Posted on Leave a comment

ஹிந்து – முஸ்லிம் பிரச்சினை (1924) | லாலா லஜ்பத் ராய் | தமிழில்: சுப்ரமணியன் கிருஷ்ணன்

பகுதி – 8
உலகளாவிய இஸ்லாமிய வாதம் என்னும் திவாலான
கருத்தாக்கம்
இதனுடன், இந்தியா ஒரு ‘தாருல்-ஹராப்’
(போர்க்களம்) என்பதால், ஒவ்வொரு நல்ல முஸ்லிமும் அதை விட்டுவிட்டு ஒரு முஸ்லிம் நாட்டிற்குக்
குடிபெயர வேண்டும் என்று உலமாக்களின் ஃபத்வாவைச் சேர்த்துக்கொள்ளலாம். ஹிஜ்ரத் இயக்கம்
எவ்வாறு முடிந்தது என்பதை இத்தருணத்தில் நாம் அறிவோம்; அதன் மீது எவ்வளவு பணம் வீணடிக்கப்பட்டது,
அதன் மூலம் எவ்வளவு துன்பங்கள் ஏற்பட்டன என்பதையும் நாம் அறிவோம். இது குறித்த சிறந்த
வர்ணனை ஒன்றை கான்ஸ்டான்டினோபிளில் நான் கண்டேன். நான் அங்கு தங்கியிருந்த மூன்றாவது
அல்லது நான்காவது நாளில், இரண்டு இளம் இந்திய முஸ்லிம்களை வீதியில் நடந்து சென்றபோது
சந்தித்தேன். அவர்கள்தான் முதலில் என்னை அணுகினர். கான்ஸ்டான்டினோபிளில் அவர்கள் எப்படி
இருக்கிறார்கள் என்று நான் கேட்டபோது,
​​அவர்களில் ஒருவர் கிட்டத்தட்ட கண்ணீருடன் வெடித்தார். அவர் எப்போதாவது
இந்தியாவுக்குத் திரும்பினால், இந்தியா ஒரு போர்க்களம் என்ற போதனை எவ்வளவு முட்டாள்தனமானது
என்பதையும் முழு உலகமும் முஸ்லிம்களின் வீடு என்ற கருத்து எவ்வளவு அபத்தமானது என்பதையம்
தனது முஸ்லிம் மக்களுக்குக் கட்டாயம் சொல்வேன் என்று கூறினார். அவர் 1921ம் ஆண்டைச்
சேர்ந்த மகாஜரின்களின் ஒருவர்.  ஆப்கானிஸ்தானில்
இருந்து துருக்கிஸ்தான் வழியாக ரஷ்யா வரை முஸ்லிம் ஆசியா முழுவதும் பயணம் செய்திருக்கிறார்.
பின்னர் அங்காரா மற்றும் கான்ஸ்டான்டினோபிலுக்குத் திரும்பினார். அவரது அனுபவம் மிகவும்
கசப்பானதாகவும் அவரது நிலை மிகவும் பரிதாபகரமானதாகவும் இருந்தது.  அவர் உலகளாவிய இஸ்லாமியவாதத்தை மிகவும் வலுவான வார்த்தைகளில்
கண்டித்தார்.
துருக்கி மற்றும் எகிப்தில் நான் சந்தித்த
மற்ற இந்திய முஸ்லிம்களிடமிருந்தும் நான் கற்றுக்கொண்டது இதுதான், இது இயற்கையானது.
எகிப்தில் ஒரு பெங்காலி முஸ்லிம் கிலாபத் இயக்கத்தை கண்டித்த விதத்தை என்னால் வார்த்தைகளில்
எழுத முடியாது.  பிரபலமான பழமொழியான இரத்தம்
தண்ணீரை விட அடர்த்தியாக இருக்கிறது என்பதை அது உறுதிப்படுத்தியது. எகிப்தைத் தவிர
முஸ்லிம்கள் வாழும் வேறு எந்தப் பகுதியும் அதிக வசதியானதாகவும் வளமானதாகவும் இல்லை.
எல்லா இடங்களிலும் அரசுகளே தங்கள் மக்களைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. மக்களுக்கோ
தங்கள் தினப்படி வாழ்க்கையைத் தள்ளுவதே பெரும்பாடாக உள்ளது. முஸ்லிம்களாக இருந்தாலும்,
வெளிநாட்டினரை அவர்கள் ஆதரிப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? மகாஜரின்களை
தன் நாட்டிலிருந்து வெளியேற்றும்படி சொன்ன காபூல் அமீரின் செய்கை நியாயமானதே. பிற்காலத்தில்,
இராஜதந்திர காரணங்களுக்காக, பிரிட்டிஷ் விரோத முஸ்லிம்கள் என்று கூறப்படும் சிலரை தனது
பிரதேசங்களை விட்டு வெளியேற்றும்படி அவர் கட்டாயப்படுத்தப்பட்டார். இதேபோல், தங்கள்
சொந்த நிலத்தில் இவ்வளவு வறுமை இருக்கும்போது துருக்கியர்கள் இந்திய முஸ்லிம் மகாஜரின்களுக்கு
உதவி செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது அபத்தமானது.
உண்மை என்னவென்றால், துருக்கி, ஆசியா
மைனர், சிரியா, பாலஸ்தீனம் மற்றும் எகிப்தில் நான் மேற்கொண்ட பயணங்கள் உலகளாவிய இஸ்லாமியத்தைப்
பற்றிய எனது நம்பிக்கையை முற்றிலும் இழக்கச் செய்துள்ளது.  நான் அதை எங்கும் காணவில்லை. ஒவ்வொரு நாடும் தன்
சொந்தப் பிரச்சினைகளில் மும்முரமாக உள்ளது, அந்தப் பிரச்சினைகள் மிகவும் சிக்கலானவையாகவும்
குழப்பமானவையாகவும் இருப்பதால் அந்த நாடுகள் மற்ற எவற்றிலும் ஈடுபட நேரமே இருப்பதில்லை.
துருக்கி ஒரு பேரழிவுகரமான போரின் விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. போர் அதன் ஆண்
வர்க்கத்தின் உழைக்கும் கரங்களைப் பலவீனப்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாகவே அவர்கள்
பர்தா முறையை ஒழித்து, உணவு உற்பத்திக்கு பெண்களை நம்ப வேண்டியிருக்கிறது.  துருக்கியில் இருந்து கிறிஸ்தவர்களை வெளியேற்றுவதும்,
அதற்கு ஈடாக கிரேக்கத்திலிருந்து  முஸ்லிம்களைப்
பெறுவதும் அவர்களின் கைகளில் உள்ள மிகப்பெரிய பிரச்சினையாகும். உள் எதிரிகளிடமிருந்து
(கிரேக்கர்கள், ஆர்மீனியர்கள் மற்றும் யூதர்கள் போன்றவை) தங்களைப் பாதுகாப்பதில் உள்ள
சிக்கலே அவர்களுக்குப் போதுமானது. உள் மற்றும் வெளிப்புற அச்சங்கள் ஒரு திறமையான இராணுவத்தைப்
புதுப்பித்து வைத்திருக்க அவர்களைக் கட்டாயப்படுத்துகின்றன. இவை அனைத்தும் ஒரு பெரிய
நிதி நெருக்கடிக்கு இட்டுச் செல்கின்றன. இவை எல்லாவறுக்கும் மேலாக, அவர்கள் தங்களுக்குள்
ஒன்றிணைவதில்லை. மற்ற நாடுகளைப் போலவே, துருக்கியிலும், அரசியலில் வித்தியாசமாக சிந்திக்கும்
கட்சிகள் உள்ளன. கிலாஃபத்தை ஒழிப்பது மற்றும் கலீஃபா மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்த
மற்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்படுவது தற்போதைய அரசியலமைப்பின் நலன்களுக்காக வேறு வழியில்லாமல்
அவர்கள் எடுத்த நடவடிக்கையாகும். அவர்கள் தங்கள் அதிகாரத்தை பலப்படுத்தவும், தங்கள்
நிர்வாகத்தை சீர்திருத்தவும், தங்கள் நாட்டை யூரோப்பின் சபைகளில் முதல் வகுப்பு நிலைக்கு
உயர்த்தவும் மிக உன்னதமான முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், மதம். அரசியல் விஷயங்களில்
முஸ்தபா கமலுடனும் அவரது கட்சியுடனும் முரண்படுகிறவர்களும், கிலாஃபத்தை ஒழிப்பதை எதிர்த்தவர்களும்
கூட, இந்தக் கேள்வியை மீண்டும் எழுப்புவதை தேசபக்தியின் அடிப்படையிலான காரணங்களால்
எதிர்க்கின்றனர். துருக்கியின் நிலையைப் பற்றிய எனது ஆய்வில் இருந்து துருக்கியர்கள்
தீவிர தேசியவாதிகள் என்று தீவிரமாக நம்புகிறேன். தற்போதைய தருணத்தில் அவர்களின் ஒரே
அக்கறை அவர்களின் நாடு. அவர்கள் துருக்கியர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், நிர்வகிக்கவும்,
ஆட்சி செய்யவும் விரும்புகிறார்கள். துருக்கியர்கள் நல்லவர்களாகவே  எனக்குத் தோன்றினர், அவர்கள் தோற்றத்தில் சுத்தமாகவும்,
மற்றவர்களுடனான நடவடிக்கைகளிலும் சுத்தமாகவும் இருந்தார்கள். ஆண்கள் குல்லா அணிவதைத்
தவிர, அவர்களின் உடை மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை கிட்டத்தட்ட முற்றிலும் யூரோப்பிய
மயமானவை.
அவர்களின் மதத்தைப் பற்றி எனக்கு எதுவும்
தெரியாது, ஆனால் திறந்த மனத்துடன் இருக்கும் ஒருவர் யதார்த்தத்தை சரியாகக் கணிக்க முடியும்.
துருக்கியில் மதவாதம் அதிகம் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் பர்தாவை ஒழித்துவிட்டார்கள்.
பெண் குமாஸ்தாக்கள் தபால் அலுவலகம் மற்றும் பிற பொது அலுவலகங்களில் முக்காடு இல்லாமல்
வேலை செய்வதை நான் கண்டேன். ஆயிரக்கணக்கானோர் [பெண்கள்] ஐரோப்பிய உடையில் துருக்கிய
மேல் ஆடைகளுடன் பொது வீதிகளில் செல்வதையும், முக்காடு இல்லாமல் பொதுத் தோட்டங்களில்
நடப்பதையும் நான் கண்டேன். என்னைப் பொருத்தவரை அவர்களின் ஆடை மிகவும் ஒழுக்கமானதாகத்
தோன்றியது. இது கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளின் நாகரிகங்களை மிகவும் பொருத்தமான முறையில்
இணைத்தது. பலதார மணங்களை ஒழிக்கும் விதத்தில் துருக்கியர்கள் கடுமையான விதிமுறைகளை
வெளியிட்டுள்ளனர். அதை முற்றிலுமாக ஒழிக்காவிட்டாலும் மிகப் பெரிய அளவில் கட்டுப்படுத்துவதை
இந்த விதிமுறைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன. துருக்கிய மொழியைத் தவிர வேறு எதையும் பயன்படுத்துவதற்கு
எதிராக மிகக் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதை நான் கண்டேன். துருக்கியர்கள்
அல்லாதவர்களை இராணுவத்தில் சேர்ப்பதற்கு எதிராக (சில விதிவிலக்குகளுக்கு உட்பட்டு)
மிகவும் கடுமையான விதிகளும் உள்ளன. வாய்ப்பாட்டு அல்லது கருவி இசைக்கு எதிரான எந்தவொரு
பாரபட்சத்தையும் நான் கவனிக்கவில்லை. நடனம் கூட உயர் வட்டங்களில் அனுமதிக்கப்படுகிறது.
ஆனால் மதுவைப் பயன்படுத்துவதைக் கண்டு நான் வருந்தினேன்.
சுருக்கமாகச் சொன்னால், கான்ஸ்டான்டினோபிளிலோ
அல்லது ஆசியா மைனரின் பிற நகரங்களிலோ துருக்கியர்கள் யூரோப்பின் மற்ற குடிமக்களை விட
அதிக மதநம்பிக்கை உடையவர்கள் என்பதற்கான அறிகுறிகள் எதையும் நான் எதுவும் காணவில்லை,.
எல்லா இடங்களிலும் நான் சமூக, தேசிய வேறுபாடுகளையும் தனிப்பட்ட விருப்பங்களின் அறிகுறிகளையும்
கண்டேன். என்னைச் சந்தித்த கான்ஸ்டான்டினோபிளில் வசிக்கும் இந்திய முஸ்லிம் குடியிருப்பாளர்களால்
எனது எண்ணங்கள் உறுதி செய்யப்பட்டன. அல்-அஹார் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களின்
குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்ட அறைகள் ரவாக்.ஐ-ஹனுத் (அதாவது இந்துக்களுக்கான ஒரு
விடுதி) என்று அழைக்கப்பட்டதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். சிரியாவிலும். பாலஸ்தீனத்திலும்
முஸ்லிம் சமூகம் சந்திக்கின்ற மிகப்பெரிய பிரச்சினை அவர்களின் சுதந்திரத்தை எவ்வாறு
மீட்டெடுப்பது அல்லது பராமரிப்பது என்பதுதான்.
பாலஸ்தீனத்தில் முஸ்லிம்கள் யூதர்களை
விட பெரும்பான்மையில் உள்ளனர். கிறிஸ்தவ யூரோப் பாலஸ்தீனத்தில் ஒரு வலுவான, நன்கு பாதுகாக்கப்பட்ட
உல்ஸ்டரை உருவாக்கி வருகிறது, இது முஸ்லிம்கள் தங்கள் இழந்த மேலாதிக்க நிலையை மீண்டும்
பெறுவார்கள் என்ற நம்பிக்கையை அளிக்கவில்லை. எல்லா இடங்களிலும் யூதர்களின் நன்கு கட்டப்பட்ட,
எல்லா வசதிகளும் உடைய  காலனிகள் வளர்ந்து வருவதைக்
காண முடிகின்றது, அவர்களின் திறமையான கல்வி, பரோபகார நிறுவனங்களின் உதவியாலும் திறன்வாய்ந்த
தொழில்துறை நிறுவனங்களாலும் இது நிகழ்ந்துவருகிறது. அவர்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின்
நிலங்களை வேகமாக வாங்குகிறார்கள். அமெரிக்காவிலிருந்தும் யூரோப்பிலிருந்தும் இதற்கான
பணம் கொட்டப்படுகிறது. ஒரே ‘அதிருப்தி’ அளிக்கின்ற அம்சம் என்னவென்றால், யூதர்களின்
ஏழ்மையான வர்க்கமும், அந்த இனத்தின் ஒடுக்கப்பட்ட உறுப்பினர்களும் மட்டுமே நிரந்தர
குடியேற்றத்திற்காக பாலஸ்தீனத்திற்கு குடிபெயர்கின்றனர். சிரியாவில் கிறிஸ்தவர்கள்
மக்கள் தொகையில் மிக முக்கியமான பகுதியாக உள்ளனர். இந்த இரண்டு நாடுகளிலும் முஸ்லிம்களுக்கும்
கிறிஸ்தவர்களுக்கும் இடையில் எந்தவிதமான இன வெறியும் பொறாமையும் இல்லை.
உலக முஸ்லிம்களை விட இந்திய முஸ்லிம்கள்
உலகளாவிய இஸ்லாமிய வாதம் மூலமாக தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்று நான் பயப்படுகிறேன்.
இது மட்டுமே ஒரு ஐக்கிய இந்தியாவை உருவாக்குவதைக் கடினமாக்குகிறது. இந்த விஷயத்தில்
குறைந்தபட்சம், சர் சையத்தின் கொள்கை கிலாஃபாத் இயக்கத்தினரின் கொள்கையை விடச் சிறந்ததாக
இருந்தது என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு மதவாத கிலாபத்தை நம்பவில்லை. அவர் துருக்கி
சுல்தானை ஒரு கலீஃபாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. துருக்கி அல்லது பிற முஸ்லிம் நாடுகளின்
விவகாரங்களில் இந்திய முஸ்லிம்கள் அதிக கவனம் செலுத்துவதை அவர் எதிர்த்தார்.