பகுதி 8 (நிறைவுப் பகுதி)
(27) மத்திய அரசு
தொடர்பான எனது மனப்பாங்கு
இந்தப் பத்திரிகைச் செய்தியை நான் வெளியிட்ட
பின்னர், இந்திய அரசியலில் மிகப் பெரிய பிரளயமே ஏற்பட்டது. இந்தியாவில் விலங்குகளை
உயிருடன் அறுத்து ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இயக்கத்துக்குத் தலைமை வகித்து
வருகிறேன். ஆனால் 1947ம் ஆண்டு நமது தாய்நாடு பிரிவினைக்கு உள்ளானது. பாகிஸ்தான் தனி
நாடாகப் பிரிந்து சென்றாலும், அந்த இழப்பை ஈடு செய்ய, இந்துஸ்தானின் மிகப் பெரிய பகுதி
அந்நிய ஆளுமையிலிருந்து விடுதலை பெற்றது. அரசியல் விடுதலைக்காக நடைபெற்ற சுதந்திரப்
போரில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒரு போர் வீரனாகப் பங்கேற்றுக் கடுமையான பாதிப்புகளுக்கு
உள்ளானேன். நான் பட்ட துன்பங்களும், துயரங்களும், எனது தலைமுறையைச் சேர்ந்த வேறேந்த
நாட்டுப்பற்று மிக்கத் தலைவருக்கும் சளைத்ததல்ல. நிறைவாக நாடு விடுதலை பெற்று சுதந்திர
இந்தியா மலர்ந்தது. என் நாடு விடுதலை பெறுவதைக் கண்ணாரக் கண்டு மகிழ உயிருடன் இருப்பதற்கு
பாக்கியம் செய்திருக்க வேண்டுமென்றே உணர்கிறேன். எங்கள் நோக்கத்தின் ஒரு பகுதி இன்னும்
முழுமை பெறவில்லை என்பது உண்மை. என்றாலும், சிந்து முதல் பெருங்கடல்கள் வரை தாய்நாட்டை
மீட்டெடுத்து ஒருங்கிணைக்கும் விருப்பத்தை நாங்கள் கைவிடவில்லை. இந்த நோக்கத்தை நிறைவு
செய்வதற்குக் கூட முதலில் நாம் வெற்றி பெற்ற பகுதிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதால்,
எந்தக் கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தாலும், மத்திய அரசு வலுவாக இருக்க வேண்டியது
அவசியம் என்பதை மக்கள் மனத்தில் ஆழமாகப் பதிய வைக்க முயன்றேன்.
ஆட்சிப் பொறுப்பில் எந்த மாற்றத்தை விரும்பினாலும்
அது அரசியல் அமைப்புச் சட்டம் மூலம் மட்டுமே நடைபெற வேண்டும். வன்முறையோ, உள்நாட்டுக்
கலவரமோ ஏற்பட்டால் அது நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும். அந்நிய அரசை எதிர்த்து
நான் நடத்திய போராட்டத்தின் போது புரட்சிகரமான எண்ணங்கள் தவிர்க்க முடியாதது மற்றும்
நியாயமானதுதான். என்றாலும், நமது நாட்டைப் பயங்கரமான குழப்பங்களிலிருந்தும், உள்நாட்டுக்
கலவரங்களிலிருந்தும் காப்பாற்ற வேண்டுமானால், ஆயுத ஒடுக்குமுறையிலிருந்து, அரசியல்
அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட ஜனநாயகத்துக்கு உடனடியாக மாற வேண்டும். இதை நோக்கமாகக்கொண்டே,
தற்போது நெருக்கமாகி வரும் காங்கிரஸ் மற்றும் மகாசபா ஆகிய இரு அமைப்புகளும் பொதுவான
முன்னணியை அமைத்து நமது நாட்டின் மத்திய அரசின் கரங்களை வலுப்படுத்த வேண்டுமென விரும்பினேன்.
இதன் அடிப்படையிலேயே புதிய தேசியக் கொடியை ஏற்றுக் கொண்டேன். உடல்நலம் குன்றியிருந்த
நிலையிலும் அனைத்துக் கட்சி இந்து மாநாட்டுக்குத் தலைமை வகிக்க தில்லி சென்று மகாசபா
செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றேன். பெரும்பான்மை மகாசபா தலைவர்கள் மற்றும் சில காங்கிரஸ்
முன்னணி தலைவர்களும் என்னுடன் இணைந்து பொதுவான முன்னணியை அமைக்கக் கடுமையாக உழைத்துக்
கொண்டிருந்தனர். மத்திய அரசுக்கு முழுமையான ஆதரவளிக்க மகாசபா செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது.
மகாசபா தலைவர் டாக்டர் எஸ்.பி.முகர்ஜி மத்திய அமைச்சரவையில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டதை
நாங்கள் அனைவரும் மனதாரப் பாராட்டி வரவேற்றோம். இந்த நீதிமன்றத்தில் இவற்றின் சில விவரங்கள்
பதிவு செய்யப்பட்டுள்ளன (பேட்ஜ் சாட்சியம் பக்கம் 224 & 225 பார்க்கவும்). பி.டபிள்யூ
69 தாதா மகராஜும் கூறுகையில் ‘பம்பாயில் இந்து தலைவர்கள் நடத்திய மாநாட்டில் 1947 டிசம்பரில்
கலந்து கொண்டேன். வீர சாவர்க்கர் அந்த மாநாட்டுக்குத் தலைமை வகித்து அனைத்து இந்துக்களும்
ஒன்றுபட வேண்டும் என்றும், இந்தியா விடுதலை பெற்றதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும்
தங்கள் வேற்றுமைகளை மறந்து இந்திய அரசை வலுப்படுத்தி முழுமையான ஆதரவை வழங்க வேண்மென
வலியுறுத்தினார்’ என்றார். (பி.டபிள்யூ 69 பக்கம் 320).
கோட்சேவும் ஆப்தேவும் மகாசபையை நிராகரித்தனர்
இந்து மகாசபாவின் முன்னணித் தலைவர்களாக
நாங்கள் கருதப்பட்டாலும், மகாசபா உள்ளேயும், வெளியேயும், இந்து சங்கடன்களின் பெரிய,
தீவிர மற்றும் உறுதினான பிரிவு, நாங்கள் மேற்கொண்ட இந்தக் கொள்கையை எதிர்த்ததை
1947 ஆகஸ்ட் பிரிவினையிலிருந்தே கண்டுபிடித்தோம். மகாசபா உள்ளேயும், வெளியேயும், இந்திய
யூனியனை அங்கீகரிப்பது, பாகிஸ்தானை அங்கீகரிப்பதற்கு ஒப்பாகும் என்ற அடிப்படையில் எங்களை
வெளிப்படையாக எதிர்க்கத் தொடங்கினார்கள். மேலும் வங்காளம் மற்றும் பஞ்சாபிலுள்ள முஸ்லிம்
தீவிரவாதிகள் லட்சக் கணக்கான இந்துக்களைக் கொன்று குவித்த போது அவர்களைப் பாதுகாகத்
தவறிய மத்திய அரசுடன் ஒத்துப் போவது இந்துக்களுக்குச் செய்யும் துரோகம் என்றும் வாதாடினார்கள்.
இந்த வழக்கில் என்னைப் பாதுகாத்துக் கொள்ளத்
தேவையான விவரங்களை மட்டுமே நான் தெளிவுபடுத்தி என் வாக்குமூலத்தைக் கட்டுப்படுத்தி
கொள்ள விரும்புகிறேன். எனவே, பிரிவினை முதற்கொண்டே ஆப்தே, கோட்சே மற்றும் அவர்கள் குழுவினர்,
இந்தியா முழுவதுமுள்ள இந்து சங்கடன் முகாமிலுள்ள எதிர்ப்பு கோஷ்டியினருடன் கை கோத்துக்
கொண்டனர் என்பதை மட்டும் தெளிவுபடுத்துவது போதுமென எண்ணுகிறேன்.
(A) ஆப்தேவும் கோட்சேவும் கட்டாயப்படுத்தி வழிநடத்தப்படும் மனிதர்கள்
அல்ல
பண்டிட் கோட்சேவும், ஆப்தேவும், மன உறுதி
மிக்கவர்கள் என்றும், இந்து மதத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர்கள் என்றும், தங்கள்
மனத்துக்குச் சரியென்றால் மட்டுமே ஒரு விஷயத்தைச் செய்வபர்கள் என்றும், காரணம் ஒத்துப்
போனால் மட்டுமே ஒன்றைப் பின்பற்றுவார்கள் என்றும் ப்ராசிக்யூஷன் தரப்பே சாட்சியம் அளித்துள்ளது.
ஆதலால் அவர்கள் கட்டாயப்படுத்தி வழிநடத்தப்படும் மனிதர்கள் அல்ல என்பது தெளிவு. இந்து
மகாசபா தலைவர் என்ற முறையில் இந்து மகாசபா ஊழியர்களாக அவர்கள் எனக்கு எழுதிய கடிதங்களை
பராசிக்யூஷன் தரப்பு சான்றாவணங்களாகச் சமர்ப்பித்துள்ளது. அவற்றில் நான் என்ன செய்ய
வேண்டும், தலைமை உரையில் எவ்வாறு பேச வேண்டும், தலையங்கம் எவ்வாறு எழுத வேண்டும் என்று
‘யோசனையும்’, சில தருணங்களில் ‘அறிவுரையும்’ கூறியுள்ளனர். மேலும் அவர்கள் நம்பாத,
மகாசபாவின் சில தலைவர்களை நான் நம்புதுவது தவறு என்றும், அவர்கள் விருப்பம்போல் நான்
செயல்படாதது, இன்னும் குறிப்பாக, அக்ரணி பத்திரிகைக்கு நான் எழுதாததற்காக மறைமுகமாகக்
கண்டித்ததுடன், அவர்களது பத்திரிகைக்கு இருபதாயிரம் ரூபாய் வழங்காததால் ஏற்பட்ட இழப்புக்கு,
அவர்களுடைய வார்த்தையையே மேற்கோள் காட்டுவதென்றால், ‘மூழ்கிவிட்டது’ எனத் தங்களது அதிருப்தியை
வெளிப்படுத்தியதையும் அக்கடிதங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். (கடிதங்கள் ஜி1 (டி/30),
ஜி26 (பி/277), ஜி43 (பி/284), ஜி70 (பி/293) மற்றும் ஜிஏஎஸ்4 (பி/298 பார்க்கவும்).
(B) மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு
அளிக்க வேண்டும் என்பதுடன் அதில் பங்கேற்கவும் ஆதரவளித்த மகாசபாவின் தீர்மானத்தை ஆப்தே,
கோட்சே மற்றும் அவர்கள் குழுவினர் கண்டித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. இந்திய யூனியனை
அங்கீகரித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவளித்த டாக்டர் முகர்ஜி, பாரிஸ்டர்
என் சி சாட்டர்ஜி, டாக்டர் மூஞ்சி, போபட்கர், நான் மற்றும் ஏனைய தலைவர்கள் மகசபாவின்
‘வயதான தலைவர்கள்’ என்று அவர்களால் முத்திரை குத்தப்பட்டோம். வயதான தலைவர்கள் தலைமையில்
செயல்படும் மகாசபா, இந்து ராஜ்ஜியத்தைப் பாதுகாக்கத் தவறியதற்காக அவர்களது தினசரியான
‘அக்ரணி’ அல்லது ‘இந்து ராஷ்ட்ரம்’ பத்திரிகையில் தொடர்ந்து பல மாதங்கள் தாக்குதலுக்கு
உள்ளானார்கள். மேலும் இந்து இளைஞர்கள் ‘வயதான தலைவர்களின்’ தொடர்பு இல்லாமல், தனிப்பட்ட
முறையில் சுதந்திரமான ‘நடவடிக்கை அமைப்பை’ ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் புத்திமதி
சொல்லிக் கொண்டே இருந்தனர்.
(C) இந்த வாக்குமூலம் முழுவதும் ப்ராசிக்யூஷன்
தரப்பு சாட்சி மூலம் ஏற்கெனவே உறுதிப்படுத்திய விவரங்களை மட்டுமே நான் குறிப்பிட்டுள்ளேன்.
இதிலும் கூட அப்ரூவராக மாறி மன்னிப்புக் கோரிய பேட்ஜ், சாட்சியத்தில் பதிவு செய்த சில
தொடர்புடைய வரிகளை, துல்லியமான தகவல்களை நான் மேற்கோள் காட்டுகிறேன். 1947 ஆகஸ்ட்
15 இந்திய சுதந்திரம் பெற்ற நாளன்று வீர சாவர்க்கர் தனது இல்லத்தில் இந்து மகாசபா மற்றும்
தேசியக் கொடியை ஏற்றிக் கொண்டாடியது நினைவிருக்கிறது. தேசியக் கொடியைத் தத்யாராவ் தனது
இல்லத்தில் ஏற்றியதை இந்து மகாசபாவினர் ஆட்சேபித்தது உண்மைதான். அவர் தேசியக் கொடியை
ஏற்றியதை நானும் ஆட்சேபித்தேன். கோட்சே, ஆப்தே மற்றும் பலரும் ஆட்சேபித்தனர். இந்தியப்
பிரிவினையைத் தொடர்ந்து மத்திய அரசை (நேரு அரசை) வலுப்படுத்த வேண்டும் என்பதே மகாசபையின்
கொள்கை என்பதை நானறிவேன். இந்து மகாசபா நிறைவேற்றிய தீர்மானத்தை எல் பி போபட்கர் படித்தார்.
காங்கிரஸோடு தோளோடு தோள் நின்று நாம் உழைப்பதுடன், நேரு அரசுக்கு (மத்திய அரசுக்கு)
அதரவளிக்க வேண்டும் என்பதே அத்தீர்மானத்தின் சாராம்சம் ஆகும். பார்சியில் நடைபெற்ற
மராட்டிய மாகாண இந்து மகாசபா முன்னிலையில் 1946 டிசம்பரில் தீர்மானம் படிக்கப்பட்டது.
கோட்சேவும், ஆப்தேவும் இத்தீர்மானத்தைக் கடுமையாக எதிர்த்தனர். சமீபமாகச் சில தருணங்களில்
இந்து மகாசபாவின் கொள்கையை கோட்சேவும், ஆப்தேவும், தங்கள் ‘அக்ரணி’ மற்றும் ‘இந்து
ராஷ்ட்ரம்’ பத்திரிகைகளில் விமர்சித்தது உண்மையே (பேட்ஜ் சாட்சி பக்கம் 224 &
225).
இந்த நேரத்தில் என் உடல்நலம் மீண்டும்
பாதிக்கப்பட்டேன். தினசரிக் காய்ச்சல், 1948 ஜனவரி மாதம் முழுவதும் என்னைப் படுக்கையிலேயே
கிடத்தியது. திடீரென ஜனவரி 30ம் தேதி தில்லியில் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட
அதிர்ச்சியான செய்தியைக் கேட்டேன். பத்திரிகைச் செய்தி முகமைகள் என்னைத் தொலைபேசியில்
தொடர்ந்து அழைக்கவே, நான் கைது செய்யப்படுவதற்கு முன்பு, 1948 பிப்ரவரி 4ம் தேதி, கீழ்க்காணும்
பத்திரிகைச் செய்தியை வெளியிட்டேன். இந்தியாவின் அனைத்துப் பத்திரிகைகளிலும் அது வெளியானது.
இந்த வாக்குமூலத்துடன் எனது பத்திரிகைச் செய்தியை உறுதிப்படுத்தப் பம்பாய் ‘டைம்ஸ்
ஆஃப் இந்தியா’ 1948 பிப்ரவரி 7 ம் தேதி வெளியான செய்திக் குறிப்பை இணைத்துள்ளேன். அறிக்கை
பின்வருமாறு:-
தில்லியிலுள்ள இந்து மகாசபா தலைவர் எல்
பி போபட்கர் மற்றும் செயற்குழுவின் சில உறுப்பினர்களின் கூட்டு அறிக்கை, மகாத்மா காந்தியின்
கொடூரமான படுகொலை தொடர்பான உணர்வுகளை அதிகாரப்பூர்வமாக சிறப்பாக வெளியிட்டிருக்கிறது.
அத்துடன், இந்து மகாசபா என்பது ஜனநாயக மற்றும் பொது அமைப்பு என்பதையும் தெளிவுபடுத்தி
உள்ளது. இந்து மகாசபையின் துணைத் தலைவர்களுள் ஒருவன் என்ற முறையில், நானும் அவர்களது
உணர்வுகளுடன் உடன்படுகிறேன். தனிநபர் வெறுப்பு அல்லது கூட்டத்தின் வெறிச் செயல் காரணமாக
ஏற்படும் இதுபோன்ற சகோதரச் சண்டைகளை எந்தச் சமரசமும் இன்றி வன்மையாகக் கண்டிக்கிறேன்.
வெற்றிகரமான நாடு தழுவிய புரட்சிக்கும், புதிதாகப் பிறந்த தேசிய அரசுக்கும், சகோதரத்துவ
உள்நாட்டுச் சண்டையைக் காட்டிலும், குறிப்பாக அந்நிய சக்திகளால் தூண்டப்பட விரோதத்தை
விடவும், மோசமான எதிரி இருக்க முடியாது. வரலாறு உரைக்கும் இந்த உறுதியான எச்சரிக்கையை
ஒவ்வொரு நாட்டுப்பற்று மிக்க குடிமகனும் நெஞ்சில் நிறுத்தவேண்டும் – வி டி சாவர்க்கர்.
மேற்கூறிய பத்திகளில், என் மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுகளுக்கான பதிலைச் சுருக்கமாகப் பதிவு செய்துள்ளேன். என்னுடைய வழக்கறிஞர்கள்
அவர்களது வாதத்தின் போது சரியாகவும், முறையாகவும் இருக்கும் வகையில் விரிவாக எடுத்துரைப்பார்கள்.
என்னுடைய வழக்கில் தொடர்புடைய அனைத்து சட்ட விவரங்களையும் அவர்கள் கவனிப்பார்கள்.
நிறைவாக, எனக்கு எதிரான ப்ராசிக்யூஷன்
வழக்கைக் கூட்டாகவும், விரிவாகவும் ஆய்வு செய்த பிறகு கீழ்க்காணும் முக்கிய விவரங்களைச்
சமர்ப்பிக்கிறேன்:-
(A) கூறப்படும் சதித்திட்டத்தில் எனக்குத்
தனிப்பட்ட முறையில் நேரடித் தொடர்பு அல்லது பங்களிப்பு அல்லது அதன் கருத்துருவாக்கம்
அல்லது அதனைத் தொடர்ந்து நடைபெற்றதாகக் கூறப்படும் செயல்கள் எதிலும் நேரடிச் சாட்சி
இல்லை.
(B) என்னைக் குற்றவாளியாக்கும் வகையில்
எனது கையிருப்பிலோ, கட்டுப்பாட்டிலோ, எந்த ஆயுதமோ, வெடிமருந்தோ, அதைப் போன்ற எந்தப்
பொருளோ இல்லை
(C) பத்து ஆண்டுகளுக்கும் மேலான
கடிதத் தொடர்பில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களில்
என்னைக் குற்றவாளியாக்கும் வகையில் ஒரு வார்த்தை அல்லது சிறு குறிப்பு கூட இல்லை.
(D) என் மீதான முழு வழக்கு மூன்று அல்லது
நான்கு சொற்றொடர்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு தொடரப்பட்டுள்ளது. செவிவழிச் செய்தியாகவும்,
அதுவும் அப்ரூவர் ஒருவரால் கேட்டதாக ஒப்புக் கொள்ளப்பட்ட செவி வழிச் செய்தியாகவும்,
எந்த தனிப்பட்ட அல்லது நம்பகத்தன்மை கொண்ட சாட்சியால் முற்றிலும் உறுதி செய்யப்படாததாகவும்
உள்ளது.
(E) மேலே உள்ள பிரிவுகளில் (பிரிவு
26 & 27) மேற்கோள் காட்டப்பட்ட எனது பத்திரிகைச் செய்தி மூலம் மகாத்மா காந்தி மற்றும்
பண்டிட் ஜவாஹர்லால் நேரு ஆகியோரின் நாட்டுப் பற்று மற்றும் தியாகத்தின் மீது நான் உயர்ந்த
அளவு மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தது, பிரிட்டிஷ் அரசு அவர்களைக் கைது செய்த போதெல்லாம்
நான் கண்டித்தது, காந்திஜிக்கு ஏற்பட்ட தனிப்பட்ட சோகங்களிலும், துக்கங்களிலும் பங்கேற்றது,
அவர் விடுதலையாகும் போதும் மகிழ்ந்தது, அவரது 75 ஆவது பிறந்த நாளின் போது நீண்ட காலம்
வாழ வேண்டுமெனப் பிரார்த்தித்தது, எனது 60ஆவது பிறந்தநாளுக்குக் காந்திஜி வாழ்த்துச்
செய்தி அனுப்பியது என, மேற்கண்ட விஷயங்கள் அனைத்துமே, எங்கள் இருவருக்கும் இடையே கொள்கை
ரீதியான அல்லது நிஜமான வேற்றுமைகள் இருந்தாலும், அவை பொதுவிலோ, தனிப்பட்ட முறையிலோ,
ஆழ்ந்த வெறுப்பாக மாற நாங்கள் என்றைக்குமே அனுமதித்ததில்லை என்பதைத் தெளிவாக்குகிறது.
இதன் காரணமாகவே திடீரென அதிர்ச்சியூட்டும்
வகையில் மகாத்மா காந்தியின் படுகொலைச் செய்தியை நான் கேட்டதுடன், பத்திரிகை செய்தி
மூலம் அதைச் சந்தேகத்துக்கு இடமற்றக் கொடூரமான, சகோதரச் சண்டை என்று வெளிப்படையாகவே
கண்டித்தேன். இன்றைக்கும் கூட மகாத்மா காந்தியின் படுகொலையை சமரசமற்றப் படுகொலை என்றே
கண்டிப்பேன்.
மேற்கூறிய முக்கிய விவரங்கள் காரணமாக
ப்ராசிக்யூஷன் தரப்பு கிரிமினல் வழக்குக்குத் தேவையான நிலையான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால்,
என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறிவிட்டது
எனவே வாக்குமூலத்தில் விவரிக்கப்பட்ட
எனது வாதத்தைப் படித்துப் பார்த்த பிறகு என் மீது தொடுக்கப்பட்ட வழக்கு முழுக்க முழுக்க
சந்தேகங்களாலும், அனுமானங்களாலும் ஆனவை என்பதைப் ப்ராசிக்யூஷன் தரப்பு நம்புமெனத் தாழ்மையுடன்
சமர்ப்பிக்கிறேன். இது போன்ற சந்தேகங்கள் மற்றும் அனுமானங்களால் பிரச்சினைகளைக் குழப்பாமல்,
எனக்கு எதிராக உள்ளதைப் போன்ற வழக்கை மதிப்பீடு செய்து நீதிமன்றம் முடிவுக்கு வர உதவுவதே
அதன் கடமை என்பதை ப்ராசியூஷன் தரப்புக்கு நினைவூட்ட வேண்டுமெனக் கருதவில்லை.
எனது வாக்குமூலத்தை நிறைவு செய்வதற்கு
முன்பு ஒரு மனிதன் தன்னை நிரபராதி என்று நிரூபிப்பதற்குச் சாத்தியம் உண்டு என்பதால்
மீண்டும் உறுதியாக வலியுறுத்துகிறேன். என் மீது சுமத்தப்பட்ட எந்தக் குற்றத்தையும்
நான் இழைக்கவும் இல்லை, அதற்கான காரணமும் எதுவும் இல்லை. என் மீது குற்றம் சுமத்தப்பட்டது
போல் எந்தக் கிரிமினல் ஒப்பந்தத்துடனோ, சதித்திட்டத்துடனோ எனக்கு எந்தப் பங்களிப்பும்
இல்லை. குற்றச்சாட்டில் கூறியுள்ளபடி நான் எந்தக் குற்றத்துக்கும் உடந்தையாகவும் இல்லை,
குற்றச் செயல்கள் குறித்து அறிந்திருக்கவும் இல்லை.
எனவே, மாண்புமிகு கனம் நீதிபதி அவர்களுக்குத்
தாழ்மையுடன் சமர்ப்பிப்பது என்னவெனில், மேற்கூறியவை உள்ளிட்ட ஏனைய காரணங்களுக்காக,
எனது நடத்தை மீது சிறு களங்கம் கூட இல்லாமல், அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும்
விடுவித்து என்னை விடுதலை செய்ய ஆணையிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தில்லி
(ஓப்பம்) வி.டி. சாவ்சர்கர்
தேதி 1948 நவம்பர் 20 குற்றம் சுமத்தப்பட்டவர்
இணைப்பு A
ஏ எஸ் பிடே எழுதிய ‘வீர் சாவர்க்கர் சூறாவளிப்
பிரச்சாரம்’ என்னும் நூலின் 262 பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவை (பிரிவு 26 (A) பக்கம்
46)
ஜவாஹர்லால் நேருவுக்குச் சிறைத் தண்டனை
பண்டித ஜவாஹர்லால் நேருவுக்கு நான்கு
ஆண்டு சிறைத் தண்டனை என்னும் செய்தி ஒவ்வொரு தேசாபிமானிக்கும் வருத்தமான அதிர்ச்சியைக்
கட்டாயம் ஏற்படுத்தி இருக்கும். எங்கள் இருவருக்கும் இடையே நிலவும் பல்வேறு தத்துவங்கள்
மற்றும் கொள்கைகள் காரணமாக நாங்கள் வேறு வேறு பாதைகளில் இயங்கிக் கொண்டிருந்தாலும்,
பண்டித ஜவாஹர்லால் நேருஜியின் பொது வாழ்வு முழுவதும் அவர் மேற்கொண்ட நாட்டுப் பற்று
மற்றும் மனிதாபிமான முனைவுகளைப் பாராட்டவும், அவர் சந்திக்கும் துன்பங்களுக்கு எனது
ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவிக்கவும் தவறினால், இந்து சபா உறுப்பினர் என்னும் கடமையிலிருந்து
தவறியவன் ஆவேன்.
‘காங்கிரசுக்குள் காந்தியக் கொள்கைகளிலிருந்து
மாறுபட்ட கட்சிகளின் தேசாபிமானத் தலைவர்களான சேனாபதி பாபத், பாபு சுபாஷ் சந்திர போஸ்
மற்றும் ஏனைய தொண்டர்களும், போர் தொடங்கிய உடனேயே இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்
கீழ் தண்டனை அளிக்கப்பட்ட போது, பண்டித ஜவாஹர்லால் நேருஜி உள்ளிட்ட காங்கிரஸின் இப்போதைய
செயற்குழுவும், வழிநடத்திய காந்திஜியும், குற்ற உணர்ச்சியுடன் அமைதியாக இருந்தார்கள்.
அத்தோடு, எந்தவொரு கண்டனத்தையோ, வருத்தத்தையோ தெரிவிக்கவில்லை. இந்நிலையில், அரசின்
கொள்கையையும், அடக்குமுறையையும், இந்து மகாசபா தனது கடமையிலிருந்து விலகி எச்சரிக்கத்
தவறவில்லை. வெஸ்ட்மினிஸ்டர் ஸ்டேசரில் பரிந்துரைத்ததுபோல் டொமினியன் அந்தஸ்தை உடனடியாக
அரசு வழங்கினால் மட்டுமே இந்திய மக்களின் உண்மையான மற்றும் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும்
என்றும், ஒடுக்குமுறை இன்னும் ஆழமான அதிருப்தியையே ஏற்படுத்தும் என்றும், இந்து மகாசபாவின்
செயற்குழு 1940 மே மாதமே இது தொடர்பான தீர்மானத்தை வலியுறுத்தி நிறைவேற்றியது. நம்பிக்கை
ஒன்றே நம்பிக்கையை ஏற்படுத்தும். அரசியல் அமைப்புச் சட்ட ரீதியான மேம்பாடு மட்டுமே
தேசிய அளவிலான ஒத்துழைப்பை ஏற்படுத்த முடியும்.
‘உலக யுத்தம் வெடித்த உடனேயே பண்டித ஜவாஹர்லால்ஜி
போன்ற மாமனிதர் அவசர அவசரமாக, அதீத ஆர்வத்துடன், உலக ஜனநாயகத்தைக் காக்கும் பிரிட்டிஷுக்கு
நிபந்தனையற்ற ஒத்துழைப்பை இந்தியா வழங்க வேண்டுமென்று அறிக்கை வெளியிட்டார். பிறகு,
மனக்கசப்புடன் அனைத்து ஒத்துழைப்பையும் திடீரெனக் கண்டித்தார். ‘இதன் காரணமாக இந்தியப்
பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பழிவாங்கும் நோக்கத்துடன் அவருக்குத் தண்டனை வழங்கும்
அளவுக்கு வேறு வழியின்றி அரசு தள்ளப்பட்டிருக்கிறதா என்ன?’ என்று நான் கேட்கும் ஒரு
சாதாரண கேள்வி தொடர்பாகக் கொஞ்சம் தீவிர கவனம் செலுத்துமாறும் அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
உலக யுத்தம் வெடித்தவுடன் ஐரோப்பாவிலுள்ள
ஒரு நாடு உலக ஜனநாயகத்தைக் காப்பாற்ற அல்லது சுயநலமற்ற வேறு முனைவுக்காகப் போரில் பங்கேற்றது
என்று காங்கிரஸ் வெளிப்படையாக, அவசர அவசரமாக, அதீத ஆர்வத்துடன் அறிக்கை வெளியிட்டது.
ஆனாலும், ஒவ்வொரு நாடும் தனது சொந்த தேசிய நலனுக்காகவும், ஏகாதிபத்திய இலட்சியத்துக்காகவுமே
களத்தில் இறங்கின. இதன் விளைவாக இந்து மகாசபா தொடக்கம் முதற்கொண்டே தங்கள் தேசிய நலன்களைப்
பெற ஒரே வழி ‘ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு’ மட்டுமே என்று தனக்குத் தானே சொந்தக் கொள்கையை
வகுத்துக் கொண்டது.
இந்தக் கொள்கையின் கீழ் ஒத்துழைப்பு என்பதும்
தொடர்புடைய ஆக்கப்பூர்வ விளைவு என்று சுட்டிக் காட்டப்படுவதும் தெளிவாக இல்லையா? நேர்மையான
ஒத்துழைப்பைப் பெற ஒடுக்குமுறை மட்டுமே சிறந்ததாகக் கருத முடியுமா?
இந்திய அரசு இந்தியாவைத் தொழில்மயமாகவும்,
ராணுவ பலமிக்கதாகவும் மாற்றவும், எதிரிகளின் படையெடுப்பு அல்லது உள்நாட்டுக் குழப்பம்
ஆகியவற்றிலிருந்து இந்தியாவைப் பாதுகாக்கவும், திட்டமிட்டு மேற்கொள்ளும் அனைத்து போர்
முனைவுகளிலும், இந்து சங்கடன்கள் இன்றைய சூழலில் தங்கள் சக்திக்கு உட்பட்டு பங்கேற்க
வேண்டும். இந்து சபா உறுப்பினர் என்ற வகையில் இதில் உண்மையாகவே ஆர்வமாக உள்ளேன். அமைதி
அல்லது நிர்பந்திக்கப்பட்ட ஒத்துழைப்பைப் பெற இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்
அடக்குமுறையை மட்டுமே நம்பியிருக்கிறது. இந்தியாவின் நிஜமான பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும்,
தடையாகவும், இதை விடத் தீவிரமாக வேறேதும் இல்லை. இவற்றையெல்லாம் தாமதமாக உணர்ந்து கொள்வதற்கு
முன்பாகவே, இந்திய அரசு மயக்கத்திலிருந்து விடுபட வேண்டுமென இந்திய அரசை வலியுறுத்தக்
கட்டாயப்படுத்தப்பட்டுள்ளேன்; நல்ல ஆரம்பமாக டொமினியன் அந்தஸ்தை வழங்குவதன் மூலம் உடனடியாக
அரசியல் அமைப்புச் சட்ட வழிமுறைகளுக்கான கதவுகளைத் திறந்து விட வேண்டும். இவ்வாறு நடைபெறும்
பட்சத்தில், இந்திய தேச நலனில் தங்களுக்குக் கடமை இருப்பதுடன், அரசுடன் இணைந்து செயல்படவும்,
நேருஜி போன்ற தலைவர்கள் உணர்வதை அரசு காண வாய்ப்புண்டு. ஒரு பிரிவினர் இந்தக் கொள்கைக்கு
உடன்படவில்லை என்றாலும், இந்திய மக்களுக்கும், பிரிட்டிஷ் அரசுக்கும் இடையேயான ஒப்பந்தத்தை
எதிர்க்கும் அவர்களது கிளர்ச்சி பொது மக்கள் மனத்தில் தானாகவே குறையத் தொடங்கும். இதனால்
அவர்களுடைய எண்ணமும் தானாகவே தோல்வி அடைந்துவிடும். எனவே இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்
கீழ் கடுமையான தண்டனைகள் பெறும் அளவுக்கு எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டார்கள்.
06/11/1940
இந்து சபாக்களுக்கு எச்சரிக்கை
வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பும், உங்கள் கடமையும்.
அனைத்து மாகாண மற்றும் உள்ளூர் உள்ளூர்
இந்து சபாக்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தீவிர கவனம் செலுத்த அவசர அழைப்பு விடப்படுகிறது.
ஐதராபாத் உள்நாட்டு எதிர்ப்பு இயக்கத்தைப் போன்று மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்
என்பதால் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி முக்கியம் மற்றும் அவசரமும் ஆகும். வரவிருக்கும்
குறைந்தபட்சம் பத்தாண்டுகளுக்கு பொதுச் சேவை, சட்டமன்றங்கள் தொடர்பான அனைத்து அரசியல்
அமைப்பு விவகாரங்கள், எதிர்வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவாகும் எண்கள் மற்றும்
தகவல்கள் அடிப்படையில் அட்டவணையிடப்பட்டு உறுதி செய்யப்படும்.
ஏனைய விஷயங்களைப் போன்றே காங்கிரஸின்
முட்டாள்தனமான கொள்கையால், முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பைப் புறக்கணித்த காரணத்தால்,
இந்துக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயினர். காங்கிரஸை வழிநடத்தும் எண்ணக் கோளாறு
கொண்ட காந்திஜியின் சில புதிய ‘உள் குரல்கள்’ இம்முறை கூட இந்துக்களின் நலன்களைத் தியாகம்
செய்வதுடன், போலித்தனமான தேசியத்தையும் திருப்திப்படுத்தும், ‘சத்தியாகிரகம்’ போன்ற
நடவடிக்கையை எடுப்பார்களா என்று சொல்ல முடியாது. எனவே இதன் காரணமாக இந்து மகாசபா தொடக்கத்திலிருந்தே
தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் உறுதியாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.
வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்துக்களின் ஜனத்தொகை வலிமையைத் துல்லியமாகப் பதிவு
செய்ய வலியுறுத்துவதுடன், இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கூட இந்துக்களின் நலன்களைப்
பாதுகாக்கத் தவறினால், தங்கள் வாழ்க்கையின் அனைத்துக் கோணங்களிலும் தங்களுக்குத் தாங்களே
இந்துக்கள் இரட்டைப் பாதிப்பை ஏற்படுத்திக் கொள்வார்கள் என்பதை உணர்த்தும் வகையில்,
சரியான நேரத்தில் களமிறங்கி இந்து நாட்டுக்குத் தனிப்பட்ட முனைவையும், வழிகாட்டுதலையும்
வழங்க வேண்டும்.
புயல் வேகப் பிரச்சாரத்தை மேற்கொள்ளுதல்
இதன் காரணமாக ஒவ்வொரு மாகாணம், மாவட்டம்
மற்றும் உள்ளூர் இந்து சபா உறுப்பினர்கள் இந்தியா முழுவதும் புயல் வேகப் பிரச்சாரத்தை
மேற்கொண்டு இந்துக்களின் எண்ணிக்கையை வரும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் துல்லியமாகப்
பதிவு செய்ய வேண்டும். அதே சமயம் சட்டத்துக்குப் புறம்பாக முஸ்லிம்கள் தங்களது எண்ணிக்கையை
மிகைப்படுத்திப் பதிவு செய்வதையும் எப்படியேனும் தடுத்தாக வேண்டும். மேலும் மக்கள்
தொகை எண்ணிக்கையின் சரியான பதிவு மட்டுமே முக்கியமல்ல. இந்துக்களின் நலன் அரசியல்,
சமூகம், மதம், பொருளாதாரம், வரலாறு என எல்லாப் பிரிவுகளிலும் பாதுகாக்கப்பட வேண்டுமெனில்
அனைத்து விவரங்களும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியமும் கட்டாயமும்
ஆகும்.
பிரச்சாரத்துக்கான எல்லைகளை வகுக்கவும்,
முறைப்படுத்தவும், கீழ்க்காணும் சில முக்கிய அறிவுறுத்தல்களை இந்தியாவிலுள்ள அனைத்து
மாகாண, மாவட்ட, உள்ளூர் இந்து சபாக்களும் வரையறைகளுக்கு உட்பட்டு உடனடியாகப் பின்பற்ற
வேண்டும்.
மாகாண இந்து சபாக்கள் முதற்கட்டமாக மாகாண
மக்கள் தொகைக் கணக்கெடுப்புக் கண்காணிப்பாளர் அலுவலகத்துடனான தொடர்பை ஏற்படுத்திக்
கொள்ள வேண்டும். மாவட்ட மற்றும் உள்ளூர் சபாக்கள் அவரவர் பகுதியில் பொறுப்பிலுள்ள மக்கள்
தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளுடன் அதேபோன்ற தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுவது அவசியமாகும்.
இணைப்பு B
‘பயோனீர்’ பத்திரிகை தேதியிட்ட 1943 பிப்ரவரி 22 (நகரப் பதிப்பு)
சான்றாவணம் டி.79
பிரிவு 26 (சி) பக்கம் 47 மேற்கண்டபடி
உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் காந்திஜிக்கு விண்ணப்பம்
சாவர்க்கர் ஆலோசனை
பம்பாய் பிப்ரவரி 20 : மகாத்மா காந்தியின்
உயிரைக் காப்பாற்ற அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதைத் தவிர இப்போதைக்குத்
வேறு வழியில்லை என்பதால் தேசிய அளவிலான கோரிக்கையை இந்து மகாசபைத் தலைவர் வி டி சாவர்க்கர்
பரிந்துரைத்துள்ளார்.
‘நமக்கு முன்னிருக்கும் இருண்ட சூழலை
நாம் மன உறுதியுடன் சந்தித்தே ஆக வேண்டும். நமக்கு அந்நியமாகவும், கருணையற்றும் இருக்கும்
வைஸ்ராய் லாட்ஜ் கதவுகளின் வாசலில் நிற்பதை விடுத்து மகாத்மா காந்தியின் படுக்கை அருகே
நமது கவனத்தைத் திருப்பி, எந்த தேச நலனுக்காக உண்ணாவிரதம் மேற்கொண்டாரோ, அந்த தேசத்துக்குச்
சேவை புரியத் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டுமென வேண்டுகோள் விடுக்க வேண்டும்’ என்கிறார்
சாவர்க்கர்.
‘இந்த நிமிடம் வரை மகாத்மா காந்திஜியை
விடுதலை செய்து அவரது உயிரைக் காப்பாற்ற எங்களால் இயன்ற வரை அரசிடம் வேண்டுகோள் விடுத்தோம்.
ஆனால் உண்ணாவிரதம் தொடர்பாக நம்பிக்கை மீது நம்பிக்கை வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
மனிதாபிமான முறையில் வைக்கும் வேண்டுகோளும் அரசின் மனத்தில் எந்த வகையான மாற்றத்தையும்
ஏற்படுத்தப் போவதில்லை. அரசின் இந்த முடிவைக் கோடிக் கணக்கான மக்கள் ஏற்காமல், அதன்
மனப்பாங்கைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். நேரம் மிக வேகமாக ஓடிக் கொண்டே இருப்பதால்,
விமர்சனம் மற்றும் எதிர்ப்பென ஒரு நிமிடத்தைக் கூட நம்மால் வீணடிக்க முடியாது. மகாத்மாவின்
விடுதலையை நாம் அரசுக்கு வைக்கும் வேண்டுகோள், ராஜிநாமா அல்லது தீர்மானங்கள் மூலம்
பெற முடியாது.
‘மகாத்மா காந்தி உயிரிழப்பதற்கு முன்பாக
அவரது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேறெந்த நியாயமான கேள்வியும் தடையாக இருக்க முடியாது.
மகாத்மா காந்தி உண்ணாவிரதத்தைத் தொடங்கும் போது அதை உயிருக்கான இடர்ப்பாடாகக் கருதாமல்
கடுமையான சோதனையை வெற்றி கொள்ளவே விரும்புவதாகக் கூறினார். இதன் காரணமாக இதுவொரு திறன்
உண்ணாவிரதம் ஆகும். எத்தனை நாள்கள் என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றிக் கூறினாலும்,
அதுவொரு அரைகுறைக் கணக்கே ஆகும்’.
உயர்ந்த நோக்கம்
இரண்டாவதாக, தேவையற்ற சிறு விஷயங்களுக்கு
அதிக முக்கியத்துவம் அளிப்பதைத் தவிர்க்கும் வகையில் உயர்ந்த நோக்கம் ஒன்றுள்ளது. மகாத்மா
காந்திஜியின் வாழ்க்கை நாட்டின் சொத்து என்பதால் அவருக்கே சொந்தமானதல்ல. நமது நச்சரிப்புகள்
அல்லது முகஸ்துதிகளுக்கு அரசு இறங்கி வருவதை விடவும், தேசிய நலனுக்காக அவர் இறங்கி
வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். தான் எடுத்த முடிவுகள் தேச நலனுக்குக் கேடு விளைவிக்கும்
என்பதைத் தெரிந்து கொண்டாலோ, ராஜ்கோட் மற்றும் ஏனைய இடங்களில் மேற்கொண்ட சபதங்களைப்
போன்று தான் மேற்கொண்ட சபதங்களில் ஏதேனும் சிறு தவறுகள் காணப்பட்டாலோ, தேசிய நலனைக்
கருத்தில் கொண்டு அவற்றை மகாத்மா காந்திஜி பலமுறை புறக்கணித்திருப்பதை நாம் அறிவோம்.
நிறைவாக சாவர்க்கர் கூறுவதாவது: ‘எனவே
தில்லி கருத்தரங்கில் பங்கேற்கும் அனைத்து கனவான்களுக்கும் நான் தாழ்மையுடன் கேட்பது
என்னவெனில் ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காமல், மகாத்மா காந்திஜி தனது உண்ணாவிரதத்தை உடனடியாகக்
கைவிட வேண்டுமென்று நீங்கள் மட்டுமின்றி அவரது உயிரைக் காப்பாற்ற ஏற்கெனவே துடித்துக்
கொண்டிருக்கும் நாடு முழுவதுமுள்ள நூற்றுக் கணக்கான நிலையங்களிலுள்ள பிரதிநிதிகள் அனைவரும்
கூட்டாகக் கையெழுத்திட்டு வேண்டுகோள் விடுக்க வேண்டும்’.
இணைப்பு C
ஆனந்த் பஜார் பத்திரிகை தேதி 1944 பிப்ரவரி 24 (சான்றாவணம் டி.78)
பிரிவு 26 (எஃப்) பக்கம் 50 மேற்கண்டபடி
வி டி சாவர்க்கர் கீழ்க்காணும் தந்தியைக்
மகாத்மா காந்திஜிக்கு அனுப்பி உள்ளார்:
கஸ்தூரி பாய் மரணத்துக்கு என் ஆழ்ந்த
அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம்பிக்கையான மனைவியாகவும், அன்பான அன்னையாகவும்,
கடவுள் மற்றும் மனிதனுக்கான சேவையில் மேன்மையான மரணத்தைத் தழுவியுள்ளார். இந்த நாடே
உங்கள் துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறது.
இணைப்பு D
‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகை’ 1948 பிப்ரவரி 7 பிரிவு 29,
பக்கம் 55 மேற்கண்டபடி
சாவர்க்கரின் கருத்து
பிப்ரவரி 4 அதாவது கைதாவதாற்கு முதல்
நாள் இந்து மகாசபாவின் முன்னாள் தலைவர் வி டி சாவர்க்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
‘மகாத்மா காந்தி படுகொலை தொடர்பாகத் தில்லியிலுள்ள இந்து மகாசபா தலைவர் மற்றும் செயற்குழு
உறுப்பினர்கள் சிலர் கூட்டாக விடுத்த அறிக்கை, தம் உணர்வுகளை அதிகாரப்பூர்வமாக சிறப்பாக
வெளியிட்டிருக்கிறது. அத்துடன், இந்து மகாசபா என்பது ஜனநாயக மற்றும் பொது அமைப்பு என்பதையும்
தெளிவுபடுத்தி உள்ளது. இந்து மகாசபையின் துணைத் தலைவர்களுள் ஒருவன் என்ற முறையில்,
நானும் அவர்களது உணர்வுகளுடன் உடன்படுகிறேன். தனிநபர் வெறுப்பு அல்லது கூட்டத்தின்
வெறிச் செயல் காரணமாக ஏற்படும் இதுபோன்ற சகோதரச் சண்டைகளை எந்தச் சமரசமும் இன்றி வன்மையாகக்
கண்டிக்கிறேன். வெற்றிகரமான நாடு தழுவிய புரட்சிக்கும், புதிதாகப் பிறந்த தேசிய அரசுக்கும்,
சகோதரத்துவ உள்நாட்டுச் சண்டையைக் காட்டிலும், குறிப்பாக அந்நிய சக்திகளால் தூண்டப்பட
விரோதத்தை விடவும், மோசமான எதிரி இருக்க முடியாது. வரலாறு உரைக்கும் இந்த உறுதியான
எச்சரிக்கையை ஒவ்வொரு நாட்டுப்பற்று மிக்க குடிமகனும் நெஞ்சில் நிறுத்தவேண்டும்.
நிறைவு