Posted on Leave a comment

பட்ஜெட் 2019 | ஜெயராமன் ரகுநாதன்

இந்த பட்ஜெட்டின் முப்பெரும் தாக்கம்:

ஐந்து ஏக்கருக்கும்
குறைவான நிலம் வைத்திருக்கும் பன்னிரண்டு கோடி விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ 6,000
நேரடியாக அவர்களது வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும்.

மூன்று கோடிக்கும்
அதிகமான
எண்ணிக்கையில் உள்ள சம்பளம்
அல்லது பென்ஷன் வாங்கும் அலுவலர்களுக்கு Standard Deduction குறைப்பின் மூலம் வருடத்திற்கு
ரூ 500 முதல் ரூ 3,600 வரை சேமிப்பு.

பத்து கோடிக்கும்
அதிகமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அவர்களின் 60 வயதுக்குப்பின் மாதம் ரூ
3,000 வரை பென்ஷன். வேலை செய்யும் காலத்தில் அவர்கள் மாதம் ரூ 100 செலுத்தினால் போதும்.

முழுக்க முழுக்க தேர்தலை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட்
என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு, ‘ஆமாம்! இப்ப என்னன்றீங்க!’ என்ற ரீதியில்
ஆணித்தரமாக பதில் அளிக்கப்பட்டதும், அவை, முக்கியமாக காங்கிரஸ், சட்டென்று வாயை மூடிக்கொண்டதன்
பின்னணி அப்படி ஒன்றும் அதிசயமல்ல. ஏனென்றால் கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்
கடைசி வருடத்தில் ப. சிதம்பரம் இந்த மாதிரி ஒரு பட்ஜெட்டைத்தான் அளித்தார். ஆனால் அவர்
அளித்த சலுகைகள் மேல்மட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் போய்ச்சேரும் வகையில் இருந்தன.
கார்ப்பரேட்டுக்களுக்கு பலனளிக்கும் மறைமுகமான சலுகைகள் அவை என்னும் குற்றச்சாட்டும்
இருந்தது.

உண்மையில் இந்த பட்ஜெட்தேர்தல் பட்ஜெட் மட்டும்தானா?

இது பாஜக அரசின் ஐந்தாண்டுச் செயல்பாட்டின் ஒரு மதிப்பீடு
என்பது தெளிவு. இந்த அரசின் கடைசி பட்ஜெட் என்பதாலும் இன்னும் இரண்டே மாதத்தில் தேர்தல்
வந்து அதன் மூலம் வேறொரு அரசு பதவியேற்கும் சாத்தியம் இருப்பதாலும் இந்த பட்ஜெட்டில்
அளிக்கப்பட்ட சலுகைகள் கொஞ்சம் அதிகம், புதிதாகப் பதவி ஏற்கும் அரசுக்குப் பெரும் சுமையை
விட்டுச்செல்வது போன்ற செயல் என்னும் வாதத்தை முற்றிலும் புறந்தள்ள முடியாது.

அப்படியானால் இந்த பட்ஜெட் செய்திருப்பது என்ன?

கடந்த ஐந்தாண்டுகளில் பாஜக அரசால் மிக அடிப்படையான தொலைதூரப்பார்வை
கொண்ட பல முடிவுகள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. முதன்மையாக, கடுமையான நிதி நிலை
ஒருங்கிணைப்பு (Fiscal consolidation) முடிவுகள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும்
வரிச்சீர்திருத்தம், மிகச்சிறப்பாக மக்களைச் சென்றடைந்த மானியங்கள் மற்றும் கணிசமாக
அதிகரித்த முதலீடுகள், குறிப்பாக கட்டமைப்புச் சார்ந்த முதலீட்டின் அதிகரிப்பு போன்ற
செயல்களின் நல்ல விளைவுகளையும் அதன் லாபங்களையும் மக்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய
ஒரு நல்ல விஷயத்தைத்தான் இந்த பட்ஜெட் செய்திருக்கிறது.

வரி கட்டுவோருக்கு சலுகைகள், விவசாயிகளின் அவலத்தைக் குறைக்கும்
வகையிலான நிவாரண நடவடிக்கைகள் அளிக்கும் இந்த பட்ஜெட், இவற்றால் ஏற்படும் சுமைகள் நிதி
நிலைமையின் மேல் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தா வண்ணம் செய்யப்பட்டிருப்பதைப் பாராட்டத்தான்
வேண்டும். பண மதிப்பிழப்பு, ஜி எஸ் டி போன்ற கட்டமைப்பு நடவடிக்கைகளால் பாதிப்புக்குள்ளான
நேர்மையான மக்களுக்கு அதற்கான வெகுமதியை அளித்திருக்கிறது இந்த பட்ஜெட்.

வல்லுநர்கள் எழுப்பும் ஒருகேள்வி, விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டில்
வழங்கப்படப்போகும் தொகை கிட்டத்தட்ட ரூ 20,000 கோடிக்கு மேல் வரும். அடுத்த சில வருடங்களில்
ரூ 75,000 கோடி வரை செலவாகும். இத்தகைய மாபெரும் செலவு எப்படி நமது நாட்டு நிதி நிலைமையைப்
பாதிக்காமல் இருக்கும் என்பதே. ஆனால் ஒன்றைக் கவனிக்க வேண்டும். உலகத்திலேயே மிக வேகமாக
வளர்ந்துவரும் ஆறாவது பொருளாதாரமாக இந்தியா இருக்கிறது. இந்த அளவு மிகப்பெரும் பொருளாதாரத்தைக்கொண்ட
அரசால் நிச்சயமாக மேலே சொன்ன அளவு சலுகைகளை மக்களுக்கு வழங்க முடியும். அதனால் ஏற்படும்
தாக்கம் சதவீத அளவில் அதிகமிருக்காது. விவசாயக்கடன் தள்ளுபடியை விட இந்தச் சலுகை அதிக
விவசாயிகளுக்குப் பயனளிக்கும். மேலும் இதில் முறைகேடுகள் நடக்கும் வாய்ப்புக்களும்
குறைவு.

பண மதிப்பிழப்பு, ஜி எஸ் டி நடவடிக்கைகளினால் நாட்டில் வரி
கட்டுவோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. அதனால் வரி விகிதத்தைக் குறைத்தாலும்
மொத்தமாக அரசுக்கு வரும் வரிப்பணம் அதிகமாகவே இருக்கும் என்பதை நாம் புள்ளி விவரங்களின்
மூலமாகப் புரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு, பல ஆண்டுகளாக வரி வருமானம் மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் (GDP) 10% லேயே தேங்கிக்கிடந்தது. ஆனால் இப்போது அது 12% ஆக உயர்ந்திருக்கிறது.
அதே போல ஜி எஸ் டி வரி வருமானமும் இப்போது 5.5% ல் இருந்தாலும் வரும் ஆண்டுகளில் அது
கணிசமாக உயர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு விவரம் பாருங்கள், விவசாயிகளுக்கு
அளிக்கப்பட்ட சலுகைகள் மற்றும் வரி குறைப்பினால் உண்டாகும் செலவினம் நமது மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் (GDP) 0.4% மட்டுமே. இதுவுமே 0.3% அதிகரித்துவிட்ட வரி வருமானத்தினால்
முக்கால் வாசிக்கு மேல் சரிக்கட்டப்பட்டுவிடும்.
மேலும் இந்த அரசு ஜன்தான் வங்கிக் கணக்குகள் தொடங்கியும்
ஆதார் தகவல் ஒருங்கிணைப்பு மூலமாகவும் விவசாயிகளுக்கு மானியங்களை நேரடியாக, எந்தவித
இடைத்தரகர்களும் இல்லாத வகையில், அவர்களது வங்கிக்கணக்கிலேயே செலுத்திவிடும் வசதியினால்
இந்த மாபெரும் சலுகைகள் உண்மையான பயனாளிகளைச்சென்றடைவது உறுதி. இந்த நேரடி நிதித்தொடர்பு
மூலமாக அரசின் சின்ன பட்ஜெட் செலவினங்கள் கூட நல்ல தாக்கத்தை சாமானியர்களிடம் ஏற்படுத்தி
விடுவது கண் கூடு. காலதாமதம் இல்லாமல், இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் மானியத்தைப்
பெற்றுவிடும் வசதி மிகப்பெரிய வரமாகிவிட்டது.
அடுத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பென்ஷன் திட்டம்
இன்னொரு நல்ல பயனை மக்களுக்குக்கொண்டு செல்லும் முயற்சி. ஆனால் இதன் நிர்வாகம் எப்படி
அமையப்போகிறது என்பது ஒரு கேள்விதான். இத்தனை பெரிய தேசத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களை
ஒருங்கிணைத்து பென்ஷன் திட்டத்துக்குள் கொண்டு வந்து நிர்வகிப்பது சவால்தான்.

இன்று நாம் கண்டு கொண்டிருப்பது குறைவான பண வீக்கம் மற்றும்
ஓரளவுக்கு நிலையான உணவுப்பொருட்களின் விலைவாசி. இவ்விரண்டும் விவசாயிகளுக்கு, செலவுக்கு
மேற்பட்ட விலையைப்பெற்று அவர்களின் உற்பத்தியை அதிகரிக்கும் ஊக்கத்தையும் தரக்கூடும்.
இந்த பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை சென்ற வருடத்தைப்போல
அதே அளவான 3.4%க்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சலுகைகளுக்குப் பின்னரும் பற்றாக்குறை
கட்டுப்பாட்டில் இருப்பது மிகச்சிறப்பான அம்சம் என்பதில் சந்தேகமில்லை.

நடுத்தர வர்க்கத்திற்கு அதிகமான சலுகைகள் வழங்கப்பட்டிருப்பது
பரவலாக வரவேற்பைப் பெற்றுள்ளது! வரி விலக்கு, வரிப்பிடிப்புச்சலுகை (Tax Deduction
at source), வீடு சம்பந்தப்பட்ட சலுகைகள் ஆகியவை நடுத்தர வர்க்கத்திற்கு இன்னும் அதிக
செலவு செய்யும் திறனை உண்டாக்கி நுகர்வுப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பது, உற்பத்திப்
பொருளாதாரம் மற்றும் நாட்டின் மொத்த பொருளாதாரத்திற்குமே நன்மை பயக்கும்.

மொத்த வரி வருமானம் 25.52 லட்சம் கோடிகளை எட்டியுள்ளது. இது
சென்ற ஆண்டைவிட 13.5% அதிகமாகும். அதே சமயம் செலவினங்களின் அதிகரிப்பு 13.3% தான்
(ரூ 27.84 லட்சம் கோடி) என்பதால் வருமான உயர்வு செலவின உயர்வை ஓரளவேனும் கட்டுப்படுத்திவிடும்
என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஆனால் முதலீட்டைப் பொருத்த வரையில் கட்டுமானப்பணிக்கான செலவு
(Capital Expenditure) மொத்தம் 9.53 லட்சம் கோடியில், கிட்டத்தட்ட 65% வரை, கடனில்லாமல்
அரசே ஈட்டும் பொருளிலிருந்துதான் சரிக்கட்ட வேண்டும். இது நடைமுறையில் சாத்தியமா என்பது
பெரும் சவால்.

கவலைக்குரிய அம்சம் என்னவென்றால் கடந்த ஆறு மாதங்களில் ஜி
எஸ் டியின் மூலம் வரும் வரிப்பணம் 7% மட்டுமே உயர்ந்திருக்கிறது. ஆனால் இந்த வருமானம்
25% வரை உயரும் என்னும் அளவில் அடுத்த வருடகணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.
ஒரு வேளை அது நடக்கவில்லை என்றால் பட்ஜெட்டில் துண்டு விழுவதைத் தவிர்க்க முடியாது.
அடுத்து கேட்கப்படும் கேள்வி, வேலை வாய்ப்பு உயரவே இல்லையே
என்பது. ஆனால் இதற்கான பதில், நேரடி வேலை வாய்ப்பு வெறும் எண்ணிக்கையில் இல்லை. பத்துப்பதினைந்து
வருடங்களுக்கு முன்பெல்லாம் தனியார் மற்றும் பொது நிறுவன வேலைவாய்ப்புக்களுக்கே மிக
அதிகத் தேவை இருந்தது, இன்று தனி வியாபாரம் மற்றும் சுய தொழில் செய்பவரின் எண்ணிக்கை
கணிசமாக உயர்ந்துள்ளது. சமூசா விற்பவர் பற்றி மோடியை ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும்
பரணி பாடியதை நாம் மறந்திருக்க மாட்டோம். ஆனால் அவர் பேசியதுதான் நிதரிசனமான நிஜம்.
ஜி எஸ் டி மற்றும் வருமான வரிகள் கணிசமாக உயர்ந்துகொண்டு வருவது, அதிக வேலை வாய்ப்புக்களைத்தானே
காட்டுகிறது. கூடவே வரி செலுத்துவோர் எண்ணிகையும் பல மடங்கு உயர்ந்திருப்பதும் மறைமுகமாக
வேலை வாய்ப்பு பெருகிவருவதைத்தானே குறிக்கும்! முத்ரா திட்டத்தின் கீழ் 70% கடன் பெண்களுக்கே
அளிக்கப்பட்டிருக்கிறது. இது கிட்டத்தட்ட ரூ 7 லட்சம் கோடி அளவாகும். இதன் மூலம் எத்தனையோ
தொழில்கள் தொடங்க/விஸ்தரிக்கப்பட்டிருக்கின்றன. இதெல்லாம் கூடுதல சுய வேலை வாய்ப்புதானே!

சலுகைகள் பயனாளிகளைச் சென்றடைவதில் இருக்கும் குறைபாடுகளை
விலக்குவது அல்லது குறைப்பதே இந்த பட்ஜெட்டின் முக்கியமான அடிநாதம். இவற்றை நிர்வகிப்பதும்
அதிகக் கஷ்டமான விஷயமும் அல்ல. இப்படிச் செய்வதன் மூலம் வரும் எதிர்கால அரசாங்கங்களும்
இந்த மாதிரியான முறைகளைப் பயன்படுத்தியே மக்களுக்கான பயன் தரும் திட்டங்களை நிர்வகிக்க
வேண்டும். அப்படிச் செய்தால் தேசத்தின் பொருளாதார அடிப்படைக் கட்டமைப்பை பலவீனப்படுத்தாமல்
மக்களையும் வளர்ச்சியில் பங்கேற்கச்செய்து பயன் பெற வைக்க முடியும். அதை இந்த பட்ஜெட்
செய்திருக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் ஒரு தனி மனிதப் பொருளாதாரத்துக்கு
பா ஜ செய்தவை:

• பணவீக்கத்தைக் கட்டுக்குள்
வைத்திருந்தது.
• கடன் வாங்குதற்கான
செலவை (cost of borrowing) குறைத்தது.
• வருமான மற்றும்
முதலீட்டு வரிகளை உயர்த்தினாலும் நாம் நுகரும் பொருட்களின் வரியைக்குறைத்தது.
• வசதிகளைப் பெருக்கியது
– முக்கியமாக கழிப்பறை, மின்சாரம், சாலை, வங்கிக்கணக்கு மற்றும் கல்வி கிராமப்புறத்தைச்
சென்றடையச் செய்தது.
• நடுத்தர வர்க்கத்துக்கு,
முக்கியமாக அவர்களின் சேமிப்பை அதிகப்படுத்தி சொத்துக்களைப் பெருக்கும் வகையில் அதிகம்
செய்யப்படவில்லை. (இந்த பட்ஜெட்டில் வரி குறைப்பு தவிர.)

நாட்டின் பொருளாதாரத்துக்கு பாஜக அரசு செய்தவை:

• கடந்த வருடங்களின்
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) எண்ணிக்கையைத் திருத்தியது. (அதனால் சமீபத்திய GDP
எண்ணிகை உயர்த்திக் காட்டியது.)
• நிதிப்பற்றாக்குறை,
மாநியங்கள், கடன் மற்றும் விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருந்தது.
• வெளிநாடு முதலீடுகளை
அதிக அளவில் கொண்டு வந்தாலும் உள்நாட்டு முதலீட்டை அதிகம் பெருக்க முடியாதது.
• வேலை வாய்ப்பு ஏற்படுத்தியது
பற்றி முழுமையாக மக்களை உணரச்செய்ய முடியாதது.

இந்த பட்ஜெட் ஒரு பாசிடிவான மன நிலையை உண்டாகியிருப்பதை மறுக்க
முடியாது. அதே சமயம் சவால்களை எதிர்கொண்டாக வேண்டும் என்னும் நிதர்சனத்தையும் ஒதுக்க
முடியாது. 2014லிலிருந்து 2019 வரை நமது GDP 918 பில்லியன் டாலர் ($918 பில்லியன்)
கூடியிருக்கிறது. ஒரு ஒப்பீட்டுக்காகப் பார்க்கப்போனால் பாகிஸ்தானின் GDP $307 பில்லியன்,
பங்களாதேசத்தின் GDP $286 பில்லியன். அதாவது கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியா ஒரு பாகிஸ்தானையும்
இரண்டு பங்களாதேசத்தையும் தன்னுடன் இணைத்துக்கொண்டுள்ளது.

இப்படிப்பட்ட இந்தியா போன்ற பரந்த தேசத்தில் சிக்கல்கள் மிக
அதிகம். வளர்ச்சியின் நன்மைகளைக் கடைக்கோடி மக்களும் அனுபவிப்பதற்கான ஏற்பாட்டைத் தொடங்கியிருக்கிறது
இந்த பட்ஜெட். இது தொடர வேண்டும் என்பதுதானே ஒவ்வொரு இந்தியனின் வேண்டுகோளாக இருக்க
முடியும்.

Posted on Leave a comment

இரட்டைப்படகு சவாரி செய்த அலிக் பதம்ஸீ | ஜெயராம் ரகுநாதன்

“Alyque Padamsee swam against the tide for contentious campaigns whose time had come – his Kamasutra Condom ads with Pooja Bedi blew sex out of the closet……

Vikram Phuken, The Hindu

இந்த வாக்கியங்கள் அலிக் பதம்ஸியை மிகச்சரியாக விவரிக்கின்றன எனலாம். நவம்பர் 18, 2018ல் தன் 90வது வயதில் காலமான பதம்ஸி இந்திய விளம்பர உலகில் முடி சூடா மன்னராகவே இருந்தவர். விளம்பரம் மட்டுமில்லமல் அவர் ஒரு மிகத்திறமையான தியேட்டர் ஆசாமியும் கூட. சினிமாவிலும் தலை காட்டியிருக்கிறார்.

நான் ஒண்ணரை வருடப் பயிற்சி முடித்து மேலாளராகப் பதவி ஏற்றதும் ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட்டின் அழகு சாதனப்பொருட்கள் பிரிவில் சேர்ந்தேன். அந்தப் பிரிவிலிருந்துதான் இன்றைய பிரபல லிரில் சோப், ஃபேர் அண்ட் லவ்லி போன்ற அழகு சாதனப்பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வந்தார்கள். அன்றைய பிரிவின் தலைவர் சித்தார்த் சென் என்பவர் அன்றைய மார்க்கெட்டிங் உலகின் உஸ்தாத் என்று அறியப்பட்டவர். பதம்ஸீயின் நல்ல நண்பர். இருவருமாகச் சேர்ந்துதான் மிக மிக வெற்றிகரமான அந்த நீர் வீழ்ச்சியில் இளம் பெண் குளிக்கும் லிரில் சோப் விளம்பரத்தை உண்டாக்கியவர்கள்.

1985ல் பத்து வருடங்களுக்கு முந்தைய லிரில் சோப்பின் விளம்பரப் படத்தை மீண்டும் எடுக்கத் திட்டம் போடப்பட்டபோது அந்தப் பிரிவின் நிதி மேலாளர் என்னும் முறையில் பல கூட்டங்களில் நானும் பங்கேற்றிருக்கிறேன். நேரிடையாக பதம்ஸீயின் அணுகுமுறையைக் கண்டவன் என்னும் வகையில் எனக்கு அவர் மேல் சிவாஜி கணேசன் போல ஒரு மதிப்பு ஏற்பட்டது. மும்பையின் லீவர் ஹௌஸ் என்னும் எங்கள் அலுவலகத்தின் கான்ஃபெரென்ஸ் அறையில் தெலுங்குப்பட தேவலோகக் காட்சி போல சிகரெட் புகை சூழ சித்தார்த் சென்னும் அலிக் பதம்ஸீயும் விவாதித்து, வினாடி வினாடியாக அந்த லிரில் பட விளம்பரத்தை உருவாக்கியதை ஓரளவுக்குக் கண்ணால் கண்டவன் நான். படைப்புத்திறம் என்பது அங்குலம் அங்குலமாகச் செதுக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை நிதரிசனமாகப் புரிந்துகொண்ட தருணங்கள் அவை. ஒரு விளம்பரம் எவ்வாறெல்லாம் மக்களைச் சென்றடையும், அதன் தாக்கங்கள் எவ்வாறெல்லாம் இருக்கக்கூடும், அது எங்ஙனம் ஒரு பொருளின் விற்பனைக்குச் சாதக பாதகங்களை ஏற்படுத்தும் என்னும் இயலைக் கசடறக்கற்றவர் அலிக் பதம்ஸீ.

இந்த இருவரின் விவாதங்களில் ஒரு சுவாரஸ்ய அம்சம் – சர்வ சகஜமாகக் கெட்ட வார்த்தைகள் இறையும். ‘நான்கு எழுத்து ஆங்கிலச் சொல்’ ஒவ்வொரு வாக்கியத்திலும் இரண்டாவது இருப்பதைக் கவனித்திருக்கிறேன்!

பதம்ஸி உருவாகின லைஃப் பாய் விளம்பரம் பட்டி தொட்டிகளிலெல்லாம் அந்த சோப்பைக் கொண்டுபோய்ச் சேர்த்ததை நாமறிவோம். வடஇந்தியாவில் அப்போதெல்லாம் கடைகளில் பெயர்கூடச் சொல்லாமல் ‘லால்வாலி சோப்’ (சிகப்பு கலர் சோப்) என்றே கேட்டு வாங்குவார்களாம். நிதி மேலாளராக இருந்த நான் லைஃப்பாய் சோப்பின் விற்பனை எப்படியெல்லாம் உயர்ந்தது என்பதை அறிவேன்.

பதம்ஸீயின் இன்னொரு அபார உருவாக்கம் செர்ரி பிளாசம் ஷூ பாலிஷ். மிகச் சாமர்த்தியமாக சார்லி சாப்ளினை அதன் பிராண்ட் அம்பாசடாராக்கி பள்ளி போகும் குழந்தைகளின் செல்ல பிராண்டாக்கிவிட்டார். அம்மாக்கள் கடைகளில் சார்லி சாப்ளின் ஷூ பாலிஷ் என்று கேட்டு வாங்குவார்களாம்.

லலிதாஜியும் சர்ஃப் துணி சோப்பும் தெரியாத நடுத்தரப் பெண்மணி இன்று இந்தியாவில் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்குப் பெண்களை ஈர்த்த விளம்பரம். இந்த விளம்பரத்துக்குப்பின் கவிதா சௌத்ரி இன்னும் உயரத்துக்குப்போனது தெரிந்த விஷயம்.

பதம்ஸீயின் இன்னொரு மாஸ்டர் ஸ்ட்ரோக் காமசூத்ரா ஆணுறை விளம்பரம். நான்கு சுவர்களுக்குள் மட்டுமே நடந்த சமாசாரத்தை விளம்பரத்தின் மூலம் வீட்டின் அறைக்குள் கொண்டுவந்தார் என்று அவர் மேல் குற்றச்சாட்டு உண்டு. இந்தியாவின் விளம்பர உலகம் வயதுக்கு வந்துவிட்டது என்று இந்தியர்களுக்கே உணர்த்தியவர் பதம்ஸீ. இந்த விளம்பரத்தில் நடித்த பூஜா பேடி மிகப் பிரபலமனது இன்னொரு சுவாரஸ்யம்.

மார்க்கெட்டிங் உலகில் பொருளைத் தயாரிக்கும் நிறுவனங்களில் இருக்கும் பெரிய மேலாளர்கள் இந்த விளம்பரங்கள் எப்படி வரவேண்டும் என்பதில் மிகுந்த முனைப்பு காட்டுவார்கள். அவர்களின் குறுக்கீடுகளைத் தாண்டி ஒரு நல்ல பிராண்ட் விளம்பரம் கொண்டு வருவது மிக மிகக் க‌ஷ்டமான செயல். பதம்ஸீ அந்தக் கடுமையான சவால்களைத் தன் அபாரத் திறமையாலும் ஆளுமையாலும் அனாயாசமாகக் கையாண்டு வெற்றி பெற்றார்.

பதம்ஸிக்குள் ஒரு நடிகர் இருந்தார் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. அவர் முதலில் நடித்தது தன் சொந்தச் சகோதரரின் நாடகக்குழுவில், ஏழே வயதில்! ஷேக்ஸ்பியரின் வெனீஸின் வியாபாரி நாடகத்தில் நடித்தார். என்ன வேடம் போட்டார் என்பது பற்றிச்செய்தி இல்லை. அடுத்த 70 வருடங்களில் அவர்களுடைய குழுவின் நாடகங்களை இயக்கியது பதம்ஸீ அல்லது அவரின் மனைவி பேர்ல் பதம்ஸி. நாடக உலகிலும் பல புதுமைகளைச் செய்தவர் பதம்ஸீ.

1974ல் ஆண்ட்ரு லாயிட் வெபெர் (ஆம் ஸ்லம் டாக் மில்லியனரின் இசையமைப்பாளரேதான்!) ‘ஜீஸஸ் கிரைஸ்ட் சூப்பர்ஸ்டார்’ என்னும் பிராட்வே ரக இசை நாடகத்தை அரங்கேற்றி இந்தியாவில் இதுபோன்ற நாடகங்களுக்கு பெரும் வரவேற்பை ஏற்படுத்தினார். பதம்ஸீ ஓரளவுக்கு வெகுஜன வகை நாடகங்களையே இயக்கினார் என்றாலும் புதுமைகளும் செய்யாமலில்லை. கிரிஷ் கர்நாடின் துக்ளக் நாடகத்தை இவர் மேடையேற்றியது நாடக உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

இவர் மீது விமரிசகர்கள் வைக்கும் குற்றச்சாட்டு இவர் தன் படைப்புக்களில் வணிகத்தன்மையும் மேட்டிமைத்தன்மையுமே ஆதரித்தார் என்பார்கள். முக்கியமாக விஜய் டெண்டுல்கர், பாதல் சர்க்கார் போன்றவர்களின் அடித்தட்டுக் கதைக்கருவை இவர் அதிகம் தீண்டியதில்லை என்னும் விமரிசனத்துக்குள்ளானவர். பதம்ஸீ இதற்கெல்லாம் கவலைப்பட்டுப் பதில் சொன்னாரில்லை.

உலகளாவிய நிலையில் நடிப்புக்காக பதம்ஸீயின் பெயர் வெளி வந்தது, ரிச்சார்டு அட்டன்பரோ இயக்கிய காந்தி படத்தில் இவரின் ஜின்னா வேடத்துக்காகத்தான். ஒரு காக்டெயில் விருந்தில் இவரின் அனாயாச பர்சனாலிடியைப் பார்த்த அட்டான்பரோ இவர்தான் ஜின்னா என்று அப்போதே முடிவெடுத்தார் என்பார்கள். அந்தப் படத்தில் இவர் அணிந்து வந்த தலையை ஒட்டிய குல்லாயும் ஒற்றை மூக்குக்கண்ணாடியும் புதிதாகப் பிறக்கவிருக்கும் ஒரு தேசத்தின் படபடப்பை நிதரிசனமாகத் திரையில் கொண்டு வந்த அற்புதத்தை நாம் பார்த்தோம்.

பல நடிப்புக் கல்லூரிகளுக்குச்சென்று பாடம் எடுத்திருக்கிறார். இன்றைய விளம்பர உலகத்தின் பல விற்பன்னர்கள் பதம்ஸீயின் புகைப்படத்தை வீட்டில் பூஜை அறையில் வைத்திருப்பதாகச் சொல்லுவார்கள்.

இந்தியாவின் விளம்பர உலகின் ‘பிராண்ட்’ தந்தை என்றே சொல்லும் தகுதி பெற்றவர் பதம்ஸீ. அவருடைய படைப்பாற்றலால் மட்டுமே இந்தியாவில் நூறுக்கும் மேற்பட்ட பிராண்டுகள் உருவாகியிருக்கின்றன.

அலிக் பதம்ஸீக்கு விளம்பர உலகத்தின் ஆஸ்கார் என்று கருதப்படும் International Clio Hall of Fame nomination கிடைத்திருக்கிறது. இதைப்பெற்ற ஒரே இந்தியர் இவர்தான் என்பது விசேஷம்.

லிரில் சோப் விளம்பரத்தில் பிரீதி சிந்தாவுக்கு முன்பு முதன்முதலில் நடித்த கரென் லூனல் என்னும் நடிகை, “அலிக் பதம்ஸீ இந்த விளம்பரத்தின் நுணுக்கங்கள் பற்றி ஷூட்டிங் தினங்களில் தினமும் பேசிப்பேசி என் மூடை உருவாக்கினார். எனக்கான புகழ் அவருக்குப் போய்ச்சேர வேண்டும்” என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இத்தனைக்கும் இந்த விளம்பரத்துக்கான கதைக்கரு (ஸ்டோரி போர்ட்) என்ன தெரியுமா? “நீர் வீழ்ச்சியில் இளம் பெண்!” அவ்வளவுதான்.

அதுதான் அலிக் பதம்ஸீ!

Posted on Leave a comment

ஜெர்மனியின் அக்டோபர் திருவிழா | ஜெயராமன் ரகுநாதன்


முன்குறிப்பு: உலகின் ஓரிடத்தில் நடக்கும் ஒரு கலாசாரத் திருவிழாவின் கோலாகலக் குறிப்புகள் என்பது மட்டுமே இக்கட்டுரையின் நோக்கம். மற்றபடி, குடி குடியைக் கெடுக்கும் என்பதிலும், குடியைத் தவிர்ப்பது மிகவும் அவசியம் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.
*
ஜெர்மனியின் பவேரியத்தலைநகரமான ம்யூனிக்கில் கொண்டாடப்படும் இந்த அக்டோபர் திருவிழா (Oktoberfest) லிட்டர் லிட்டராக பியர் குடிப்பதைத்தான் முதன்மைப்படுத்துகிறது. சாராயம் குடிக்க திருவிழாவா என்று நாம் மிரட்சியுடன் கேட்டால் என்றால், அதனால் என்ன என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்.

நம் ஊர் டாஸ்மாக்கில் குடித்துவிட்டு மட்டையாவதற்கோ அல்லது காதல் தோல்வியில் புலம்புவதற்கோ அல்ல; இங்கே பியர் குடிப்பது ஒரு கலாசார அடையாளம். அதுவும் இந்த அக்டோபர்ஃபெஸ்ட் என்னும் திருவிழா 1810ம் ஆண்டு பவேரிய மன்னர் லுட்விக் (Ludwig 1786 – 1868) Saxe Altenburg என்னும் சிறிய ஜெர்மன் பிரதேசத்தின் இளவரசி தெரெஸாவைத் திருமணம் புரிந்துகொண்ட சமயத்தில் தொடங்கப்பட்ட கோலாகலம்.

தம் மன்னரின் திருமண வைபவத்தை பிரஜைகளும் கொண்டாடவேண்டும் என்பதற்காக ம்யூனிக்கின் வயல்வெளிகளில் மக்களின் கொண்டாட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அக்டோபர்ஃபெஸ்ட் கடந்த இருநூத்திச்சொச்ச வருடங்களில் பல வடிவங்கள் மாறினாலும் இன்றும் உலகத்திலேயே மிக அதிக மக்கள் ஒன்றுகூடிக் கொண்டாடும் விழாவாகக் கருதப்படுகிறது. நகரமயமாக்கப்பட்டபின் இந்த விழாவுக்கென்றே ஒரு பெருந்திடல் அமைக்கப்பட்டு அதை தெரெஸா பசும்புல் வெளி (Theresa’s Meadow) என்றும் சுருக்கமாக ஜெர்மானிய மொழியில் வைஸென் (Wisen) என்றும் சொல்கிறார்கள்.

2018ம் வருட விழா தொடங்கிய ஞாயிறு (23 செப்டம்பர் 2018) காலை மேகமூட்டத்துடன் இருக்கும் என்றது அலெக்ஸா. ஸ்வெட்டர் மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டேன். மரீன் ப்ளட்ஸ் என்னும், மிக அழகான ஃபௌண்டன் பன்னீர் தூவும் அந்த ராஜபாட்டையின் நடுவில் ஒரு நல்ல இடத்தைப் பிடித்துக்கொண்டேன். சரியாகப் பத்து மணிக்கு ஊர்வலம் நான் இருந்த பாட்டையில் வந்து முன்னேறியது.

வயதானவர்களும், பெண்களும் கட்டுமஸ்து இளைஞர்களும் சின்னப்பையன்களும் சிறுமியரும் சம்பிரதாய உடையில் கையில் அவரவர் ஊர்களின் விசேஷ சாமக்கிரியைகளுடன் (ஒரு சிலர் மிகப்பெரிய கத்தி, துருப்பிடிக்காத 18ம் நூற்றாண்டுத் துப்பாக்கி, பதப்படுத்தப்பட்ட செம்மறி ஆட்டைக் குச்சியில் தலைகீழாகக் கட்டி, கொத்துக்கொத்தாய் மலர்ப்பந்துகள் அடுக்கி என வர்ஜ்யா வர்ஜ்யமில்லாமல்) கோலாகலமாக ஊர்வலம் வருகிறார்கள்.

இந்த ஊர்வலத்தின் சிறப்பு அவர்களின் உடைகள்தாம். பவேரிய உடைகளான டிரெண்டல் (Drendl) என்னும் உடையைப் பெண்கள் அணிகிறார்கள். இது மூன்று பீஸ் கொண்ட உடை – பாவாடை, பிளவ்ஸ் மற்றும் ஏப்ரன் எனப்படும் கவசம் போன்ற மார்புப்பகுதி உடை. ஆண்கள் லெதர்ஹோஸென் (Lederhosen) என்னும் தோலிலான அரை டிராயர் மற்றும் நம் ஊரில் அந்தக் காலத்தில் எலிமெண்டரி பள்ளிப் பிள்ளைகள் போட்டுக்கொள்ளும் டிராயர் பட்டி, மேலே இறுக்கமான சட்டை. ஒரு காலத்தில் இந்த டிரெண்டல் உடை, பாரில் மற்றும் எடுபிடி வேலை செய்யும் பெண்களின் உடையாக இருந்து வந்தது. அதே போல குதிரை லாயங்களில் வேலை செய்யும் ஆண்களின் உடை இந்த லெதர்ஹோஸென்! ஆனால் ஆஸ்திரிய மன்னர் ஃப்ரான்ஸ் ஜோசெஃப் (தன் திருமணத்துக்குப் போகும் வழியில் எதேச்சையாகப் பார்த்து மையல் கொண்டுவிட்ட ஸிஸ்ஸி என்னும் பவேரிய சாதாரணளைப் பிடிவாதமாகத் திருமணம் செய்து கொண்டவர்!) இந்தவித உடையை அணிந்து அதற்கு பெரும் கௌரவத்தை ஏற்படுத்திவிட்டார்.

சம்பிரதாயமாகத் தொடங்கப்பெறும் இந்த அக்டோபர்ஃபெஸ்ட் விழாவில், முதலில் பலவித மாநிலங்கள் மற்றும் பியர் கம்பெனிகளின் சார்பில் அலங்கார வண்டிகள் அணிவகுத்து வரும். அவற்றின் பின்னே தெரெசா மைதானத்தில் பணி புரியவரும் பெண்கள், காவல் காக்க வரும் ஆண்கள் என அனைவரும் அவரவர்களின் கலாசார உடையலங்காரங்களுடன் பெரும் ஊர்வலமாக வருகின்றனர். சாலையின் இருபுறமும் மக்கள் கூடி ஆரவாரம் செய்ய மறு ஆரவாரம் செய்து உற்சாகமூட்டுகிறார்கள். நான் கூட துப்பாக்கி ஏந்தி வந்த ஒரு ஆசாமியைப் பார்த்து கையை ஆட்டி வைத்தேன்.

குழு குழுவாகப் போகும் இந்த ஊர்வலத்தில் கிட்டத்தட்ட 90-100 குழுக்கள் ஊர்வலம் போகுமாம். அவர்களின் உற்சாகத்தில், தம் நாட்டின் பாரம்பரியத்தில் கலந்துகொள்ளும் பெருமிதம் நிரம்பி வழியும். வயது வித்தியாசமின்றி மழைத் தூறலையும் பொருட்படுத்தாத அழகான தாத்தாக்களும் பாட்டிகளும் குழந்தைகள் மாதிரிச் சிரித்துக் கைகளை வீசி ஆட்டிக்கொண்டு போகும் குதூகலம் நிச்சயம் ரசிக்கப்படவேண்டிய ஒன்று. இந்த ஊர்வலம் மிகப்பெரிய ஒற்றுமை ஊக்கி என்பதில் சந்தேகமில்லை.

காலை ஒன்பது மணியளவில் தொடங்கும் இந்த ஊர்வலம் ம்யூனிக்கின் முக்கிய ராஜ பாட்டையின் வழியாகச் சென்று தெரெஸா பசும்புல்வெளியை சுமார் பன்னிரண்டு மணியளவில் அடைகின்றது. அங்கே ம்யூனிக்கின் மேயர் ஒரு அடையாள சுத்தியுடன் முதல் பியர் பீப்பாயைத் தட்டி உடைத்து பியரை வழியவிட்டு முதல் ஒரு லிட்டர் பியர் கோப்பையை பவேரிய மாநிலத்தின் தலைவருக்கு அளிக்க, ஆரவாரமாகத் தொடங்குகிறது இந்த அக்டோபர்ஃபெஸ்ட் என்னும் பியர் திருவிழா. ஒவ்வொரு வருடமும் மேயருக்கு எத்தனை சுத்தியல் அடி தேவைப்படுகிறது என்பது பற்றி பந்தயம் எல்லாம் கட்டுகிறார்கள். இதில் சாதனை செய்திருப்பவர் தாமஸ் விம்மர் என்னும் மேயர் – 1950ஆம் ஆண்டு இவருக்கு முதல் பீப்பாயை உடைக்க 19 சுத்தியல் அடி தேவைப்பட்டதாம். மூன்றே அடிகளில் உடைத்த மேயர்களும் உண்டு.

தெரெஸா பசும்புல்வெளியில் இந்த அக்டோபர்ஃபெஸ்டிவலின் போது தரப்படும் பியர் வேறெப்போதும் கிடைக்காதாம்.

ராஜபாட்டையில் ஊர்வலம் நடந்தபோது போக்குவரத்தை முழுமையும் நிறுத்தி சாலையை துப்புரவாகத் துடைத்துவிட்டிருந்தார்கள். ஊர்வலம் மட்டுமே கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் கடக்கும் இந்த ராஜபாட்டையில் போக்குவரத்து விளக்குகள் மட்டும் எப்போதும் போல இம்மி பிசகாமல் சிவப்பு ஆரஞ்சு பச்சை என்று குறிப்பிட நேரத்துக்கு மாறாமல் ஒளிர்ந்துகொண்டிருந்த ஒழுக்கத்தில் நமக்கு ஒரு படிப்பினை இருக்கிறது என்பேன்.

தெரெசா பசும்புல்வெளியில் இப்போது புல் வெளியெல்லாம் இல்லை. ஒரு காலத்தில் இருந்திருக்கலாம். உள்ளே நுழையும்போதே கோலாகலத்தின் அடையாளங்கள் சந்தேகமின்றி வெளியில் தெருவிலேயே கேட்கின்றது. ஆம், அந்தச் சத்தம், பேச்சின் சளசளப்பு, சைக்கேடெலிக் வண்ணங்கள் கலந்து இழையும் விளக்குகள். பிறகு, அந்த சங்கீதம்! அபார துடிப்புமிக்க சங்கீதம். மிகப்பெரிய ‘பியர் கூடாரம்’ போட்டு, அங்கு ஆயிரக்கணக்கில் மேஜை நாற்காலிகள் போட்டு, பாரம்பரிய உடை அணிந்த பெண்கள் இரண்டு கைகளிலும் பியர் கோப்பைகளை அடுக்கியவாறே நடந்து சென்று விநியோகிக்க, கூட்டம் மேடையில் துடிக்கும் சங்கீதத்துக்குக் கூடவே பாடி ஆடி மாய்ந்து போகிறார்கள்.

சங்கீதம் என்று ஒரு வார்த்தையில் அதை முடித்துவிட முடியாது. தற்காலிக மேடை போட்டு சங்கீத உபகரணங்கள் வைத்து நாடி நரம்பெல்லாம் சிலிர்க்க வைக்கிறார்கள். சைகேடலிக் வண்ணங்கள் ஊடாடிக் கொண்டிருக்க கிட்டத்தில் போய்ப் பார்த்தேன். அங்கே மேடையில் ஒரு குழு (Band) ரகளை பண்ணிக் கொண்டிருந்தார்கள். அபார சங்கீதம். அந்தத் தாளம், ரிதம், கிடாரிஸ்டுகளின் சேட்டையுடன் கூடிய வாசிப்பு, எல்லாம் நம்மை ஒரு வேறு உலகத்திற்கு அழைத்துப் போவதை உணர முடிகிறது. கொஞ்சம் நேரமாக நேரமாக, அந்த சங்கீதம் மேலே மேலே என்று போய் ஒரு உச்சத்தில் நரம்புகளைத் துடிக்க வைத்துச் சட்டென்று முடிவது, போதையான எல்.எஸ்.டி அனுபவம். முடிந்து அந்த சிம்பல்கள் ஒன்றோடு ஒன்று மோதி வெடிக்கும் தருணத்தில் கூட்டம் முழுவதும் ஹோ வெனா ஆர்ப்பரிக்கும். ரகளை! ஆங்காங்கே ஜோடிகள். ஒரு கையில் பியர் இன்னொரு கையில் பெண் என்ற விகிதத்தில் அவ்வப்போது பியரைச் சப்பிக்கொண்டு இடையிடையே அந்தப் பெண்ணின் மூக்கை நிரடிக்கொண்டும் இருக்கும் காட்சிகள் சர்வ சாதாரணம்.

அக்டோபர் திருவிழாவில் பியர் தயாரிப்பதற்கான உட்பொருட்கள் என்ன என்பதைக்கூட 1516ம் யூனிக் சட்டம் சொல்லியிருக்கிறது. இவை தவிர இதில் ஈஸ்ட் மட்டும் கலக்க அனுமதி. ஏனென்றால் இந்தச்சட்டம் இயற்றப்பட்டபோது ஈஸ்ட் எனப்படும் சமாசாரம் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கென்று தனி ஃபார்முலாவில் தயாராகும் பியர் மற்ற சந்தர்ப்பங்களில் தயாரிக்கப்படக்கூடாது என்பதும், இந்த கம்பெனிகள் தவிர வேறு எந்த சாராய நிறுவனமும் இந்த அக்டோபர்ஃபெஸ்ட் பியரைத் தயாரிக்க முடியாது என்பதும் சட்டம்.

இந்த தெரெசா மைதானத்து நுழைவிலேயே கடுமையான பாதுகாப்பு செய்திருக்கிறார்கள். இன்றைய பாதுகாப்பற்ற காலகட்டத்தில் இந்தக் கெடுபிடி தேவைதான். ஏகப்பட்ட கூடாரங்கள் போடப்பட்டிருக்க அவற்றில் கூட்டம் கூட்டமாக ஜனம் அம்முகிறது. குறைந்த அளவு பியர் கோப்பையே ஒரு லிட்டர்தான். அதன் விலை கிட்டத்தட்ட பதினொரு யூரோக்கள் (சுமார் 900 ரூபாய்.) அதகளமாகப் பேசிக்கொண்டு சிரித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொண்டு பியர் குடித்த வண்ணம் இருக்கிறார்கள்.

கூடவே ஏகப்பட்ட உணவு வகைகளும் கிடைக்கின்றன. பவேரியன் மற்றும் ஜெர்மன் வகை உணவுகள்தாம் அதிகம். அதிலும் வறுத்த கோழி, பன்றி கட்லெட், ஸ்பாட்ஸீ என்று சொல்லப்படும் முட்டை உணவு, விதவிதமான காய்கறிகள் பழங்கள் என்று நிறைய வகைகள் இருந்தாலும் அந்தப் பச்சை மாமிச நாத்தம், நம் ஊர் போல மிளகு காரம் மசாலா சேர்க்காததாலோ என்னவோ, சில சமயம் நம் ஊர் ஊதுவத்திகளை விட மோசமாக இருக்கிறது.

லாங்கோஸ் (Langos) என்று ஒரு சாப்பிடும் வஸ்து. அங்கே கூட்டம் அல்லாடியது. என்னவென்று பார்த்தால் நம் ஊர் னான் போல, ஆனால் அப்பளமாகப் பொரிக்கப்பட்ட ஒரு மகா வட்ட சமாசாரத்தில் கொழகொழவென க்ரீம் தடவி, அதன் மேல் ஏகப்பட்ட சீஸைக்கொட்டி, மேலும் தக்காளி துண்டுகள் மற்றும் குரோய்ட்டர் என்னும் இலை தழை போன்ற சாலடுக்கான சாமக்கிரியைகளைப் பரப்பி, “உங்கள் உணவை எஞ்சாய் பண்ணுங்கள்” என்று கீச்சுக்குரலில் அழகிய இளம் பெண்கள் கௌண்டரில் தருகிறார்கள். இந்த னான் என்னும் அப்பளத்தை முகத்தில் க்ரீம் அப்பிக்கொள்ளாமல் சாப்பிடுகிறவர்களுக்கு, அதேதான், கேள்வி கேட்காமல் நம் வலது காதை வெட்டிக்கொடுக்கலாம்.

என்னுடைய ஸ்வெட்டர் காலி. மூக்குக்கண்ணாடி முழுக்க கிரீம்.

பியர் அருந்தும் ஸ்டால்களைத்தவிர குடும்பத்தோடு வருபவர்களுக்காக பலப்பலக் கேளிக்கைகளுக்கான சௌகரியங்களும் இருக்கின்றன. நம் ஊர் ஜெயண்ட் வீலின் பலதரப்பட்ட வடிவங்கள். அதன் உயரமும் சுழற்சியும் வீச்சும், புவிஈர்ப்பைக் காதலிக்கும் என் போன்ற ஆசாமிகளுக்கு வயிற்றில் ஈரப்பந்து சுருட்டிக்கொள்ள வைக்கின்றன. கூடவே உபத்திரவமில்லாத வளையம் எரிதல், துப்பாக்கிச் சுடுதல் வகை விளையாட்டுக்களும் பலப்பல உண்டு. விதவித பலூன்களைக் கொடுத்து குழந்தைகளைக் கிறீச்சிட வைக்கிறார்கள். நூல் தவறின ஒரு குழந்தையின் ஹீலியம் பலூன் வானத்தில் ஏறின காட்சியை ஏதோ பெரிய அதிசயம் போல ரசித்துப் பார்த்த கூட்டத்தில் நானும் அடக்கம்.

இந்தக் கோலாகல வட்டாரம் முழுக்கவே புகை பிடிக்க அனுமதியில்லை என்றுதான் இருந்ததாம். ஆனால் புகை பிடிக்கும் அன்பர்கள் சிணுங்கியதால் ஒரு சில இடங்களில் புகை பிடிக்க அனுமதி கொடுத்துவிட்டார்கள்.

இந்த அக்டோபர்ஃபெஸ்ட் என்னும் கோலாகலத்தில் இரண்டு வாரங்கள் உல்லாசமாகக் கூட்டம் கூடி லிட்டர் லிட்டராக பியர் அருந்தி, உண்டு, அனுபவித்து, அதே சமயம் ஒரு சின்ன அசம்பாவிதத்துக்கூட இடமில்லாமல் இருக்கும் அவர்களின் ஒழுக்கம் நமக்கு உணர்த்துவது என்ன என்பதை நாம் யோசிக்கத்தான் வேண்டும்.

Posted on Leave a comment

தங்கத் தேடல் | ஜெயராமன் ரகுநாதன்

“A series of Gold-bearing reefs strike across the Wayanad gneiss. That they contain gold was perhaps known for two centuries as far back as 1793..”

The Madras District Gazettier, The Nilgiris, W Francis

புல்பள்ளி கிராமம் கேரளாவின் வயநாட்டு தாலுகாவில் இருக்கிறது. சுல்தான் பத்தேரி என்னும் வினோதப்பெயர் கொண்ட ஊருக்கு இருபத்து நான்கு கிலோமீட்டரில் இருக்கும் படு கிராமம். கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலூன்ற எடுத்த அபார முயற்சிகளில் இந்தப் புல்பள்ளியும் சிக்கிக்கொண்டது. புல்பள்ளி மட்டுமில்லை, சுற்றுவட்டார ஊர்களான செட்டப்பாலம், மடப்பள்ளிக்குன்னு, வனமூலிகா, பெரிக்கல்லூர், பிரக்கடவு என்று எல்லா ஊர்களிலுமே எஸ்டேட் வேலைக்கு ஆள் எடுக்க மேஸ்திரிகள் வந்து அப்பாவி கிராம மக்களை அள்ளிக்கொண்டு போவார்கள்.

ஜி.எஃப்.ஃபிஷெர் துரை 1820களிலேயே சேலத்தில் சேர்வராயன் மலையில் காபித் தோட்டங்களைப் பயிரிட்டுச் சம்பாதித்தார். அப்போதைய சேலம் கலெக்டர் காக்பர்ன் அவருக்கு மலைத்தொடர்களில் காபி பயிரிட அனுமதித்துவிட, நல்ல விளைச்சல். இவரைத் தொடர்ந்து ஜே.ஔச்டர்லொனி துரை வயநாட்டில் காபித் தோட்டங்களை உருவாக்கி நிர்வகித்தார். 1840-50 காலகட்டங்களில் வேலை செய்ய மேஸ்திரிகள் கிராமம் கிராமமாகப்போய் அப்பாவி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அரக்கத்தனமான கொடுமைக்கு ஆளாக்கின கால கட்டம்.

துரைகளின் மற்றும் துபாஷிகளின் வாழ்க்கை படு சுவாரஸ்யமானதாக இருந்திருக்கிறது.

துரை வரும்போது என்ன பரபரப்பு! முதலில் அந்த பியூன் என்பவன் “நவுரு நவுரு, துரை வந்தாச்சு” என்று விரட்டிக்கொண்டே போக, பின்னால் குமாஸ்தாக்கள் கையில் பேப்பர் கட்டுக்களுடன், “நிக்காதய்யா வழியில! துரைக்கு கோவம். எதுனா பண்ணிப்பிடப்போறார்!”

அதன் பின் ஒன்றிரண்டு துபாஷிகள், அவர்களின் எடுபிடிகள் செய்யும் ஆர்ப்பாட்டங்கள்.

“என்ன அய்யிரே! என் காண்ட்ராக்ட் இன்னிக்கு கையெழுத்தாவுமா?”

“எது, அந்த பிலாத்தோப்பு நிலமா? நேத்தே தொர யாருட்டயோ கேட்டுக்கினு இருந்தாரு. நீங்க ஒண்ணும் நெஜத்துக்கு மாறா வெல சொல்லலியே?”

“கும்பினி வெல பதிமூணு ரூவாத்தான் போட்ருக்கேன். நெசமாலும் அது பதினேழுய்யா. உன்னாண்ட சொன்னேனே, ரெண்டு ரூவா காசும், மொந்தன்பழத்தார் ஒண்ணும் வீட்ல தரச்சொன்னெனே?”

“எனக்கு சரின்னா, அவாளுக்கு மனசு கனியணூமே!”

“பாத்து நீங்களும் சொல்லிடுங்க சாமி! அடுத்த மாசம் கல்யாணம் வருதாமே, நானே நேர்ல வர்ரேன்!”

“ஆஹா, கொடுத்து வெச்சிருக்கேன்னா!”

துரைக்கு முன்னால் அடிமையாய்க் கூனிக்குறுகும் துபாஷி, துரை அந்தாண்டை நகர்ந்ததும் ஒரு சமஸ்தான ராஜாவாய் மற்றவரைச் சிறுமைப்படுத்துவது வாடிக்கையாக நடந்தது.

‘டேய்! கேட்டே இல்ல தொர சொன்னத? பேசாம கிரயம் பண்ணிக்கொடுத்துட்டு வாங்கின்னு போ!”

“இல்லீங்க, எட்டு ரூவான்னு…..”

“என்னடா எட்டு ஏழுன்னு இழுக்கற? கேசவா! விஜாரி!”

“வாடா இங்க, உம்முகத்துக்கு மூணு ரூவா போறாதா? நம்ம அய்யாட்டயே எதுத்து பேசுவியா? தொர சொல்றதக் கேக்கல நீயி? நைன் ருபீஸ்ன்னாரே, நைன்னா என்ன, மூணுடா!”

“சரிங்க சரிங்க கைய விடுங்க, வலிக்குது”

“போ போ குடுத்ததை வாங்க்கிக்கினு நட, வேலயைப்பாரு”

அந்த துபாஷிக்குக் கிடைக்கும் மரியாதை, அந்தஸ்து, அவனைச் சுற்றிய எடுபிடிக் கூட்டம், அடியாட்கள், துபாஷி போலப் பட்டு வேஷ்டியும் சில்க் ஜிப்பாவுமாய் அத்தர் மணக்க ஆள் படை என்று வலம் வரும் காட்சி கண்ணில் தெரிந்து, சாதாரணர்களை, நாமும் ஏதாவது செய்து துரையின் அருகில் போய்ச் சம்பாதிக்க மாட்டோமா என்று ஏங்க வைத்தது.

1840களில் வயநாட்டிலும் நீலகிரியிலும் சேலம் அருகிலுள்ள சேர்வராயன் மலைகளிலும் காபி நன்றாக விளைந்து லாபம் தர ஆரம்பித்துவிட்டது. மேற்சொன்ன ஃபிஷெரும் ஔச்டர்லோனியும் பல ஏக்கராக்களில் காபி பயிரிட்டுக் கொழித்துக்கொண்டிருக்க, இருபதே வருடங்களில் நிலைமை மாறியது.

1865ம் வருடத்தில் நல்ல மழை அடித்துப் பெய்தது. எஸ்டேட்டை வலம் வந்த துரைகள் சிலாகித்து மேஸ்திரிகளிடம், இன்னும் நூறுபேர் வேலைக்கு வேண்டும் என உத்தரவிட்டனர். இங்கிலாந்துக்கு எழுதின கடிதத்தில் இந்த முறை இன்னும் 20 சதவீதம் கூடவே காபி ஏற்றுமதியாகும் என்று ஔச்டர்லொனி கடிதம் எழுதினார்.

ஆனால் போரர் (Borer) என்னும் பூச்சி பரவி பல எஸ்டேட்டுகளில் காபித் தோட்டங்கள் அழிந்தன. அதோடு இலைப்புழு புகுந்து அடித்த கொட்டத்தில் 1871ல் காபி சுத்தமாகக் கையை விரித்தது.

இந்த வருடத்தில்தான் தங்கப்புரளி மறுபடியும் கிளம்பியது.

மறுபடியுமா?

ஆம். 1831ம் ஆண்டே வயநாட்டுப் பள்ளத்தாக்குகளில் மாப்ளா என்று சொல்லப்படும் அடிமை வேலையாட்கள் உள்ளூர் நிலச்சுவான்தார்களால் அமர்த்தப்பட்டு தங்கம் எடுக்கும் முயற்சிகளைச் செய்து வந்தார்கள். அவர்களின் முறை பழங்காலச் சல்லடை முறையானதால் குந்துமணி குந்துமணியாகச் சில பொட்டுத் தங்கமே கண்ணில் பட்டது. ஆனால் அதற்கான கூலியோ, கிடைக்கும் தங்கத்தைவிட அதிகமாக இருந்தது. அப்போது அங்கு டூர் வந்த லெஃப்டினெண்ட் வூட்லி நிகொல்ஸன் இந்தத் தங்க சமாசாரங்களை ஆராய முற்பட்டார். அவர் வருவதை அறிந்த உள்ளூர் ஆசாமிகள் அவரிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, தங்கம் எடுக்க உத்தரவாதம் தர, நிக்கோல்ஸன் கொஞ்சம் அவசரக்கோலமாக ஆராய்ந்து ஆகா ஓகோவென அறிக்கை கொடுத்துவிட்டார். இதை நம்பி அரசாங்கம் பல இயந்திரங்களைத் தருவித்து தங்கத்தேடலுக்கு ஆரம்ப மணி அடித்தாலும் சில மாதங்களிலேயே இந்தத் தேடலில் பைசா பேறாது என்பது புரிந்துவிட்டது. எனவே 1833ம் ஆண்டு அரசாங்கம் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

1871ல் காபி ஏமாற்றிவிட, தோட்ட உரிமையாளர்கள் மறுபடி இந்தத் தங்கப்புரளியை சீரியஸாக எடுத்துக்கொண்டு இதில் இறங்கினார்கள். ப்ரோ ஸ்மித் (Mr.Brough Smith) என்னும் விற்பன்னர் ஆஸ்திரேலியாவிலிருந்து தருவிக்கப்பட்டார். இந்த ப்ரோ ஸ்மித்தின் வாழ்க்கை வரலாற்றையே ஒரு தனி அத்தியாயமாக எழுதலாம். ரத்தினச் சுருக்கமாக – 1846ல் சாதாரண க்ளார்க்காக இங்கிலாந்தில் கான்செட் இரும்பு கம்பெனியில் ஆரம்பித்த ப்ரோ ஸ்மித், 1853ல் மெல்போர்னுக்கு வந்தார். 12 வருடஙகளில் என்னென்னமோ செய்து வானிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவராகிவிட்டார். கூடவே கனிம சமாச்சாரங்களில் உஸ்தாத் என்று பெயரெடுத்தார். இவர் வயநாட்டுக்கு வந்து ஒன்றரை வருடம் தங்கி என்னத்தையோ ஆய்வெல்லாம் செய்து, இங்கு தங்க உற்பத்திக்கு வாய்ப்பிருக்கிறது என்று அறிக்கை எழுதிக்கொடுத்துவிட்டு அங்கேயே இருந்து பல கம்பெனிகளுக்கு ஆலோசகராகக் கொழிக்க ஆரம்பித்தார்.

குமாஸ்தாக்களும் பியூன்களும் அபார ரகசியங்கள் வைத்துக்கொண்டிருந்த காலம். நம்ம பயல்களின் மஹா அடிமைத்தனங்கள் ஒரு சில ஆண்டுகளிலேயே கும்பினிக்காரர்களை ஓரளவுக்கு ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது. 1836லேயே இங்கிருந்த ஒரு ஆங்கில மாது தன் சகோதரிக்குக் கடிதத்தில் எழுதின விஷயம் இப்போது படித்தால் மறுபடி இங்கிலாந்துடன் சண்டைக்குப் போக வேண்டியிருக்கும்.

“ஆர்மகமும் சுப்பூவும் விருந்து முடிந்தவுடன் எங்கள் காலில் விழுந்து எழுந்தனர். ‘துரைசானி அம்மா! எங்களால் முடிந்த அளவு உங்களை உபசரித்தோம். அதில் ஏதாவது தவறு இருந்தால் அது எங்களின் அறியாமையால்தான். மரியாதைக்குறைவால் அல்ல. உங்களை நாங்கள் எம் தாயினும் மேலாகப் பாவிக்கிறோம்.’

சங்கீதம் என்று ஏதோ இசைத்தார்கள். நம் ஊரில் மரண ஊர்வலம் போல இருந்தது.

எல்லோரும் திருடர்கள். எல்லோரும் நடிக்கிறார்கள்.”

இந்த ஆர்மகமும் சுப்பூவும் இத்தனைக்கும் பணக்கார துபாஷிகள்.

இப்படிப்பட்ட காலகட்டத்தில் கும்பினி வெள்ளையர்களுக்கு குமாஸ்தாக்களும் பியூன்களும் இன்னுமே மனிதர்களாகவே படவில்லை. இவர்கள் இருப்பதையே ஒரு பொருட்டாக மதிக்காமல் அவர்கள் தத்தம் திட்டங்களைப் பற்றிப் பேசலானார்கள். அரைகுறை ஆங்கிலம் அறிந்து வைத்திருந்த நம் குமாஸ்தாக்களும் பியூன்களும் இந்த விஷயங்களை ஏதோ ராஜ ரகசியமாக குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் பெருமை அடித்துக்கொண்டிருக்க, அரசாங்க செய்திகள் கசியத்தொடங்கின.

தங்கத் தேடலுக்குத் தோதாக தென்னிந்திய ஆல்ஃபா கோல்டு மைனிங் கம்பெனி நிறுவப்பட்டதிலிருந்தே பாரி அண்ட் கம்பெனி அதற்கு ஏஜண்ட்டானார்கள். எங்கடா சம்பாதிக்கலாம் என்று தேவுடு காத்துக்கொண்டிருந்த கும்பினி அதிகாரிகள் தத்தம் மச்சான், சகலைகளுக்கு எழுதின சுருக்கில் 41 கம்பெனிகள் இங்கிலாந்தில் ரெஜிஸ்தர் செய்யப்பட்டு 50 லட்சம் பவுண்ட் ஸ்டெர்லிங் முதலீடு செய்ய, இந்தியாவில் ஆறு கம்பெனிகள் செய்த முதலீடு கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பவுண்டுகள். எல்லா கம்பெனிகளும் வயநாட்டை நோக்கி வர, அப்போது சில சாதாரணர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்.

துரைமார்களுக்கும் கம்பெனி ஆசாமிகளுக்கும் கூழைக்கும்பிடு போட்டு இடம் காண்பிக்கிறேன், ஆள் தருவிக்கிறேன் என்று ஏஜண்டு வேலை செய்து பணம் பார்த்தார்கள். இதில் ஒரு பேக்கரி வைத்து நொடித்துப்போனவனும் சர்க்கஸில் கோமாளியாக இருந்தவனுங்கூட அடக்கம்! கூடவே பின்னி கம்பெனியும், பாரியும் அர்பத்னாட்டும் அந்த கம்பெனிகளுக்கான மானேஜிங் ஏஜன்சி எடுத்து ஆட்களை வயநாட்டிற்கு அனுப்பினார்கள். காபியும் அப்போது விலை சரிந்துகொண்டிருந்ததால், காபி தோட்ட முதலாளிகள் தங்கள் நிலத்தைத் தங்கம் தோண்ட விற்க ரெடியானார்கள். அதற்கு ஏகப்பட்ட போட்டி இருக்கவே நிலத்தின் விலை எகிறியது. ஆரம்பத்தில் 70 பவுண்டுக்கு ஒரு ஏக்கர் விற்ற நிலம் விரைவிலேயே 2600 பவுண்டு வரை ஏறியதாம்.

இந்த அழகில் சென்னையில் வியாபாரிகளிடையே ஏகப்பரபரப்பு.

மைசூர் மாகாணத்தில் எத்தனை சலுகைகள் தெரியுமா, நம்ம ப்ரெசிடென்ஸியில் கொடுக்கவில்லையென்றால் தொழில் எப்படி முன்னேறும் என்றெல்லாம் கூட்டம் போட்டுப்பேசி கும்பினியிடம் சலுகைகள் கேட்க, லண்டன் எப்போதும் போல ஈசானிய மூலையைப் பார்த்து யோசித்துக்கொண்டிருந்தது.

ஒவ்வொரு கம்பெனிக்கும் இந்த மூன்று ஏஜண்ட்டுகள் – பாரி, பின்னி அர்பத்நாட் – முழு வேலையையும் கவனித்தார்கள். மேஸ்திரிகள் இப்போது மண் தோண்ட ஆள் சேகரித்தார்கள். காப்பி தோட்டத்தில் இடுப்பொடிந்தவர்கள் இப்போது பள்ளம் நோண்டுவதில் முதுகெலும்பை முறித்துக்கொண்டார்கள். அந்த உழைக்கும் கூட்டத்தில் ஒவ்வொரு நாளும் விழுந்த அடிகளும், சிந்திய ரத்தங்களும், பிறந்த குழந்தைகளும், அகாலமாக இறந்த ஆட்களும், சக்கையாக உபயோகப்படுத்தப்பட்ட பெண்களும்… ஒவ்வொன்றும் ஒரு கதையாகிப் போனது.

ஆல்ஃபா கம்பெனியின் பங்கு விஷமாய் ஏறி, பல கை மாறி, ஒவ்வொரு மாற்றலிலும் விலை ஏற்றம் கண்டது. இன்றும் நாம் பார்க்கும் அதே பங்கு மார்க்கெட் ரசாயன விலையேற்றத்திற்குச் சூடு கிளப்ப, வெகு சீக்கிரத்திலேயே அங்கே தங்கத்தேடல் குப்புறத் தலைவிழ்ந்தது. மிஞ்சி மிஞ்சிப் பார்த்ததில் ஒரு டன்னிலிருந்து நான்கு அவுன்ஸ் தங்கமே கிடைத்ததாம். இன்னொரு இடத்தில் 19 டன்னில் கிடைத்த தங்கம் 2 Dwts. அதாவது ஒன்றின் கீழ் ஒன்பது அவுன்ஸ் மட்டுமே. (அதாவது ஒரு அவுன்ஸ் தங்கம் என்பது 18.23 Dwts)

பெரும் பள்ளங்கள் தோண்டினதுதான் மிச்சம். ஸ்மித்தின் அறிக்கை படியெல்லாம் தங்கம் அப்படி ஒன்றும் அகப்பட்டுவிடவில்லை. தோண்டத் தோண்ட மண்ணும் சகதியும் தண்ணீரும்தான் கிடைத்தன. ஒரே ஒரு கம்பெனி 363 அவுன்ஸ் தங்கமும் இன்னொரு கம்பெனி 60 அவுன்ஸும் எடுத்ததோடு ரகளை முடிவுக்கு வந்தது.

இதை அறிந்தோ என்னவோ ப்ரோ ஸ்மித் அதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்னும் ரீதியில் நடித்து,  நிறைய பணத்தைக் கவர்ந்துகொண்டு ஆஸ்திரேலியாவுக்கு ஜூட் விட்டிருந்தார்.

அடுத்த சில நாட்களிலேயெ ஒவ்வொரு கம்பெனியாகக் கதவைமூடிப் பூட்டுப் போட்டார்கள். ஆசாமிகளுக்கு வேலை போனது. புல்பள்ளி கிடங்க நாடு நாஞ்சில் நாடு பிரதேசங்களில் கோச் வண்டிகள் நடமாட்டம் குறைந்து மறுபடியும் சோகையான ஆடுகளும் மாடுகளும் அழுக்கு மேல் துணி அணிந்த கிராமத்தார்களும் தெருவில் ஊடாட, துரைமார்கள் போக்குவரத்தும் நின்று போனது. எஸ்டேட்டுகளில் காபி பயிரிடல் மீண்டும் ஆரம்பிக்க, மேஸ்திரிகள் மறுபடியும் கிராமங்களுக்கு வந்து அடிமைகளைத் தேடிப் பிடித்துக்கொண்டு போக ஆரம்பித்தார்கள்.

ஏராளமான மனிதர்களின் உயிரையும் இன்னும் பலரது நல் வாழ்க்கையையும் காவு வாங்கிய பின்னர் தங்கத்தேடல் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

மீண்டும் The Madras District Gazettier, The Nilgiris by W Francis……

“By 1906, at Pandalur, three or four houses, the old store, traces of race course survive; At Devala, were a grave or two; topping many of the little hills derelict bungalows and along their contours, run grass grown roads. Hidden under thick jungle are heaps of spoil, long forgotten tunnels used only by she-bears and panthers expecting an addition to their families and lakhs worth of rusting machinery that were never installed…..”

Posted on Leave a comment

சென்னைக் கலகமும் சிப்பாய்க் கலகமும் | ஜெயராமன் ரகுநாதன்

சிப்பாய்க்கலகம் சென்னையைத் தொடவே இல்லை என்பதை சுஜாதாவுக்குச் சொல்ல விரும்புகிறேன்!”

சிப்பாய்க்கலகம் சென்னையைத் தொடவில்லை என்பது என் இரண்டாவது மகனுக்குக்கூடத் தெரியும்!”

சாண்டில்யனின் வார்த்தைகளுக்கு சுஜாதாவின் பதில் எழுபதுகளில் ஒரு சின்ன சலசலப்பை உண்டாக்கிய கதை இப்போது வேண்டாம். ஆனால் மேற்சொன்ன சிப்பாய்க்கலகம் சென்னையைத் தொட்டதா இல்லையா என்பது கிடக்கட்டும். இந்தச் சென்னைக்கலகமே ஒரு சுவாரஸ்யமான சமாசாரம்தான்.

நாமெல்லாம் நன்கு அறிந்த 1857 சிப்பாய்க்கலகம் பெரும்பாலும் வடக்கு, மேற்குப் பகுதிகளில் நிகழ்ந்தது. அதன் சிற்சில தாக்கங்கள் மெட்ராசிலும் எதிரொலித்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் இதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே, 1806ம் ஆண்டு இங்கே ஒருகச முசாநிகழ்ந்ததென்னவோ உண்மைதான்.

அப்போதைய மெட்ராஸ் ஆர்மியின் தலைமைக் கமாண்டராக இருந்த ஜெனெரல் சர் ஜான் கிராடாக் (General Sir John Craddock) செய்த காரியத்தினால் விளைந்தது வில்லங்கம். வேலூர்க்கோட்டையில் தன் சிப்பாய்களிடம் ஒரு ஆணையைப் போட்டார். இனி நெற்றியில் விபூதி குங்குமம் இடக்கூடாது, டர்பன் அணியக்கூடாது என்பதே அந்த ஆணை.
ஹிந்துப் படை வீரர்களோடு விட்டாரா? முஸ்லிம் சிப்பாய்களுக்கும் ஆணையிட்டார். தாடி மீசையை மழிக்கவேண்டும், மீசையை ட்ரிம் செய்துகொள்ளவும் வேண்டும், நிச்சயம் ரவுண்டு தொப்பி அணியவேண்டும்.
இவையெல்லாம் இருந்தால்தான் கிழக்கிந்திய கும்பினியின் படை வீரருக்கான அடையாளம் இருக்கும் என்று அவர் நம்பினார்.
கொதித்தெழுந்தனர் ஹிந்து முஸ்லிம் படைவீரர்கள். மதச்சின்னங்களை அழிப்பதோடு இல்லாமல் கிறிஸ்துவ முறைப்படி தொப்பியா!
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இருவத்தோரு பேர் மெட்ராஸ் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அனுப்பப்பட, இங்கே இரண்டு பேருக்கு 90 கசையடிகளும் மீதம் பத்தொன்பது பேருக்கு 50 கசையடிகளும் கொடுக்கப்பட்டன. அதோடு கும்பினியாரிடம் தண்டனிட்டு மன்னிப்பும் கேட்கவைக்கப்பட்டனர்.
இதெல்லாம் சகியாமல் சில படைவீரர்கள் 1806 மே மாதம் கலகம் செய்தனர். ஹிந்து முஸ்லிம் சிப்பாய்கள் 69வது ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த 14 ஆஃபீஸர்களையும் 115 சாதாரண ஐரோப்பியப் படை வீரர்களையும் கொன்று போட்டனர். முக்கால்வாசி வீரர்கள் பாரக்ஸில் தூங்கிக்கொண்டிருக்கும்போதே, கலகம் செய்தவர்கள் வேலை தீர்த்துவிட்டனர். தமிழ் வீரம், முதுகில் குத்தும் கோழைத்தனம், மறவர் குலமெல்லாம் அதிகம் பார்க்கவில்லை போலும். கொல்லப்பட்டவர்களில் வேலூர்க் கோட்டையின் கமாண்டர் ஜான் ஃபான்கோர்ட்டும் ஒருவர் (Colonel St. John Fancourt). கலகக்காரர்கள் பொழுது விடியும்போது வேலூர்க் கோட்டையைக் கைப்பற்றி மைசூர் சுல்தான் கொடியை ஏற்றி திப்புசுல்தானின் இரண்டாவது மகனான ஃபதே ஹைதரை (Fateh Hyder) ராஜாவாகப் பிரகடனம் செய்தனர்.

இதெல்லாம் ஒருநாள் கூத்துதான்.

மேஜர் கூப்ஸ் (Major Coops) என்னும் பிரிட்டிஷ் ஆஃபீசர் கோட்டையிலிருந்து தப்பி ஒரே ஓட்டமாக ஓடி ஆற்காட்டில் இருந்த பிரிட்டிஷ் பட்டாலியனில் விஷயத்தை விளக்கினான். ஒன்பதே மணி நேரத்தில் சர் ராபர்ட் ரோலோ கில்லெசெப்பி (Sir Rollo Gillespie) என்னும் கமாண்டரின் தலைமையில் சரசரவென வேலூர்க் கோட்டையை வந்தடைந்தனர். அடுத்து கில்லெசெப்பி செய்த விஷயம் பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டிய ஜேம்ஸ் பாண்ட் வகை சாகசம்.



கோட்டையின் முக்கியக் கதவு கலகக்காரர்களால் காக்கப்பட்டுக்கிடக்க, இவர் உடும்பு கணக்காக சிலருடன் கோட்டை மதில் மேலேறித் தாக்குதலை ஆரம்பிக்க, சிறிது நேரத்தில் வந்துவிட்ட 69வது ரெஜிமெண்ட் குண்டு வைத்துக் கோட்டைக் கதவைப் பிளக்க, மெட்ராஸ் கேவல்ரியும் 19வது ரெஜிமெண்ட்டும் புகுந்து ரணகளம் செய்தார்கள். கலகக்காரர்கள் எதிர்த்து நிற்க முடியாதபடி அதிரடித் தாக்குதல். கண்ணில் பட்ட நூறு வீரர்களை ஆட்டு மந்தையாய் வெளியே இழுத்து வந்து அத்தனை பேரையும் விசாரணை ஏதுமின்றிச் சுட்டுத்தள்ளினார் கில்லெசெப்பி. மொத்தமாக 350 கலகக்காரர்கள் கொல்லப்பட, இன்னொரு 350 பேர் சிறைபிடிக்கப்பட்டார்கள்.

கில்லெசெப்பி அப்போது சொன்னார், “இன்னும் ஐந்து நிமிடம் தாமதித்திருந்தால் இந்தியாவின் பிரிட்டிஷ் சரித்திரமே மாறியிருக்கும்!”
கலகம் முறியடிக்கப்பட்ட பின்னால் விசாரணை ஒன்று நிகழ்ந்தது. அதில் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி, ஆறு கலகக்காரர்கள் பீரங்கி முன் நிற்கவைக்கப்பட்டு வெடித்துச்சிதறடிக்கப்பட்டனர். ஐந்து பேர் ஒரு துப்பாக்கி ஸ்குவாடினால் சுடப்பட, இன்னும் எட்டு பேர் தூக்கிலிடப்பட, அதிர்ஷ்டம் வாய்ந்த கடைசி ஐந்து பேர் நாடு கடத்தப்பட்டனர். கலகத்தால் சுதாரித்துக்கொண்ட கும்பினி மூன்று மெட்ராஸ் ரெஜிமெண்ட்டையும் கலைத்துப்போட்டது. இந்தக் களேபரத்துக்கு ஆரம்பமான உடை விவகாரத்தைத் தொடங்கி வைத்த ஆஃபிசர்களை இங்கிலாந்து மறுபடி அழைத்துக்கொண்டது. வேலூர்க் கோட்டையில் சுகமாகவே சிறைவாசம் செய்துகொண்டிருந்த திப்புசுல்தான் வாரிசுகள் கல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுவிட்டனர்.

இந்தக் கலகக் கூத்தினால் நன்றாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த மெட்ராஸ் கவர்னர் லார்ட் வில்லியம் பெண்டிங்க் (சென்னையின் இன்றைய சிங்காரவேலர் மாளிகையின் முன்னோடியான பெண்டிங்க் பில்டிங்கின் பேர் கொண்டவர்) இங்கிலாந்துக்கு வாபஸ் அழைக்கப்பட்டுவிட்டார்.
இந்த மெட்ராஸ் கலகத்தைப் பற்றிய நேரடிச்செய்தி நமக்குக் கிடைக்க உதவியது லேடி ஃபான்கோர்ட் (Lady Fancourt) எழுதிய டயரிக் குறிப்புகள்தான். இந்தக் கலகத்தை நேரில் கண்டவர். தன் குழந்தைகளுடன் தப்பிய இவரின் கணவர்தான் கலகக்காரர்களால் கொல்லப்பட்ட வேலூர்க் கொட்டையின் கமாண்டர் ஜான் ஃபான்கோர்ட்!

மெட்ராசுக்கு அருகில் நடந்த இந்தக் கலகத்துக்கும், பின்னாளில் சுமார் ஐம்பது வருடங்களுக்குப்பிறகு, அதாவது சுதந்திரப் போராட்டத்தின் முதல் வித்து என்று பெயர் பெற்ற, 1857ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி பாரக்பூரில் முதலில் ஆரம்பித்த சிப்பாய்க் கலகத்துக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. 1857 சிப்பாய்க்கலகம், வேலூர் அளவுக்குச் சின்னதில்லை, பெரிய அளவில் நடந்த புரட்சி. இதில் புரட்சியாளர்கள் பஹதுர் ஷா சஃபரை இந்தியாவின் சக்கரவர்த்தி என்று சொல்லி, முகலாய ஆட்சி மீண்டும் மலர்ந்துவிட்டது என்று பிரகடனம் செய்தார்கள். நம் வேலூர் ஆசாமிகளும் திப்புவின் இரண்டாவது மகனை அரசராக ஆக்கினார்கள். மதப்பழக்கங்களைச் சீண்டிய விதத்திலேயே இரண்டு கலகமும் தொடங்கின.

இந்தச் சிப்பாய்க் கலகத்தின் விளைவால் பிரிட்டிஷ் அரசாங்கம் கவன்மெண்ட் ஆஃப் இந்தியா சட்டம் 1858 இயற்றி இந்தியாவின் அரசுரிமையை முழுவதுமாக மகாராணியின் ஆட்சிக்குக்கீழ் கொண்டு வந்தவிட்டது. ஒரு நல்ல நாள் நல்ல முகூர்த்தத்தில் கிழக்கிந்திய கம்பெனியை இழுத்து மூடச்சொல்லி உத்தரவும் ஆகியது.
இங்கேயும், அந்தக் கலகத்தின் தாக்கத்தில் சில சில்மிஷங்களும் அடக்குமுறைகளும் நடந்தன என்கிறது மெட்ராசின் சரித்திரம்.
1857ம் ஆண்டே ஹைதராபாத்தின் அரண்மனை, சையது ஹுசைன் என்னும் ஆசாமியை நகரி, காளஹஸ்தி, வெங்கடகிரி சமஸ்தானங்களுக்கு அனுப்பி பிரிட்டிஷாருக்கு எதிராகக் கலகம் செய்யத் தூண்டியது. ஹுசைன் அதோடு நில்லாமல் வட ஆற்காடு, சித்தூரில் எல்லாம் கலகத்தைத் தூண்டிவிட்டுக்கொண்டே போனார். இங்கே திருவல்லிக்கேணியில் ஷாஹிதி மஹால் என்னும் ஆற்காடு மன்னரின் அரண்மனையில் முஸ்லிம் அன்பர்கள் கூட்டம் கூடி அவரை ஹைத்ராபாத் நிஜாமுடன் சேர்ந்து கலகம் செய்யுமாறு வற்புறுத்தினார்கள். சய்யது ஹாமிட் ஜெல்லா என்னும் திருவல்லிக்கேணி வாசி ஒருவர் இந்தியப்படை வீரர்களைத் தூண்டி விடும்படியான பிட் நோட்டிசெல்லாம் விநியோகித்து மாட்டிக்கொண்டு ஏழு ஆண்டுகள் சிறைக்குப்போன கதையும் உண்டு. சேலம், கோயமுத்தூர் மலபாரிலெல்லாம்கூடச் சின்னச்சின்ன கலகம் ஏற்படத் தூண்டுதல்கள் நிகழ்ந்தாலும் அவையெல்லாம் வெகு சுலபமாக அடக்கப்பட்டன.
இதுபோல மீண்டும் நிகழ்ந்தால் என்ன செய்வது என்று யோசித்த பிரிட்டிஷார் The Corps of Madras Volunteer
Guards
என்னும் அமைப்பை உருவாக்கி (ஜூலை 2, 1857) அதில் 100 குதிரைப்படை 700 தரைப்படை வீர்ர்களை நியமித்து மெட்ராசைச் சுற்றி ரோந்து வர ஆரம்பித்தனர். இந்த அமைப்பு தொடர்ந்து, பின்னாளில், கூட்டம் கூடும் இடங்களில் சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்தவும் உதவியது.

மெட்ராசில் உள்ள பிரிட்டிஷார் ஒன்று கூடி, கலகம் தங்களைப் பாதிக்காதவாறு காத்துவிட்டதற்கு நன்றி தெரிவிப்பதற்காக, காசு போட்டு மெமோரியல் ஹால் ஒன்றைக் கட்டினார்கள். கர்னல் ஜார்ஜ் வின்ஸ்காம் என்பவரால் வடிவமைக்கப்பட்டு கர்னல் ஹார்ஸ்லி என்பவரால் அருமையாகக் கட்டப்பட்ட அந்த இடம்தான் இன்றும் நம் பார்க் டவுனில் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது.

சுஜாதாவும் சரி சாண்டில்யனும் சரி, சிப்பாய்க்கலகம் சென்னையைத் தொடவே இல்லை என்று சொன்னதை முழுக்க சரி என்று சொல்லமுடியாது, வேண்டுமானால் ஏறக்குறைய சரி என்று சொல்லலாம்.

முக்கியக்குறிப்பு: 1857ன்  மகத்தான விடுதலை எழுச்சியை சிப்பாய்க் கலகம் என்று ஆங்கிலேயர் அழைத்தனர்.  ஆனால் வீரசாவர்க்கர் வெளியாவதற்கு முன்பே பிரிட்டிஷ் அரசால் தடைசெய்யப் பட்ட தனது நூலில்  முதல் சுதந்திரப் போர் என்றே அதனை அடையாளப் படுத்தினார். அந்த நூல் நாடு முழுவதும் தேசபக்தர்களிடையே பெரும் உத்வேகத்தை உருவாக்கியது  (தமிழில் ‘எரிமலை’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது).  தற்போதைய இந்திய வரலாற்று நூல்கள் அனைத்திலும்  முதல் சுதந்திரப் போர் (First War of Independence) என்ற சொல்லாட்சியே பயன்படுத்தப் படுகிறது.



ஆதாரக் குறிப்புகள்:

1.     Championing
Enterprise by V Sriram
2.     Madras and the 1858 Revolt by S Muthiah



Posted on Leave a comment

வால்மார்ட் – ஃப்ளிப்கார்ட் என்னும் ரோலர் கோஸ்டர் | ஜெயராமன் ரகுநாதன்

இந்தியாவின் ஆன்லைன் வர்த்தகம் (e Commerce) கடந்த ஓரிரு வருடங்களாக வெறிபிடித்தோடும் ரேஸ் குதிரையாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. தகவல் தொழில்நுட்பம் தறிகெட்டுப்பரவ, மொபைல் ஃபோன்களின் பயன்பாடு எகிற, வீட்டில் இருந்தபடியே வாங்குவதும் விற்பதும் நாளுக்கு நாள் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. கையில் பணம் புழங்கும் இருபது முப்பது வயது ஜனம் மந்திரிக்கப்பட்டது போல ஆன்லைனில் ஈடுபட்டிருக்கின்றது.

இந்தியாவின் ஆன் லைன் வர்த்தக ஓட்டத்தில் முன்னணியில் இருந்து வருவது ஃப்ளிப்கார்ட் (Flipkart) நிறுவனம். கடந்த சில வருடங்களில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 10 பில்லியன் டாலருக்கு (ரூ 65,000 கோடி) மேல் போய்விட்டது. இதற்குப் போட்டியாக அமேசான் நிறுவனம் வந்து சேர்ந்து மார்க்கெட்டில் ரகளை செய்ய, ஃப்ளிப்கார்ட் கொஞ்சம் தடுமாறி அமேசானின் சந்தைச்சண்டையில் சோர்வடையத் தொடங்கியது.

இந்தியாவின் வளரும் பொருளாதாரத்தின் மீது கண் கொண்ட அமெரிக்காவின் நிறுவனங்கள் எப்படியாவது இந்த 130 கோடி மக்களின் சந்தையைப் பிடிக்க முயன்று வருகின்றன. அந்தப் படையெடுப்பில் அமேசான் சில வருடங்களுக்கு முன் இங்கே வந்து ஆன்லைன் வர்த்தகத்தில் புகுந்து புறப்பட்டு இந்திய கம்பெனியாகிய ஃப்ளிப்கார்ட்டுக்குத் தூக்கமின்மையைக் கொடுத்துக்கொண்டிருந்தது. கடுமையான முயற்சிகளுக்குப்பின் ஃப்ளிப்கார்ட் இந்தியாவின் ஆன்லைன் வர்த்தகத்தில் 40% மர்க்கெட்டைப் பிடித்து வைத்திருக்க, அமெரிக்காவிலிருந்து வந்து அமேசான் தனது தொழில்நுட்பம், அளவில்லா விளம்பரச் செலவு மற்றும் தேர்ந்த அமெரிக்க அனுபவத்தினால் மடமடவென 31% இந்தியாவின் ஆன்லைன் மார்க்கெட்டைப் பிடித்து விட்டது.

அமெரிக்காவில் இன்றும் மாபெரும் சூப்பர்மார்க்கெட் நிறுவனமான வால்மார்ட்தான் சில்லறை வர்த்தகம் என்னும் ரீடெயில் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கிறது. அங்கே அமேசானின் மொத்த விற்பனை 178 பில்லியன் டாலர்தான். ஆனால் வால்மார்ட்டின் விற்பனை 500 பில்லியன் டாலராக இருந்தாலும் ஆன்லைன் வர்த்தகத்தில் வால்மார்ட் அமேசானைவிட மிகக்குறைவே. சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்காத்துக் கொண்டிருந்த வால்மார்ட் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டது.

இந்தியாவில் நுழையவும் அதே சமயம் ஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு பெரிய முயற்சியை எடுக்கவும் துணிந்து வால்மார்ட் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருந்த ஃப்ளிப்கார்ட்டை விலைக்கு வாங்கி விட்டது. அமேசானின் தாக்குதலைச் சமாளித்துவந்த ஃப்ளிப்கார்ட்டுக்கும் இந்த வால்மார்ட்டின் வருகை ஒரு பெரிய வரமாகிவிட்டது. ஃப்ளிப்கார்ட்டின் 77% பங்குகள் இப்போது வால்மார்ட்டின் கைகளில்! இன்னும் 5% சதவீதம் பங்குகளைக்கூட வாங்கிவிடப்போவதாகப் பட்சிகள் சொல்கின்றன.

என்ன விலை கொடுத்திருக்கிறார்கள் தெரியுமா? அதிகமில்லை, பதினாறு பில்லியன் டாலர்தான். (ஒரு லட்சத்தி நாலாயிரம் கோடி ரூபாய்.)

இதன் அர்த்தம் என்னவென்றால் ஃப்ளிப்கார்ட்டின் மொத்த சந்தை மதிப்பு 21 பில்லியன் டாலர்கள். (ஒரு லட்சத்தி முப்பதாறாயிரத்தி ஐநூறு கோடி ரூபாய்.)

இன்னொரு விஷயம் என்னவென்றால் ஃப்ளிப்கார்ட்டே இது வரை பெரும் நஷ்டத்தில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அது மட்டுமில்லை, இன்றைய கணக்குப்படி இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு ஃப்ளிப்கார்ட்டால் லாபம் ஈட்ட முடியாதாம்.

மேலும் இந்த வியாபாரத்தை வால்மார்ட்டின் தலைவர் டக்ளஸ் மாக்மில்லன் (Douglas McMillon) வெளியிட்ட சுருக்கில் அமெரிக்க ஸ்டாக் மார்க்கெட்டில் வால்மார்ட்டின் பங்கு விலை சரிந்து கிட்டத்தட்ட 10 பில்லியன் டாலர்கள் வரை வால்மார்ட்டின் சந்தை மூலதனம் (Market Capitalisation) அடி வாங்கியிருக்கிறது.

இவ்வளவு விலை கொடுத்து வாங்கின பிறகும் எப்பதான் லாபம் பார்க்க முடியும்? அதுக்காகவா இவ்வளவு விலை.

அதுதான் இந்தியா.

வளரும் இந்தியாவின் பொருளாதாரத்தினாலும் உயரும் இளைய சமுதாயத்தின் எண்ணிக்கையாலும், அவர்களின் சம்பாதிக்கும் செலவழிக்கும் திறனாலும், பரவி வரும் தொழில்நுட்பங்களினாலும் இந்தியாவின் ஆன்லைன் வர்த்தகம் மிகப்பெரியதாகிக்கொண்டு வருகிறது. இந்த வர்த்தகத்தில் பங்கு பெற உலகமெங்கும் பலரும் முயன்று வருகின்ற நிலையில் வால்மார்ட் நிறுவனம், இந்த ஃப்ளிப்காகார்ட் கூட்டின் மூலம் மிகப்பெரிய ஜாக்பாட் அடித்திருக்கிறது எனலாம்.

ஆன்லைன் வர்த்தகத்தில் விற்பனையைத்தாண்டி பணப்பட்டுவாடா, டெலிவரி, கஸ்டமர் சர்வீஸ் என்று பல விஷயங்கள் இருக்கின்றன. அலிபாபா என்னும் இன்னொரு பெரிய ஆன்லைன் நிறுவனம், பேடிஎம் (Paytm), சொமாடோ (Zomato), ஸ்னாப்டீல் (Snapdeal), பிக் பாஸ்கெட் (Big Basket) போன்ற தன் சக நிறுவனங்கள் மூலமாக இந்த ஆன்லைன் வர்த்தகத்தில் தன் பெயரைப் பொறிக்க முயலுகிறது.

இந்த வால்மார்ட் – ஃப்ளிப்கார்ட் ஒப்பந்தம் பற்றிச்செய்திகள் வெளியானவுடன் பல தரப்பட்ட எதிரொலிகளைக்கேட்க முடிந்தது.

“ஐயகோ! வெளிநாட்டுக்காரன் நுழைகிறானே” என்று சிலர் அலறாமலில்லை, அதே சமயம் “இந்தியா வயசுக்கு வந்துவிட்டது, இதன் மூலம் இந்தியப் பொருளாதாரம் சிறக்கும், வேலை வாய்ப்புகள் பெருகும், நமது ஏற்றுமதி அதிகரிக்கும், வெளி நாட்டு மூலதனம் இங்கே வந்து சேரும்” என்றெல்லாம் பொருளாதார நிபுணர்கள் பேட்டிகள் கொடுத்தார்கள்.

இந்திய இளைய சமுதாயம் ஸ்டார்ட் அப் (Start Up) என்னும் சுய வேலை வாய்ப்புத் தொழில்களுக்கு ஃப்ளிப்கார்ட் ஒரு முன்னோடி. ஃப்ளிப்கார்ட்டைத் தொடங்கிய பின்னி பன்சல் தன்னிடம் உள்ள பங்கின் ஈடாக சம்பாதித்தது 6,500 கோடி ரூபாய். நாமும் அதே போல கம்பெனி தொடங்கிப் பின்னாளில் வெளி நாட்டு நிறுவனத்துக்கு விற்றுப் பல ஆயிரம் மடங்கு லாபம் சம்பாதிக்க வேண்டும் என்னும் உந்துதலைக் கொடுத்திருக்கிற ஒப்பந்தம் இது.

இதெல்லாம் போக நமது வருமான வரி இலாகாவும் தங்களுக்குக் கிடைக்கப்போகும் மூலதன லாப வரி (Capital Gains Tax)ஐ எண்ணி நாக்கைச் சப்புக்கொட்டிக்கொண்டு இருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவுக்குக் கிடைக்கப்போகிற மிக முக்கிய நன்மை என்று நான் கருதுவது வால்மார்ட்டின் அசுர நிர்வாகத் திறனும் அனுபவமும் இந்திய வியாபார உலகில் உண்டாக்கப்போகும் சில நல்ல தாக்கங்களும்தான்.

அமேசானைவிட வால்மார்ட்டின் பலம் இருப்பது அதன் ஒப்பீட்டுப் போட்டியாளர் வலிமை (Competitive Strengths) என்பதில்தான். சில வருடங்களாகவே வால்மார்ட் புதிய, உயர் தரக் காய்கறிகள், பழங்கள் மற்றும் விவசாயப் பொருட்களை விற்பனைச் சங்கிலி (Supply Chain) மூலம் திறமையான விநியோகத்தைச் செய்து வருகின்றது. இந்த விநியோக முறையில் பல நுணுக்கங்களைப் புகுத்தி பொருட்களை நுகர்வோருக்கு எளிமையாக, திறமையாக, குறைந்த விலையில் கொண்டு சேர்த்துவிடும் இயலில் வால்மார்ட் பிரசித்தி பெற்றிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்னால் ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கூட இதை முயன்று அவ்வளவாக வெற்றி பெற முடியவில்லை. வால்மார்ட்டின் பரிசோதனை முயற்சியாக சில வருடங்களுக்கு முன்பே இந்தியாவில் அவர்கள் மொத்த விற்பனை நிலையங்களை நடத்தி வந்திருக்கிறார்கள். 21 சிறந்த விலை (21 Best Price) என்னும் பெயர் கொண்ட மொத்த விற்பனை நிலையங்கள் ஏற்கெனவே பத்து லட்சம் சில்லறை வியாபாரிகளை உள்ளடக்கியிருக்கிறது. இப்போது வால்மார்ட் இதை இன்னும் விரிவுபடுத்தி ஒவ்வொரு இந்தியக் குடும்பத்துக்கும் டெலிவரி செய்யக்கூடிய வகையில் பெரிதுபடுத்த திட்டம் வைத்திருக்கிறது.

ஒரு திருமணத்துக்குத் தேவையான அனைத்தையும் ஃப்ளிப்கார்ட்டில், வால்மார்ட்டில் வாங்கலாம் என்பது மிகப்பெரிய சௌகரியம் என்றாலும் இதுபோன்ற மாபெரும் நிறுவனங்களின் வரவால், உப்பு புளி முதற்கொண்டு எல்லாமே ஆன்லைன் எனறாகிவிட்டால், தெருக்கோடியில் ஒன்று, இரண்டு என்று நம்பர் எழுதின பலகைகளைக் கதவாய் வைத்துச் செயல்படும் சிறுசிறு கடை வியாபாரிகள் நிலைமை என்னாகும்?

டக்ளஸ் மாக்மில்லன் தயங்காமல் Inclusive என்னும் வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்.

“கிரானா கடைகள், (அதான் தெருக்கோடி நாடார் கடை என்று நாம் சொல்லுவது) எங்களுக்கு மிக முக்கியம். அவர்களோடு தொடர்பு கொண்டுதான் நாங்கள் பொருட்களை கஸ்டமர்களுக்குக் கொண்டு சேர்க்கப்போகிறோம். எங்களின் வெற்றியில் அவர்களும் உள்ளடங்கியிருக்கிறார்கள்.”

முதன்முதலில் வால்மார்ட் இந்தக் கிராம அளவில் இருக்கும் சிறுசிறு கடைகளுக்கு வியாபாரத் திறனை மேம்படுத்தும் பயிற்சிகள் தரப்போகிறது. சரக்கு மேலாண்மை (Inventory Management), டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை (Digital Payment) மற்றும் போக்குவரத்து தொழில்நுட்பம் (Logistics Technology) ஆகிய துறைகளில் அவர்களுக்குத் திறனை அதிகரிக்கச் செய்து தத்தம் சிறு வியாபாரத்தை மிகத் திறமையாகவும் ஒழுங்காகவும் செய்து லாபம் ஈட்டும் கலையைக் கற்றுத் தரவிருக்கிறார்கள்.

நமக்கு இந்த விஷயம் மிக முக்கியமான செய்தி ஒன்றைத் தெரிவிக்கிறது.

மேற்சொன்ன பயிற்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டால் இந்தியாவின் இ-காமர்ஸ் என்னும் இணைய வர்த்தகம் நமது கிராமப்புற மற்றும் இதர சிறு குறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் தொழில் வாழ்க்கைத் தரத்தையே மற்றியமைத்துவிடும் என்பது என் கணிப்பு. ஆனால் இவற்றையெல்லாம் நாம் மிகக் கவனமாகக் கண்காணிக்கவேண்டும் என்பது முக்கியமானது.

இதெல்லாம் செய்து முடிக்க வால்மார்ட்டுக்கு இன்னமும் அதிகம் முதல் தேவைப்படும். அதன் தலைவர் ஏற்கெனவே தாம் இன்னும் 5 பில்லியன் டாலர் முதலீட்டைச் செய்யப்போவதாக அறிவித்துவிட்டார். இதனால் உடனடியாக 1 கோடி வேலை வாய்ப்புக்கள் உண்டாகும் என்பது விற்பன்னர்களின் எதிர்பார்ப்பு. சென்ற சில வருடங்களாகவே வால்மார்ட் இந்தியாவில் வாங்கும் பொருட்களில் 97% வரை சிறு குறு வியாபாரிகளிடம் வாங்கி, கிட்டத்தட்ட 4-5 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.

நாம் அடையாறில் வாங்கும் ஒரு கிலோ உருளைக்கிழங்குக்கு ரூ 20 வரை கொடுக்கும்போது, அந்த உருளைக்கிழங்கை விளைவித்த விவசாயிக்குக் கிடைப்பது ரூ 4 கூட இருக்காது. கடந்த சில வருடங்களில் ரிலையன்ஸ், பிக் பசார் போன்ற பெரும் சூப்பர் மார்க்கெட்டுகள் வந்த பின்னர் ஓரளவுக்கு நடுத்தரகர்கள் மறைந்து போய் விவசாயிக்கு இன்னும் அதிகம் கிடைக்கிறது. ஆக இனி ஏஜண்ட்டுகளும் மொத்த வியாபாரிகளும் நிச்சயம் இழப்பைச் சந்திப்பார்கள். அவர்களும் இந்த மெகா மாற்றத்தினால் இந்த லாஜிஸ்டிக் சங்கிலியில் உள்ளிழுக்கப்பட்டால் அவர்களுக்கும் கிடைக்க வேண்டிய நியாயமான லாபம் கிடைக்க வழி இல்லாமலில்லை.

ஒரு விவசாயி தன் பயிரை அறுவடை செய்து, மாட்டு வண்டியில் ஏற்றி, நாற்பது ஐம்பது கிலோமீட்டர் ஓட்டி வந்து சந்தையில் நின்றால், அங்கு இருக்கும் நடுத்தரகர்களின் சந்தர்ப்பவாதக் கூட்டால் விவசாயி தன் பொருளை மிகக்குறைவான விலைக்குத்தான் விற்க முடியும் என்னும் நிலைதான் இருக்கிறது. இந்தக் கொடுமையைத் தடுக்கவே அரசாங்கம் Agricultural Produce Marketing Committees (APMC) என்னும் விவசாயப் பொருள் விற்பனை கமிட்டிகளை ஒழித்துப் புதுவித மாற்றங்களைக்கொண்ட திருத்தச் சட்டத்தை ஏற்படுத்தியது. ஆனால் மகாராஷ்டிரா, பிஹார் போன்ற ஓரிரு மாநிலங்கள் மட்டுமே இந்தச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கின்றன. மற்ற மாநிலங்கள் ஏன் மெத்தனமாக இருக்கின்றன, அரசியல்வாதிகள் ஏன் இது பற்றி அதிகம் பேசுவதில்லை என்பதற்கான உண்மைக் காரணத்தை வெளியே சொன்னால் நம்மைச் சுளுக்கு எடுத்துவிடுவார்கள். e NAM என்னும் இணையத்தளம் விவசாயிகளுக்குச் சுற்று வட்டார மார்க்கெட் நிலவரத் தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் பல அரசுத்திட்டங்கள் போலவே இந்த eNAM திட்டமும் அப்படி ஒன்றும் வெற்றியடையவில்லை.

ஆனால் வால்மார்ட் போன்ற மாபெரும் சில்லறை விற்பனை நிறுவனங்கள், குளிர் சேமிப்புத் தலங்கள், குளிரூட்டப்பட்ட வாகனங்கள், தரம் பிரிக்கும் வசதிகள் போன்றவற்றில் பெரும் முதலீடு செய்வார்கள். இது, அறுவடைக்குப் பின்னால் உண்டாகும் சேதம், அழுகல் போன்ற இழப்புக்களைப் பெருமளவில் குறைக்கும்.

பல நன்மைகள் உண்டாகும் என்றாலும் வால்மார்ட் இந்த அளவு முதலீடு மற்றும் அதிக மேல் செலவுகள் கொண்டு வியாபாரத்தை நடத்தும்போது நிச்சயம் லாப நோக்கில்தான் இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது.

இதில் டெல்லிக்கும் ஒரு செய்தி இருக்கிறது.

உண்மையாகவே இந்த பாஜக அரசு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் பட்ஜெட் குறிக்கோளை சீரியஸாக எடுத்துக்கொள்ளுமாயின், முதலில் அவர்கள் செய்ய வேண்டியது இந்த APMCக்களின் நேர்மையற்ற கூட்டைக் கலைக்க வேண்டும். இந்தக் கூட்டுதான் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை என்னும் ஆக்ஸிஜன் வழங்கும் ஊற்றுக்கண் என்றொரு ஊகம் இருப்பதால் (சந்தேகம் என்றே சொல்வோம்) இந்த APMC ஒழிப்பை நடத்துவார்களா என்பது கேள்வி. அப்படி நடந்தால் வால்மார்ட், அமேசான், ஸ்னாப்டீல், அலிபாபா போன்ற நிறுவனங்களுக்கிடையே ஏற்படும் கடும் போட்டியினால் நுகர்வோர் பயனடைய முடியும்.

அமேசான் இந்த வால்மர்ட் – ஃப்ளிப்கார்ட் கூட்டினால் தன் நிலையை ஸ்திரப்படுத்திக்கொள்ள இன்னும் ஆக்கிரமிப்பை அதிகரிக்க முயலும். இலவசங்கள் என்னும் மழை பெய்யும். விலைக் குறைப்பு என்னும் இடி இடிக்கும். டிஸ்கவுண்ட் என்னும் புயல் வீசும். நமக்கு நல்ல பொருட்கள் சகாய விலையில் தட்டிக்கொண்டு போகும் வாய்ப்புக்கள் பெருகும். அமேசானைவிட வால்மார்ட் மிகப்பெரிதாகையால் அதன் பலதரப்பட்ட லேபிள் பொருட்கள் இந்தியாவில் அதிகமாகக் கிடைக்கும்.

இந்தியாவின் ஆன்லைன் வர்த்தகம் இனி ஒரு ரோலர் கோஸ்டர் பயணம். திரில்களுக்கும் ஆச்சரியங்களுக்கும் குறைவிராது. விபத்துகள் இல்லாதிருக்க அரங்கனை வேண்டுவோம்.

ஃப்ளிப்கார்ட்டில் வேலை செய்த 3,000 பேருக்கு அந்த நிறுவனம் ஆரம்பித்த புதிதில் Employee Stock Option என்னும் ஊழியர் பங்கு உரிமை கொடுத்திருந்தது. இந்த ஃப்ளிப்கார்ட் வால்மார்ட் ஒப்பந்தத்தின்படி இப்போது வால்மார்ட்டுக்கு 77% பங்குகள் விற்கப்படுவதால், ஃப்ளிப்கார்ட் தன் ஊழியர்களிடமிருந்து அந்தப் பங்குகளைப் பணம் கொடுத்து வாங்கவிருக்கிறது. உறுதிப்படுத்தாத செய்திகள் தெரிவிப்பது ஒவ்வொரு பங்கின் விலையும் 150 டாலர் இருக்கலாமாம். ஆயிரம் பங்குகள் வைத்திருப்பவருக்குக் கிடைக்கப்போவது கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்!
எண்பதுகளில் இன்ஃபோஸிஸ் செய்த அதே மாஜிக்கை இப்போது ஃப்ளிப்கார்ட் செய்யவிருக்கிறது.

Posted on Leave a comment

மத்திய பட்ஜெட் 2018 | ஜெயராமன் ரகுநாதன்


“இந்தியா ஒரு விவசாய நாடு!”

ஃபிப்ரவரி ஒன்றாம் தேதி காலை எல்லோரும் டிவியின் முன் ஆவலோடு காத்திருக்க, அருண் ஜெய்ட்லியின் வார்த்தைகள் காதில் விழுந்தன..

இந்த வருட பட்ஜெட்டின் சார்பு நிலை அப்போதே ஓரளவுக்குப் பிடிபட்டுவிட்டது. விவசாயிகளும் கிராமப்புறப் பொருளாதாரமும் முன்னணியில் நிற்கப்போவதைக் கட்டியம் கூறிய வார்த்தைகள்.

பட்ஜெட்டுக்கு முன்னர் அளித்த ஒரு பேட்டியில் நமது பிரதமர், “இலவசங்களை சாதாரண இந்தியன் எதிர்பார்க்கவில்லை. அவன் எதிர்பார்ப்பது நேர்மையும் தகுதிக்கேற்ற சலுகைகளும்தான்” என்று ஆணித்தரமாகச் சொல்லியிருந்தார்.

மீடியாக்களிலும் அலுவலக காரிடார்களிலும் மிக அதிகமாகப் பேசப்பட்ட ஜனவரி மாதம் இது. அப்படிப் பேசின விஷயம், இந்த வருட பட்ஜெட் எப்படி அமையும் என்பதுதான். ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப்பிறகு வரும் முதல் பட்ஜெட். மேலும் இந்த பாஜக அரசின் கடைசி பட்ஜெட். இந்த இரண்டு விஷயங்களும் பலரை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்தன.

நிச்சயம் நடுத்தர வர்க்கத்துக்கு அதிகம் நன்மைகள் வரும் என்றும் கார்ப்பரேட்டுகளுக்கு வரிக் குறைப்பு இருக்கும் எனவும் வெளி நாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் வண்ணம் நிறைய சமாச்சாரங்கள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட்.

விவசாயிகளின் நலன், சுகாதாரம், ஊட்டச்சத்து, பெண் முன்னேற்றம், கல்வி, கட்டுமானம், மலிவு வீட்டு வசதி போன்ற விஷயங்கள் இந்த பட்ஜெட்டில் முன்னிலை பெறப்போவதை உணர முடிந்தது.

மோதி அரசு பதவியேற்ற சமயத்தில் நாட்டின் பொருளாதாரம் ஒரு வெடிக்கக் காத்திருக்கும் வெடிகுண்டாக இருந்தது. ஏராளமான ஊழல்கள், பொருளாதார விரயம், குழப்பமான இறக்குமதிக் கொள்கை ஆகியவை நம் பொருளாதாரத்தின் வேரையே அசைத்திருந்தன. 2011–13 வரையிலான காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி நிலை குலைந்திருந்தது. விலைவாசி ஏற்றம் ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட 9.8% வரை உயர்ந்திருந்தது. பட்ஜெட்டில் விழுந்த துண்டு 5.1% அளவில் அதிகரித்து இருக்க, ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாகி இந்தப் பற்றாக்குறை இன்னும் உயர்ந்தது.

மோதி அரசு பதவியேற்ற முதல் இரண்டு ஆண்டுகளில் பொருளாதார வீழ்ச்சியைச் சரி செய்து சமன்படுத்துவதே முக்கியமாகிப் போனது. பட்ஜெட் பற்றாக்குறையைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டு இன்று அந்தப் பற்றாக்குறை 3.5% ஆகக் குறைந்துள்ளது. வெளிநாட்டு வர்த்தகப் பற்றாக்குறை கூடப் பாதிக்குப் பாதியாகக் குறைந்து இப்போதைய நிலைமையில் நல்ல முன்னேற்றத்துடன் இருந்து வருகிறது. கறுப்புப் பணப்புழக்கத்தால் ஏகத்துக்கும் உயர்ந்திருந்த தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டின் விலையேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டாலும் அரசு கொண்டு வந்த ரூ 1,000 மற்றும் ரூ 500 பண மதிப்புத் தடை சில மாதங்களுக்கு நாட்டைக் கொந்தளிப்பில் தள்ளியதை மறுக்க முடியாது. அறுவை சிகிச்சையானதால் அவசியத்தேவை என்றாலும் வலியை மறைக்க முடியவில்லை. கூடவே நாடு தழுவிய ஜிஎஸ்டியும் கொண்டு வரப்பட்டதால் கொந்தளிப்பு இன்னும் அடங்காமல் இருந்தாலும் ஒட்டுமொத்தப் பொருளாதாரம் ஓரளவு கட்டுக்குள் வந்துவிட்டதை யாரும் மறுக்க முடியாது. ஆக, கடந்த வருடங்களில் மோதி அரசின் பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்ட நிலைமைகள் சற்றே அசாதாரணமானவை என்பது கண்கூடு.

இந்த வகையில் 2018க்கான பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டபோது சில விவாதங்கள் எழுந்தன.

தேர்தல் வருவதால்தான் மோதி அரசாங்கம் இந்த வருட பட்ஜெட்டில் பம்மியிருக்கிறார்கள் என்று மோதி எதிர்ப்பாளர்கள் சொல்கிறார்கள்.

முந்தைய அரசாங்கங்கள் போலன்றித் தேர்தலை மனதில் கொள்ளாமல் உண்மையான நலத்திட்டங்கள் நிறைந்த வளர்ச்சிக்கான பட்ஜெட் இது என்பது நடு நிலையாளர்களின் குரல்.

மிக அதிகமான வரி வருவாய் (18.7% அதிகரிப்பு)

முதலீட்டைத் திரும்பப்பெறும் முயற்சியில் வந்து சேர்ந்த அபரிமிதமான தொகை (ரூ 1 லட்சம் கோடி) இருந்தபோதிலும், ஜிஎஸ்டியில் எதிர்பார்த்ததற்கும் குறைவான வருவாயே வந்ததாலும் அரசுக்கு வந்து சேரவேண்டிய டிவிடெண்ட் வருவாய்க் குறைவாலும் அருண் ஜெய்ட்லி பட்ஜெட் பற்றாக்குறையை விட்டுத்தான் பிடிக்க முயன்றிருக்கிறார். போன பட்ஜெட்டில் இந்தப் பற்றாக்குறை 3.2% என்று திட்டமிடப்பட்டாலும் அதை 3.5% க்கு அனுமதித்து அடுத்த வருடத்திய பற்றாக்குறையை 3.3%ஆக நிறுவி இருக்கிறார். கூடவே பல சரி செய்யும் நடவடிக்கைகளையும் அறிவித்திருக்கிறார்.

இந்த பட்ஜெட் நிச்சயம் இந்தியக் கிராமப்புறச் சர்புடையதுதான் என்பதில் சந்தேகமில்லை. முக்கியமாக விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதரவு விலை, ஆன செலவைப்போல ஒன்றரை மடங்காவது இருக்கும் என்பதில் தொடங்கி அருண் ஜெய்ட்லி அறிவித்த பலப்பல திட்டங்கள் கிராமம் மற்றும் வளர்ச்சி சார்ந்ததாகவே இருக்கின்றன. அதனாலேயே இது தேர்தலைக்கொண்டு போடப்பட்ட பட்ஜெட் என்கிறது ஒரு வாதம்.

அதே சமயம் பல நல்ல முயற்சிகளும் எடுக்கப்பட்டிருப்பதை மறுக்கவும் முடியாது.

விவசாயம், சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு என்னும் நான்கு தூண்களில் இந்த பட்ஜெட் இருப்பதாக பல விற்பன்னர்கள் கருத்துக் கூறியிருக்கிறார்கள். கூடவே மத்தியத்தர சிறு குறு தொழில் வளர்ச்சியும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

விவசாயிகளுக்கு அடக்க விலைக்கு மேல் அம்பது சதவீதம் குறைந்த பட்ச விலை நிர்ணயம் அவர்களின் லாபத்துக்கு மிக முக்கியத் தேவையாகும். நாடு முழுவதும் கிட்டத்தட்ட 22,000 சந்தைகளில் இந்தக் குறைந்த அளவு விலை கிடைக்க ஏற்பாடும் செய்யப்போவதாக அறிவித்திருப்பது நன்மையே.

திட்டமிடப்பட்ட நேரத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பிரதமரின் கிராமப்புறs சாலை அமைப்புத் திட்டம் முடிவடைந்துவிட்டது. ஐந்து கோடி குடும்பங்களுக்கு இலவச கேஸ் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இது இன்னும் மூன்று கோடி குடும்பங்களுக்கு வழங்கவும் ஏற்பாடுகள் நடக்கவிருக்கின்றன. கிராமப்புற நகர்ப்புற ஏழைகளுக்கான மலிவு விலை வீடுகள் வழங்கும் திட்டம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பத்து கோடி ஏழைக் குடும்பங்களை உள்ளடக்கிய காப்பீட்டுத் திட்டம் உலகத்திலேயே மிகப்பிரம்மாண்டமான திட்டம் என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

ஒன்றரை லட்சம் உடல்நலப் பரிசோதனை மையங்கள் அமைத்து பரிசோதனை செய்தல் மற்றும் மருந்து வழங்குதல், குறு தொழில்களுக்கு உத்திரவாதத்துடன் இன்னும் மூன்று லட்சம் கோடி கடனுதவி (ஏற்கெனவே ரூ 4 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது), மத்தியத்தரத் தொழில்களுக்கு வரி குறைப்பு என்று பல வளர்ச்சித்திட்டங்களையும் இந்த பட்ஜெட் உள்ளடக்கியிருக்கிறது.

“ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்த மத்தியத்தரத்துக்கு ஒன்றுமே இல்லை!” என்னும் குரல் ஒலிப்பதைக் கேட்க முடிந்தது.

அறுபது வயதுக்கு மேற்பட்ட சீனியர்களுக்கு வரிச்சலுகை, மாதச்சம்பளம் பெறுபவர்களுக்கு ரூ 40,000 standard deduction போன்ற சலுகைகள் மத்தியத்தர வர்க்கத்துக்கு உதவும் அம்சங்கள். சீனியர் சிட்டிசென்களுக்கு அவர்களது முதலீட்டிலிருந்து வரும் வட்டிக்கான வரி விலக்கு ரூ 10,000த்திலிருந்து ரூ 50,000மாக உயர்த்தப்பட்டிருப்பது, பணவீக்கம் மற்றும் குறைந்து வரும் டெபாசிட் வட்டி ஆகியவற்றிலிருந்து பெரிய விடுதலை. ஆனாலும் சம்பள வரி விலக்கை ரூ 3 லட்சத்திற்கு உயர்த்துவார் என்னும் எதிர்பார்ப்பு பலரிடம் இருந்ததையும், அது இல்லாமல் போனதால் ஏமாற்றமும் கோபமும் உண்டானதையும் கவனிக்க முடிகிறது.

ஆனால் கடந்த நான்கு வருடங்களில் பார்த்தால் மத்தியத்தர வர்க்கத்துக்காக இந்த அரசு கொண்டு வந்த சலுகைகள் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்ததற்கு எவ்விதத்திலும் குறைந்தது அல்ல என்பதை உணரலாம்.

அதேபோல கம்பெனிகளுக்கான வரிவிதிப்பு சராசரியாக 25% அளவில் குறைக்கப்படும் என்னும் எதிர்பார்ப்பும் இருந்தது. அதுவும் நடக்கவில்லை. ஐரோப்பாவில் கம்பெனிகளின் சராசரி வரி விகிதம் 20% தான். சமீபத்தில் அமெரிக்காவும் கார்ப்பரேட் வரியை 21% ஆகக்குறைத்துவிட்டது. இந்த நிலையில் நாமும் அதைக் குறைத்திருந்தால்தான் அந்நிய முதலீடுகள் நமக்கு வரக்கூடிய வாய்ப்புக்கள் பெருகும் என்னும் வாதம் எழுகிறது.

அதேபோல இதுநாள் வரை முழுவிலக்குப் பெற்றிருந்த நீண்ட கால மூலதன ஆதாயம் (Long Term Capital gain) இந்த முறை 10% வரி விதிக்குள்ளாகியிருக்கிறது. இது பங்குச்சந்தையில் மிகப்பெரும் எதிர்ப்பைக் கண்டிருக்கிறது. இது நிச்சயம் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்னும் கோரிக்கை பரவலாக எழுந்திருக்கிறது. Indexing எனப்படும் சமன்பாட்டையாவது செய்ய அனுமதிக்கப்படவேண்டும் என்பது உரக்கக் கேட்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பங்குச்சந்தை இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது. மற்ற எந்தச் சொத்தை விற்றாலும் பெறப்படும் நீண்ட கால லாபத்துக்கான வரி கட்டியாக வேண்டும். பங்குகளுக்கு மட்டும் வரி இல்லாமல் இருந்தது. 2004ல் இந்த விலக்கு வந்தபோது பங்குச் சந்தை 6,500 – 7,000 புள்ளிகளாக இருந்தது. அது இப்போது 35,000 வரை உயர்ந்துவிட்டிருக்கிறது. இதன் மூலம் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியவர்கள் வரி கட்டவில்லை. போன நிதி ஆண்டில் மட்டுமே வரி இல்லாமல் பங்குகளில் ஈட்டப்பட்ட லாபம் 3.7 லட்சம் கோடியாகும். எனவே இந்த வரி விதிப்பு நியாயமானதுதான் என்பது அரசின் வாதம்.

மேலே சொன்னமாதிரி கடந்த நான்கு ஆண்டுகளில் சீர் திருத்தப்பட்டதால் நம் பொருளாதாரம் தன் வேர்களை உறுதியாக்கிக்கொண்டு இன்று உலகத்திலேயே மிக வேகமாக முன்னேறும் நாடுகளுள் இந்தியாவும் ஒன்று என்பதை உறுதி செய்துள்ளது. நிச்சயம் அடுத்த சில ஆண்டுகளுக்குப் பொருளாதார வளர்ச்சி 8%க்குக் குறைய வாய்ப்பே இல்லை என்பது புலப்படுகிறது.

ஊசலாடிக்கொண்டிருந்த பட்ஜெட் பற்றாக்குறை ஒரு வழியாக 3,5%க்குக் கொண்டு வரப்பட்டு, அடுத்த வருடத்தில் 3.3%ஆகக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வரிகள் விஷயத்தில் நிதி அமைச்சர் சொன்னாற்போல வரி வட்டத்துக்குள் வருபவர் எண்ணிக்கை கணிசமாகக் கூடியிருக்கின்றது. தாமாகவே பதிவு செய்யும் வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை ஜிஎஸ்டியினால் உயர்ந்திருக்கின்றது. ஜிஎஸ்டி வந்துவிட்டதால் மறைமுக வரிகள் பற்றி இந்த பட்ஜெட் அதிகம் பேசவில்லையென்றாலும் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டு மொபைல் ஃபோன், அழகு சாதனப்பொருட்கள், கார், டெலிவிஷன் ஆகியவை விலையேற்றம் கண்டிருக்கின்றன. ஒரு வகையில் இது ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு ஊக்கம் கொடுப்பதாகும்.

பொது நலத்தையும் வளர்ச்சியையும் குறிக்கோளாகக்கொண்ட இந்த பட்ஜெட்டைக் குறை கூற அதிகம் காரணங்கள் அதிகமில்லைதான் என்றாலும் சில நெருக்கடியான கேள்விகள் ஒலிக்காமலில்லை.

அறிவிக்கப்பட்ட சில திட்டங்களுக்கான நிதி பற்றித்தான் சந்தேகங்கள் எழுகின்றன. பல நல்ல திட்டங்களுக்கான நிதியைப் பெற அமைச்சர் பட்ஜெட்டுக்கு வெளியிலிருந்து (Extra budgetary resources) பெற விழைந்திருக்கிறார். அந்த அளவு நிதி திரட்டப்படவில்லை என்றால் திட்டங்கள் அறிவிப்பிலேயெ நின்று போகக்கூடிய அபாயம் உண்டு. உதாரணமாக குறைந்த அளவு விலை நிர்ணயம் (Minimum Support Price – MSP) ஒண்ணரை மடங்கு என்று சொல்லிவிட்டு உணவுக்கான மானியம் ரூ 29,041 கோடிதான் என்றும்  இந்த MSP எந்த நிலையிலும் குறையாமல் பார்த்துக்கொள்ள, சரியாக முறைமைப்படுத்தும் கடமையை நிதி ஆயோக்கிடம் விட்டிருக்கிறார், அவர்கள் அதைச்செய்ய முடியாமல் போனால், இந்த நலத்திட்டமே உடைந்து போய்விடக்கூடும். அதே போல கிராமப்புறச் சந்தைகள் ஏற்படுத்துதல் விவசாயிகளுக்குப் பெரும் நன்மை பயக்கும் எனபதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு வெறும் ரூ 2,000 கோடிதான் என்பதுதான் சிக்கல்.

மிகப்பெரும் கிராமப்புறத் திட்டங்களுக்கான நிதித்தேவை கிட்டத்தட்ட ரூ 14.34 லட்சம் கோடி. அதில் 80%க்கு மேலாக அருண் ஜெய்ட்லி எதிர்பார்ப்பது பட்ஜெட்டுக்கு வெளியிலிருந்து என்னும் போது நமக்கு வேர்த்து விடுகிறது.

பத்து கோடி குடும்பங்களுக்கு தலா ரூ 5 லட்சம் மதிப்பில் காப்பீட்டுத்திட்டம், தனியார் காப்பீட்டு கம்பெனிகளால்தான் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதும் கொஞ்சம் சந்தேகத்துக்கு இடமளிக்கும் அம்சம்தான். இது எப்படி நிர்வகிக்கப்படும் என்பது பெரிய கேள்வி.

கட்டுமானத் திட்டங்களில் நிச்சயம் உறுதித் தன்மை இருப்பதைப் பார்க்க முடிகிறது. ரூ 5.97லட்சம் கோடிக்கான ஒதுக்கீட்டில் முக்கால்வாசித் திட்டங்களை பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டிருப்பது ஆறுதல்.

குமாரமங்கலம் பிர்லா, என்.சந்திரசேகரன் (TCS), தீபக் பாரிக், உதய் கோடக், சந்தா கோச்சர் போன்ற தொழிலதிபர்கள் இந்த பட்ஜெட்டை சிலாகித்திருக்கிறார்கள். முக்கியமாக, கிராமப்புற, கல்வி, சுகாதார முனைப்புக்கொண்ட அம்சங்கள் இந்தியாவின் எதிர்காலப் பொருளாதாரத்துக்கு நல்ல மேடை அமைக்கும் என்பது இவர்களின் கணிப்பு. கட்சி சார்பில்லாத இந்த விற்பன்னர்களின் கருத்து நிச்சயம் நம்பகத்தன்மை வாய்ந்ததுதான்.

கழுகுப் பார்வையில் பார்த்தோமானால் இந்த பட்ஜெட்டின் நோக்கம் அதன் வீச்சு, நீண்ட காலப் பார்வை ஆகியவற்றில் குறை சொல்ல ஏதுமில்லை. வளர்ச்சியைவிட தேர்தலைக்கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்னும் குற்றச்சாட்டில் பெரிய அளவில் உண்மை இல்லை. இன்னும் சொல்லப்போனால் தனி மனிதருக்கான வரிவிலக்கு கூட்டப்படாதது, இந்த அரசு தேர்தலை மட்டுமே மையமாக வைத்து இந்த அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை என்பதை உறுதிபடுத்துகிறது. ஒருவேளை தேர்தலை மையாக வைத்து சிறிய சாய்வு இருக்குமானால் கூட அதைப் புரிந்துகொள்ள முடியும். அந்த சாய்வு கூடப் பொருளாதாரத்தின் அடிப்படையை எந்தவிதத்திலும் சிதைப்பதாக இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கவலை தரும் அம்சம் நிதிப்பற்றாக்குறையும் அதனால் பாதிக்கப்படப்போகும் நல்ல திட்டங்களும்தான். கூடவே ஜிஎஸ்டி வருவாயும் பரந்துபட்டிருக்கும் வரி வருவாயும் எதிர்ப்பார்த்த அளவுக்கு வருமானால் எதிர்கால பட்ஜெட்டுகள் இந்த பட்ஜெட்டின் அஸ்திவாரத்தைக் கட்டிக்காத்து நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமாக்கிவிட முடியும்.

அது நடக்கும் என்று நம்புவோம்.

Posted on Leave a comment

கிளிக்காரன் (சிறுகதை) – ஜெயராமன் ரகுநாதன்

“ரமணா, வா வா. அடியே… யாரு வந்திருக்கா பாரு.”

“ரமணனா… வா வா. சௌக்கியமா இருக்கியா?”

“மன்னி. நீங்க சௌக்கியமா? சங்கரா, எப்படி இருக்கே?”

“என்ன கேள்விடா இது. 84 வயசுக்கு ஏதோ நாளை ஓட்டிண்டு இருக்கோம். ஆமா, உனக்கே 81 ஆயிடுத்தே.”

“போன தை மாசந்தானே சதாபிஷேகம் பண்ணிண்டான் ரமணன். சௌம்யா சௌக்கியமா இருக்காளா?”

“இருக்கா மன்னி. இந்த முட்டி வலிதான் அப்பப்போ படுக்கையில போட்டுடறது.”

“ஆமா எப்படி இருக்கு நம்ம ராக்கியப்ப முதலி ஸ்ட்ரீட்?”

“அப்படியேதான் இருக்கு. அட சொல்ல மறந்துட்டேன், சங்கரா. அந்த பைத்தியம் போன வாரம் செத்துப்போய்ட்டாண்டா.”

“அடடே… கிளி மாதிரி சொன்னதையே சொல்லிக்கிட்டு தெருவுலேயே சுத்திண்டு இருந்தானே அவனா? போய்ட்டானா? அவனுக்குமே 75 வயசு இருக்கும்டா.”

“ஆமா, ஆறேழு வயசு இருக்கும்போது நம்ம தெருவுக்கு வந்தான் அனாதையா.”

“இத்தனை வருஷம் தெருவுலேயேதான் இருந்தான் இல்ல?”

“ஆமா, அடிக்கொரு தரம் “எங்கப்பா அம்மா ஊருக்குப் போய்ட்டாங்க’ன்னு சொல்லிண்டே இருப்பான். அவன் ஒரு மாதிரி ராக்கியப்ப முதலி தெருவுக்கு செல்லமாயிட்டான்.”

“எனக்கு ஞாபகம் இருக்குடா ரமணா. நானும் இவளும் கல்யாணம் ஆகி உங்க வீட்டுக்கு முதமுதல்ல சாப்பிட வந்தபோது, உங்கம்மா அவனுக்கும் கிணத்தடில உக்கார வெச்சு சாப்பாடு போட்டா.”

“எங்கம்மா மட்டும் இல்ல, தெருவுல எல்லார் வீட்டிலயும் அவனுக்கு ஒரு நா சாப்பாடு உண்டு. விசேஷத்துக்கு சம்மந்தி இல்லாட்டாலுங்கூட இவனுக்கு சாப்பாடு இல்லாம இருக்காது.”

“பாவம் நல்லவண்டா. அவம்பாட்டுக்கு போட்டதைச் சாப்பிட்டுண்டு தெருவுல நடமாடிண்டு, சாதுவா புழங்கிண்டு இருந்தான்.”

“சங்கரா, உனக்கு ஞாபகம் இருக்கா? ஒரு தீபாவளி சமயம், ஆயிரத்து தொள்ளாயிரத்து நாப்பத்தி மூணோ நாலோ, நாம அந்த பிஎஸ் ஹை ஸ்கூல் க்ரௌண்டுல வாண வேடிக்கை பாக்கப்போனோமே, அன்னிக்குதான் இவன் ராக்கியப்ப முதலி தெருவுக்கு நம்ம பின்னாடியே வந்துட்டான்.”

“இருக்கு இருக்கு. பெரிய ராஜகோபாலந்தான் வாண வேடிக்கைன்னு நம்ம எல்லோரையும் கூப்டுண்டு போனான்.”

“மணி கூட நொண்டிண்டே வந்தான், கால்ல அடி பட்டுண்டு.”

“என்னா ஆச்சுடா அவனுக்கு? எப்படி செத்துப்போனான்?”

“ராத்திரி சௌம்யாதான் சாப்பாடு போட்ருக்கா. சாப்டுட்டு வழக்கம்போல தெருவுக்குப்போய் வாசத்திண்ணையில் படுத்துண்டுட்டான். கார்த்தால எழுந்திருக்கல. குமார்தான் போய் டாக்டர் நாராயணனைக் கூப்பிட்டு காமிச்சான். ராத்திரியே உசிர் போய்டுத்துன்னுட்டார். எல்லோருமா காசு போட்டு காரியத்தப் பண்ணிட்டோம்.”

“என்ன மாதிரி ஜென்மமாப்போயிட்டாண்டா…”

1943 அக்டோபர் மாதம்…

“என்ன துரை, கொஞ்ச நாளா ஆள கண்லயே காணுமே…”

“ரொம்ப வேல ஜாஸ்தியாய்டுச்சுங்க. இப்ப ஜப்பான்காரன் குண்டு போடப்போறான்னு பீதி வேற. வர்ற கப்பல்ல சாமாங்களை எறக்கி கோடவுன்ல கொண்டு சேர்க்கறதுக்குள்ள தாவு தீந்துடுதுங்க. ரெண்டு மடங்கு கூலி குட்த்தாலும் ஆளே இல்லை. ஜனமெல்லாம் தெற்குப்பக்கம் போய்ட்டாங்க.”

“ஹார்பர்ல என்ன பேசிக்கிறாங்க? ஜப்பான்காரன் வந்துடுவானா?”

“பயம் இருக்குதுங்க. ராணுவக்காரங்க நடமாட்டம் ஜாஸ்திதான். ஆனா ஒருத்தரும் வாயத்தொறக்க மாட்றாங்க.”

“உன் கம்பெனிக்கு யோகம்தாம்ப்பா. கொழிக்கறாரே செட்டியாரு.”

“இப்ப தானுங்களே யுத்த சமயம். இப்ப பிஸினஸ் பண்ணினாத்தானே லாபம் பாக்கமுடியும்.”

“நீதான் ஹார்பர் பக்கம் சிப்பாயிங்களோட ஸ்னேஹமாயிருக்க. என்னதாம்ப்பா ஆச்சு விசாகப்பட்ணத்துல?”

“நிச்சயமா ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஜப்பான் ப்ளேன் வந்து குண்டு போட்டதென்னவோ நெஜம்தான். ஏப்ரல்ல கார்த்தால ஏழு மணிக்கு காக்கிநாடா ஹார்பர்ல ஒத்தையா வந்து ஜப்பான்காரன் குண்டு போட்ருக்கான். ரெண்டு சரக்குக்கப்பல் சேதமாயிடுச்சி. ஒண்ணு ரெண்டு பேர் செத்துப்போய்ட்டானுங்கன்னு வேற பேச்சு. எதுவும் நிச்சயமா சொல்றதுக்கில்ல.”

“மறுபடி அஞ்சு மணிக்கு அன்னிக்கே குண்டு போட்டானாமே… எம்மாம் தைரியமப்பா அவனுக்கு. இதோ, இங்க மெட்ராஸ் வரதுக்கு எம்மாம் நேரம் ஆவப்போவுது.”

“அதெல்லாம் கஷ்டம். ஆனா கவர்மெண்ட் எல்லாத்தையும் ரகசியமா வெச்சிருக்காங்க. வெளியே இதப் பேசிடாதீங்க, சங்கடமாய்டும். சரி, நா போறேன், புள்ளாண்டான் என்னைத் தேடிக்கினு இருப்பான்.”

“வாங்க… ஏங்க இம்மாம் நேரம்?”

“வழில நம்ம ராமசாமி பேச்சுக்கொடுத்தாரு.”

“டேய் முருகேசு, என்ன பண்றே?”

“அப்பா, இன்னிக்கு கோலில செல்வத்தோட டாணா கோலிய உடைச்சுட்டேம்ப்பா.”

“போடு சக்கைன்னானாம். சரி வா சாப்டலாம்.”

“என்னங்க, எங்கனா வெளில கூப்ட்டுப்போங்க. பையன் ஏங்கிப் போயிட்ருக்கான்.”

“இப்ப எங்கடி வெளில போறது? ஊரே பயந்துகிடக்கு.”

“நாலு நாள் செட்டியாரண்ட சொல்லி லீவு எடுங்க. உத்திரமேரூர் போய் எங்கக்காவப் பாத்துட்டு வரலாம்.”

“லீவா? செட்டியார் அதோட போயிடு வராத திரும்பின்னுடுவாரு. இன்னும் ரெண்டு சரக்குக்கப்பல் வரணும் அடுத்த பத்து நாளுல. நா வூட்டுக்கு வரதே சிரமம். அத்தோட தீபாவளி வருது. புள்ளைக்கு உனக்கு புடவத்துணிமணி எடுக்கணும்னா துட்டு வாணாம்? இந்த ரெண்டு கப்பல் வேல முடிஞ்சா காசு புரளும். நல்லபடியா தீபாவளி கொண்டாடலாம். மே மாசம் போலாம் உத்திரமேரூருக்கு.”

“ஏங்க அப்படியே நம்ம வூட்டுக்கும் ஓடைச் சரிபண்ணிடணும். போனமாச மழைக்கு பிச்சிக்கிச்சு. என்னா மழ, என்னா மழ…”

“செய்வோம் செய்வோம். பசிக்குதுடி. சோத்தைப்போடு. முருகேசு, வா சாப்பிட.”

“துரை, செட்டியார் கூப்பிடறாரு உன்னை.”

“என்னங்க?”

“வா துரை. அடுத்த வாரம், அதான் பதினொண்ணாம் தேதியன்னிக்கு சரக்கு கப்பல் டாக் ஆவுதாம். நம்ம சரக்கு பதினேழு லோடாம். அத அன்னிக்கு ராவே எறக்கி, கோவிந்தப்பநாய்க்கன் கோடவுன்ல போட்டு வெச்சிரு. நீ ஹார்பர்ல பாத்துக்க. மேஸ்திரி நடேசன கோடவுன்ல இருக்கச்சொல்லி லோடெல்லாம் எண்ணிப் பாத்து எறக்க சொல்லிடு.”

“செஞ்சுடலாம் முதலாளி.”

“அடுத்த நாள் காலையில வீட்டுப்பக்கம் வா. போன கப்பலுக்கே குடுக்க வேண்டிய அம்பது ரூபாயும் சேத்து எண்பது ரூபாய் கொடுத்துடறேன். உனக்கும் தீபாவளிக்கு ஆச்சு. ஆமா பையன் எப்படி இருக்கான்? நல்லா படிக்கிறானா?”

“ரொம்ப சந்தோஷங்க. நல்ல படிக்கிறான்.”

“நல்லது. பாத்து செய்யி. ஹார்பர்ல ஆர்மிக்காரங்க நடமாட்டம் இருக்கு. வம்பு பண்ணுவானுங்க. ஒதுங்கிப்போயிடு. நமக்கு காரியம் முக்கியம்.”

“செல்லி, இன்னிக்கி சாயங்காலம் சீக்கிரமா சாப்பாடு போட்டுடு. ஏழுமணிக்கெல்லாம் கிளம்பணும். கப்பல் வருதுன்னு சொன்னேனே… ராத்திரி பன்னண்டாய்டும் வர்றதுக்கு.”

“நாளைக்கி வூட்லதான இருப்பீங்க. சினிமா போலாமா? மங்கம்மா சபதம்னு ரொம்ப நல்லா இருக்குன்னு அந்த வூட்டம்மா சொன்னாங்க.”

“போலாமே.”

“யப்போவ். இன்னாப்பா ராத்திரிக்கி ஆபீஸ் போற?”

“ஆமாண்டா, இன்னிக்கி கப்பல் வருது. சரக்கெல்லாம் எறாக்குவானுங்க, அதை பாத்துக்கணுமுல்ல?”

“என்னையும் அழச்சிட்டுபோயேம்ப்பா. நானும் கப்பல் பாக்கறேன்.”

“டேய், இது வேல நேரண்டா. உன்ன எப்படி அழச்சிட்டுப்போறது?”

“என்னங்க, இதோ இருக்குது ஹார்பர். நாங்களும் வரோமே. அப்படி ஓரமா உக்காந்து பாக்கறோம். நீங்க பாட்டுக்கு உங்க வேலய முடிங்க. எல்லாமா திரும்பி வூட்டுக்கு வந்துடலாம்.”

“ஹார்பருக்குள்ள உன்னல்லாம் வுடமாட்டாங்க செல்லி. அதும் இப்ப பதட்ட காலமா இருக்கு.”

“அட என்னங்க நீங்க… அதான் ஹார்பர்ல எல்லா கேட் கீப்பருங்களையும் உங்களுக்கு நல்லாத் தெரியுமே… வேடிக்கை பாக்கறோம்னா வாணான்னா சொல்லுவாங்க. கூட்டுட்டு போங்க.”

“சரி வாங்க.”

“இன்னா தொர, குடும்பத்தோட வண்ட்ட? இன்னிக்கு கப்பல் வருதுன்னாங்க..?”

“ஆமா சார், கப்பல் பாக்கணும்னு ஒரே தொணதொணப்பு, அதான்…”

“சரி அப்படி ஓரமா நடந்து போய் நம்ம காபின் கிட்ட இவங்கள உக்காரச்சொல்லிட்டு நீ வேலயக் கவனி. அங்க இங்க நடமாடக்கூடாது. மேலதிகாரி பாத்தா எனக்கு வேல போய்டும், என்னா?”

“அதெல்லாம் நா ஜாக்கிரதையாப் பாத்துக்கறனுங்க. வா செல்லி, வாடா முருகேசு. சாருக்கு சல்யூட் வை.”

“கமான் க்விக். அந்த ஃபையர் யூனிட்ட அனுப்பு. மூவ் மூவ்…”

“காப்டன், இதெல்லாம் இன்ஃப்ளெம்மபிள். உடனே நகர்த்தியாகணும்!”

“பாஸ், அங்க ஆயில் லீக் ஆகுது. எனக்கு இன்னொரு ஃபையர் யூனிட் வேணும்.”

“ரோட்ரிக்ஸ், சிவிலியன் காஷுயாலிடி இருக்கா?”

“சார்…”

“கம் அவுட் மேன். ஜஸ்ட் ஸ்பில் இட்.”

“இருக்கு சார்.”

“யாரு லேபரா? ஐடெண்டிஃபை பண்ணியாச்சா?”

“இல்ல சார். ஒரு ஆளும் பெண்ணும்.”

“பெண்ணா? வாட் இஸ் ஹேப்பெனிங் சோல்ஜர்?”

“ஒண்ணுமே புரியலை சார்.”

“என்ன புரியல? கால் தட் கேட் கீப்பர் இடியட்.”

“என்ன மன்னிச்சிடுங்க சார். செட்டியார் கம்பெனி சூப்பரைசர் துரையும் அவனோட சம்சாரம், புள்ளயும் வந்தாங்க. சும்மா கப்பல் பாக்கணும்னாங்கன்னு நாந்தான்…”

“புல் ஷிட், புள்ளயா? பாடி கெடச்சுடுத்தா?”

“இல்ல சார்…”

“தேடு தேடு… க்விக். என்ன ஒரு மெஸ்… மேஜர் என்னுடைய பின் பக்கத்தைக் காவு வாங்கப்போகிறார்.”

“சார், புள்ள கெடச்சுட்டான் சார்.”

“தாங்க் காட்! என்ன பண்ணப்போறோம் மூணு பாடியையும்?”

“மூணு இல்ல சார், ரெண்டுதான். பையன் உயிரோடதான் இருக்கான்.”

“வாட்… அடக்கடவுளே. இப்ப என்ன பண்றதுய்யா?”

“சார், ஐ ஹேவ் அன் ஐடியா…”

“சொல்லித் தொலை.”

“ரெண்டு பாடியையும் இங்கேயே புதைச்சுடலாம் சார். பையனை எங்கியாவது கொண்டுவிட்டுடலாம்.”

“யோவ், அவன் பேசிட்டான்னா நா, நீயெல்லாம் ராணுவ வேலயை விட்டு தோட்டம் கொத்தப் போக வேண்டியதுதான்.”

“அவன் பேசாம நா பாத்துக்கறேன் சார்.”

“என்ன பண்ணப்போற?”

“டெர்ர்ரைஸ் தான் சார். அஸால்ட் ஆன் ஐடெண்டிடி.”

“பாத்துப்பண்ணுய்யா. I don’t want any comebacks.”

“தம்பி, உம்பேரென்ன?”

“முருகேசு. எங்கப்பா அம்மா வேணும்…”

“த பாரு. உங்கப்பாம்மா ஊருக்குப் போய்ட்டாங்க. அப்படியே சொல்லு கேப்போம்…”

“இல்ல, அங்க இருந்தாங்க நேத்து ராத்திரி. வெடி வெடிச்சது.”

பளார்.

“சொல்லுடா, எங்கப்பாம்மா ஊருக்குப் போய்ட்டாங்க.”

“இல்ல, அங்க…”

பளார்.

“சொல்லுடான்னா…”

“எங்கப்பாம்மா ஊருக்குப் போய்ட்டாங்க.”

“எங்கப்பாம்மா ஊருக்குப் போய்ட்டாங்க.”

“உம்பேரு என்ன?”

“எங்கப்பாம்மா ஊருக்குப் போய்ட்டாங்க.”

“உங்க வீடு எங்க?”

“எங்கப்பாம்மா ஊருக்குப் போய்ட்டாங்க.”

“நீ இங்க என்ன பாத்த?”

“எங்கப்பாம்மா ஊருக்குப் போய்ட்டாங்க.”

“சார்லஸ், சாயங்காலம் ஆறு மணிக்கு, கொஞ்சம் இருட்டினப்றம் ஜீப்புல இவன அழச்சிட்டுப்போய் நல்ல நடமாட்டம் இருக்கற எடமா… தப்பாரு, ஹார்பர்லேர்ந்து தள்ளி… மைலாப்பூர் பக்கம் போ. அங்க கமுக்கமா கூட்டத்துல எறக்கிவிட்டுட்டு நீ பாட்டுக்கு திரும்பிப்பாக்காம வந்துடணும்.”

“எங்க இறக்கி விட்டே?”

“பிஎஸ் ஹைஸ்கூல்ல வாண வேடிக்கை காட்டிட்டு இருந்தாங்க. ஒரு ஏழெட்டு சின்னப்பசங்க பின்னாடி வுட்டுட்டு நழுவி வந்துட்டேனுங்க.”

“என்ன ரோட்ரிக்ஸ்? பையன்…?”

“மிஷன் கம்ப்ளீடெட் சார்.”

“ரமணா, அந்தப் பைத்தியத்தை தேடிண்டு யாருமே வரலியா இத்தனை வருஷமா…”

“எங்கேடா… அவன் வாயிலேர்ந்து இத்தனை வருஷத்துல “எங்கப்பாம்மா ஊருக்குப் போய்ட்டாங்க’ங்றதத் தவிர வேற வார்த்தை வந்தே யாரும் கேட்டது இல்லியே…”

“பாவம், என்ன படைப்போ… கடவுளோட டிசைனே புரியமாட்டேங்கறதே ரமணா.”

ரோட்ரிக்ஸின் பெண் மூன்றாம் மாடியிலிருந்து விழுந்து அடிபட்டுச் செத்துப்போனதும் சார்லஸின் மனைவி சுபேதார் ஒருவனுடன் ஓடிப்போனதும்… அது வேறு கதை.

Posted on Leave a comment

ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் – ஜெயராமன் ரகுநாதன்


“கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? கொடுத்த வேலயச் செய்யாம இப்படி இருந்தா என்ன ஆறது?”

இப்படித் திட்டு வாங்குவது சாதாரணமாக மாணவர்களாகத்தானே இருக்கும். ஆனால் நமது உயர்நீதி மன்றம் தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களைக் கிட்டத்தட்ட இந்த அளவுக்குக் கேள்வி கேட்டிருக்கிறது.

“நீட் தேர்வில் ஐந்தே ஐந்து மாணவர்களே அரசுப் பள்ளிகளிலிருந்து தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அவமானப்படவேண்டிய விஷயம் இது. இவர்கள் தம் பொறுப்பை உணர்ந்து இந்த மாதிரி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதைக் கைவிடவேண்டும்” என்று நீதிபதி கிருபாகரன் சொல்லியிருக்கிறார்.

‘நீட்’ போன்ற போட்டித் தேர்வுகளில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்களின் மகா மோசமான செயல்பாட்டுக்கு ஒரு முக்கியக் காரணம் அப்பள்ளிகளின் ஆசிரியர்களும்தான் என்பதை மறுக்கவே முடியாது. எதற்கெடுத்தாலும் பாடத்திட்டத்தை மட்டுமே காரணம் சொல்லித் தப்பித்துவிட முடியாது. ஆசிரியர்களின் பயிற்றுவிக்கும் முறையும் அவர்களின் ஈடுபாடும் உழைப்புமே கேள்விக்குரியவைதான்.

கடந்த காலங்களில் அரசு ஊழியர்கள் மிகப்பெரும் அளவில் வேலை நிறுத்தம் செய்வது பற்றிய செய்திகள் வருகின்றன. கேட்டால் எங்களின் பல கோரிக்கைகளை இந்த அரசு கண்டுகொள்ளவே இல்லை என்று பதில் வருகிறது.

“ஸ்டிரைக்தான் அரசின் கவனத்தை எங்கள் பக்கம் திருப்ப ஒரே வழி!”

மற்ற அரசு ஊழியர்கள் போல ஆசிரியர்களும் கோரிக்கை வைத்திருக்கின்றனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற்று, பழைய திட்டத்தையே கொண்டு வரவேண்டும், ஏழாவது பே கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட வேண்டும். மொத்தத்தில் இன்னும் அதிகம் சம்பளம் தொடர்பான கோரிக்கைகள்.

“போன எலக்ஷன் சமயத்துல வாக்குறுதி குடுத்தாங்களே? அதான் நாங்க கேட்கறோம். ஜெயிச்சு வந்தவுடனே எங்களை மறந்துட்டா எப்படீங்க?”

“ஆனா நீங்க ஸ்டிரைக் பண்ணறது சரியா? பாதிக்கப்படுவது மாணவர்களாச்சே!”

“வேறென்ன செஞ்சாலும் அரசு எங்களைக் கண்டு கொள்ளறதில்லியே!”

என்ன பதில் சொல்லுவது?

ஆனாலும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்வது சரியல்ல. முக்கியமாக இன்றைய அதீதப் போட்டிகள் நிலவும் காலகட்டத்தில் ஒவ்வொரு மாணவனும் நேரவிரயமின்றிப் படித்து, தேர்வுகள் எழுதி, நல்ல மேற்படிப்புக்குச் சென்று தன் எதிர்காலத்தை நிலைநிறுத்திக்கொள்ளவேண்டியது கட்டாயம். முன்பிருந்ததைவிட மாணவனுக்கு ஆசிரியர்களின் ஆதரவும் கற்பித்தலும் ஆலோசனைகளும் அதிகமாகத் தேவையாக இருக்கின்றன. பாதிக்கு மேற்பட்ட பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் சரியான ஆலோசனை வழங்கும் நிலையில் இல்லை. தான் கூலித் தொழிலாளியாகவோ ஆட்டோ டாக்ஸி ஓட்டுபவராகவோ இருந்தாலும் தன் மகனோ மகளோ பட்டப்படிப்பு முடிக்கவேண்டும், நல்ல வேலைக்குப் போகவேண்டும் என்று எண்ணும் பெற்றோரால் தகுந்த ஆலோசனைகள் வழங்க இயலாத நிலையில் ஆசிரியரின் பங்கு மிக முக்கியத்துவம் பெறுகிறது.
ஆசிரியர் என்பவர் தொழில்முறை வல்லுநர். எஞ்சினீயர், அக்கவுண்டண்ட் ஆர்க்கிடெக்ட் போலத்தான் இவரும். ஒரு தொழில்முறை வல்லுநர் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது. அவருக்கு இஷ்டம் இல்லையென்றால், அதற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கட்டும், அவர் தன் வேலையைவிட்டு விலகி வேறொரு வேலை தேடிக்கொள்ளவேண்டுமே தவிர, கூட்டம் கூட்டி வேலை நிறுத்தம் செய்வது தகாது.

“யார் சொன்னது? இது என்ன வேதமா இல்லை சட்டமா? ஆசிரியர்கள் மிக முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள். அவர்களின் பணி மிகக் கடுமையானது. பலதரப்பட்ட மாணவர்களுடன் பழகி, அவர்களின் தன்மைக்கேற்ப பாடம் கற்பித்தல் வேண்டும். இந்தக் கடின உழைப்பாளர்கள் நிச்சயம் தங்களின் நிலையை உயர்த்திக் கொள்ளவோ அல்லது அதிக சம்பளத்துக்காகவோ வேலைநிறுத்தம் செய்வதில் என்ன தவறு காணமுடியும்?”

இரண்டு பார்வைகளும் இருக்கின்றன.

“அதெல்லாம் பாவ்லா பேச்சு! ஒரு தொழிற்சாலையில் ஸ்டிரைக் நடந்தால் அதன் மானேஜ்மெண்ட் மட்டுமே பாதிக்கப்படும். ஆனால் டீச்சர்கள் ஸ்டிரைக் செய்தால் குழந்தைகள், பெற்றோர், குடும்பம் மற்றும் அந்தச் சமூகச்சூழலே பாதிக்கப்படும். அதனால டீச்சர் ஸ்டிரைக்கையும் மற்ற தொழிலாளர் ஸ்டிரைக்கையும் ஒப்பிடக்கூடாது!”

“அதெப்படி? டீச்சர்களின் பங்கு மிக முக்கியமானது என்று சொல்கிறீர்கள். ஆனால் அவர்களுக்குத் தேவையான ஊதியம் வழங்கித்தானே ஆகவேண்டும்? நம்முடைய வரிப்பணம் இதற்கில்லாமல் வேறெதற்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும்! வரிப்பணத்தை வைத்துக்கொண்டு இலவசத்திட்டங்கள் வழங்கிவிட்டு ஆசிரியர்களுக்கென்று வரும்போது அரசு கை விரிப்பது என்ன நியாயம்!”

ஆகஸ்ட் மாதம் அரசு ஊழியர்களோடு சேர்ந்து ஆசிரியர்கள் ஸ்டிரைக் செய்தபோது JACTO-GEO வோடு ‘கோட்டை நோக்கிப் புறப்படுவோம்’ என்று சென்றார்கள்.

“முதலில் 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்குங்கள். கூடிய விரைவில் எங்கள் கோரிக்கைகளை முழுமையாகப் பரிசீலிக்க உத்தரவு தாருங்கள்” என்று கேட்டவர்கள், “அரசு எங்களை அழைத்துப் பேசாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம்” என்றும் எச்சரித்தார்கள்.

ஆனால் இந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கேட்பது கொஞ்சங்கூட நியாயம் இல்லை என்று வாதிடுபவர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்களின் மாதச் சம்பளத்தோடு ஒப்பிட்டுச்சொல்கிறார்கள். அரசுப்பள்ளியில் ஒரு சீனியர் ஆசிரியர் ரூ 40,000 முதல் ரூ 60,000 வரையும் ஜூனியர் ஆசிரியர் ரூ 20,000 முதல் ரூ 40,000 வரையும் மாதச் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் இதே சம்பளம் தனியார் பள்ளி என்று வரும்போது சீனியர்களுக்கு ரூ 20,000 முதல் ரூ 40,000 மற்றும் ஜூனியர்களுக்கு ரூ 15,000 முதல் ரூ 35,000 மட்டுமே கிடைக்கின்றது. வசதி குறைந்த தனியார்ப் பள்ளிகளில் சம்பளம் இன்னும் குறைவே. ஆனால் தனியார்ப் பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்களின் உழைப்போ பல மடங்கு அதிகமாக உள்ளது. நிலைமை இப்படி இருக்க மாணவர்களைப் பெரும் சங்கடத்துக்குள்ளாகும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இந்த வேலை நிறுத்தம் இப்போது தேவைதானா என்னும் கேள்வி தவிர்க்கமுடியாததே. அரசுப் பள்ளிகளில் உள்ள அரசு ஆசிரியர்களின் மீதான பொதுமக்களின் மதிப்பீடு என்ன என்பதை வேலை நிறுத்தம் செய்யும் ஆசிரியர்கள் உணர்ந்துகொள்வது நல்லது. மக்களின் ஆதரவின்றி நடைபெறும் எப்போராட்டமும் பிசுபிசுத்துப் போகும்.

இன்று தமிழக அரசுப்பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 1,16,84. இவர்களில் செப்டம்பர் 15 தேதி வரை வேலை நிறுத்தம் செய்தவர்களின் எண்ணிக்கை 33,487. அதாவது கிட்டத்தட்ட 30 சதவீதம் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்திருக்கிறார்கள். நிச்சயம் இதன் பாதிப்பு கணிசமாக இருக்கும். ஆனால் அரசும் நீதிமன்றமும் கடுமையைக் காட்டியிருப்பது நல்ல விஷயமே. ஆசிரியர்களின் பொறுப்புணர்ச்சி பற்றிய நீதிபதியின் கேள்விக்கு சில ஆசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்து நீதிபதியின் நேர்மை குறித்தும் சாடியிருப்பது சட்டப்படியும் தார்மிகப்படியும் சரியல்ல.

சமீபகாலமாக தமிழ்நாட்டில் எந்தத் திட்டத்துக்கும் எதிர்ப்பும் போராட்டமும் கிளம்பியிருப்பது வருந்தத்தக்க விஷயம். ஒரு சில பிரிவினைவாதிகளும் அதில் குளிர்காய முற்படும் அரசியல்வாதிகளும் ஏற்படுத்தும் இந்தப் போராட்டங்களினால் இழப்பு தமிழ்நாட்டுக்குத்தான் என்பதைப் பெருவாரியான மக்கள் உணர வேண்டும். ஒன்றிரண்டு நாள் தொலைக்காட்சியின் ஆர்க் லைட்டுக்கு மயங்கி எதை வேண்டுமானாலும் பேசுவது என்றிருக்கும் வெத்துவேட்டு அரசியல் மற்றும் வாய்ச்சவடால் வீரர்களின் வார்த்தைக்கு மயங்காமல் அவர்களை ஒதுக்கி, தமிழக முன்னேற்றத்துக்கான செயல்பாடுகளை மத்திய அரசிடம் கேட்டுப்பெறுவது மிக முக்கியம். அடிப்படையாக நமது கல்வித்திட்டமும் செயல்படுத்தும் முறைகளும் இன்னும் பல படிகள் மேலே போகவேண்டும்.

ஆசிரியர்கள் என்றாலே சமுதாயத்தில் பெரும் மதிப்பும் மரியாதையும் இருந்த ஒரு காலகட்டம் உண்டு. ஆசிரியர்களும் அப்போது அந்த அளவுக்கு அர்ப்பணிப்பும் உழைப்பும் கொண்டு மாணவர்களின் மேம்பாட்டில் கவனம் செலுத்தினார்கள். யாரும் கேட்காமலே, தியாகம் என்னும் உணர்வே இல்லாமல் தம் வாழ்க்கையைப் பள்ளிகளில் முழு ஈடுபாட்டோடு, இது ஆசிரியராகத் தம் கடமை என்று எண்ணிச் செலவழித்த ஆசிரியர்கள் இருந்திருக்கின்றனர். இன்னும்கூட சொற்ப அளவில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். உலகெங்கிலும் இருக்கும் பல வெற்றியாளர்கள் தம் கிராமத்துப் பள்ளிகளில் கல்வி கற்பித்த ஆசிரியர்களே தம் வெற்றிக்குக் காரணம் என்று கொண்டாடுவதை நாம் இன்றும் பார்க்கலாம். அப்படிப்பட்ட பொற்காலத்தை நோக்கிச்செல்ல வேண்டும் என்னும் ஆசையையே நீதிபதி கிருபாகரனும் எதிரொலித்திருக்கின்றார்.

ஏற்கெனவே தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து ஐஐடிக்களிலும் மற்ற நாடு தழுவிய கல்விக்கூடங்களிலும் தமிழ் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருகிறது. வெறும் மனப்பாடம் செய்தாலே மிக அதிக மதிப்பெண்கள் பெற்றுவிடும் தரத்தில் இருக்கும் மாநிலப் பாடத்திட்டம் மேம்படுத்தப்பட வேண்டும் என்னும் கோரிகை பலமாக எழுந்திருக்கிறது. அடுத்த வருடம் நீட் தேர்வு நிச்சயம். இதற்கெல்லாம் மாணவர்கள் தயாராக வேண்டும் என்றால் ஆசிரியர்களின் தொடர்ந்த ஒத்துழைப்பும் ஆலோசனையும் மிக மிக அவசியம். இந்த நிலையில் அவர்கள் வேலை நிறுத்தம் என்று போய்விட்டால் பாதிக்கப்படப்போவது தமிழக மாணவர்களே! இந்த வழக்கில் நீதித்துறை தடாலடியாக ஆசிரியர்களை வேலை நீக்கவும் முடியும் என்று ஒரு குண்டைத்தூக்கிப்போட்டு வேலை நிறுத்தத்திற்கு ஒரு முடிவைக்கொண்டு வந்திருப்பதைப் பலரும் வரவேற்கிறார்கள். நீதித்துறை தன் கரங்களை அளவுக்கதிகமாக நீட்டிவிட்டது என்று புலம்புவோரும் உண்டு.

இந்தப்பிரச்சினைக்கு அரசு வெகு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆசிரியர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படவேண்டும் என்பதில் தயக்கம் இல்லாவிட்டாலும், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்வது தடை செய்யப்படவேண்டும் என்பதில் தவறில்லையோ என்றே படுகிறது.

Posted on Leave a comment

ஜி.எஸ்.டி: கட்டுக்கதைகளும் உண்மையும் – ஜெயராமன் ரகுநாதன்


பல வருடங்களுக்கு
முன்னால் சென்னையில் மதுரை வீரன் வந்துவிட்டான் என்றொரு பீதி வலம் வந்தது, ஐம்பதைக்கடந்த
நம்மைப் போன்ற இளைய சமுதாயத்துக்கு நினைவிருக்கலாம். ஜிம்கானா கிளப்பின் முன்னால் இருக்கும்
காமராஜர் சிலையிலிருந்து பாரீசை நோக்கிப் பார்த்தால் வானத்தில் இரண்டு நிமிடங்களுக்கொருமுறை
குதிரையில் சரேலென்று நிழலுருவமாகப் பறந்தான் என்று சிலர் துண்டு போட்டுத் தாண்டிச்
சொன்னார்கள். எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதப்பட்ட பரபரப்பான செய்தியாக இது சில நாட்கள்
சுற்றியது.

 “மதுரை வீரன் வந்துட்டானாமே! சோதனைதான் மெட்ராஸுக்கு!”

 “நீ பாத்தியா?”

 “இல்லீங்க! பெரியமேட்டுல பார்த்த ஆளு சொன்னாரு!”

இதேபோல எது நிஜமென்பது
தெரியாமல் மானாவாரியாக ஜி.எஸ்.டி பற்றிய கருத்துக்களும் கண்டனங்களும் உலா வந்துகொண்டிருக்கின்றன.

“ஜி.எஸ்.டி விடுங்க!
அந்த மதுரை வீரன் மெட்ராசுக்கு வந்தது என்னாச்சுங்க?”

சொல்கிறேன்.
ஆனால் இப்போது இல்லை, கடைசியில். இப்போது ஜி.எஸ்.டி பற்றிய கட்டுக்கதைகளையும் அதன்
உண்மைத்தன்மையையும் பார்க்கலாமா?

கட்டுக்கதை #1

“ஒரு சின்ன வியாபாரி
எப்படீங்க கம்ப்யூட்டர்ல பில்லு போடுவான்? அத்தோட நாள் முழுக்க இணைய இணைப்பு வேற தேவையாமே?”

இதனால் சிறிய
நிறுவனங்கள் நிச்சயம் கஷ்டத்துக்குள்ளாகும்.

உண்மை நிலை

சிறிய வியாபாரிகள்
எப்போதும்போல கம்ப்யூட்டர் இல்லாமலும் பில் போடலாம். தொடர்ந்த இண்டர்நெட் தேவையில்லை.
மாதாந்திர ஜி.எஸ்.டி கணக்கு தாக்கல் செய்ய மட்டுமே இணைய இணைப்பு தேவை. அதைச் சுலபமாக
இண்டர்நெட் செண்டர்களில் போய் செய்துவிட முடியும். பில் போடாமல் தப்பிப்பதுதான் கஷ்டம்.

கட்டுக்கதை
#2

“இந்த ஜி எஸ்
டியால கட்டுப்படியாகறதில்லீங்க! அல்லா வெலவாசியும் ஏறிப்போச்சே!”

ஜி.எஸ்.டி வரி
18% – 28% இருக்கிறது. இது முந்தைய விற்பனை வரியைவிட (சேல்ஸ் டேக்ஸ்) மிக அதிகம். அதனால்
விலைவாசிகள் உயரும். மக்கள் கஷ்டப்படப் போகிறார்கள்.

உண்மை நிலை

மேலோட்டமாகப்
பார்த்தால் ஜி.எஸ்.டி வரி அதிகம் போலத் தோன்றுகிறது. ஆனால் முன்பு பல வரிகள் ரசீதில்
தென்படாது. உதாரணமாக தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஒரு பொருளின் மீது எக்ஸைஸ் வரி,
கூடுதல் எக்ஸைஸ் வரி, கொள்முதல் வரி எனப் பலவரிகள் ஏற்கெனவே போடப்பட்டு அந்த வரிகளுக்குப்
பின்னால் உள்ள விலையில் விற்பனை வரி போடப்பட்டது. இப்போது எந்த வரியும் இல்லாமல் வெறும்
தயாரிப்புச் செலவின்மீது நேராக ஜி.எஸ்.டி மட்டும்தான் போடப்படும். அதனால் பல பொருட்களின்
விலை குறையவே செய்யும். ஒரு சின்ன கணக்கு போட்டுப் பார்க்கலாம்.

ஜி.எஸ்.டிக்கு
முன்பு:

ஒரு பொருளின்
தயாரிப்புச் செலவு ரூ 100. எக்ஸைஸ் 15%, கூடுதல் எக்ஸைஸ் 6% என்று வைத்தால், அந்தப்பொருள்
சந்தைக்கு வரும்போது அதன் விலை ரூ 121.90. ஹிந்துஸ்தான் யூனிலீவர் தயாரிப்பான ரின்
சோப்பின் விலை ரூ 18.

ஜி.எஸ்.டிக்குப்
பின்பு:

அந்தப்பொருள்
இப்போது ஜி.எஸ்.டியின் கீழ், 18% இருந்தால் கூட, ரூ 118 தான் ஆகும். ஜி.எஸ்.டிக்குப்பிறகு
ரின் சோப்பின் விலை ரூ 15ஆகக் குறைக்கப்பட்டது. அதேபோல துணி துவைக்கும் சர்ஃப் பவுடர்
ஜி.எஸ்.டிக்கு முன்பு, ரூ 10க்கு 95 கிராம் தரப்பட்டது. இப்போது அதே ரூ 10க்கு 105
கிராம் கிடைக்கிறது.

கட்டுக்கதை
#3

“என்னாங்க இது
அநியாயம்! ரொக்கத்தெல்லாம் விட்டொழி! கிரெடிட் கார்டு மொபைல் பேடிஎம்முனு அல்லாரும்
பேசறாங்க. இந்த ஜி.எஸ்.டியில ரெண்டு முறை கட்டணும் போலருக்கே!”

உண்மை நிலைஜி.எஸ்.டியின்
கீழ் இரண்டு முறை பணம் செலுத்தத் தேவையில்லை. சில நிறுவனங்கள் கிரெடி கார்டு மூலம்
பணம் செலுத்தும்போது 1% அல்லது 2% சர்வீஸ் சார்ஜ் வசூலித்துக் கொண்டிருந்தார்கள். உதாரணமாக
நீங்கள் ரூ 2,000 தொகையை கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும்போது கூடவே 1% சர்வீஸ் சார்ஜ்
(ரூ 20) செலுத்த வேண்டியிருக்கும். இப்போது அந்தக் கூடுதல் சர்வீஸ் சார்ஜுக்கு ஜி.எஸ்.டி
உண்டு. அதனால் நீங்கள் செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி வாங்கின ரூ 2,000க்கு இல்லை. அந்த
சர்வீஸ் சார்ஜுக்கு மட்டுமே. ஜி.எஸ்.டி வருவதற்கு முன்புமேகூட சர்வீஸ் சார்ஜுக்கு
15% வரி செலுத்திக்கொண்டிருந்தோம். இப்போது கூடுதலாக 3% செலுத்த வேண்டும், அவ்வளவுதான்.

கட்டுக்கதை #4

பிஸினஸ் நிறுவனங்கள்
ஜி.எஸ்.டியின் மூலம் பயனடைந்தாலும் அதை நமக்குத் தர மாட்டார்கள். அரசாங்கத்தை ஏய்த்துப்
பயன் பெற்றுவிடுவார்கள்!

 உண்மை நிலை

சில மாநில அரசுகள்
ஜி.எஸ்.டிக்கும் மேற்பட்டு வரி விதித்திருக்கின்றன. மகாராஷ்டிரா மாநிலம் கார்கள் மீது
ரிஜிஸ்டிரேஷன் வரியை 3% உயர்த்தி உள்ளது. கார் நிறுவனங்கள் ஜி.எஸ்.டியினால் ஏற்பட்ட
வரிக் குறைப்பில் விலையைக் குறைத்திருந்தன. ஆனால் இந்த ரிஜிஸ்டிரேஷன் வரி உயர்த்தப்பட்டதால்
விலை குறைவின் பயன் நுகர்வோருக்குக் கிடைக்கவில்லை.

கட்டுக்கதை
#5

“இந்தியா ஒரே
நாடு – ஒரே வரி!”

சாரி, இது கொஞ்சம்
ஓவர்!

உண்மை நிலை

இந்த வாக்கியங்களோடுதான்
ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்டாலும் நிஜத்தில் இன்னும் சில பொருட்கள் ஜி.எஸ்.டிக்குள் வராமல்
இன்னும் தனி வரி விதிப்புக்குள்ளே உள்ளன. பெட்ரோல் ஒரு முக்கிய உதாரணம். தமிழ் சினிமாவில்
‘கோர்ட்டர்’ என்று இப்போதெல்லாம் கதாநாயகர்களின் வாயாலேயே உச்சரிக்கப்படும் மதுபானங்களுக்கும்
ஜி.எஸ்.டி கிடையாது. அவற்றுக்கு வேறொரு வரி விதிப்பு. ஜூலை 5ஆம் தேதி அன்று மும்பையில்
பெட்ரோல் ரூ 74.39க்கு விற்கப்பட, டெல்லியில் பெட்ரோல் விலை ரூ 63.12தான்

கட்டுக்கதை #

“ஜி.எஸ்.டி கட்டிவிட்டால்
போதும். வேறெந்த வரியும் இருக்காது!”

இல்லை, இருக்கும்!

 “அட என்னாங்க இது? குண்டைத்தூக்கிப்போடறீங்களே!”

உண்மை நிலை

இந்த ஜி.எஸ்.டி
தூக்கிச் சாப்பிட்டிருப்பது மத்திய மாநில அரசாங்கங்களின் வரிகள் மட்டுமே. உள்ளாட்சியின்
வரிகளை ஜி.எஸ்.டி எடுத்துவிடவில்லை. அந்தந்த மாநிலங்களில் உள்ளாட்சித் துறைகள் இன்னும்
வரி வசூலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அவை நிறுத்தப்படவில்லை. சினிமாவின் மீது
28% ஜி.எஸ்.டி இருக்க, தமிழ்நாட்டில் கார்ப்பரேஷன் வரியை எடுக்காமல் அப்படியே இருந்ததால்
சினிமா டிக்கட் விலை எகிறி, ரூ 100க்குகீழே உள்ள டிக்கட்டுக்கு 48% வரியையும் ரூ
100க்கு மேலே உள்ள டிக்கட்டுகளுக்கு 58% வரியையும் விதிப்பதால் தியேட்டர்காரர்கள் ஸ்டிரைக்
செய்து, சில நாட்கள் படம் ஓட்டாமல் இருந்ததெல்லாம் நமக்குத் தெரியும்.

ஆனால் வரி விற்பன்னர்கள்,
தமிழ்நாட்டின் இந்த வரி விதிப்பு ஜி.எஸ்.டியின் கொள்கைக்கு முரணானதுதான். ஆகவே ஜி.எஸ்.டி
கவுன்சில் இதை நீக்க வழி செய்ய வேண்டும் என்று வாதாடுகிறார்கள்.

ஜி.எஸ்.டியினல்
இனி வரி ஏய்ப்பு என்பது கஷ்டமாகிவிடும். இது unorganized Sector என்னும் ஒழுங்கு படுத்தப்படாத
துறையினரை வரி வலைக்குள் வர வழைக்கும். இதனால், சற்றே விலை குறைந்திருக்கும் இந்த ஒழுங்குபடுத்தப்படாத
துறையின் பொருட்களின் விலை ஏற வாய்ப்புள்ளது. மேலும் வரி வலைக்குள் விழுந்துவிடுவதால்
இவையும் ஒழுங்குபடுத்தப்பட்ட துறையாகி பொருளாதாரம் உயர்ந்ததுபோல தகவல்கள் அரசுக்குக்
கிடைக்கும். உண்மையில் ஒழுங்குபடுத்தப்படாத துறையிலிருந்து ஒழுங்குபடுத்தப்பட்ட துறைக்கு
மாறுகிறதே தவிர, நிஜமான வளர்ச்சி (Real Growth) இல்லை. ஆனாலும் வரிகட்டும் நிறுவனங்களின்
எண்ணிக்கையும் வரி வசூலும் அதிகரிக்கும் என்பது மறைமுகமாக நன்மையே.

நிதி ஆயோகின்
தலைவராக இருந்து வெகு சமீபத்தில் மீண்டும் தன் பேராசிரியர் வாழ்க்கைக்குத் திரும்பிய
பொருளாதார நிபுணர் அர்விந்த் பனாகிரியாகூட, “இந்த ஜி.எஸ்.டியின் மேலாண்மை சரியாகத்தான்
போகிறது. வளர்ச்சி அப்படி ஒன்றும் பெரிதாக பாதிக்கப்படவில்லை. இந்த நிதியாண்டின் கடைசி
காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 8%ஐத் தொட்டுவிடும் என்பதில் சந்தேகமில்லை” என்கிறார்.

உலகமயமாக்குதல்
என்னும் பொருளாதார சித்தாந்தத்தின்படி இந்த ஜி.எஸ்.டியினால் இந்தியாவும் மற்ற முன்னேறிய
நாடுகளோடு சேர்ந்து, ‘எளிதாக வியாபாரம் செய்தல்’ (Ease of doing business) அளவுப்படி
அதிகமான வெளிநாட்டு முதலீடு இந்தியாவில் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். தற்காலச்
சிரமங்கள் இருக்கக்கூடும். சில பொருட்களின் விலை அதிகரிக்கவும் செய்யலாம். ஆனால் நீண்டகால
அடிப்படையில் இந்த ஜி.எஸ்.டி நிச்சயம் இந்தியப் பொருளாதாரத்திற்கு நல்லதே செய்யும்
என்றே நம்பலாம்.

ஆளும் கட்சியினர்
ஜி.எஸ்.டியை ‘வாராது வந்த மாமணி’ போலப் புகழ்வதும், எதிர்க்கட்சியினர் அது ஏதோ பெரிய
சாபம் போல இழிப்பதும் என இரண்டையுமே நாம் ஊடகங்களில் பார்க்கிறோம். நமது நாட்டின் பொருளாதாரம்
இதனால் மேம்படுமா அல்லது அடி வாங்குமா என்பது இன்னும் சர்ச்சையாகவே இருக்கிறது. உண்மை
நிலை இரண்டுக்கும் இடையில்தான் இருக்கிறது!

பின் குறிப்பு:

மதுரை வீரனெல்லாம்
சும்மா வதந்திதான். சாந்தோமில் உள்ள லைட் ஹவுஸிலிருந்து அடிக்கொருதரம் சுழலும் அந்த
விளக்கு வெளிச்சத்தில் குதிரை சவாரி செய்வது போன்ற மன்றோ சிலையின் பிம்பம் வானத்தில்
பறப்பதுபோலத் தெரிந்ததாகச் சொன்னார்கள்!