மார்ச் 2017. ரஜினி தலையசைத்ததும் முதல் கட்ட பணிகள் ஆரம்பித்துவிட்டன. தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர் மன்றங்களில் இப்போதும் முழு மூச்சாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பது, போட்டோ எடுத்துக்கொள்வது, கூடவே அரசியல் கள நிலவரத்தை அறிந்து கொள்வது – இதுதான் திட்டம். சந்திப்பிற்கு எத்தனை பேர் வருவார்கள் என்பது யாருக்கும் தெரியாது. மாவட்ட தோறும் 200 டோக்கன்கள் விநியோகிக்கலாம். அவற்றை மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள் பிரித்துக்கொள்ளட்டும் என்று முடிவு செய்யப்பட்டது. கடைசிநேரத்தில் ரசிகர்ளுடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
ரஜினியோடு குழுவாக போட்டோ எடுத்துக்கொள்வதை ரசிகர்கள் விரும்பவில்லை. தனித்தனியாக எடுததுக்கொள்வதே பெரும்பாலானவர்களின் விருப்பமாக இருந்தது. பல ஆண்டுகளாக நேரில் சந்திக்காவிட்டாலும் ரசிகர்கள் மனதளவில் ரஜினியோடு நெருக்கமான பந்தத்தைக் கொண்டிருப்பவர்கள். ரஜினியை நேரில் சந்திக்கும்போது ஆரத்தழுவியோ, கை குலுக்கியோ அன்பை வெளிப்படுத்தத் தயாராக இருப்பவர்கள். குரூப் போட்டோ, ரஜினியுடனான நெருக்கத்தை வெளிக்காட்டாது. தனித்தனியாகப் புகைப்படம் எடுக்க அனுமதி கொடுங்கள், இல்லாவிட்டால் வேண்டவே வேண்டாம் என்று ரசிகர் மன்ற நிர்வாகிகளிடமிருந்து தெளிவாக செய்தி வந்தது. விஷயத்தைக் கேள்விப்பட்டதும், அதிலிருந்த நியாயத்தை ரஜினி புரிந்து கொண்டார்.
ரஜினியை ரசிகர்கள் சந்திப்பு என்பது தனிப்பட்ட நிகழ்வாகவே இதுவரை இருந்து வந்தது. இதில் அரசியல் சாயம் பூசப்படும் என்பது தெரிந்ததன் காரணமாகவே ரசிகர்களை சந்திப்பதை ரஜினி தவிர்த்து வந்தார். குறிப்பாக 2003 – 2008 காலங்களில் கடும் நெருக்கடிக்கு இடையேயும் ரசிகர்களை சந்திப்பதை வெவ்வேறு காரணங்களுக்காகத் தவிர்த்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நிகழும் சந்திப்பு என்பதால், அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் தான் சந்தித்திருந்த நிர்வாகிகளை வயது முதிர்ந்த நிலையில் மீண்டும் சந்தித்தபோது உண்டான வியப்பையும் வெளிப்படையாக ரஜினி பகிர்ந்து கொண்டார். ரஜினிக்கான அரசியல் நெருக்கடி என்பது அவர் மீதான எதிர்பார்ப்புகளை எதிர்கொள்வது என்பதுதான். எதிர்பார்ப்புகளைக் கூட்டிவிடாமல் அதே சமயம் ஏமாற்றங்களைத் தவிர்ப்பது. ரசிகர்கள் சந்திப்புக்கான ஒரே நோக்கம் அதுதான்.
போருக்குத் தயாராக இருங்கள் என்று அறிவித்த பின்னர், 2017 ஜூன் தொடங்கி டிசம்பர் வரையிலான காலகட்டங்களில் ரசிகர் மன்றங்களை அமைப்பு ரீதியாகப் பலப்படுத்தும் பணிகள் ஆரம்பமாகின. திராவிடக் கழகங்களும், தேசியக் கட்சிகளும், தமிழ்த் தேசியக் குழுக்களும் நிறைந்த தமிழ் அரசியல் சூழலில், ‘நீங்களும் வந்து என்னதான் செய்யப்போகிறீர்கள்?’ என்கிற கேள்வி மக்கள் மத்தியில் முன்வைக்கப்படும் என்பது ரஜினிக்கு நிச்சயம் தெரியும். கேள்விக்கான பதிலைத் தயார் செய்தபின்னர்தான் ரசிகர் சந்திப்பு என்கிற ஆட்டத்திற்கே ரஜினி தலையசைத்திருந்தார். அத்தகைய பதில் எதுவாக இருக்கும் என்பதில் ரஜினியின் நெருங்கிய வட்டாரங்களே சஸ்பென்ஸில் இருந்தன. தென்னிந்திய நதி நீர் இணைப்பு, ஊழலுக்கும் லஞ்சத்திற்கும் எதிரான யுத்தம், எம்ஜிஆர் பாணி அரசியல் என ஏராளமான விஷயங்கள் பேசப்பட்டன. ‘ஆன்மீக அரசியல்’ என்று ரஜினி அறிவித்தபோது நிறைய பேருக்கு ஆச்சர்யம்.
ஆன்மீக அரசியல், ரஜினியின் இயல்புக்கும், எண்ணத்திற்கும் பொருத்தமானது. 80கள் தொடங்கி அவரது சொல்லிலும், செயலிலும் தென்பட்ட விஷயம். தான் சார்ந்த மதம் குறித்தும், கடவுள் நம்பிக்கை குறித்தும் வெளிப்படையாகப் பேசிய இந்திய சினிமா பிரபலம் ரஜினி மட்டுமே. திராவிட சிந்தாந்தத்தில் ஊறிப்போயிருப்பதாக நம்பப்படும் தமிழகத்தில் ரஜினியின் ஆன்மீகம் சார்ந்த தேடல்கள் வெளிப்படையாகவே இருந்தன. 2002 வரை ரஜினி முன்வைத்த ஆன்மீகத்திற்குப் பெரிய அளவில் எதிர்ப்புகள் எழுந்ததில்லை. ஆனால், 2002க்குப் பின்னர் ரஜினிக்கான நெருக்கடிகள் அடுத்தடுத்து வரிசையாக வர ஆரம்பித்தன. தனிப்பட்ட அளவில் தன்னைத் தாக்கி வரும் விமர்சனங்களுக்குப் பதிலடி தராமல் தவிர்த்ததன் மூலமாக ரஜினி, தனித்து நின்றார்.
பாபாவின் தோல்வியை, ரஜினியின் ஆன்மீகத்திற்கான தோல்வியாகத் தமிழ் ஊடகங்கள் தொடர்ந்து முன்வைத்தன. 1996 தேர்தலில் ரஜினியின் அரசியல் நுழைவால் பாதிக்கப்பட்ட தமிழ்த் தேசிய சிந்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டிருந்த அரசியல் அமைப்புகள் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டன. ரஜினியை வலதுசாரியாக சித்தரிப்பதன் மூலம் அவர் சார்ந்த தொழிலிலும், சமூக செல்வாக்கிலும் ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று நினைத்தார்கள். இருபெரும் திராவிடக் கட்சிகளும் அதற்கு மறைமுகமாக உதவினார்கள். அரசியலில் ரஜினி என்னும் அச்சுறுத்தலை சமாளிக்க அவர்களுக்கும் அது அவசியப்பட்டது. ‘நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று; பகைவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று 2004ல் ரஜினி அறிவிக்க வேண்டியிருந்தது.
சினிமாவிலும் அரசியலிலும் ரஜினி உச்சம் தொட்டாலும் இன்னும் சாமானியனாகவே இருக்கிறார். தாமரை இலையில் இடப்பட்ட தண்ணீர் போன்ற ரஜினியின் மனநிலை எப்போதும் விமர்சனத்திற்கு உள்ளாகிறது. தன்னுடைய பலவீனங்களையும், எல்லைகளையும் அறிந்து எந்தவொரு மனிதனும் வெகுஜன அபிலாஷைகளிலிருந்து விலகி நிற்பது இயற்கை. சமூகத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தன்னிடம் தீர்வு இருப்பதாகத் தொடர்ந்து தமிழ்நாட்டுத் தலைவர்கள் மக்களை நம்ப வைத்திருக்கிறார்கள். காரில் இருந்து இறங்கும் கண நேரத்தில், தன்முன்னே நீட்டப்படும் மைக்கில், கொள்கையைப் பற்றி விவரிப்பதில் உள்ள அபத்தத்தைப் போகிற போக்கில் ரஜினி கிண்டலடிக்கும்போது, பாவனைகள் நிறைந்த தமிழ்நாட்டு அரசியல் மேடை இன்னும் சீரியஸாகிறது. இன்னும் பல வேஷங்களை ரஜினி கலைக்கக்கூடும். அதுதான் காலத்தின் தேவை.
ரஜினியின் சினிமா வெற்றிகள், சினிமாத்துறையின் வளர்ச்சிக்கு அவரது பங்குகள் குறித்து கேள்விகளும் சந்தேகங்களும் முன்வைக்கப்படுகின்றன. தன்னுடைய சினிமா பங்களிப்பு பற்றி ரஜினி பெருமைப்படும்படி எக்காலத்திலும் சொல்லிக்கொண்டதில்லை. அவையெல்லாம் தேவையில்லை என்று ரஜினி நினைக்கிறார். தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் தமிழக அரசியல் மேடையில் அது அவசியமாகிறது. ரஜினி, வருமான வரி கூடக் கட்டுவதில்லை என்று தொடர்ந்து நம்பவைக்கப்படுகிறது. அதையெல்லாம் மறுத்து, உண்மையை வெளிக்காட்டுவதற்கு ரஜினிக்கு அரை மணி நேரம் கூடத் தேவைப்படாது. ஆனாலும், எதிர்ப்புகளை எதிர்கொள்ளாமல் விட்டுவைக்கிறார். இதுவொரு அரசியல் யுக்தி என்றே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
தமிழகத்தில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.தற்போதைய ஆட்சியை இழந்தபின்னர் அதிமுக என்னும் கட்சி இருக்கப்போவதில்லை என்பது உறுதியாகிக் கொண்டே வருகிறது. திமுகவிடம் வலுவான தலைமை இல்லையென்றாலும் உள்கட்டமைப்பில் இன்னும் வலுவாக உள்ளது. திமுக தொண்டர்கள் இன்னும் உற்சாகத்தோடுதான் உலா வருகிறார்கள். எந்தவொரு தொகுதியாக இருந்தாலும் 30 சதவீத வாக்குகளைப் பெற்றுவிடும் நிலையில் திமுக உள்ளது. வலுவான கூட்டணியை அமைக்கும் பட்சத்தில் கூடுதலாக 10 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவு, அவையெல்லாம் தவறான நம்பிக்கை என்பதை நிரூபித்துவிட்டது. வலுவான கூட்டணியைவிட திமுகவுக்குத் திறமையான, வலுவான தலைமை அவசியப்படுகிறது.
தேசியக் கட்சிகளின் நிலைமையோ பரிதாபம். காங்கிரஸ் தன்னுடைய முகவரியைத் தொலைத்து நாளாகிவிட்டது. மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் பாரதிய ஜனதா கட்சியால் தமிழ்நாட்டில் ஒரு நிலையான இடத்தைப் பெறமுடியவில்லை. சமூக ஊடகங்களில் சலசலப்பை ஏற்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்த்தாலும், பல நேரங்களிலும் அதெல்லாம் எதிராகவே திரும்பி, கட்சிக்குப் பெரிய பின்னடைவைத் தந்திருக்கிறது. சிறிய கட்சிகளைப் பொருத்தவரை விடுதலைச் சிறுத்தைகள் ஏற்கெனவே அறிவாலயத்தில் அடைக்கலமாகிவிட்டது. வட தமிழ்நாட்டில் தன்னுடைய செல்வாக்கை மீட்பதுதான் பாமகவின் கவலையாகியிருக்கிறது. விஜயகாந்தே விரும்பாவிட்டாலும், தேமுதிகவை திராவிடக் கட்சியாக்கிவிட்டார்கள். தமிழக அரசியலில் இனி விஜயகாந்தும், வைகோவும் சவலைப்பிள்ளைகள்தான்.
தமிழ்த் தேசியம் பேசும் சிறு அமைப்புகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. தமிழக மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டாலும் கலைஞர், ஜெயலலிதா இல்லாத அரசியல் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிவிட முனைப்பு காட்டுகிறார்கள். தமிழகம் தனித்துவிடப்பட்டுவிடக்கூடாது என்று பதட்டப்பட்டு, புலம்பும் நடுத்தர மக்களின் ஒரே ஆறுதலாகவும், நம்பிக்கையுமாகவும் , இறுதி ஆயுதமாகவும் ரஜினி இருக்கிறார்.
ரஜினி, தமிழகத்தை மீட்பாரா?
ரஜினியால் மீட்க முடியும். மீட்பது என்பது தேர்தல் அரசியலில் நுழைந்து, வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து, மாற்றங்களைக் கொண்டு வந்து, ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதெல்லாம் அல்ல. அதற்கு நல்ல செயல் திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். அவை பரந்துபட்ட மக்களின் நம்பிக்கையையும், ஆதரவையும் பெற்றாக வேண்டும். ‘68 வயதில் இதெல்லாம் வாய்ப்பில்லை. ரஜினியிடம் நல்லவர்களும் வல்லவர்களும் இல்லை. இனி சினிமா அரசியல் செல்லுபடியாகாது. அரசியலில் வெற்றி பெற, ரஜினி கடுமையாக உழைத்தாகவேண்டும்’ என்றெல்லாம் நாள்தோறும் அவநம்பிக்கைள் விதைக்கப்படுகின்றன. ரஜினி விஷயத்தில் மட்டும்தான் இப்படியெல்லாம் தீவிரமான சிந்தனைகளும், ஆழமான விவாதங்களும் அரங்கேறுகின்றன என்பதை நாம் கவனித்தாக வேண்டும்.
ரஜினியின் அரசியல் நுழைவு என்பதே பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதைப் பலர் கணிக்கத் தவறுகிறார்கள். தமிழகம் முழுவதும் திராவிடத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், இனத்தின் பெயரால் குவித்து வைக்கப்பட்டிருக்கும் வாக்கு வங்கிகளுக்கு கணிசமான சேதாரங்கள் ஏற்படும். அதுதான் மாற்றத்திற்கான முதல் படி. வாக்கு வங்கிகள் சரிந்து பின்னர் கொள்கைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, மக்கள் நலச் செயல் திட்டங்களே முன்னிலைப்படுத்தப்படும். 50 ஆண்டுகளாக எந்தவொரு மாற்றத்தையும் சந்தித்திராத தமிழக அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வருவதென்பது சாமானியாகளால் சாத்தியமில்லை. ரஜினி போன்ற வலுவான சமூக செல்வாக்கு கொண்டவர்களால் சாத்தியப்படும். அந்த வகையில் ரஜினி, தமிழ்நாட்டுத் தீவிற்கு வந்து சேர்ந்திருக்கும் கடைசிக் கப்பல்.
எம்ஜிஆரை விடப் பல மடங்கு எதிர்ப்புகளை சந்திக்க ஆரம்பித்திருக்கிறார் ரஜினி. இது ரஜினியின் தன்னம்பிக்கையைக் குலைக்குமா என்று கேள்வி எழுப்பப்படுகிறது. தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாமல் தன்னுடைய படவிவாதத்தைக் கூட ரஜினி ஆரம்பித்ததில்லை. ரஜினி படங்கள் வெளியான பின்னர்தான், வெற்றி பெற வேண்டிய கட்டாயமில்லை. வெளிவருவதற்கு முன்பே கணிசமான லாபங்களைப் பெற்றுவிடுகின்றன. கடந்த 30 ஆண்டுகால தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டு திரும்பத் திரும்ப நிரூபித்த விஷயம்தான் இது. ரஜினி அரசியலும், அதே வழியில் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒரு சினிமாவைத் திட்டமிடுவதில் ஆரம்பித்து, வெளியாகும் வரையிலான ரஜினியின் ஈடுபாட்டையும் கவனத்தையும் கவனித்தவர்களால் ரஜினியின் அரசியல் எத்தகையதொரு திட்டமிடல் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
ரஜினி ஒரு கன்னடர், மராத்தியர், சினிமாக்காரர், படிக்காதவர், பயந்தாங்கொள்ளி, திறமையில்லாதவர் போன்ற விமர்சனக் கணைகள் இதுவரை எந்தவொரு தமிழக அரசியல்வாதி மீதும் எறியப்பட்டதில்லை. சாதாரண விமர்சனங்களுக்கே பதறிப்போய் பதிலடி தரும் தமிழக அரசியல் சூழ்நிலையில் ரஜினியின் நிதானமான போக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது. அதீத எதிர்ப்பு, சலித்துப்போய் ஒரு கட்டத்தில் பூமாராங் ஆகிவிடும் வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது. இதை புரிந்து கொண்டதன் காரணமாக திமுக போன்ற கட்சிகள் நிதானமாக அணுகுகின்றன. அரசியலை வாழ்வாதாரமாக வைத்துள்ள சிறிய கட்சிகளுக்கு அப்படியொரு தொலைநோக்குப் பார்வையெல்லாம் இல்லை.
ரஜினியின் அரசியல் என்பது சர்வ நிச்சயமாக மற்ற நடிகர்களின் அரசியலிலிருந்து பெரிதும் மாறுபட்டது. எம்ஜிஆர் போல் அரசியலை தன்னுடைய சினிமா வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டவரில்லை. சினிமாவில் வளர்ச்சி பெற்ற பின்னரே ரஜினியின் பெயர் அரசியலில் அடிபட ஆரம்பித்தது. என்.டி.ஆர் போல் அவசர அவசரமாகக் கட்சி ஆரம்பித்து, ஆட்சியைப் பிடிப்பதும் நோக்கமில்லை. விஜயகாந்த், சிரஞ்சீவி போன்றவர்கள் செய்த தவறுகளை ரஜினி நிச்சயம் செய்யமாட்டார். காரணம், அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வந்திருக்கிறார். ஆறு நிமிஷங்களில் ரஜினி செய்த அறிவிப்புகளுக்குப் பின்னால் ஆறு ஆண்டு கால நிதானமும், பொறுமையும் இருந்திருக்கின்றன.
ரஜினிக்கு அரசியலிலும், நிர்வாகத்திலும் அனுபவமில்லை என்று விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. 70 வயதை நெருங்குபவரால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சிக்கொடியை ஏற்றி வைக்க முடியுமா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. தமிழக அரசியல் எந்தவொரு மாற்றத்தையும் இதுவரை சந்தித்ததில்லை என்பதற்கு இதெல்லாம் உதாரணங்கள். 1996ல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் திமுக – தமாகா கூட்டணியை ஆதரித்து, பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அதை மறுத்து, டிவி மூலமாகப் பிரச்சாரம் செய்தாலே போதும் என்கிற முடிவெடுத்தார் ரஜினி. 20 ஆண்டுகளுக்கு முன்னரே ரஜினி எடுத்த அந்த முடிவு, புதுமையானது. முடிவுகள் எடுக்காமல் திணறிக்கொண்டிருந்த நடுநிலை வாக்காளர்களைக் குறிவைத்துச் செய்யப்பட்ட பிரச்சாரத்திற்கு கைமேல் பலன் இருந்தது. தொழில்நுட்பத்தில் உச்சம் தொட்டிருக்கும் நேரத்தில், இன்றைய ரஜினி அதைவிடப் புதுமையான விஷயத்தை முயற்சிப்பாரே தவிர கழக பாணி பிரச்சார முறைகளைக் கையிலெடுக்கமாட்டார்.
ரஜினியின் முன் உள்ள நிஜமான சவால், மக்கள் நலனுக்கான போராட்டங்கள் என்னும் பெயரில் தமிழ்த் தேசிய அமைப்புகள் முன்னிறுத்தும் நாடகங்களை அம்பலப்படுததுவதான். நீட் தேர்வு எதிர்ப்பு, மீத்தேனுக்கு எதிரான எதிர்ப்பு, செம்மரக்கடத்தல், மீனவர் படுகொலை, காவிரி நீர்ப் பங்கீடு போன்ற போராட்டங்களில் கலந்து கொள்ளவும், அது குறித்தான தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்கவும் நேரிடும். தமிழர் நலன் என்னும் பெயரில் தமிழகத்தைத் தனிமைப்படுத்தும் பணியை செய்து வரும் கட்சிகளுக்கு எதிராக ரஜினி திரும்ப மாட்டார். ஒருவேளை, அரசியல் விவகாரக் குழு ஒன்றை அமைத்து, அவர்கள் மூலமாகப் பிரச்சினையை எதிர்கொள்வாரே தவிர, நேரடியாகக் களத்தில் இறங்க மாட்டார். அதற்கான தேவையும் இருக்கப்போவதில்லை.
ரஜினியின் வெளிப்படையான அணுகுமுறையும், தமிழ்நாட்டு மக்களின் எண்ணவோட்டத்தைச் சரியாகக் கணிக்கும் திறமையும் அரசியல் சூறாவளிகளிடமிருந்து தொடர்ந்து அவரைக் காப்பாற்றியிருக்கின்றன. இதை ரஜினியும் நன்றாகப் புரிந்து வைத்திருப்பதன் காரணமாகத்தான் தொடர்ந்து ஆண்டவனுக்கு நன்றி சொல்கிறார். யோசிக்காமல் ரஜினி எதையும் செய்துவிடுவதில்லை. சினிமாவோ, அரசியலோ தன்னுடைய வழி தனி வழி என்பதைக் கடந்த காலங்களில் அழுத்தமாக நிரூபித்திருக்கிறார். அரசியலில் 20 ஆண்டுகாலம் என்பது பெரிய விஷயம். 1952ல் தமிழக அரசியலின் உச்சத்தில் இருந்த பெரியாரும், ராஜாஜியும் 1972ல் காணாமல் போனார்கள். 1967ல் ஆட்சிக்கு வந்த அண்ணாவின் திமுக, 1987ல் இரண்டாகப் பிளவுபட்டுக் கிடந்தது. காமராஜருக்குப் பின்னர் காங்கிரஸை வளர்த்த மூப்பனாரை இன்று யாருக்கும் தெரியவில்லை. தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தவர்களின் முகவரியெல்லாம் தொலைந்து போனது. அரசியலில் சூறாவளியாக உலா வந்தவர்களெல்லாம் குறுகிய காலத்திலேயே சுருண்டு போனார்கள். ரஜினியின் மிகப்பெரிய சாதனை, தன் மீதான எதிர்பார்ப்புகளைத் தக்க வைத்துக்கொண்டதுதான். 25 ஆண்டுகள் என்பது நீண்ட நெடிய காலம். ரஜினி தவிர வேறு யாருக்கும் சாத்தியப்படாத விஷயம். இனி வரும் காலங்களிலும் ரஜினியை அரசியலில் தவிர்க்க முடியாது என்பதுதான் நிஜம்.
****