தரம்பாலை நேரில் சந்திக்கும் பாக்கியம் எங்களுக்கும் கிடைத்திருக்கிறது. எங்களுடைய பாரத் க்யான் அமைப்பின் பணிகள் தொடர்பாக அவரை வார்தாவில் சேவா கிராமில் சென்று சந்தித்திருக்கிறோம். அவருடைய கட்டிலில் அவருக்கு அருகில் அமர்ந்து பல நாட்கள் பாடம் கற்றிருக்கிறோம்.
திரும்ப வரும்போது இந்தியா ஆஃபீஸ் ரெக்கார்ட்ஸ், பிரிட்டிஷ் மியூசியம் ஆகியவற்றுக்குச் சென்று கைப்பட எழுதி எடுத்த மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டபோது குழந்தைபோல் அவர் முகம் குதுகலித்தது. நாங்கள் இங்கிலாந்துக்கு ஆய்வுக்காகச் சென்றபோது ஒரு மாத காலம் தினமும் அவரைப் போலவே எங்களுக்கான ஆய்வுத் தரவுகளைக் கைப்பட எழுதி எடுத்தோம். ராமர் நடந்து சென்ற பாதையில் நடக்கும்போது கிடைக்கும் ஒரு சந்தோஷம், அப்படி அவரைப் போலவே எழுதி எடுத்தபோதும் கிடைத்தது. இங்கிலாந்தில் இருந்து தரம்பால் பெரிய அளவு டிரங்க் பெட்டிகளில் எடுத்துவந்த கையெழுத்துப் பிரதிகளைத் தொட்டுப் பார்த்தபோது நம் முன்னோர்களைத் தொட்டு உணர்ந்த பரவசம் கிடைத்தது. அந்த பெட்டிகளில் சில வார்தாவிலும் சில சென்னையிலும் இன்றும் இருக்கின்றன. அந்த ஆவணங்களை தரம்பாலின் அனுமதியுடனும் வழிகாட்டுதலுடனும் நமது கடந்த காலம் பற்றிய எங்கள் பாரத் க்யான் ஆய்வுகளுக்குப் பயன்படுத்திக்கொண்டும் இருக்கிறோம்.
தரம்பால் சென்னையோடு மிக நெருங்கிய உறவு கொண்டவர். அவருடைய பிரிட்டிஷ் காலத் தரவுகளில் செங்கல்பட்டு பற்றிய ஆவணங்கள் அதிகம் உண்டு என்பது ஒருபக்கம் இருந்தாலும் Patriotic and People oriented Science and Technology (PPST) என்ற சென்னை அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். பிற மொழிகளைவிட தமிழ்நாட்டுடனும் தமிழ் மக்களுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அந்த வகையில் இந்தப் புத்தகம் (இப்போதாவது) தமிழில் வருவது அவருக்குச் செய்யும் மிகப் பெரிய அஞ்சலியே. அந்த வகையில் மகாதேவன் மிக முக்கியமான பணியைச் செய்திருக்கிறார்.
மேற்கத்திய சிந்தனை, இடதுசாரிப் பார்வை, எதிர்மறை உணர்வுகள் இப்படியான விஷயங்களே அச்சு ஊடகம், காட்சி ஊடகம் எங்கும் நிரம்பி வழிகின்றன. அதை மாற்ற வேண்டுமென்றால் வரலாற்று உண்மைகளை, ஆதாரபூர்வமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம். அதை மிக அழுத்தமாகச் செய்யும் தரம்பாலின் படைப்புகள் அனைத்து பிராந்திய மொழிகளிலும் கொண்டுசெல்லப்படவேண்டும். அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் பாடமாகவும் வைக்கப்படவேண்டும்.
*
எளிய மனிதர்கள் மீதான அக்கறை, அவர்களுடைய தொழில் நேர்த்தி மீதான மரியாதை இதுவே தரம்பாலின் ஆதார அம்சமாக எனக்குத் தோன்றுகிறது. அவருடைய வாழ்வின் பல கட்டங்கள் கிராமப்புற வாழ்க்கை, அது தொடர்பான கனவுகள் ஆகியவற்றால் நிறைந்ததாகவே இருந்தது. அதோடு சமகாலத்தில் இளைய தலைமுறையினர் வெற்று ஆடம்பரம், நுகர்வு வெறி, பொறுப்பற்ற தன்மை, பொய்யான வாழ்க்கை ஆகியவற்றில் ஈடுபட்டுவருவது குறித்து மிகுந்த கவலையும் கொண்டிருந்தார்.
எளிய மனிதர்கள் மீதான மரியாதை, நவீன வாழ்க்கையின் வீழ்ச்சி இந்த இரண்டு விஷயங்கள் தொடர்பான பார்வைதான் நமது கடந்த காலத்தை நோக்கிய அவருடைய ஆய்வுகளுக்கு ஆதாரமாகவும் இருந்தன. அவர் அந்த ஆய்வுகளை அறிவியல்பூர்வமாக, வலுவான வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கொண்டதற்கு காந்தியுடனான மற்றும் நவீன உலகுடனான அவருடைய பரிச்சயமே காரணமாக அமைந்தது.
ராமாயண காலத்தில் சேது பாலம் கட்டப்பட்டது பற்றி மிகத் துல்லியமாக விவரிக்கப்பட்டிருக்கிறது… மகாபாரக் காலத்தில் ஓரிடத்தில் நடக்கும் நிகழ்வுகளை வேறொரு இடத்தில் இருந்துகொண்டு ஏதோவொரு தொலைத்தொடர்பு வசதி இருந்ததுபோலவே விவரித்திருக்கிறார்கள். இதுபோல் எண்ணற்ற நவீன கால விஷயங்கள் நமது ஆதிகால இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், அவற்றையெல்லாம் வெறும் புராண கட்டுக்கதை என்பதாகவே நவீன உலகம் ஒதுக்கிவருகிறது.
எனவே, எளிய மனிதர்களான நமது முன்னோர்கள் மகத்தான சாதனைகளைச் செய்தவர்கள் என்பதை நவீன மனிதர்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்பிய தரம்பால் மிகப் பொருத்தமான வழியைக் கண்டுபிடித்தார். மேற்கத்திய நவீன சிந்தனைகளால் சூழப்பட்டவர்களுக்கு மேற்கத்திய ஆதாரங்கள், ஆவணங்களையே சான்றாக முன்வைத்தார். தரம்பால் தொகுத்த தரவுகள் அனைத்தும் ஏதேனும் இந்திய மொழியில், ஏதேனும் இந்தியத் துறை சார் நிபுணர்களால் எழுதப்பட்டிருந்தால் அவை மேற்குலக, இடதுசாரி அறிவுஜீவி வர்க்கத்தாலும் அவர்களுடைய இந்திய சீடர்களாலும் ஒரேயடியாகப் புறம் தள்ளப்பட்டிருக்கும். அம்மை நோய்க்கிருமிகளைக் கொண்டே அம்மை நோய்க்கு தடுப்பு மற்றும் முறி மருந்து கண்டுபிடித்த நம் முன்னோர்களைப் போலவே தரம்பால், மேற்கத்திய (பிரிட்டிஷ்) ஆவணங்களைக் கொண்டே மேற்கத்திய வரலாற்றுப் புனைவுகளை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
நவீன மனிதர்கள் புரிந்துகொள்ளும் வரலாற்று மொழியில், அவர்களுக்குத் தேவைப்படும் அறிவியல்பூர்வ ஆதாரங்களுடன் நமது முன்னோர்களை, நமது கடந்த காலத்தைப் பற்றிய உண்மையான சித்திரத்தை முன்வைத்திருக்கிறார். மேற்குலகம் உருவாக்கி வைத்த இந்தியாவுக்கு மாற்றான உண்மையான, இன்னொரு இந்தியாவை நமக்குக் காட்டியிருக்கிறார். தரம்பாலின் ஆங்கிலப் பதிப்பாளரான க்ளாட் ஆல்வரெஸ் தனது பதிப்பகத்துக்கு ‘அதர் இந்தியா பிரஸ்’ என்று பெயர் சூட்டுவதற்கான முக்கியக் காரணமாகவும் அதுவே அமைந்தது.
*
இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஆவணங்கள் எல்லாம் பிரிட்டிஷாரால் எழுதப்பட்டவை. இந்தியாவை, மன்னிக்கவும் இந்துஸ்தானை (பிரிட்டிஷார் தமது ஆவணங்களில் 90% இடங்களில் இந்தியர்களை இந்துக்கள் என்றே குறிப்பிட்டிருக்கின்றனர். இந்து அல்ஜீப்ரா, இந்து வானவியல் என்றே குறிப்பிட்டிருக்கிறார்கள்) ஆக்கிரமிக்கத் தொடங்கும் முன் இந்துஸ்தானின் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணிதம், கனிம வளம், விவசாயம், கைவினைத் தொழில்கள் ஆகியவை பற்றி பிரிட்டனில் இருந்த துறைசார் நிபுணர்கள், அரசு பிரதிநிதிகள் ஆகியோருக்கு விரிவாக எழுதி அனுப்பியிருக்கிறார்கள். 18ம் நூற்றாண்டின் பின்பாதியில் எழுதப்பட்ட பல ஆவணங்கள் இந்துஸ்தானின் உண்மை நிலையை, பிரிட்டிஷார் புரிந்துகொண்ட வகையில் அப்படியே ஆவணப்படுத்தியுள்ளன. எந்தவித அரசியல் உள்நோக்கங்களும் அப்போது பெரிதாக ஆரம்பித்திருக்கவில்லை.
அல்ஜீப்ரா என்பது அரபுப்பெயர் கொண்டதாக இருந்தாலும் அராபியர்கள் இந்துக்களிடம் இருந்துதான் அதைத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்; கிரேக்கர்களைவிட இந்துக்கள் அல்ஜீப்ராவில் சிறந்து விளங்கியிருக்கின்றனர் என்ற உண்மைகளை மிக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு பார்த்து பிரிட்டிஷார் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
காசியில் கங்கைக் கரையில் அமைந்திருக்கும் வான் ஆராய்ச்சி மையம் பற்றியும் வானவியலில் இந்துஸ்தான் செய்த மகத்தான சாதனைகள் பற்றியும் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்துஸ்தானின் எஃகானது ஐரோப்பிய எஃகைவிட மிக உயர் தரத்தில் இருந்தது என்பதை பிரிட்டிஷார் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இரும்புத் தாதுக்களை வெட்டி எடுப்பதில் தொடங்கி வார்ப்பிரும்பு, தேனிரும்பாக உருவாக்கி எடுப்பது வரையிலான செயல்பாடுகளை அருகில் இருந்து பார்த்து எழுதியிருக்கிறார்கள். இந்திய இரும்புத் தொழிலின் எளிமை, சிக்கனம், செய் நேர்த்தி, உயர் தரம் ஆகியவற்றை அன்றைய ஐரோப்பியத் தொழில் நுட்பத்துடன் ஒப்பிட்டுப் புகழ்ந்திருக்கிறார்கள்.
இந்துஸ்தானின் விதைக் கலப்பைத் தொழில்நுட்பமானது ஐரோப்பிய கலப்பைத் தொழில்நுட்பத்தைவிடச் சிறந்தது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
இமயமலை நீங்கலாக இந்துஸ்தானில் வேறு எங்குமே ஐரோப்பா போல் பனி படரும் வாய்ப்பு இல்லை. இந்நிலையில் பூமிக்கு அடியில் குழிகளை வெட்டி அதில் வெந்நீரைச் சிறுகலங்களில் ஊற்றி வைத்து பனிக்கட்டி தயாரித்ததை வியந்து பாராட்டியிருக்கிறார்கள். வெப்பம் மிகுந்த நம் நாட்டுக்கு பனிப்பிரதேசத்தில் இருந்து வந்த ஐரோப்பியர்கள் பானங்களைக் குளிர்விக்க எவ்வளவு தவித்திருப்பார்கள்; இந்துஸ்தானில் அது நம்ப முடியாதவகையில் உற்பத்தி செய்யப்பட்டதைக் கண்டு எவ்வளவு மகிழ்ந்தார்கள் என்பவையெல்லாம் அவர்களுடைய வார்த்தைகளிலேயே இந்தப் புத்தகத்தில் பதிவாகியுள்ளன.
கப்பலின் அடித்தளம் தொடங்கி வெடிமருந்துப் பீப்பாய்களை நீர் புகாமல் பாதுகாப்பதுவரை அனைத்துத் தேவைகளுக்குமான பசு மரப்பிசினை இந்துஸ்தானின் மகத்தான கண்டுபிடிப்பாகப் போற்றியிருக்கிறார்கள்.
அம்மை நோய் சீஸன் ஆரம்பித்த மறுநொடியே ஐரோப்பாவுக்குப் பறந்துவிடவேண்டும் என்ற தீர்மானத்துடனே ஐரோப்பியர்கள் இந்துஸ்தானுக்கு வருவார்கள். அவர்கள் இந்துஸ்தானில் அம்மை நோய்க்கு பிராமணர்கள் செய்த சிகிச்சையைப் பார்த்து மலைத்துப் போயிருக்கிறார்கள். அம்மை நோய் குணமாக வேண்டிக்கொள்ளும் அம்மன், கங்கை நீர் தெளித்து தடுப்பு சிகிச்சை செய்த விதம் ஆகிய உளவியல் அம்சங்களைக் கண்ணியமான முறையில் பதிவு செய்திருக்கிறார்கள். அதோடு அந்தத் தடுப்பு சிகிச்சை முறையின் மருத்துவ அறிவியல் அம்சங்கள், உணவுப் பத்தியம் ஆகியவற்றை மிக விரிவாகப் புகழ்ந்து ஆவணப்படுத்தியிருக்கிறார் ஒரு பிரிட்டிஷ் மருத்துவர். அவரிடம் சிகிச்சைக்கு வரும் ஐரோப்பியர் அனைவருக்கும் பிராமணர்கள் பின்பற்றிய வழிமுறையிலேயே தடுப்பு சிகிச்சை செய்து அவர்கள் உயிரைக் காப்பாற்றியுமிருக்கிறார்.
விதைப்பதற்கு முன்பாக நாள், நட்சத்திரம் பார்ப்பது, சிகிச்சைகளில் புனித நீரைப் பயன்படுத்துவது தொடங்கி கிராமப்புறங்களில் சாணிகளைச் சிறுவர்கள் கூடை எடுத்துச் சென்று அள்ளுவதுவரை அனைத்துமே ஐரோப்பாவில் இருப்பதுபோலவே இங்கும் இருப்பதை ஒருவித அந்நியோந்நியத்துடன் பதிவு செய்திருக்கிறார்கள்.
கங்கைப் பகுதியில் இருந்து இந்து மதம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் ஸ்டோன்ஹென்ஜ் (Stonehenge- நடுகல்பூத வழிபாடு, இறந்தவர் வழிபாடு) என்பது இந்து வேர்கள் கொண்ட வழிபாடுகளில் ஒன்றே. கணிதவியல், வானவியல், ஜோதிடம், விடுமுறைகள், விளையாட்டுகள், நட்சத்திரங்களின் பெயர்கள், நட்சத்திரத் தொகுப்புகளின் பெயர்கள், பழங்கால நினைவுச் சின்னங்கள், சட்டங்கள், பல்வேறு நாடுகளின் மொழிகள் என அனைத்திலும் மூல இந்து வேர்களின் தடயங்களைக் காண முடியும் என்று பிரிட்டிஷார் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இந்துக்களின் முன்னுதாரணமான வாழ்க்கையைப் பார்த்துவிட்டுத் தான் இஸ்லாமியர்கள்கூட வேறு எந்த நாட்டிலும் இல்லாதவகையில் இந்துஸ்தானில் அமைதி காலக் கலைகள், வாழ்க்கை முறை ஆகியவற்றில் ஈடுபட்டுவந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இன்று உலகம் அனைத்து அறிவியல்தொழில்நுட்பத் துறைகளிலும் மிகப் பெரிய சாதனைகளைச் செய்துவருவது உண்மையே. நாம் இப்போது பெருமளவுக்கு எந்தவிதப் படைப்பூக்கமும் இன்றி வெறும் நுகர்வுச் சந்தையாக நகல் வாழ்க்கையை வாழ ஆரம்பித்திருக்கிறோம். பத்திருபது தலைமுறைகளுக்கு முன்பாக நாம் அன்றைய அளவில் அடைந்திருந்த சுயமான வளர்ச்சியைத் தெரிந்துகொள்வதென்பது மிகவும் அவசியம். அம்மை நோய்வாய்ப்பட்ட உடம்பில் எதிர்ப்பு சக்தியை விழித்தெழவைக்க அதிகாலையில் மளமளவென்று குளிர்ந்த நீரைக் குடம் குடமாக ஊற்றும் சிகிச்சை பற்றி இந்தப் புத்தகத்தில் பிரிட்டிஷ் மருத்துவர் விவரித்திருக்கிறார். மேற்கத்தியக் கிருமிகளால் பீடிக்கப்பட்ட நம் மனதுக்கு இந்தப் புத்தகமும் அப்படியான ஒரு அதிர்ச்சி வைத்தியத்தையே தருகிறது. சீக்கிரமே நம்மைப் பீடித்திருக்கும் மேற்கத்திய, காலனிய சிந்தனை நோய் விலகி சுய வலிமை பெருகட்டும்.
(B.R. மகாதேவன் மொழிபெயர்ப்பில் கிழக்கு பதிப்பகம் வெளியிட இருக்கும் தரம்பாலின் ‘அழகிய நதி’ புத்தகத்துக்கான முன்னுரை.)