Posted on Leave a comment

மறைக்கப்பட்ட உண்மைகள் – அழகியமரம் நூலின் மொழிபெயர்ப்பாளர் உரை | BR மகாதேவன்

(அழகிய மரம், தரம்பால், தமிழில்: BR மகாதேவன், கிழக்கு பதிப்பகம், ரூ
500)

(The
Beautiful Tree என்ற தரம்பாலின் ஆங்கில நூலின் தமிழ் மொழியாக்கம் ‘அழகிய மரம்’ என்ற
பெயரில் வெளியாகிறது. இந்த நூலும் மொழிபெயர்ப்பாளர் BR மகாதேவன் இந்த நூலுக்கு முன்னுரை.)
2000 ஆண்டுகளாக
எங்களைப் படிக்கவிடவில்லை என்பதுதான் பிராமணரல்லாதார் இயக்கமாக முன்னெடுக்கப்பட்ட திராவிட
அரசியலின் முத்திரை முழக்கம். ஆனால், பிரிட்டிஷ் ஆவணங்களை அடிப்படையாகக்கொண்டு, ‘அழகிய
மரம் – 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி’ என்ற தலைப்பில் தரம்பால் தொகுத்திருக்கும்
நூல் வேறொரு உண்மையை அழுத்தமாக முன்வைக்கிறது.
தரம்பாலின் வார்த்தைகளிலேயே
அதை இங்கு தருகிறேன்:
பழங்கால
இந்தியாவிலும் பிரிட்டிஷ் ஆட்சியின் ஆரம்பகட்டத்திலும் கூடக் கல்வி என்பது பெரிதும்
மேல் மற்றும் இடைநிலை சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் கிடைத்ததாகவே நம்பப்படுகிறது.
இந்துக்களைப் பொருத்தவரையில் (மதராஸ் பிரஸிடென்ஸியில் 95% பேர் இந்துக்களே) அது பிராமணர்,
சத்ரியர், வைசியர் என்ற இரு பிறப்பாளர்களுக்கு மட்டுமே கிடைத்ததாகவே நம்பப்படுகிறது.
ஆனால்,
18-ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் ஆவணங்களை எடுத்துப் பார்த்தால் நிலைமை முற்றிலும் நேர்மாறாக
இருப்பது தெரியவரும். அதிலும் தமிழ் பேசப்படும் பகுதிகளில் கல்வி கற்ற மாணவர்களில்
இரு பிறப்பாளர்களின் சதவிகிதம் தென் ஆற்காடில் வெறும் 13 மட்டுமே. மதராஸில் 23% மட்டுமே.
தென் ஆற்காடு, செங்கல்பட்டில் கல்வி கற்ற முஸ்லிம்களின் சதவிகிதம் 3க்கும் குறைவு.
சேலத்தில் 10%. ஆனால், சேலம், திருநெல்வேலியில் இருந்த பள்ளிகளில் கல்வி பெற்றவர்களில்
சூத்திர சாதி மாணவர்களின் எண்ணிக்கை 70%. தென் ஆற்காட்டில் அவர்களின் எண்ணிக்கை
84%க்கும் அதிகம்.
இந்தப் புத்தகத்தில்
தரம்பால் முன்வைக்கும் உண்மைகளை இப்படித் தொகுக்கலாம்.
பிரிட்டிஷார் இந்தியாவுக்கு
வருவதற்கு முன்னால் உலகின் பிற பகுதிகளில் கல்வி எப்படி இருந்ததோ அதைவிட மேலான நிலையில்
இந்தியாவில் இருந்திருக்கிறது. கற்றுக் கொடுக்கும் முறை மிகவும் எளிமையானதாகவும் அதிகப்
பயன் தருவதாகவும் இருந்திருக்கிறது. அனைத்து வகுப்பு மாணவர்களும் ஒன்றாகச் சேர்ந்து
படித்தல், மேல் வகுப்பு மாணவர்களே கீழ் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்களாகவும் இருப்பது,
பெரிதும் இலவசக்கல்வி, கட்டணம் விதிக்கப்பட்ட இடங்களிலும் மிகவும் குறைவான கட்டணம்,
குறைவான தண்டனை, அருகமைப் பள்ளிகள், மாணவர்கள் வாழும் சமூகத்தோடு நெருக்கமான கல்வி
என இன்றைய லட்சியப் பள்ளிக்கு என்னவெல்லாம் இலக்காகச் சொல்லப்படுகின்றனவோ அவையெல்லாம்
இந்தியப் பாரம்பரியக் கல்வியில் 18ம் நூற்றாண்டுக்கு முன்பாகவே இருந்திருக்கின்றன.
சமஸ்கிருதம், அண்டை
மாநிலத்து மொழி போன்றவை கற்றுத் தரப்பட்ட நிலையிலும் தாய்மொழி வழிக் கல்வியே பெரிதும்
இருந்திருக்கிறது. சமூகத்தின் அனைத்து சாதியினருக்கும் அடிப்படைக் கல்வி கிடைத்திருக்கிறது.
மன்னர்கள், செல்வந்தர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூகமும் அந்தக் கல்வி மையங்களுக்கு
நில மானியம், பொருள் உதவி, மாணவ ஆசிரியர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம் என முடிந்த
வழிகளில் எல்லாம் உதவிவந்திருக்கிறது.
வர்த்தக நோக்கில்
நுழைந்த பிரிட்டிஷார், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டதும் இந்தியப் பாரம்பரியக்
கல்வியை அப்புறப்படுத்தி ஆங்கிலக் கல்வியை இந்தியாவில் புகுத்தினார்கள். இந்தியப் பாரம்பரியப்
பள்ளிகளுக்கு அதுவரை கிடைத்து வந்த அரசு உதவிகள் அனைத்தையும் தடுத்து நிறுத்தினார்கள்.
இந்து அரசர்களும் இஸ்லாமிய அரசர்களும் முன்பு மானியமாகக் கொடுத்த நிலங்களுக்கு வரி
விதித்தார்கள். அல்லது அந்த மானியம் பெற்றவரிடமிருந்து அதைப் பறித்து அரசின் பொறுப்பில்
எடுத்துக்கொண்டார்கள். இதனால், அந்த மானியத்தை நம்பி நடந்துவந்த ஏராளமான குருகுலங்கள்,
திண்ணைப் பள்ளிகள், மதரஸாக்கள், பாரசீக, அரபுப் பள்ளிகள் எல்லாம் ஒரு தலைமுறை காலத்துக்குள்
அழிந்தன.
பள்ளிக்கூடம் என்றால்
பல அறைகள் கொண்ட கட்டடம் இருக்க வேண்டும், அச்சிட்ட புத்தகங்கள் இருக்கவேண்டும், முறையான
பாடத்திட்டம், தேர்வுகள் எல்லாம் இருக்கவேண்டும் என்று நவீன கல்வியை பிரிட்டிஷார் அறிமுகம்
செய்தார்கள். அப்படியான கல்வி இங்கிலாந்திலும் அப்போதுதான் அறிமுகமாகியிருந்தது. அந்த
மேலான கல்வி கிடைக்க வேண்டுமென்றால் அதிகக் கட்டணம் வசூலித்தாக வேண்டும். ஒருவருக்கு
அப்படியான கட்டணம் கொடுக்க முடியவில்லையென்றால் அந்தக் கல்வியைப் பெற அவர்களுக்குத்
தகுதி இல்லை என்றே அர்த்தம் என்று விட்டேத்தியாக முடிவெடுத்தார்கள். இந்தியப் பாரம்பரியப்
பள்ளிகள் அழிந்து போயிருக்க, ஆங்கில நவீனக் கல்வி எட்டாக்கனியாக இருக்க இந்திய இடை,
கடைநிலை சாதியினர் கல்வியில் பின்தங்கிப் போக நேர்ந்துவிட்டது.
இதுதான் தரம்பால்
இந்தப் புத்தகத்தில் முன்வைக்கும் இந்தியக் கல்வியின் வரலாறு.
அப்படியாக 200 ஆண்டு
பிரிட்டிஷ் ஆட்சிக் காலகட்டத்தில் கடை, இடைநிலை சாதியினர் கல்வியில் இருந்து விலக்கப்பட்டதைத்தான்
திராவிட அரசியல் சக்திகள் 2000 ஆண்டு கால சதியாக முன்வைத்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டிருக்கிறார்கள்.
அந்த 200 ஆண்டுகளில் சமூகத்தில் பொருளாதாரரீதியாக வசதி வாய்ப்புகளைப் பெற்று முன்னேறிய
பிராமணர்களையே அந்த சதியின் மூல காரண கர்த்தாவாக ஓர் அவதூறுப் பிரசாரத்தை முன்னெடுத்தும்
வந்திருக்கிறார்கள். கடை, இடை நிலை சாதிகளில் இருந்து அம்பேத்கர் போல் ஒருசில அறிஞர்கள்
உருவாக வழிவகுத்த அதே பிரிட்டிஷ் கல்விதான் எஞ்சிய இடை, கடைச் சாதியினரை முற்றாகக்
கல்வியில் இருந்து விரட்டியடிக்கவும் செய்திருக்கிறது. இந்தப் புத்தகம் அந்த உண்மையை
ஆதாரபூர்வமாக முன்வைக்கிறது.
இந்தப் புத்தகத்தில்
இடம்பெற்றிருக்கும் ஆதாரங்கள் ஒருவகையில் முழுமையற்றவையே… அதாவது இந்த நூலில் இந்தியப்
பாரம்பரியப் பள்ளிகளின் செயல்பாட்டில் பிரிட்டிஷாராகிய நாம் குறுக்கிடக்கூடாது… அந்தக்
கல்வி மையங்களுக்கான உதவித் தொகைகளை நம் அரசு கையகப்படுத்தக்கூடாது… அவர்களுக்கு
மேலும் நாம் உதவ வேண்டும் என்ற உத்தரவுகளே ஆவணமாகக் கிடைத்திருக்கின்றன. பாரம்பரியப்
பள்ளிகளுக்குத் தரப்பட்ட மானியமானது அந்த மானியம் பெற்றவர்கள் இறந்ததும் அவருடைய வாரிசுகளுக்கு
பிரிட்டிஷ் அரசால் தரப்பட்டிருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகளுக்கான சில உதாரணங்களே இடம்பெற்றிருக்கின்றன.
இவை மிகவும் தந்திரமான ஆவணப்படுத்தல். அதாவது, நாடு முழுவதிலும் லட்சக்கணக்கான ஏக்கர்
நிலங்களைக் கையகப்படுத்தியதையும் ஆயிரக்கணக்கான கல்வி மையங்களை முடக்கியதையும் பற்றி
எதுவும் பதிவு செய்யாமல் ஒருசில இடங்களில் செய்த உதவிகளை மட்டும் பதிவு செய்து சரித்திரமாக்கியிருக்கும்
தந்திரம். அந்த ஆவணங்களை நுட்பமாகப் பரிசீலித்தால்தான் சொல்லாமல் விடப்பட்ட உண்மைகள்
ஒருவருக்குப் புரியும்.
காந்தியடிகளுக்கும்
வேறு பல இந்திய தலைவர்களுக்கும் ஒருசில பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கும் கல்வியாளர்களுக்கும்
இந்த உண்மைகள் புரிந்திருந்தன. ஆனால், அவர்களிடம் பிரிட்டிஷாரால் இந்தியப் பாரம்பரிய
மரம் வேரோடு பிடுங்கப்பட்டுவிட்டது என்பதற்குத் தெளிவான அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களாக
எதுவும் இருந்திருக்கவில்லை. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் காந்தி – சர்
ஃபிலிப் ஹெர்டாக் உடனான உரையாடல் அதையே நமக்கு உணர்த்துகிறது.
இந்தியப் பாரம்பரியக்
கல்வியை பிரிட்டிஷாராகிய நாம் அழித்துவிட்டோம் என்று சில 18ம் நூற்றாண்டு பிரிட்டிஷ்
அதிகாரிகள் கூறிய கருத்துகளையே காந்தி தனது கூற்றுக்கு ஆதாரமாகச் சொல்கிறார். ஆனால்,
அந்தக் காலகட்டத்து மக்கள் தொகை என்ன… அதில் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை என்ன…
இன்றைய மக்கள்தொகை என்ன… அதில் கல்வி கற்றவர்களின் சதவிகிதம் என்ன என்ற புள்ளிவிவரங்களின்
அடிப்படையில்தான் பேசவேண்டும் என்று ஃபிலிப் ஹெர்டாக் பிடிவாதமாக வாதிடுகிறார். அவருடைய
முன்னோர் தந்திரமாகப் பதிவு செய்யாமல் விட்ட ஆதாரங்கள் அல்லவா அவை! எனவே முன்னால் ஓடியவர்கள்
ஈட்டிக் கொடுத்த முன்னிலையைத் தக்கவைத்துக் கொண்டு ஹெர்டாக் வெகு உற்சாகமாக வெற்றிக்கோட்டை
நோக்கி ஓடுகிறார். ஆனால், அது தவறான திசையிலான ஓட்டம் என்பது உலகக் கல்வி வரலாற்றை
முழுமையாகப் பார்க்கும் ஒருவருக்கு எளிதில் புரியும்.
உண்மையில் பழங்கால
இந்தியாவின் கல்வி நிலை எப்படி இருந்தது என்பதை இன்றைய கல்வி நிலையோடு ஒப்பிட்டுப்
பார்க்கக்கூடாது. அதே காலகட்டத்தில் உலகில் கல்வி நிலை என்னவாக இருந்தது என்பதோடுதான்
ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். அதோடு, பழங்காலக் கல்வி முறை அதன் இயல்பான வளர்ச்சிப்
பாதையில் முன்னேற வழிவகுக்கப்பட்டிருந்ததா இல்லையா என்றும் பார்க்கவேண்டும். அந்த அடிப்படையில்தான்
காந்தி பிரிட்டிஷாரை விமர்சித்தார். ஹெர்டாகோ நவீன காலத்தோடு ஒப்பிட்டுப் பழங்கால இந்தியாவை
விட பிரிட்டிஷ் இந்தியாவில் கல்வி நிலை மேம்பட்டுத்தான் இருக்கிறது என்று காந்தியை
மடக்கினார். இது எப்படியென்றால், எந்தக் குழந்தையும் திரும்பியே படுத்திருக்காத காலகட்டத்தில்
ஒரு குழந்தை நடைவண்டியைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்திருக்கிறது. ஆனால், காலப்போக்கில்
பிற குழந்தைகள் எல்லாம் நடக்கக் கற்றுக்கொண்டு ஓடவும் ஆரம்பித்துவிட்ட நிலையிலும் முன்பு
நடைவண்டியைப் பிடித்துக்கொண்டு நடக்கத் தொடங்கிய குழந்தையின் இயக்கத்தை முடக்கி அதை
வெறுமனே நடக்கும் அளவுக்கு மட்டுமே ஆக்கிவைத்திருக்கிறார்கள். இப்போது ஒருவர் முன்பே
நடைவண்டியில் நடக்கத் தொடங்கிய குழந்தையை அதன் போக்கில் விட்டிருந்தால் இன்று ஓட மட்டுமல்ல
பறக்கவே செய்திருக்குமே அப்படிச் செய்ய முடியாமல் தடுத்துவிட்டீர்களே என்று சொல்கிறார்.
இன்னொருவரோ முன்பு நடைவண்டியைப் பிடித்து நடந்த குழந்தை இன்று தானாக நடக்க ஆரம்பித்திருக்கிறதே
இது சாதனைதானே என்று மடக்குகிறார். கல்வியில் மட்டுமல்ல, இந்தியச் சமூகத்தின் பெரும்பாலான
விஷயங்களிலும் இப்படியான குறுக்கீடே நடந்திருக்கிறது.
மேலும், தமிழர்களாகிய
நமக்கு இந்தப் புத்தகம் சுட்டிக்காட்டும் வேறொரு உண்மை மிகவும் முக்கியமானது: பிராமணர்களைவிட
அதிக எண்ணிக்கையில் பிற சாதியினரே அடிப்படைக் கல்வி பெற்றிருக்கின்றனர்.
உண்மையில் இந்தப்
புத்தகம் காலம் தாழ்த்தி வந்திருக்கும் ஒன்றுதான். இரட்டை ஆயுள் தண்டனை பெற்று வாழ்நாள்
முழுவதையும் சிறையில் வாடிக் கழித்த ஒருவருக்கு அவருடைய மரணத்துக்கு முந்தைய தினங்களில்
வந்து, நீ நிரபராதிதான்… உன்னைத் தவறுதலாகச் சிறையில் அடைத்துவிட்டோம். இனி நீ போகலாம்
என்று சொன்னால் எப்படி இருக்கும்? அதுபோல்தான் இந்தியப் பாரம்பரியக் கல்வியை அழித்தொழித்து
ஆங்கிலக் கல்வியை ஆழமாக நிலைபெறச் செய்ததோடு பிராமண அறிவுத் தரப்பை அப்புறப்படுத்தி
திராவிட வெறுப்புக் கருத்தியலை முன்னிலை பெறச் செய்துவிட்ட பிறகு இன்று வந்து இந்தியக்
கல்வி பழங்காலத்தில் சிறப்பாகத்தான் இருந்திருக்கிறது, அனைவருக்கும் கல்வி கிடைத்திருக்கிறது
என்று சான்று வழங்குவது இருக்கிறது.
காலந்தாழ்த்திக்
கிடைக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்குத்தானே சமம். எனினும் அப்படி முற்றாகச் சோர்ந்துபோய்
விடவேண்டியதில்லை. ஏனென்றால் இன்றும் மெக்காலே புத்திரர்கள் புதிய புதிய குற்றச்சாட்டுகளுடனும்
வழக்குகளுடனும் இந்தியாவையும் இந்து மதத்தையும் தாக்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
நம் கையில் இருந்த வைரக்கல்லை கண்ணாடித்துண்டு என்று குப்பைக்கூடையில் நம்மைக் கொண்டே
தூக்கி எறிய வைத்தவர்கள் இன்றும் வேறு வடிவங்களில் நம்மைச் சிறுமைப்படுத்தி வருகிறார்கள்.
இந்தப் புத்தகம் குப்பைக் கூடையில் நாம் தூக்கி எறிந்த நம் வைரக்கல்லை நமக்கு எடுத்துக்காட்டியிருக்கிறது.
அதன் ஒளியில் நாம் நம்மிடம் இருக்கும் மேலும் பல ரத்தினங்களை இனம் கண்டு (அவற்றையும்
மெக்காலே புத்திரர்கள் கண்ணாடித்துண்டுகள் என்றே வீசி எறியச் சொல்கிறார்கள்) மீட்டெடுத்து
அணிந்துகொண்டாகவேண்டும். அந்த வகையில் இந்தப் புத்தகம் இன்றும் முக்கியமானது என்று
சொல்வதைவிட இன்றுதான் அது மிக மிக முக்கியமானது என்றே சொல்லவேண்டும்.
ஆனால், இந்தப் புத்தகத்தைப்
படித்த பிறகு திராவிட இயக்கத்தினர் தமது பிழையான பார்வையைத் திருத்திக்கொள்வார்கள்
என்றெல்லாம் நம்பவில்லை. ‘சரி… அனைத்து ஜாதியினரும் கல்வி பெற்றிருக்கிறார்கள்…
ஆனால், மொத்த மக்கள்தொகையில் கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை வெகு குறைவுதானே. அதோடு
அனைத்து ஜாதியினரும் கல்வி பெற்றிருந்தாலும் அனைத்து வேலைகளையும் அவர்கள் செய்ய அது
வழிவகுத்திருக்கிறதா… உயர்கல்வி பிராமணர்களுக்கு மட்டும்தானே கிடைத்திருக்கிறது…
பெண்களுக்கும் தலித்களுக்கும் கல்வி வெகு சொற்பமாகத்தானே கிடைத்திருக்கிறது. எனவே அது
அழகிய மரம் அல்ல… வெறும் ஒரு செடிதான்’ என்று சொல்வார்கள்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது
இந்த விமர்சனங்கள் நியாயமானவை போலவே தோன்றும். ஆனால், உலகில் எல்லாப் பகுதியிலுமே ஏட்டுக்
கல்வி புரோகித, அரச, பிரபுத்துவ குடும்பங்களுக்கு மட்டுமே கிடைத்துவந்திருக்கிறது.
பெண்களுக்கும் தலித்களுக்கும் ஏட்டுக் கல்வி எங்குமே கிடைத்திருக்கவில்லை. வேலைகளானது
பெற்றோரிடமிருந்தே குழந்தைகளுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. ஒவ்வொரு தொழில் குழுமங்களுக்கு
உள்ளேயே அந்தந்த வேலைகளுக்கான பயிற்சிகள் கிடைத்து வந்திருக்கின்றன.
உயர்கல்வி என்று
அவர்கள் சொல்வதெல்லாம் பிராமணர்களின் தொழிலுக்கான கல்வி மட்டுமே. ஆய கலைகள் அறுபத்து
நான்கில் பிராமணரல்லாதாரின் கலைகள் எல்லாமும் குல வழியில் கற்றுத் தரப்பட்ட நிலையில்
பிராமணக் கலைகளும் குல வழியில் கற்றுத் தரப்பட்டிருக்கின்றன தொழிற்புரட்சிக்கு முன்னால்
மன்னராட்சி காலத்தில் உலகில் எல்லா இடங்களிலுமே நிலைமை இதுதான். எனவே, இந்தியாவிலும்
அப்படியே இருந்திருக்கிறது. மேலும் பிற பகுதிகளில் எந்த அளவுக்கு விதிவிலக்குகள் உண்டோ
அதைவிட இந்தியாவில் விதிவிலக்குகள் அதிகம் உண்டு. அந்தவகையில் இந்தியக் கல்வி மரம்
ஒப்பீட்டளவில் சிறப்பாகவே இருந்திருக்கிறது. இயல்பான போக்கில் வளர்ச்சியடைய அனுமதிக்கப்பட்டிருந்தால்
அந்த அழகிய கல்வி மரம் நிச்சயம் அதிகம் பேருக்கு கனியும் நிழலும் தரும் அழகிய தோப்பாகச்
செழித்திருக்கும். ஆனால், மரத்தை ஆராய்ச்சி செய்கிறேன் என்ற போர்வையில் வேரைப் பிடுங்கிப்
பார்த்தவர்கள் அதன் பிறகு அப்படியே அதை மட்கிப் போக வைத்துவிட்டார்கள்.
இந்தப் புத்தகத்தை
எந்தவித முன்முடிவுகள் இன்றியும் படிக்கும் ஒருவருக்கு அந்த எளிய உண்மை புரியவரும்.
தரவுகளின் அடிப்படையில் அரசியலைத் தீர்மானிப்பவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு
இந்தியக் கல்வி தொடர்பான தமது அரசியலை நிச்சயம் மறு பரிசீலனை செய்வார்கள். தன் அரசியலுக்கு
ஏற்பத் தரவுகளைத் திரிப்பவர்கள் பழகிய செக்குமாட்டுப் பாதையில் தலையை ஆட்டிக்கொண்டு
தமது பயணத்தைத் தொடர்வார்கள்.
மொழிபெயர்ப்பு தொடர்பாக
சில விஷயங்கள் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்தியப் பாரம்பரியப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு
மாணவர்கள் விசேஷ நாட்களில் கிஃப்ட்கள், பிரசெண்ட்கள் தந்தார்கள் என்று பிரிட்டிஷ் ஆவணங்களில்
குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதைப் பரிசுகள் என்று மொழிபெயர்க்கவில்லை. ஏனென்றால்,
அவை உண்மையில் தானம், சன்மானம், தட்சணை என்ற பெயரில் நம்மால் தரப்பட்டிருக்கின்றன.
பரிசு என்று பிரிட்டிஷ் ஆவணங்களில் குறிப்பிட்டிருப்பதுபோல் ஒரு இடத்தில் பயன்படுத்திவிட்டு
அதன் பிறகு வரும் இடங்களில் தானம், சன்மானம், தட்சணை என்றே மொழிபெயர்த்திருக்கிறேன்.
விசேஷ நாட்களில் மாணவர்கள் ஆசிரியர்களுக்குப் புதுத் துணியைப் பரிசாகத் தந்தார்கள்
என்று மொழிபெயர்க்கும்போது அது மிகவும் அந்நியமாகப்படுகிறது. எனவே, மாணவர்கள் ஆசிரியர்களுக்கு
வஸ்திர தானம் தந்தார்கள், புதுத் துணியை சன்மானமாகத் தந்தார்கள் என்று மொழிபெயர்த்திருக்கிறேன்.
அதுபோல் இந்தியப்
பெயர்களை அன்றைய ஆங்கிலத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கடித்துக் குதறியிருக்கிறார்கள்.
சில இடங்களில் அவர்கள் எதைச் சொல்கிறார்கள் என்பதே நமக்குப் புரிவதில்லை. எனவே, அந்த
இடங்களில் கொஞ்சம் சுதந்தரம் எடுத்து நமக்குப் புரியும் ஒன்றாக மொழிபெயர்த்திருக்கிறேன்.
உதாரணமாக, Paurejantahpatraranum அதாவது ப(வ்)ரிஜந்தபத்ராரணம் என்று வருகிறது. இதை
பாரிஜாத புராணம் என்று மொழிபெயர்த்திருக்கிறேன். ஒருவேளை அது தவறென்றால் சரியானதைத்
தெரியப்படுத்துங்கள். அடுத்த பதிப்பில் சரி செய்துகொள்கிறேன்.

Posted on Leave a comment

அழகிய மரம் நூலின் முன்னுரை | தரம்பால், தமிழில்: BR மகாதேவன்

(The Beautiful Tree என்ற தன்
நூலுக்கு தரம்பால் எழுதிய முன்னுரை
யின் தமிழாக்கம்.)


(தரம்பால்)

இந்தியக் கல்வியின்
வரலாறுபற்றி, குறிப்பாக 1930-40களில், ஏராளமான ஆய்வு நூல்கள் வெளியாகின. ஒருவகையில்
பார்த்தால், பிரிட்டிஷ் அதிகாரிகளாகவும் அறிஞர்களாகவுமிருந்தவர்கள் 19ம் நூற்றாண்டின்
மத்தியிலேயே இது தொடர்பாக எழுத ஆரம்பித்திருந்தனர். எனினும் இவற்றில் பெரும்பாலானவை
பழங்கால இந்தியாவைப் பற்றியவையாக இருந்தன. சில நேரங்களில் 10-12ம் நூற்றாண்டுகள் பற்றியவையாக
இருந்தன. எஞ்சியவை பிரிட்டிஷாரின் காலத்திலும் அதற்குப் பிறகும் இந்தியாவில் கல்வி
எப்படி இருந்தது என்பது பற்றி எழுதப்பட்டவை. பழங்காலக் கல்வி அமைப்புகள் (நாலந்தா அல்லது
தட்சசீலத்தில் இருந்தவை போன்று) பற்றிய விரிவான ஆய்வுபூர்வமான படைப்புகள் நீங்கலாக
ஏ.எஸ்.அல்டேகர்1 போன்றோர் எழுதிய, பழங்காலம் பற்றிய பொதுவான பல படைப்புகள்
வெளியாகின. அதற்குப் பிந்தைய காலம் பற்றியும் பல படைப்புகள் வெளியாகியுள்ளன: இந்திய
அரசால் வெளியிடப்பட்டு சமீபத்தில் மறுபதிப்பும் கண்ட செலக்ஷன்ஸ் ஃபிரம் எஜுகேஷனல் ரெக்கார்ட்ஸ்
(இரண்டு தொகுதிகள்),2 எஸ்.நூருல்லா, ஜே.பி. நாயக் போன்றோரின் படைப்புகள்
ஆகியவற்றை இந்த இடத்தில் குறிப்பிடலாம்.3 இவர்கள் தமது படைப்பை, ‘கடந்த
160 வருடங்களிலான இந்தியக் கல்வியின் வரலாற்றை விரிவாக, ஆவணபூர்வமாக, இந்தியக் கோணத்தில்
எழுதுவதற்கான முயற்சி’ என்று (அந்த நூல் பேசும் காலகட்டம் மற்றும் அது எந்தக் கோணத்தில்
ஆராயப் பட்டிருக்கிறது என்பது பற்றிச் சுட்டிக்காட்டும்வகையில்) குறிப்பிட்டிருக்கின்றனர்.4
ஒருவகையில் அகடெமிக்
ஆய்வு அம்சம் சற்றுக் குறைவாக இருந்தபோதிலும் 1939ல் பண்டிட் சுந்தர்லால் எழுதிய பிரமாண்டப்
படைப்பு மிக அதிக வாசகர்களைச் சென்றடைந்தது.5 அவர் எழுதிய நூலில் சுமார்
40 பக்கங்கள் கொண்ட 36வது அத்தியாயத்தின் தலைப்பு ‘இந்திய பாரம்பரியக் கல்வியின் அழித்தொழிப்பு.’
ஏராளமான பிரிட்டிஷ் ஆவணங்களை மேற்கோள்காட்டிப் பேசும் அந்த நூல் கிட்டத்தட்ட 100 ஆண்டு
கால வரலாற்றை விவரிக்கிறது: ஜூன் 1814ல் இந்தியாவுக்கான கவர்னர் ஜெனரலுக்கு இங்கிலாந்தில்
இருந்து வந்த அறிக்கையில் ஆரம்பித்து மாக்ஸ் முல்லருடைய கருத்துகள் வரை பேசுகிறது.
1909ல் பிரிட்டிஷ் தொழிற்கட்சித் தலைவர் கேர் ஹார்டி எழுதியவையும் அதில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.
அந்தப் புத்தகம் எழுதப்பட்ட காலகட்டத்தில் கையெழுத்து ஆவணப் பிரதிகள் எளிதில் கிடைத்திருக்கவில்லை.
எனவே, அன்றைய தேதியில் அச்சில் இருந்தவற்றை மட்டுமே வைத்து அந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.
இருந்தபோதிலும் ‘பாரத் மேம் அங்ரேஜி ராஜ்’ (பாரதத்தில் ஆங்கிலேயர் ஆட்சி) என்ற அந்த
அத்தியாயம் 18-19ம் நூற்றாண்டுகளில் இந்திய பாரம்பரியக் கல்விபற்றிய மிக மிக முக்கியமான
படைப்பாகத் திகழ்கிறது.
13ம் நூற்றாண்டில்
ஆரம்பித்து 19ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதிவரையிலான காலகட்டத்து வரலாறு அல்லது கல்விபற்றி
மிகக் குறைவாகவே எழுதப்பட்டிருக்கிறது. இஸ்லாமியர் கல்வி பற்றி எஸ்.எம். ஜாஃபர் எழுதிய
படைப்பு6 போன்றவை எல்லாம் இருக்கின்றன; பிரிட்டிஷ் காலகட்டத்தில் இந்தியாவில்
கல்வி பற்றியும் 18-19ம் நூற்றாண்டுகளில் சிதைந்த நிலையில் இருந்த இந்தியப் பாரம்பரியக்
கல்வி பற்றியும் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிற்சில தகவல்களும் அத்தியாயங்களும் கல்வி
வரலாறு பற்றிய நூல்களில் எழுதப்பட்டிருக்கின்றன. மொத்தம் இருக்கும் 643 பக்கங்களில்
நூருல்லாவும் நாயக்கும் சுமார் 43 பக்கங்களை 19ம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்தில் இருந்த
இந்தியக் கல்வி பற்றி எழுதியிருக்கிறார்கள்.7 அந்தக் கல்வியின் வீச்சு,
தன்மைபற்றிய பிற்கால பிரிட்டிஷாரின் சில கருத்துகளை அந்த நூலில் கேள்விக்கு உட்படுத்தியுமிருக்கிறார்கள்.
19ம் நூற்றாண்டின்
ஆரம்பகட்டத்தில் இந்தியாவில் இருந்த கல்வி பற்றி எழுதப்பட்ட பெரும்பாலான படைப்புகளும்
அதுதொடர்பான பல்வேறு மாறுபட்ட கருத்துகளும் முன்று ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன.
முதலாவதாக, முன்னாள் கிறிஸ்தவ மத போதகரான வில்லியம் ஆடம் எழுதிய ஆவணங்கள்.8
வங்காளம், பிகார் முதலான பகுதிகளில் 1835-38 காலகட்டத்திலிருந்த பாரம்பரியக் கல்வி
பற்றி விரிவாக ஆய்வு செய்து எழுதப்பட்ட இந்த ஆவணங்கள் மிக அதிகக் கவனம் பெற்றன. இரண்டாவதாக,
பம்பாய் பிரஸிடென்ஸியில் 1820களில் இருந்த இந்தியப் பாரம்பரியக் கல்வி பற்றி பிரிட்டிஷ்
அதிகாரிகள் நடத்திய ஆய்வு முடிவுகள்.9 மூன்றாவதாக 1822-25 காலகட்டத்தில்
மதராஸ் பிரஸிடென்ஸியில் இந்தியக் கல்வி தொடர்பான மிக விரிவான பிரிட்டிஷ் ஆய்வு முடிவுகள்.10
வடக்கே ஒரிஸாவின் கஞ்சம் பகுதியில் ஆரம்பித்து தெற்கே திருநெல்வேலி வரையிலும் மேற்கே
மலபார் வரையிலுமான பகுதிகள் மதராஸ் பிரஸிடென்ஸியில் அப்போது இருந்தன. இதே விஷயம் தொடர்பான
பிற்காலத்திய ஆவணம் பஞ்சாபின் பாரம்பரியக் கல்வி தொடர்பாக ஜி.டபிள்யூ. லெய்ட்னர் தொகுத்தவை.11
மேலே குறிப்பிடப்பட்டுள்ளவற்றில்
லெய்ட்னரின் படைப்பு பிரிட்டிஷாரின் கொள்கை முடிவுகளை மிகக் கடுமையாக வெளிப்படையாக
விமர்சிக்கிறது. இவரது நூல் இவர் சொந்தமாக மேற்கொண்ட ஆய்வு மற்றும் முந்திய பிரிட்டிஷ்
அரசு ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டிருந்தது. பஞ்சாப் பகுதியில் பாரம்பரியக்
கல்வியின் நசிவுக்கு மட்டுமல்லாமல் அதன் அழித்தொழிப்புக்கும் பிரிட்டிஷ் அதிகாரிகளே
காரணம் என்று அது சொல்கிறது.
ஆடம்மின் ஆய்வுகளும்
வேறு சில மதராஸ் பிரஸிடென்ஸி கலெக்டர்களின் ஆய்வுகளும்12 இந்தியப் பாரம்பரியக்
கல்வியின் அழிவுக்கு பிரிட்டிஷார்தான் காரணம் என்றே தெரிவிக்கின்றன. எனினும், அந்த
விமர்சனங்கள் மிகவும் நாசூக்காக, பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கும் கனவான்களுக்கும் உகந்த
மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன (லெய்ட்னர் பிரிட்டிஷ் அதிகாரிதான் என்றாலும் அவர்
‘ஆங்கிலேயர் அல்லர்’)13
அக் 20, 1931ல்
மகாத்மா காந்தி லண்டனில் இருக்கும் ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டர்நேஷனல் அஃபயர்ஸில்
ஒரு நீண்ட உரை ஆற்றினார். அதில், ‘இந்தியாவில் கல்வி கடந்த 50 -100 வருடங்களாக அழிந்துவருகிறது;
அதற்கு பிரிட்டிஷாரே காரணம்’ என்று தெரிவித்தார். ஆடம், லெய்ட்னர் போன்ற பலர் தெரிவித்த
கருத்துகளுக்கும் இந்தியர்கள் பல காலமாகச் சொல்லிவந்த கருத்துகளுக்கும் காந்தியின்
உரை பெரும் வலுவை ஊட்டியது. அதைத் தொடர்ந்து 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியப்
பாரம்பரியக் கல்வி தொடர்பான மேலே சொன்ன ஆவணங்களுக்குப் பெரியதொரு முக்கியத்துவம் வந்தது.
தனி நபர் என்ற வகையிலும் பிரிட்டிஷ் அரசின் சார்பாகவும் சர் ஃபிலிப் ஹெர்டாக்கிடமிருந்து
காந்திக்கு உடனே மறுப்பு எழுந்தது. அவர் டாக்கா பல்கலைக்கழகத்தின் துணைச் செயலாளராகவும்
ஆக்ஸிலரி கமிட்டி ஆஃப் இந்தியன் ஸ்டாச்சுடரி கமிஷனின் சேர்மனாகவும் இருந்திருக்கிறார்.
காந்தியின் கூற்றுக்கு ‘அச்சில் வெளியான துல்லியமான ஆதாரங்கள் இருக்கின்றனவா’ என்று
கேட்டார்.14
காந்திஜியும் (இந்தக்
காலகட்டத்தில் சிறையில் அதிக காலம் கழிக்க வேண்டியிருந்தது) அவருடைய சக போராளிகளும்
அளித்த பதில்களினால் திருப்தியடையாத ஹெர்டாக், நான்கு ஆண்டுகள் கழித்து லண்டன் இன்ஸ்டிடியூட்
ஆஃப் எஜுகேஷனில் ஆற்றிய மூன்று தொடர் உரைகளில் காந்திஜியின் கூற்றை மறுத்து விரிவாகப்
பேசினார். 1939ல் தனது அந்த உரைகளையும் வேறு சில ஆதாரங்களையும் சேர்த்துப் புத்தகமாக
வெளியிட்டார்.15
காந்திஜியையும்
பிரிட்டிஷாரின் ஆரம்பகால ஆவணங்களையும் மறுதலித்தவர்களில் ஹெர்டாக் முதல் நபர் அல்ல;
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியையும் கொள்கைகளையும் நியாயப்படுத்திப் பேசியபடி பலரும்
பயணித்திருந்த பாதையை அப்படியே பின்பற்றுபவராகவேதான் இருந்தார். விக்டோரிய இங்கிலாந்தின்
தந்தை என்று பாராட்டப்பட்ட வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் மூலமாக பிரிட்டிஷ் ஹவுஸ் ஆஃப்
காமன்ஸில் 125 ஆண்டுகளுக்கு முன்பாகவே போடப்பட்ட பாதை அது.16 ஹெர்டாகைப்
போலவே அவருடைய காலகட்டத்தைச் சேர்ந்த டபிள்யூ ஹெச் மோர்லாந்தும் முன்பு இதுபோல் பேசியிருக்கிறார்.
‘இப்போது இருப்பதைவிட அக்பர், ஜஹாங்கீர் காலகட்டத்தில் பஞ்சம் வெள்ளம் போன்றவை இல்லாத
இயல்பான காலகட்டத்தில் தொழிலாளர்களுக்கு அதிகக் கூலி கிடைத்தது’ என்று வின்சென்ட் ஸ்மித்
கூறியிருந்ததை மோர்லாந்து மறுத்திருந்தார்.17 மோர்லாந்து ஓய்வு பெற்ற வருவாய்
அதிகாரி என்ற நிலையில் இருந்து இந்தியாவின் பொருளாதார வரலாற்று ஆசிரியர் என்ற நிலைக்கு
மாற ஸ்மித் முன்வைத்த சவால் ஒருவகையில் காரணமாக அமைந்தது.18 1940கள் வரை,
உலகை நாகரிகப்படுத்தும் பெரும் பொறுப்பைச் சுமந்தவர்கள் என்ற வகையில், பிரிட்டிஷார்
இந்தியாவில் (அல்லது வேறு இடங்களில்) ஆட்சி செய்த 200 ஆண்டுகாலத்தில் அவர்களால் திட்டமிடப்பட்ட
அல்லது திட்டமிடப்படாத செயல்கள் குறித்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்திருக்கவில்லை.
இந்தப் புத்தகத்தில்
மறுபிரசுரம் செய்யப்பட்டிருக்கும் ஆவணங்கள் பெருமளவுக்கு ‘மதராஸ் பிரஸிடென்ஸி இண்டிஜினஸ்
எஜுகே ஷன் சர்வே’யில் இருந்து எடுக்கப்பட்டவையே. 1966ல்தான் இதை முதலில் பார்த்தேன்.
முன்பே சொன்னதுபோல் 1831-32லேயே ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் ஆவணங்களில் இந்த ஆய்வறிக்கைகளின்
சுருக்கம் இடம்பெற்றிருக்கிறது. ஏராளமான ஆய்வாளர்கள் மதராஸ் பிரஸிடென்ஸி டிஸ்ட்ரிக்ட்
ஆவணங்களிலும் பிரஸிடென்ஸி ரெவின்யூ ஆவணங்களிலும் (பிந்தைய அறிக்கைகள் மதராஸிலும் இருக்கின்றன,
லண்டனிலும் இருக்கின்றன) இருக்கும் இந்த விரிவான ஆய்வறிக்கைகளைப் பார்த்திருக்கக்கூடும்.
எனினும் இனம்புரியாத காரணங்களினால் அவை அறிவுப்புலப் பார்வையில் இருந்து தப்பிவிட்டிருக்கின்றன.
இதே காலகட்டத்தைச் சேர்ந்த மதராஸ் பிரஸிடென்ஸி மாவட்டங்கள் பற்றிய ஆய்வு ஏடுகள்கூட
இந்த ஆய்வுத் தகவல்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை. இத்தனைக்கும் அந்த ஆய்வு
ஏடுகள் சிற்சில இடங்களில் கல்வி தொடர்பான குறிப்புகளைப் பற்றிப் பேசவும் செய்திருக்கின்றன.
பிரிட்டிஷாரின்
ஆட்சியைக் குறைகூறுவதற்காக இந்த நூல் எழுதப்படவில்லை. 18ம் நூற்றாண்டின் பிந்தைய காலகட்டம்,
19ம் நூற்றாண்டின் முந்தைய காலகட்டம் ஆகியவற்றில் இந்தியாவின் உண்மைநிலை என்ன என்பதை
இந்த ஆவணங்களில் இருந்து முடிந்தவரை தெரிந்துகொள்வதற்கான முயற்சியே இது. இந்திய சமூகம்,
அதன் உள்கட்டமைப்பு, அதன் பழக்கவழக்கங்கள், பிற நிறுவனங்கள், அவற்றின் பலங்கள், பலவீனங்கள்
ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியே. 18ம் நூற்றாண்டில்
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (இண்டியன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இன் த எய்டீன்த்
செஞ்சுரி)19, இந்தியப் பாரம்பரியத்தில் ஒத்துழையாமை அணுகு முறை (சிவில்
டிஸொபீடியன்ஸ் இன் இந்தியன் டிரடிஷன்)20 என்ற முந்தைய நூல்களின் பாணியிலேயே
இந்த நூலும் இந்தியாவின் வேறொரு பரிமாணத்தை சித்திரித்துக் காட்டுகிறது. அந்தக் கால
கட்டத்து நிலைமையோடு இந்த ஆய்வுகளைப் பொருத்திப் பார்ப்பதோடு, பிரிட்டனில் 19ம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் கல்வி எப்படி இருந்தது என்பதையும் லேசாகக் கோடிகாட்டுகிறது.
ஏராளமான நண்பர்கள்
இந்த ஆய்வுப் பணியில் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள். பல ஆலோசனைகள் கூறியிருக்கிறார்கள்.
அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. அவர்களுடைய ஆதரவும் ஊக்கமும் இல்லாதிருந்தால்
இந்தப் புத்தகம் உருவாகியிருக்கவே முடியாது. 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆக்ஸ்போர்ட்
பல்கலைக்கழகத்தில் என்ன பாடங்கள் கற்பிக்கப்பட்டன என்பது தொடர்பான என் ஆய்வுகளுக்கு
உதவும் வகையில் ஆக்ஸ்ஃபோர்டு ஆவணக் காப்பகத்தைப் பயன்படுத்திக்கொள்ள உதவியதற்காக அவர்களுக்கு
நன்றி. அதுபோலவே இந்தியா ஆஃபீஸ் லைப்ரரி அண்ட் ரெக்கார்ட்ஸுக்கும் நன்றி. காந்தி –
ஹெர்டாக் இடையிலான உரையாடலுக்கான பிரதிகளைத் தந்து உதவியதற்காக திரு மார்டின் மோயருக்கு
விசேஷ நன்றி.
1972-73 காலகட்டத்தில்
எனக்கு சீனியர் ஃபெலோஷிப் தந்ததற்காக ஏ.என்.சின்ஹா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் ஸ்டடீஸ்க்கு
(பாட்னா) என் நன்றி. வாரணாசியைச் சேர்ந்த காந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்டடீஸ், புது
டில்லியின் காந்தி பீஸ் ஃபவுண்டேஷன், த காந்தி சேவா சங்கம், சேவாகிராம், புது தில்லையைச்
சேர்ந்த அசோசியேஷன் ஆஃப் வாலண்டரி ஏஜென்ஸிஸ் ஃபார் ரூரல் டெவலப்மெண்ட் என அனைத்து அமைப்புகளும்
தேவைப்படும் நேரங்களில் எனக்கு உதவிகள் புரிந்தன. அதற்கு அவர்களுக்கு நன்றிகள் பல.
இந்தப் புத்தகத்தில்
பின்னிணைப்பாக இடம்பெற்றிருக்கும் மதராஸ் பிரஸிடென்ஸி தொடர்பான ஆவணங்களை இந்தியா ஆஃபீஸ்
நூலகத்தில்தான் முதலில் பார்த்தேன். எனினும் தமிழ்நாடு அரசு ஆவணக்காப்பகத்தில் இருந்தே
அவற்றை மறு பிரசுரம் செய்திருக்கிறேன். முன்பு அது மெட்ராஸ் ரெக்கார்டு அலுவகம் என்ற
பெயரில் இருந்தது. இதற்கும் அவர்கள் என் மீது காட்டிய அன்புக்கும் மிக அதிக சிரமம்
எடுத்துக்கொண்ட அந்த ஆவணக்காப்பகத்தின் பணியாளர்களுக்கும் நன்றி. அலெக்சாண்டர் வாக்கரின்
குறிப்பும் இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. எடின்பர்க்கில் இருக்கும் ஸ்காட்லாந்து
தேசிய நூலகத்தில் இருக்கும் வாக்கர் ஆஃப் பௌலாந்து பேப்பர்ஸ் அறிக்கையில் இருந்து அது
எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த தேசிய நூலகத்துக்கு என் நன்றி. ஸ்காட்லாந்து ரெக்கார்டு
அலுவலகம், எடின்பர்க் பல்கலை, அலகாபாத்தில் இருக்கும் உத்தரபிரதேச அரசு ஆவணக்காப்பகம்
ஆகியவற்றுக்கும் நன்றி.
சேவாகிராமின் ‘ஆஸ்ரம்
பிரதிஸ்தான்’ இந்தப் புத்தகத்தை எழுத இடவசதியும் பிற வசதிகளும் செய்துகொடுத்து அவர்களில்
ஒருவராகவே என்னை அன்புடன் நடத்தியது. காந்திஜியின் குடிலுக்கு அருகில் அமர்ந்தபடி இந்த
நூலை எழுதி முடித்தது மிகப் பெரிய பாக்கியமே.
*
இந்த மொழிபெயர்ப்பின்
மூல ஆங்கிலப் புத்தகத்தின் தலைப்பான The Beautiful Tree (அழகிய மரம்) மகாத்மா காந்தி
லண்டனில் சாத்தம் ஹவுஸில் அக், 20, 1931ல் ஆற்றிய உரையில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.
‘பிரிட்டிஷ்
நிர்வாகிகள் இந்தியாவுக்கு வந்தபோது, இங்கிருக்கும் யதார்த்த நிலையை வளர்த்தெடுக்காமல்
அவற்றை வேருடன் பிடுங்கி எறிய முற்பட்டார்கள். மண்ணைத் தோண்டி வேரை வெளியில் எடுத்து
மரத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். அதன்பிறகு அந்த வேரை அப்படியே விட்டுவிட்டார்கள்.
அந்த அழகிய மரம் அழிந்துவிட்டது.’
18ம் நூற்றாண்டில்
இந்தியப் பாரம்பரியக் கல்வி என்ற துணைத் தலைப்பும் பொருத்தமாகவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் புத்தகத்தில் பெருமளவுக்கு இடம்பெற்றிருக்கும் மதராஸ் பிரஸிடென்ஸி ஆவணங்கள்
1822-25ல் தொகுக்கப்பட்டவை. எனினும் அந்தத் தகவல்கள் அதைவிடப் பழமையான கல்வி அமைப்பு
பற்றியே பேசுகின்றன. அந்தக் கல்வி அமைப்புதான் 18ம் நூற்றாண்டிலும் நடைமுறையில் இருந்தது.
அதன் பிறகு அது வெகு விரைவில் அழிந்துவிட்டது. ஆடம்மின் ஆய்வறிக்கை 19ம் நூற்றாண்டின்
நான்காவது பத்தாண்டில் நடந்த இந்திய பாரம்பரியக் கல்வியின் வீழ்ச்சி பற்றிப் பேசுகின்றன.
– தரம்பால்
பிப்ரவரி 19, 1981,
ஆஸ்ரம் பிரதிஸ்தான்,
சேவா கிராமம்.
1. ஏ.எஸ். அட்லேகர்:
எஜுகேஷன் இன் ஏன்சியண்ட் இந்தியா. இரண்டாம் பதிப்பு., பனாரஸ், 1944.
2. இந்திய தேசிய
ஆவணக்காப்பகம்: செலக்ஷன்ஸ் ஃப்ரம் தி எஜுகேஷனல் ரெகார்ட்ஸ்: I: 1781-1839, II –
1840-1859, ஹெச்.ஷார்ப் மற்றும் ஜே.ஏ.ரிச்சி எழுதியது, 1920, 1922 (மறுபதிப்பு
1965).
3. சையது நூருல்லா
மற்றும் ஜே.பி.நாயக்: ஹ்ஸ்டரி ஆஃப் எஜுகேஷன் இன் இந்தியா ட்யூரிங் தி பிரிட்டிஷ் பீரியட்.,
பம்பாய், 1943.
4. அதே நூல் முன்னுரை.
5. பாரத் மேம் அங்கிரேஜி
ராஜ் (ஹிந்தியில்). இந்த நூலின் முதல் பதிப்பு 1929ல் வெளியானதுமே தடை செய்யப்பட்டது.
1939ல் மூன்று தொகுதிகளாக (1780 பக்) மீண்டும் வெளியிடப்பட்டது. மிக விரிவன தகவல்களைக்
கொண்டிருக்கும், மறுபதிப்பு காணாத அந்த நூல் இன்று அரிய க்ளாசிக் படைப்பாக ஆகிவிட்டிருக்கிறது.
6. எஸ்.எம்.ஜாஃபர்:
எஜுகேஷன் இன் முஸ்லிம் இந்தியா, பெஷாவர், 1936.
7. ஹிஸ்டரி ஆஃப்
எஜுகேஷன் இன் இந்தியா ட்யூரிங் பிரிட்டிஷ் பீரியட்., 1943
8. டபிள்யூ. ஆடம்:
ரிப்போர்ட்ஸ் ஆன் தி ஸ்டேட் ஆஃப் எஜுகேஷன் இன் பெங்கால் 1835 அண்ட் 1838. அனந்தநாத்
பாசு எடிட் செய்தது., மறு பதிப்பு கல்கத்தா 1941.
9. ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்
பேப்பர்ஸ், 1831-1832., தொகுதி 9.
10. அதே படைப்பு.,
பக் 413-417, 500-507.
11. ஜி.டபிள்யூ.
லெட்னர்: ஹிஸ்டரி ஆஃப் இண்டிஜினஸ் எஜுகேஷன் இன் த பஞ்சாப் சின்ஸ் அனெக்சேஷன் அண்ட்
இன் 1882, 1883; (பஞ்சாப், மொழித்துறை, மறு பிரசுரம், பட்டியாலா, 1973).
12. மதராஸ் கலெக்டர்கள்
அறிக்கை, பின்னிணைப்பு A(i)&(xxx)
13. ஃபிலிப் ஹெர்டாக்:
சம் ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இந்தியன் எஜுகேஷன் பாஸ்ட் அண்ட் ப்ரசன்ட்., ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்சிட்டி
பிரஸ்., முன்னுரை.
14. இந்தியா ஆஃபீஸ்
லைப்ரரி: எம்.எஸ்.எஸ். இ.யு.ஆர். டி 551., காந்திக்கு ஹெர்டாக் அனுப்பிய கடிதம்:
21.10.1930.
15. Hartog:
op. cit.
16. ஹன்ஸார்ட்:
ஜூன் 22 மற்றும் ஜூலை 1, 1813.
17. வி.ஏ.ஸ்மித்:
அக்பர் தி கிரேட் மொகல், க்ளியர்டன் பிரஸ், 1917, பக் 394.
18. லண்டன்: ஜர்னல்
ஆஃப் தி ராயல் ஆசியாட்டிக் சொசைட்டி, 1917, பக் 815-825.
19. இந்தியன் சயின்ஸ்
அண்ட் டெக்னாலஜி இன் தி எய்டீந்த் செஞ்சுரி: சம் காண்டம்பரரி ஈரோப்பியன் அக்கவுண்ட்ஸ்
(அதர் இந்தியா பிரஸ்) கோவா 2000.
20. சிவில் டிஸ்ஒபீடியன்ஸ்
இன் இந்தியன் டிரடிஷன்: வித் சம் எர்லி நைண்டீந்த் செஞ்சுரி டாக்குமெண்ட்ஸ், அதர் இந்தியா
பிரஸ்., கோவா, 2000.

Posted on Leave a comment

தரம்பாலின் ‘அழகிய நதி’: விரைவில் பூரணகுணம் உண்டாகட்டும் | டி.கே.ஹரி, ஹேமா ஹரி

தரம்பாலை நேரில் சந்திக்கும் பாக்கியம் எங்களுக்கும் கிடைத்திருக்கிறது. எங்களுடைய பாரத் க்யான் அமைப்பின் பணிகள் தொடர்பாக அவரை வார்தாவில் சேவா கிராமில் சென்று சந்தித்திருக்கிறோம். அவருடைய கட்டிலில் அவருக்கு அருகில் அமர்ந்து பல நாட்கள் பாடம் கற்றிருக்கிறோம்.
திரும்ப வரும்போது இந்தியா ஆஃபீஸ் ரெக்கார்ட்ஸ், பிரிட்டிஷ் மியூசியம் ஆகியவற்றுக்குச் சென்று கைப்பட எழுதி எடுத்த மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டபோது குழந்தைபோல் அவர் முகம் குதுகலித்தது. நாங்கள் இங்கிலாந்துக்கு ஆய்வுக்காகச் சென்றபோது ஒரு மாத காலம் தினமும் அவரைப் போலவே எங்களுக்கான ஆய்வுத் தரவுகளைக் கைப்பட எழுதி எடுத்தோம். ராமர் நடந்து சென்ற பாதையில் நடக்கும்போது கிடைக்கும் ஒரு சந்தோஷம், அப்படி அவரைப் போலவே எழுதி எடுத்தபோதும் கிடைத்தது. இங்கிலாந்தில் இருந்து தரம்பால் பெரிய அளவு டிரங்க் பெட்டிகளில் எடுத்துவந்த கையெழுத்துப் பிரதிகளைத் தொட்டுப் பார்த்தபோது நம் முன்னோர்களைத் தொட்டு உணர்ந்த பரவசம் கிடைத்தது. அந்த பெட்டிகளில் சில வார்தாவிலும் சில சென்னையிலும் இன்றும் இருக்கின்றன. அந்த ஆவணங்களை தரம்பாலின் அனுமதியுடனும் வழிகாட்டுதலுடனும் நமது கடந்த காலம் பற்றிய எங்கள் பாரத் க்யான் ஆய்வுகளுக்குப் பயன்படுத்திக்கொண்டும் இருக்கிறோம்.
தரம்பால் சென்னையோடு மிக நெருங்கிய உறவு கொண்டவர். அவருடைய பிரிட்டிஷ் காலத் தரவுகளில் செங்கல்பட்டு பற்றிய ஆவணங்கள் அதிகம் உண்டு என்பது ஒருபக்கம் இருந்தாலும் Patriotic and People oriented Science and Technology (PPST) என்ற சென்னை அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். பிற மொழிகளைவிட தமிழ்நாட்டுடனும் தமிழ் மக்களுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அந்த வகையில் இந்தப் புத்தகம் (இப்போதாவது) தமிழில் வருவது அவருக்குச் செய்யும் மிகப் பெரிய அஞ்சலியே. அந்த வகையில் மகாதேவன் மிக முக்கியமான பணியைச் செய்திருக்கிறார்.
மேற்கத்திய சிந்தனை, இடதுசாரிப் பார்வை, எதிர்மறை உணர்வுகள் இப்படியான விஷயங்களே அச்சு ஊடகம், காட்சி ஊடகம் எங்கும் நிரம்பி வழிகின்றன. அதை மாற்ற வேண்டுமென்றால் வரலாற்று உண்மைகளை, ஆதாரபூர்வமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம். அதை மிக அழுத்தமாகச் செய்யும் தரம்பாலின் படைப்புகள் அனைத்து பிராந்திய மொழிகளிலும் கொண்டுசெல்லப்படவேண்டும். அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் பாடமாகவும் வைக்கப்படவேண்டும்.
*
எளிய மனிதர்கள் மீதான அக்கறை, அவர்களுடைய தொழில் நேர்த்தி மீதான மரியாதை இதுவே தரம்பாலின் ஆதார அம்சமாக எனக்குத் தோன்றுகிறது. அவருடைய வாழ்வின் பல கட்டங்கள் கிராமப்புற வாழ்க்கை, அது தொடர்பான கனவுகள் ஆகியவற்றால் நிறைந்ததாகவே இருந்தது. அதோடு சமகாலத்தில் இளைய தலைமுறையினர் வெற்று ஆடம்பரம், நுகர்வு வெறி, பொறுப்பற்ற தன்மை, பொய்யான வாழ்க்கை ஆகியவற்றில் ஈடுபட்டுவருவது குறித்து மிகுந்த கவலையும் கொண்டிருந்தார்.
எளிய மனிதர்கள் மீதான மரியாதை, நவீன வாழ்க்கையின் வீழ்ச்சி இந்த இரண்டு விஷயங்கள் தொடர்பான பார்வைதான் நமது கடந்த காலத்தை நோக்கிய அவருடைய ஆய்வுகளுக்கு ஆதாரமாகவும் இருந்தன. அவர் அந்த ஆய்வுகளை அறிவியல்பூர்வமாக, வலுவான வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கொண்டதற்கு காந்தியுடனான மற்றும் நவீன உலகுடனான அவருடைய பரிச்சயமே காரணமாக அமைந்தது.
ராமாயண காலத்தில் சேது பாலம் கட்டப்பட்டது பற்றி மிகத் துல்லியமாக விவரிக்கப்பட்டிருக்கிறதுமகாபாரக் காலத்தில் ஓரிடத்தில் நடக்கும் நிகழ்வுகளை வேறொரு இடத்தில் இருந்துகொண்டு ஏதோவொரு தொலைத்தொடர்பு வசதி இருந்ததுபோலவே விவரித்திருக்கிறார்கள். இதுபோல் எண்ணற்ற நவீன கால விஷயங்கள் நமது ஆதிகால இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், அவற்றையெல்லாம் வெறும் புராண கட்டுக்கதை என்பதாகவே நவீன உலகம் ஒதுக்கிவருகிறது.
எனவே, எளிய மனிதர்களான நமது முன்னோர்கள் மகத்தான சாதனைகளைச் செய்தவர்கள் என்பதை நவீன மனிதர்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்பிய தரம்பால் மிகப் பொருத்தமான வழியைக் கண்டுபிடித்தார். மேற்கத்திய நவீன சிந்தனைகளால் சூழப்பட்டவர்களுக்கு மேற்கத்திய ஆதாரங்கள், ஆவணங்களையே சான்றாக முன்வைத்தார். தரம்பால் தொகுத்த தரவுகள் அனைத்தும் ஏதேனும் இந்திய மொழியில், ஏதேனும் இந்தியத் துறை சார் நிபுணர்களால் எழுதப்பட்டிருந்தால் அவை மேற்குலக, இடதுசாரி அறிவுஜீவி வர்க்கத்தாலும் அவர்களுடைய இந்திய சீடர்களாலும் ஒரேயடியாகப் புறம் தள்ளப்பட்டிருக்கும். அம்மை நோய்க்கிருமிகளைக் கொண்டே அம்மை நோய்க்கு தடுப்பு மற்றும் முறி மருந்து கண்டுபிடித்த நம் முன்னோர்களைப் போலவே தரம்பால், மேற்கத்திய (பிரிட்டிஷ்) ஆவணங்களைக் கொண்டே மேற்கத்திய வரலாற்றுப் புனைவுகளை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
நவீன மனிதர்கள் புரிந்துகொள்ளும் வரலாற்று மொழியில், அவர்களுக்குத் தேவைப்படும் அறிவியல்பூர்வ ஆதாரங்களுடன் நமது முன்னோர்களை, நமது கடந்த காலத்தைப் பற்றிய உண்மையான சித்திரத்தை முன்வைத்திருக்கிறார். மேற்குலகம் உருவாக்கி வைத்த இந்தியாவுக்கு மாற்றான உண்மையான, இன்னொரு இந்தியாவை நமக்குக் காட்டியிருக்கிறார். தரம்பாலின் ஆங்கிலப் பதிப்பாளரான க்ளாட் ஆல்வரெஸ் தனது பதிப்பகத்துக்கு அதர் இந்தியா பிரஸ் என்று பெயர் சூட்டுவதற்கான முக்கியக் காரணமாகவும் அதுவே அமைந்தது.
*
இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஆவணங்கள் எல்லாம் பிரிட்டிஷாரால் எழுதப்பட்டவை. இந்தியாவை, மன்னிக்கவும் இந்துஸ்தானை (பிரிட்டிஷார் தமது ஆவணங்களில் 90% இடங்களில் இந்தியர்களை இந்துக்கள் என்றே குறிப்பிட்டிருக்கின்றனர். இந்து அல்ஜீப்ரா, இந்து வானவியல் என்றே குறிப்பிட்டிருக்கிறார்கள்) ஆக்கிரமிக்கத் தொடங்கும் முன் இந்துஸ்தானின் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணிதம், கனிம வளம், விவசாயம், கைவினைத் தொழில்கள் ஆகியவை பற்றி பிரிட்டனில் இருந்த துறைசார் நிபுணர்கள், அரசு பிரதிநிதிகள் ஆகியோருக்கு விரிவாக எழுதி அனுப்பியிருக்கிறார்கள். 18ம் நூற்றாண்டின் பின்பாதியில் எழுதப்பட்ட பல ஆவணங்கள் இந்துஸ்தானின் உண்மை நிலையை, பிரிட்டிஷார் புரிந்துகொண்ட வகையில் அப்படியே ஆவணப்படுத்தியுள்ளன. எந்தவித அரசியல் உள்நோக்கங்களும் அப்போது பெரிதாக ஆரம்பித்திருக்கவில்லை.
அல்ஜீப்ரா என்பது அரபுப்பெயர் கொண்டதாக இருந்தாலும் அராபியர்கள் இந்துக்களிடம் இருந்துதான் அதைத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்; கிரேக்கர்களைவிட இந்துக்கள் அல்ஜீப்ராவில் சிறந்து விளங்கியிருக்கின்றனர் என்ற உண்மைகளை மிக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு பார்த்து பிரிட்டிஷார் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
காசியில் கங்கைக் கரையில் அமைந்திருக்கும் வான் ஆராய்ச்சி மையம் பற்றியும் வானவியலில் இந்துஸ்தான் செய்த மகத்தான சாதனைகள் பற்றியும் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்துஸ்தானின் எஃகானது ஐரோப்பிய எஃகைவிட மிக உயர் தரத்தில் இருந்தது என்பதை பிரிட்டிஷார் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இரும்புத் தாதுக்களை வெட்டி எடுப்பதில் தொடங்கி வார்ப்பிரும்பு, தேனிரும்பாக உருவாக்கி எடுப்பது வரையிலான செயல்பாடுகளை அருகில் இருந்து பார்த்து எழுதியிருக்கிறார்கள். இந்திய இரும்புத் தொழிலின் எளிமை, சிக்கனம், செய் நேர்த்தி, உயர் தரம் ஆகியவற்றை அன்றைய ஐரோப்பியத் தொழில் நுட்பத்துடன் ஒப்பிட்டுப் புகழ்ந்திருக்கிறார்கள்.
இந்துஸ்தானின் விதைக் கலப்பைத் தொழில்நுட்பமானது ஐரோப்பிய கலப்பைத் தொழில்நுட்பத்தைவிடச் சிறந்தது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
இமயமலை நீங்கலாக இந்துஸ்தானில் வேறு எங்குமே ஐரோப்பா போல் பனி படரும் வாய்ப்பு இல்லை. இந்நிலையில் பூமிக்கு அடியில் குழிகளை வெட்டி அதில் வெந்நீரைச் சிறுகலங்களில் ஊற்றி வைத்து பனிக்கட்டி தயாரித்ததை வியந்து பாராட்டியிருக்கிறார்கள். வெப்பம் மிகுந்த நம் நாட்டுக்கு பனிப்பிரதேசத்தில் இருந்து வந்த ஐரோப்பியர்கள் பானங்களைக் குளிர்விக்க எவ்வளவு தவித்திருப்பார்கள்; இந்துஸ்தானில் அது நம்ப முடியாதவகையில் உற்பத்தி செய்யப்பட்டதைக் கண்டு எவ்வளவு மகிழ்ந்தார்கள் என்பவையெல்லாம் அவர்களுடைய வார்த்தைகளிலேயே இந்தப் புத்தகத்தில் பதிவாகியுள்ளன.
கப்பலின் அடித்தளம் தொடங்கி வெடிமருந்துப் பீப்பாய்களை நீர் புகாமல் பாதுகாப்பதுவரை அனைத்துத் தேவைகளுக்குமான பசு மரப்பிசினை இந்துஸ்தானின் மகத்தான கண்டுபிடிப்பாகப் போற்றியிருக்கிறார்கள்.
அம்மை நோய் சீஸன் ஆரம்பித்த மறுநொடியே ஐரோப்பாவுக்குப் பறந்துவிடவேண்டும் என்ற தீர்மானத்துடனே ஐரோப்பியர்கள் இந்துஸ்தானுக்கு வருவார்கள். அவர்கள் இந்துஸ்தானில் அம்மை நோய்க்கு பிராமணர்கள் செய்த சிகிச்சையைப் பார்த்து மலைத்துப் போயிருக்கிறார்கள். அம்மை நோய் குணமாக வேண்டிக்கொள்ளும் அம்மன், கங்கை நீர் தெளித்து தடுப்பு சிகிச்சை செய்த விதம் ஆகிய உளவியல் அம்சங்களைக் கண்ணியமான முறையில் பதிவு செய்திருக்கிறார்கள். அதோடு அந்தத் தடுப்பு சிகிச்சை முறையின் மருத்துவ அறிவியல் அம்சங்கள், உணவுப் பத்தியம் ஆகியவற்றை மிக விரிவாகப் புகழ்ந்து ஆவணப்படுத்தியிருக்கிறார் ஒரு பிரிட்டிஷ் மருத்துவர். அவரிடம் சிகிச்சைக்கு வரும் ஐரோப்பியர் அனைவருக்கும் பிராமணர்கள் பின்பற்றிய வழிமுறையிலேயே தடுப்பு சிகிச்சை செய்து அவர்கள் உயிரைக் காப்பாற்றியுமிருக்கிறார்.
விதைப்பதற்கு முன்பாக நாள், நட்சத்திரம் பார்ப்பது, சிகிச்சைகளில் புனித நீரைப் பயன்படுத்துவது தொடங்கி கிராமப்புறங்களில் சாணிகளைச் சிறுவர்கள் கூடை எடுத்துச் சென்று அள்ளுவதுவரை அனைத்துமே ஐரோப்பாவில் இருப்பதுபோலவே இங்கும் இருப்பதை ஒருவித அந்நியோந்நியத்துடன் பதிவு செய்திருக்கிறார்கள்.
கங்கைப் பகுதியில் இருந்து இந்து மதம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் ஸ்டோன்ஹென்ஜ் (Stonehenge- நடுகல்பூத வழிபாடு, இறந்தவர் வழிபாடு) என்பது இந்து வேர்கள் கொண்ட வழிபாடுகளில் ஒன்றே. கணிதவியல், வானவியல், ஜோதிடம், விடுமுறைகள், விளையாட்டுகள், நட்சத்திரங்களின் பெயர்கள், நட்சத்திரத் தொகுப்புகளின் பெயர்கள், பழங்கால நினைவுச் சின்னங்கள், சட்டங்கள், பல்வேறு நாடுகளின் மொழிகள் என அனைத்திலும் மூல இந்து வேர்களின் தடயங்களைக் காண முடியும் என்று பிரிட்டிஷார் குறிப்பிட்டிருக்கிறார்கள்
இந்துக்களின் முன்னுதாரணமான வாழ்க்கையைப் பார்த்துவிட்டுத் தான் இஸ்லாமியர்கள்கூட வேறு எந்த நாட்டிலும் இல்லாதவகையில் இந்துஸ்தானில் அமைதி காலக் கலைகள், வாழ்க்கை முறை ஆகியவற்றில் ஈடுபட்டுவந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இன்று உலகம் அனைத்து அறிவியல்தொழில்நுட்பத் துறைகளிலும் மிகப் பெரிய சாதனைகளைச் செய்துவருவது உண்மையே. நாம் இப்போது பெருமளவுக்கு எந்தவிதப் படைப்பூக்கமும் இன்றி வெறும் நுகர்வுச் சந்தையாக நகல் வாழ்க்கையை வாழ ஆரம்பித்திருக்கிறோம். பத்திருபது தலைமுறைகளுக்கு முன்பாக நாம் அன்றைய அளவில் அடைந்திருந்த சுயமான வளர்ச்சியைத் தெரிந்துகொள்வதென்பது மிகவும் அவசியம். அம்மை நோய்வாய்ப்பட்ட உடம்பில் எதிர்ப்பு சக்தியை விழித்தெழவைக்க அதிகாலையில் மளமளவென்று குளிர்ந்த நீரைக் குடம் குடமாக ஊற்றும் சிகிச்சை பற்றி இந்தப் புத்தகத்தில் பிரிட்டிஷ் மருத்துவர் விவரித்திருக்கிறார். மேற்கத்தியக் கிருமிகளால் பீடிக்கப்பட்ட நம் மனதுக்கு இந்தப் புத்தகமும் அப்படியான ஒரு அதிர்ச்சி வைத்தியத்தையே தருகிறது. சீக்கிரமே நம்மைப் பீடித்திருக்கும் மேற்கத்திய, காலனிய சிந்தனை நோய் விலகி சுய வலிமை பெருகட்டும்.
(B.R. மகாதேவன் மொழிபெயர்ப்பில் கிழக்கு பதிப்பகம் வெளியிட இருக்கும் தரம்பாலின் அழகிய நதி புத்தகத்துக்கான முன்னுரை.)