Posted on 1 Comment

புலாலும் ஆரியமும் – பத்மன்

முகநூல் (பேஸ்புக்) சமூக வலைத்தளத்தில், மாட்டுப் பொங்கலுக்கு மாட்டைக் குளிப்பாட்டி வணங்கிவிட்டு ஆட்டை வெட்டித் தின்னலாமா என்று ஒரு நண்பர் கருணை உள்ளத்தோடு கேள்வி கேட்டிருந்தார். அதற்குப் பதில் அளித்துள்ள மற்றொரு நண்பர், இப்படியெல்லாம் ஆரியத்தனமாக கேள்வி எழுப்பலாமா என்று அங்கலாய்த்திருந்தார்.

ஆங்கிலேயன் தன் வயிற்றுப்பிழைப்புக்காகச் சொன்ன ஆரிய – திராவிட வாதம் சுத்த அபத்தம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். அதை உண்மை என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். ஜீவ காருண்யம் என்பது ஆரியத்துக்கு மட்டுமே சொந்தமா? ஆரியர் என்பவர் பார்ப்பனர் மட்டும்தானா? க்ஷத்திரியர், வைசியர் எல்லாம் ஆரியர் கணக்கில் அடங்க மாட்டார்களா? ஆரியர் என்போர் வடநாட்டார் அனைவருமேவா? இல்லை, அதிலும் திராவிடச் சான்றிதழ் பெற்றவர் உள்ளனரா?

ஆரியர் கணக்கில், கொல்லாமையை வலியுறுத்திய வடநாட்டுப் புத்தரும், மகாவீரரும் இடம் பெறுகிறார்களா, இல்லையா? நமது திருவள்ளுவர்கூட, ‘கொல்லாமை’ மற்றும் ‘புலால் மறுத்தல்’ என இரண்டு அதிகாரங்களைப் படைத்து, இருபது குறள்களை எழுதியுள்ளாரே? அவையெல்லாம் ஆரியத்தின் குரலா?

“அறவினை யாதெனில் கொல்லாமை”, “நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை”, “தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் செயல்” எனக் கொல்லாமையிலும்,  “தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்?”, “தினல்பொருட்டால் உண்ணாது உலகுஎனின் யாரும் விலைபொருட்டால் ஊன்தருவார் இல்”, “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றின் உயிர்செகுத்து உண்ணாமை நன்று”, “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்” என்று புலால் மறுப்பிலும் அய்யன் திருவள்ளுவர் வலியுறுத்தியிருப்பது அய்யர்களுக்கோ அன்றி அனைத்துத் தமிழர்களுக்கோ?

ஒருவேளை திருவள்ளுவர் வாக்கெல்லாம் ஆரிய மாயையில் அகப்பட்டதன் வெளிப்பாடா? அல்லது இன்றளவும் ஆறாத, பொய்மான்கரடாய் ஆரியம்(!) வெறுக்கும் திராவிட ஆவேசப் புளுகுவாதத்தை மறுதலிக்கும் இலக்கிய ஆதாரங்களா?

சமணத்தைப் பின்பற்றும் நயினார் என்றழைக்கப்படும் தமிழ்ச் சாதியினர், வைதீகர்களைக் காட்டிலும் மிகத் தீவிரமக புலால் மறுப்பை வலியுறுத்திக் கடைப்பிடிக்கிறார்களே? அவர்களும் ஆரியரோ? ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய’ அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை வடிவான வள்ளலார் ஆரிய இனத்தவரோ? அவர் காட்டும் சமரச சன்மார்க்க நெறியிலும், அதற்கு முன்பிருந்தே சுத்த சைவ நெறியிலும், புலால் மறுக்கும் வைணவ நெறியிலும் வாழும் தமிழர் எல்லாம் ஆரியக் கலப்புற்றனரோ? அன்றி ஆரியக் கலகத்துக்கு ஆட்பட்டனரோ?

அதுசரி, யார் ஆரியர்? பல்லாயிரம் ஆண்டுகளாய் தமிழகத்தில் வாழ்ந்து, தமிழ் மொழியையே தாய்மொழியாய்க் கொண்டு, தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமுதாயத்துக்கும் தொண்டாற்றிவரும் பார்ப்பனர்கள், தமிழர் அல்லரோ? தமிழ் இலக்கியங்களை ஊன்றிப் படிக்காத அறிவிலிகளின், பகுத்தறிவாளர் என்ற பிரகடனத்தைத் தமக்குத் தாமே சூட்டிக்கொண்டு பகுத்தறிவின் வாசம் இம்மியும் அறியாத கசடர்களின் கவைக்கு உதவாத பேச்சு அது.

குறிஞ்சிக்கோர் கபிலன் என்று புகழ்பெற்ற பண்டைக் கவிஞரும், மன்னன் பாரி வள்ளலின் மகள்களை மூவேந்தர் பகையையும் பொருட்படுத்தாமல் வளர்த்த மானுடப் பண்பாளருமான கபிலர், தன்னை “அந்தணன் புலவன்” என்றுதான் குறிஞ்சிப் பாட்டில் குறிப்பிடுகிறார். அந்தக் குறிஞ்சிப் பாட்டே, ஆரிய மன்னன் பிருகதத்தனுக்கு தமிழ் உணர்த்துவதற்காக உரைக்கப்பட்டது என்று மொழியப்பட்டுள்ளது.

இதன்மூலம் அந்தணர் (பார்ப்பனர்) ஆகிய கபிலர், ஆரியர் அல்லர் என்பது அறியப்படுகிறது. அவ்வாறெனில், ஆரியர் யார்? ஆரிய மன்னர் கனக, விசயர்கள் என்று சிலப்பதிகாரத்திலும் பிற இலக்கியங்களிலும் சொல்லப்பட்டுள்ளனவே? எனில், வடநாட்டு மன்னர்களில் சிலர் ஆரிய என்று பட்டம் சூட்டிக்கொண்டார்கள். ஆரிய என்பதற்கு, சிறந்த, உயர்ந்த என்று பொருள் உரைக்கப்படுகிறது. அதனால்தான் புத்தர்கூட, தனது சங்கத்தை ஆரிய சங்கம் என்று அழைத்தார். (பிராமணத்துவம் என்பது அடையக் கூடிய தகுதியே அன்றி, பிறப்பின் அடிப்படையில் வருவது அல்ல என்பதையும் அவர் நன்கு விளக்கியிருக்கிறார், இது இக்கால பிராமணர்களுக்கு மட்டுமின்றி, பிராமண எதிர்ப்பாளர்களுக்கும் புரியவில்லை என்பது வேறு விஷயம்.)

ஆரிய என்பதற்கு உயர்ந்த, சிறந்த என்று பொருள் இருப்பதால்தான், சமணப் பெண் துறவிகளுக்கு ஆர்யை என்று பெயர். விவசாயத்திலும், கல்வியிலும், போர்களிலும் சிறந்து விளங்கிய வட இந்தியாவின் ஒரு பகுதி ஆர்ய  வர்த்தம் என்று அழைக்கப்பட்டது. அம்மன்னர்களில் ஒரு பிரிவினர் ஆரிய என்ற பட்டம் சூட்டிக்கொண்டனர். (இந்தியாவின் வடபகுதி மட்டுமல்ல, இலங்கையின் வடபகுதியில் வாழ்ந்த தமிழ் மன்னர்களில் ஒரு பிரிவினரும் ஆர்ய மன்னர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் என்பது ஆய்வுக்குரிய கிளைச் செய்தி.)

ஆர்ய என்பது இனம் அல்ல. அது உயர்ந்த, சிறந்த என்ற பொருள்தரும் பதம் மாத்திரமே என்பதை மகாகவி பாரதியார் அறிந்திருந்ததால்தான், “ஆரிய நாட்டில் நாரியரும் நரசூரியரும் சொல்லும் வீரியமந்திரம் வந்தேமாதரம்” என்றும் “அச்சம் கொண்டவன் ஆரியன் அல்லன்” என்றும் அடித்துச் சொல்ல முடிந்தது. (அவரையும், அழியும்நிலையில் இருந்த தமிழ் நூல்  சுவடிகளைத் தேடிப்பிடித்துச் சேகரித்து முதன்முதலில் பதிப்பித்தவருமான உ.வே.சாமிநாத ஐயரையும் பிறப்பால் பிராமணர் என்பதால் ஆரியர் என்றே நினைக்கிறது, அழைக்கிறது, உதாசீனப்படுத்துகிறது ஓர் அறியாக் கூட்டம்.)

தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் ஆரியர்கள் அல்லர் என்பதற்கு, பழந்தமிழ்ச் சங்க இலக்கியங்களில் ஓரிடத்தில்கூட அந்தச் சாதியினர் ஆரியர் என்று குறிப்பிடப்படவில்லை என்பதே சான்று. பார்ப்பனர், அந்தணர், மறையோர், வேதியர் என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்கள் ஏன் ஆரியர் என்று அழைக்கப்படவில்லை? சிலப்பதிகாரத்தில்கூட, கண்ணகி – கோவலன் திருமண நிகழ்வை, மாமுது பார்ப்பான் மறைவழி காட்டித் தீவலம் வந்து மணம் புரிந்ததாகக் கூறப்பட்டுள்ளதே அன்றி, ஆரியர் காட்டிய “தீவழியில்” திருமணம் புரிந்ததாகக் குறிப்பிடப்படவில்லை.

கபிலர் மட்டுமின்றி, பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடிப் பரவிய மாங்குடி மருதனார், நக்கீரர், பதுமனார், வடம வண்ணக்கண் பேரிச் சாத்தனார், வடம வண்ணக்கண் தாமோதரனார் (வடமர் என்பவர் தமிழ்ப் பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர்), மலைபடுகடாம் இயற்றிய பெருங் கௌசிகனார், கள்ளில் ஆத்திரையனார், கடம்பனூர் சாண்டில்யனார் (கௌசிகம், ஆத்ரேயம், சாண்டில்யம் என்பதெல்லாம் பிராமணர்களின் கோத்திரப் பெயர்கள் – கோத்திரம் என்பது இன்ன முனிவர் கால்வழியில், அதாவது பரம்பரையில், தோன்றியவர் என்பதைக் குறிக்கும் சொல்) உள்ளிட்ட பழந்தமிழ்ப் புலவர்களும் பார்ப்பனர்களே. தூய தமிழில் அகமும், புறமும் பாடிய இந்தப் புலவர்கள் எல்லாம் அந்தணர் என்பதால் அன்னியர் ஆகிடுவாரோ?

இதுபோல் சங்கப்பாடல் இயற்றிய புலவர் பெயரில் எல்லாம் ஆரிய என்ற முன்னொட்டு இல்லை. கபிலர், ஆரிய மன்னன் பிருகதத்தனுக்குத் தமிழ் உரைத்தார் என்பதை முன்னர் கண்டோம். தமிழ் கற்றுக்கொண்ட மற்றொரு  ஆரிய அரசன் யாழ் பிரமதத்தன் பாடல், எட்டுத்தொகை நூலான குறுந்தொகையில், 184வது பாடலாக இடம்பெற்றுள்ளது. ஆக, அரசர்கள் மட்டுமே ஆரியர் என்று அழைக்கப்பட்டனர் என்பதும், அக்காலப் பார்ப்பனர்கள் ஆரியர் என்று அழைக்கப்படவில்லை என்பதும் இதன் மூலம் நிரூபணமாகிறது.

வேதவழியைப் பின்பற்றிய வேந்தர்கள் சங்க காலந்தொட்டே அல்லது அதற்கு முன்பிருந்தே தமிழகத்தில் வாழ்ந்திருக்கின்றனர். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, ராஜசூயம் வேட்ட சோழன் பெருநற்கிள்ளி, மகாபாரதப் போரில் இருதரப்பாருக்கும் உண்டி கொடுத்த பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் ஆகியோரின் பெயர்களும், அவர்தம் பெருமை குறித்த பாடல்களும் இவற்றை நமக்கு விளக்குகின்றன.

மேலும் ஒரு விஷயம். தென்னாட்டுப் பார்ப்பனர்கள்தாம் புலால் உண்ணாதவர்கள். வடநாட்டுப் பார்ப்பனர்கள், குறிப்பாக வங்காள பிராமணர்கள் மீனையும், ஒரிய பிராமணர்கள் அனைத்துவித புலாலையும் உண்ணும் வழக்கமுடையோர். (அக்காலத்திலே, பல்வேறு பிராமணர்களும் மாமிசம் உண்டு மகிழ்ந்தவர்கள்தாம் என்றும், கொல்லாமை என்ற அறக்கோட்பாட்டின் செல்வாக்குக்கு ஆட்பட்டும், ஆன்மீக வளர்ச்சியின் விளைவாகவும் புலால் உணவுப் பழக்கத்தைத் துறந்தார்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர்.)

பிராமணர்கள் என்றால் ஆரியர்கள் என்றும், தமிழர்கள் அல்லர் என்றும் கருதுவது அறியாமையே. தமிழ் இலக்கியங்களையும், கலாசார மாண்புகளையும் முறையாக அறியாததால் ஏற்பட்டுள்ள மதிமயக்கமே அது. அந்த மயக்கத்தில் இருந்து தமிழர்கள் விடுபட்டு சுய நினைவுக்கு, சுயம் பற்றிய நேர்மைப் புரிதலுக்குத் திரும்பவிடாமல் சில சில்லறை அமைப்புகளும், சில்லறை மனிதர்களும் பாடுபட்டு, பாடுபடுத்தி வருகின்றன(ர்).

ஆகையினால் புலால் மறுப்பு என்பது ஆன்மீக ரீதியிலும், ஜீவகாருண்யம் மற்றும் இயற்கை நேசம் ஆகியவற்றின் அடிப்படையிலும் கடைப்பிடிக்கப்படும் கொள்கையே அன்றி வேறொன்றுமல்ல. இதற்கு இனவாதமும், மொழிவாதமும் அவசியமில்லை.

முடிவாக ஒரு விஷயம்: எளியதை வலியது கொல்லும் என்பது காட்டு நியதி, எளியதை வலியது காக்கும் என்பதே நாட்டு நியதி, நல்லோர் நியதி. இயற்கை, மனிதர்களுக்காக இதரபிற  உயிரினங்களை உருவாக்கவில்லை,  இயற்கையின் தன்மையான பல்லுயிர்ப் பெருக்கத்தில் மனிதனும் ஓர் அங்கம் என்பதே உண்மை. இதுவரையான பரிணாம வளர்ச்சியில் உயர்ந்த நிலையில் உள்ள ஓர் அங்கம், அவ்வளவே. அந்த வகையில் மனிதனுக்குப் பிற உயிரினங்கள் மீது உள்ள உரிமையைவிட, அவற்றுக்குச் செய்ய வேண்டிய கடமையே அதிகம். இதைத்தான் நமது பாரதப் பண்பாடு, ஹிந்து தர்மம் போதிக்கிறது.