மூன்று சகோதரிகளையும் மூன்று சகோதரர்களையும் கொண்ட இவர் குடும்பம் அவ்வளவு வசதியானது அல்ல. உடுக்க உடைகள் குறைவாக இருந்தாலும் படிக்கப் புத்தகங்கள் நிறைய வாங்கித் தருவாராம் இவருடைய தந்தை. அப்படி சிறு வயதிலேயே சுவாமி விவேகானந்தருடைய புத்தகங்களைப் படித்ததன் விளைவு, வளர்ந்ததும் சமுதாயத்துக்கு உபயோகமாக எதாவது சேவை புரிய வேண்டும் என்ற எண்ணத்தை இவருக்குள் வளர்த்தது. விவேகானந்தா கேந்திரத்தின் நிறுவனர் ஏக்நாத்ஜி ரானடே தேச சேவைக்கு இளைஞர்களை அழைத்தபோது இவருக்கு அதில் இணைந்து தானும் பணி புரிய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அதை தன் தந்தையிடம் தெரிவித்தபொழுது அவர் குறைந்த பட்சம் பட்டதாரி படிப்பையாவது முடித்த பின்னரே அதில் சேரலாம் என்று கூறி விட்டார். ஆகவே இவர் தன் பிஎஸ்சி பரிட்சை முடித்த அடுத்த நாள் கன்யாகுமரிக்குக் கடிதம் எழுதினார்.
கேந்திரத்தின் நிறுவனர் ஏக்நாத்ஜி இவரை நேர்காணலுக்கு அழைத்திருந்தார். அவர் இவரைப் பார்த்ததும் “உனக்கு ரொம்ப சின்ன வயசு, இப்போது போய் இரண்டு வருடம் கழித்து வா” என்று கூறியிருக்கிறார். அதற்கு இவர் தனக்கு சமூக சேவையில் நாட்டம் இருப்பதால் உடனே சேர விரும்புவதாகக் கூறி இருக்கிறார். இவருடைய பெற்றோரின் சம்மதத்தைப் பெற்ற உடன் இவரைச் சேர்த்து கொண்டிருக்கிறார்.
பள்ளிப் படிப்பில் வார்தா மாவட்டத்தில் முதல் மாணவியாகவும் பல்கலைக்கழகப் படிப்பில் ரேங்க் எடுத்துத் தேர்ச்சி பெற்ற இவரை PhD படிக்க வைக்க வேண்டும் என்பதே இவர் தந்தையின் கனவாக இருந்தது. இருந்தாலும் இவர் தன் மகளின் விருப்பத்திற்குக் குறுக்கே நிற்கவில்லை. 1977ம் ஆண்டு கேந்திரத்தில் முழு நேரத் தொண்டராகச் சேர்ந்து சமுதாயப் பணிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நிவேதிதா பிடே 1978ல் இருந்து 1985ம் ஆண்டு வரை தமிழகத்தின் தென் பகுதி மாவட்டங்களில் கிராமப்புற முன்னேற்றத் திட்டத்தில் பங்கு பெற்று பணி ஆற்றினார். அதன் பிறகு கிராமப்புறக் குழந்தைகளின் நலனுக்கென கன்யாகுமரியில் நடத்தப்படும் விவேகானந்த கேந்திர வித்யாலயா என்ற பள்ளிக்கூடத்தின் தலைமையாசிரியராக 1981ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டு வரை பணியாற்றினார்.
பழங்குடி இனத்தவர் நலனுக்கென அவர்கள் அதிகமாக இருக்கும் இடங்களான அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், அந்தமான், நாகாலாந்து போன்ற பகுதிகளில் பல பள்ளிகளை கேந்திரம் நடத்தி வருகிறது. (தற்போதைய எண்ணிக்கை 72). இந்தப் பள்ளிகளுக்கு அகில இந்தியச் செயலாளராக 1993 முதல் 2000வது ஆண்டு வரை பொறுப்பு வகித்தார். கல்வியாளர்களுக்காக உலக அளவில் 1999ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டிருக்கிறார். பழங்குடி இனத்தவரின் கல்வி மற்றும் மேம்பாடு, பெண்களின் முன்னேற்றம் இவற்றிற்காக கேந்திரம் ஆற்றும் பணியில் இவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.
விவேகானந்தரின் பார்வையில் பெண்மை, யோகம் ஒருமைத்துவத்தில் அமைந்த தத்துவம் ஆகியவை உட்பட பல புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். இவரது புத்தகங்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி உட்பட பல இந்திய மொழிகளில் வெளிவந்துள்ளன. IIT சென்னை, டெல்லி, கரக்பூர் IIM இந்தூர் IISC பெங்களூரு போன்ற புகழ்பெற்ற கல்விக்கூடங்களில் மாணவர்களிடையே உரையாற்றி இருக்கிறார். கல்வித்துறை சம்பந்தப்பட்ட பல்வேறு கருத்தரங்களில் இவர் பங்கேற்று உரையாற்றி இருக்கிறார். இவருடைய முப்பதாண்டுக் கால சமுதாயப் பணியை அங்கீகரித்து இந்த ஆண்டு மத்திய அரசால் பத்மஸ்ரீ விருது இவருக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.