Posted on Leave a comment

மாலுமி (சிறுகதை) – பா. ராகவன்


ஆதியிலே வினாயகஞ் செட்டியார் என்றொரு தன வணிகர் மதராசப் பட்டணத்திலே வண்ணாரப்பேட்டை கிராமத்தில் தனது குடும்பக் கிழத்தி, குஞ்சு குளுவான்களோடு சௌக்கியமாக வசித்து வந்தார். துறைமுக வளாகத்தில் வந்திறங்கும் பர்மா ஷேல் எண்ணெய் கம்பேனியின் சரக்குகளைப் பட்டணத்தின் பல திக்குகளிலும் இருந்த அக்கம்பேனியின் சேமிப்புக் கிட்டங்கிகளுக்குக் கொண்டு சேர்க்கிற ஒப்பந்த ஊர்திகளில் ஒன்பது ஊர்திகள் அவருக்குச் சொந்தமானவையாக இருந்தன. பர்மா ஷேல் கம்பேனியாரிடம் தாம் சம்பாதனை பண்ணும் தொகையைச் சிந்தாது சிதறாது சேகரம் பண்ணி வினாயகஞ் செட்டியார் வட்டிக்குச் சுற்று விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவ்வாறாகப் பல ஆண்டுக்காலம் அவர் சிறுகவும் பெருகவும் சேகரித்த பணத்தைக் கொண்டு தமது முதல் இரண்டு புத்திரிகளுக்கு விமரிசையாகக் கலியாணஞ் செய்து வைத்தார்.

வினாயகஞ் செட்டியாரின் மூத்த புத்திரி வடிவம்மை, தட்டாஞ்சாவடிக்கு வாழ்க்கைப்பட்டுப் போனாள். அவளது புருஷன் முத்தையா அங்கே பலசரக்குக் கடை வைத்துப் பிழைத்துக்கொண்டிருந்தான். அதன் லாபத்தில் வட்டித்தொழில் செய்துகொண்டிருந்தான். அவர்களுக்கு இராமநாதன், லீலாவதி என்று இரண்டு மகவுகள் பிறந்தன. செட்டியாரின் இரண்டாவது புத்திரி முத்துலட்சுமி திருப்போரூருக்கு வாழ்க்கைப்பட்டுப் போனாள். அவளது புருஷன் கருப்பையா அங்கே அச்சுக்கூடம் வைத்துப் பிழைத்துக்கொண்டிருந்தான். அதில் வந்த லாபத்தில் வட்டித் தொழில் செய்துகொண்டிருந்தான். அவர்களுக்குத் திருநாவுக்கரசு என்ற மகன் பிறந்தான். மூன்றாவது புத்திரியான மகேசு என்கிற மகேசுவரியை வினாயகஞ் செட்டியார் பாண்டிச்சேரியில் வசித்து வந்த லெட்சுமணச் செட்டியார் விசாலாட்சி தம்பதியரின் ஏக புத்திரனும் பிரெஞ்சு அரசாங்கக் காரியஸ்தனுமான முத்துக்குமாரசாமிக்குக் கலியாணஞ் செய்துகொடுக்கப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார்.

இந்தப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த காலத்திலே வினாயகஞ் செட்டியார் வாசம் செய்துகொண்டிருந்த மதராசப் பட்டணத்துக்கு ஒரு விநாசம் வந்து சேர்ந்தது. யுத்த காலமென்பதால் பொதுவாகவே ஜனங்கள் கலவரமும் பயப்பீதியும் கொண்டு திரிந்துகொண்டிருந்தார்கள். அது போதாதென்று வான் முல்லர் என்னும் கப்பற்படைத் தலைவரின் கட்டுப்பாட்டில் இயங்கிய எம்டன் என்னும் ஜெர்மானியப் போர்க்கப்பல் மதராசப் பட்டணத்தின் கடற்கரையை நெருங்கி வந்து நின்றுகொண்டது. அது ராப்பொழுது என்பதாலும் எதிரிக் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் படைப்பிரிவு என்று மதராசப் பட்டணத்தில் ஒன்றுமில்லாததாலும் எம்டன் கப்பல் மையம் கொண்டதை யாரும் அறிந்திருக்கவில்லை. விளக்கு வைத்து ஒரு ஜாமம் கழிந்த பொழுதில் சமுத்திரக் கரையில் இருந்து ஒன்றரை மைல் தொலைவில் நங்கூரமிட்டிருந்த எம்டன் கப்பலானது, ஒன்பதரை மணி சுமாருக்குத் தனது பீரங்கிகளை இயக்கி வெடிக்க ஆரம்பித்தது.

அது வினாயகஞ் செட்டியாரின் கெட்ட நேரம்தான் என்பதில் சந்தேகமில்லை. எம்டன் கப்பல் எறியத் தொடங்கிய முதல் முப்பது சுற்றுக் குண்டுகளும் கரையோரம் இருந்த பர்மா ஷேல் கம்பெனியின் எண்ணெய் டாங்குகளைத்தான் குறி வைத்து வந்து தாக்கின. அதுவும் வினாயகஞ் செட்டியார் எடுத்துச் சென்று சேர்ப்பிக்க வேண்டிய சரக்கு நிறைந்த டாங்குகளாக இருந்தன. அன்றைக்குச் செவ்வாய்க் கிழமை என்பதாலும் பொன் கிட்டினாலும் புதன் கிட்டாதென்னும் பழமொழியின்பால் வினாயகஞ் செட்டியாருக்குப் பிரீதி உண்டென்பதாலும் மறுநாள் விடிந்ததும் தனது வாகனங்களைத் துறைமுகத்துக்கு அனுப்பி வைக்க உத்தேசித்திருந்தார். ஆனால் அதற்குள் எம்டன் கப்பலில் இருந்து புறப்பட்டு வந்த பீரங்கிக் குண்டுகள் அந்த எண்ணெய் டாங்குகள் அனைத்தையும் தாக்கி நொறுக்கிவிட்டன. துறைமுகத்தில் கோடி பிணங்களைக் கொட்டிக் கொளுத்தினாற்போலே தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

வினாயகஞ் செட்டியாருக்கு சேதி வந்து சேர்ந்தபோது குண்டு வீசிய எம்டன் கப்பல் திரும்பிச் சென்று, பிரம்ம முகூர்த்தமே தொடங்கியிருந்தது. நடந்த எதையும் அறியாமல் துயில் கொண்டிருந்த செட்டியாரை அவரது விசுவாசியான ஊழியன் ஆறுமுகச் சாமி கதவைத் தட்டி எழுப்பி, பதைக்கப் பதைக்க நடந்ததைச் சொல்லி முடித்தான். செட்டியாருக்கு பூமி கிடுகிடுத்தது. ‘ஐயோ மோசம் போனோமே. இனி பர்மா ஷேல் கம்பேனியே இருக்காதே’ என்று அப்போதே தலையில் கைவைத்து அவர் புலம்ப ஆரம்பித்துவிட்டார். கம்பேனி இல்லாது போனால் ஏஜென்சி இல்லாது போகும். ஏஜென்சி இல்லாது போனால் பண வரத்து இல்லாது போகும். எண்ணெய்ப் பணம் வராது போனால் வட்டித் தொழில் சண்டித்தனம் செய்ய ஆரம்பிக்கும். உடனடிச் சிக்கல் ஒன்றுமிராது என்றபோதிலும் அவரது மூன்றாவது புத்திரி மகேசுவரியின் கலியாண காரியங்களில் சுணக்கம் ஏற்படலாம். தொழில் நொடித்துவிட்ட விவகாரம் தெரியவந்தால் பிரெஞ்சு காரியஸ்தனான பாண்டிச்சேரி மாப்பிள்ளை சற்று யோசிக்கலாம். ஏற்கெனவே ஜாதகக் கட்டங்கள் சரியில்லாத பெண்ணென்பதால் மாப்பிள்ளை பிடிப்பது குதிரைக் கொம்பாக இருந்து வந்தது. சொந்த ஜாதியாகவும் இருக்க வேண்டும். ஜாதகமும் பொருந்த வேண்டும். பண வசதிக்குக் குறைச்சல் இருக்கக்கூடாது. அந்தஸ்தும் ஜபர்தஸ்தும் உள்ள இடமாகவும் வேணுமென்று வினாயகஞ் செட்டியார் எங்கெங்கோ சொல்லி வைத்துத் தேடிப் பிடித்திருந்த இடம் அது. மாப்பிள்ளையானவன் பிரெஞ்சு அரசாங்க உத்தியோகஸ்தன் என்றாலும் ஏனாமில் அவனுக்கு ஒரு பெரிய அச்சுக்கூடம் இருந்தது. மாதம் ஒருமுறை மதராசப் பட்டணத்துக்கு வந்து அங்கிருந்து பாசஞ்சர் மெயிலில் முதல் வகுப்பு டிக்கெட் எடுத்து அவன் ஏனாமுக்குப் போய் வருவது வழக்கம் என்று அவனது தகப்பனார் செட்டியார் சொல்லியிருந்தார். விடுவதாவது?

அன்றையப் பொழுது விடிந்தபோது ஊரே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது. குண்டு வீசிவிட்டு ஓட்டமாய் ஓடிச் சென்ற எம்டன் கப்பலானது, எப்போது வேண்டுமானாலும் திரும்ப வந்து தாக்கும் என்று மூலைக்கு மூலை ஜனம் பேசிக்கொண்டது. சாலையில் நோக்குமிடமெல்லாம் போலிஸ்காரர்கள் நடமாட்டம் பலமாக இருந்தது. வெள்ளைக்காரத் துரைகள் திறந்த ஜீப்பு வண்டிகளில் போனவண்ணமும் வந்த வண்ணமும் இருந்தார்கள். நாலாபுறமும் ஜனக்கூட்டம் ஓட்டமும் நடையுமாக விரைந்துகொண்டிருந்தது. பலபேர் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு அன்றே ஊரைப் பார்க்கப் புறப்பட்டிருந்தார்கள். இடுப்பிலும் தோளிலும் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு, பெட்டிப் படுக்கையுடன் அவர்கள் விரைந்ததைக் கண்டவண்ணம் வினாயகஞ் செட்டியார் துறைமுக வளாகத்தை ஒட்டியிருந்த பர்மா ஷேல் ஆயில் கம்பேனியின் காரியாலயத்துக்கு வந்து சேர்ந்தார்.

அங்கே அவரை வரவேற்கவோ முகமன் சொல்லவோ யாரும் இல்லை. உயரதிகாரிகளைப் பார்க்கவே முடியவில்லை. இடைநிலைச் சிப்பந்திகளும் இப்போது ஒன்றும் பேசுவதற்கில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஒருபுறம் பற்றி எரிந்துகொண்டிருந்த நெருப்பை அணைக்க சிந்நூறு பேர் போராடிக்கொண்டிருக்க, மறுபுறம் குண்டு வீச்சுக்கு ஆட்படாத சரக்கினங்களை உடனடியாக அப்புறப்படுத்தும் பணிகள் துரிதகதியில் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஓரிரண்டு தினங்களில் எம்டன் கப்பலானது கட்டாயம் திரும்ப வரும் என்று துறைமுகச் சிப்பந்திகளும் சொன்னார்கள். இம்முறை அவர்கள் வீசிய குண்டுகள் வெறும் பரீட்சார்த்தம் என்றும், அடுத்த முறை வீசப்போகிற குண்டுகளில் மதராசப் பட்டணமே பஸ்பமாகிவிடும் என்றும் அவர்கள் பேசிக்கொண்டதை வினாயகஞ் செட்டியார் கேட்டார். ஆச்சியிடம் மட்டும் சொல்லிவிட்டு அன்று மாலையே அவர் பாண்டிச்சேரிக்குப் பயணமானார்.

வினாயகஞ் செட்டியார் அதற்குமுன் இரண்டு முறை பாண்டிச்சேரிக்குப் பயணம் செய்திருக்கிறார். மகேசுவின் ஜாதகத்தை லெட்சுமணச் செட்டியாரிடம் சேர்ப்பிப்பதற்காக ஒரு முறையும், சேர்ப்பித்த ஜாதகம் அவரது திருக்குமாரன் முத்துக்குமாரசாமியின் ஜாதகத்துடன் பெருமளவு பொருந்தியிருப்பதை அறிந்து செல்ல வந்த வகையில் ஒரு முறையும் ஆகும். மூன்றாவதான இப்பயணத்தில் திருமணத்தை நிச்சயஞ் செய்துவிட்டே வரவேண்டுமென்ற தீர்மானத்துடன் புறப்பட்டிருந்தார். அவரது கவலையெல்லாம் ஒன்றுதான். ஜாதகப் பொருத்தம் சரியாக அமைந்திருப்பதைத் தெரிவித்துவிட்டு, பிளெசர் காரில் மதராசுக்கு வந்து பெண் பார்த்துவிட்டுப் போன பின்பும் லெட்சுமணச் செட்டியாரிடம் இருந்து எந்தத் தகவலும் வந்திருக்கவில்லை. இத்தனைக்கும் மகேசுவை மாப்பிள்ளைப் பையனுக்குப் பிடித்திருப்பதாகப் பெண் பார்க்க வந்த தினத்தன்றே அவர்கள் தெரிவித்திருந்தார்கள். அத்தனைக்குப் பின்பும் தாம்பூலம் மாற்றிக்கொள்ள எதற்காக இத்தனைத் தாமதஞ் செய்ய வேண்டும் என்பதுதான் வினாயகஞ் செட்டியாருக்குப் புரியவில்லை.

என்னவானாலும் இன்றைக்குப் பேசி முடித்துவிடுவது என்ற மனோதிடத்துடன் பாண்டிச்சேரிக்கு வந்து சேர்ந்த வினாயகஞ் செட்டியார் கூபர்த்து விடுதியிலே அறையெடுத்துத் தங்கி, ஸ்நானபானமெல்லாம் செய்து முடித்த பின்பு அந்துலேன் வீதியில் இருந்த லெட்சுமணச் செட்டியாரின் கிருஹத்துக்கு ஒரு ஜட்கா பிடித்துப் போனார். வழியிலே அவர் கண்ட பிரெஞ்சுக்கார சீமான்களும் சீமாட்டிகளும் ஆங்கிலேயர்களைக் காட்டிலும் சிவப்பாக இருப்பதாக அவருக்குப் பட்டது. அன்னார்தம் நடையுடை பாவனைகள் ஆங்கிலத் துரை மற்றும் துரைசானிமார்களின் நடையுடை பாவனைகளினும் லலிதமாயிருப்பதாகவும் தோன்றியது. பிழைத்துக் கிடந்து இந்தக் கலியாணம் நல்லபடியாக நடந்தேறிவிட்டால் குடும்பத்தோடு பாண்டிச்சேரிக்குக் குடிமாறி வந்துவிடலாம் என்று அவர் மனத்தில் ஓர் எண்ணம் உருவானது. உலக யுத்த களேபரங்களில் பிரெஞ்சு அரசாங்கமும் பங்கு வகித்தாலும் பாண்டிச்சேரியில் அதன் தாக்கம் மதராஸ் அளவுக்கு இல்லை என்று தோன்றியது. குடிசனங்களின் மனத்திலே பயப்பீதி உருவாகாமல் பார்த்துக்கொள்வதினும் ஓர் அரசாங்கத்தின் பணி வேறு எதுவாக இருக்கும்?

லெட்சுமணச் செட்டியார், வினாயகஞ் செட்டியாரை வரவேற்று இருக்கையளித்து உபசரித்தார். அவரது பத்தினியான விசாலாட்சி ஆச்சி, தங்கமென மின்னிய பித்தளைத் தம்ளரில் காப்பி எடுத்து வந்து கொடுத்துவிட்டு க்ஷேமலாபங்களைக் கேட்டறிந்துகொண்டு உள்ளே போய்விட்டாள். வினாயகஞ் செட்டியாருக்கு விஷயத்தை எங்கிருந்து ஆரம்பிப்பது என்று புரிபடவில்லை. என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தார். எம்டன் கப்பலைப் பற்றி. அது வீசியெறிந்த குண்டுகளைப் பற்றி. மதராஸ் துறைமுகமே பற்றியெரிந்து கொண்டிருப்பது பற்றி. அதனாலெல்லாம் தனது தொழிலும் வர்த்தகமும் பாதிக்கப்படாது என்று திரும்பத் திரும்பச் சொன்னார். ஒருவாறாக முக்கால் மணி நேரம் நாட்டு வர்த்தமானம் பேசிக் களைத்தபின் கேட்டார். நிச்சயதாம்பூலத்தை விரைவில் நடத்தி முடித்துவிட்டால் கலியாணத்துக்கு நாள் பார்க்க சௌகரியமாயிருக்கும்.

ஆஹா அதற்கென்ன என்று ஆரம்பித்த லெட்சுமணச் செட்டியாரும் எதையோ சொல்ல நினைத்துத் தயங்கிக்கொண்டிருப்பதாக வினாயகஞ் செட்டியாருக்குப் பட்டது. என்னவாக இருக்கும் என்று அவருக்குப் புரிபடவில்லை. ஏனெனில், தமது பேச்சினிடையே லெட்சுமணச் செட்டியார் அடிக்கடி ‘பிராப்தம்’ என்றும் ‘விதி’ என்றும் ‘ஆண்டவன் சித்தம்’ என்றும் பொருந்தாத இடங்களிலெல்லாம் பதப்பிரயோகம் செய்துகொண்டிருந்தார். இது வினாயகஞ் செட்டியாருக்கு தர்ம சங்கடமாயிருந்தது. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அவர் சொன்னார், ‘இதோ பாரும். இரண்டு மகள்களுக்குக் கலியாணஞ் செய்து புகுந்தகத்துக்கு அனுப்பினது போகவும் இன்னமும் அவர்களுக்குச் செய்யப் போகிற சீர் செலவுகள் போகவும் ஆறேழு லட்ச ரூபாய் என்வசம் சொத்து உண்டு. எல்லாமே மகேசுக்குத்தான். வண்ணாரப் பேட்டையில் இருக்கிற வீட்டின் மதிப்பு தனி. அதுபோக ஆறாவயலில் நாற்பது ஏக்கரா நிலம், தேவக்கோட்டையில் ஒரு கலியாண சத்திரம். பர்மா ஷேல் ஏஜென்சி இனிமேல் இல்லாது போனாலும் வட்டித்தொழில் இருக்கவே இருக்கிறது.’

லெட்சுமணச் செட்டியாரின் கண் கலங்கிவிட்டது. சடேரென்று எழுந்து வந்து வினாயகஞ் செட்டியாரின் கரங்களைப் பற்றிக்கொண்டு, ‘ஐயோ நான் மனுஷாளை மட்டுமே பார்ப்பேன். சொத்தா பெரிசு?’ என்று கேட்டார்.

‘அப்புறமெதற்கு யோசிக்கிறீர்? ஆகவேண்டியதைப் பார்க்கலாமே?’ என்றார் வினாயகஞ் செட்டியார்.

மடையறைக் கதவோரம் ஆச்சி மறைந்து நின்று சம்பாஷணையைக் கவனித்துக்கொண்டிருந்ததை வினாயகஞ் செட்டியார் அறிந்திருந்தார். சட்டென்று என்னவோ தோன்றியது. ஒருவேளை மாப்பிள்ளைப் பையன் வேறு யாராவது பெண்ணிடம் மையலாகிவிட்டானோ?

இல்லவேயில்லை என்று லெட்சுமணச் செட்டியார் சொன்னார். ‘உம்மிடம் சொல்லுவதற்கென்ன? பயலுக்கு பிரான்சுக்குப் போகவேணுமென்று ஒரு ஆவலாதி. அங்கே கூப்பிட்டு உயர் பதவியில் உட்காரவைக்க குவர்னர் வரைக்கும் சகாயம் உண்டு. ஆனால்…’

இப்போதும் அவர் இழுத்தது வினாயகஞ் செட்டியாருக்கு மேலும் கவலையளித்தது. என்னமோ இருக்கிறது. பல்லுக்கடியில் சிக்கிய பாக்கு போல மெல்லவும் வராமல் விழுங்கவும் வராமல் துப்பவும் வராமல் இம்சிக்கிற சங்கதி. இதை இப்படியே எத்தனை நேரம் இழுத்துக்கொண்டிருக்கப் போகிறார் இவர்? எனவே துணிந்து கேட்டே விட்டார். ‘என்னதான் சொல்ல வருகிறீர்? என் மகளும் பிரான்சுக்குப் போகவேண்டியதிருக்கும் என்றா? அது ஒரு பிரச்னையே இல்லை செட்டியார்வாள். இரண்டு பேரையும் தனிக்கப்பலில் தேனிலவாகவே அனுப்பிவைப்பேன்.’

லெட்சுமணச் செட்டியார் ஒரு கண நேரம் அவரை விவரிக்க முடியாத உணர்ச்சியொன்றை வெளிப்படுத்தும் பார்வை பார்த்தார். அமைதியாக எழுந்து சென்று அலமாரியொன்றைத் திறந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து டீப்பாயின்மீது வைத்தார்.

‘என்னதிது?’ என்று வினாயகஞ் செட்டியார் கேட்டார்.

‘நீரே பாரும்.’

அட்டை போட்டு வைக்கப்பட்டிருந்த அந்தப் புத்தகத்தை வினாயகஞ் செட்டியார் பிரித்ததும் முதல் பக்கத்தில் “இழான் பத்தீட்டு திரிங்கால் அவர்களால் மொழியாக்கஞ் செய்யப்பட்ட திருவிவிலியப் புதிய ஏற்பாடு” என்ற எழுத்துகள் கண்ணில் பட்டன. வினாயகஞ் செட்டியார், லெட்சுமணச் செட்டியாரை நிமிர்ந்து பார்த்தார்.

‘அவன் இப்போதெல்லாம் இதைத்தான் வாசிக்கிறான். தேவாலயப் பிரார்த்தனைகளுக்குப் போகிறான். விரைவில் ஞானஸ்நானம் செய்துகொண்டு கிறித்தவனாகிவிடப் போகிறேன் என்று சொல்லுகிறான்.’

‘ஐயோ’ என்று அலறிவிட்டார் வினாயகஞ் செட்டியார். அதற்குமேல் அங்கே என்ன பேசுவதென்று அவருக்குப் புரியவில்லை. லெட்சுமணச் செட்டியாரின் குடும்பத்துக்குத் தன்னோடு சம்பந்தம் வைத்துக்கொள்ளப் பிடித்திருந்தும் ஏன் அதைச் சொல்லாமல் இழுத்தடித்துக்கொண்டிருந்தார் என்பதற்கான காரணம் விளங்கிவிட்டது. என்ன இருந்தாலும் பெற்றவர்களுக்கு இது பேரிடித் தாக்குதல்தான் அல்லவா?

‘உமது பட்டணத்தில் எம்டன் கப்பல் வீசிய குண்டுகளைப் பற்றிச் சொன்னீரே, இது அதைக் காட்டிலும் பெரிய குண்டல்லவா? என் உறவு சனங்கள் யாருக்கும் இதுவரை இந்த விவகாரம் தெரியாது. தெரியுமானால் என் மானமே போய்விடும் ஐயா! நான் பெற்ற மகன் இப்படியொரு பாதையில் போகத் தீர்மானஞ் செய்திருக்கும்போது நான் அவன் கலியாணத்தைப் பற்றி எப்படிச் சிந்திக்க முடியும்?’ என்று லெட்சுமணச் செட்டியார் கேட்டார்.

‘பேசிப் புரியவைக்க முடியாதா?’ என்று வினாயகஞ் செட்டியார் கேட்டார்.

‘என்னத்தைப் பேச? பாரிசுக்கு அதிகாரியாகப் போவதென்றால் கிறித்தவனாக மாறினால்தான் முடியுமாம். அப்படியொரு உத்தியோகமே வேண்டாமடா என்று தலைப்பாடாக அடித்துக்கொண்டேன். இப்படித்தான் என் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவீர்களென்றால் எனக்கு உமது உறவே வேண்டாம் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டான்!’

அன்று மாலையே வினாயகஞ்செட்டியார் தாம் தங்கியிருந்த விடுதி அறையைக் காலி செய்து கொடுத்துவிட்டு ஊருக்குப் புறப்பட்டுவிட்டார். மகேசுவிடம் இந்த விவகாரத்தைத் தெரியப்படுத்தாமலே இருந்துவிட முடிவு செய்திருந்தார். பற்பல ஜாதகங்கள் பார்த்து எதுவும் தோதுப்பட்டு வராதிருந்த நிலையில் இந்த மாப்பிள்ளைப் பையன் வந்து பார்த்து, பிடித்திருப்பதாகச் சொல்லிவிட்டுப் போனதில் இருந்து அவளது நடவடிக்கையில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்ததைச் செட்டியார் கவனித்திருந்தார். தனியே இருக்கும் பொழுதுகளில் அவள் யாருக்கும் கேட்காத குரலில் அவ்வப்போது எதையாவது பாடிக்கொண்டிருந்தாள். பெரும்பாலும் அவை காதல் ரசம் சொட்டும் பாடல்களாக இருந்தன. தவிர கண்ணுக்கு மை தீட்டி அழகு பார்ப்பதும் அடிக்கடி கால் கொலுசின் திருகாணியைத் திருகியபடி கனவுலகில் சஞ்சாரம் செய்வதுமாக அவளது பொழுதுகள் போய்க்கொண்டிருந்தன. மேற்படி வரன் வந்து பார்த்துச் சென்றதையாவது உறவு சனங்களிடம் தாம் சொல்லாதிருந்திருக்கலாம் என்று அவருக்குத் தோன்றியது. இந்த இடம் அநேகமாகக் குதிர்ந்துவிடும் என்று சொல்லி வைத்ததுதான் எத்தனை பெரும் பிழையாகப் போயிற்று! ஏதாவது இறையற்புதம் நிகழ்ந்து ஓரிரு தினங்களுக்குள் வேறொரு வரன் வந்து அமைந்துவிட்டால் நன்றாயிருக்கும் என்று நினைத்துக்கொண்டார். எல்லாம் நினைப்பதுதான். நடக்க வேண்டுமே.

மறுநாள் அவர் வீடு வந்து சேர்ந்து ஸ்நானபானங்கள் ஆன பிற்பாடு ஆச்சி என்ன ஆயிற்று என்று வினவினாள்.

‘ம்? எம்டனெல்லாம் திரும்பி வராது. இங்கே தேவையில்லாமல் பீதி கிளப்பிக்கொண்டிருக்கிறான்கள். அவன் பாண்டிச்சேரிப் பக்கம் போய்விட்டானாம். நல்லவேளை, சேதி தெரிந்து நான் பாதி வழியில் திரும்பிவிட்டேன்’ என்று சொல்லிவிட்டு அவசரமாக வெளியே புறப்பட்டுப் போனார்.

*****

Posted on 1 Comment

லா.ச.ரா : அணுவுக்குள் அணு – பா. ராகவன்

லாசரா எனக்கு
முதல் முதலில் அறிமுகமானபோது நான்  விவேக் ரூபலாவின்
கொலைவெறி ரசிகனாக இருந்தேன். பத்தாம் வகுப்பு முடித்திருந்த நேரம். எங்கள் பேட்டையில்
அப்போது இருந்த லீலா லெண்டிங் லைப்ரரியில் தினமும் ஒரு கிரைம் நாவலை எடுத்துப் படிப்பது
என்பதை ஒரு சமூகக் கடமையாக நினைத்தேன். சுஜாதாவெல்லாம் என்னைக் கவரவில்லை. ராஜேஷ்குமார்தான்.
உலகின் ஒரே உன்னத எழுத்து என்றால் அது அவரது க்ரைம் நாவல்தான்.
அத்தகு ரத்த
தினம் ஒன்றில் எங்கள் குடும்ப நண்பர் கவிஞர் நா.சீ. வரதராஜன், ‘நீ நிறைய படிக்கறியாமே?
லாசரா படிச்சிருக்கியா?’ என்று கேட்டார்.
‘ராஜேஷ்குமார்
மாதிரி சூப்பரா எழுதுவாரா சார்?’
அவர் பதில்
சொல்லவில்லை. மாறாக, பைண்ட் செய்யப்பட்ட பழைய புத்தகம் ஒன்றை எடுத்துக் கொடுத்து,
‘முடிஞ்சா படிச்சிப் பாரு. புரியலன்னா கவலப்படாத. அப்பறமா புரியும்’ என்று சொன்னார்.
இந்த அறிமுகமே
எனக்கு திகிலாக இருந்தது. சரி, ராஜேஷ்குமாரைவிடப் பெரிய ஆள் போலிருக்கிறது என்று எடுத்து
வந்து புரட்ட ஆரம்பித்தேன். அது ஜனனி சிறுகதைத் தொகுப்பின் முதல் பதிப்பு. தடிதடியான
தாள்கள். பழுப்பேறி இருந்தது. முதல் பக்கத்தில் லாசராவின் ஆட்டோகிராஃப் இருந்தது. அந்தக்
கையெழுத்து எனக்குப் பிடித்தது. இஸ்திரி செய்த அங்கவஸ்திரத்தைக் கொடியில் போட்ட மாதிரி
எழுத்து.
ஆனால் கையெழுத்து
கவர்ந்த அளவுக்குக் கதை கவரவில்லை. முதல் சிறுகதையின் முதல் பத்தியிலேயே நான் காலி.
அணுவுக்குள் அணுவாம் பரமாணுவுக்குள் எனக்கு அப்போது நுழையத் துப்பில்லை.
ஆனால் நான்
லாசராவின் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு திரிந்ததைக் கண்ட ஒரு சிலர் என்னை ஒரு
மாதிரி பார்க்க ஆரம்பித்தார்கள். அந்த லுக் எனக்குப் பிடித்தது. புரியாவிட்டாலும் இந்த
ஆள் நமக்கு உதவுவார் என்று தோன்றியது.
இதே மாதிரி
ரகத்தில் வேறு யார் யாரெல்லாம் உண்டு என்று எனக்குத் தெரிந்த மாபெரும் இலக்கிய ஏஜெண்டான
லீலா லெண்டிங் லைப்ரரியின் உரிமையாளர் சாமியப்பனிடம் கேட்டபோது அவர் அம்மா வந்தாளை
எடுத்துக் கொடுத்தார்.
பகல் பதினொரு
மணிக்கு அதைப் படிக்க ஆரம்பித்து மூன்று மணிக்கு முடித்தது முதல் எனக்கு நிலைகொள்ளாமல்
போய்விட்டது. அந்தக் கதை என்னவோ செய்தது. இரவு தூக்கம் வரவில்லை. மறுநாள் மீண்டும்
படித்தேன். மேலும் சிலது புரிவது போலிருந்தது. மூன்றாம் நாள் மறுபடியும். முற்றிலும்
பிடிபட்டு கிறுகிறுத்துவிட்டது.
பிசாசு அடித்த
மாதிரி அது முதல் ஜானகிராமனின் அத்தனை நாவல்களையும் தேடிப் பிடித்து மூன்று மாதங்களில்
படித்துத் தீர்த்தேன். அதன் பிறகுதான் மீண்டும் லாசராவுக்கு வந்தேன்.
 

அணுவுக்குள்
அணு.
அப்போதும் எனக்கு
ஜனனி பிடிபடவில்லை. ஆனால் த்வனி பிடித்தது. கதை புரிதலைவிட இம்முறை மொழியை ரசிக்க ஆரம்பித்தேன்.
கண்ணாடியில் பிம்பம் விழும் த்வனிகூட எனக்குக் கேட்கிறது என்னும் வரியை நாளெல்லாம்
நினைத்து வியந்துகொண்டிருந்தேன். லாசராவின் பெண்களையும் ஜானகிராமனின் பெண்களையும் ஒப்பிட்டுப்
பார்க்கும் வழக்கம் உண்டானது. என்னால் ஜானகிராமன் காட்டிய பெண்களை சுலபமாகத் திருட்டுக்காதல்
செய்ய முடிந்ததைப் போல ராமாமிருதம் சுட்டிய பெண்களை நெருங்க முடியவில்லை. அது பயமில்லை.
மிரட்சி. சுநாதனி போன்ற ஒரு பெண்ணை வாழ்வில் என்றேனும் சந்திக்க நேர்ந்தால் விழுந்து
சேவித்துவிடுவேன் என்று தோன்றியது.
சுமார் பத்து
முறையாவது திரும்பத் திரும்பப் படித்து அந்தத் தொகுப்பை ஒருவாறு உள்வாங்கியபிறகு ஒருநாள்
லாசராவுக்கு ஒரு போஸ்ட் கார்ட் போட்டேன். அப்போது அவர் அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில்
இருந்தார். ‘எனக்குப் புரியவில்லை; ஆனால் படிக்காமல் இருக்கமுடியவில்லை’ என்பதுதான்
அந்தக் கடிதத்தின் சாரம். மிகவும் மொக்கையான மொழியில் இதைச் சுற்றி வளைத்துத் தெரிவித்திருந்தேன்.
அவரிடமிருந்து நாலு நாளில் பதில் கார்ட் வந்தது.
சிரஞ்சீவி ராகவனுக்கு,
ஆசிகள் என்று ஆரம்பித்து அஞ்சலட்டையின் ஒன்றரைப் பக்கத்திலும் இடைவெளியின்றி எழுதியிருந்தார்.
அதே கையெழுத்து. அதே அழகு. அதில் ஒருவரி எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. எல்லாம்
புரிந்தேதான் தீரவேண்டுமென்று என்ன கட்டாயம்? என்றாவது புரியட்டும். அவசரப்பட வேண்டாம்.
இறுதிவரை புரியாவிட்டாலும் நஷ்டமில்லை.
இது என்னைச்
சீண்டியது. இந்த மனிதரைப் புரிந்துகொள்ளாமல் அடுத்த வேலை இல்லை என்று முடிவு செய்து
மீண்டும் மீண்டும் வாசிக்கத் தொடங்கினேன். அவரது மாய மொழியின் அடர்ந்த வலைப்பின்னலைக்
களைந்து கதையின் அந்தராத்மாவைத் தொடுவதுதான் அங்கே எனக்கிருந்த ஒரே ட்ராப். மொழி போதையிலேயே
திளைத்து உள்ளே போகாதிருந்ததுதான் நான் செய்த தவறு. அதைப் புரிந்துகொண்ட மறுகணமே லாசராவின்
விஸ்வரூப தரிசனம் எனக்குக் கிடைக்கத் தொடங்கிவிட்டது.
தமிழ்ச் சமூகத்தில்
அப்போதுதான் குடும்பம் என்னும் அமைப்பு ஆங்காங்கே சிதைய ஆரம்பித்திருந்தது. தனிக்குடித்தனத்
தனியாவர்த்தனங்கள் பரவலாக அரங்கேறத் தொடங்கியிருந்தன. லாசராவின் கதைகள் எனக்குக் குடும்பத்தின்
மீதான பிரேமையை உருவாக்கியளித்தன. உறவுக்கார மகாஜனங்களின் குற்றம் குறைகளையும் ரசிக்கப்
பழகினேன். மனிதன் என்பவன்தான் யார்? ஏராளமான பிசிறுகளின் நேர்த்தியான தொகுப்பே அல்லவா?
சிக்குப் பிடித்த தலைமுடியை உட்கார்ந்து எண்ணெய் தடவி வாரி,  சல்லாத்துணி போலாக்குவதில் ஒரு லயம் உள்ளது. சிக்கு
பிடிக்கத்தான் செய்யும். வாரிக்கொண்டேதான் இருக்கவேண்டும். மொட்டையே சுகமென்றால் சொல்ல
ஒன்றுமில்லை. லாசராவின் ஒரு கதாநாயகி பிரமாதமான கூந்தலழகி. இறுதியில் அவள் உயிரைக்
கொடுத்த இறைவனுக்கு மயிரைக் கொடுக்கிற தருணம் ஒன்று கதையில் வரும். மழித்தாலும் அது
விளைந்துவிடுவதுபோலத்தான் உறவென்னும் நினைவுப் போதம்.
பின்னர் அவருக்கு
எத்தனையோ தபாலட்டைகள் அனுப்பியிருக்கிறேன். அவரும் சளைக்காமல் பதில் போடுவார். கதைகள்
மீதான எனது புரிதல் அளவு உயர்ந்து வருவதை ஒரு கடிதத்தில் பாராட்டியிருந்தார். அவரது
சுபமங்களா பேட்டி வெளியானபோது, ‘இதற்குமேல் தாங்காது; உங்களை நேரில் சந்திக்கவேண்டும்’
என்று எழுதினேன். வரச் சொல்லி வீட்டு விலாசத்தைக் குறிப்பிட்டு குரோம்பேட்டையில் இருந்து
எப்படி வருவது என்று வழியெல்லாம் விளக்கியிருந்தார்.
அந்த நாளை என்னால்
மறக்க முடியாது. முதல் பார்வையில் எனக்கு அவர் ஒரு மகரிஷி போலக் காட்சியளித்தார். கண்ணைச்
சுருக்கி என்னைப் பார்த்தார். சரேலென ஒரு புன்னகை. உட்காரச் சொல்லி நிறையப் பேசினார்.
என்ன படிக்கற. அப்பா என்ன பண்றார். மூத்தவனா நீ? கூடப் பொறந்தவா எத்தன பேர். எழுதறியா.
ஜாக்கிரதை. படிப்ப கெடுத்துண்டுடாம எழுது. சினிமா பாப்பியா. குறைச்சிக்கோ. ராத்திரி
ரொம்ப நேரம் கண்ணு முழிக்காத.
என்னைப் பொறுத்தவரை
அவர் மகரிஷிதான். ஆனால் அந்த முதல் சந்திப்பிலேயே என் அப்பாவின் அன்னியோன்னியத்தை அவரிடம்
காண முடிந்தது. இது எனக்குப் பெரிய வியப்பை அளித்தது. வாழ்வில் நான் சந்தித்த கொம்பு
முளைக்காத முதல் எழுத்தாளர். (அடுத்தவர் அசோகமித்திரன்.)
லாசராவைப் படிக்கத்
தொடங்கியபிறகு வெகுகாலம் நான் வேறெந்த எழுத்தாளரையும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. மற்ற
எதுவுமே வேண்டாம் என்று நினைக்கச் செய்துவிடும் எழுத்து அவருடையது. மொழியின் மீதான
அவரது சாகசம் திரும்பத் திரும்ப இங்கு பேசப்பட்டிருக்கிறது. உண்மையில் வாழ்வின்மீது
அத்தகு சாகசம் நிகழ்த்தாமல் மொழியில் அது பிரதிபலிக்க வாய்ப்பில்லை.
ஜென் குரு ஒருவர்
இறக்கும் தருவாயில் ஆசைப்பட்டு ஓர் இனிப்புப்பண்டம் வாங்கி வரச் சொல்லி உண்டு முடித்த
வேளையில் அவரது சீடர்கள் கேட்டிருக்கிறார்கள். ‘குருவே, இறுதியாக ஒரு சொல்லை அளியுங்கள்.’
குரு சொன்னார்,
‘அப்பா! என்ன ருசி!’
லாசராவின் எழுத்தில்
நான் அடைந்தது அதுதான். வாழ்வின் மீதான பூரண ருசி.