ரிசப்ஷனிஸ்ட் அழைத்து “உள்ளே போங்க” என்றதும் உள்ளே சென்று அமர்ந்தோம். ஐம்பது வயதிருக்கும் அந்த டாக்டருக்கு. ரொம்பக் கண்டிப்பானவர் என்று பெயரெடுத்தவர். சொற்ப வார்த்தைகளே பேசுவார். அசிஸ்டென்ட் டாக்டர்கள் அவரது முகத்தின் குறிப்பறிந்து டக்டக்கென்று பணியில் உதவ வேண்டும்; அவர் கேட்ட கேள்விக்குத் தெளிவாக சுருக்கமாக பதில் சொல்ல வேண்டும். அவர் பேசுகையில் குறுக்கே பேசக்கூடாது. ஒருமுறைதான் எதையும் சொல்வார். இப்படி நிறைய கண்டிப்புத்தனம் இருப்பினும் அந்த டாக்டரையே நாங்கள் தேர்வு செய்திருந்தோம். காரணம் அவர் பல வருடங்கள் அனுபவமிக்க சீனியர் மகப்பேறு மருத்துவர்.
அவரது கணினித் திரையில் ரத்தப் பரிசோதனை முடிவை ஒரு நிமிடம் ஊன்றிப் படித்தார். தன் சுழலும் நாற்காலியைத் திருப்பி, எங்களைப் பார்த்தார். தன் மூக்குக் கண்ணாடியை சரிசெய்தவாறே, “இந்த ஹாஸ்பிடல்ல இருக்குற பன்னிரண்டு கைனகாலஜிஸ்ட்டுகள்ல, நாங்க ஒரு மூணு டாக்டர்ஸ்தான் பிளட் டெஸ்ட் எழுதிக் கொடுக்கும்போது டாக்சப்ளாஸ்மாவுக்கும் சேர்த்து இருக்கானு பார்க்கச் சொல்லி எழுதிக் கொடுப்போம். மத்தவங்க அவ்வளவு சீரியஸா அதை எடுத்துக்கறது இல்ல. ஐயம் ஸாரி, உங்களுக்கு டாக்ஸபிளாஸ்மோசிஸ் பாஸிட்டிவ்னு காமிக்குது” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
Toxoplasmosis! எனக்கு திக்கென்று இருந்தது. மனைவிக்கு சரியாகப் புரியவில்லை. என் முகத்தை பயத்துடன் பார்த்த என் மனைவியிடம் அவர் சொன்னார். “இது ஒரு பாரசைட்டிக் இன்ஃபெக்ஷன், இது ப்ரக்னென்சிய பாதிக்கும், கருவையும் பாதிக்கும்” என்றவர், “நீங்க ஒண்ணு செய்யுங்க. ஆனந்த் லேபரட்ரினு இன்னொரு லேப் இருக்கு, அங்க போய் பிளட்டெஸ்ட் எடுத்துப் பாருங்க. என்ன ஏதுன்னு எல்லாம் சொல்லாதீங்க. டாக்ஸோ செக் பண்ணிட்டு வாங்க. அங்க ரிசல்ட் எப்படி வருதுன்னு பாத்துட்டு முடிவெடுக்கலாம்” என்று ரத்தப் பரிசோதனைக்கு எழுதிக் கொடுத்தார்.
மறுநாளே ஆனந்த் லேபிற்கு சென்று ரத்தப் பரிசோதனைக்கு ரத்தமாதிரி கொடுத்தார் என் மனைவி. மூன்று நாள்கள் கழித்து வந்த பரிசோதனை முடிவை எடுத்துக்கொண்டு மறுபடியும் கைனக்காலஜிஸ்டை சந்தித்தோம். ரிசல்டை வாங்கிப் பார்த்த டாக்டரின் முகத்தில் சீரியஸ்தன்மை அதிகமானது. நிமிர்ந்து எங்களைப் பார்த்தவர், “மறுபடியும் டாக்ஸோ பாசிட்டிவ்னு வந்திருக்கு” என்றவர், “வீட்டில் செல்லப்பிராணிகள் ஏதும் வளர்க்கிறீர்களா?” என்றார்.
“இல்லை, எனக்கு நாய், பூனைன்னாலே பயம்” என்றார்.
“நான்வெஜ் சாப்பிடுவீங்களா?”
“இல்லை, வெஜிடேரியன்தான்.”
டாக்ஸோ என்று டாக்டர் கவலையுடன் சொன்ன டாக்சப்ளாஸ்மா என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு ஒட்டுண்ணிப் புழு. இந்த ஒட்டுண்ணி தாக்கிய நோயாளிகள் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை. வெகு சிலருக்கே ஃப்ளு காய்ச்சல் போல ஒரு அறிகுறி தென்படலாம். உலகத்தில் பாதிப்பேருக்கு மேல் டாக்சப்ளாஸ்மா நோய்த்தொற்று இருக்கிறது, ஆனால் அதற்கான எந்த அறிகுறிகளையும் அது வெளிப்படுத்துவதில்லை. ஐரோப்பா, அமெரிக்கா போன்ற குளிர்ப்பிரதேசங்களில் இது பரவலாகக் காணப்படும். குறிப்பாக, சமைக்காத இறைச்சி, பதப்படுத்தப்படாத பால், பதப்படுத்தப்படாத பாலாடைக்கட்டி போன்றவைகள் விரும்பி உண்ணப்படும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் டாக்சோ அதிகம் உள்ளது.
பொதுவாக, சரியாக வேகவைக்கப்படாத இறைச்சியைச் சாப்பிடுகையில் அந்த இறைச்சியில் டாக்ஸா தாக்கம் இருந்தால் இந்த நோய்த்தொற்று வரும். ஆனால், சைவ உணவை மட்டுமே உண்ணும் என் மனைவிக்கு இது தொற்றியது எப்படி?
இந்த ஒட்டுண்ணிகள் இருக்கும் எலிகளைப் பூனைகள் தின்ன அவற்றுக்கும் இது பரவும். பூனையின் வயிற்றில் அடுத்தப் பரிணாமத்தை அடையும் இந்த ஒட்டுண்ணிகள் பூனையின் கழிவில் லட்சக்கணக்கில் வெளியேறுகின்றன. இப்படி வெளியேறும் ஒட்டுண்ணிப் புழுக்கள் நோய்த் தாக்கத்தை உண்டாக்க வல்லவை. கக்கா போய் விட்டு வந்த பூனையைத் தூக்கிக் கொஞ்சுகையில் நம் கைகளில் பட்டு, தெரியாமல் அது நம் வாயினுள், மூக்கினுள் நுழைந்து, நம்மையும் போட்டுத் தாக்குகிறது. கர்ப்பிணிகளுக்கு இந்த நோய்த் தொற்று வந்தால் அது தொப்புள்கொடி வழியே பயணித்து வளரும் கருவையும் தாக்குகிறது.
அது சரி, நாய், பூனை இது எதையுமே எப்போதுமே தொடாத என் மனைவிக்கு இந்தத் தொற்று எவ்விதம் நிகழ்ந்திருக்கும் என்று இணையத்தில் தேடிப்படித்தேன். மண்ணுக்கு உள்ளே இருந்து கிடைக்கும் காய்கறிகளான கேரட், உருளைக்கிழங்கு, முள்ளங்கி போன்றவற்றை காய்கறிக் கடையில் வாங்குகையில் நோய்த்தாக்கம் இருந்த பூனையின் கழிவுகள் ஒட்டிய மண் அந்தக் காய்கறிகளில் ஒட்டிக் கொண்டிருந்து, அதில் கைபட்டு நம் வாய் மூலமோ, மூக்கு வழியாகவோ டாக்ஸபிளாஸ்மா ஒட்டுண்ணிகள் உடலில் புக வாய்ப்பிருக்கிறது. எனக்குத் தெரிந்து இந்த வழியாகத்தான் என் மனைவிக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பினேன்.
எதிர்பாராதவிதமாக டாக்சப்ளாஸ்மா இருக்கும் மண்ணை உண்பது – சரியாக கழுவப்படாத பழங்கள் மூலம் நேர்கிறது.
டாக்சப்ளாஸ்மா கலந்த அசுத்தமான நீரைக் குடிப்பது (குளம் போன்ற பொதுக் குடிநீர்நிலைகளில் நோய்த்தாக்கம் உள்ள பூனையின் கழிவு கலப்பதின் மூலம்) இந்தத் தொற்றைக் கடத்துகிறது.
இந்த நோய்த்தொற்றை டாக்சப்ளாஸ்மொசிஸ் என்பர். இதன் காரணகர்த்தாவை ஃபர்ஸ்ட்நேம் சர்நேம் எல்லாம் சேர்த்துச் சொல்வதானால் டாக்ஸப்ளாஸ்மா கோன்டை எனலாம்.
டாக்ஸோ ஒட்டுண்ணி உடம்பில் இருந்தாலும், நம் நோய்த்தடுப்பு சக்தி நன்றாக இருக்கும் வரை அது நம்மை ஒன்றும் செய்வதில்லை. எப்போது நம் நோய் எதிர்ப்புச்சக்தி குறைகிறதோ அப்போது டாக்ஸோ வலுப்பெற்று இந்த வியாதியை நம் உடலில் பரப்புகிறது.
சாதாரண மனிதர்களில் அதிகம் வெளிப்படாத டாக்ஸோ கர்ப்பமுற்ற பெண்களை எளிதாகத் தாக்கி தொப்புள்கொடி மூலம் வளரும் கருவையும் தாக்குகிறது.
டாக்ஸோ தாக்கின வளரும் சிசு வளர்ச்சி குன்றி இருக்க வாய்ப்புண்டு. குறைப்பிரசவம் அல்லது சிலசமயம் கர்ப்பமே கலைந்துவிடும் ஆபத்தும் உண்டு. நோய்த்தாக்கப்பட்ட கரு பெரும்பாலும் எந்தவிதப் பாதிப்பையும் வெளிக்காட்டுவதில்லை. டாக்ஸோ தாக்கின சிசுக்கள் மற்ற ஆரோக்கியமான குழந்தைகளைப் போன்றே பிறந்து வளரும். ஆனால், அவர்களுக்குப் பத்து வயது பூர்த்தியடைகையில் பார்வைக் குறைபாடு, நரம்புமண்டலக் குறைபாடு, மூளைவளர்ச்சிக் குறைவு போன்றவையாக அதன் பாதிப்புகள் வெளிப்படுகின்றன.
டாக்ஸோ வராமல் தவிர்க்க என்னென்ன முன்னெச்சரிக்கைகள் எடுக்கலாம்?
– இறைச்சி உணவுகளை சரியாக, முழுமையாக சமைத்து உண்பது. டாக்ஸோ ஒட்டுண்ணி கொதிநிலை வெப்பத்தில் கொல்லப்பட்டுவிடும்.
– மண்ணிலிருந்து பெறப்படும் காய்கறிகள், கிழங்கு வகைகளை சுத்தமாகக் கழுவிய பின்னரே உணவுக்குப் பயன்படுத்துதல்
– காய்ச்சாத பால், பதப்படுத்தப்படாத பாலாடைக்கட்டி போன்றவற்றை உட்கொள்வதைத் தவிர்த்தல்.
– பழங்கள் போன்ற இயற்கை உணவுகளை நன்கு கழுவியபின்னரே உண்ணுதல்
– காய்கறிகளை வெட்டப் பயன்படுத்தும் பலகையை நன்கு கழுவித் சுத்தப் படுத்துதல்
– தோட்டவேலைகள் செய்கையில் கைகளில் கையுறை உபயோகித்தல்
– குழந்தைகளுக்குக் கை கழுவுவதன் அவசியத்தை வலியுறுத்துதல்
– பூனைகளை வளர்ப்போர், அதன் கழிவு டப்பாவை சுத்தம் செய்கையில் கையுறைகள் அணிவது
– கர்ப்பவதிகள் பூனைகளை மடியில் போடாது, படுக்கையில் சேர்க்காது சற்று விலகி இருக்கச் செய்வது. கூடியவரை அதன் கழிவுகள் எந்தவிதத்திலும் நம் கை கால்களில் படாது பார்த்துக் கொள்ளுதல்
இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் டாக்ஸப்ளாஸ்மோஸிஸ் தொற்றாமல் வருமுன் காக்கலாம்.
“கன்ஃபர்மா இன்ஃபெக்ஸன் இருக்குதுன்னு வந்திருக்கு. பிரக்னென்சிய கண்ட்டினியு செய்யலாம்னா சொல்லுங்க. பிரசவம் வரைக்கும் ஊசி போட்டுக்கிட்டு, குழந்தை பிறந்த பின்னாலும் அதற்கும் தொடர்ந்து சிகிச்சை கொடுக்க வேண்டி இருக்கும். அதனால சைட் எஃபெக்ட்சும் வரும். ஆனா, குழந்தை வளர்ந்தப்புறம் நான் சொன்ன பாதிப்புகள் முழுவதும் வராதுன்னு என்னால உறுதியா சொல்ல முடியாது. நீங்களே யோசிச்சி உங்க முடிவ சொல்லுங்க” என்றார்.
சரி என்றோம். “இங்க பாருங்க” என்றவர், குனிந்து தன மேசையின் கிழே இருந்து ஒரு பழைய ரூல்டு நோட்டை எடுத்து தூசி தட்டி அதைத் திறந்து காண்பித்தார்.
வரிசையாய் அதில் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. “என்னோட இருபது வருஷ சர்வீசுல இதுவரைக்கும் பதினைஞ்சு பேருக்கும் மேல கர்ப்பிணிகளுக்கு இந்த டாக்ஸப்ளாஸ்மோசிஸ் இன்ஃபெக்ஷன் வந்திருக்கு. நான்தான் டெலிவரி பாத்தேன்; அவங்களுக்குப் பிறந்த குழந்தைகளும் நார்மலாத்தான் பிறந்தார்கள். ஆனா, பத்துப் பதினைந்து வருஷமாச்சு, இதுவரைக்கும் இவங்கள்ல ஒருத்தர்கூட என்கிட்ட வந்து என் குழந்தைக்கு இந்த பாதிப்பு இருக்குன்னோ, அல்லது என் குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாம நல்லபடியா இருக்குதுன்னோ ஃபீட்பேக் எதுவுமே கொடுக்கவேயில்லை. அதனால என்னால உறுதியா எதையும் தீர்மானமா சொல்ல முடியாது, நீங்களே முடிவெடுத்து சொல்லுங்க” என்றார்.
டாக்ஸப்ளாஸ்மோஸிஸ் பற்றி வெட்னரி காலேஜில் பாரசைட்டாலஜியில் படித்துள்ளேன். அதன் பாதிப்பை என் வாழ்க்கையிலேயே அனுபவிக்க நேரிடும் என்று கனவிலும் நினைத்ததேயில்லை. இணையத்தில் அதைப்பற்றி மீண்டும் வாசித்தேன். அந்த வாரத்தின் ஒரு மாலையில் சேனல் மாற்றிக் கொண்டிருக்கையில் டிஸ்கவரி சேனலில் டாக்ஸப்ளாஸ்மோஸிஸ் பற்றிய ஒரு அரைமணி நேர நிகழ்ச்சியை கவனித்துப் பார்த்தோம். அது எப்படிப் பரவுகிறது, கர்ப்பவதிகளைத் தொற்றுகையில், தொப்புள்கொடி மூலம் வயிற்றில் வளரும் சிசுவையும் எப்படி பாதிக்கிறதென தெளிவாக விளக்கினர்.
அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மனைவி, இதற்கு வேறெதுவும் வழியே இல்லையா என்று கேட்கையில் அவர் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. முதல்முறை கருவுற்று இரண்டு மாதங்கள் கூட முற்றுப்பெறவில்லை எனினும், வயிற்றில் வளரும் கருவுக்கும் அவருக்கும் உடலளவில் மட்டுமல்ல, உள்ளத்தளவிலும் பிரிக்க முடியாத பந்தம் வளர்ந்துவிட்டது.
கருவின் வளர்ச்சியை உணர்த்தும் உடல் மாற்றங்கள் உள்ளத்திலும் மாறுதல்களை உண்டாக்கி இன்னும் முகம் பார்க்கா சிசுவெனினும் அதன் மேல் கொண்ட பிரியத்தினால் அதை எக்காரணம் கொண்டும் பிரிந்துவிட மனமில்லை அவருக்கு.
டாக்ஸப்ளாஸ்மோஸிஸ் பற்றித் தெரியுமாதலால், இரண்டாம் முறை ரத்தப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டபோதே என் மனதில் வருத்தமளிக்கும் அந்த முடிவைத் தேர்ந்தெடுத்து விட்டிருந்தேன். அதனால் என் மனம் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், என் மனைவி விஷயத்தில் அது இன்னும் நிகழவில்லை. இன்னமும் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்து எல்லாம் சரியாகி விடாதா என்று ஒரு மெல்லிய நம்பிக்கை நூலைப் பற்றியபடி அவர் மனம். இன்னொரு முறை ரத்தப் பரிசோதனை எடுத்துப் பார்த்து அதில் நார்மல் என்று முடிவு வருமோ என்று கூட ஒரு நப்பாசை அவருக்கு.
இல்லை. இது நம்மால் சரி செய்ய முடியாத விஷயம். அசட்டுத் துணிச்சலுக்கு இங்கே இடமில்லை. டாக்ஸோ பாதித்த குழந்தை வளர்ந்தவுடன் அதற்கு நேரும் குறைபாடுகள் பற்றி அறிவியல் ஆவணப்படுத்தியுள்ளது. அதை முற்றிலும் நிராகரித்து வருவது வரட்டும் என்று கடவுளின் மீது பாரத்தைப் போட்டுக் குழந்தையைப் பெறுவது படித்திருந்தும் முட்டாள்தனம் செய்வது.
“டாக்டர் சொன்ன மாதிரி டெலிவரி வரைக்கும் ட்ரீட்மென்ட் எடுத்துக் கிட்டு, குழந்தை பிறந்தபின்னும் அதுக்கும் ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டா சரியாகிடுமா?” என்று கேட்டார் என் மனைவி.
“இல்லை. கர்ப்பகாலத்தில் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் உனக்கும், வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பக்க விளைவுகள் நிறைய வரும். பிறந்த பின்னும் மாதக்கணக்கில் எடுக்கப்போகும் மருந்துகள் குழந்தையின் உடல்நலனில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒழுங்காகப் பிறந்து நன்றாக வளரும் குழந்தையையே இந்தக் காலத்தில் வளர்ப்பது பெரும்பாடாக இருக்கிறது. பார்வைக் குறைபாடு, மூளைவளர்ச்சிக் குறைபாட்டுடன் இருக்கும் குழந்தையை வளர்ப்பது இன்னும் சிக்கல். இதில் நமக்கு இருக்கும் கஷ்டத்தைவிட அந்தக் குழந்தை அனுபவிக்கப் போகும் கொடுமைகளே என்னை இந்த முடிவுக்குத் தள்ளின” என்றேன்.
ஆனாலும் வார்த்தைகளால் ஆறுதல் படுத்தமுடியாத மனநிலைக்கு என் மனைவி சென்று விட்டிருந்தார். இதைக் கடந்தே தீரவேண்டும் என்று எனக்குத் தெரிந்தது. மொபைலை எடுத்து மருத்துவமனைக்குப் பேசினேன். டாக்டரைச் சந்திக்க நேரம் கேட்டு முன்பதிவு செய்தேன்.
அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு மறுநாள் காலையில் மருத்துவமனை வரவேற்பறையில் அமர்ந்திருந்தோம். அந்த அறையில் முகத்தில் பூரிப்புடன், பெரிய வயிற்றுடன் பல கர்ப்பிணிகள். இரவெல்லாம் உறக்கமின்றி அழுது வீங்கின கண்களுடன் என் மனைவி. ஆறுதல் படுத்த முடியாத நிலையில் நான்; அந்தச் சூழ்நிலையில் எங்களை வித்தியாசமாக உணர்ந்தோம்.
எங்கள் முறை வந்ததும் தளர்வாய் நடந்து உள்ளே சென்று டாக்டரிடம் பேசினோம்.
“குட், சரியான முடிவைத்தான் எடுத்திருக்கீங்க” என்றவர், தன் அசிஸ்டெண்ட் டாக்டரிடம், “D and C – ப்ரிஸ்க்ரிப்ஷன் நீங்களே எழுதிருங்க, என் வாழ்நாள்ல இந்தப் பிரிஸ்க்ரிப்ஷன மட்டும் என் கைப்பட நான் எழுத மாட்டேன்” என்று கண்களை மூடிக் கைகளைக் கோர்த்தார்.
அது ஒரு சிறிய அளவிலான சர்ஜிகல் ப்ரொஸீஜர். அது முடிந்ததும் கொஞ்ச நேரம் ஓய்வில் இருக்கச் சொன்னார்கள். இரண்டு மணி நேரங்கள் கழித்து மெதுவாய் நடக்க முடிந்தது. ஐந்து வாரங்கள் உட்கொள்ள வேண்டிய மருந்துகளை அங்கேயே மருந்துக்கடையில் வாங்கிக் கொண்டு சோர்வாய் வீடு வந்து சேர்ந்த மனைவியின் மனம் புயல் வந்து கிளைகளை எல்லாம் இழந்த மரமாய் வெறுமையாய் இருந்தது. உடலளவிலும் மனத்தளவிலும் பலவீனமாக இருந்தார்.
ஐந்து வாரங்கள் முடிந்ததும் மீண்டும் மருத்துவமனை. ரத்தப் பரிசோதனை. டாக்டர். “ப்ளட்டெஸ்டில் டாக்ஸோ நெகடிவ்னு வந்திருக்கு” என்று புன்னகைத்தார். “ரொம்ப நல்லது இனிமே நீங்க ப்ளான் செய்யலாம். ஒருமுறை டாக்ஸோ வந்து குணமாகிருச்சுன்னா, உடம்புல அதுக்கு இம்யூனிட்டி டெவலப் ஆகிடும் அதனால நோ வொர்ரி” என்றார்.
சிலவாரங்களே வயிற்றில் சுமந்திருந்த போதிலும் மாதக் கணக்கில், வருடக்கணக்கில் அந்த பாரத்தை இதயத்தில் சுமந்து கொண்டிருந்தோம். எங்களுக்கென ஒரு குழந்தை பிறந்தும், இந்த நிகழ்ச்சியை இன்னும் மறக்கமுடியவில்லை. இம்மாதிரியான ஒரு வேதனை எங்களுக்குத் தெரிந்த யாருக்கும் இனி நேரக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறோம். நேரிலோ, தொலைபேசியிலோ “எனக்குக் கல்யாணம் நிசசயம் ஆயிருக்கு” என்று சொல்லும் தோழிகளிடம், உறவினர்களிடம், “அட்வான்ஸ் கங்கிராஜிலேஷன்ஸ்” என்று சொல்வதற்கு முன்பே “தயவுசெய்து உடனே டாக்டரை கன்சல்ட் செஞ்சு ஒரு டீவார்மிங் டேப்ளட் எடுத்துக்குங்க” என்று சொல்கிறோம்.