ஆவின் பால் விலையேற்றம் | பிரவீன் குமார்கடந்த நான்கு முதல் ஐந்து வருடங்களில் தண்ணீர்ப் பிரச்சினை காரணமாக நெல் பயிரிடும் பரப்பு குறைந்துவிட்டது. இரண்டு போகம், அதாவது குறுவை மற்றும் சம்பா பருவத்தில், சம்பா பருவத்திற்கு மட்டுமே தண்ணீர் கிடைப்பதால் அந்தக் காலங்களில் மட்டுமே பயிரிடப்படுவதால், வைக்கோலுக்கு மூலமான நெல் பயிரிடும் பரப்பு குறைந்து வருகிறது. அதோடு அந்தப் பயிரினை எந்திரம் மூலமாக அறுவடை செய்வதால், வைக்கோல் சரியாகக் கிடைப்பதில்லை, வைக்கோல் எல்லாம் கூலம் குப்பையாகப் போகிறது. மாடு அதை விரும்பி உண்பதும் இல்லை. அதனால் வைக்கோல் பற்றாக்குறை மற்றும் பசுந்தீவனம், உலர் தீவனம், கலப்புத் தீவனம், தவிடு, புண்ணாக்கு விலைகள் எல்லாம் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. நான்கு வருடத்திற்கு முன்னர் கோதுமைத் தவிடு விலை ரூ 700க்கு விற்றது. இன்றோ 1350 ரூபாய்க்கு விற்கிறது. ரூ 24க்கு விற்ற கடலைப் புண்ணாக்கு ரூ 38க்கு விற்கிறது. தீவனம் ரூ 1650 ரூபாய்க்கு விற்கிறது. இப்படியான ஒரு சூழலில்தான் பால் கொள்முதல் விலையும், அதனால் விற்பனை விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு பால் கொள்முதல் விலை ரூ 17.25லிருந்து கடந்த 2011ம் ஆண்டு 6.25 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூபாய் 24க்கும், அதன் பிறகு 2014ல் அது 26ஆகவும் உயர்த்தபட்டது. பின் 2 ரூபாய் உயர்த்தப்பட்டு 28 ஆகவும், எருமைப்பால் 35 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

19-08-2019க்கு முன்னர் 1 லிட்டர் பசும்பால் கொள்முதல் விலை 28 ரூபாய். ஆனால் மாடு வளர்ப்பவர்களான எங்கள் கைக்குக் கிடைப்பது ரூபாய் 26 மட்டும்தான்.  எங்கள் பகுதியில் ஆவின் பால் கொள்முதல் மட்டுமே நடைபெறுகிறது. தனியார் பால் கொள்முதல் எங்கள் பகுதியில் நடைபெறவில்லை. நிச்சயம் தனியார் கொள்முதல் பால் விலை இதைவிடக் குறைவாகவே இருக்கும். ஒரு சில பெரும் பால் உற்பத்தியாளர்கள், ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பால் விற்பதும் உண்டு.

அரசு எங்களுக்குரிய பால் கொள்முதல் பணத்தினை மாதத்தில் இரு தவணைகளாக 15 நாளுக்கு ஒருமுறை சரியான நேரத்தில் தந்துவிடுகிறது. 15ம் நாள் மாலை 15 நாளுக்குரிய பணம் சரியாகப் பால் உற்பத்தியாளர்களின் வங்கிக்கணக்கில் வந்துவிடும்.  தனியாரும் இரு தவணைகளில் செலுத்துகிறது. சில தனியார் நிறுவனங்கள் வாரம் ஒரு முறை எனப் பணம் தருவதும் உண்டு.

மாடுகளுக்குத் தரவேண்டிய தீவனத்தை அரசு எங்களுக்கு ரூபாய் 1350க்குத் தருகிறது. (எடை 50 கிலோ.) தனியார் தீவனம் ரூ 1650க்கு விற்கப்படுகிறது. (எடை 70கிலோ.) அரசு தரும் தீவனம் மாவட்டத் தலைமைப் பால் நிலையத்திலிருந்து மட்டுமே வரும். அதற்கு மூட்டைகளை ஏற்றி இறக்க வண்டி வாடகையை நாம்தான் தரவேண்டும். அதனால் தாமதம் ஏற்படுகிறது. உற்பத்தியாளர்கள் எல்லாம் சேர்ந்து எடுத்து வர முயன்றாலும் தாமதம் ஆகிறது. அதனால் தீவனம் சரியான நேரத்துக்குக் கிடைப்பதில்லை.

மாடுக்குகளுக்குப் போட வேண்டிய தடுப்பூசிகளை காலம் தவறாமல் சரியாக அரசு நடைமுறைபடுத்துகிறது. மாடுகளுக்கு நோய்ப் பாதிப்பு உள்ளதா என அரசு கால்நடை மருத்துவர் மூலம் மாதம் ஒருமுறை சோதனை செய்கிறது. சில தனியார் நிறுவனங்களும் இந்த மாதிரியான சோதனைகளைச் செய்கிறது. அதற்கென்றே மருத்துவர்களும் இருக்கிறார்கள். இப்படிச் செய்யாத சில தனியார் நிறுவனங்களும் உண்டு. அவர்கள் பாலினை மட்டுமே கொள்முதல் செய்து கொள்வார்கள்.

பசும் பாலை டீ கடைகளுக்கு அவ்வளவாக யாரும் வாங்குவது இல்லை. ஏனென்றால் அது தண்ணீர் கட்டாது. அவர்கள் பாக்கெட் பால் மட்டுமே வாங்குவர். புதிதாகக் கடைவைக்கும் சிலர் பசும் பாலை 1 லிட்டர் ரூ 35 என மக்களைக் கவர வாங்குவர். ஆனால் அது தொடர்ந்து நீடிக்காது. அவர்களிடம் இருந்து சரியாகப் பணமும் வருமா என்றால் நிச்சயமாகச் சொல்லமுடியாது. சில டீக்கடைகள் மிகவும் குறைந்த விலையில் பாலைக் கொள்முதல் செய்வார்கள். வேறு வழியின்றி சிலர் இவர்களுக்குப் பாலை விற்பதும் உண்டு.

மாடுகளுக்கு அதன் விலையைப் பொருத்து காப்பீட்டில் அரசு மானியம் தருகிறது. வருடம் ஒருமுறை காப்பீட்டுப் பணம் செலுத்துகிறோம். அதில் பாதிப் பணம் அரசு நமக்காகக் கட்டுகிறது. தொழிலுக்காக மாடு வாங்கவும் அரசு கடன் உதவி செய்கிறது.

தமிழ்நாட்டில் பசும்பால் விலை ரூ 28 லிருந்து 32 ஆகவும், எருமைப் பால் ரூ 36லிருந்து ரூ 41 ஆகவும் நீண்ட நாள் கோரிக்கைக்குப் பின் அரசு தற்போது உயர்த்தித் தந்துள்ளது. மற்ற மாநிலங்களின் பால்விலையோடு ஒப்பிடும்போது, தற்போது உயர்த்தப்பட்ட பிறகும்கூட, பெரிய வேறுபாடு இல்லை.

மாடு வளர்ப்புத் தொழிலுக்கு அரசு கான்க்ரீட் சுவருடன் மேல் தகரம் சீட் போட்டு, அதனுள் தண்ணீர்த் தொட்டி, தவணையில் மின்விசிறி தந்து, கொட்டகை அமைத்துத் தந்துள்ளது. பால் கரப்பதற்கு மிசின் தந்துள்ளது. ஆனால் அது எல்லா மாட்டிற்கும் இது ஒத்துவராது. மிசின் மூலம் பால் கரப்பது சரிவராது. அதிக அழுத்தம் காரணமாக சில நேரங்களில் ரத்தம் கூட வந்துவிடும். இதெல்லாம் அதிகம் பால் தரும் கிர், சாகிர் வாலா, காங்கிரஜ் போன்ற மாடுகளுக்கு மட்டுமே பொருந்தும். அதோடு ஒரு மாட்டிலிருந்து இன்னொரு மாட்டிற்கு மிசின் மாற்றும்போது தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. மிசின் பராமரிப்பு என்பது கொஞ்சம் கடினமானது. எங்கள் சங்கத்தில் உள்ள மிசின் யாரும் பயன்படுத்தாமல் சும்மா கிடக்கிறது. அதையும் அரசு எடுத்துச் சென்று விட்டது. அதனால் பெரும்பாலானவர்கள் கையால் மட்டுமே பால் கரக்கிறோம். அதற்கும் கிராமப் புறத்தில் இப்போதெல்லாம் ஆள்  கிடைப்பதில்லை. இந்தக் காரணத்தாலும் பலர் மாடுகளை விற்கிறார்கள். தற்போது உள்ள சூழ்நிலையில், பால் கரக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே மாடுகள் வைத்திருக்கும் நிலை உள்ளது.

அரசு எங்களிடம் பாலின் தரத்தைப் பொருத்தே கொள்முதல் செய்கிறது. தரத்தை லாக்டோ மீட்டர் மூலம் சோதனை செய்து கொள்முதல் செய்கிறது. அதன் தரம் 27°முதல் 30°க்குள் இருக்க வேண்டும். இந்த டிகிரிக்குள் இருந்தால் மட்டுமே அரசு பாலினைக் கொள்முதல் செய்துகொள்ளும். மாடு கன்று போட்டு பின் 5 நாளுக்கு அடுத்து, பால் தெளிந்து விட்டதா எனச் சோதனை செய்து, பின்பே அரசு கொள்முதல் செய்கிறது. சில தனியார் நிறுவனங்கள் மேம்பட்ட கருவிகளை வைத்துள்ளன. பாலை ஊற்றும்போதே அந்தக் கருவிகள் பாலின் தன்மை, அதில் உள்ள கொழுப்பின் அளவு, நீரின் அளவு என எல்லாவற்றையும் துல்லியமாகக் காட்டிவிடும்.

மாடு வளர்ப்பவர்கள் சந்திக்கும் பல்வேறு வகைப்பட்ட பிரச்சினைகளைச் சொல்லி மாளாது. விடியற்காலை முதல் இரவு வரை மாடுகளுக்குத் தண்ணீர் வைப்பது, வைக்கோல் போடுவது, தீவனம் வைப்பது, குளிப்பாட்டுவது, பால் கரப்பது, சாணம் அள்ளுவது எனப் பணி ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்துகொண்டே இருக்கும். மாடுகளைக் கவனிப்பதிலேயே நேரம் சென்றுவிடும். நிச்சயம் ஒரு ஆள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். வெளியில் சுப விழா அல்லது ஏதோ தேவைகளுக்கு எங்கும் செல்ல முடியாது. அப்படியே போனாலும் காலையில் போனால் மாலையில் வீட்டுக்கு வந்து விடும் தூரத்திற்கே வெளியில் செல்ல முடியும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் பால் விற்பனையாளர்கள் இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு ஆவின் மூலம் தோராயமாக 25 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. மற்ற தனியார் நிறுவனங்களின் கணக்குகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். எத்தனை அவசியமான ஒரு உணவை நாங்கள் உற்பத்தி செய்கிறோம் என்பது புரியும். இந்த நிலையில்தான் பால் விற்பனை உயர்வைப் பார்க்கவேண்டும். பால் விற்பனையின் மூலம் ஒரு சில பெரும் விற்பனையாளர்களைத் தவிர மற்றவர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அரசுக்கு பால் விற்பது மூலம் இவர்களுக்கு லாபமும் இல்லை நட்டமும் இல்லை. தங்கள் வீட்டிலும் மாடு நிற்கிறதே என்ற ஒரு லாபம் மட்டும்தான். இதுதான் நிதர்சனம்.