ஏழைகளுக்கு உணவளியுங்கள்; தேவையுள்ளவர்களைக் கவனியுங்கள்; கல்வியற்றவர்க்குக் கல்வியறிவைக் கொடுங்கள்; அவர்கள் அனைவரும் திருப்தியாக சம்பாதித்துக் கௌரவமான வாழ்க்கை வாழ வழிவகை செய்யுங்கள்; உங்கள் முயற்சியால் அவர்கள் உட்கொள்ளும் ஒவ்வொரு கைப்பிடி உணவும் நீங்கள் எனக்குச் செய்யும் பிக்ஷா வந்தனம் ஆகும்.
– காஞ்சி காமகோடி பீடாதிபதி பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
மும்மூர்த்திகள்
ஸ்ரீ ஆதிசங்கரர், ‘நகரேஷு காஞ்சி’ என்று நூற்றாண்டுகளாகப் போற்றப்பட்டு வரும் காஞ்சி மாநகரில் நிறுவிய ஸ்ரீ காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாக, அனைவராலும் ‘மஹா பெரியவா’ என்று போற்றி வணங்கப்பட்ட பூஜ்ய ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் 1907ம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் 13ம் தேதியன்று பீடாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். நாடெங்கும் பல்லக்கிலும், பின்னர் கால்நடையாகவும் சுற்றுப்பயணம் செய்து, பாரத தேசத்தின் ஆன்மிகப் பாரம்பரியத்தையும், வேத நாகரிகத்தையும், சனாதன தர்மத்தையும் மக்களிடையே போதித்து வந்தார். ‘முற்றும் துறந்த துறவி’ என்கிற பதத்திற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தார்.
1954ம் ஆண்டு மார்ச்சு மாதம் 22ம் தேதி அன்று, தஞ்சை மாவட்டத்தின் ‘இருள் நீக்கி’ என்கிற கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியனைத் தன்னுடைய சீடராக ஏற்றுக்கொண்டு அவருக்கு சன்யாஸ தீக்ஷை அளித்து, அவரைத் தனக்கு அடுத்த பீடாதிபதியாக ‘ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்’ என்று நாமகரணம் சூட்டி நியமித்தார். குருவின் காலடியைப் பின்பற்றி அவருடன் இணைந்து ஆன்மிகப் பணிகளில் ஈடுபடலானார் பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். இருவரும் இணைந்தே நாடெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். ‘மஹா பெரியவா’ என்றும் ‘புதுப் பெரியவா’ என்றும் கோடிக்கணக்கான பக்தர்கள் இருவரையும் போற்றி வழிபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் கிராமத்தில் பிறந்த ஸ்ரீ சங்கரநாராயணனைத் தன் சீடராக ஏற்றுக்கொண்ட ஸ்ரீ ஜெயேந்திரர், அவருக்கு 1983ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி அன்று, தன்னுடைய குருவான மஹா பெரியவாளின் அனுக்ரஹத்துடன், தீக்ஷை அளித்து ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் என்று நாமகரணம் சூட்டி, காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது ஆச்சாரியாராக நியமித்தார்.
அதனைத் தொடர்ந்து 1994ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதியன்று மஹா பெரியவா சித்தி அடைகின்றவரை, ஏறக்குறைய பத்து ஆண்டுகள் மும்மூர்த்திகளாக மூன்று ஆச்சாரியார்களும் ஆன்மிகப் பணியில் ஈடுபட்டனர். மூன்று ஞான சூரியர்களின் ஒளிவெள்ளத்தில் அருள் பெற்ற பக்தர்கள், மஹா பெரியவா, புதுப் பெரியவா ஆகியோருடன் சேர்த்து ஸ்ரீ சங்கர விஜயேந்திரரை ‘பால பெரியவா’ என்று போற்றி வழிபட்டு ஆனந்தித்தனர். மூன்று பீடாதிபதிகள் ஒரே சமயத்தில் ஆன்மிகப் பணியில் ஈடுபட்டது என்பது காஞ்சி காமகோடி பீடத்தில் மட்டுமே நடந்துள்ள விசேஷமாகும்.
காஞ்சி சங்கர மடம் உலகப்புகழ் பெற்று மகோன்னதமான நிலைக்கு உயர மஹா பெரியவாளுடன் இணைந்து செயல்பட்டு, அவருக்குப் பின்னர் மேலும் பல்வேறு தளங்களில் மடத்தின் பணிகளை விரிவாக்கம் செய்த பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் கடந்த ஃபிப்ரவரி மாதம் 28ம் தேதி புதன்கிழமையன்று (சுக்ல பக்ஷ த்ரயோதஸி) சித்தி அடைந்தார். மார்ச்சு ஒன்றாம் தேதி அவருடைய பிருந்தாவனப் பிரவேசம் மஹா பெரியவா பிருந்தாவனத்தின் அருகிலேயே நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 12ம் தேதிவரை வேத பாராயணங்கள், பஜனைகள் என்று பலவிதமாக ஸ்ரத்தாஞ்சலிகள் நடைபெற்று, 13ம் தேதியன்று ஆராதனை நிறைவடைந்தது.
ஸ்ரீ ஆதிசங்கரருக்கு அடுத்தபடியாகச் சிறப்புப் பெற்றவர்
பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பல தனிச் சிறப்புகள் பெற்றவர். ஸ்ரீ ஆதி சங்கரருக்கு அடுத்தபடியாக பாரதம் முழுவதும் பயணம் மேற்கொண்டவர். நான்கு முறை பாரதத்தை வலம் வந்தவர். 51 சக்தி பீடங்கள், 7 முக்தித் தலங்கள், 12 ஜோதிர்லிங்க க்ஷேத்திரங்கள் ஆகியவற்றைத் தரிசனம் செய்து 7 புண்ணிய நதிகளிலும் ஸ்நானம் செய்தவர். நேபாளம், சீனம் மற்றும் வங்க தேசம் ஆகிய வெளிநாடுகளில் பெரிதும் வரவேற்கப்பட்டு அரசு மரியாதை அளிக்கப் பெற்றவரும் இவரே!
1974ம் ஆண்டு நேபாள அரசின் அழைப்பின் பேரில் அரசு விருந்தினராக நேபாளம் சென்றார். ஆதிசங்கரருக்கு அடுத்தபடியாக நேபாளத்திற்குச் சென்ற சங்கராச்சாரியார் என்கிற பெருமையும் பெற்றார். அங்குள்ள அனைத்து க்ஷேத்திரங்களையும் தரிசனம் செய்தார். பெரியவாளின் ஆலோசனையின் பேரில் நேபாள மன்னர் பசுபதிநாத் ஆலயத்தின் நுழைவில் ஸ்ரீ ஆதிசங்கரர் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்தார். மேலும் ஆச்சாரியாரின் மற்றொரு ஆலோசனையின்படி, நேபாள-இந்திய எல்லையில் மிர்கஞ்ஜ் எனுமிடத்தில், ‘உலகின் ஒரே ஹிந்து நாட்டிற்கு வரவேற்கிறோம்’ என்கிற வரவேற்பு வளைவை நிறுவினார் நேபாள மன்னர். அந்த வளைவை 1988ல் திறந்து வைத்தார் ஸ்ரீ ஜெயேந்திரர்.
சீன அரசின் அழைப்பின் பேரில் 1998ல் கைலாயம் செல்லும்போதும் நேபாளத்திற்கும் சென்று அரசு விருந்தினராக மன்னர் பிரேந்திராவால் மரியாதையுடன் உபசரிக்கப்பட்டு, அந்நாட்டின் புண்ணிய க்ஷேத்திரங்களைத் தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து கைலாயத்திற்கும் மானசரோவருக்கும் சென்றார். ஆதிசங்கரருக்கு அடுத்தபடியாக கைலாயத்திற்கும், மானசரோவருக்கும் யாத்திரை சென்ற ஒரே சங்கராச்சாரியாரும் இவரே! சீன அரசு அவரைப் பிரதம விருந்தாளியாகப் பாவித்து பலத்த பாதுகாப்பும், விமரிசையான மரியாதைகளும் ஏற்பாடு செய்தது. கைலாயப் பாரிக்கிரமத்தின் தொடக்கத்திலும் நிறைவிலும் (14000 அடிகள் உயரத்தில்) ஆதிசங்கரரின் மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்தார். அவர் அங்கே சென்ற தினம் குரு பூர்ணிமா தினம் என்பதோடு மட்டுமல்லாமல் குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையாக நேர்ந்தது. மிகவும் ஆனந்தத்துடனும் பக்தியுடனும் மானசரோவரில் ஸ்நானம் செய்துவிட்டு குரு பூர்ணிமா தினத்தன்று செய்யப்படும் ‘வியாச பூஜை’ செய்தார். அதன் பிறகு மனநிறைவுடன் அருளாசி வழங்கியபோது, சீனப்பயணத்திற்கு விஸா (VISA) கிடைக்கப் பதினைந்து நாட்கள் தாமதம் ஆனதால், குரு பூர்ணிமா தினத்தன்று கைலாய மானசரோவரில் வியாச பூஜை செய்யும் பாக்கியம் கிடைத்தது இறைவனின் அருளே என்று கூறினார்.
பின்னர் 2001ல் அமர்நாத் யாத்திரை மேற்கொண்டு பனிலிங்கத்திற்கு வெள்ளி மற்றும் தங்கத்தினாலான வில்வங்களைக் காணிக்கையாக அளித்தார், பாதரச லிங்கத்தை பனி ஆவுடையார் மீது வைத்து வழிபட்டார்.
அதனைத் தொடர்ந்து 2000ம் ஆண்டு ஜூன் மாதம் வங்கதேசம் சென்று, சக்தி பீடமான டாகேஸ்வரி ஆலயத்திற்குச் சென்று வழிபட்டார். ஸ்ரீ ஆதிசங்கரருக்கு அடுத்ததாக அந்த ஆலயத்திற்குச் சென்ற சங்கராச்சாரியார் என்கிற பெருமையைப் பெற்றார். ஆலய வாயிலுக்கு ‘சங்கராச்சாரியார் வாயில்’ என்று பெயர் சூட்டியதோடு மட்டுமல்லாமல், அங்கே ஒரு வரவேற்பு வளைவு நிறுவி அதற்கு ‘ஜெயேந்திரா வளைவு’ என்கிற பெயரையும் சூட்டியது வங்கதேச அரசு.
ஜம்மு காஷ்மிர் மாநிலத்தில் லடாக் பகுதியில் சிந்து நதிக்குப் பூஜை செய்யும் கைங்கர்யத்தைத் தொடங்கி வைத்தார். ஒவ்வோர் ஆண்டும் குரு பூர்ணிமா தினத்தன்று சிந்து பூஜை நடந்து வருகின்றது.
ஸ்ரீநகருக்கும் ஜம்முவிற்கும் இடையே உள்ள ரம்பான் என்னும் இடத்தில் சரஸ்வதி தேவிக்கு ஓர் ஆலயம் நிறுவினார்.
ஹிமாலய யாத்திரையின்போது, கேதார்நாத் ஆலயத்திற்கு ஸ்படிக லிங்கம் வழங்கினார். ஆதிசங்கரர் சன்னிதியில் பளிங்குக் கல்லில் ஆதிசங்கரரின் ஸ்லோகங்களைப் பொறிக்கச் செய்தார். திருஞான சம்பந்தரின் தேவாரத் திருமுறைகளை அச்சிட்டுப் படங்களாக ஆக்கி அவ்வாலயத்தில் மாட்டச் செய்தார். பத்ரிநாத், பஞ்ச பத்ரி, பஞ்ச ப்ரயாகைகள், ரிஷிகேஷ், ஹர்த்வார் போன்ற பல தலங்களுக்கும் சென்று வழிபட்டார்.
யுகதர்மம் காத்த ஜகத்குரு
ஸ்ரீ ஜெயேந்திரர் செய்துள்ள தர்மப்பணிகள் ஏராளமானவை, அளப்பரியவை. காலமாற்றத்திற்கு ஏற்ப, யுகதர்மத்தை நோக்கமாகக் கொண்டு, அதே சமயத்தில் ஆச்சாரங்களுக்கும் மரபுகளுக்கும் சாஸ்திரங்களுக்கும் உட்பட்டு, மடத்தின் அணுகுமுறைகளை சற்றே வித்தியாசமாக மாற்றி அமைத்துக்கொண்டார். இதனால் மடத்தின் சேவைகள் பல தளங்களில் பெரிதும் விரிவடைந்தன. தேசத்தின் மூலைமுடுக்களில் இருக்கும் மக்களையெல்லாம் போய்ச்சேர்ந்தன.
வேத ரக்ஷணம்
தன்னுடைய குருவான ஸ்ரீ மஹா பெரியவாளின் நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு ஸ்ரீ மடத்தின் கிளைகளை நாடெங்கும் நிறுவினார். தற்போது பாரதத்தில் மொத்தம் 40 இடங்களில் சங்கர மடத்தின் கிளைகள் உள்ளன. அதே போல 30க்கும் அதிகமான இடங்களில் வேத பாடசாலைகள் நடந்து வருகின்றன. புரிந்துணர்வின் அடிப்படையில் நேபாளத்திலும் வேத பாட சாலைகளை மடம் நடத்தி வருகின்றது. வேத ரக்ஷண நிதி டிரஸ்ட், வேத தர்ம சாஸ்த்திர பர்பாலன சபா, கலவை பிருந்தாவன டிரஸ்ட் போன்ற பல அறக்கட்டளைகள் மூலம், வேத பாடசாலைகளை நடத்தி, வேதம் பயிலும் மாணாக்கர்களுக்குச் சகல வசதிகளும் செய்து வருகின்றது சங்கர மடம். வேதம் படிக்கும் மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தி, பரீட்சைகள் வைத்து, வேத பண்டிதர்களை உருவாக்கி வருகின்றது. வைதீகத்தில் ஈடுபட்டு வருபவர்களின் நலனையும் பலவிதங்களில் காப்பாற்றி வருகின்றது. வைதீகத்தில் ஈடுபட விரும்பும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகப் பல நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. வயதான வைதீகர்களுக்கும் வேத பண்டிதர்களுக்கும் ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது.
அத்வைத சபா, ஸ்ரீ ஆதிசங்கரா அத்வைத ஆராய்ச்சி மையம் போன்ற அமைப்புகளை அமைத்து அவற்றின் மூலமாக அத்வைதத் தத்துவங்களைக் கற்றுக்கொடுக்கவும் பரப்பவும் வழிவகை செய்தார் ஸ்ரீ ஜெயேந்திரர். த்வைத, விசிஷ்டாத்வைத தத்துவங்களைக் கற்ற பண்டிதர்களையும் வரவழைத்து, கருத்துப் பரிமாற்றங்கள் நடத்தி அவர்களுக்கும் மரியாதைகள் செய்து, அம்மடங்களுக்கும் சென்று அம்மடங்களின் ஆச்சாரியார்களைச் சந்தித்து பரஸ்பரம் மரியாதைகள் செய்து, ஏற்றுக்கொண்டு, நல்லதொரு சுமுகமான நட்பான சூழ்நிலைகளையும் ஒற்றுமையையும் உருவாக்கியவர் ஸ்ரீ ஜெயேந்திரர்.
சம்ஸ்க்ருதக் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அதற்காக அமரபாரதி பரிக்ஷா சமிதி போன்ற அமைப்புகளைத் தொடங்கினார். தபால் வழிக் கல்வியாகவும் சம்ஸ்க்ருதம் கற்றுத்தரப்படுகிறது. பகவத் கீதை, காவியங்கள், காப்பியங்கள், இலக்கணம் போன்றவை கற்றுத்தரப்படுகின்றன. ‘சம்ஸ்க்ருதஸ்ரீ’ என்கிற பத்திரிகையும் நடத்தப்படுகின்றது.
தமிழ் வளர்ச்சியிலும் மடத்தை ஈடுபட வைத்துள்ளார் ஸ்ரீ ஜெயேந்திரர். தமிழ் இலக்கியவாதிகளையும், புலவர்களையும், ஒவ்வொரு ஆண்டும் அங்கீகாரம் அளித்து, நலவுதவிகளும் விருதுகளும் அளித்து வருவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. பல தமிழ் நூல்களையும் தொடர்ந்து பதிப்பித்து வருகின்றார்கள். பள்ளி மாணவர்களுக்கு திருமுறைகள், திவ்யப் பிரபந்தங்கள், திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவற்றைக் கற்பித்துப் போட்டிகளும் நடத்தப்பட்டுப் பரிசுகளும் தரப்படுகின்றன. குழந்தை மாணாக்கர்களுக்கு ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் ஆகியவை கற்றுத்தரப்படுகின்றன.
ஆலயப் பாரம்பரியம் காத்தல்
புதிய கோவில்களைக் கட்டுவதைவிட, பாழடைந்துள்ள பழைய கோவில்களைப் புனருத்தாரணம் செய்து பாதுகாக்க வேண்டும் என்கிற உறுதியான நிலைப்பாடு கொண்டவர் ஸ்ரீ ஜெயேந்திரர். நூற்றுக்கணக்கான பாழடைந்த கோவில்களைப் புனர்நிர்மாணம் செய்தவர். அந்த மாதிரி பாழடைந்த கோவில்களைப் புனர்நிர்மாணம் செய்யும் கைங்கர்யத்தில் பொதுமக்களையும் ஈடுபட வைத்து அதன் முக்கியத்துவத்தை அவர்கள் உணருமாறு செய்தவர். தன்னுடைய வாழ்நாளில் நாடெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்களுக்குக் கும்பாபிஷேகம் செய்தவர்.
காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவிலுக்குப் பொன்கூரை வேய்ந்தார். தங்க ரதமும் வெள்ளி ரதங்களும் அளித்தார். சிதம்பரம் நடராஜருக்கு வைரங்கள் பதித்த குஞ்சித பாதம் அளித்தார். திருப்பதி பெருமாளுக்கு வைர க்ரீடம், வைர மாலை, வைர பூணல், தங்க அபய ஹஸ்தங்கள், தங்கப் பாதங்கள் ஆகியவற்றை மடத்தின் சார்பாக அளித்துள்ளார். சீர்காழியில் திருஞான சம்பந்தரின் இல்லத்தைப் புதுப்பித்தார். பழனியில் முருகனுக்கு வெள்ளி வேலும், விநாயகருக்கு வெள்ளிக் கவசமும் அளித்தார். பிள்ளையார்பட்டி விநாயகருக்கு முத்துமாலை அளித்துள்ளார். காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலுக்குத் தேர் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. காசியில் காமகோடீஸ்வரர் கோவிலைக் கட்டினார். காலடியில் ஆதிசங்கரர் கீர்த்தி ஸ்தம்பமும், பிரயாகையில் ஆதி சங்கரர் ஆலயமும் நிர்மாணித்தார்.
1984ம் ஆண்டு தஞ்சை பெரிய கோவிலை நிர்மாணித்த ராஜ ராஜ சோழனின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது, ராஜ ராஜ சோழனுக்குத் தங்கக் க்ரீடம் அளித்ததோடு மட்டுமல்லாமல், கோவிலில் நிரந்தர பூஜை நடைபெற ஏதுவாக ஒரு அறக்கட்டளையும் தொடங்கி வைத்தார். அவ்வமயம், அம்மன்னனின் 80 கல்வெட்டுகளைச் சேகரித்து, அவற்றை ‘சிவபாத சேகரனின் கல்வெட்டுகள்’ என்று புத்தகமாக வெளியிட்டார். இது போன்று நாடெங்கும் இருக்கும் ஏராளமான கோவில்களுக்கு எண்ணற்ற கைங்கர்யங்கள் செய்துள்ளார்.
ஆலயம் சார்ந்த பாரம்பரியத் தொழில்களையும் அந்தத் தொழில்களில் ஈடுபடும் சமூகத்தவரும் முன்னேற்றப்பட வேண்டும் என்று விரும்பியவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். அதற்கேற்றவாறு பல திட்டங்களையும் வகுத்தவர். சிலை வடிக்கும் சிற்பிகள், ஓதுவார்கள், உபன்யாசகர்கள், நாதஸ்வர தவில் வித்வான்கள், சிவாச்சாரியார்கள், கிராமக் கோவில் பூஜாரிகள் போன்றவர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர் ஸ்வாமிகள்.
சிற்பக் கலை வளர்ச்சிக்கென, சிற்பக் கலைப் பயிற்சிப் பாடசாலையை நடத்தி வருகின்றது சங்கர மடம். அதே போல ஆகம சாஸ்த்திரத்தைப் போற்றி வளர்க்கும் விதமாக ஆகமப் பாடசாலைகளையும் நடத்தி வருகின்றது. ஓதுவார்களும், உபன்யாசகர்களும் ஒவ்வோர் ஆண்டும் அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கு விருதுகளும் நலத்திட்டங்களும் உதவிகளும் அளிக்கப்படுகின்றன.
கிராம தேவதைக் கோவில்கள் பராமரிக்கப்படுவதிலும் விசேஷமான அக்கறை கொண்டவர் ஸ்வாமிகள். கிராமக் கோவில்களுக்குத் தேவையான உதவிகளைத் தொடர்ந்து செய்தவர். தாம் மேற்கொள்ளும் யாத்திரைகளின் போது கிராமக் கோவில்களுக்கு சென்று நேரில் அவர்கள் குறைகளைக் கண்டறிந்து, கேட்டறிந்து அவற்றை நீக்கியவர். குறிப்பாக ஹரிஜனங்கள் இருக்கும் பகுதிகளுக்கு அதிகம் செய்தவர். அவர்களுக்குக் கோவில்கள் கட்ட நிதியுதவி மட்டுமல்லாமல் விக்ரஹங்களும் அளித்து உதவியவர். கிராமக் கோவில் பூஜாரிகளுக்குப் பூஜைகள் முறையாக எப்படிச் செய்ய வேண்டும் என்று பயிற்சி கொடுக்கவும் ஏற்பாடு செய்தவர். அவர்களுக்கும் பல நலத்திட்டங்களை ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து செய்தவர்.
ஒரு வேளை பூஜைக்கும் நைவேத்யத்திற்கும் இயலாத நிலையில் இருக்கும் பல கோவில்களுக்கு இரண்டு வேளை விளக்கேற்றவும், ஒரு வேளை நைவேத்யம் செய்யவும் ‘க்ஷேத்ர பரிபாலன சங்கம்’ என்கிற அமைப்பை அவர் தோற்றுவித்து இன்றும் அதன் சேவை நடைபெற்று வருகிறது.
ஆலயங்களில் நந்தவனத்தின் அவசியத்தை எடுத்துக்கூறி, நூற்றுக்கணக்கான ஆலயங்களுக்கு துளசி, வில்வம் போன்ற செடிகளும் மரங்களும் வளர்க்க ஏற்பாடுகள் செய்துள்ளார். ஆலய நந்தவனங்களில் மூலிகைச் செடிகளும் வளர்க்கப்பட ஏற்பாடுகள் செய்துள்ளார்.
கோ சம்ரக்ஷணம்
பசு பாதுகாப்பு அவருடைய இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு தர்மம். ஒவ்வோர் ஆலயத்திலும் பசு மடம் நிறுவப்பட்டுப் பராமரிக்கப்பட வேண்டும் என்று விரும்பியவர். அதற்காகப் பாடுபட்டதோடு மட்டுமல்லாமல், செயல்படுத்த உதவிகளும் புரிந்தவர். நாடெங்கும் பல கோ சாலைகள் நிறுவியுள்ளார். பல்வேறு சேவை அமைப்புகளுக்கு கோ சாலைகள் நிறுவ ஊக்கமும் உதவியும் அளித்துள்ளார். இந்தியாவில் பசுவதைத் தடைச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று ஒவ்வொரு பிரதமரிடமும், அரசியல் தலைவரிடமும் வலியுறுத்தி வந்தார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பசுவதைத் தடைச் சட்டம் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அவர் அறிவித்தவுடன், அதற்காக ஒரு ஆணையம் அமைத்து, உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் வாஜ்பாய். பசு மட்டுமல்லாமல் அனைத்துவகைக் கால்நடைகளும் காப்பாற்றப்பட வேண்டும் என்று போகுமிடமெல்லாம் பேசி அறிவுறுத்தி வந்தவர் ஸ்ரீ ஜெயேந்திரர்.
கல்விச்சேவை
ஸ்ரீ ஜெயேந்திரரின் கல்விச்சேவை சொல்லி மாளாது. மஹா பெரியவாளின் ஆலோசனைப்படி வேத பாடசாலைகளும், ஆகம பாடசாலைகளும் நிறுவியது மட்டுமல்லாமல், நவீன கல்விச்சாலைகளும் நிறுவியுள்ளார். பள்ளி மாணாக்கர்களுக்கு தேவ பக்தியும், தேச பக்தியும் சொல்லித்தரப்பட வேண்டும் என்றும், அறிவியலும் கலாசாரமும் இணைந்து பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் விரும்பியவர்.
பல ஊர்களில் சங்கரா பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் சிறந்த முறையில் இயங்கி வருகின்றன. மேநிலை வகுப்புகள் வரை உள்ளன. சென்னை, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் வேதம் படிக்கும் மாணவர்கள் CBSE பாடத்திட்டத்துடன் நவீன கல்வியையும் கற்கும் விதமாகப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகளாக இருக்கும் மாணவர்களுக்கு என்று தனியாக காஞ்சிபுரம், கலவை மற்றும் ஹர்த்வாரில் பள்ளிகள் நடத்தப்படுகின்றன.
ஸ்ரீ ஜெயேந்திரரின் கல்விப் பணிகளின் மணிமகுடமாகத் திகழ்வது 1993ம் ஆண்டு அவர் தொடங்கிய ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹாவித்யாலயா நிகர்நிலைப் பல்கலைக் கழகம் தான். கலை, அறிவியல், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் என்று அனைத்துப் பாடத்திட்டங்களும் கற்பிக்கப்படுகின்றன.
ஸ்ரீ சக்ரத்தின் வடிவில் கட்டப்பட்டுள்ள ‘சந்திரசேகரேந்திர சரஸ்வதி சர்வதேச நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம்’ வேதாந்தம், நியாய சாஸ்திரம், மந்த்ர சாஸ்த்திரம், தந்த்ர சாஸ்த்திரம், ஜோதிட சாஸ்த்ரம், இலக்கியம், இலக்கணம் என்று இரண்டு லக்ஷத்திற்கும் அதிகமான நூல்களுடன் இயங்கி வருகின்றது. செப்புப்பட்டயங்களையும், ஓலைச் சுவடிகளையும், கல்வெட்டுகளையும் Digital முறையில் சேமித்து வைக்கும் பணியையும் செவ்வனே செய்து வருகின்றது. ஆயுர்வேதக் கல்லூரியும் இயங்கி வருகின்றது. அக்கம்பக்கத்தில் இருக்கும் கிராமப்புற மக்களுக்கு மூலிகைச் செடிகளை வளர்த்து ஆயுர்வேத மருந்துகளைத் தயாரிக்கும் பயிற்சியும் வழங்கப்படுகின்றது. அந்த மருந்துகளை விற்று வரும் நிதி, அந்த மக்களின் நலனுக்குப் பயன்படுத்தப்படுகின்றது.
மருத்துவச் சேவை
ஸ்ரீ ஜெயேந்திரரின் மருத்துவச் சேவையும் வியந்து பாராட்டத்தக்கது. 1916ம் ஆண்டு மஹா பெரியவாள் கும்பகோணத்தில் ஒரு ஆயுர்வேத மருந்தகத்தையும், தொழுநோயாளிகளுக்கான மருத்துவமனையையும் ஆரம்பித்தார். அப்போது தொடங்கிய காஞ்சி மடத்தின் மருத்துவ சேவை ஸ்ரீ ஜெயேந்திரரின் முயற்சியால் பெரிதும் வளர்ந்து இன்று நாட்டின் பல பகுதிகளில் மக்களுக்குத் தரமான சிகிச்சையும் பூரண ஆரோக்யத்தையும் வழங்கும் விதமாகத் திகழ்கின்றது.
சென்னையில் நலிவடைந்த நிலையில் இருந்த Child Trust மருத்துவமனையை எடுத்து அதைத் தரம் மிகுந்த மருத்துவமனையாக மாற்றியமைத்துள்ளார் ஸ்ரீ ஜெயேந்திரர். காஞ்சி காமகோடி சங்கரா மருத்துவமனை, ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகியவை நல்ல முறையில் நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் 17 இடங்களுக்கும் மேலாக ஹிந்து மிஷன் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் சில ஆயுர்வேத மருத்துவமனைகள்.
சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவத்தில் சரித்திரம் படைத்து வருகின்றது. கோயமுத்தூரில் காஞ்சி சங்கரா கண் சங்கம் நிறுவியுள்ளார். கண் தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பிரச்சாரம் மேற்கொண்டு இன்று தேசம் முழுவதும் மக்கள் கண் தானம் செய்ய முன்வருவதற்குப் பாதை அமைத்துக் கொடுத்தவர் ஸ்ரீ ஜெயேந்திரர்.
பின்தங்கியுள்ள இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளின் நலனுக்காக கௌஹாத்தியில் ஸ்ரீ காஞ்சி சங்கரா சுகாதாரம் மற்றும் கல்வி நிறுவனம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் கீழ் இயங்கும் ஸ்ரீ சங்கரதேவ நேத்ராலயா அப்பகுதி மக்களுக்கு கண்மருத்துவம் நல்ல முறையில் அளித்து வருகின்றது.
நேபாளத்தின் எல்லையில், பிகார் மாநிலம் மதுபானியில் ஒரு கண் மருத்துவமனை துவக்கினார். ஹிமாலயத்தில் பத்ரிநாத் போகும் வழியில் ஒரு பொது மருத்துவமனை நிறுவினார். கொல்கத்தாவில் ஒரு காஞ்சி சங்கரா மருத்துவ மையம் உள்ளது. ஒடிஷாவில் கடந்த 2016ம் ஆண்டு, 12வது சங்கரா கண் மருத்துவமனை ஸ்ரீ ஜெயேந்திரர் முன்னிலையில் முதல்வர் நவீன் பட்நாயக்கினால் தொடங்கி வைக்கப்பட்டது.
சமுதாய முன்னேற்றம்
திருப்பதி வெங்கடாஜலபதி சன்னிதியில் தியானம் இருக்கும்போது அவருக்குக் கிடைத்த உத்தரவின் படி, 1987ம் ஆண்டு அவர் தொடங்கிய ‘ஜன கல்யாண்’ என்னும் இயக்கம் பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வருகின்றது. தனிமையில் இருக்கும் பெண்மணிகளுக்கு சுய வேலை வாய்ப்புத் திட்டத்துடன் கூடிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கைக் கைகால்கள், மூன்று சக்கர சைக்கிள்கள், போன்ற உதவிகள் வழங்கப்படுகின்றன. ஜன கல்யாண் மூலம் குடிசைத் தொழில்கள் ஏழை மக்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றன. ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவியும், புடவை, திருமாங்கல்யம் போன்ற முக்கியமான பொருட்களும் வழங்கப்படுகின்றன. ஹரிஜனங்களுக்குப் பல ஏக்கர் நிலங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. சுய வேலைப்பாடு திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்களும் வழங்கப்படுகின்றன. மகளிர் சுய உதவிக்குழுக்களும் அமைக்கப்பட்டு நல்ல முறையில் இயங்கி வருகின்றன.
அனாதைப் பெண் குழந்தைகளுக்கென ஒரு விடுதியும் காஞ்சிபுரத்தில் இயங்கி வருகின்றது, மாற்றுத் திறனாளிகளுக்கான விடுதியும் பள்ளியும், காஞ்சிபுரத்திலும் ஹர்த்வாரிலும் நடத்தப்படுகின்றன. தமிழகம், ஆந்திரம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பல இடங்களில் ஆதரவற்ற முதியோருக்கான இல்லங்கள் நல்ல முறையில் நடத்தப்படுகின்றன. ஆதரவற்றப் பெண்களுக்கான இல்லங்களும் கலவை, காஞ்சிபுரம் மற்றும் காளஹஸ்தி ஆகிய இடங்களில் உள்ளன. ஆதரவற்ற அனாதைக் குழந்தைகள் காப்பகங்களும் நடத்தப்படுகின்றன.
காஞ்சி மூதூர் அர்ச்சகர் நல அறக்கட்டளை என்னும் அமைப்பின் மூலம் ஏழை கோவில் அர்ச்சகர்களுக்கும் கிராமக் கோவில் பூஜாரிகளுக்கும் மாதாந்திர ஊதியம் வழங்கப்படுகின்றது. முதிய வயதான வேத பண்டிதர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது.
ஏழை மக்களுக்காக கஞ்சிபுரத்திலும் மற்றும் பல ஊர்களிலும் தினமும் அன்னதானம் வழங்கப்படுகின்றது. பரமாச்சாரியார் ஆசிகளுடன் தொடங்கப்பட்ட ‘பிடி அரிசி’ திட்டம் ஸ்ரீ ஜெயேந்திரரால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இயற்கைப் பேரிடர் நிகழ்ந்த சூழ்நிலைகளில் அந்தப் பகுதிகளில் உடனடியாகப் பல உதவிகளைச் செய்ய நிரந்தர உத்தரவிட்டுள்ளார் ஸ்ரீ ஜெயேந்திரர். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால் குஜராத் மாநிலம் பூகம்பத்தினால் பாதிப்புக்குள்ளானபோது, பல்வேறு உதவிகளைச் செய்ததோடு மட்டுமல்லாமல், இரண்டு கிராமங்களை தத்து எடுத்துக்கொண்டு அவற்றை முழுவதுமாக புனர்நிர்மாணம் செய்து எழுப்பியது காஞ்சி மடம். அதே போல கார்கில் யுத்தத்தின் போதும் ராணுவ வீரர்களின் நலனுக்கு உதவி செய்துள்ளது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர் சமுதாய மக்களுக்கு இலவசமாகக் கண்சிகிச்சைகள் செய்ய ஏற்பாடு செய்தார்.
ஜீவன் தாரா கிணறு திட்டம் என்கிற திட்டத்தின் கீழ் காஞ்சிபுரத்தில் பலவிடங்களில் குடிநீருக்காக கிணறுகள் வெட்டிக் கொடுக்க ஏற்பாடுகள் செய்திருக்கிறார். ‘ஜீவாத்ம கைங்கர்யம்’ என்கிற அமைப்பின் கீழ் அனாதைப் பிரேதங்களுக்கு சாஸ்த்திரப் பிரகாரம் அந்திமக் காரியங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன.
சமய நல்லிணக்கம்
1976ம் ஆண்டு பரமாச்சாரியார் ஆசிகளுடன் ‘உலக ஹிந்து மன்றம்’ (World Hindu Council) என்னும் அமைப்பைத் தொடங்கினார் ஸ்ரீ ஜெயேந்திரர். அதன் கீழ், முதல் ஹிந்து மாநாட்டை நடத்தினார். ஹிந்து சமய மன்றத்தின் உறுப்பினர்கள் 700 பேர் மற்றும் இலங்கை, நேபாளம், சிங்கப்பூர், மலேஷியா, இந்தோனேஷியா, ஃபிஜி தீவுகள், தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளிலிருந்து 1000க்கும் அதிகமானோர் அம்மாநாட்டில் கலந்துகொண்டனர். தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள், சைவ சித்தாந்தம், விஷ்ணு பக்தி, சங்க இலக்கியத்தில் ஹிந்துமதக் கோட்பாடுகள், கல்வெட்டுகளில் ஹிந்துமதம், போன்ற தலைப்புகளில் பல அறிஞர்களின் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன. மாலையில் வில்லுப்பாட்டு, கரகாட்டம், போன்ற கிராமியக் கலை நிகழ்ச்சிகளும், பஜனைகளும் நடத்தப்படன. ஹிந்து மதத்தைப் பற்றிய ஒரு கண்காட்சியும் நடத்தப்பட்டது.
உலக ஹிந்து மன்றத்தின் சார்பில் 1977ம் ஆண்டு மதுரையில் ‘உலக சமய, தத்துவ, கலாசார மாநாடு’ பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. உலகத்தில் உள்ள மதங்களிடையே நல்லிணக்கத்தைத் தோற்றுவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட அந்த மாநாட்டில், பல்வேறு மதங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் விளக்கப்பட்டன. இந்து மதம், திபேத்திய பௌத்தம், ஜென் பௌத்தம், ஜைனம், ஜொராஸ்ட்ரிய மதம், இஸ்லாம், கிறிஸ்துவம், கிரேக்க மற்றும் எகிப்திய மதங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் உலகின் பல நாடுகளிலிருந்து வந்து கலந்துகொண்டனர்.
ஹிந்து ஒற்றுமையும் மத நல்லிணக்கமும்
1981ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் ஹரிஜன சமூகத்தவர்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டபோது, தேசமே அதிர்ச்சிக்குள்ளானது. அரசுகளின் நடவடிக்கையை எதிர்பார்க்காமல், உடனடியாக அங்கே பயணம் மேற்கொண்டு, அம்மக்களை நேரில் சந்தித்து ஆறுதலும், நம்பிக்கையும் அளித்து மேலும் பலர் மதம் மாறுவதைத் தடுத்தார். இரு மதத்தினருக்கும் ஏற்படவிருந்த மோதல்களையும் தவிர்க்கச் செய்தார்.
மீனாட்சிபுரம் மட்டுமல்லாமல் அதற்கு முன்பும் பின்பும், அவருடைய யாத்திரைகளில் ஹரிஜனங்கள் வாழும் பகுதிகளில் சென்று அம்மக்களை நேரில் சந்திப்பதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார். தன்னுடைய சுற்றுப்பயணங்களின் போது தீண்டாமையை ஒழித்து, ஜாதி வேறுபாடுகள் அற்ற ஒற்றுமையை ஹிந்துக்கள் மத்தியில் வளர்க்கும் விதமாகச் செயல்பட்டார்.
அதே போல அயோத்தி ராம ஜன்மபூமி விஷயத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும் பேச்சு வார்த்தைகளும் இரு மதத்தவர்களிடையே பெரிதும் நம்பிக்கையையும் இணக்கத்தையும் ஏற்படுத்தின. பேச்சு வார்த்தையின் மூலம் அப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்று உறுதியாக நம்பி, செயலிலும் ஈடுபட்டார். இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களும் அவர்மேல் பெரும் நம்பிக்கை கொண்டு அவருக்கு ஒத்துழைப்பு தந்தனர். இன்று ஒரு பக்கம் நீதிமன்றத்தில் அயோத்தி வழக்கு நடந்து கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் பல தலைவர்கள் பேச்சு வார்த்தையிலும் சமரச முயற்சியிலும் தீர்வு காண முயல்வதற்கு ஸ்ரீ ஜெயேந்திரர் அமைத்துக் கொடுத்த வலிமையான அடித்தளமே காரணம்.
முஸ்லிம் மக்கள் அவர் மேல் பெரிதும் மரியாதையும் அன்பும் கொண்டிருந்தனர் என்பதற்கு, அவர் சித்தி அடைந்தவுடன் அவர்கள் மடத்திற்கு வந்து மரியாதை செலுத்தியதும், அவருக்காகப் பிரார்த்தனை செய்ததுமே சான்று.
திராவிட இனவாத இயக்கங்களையும், அவற்றுக்குப் பின்னே இருந்து அவற்றை ஊக்குவித்துக்கொண்டிருக்கும் அன்னிய சக்திகளையும், அவர்களால் ஏற்பட்டு வரும் ஆபத்துக்களையும் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தார் ஸ்ரீ ஜெயேந்திரர். நாட்டில் நிலவும் போலி மதச்சார்பின்மையையும், மதச்சார்பின்மை என்கிற பெயரில் ஹிந்து தர்மத்திற்கு விரோதமாகப் பல தளங்களில், பல நிறுவனங்களின் செயல்பாடுகளையும் அறிந்திருந்தார். இவர்களுக்குப் பின்னால் இருந்துகொண்டு, நிதியுதவியும் செய்துகொண்டு, இந்த தேசத்தை நிலைகுலையச் செய்யவேண்டும் என்கிற நோக்கத்துடன் செயல்பட்டுவரும் அன்னிய சக்திகள் பற்றியும் தெரிந்து வைத்திருந்தார்.
இவைகளை முறியடிக்கும் விதமாகவே அவருடைய சமூகப்பணிகள் நிறைவேறின. ஹிந்து சமுதாயத்தில் ஒற்றுமை ஏற்பட்டால் தீய நோக்கம் கொண்ட சக்திகள் செயலிழந்து போய்விடும் என்கிற உறுதிப்பாட்டுடன் ஹிந்து சமூகத்தை முன்னேற்றுவதிலேயே கவனத்தைச் செலுத்தினார். காஞ்சி முனிவர் பரமாச்சாரியார் எந்த அளவுக்கு ஆன்மீகத் தளத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தினாரோ, அந்த அளவிற்குச் சமூகத் தளத்தில் ஸ்ரீ ஜெயேந்திர ஸ்வாமிகள் புரட்சியை ஏற்படுத்தினார்.
துன்பம் மிகு ஒன்பது வருடங்கள்
காஞ்சி பீடத்தின் கீழ் இருக்கும் அனைத்து அறக்கட்டளைகளின் மூலம், ஆன்மீகம், கலாசாரம், கல்வி, மருத்துவம், சமூகம் போன்ற துறைகளில் பொதுமக்களுக்கு, குறிப்பாக ஏழை மக்களுக்குப் பெரிதும் பணியாற்றி, அவர்களுக்குத் தேவையானவற்றைக் கிடைக்குமாறு செய்ததால், அன்னிய மத நிறுவனங்களின் மதமாற்ற மதப்பிரச்சார குறிக்கோளுக்குப் பெரும் தடை ஏற்பட்டது. எனவே, அன்னிய சக்திகள் பெரிதும் ஆத்திரம் கொண்டன. காஞ்சி பீடத்தையும் ஆச்சாரியார்களையும் ஆபத்தில் சிக்கவைத்து அழிக்கும் நோக்கத்துடன், ஊடகத்துறை மற்றும் அரசு இயந்திரத்தின் உதவியுடன் பெரும் முயற்சியில் இறங்கின. மிகப்பெரிய சதிவலை பின்னப்பட்டு அவர் மீது கொலைப்பழி சுமத்தப்பட்டு, பொய் வழக்கும் தொடரப்பட்டது, ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய அ.தி.மு.க அரசு (2004) அவரைத் தீபாவளித் திருநாள் அன்று கைது செய்து சிறையில் அடைத்தது. பால பெரியவா ஸ்ரீ விஜயேந்திரரை இரண்டாவது குற்றவாளியாக அறிவித்து 2005ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி கைது செய்தது. மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் இதற்கெல்லாம் சாதகமாக அமைந்தது.
ஹிந்து விரோத சக்திகள் குதூகலித்துக் கொண்டாடின. கைதுப் படலங்கள் தொடங்கியது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்வரை, அன்னிய சக்திகள் மட்டுமல்லாது, அவர்களுடன் சேர்ந்து நாத்திகவாத, மதமாற்ற, பிரிவினைவாத, போலி மதச் சார்பின்மைவாத சக்திகளும் இணைந்து ஹிந்து தர்மத்தை அடியோடு குலைக்கும் எண்ணத்துடன் காஞ்சி பீடம் மீதும் பீடாதிபதிகள் மீதும் கடுமையான அவதூறுகளைப் பரப்பின. ஹிந்து விரோத ஊடகங்களின் மூலம் கடுமையான துவேஷப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. நாளிதழ்களும், பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் பொய்யும் புளுகும் புனைச்சுருட்டும் கலந்த அவதூறுகளை விஷமத்தனமாக வீரியத்துடன் பிரச்சாரம் செய்தன. 2500 வருட பாரம்பரியம் மிக்க ஒரு ஹிந்து மத நிறுவனத்தை நிலைகுலையச் செய்யவேண்டும் என்கிற நோக்கத்துடன் பயங்கரமான பிரச்சார உத்திகளைக் கட்டவிழ்த்து விட்டன. உலகிற் சிறந்த ஆன்மிக நிறுவனமாக இயங்கிக் கொண்டிருந்த காஞ்சி காமகோடி பீடம் என்கிற உன்னத நிறுவனம் தன் பொலிவை இழக்கும் அளவுக்குச் சம்பவங்களும் பிரச்சாரங்களும் நடந்தேறின.
இதனிடையே, உள்ளுக்குள் இருந்தபடியே மடத்திற்கு விரோதமான நடவடிக்கைகளில் இறங்கிய சதிகாரர்களும் இருந்தனர். பீடாதிபதிகளைப் பதவியில் இருந்து இறங்கச் சொன்னார்கள் சில துரோகிகள். வெளியே மடத்தின் நெருங்கிய பக்தர்களாகக் காட்டிக் கொண்டு, பொதுவில் மடத்திற்கு ஆதரவான கருத்துகளைப் பதிவு செய்துகொண்டு, அதே சமயம் மடத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டனர் சில தீயவர்கள். குருத் துரோகத்திற்கு பிரய்யச்சித்தமும் மன்னிப்பும் கிடையாது. இவர்களின் கதியை இறைவனே தீர்மானிப்பான்.
ஹிந்து அமைப்புகளும் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. ஆரம்பத்தில் ஏதோ பெயருக்குச் சில ஆர்பாட்டங்கள் நடத்தியதோடு சரி. அந்த அமைப்புகளுக்கு, தர்மத்தைவிட அரசியல் பெரிதாகப்பட்டது. ஆச்சாரியார்களைவிட ஆச்சாரியார்களுக்குத் தீங்கிழைத்த அரசியல் தலைமைகளின் நட்பும் கூட்டணி உறவும் தேவைப்பட்டது. மொத்தத்தில் இந்த தேசமே ஆச்சாரியார்களைக் கைவிட்டது; தோல்வியுறச் செய்தது.
இருப்பினும், அனைத்து விதமான சதிகளையும், பிரசாரங்களையும், வழக்கையும் இரு குருமார்களும் தைரியமாகச் சந்தித்தனர். உண்மையான குருபக்தி கொண்ட சில நல்லுள்ளங்கள் உறுதியுடன் ஆச்சாரியார்களுக்குத் துணையாக நின்றனர். தைரியமாகச் சதிகாரர்களை எதிர்த்து மடத்திற்கு ஆதரவாக
இயங்கினர். தங்களுடைய சொந்த வாழ்க்கையை மறந்து மடத்தின் தினப்படிச் செயல்பாடுகள் நின்றுவிடாமல் தொடரும் வண்ணம் உழைத்தனர். மடத்தைப் பாதுகாத்தனர். தர்மத்தைக் காத்து நின்றனர்.
ஒன்பது ஆண்டுகாலமாக சித்ரவதை அனுபவித்து வந்த உண்மையான பக்தர்களின் கண்ணீர் துளிகளுக்கும் தினப்படிப் பிரார்த்தனைக்கும் பலன் கிடைத்து. 2013ம் ஆண்டு நீதி நிலைநாட்டப்பட்டது. தர்மம் வென்றது.
அத்தனை விதமான அராஜகத் தாக்குதல்களையும் அமைதியாகத் தாங்கிக்கொண்டு, சிறையில் பட்ட துன்பங்களையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல், சட்டத்தின் மாண்பை மதித்து வழக்கு விசாரணைக்கும் நீதிமன்றத்திற்கும் முழு ஒத்துழைப்பையும் அளித்துக்கொண்டு, தங்களின் ஆன்மீக மற்றும் சமூகப் பணிகளையும் தொடர்ந்து செய்துகொண்டு, ஒன்பது ஆண்டுகளும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்த ஆச்சாரியார்களின் ஆன்ம பலம், நிலைகுலைந்து போன பக்தர்களுக்கும் பெரும் பலமாகத் துணை நின்றது என்றால் அது மிகையாகாது.
ஸ்ரீ ஜெயேந்திரர் இந்த தேசத்திற்குச் செய்துள்ள ஏராளமான எண்ணிலடங்கா தர்மப்பணிகளை வியந்து நோக்கும்போது, அவருக்குத் துன்பம் ஏற்பட்ட காலத்தில் இந்த தேசம் அவருக்குத் துணையாக நில்லாமல் போனதையும் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. எனவேதான், இந்த தேசம் அவருடைய அருளைப் பெற அருகதையற்ற தேசமாக எனக்குத் தோன்றுகிறது.
குறிப்புகள்:
Jagathguru Sri Jeyendra Saraswathi Swamiji – An Offering by Sri.P.R.Kannan, M.Tech., Navi Mumbai,www.kamakoti.org