ஜெயலலிதாவின் மறைவு – அடுத்தது என்ன? பி.ஆர்.ஹரன்

‘அம்மா’ என்று லட்சக்கணக்கான தொண்டர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் கடந்த டிசம்பர் (2016) மாதம் திங்கட்கிழமை ஐந்தாம் தேதியன்று இரவு 11.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார். 75 நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு 4-ம் தேதி மாலை மாரடைப்பு ஏற்பட்டு, அதற்குப் பிறகும் மருத்துவ நிபுணர்களின் தொடர் சிகிச்சைப் பலனளிக்காமல் மரணமடைந்தார்.

பொதுமக்களுக்கு, குறிப்பாக கட்சித் தொண்டர்களுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், ஜெயலலிதாவைப் பார்க்க வருபவர்களை, மிகவும் முக்கிய பிரமுகர்களாக இருந்தாலும், அவரைப் பார்க்க அனுமதிக்காமல், அவருடைய தோழியாக உடன்பிறவா சகோதரியாக அறியப்பட்ட சசிகலா என்பவரின் உத்தரவுகளுக்கு இணங்க அபோல்லோ மருத்துவமனை நிர்வாகம் செயல்பட்டது. அவ்வாறு செயல்பட்ட காரணத்தால் ஜெயலலிதாவின் 75 நாள் சிகிச்சை மற்றும் இறப்பு பற்றிப் பலவித சந்தேகங்களும் கேள்விகளும் மக்கள் மனதில் எழும்பியுள்ளன. அந்தக் கேள்விகளைத்தான் நடிகை கௌதமி பிரதமருக்கு அனுப்பிய பகிரங்கக் கடிதத்தில் எழுப்பியிருந்தார்.

அந்தக் கேள்விகளுக்கு விடைகள் வெளிவருமா அல்லது ஜெயலலிதாவின் புதிர்கள் நிறைந்த வாழ்க்கையில் இந்தக் கேள்விகளும் புதிர்களாகவே அடங்கிவிடுமா என்பது வரும் நாட்களில்தான் தெரியும்.


கடந்த காலம் பற்றிய சிறு நினைவூட்டல்

ஜெயலலிதா தன்னுடைய சிறு வயதிலேயே தந்தையாரை இழந்தவர். தாய் சந்தியாவின் வளர்ப்பில், மிகவும் புத்திசாலியான மாணவியாக உருவெடுத்தார். ஆயினும், தனக்கு விருப்பம் இல்லாமல் இருந்தாலும், தாயாரின் விருப்பத்திற்கிணங்க திரையுலகில் கால்பதித்த ஜெயலலிதா பெரும் வெற்றி பெற்று முன்னணிக் கதாநாயகியாக வலம் வந்தார். இருபத்து இரண்டாவது வயதில் தன் தாயையும் இழந்தார் ஜெயலலிதா.

தனிமையில் உழன்று கொண்டிருந்தவரை, அப்போது திரையுலகில் மாபெரும் சக்தியாக விளங்கிய எம்.ஜி.ஆர் நெருங்கி, அவருடன் நட்புறவை ஏற்படுத்திக்கொண்டு, அவரைத் தன் விருப்பத்தின்படி அரசியலிலும் நுழைத்தார். அரசியல் மீது நாட்டமில்லாமல் இருந்தாலும், எம்.ஜி.ஆரின் கட்டுப்பாட்டில் இருந்ததால், அரசியலிலும் கால்பதித்தார் ஜெயலலிதா. அவரை 1983ல் கொள்கைப் பரப்புச் செயலாளராக்கி, 1984ல் ராஜ்ய சபா உறுப்பினராகவும் ஆக்கினார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். 1987ல் இறந்த சமயத்திலும், அதற்குப் பின்னரும் பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்த ஜெயலலிதா, அவற்றை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றுக் கட்சியைத் தன் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்.

கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்தபோது, ஜெயலலிதாவுக்கு சசிகலாவின் தொடர்பு ஏற்பட்டது. சசிகலாவின் கணவர் நடராஜன் அப்போது மாநில அரசில் பொதுத்தொடர்பு அலுவலராகப் பணிபுரிந்து வந்தார். சசிகலா ஒரு வீடியோ மையம் வைத்து நடத்திக்கொண்டிருந்தார். நாளடைவில் ஜெயலலிதாவின் முழு நம்பிக்கைக்குப் பாத்திரமான சசிகலா, அவரின் உற்ற தோழியாக போயஸ் தோட்ட இல்லத்தில் நுழைந்தார். 1991ல் அ,தி.மு.க வெற்றி பெற்று அரசு அமைத்தபோது, திரைமறைவில் பெரும் சக்தியாக விளங்கினார் சசிகலா. 1991 முதல் 1996 வரையிலான ஐந்து வருட ஆட்சியானது, ஊழல்களும் குற்றங்களும் நிறைந்த ஆட்சியாக இருந்தது. அதன் விளைவாக 1996 தேர்தலில் ஆட்சியை இழந்தது அ.தி.மு.க.

ஊழல்கள்

· ஜெயலலிதா முதன் முதல் ஆட்சியைக் கைப்பற்றி முதல்வராக இருந்த 1991 முதல் 1996 வரையிலான ஆட்சியில்தான் ஊழல்கள் மலிந்து காணப்பட்டன.

· கொடைக்கானலில் உள்ள பிளெஸண்ட் ஸ்டே ஹோட்டல் (Pleasant Stay Hotel) வழக்கு

· டான்ஸி (TANSI – Tamil Nadu Small Industries Corporation) நில பேரத்தில் நடந்த ஊழல் பற்றிய வழக்கு

· டிட்கோ பங்குகளை ஸ்பிக் நிறுவனத்திற்கு விற்றதில் நடந்த ஊழல் (Disinvestment of TIDCO’s shares to SPIC) பற்றிய வழக்கு

· இலவச கலர் டி.வி. வாங்கியதில் பலகோடி ரூபாய் ஊழல் வழக்கு

· வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்த வழக்கு

இந்தக் காலகட்டத்தில் சசிகலாவின் குடும்பத்தினர் தமிழகமெங்கும் தங்களுடைய அராஜகத்தைக் கட்டவிழ்த்து, பல பிரமுகர்களை மிரட்டியும் ஏமாற்றியும் பல சொத்துக்களைக் கைப்பற்றினர். திரைப்பட இசையமைப்பாளர் கங்கை அமரனின் பங்களா, சென்னை அண்ணா சாலையில் இருந்த சஃபையர் தியேட்டர், கோயமுத்தூரில் இருந்த குரு ஹோட்டல் மற்றும் தமிழகமெங்கும் பல முக்கியப் பிரமுகர்களின் சொத்துக்கள் மிரட்டியும் ஏமாற்றியும் வாங்கப்பட்டன. இதனாலேயே அவர்களுக்கு ஊடகங்களால் ‘மன்னார்குடி மாஃபியா’ என்கிற பெயர் கொடுக்கப்பட்டது.

அனைத்திற்கும் உச்சக்கட்டமாக, சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த சுதாகரன் என்பவரைத் தன்னுடைய வளர்ப்பு மகனாக அறிவித்து, அவருக்கு நடிகர் சிவாஜி கணேசனின் பேத்தியைத் திருமணம் செய்வித்தார் ஜெயலலிதா. அந்தத் திருமண விழா மிகவும் பகட்டாக பணக்காரத்தனத்தின் அகம்பாவம் மிகுந்த வெளிப்பாடாகக் காட்சி அளித்தது. அந்த ஒரு விழாவே இவர் கண்டிப்பாக ஊழல்கள் பல செய்திருப்பார் என்கிற வலுவான எண்ணத்தைப் பொதுமக்களின் மனதில் ஏற்படுத்துவதாக இருந்தது.

டாக்டர் சுப்பிரமணியன் ஸ்வாமி தனியாகவும், தி.மு.க. தனியாகவும் ஜெயலலிதாவுக்கும், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கும் எதிராகப் பதிவு செய்த சொத்துக்குவிப்பு வழக்கு, கீழ் நீதிமன்றத்தில் தண்டனை அளிக்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தில் அந்தத் தண்டனைத் தள்ளுபடி செய்யப்பட்டு, தற்போது தீர்ப்புக்காக உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. இதனிடையே 2001 முதல் 2006 வரை ஆட்சி செய்தபோது, முந்தைய தி.மு.க அரசு தன் மேல் தொடர்ந்திருந்த மற்ற அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுதலை பெற்றார் ஜெயலலிதா.

குற்றங்கள்

ஜெயலலிதாவின் ஆட்சியில் குற்றங்களுக்கும் பஞ்சமில்லை. ஊழல் வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட போது, தர்மபுரி அருகே அ.தி.மு.கட்சியினரால் பெண்கள் கல்லூரி பஸ் ஒன்று தீ வைக்கப்பட்டு மூன்று அப்பாவி மாணவிகள் உயிரிழந்தனர். ‘தராசு’ பத்திரிகை அலுவலகத்தின் மீது அ.தி.மு.கட்சியினர் தாக்குதல் நடத்தி இரண்டு நிருபர்களைக் கொன்றனர்.

ஆட்சியில் ஊழல் நடவடிக்கைகளுக்கு ஒத்துவரவில்லை என்கிற காரணத்துக்காக திறமை மிகுந்த IAS அதிகாரியான சந்திரலேகா அவர்கள் மீது கூலிப்படை ஆள் ஒருவனை ஏவி அவர் மீது அமிலத்தை வீசி அவரைக் கொலை செய்யும் முயற்சி நடந்தது. அவரின் அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த பிரபல வழக்கறிஞர் விஜயன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.

அனைத்துக் குற்றங்களுக்கும் உச்சக்கட்டமாக, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக, 2004ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று, பாரம்பரியம் மிக்க பழமையான காஞ்சி சங்கர மடத்தின் மீது கடுமையான தாக்குதலை நடத்தினார். பொய்யாகப் புனையப்பட்ட கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் இருவரையும் ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்து, மடத்தின் உள்ளே இருக்கும் பரமாச்சாரியாரின் பிருந்தாவனத்துள் போலிஸ்படையினரை பூட்ஸ் கால்களுடன் அனுப்பி அந்தப் புனிதமான மஹாசமாதியை அவமதித்தார். மடத்து ஊழியர்களை விசாரணை என்கிற பெயரில் கைது செய்து பலவிதமாகச் சித்தரவதை செய்தனர் அவருடைய போலிசார். உயர் பதவிகள் வகித்து ஓய்வு பெற்று, காஞ்சி மடத்தில் ஆன்மிகச் சேவை புரிந்து வந்த வயதானவர்கள் மீது கஞ்சா கடத்தியதாகப் பொய் வழக்கு போட்டு சிறை செய்து சித்தரவதை செய்தது காவல்துறை. தன்மீது நியாயமான விமர்சனத்தைக் கூடப் பொறுக்காமல் மானநஷ்ட வழக்குகள் போடும் ஜெயலலிதா, ஊடகங்கள் காஞ்சி மடத்தின் மீது சேற்றையும் புழுதியையும் வாரி இறைத்ததைக் கண்டுகொள்ளாமல் இருந்தார். 9 ஆண்டுகள் கழித்து ஜெயலலிதாவின் அரசு, சுமத்திய குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாமல் தோல்வி அடைந்தது. சங்கராச்சாரியார்களும் மற்றவரும் விடுதலை செய்யப்பட்டனர். அதன் பிறகு 3 ஆண்டுகள் முடிந்து, ஒட்டுமொத்தமாக 12 ஆண்டுகள் கழிந்த பிறகும், தான் செய்த மாபெரும் தவறுக்குச் சிறு வருத்தம் கூடத் தெரிவிக்காமல் அவர் மரணம் அடைந்தது அவருடைய துரதிர்ஷ்டமும் கர்மவினையும் என்றுதான் சொல்லவேண்டும்.


ஜெயலலிதா-சசிகலா

2012ம் ஆண்டு, சசிகலா மற்றும் குடும்பத்தினரை ஜெயலலிதா தன் இல்லத்தை விட்டும் கட்சியை விட்டும் வெளியேற்றினார். அப்போது ஊடகங்களில் ஒரு பகுதியினர் சசிகலா குடும்பத்தைப் பற்றிப் பலவிதமான செய்திகளையும் கட்டுரைகளையும் வதந்திகளையும் வெளியிட்டனர். ஆனால், ஜெயலலிதா ஒரு சில மாதங்களிலேயே சசிகலாவை மீண்டும் தன் இல்லத்தில் சேர்த்துக்கொண்டார். இருப்பினும், கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர்களில் ஒரு பகுதியினரும், கட்சியில் கீழ்மட்டப்பதவியில் இருப்பவர்கள் மற்றும் தொண்டர்கள் பெரும்பகுதியினரும் சசிகலாவின் மீது உள்ளூர சந்தேகம் கொண்டவர்களாகவும், ஆனால் வெளியே ஏதும் சொல்ல விரும்பாமலும் இருந்தனர்.

தன் கணவர் நடராஜனை விட்டுப் பிரிந்துவாழ்வதாக சசிகலா காட்டிக்கொண்டாலும், நடராஜன் எக்காரணம் கொண்டும் கட்சிப்பக்கமோ, அரசு பக்கமோ நெருங்கக் கூடாது என்று தீர்மானமான உத்தரவை ஜெயலலிதா போட்டிருந்ததால்தான் சசிகலா அம்மாதிரியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம். மேலும் சசிகலாவின் ஒவ்வொரு நகர்வும், ஒவ்வொரு செயலும் நடராஜனின் திட்டப்படியே நடப்பதாகவும், அனைத்திற்குமே அவர்தான் சூத்திரதாரி என்றும் கூறப்பட்டு வந்தது. இவ்வுண்மை ஜெயலலிதாவுக்குத் தெரியவில்லையா அல்லது தெரிந்தும் ஒன்றும் செய்ய இயலாதவராக இருந்தாரா என்பது என்றுமே புதிராகத்தான் இருந்துள்ளது.

தற்போது ஜெயலலிதாவின் மறைவு சசிகலா, நடராஜன் மற்றும் இவர்களது குடும்பத்தினரை வெளியே பகிரங்கமாகக் கொண்டுவந்துள்ளது. ராஜாஜி கூடத்தில் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைத்திருக்கப்பட்டபோது, அவருடைய உடலைச் சுற்றி அந்தக் குடும்பத்தினர் மட்டுமே சூழ்ந்து நின்றுகொண்டிருந்தனர். முதல்வர் பன்னீர்செல்வமும் மற்ற அமைச்சர்களும் ஜெயலலிதாவின் உடல் இருந்த இடத்திற்குச் செல்லும் படிக்கட்டுகளில்தான் அமர்ந்திருந்தனர். சசிகலா குடும்பத்தினரின் முகபாவத்திலும் உடல் மொழியிலும் பெரிய அளவில் சோகம் தெரியவில்லை. ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்ய நடந்த இறுதிச்சடங்குவரை இந்த உடல்மொழி அப்படியே இருந்ததைத் தொலைக்காட்சிகளின் நேரலை ஒளிபரப்பில் தெளிவாகவே பார்க்கமுடிந்தது.

பா.ஜ.க எதிர்கொள்ளும் சவால்

ஜெயலலிதாவின் மறைவு தமிழக அரசியலில் ஒரு பெரும் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அ.தி.மு.க மிகுந்த கவர்ச்சியும் பெரும் மக்கள் செல்வாக்கும் உள்ள தலைவரின் கட்டுப்பாட்டில் வளர்ந்த கட்சி. கட்சியின் நிறுவனரான எம்.ஜி.ஆர் திட்டமிட்ட தொலைநோக்கம் கொண்டவர். தன் திரையுலக நடிப்பு மூலம் அப்பேற்பட்ட ஒரு மக்கள் செல்வாக்கை வளர்த்திருந்தார். எம்.ஜி.ஆர். இறந்த பிறகு கட்சியின் மூத்த தலைவர்களிடமிருந்து ஜெயலலிதா கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தார். அதன் விளைவாக கட்சி இரண்டாகப் பிளந்தது. ஆயினும் குறைந்த காலத்திலேயே அந்த மூத்த தலைவர்கள் மற்றும் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்று மற்ற தலைவர்களையும் ஒருங்கிணைத்து கட்சியைத் தன் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்.

பல நோக்குகளில் எம்.ஜி.ஆரை மிஞ்சிய ஜெயலலிதா, காலப்போக்கில் கட்சியின் பிரசாரம் மற்றும் அரசின் திட்டங்கள் ஆகியவற்றில் அவருடைய பெயரையும், படங்களையும், பிம்பங்களையும் நீக்கிவிட்டுத் தன்னையே முன்னிறுத்தி, தன்னை ஓர் அன்னையாகக் காண்பித்துக்கொண்டு, ‘அம்மா’ என்கிற முத்திரை கொண்ட ஒரு பிம்பத்தைப் பெரிதாக வளர்த்துக்கொண்டார். அந்த அம்மா என்கிற பிம்பம் அவருக்கும் கட்சிக்கும் வெற்றிகளைத் தேடித்தந்தது. அந்த பிம்பத்தின் சக்தியை உணர்ந்த மற்ற தலைவர்கள் அவரின் அடிமைகளாகவே தொடர்ந்தனர்.

தற்போது ஜெயலலிதா இல்லாத சூழலில் சசிகலா குடும்பம் தன்னுடைய சக்தி அனைத்தையும் பிரயோகித்துக் கட்சியைக் கைப்பற்றித் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்யும். செய்ய ஆரம்பித்து விட்டது. இதன் முதல் கட்டமாக, ஜெயலலிதாவின் இறுதிச்சடங்குகளை அந்தக் குடும்பமே முன்னின்று நடத்தியது. சொல்லப்போனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினத்திலிருந்தே அந்தக் குடும்பம் தன்னுடைய வேலைகளை ஆரம்பித்துவிட்டது என்பதே உண்மை.

ஆயினும், 4ம் தேதி மாலையிலிருந்து 6ம் தேதி மாலை வரை, பகிரங்கமாகவும், திரைக்குப் பின்னும் நடந்ததாகச் சொல்லப்படும் விஷயங்களை ஆழ்ந்து நோக்கும்போது, மத்திய அரசு ஒரு யுக்தியுடன் நடந்துகொள்வதாகத் தெரிகின்றது. அ.தி.மு.கவில் பிளவு எற்படுவதை இன்றைய சூழலில் பா.ஜ.க விரும்பாது. குறைந்தபட்சம் வருகின்ற 2019 பாராளுமன்றத் தேர்தல் வரையிலாவது பிளவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் தன்னுடைய எதிர்காலத்தைச் சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கான கடினமான பணிகள் பா.ஜ.கட்சிக்குக் காத்திருக்கின்றன. ஜெயலலிதாவின் மறைவு தமிழகத்தில் ஒரு சிறந்த வாய்ப்பை பா.ஜ.கட்சிக்கு உருவாக்கியுள்ளது. தான் விரும்பிய பன்னீர்செல்வத்தை முதல்வராக ஆக்கியது உண்மை என்றால், அதில் ஒரு சிறு வெற்றியை பாஜக அடைந்துள்ளது எனலாம். இதன் அடுத்த கட்டமாக சசிகலா அ.தி.மு.கட்சியின் பொதுச் செயலாளராக ஆவதைத் தடுக்க வேண்டும். சசிகலாவின் விசுவாசிகள் தவிர மற்றவர்கள் அவர் பொதுச் செயலாளர் ஆவதை விரும்பமாட்டார்கள். ஏனென்றால் ஜெயலலிதா ‘அம்மா’ என்கிற சக்தியால்தான் தாங்கள் இப்பேற்பட்ட நல்வாழ்வைப் பெற்றிருக்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரியும். மேலும் சசிகலா ஜெயலலிதாவை எப்படித் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஆகவே அவர்கள் சசிகலா பொதுச் செயலாளர் ஆவதை விரும்பமாட்டார்கள். ஆனால், இரண்டாம்கட்டத் தலைவர்களுக்குள் ஒற்றுமையும் புரிதலும் இல்லாத பட்சத்தில் சசிகலா சுலபமாகப் பொதுச்செயலாளர் பதவியைக் கைப்பற்ற முடியும். அதற்கான அறிகுறிகளும் தெரிய ஆரம்பித்துள்ளன.

இருப்பினும், கட்சியைக் கைப்பற்ற சசிகலா பல்வேறு வழிகளில் முயற்சி செய்யும் பட்சத்தில் கட்சி பிளவு ஏற்படும் வாய்ப்பும் உண்டு. அம்மாதிரி நடந்தால், எதிரக்கட்சிகள், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களைத் தன்பக்கம் இழுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடும். பா.ஜ.க தன்னுடைய விருப்பப்படி அ.தி.மு.கவில் பிளவு ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது என்று தெரிந்தால், தி.மு.க பிளவை ஏற்படுத்த மேலும் முயற்சிக்கும். தேவைப்பட்டால் சசிகலா குடும்பத்துடன் சேர்ந்துகொள்ளவும் செய்யும்.

எனவே பா.ஜ.க (மத்திய அரசு) சில காரியங்களில் தீவிர கவனத்துடன் செயல்படவேண்டும். முதலாவதாக, சசிகலா குடும்பத்தைத் தனிமைப்படுத்த வேண்டும். இரண்டாவதாக, அவர் பொதுச் செயலாளராக ஆவதைத் தடுக்க வேண்டும். மூன்றாவதாக, சசிகலா குடும்பம் சட்டத்திற்குப் புறம்பாகவும் வருமானத்திற்கு அதிகமாகவும் சேர்த்துள்ள சொத்துக்களையும், அவர்களுடைய பினாமி சொத்துக்களையும் வருமானவரித்துறையின் கண்காணிப்பில் சோதனைக்கு உள்ளாக்க வேண்டும். சொத்துக்குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இறுதித்தீர்ப்புக்காக நிலுவையில் இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவேளை சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராக ஆகிவிட்டால், பிறகு பா,ஜ.க நீண்ட காலத்திற்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாமல் விட்டதற்காகத் தன்னைத்தானே நொந்துகொண்டிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்.

மற்றொரு புறம், தி.மு.கட்சியும் நல்ல நிலையில் இருக்கிறது என்று சொல்ல முடியாது. அக்கட்சியின் முதல் பிரச்சினை கட்சித்தலைவர் கருணாநிதியின் உடல்நலன். இரண்டாவது பிரச்சினை அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே தொடர்ந்து கொண்டிருக்கும் பனிப்போரும், சச்சரவுகளும். மூன்றாவதாகக் கட்சியில் கனிமொழியின் நிலை. ஸ்பெக்ட்ரம் ஊழல், கலைஞர் டிவி ஊழல் என்று ஊழல் வழக்குகளை சந்தித்துக்கொண்டிருக்கிறார் அவர். நான்காவதாக மாறன் சகோதரர்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் ஊழல் வழக்குகள் மிகவும் வலுவானவை. ஐந்தாவதாக தி.மு..கட்சியின் கூட்டாளியான காங்கிரஸ் கட்சி நாடெங்கிலும் பெரும்பாலான மாநிலங்களில் படுதோல்வி அடைந்துள்ளது. தமிழகத்திலும் வெறும் பூஜ்யமாக உள்ளது. கருணாநிதியின் இருப்பு மட்டுமே தி.மு.கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது. அரசியல் களத்தில் அவர் இல்லாமல் போனால், ஸ்டாலினின் கீழ் பெரும்பாமையானவர்கள் அணிதிரண்டாலும், கட்சி பலவீனமாகத்தான் காட்சி அளிக்கும். தி.மு.கட்சியின் மேற்கண்ட நிலையையும் பா.ஜ.க கவனத்தில் கொள்ள வேண்டும்.

மற்ற எதிர்க்கட்சிகளான பா.ம.க., தே.மு.தி.க போன்ற கட்சிகள் சென்ற தேர்தல்களில் பெருந்தோல்வி அடைந்து ஒன்றுமில்லாமல் போய்விட்டன. தமிழகத்தில் மூன்றாவது இடத்தில் இருந்த தே.மு.தி.க, சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது. அக்கட்சியிலிருந்து பலர் தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் போய்விட்டனர். கட்சியைப் போலவே கட்சித் தலைவர் விஜயகாந்தும் உடல்நிலை பொருத்தவரைப் பலவீனமாக இருக்கிறார். மற்ற எதிர்க்கட்சிகளான ம.தி.மு.க, கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் போன்றவை வருகின்ற நாட்களில் ஏற்படும் அரசியல் மாற்றங்களைப் பார்த்துக்கொண்டு தங்கள் நவடிக்கைகளை மேற்கொள்ளும். பா.ஜ.க இக்கட்சிகளின் நடவடிக்கைகளையும் ஒரு பக்கம் கவனிக்க வேண்டும்.

பா.ஜ.க செய்ய வேண்டிய மிகவும் முக்கியமான விஷயம் சசிகலாவின் கணவர் நடராஜனைக் கண்காணிப்பது. சசிகலாவின் கடந்தகால நடவடிக்கைகள் அனைத்திற்கும் பின்னணியில் இருந்த ‘சூத்திரதாரி’ இவர்தான் என்பதையும், அவருடைய ஒவ்வொரு நகர்வையும் முடிவு செய்தவர் இவர்தான் என்பதையும் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். சசிகலா மூலமாக, ஜெயலலிதா, அரசு, கட்சி ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்தியவர் இவர்தான். விடுதலைப் புலி ஆதரவும், தமிழ்ப் பிரிவினைவாதிகளின் ஆதரவும் கொண்டவர் இவர். திராவிட இனவெறியாளர்களிடமும் நட்பு பாராட்டுபவர். இவரைப் பக்கத்தில் நெருங்க விடாமல் தள்ளி வைத்தது ஜெயலலிதா செய்த நல்ல விஷயங்களுள் ஒன்று. மத்திய அரசு இவரைத் தீவிரக் கண்கானிப்பில் வைத்திருக்க வேண்டும்.

ஜெயலலிதாவின் மறைவும் அதன் விளைவாக அ.தி.மு.கட்சி உடைவதும் பொதுவாக இந்தியாவுக்கும், குறிப்பாகத் தமிழகத்துக்கும் நல்லதல்ல. தமிழகத்தில் உறுதியற்ற நிலை நிலவினால், அது மொழி வெறி, இன வெறி, பிரிவினைவாத, தேச விரோத சக்திகளுக்குப் பெரும் வாய்ப்பாக முடிவதோடல்லாமல், அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகள், கிறிஸ்தவ மதமாற்ற சக்திகள், வெளிநாட்டு நிதியில் தேச விரோத வேலைகள் செய்யும் NGOக்கள், நக்ஸலைட்டு மற்றும் மாவோயிஸ்டுகள் ஆகியோருடன் கூட்டணி கொண்டு செயல்படுவார்கள். அது தமிழகத்துக்குப் புதிதல்ல என்றாலும், பேராபத்தில் முடியும் என்பதில் சந்தேகமில்லை.

மத்திய அரசும் பா.ஜ.கட்சியும் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றார்போல் விழிப்படைந்து உயிர்த்தெழுந்து களத்தில் இறங்கவேண்டியது அவசியம்.

(உதய் இந்தியா வலைத்தளத்தில் தமிழ்ச்செல்வன் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழ் வடிவம்.)

சான்றுகள் / ஆதாரங்கள்: –

கோவில் யானைகள் நலனும் ஆன்மிகப் பாரம்பரியமும் – பி.ஆர்.ஹரன்

கோவில் யானைகள் நலனும் ஆன்மிகப் பாரம்பரியமும்

பி.ஆர்.ஹரன்

இவ்வருட நவராத்திரி கொண்டாட்டத்தில் நடந்த சம்பவம் இது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நவராத்திரி மூன்றாம் நாள் விழா அன்று மாலை, தாயார் சன்னிதியில் பழங்களைப் பிரசாதமாகப் பெற்றுக்கொள்ள, கோவில் யானை ஆண்டாள் பக்தர்களின் கூச்சல் மற்றும் ஆரவாரங்களுக்கு இடையே, ஒரு காலை மடக்கி, மூன்று கால்களால் நொண்டி அடித்தவாறு வந்து, பட்டரிடம் பிரசாதம் பெற்றுக்கொண்டு, தாயாரைத் துதிக்கையால் வணங்கிவிட்டு, பிறகு மௌத்ஆர்கன் வாசித்துவிட்டுச் சென்றது. இந்தக் காட்சியின் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவ, விலங்குகள் நல ஆர்வலர்கள் கொதித்துப்போய்த் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தார்கள்.

கேரள மாநிலத்தை மையமாக வைத்து கோவில் யானைகளுக்கு இழைக்கப்படும் துன்பத்தை ஆவணப்படுத்திவிலங்கிடப்பட்ட கடவுள்கள்’ (Gods in Shackles) என்கிற ஆவணப்படத்தை வெளியிட்டுள்ள கனடா நாட்டைச் சேர்ந்த சங்கீதா ஐயர் என்கிற பத்திரிகையாளரும் தன் முகநூல் பக்கத்தில் இந்த நிகழ்வைக் கடுமையாகக் கண்டித்துப் பதிவிட்டிருந்தார்.

இந்தச் சமயத்தில், உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கும் கோவில் பசுக்கள் மற்றும் யானைகள் நலன் பற்றிய வழக்கு விசாரணைக்கு வரவே, இந்த காணொளியும் முதல் அமர்வு நீதிபதிகள் முன்பு காட்டப்பட்டது. அவர்களும் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து, விளக்கம் கேட்டு அறநிலையத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

இதனால் கோபமுற்ற ஸ்ரீரங்கம் பக்தர்கள், சங்கீதா ஐயரையும், PETA அமைப்பையும் ஹிந்துக் கோவில்களுக்கு எதிராகவும், கோவில் பாரம்பரிய வழக்கங்களுக்கு எதிராகவும் இயங்குகிறார்கள்; அவர்களுடைய நோக்கம் விலங்குகள் நலன் அல்ல, கோவில் பாரம்பரியத்தை அழிப்பதே என்று கூறுகின்றார்கள். ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து ஆண்டாள் யானையை வெளியேற்றுவதும் அவர்கள் நோக்கம் என்று தங்கள் சந்தேகத்தைத் தெரிவிக்கிறார்கள்.

இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இரண்டு விஷயங்கள். ஒன்று, கோவில்கள், சர்க்கஸ்கள், தனியார் வசம் இருக்கின்ற சிறைப்படுத்தப்பட்ட யானைகள் (Captive Elephants) கொடுமைப்படுத்தப்படுவது; மற்றொன்று, கோவில்களில் பல நூற்றாண்டுகளாக யானைகளைப் பயன்படுத்திச் செய்யப்படும் சில சம்பிரதாயங்கள். இதில், யானைகள் என்று வரும்போது, அவற்றின் உடலமைப்பு, அவை வாழ்வதற்கான சூழல், தேவையான உணவு மற்றும் குடிநீர், போன்ற யானைகளின் நலன் சார்ந்த பல விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். கோவில்கள் என்று வரும்போது, நமது தேசத்துப் பண்பாட்டுச் சின்னங்களாக அவை விளங்குவதால், நூற்றாண்டுகளாக அக்கோவில்களில் பின்பற்றப்பட்டு வரும் நமது ஆன்மிகப் பாரம்பரியம் கெட்டுப்போகாமல் பாதுகாக்கவும் வேண்டும். ஆகவே, யானைகள் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும், ஆன்மிகப் பாரம்பரியமும் தொடரவேண்டும், என்கிற இரண்டு விஷயங்களையும் நிறைவேற்றுமாறு ஒரு நியாயமான தீர்வு வேண்டும்.

பாலூட்டி வகையைச் சேர்ந்த யானை சராசரியாக 70 ஆண்டுகள் வாழக்கூடியது. குடும்பமாக, குழுவாக வாழும் வனவிலங்கு இது. நன்கு வளர்ந்த யானைகள் ஒரு நாளைக்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன. யானையின் தோல் மிகவும் தடிமனானது. சுமார் 2.5 செண்டிமீட்டர் முதல் 3 செண்டிமீட்டர் அளவுக்குத் தடிமனாக இருக்கும். அதேசமயம் மென்மையாகவும் இருக்கும். கொசு, எறும்பு போன்ற மிகச் சிறிய பூச்சிகள் கூட அதைக் கடித்துத் துன்புறுத்த முடியும். யானையின் வாயைச் சுற்றியும் காதுகளின் உட்பகுதியிலும் தோல் மிகவும் மென்மையாக இருக்கும்.

கால்கள் பலமுள்ளவை. உடல் பெரியதாக இருந்தாலும், காட்டு விலங்கு என்பதால் மேடுகளிலும், பள்ளங்களிலும், மணல் சரிவுகளிலும், செங்குத்தான பாதைகளிலும் ஏறவும் இறங்கவும் முடியும். பாதங்கள் மிகவும் மென்மையானவை. மணல்தரை அல்லது புல்தரைதான் அதற்கு ஏற்றது. தார்ச் சாலைகள், கான்கிரீட் அல்லது கிரானைட் தரைகள் அதற்கு ஏற்றவையல்ல. அவற்றில் நடந்தால், பாதங்களில் சீக்கிரம் புண்கள் ஏற்படும், நகங்கள் பிளவுபடும் வாய்ப்பும் உண்டு. கால்கள் வீங்கிக்கொண்டு மூட்டு வலியும் ஏற்படும்.

யானைகள் வாழ்வதற்குப் பெரிய அளவிலான காட்டுப்பகுதிகள் தேவைப்படுகின்றன. இயற்கைச் சூழலுடன் கூடியமரம் செடி கொடிகள் கொண்ட பகுதிகள் தேவைப்படுகின்றன. இப்படிப்பட்ட ஒரு வனவிலங்கை, காட்டிலிருந்து நகர்ப்புறத்துக்குக் கொண்டுவந்து, சர்க்கஸ், மடங்கள் மற்றும் கோவில்கள் ஆகிய இடங்களில் வைத்துப் பயன்படுத்துகிறார்கள். இந்த மாதிரியான இடங்களுக்கு வளர்ந்த யானைகளைக் கொண்டுவந்து பழக்க முடியாது. ஆகவே, கன்றாக இருக்கும்போதே பாலூட்டும் அதன் தாயிடமிருந்து பிரித்து எடுத்துக்கொண்டு வருகிறார்கள். யானையின் வயதிற்கு ஏற்ப குச்சிகள், மூங்கில் கழிகள், இரும்புப் பூண்கள் பூட்டப்பெற்ற கழிகள், இரும்புக் கொக்கி கொண்ட அங்குசங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அதை அடக்குவார்கள். ஒரு குச்சியை அல்லது ஒரு கழியைப் பார்த்தாலே இருக்கின்ற இடத்தை விட்டு நகராத அளவுக்கு அதன் மனதில் ஓர் அச்சத்தை உருவாக்கிவிடுவார்கள்.

ஆண் யானைகளுக்கு 12 வயதிலேயே (Adolescent stage) மதநீர் சுரப்பிகள் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். அப்போது அதை அடக்குவது கடினம் என்பதால் சங்கிலிகளால் அதன் கால்களையும் உடம்பையும் கட்டிவிடுவார்கள். அந்தச் சமயத்தில் அதற்குக் கொடுக்கப்படும் உணவின் அளவையும் குறைத்துவிடுவார்கள். வயது கூடிய பெண் யானைகளின் கால்களையும் சங்கிலிகளால் பிணைத்துவிடுவார்கள். யானைகள் முழுவதுமாக அடங்கி நடக்கும் வரை பலவிதங்களில் சித்திரவதை செய்யப்பட்டுத் துன்பங்களை அனுபவிக்கின்றன.

இந்நிலையில்தான், சில விலங்குகள் நல அமைப்புகள், யானைகளின் இருப்பிடம் காடுகள்தான்; சிறைப்படுத்தப்பட்ட யானைகளை அவற்றின் துன்பங்கள் மிகுந்த சூழ்நிலையிலிருந்து விடுவித்து சுதந்திரமாக இருக்கக்கூடிய காடுகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்கிற நோக்கத்துடன் போராடத்தொடங்கின. WRRC (Wildlife Rescue and Rehabilitation Center), Compassion Unlimited Plus Action (CUPA) ஆகிய அமைப்புகள் போராட்டத்தைத் தொடங்கின. இந்திய விலங்குகள் நலவாரியமான AWBI அமைப்பும் இவர்களுக்கு உதவுகின்றது. WRRC/CUPA மற்றும் AWBI அமைப்புகளுடன் PETA அமைப்பும் இணைந்து கொண்டது. இவர்களுக்கு உதவியாகக் கேரளத்தை மையமாகக் கொண்டு செயல்படும் Heritage Animal Task Force என்கிற அமைப்பும் செயல்படுகிறது.

இதனிடையே கனடா நாட்டிலிருந்து தன்னுடைய தந்தையாரின் நினைவு தினத்தை அனுசரிக்க வந்த சங்கீதா ஐயர் என்கிற பத்திரிகையாளரும் இதே விஷயத்தைக் கையில் எடுக்கிறார். ஓர் ஆவணப்படம் எடுக்கத் திட்டமிடுகிறார். அவர் ஆவணப்படத்தைத் தயாரித்துக்கொண்டிருக்கும் சமயத்தில்தான் Save The Asian Elephants (STAE) என்கிற அமைப்பின் நிறுவனர் டன்கன் மெக்னாய்ர் இவ்விஷயம் தொடர்பாக இந்தியாவிற்கு வருகிறார். இவருடைய STAE அமைப்புக்கும் WRRC/CUPA மற்றும் AWBI அமைப்புக்கும் தொடர்பு உள்ளது. இவர் இந்தியா வரும்போது லிஸ் ஜோன்ஸ் என்கிற ஆங்கிலேயப் பத்திரிகையாளரையும் அழைத்து வருகிறார்.

லிஸ் ஜோன்ஸின் கற்பனையும், பொய்யும், பாதி உண்மைகளும் கலந்து உருவான ஒரு கட்டுரை லண்டனில் வெளியாகும்தி மெயில்’ (The Mail) பத்திரிகையில் வெளியாகிறது. அதே நேரத்தில், ஆவணப்படத்தை முடித்த சங்கீதா ஐயர் அதை வெளிநாடுகளில் வெளியிட்டுப் பல விருதுகளையும் பெறுகிறார். (http://www.godsinshackles.com/). லிஸ் ஜோன்ஸின் கட்டுரையையும், சங்கீதா ஐயரின் ஆவணப்படத்தையும் மேற்கோள் காட்டி இந்தியப் பத்திரிகைகளும் கட்டுரைகளும் செய்திகளும் வெளியிடுகின்றன.

தற்போது ஆவணப்படம், கட்டுரைகள், செய்திகள், பேட்டிகள், வழக்குகள், சமூக வலைத்தளங்களில் பிரசாரங்கள் என்று ஒரு பெரும் பரபரப்பான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அமைப்புகளில் AWBI அமைப்பு மட்டுமே இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற இந்திய அமைப்பு. அரசியல் சாஸனப்படி அரசுக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு. மற்றவை எல்லாமே அன்னிய சக்திகளின் பின்னணியில், பெரும்பாலும் அன்னிய நிதியுதவி பெற்றுச் செயல்படுபவை. ஆகவேதான் அவற்றின் நோக்கம் ஹிந்து கலாசாரத்துக்கும், ஆன்மிகப் பாரம்பரியத்துக்கும் எதிரானது என்கிற சந்தேகம் ஆன்மிக ஆர்வலர்களுக்கு எழுந்துள்ளது.

இவர்களின் போராட்டங்களும், வழக்காடுதல்களும் நடந்துகொண்டிருக்கும் சமயத்தில், தமிழகத்தில் திருக்கடையூர் கோவில் அபிராமி, ராமேஸ்வரம் கோவில் பவானி, கூடலழகர் கோவில் மதுரவல்லி, திருச்செந்தூர் கோவில் குமரன், தஞ்சாவூர் கோவில் வெள்ளையம்மாள், விருதுநகர் கோவில் சுலோச்சனா என்று வரிசையாகக் கோவில் யானைகள் இறந்துபோகின்றன. தென்னக மாநிலங்களில் நூற்றுக்கணக்கான சிறைப்படுத்தப்பட்ட யானைகள் இறந்து போகின்றன. உதாரணத்துக்கு 2007 முதல் 2010 வரையிலான மூன்று வருடங்களில் மட்டும் (கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தமிழகம் ஆகிய நான்கு மாநிலங்களில்) 215 சிறைப்படுத்தப்பட்ட யானைகள் இறந்துபோயுள்ளன.(1)

சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் இறப்புகளுக்கும், துன்பங்களுக்கும் முக்கியமான காரணங்களாக, சிறுவயது முதல் தனிமை, தேவையான உணவின்மை, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, பாகன்களின் சித்திரவதை, முறையான சிகிச்சையின்மை ஆகியவற்றைச் சொல்லலாம். யானைகளின் உரிமையாளர்களும் பாகன்களும் பலவிதமான சட்டமீறல்களில் ஈடுபடுகிறார்கள். சட்டத்திற்குப் புறம்பாக யானைகளை வைத்திருத்தல், காலம்கடந்த, செல்லுபடியாகாத உரிமைச் சான்றிதழ்கள் வைத்திருத்தல், காயமுற்ற, நோயுற்ற, வேலைக்குத் தகுதியில்லாத யானைகளை வேலை செய்ய வைத்தல், தொடர்ந்து சங்கிலியாலும் கயிற்றாலும் யானைகளின் கால்களைக் கட்டுதல், இரும்பு அங்குசங்களைப் பயன்படுத்துதல், அங்கஹீனம் செய்தல், தேவையான குடிநீர், உணவு ஏற்பாடு செய்யாமல் இருத்தல், தங்குமிடங்களின் சூழ்நிலைகள் மற்றும் வசதிகளின் குறைபாடு, மருத்துவப் பரிசோதனையும் சிகிச்சையும் முறையாகக் கொடுக்காதிருப்பது, பல்வேறு ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் பராமரிக்காமல் இருத்தல் என்று பல்வேறு சட்டமீறல்களில் ஈடுபடுகின்றனர்.

1972-இந்திய வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டம் (Indian Wildlife Protection Act 1972), 1960-பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம் (Prevention of Cruelty to Animals Act 1960), போன்ற சட்டங்கள் மட்டுமல்லாமல், 2011-தமிழ்நாடு சிறைப்படுத்தப்பட்ட யானைகள் பராமரிப்பு விதிகளும் (Tamil Nadu Captive Elephants – Management and Maintenance – Rule 2011) மீறப்படுகின்றன. அதே போல கர்நாடகத்திலும், கேரளாவிலும் கூட, சிறைப்படுத்தப்பட்ட யானைகள் பராமரிப்பு விதிகள் மீறப்படுகின்றன.

இதனால், இந்தியாவில் தமிழகம் மட்டுமல்லாமல், கேரளம், கர்நாடகம், மஹாராஷ்டிரம் போன்ற பல மாநிலங்களில் சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் நலன் பற்றிய பிரச்சினைகள் எழுப்பப்பட்டு நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்திலும் WRRC அமைப்பு 2014ம் ஆண்டு தொடர்ந்துள்ள ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.

விலங்குகள் நல அமைப்புகள் தாங்கள் தொடர்ந்துள்ள வழக்கிற்கு ஆதாரமாக மறுக்கமுடியாத சான்றுகளை இணைத்துள்ளன. அவை வழக்கு தொடர்ந்திருப்பது, மாநில அரசுகளுக்கும் கோவில் தேவஸ்தானங்களுக்கும் எதிராக. ஏனென்றால் மாநில அரசுகளும், வனத்துறையும், அறநிலையத்துறையும், கோவில் தேவஸ்தானங்களும்தான் சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் நலனுக்குப் பொறுப்பு.

அவ்வமைப்புகளுக்கு எதிராக, பல நூற்றாண்டுகள் தொடர்ந்து வழக்கத்தில் இருந்து வரும் பாரம்பரியத்தை நிரூபிக்கும் வகையில் தேவஸ்தானங்கள் தங்களுடைய சான்றுகளை நீதிமன்றத்தின் முன் வைக்க வேண்டும். மேலும் தங்களிடம் இருக்கும் யானைகள் துன்புறுத்தப்படவில்லை என்பதையும் நிரூபிக்க வேண்டும். மாநில அரசுகளும், அறநிலையத்துறைகளும், கோவில் தேவஸ்தானங்களும் இதில் எந்த அளவுக்குத் தீவிரமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

கோவில் வழிபாடுகளிலும் சம்பிரதாயங்களிலும் யானையின் பங்கு இன்றியமையாதது. பல நூற்றாண்டுகளாக, யானைகள் கோவில் பண்பாட்டின் ஒரு அங்கமாக இருந்து வருகின்றன என்கிற உண்மையை மறுக்க முடியாது. அதற்கான இலக்கிய, கல்வெட்டு, வரலாற்றுச் சான்றுகள் ஏராளமாக உள்ளன. விலங்குகள் நல அமைப்புகள் சொல்வது போல, ஹிந்து மத நூல்களில் குறிப்பிடப்படவில்லை என்கிற ஒரே காரணத்துக்காக யானைகள் கோவில்களில் தேவையில்லை என்கிற முடிவை உச்ச நீதிமன்றம் எடுக்க வாய்ப்பில்லை. அதே சமயத்தில் கோவில் யானைகளின் துன்பச் சூழலும், அனுபவிக்கும் சித்தரவதையும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டால், கோவில்களிலிருந்து யானைகளை வெளியேற்றுமாறு உத்தரவிடுவதற்கு வாய்ப்புண்டு.       

ஹிந்து அமைப்புகளும், ஹிந்து கலாசார ஆர்வலர்களும் விலங்குகள் நல அமைப்புகளின் நோக்கங்களைச் சந்தேகிக்கலாம். ஆனால் அந்தச் சந்தேகங்களை வலிமைமிக்கதாக ஆக்கத் தகுந்த சான்றுகளை முன்வைக்க வேண்டும். ஹிந்து அமைப்புகள் இரண்டு வகையில் செயலாற்ற வேண்டும். ஒன்று, கோவில் வழிபாடுகளிலும், சம்பிரதாயங்களிலும் யானைகளின் பங்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உள்ளது என்பதற்கான வரலாறு, இலக்கிய மற்றும் கல்வெட்டுச் சான்றுகளைத் திரட்டி, உச்ச நீதிமன்றத்தில் தாங்களும் ஒரு மனுவைச் சமர்ப்பித்து அவ்வழக்கில் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு, கோவில் யானைகளின் நலனுக்காக, தோப்புகள், மரம் செடி கொடிகள், நீர் ஆதாரங்கள் நிறைந்த நிலங்களைக் கோட்டங்களாகத் தயார் செய்து, அங்கே கோவில் யானைகளை வைத்துப் பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவற்றின் தேவைக்கேற்ப உணவுகளும், மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்படவேண்டும். இவ்விஷயத்தில் தேவஸ்தானங்களுடனும், அறநிலையத்துறையுடனும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.

இந்தியாவில் யானைகளைப் பழக்கப்படுத்தும் பண்பாடு ஆயிரமாயிரம் ஆண்டுகள் கொண்டது. யானைகளைப் பழக்கிப் பராமரிக்கும் பாகன்கள் கௌரவமான வாழ்க்கை வாழ்ந்தார்கள்; கௌரவமாகவும் நடத்தப்பட்டார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, தற்போது அந்தப் பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்து கொண்டிருக்கிறது. அதை மீட்டெடுக்க வேண்டும். அதற்கான வள ஆதாரங்கள் நம்மிடம் இருக்கின்றன.

ஒவ்வொரு மாநில அரசிலும் வனத்துறையும், கால்நடைத்துறையும் இருக்கின்றன. இவற்றுடன் சேர்ந்து அறநிலையத்துறையும் ஒருங்கிணைந்து ஊழலின்றி செயல்பட்டு, சட்டங்களையும் விதிகளையும் வழிகாட்டுதல்களையும் முறையாகப் பின்பற்றி, யானைக்கோட்டங்களையும், யானைப்பாகன்கள் பயிற்சி மையங்களையும் சரியாகப் பராமரித்தால் யானைகளின் நலன் பூரணமாகப் பாதுகாக்கப்படும் என்பதோடு, கோவில் சம்பிரதாயங்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் தொய்வில்லாமல் தொடர்ந்துகொண்டிருக்கும்.

வலம் இதழ் – அக்டோபர் 2016 – அருகி வரும் யானைகள்

அருகி வரும் யானைகள் 
– பி.ஆர்.ஹரன்

காட்டு யானைகளின் அவலம்

ஆப்பிரிக்க யானைகள், ஆசிய யானைகள் என்று இருவகைகளாக யானைகள் அறியப்படுகின்றன. 2003-ஆம் ஆண்டு கணக்கின்படி, ஆசிய யானைகளின் எண்ணிக்கை 40,000 முதல் 50,000 வரை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 30,000 யானைகள் வரை இருக்கலாம் என்று தெரிகிறது. ஆசிய யானைகளை, இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (International Union for Conservation of Nature and Natural Resources – IUCN) என்கிற அமைப்பு, அருகிவரும் உயிரினமாக (Endangered Species) அறிவித்துள்ளது. 1972ம் ஆண்டு இந்திய வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்ட வரைவின்படி யானை அருகிவரும் உயிரினமாகப் பட்டியல்-1-ல் (Schedule-1) இடம்பெற்று, முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டிய மிருகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அருகிவரும் உயிரினமான யானைகளைப் பாதுக்காக்கும் பொருட்டு, இந்திய அரசின் வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் 1992-ஆம் ஆண்டு ‘ப்ராஜெக்ட் எலிஃபேண்ட்’ (யானைத் திட்டம் – Project Elephant) என்கிற திட்டத்தை அறிமுகம் செய்தது.(1) யானைகள் இருக்கும் 16 மாநிலங்கள் இந்தத் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டு, அம்மாநில அரசுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, அவற்றுக்குத் தேவையான நிதி வழங்கி யானைகளின் பாதுகாப்பிற்காகப் பல நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகின்றது. இருப்பினும் எதிர்பார்த்த அளவு எண்ணிக்கையை அதிகரிக்க இயலவில்லை. 2007-ல் 27,682-ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை 2012-ல் 30,711-ஆக உயர்ந்தாலும், அது 1990களின் எண்ணிக்கையைத்தான் ஒத்துப்போகிறது. இத்தனைக்கும், மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ப்ராஜெக்ட் எலிஃபேண்ட் திட்டத்தின்படி, இந்தியாவில் மொத்தம் 58,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட 32 யானைப்பாதுகாப்பிடங்களை (Elephant Reserves) பராமரித்து வருகின்றது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக ‘யானைத் திட்டம்’ மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் யானைகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருப்பதற்கான காரணங்களை இப்படிப் பட்டியலிடலாம். காடுகள் மனிதர்களாலும், அரசுகளின் வளர்ச்சித் திட்டங்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றின் பரப்பளவு குறைந்து வருவது; தந்தத்திற்காகக் கள்ளத்தனமாக வேட்டையாடப்படுவது; யானைகள்-மனிதர் மோதல்கள்; சிறைப்படுத்தப்பட்ட யானைகள் (CaptiveElephants) முறையாகப் பராமரிக்கப்படாதது; ஆண்யானை-பெண்யானை விகிதாசாரம் சரியாக இல்லாதது.

யானைத்திட்டத்தின் முக்கியக் குறிக்கோள்கள், (1) யானைகள், யானைகளுக்கான இயற்கையான வாழ்விடங்கள் (Elephant Habitat), வனங்களினூடாகச் செல்லும் யானைகளின் வழித்தடங்கள் (Elephant Corridors), ஆகியவற்றின் பாதுகாப்பு.

(2) யானைகள்-மனிதர் மோதல்களுக்கான (Human-Elephant Conflicts) காரணங்களை ஆராய்ந்து அவற்றை முற்றிலுமாகத் தவிர்த்தல். (3) சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் நலன்.

கடந்த 30 ஆண்டுகளில் 23,716 தொழில்வளர்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதில் 14,000 சதுர கிலோமீட்டர் வனப்பகுதியை நாம் இழந்துள்ளோம். இவற்றில் சுரங்கத்தொழில்களுக்காக 4,947 சதுர கிலோமீட்டர், பாதுகாப்புத் திட்டங்களுக்காக 1,549 சதுர கிலோமீட்டர், நீர்மின்சக்தி திட்டங்களுக்காக 1,351 சதுர கிலோமீட்டர் வனப்பகுதியை இழந்துள்ளோம். தற்போது, 250 சதுர கிலோமீட்டர் வனப்பகுதியை வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் இழந்துவருகிறோம். இன்று, இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில், 21.34% மட்டுமே வனப்பகுதியாக இருக்கின்றது.வளர்ச்சித்திட்டங்களுக்கு அனுமதியளிக்கும்போது, அழிக்கப்படும் காடுகளுக்கு நஷ்டஈடாகப் பயனாளிகள் மரங்கள் நடவேண்டும் என்கிற விதி உள்ளது. ஆயினும், காடுகள் அழிக்கப்படும்போது, மரங்கள் மட்டும் அழிக்கப்படுவதில்லை; ஓர் இயற்கை சுற்றுச்சூழலே (Ecosystem) அழிக்கப்படுகிறது. தாவர வளமும் உயிர் வளமும் (Flora & Fauna) அழிக்கப்படுகின்றன. ஆகவே வெறும் மரங்களை மட்டும் நட்டுத்தருவது ஏற்கெனவே நிலவிய சுற்றுச்சூழலுக்கு ஈடாகாது என்று வனமேலாண்மை நிபுணர்கள் ஒருமித்த கருத்துத் தெரிவிக்கின்றனர். இக்கருத்தை அரசும் பாராளுமன்றத்தில் ஒத்துக்கொண்டுள்ளது.

வளர்ச்சித் திட்டங்களுக்காகக் காடுகள் அழிக்கப்படுவது மட்டுமல்லாமல், மக்கள்தொகை பெருகுவதும் நகரமயமாக்கம் அதிகரிப்பதும் காடுகளின் ஆக்கிரமிப்பிற்கு வழிவகுக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளில் 15,000 சதுரகிலோமீட்டர் வனப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதிகளில் யானைகளின் வழித்தடங்களும் அடக்கம். அவ்விடங்களில் புதிதாகக் கிராமங்கள் உருவாகி, தானியங்களும் காய்கறிகளும் பயிரிடுவதும் அதிகரிக்கின்றது. வனப்பகுதிகள் சுருங்கிவரும் சூழலில் இந்தப் பயிர்நிலங்கள் யானைகள் போன்ற மிருகங்களின் தாக்குதலுக்கு உள்ளாவது இயற்கையே. இதனால், மனிதர்-வன உயிரினங்கள் இடையேயான மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

யானைகள் தங்களின் விளைநிலங்களை அழிக்காமல் இருப்பதற்காக, நிலச் சொந்தக்காரர்கள் நிலங்களைச் சுற்றி மின்வேலிகள் அமைக்கின்றனர்; சிலர் ஆங்காங்கே தீ மூட்டுவதும் உண்டு. அருகில் வரும் யானைகளை விரட்ட முரசுகளை ஒலிப்பதும், பட்டாசுகள், வெடிகள் வெடிப்பதும் உண்டு. ஆனால் யானைகள் கூட்டமாக வரும்போது சில நிமிடங்களில் கிராமத்தையே அழித்துத் துவம்சம் செய்துவிடும் இயல்பு கொண்டவை. மனிதர்-யானைகள் மோதல்களால் இருபக்கமும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதில் யானைகளைக் குறை சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

உலகச் சந்தையில் யானைத் தந்தத்திற்கும், தந்தத்தால் செய்யப்பட்ட பொருள்களுக்கும் மிகுந்த மதிப்பு உண்டு. பில்லியர்ட்ஸ் பந்துகள், பியானோ விசைகள் (Piano Keys) செய்வதற்குக்கூட தந்தங்கள் தேவைப்படுகின்றன. யானைகளின் தோலுக்கும், முடிக்கும் கூட நல்ல மதிப்பு உண்டு. ஆகவே யானைகள் இவற்றுக்காகவும், பாரம்பரிய மருத்துவப் பொருள்களுக்காகவும் கள்ளத்தனமாக வேட்டையாடப்படுகின்றன.

இந்திய வன உயிரினங்கள் பாதுகாப்புச் சங்கம் (Wildlife Protection Society of India – WPSI) என்கிற அமைப்பு 2008 முதல் 2011 வரையிலான நான்கு ஆண்டுகளில் 121 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. இதே காலகட்டத்தில் 781 கிலோ தந்தம், 69 தந்தங்கள், 31 தந்தத் துண்டுகள், 99 செதுக்கப்பட்ட தந்தங்கள், 75 தந்த வளையல்கள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன என்றும் அவ்வமைப்பு தெரிவிக்கின்றது. 1986-ஆம் வருடமே தந்தங்கள் மற்றும் தந்தங்களிலான பொருள்களை வியாபாரம் செய்வதை இந்திய அரசு தடைசெய்துள்ளது.

கோடைக் காலங்களில் நீர்நிலைகள் வற்றி, தாவரங்களும், காய்கறிகளும் கிடைப்பது அரிதாகிவிடுவதால், யானைகள் கூட்டம் கூட்டமாக நீரையும் உணவையும் தேடி அலையும். இந்தக் கோடைக் காலத்தைத்தான் வேட்டையாடுபவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். தந்தங்களுக்காக வேட்டையாடுபவர்கள் மட்டுமல்லாமல், தேக்கு மற்றும் சந்தனக் கொள்ளையர்களும் யானைகளைத் தந்தங்களுக்காகக் கொல்வதுண்டு. வீரப்பன் போன்றவர்களே இதற்கு உதாரணம். உண்மையில் தந்தக் கடத்தல் தொழிலில் ஆரம்பித்துப் பின்னர்தான் சந்தனமரக் கடத்தலுக்கு மாறினான் வீரப்பன் என்றும், தந்தக் கடத்தல் தொழிலில் இருக்கும்போது கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட யானைகளைக் கொன்றுள்ளான் என்றும் இந்திய வன உயிரினங்கள் பாதுகாப்புச் சங்கத்தின் ‘கடுந்துன்பத்தில் ஒரு கடவுள்’ (A God in Distress) என்கிற ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. வீரப்பன் போன்றவர்கள் மட்டுமல்லாமல், உல்ஃபா (ULFA), போடோ (BODO), நாகா (NAGA) தீவிரவாதிகளும், மக்கள் போர்க் குழு (PWG) மாவோயிஸ்டுகளும் தங்களுடைய இயக்கங்களின் பணத்தேவைக்காக அவ்வப்போது யானைகளைக் கொல்வதுண்டு என்றும் அவ்வறிக்கைத் தெரிவிக்கிறது.(2)

இந்திய விலங்குநல ஆராய்ச்சி நிறுவனத்தின் (Indian Veterinary Research Institute) ஓய்வுபெற்ற விஞ்ஞானியான டாக்டர் B.M.அரோரா மேற்கொண்ட ஆய்வின்படி, கடந்த 20 ஆண்டுகளில் 6,000க்கும் அதிகமான யானைகள் இறந்துள்ளதாகத் தெரிகிறது. இதில் 1990 முதல் 2012 வரை தென்னிந்தியாவில்தான் அதிகமாக, அதாவது 3,239 யானைகள் இறந்துள்ளன. வடகிழக்கு இந்தியாவில் 1,403 யானைகளும், கிழக்கு இந்தியாவில் 1,253 யானைகளும், வடக்கு மண்டலத்தில் 378 யானைகளும் இறந்துள்ளன. ,499 யானைகள் நோய்களால் உடல்நலன் குன்றி இறந்துள்ளன; 694 யானைகள் மின்சார வேலிகளைத் தீண்டியதால் இறந்துள்ளன; 562 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளன; 1,276 யானைகள் இயற்கைக் காரணங்களால் இறந்துள்ளன; 875 யானைகளின் சாவுக்குக் காரணம் தெரியவில்லை.(3) வனப் பகுதியை ஆக்கிரமித்து உருவாகியுள்ள கிராமங்களில் பலர் சட்டத்திற்குப் புறம்பாக, அனுமதியின்றி மின்சார வேலிகள் அமைக்கின்றனர். இவ்விஷயத்தில் வனத்துறையினர் சரியான கவனம் செலுத்துவதில்லை. அரசியல் அழுத்தங்களால், அத்துமீறுபவர்களும் தண்டனையிலிருந்து தப்பிவிடுகிறார்கள்.

நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் ரயில் வண்டிகளில் அடிபட்டு யானைகள் இறந்துபோவது. இந்திய வளர்ச்சித் திட்டங்கள் முழுமையாக வெற்றியடைய தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் போக்குவரத்துக்கான இருப்புப்பாதைகள் ஆகியவற்றை அமைக்கவேண்டியது கட்டாயமாகிறது. சில இருப்புப்பாதைகள் காடுகள் வழியாகவும் அமைக்கப்படுகின்றன. அப்பாதைகள் யானைகளின் வழித்தடங்களின் ஊடாகச் செல்வதால், அந்தப் பாதைகளைத் தாண்டிப்போகும்போது யானைகள் ரயில்களில் அடிபட்டுப் பரிதாபமாக மரணமடைகின்றன. 1987 முதல் 2010 வரை இந்தியாவில் மொத்தம் 150 யானைகள் ரயில்களில் அடிபட்டு இறந்துபோயுள்ளன. இதில் 2000 முதல் 2010 வரை 100 யானைகள் இறந்துபோயுள்ளன.

பல இடங்களில் இருப்புப்பாதைகள் மேடான பகுதிகளில் போடப்பட்டிருப்பதாலும், பாதையிலிருந்து கீழே நிலப்பகுதிக்குச் சரிவாக வரவேண்டியிருப்பதாலும், பருத்த உடலும் மெதுவான நகர்வும் கொண்ட யானைகள் ரயில்கள் வருவதற்குள் பாதையைக் கடக்க முடியாமல் அடிபட்டு இறந்துபோகின்றன. வழித்தடங்களை யானைகள் கடந்துசெல்லும்போது, ரயில் ஓட்டுநர்கள் ரயில்களை மெதுவாகக் குறிப்பிட்ட அளவு வேகத்தில்தான் செலுத்த வேண்டும் என்னும் விதி உள்ளது. ஆனால் பல ஓட்டுநர்கள் அதைப் பின்பற்றுவது கிடையாது. ஓட்டுநர்களின் பார்வைக்கு, வழித்தடங்களைக் கடக்கும் யானைகள் தெளிவாகத் தெரிகின்ற அளவுக்கு, வழித்தடங்களில் இருக்கும் மரங்கள், பாறைகள் போன்றவற்றை அகற்ற வேண்டிய பொறுப்பும் வனத்துறையினருக்கு உண்டு.

சமீபத்தில் மேற்கு வங்க மாநில டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள மஹானந்தா வன உயிரினக் காப்பகத்தின் வழியாக ரயில் போக்குவரத்துக்கான இருப்புப்பாதையை நீட்டிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.(4) இந்தப் பாதையில் ஏற்கனவே 55 யானைகள் அடிபட்டு இறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், உத்தர்கண்ட் மாநிலத்தில் ஹரித்வார், தேஹ்ராதூன், பௌரி கார்வால் ஆகிய மாவட்டங்களை இணைக்கும் ராஜாஜி தேசியப் பூங்காவில், 18 கிலோமீட்டர் நீளத்துக்கு இருக்கும் ரயில்பாதையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக யானைகளுக்கு எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படவில்லை. அதற்குக் காரணங்கள், வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பதும், ரயில் ஓட்டுநர்களுக்கு ஆங்காங்கே அறிவிப்புப் பலகைகள் வைத்திருப்பதும், இருப்புப்பாதையை ஒட்டியிருக்கும் மேடான பகுதிகள் மற்றும் சரிவுகள் சமநிலைப்படுத்தப்பட்டதும், பார்வை மறைப்பு வளைவுகளில் (Blind Curves) உள்ள மறைப்புகளை அப்புறப்படுத்தியதும், ஓட்டுநர்கள் வேகக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதும் ஆகும். இதே போன்ற நடவடிக்கைகள் மேற்குவங்க மஹானந்தா வன உயிரினக் காப்பகத்திலும் எடுக்கப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2014-ல் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, இதுவரை மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் 6.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 900 திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஆயினும், சுற்றுச்சூழல் கெடாமல் இருக்கவும் வன உயிரினங்களின் பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாமல் இருக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு கண்டிப்பாக எடுக்கும் என்றும் அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

இந்திய வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டமும், மற்ற வழிகாட்டுதல்களும், விதிகளும் மீறப்படுவது; வனத்துறையில் மலிந்து கிடக்கும் ஊழல் மற்றும் பொறுப்பின்மை, இதனால் தொடர்ந்துகொண்டிருக்கும் வன ஆக்கிரமிப்புகள்; இவற்றின் விளைவாக வேகமாகச் சுருங்கிவரும் வனப்பகுதிகள் ஆகியவையே, அருகிவரும் உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ள யானைகள் இறந்துபோவதற்கும், எண்ணிக்கை குறைவதற்கும் முக்கியக் காரணங்கள். இதில் யானைகளின் நலன் மனிதனின் கைகளில்தான் இருக்கிறது. மனிதன் தன்னை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும்.

ஒரு பக்கம் மனிதனின் ஆக்கிரமிப்புகளாலும், வளர்ச்சித்திட்டங்களாலும், உள்கட்டமைப்புத் திட்டங்களாலும் காட்டு யானைகள் அழிந்து வரும் நிலையில், மறுபக்கம் தனியார் வசமும், வழிபாட்டுத் தலங்களிலும் சிறைப்படுத்தப்பட்ட யானைகள் கடும் துன்பத்தையும் சித்தரவதையையும் அனுபவித்து இறந்துபோகின்றன. காட்டு யானைகளைப் பொருத்தவரையில் சித்தரவதை என்பது இல்லை. ஆனால் சிறைப்படுத்தப்பட்ட யானைகளுக்குக் கன்று வயது முதல் இறந்துபோகும் வரை துன்பமும் சித்தரவதையும்தான் வாழ்க்கை.

(சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் அவலங்கள் அடுத்த இதழில் வெளியாகும்.)

சான்றுகள்:

(1) https://en.wikipedia.org/wiki/Project_Elephant

(2) http://www.wpsi-india.org/images/a_god_in_distress.pdf, பக்கம் 30, 31.

(3) http://timesofindia.indiatimes.com/city/bareilly/Over-6000-elephant-deaths-in-two-decades/articleshow/47193313.cms?gclid=CMvrsMKn_c4CFdOFaAod3-wJQg

(4) https://www.scoopwhoop.com/inothernews/elephants-killed-on-railway-tracks/#.khj8bzrhv

-oOo-