பிட்காய்ன் என்பது ஒரு நாணயம். அது கணினிகளிலேயே உருவாகி, அவற்றின் வழியாகவே பரிமாற்றம் செய்யப்படுகிறது. அதெப்படி கணினிகளிலேயே உருவாகும்? யார் அதை உருவாக்குகிறார்கள்? அதன் மதிப்பு எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது? அது சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்படுகிறதா? அதில் அப்படியென்ன தனித்துவமான, மற்ற நாணயங்களில் இல்லாத வசதிகள் இருக்கின்றன? இப்படிப் பலப்பலக் கேள்விகள் நமக்குள் எழுவது இயற்கையே.
பணவாட்டப் பொருளாதாரக் கொள்கையை (deflationary economics) அடிப்படையாகக் கொண்டு, தொழில்நுட்பம் மற்றும் கணிதத்தின் மூலம் பிட்காய்ன் உருவாக்கமும் பரிவர்த்தனைகளும் நடைபெறுகின்றன. ஆகவே, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தின் வழியாகவே நாமும் பிட்காய்னைப் புரிந்துகொள்வோம்.
பொருளாதாரக் கூறுகள்
பணத்திற்கு மூன்று முக்கியச் செயல்பாடுகள் இருக்கின்றன.
1. பொருட்களையோ, சேவைகளையோ பரிமாறிக்கொள்ள ஒரு சாதனம் (medium of exchange) – கடைக்காரரிடம் ஒரு பொருளை வாங்கிவிட்டு நாம் அதற்குப் பணம் தருவது.
2. பொருட்கள் மற்றும் சேவைகளை மதிப்பீடு செய்யும் ஓர் அலகு (unit of account) -வீட்டை நிர்வாகம் செய்யும் மகளிரோ அல்லது அலுவலகத்தில் உள்ள ஒரு நிர்வாகியோ, பட்ஜெட் விவரங்களைத் தயாரிக்கும்போது இன்னின்ன பொருள் இவ்வளவு விலை என்று குறித்து அதற்கேற்றவாறு வரவு-செலவுகளைத் திட்டமிடுவது.
3. மதிப்பைச் சேமித்து வைக்கும் ஒரு கருவி (store of value) – குழந்தைகளின் மேற்படிப்புச் செலவுக்காகவோ, எதிர்காலத்தில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள வெளிநாட்டுப் பயணச் செலவுக்காகவோ பணத்தைப் பெட்டியிலோ அல்லது வங்கியிலோ போட்டு வைத்திருப்பது.
உலகின் எல்லா மூலைகளிலும் இந்த மூன்று செயல்களை எது செய்கிறதோ அதுவே பணம். பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் இந்தச் செயல்களைச் செய்யும் பணத்தை அரசாங்கமே கட்டுப்படுத்துகிறது. காரணம் ரொம்பச் சுலபம் – எப்படி மின்சாரம் முழுக்கத் துண்டிக்கப்படாது என்றும், வாகனங்கள் செல்லச் சாலைகள் திறந்தே இருக்குமென்றும் அரசாங்கத்தை நம்புகிறோமோ, அப்படியே பெரும்பாலும் நிலையானதொரு மதிப்பீட்டுடன் மேற்சொன்ன மூன்று செயல்களையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பணம் செய்யமுடியும் என்று நம்புகிறோம்.
ஆனால், ஒரே ஒரு சின்ன பிரச்சினை – உலகிலுள்ள பெரும்பாலான அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நாணயங்கள், ‘பணவீக்க’ நாணயங்கள். அதாவது, வருடாவருடம் அந்த நாணயங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகும்; எனவே அவற்றின் மதிப்பு குறைந்துகொண்டே போகும். (ஜப்பான் இதற்கு விதிவிலக்கு. அங்கே அரசாங்கத்தின் ‘யென்’ என்ற நாணயம் ‘பணவாட்ட’ நாணயம் – அதாவது, நாணயத்தின் எண்ணிக்கை மொத்த உற்பத்தி மற்றும் நுகர்வை வைத்துப் பார்க்கும்போது வாடிக்கொண்டே / குறைந்துகொண்டே போகும்; எனவே அவற்றின் மதிப்பு கூடிக்கொண்டே போகும்.) ஒருவகையில், இது ‘கோழி வந்ததா, முட்டை வந்ததா’ பிரச்சினைதான் – அதிக அளவில் நாணயங்களை அச்சடித்தால் இருக்கும் நாணயங்களின் மதிப்பு குறைந்து விலைவாசி ஏறும். அவ்வாறு ஏறும்பொழுது, அதைச் சமாளிக்க மேலும் நாணயங்களை அச்சடிக்க வேண்டியிருக்கும். (இது கொஞ்சம் மிகையான எளிமைப்படுத்தல்தான்.)
2008ம் வருடப் பொருளாதார நெருக்கடியின் போது, அமெரிக்க அரசாங்கம் ஃபெடரல் ரிசர்வின் உதவியுடன் பணப் புழக்கத்தை அதிகரித்தது. வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் தவறான நடவடிக்கைகளால் விளைந்த பொருளாதாரச் சரிவுக்கு, மக்கள் வரிப்பணத்தில் தீர்வு காண நினைத்தது. இது சமூகத்தில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. மொத்தத்தில் அரசாங்கம் பெருநிறுவனங்களின் சார்பாகவே செயல்படுவதாக ஒரு கருத்து நிலவியது. இந்தக் கருத்து சரியா, தவறா என்பது இங்கே பொருட்டல்ல; ஆனால், பிட்காய்னின் வரலாற்றில் இந்தக் கருத்து ஒரு முக்கியப் பங்கு வகித்தது.
இதற்கிடையில், மின்னணுப் பணப்பரிவர்த்தனை உலகில் பெருமளவில் பரவ ஆரம்பித்தது. மக்கள் கடன் அட்டைகளிலும் (கிரெடிட் கார்ட்), பற்று அட்டைகளிலும் (டெபிட் கார்ட்) இணையம் வழியாகத் தங்கள் பணப் பரிவர்த்தனைகளைப் பெருமளவில் செய்தனர். இப்படிச் செய்யப் பல இடைநிலை நிதிநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்கு தேவைப்பட்டது. இதிலும் சில பிரச்சினைகள் இருந்தன. ஒரு சிறுவணிகர் தன் கடையில் அட்டை மூலமாகவோ இணையம் வழியாகவோ பெற்றுக்கொள்ளும் பணம், அவருக்கு உடனே வந்து சேராமல் நாட்கணக்கிலோ, வாரக்கணக்கிலோ தாமதமாக ஆரம்பித்தது.
அதுமட்டுமில்லாமல், ஒருவரின் தனியுரிமை சுலபமாக பாதிக்கப்படக் கூடிய நிலையும் இதில் உருவானது. அட்டைகள் மற்றும் இணையம் மூலம் நடக்கும் பரிவர்த்தனைகள், அவற்றைச் செய்பவரின் அடையாளத்துடனே நடப்பதால், இடைநிலை நிறுவனங்கள் அந்தத் தகவல்களைத் தவறாகப் பிரயோகிக்கும் நிலை ஏற்பட்டது.
மேலே சொன்ன விஷயங்களெல்லாம் ஒருவருக்கு உறுத்தியது. அவர் பெயர் ‘சதோஷி நகமோதோ.’ (இந்தப் பெயரே ஒரு புனைப்பெயர்தான். இந்தப் பெயரில் உள்ளவர் யார் என்பதும், அவர் ஆணா, பெண்ணா அல்லது ஒரு குழுவா என்பதெல்லாமும் இன்று வரை மர்மமாகவே இருக்கிறது. நம் சௌகரியத்துக்காக, ‘அவர்’ என்ற மரியாதைப் பன்மையிலேயே குறிப்பிடுவோம்.) பணம் அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லாமல், மனிதனுக்கு மனிதன் (peer-to-peer) பரிமாறிக்கொள்ளும் ஒன்றாகவே இருக்கவேண்டும் என்று அவர் நினைத்தார். அந்த எண்ணத்தின் விளைவாக உருவானதே பிட்காய்ன்.
சரி, பிட்காய்ன் எப்படி மேலே சொல்லியிருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வாகும்? இந்தக் கேள்விக்கு விடை, பொருளாதாரத்தைத் தாண்டி, தகவல் தொழில்நுட்பத்திலேயும் கணிதத்திலேயுமே இருக்கிறது.
பிட்காய்ன் உருவாவது எப்படி?
முன்னொரு காலத்தில், நாணயங்கள் தங்கம், வெள்ளி, செப்பு போன்ற உலோகங்களினால் செய்யப்பட்டிருந்தபோது, அந்த உலோகங்களைச் சுரங்கங்களிலிருந்து வெளிக்கொணர்ந்து பின்பு நாணயங்கள் செய்தார்கள். ஓரளவு சுலபமாகக் கிடைக்கும் உலோகங்கள் குறைந்த மதிப்புடைய பொருட்களுக்கும், அரிதாகக் கிடைக்கும் உலோகங்கள் அதிக மதிப்புடைய பொருட்களுக்கும் விலையாய்க் கொடுக்கப் பயன்பட்டன.
பிட்காய்னும் ஒருவகையில் இப்படிச் சுரங்கத்தில் தோண்டியெடுக்கப்படும் உலோகம் போலத்தான். பிட்காய்னுக்கென்று ஒரு நிரல் (program) உள்ளது. அதைத் தரவிறக்கி அதில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு கணிதப்புதிருக்கு விடை கண்டுபிடித்தால் பிட்காய்ன் உடனே அந்தக் கணினியில் உருவாகிவிடும். அந்தப் புதிர்தான் என்ன? சுரங்கவேலை போல மிகவும் நேரமும், உழைப்பும் எடுக்கக்கூடிய ஒரு கடினமான வேலையை நிகழ்த்துவதற்கான ஒரு வழிமுறைதான் அந்தப்புதிர்!
உதாரணத்திற்கு – சென்னையில் நீலநிற வண்ணம் அடித்து, பக்கத்தில் வாழைமரமும் உள்ள வீட்டை நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும் என்று ஒரு சவால்! நீலநிற வண்ணம் அடித்த வீடுகள் பல இருக்கலாம். ஆனால் அருகில் வாழைமரத்துடன் இருக்கும் வீடு என்றதும் அப்படியொரு வீட்டைக் கண்டுபிடிக்கும் சாத்தியக்கூறு குறைகிறதல்லவா? அதுபோல, ஒரு கடின இலக்கு ஒன்றை அந்த நிரல் உங்களுக்கு அளிக்கும். அந்த இலக்கு 40 பூஜ்யங்களுடன் (உதாரணத்திற்கு) தொடங்கவேண்டும் என்பதாக இருக்கும். அதைக் கணக்கிடுவது அவ்வளவு சுலபமல்ல! இந்தக் கணக்கைச் செய்வதற்கென்றே ASIC என்று கூறப்படும் ஒருவித கணினிகளைப் பயன்படுத்தி இதைச் செய்வார்கள். அவ்வாறு கண்டுபிடிக்கப்படும் விடை ஒரு தொகுதியின் (block) பெயராக வைக்கப்படும். இதை நீங்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டீர்களென்றால், அந்தத் தொகுதி உருவானதும் அதற்குள்ளேயே குறிப்பிட்ட அளவு பிட்காய்ன்கள் உருவாகி அந்தப் பரிவர்த்தனைக்கான ஒரு பொது முகவரியில் (public address) அது சேர்ந்துவிடும். இந்தத் தொகுதி ஒருவகையில் ஒரு பணப்பை போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். உங்களுக்கு இதில் கிடைக்கும் பிட்காய்ன் தவிர, இந்த நெட்ஒர்க்கில் மற்றும் பலர் செய்துள்ள பிட்காய்ன் பரிவர்த்தனைகளை நீங்கள் புகுத்தவேண்டும். பின்பு அதை நெட்ஒர்க்கில் மீண்டும் பரப்பவேண்டும்.
ஆஹா, பிட்காய்ன்தான் கிடைத்து விட்டதே; இதை வைத்து மசால்வடையோ, மாளிகையோ எதையோ வாங்கியே ஆகவேண்டும் என்று உடனே கிளம்பிவிட முடியாது! நீங்கள் கண்டுபிடித்த விடை சரியா என்பதை இன்னும் பலர் சரிபார்க்கவேண்டும். அப்பொழுதுதான் உங்களுக்குக் கிடைத்த பிட்காய்னும், மேலும் அந்தத் தொகுதிக்குள் இருக்கும் மற்றும் பலரின் பரிவர்த்தனைகளும் ‘முறையானது’ என்றாகும். அதாவது நீங்கள் நியாயமாகவே ‘சுரங்க வேலை’ செய்துதான் அந்த விடையைக் கண்டுபிடித்ததாக நிரூபிக்கப்படும்.
ஆனால் அப்படிச் சரிபார்க்க ஒவ்வொருவருக்கும் நெடுநேரம் ஆகாது. வாழைமரம் அருகில் உள்ள நீலநிற வண்ணம் அடிக்கப்பட்ட வீட்டைப் பற்றிப் பார்த்தோமல்லவா? நீங்கள் அந்த வீட்டைக் கண்டுபிடித்தபின், அதன் வழியைப் பொதுவெளியில் அறிவித்தீர்களென்றால், அந்த வழியை வைத்து நீங்கள் அடைந்த வீடு சரியானதுதான் என்று உறுதிப்படுத்திக் கொள்வது சுலபம்தானே. அதேபோலத்தான் பிட்காய்னிலும். உங்கள் விடையையும், உள்ளீட்டையும் நீங்கள் கொடுத்துவிட்டால், சரிபார்ப்பவர்கள் நீங்கள் பயன்படுத்திய அதே வழிமுறையை (அல்கோரிதம்) உபயோகப்படுத்தி வெகு சீக்கிரம் சரிபார்த்துவிடுவார்கள். அப்புறம் என்ன? உங்கள் விருப்பப்படி நீங்கள் மசால்வடை வாங்கச் செல்லலாம். (கொஞ்சம் பொறுங்கள். மசால்வடையைப் பற்றிப் பின்னர் மீண்டும் பேச வேண்டியிருக்கும்.)
அப்படியென்றால் யார் வேண்டுமானாலும் இப்படிச் செய்து பிட்காயின்களை உருவாக்கிடமுடியுமா? முன்னே கூறியிருப்பது போல, ASIC கணினிகளைப் பெருமளவில் வாங்கி உபயோகப்படுத்தி யார் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். உலகளவில் இந்த வேலையைச் செய்யும் நிறுவனங்கள் உள்ளன. அவர்களும் தாங்களாகவே இதை முழுமையாகச் செய்வதில்லை; செய்வதும் சுலபமில்லை. எனவே, அவர்கள் ஒரு குழுவை (mining pool) உருவாக்கி பொதுமக்களை அந்தக் குழுவின் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொள்வார்கள். அதில் ASIC கணினிகள் வாங்கப்பட்டு, பிட்காய்ன் உருவாக்கும் வேலை நிகழும். அப்படி வரும் பிட்காயின்கள் அவரவரின் பங்களிப்பு மற்றும் விதிகளுக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும்.
பிட்காய்ன் பரிவர்த்தனைகள்
வெற்றிகரமாக இப்போது பிட்காய்ன் உருவாகிவிட்டது. இனி, இதை வைத்து எப்படிப் பரிவர்த்தனைகள் செய்வது என்று பார்ப்போம்.
பிட்காய்ன் நிரலில் உங்களிடம் உள்ள மொத்தப் பணத்தின் எண்ணிக்கையும் ஒரே பதிவாக இருக்காது. உதாரணத்துக்கு, முகவரி 1ல் 5 பிட்காய்னும் முகவரி 2ல் 3 பிட்காய்னும் உங்களுக்குக் கிடைத்ததென்றால், அவை அதே வடிவில் தனித்தனியாக இருக்குமே தவிர ‘உங்களிடம் மொத்தம் 8 பிட்காய்ன் உள்ளது’ என்ற வடிவில் இருக்காது. ஒருவகையில் உங்கள் கையில் இருக்கும் பணத்தைப் போலத்தான் இது. 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் நீங்களே அதைக் கூட்டித் தெரிந்து கொள்ள முடியுமே. இதற்குச் சில காரணங்கள் உண்டு. ஆனால், அது கொஞ்சம் விரிவாகப் பேசவேண்டிய விஷயம்.
இப்படித் தனித்தனியாக இருக்கும் பிட்காய்ன்களை எப்படிச் செலவு செய்வது? இதுவும் பணத்தைச் செலவு செய்வது போலத்தான். நீங்கள் 6 பிட்காய்ன்களை ஒருவருக்குத் தரவேண்டும் என்றால், உங்களிடம் உள்ள 5 மற்றும் 3 பிட்காய்ன்களை அவருடைய பொதுமுகவரிக்கு அனுப்ப வேண்டும். மீதி 2 பிட்காய்ன்களை உங்களுக்கென்று இன்னொரு முகவரியில் வாங்கிக் கொள்ளலாம்.
பிட்காய்ன் பரிமாற்றத்துக்குப் பொதுமுகவரி மிகமுக்கியம். உங்கள் பொதுமுகவரியிலிருந்து வாங்குபவரின் பொதுமுகவரிக்கு நீங்கள் பணத்தை அனுப்பலாம். இந்த முகவரியை நீங்கள் உருவாக்க உங்களுக்கு முதலில் இரு குறியீட்டு எண்கள் (சாவிகள்) வேண்டும். உங்களுக்கென்று தனியாக ஒன்று (private key), உங்கள் அடையாளமாகப் பிறருக்குத் தரக்கூடிய ஒன்று (public key) – இப்படி இரண்டு குறியீட்டுச் சாவிகளை வைத்துத்தான் உங்கள் பொது முகவரியை உருவாக்க முடியும். (இது எப்படியென்றால், முதலில் சாவியைத் தயாரித்துவிட்டு பின்பு அதற்கான பூட்டைச் செய்து, பின்பு உங்கள் முகவரியை உருவாக்கி, அந்த முகவரியில் உள்ளதைப் பூட்டுவது போல.)
குறிப்பாக அந்தத் தனிப்பட்ட குறியீட்டு எண் (private key) பத்திரம்! தொலைத்துவிட்டால் டூப்ளிகேட் எல்லாம் கிடைக்காது. மொத்த பிட்காய்னும் அம்பேல்தான்.
பிட்காய்னின் பொருளாதாரம்
நாடுகள் தங்கள் நாணயத்தை அடிப்பதற்கும் (சிலேடைக்கு மன்னிக்கவும்!), பிட்காய்ன் உருவாவதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. ஒரு நாட்டில் பொதுவாக எவ்வளவு பணம் புழக்கத்தில் இருக்குமென்பதும், அது வருடாவருடம் எப்படி மாறுமென்பதும் யாராலும் துல்லியமாகக் கணிக்கமுடியாது. ஆனால் பிட்காய்ன் அப்படியல்ல. மொத்தமாக 2.1 கோடி பிட்காய்ன்கள் மட்டுமே மொத்தமாகப் புழக்கத்துக்கு வரும். அவையும் எவ்வளவு நேரத்தில் எவ்வளவு பிட்காய்ன்கள் உருவாகும் என்பதை ஓரளவு துல்லியமாகவே சொல்லிவிடலாம். ஒவ்வொரு 4 வருடங்களுக்கு ஒருமுறை, பிட்காய்ன் உருவாக்கம் என்பது முந்தைய அளவிலிருந்து பாதியாகக் குறையும். சென்ற வருடத்தின் தொடக்கத்தில், ஒரு தொகுதிக்கு (block) 12.5 பிட்காய்ன்கள் என்ற விகிதத்தில் இருந்தது, வரும் 2020 வருடத்தில், ஒரு தொகுதிக்கு 6.25 பிட்காய்ன்கள் என்று குறைந்துவிடும். இப்படிப் படிப்படியாகக் குறைந்து, 2140ம் வருட வாக்கில் மொத்த பிட்காய்ன் உற்பத்தியும் நடந்தேறிவிடும்.
வெறும் 2.1 கோடி பிட்காய்ன்களை வைத்துப் பெரிதாக என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வி எழுகிறதல்லவா? எப்படி ரூபாய் என்பது பைசாக்களாகப் பகுக்கப்படுகிறதோ, அதுபோல பிட்காய்னுக்கும் பகுப்புகள் உண்டு. ஒரு பிட்காய்னில் நூறு கோடியில் ஒரு பங்கு ‘சதோஷி’ எனவும், பத்து லட்சத்தில் ஒரு பங்கு ‘மைக்ரோ பிட்காய்ன்’ எனவும், ஆயிரத்தில் ஒரு பங்கு ‘மில்லி பிட்காய்ன்’ எனவும் அழைக்கப்படுகின்றன. இந்தக் கட்டுரை எழுதும் சமயத்தில் ஒரு பிட்காய்ன் இந்திய பிட்காய்ன் சந்தைகளில் ஐந்து லட்சம் ரூபாய்! எனவே இன்று 20 மைக்ரோ பிட்டுகள் இருந்தால் போதும் – 10 ரூபாய் பெறுமானமுள்ள மசால்வடையை வாங்கிவிடலாம்.
ஆனால் ஒன்றை யோசித்துப் பாருங்கள். அதிகபட்ச எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்ட – அதாவது நீண்டகால நோக்கில் தங்கத்தைப் போல அரிதாகவே கிடைக்கும் பிட்காய்னை மசால்வடை, டீ போன்ற தினசரி தேவைகளுக்குப் பயன்படுத்துவோமா? இந்தக் கேள்விக்குத் தீர்மானமான பதில் இல்லை. உலகம் முழுவதும் உள்ள பொருளாதார நிபுணர்கள் மற்றும் குறியாக்கவடிவ நாணயங்கள் (cryptocurrencies) பற்றி அறிந்த நிபுணர்களும், இன்னுமே இந்தக் கேள்விக்கு விடை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
பிட்காய்ன் சந்திக்கும் சவால்கள்
உலகின் எல்லாக் கண்டுபிடிப்புகளும் அவற்றின் ஆரம்பக்கட்டங்களில் அவநம்பிக்கைகளையும் கடும் எதிர்ப்புகளையும் சந்தித்தே இருக்கின்றன. அவற்றிற்கிடையே வென்று மேலெழும்பி சமுதாயத்தில் பரவலான பயன்பாட்டுக்கு வந்தவையும் உண்டு; தோல்வியடைந்து பெட்டிக்குள் முடங்கியவையும் உண்டு. பிட்காய்னும் அதன் ஆரம்பக்கட்டமான இன்றைய நிலையில் பல சவால்களைச் சந்திக்கிறது.
முதலாவதும் முக்கியமானதுமாக, பிட்காய்னின் மீது அரசாங்கங்கள் விதிக்கும் கட்டுப்பாடு. மனிதனுக்கு மனிதன் நேரடியாகப் பரிவர்த்தனை செய்துகொள்ள முடியும் வகையில் ஒரு நாணயம் இருந்தால், அது நிச்சயம் ஒரு அரசாங்கத்துக்குத் தலைவலிதான். வரும் வருமானத்துக்குச் சரியான வரி கட்டப்படுகிறதா, வரும் வருமானமே முறையாக வந்ததுதானா, தவறான நோக்கங்களுக்காக இது பயன்படுத்தப் படுகிறதா – இப்படிப் பலப்பல சந்தேகங்கள் அரசாங்கத்துக்கு நிச்சயம் வரும். எனினும் இதைத் தடைசெய்வது எளிதல்ல. பிட்காய்ன் முகவரிகள் அநாமதேயமான அடையாளங்கள். அது யாரைச் சார்ந்தது என்று கண்டுபிடிப்பது மிகமிகக் கடினம். எனவே தடை என்று வந்தால், கள்ளமார்கெட் போல பிட்காய்ன் மார்கெட் வளர்வதும் உறுதி.
இரண்டாவது, பிட்காய்னைப் பயன்படுத்துவதில் உள்ள சிரமம். இன்றைக்கு பிட்காய்னை வாங்கி விற்கவென்று இணையச் சந்தைகள் இருக்கின்றன. இந்தச் சந்தைகளை உபயோகப்படுத்திக்கொள்வது சுலபம். ஆனால், இதிலும் இரண்டு பிரச்சினைகள் உண்டு. இந்தச் சந்தைகள் உங்கள் தனிப்பட்ட குறியீட்டு எண்ணை (private key) அவையே வைத்திருக்கும். (தனிப்பட்ட குறியீட்டு எண் முக்கியம் என்று பார்த்தோமல்லவா!) இப்படி தனிப்பட்ட குறியீட்டுச் சாவியை இன்னொருவரிடம் விட்டுவைத்திருப்பது நல்லதல்ல. மேலும், நாம் எல்லோரும் உபயோகிக்கும் வகையில் சுலபமான வடிவில் பிட்காய்ன் இன்னும் வரவில்லை. கடனட்டை போல ஒரு சுலபமான முறையில் பரிவர்த்தனைகள் செய்யும்படி இருந்தால் மட்டுமே பிட்காய்ன் பொதுவரவேற்பைப் பெறும்.
மூன்றாவது, சமூகப் பார்வை. பிட்காய்னை போன்சி (ponzi) திட்டங்களுடன் சிலர் ஒப்பிடுகிறார்கள். இது ஒரு தவறான கண்ணோட்டம் என்றே படுகிறது. ஆனால், பிட்காய்னை இன்றைய தேதியில் பங்குச் சந்தை போலப் பார்க்கலாம். மற்ற கரன்சியைக் கொடுத்து பிட்காய்ன் வாங்குவது இன்று நிறையவே நடக்கிறது. ஆனால், இதன் ஏற்ற இறக்கம் மிகவும் அதிகமானதாக இருக்கிறது. திடீரென்று 4,50,000 ரூபாய் பெறுமானமுள்ள பிட்காய்ன், மறுநாளே 5,00,000 ரூபாயாகவும், அதற்கு அடுத்த வாரம் மீண்டும் 4,25,000 ரூபாயாகவும் என்று ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. இது ஓரளவு சமநிலை அடையும் வரை, சமூகத்தால் இது ஏற்றுக்கொள்ளப்படுவதும் சந்தேகமே.
பிட்காய்னின் வருங்காலம்
பிட்காய்ன் எந்தத் தனிமனிதரையும் நிறுவனத்தையும் நம்பியோ சார்ந்தோ இல்லை. ஒரு வகையில், இது ஜனநாயக முயற்சி போலத்தான். கூட்டுமுயற்சியின் மூலம் மட்டுமே நிலைத்திருக்கும் பிட்காய்ன் ஏதோ ஒரு வடிவத்தில் உலகில் பல மூலைகளில் பலரால் பயன்படுத்தப்பட்டு ஏதோ ஒரு வடிவில் வாழ்ந்துகொண்டே இருக்குமென்றே தோன்றுகிறது.