Posted on Leave a comment

யாவரும் கேளிர் | மாலதி சிவராமகிருஷ்ணன்

நாதன் மாமா வந்து உட்கார்ந்து காபி குடித்துக் கொண்டிருந்த போது பக்கத்து வீட்டிலிருந்து ‘காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?’ பாட்டு கேட்க ஆரம்பித்தது.

“என்ன அழகான, கதையோட சந்தர்ப்ப சூழ்நிலைக்கு பொருத்தமான கவிதை வரிகள் இல்லை? நீ இந்த சினிமாவை பாத்திருக்கியோ?” என்று கேட்டார்.

மாமா எப்ப வந்தாலும் எவ்வளவு சந்தோஷமா இருக்கு என்று நினைத்துக்கொண்டே, “ஓ யெஸ். பாத்திருக்கேனே. பாத்து எத்தனையோ வருஷம் ஆச்சு, ஆனா ஒவ்வொரு ஃப்ரேமும் அப்படியே மனசுல இருக்கு” என்றாள் பத்மா.

காபி டம்ளரை டீபாயில் வைத்துக்கொண்டே, “அந்த பாட்டுல கதாநாயகியோட மனசு சந்தோஷத்துக்கு உவமையா நினைக்கறதையெல்லாம் காட்சியா காட்டியிருப்பார், தும்பை அறுத்துண்டு துள்ளியோடற கன்னுக்குட்டி, மரங்களுக்கு நடுப்ற ஓடி வர சூரியன், உற்சாகத்தோட குதிச்சு பொங்கற அருவி,முகத்தை முத்தமிடற சாரல் மழை இப்பிடின்னு….” என்றார்.

“ஆமா. அந்த காட்சியைப் பத்தி யாரோ ஒரு விமர்சகர், யாருன்னு நினைவில்ல, சொல்லியிருப்பார், தி.ஜானகிராமனோட கதை வரிகளை காட்சி படுத்தினமாதிரி இருக்கும் அந்த பாடல் காட்சின்னு. அழகான கவிதை மாதிரியான சீன்தான் அது.”

“அப்பிடியா சொல்லியிருந்தார் அந்த சீனைப் பத்தி? பலே பலே. சரியான ஒப்பீடுதான்.” மாமா முகம் மலர லயித்துச் சொன்னவர் தொடர்ந்தார், “தி.ஜா என்ன மாதிரியான எழுத்து அது. அப்பா… நினைச்சு பாக்க முடியுமா அந்த மாதிரி எழுத்தையெல்லாம். ஆமா, தி.ஜா சிறுகதைத் தொகுப்பு படிச்சு முடிச்சயா?”

“ஆச்சு மாமா. ஏற்கெனவே பல கதைகளை சின்ன சின்ன தொகுப்பில படிச்சிருக்கேன், இப்ப எல்லாத்தையும் சேத்து படிக்கறது, ஒரு புதையல் கிடைச்சா மாதிரி இருக்கு. அவர் நாவல்கள்ல தொட்ட உயரத்தைக் காட்டிலும் சிறுகதைகள்ல தொட்ட உச்சம் அபாரமானதுன்னு எனக்குத் தோணறது. சிலிர்ப்பு, கோதாவரி குண்டு, பாயசம், பரதேசி வந்தான், தீர்மானம்… எல்லாம் என்ன கதைகள். கோதாவரி குண்டுல எழுதியிருப்பார் அந்த ராவ்ஜியை வர்ணிக்கும் பொழுது. அவர் ஒண்ணும் சம்பாதிக்க வழியில்லாதவர், ஒரு தொழிலும் தெரியாது, சாமர்த்தியமும் கிடையாது, வெறும்ன சாப்பிடற திவச பிராமணனா போய் சம்பாதிக்கறதுதான், அதை சொல்லும் போது எழுதுவார் ‘படைத்ததுதான் படைத்தானே கடவுள் கொஞ்சம் கெச்சலா, கறுவலா, பார்க்க பரிதாபமா படைத்திருக்க மாட்டானோ, இப்பிடியா சித்ரத்தில எழுதின மாதிரி ராஜ களையா, செக்கச் செவேல்னு கம்பீரமா படைப்பான் அந்த கடவுள். தானம் குடுக்கிறவனுக்கு கொஞ்சமாவது இரக்கம், அனுதாபம் வர வேண்டாம்? கடவுள் என்ன சராசரிக்கும் இத்தனை குறைந்த படைப்பாளியா என்ன?’ எப்பிடி எழுதறார்பாருங்கோ.”

மாமா முகமெல்லாம் சிரிப்பாக ரசித்து கேட்டுக் கொண்டிருந்தார்.

“வாஸ்தவம். அதை படிச்சுட்டு, இதையெல்லாம் எப்பிடி படிக்கறது சொல்லு.” கையிலிருந்த வார பத்திரிகையை காட்டிச் சொன்னார். “எழுதியிருக்கான் பாரு ‘யாதும் ஊரே. யாவரும் கேளீர்’னு. இது என்ன அச்சுப் பிழையா, இல்லை அறிவுப் பிழையா இல்லை அறியாப் பிழையா? இல்ல ஜோக்ன்னு எழுதியிருக்கானா, தெரியல. பொதுவாவே பல பேருக்கு பழந்தமிழ் இலக்கியத்தோட அறிமுகமும் கிடையாது, புதுசா எழுதறதுல எது தரமானதுன்னு கணிக்கும் திறமையும் கிடையாது. இவங்கதான் இந்த பத்ரிகைகள்ல உதவி ஆசிரியர்கள், இவங்கதான் எதை வெளியிடணும், எதை வெளியிடக்கூடாதுன்னு தீர்மானிக்கறாங்க. ஹ்ம்ம். பாவம் வாசகர்கள்.”

“முதல்ல கேளிர்னா என்ன அர்த்தம்னு கேளுங்கோ அவாகிட்ட.”

“அதை சொல்லு முதல்ல.”

“ஒரு நிமிஷம், மாமா குக்கர் வச்சுட்டு வந்துடறேன்.”

“மெதுவா வா. அவசரமில்லை.”

உள்ளேயிருந்து பாத்திரங்களின் சத்தம், குழாய் திறந்து தண்ணீர் விழும் ஓசை, பாட்டில்களை திறந்து மூடும் ஒலி, இவைகளுக்கு இடையே அவள் சொன்னாள், “மாமா உங்க கிட்ட ரொம்ப நாளா ஒண்ணு சொல்லணும்னு நினைச்சேன்.”

“ம்.”

“ஆண்டனி அண்ட் கிளியோபாட்ராவில ஆண்டனியை பத்தி சொல்லும்போது ஷேக்ஸ்பியர் சொல்வார், ‘அவன் நடக்கும் பொழுது சட்டைப் பையிலிருந்து சாம்ராஜ்யங்கள் சில்லறைக் காசுகளைப் போல் உருண்டு ஓடின’ என்று, அது மாதிரி உங்களைப் பத்தி சொல்லணும்னா நாதன் மாமாவின் சட்டைப் பையிலிருந்து சந்தோஷமும் அன்பும் ரசனையும் புரிதலும் சில்லறைக் காசுகளைப் போல் உருண்டு ஓடுகின்றன அப்படீன்னு சொல்லலாம்னு தோணித்து. என்ன சத்தத்தையே காணும். கேலி பண்ணி உங்களுக்குள்ள சிரிச்சுக்கறேள்னு நினைக்கறேன். பரவாயில்லை. இரண்டு நிமிஷத்தில வந்துடறேன். வேணும்னா டி.வி போட்டு பாருங்கோ. இல்லை அந்த புஸ்தகத்தைப் படிச்சுண்டுருங்கோ.”

குக்கரை வைத்துவிட்டு கையைத் துடைத்துக்கொண்டு “அப்புறம். சொல்லுங்கோ மாமா” என்றபடியே சமையலறையிலிருந்து வெளியே வந்தாள்.

மாமா ஸோஃபாவில் சரிந்து உட்கர்ந்திருந்த விதத்தில் ஒரு அசாதாரணத்துவம் தெரிந்தது. அவள் தலையில் எரிமலைக் குழம்பு, கால்களில் பனி மலைக் குளிர்ச்சி, நடுங்கியது, நிற்க முடியவில்லை. சுவரைப் பிடித்துக்கொண்டு கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.

மெதுவாக மாமா அருகில் சென்று மாமா மாமா என்று கூப்பிட்டாள். கூப்பிடும் பொழுதே அழுகை வந்தது. இல்லை இல்லை ஒண்ணும் ஆகலை.

ப்ளீஸ். எழுந்திருங்கோ. ப்ளீஸ்.ப்ளீஸ்.

அன்னிய ஆடவரைத் தொடுவதில் உள்ள தயக்கமும், நடந்தது புரிந்த பயமுமாக லேசாகக் கையைத் தொட்டு உலுக்கினாள். தலை தொய்ந்தது.

மாமா மாமா ப்ளீஸ். ப்ளீஸ்… ஐயோ. நான் என்ன செய்வேன். அழத் தொடங்கினாள்..ஒரு நிமிஷத்தில் கண்களைத் துடைத்துக் கொண்டு வாசல் வழியாக வெளியே ஓடி வந்தாள். நல்லவேளையாகப் பக்கத்து காம்பவுண்டில், துணிகளைக் கொடியில் இருந்து செந்தில் அம்மா எடுத்துக் கொண்டிருந்தாள்,

“செந்தில் அம்மா, இங்க ஒரு நிமிஷம் வாங்களேன்.”

“என்ன சேகர் அம்மா என்ன வேணும்” என்று அருகில் வந்தவள் அவள் முகத்தையும் கண்களையும் பார்த்தவுடன் சட்டென்று புரிந்து கொண்டு “என்ன ஆச்சு? எதாவது பிராப்ளமா?” என்றாள் கண்களை குறுக்கி கொண்டு.

‘செந்தில் அப்பா இருக்காரா? அவரையும் கூப்பிடுங்களேன் கொஞ்சம்.”

வாசலுக்கு நேர் எதிரில் இருந்த ஸோஃபாவில் செல்வி இருந்தாள். “செல்வி. அப்பாவை கூப்பிடு. ஆண்டி கூப்பிடறாங்க பாரு.”

செல்வி இவளைப் பார்த்துக் கொண்டே “அப்பா பக்கத்து வீட்டு ஆண்டி கூப்பிடறாங்கப்பா” என்றாள்.

அவர் கொடியில் இருந்த சட்டையை உருவி பட்டனைப் போட்டுக்கொண்டே வெளியே வந்தார். இவளைப் பார்த்ததும், தலையைக் கோதிக் கொண்டு “எங்க வெங்கடேசன் சாரை இரண்டு நாளா காணும்?” என்றார்.

“டூர் போயிருக்கார், இன்னிக்கு வந்துடுவார்” என்று அவசரமாகச் சொல்லிவிட்டு அவர் பேச இடம் கொடாமல், “சார். நீங்களும், செந்தில் அம்மவும் ஒரு நிமிஷம் எங்க வீட்டுக்கு வாங்களேன்.”

அவர்களிருவரும் வாசல் கேட்டைத் தாண்டி வரும் வரை அவசரமும் பதற்றமுமாகக் காத்திருந்தாள்.

மாமா உங்களுக்கு ஏன் இப்படி ஆயிற்று? அதுவும்… சே. தலையை ஆட்டி அந்த எண்ணத்தைப் போக்க முயன்றாள்.

“என்ன ஆச்சு?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தவர், “அய்யோ என்ன ஆச்சு இவருக்கு? நாதன் ஸார்தானே?”

அவள் ஆமாம் எனத் தலையை அசைத்து, “சமையலறையிலிருந்து வெளில வந்து பாத்தேன் இப்படிக் கிடந்தார்” முடிக்கும் பொழுது மறுபடியும் அழுகை வந்தது.

“இருங்க இருங்க. பயப்படாதீங்க” அவளிடம் சொல்லிவிட்டு, “என்னங்க. கொஞ்சம் முகத்தில தண்ணி தெளிச்சு பாருங்க” என்றாள் செந்தில் அம்மா, தன் கணவரிடம்.

அவர் சப்பாட்டு மேஜை மேலிருந்த டம்ளரில் இருந்து தண்ணீர் எடுத்துத் தெளித்தார். பின் மெதுவாக மாமா கையைப் பிடித்துப் பார்த்தார். இவளிடம் திரும்பி, “டாக்டர் இளங்கோவுக்கு ஃபோன் போட்டு உடனே வரச் சொல்லுங்க” என்றார் பரபரப்பாக.

“ஃபோன் ரண்டு நாளா வேலை செய்யல” என்றாள் கம்மிய குரலில்.

வாசல் பக்கம் ஓடி வலது பக்கம் பார்த்தார். கையைத் தட்டி “கண்ணன் கண்ணன” என்று கூப்பிட்டார். கையினால் பைக் ஓட்டுவது போலக் காட்டி “பைக்கோட வா சீக்கிரம்” என்றார்.

சில நொடிகளுக்குப் பிறகு பைக் சத்தத்தோடு வாசலில் நின்றது. செந்தில் அப்பா அவனிடம் மெதுவாக தணிந்த குரலில் சொல்ல அவன் தலையை ஆட்டிக் கொண்டே பைக்கிலிருந்து சாய்ந்து உள்ளே எட்டிப் பார்த்தான்.

அவர் “சீக்கிரம்” என்று அவன் தோளைத் தட்டினார்.

உள்ளே வந்தார். பத்மா அவர்களிருவரையும் உட்காரச் சொல்லி சேரைக் காட்டினாள். அவர், “இருக்கட்டும் இருக்கட்டும். அதுக்கு இப்ப என்ன? எப்ப வந்தாரு இவரு?” எனக் கேட்டார்.

“இப்பதான் ஒரு கால் மணி நேரம் ஆயிருக்கும், திருச்சிக்கு சினேகிதர் வீட்டுக்குப் போயிட்டுருந்தேன், பஸ் இங்க நின்னது, சரி உங்களையெல்லாம் பாத்து நாளாச்சேன்னு தோணிச்சு, இறங்கிட்டேன் அப்படின்னார்…”

“அம்மா. கிரிக்கெட் பால் திருப்பியும் சாக்கடையில விழுந்துடுத்து, இந்த வாட்டி எடுக்க முடியலை, இன்னொரு பால்…” என்று கத்திக்கொண்டே சேகர் ஓடி வந்தான். “ஹாய் அங்கிள். ஹலோ ஆண்டி.” அவர்கள் இருவரையும் பார்த்துச் சிரித்தான். ஸோஃபாவைப் பார்த்ததும் “ஐ. நாதன் மாமா.” என்று அவர் அருகில் ஓடப் பார்த்தவன் சட்டென்று நின்று, ஏதோ சரியில்லை என உணர்ந்தவன் போல “என்னம்மா” என்றான் மெதுவாக.

“மாமாவுக்கு உடம்பு சரியில்லை. நீ சாரதா ஆண்ட்டி வீட்டுக்குப் போய் வித்யா, ரம்யா இரண்டு பேரும் இன்னும் கொஞ்ச நேரம் அங்கயே விளையாடட்டும்னு அம்மா சொல்லச் சொன்னான்னு ஆண்ட்டி கிட்ட சொல்லு. நீயும் அங்கயே கொஞ்ச நேரம் இரு” என்று சொல்லும்போதே எவ்வளவு மோசமான நிலைமையிலும் மனம் வேறு வேறு தளங்களில் அதது பாட்டுக்கு இயங்குவதன் ஆச்சரியம் பற்றி யோசித்தாள்.

“இல்லம்மா. நான் இங்கயே இருக்கேன், சொல்லிட்டு மட்டும் வந்துடறேன்.”

“இல்லடா.”

“இல்லம்மா. அப்பா வேற இன்னும் வல்ல, நான் இருக்கேம்மா.”

“பெரிய மனுஷன் மதிரி பேசறான் பாருங்க.” செந்தில் அம்மா சிரித்தாற்போல் சொன்னது கொஞ்சம் அசந்தர்ப்பமாக இருந்தது. அந்த நொடியைத் தாண்ட நினைப்பது போல, “குக்கர் ரொம்ப நாழியா சத்தம் போடுது. நிறுத்தட்டா?”.

அவள் பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே போய் அடுப்பை அணைத்தாள் செந்தில் அம்மா. ‘நாழி என்கிற சொல்லைப் பயன்படுத்துகிறார்களே, எந்த ஊரைச் சேர்ந்தவராய் இருப்பார்’ என பத்மா யோசித்தாள்.

“இல்ல கண்ணா. நீ அங்கயே ரம்யா, வித்யாவோட இருந்தாதான் சௌகர்யமா இருக்கும். நீ இல்லன்னா அதுக ரண்டும் இங்க ஓடி வந்துடும். சாரதா ஆன்டிக்கும் ரொம்ப நேரம் அதுகளை மேய்க்கறது கஷ்டமா இருக்கும். நீ இப்ப போய்ட்டு ஒரு ஆறரை, ஏழு மணி வாக்கில அதுகளையும் கூட்டிண்டு வா. அதுதான் எனக்கு ரொம்ப உதவியா இருக்கும் சரியா?” என்றாள் பத்மா.

அவன் உதட்டைக் கடித்துக் கொண்டு தலையை ஆட்டிவிட்டு வெளியே போனான். பத்து வயதுக்கு மனிதர்களைப் புரிந்து கொள்வதும், நிலைமைக்குத் தகுந்த மாதிரி இதமாக இருப்பதும் அதிகம்தான். நாதன் மாமா கூட அவன் தலையைக் கோதி விட்டுக்கொண்டு சொல்லுவார், எவ்வளவு முதிர்ச்சியோட பேசறான் பாரு என்று. அவர் போன முறை வந்தபோது சேகர் கிரிக்கெட் விளையாடுவது போல வெறும் கையை வைத்து பேட்டைச் சுழற்றுவது போல செய்து கொண்டிருந்தான். “மாட்ச் நடக்கறதே ஃபாலோ பண்றியா” என்றார். அவன் தலையை ஆட்டியதும் “உனக்கு யார் ஆட்டம் பிடிக்கும்?” அவன் ஒரு நிமிடம் யோசித்தான். அவரே “சச்சின்?’ என்று கேட்டார். “சச்சினும் பிடிக்கும், தீபாவளி வாண வேடிக்கை பாக்கற மாதிரி இருக்கும் அவர் ஆட்டம். ஆனா எனக்கு ராஹுல் திராவிட்தான் பிடிக்கும்.”

“ஏன்?”

“அவர் விளையாடறப்போ தன்னை பத்தி கவலைப் படாம தன் இண்டிவிஜுவல் ஸ்கோரெப் பத்தி கவலைப்படாம, தன் டீமைப் பத்தி மட்டும் யோசிச்சு, ஒரு யோகி மாதிரி ஆடறார்னு தோணும், அதுனால பிடிக்கும்.”

மாமா ஆச்சரியத்தில் கண்களை விரித்து, “இங்க வாடா கண்ணா” என்று அவனை நெஞ்சோடு அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.

அவளிடம் அவன் விளையாட போன பின்னர் சொன்னார், “அவன் தானா யோசிச்சு சொல்லல, யாரோ எழுதினதை படிச்சுட்டு சொல்றான்னே வச்சுப்போம், ஆனா படிக்கற எத்தனையோ விஷயங்கள்ல இதை தன் அபிப்ராயமா சொல்றதே இதுதான் தான் நினைக்கறதுக்கு நெருக்கமா இருக்குன்னு உணர்வதால்தானே? அதுதான் அவன் யாருன்னு காட்டறதுன்னு நினைக்கறேன். இல்லையா?” என்றார்.

மாமா தான் ஆண்டனி அன்ட் கிளியோபாட்ராவைப் பற்றிச் சொன்னதைக் கேட்டிருப்பாரா? என்ன யோசனை இது, இந்த நேரத்தில்…

குக்கரை அணைத்துவிட்டு டைனிங்க் டேபிளை ஒட்டி நின்று கொண்டாள் செந்தில் அம்மா. இவள் சற்றுக் கோணலாகத் தள்ளி இருந்த நாற்காலியைப் பிடித்துக்கொண்டு தலை குனிந்து நின்றாள். செந்தில் அப்பா வாசல் பக்கம் பார்த்தாற்போல் நின்று கொண்டு எதையோ யோசிப்பவர் போல் இருந்தார். மூவருமே மாமாவைப் பார்ப்பதை தவிர்க்கிறோமோ என நினைத்துக் கொண்டாள். நடிக்கத் தெரியாத நாடக நடிகர்கள், மேடையில் எங்கு நிற்க வேண்டும், எப்படிக் கைகளை வைத்துக் கொள்ளவேண்டும், யாரைப் பார்க்கவேண்டும் என்ற நிச்சயமின்மையோடும் தடுமாற்றத்தோடும் நிற்பது போல மூவரும் நிற்பது இருக்கும் எனத் தோன்றியது. மாமாவிடம் சொன்னால் இதை ரசித்துக் கேட்பார் என்றும் நினைத்தாள். என்ன அபத்தமாக யோசிக்கிறேன்?

வாசலில் பைக் சத்தம் கேட்டது. அதற்குள்ளாகவா கண்ணன் டாக்டரைக் கூட்டி வந்து விட்டான்? பரவயில்லையே. இல்லை தனியாக வந்தான்.

“சார். டாக்டர் பக்கத்து ஊருக்கு போயிருக்காராம் கிளினிக்ல சொன்னாங்க. அட்ரஸ் குடுத்துருக்காங்க. போய் கூட்டிக்கிட்டு வந்துடறேன். நேரமாச்சுன்னு நினைக்கப் போறீங்களேன்னு சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன்.”

“எப்ப போனாராம்?”

“ஒரு மணி நேரம் ஆச்சுன்னாங்க.”

“ம்….அப்ப வர நேரம்தான். சரி. நீ கேர்ஃபுல்லா ஓட்டிட்டுப் போ. வழியில பாத்துக்கிட்டே போ. இடையிலயே பாத்தாலும் பாப்பேன்னு நினைக்கறேன்.” அவனை அனுப்பிவிட்டு “இதான் இந்த மாதிரி சின்ன ஊர்ல பிரச்னை. ம்… என்ன பண்ணலாம்? திருச்சிக்கு கூட்டிக்கிட்டு போலாம்னாலும் ஒன்றரை மணி நேரம் ஆகும். நீ என்னம்மா நினைக்கறே?” என்று அவர் மனைவியிடம் கேட்டார்.

“டாக்டர் வர நிச்சயம் அவ்வளவு நேரம் ஆகாதுல்ல. எதுக்கும் நீங்க டாக்ஸி ஏற்பாடு பண்ண முடியுமான்னு பாருங்க.”

“இந்த குக்கிராமத்தில டாக்ஃஸிக்கு எங்க போறது? மெயின் ரோட்ல போய்த்தான் பாக்கணும். ஏதாவது போக்கு டாக்ஸி கிடச்சாதான் உண்டு.”

“இல்லங்க. கிடைக்கறது கஷ்டம்தான், இன்னொரு நல்ல ஐடியா சொல்றேன். நல்லூர்ல முத்து இருக்காரில்ல, ஃபோனைப் போட்டு கார் குடுக்க முடியுமான்னு கேளுங்க. அதுக்குள்ள டாக்டர் வந்துட்டார்னா, முத்துகிட்ட கார் வேணாம்னு சொல்லிடலாம். என்ன சொல்றீங்க?” என்றாள் செந்தில் அம்மா. அவர், “கரக்ட்தான் நீ சொல்றது” என்றபடி வெளியே போனார்.

சின்ன ஊர்தான். கிராமம் என்பற்கு ரொம்பக் கொஞ்சம் மேலே, ஊர் என்பதற்குக் கொஞ்சம் கீழே. வங்கி மேலாளருக்குக் காட்டாயக் கிராமப்புறப் பணி என்பது இருந்திருக்காவிட்டால் இந்த ஊரைப் பற்றிக் கேள்வி கூடப் பட்டிருக்க மாட்டாள். இந்த ஊரின் ஒரே சாதக அம்சம் இரு பெரிய நகரங்களை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை ஊருக்கு ஒரு கிலொமீட்டர் தொலைவில் இருந்தது. இந்தக் கிராமத்தை நோக்கி மாமாவை ஈர்த்தது மனிதர்கள் மீதான அன்பு அன்றி வேறென்ன? எதிர்பாராமல் பெய்கிற மழை மாதிரி மாமாவின் வருகை. ஒவ்வொரு முறையும் மனதை குளிர வைத்திருக்கிறது. உங்களுக்கு ஏன் மாமா இப்படி ஆயிற்று?

‘இந்த சமயத்தில் இவர்களிருவரும் இல்லையென்றால் நான் என்ன செய்திருப்பேன்?’ அவளுக்கு நினைக்கவே பயமாக இருந்தது.

“முத்து கார் எடுத்துக்கிட்டு வெளியூர் போயிருக்காராம்” என்றபடியே உள்ளே வந்தார் செந்தில் அப்பா.

நல்ல வேளையாக டாக்டர் உள்ளே வந்தார். கண்ணனும் வந்து ஓரமாக நின்று கொண்டான். செந்தில் அப்பா மாமாவை கை காட்டினார். கண்ணன் காதில் ஏதொ சொன்னர். அவன் தலையை ஆட்டிவிட்டு வெளியே போனான். ஸ்டெத்தை எடுத்துக்கொண்டே, “இவருக்கு பி பி, ஹார்ட் பிராப்ளம் எதாவது உண்டா?” என்று பத்மாவைப் பார்த்தார். அவள் “தெரியலயே” என்றாள் பலவீனமாக.

ஓரிரு நிமிடங்கள் சோதித்துவிட்டு, “ஹூம்…. போயிட்டாருங்களே. மாசிவ் அட்டாக். சார் யாரு? வெங்கடேசன் சாரோட அங்கிளா? சார் வீட்டுல இல்லையா?” செந்தில் அப்பா அவரிடம் மெதுவாகச் சொன்னார். “ம்ஹூம்.” தலையை அசைத்துவிட்டு டாக்டர் கிளம்பினார்.

“ஐயோ.”த ரையில் உட்கார்ந்து தலையில் அடித்துக்கொண்டாள்.

செந்தில் அப்பா அவருடன் வாசல் வரை போனார். செந்தில் அம்மா அவள் அருகில் அமர்ந்து, “என்னங்க பண்றது? மனுஷங்க விதி எங்க, எப்ப எப்படி முடியும்னு யாரால சொல்ல முடியும்? அவரோட விதி இன்னிக்கு இங்க உங்க வீட்டுல முடியணும்னு இருக்கு. நீங்களோ நானோ என்ன பண்ண முடியும்?”

“எனக்கு… எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்மா” என்று அவள் கையைப் பிடித்துக்கொண்டு அழுதாள்.

“கஷ்டமான நிலைமைதான். புரியுது. நீங்க கொஞ்சம் தைரியமா இருங்க.”

“நாதன் சார் குடும்பம் எங்க இருக்கு?” என்றார் செந்தில் அப்பா. அவள் மலங்க மலங்க விழித்தாள்.

“நீங்க என்னங்க இப்ப போய்… கொஞ்சம் சமாதானம் ஆகட்டும்.”

“இல்லம்மா. வெங்கடேசன் சார் வேற ஊர்ல இல்ல. பெரிய பிராப்ளமா ஆயிடக் கூடாது இல்ல. என்ன பண்றதுன்னு யோசிக்க வேண்டியது நம்ம கடமையில்லயா? அவசரமில்லை, சொல்லுங்க மெதுவா. சாருக்கு எந்த ஊரு? யாரை கான்டாக்ட் பண்ணனும்?”

மாமா எந்த ஊரு? எப்ப வரும் பொழுதும் எதையாவது சொல்லிக் கொண்டே வருவார். போன வாரம் மட்ராஸ்ல ஒரு வேலையா போயிருந்தேன்ம்பார் ஒரு தடவை. மறு சமயம் இப்ப கோயம்புத்துர்ல ஒரு விஷயமா போக வேண்டியிருந்தது என்பார். இன்னொரு சமயம் தஞ்சாவூருக்கு பழைய ஃபிரண்ட் ஒத்தர் வரேன்னு சொல்லியிருக்கார் போயிண்டுருக்கேன், அப்பிடியே கும்பகோணம் போய் ஒரு வாரம் கோவிலெல்லாம் பாக்கலாம்னு யோசனைன்னார், அப்புறம் ஒரு தடவை திருச்சிக்கு சினேகிதரைப் பார்க்க போயிண்டுருக்கேன்னு. நினைச்சு பாத்தா மாமா எப்பவும் எங்கேயோ போய்க் கொண்டும், எங்கிருந்தோ வந்து கொண்டும் இருந்தார் என்றே தோன்றுகிறது. அதை மாமாவிடம் கூட ஒரு தரம் சொல்லியிருக்கிறாள். அவரும் சிரித்துக்கொண்டே எல்லாருமே அப்பிடித்தானே, எங்கோ போய்க் கொண்டும், எங்கிருந்தோ வந்து கொண்டும்தானே இருக்கிறோம் என்றார்.

நிஜமாவே மாமா ஊர் எது? அவருக்கு குடும்பம்னு ஒண்ணு இருந்துதா? அதைப் பத்தி சின்ன ஊகமா கூட ஒண்ணும் தெரியலயே? நான் ஏன் அதை கேக்கலை? அவர் ஏன் அதை சொல்லலை?

இல்லயே, அவர் சின்ன வயசு அனுபவங்களை பத்தி நிறைய சொல்லியிருக்காரே.. திருவாரூர் பக்கத்து கிராமத்துல தன் தாத்தா பாட்டி வீட்டுல ரொம்ப பெரிய கூட்டுக் குடும்பத்தில இருந்திருக்கார். பெரியவா சின்னவா எல்லாரும் சேந்து ஒரு இருபது, முப்பது பேர் சாப்பாடு ஒவ்வொரு வேளைக்கும், ஜே ஜேன்னு வீடே நித்ய திருவிழாவா இருக்கும்பார். ஆனா வீட்டுல இருந்த பொம்மனாட்டிகள் பாடுதான் திண்டாட்டம். கார்த்தாலேந்து ராத்ரி படுக்கப் போற வரைக்கும் இடுப்பை ஒடிக்கற வேலைகள். பாவம் பெண்கள் என்பார். அதிலேந்து ஆரம்பிச்சு பெண்கள் வாழ்க்கை இத்தனை வருஷங்களில் மாறி இருக்கா இல்லயா, இப்படி ஒன்றிலிருந்து ஆரம்பித்து, ஒன்றாக அவர்களிடையே பேச்சு போய்க் கொண்டிருக்கும். எத்தனையோ சமாசாரம் சொல்லுவார்.

தன் கடந்த கால வாழ்க்கையில், தன் வீடு, அதன் மனிதர்கள், அவர்களுடனான தன் உறவுகள், பிரியங்கள், பிணக்குகள், புரிதல்கள், சண்டைகள், சமாதானங்கள், சமன்பாடுகள், கற்றல்கள் எல்லாவற்றையும் பேசியிருக்கிறார், அதுவும் அவருக்கும் அவர் அம்மாவுக்குமான அற்புதமான அழகிய உறவு பற்றி… இவளுக்குத் தானே ஒரு வார் டிராயர் போட்டுக்கொண்ட சின்னப் பையனாக, அந்த கிராமாந்திர வீட்டில், அதிகாலைப் பொழுதில், அம்மாவுடன் அமர்ந்து, எரிகிற விறகு அடுப்பின் தழலில் ஒளிர்கிற, பெரிய குங்குமப் பொட்டும், சுடர் விடுகிற மூக்குத்தியுமாக இருக்கிற அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டு அவள் மெல்லிய குரலில் சொல்லுகிற கதையைக் கேட்பது போல கனவு கூட வந்திருக்கிறது. இவளுக்கு ஒரு சமயம் அவர்கள் எல்லாரும் தனக்கு மிகவும் பழக்கமான மனிதர்களாக தன்னுடைய வாழ்க்கையில் வந்தவர்களாகவே தோன்ற ஆரம்பித்தது.

ஆனால் அவருடைய நிகழ் காலம் என்பது வீட்டுக்கு வெளியேயான வாழ்க்கை, வெளி மனிதர்கள், தவிர அவர் ரசனைகள் என்பதாகவே மட்டும் இருந்தது. இந்த முரண்பாட்டை நான் ஏன் கவனிக்க தவறினேன்? அப்புறம்…

“ஏங்க. என்னாச்சு? ஏம்மா கொஞ்சம் காபி கீபி குடுமா மேடத்துக்கு. குடிச்சுட்டு கொஞ்சம் சொல்லுங்கம்மா சாரை பத்தின டீடைல்ஸ்.”

“இல்லங்க, எனக்கு அவர் ஊரு எதுன்னு தெரியலயே.”

“என்ன? இத்தனை தரம் உங்க வீட்டுக்கு வந்திருக்கார், உங்களுக்கு அவர் எந்த ஊருன்னு கூடத் தெரியாதா.” முதலில் ஆச்சரியம் தெரிந்தது கண்களில். பின்னர் வந்த குற்றம் சாட்டுகிற தோரணையைப் பார்வையிலிருந்து மறைக்க அவர் பிரயத்னப் பட்டார்.

“உங்களுக்கு எப்படி பழக்கம் இவரை?”

“இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு தடவை நாதன் மாமாவும், இவரும் சேலத்திலிருந்து வரும் போது பஸ்ல பக்கத்து பக்கத்துல உக்காந்து பேசிக்கிட்டே வந்திருக்காங்க. அப்ப அவர் யாரு என்னன்னு எல்லாம் ஒண்ணும் தெரியாது. வந்த பஸ் நம்ம ஊருகிட்ட வரும்போது பிரேக் டவுன் ஆயிருக்கு. அடுத்தடுத்த பஸ்ல ஆட்களை ஏத்தி அனுப்பிச்சுட்டிருக்கிறாங்க. ஒரே கூட்டம். இவர் மாமாவை நம்ம வீட்டுக்கு வந்து காபி சாப்பிட்டுட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் பாண்ணிட்டு போலாம் வாங்க, ஒரு அரை மணி நேரம் கழிச்சு கூட்டம் குறைஞ்சுடும்ன்னு கூட்டிட்டு வந்தார். வந்து பசங்களோட பேசி விளையாடி எல்லாம் பண்ணினார். அவருக்கு குழந்தைகளை ரொம்ப பிடிச்சது, குழந்தைகளுக்கும் மாமாவை ரொம்ப பிடிச்சது. அப்பிடியே பழக்கம். அதிலேந்து எப்ப இந்த ஊரை கிராஸ் பண்ணி போனாலும் இங்க வந்து அரை மணி நேரமாவது இருந்துட்டுப் போவார். இது வரைக்கும் ஒரு ஆறேழு தடவை வந்திருப்பார்.”

மாமாவை தனக்கு ஏன் இவ்வளவு பிடித்திருக்கிறது? ‘என்ன சேகர் அம்மா. இன்னிக்கு உங்க வீட்டுல என்ன சமையல்? நல்ல வெயில் வந்திடுச்சே, வடகம், வத்தல் போட ஆரம்பிக்கலயா? நேத்து பெண் எனும் பெருந்தெய்வம் சீரியல்ல அந்த படு பாவி, அவ மாமியாரோட சேந்து அந்த பெண்ணை கொல்ல சதி செய்யாறான் பாத்தீங்களா? பாக்கலையா? அடடா. நல்ல சீனை மிஸ் பண்ணிட்டீங்களே’ என்பது போன்ற தன் அறிவுத் தளத்திற்குக் கீழே இருப்பதாகத் தான் நம்பிய, சலிப்பூட்டும் தினசரி உரையாடல்களிருந்து தான் தப்பிச் சென்று ஆசுவாசம் அடைகிற ஒரு இடமாக மாமா இருந்தார். தன் அறிவுத் தளத்திற்கான உரையாடல்கள் மற்றும் ரசனை பரிமாற்றங்களுக்கான நல்ல சக தோழனாக இருந்தார். தவிர தனக்கான பிரத்யேக மேடையை, தன் மீது பாய்ச்சுகிற ஒளி வட்டத்தை அவர் அளித்தார். தன் ரசனைக்கான பாராட்டுதல்கள், தன் கருத்துக்களுக்கான ஆமோதிப்புகள், தன் வேறுபட்ட பார்வைக்கான வியத்தல்கள், கூர்ந்த அறிவுபூர்வமான பேச்சுக்களுக்கான கைதட்டல்கள் இவை எல்லாவற்றையும் மனமாரக் கொடுக்கிற ஒரு நல்ல பார்வையாளனாகவும் அவர் இருந்தார். அவளும் அவருடைய அடுத்த வருகையை எதிபார்த்து தன் நிகழ்த்துகலையின் ஒவ்வொரு அம்சத்தையும் கூர் தீட்டிக்கொண்டு காத்துக் கொண்டிருந்தாள்.

அந்த வேளையின் துக்கத்தைக் கடப்பதற்காகத் தன்னைத்தானே இவ்வளவு கூறு போட்டு பார்க்கவேண்டுமா என்ன? வேண்டாம், இதைப் பற்றி யோசிக்க வேண்டாம். கடவுளே. இது ஏன் இப்படி ஆனது? இப்போது கூட மாமா போன வருத்தத்தைக் காட்டிலும், அவர் போனதால் தான் இழந்தது என்ன என்ற கணக்கு பார்க்கிறதே இந்த மனசு. எல்லார் சாவுக்கும் எல்லார் அழுவதும் அதனூடாக தான் இழப்பது பற்றியே அல்லவா?

“என்ன ஸார். எப்படி இருக்கீங்க?” என்று செந்தில் அப்பாவைக் கேட்டுக் கொண்டே வெங்கடேசன் உள்ளே நுழைந்தான், பயண களைப்பும், கைப் பையுமாக. இந்த நேரத்தில் இவர்களிருவரும் நம் வீட்டில் ஏன் என யோசித்துக்கொண்டே அவளைப் பார்த்தான். அவன் பார்வைக் கோணத்தில் மாமா விழுந்ததும், “ஐயோ. என்ன ஆச்சு?” என்றான். செந்தில் அப்பா அவன் அருகில் சென்று மெதுவாக சொல்லத்தொடங்கினார். அவன் அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டே நடு நடுவில் அவள் முகத்தைக் கவலையும் கலவரமுமாகப் பார்த்தான்.

அவர் சொல்லி முடித்ததும் அவள் கேட்டாள், “உங்களுக்கு நாதன் மாமா ஊர் எதுன்னு தெரியுமா? அவர் குடும்பம் எங்கே இருக்கு?” என்றாள் கம்மிய குரலில்.

அவன் “தெரியாதே” என்றான்.

அவள் ஓவென்று அழத்தொடங்கினாள்.

****
Posted on Leave a comment

செல்விருந்தோம்பி.. | மாலதி சிவராமகிருஷ்ணன்

வாசலில் குதிரை வண்டி வந்து நின்ற சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தேன். வண்டியிலிருந்து இறங்கிய பெண்மணி “இது எம்கேஎம் வீடுதானே?” என்றாள். நான் “ஆமா, வாங்க!” என்றேன். குரல் கேட்டு அம்மா வெளியே வந்தாள். அந்த அம்மாள் பின்னாடியே பாண்ட் சட்டை போட்ட ஒரு உயரமான மாமாவும், கையில் மாவு கட்டு போட்டுக் கொண்ட பத்து வயது மதிக்கத்தக்க பையனும் இறங்கினார்கள். அம்மா, “யாருடி?” என்று என்னிடம் கேட்டுக்கொண்டே அவர்களைப் பார்த்து “வாங்க” என்றாள். அந்த மாமி மாமாவைப் பார்த்து, “சொல்லுங்க” என்றாள். அவர் “வணக்கம்ங்க, நான் தனசேகர், எம்கேஎம் சாரோட ஃப்ரண்ட். நானும் போஸ்ட் ஆஃபிஸ்லதான் வேலை பாக்கறேன்” என்றார். அம்மா “வாங்க வாங்க, உள்ள வாங்க” என்று அழைத்தாள்.

பெரிய பெட்டிகளிரண்டும், ஒரு பெரிய பயண தோள் பையும் இன்னும் இரண்டு மூன்று சாமான்களுமாக அவர்கள் உள்ளே வந்தார்கள்.

அப்பாவோட வேலை செய்பவராக இருப்பவர் ஏன் பெட்டி படுக்கையோடு வந்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டே அம்மாவைப் பார்த்தேன், அம்மாவுக்கும் அதே சந்தேகம் தோன்றியிருக்க வேண்டும்.

அவர் புரிந்து கொண்டவராக, “நான் சேலத்தில வேலை பாக்கறேன், சாரை நல்லாத் தெரியும்” என்றார்.

கூடத்தில் நடுவில் அவர்கள் கொண்டு வந்த சாமான்களை வைத்துவிட்டுத் தான் கொண்டுவந்த பெட்டியின் மேலேயே அந்த மாமி உட்கார்ந்து கொண்டாள். அந்த மாமாவும், பையனும் கட்டிலில் அமர்ந்துகொண்டார்கள்.

அம்மா காபி கலக்க உள்ளே போனாள். போகும் போதே கேட்டாள், “பையன் என்ன குடிப்பான்?”

“ஹார்லிக்ஸ், போர்ன்விடா எதுனாலும் குடிப்பான் மாமி.”

அவர்கள் காபி குடிக்கும்போது அப்பா வந்தார். உள்ளே நுழையும் போதே அந்த மாமா எழுந்து “வாங்க சார்” என்றார்.

அப்பா புரியாமல் அவர்களைப் பார்த்தார்.

“சார், நாந்தான் சார் தனசேகர்.” குழப்ப மேகம் இன்னும் விலகவில்லை.

“சார், நாம சேலம் கான்ஃபெரன்ஸ்ல பாத்தோமே. நீங்க கூட மதுரை வந்தா அவசியம் வீட்டுக்கு வரணும்னு சொன்னீங்களே.”

அப்பா தபால் தந்தி ஊழியர்களுக்கான தொழிற் சங்கத்தின் மதுரை மாவட்டப் பொதுச் செயலாளராக இருந்தார். நல்ல பேச்சாளர். இரண்டு மாதத்திற்கு முன்னால் சேலத்தில் நடந்த மாநில அளவிலான மாநாட்டுக்குப் போயிருந்தார். எல்லாரிடமும் உண்மையான தோழராக இருந்த அவரைக் கடைநிலை ஊழியரிலிருந்து, பெரிய அலுவலர் வரை எல்லாருக்கும் பிடிக்கும். பழகுவதற்கு இனியவர்.

“ஓ, ஓ! வாங்க வாங்க. எப்பிடி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் சார்.”

அதற்குள் அம்மா, “குழந்தைக்கு கையில என்ன கட்டு?” அந்த மாமியிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“அதை ஏன் மாமி கேக்கறீங்க? இவன் மரத்து மேல ஏறி விளையாடிருக்கான், கீழ விழுந்து கை முறிஞ்சுடிச்சு. அங்க டாக்டர்கிட்ட காமிச்சோம். அக்கம் பக்கத்துல சொன்னாங்க, மதுரையில பெரிய எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் சீனுவாசன்னு இருக்காரு, அவர்கிட்ட காட்டுங்கன்னு சொன்னாங்க. அதான் வந்தோம்!” என்று பெரிய குரலில் அப்பாவுக்கும் கேட்கும்படிச் சொன்னாள்.

நான் அந்த பையனைப் பார்த்து, “உன் பேர் என்ன?” என்று கேட்டேன்.

அவன் அம்மாவைப் பார்த்தான். “சொல்லேண்டா.”

அவன் மெதுவான குரலில் “குமாரு!” என்றான்.

“எந்த கிளாஸ் படிக்கறே!”

மறுபடியும் அம்மாவைப் பார்த்தான். “சொல்லுடா.”

“அஞ்சாவது.”

“எம் பேரு அம்ச வேணி. அம்சான்னு நிறைய பேர் கூப்பிடுவாங்க. சில பேர் வேணின்னும் கூப்பிடுவாங்க.” மாமி தானாக அம்மாவிடம் சொன்னாள். ஒரு வேளை அம்மா கேட்கவில்லையே என்று நினைத்தாள் போலிருக்கிறது.

அந்தப் பையன் பொதுவாக ரொம்ப பேசாதவனாக இருந்தான். அந்த மாமி அவனுக்கும் சேர்த்து வைத்துப் பேசினாள். நாங்கள் விளையாடும் பொழுது வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பான். கையில் அடி வேறு பட்டிருந்ததால் அவனால் எங்களுடைய விளையாட்டில் சேர்ந்து கொள்ளவும் முடியவில்லை.

அவர்கள் வெளியில் போயிருந்த ஒரு சமயத்தில் நான் கேட்டேன்

“இவர் யாருன்னு உங்களுக்கு சட்னு தெரியலையே, ஏம்பா?”

“இல்லம்மா. இவரை கான்ஃப்ரென்ஸ்ல தனிப்பட்ட முறையில பாத்துப் பேசலை. அதுக்கு முன்னாடியும் பழக்கம் இல்ல. ஒரு தரம் என்னோட மேடைப் பேச்சு முடிஞ்சவுடன வந்து பாராட்டினவங்களில் இவரும் இருந்தார். அஞ்சு, பத்து நிமிஷம் பேசிண்டிருந்தார், அதான் சட்னு தெரியல.”

அவர்கள் ஐந்து ஆறு நாட்கள் இருந்தார்கள். தினமும் டாக்டரிடம் போய் விட்டு வரும் நேரம் தவிர அந்த மாமி பெட்டியின் மேலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்தாள்.

அம்மாவிடம் ஏதேதோ பேசிக் கொண்டிருப்பாள்.

“இங்கதான் மாமி ஷெனாய் நகரில எங்க பெரியப்பா பையன் இருக்கான். பாங்கில ஆஃபிஸரா இருக்கான். நல்ல பெரிய வீடு. அப்புறம் மதுரை டவுனுக்குள்ள மேல வாசல் பக்கத்தில இவங்க தங்கச்சி இருக்காங்க. அவங்க புருஷன் பிசினஸ் பண்றாரு. அப்புறம் அரசரடியில இவங்க மாமா இருக்காங்க. டிவிஎஸ்ல பெரிய வேலை பாக்காறாரு.”

“ஊருக்கு போறதுக்கு முன்னால அவங்களை எல்லாம் ஒரு தரம்பாக்க போகணும் இல்லையா?” அம்மா பொறுக்கமாட்டாமல் கேட்டாள்.

“மாமி! உதவின்னு கேட்டு யார் வீட்டு வாசல்லயும் போய் நிக்கக் கூடாது. என்ன நான் சொல்றது? ஃபிரண்ட்ஸ் சமாசாரம்னா அது வேற, இல்லையா? நான் சொல்றது சரிதானே மாமி?” என்றாள் அம்சா மாமி.

“சரிதான்” என்றாள் அம்மா.

தெரிந்தவர்களோ இல்லையோ, அவர்கள் இருந்த அத்தனை நாட்களிலும் வேளா வேளைக்கு அம்மா வித விதமாகச் சமைத்துப் போட்டாள். பெரிய கால் படி டம்பளரில் வழிய வழிய வாசனை பொங்க காபி கொடுத்தாள்.

அவர்களுக்குப் படுப்பதற்குக் கூடத்தை ஒழித்துக் கொடுத்துவிட்டு, நாங்கள் வீட்டின் பல்வேறு பகுதிகளில் படுத்துக் கொண்டோம்.

ஒரு வாரம் கழித்து அவர்கள் ஊருக்குப் போய் விட்டார்கள்.

இத்தனை வருடங்கள் கழித்து யோசித்துப் பார்க்கையில் அந்த மாதிரி யாரோ பழக்கம் இல்லாத முன் பின் தெரியாதவர்களுக்கு, ஆசாரமான கிராமத்துக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அம்மா, வசதி குறைவான அந்த நகரத்து வீட்டில் செய்த விருந்து உபசாரம் உண்மையிலேயே ரொம்ப ஆச்சரியப்பட வைக்கிறது.

*

அவனுக்குப் பதினான்கு அல்லது பதினைந்து வயது இருக்கும். (அவன் வீட்டின் ஆசாரமான பக்தி சூழ்நிலையினாலும், நிறைய ஸ்வாமிகள் அவன் வீட்டிற்கு வந்து தங்குகிற தொடர்புகளினாலும் (முக்கியமாக, பூர்வ ஜன்ம வாசனையினாலும்) அவன் வயதுக்கு மீறிய பக்தி பாவனையோடு இருந்தான்.) அந்தச் சமயத்தில் புதுக்கோட்டையில் ஒரு பெரிய ஸ்வாமிகள் புவனேஸ்வரி அம்மனுக்கு கோடி தில ஹோமம் நடத்துகிறார் என்று கேள்விப்பட்டு கிளம்பினான். அவர்கள் வீட்டில் அது ஒன்றும் பெரிய ஆச்சரியத்தை உண்டு பண்ணவில்லை. அம்மா பத்து ரூபாய் கொடுத்து விட்டு, “ஜாக்ரதையா போய்ட்டு வா” என்றாள். அப்போது திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்குப் பேருந்து கட்டணம் ஒரு ரூபாய். கிளம்பிப் போனான்.

அந்தப் பெரிய யாக சலையின் அளவே பிரமிப்பு ஊட்டக்கூடியதாக இருந்தது. பெரிய பத்து அடிக்கு பத்து அடி அளவுள்ள யாக குண்டங்கள் நாற்பது இருந்தன. ஒன்றொன்றிலும் பதினோரு வேத விற்பன்னர்கள். அந்த யாக சாலையின் ஒரு பக்கத்தில் பெரிய பிரமாண்டமான மேடை. அதில் ரொம்ப பெரிய புவனேஸ்வரி அம்மனின் படம் பூ அலங்காரங்களோடு. அதன் இரண்டு பக்கமும் ஆளுயர குத்து விளக்குகள் ஐந்து முகமும் ஏற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. பந்தல் முழுக்க நிறைத்து கூட்டம். அந்தச் சூழ்நிலையே அவனுக்கு ஒரு உற்சவம் அளிக்கிற மகிழ்ச்சியையும், தானும் பெரியவன்தான் என்கிற உணர்வையும் தந்தது.

எத்தனை நேரம் ஆயிற்று என்று தெரியவில்லை. பக்கத்தில் இருந்த மாமி இன்னொரு மாமியிடம், “சரி, மணி ஒண்ணாயிடுத்து, நாம இப்போ போய்ட்டு சாயங்காலம் வரலாம். இவாளும் இரண்டு மணிக்கு நிறுத்திட்டு அப்புறம் நாலு மணிக்குத்தான் ஆரம்பிப்பா” என்றாள்.

இவனும் சாப்பிட்டுவிட்டு வரலாம் என்று கிளம்பினான்.

புது ஊரில் தெரியாத தெருக்களில் அலைவது ஒரு விதமான விடுதலை உணர்ச்சியை அளித்தது. இரண்டு, மூன்று தெருக்களைத் தாண்டி லலிதாம்பிகா மெஸ் என்ற பேரைப் பார்த்தவுடன் பிடித்தது. உள்ளே போனான். கொஞ்சம் கூட்டமாகத்தான் இருந்தது.

“வா அம்பி! வா!” பெரிய தொப்பையும், சிரித்த முகமுமாக ஒரு மாமா வாஞ்சையுடன் அழைத்தார்.

சுடச் சுடச் சாப்பாடு, பசித்த வயிற்றில் அமிர்தமாக இறங்கியது.

இன்னும் இரண்டு நாளைக்குச் சாப்பாட்டிற்குத் தன்னிடம் இருக்கும் பணம் போதுமா என்று கணக்குப் பார்த்துக்கொண்டான்.

சாயங்கால பூஜை முடியும்போது கிட்டத்தட்ட எட்டு மணி இருக்கும் என்று தோன்றியது. ‘ராத்திரி எங்கே தங்குவது… இங்கே யாக பந்தலில் தங்க விடுவார்களா?’ சுற்றும் முற்றும் பார்த்தான்.

காக்கி உடை உடுத்திக் கொண்டு இருந்த ஒரு மாமா இவனைப் பார்த்தார்.

“என்ன அம்பி, அம்மா, அப்பாவைத் தேடறயா?”

“இல்ல மாமா. நான் மட்டும் தனியாத்தான் வந்தேன்.”

“எந்தத் தெரு?”

“இந்த ஊர் இல்ல மாமா. நான் திருச்சியிலேந்து வந்திருக்கேன்.”

“இங்க எங்க தங்கியிருக்க?”

“தெரியல மாமா, எனக்கு இங்க யாரையும் தெரியாது.”

“அடடா பாவமே. சின்னக் குழந்தை தனியா வந்திருக்கயே… பரவாயில்லை, இப்போ என்னைத் தெரிஞ்சுண்டுட்ட இல்லயா? கவலைப்படாதே. எங்காத்துக்கு வா.”

மாமாவுடன் அவர்கள் வீட்டுக்குப் போனான். பெரிய கிராமாந்திர வீடு.

உள்ளே நுழையும்போதே, “ராஜம், இங்க பாரு, ஒரு குழந்தை வந்திருக்கான்” என்றார்.

வீட்டின் முற்றத்தில் நுழையும்போது, வலது பக்கம் தாழ்வாரத்தை ஒட்டி இருந்த கூடத்தில் சமையலறை வாசலையடுத்து நாலைந்து குழந்தைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தான்.

மாமி அழகிய மஞ்சள் நிறத்தில் சரிகை போட்ட மடிசார் புடைவையும், அரக்கு வண்ண ரவிக்கையும் அணிந்துகொண்டு, கையில் கரண்டியோடு வந்து இவனைப் பார்த்து வாஞ்சையாகச் சிரித்து,

“வாடா குழந்தை, கையை, காலை அலம்பிண்டு சாப்பிட வா.”

இவனுக்கு அன்னபூரணியைத் தரிசித்தது போல இருந்தது.

முற்றத்தில் கைகால் அலம்பிக் கொண்டிருக்கும் போது மாமா சொல்லிக் கொண்டிருந்தார்.

“இந்தக் குழந்தை திருச்சியிலேந்து ஹோமத்தைப் பாக்கணும்னு தனியா வந்திருக்கான், அதான் இரண்டு நாளும் நம்மாத்திலேயே இருக்கட்டும்னு கூட்டிண்டு வந்தேன்.”

குழந்தைகள் பக்கத்தில் உட்கார்ந்தான்.

மாமி பரிந்து பரிந்து பரிமாறினாள்.

பெரிய வாழை இலையில் சுடச் சுட வெள்ளை சாதத்தைப் பார்த்தபோது அதில் மாமா, மாமியின் பெருங்கருணையும், அன்பும் தெரிவது போல இருந்தது.

சாப்பிட ஆரம்பித்தான்.

*

மேற்சொன்ன இரண்டு சம்பவங்களும் நடந்து நாற்பத்தைந்து, ஐம்பது வருடங்கள் ஆகியிருக்கும். இத்தனை வருடங்களில் உலகமும் வாழ்க்கை முறையும் எத்தனையோ மாறியிருக்கின்றன. அப்பொழுது இருந்தவர்கள் எல்லாரும் பெரிய மனதுக்காரர்கள், இப்பொழுது இருப்பவர்கள் எல்லாரும் யாருக்கும் எந்த உதவியும் செய்யாதவர்கள் என்ற முடிவுக்கு வருவது மிகவும் மேலோட்டமானது. அன்றும் தன் வீட்டுப் பிள்ளைகளை மட்டும் உள்ளே அழைத்து தின்பண்டங்கள் கொடுத்துவிட்டு வாயைத் துடைத்துக்கொண்டு வெளியே விளையாடப் போ என்று சொன்னவர்கள் இருந்திருக்கிறார்கள்.

மனிதனின் மனம் எப்போதுமே பிரமிக்கத்தக்க உயரங்களை அடையக் கூடிய சாத்தியங்களோடும், கற்பனைக்கு அப்பாற்பட்ட கீழ்மைகளில் திளைக்கக்கூடிய சாத்தியங்களோடும் இருந்து வந்திருக்கிறது, அன்றும், இன்றும்.

ஆனால், சில விழுமியங்கள், பண்பாட்டுக் கூறுகள், தனி மனித, குடும்ப, சமூக அறன்களின் மீதான நம்பிக்கைகளுக்கு இன்றைய வாழ்க்கை முறையில் இருக்கின்ற இடம் என்ன என்ற ஆதாரமான கேள்விக்கான விடை என்ன? வீழ்ச்சி என்பது இல்லையென்றாலும் கூட, சரிவுகளும், சறுக்கல்களும் இருப்பது ஓரளவு கண்கூடு.

என்றாலும், சாதாரணமான மனிதர்கள், சாதாரணமான தருணங்களில் கூட வெளிப்படுத்துகிற மனித நேயத்தை இன்றும் காண நேருகிற பொழுது, நாம் இன்னும் முற்றாக இழந்து விடவில்லை என்ற ஆசுவாசம் ஏற்படுகிறது.