Posted on Leave a comment

எம்ஜியார் என்கிற இந்து புத்தக ஆசிரியரின் முன்னுரை | ம.வெங்கடேசன்(எம்.ஜி.ஆர் என்கிற இந்து, ம.வெங்கடேசன்,
தடாகமலர், ரூ 150)
எம்.ஜி.ஆர். இந்த
மூன்றெழுத்துக்குத்தான் எத்தனை எத்தனை மந்திர சக்திகள்!
திரைத்துறையில்
அவர் இருந்தவரை அவர்தான் வசூல் நாயகன். அவரை நம்பி எவ்வளவு கோடி பணம் செலவு செய்து
படம் எடுத்தாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டம் வராது. அவரின் லட்சோபலட்சம் ரசிகர்கள் அவரை
ஒரு மனிதராக – ஒரு நடிகராகப் பார்க்கவில்லை. தங்களை மீட்க வந்த மீட்பராக – கடவுள் அவதாரமாகவே
அவரைக் கருதினர். தங்களுடைய ரத்தத்தைக் கொடுத்து அதிலிருந்து வந்த பணத்தின் மூலம் எம்ஜிஆரின்
படத்தைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு உண்டு.
தர்மத்தின் மறுவடிவமாக
– மாபெரும் வள்ளலாக அவரைப் பார்த்தனர் தமிழக மக்கள். தங்களுடைய வீட்டின் அடுப்பில்
தண்ணீரைக் கொதிக்கவிட்டுவிட்டு அரிசிக்காக எம்ஜிஆர் அவர்கள் வீட்டுக்கு நம்பிக்கையுடன்
போகலாம். லட்சக் கணக்கான மக்களுக்கு அவர்தான் தமிழகக் கர்ணன். அரசியல்துறையில் அவர்
இருந்தவரை அவர்தான் நிரந்தர முதல்வர். அவரைத் தவிர்த்து வேறு ஒருவரைக் கனவிலும் தமிழக
மக்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அவர் நேரடியாகத் தேர்தல் பிரசாரத்திற்குக்கூட
வரவேண்டாம். ஆனால் அவர் முகம் மட்டும் போஸ்டரில் காட்டினால்கூட ஓட்டு விழும்.
மூன்றெழுத்தில்
என் மூச்சிருக்கும் – அது முடிந்த பின்னால் என் பேச்சிருக்கும் என்கிற பாடல் வரிகள்
பொய்யல்ல. நூறு சதவீதம் உண்மை என்பதை இன்று பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் போட்டிப்
போட்டுக்கொண்டு நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருவதன்மூலம் நாம் அறியலாம்.
அவரை கடைசிவரை விமர்சித்த,
எதிர்த்த திராவிடர் கழகம்கூட இன்று அவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடியிருக்கிறது.
கொண்டாடியது தவறல்ல. ஆனால் அவர்கள் தற்போது அவரைச் சொந்தம் கொண்டாடுவதுதான் வேடிக்கையாக
உள்ளது. அவர்கள் கொண்டாடிய நூற்றாண்டுவிழாவில் பேசிய பேச்சுகள், வெளியிட்ட மலர் போன்றவற்றில்
இருக்கின்ற பொய்கள்தான் இந்தப் புத்தகத்தை எழுதத் தூண்டியது. எம்ஜிஆரை இந்து மத விரோதி,
இந்து இயக்க விரோதி, திராவிடக் கொள்கை நாத்திக கொள்கையில் நம்பிக்கையுடையவர் என்றெல்லாம்
பொய்யை அவர் மேல் ஏற்றியுள்ளனர்.

மறுபுறம் ஆர்எஸ்எஸ்
அமைப்பு அவரை இந்து மதத்தைக் கடைப்பிடித்தவர், கடவுள் நம்பிக்கை உடையவர், தேசியவாதி
என்று பரப்புரை செய்து வருகின்றது.
இதில் எது உண்மை?
திராவிடர்கழகம்
சொல்வது உண்மையா?
ஆர்எஸ்எஸ் சொல்வது
உண்மையா?
வாருங்கள் நாமும்
உண்மையை நோக்கி பயணிப்போம்.
-O-
எம்ஜியார் என்கிற
இந்து என்ற நூலின் முதல் அத்தியாயம் வலம் வாசகர்களுக்காக இங்கே தரப்படுகிறது.
1. யார் சொல்வது உண்மை?
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின்
அதிகாரப்பூர்வ இதழ் ‘விஜய பாரதம்’. அந்த இதழில் (14-10-2016) எம்.ஜி.ஆர். மற்றும் கிருபானந்தவாரியார்
அவர்களின் படத்தைப் போட்டு ‘எம்.ஜி.ஆர். போல ஹிந்துத்துவ ஆதரவு முதல்வர் நேற்றும் இல்லை,
நாளையும் இல்லை’ என்று முகப்பு அட்டையைப் போட்டு உள்ளே வெறும் நான்கு பக்கத்திற்கு
எம்.ஜி.ஆர். பற்றிய கட்டுரையை வெளியிட்டது.
இதற்கு மறுப்பாக
உடனே திராவிடர் கழகம் தங்களுடைய இதழான ‘உண்மை’ இதழில் (அக்டோபர் 16-31, 2016) ஆர்எஸ்எஸ்
அமைப்பை விமர்சனம் செய்து எம்.ஜி.ஆர். மற்றும் ஈவெரா படத்தைப் போட்டு பதினொரு பக்கத்திற்குக்
கட்டுரை வெளியிட்டு உள்ளது. மேலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையும் திடீரென நடத்தியிருக்கிறது.
‘திராவிடர் கழகம் என்ற வேரில் இருந்து கிளர்ந்தெழுந்து ஆலமரமாக வளர்ந்தவர் எம்.ஜி.ஆர்.1
திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அவரை அபகரிக்க ஆர்எஸ்எஸ் திட்டமிட்டதால் நாங்கள் முந்திக்கொண்டோம்’
என்று நூற்றாண்டு விழாவில் வீரமணி பேசியிருக்கிறார். ஆனால் அதில் கூட ‘புரட்சி நடிகர்’,
‘புரட்சித் தலைவர்’ என்று இல்லாமல் ‘வள்ளல் எம்.ஜி.ஆர்’ என்றே நூற்றாண்டு விழாவைக்
கொண்டாடி யிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் அவர்களுக்கு புரட்சி நடிகர், புரட்சித் தலைவர்
என்ற அடைமொழியை ஏன் அவர்கள் கொடுக்கத் தயங்குகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியும்.
ஏனென்றால் அவர் பல சமயங்களில் ஈவெராவின் கொள்கைகளுக்கு, திராவிடர் கழகக் கொள்கைகளுக்கு
எதிராகவே செயல்பட்டுள்ளார் என்பது அவர்களுக்கும் தெரியும்; நமக்கும் தெரியும்.
எம்.ஜி.ஆர். அவர்களை
திராவிடர் கழகத்துக்காரராக, ஈவெராவின் சீடராகவே குறிப்பிட்டு அக்கட்டுரையிலும், அவர்கள்
வெளியிட்டுள்ள ‘தந்தை பெரியாரும் டாக்டர் எம்ஜிஆரும்’ என்ற நூலிலும் எழுதியிருக்கிறார்கள்.
அப்புத்தகத்தில் ஈவெரா பற்றி எம்.ஜி.ஆர் அவர்கள் என்ன பேசியிருக்கிறார் என்பது பற்றிய
நான்கு கட்டுரைகளும் ஈவெராவின் ஒரு கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. ஈவெராவின் கட்டுரையில்
எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி வார்த்தைக்குக்கூட ஈவெரா ஏதும் புகழ்ந்து விடவில்லை என்பதைப்
படிப்பவர்கள் அனைவரும் புரிந்து கொள்ளலாம். பக்கத்தைக் கூடுதலாக்கவே அதைச் சேர்த்திருக்கிறார்கள்
என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
எம்.ஜி.ஆர் அவர்கள்
ஈவெராவைப் பற்றிப் பெருமதிப்புக் கொண்டிருந்தார் என்று திராவிடர் கழகம் சொல்கிறது.
உண்மையிலேயே அப்படிக்கூட இருக்கலாம். ஆனால் ஈவெராவும் திராவிடர் கழகமும் எம்.ஜி.ஆர்
அவர்களை எப்படி மதிப்பிட்டது என்பது நமக்கு முக்கியம். அதே போல எம்.ஜி.ஆர் அவர்களும்
திராவிடர் கழகக் கொள்கைகளை எந்த அளவுக்கு பின்பற்றியிருக்கிறார் என்பதும் அக்கொள்கைகளுக்கு
அவர் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதும் நமக்கு முக்கியம். இரண்டையுமே
நாம் பார்த்துவிடலாம்.
ஆதாரம்
1. தி இந்து (தமிழ்)
25-10-2016