அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. மாலைப்பொழுது. வெளியில்
போய்விட்டு வந்துகொண்டிருந்தோம். எங்கள் வண்டி சிக்னலில் நின்றிருந்தது.
நடைபாதையில் ஒரு சிறுமி – பரட்டைத்தலையும், அழுக்கு உடைகளுமாக – மிஞ்சிப்போனால்
பத்து அல்லது பதினோரு வயது இருக்கலாம். திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டு வேக
வேகமாக ஓட்டமும் நடையுமாகப் போய்க்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் கலவரம்;
கண்களில் அதீத பயம். அவள் பின்னாலேயே ஒரு சிறுவன் – அவளைவிட ஒன்றிரண்டு வயது கூட
இருக்கலாம். வயதுக்கு மிஞ்சிய வளர்ச்சி. அரைகுறையாக வளர்ந்திருந்த மீசையும் தாடியும்
அவனை விடலையாகக்
காட்டியது. இவள் திரும்பிப் பார்த்தவுடன் கால்களை அகட்டி நின்று கொண்டு அசிங்கமாக
சைகை காண்பித்தான். பார்த்துக் கொண்டிருந்த எனக்கு முதுகுத் தண்டு சில்லிட்டது.
உடலெல்லாம் கூசியது. அந்தச் சிறுமி இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தாள். அதற்குள் பச்சை
விளக்கு எரியவே எங்கள் வண்டி நகர்ந்துவிட்டது. பலநாட்கள் தெருவில் கண்ட இந்தக்
காட்சியே மனதை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது.
பிஞ்சிலேயே பழுத்து வக்கிரமாகிவிட்ட அந்தச் சிறுவனை யார்
கட்டுப்படுத்துவது? சமூகத்தில் இந்த மாதிரியான விடலைப் பருவத்தில் அலையும் சிறுவர்களை
யார் திருத்த முடியும்? ஒருபக்கம் படிப்பில் சூரப்புலிகளாய் சிறுவர்கள்; இன்னொரு
பக்கம் இதைப்போன்ற வீதியோரங்களில் வளரும், பிற்காலத்தில் சமூக விரோதிகளாக
உருவாகும் குழந்தைகள். இந்தக் குழந்தைகளை திசை மாற்றி நல்லவர்களாய், சமூகத்தில்
தலை நிமிர்ந்து வாழுபவர்களாய் செய்ய முடியாதா? இந்தக் கேள்விகள் மனதை குடைந்து
கொண்டிருந்தன.
இந்த மாதிரி சிறுவர்களைப் பொதுவாக வீதிக்குழந்தைகள்
என்று குறிப்பிடப்படுகிறார்கள் (street children). யூனிசெப்-பின் கருத்துப்படி
பதினெட்டு வயசுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர்கள் – வீதிகளை அல்லது மனிதர்கள்
யாருமில்லாத இடங்களைத்
தங்களது வாழ்விடங்களாக மாற்றிக்கொண்டு, போதுமான பாதுகாப்போ அல்லது அவர்களை
அக்கறை எடுத்துக்
கவனிக்க யாரும் இல்லாமலோ இருப்பவர்கள் வீதிக் குழந்தைகள். சில வளர்ந்த நாடுகளில்
சில குழந்தைகள் த்ரோன்-அவே (thrown-away) குழந்தைகள் என்று ஒரு தனியான பிரிவின்
கீழ் வகைப்படுத்தப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தாய் அல்லது தந்தை
மட்டுமே இருக்கும் ஒற்றைப் பெற்றோர் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர்களாக
இருக்கிறார்கள்.
இந்தக்
குழந்தைகளைப் பற்றிய முதல் ஆவணம் 1848ல் ஆலன் பால் என்பவர் எழுதிய சோவியத்
ரஷ்யாவின் கைவிடப்பட்ட குழந்தைகளைப் பற்றிய புத்தகத்தில் காணப்படுகிறது. ‘அநாதைகளாகவும்,
கைவிடப்பட்டும் வாழும் குழந்தைகள் பழங்காலத்தில் இருந்தே துன்பத்திற்கு ஆளாகி
வருகிறார்கள். அகஸ்டன் ரோமில் இருக்கும் ஆண் விபசாரிகள் பலரும் இந்தச் சிறுவர்களே’
என்று இந்த நூலில் குறிப்பு காணப்படுகிறது. லார்ட் ஆஷ்லி 1848ல் சுமார்
30,000க்கும் மேற்பட்ட நிர்வாணமான, இழிந்த நிலையில் கைவிடப்பட்ட சிறுவர்கள் லண்டன்
நகரத்தில் சுற்றுவதாகக்
குறிப்பிடுகிறார். முதல் உலகப்போரில் ஏற்பட்ட அழிவிற்குப் பிறகு சுமார் 7 லட்சம்
வீதியோரச்
சிறுவர்கள் இருப்பதாகவும், இவர்கள் தங்களுக்குள் குழுக்களை அமைத்துக்கொண்டு சின்னச்சின்ன
திருட்டுக்களிலும் விபசாரத்திலும் ஈடுபடுவதாகவும் குறிப்புகள் கூறுகின்றன.
இந்தியாவின் முக்கியப் பெருநகரங்களில் சுமார் ஒரு
மில்லியன் வீதியோரக் குழந்தைகள் இருக்கின்றனர் என்று ஒரு ஆய்வு சொல்லுகிறது.
அவர்களைத் தவிர சின்ன நகரங்களிலும், ஊர்களிலும் இன்னும் நிறைய பேர்கள்
இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான இந்தச் சிறுவர்கள் வார்த்தைகளில் விவரிக்கவொண்ணாக் கொடுமையான நரக வாழ்க்கையை
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பலர் குழந்தைத் தொழிலாளிகளாக மாறுகின்றனர்.
பாதி வயிற்றுக்கு உணவு, கொளுத்தும் வெயிலிலிருந்தும், தாங்க
இயலாத குளிரிலிருந்தும் கொட்டும் மழையிலிருந்தும் காப்பாற்றாத உடைகள், ஒரு நாகரீக
சமுதாயத்தின் அடையாளங்களான கல்வி, மருத்துவம் போன்ற வசதிகள் எதையும் அறியாமல்
வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இந்த வீதியோரக் குழந்தைகள். முடிவே இல்லாத வலியும்,
வேதனைகளும் நிறைந்தது அவர்களது வாழ்க்கை. வீதியோரக் குழந்தைகள் என்பவர்கள்
சுருக்கமாகச் சொன்னால் குப்பை பொறுக்கும் சிறுவர்கள். இவர்களில் காலணிகளை பாலிஷ்
செய்பவர்கள், கூலிகள், சிறு சிறு பொருட்களை விற்பவர்கள் எல்லோரும் அடக்கம்.
இந்தக் குழந்தைகள் இப்படி வீதியோரக் குழந்தைகளாய் மாற என்ன
காரணம்?
குடும்பத்தில் நிலவும் வறுமை, குடும்பச் சண்டை. இவை தவிர, அன்போ பாசமோ பெற்றவர்களிடமிருந்து
கிடைக்காதது.
மாற்றந்தாய்க்
கொடுமை, பெற்றோர்களைச்
சிறுவயதிலேயே இழக்க நேரிடுவது ஆகியவை இவர்கள் வீதிகளில் அடைக்கலம் புகக்
காரணங்கள். இவை தவிர, சமவயதுக்காரர்களுடனான போட்டி, அவர்களை மிஞ்சி இருக்க
வேண்டும் என்ற மன உந்துதல், நகர வாழ்க்கையின் வசீகரம், சுதந்திரமாக வாழ வேண்டும்
என்கிற ஆசை, தனக்கான அங்கீகாரம் கிடைக்க ஏங்குதல் என்று பல பலக் காரணங்களை கூறலாம்.
இந்தக் காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறும் சிறுவர்கள்
கானல் நீரைத் தேடி ஓடும் மான் போல நல்ல வாழ்க்கையைத் தேடி ஓடிக்கொண்டே
இருக்கிறார்கள். சிறுவயதிலேயே இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் ஆளாகித் தங்கள் குழந்தைப்
பருவத்தையும் தொலைக்கிறார்கள். ஒரு குடும்பச்சூழலில் கிடைக்கக்கூடிய அன்பு, பாசம்,
அக்கறை, வசதிகள் எல்லாவற்றையும் இழக்கிறார்கள். இளம் வயதிலேயே அடிப்படைத்
தேவைகளைக்கூட தாங்களே பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய நிலைமைக்குத்
தள்ளப்படுகிறார்கள். இதனால் மற்ற குழந்தைகளுக்கும் தங்களுக்கும் இடையே உள்ள மிகப்
பெரிய வித்தியாசங்களை உணருகிறார்கள்.
தங்களுக்கென்று ஒரு போக்கிடம் இல்லை என்பதைத் தினம் தினம் உணருவதுடன்,
மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். வீதிகள் அவர்களுக்கு வேண்டிய சௌகரியங்களைக் கொடுப்பதில்லை
என்பதுடன் சமுதாயமும் அவர்களை ஏற்பதில்லை. உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்படும்
இந்தச் சிறுவர்கள் குப்பைத் தொட்டிகளில் தங்கள் உணவைத் தேடுகிறார்கள்; பல நாட்கள்
பசியுடன் கழிக்கிறார்கள். நீரைக் குடித்தும், சில வேளைகளில் தகாத தொடர்புகள் மூலம்
போதை மருந்துக்கு ஆளாகி, அவற்றை உட்கொண்டும் தங்கள் பசியைத் தணித்துக்
கொள்ளுகிறார்கள்.
போஷாக்குப் பற்றாக்குறையினால் பல்வேறு குறைபாடுகளால்
பாதிக்கப் படுகிறார்கள். இளம் வயதிலேயே சிகரெட், மது, போதை மருந்துகளுக்கு ஆளாகி
இவர்களது வாழ்க்கை உருப்பெறுவதற்கு முன்பே அழியத் தொடங்குகிறது. போக்குவரத்து மிகுந்த,
ஜனசந்தடி நிறைந்த இடங்களில் இருப்பதால் நாள் முழுவதும் தூசியினாலும் வேறுவிதமான
மாசுப் பொருட்களாலும் பாதிக்கப்பட்டு ஆஸ்த்துமா, மூச்சுக் குழாய் அழற்சி நோய்
எனப்படும் பிராங்கைடிஸ் மற்றும் கடுமையான காச நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் மட்டுமின்றி இந்தப் பிரச்சினை உலகளவில் காணப்படுகிறது.
சில நாடுகளில் அவர்களது கலாசாரமே குழந்தைகளுக்கு எதிரியாக
மாறி அவர்களை வீட்டை விட்டு வெளியேறும்படி செய்கிறது. காங்கோ மற்றும் உகாண்டா
நாடுகளின் சிலபகுதிகளில் பேய் பிடித்திருப்பதாக நம்பப்பட்டு சில குழந்தைகள்
அவர்களது குடும்பத்தினரால் வீதிக்குத் தள்ளப்படுகிறார்கள். ஒரு சிறுமி
கற்பழிப்பட்டாள் என்றோ அல்லது பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாள் என்ற சந்தேகம்
ஏற்பட்டால், அல்லது பெற்றோர் பார்த்துவைக்கும் திருமணத்தை மறுத்தாலோ ஆப்கானிஸ்தான்
நாட்டில் அவளை வீட்டைவிட்டு வெளியேற்றிவிடுகிறார்கள். வடக்கு நைஜீரியாவில் ஒரு
பிரிவினர் தங்கள் குழந்தைகளை புனித குரானைக் கற்பதற்கென மல்லம் என்று
அழைக்கப்படும் ஆசிரியரிடம் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு ஒப்பந்தத்தின்
அடிப்படையில் அனுப்புகிறார்கள். ஒப்பந்தக் காலத்தில் இந்தக் குழந்தைகள் தங்கள்
வாழ்வாதாரங்களை வீதிகளில் பிச்சையெடுத்து தேடிக் கொள்ள வேண்டும். அவர்கள் அப்படி
சம்பாதிப்பதில் குருவிற்கும் கட்டாயமாகப் பங்கு உண்டு. கொடுக்காத பட்சத்தில்
கடுமையான தண்டனைகளுக்கு குழந்தைகள் ஆளாகிறார்கள்.
புனர்வாழ்வு மையங்கள்:
இந்தக் குழந்தைகளை அநாதை இல்லங்களுக்கோ, சிறார் சீர்திருத்த
பள்ளிகளுக்கோ, அல்லது புனர்வாழ்வு மையங்களுக்கோ அனுப்பும் முயற்சிகளை பல அரசுகள்
எடுக்கின்றன. அரசு சாராத அமைப்புகளும் இந்தப் பணியில் ஈடுபடுகின்றன.
தினமும் சுமார் 25 சிறுவர்கள் காப்பாற்றப்பட்டு, சீர்திருத்த
அமைப்புகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.
ஆனாலும் இன்னும் நிறைய சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.
பல அமைப்புகள் இத்தகைய குழந்தைகளைக் கண்டுபிடித்து அவர்களை மற்ற சிறுவர்களைப்
போல வாழவைக்க, எல்லாவிதமான முயற்சிகளும் செய்து வருகின்றன. இந்த அமைப்புகள் இந்தச்
சிறுவர்களை துணையில்லாத குழந்தைகள் என்று பொதுப்பெயரால் குறிப்பிடுகிறார்கள்.
வீதியில் வாழும் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளிகள், காணாமல் போன, கடத்தப்பட்ட
குழந்தைகள், வீட்டைவிட்டு ஓடி வந்த குழந்தைகள், கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு
ஈர்க்கப்பட்டு ஓடிவந்த குழந்தைகள், குற்றம் புரிந்த குழந்தைகள் எல்லோரும் இந்தத் துணையில்லாத குழந்தைகள் என்ற
வகையில் அடங்குவர்.
இந்த அமைப்புகளின் முக்கியப்பணி குழந்தைகளுக்கு நல்வாழ்வு
கொடுப்பதுதான். ஒவ்வொரு குழந்தைக்கும் தகுந்தவாறு அவர்களது புனர்வாழ்வு
முயற்சிகளும் அமைகின்றன. கடத்தப்பட்ட குழந்தைகள், குப்பை பொறுக்கும் சிறுவர்கள்,
குழந்தைத்
தொழிலாளிகள் ஆகியோர் மீட்டெடுக்கப்பட்ட 24மணி நேரத்திற்குள் அவர்களது
குடும்பத்தைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப் படுகின்றன. குழந்தைகள் நல அமைப்பு, காவல்துறை,
மற்றும் ஒரு ஆலோசனையாளர்
ஆகியோர் குழந்தையுடன் அதற்குத் தெரிந்த மொழியில் பேசி அதன் ஊர் மற்றும்
பெற்றோர்களைப் பற்றிய விவரங்களை அறிகிறார்கள்.
சிறுவர்கள் அரசுப் பள்ளிகளுக்கும் தனியார்ப் பள்ளிகளுக்கும் அனுப்பப்படுகிறார்கள்.
14 வயதுக்கு மேற்பட்ட துணையில்லாக் குழந்தைகளில் முக்கால்வாசிபேர் பள்ளிப்படிப்பைப் பாதியில் விட்டவர்கள்.
அவர்களுக்கென சில தொழில்கள் கற்பிக்கப்படுகின்றன. உணவக மேலாண்மை, தச்சு வேலை,
தையல் வேலை ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. சிலர் அழகு நிலையங்களிலும், ஐஸ்க்ரீம்
பார்லர்களிலும், ஷாப்பிங் மால்களிலும் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இவர்களுக்கு
ஒரு குறிப்பிட்ட வயது வரும்வரை – தனியாகத் தங்கள் வாழ்க்கையைச் சமாளிக்கும் வரை – காப்பகங்களே அவர்களின்
பொறுப்புகளை ஏற்கின்றன.
நீதியின்முன் குற்றவாளிகளாக நிறுத்தப்படும் சிறுவர்கள்,
பரோலிலோ அல்லது வழக்கு விசாரணை முடிந்த பின்னரோ நல்வழிப்படுத்தும் காப்பகத்தின்
கண்காணிப்பு இல்லங்களில் வைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கென இருக்கும் சிறப்பு
இல்லங்களில் இவர்களுக்குத்
திருந்தி வாழ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. யோகா, தியானம் முதலியவை
கற்பிக்கப்படுகின்றன. ஆனால் இவர்களை வழிக்குக் கொண்டுவருவது அத்தனை சுலபமான
காரியம் அல்ல. ஆலோசனை கூறுபவர்களுடன் பேசுவதற்கே இந்தச் சிறுவர்கள் நீண்ட காலம்
எடுத்துக் கொள்ளுகிறார்கள். தங்களது கடந்த கால வாழ்க்கைப் பற்றி பேச
விரும்புவதில்லை. ஆரம்பத்தில் அவர்கள் ஆலோசகர்களின் முகத்தைப் பார்க்கவும்
செய்வதில்லை. அவர்கள் செய்த குற்றத்தைப் பற்றிப் பேசாமல் அவர்களது பின்னணி பற்றி
பேச ஆரம்பிப்பார்கள் இந்த ஆலோசகர்கள். அவர்களிடம் உள்ள நல்லவைகளை அதிகம் எடுத்துச்
சொல்லுவார்கள். ஆலோசகர்கள் அவர்களின் நண்பன்; அவர்களுக்கு நல்லது செய்வார்கள் என்ற
நம்பிக்கை வந்த பின்புதான் அவர்கள் பேசத் தொடங்குவார்கள். இந்தக் கண்காணிப்பு இல்லங்களில்
இந்தச் சிறுவர்களுக்கு மருத்துவ வசதி, அவ்வப்போது உடல்நலப் பரிசோதனை மற்றும்
அவர்களது குடும்பத்துடன் தொடர்பு என பலவகையான உதவிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.
குடும்பத்தில் பலவகையான துன்பங்களுக்கு ஆளானாலும் இவர்களுக்கு
இந்த இல்லங்களுக்கு வர விருப்பம் இருப்பதில்லை என்பது வருத்தமான உண்மை. முதல் முறை
வீதிக்கு வரும்போது அந்தக்
கொடுமையான அனுபவத்தால் பயந்துவிடுகிறார்கள். அந்த சமயத்தில் இவர்களை மீட்டால்
நலவாழ்வு மையங்களுக்கு விருப்பத்துடன் வருவார்கள். சில நாட்கள் வீதிகளில் வாழ்ந்து
பழகிவிட்டால் அவர்களால் இந்த மையங்களுக்கு வந்து இருக்க முடியாது. எந்தக் கவலையும்
இல்லாமல் வீதிகள் தரும் சுதந்திரம் இந்த இல்லங்களில் கிடைக்காது. இல்லங்களின்
கட்டுப்பாடுகளுக்குக்
கட்டுப்பட்டு நடப்பதை பெரிய சுமையாக எண்ணுகிறார்கள். பொதுவாக மீட்கப்படும் ஆண்
சிறுவர்கள் அதிக நாட்கள் இங்கு இருப்பதில்லை. சமயம் கிடைக்கும்போது வெளியே
ஓடிவிடுகிறார்கள்.
தொழிற்சாலைகள், உணவகம், கட்டட வேலை நடக்கும் இடங்களில் வேலைபார்க்கும்
குழந்தைத்
தொழிலாளிகள் மீட்கப்பட்டு, புனர்வாழ்வு கொடுக்கப்படுகிறது. இதற்கு 3 மாதங்களில் இருந்து ஒரு
வருடம் வரை ஆகலாம். காவல்துறையின் உதவியுடன் முதல் விவர அறிக்கை பதிவு
செய்யப்படுகிறது. இந்தக் குழந்தைகளுக்கு முதலில் முறைசாராக் கல்வி
அளிக்கப்படுகிறது. சிறிது காலத்திற்குப் பிறகு இவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர்க்கப்படுகிறார்கள்.
இப்படி மீட்கப்பட்ட சிறுவர்களில் இருவர் படித்து பொறியாளர்கள் ஆகியிருக்கின்றனர்.
15 சிறுவர்கள் டிப்ளமா படிப்பு முடித்திருக்கிறார்கள் என்று மீட்பு மையங்களின்
தகவல் கூறுகிறது.
சமீபத்தில் இளம் குற்றவாளிகள் சட்டத்தில் திருத்தங்கள்
செய்யப்பட்ட போதிலும், அதை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சிக்கல்கள், இதற்கான
முறையான அமைப்புகள் இல்லாத குறை, வலுவான அரசியல் கொள்கைகள் இல்லாமை இவற்றால்
வீதிகளில் நடமாடும் சிறுவர்களை நல்வழிக்குக் கொண்டுவந்து அவர்களையும் சமுதாயத்தில்
ஒரு அங்கமாக மாற்றுவது என்பது கடினமான ஒன்று. குழந்தைகளின் உரிமை என்பது
சட்டத்தில் அத்தனை முக்கியத்துவம் பெறுவதில்லை என்பது வருத்தமான விஷயம்தான்.
இந்த அமைப்புகள் பொதுமக்களிடம் வைக்கும் ஒரு கோரிக்கை:
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொதுவிடங்களில் இந்த மாதிரிச்
சிறுவர்களைப் பார்த்தால் உடனே ஏதாவது ஒரு மையத்தைத் தொடர்புகொண்டு விவரம்
சொல்லுங்கள். ஒரு குழந்தையின் எதிர்காலம் பாதுகாக்கப்படும், இந்த ஒரு சின்ன
செய்கையினால்.
நினைவு வைத்துக் கொள்ளுவோமாக!