Posted on Leave a comment

தமிழக விவசாயிகளின் போராட்டம் – ராஜா ஷங்கர்

தமிழகத்தில் விவசாயத்தையும் விவசாயிகளையும் முன்னிறுத்திய போராட்டங்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்டவை. கூலியாகக் கொடுப்பட்ட நெல்லை உயர்த்திக் கொடுக்கச் சொல்லி கம்யூனிஸ்டுகள் தஞ்சாவூரில் நடத்திய போராட்டங்களில் இருந்து, மாட்டு வண்டிகளை நிறுத்தி கோயமுத்தூரை முற்றுக்கையிட்ட போராட்டம் வரை தமிழ்நாடு விவசாயத்தை முன்னிறுத்தி ஏகப்பட்ட போராட்டங்களைக் கண்டிருக்கிறது.

இந்தப் போராட்டங்களை முன்னிறுத்தி விவசாய சங்கத் தலைவர்கள் பெரிய அளவில் அரசியல் பலமும் மக்கள் ஆதரவும் கொண்டிருந்தார்கள் என்பதும் உண்மை. அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த விவசாய சங்கத் தலைவர்களின் ஆதரவைப் பெற போட்டி போட்டார்கள் என்பதெல்லாம் இன்றைக்கு நம்பமுடியாத விஷயங்களாக இருக்கும். உழவர் உழைப்பாளர் கட்சி என அரசியல் கட்சி தொடங்கி தேர்தலிலே போட்டியிட்டார்கள் என்பெதல்லம் இன்றைய விவசாய சங்கத்தினருக்கே ஞாபகம் இருக்குமா எனத் தெரியவில்லை.

இன்றைக்கு விவசாயிகள் போராடும் கடன் வசூல், கடன் வசூல் ஏலம் போன்றவைதான் அன்றைக்கும் பெரும் பிரச்சினைகளாக இருந்தன. விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்பதும் அன்றிலிருந்து இன்றைக்கு வரைக்கும் விவசாயிகளின் போராட்டமாக இருக்கிறது. ஒரு தேர்தலின் பிரசாரத்தின்போது எம்ஜியார், தான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பிரச்சினை அடியோடு ஒழிக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார். பின்பு எம்ஜியாரின் ஆட்சியில்தான் போராடிய விவசாயிகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதை விவசாயிகளின் பிரச்சினையை ‘அடி ஓடு’ ஒழித்தார் எனக் கிண்டலாகவும் பரப்புரை செய்தார்கள்.

முன்பு விவசாயத்தை ஊக்குவிக்க பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அணைக்கட்டுகள், கால்வாய்கள், பாசனத் திட்டங்கள், புதிய சாகுபடி முறைகள் எனப் பலவும் காமராஜர் காலத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்டன. பின்பு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை பின்தள்ளிவிட்டு இலவச மின்சாரம், கூட்டுறவுக் கடன் தள்ளுபடி என்று மட்டுமே விவசாயிகளின் நடவடிக்கைகள் சுருங்கின. இதற்கு இன்னொரு காரணம், சினிமாவில் நடித்தால் முதல்வராகி விடலாம் என்ற நம்பிக்கை இருப்பது போல விவசாய சங்கம் ஆரம்பித்தால் பெரும் தலைவராகி விடலாம் என்ற கனவில், ஊருக்கு ஒரு விவசாய சங்கம் ஆரம்பிக்கப்பட்டு பல நூறு பேர்கள் இன்றைக்குத் தங்களை விவசாய சங்கத் தலைவர் எனச் சொல்லிக்கொள்வதுதான்.

இப்படி நிறைய பேர் விவசாய சங்கத் தலைவர் எனச் சொல்லிக்கொள்வது நல்லதுதானே, போராட நிறைய சங்கங்களும் ஆட்களும் கிடைப்பார்கள் என நினைத்தால் அது தவறு. இப்படி உடைந்த சங்கங்கள் வெறுமனே லெட்டர்பேட் சங்கங்களாக அமைப்புகளாக சுருங்கி ஆள்வோரின் அநியாயங்களைச் சுட்டிக்காட்ட, அதை எதிர்த்துப் போராடத் தவறின.

இதனால் ஆண்ட திராவிடக் கட்சிகளின் மணல் கொள்ளை, ஆறு, ஏரி குளங்களை வீட்டு மனைகளாக மாற்றுவது என்ற அதிகார அத்துமீறல்கள் நிகழ்ந்தன. புதிய தடுப்பணைகள் கட்டுவதில் இருந்து மிச்சம் மீதி இருக்கும் நீர் நிலைகளில் பராமரிப்பு பணிகள், மராமத்து பணிகள் என அனைத்தும் ஊழலில் ஊற்றுக்கண்ணாக மாறின. இதைக் கண்காணிக்க வேண்டிய விவசாயிகளோ திராவிடக் கட்சிகள் போட்ட சில்லறைகளை எண்ணிக்கொண்டிருந்தார்கள். இப்போதும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு ஆதாரம் தேடி எங்கேயும் போகவேண்டியதில்லை. தற்போது டெல்லியில் போராடும் நாடகப் போராட்டக் குழுவினரே இதை எல்லாம் சொல்லுகிறார்கள். அவர்களிடம் இதை யாரும் ‘ஏன் இதுவரை எதுவுமே போராடவில்லை?’ எனக் கேட்கவில்லை. இதுவரை இல்லாத அவசரம் ஏன் இப்போது? அதற்கும் காரணமிருக்கிறது. நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்ட பின்பு இலவச மின்சார உதவியுடன் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் இறைத்து விவசாயத்தைச் சமாளித்தார்கள். ஆனால் ஆழ்துளைக் கிணறுகள் ஒன்றும் அட்சயபாத்திரங்கள் அல்லவே?

நிலத்தடி நீர் என்பது மழைபெய்யும் போது பூமிக்கு உள்ளே இறங்கவேண்டும். இல்லையேல் முன்பு பாறைகளிலே சேமிக்கப்பட்ட நீரை எடுக்கலாம். அது வற்றியபின்பு நீர் கிடைக்காது. இதை சமாளிக்கவே நம் முன்னோர்கள் ஏரி, குளங்களிலே சேரும் வண்டல் மண்ணை அகற்றி விவசாய நிலங்களுக்குப் பயன்படுத்தினார்கள். இதன் மூலம் ஏரியிலே தேங்கும் நீர் நிலத்தடி நீரைப் புதுப்பிக்கும். கூடவே விவசாய நிலங்களுக்கு நல்ல உரமும் கிடைக்கும்.

குளத்தை தூர்வாருவதும் கிடையாது. ஆழ்துளைக் கிணறுகளையும் சுரண்டி தண்ணீர் எடுத்தாயிற்று. இனி என்ன ஏமாற்று வேலை செய்வது? இதிலே உள்ளூர் ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கமுடியாத நிலையும் கூட. ஏனென்றால் இந்த விவசாய சங்கங்களும் அவர்கள் அடித்த கொள்ளையில் உடந்தை ஆக இருந்தார்கள்.

சென்னை முகப்பேரியில் ஏரி இருந்தது. 8 ஆண்டுகளுக்கு முன்னால். கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஏரி. அதில் 10 அடிக்கும் மேல் மண் கொட்டி நிரப்பி, அரசே வீட்டு மனையாக மாற்றி விற்றது. இது 8 ஆண்டுகளுக்கு முன்னர்தான் நடந்தது. இதுபோலப் பல உதாரணங்கள் உண்டு.

பேருந்து நிறுத்தங்கள், நீதிமன்றக் கட்டடங்கள், அரசு அலுவலகங்கள் போன்றவை எல்லாம் ஏரிகளிலும் குளங்களிலுமே கட்டப்பட்டன. மிச்சமிருந்த இடங்கள் வீடு கட்டிக் குடியிருக்க விற்கப்பட்டவை. இதுவே இன்றுவரை தொடர்கிறது.

நீர்நிலைகளில்தான் இப்படிப் பிரச்சினை. ஆனால் மழை, புயல், நோய் தாக்குதல் போன்றவற்றில் பயிர் சேதமடைந்தால் அதற்கேனும் அரசு நஷ்டஈடு கொடுக்கவேண்டும் அல்லவா என்ற கேள்வியும் நியாயமானதே. அவை ஏற்கெனவே கொடுக்கப்பட்டு வருகின்றன. பயிர்க்காப்பீட்டுத் திட்டம் மற்ற மாநிலங்களில் நல்ல முறையில் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு அதைப்பற்றித் தெரியவில்லை. எடுத்துச் சொல்லி நலனைக் காக்கவேண்டிய சங்கங்களோ கடன் தள்ளுபடி எனும் ஒற்றைக்கடுக்காய் வைத்தியத்திலே குறியாய் இருக்கின்றன. நெடுங்காலமாக, மத்திய அரசே உர மானியம், விதைப்பு விதைகள் எனப் பல விஷயங்களைச் செய்து வருகிறது. ஆனால் விவசாயிகள் அவற்றைச் சரியான முறையிலே பயன்படுத்தவேண்டும் அல்லவா?

தற்போதைய டெல்லி போராட்டத்தின் கோரிக்கைகள் என்ன?

விவசாயிகள் எல்லா வங்கிகளிலும் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்பதுதான் முக்கியமான கோரிக்கையாக இருக்கிறது. எல்லா வங்கிகளும் என்றால் வழக்கமாகக் கடன் தள்ளுபடி செய்யப்படும் கிராமக் கூட்டுறவு வங்கிகள் மட்டுமல்லாது, தேசிய வங்கிகளான பாரத ஸ்டேட் வாங்கி முதலான வங்கிகளிலே வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்யவேண்டும் எனக் கேட்கிறார்கள்.

இது சாத்தியமா என சக விவசாய சங்கத் தலைவர்களே கேட்கிறார்கள். காரணம், இது கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடிக்கு மேல் போகும். ஏனென்றால் விவசாயி என்பவர் என்ன காரணத்திற்காகக் கடன் வாங்கியிருந்தாலும் எந்த வங்கியிலே வாங்கியிருந்தாலும் கண்டிப்பாக தள்ளுபடி செய்யவேண்டும் எனக் கேட்பது எப்படி சாத்தியம்?

தனிப்பட்ட விவசாயிகள் நஷ்டமடைந்திருந்தால், காப்பீடு மூலமோ அல்லது கடனை அடைக்கமுடியாத சொத்து அற்றவராகவோ அறிவித்துக்கொண்டு அதிலிருந்து விடுபடலாம் என்பதுதான் நடைமுறை. விவசாயத்திற்கு மட்டும் கடன் கொடுத்த கிராமக் கூட்டுறவு வங்கிகளின் கடனைத் தள்ளுபடி செய்தால் விவசாயிகள் அதிலும் குறிப்பாக சிறு, குறு விவசாயிகள் பயன்பெறுவர். ஆனால் இப்படி ஒட்டுமொத்த வங்கிகளிலும் பெற்ற கடனைத் தள்ளுபடி செய்தால் பெரும் விவசாயிகள்தான் பயன்பெறுவர் எனவும், இப்படி ஒரு கடன் தள்ளுபடித் திட்டம் முன்பும் ஒருமுறை அறிவிக்கப்பட்டும் பயன் தரவில்லை எனவும் சொல்லுகிறார்கள்.

சக விவசாய சங்கங்களே ஆதரவு தராத நிலையிலே இன்னொரு விமர்சனமும் வைக்கப்படுகிறது. அது வருமான வரி ஏய்ப்பு. சென்ற வருடம் இந்தியாவின் மொத்த வருமானத்தை விடப் பலமடங்கு வருமானம் விவசாய வருமானமாகக் காட்டப்பட்டு வருமான வரிவிலக்கு பெறப்பட்ட பிரச்சினை நாடாளுமன்றத்திலே எழுப்பப்பட்டது ஞாபகம் இருக்கலாம். அதை முன்வைத்து, ஏன் இது வருமான வரி விலக்குச் சிக்கல்களைத் தவிர்க்க அரசியல் பின்னணியிலே செய்யப்படும் நாடகமாக இருக்கக்கூடாது எனவும் கேள்விகள் எழுகின்றன.

அப்படியானால் என்னதான் வழி? உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்றே காலங்காலமாய் வாழவேண்டியதுதானா? அல்லது கார்ப்பரேட் சதி, அந்நிய சதி என்றே போராடிக்கொண்டிருக்க வேண்டியதுதானா? என்ன தீர்வு?

விவசாயம் ஒரு வியாபாரமாக, ஒரு தொழிலாகச் செய்யப்படவேண்டும். விவசாயம் சார்ந்த தொழில்களை விவசாயிகளே அல்லது சுயாட்சி கொண்ட விவசாயக் கூட்டுறவுச் சங்கங்களே செய்து, தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்கவும் முன்வரவேண்டும்.

கோதுமையாக விற்றால் 1% லாபம் கிடைக்கும். மாவாக விற்றால் 5% கிடைக்கும். பிஸ்கெட் ஆக விற்றால் 15% லாபம் கிடைக்கும்.

தேங்காயாக விற்றால் ஒரு காய் 5 ரூபாய்க்கு விற்கலாம். காயவைத்துப் பருப்பாக விற்றால் கிலோ 100 ரூபாய். 100 காய்களுக்கு 10 கிலோ பருப்பு கிடைக்கும். பாதிக்கும் மேல் கிடைக்கும். எண்ணெய்யாக ஆட்டினால்? இரண்டு கிலோ பருப்புக்குத் தோராயமாக ஒரு லிட்டர் எண்ணெய் கிடைக்கும் என்றால், லிட்டர் 250 ரூபாய் என வைத்துக்கொண்டால், 10 கிலோ பருப்புக்கு 2,500 ரூபாய். புண்ணாக்கு விற்பது, செக்குக்கூலி, போக்குவரத்து என எல்லாம் சேர்த்தாலும் 10 கிலோ பருப்புக்கு 1,800 ரூ வரை கிடைக்கும் இல்லையா?

இதே போலவே மற்ற தொழில்களிலும் பால் உட்படக் கணக்கு போடலாம். ஆவின் விலையைக் குறைத்துவிட்டது எனவும் பால் விற்கவில்லை எனவும் வழியிலே கொட்டிப் போராட்டம் செய்யும் விவசாயிகளைப் பார்த்திருப்போம் ஏன் சீஸ், பனீர், வெண்ணெய், நெய் தயாரிப்பது எனப் போவதில்லை என்பதுதான் கேள்வி.

பால் ஒரு நாளிலே கெட்டுவிடும். பனீர் ஒரு வாரம் தாங்கும். சீஸ் ஒரு மாதம் வரை தாங்கும். வெண்ணெய் அதேபோல. நெய்யோ பல மாதங்கள் தாங்கும் எனத் தெரிந்திருக்கும்போது, ஏன் குஜராத் அமுல் போல தமிழ்நாட்டில் செய்யமுடியவில்லை? இருக்கும் ஆவின் நிறுவனமோ ஊழலில் திளைத்துத் தடுமாறுகிறதே?

பதப்படுத்தப்பட்டகிடங்குகள், சேமிப்பு நிலையங்கள் என வடக்கே அரசுத் திட்டங்களும் தனியாரும் இணைந்து பெருமளவிலே முன்னேற்றம் காணும்பொழுது இங்கே ஏன் இப்படி என ஏன் யாரும் கேட்கவில்லை? போராடவரவில்லை?

விவசாயச் சங்கங்கள் தாங்கள் விவசாயத்தில் இருக்கிறோம் என நினைக்கவில்லை. ஏதோ இலவசமா மின்சாரம் கிடைக்குத, தானா மழை பொழியுது, விதை போட்டா விளையுது என்ற அளவிலே இருக்கும் வரை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு இருக்காது.

விவசாயத்தை நவீனப்படுத்துவதும், விவசாயம் சார்ந்த தொழில்களை ஊக்குவிப்பதும் அதை விவசாய சங்கங்கள் முன்னெடுப்பதும்தான் தீர்வு.

Posted on Leave a comment

வலம் அக்டோபர் 2016 இதழ் – மாதொரு பாகன் – என்னதான் நடந்தது?

மாதொரு பாகன் – என்னதான் நடந்தது? – ராஜா ஷங்கர்

பெருமாள் முருகன் எழுதி காலச்சுவடு வெளியிட்டிருந்த ‘மாதொருபாகன்’ நூல் தொடர்பான சர்ச்சையைப் பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.

இந்த விஷயம், தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையை ஆய்வுசெய்து ஒரு ஆய்வுக்கட்டுரை மற்றும் நூல் எழுதுவதற்காக பெருமாள் முருகன் இந்தியக் கலாசார மையம் என்னும் பெங்களூருவில் இருக்கும் அமைப்பிடமிருந்து பணம் வாங்கியதில் தொடங்குகிறது. இந்த அமைப்பிடமிருந்து பணம் பெற்றதாக பெருமாள் முருகன் ‘மாதொரு பாகன்’ நூல் முன்னுரையிலேயே குறிப்பிடுகிறார். ‘ஆய்வின் மூலமாக நாவல் எழுதும் திட்டம் ஒன்றிற்கு ரத்தன் டாட்டா அறக்கட்டளை வழியே நல்கை வழங்கப் பெங்களூரில் உள்ள ‘கலைகளுக்கான இந்திய மையம் (மிதிகி)’ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதற்கு விண்ணப்பித்து நல்கை பெற்றேன்’ என்கிறார். ஆய்வுக்கு நல்கை பெற்றவர் ஆய்வுக்கட்டுரைதான் எழுதினாரா என்றால் இல்லை. மாதொருபாகன் என்ற நூலைத்தான் எழுதினார். அப்படியானால் ஆய்வு? அந்த ஆய்வின் முடிவுகளைக் கொண்டுதான் இந்த நூல் எழுதியதாகச் சொல்கிறார். நூலின் முன்னுரையில் இப்படி ஒரு வரி உள்ளது. ‘சைவம், கோயிலின் பூர்வ வரலாறு ஆகியவற்றைவிட மக்களிடையே கோயில் பெற்றிருக்கும் மிதமிஞ்சிய செல்வாக்கே என்னை ஈர்த்த விஷயம்.’ அதாவது கோவிலின் ‘மிதமிஞ்சிய’ செல்வாக்கு.

நூல் வெளிவந்து சில வருடங்கள் கழித்துத்தான் சர்ச்சை ஆரம்பிக்கிறது. இந்த நூலிலே இப்படி ஒரு தரக்குறைவான விஷயம் ஆய்வு என்னும் போர்வையில் சொல்லப்பட்டிருப்பது, இந்நூல் வெளிவந்தபோது மக்களுக்குப் பரவலாகத் தெரியவில்லை. தமிழ்நூல்களைப் படிக்கும் வழக்கமே அருகிவருகிறது என்பதை அந்த நூல்களைப் பதிப்பிப்பவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். அதுவும் தீவிர இலக்கியப் புனைவு என்னும் போர்வையில் வரும் புத்தகங்களை வாசிப்பவர்கள் மிகமிகக் குறைவே. அதிலும் இப்படிப்பட்ட இடதுசாரித்தனமான நூல்களை கம்யூனிஸ்ட்டுகள் தங்களுக்குள்ளே படித்துக்கொண்டு தங்களுக்குள்ளே பாராட்டுவிழாவும் நடத்திக்கொள்வார்கள் என்பதால் இந்நூல் வெளிவந்தபோது இதைப் பற்றி வெளிஉலகுக்குத் தெரிவதில்லை.

இந்நூல் எழுத காசு கொடுத்தவர்களும், இந்நூலோடு தொடர்புடைய சிலரும் சேர்ந்து கொங்கு மண்டலத்தின் மக்கள் மீது வீசிய புழுதியை உலகெங்கும் கொண்டு செல்வது எனத் தீர்மானித்து இந்த நூலுக்கு சிங்கப்பூரிலே பாராட்டு விழா நடத்தினார்கள். அதுவும் ஆங்கிலத்திலே மொழிபெயர்க்கப்பட்ட நூலுக்கு. அப்போதுதான் இந்நூல் குறித்த உண்மையான செய்திகள் மக்களுக்குத் தெரியவருகின்றன. நன்றாகக் கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் கொங்கு மண்டலத்தில் எந்த இடத்திலும் இந்நூலுக்கு ஒரு விவாதமோ பாராட்டோ விழாவோ ஏற்பாடு செய்யப்படவில்லை. நேராக சிங்கப்பூர் போய்விட்டார்கள்.

ஒரு தம்பதியினருக்குக் குழந்தை இல்லை என்பதைச் சொல்வதாக அமைந்திருக்கும் கதையில், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, குழந்தை வரம் என்பது கடவுளின் அருளால் கிடைப்பதில்லை, அது கோவில் திருவிழாவுக்கு வரும் ஆண்களுடன் கூடுவதால் கிடைப்பது என்றும் கோவில் திருவிழாவிலே மிகமோசமான நிகழ்வுகள் நிகழ்கின்றன என்றும் சொல்லப்பட்டுள்ளது. இங்கே கவனிக்கப்படவேண்டியது, இதை நேரடியாகச் சொல்லாமல், இப்படி ஒரு விஷயம் காலங்காலமாக நடந்து வருவதாகவும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், பின்னணியில் மறைமுகமாகச் சொல்லப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட ஆதாரமற்ற மோசமான கருத்தைப் பின்னணியாகக் கொண்டு ஆய்வு என்ற பெயரில் தங்கள் ஊரும் புனிதமான கோவிலும் கேவலப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்த மக்கள் அகிம்சை முறையிலே எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். கடையடைப்பு, அமைதியாக ஊர்வலம் என எதிர்ப்புகள் பதிவுசெய்யப்பட்டன. இந்த எதிர்ப்பைக் கண்ட கதாசிரியர் தன் நூலான ‘மாதொருபாகன்’ நாவலில் சொல்லப்பட்டவை அனைத்தும் கற்பனை எனவும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் எனவும் பல அறிக்கைகளை வெளியிட்டார். மக்களோ அந்தப் பாசாங்குக்கெல்லாம் மயங்கவில்லை. இறுதியாக மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்திய அமைதிக்கூட்டத்தில் நிபந்தனை அற்ற மன்னிப்புக் கேட்பதாகச் சொல்லி கையெழுத்திட்டுத் தந்துவிட்டார் நாவலாசிரியர்.

அக்கூட்டத்தில் பெருமாள் முருகனால் ஒப்புக்கொள்ளப்பட்டவை:

1. யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் இந்தப் புத்தகம் எழுதப்படவில்லை.

2. எதிர்காலத்தில் இப்புத்தகம் வெளிவந்தால் திருச்செங்கோடு பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம் பெறாது.

3. இது தொடர்பாக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும்படி பேட்டியோ கட்டுரையோ வெளியிடமாட்டேன்.

4. ஏற்கெனவே வெளியிடப்பட்ட பிரதிகளில் விற்பனையாகாமல் உள்ள புத்தகங்களைத் திரும்ப பெற்றுக்கொள்கிறேன்.

மாவட்டநிர்வாகம் கூட்டிய கூட்டத்தில் இப்படிக் கையெழுத்திட்டுத்தந்த கதாசிரியர் ‘அடுத்தநாள் பெருமாள் முருகனின் மரணம்’ எனச் சமூக வலைத்தளங்களில் அறிவித்தார். இதனால் தூண்டப்பட்ட மனித உரிமைக்கும் கருத்து சுதந்திரத்திற்கும் குரல் கொடுப்பவர்களாகச் சொல்லிக்கொள்பவர்கள் மாவட்ட நிர்வாகம் செய்த முயற்சிகளையும் நாவலாசிரியர் மேல் பதியப்பட்ட காவல்துறை வழக்குகளையும் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ‘பெருமாள் முருகன் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் நீக்கவேண்டும். கருத்துச் சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு வேண்டும்’ என்ற கோரிக்கைகளையும் முன்வைத்தனர். இதில் ஒரு தரப்பாக பெருமாள் முருகன் பின்புதான் சேர்க்கப்பட்டார். அந்தக் ‘கதை’யை வெளியிட்ட பதிப்பாசிரியரும் சேர்ந்துகொண்டார். பதில் மனுக்களை இந்து இயக்கங்களும் கொங்கு மண்டல சமூக அமைப்பைச் சேர்ந்தவர்களும் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் பல விசித்திரங்கள் நடந்தேறின. முதலில் இந்தக் கதை ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்டது எனச் சொன்ன கதாசிரியர், அது வெறும் கற்பனை எனச் சொன்னார். ஆனால் அந்தப் புத்தகத்தை பதிப்பித்த பதிப்பாளர் ‘அது கற்பனை அல்ல, உண்மை’ என்று வாதாடினார். மேலும் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தது உண்மையே எனச் சொல்ல காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருந்த கட்டுரைகளிலும் புத்தகங்களிலும் இருந்தே ஆதாரம் காட்டுகிறோம் என்ற வேடிக்கைகளும் நடந்தன. அதோடு ஏகப்பட்ட புத்தங்களைக் கொண்டுவந்து, இதிலெல்லாம் ஆதாரம் இருக்கிறது, இதைப் படித்துப் பார்த்துவிட்டு பதில் சொல்லுங்கள் என செய்ய முடியாத வேலைகளைச் செய்யச் சொன்ன விநோதங்களும் நடந்தன.

கொங்கு மண்டல சமூக அமைப்புகள் தங்கள் வாதத்தில், இப்படி எழுதப்பட்டிருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, இந்து அறநிலையத்துறையின் 100 வருட ஆவணங்களில் இப்படி எந்த ஒரு குறிப்பும் இல்லை, எனவே இப்படி உண்மைக்குப் புறம்பான விஷயங்களை எழுதியவர்கள்மீதும் அதைப் பதிப்பித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்கள். இந்து மத நூல்களிலும் இப்படியான ஒரு கேவலமான செய்கை ஏதுமில்லை, சாஸ்திர சம்பிரதாயங்கள் இதை எப்போதும் சொன்னதில்லை என்பதும் முன்வைக்கப்பட்டன.

வழக்கின் தீர்ப்பு, கோவிலில் நடந்ததாக இருந்தாலும் தவறில்லை, ஏனென்றால் கோவிலில் ஓர் இடத்தில் நடந்ததாகச் சொல்வது கோவிலையோ அல்லது இந்து மதத்தையோ புண்படுத்தியதாகாது என்பதையும் அக்காலத்திய மக்களைச் சொன்னதை இப்போது இருக்கும் மக்கள் தங்களைச் சொல்வதாக நினைத்து வருத்தப்படக்கூடாது என்பதையும் உள்ளடக்கியதாக இருந்தது. பல வாதங்களைப் பயன்படுத்தி மனித உரிமை ஆர்வலர்கள் போட்ட மனுவை ஏற்று, மக்கள் அளித்த பதில் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இரண்டு தரப்பும் சமாதானமாகப் போகவேண்டும், காலத்தினால் இந்த வடுக்கள் ஆறும், எனவே நடந்ததை மறந்து இரண்டு தரப்பும் சுமூகமாகப் போகவேண்டும் என நீதிமன்றம் ஆலோசனையும் வழங்கியது. எழுத்தாளர் உயிர்த்தெழுந்து மீண்டும் வரவேண்டும் என எழுத்தாளருக்கு வேண்டுகோளும் விடுத்தது.

தீர்ப்புக்குப் பிறகு மனித உரிமை ஆர்வலர்களும் இன்னபிற கோஷ்டிகளும் மிகவும் அமைதியாக இருக்கிறார்கள். இந்த விடுதலையைக் கொண்டாடி ஒரே ஒரு கட்டுரையை எழுதியதோடு சரி. நாவலாசிரியரும் ‘நான் என்னை சுயபரிசோதனை செய்து கொள்கிறேன், சுய தணிக்கை செய்து கொள்கிறேன்’ என்றெல்லாம் பேட்டி கொடுத்திருக்கிறார். அவரின் எல்லா நூல்களும் ஒரு மாற்றத்திற்கு உட்பட்டே மீண்டும் வரும் எனவும் சொல்லியிருக்கிறார். டெல்லியில் ஒரு கவிதைத்தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். என்.டி.டி.வியில் பேட்டி அளித்திருக்கிறார். இதற்கு டெல்லியில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் காரணமா, அல்லது ஆட்சி மாறட்டும் எனக் காத்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை. ஒருவேளை தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலே முறையீடு செய்தால் அதை நீர்த்துப் போகச் செய்வதற்காக ‘நாங்களே தணிக்கை செய்து கொள்கிறோம் எனச் சொல்லி இருக்கிறோம்’ எனச் சொல்வதற்காகவா எனத் தெரியவில்லை.

இந்துக்களின், இந்நாட்டு மக்களின் வரலாற்றைக் காசு கொடுத்து திரித்து எழுதுவதற்கு ஒரு பெரும் படையே இருக்கிறது என மீண்டுமொரு முறை நீருபிக்கப்பட்டுள்ளது. அப்படித் திரித்த வரலாற்றை முட்டுக்கொடுக்கவும் ஒரு பெரும் கூட்டம் ஆயத்தமாக இருக்கிறது என்பதும் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய சரியான வரலாற்றை நாமே ஆய்வுபூர்வமாக எழுதி நமது அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்வதும், இதுபோன்ற ஆய்வு என்ற பெயரில் நடக்கும் மோசடிகளுக்கு எதிராகத் தீவிரமாகக் குரல் கொடுப்பதும் நாம் உடனடியாக முன்னெடுக்கவேண்டியவை. இவை அன்றி இதுபோன்ற விஷயங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்வதைத் தடுக்கவே முடியாது.

-oOo-