Posted on Leave a comment

சுழல் (சிறுகதை) – ராமசந்திரன் உஷா

அந்த மாலை நேர நெரிசலில் கையில் ஊன்றுகோலுடன், தடுமாறும் அம்மாவின் கையைப் பற்றிக்கொண்டு நடக்க முடியாமல் திணறினார் ராகவன். எதிர் வெய்யில் முகத்தில் அடித்தது. ஊற்றாய்க் கொட்டும் வியர்வை. நெருக்கித் தள்ளும் கூட்டம். காதைக் கிழிக்கும் வாகனங்களின் ஹாரன் சத்தங்கள். தெருவையே ஆக்கிரமைத்துக்கொண்ட காய்கறிக் கடைகள். சடசடவென்று சிறுநீர் கழித்துக்கொண்டே காய்கறிக் கூடைகளில் வாய் வைக்கும் மாடுகள்.

“முப்பத்தஞ்சு வருஷமாகியும் டிரிப்ளிகேன் அப்படியே இருக்கு” என்று அவர் வாய் முணுமுணுத்தது.

“பேபி! காரை பெருமாள் கோவில் வாசலிலுக்கு வரச் சொல்லிடு. நாம ராகவேந்திரர் மடத்துக்குப் போயிட்டு, இப்படியே பிரதட்சணமாய் கோவில் முன்வாசலுக்குப் போயிடலாம்” என்றார் கோதையம்மாள்.

பேபி! அம்மாவைத் தவிர வேறு யாரும் கூப்பிடாத பெயர். அக்காவும், அண்ணாவும் சிறு வயதில் நண்பர்கள் முன்னிலையில் கூப்பிட்டு அழ வைப்பார்கள். அம்மாவுடன் பல முறை இந்த பேபி பெயர் அழைப்பு வேண்டாம் என்று சண்டை போட்டதும் உண்டு. ஆனால் வயது ஏறஏற அம்மா பேபி என்று கூப்பிடுவது கேட்டு வயது மறந்து குழந்தையாய் மாறும் ஒரு நிறைவான உணர்வு.

ராகவேந்திரரை வணங்கிவிட்டு வெளியே வந்தால், அம்மா “வடிவுடையம்மன் வெண்ணைய்க் கடை இன்னும் இருக்கு பாரேன். நல்லா அழகா மாத்திட்டாளே? ஒரு கால் கிலோ வாச்சும் வாங்கேன். இந்த வாசனையும் ருசியும் வேற எங்கும் கிடைக்கிறதில்லே… உங்கப்பா, வெண்ணை வாங்கிண்டு வந்தா போதும், நீங்க மூணு பேரும் பாதிய தின்னே தீர்த்திடுவீங்க. ஆங்… கார் ஏசி இருக்கட்டும், இல்லைன்னா இந்த வெய்யில்ல வெண்ணெய் ஊருகி வீணா போயிடும்.”

ராகவன் டிரைவரிடம் பணத்தைத் தந்து வெண்ணெய்யை வாங்கி காரில் வைத்துவிட்டு, பார்த்தசாரதி பெருமாள் கோவில் முன்வாசலில் வந்து காத்திருக்கச் சொல்லிவிட்டு அம்மாவுடன் நடந்தார்.

“முன்ன எல்லாம் ராகவேந்திரர் மடம் இருளோன்னுட்டு இருக்கும். இப்ப பாரு என்னமா கூட்டம்? சாமி இல்லைன்னு சொல்ல சொல்ல பக்தி அதிகமாயிட்டேயில்லே போறது.” அம்மா சொன்னதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்தார் ராகவன்.

ரெட்டை ஜடையுடன், தாவணியில் ஒரு சிறுமி கடந்து போனாள். “லலிதாவா?” என்று ஒரு விநாடி மனம் பேதலித்துப் போனது. இன்னும் இரண்டு மாதங்களில் ஐம்பத்தி ஆறு வயது ஆகப்போகிறது. கூட படித்த லலிதாவுக்கும் அதே வயது இருக்குமில்லையா? அவளோட பேத்தியா கூட இருக்கலாம். முகத்தில் புன்னகை மலர்ந்தது.

கோவிலுக்குள் நுழைந்தார்கள். நல்ல கூட்டம். அப்பொழுதுதான் சன்னதி திறந்ததால், காத்திருந்த கூட்டம் உள்ளே நுழைய முண்டியது. அம்மா பெருமாளே என்று சொல்லிக்கொண்டே, ராகவனின் கையைப் பற்றியபடி முன்னே போய்க்கொண்டே இருந்தார்.

முப்பத்து ஐந்து வருட அமெரிக்க வாழ்க்கையில் சத்தம், கூட்ட நெரிசல், வியர்வை, பூ வாசனை எல்லாமே மறந்து போய் இருந்தது அவருக்கு. இடைக்கிடையில் இந்தியாவிற்குப் பலமுறை வந்திருந்தாலும், இதுபோன்ற கூட்டத்தில், நெரிச்சலில் சிக்கியது இல்லை. அவரின் இறைநம்பிக்கையின்மை மனைவி மகளுக்கும் தொற்றிக் கொண்டதால் இந்தியப் பயணங்களின்பொழுது பழங்காலக் கோவில்களின் சரித்திரச் சான்றை ஆராய மட்டும் போவது என்று வழக்கமாகிப் போய்விட்டது.

அந்தக் கூட்டத்தின் பக்திப் பிரவாகம் அவருக்கு விசித்திரமாய் இருந்தது. சுற்று முற்றும் பார்த்தார். எல்லார் கண்களிலும் பரிதவிப்பு. அவருக்குப் பரிதாபமாய் இருந்தது. ஆசைகளும் தேவைகளும் அதிகரிக்க அதிகரிக்க கடவுள் நம்பிக்கையும் அதிகரிக்கத்தானே செய்யும்?

நாலு வருடங்களுக்கு முன்பு அப்பா காலமானதும் அண்ணா வீஆரெஸ் வாங்கிக்கொண்டு ஶ்ரீரங்கத்தில் செட்டில் ஆகிவிட்டான். அம்மாவைக் காண வந்த ராகவனிடம், எண்பது வயதைக் கடந்தவள் கடைசியாய் ஒருமுறை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளைத் தரிசிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டதும், அவரால் மறுப்பு சொல்ல இயலவில்லை.

“எதுக்கு ஓரமாய் போறே? இப்படி வா. சீக்கிரம் ஸ்வேதாவுக்கு நல்ல வரனா அமையணும்ன்னு வேண்டிக்கோ.”

டாக்டரேட் செய்யும் மகளுக்கு இப்பொழுது எதற்குக் கல்யாணம்? வியர்வை நாற்றம் குமட்டியது. முண்டியடிக்கும் கூட்டத்தில் இருந்து விலகி இன்னும் ஓரமாய்ப் போய் நின்றார்.

அப்பொழுது அந்தக் குரல் இடது காதில் தெளியாய் விழுந்தது.

“பெருமாளே! நான் என்ன பாவம் செஞ்சேன். எம்பையன் பொண்டாட்டி பேச்சைக் கேட்டுண்டு என்னைக் கேவலமா நடத்தறானே… அப்பனை முழுங்கிட்டுப் பொறந்த பிள்ளைன்னு ஊரே கரிச்சிக் கொட்ட, நான் ஒருத்தியா வளர்த்து ஆளாக்கியது அவனுக்கு மறந்து போச்சே. வேலைக்காரிக்கும் கீழாய் என்ன நடத்துறானே? போதும் நானும் மனுஷ ஜென்மம் எடுத்து நாய்ப்பாடு பட்டுக்கிட்டு இருக்கிறது.”

“மாமி ஆரம்பிச்சிட்டேளா ஒங்க புராணத்த! இந்தாங்க தீர்த்தம், சடாரி வாங்கிட்டு மத்தவாளுக்கும் சேவிக்க வழிவிடுங்கோ.”

மெல்லத் திரும்பிப் பார்த்தால், கூட்டத்தில் இரண்டொரு கிழ முகங்கள். ராகவனின் கண்ணில் கற்பூர தீப ஒளியில் பெருமாள் முகம் பளிச்சென்று பட்டது.

“பாவம், அந்தம்மாவுக்கு நிம்மதி கிடைக்கட்டும்” என்று நினைத்துக் கொண்டார்.

பச்சைக் கற்பூர வாசனையுடன் கிடைத்த தீர்த்தம் அருமையாய் இருந்தது. கையில் கிடைத்த ரெண்டு இலை துளசி மணத்தது. வெளியே வர பின்னால் அம்மாவும் வந்தார்.

மனம் முழுக்க அந்தக் கிழவியின் பரிதாபக் குரல்.

“இப்படியே, சித்த நாழி ஆண்டாள் சன்னதியில ஒக்காந்திட்டு போகலாம்” என்று சொல்லிக்கொண்டே அம்மா உட்கார்ந்து விட்டார்.

“எத்தன வருஷம் ஆச்சு?” அம்மா நீண்ட பெருமூச்சு விட்டார். கண்கள் கனவுலகில் மிதப்பது போல இருந்தது.

“எனக்கு அப்ப எல்லாம் எல்லாமே பெருமாள்தான். உங்க ஆண்டாள் பாட்டி படுத்தல், அப்பாவோட பணக் கஷ்டம், ஜெயஶ்ரீ கல்யாணம், நீ, உங்கண்ணா படிப்பு வேலைன்னு என்ன பிரச்சனையானாலும் சாயந்தரம் பெருமாளை சேவிச்சிட்டுட்டு, தோ… இந்தத் தூணில் சாஞ்சிண்டு கண்ணை மூடிண்டு பத்து நிமிஷம் ஒக்காந்தா போதும், மனசு நிம்மதியாயிடும்.”

ராகவன் பதில் சொல்லாமல் அம்மாவைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.

“நீ மட்டும் என்ன? ஒன் பிரண்ட்ஸ் எல்லாரோட சேர்ந்து, இந்த சுத்து மண்டபம் முழுக்கப் பெருக்கி அலம்பி சுத்தம் செய்வாயே? அந்த பக்திக்குதான் இப்ப ஓஹோன்னு இருக்கே” என்றார் அம்மா.

ஒன்பதாவதில் இருந்து பதினோராவது வரை மாசாமாசம் பள்ளி நண்பர்களுடன் விளையாட்டாய்ச் செய்தது. போதாக்குறைக்கு பொங்கல், புளியோதரை என்று பிரசாதம் வேறு கூலியாய்க் கிடைக்கும்.

“பெருமாளாண்ட வேண்டிண்டு இருக்கேன். நீயே பாரேன். சீக்கிரம் ஸ்வேதாவுக்கு கல்யாணம் நிச்சயமாயிடும். மாப்பிள்ளைக்கு ஆபரேஷன் நல்லபடியா நடக்கணும். உங்கண்ணாவுக்கு…” அம்மா சொல்ல சொல்ல ராகவனுக்குக் கொஞ்சம் எரிச்சலாய் வந்தது. கடவுள் என்பது கேட்டதைக் கொடுக்கும் மெஷினா? என்ன சுயநலம் இது? இப்படி நினைக்கும்பொழுதே காதில் கேட்ட அந்தக் கிழவியின் பரிதாபக் குரல் நினைவுக்கு வந்தது. இவ்வளவு வருடங்கள் கழித்து கோவிலுக்கு வந்து தன் பிரச்சினைகளை நினைக்காமல் யாரோ முகம் தெரியாத ஒருத்திக்காக வேண்டிக் கொண்டதை நினைத்து ஒரு நொடி மனசு பெருமைப்பட்டது.

“சரி போகலாமா, டைம் ஆச்சு” என்றதும், அம்மா அவர் கையைப் பிடித்துக்கொண்டு எழுந்தார். மெல்ல நடந்து கொண்டிருந்தவர் வெளி மண்டபத்துக்கு வந்ததும் அப்படியே நின்றார்.

அருகில் இருந்த தூணைப் பிடித்துக் கொண்டு நின்றவர், கண்கள் கலங்க, “நோக்கு நெனைவிருக்கா பேபி, இப்ப நடந்தா மாதிரி இருக்கு” உணர்ச்சியின் வேகத்தில் வார்த்தைகள் தடுமாறின.

“பியூசி ரிசல்ட் வர அன்னைக்கு, அப்பா ஏதோ சொல்லிட்டார்ன்னு கோச்சிண்டு எங்கோ போயிட்டே. காலைல காப்பி சாப்பிட்டுப் போனவன், மத்தியானம் சாப்பிடவும் வரலை. ரிசல்ட் பார்க்க போயிருப்பேன்னு ஒங்கண்ணா காலேஜ்க்கு போய் தேடிட்டு உன்னை காணலைன்னு வந்தான். காலேஜ்ல பர்ஸ்ட் மார்க், நீ இஷ்டப்பட்டபடி இன்ஜினியர்க்குப் படிக்கலாம்ன்னு சொன்னான். ஆனா ஒன்ன எங்க தேடியும் காணலை. சாப்பிட வந்த அப்பாவாண்ட, நீ கோச்சிண்டு போனதைச் சொன்னேன். அப்படியே திண்ணைல ஒக்காந்து கண்ணு கலங்கிட்டார். இருந்தாப்போல அப்படியே தெருல இறங்கி ஓடறார். எனக்கு ஒண்ணுமே புரியலை. கால்ல செருப்பு கூட இல்லாம அவர் பின்னாலே போறேன். இதோ இந்த வெளி வாசல், இதோ… இந்த தூணுல சாஞ்சிண்டு, அரை மயக்கமா கெடந்தே. அப்பா உலுக்கறார். வரமாட்டேன்னு தலை ஆட்டறே. நாணா வந்து உன் மார்க் சமாச்சாரம் சொன்னதும்தான் உனக்கு பிரக்ஞையே வந்தது. அந்த பக்தி தாண்டா ஒனக்கு இந்த ஐஸ்வரியத்தைத் தந்திருக்கு… சும்மாவா சொல்லுவா திக்கற்றவாளுக்கு தெய்வம்தான் துணைன்னு. நாம அன்னைக்கு இருந்த இருப்புல நீ அமெரிக்கா போய் படிப்பேன்னு கனாக்கூட கண்டிருக்க முடியாது.”

அம்மா சொல்லிக்கொண்டே போக, போன ஜென்மத்து நினைவுகளாய் மறந்துபோன விஷயங்கள் எல்லாம் அவர் மனக்கண்ணில் படமாய்த் தெரிந்தன.

அதே தூணில் கையை வைத்து மெல்ல தடவினார். ஆக எனக்குத் தேவையிருக்கும்பொழுது, என்னால் சமாளிக்க முடியாது என்ற நிலையில் கடவுளை நம்பியிருக்கிறேன். இப்பொழுது பிரச்சினைகள் வந்தாலும் பணமும் அந்தஸ்தும் எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கையைத் தந்துள்ளதா என்ன? ஆக, நாத்திகம் என்பது இவ்வளவுதானே? அம்மாவின் வேண்டுதல்கள், சன்னதியில் கூடும் கூட்டத்தின் பரிதவிப்பு, எல்லாம் ஏளனமாய் நினைத்தது சரியா? ராகவனுக்கு குழப்பமாய் இருந்தது.

“என்ன மாமி, மணி ஆச்சு இன்னும் கிளம்பலையா?” யாரோ கட்டைக் குரலில் கேட்க, “போனா போறது” என்று அலட்சியமாய்ச் சொன்னது பெருமாள் சன்னதியில் புலம்பிய அதே குரல்.

“எம் புள்ளைக்கு, ஜூரம்ன்னு இன்னைக்கு லீவு போட்டிருக்கா மாட்டுப் பொண். ஒரு நா எல்லா வேலையும் பண்ணட்டுமே.” கிழவியின் குரலில் அலட்சியம். சன்னதியில் கேட்ட பரிதாபக் கெஞ்சலுக்கும், இப்பொழுது மகனையும் மருமகளையும் அலட்சியமாய்ப் பேசும் குரலுக்கும் எவ்வளவு வித்தியாசம்? ராகவனுக்கு திரும்பிப் பார்க்க மனமில்லை.

ஏதோ சொல்லிக்கொண்டு அம்மா மெல்ல நடந்து திரும்ப, முன்வாசல் படியின் மீது நின்று “பெருமாளே!” என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்.

“விசித்திரமா இருக்கு” என்று தலையை ஆட்டிக்கொண்டே,“ கற்பூர ஆரத்தி காட்டிண்டு இருந்தா. பார்த்தசாரதின்னா போர்க்கோலம்ன்னு பேரு, நீ சொன்னா நம்ப மாட்டே, மொகத்துல சாட்சாத் கிருஷ்ணன் மாதிரி ஒரு கள்ளச் சிரிப்பு. நம்பள மாதிரி அஞ்ஞானிகளைப் பார்த்தா சிரிப்பு வாராம இருக்குமா என்ன?” ராகவனுக்குத் தலையைச் சுற்றுவது போல இருந்தது. பத்துவயதில் காவேரி ஆற்றில் நீச்சல் தெரியாமல், தண்ணியில் குதித்து சூழலில் மாட்டிக் கொண்டபோது ஏற்பட்ட அதே உணர்வு.

“ சரி சரி, கிளம்பு நேரமாகுது.” எரிச்சலுடன் வாசல் பக்கம் திரும்பினார் ராகவன்.

Posted on Leave a comment

கொனாரக் மகாலஷ்மி (சிறுகதை) – ராமசந்திரன் உஷா

ஹொரா எக்ஸ்பிரஸ் அரை மணி நேரம் தாமதமாய் வந்தது. நாலு நாள் பயணம் என்பதால் லக்கேஜ் அதிகமில்லை. சின்ன சூட்கேசை சீட்டுக்கு அடியில் தள்ளிவிட்டு நிமிரும்பொழுது, “எதுக்கு தனியாய் டிரெயின்ல போகணும், பேசாம பிளைட்டுலேயே போயிருக்கலாம்” என்று முணுமுணுத்தவரை பார்த்து, “நானூத்தி நாற்பத்தி நாலாவது தடவை இந்த ஒரு வாரத்தில் சொல்லியாச்சு” நான் சிரித்துக்கொண்டே சொன்னதைக் கேட்டு ஒரு முறை முறைத்தார்.

யாரோ அழைப்பது கேட்டுத் திரும்பினால் ஓய்வுபெற்ற  அலுவலக சகா அசோக்.

“என்ன மேடம் எங்க பயணம்” என்றவரை கணவருக்கு அறிமுகம் செய்துவிட்டு, “புவனேஸ்வர்ல ஒரு கான்ஸ்பரன்ஸ். அதுதான்.” நான் முடிக்கும் முன்பு, “நீங்க பிளைட்டுலேயே போயிருக்கலாமே, எலிஜீபிலிட்டி இருக்குமே” என்றதும், “இவளுக்கு ரெயில் ஜேர்ன்னிதான் பிடிக்கும்…” என்று ஆரம்பித்த கணவரை, “நீங்க கெளம்புங்க” என்றேன்.

“சரி வரேன். ரொம்ப சுத்தாதே, பார்த்து… ஜாக்கிரதை” என்று சொல்லி இறங்கவும், ரயில் கிளம்பியது.

எதிர் சீட்டிலேயே திரு, திருமதி அசோக். சாப்பாட்டு மூட்டையை ஜன்னல் ஓரத்தில் இரண்டு சீட்டுக்கும் நடுவில் இருந்த சின்ன மேடையில் வைக்கப் போனேன்.

“அங்க வைக்காதீங்க. ஸ்வாமி வைத்திருக்கேன். எங்க போனாலும் பூஜையை விடமாட்டேன்” என்றார் திருமதி அசோக்.

அழகாய் டவல் விரித்து வானிட்டி பேக் மாதிரி ஒன்று உட்கார்ந்திருந்தது. நான் என் சாப்பாட்டு மூட்டையை சீட்டில் வைத்தேன்.

“நா பிளைட்டுல போகலாம்ன்னு எவ்வளவோ சொன்னேன். இவர் கேட்கல.” புலம்பலாய் ஆரம்பித்தாள் திருமதி அசோக்.

“இல்லே மேடம், குரூப்பா புவனேஸ்வர், கல்கத்தா போறோம். நாம மட்டும் பிளைட்டுல போனா நல்லா இருக்குமா?  இன்னைக்கு நைட்டு கிளம்பினா நாளைக்கு நைட்டு போய் சேர்ந்திடலாம்.”

கொஞ்ச நேரம் பழைய நண்பர்களைப் பற்றிப் பேசிவிட்டுப் படுக்கையைப் பிரித்துப் போட ஆரம்பித்தனர்.

நான் ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டு அப்படியே உட்கார்ந்திருந்தேன். காதில் எம்பி3 பிளேயரில் இளையராஜா.

திருமதி. அசோக் ஏதோ சொல்வது போல் இருந்தது. ஹெட் போனை எடுத்ததும்,

“அது என்ன டிரெயின்ல போவது ரொம்ப பிடிக்கும்ன்னு சொன்னீங்க? திரும்ப திரும்ப என்ன வர போகுது” என்றவளிடம், “பச்சை பசேல்ன்னு ஆந்திரா நெல்லு வயல், கோதாவரி, சில்கா ஏரின்னு எனக்கு எத்தனை பார்த்தாலும் அலுக்காது.” என்னமோ சரி என்பதைப் போல தலை அசைந்தது. அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல், “கோதாவரின்னு ஒரு தெலுங்கு படம். அதை பார்த்துல இருந்து கோதாவரி நதி இன்னும் பிடிச்சிப் போச்சு” என்றேன்.

“பக்தி படம்தானே? நம்ப மாதிரி கிடையாது. ஆந்திரால பக்தி அதிகம். கோதாவரி நதிக்கரைக் கோவில்கள்ன்னு பக்தி மலர்ல படிச்சிருக்கேன்.”

“இல்லே இல்லே இது சும்மா ஃபீல் குட் மூவி. கதை முழுக்க கோதாவரி நதியில் நடக்கும்” என்றவள், அங்கதான் ஹீரோவை மீட் பண்ணுவா என்பதைச் சொல்லாமல் விட்டுவிட்டேன்.

“சினிமா எல்லாம் போறதேயில்லை.. என்னமோ இன்னைக்கு சிவராத்திரிதான்” என்று பெருமூச்சு விட்டுக்கொண்டு படுத்துக்கொண்டார் அந்த அம்மையார்.

விளக்குக்கள் அணைந்தன. ஜன்னல் ஓர இருக்கை. இருட்டில் தூரத்தில் தெரியும் வெளிச்சப் புள்ளிகள். இதமான ஏசி குளிர். காதில் எஸ்.பி.பி “இது மெளனமான நேரம்” என்று குழைய ஆரம்பித்தார்.

தாலாட்டு போல ரயில் ஆட்டத்தில் நல்ல தூக்கம். ஏதோ கோவில் மணிச் சத்தம், பாட்டுச் சத்தம் கேட்டது.

கண்விழுத்துப் பார்த்தால் நடுநாயகமாய் திருமதி. அசோக், வானிட்டி பேகுக்குத் தீபாரதனை காட்டிக்கொண்டு இருந்தாள். சுற்றிலும் ஏழெட்டு பேர்கள்.

மெல்ல எழுந்து பல் தேய்த்துவிட்டு வந்தால், உலர் பழங்கள் பிரசாதமாய்க் கிடைத்தன.

“பர்ஸ்ட் ஏசில குளிக்க நல்ல வசதி. டவல், சோப் எல்லாம் தராங்க. எங்க குரூப் ஆளுங்க அங்கேயும் ரெண்டு பேர் இருக்காங்க, குளிச்சதால் பூஜை பண்ண முடிந்தது” என்றார் மாமி பெருமையாய்!

மூன்றாம் வகுப்பு ஏசியில் பஜனை நடக்கிறது என்று கிளம்பிப் போனவர் ஒரு மணி நேரத்தில் நாலைந்து பேருடன் வந்தார்.

ஒருவர் கையில் இருந்த லேப் டாப்பை சீட்டில் வைத்தார்.  ஜன்னல் சீலைகள், பர்த் சீலைகள் இழுக்கப்பட்டு இருட்டாக்கப்பட்டது. முந்தின நாள் சீரியல்கள் ஓட தொடங்கின. நல்லவேளையாய் சைட் பர்த் ஆசாமியும் எட்டிப் பார்க்க, அவரை என் சீட்டில் உட்கார சொல்லிவிட்டு, வெளியே அவர் இடத்தில் அமர்ந்தேன்.

நானும் ஜன்னல் ஓரக் காட்சிகளில், இளையராஜாவுடன் ஐக்கியம் ஆனேன்.

மறுநாள் முழுக்க கான்ஃபரன்ஸ் ஓடியது. அடுத்த நாள் காலை பத்து மணிவாக்கில் பல நாள் கனவான கொனாரக் போய்ச் சேர்ந்தேன். முன் மண்டபம் தாண்டிப் போனதும் திரை விரிந்தது போல பிரமாண்டம். அப்படியே வாய் அடைத்துப் போனேன். முன் மண்டபம் முழுக்க நாட்டிய நங்கைகள். வித வித போஸ்கள். மெயின் சூர்ய தேவன் கோவில் முழுக்க திருக்குறளின் மூன்றாவது பால். கொனாரக்கின் பிரபல சூரிய சக்கரங்கள்.

எது கை, கால் என்று தெரியாமல் ஓர் அற்புதச் சிலை. பார்த்துக்கொண்டு இருக்கும்பொழுது, எப்படி மேடம் இருக்கீங்க என்று திருமதி.அசோக் அருகில் வந்து, சிலையைக் கூர்ந்து நோக்கியவள், மகாலஷ்மி என்று தொட்டுக் கும்பிட்டாள்.

மகாலஷ்மிக்கும் இந்த போஸ்க்கும் ஓர் ஒற்றுமை கூட என் கண்ணில் படவில்லை. முணங்கலாய், “இது மகா லஷ்மி இல்லேயே” என்று சொன்னேன்.

“நீங்க வெளி மண்டப சிற்பங்கள் பார்த்தீங்களா, ரெண்டு கை, ரெண்டு கால் இருக்கும். அதெல்லாம் நம்ம மாதிரி சாதாரண மனுஷனுங்க. இங்க பாருங்க, நாலு கை… சுவாமி சிலைன்னா இப்படித்தான் கைங்க இருக்கும்” என்று விளக்கம் சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுது அவங்க குரூப் ஆளுங்க போல நாலைந்து பேர் வர, திருமதி அசோக், ‘மகா லஷ்மி’ சிலையைக் காட்டினாள். சில பெண்கள் பக்தியுடன் தொட்டுக் கும்பிட ஒரு மாமா மட்டும் சந்தேகம் கேட்க, அதிக்க கையிருந்தால் ஸ்வாமி சிலை என்று எடுத்துச் சொன்னாலும், அந்த மாமா எந்த உணர்வும் காட்டாத முக பாவத்துடன் சட்டென்று இடத்தை விட்டு நகர்ந்தார்.

அதே சமயம், நான்கு வட நாட்டு பெண்மணிகள் வந்ததும், அதே மகாலஷ்மி புராணம் ஓட்டை ஹிந்தியில் சொல்லப்பட்டது. பய பக்தியுடன் கைகளை உயரத் தூக்கி அவர்களது பாணியில் வணங்கத் தொடங்க, வெடித்து வரும் சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு வேகமாய் இடத்தை விட்டு நகர்ந்தேன்.

செல் அடித்தது. எடுத்தவுடன் சிரிக்கத் தொடங்கினேன்.

என்ன விஷயம் என்று கேட்டவரிடம் “இங்கே ஒரு Erotic pose. கை எது கால் எங்கேன்னு தெரியலை… எங்கூட டிரெயினில் வந்தாளே, மிஸஸ் அசோக், அவ வந்து ஒரு சிலையைப் பார்த்து மகாலஷ்மின்னு கன்னத்துல போட்டுக்கிறா. அதுக்கு ஒரு எக்ஸ்பிளனேஷன் தந்தா பாருங்க…” முடிக்க முடியாமல் சிரிக்கத் தொடங்கினேன்.

“நீ சொல்லுவது எதுவும் புரியலை. ஒண்ணு சிரிச்சிட்டு சொல்லு, இல்லே சொல்லிட்டு சிரி” என்றார்.

விளக்கமாய்ச் சொன்னதும், “பாவம் விடு. Ignorance is bliss” என்றார்.

“ஆமாம். இந்த இன்னெசெண்டும் அழகுதான். எந்த விதக் கேள்வியும் மனசுல வராம அப்படியே ஏத்துக்குவதும் ஒரு கிஃப்ட்தான். தொந்தரவு இல்லை பாருங்க.”

“உன்ன மாதிரியா… கண்டதையும் படிச்சிட்டு மூளைய குழப்பிக்க வேண்டியது. சரி  சரி கிளம்பு, மணியாச்சு, இப்ப கிளம்பினா சரியா இருக்கும்” என்றவரிடம், “வாட்ஸ் அப்புல அந்தப் படம் அனுப்புறேன். பாருங்களேன்.”

“வேணா வேணாம். கேமிரா கொண்டு போனே இல்லே, அந்த மகாலஷ்மியை நானும் தரிசிக்கிறேன். குளோசப் நாலு எடுத்துக்கிட்டு வா. கை கால் எங்கேன்னு கண்டுப்பிடிக்கலாம். நாமும் டிரை பண்ணலாம்” என்றதும், “அய்யே போதுமே. வைங்க போனை” என்றேன்.