(New Yorker 17, July, 1995 இதழில் வெளியான
கட்டுரையின் தமிழ் வடிவம்)
1984ம் ஆண்டில்
மிகப் பெரிய அழிவின் அடையாளங்களை நம் இந்தியா அனுபவித்த மாதிரி உலகத்தில் எங்குமே பார்த்திருக்க
முடியாது.
தனிநாடு கேட்டு
பஞ்சாப் மாநிலத்தில் கிளர்ந்த பயங்கரம்; சீக்கியர்களுக்குப் புனிதமான பொற்கோயிலில்
நடந்த ராணுவ முற்றுகை; நமது (அப்போதைய) பிரதமரான இந்திரா காந்தியின் படுகொலை; பல ஊர்களில்
நடந்த கலவரம்; போபாலில் நடந்த விஷவாயு பயங்கரம் – இவையெல்லாமே அடுத்தடுத்து நடந்த அவலங்கள்.
1984ல் புது தில்லியில் செய்தித்தாளைப் பிரிப்பதற்கே மனதில் திடம் வேண்டும். இந்த ரத்தம்
தோய்ந்த நினைவுகள் எல்லாமே என் மனதில் ஆழ ஊடுருவி இருந்தன. நான் பார்த்த, கேட்ட, அனுபவித்த
அனுபவங்கள் எல்லாம் சேர்ந்துதான் நான் எழுத்தாளராவதற்கு முக்கியக் காரணங்களாகின. இவையெல்லாம்
என்னுள் ஏராளமான மாற்றங்களை உண்டு பண்ணியிருந்தாலும் இது நாள் வரை இவற்றை எழுத்தில்
கொண்டுவர நான் முயன்றதில்லை.
அந்த இக்கட்டான
நாட்களில் தில்லியிலுள்ள டிஃபன்ஸ் காலனி குடியிருப்பில் நான் வசித்து வந்தேன். பிரமாண்டமான
வீடுகள். வீட்டிலுள்ள வேலையாட்களுக்குத் தங்குவதற்கு தனித்தனியே குடியிருப்புகள். தேன்கூட்டைப்
போல அடுக்கடுக்காக குடியிருப்புகள், தலையில் முளைத்த டிவி ஆன்டென்னா கொம்புகள்…
இங்கிலாந்தில் உள்ள
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் டாக்டரேட் வாங்கிவிட்டு, தில்லி பல்கலைக்கழகத்தில்
விரிவுரையாளர் வேலை கிடைத்த சமயம் அது. தனியே இருக்கும் நேரங்களில் என்னுடைய முதல்
நாவலை எழுதவும் திட்டமிட்டு வேலை செய்து வந்தேன். அந்த 31ம் தேதி அக்டோபர் மாதம், திருமதி.
இந்திரா காந்தி இறந்த அன்று எப்போதும்போல காலை ஒன்பதரை மணிக்கு பஸ் ஏறி தில்லி பல்கலைக்கழகத்திற்குச்
சென்று கொண்டிருந்தேன். நான் இருந்த இடத்திலிருந்து அது நல்ல தூரம். அந்த சமயத்தில்
இந்தப் படுகொலை பற்றிய விஷயம் எனக்குத் தெரியாது. அந்த செய்தி வேகமாகப் பரவி நான் பல்கலைக்கழகம்
சென்றடைந்தபோது என்னைச் சேர்ந்தது.
கல்லூரி வளாகத்தினுள்ளே
ஆங்காங்கே சிறு சிறு குழுவாக மக்கள் கையில் ட்ரான்ஸிஸ்டர் ரேடியோவுடன் நின்று செய்திககளைக்
கேட்டு விவாதித்துக்கொண்டிருந்தனர். சீக்கியர்களின் புனிதச் சின்னமான பொற்கோவிலுக்குள்
ராணுவத்தை அனுப்பிய காரணத்திற்காகப் பழிவாங்கும் விதமாக சீக்கிய மெய்க்காப்பாளர்களே
இந்திரா காந்தியைச் சுட்டுக் கொன்றுவிட்டனர் என்ற பேச்சு காற்றில் அலைந்து கொண்டிருந்தது.
வகுப்பறைக்குள் நுழையும் முன் திருமதி காந்தி மீது துப்பாக்கிச் சூடு நடந்து அவர் சிகிச்சைக்காக
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை ஆல் இந்தியா ரேடியோ ஒலிபரப்பிக்
கொண்டிருந்தது.
நான் எப்போதும்
போல வகுப்பறைக்குள் நுழைந்து என் பாடத்தை ஆரம்பிக்க முற்பட்டேன். நிறைய மாணவர்கள் வரவில்லை.
வந்திருந்த மாணவர்களும் ஒரு மாதிரியான அச்சத்துடன் காணப்பட்டார்கள். நானே பாடம் எடுக்கத்
தடுமாறியபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் திருமதி இந்திரா காந்தியின் ஆதரவாளன்
அல்ல. ’70 களின் மத்தியில் எமெர்ஜென்சி என்ற பெயரில் அடக்குமுறை ஏவப்பட்டு நடந்த நிகழ்வுகள்
என் மனதில் பசுமையாக நினைவிருந்தன. ஆனாலும், ஒரு துணிச்சல்மிக்க, ஆளுமை நிறைந்த இந்தியப்
பெண்மணியைத் தாக்கிய விதம் சங்கடப்படுத்துவதாக இருந்தது.
திருமதி. இந்திரா
காந்தியின் மறைவு பற்றி பாகிஸ்தான் வானொலிதான் (கராச்சியிலிருந்து) மதியம் 1.30 மணி
வாக்கில் ஒலிபரப்பியது. ஆல் இந்தியா ரேடியோவில் எல்லா நிலையங்களும் சோக சங்கீதத்தை
வாசிக்க ஆரம்பித்தன. நான் ஒரு அயல் தேச தொலைபேசி அழைப்பு செய்ய வேண்டியிருந்தது. நண்பர்
ஹரி சென் அருகில் இருந்ததால் தன் வீட்டிலிருந்து செய்யலாம் என அழைத்தார். அவர் வீட்டுக்குச்
செல்ல வேண்டுமானால், தில்லி கன்னாட் பிளேஸ் எனும் இடத்தில பஸ் மாற வேண்டும். பஸ்ஸில்
செல்லும்போது கிட்டத்தட்ட எல்லாக் கடைகளுமே மூடியிருந்தன. எங்களுடன் அந்தக் கூட்டமில்லாத
பஸ்ஸில் ஒரு சீக்கிய அன்பரும் பயணித்ததை நான் முதலில் கவனிக்கவில்லை. துரதிருஷ்டவசமாக
திருமதி. இந்திரா காந்தி இறந்த மருத்துவமனை வழியாகத்தான் அந்த பஸ் சென்றது. அங்கிருந்த
ஒரு கும்பல் இந்திய ஜனாதிபதி ஜெயில் சிங் சென்ற காரை, அவர் சீக்கியர் என்ற ஒரே காரணத்தினால்,
அப்போதுதான் மறித்துத் தாக்கியிருந்தது. எங்களில் பெரும்பாலானோருக்கு தில்லியில் சீக்கியர்கள்
மீது தாக்குதல் ஆரம்பமாகி உள்ள விஷயமே தெரியாதிருந்தது.
பஸ் அந்த மருத்துவமனையை
நெருங்கும்போது அங்கிருந்த இளைஞர்கள் பலர் கைகளில் சைக்கிள் செயின், இரும்புக் குழாய்கள்
என்று ஆயுதங்களை ஏந்தி, கடந்து செல்லும் ஒவ்வொரு வண்டியையும் உற்று நோக்கியவாறு இருந்தனர்.
என் அருகே அமர்ந்திருந்த ஒரு காத்திரமான பெண்மணி அந்த சீக்கிய அன்பரைப் பார்த்து ஒளிந்து
கொள்ளுமாறு ஹிந்தியில் கிசுகிசுத்தார். அந்த சீக்கிய அன்பர் சற்று சிரமப்பட்டு இரு
இருக்கைகளுக்கிடையே தன்னை மறைத்துக் கொண்டார்.
சில நிமிடங்களில்
கையில் ஆயுதங்களுடன் ஒரு இளைஞர் கும்பல் பஸ்ஸை வழிமறித்து, கூட்டத்தில் இருந்த ஒருவன்
வண்டி ஓட்டுநரிடம், ‘உள்ளே சீக்கியர்கள் இருக்கிறார்களா?’ என்று கேட்க, அவர் ‘இல்லை’
என்றார். அதற்குப் பிறகும் திருப்தி அடையாத சில இளைஞர்கள் பஸ்ஸில் ஏறி நோட்டம் பார்த்து,
‘சீக்கியர்கள் யாரேனும் இருக்கிறார்களா?’ என்று மெல்லிய, கோபம் இல்லாத குரலில் நிதானமாகக்
கேட்டதே மிக அச்சுறுத்தலாக இருந்தது. பஸ் பயணிகள் நிறையப்பேர் ஒருமித்த குரலில் ‘அப்படி
யாரும் இல்லை. நேரமாகிவிட்டது. வழிவிடுங்கள்’ என்று கூறவும், அந்த சோம்பேறிகள் கீழே
இறங்கிக் கொண்டு பஸ்ஸுக்கு அனுமதி கொடுத்தனர்.
ரிங் ரோட் அருகே
பஸ் செல்லும் வரை யாருமே பேசவில்லை. நண்பர் ஹரி சென் புதிதாக வளர்ந்திருந்த சஃப்தர்ஜங்
என்க்ளேவ் என்ற இடத்தில இருந்தார். அந்த ஏரியாவில் நிறைய சீக்கிய அன்பர்களும் குடியிருந்தனர்.
அன்று இரவு நண்பர் வீட்டில் தங்கிவிட்டு, மறுநாள் காலை வெளியே வந்தபோது காற்றில் அச்சம்,
வெறுப்பு எல்லாம் கலந்து அங்கங்கே சீக்கிய வீடுகள், கடைகள் எரிந்துகொண்டிருந்தன. அருகே
இருந்த அன்பர் ஒருவர் எல்லா சீக்கிய வீடுகள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு, உடைமைகள்
திருடப்பட்டு வருகின்றன என்றும், சீக்கியர்களுக்கு யாரேனும் இந்துவோ, இஸ்லாமியர்களோ
புகலிடம் கொடுத்தால் அவர்களையும் ஒரு கும்பல் தாக்குவதாகத் தெரிவித்தார்.
Image Credit: AFP
சம்பவங்கள் அமைதியாக,
அதிகப்படியான திகில் கலந்த ஆச்சரியத்துடன் நிகழ்ந்து கொண்டிருந்ததை உணர முடிந்தது.
வழக்கம் போல இருக்கும் கால நேர அவசரப் போக்குவரத்தின் சப்தங்கள் அதிகமாக இல்லை. நிதானமாகத்
திட்டமிட்டு அந்த நிகழ்வின் அமைப்பாளர்கள் ஆங்காங்கே குண்டர்கள் சீக்கியர்களின் வீடுகள்
/ கடைகள் என்று குறிவைத்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். கையில் தேவையான பெட்ரோல் இருப்பை
வைத்துக்கொண்டு தேர்வு செய்து சீக்கியர்களின் குருத்வாரா (அவர்கள் தொழும் இடங்கள்)
எங்கெங்கே இருக்கிறதோ அவற்றையெல்லாம் தீ வைத்து எரித்துக் கொண்டிருந்தார்கள். சீக்கிய
இளைஞர்களை இழுத்து வந்து அடித்து நொறுக்கி உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொண்டிருந்தார்கள்.
உடைமைகளை சேதமாக்குவதை விட சீக்கியர்களை உயிருடன் கொளுத்துவதே ஆர்பாட்டக்காரர்களின்
நோக்கமாக இருந்தது. நகரமெங்கும் தீயின் வெளிச்ச நடனம்.
நான் நேரில் பார்த்ததுபோக,
இதில் கணவனையும் தன் மூன்று மகன்களையும் இழந்த ஒரு சீக்கியப் பெண்மணி, ஹரி சென் வீட்டருகே
இருந்த ஒரு சமூக சேவகரிடம் விலாவாரியாக விவரித்துக் கொண்டிருந்ததை வேறு எதுவும் செய்யமுடியாமல்
கைகளைக் கட்டிக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தோம். அடுத்த சிலநாட்களில் தில்லியில் மட்டுமே
சுமார் 2500 சீக்கியர்கள் பலியாகினர். மற்ற நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் மடிந்து இருக்கலாம்.
இந்தக் கணக்கு வெளியே வரவேயில்லை. இறந்தவர்களில் பெரும்பாலானோர் சீக்கிய ஆண்கள். இதில்
உடைமைகள், வீடுகள் எல்லாவற்றையும் இழந்து நிராதரவானவர்கள் ஏராளம்.
இந்தியாவில் உள்ள
பெரும்பான்மை மக்களைப் போலவே இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது – 1947ல் நடந்தது
போன்ற நிகழ்வுகள் – இனி ஒருபோதும் நிகழாது என்றே நம்பியிருந்தோம். ஆனால், எங்களுடைய
நம்பிக்கைகள் இந்தக் கொடூர நிகழ்வுகளினால் பொடிப்பொடியாகின. வன்முறையின் ரத்தவெறி உச்சத்தை
நேரில் பார்த்து அனுபவிக்கும் துயரமான வாய்ப்பு கிடைத்தவர்களில் நானும் ஒருவன்.
நண்பர் ஹரி சென்னும்
நானும் எல்லாவற்றையும் விவாதித்துக் கொண்டிருக்கையில், ஹரியின் அம்மா பொறுப்புடன் அருகே
இருந்த சீக்கிய முதியவர்களின் வீட்டுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்கள் தன்
(ஹரி சென்) வீட்டிற்கு வந்துவிட ஆலோசனை கூறினார். ஏனென்றால், ஆர்ப்பாட்டக்காரர்கள்
ஹரி சென்னின் வீடு இருந்த சஃப்தர்ஜங் என்க்ளேவ் ஏரியாவில் ஒவ்வொரு வீடாக சோதனையிட்டு
வருவதை அறிந்தோம்.
அந்த வீட்டிலிருந்த
முதிய சீக்கியரை பாவா என்று அன்புடன் அழைத்து வந்தார்கள். அவர் வெளியுலகில் நடப்பதின்
தீவிரம் அறியாதவராகக் காணப்பட்டார். அவருடன் சூழ்நிலையின் தீவிரத்தை எப்படி விளக்குவது
என்று யோசித்தேன். அவரோ எல்லாவற்றையும் நகைச்சுவையுடன் எடுத்துக் கொண்டு தன்னை அந்த
ஏரியாவில் இருக்கும் யாரும் துன்புறுத்த மாட்டார்கள் என்று தீர்மானமாகச் சொல்லி, என்னையும்
நண்பர் ஹரியையும் முதுகில் தட்டிக் கொடுத்து வெளியே அனுப்பிவிட்டார்.
அப்போது நடந்துகொண்டிருந்த
வன்முறையை அடக்க அரசு ஆவன செய்யும் என்று நம்பினேன். பொதுமக்களுக்கு இடையூறு தரும்
எந்தவொரு கலகத்தையும் அரசு அடக்க முற்படும் என்பது பொதுவாக எல்லோருடைய எதிர்பார்ப்புதானே?
அடிக்கடி ரேடியோவில் கலகத்தைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கேட்டுக் கொண்டே இருந்தோம்.
ராணுவம் என்ன செய்கிறது? பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்போது உதவி கிடைக்கும் போன்ற விவரங்கள்
எதுவும் தெரியவில்லை. ரேடியோவில் அதைப் பற்றிச் சொல்வார்கள் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமாந்து கொண்டிருந்தோம். இந்திரா காந்தி அம்மையாரைப் பார்க்க வெளிநாட்டு முக்கிய மனிதர்கள்
எல்லாம் வர ஆரம்பித்துவிட்டார்கள் என்று தெரிய வந்தது.
எதையும் உணரும்
முன், அடுத்த தெருவிலேயே கூச்சலும், புகையும் வருவதைப் பார்த்தபோது மிகுந்த அச்சமாக
இருந்தது. ராணுவத்தையோ, போலீஸ் படையையோ எங்கேயும் பார்க்க முடியவில்லை.
பாவா வீட்டு ஜன்னல்
வழியே வெளியே பார்த்தபோது நெருப்பையும், புகையையும் உணர முடிந்தது. அவரும் நிலைமையின்
தீவிரத்தை உணர்ந்து எங்களுடன் வெளியே (ஹரி வீட்டுக்கு) வரச் சம்மதித்தார். அவர் வீட்டுக்கு
வெளியே வந்தபோது சூரியன் மேற்கே மறைய ஆரம்பித்திருந்தான். அவர்களுடன் இருந்த சமையல்காரர்
சீக்கியர் அல்லாதவர் என்பதால் பாவா வீட்டிலிருந்து பார்த்துக் கொள்ள சம்மதித்தார்.
பாவா மற்றும் அவர் மனைவி இருவரையும் ஹரி வீட்டில் பத்திரமாக அமர வைத்துவிட்டு, நானும்
ஹரியும் வெளியே நின்றோம். மிகச் சரியாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்து பாவா வீட்டருகே
நின்றது. ஆயுதம் படைத்த இரண்டு குண்டர்கள் இறங்கி வீட்டினுள்ளே சென்றார்கள். சமயற்காரர்
பயந்து போயிருந்தார். அவரைச் சுற்றி ஒரு கும்பல். கத்தி, தடி, இரும்புக் கம்பி என வைத்துக்
கொண்டு, அந்த வீட்டில் உரிமையாளர் சீக்கியரா அல்லது சீக்கியர் அல்லாதவரா என்று கேட்டுக்
கொண்டிருந்தது. ஆனால் சமையற்காரர் பயந்து போயிருந்தாலும் தெளிவாக அங்கே இருந்த வயது
முதிர்ந்த சீக்கிய ஜோடி வெளியூர் சென்றுள்ளது என்றும், அவர்கள் வாடகைக்கு இருப்பது
ஒரு சீக்கியர் அல்லாதவர் வீட்டில்தான் என்று அசராமல் சொன்னார். அவர்கள் அருகே இருந்த
ஹரி வீட்டைப் பார்த்துவிட்டு அங்கே வந்து வாசல் கேட்டைத் தட்டினார்கள்.
நானும் ஹரியும்
சென்று இரண்டு பக்கமும் நின்று கொண்டு அவர்களிடம் சத்தம் போட்டோம். இங்கே சீக்கியர்கள்
யாரும் இல்லை. நீங்கள் தேவையில்லாமல் எங்களைத் துன்புறுத்த வேண்டாம் என்று ஒருமித்த
குரலில் பலமாகச் சொன்னோம். அதிசயமாக அந்தக் கூட்டம் கலைய ஆரம்பித்தது. மெதுவே உள்ளே
சென்று பார்த்தபோது பாவா எந்தவித பயமும் இல்லாமல், டீ அருந்தியபடி நிலவரத்தைப் பற்றி
அலசிக்கொண்டிருந்தார். அந்த முதியவரின் அசாத்திய தைரியத்தைப் பார்த்து அசந்து போனேன்.
அடுத்த நாள் காலை
70-80 பேர் கொண்ட கூட்டம் ஒன்று பொது மக்களைத் துன்புறுத்தவதை எதிர்த்துக் குரல் கொடுக்க
ஆரம்பித்தபோது நானும் ஒருவனாக அங்கே சேர்ந்து கொண்டேன். அங்கிருந்தோர் நிலைமையை அலசினார்கள்.
எவ்வாறு ரத்தவெறியுடன் சீக்கியர்கள் தாக்கப்படுகிறார்கள், எப்படி போலீஸும், அரசின்
மற்ற இயந்திரங்களும் பாதுகாப்பு எதுவும் கொடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றன, ஏராளமான
சீக்கிய மக்கள் எப்படிப் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்றெல்லாம் ஆவேசமாக சிலர் பேசினார்கள்.
சீக்கியர்களின் கடைகள் மற்ற உடைமைகள் எப்படி நாசமாக்கப்படுகின்றன என்பதையும் பார்க்க
முடிந்தது.
இந்தியாவின் மிகப்
புகழ் பெற்ற எழுத்தாளர் வி.எஸ். நைபால் ஒருமுறை இதுபோன்ற கலகத்தைப் பற்றி விவரித்திருந்தார்.
தென் ஆப்பிரிக்காவில் தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையின் சன்னல் வழியே பார்த்த போது,
கலகக்காரர்களுடன் சென்று கலந்து கொள்ள மிக விரும்பினாலும், அது போன்ற கூட்டத்துடன்
அதுவரை தான் கலந்துகொண்டதில்லை என்பதால் கடைசியில் தைரியம் போதாமல் அந்த வேலையைக் கைவிட்டதாக
எழுதியிருந்தார். கிட்டத்தட்ட என் நிலைமையும் அதுபோலவே இருந்தது.
இப்போது கூட்டத்தில்
அதிகமாக ஆண்களும் பெண்களும் சேர ஆரம்பித்திருந்தார்கள். ஸ்வாமி அக்னிவேஷ் என்ற அரசியலில்
ஈடுபாடுள்ள ஹிந்து சாமியாரும், ரவி சோப்ரா என்ற விஞ்ஞானியும் கலந்துகொண்டு பேச ஆரம்பித்தார்கள்.
அப்போது பின்னாளில் நம் பிரதமரான சந்திரசேகர் அவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
நான் கொஞ்சம் தைரியம் பெற்று கூட்டத்தில் ஐக்கியமாகலானேன். கூட்டம் மெதுவாக ஊர்வலமாக
அருகே இருந்த முக்கிய வியாபார ஸ்தலமான லஜ்பத் நகர் நோக்கி முன்னேறியது. மகாத்மா காந்தியின்
அஹிம்சா வழியைப் பின்பற்றி கோஷங்கள் போட்டுகொண்டு நாங்கள் முன்னேறினோம். நிதானமாகக்
கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனது மகிழ்ச்சியாக இருந்தாலும், அடுத்து என்ன நடக்குமோ
என்ற அச்சமும் இருந்தது. எப்படியும் நான் இருந்த கூட்டம் தாக்கப்படும் என்ற எண்ணம்
மிகுந்திருந்தது. சிறிது தூரம் சென்றபின், ஏகப்பட்ட ஆயுதங்களுடன் ஒரு பெருங்கூட்டம்
எங்களை நோக்கி கண்களில் வெறியுடன் முன்னேறியது. ஆனால், எங்கள் கூட்டம் அசராமல் முன்னேறியது.
அப்போது ஒரு அதிசயம்
நிகழ்ந்தது. கூட்டத்தில் புடவையுடன், சல்வார்-கமீஸுடன் இருந்த பெண்கள் சொல்லிவைத்தாற்போல
ஆண்களுக்கு முன்னால் அரணாக நடக்க ஆரம்பித்தார்கள், அந்த அற்புத வேலையை எந்தப் பெண்மணி
ஆரம்பித்தார் என்று தெரியவில்லை. ஆனால், ஒரு அன்னையின் அரவணைப்பை அங்கே உணர முடிந்தது.
எங்கள் யாருடைய கைகளிலும் எந்த ஆயுதமும் இல்லை. ஒரு சிலர் கைகளில் நமது தேசியக் கொடி
மட்டுமே காற்றில் படபடத்துத் துடித்துக் கொண்டிருந்தது. எங்கள் கண் முன்னே அந்த அராஜகக்
கூட்டம் செய்வதறியாது திகைத்து, பின் மெதுவே கலைந்து செல்ல ஆரம்பித்தது. இந்த உணர்வு
ஒரு மகத்தான, இன்று வரை மறக்க முடியாத, உணர்வு.
அடுத்த சில மணி
நேரங்களில் அந்தக் கூட்டம் – அப்போது அதற்கு ஒரு பெயரும் முளைத்திருந்தது – நகரிக்
ஏக்தா மார்ச் – ஊர் மக்களின் ஒருமித்த ஊர்வலம் – பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும்
அவர்களுக்கு நிவாரணம் உடனே வழங்க வேண்டும், மருத்துவ உதவி உட்பட எல்லா உதவிகளையும்
அரசு உடனே செய்ய வேண்டும் என்ற கோஷங்களுடன் கூட்டம் முன்னேறிக்கொண்டிருந்தது.
பத்திரிகை நிருபர்களையும்,
புகைப்படக்காரர்களையும் இப்போது பார்க்க முடிந்தது. கூட்டத்திலிருந்த லலிதா ராமதாஸ்,
வீணா தாஸ், மிதா போஸ், ராதா குமார் போன்ற சில தைரியமான தாய்மார்கள், அடைக்கலமில்லாத
சீக்கியர்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்று முன்வந்தார்கள். என்னுடைய பங்கு
இதில் சொற்பமே. நான் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. என்னால் ஆன அளவு, நான் வேலை பார்த்து
வந்த பல்கலைக்கழகத்திலிருந்து ஆட்களை உதவிக்கு அழைத்தேன். இந்தக் கூட்டத்தின் வேலை
முடிந்துவிட்டது என்றே நினைத்தேன். தவறு, விரைவிலேயே அந்தக் கூட்டத்திலிருந்த சிலர்
ஒரு ஆவணப்படத்தை ‘Who is Guilty?’ என்ற பெயரில் தயாரித்தார்கள். பொறுப்பிலிருந்து தவறிய
அரசியல்வாதிகள்/ போலீஸ் ஆகியோரை மிகத் துணிவுடன் கேள்விகள் கேட்ட அந்த ஆவணப்படம் மிகப்
பிரபலம் அடைந்தது.
காலப்போக்கில் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு (அனைவருக்கும் இல்லையென்றாலும், குறிப்பிட்ட அளவுக்கேனும்) வீடு, வேலை போன்ற
வசதிகளை அரசு செய்தது. ஆனால், இன்றளவும் அது செய்யத் தவறிய ஒன்று – அந்தக் கலகத்தைத்
தூண்டியது யார், அவர்களுக்கு என்ன தண்டனை என்ற இந்தக் கேள்விகளுக்கு இதுவரை பதில் வரவில்லை
என்பதுதான். மக்களைக் காப்பாற்றுவது அரசின் தலையாய கடமை என்பதை எந்த அரசானாலும் உணர
வேண்டும்.