Posted on Leave a comment

வலம் அக்டோபர் 2016 இதழ் – சிவன்முறுவல்

சிவன்முறுவல் – ர. கோபு

கோயில்களுக்கு நாம் ஏன் செல்கிறோம்? வழிபடத்தான். சிலருக்குத் தொட்டில் பழக்கம். வளர்பிறை தேய்பிறையாய் பக்தி வரும் நம்மில் சிலர், திருவிழா, திருமணம், பிறந்தநாள், வேண்டுதல் என்று ஏதேதோ காரணத்திற்குப் பழக்கரீதியாய்க் கோயில் செல்கிறோம். சக்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், வடைமாலை, கற்கண்டு என்று பிரசாத வகையறாக்களே சிறுவயதில் நம்மை ஈர்க்கும். அங்குமிங்கும் மற்ற சிறுவருடன் ஓடி விளையாடுவது, கல் யானை மேல் சவாரி, படிகளில் சறுக்குதல், குளத்தில் நீர் விளையாட்டு, கடைகளில் செப்புச்சாமானோ சிறுபண்டமோ வாங்குவது என்பதையெல்லாம் மறக்கவே முடியாது. கச்சேரி, நாட்டியம் என்று கலைகளை ரசிக்கவும் சிலர் கோயில் செல்வது வழக்கம். ஓரிருவர் சிற்பங்களைக் காணச் செல்வதுமுண்டு.

எந்தக் கோயிலுக்குப் போகலாம்? முருக பக்தருக்கு அறுபடை வீடும், வைணவருக்கு ஆழ்வார்கள் பாடிய திவ்ய தேசங்களும், சைவருக்கு நாயன்மார்களின் பாடல பெற்ற தலங்களும் தமிழகத்தில் புகழ்பெற்றவை. ஒரே நாளில் பஞ்ச பூதத் தலங்களையோ, நவக்கிரகத் தலங்களையோ காணும் வழக்கம் சமீபத்தில் புகழ் பெற்றுள்ளது. கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ கதையைப் படித்த ஆர்வத்தில், வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் சென்ற கோயில்களையும் வரலாற்றுத் தடங்களையும், பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவைக் குழுவினர் ஆண்டுக்கொருமுறை வலம் வருகின்றனர். நான் சேர்ந்துள்ள தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளைக் குழுவினர் மகேந்திர வர்மப் பல்லவன் பாதையில் அவன் எழுப்பிய வல்லம், சிங்காவரம், தளவானூர், மண்டகப்பட்டு குகைக் கோயில்களைச் சென்று களித்தோம். கும்பகோணம் கவின் கலை கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற நண்பர் விசுவநாதன், நாகசாமி எழுதிய ஓவியப்பாவை நூலை ஏந்தி, ஓவியங்களுக்கும் சிற்பங்களுக்கும் புகழ்பெற்ற குந்தவை ஜீனாலயம், கீழ் பழுவூர், குறிச்சி, திருப்புலிவனம், கோனேரிராஜபுரம், வேப்பத்தூர், திருவலஞ்சுழி, திருப்பருத்திக்குன்றம் என்று பயணிக்கிறார்.

கல்லூரி நாள்களில் நானும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குக் கல்வெட்டு படிக்க ஆவலோடு சென்றேன். இருளில் கல்வெட்டு சரியாகத் தெரியவில்லை; தெரிந்தவற்றைப் படிக்க இயலவில்லை. 2000இல் ‘சிவகாமியின் சபதம்’ படித்தபின் எனக்குச் சிற்பத்தின் மேல் ஆர்வம் வந்தது. கேலண்டர் படங்களிலும், அமர் சித்திர கதா புத்தகங்களிலும், ஏ.பி. நாகராஜன் திரைப்படங்களிலும் காணும் தெய்வ வடிவங்களையே பார்த்துப் பழகியிருந்தேன். முனைவர் சித்ரா மாதவனின் வரலாற்று உரைகளில் பல சிற்பங்களின் வடிவங்களை அவர் படம்காட்டி விளக்கியதாலேயே, பாரத சிற்பக் கலையையும் அதன் நெடும் பாரம்பரியத்தையும் புரிந்துகொள்ளமுடிந்தது.

தியானத்தில் அமர்ந்த சிவன் சடையில் நடுவே குற்றால அருவி போல் விழும் கங்கையை நாள்காட்டிகளின் அட்டைப் படங்களில் காண்கிறோம். ஆனால் பல்லவர், சோழர் காலச் சிற்பங்களில் அவர் அப்படியில்லை. ஈசன் தலையில் நிற்க விரும்பும் கங்கையின் அகந்தையை அடக்க, தன் சடையின் ஒருமுடியை மட்டும் விரலால் நீட்டுகிறான் பரமசிவன். நானிருக்க யாரிவள் என்று கங்கையைக் காணவும் கணவனை கடியவும் வருகிறாள் பார்வதி. உமையவள் பாவத்தில் சினமா ஊடலா? ஈசனுக்கு தேவியின் பாராமுகமா? இல்லை, இது மலைமகளின் ஊடல்! உமையின் உடல் ஒருபுறமிருக்க, அவள் முகமோ கங்காதரனைக் காதலோடு நோக்குகிறது.

பார்க்கும் பார்வதியின் முக பாவம் ஒருபால். தாங்கும் தாணுவின் கோலமென்ன? பெரும் பாரம் தலையில் வந்து விழுந்து, பூதேவிக்குத் தாங்கமுடியாமல் விழுவதைத் தடுக்கவேண்டும் என்ற கவனமும் பொறுப்பும் கவலையும் அக்கறையும் வாட்டுகிறதா அவனை? ஒன்றுமில்லை. மிக அலட்சியமாக, இடுப்பில் ஒரு கைவைத்து, இதழில் புன்சிரிப்பு மலர திருவிளையாட்டுக் குறும்புக் கோலத்தில் காட்சி தருகிறான். பல்லவர் காலத்துச் சிற்பிக்கும் சமகாலத்து ஓவியனுக்கும் உள்ள பெரும் இடைவெளியை இதில் காணலாம். ஆகாயகங்கையின் அதிவேகம் சிவனின் மகிமைக்கு ஒரு சுமையல்ல என்பதை எவ்வளவு ஆழமாக அழுத்தமாக உணர்ந்து அந்தச் சிற்பி இதை வடித்திருக்கவேண்டும்!

ஸ்தபதிகள் கோயில் கட்டுமுன், வேத மந்திரத்தை தியானம் செய்து, அந்த தியானத்தின் பலனாய் மனக்கண்ணில் கோவிலின் வடிவத்தைக் கண்டபின்னரே, அதைக் கட்டத் தொடங்குவராம். சிற்ப சாத்திரங்களின் விதிகளுக்கிணங்கவே ஸ்தபதிகள் கோயில்களை அமைத்தாலும், அவரவர் திறமையும் கற்பனையும் கலைப்பாங்கும் சிற்பத்திலும் கோவிலின் கட்டுமானத்திலும் மிளிர்ந்து தெரிகிறது.

ஒரு கோயிலில் ஒரு கோஷ்டத்திலுள்ள ஒரு சிற்பத்துக்கே இத்தனை பின்கதையிருப்பின், தஞ்சை, தாராசுரம் போன்ற பெருங்கோயில்களில் என்னவெல்லாம் இருக்கும்? பயணத்தால் மட்டும் சிலவற்றை அறியமுடியாது. பல கோயில்களில் பல சிற்பங்கள் புரியாத புதிராகவே உள்ளன. நம்முன் பற்பலக் கோயில்களுக்குச் சென்று, தங்கள் கலைக்கண்களால் கண்டுகளித்து, நமக்குத் தெரியாத விவரங்களை ஆர்வலர்கள் நூலில் எழுதியதைப் படித்தால் கல்லாதது கல்லளவு என்று புரியும்.

மாமல்லபுரத்துப் பஞ்ச பாண்டவ ரதங்களில் பெரியது தர்மராஜ ரதம். முதலில் சென்றபோது கீழ்த்தளத்திலுள்ள எட்டுச் சிற்பங்களை மட்டும் பார்த்துவிட்டு வந்தேன். கல்வெட்டுகள் தெரிந்தன. தமிழ் எழுத்து போலிருந்தாலும் சில எழுத்துக்களுக்கு அங்குமிங்கும் வாலும் கொம்பும் முளைத்தது போல் தெரிந்தன. பல்லவருக்கு ஒருவேளை ஆர்வக்கோளாரா என்ற சந்தேகமே எழுந்தது. அது தமிழே இல்லையாம். பல்லவ கிரந்த லிபியில் எழுதிய சமஸ்கிருதமாம். ‘நாமும் ஏக் கிசான் ரகுதாத்தா ஹிந்தி படித்தோமே? ஹிந்தி எழுதும் தேவநாகரி லிபியில் அல்லவா சமஸ்கிருதம் எழுதுவார்கள்?’ என்று குழம்பும்பொழுது, ஏறத்தாழ ஆறாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டுவரை வட இந்தியாவில் மட்டுமே தேவநாகிரியில் எழுதுவார்களென்றும், தென்னிந்தியாவில் கிரந்த லிபியிலோ தெலுங்கு-கன்னட லிபியிலோ சமஸ்கிருதம் எழுதுவது வழக்கமென்றும் தெரியவந்தது. இதுபோன்ற அடிப்படைத் தகவல்களைப் பள்ளிக்கூடப் பாடங்களில் சொல்லவேண்டாமா? கல்வெட்டு ஆய்வோர்க்கு மட்டும் தெரியும் ரகசியமாக ஏன் இருக்கவேண்டும்?

மலையா, கம்போடியா, பர்மா, சுமத்திரா, சாவகம், சியாமதேசம் என்னும் தாய்லாண்டு – ஏறக்குறைய தொண்ணூறு தென்கிழக்கு ஆசிய மொழிகளின் எழுத்துகள் கிரந்தத்திலிருந்து பிறந்தவை என்பது மொழிவல்லுனர் கருத்து. ஐரோப்பிய கும்பெனியார் ஆட்சி வந்தபின் அம்மொழிகள் பலவும் லத்தீன் லிபியின் வடிவைத் தழுவிக்கொண்டன. தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளையின் மல்லை கலை உலாவின் அறிமுக உரையில் பேராசிரியர் சுவாமிநாதன் இதைச் சொன்னபொழுது எனக்கு மெய்சிலிர்த்து. சீவக சிந்தாமணியை முதலில் படிக்கும்போது உ.வே.சாமிநாத ஐயருக்கு இப்படி அல்லவா சிலிர்த்திருக்கும்?

மாமல்லபுரத்தைப் பற்றி முதலில் 1788ல் எழுதிய வில்லியம் சேம்பர்ஸ், இது சியாமதேச லிபி, ஒரு காலத்தில் தமிழகத்தை சியாம மன்னர்கள் ஆண்டிருக்கவேண்டும் என்றே கருதினார். அக்காலத்தில் அங்கே வாழ்ந்த பிராமணர்களுக்கும் பல்லவர் காலத்து கிரந்த லிபி தெரிந்திருக்கவில்லை. பல்லவர் என்ற மன்னர் குலத்தையே மக்கள் மறந்திருந்தினர். அந்த வரலாற்றை மீட்டெடுத்தது ஒரு பெரும் கதை. இந்தப் பின்புலத்தை அறிந்தபின் சென்று பார்த்தால், நம் சிற்பக்கலையின் மகிமையே தனி. இலக்கியத்திலும் இசையிலும் அரசியலிலும் நமக்குள்ள ஆர்வமோ ஆழமோ, சிற்ப ஓவியக் கலைகளில் இல்லை. இணையம், முகநூல், டிஜிட்டல் கேமராக்களால் இது மாறிவருகிறது.

மல்லை தர்மராஜ ரதத்தைக் கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தால் மேலே இரண்டு தளங்கள் இருப்பது தெரியும். அற்புதமான பல சிற்பங்கள் அங்கே உள்ளன. வீணாதர சிவன் அதில் ஒருவர். அவர் கையிலுள்ள வீணையில் குடமோ தந்திகளோ இல்லை. நமக்குப் பழகிய வீணை பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சை மன்னர் ரகுநாத நாயகர் உருவாக்கியதாம். சோழர் காலத்துத் தமிழகத்தில் மட்டுமல்ல, ஒரிசா தலைநகர் புவநேஷ்வரில் முக்தேஷ்வர் கோவிலில் வீணை வாசிக்கும் ஒரு பெண்ணின் சிற்பத்தைக் கண்டேன். அவள் கையிலும் அதே மெல்லிய வீணை. ஆனால் வீணாதரக் கோலத்தில் என் மனதைக் கொள்ளை கொண்டது கும்பகோணத்தில் நாகேஷ்வரன் கோவில் வீணாதர தட்சிணாமூர்த்திதான்.

நாகசாமியின் ஓவியப்பாவை நூலில் வலம்புரம் என்னும் ஊரை அப்பர் பாடிய தேவாரத்தை எடுத்துக்காட்டுவார்.

கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக்
காலினாற் காய்ந்துகந்த காபா லியார்
முறித்ததொரு தோலுடுத்து முண்டஞ் சாத்தி
முனிகணங்கள் புடைசூழ முற்றந் தோறுந்
தெறித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம்வாய்ச்
சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ
மறித்தொருகால் நோக்காதே மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னினாரே

என்பது அப்பரின் தேவாரம். ‘கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பு’ என்ற வர்ணனை பலருக்கும் தெரியும். ‘சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ’ என்ற இந்த வர்ணனை அதையே செய்தது. கும்பகோணம் நாகேஷரன் கோவிலுள்ள வீணாதர தட்சிணாமூர்த்தி இதழ்களிலுள்ள சிறுமுறுவல் என் சிந்தை வௌவியது.

ஆசிரியரின் வலைத்தளம் – http://VarahaMihiraGopu.blogspot.in

-oOo-