Posted on Leave a comment

மாறி வரும் சவுதி அரேபியா | லக்ஷ்மணப் பெருமாள்சவுதி அரேபியாவில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். இந்தக்கட்டுரை எனது அனுபவத்திற்குள்ளான காலகட்டத்தில் நடந்த மாற்றங்கள் பற்றி மட்டுமே சொல்லப்போகிறேன். 

மற்ற நாடுகளுக்கு முதன்முறையாகச் செல்வோருக்கு வழங்கப்படும் அறிவுரைகளுக்கும் சவுதி அரேபியாவிற்கு நீங்கள் பணி நிமித்தமாகப் பயணப்பட வேண்டி வந்தால் சொல்லப்படும் அறிவுரைகளுக்குமே ஒரு வித்தியாசமிருக்கும். சவுதி அரேபியா பற்றிய பொதுவான சித்திரம் இந்தியர்களான நமக்கு ஒரு பயத்தை, எச்சரிக்கையைச் சொல்வதாகவே இருக்கும். குறிப்பாக சுதந்திரமற்ற நாடு என்ற மிரட்டல் இருக்கும். அதைப் பிரதிபலிக்கும் விதமாக வேலைக்கு எடுத்த நிறுவனத்தின் அதிகாரியும் பணியில் சேர்ந்த நாளிலோ அல்லது பயணத்திற்கு முன்பாகவோ அப்பயத்தை உறுதிப்படுத்தும் வகையில் சவுதி அரேபியாவிற்குள் வரும்போது என்ன கொண்டு வரலாம், எதையெல்லாம் அறியாமல் கொண்டு வந்துவிடக் கூடாது என்பதில் ஆரம்பித்து, ஆடைக் கட்டுப்பாட்டிலிருந்து ஆட்சியாளர்களைப் பற்றி பொது வெளியில் எங்கும் எதுவும் பேசக் கூடாது என்ற அறிவுரையில் வந்து முடியும்.  குறிப்பாக மன்னரைப் பற்றியோ ஆட்சியைப் பற்றியோ வெளிப்படையாக எழுதினால் விசாரணையின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையும் சவுதிக்கு முதன்முறையாக வருபவர்கள் விமான நிலையத்திலே மோசமான அனுபவங்களைச் சந்தித்திருப்பார்கள். துளியும் ஆங்கிலம் பேசாத விமானநிலைய அதிகாரிகள். களைப்போடு பயணம் செய்து வந்து சேர்ந்திருக்கும் மனிதர்கள் பற்றிய அக்கறை சிறிதும் அதிகாரிகளிடம் இருக்காது. எந்த வரிசையில் நிற்க வேண்டும் என்பது கூடப் புரியாமல் மாற்று வரிசையில் நின்றவர்கள், மீண்டும் சரியான வரிசையில் வந்து நின்று வெளிவருவதற்குள் போதும்போதுமென்றாகி விடும். எத்தனை மணி நேரம் காத்திருந்து நீங்கள் Immigration clearance செய்து வெளி வருவீர்கள் என்பதெல்லாம் உங்கள் அதிர்ஷ்டம்! சிலருக்கு ஏன் காக்க வைக்கிறார்கள் என்று தெரியாது. அங்கிருந்து பாக்கேஜ் எடுத்து வெளி வரும் போது பயணிகள் தங்களின் அனைத்து பாக்கேஜையும் திறந்து காண்பிக்க வேண்டும். அறிந்தோ அறியாமலோ  CD க்கள், கதைப் புத்தகங்கள்,  மடிக்கணினியில்  Pirated software, சாமி படங்கள் கொண்டு சென்று அவர்கள் பார்த்து விசாரித்தால் என்ன செய்வார்கள் என்ற அச்சத்திலேயே மனிதன் பாதி செத்துப் போய் விடுவான். சில நேரங்களில் அவற்றைப் பறிமுதல் செய்து விட்டு சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் பறித்து வைத்த பொருட்களைச் சில தினங்கள் கழித்து அதற்கென உள்ள ஒரு அதிகாரியிடம் சென்று CD யில் தவறாக எதுவுமில்லை என்று நிரூபித்தால்,  உங்கள் பொருளைத் தாராளமாக எடுத்துச் செல்லலாம் என்ற அறிவிப்பு உண்டு. ஆனால், எவரும் அத்தனை எளிதில் சென்று வாங்க மாட்டார்கள். ஏனெனில் அவரையும் அறியாமல் அதில் தேவையற்ற கவர்ச்சிப் படங்களோ, தகாத காட்சிகள் உள்ள வீடியோக்களோ இருந்தால் தேவையற்ற பிரச்சினையில் மாட்டுவோம் என்று அப்பக்கமே செல்ல மாட்டார்கள்.

இன்று வரையிலும் கசகசா சவுதி அரேபியாவில்  ஒரு போதைப் பொருளாகத்தான் பார்க்கப்படுகிறது. மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று எண்ணும் சக இந்தியனுக்கு வழங்கப்படும் அறிவுரையில் கசகசா கொண்டுவரக்கூடாது என்பது தவறாமல் இடம் பெறும். இன்று வரையிலும் மாறாத விஷயங்களைக் கடைசியில் சொல்கிறேன். தற்போதைக்கு எங்கிருந்த சவுதி அரேபியா எப்படி மாறுகிறது என்ற சித்திரம் கிட்டவே கடந்த கால நடைமுறைகள், சட்ட திட்டங்கள் பற்றிச் சொன்னேன்.

முத்தவாக்களின் அதிகார பலம்

கடைகளில் குமுதம், குங்குமம் போன்ற புத்தகங்கள் அப்போதே வந்து கொண்டிருந்தன. அட்டைப்படத்தில் ஆரம்பித்து புத்தகத்தின் இறுதிப்பக்கம் வரை கவர்ச்சிப்படங்கள் அனைத்திலும் கரி பூசப்பட்டிருக்கும். சேலை கட்டிய நடிகைகளின் இடுப்புப் பகுதி கூடக் கரி பூசப்பட்டிருக்கும். வீடுகளில் மாற்று மதத்தினர் தங்களது சாமி படங்களை வைத்திருக்கக்கூடாது. அப்படி வைத்திருப்பது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் போன்ற பயமுறுத்தல்களால் சாமி படங்கள் கூட வெளியாட்கள் கண்களில் படாத வண்ணம் மறைக்கப்பட்டிருக்கும். அப்போது மதக் காவலர்கள் என்று சொல்லப்படும் முத்தவாக்களுக்கு பலத்த அதிகாரமிருந்தது. அவர்களைக் கண்டால்  இஸ்லாமியரில் ஆரம்பித்து மாற்று மதத்தினர் வரை அனைவரும் பயந்து நடுங்குவார்கள். ஏனெனில் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சிறைக்கு அனுப்பி விடுவார்கள். தொழுகை நடக்கும் ஐந்து வேளைகளில் வெளியே யாரேனும் சுற்றித் திரிந்தால் உடனடியாகக் கைதுதான். குறிப்பாக இஸ்லாமியர்கள் தொழுகைக்குச் செல்லாமல் திரிந்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும். மாற்று மதத்தினர் அவர்கள் தொழுகை செய்வதை மதித்து அமைதியாகச் செல்ல வேண்டும். வாகனத்தில் அமர்ந்து இருப்பவர்கள் வரை விசாரணை செய்வார்கள் என்பதால் பலரும் முத்தவா வருகிறார் என்றாலே அவ்விடத்தை விட்டு வேகமாக மாற்று இடங்களுக்குச் சென்று விடுவார்கள். அதை உணர்ந்துகொள்ள வேண்டுமென்றால் திடீரென ஒரு கும்பல் வேகமாக ஓடும். அதுதான் முத்தவா வருகை பற்றிய சமிக்ஞை.

ஆண்கள் கையிலோ கழுத்திலோ தங்க மோதிரம் அணிந்தால் முத்தவாக்கள் பிடுங்கிச் சென்று விடுவார்கள். ஆண்கள் தங்க ஆபரணங்களை அணியக் கூடாது, கைகளில் கறுப்புக் கயிறுகளைக் கட்டி இருக்கக் கூடாது. இதற்குப் பொருள் மோதிரம், கறுப்புக் கயிறு கட்டி இருக்க மாட்டார்கள் என்ற அர்த்தமல்ல. மாட்டினால் பதில் சொல்ல வேண்டி வரும் என்பதே. ஒருமுறை யான்பு என்ற நகரில் சலா (தொழுகை) நேரத்தில் வழக்கம் போல ஒரு கும்பல் ஓட நாங்களும் காரை விட்டு இறங்கி வேகமாக ஓடி விட்டோம். வந்து பார்த்தால் அவசரத்தில் காரின் ஹெட்லைட்டை அணைக்காமல் சென்றுள்ளேன். பாட்டரி முற்றிலும் படுத்து நண்பர்களின் உதவியோடு காரை எடுத்துச் செல்ல வேண்டிய அவஸ்தை ஏற்பட்டது.

பெண்களைப் பொருத்தவரையில் எந்த மதத்தினராக இருந்தாலும் புர்கா போட்டே வெளியில் செல்ல வேண்டும். தலையிலும் அவசியம் அபயா போட்டிருக்க வேண்டும். பெண்கள் ஆண் துணையின்றி, அதாவது கணவன், அண்ணன், தந்தை, தம்பி தவிர்த்த எந்த ஆணுடனும் வெளி இடங்களில் செல்லக் கூடாது. ஒருவேளை மால்களிலோ பூங்காக்களிலோ அப்படி மாட்டினால் சிக்கல்தான். இன்று வரையிலும் சட்டம் அப்படியே சொல்கிறது.

மிகப்பெரிய மால்களுக்குள் வியாழன், வெள்ளி ஆகிய வார விடுமுறை நாட்களில் கல்யாணமாகாதவர்கள் அல்லது குடும்பமல்லாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மற்ற பணி நாட்களில் மட்டுமே உள்ளே செல்ல அவர்களுக்கு அனுமதி உண்டு. வீடியோ கடைகள் உண்டு. அதிலும் சில ஊர்களில் அதற்கும் தடை. மறைத்து வைத்து விற்பவர்கள் முத்தவாக்களிடம்  பிடிபட்டால் அவ்வளவுதான். வெளியூர்களுக்கு மட்டுமே அரசுப் பேருந்துகள் இயங்கி வந்த காலமது. நம்மூரில் வேன் என்று சொல்வோமல்லவா அதுபோன்ற பேருந்து மட்டுமே ரியாத் போன்ற மாநகரங்களில் உண்டு. சிறு நகரங்களில் அதுவும் கிடையாது. வாகனங்கள் இல்லாதவர்கள் டாக்சியில் மட்டுமே செல்ல வேண்டும். விலை மிக மிகக் குறைவுதான். கலை நிகழ்ச்சிகளை எல்லாம் அதிகாரபூர்வமாக நடத்த இயலாது என்பதான காலகட்டமது.

*

நான் துணை மின் நிலையத்தில் பணி புரிந்தபோது கேள்விப்பட்ட நிகழ்வு இது. சவுதி பொறியாளர் ஒருவரையும் இந்தியப் பொறியாளர் ஒருவரையும் அந்த மின் நிலையத்தில் பணி புரிய அமர்த்தியுள்ளார் மேலாளர்.. சவுதி இளைஞர் தொழுகைக்குச் செல்கிறேன் என்று சென்றால் மூன்று மணி நேரம் வரமாட்டார். கேட்டால் சலா சென்றேன், நீ எப்படிக் கேட்கலாம் என்பார். இப்படியாகச் செல்ல சீனியர் மேலாளரிடம் தன்னால் அவரைக் கட்டுப்படுத்த இயலாது என்று இந்தியப் பணியாளர் சொல்லியுள்ளார். இதை அறிந்த சவுதி இளைஞர் நேரடியாக முத்தவாவிடம் சென்று, ‘நான் தொழுகை செல்லக் கூடாது என்று இவர் சொல்கிறார்’ என்று புகார் கொடுக்க, எந்த விசாரணையுமின்றி அந்த நிறுவனமே அவரை இந்தியாவிற்கு final exit செய்து வெளியேற்றியுள்ளது. வெளியற்ற வேண்டும் என்பது மதக்காவலரின் உத்தரவு. இது போன்ற பல செவி வழிச் செய்திகள் மட்டுமல்லாமல் அனுபவத்திலும் பெரும்பாலான சவுதிகள் வேலைக்குக் குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் இருப்பது, முழு நேரமும் அலுவலகத்திலோ பணியிடத்திலோ வேலை செய்யாமல் இருப்பது என்பதெல்லாம் தெரிந்தும் எந்த மேலாளரும் கண்டுகொள்ளாமல் செல்வார்கள். ஏனெனில் காவல் நிலையத்திலோ அல்லது வெளியிலோ தனக்கு இடைஞ்சல் வரலாம் என்பதால்தான்.

மாறி வரும் காட்சிகள்

பெண்கள் முன்னேற்றம்:

மன்னர் அப்துல்லாவின் காலகட்டத்திலேயே மதக் காவலர்களுக்கான அதிகாரங்கள் அகற்றப்பட்டன. அவர்கள் யாரையும் நேரடியாகக் கைது செய்யக் கூடாது, தேவைப்பட்டால் காவலர்களை அழைத்துப் புகார் செய்யலாம் என்ற வகையில் அதிகாரங்கள் சுருங்கின. குறிப்பாகப் பெண்களின் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மன்னர் அப்துல்லாவின் காலத்தில்தான் அதிக அளவில் ஆரம்பமானது. முற்றிலுமாக பெண்களுக்கான சுதந்திரம் இன்று வரையிலும் கிடைக்காவிட்டாலும் மெல்ல மெல்ல பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பல தடைகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. ஓர் அரசின் சில செயல்பாடுகளிலிருந்து அது எத்தகைய மாற்றத்தை நோக்கி நகர்கிறது என்று நாம் அனுமானிக்க இயலும். அவ்வகையில் உலகின் மிகப் பெரிய பெண்கள் பல்கலைக்கழகம் (Princess Noura Bint Abdul Rahman University) ரியாத்தில் அப்துல்லாவின் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. 1970ல் ஆண்களின் கல்வி விகிதம் 15% ஆகவும், பெண்களின் கல்வி விகிதம்  2% ஆகவும் இருந்தது. உலக வங்கியின் கணக்கின் படி, தற்போது ஆண்களின் (15 -24 வயதுடையவர்களின்) கல்வி விகிதம் 98%  என்றும் பெண்கள் 95% என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. (நம்ப முடியவில்லை, ஒருவேளை அரபு மொழியில் படிக்க எழுதத் தெரிந்தவர்களாக இருக்கலாம்.) இன்றைய நிலையில் பெண்களே 60% பல்கலைக்கழகங்களில் படித்து வருகிறார்கள். ஆண்கள் 40%தான் உள்ளனர். மேலை நாடுகளுக்குச் சென்று படித்து பட்டம் பெறுபவர்களின் எண்ணிக்கையிலும் சவுதிய ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் அரசியலில் பங்கெடுக்கும் வாய்ப்பும் மன்னர் அப்துல்லா காலத்திலேயே தொடங்கிய ஒன்று. கலந்தாய்வுக் கூட்டங்களில் பெண்கள் பங்கெடுப்பது எனத் தொடங்கிய விஷயம் இன்று மன்னர் சல்மானின் ஆட்சிக் காலத்தில் பெண் அமைச்சர் ஒருவரை நியமித்துள்ளது என்று முன்னேற்றம் கண்டுள்ளது. தற்போதைய இளவரசர் முகம்மது பின் சல்மான் மிக வேகமாக நாட்டை மாற்றுப்பாதைக்கு எடுத்துச் செல்கிறார். அதன் சாட்சியாக பெண்கள் விஷயத்திலேயே மூன்று விஷயங்களை அவர் அறிவித்தார். பெண்களுக்கான வாகன ஓட்டுநர் உரிமையை வழங்கியது, பெண்கள் அதிக அளவில் பணியில் அமர்த்தப்படும் நிகழ்வுகள், உலகின் முதல் பெண் ரோபோவை அடையாளமாக வாங்கியது எனப் பெண்களுக்கான சுதந்திரம் சார்ந்த சமிக்ஞைகள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன. பெண்களும் விளையாட்டுப் போட்டிகளைக் காணும் வாய்ப்பு, விளையாட்டுக் கல்லூரி எனப் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இவையெல்லாம் பெரிய மாற்றமா என்று ஒருவர் கேட்கலாம். எதுவுமே வழங்கப்படாமல் மறுக்கப்பட்ட உரிமைகள் இன்று கிடைக்க ஆரம்பித்திருப்பதை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

மால்களில் ஆரம்பித்து வணிக நிறுவனங்கள் வரை இன்று பல பெண்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடும் விரைவில் தளர்த்தப்படலாம்.

திரை அரங்குகள் பொதுப் போக்குவரத்து:

பொழுது போக்குவதற்காக திரை அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இதைப் பற்றி அறிவிக்கும் போதும் முகம்மது பின் சல்மான் இவ்வாறாகக் குறிப்பிட்டார். 1979க்கு முன்பான சவுதி அரேபியாவில் திரை அரங்குகள் மற்றும் பல பொது விஷயங்களில் அனைவரும் கலந்து கொள்ளும் வழக்கம் இருந்தது. இடையில் அது மாறி இருந்தாலும் மீண்டும் பழைய சவுதி அரேபியாவாக மாறும் என்றார். இந்த வருடமே திரை அரங்குகள் வந்துவிடும்.  தற்போது பல இடங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு அனுமதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மாநகரங்களில் முதற்கட்ட நடவடிக்கையாக மாநகராட்சிப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் ஏற்கெனவே அறிமுகமும் ஆகிவிட்டது. ரியாத் மெட்ரோ ரயில் பணிகளும் நடந்து வருகின்றன. இனிமேல்தான் மற்ற நகரங்களுக்கும் மெட்ரோ சேவை வரவேண்டும். ஏழைகள் இதனால் மிகப்பெரிய பலனை அடைவார்கள்.

முன்பெல்லாம் இந்துக்களோ மாற்று மதத்தினரோ விழாக்களை இஸ்திரகா (resort) பிடித்துக் கொண்டாடுவார்கள். இப்போது தீபாவளி, பொங்கல் , கிருஸ்துமஸ் எனப் பண்டிகைத் தினங்களிலும் பூஜைகள் செய்து கொண்டாடுகிறார்கள். சட்ட ரீதியாக அனுமதி இல்லையென்றாலும் அரசின் மென்மைப் போக்கின் காரணமாக தைரியமாகக் கொண்டாடும் மனநிலைக்கு மக்கள் வந்துள்ளார்கள்.

விமான நிலையங்களில் இன்று

தற்போது விமான நிலையங்களில் வாடிக்கையாளர்களை வரவேற்பது மற்றும் “Immigration Clearance” பகுதிகளில் தனியார் நிறுவனத்தின் ஆட்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆங்கிலத்திலேயே பேசத் தெரிந்தவர்கள் உள்ளனர். மேலும் ஒரு மணி நேரத்திற்குள்ளாக வெளியில் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்துவிடலாம். இப்போதெல்லாம் Scanning செய்வதில் சந்தேகம் ஏற்பட்டால் மட்டுமே திறந்து காண்பிக்கச் சொல்கிறார்கள். மற்றபடி விமான நிலையத்தில் எந்தப் பிரச்சினையுமில்லை. தற்போதைய அரசு இன்னொரு அறிவிப்பையும் செய்துள்ளது. விமான நிலையங்களில் அதிக அளவில் பெண்களைப் பணியில் அமர்த்தப் போவதாகவும் அவர்களுக்கு இந்தி, தகலாக், உருது, மலையாளம் எனப் பல மொழிகளில், எந்தெந்த நாடுகளிலிருந்து மக்கள் தொகை அதிகமுள்ளனரோ அவர்களை உபசரிக்கும் விதமாக அந்த மொழிகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள் என்ற அறிவிப்பும் வந்துள்ளது. இவையெல்லாம் கடந்த கால சவுதி அரேபியா எப்படி மாறி வருகிறது என்பதற்கான அடையாளங்கள்.

ஐரோப்பிய மாதிரி  நகரம்

 ஐரோப்பிய மாதிரி நகரம் அமைக்கப்படும் என்றும் பல சுற்றுலாத் தளங்கள் அமைக்கப்பட்டு மற்ற வளைகுடா நாடுகளுக்கு இணையான பல்வேறு பொழுதுபோக்கு இடங்களும், வெளி நாட்டினர் வந்து மகிழும் வகையிலான Water Theme Park,  Disney Land எனப் பல விஷயங்கள் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் வருமானத்தில் எண்ணெய்க்கு அடுத்தபடியாக சுற்றுலா வருமானமே இன்றும் இரண்டாமிடத்தில் அதிக வருவாய் ஈட்டித் தருகிறது. சுற்றுலா வருமானம் ஒட்டுமொத்தமாக மெக்கா, மெதினாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலமே கிடைத்து வந்தது.

சவுதி அரேபியாவின் இன்றைய சிக்கல்கள்

எண்ணெய் சார்ந்த வணிகம் குறைவதாலும் அண்டை நாடுகளுடனான உறவுகளில் ஏற்பட்டுள்ள பகையாலும் சவுதி பல்வேறு சிக்கல்களையும் எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக ஏமனில் ஹௌதி அமைப்புடன் நடக்கும் போர், சிரியாவிற்கான போர்ச்செலவு, கத்தாருடனான உறவில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், என்றும் பகைவனான ஈரான் என வளைகுடா நாடுகளுக்குள்ளேயே சவுதி அரேபியாவின் அண்டைய நாடுகளுடனான  உறவு கெட்டுப்போயுள்ளது. (அதேவேளையில் ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரைன், குவைத், ஓமன் போன்ற நாடுகளுடனான உறவு இணக்கமாகவே உள்ளது.) இதனால் மக்கள் நலத்திட்டங்களைக் காட்டிலும் ஆண்டுதோறும் ராணுவத்திற்கு பட்ஜெட் அதிக அளவில் ஒதுக்கப்படுகிறது. இவை ஒருபுறம். மற்றொரு புறம் எண்ணெய் வளத்தை வைத்து செழிப்பாக இருந்த சவுதி அரேபியா எதிர்காலங்களில் எலெக்ட்ரிக் கார்கள், கதிராலைகள், காற்றாலைகள் என பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்படுவதால் மிகப்பெரிய வருமான இழப்பைச் சந்திக்கும். கூடுதலாக பாரலுக்கு விலை நிர்ணயம் செய்வது தாங்கள் எடுக்கும் முடிவே என்ற இடத்திலிருந்து இன்று அதன் தேவை குறைந்துள்ளதால், பாரலுக்கான விலையையும் ஏற்ற முடியவில்லை. இதனால் அரசுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப்
பொருளாதாரச் சிக்கலைச் சமாளிப்பதில் சிக்கல் ஏற்படுவதால் மக்களிடம் வரி, வெளிநாட்டினரிடம் வரி என அரசு தனக்கான வருமானத்தைப் பெருக்கும் வழிகளைக் கொண்டு வந்துள்ளது.

வெளிநாட்டினர் குடும்பத்திலுள்ள நபர் ஒன்றுக்கு இத்தனை ரியால்கள் கட்டவேண்டும் என்பதை  ஆண்டுதோறும் அரசு அதிகரிக்கும் என்பது அமலுக்கு வந்து விட்டது. பொருட்கள் மற்றும் சேவைக்கு 5% VAT வசூலிக்கப்படுகிறது. இதனால் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. மேலும் நிறுவனங்களிடமிருந்து ஆண்டுதோறும் ஒரு வெளிநாட்டினருக்கு ஒரு விலையை நிர்ணயித்து அதன் மூலமும் அரசு வருவாயைப் பெற வேண்டிய நிலையில் உள்ளது. சுருங்கச் சொல்வதனால் வெளிநாட்டினருக்கான விசா வழங்குவதில் ஆரம்பித்து அனைத்திலும் பண வசூல் வேட்டையை அரசு அமல்படுத்தியுள்ளது.  எதிர்காலத்தில் வாகனங்கள் பார்க்கிங்கிற்கும் வசூல் பிரிக்கப்படும். சேமிப்பின் பூமி என்று அனைவராலும் மெச்சப்பட்ட சவுதி அரேபியா இனி செலவழிக்கவும் அரசுக்கு வரி செலுத்தவும் தயாரெனில் மட்டுமே தாக்குப்பிடிக்க இயலும். இத்தகைய வரிவிதிப்பு முறைகளால் பலரும் தங்கள் குடும்பங்களைத் தத்தம் நாடுகளுக்கு அனுப்புவார்கள் என்று கணிக்கப்படுகிறது. இதனால் 2020 க்குள்  35% பன்னாட்டுப் பள்ளிகள் மூடப்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இன்றும் மாறாமல் நடைமுறையில் உள்ளவை

தொழுகை நேரங்களில் கடைகள் மூடப்படுகின்றன. மற்ற அராபிய நாடுகளில் இத்தகைய வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. மெக்கா, மெதினா நகர எல்லைக்குள் மாற்று மதத்தினர் செல்ல இயலாதது; கோயில்கள், சர்ச்சுகள் போன்ற வழிபாட்டுத்தலங்களுக்கு அனுமதி வழங்கப்படாதது; பெண்கள் இன்றும் புர்கா அணிய வேண்டியுள்ளது; உணவகங்களில் குடும்பத்தினர் தனியாக, திருமணமாகாதவர்கள் தனியாக அமர்ந்து சாப்பிடும் வழக்கம் என மாற வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. வெளியே செல்லும் போது மறந்துகூட இக்காமாவை (அடையாள அட்டை) விட்டுச் சென்றால் முதலில் கைது. நிறுவனத்திலிருந்து வந்து இக்காமாவைக் காண்பித்தால் மட்டுமே சிறையிலிருந்து வெளிவர இயலும்.

இன்றும் ஆட்சியாளர்களை எதிர்த்து எழுதுவதோ பேசுவதோ இயலாத காரியம். கருத்துச் சுதந்திரம் கிலோ என்ன விலை என்றுதான் கேட்க வேண்டும். அப்படித் தான் இன்றும் உள்ளது. மாறி வரும் சவுதி அரேபியா என்பது அரசு தானாக முன்வந்து எடுக்கும் நடவடிக்கைகளால் மட்டுமே நடக்கும் என்பதே கவனிக்கப்பட வேண்டிய விஷயம். மக்கள், அரசு என்ன மாற்றம் கொண்டு வருகிறதோ அதில் சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டும். அதை மீறி மொட்டை மாடியில் நடனமாடிய பெண்ணைக் கூட கைது செய்து பின்னர் கண்டிப்புடன் விடுதலை செய்யும் வழக்கம் இன்றும் உள்ளது.

அரசு பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டு வரும் இந்தக் காலகட்டத்தில்தான் வெளிநாட்டினருக்கான செலவும் அதிகரித்து வருகிறது. இந்த ஊருக்கு வந்தபோது லிட்டருக்கு பத்து ஹலாலாவாக இருந்த பெட்ரோல் விலை இன்று இரண்டு ரியால் ஐந்து ஹலாலாவாக அதிகரித்துள்ளது. நவீனமாக மாறும் காலகட்டத்தில் அனுபவிக்கப் போகும் வெளிநாட்டினரும் உள்நாட்டினரும் மகிழ்ச்சி அடைவார்கள். அதிக செலவின் காரணமாகவும் சவுதியர்களை பணிகளில் அமர்த்துவதால் பலரும் வேலை வாய்ப்புகளை இழந்து வருகின்றனர். சவுதியும் மாறுகிறது, பணிபுரியும்  வெளிநாட்டினரில் ஒரு தரப்பின் சகாப்தமும் நிறைவுக்கு வருகிறது. புதிய சவுதி அரேபியாவில் புதிதான வெளிநாட்டினர் அனுபவிப்பார்கள் அல்லது சேமிப்பைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் இங்கே தாக்குப் பிடிப்பார்கள்.

முகம்மது பின் சல்மானின் அதிரடி நடவடிக்கைகளால் சவுதி அரேபியா எட்டுக் கால் பாய்ச்சலில் நாகரிகத்தை நோக்கி வளர்கிறது. பொருளாதாரத் திட்டங்களுக்கான சவால்களைச் சமாளித்து விட்டால் சவுதியும் செழிக்கும், பணி புரியும் வெளிநாட்டினரும் பலன் பெறுவார்கள் என்பதே நிதர்சனம்.

Posted on Leave a comment

காவிரி – தீரா நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினை | லக்ஷ்மணப் பெருமாள்


 காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் 16-02-2018ல், தனது இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பின் சாராம்சம் இதுதான்.

“கர்நாடகா, தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி (டிஎம்சி என்பது ஆயிரம் மில்லியன் கன அடி) அளவு நீரை வழங்க வேண்டும். அடுத்த 15 ஆண்டுகளுக்கு இதே தீர்ப்பு அமலில் இருக்கும் என்பதால், இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. அதில் உள்ள சிறு குறைகளை மட்டும் நீக்கிவிட்டு, தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்படுகிறது. காவிரி ஆறு ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்குச் சொந்தமானது அல்ல. காவிரி ஆறு தேசியச் சொத்து. அதனை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது.

தமிழகத்தில் காவிரி பாசனப்பகுதிகளில் 20 டிஎம்சி நிலத்தடி நீர் உள்ளது. அதில் குறைந்தபட்சமாக 10 டிஎம்சி நீரை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு, முன்னர் தரப்பட்டிருந்த 192 டிஎம்சி நீரில் இருந்து 177.25 டிஎம்சி நீராகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் கர்நாடகாவில் வளர்ந்து வரும் தொழிற்சாலைகளையும், பெங்களூருவின் குடிநீர்த் தேவையையும் கருத்திற்கொண்டு கர்நாடகாவுக்குக் கூடுதலாக 14.75 டிஎம்சி நீர் ஒதுக்கப்படுகிறது.

பெங்களூரு சர்வதேச நகராக வளர்ந்துள்ளதால் நாளுக்கு நாள் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. இதனால் பெங்களூருவின் குடிநீருக்காக 4.75 டிஎம்சி நீரும், தொழிற்சாலைகளின் தேவைக்காக 10 டிஎம்சி நீரும் ஒதுக்கப்படுகிறது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் தரப்பட்டிருந்த, கேரளாவுக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி நீரில் எவ்வித மாற்றமும் இல்லை.

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக மக்களின் நலன் கருதி 1892 மற்றும் 1924 ஆகிய ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும். எனவே தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட முடியாது. மழைக்காலங்களில் காவிரியில் அதிகப்படியாக வரும் நீரை கர்நாடகா முறையாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.

மத்திய அரசு இன்னும் 6 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.”

இவ்வாறு உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவிரியின் கடந்த கால வரலாறு

18-02-1892ல் சென்னை மாகாணத்துக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையில் முதல் காவிரி நீர்ப்பகிர்வு உடன்படிக்கை செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தப்படி மைசூர் மாகாணம் கூடுதலாக வேளாண்மை செய்ய வேண்டுமென்றால் சென்னை மாகாணத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். இல்லையேல் புதிதாக வேளாண்மை செய்யக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது.

14 ஆண்டுகள் கழித்து நடுவர் குழு மற்றும் ஆய்வுக்குழுவின் வழிகாட்டுதல்படி, 18-02-1924ல் மைசூர் – கண்ணம்பாடியில் கிருஷ்ணராஜ சாகர் அணையையும், இங்கே மேட்டூர் அணையையும் அடிப்படையாக வைத்து, இந்திய அரசின் மேற்பார்வையில் சென்னை மாகாணத்துக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் 50 ஆண்டு கால உடன்படிக்கை செய்யப்பட்டது.

1956ல் மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்பட்டபோது காவிரி உற்பத்தியாகும் குடகு கர்நாடகாவிற்குச் சென்றது. மேலும் காரைக்கால் காவிரி நீரால் பயனடைந்து வந்ததால் புதுச்சேரியும், கபினி நீரின் பிறப்பிடம் கேரளாவிற்குச் சென்றதால் 1960ல் கேரளமும் நீர்ப்பங்கீடு கேட்டு உரிமைப் பிரச்சினையை எழுப்பின.

1924 -1974 உடன்படிக்கை முடிவுக்கு வந்தபோது கர்நாடகா நீர் தர மறுத்தது. இதற்கிடையே 1892, 1924 ஒப்பந்தங்களை மதிக்காமல், நீர்ப்பங்கீட்டை கர்நாடகா மறுக்கிறது என்று தமிழகம் 17-02-1970ல் மத்திய அரசிடம் நடுவர் தீர்ப்பாயத்தை அமைக்கக் கோரிக்கை வைக்கிறது. 16 ஆண்டுகளாகியும் நடுவர் தீர்ப்பாயத்தை அமைக்காத காரணத்தால் ‘மாநிலங்களுக்கிடையேயான நீர்த்தகராறு 1956 சட்டத்தின்’ கீழ் தமிழகம் நடுவர் தீர்ப்பாயத்திடம் செல்வதென முடிவெடுக்கிறது. நடுவர் தீர்ப்பாயக் குழுவை அமைக்காமல் மத்திய அரசு கால தாமதம் செய்கிறது. இதனையடுத்து உச்சநீதி மன்றம் தலையிட்டதன் பேரில் 1990, ஜுனில்தான் காவிரி நடுவர் தீர்ப்பாயம் (நடுவர் மன்றம்) அமைக்கப்படுகிறது. அக்காலக் கட்டத்திலிருந்த மத்திய அரசின் அலட்சியப் போக்கினால் தமிழகம் இழந்தது ஏராளம். ஏனெனில் கர்நாடகாவில் விவசாயம் செய்யும் நிலப்பரப்பு விரிவாக்கப்பட்டுக் கொண்டே சென்றது.

காவிரி நதிநீர் நடுவர் தீர்ப்பாயத்தில் மூன்று நீதிபதிகள் அதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். தீர்ப்பாயத்தின் முடிவான தீர்ப்பு அளிக்கப்படும் வரை, 25-06-1991 அன்று, இடைக்கால உத்தரவாக தமிழ்நாட்டிற்கு 205 டிஎம்சி நீரை ஆண்டுதோறும் வழங்க வேண்டும் என்று ஆணையிட்டது. பத்து நாட்களுக்குப் பிறகு தீர்ப்பாயத்தின் உத்தரவை ஏற்க மறுத்து, கர்நாடக சட்டமன்றம் ஒருமனதாகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. தன்னுடைய அலுவலர்களுக்கும் கர்நாடக அரசு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி, மாநில விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் காவிரி நீரைக் காப்பாற்றிப் பாதுகாக்குமாறு உத்தரவிட்டது. விவகாரம் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. கர்நாடகாவின் தீர்மானம் அரசியலமைப்புச் சட்ட வரம்பை மீறுவது என்று உச்சநீதி மன்றம் கூறியது. இதனையடுத்து மத்திய அரசு கர்நாடகா விடவேண்டிய தண்ணீரின் அளவைக் குறிப்பிட்டு தனது கெஸட்டில் வெளியிட்டு, அதை அதிகாரப்பூர்வமாக்கியது. அதற்குப் பதிலளிக்கும் வகையில் அப்போதைய கர்நாடக முதல்வர் எஸ்.பங்காரப்பா பொதுவேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து தமிழகத்திற்கு எதிராக கர்நாடகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. கலவரங்கள் நிகழ்ந்தன. தமிழகத்திலும் பல கோடி இழப்புகள் ஏற்பட்டது. அதுபற்றிப் பின்னர் விரிவாகக் காணலாம்.

இதற்கிடையே கர்நாடகம் அதன் பாசனப் பரப்பை அப்போதைய 11,20,000 ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக் கூடாது என்றும் தீர்ப்பாயம் ஆணையிட்டது. இந்த இடைக்காலத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. பின்னர், குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டபடி, உச்ச நீதிமன்றம் தலையிட்டு அந்த அவசரச் சட்டத்தை நீக்கியது.

கர்நாடக அரசு பாசனப் பகுதிகளை அதிகப்படுத்தியது; அரசியல் லாபங்களை முன்வைத்து, உச்சநீதிமன்றம், நடுவர் தீர்ப்பாயம் அறிவிக்கும் நீரின் அளவை, மழைக் காலங்களில் அதிக நீர்வரத்து இருந்தால் திறந்து விடுவதும், மழை குறைவான ஆண்டுகளில் அல்லது நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் மாதங்களில் தண்ணீரைத் திறந்து விடுவதில் உள்ள சிக்கலைக் காரணம் காட்டி நடுவர் தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி திறந்து விட இயலாது என்று காரணம் காட்டுவதும் வாடிக்கையானது. தமிழகம் தனக்கான நீதி கேட்டு உச்சநீதிமன்றம் செல்வதும், கர்நாடகமும் தனது பங்கிற்கு வழக்குகளைப் போடுவதும் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. தமக்கான தண்ணீரின் அளவைக் குறைத்துவிடக்கூடாது என்ற கவலையில் கேரளாவும், புதுச்சேரி யூனியனும் கூட வழக்குகளைப் பதிவு செய்தன.

காவிரி பற்றிய சில தகவல்கள்

காவிரி தலைக்காவிரி, குடகு என்ற இடத்தில் தற்போதைய கர்நாடகாவில் பிறக்கிறது. கர்நாடகாவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியின் வாயிலாக தமிழகத்தில் நுழையும் காவிரி, தெற்கு, தென் கிழக்குப் பகுதிகளில் பாய்ந்து இரு கிளைகளாகப் பிரிந்துசென்று இறுதியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

காவிரி நதியில் கலக்கும் சிறு ஆறுகள்: சிம்ஸா, ஹேமாவதி, அர்காவதி, ஹொன்னுகோல், லக்ஷ்மண தீர்த்தா, காபினி, பவானி ஆறு, லோகபவானி, அமராவதி மற்றும் நொய்யல் ஆறு.

காவிரி பாயும் மாநிலங்கள்: கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி.
காவிரிப் படுகையின் நீர்த்தேக்கத்தின் அளவு : 81,155 Sq.KM (31,334 Sq.Miles)
நீளம்: 765 KM
காவிரி விடுவிப்பு சராசரியாக : 235.7 Cubic Meter/Sec (8,324 Cubic feet/Sec)

இந்தியாவில் நீர் பற்றிய சட்டங்களில் என்ன கூறப்பட்டுள்ளது?

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் நீர் மேலாண்மை பற்றிய சட்டங்களை வரையறுத்ததில் உள்ள உரிமைகள் இன்று மாநிலங்களுக்கிடையே நீரைப் பகிர்ந்து கொள்வதில் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. சட்டங்கள் வரையறுக்கப்பட்ட போதிலும், முழுமையான அதிகாரமோ அல்லது மாநிலத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரமோ முற்றிலுமாக மத்திய அரசின் கையில் இல்லை. அதே நேரத்தில் மாநிலங்களுக்கிடையேயான நீரைப் பகிர்ந்து கொள்வதன் மேற்பார்வை மற்றும் நீரைப் பகிர்ந்து கொள்வதில் பிரச்சினை ஏற்பட்டால் மத்திய அரசு என்ன முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற வரையறைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான நேரங்களில் இதுவரை ஆண்ட அனைத்து மத்திய அரசும் இப்பிரச்சினையை நேர்மையாக அணுகவில்லை என்பது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியதாகும். இதுவே உச்ச நீதி மன்றத்திற்கும் பொருந்தும். நடுவர் தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களாக இருந்தும் மாநில அரசு தனது உரிமையைப் பயன்படுத்தி சில அவசரச் சட்டங்களைப் போடுவதை அவர்களால் நேரடியாகக் கேள்வி எழுப்ப இயலவில்லை. அதேவேளையில் நடுவர் தீர்ப்பாயத்தில் எத்தகைய ஆய்வை மேற்கொண்டு குறிப்பிட்ட அளவு நீரை, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு வழங்க வேண்டும் என்று சட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டாலும், பருவ நிலை மாற்றங்கள், மழை குறைவாக பெய்தல் போன்ற பல்வேறு காரணிகளால், அவ்வுத்தரவைப் பல வருடங்களுக்குப் பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவுகளை ஏற்க இயலாது என்பது போன்ற மாநில அரசின் கோரிக்கைகளையும், வழக்குகளையும் முற்றிலுமாக நிராகரிக்க இயலவில்லை. தண்ணீர் கிடைக்காத மாநிலம் தன் தரப்பு நீதி கேட்டு வழக்குகளைப் போடுகிறது. இவ்வாறாக இந்தியாவில் மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ப்பங்கீட்டுப் பிரச்சினை அரசியல் பிரச்சினையாகி, தற்போது மாநில விவசாயிகளின் உணர்வுப் பிரச்சினையாகவும் மாறியுள்ளது.

மாநில அரசின் கீழ் இருக்கும் அதிகார வரம்புகளில் ‘நீர்’ 17வதாக இடம்பெறுகிறது.

Water is a state subject as per constitution of India and Union’s role comes into only in the case of inter- state river waters.

The State List of the Seventh Schedule has the following as Entry 17:

“Water, that is to say, water supplies, irrigation and canals, drainage and embankments, water storage and water power”

17ல் (Entry 17) நீர் மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் வருவதால் குடிநீர் வழங்கல், விவசாயத்திற்கு வழங்கல், கால்வாய், வடிகால், நீர்த்தேக்கம், புனல் மின்சாரம் உள்ளிட்டவைகளில் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது. அது தொடர்பான சட்டங்களையும் மாநில அரசு இயற்ற இயலும். இதைத்தான் கர்நாடகா பயன்படுத்துகிறது. தனது மாநிலத்தின் வேளாண்மையைப் பெருக்கும் வகையில் பல நீர்த்தேக்கங்களை, வடிகால்களை அமைக்கும் உரிமை தனக்குள்ளது என்ற அடிப்படையில்தான் கர்நாடகாவில் விவசாய நிலங்களைப் பெருக்கிக் கொண்டு சென்றது. 1970 லிருந்து 1990 வரை நடுவர் தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்காமல் போனதும் முக்கியக் காரணம்.

1928ல், காவிரி, இப்போதைய கர்நாடகத்தின் 1.1 கோடி ஏக்கர் விவசாய நிலங்களுக்கும், இப்போதைய தமிழ்நாட்டின் 14.5 கோடி ஏக்கர் நிலங்களுக்கும் பாசனவசதி அளித்து வந்தது. 1971ல் இடைவெளி மேலும் அதிகரித்தது. புள்ளிவிவரப்படி, கர்நாடகத்தில் 4.4 கோடி ஏக்கரும், தமிழ்நாட்டில் 25.3 கோடி ஏக்கரும் பாசன வசதி பெற்றன. எனினும், இருபதாம் நுற்றாண்டின் இறுதியில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி கர்நாடகாவில் 21.3 கோடி ஏக்கர் அளவிற்கும், தமிழ்நாட்டில் 25.8 ஏக்கரில் பாசன வசதி உள்ளது.

கர்நாடகாவின் இந்த மகத்தான பாசன வசதி விஸ்தரிப்பு மாண்டியா மற்றும் மைசூர் விவசாயிகளுக்கு அதிகப் பொருள் வளத்தை ஈட்டித் தந்தது. இப்போது கர்நாடகாவில் இரண்டு, மூன்று போகம் நெல், கரும்பு சாகுபடிகளைச் செய்கிறார்கள்.

1970, 1980களில் இரு மாநிலங்களுக்கும் சமரசமாக ஏற்கக்கூடிய வகையிலான காவிரி நதிநீர்ப்பங்கீட்டை முடிவு செய்ய மத்திய அரசு பல்வேறு கூட்டங்களைக் கூட்டியது. இக்காலக்கட்டத்தில் 26 முறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. தமிழ்நாடு, மேல் பகுதியில் விரைவான கால்வாய் அமைக்கும் பணிகள், தம் மாநில விவசாயிகளைப் பாதிக்கும் என்று அஞ்சியது. அதேபோல கர்நாடகம், ஏற்கெனவே காலம் தாழ்த்தி விட்டோம். காலம் கடந்து ஆரம்பித்ததால், தம் மாநிலத்தின் பாசன வசதி மேம்பாடு, எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்று வாதிட்டது. அதை உறுதிப்படுத்த மாநில அதிகார வரம்பில் நீர் இருப்பதால், அதைப் பயன்படுத்தியே பாசன வசதியை மேம்படுத்திக் கொண்டது. கூடுதலாக தேவையான கால்வாய்கள், வடிகால்களை அமைத்தது.

மத்திய அரசின் கீழ் இருக்கும் அதிகார வரம்புகளில் ‘நீர் மேலாண்மை’ 56வதாக இடம்பெறுகிறது.

Entry 56 of List I (Union list), reads as follows:

“Regulation and development of inter- state rivers and river valleys to the extent to which such regulation and development under the control of the Union, is declared by Parliament by law to be expedient in the public interest”.

பிரிவு 56, பல்வேறு மாநிலங்களுக்கிடையே பாயும் ஆறுகள், ஆற்றுப் பள்ளத்தாக்குகளை மேம்படுத்துவது, அவற்றை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு மாநில மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அதிகாரத்தைத் தருகிறது.

மாநிலங்களுக்கிடையே நதி நீர்ப்பங்கீட்டால் ஏற்படப்போகும் பிரச்சினைகளை உணர்ந்த மத்திய அரசு சட்டப் பிரிவு 262ல் இதுபற்றிப் பேசுகிறது. இதற்குத் தேவையான ஒழுங்கு முறை வாரியம், நடுவர் தீர்ப்பாயம் போன்ற குழுக்களை அமைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்று வரையறுக்கப்பட்டது. மேலும் சட்டப் பிரிவு 262ன் படி இரு சட்டங்களை உருவாக்கியது.

River Board Act 1956:

பல்வேறு மாநிலங்களுக்கிடையே பாயும் நதிகள் மற்றும் ஆற்றுப் பள்ளத்தாக்குகளின் மேம்பாடுகளைக் கணக்கில்கொண்டு, மாநிலங்களுடன் கலந்தாலோசனை செய்து, வாரியம் அமைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு. மேலும் பிரச்சினைகளைத் தவிர்க்க மேலாண்மை வாரியம் அல்லது நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்.

இந்தச் சட்டப்பிரிவைப் பயன்படுத்தி இதுவரையிலும் எந்த மத்திய அரசும் காவிரி மேலாண்மை வாரியத்தை (No River Board) அமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 Inter-State Water Dispute Act, 1956:

மாநிலங்களுக்கிடையே ஏற்படும் நதிநீர்ப்பங்கீட்டுப் பிரச்சினையைத் தீர்க்க மாநிலங்களுடன் கலந்தாலோசனை செய்து பிரச்சினையைத் தீர்க்க முயல வேண்டும். அவ்வாறு முயற்சித்தும் பிரச்சினையைத் தீர்க்க இயலவில்லையெனில், நடுவர் தீர்ப்பாயம் அல்லது நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்.

குறிப்பு: உச்சநீதி மன்றம் தீர்ப்பாயம் கொடுக்கும் அளவு பற்றி கேள்வி கேட்கக் கூடாது அல்லது தீர்ப்பாயம் நீரின் அளவை எதனடிப்படையில் அடைந்தது என்ற கேள்விகளைக் கேட்க முடியாது. ஆனால், அது வேலை செய்யும் முறையைக் கேள்வி கேட்கும் அதிகாரம் உண்டு.


காவிரிப் பிரச்சினையின் உண்மை நிலவரம்

காவிரி நதிநீர்ப்பங்கீட்டுப் பிரச்சினையில் 1974ம் ஆண்டிலிருந்தே தமிழகத்திற்கு உரிய நீதி கிடைக்கவில்லை. எம்ஜிஆர் 1974ல் ஒப்பந்தம் முடிவிற்கு வந்ததை அடுத்து உச்சநீதி மன்றத்தை அணுகினார். பின்னர் இந்திராவின் கோரிக்கையை ஏற்று வழக்கை திரும்பப்பெற்றுக் கொண்டது தமிழக அரசு. ஆனால், நடுவர் தீர்ப்பாயம் அமைக்க கர்நாடகம் தெரிவித்த கடும் எதிர்ப்பை மட்டும் கருத்திற்கொண்டு உடன்பாடு எட்டப்படாததால் நடுவர் தீர்ப்பாயக் குழுவை அமைக்காமல் காலம் கடத்தி வந்தது. இதனால் மீண்டும் தமிழ்நாடு 1986ல் உச்சநீதி மன்றத்தை அணுகியது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல நடுவர் தீர்ப்பாயக் குழு அமைக்கப்பட்டதும், அதன் இடைக்கால உத்தரவாக 25-06-1991ல் 205 டிஎம்சி நீரை வழங்க வேண்டும் என்ற உத்தரவை முழுமையாக கர்நாடகா நிறைவேற்றவில்லை.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் (05-02-2007) வழங்கப்பட்ட 192 டிஎம்சி தண்ணீரையும் கர்நாடகா தொடர்ச்சியாக வழங்கியது கிடையாது. இதை எதிர்த்தும் இரு மாநில அரசுகளும் சிறப்பு மனுவை (Special Leave Petition) உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தன. கூடவே கேரளாவும், புதுச்சேரியும் கூடத் தம்மையும் வழக்கில் இணைத்துக் கொண்டன. அதன் இறுதித் தீர்ப்பு 16-02-2018ல் வந்தபோது 192 டிஎம்சியிலிருந்து 14.75 டிஎம்சி-ஐக் குறைத்து தமிழகத்திற்கு 174.75 டிஎம்சி அளவு வழங்க வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு கூட உச்சநீதி மன்றம் வலியுறுத்தியும் பாராளுமன்றத்தில் இதுபற்றி விவாதித்து புதிய சட்ட வரைவுடன்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும், உச்சநீதி மன்றம் விடுத்த நான்கு வாரங்களுக்குள் அமைக்க இயலாது என்று மத்திய அரசு தெரிவித்தது ஞாபகமிருக்கலாம். சட்ட ரீதியாக சரி என்றால் கூட தமிழகம்தான் இதனால் இழப்புக்குள்ளாகி உள்ளது.

இந்தத் தீர்ப்பைக் கர்நாடகா 14 ஆண்டுகளுக்கும் ஏற்றுச் செயல்படும் என்று நம்ப இடமில்லை.

உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதால் மழை மற்றும் அணையின் கொள்ளளவைப் பொறுத்துக் குறைந்தபட்சம் ஆண்டுதோறும் நீரின் அளவை முன்வைக்கும். மேலும் உபரி ஆறுகளிலிருந்து காவிரியில் கலக்கும் நீரையும் கணக்கில் கொண்டு வெளியிடப்படும் நீரின் அளவைத் தீர்மானிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தில் நான்கு மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், துறை சார்ந்த வல்லுநர் குழு, தொழில்நுட்பக் குழு மற்றும் அதன் தலைமைப் பொறுப்பை வகிக்கும் நீதிபதி குழு அறிக்கையை சமர்ப்பிப்பதன் மூலம் மாநிலங்களுக்கிடையே எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நீரைப் பகிர்ந்து கொள்ள முடியும் என்பதே, மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பவர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலாண்மை வாரியத்தின் முடிவை ஏற்று கர்நாடகமும் தமிழகமும் செயல்பட வேண்டும். குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை இதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவரை மாற்ற வேண்டும். குழுவைக் கூடச் சில ஆண்டுகளில் மாற்ற வேண்டும். தனி அமைப்பாக சுதந்திரமாக செயல்படும் மேலாண்மை வாரியமாக அமைக்கப்பட வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் கூட, ஆண்டுதோறும் நீரின் அளவைக் குறைக்கச் சொன்னாலோ அதிகரிக்கச் சொன்னாலோ, இரு மாநிலங்களில் ஏதோ ஒரு மாநிலம் உச்சநீதி மன்றத்தை அணுகி வழக்கு தொடரும் என்றே அனுமானிக்கிறேன். தனக்கு எதிரான எந்த முடிவை மேலாண்மை வாரியம் எடுத்தாலும் அதையே அரசியல் பிரச்சினையாக்கி மாநில அரசுகள் முன்னெடுத்துச் செல்லும். ஆயினும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றே தற்போதைக்கு மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு செய்யும் நற்செயலாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.


வஞ்சிக்கப்படும் தமிழகம்

மூன்று விஷயங்களில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது.

இன்று வரையிலும் தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்த மத்திய அரசு காவிரிப் பிரச்சினையை நேர்மையாக அணுகவில்லை. மேலும் குறிப்பிட்ட கால அளவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை.

கர்நாடகாவின் காவிரிப் பாசனப்படுகையில் விவசாயம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் இருக்கக்கூடாது என்ற சட்ட உத்தரவும் போட இயலாத காரணத்தால் தமிழகம் இன்று பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதனால் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவும் குறைகிறது.

பருவ மாற்றங்களால் ஏற்படும் வெப்பம், கர்நாடகாவில் பெய்யும் மழையின் அளவுக் குறைவு போன்ற காரணங்களாலும் தமிழகத்திற்குக் கொடுக்கவேண்டிய குறிப்பிட்ட அளவிலான நீர் வர இயலாமல் போகிறது.


கர்நாடக தரப்பின் வாதங்கள்

மத்திய நீர் கமிட்டி (Central Water Commission), 1971- 2004 வரையிலான காலக்கட்டத்தில் பெய்த மழை பற்றிய ஓர் ஆய்வை மேற்கொண்டது. அது காவிரிப் படுகையில் மழையின் அளவு குறைந்து வருகிறது எனத் தெரிவித்தது. இந்தியன் இன்ஸ்டிடுயுட் ஆப் சயின்ஸ் மேற்கொண்ட ஆய்விலும் பருவ நிலை மாற்றங்களால் காவிரிப்படுகையில் மழையின் அளவு குறைந்து வருகிறது என்று தெரிவித்தது. குடகு பகுதியிலும் மழையின் அளவு குறைந்து வருவதாகவும் தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காவிரி நீர்ப்பிரச்சினை வாரியம் (CWDT- Cauvery Water Dispute Tribunal ) 205 டிஎம்சி வழங்கச் சொல்லி இருந்தது. ஆனால் மழையில்லாக் காலக்கட்டத்திலோ, தண்ணீர் வரத்து குறைவாக இருக்கும் மாநிலங்களில் எந்த அளவு நீர் வழங்க வேண்டும், அதை எவ்வாறு கணக்கிடுவது என்ற தெளிவை முன்வைக்கவில்லை. ஏனெனில் காவிரி மேலாண்மை வாரியம் இன்று வரையிலும் அமைக்கப்படவில்லை. கர்நாடகாவில் உள்ள விவசாயிகளின் நலன், 95-96, 2003-2004 மற்றும் சில வருடங்களில் பெய்த குறைந்த மழையைக் காரணம் காட்டியது கர்நாடகம். அதே வேளையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் எதிர்ப்பு தெரிவித்தது.

விவசாயம், மின்சாரம் ஆகியவற்றைக் கொடுக்கும் கடமை தனக்குள்ளது என்ற வாதங்களை தன் தரப்பிலிருந்து முன்வைத்தது கர்நாடகம்.

மத்திய அரசின் அலட்சியம்

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் (05-02-2007) 192 டிஎம்சி தண்ணீரைத் தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்டிருந்தது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, காவிரியில் வரும் தண்ணீரை நான்கு மாநிலங்களிடையே ஒவ்வொரு மாதமும் (ஏன் ஒவ்வொரு 10 நாட்களுக்கும்) பிரித்து வழங்கும் பொறுப்பும் அதிகாரமும் காவிரி மேலாண்மை வாரியம் என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு வழிகாட்டி நெறிமுறைகளை / அறிவுரை வழங்குவதற்காக காவிரி ஒழுங்குமுறை குழு என்ற ஒரு அமைப்பும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இந்த இரு அமைப்புகளையும் அரசிதழில் இறுதித் தீர்ப்பு வெளியிட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் மத்திய அரசு நியமித்திருக்க வேண்டும். (மே 18, 2013க்குள்) ஆனால், எப்போதும்போல் காங்கிரஸ் அரசு காலம் தாழ்த்தியது. இதையடுத்து, கடந்த 08-04-2013ல் மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை தமிழக அரசு தட்டியது. ஆனால், 10-05-2013ல் உச்ச நீதிமன்றமும் (காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை ஓரங்கட்டும் வகையில் அதன் அரசியல் சட்ட அமைப்புகளை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் எந்தவித முகாந்திரமும் இன்றி) காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட மத்திய அரசுக்குக் காலக்கெடுவும் அறிவுறுத்தலும் செய்யாமல் அதிகாரமற்ற காவிரி மேற்பார்வைக் குழுவை அமைக்க உத்தரவிட்டது. இந்தக் குழுவும், கண்துடைப்பு நாடகமாக கடந்த 2013 ஜூன் 1, 12ல் கூடியது. ஆனால், எந்த முடிவும் எடுக்காமல் கலைந்தது.

2016 செப்டம்பரில் மீண்டும் உச்சநீதி மன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை நான்கு வாரங்களுக்குள் அமைக்கச் சொல்லி மத்திய அரசிற்கு உத்தரவிட்டது. மத்திய அரசு பாராளுமன்றத்தில் கலந்துகொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கால தாமதம் செய்தது. அதன் பின்னர் தற்போதைய மத்திய அரசு ‘Inter-State River Water Disputes (Amendment) Bill 2017’ கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த சட்ட மசோதா நதிநீர்ப்பங்கீட்டுப் பிரச்சினையை அணுகும் விதத்தில் சற்றுக் கடுமையான வழிவகைகளை முன்வைத்துள்ளது. இது முக்கியமான முன்னகர்வுதான் என்றபோதிலும் அது எந்தளவுக்கு நடைமுறையில் செயல்படப் போகிறது என்ற ஐயமும் உள்ளது. ஏனெனில் கடந்த கால வரலாறு அவ்வாறாக இருப்பதே இதற்குக் காரணம்.

தற்போதைய மத்திய அரசு அறிமுகப்படுத்தும் இந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

சட்டம் 1956 படி, பிரச்சினை ஏற்பட்டால் மட்டுமே தீர்ப்பாயம் அமைக்கப்படும் என்று இருந்தது. மேலும், குறிப்பிட்ட கால அளவுக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது கொண்டு வருகிற சட்டத்தில், தற்காலிகமாகவோ அல்லது பிரச்சினை காலத்திற்கு மட்டுமே என்றில்லாமல் நிலையாக ஒரு ஒழுங்குமுறைக்குழு (permanent Inter-State River Water Disputes Tribunal (ISRWDT) அமைக்கப்படும் என்கிறது. மேலும் அதிகபட்சமாக ஐந்தரை ஆண்டுகளுக்குள் தமது அறிக்கையைக் குழு வல்லுநர்களின் உதவியோடு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது. உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி உட்பட்ட எட்டு உயர்நீதி மன்ற நீதிபதிகளைக் கொண்ட குழுவின் முன்பாக மூன்று பேர் கொண்ட தீர்ப்பாயக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்றும் தெரிவிக்கிறது. மேலும் அவர்களின் பதவிக் காலம் 70 வயது என்ற உச்சவரம்பையும் புதிய சட்டத்தில் சமர்ப்பித்துள்ளது.

2017ல் சமர்பிக்கப்பட்ட சட்ட மசோதாவில், பிரச்சினையைத் தீர்க்கும் குழு (DRC-Dispute Resolution Committee ) அமைக்கப்படும் என்றும் அது துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்டதாக இருக்குமென்றும் தெரிவிக்கிறது. துறை சார்ந்த நிபுணர்கள் மாநிலங்களின் கோரிக்கைகள், தண்ணீரின் அளவு, மழையின் அளவு என பல்வேறு விஷயங்களைத் தொகுத்து தீர்ப்பாயத்திற்கு வழங்குவார்கள் என்கிறது.

மத்திய அரசே அதற்கான குழுவை அமைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதை எந்த அளவிற்கு மாநில அரசுகள் ஏற்கும் என்பது தெரியவில்லை. புள்ளிவிவரங்களைத் தொகுப்பதோ, உண்மை நிலவரத்தைத் தொகுத்து வழங்குவதோ இங்குப் பிரச்சினையல்ல. உண்மையில் தண்ணீரைத் திறந்துவிடும் இடத்திலுள்ள மாநில அரசும், தண்ணீரைக் கோரும் மாநில அரசும் எப்படி அணுகும் என்பதே பிரச்சினை.

இதற்குக் கடந்த காலத்தில் பல உதாரணங்கள் உண்டு. ஒவ்வொரு முறையும் காவிரி விஷயத்தில் தமிழ்நாடு அதிக அளவிலான டிஎம்சி நீரைக் கோருவதும், கர்நாடகா குறைந்த அளவைத் தர இயலும் என்று சொல்வதும் நாம் பார்த்ததே. இரு தரப்பிலும் அடுத்தவர் தரப்பின் நியாயங்களை உணர்ந்து செயல்படுவதில்லை. அதைத் தடுக்க வேண்டிய இடத்திலுள்ள மத்திய அரசோ காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் கால தாமதம் செய்கிறது.


காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன?

காவிரிப் பிரச்சினையின் மையப்புள்ளி, நீரின் இருப்பைக் காட்டிலும் தேவையின் அளவு அதிகமாக இரு தரப்புக்கும் இருக்கிறது. இப்பிரச்சினையை மாநிலங்கள் பரந்த மனப்பான்மையுடன், வெளிப்படைத் தன்மையுடன், ஜனநாயக முறையை மதித்தும், துறை சார்ந்த நிபுணர்களின் பங்களிப்புடன் ஒரு முறையான சட்ட வடிவை மதித்து நடப்பதே இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை விரைவில் அமைக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியமும் நீர்ப்பிரச்சினை தீர்க்கும் குழுவும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத வகையில் தனி அமைப்பாகச் செயல்படும் சுதந்திரம் வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் நீரின் அளவைப் பொறுத்தும், மழையின் தன்மையைப் பொறுத்தும் விடக்கூடிய நீரின் அளவை ஒவ்வொரு பத்து நாட்களுக்கும் பரிசீலனை செய்ய வேண்டும். பல்வேறு மாநிலங்களுக்கிடையே செல்லும் நதிகள் தேசியச் சொத்து என்ற உச்சநீதி மன்றத்தின் கூற்றை நிருபிக்க கர்நாடகாவின் தலையீடு நீர் வெளியிடுவதில் இருக்கக் கூடாது.

அரசியல் சட்ட வரைவில் மாநிலங்கள் கூடுதல் நிலங்களை விவசாயத்திற்குப் பயன்படுத்துவது பற்றிய ஒப்பந்தங்கள் இருக்க வேண்டும்.

இரு மாநிலத்திலும் பெரும்பாலும் நெல் மற்றும் கரும்பே அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இதற்கு ஆகும் நீரின் அளவு மற்ற பயிர்களையோ தானியங்களையோ ஒப்பிடும் போது மிக அதிகமாகச் செலவாகிறது. இரு மாநில விவசாயிகளையும் இரு போகங்களில் மாற்றுப் பயிர்களை பயிரிட வைப்பதன் மூலமாக விவசாயத்தையும் காப்பாற்றலாம். விவசாயிகளின் பிரச்சினையும் குறையும். ஆனால் அத்தகைய முன்னெடுப்புகளை எந்தத் தரப்பும் செய்வதில்லை என்பது சோகமான செய்திதான்.

மத்திய அரசு, மாநில அரசு, உச்சநீதி மன்றம் போன்றவை காவிரி மேலாண்மை கூறிய விஷயங்களை ஏற்று நடக்க மட்டுமே அறிவுறுத்தப்பட வேண்டும். அவ்வாறு முன்வைக்கும் தீர்வு நடைமுறையில் செயல்படுத்தக்கூடியதாகவும், நீண்ட காலத்திற்குப் பொருந்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மாறாக மத்திய அரசு நிலையான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் சென்றால் அது இன்னும் பிரச்சினையைப் பெரிது படுத்துமே ஒழிய தீர்வை நோக்கி நகராது.

மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து கர்நாடகமோ தமிழகமோ இதை அரசியலாக்கும் வகையில் செயல்படும் பட்சத்தில் காவிரிப் நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினை தீராப்பிரச்சினைதான்.

உதவியவை:

https://interstatedisputes.wordpress.com/2013/10/06/case-study-cauvery-river-water-sharing-dispute/ | https://www.clearias.com/inter-state-river-water-disputes-india/ | http://www.livemint.com/Opinion/JDRZ3dpZdFPes9qiULWUgO/Addressing-Indias-water-dispute-problem.html | https://interstatedisputes.wordpress.com/ | https://sandrp.wordpress.com/2016/10/06/inter-state-river-water-disputes-in-india-history-and-status/ | http://tamil.thehindu.com/tamilnadu/article22771035.ece?homepage=true | http://tamil.thehindu.com/tamilnadu/article22771035.ece?homepage=true | http://tamil.thehindu.com/india/article22781477.ece | http://www.prsindia.org/uploads/media/Inter-state%20river%20water%20dispute/SCR-%20Inter-State%20River%20Water%20Disputes(A)%20Bill,%202017.pdf | http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=164541

Posted on 3 Comments

ஒன்றுபட்ட இந்தியா – லக்ஷ்மணப் பெருமாள்

“சீக்கியர்கள் தனி அரசு அமைக்க முயற்சி செய்யலாம். அவர்கள் அப்படிச் செய்வார்கள் என்றே நினைக்கிறேன். அது இந்திய ஒற்றுமைக்கு எதிராகவும், இந்தியாவின் ஒட்டுமொத்த பிளவுக்குத் தொடக்கமாகவும் இருக்கும். ஏனெனில், இந்தியத் துணைக் கண்டம், ஐரோப்பாவைப் போல வித்தியாசங்கள் பல நிறைந்த நாடு. ஒரு ஸ்காட்லாந்துக்காரர் எப்படி இத்தாலியிடமிருந்து வேறுபடுகிறாரோ, அந்தளவுக்கு ஒரு பஞ்சாபி தமிழரிடமிருந்து வேறுபடுகிறார். பல தேசங்கள் அடங்கிய ஒரு கண்டத்தை, ஒற்றைத் தேசமாக ஆக்க முடியாது.”

– ஜெனரல் சர். கிளாட் ஆச்சின் லெக், முன்னாள் இந்தியத் தலைமைத் தளபதி, 1948

பல மேற்கத்திய அறிஞர்கள், அரசியல் வல்லுநர்கள், வரலாற்றாசிரியர்கள் கூறிய கருத்துகள் இவைதான்: “அரசியல் ரீதியாக, ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பு எல்லையை வைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு தேசம்தான் இந்தியா. இந்தியாவின் படிப்பறிவில்லாத மக்கள், பல மொழிகள், பல சாதிய வேறுபாடுகளுடன், பல மதக்குழுக்கள் மற்றும் பல்வேறு கலாசாரப் பின்னணி கொண்ட ஒரு தேசம், ஒரே தேசமாக ஒற்றுமையுடன் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. ஐரோப்பாவைப் போல ஒரு நாடாக இருக்க ஒரேயொரு மொழி, ஒரேயொரு மத நம்பிக்கை மிக அவசியம். இல்லையெனில் சில ஆண்டுகளில் உள்நாட்டுக் குழப்பங்கள் காரணமாக அத்தேசம் சிதையும். அதுவே இந்தியாவிலும் பத்து – பதினைந்து ஆண்டுகளில் நடக்கும்” என்று மேற்கத்தியர்கள் எழுதினர். ஆனால் இன்றுவரை இந்தியா ஒற்றைத் தேசமாக, ஒரே நாடாக இருப்பதோடு மேலும் பலம் பொருந்திய தேசமாகவும் மாறியுள்ளது.

பஞ்சாப்பும், மதராசும் (சென்னை) ஒரே அரசியலமைப்பில் பங்கு பெறுவதைக் கற்பனை செய்தும் பார்க்க முடியாது என்று 1888ல் ஸ்ட்ராச்சி எழுதியிருந்தார். ஆனால் அரசியல்ரீதியாக இந்தியா 1947ல் அமைக்கப்பட்டபோது அவர் சேரவே சேராது என்று நினைத்த பல பிராந்தியங்களும் இந்தியாவுடன் ஐக்கியமாகி இருந்தன. ஆரம்பக் காலத்தில் மத ரீதியாக பாகிஸ்தானால் பல வன்முறைகள் தூண்டப்பட்டபோதிலும், ஆண்டுகள் செல்லச் செல்ல பொருளாதார ரீதியில், கலாசார ரீதியில் மக்கள் தாங்கள் உணர்வுபூர்வமாக இந்தியர்கள் என்று பெருமிதம் அடைந்தனர். ஆங்காங்கே சில வெறுப்புப் பிரசாரங்களும், தேசப் பிரிவினைக் கோஷங்களும், ஜன நாயகத்தை எதிர்த்து கம்யுனிஸம் என்ற பெயரில் மாவோயிஸ்டுகள் உருவாக்கும் பிரச்சினைகளும் இருந்தாலும் 90%க்கும் அதிகமான இந்தியர்கள் தங்களைப் பெருமைக்குரிய இந்தியர்களாகவே கருதி வருகின்றனர்.

இந்தியன் என்ற ஒற்றுமை உணர்வு

இந்தியா அரசியல் ரீதியாக சுதந்திரம் அடைந்த பிறகு ஒரு தேசமாகக் கட்டமைக்கப்பட்டு, அதன் சட்ட திட்டங்கள் வரையறுக்கப்பட்டிருக்கலாம். அதேபோல நிலப்பரப்பை வரையறுத்த அளவில் வேண்டுமானால் இது ஒரு தேசமாக உருவானது என்பதால், பிரிவினைவாதிகள், இனவாதிகள், ‘இது ஒரு தேசமல்ல, கட்டாயப்படுத்தி இணைத்து வைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு நாடு’ என்று குறை சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆனால், இந்தியா சுதந்திரம் அடைவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கும் முன்பாகவே தன்னை மற்ற பகுதிகளுடன் உணர்வுரீதியாகவும், கலாசார ரீதியாகவும் பல விஷயங்களில் பிணைத்துக்கொண்டிருந்தது.


இராமாயணமும் மகாபாரதமும்

தேசத்தின் கலாசார மையமாக இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு பெரும் காப்பியங்கள் விளங்கின. இந்தியா என்ற தேசமாக உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே இவ்விரு காவியங்களும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பரதநாட்டியம், தெருக்கூத்து, பாவைக்கூத்து எனக் கலைகளின் மூலமாகவும் இலக்கியத்தின் மூலமாகவும் மக்களை உணர்வுபூர்வமாக இணைத்திருந்தது. கம்பனைப் போலவே பல மொழிகளிலும் ராமாயணத்தைப் பல இலக்கியவாதிகள் மொழி பெயர்த்திருந்தனர். கி.பி 12ம் நூற்றாண்டிலேயே கம்பன் ராமாயணத்தை இயற்றி இருந்தார். அரசியல் ரீதியாக இந்தியத் தேசம் பிறப்பதற்கு முன்பாகவே, மக்களிடம் உள்ள உணர்வுபூர்வமான ஒற்றுமைக்குக் காரணம் இவ்விரு காப்பியங்களும். கூடவே கலாசாரப் பரிமாற்றங்களும்.


பக்தி யாத்திரை

சுதந்திரத்துக்கு முன்பாகப் பல நூற்றாண்டுகளாக காசிக்கும் பத்ரிநாத் கோயிலுக்கும் ராமேஸ்வரத்திற்கும் ஸ்ரீசைலத்திற்கும் மக்கள் பக்தி யாத்திரை மேற்கொண்டுள்ளார்கள். காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது செல்வதன் வாயிலாகத் தங்கள் பாவங்களைக் கழிக்கலாம் என்ற நம்பிக்கை பல நூறாண்டுகளாக இங்கு நடைமுறையில் உள்ளது. ஆன்மீகமும் பக்தியும் தேசம் அடிமைப்படுவதற்கு முன்பே தொடர்பில் இருந்தமைக்கான சான்றுகள் ஏராளம் உண்டு. வணிக ரீதியாகப் பல நாடுகளுடன்கூட நமக்குத் தொடர்புண்டு என்று கேள்வி எழுப்பலாம். தேச ஒற்றுமைக்கு உணர்வே பிரதானம். அவ்வகையில் தேசத்தின் பெரும்பான்மை மக்கள் எப்படி இரு துருவங்களில் உள்ள கோயில்களைப் பாவங்களைப் போக்கும் இடமாகக் கண்டறிந்தார்கள் என்கிற கேள்வி மிக முக்கியமானது.

ஜனநாயக சுதந்திர இந்தியா மலர்ந்த பிறகு:


இந்தியாவின் புவி நிலப்பரப்பும் அரசியல் சட்ட வடிவமைப்பும்

ஆங்கிலேயர்கள் தேசத்தைவிட்டு வெளியேறியபோது இந்தியாவின் 565 சமஸ்தானங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பை சர்தார் வல்லாபாய் படேல் மேற்கொண்டார். ஹைதராபாத், ஜுனாகத், காஷ்மீர், திருவாங்கூர் தவிர்த்த மற்ற சமஸ்தானங்களை மிக எளிமையாகவே ஒருங்கிணைத்தார். ஆனால் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் ராணுவ பலத்தைக் கொண்டு எஞ்சிய நான்கு பகுதிகளும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. குறிப்பாக ஹைதராபாத்தின் நிஜாம் மன்னர் தனித்த நாடாக இருப்போம் என்று ஆரம்பத்தில் சொல்லித் திரிந்தாலும் அவரையும் இறுதியில் படேல் வழிக்குக் கொண்டுவந்தார்.

இந்தியாவின் நிலப்பரப்பே இந்தியாவிலிருந்து மாநிலங்கள் பிரிந்து போவதைத் தடுக்கும் வண்ணமே பெரும்பாலும் உள்ளது. ஒருசில வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் காஷ்மீர் தவிர்த்து மற்ற எந்த நாட்டுடனும் தரை வழியில் இணையும் வாய்ப்புகள் கூட இல்லாத வகையில், இந்தியாவின் நிலப்பரப்பு ஒரு புறம் இமயமலையாலும், மற்ற மூன்று புறமும் இந்தியப் பெருங்கடலாலும் சூழப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் சட்டங்களை உருவாக்கியதில் அங்கங்கு சில சிக்கல்களும், அன்றைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு மதச் சட்டங்களை உருவாக்கியதில் சில விடுபடல்கள் இருந்தாலும், மாநில உரிமைகளைக் கணக்கில் கொண்டும், இந்தியா என்ற தேசம் வலிமையாக இருக்கும் வகையில் வெளியுறவு, ராணுவம், உள்நாட்டுப் பாதுகாப்பு என முக்கியத் துறைகள் மத்திய அரசின் கையிலும் இருக்கும் வகையிலும் சட்டங்கள் இயற்றப்பட்டன. மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, இது இந்தியாவிற்குத் தலைவலி என்றே கருத்துரைத்தனர். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியபோதே மாநிலங்கள் தங்களின் ஆட்சி மொழியைத் தீர்மானிக்கும் உரிமை தரப்பட்டது. எந்தத் துறைகளெல்லாம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்குமென்றும் அவற்றில் மத்திய அரசு தலையிட இயலாது என்றும் தெளிவுறுத்தப்பட்டது.

ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்று முடிவு எடுக்கப்பட்டபோது எழுந்த எதிர்ப்பை உள்வாங்கிய சாஸ்திரியின் அமைச்சரவை அந்த முடிவைக் கைவிட்டது. மேலும் இந்தி, ஆங்கிலம் இரண்டுமே அலுவல் மொழியாக இருக்கும் என்ற உறுதியையும் தந்தது. மாநிலங்கள் தங்கள் உரிமை என்று பெரிய அளவில் போராடியபோதெல்லாம் மத்திய அரசு தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் நடந்துகொள்ளாமல் வளைந்து கொடுத்தும், மாநிலங்களின் உரிமையை மதித்தும் நடந்தே வந்துள்ளது. இந்தியா ஒற்றைத் தேசமாக இருப்பதற்கு இது மிக முக்கியக் காரணம்.


இந்தியத் தேர்தல் நாள் ஒரு பண்டிகை நாள்

இந்தியா சுதந்திரமடைந்து ஏழு ஆண்டுகள் கழித்து, 1952ல் முதல் பாராளுமன்றத் தேர்தல் ஜனநாயக முறையில் நடந்தது. படிப்பறிவு குறைந்த மக்களைக் கொண்ட தேசம், பெண்ணடிமை தேசம் என்று மேற்கத்தியர்களால் வர்ணிக்கப்பட்ட தேசத்தின் முதல் தேர்தலிலேயே பெண்களும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் கூட 1970க்குப் பிறகே பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றார்கள். இங்கிலாந்து தன்னை மூத்த ஜனநாயக நாடாக அறிவித்துக் கொண்டாலும் அங்கும் பெண்களுக்கான வாக்குரிமை 1928ல்தான் வழங்கப்பட்டது. சுதந்திரம் வாங்கிய முதல் தேர்தலில் 46% அளவிற்கே வாக்குகள் பதிவாகி இருந்தன. ஆனால் இன்று, தேர்தல் ஆணையம் எடுத்து வந்த சீரிய முயற்சியாலும் வாக்காளர்களை ஒழுங்குபடுத்திய காரணத்தாலும் 75% க்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கிறார்கள். இதுவே ஜனநாயகத்தில் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதற்கான சான்று. 125 கோடி மக்கள் தொகையைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. அங்கு தேர்தல் நடத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல், பொருளாதாரச் செலவு தாண்டி அனைவருக்குமான ஜனநாயக உரிமையை வழங்கி, மக்கள் ஆதரவு பெற்ற கட்சிகள் ஆட்சி செய்யும் வழிமுறை போற்றுதலுக்குரியது. இந்தியாவில் தேர்தல் நாளை ஒரு பண்டிகையைப் போன்றதொரு கொண்டாட்ட மனநிலையுடன்தான் மக்கள் எதிர்கொள்கிறார்கள். முன்பெல்லாம் இதற்காகப் பேருந்துகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஆட்களை ஏற்றி வரும் நிகழ்வுகளுண்டு.

கம்யுனிஸ நாடுகள் ஒருபோதும் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்ததில்லை. கம்யுனிஸ நாடுகளோடு இந்தியாவை ஒப்பிட்டால் ஜனநாயகத்தின் அருமை புரியும். ஜோசப் ஸ்டாலின் என்ற ரஷ்ய கம்யுனிஸ அதிபர் ஒற்றை மொழியை மட்டுமே கற்க வேண்டும் என்று காரணம் கற்பித்தார். அதுவே தேசத்தின் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என்றார். அவ்வாறே ரஷ்ய மொழி கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் 90களில் சோவியத் ரஷ்யா உடைந்து சிதறியதைக் கண்டோம். சீனா பொருளாதார ரீதியில் முன்னேறிய நாடாக இருக்கக் காரணம், உலக மயமாதலை நம்மைவிட முன்பே ஏற்றுக்கொண்டது மட்டுமே! இந்தியா சோஷலிச பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்ததால் சீனாவைக் காட்டிலும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்திருக்கலாம். ஆனால் அரசியல் ரீதியாக இந்தியா உலகிற்கு மிக முன்னோடியான நாடு என்பதை உறுதியாகச் சொல்லலாம். கருத்துச் சுதந்திரம் உள்ள நாடு. இங்குள்ள ஊடகங்கள் அரசியல் தலைவர்களைக் கேள்வி கேட்கலாம். அனைத்துப் பிரச்சினைகளையும் ஆட்சியாளர்களையும் எதிர்த்துப் பேசலாம். இவை எதையும் கம்யுனிஸ நாடுகளில் நீங்கள் கனவில் நினைத்தாலும் பார்க்க இயலாது.


ரயில் சேவையும் இந்திய நிர்வாக அமைப்பு முறையும்

ஆங்கிலேயர் காலத்திலிருந்தே (அவர்களின் சுயநலத்திற்காக) ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பெற்று இருந்தாலும், அதன் பிறகு அமைக்கப்பட்ட பல வழித் தடங்களும் தேசிய நெடுஞ்சாலைகளும் இந்தியர்களை ஒருங்கிணைக்கின்றன. தங்கள் கல்விக்கேற்ற வேலை எந்த மாநிலத்தில் கிடைத்தாலும், அதற்குரிய தொழிற்சாலைகள் இந்தியாவில் எங்கு இருந்தாலும், தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்துள்ள இந்தக் காலக்கட்டத்தில் இத்தகைய போக்குவரத்து வசதிகளால் மக்கள் பயணிக்கும்போதும் சரி, வேற்று மாநிலத்தில் பணியாற்றினாலும் சரி, தாங்கள் மிகப் பாதுகாப்பாக வாழ்வதாகவே உணர்கிறார்கள். வெளிநாட்டில் பணி புரிபவர்கள் எத்தனை வசதியோடு இருந்தாலும் பாதுகாப்பான உணர்வு அவர்களுக்குக் கிடைப்பதில்லை என்கிற உண்மை புரிந்தால் இந்தியாவில் எந்த நிலப்பகுதியில் பணி புரிந்தாலும் இந்தியனாக இந்திய பூமியில் இருப்பதால் பாதுகாப்புணர்வு இயல்பாகவே கிடைத்து விடுகிறது.

மேலும் மத்திய அரசின் பணிகளில் குறிப்பாக இந்திய ஆட்சிப் பணிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் மற்றும் இதர மத்திய அரசுப் பணிகளில் தேர்வுகள் மூலம் வேலை கிடைக்கப்பெறுபவர்கள், பல மாநிலங்களுக்கும் செல்ல வேண்டி இருக்கிறது. மேலும் இந்திய ஆட்சிப் பணியில் இருப்பவர்கள் எங்கு வேலை பார்த்தாலும் மாவட்ட மக்களுக்கான நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்வதில், மாநில நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்வதில், இது எனது நாடு, எனது பணி என்ற உணர்வுடன் நடப்பதுவே அடிப்படையான விஷயமாகிறது. சாமானிய மக்களும் அவர்களைத் தனது நாட்டின் அதிகாரியாகவே பார்க்கிறார்கள். இவையெல்லாம் நம்மையறியாமலேயே இந்தியர்களாக நம்மை நாம் அறியும் எளிய தருணங்கள்.

உலக மயமாதலுக்குப் பின் பல்வேறு மாநிலத்தவர்களும் பெரும் நகரங்களில் தொழில் நிமித்தமாகத் தங்கி விடுவதைக் காண்கிறோம். இன்று பலரும் தொழில் நிமித்தமாகப் பல மாநிலங்களுக்குக் குடிபெயர்வது இயல்பாக உள்ளது. பல மொழிகள் பேசுபவர்கள் வாழும் இடமாக நகரங்கள் மாறுவதால் இயல்பிலேயே இந்தியர்களாகக் கலக்கிறோம்.

தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் ஏற்படுத்திய இந்திய ஒற்றுமை

சுதந்திரம் அடைந்த பிறகு தமிழ்நாட்டை முதல் 17 ஆண்டுகளுக்கு தேசியக் கட்சிகளே ஆட்சி செய்து வந்தன. 1967ல் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் விளைவாக திமுக ஆட்சியைப் பிடித்தது. முதல் மாநிலக் கட்சியாக ஆட்சியைப் பிடித்த திமுக தனது கொள்கையாக ‘அடைந்தால் திராவிட நாடு… அடையாவிட்டால் சுடுகாடு’ என்ற கொள்கை முழக்கத்தை முன்வைத்தது. திராவிட இனவாதிகள் என்ற முழக்கத்தை முன்வைத்தாலும் தேசிய நீரோடையில் கலந்த பிறகு அக்கொள்கையிலிருந்து மெல்ல வெளிவந்தது. அதன் பின்னர் பல மாநிலங்களிலும் காங்கிரசிற்கு எதிராக மாநிலக் கட்சிகள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தன. அப்போதும் பல அறிஞர்கள் மாநிலக் கட்சிகள் வளர்வது இந்திய தேச ஒற்றுமையைப் பிரிக்க வழிவகுக்கும் என்றே கருத்துரைத்தார்கள். மாநில நலன் என்ற பெயரில், மொழியின் அடிப்படையிலான அரசியல், இனவாத அரசியல் முன்னெடுப்புகள், மாநிலங்களுக்கிடையேயான நீர்ப் பிரச்சினைகள் போன்றவற்றைக் காரணங்களாக முன்வைத்தார்கள்.

சில மாநிலக் கட்சிகள் மொழியின் பெயரில், மாநிலத்தின் பெயரில், இன அடிப்படையில் கட்சிகளை உருவாக்கின. மேலும் மாநில உரிமைகள் பறிபோகின்றன என்ற முழக்கங்களை முன்வைத்து மக்களிடம் செல்வாக்குப் பெற்று வந்தாலும், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்திய தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடவில்லை. இன்னமும் சொல்லப் போனால், மாநிலக் கட்சிகள் தேசியக் கட்சிகளான பாஜகவுடனும் காங்கிரசுடனும் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிட்டார்கள். ஆட்சியிலும் பங்கேற்றார்கள். தேச ஒற்றுமையை வலுப்படுத்தியதில் மாநில ஆட்சியாளர்களுக்கும் மத்திய ஆட்சியாளர்களுக்கும் உள்ள பொறுப்பையுணர்ந்தே இரு தரப்பிலும் செயல்பட்டு வந்துள்ளார்கள்.


இந்திய ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பவர்கள்

1. காஷ்மீர், நாகலாந்து, பஞ்சாப் போன்ற மாநிலங்களில்தான் அதிக அளவிற்கான தேசப் பிரிவினைவாதங்கள் முன்வைக்கப்பட்டன. பஞ்சாப்பில் தற்போது ஒப்பீட்டளவில் இல்லையென்றாலும் மற்ற இரு மாநிலங்களிலும் பிரிவினைவாதங்கள் இன்றும் முன்வைக்கப்படுகின்றன. பிரிவினையாளர்கள் மத அடிப்படையிலும், பிராந்தியத்தை முன்வைத்தும் தங்களை இந்தியாவிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கின்றனர். அங்குள்ள மக்களிடம் இந்தியா இந்து தேசம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி ஒற்றுமையைக் குலைக்க முயல்கிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

2. மாவோயிஸ்டுகள்: கம்யுனிஸம் என்ற பெயரில் ஜனநாயக அமைப்பே விரோதமானது என்று நம்பும் இவர்கள் சத்தீஸ்கர், ஆந்திரா, மேற்கு வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் வன்முறையில் ஈடுபடுவதும், இளைஞர்களை, குறிப்பாக வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களைப் பயன்படுத்திக்கொண்டு, ‘புரட்சி’ என்ற பெயரில் ஒற்றுமையைக் குலைக்க முற்படுகிறார்கள். இவர்கள் எல்லைப் பகுதிகளிலும் மலைவாழ் பகுதிகளிலும் எவ்வளவோ முயன்றும் மக்களைத் தேர்தல் அரசியலில் இருந்து பிரிக்க இயலாமல் தவிக்கிறார்கள். பலமுறை அரசு அலுவலகங்கள் மீது குண்டு வீசுவதும், ஓட்டு போடுபவர்களின் முகத்தில் கரியைப் பூசுவது போன்ற பல காரியங்களில் ஈடுபட்டும் வருகின்றனர். ஆனால், மாநில மற்றும் மத்திய அரசின் ராணுவ நடவடிக்கைகளால் இவர்களால் வெற்றிபெற இயலவில்லை. கடுமையாக ஒடுக்கப்பட்டுள்ளார்கள்.

3. அந்நிய தேசக் கைக்கூலிகள், இந்தியா ஏழைகளுக்கு எதிரான நாடு என்ற பிம்பத்தைக் கட்டமைப்பதும், வெளி நாட்டு நிதி பெற்று இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களை NGO என்ற பெயரில் (சில NGOக்கள் மட்டுமே) சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற வகையில் பிராந்திய மக்களின் மனதில் விஷத்தைப் பரப்பும் செயல்களைப் பரப்பி இந்திய அரசு உங்களுக்கெதிரானது என்ற எண்ணத்தை விதைக்கிறார்கள்.

4. மொழி அடிப்படைவாதிகள், இன அடிப்படைவாதிகள், மத அடிப்படைவாதிகள் சிலரின் செயல்களும், பேச்சுகளும் இந்திய ஒற்றுமையைக் குலைக்க முடியாதெனினும் ஒரு வகையில் அது தேச அமைதிக்குப் பங்கம் விளைவிக்கின்றன.

5. மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை அமைதியைக் கெடுக்கிறது. அரசியல் கட்சிகள் தாங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வர வேண்டும் என்பதற்காக பிராந்திய மக்களின் உணர்வுகளைத் தூண்டிப் பிரச்சினையைப் பெரிதாக்குகிறார்கள். தேர்தல் அற்ற நேரங்களில், மழைக் காலங்களில் இது பெரும் பிரச்சினையாக இல்லாவிட்டாலும் தேர்தல் நெருங்கும் வேளைகளில் இதனால் ஏற்படும் பிரச்சினைகள் தேசத்திற்கு நல்லதல்ல. நதிகளை தேசிய அளவில் இணைக்க தற்போதைய பாஜக அரசு 6,00,000 கோடியை ஒதுக்க முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. நீர்ப்பிரச்சினை சொந்த மாவட்டத்திலேயே உண்டு என்றாலும் ஒரே ஆட்சியாளர் என்பதால் கட்டுக்குள் வைக்க இயலும். ஆனால் மாநிலங்களுக்கிடையே என்பது குறிப்பாக மொழி வாரி மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் இதை மொழிப் பிரச்சினையாகவும் திரிப்பது, தங்கள் சொந்த நலனுக்கே என்றாலும், தேச ஒற்றுமைக்கு அது பங்கம் விளைவிக்கும். தேசிய நதிகளை இணைத்துவிட்டு, முற்றிலுமாக இவை தேர்தல் ஆணையம் போலத் தனி அமைப்பாகச் செயல்பட வேண்டும். அப்போதுதான் சுய அரசியல் லாபங்களுக்காகக் கட்சிகள் அரசியல் செய்யாமல் இருக்கும் சூழல் உருவாகும். அப்படி நடக்குமானால், அண்டை மாநிலங்கள் தங்களுக்குள் இருக்கும் வெறுப்பைக் கைவிடும்.

தனித்தமிழ் தேசக் கோஷங்கள்

மாநில உரிமைகள் பற்றிப் பேசுவதற்கும், தனி நாடு என்று பேசுவதற்கும் பெரும் வித்தியாசமுள்ளது. மாநில உரிமைகள் பற்றி அரசியலமைப்புச் சட்டம் மிகத் தெளிவாகவே வரையறுத்துள்ளது. மாநிலத்தில் எந்த வளர்ச்சித் திட்டத்தையும் மத்திய அரசு தானாகக் கொண்டு வரமுடியாது என்பதில் ஆரம்பித்து, ஆட்சி மொழி, உள்ளாட்சி நிர்வாகம், மாநில நிர்வாகம், சுகாதாரம், விவசாயம் என அரசியலமைப்புச் சட்டத்தில் கூறிய அனைத்தும் மாநில உரிமைகள் பற்றியே பேசுகின்றன. அதை மீறி சில விஷயங்கள் எமெர்ஜென்சி காலக்கட்டத்தில், உதாரணமாக கல்வியில் மத்திய அரசிற்கும் பங்குண்டு என்று எடுத்துச் செல்லப்பட்டதுண்டு. மற்ற எந்தக் காலக்கட்டத்திலும் பெரும்பான்மை மாநிலங்களின் ஒப்புதலோடும் மாநிலக் கட்சிகள் பலவற்றின் ஒப்புதலோடும்தான் மத்திய மாநில அரசின் அதிகாரப் பகிர்வுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே கூறியது போல திராவிட நாடு என்ற கோரிக்கையை முன்வைத்து அரசியலை ஆரம்பித்தாலும் தேசியத்தோடு இணைந்த கட்சிகள் திராவிடக் கட்சிகள். ஆகையால் தனித்தமிழ்தேசம் என்ற பிரசாரத்தை முன்னிறுத்தி வெற்றி பெற்றால்கூட, ஆட்சியில் பொறுப்பேற்ற பிறகு இந்தியத் தேசியத்துடன் கலந்து விடுவார்கள். அதற்கு சிறந்த உதாரணம் திமுக. இந்திய தேசியத்தை வலுப்படுத்தும் பல சட்டங்களை உருவாக்க இதே கட்சிகள் ஆதரவு தெரிவித்தே வந்துள்ளன. இன்று சில அரசியல் கட்சிகளும், சில இயக்கங்களும் தனித்தமிழ்த் தேசம் என்ற பரப்புரையுடன் அடிப்படைவாதம் பேசுகின்றன. யார் தமிழர் என்று வரையறுப்பதில் ஆரம்பித்து தமிழர்கள் முற்றிலுமாக வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள் என்ற கோஷத்தின் வாயிலாக அரசியலை முன்வைப்பவர்கள் இவர்கள். நதிநீர்ப் பங்கீட்டில் தமிழகத்திற்கு உரிய நீதி சில நேரங்களில் கிடைத்துள்ளது. சில நேரங்களில் கிடைக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் தமிழகத்தின் பிரச்சனைகளை முன்வைத்து அரசியல் செய்யாமல் மத்திய அரசை மாற்றான் தாய் என்ற கோணத்தில் வைத்து எத்தனை பிரசாரத்தை முன்வைத்த போதும் இவர்களது பிரசாரம் எடுபடவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் உறுதி செய்துள்ளன.

சில விஷயங்களின் அடிப்படையைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை தனித்தமிழ் தேசப் பிரிவினையாளர்கள் இந்திய அரசை எதிர்த்தால் என்ன நடக்கக் கூடும்? உள்நாட்டுக் கலவரங்களை ஏற்படுத்தி அதன் வாயிலாக தனித்தமிழ் தேசத்தைக் கட்டமைப்பது இயலாத காரியம். மத்திய அரசை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்துவதைத் தவறு என்று எவரும் சொல்ல மாட்டார்கள். முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பது வேறு. அதற்காக தனித்தமிழ் தேசம் என்ற கோரிக்கையை முன்வைப்பதால் தமிழகம் எதையும் சாதிக்க இயலாது. மாறாகப் பேரழிவையே சந்திக்க வேண்டிவரும். உலக நாடுகளின் உள்நாட்டுக் கலவரங்களில் நேரடியாகப் பங்கேற்க எந்த அந்நிய நாட்டாலும் இயலாது. ஆயுதங்கள் கொடுத்து உதவலாம், பணம் கொடுத்து உதவலாம். ஆனால் நேரடியாக உதவிக்கு வர இயலாது.

இந்திய அரசிடம் வலிமையான ராணுவம் உள்ளது. கப்பல்படை உள்ளது. விமானப்படை உள்ளது. வெளியுறவுக் கொள்கையை மற்ற நாடுகளுடன் தீர்மானிக்கும் இடத்தில் உள்ளது. அவ்வளவு ஏன், விளையாட்டில் கூட எந்த மாநிலமும் தன் மாநிலத்தை முன்னிறுத்த இயலாத வகையிலான சில முக்கியமான வலிமையான முடிவை எடுக்கும் விஷயங்கள் மத்திய அரசிடம் உள்ளன. வலுவான பொருளாதார வலிமை உள்ளது. அண்டை மாநிலங்கள் எவையும் தனித்தமிழ் தேசம் போல எந்தத் தேசப்பிரிவினை கோஷத்தையும் முன்வைக்கவில்லை. அதிலும் மத்திய அரசு பாரபட்சம் செய்கிற விஷயங்களில் உள்ள நியாயத்தை அண்டை மாநிலங்களையும் புரிந்துகொள்ள வைத்து, மாநில உரிமைகளைப் பெறுவதற்கான அரசியலை முன்னெடுக்காமல், அண்டை மாநிலங்களிடம் நல்லுறவைப் பேணாமல் பிரச்சினைகளைப் பெரிதாக்கிவிட்டு, தனித்தமிழ் தேசக் குரல் எழுப்புபவர்களுக்கு அவர்களிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்காது. ஆகையால் எவருடைய ஆதரவும் தமிழகத்திற்கு இல்லை என்கிற உண்மையை உணர வேண்டும். இந்த யதார்த்தத்தைப் புரியாமல் வாள் சுற்றுவதால் எந்தப் பலனும் இல்லை. இன்று நேரடி அரசியலில் இருக்கும் கட்சிகள் கூட நாளை வெற்றி பெற்றால் மத்திய அரசுடன் திராவிடக் கட்சிகளைப் போல இணக்கப்போக்கையே கடைப்பிடித்தே ஆகவேண்டும் என்பதே யதார்த்தம்.

மேற்கூறிய கற்பனைக்கு அவசியமே இல்லை. ஏனெனில், பெரும்பாலான தமிழர்கள் தங்களைத் தமிழர்களாகவும், இந்தியர்களாகவும், கேரளத்தினர் தங்களை மலையாளிகளாகவும் இந்தியர்களாகவும், பஞ்சாபியினர் பஞ்சாபிக்காரர்களாகவும் இந்தியர்களாகவும், குஜராத்திகள் இந்தியர்களாகவும் குஜராத்திகளாகவும், இந்தி பேசும் மாநிலத்தினர் இந்திக்காரர்களாகவும், இந்தியர்களாகவும்தான் உணர்கிறார்கள். அந்த வகையில் இந்தியா பன்மைத்தன்மையை பல நூறாண்டுகளுக்கு மேலாகவே தன்னுடைய ஆன்மாவில் உள்வாங்கி இருப்பதால், இன்றும் ஒற்றைத் தேசமாக இருக்கிறது, நாளையும் தொடரும்.

******

Posted on Leave a comment

குஜராத் தேர்தல் முடிவுகள்: ஓர் ஆய்வு – லக்ஷ்மணப் பெருமாள்

குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் 18-12-2017 அன்று வெளிவந்தன. இரு மாநிலங்களிலும் பாஜக தனிப் பெரும்பான்மைக்கான இடங்களைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இமாச்சலில் காங்கிரஸ் தனது ஆட்சியைப் பாஜகவிடம் பறி கொடுத்துள்ளது. குஜராத்தில் 22 ஆண்டுகளாக (1995ம் ஆண்டு முதல்) தொடர்ந்து ஆட்சியில் இருந்துவரும் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இமாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகளைப் பற்றியோ, காங்கிரஸ் ஏன் ஆட்சியை இழந்தது என்பதற்கான காரணங்கள் பற்றியோ கூட ஊடகங்களில் பெருமளவிற்கு விவாதிக்கப்படவில்லை. குஜராத் பிரதமரின் மண் என்பதும், பாஜக ஆட்சியைத் தொடர்வதில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் மற்றும் மத்திய அரசின் பொருளாதார ரீதியிலான கொள்கை முடிவுகள், மோடி முதல்வராக இல்லாமல் மேற்கொண்ட முதல் தேர்தல் போன்ற பல காரணிகள் குஜராத் பற்றிய பல்வேறு ஆய்வுகளை ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என அனைத்து இடங்களிலும் பலவாறாக ஆராயப்பட்டன.

குஜராத்:

குஜராத்தின் மொத்த இடங்கள் 182. பெரும்பான்மையை நிரூபிக்க 92 இடங்கள் தேவை. இதில் பாஜக 99 இடங்களையும், காங்கிரஸ் 77 இடங்களையும், சுயேட்சைகள் மற்றும் சிறு கட்சிகள் எஞ்சிய 6 இடங்களையும் பிடித்தன. பாஜக 49.1% வாக்குகளையும், காங்கிரஸ் 41.4% வாக்குகளையும் பெற்றுள்ளன. 2012 சட்டசபைத் தேர்தல் முடிவுகளோடு ஒப்பிடுகையில், பாஜக 16 இடங்களை இழந்துள்ளது. காங்கிரஸ் 16 இடங்களை அதிகமாகக் கைப்பற்றியுள்ளது. இரு கட்சிகளும் தத்தமது வாக்கு சதவிகிதத்தை அதிகரித்துள்ளன. காங்கிரஸின் வாக்கு சதவிகித முன்னேற்றமும், இரு கட்சிகளுக்குமான வாக்கு சதவிகிதம் குறைந்ததுவுமே காங்கிரஸ் பாஜகவைக் காட்டிலும் 16 இடங்களை அதிகமாகப் பிடிக்க முக்கியமான காரணிகளாக இருந்துள்ளன.

1995 முதல் 2017 வரை நடந்துள்ள சட்டசபைத் தேர்தல்களில் இரு கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதமும், இரு கட்சிகளுக்குமான வாக்கு வித்தியாசம் குறைவதற்கேற்ப இடங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் காணலாம். பாஜக 49.12% வாக்குகளை 2007ல் பெற்றபோது அக்கட்சி 117 இடங்கள் வரை பிடித்திருந்தது. அத்தேர்தலில் காங்கிரஸிற்கும் பாஜகவிற்கும் வாக்கு வித்தியாசம் 9%. 2017ல் பாஜக Vs காங்கிரஸ் வாக்கு வித்தியாசம் 7% ஆக குறைந்துள்ளது. 2012 தேர்தலில் கணக்கிட்டால் வாக்கு வித்தியாசம் 7.7%. அவ்வாறானால் ஏன் இத்தனை இடங்களை பாஜக இழந்துள்ளது என்ற கேள்வி எழலாம்.

1. பாஜக–காங்கிரஸிற்கிடையிலான வாக்கு வித்தியாசம் குறையும்போது காங்கிரஸ் அதிக இடங்களைப் பிடித்துள்ளது. அதாவது பாஜகவின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

2. சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் அதிக அளவில் வாக்குகளைப் பிரித்ததால் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக 2007, 2012 தேர்தல்களில் சுயேட்சைகள் மற்றும் சிறு கட்சிகள் முறையே 11.84%, 12.27% வாக்குகளைப் பெற்றுள்ளார்கள். ஆனால் இந்த முறை 8.6% வாக்குகளை மட்டுமே சிறு கட்சிகளும் சுயேட்சைகளும் பிரித்துள்ளார்கள். எனவேதான் இந்த முறை வாக்கு வித்தியாசம் குறைவதற்கு ஏற்றாற்போல காங்கிரஸ்–பாஜகவின் இடங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இரு கட்சிகளுக்குமான வாக்கு வித்தியாசம் குறைய குறைய இடங்களின் எண்ணிக்கையில் பாதிப்பு அதிகமாகிறது. 2012–2017 வாக்கு வித்தியாசத்தை (BJP Vs Congress) ஒப்பிட்டால் 0.7%தான் காங்கிரஸிற்குக் குறைந்துள்ளது. ஆனால் இடங்களின் எண்ணிக்கையில் 16 இடங்களை, கடந்த தேர்தலைக் காட்டிலும் அதிகமாகப் பெற்றுள்ளது.

3. கிராமப் புறப் பகுதிகளில் பாஜக அதிக இடங்களை கடந்த முறையைக் காட்டிலும் அதிக அளவில் இழந்துள்ளது.

குஜராத் தேர்தலை எப்படிப் புரிந்துகொள்வது?

குஜராத்தின் தேர்தல் முடிவுகளை சௌராஷ்டிரா-கட்ச், தென் குஜராத், வட குஜராத், மத்திய குஜராத் என நான்கு பகுதிகளாகப் பிரித்தே ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2012 சட்டசபை முடிவுகளுடன் ஒப்பிடுகையில் பாஜக வட குஜராத்தில் 1 இடத்தையும், சௌராஷ்டிரா-கட்ச் பகுதியில் 12 இடங்களையும், தென் குஜராத்தில் 3 இடங்களையும் இழந்துள்ளது. மத்திய குஜராத்தில் (37/61) அதே இடங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. குறிப்பாக 2012 தேர்தலில் சௌராஷ்டிரா-கட்ச் பகுதியில் கேசுபாய் பட்டேலின் குஜராத் பரிவர்தன் கட்சி பாஜகவின் எதிர்ப்பு வாக்குகளைப் பெற்றிருந்தது. கீழுள்ள படத்தில் மற்றவர்களின் வாக்கு சதவிகிதம் 17.9% (2012) to 8.7% (2017) ஆகக் குறைந்துள்ளதைக் காணலாம். இப்பகுதியில்தான் குஜராத் பரிவர்தன் கட்சி இரு இடங்களில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக 2007 தேர்தலுடன் ஒப்பிடுகையில் 2012 தேர்தலில் பாஜக சௌராஷ்டிரா-கட்ச் பகுதியில் சில இடங்களை இழந்திருந்தது. 2012 தேர்தலில் பாஜகவின் எதிர்ப்பு வாக்குகளின் ஒரு பகுதியைக் காங்கிரஸிற்குச் செல்ல விடாமல் கேசுபாய் பட்டேல் தடுத்தார். 2012 தேர்தலில் கேசுபாய் பட்டேல் தமது சாதி உதவியுடன் 3.63% வாக்குகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இம்முறை அவ்வாக்குகளை ஹர்திக் பட்டேலின் உதவியுடன் காங்கிரஸ் குவித்துள்ளது. எனவேதான் சௌராஷ்டிரா-கட்ச் பகுதியில் எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் காங்கிரஸிடம் குவிந்ததும், மேலும் இப்பகுதி அதிக அளவில் கிராமப் புறத் தொகுதிகள் நிறைந்தது என்பதும், விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ள ஏமாற்றமும் காங்கிரஸ் அதிக அளவில் இடங்களைப் பெற உதவியுள்ளன. மற்ற பகுதிகள் பெரிய அளவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. மாநிலத்தின் நான்கு பகுதிகளிலும் பாஜகவின் வாக்கு வங்கியே அதிகமென்றாலும் இடங்களைப் பொறுத்தவரையில் தொகுதிக்கேற்ப முடிவுகள் அமையப்பெற்றுள்ளன.

ஜிஎஸ்டியின் தாக்கம் எவ்வாறாக இருந்தது? நகர்ப்புற வாக்காளர்கள் யார் பக்கம்?

ஜிஎஸ்டியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் குஜராத்திகள்தான். குறிப்பாக நகர்ப்புற குஜராத்திகள். அதிக அளவில் வணிகர்கள் உள்ள மாநிலம் குஜராத். மேலும் மிகப் பெரிய அளவில் வணிகர்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்பை எதிர்த்துப் போராடினார்கள். இது போன்ற காரணிகளால் பாஜகவின் வெற்றி பாதிக்கும் என்றே அரசியல் வல்லுநர்கள் தேர்தலுக்கு முன்பாக தெரிவித்திருந்தார்கள். மேலும் 43% நகர்ப்புற மக்கள் தொகையுள்ள ஒரு மாநிலம் குஜராத். 42 நகர்ப்புறத் தொகுதிகளில் 36 இடங்களை பாஜக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. படித்தவர்களும், வணிகர்களும் அதிகம் நிரம்பிய நகர்ப்புறத் தொகுதிகளை வென்றதன் வாயிலாக ஒரு செய்தி தெளிவாகிறது. குஜராத்தில் ஜிஎஸ்டியால் பாஜகவிற்குப் பெருமளவிற்குப் பாதிப்பு ஏற்படவில்லை. நகர்ப் புறங்களில் உள்ள பட்டேல் சமூகத்தினரும் பாஜகவைக் கைவிடவில்லை. ஏனெனில் ஹர்திக் பட்டேல் மிகப் பெரிய ஊர்வலத்தை சூரத் நகரில் நடத்திக் காட்டினார். நகர்ப்புற பட்டேல்களும், வணிக பட்டேல்களும் பாஜகவிற்கே ஆதரவைத் தந்துள்ளனர் என்பதை நகர்ப்புறத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

பட்டேல் தொகுதிகள்:

பட்டேல்களின் இடங்களில் பாஜகவின் வெற்றி விகிதம் 50.3% (28/52).
பட்டேல்கள் தீர்மானிக்க இயலாத இடங்களில் வெற்றி விகிதம் 48.6% (71/130).
காங்கிரஸ் இரண்டிலும் 42.9%. பட்டேல்கள் அதிகமுள்ள இடங்களில் 23/52. பட்டேல்கள் தீர்மானிக்க இயலாத இடங்களில் 57/130.

40%க்கும் அதிகமாக பட்டேல்கள் உள்ள தொகுதிகளில் Gondol, Kamrej, Surat North, Katargam ஆகிய நான்கு இடங்களில் பாஜகவே வென்றுள்ளது. அதுவும் 50% to 55% வாக்குகளைப் பெற்று வென்றுள்ளது. காங்கிரஸ் Varachcha, Unjha தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. இந்த முறை பாஜக சௌராஷ்டிரா-கட்ச் இடங்களில் (பட்டேல்கள் உள்ள இடங்களில்) கிராமப் புறப் பகுதிகளில் பாஜக அதிக இடங்களை இழந்துள்ளது. ஆனால் மற்ற இடங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் (பட்டேல்கள் உள்ள இடங்களில்) அதிக இடங்களை அனேகமாக அனைத்து இடங்களையும் பாஜகவே வென்றுள்ளது.

கிராமப்புறத் தொகுதிகள்:

140 தொகுதிகள் கிராமப்புறத் தொகுதிகளாக அடையாளம் செய்யப்பட்டுள்ளன. 2012 தேர்தலில் பாஜக 77 இடங்களையும், காங்கிரஸ் 57 இடங்களையும் கைப்பற்றி இருந்தன. இந்தத் தேர்தலில் பாஜக 63 இடங்களையும், காங்கிரஸ் 71 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. பாஜகவிடமிருந்து 14 இடங்களைக் காங்கிரஸ் கூடுதலாகக் கைப்பற்றியுள்ளது. பாஜக கிராமப் புறங்களில் தோற்றதற்கு மிக முக்கிய காரணங்கள் இரண்டு. விவசாயிகளுக்கு எந்த ஒரு மானியமும் கிடைக்கப் பெறவில்லை. 2012ல் பருத்தி 20 கிலோ 1400 ரூபாய் இருந்தது. தற்போது 600 ரூபாயாகக் குறைந்துள்ளதும் அரசு அதற்கான விலையை அதிகரிக்காமல் போனதும் கிராமப்புறங்களில் பாஜக அதிக இடங்களை இழக்கக் காரணங்கள். குறிப்பாக சௌராஷ்டிரா பகுதியில்தான் பருத்தித் தொழில் செய்பவர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால்தான் அங்கு பாஜக கடந்த தேர்தலைக் காட்டிலும் 13 இடங்களை இழந்துள்ளது. பாஜக அரசு நீர்ப்பாசன வசதியை, நர்மதா அணையைக் கட்டியதை சாதனையாகச் சொன்ன போதிலும் தமிழகத்தைப்போல விவசாயத்திற்கு இலவச மின்சாரமோ, சலுகைகளோ, பருத்திக்கான விலை நிர்ணயம் போன்றவை விவசாயிகளின் எதிர் மன நிலைக்குக் காரணமாக இருக்கக் கூடும். இதைப் புதிய பாஜக அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.
தனித் தொகுதிகள் மற்றும் பழங்குடியினர் தொகுதிகள்:
குஜராத்தில் 40 தனி (13) மற்றும் பழங்குடியினத் தொகுதிகள் (27) உள்ளன. தனித் தொகுதிகளில் பாஜக 8 இடங்களையும், காங்கிரஸ் 4 இடங்களையும், சுயேட்சை வேட்பாளர் 1 இடத்தையும் வென்றுள்ளார்கள். பழங்குடியினத் தொகுதிகளில் பாஜக 11 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும் சுயேட்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். பாஜக, காங்கிரஸ் தலா 47.5% இடங்களைப் பெற்றுள்ளன. தலித்துகள் பாஜகவிற்கு எதிரானவர்கள் என்ற மாயை பொய் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பாஜக தலித்துகளின் வாழ்க்கையை முன்னேற்ற இன்னமும் சிரத்தை எடுக்க வேண்டும். பாஜக உயர் சாதியினரின் கட்சி என்ற இமேஜிலிருந்து பெருமளவுக்கு விடுபட பிரதமர் நரேந்திர மோடி மிக முக்கிய காரணம்.

கட்சிகளின் வெற்றி வாக்கு விகிதம்:

கீழே உள்ள இந்த இரு அட்டவணையைப் பார்த்தால் அனைவருக்கும் எளிமையாகப் புரியும் ஒரு விஷயம். பாஜக சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசம் காங்கிரஸ் சராசரியாகப் பெற்றதைக் காட்டிலும் இரண்டு மடங்கிற்கும் அதிகம் என்பது புரியும். மேலும் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக மொத்தம் 35 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் ஒரேயொரு தொகுதியில் மட்டுமே 40,000க்கு மேலாக வென்றுள்ளது. இதன் மூலமாக பாஜக கட்சியின் அடிப்படை எந்தளவிற்குக் கட்டமைப்புடையது, இறுதி வாக்காளரையும் வாக்களிக்க வைக்கும் முயற்சி என அனைத்தையும் புரிந்து கொள்ளலாம்.

குஜராத் தேர்தல் முடிவுகளின் முக்கிய அம்சங்கள்:

1. நரேந்திர மோடி என்ற தனி நபரின் பிரசாரமும், கட்சியின் அடிப்படைக் கட்டமைப்புமே பாஜக வெற்றி பெற்றதற்கான மிக முக்கிய காரணம்.

2. காங்கிரஸ் குஜராத் தேர்தலில் தனது மென்மையான இந்துத்துவத்தை முன் வைத்தது. குறிப்பாக இந்துக்கள் வாக்குகள் பெருமளவிற்கு பாஜகவிற்குச் செல்வதைத் தடுக்க இந்துக்களின் வாக்குகளைச் சாதி ரீதியாகப் பிரிக்க வேண்டும். அதற்கேற்றாற்போல பாஜக பட்டேல்களின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை நிறைவேற்றாமல் இருந்ததைத் தமது அரசியல் லாபத்திற்கு காங்கிரஸ் ஹர்திக் பட்டேலை உபயோகித்துக் கொண்டது. தாக்கூர், பட்டேல், மோவானி என சாதி இளைஞர்களை வைத்து இந்துக்கள் வாக்குகளைச் சிதறச் செய்ததில் ஓரளவு வெற்றி கண்டுள்ளது.

3. சுயேட்சைகள் மற்றும் சிறு கட்சிகள் கடந்த காலத் தேர்தல்கள்போல அதிக வாக்கு சதவிகிதத்தைப் பெறாமல் போனதும், 22 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் கட்சிக்கெதிரான மன நிலையும் இந்த முறை வாக்குகளைக் காங்கிரஸின் பக்கம் குவிய உதவியது.

4. விவசாயிகள் மற்றும் பருத்தித் தொழில் செய்பவர்கள், வியாபாரிகளின் மீது மிகுந்த அக்கறையையும் அவர்கள் பலனடையும் வகையிலான சில திட்டங்களையும் பாஜக செய்ய வேண்டியது அவசியம் என்பதைப் பாஜக புரிந்து கொள்ள வேண்டும்.

5. தனித் தொகுதிகள் மற்றும் பழங்குடியினரின் தொகுதிகளில் இன்னமும் அதிக இடங்களைப் பிடிக்க வேண்டுமானால் அவர்களுக்குத் தேவையான பல்வேறு உதவிகளை அரசு செய்து மேம்படுத்த வேண்டும்.

6. மிகச் சிறந்த மாநில நிர்வாகத்தைக் கட்டுக்குள் வைக்கும் நல்ல ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு பாஜகவிற்கு உள்ளது.

இமாச்சலப் பிரதேசம்:

இமாச்சலைப் பற்றி அதிகம் ஆய்வு செய்யாமல் அங்கு கட்சிகள் பெற்ற இடங்களை மட்டும் அறிந்து கொள்வோம். மொத்த சட்ட மன்ற இடங்கள் 68. பெரும்பான்மையை நிரூபிக்க 35 இடங்கள் தேவை. பாஜக 44, காங்கிரஸ் 21, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, சுயேட்சைகள் 2 இடங்களையும் பிடித்துள்ளார்கள். 2012 சட்டசபை முடிவுகளைப் பொறுத்தவரை காங்கிரஸ், பாஜக மற்றும் சுயேட்சைகள் முறையே 36, 26, 6 இடங்களைப் பிடித்திருந்தார்கள். பாஜக 38.83% (2012)லிருந்து 48.8% (2017) ஆக வாக்கு வங்கியை அதிகரித்துள்ளது. காங்கிரஸ் 43.21% (2012)லிருந்து 41.7% (2017) ஆகக் குறைந்துள்ளது. காங்கிரஸின் ஊழல், ஆட்சிக்கு எதிரான மனநிலை போன்றவை பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியுள்ளது. 1977லிருந்தே காங்கிரஸும் பாஜகவும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.

உதவி வலைத்தளங்கள்:

http://eciresults.nic.in/ | https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/gujarat-election-2012-keshubhais-party-dented-bjp-prospects-in-saurashtra/articleshow/17709461.cms | https://timesofindia.indiatimes.com/india/why-gujarat-verdict-heralds-a-new-bjp-3-0/articleshow/62123202.cms | https://thewire.in/206224/gujarat-assembly-elections-results-2017/ | http://indianexpress.com/elections/gujarat-assembly-elections-2017/bjp-deepens-urban-support-congress-widens-rural-reach-4989021/ | http://postcard.news/congress-actually-won-17-seats-using-dirty-trick-britishers-won-77-seats/ | http://indianexpress.com/elections/gujarat-assembly-elections-2017/bjp-deepens-urban-support-congress-widens-rural-reach-4989021/

Posted on Leave a comment

இந்தியாவில் சுகாதாரம் – லக்ஷ்மணப் பெருமாள்


‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்கிறது குறள். நோயற்ற வாழ்வு என்பது வெறும் உடல்நலக் கேடு சார்ந்தது மட்டுமல்ல, மன நலனையும் சார்ந்தது. இன்று பல நோய்கள் வருவதற்கு மன அழுத்தம் மிக முக்கியக் காரணியாக மாறியுள்ளது. உடல்

உழைப்பு சார்ந்த வேலைப்பளுவும் கடந்த காலங்களை ஒப்பிடும்போது குறைந்து வருகிறது. இந்தியாவில் சுகாதாரத்தின் நிலை என்ன? மத்திய அரசு மற்றும் மாநில அரசு சுகாதாரத்தின் நிலையை மேம்படுத்த எடுத்து வரும் முயற்சிகள் என்ன? மத்திய,

மாநில அரசு சுகாதாரத்திற்காக ஒதுக்கும் பட்ஜெட் போதுமானதா? இந்திய அளவில் குழந்தைகளின் பிறப்பு-இறப்பு விகிதம், சராசரி ஆயுள், ஒரு பெண் சராசரியாக எத்தனை குழந்தைகளைப் பெறுகிறாள், தங்கள் நலனிலும் சுற்றுச் சூழலைப் பேணுவதிலும்

மக்களிடம் போதுமான அளவு பொறுப்பும் அக்கறையும் இருக்கிறதா?

சுகாதாரத்தைப் பேணிக் காக்கும் பொறுப்பு யாருடையது?

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 7ன் கீழ், சில துறைகளின் சட்ட மயமாக்கும் உரிமை மத்திய அரசின் பட்டியலில் (Central List) உள்ளது. சில துறைகளின் சட்டமயமாக்கும் சுதந்திரம் மாநில அரசின் பட்டியலில் (State List) உள்ளது.

மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இணைந்து சட்டமாக்கிச் செயல்படுத்தும் வகையில் சில துறைகள் பொதுப் பட்டியலில் (concurrent List) உள்ளன. அவ்வகையில் பலரும் பொதுச் சுகாதாரத்தைப் பற்றிப் பேசும்போது மத்திய அரசை நோக்கிச் சாடுகிறார்கள். உண்மையில் பொதுச் சுகாதாரம் மாநில அரசின் பட்டியலில் உள்ளது. அதாவது மாநில அரசிற்கே சுகாதாரம், துப்புரவு, மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்கள் ஆகியவற்றை அமைக்கும் பொறுப்பு உண்டு. மத்திய அரசு

இந்தியாவை ஆளும் அரசென்பதால் மத்திய அரசும் சுகாதாரத்திற்கென பட்ஜெட்டை ஒதுக்குகிறது. பல்வேறு நடவடிக்கைகளை சுகாதாரம் சார்ந்து மேற்கொள்ள நடவடிக்கைகளையும் திட்டங்களையும் கொண்டு வருகிறது.

மத்திய அரசு சுகாதாரத்திற்கென ஒதுக்கும் பட்ஜெட் ராணுவத்திற்கு ஒதுக்கும் பட்ஜெட்டோடு ஒப்பிட்டால் மிகக் குறைவு என்பது வருத்தமான விஷயமே. கடந்த சில வருடங்களோடு ஒப்பிடுகையில், சுகாதாரத்திற்கு தற்போதைய மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சுகாதாரத்திற்கு 26,567 கோடி (2012-13) செலவிடப்பட்டது. தற்போதைய பாஜக தலைமையிலான அரசில் 37,471 (2017-18) செலவிடப்படுகிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும் சராசரியாக 18% சுகாதாரத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதம மந்திரி சுவஸ்த சுரக்ஷா யோஜனாவின் கீழ் இந்தாண்டு கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 26% அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 3.2 கோடியிலிருந்து (2016-17) 1486 கோடி (2017-18) இத்திட்டத்தின் கீழ் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2011–12லிருந்து சராசரியாக 4.4% கிராமப்புற மருத்துவ மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் 2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான பட்ஜெட் 2015-16ல் 53% ஆக இருந்தது, 2017-18ல் 43% ஆகக் குறைந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் 2017-18 பட்ஜெட்டில் 10,150 கோடி பொதுச் சுகாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு 18,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 1,800 கோடி முதலமைச்சர் சுகாதாரக் காப்பீட்டின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.1

மனித வளக் குறியீட்டில் இந்திய சராசரியும் தமிழகத்தில் நிலையும்

பிறப்பின்போது குழந்தைகள் இறப்பு விகிதம், சராசரியாக ஒரு பெண் எத்தனை குழந்தைகளைப் பெறுகிறாள், மனிதனின் சராசரி ஆயுள் எனப் பல முடிவுகளை மாதிரி சர்வேக்கள் (Sample Survey Registration) எடுக்கப்பட்டு, 1971 முதல் 2015 வரையிலான காலக்கட்டத்தில், மாநிலங்களின் நிலை, இந்தியாவின் சராசரி போன்ற விஷயங்கள் நிதி ஆயோக்கின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய இரு பிரிவுகளிலும் கேரளாவும், தமிழ்நாடும் சுதந்திர இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவே உள்ளன. அதற்கு வரலாற்று ரீதியிலான காரணங்களும் உண்டு. உதாரணமாக கேரளா சுதந்திரம் அடைந்த போதே 47% கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்தனர். தமிழகம் அடுத்த நிலையில் இருந்தது. கேரளாவும் தமிழகமும் 1971ம் ஆண்டிலேயே மேற்கூறிய மனித வளக் குறியீட்டில், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், மேம்பட்ட நிலையில் இருந்ததைக் காண முடிகிறது. இந்திய அளவில் மனித வள குறியீடுகள் பல படிகள் முன்னேறி இருந்தாலும் உலக நாடுகளின் சராசரியை ஒப்பிடும்போது இந்தியா பின்தங்கியே உள்ளது. அவ்வகையில் கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தொடர்ச்சியாக சுகாதார விஷயத்தில் அக்கறை செலுத்திய காரணத்தால்தான் இன்று இந்திய சராசரியைக் காட்டிலும் மேம்பட்ட நிலையில் இருப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையம், துணை நிலை ஆரம்ப சுகாதார மையம் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டு இருக்கிறது. குறிப்பிட்ட கிலோமீட்டர் தொலைவிற்குள்ளாக மருத்துவ மனைகள் மற்றும் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதால் பல இறப்புகளைத் தடுக்க இயலுகிறது.

பிறப்பின் போது இறப்பு விகிதம்: (Infant Mortality Rate)

ஒரு லட்சம் குழந்தைகள் பிறந்தால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை:

மேற்கூறிய பட்டியலை நாம் இரு விதமாக அணுகலாம். பிறப்பின்போது இறப்பு என்பதை எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்துள்ளது. அதே வேளையில் இந்திய சராசரியோடு ஒப்பிடுகையில் உத்திரப் பிரதேசமும், மத்திய பிரதேசமும் இன்னமும் பின்தங்கியுள்ளதைப் பார்க்க முடியும். குஜராத் இந்திய சராசரி அளவைக் காட்டிலும் குறைத்து விட்டுள்ளதையும் பார்க்க இயலும். கேரளாவும், தமிழகமும் முன்மாதிரி மாநிலங்களாகவே தொடர்கின்றன.2

குழந்தைகளின் பிறப்பு விகிதம்: (Total Fertility rates by Residence)

ஒரு பெண் சராசரியாக எத்தனை குழந்தைகளைப் பெறுகிறாள் என்பதை அடிப்படையாகக் கொண்ட புள்ளி விபரங்கள்:

கல்வியறிவு அதிகமுள்ள மாநிலங்களில் குழந்தைகள் பிறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளதைப் பார்க்க முடிகிறது. மேலும் இந்தி பேசும் மாநிலங்களில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் இந்திய சராசரியைக் காட்டிலும் அதிகமுள்ளது என்பதும் தெரிகிறது. எதிர்காலத்தில் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் பிறப்பு விகிதம் இன்னும் குறையுமேயானால் அரசியல் ரீதியாகப் பல இழப்புகளைச் சந்திக்க நேரலாம். ஆனால் தனி நபர் வருமானம் மிக அதிக அளவில் உயர்ந்தது போலத் தோன்றும். பொருளாதாரக் குறியீட்டில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறிப்பிட்ட அளவிற்குக் கீழே குறைந்தால் தனி நபர் வருமானம் அதிகரிக்கும். மேற்கத்திய நாடுகளான ஐரோப்பாவில் ஒரு பெண் சராசரியாக 1.0 to 1.6 வரையில் பெறுவதை அரசியல் மற்றும் பொருளாதார அறிஞர்கள் விமர்சிக்கும் போது இவை அந்த நாடுகளின் எதிர்கால அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பெரும் கேள்விக்குறியையும், தனி அடையாளத்தையும் காலப் போக்கில் அழிக்கும் என்கிறார்கள். போர், உற்பத்தி போன்ற விஷயங்களில் இவை மிகுந்த சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

சராசரி ஆயுள்:3

மேற்கூறிய பட்டியலில் குறிப்பிட்ட மாநிலங்களைத் தவிர சிறிய மாநிலங்களான டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் சராசரி ஆயுள் தமிழகத்தைக் காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவே இந்தியாவில் மனிதர்களின் சராசரி ஆயுள் விஷயத்தில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. இந்தப் பட்டியலில் ஏன் சில மாநிலங்களில் பிறப்பின்போது சராசரி ஆயுள் அதிகமாகவும் வயது 5-10ல் கணக்கிடும்போது சராசரி ஆயுள் ஏன் குறைந்துள்ளது அல்லது அதிகரித்துள்ளது என்ற சந்தேகம் வரலாம். குழந்தை பிறப்பின்போது இறக்கும் குழந்தைகளுக்கான எண்ணிக்கையில் இந்திய சராசரியைவிட அதிகமாக இருக்கும் மாநிலங்களில், சராசரி ஆயுள் அதிகமென்பதும் அதே மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, குஜராத் போன்ற மாநிலங்கள் வயது 5-10ன் போது உயிரோடு இருக்கும் குழந்தைகள் என்ற கணக்கில் பார்த்தால் மனிதர்களின் சராசரி ஆயுள் குறைந்துள்ளதையும் காணலாம். இந்திய சராசரியைக் காட்டிலும் குறைவாக, பிறப்பின்போது இறக்கும் குழந்தைகளைக் கொண்ட மாநிலங்களில் இவை அப்படியே தலைகீழாக இருப்பதையும் காண முடியும்.

பிறப்பின் போது ஆண்-பெண் விகிதம்:
(1000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்ற கணக்கீடு)

இந்தப் பட்டியலில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆண் பெண் விகிதத்தை ஒப்பிட்டால் எந்த முடிவுக்கும் வர இயலாது. கல்வி பெற்ற மாநிலங்களுக்கு இணையாகக் கல்வியறிவு இல்லாத சில மாநிலங்களில் பெண் குழந்தைகளின் சராசரி உள்ளது அல்லது அதிகமாகவும் உள்ளது. பல இஸ்லாமிய நாடுகளில் கூட ஆண் – பெண் விகிதத்தை ஒப்பிட்டால் பெண்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதைக் காணலாம். இதைப் பெண் சிசுக் கொலை என்று சுருக்கிப் பார்க்க இயலாது என்பதே எனது பார்வை.

சுகாதாரத்தில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்:

சிக்கன் குனியா, பறவைக் காய்ச்சல், டெங்கு, பிளேக், பன்றிக் காய்ச்சல் எனப் பல தொற்று நோய்கள் இந்தியாவைத் தொற்றிக் கொண்டு வருவது மிகுந்த சவாலாக உள்ளது. இதில் சிக்கன் குனியா, பறவைக் காய்ச்சல், பிளேக் போன்ற நோய்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது என்பது ஆறுதல் தரும் விஷயம். ஆனால் இது போன்ற தொற்று நோய்கள் பரவுவதைத் தடுக்கவோ சுற்றுச் சூழலைப் பேணிக் காப்பதில் மக்களுக்கும் பொறுப்பில்லை. மேலும் சாக்கடை, கழிப்பறை வசதியின்மையால் பொது வெளியைப் பயன்படுத்துவதற்கு சமூகமாக நாம் பல முயற்சிகளை எடுக்காததாலும் எளிமையில் தொற்று நோய்கள் பரவுகின்றன. இன்று ஊடகம் இல்லாத வீடுகளைப் பார்ப்பது அரிது. ஆனால் கழிப்பறை இல்லாத வீடுகள் நிறைய உண்டு. பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது, குப்பைகளைக் கொட்டுவது என மக்களே சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். ஒருபுறம் கழிப்பறையின் பற்றாக்குறை, மற்றொரு புறம் அவற்றை முறையாகப் பராமரிக்காமை. பேருந்து நிலையம் போன்ற மக்கள் கூடும் இடங்களிலேயே கழிப்பறைக்கு வெளியே பொது வெளியில் சிறுநீர் கழிப்பது என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். பிளாஸ்டிக் பொருட்களை, கண்ட கழிவு நீர்ச் சாக்கடையிலும்,வாய்க்காலிலும் போடுவதால் நீர் செல்ல இயலாது கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதற்கு மேலும் ஏன் தொற்று நோய்கள் பரவுகின்றன. இந்தியர்களுக்குத் தங்களுடைய உடல் மீது பெரிதும் அக்கறை கிடையாது. சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்திருப்பதிலும் அக்கறையோ பொறுப்போ கிடையாது. இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாரபட்சமெல்லாம் கிடையாது.

மத்திய மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள்:

மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்ததோடு நில்லாமல் சுகாதாரம் சார்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தூய்மை இந்தியா திட்டத்தில் மோடி பதவியேற்ற மூன்று ஆண்டுகளில் 3 கோடியே 88 லட்சத்து 50 ஆயிரம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.3

போலியோ நோய் ஒழிப்புத் திட்டத்திலும் இந்தியா வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையைப் படைத்துள்ளது. இந்தியா போலியோ இல்லாத நாடாக 2014 மார்ச் மாதம் 27ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. டெட்டனஸ் தாக்குவதால் தாய் மற்றும் பச்சிளம் குழந்தை இறப்பு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. பல நோய்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள, நோயை முற்றிலுமாக ஒழிக்க அரசின் மூலம் மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி விழிப்புணர்வும் பெரிய அளவில் உதவி உள்ளது. குழந்தைகளுக்கு முறையாகத் தடுப்பூசி போடப்பட்டதால் பல குழந்தைகளின் இறப்பு தடுக்கப்பட்டுள்ளது. இந்திர தனுஷ் என்ற திட்டத்தின் மூலம் தடுப்பூசி குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் போடப்படுகிறது.4

சுருக்கமாக, இந்தியாவின் சுகாதாரம் மேம்பட என்ன செய்ய வேண்டும்?

1. மத்திய மாநில அரசு சுகாதாரத்திற்கு ஒதுக்கும் பட்ஜெட் போதுமானதாக இல்லை. அதை அதிகரிக்க வேண்டும்.

2. மக்களிடையே சுற்றுச் சூழல் குறித்த அக்கறையையும் பொறுப்பையும் அதிகரிக்க வேண்டும்.

3. கிராமப் பஞ்சாயத்தில் ஆரம்பித்து மெட்ரோ நகரங்கள் வரை குறிப்பிட்ட அளவிலான வீடுகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அதிக அளவில் குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும்.

4. கழிவு நீர்ப் பாதைகள் முறையாக மூடப்பட்டிருக்க வேண்டும். பொது வெளியில் துப்புவது, குப்பையாக்குவது போன்றவை தவறானது என்ற எண்ணத்தை மக்களிடம் உருவாக்க வேண்டும்.

5. மருத்துவத்திற்கான காப்பீடு அனைவருக்கும் இலவசம் என்ற வகையில் மருத்துவ மனைகளில் இலவசமாக மருத்துவப் பரிசோதனை கிடைக்கப்பெறும் நாளில் இந்தியாவில் மக்களின் ஆயுளும் கூடும். இறப்புகளையும் பெருமளவில் தடுக்க இயலும்.

அடிக்குறிப்புகள்:

01. http://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-nadu-budget-key-points-highlights/article17471153.ece

02. http://niti.gov.in/writereaddata/files/StateStats-Ebook.pdf

03. http://swachhindia.ndtv.com/httpswachhindia-ndtv-com5-year-report-card-shows-massive-growth-indias-sanitation-coverage-6232-6232/

4. http://www.pmindia.gov.in/ta/news_updates/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95/
________________

Posted on Leave a comment

ஆங்கிலவழிக் கல்வியின் அபாயங்கள் – லக்ஷ்மணப் பெருமாள்


 

உலகில் ஆங்கிலத்தின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் கூடிக்
கொண்டே செல்கிறது. நவீன உலகப் பொருளாதார மயமாக்கல் காலத்தில் ஆங்கிலம் உலகின் தொடர்பு
மொழியாக முற்றிலுமாக நிலை கொண்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் உள்ளூர் ஆட்சி மொழிக்கு
அடுத்தபடியாக ஆங்கிலமே இரண்டாம் மொழியாகப் பார்க்கப்படுகிறது. உலகின் புவி வெப்பமயமாதல்
மாநாட்டில் தொடங்கி, விளையாட்டு, கலை என அனைத்துத் துறைகளிலும் தமது தாய்மொழிக்கு அடுத்தபடியாக
உலகின் தொடர்பு மொழியான ஆங்கிலத்திலேயே மொழிபெயர்க்கப்படுகிறது. பழங்கால இந்தியாவில்
சம்ஸ்கிருதத்தில் பல நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. அதைப் போல சமஸ்கிருதம் படித்த பண்டிதர்கள்,
சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட பல காவியங்களை, இதிகாசங்களை, தமது சொந்த மொழியில் மொழியாக்கம்
செய்தனர். இன்று இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் அனைத்தும் ஆங்கிலத்திலேயே மொழிபெயர்க்கப்படுகின்றன.
தமது தேசத்தின் பிறமொழிகளில் அவை மொழி மாற்றம் செய்யப்படுவதில்லை.

உலகம் முழுவதும் ஆங்கிலத்தின் தேவையைக் கருத்திற்கொண்டு,
ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும் ஆங்கிலவழிக் கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. உலகம்
முழுவதும் 2 பில்லியன் குழந்தைகள் ஆங்கில வழியில் படிக்கின்றனர். வேலைவாய்ப்பு என்ற
ஒற்றை மூல மந்திரமே அரசு, சமூகம், பெற்றோர் என அனைத்துத் தரப்பினரையும் ஆங்கிலவழிக்
கல்வி என்ற மோகத்தினுள் தள்ளியுள்ளது. இதற்கிடையே ஒவ்வொரு நாட்டின் அரசும் பெரும்பான்மை
மக்களால் பேசப்படும் மொழிவழிக் கல்விக்கொள்கைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கின்றன.
இதனால் குறைந்த எண்ணிக்கையில் பல மொழிகளைப் பேசும் மக்களின் மொழிகளை அடுத்த தலைமுறைக்குக்
கொண்டுசெல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆகையால் பெரும்பாலான மொழிகள் அழிந்து வருகின்றன.

உலகில் 7,103 மொழி பேசுபவர்கள் உள்ளனர். ஒவ்வொரு 14 நாட்களுக்கும் ஒரு மொழி அழிந்து வருகிறது
என்பதே சோகமான விஷயம். இந்தியாவில்
தற்போது 780 மொழிகள் பேசும் மக்கள் உள்ளனர். கடந்த 50 ஆண்டுகளில் 220 இந்திய மொழிகள்
அழிந்துள்ளன. தற்போது 197 இந்திய மொழிகள் அழியும் அபாயத்தில் உள்ளன. பெரும்பாலும் இச்சிறுபான்மை
மொழி பேசும் மக்கள் பழங்குடிகள் அல்லது மலைவாழ் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசே
1971க்குப் பிறகு 10,000 க்கும் குறைவான மக்கள் பேசும் மொழியைக் கணக்கில் கொண்டு வருவதை
நிறுத்தியுள்ளது. மிகக் குறைந்த அளவிலேயே மிகச் சிறுபான்மையினர் பேசும் மக்களின் மொழியை
உயிர்ப்பிக்க அரசு உதவுகிறது. மேலும் இந்திய அரசின் செம்மொழிகளாக 22 மொழிகளே அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
போரோ (Boro) மற்றும் மெய்தி (Meitei) மொழிகள் கூட அழியும் அபாயத்தில் உள்ளன
. இவை இரண்டும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 22
மொழிகளில் உள்ளன.
மொழிகளின் அழிவிற்கு
நவீன கல்வி முறையும், மக்கள் இடம் பெயர்தலும், பல மொழிகளுக்கு எழுத்துரு இல்லாமல் இருப்பதும்,
அரசின் நடவடிக்கைகளும்தான் மிக முக்கியக் காரணங்கள். ஒரு தலைமுறை மறையும் போது அம்மொழியும்
மறைகிறது.

 இந்தியாவின் மொழிகள்
மற்றும் பண்பாடு காப்பாற்றப்பட, மத்திய, மாநில அரசின் கல்விக் கொள்கையில் உடனடி மாற்றங்கள்
தேவைப்படுகின்றன. ஆங்கிலவழிக் கல்விக் கொள்கையை ப்ரீகேஜியிலிருந்து ஆரம்பிப்பது மிகத்
தவறான கல்விக் கொள்கையாகும். வீட்டில் பேசும் மொழிக்கும் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும்
மொழிக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.
மத்திய அரசு இந்தியின் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்வது கூட எந்த
வகையிலும் பலன் தரக்கூடியதல்ல. வேலை
வாய்ப்பைக் கருத்திற்கொண்டே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கிலவழிப் பள்ளியில் சேர்க்க
விரும்புகின்றனர்.

இந்தியாவில் 17% குழந்தைகள் ஆங்கிலவழிப் பள்ளிக்கூடங்களில்
படிக்கின்றனர். ஐந்து (2008-09 to 2013 -14 ) ஆண்டுகளில் ஆங்கில வழிப் பள்ளிக்கூடங்களில்
சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. 2008-09 ல் ஆங்கில வழிப்பள்ளியில்
படித்த மாணவர்களின் எண்ணிக்கை 1.5 கோடி. 2013-14 ல் அவ்வெண்ணிக்கை 2.9 கோடியாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் ஆங்கிலவழிப் பள்ளிக் கூடங்களில்
குழந்தைகள் சேர்க்கை அதிகமாகியுள்ளது. இதன் பொருள், தென்னிந்தியாவில் ஆங்கில மோகம்
இல்லை என்பதல்ல. இம்மாநிலங்களில் ஆங்கிலவழிப் பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்களின்
எண்ணிக்கை இந்தி பேசும் மாநிலங்களை விடப் பல மடங்கு அதிகம் என்பதை மறந்து விடக்கூடாது.

ஆங்கில வழிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மாநில வாரியாக:
காஷ்மீரில் 99.9%, கேரளா 49.2%, டெல்லி 48.6%, ஆந்திரா 44.1%, தமிழ்நாடு 41% இமாச்சலப்
பிரதேசம் 30%. காஷ்மீர், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லியின் ஆங்கில
வழிப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சராசரி 54%. வட கிழக்கு மாநிலங்களான நாகலாந்து,
சிக்கிம் மற்றும் மணிப்பூரில் 80-90% மாணவர்கள் ஆங்கில வழிப் பள்ளியில் படிக்கின்றனர்.

பீகாரில் 4700% மாணாக்கர் சேர்க்கை ஐந்து வருடங்களில் ஆங்கிலவழிப்
பள்ளியில் அதிகரித்துள்ளது. இந்தி பேசும் மாநிலங்களில் ஆங்கிலவழிப் பள்ளியில் சேரும்
மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை, ஜெயலலிதா,
ஏழை மாணவர்களுக்கும் ஆங்கில வழியில் படிக்க விரும்பினால் ஆங்கில வழியில் படிக்கலாம்
என அறிவித்த மூன்று ஆண்டுகளில், தமிழக அரசுப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை
3.2 லட்சம். இந்தியா முழுமைக்கும் தாய்மொழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பல
மடங்கு குறைந்துகொண்டே வருகிறது.

 மத்திய அரசும்
மாநில அரசும் ஆங்கிலவழிக் கல்விக் கொள்கையை வைத்திருக்கும் வரையில் இந்தியாவில் தமிழ்,
இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் இன்னபிற மொழிகள் வளர்வதற்கு வாய்ப்பே இல்லை.
இந்த மொழிகள் அழிவதற்கான சாத்தியக் கூறுகள் மிக மிகக் குறைவு. ஏனெனில் கணினி காலக்கட்டத்தில்
இம்மொழிகளில் உள்ள அத்தனையையும் சேமிக்க இயலும். அதற்கான தட்டச்சு முறைகள்கூட வளர்ந்து
விட்டுள்ள காலகட்டம் என்பதையெல்லாம் மறுப்பதற்கில்லை. அவ்வாறானால் ஏன் இந்த மொழிகளின்
வளர்ச்சி சாத்தியமில்லை என்று கேட்கலாம்.

குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு வரையாவது தாய்மொழிவழிக்
கல்விக் கொள்கை இருக்க வேண்டும். ஆங்கிலம் ஒரு பாடமாக மட்டும் இருக்க வேண்டும். இல்லையெனில்
எதிர்கால சந்ததிக்கு வரலாற்றுச் சொற்களோ, கலைச் சொற்களோ தெரியாமல் போகும். கணித மற்றும்
அறிவியல் சொற்களுக்கான அர்த்தம் கூடத் தெரியாமல் போய்விடும் அபாயம் உள்ளது. கணித மற்றும்
அறிவியல் சொற்களுக்கு இணையான தமிழ் வார்த்தைகள் இருப்பது தெரியாமல் போகும். இப்போதே
நிலைமை கிட்டத்தட்ட இப்படித்தான் உள்ளது. இது தொடர்ந்தால் என்ன ஆகும்? தமிழில் எழுதுகிறேன்
என்று சொல்லிக்கொண்டே பெரும்பாலான ஆங்கில வார்த்தைகள் தமிழிலும் எழுதப்படும். இன்னும்
சொல்லப்போனால், ஆரம்பக் கல்வியிலிருந்து தமிழ் தவிர்த்து மற்ற அனைத்துப் பாடங்களையும்
ஆங்கில வழியில் படிப்பதால், தமது தாய்மொழியைக் கூடப் பிழையில்லாமல் எழுதத் தெரியாத
சந்ததி உருவாகி இருக்கும். தசம எண்கள், மின்னோட்டம், மின்னூட்டம், மின் காந்தப் புலம்
என தமிழில் வார்த்தைகள் இருப்பது கூடத் தெரியாத சந்ததியை உருவாக்குவதில்தான் நமது அரசுகளின்
கல்விக் கொள்கை உள்ளது.

நம்மை நாமே முட்டாளாக்குவது
என்பது எது தெரியுமா? மத்திய அரசு இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்க முயற்சிப்பது போல
நடிப்பதும், போலியாக இங்குள்ளவர்கள் இந்தியை எதிர்ப்பதும்தான். உண்மையில் தாய்மொழிக் கல்வியோடு இந்தியாவின்
ஒரு மொழியையும், ஆங்கிலத்தையும் ஒரேயொரு பாடமாகக் கொண்டு வராத வரையில் அத்தனையும் இந்திய
மொழிகளின் வளர்ச்சிக்கு உதவாத ஒன்றுதான். பள்ளியில் தாய்மொழியை மழுங்கடிக்கச் செய்யும்
கல்விக் கொள்கையை வைத்துக்கொண்டு இந்திய மொழிகள் வளரும் என்பது நம்பும்படியாக இல்லை.

மொத்தத்தில் ஆங்கிலம் வளரும். தாய்மொழியைப் பிழையின்றி
எழுதும் தலைமுறையையும், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தாய்மொழிச் சொற்களைத் தெரியாத
சமூகத்தையும், ஆங்கில வழியில் படிப்பதால் எதிர்கொள்ள நேரிடும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
சம்ஸ்கிருதத்தைப் பாதுகாக்க மெனக்கெடுவது போல, அரசே தமிழில் ஆவணப்படுத்தவும், தமிழ்
ஆர்வலர்கள் இணையத்தில் ஆவணப்படுத்தவும் செய்ய வேண்டிய கட்டாயம் வரலாம். ஒரே ஆறுதல்
தமிழ் பிராந்திய மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் இருப்பதே அதன் வாழ்வை நிர்ணயிக்கிறது.
இந்திய அரசின் அலுவல் மொழி திணிக்கப்படுவதை எதிர்ப்பதில் பிழையில்லை என்று சொல்லும்
தமிழ்நாட்டில்தான் ஆங்கிலவழிப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

ஆங்கிலம் ஒரு வணிக மொழியாக இருக்கலாம். ஆனால் பண்பாட்டு
மொழியாக இருக்க முடியாது. ஆங்கிலம் பணப் பரிமாற்றத்திற்கு உதவலாம். ஆனால் நிச்சயமாக
பிராந்திய மொழிகளையும் பண்பாட்டையும் காலப்போக்கில் அழிக்கும்” என்கிறார் மைசூரில்
பணிபுரிந்து வரும் பேராசிரியர் ரகுநாத். பண்பாடு வீழ்வதற்கு மிக முக்கியக் காரணமாக
அவர் முன்வைப்பது தாய்மொழிவழிக் கல்வி இன்மையைத்தான். பண்பாட்டுக் கல்வியை அழிப்பதில்
மிக முக்கியப் பங்கு வகிப்பது ஆங்கிலவழிப் பள்ளிக்கல்விக் கொள்கை என்கிறார். தாய்மொழியில்
படிப்பதே பண்பாட்டையும் பேணிக் காக்கும் என்கிறார்.

உலகின் இரண்டாவது மொழியாக ஆங்கிலம் இருப்பதில் பிரச்சினையில்லை.
ஆனால் அரசே வேலை வாய்ப்பு என்பதைக் காரணம் காட்டி ஆங்கில வழிப் பள்ளிக் கல்விக் கொள்கையைக்
கையில் வைத்திருக்கும் வரை எந்த இந்திய மொழியின் வளர்ச்சியும் சாத்தியமில்லை. ஒரு தேசத்தின்
பண்பாட்டை அழிக்க வேண்டுமானால், அந்த தேசத்தின் மொழி அழிந்தால் போதும். அதன் பின்னர்
அது கடலில் மூழ்கிய கதையாகவே இருக்கும். அறிவியல்பூர்வமாக தாய்மொழியில்தான் தொடக்கப்பள்ளி
சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று பல ஆய்வுகள் வந்தும், ஆங்கில மோகம் நோக்கி இந்திய
சமூகம் செல்வதால் நிச்சயம் பிராந்திய மொழி நலிவுறவே செய்யும். இவற்றை சரிசெய்வது அரசின்
கைகளில்தான் உள்ளது. மாறாக அரசுப் பள்ளியிலும் ஆங்கிலவழிக் கல்வி என்ற கொள்கை முடிவுகளையே
அரசு எடுக்கிறது. கல்வி இலவசமாக்கப்பட வேண்டும். கட்டாயம் எட்டாம் வகுப்பு வரை தாய்மொழிவழிக்
கல்விக் கூடங்கள் மட்டுமே இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் அனைத்து மொழிகளும்
வளரும். இல்லையேல் உள்ளூர் அரசியல் சண்டைகள் மட்டுமே மிஞ்சும்.

***** 

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/lsquoEnglish-a-threat-to-local-languagesrsquo/article16572399.ece

http://timesofindia.indiatimes.com/india/Number-of-children-studying-in-English-doubles-in-5-years/articleshow/49131447.cms

http://blogs.timesofindia.indiatimes.com/Swaminomics/is-premature-english-making-india-a-super-dunce/

http://blogs.economictimes.indiatimes.com/cursor/why-english-should-not-be-the-medium-of-instruction-in-india/

http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/seven-decades-after-independence-many-small-languages-in-india-facing-extinction-threat/articleshow/60038323.cms

http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/seven-decades-after-independence-many-small-languages-in-india-facing-extinction-threat/articleshow/60038323.cms

https://thewire.in/144855/india-endangered-languages-need-to-be-digitally-documented/

Posted on Leave a comment

இந்திய வளர்ச்சியில் மின் உற்பத்தி – லக்ஷ்மணப் பெருமாள்


ஒவ்வொரு தேசமும் மின்சார உற்பத்திக்கான தமது கொள்கையைப் பல்வேறு கோணங்களில் வகுக்கிறது.

• மக்கள் தொகையின் அடிப்படையில் திட்டங்களைத் தீட்டுவது.
• மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் சுற்றுச் சூழலைக் கருத்தில் கொண்டும் திட்டமிடுதல்.
• பொருளாதார வலிமையைப் பொறுத்தும், நாட்டின் பாதுகாப்புக் கருதியும் திட்டமிடல்.
• இவையெல்லாவற்றையும் தாண்டி மின் உற்பத்திக்கான மூலப் பொருளின் இருப்பையும், தேவையையும் பொறுத்து திட்டமிடல்.
• மின்னுற்பத்தியில் அதிக பங்களிப்பைத் தரவல்ல மின் உற்பத்தி எது என்பதன் அடிப்படையில் திட்டமிடல்.

மேற்கூறிய காரணங்கள் மிக முக்கியமானவை. இந்தப் பார்வை இல்லாமல், சில மின் திட்டங்கள் தேவையற்றது என பேசிக் கொண்டிருப்பதில் பலனில்லை. இந்திய அரசு அனைத்து வகையான மின் உற்பத்தி முறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆனால் அரசு அணு மின் உற்பத்திக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்தது போன்ற பிரமையையும், புதுப்பிக்கத்தக்க (Renewable Energy) மின் உற்பத்தி முறைக்கு முக்கியத்துவம் கொடுக்காதது போன்ற எண்ணத்தையும் மக்கள் மனதில், ஊடகங்களும், கூடங்குளம் அணு மின் உற்பத்திக்கு எதிராகப் போராடிய தரப்பும் பதிய வைத்துள்ளன.

உண்மையைச் சொல்லப் போனால், உலகம் முழுவதும் அணு மின் உற்பத்திகெதிரான பரப்புரைகளைச் செய்பவர்கள் சூரிய மின் ஆலைகளுக்கும், காற்றாலைகளுக்கும் ஆதரவான கருத்துகளையும் கட்டுரைகளையும் எழுதித் தள்ளுவார்கள். இதன் பின்னால் உள்ள வணிக அரசியல் மிக முக்கியமானது. ஜப்பானில் புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்திற்குப் பிறகுதான் அணு மின் உற்பத்தி முறைக்கு எதிரான கருத்துகள் வலுவாக அமைந்தன. அப்போது சூரிய மின் ஆலைகள், காற்றாலைகள் பெருமளவிற்கு உலகில் நிறுவப்படவில்லை. உலகில் சில நாடுகள் அணு உலையை நிறுத்தப் போவதாக அறிவித்தன. இவற்றில் பல நாடுகளில் அணு மின் உற்பத்தி முறையே கிடையாது அல்லது மிகக் குறைந்த அளவில் இருந்தது. ஆனால் ஜெர்மனியின் மின் உற்பத்தியில் 17% அணு மின் உற்பத்தி இருந்தது. ஆஸ்திரேலியாவில் அணு மின் உற்பத்தி முறையே கிடையாது. ஜெர்மனி தமது மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு 2017க்குள் தமது நாட்டிலுள்ள அனைத்து அணு மின் நிலையங்களையும் கைவிடுவதாக அப்போதுதான் அறிவித்தது. மக்களின் பாதுகாப்பைக் காட்டிலும் சூரிய மின் ஆலைகள் மற்றும் காற்றாலைகளின் முன்னோடியாக நவீன மற்றும் தரமான தொழில்நுட்பத்தைக் கையில் வைத்திருந்த நாடு ஜெர்மனி. அணு மின் உற்பத்தியைக் கைவிடமாட்டோம் என்று அறிவித்தது பிரான்ஸ். ஏனெனில் பிரான்ஸ் அணு மின் தொழில் நுட்பத்தில் கைதேர்ந்த நாடு. அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகளும் அணு மின் உற்பத்தியை கொள்கையளவில் கைவிடுவதாக அறிவிக்கவில்லை. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ஆதரவான விளம்பரங்கள் அதிகரிக்க, அணு மின் உற்பத்திக்கு ஆதரவான குரல்களும் எழுந்தன. இவையனைத்தும் தத்தம் நாடுகளிலுள்ள கனிமப் பொருட்களின் வளத்தையும், தொழில்நுட்பத்தில் உள்ள வல்லமையின் அடிப்படையிலும், புதுப்பிக்கத்தக்க மின்னாற்றலை உபயோகிக்கத் தகுந்த இடங்கள் இருப்பதைப் பொருத்தும் அமைந்தன.

இந்தியா, தோரியம் மற்றும் புளுட்டோனியம் ஆகியவற்றை உபயோகிப்பதில் பல நாடுகளுக்கு முன்னோடியாக உள்ளது. இந்தியாவைப் பொருத்தவரையில் அனைத்து மின் உற்பத்தி முறைகளுக்கும் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. குறிப்பாக 2010 to 2016 க்குள்ளாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையங்களும், அனல் மின் நிலையங்களும் அதிக அளவில் நிறுவப்பெற்றுள்ளன.

இந்தியாவின் மின் நிறுவுத் திறன்:

ஏப்ரல் 2017ல், இந்தியாவின் மொத்த மின் நிறுவுத் திறன் 329.204 GW. இதில் அனல் மின் நிலையத்தின் பங்களிப்பு 67%. அணு மின் உற்பத்தி, நீர் மின் உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க (Renewable) மின் உற்பத்தி முறைகளின் பங்களிப்பு முறையே 2.06%, 13.55%, 17.39%. உலக அளவில் மின் உற்பத்தி நிலையங்களை அமைத்ததில் இந்தியா 5வது இடத்திலும், மின்சார உற்பத்தியில் உலக அளவில் 3வது இடத்திலும் உள்ளது.

ஜனவரி 2017ல், இந்தியாவின் மின் உற்பத்தியில் மத்திய, மாநில அரசின் நேரடிப்பங்களிப்பு 56.4%. தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு 43.6%. அணு மின் ஆலைகளை நிறுவுவதை மத்திய அரசு, தனியார்களின் கையிலோ, மாநில அரசின் கைகளிலோ கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பாதுகாப்பு கருதிய கொள்கைமுடிவாகக் கூட இருக்கலாம். புதுப்பிக்கத்தக்க மின் ஆலைகளைப் பொருத்தவரை மத்திய அரசின் பங்களிப்பு எதுவுமில்லை. புதுப்பிக்கத்தக்க ஆலைகள் நிறுவும் பணிகளை மாநில அரசுகளும், தனியார் நிறுவனங்களுமே இந்தியாவில் செய்துள்ளன. மத்திய அரசுதான் மானியத்தை வழங்குகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை நிறுவுவதில் மாநில அரசுகள் கூட வெறும் 3.45% அளவில்தான் தமது சொந்த முயற்சியில் நிறுவியுள்ளன. புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பொருத்தவரையில் தனியார் நிறுவனங்களே 96.55% நிறுவியுள்ளன.

மின் கோட்டங்களைக் கணக்கில் கொள்ள இந்தியாவிலுள்ள மாநிலங்கள் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் வட கிழக்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மகாராஸ்ட்ராவில்தான் அதிக அளவிற்கு மின் நிறுவனங்கள் அமைந்துள்ளன. குஜராத், தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் 20,000MW க்கும் அதிகமாக மின் ஆலைகள் நிறுவப்பெற்றுள்ளன. குறிப்பாக கிழக்கு மற்றும் வட கிழக்கு மாகாணங்களில் மிகக் குறைந்த அளவிலேயே மின் ஆலைகள் உள்ளன. மக்கள் தொகையை ஒப்பிட்டால் கிழக்கு மாநிலங்களில்தான் மிகக் குறைவாக மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. பீகார், ஓடிஸா, ஜார்க்கன்ட், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் மிகக் குறைந்த அளவிலேயே மின் ஆலைகள் நிறுவப்பெற்றுள்ளன. இம்மாநிலங்கள் ஏன் தொழில் வளர்ச்சிக் குறைந்த மாநிலங்களாக தற்போதும் உள்ளன என்பதற்கான காரணங்களை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். மேற்கூறிய மாநிலங்களில் மேற்கு வங்கம் தவிர்த்து அனைத்து பெரிய மாநிலங்களில் கூட 5,000MW க்கும் குறைவாகவே மின் ஆலைகள் அமைந்துள்ளன. மேற்கு வங்கத்தில் கூட 10,500MWதான் உள்ளது. கம்யுனிஸக் கொள்கையுடைய மாநிலங்கள் தொழில் வளர்ச்சிக்கு திரான மாநிலங்கள் என்பதை அவர்கள் அரசுகளின் கொள்கை முடிவுகள் காட்டுகின்றன. காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தனியார் நிறுவனங்கள் மின் ஆலைகளை நிறுவ முன் வரவில்லை. தனியாரின் மொத்த மின் நிறுவுத் திறனே 100 MWக்கும் குறைவு. இந்தியாவில் சமச்சீரான தொழில் வளர்ச்சி சாத்தியமில்லை என்பது உண்மையே. ஏனெனில் வேளாண்மை சார்ந்த மாநிலங்கள் பெரிதும் தொழில் வளர்ச்சியை நம்பி இல்லை. ஆனால் அம்மாநில அரசுகள் தொழில் வளர்ச்சியைப் பெருக்கும் நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே இந்தியா சீரான வளர்ச்சியைப் பெற இயலும். இந்தியாவின் முன்னேறிய மாநிலங்கள் என்று கணக்கில் எடுத்தால் தொழில் வளர்ச்சி சார்ந்த மாநிலங்கள் முன்னிலை வகிப்பது புரியும். வட கிழக்கு மாநிலங்களில் கிரிட் வசதியை ஏற்படுத்துவதில் சிக்கல் இருந்தாலும் இந்தியாவின் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய ஓர் அரசு அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும். முற்றிலுமாக பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசுகளால் வட கிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தன. தற்போதைய அரசு அதைச் சீராக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது பாராட்டத்தக்கது.

மின் கொள்கை முடிவுகள்:

இந்தியாவின் மின் தேவை எவ்வாறு அதிகரித்துள்ளது என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவில் மொத்த மின் நிறுவுத் திறன் 1362MW. இன்று 329204.53 MW. இந்தியாவின் மின் நிறுவுத் திறனை எப்படிப் பார்க்க வேண்டும்? உலக மயமாதலுக்கு முன், பின் என பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது. 1991ல் இந்தியா தாராளவாதக் கொள்கைக்குள் செல்கிறது. உலகமயமாதலுக்குத் தன்னை உட்படுத்திக் கொண்ட பின்பே இந்தியாவில் மின் தேவைக்கான கூடுதல் அவசியம் ஏற்படுகிறது. உலக மயமாதலுக்கு முன்பு அதாவது சோஷலிச பொருளாதாரக் காலகட்டத்தில் இந்தியாவில் மின் நிறுவுத் திறன் ஒரு விஷயத்தைப் புரியவைக்கிறது. அரசே அனைத்துத் துறைகளையும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து செயல்படுத்த வேண்டும்; தனியாரை உட்படுத்தும் எந்தவொரு கொள்கை முடிவும் மக்களுக்கு எதிரானவை என்ற அடிப்படையில் மட்டுமே பார்க்கப்பட்டது. மேலும் சுதந்திரமடைந்த காலம் இந்தியா பொருளாதார ரீதியாக மிக நலிந்த நிலையிலிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அத்துடன், ஓர் அரசால் ஏழைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கும் வாழ்வாதாரத்திற்கும் இலவசங்களையும் மானியங்களையும் வழங்க வேண்டி இருந்தது. அது தவறல்ல என்றபோதிலும், நிதி வருவாய், தொழில் வளர்ச்சியைப் பெருக்கவோ புதிய வேலை வாய்ப்புகளைப் பெருக்கவோ பெருமளவு உதவவில்லை.

சோஷலிச காலகட்டமான 1940 முதல் 1990 வரையில் மொத்த மின் நிறுவுத் திறன் 63,636MW. தற்போது இந்தியாவில் மொத்த மின் நிறுவுத் திறன் 329204 MW. 1940 முதல் 1990 வரையிலான 43 ஆண்டுகளில் 63636 MW அளவிற்கே இந்தியா மின் ஆலைகளை நிறுவி இருந்தது. ஆனால், 1991 முதல் 2017 வரையிலான, உலக மயமாதலுக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்ட கடந்த 27 ஆண்டுகளில் 265,568 MW அளவிற்கு மின் ஆலைகள் நிறுவப் பெற்றுள்ளன. தொழில்துறையில் இந்தியா வளர மின்சாரம் தேவை என்பதைப் புரிந்து கொண்ட பிறகே பல்வேறு கொள்கை முடிவுகளை நாட்டின் முன்னேற்றம் கருதி இந்திய அரசுகள் எடுத்து வந்துள்ளன. குறிப்பாக தனியார் நிறுவனங்கள் மின் ஆற்றல் உற்பத்தி செய்யும் வகையில் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் மின் உற்பத்தித் துறையில் 100% வரை அந்நிய நேரடி முதலீடு இருக்கலாம் என்றும் அரசு கொள்கை முடிவெடுத்தது. ஆரம்ப காலகட்டங்களில் தனியார் மிக அதிக விலைக்கே மின்சாரத்தை அரசுக்கு விற்றது என்ற நிலை இன்று மாறியுள்ளது. உதாரணமாக சூரிய மின் உற்பத்திக்கு தனியார் நிறுவனங்கள் 2010ல் யூனிட்டிற்கு 12 ரூபாய் விலையாக நிர்ணயித்திருந்தது. சோலார் பானல்களின் விலை 85% போட்டி காரணமாகக் குறைந்தது. 2017 மே 12
அன்று ராஜஸ்தானின் பாட்லா சோலார் பூங்கா அமைப்பதற்கான டெண்டரில் பங்கெடுத்த ஒரு நிறுவனம் யூனிட்டிற்கு 2.44 ரூபாய் எனக் குறித்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கிடையேயான போட்டியின் காரணமாகவே விலை நிர்ணயம் பெருமளவிற்குக் குறைந்துள்ளது. இதுநாள் வரை அனல் மின் உற்பத்தி மட்டுமே யூனிட்டிற்கு மிகக் குறைந்த அளவில் இருந்தது. தற்போதும் நிலக்கரி மின் உற்பத்தியின் விலை யூனிட்டிற்கு 3.20 ரூபாயாக உள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா 105,860 MW நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா ஒருபுறம் தொழில் வளர்ச்சிக்கான சந்தையை உருவாக்கும் பொருட்டு அதிக அளவில் மின் கொள்கைகளை வகுத்துச் செயல்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டே தொழில்நுட்பம் சார்ந்த வேலை வாய்ப்புகளை உருவாக்க இயலும்.

மன் மோகன் சிங் அரசின் நிலக்கரி சுரங்க ஊழலும் மோடி அரசின் புதிய கொள்கை முடிவுகளும்:

உச்சநீதிமன்றம், மன் மோகன் சிங் ஆட்சியில் நடந்த நிலக்கரி ஊழல் மற்றும் டெண்டர் விடும் முறைக்கு எதிரான தீர்ப்பையும், 204 தனியார் நிறுவனங்களின் உரிமையையும் ரத்து செய்தது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நிலக்கரிச் சுரங்கத்தில் விடப்படும் டெண்டர்கள் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய E-Auction (ஆன்லைன் மூலம் ஏலம் விடுதல்) முறைக்கு மாறிய பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் அளப்பரியது. 2014ல் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது நிலக்கரியைச் சார்ந்த அனல் மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவியது. சில ஆலைகளில் ஏழு நாட்களுக்குக் குறைவான இருப்பு மட்டுமே இருந்து வந்தது. பியுஷ் கோயல் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற இரண்டே வருடங்களில் நிலக்கரி உற்பத்தி அதிகரித்ததன் வாயிலாக 25 நாட்களுக்கும் அதிகமாக மின்சாரம் கொடுக்கும் வகையில் நிலக்கரி இருப்பு உள்ளது. தற்போதைய புதிய கொள்கையின் படி, நிலக்கரி வளத்தைக் கொண்டுள்ள மாநிலங்களுக்கு அடுத்த முப்பது ஆண்டுகளில் (Coal life time) 3.44 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும். இதில் அதிக அளவில் பலனடையும் மாநிலங்கள் ஒடிஸா, மேற்கு வங்காளம், ஜார்க்கன்ட், சத்தீஸ்கர். முப்பத்து இரண்டு நிலக்கரிச் சுரங்க வேலைகளுக்கு வெளிப்படைத்தன்மையுடன் கூடிய ஏலம் நடைபெற்றதால் மத்திய அரசுக்கு 2 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதிலுள்ள சிறப்பம்சம், ஏலத்தில் கிடைக்கும் வருவாய் அந்தந்த மாநில அரசுகளுக்குச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில அரசுகளின் கடன் சுமை பெருமளவு குறையும் அல்லது அதிக வருவாய் கிடைக்கும்.

2010 – 2014 காலகட்டத்தில் நிலக்கரி உற்பத்தி 1.8% -ஆக இருந்தது. 2014 – 2016 காலகட்டத்தில் நிலக்கரி உற்பத்தியின் அளவு சராசரியாக 7.7% ஆக அதிகரித்துள்ளது. எப்போதும் இல்லாத வகையில் 2014-16ல் 7.4 கோடி டன்கள் உற்பத்தியும் கூடியுள்ளது. நிலக்கரி உற்பத்தியை அதிகரித்ததன் விளைவாக 2015 – 2016 வருடத்தில் 24,000 கோடி அந்நியச் செலவாணி அரசுக்குக் குறைந்துள்ளது. 2016-17ல் 40,000 கோடிக்கு அந்நிய செலவாணியைக் குறைக்கும் நோக்கில், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வண்ணம் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. உதய் திட்டம், குழல் விளக்கு திட்டம், கிராமங்களுக்கான மின் இணைப்பு, உஜாலா திட்டங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்கவியலா மின் உற்பத்தி சார்ந்த மத்திய அரசின் நடவடிக்கை மற்றும் திட்டங்களை அடுத்த பகுதியில் காணலாம்.

உசாத்துணைகள்:

http://coal.nic.in/two-years-achievements-english/#/12

http://www.cea.nic.in/reports/monthly/installedcapacity/2017/installed_capacity-04.pdf

http://www.dnaindia.com/money/report-coal-block-auction-money-to-wipe-out-fiscal-deficit-of-indian-states-2067520

https://www.theguardian.com/environment/2017/may/10/indian-solar-power-prices-hit-record-low-undercutting-fossil-fuels

https://www.ibef.org/industry/power-sector-india.aspx

Posted on Leave a comment

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் – லக்ஷ்மணப் பெருமாள்

பல கட்டங்களாக நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களுக்கான
சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மார்ச் 11, 2017 அன்று வெளிவந்தது. சட்டசபைத் தேர்தல்
நடந்த மாநிலங்கள் உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா. இதில்
பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கிறது. இதர நான்கு மாநிலங்களில் பாஜக தலைமையிலான
ஆட்சி அமைந்துள்ளது. மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஏறக்குறைய மூன்று
ஆண்டுகள் கழித்து நடந்த தேர்தல் என்பதால் மிகுந்த கவனத்தைப் பெற்ற தேர்தலாக அமைந்தது.
குறிப்பாக இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்திரப்பிரதேச முடிவுகள் 2019 தேர்தலுக்கான
முன்னோட்டமாக இருக்கும் எனத் தேர்தல் நடந்தபோது மோடி ஆதரவாளர்களில் ஆரம்பித்து மோடி
எதிர்ப்பாளர்கள், வெறுப்பாளர்கள் வரை கருத்துரைத்தனர். இந்தத் தேர்தல் முடிவுகளை,
2012ம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகளோடும், 2014ம் ஆண்டில் நடந்த பாராளுமன்றத்
தேர்தல் முடிவுகளோடும் ஒப்பிட்டுப் பேசலாம். ஆம்ஆத்மி கட்சியின் உதயம் தேசிய அளவில்
எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது, ஒவ்வொரு மாநிலத்திலும் இதர தேசியக் கட்சிகளின்
செல்வாக்கு மற்றும் மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு சரிந்துள்ளதா அல்லது அதிகரித்துள்ளதா
என்ற கோணத்தில் பார்க்க வேண்டியுள்ளது.
இந்தத் தேர்தல் முடிவுகளை மேலோட்டமாக ஒப்பிட
வேண்டுமானால், ஆட்சியில் இருந்த கட்சிகள் தேர்தலில் தத்தம் மாநிலங்களில் பின்னடைவைச்
சந்தித்துள்ளன. பஞ்சாப், கோவா தவிர்த்து பிற மாநிலங்களில், மோடியின் தலைமையில் அபரிமிதமான
வெற்றியைப் பாஜக பெற்றுள்ளது. மாநிலக் கட்சிகள் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ள
தேர்தல் இது.
உத்திரப் பிரதேசம்:
இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்திரப்
பிரதேசம் 403 சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் பாஜக அணி 325 இடங்களைப் பெற்றுள்ளது.
312 இடங்களில் பாஜகவும், கூட்டணிக் கட்சிகளான அப்னா தள் 9 இடங்களிலும், சுஹேல் தேவ்
சமாஜ் கட்சி 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சமாஜ்வாதி – காங்கிரஸ் அணியில் இருகட்சிகளும்
முறையே 47 மற்றும் 7 இடங்களைப் பெற்றுள்ளன. பஹுஜன் சமாஜ்வாதி கட்சி 19 இடங்களையும்,
சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகள் 5 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
பாஜகவைப் பொருத்தவரையில் 2012ல் 47 இடங்களை
மட்டுமே பெற்றிருந்த கட்சி 2017 தேர்தலில் 312 இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் 1980ல் அதிக பட்சமாக 309 இடங்களைப் பிடித்திருந்தது.
2014 லோக்சபா தேர்தலில் பாஜக வென்ற நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உள்ளிட்ட சட்டசபைத்
தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால் பாஜக 328 இடங்களைப் பிடித்திருந்தது.
தற்போது 312 இடங்களில் வென்றுள்ளது. 2014 லோக்சபா தேர்தலில் பாஜக அணி 44% வாக்குகளைப்
பெற்றிருந்தது. 3% வாக்குகளை இழந்து 41% வாக்குகளை இத்தேர்தலில் பெற்றுள்ளது. ஆனால்
2012 சட்டசபைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் 16%. தற்போது அது 25% அதிகரித்துள்ளதையும்
காண முடிகிறது. உத்திரப் பிரதேச தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகின்றன.

2012, 2014
& 2017 கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் :
வாக்கு சதவீதம்
கட்சிகள்
2012
2014
2017
பாரதிய ஜனதா
15.00%
42.63%
39.63%
சமாஜ்வாதி
29.13%
22.35%
21.80%
காங்கிரஸ்
11.65%
7.53%
6.20%
பஹுஜன் சமாஜ்வாதி
25.91%
19.77%
22.20%
1.      மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டிருந்த தேசியக்
கட்சியான பாஜக 14 வருட வனவாசத்திற்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மாநிலத்தில்
இரு பெரும் மாநிலக் கட்சிகள் (பகுஜன் சமாஜ்வாதி, சமாஜ்வாதி கட்சிகள் தேசிய அந்தஸ்து
பெற்று இருந்தாலும் மற்ற மாநிலத்தில் ஆட்சிக்கு வராததால்) அசுர பலத்துடன் ஆட்சியை மாறி
மாறிப் பிடித்து வந்த நிலையில் இம்முறை பாஜக அதை முறியடித்தது மட்டுமல்லாமல், சிங்கத்தின்
குகைக்குள் சென்று அதன் பிடரியை இழுத்துப் போட்டதொரு வெற்றியைப் பெற்றுள்ளது. மோடி
தேசிய அரசியலுக்குள் நுழைந்த பின்னர்தான் பாஜக ஒவ்வொரு மாநிலத்திலும் தனது வாக்கு சதவீதத்தைக்
கூட்டியோ தக்கவைத்துக் கொண்டோ செல்வதைக் காண முடிகிறது.
2.      மோடி 2014ல் பதவியேற்ற பின் மஹாராஷ்டிரா, ஹரியானா
போன்ற மாநிலங்களிலும் இச்சாதனையைச் செய்து காட்டியது. பாஜகவையும் காங்கிரசையும் இப்படி
ஒப்பிட்டால்தான் இரு கட்சிகளின் தேசிய வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் புரிந்து கொள்ள
முடியும். காங்கிரஸ் மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்ட பின்னர் எந்தவொரு மாநிலத்திலும்
மக்கள் நம்பிக்கையைத் தனித்து நின்று பெற்று ஆட்சி அமைத்ததாகக் கடந்த கால வரலாறு இல்லை.
உதாரணமாக, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், உத்திரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில்
அதன் வீழ்ச்சியைக் காணலாம். பீகாரில் பாஜக எண்ணிக்கையில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது
போன்ற ஒரு தோற்றமுள்ளது. காங்கிரஸ் மற்றும் லாலுவும், நிதிஷ் குமாரும் இணையாமல் தேர்தலை
எதிர்கொண்டிருந்தால் பீகாரில் கூட பாஜக ஆட்சி அமைத்திருக்கும். உத்திரப் பிரதேசத்தில்கூட
இந்த அடிப்படையில்தான் காங்கிரசும் சமாஜ்வாதி கட்சியும் இணைந்து பாஜகவை எதிர்கொண்டன.
பகுஜன் சமாஜ்வாதி தனித்து நின்றதால் பாஜகவின் வெற்றியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
3.      ராகுல் காந்தி கட்சியைத் தனித்து வளர்க்க வேண்டுமென்று
அதிகக் கவனம் செலுத்திய மாநிலங்கள் பீகார், உத்திரப்பிரதேசம். ஆனால் தனது கட்சியால்
இனி பாஜகவையோ, மாநிலக் கட்சிகளையோ எதிர்கொள்ள இயலாது என்பதாலும், மீண்டும் இம்மாநிலங்களில்
ஆட்சியைப் பிடிக்க இயலாது எனக் கருதி மாநிலக் கட்சிகளோடு தன்னை இணைத்துக் கொண்டு அணிலாகச்
செயல்பட முனைந்தும் கூட உபியில் பாஜகவின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. முற்றிலுமாக
உபியில் காங்கிரஸ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் கூட
காங்கிரஸ் 4 இடங்களையும் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
4.      உபி முடிவுகளில்
அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது பஹுஜன் சமாஜ்வாதி கட்சியே! குறிப்பாகத் தலித்
மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் கூட இம்முறை பகுஜன் சமாஜ்வாதி கட்சி அதிகம் வெற்றி
பெறவில்லை. மேலும் நாடாளுமன்றத்தில் லோக்சபாவில் அக்கட்சிக்கு ஒரு உறுப்பினர் கூட இல்லை.
தற்போது பதவியிலுள்ள ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவிக்காலம் முடியும்போது அக்கட்சிக்கு
ஒரு எம்பி மட்டுமே இருப்பார்.
5.      சமாஜ்வாதி கட்சிக்கு, ஆட்சிக்கு எதிரான அலையும்,
அதை விட மோடி அலையும் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கக் காரணமாக அமைந்துள்ளது. ஆனால்
மீண்டும் சமாஜ்வாதி கட்சி எளிதில் எழுந்து நிற்கும் வாய்ப்புள்ளதை மறுக்க இயலாது.
6.      பாஜக உபியில் தனது வெற்றியைத் தக்கவைத்துக்
கொள்ள செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே. மக்களுக்குச் சேவை செய்யும் இன்னொரு மோடியை,
சிவராஜ் சிங் சௌகானை உபிக்கு அடையாளப்படுத்துவது மட்டுமே. இதில் தவறிழைத்தால் கட்சி
மீண்டும் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும் வாய்ப்புகூட உருவாகும் என்பதை உணர்ந்து
செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. இதைப் பொறுத்தே 2019 லோக்சபாவின் வெற்றி தோல்வி பாஜகவிற்கு
அமையும். தற்போது உத்திரப் பிரதேசத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் யோகி ஆதித்யநாத்
மக்களின் எதிர்பார்ப்பை உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.
7.      இதையெல்லாம் மீறி உத்திரப் பிரதேசத்தில்
பாஜக செய்திருக்கும் சாதனை, ஜாதி மற்றும் மத ரீதியாக மட்டுமே வெல்ல முடியும் என்ற நிலையை
அடியோடு மாற்றிக் காண்பித்திருப்பதுதான்.
இதை ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான ஒரு பாடம்
என்றுகூடச் சொல்லலாம். ஓரளவுக்கு மேல் மத மற்றும் ஜாதி ரீதியான பிளவுகள் ஒரு கட்சியின்
வெற்றி வாய்ப்பைப் பாதிக்காது என்பதை உரக்க நிரூபித்திருக்கிறது பாஜக.
பஞ்சாப்:
சிரோன்மணி அகாலிதளம், பாஜக கூட்டணி ஆட்சியே கடந்த 10 ஆண்டுகளாக பஞ்சாபில் இருந்தது.
போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் ஆட்சிக்கு எதிரான மனநிலை நிலவியதை, கடந்த லோக்சபா
தேர்தலிலேயே இக்கூட்டணிக்குக் கிடைத்த எண்ணிக்கையிலிருந்து புரிந்து கொள்ள இயலும்.
மோடி அலையின் காரணமாக லோக்சபா தேர்தலில் இந்த அணி 6/13 இடங்களைப் பிடித்திருந்தது.
தற்போது சட்டசபைத் தேர்தல் என்பதும், ஆட்சிக்கு எதிரான அலை வீசியதும், இவ்விரு கட்சிகளுக்கும்
பெருத்த அடியைத் தந்துள்ளது.
மொத்தமுள்ள 117 இடங்களில் , முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களைச்
சேர்த்து மொத்தமாகப் பார்த்தால், ஆம்ஆத்மி கூட்டணியைக் காட்டிலும் சிரோன்மணி அகாலிதளம்
+ பாஜக அணி  அதிக இடங்களில் முதலிரண்டு இடங்களைப்
பெற்றுள்ளது. சிரோன்மணி + பாஜக அணி மொத்தமாக 80 இடங்களில் முதலிரண்டு இடங்களில் வந்துள்ளது.
ஆனால் ஆம்ஆத்மி + லோக் இன்சாப் அணி 48 இடங்களில் மட்டுமே முதலிரண்டு இடங்களில் வந்துள்ளது.
பாஜகவை நேரடியாக ஆம்ஆத்மி கட்சி எதிர்கொண்ட இடங்களில் பாஜகவின் வாக்கு சதவீதம் ஆம்ஆத்மியைக்
காட்டிலும் இரு மடங்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

2012, 2014 & 2017 கட்சிகள் பெற்ற வாக்கு
சதவீதம் :
வாக்கு சதவீதம்
கட்சிகள்
2012
2014
2017
காங்கிரஸ்
40.09%
33.19%
38.50%
சிரோன்மணி அகாலிதளம்
34.73%
26.37%
25.20%
பாரதிய ஜனதா
7.18%
8.77%
5.40%
ஆம் ஆத்மி
**
24.40%
23.70%
** ஆம் ஆத்மி கட்சி துவங்கப்படவில்லை.
பஞ்சாப் தேர்தல் முடிவுகளை எப்படிப் புரிந்துகொள்ள
வேண்டும்?
1.      சிரோன்மணி அகாலிதளம், பாஜக ஆட்சிக்கு எதிரான
அலை அக்கட்சிகள் பல இடங்களை இழக்கக் காரணமாக அமைந்துள்ளது.
2.      கடந்த 2014 லோக்சபா தேர்தலில் டெல்லி உட்பட
அனைத்து மாநிலங்களிலும் ஓரிடத்தைக் கூடப் பெறாத ஆம்ஆத்மி கட்சிக்கு பஞ்சாப் மட்டும்
புத்துயிர் அளிக்கும் விதமாக 4 இடங்களை வழங்கி பஞ்சாபில் ஆம்ஆத்மிக்கான பலத்த எதிர்பார்ப்பை
உருவாக்கி இருந்தது. மேலும் வெளிவந்த பெரும்பாலான கருத்துக் கணிப்புகளும், ஆம்ஆத்மிக்கும்
காங்கிரசிற்கும் இடையே பலத்த போட்டி இருக்குமென்றும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கும்
என்றும் கூறின. அதை வைத்துப் பார்த்தாலும் சரி, லோக்சபா தேர்தல் முடிவுகளை வைத்துப்
பார்த்தாலும் சரி, ஆம்ஆத்மிக்கு இத்தேர்தல் முடிவுகள் மாபெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
வாக்கு சதவீத அடிப்படையில் சிரோன்மணி அகாலிதளத்தைக் காட்டிலும் குறைந்த வாக்குகளைப்
பெற்றாலும் இடங்களின் எண்ணிக்கையில் அதிக இடங்கள் என்ற அடிப்படையில் எதிர்க் கட்சி
என்ற அந்தஸ்தை ஆம்ஆத்மி பெறுவது அக்கட்சிக்கு ஒருவகையில் நல்லதே. எதிர்காலத்தில் ஆம்ஆத்மி
கட்சி ஆட்சியைப் பிடிக்குமா என்றோ, ஒருவேளை காங்கிரஸ் ஆட்சி மீது வெறுப்பு வந்தால்
சிரோன்மணி அகாலிதளம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா என்றோ எவராலும் உறுதியாகச் சொல்ல
முடியாது.
3.      காங்கிரஸ் எண்ணிக்கை அடிப்படையில் நோக்கும்
போது மாபெரும் வெற்றியைக் குவித்துள்ளது. ஆனால் 2012 சட்டசபை வாக்கு சதவீதத்தை ஒப்பிட்டால்
ஆம்ஆத்மியிடம் தனக்கான வாக்குகளை இழந்திருக்கிறது என்பதைக் காணலாம். காங்கிரஸ் இம்மாநிலத்தில்
வெற்றி பெற, அமரிந்தர் சிங் ஒரு  தனித்த அடையாளம்
என்பதையும், காங்கிரஸின் பலம் பொருந்திய சில மாநிலங்களில் பஞ்சாபும் ஒன்று என்பதையுமே
தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன. இத்தேர்தலைப் பொருத்தமட்டில் ஆம்ஆத்மியின் மீது
பெரிய நம்பிக்கை வைக்காமல், காங்கிரஸ் ஆட்சியமைக்கவே மக்கள் விரும்பியுள்ளார்கள்.
4.      சிரோன்மணி அகாலிதளம் பாஜக அணி வாக்கு சதவீதம்,
இடங்களின் எண்ணிக்கை இரண்டையுமே இழந்துள்ளது. இக்கட்சிகளின் ஒரே நம்பிக்கை ஆம்ஆத்மியை
ஒப்பிடுகையில் 5.7% அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது என்பதுதான்.
உத்தராகண்ட்:
உத்தராகண்ட் மாநிலத்தின் சட்டசபைத் தொகுதிகளின்
எண்ணிக்கை 70. உத்தராகண்ட் மாநிலத்தில் மகத்தான வெற்றியைப் பெற்று பாஜக ஆட்சி அமைக்கிறது.
கீழுள்ள அட்டவணையில் கட்சிகள் பெற்றுள்ள இடங்களைக் காணலாம்.


2012, 2014
& 2017 கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் :
வாக்கு சதவீதம்
கட்சிகள்
2012
2014
2017
காங்கிரஸ்
33.79%
34.40%
33.50%
பாரதிய ஜனதா
33.13%
55.93%
46.50%
உத்தராகண்ட் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது?
1.      உத்தராகண்ட்டைப் பொருத்தவரையில் 2014 மற்றும்
2017 ஆகிய இரு தேர்தல்களிலும் தனது வாக்கு வங்கியை அதிகப்படுத்த இயலவில்லை என்பது தெரிகிறது.
லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக அலை வீசிய மாநிலங்களில் உத்தராகண்ட்டும் ஒன்று.
கூடுதலாக அங்கு காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்ததும், இம்மாநிலத்திலும் ஆட்சிக்கு எதிரான
அலையில் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
2.      பாரதிய ஜனதா கட்சியைப் பொருத்தவரை, கடந்த லோக்சபா
தேர்தலில் பெற்ற வாக்கு சதவீததைக்காட்டிலும் குறைவாகப் பெற்றாலும், பாஜக இழந்த அவ்வாக்குகள்
சுயேச்சைகளுக்குச் சென்றுள்ளனவே தவிர, காங்கிரசால் அவ்வாக்குகளைத் திரும்பப் பெற இயலவில்லை
என்று திருப்திப் பட்டுக் கொள்ளலாம். மேலும் தற்போதும் தனக்கு அடுத்த நிலையிலுள்ள காங்கிரசைக்
காட்டிலும் கூடுதலாக 13% வாக்குகளைப் பெற்றுள்ளது. சிறந்த முதல்வரை அறிமுகப்படுத்தி
நல்லாட்சி வழங்கினால் குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் வரிசையில் இம்மாநிலமும்
வரலாம்.
3.      பெரிதாக மற்ற மாநில கட்சிகள் இங்கில்லை என்பதும்,
பஹுஜன் சமாஜ்வாதி கட்சிக்கு மட்டும் சிறிதளவு வாக்கு வங்கி உள்ளது என்பதும் மட்டுமே
காங்கிரஸ், பாஜக ஆகிய இரு தேசியக் கட்சிகளுக்கும் ஆசுவாசத்தைக் கொடுக்கிறது.
மணிப்பூர்:
70 சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கியது மணிப்பூர். மணிப்பூரில் காங்கிரஸ் அதிக
இடங்களைப் பெற்று இருந்தாலும், அங்குள்ள மாநில கட்சிகள் பாஜகவை ஆதரிக்க முன்வந்ததால்
அங்கும் பாஜக ஆட்சியை அமைக்கிறது. மணிப்பூர் கோவா இரு மாநிலங்களிலும் சிறு கட்சிகள்
பாஜகவை ஆதரிப்பதற்கு மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதே காரணம். மணிப்பூரைப் பொருத்தவரை
மணிப்பூர் நாகா கட்சி எக்காலத்திலும் காங்கிரசை ஆதரிக்காது என்பதால் அதைச் சாதகமாகப்
பயன்படுத்திக் கொண்டது பாஜக. பாஜகவைப் பொருத்தவரையில் வட கிழக்கு மாநிலங்களில் தனது
அடித்தளத்தை வலுப்படுத்த அதிகக் கவனத்தைச் செலுத்தி வந்ததன் அடையாளமாக அஸ்ஸாமிற்கு
அடுத்தபடியாக மணிப்பூரிலும் கட்சியை வலுப்படுத்திக் கொண்டுள்ளது. 2012 சட்டசபைத் தேர்தலில்
ஓரிடத்தில் கூட வெற்றி பெறாத பாஜக தற்போது 21இடங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மோடி ஆட்சிக்கு
வந்தபிறகு வட கிழக்கு மாநிலங்களில் நிறைய திட்டங்களைச் செயல்படுத்தி வந்ததே பாஜக அங்கு
வலுப்படக் காரணமாக அமைந்துள்ளது.
கோவா:
40 சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கியது கோவா. கோவாவில் பாஜக 2012, 2014 தேர்தல்களை
மகாராஷ்டிரா கோம்னாடக் என்ற கட்சியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது. இம்முறை தனித்து
நின்றது. மனோகர் பரிக்கருக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட லக்ஷ்மி காந்த் பரிக்கர் ஆட்சி
மீது நம்பிக்கையின்மையும் நிலவியது. இதனால் பாஜகவுக்கு 13 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

வாக்கு சதவீதம்
கட்சிகள்
2012
2014
2017
காங்கிரஸ்
30.08%
37.02%
28.40%
பாரதிய ஜனதா
34.68%
54.12%
32.50%
மகாராஸ்டிரா கோம்நாடக்
6.72%
**
11.30%
ஆம் ஆத்மி
*
1.00%
6.30%
NCP – 4.08% allinace with Cong
1.      கோவாவில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்றிருந்தாலும்
வாக்கு சதவீதத்தை வைத்து ஒப்பிட்டால் இன்றும் பாஜகவை விடக் குறைவாகவே உள்ளது.
2.      பாஜக தனித்து நின்றதால் தனது செல்வாக்குக் குறைந்திருப்பதைக்
கணக்கில் கொள்ளவேண்டும். இதை மனதில் வைத்து, ஆட்சியை விட்டுவிடக்கூடாது என்பதால்தான்
மனோகர் பரிக்கரையே திரும்ப அனுப்பியுள்ளது பாஜக.
ஐந்து மாநிலத் தேர்தல்கள் இறுதியாக இரண்டு செய்திகளைச் சொல்கின்றன. மாநிலங்களில்
நல்லாட்சியைத் தரவில்லை என்று நம்பும் பட்சத்தில் அது எக்கட்சியின் ஆட்சி நடந்தாலும்
மக்கள் அதற்கு எதிரான வாக்குகளை அளிப்பார்கள் என்பது ஒன்று. இன்னொன்று, பாரதிய ஜனதாவை
வெல்ல மிகப் பெரிய கூட்டணியை எதிர்க்கட்சிகள் அமைக்கவேண்டும். அப்போது மட்டுமே 2019
லோக்சபா தேர்தலில் மோடியையும் பாஜகவையும் எதிர்கொள்ள முடியும். நல்லாட்சியைத் தந்தால்
மக்கள் அக்கட்சியையும் தலைவனையும் வரவேற்பார்கள் என்பதற்கு மோடி ஓர் உதாரணம். இந்திய
வரலாற்றில் மோடி மிகப்பெரிய இடத்தைப் பெறுவார் என்பதை எவரும் மறுக்க இயலாது. பாஜகவை
எதிர்க்க மிகப்பெரிய வியூகம் அமைக்க வேண்டிய இக்கட்டான நிலையில் எதிர்க்கட்சிகளும்,
அவர்களில் யார் தலைமையை ஏற்று நடப்பது என்ற குழப்பமும் நீடித்தால் மோடியே மீண்டும்
இந்தியாவின் பிரதமர் என்பது உறுதி.

http://eci.nic.in/eci_main1/ElectionStatistics.aspx
Posted on Leave a comment

தமிழக அரசியலின் எதிர்காலம்: ஜெயலலிதா மறைவுக்குப் பின் – லக்ஷ்மணப் பெருமாள்

தமிழக முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதாவின் மறைவு, தமிழக
அரசியலில் ஒரு வெற்றிடத்தை நிச்சயமாக ஏற்படுத்தியுள்ளது என்பதை எவரும் மறுக்க இயலாது.
அவரின் மறைவால் தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ வாய்ப்புண்டு. இதற்கிடையில்
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் ஆரம்பித்து, அவரது கடந்தகால மற்றும்
அதிமுகவின் எதிர்கால அரசியல் மாற்றங்கள் பற்றி இனி கிளப்பப்படும் சந்தேகங்களுக்கும்
வதந்திகளுக்கும் பஞ்சம் இருக்கப் போவதில்லை.
இந்தக் கட்டுரை கூட நம்மை வந்து சேரும் செய்திகளிலிருந்தும்,
எனக்குத் தோன்றும் / அறிந்த அரசியல் பார்வையிலிருந்து மட்டுமே எழுதப்படுகிறது. இது
நடக்கலாம், நடக்காமல் போகலாம். நம் முன்னே உள்ள சாத்தியக்கூறுகள் என்ன என்பது பற்றி
மட்டுமே இக்கட்டுரையில் அலசப்படுகிறது.

ஜெயலலிதாவின் இறப்புச் செய்தியிலிருந்தே அடுத்தடுத்து நிகழ்ந்த
காட்சிகள் பலருக்கும் ஐயத்தை மட்டுமல்ல, அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எந்த நடராஜனையும்
சசிகலா குடும்பத்தினரையும் ஜெயலலிதா விலக்கி வைத்தாரோ அவர்களனைவரும் ஜெயலலிதாவின் பூத
உடலைச் சுற்றி நின்றிருந்தார்கள் என்பதிலிருந்தே அந்த அச்சம் எழுகிறது. சசிகலாவின்
ஆதிக்கமும் ஜெயலலிதாவுடனான அவரது நெருக்கமும் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கும்,
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் அச்சத்தை உண்டாக்கின என்பதை நாமறிவோம்.
சசிகலாவால் கட்சியில் பதவியை இழந்தவர்களும் உண்டு, பதவியைப் பெற்றவர்களும் உண்டு. ஜெயலலிதாவிற்குக்
கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், சசிகலா தலையீட்டால், அமைச்சராக இருந்தவர்கள் பலர்
பதவியை இழந்ததையும் நாமறிவோம்.
இவையெல்லாம் கடந்த கால வரலாறு. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
நாளிலிருந்து அவரது உடல்நிலை குறித்து வந்த செய்திகளில் ஆரம்பித்து, ஓ.பன்னீர் செல்வத்திடம்
ஒப்படைக்கப்பட்ட முதல்வர் பொறுப்பு உட்பட, மருத்துவமனையில் ஜெயலலிதாவின் உடல்நிலையை
அறிந்து கொள்வது வரையிலான தகவல்கள், எந்தெந்த அதிமுக தலைவர்களுக்குத் தெரியும் என்றுகூட
நமக்குத் தெரியாத வண்ணம் ரகசியம் காக்கப்பட்டது. முதல்வர் பொறுப்புகளை ஓ.பன்னீர்செல்வம்
கவனிப்பார் என்பதில் ஆரம்பித்து ஒ. பன்னீர்செல்வம் நடுஇரவில் அவசர அவசரமாக முதல்வர்
பதவிப் பிரமாணம் நடந்தது வரையுள்ள காட்சிகளுக்குப் பின்னாலிருக்கும் அரசியல் அந்தரங்கங்கள்
இனிமேல் மெல்ல மெல்ல வெளி வரலாம். அல்லது வெளியாகாமலேயேவும் போகலாம்.

எதிர்காலத்தில் என்ன அரசியல் மாற்றங்கள் நடக்கலாம்?

1.       ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையிலான இந்த ஆட்சி ஐந்து வருடத்திற்குத் தாக்குப்
பிடிக்காது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.
2.       தற்போதைய நிலையில் தமிழகத்தில் அடுத்த தேர்தல் என்பது உடனடி சாத்தியமில்லை என்பதும்
நிச்சயம். சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட அதிமுக, திமுக உறுப்பினர்கள்
அதை விரும்ப மாட்டார்கள். எனவே அவர்கள் யார் தலைமையில் ஆட்சி நடந்தாலும் ஏற்றுக் கொள்வார்கள்.
3.       அதிமுகவில் அடுத்து என்ன நடக்கிறது என்பதை திமுக, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள்
கூர்ந்து கவனிக்கும். பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுகவினர் தங்களுக்குள்ளாக அடித்துக்
கொள்கிறார்களா, கட்சி உடைகிறதா, தலைமைப் பொறுப்பையும், பொதுச் செயலாளர் பதவியையும்
யார் அலங்கரிக்கப் போகிறார்கள் என்பது வரை மௌனமாகவே கவனிப்பார்கள்.
4.       ஒருவேளை சசிகலா தரப்பு அப்பொறுப்புகளைப் பெற்றால், குறிப்பிட்ட கால இடைவெளிக்குள்
கட்சியை உடைக்கும் வேலையை திமுக ஆரம்பிக்கும். அல்லது பாஜகவும், காங்கிரசும் தனித்தனியே
அதற்கான நடவடிக்கையில் இறங்கலாம். அதிமுகவின் மீதான நம்பகத்தன்மையைக் குறைப்பதன் வாயிலாக
தமக்கான ஆதரவு கூடுமென பாஜகவும் காங்கிரசும் நம்பலாம்.
5.       திமுக என்ன செய்யும்? திமுக அடுத்த ஆறுமாதங்களுக்கோ, ஒரு வருடத்திற்கோ வேண்டுமானால்
அதிமுகவின் ஆட்சியை விட்டு வைக்கும். அதன் பின்னர் நிச்சயமாக அதிமுகவை உடைத்து நேரடியான
ஆட்சியில் அமரும் வாய்ப்புகள் அதிகம். இதில் காலதாமதம் ஆகலாம். அதிமுகவை ஐந்தாண்டுகளுக்கு
ஆட்சியில் தொடர விடுவது திமுகவிற்குத்தான் அதிக இடைஞ்சலை ஏற்படுத்தும். எனவே இந்த ஆட்சியை
உடைத்து, ஆட்சி அமைக்கத் தேவையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு உள்ளது எனச்
சொல்லிப் பதவியைப் பிடிக்கும்.
6.       அதிமுகவை ஐந்தாண்டுகள் ஆட்சியைத் தொடர விடுவது திமுகவைக் காட்டிலும் பாஜகவிற்கும்,
காங்கிரசிற்கும் இதர தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளுக்கும் எந்த லாபத்தையும் தராது
என்பதால் அவர்கள் திமுகவைக் காட்டிலும் அதிமுக எப்போது உடையும் என்று காத்திருப்பார்கள்.
அதாவது அதிமுக ஒன்றுபட்டு வலுப்படுவதை எந்தத் தமிழக கட்சியும் விரும்பப்போவதில்லை.
ஆனால் இதை முன்னின்று செய்யும் வலிமை பாஜகவின் கையில் மட்டுமே இப்போது உள்ளது. மத்தியில்
ஆளுங்கட்சியாக இருப்பதால் அதிமுகவைக் கட்டுக்குள் வைக்க முயல்வார்கள். காங்கிரஸ், திருநாவுக்கரசருக்கு
அதிமுகவிலிருந்து சில தலைவர்களையாவது காங்கிரஸ் பக்கம் கொண்டு வர வேண்டிய பொறுப்பைக்
கொடுக்கும்.
7.       இதனால் உடனடி மற்றும் நீண்டகாலப் பலனை அடையப் போகும் கட்சி திமுக மட்டுமே. குறைந்தபட்சம்
தமிழக அரசியலில் அதிமுக என்ற கட்சி உடைந்தாலே போதும், திமுகவின் ஆட்சி 2024 வரை உறுதியாக
இருக்கும் எனக் கணித்துவிட இயலும்.
அதிமுகவிற்குள் என்ன நடக்கலாம்?
1. கட்சி, ஆட்சி எனப் பங்கிட்டுக் கொண்டு இந்த ஐந்தாண்டு ஆட்சியை
நிறைவேற்ற முயலும் அதிமுக. அதற்கு சசிகலா தரப்பு இறங்கி வர வேண்டியிருக்கும். குறிப்பாக
கட்சியின் முக்கிய சாதித் தலைவர்களுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்குவதன் மூலமாக ஆட்சியை
நடத்தலாம்.
2. கட்சியை முழுமையாக சசிகலா கைப்பிடித்தால் ஜெயலலிதாவைப் போல
அவருக்கு யார் இடைஞ்சலாக இருந்தாலும் , அவர்களைக் கட்சியை விட்டுத் தூக்கி எறிவார்.
கட்சித் தலைவராக, பொதுச் செயலாளராக மட்டுமே சசிகலா தரப்பு ஆரம்பத்தில் இருக்க முயலும்.
அப்போது மட்டுமே இரட்டை இலை என்ற சின்னம் கிடைக்கும்.
3. இரட்டை இலை என்னும் சின்னத்தை வைத்திருப்பவர்களால் மட்டுமே
அதிமுக என்ற பெயருடன் கட்சியை நடத்த இயலும். அவ்வாறு சசிகலா சாதுர்யமாகச் செயல்பட்டு
தீவிர அதிமுக தொண்டர்களை அதிமுகவில் தொடரச் செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக
சாதிக் கட்சியாக சுருங்கி விடாமல், மற்ற சாதித் தலைவர்களுக்கும் முக்கியப் பொறுப்புகள்
வழங்கினால் அதிமுக என்ற கட்சி நிச்சயமாக எதிர்க் கட்சியாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
4. சசிகலாவிற்கு இருக்கும் மிக முக்கிய சவால், கட்சியைக் காட்டிலும்
கட்சிக்கு வெளியே மக்களிடம் அதிமுக மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதே. அதை வென்றெடுக்க
கடுமையான போராட்டக் குணம் வேண்டும். ஜெயலலிதாவிற்கு வேண்டுமானால் மத்திய அரசிடமிருந்தும்
பாஜகவிடமிருந்தும் கருணை கிடைத்திருக்கலாம். ஆனால் சசிகலாவிற்கு அது அவ்வளவு எளிதில்
நடக்காது. அதற்கு அவர் நிறைய விலை கொடுக்க வேண்டி வரும்.
5. அதிமுக என்ற கட்சியிலிருந்து முக்கியத் தலைவர்களும் இதர சாதித்
தலைவர்களும் வெளியேறினால் அதிமுக என்ற கட்சி தேய்ந்து மற்றவர் தலைமையை ஏற்கும் கட்டாயம்
கூட எதிர்காலத்தில் வரலாம். காலமும், சசிகலா தரப்பின் நடவடிக்கையும் மட்டுமே அதிமுகவின்
எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.

பாஜக என்ன செய்ய வேண்டும்?

மத்திய அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக அவசர அவசரமாகக்
காயை நகர்த்தினால் பாஜக வளராது. மேலும் அது பாஜக மீது கசப்பான எண்ணத்தையே மக்களுக்குக்
கொடுக்கும். இதனால் தமிழ்த் தேசியம் பேசும் மாநிலக் கட்சிகளுக்கும் திமுகவிற்குமே லாபம்
கிடைக்கும். தமிழகத்தில் பாஜக வளர வேண்டுமானால் அடுத்த ஒரு வருடத்திற்கு அதிமுகவை உடைக்கக்
கூடாது. இதற்கிடையில் பாஜக என்ன செய்யலாம்?
1. பாஜகவிலிருந்து முதல்வர் வேட்பாளர் யார் என
அடையாளப்படுத்த வேண்டும். மக்களை வசீகரிக்கும் நபராக, குறிப்பாகக் கட்சியைக் கட்டுக்குள்
வைக்கத் தெரிந்த தலைவராக இருத்தல் நலம் பயக்கும்.
2. முதல்வர் வேட்பாளராக ஒருவரை நியமித்த பிறகு
உட்கட்சிப் பூசல் இல்லாமல் அவரது தலைமையை ஏற்று, தலைமையால் தமிழகத்தைச் சிறப்பான மாநிலமாக
மாற்ற இயலும் என்ற நம்பிக்கையுடன் கூடிய பரப்புரைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
3. இந்தக் குறிப்பிட்ட காலத்திற்குள்ளாக RSS என்ற
அமைப்பு தமிழகம் முழுவதுமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அன்றாடப் பயிற்சிகள் வழங்கும்
ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
இயன்ற வரையில் மத்திய அரசின் சாதனைகள் எளிய மக்களுக்குச் சென்று
சேரும் வகையில் செயல்பட வேண்டும். குறைந்தபட்சம் ஒரு வருடமோ, இரு வருடங்களோ கழித்தே
அதிமுகவை உடைக்க வேண்டும். அதிமுக வலுவடைவதற்கு முன்பாகக் கட்சியிலிருந்து ஒரு சாராரைப்
பிரித்து பாஜகவுடன் கூட்டணி அமைக்கச் செய்யவேண்டும் அல்லது பாஜகவில் இணைக்கவேண்டும்.
தமிழகத்தில் பாஜக வளர்வது அத்தனை எளிதல்ல என்பதே யதார்த்தமான உண்மை.
அதைப் புரிந்து கொள்ளாமல் மத்திய அரசின் அதிகாரத்தின் வாயிலாகவோ, மோடியின் சாதனைகள்
என்று சொல்லியோ மட்டும் மக்களை நம்ப வைப்பது இயலாத காரியம்.
இதை உணர்ந்து ஆத்மார்த்தமான கடும் உழைப்பைக் கொட்டுவதன் வாயிலாக மட்டுமே பாஜகவை
கொஞ்சமேனும் வளர்க்க இயலும் என்பதே கள நிலவரம். பாஜக வளர்ந்து விடுமோ என்று அஞ்சுபவர்களுக்குக்
கூட, பாஜக கடந்த காலங்களில் வாங்கிய ஓட்டுகளை வைத்துப் பார்க்கும்போது, இது தமிழகத்தில்
செயற்கையாக ஊதிப் பெரிதாக்கப்படுகிற பலூன் என்பதும், பாஜகவால் மக்கள் செல்வாக்கைக்
கடந்த தேர்தல்களில் பெற இயலவில்லை என்பதே உண்மை என்பதும் தெரியும். அதற்கு மிக முக்கியக்
காரணம், ஜெயலலிதா என்ற ஆளுமை.
உயர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பலருக்கும் பாஜக
மீது நல்ல அபிப்பிராயங்கள் இருந்தாலும், தேர்தல் என்று வருகிற போது, திமுக வரக்கூடாது
என்ற ஒற்றைக் காரணத்திற்காகவும், வெல்லும் கட்சிக்கு ஓட்டுப் போடுவோம் என்ற எண்ணத்திலும்
ஜெயலலிதாவிற்கே வாக்களிக்க முடிவெடுத்தார்கள். பாஜகவை மட்டம் தட்டுபவர்களும் இதை உணர்ந்தே
உள்ளனர். பாஜக வளர்ந்து விடுமோ என்று அஞ்சுவதற்குக் காரணம் இந்தப் பயத்தினால்தான்.
இந்த அருமையான வாய்ப்பு எப்போதுமில்லாமல் இப்போது தமிழக பாஜகவிற்குக் கிடைத்துள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தனது தலைமையிலான ஓர் அணியை உருவாக்கி முதன்மை
எதிர்க்கட்சியாக அமையும் அரிய வாய்ப்பை பாஜக தவறவிட்டால், இதே போன்று இன்னொரு சந்தர்ப்பம்
எதிர்காலத்தில் கிடைக்காமலேயே போய்விடும்.
அதிமுகவால் பலன் அடையும் மற்ற கட்சிகள் எவை?
தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள், குறிப்பாக நாம் தமிழர் இளைஞர்களில்
ஒரு பகுதியினர் மீது மாற்று நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சிக்கலாம். ஜெயலலிதா இருந்தால்
வழக்குகள் பாயுமோ என்று அஞ்சியவர்களுக்கு இனி அந்தப் பயம் இருக்காது. ஆனால் என்னைப்
பொருத்தவரையில் மக்கள் தெளிவானவர்கள். இந்திய தேசியத்தையோ அல்லது இந்திய தேசியத்தோடு
அங்கமான அல்லது அங்கம் வகிக்கும் கட்சிகளையோ தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு
உள்ளது. தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி அரசியல் செய்வதும், ஈழத்தை வைத்து அரசியல்
செய்வதும் ஒன்றுதான்.
ஈழப் பிரச்சினை தமிழகத் தேர்தலில் எந்த மாற்றத்தையும்
கொண்டு வந்ததில்லை என்பதைக் கடந்தகால தேர்தல்கள் சொல்லிக்கொடுத்துள்ளன.
ஆனால் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள், வாஞ்சையாக, உள்ளூர்ப் பிரச்சனைகளை அதிகம்
முன்னெடுத்தால் அதற்கான சிறிய பலனை எதிர்காலத்தில் அடையும் சாத்தியக் கூறுகள் அதிகம்
என்பதை மறுக்க இயலாது. இத்தனை அரசியல் செய்தாலும் நாம் தமிழர் மூன்று சதவீத வாக்குகளுக்கு
மேல் பெறாது என்பதே நிதர்சனம்.
பாமக:
அன்புமணி ராமதாஸ் கடந்த சட்டசபைத் தேர்தலில் தோற்று இருக்கலாம்.
ஆனால் தமது கட்சியை மூன்றாவது பெரிய கட்சியாக அதுவும் தனித்து நின்று செய்துகாட்டினார்
என்பது சூசகமாக ஒரு செய்தியைச் சொல்கிறது. மாநிலம் தழுவிய அரசியலை முதன்முறையாகக் கடந்த
தேர்தலில் மட்டுமே பாமக செய்தது. ராமதாஸ் தமது அரசியல் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய
தவறே இதுதான். கட்சியை வட மாநிலங்களைத் தாண்டி கொண்டு போவதற்கு எந்த மெனக்கெடலும் செலுத்தாததுதான்.
தாமரை என்ற சின்னம் தெரிந்த அளவிற்குக் கூட மாம்பழம் தெரியாது என்பதே பாமகவிற்கான மிகப்பெரும்
பாதகம். நிச்சயமாக அவர்களின் வளர்ச்சி பெரிய அளவில் இருக்காது. ஆனால் அன்புமணி ராமதாசுக்கு
இணையான கவர்ச்சியான மக்கள் நம்பும் இளம் தலைவரை பாஜக போன்ற கட்சிகள் கொடுக்காமலே தற்போதைய
அரசியல் போல செய்து கொண்டிருந்தால் அன்புமணி சிறிது தாக்கத்தை ஏற்படுத்தி, கட்சிக்கான
வாக்குகளை அதிகரிக்க உதவுவார். எதிர்காலத் தேர்தல்களில் கூட்டணி வைக்கும்போது அதிக
சீட்டுகளைப் பெறவும், பதவிகளை அடையவும் மட்டுமே உதவும். மற்றபடி தமிழகத்தை ஆளும் கட்சியாக
வளர்வதற்கு பாமகவுக்கு வாய்ப்பே இல்லை.
காங்கிரஸ்:
காங்கிரஸ் எதிர்காலத்தில் எத்தகைய முயற்சிகளை எடுத்தாலும் தேர்தல்
நேரத்தில் திமுக அல்லது அதிமுக இரண்டில் ஒரு கட்சியைச் சார்ந்தே அரசியல் செய்யும்.
இயன்ற அளவிற்கு ஆளும் கட்சியாக வரும் வாய்ப்புள்ள திமுக பக்கமே சாய விரும்பும். ஆனால்
திமுக இனி காங்கிரசை வைத்துக் கொள்ளாது என்றே தோன்றுகிறது. காங்கிரசும் பாஜகவைப் போலவே
திமுக அதிமுகவிற்கு மாற்றாகத் தன்னை முன்னெடுக்கும் அரசியல் செய்ய முயற்சிக்கலாம்.
ஆனால் அது எந்தப் பலனையும் தமிழக காங்கிரசிற்குத் தராது. பெண்கள் நம்பிக்கையையும்,
இளைஞர்கள் நம்பிக்கையையும் ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் இழந்து நிற்கும் ஒரு கட்சியாகவே
காங்கிரஸ் உள்ளது.
தேமுதிக, கம்யுனிஸ்ட், மதிமுக கட்சிகள்:
ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை சாதிக் கட்சிகளான விடுதலைச்
சிறுத்தைகளும், பாமகவும் பயன்படுத்திக்கொள்வதைப் போல, கொங்கு வேளாளக் கட்சியும் பயன்படுத்திக்கொள்ளும்.
குறைந்தபட்சம் இளைஞர்களைத் தம் பக்கம் திருப்பும் வாய்ப்புகளையாவது பயன்படுத்தி வாக்கு
சதவீதத்தை உயர்த்திக் கொள்ள முயற்சிக்கும். அது ஓரளவு பலனளிக்கும். ஆனால் தேமுதிகவுக்கும்,
கம்யுனிஸ்ட் கட்சிகளுக்கும், மதிமுகவிற்கும் இதனால் எந்த லாபமும் கிடையாது. விஜயகாந்தின்
உடல்நலக்குறைபாடு, தேர்தல் கூட்டணி சார்ந்து அவர் செயல்பட்ட விதம், மேலும் அவரது மேடைப்
பேச்சுகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, தேமுதிகவைப் போல மக்கள் மத்தியில் குறைந்த
காலத்தில் நம்பிக்கையை இழந்த கட்சி தமிழக அரசியல் வரலாற்றில் வேறெந்தக் கட்சியும் இல்லை
என்று சொல்லலாம். கம்யுனிஸ்ட் கட்சிகளால் ஊடக விவாதங்கள் நடத்துபவர்களுக்கு மட்டுமே
லாபம். ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை விமர்சிக்கும் நல்ல பேச்சாளர்கள் கம்யுனிஸ்ட்
கட்சியைப் போல மற்ற கட்சிகளில் கிடையாது. விமர்சிப்பவருக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.
எந்தப் பொறுப்பும் இல்லையென்கிறபோது அது கேட்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் மக்கள்
மத்தியில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தாது. மக்களைப் பொருத்தவரையில் நீங்கள் என்ன
செய்தீர்கள் அல்லது என்ன செய்வீர்கள் என்பதை மனதிற்கொண்டே வாக்குகளைச் செலுத்துகிறார்கள்.
கம்யுனிஸ்ட் கட்சியைப் பொருத்தவரையில் காங்கிரசை திமுக வெளியே தள்ளினால் ஓடிப்போய்
ஒட்டிக்கொண்டு தேர்தலில் சில சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே பெற இயலும். மக்கள் நலக்கூட்டணி
போலப் புதிதாக முயற்சித்தால் 0.67 % வாக்குகள் மேலும் குறையும். மதிமுகவைப் பொருத்தவரையில்
வைகோவிற்கே அவரது உயரம் என்னவென்று புரிந்துவிட்டது. தமிழகத்தின் இன்னொரு கம்யுனிஸ்ட்
கட்சி எதுவென்றால் அது மதிமுகதான். போராட்டக் களங்களில் கம்யுனிஸ்ட் போல செயல்படுவார்
வைகோ. தேர்தல் கூட்டணியில் அவரைப் போல தவறான முடிவுகளை எடுத்த தலைவர்கள் எவரும் கிடையாது.
மதிமுகவிற்கு அதிமுக உடைவதாலோ ஜெயலலிதாவின் மறைவாலோ எந்த லாபமும் இருக்கப்போவது கிடையாது.

தமிழ்த் தேசியம் பேசுபவர்களை மத்திய அரசு கூர்ந்து கவனிக்க வேண்டும்.
அவர்களது செயல்பாடுகள் எல்லை மீறிப் போனால் கடும் நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள்
மேற்கொள்ள வேண்டும். இந்திய தேசியம் வலுப்படும் வகையிலான நம்பிக்கை நடவடிக்கைகளை மத்திய
அரசும், மாநில அரசுகளும் செயல்படுத்தினால் போதும். அந்த வகையில் தேசிய நீரோட்டத்தில்
கலந்து கொண்ட கட்சிகள் அதிமுக, திமுக. அவர்களின் வீழ்ச்சி முக்கியமல்ல. இந்திய தேசியத்தின்
ஒற்றுமை அனைத்தையும் விட முக்கியம். இந்திய தேசியம் மொழி உணர்ச்சிகளைத் தாண்டிய உன்னதமான
ஒன்று. அது ஒருபோதும் வீழாது. வீழக்கூடாது. இந்திய தேசியத்தை முன்னிறுத்தும் எந்தக்
கட்சி வளர்ந்தாலும், அதை வரவேற்று அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையுடன் தமிழக அரசியலை
அணுகுவோம்.
Posted on Leave a comment

GST ஒரு புரிதல் – லக்ஷ்மணப் பெருமாள்


 சரக்கு மற்றும் சேவை வரியின் (Goods and Services Tax) சுருக்கமே ஜிஎஸ்டி. மத்திய,
மாநில சரக்கு மற்றும் சேவை வரி 2014ம் ஆண்டு லோக்சபாவில் ‘122வது பாராளுமன்ற சட்டத்திருத்த
மசோதாவாக’ நிறைவேறியது. கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் தேதியன்று ராஜ்யசபையில் சில திருத்தங்கள்
சேர்க்கப்பட்டு அங்கும் நிறைவேறியது. அடுத்த இரு தினங்களில் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும்
லோக்சபாவிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நேரடி மற்றும் மறைமுக வரிகளை விதிக்கின்றன.
(1) பொருள் உற்பத்தி மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரி (Excise duty), (2) பொருள்
விற்பனை மீது மாநிலங்கள் விதிக்கும் விற்பனை வரி, (3) மாநிலங்களுக்கிடையே விற்பனை நடைபெறும்போது
எந்த மாநிலத்தில் விற்பனை ஏற்படுகிறதோ அம்மாநிலத்தால் விதிக்கப்படும் மத்திய விற்பனை
வரி, (4) சேவைகள் மீது மத்திய அரசு விதிக்கும் சேவை வரி, (5) சினிமா போன்ற பொழுபோக்கு
வியாபாரத்தின் மீது மாநிலங்களால் விதிக்கப்படும் கேளிக்கை வரி, (6) ஒரு மாநிலம் அல்லது
ஒரு உள்ளாட்சி தங்கள் பகுதிக்குள் வரும் பொருட்கள் மீது விதிக்கும் உள்ளூர் வரி அல்லது
ஆக்ட்ராய், (6) மாநிலங்கள் விதிக்கும் வாகன வரி எனப் பல வரிகள், பொருட்கள் மீதும் சேவைகள்
மீதும் விதிக்கப்படுகின்றன.
இதில் மத்திய அரசு விதிக்கும் பொருள் உற்பத்தி வரி, சேவை வரி, உற்பத்தி மற்றும்
சுங்கத்துறையில் விதிக்கப்படும் கூடுதல் வரி, செஸ், சிறப்பு கூடுதல் சுங்க வரி, சர்சார்ஜ்
உள்ளிட்ட அனைத்து பல்முனை வரிகளும் தொகுக்கப்பட்டு இனி ஒருமுனை வரியாக விதிக்கப்படும்.
மாநில அரசு விதிக்கும் மதிப்புக் கூட்டு வரி (வாட்), மத்திய வரி, வாங்கும்போது விதிக்கப்படும்
வரி, நுழைவு வரி, பொழுதுபோக்கு வரி, விளம்பரங்கள் மீதான வரி, லாட்டரி, பந்தயம், சூதாட்டம்
என மாநில அரசு விதிக்கும் பிற வரி விதிப்புகளுக்கு மாற்றாக இது அமையும். பல்வேறு பெயரில்
விதிக்கப்படும் நேரடி மற்றும் மறைமுக வரிவிதிப்பு முறைகளுக்கு மாற்றாக ஒருமுனை வரிவிதிப்பைக்
கொண்டுவருவதே இச்சட்டத்திருத்தத்தின் நோக்கம்.
வரி வசூலிக்கும் முறை
வரி வசூலிக்கும் முறை மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
1.    மத்திய சரக்கு மற்றும் சேவை வரி
– சிஜிஎஸ்டி (CGST) – மத்திய அரசு வசூலிக்கும்.
2.    மாநில சரக்கு மற்றும் சேவை வரி
– எஸ்ஜிஎஸ்டி (SGST) – மாநில அரசு வசூலிக்கும்.
3.    மாநிலங்களுக்கிடையேயான சரக்கு மற்றும்
சேவை வரி – (IGST) – மத்திய அரசு வசூலிக்கும்.
வரி வசூலிப்பு எவ்வாறு பங்கு செய்யப்படும்?
உதாரணமாக 19% GST வரி என்று எடுத்துக்கொள்வோம். ஒரு பொருள் ஒரு மாநிலத்தில்
உற்பத்தி செய்யப்பட்டு அதே மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்டால் அந்த 19% ஜிஎஸ்டி வரியானது
சிஜிஎஸ்டி (Central GST) என்றும், எஸ்ஜிஎஸ்டி (State GST) என்றும் பிரிக்கப்பட்டுச்
சமர்ப்பிக்கப்படும். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பங்குகள் செல்லும். மாறாக,
ஒரு பொருள் ஒரு மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வேறு மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்டால்,
அதற்கும் 19% ஜிஎஸ்டி. அதில் மத்திய அரசின் பங்கு மத்திய அரசுக்குச் செல்லும். ஆனால்,
மீதமுள்ள பங்கு எந்த மாநிலத்திற்கு விற்பனை செய்யப்பட்டதோ அந்த மாநிலத்திற்குச் செல்லும்.
இதனை ஐஜிஎஸ்டி என்ற பொதுக் கணக்கில் வரவு வைப்பார்கள். பின்பு பொருள் சென்று சேர்ந்த
மாநிலத்தில் உள்ள அரசுக்கு அந்த வரிப்பணம் சென்று சேரும்.
ஜிஎஸ்டியால் யாருக்கு லாபம்? யாருக்குச் சுமை?
ஜிஎஸ்டி
அறிமுகத்தால் இந்தியாவிற்கே லாபம்தான். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இதனால்
அதிகரிக்கும் (1 to 2%) எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்தப் புதிய சரக்கு மற்றும் சேவை வரியால் உற்பத்தி
பொருட்களுக்கான வரி குறைவதால், பொருட்களின் விலையும் குறையும். இதனால் நுகர்வோர் பெரும்
பலனை அடைவர். விலை குறைவதால் வாங்கும் திறன் அதிகரிப்பதும், அதனால் உற்பத்தி அதிகரிப்பதும்
இயல்பாகவே நடக்கும். தொழில் உற்பத்தியாளர்களுக்கான வரியும் குறைவதால் நிறைய முதலீடுகளும்
புதிய உற்பத்தி நிறுவனங்களும் பெருகும். போட்டி உருவாவதால் பொருள் விலை குறையும். ஏற்றுமதிப்
பொருட்களுக்கான போட்டிகள் அதிகரிக்கும். ஒருமுனை வரி செலுத்துவதால் பொதுமக்களுக்கும்
குழப்பங்கள் நீங்கும். வரி ஏய்ப்பும் இதனால் பெருமளவு குறைய வாய்ப்புள்ளது.
சிறு மற்றும் குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்கள் வளர GST மசோதா வழிவகுக்கிறது.
உற்பத்தி, வணிகம், நுகர்வில் உள்ள சிக்கலான தடைகள் விலகும். வியாபாரிகள் பலமுனை வரிவிதிப்பிலிருந்து
விடுபடுவதால் அவர்கள் சிரமமின்றி வரியைச் செலுத்த இயலும். மேலும் சிறுவியாபாரிகளுக்கு
இந்த GSTயிலிருந்து வரிவிலக்கு அளிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சேவைத்துறையை மட்டும் நம்பி வணிகம் செய்தவர்களின் வரி உயருவதால் அவர்களுக்கு
இது பாதிப்பைத் தரும். தற்போது 14%தான் சேவை வரி விதிக்கப்படுகிறது. இனி புதிய சதவீத
(குறைந்த பட்சம் 18% க்கும் மேல்) வரியைச் செலுத்த வேண்டி வரும். அதேபோல சில பொருட்களின்
விலை உயருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் சில்லறை வணிக வரி இரட்டிப்பாவதற்கான சாத்தியக்கூறுகள்
உள்ளன. இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியும் 6% வரை உயரும். அனைத்துத் துறைகளும்
மத்திய மாநில அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கும்.
GSTயிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள்:
1. மது. (ஆனால் மருந்துகள், சுத்தம் செய்யும் பொருட்களில் உபயோகிக்கும் ஆல்கஹாலுக்கு
விலக்குக் கிடையாது.). 2. பெட்ரோலியப் பொருட்கள்.3. டீசல் 4. புகையிலை
மேற்கூறிய பொருட்களை GST க்குள் கொண்டு வர மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன்
அடிப்படையில் தற்காலிகமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மது மற்றும் பெட்ரோலியம் மூலமாகவே
மாநில அரசுகளுக்குத் தேவையான 40-45% வருவாய் கிடைப்பதே எதிர்ப்பிற்குக் காரணம். பெட்ரோலியப்
பொருட்கள் GST வரையறைக்குள் வராத பட்சத்தில் அது முழுமையற்ற GST என்ற கருத்தும் உள்ளது.
வங்கிகளை GST வரைமுறைக்குள் கொண்டு வந்தால் வங்கிகளின் சேவைச் செலவும் கூடுமாதலால்
அதற்கும் விலக்கு அளிக்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சரக்கு மற்றும் சேவை வரியை எவ்வாறு நிர்ணயிப்பது?
மத்திய மாநில அரசுகளின் தற்போதுள்ள வரி வருவாயைப் பாதிக்காத வண்ணமும், எதிர்காலத்தில்
புதிய வரி வருவாயை அதிகரிக்கும் வண்ணமும், வரிவிகிதம் அதிகமாக இருக்க வேண்டும். இதைத்தான்
Revenue Neutral Rate என்கிறோம். இதனால்தான் ஜிஎஸ்டி வரி RNRஐப் பொருத்தது என்கிறோம்.
தற்போதுள்ள நிலையில் முக்கிய வருவாயுள்ள பெட்ரோலியம், மது போன்ற பொருட்களை
GSTயிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதால் RNR அதிகமாக இருக்கும். அதாவது சரக்கு
மற்றும் சேவை வரி 18% க்குள்ளாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே பணவீக்கத்தைக்
கட்டுக்குள் வைத்திருக்கமுடியும். RNR அதிகமானால் சரக்கு மற்றும் சேவை வரி அதிகமாகும்.
அதனால் தற்காலிகமாக அதிக பண வீக்கத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
பிரதமரின் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியம் இவ்வாறாகச் சொல்கிறார்.
“GSTக்கான வரி 18% ஆக இருப்பதே சிறந்தது. ஆனால் இதை மாநில அரசுகள் புரிந்துகொண்டதாகத்
தெரியவில்லை. அவர்களுக்கு அரசுக்கான வருவாயை அதிகரிக்க வரியை அதிகமாக்க வேண்டும். அப்படி
மட்டுமே அரசின் வருமானம் அதிகரிக்கும் என எண்ணுகிறார்கள். இதனால் இந்திய அளவில் பண
வீக்கம் அதிகரிக்கும் என்பதை உணரவேண்டும்” என்கிறார்.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் மதுவிற்கு விலக்கு அளித்துவிட்டுக் கொண்டுவரப்பட்டுள்ள
GST அர்த்தமற்றது என்ற குரல்கள் குறித்துக்கேட்டபோது மிக அழகான பதிலை முன்வைக்கிறார்.
“இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், அனைத்து மாநில அரசுகளையும் ஒருங்கிணைத்து
அவர்களின் ஒப்புதலுடன் முதலில் GSTயைக் கொண்டு வந்ததே மிகச் சிறந்த சாதனைதான். கூட்டாட்சித்
தத்துவத்தை மதித்துத்தான் திட்டங்களை அமல்படுத்த இயலும். அவ்வகையில் மாநில அரசுகளின்
அச்சத்தைப் போக்கித்தான் மத்திய அரசு செயல்பட முடியும். அதைத்தான் மோதியின் அரசு செயலாக்கி
உள்ளது. மேலும் எதிர்காலத்தில் மாநில அரசுகளே சில ஆண்டுகளுக்குப் பிறகு வருவாயைப் பொருத்தும்,
மக்கள் சுமையைப் புரிந்துகொண்டும் பெட்ரோலியப் பொருட்களையும் GST க்குக் கீழ் கொண்டு
வரச் சம்மதிப்பார்கள்.” எனவே பெட்ரோலியப் பொருட்கள் அல்லாத ஜிஎஸ்டி பயனற்றது என்ற வாதத்தைக்
காட்டிலும் முதல் நடவடிக்கையை எடுத்துள்ளோம் என்பதே முக்கியமானது. இது ஓர் இயக்கம்”
என்கிறார்.
உலக அளவில் சராசரியாக ஜிஎஸ்டி விகிதம் 16 to 20% ஆக உள்ளது. ஆஸ்திரேலியாவில்
10%, நியுசிலாந்தில் 15%, ஜப்பானில் 8%, ஜெர்மனியில் 23%, மலேசியாவில் 6% ஆக உள்ளது.
பிரான்ஸ், இங்கிலாந்தில் இரட்டை ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை உள்ளது. இந்தியாவும் ஜிஎஸ்டி
விகிதத்தை சராசரி நிர்ணய அளவான 20%க்கு மிகாமல் வைத்திருக்கவும், ஏழை மக்களைக் கருத்தில்கொண்டு
சில பொருட்களுக்கு அடிப்படை விகிதமான 14% மட்டுமே வைத்திருக்கவும் திட்டமிட்டுச் செயல்படுகிறது.
சில ஆடம்பரப் பொருட்களுக்கு அதிக விகிதத்தில் வரி விதிக்கலாமா என்ற யோசனையிலும் உள்ளது.
இதில் எந்தத் திட்டவட்டமான முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஜிஎஸ்டி கவுன்சில் கூடித்தான்
இந்த வரி அளவை நிர்ணயிக்க இயலும். ஜிஎஸ்டி விகிதம் அதிகமானால் நுகர்வோருக்கு அவநம்பிக்கை
ஏற்படும். இது அனைத்துத் துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
சிக்கலான வரி செலுத்தும் முறையா ஜிஎஸ்டி?
வரி செலுத்தும் முறையை எளிமைப்படுத்துவதற்காக ஜிஎஸ்டி நெட்வொர்க் (GSTN) என்ற
ஒரு நிறுவனத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து 2013லேயே ஆரம்பித்துவிட்டன. முழுவதும்
கணினி மயமான வரி செலுத்தும் முறையை இந்த நிறுவனம் ஏற்படுத்திவிட்டது. தங்கள் வரி வசூலிக்கும்
நிர்வாக அலுவலகங்களைக் கணினிமயமாக்கவும், அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் இந்
நிறுவனம் மாநிலங்களுக்கு உதவி செய்கிறது. பல தனியார்க் கணினி மென்பொருள் நிறுவனங்களும்
இந்த வேலையைச் செய்துள்ளன.
ஜிஎஸ்டி வரியை வங்கிகளில்தான் கட்டவேண்டும். இணையத்தள வங்கிச் சேவையில் வரி
செலுத்துவது ஊக்குவிக்கப்படும். இதற்காக மத்திய ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்குத்
தனியான பண வரிவர்த்தனை வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பங்குதாரராக மத்திய மாநில அரசு வங்கிகளின் பங்களிப்போடு,
தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி, எல்ஐசி ஃபினான்ஸ் கம்பெனி ஆகியவையும் பங்குதாரராக
இருக்கும். வேறெந்தப் பொதுத்துறை வங்கியும் பங்குதாரராக இல்லை. ஜிஎஸ்டி வரியை வசூலிக்க
ஆரம்பச் செலவாக 4,000 கோடி நிர்வாக முதலீட்டுத் தொகை தேவைப்படுகிறது. இதை முழுவதுமாக
அரசு வங்கியாலோ பொதுத்துறை வங்கியாலோ ஏற்க இயலாது என்பதால், தனியார் வங்கிகளின் பங்களிப்போடு
செயல்படும் வகையில், சிதம்பரம் அமைச்சராக இருந்தபோதே முடிவெடுக்கப்பட்டுவிட்டது.
GSTN ன் பங்குதாரராக மத்திய, மாநில வங்கிகளின் பங்கு 49 சதவீதமும், தனியார் வங்கிகளின்
பங்கு 51 சதவீதமும் இருப்பதைக் கடுமையாக எதிர்க்கிறார் சுப்பிரமணியம் சுவாமி. இதை எதிர்த்துப்
பிரதமருக்குக் கடிதமும் அனுப்பியுள்ளார். இது குறித்து முறையான நடவடிக்கையை நிதித்துறை
எடுக்காவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் எனக் கூறிவருகிறார் சுவாமி.
 ஜிஎஸ்டி கவுன்சில்
மத்திய மாநில அரசுகள் இணைந்தே வரிவிதிப்பில் மாற்றம் கொண்டுவர இயலும். மத்திய அரசு தன்னிச்சையாகச் செயல்படுவது கூட்டாட்சி
தத்துவத்திற்கு எதிரானது என்பதால் மாநில அரசுகளின் கோரிக்கைகளும் கேட்கப்பட்டு ஒரு
பொதுவான/ சமரசமான முடிவுகள் எட்டப்பட ஒரு கவுன்சில் அமைக்கப்படும். அதுவே GST கவுன்சில்.
அதன் தலைவராக மத்திய அரசின் நிதி அமைச்சர்
இருப்பார். இதன் உறுப்பினர்களாக அனைத்து மாநில நிதி அமைச்சர்களோ, வருவாய்த் துறையைச்
சார்ந்த அமைச்சர்களோ நியமிக்கப்படுவார்கள். சட்ட வரைவை மாற்ற வேண்டுமென்றால், குழுவிலுள்ள
உறுப்பினர்களில் நான்கில் மூன்று பங்கு ஓட்டுக்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம். கூட்டாட்சித்
தத்துவத்தை நிரூபிக்கும் வகையில் மூன்றில் ஒரு பங்கு ஆதரவு வாக்குகள் மத்திய அரசிடமும்,
மூன்றில் இரு பங்கு வாக்குகள் மாநிலங்கள் வசமும் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது சட்டவரைவிலோ, தற்போது ஜிஎஸ்டி வரையறைக்குள் வராத பொருட்களை எதிர்காலத்தில் கொண்டுவரவேண்டுமானால்
குறைந்த பட்சம் 75% வாக்குகளைப் பெற்றிருந்தால் மட்டுமே மாற்றம் கொண்டு வர இயலும்.
எளிதாக விளக்க வேண்டுமானால் 19 மாநிலங்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே மத்திய அரசால்
மாற்றங்களைக் கொண்டுவர முடியும். அதேபோல மாநிலங்களைப் பொருத்தவரையில், 12 மாநிலங்களின்
ஆதரவு இருந்தால் மத்திய அரசின் விருப்பப்படி நடக்காமல் தடுத்துவிட இயலும்.
மாநில உரிமைகளை ஜிஎஸ்டி சட்டம் பறிக்கிறதா?
ஜிஎஸ்டியை ஏப்ரல் 2017 முதல் நடைமுறைக்குக் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
அதற்கு முன்பாகக் குறைந்தபட்சம் 50%க்கும் கூடுதலான மாநிலங்கள் இந்த சட்டவரைவை ஏற்றுக்கொள்வதாகச்
சட்டசபையில் சட்டமாகக் கொண்டுவரவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மாநில உரிமைகள்
எவ்விதத்திலும் பாதிக்கக்கூடாது என்ற வகையில்தான் இந்த ஏற்பாடு.
அதிமுகவைத் தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் ஜிஎஸ்டி மசோதாவை ஏற்று ராஜ்யசபாவில்
வாக்களித்திருந்தது. இதனைத் தொடர்ந்து இதுவரையிலும் 23 மாநிலங்கள் GST யில் சேர்வதை
உறுதிசெய்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுள்ளது. தமிழகம் தவிர்த்து அனைத்து
மாநிலங்களும் வெகுவிரைவில் தீர்மானம் நிறைவேற்றிட உறுதி கொண்டுள்ளன. இந்தியாவில் கூட்டாட்சித்
தொடர்பான ஷரத்துகளில் மாற்றம் கொண்டுவரவேண்டுமானால் சட்டத்திருத்த மசோதாவாக மட்டுமே
கொண்டுவர இயலும். எனவேதான் சட்டத்திருத்தம் 368 அறிமுகப்படுத்தப்பட்டு 122வது சட்டத்திருத்த
மசோதாவாக இது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டியை எதிர்ப்பதற்கு அதிமுக கூறும் காரணங்கள்:
அதிமுகவின்
எதிர்ப்பினை முற்றிலும் புறந்தள்ளவிட முடியாது. அதில் நிச்சயமாக மாநில நலன் அடங்கியுள்ளது.
அதேபோல முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
அதிமுக எதிர்ப்பதில் மிக முக்கியமான அம்சமாக இருப்பது, பொருள்
ஏற்றுமதி (IGST Inter State GST) வரியின்கீழ் கூடுதலாக 2% வரியை மாநிலங்கள் நேரடியாக
இதுவரையிலும் வசூலித்து வந்தன. பாஜக தனது ஆரம்ப சட்டவரைவில் இதை 1% இருக்குமாறு வைத்திருந்தது.
ஆனால் காங்கிரஸ் மற்றும் நுகர்வோர் மாநிலங்கள் காட்டிய எதிர்ப்பின் காரணமாக IGSTயிலிருந்த
1% வரியை நீக்க ஒப்புக்கொண்டுவிட்டது. மத்திய அரசே வசூலித்துப் பின்னர் பொதுக் கணக்கை
உருவாக்கி, நுகர்வோர் மாநிலத்திற்கும் உற்பத்தி மாநிலத்திற்கும் கொடுக்குமெனச் சட்டவரைவில்
திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு உற்பத்தி மாநிலமாக இருப்பதாலும், உற்பத்திப்
பொருட்களுக்கான புதிய வரி குறைவதாலும் மாநில அரசிற்கு ஆண்டிற்கு 9200 கோடி ரூபாய் இழப்பு
ஏற்படுவதைக் காரணமாகச் சொல்கிறது அதிமுக.
தன் மாநில நலன்கருதி அதிமுக முன்வைத்த குற்றச்சாட்டு மிகச் சரியானதே. இதேபோல
மகாராஷ்டிராவிற்கு ஆண்டிற்கு 20,000 கோடி ரூபாயும், குஜராத்திற்கு 10,000 கோடி ரூபாயும்,
ஹரியானாவிற்கு 3,000 ரூபாய் கோடிக்கு மேலாகவும் இழப்பு ஏற்படலாம். மற்ற மாநிலங்களை
பிஜேபி ஆள்வதால் மௌனம் காக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அந்தக் கட்டாயம் அதிமுகவிற்குக்
கிடையாது. மாநிலங்களுக்கான இந்த இழப்பை மத்திய அரசு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஈடுசெய்யும்
என்ற உறுதியையும் கொடுத்துள்ளது. தற்போது மாநிலங்களுக்குச் சேவை வரி மூலம் கூடுதல்
வருவாயும் வர வாய்ப்புள்ளது. தமது மாநில நலனை முன்வைத்து எதிர்ப்பை அதிமுக பதிவு செய்ததை
வரவேற்கலாம். ஆனால், மத்திய அரசே GST கவுன்சிலில் இருக்கக்கூடாது என்றும், ஏற்கெனவே
இருந்த Empowered Committee மட்டுமே போதுமானது என்றும், ஜிஎஸ்டி மாநில உரிமைகளைப் பறிக்கிறது
என்றும், மாநிலப் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பாதிக்கிறது என்றும் அதிமுக சொல்வதை ஏற்க
இயலாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஓட்டு என்ற முறையை அதிமுக எதிர்க்கிறது. அதிமுகவின்
வாதம், இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% வரை உற்பத்தி செய்யும் மாநிலத்திற்கும்,
குறைந்த உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கும், சரிசமமாக ஒரே ஓட்டு என்பது சரியானதல்ல
என்பதுதான். மேலும், மக்கள்தொகை விகிதத்தைக் கணக்கில் கொள்ளாமல் அனைத்து மாநிலங்களுக்கும்
ஒரே விதமாக ஒரு ஓட்டு என்ற முடிவை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளது அதிமுக.
அதிமுகவின் எதிர்ப்பால் தற்போதைய நிலையில் எந்தப் பலனும் கிடையாது. மேலும் உற்பத்தி
மாநிலங்களைக் காட்டிலும், மக்கள்தொகை அதிகமான உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம்,
மத்தியப் பிரதேசம், ஒடிஸா, கேரளா போன்ற மாநிலங்கள் நுகர்வோர் மாநிலங்கள் என்ற இடத்தில்
இருப்பதால்தான் அந்த மாநிலங்கள் இது மாநில அதிகாரத்தைப் பறிப்பதாகப் பார்க்கவில்லை.
மற்ற மாநிலங்களைப் பொருத்தவரையில், மாநிலங்களுக்கு 2/3 பங்கு அதிகாரமுள்ளது என்பதால்,
தமது அதிகாரம் அதிகமாக இருப்பதாக நம்புகிறது. தத்தம் மாநிலங்களுக்கு வருமானம் அதிகமாக
புதிய GST வரிவிதிப்பு முறை உதவும் என்பதால்தான் மத்திய அரசுடன் ஒத்துழைத்துள்ளன என்பதைப்
புரிந்துகொள்ள வேண்டும். மேலும், பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டிக்குக் கீழ் கொண்டுவரக்கூடாது
என்றும் அதிமுக தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டியை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்ற முனைப்போடு
மத்திய அரசு செயல்படுகிறது. மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பையும் இவ்விஷயத்தில் பெரும்பாலான
மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. ஜிஎஸ்டி கவுன்சில் கூடி மக்கள் ஏற்றுக்கொள்ளும்படியான
வரிவிகிதத்தை அமைக்க வேண்டும். ஏழைகளைக் கணக்கில்கொண்டு அத்தியாவசியப் பொருட்களுக்கு
குறைந்தபட்ச வரி மட்டுமே விதிக்கப்படவேண்டும்.
எந்த வகையில் பார்த்தாலும் இந்தியாவின் புதிய வரிக்கொள்கை வரவேற்கப்படவேண்டியதே.
அற்ப அரசியல் காரணங்களைக் காட்டிலும், புதிய சரக்கு மற்றும் சேவை வரியால், பொதுமக்கள்
பெருவாரியான விஷயத்தில் பலனடைவார்கள். உலகப் பொருளாதார வளர்ச்சியில் தேசம் முக்கிய
இடத்தைப் பெறும். இந்த எளிய காரணங்களை முன்வைத்து ஒவ்வொரு இந்தியனும் இதைத் தாராளமாக
ஆதரிக்கலாம். பல ஆண்டுகளாக இழுத்து வந்த விஷயத்தை மோதியின் அரசு திறம்பட மாநில அரசுகளை
அனுசரித்து கூட்டாட்சித் தத்துவத்தைக் காக்கும் வகையிலும் இந்தியாவின் எதிர்காலப் பொருளாதார
வளர்ச்சியைக் கணக்கில்கொண்டும் இதை ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டிற்குள்ளாகக் கொண்டுவந்து
சாதனை படைத்துள்ளது.
உசாத்துணைகள்: