Posted on Leave a comment

அஞ்சலி: சுஷ்மா ஸ்வராஜ் | SG சூர்யா



(ஓவியம்: லதா ரகுநாதன்)


1952ம்
ஆண்டு பிப்ரவரி 14ம் நாள், திரு. ஹரதேவ் ஷர்மா மற்றும் திருமதி லக்ஷ்மி தேவி ஆகியோருக்கு
மகளாகப் பிறந்தவர் சுஷ்மா ஸ்வராஜ். இவரது தந்தை சிறு வயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில்
இருந்தவர். சமஸ்கிருதம் மற்றும் பொலிட்டிக்கல் சயின்ஸ் பிரிவுகளில் பட்டம் பெற்ற இவர்,
சட்டமும் பயின்றார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யா பரிஷத்
(ABVP)ல் 1970 முதல் சேவை புரியத் துவங்கினார். 1973 முதல் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகப்
பணியாற்றத் துவங்கினார்.
இந்திரா
ஆட்சி செய்தபோது, காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நெருக்கடி நிலையால் பல இன்னல்களை சந்தித்த
இவர், பா.ஜ.கவில் இணைந்து படிப்படியாக உயரத் துவங்கினார். 1977 முதல் 1982 வரை மற்றும்
1987 முதல் 1990 வரை இரண்டு முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். 1977ல் ஹரியானா மாநில
அமைச்சரவையில் பங்குபெற்றார். 1979ம் ஆண்டு ஹரியானா மாநில பா.ஜ.க தலைவராகப் பொறுப்பேற்றார்.
1990ம் ஆண்டு ராஜ்ய சபா எம்.பியாக பதவி ஏற்றார். 1998ம் ஆண்டு டெல்லியின் முதல் பெண்
முதலமைச்சராகப் பதவி ஏற்றார்.
தகவல்
தொடர்புத் துறை, தொலைத்தொடர்புத் துறை, சுகாதாரத்துறை, குடும்ப நலத்துறை, வெளியுறவுத்
துறை எனப் பல்வேறு துறைகளில் மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இவர் சுகாதாரத்துறை அமைச்சராக
இருந்தபோதுதான் போபால், ஒடிசா, ராஜஸ்தான், பீகார், சட்டிஸ்கர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில்
எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தார்.
கடந்த
பா.ஜ.க ஆட்சியில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக
இருந்தார். இன, மத வேறுபாடின்றி உலகெங்கும் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை ஒரு வெளியுறவுத்துறை
அமைச்சராக உறுதி செய்தார். ட்விட்டர் மூலம் அனைத்து இக்கட்டான பிரச்சினைகளுக்கும் எளிதில்
தீர்வு கண்டார்.
இலங்கை பிரச்சினையில் சுஷ்மாவின்
அணுகுமுறை
சுஷ்மா
ஸ்வராஜ் குறித்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில் “இலங்கையில்
தமிழ் மக்களின் பிரச்சினைக்காக உணர்வுபூர்வமாக குரல் கொடுத்த ஒரு தலைவர் அவர். சுஷ்மா
ஸ்வராஜ் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இந்திய நாடாளுமன்றக் குழுவிற்குத் தலைமை
தாங்கி இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அப்போது, இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சினை
தொடர்பாக காத்திரமான அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தார். மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில்
இரா.சம்பந்தனுடன் இணைந்து விரைவில் அரசியல் தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தி ஒரு சுமூகமான
உடன்பாடு காண வழி செய்தார். வெளியுறவு அமைச்சராக இருந்தபோது தமிழ் மக்களின் பிரச்சினையில்
மிகக் கவனமாகச் செயற்பட்ட ஒரு தலைவராவார். குறிப்பாக இலங்கைக்கு வருகை தந்த அனைத்து
சந்தர்ப்பங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்க அவர் தவறியதில்லை. இந்திய
மீனவர்கள் இடைடேயான மீனவர்கள் பிரச்சினையில் இவரது தலையீட்டிலேயே இழுவைப்படகுகள் முற்றாகத்
தடை செய்யப்பட்டன. அவை தொடர்பான முழுமையான அறிக்கையும் இவரால் வெளியிடப்பட்டது. நியாயத்தின்
பக்கம் நின்று கடைசி வரை போராடியவர் அவர்” என தெரிவித்துள்ளார்.
04/02/2011
வேதாரண்யம், பூங்காவனம் என்ற பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்
கொல்லப்பட்ட போது, பாதிக்கப்பட்ட அனைவரின் வீடுகளுக்கும் சென்று குடும்பத்தினருக்கு
ஆறுதலும், உதவித்தொகையும் வழங்கியதோடு, இந்தப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில்
கேள்வி எழுப்புவேன் எனக் கூறிச் சென்றார்.
பாராளுமன்றத்தில்
இலங்கை அரசுக்கு வெளிப்படையாக எச்சரிக்கை செய்தது மட்டுமல்லாமல், இந்தியாவுக்கான இலங்கைத்
தூதரை அழைத்து, “இனியும் இது போன்று நடக்கும் என்றால் அதற்கான எதிர்வினையை இலங்கை சந்திக்கத்
தயாரக இருக்க வேண்டும்” என எச்சரிக்கை செய்தார். அதுவரை தமிழக மீனவர்கள் என்றிருந்த
நிலையில் இந்தியத் தமிழ் மீனவர்கள் என்ற சொல்லைப் புதிதாகப் பயன்படுத்தியவர் சுஷ்மா
ஸ்வராஜ் அவர்கள். நமது மீனவர்கள் இலங்கையினால் பாதிக்கப்பட்டபோது அடுத்த நாளே தானாக
முன்வந்து டெல்லியில் மாபெரும் கண்டனக் கூட்டத்தை சுஷ்மா ஸ்வராஜ் நடத்தினார்.
31/01/2014ல்,
இராமேஸ்வரத்தில் நமது மீனவ சகோதரர்களின் நல்வாழ்விற்காக தமிழக பா.ஜ.க கடல்தாமரை மாநாடு
நடத்தியபோது, அதில் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், பா.ஜ.கவின் அரசு
ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களுக்காகத் தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று அங்கேயே அறிவித்தார்.
இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி மீனவர்களின் நலனுக்காகத் தனி அமைச்சகம் அமைத்து
மீனவ சமுதாயத்தைப் பெருமைபடுத்தியுள்ளார் என்றால் அதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர்
சுஷ்மா ஸ்வராஜ்தான்.
பிரதமர்
நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு 2014ல் பதவி ஏற்ற பின்பாக, மத்திய வெளியுறவுத்துறை
அமைச்சர் பொறுப்பு வகித்த சுஷ்மா ஸ்வராஜ், இந்தியாவின் கௌரவத்தையும், பெருமையும் உலக
அரங்கில் நிலைநாட்ட தனது முழு கவனத்தையும் செலுத்தி ஓய்வின்றிப் பணியாற்றினார். தனது
சிறுநீரகம் முழுமையாகப் பாதிக்கப்பட்டு மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்ட பின்பும் கூட
தனது பணியை அவர் நிறுத்தவில்லை.
சுஷ்மா
ஸ்வராஜ் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், இலங்கை மற்றும் இந்தியத்
தமிழ் மீனவர்களுக்கிடையே 7 முறை நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இலங்கை மற்றும்
இந்திய அரசுக்கிடையே மீனவர்கள் நலன் குறித்து 6 முறை பேச்சுவார்த்தை நடந்தது. நமது
மீனவர்களின் துயரத்தை நிரந்தரமாகப் போக்க, ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக இந்திய, இலங்கை
அரசுகளின் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு 3 மாதங்களுக்கு ஒருமுறை இக்குழு சந்தித்து
விவாதிக்க வேண்டும் என்பதோடு, அதிகாரிகள் மட்டத்திலும் 3 மாதங்களுக்கு ஒருமுறை சந்திக்கவும்
ஏற்பாடு செய்தார்.
ரூபாய்
1500 கோடியில் இந்தியத் தமிழ் மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு வசதியாகப் படகுகளைக்
கட்ட அவர் திட்டத்தை வகுத்துக் கொடுத்து, அதற்கான பணிகள் நடைப்பெற்று வருகின்றன. பிரதமர்
நரேந்திர மோடியின் அரசு பதவி ஏற்றவுடன், அதுவரை ஒரு வருடத்திற்கும் மேலாக இலங்கைச்
சிறையில் அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வைத்ததுடன்,
இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நமது மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க ஏற்பாடு
செய்தார். ஈரான், பஹ்ரைன், செஷல்ஸ், இலங்கை, ஏமன் போன்ற பொல்வேறு நாடுகளில் சிறை பிடிக்கப்படும்
நமது மீனவர்களை மீட்க உறுதுணையாக நின்றார்.
நம்முடைய
மீனவர்கள் இலங்கை அரசினால் தொடர்ந்து சிறை பிடிக்கப்படும் போது, நமது மீனவர்களைக் கொஞ்சம்
கைதாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள், நான் ஒவ்வொரு முறையும் நமது மீனவர்களின் விடுதலைக்காக
இலங்கை அரசிடம் மடிப்பிச்சை கேட்பது போலக் கேட்கிறேன் எனப் பலமுறை கூறியுள்ளார். பெற்ற
தாய் தன் மகனுக்குக் கஷ்டம் வரும்போது எப்படித் துடிப்பாளோ அந்த உணர்வை, அந்தத் தாய்
உள்ளத்தை சுஷ்மா ஸ்வராஜ் அவர்களிடம் நான் எப்போதும் கண்டுள்ளேன் என முன்னாள் அமைச்சரும்,
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
வீரமங்கை
சுஷ்மா
ஸ்வராஜ் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், வெளிநாட்டில் சிக்கித்
தவித்த ஏராளமான இந்தியர்கள் தாய் நாடு திரும்ப பெரும் உதவியாக இருந்துள்ளார். ஏராளமானோருக்கு
அவர் பெரும் உதவி புரிந்துள்ளார். செவ்வாய் கிரகத்தில் சிக்கித் தவித்தாலும், இந்திய
வெளியுறவுத்துறை உங்களுக்கு பக்கபலமாக நின்று உதவும் என்றும், நான் காப்பாற்றுவேன்
என்றும் மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
80 ஆயிரம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களை
சிக்கல்களில் இருந்து மீட்டுத் தாயகம் கொண்டு வந்து சேர்த்தவர்: பிரதமர் மோடி புகழாரம்
பிரதமர்
மோடி சென்ற ஆண்டு அமெரிக்கா சென்றிருந்தபோது வாஷிங்டன்னில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின்
சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மோடி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
“உலகில்
எந்த மூலையில் இந்தியர்களுக்குப் பாதிப்பு என்றாலும் சமூக வலைத்தளம் மூலம் தகவல்களைப்
பெற்று உடனடி நடவடிக்கையை மத்திய வெளியுறவுத்துறை எடுத்து வருகிறது. சுஷ்மா சுவராஜுக்கு
யாராவது தகவல் அனுப்பினால் அடுத்த 15 நிமிடத்தில் அவர் அதற்கு பதில் அளிக்கிறார். இரவு
2 மணிக்கு கூட அவருக்குத் தகவல் அனுப்பினாலும் அதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த 3 ஆண்டில் இந்தத் துறை பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. உலகம் முழுவதும்
80 ஆயிரம் இந்தியர்கள் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியபோது அவர்களை பத்திரமாக தாயகத்திற்கு
திரும்ப அழைத்து வரப்பட்டனர். பாகிஸ்தானில் உஷ்மாஅகமது என்ற இந்திய பெண் துப்பாக்கி
முனையில் கட்டாயமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். இந்தியாவின் மகளான அவரை பத்திரமாக
இந்தியாவிற்கு திரும்ப அழைத்து வந்தோம். இதற்கு சுஷ்மா சுவராஜ்தான் காரணம்.”
காதலியைப் பார்க்கச் சென்று பாகிஸ்தான்
சிறையில் வாடிய இளைஞரை மீட்டவர்
மும்பையைச்
சேர்ந்தவர் ஹமீது நேஹல் அன்சாரி. பொறியாளரான இவருக்கு பேஸ்புக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்த
பெண் ஒருவர் தோழியாக அறிமுகமானார். அங்குள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள கரக்
நகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணும் அன்சாரியும் தினமும் சாட் செய்தனர். நட்பு காதலாக மாறியது.
இந்நிலையில்
திடீரென அந்தப் பெண், அன்சாரியுடனான நட்பைத் துண்டித்தார் இதனால் சோகமான அன்சாரி தனது
தோழியை சந்திக்க ஆப்கானிஸ்தான் வழியாக 2012ம் ஆண்டு பாகிஸ்தான் சென்றார். கரக் நகரில்
அவரை பாகிஸ்தான் போலிஸார் கைது செய்தனர். ஆவணங்கள் இல்லாமல் உளவு பார்க்கச் சென்றதாகக்கூறி
பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் 2015ம் ஆண்டு அவருக்கு மேலும் 3 ஆண்டு சிறைத் தண்டனையை
வழங்கியது.
அவரை
விடுவித்து இந்தியா அழைத்து வர அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பெரும்
முயற்சி மேற்கொண்டார். பெஷாவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, உத்தரவு பெற்று, அன்சாரி
இந்தியா அழைத்து வரப்பட்டார்.
இந்தியா
மீட்டுவரப்பட்ட அவர், முதலில் சந்தித்தது சுஷ்மாவைத்தான். அவரது சந்திப்பு உருக்கமானதாக
இருந்தது. ஒட்டுமொத்த இந்தியாவும் சுஷ்மாவைப் பாராட்டியது. இந்தநிலையில் சுஷ்மா ஸ்வராஜ்
மறைந்த செய்தி கேட்டு அன்சாரி பெரும் சோகத்துக்கு ஆளாகியுள்ளார். இதுகுறித்து அவர்
கூறியதாவது:
‘சுஷ்மா
ஸ்வராஜ் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவரது இழப்பை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.
நான் நாடு திரும்ப அவர் செய்த உதவிகள், அவரின் முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல.’
எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளை அரவணைத்த
சுஷ்மா
கேரள
மாநிலம் கொச்சியில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பென்சன், பென்சி ஆகியோர்
அவர்கள் பயின்ற தனியார் பள்ளியிலிருந்து 2003ல் வெளியேற்றப்பட்டனர். அந்தக் குழந்தைகளுக்கும்
எய்ட்ஸ் நோய் ஏற்பட்டிருப்பதால் மற்றவர்களுக்கும் இது பரவிவிடும் என்ற அறிவியலுக்குப்
புறம்பான அச்சத்தின் காரணமாக, இந்த ஈவு இரக்கமற்ற நடவடிக்கையை அப்பள்ளி நிர்வாகம் மேற்கொண்டது.
இந்தத்
தகவல் தெரியவந்ததை அடுத்து, அப்போதைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா
ஸ்வராஜ், நேரடியாக கொச்சிக்குச் சென்று அந்தக் குழந்தைகளைக் கட்டியணைத்து முத்தமிட்டார்.
தொடுவதாலும், முத்தமிடுவதாலும் எய்ட்ஸ் நோய் பரவாது என்பதை உணர்த்துவதற்காக சுஷ்மா
அவ்வாறு செய்தார். இந்தச் சம்பவத்துக்கு பிறகு, அந்தக் குழந்தைகள் மீண்டும் பள்ளியில்
சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
உலகப் பெண்களின் உள்ளத்தைத் தொட்ட
சுஷ்மா
சுஷ்மா
சுவராஜ் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மூத்த ஆலோசகரும், மகளுமான
இவாங்கா டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், “சுஷ்மா
சுவராஜ் மறைவால் கருணையும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட தலைவரை இந்தியா இழந்துவிட்டது.
அவர் இந்தியப் பெண்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கும் ஆதரவாகப் போராடக்கூடியவராக
இருந்தார். அவரை தெரிந்து வைத்திருப்பது கவுரவமான விஷயம்” என்று கூறியுள்ளார்.

சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின்
இழப்பு இந்தியாவுக்கும் பாஜகவுக்கும் பேரிழப்பு.

Posted on Leave a comment

ஒரு நொடி [சிறுகதை] – லதா ரகுநாதன்

கண்ணாடியில் தீர்க்கமாகப் பார்த்தாள். கறுப்புக்கண்களில் எப்போதும் தெரியும் மெல்லிய சோகம் ஒரு அழகு. அது பளபளப்பாகத் தெரியும்படி அதில் காணப்படும் ஒரு திரை போன்ற கண்ணீர் அந்தக் கண்களுக்கு வரம். சற்றே தூக்கலான சிறிய மூக்கு, நேர்த்தியான சிவப்பு. சும்மா சொல்லக்கூடாது. அழகுதான்.

ஆனால் இன்று…

ஏதோ ஒரு முன்பகல் நேரம். வேலை, அது எப்போதும் ஒன்றேதான். இப்படிப் போகும்போது ஒருமுறை , திரும்பி வரும்போது இன்னும் கொஞ்சம் அதிக நேரம் நின்று, சில போது பற்பசை விளம்பரம் போல் சிரித்து, சில முறை குரங்குபோல் முகம் குவித்து, அட, எல்லாம் கண்ணாடி முன்தான்.

அன்றும் அதே போல் ஒரு நேரத்தில், முகத்தை இப்படிச்செய்து ரசித்துக்கொண்டிருக்கும்போது, அழகிய மூக்கின் கீழ், சிவந்த உதட்டின் மேல், லேசாக கறுப்போடி இருப்பதுபோல் தெரிந்தது. ஒரு கைதேர்ந்த புகைப்படக்காரரின் படைப்பில் தூக்கலாகத் தெரியும் கறுப்பு வெள்ளை போல். ஆமாம்,லேசாகப் பூனைமயிர் போல். அதேதான். வெள்ளை முகத்தில் கொஞ்சம் தெளிவாகவே.

கடவுளே, மீசையா? எனக்கா?

இதற்குப்பின், ஆமாம், நீங்கள் நினைத்தது மிகவும் சரி. கண்ணாடி முன் நிற்கும் காலநேரம் கூடிப்போனது. பார்வையின் ஃபோகஸ், இப்போது இடுப்பில் இருக்கும் மடிப்பு, லேசாக உப்பித்தெரியும் மேல்தொப்பை, சீப்புப்பல்களில் சிக்கிச்சுற்றிய தலை முடி, இவையாவும் இல்லாதுபோய், மேல் உதடு மட்டுமே என்று மாறிப்போனது.

“அம்மா. என்னைப் பாரேன்.” “புதுசா என்ன? பாத்துக்கிட்டேதான் இருக்கேன்.” “முகத்துலே ஏதேனும் மாறுதல்?” “ஏண்டி? பல்லெல்லாம் விழுந்து மொளச்சாசில்ல… இப்ப என்ன கேடு?” “அம்மா… பாரு… உதட்டுக்கு மேல பாரு.” சாளேச்வரம் மிகுதியால் போடப்பட்ட சோடாபுட்டி வழி பூதாகரமாகத் தெரிந்த கண்கள் அவள் மிக அருகில்.

“ஒண்ணுமில்லையே…” “சரியாப்பார்… மீசைமா.”

ஒன்றும் புரியாமல் கண்களை அபாரமாகப் பெரியதாக்கி, திருஷ்ட்டிப் பூசணிக்காய் போல் அளித்த காட்சி, அவளுக்கு கொஞ்சம் குதூகலமளித்தாலும், முகத்தில் உள்ள பிரச்சினை மிக முக்கியமான ஒன்றாகத் தோன்றியதால் சிரிக்காமல் முகத்தைக் கொஞ்சம் கடுமையாகவே வைத்துக்கொண்டாள். “ஆமா… லேசா கருப்போடிதான் கிடக்கு… சொன்னா கேட்டியா? குளிக்கும்போது மஞ்சள் தடவுன்னு எத்தனை முறை சொல்லி இருப்பேன். அப்போதெல்லாம் ஃபாஷன். இப்போ பாரு ஆம்பளை காமாஷி போல… நல்ல வேளை. இப்போதான் வளரத் தொடங்கி இருக்கு. ரெண்டு வேளையும் மஞ்சள் பூசு… உதுந்துவிடும்.”

அன்று ஆரம்பித்தது வினை.

முதலில் மஞ்சள் பெளடரா அல்லது மஞ்சள் கிழங்கா? பெரிய விவாதத்துக்குப் பிறகு கிழங்கு என்று முடிவானது. இரவில் படுக்கப்போகுமுன் முகம் கழுவி, மஞ்சள் விழுது அரைக்கப்பட்டு, முகம் முழுவதும் பூசாமல் வாயைச் சுற்றி மட்டும் கரகரவென்று தேய்க்கப்பட்டு, அடுத்த நாள் காலையில் குளிக்கும்போது மறுபடி ஒருமுறை பூசப்பட்டு, சில காலம் ரோட்டில் பிச்சை எடுக்கவரும் ஹனுமான் கணக்காக, வாயைச்சுற்றி சிகப்புக்கலந்த மஞ்சள் நிறத்தோடு அலைந்துகொண்டிருந்தாள்.

மஞ்சள் கிலோகணக்கில் அரைத்துத் தீர்ந்தது மட்டும்தான் நடந்தது. மீசை… நாளொருமேனியும் பொழுதொரு வனப்பும் கூடித்தான் நின்றது.

இந்த ஹனுமான் ரூபம் பெரும் மனக்கஷ்டத்தைக் கொடுக்கத் தொடங்கியபோது, இது அவ்வளவாக உபயோகப்படாத வழி என்றும், அம்மாவை நம்பி தன் அழகைக் கெடுத்துக்கொள்ள கூடாதென்ற சுயஉணர்வும் வந்த ஒருபொழுதில்தான் பக்கத்து வீட்டு மாலதி அக்கா பார்வையில் பட்டாள். காலேஜ் போகும்போது அவள் பின்னால் போகும் ஒரு கூட்டம். திரும்ப வரும்போது மற்றுமொரு கூட்டம். இதுவே போதுமானதாக இருந்தது அவள் அழகி என்பதற்கு.

ஒரு ஞாயிறு மதியம். பாட்டி மற்றும் அம்மாவின் குறட்டை ஒலிகள் கிடுகிடுத்து எகிறும் ஒரு வேளையில், மாலதியின் வீட்டிற்குச் சென்றாள். கைகளில் நெய்ல் பாலீஷ் இட்டு அது காய்வதற்காக வெளியே வெய்யிலில் கைகளைக் காட்டியபடி நிற்கும் மாலதி அக்கா. அதை ப்ளாட்ஃபார்ம் ஓரம் நின்று ரசித்து நின்ற ரங்கு மற்றும் சுப்பு, சப்பை, குள்ள கார்த்தி இவர்களை ஒதுக்கிவிட்டு…

“அக்கா… உள்ளார போலாம் வா… உங்ககிட்ட முக்கியமா பேசணும்.”

மாலதி அதை அவ்வளவாக ரசிக்காவிட்டாலும் முக்கியமான செய்தி எதுவாகிலும் இருக்கக்கூடும் என்ற ஆவலில் விருட்டென்று தலையை ஒரு சிலுப்பு சிலுப்பி , கூந்தல் அலைகளைப் பறக்கவிட்டாள். அதில் ப்ளாட்ஃபார்ம் ரோமியோக்களின் மனதையும் சிதைக்க விட்ட காட்சி அவள் மனதில் அழுத்தமாகப் பதிந்து, வீடு சென்ற பின் அதைப் பழக்கப்படுத்திப் பார்க்கவேண்டிய கட்டாயம் ஒன்றும் ஏற்பட்டது.

பாதி காய்ந்திருந்த கை நகங்களை ஊதியபடி நின்ற மாலதியின் உதடுகளைப் பார்த்தாள். பளபளபள.

“அக்கா. நீதான் எனக்கு உதவணும். என் மேல் உதட்டைப் பாரு. பெரிசா கருகருன்னு வளந்துடுமோ பயமா இருக்குக்கா. என்ன செய்ய. உனக்குதான் எல்லாம் தெரியுமே. ப்ளீஸ் சொல்லுக்கா.”

உற்றுப் பார்த்த மாலதி அசந்தர்ப்பமாய்ச் சிரித்தாள். பின் தன் கை நகங்களை ஊதிக்கொண்டே, “ரேசர்தான். நீதான் ப்ளேட் போடுவன்னு பார்த்தா நீயே ப்ளேட்போடனும் போல இருக்கே.”

“அக்கா, ப்ளீஸ்…” கண்ணீரின் முதல் தளுக்.

“அய்ய… எதுக்கு அழுவற. எல்லாத்துக்கும் வழி இருக்கு. மயிலாப்பூர்லே புதுசா ஒரு ப்யூட்டி பார்லர் திறந்திருக்கு. நான் அங்கேதான் என் ஐப்ரோ திருத்த போகிறேன். போகும்போது இதையும் கேட்டு வரேன். எடுத்துடலாம்.”

மாலதி கேட்டு வந்தாள். ஆனால் இவள் போகவில்லை. இதற்காக மாலதியிடம் பார்லர் சொல்லி அனுப்பிய தொகை மிகவும் அதிகமாக மனதிற்குப்பட்டதாலும், அது ஒரு தடவையோடு நிற்காது என்ற தெளிவாலும் இவள் போகவில்லை. ஐப்ரோ திருத்தப்பட்ட மாலதியின் முகம் அருகில் பார்த்தபோது அங்கே பச்சை ஓடி சற்று விகாரமாகத் தெரிந்து பயமுறுத்தியதும் ஒரு காரணம்.

மீசை அதிகம் வளராவிட்டாலும், அவள் கவலைகளுக்கு ஒரு விமோசனம் வந்தாற்போல் தோன்றியது புயூமைஸ் ஸ்டோன். கல் வடிவத்தில். கைக்கு அடக்கமாக. தூரத்துச் சொந்தம் ஒருத்தி அவளிடம் இதைக் கொடுத்தபின் இட்ட கட்டளை, காலை மாலை இருவேளையும் முகத்தில் வேண்டாத ரோமம் இருக்கும் இடங்களில் க்ளாக் வைஸ்சாக வட்ட சுழற்சியில் பத்துமுறை சுற்றவேண்டும். அதற்கு முன் நன்றாக சோப் இட்டு இடத்தைப் பதப்படுத்தவேண்டும்.

ஆக, ஏதோ லாப் எக்ஸ்பிரிமெண்ட் போன்ற இந்த முறையைப் பயன்படுத்தியபோது, அந்தக் கல்லில் இருந்த துளைகளில் மாட்டிப் பிடுங்கப்பட்ட வலி தாங்காமல் இதுவும் கைவிடப்பட்டது.

செமஸ்டரில் வாங்கிய அதி குறைந்த மதிப்பெண்கள் கூட மனதைப் பாதிக்க இயலா வண்ணம் அவள் மனதில் இருந்தது அந்த ஒரே ஒரு பிரச்சினை மட்டுமே. இந்த பிரச்சினையின் அடிவரை சென்று பார்த்துவிடும் நோக்கத்தோடு, இதைப்பற்றிய கட்டுரைகளில் அவள் மூழ்கி இருந்த நேரம்.

“அப்பாவின் சினேகிதருக்கு தெரிந்தவராம். பிள்ளை நன்றாகப் படித்து நல்ல வேலையில் கை நிறைய சம்பாத்தியம். போட்டோ பார்த்து பிடிச்சுடுத்தாம். நாளைக்கு உன்னை பொண் பார்க்க வரலாமான்னு கேட்டு அனுப்பி இருக்கா… படிப்பு முடிச்சு கல்யாணம்ன்னும் சொல்லிட்டா. இன்று நீ காலேஜ் போகவேண்டாம் கேட்டியா…”

அவளுக்குக் கல்யாணம், படிப்பு இதெல்லாம் அவ்வளவாகக் கவலை கொடுக்கக்கூடியது இல்லை. ஆனால் இந்த மீசை? கடவுளே… அவர்கள் வரும்போது தயவு செய்து கரண்ட் இல்லாமல் செய். இருட்டாக இருந்தால் தெரியாது.

“எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பையன் பொண்ணோட கொஞ்சம் தனியா பேச நினைக்கிறான்.”

“பேசலாம். பால்கனி இருக்கு. சேரும் இருக்கு. போய் செளகர்யமா உட்கார்ந்து பேசலாம் கேட்டேளோ…”

“உஷ். அம்மா, பால்கனி வேண்டாம். உள்ளே ரூம்மில் போய் பேசறோம்.”

“சட். சும்மா இரு. தனியா இருளோன்னு கிடக்கு. போ பால்கனிக்கு. இந்த காபியையும் கையிலே கொடு.”

அவளுக்குத்தான் அவனை நேரில் நிமிர்ந்து பார்க்கத் தயக்கம், நாணம், இப்படியாகப்பட்ட காரணங்கள் ஏதுமில்லை. மேலுதட்டின் மேல் கறுப்போடியதைப் பார்த்துவிட்டால். அந்த பயம். முடிந்தவரை கைகளால் வாயை மூடி, தலையை சாயோசாய் என்று சாய்த்து, வெய்யில் முகத்தில் அடிக்காமல் பார்த்துக்கொண்டு…

நிறைய பயம். நிறைய தடுமாற்றம். நிறைய கேள்விகள். இருவருக்கும். சமர்த்தாக முகம் குனிந்து அமர்ந்திருந்தாள். என்னென்னவோ பேசினார்கள்.

“நான் என்னைப்பற்றிச் சொல்கிறேன். உங்களுக்கு அப்படி இருப்பவரைப் பிடிக்குமா என்று சொல்லுங்கள். அதேபோல் நீங்களும் உங்களைப்பற்றி சொல்லுங்கள்.”

இதெல்லாம் எவ்வளவு சினிமாவில் பார்த்தாகிவிட்டது. சிரிப்பு வந்தது. முகம் துடைப்பது போல் கைக்குட்டையால் வாயை மூடி… பின்னும் மூடி… மூடியபடியே…

“ஆமாம்… சரிதான்” என்று சொன்னாள்.

“எனக்கு கல்கியின் பொன்னியின் செல்வன் பிடிக்கும், உங்களுக்கு?” போன்ற அதிபுத்திசாலியான கேள்விகளின் பிறகு,

“ஏண்டா… நேரம் ஆகிறது. பேசி முடிச்சாச்சா?”

ஒரு வழியாகச் சமாளித்ததாக நினைத்து மகிழ்ந்து எழுந்தபோது,

”சொல்லலாமான்னு தெரியலை. ஆனால் உங்களை போட்டோவில் பார்த்தே நீங்கள்தான் என்று முடிவெடுத்துவிட்டேன். நேரில் பார்க்கும்போது இன்னும் பிடிக்கிறது… யூ நோ… எனக்கு மிகவும் பிடித்திருப்பது உங்கள் உதட்டின் மேல் இருக்கு அந்தப் பூனை முடிகள்தான்.”