பகுதி
7
சர்
சையது அகமது கானிலிருந்து இக்பாலுக்கு
சர் சையத் அகமது கான் சந்தேகத்திற்கு இடமின்றி
ஒரு சிறந்த மனிதர். அவர் நல்ல மனமுடையவர், தன்னலமற்றவர், தனது சமூகத்தின் நலன்களுக்காகத்
தன்னையே அர்ப்பணித்தவர். தன் சமூகத்திற்காகவே அவர் வாழ்ந்தார், மறைந்தார். அவரது கொள்கை
மூன்று கூறுகளைக் கொண்டிருந்தது:
(அ)மற்ற முஸ்லிம் நாடுகளின் விவகாரங்களில் தலையிடாதது.
(ஆ)உள்நாட்டில் முஸ்லிம்களின் நிலையை மேம்படுத்துவதற்கான
அனைத்து முயற்சிகளிலும் கவனத்தைச் செலுத்துவது.
(இ)பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் கூட்டணி.
அவரது பார்வையில், இம்மூன்றும் ஒன்றுக்கொன்று சார்ந்தவை.
தான் வாழ்ந்தவரை, தனது படித்த சக மதவாதிகளின் நம்பிக்கைக்குப்
பாத்திரமாகவே இருந்தார் அவர். ஆனால் அவர்களில் சிலர் இந்திய தேசிய காங்கிரஸிலும் ஆர்வம்
காட்டினர். அவரது மரணத்திற்குப் பிறகு ஒரு மாற்றம் ஏற்பட்டது. அவரைப் பின்பற்றியவர்களும்
அவரது மாணவர்களும் அவருடைய கொள்கையின் மூன்று கூறுகளையும் கைவிட்டனர். ஆனாலும் பெரும்பாலானோர்
அவரது கொள்கையை தொடர்ந்து நம்பிப் பின்பற்றி வந்தனர். இந்த நிலைமையைப் பின்வருமாறு
விளக்கலாம். உலகளாவிய இஸ்லாமிய வாதம், பிரிட்டிஷருக்கு எதிரான விரோதம்.
ஒத்துழையாமை இயக்கத்தின் தாக்கத்தினால் பெருமளவு
முஸ்லிம்கள் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தனர்; ஆனால் பல சந்தர்ப்பங்களில் தேசியவாதம்
அவர்களின் இஸ்லாமிய வாதத்திற்கு அடுத்த இடத்திலேதான் இருந்தது என்று தோன்றியது. இந்திய
முஸ்லிம்கள் வெளிநாடுகளில் உள்ள சக முஸ்லிம்களுக்கு அனுதாபம் காட்ட வேண்டும் என்பது
தெளிவானதாக இருந்தது. வெளிநாட்டு முஸ்லிம்களின் துன்பங்கள் அவர்களது அனுதாபத்தை ஈர்த்தன,
அவர்களது வெற்றிகள் இங்குள்ளவர்களை உற்சாகப்படுத்தின. இது இயற்கையானது. இந்தியாவுக்கு
வெளியே இந்துக்கள் அதிகம் இல்லாததால் இந்துக்களால் இதை முழுமையாக உணர முடியாது. ஒருபுறம்
இதை ஒப்புக் கொள்ளும்போது, சர் சையத்தின் உள்நாட்டுக் கவனம் பற்றிய கொள்கை சிறந்தது
என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
அரசியல் அல்லது மத ரீதியான தேசியவாதம் சர்வதேச
ரீதியான மதவாதத்திற்கு முன்னதாக இருக்க வேண்டும் என்பதை உலகளாவிய இஸ்லாமியவாதத்தின்
ஆதரவாளர்கள் ஒருபோதும் உணரவில்லை. வீட்டில் சுதந்திரமில்லாத நபர்கள், மற்றவர்கள் சுதந்திரத்தைப்
பெற அல்லது அதைத் தக்க வைத்துக் கொள்ள உதவ முடியாது. ஏழைகள், கல்வியறிவற்றவர்கள், ஆதரவற்றவர்கள்,
தன் வீட்டைச் சார்ந்துள்ளவர்கள் ஆகியோர் மற்றவர்களுக்கு உதவுவதற்காக தங்களிடம் உள்ளதைக்
கொடுக்க முடியாது. இந்த உணர்வு எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும், நடைமுறை அரசியலுக்கோ
அல்லது நல்ல ஒரு பொருளாதாரத்திற்கோ ஒவ்வாத ஒன்று. என்னைப் பொருத்தவரை இது ஒரு சிறந்த
மதரீதியான வழிமுறையாகவும் இருக்க இயலாது. இந்த யோசனைகளைப் பார்த்து எள்ளி நகையாடும்
சிலர் உள்ளனர், ஆனால் அது இந்த உண்மையைப் பாதிப்பதில்லை. கடந்த மூன்று ஆண்டுகளின் நிகழ்வுகள்
எனது நம்பிக்கையை குறைந்தபட்சம் இந்த விஷயத்தில் உறுதிசெய்துள்ளன. சர் சையத்தின் கொள்கை
அதை மாற்றியமைத்தவர்களின் கொள்கைகளை விட சிறந்ததாக இருந்தது.
குறிப்பு: கிலாபத் மற்றும் ஸ்மிர்னா நிதிகளுக்கான
முஸ்லிம் பங்களிப்புகளை திலக் ஸ்வராஜ்ய நிதியம், மலபார் நிவாரணம் மற்றும் முஸ்லிம்
கல்வி நிதி போன்றவற்றுடன் ஒப்பிடுக.
ஒரு இந்தியரின் முதல் நோக்கம் உலகத்தின் மற்ற எல்லா
நாடுகளுக்கும் மேலாக இந்தியாவை நேசிப்பதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் ஒரு தேசபக்தராக
இருக்க முடியும். பிளவுபட்ட விசுவாசம் மற்றும் பிளவுபட்ட நேசம் நல்ல தேசியவாதிகளை,
தேசபக்தர்களை அல்லது நல்ல மதவாதிகளைக் கூட உருவாக்க முடியாது.
முஸ்லிம் கவிஞர்களில் மிகவும் திறமையான, பிரபலமான
ஒருவர் இரண்டு பாடல்களைப் பாடினார். ஒன்று சாரே ஜஹான் சே அச்சா இந்துஸ்தான் ஹமாரா
(உலகின் அனைத்து நாடுகளிலும், நமது இந்துஸ்தான் சிறந்தது), மற்றொன்று ஒரு முசத்தாஸ்
பல்லவியுடன் முடிவடைகிறது: ‘இது எனது நாடு, இதே எனது நாடு.’ இந்த பாடல்களின் சில வரிகளை
இங்கே காண்பது சுவாரஸ்யமானதாக இருக்கும், பாடலாசிரியரின் தேசபக்தியின் ஆழத்தையும்,
அவரை ஊக்கப்படுத்திய தேசியவாதத்தின் உயரத்தையும், சகிப்புத்தன்மையின் பரந்த மனநிலையையும்
இவை காட்டுகின்றன. முதலாவதாக
(மொழிபெயர்ப்பு)
மதம் பரஸ்பர விரோதத்தைக் கற்பிக்காது.
நாம் இந்தியர்; நம் நாடு இந்துஸ்தான்.
கிரீஸ், எகிப்து, ரோம் என்ற அனைத்தும் உலகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன,
ஆனால் நம் பெயரும் தனித்தன்மையும் இன்னும் வாழ்கின்றன.
நம் வாழ்க்கை அழிந்துபோகாததற்கு சில காரணங்கள் உள்ளன,
ஆயினும் மாறிவரும் காலம் பல நூற்றாண்டுகளாக நம் எதிரியாக உள்ளது
இந்தப பாடல் பெரும்பாலும் ‘வந்தே மாதரம்’ என்ற
கீதத்திற்கு மாற்றாகப் பாடப்பட்டு தேசிய கீதத்தின் கண்ணியத்திற்கு ஈடாக உயர்த்தப்பட்டுள்ளது.
அடுத்த பாடலைப் பார்ப்போம்:
(மொழிபெயர்ப்பு)- “சிஸ்டி தனது சத்திய செய்தியை
வழங்கிய நிலம்; நானக் தத்துவ பாடலைப் பாடிய தோட்டம்; தார்தாரியர்கள் தங்கள் வீடாக ஏற்றுக்கொண்ட
நிலம்; ஹெட்ஜாஸ் மக்களை அரேபியாவின் பாலைவனத்தை விட்டு வெளியேறச் செய்த நிலம்; அதே
நிலம் என் பூர்வீக நிலம், அதே என் சொந்த நிலம்.”
2. (நிலம்)இது கிரேக்கர்களின் அதிசயத்தைத் தூண்டியது.
(நிலம்)அறிவியல் மற்றும் கலையை முழு உலகிற்கும் கற்பித்தது.. முதலியன.
3. தத்துவத்தின் பாடலை உலகம் கேட்ட இடம்; அரேபிய
நபி குளிர்ந்த காற்று போன்றவற்றைப் பெற்ற இடம்.. முதலியன
அடிக்குறிப்பில், முதல் வரி ஸ்ரீ கிருஷ்ணரின் புல்லாங்குழலின்
இசையைக் குறிக்கிறது என்றும், இரண்டாவது வரி நபி கூறியதின் ஒரு ஹதீஸ்: “அவர் இந்தியாவின்
திசையிலிருந்து குளிர்ந்த காற்றைப் பெற்றுக்கொண்டார்” என்றும் கூறப்பட்டுள்ளது.
(4) (நிலம்)யாருடைய வாழ்க்கைச் சூழல் சொர்க்கத்தின்
வாழ்க்கையைப் போன்றுள்ளதோ
(5) (நிலம்)இது கௌதமரின் நாடு, (இதனால்)ஜப்பானியர்களின்
புனித நிலம், (நிலம்)இது கிறிஸ்துவின் அன்பர்களுக்கு ஒரு சிறிய ஜெருசலேம்.
அதே கவிஞரால் ‘புதிய சிவாலா’ என்ற பெயரில் இயற்றப்பட்ட
மற்றொரு பாடல் உள்ளது – சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இப்பாடல் இந்து-முஸ்லிம் ஒற்றுமையின்
உன்னதமான உணர்வுகளால் நிறைந்துள்ளது. நான் அமெரிக்காவில் இருந்த போது இதை அடிக்கடி
படித்து ஒரு ஆங்கில இதழுக்காக மொழிபெயர்த்தேன். எனது மொழிபெயர்ப்பை டாக்டர் ஆனந்த குமாரசாமி
சரிபார்த்து அமெரிக்கப் பத்திரிகை ஒன்றில் வெளியிட்டார்.
இதைப் போலவே, குறிப்பிடத்தக்க மற்றும் பரிதாபகரமான
ஒரு கவிதை, சதா-இ-தர்த் (வலியின் அழுகை)இந்து-முஸ்லிம் ஒற்றுமை இன்மையைப் பற்றிப் புலம்புகிறது.
அதே வரிசையில் இன்னும் ஈர்க்கக்கூடியது தஸ்வீர்-இ-தர்த் (வலியின் சித்திரம்)என்று அழைக்கப்படும்
ஒரு கவிதை. இங்கே ஒரு சில வரிகளைக் கொடுக்க விழையும் என்னுடைய ஆர்வத்தை என்னால் அடக்க
இயலவில்லை.
(மொ.பெ)ஓ, இந்துஸ்தான், அந்தக் காட்சி என்னை அழ
வைக்கிறது. எல்லா கதைகளைக் காட்டிலும் போதனையைத் தரக்கூடியது உங்களது கதை.
அடுத்த வரிகள், இந்தியாவைப் பற்றிய துன்பியல் இலக்கியங்களை
(நௌஹா கவான்)வாசிப்பதன் கடமை விதிவசத்தால் ஒரு எழுத்தாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற
உண்மையை உரைக்கிறது.
(மொ.பெ)ஓ! மலர்களைப் பறிப்பவர்களே (வெளிநாட்டு
ஆட்சியாளர்களைக் குறிக்கிறது). நீங்கள் இலைகளின் சுவடுகளைக் கூட விட்டுவைக்கவில்லை.
உங்கள் நல்ல அதிர்ஷ்டத்தால், தோட்டக்காரர்கள் ஒருவருக்கொருவர் போரிடுவதில் ஈடுபட்டுள்ளனர்.
(இது இந்து முஸ்லிம் சண்டைகளைக் குறிக்கிறது).
பின்வரும் வரிகள் அடுத்து:
(மொ.பெ)ஓ, முட்டாள்களே, உங்கள் நாட்டை நினைத்துப்
பாருங்கள்; அதை அழிக்க வானத்தில் ஆலோசனைகள் நடக்கின்றன, துரதிர்ஷ்டம் உங்களை நெருங்குகின்றது.
என்ன நடக்கிறது, என்ன நடக்கப்போகிறது என்று பாருங்கள். பழைய கதைகளை மீண்டும் மீண்டும்
பேசுவதன் பயன் என்ன?
ஓ! இந்தியர்களே, நீங்கள் சரியான நேரத்தில் விழித்துக்
கொள்ளாவிட்டால், நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள். கதைகளில் கூட உங்களைப் பற்றிய குறிப்பேதும்
இருக்காது.
லாகூரில் வெளியிடப்பட்ட டாக்டர் இக்பாலின் உருது
கவிதைத் தொகுப்பில், அவரது கவிதைகள் மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதலாவது
1905 உடன் முடிவடைகிறது. நாட்டின் அன்பையும் இந்து முஸ்லிம் ஒற்றுமையையும் சுவாசிக்கும்
அனைத்து கவிதைகளும் இந்தக் காலத்தைச் சேர்ந்தவை. இரண்டாவது 1908 உடன் முடிவடைகிறது.
மூன்றாவது 1908 இல் தொடங்குகிறது. நான் மேற்கோள் காட்டிய அனைத்து கவிதைகளும் முதல்
காலகட்டத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் மற்றும் இரண்டாவது காலகட்டங்கள்
குறுங்குழுவாதத்திலிருந்து ஒப்பீட்டளவில் விடுபடுகின்றன. மூன்றாவது குறுங்குழுவாதமும்
மதவாதமும் நிறைந்தது.
உருது இலக்கியம் மற்றும் இந்திய தேசியவாதத்தின்
இந்த ரத்தினங்களை உலகளாவிய இஸ்லாமிய வாதத்தின் காலகட்டத்தில் இயற்றப்பட்ட பிற்காலப்
பாடல்களுடன் ஒப்பிடுங்கள். அவை இவ்வாறு தொடங்குகின்றன:
(மொ.பெ)சீனாவும் அரேபியாவும் நம்முடையது (போலவே)இந்தியா
நம்முடையது. நாம் முஸ்லிம்கள், உலகம் முழுவதும் எங்கள் பூர்வீக நிலம்.
இன்னும் பிற்கால கவிதைகளில் பின்வருபவை குறிப்பிடப்படுகின்றன:
(மொ.பெ)உங்கள் ஆடை விளிம்புகள் பூர்வீக நிலத்தின்
தூசியிலிருந்து விடுபட்டவை: ஜோசப் என்ற உனக்கு ஒவ்வொரு எகிப்தும் கானனாகிய மொழி.
தேசபக்தி அல்லது நாட்டுப்பற்று பற்றிய ஒரு கவிதையில்
கவிஞர் அதன் தீமைகளைப் பாடுகிறார், தேசபக்தி என்ற மரத்தின் வேர்களை நபி வெட்டியதைக்
குறிக்கிறார். நவீன சக்திகளின் புதிய, சிக்கலான ஆயுதம் இது என்று அவர் கூறுகிறார்.
பார்த்தீர்களா… என்ன ஒரு மாற்றம்! ஆனால் இன்னும்
ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கிலாபத் இயக்கத்தின் சிறந்த நாட்களில் இதுபோன்ற
நாட்டுப்புறப் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன, இன்றும் பஞ்சாபில் உள்ள முஸ்லிம்களால் பாடப்படுகின்றன.
இது போன்ற எழுத்துக்கள், பாடல்களால் இஸ்லாமியர்களின்
இளைய தலைமுறையினர் மனதில் எந்தவிதமான ஒரு மனப்பான்மை உருவாகியிருக்க வேண்டும் என்பதை
வாசகர் கற்பனைக்கே விட்டுவிடுகின்றேன்.
டாக்டர் முஹம்மது இக்பால் ஒரு சாதாரணக் கவிஞர்
இல்லை. அவர் ஒரு சிறந்த அறிஞர், அருமையான பாடலாசிரியர். பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.
அவரது எழுத்துக்களும் கவிதைகளும் ஒவ்வொரு படித்த முஸ்லிமின் வீட்டிலும் காணப்படுகின்றன.
சொல்லப்போனால், பெரும்பாலான ஹிந்துக்களின் வீடுகளிலும் கூட உள்ளன. அவர் எந்த வகையிலும்
இந்த கருத்துக்களுக்கான தனிப்பட்ட சொந்தக்காரர் இல்லை. நான் அவரின் அபிமானியாக இருப்பதால்
அவரைத் தேர்ந்தெடுத்துள்ளேன். நான் அவரது பாடல்களைத் தொடர்ந்து வாசிப்பவனாக இருந்தேன்.