Posted on Leave a comment

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) – லாலா லஜ்பத் ராய் (பகுதி 3) | தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்

பகுதி 3 
மதங்களைக் கூடியவரை அறிவார்ந்த சிந்தனைகளுக்கு
உட்படுத்தவேண்டும்
ஒன்றுபட்ட
இந்தியாவை உருவாக்கும் நோக்கம் கொண்ட அனைவரும், இந்தியா பல நம்பிக்கைகள் மற்றும்
பல மதங்களின் நிலம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்; இந்த நம்பிக்கைகள் மற்றும்
மதங்கள் பற்பல பிரிவுகளையும் துணைப் பிரிவுகளையும் கொண்டுள்ளன.; இந்தப் பிரிவுகள்
மற்றும் துணைப்பிரிவுகள் பல்வேறு சம்பிரதாயங்கள், சடங்குகளைக் கடைப்பிடிக்கின்றன;
இந்தச் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களில் சில ஒன்றுடன் ஒன்று முரண்படுகின்றன.
மதங்கள், அதன் பிரிவுகள் மற்றும் துணைப்பிரிவுகள், அவர்களின் சடங்குகள் சம்பிரதாயங்கள்
ஆகியவற்றைக் கடைப்பிடிக்கும் விஷயத்தில், குறிப்பாக அவை ஒருவருக்கொருவர்
முரண்படுகையில், அவற்றின் முழுமையான சுதந்திரத்திற்கு எந்தவொரு அரசும் உத்தரவாதம்
அளிப்பது சாத்தியமில்லை. இந்தச் சடங்கு சம்பிரதாயங்களில் சில மனிதாபிமானமற்ற,
கொடூரமான, ஒழுக்கக்கேடானவை. எந்த ஒரு சிறிய அல்லது பெரிய சமூகத்தின் மதச்
சடங்குகளையும் விழாக்களையும் கண்டிப்பாகவும் முழுமையாகவும் கடைப்பிடிப்பதற்கான
உரிமையை வலியுறுத்துவதும் அதற்காக அழுத்தம் கொடுப்பதும் சாத்தியமற்றது, ஒன்றுபட்ட
இந்தியா என்ற கருத்தாக்கத்திற்கு எதிரானது. ஆயினும் பிரிட்டிஷ் அரசாங்கம், மத
நடுநிலைமை என்ற நிலைப்பாட்டிற்கு இடையிலும் அவ்வப்போது மத நடைமுறைகள் விஷயத்தில்
தலையிட்டுள்ளனர். உதாரணமாக, ஹிந்துப் பழமைவாதிகள் மதத்தின் ஒரு பகுதி என்று கருதிய
சதி மற்றும் சிசுக்கொலையின் மனிதாபிமானமற்ற நடைமுறைகளை அவர்கள் சட்டத்தின் மூலம்
தடைசெய்தனர்.
இதுபற்றிய
விவரங்களை விரிவாக ஆராய்வது இங்கே எனது நோக்கம் அல்ல, ஆனால் இந்திய மதங்களைப்
பற்றிக் கற்கும் ஒரு மாணவர், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் வருகையும், அதைத்
தொடர்ந்து மேற்கத்திய அறிவு மற்றும் மேற்கத்திய அறிவியலின் பரவலும், அதனோடு இணைந்த
சமஸ்கிருதம் மற்றும் அராபிக் மொழிகளின் ஆய்வின் மறுமலர்ச்சியும், பல மதச்
சீர்திருத்த இயக்கங்கள் தொடங்கப்படுவதற்கு வழிவகுத்தன என்ற எனது கருத்தை எளிதில்
உறுதிப்படுத்த முடியும். இந்த இயக்கங்கள் பல நூற்றாண்டுகளின் அறியாமை மற்றும்
குருட்டு நம்பிக்கையால் பீடிக்கப்பட்டிருந்த இந்திய மதங்களை தூய்மைப்படுத்தும்
நடவடிக்கையில் முனைந்தன. அவர்களுக்குக் கிடைத்த புதிய அறிவின் வெளிச்சத்தில், ஒரு
மதத்தின் பெயரில் நடைமுறையில் உள்ள பல சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் அந்த
மதத்தின் நூல்களால் அனுமதிக்கப்படவில்லை என்பதையும், அம்மதங்களைச் சேர்ந்த
நிறுவனர்கள், ஆரம்பகாலச் சிந்தனையாளர்களின் கருத்தாக்கங்களுக்கு எதிரானவை
என்பதையும் மக்கள் கண்டறிந்தனர். இன்றும் இதுபோன்ற மனிதாபிமானமற்ற, ஒழுக்கக்கேடான
பல்வேறு சடங்குகளையும் வழிமுறைகளையும் நம்பும் சமூகங்கள் உள்ளன என்பதை மறுக்க
இயலாது. சமூகம் யாருடைய நம்பிக்கையிலும் தலையிட முடியாது. ஆனால் அதே சமயம்
எந்தவொரு முற்போக்கான சமூகமும் அத்தகைய நடைமுறைகளை மதத்தின் பெயரில், அதன்
பெரும்பான்மையான உறுப்பினர்களின் மனித நேயம், ஒழுக்கநெறி ஆகியவற்றிற்கு எதிராக,
கண்மூடித்தனமாக முன்னெடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது,
ஒரு அரசியல்
கண்ணோட்டத்தில், மத வேறுபாடுகள் குறைக்கப்படுவது மிகவும் அவசியமான ஒன்று.
இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் மதத்தின் பெயரால், அவரது மதம் சார்ந்த நம்பிக்கை
என்று அவர் கருதும் எதையும் பின்பற்ற அவருக்கு உரிமை உண்டு என்ற நிலை ஏற்பட்டால்
இங்கு எந்த ஒற்றுமையும் சாத்தியமில்லை என்பது வெளிப்படையானது. ஒன்றுபட்ட இந்தியா
என்ற கருத்தாக்கம் வெவ்வேறு மதங்கள் பிரிக்கும் வேறுபாடுகளைக் காட்டிலும் வேறுபட்ட
மதங்கள் ஒப்புக் கொள்ளும் விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
என்று கோருகிறது. எனவே ஒன்றுபட்ட இந்தியா என்ற கருத்தாக்கம், மதங்களையும் மதம்
சம்பந்தப்பட்ட சடங்குகளையும் எவ்வளவு இயலுமோ அவ்வளவு தூரம் அறிவுக்கு ஏற்புடையதாக
மாற்றும் தேவையை வலியுறுத்துகிறது. தனது மதத்தின் ஒரு அங்கம் என்று ஒருவர்
நம்புகின்ற அனைத்தையும் முழுமையாகவும், கட்டுப்பாடற்றதாகவும் கடைப்பிடிக்க
அவருக்கு உரிமை உண்டு என்ற கூற்று, பகுப்பாய்வின் சோதனைக்கு அப்பாற்பட்டதாக இருக்க
முடியாது. ஒவ்வொருவரின் உரிமையும் மற்றவர்களின் நியாயமான உரிமைகளால்
மட்டுப்படுத்தப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், முரண்பட்ட சடங்குகளை கடைப்பிடிக்கும்
வழக்கங்கள் கடுமையாக எதிர்க்கப்படவேண்டும்.. தவறான நம்பிக்கைகளை அடிப்படையாகக்
கொண்ட இத்தகைய கருத்துக்கள் அனைத்தும் வெவ்வேறு சமூகங்களுக்கிடையில், வெறுப்பை
அதிகரித்தல், ஒரு சமூகத்தை மற்றொன்றிடமிருந்து பிரித்தல் மற்றும் தடைகளை
உருவாக்குதல் போன்றவற்றை உருவாக்கி, வகுப்புவாத உணர்வை மேலும் கடுமையானதாகவும்
கசப்பானதாகவும் ஆக்குகிறது. இது படிப்படியாக அகற்றப்பட வேண்டும்..
துரதிர்ஷ்டவசமாக,
இந்தியாவில் மதச் சீர்திருத்த நகர்வுகள் கூட சில சந்தர்ப்பங்களில் தவறான
திருப்பத்தை எட்டியுள்ளன. அவை அறம் சாராத, சம்பந்தப்பட்ட மதம் சாராத சடங்கு
சம்பிரதாயங்களைப் பின்பற்றும் வழக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளன
என்றாலும், வகுப்புவாத உணர்வு, மீண்டும், இதுபோன்ற சடங்குகளைக் கடைப்பிடிப்பதன்
மூலம் வேறுபாடுகளை நிலைநிறுத்துவதோடு, ஒரு சமூகத்தை இன்னொரு சமூகத்திலிருந்து
பிரிக்கும் ஒரு திடமான சுவரை உருவாக்குகிறது. ஆர்ய சமாஜ், முஹம்மது சீர்திருத்த
இயக்கம் மற்றும் சீக்கிய சீர்திருத்த இயக்கம் ஆகியவை அனைத்தும் இந்தப் போக்கைச்
சித்தரிக்கின்றன; மகாத்மா காந்தியும் அவர் பலமாக ஆதரித்த கிலாஃபத் இயக்கமும் இந்த
உணர்வை அதிகப்படுத்தியுள்ளன என்பதை மறுக்க முடியாது.
மகாத்மா
காந்தியின் ஆளுமை ஒரு வகையில் புதிரானதாக உள்ளது. நடைமுறையில் அவர் தாராளவாதிகளின்
தாராளவாதி, பரந்த எண்ணம் கொண்ட மனிதாபிமானம் கொண்டவர். பல்லாயிரக்கணக்கான
இந்துக்கள் தங்கள் மதத்தின் இன்றியமையாத பகுதியாக கருதுகின்றனர் என்ற போதிலும்,
தீண்டாமையை மனிதாபிமானமற்றது, வேரோடு அழிக்கப்படவேண்டியது என்று அவர்
அறிவிக்கிறார். மறுபுறம், அவரது சில கோட்பாடுகளின் அடிப்படையில், அவர் சில
நேரங்களில் குறுகிய மனப்பான்மையையும் பிரிவினை சார்ந்த மூடநம்பிக்கைகளையும்
ஆதரிப்பதாகத் தெரிகிறது. இது, அவரது வருகைக்கு முன்பு தங்கள் மதங்களில் செல்வாக்குகளை
இழந்துகொண்டிருந்த பண்டிதர்களுக்கும் மவுல்விகளுக்கும் ஒரு புதிய வாழ்க்கையை
அளித்துள்ளது. இதன் காரணமாக கடந்த மூன்று நான்கு வருடங்களில் ஹிந்துப்
பிரிவினைவாதிகள் முன்பை விட வெறுப்பைக் கக்குகிறவர்களாகவும் இஸ்லாமிய, சீக்கியப்
பிரிவினைவாதிகள் அவர்களைவிட வெறுப்புணர்ச்சி கொண்டவர்களாகவும் மாறியுள்ளனர். இந்த
மதங்களைப் பின்பற்றுபவர்களிடையே பிற்போக்குவாதிகள் மீண்டும் அதிகாரத்திற்கு
வந்துள்ளனர், சமூகங்களை ஒருவருக்கொருவர் ஒதுக்கி வைப்பதிலும், மதத்தின் பெயரில்
நடைமுறையில் உள்ள பல மட்டமான சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதிலும்
கவனத்தைச் செலுத்தி பல்வேறு சமூகங்களை இணைப்பதை விட பிரிப்பதில் அதிகம் முனைப்பாக
உள்ளனர்.
யாருடைய
எண்ணங்களையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை, ஆனால் தற்போதுள்ள நிலைமைகள்
சரியாக ஆய்வு செய்யப்பட்டால், கடந்த மூன்று ஆண்டுகளில் குறுங்குழுவாதமும் குறுகிய
எண்ணம் கொண்ட மதவெறியும் மிகவும் பலமடைந்துள்ளதைக் காணலாம். குறிப்பாக கிலாஃபத்
இயக்கம் முஹம்மதியர்களிடையே அதை பலப்படுத்தியுள்ளது. அதன் எதிர்வினையும் தாக்கமும்
ஹிந்துக்களிடையேயும் சீக்கியர்களிடையேயும் உள்ளது. சீர்திருத்தத் திட்டத்தின் கீழ்
கொண்டுவரப்பட்ட வகுப்புவாத பிரதிநிதித்துவம், வலுவான வகுப்புவாத எண்ணங்களை
உருவாக்கி, இரு முக்கிய சமூகங்களிடையேயான உறவுகளைச் சிக்கலானதாகவும்
வெறுப்புணர்ச்சி கொண்டதாகவும் ஆக்கியதை நாம் புறக்கணிக்க இயலாது. நம்முடைய
தற்போதைய அக்கறை இந்தக் குறிப்பிட்ட பிரச்சினையைப் பற்றியதாகும்.
நாம்
உண்மையிலேயே நேர்மையாக ஒரு ஒன்றுபட்ட இந்தியாவை விரும்பினால், நாம் இந்த நாட்டில்
உள்ள பல்வேறு மத சமூகங்கள், மதத்தில் அத்தியாவசியமானவை மற்றும்
அத்தியாவசியமற்றவற்றுக்கு இடையே ஒரு தெளிவான வேறுபாட்டை வெளிக்காட்ட வேண்டும்.
முழு மதச் சுதந்திரம் என்பது பிற சமூகங்களின் நியாயமான உரிமைகளை பாதிக்கும்
வகையிலோ அல்லது அவர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையிலோ சடங்கு
சம்பிரதாயங்களைப் பின்பற்றுவதற்கான முழு, கட்டற்ற சுதந்தரத்தை அளிப்பது என்று
அர்த்தமல்ல. அத்தகைய உரிமையை, தனிநபராகவோ அல்லது சமூகமாகவோ வலியுறுத்துவதும்,
பிரிட்டிஷ் அரசாங்கம் அத்தகைய உரிமையை நடைமுறைப்படுத்தும் என்ற நம்பிக்கையும்
இந்தியாவில் பெரும் சிக்கல்களை உருவாக்கியுள்ளது. உதாரணமாக, வடமேற்கு எல்லைப்புற
மாகாணத்தின் விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கிராமத்தின் மக்கள் தொகையில் 99
சதவிகிதம் இஸ்லாமியர்கள். ஹிந்துக்கள் 1 சதவிகிதம் மட்டுமே. பல மசூதிகள்
அமைந்துள்ள கிராமத்தின் தெருக்களில் ஊர்வலமாகத் தனது சிலையை ஊர்வலமாக எடுத்துச்
செல்ல ஒரு ஹிந்து தனது உரிமையை வலியுறுத்துவது மிகவும் முட்டாள்தனமான செயல்.
அஜூதியா, மதுரா, பிந்த்ராபன் அல்லது ஹரித்வார் போன்ற இடங்களில் ஒரு இஸ்லாமியர்
பசுவைப் பலியிடும் உரிமையை வலியுறுத்துவதும் அதே மாதிரியானதே.
துரதிர்ஷ்டவசமாக
பிரிட்டிஷ் ஆட்சி, ஹிந்துக்கள் மற்றும் முகமதியர்கள் இருவரையும் அத்தகைய உரிமைகளை
வலியுறுத்தவும், அவை மறுக்கப்பட்டால் போராடவும் ஊக்குவித்துள்ளது. தனிமனிதவாதம்
என்ற தத்துவமும், முழுமையான மத சுதந்திரம் பற்றிய கருத்தாக்கமும், நான் ஏற்கெனவே
சுட்டிக்காட்டியுள்ளபடி, முற்றிலும் தவறானவை. தற்போது இந்தியாவில் பிரிட்டிஷ்
ஆட்சியினால் விளைந்தவை. இந்தியர்களின் மனதில் வலுவாக வேரூன்றி நம்முடைய தேசிய
வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருப்பவை. எனவே
ஒரு உண்மையான தேசிய வாழ்க்கையை உருவாக்குவதற்கான முதல் படி, இந்த வகையான
விஷயங்களில் சரியான கருத்துக்களை பொதுமக்களின் மனதில் விதைப்பதற்கு ஒரு பரவலான
பிரசாரத்தை மேற்கொள்வதேயாகும். ஆனால் ஹிந்து மற்றும் இஸ்லாமிய மதக் கோட்பாடுகளின்
ஏதோ ஒன்றை ஒவ்வொரு நாளும் தங்கள் வாழ்வில் உடைத்துக்கொண்டிருக்கும் ஆண்களும்
பெண்களும் அந்தந்த மதங்களால் நிராகாரிக்கப்படுவதற்குப் பதிலாக அவற்றின் தலைவர்களாக
ஏற்கப்படுவது என்னைப் பொருத்தவரை ஒரு விரும்பத்தகாத முரண்பாடாகவும், தற்போதைய
நிலையில் புதிரான விஷயமாகவும் உள்ளது.
என்னுடைய
வாதத்தின் தொகுப்பு இதுதான், ஹிந்துக்களுக்கும் முகமதியர்களுக்கும் இடையிலான
தற்போதைய பதட்டத்திற்கு ஒரு காரணம், மத சம்பிரதாயங்களை அனுசரிக்கும் விஷயத்தில்
முழுமையான சுதந்திரம் என்ற கருத்து புத்துயிர் ஊட்டப்பட்டதேயாகும். நான் ஏற்கெனவே
கூறியது போல, மற்றொருவரின் நம்பிக்கையில் யாரும் தலையிடவோ கேள்வி கேட்கவோ முடியாத
நிலை உருவாகியுள்ளது. இத்தகைய நம்பிக்கை முழுக்க முழுக்க தனிமனிதனைச் சார்ந்தது.
ஆனால் அவற்றை நாம் கடைப்பிடிக்கும்போது, நாம் வாழும் சூழலையும், அண்டை அயலாரின்
நல்லெண்ணத்தையும் அமைதியையும், சமூக மோதலைத் தவிர்ப்பதையும் கருத்தில் கொள்ள
வேண்டும். இதற்காக சுதந்தரத்தைத் தியாகம் செய்யவும் தயாராக இருக்கவேண்டும்.
இந்தியா
போன்ற ஒரு நாட்டில், இதுவரை கடைப்பிடிக்கப்பட்ட அல்லது ஒருவரின் நம்பிக்கையின்
பேரில் அனுமதிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்டதாகக் கருதப்படும் ஒவ்வொரு மத
நடைமுறையையும் புனிதமானது, மாறாதது என்று சொல்லி அந்தக் கருத்தை ஊக்குவிப்பது,
எனது தாழ்மையான கருத்தின்படி, விஷமத்தனமானது, எதிர்க்கப்படவேண்டியது. இந்தியாவின்
வளர்ச்சியின் தற்போதைய கட்டத்தில், அதற்கு தேவையானது பகுத்தறிவும்
சகிப்புத்தன்மையும்தானே தவிர பழமைத்தன்மையும் மதவெறியும் அல்ல. துரதிர்ஷ்டவசமாக,
கடந்த தசாப்தத்தில் பகுத்தறிவு மற்றும் சகிப்புத்தன்மையை விட பழமைத்தன்மை, மதவெறி
ஆகியவற்றின் வாசனைதான் சுற்றுச்சூழலில் அதிகம் உணரப்படுகிறது. ஒத்துழையாமை இயக்கம்
இந்தச் சூழலை உருவாக்க தன்னாலான பங்கை அளித்திருக்கிறது. இந்தியாவில் கிலாஃபத்
இயக்கம் அரசியல் அடிப்படையில் அல்லாமல் ஒரு மதத்தின் அடிப்படையில் தனது நிலைப்பாட்டை
எடுத்திருப்பது ஏற்புடையதல்ல. அதை ஆதரிக்க அரசியல் காரணங்கள் இருந்தன. உண்மையில்
மதத்தைவிட அரசியலை அடிப்படையாகக் கொண்ட கிலாஃபத் போன்ற ஒரு இயக்கத்தில் மகாத்மா
காந்தியும் அந்த இயக்கத்தின் தலைவர்களும் மதத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது
துரதிருஷ்டவசமானது.
ஒத்துழையாமை
இயக்கத்தின் பல்வேறு அம்சங்களுக்கு மதரீதியான அனுமதி பெற வேண்டும் என்ற ஆசை
மற்றொரு பெரிய தவறு. இது ஒரு குறுங்குழுவாத மறுமலர்ச்சிக்கு நேரடியாக வழிவகுத்து,
ஒன்றுபட்ட இந்தியாவின் கருத்தாக்கத்திற்கு விரோதமான தாக்கத்தைச் செலுத்தக்கூடிய
சக்திகளை மீண்டும் சிம்மாசனம் ஏற வழிவகுத்திருக்கிறது. ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை
என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட ஒத்துழையாமை இயக்கம், அவர்களின் பிரிவினைக்குக்
காரணமான சக்திகளில் ஒன்றாக மாறிப்போனது. படித்த இந்துக்கள், முசல்மான்கள் மற்றும்
சீக்கியர்கள் இப்போது போல மதத்தின் பெயரில் அற்பமான மற்றும் சிறிய விஷயங்களுக்கு
இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை.
சாஸ்திரங்களும் ஷரியத்களும் ஆய்வு செய்யப்பட்டு, குறுகிய மனப்பான்மை மற்றும்
மதவெறியின் சூழ்நிலையை உருவாக்க மட்டுமே அந்த ஆய்வுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தாடியைச்
சவரம் செய்யத் துணிந்ததற்காக இளம் இஸ்லாமியர்கள் மவுல்விகளால் கடுமையாகக்
கண்டிக்கப்படுவதை நான் கண்டிருக்கிறேன், தேசிய காங்கிரசின் வருடாந்திரக்
கூட்டத்தில் ஒரு முஸ்லீம் தலைவர் கருவி இசையை நிறுத்த முயல்வதை இந்தியா முழுவதும்
கண்டது. முன்னெப்போதும் நாம் கற்பனை செய்யாத வகையில் மதத்தின் பெயரால் மிகவும்
ஆச்சரியப்படும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதை நாம் காணுகிறோம். கடந்த நான்கு
ஆண்டுகளில், எந்தவொரு மதரீதியான அங்கீகாரமும் ஆன்மிக மரியாதையும் பெறாத
மவுலானாக்கள்., பண்டிதர்கள் மற்றும் ஞானிகளின் படை உருவாகியுள்ளது.
நான்
யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. ஆனால் எனது கருத்தை விளக்குவதற்காக இந்த
உண்மைகளை நான் கூறுகிறேன். உதாரணமாக, மசூதிகளுக்கு முன்பு இசை வாசிப்பதை எடுத்துக்
கொள்ளுங்கள். கடந்த நாற்பது ஆண்டுகால எனது அனுபவத்தில், இந்தக் கேள்விக்கு
முக்கியத்துவமும் இருந்ததாக நான் ஒருபோதும் உணரவில்லை, ஆனாலும் நான் தொடர்ந்து
செய்தித்தாள்களை வாசிப்பவனாகவும், நிகழ்வுகளை கூர்ந்து கவனிப்பவனாகவும் இருந்தேன்.
உலகெங்கிலும் பயணம் செய்த, மிகவும் பரந்த மனப்பான்மை கொண்ட ஹிந்துக்கள் சிலர்,
இஸ்லாமியர்களுக்கு எதிராகத் தீண்டத்தகாத தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை
உணர்வார்கள் என்பது எனக்கு வேதனையாக உள்ளது. ஹிந்து அல்லாதவர்களால் தொட்ட உணவைக்
குடிப்பது அல்லது சாப்பிடுவது தங்கள் மதத்திற்கு எதிரானது என்று நம்பும்
இந்தியர்கள் இருக்கும் வரை, இந்தியா ஒரு தேசமாக அரசியல் ரீதியாக ஒன்றுபடும் என்று
நீங்கள் எதிர்பார்க்க முடியாது. ஒரு பெரிய சமாஜத்தின் தலைவர் காங்கிரஸ்காரர்களை
ஒற்றுமைக்காக தங்கள் மதத்தை விற்றதாக ஒருமுறை கண்டனம் செய்ததை நான் நினைவில்
கொள்கிறேன். இந்த விற்பனையானது, அவரது கருத்தில், அவர்கள் முகமதியர்களுடன்
சுதந்திரமாகச் சாப்பிடுவதிலும், (உணவைக்) குடிப்பதிலும் இருந்தது.
உண்மை
என்னவென்றால், ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கான விருப்பத்தைக் கொண்ட, ஒன்றுபட்ட
இந்தியாவை உருவாக்க விருப்பப்படும் ஏராளமான இந்துக்களும் முஸ்லிம்களும்
ஒற்றுமைக்கு ஒரு விலை இருப்பதையும் அதை அடைவதற்கு முன்பு அவர்கள் அதைச் செலுத்தவேண்டும்
என்பதையும் உணரவில்லை. ஹிந்துக்கள் அல்லது முகமதியர்கள் தங்கள் மதத்தின்
அத்தியாவசியங்களை ஒற்றுமைக்காக தியாகம் செய்ய வேண்டும் என்று நான் கூறவில்லை.
என்னைப் பொருத்தவரை, தனிப்பட்ட முறையில், அறத்தின் தேவைகள் குறைவு, அவை
இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஒற்றுமையை உருவாக்கக் கூடியவை. ஆனால்
இந்துக்கள் மற்றும் முகமதியர்களின் முக்கிய அமைப்புகள் இந்த விஷயத்தில் எனது
கருத்துக்களை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்க எனக்கு உரிமை இல்லை. எவ்வாறாயினும்,
ஹிந்துக்கள், முகமதியர்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தங்கள் மத மற்றும்
சமூக வாழ்க்கையில் தாராளமாகவும் பகுத்தறிவுடனும் இருக்கும் மனதையும் உருவாக்கிக்
கொள்ளாவிட்டால் ஒற்றுமை என்பது ஒருபோதும் நிறைவேறாத ஒரு கனவு என்று நான்
வெளிப்படையாகச் சொல்வேன்.
தற்போது
ஹிந்து, முஸ்லீம், சீக்கிய இனவாத வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தும் குறுகிய மத
சூழ்நிலை ஒன்றுபட்ட இந்தியாவின் கருத்தாக்கதிற்கு ஆபத்தானது. எவ்வளவு விரைவில்
இந்தச் சமூகங்களின் தலைவர்கள் இந்த உண்மையை உணர்ந்துகொள்கிறார்களோ, அது நம்
அனைவருக்கும் நல்லது. இரு மதங்களைப் பின்பற்றுபவர்களும் அரசியல் ரீதியாக
ஒன்றுபடுவதை சாத்தியமில்லாததாக்கும் அளவுக்கு ஹிந்து மதம் அல்லது இஸ்லாம் மிகவும்
குறுகலானது என்ற கருத்தை நான் ஒப்புக்கொள்ள முடியாது. வெளிப்படையாகச்
சொல்வதென்றால், அரசியல் சுதந்திரத்தை நாம் உண்மையிலேயே விரும்பினால் இந்த
விஷயத்தில் ஐரோப்பாவைப் பின்பற்ற வேண்டியிருக்கும். மதம் அரசியலில் இருந்து
பிரிந்து செயல்பட வேண்டும். சமூக வாழ்க்கை விரிவுபடுத்தப்பட வேண்டும். அரசியல்
வாழ்க்கை என்பது பரந்த தேசியக் கொள்கையை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளவேண்டும்.
மதம் நம் வாழ்க்கையிலிருந்து விலக்கப்படவேண்டும் என்றோ அல்லது நமது அரசியல்
கட்டமைப்பானது மதரீதியான தாக்கங்களைக் கொண்டிருக்கக்கூடாது என்றோ நான்
சொல்லவில்லை. ஆரோக்கியமான மதரீதியான தாக்கங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தனிப்பட்ட
மற்றும் தேசிய வளர்ச்சிக்கு அவசியம். இந்த அளவில் நான் மதத்துக்கோ அல்லது
அறத்திற்கோ எதிராக எதுவும் கூறவில்லை. ஆனால் மதத்தின் சடங்குகள் சம்பந்தப்பட்ட
அம்சம் தனிநபர்கள் அல்லது சமூகங்களின் மையமாக மட்டுமே இருக்க வேண்டும். பல்வேறு
மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கு, பல்வேறு மதம் சார்ந்த சமூகங்களுக்கு இடையில்
தடைகளையோ அரசியல் வேறுபாடுகளையோ உருவாக்கும் விதத்தில் இவை செயல்பட நாம் அனுமதிக்கக்கூடாது.
பின்குறிப்பு
: மேற்கண்டவற்றை எழுதிய பிற்பாடு, மகாத்மா காந்தியின் ஹிந்து மதம் மற்றும் ஹிந்து
முஸ்லீம் ஒற்றுமை பற்றிய கட்டுரைகளை மீண்டும் படித்தேன். ஹிந்து மதம் குறித்த
அவரது கருத்துக்கள் மிகவும் தாராளமயமானவை. இருப்பினும் சாதி அமைப்புக் குறித்த
அவரது விளக்கத்திலிருந்தும் பசு வழிபாட்டைப் பற்றிய விளக்கத்திலிருந்தும் ஒருவர்
வேறுபடக்கூடும். அவரது ஒரு கட்டுரையில் அவர் இவ்வாறு கூறுகிறார்: “ஒவ்வொரு சிறிய
விஷயத்தையும் ஆழ்ந்த மத முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக நாம்
புனிதப்படுத்தக்கூடாது என்று நான் கருதுகிறேன்
; மேலும்: “அத்தியாவசியமற்ற எல்லா விஷயங்களிலும், ஒரு ஹிந்து எது தேவையோ
அதற்கு அடிபணிய வேண்டும்.
அத்தியாவசியமற்றவற்றின் ஒரு உதாரணமாக
அவர் குறிப்பிடுகிறார்: “ஒரு மசூதிக்கு அருகில் 24 மணிநேரமும் அமைதியாக இருக்கவேண்டும்
என்ற முஸல்மானின் உணர்வை ஒருவர் எளிதில் புரிந்துகொள்ளலாம்.
அவரது எழுத்துகளில் இதுபோன்று முஸ்லீம்களுக்கு எதிராகக்
கூறப்பட்ட அறிவுரை எதையும் நான் காணவில்லை. பசு பாதுகாப்பிற்காக அவர் மன்றாடியது வேறு
பாணியில் அமைந்துள்ளது. ஒற்றுமைக்காக இரு சமூகத்தினரும் தம் மத நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்கவேண்டாம்
என்ற தொனியில் அமைந்த அவரது மற்ற அவதானிப்புகளை எங்கோ நான் கண்டிருக்கிறேன்.

Posted on Leave a comment

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) – லாலா லஜ்பத் ராய் – பகுதி 2 | தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்

ஒற்றுமை மாநாடும் உரிமைகளின் தொடர்பும்

(லாலா லஜ்பத் ராய்)
டெல்லி ஒற்றுமை மாநாட்டில் நடைபெற்ற விவாதங்களின்போது, என்னை ஒரு விஷயம் அதிகம் பாதித்தது. அது என்னவென்றால், நல்ல திறனுள்ள, நாட்டுப்பற்றுள்ள இளம் முகமதியர்கள், அதே போல் சில ஹிந்துக்கள், ‘அறுதியான, முழு உரிமைகள் (absolute rights) என்ற கருத்தாக்கத்தின் மீது பெரும் பிடிப்புக்கொண்டிருந்தார்கள். பசுக்களைக் கொல்வதற்கான உரிமை முகமதியர்களுக்கு இருந்தது என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வந்தது. அந்த உரிமையை அவர்கள் தானே முன்வந்து தியாகம் செய்தால்தான் குறைக்க இயலும். இந்த முழு உரிமைகளின் அடிப்படையில்தான், காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டிருந்த திறமையான, தன்னைத் தியாகம் செய்த பல இளைஞர்கள் வரைவுத் தீர்மானங்களைத் தயார் செய்தனர். நான் பலமுறை சுட்டிக்காட்டியபடி, முழு உரிமைகள் பற்றிய கருத்து தவறான ஒன்றாகும், சட்டத்தில் அதற்கான அடிப்படை ஏதுமில்லை. தலைவரான பண்டித மோதிலால் நேருவும் இதே பார்வையைக் கொண்டிருந்து அதை மிகச் சிரமப்பட்டு விளக்கினார். இருப்பினும், விளக்கங்கள் மிகவும் திருப்திகரமாக இருப்பதாக எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. பலரும் இதே கருத்தாக்கத்தைக் கொண்டிருந்ததால், அதைப் பற்றி நீண்ட விளக்கம் ஒன்றை அளிக்க விரும்புகிறேன்.
எந்தவொரு தனிநபரிடமோ அல்லது நாட்டின் ஒரு பகுதியாக உள்ள எந்தவொரு சமூகத்திடமோ முழுமையான உரிமைகள் அளிக்கப்படவில்லை என்று நான் கூறுகிறேன். உரிமைகள் அந்தந்த நிலைமைகளைச் சார்ந்தே அமைந்திருக்கின்றன. முழுமையான உரிமைகளின் அடிப்படையில் அமைந்த எந்த ஒரு சமூகமும் இருபத்து நான்கு மணிநேரத்திற்குக் கூட ஒன்றாக இருக்க இயலாது. முழு உரிமைகள் என்பது தவறான கோட்பாடாகவும், நடைமுறையில் தீங்கு விளைவிப்பதாக இருப்பதால், அந்தக் கருத்தாக்கம் நீண்ட காலம் முன்பே உடைந்துவிட்டது. இந்தக் கட்டுரையைப் பெரும் சிந்தனையாளர்கள், மேற்கத்திய சட்ட நிபுணர்களின் மேற்கோள்களைக் கொண்டு நான் நிரப்ப விரும்பவில்லை. இந்தக் கருத்து என்னைப் பொருத்தவரை மிகவும் எளியதாக இருப்பதால் அதை விளக்க அதிகம் சிரமப்படத்தேவையில்லை என்று கருதுகிறேன். ஒரு உயிரினத்தின் ஒட்டுமொத்த செயல்பாடு அதன் உறுப்புகளாக உள்ளவற்றின் பரஸ்பர கடமைகளைச் சார்ந்ததாக உள்ளது. உயிரினத்தின் எந்த ஒரு பகுதிக்கும் முழுமையான உரிமைகள் இல்லை.
முதலாவதாக, ஒரு தனிநபரின் அனைத்து உரிமைகளும். மற்றவர்களின் சம உரிமைகளைச் சார்ந்தே உள்ளன. இதுவே ஒரு சமூகத்தின் பல்வேறு உறுப்பினர்களுக்கிடையேயான பரஸ்பர கடமைகளையும் பொறுப்புகளையும் உருவாக்குகிறது. நன்கு கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு சமூக உயிரினத்தில் காரணமில்லாமல் இன்னொருவருடைய சட்டபூர்வமான நலன்களுடன் மோதக்கூடிய செயலைச் செய்யும் உரிமை எவருக்கும் இல்லை. சொல்லப்போனால், நல்லெண்ணத்தையும் முன்னேற்றத்தையும் காண்பதற்கு, மிகவும் மேம்பட்ட உறுப்பினர்கள் சில நேரங்களில் தங்கள் நலன்களைப் பொதுநலனுக்காக, சமூகத்தின் மற்ற உறுப்பினர்களுக்காகத் தியாகம் செய்ய வேண்டியிருக்கும். ஏழைகளைக் காப்பது, தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியாதவர்களின், அதாவது விதவைகள், அனாதைகள், பார்வையிழந்தவர்கள், முடவர்கள், வயதானவர்கள், சிறுவர்கள் ஆகியோரின் நலத்தைப் பேணுவது என்ற அனைத்தும் இந்த வகையின் கீழ் வருகிறது.
யூரோப்பின் வரலாற்றில் மனித உரிமைகள் மீது மிகுந்த கவனம் செலுத்திய காலம் ஒன்று இருந்தது. அது பிரெஞ்சுப் புரட்சியின் காலம். தாமஸ் பெயினின் ‘மனித உரிமைகள் (Rights of Man) அந்தத் தலைமுறையின் மனநிலையின் ஒரு பொதுவான பிரதிபலிப்பு ஆகும். ஆனால், ஐம்பது வருடங்களுக்குள்ளாகவே அந்தக் கோட்பாடு முற்றிலும் தவறானதாக, தீங்கு விளைவிப்பதாகக் கண்டறியப்பட்டது. மாஜினியின் ‘மனிதர்களின் கடமைகள் (Duties of Man), பெயினின் ‘மனித உரிமைகள் நூலுக்கு முழுமையான, உறுதியான பதிலடியாக அமைந்தது. பிரெஞ்சுப் புரட்சி மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்டது. அதன் அரசியலமைப்பும் அதன் அடிப்படையிலேயே அமைந்தது. அமெரிக்க அரசியலமைப்பும் அதே முயற்சியைச் செய்கிறது. ஆனால் நடைமுறையில், இரண்டிலும் உரிமைகள் வரம்புகளுக்கு உட்பட்டவையாகவே உள்ளன.
உதாரணமாக, அந்த அரசியல் சட்டங்களால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேச்சுச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைகள் சுதந்திரம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். தங்களுடைய நாட்டின் நலன் என்று வரும்போது, பிரஞ்சு மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் இந்த உரிமைகள் மீது கைவைக்காமல் இருந்துவிடும் என்று யாராவது நினைக்க முடியுமா? முதலாம் உலகப்போரின்போது நான் அமெரிக்காவில் இருந்தேன். அரசியல் சட்டம் உத்தரவாதம் அளித்த அடிப்படை உரிமைகள் எப்படி மக்களிடமிருந்து ஏதாவது ஒரு சாக்கில் அரசின் நடவடிக்கைகள் மூலமோ அல்லது மாநில சட்டத்தின் மூலமோ விலக்கிக்கொள்ளப்படுவதைக் கண்கூடாக என்னால் பார்க்க முடிந்தது. தங்கள் விருப்பமில்லாமல், போரில் ஈடுபடவைப்பதைத் தவிர்க்கும் உரிமை எல்லோருக்கும் இருந்தது. ஆனால், இந்தப் போரின்போது, பல அரசுகள் இந்த உரிமையை நிராகரித்தன. தங்களது விருப்பத்திற்கு எதிராக மக்கள் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுப் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த உரிமை நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மனச்சாட்சியுள்ளோர் எத்தகைய கடுமையான போராட்டங்களில் ஈடுபடவேண்டியிருந்தது, அதன் காரணமாக அவர்கள் எந்தவிதமான துன்பங்களைச் சந்திக்கவேண்டியிருந்தது என்பதை எல்லோரும் அறிவார்கள். ஒரு தனிமனிதர் அவர் விருப்பம்போல எதை வேண்டுமானாலும் சிந்திக்க முடியும், ஆனால் அந்த எண்ணத்தைப் பேச்சிலோ செயலிலோ அவர் காண்பிக்க முற்படும்போது அவரது உரிமைகள் நிபந்தனைகளாலும் வரம்புகளாலும் மட்டுப்படுத்தப்படுகின்றன. இந்தக் கேள்வியின் சட்டபூர்வமான, அரசியலமைப்புச் சார்ந்த அம்சம் இதுதான்.
அதன் அறம் சார்ந்த அம்சத்தைப் பொருத்தவரை, உரிமைகளை விட கடமைகளை வலியுறுத்துவதே மேலானது என்பது தெளிவாக உள்ளது. கடமைகளை விட உரிமைகளை வற்புறுத்துபவர்கள் சுயநலவாதிகளாக, கர்வம் கொண்டவர்களாக, தன்னைப் பற்றியே சிந்திப்பவர்களாக உள்ளனர். கடமைகளை வலியுறுத்துகின்றவர்கள் இதற்கு நேர்மாறானவர்கள். மனிதகுலத்தின் மேம்பாட்டிற்கும் சேவை மனப்பான்மைக்கும் அடிப்படை உரிமைகளை விட கடமைகளை வலியுறுத்துவதில்தான் உள்ளது. உலகின் எல்லாப் பெரிய மதங்களின் போதனையும் இதுதான். புத்தர், கிறிஸ்து, காந்தி ஆகியோரின் போதனை இதுவே. ஒவ்வொரு நாளும் அளிக்கும் அனுபவத்தின் பாடமும் இதுதான். ஒரு உயர்ந்த சமூகத்தின் சிறந்த தன்மைக்கான எடுத்துக்காட்டு, அதன் உறுப்பினர்கள் மற்ற உறுப்பினர்களுக்கு வேதனையளிக்கக்கூடிய எந்தவொரு செயலையும் செய்யாமல் இருப்பது, அதற்காக உரிமைகள் என்று அழைக்கப்படுகிற தங்களது நலனையும் குறைத்துக்கொள்ளுவது என்பதுதான். எப்படியோ, ஒரு விஷயம் நிச்சயம். ஒரு சமுதாயத்தின் எந்தவொரு உறுப்பினரும் மற்றவர்களின் உரிமைகள் மீது மோதக்கூடிய அவரது உரிமையைச் செலுத்துவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது. இரண்டு பக்க உரிமைகளும், அவை ஒன்றுக்கொன்று பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வண்ணம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
மகாத்மா காந்தியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இளைஞர்களில் சிலர், இந்த ‘உரிமைகளின் கோட்பாட்டை வலியுறுத்துவதைக் கண்டு நான் ஆச்சரியம் அடைந்தேன். ஏனெனில், திரு இராஜகோபாலச்சாரி மாநாட்டில் ஏற்கெனவே குறிப்பிட்டது போல், காந்தியின் போதனை என்பது உரிமைகளை விட கடமைகளின் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இந்த கேள்வியை இன்னும் சிறிது ஆழமாகச் சிந்திக்க நம் இளைஞர்களுக்கு நான் அறிவுறுத்துவேன். நாட்டு இளைஞர்களுக்கு நான் அறிவுரை வழங்குவேன். இந்த விஷயத்தைப் பற்றிய பற்றிய எழுத்துகளை இன்னும் கவனமாக வாசிப்பதற்கும், இந்த தீங்கு விளைவிக்கும் கோட்பாட்டின் தொல்லையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளவும் நான் ஆலோசனை கூறுவேன். இது நடக்காவிடில், இந்தியாவின் ஒற்றுமைக்குச் சாத்தியமே இல்லை. நாம் பன்மொழிகளைக் கொண்ட ஒரு நாடு என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும், தங்கள் சுதந்தரத்திற்காகப் போராட வேண்டியிருந்த எந்த ஒரு யூரோப்பிய, மேற்கத்திய நாடுகளையும் விட நமது ஒற்றைப்படைத்தன்மை குறைவு. பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த அதன் மக்கள் அனைவரும் உரிமைகளால் அல்லாமல் கடமைகளால் ஈர்க்கப்பட்டாலொழிய, அத்தகைய ஒரு நாடு சுதந்தரத்தை வென்றெடுக்க முடியாது; அப்படியே சுதந்தரம் அடைந்தாலும் அதைத் தக்கவைத்துக்கொள்ள இயலாது. ஒவ்வொருவரும் அவருடைய நலனை மட்டுமே நினைத்தால், ஒற்றுமை இருக்காது. ஒற்றுமை இல்லாமல் சுதந்திரம் இல்லை.
(தொடரும்.)

Posted on Leave a comment

ஹிந்து – முஸ்லிம் பிரச்சினை (1924) – பகுதி 1 : லாலா லஜ்பத் ராய் | தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்

பகுதி 1 
ஹிந்து முஸ்லிம் பிரச்சினை இந்தியாவின் பிரச்சினை

 

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை
என்பது இந்தியாவின் பிரச்சினையாகும். ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையைப் பற்றி நாம் படித்திருக்கிறோம்,
கேள்விப்பட்டுமிருக்கிறோம். ஆங்கிலோ-இந்தியர்களுக்கும் தேசியவாதிகளுக்கும் இடையே எப்போதும்
விவாதத்தை உருவாக்கும் விஷயம் இது. ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு ஒரே நாட்டில்
வாழமுடியும் என்பதை முன்னவர்கள் நம்பமறுக்கிறார்கள், பின்னவர்கள் நம்புகிறார்கள். குறிப்பிட்ட
ஒரு தருணத்தில் எவ்வளவு ஒற்றுமை அல்லது வேற்றுமை உள்ளது என்பதே ஒரு முக்கியப் பிரச்சினையாகும்.
ஆனால் 1919லிருந்து 1921 வரை இந்தியாவில் இருந்த ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு
இருந்தனர் என்பது உண்மை. இந்தக் காலக்கட்டத்தில்தான் இந்திய வரலாற்றில் முதன்முறையாக
ஆகப்பெரிய, வரலாற்றின் முக்கியமான, இந்தியாவில் உள்ள அற்புதமான மசூதி ஒன்றின் வளாகத்திலிருந்து
ஒரு காஃபிர் உரை நிகழ்த்தினார். அதேபோல் மிலேச்சர்கள் ஹிந்துக்களுடன் சேர்ந்து ஹிந்துக்களின்
பண்டிகைகளைக் கொண்டாடினர்.
இருப்பினும், இந்தக்
குறுகிய காலகட்டத்தில் ஏற்பட்ட ஒற்றுமை தொடரவில்லை என்பதும் உண்மை. கடந்த மூன்று வருடங்களாக
பிரிட்டிஷ் ஆட்சியில் முன்னெப்போதும் இல்லாதவரையில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவர்மீது
ஒருவர் கடுமையான விரோதம் பாரட்டுகின்றனர். இந்தச் சீர்கேட்டைத் தடுக்க நடைபெற்ற முயற்சிகள்
எதுவும் வெற்றிபெறவில்லை. தீர்வு ஒன்றினைக் காண செய்யப்பட்ட பிரயத்தனங்கள் எதுவும்
பலனளிக்கவில்லை. இதை எழுதும்போது இரண்டு சமூகங்களுக்கும் இடையேயான உறவுகள் மீட்டெடுக்கமுடியாமல்
முறியும் நிலையில் உள்ளன என்பதை மறுக்க இயலாது. மதக் கலவரங்களும் பிரச்சினைகளும் முன்னெப்போதையும்விட
அடிக்கடி நிகழ்கின்றன. பரஸ்பர நம்பிக்கையின்மையும் சந்தேகங்களும் விளிம்புநிலையை எட்டிவிட்டன.
என்னதான் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக்கொண்டாலும், காங்கிரஸ் வட்டாரங்களிலும்கூட,
இரண்டு சமூகங்களையும் சேர்ந்த தலைவர்களுக்குள் நம்பிக்கையின்மையும் சந்தேகமும் நிலவுகிறது.
காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் எப்போதுமே ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை முன்னிருத்தப்படும், ஆனால்
அதன் தலைவர்கள் நிலைமையைச் சீராக்கவோ, ஒரு தீர்வை எட்டவோ தவறிவிட்டனர். இதற்கான விளக்கம்
எளிது. அவர்கள் மக்களின் ஆதரவை இழந்திருக்கவேண்டும் அல்லது நேர்மையாக நடந்துகொள்ளாமல்
இருந்திருக்கவேண்டும். பின்னாலுள்ள கருத்தை நான் ஏற்கவில்லை, எனவே முன் உள்ள கருத்தையே
நாம் ஏற்றுக்கொண்டாகவேண்டும்.
மகாத்மா காந்தி விடுதலை
செய்யப்படுவதற்கு முன்பு, நாடு முழுவதும் அவர் சிறையில் இருந்தபோது பெரிதாக உருவெடுத்துவிட்ட
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண எரவாடா சிறையை நோக்கி இருந்தது. எல்லா நம்பிக்கைகளும்
ஒரே மனிதரைச் சார்ந்தே இருந்தன, ஆனால் அவர் சிறையில் இருந்த காரணத்தால், அவரது விடுதலை
ஹிந்து முஸ்லிம் தகராறிலிருந்து நாட்டிற்கும் விடுதலை அளிக்கும் என்று கருதப்பட்டது.
இருதரப்பும் அவர் மீது நம்பிக்கை கொண்டிருந்தன. அவரது தலைமை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
அவரது நோக்கங்களைப் பற்றி சிறிதளவு சந்தேகம் கூட இருந்ததில்லை. அன்பு, பொறுமை, நம்பிக்கை,
நற்குணம் ஆகியவற்றின் அடையாளமாக அவர் கருதப்பட்டார். ஆகவே ‘எரவாடா சிறையைத் திறக்கும்
சாவி’ ஹிந்து முஸ்லிம் பிரச்சினைகளைத் தீர்க்கும் சாவியாகக் கருதப்பட்டது. விதி அத்தகைய
ஒரு சாவியை அளித்தது, மகாத்மா விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலை செய்யப்பட்டு கிட்டத்தட்ட
ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. அவர் விடுதலையானபோது அவரது உடல்நலம் அவ்வளவு சரியாக இல்லை.
அதனால் ஆறு வாரங்களை அவர் மருத்துவமனையில் அவர் கழிக்க நேரிட்டது. ஆனால் அவருக்கே உரிதான
தன்னலமற்ற தன்மையுடன் நிலைமையை ஆராய அவர் முற்பட்டார், இந்த வருத்தத்திற்குரிய மாற்றத்தின்
காரணத்தையும் அவர் ஆராய்ந்தார். இம்முயற்சியில் எதையும் அவர் விட்டுவைக்கவில்லை. இருதரப்பு
நியாயங்களையும் அவர் கேட்டறிந்தார், நடுநிலையாளர்களின் கருத்துக்களையும் கேட்டார்.
தனிப்பட்ட விசாரணைகளை முடித்துவிட்டு, சிந்தனையிலும் தியானத்திலும் ஆழ்ந்தார்.
அதன்பின் இனிமையான,
நியாயமான, சமாதானத்தைக் கோரும் அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டார். ஆனால் அது இருதரப்பிற்கும்
திருப்தியாக இல்லை. நான் இங்கே இரு தரப்பிற்கும் என்று கூறும்போது அவர் வார்த்தையை
வேதவாக்காக நினைக்கும், அவர் கூறுவதற்கு எதிர்க்கேள்வி கேட்காத பிரிவை அதில் சேர்க்கவில்லை.
அவருடைய அறிக்கை எந்த அளவிற்கு ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் திருப்தியளித்தது
என்று ஆராய்ந்தால், அதில் ஹிந்துக்களுக்கு முஸ்லிம்களைவிட குறைவான திருப்தியே இருந்தது
என்று சொல்லலாம். குற்றம்சாட்டுவதிலும் பொறுப்பைச் சுமத்துவதிலும் அவர் பாரபட்சமில்லாது
நடந்துகொள்ளவில்லை என்ற குறை ஹிந்துக்களுக்கு இருந்தது. ஹிந்துக்களில் ஒரு பிரிவினரை
(செல்வாக்குமிக்க, துடிப்பான, சுறுசுறுப்பானவர்கள்) அவரது அறிக்கை காயப்படுத்தி, வார்த்தைகளாலும்
தீர்மானங்களாலும் அதற்குக் கடுமையான எதிர்வினைகளை ஆற்ற வைத்தது. இது சரியானது அல்லது
தவறானது என்று எப்படி நினைத்தாலும், இரு சமூகங்களுக்கிடையே சமரசத்தை உருவாக்க நினைக்கும்
ஒருவர் அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட இயலாதவாறு இருந்தது அது.
 
லாலா லஜ்பத் ராய்
என்னைப் பொருத்தவரை
மகாத்மா அளித்த தீர்வும், இதற்கான மருந்தாக அவர் பரிந்துரைத்ததும் ஒருவரையும் கவரவில்லை.
ஒருவர் அவரிடமிருந்து எதிர்பார்த்தது போல், அவருடைய ஆய்வும் அவ்வளவு சிறப்பானதாக இல்லை.
அவர் மேம்போக்கான காரனங்களைக் கருதினாரேயன்றி, ஆழமாகச் சென்று அடிப்படைக் காரணிகளைப்
புரிந்துகொள்ள முயலவில்லை. மியான் ஃபசல்-இ-உசைனைப் பற்றியும் ஸ்வாமி ஷ்ரத்தானந்தரையும்
பற்றி அவர் சில கருத்துகளைச் சொன்னார், ஆனால் அவர்களைத் தூண்டிவிட்டவர்கள் பற்றி ஏதும்
தெரிவிக்கவில்லை. அவரது நேர்மையையும், எல்லோரிடமும் அவர் கொண்ட அன்பையும், சமாதானத்திற்கான
அவரது விருப்பத்தையும், ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே முழுமையான ஒற்றுமை
ஏற்படவிரும்பிய அவரது பதட்டத்தையும், இவை எல்லாவற்றின் மூலமாக ஸ்வராஜ்யம் என்ற கோரிக்கையையும்,
ஏன் ஸ்வாராஜ்யம் அடைவதையே அவர் விரும்பியதையும் யாரும் சந்தேகிக்கவில்லை. ஆனால் இதையெல்லாம்
அடைய உதவுகின்ற அறிக்கை ஏமாற்றம் அளித்தது. தோற்றத்தில் அருமையாகவும், பிரமாதமாகவும்
இருந்த பிரச்சினைக்கான தீர்வு மேலோட்டமாக இருந்தது. கடந்த ஆறு மாதங்களில் ஏற்பட்ட நிகழ்வுகள்,
ஒரு வலிநிவாரணியாக, நிரந்தரத் தீர்வாக அவரது முடிவு இருக்கும் என்பதைப் பொய்யாக்கிவிட்டது.
இந்தக் குழப்பங்களுக்கும்
ஏமாற்றங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் இடையே, அது உண்டாக்கிய பிரச்சினைகளுக்கு நடுவே,
இந்தியாவின் நலனை விரும்புபவர்களுக்கு ஒரு வலிமையான கருத்து உருவாகி வந்திருக்கிறது.
ஹிந்துக்களும் முஸ்லிம்களும் எந்த அளவு பிரிந்திருந்தாலும், ஒருவருக்கொருவர் இடையேயான
அவர்களின் உறவுகள் எவ்வளவு மோசமடைந்திருந்தாலும், ஸ்வராஜ்யம் என்ற கருத்தில் அரசுக்கு
எதிரான நோக்கத்தில் அடிமைத்தளையை உடைத்தெடுக்கும் முயற்சியில் அவர்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர்
என்பதுதான் அது. இந்தியர்கள் ஒவ்வொருவரிடமும் இந்த அரசியல் தன்மையைக் கொண்டுசேர்த்த
பெருமை மகாத்மா காந்தியையே சேரும். அவர்களிடம் ஒரு விழிப்புணர்வை, எக்காலத்திலும் அணையாத
அந்த வேட்கையை ஏற்படுத்தியது அவர்தான். ஒரு தேசியத்தை உருவாக்கும் எண்ணத்தை அவர்களிடம்
விதைத்தது அவர்தான். மகாத்மாவின் இந்த வலிமையான, நிரந்தரமான சாதனையின் காரணமாக எதிர்காலத்தைக்
குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை. ஒருவர் விரும்பியதைப் போல அவரது அறிக்கை திருப்திகரமானதாக
இல்லாமலிருக்கலாம். ஆனால் அனைவரையும் முன்னே இழுத்துச் செல்பவர் அவர்தான். நாம் விரும்பும்
நோக்கத்தை அடைய தலைமை தாங்கி முன்செல்பவரும் அவர்தான். ஆனால் வெற்றிக்கு முக்கியமான
காரணிகளில் ஒன்றாக இருப்பது, எந்த ஒரு உண்மையையும் புறக்கணிக்காமல் இருப்பது. அனுபவத்தைத்
தவிர்த்து வெற்றுப்பேச்சுகளை நம்புவது பலனளிக்காது. அவர் செய்யாவிட்டாலும் மற்றவர்கள்
சரியான சிந்தனையையும், எண்ணத்தையும் சரியான தீர்வு ஒன்றுக்கான தயார் நிலையையும் தூண்டி
வெற்றிகாணக்கூடும்.

 

இந்தியாவை நோக்கிய
என் பயணத்தின்போது மேற்கூறியவற்றை நான் எழுதினேன். அதன்பின் நவம்பர் 18, 1924ல் நான்
பம்பாயை அடைந்தபின்னர் நான் பார்த்த, படித்த, அவதானித்தவற்றுடன் நான் எழுதியதை ஒப்பிட்டுப்
பார்த்தேன். நான் இந்த மண்ணை அடைந்தவுடன் இரண்டு அதிர்ச்சியான விஷயங்களைக் கேள்விப்பட
நேர்ந்தது. ஒன்று கோஹட் துயர சம்பவம், மற்றொன்று மகாத்மா காந்தியின் உண்ணாவிரதம். கோஹட்
சம்பவத்தின் ஆகப்பெரிய துன்பமளிக்கும் விஷயம், முஸ்லிம்களின் தாக்குதலுக்கு அஞ்சி ஹிந்துக்கள்
அனைவரும் அந்த இடத்திலிருந்து வெளியேறியதுதான். இந்தத் துயர சம்பவத்திற்கான இரண்டு
சமூகங்களின் பங்களிப்பைக் குறித்து இங்கு நான் வாதிட விரும்பவில்லை. ஆனால் பிரிட்டிஷ்
ஆட்சியில் முன்னெப்போதையும் விட இந்த அரசு செயல்படாமலும், திறனில்லாமலும் நடந்துகொண்டிருக்கின்றது
என்பதை நான் சொல்லமுடியும். நான் பிரிட்டிஷ் ஆட்சியினால் கவரப்பட்டவனல்ல. சொல்லப்போனால்
எந்த ஒரு அந்நிய ஆட்சியாலும் மயங்கிவிட்டவனல்ல. பிரிட்டிஷ் குணநலன்களை நான் மதித்தாலும்
அவர்கள் நிர்வாக முறைகளின் எனக்கு விமர்சனங்கள் எப்போதும் உண்டு. இருப்பினும் பிரிட்டிஷ்
அரசால் சிறுபான்மையரைப் பாதுகாக்க முடியும் என்றும் எந்த ஒரு சூழ்நிலையிலும் அமைதியையும்
பாதுகாப்பையும் அவர்களால் கட்டிக்காக்க முடியும் என்று நம்புகிறவன் நான்.
கிட்டத்தட்ட
3500 நபர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அடங்கிய ஒரு சமூகமே அவர்கள் வீடுகளிலிருந்து
தூரமான ஒரு இடத்தை நோக்கி அரசுப் போக்குவரத்தின் மூலம் அரசின் உதவியால், ஒரு பெரும்பான்மை
சமூகத்தினால் தாக்கியழிக்கப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாக இடம்பெயர்ந்த இந்த நிகழ்வு,
பிரிட்டிஷ் அரசின் மீதான இந்த நம்பிக்கையைக் குலைத்து விட்டது. ஏனெனில் இதற்கு இரண்டு
காரணங்கள்தான் இருக்க முடியும். வடமேற்கு மாகணத்தில் இருந்த, பிரிட்டிஷ் அதிகாரிகளின்
நேர்மையின்மை அல்லது திறமையின்மை இதன் காரணமாக இருக்கக்கூடும். ஒரு வாதத்திற்காக கோஹட்டில்
இருந்த ஹிந்துக்கள்தான் கலகம் செய்து, முஸ்லிம்களை இத்தகைய கொலைவெறித்தாக்குதலில் ஈடுபடும்
நிலைக்குத் தள்ளினார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் இந்தத் தாக்குதலிலிருந்து ஹிந்துக்களுக்குப்
பாதுகாப்பு அளித்து, அங்கு சட்டம் ஒழுங்கு சீரடைந்த உடன், குற்றம் செய்தவர்களுக்குத்
தகுந்த தண்டனை அளிப்பது பிரிட்டிஷ் அரசின் கடமை. உண்மையில் கோஹட்டின் நடந்தது என்னவென்றால்,
அதிகாரிகள் நிலைமை கட்டுமீறிப்போய்விட்டதென்று கருதி ஹிந்துக்களுக்குத் தகுந்த பாதுகாப்பு
அளிக்கத் தவறிவிட்டனர். விசாரணையின்றி தண்டனை அளிக்கும் சட்டத்தைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்
அல்லவா. அது என்ன? வழக்கமான நீதி வழங்கும் முறையைத் தடுத்து, அதிகாரிகளைச் சட்டத்தின்
படி செயல்பட விடாமல் தடுப்பது. அதே போன்ற ஒன்றுதானே கோஹட்டிலும் நடந்தது?
குற்றம் சாட்டப்பட்ட
ஒவ்வொருவருக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்கவேண்டுமென்றும் குற்றம் சாட்டுபவர்களின்
தாக்குதலிலிருந்து அவர் காக்கப்படவேண்டுமென்றும் சட்டம் சொல்கிறது. ஒரு நீதிமன்றம்
அவரைக் குற்றவாளி என்று கருதிய பின்னரே அவருக்குத் தகுந்த தண்டனையளிக்கப்படவேண்டும்.
கோஹட்டின் ஹிந்துக்கள் குற்றம் செய்தவர்கள் எனக் கொண்டாலும், அவர்களைக் கைது செய்து,
நீதிமன்றத்தின் முன் நிறுத்தி வழக்கு நடைபெறும்போது பாதுகாப்பது பிரிட்டிஷ் அரசின்
கடமை. கோஹட்டில் இதைச் செய்ய பிரிட்டிஷ் அரசாங்கம் தவறிவிட்டது. உயிர்பயத்தால் ஹிந்துக்கள்
அங்கிருந்து வெளியேற விரும்பினாலும், அவர்களைத் தடுத்து நம்பிக்கையளிப்பது அரசின் கடமை.
அவர்களுக்கு தகுந்த ராணுவப் பாதுகாப்பு அளித்து அவர்கள் வீட்டில் தங்குமாறு அரசு செய்திருக்கவேண்டும்.
தங்கள் உயிருக்கு ஆபத்து எற்படும் என்ற அச்சம் இருந்தாலொழிய கோஹட் ஹிந்துக்களைப் போல
யாரும் தங்கள் வீடுகளையும் சொத்துக்களையும் விட்டுச் செல்ல விரும்பமாட்டார்கள். இந்த
நிகழ்வு மதக் கலவரத்தின் ஒரு புதிய பரிணாமத்தை வெளிக்காட்டியிருக்கிறது. இதை ஒற்றுமையை
ஏற்படுத்த விரும்புபவர்கள், பிரச்சினையின் ஆணிவேரை அணுகாமல் மேலோட்டமாகத் தீர்வு ஒன்றைக்
காண விரும்புபவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
மகாத்மா காந்தியின்
உண்ணாவிரதத்தைப் பொருத்த வரையிலும், அமேதி, குல்பர்கா, கோஹட் போன்ற இடங்களில் உள்ள
ஹிந்து ஆலயங்களுக்கு நேர்ந்த அவமதிப்புகள், கோஹட் துயரச் சம்பவம் ஆகியவை அவருக்கு அதிர்ச்சியை
அளித்திருக்கவேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக, அவரது புரிதல் இன்மைக்கும், ஹிந்து
முஸ்லிம் விவகாரத்தைத் தவறாகக் கையாண்டதற்கும் ஒரு தியானத்தை மேற்கொள்ளவேண்டிய கடமை
இருப்பதாக அவர் கருதியிருக்கவேண்டும். முஸ்லிம்களின் ‘கிலாஃபத்தை’ காப்பதற்காக ஹிந்துக்களின்
ஒத்துழைப்பைக் கோரிய அவர் எந்த ஒரு தூண்டுதலும் இல்லாமல் முஸ்லிம்கள் ஹிந்துக் கோவில்களை
அவமதித்ததற்காக வருந்தியிருக்கவேண்டும். அவரது அதிர்ச்சி ஏற்படுத்திய கையாலாகாத்தனத்திற்கும்
ஏமாற்றத்திற்கும் தீர்வாக தன்னைச் சுத்திகரித்துக்கொள்ள இந்த இருபத்து ஒரு நாள் உண்ணாவிரதம்
உதவுமென்று, தன்னையறியாமல் அவர் செய்த பாவங்களுக்கு மன்னிப்பாக அவர் இதைக் கருதியிருக்கலாம்.
ஹிந்து முஸ்லிம் உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட இந்த இடைவெளி ஒரு வாய்ப்பாக அமையுமென்றும்
அவர் நம்பியிருக்கலாம்.
என்னுடைய முதல் உணர்வு
இதை நிராகரிப்பதாக அமைந்தது. ஆனால் டெல்லியை அடைந்ததும், இந்தத் தீர்மானத்தை எடுக்க
அவரைத் தூண்டியது வேறு எந்த வழியிலும் அவரைத் திருப்திப் படுத்தாது என்று உணர்ந்துகொண்டேன்.
ஒற்றுமை மாநாட்டைப் பற்றிய என்னுடைய கருத்தும் இதுவேதான். ஒற்றுமை மாநாடு இதற்கான தீர்வை
அடையாது, தீர்வை அடையவும் முடியாது என்பதே என் எண்ணம். ஆனால் இந்தப் பிரச்சினையைப்
பற்றிய பல்வேறு விதமான குழப்பங்களையும் தாக்கங்களையும் அறிந்து கொள்ள இது ஒரு நல்ல
முயற்சியாக இருக்கும் என்று எண்ணினேன். தனது ஆற்றல், நேரம், கவனம் ஆகியவற்றின் பெரும்பகுதியை
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக செலவழிக்க மகாத்மா காந்தி முடிவுசெய்திருக்கிறார்.
என்னுடைய இதயத்தின் அடியாழத்திலிருந்து இந்த முயற்சியில் அவர் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
ஆனால் அவர் தன்னுடைய முயற்சி அத்தனையும் தற்போதைய நிலையில் அடிப்படைக் காரணிகளை அறிவதில்
செலவழித்தாலொழிய அவர் இதில் வெற்றிபெற இயலாது. அவருடைய நெருக்கமான நண்பர்களின் ஊகங்கள்,
முன்முடிவுகளை அவர் தவிர்த்தாலேயன்றி, தனது முக்கியமான நேரத்தை தகுந்த முறையில் பயன்படுத்தினாலேயன்றி
இதற்குத் தீர்வு காண முடியாது. அறிவியல் ரீதியாக இந்தக் கேள்விக்கு விடைகாண அவர் முயலவேண்டும்.
பிரச்சினையின் அடிப்படைக் காரணங்களை அறிந்து அதன் மூலம் தீர்வு காண அறிவியல் முறைகளை
அவர் பயன்படுத்தவேண்டும்.
என்னுடைய
கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவிப்பதற்காக நான் காங்கிரஸிலிருந்து ராஜினாமா செய்துவிட்டேன்.
நான் உண்மையை வெளிப்படையாகப் பேசப்போகிறேன். தலைமைத்துவம் அளிக்கும் பொறுப்பின் காரணமாக
பூடகமாகப் பேசுவதைக் கைவிட்டு, யார் என்ன நினைப்பார்களோ என்று கவலைப்படாமல் செயலாற்றப்போகிறேன்.
என்னைப் பலர் விமர்சனம் செய்யக்கூடும், ஆனால் பிரச்சினைகளில் ஈடுபட்டுக்கொள்ள எனக்கு
விருப்பமில்லை. இந்த விவகாரத்தில் என்னுடைய கருத்துகளைத் தெரிவிக்கும் முன்னர் இதை
எல்லாம் தெளிவுபடுத்துவது தேவை என்று நினைக்கிறேன்.
(தொடரும்)

 

பாகம் 13 | பாகம் 12 | பாகம் 11 | பாகம் 10 | பாகம் 9 | பாகம் 8 | பாகம் 7 | பாகம் 6 | பாகம் 5 | பாகம் 4 | பாகம் 3 | பாகம் 2 |