மாதொரு பாகன் – என்னதான் நடந்தது? – ராஜா ஷங்கர்
பெருமாள் முருகன் எழுதி காலச்சுவடு வெளியிட்டிருந்த ‘மாதொருபாகன்’ நூல் தொடர்பான சர்ச்சையைப் பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.
இந்த விஷயம், தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையை ஆய்வுசெய்து ஒரு ஆய்வுக்கட்டுரை மற்றும் நூல் எழுதுவதற்காக பெருமாள் முருகன் இந்தியக் கலாசார மையம் என்னும் பெங்களூருவில் இருக்கும் அமைப்பிடமிருந்து பணம் வாங்கியதில் தொடங்குகிறது. இந்த அமைப்பிடமிருந்து பணம் பெற்றதாக பெருமாள் முருகன் ‘மாதொரு பாகன்’ நூல் முன்னுரையிலேயே குறிப்பிடுகிறார். ‘ஆய்வின் மூலமாக நாவல் எழுதும் திட்டம் ஒன்றிற்கு ரத்தன் டாட்டா அறக்கட்டளை வழியே நல்கை வழங்கப் பெங்களூரில் உள்ள ‘கலைகளுக்கான இந்திய மையம் (மிதிகி)’ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதற்கு விண்ணப்பித்து நல்கை பெற்றேன்’ என்கிறார். ஆய்வுக்கு நல்கை பெற்றவர் ஆய்வுக்கட்டுரைதான் எழுதினாரா என்றால் இல்லை. மாதொருபாகன் என்ற நூலைத்தான் எழுதினார். அப்படியானால் ஆய்வு? அந்த ஆய்வின் முடிவுகளைக் கொண்டுதான் இந்த நூல் எழுதியதாகச் சொல்கிறார். நூலின் முன்னுரையில் இப்படி ஒரு வரி உள்ளது. ‘சைவம், கோயிலின் பூர்வ வரலாறு ஆகியவற்றைவிட மக்களிடையே கோயில் பெற்றிருக்கும் மிதமிஞ்சிய செல்வாக்கே என்னை ஈர்த்த விஷயம்.’ அதாவது கோவிலின் ‘மிதமிஞ்சிய’ செல்வாக்கு.
நூல் வெளிவந்து சில வருடங்கள் கழித்துத்தான் சர்ச்சை ஆரம்பிக்கிறது. இந்த நூலிலே இப்படி ஒரு தரக்குறைவான விஷயம் ஆய்வு என்னும் போர்வையில் சொல்லப்பட்டிருப்பது, இந்நூல் வெளிவந்தபோது மக்களுக்குப் பரவலாகத் தெரியவில்லை. தமிழ்நூல்களைப் படிக்கும் வழக்கமே அருகிவருகிறது என்பதை அந்த நூல்களைப் பதிப்பிப்பவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். அதுவும் தீவிர இலக்கியப் புனைவு என்னும் போர்வையில் வரும் புத்தகங்களை வாசிப்பவர்கள் மிகமிகக் குறைவே. அதிலும் இப்படிப்பட்ட இடதுசாரித்தனமான நூல்களை கம்யூனிஸ்ட்டுகள் தங்களுக்குள்ளே படித்துக்கொண்டு தங்களுக்குள்ளே பாராட்டுவிழாவும் நடத்திக்கொள்வார்கள் என்பதால் இந்நூல் வெளிவந்தபோது இதைப் பற்றி வெளிஉலகுக்குத் தெரிவதில்லை.
இந்நூல் எழுத காசு கொடுத்தவர்களும், இந்நூலோடு தொடர்புடைய சிலரும் சேர்ந்து கொங்கு மண்டலத்தின் மக்கள் மீது வீசிய புழுதியை உலகெங்கும் கொண்டு செல்வது எனத் தீர்மானித்து இந்த நூலுக்கு சிங்கப்பூரிலே பாராட்டு விழா நடத்தினார்கள். அதுவும் ஆங்கிலத்திலே மொழிபெயர்க்கப்பட்ட நூலுக்கு. அப்போதுதான் இந்நூல் குறித்த உண்மையான செய்திகள் மக்களுக்குத் தெரியவருகின்றன. நன்றாகக் கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் கொங்கு மண்டலத்தில் எந்த இடத்திலும் இந்நூலுக்கு ஒரு விவாதமோ பாராட்டோ விழாவோ ஏற்பாடு செய்யப்படவில்லை. நேராக சிங்கப்பூர் போய்விட்டார்கள்.
ஒரு தம்பதியினருக்குக் குழந்தை இல்லை என்பதைச் சொல்வதாக அமைந்திருக்கும் கதையில், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, குழந்தை வரம் என்பது கடவுளின் அருளால் கிடைப்பதில்லை, அது கோவில் திருவிழாவுக்கு வரும் ஆண்களுடன் கூடுவதால் கிடைப்பது என்றும் கோவில் திருவிழாவிலே மிகமோசமான நிகழ்வுகள் நிகழ்கின்றன என்றும் சொல்லப்பட்டுள்ளது. இங்கே கவனிக்கப்படவேண்டியது, இதை நேரடியாகச் சொல்லாமல், இப்படி ஒரு விஷயம் காலங்காலமாக நடந்து வருவதாகவும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், பின்னணியில் மறைமுகமாகச் சொல்லப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட ஆதாரமற்ற மோசமான கருத்தைப் பின்னணியாகக் கொண்டு ஆய்வு என்ற பெயரில் தங்கள் ஊரும் புனிதமான கோவிலும் கேவலப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்த மக்கள் அகிம்சை முறையிலே எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். கடையடைப்பு, அமைதியாக ஊர்வலம் என எதிர்ப்புகள் பதிவுசெய்யப்பட்டன. இந்த எதிர்ப்பைக் கண்ட கதாசிரியர் தன் நூலான ‘மாதொருபாகன்’ நாவலில் சொல்லப்பட்டவை அனைத்தும் கற்பனை எனவும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் எனவும் பல அறிக்கைகளை வெளியிட்டார். மக்களோ அந்தப் பாசாங்குக்கெல்லாம் மயங்கவில்லை. இறுதியாக மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்திய அமைதிக்கூட்டத்தில் நிபந்தனை அற்ற மன்னிப்புக் கேட்பதாகச் சொல்லி கையெழுத்திட்டுத் தந்துவிட்டார் நாவலாசிரியர்.
அக்கூட்டத்தில் பெருமாள் முருகனால் ஒப்புக்கொள்ளப்பட்டவை:
1. யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் இந்தப் புத்தகம் எழுதப்படவில்லை.
2. எதிர்காலத்தில் இப்புத்தகம் வெளிவந்தால் திருச்செங்கோடு பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம் பெறாது.
3. இது தொடர்பாக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும்படி பேட்டியோ கட்டுரையோ வெளியிடமாட்டேன்.
4. ஏற்கெனவே வெளியிடப்பட்ட பிரதிகளில் விற்பனையாகாமல் உள்ள புத்தகங்களைத் திரும்ப பெற்றுக்கொள்கிறேன்.
மாவட்டநிர்வாகம் கூட்டிய கூட்டத்தில் இப்படிக் கையெழுத்திட்டுத்தந்த கதாசிரியர் ‘அடுத்தநாள் பெருமாள் முருகனின் மரணம்’ எனச் சமூக வலைத்தளங்களில் அறிவித்தார். இதனால் தூண்டப்பட்ட மனித உரிமைக்கும் கருத்து சுதந்திரத்திற்கும் குரல் கொடுப்பவர்களாகச் சொல்லிக்கொள்பவர்கள் மாவட்ட நிர்வாகம் செய்த முயற்சிகளையும் நாவலாசிரியர் மேல் பதியப்பட்ட காவல்துறை வழக்குகளையும் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ‘பெருமாள் முருகன் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் நீக்கவேண்டும். கருத்துச் சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு வேண்டும்’ என்ற கோரிக்கைகளையும் முன்வைத்தனர். இதில் ஒரு தரப்பாக பெருமாள் முருகன் பின்புதான் சேர்க்கப்பட்டார். அந்தக் ‘கதை’யை வெளியிட்ட பதிப்பாசிரியரும் சேர்ந்துகொண்டார். பதில் மனுக்களை இந்து இயக்கங்களும் கொங்கு மண்டல சமூக அமைப்பைச் சேர்ந்தவர்களும் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் பல விசித்திரங்கள் நடந்தேறின. முதலில் இந்தக் கதை ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்டது எனச் சொன்ன கதாசிரியர், அது வெறும் கற்பனை எனச் சொன்னார். ஆனால் அந்தப் புத்தகத்தை பதிப்பித்த பதிப்பாளர் ‘அது கற்பனை அல்ல, உண்மை’ என்று வாதாடினார். மேலும் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தது உண்மையே எனச் சொல்ல காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருந்த கட்டுரைகளிலும் புத்தகங்களிலும் இருந்தே ஆதாரம் காட்டுகிறோம் என்ற வேடிக்கைகளும் நடந்தன. அதோடு ஏகப்பட்ட புத்தங்களைக் கொண்டுவந்து, இதிலெல்லாம் ஆதாரம் இருக்கிறது, இதைப் படித்துப் பார்த்துவிட்டு பதில் சொல்லுங்கள் என செய்ய முடியாத வேலைகளைச் செய்யச் சொன்ன விநோதங்களும் நடந்தன.
கொங்கு மண்டல சமூக அமைப்புகள் தங்கள் வாதத்தில், இப்படி எழுதப்பட்டிருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, இந்து அறநிலையத்துறையின் 100 வருட ஆவணங்களில் இப்படி எந்த ஒரு குறிப்பும் இல்லை, எனவே இப்படி உண்மைக்குப் புறம்பான விஷயங்களை எழுதியவர்கள்மீதும் அதைப் பதிப்பித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்கள். இந்து மத நூல்களிலும் இப்படியான ஒரு கேவலமான செய்கை ஏதுமில்லை, சாஸ்திர சம்பிரதாயங்கள் இதை எப்போதும் சொன்னதில்லை என்பதும் முன்வைக்கப்பட்டன.
வழக்கின் தீர்ப்பு, கோவிலில் நடந்ததாக இருந்தாலும் தவறில்லை, ஏனென்றால் கோவிலில் ஓர் இடத்தில் நடந்ததாகச் சொல்வது கோவிலையோ அல்லது இந்து மதத்தையோ புண்படுத்தியதாகாது என்பதையும் அக்காலத்திய மக்களைச் சொன்னதை இப்போது இருக்கும் மக்கள் தங்களைச் சொல்வதாக நினைத்து வருத்தப்படக்கூடாது என்பதையும் உள்ளடக்கியதாக இருந்தது. பல வாதங்களைப் பயன்படுத்தி மனித உரிமை ஆர்வலர்கள் போட்ட மனுவை ஏற்று, மக்கள் அளித்த பதில் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இரண்டு தரப்பும் சமாதானமாகப் போகவேண்டும், காலத்தினால் இந்த வடுக்கள் ஆறும், எனவே நடந்ததை மறந்து இரண்டு தரப்பும் சுமூகமாகப் போகவேண்டும் என நீதிமன்றம் ஆலோசனையும் வழங்கியது. எழுத்தாளர் உயிர்த்தெழுந்து மீண்டும் வரவேண்டும் என எழுத்தாளருக்கு வேண்டுகோளும் விடுத்தது.
தீர்ப்புக்குப் பிறகு மனித உரிமை ஆர்வலர்களும் இன்னபிற கோஷ்டிகளும் மிகவும் அமைதியாக இருக்கிறார்கள். இந்த விடுதலையைக் கொண்டாடி ஒரே ஒரு கட்டுரையை எழுதியதோடு சரி. நாவலாசிரியரும் ‘நான் என்னை சுயபரிசோதனை செய்து கொள்கிறேன், சுய தணிக்கை செய்து கொள்கிறேன்’ என்றெல்லாம் பேட்டி கொடுத்திருக்கிறார். அவரின் எல்லா நூல்களும் ஒரு மாற்றத்திற்கு உட்பட்டே மீண்டும் வரும் எனவும் சொல்லியிருக்கிறார். டெல்லியில் ஒரு கவிதைத்தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். என்.டி.டி.வியில் பேட்டி அளித்திருக்கிறார். இதற்கு டெல்லியில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் காரணமா, அல்லது ஆட்சி மாறட்டும் எனக் காத்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை. ஒருவேளை தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலே முறையீடு செய்தால் அதை நீர்த்துப் போகச் செய்வதற்காக ‘நாங்களே தணிக்கை செய்து கொள்கிறோம் எனச் சொல்லி இருக்கிறோம்’ எனச் சொல்வதற்காகவா எனத் தெரியவில்லை.
இந்துக்களின், இந்நாட்டு மக்களின் வரலாற்றைக் காசு கொடுத்து திரித்து எழுதுவதற்கு ஒரு பெரும் படையே இருக்கிறது என மீண்டுமொரு முறை நீருபிக்கப்பட்டுள்ளது. அப்படித் திரித்த வரலாற்றை முட்டுக்கொடுக்கவும் ஒரு பெரும் கூட்டம் ஆயத்தமாக இருக்கிறது என்பதும் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய சரியான வரலாற்றை நாமே ஆய்வுபூர்வமாக எழுதி நமது அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்வதும், இதுபோன்ற ஆய்வு என்ற பெயரில் நடக்கும் மோசடிகளுக்கு எதிராகத் தீவிரமாகக் குரல் கொடுப்பதும் நாம் உடனடியாக முன்னெடுக்கவேண்டியவை. இவை அன்றி இதுபோன்ற விஷயங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்வதைத் தடுக்கவே முடியாது.
-oOo-