Posted on Leave a comment

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை – லாலா லஜ்பத் ராய் (பகுதி 6) | தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்

பகுதி 6 


சமூக அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தின் வரலாறு 
இந்தக் கட்டுரையில் சமூக அடிப்படையிலான பிரதிநிதித்துவம் மற்றும் தனிப்பட்ட வகுப்புவாத விருப்பங்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய வரலாற்றைப் பற்றி எழுத விழைகிறேன். 19ம் நூற்றாண்டின் எழுபதுகளில்தான் அலிகரில் எம்.ஏ.ஓ. கல்லூரியை நிறுவுவதற்கான இயக்கம் தொடங்கப்பட்டது. அதே நேரத்தில்தான் ஆர்ய சமாஜ் நிறுவப்பட்டது. 1877ம் ஆண்டு இம்பீரியல் தர்பார் நிகழ்வில் இந்த இரண்டு இயக்கங்களின் நிறுவநர்களும் டெல்லியில் சந்தித்தபோது அவர்கள் மனதில் ஒரு ஐக்கிய இந்தியாவின் யோசனை இருந்தது. ஆனால் ஒரு பொதுவான நம்பிக்கையின் அடிப்படையில் இந்தியாவை ஒன்றிணைக்க இயலாது என்பதை அவர்கள் விரைவில் கண்டறிந்தனர்.. இந்திய தேசிய காங்கிரஸ் அப்போது உருவாகியிருக்கவில்லை. சர் சையத்தின் மனதில் இந்திய முஸ்லிம்கள் அரசாங்கத்தின் கீழோ அல்லது அதற்கு வெளியிலோ செழிப்பான நிலையை அடைய, மேற்கத்திய அறிவைப் பெறவேண்டும் என்றும், அதற்காக இழந்த நேரத்தை ஈடுகட்ட வேண்டும் என்றும் ஓர் எண்ணம் இருந்தது.
செல்வாக்கு மிக்க ஹிந்துக்கள் சர் சையதின் யோசனையை முன்னெடுத்துச் செல்வதற்குத் தங்கள் ஆதரவை அளித்து, பொருளாதார உதவியும் புரிந்தனர். பணக்கார ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து இளவரசர்கள் அலிகார் எம்.ஏ. கல்லூரியின் நிதிக்கு தாராளமாக சந்தா செலுத்தினர். ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்த கல்லூரி என்பதன் கருத்தாக்கம் வகுப்புவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பண்புகள் மற்றும் வகுப்புவாதப் பெருமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. எனவே அங்கே வகுப்புவாத உணர்வு அதிகரிப்பது தவிர்க்க இயலாதது. அது இந்தக் கல்லூரியிலும் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. அலிகார் கல்லூரியின் வெற்றியும் பிரபலமும் பெரும்பாலும் அதன் முன்னாள் மாணவர்கள் அரசாங்கத்தில் உயர் மற்றும் லாபகரமான பதவிகளைப் பெறுவதைப் பொருத்தே இருந்தது. முதலில் உயர் அதிகாரிகளிடம் சையத்திற்கு இருந்த தனிப்பட்ட செல்வாக்கு இந்த நோக்கத்திற்குப் போதுமானதாக இருந்தது. ஆனால் இனவாத உரிமைகோரல்களை வலியுறுத்துவது அவசியமானது என்று பின்னர் கண்டறியப்பட்டது. அரசாங்க சேவைகளில் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் ஒப்பீட்டுப் புள்ளிவிவரங்கள் முகமதியக் கல்வி மாநாட்டின் ஆரம்ப நாட்களில் இருந்தே விவாதிக்கப்பட்டு அதன் சிறப்பியல்பு அம்சங்களில் ஒன்றாக மாறியது.
சர் சையத் ஒரு சிறந்த மதச் சீர்திருத்தவாதி. இஸ்லாத்தின் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தியதன் மூலமும் அதன் பகுத்தறிவுத்தன்மையை அதிகரிக்க முயன்றதன் மூலமும் அவர் முஸ்லிம் உலமாக்களின் கோபத்தை சம்பாதித்துக் கொண்டார். எனவே அவர்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இருப்பினும் அரசாங்கத்துடனான கூட்டணியில் அவரது பலம் இருந்தது. இந்தக் கூட்டணியைப் பற்றிய யோசனை இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்படுவதற்கு முன்பே அவரது மனதில் இருந்ததா என்பதை உறுதியாகக் கூற முடியாது. ஆனால் காங்கிரஸ் உருவான பின் அவரது அரசியல் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக இது மாறியது என்பதை உறுதியாகச் சொல்லலாம். இப்படியாக அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் ஹிந்துக்களுக்கு எதிராகவும் அரசிற்கு ஆதரவாகவும் திரும்பியது.
மறுபுறம், பஞ்சாபில் ஆர்ய சமாஜ் நடவடிக்கைகள் பண்டைய இந்தியாவின் மகிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கின. தவிர முஸ்லிம் ஆட்சியாளர்களால் ஹிந்துக்கள் மற்றும் இந்து கோவில்கள் மேல் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றியும் பேசத்தொடங்கின. இந்த ஆர்ய சமாஜிஸ்டுகள் தங்கள் அரசியல் சுதந்திரம் குறித்த கருத்துக்களை தாமஸ் பெயின், ஜோசப் மஸ்ஸினி, ஜார்ஜ் வாஷிங்டன் போன்றவர்களிடமிருந்து பெற்றனர். அவர்கள் ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு எதிராக, கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக, ஒன்றுபட முயன்றனர். டி.ஏ.வி கல்லூரி ஹிந்து ஒற்றுமை, ஹிந்து முன்னேற்றம் மற்றும் ஹிந்து ஒருங்கிணைப்புக்காக முன் நின்றது.
இப்படியாக, கடுமையாகப் பிளவுபட்ட ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் இரண்டு பிரிவுகள் உருவாயின. அவற்றில் ஒன்று அரசியல் சுதந்திரத்தை முன்வைத்தது, மற்றொன்று ஆளும் சக்தியுடனான கூட்டணியைப் போதித்தது. இந்த வேறுபாடு பின்னர் தீப்பிழம்புகளாக வெடித்த நெருப்பின் அடித்தளமாக மாறியது. தற்போது ஒரு ஐக்கிய இந்தியாவின் அனைத்து நம்பிக்கைகளையும் இதுவே சாம்பலாக்க முயல்கிறது. ஒருபுறம் அலிகாரில் படித்த முஸ்லிம்களும், மறுபுறம் ஆர்ய சமாஜிஸ்டுகளும், தத்தமது சமூகங்களின் தலைமைப் பொறுப்பை ஏற்று அவர்களுடைய நலன்களை முன்னெடுத்துச் சென்றனர்.
முஸ்லிம்களின் தரப்பிலிருந்து வந்த இனவாத பிரதிநிதித்துவம் மற்றும் தனி வாக்காளர்களுக்கான கோரிக்கை, அவர்களுடைய சமூக முன்னேற்றத்தை நோக்கிய பயணத்தின் அடுத்த, இயல்பான படியாகும். அரசாங்கம் அதன் பங்கிற்கு சர் சையத் மற்றும் அவரைச் சார்ந்த முஸ்லிம்களிடத்தில் ஒரு இயற்கையான, வரவேற்கத்தக்க கூட்டாளியைக் கண்டறிந்து, சட்டமன்றங்கள் மற்றும் ராணுவத்தில் சிறப்பு பிரதிநிதித்துவத்திற்கான அவர்களின் கோரிக்கைகளை ஊக்குவிக்கத் தொடங்கியது. முஸ்லிம்களின் “அரசியல் முக்கியத்துவம்” ஒரு போர்க்குரலின் முக்கியத்துவத்தைப் பெற்றது. இந்தியா முழுவதிலும் உள்ள ஹிந்துக்கள் இதை எதிர்த்தனர், உ.பி மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த ஹிந்துக்கள் மிகவும் அதிகமாக எதிர்த்தனர். இந்த யோசனையின் ஆரம்பத்தையும் வளர்ச்சியையும் அறிய விரும்புவோருக்கு, “தோழர்”-ன் ஆரம்பத் தொகுதிகள் ஒரு சுவாரஸ்யமான மற்றும் வெளிப்படைத்தன்மையான ஆய்வை வழங்கும்.
முஸ்லிம்களின் அரசியல் முக்கியத்துவம் குறித்த கோரிக்கையின் ஆணிவேராக இருந்தது என்ன? அவர்கள் பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் ஆட்சியாளர்களாக இருந்தனர் என்பதும், இந்தியாவுக்கு வெளியே இன்னும் பல சுதந்திரமான முஸ்லிம் நாடுகள் இருந்தன என்பதும் இரண்டு காரணங்கள். 1877-78ல் ரஷ்யாவுடனான போரில் துருக்கியர்களுக்கு எந்தவொரு உதவியையும் இந்திய முஸ்லிம்கள் அனுப்புவதை சர் சையது அவர்களே எதிர்த்தார் என்பது அனைவரும் அறிந்த வரலாற்று உண்மை. அவர் உலகளாவிய-இஸ்லாமியரா என்று எனக்குத் தெரியவில்லை. இல்லை என்று நான் நினைக்கிறேன். எவ்வாறாயினும், இந்திய முஸ்லிம்கள் மற்ற முஸ்லிம் நாடுகளின் விவகாரங்களில் தலையிட வேண்டும் என்ற கருத்தை அவர் கடுமையாக எதிர்த்தார்.
எவ்வாறாயினும் இந்திய முஸ்லிம்கள், கிரேட் பிரிட்டனும் பிற ஐரோப்பிய சக்திகளைப் போலவே அதன் ஏகாதிபத்திய நலன்களுக்கு ஏற்றவாறு மட்டுமே முஸ்லிம் நாடுகளில் மீது அக்கறை கொண்டுள்ளது என்பதை விரைவில் கண்டுபிடித்தனர். இந்திய முஸ்லிம்களைப் பற்றிய இந்திய அரசாங்கத்தின் அணுகுமுறை இந்தியாவுக்கு வெளியே உள்ள முஸ்லிம் நாடுகளின் விவகாரங்களில் அவர்கள் தீவிர அக்கறை காட்டுவதைத் தடுக்க முயலும் ஒரு போதைப்பொருள் மட்டுமே என்று சந்தேகங்கள் எழுந்தன. படித்த முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் கூட்டணி வைத்திருப்பது அதன் இயல்பான செல்வாக்கை மக்களிடையே ஏற்படுத்தியது. உயர்குடியினரும் சாதாரணர்களும் அரசு தங்கள் நண்பர், ஹிந்துக்களுக்கு எதிரானது என்ற கருத்தாக்கத்தை உள்வாங்கிக்கொண்டனர். யூரோப்பியர்களும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் அவர்கள் மனத்தில் இந்தக் கருத்தைத் திணித்தனர்.
ஆனால் இதற்கான எதிர்வினை வர வேண்டுமல்லவா. அது இரண்டு வழிகளில் வந்தது. முதலாவதாக, முஸ்லிம்கள் தங்கள் கோரிக்கைகளை மிக அதிகமாக, அரசாங்கம் கூட அவற்றை நிறைவேற்ற முடியாத அளவிற்கு உயர்த்தத் தொடங்கினர். இரண்டாவதாக, துருக்கி மற்றும் எகிப்தின் முஸ்லிம் சாம்ராஜ்யங்களின் படிப்படியான வீழ்ச்சி மற்றும் சிதைவு ஆகியவை பிரிட்டிஷ் நட்பின் மதிப்பைக் குறித்து இந்திய முஸ்லிம்களின் கண்களைத் திறந்தன. முதலில் எகிப்தின் மீதான ஆக்கிரமிப்பு நிகழ்ந்தது; அதன் பின் துருக்கிய சாம்ராஜ்யம் கிறிஸ்தவ மாகாணங்களின் இழப்பால் சுருங்கியது. அடுத்ததாக முஸ்லிம் நாடான திரிப்போலி மீது இத்தாலி போர் தொடுத்தது. இறுதியாக துருக்கியுடனான போர் நிகழ்ந்து. துருக்கிய சாம்ராஜ்யத்தை செவெரஸ் ஒப்பந்தத்தால் சிதைத்தது. இது சில முஸ்லிம் தலைவர்களின் அரசியல் கருத்துக்களில் முழுமையான மாற்றத்தைக் கொண்டு வந்து ஒத்துழையாமை இயக்கத்தைப் பற்றிய யோசனையை உருவாக்கியது.
இந்தக் காலகட்டத்தில் அரசோடு கூட்டணி வைத்து அதன் மீதான அரசியல் சார்பை வளர்த்த அணிக்கு எதிராக அரசியல் சுதந்திரத்தின் நோக்கங்களுக்காக இந்துக்களுடன் கூட்டணியில் நின்ற முஸ்லிம் தலைவர்கள் யாரும் இல்லை என்று நான் கூற முயலவில்லை. இறந்தவர்களில் திருவாளர்கள் பத்ருதீன் தியாப்ஜி, ரஹ்மத்துல்லா, ரசூல், மற்றும் தற்போது இருப்பவர்களில் மௌலானா அபுல் கலாம் ஆசாத், எம்.ஏ.ஜின்னா, ஹசன் இமாம், மற்றும் மஜார்-உல்-ஹக் ஆகியோர் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான அரசியல் ஒற்றுமையின் பக்கம் நிற்கிறார்கள்.
கிரேட் பிரிட்டனின் சிறந்த முற்போக்குச் சிந்தனையாளரும் அரசியல்வாதியுமான லார்ட் மோர்லி, இந்திய அதிகாரத்துவத்தின் அழுத்தத்தின் காரணமாக, இந்தியாவில் சமூகரீதியான பிரதிநிதித்துவத்திற்கான அனுமதியை ஒருவழியாக வழங்கினார். இந்த ஏற்பாடு பின்னர் இரு சமூகங்களின் முற்போக்குத் தலைவர்களாலும் லக்னோ ஒப்பந்தத்தின் படி அங்கீகரிக்கப்பட்டது.
இது சுருக்கமாக, சமூக அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தின் வரலாறு. அதன் அவசியம் குறித்தோ அதை எதிர்த்தோ நான் எதுவும் கூறவில்லை, அதற்கு முன் நான் மறைந்த சர் சையத் அகமது கானின் கொள்கை குறித்து சுருக்கமாக கருத்து தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் இந்தியாவில் உலகளாவிய-இஸ்லாமியத்தின் வளர்ச்சியைக் கண்டறியவும் விரும்புகிறேன்.

Posted on Leave a comment

வலம் அக்டோபர் 2019 – முழுமையான படைப்புகள்

கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள் – சில குறிப்புகள் | ஓகை நடராஜன்

திருப்பங்களுடன் கூடிய ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு | லக்ஷ்மணப் பெருமாள்

காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக ராஜீவுக்கு ஜக்மோகனின் கடிதம் – தமிழில்: ஹரன் பிரசன்னா

இந்திய இறைமையும் ஈழப் போராட்டமும் – அகரமுதல்வன்

சில பயணங்கள் சில பதிவுகள் – 23 | சுப்பு

மகாத்மா காந்தி கொலை வழக்கில் சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 6) | தமிழில்: ஜனனி ரமேஷ்

சந்திரயான் – கோல் முதல் கோள் வரை | சுஜாதா தேசிகன்

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை – லாலா லஜ்பத் ராய் (பகுதி 6) | தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்

கல் உமி (சிறுகதை) – சத்யானந்தன்

அந்தமானில் இருந்து கடிதங்கள் – வீர் சாவர்க்கர் (கடிதம் 5) | தமிழில்: VV பாலா

Posted on Leave a comment

அந்தமானில் இருந்து கடிதங்கள் – வீர் சாவர்க்கர் (கடிதம் 5) | தமிழில்: VV பாலா

செல்லுலார் சிறை. 

6-7.1916 
போர்ட் ப்ளேயர் 
எனதன்பிற்குரிய பால் மற்றும் இனிய சாந்தா. 

காதல் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கப்போகும் உங்கள் இருவருக்கும் எனது மற்றும் என் சகோதரனுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வின் இரண்டாவது கட்டத்தில் நீங்கள் நுழைகிறீர்கள். வாழ்வில் முதலில் நாம் கடக்க வேண்டிய நிலையான தியாகம் மற்றும் சுய ஒழுக்கம் ஆகியவற்றில் நீ முழுமையாகத் தேர்ந்திருக்கிறாய். சம்ஸ்க்ருதம் மற்றும் ஆங்கில மொழிகளைக் கற்றுக்கொண்டு நீ பாரம்பரிய மற்றும் நவீன அறிவையும் பெற்றிருக்கிறாய். மருத்துவத்தில் நீ கடைசியாகத் தேர்ச்சி பெற்ற தேர்வின் மூலம் உலகத்தின் எந்த இடத்திலும் சென்று, எத்தகைய சட்ட ரீதியான இடையூறுகள் இருந்தாலும் பணியாற்றும் திறனைப் பெற்றிருக்கிறாய். உன்னுடைய கவிதை மற்றும் கட்டுரைகள் மூலம் நீ ஏற்கெனவே மகாராஷ்டிரத்தின் இலக்கிய உலகில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறாய். இந்தத் துறையில் நீ இதைவிடச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கமுடியாது என்று கூடச் சொல்வேன். நம் தேசத்திற்குப் பெரும் இன்னல்கள் வந்தபோது பெரும்பாலானவர்கள்போலப் புறமுதுகு காட்டாமல் நீ துணிந்து நின்று அவற்றை எதிர்கொண்டாய். எந்த உற்சாகத்தைத் தங்கள் இளைஞர்களிடம் கொண்டு வர வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் எதிர்பார்க்கின்றனவோ, அந்த உற்சாகத்தை உன்னிடத்தில் நீ கொண்டிருக்கிறாய். சமுதாயத்தில் அங்கீகாரம் இல்லாது போனாலும் தியாகம் செய்ய துணிந்த நீ இப்போது வாழ்வின் இரண்டாவது கட்டத்தில் சாந்தாவுடன் மணவாழ்வில் இணைய இருப்பது மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாகும். இந்த மணவாழ்க்கை உனக்கும் சாந்தாவிற்கும் ரோஜா மலர்கள் தூவிய பாதையாக, இன்பமானதாக இருக்கட்டும். உங்களது இல்லற வாழ்க்கை மிகவும் இனிமையானதாக இருக்கட்டும். இல்லற வாழ்வின் இனிமை மட்டுமே இன்னும் அதன் வீழ்ச்சியைச் சந்திக்காமல் இருக்கும் வரம் பெற்றிருக்கிறது. 

உன்னுடைய மனதை ஏதேனும் ஒரு புத்திசாலி பெங்காலி பெண் திருடினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன் என்று நான் உனக்கு இதற்கு முன் எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தது உனக்கு நினைவு இருக்கலாம். நான் எதிர்பார்த்தது கிட்டத்தட்ட நடந்துவிட்டது. நம் நாட்டில் உள்ள மக்கள் ஜாதி மற்றும் பிராந்தியம் போன்ற பிரிவுகளால் பிளவுபட்டு இருக்கிறார்கள். இந்தப் பிளவுகளை மீறி அவர்கள் திருமணம் செய்து கொள்வது இந்து சமுதாயத்தில் உள்ள இதுபோன்ற செயற்கையான பிரிவுகளை இல்லாமல் செய்துவிடும். அந்த நாளைக் காண நான் ஏங்குகிறேன். இத்தகைய தடைகளை உடைத்து நம் பண்பாடு காட்டாற்று வெள்ளம் போலச் சீறிப் பாய்ந்து செல்லவேண்டும். கால்நடைகளின் இனப்பெருக்கம் நல்ல முறையில் ஆரோக்கியமானதாக நடக்கவேண்டும் என்று கவலைப்படும் நாம், மனிதர்களின் வருங்கால வம்சம் குறித்து அந்த அளவு அக்கறை கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பல நூற்றாண்டுகளாக குழந்தைத் திருமணம் மற்றும் பிரதிநிதி மூலம் திருமணம் ஆகியவை இங்கு நடந்து வருகின்றன. உடலுக்கும் மனதிற்கும் ஆன்மாவிற்கும் மேன்மையைக் கொடுக்கக் கூடிய காதல் என்ற உணர்வு இங்கு பல நூற்றாண்டுகளாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதன் தவிர்க்கமுடியாத விளைவாக நம் இனம் வீர்யம் இன்றி வலுவிழந்து இருக்கிறது. இதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம், ஆனால் நம்மிடையே இருக்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் இதற்கு ஒரு முக்கியக் காரணம். நம் மதத்தின் அதிகார பீடங்கள் இத்தகைய காதலை மறுதலிக்காமல் அங்கீகரிக்கவேண்டும். ஆகையால், வயதும் கல்வியும் உங்கள் ஒருவருக்கு ஒருவர் இடையே ஏற்பட்ட பரஸ்பர கவர்ச்சியும் உங்களிடையே காதலாக மலர்ந்தது எனக்கு மகிழ்ச்சியைத்தான் தருகிறது. நமக்கு நெருக்கமானவர்கள் இதனை அங்கீகரித்திருக்கிறார்கள் என்பதே போதுமானது. இந்த விஷயத்தில் நம் குடும்பம் பின்தங்கி இருக்கவில்லை என்பதை அறிந்து மகிழ்ந்தேன். நம் சகோதரர் இதற்கு ஒப்புக்கொண்டு ஆசீர்வதித்தார் என்பதே போதும், இது எனக்கும் விருப்பமான ஒன்றுதான் என்பதை முடிவு செய்ய. 

நீங்கள் எங்கே குடியிருக்க போகிறீர்கள் டாக்டர் அய்யா? முதல் கடிதம் போஸ்ட் ஆபீசில் தவறுதலாகத் தொலைந்து போய்விட்டதால் நேற்றுதான் இரண்டாவது கடிதம் எழுத எனக்கு அனுமதி கொடுத்தார்கள். இது உனக்குப் பதட்டத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் எனக்கு இதன் மூலம் உன்னுடைய தற்போதைய முகவரி கிடைத்தது. நீ தற்போது பம்பாயில் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். நீ அந்த நெரிசல் மிகுந்த சுகாதாரம் குறைந்த நகரத்திலா குடியேறப் போகிறாய்? அதற்கு பதில் சாயாஜி ஆண்டுவரும், தற்போது நன்றாக வளர்ந்து வரும் பரோடா சரியான இடமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் களநிலவரம் அறிந்த நீ எடுக்கும் முடிவு சரியானதாகத்தான் இருக்கும். நான் உன்னிடம் வலியுறுத்த போவது ஒன்றே ஒன்றுதான். எக்காரணம் கொண்டும் உன் தனிப்பட்ட சுதந்திரத்தையும் உன் ஆரோக்கியத்தையும் கெடுத்துக்கொள்ளாதே. நம் தனிப்பட்ட நலன் மீது அதீத அக்கறை எடுத்துக்கொள்வது மற்றவர்கள் விஷயத்தில் வேண்டுமானால் தவறாக இருக்கலாம், ஆனால் உனக்கு அது பொருந்தாது. நீ உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், அது ஆப்பிரிக்கக் காடுகளாகட்டும் அல்லது அமெரிக்காவாகட்டும், நீ படித்திருக்கும் மருத்துவப் படிப்பு உன் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் உன் பாதுகாப்பிற்கும் உதவும். எங்கெல்லாம் மரணம் இருக்கின்றதோ, அங்கெல்லாம் டாக்டர்களும் இருப்பார்கள். இதைச் சொல்வதற்காக என்னை நீ கோபித்துக்கொள்ளாதே. நான் மருத்துவ படிப்பின் உயர்வினைக் குறிப்பிடவே இதனைச் சொன்னேன். எனவே உன் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பு வரும் வகையில் எதையும் செய்யாதே, அதேபோல சாந்தாவின் உடல் ஆரோக்கியத்தையும் நன்றாகப் பார்த்துக்கொள். அவளை நிறையப் படிப்பதற்கும் எழுதுவதற்கும் உற்சாகப்படுத்து. ஆனால் ஒரு பெண்ணின் முதல் கவனம் அவளது ஆரோக்கியத்தில்தான் இருக்கவேண்டும். இது அவள் மட்டுமில்லாமல் அவளுடைய வருங்கால சந்ததிக்காகவும் அவள் மேற்கொள்ள வேண்டிய கடமை. அவளுடைய உடம்பில் இருந்து வீணாகும் ஒவ்வொரு துளி சக்தியும் எதிர்கால சந்ததியை பலவீனமாக்கும். அவள் நேற்றைய மற்றும் வருங்கால சந்ததியின் இணைப்புப் பாலம். வருங்கால சந்ததியின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யப் போகிறவள் பெண். அதனால் ஒரு மனைவி தன்னுடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மிகவும் கவனமாகப் பேணிப் பாதுகாக்கவேண்டும். அதனால் படிப்போ அல்லது பொழுதுபோக்கோ, அவளது சக்தியை வீணடிக்கும் விதத்தில் இருக்கக்கூடாது. மாறாக அவளுடைய அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் விதத்தில் மட்டுமே இருக்கவேண்டும். 

என்னைப் பற்றிக் கூறுவதற்கு விசேடமாக ஒன்றும் இல்லை. என்னுடைய கடைசிக் கடிதம் உனக்குக் கிடைத்தபோது நான் எப்படி இருந்தேனோ அதே போலத்தான் இப்போதும் இருக்கிறேன். ஒரு கைதியின் வாழ்க்கையில், அதிலும் குறிப்பாக போர்ட் ப்ளேயரில் இருக்கும் கைதியின் வாழ்கையில் மாற்றம் என்ற ஒன்று அகராதியிலேயே இருக்காது. போரினால் உங்கள் பகுதியில் வாழ்கை மிகவும் பாதிப்பை உணர்ந்தது என்றாய், ஆனால் இங்கே போர்ட் ப்ளேயரில் அதன் சுவடே தெரியவில்லை. போரினால் இங்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று அரசவையிலிருந்து பெருமையுடன் அறிக்கை வெளியிடலாம். எங்களுடைய ஏற்றுமதி இறக்குமதிகளில் எந்த மாறுதலும் இல்லை. நாங்கள் இரவெல்லாம் விளக்கை அணைக்காமல் ஏற்றியே வைத்திருக்கிறோம். எங்களுடைய சர்வதேசத் தகவல் தொடர்புகள் எல்லாம் எப்போதும் போல அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மிஸ்டர் அஸ்கித் எங்களைப் பார்த்துப் பொறாமைப்படக் காரணங்கள் இருக்கின்றன. எங்களுக்கு சாப்பாட்டின் அளவோ அல்லது உருளைக்கிழங்கின் அளவோ குறைக்கப்படவில்லை. ஆனால் ஜெர்மானியர்களுக்கு இதுபோலக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. நாங்கள் உண்ண வேண்டியதை நாங்களே விளைவிக்கின்றோம். எங்களுடைய சிறைச் சுவர்கள் சீனப் பெருஞ்சுவர்களைக் காட்டிலும் பெருமை மிக்கவை. அந்தப் பெருஞ்சுவரினால் அந்நியர்கள் உள்ளே ஊடுருவாமல் தடுக்க மட்டும்தான் முடிந்தது. ஆனால் இந்தச் சுவர்கள் அதைச் செய்வதோடு உள்ளிருப்பவர்கள் வெளியே செல்ல முடியாத படியும் தடுக்கின்றன. மரணம் வலியில்லாததாக இருக்கிறது. போர் என்பது முடிவிற்கு வந்ததும் எங்களுடைய வாழ்கை மனித குலத்திற்கு ஒரு மாதிரி போலக் காண்பிக்கப்படலாம். மரணத்தையே வெட்கமுற வைக்கும் விதத்தில் ஒரு அமைதியான வாழ்க்கை அல்லது பிழைத்திருத்தல் என்றும் சொல்லலாம். 

நேர்காணலைப் பொருத்தவரையில் நாம் போர் முடியும்வரை காத்திருக்கலாம். அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கத் தயங்குவதின் காரணத்தை நாம் ஓரளவிற்குப் புரிந்துகொள்ளலாம். அதற்குப் பின்னும்கூட நீ அனுமதிவேண்டி எழுதும் கடிதத்தில் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கத் துடித்துக்கொண்டிருக்கிறோம் என்ற ரீதியில் இல்லாமல், ஐந்து வருடங்கள் ஆனபிறகு எல்லாக் கைதிகளுக்கும் வழங்கப்படும் சலுகை இது, அதனால் நமக்கும் வழங்கப்படவேண்டும் என்றே கேட்கவேண்டும். அப்போது அனுமதி மறுக்கப்பட்டாலும் இந்த இரக்கமில்லாத அந்நியர் கண்களுக்கு நம் பிரிவின் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறோம் என்பதைக் காட்டாமல் இருந்தோம் என்ற திருப்தியாவது இருக்கும். மேலும் இங்கு நிலைமையை சீராக்க வேண்டி நீ எந்த வேண்டுகோள் விடுப்பதாக இருந்தாலும் அதனை டெல்லிக்கு நேரடியாக எழுதவும். ஏனென்றால் இங்குள்ள அதிகாரிகளுக்கு நிலைமையை சீராக்கும் விதத்தில் எதனையும் தீர்மானிக்கும் அதிகாரம் கிடையாது. அவர்களால் செய்ய முடிந்த அனைத்தையும் அவர்கள் செய்யாதிருக்கும் பட்சத்தில் நான் அவர்களைச் செய்யச் சொல்லி வேண்டுகோள் விடுத்து அவற்றை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறேன். இங்குள்ள கொடுமைகளால் நான் மனமுடைந்து போகமாட்டேன் என்று உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கும். ஆனாலும், நான் இத்தகைய கொடுமைகளை அனுபவிக்கக் காரணமான சமூக, அரசியல் மற்றும் இலக்கியப் பணிகளில் ஈடுபடாமல் இருக்கவேண்டும் என்று நினைக்கலாம். ஆனால், ஒரு விஷயத்தை நினைத்துப் பார் என் சகோதரனே! அல்லல்படுவதும் ஒரு வேலைதானே. கிறிஸ்தவ மதத்திற்காக யார் அதிகம் வேலை செய்தார்கள்? வேலை செய்தவர்களா அல்லது அமைதியாக அல்லல்களை அனுபவித்தவர்களா? இருவருமேதான். ஆனால் நல்ல விஷயங்களுக்காக வெளியே வேலை செய்பவர்களைக் காட்டிலும் அதே காரணங்களுக்காகச் சிறையில் அடைபட்டு அல்லல்படுபவர்கள் கூடுதலாக வேலை செய்கிறவர்கள் என்று நான் கருதுகிறேன். அல்லல்படுவது என்பது நம்மை மேற்கொண்டு பணி செய்யத் தூண்டும் உந்து சக்தியாக இருக்கின்றது. சமுதாயத்தில் உள்ள சிறந்த மக்கள் அல்லலுராமல், மற்றவர்கள் பணி செய்ய இயலாது. இரண்டுமே மகத்தானது, அதே நேரம் இரண்டுமே தவிர்க்க இயலாதது. அதனால் இதில் இரண்டில் எதனைச் செய்ய நாம் பணிக்கப்பட்டாலும் நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை. இது எனக்குக் கிடைத்த பாக்கியம் என்றே நான் கருதுகிறேன். ஆகவே சகோதரா, மற்றவர்கள் எல்லாம் வெளியில் மகிழ்ச்சியாக இருக்க நான் மட்டும் இங்கே இருட்டறையில் அல்லல்படுகிறேன் என்று கவலை கொள்ளவேண்டாம். 

நம் பாரதத் தாயின் பாதங்களுக்கு சேவை செய்ய ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். காத்திருந்து அல்லல்படுவோரும் அதில் அடக்கம் என்பதை நீ மனதில் கொள்ள வேண்டும்.
காத்திருத்தல் மட்டுமல்லாமல் அல்லலும் பட்டு அதனை தீரத்துடன் எதிர்கொள்வோரும் பெரும் பணி செய்பவர்கள்தான். பாறைகளை செதுக்கி அவற்றை அடுக்கும் பணி சிறப்பான ஒன்றுதான். ஆனால் தேவாலயச் சுவர்களில் இந்தப் பாறைகளைத் தாங்கும் சிமெண்டும் அதேபோல இன்றியமையாததுதான். அமைதியாகத் தியாகம் புரிவோர் இத்தகையவர்கள்தான்.

பால், உனக்கு நம்புவதற்குக் கடினமாக இருக்கும், ஆனால் உடல் ரீதியாக நான் படும் ஒவ்வொரு அவஸ்தையும் என் அமைதியான ஆன்மாவின் சக்தியினால் காணாமல் போகின்றது. இந்த அமைதித் தென்றல் என்னை வருடிச் செல்கிறது. கல்லூரியில் படிக்கும்போது இறுதித் தேர்வை எழுதி முடித்துவிட்டு அதன் முடிவுகளுக்காகக் காத்திருப்பவனைப் போல நான் உணர்கிறேன். நம் தாய்நாட்டின் விடுதலைக்காக நான் எதிர்கொள்ளும் பரிட்சையே இது. அதனால் இதனை நான் திருப்தியுடன் எதிர்கொள்கிறேன். விடுதலை என்ற அற்புதச் செய்திக்காக நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். பகலில் கடுமையாக உழைக்கிறேன். அதனால் இரவுப்பொழுது நெருங்கியதும் நன்றாக உறங்கவும் செய்கிறேன். சில நாட்கள் சில கெட்ட கனவுகள் வந்து என்னைத் தொந்தரவு செய்யும். ஆனால் விழித்துக் கொண்டவுடன் மனம் மீண்டும் அமைதியாக ஆகிவிடும். சில சமயம் நான் உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டவுடன் கடல் அலைகளின் சாத்தான் ஜன்னல் வழியாக எனக்குக் கேட்கும். தன்னைத் தானே பரிகசித்துக்கொண்டு சிரித்த ராஜனின் கதை பற்றி காளிதாசன் எழுதிய வரிகள் எனக்கு நினைவிற்கு வருகின்றன. நானும் என்னை அதேபோல கற்பனை செய்துகொண்டு சிரித்துக்கொள்கிறேன். கடுமையான பணிகள் ஒரு புறம், அமைதியான மனம் மறுபுறம் என்று இருப்பதினால் இதுபோன்ற சிந்தனைகள் வருகின்றன. இது சிறையில் படும் அல்லல்களினால் ஏற்படும் அயர்ச்சியைப் போக்க உதவுகிறது. அதனால், நானும் நம் சகோதரனும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம், இந்த அடிமை வாழ்வில் வரக்கூடிய எல்லா இன்னல்களையும் ஏற்றுச் சமாளிக்கத் தயாராக இருக்கிறோம்.

உன்னுடைய திருமண வைபவம் குறித்த விபரங்கள் மிக நன்றாக விவரிக்கப்பட்டிருந்தது. அதை எழுதியவர் நல்ல திறன் படைத்தவர் என்றாலும் அவரின் தயக்கமே அவருக்குப் பெரிய தடைக்கல்லாக இருக்கும். அவர் முதலில் சிறிய கதைகள் சிலவற்றை எழுதி அவற்றைப் பிரசுரத்திற்கு அனுப்பவேண்டும். அவை பிரசுரமானால் அவருக்கு அது தைரியத்தை அளிக்கும். உதாரணத்திற்கு அவர் நம் சாதி அமைப்பை எடுத்துக்கொள்ளலாம். அது எத்தகை தீமையை விளைவிக்கின்றது என்பதை விளக்கும் வகையில் அவர் கதை எழுதலாம். மனிதகுலம் தன் மாபெரும் இலக்கை நோக்கி முன்னேற அது எப்படி ஒரு தடைக்கல்லாக இருக்கின்றது என்பதை அதில் விளக்கலாம். அதன் பிறகு அவர் பெரிய கதைகளை எழுதலாம். அவரையும் சகோதரர் யமராஜ் அவர்களையும் நான் விசாரித்ததாகச் சொல்லவும். என்னுடைய பால்ய கால நண்பர்களையும் கல்லூரித் தோழர்களையும் மற்றும் எனக்கு நெருக்கமானவர்கள் எல்லோரையும் நான் விசாரித்ததாகக் கூறவும். என் ப்ரிய ரிஷியின் இருப்பிடம் பற்றித் தெரிந்துகொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. அவன் இன்னமும் அதே அலுவலகத்தில் அதே பணியில் இருக்கின்றானா? அப்புறம் என்னுடைய புதிய நண்பர்களும். எனக்கு அவனைப் பற்றிய நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. அவனும் இதேபோல இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் என்னிடம் மிகவும் கனிவாக நடந்து கொண்டான். புத்திசாலித்தனமும் சுறுசுறுப்பும் ஒருசேரப் பெற்றவன் அவன். உன் திருமணத்தில் கலந்துகொண்ட பேராசிரியரின் பெயரை நான் மறந்துவிட்டேன். அவருக்கும் என் பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மேடம் காமாவிற்கும் என் வந்தனங்கள். போரினால் மேடம் காமாவிற்கு பெரும் இன்னல்கள் ஏற்பட்டிருக்கக் கூடும். அவருக்கு என் அன்பினைக் கூறவும். அவருடன் பாரீசில் நான் பார்த்த நண்பர்கள், அதிலும் குறிப்பாக அந்த சந்நியாசி, அவர்கள் என் நினைவில் எப்போதும் இருக்கிறார்கள் என்று கூறவும். நீ அனுப்பி வைத்த படங்களைப் பார்க்கும்போதெல்லாம் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். எனதன்பிற்குரிய இயேசுவாகினி மிகவும் அமைதியாக ஒரு தேவதை போலக் காட்சியளிக்கிறாள். பம்பாய் சிறையில் என்னை அவள் காண வந்தபோது அங்கிருந்த அதிகாரி ஒருவரும் இதே கருத்தைச் சொன்னார். அக்காவிற்கும் சாந்தாவிற்கும் என் அன்பு நிறைந்த விசாரிப்புகளைக் கூறவும். எனக்கு அவர்கள் எல்லோரையும் நினைத்தாலே பெருமையாக இருக்கின்றது. அடுத்த முறை என் ப்ரிய யாமனேவின் கடிதத்தின் மொழிபெயர்ப்பை அனுப்ப மறக்கவேண்டாம். நல்ல குணவதி, அவளுக்கு என் அனுதாபங்கள். அமைதியாக எல்லாவற்றயும் பொறுத்துக்கொள்ளும் அவளுக்குப் பெருமைகள் உண்டாகட்டும். அவளுடைய பெற்றோர்கள் ஆட்சேபித்தால் அவளை பம்பாய் வரச் சொல்லி வற்புறுத்தவேண்டாம். அவர்களுடைய அன்பும் அவர்கள் எடுக்கும் முடிவுகளும் மதிக்கப்பட வேண்டும். மற்ற சகோதரர்கள் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்? அம்மாவிற்கும் சித்திக்கும் என்னுடைய வந்தனங்கள்.

அன்புடன்
உங்களுடைய தாத்யா.


Posted on Leave a comment

கல உமி (சிறுகதை) | சத்யானந்தன்

திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில் அருகே சன்னதித் தெரு.
ஈஸ்வரன் உற்சவ மூர்த்தி வீதி உலாவுக்கென நீர் தெளித்த வாசலில்
விரிந்து பரந்த கோலங்கள் சாணி
மெழுகிய முன் வாயில்களில் தெருவின் இருபுறமும் கண்ணைக் கவர்ந்தன. ஒரு கையில்
கமண்டலம்,
மறுகையில்
கப்பரை, இடுப்பில் ஒரு முழமோ என ஐயம் கொள்ள வைக்கும் சிறிய காவி வேட்டியே இடுப்பு
வஸ்திரமும் கோவணமுமாய், தாடி, கருப்பும் வெள்ளையுமான ஜடா முடியுடன் மார்பில் நிறைய
ரோமம், இவை போதாதென செக்கச் சிவந்த கண்களுடன் ஒரு துறவி நடந்து வந்தார். சன்னதித்
தெருவில் பெரிய திண்ணை உள்ள ஒரு வீட்டின் முன் நின்றார். ‘ஹரஹர மகா தேவ்’ என்றார்
ஒரு முறை. பின்னர் சற்றே உரத்த குரலில் ஹர ஹர மகாதேவ் என்றார் மேலும் இரு முறை.
அந்த விட்டின் முன் வாயிலில் உள்ள பெரிய தேக்குக் கதவு சற்றே ஒருக்களித்துத்
திறந்தது. வெளியே சென்னிறமாய், பட்டு மடிசார் கட்டில் இருந்த நடுவயது மாது எட்டிப்
பார்த்தார் “சுவாமி வர்ற நேரம். அப்புறம் வா”, என்றவர் கதவை மீண்டும்
சார்த்தினார்.
 

தெருவின் நட்ட நடுவே நின்றிருந்த சாமியார் முன் வாயிற் கோலத்தை மிதித்தபடி அந்த
வீட்டின் படிகளில் ஏறினார். கமண்டலம் மற்றும் கப்பரையை திண்ணை மீது வைத்தவர்
கதவருகே சென்று நின்றார்.
அரச இலை அளவுக்கு வினாயகர் உருவம் பதித்த ஒரு செப்புத் தகடு ஆணியால் முன் வாயிற் கதவின் மீது
திருஷ்டி பரிகாரமாகப் பொருத்தப் பட்டிருந்தது. அதை வலது கையில் ஒரே இழுப்பில்
பிடுங்கி எடுத்தார். மறுபடி தெரு மத்தியில் நின்றார். இதற்குள் நாதஸ்வர மேள
தாளத்துடன் தெருவுக்குள் ஈஸ்வரனின் சப்பரம் நுழையவே இந்த வீடு உட்பட எல்லா
வீட்டுக் கதவுகளும் திறந்தன. இன்னும் நூறு இரு நூறு அடிகள் தாண்டி ஊர்வலம் வந்தால்
துறவி நகர வேண்டி இருக்கும். துறவியின் இடுப்புக் காவி வேட்டியின் மேற்புறமாக இடுப்பின்
இரு பக்கம் தொங்குவதாய் இரண்டு துணி முடிச்சுகள் இருந்தன. அவற்றுள் இடது முடிச்சை
அவர் ‘செப்புத் தகடு வினாயகரை’ வலது கையில் இரு விரல்களுள் இடுக்கி, மீதி
விரல்களால் சற்றே அவிழ்த்தார். உள்ளே சில பச்சிலைகள் காய்ந்து பொடியும் நிலையில்
இருந்தன. அவற்றுள் சிலவற்றை உருவினார். இடது கையில் செப்புத் தகட்டை வைத்து, வலது
உள்ளங்கைக்குள் பச்சிலைகளை வைத்து, கையை மூடித் திறந்து அவற்றைப் பொடி ஆக்கினார்.
பின்னர் அந்தப் பொடிக்குள் இந்தத் தகட்டை வைத்துக் கொண்டு, திண்ணைக்கு அருகே
வந்தார்.
 

திண்ணையில் நின்று எட்டிப் பார்த்தபடி இருந்த, அந்த வீட்டின் வெவ்வேறு வயது நிலையிலுள்ள
பெண்களும் பயந்து வீட்டுக்குள் நகர்ந்தனர். இடதுகையால் கமண்டலத்தை எடுத்து
அதிலிருந்து சில துளி நீரை வலதுகை மீது ஊற்றினார். பின்னர் கையை நெற்றி அருகே
கொண்டு சென்று முணுமுணுப்பாய் சிறு மந்திரம் ஒன்றை ஓதினார். மீண்டும் கமண்டலத்தைத்
திண்ணை மீது வைத்தார். தெரு நடுவே சென்று வலது கை உள்ளங்கையை விரித்தார். செப்புத்
தகடு தங்கமாகி வெய்யிலில் பளபளத்தது பல வீட்டுத் திண்ணைகளிலிருந்து தெளிவாகத்
தெரிந்தது. ஓங்கி அதை வீட்டுக்குள் வீசினார். அது ரேழியைக் கடந்து நான்கு புறம் ரேழி
சூழும் முற்றத்தில் விழுந்து மின்னியது. திண்ணை அருகே வந்தவர் கமண்டலத்தையும்
கப்பரையையும் கையில் எடுத்துக் கொண்டு மேற்சென்றார்.
  

அவருக்குப் பின்னாலேயே வந்து கொண்டிருந்த உற்சவரின் சப்பரம் தமது வீட்டைக்
கடக்கும்போது பக்தியுடன் அணுகி அர்ச்சனை செய்து கும்பிட்ட பின் அந்தணர்
ஒவ்வொருவராக அதன் பின்னேயே நடந்து சித்தர் கால் பட்ட வீட்டின் முன் குழுமினர்.
சற்று நேரத்தில் தெருவின் அத்தனை அந்தண ஆண் பெண்கள் அங்கே கும்பலாய்க் குழுமி
விட்டனர். அந்த வீட்டின் தலைவர் கட்டுக் குடுமி, நெற்றி தோள் முன் கை என எங்கும்
விபூதியாய் பஞ்சகச்ச வேட்டியுடன் திண்ணைக்கு வந்து, “நமஸ்காரம். என்ன தேவரீர்
எல்லாம் இந்தப் பிராமணன் கிருகத்துக்கு வந்திருக்கேள்,” என்றார்.
 
“என்ன ஓய், அந்த சன்யாசி உம்ம வீட்டு செப்புத் திருஷ்டித் தகட்டைத்
தங்கமாக்கிட்டானே. அது அதிசயமில்லையோ?”
 

“தங்கமா? சற்றே இருங்கோ, காமாட்சி அதை எடுத்துண்டு வா.”
 

மகள் பெயரைச் சொல்லியே அவர் மனைவியை அழைப்பார்.
 

துணைவியார் அந்தத் தகட்டைக் கொண்டு வந்து அவரிடம் நீட்டி விட்டுப் பின்னகர்ந்தார்.
“அதிசயமாத்தான் இருக்கு,” என்றவர், “ஒரு ஆசாரிய வெச்சு உரசிப் பாப்போமா?’ என
வினவினார்.
 
*

“போஷூ
[1], கோமோ வேச்சு?[2] என் ஆயுசுல இந்த மாதிரி குளிர நான் பிரான்ச்ல கண்டதில்லை,” என்ற
பால் அகஸ்டின் சட்டென்ற உற்சாகத்துடன், “பிறகு என்னதான் ஆனது லூகாஸ் மதாம்?”
என்றான்.
 

“வேறென்ன? பொற்கொல்லர் வந்தார். தம் தோளில் சுமந்து வந்த சிறு துணி மூட்டையில்
இருந்து ஒரு உறைகல்லை வெளியே எடுத்தார். அந்தத் தகட்டைக் கல்லின் மீது உராசிப்
பார்த்தபின் ‘சொக்கத் தங்கம்’ என்றார். நாங்கள் புதுச்சேரியில் இருந்து படகு வழியே
கடலூர்த் துறைமுகத்தில் இருந்து இந்தப் புராதன ஊருக்குக் கட்டை வண்டியில போய்
இந்தக் கோயில் விழாவைப் பார்த்தோம். வீட்டுக்குள் எங்களை அனுமதிக்க மாட்டார்கள்
என்பதால் அவர்களது கடவுளின் சிலை ஊர்வலத்தின் பின்னேயே தெருவில் சென்ற படி
இருந்தோம்.”
 

“பின்னர் என்ன ஆனார் அந்தத் துறவி?”
 

“கொளுத்தும் வெயிலில் அதற்கு மேல் நாங்கள் அங்கே நிற்கவில்லை. கிளம்பி விட்டோம்.
ஆனால் உனது இதே கேள்விதான் ஆர்தரைத் துளைத்தபடியே இருந்து இன்று அவன் சொல்லாமல்
கொள்ளாமல் இந்தியா செல்லுமளவு துணிந்து விட்டான்.”
 

“எப்படி மதாம் அவன் இந்தியா செல்ல இயலும்?”
 

“அவனுக்கு இப்போது 25 வயது ஆகி விட்டது என்பதை நீ மறந்து விட்டாயா அகஸ்டின்?
இருபதாம் நூற்றாண்டு தொடங்கி ஒன்பதாண்டுகளும் ஒருண்டோடி விட்டன. அவன் தனது அப்பா
தந்தங்கள், மிளகு மற்றும் தோல் இறக்குமதி செய்யும் கப்பல்காரர்கள் பற்றித்
தெரிந்தவன், அவர்கள் உதவியுடன் நமது ஆட்சியில் இருக்கும் புதுச்சேரிக்குச் சென்று
விட்டான். துறைமுகத்தில் இருந்து ஒரு கடிதத்தை மட்டும் அனுப்பினான். அவன் அப்பா
லூகாஸ் பக்கவாத்தில் படுத்த படுக்கையாயிருக்கும்போது என்னை இது எந்த அளவு
பாதித்திருக்கும்
என்று நினைத்துப் பார் அகஸ்டின்.” 

“மதாம், எந்தக் கத்தோலிக்கருக்கும் அவர் புனித பைபிள் மீது செய்த உரைகளாகட்டும்
அல்லது டிரைஃபஸ் விடுதலையை எதிர்த்த ஆணித்தரமான வாதங்களாகட்டும், அவர் போல ஒரு
ஈர்ப்பான பேச்சாளர் அரியவரே. எங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் அவர் விரைவில்
குணம் அடையவே. நீங்கள் என்னை அழைத்த காரணம் இப்போதுதான் எனக்குப் பிடி படுகிறது”
 
“ஆம் அகஸ்டின், உன்னால் எங்கள் ஆர்தரை பாண்டிச்சேரியில் தேடி இங்கே
அனுப்ப இயலுமா?”
 
“ராணுவ வீரனால் முடியாது என்று எதுவுமே இருக்கக் கூடாது, மதாம்.
அவனை அனுப்பி வைப்பது என் பொறுப்பு.”
*

ஆண்டைய்ன் அர்லோக் அழைத்துச் சென்ற வீடு பாண்டிச்சேரியின் ஈஸ்வரன் கோயில் தெருவில்
இருந்தது. முன்புறம் வெண்ணிறத் தூண்கள், அதைக் கடந்ததும் உள்ளே கூடம் அதன் பின்
ஒரு முற்றம், அதன் பின்னே சிறிய கூடம், பின் கட்டுக்கான கதவு இவற்றைத் தாண்டியதும்
வந்த
மாடிப் படிகளில் ஏறி அவர்கள்
மொட்டை மாடியில் கால் வைக்கும் போதே புகையிலையுடன் சேர்ந்த வேறு ஒரு வாடையும்
புகையும் ஆன சூழலில், தலையில் வெள்ளை முண்டாசு, இடுப்பில் பஞ்சகச்ச வேட்டி, மேலே
கருப்புக் கோட், விசித்திரமாய் டை இருக்க வேண்டிய பகுதியில் வெள்ளைத் துணி பெரிய
மீசையுடன் விசித்திரமான தோற்றத்துடன் ஒருவர் இருந்தார். “வாருங்கள் அர்லோக்” என
தெளிவான பிரெஞ்சு மொழியில் வரவேற்ற அவர், “தரையில் அமர வேண்டும். சிரமமென்றால்
நான் நின்று கொள்கிறேன். நீங்கள் என் ஆசிரியர் அல்லவா?”
 

“இல்லை சுப்ரமண்யா. இது ஆர்தர். ஆர்தர், இவர் சுப்ரமண்யா. தமிழ் மொழியில் கவிஞர்.
சிறப்பாக பிரெஞ்ச் கற்றவர்.”
 

“உங்களிடம் கற்றேன் என்பதைச் சேர்த்துக் கூறுங்கள்,” என்ற பாரதியார், அருகே
அமர்ந்த இருவரில் முதலில் அர்லோக் கையைக் குலுக்கினார்.
 

பின்னர் ஆர்தர் கையைப் பற்றி, “தவறான ஆள் போதைக்கு அடிமையிடம் வந்து விட்டோம் என
நினைக்கிறாயா?”
 

“அப்படியெல்லாம் இல்லை.”
 

“நான் சொந்த மண்ணில் இருந்து துரத்தப் பட்டு இங்கே அடைக்கலம் ஆனவன். அந்த அழுத்தம்
தாங்க முடியாதபோது அரிதாய் போதை கை கொடுக்கும். சுதந்திர வேட்கையில்
விழித்திருப்பவன் நான். போதைக்கு அடிமையானவன் இல்லை.”
 
சற்று நேரம் அனைவரும் மௌனித்தனர். ரசவாத சித்தரைத் தன் பெற்றோர் பார்த்ததில் இருந்து துவங்கி அவரைப்
பற்றித் தெரியுமா என வினவினான் ஆர்தர்.
 

“நான் சமீபத்தில் சந்தித்த ஆன்மீக குரு, துறவி எல்லாமே அரவிந்தர்தான். நீங்கள்
தேடும் சாமியாரை நான் சந்தித்ததே இல்லை.”
 

“என் தாயிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் திடீரென வந்து விட்டேன். நான் தோல்வியோடு
போனால் அவரை எப்படி சந்திப்பேன்?”
 

“ஆர்தர், பலவேறு மன்னர்களின் பிரஜைகள் நாங்கள். எல்லோருமே பிரிட்டிஷாரிடம் அடிமை
ஆகி விட்டார்கள். இருந்தும் நாங்கள் விடுதலை வேட்கையில் பின்னடையவே இல்லை. உங்கள்
தேடலின் தீவிரம் உங்களுக்கு வழிகாட்டட்டும்.”
 
*
பவுர்ணமி அன்று மகாகாலேஷ்வர் திருக்கோயிலில் எப்படியும்
தனலட்சுமியின் சதிராட்டம் உண்டு என்று இரும்பை கிராம மக்களுக்குத் தெரியும்.
அவர்களுக்கு சிவப்புத் தொப்பியும், நீல நிற நீண்ட மேற்சட்டையும், சிவப்பு நிறக்
கால்சராயுமாக முதல் வரிசையில், அவருக்காக மட்டும் வர வழைக்கப் பட்ட நாற்காலியில்
அமர்ந்திருந்த வெள்ளைக்கார சிப்பாயைக் காண வியப்பாயிருந்தது. அவரிடம் போய்ப் பேச
யாருக்கும் தைரியமில்லை. அவர் அருகே வெளியூர் ஆள் ஒருவன் காதில் குசுகுசுவென
அவ்வப்போது பேசிக் கொண்டிருந்தான். அவன் பெயர் சிவமணி என யாரோ கூறினார்கள்.
  

பால் அகஸ்டினுக்கு ஒரு சிறிய கல்லின் மீது குச்சியால் தட்டும் நட்டுவாங்கம்,
மிருதங்கம் மற்றும் புல்லாங்குழல் வாசிப்போர், நடனத்துக்கான பாடலைப் பாடுபவர்,
அவர் அருகே ஹார்மோனியம் வாசிப்பவர் அனைவருமே அதிசயமாகத் தெரிந்தனர். அவர்கள்
எப்படி இசையை தம்முன்னே ‘நோடெஷன்’ தாள் வைக்காமல் வாசிக்கிறார்கள் என்பது மிகவும்
வியப்பாக இருந்தது. பவுர்ணமியின் ஒளியைத் தவிரவும், கோயிலின் முன் வாயிலின் அருகே
அமைக்கப்பட்ட மரத்தால் ஆன மேடையைச் சுற்றிலும் கல் தூண்கள் மீது பருத்தித்
துணிக்குள் பஞ்சு வைத்த உருண்டைத் திரிகள் பெரிய வெளிச்சம் காட்டின.
  

நீல வானம் தனில் ஒளி வீசும்
 
நிறைமதியோ உன் முகமே கண்ணா

என்னும் பல்லவிக்கு மெல்ல உயர்ந்து இருபக்கம் சீராக நளினமாக
விரியும் தன் இரு கைகளால் தனலட்சுமி அபினயித்தபோதும், நிறைமதியோ எனத் தன் முகத்தை
வலது கையால் சுற்றி முகம் முழுதும் மெல்லப் பரவும் புன்னகையுடன் கண்களை விரித்துக்
காட்டிய பாவத்திலும் பால் தன்னுள் ஒரு மலர் மொட்டவிழ்வது போன்ற ரசனையை உணர்ந்தான்.
 

“வானத்தையும் நிலவையும் தானே அவர் குறிப்பிடுகிறார்?” என்று மொழிபெயர்க்க உடன்
வந்திருக்கும் சிவமணியை வினவ, “எப்படி துரை கண்டுபிடித்தீர்கள்?” என அவன்
பாராட்டினான். மேடையின் விரிவெங்கும் சுழன்று சுழன்று ஆடிய தனலட்சுமியின்
இயக்கத்தின் சீரான வேகம் அவனைத் திணற அடித்தது.
  

நதிக்கரை ஓரத்திலே யமுனை
நதிக்கரை ஓரத்திலே – என இருமுறை
பாடல் வரிகள் ஒலிக்க மேடையில் நீள வாக்கில் கைகளால் அலைபோல அபினயித்து, நீள்
நதியின் நடையைக் காட்டுவது போல இரு புறமும் மாறி மாறி மெல்லச் சாய்ந்து நடந்தபோது,
வெள்ளைத் தோல் அல்லாத ஒரு பெண்ணைத் தான் இவ்வளவு ரசிப்பது இப்போதுதான் என அவன்
உணர்ந்தான்.
  

நதிக்கரை ஓரத்திலே யமுனை
நதிக்கரை ஓரத்திலே – அன்று ஒரு
நாள் இன்னேரத்திலே- அன்
றலர்ந்த நறுமணமலரோ மலரிதழோ உன்மதிமுகமென்றதும்
மதிமயங்கி வசமிழந்த என்னிடம் மனமிறங்கி அருள்புரிந்து சென்றதும்
மறவேனே 

மலர் மொட்டமிழ்வதை உள்ளங்கையைக் குவித்து மெல்ல மெல்ல விரித்து விரல்களில்
தனலட்சுமி காட்டிய லாகவம், ‘மதிமயங்கி வசமிழந்த என்னிடம்’ எனும்போது முகமெல்லாம்
பரவிய நாணம், கிறங்கிய பாவத்தில் தலையை மிக நளினமாகச் சாய்த்து மீண்டு, பின் ‘அருள்
புரிந்து’ எனும்போது கண்களில் காட்டிய தெய்வீக பாவமும் மாறி மாறி வந்த கலைத்
திறனும் அவன் இதுவரை கண்டிராதவை.
  

நாட்டியம் முடிந்ததும் ‘பால்’-இன் விருப்பப்படி சிவமணி தனலட்சுமியை அழைத்து
வந்தான். “உங்கள் நாட்டியம் சதிர் என அறிந்தேன். இதை நான் கலைகளுக்குப் புகழ்
பெற்ற பாரிஸ் நகரில் கூட கண்டதில்லை. பாண்டிச்சேரியில் எங்கள் படை வீரர்களும்
மற்றும் பாரிஸில் உள்ள எங்கள் மேடைகளிலும் நீங்கள் ஆட வேண்டும்.” சிவமணி
மொழிபெயர்த்ததும் அதைக் கூர்ந்து கேட்ட தனலட்சுமி நடராஜர் வடிவ முத்திரைக்கு சில நொடிகளில்
மாறி, பின்னர் கால்களைப் பழையபடி வைத்துத் திரும்பி, கோபுரத்தைக் காட்டி வணங்கி, “அந்த
நடராஜன் கோயில் தவிர வேறு எங்கும் ஆட மாட்டேன். இது உங்களுக்குத் தெரியுமே”
என்றாள்.
 

பிரெஞ்சில் கேட்டதும் பால்லின் முகம் வாடியது. சில கணங்கள் யோசித்தபின், “சமூகத்தில்
உங்கள் நிலை முன் போல இல்லை என்று அறிகிறேன். எங்கள் நாடு கலைஞர்களைக் கொண்டாடும்.
மறுபடி யோசியுங்கள்.”
 

சிவமணியின் இந்த மொழிபெயர்ப்புக்கு அவள் கண்ணீர் மட்டுமே பதிலாக இருந்தது.
  

*
பாண்டிச்சேரியின் வெயிலும் வெப்பமும் ஒன்றுமே இல்லை போல இருந்தது.
திருவண்ணாமலை மிகவும் வெப்பமாக இருந்தது. மொழி பெயர்ப்பாளர் அந்த ஊரின் மலை மீது
ஏற்றி அழைத்துச் சென்றது இன்னும் கொடுமை. ஒரு குகை அருகே நின்றவர் அதன் உள்ளே
எட்டிப் பார்த்து, “இவரை தரிசனம் செய்து கொள்ளுங்கள்” என்றார் அரைகுறை பிரெஞ்சில்.
 

“இவர் ரசவாதம் தெரிந்தவரா?”
 

“இல்லை. பெரிய ஞானி. இவர் பெயர் ரமணர்.” ஆர்தர் எட்டிப் பார்த்தான்.
 

அவர் மீது கரப்பான் பூரான் எனப் பல ஜந்துக்களும் ஊர்ந்து கொண்டிருந்தன. எந்த
நினைவுமே இல்லை. ஆழ்ந்த தியானத்தில் இருந்தார் அவர். தன் வயதை ஒத்தவராகத்
தெரிந்தார். “இப்படி தியானம் இருப்பது எதற்காக?”
 

“அவர் நம்மைப் போல் அறியாமையில் மூழ்கி இருக்க விரும்பவில்லை. எது உண்மையோ அதை
உணரத் தவமிருக்கிறார்.”
 

ரசவாதம் தவிர எல்லாவற்றையும் பற்றி இந்தியர்கள் பேசுகிறார்கள். “ரயிலுக்கு இன்னும்
எவ்வளவு நேரம்?” என்றான் ஆர்தர்.
 

“இனி நாளை மதியம்தான் ரயில் வரும். உங்களுக்கு நான் தங்குவதற்கு ஒரு சத்திரம்
காட்டுகிறேன்” என்றான்.
 

“காலையில் பொது இடத்தில் கழிக்கச் சொல்வீர்களா?” என்ற ஆர்தரிடம், “இந்த ஊரில் ஒரு
சில இடங்களில் கழிப்பறை கட்டிடத்துக்கு உள்ளேயே உண்டு. இந்தச் சத்திரம் மேல்ஜாதி
யாத்திரிகர்கள் தங்குவது” என்றான்.
 

திரும்ப திரும்ப அரிசிச் சோற்றையே காட்டும் அந்த ஊர் அலுப்படித்தது. இரவு
மொழிபெயர்ப்பாளன் வைரவன் ரொட்டியும் கோழிக்கறியும் கொண்டு வந்தான். ஆனால்
கோழிக்கறியில் காரம் அதிகம். கண்ணில் நீர் வந்து விட்டது. பெரிய அகல் விளக்குகளை
ஏற்றி வைத்திருந்தார்கள். சத்திரத்தில் அந்த தீபங்களை நோக்கி நிறைய பூச்சிகளும்
வந்தன. தரையில் அமர்வது தரையில் படுப்பது என இந்தியர்களுக்கு என்ன சாகச
வேலையெல்லாம் எளிதாகக் கை வருகிறது!
 

ஆர்தருக்கு மன வருத்தம் அதிகமாகிக் கொண்டே வந்தது. நாளை ரயில். ஒரு வாரத்துக்குள்
கப்பல். பின்னர் பிரான்ஸ்.
 பால் அகஸ்டின் என்னும் போர் வீரன் தான் வீடு திரும்புவதை
அம்மாவுக்கு ஏற்கெனவே தெரியப் படுத்தியும் விட்டான். தேடி வந்தது கிடைக்காது
என்பது எவ்வளவு துக்கம் தருவது. தொண்டையை செருமியபடி பைரவனுடன் ஒருவர் வந்தார்.
 

“இவரால் பிரான்சுக்கு ஏற்றுமதி செய்ய பொருட்கள் ஏற்பாடு செய்ய முடியுமாம்.”
 

ஆர்தர் பதில் ஏதும் கூறவில்லை. “ரசவாத சித்தர் பற்றி நீங்கள் கேள்விப்
பட்டிருக்கிறீர்களா?” என்றான்.
 

“அவர் திருவண்ணாமலைக்கு சமீபத்தில் வந்தார்,” என்றார் வியாபாரி.
 

“இப்போ எங்கே இருப்பார்?”
 

“அவர் திரிந்து கொண்டே இருப்பவர். நீங்கள் கோயிலுக்கு வருபவர்களிடம் கேட்டுப்
பாருங்கள்” என்றார். தமது முகவரியை மறக்காமல் அவனிடம் கொடுத்தார்.
  

அண்ணாமலையார் கோயில் மிகப் பெரியதாக இருந்தது. பைரவன் விசாரித்த யாருக்கும்
எதுவும் தெரியவில்லை. மதியம் என்ன வெய்யிலானாலும் ரயிலில் ஏறி விடுவது என
முடிவெடுத்தான்.
குளக்கரையில் அமர்ந்தான். பொத்தான்கள் இல்லாத கைத்தையல் போட்ட ஒரு
மேற்சட்டை, குடுமி, நான்கு முழ வேட்டியுடன் ஒருவர் ஐம்பது வயது சுமார் அருகில்
அமர்ந்து பொரியை குளத்தில் மீன்களுக்கு இரைத்துக் கொண்டிருந்தார். பைரவன் அவரிடம்
ஏதோ பேசினான். பிறகு ஆர்தரிடம், “இப்போ பஞ்சமில்லையா? இவர்
ஒரு விவசாயி. ஊரிலேயே இருந்தா
அவருக்கு ரொம்ப மனச்சங்கடம். அதான் கோயில் குளமெல்லாம் போய் வரார். அவருக்கு ரசவாத
சித்தர் இருக்கும் இடம் தெரியுமாம். அது மலை என்பதால் தினமும் போய் பார்த்து
அவருக்குப் பழம், குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டு வருவாராம்.”
 

“என்னது? தெரியுமாமா?” – பைரவன். “அவர் கிட்டே ஏன் இவர் தங்கமா பித்தளையை
மாத்துகிற வித்தையைக் கேட்கவே இல்லை. இவர் மட்டுமில்லே. வேற யாருமே ஏன் கேக்கலே?
அவரு என்ன திருப்பாதிரிப்புலியூர் தாண்டி எங்கேயுமே ரசவாதம் செய்ய மாட்டாரா?”
இதையெல்லாம் விவசாயியிடம் கேட்டான் பைரவன். பின்னர், ”அவரை நீங்க பார்த்தப்புறம்
இதுக்கு பதில் சொல்லறேன்கிறாரு.”
 
ரமணர் இருந்த இடம் அளவு உயரம் இல்லை என்றாலும் குகை மலையில்
மறுபக்கம் என்பதால் மாட்டு வண்டியில் போய் முதுகே உடையும் போலிருந்தது. சாலைகளே
இல்லாமல் எப்படி வாழ்கிறார்கள்?
 

ஒரு குகையின் வாசலில் பலரும் அமர்ந்திருந்தார்கள். ஆண்கள். பெண்கள். பெரிதும்
நடுவயதினர். குகை பெரியது. அகலமாய் வெளிச்சம் தெரியும் படியானது. ஒரு மூலையில்
சம்மணமிட்டு எலும்பும் தோலுமாய் அமர்ந்திருந்தார் அவர். தன் கையில் கொண்டு
வந்திருந்த ஒரு மண் குடுவை நிறையத் தண்ணீர், வாழை, கொய்யா ஆகிய பழங்களையும் அவர்
முன்னே வைத்தார். “குரங்கு எதுவாவது வந்து எடுத்துப் போகாதா?”
 

“பகலில் ஒருவர் இரவில் ஒருவர் இங்கேயே இருப்போம். அவர் தியானம் கலைந்து கண்
விழித்தால் உடனே கொடுப்போம்.”
 

“அவரிடம் யாராவது பேசி இருக்கிறார்களா? அவர் எப்போது தியானம் விழிப்பார்?”
 

“பல நாட்களுக்கு ஒரு முறைதான் அவர் கண்
விழிப்பார். நிரந்தர மௌனி என்றே கூறுகிறார்கள் அவர் யாரிடமும்
பேசுவதே கிடையாது. ஹரஹரமகா தேவ் அப்டின்னு தியானத்துக்கு முன்னே, அது கலைஞ்சதும்
சொல்லுவாரு. வேற எதுவும் பேச மாட்டாரு.”
 

“அப்போது ஏன் அவரோடு இருக்கிறீர்கள்? ரசவாதம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவே
போவதில்லையே?” பைரவன் தொடர்ந்து மொழிபெயர்த்தபடியே வந்தான். விவசாயி பதில்
கூறவில்லை. “எதற்காகத்தான் அவரோடு இப்படி இரவு பகல் இருக்கிறீர்கள்?”
 

“ரசவாதத்துக்காக யாருமே அவரோடு இருக்கவில்லை”
என்றார் விவசாயி. பைரவன் மொழிபெயர்த்தான். 
“பின்னே ஏன்தான் இந்த ஊமையோடு இருக்கிறீர்கள்?” கத்தி விட்டான்
ஆர்தர்.
 

சாமியார் தியானம் கலையவில்லை. ஏனையர் அவனைப் பார்த்து உதட்டின் மேல் விரலை வைத்து,
“சத்தம் போடாதே” என சமிக்ஞை செய்தனர்.
 

சில நொடிகள் கழித்து விவசாயி, “கலம் உமி தின்னா ஒரு அவிழ் தட்டாதானுதான்” என்றார்.
அதை பைரவனால் மொழிபெயர்க்க முடியவில்லை.
 
[1] ஹலோ
[2] எப்டி இருக்கீங்க 

Posted on Leave a comment

சந்திரயான் – கோல் முதல் கோள் வரை | சுஜாதா தேசிகன்

சந்திரயான்-2
(ச-2) என்ற பெயர் தோனி போலப் பிரபலமாகிவிட்டது. ச-2 விக்ரம் லேண்டிங் அன்று இந்தியா
முழுவதும் விடிய விடியப் பார்த்ததை ஒரு சாதனை என்று கூடச் சொல்லலாம். ச-2 ஏதோ ‘ராக்கெட்’
சமாசாரம் என்று பலர் நினைக்கலாம் ஆனால் அதற்கும் மேலே.
இன்னும்
2 கிமீ தூரம் இருக்க ச-2 நிலவை ‘சாஃப்ட் லேண்டிங்’ செய்ய முடியாமல் போனபோது பையன் நல்லா
படித்தான், ஆனால் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கவில்லை போன்ற மனோநிலைக்குச் சென்றார்கள்.
ஆனாலும், விண்வெளியை நாசா போன்ற பணக்கார நாடுகள் குத்தகைக்கு எடுத்துள்ளது என்பதை ஒரே
இரவில் இந்தியா மாற்றியது.
சில அடிப்படையைப்
புரிந்துகொண்டால் ச-2வை நன்கு அனுபவிக்கலாம். இந்தக் கட்டுரையின் நோக்கமும் அதுவே.
விண்வெளி
என்பது பல நூற்றாண்டுகளைக் கடந்து இன்றும் பரவசமூட்டும் ஒரு சொல்லாக இருக்கிறது. புவி
தனது அச்சிலே சுற்றிக்கொண்டு கதிரவனையும் சுற்றும் ஒரு கோளம் என்று ஆர்யபாட்டா பொயு-499ல்
கூறினார்.
இணை கோடுகளின்
பண்புகள் (properties of parallel lines) என்ற பாடம் ஏழாம் வகுப்பு பாட புத்தகத்தில்
இருக்கிறது. அதிலிருந்து இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கலாம். இந்த படத்தில் ‘A’ ‘B’ என்ற
கோணங்களின் அளவு ஒன்றே என்று புரிந்துகொண்டு மேலே படிக்கவும்.

இந்த
விஷயங்கள் எல்லாம் ஏதோ கட்டடம் கட்டும் கட்டட பொறியியலாளர்களுக்கு மட்டுமே பயன்படும்
என்று நினைக்க வேண்டாம், இது புவியின் சுற்றளவை மிகத்துல்லியமாகக் கணக்கிட உதவும்.
பொமு மூன்றாம் நூற்றாண்டில் செயற்கைக் கோள்கள், கணினி இல்லாத காலத்தில் ஒரு கோல்மூலம்
கண்டுபிடிக்க உதவியிருக்கிறது.
எப்படி?
எகிப்தில் வாழ்ந்த எரோடோஸ்தானிஸ் (Eratosthens) கோடையில் தன் வசிக்கும் இடத்தில் உள்ள
கிணற்றில் சூரியன் நேராகப் பிரதிபலிப்பதைக் கண்டார். அப்போது நேர் வடக்கே உள்ள இன்னொரு
இடத்தில் சூரியன் 7.2° கோணத்தில் நிழலை விழுவதைக் கண்டார்.
கிரேக்க மேதை
Syene (A) என்ற இடத்தில் கிணறு சூரிய பிம்பத்தைப் பிரதிபலித்தது. அதே நேரம் சுமார்
800 கிமீ தொலைவில் ஒரு கம்பத்தை வைத்து அது 7.2° கோணத்தில் நிழலைப் பிரதிபலித்த இடம்
Alexndria (B) (படத்தில்
𝜶 இரண்டு இடங்களில் இருப்பதைப் பார்க்கலாம் (7 ஆம் வகுப்புப்
பாடம்!)
இரு இடங்களுக்கும்
உள்ள தொலைவை ஒட்டகத்தின் மூலம் பயணம் செய்து அளந்து, புவியின் சுற்றளவு 39,852 கிமீ
என்று கணக்கிட்டார். இன்றைய செயற்கைக் கோள் பூமியின் சுற்றளவு 40,075 கிமீ என்று சொல்லுகிறது
ஆனால் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வெறும் ஒரு விழுக்காடு வேறுபாட்டில் கணக்கிட்டுள்ளார்!
அடுத்து
புவி ஈர்ப்பு பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம். புவி ஈர்ப்பு என்றவுடன் ஆப்பிள் கீழே
விழுந்த கதையை நினைத்துக்கொள்வோம். அதன் பயன்பாடு என்ன என்று கேட்டால் உடனே பதில் சொல்லத்
தெரியாது. இந்தப் பூமியின் கடல், மலைகள், பாலைவனம், காடுகள் என்று இருக்கிறது பூமியின்
ஈர்ப்பு விசையைத் துல்லியமாகத் தெரிந்தால் இந்தப் பூமியின் வடிவத்தையும் துல்லியமாகச்
சொல்லலாம்!
மெரினா
கடற்கரையில் நின்று பார்த்தால் கடல் நீர் மட்டம் ஒரே மாதிரி இருப்பதைப் போல நமக்குத்
தெரியும். கடலின் நீர் மட்டத்தின் கீழ் ஏற்றத் தாழ்வுகளைத் துல்லியமாக அறிந்துகொள்ள
இந்தச் செயற்கைக்கோள்கள் உதவுகின்றன. அதற்கு உதவுவது புவி ஈர்ப்புதான்!
ஈர்ப்பு
விசையை எதற்கு அளக்க வேண்டும் அது அவ்வளவு முக்கியமானதா என்று நினைக்கலாம். நீல் ஆர்ம்ஸ்டிராங்
நிலவில் இறங்கியபோது குறிப்பிட்ட இடத்தில் இறங்க வேண்டியவர், ஆறு கிமீ தள்ளி இறங்கினார்.
காரணம் நிலவின் ஈர்ப்பு விசையைச் சரியாக அறியாததால்.
பூமியின்
ஈர்ப்பு விசை, நிலவின் ஈர்ப்பு விசை மிகச் சரியாக அளவிட்டால்தான் நாம் அனுப்பும் கோள்களைச்
சரிவரச் செலுத்த முடியும்!
அடுத்து
நாம் தெரிந்துகொள்ள வேண்டியது சுற்றுப்பாதை (orbit). கோள்கள் பூமியை அதன் சுற்றுப்பாதையில்
சுற்றுகிறது. கோள்கள் சுற்றும்போது பூமியின் வடதுருவம் தென் துருவம் பக்கம் வரும்போது
புவி ஈர்ப்பு மாறுகிறது அந்தச் சமயத்தில் கோள்களை ஸ்டியரிங்கை வளைப்பது மாதிரி வளைத்து
அதைச் சரி செய்ய வேண்டும். நாம் கார் ஓட்டுவது போல அதிகமாக வளைக்க முடியாது. 1° கீழ்
வளைக்க வேண்டும். சுற்றுப்பாதை பயணம் என்பது திருமண வாழ்வு மாதிரி வாழ்நாள் முழுக்க
‘அட்ஜெஸ்ட்மெண்ட்’ தேவை.
கார்
ஓட்டுவது என்பது இரு பரிமாணத்தைக் கொண்டது. சாலை சரியாக இருந்தால் போதும், ஆனால் அந்தரத்தில்
பறக்கும் கோள்களுக்கு மூன்று பரிமாணம். பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும் உதாரணமாகக்
காற்றின் வேகம், சூரியனின் வெப்பம் போன்றவை. இந்தச் சவால்கள் இஸ்ரோவிலிருந்து கண்காணித்து
கோள்களுக்குத் தகுந்த அறிவுரையைக் கொடுக்க வேண்டும். சூரியனின் வெப்பம் அதிகமானால்
மூலக்கூறுகளின் அடர்த்தி (density) அதிகமாகும். இந்தச் சமயத்தில் கோள்களின் சாய்வைச்
சரி செய்ய வேண்டும். சில சமயம் 0.15° அளவுக்குக் கூடத் திருப்ப வேண்டும், இல்லை என்றால்
வழி தவறித் தொலைந்துவிடும்!
சூரியனுடன்
இணைந்து சில கோள்கள் சுற்றுகின்றன. எவ்வளவு உயரத்தில் எவ்வளவு சாய்ந்த நிலையில் கோணத்தின்
சுற்றுப்பாதை அமைத்தால் ஒரு நாளைக்கு எத்தனை முறை பூமியைச் சுற்றலாம் போன்ற கணக்குகளை
விஞ்ஞானிகள் கணக்கு செய்து அனுப்புகிறார்கள்.
நாம்
தீபாவளி ராக்கெட் விடும்போது அதன் தலையில் ஒரு சின்னக் கல்லைக் கட்டினால் அது மேலே
செல்லாமல் நம் மீது பாயும். இதற்கு ராக்கெட் எடை கூடுதலாக இருப்பதுதான் காரணம். அதை
மேலே அனுப்ப அதற்கு அதிக எரிபொருள் தேவை.
ஐந்து
டன் ஏவுகணையை ஐந்து டன் விசையால் (force) மேலே செலுத்த முடியாது. அதைவிட அதிகமாக வேண்டும்.
விண்ணில் செலுத்தப்படும் ராக்கெடுக்கு எவ்வளவு எரிசக்தி, விசை, உந்து திறன் (thrust)
என்று எல்லாம் முன்கூட்டியே சரியாகக் கணக்கிட்டுச் செயல்படுத்த வேண்டும். உந்துதிறன்
ராக்கெடுக்கு பூமியின் புவி ஈர்ப்பைச் சமாளிக்க வேண்டிய வலிமை தேவை என்பதைக் குறிக்கும்.
புறப்படும்
சமயம் (lift-off mass) சந்திரயான்-1 நிறை – 1380 கிலோ. சந்திரயான்-2ன் நிறை 3850 கிலோ.
அதனால் மேலே செல்லச் செல்ல அதற்கு அதிக வலிமை தேவைப்படும். அப்படி மேலே செல்லும்போது,
அதன் உள் இருக்கும் எரிபொருள் குறைவாகி, புவி ஈர்ப்பு மாறும். அப்போது அதன் வலிமையைச்
சரியாகக் கணக்கிட்டு அதைக் கீழே இருந்து சரி செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும்.
இன்று
3850 கிலோ கொண்ட ராக்கெட் அனுப்பும் நாம் 1967ல் முதல் ராக்கெட் அனுப்பியபோது அதன்
எடை 70 கிலோதான். குறுக்களவு வெறும் 75மிமீ தான். மேலே சென்ற தூரம் 4.2 கிமீ. அன்று
பலர் இந்தியா ஏதோ ஒரு விளையாட்டுப் பொருளை மேலே அனுப்பியது என்று கேலி பேசினார்கள்.
மற்றவர்கள்
கேலி பேசியபோது இந்திய விஞ்ஞானிகள் மேலே சென்ற ராக்கெட் தங்கள் வைத்திருந்த குறிப்புகளுடன்
ஒத்துப் போகிறதா என்று பார்த்தார்கள். அவை யாவும் சரியாக இருந்ததைக் கண்டு, அடிப்படையைக்
கற்றுக்கொண்டு விட்டோம் என்ற சந்தோஷப்பட்டு, தங்களிடம் பெரிய ராக்கெட்செய்யும் வசதி
இருந்தால் இன்னும் அதிக தூரம் அனுப்பலாம் என்று முடிவுக்கு வந்தார்கள். படிப்படியாக
ராக்கெட் செய்து ஐம்பது ஆண்டுகளில் ச-2 என்ற பெரிய சாதனையைப் படைத்திருக்கிறார்கள்.
பொதுவாக
ராக்கெட் எல்லாம் இயற்பியல் சம்பந்தப்பட்டது என்று நினைத்திருப்போம். ஆனால் ராக்கெட்டுக்கு
வேண்டிய எரிபொருள் எல்லாம் வேதியியல் சம்பந்தப்பட்டது. ராக்கெட்டுக்கு வேண்டிய உந்து
சக்தியைத் தருவது புரொப்பலண்ட் எனப்படும் உந்து அமைப்பு. இது திட அல்லது திரவமாக இருக்கலாம்.
பல ரசாயனங்கள் எப்படி எவ்வளவு எரிக்க வேண்டும், எந்த வெப்ப நிலை என்று எல்லாம் சரியாகக்
கணக்கிட வேண்டும்.
நாளை
மனிதனை அனுப்பும்போது இதில் மருத்துவமும் சேர்ந்துகொள்ளும். மனிதன் விண்வெளியை நோக்கிப்
போகும் உடம்பில் பல அடிப்படை மாற்றங்கள் நிகழ்வுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து அதற்கேற்றாற்
போலத் திட்டமிடவேண்டும்.
சுமார்
இரண்டு லிட்டர் ரத்தம் மற்றும் திசு திரவம் விரைவாக இடம்பெயர்ந்து, கீழ் முனைகளிலிருந்து
உடலின் மேல் பகுதிகளை நோக்கிப் போகும்போது, மத்திய நரம்பு மண்டலம் மற்றும் இதயம் பாதிக்கப்படுகிறது.
இந்த மாற்றத்தால் இதயம் மட்டும் இல்லை, சிறுநீரகங்களின் உப்பு மற்றும் நீர் வெளியேற்றத்தில்
மாறுதல்கள் ஏற்படுகின்றன. மனிதனும், மைகிரோ கிராவிட்டியும் என்று தனியாகக் கட்டுரையே
எழுதலாம்.
GLSV
என்ற சொல் நமக்கு மிகவும் பழக்கப்பட்ட சொல். SLV – என்றால் Satellite Launch
Vechile. இது மூன்று அல்லது நான்கு நிலை வாகனமாகும். சர்க்கஸில் கோமாளி மேலே ஏற ஏற
தன் சட்டையைக் கழட்டிப் போடுவது போல, இதில் ஒவ்வொரு பாகமாக! அப்படிச் செல்லும்போது
இதன் இடை குறைந்து கடைசியில் செயற்கைக் கோள் மட்டும் மேலே சுற்றுப்பாதையில் துப்பிவிடும்.
இதன்
ஒவ்வொரு பாகத்திலும் திரவ எரிபொருளைப் பற்றவைத்தல் முறைகளில் இஸ்ரோ நல்தேர்ச்சி அடைந்தது,
அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகளுக்கு இணையாக! ஆனால் அதே சமயம் அவர்களைவிடச் செலவு மிக
குறைவாகச் செய்கிறது.
ச-2 என்ன
சிறப்பு?
ச-2 விண்வெளிக்குச்
செலுத்தப்பட்ட இரண்டாவது வெற்று விண்கலம். இந்த ஆண்டு ஜூலை 22ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
ச-2 மேலே
கூறிய SLV சமாசாரம்தான் இது. ஆர்பிட்டர் என்ற ஒன்றை அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஆர்பிட்டரை மற்ற செயற்கைக்கோள் மாதிரி நிலவைச் சுற்றவிட்டுவிட்டு அதிலிருந்து ‘விக்ரமை’
நிலவுக்கு அனுப்பி, அதன் மேற்பரப்பில் தரையிறங்கும் அதுவும் நிலவின் தென் துருவத்தில்
இறங்கும் முயற்சி, இதுவரை யாரும் செய்யாதது.
பூமியிலிருந்து
ச-2 எப்படிச் சென்றது என்று அறிந்துகொண்டால் நம் இந்திய விஞ்ஞானிகளின் சாதனையை வியக்கலாம்.
ச-1 சில
ஆண்டுகளுக்கு முன் சென்று நிலவில் தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பதைக் கண்டுபிடித்து வரலாறு
படைத்தது. ஆனால் ச-2வின் முக்கிய விஷயம் ‘சாஃப்ட் லேண்டிங்’ என்பதுதான். சந்திரனில்
மனிதன் இறங்க இது ஒரு ‘Proof of concept’ என்று கூடச் சொல்லலாம்.
செயற்கைக்
கோள் பற்றிப் படிக்கும் போது ‘பேலோட்’ என்ற ஒரு வார்த்தையை அடிக்கடி கேட்டிருக்கலாம்.
இதைப் புரிந்துகொள்ள ஒரு சின்ன உதாரணம் தருகிறேன்.
ஒரு தபால்
அனுப்புகிறீர்கள். என்ன செய்வீர்கள்? ஒரு கவர் மீது பெறுநர் முகவரி; உள்ளே கடிதமோ பொருளோ
வைத்து அனுப்புகிறீர்கள். பெறுநர் என்ன செய்கிறார், கவரைப் பிரித்து போட்டு விட்டு
உள்ளே இருக்கும் கடிதத்தை எடுத்துக்கொள்கிறார்.
உள்ளே
இருக்கும் அந்த சமாசாரத்துக்குப் பெயர் தான் பேலோடு.
ஒரு கவர்
அதற்குள் இன்னொரு கவர் அதற்குள் இன்னொரு கவர் என்று… இருந்தால்?
கவருக்குள்
இருக்கும் இன்னொரு முதல் கவருக்கு பேலோட் அதற்குள் இருக்கும் இன்னொரு கவர் அதற்கு பேலோட்….
இப்படி.
ச-2விலும்
இப்படித்தான் பல பேலோட் இருக்கிறது. ச-2ல் ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்), ரோவர் (பிரக்யான்)
என்ற மூன்று விஷயங்களை உள்ளடக்கியுள்ளது. மூன்று கருவிகள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
ஆர்பிட்டர் ஒரு கவர் அதற்குள் விக்ரம் என்ற கவர் அதற்குள் ரோவர் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
ராக்கெட்
மேலே சென்றவுடன் ஆர்பிட்டரை பூமியின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் புகுத்தும். படத்தில்
170 x 39120கிமீ என்று இருப்பதைக் கவனிக்கலாம். பூமிக்கு அருகில் 170 கிமீ தூரமும்
அதிகபட்ச தூரமாக 39120 கிமீ புரிந்துகொள்ள வேண்டும். இப்படிச் சுற்ற வேண்டும் என்று
இஸ்ரோவிலிருந்து ஆர்பிட்டரைக் கட்டுப்பாடு செய்வார்கள்.
பூமியை
ஐந்து முறை சுற்றி பிறகு நிலவின் சுற்றுப்பாதையில் நகர்த்திவிடும். மீண்டும் சில நாட்கள்
சந்தினை சுற்றி சுற்றி அதன் அருகில் செல்லும். நிலவுக்கு அருகில் சென்றவுடன் 100கிமீ
சுற்றுப்பாதையில் சுற்ற ஆரம்பித்தவுடன், ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் கழன்று கொள்ளும்.
விக்ரம் நிலவைச் சுற்றி 30 கிமீ தூரத்தில் சுற்ற ஆரம்பிக்கும். (ஆர்பிட்டரின் பேலோட்
விக்ரம் என்று புரிந்திருக்கும்).
விக்ரம்
நான்கு நாட்கள் சந்திரனைச் சுற்றிய பிறகு அதிலிருக்கும் உயர் தெளிவுத்திறன் கேமரா ஒன்று
வெளியே வந்து ‘எந்த இடத்தில் தரையிறங்கலாம்’ என்று பொருத்தமான இடங்களைப் படம் பிடித்து
அனுப்பும்.
இஸ்ரோ
விஞ்ஞானிகள் அந்தப் படங்களை ஆராய்ந்து பொருத்தமான இடம் எது என்று தேர்வு செய்து அந்த
வரைபடத்தை விக்ரத்துக்கு, வாட்ஸ் ஆப்பில் ‘லொகேஷன்’ அனுப்புவது போல, அனுப்புவார்கள்.
விக்ரம்
அதைப் புரிந்துகொண்டு அந்த இடத்தில் தரையிறங்கத் திட்டமிட்டுத் தரையிறங்கும். இது தான்
‘சாஃப்ட் லேண்டிங்’ என்பார்கள்.
விக்ரம்
லாண்டிங் செய்த பிறகு, அதிலிருந்து ஒரு சருக்கு மரம் மாதிரி ஒன்று வெளியே வந்து பிரக்யான்
என்ற சின்ன வண்டியை வெளியே அனுப்பும். இதை ரோவர் என்பார்கள்.
ரோவரில்
இதே போல உயர் திறன் படக்கருவி மற்றும் எஸ்ரே போன்ற கருவிகள் ரசாயனம், சுற்றுப்புறம்,
சூழ்நிலையைச் சோதிக்க மீட்டர், மானிட்டர் என்று பல கருவிகள் அதில் இருக்கும். இது எல்லாம்
அதன் பேலோட்.
விக்ரம்,
பிரக்யான் இரண்டும் ஒரு ‘நிலவு நாள்’ வேலை செய்யும். ஒரு நிலவு நாள் என்பது நமக்கு
14 நாட்கள். ரோவர் சந்திரனை சுமார் 500கிமீ சுற்றும். ஆர்பிட்டர் நிலவை ஒரு வருடம்
சுற்றும்.
விக்ரம்
படங்களை அனுப்பி இஸ்ரோ தேர்ந்தெடுத்து அனுப்பிய பின் அது தரையிறங்கும் போது சுமார்
2 கிமீ தூரத்தில் தகவல் அனுப்புவது துண்டிக்கப்பட்டு ‘தொப்’ என்று கீழே விழுந்தது.
பிறகு என்ன ஆனது என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
ராக்கெட்
அனுப்புவது என்பது எவ்வளவு கடினம் என்று புரிந்திருக்கும். சுமார் 0.9டிகிரீ தப்பு
செய்தாலும் சுற்றுப்பாதை மாறிவிடும் அபாயம் இருக்கிறது. ஈர்ப்பு விசை, உந்து சக்தி
என்று எல்லாம் சரியாகக் கணக்கிட்டுச் செய்ய வேண்டும். இதில் எல்லாம் இஸ்ரோ தேர்ச்சி
பெற்றுவிட்டது. மொத்தம் 3,84,000 கிமீ சென்று கடைசி ‘சாப்ட் லேண்டிங்’ மட்டும்தான்
செய்ய வேண்டும். (இதுவரை மொத்தம் 38 மென்மையான தரையிறங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வெற்றி விகிதம் 52%.)
அடுத்த
விண்வெளிக்கு விக்ரமிலிருந்து அனுப்பும் பேலோட் ஒரு இந்தியனாக இருப்பான். 2059ல் அத்திவரதர்
வெளிவருவதற்குள் இந்தியா பல முறை நிலவைத் தொட்டுவிட்டு வந்துவிடும்!

Posted on Leave a comment

மகாத்மா காந்தி கொலை வழக்கில் சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 6) | தமிழில்: ஜனனி ரமேஷ்



(22) குற்றத்துக்கு உட்படுத்தும் வகையில்
என்னிடம் இருப்பதாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
உரிமம் பெறாத வெடி மருந்துகள் அல்லது ஆயுதங்கள் அல்லது குற்றத்துக்கு
உட்படுத்தும் வகையில் ஆவணச் சான்றுகள் அல்லது பொருள் சான்று என்னிடம் இருப்பதாகக் எதுவுமே
கண்டுபிடிக்கப்படவில்லை.
(23) தொடர்பு மட்டுமே சதிக்கான ஆதாரமாகாது
வழக்கின் தொடக்கத்திலேயே ப்ராசிக்யூஷன் தரப்பு அதனிடம் இருக்கும்
வலுவான ஆவணச் சான்று மூலம் குற்றம் சுமத்தப்பட்டவர், குறிப்பாக கோட்சேவும், ஆப்தேவும்,
என்னோடு தொடர்பில் இருந்துள்ளனர் என்றும் அவர்களுடைய வழிகாட்டியாவும் குருவாகவும் நான்
திகழும் அளவுக்கு எனது அசைக்க முடியாத விசுவாசிகளாவும் விளங்கியதால், எனது ஆலோசனையோ,
ஒப்புதலோ இல்லாமல், அவர்களால் சதித் திட்டம் தீட்டி இச்செயலைச் (ஆதாவது படுகொலை) செய்திருக்கவே
முடியாது என்று குற்றம் சாட்டியது.
இப்போது இந்த ஆவணச் சான்று வெளிச்சத்துக்கு வந்த நிலையில் ப்ராசிக்யூஷன்
தரப்பு என் மீது குற்றம் சுமத்தியதைப் போன்றே நானும் உறுதியாக அந்தக் குற்றச்சாட்டு
ஆதாரமற்றது, நியாயமற்றது என்பதுடன் நீதிமன்றம் என் மீது காழ்புணர்வு கொள்ளவும் வழிவகுக்கும்
என்றும் சொல்வதற்கு வாய்ப்பை அளித்துள்ளது. இதற்கான காரணங்கள் பின்வருமாறு:
A) கவதங்கர் பி.டபிள்யு. 115 மற்றும் சி ஹெச் ப்ரதான் பி.டபிள்யூ.
130 ஆகியோரின் சாட்சிகள் என் வீட்டில் சோதனை நடைபெற்ற பிறகு ஏராளமான கடிதங்கள் சிஐடி
அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன என்பதை உறுதிப்படுத்துகின்றன. காவல் ஆய்வாளர்
ஏ.ஆர்.பிரதான் (பி.டபிள்யூ.129) இதற்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். கடிதப் போக்குவரத்தில்
மொத்தம் 143 கோப்புகள் இருந்தன என்றும் அவற்றில் மொத்தமாக 10,000 கடிதங்களுக்குக் குறையாமல்
இருந்தன என்றும் பிரதான் ஒப்புக் கொள்கிறார் (பி.டபிள்யூ.129 பக்கம் 4). மூன்று மாதங்கள்
இப்பணியில் முழுமையாக ஈடுபட்டு ஒவ்வொரு கடிதத்தையும் படித்து ஆய்வு செய்தார். பின்னர்
அவற்றில் பெரும்பான்மை தள்ளுபடி ஆனது – காரணம் என்னைக் குற்றத்துக்கு உட்படுத்தும்
வகையில் எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை. கோட்சேவும் ஆப்தேவும் எனக்கு எழுதியதாவும்,
நான் அவர்களுக்கு எழுதியதாகவும் கருதப்படும் 100-125 கடிதங்களை எனக்கு எதிரான சான்று
ஆவணங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ப்ராசிக்யூஷன் தரப்பு முனைந்தது. ஆனால் இயல்பற்ற,
வழக்கத்துக்கு மாறான அக்கடிதங்களின் ஏற்புநிலை கேள்விக்குரியானது. ப்ராசிக்யூஷன் தரப்பு
சமர்ப்பித்த 100-125 கடிதங்களில் ஆப்தேவும், கோட்சேவும் எழுதிய 20 கடிதங்கள் மட்டுமே
ப்ராசிக்யூஷன் தரப்பு ஆவணங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. முக்கியமாக இந்த வழக்கில் அவற்றை
ஆவணச் சான்றுகளாக என்னை நேரடியாகக் குற்றத்துக்கு உட்படுத்தாமல், கோட்சே மற்றும் ஆப்தே
ஆகியோருக்கும் எனக்கும் இடையேயான பொதுவான தொடர்பைக் குறிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த
வேண்டும் என்னும் நிபந்தனையுடன் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
(B) மேற்கண்ட நிபந்தனையின் அடிப்படையில் இக்கடிதங்கள் சான்றாக
அனுமதிக்கப்பட்டாலும், இவை குறித்து நான் விரிவாகவே இந்த வாக்குமூலத்தின் பிரிவுகளில்
(10 & 11) தெரிவித்திருக்கிறேன். மேலும் கோட்சேவும், ஆப்தேவும், வெளிப்படையான,
சட்டப்பூர்வமான இந்து சங்கடன் மற்றும் மகாசபா செயல்பாடுகளின் ஊழியர்களாக மட்டுமே என்னுடன்
தொடர்பு கொண்டிருந்தனர் என்றும் அக்கடிதங்களிலிருந்து நான் தெளிவாக மேற்கோள் காட்டி
உள்ளேன்.
இதன் காரணமாக, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எனக்கு வந்த தபால்களில்
ப்ராசிக்யூஷன் வசமுள்ள சற்றேறக்குறைய 10,000க்கும் மேற்கண்ட கடிதங்களில், மிகத் தீவிர
ஆய்வுக்குப் பின்னரும், என்னைக் குற்றத்துக்கு உட்படுத்தும் வகையில் ஒற்றைச் சொல்லோ
வரியோ காணப்படவில்லை என்பதே, ஏனைய விஷயங்கள் சரிசமமாக இருக்கும் சூழலில், நான் அப்பாவி
என்பதை நிரூபிப்பதற்கான சான்றாகும். எப்படி இருப்பினும், கைவசமுள்ள சான்றாவணம் மூலம்,
கூறப்படும் இந்தச் சதித்திட்டத்தில், கோட்சே மற்றும் ஆப்தேவுடன் என்னைத் தொடர்புபடுத்தும்
ப்ராசியூஷன் தரப்புக் குற்றச்சாட்டு தவிடுபொடியாகும்.
(C) மேலும், ப்ராசிக்யூஷன் தரப்புச் சான்றே 1948ல் ஆப்தேவிடமிருந்து
ஒரு கடிதமும், கோட்சேவிடமிருந்து மூன்று கடிதங்களும் எனக்கு வந்திருப்பதை உறுதிப்படுத்துகிறது.
இக்கடிதங்கள் அனைத்துமே அதே ஆட்சேபணைற்ற வகையில் இருப்பதுடன், 1946 அக்டோபர் 30க்குப்
பிறகும், 1947லும், 1948லும், கோட்சே எனக்கு எந்தக் கடிதமும் எழுதவில்லை என்பதையும்
தெளிவுபடுத்துகிறது (பி.டபிள்யூ.129 பக்கம் 4).
மேற்கூறிய காலகட்டத்தில் ஆப்தேவிடமிருந்து எனக்கு எந்தக் கடிதமும்
வரவில்லை என்பதுடன் கோட்சேவுக்கோ ஆப்தேவுக்கோ தனியாகவோ கூட்டாகவோ எந்தக் கடிதத்தையும்
நானும் அனுப்பவில்லை. இதன் மூலம் அந்தச் சான்றாவணம் 1947 அல்லது 1948ல் எங்களுக்கு
இடையே எந்தக் கடிதப் போக்குவரத்தும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
கர்க்கரே குறித்து பிரதான் (பி.டபிள்யூ.129 பக்கம் 3) தனது சாட்சியில்
கூறுவதாவது ‘நான் ஆய்வு செய்த 143 கோப்புகளில் சாவர்க்கருக்கு கர்க்கரே அல்லது கர்க்கரேக்கு
சாவ்சர்க்கர் எழுதியதாக ஒரு கடிதத்தைக் கூட காணவில்லை’ என்கிறார்.
(D) எனவே குற்றம் சாட்டப்பட்ட எவரோடும், குறிப்பாக ஆப்தே மற்றும்
கோட்சேவோடும், 1946 இறுதி தொடங்கி 1948 பிப்ரவரியில் நான் கைது செய்யப்படும் தேதி வரை,
எனக்கு எந்தக் கடிதத் தொடர்பும் இல்லை என்பது தெளிவு. ஆப்தே – கோட்சே கடிதத்தை அடிப்படையாகக்
கொண்டு ப்ராசிக்யூஷன் தரப்பு அவர்களுக்கும் எனக்குமான தொடர்பை நிரூபிக்க முனைவதை எதிர்த்து
அது மகாசபையின் சட்டபூர்வ மற்றும் பொதுவான செயல்பாடுகள் என்னும் எனது வேண்டுகோளை இது
உறுதிப்படுத்துகிறது. எனவேதான் 1946ல் நான் மகாசபை தலைவர் பதவியை உடல் நிலை சீராக இல்லாததால்
ராஜினாமா செய்த பிறகு எனது பொதுச் சேவை தொடர்பான அனைத்துப் பணிகளையும் தற்காலிகமாக
நிறுத்திவிட்டேன். இதன் காரணமாக ஏனைய இந்து சபா ஊழியர்களைப் போலவே ஆப்தேவும் கோட்சேவும்
இந்து சங்கடன் அறிக்கைகள் அல்லது எனது பிரசாரப் பயணம் அல்லது பொது விவகாரங்கள் தொடர்பான
எனது வழிகாட்டுதல்கள் ஆகியவை குறித்து எனக்கு எழுதுவதை நிறுத்திவிட்டனர். ஆகவே மேற்கொண்ட
கால கட்டத்தில் அவர்களது கடித்தப் போக்குவரத்து திடீரென நின்று போனதை இது விவரிக்கிறது.
E) கூறப்படும் சதித்திட்டம் 1947 டிசம்பரில் தொடங்கியதாகப் ப்ராசிக்யூஷன்
தரப்பு சொல்வதைக் கவனிக்க வேண்டும். என்னுடனான கோட்சே மற்றும் ஆப்தே கடிதப் போக்குவரத்து
அந்தக் காலத்துக்கு முன்பே நின்று விட்டதைப் ப்ராசிக்யூஷன் சாட்சியே மேற்கண்டபடி நிரூபிக்கிறது.
இதன் காரணமாக எனக்கும் கோட்சே மற்றும் ஆப்தேவுக்கும் இடையேயான தொடர்பு, அதாவது எந்தக்
கடிதப் போக்குவரத்தை ஆதாரமாக வைத்து ப்ராசிக்யூஷன் தரப்பு நிரூபிக்க முனைகிறதோ, அந்தத்
தொடர்பை நிரூபிக்க கடிதப் போக்குவரத்து, கூறப்படும் சதித்திட்டம் உருவாவதற்கு ஓராண்டுக்கு
முன்பாகவே நின்று விட்டது.
இந்தக் காரணங்களுக்காகவே நான் சமர்ப்பிப்பது என்னவெனில், கடிதப்
போக்குவரத்து குறிப்பிடும், இதுபோன்ற சட்டப்படியான மற்றும் முறையான தொடர்பு, கூறப்படும்
சதித் திட்டம் உருவாவதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே நின்றுவிட்டதால், என்னை எந்தச் சூழலிலும்,
குற்றவாளியாக்க இயலாது என்பதுடன், இதைக் குற்றம் மற்றும் சதித்திட்டத்துடனான தொடர்பாகவும்
சந்தேகிக்க முடியாது என்பதுதான். முறையான மற்றும் சட்ட ரீதியான தொடர்பையும், குற்றம்
மற்றும் சதித்திட்டத்தையும் இணைக்க முடியாத அளவுக்கு இடைவெளி உள்ளது. பல பிரபல வழக்குகளில்
இந்த அடிப்படைக் கொள்கைகள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு,
சர்காரின் சாட்சியச் சட்டம் (பிரிவு 10 பக்கம் 98) ‘சதித் திட்டம் தீட்டிய எவருடன்
குற்றம் சுமத்தப்பட்டவரின் தொடர்பு குறித்த சாட்சி மட்டுமே அவரை அந்த சதியின் கூட்டாளியாகக்
குற்றவாளியாக்கப் போதுமானது அல்ல’ என்று தெளிவாகக் கூறுகிறது.
(24) இந்தச் சதித்திட்டம் குறித்துக் கோட்சேவும் ஆப்தேவும் என்னோடு
ஆலோசனை நடத்தினர் என்றும், அவர்கள் எனக்கு எழுதிய கடிதங்களில் தங்களது விசுவாசத்தை
மதிப்போடும் மரியாதையோடும் எனக்கும் நான் பின்பற்றும் இந்து சித்தாந்தத்துக்கும் தெரிவித்துள்ள
காரணத்தால், என்னுடைய ஒப்புதலின்றி இந்தக் குற்றத்தை அவர்கள் செய்திருக்க இயலாது என்று
ப்ராசிக்யூஷன் தரப்பு பிடிவாதமாக முடிவுக்கு வந்துள்ளது அபத்தம் என்பது மேற்கண்ட பிரிவிலிருந்து
தெளிவு.
பெரும்பான்மைக் குற்றவாளிகள் தங்களது மதப் பிரிவுகளின் குருக்கள்
மற்றும் வழிகாட்டிகள் மீது மிகுந்த மரியாதையும், விசுவாசத்தையும் செலுத்துவதுடன், அவர்களது
கொள்கைகளைப் பின்பற்றுவதிலும் உறுதியாக உள்ளனர். அப்படியெனில் அவர்களைப் பின்பற்றுவர்களின்
குற்றச் செயல்களுக்கு குருவும் வழிகாட்டியும் பொறுப்பாக முடியுமா? அந்தக் குற்றவாளிகள்
தங்கள் குருக்கள் மற்றும் வழிகாட்டிகள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றனர்
என்ற ஒரே காரணத்துக்காக அவர்களையே குற்றவாளியாக்க முடியுமா? குற்றம் சுமத்தப்பட்ட பெரும்பான்மை
நபர்கள் தங்கள் பெற்றோர், சகோதரர்கள் மற்றும் உறவினர்களுடன் நெருங்கிய தொடர்பும், அன்பும்
மரியாதையும் வைத்துள்ளதுடன், அவர்களுக்கு எழுதும் கடிதங்களிலும் தங்கள் பணிவைத் தெரிவிக்கின்றனர்.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் உறவினர்களிடம் பணிவோடு கீழ்ப்பணிவதால், குற்றச் செயல்களைச்
செய்வதற்கு முன்பு அவர்களின் ஆலோசனையையும் வழிகாட்டுதலையும் பெற்றார்கள் என்றும் குற்றத்துக்கு
உடந்தையாக இருந்தார்கள் என்றும் கூற முடியுமா? அரசியல் கட்சிகளிலுள்ள எண்ணற்ற தொண்டர்களில்
சிலர் ஏதேனும் குற்றம் செய்திருந்தால், தலைவர்கள் மீது அவர்கள் மதிப்பும், மரியாதையும்,
வைத்திருக்கும் ஒரே காரணத்துக்காகக் குற்றத்துக்கு அவர்களைப் பொறுப்பாக்கிக் காவல்
துறை கைது செய்ய முடியுமா? இன்னும் சொல்லப் போனால் தலைவருக்குள்ள தார்மிகச் செல்வாக்கைச்
அவரது அனுமதியைப் பெறாமலேயே சில தொண்டர்கள் தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கவில்லையா?
1942ல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் போது காங்கிரஸ்
தொண்டர்களாக மகாத்மா மீது மதிப்பு மரியாதையுடன் நெருங்கமாக இருந்த சில முன்னணிச் செயல்
வீரர்கள் தலைமறைவாக வன்முறையில் ஈடுபட்டனர். அந்நிய ஆட்சிக்கு எதிரான இதுபோன்ற தலைமறைவு
வன்முறை நியாயமா, நியாயமற்றதா என்ற கேள்விக்குள் நான் போக விரும்பவில்லை. மகாத்மா காந்தி
இந்தத் தலைமறைவு வன்முறையைக் கண்டித்தார் என்பதை மட்டும் சொன்னால் போதுமென நினைக்கிறேன்.
ஆனால் இந்தச் செயல் வீரர்களின் பின்னால் அணிவகுத்த மக்கள் ‘மகாத்மா காந்திக்கு ஜே’
என்று முழக்கமிட்டுக் கொண்டே இரத்தம் பெருக்கெடுக்கக் கலவரத்திலும், நாசவேலையிலும்
ஈடுபட்டனர். ‘மகாத்மா காந்திக்கு ஜே’ என்று முழக்கமிட்டதாலும், குற்றச் செயல்களில்
ஈடுபட்டவர்கள் அவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்ததாலும், காந்திஜியிடம் கட்டாயம்
வன்முறை குறித்த ஆலோசனைகளைக் கேட்டிருப்பார்கள் என்ற முடிவுடன் பிரிட்டிஷ் அரசு கூட
காந்திஜியைச் சிறையில் அடைக்கவில்லை. இந்த வழக்கில் ப்ராசிக்யூஷன் தரப்பு சில குருக்களையும்,
வழிகாட்டிகளையும் சாட்சிகளாக விசாரித்ததில், குற்றம் சுமத்தப்பட்டவர்களில் சிலருக்குப்
பயங்கரமான வெடி மருந்துகளை வழங்கியதுடன், இந்தச் சதித்திட்டம் நடைபெற்றதாகக் கூறப்படும்
டிசம்பர் – ஜனவரி காலகட்டத்தில், இந்தியக் குடிமகன்களாக இருந்த ஜின்னா மற்றும் லியாகத்
அலி ஆகியோரைக் கொலை செய்யத் தூண்டியதாகவும் பிரமாணத்தில் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும், ஒப்புக் கொள்ளப்பட்ட இத்தகைய குற்றத் தொடர்பைக்
கூடக் காரணம் காட்டி ப்ராசிக்யூஷன் தரப்பு குற்றம் சுமத்தப்பட்டவர், இச்சதித்திட்டம்
சம்மந்தமாக இந்தச் சாட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்ற முடிவுக்கு வருவதுடன், அவரையும்
இந்தச் சதியில் குற்றவாளியாக்க இயலாது. அவர்கள் அனைவரும் குற்றவாளியாக்கப்பட்டிருக்க
வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இதே ப்ராசிக்யூஷன், ஆப்தேவுக்கும் கோட்சேவுக்கும்
எனக்கும் இடையே பல ஆண்டுகளுக்கு முன்பிருந்த சட்டபூர்வ கடிதப் போக்குவரத்து மற்றும்
தொடர்பைக் காரணமாக்கி, இந்தச் சதித் திட்டம் சம்மந்தமாக என்னிடம் ஆலோசனை நடத்தினர்
என்பதுடன், என்னையும் குற்றவாளியாக்கும் பிடிவாதமான முடிவு அபத்தமும் அநியாயமும் ஆகும்.
ஆனால் ப்ராசிக்யூஷன் தரப்பு சாட்சியே அதே குணத்துடன், ‘இருந்திருப்பார்’ மற்றும் ‘இருந்திருக்க
மாட்டார்’ என்ற ஊக அடிப்படையில் இருப்பதால், எனக்கு எதிரான வழக்கை நிருப்பிக்கப் போதுமான
மற்றும் நேரடி சாட்சியைத் தேடுவதில் ப்ராசிக்யூஷன் தரப்பு நம்பிக்கையற்று இருக்கிறது.
அதே அளவுக்கு, சரியோ, தவறோ, இடரில் இருப்பதாகக் கருதும் தங்களது கௌரவத்தைக் காப்பாற்றப்
போதிய ஆதாரங்களின்றி அபத்தமான ஊகங்களின் அடிப்படையில் பொறுப்பற்று நடந்து கொள்வதும்
தெள்ளத் தெளிவாகிறது.
(25) ப்ராசிக்யூஷன் சாட்சியின் இந்தப் புனைவு
இரண்டே வரிகளில் அடங்கி உள்ளது. முதலாவது செவி வழிச் செய்தி, இரண்டாவது அனுமானம்
இப்போது எந்தச் சான்றாக இருந்தாலும், பொருள் அல்லது சூழ்நிலை,
வாய்மொழியாக அல்லது எழுத்துபூர்வமாக, எனக்கு எதிராக ப்ராசிக்யூஷன் தரப்பு கொண்டுவந்திருந்தாலும்,
எனது வாக்குமூலத்தின் மேற்கண்ட பகுதியில் அவற்றுக்கு விரிவான விளக்கம் அளித்துள்ளேன்.
இந்நிலையில் அதிலுள்ள ஒரேயொரு பகுதியில் காணப்படும் இரண்டே வரிகள் மூலம் மட்டுமே சதித்திட்டத்தில்
எனக்குள்ள தனிப்பட்ட தொடர்பை உறுதிப்படுத்துவதே அதன் நோக்கமாகும்! இவ்விரண்டுமே பேட்ஜ்
சுமத்திய குற்றச்சாட்டுகள்:-
காந்தி, நேரு மற்றும் சுராவார்டி ஆகியோரைத் தீர்த்துக் கட்டுமாறு
நான் ஆப்தேவிடம் சொன்னதாக, ஆப்தே தன்னிடம் கூறினார் என்பதே பேட்ஜின் முதல் வாக்கியமாகும்.
‘வெற்றிகரமாக முடித்துவிட்டுத் திரும்பி வாருங்கள்’ என்று நான் ஆப்தே மற்றும் கோட்சேவிடம்
சொன்னதைக் கேட்டதாக பேட்ஜ் கூறுவது இரண்டாவது வாக்கியமாகும். ஆப்தே சொன்ன முதல் வாக்கியத்தின்
அடிப்படையில் இதை பேட்ஜ் ஊகித்திருக்கலாம்.
வண்டிகள் நிறையக் கடிதப் போக்குவரத்து, தேடல்கள், அமைச்சர் முதல்
திரைப்பட நடிகர் வரை, மகாராஜா முதல் டாக்ஸி ஓட்டுனர் வரை, ஏராளமான சாட்சிகளுடன் ப்ராசிக்யூஷன்
சான்றாவணத்தை பிரம்மாண்டமாக்கித் தீவிரப்படுத்தியதன் முக்கிய நோக்கம் எதிர்பார்த்த
விளைவு கிடைக்க வேண்டும் என்பதே. ஆனால் என்னுடைய வழக்கைப் பொருத்தவரை, மகா சபா பவன்
தொலைபேசி ‘ட்ரங்கால்’ போன்று ‘பயனற்றுப்’ போய்விட்டது.
இந்த வாக்குமூலத்தில் பிரிவுகள் (18 மற்றும் 19) கூறிய காரணங்களின்படி
மதன்லாலின் கதையிலும் எதுவுமில்லை. ஜெயின் சொன்னதாக அங்கத் சிங்கும், அமைச்சரும் கூறுகிறார்கள்;
ஜெயின் தனக்கு மதன்லால் சொன்னதாகக் கூறுகிறார்; மதன்லாலோ நான் ஜெயினிடம் எதுவுமே சொல்லவில்லை
என்கிறார்; ஜெயின் சொன்ன கதையாகவே இருப்பினும், கூறப்படும் சதித்திட்டத்தோடு தனிப்பட்ட
முறையிலும் உறுதியாகவும் என்னைத் தொடர்புபடுத்தவில்லை.
இப்போது, என்னை இந்தச் சதித்திட்டத்துடன் உறுதியாகவும், நேரடியாகவும்
தொடர்புபடுத்த முனைவு மேற்கொள்ளப்படும் பேட்ஜ் சான்றாவணத்தில் மேற்கண்ட இரு வாக்கியங்களுள்,
முதலாவது செவி வழிச் செய்திதான். அப்ரூவரான பேட்ஜ் இந்த வாக்கியத்தைத் தன்னிடம் ஆப்தே
கூறியதாகச் சொல்கிறார். ஆனால் ஆப்தேவும் கோட்சேவும் அவ்வாறு பேட்ஜிடம் எதுவுமே சொல்லவில்லை
என்றும் நானும் அவர்களிடம் எதுவும் கூறவில்லை என்றும் மறுத்துள்ளனர். எனவே பேட்ஜின்
குற்றச்சாட்டை உறுதிப்படுத்த எந்தச் சான்றும் நிச்சயமாக இல்லை. பேட்ஜின் முதல் குற்றச்சாட்டு
செவிவழிச் செய்தி மட்டுமின்றி உறுதிப்படுத்தப்படாத செவிவழிச் செய்தியும் ஆகும். உறுதிப்படுத்தப்படாத
நிலையில், ஒரு அப்ரூவர் தனிப்பட்ட முறையில் கேட்டதையோ, பார்த்தையோ கூட நம்பகமான சான்றாகப்
பொதுவாகச் சட்டம் ஏற்றுக் கொள்வதில்லை. எனவே ஒரு செவிவழிச் செய்தியை, ஒரு அப்ரூவர்
செவிவழிச் செய்தி என்று ஒப்புக் கொண்ட பிறகு, நம்பகத்தன்மை அற்றதாகவும், உறுதிப்படுத்தப்படாததாகவும்
தானே இருக்க முடியும்!
அதுமட்டுமன்றி, அதைப் போன்ற சில காரணங்கள், ஆப்தே மற்றும் கோட்சேவிடம்
சொன்னதைத் தனிப்பட்ட முறையில் கேட்டதாக பேட்ஜ் சொன்னது இரண்டாம் வாக்கியத்தின் நம்பகத்தன்மையைப்
பழுதாக்குகிறது. இது உண்மையெனில் பிறகு அது செவிவழிச் செய்தி அல்ல. ஆனால் பேட்ஜ் அதே
வாக்கியத்தில் ‘வெற்றிகரமாக முடித்துவிட்டுத் திரும்பி வாருங்கள்’ என நான் சொன்னது
சதித்திட்டம் தொடர்பாக நேரடியாக இல்லை என்பதை அவரே ஒப்புக் கொள்கிறார். சதித்திட்டத்துடன்
எனக்கு தொடர்பிருக்கலாம் என்ற பேட்ஜ் அனுமானித்திருக்கலாம். மேலும் ஆப்தே மற்றும் கோட்சே
ஆகிய இருவரும் என் வீட்டுக்கு மூவர் வந்த கதையும், அந்த வாக்கியத்தை நான் சொன்னதாகக்
கூறிய குற்றச்சாட்டும், புனையப்பட்டவை மற்றும் முற்றிலும் பொய் என்று தெளிவாகக் கூறியுள்ளனர்.
இதை யாரும் எதற்கும் உறுதிப்படுத்தவில்லை. ஆகவே உறுதிப்படுத்தப்படாத இந்தச் செய்தியை
அனுமானித்தது தர்க்கவியலாளர் கூட இல்லை, ஒரு அப்ரூவர் என்பதால், அதற்கு நீதிமன்றத்தில்
எந்த விதமான நம்பகத்தன்மையோ, சான்றாவண மதிப்போ கிடையாது. இவ்விரண்டு குற்றச்சாட்டுகளின்
அடிப்படையில் என் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது – முதலாவது அப்ரூவர் சொன்ன உறுதிப்படுத்தப்படாத
செவிவழிச் செய்தி. இரண்டாவது அப்ரூவரின் உறுதிப்படுத்தப்படாத அனுமானம். இவ்விரண்டுமே
எந்த நீதிமன்றத்தின் முன்பாகவும் ஏற்றுக் கொள்ளத்தக்க சான்றாவணமாக இருக்க முடியாது
என்ற நிலையில், நான் தாழ்மையுடன் பணிந்து சமர்ப்பிப்பது என்னவெனில், எனக்கு எதிரான
வழக்கு முழுவதுமாகத் தானாகத் தகரும். அத்துடன், நான் குற்றமற்றவன் என்பதும் சந்தேகத்துக்கு
இடமின்றி நிரூபணமாகும்.

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 23 | சுப்பு




பார்வதி அக்கா
என்னுடைய ஆன்மீகப் பயணம் தொடங்கியவுடனேயே ஒவ்வொரு நாளும் வினோதமான,
விளக்க முடியாத அனுபவங்கள் ஏற்பட்டன. திடீரென்று என்னைச் சுற்றி ஒரு பூந்தோட்டம் போடப்பட்டு
நான் எப்போதும் நறுமணத்தோடு இருக்க வேண்டும் என்பது போல் ஒரு ஏற்பாடு. காரணமில்லாமல்
எல்லோரும் என்னிடம் கனிவோடு இருந்தார்கள்.
எனக்கு உணவளிப்பதில் பெசன்ட் நகர் மக்களிடம் ஒரு ஆரோக்கியமான
போட்டி இருந்தது. நேற்று வரை என் மீது அதிகம் மதிப்பு வைத்திராத நண்பர்கள், உறவினர்கள்
கூட என்னை சீராட்டத் துவங்கினார்கள். என் வயதொத்த பெண்களில் சிலர் என்னைத் தம்பிப்
பாப்பாவாகத் தத்தெடுத்துக்கொண்டார்கள்.
இதனுடைய தாக்கத்தில் சிக்கி, ருசியில் மயக்குண்டு நான் உலகியலில்
பங்கெடுப்பவன் என்ற நிலையிலிருத்து விலகி பார்வையாளனாக மாறிக் கொண்டிருந்தேன். இத்தனைக்கும்
என்னுடைய அரசியல் தொடர்புகளோ பொதுப் பணியோ என்னை விட்டுப் போகவில்லை.
இப்படிப்பட்ட ஒரு நாள் காலையில் பெசன்ட் நகரில் ராகவன் வீட்டில்
தங்கி, தி ஹிந்து நாளிதழைப் படித்துக்கொண்டிருந்தேன். அதிலிருந்த ஒரு செய்தி என்னைச்
சூடேற்றிவிட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக வெளியிடப்பட்ட செய்தி அது.
நீண்ட நேரம் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின்
சௌகரியத்துக்காக செய்யவிருக்கின்ற சௌகரியங்களைப் பற்றிய செய்தி அது. பக்தர்களின் மனதை
ஒருமுகப்படுத்துவதற்காக அவர்களுக்கு தேவஸ்தான நிர்வாகத்தின் சார்பில் ஆன்மீகம் தொடர்பான
இலவச வெளியீடுகள் வழங்கப்படும் என்றும் அதில் இந்து, முஸ்லிம், கிறித்துவம் தொடர்பான
விஷயங்கள் இருக்கும் என்று சொல்லப்பட்டது. என்னுடைய சூடேற்றத்துக்கு காரணம் இதுதான்.
இந்துக் கடவுளைப் பார்ப்பதற்காகக் காத்திருக்கும் இந்து பக்தர்களிடையே
பைபிளைப் பரப்ப வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் என் கேள்வி. இந்த அயோக்கியத்தனத்தை
அகற்ற வேண்டும் என்று நினைத்தேன். ராகவன் வீட்டிலிருந்து படியிறங்கி கீழே வீதிக்கு
வந்தேன்.
பெசன்ட் நகரில் முக்கியமான இடம், குறிப்பாக இளைஞர்களைப் பொருத்தவரை
முக்கியமான இடம் ‘ராவ் கடை’தான். உண்மையில் அது பாண்டுரங்க ராவ் என்பவர் நடத்திய சைவ
ஹோட்டல். எவ்வளவு நேரம் உட்கார்ந்து வீண் அரட்டை அடித்தாலும் ஏன் என்று கேட்காத நல்ல
மனிதர் பாண்டுரங்க ராவ். என்ன காரணத்தினாலோ இளைஞர்கள் அதை ஒரு ஹோட்டலாக ஏற்றுக்கொள்ளவில்லை.
‘ராவ் கடை’ என்று சொல்லி சொல்லி அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. ராவ் கடைக்கு வந்தேன்.
அப்போது காலை எட்டு மணி. எனக்கு முன்பாகவே குமார் அங்கு வந்திருந்தான்.
குமார் தொழில் ரீதியாக பெயின்டிங் கான்டிராக்ட் எடுக்கும் முதலாளி; சமயத்தில் தொழிலாளி.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநியாயத்தைத் தடுத்து
நிறுத்த வேண்டும் என்று குமாரிடம் எடுத்துச் சொன்னேன். இது தொடர்ந்தால் அதன் விளைவுகள்
விபரீதமாக இருக்கும் என்பதை விளக்கமாகப் பத்து நிமிடங்கள் பேசினேன். ஒரு கட்டத்தில்
அவனுடைய மூளையில் இதெல்லாம் போய்ச் சேர்ந்ததா என்கிற சந்தேகத்தோடு நிறுத்திவிட்டேன்.
அப்போது குமார் கேட்டான். “நான் என்ன செய்யணும்னு சொல்லு.”
என்னுடைய பதில் “முதல்ல பசங்கள திரட்டணும். ஆள் இருந்தாதான்
போராட முடியும்.”
குமார் ஸ்கூட்டரை உதைக்க ஆரம்பித்தான். ஒரு கட்டத்தில் போராட்டம்
வெற்றி பெற்று அவன் புறப்பட்டான். நான் காலை உணவுக்காக ராவ் கடையின் உள்ளே போனேன்.
ஒரு மணி நேரத்தில் சிறிய அளவில் போராட்டக் குழு தயாராகிவிட்டது.
நான், குமார், மத்தியான ஷிப்டில் அசோக் லேய்லாண்டிற்குப் போக வேண்டிய இரண்டு பேர்,
வேலையில்லாத அதைப் பற்றி கவலையும் இல்லாத இரண்டு பேர். இன்னும் மூன்று பேர் வருவதாகச்
சொல்லியனுப்பியிருந்தார்கள்.
பகல் பதினோறு மணிக்குள் போராட்டத்திற்கான வரைவுத் திட்டம் தயாராகிவிட்டது.
நூற்றுக்கணக்கான அஞ்சலட்டைகளை வாங்கி, பொது மக்களிடம் கையொப்பம் பெற்று தேவஸ்தானத்திற்கு
அனுப்ப வேண்டும், நம்முடைய எதிர்பைத் தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
“வீட்டுல அக்கா தங்கச்சியெல்லாம் சும்மாதான இருக்காங்க. அவங்கள
எழுதச் சொல்லலாமே” என்று யோசனை சொன்னான் ஒருவன். அவன் வேலைக்குப் போகாமல் சும்மா இருக்கிறான்
என்பது முக்கியமான விஷயம். ஓரளவுக்கு அவன் கோரிக்கையும் ஏற்கப்பட்டது.
இப்படியாக முதல் நாளில் இருநூறு, மறுநாள் முன்னூறு என்று ஐநூறு
அஞ்சலட்டைகளை அனுப்பிவிட்டோம். மூன்றாம் நாள் நண்பர்களிடம் போராட்டத்தைத் தொடருமாறு
சொல்லிவிட்டு ஒரு வேலையாக நான் சிந்தாதிரிப்பேட்டைக்குப் போனேன். அங்கேதான் சங்கத்தின்
வார இதழான தியாக பூமி அலுவலகம் இருந்தது. அதன் ஆசிரியர் ஹண்டிரட் ஜீ என்று அன்போடு
அழைக்கப்பட்ட சீனிவாசன் என்னை வரவேற்றார்.
“என்னைய்யா, நசிகேதஸ் மாதிரி வந்திருக்கிற?” என்றார்.
“இதுவும் ஒரு உயிர் மரணப் போராட்டம்தான்” என்று சொல்லி திருப்பதி
தேவஸ்தான போராட்டம் பற்றி விவரித்தேன். ஹண்டிரட் ஜீ அற்புதமான மனிதர். என்னை சாந்தப்படுத்தி
அனுப்பி வைத்தார்.
தியாக பூமியின் அடுத்த இதழில் தேவஸ்தானத்தின் முயற்சி பற்றியும்
அதைக் கண்டிக்க வேண்டிய அவசியம் பற்றியும் எழுதப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து சங்கத்தின்
அன்பர்கள் தங்கள் சக்திக்கேற்றபடி தந்தி, தபால் மூலமாக தேவஸ்தானத்தைத் துளைத்தெடுத்துவிட்டார்கள்…
இரண்டு வாரங்களுக்குப் பிறகு அதே ராகவன் வீட்டில் தி ஹிந்து
நாளிதழைப் படித்துக்கொண்டிருந்தபோது அந்தச் செய்தி கண்ணில் பட்டது. திருமலை திருப்பதி
தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு அது. முன்பு வந்த பைபிள், குரான் செய்தியை
நடைமுறைபடுத்தப் போவதில்லை என்று அது தெரிவித்தது.
இந்தச் சமயத்தில்தான் ராமானுஜன் திருமணத்திற்காகப் பெங்களூருக்குப்
போனேன்.
திருமணத்திற்கு முதல் நாள் மதியம் பெங்களூர் போய்விட்டோம். மாப்பிள்ளை
வீட்டார் பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் என்னைத் தவிர ஐம்பது பேர் பயணம்.
மதியத்திற்கும் மாலையில் நடக்கவிருக்கிற ஜானவாசத்துக்கும் இடைவெளியில்
நான் ஜெய நகருக்குப் போனேன். அங்கே என்னுடைய சித்தப்பா ராகவன் குடியிருந்தார். ஹிந்துஸ்தான்
ஏரோநாட்டிகல் நிறுவனத்தில் வேலை பார்த்த அவர் வித்தியாசமான ஆசாமி. தொழிற்சாலையில் இவர்
தொழிற்சங்கத் தலைவராக இருந்தார். அதே நேரத்தில் ராஜாஜியின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட
சுதந்திரா கட்சியிலும் ஒரு கட்டத்தில் உறுப்பினராக இருந்தார். இதுவரை எனக்கும் சித்தப்பா
ராகவனுக்கும் அதிகப் பரிமாற்றங்கள் நடந்ததில்லை, ஆனால் இந்த முறை என்னை அவர் அருகில்
வைத்துக்கொண்டார். எனவே அவரிடம் கேட்க வேண்டும் என்று பாக்கி வைத்திருந்த கேள்வியை
அப்போது கேட்டுவிட்டேன்.
எங்கள் வீட்டிலும் மற்ற உறவினர்கள் வீட்டிலும் முகப்பில் விநாயகர்
படம் இருக்கும். சிலரிடம் காஞ்சி மகா சுவாமிகளின் படம் இருக்கும். அடையார் பெரியம்மா
வகையறாக்கள் சிருங்கேரி ஆச்சாரியாள் படம் வைத்திருப்பார்கள். ஆனால் பெங்களூர் வீட்டில்
இது எதுவும் இல்லை. பகவான் ரமணர் படம் இருந்தது. இது ஏன் என்பதுதான் என்னுடைய கேள்வி.
கேட்டுவிட்டேன்.
சித்தப்பா ராகவன் சொன்ன பதில் இது:
“நான் இளம் வயதிலேயே பெங்களூருக்கு வந்து வேலைக்குச் சேர்ந்துவிட்டேன்
(1940). அப்போது நானும் என்னுடைய நண்பர் ஜானகிராமனும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருவண்ணாமலை
ரமணாஸ்ரமத்திற்குப் போவது வழக்கம். ஒரு சமயம் கூட்டமாக இருக்கும், இன்னொரு சமயம் அதிகக்
கூட்டம் இருக்காது. நாங்கள் போகும் வழியில், கூட்டம் இருக்கக்கூடாது என்று பகவானை வேண்டிக்கொண்டே
போவோம்.
அதிசயமாக ஒருமுறை பகவான் இருக்கும் அந்த ஹாலில் நாங்கள் நுழைந்த
போது அங்கே பகவானைத் தவிர நாங்கள் இரண்டு பேர்தான் இருந்தோம்.
பகவானுக்கு அருகில் போய் உட்கார்ந்துவிடலாம் என்று ஜானகிராமன்
என்னிடம் கிசுகிசுத்தான். அந்த இடத்தில் பேசுவதே எனக்கு உவப்பாக இல்லை. தேவையில்லை,
இப்படியே உட்கார்ந்து கொள்ளலாம் என்று செய்கையிலேயே சொன்னேன். எங்களுக்குள் நடந்த தகவல்
பரிமாற்றத்தை பகவான் கவனித்துவிட்டார். பகவான் பேசினார்.
“எங்கே இருந்தால் என்ன. என்ன நடந்தா என்ன. எல்லாம் ஒண்ணுதான்”
என்றார் அவர்.
சிறிது நேரம் கழித்து நாங்கள் புறப்பட்டோம். பெங்களூருக்கு வந்துவிட்டோம்.
என்னைப் பொருத்தவரை பகவானுடைய வார்த்தைகள் என் கையில் கட்டிய தாயத்தாக மாறிவிட்டது.
அன்று முதல் – இது நடந்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது – எனக்கு பிரச்சினை
ஏற்படும்போதெல்லாம் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் கொஞ்சம் நிதானிப்பேன். பகவானை நினைத்துக்கொள்வேன்.
மந்திர ரூபமாக அவருடைய வார்த்தைகள் வந்து நிற்கும். சில நிமிடங்கள்தான். பிரச்சினைக்கான
தீர்வு என்னுடைய தலையீடு இல்லாமலேயே கிடைத்துவிடும். இப்படித்தான் நம்ம வண்டி ஓடிண்டிருக்கு”
என்று சொல்லிவிட்டு “ஏதாவது புரிகிறதா?” என்று கேட்டார்.
“இப்போ இதெல்லாம் புரிகிறது” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.
சித்தப்பா எனக்கு வில் டுரண்ட் எழுதிய தி ஸ்டோரி ஆப் பிலாசபி
(Will Durant – The Story of Philosophy) புத்தகத்தைக் கொடுத்தார்.
பார்வதி அக்கா
ஜெய நகரில் ஒரு நாற்சந்தியில் நின்று கொண்டிருந்தேன். ரமணனுக்காகக்
காத்துக்கொண்டிருந்தேன். அந்த இடத்தில் ஒரு பேக்கரி. பேக்கரியின் உள்ளே சுவற்றில் சரஸ்வதி
படம் மாட்டப்பட்டிருந்தது. சரஸ்வதியையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் என்னோடு பேசுவது
போலிருந்தது. நானும் கையை ஆட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தேன். இதற்குள் கடையிலிருந்த
ஆள் ஒருவன் என்னை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். நிமிஷத்தில் நிலமை புரிந்துவிட்டது.
சரஸ்வதி படத்துக்குக்கீழே ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணை நான் வம்பு
செய்கிறேன் என்று இவன் நினைத்துவிட்டான். இவனிடம் என்ன சொல்வது என்று தீர்மானிப்பதற்குள்
ரமணன் ஆட்டோவில் வந்து இறங்கினான். அதே ஆட்டோவில் ஏறிக்கொண்டு ஆட்டோவை சீக்கிரம் ஓட்டச்
சொன்னேன்.
திருமணத்தில் பந்தியில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மீண்டும்
பராசக்தி. சாப்பாட்டு மேசையில் பக்கத்திலிருந்தவன் துப்பிய முருங்கைக்காய் சக்கைக்குப்
பக்கத்தில் குட்டி துர்க்கை. பராசக்தியைப் பார்க்காமல் இப்படி எச்சிலைப் போட்டிருக்கிறானே
என்ற சங்கடம் எனக்கு. வாய்விட்டு சொல்ல முடியவில்லை. எழுந்து கை கழுவப் போனால் வரிசையில்
எனக்குமுன் ஒரு இளம்பெண். அந்தப் பெண்ணுடைய தோளில் மகாலக்ஷ்மி. இவளைத் தொட வேண்டுமென்ற
எண்ணத்தில் கையை நீட்டி, அந்தப் பெண்ணின் கன்னத்தைத் தொட்டுவிட்டேன். அவள் முகம் சுருங்கிய
பிறகுதான் எனக்கு சூழ்நிலையின் யதார்த்தம் பிடிபட்டது.
பிறகு ராஜாஜி நகரில் இருக்கும் ரமணனின் அத்திம்பேர் வீட்டுக்குப்
போனேன். அங்கே ரமணனின் அக்கா மாலாவும் அத்திம்பேர் தியாகராஜனும் இருந்தார்கள். பராசக்தி
காட்சிகளாக வருவதையும், எந்த நேரமும் எனக்கு உதை விழலாம் என்பதையும் அவர்களிடம் விளக்கிச்
சொன்னேன். அந்த வீட்டிலேயே தங்கினேன்.
பெங்களூர் மல்லேஸ்வரத்தில் பார்வதி அக்கா என்று ஒரு பெண்மணி
இருந்தார். அவர் மூலம் சேஷாத்திரி சுவாமிகள் அனுக்ரஹம் செய்வார் என்று மாலாவும் தியாகராஜனும்
சொன்னார்கள். அவர்கள் பார்வதி அக்காவுடைய சத்சங்கத்தில் இருந்தார்கள். என்னை அவரிடம்
அழைத்துப் போனார்கள். மிகச் சிறிய அறையில் மெத்தை, பெட்டி படுக்கைகள் ஒரு பக்கம் அடுக்கி
வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு பக்கத்தில் நாங்கள் நால்வரும். பார்வதி அக்கா, ஓரளவிற்கு
என்னுடைய பாட்டி குஞ்சம்மா போலிருந்தார். நெற்றியில் திருநீறு. வாயில் பிராமண பாஷை.
தரையில் உட்கார்ந்து கொண்டு விபூதியில் கையைத் துழாவிக் கொண்டிருந்தார். என்னை அவருக்கு
அறிமுகம் செய்தார்கள்.
‘என்னப்பா பார்க்கிற நீ?”
‘பராசக்தியைப் பார்க்கறேன்”.
‘எங்கே பாக்கிற?”
‘எல்லா இடத்திலேயும் பார்க்கறேன். இப்பக்கூட இந்த மெத்தைமேல
மகிஷாசுரமர்த்தினி இருக்கா. மாலாவோட தோள்ல கன்யாகுமரி அம்மன்”.
“சரி நீ சொல்லிண்டே இரு” என்றவர் நான் ஒவ்வொரு தெய்வமாகக் குறிப்பிட,
சிலேட்டில் அழிப்பதுபோல் அவர் கையை அசைக்க, ஒவ்வொரு தெய்வமாய்க் காணாமல் போனது. “இது
ஒரு நிலை. சில அசடுகள் இதையே பார்த்துக் கொண்டு நின்றுவிடும். நீ மேலே போ” என்றார்.
அவருடனே நாங்கள் தங்கியிருந்தோம். அவர் காபி போட்டுக் கொடுத்தார். மிகவும் நேசத்துடன்
இருந்தார். வாய் ஓயாமல்  “அன்பே அமுதம், அன்பே
அமுதம்” என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
அங்கிருந்து புறப்பட்டோம். அவர்களை ஸ்கூட்டரில் போகச் சொல்லிவிட்டு
நான் நடந்து வந்தேன். இந்த அனுபவம் புதுமையாயிருந்தது. வீதியில் தென்படும் நேபாளத்துப்
பெண்மணி, பிளாட்பாரத்து நாய், மைதானத்தில் விளையாடுவோர் என்று எல்லோரிடமும் ஒரு ஜொலிப்பு
இருந்தது. வானத்தில் இருந்த மேகங்கள் இறங்கி வந்து வழியை மறைத்து விட்டன. உடல் தளர்ச்சியை
உதறிவிட்டு முறுக்கேறிக் கொண்டது. மனது மிகப் பெரியதாய், எதிலும் அடங்காமல், எதையும்
தொடாமல் தனித்திருந்தது. மாலா வீட்டுக்குப் போய் என்ன செய்யப்போகிறோம் என்ற யோசனை வந்தது.
ஏதோ ஒரு வீட்டுக்குப் போய் அங்கே உள்ள ஜனங்களோடு சம்பந்தப்பட்டு வாழ்வதென்பது ஒட்டவில்லை.
கால்போன போக்கிலே நடந்தேன். வெகு நேரம் இப்படிச் சுற்றிய பிறகு ரமணன் நம்மைத் தேடுவானே
என்ற ஞாபகம் வந்தவுடன் வழி மறந்துபோய் விசாரித்துக்கொண்டு வீடு திரும்பினேன்.
சாப்பிட்டுவிட்டு சோபாவில் உட்கார்ந்திருந்தோம். அப்போது தியாகராஜன்
காலடியில் சேஷாத்திரி ஸ்வாமிகள் தென்பட்டார். கொஞ்ச நேரம் கழித்து, “அத்திம்பேர் கால
கொஞ்சம் நகர்த்துங்களேன்” என்றேன். “ஏன்” என்றார். “காலடியில் சேஷாத்ரி ஸ்வாமிகளிருக்கார்”
என்றேன். எல்லோரும் பயந்துவிட்டார்கள். அதற்குப் பிறகு யாரும் பேசவில்லை. பிறகு படுத்துக்
கொண்டேன். சுவாமிகள் சுவரில் வேகமாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்தபடியே
தூங்கிவிட்டேன்.
இதற்குப் பிறகு பத்து நாட்கள் பெங்களூரிலிருந்தேன். பத்து நாட்களும்
பார்வதி அக்காவைப் பார்க்கத் தவறியதில்லை. காலையில் ரமணன் ஆபீஸ் போகும்போது அவர் வீட்டில்
என்னை விட்டு விட்டுப் போவான். மாலையில் ரமணனோ, மாலாவோ வந்து என்னை அழைத்துப் போவார்கள்.
பார்வதி அக்கா சத் விஷயங்களையே பேசுவார். மிகவும் அன்பாக உபசரிப்பார். எனக்குப் பிடித்த
அரிசி உப்புமா செய்து கொடுப்பார். அவர் காபியை பிரஸாதம் என்று சொல்லித்தான் கொடுப்பார்.
ஆன்மிகம் விஷயமாக அவர் எழுதிய நோட்டுப் புத்தகங்கள் அந்த வீட்டில் மூட்டை மூட்டையாயிருக்கும்.
அவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொடுத்துப் படிக்கச் சொல்வார். வண்ணக் கோலங்களை நூற்றுக்கணக்கில்
வரைந்து வைத்திருப்பார். அதைப் பார்த்துக் கொண்டிருப்பேன்.
பத்து நாட்களுக்குப் பிறகு சென்னை.
பெஸன்ட் நகரிலிருந்த ரமணனின் தந்தையும் தாயும் என்னை நன்றாகப்
பராமரித்தார்கள். ரமணனின் அம்மாவுக்கு நான் செல்லப்பிள்ளையாய் இருந்தேன். ஆன்மிக விஷயமாக
எனக்கு ஏற்படும் சந்தேகங்களை ரமணனின் அப்பா சேஷனிடம் தீர்த்துக் கொள்வேன். அவர் கூறியபடி
இடைவிடாது நான் காயத்ரி ஜபம் செய்து கொண்டிருந்தேன். இரவு, பகலாக காயத்ரி ஜபம் செய்து
கொண்டிருந்தேன். பேசினாலும் சாப்பிட்டாலும் காயத்ரி ஜபம் மனதின் ஆழத்தில் ஓடிக்கொண்டேயிருக்கும்.
குளியலறை, கழிப்பறை தவிர எல்லா இடங்களிலும் இது நீடிக்கும். சேஷன் என்னை புவனேஸ்வரி
மந்திரத்தையும் ஜெபிக்கச் சொன்னார். அதையும் அவ்வப்போது செய்து கொண்டிருந்தேன். இரவில்
திடீரென்று கண்விழித்தால் உள்ளே ஜபத்தின் ஓட்டம் தெரியும்.
இதைத் தவிர என்னுடைய பரிட்சார்த்த முயற்சிகளும் உண்டு. பஸ்,
ரயில் பயணத்தின்போது யாரோ ஒருவரைக் குறிவைத்து “யாதேவி சர்வ பூதேஷு நித்ரா ரூபேண சமஸ்திதா.
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ” என்று சொல்லிக்கொண்டே இருப்பேன். அவர் தூங்கிவிடுவார்
அல்லது அடுத்த ஸ்டாப்பில் இறங்கிவிடுவார்.
(தொடரும்…)

Posted on Leave a comment

இந்திய இறைமையும் ஈழப் போராட்டமும் – அகரமுதல்வன்


இலங்கைத்தீவில் நிகழ்ந்து வருகிற தமிழ் – சிங்கள இனப்பிரச்சினையென்பது வெறும்
இனப்பிரச்சினை மட்டுமல்ல. அதன் பின்னணியில் தேரவாத பெளத்தமதத்தின் பெருந்தேசியவாத
கோட்பாடு அச்சாக இருக்கிறது. இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்ட அனைத்து
அப்பாவித்தமிழ் மக்களையும் பெளத்த மதமே கொன்றது. ஈழத்தில் உள்ள தமிழர்கள் என்போர்
இந்துக்கள். அவர்கள் பெளத்த மதத்தின் எதிரிகள். இந்தியாவின் நீட்சியாக
இந்தத்தீவில் மிச்சமிருப்பவர்கள், ஈழத்தில் உள்ள தமிழர்களை அழிக்காமல் போனால்
இலங்கைத்தீவும் இந்தியாவின் (இந்துக்களின்) வசம் ஆகிவிடுமென ஒவ்வொரு சிங்கள
ஆட்சியாளர்களும் தமது ஆட்சிக்காலத்தில் நரபலி ஆடுகிறார்கள்.
இங்கே கூறப்படும் பெளத்த – இந்து வரலாற்றுப் பகையை சிங்கள – தமிழ்
இனப்பிரச்சனையோடு புரிந்துகொள்ளும் இந்தியர் சிலரைத்தான் காணமுடிகிறது. மாறாக
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும் அவர்களின் அரசியல்பூர்வமான
அலைக்கழிவுகளையும் மிகவும் கொச்சைப்படுத்தி
ப் பேசவல்ல எத்தனையோ
பேரை சந்தித்திருக்கிறேன். இந்திய இறைமையை நேசிக்கவல்லவர்கள் ஈழத்தமிழரின்
போரட்டத்தையும் ஆதரிக்கவேண்டியவர்கள் எனும் கூற்றை அவர்கள் நம்பமறுப்பதும் உண்டு.
இலங்கைத்தீவில் ஈழத்தமிழர்களுக்கான விடுதலை என்பது தென்னாசிய பிராந்திய அளவில்
என்றென்றைக்கும் இந்தியாவிற்கு ஒரு பாதுகாப்பு அரண் என்பதை இந்திய அரசியல்
புத்திஜீவிகள் புரியமறுப்பது வேதனை தருகிறது. இதன் இன்னொரு பக்கத்தில் ஈழத்தமிழ்
ஆதரவு சக்திகளாக இந்திய நிலவெளியில் இருக்கும் சில அரசியல் கட்சிகள் – அமைப்புகள்
உள்நாட்டு அரசியலின்பால் இந்திய வெறுப்புவாதத்தை
ப் பேசுவதும் நான்
மேற்கூறிய அவர்களின் நிலைப்பாடுகளுக்கு காரணமாக அமையலாம். ஆனால் இந்த
நொண்டிச்சாட்டை காரணம் காட்டி தமது வரலாற்றுப் பொறுப்பிலிருந்து இந்திய
இறைமையாளர்கள் நழுவமுடியாது.
இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த மாபெரும்
மனிதப்படுகொலையை அடுத்து இலங்கையின் அரசியல் களமானது பல்வேறு காட்சிகளை
அரங்கேற்றியிருக்கிறது. இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு யுத்த வெற்றி அளித்த
மகிழ்ச்சி ஒருபுறமெனினும் யுத்தக்குற்றச்சாட்டு இன்னொரு புறத்தில் நின்று
மிரட்டியது. ஆனால் சிங்கள ராஜதந்திரிகள் அதனை சர்வதேச தளத்தில் சரியாக எதிர்கொண்டு
வெற்றியும் கண்டனர். நிகழ்ந்த யுத்தத்தின் உண்மைத்தன்மையை அறிய சர்வதேச விசாரணை வேண்டுமென
மனிதஉரிமை ஆர்வலர்கள் உலக அரங்கில் குரலெழுப்பியபோது படுகொலையின் ராஜதந்திரிகள்
உள்ளக விசாரணைக் குழு அமைத்து அந்தப் பொறியிலிருந்தும் தமது நவீன பெளத்த சிங்கள
மன்னரான மஹிந்த ராஜபக்ச உட்பட அனைவரையும் காப்பாற்றினர்.
இலங்கையின் நவீன சிங்கள பெளத்த வரலாற்றில் இத்தனை லட்சம் தமிழர்களை
(இந்துக்களை) முள்ளிவாய்க்காலில் அழித்த மஹிந்த ராஜபக்சவே புதிய துட்டகாமினியென*
எத்தனையோ பிக்குகள் மீண்டும் மீண்டும் சொல்லிவருகின்றனர். பெளத்த சிங்களவர்களின்
கருத்துப்படியே மஹிந்த ராஜபக்ச துட்டகாமினி என்றால் ஈழத்தமிழர்களின் நவீன வரலாற்றில்
சோழநாட்டைச் சேர்ந்த எல்லாளமன்னன்* பிரபாகரன் அன்றி வேறு எவர். ஆக
பிரபாகரனையும் அவரது படைபலங்களையும் வெற்றிகொண்டு அவர் தேசத்து மக்களைக்
கொன்றுகுவிப்பதானது இந்துக்களான சோழ வம்சத்தை வீழ்த்துவதற்கு நிகரானது என தேரவாத
பெளத்தமனம் தனது வெற்றிவாத உரைகளில் சுட்டிக்காட்டுகிறது. ஆயின் இப்படியொரு
நேரடியான பச்சைப்படுகொலை முள்ளிவாய்க்காலில் நிகழும் போது இந்திய இறைமையாளர்கள்
அதற்கு எதிராக ஏன் அணிதிரளவில்லை? அவர்களை எது தடுத்தது?
இவ்வளவு வெளிப்படையாக உலகின் பல்வேறு ஆயுத சக்திகளை ஒன்று திரட்டி இந்து சமுத்திரத்தில்
கொல்லப்பட்ட லட்சோப லட்ச தமிழ் மக்களின் நீதிக்காக ஏன் அவர்கள் குரல்
எழுப்பவில்லை? சைவ சமயத்தின் நால்வர்களில் இருவரான சம்பந்தரும், சுந்தரரும் பாடிய
திருக்கேதீஸ்வரத்தையும், திருக்கோணேஸ்வரத்தையும் கொண்டிருக்கும் அந்த மண்ணில்
கோவிலை வழிபடும் உரிமைகூட இன்று தமிழர்களுக்கு இல்லாமல் போயிருப்பது குறித்து ஏன்
இங்குள்ள ஆதீனங்கள் கூட பேசுவதில்லை. இந்த மர்மமோ என்னை நெடுநாளாய்
தீண்டிக்கொண்டேயிருக்கிறது.
இன்றைய சூழலில் ஈழத்தமிழர்களுக்கு நிம்மதியான ஒரு வாழ்வு கிடைத்து விட்டதாக
ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. மஹிந்த
ராஜபக்ச நவீன துட்டகாமினியாக தேர்தலில் தோல்வியுற்று ரணில் – மைத்திரி அரசு
பதவிக்கு வருகையில் இலங்கைத்தீவெங்கும் சமாதானமும் அமைதியும் திரும்பியதாக
ப் பல உலகநாடுகளின்
தலைவர்கள் வாழ்த்தினார்கள். அதற்கு ஏற்ப புதிய அரசு தன்னைத்தானே  ‘நல்லிணக்க அரசு’ என அழைத்துக்கொண்டது.
தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவதில் தமக்கு எந்தத் தடையுமில்லையென
தேர்தல் பிரசார மேடைகளில் முழங்கிய ரணில் – மைத்திரி ஆகிய இருவரும் தேர்தல்
முடிவுகளுக்கு பின்னர் தமிழர்களுக்கு அரசியல் தீர்வா என அதிர்ச்சியடைந்தனர். ஒரு
புத்த பிக்கு மிக அண்மையில் பேசிய காணொளி ஒன்று வெளியானது. (தமிழர்கள்) நீங்கள்
இந்துக்கள்தானே, இந்தியாவிற்கே போங்கள் என்கிறார். கோவிலுக்குரிய காணிகளில்* விகாரைகளை
ஒருபுறம் பிக்குகள் எழுப்புகின்றனர். மறுபுறம் இந்து மயானங்களை அழித்து மசூதிகளை
எழுப்புகின்றனர் இலங்கை அரசின் கூட்டாளிகளான இஸ்லாமிய அரசியல்வாதிகள்.
மாபெரும் போரழிவுக்குப் பின்னர் வறுமையும் வாழ்வின் மீதான பிடிப்பின்மையும் உளவியல் சிதைவுகளும்
சனங்களின் மத்தியில் நிரம்பிக்கிடகின்றன. அப்படியானதொரு சூழலை
த் தமக்கு சாதகமாகப்
பயன்படுத்திக்கொள்ளும் ஏராளமான கிறிஸ்துவ சபைகள் மதமாற்ற நடவடிக்கைகளில்
ஈடுபடுகின்றன. போரினால் அதிகமாக பாதிக்கப்பட்ட கிராமங்களை இலக்குவைத்து நடக்கும்
இந்தச் செயற்பாட்டை அருவருக்க வேண்டியிருக்கிறது.
கிளிநொச்சியை ஒட்டிய கிராமமொன்றில் வாழும் எனது பள்ளித்தோழி, எறிகணை வீச்சில்
இரண்டு கால்களையும் இழந்தாள். அவளைச் சந்தித்த மதமாற்ற ஊழியர்கள் உரையாடிய விதத்தை
என்னோடு பகிர்ந்திருந்தாள். ஆண்டவர் ஒருவரே மீட்பர். அவரே எம்மை இந்த
பாதாளத்திலிருந்து ஒளிவீசும் மலைக்கு
க் கூட்டிச்செல்வார் என
பிரசங்கித்திருக்கிறார்கள். அவளோ அவர்களை
த் திட்டிப் பேசி
வீட்டிலிருந்து வெளியேற்றியிருக்கிறாள்.
யுத்த காலத்திற்குப் பின்னரான இந்தக்கால கட்டத்தில் தமிழர்கள் எதிர்கொண்டிருக்கும் இப்படியொரு
மும்முனைச்சிக்கலை கவனத்தில் கொள்ளவேண்டும். சைவக் கோவில்களை அழித்து விகாரைகளும்,
மசூதிகளும் எழும்பியாடும் இந்தப் பேரழிவையாவது தடுக்கவேண்டாமா? நாதியற்று நிற்கும்
ஈழத்தமிழர்களை நான் கூறும் இந்து வேரினால் கூட சொந்தம் கொண்டாட முடியாதா? ஈழத்தமிழர்
விடயத்தில் கடந்தகாலத்தின் காங்கிரஸ் இந்தியா கொண்டிருந்த நிலைப்பாட்டையா நிகழ்கால
பா.ஜ.க இந்தியா பேணப்போகிறது?
ஈழத்தமிழ் அறிவுப்புலத்திற்கும் – இந்திய அறிவுப்புலத்திற்குமான ஒரு விரிவான
உறவாடல் அரசியல் ரீதியாக உருவாகாமல் இருப்பது ஆபத்தானது. ஈழத்தமிழர்களையும்
அவர்களின் அரசியல் நிலைப்பாடுகளையும், உரிமைக்கான அபிலாஷைகளையும் இந்திய நிலவெளியெங்கும்
எடுத்தியம்ப வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இங்கு அதற்கான
சாத்தியங்கள் மிகச்சவாலாக இருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது
கட்டியெழுப்பபட்டிருக்கும் பொய்களும், புனைகதைகளும், அவதூறுகளும் ஏராளமானவை.
மேலும் இந்திய இறைமைக்கு எதிரானவரே பிரபாகரன் என்ற பொய்யான பிம்பமும்
உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு – இந்தியா எனும் உள்நாட்டு அரசியல்
வாக்குவாதங்களில் ஈழ அரசியல் பேசப்படுவதும் இதற்கு
க் காரணமாக
இருக்கிறது. பிரபாகரனின் அரசியல் நிலைப்பாடு இந்திய இறைமைக்கு எதிராக இருந்ததாக
வரலாற்றில் ஓரிடமும் இருந்ததில்லை. ராஜீவ்காந்தியின் அமைதிப்படை காலகட்டத்தில்
நடந்த இந்திய – புலிகள் மோதல் கூட அந்த நிலைப்பாட்டில் தோன்றியதில்லை என்பது
யாவரும் அறிந்தவொன்று. நான் மேற்கூறிய கருத்தினை உறுதிப்படுத்தும் வகையில் தமிழீழ
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின்
2008ம் ஆண்டு மாவீரர் தின உரையின் சிறிய பகுதியை கீழே இணைக்கிறேன்.
“எமது விடுதலை இயக்கமும் சரி, எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும்,
எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம்.
இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்து விடவே சித்தமாக
இருக்கிறோம். எமது நல்லெண்ணெத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக்
கட்டியெழுபுவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மை தடை செய்துள்ள நாடுகள், எமது
மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு எம்மீதான தடையை
நீக்கி எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டுமென அன்போடு
வேண்டிக்கொள்கிறேன்.
இன்று இந்தியத்தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு
அடங்கிக் கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கி ஒலிக்கின்றன.
எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து
வருகின்ற இந்தக் கால மாற்றத்திற்கு ஏற்ப இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது
உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறோம். அன்று இந்தியா
கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது
போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன.
இனவாத சிங்கள அரசு தனது கபடநாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய
இந்திய ஆட்சிப்பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்துவிட்டது. இந்தப்
பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன்
ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது. நாம்
எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய
அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது. எனினும் இந்தியாவை நாம் ஒருபோதும் பகை சக்தியாகக்
கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச்சக்தியாகவே எமது மக்கள் என்றும்
கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்
சினை விடயத்தில்
இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும்
எதிர்பார்க்கிறார்கள்
. ”
இந்த உரையின் கடைசிவரியில் கூறப்படுவதைப் போல இந்தியப் பேரரசு சாதகமான
முடிவுகளை எடுக்குமென எதிர்பார்த்த – எதிர்பார்க்கும் ஈழத்தின் மூன்றாவது
தலைமுறையாய் நானிருக்கிறேன். இப்போதும் இந்தியத் தேசம் ஈழத்தமிழர்களுக்கு சாதகமான
முடிவுகளை எடுக்காது போனால் இலங்கைத்தீவில் மிச்சமிருக்கும் தமிழர்களும் தமது
பண்பாட்டு அடையாளங்களோடு அழிக்கப்பட்டு விடுவார்கள்.
மேலும் தனது தென்முனையிலும் ஒரு பீஜிங்கை எதிர்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம்
இந்தியாவிற்கு இன்றே தோன்றியிருக்கிறது. இராணுவ ரீதியாக புலிகள் தோற்கடிக்கப்பட்ட
பின் சிங்களவர்களிடமிருந்து இலங்கைத்தீவை சீனா கைப்பற்றியது. இந்து சமுத்திரத்தின்
கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியமாக
க் காணப்படும்
திருகோணமலையை சீனா தனது வசமாக்கியுள்ளது. அம்பாந்தோட்டையில் பிரமாண்ட துறைமுகத்தை
அமைத்துள்ளது. இந்தியப்பெருங்கடலை தனது ஆளுகைக்குள் கொண்டுவர விரும்பும்
சீனப்பேரரசுவிற்கு ஆதரவான இலங்கை – பெளத்த சிங்கள ஆட்சியாளர்களை இந்தியா எவ்வாறு
நேச சக்தியாக கருதுகிறதோ?
இன்றைக்கு தென்னிலங்கையில் சீனாவின் நிதியுதவியினால் நிறுவப்பட்டிருக்கும்
தாமரைக்கோபுரம் வெறுமென உயரத்தில் மட்டுமே கவனம் கொள்ளப்படவேண்டியதில்லை. சீனாவின்
ஆதிக்கத்தையும் தனது இந்தியப் பெருங்கடல் கண்காணிப்பையும் அது வெளிப்படையாக
உணர்த்தி நிற்கிறது. பெளத்த அரசுகள் ஒன்றுபட்டு இந்தியப்பெருங்கடலின் அரசியலை
தென்னாசியாவில் நிர்மாணிக்க துடிக்கின்றன. இது உட்புறமாக மட்டுமல்ல
வெளிப்புறமாகவும் இந்தியாவிற்கான அச்சுறுத்தலாக அமைகிறது. மேலும் இந்தியாவின்
நேரடியான அரசியல் – இராணுவ எதிரியான பாகிஸ்தானோடு இலங்கைக்கு இருக்கும் நெருக்கம்
இந்திய – பாகிஸ்தான் யுத்தகால வரலாற்றிலேயே இருக்கிறது. இந்தியாவை
த் தாக்கவல்ல
பாகிஸ்தானிய போர்க்கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பில் நிறுத்திவைக்கப்பட்டதை
இந்தியர்கள் மறந்தாலும் இந்திய நவீன வரலாறு மறக்காது. எதிரிக்கு எதிரி நண்பன்
என்கிற வகையில் இந்தப் பிராந்தியத்தில் சீனா – பாகிஸ்தான் உறவு கூட இந்தியாவிற்கு
எதிரான புள்ளியில் வலுப்படுத்தப்படலாம்.
ஆனால் இலங்கைத்தீவிலுள்ள அனைத்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும்
தமிழர்களுக்குச் சொந்தமானது. அப்படியான முக்கியத்துவம் வாய்ந்தவர்களை அதிகாரமற்று
அல்லற்படும் நிலைக்கு காலம் இட்டுச்சென்று இருக்கிறது. புலிகளுக்கு எதிரான இறுதி
யுத்தத்தில் பங்கெடுப்பதற்கு இந்திய காங்கிரஸ் அரசுக்கு
த் தனிப்பட்ட
பகைமையிருந்ததைப் போலவே பாகிஸ்தானுக்கும் இருந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து
புலிகள் இயக்கத்தினரால் இஸ்லாமியர்கள் ஒரேநாளில் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை இலங்கை
அரசாங்கம் பாகிஸ்தானின் காதில் மிகவலுவாகச் சொன்னது. அதாவது தமிழீழ விடுதலைப்
புலிகள் இயக்கம் என்பது ஒரு இந்து
த் தீவிரவாத அமைப்பு, இந்திய நீட்சி கொண்டவர்கள். அவர்கள் முஸ்லிம்களுக்கு
எதிரானவர்கள், அவர்களை அழிக்கவேண்டுமென கொழும்பு மீண்டும் மீண்டும் ராஜதந்திர
வலியுறுத்தலை
ச் செய்தது. பாகிஸ்தானையும் இந்தியாவையும் ஒரே குடையின் கீழ் திரட்டி ஒரு
யுத்தவெற்றியைப் பெற்ற சிங்கள பெளத்த சாதுரியத்தை எண்ணிப்பார்ப்பது சிவனின்
அடியையும் முடியையும் காணத்துடிப்பது மாதிரியாகிவிடும்.
இந்த சம்பவங்களின் நீட்சியாகவே பாகிஸ்தானின் இன்றைய பிரதமர் தனது இரண்டு
உரைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளை இந்துத் தீவிரவாத இயக்கமென
அடையாளப்படுத்துகிறார். இம்ரான்கானின் இந்தக்கூற்றில் இருக்கக் கூடிய
அடையாளப்படுத்தல் எந்த நோக்கம் கொண்டது என்பனை நிதானித்து
க் கண்டடையவேண்டியுள்ளது.
உலகம் பூராக மனித உயிர்களை அச்சுறுத்திவருகிற இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதன்
பொருட்டும் ‘புலிகள் இந்து
த் தீவிரவாதிகள்’ என்று சொல்லி நீர்த்துப்போகச் செய்யமுடியாது. இந்த ஆண்டின்
ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரின் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு
த் தாக்குதலின் பிறகே
இம்ரான்கான் இவ்வாறு குறிப்பிடுவதை
த் தொடங்கியிருக்கிறார். புலிகளிற்குப் பிறகான ஒட்டுமொத்த
இலங்கைத்தீவின் அரசியலில் ஈழத்தமிழர்களும் இல்லை, இந்தியாவும் இல்லை என்பது
உறுதிசெய்யப்பட்டுவிட்டது. இலங்கையின் கிழக்கு மாகாணம் கிட்டத்தட்ட முஸ்லிம்
நாட்டைப் போன்று பச்சைநிறத்தினால் சூழப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் வைத்தே
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை அணுகவேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளை
அழிப்பதற்கு இலங்கை அரசினால் உருவாக்கப்பட்ட மறைமுக ஜிகாத்துக்கள் ஒரே நாளில்
இலங்கையை குண்டுகளால் கோரமாக உலுக்கினர். வீடு வீடாகத் தேடி ஆயுதக்கிடங்குகளை
கண்டுபிடித்தனர்.
இந்தச் சம்பவத்தை கூர்ந்து அவதானித்தால் இலங்கைத்தீவில் தமிழர்களின் கதி
என்னவென்று விளங்கும். ஒருபுறம் சீன – சிங்கள பவுத்த ஆதிக்கம். இன்னொரு புறம்
இஸ்லாமிய அடிப்படைவாத எழுச்சி – மறுபுறம் கிறிஸ்துவ மதமாற்ற நடவடிக்கைகள் என ஒரு
குழம்பிய சித்திரம் போல ஆகியிருக்கிறது.
 
(கொலம்ப மேதாலங்க தேரர்)
சென்ற மாதத்தின் இறுதி நாட்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிகழ்ந்திருக்கும்
ஒரு சம்பவம் இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியது. தமிழர்களின் பிரதேசமான
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ளது நீராவியடிப்பிள்ளையார் கோவில். அந்தக் கோவில்
வளாகத்திலேயே மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் புத்தவிகாரை கட்டப்பட்டது. ‘குருகந்த
புராண ரஜமகா’ என்
று அந்த விகாரைக்குப் பெயரிடப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பெளத்த பிக்குவான
கொலம்ப மேதாலங்க தேரர் புற்றுநோய் காரணமாக கொழும்பில் காலமானார். ஆனால் அவரின்
உடலை நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்திலேயே எரியூட்டப்படவேண்டுமென சிங்களப்
பவுத்த பெருந்தேசியவாத பிக்குகள் முல்லைத்தீவிற்கு
ப் படையெடுத்தனர்.
தமிழ்ச் சனங்கள் அதனை ஏற்க மறுத்தனர். நாம் வணங்கும் கோவில் வளாகத்தில் எப்படி
எரியூட்ட முடியுமென வாதாடினார்கள். நீதிமன்றம் எரியூட்டுவதற்கு வேறொரு இடத்தை
ப் பரிந்துரைத்து
தீர்ப்பு வழங்கியது. ஆனால் தேரவாத பெளத்தத்தின் மகாவம்சம் மனவுலகம் அதனை ஏற்க
மறுத்து, கோவிலை ஒட்டியுள்ள அதே சூழலில் அந்தப் பிக்குவின் உடலை எரியூட்டுகிறது.
நான் குறிப்பிடும் இந்தக் களேபரங்கள் இணையத்தில் காணொளியாகவே இருக்கிறது.
ஆனால் இதற்கு எந்தக் குரலையும் காட்டாது மழையில் நனைந்த கோழியைப் போல ஒதுங்கி நிற்கிறது
நல்லிணக்க அரசு. பிக்குகள் சனங்களை மிரட்டுகின்றனர். சனங்களை நோக்கி சிங்களத்தில்
வசைபாடுகின்றனர். ஆகம – பாஷவ – ரட்ட (ஒருமதம், ஓர் இனம், ஓர் அரசு) என்று
மிரட்டுகின்றனர். இந்துக்கள் வணங்கக்கூடிய எத்தனை ஆலயங்கள் இலங்கைத்தீவு எங்கும்
அழிக்கப்பட்டிருக்கிறது என இந்துத்துவர்கள் கணக்கெடுத்தால் இதன் கோரமுகம்
புரியும்.
இன்றைய இந்தியப் பேரரசு இப்படியான காரியங்கள் நடப்பதைத் தடுக்கவேண்டும். இந்த
அரசினால் முடியாது போனால் எந்த அரசினாலும் முடியாது என்பது எனது கருத்து. நாம்
கேட்பது நிம்மதியான வாழ்க்கையைத்தானே அன்றி வானின் நட்சத்திரங்களை அல்ல. நாம்
கேட்பது எங்கள் பூர்விக நிலத்தை – எங்கள் கடலை – எங்கள் காற்றை – எங்கள் கடவுளரை –
எங்கள் கோவிலை – எங்கள் புன்னகையை – எங்கள் அச்சமின்மையை – எங்கள் விடுதலையை!
இதன்பொருட்டு மேற்கூறியவற்றின் வந்தடைவாக ஈழத்தமிழர் விடயம் சார்ந்து இந்திய
அறிவுஜீவிகள் ஒரு சரியான புரிதலுக்கு வரவேண்டும். எழுமாத்திரமாக ஒரு பொழுதும்
ஈழத்தை அணுகாதிருப்பதும் ஒருவகையில் ஈழத்தமிழருக்கு செய்யும் உதவியாகவே நான்
பொருள் கொள்வேன். அறிவார்ந்த புத்திபூர்வமான சக்திகள் ஒன்றாக சேர்ந்து ஈழத்தமிழர்
பிரச்
சினையை இந்திய நிலவெளியெங்கும் அறிமுகப்படுத்தவேண்டும் என்பதே இந்தக்
கட்டுரையின் நோக்கம்.
*துட்டகாமினி- ஒரு சிங்கள மன்னன்.
 *எல்லாளன் – சைவத் தமிழ் மன்னன்

Posted on Leave a comment

காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக ராஜீவுக்கு ஜக்மோகனின் கடிதம் – தமிழில்: ஹரன் பிரசன்னா



முன்னாள் பிரதமர் ராஜீவுக்கு ஜக்மோஹன் எழுதிய கடிதம். ஜக்மோஹன்
ஜம்மு காஷ்மீரின் கவர்னராக இரண்டு முறை பதவி வகித்தவர். இந்தக் கடிம் ஜக்மோஹனால் ஏப்ரல்
20, 1990 அன்று ராஜீவுக்கு எழுதப்பட்டது. ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை இக்கடிதம் மிகத்
துல்லியமாக அன்றே வெளிப்படுத்தியது என்ற குறிப்புடன் ‘இந்திய எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை
இந்தக் கடிதத்தை வெளியிட்டிருக்கிறது. அதன் தமிழாக்கம் இங்கே.
காஷ்மீரில்
பாரத மாதாவைக் கைவிட்டீர்கள்!
அன்புள்ள ஸ்ரீ ராஜீவ் காந்தி,
April 21, 1990
இந்த திறந்த மடலை உங்களுக்கு எழுத வைத்துவிட்டீர்கள். கட்சி
அரசியலில் இருந்து தொடர்ந்து நான் விலகியே இருந்து வந்திருக்கிறேன். இருக்கும் கொஞ்சம்
திறமையையும் ஆற்றலையும், சில ஆக்கபூர்வமான வேலைகளைச் செய்ய பயன்படுத்தவே விரும்புகிறேன்.
சமீபத்தில் மாதா வைஷ்ணவோ தேவி கோவில் வளாகத்தை மேம்படுத்த உதவியது போல. இப்படிச் செய்து
நம் கலாசார மறுமலர்ச்சிக்கு உதவவில்லை என்றால், விரைவாக அழிந்துவரும் இதுபோன்ற அமைப்புகளைக்
காப்பாற்ற முடியாமலேயே போய்விடும். இந்த அமைப்புகளின் உன்னதமான நோக்கங்கள் (அவை சட்ட
அல்லது நீதி அமைப்புகளாக இருந்தாலும்) அதன் சாரத்தை இழந்துவிடும். நீதியின் ஆன்மாவும்
உண்மையும் இன்றைய அரசியல் சூழலால் இல்லாமல் ஆக்கப்பட்டுவிடும்.
நீங்களும் உங்கள் நண்பர் டாக்டர் ஃபரூக் அப்துல்லாவும் காஷ்மீர்
தொடர்பாகப் பொய்யான ஒரு சித்திரத்தை வரையப் பார்க்கிறீர்கள். உங்கள் கட்சியின் மூத்த
உறுப்பினர்கள் ஷிவ் ஷங்கர் மற்றும் என்.கே.பி.சால்வே போன்றவர்கள், வெளிப்படையாக உங்கள்
அறிவுறுத்தலின் பேரில், எனக்கெதிரான மனநிலையை உருவாக்க நாடாளுமன்றத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
துர்க்மன் கேட்டில் 14 வருடங்களுக்கு முன்பு நடந்த பழைய நிகழ்ச்சியைக் கையில் எடுக்கிறார்
ஷிவ் ஷங்கர். என்.கே.பி.சால்வே எனது பேட்டியை எடுத்துக்கொண்டு, எனக்கு எதிராக மதவாதக்
குற்றச்சாட்டுகளை வாரி இறைக்கிறார். அப்படி ஒரு பேட்டியை நான் தரவே இல்லை!
மணி சங்கர் ஐயரும் சில பத்திரிகைகளில் தன் விஷக் கருத்துகளைப்
பதிவு செய்கிறார். ஆனாலும், இந்தத் தொடர்ச்சியான மூர்க்கமான தவறான தகவல் அம்புகளுக்கு
பதில் அளிக்காமல் அமைதியாகவே இருந்தேன். ஒட்டுமொத்தமாகப் பொய்களைச் சொன்ன சில பத்திரிகைகளுக்கு
மட்டும் சரியான தகவல்களை எப்போதாவது எழுதினேன். எனது நோக்கம், இந்த நாட்டுக்கும் வரலாற்றுக்கும்
நான் செய்யவேண்டியதாக நம்பும் கல்வி மற்றும் வரலாற்று ரீதியிலான புத்தகத்தில் மட்டும்
இவற்றை எழுதினால் போதும் என்பதுதான்.
ஆனால், ராஜஸ்தான் தேர்தல் கூட்டங்களில் நீங்கள் பேசியவற்றின்
சில பகுதிகளை என் நண்பர்கள் காட்டினார்கள். இதுதான் எல்லை என்று அப்போதுதான் நினைத்தேன்.
உங்கள் திரிபுகளுக்கான நோக்கங்களைச் சொல்லாவிட்டால், நீங்கள் என்னைப் பற்றிய தவறான
எண்ணத்தை இந்தத் தேர்தல் பிரசாரத்தின்போது நாடு முழுக்கப் பரப்புவீர்கள் என்பதை உணர்ந்தேன்.
எச்சரிக்கை மணி
1988 தொடக்கம் முதலே, காஷ்மீரில் சூழத் துவங்கி இருக்கும் புயல்
பற்றிய ‘எச்சரிக்கை மணி’களை உங்களுக்கு அனுப்பத் துவங்கி விட்டேன் என்பதை நினைவுறுத்த
வேண்டுமா என்ன? ஆனால் உங்களுக்கும், உங்களைச் சுற்றி உள்ள அதிகார வர்க்கத்தினருக்கும்,
இந்த எச்சரிக்கையைப் பார்க்க நேரமோ ஆர்வமோ இதுகுறித்த தரிசனமோ இல்லை. இவற்றைப் பொருட்படுத்தாமல்
இருப்பது, உண்மையான வரலாற்றுப் பரிமாணத்துக்குத் தீங்கிழைப்பது என்று அவர்களுக்குத்
தெளிவாகத் தெரியும்.
உதாரணமாக சில எச்சரிக்கை மணிகளை இங்கே சொல்ல விரும்புகிறேன்.
ஆகஸ்ட் 1988ல், வெளிப்படையான மற்றும் மறைமுகமான சூழலை ஆய்வு செய்த பின்னர், இப்படித்
தொகுத்துச் சொல்லி இருந்தேன்: “குறுங்குழு மதவாக்காரர்களும், அடிப்படைவாதிகளும் அதிகம்
வேலை செய்கிறார்கள். நாசவேலைகள் அதிகரிக்கின்றன. எல்லை தாண்டி நடக்கும் விஷயங்களின்
நிழல்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. இன்னும் நிறைய நடக்கலாம்.”
ஏப்ரல் 1989ல் உடனடி நடவடிக்கை வேண்டி தீவிரமாகக் கெஞ்சினேன்.
நான் சொன்னேன்: “சூழல் மிக வேகமாக மோசமாகிக்கொண்டிருக்கிறது. இனி மீட்கவே முடியாது
என்னும் ஒரு புள்ளியைக் கிட்டத்தட்ட அடைந்துவிட்டது. கடந்த ஐந்து நாள்களாக, பெரிய அளவில்
தீவைத்தல், துப்பாக்கிச் சூடு, வேலை நிறுத்தம், உயிரிழப்பு என வன்முறை தலைவிரித்தாடுகிறது.
நிலைமை கை மீறிப் போய்விட்டது. ஐரிஷ் பிரச்சினையைப் பற்றிப் பேசும்போது பிரிட்டிஷ்
பிரதமர் டிஸ்ரேலி சொன்னார், ‘முதல்நாள் உருளைக் கிழங்கு, மறுநாள் போப்’ என்று. காஷ்மீரில்
இன்று இதே நிலைதான். நேற்று மக்பூல் பட், இன்று சத்தானின் வேதங்கள் (சாத்தானிக் வெர்சஸ்).
நாளை அடக்குமுறை நாளாக இருக்கும். பிறகு வேறொன்றாக இருக்கும். முதலமைச்சர் தனித்து
விடப்பட்ட தீவு போல் இருக்கிறார். ஏற்கெனவே அவர் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும்
செயலிழந்துவிட்டார். ஒருவேளை அரசியலமைப்பு ரீதியிலான சடங்குகள் செய்யவேண்டியது மட்டுமே
பாக்கியாக இருக்கலாம். அவர் மீது சேறு நிறைந்திருக்கிறது. அவரை ஆதரிப்பது ஆபத்தானது.
இவரது தனிப்பட்ட பிறழ்ச்சிகள்கூட இவரது பொது வாழ்க்கையை நாசப்படுத்தி இருக்கிறது. இந்தச்
சூழல், செயல்திறன் மிகுந்த தலையீட்டை எதிர்நோக்கி நிற்கிறது. இன்றே செயல்படுவது சரியானது.
நாளை என்பது தாமதம் என்றாகிவிடக்கூடும்.”
துணைவேந்தர்களின் பெருக்கம்
மே மாதத்தில் மீண்டும், வளர்ந்துகொண்டே போகும் என் தவிப்பை வெளிப்படுத்தி
இருந்தேன். “இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு துணைவேந்தரின் வெற்றியிலும்
அவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. அவர்களது பகைமை மத்திய அதிகாரிகளுக்கு எதிராகத்
திருப்பிவிடப்படுகிறது.” ஆனால் நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை. உங்களது செயலின்மை மர்மமாக
இருந்தது. இதற்கு இணையான இன்னொரு மர்மம், இரண்டாம் முறையாக நான் நியமிக்கப்பட்டபோதும்
இருந்தது. எப்படி நான் சட்டென மதவாதி ஆனேன்? முஸ்லிம் எதிரியானேன்? இன்னும் என்னதான்
இல்லை?
ஜூலை 1989ல் நான் ராஜினாமா செய்தபோது, ஒரு வெறுப்பும் இல்லை.
தென் டெல்லியின் நாடாளுமன்றத் தொகுதியில் நான் போட்டியிடவேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள்.
பெரும்பாலும் நம் நாட்டில் நிலவிய அரசியல் சூழல் குறித்த பொதுவான வெறுப்பு எனக்கு இருந்ததால்,
அந்த வாய்ப்பை நான் மறுத்தேன். ஜம்மு காஷ்மீர் கவர்னராக நான் இரண்டாவது முறையாகப் பதவி
ஏற்பதில் உங்களுக்கு கருத்து மாறுபாடு இருக்குமானால் நீங்கள் நேரடியான அணுகுமுறையின்
மூலம் என்னைப் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லி இருக்கலாம். கிட்டத்தட்ட இனி திரும்பவே
முடியாது என்னும் புள்ளியை அடையும் முன்பாக நான் ஒருமுறைக்கு இரண்டு முறை ஆலோசித்திருப்பேன்.
பொய்யான குற்றச்சாட்டுகளை என் மீது சொல்லவேண்டிய அவசியம் உங்களுக்கு வந்திருக்காது.
(நன்றி:
Indian Express)
ஒருவேளை நீங்கள் உண்மையையும் எப்போதும் ஒரேபோல் இருப்பதையும்
நல்ல குணங்களாகக் கருதாமல் இருந்திருக்கலாம். நம் தேசியச் சின்னத்தில் பொறிக்கப்பட்டிருக்கும்
சத்யமேவ ஜயதே என்னும் வார்த்தைகள் வெற்று வார்த்தைகள் என்று நினைத்திருக்கலாம். அந்த
வார்த்தைகள், நம் நாட்டை சரியான பாதையில் வழிநடத்தி நியாயமான வழிகளில் உண்மையான இந்தியாவை
உருவாக்க உதவும் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை அதிகாரம்
மட்டுமே உங்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம். அதிகாரம், எந்த வழியிலும் சரி, என்ன
விலை கொடுத்தாலும் சரி!
நான் இங்கே வருவதற்கு முன்பும் பின்பும் நிலவும்
சூழ்நிலைகளின் நிதர்சனத்தை, நீங்களும் உங்கள் நண்பர்களும் தவறான வழியில்
திரிக்கிறீர்கள். உண்மை என்னவென்றால், ஜனவரி 19, 1990ல் கவர்னர் ஆட்சி
அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, இங்கே ஒட்டுமொத்தமாக மனரீதியிலான ஒப்புதல்
இருந்தது. டிசம்பர் 8, 1989ல் டாக்டர் ருபையா சயீத்தின் கடத்தலுக்கு ஒரு நாள்
முன்பு கூட, இந்த மாநிலத்தை பயங்கரவாதக் கழுகு முழு மூர்க்கத்துடன் சுழன்றடித்தது.
11 மாதத்தில் 351 வெடிகுண்டு வெடிப்புகள் உட்பட 1600 வன்முறைச் செயல்கள் அரங்கேறின.
1990 ஜனவரி 1 முதல் ஜனவரி 19 வரை, இங்கே 319 வன்முறைச் செயல்கள், 21 தாக்குதல்கள்,
114 வெடிகுண்டு வெடிப்புகள், 112 தீ வைப்புகள், 72 கும்பல் வன்முறைகள் நிகழ்ந்தன.
நாசவேலைக்காரர்கள் இங்கே அதிகார அமைப்பை முற்றிலும்
கைப்பற்றியதைக் கவனிக்க ஒருவேளை நீங்கள் அக்கறை காட்டாமல் இருந்திருக்கலாம்.
உதாரணமாக, உளவுத்துறை தந்த துப்பை அடிப்படையாகக் கொண்டு ஷாபிர் அஹ்மது ஷா
செப்டம்பர் 1989ல் கைது செய்யப்பட்டபோது, ஸ்ரீநகர் உதவி கமிஷ்னர் அவரைக் காவலில்
வைக்கத் தேவையான வாரண்ட்டில் கையெழுத்திட மறுத்துவிட்டார். ஆனந்த்நாக் என்னும்
உதவி கமிஷ்னரும் இதே போன்றே நடந்துகொண்டார். அதோடு, மாநிலத்தின் வழக்கை நடத்த
அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. தனது பொறுப்பை அரசாங்கத்திடமும்
கூடுதல் அட்வகேட் ஜெனரலிடமும் தள்ளிவிட அவர் முயன்றார். அவர்களும் ஆஜராகவில்லை!
 
நவம்பர் 22 1989ல் நாடாளுமன்றத் தேர்தல் ஓட்டெடுப்பின்போது
என்ன நடந்தது என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? சில வாக்குச்சாவடிகளுக்கு முன்பு ‘வாக்களிப்பவருக்கு
இது தரப்படும்’ என்ற அறிவிப்புப் பலகையுடன் அதனருகில் தொலைக்காட்சிப் பெட்டிகள்
வைக்கப்பட்டிருந்தன. டாக்டர் ஃபரூக் அப்துல்லாவின் நிர்வாகத்தைச் சேர்ந்த எவரும்,
அதிகாரத்தை மீறிச் செயல்படும் இந்த அறிவிப்பை நீக்க எந்த ஒரு நடவடிக்கையையும்
எடுக்கவில்லை.
இணை அமைச்சராக இருந்த சேர்ந்த குலாம் ரசூல் கர்-ரின் சொந்த
ஊர் சோபோர் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அதேபோல், லெஜிஸ்லேடிவ்
கவுன்சிலின் சேர்மனான ஹபிபுல்லாவுக்கும், முன்னாள் நேஷனல் கான்ஃபரன்ஸ் எம்.பியும்
இணை அமைச்சருமான அப்துல் ஷா வகிலுக்கும் இதுதான் சொந்த ஊர். இருந்தாலும் சோபோர்
நகரத்தில் ஐந்து வாக்குகள் மட்டுமே பதிவாகின. அன்றைய காங்கிரஸ் (ஐ) அமைச்சர்
இஃப்திகார் ஹுசைன் அன்சாரியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லப்படும்
பட்டாணில் ஒரு வாக்கு கூடப் பதிவாகவில்லை. இதுதான் இந்த மாநிலத்தைச் சேர்ந்த
உங்கள் தலைவர்களின் ஈடுபாடும் நிலைப்பாடும். இருந்தும் நீங்கள் நினைக்கிறீர்கள்,
நாச வேலையையும் தீவிரவாதத்தையும் இத்தகைய அரசியலாலும் நிர்வாகத்தாலும் எதிர்கொள்ள
முடியும் என்று.
 
நம்பிக்கை இழந்த காவல்துறை 
அந்த சமயத்தில் காவல்துறை நம்பிக்கை இழந்தது. உளவுத்துறை
விரைவாக செயலற்றுப் போனது. டோபாக் (TOPAC) போன்ற நாசவேலைகள் குறித்த செய்திகளை
சேவை அமைப்புகளில் ஊடுருவி இருந்தவர்கள் கொண்டு வந்தபோது, டாக்டர் அப்துல்லா
வெளிநாடு போய்க்கொண்டிருந்தார். பயங்கரமான தீவிரவாதிகள் 70 பேரை விடுதலை
செய்துகொண்டிருந்தார். இவர்கள் பயங்கரமான ஆயுதங்களைப் பயன்படுத்த பயிற்சி
பெற்றவர்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாதிகளோடு தொடர்பில்
இருந்தவர்கள். பாகிஸ்தானுக்குச் செல்லவும் வரவும் உதவும் குறுக்கு வழிகளை
அறிந்தவர்கள். தலைமை நீதிபதியால் கண்காணிக்கப்படும் மூன்று நபர்கள் அடங்கிய
அறிவுறுத்தல் மன்றம் இவர்களைக் காவலில் வைக்க ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
 
அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் விடுதலை செய்ததால்,
நாசவேலை மற்றும் தீவிரவாத வலைப்பின்னலில் அவர்களால் முக்கியமான பதவிகளைப் பிடிக்க
முடிந்தது. இதனால் தீவிரவாதத்தின் சங்கிலித் தொடர் ஒன்று முழுமையானது. இவர்கள்
மீண்டும் பாகிஸ்தான் போய் அங்கிருந்து ஆயுதங்களைக் கொண்டு வந்து கொலைகளிலும்
ஆள்கடத்தல்களிலும் மற்ற தீவிரவாதச் செயல்களிலும் ஈடுபட்டார்கள்.
விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவனான, கேண்டர்பாலைச் சேர்ந்த மொஹமத் தௌத் கான், அல்
பகர் என்னும் ஒரு தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவனான். 2500 காஷ்மீர் இளைஞர்களை
அந்த அமைப்பில் பங்கெடுக்க வைப்பதில் முக்கியப் பங்காற்றினான். 70 தீவிரவாதிகளை விடுவித்து
அதனால் ஏற்பட்ட பயங்கரமான குற்றங்களுக்கு யாரைக் குற்றம் சொல்லவேண்டும்? ‘ஜக்மோகன்
காரணி (Factor) என்று நீங்கள் யாரிடம் சொல்கிறீர்களோ அவர்களே இக்கேள்விக்கு
பதிலளிக்கட்டும்.
 
கிடைக்கும் ஆதாரங்களை வைத்துப் பார்த்தால், ஜனவரி 19,
1990க்கு முன்பு அந்தத் தீவிரவாதி தலைவனாகிவிட்டான். பொதுமக்களின் மனதை
ஆக்கிரமிக்கும் அளவுக்கு, அவனுக்குத் தேவையான களம் அமைத்துக்
கொடுக்கப்பட்டுவிட்டது. ஒரு கடலில் மீன் போல அவனால் நீந்தமுடியும். அதற்குப் பின்
கடல் அவனைச் சூழ்ந்துகொள்வதால் என்ன ஆகிவிடும்?
 
காஷ்மீர் தொடர்பான உங்களது எல்லாக் கவனக்குறைவுப்
பாவங்களையும் நீங்கள் மறைக்கப் பார்க்கிறீர்கள். உங்களது சின்னத்தனமான
அரசியலுக்காக இதைச் செய்கிறீர்கள். மக்களைப் பிளவுபடுத்தி, அதனால் ஒரு வாக்கு
வங்கி உருவாக்குவதைத் தாண்டி இதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை. காஷ்மீர் முஸ்லிம்
இளைஞர்கள் உள்ளிட்ட மொத்த காஷ்மீர் மக்களும் நான் முதன்முறை ஏப்ரல் 26 1984 முதல்
ஜூலை 12 1989 வரை கவர்னாக இருந்தபோது என் மீது கொண்டிருந்த மரியாதையைக் குலைக்க
நீங்கள் சிறப்புக் கவனம் எடுத்துக்கொள்கிறீர்கள். எல்லா உண்மைகளையும் தாண்டி,
தாக்குப் பிடிக்க முடியாத ஆதாரங்களைக்கொண்ட உங்கள் தனிப்பட்ட பிரகடனங்கள் மூலம்
என்னை முஸ்லிம்களின் எதிரி என்று முத்திரை குத்தத் தொடங்கினீர்கள்.
 
இந்த நேரத்தில், ‘டெல்லி என்னும் சுவர்களுக்குட்பட்ட நகரம்:
ஷாஜஹானாபாத்தை உயிர்ப்பித்தல்’ (Rebuilding Shahjahanabad) என்ற என் புத்தகத்தில்
முன்வைத்த மூன்று முக்கியமான யோசனைகளை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர
விரும்புகிறேன்: ஒன்று, ஜாமா மசூதி மற்றும் ரெட் ஃபோர்ட்டுக்கு இடையே பசுமைப்
பகுதியை உருவாக்குவது தொடர்பானது. இரண்டாவது, நாடாளுமன்ற வளாகத்தையும் ஜாமா மசூதி
வளாகத்தையும் இணைக்கும் சாலையை உருவாக்குவது. மூன்றாவது, நகரின் கலாசாரத்தைப்
பறைசாற்றும் வகையில், பழம்பெரும் பண்பாட்டை புதுமையான வடிவத்தில் வெளிப்படுத்தும்
வகையில், மாதா சுந்தரி சாலை – மிண்ட்டோ சாலைக்கும் இடையே இரண்டாவது ஷாஜஹானாபாத்தை
உருவாக்குவது. இந்த யோசனைகளெல்லாம் முஸ்லிம் எதிரியான ஒருவனின் சிந்தனையில் வருமா
என்ன என்று உங்களைக் கேட்கிறேன்.
 
நாடாளுமன்றத்தை துஷ்பிரயோகம் செய்தல் 
காஷ்மீர முஸ்லிம்களிடையே எனக்கிருக்கும் பிம்பத்தைக்
குறைக்கும் வகையில் நீங்களும் உங்கள் நண்பர்களும் நாடாளுமன்றத்தை துஷ்பிரயோகம்
செய்கிறீர்கள். எம்.பியான என்.கே.பி. சால்வே மே 25 1990ல் ராஜ்ய சபாவில் செய்தவையே
இதற்கான ஆதாரம். பாம்பேவின் வாரப் பத்திரிகையான தி கரண்ட்டில் நான் கொடுத்ததாகச்
சொல்லப்படும் பேட்டியை (அப்படி ஒரு பேட்டியை நான் தரவே இல்லை) முன்வைத்து, சால்வே
கொஞ்சம்கூட நியாயமற்ற கருத்துகளைக் கூறினார்: “மதச்சார்புக்கு ஒரு வகையான மாதிரி
உண்டு. அதை உணரமுடியும். எனவே அவர் (கவர்னர்) தீவிரவாதிகளையும் குற்றவாளிகளையும்
நீக்கும் போர்வையில் ஒட்டுமொத்த சமூகத்தையும் நீக்குவதான மகிழ்ச்சியில்
இருக்கிறார். தற்போது கவர்னர் தனது தகாத கொடிய வெறுப்புச் செயலுக்கு அதிகப்படியான
வெட்கமற்ற செயல் ஒன்றையும் செய்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் உள்ள
ஒவ்வொருவரையும் போராளி என்று சொல்லி இருக்கிறார்.”
 
எனக்கு சால்வேவைத் தெரியும். அவர் செய்தது அவராகவே செய்தது
என்று நான் நினைக்கவில்லை. அவரது பின்னணிக்கும் பயிற்சிக்கும் தொடர்பற்ற ஒன்றை
அவர் சொல்ல வைக்கப்பட்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், எந்த
ஒருவரும், அதுவும் சால்வேவைப் போன்ற முக்கியமான ஜூரி, இப்படி ஒரு பேட்டி என்னால்
தரப்பட்டதா என்ற சிறிய விஷயத்தை முதலில் பார்த்திருக்கவேண்டும். ஒருவேளை பேட்டி
தரப்பட்டிருந்தால், என்னைக் குறிப்பவை உண்மையிலேயே என்னால் சொல்லப்பட்டதா என்றும்
பார்க்கவேண்டும். வெளிப்படையான அவசரம் இதிலேயே தெரிகிறது. இந்தப் பிரச்சினை மே 25
அன்று எழுப்பப்பட்டது. இந்த வாரப் பத்திரிகையின் தேதி மே 26-ஜூன் 2 1990 என்று
குறிப்பிடப்பட்டிருக்கிறது. உண்மையில் நான் கொடுக்காத இந்தப் பேட்டியை அடிப்படையாக
வைத்து நீங்கள் மே 25 அன்றே ஒரு கடிதத்தை அவசரமாக ஜனாதிபதிக்கு அனுப்பி
இருக்கிறீர்கள். மதவெறிக் கருத்துக்களைக் கொண்டிருக்கும் மனிதர் ஒருவரை கவர்னராக
வி.பி.சிங் நியமித்ததாக நீங்கள் விளக்கம் அளித்திருந்தீர்கள். இந்தக் கடிதம் மே 25
அன்று பரவலாக வெளிவரும்படியும் பார்த்துக்கொண்டீர்கள்.
 
மார்ச் 7 1990ல் நடைபெற்ற ஸ்ரீநகருக்கான அனைத்துக் கட்சிக்
கூட்டத்தின்போது, நான் 370வது பிரிவை 1986லேயே ரத்து செய்ய விரும்புவதாக நீங்கள்
சொன்னீர்கள். இந்த காலகட்டம் முக்கியமான காலகட்டம். தீவிரவாதத்துக்கு எதிராக நான்
போராடிய கடுமையான காலகட்டம். நாசவேலைகளின் தீய வெளிப்பாடுகளுக்குப் பின் ஜனவரி 26
1990ல் நிலைமை கொஞ்சம் முன்னேற ஆரம்பித்த காலகட்டம். நீங்கள் நினைத்தீர்கள்,
உண்மையை எனக்கெதிராகத் திரிக்க இதுதான் சரியான சமயம் என்று. உங்களது இந்தச் செயல்
பொறுப்பானதா பொறுப்பற்றதா என்பதை நாட்டு மக்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்.
1986 ஆகஸ்ட் – செப்டெம்பரில் நான் உண்மையிலேயே சொன்னது: ‘370வது
பிரிவு என்பது, சொர்க்கத்தின் இதயத்தில் ஒட்டுண்ணிகள் பெருக இடமளிக்கும் களம்
அன்றி வேறில்லை. இது ஏழைகளை ஒட்டிக்கொள்கிறது. அவர்களைக் கானல் நீர் போல
ஏமாற்றுகிறது. அதிகார வர்க்கத்தினருக்கு நியாயமற்ற முறையில் பணத்தைக் கொண்டு
வருகிறது. புதிய சுல்தான்களின் ஈகோவை விசிறிவிடுகிறது. சுருக்கத்தில், இது
நீதியற்ற ஒரு நிலத்தை உருவாக்குகிறது, ரத்தமும் முரண்பாடுகளும் நிறைந்த ஒரு
நிலத்தை உருவாக்குகிறது. வஞ்சகமும் போலித்தனமும் வாய்ப்பேச்சும் கொண்ட ஒரு அரசியலை
உருவாக்குகிறது.
 
நாசவேலைகளை இது பெருகச் செய்கிறது. இரண்டு நாடுகள் என்ற
ஆரோக்கியமற்ற கருத்தாக்கத்தை இது உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இந்தியா என்னும்
கருத்தாக்கத்தை இது மூச்சுமுட்டச் செய்கிறது. காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான
சமூக, கலாசாரப் பார்வையை இது மறைக்கிறது. தீவிரவாத நிலநடுக்கத்தின் மையப்புள்ளியாக
இது அமையக்கூடும். இதன் அதிர்வுகளால் ஏற்படும் எதிர்பார்க்கவே முடியாத விளைவுகளை
நம் நாடு முழுவதும் உணரக்கூடும்.
 
நான் சொல்லி இருந்தேன், ‘370வது பிரிவை நீக்குவது அல்லது
அமலாக்குவது பிரச்சினை தொடர்பான அடிப்படையான விஷயத்தை மறந்துவிட்டோம். அது, இது
தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான். இன்னும் வரும் காலங்களில், ஆளும் அரசின்
கைகளில் தவறாகப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாக இது மாறும். அதிகாரத்திலும்,
நீதித்துறையிலும் சில தனிப்பட்ட லாபங்களுக்கு இது பயன்படுத்தப்படும்.
அரசியல்வாதிகளைத் தாண்டி, செல்வந்தர்கள் செல்வத்தைக் குவிக்க வசதியான ஒன்றாக இதைப்
பார்க்கிறார்கள். இந்த மாநிலத்துக்கு ஆரோக்கியமான நிதிச் சட்டங்கள் வருவதை இவர்கள்
அனுமதிப்பதில்லை.
 
சொத்து வரி, நகர்ப்புற சில வரம்புச் சட்டம், கொடை வரி
மற்றும் பல நல்ல சட்டங்கள் இந்த மாநிலத்தில் 370வது பிரிவைக் காரணக் காட்டி
அனுமதிக்கப்படவில்லை. உண்மையில் 370வது பிரிவு தங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கிறது,
தங்களுக்கான நீதியை மறுக்கிறது, அதேபோல் பொருளாதார முன்னேற்றத்தில் தங்களுக்குக்
கிடைக்கவேண்டிய நியாயமான பங்கைத் தடை செய்கிறது என்பதைப் பொது மக்கள் உணராத
வகையில் தடுக்கப்பட்டிருக்கிறார்கள்.’
 
என் நிலைப்பாடு என்னவென்றால், 370வது பிரிவு என்னும் தடைச்
சுவரின் மூலம் காஷ்மீரத்து மக்கள் சுரண்டப்பட்டிருக்கிறார்கள். உண்மையான நிலை
அவர்களுக்குத் தெளிவாகச் சொல்லப்படவேண்டும். இது தொடர்பாக ஏகப்பட்ட யோசனைகளை நான்
தெரிவித்திருந்தேன். அதேபோல், சீர்திருத்தம் மற்றும் நிர்வாக மறு கட்டமைப்பு
தொடர்பாகவும் சொல்லி இருந்தேன். இவை கண்டுகொள்ளப்படவில்லை. மிகச் சிறந்த வாய்ப்பு
வீணடிக்கப்பட்டது.
 
தொடர்ச்சியாக நடந்த நிகழ்வுகள் என் கருத்தை வலுப்படுத்தி
இருக்கின்றன. அதாவது 370வது பிரிவும் அதன் உபரி விளைபொருளான ஜம்மு காஷ்மீருக்குத்
தனி அரசியலைமப்புச் சட்டம் என்பதும் போகவேண்டும். இது சட்டத்தாலும்
அரசியலைப்பாலும் செய்யப்பட முடியக்கூடியது என்பதற்காக மட்டும் சொல்லவில்லை. நம்
கடந்த கால வரலாற்றின் அடிப்படையிலான காரணங்களாலும், நிகழ்கால வாழ்க்கைக்குத் தேவை
என்பதாலும் இது போகவேண்டும் என்கிறேன். ஊழல் மேட்டுக்குடியினரின் தொடர்ச்சியான
வளர்ச்சிக்கு மட்டுமே இந்தப் பிரிவு உதவுகிறது. இது இளைஞர்களின் மனதில் தவறான
கருத்தைக் கொண்டு வருகிறது. மாநில ரீதியான பதற்றத்தையும் மோதல்களையும் இது
உருவாக்குக்கிறது. சுயாட்சி இருக்கிறது என்று நினைத்துக்கொண்டாலும், நிதர்சனத்தில்
அது சாத்தியமில்லை.
 
தனித்துவம் மிக்க கலாசாரம் கொண்ட காஷ்மீரை இந்தப் பிரிவு
இல்லாமலேயே பாதுகாக்கமுடியும். இந்த மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் வேறு மாநிலத்தைச்
சேர்ந்த ஒருவரை மணந்துகொண்டால் அவர்களது உரிமைகள் பறிபோகும் என்பது
பிற்போக்குத்தனமானது. 44 வருடங்களாக இந்த மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு அவர்களது
எளிய அடிப்படை உரிமையும் ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. இது
எல்லாவற்றுக்கும் மேலே, பரந்து விரிந்த இந்தியாவின் பன்முகத் தன்மையின் தேவையோடும்
நிதர்சனத்தோடும் இது பொருந்தி வரவில்லை.
 
இன்றைய இந்தியாவின் தேவை, இந்தியாவின் ஆன்மாவையும்
ஆசைகளையும் குலைத்து, வலிமையற்ற தலைமையால் ஒரு சிறிய ‘வாழைப்பழ குடியரசாக’
மாற்றப்படும் வெற்று இறையாண்மை அல்ல. மாறாக, நீதியின்பாலும் நியாயத்தின்பாலும்,
உண்மையையும் நேர்மையும் கருணையும் கொண்ட புதிய சமூக, அரசியல் மற்றும் கலாசார
இந்தியாவே தேவை. தூய்மையான தீவிரமான துடிப்பான உள்ளார்ந்த அமைப்புதான் வேண்டும்.
இதுவே உண்மையான சுதந்திரம், உண்மையான ஜனநாயகம், உண்மையான எழுச்சியை அனைவருக்கும்
தரும்.
 
நான் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். மற்ற
மாநிலங்கள் கூடுதல் சுயாட்சி அதிகாரத்தைக் கேட்கும்போது, அவர்கள் தனித்துப்
போகவேண்டும் என்ற பொருளில் அதைக் கேட்பதில்லை. அவர்கள் உண்மையிலேயே அதிகாரப்
பரவலாக்கலை விரும்புகிறார்கள். இதனால் நிர்வாகத்தையும் வளர்ச்சிப் பணிகளையும்
விரைவாக மேற்கொள்ள முடியும். இதனால் மக்கள் சேவையின் தரம் கூடும். காஷ்மீரில்
370வது பிரிவைத் தொடர்ந்து வைத்திருக்க எழும் கோரிக்கை, அதாவது 1953ல் இருந்து
நீர்த்துப் போகாமல் இருப்பதாகச் சொல்லப்படும் ‘அசலான தூய்மை’, வேறொரு நோக்கத்தில்
இருந்து உருவாகி இருக்கிறது. மைய நீரோட்டத்தில் இருந்து விலகி இருக்கும் ஒரு
தெளிவான தந்திரம் இது. தனி நாடு, தனிக் கொடி, முதலமைச்சருக்கு பதிலாக ஒரு பிரதமரை
வைத்துக்கொள்ள விரும்புவது, கவர்னருக்குப் பதிலாக சாத்ர்-இ-ரியாசாத்தை
வைத்துக்கொள்வது, கூடுதல் அதிகாரம் மற்றும் ஆதரவைப் பெறுவது போன்றவற்றுக்காகத்தானே
ஒழிய, மக்களுக்கான நன்மைக்காகவோ, அமைதி மற்றும் வளர்ச்சிக்காகவோ அல்லது
பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பதை அடைவதற்காகவோ அல்ல. நியோ எலைட்டுகள் என்று
அறியப்படும் ‘நியோ ஷேக்’குகளின் தேவைகளுக்காகத்தான்.
 
வாக்கு வங்கியின் காவலாளியாகவே தொடர விரும்புபவர்கள்
தொடர்ந்து சொல்வார்கள், 370வது பிரிவு என்பது நம்பிக்கையின்பாற்பட்டது என்று.
அதற்கு மேல் சொல்லமாட்டார்கள். அவர்களை அவர்களே இப்படிக் கேட்டுக்கொள்வதில்லை:
நம்பிக்கை என்றால் என்ன? அதன் காரணம் என்ன? இந்திய அரசியலைமைப்புக்குள் இந்த மாநிலத்தைக்
கொண்டு வந்து அதற்கு கூடுதல் ஒளியுள்ள, கூர்மையான நம்பிக்கையைத் தரவேண்டாமா?
இப்படித் தருவதன் மூலம் இதை கூடுதல் நீதியும் அர்த்தமும் கொண்டதாக்கவேண்டாமா?
 
இதே ரீதியில்தான், ‘வரலாற்றுத் தேவையும் சுயாட்சியும்’
இவர்களால் அணுகப்பட்டிருக்கின்றன. நடைமுறையில் இவற்றுக்கான பொருள் என்ன?
வரலாற்றுத் தேவை என்பது, காஷ்மீர் என்பது இந்தியாவின் பகுதி என்று, அதீதமாகச்
செலவு செய்து ஒரு கையால் ஒரு காகிதத்தில் எழுதித் தருவதும், நிதர்சனத்தில்,
இன்னொரு கையால் தங்கத் தட்டில் எழுதித் தருவதுமா? சுயாட்சி என்றால் என்ன? அல்லது 1953க்கு
முன் அல்லது 1953க்குப் பின் என்று சொல்லப்படும் நிலை உணர்த்துவதுதான் என்ன?
காஷ்மீரத்தின் தலைவர்கள் இப்படிச் சொல்ல இது வழிவகுக்காதா: ‘நீ அனுப்பு, நான்
செலவு செய்கிறேன். ஊழல் மிகுந்த, உணர்ச்சியற்ற, தன்னலம் மிகுந்த குழு ஒன்றை நான்
உருவாக்கினாலும், நிலைமை கட்டுக்கடங்காமல் மோசமாகி டாமோக்ளெஸ்ஸின் வாள் உன் தலை
மீது தொங்கினாலும், நீ இல்லை என்று சொல்லக்கூடாது.’
 
(அடுத்த இதழில்
முடிவடையும்)

Posted on Leave a comment

திருப்பங்களுடன் கூடிய ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு | லக்ஷ்மணப் பெருமாள்



ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரம் ஆகஸ்ட் 21, 2019 நள்ளிரவில் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதே வழக்கு சம்பந்தமாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பிப்ரவரி, 2018ல் கைது செய்யப்பட்டார். 23 நாட்களுக்குப் பிறகு ஜாமீனில் கார்த்தி சிதம்பரம் விடுவிக்கப்பட்டார். இந்தக் கைதின் பின்னணி என்ன என்பதைப் பார்க்கும் முன், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு என்றால் என்ன, இந்த வழக்கிற்கும் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவருக்குமான தொடர்பு என்ன என்று பார்த்தல் ஒரு திரைப்படத்திற்கான கதை கிடைக்கிறது. அந்த அளவிற்கு இந்த வழக்கில் பல்வேறு திருப்பங்களுடன் கூடிய அம்சங்கள் நடந்தேறி உள்ளன. 


ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு:

இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகிய இருவருக்கும் சொந்தமான நிறுவனம்தான் ஐ.என்.எக்ஸ் மீடியா. 2007ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தமது நிறுவனத்திற்கு அந்நிய முதலீடு தேவைப்படுவதாக, மார்ச் 2007ல், மத்திய நிதி அமைச்சகத்தை அணுகுகிறது. 14.98 லட்சம் ஈக்விட்டி ஷேர்ஸும், 31.22 லட்சம் கண்வெர்டிபில் நான்-குமுலேட்டிவ் ரீடீமபில் ப்ரிபிரேன்ஸ் ஷேர்ஸும் (convertible non-cumulative redeemable preference shares) தேவைப்படுவதாகவும், அதற்கு அனுமதி கேட்டு மத்திய நிதி அமைச்சகத்தை அணுகுகிறார்கள். ஒரு ஷேர் 10 ரூபாய் வீதம் விலை வைத்து, மூன்று அந்நிய முதலீட்டாளர்களால் இந்த பங்குகள் விலைக்கு வாங்கப்பட்டு, அவர்களும் முதலீட்டாளர்களாக இருப்பார்கள் என்றும், அதை அன்னிய நேரடி முதலீட்டின் மூலம் கொண்டு வரவும் அனுமதி கேட்கப்படுகிறது.

இந்தக் கோரிக்கை விடுக்கப்படும்போது மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். மத்திய நிதி அமைச்சகக் கட்டுப்பாட்டிலுள்ள ஃபாரின் இன்வெஸ்ட்மென்ட் ப்ரோமோசன் போர்ட் (Foreign Investment Promotion Board) மே 2017லேயே அனுமதிக்கிறது. 4.62 கோடி வரை நிதியை ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்குக் கொண்டு வர அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் கொண்டு வரப்படும் நிதியைத் தனது இன்னொரு நிறுவனமான ஐஎன்எக்ஸ் நியூஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் முதலீடு செய்ய கோரிக்கை வைக்கிறது. அதற்கு அனுமதி அளிக்க எப்ஐபிபி மறுத்துவிடுகிறது. அந்நிய நேரடி முதலீட்டில் 305 கோடி வரை ஐ.என்.எக்ஸ் மீடியா பணத்தைக் கொண்டு வந்து விடுகிறது. அனுமதிக்கப்பட்ட ஒரு ஷேரின் விலை 10 ரூபாய் என்பதற்குப் பதிலாக 80 மடங்கிற்கும் அதிகமாக 862 ஷேர்கள் மூலமாகவே 305 கோடி ரூபாய் முதலீடாகக் கொண்டு வந்துள்ளது. 

ஜனவரி 2008ல், ஐ.என்.எக்ஸ் மீடியா மொரிசியஸ் நாட்டிலுள்ள மூன்று நிறுவனங்கள் மூலம் முறைகேடாகக் கொண்டு வந்த முதலீட்டை மத்திய நிதி அமைச்சகத்தின் கீழுள்ள மத்தியப் புலனாய்வுத் துறை கண்டுபிடித்து விடுகிறது. அன்னிய முதலீடு தொடர்பான விவகாரம் என்பதால், மும்பை வரிவருவாய்த் துறை, இதை அமலாக்கத் துறையின் (Enforcement Directorate) கவனத்திற்குக் கொண்டு செல்கிறது. அதன்பிறகு இந்த வழக்கைக் கையில் எடுத்த அமலாக்கத்துறை 2010ம் ஆண்டு அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஐ.என்.எக்ஸ் மீடியா மீது வழக்கு தொடர்ந்தது. 

அமலாக்கத்துறை இதில் ஊழல் நடந்துள்ள வாய்ப்புகள் நிறைய உள்ளதாகவும், முக்கியப் புள்ளிகள் இதன் பின்னணியில் இருக்கக்கூடும் என்ற அடிப்படையில் சிபிஐ கவனத்திற்குக் கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் சிபிஐ மே 2017ல் ஐஎன்எக்ஸ் மீடியா மீது முதல் தகவல் அறிக்கையை (FIR) அளித்து வழக்கை முடுக்கி விடுகிறது. அவ்வாறானால் 2008 முதல் 2017 வரை என்ன நடந்தது என்கிற கேள்வி எழுகிறது. இந்தக் கால இடைவெளியில் நடந்த விஷயங்களைப் பார்க்கலாம்.

4.62 கோடிக்குப் பதிலாக 305 கோடி அளவிற்கான முதலீட்டை முறைகேடாகக் கொண்டு வந்த ஐஎன்எக்ஸ் மீடியா, இந்தப் பணத்தை ஐஎன்எக்ஸ் நியூஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தங்களது புதிய நிறுவனத்திற்கு மாற்ற பாரின் இன்வெஸ்ட்மென்ட் ப்ரோமோசன் போர்டிடம் அனுமதி கோருகிறது. ஆரம்பத்தில் இதற்கு அனுமதி அளிக்க மறுத்தது பாரின் இன்வெஸ்ட்மென்ட் ப்ரோமோசன் போர்ட் (FIPB). இங்கிருந்து தான் கதை ஆரம்பிக்கிறது. 

முறைகேடாகக் கொண்டுவரப்பட்ட முதலீட்டிற்கான அனுமதியை எப்படியாவது பெற்று விட வேண்டும் என்பதற்காக ஐஎன்எக்ஸ் மீடியா, செஸ் மானேஜ்மென்ட் செர்விசெஸ் பிரைவேட் லிமிடெட் (Chess Management Services Pvt Ltd) என்ற நிறுவனத்தை அணுகுகிறது. மத்திய நிதி அமைச்சகத்தை நட்பு ரீதியாக அணுகி இந்த விஷயத்தை முடித்துத் தர கோரிக்கை வைக்கிறது. ஐஎன்எக்ஸ் மீடியா செஸ் மானேஜ்மென்ட் செர்விசெஸ் பிரைவேட் லிமிடெட்டை அணுகக் காரணம், அதன் நிறுவனத் தலைவர் அப்போதைய நிதி அமைச்சரான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இதன் அடிப்படையில் சிபிஐ சில காரணங்களை அடுக்குகிறது.

கார்த்தி சிதம்பரம் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி, தமது தந்தையை சந்திக்க ஏற்பாடு செய்ததாகவும், நிதி அமைச்சரான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியாவிடம், புதிதாகப் பணத்தைக் கொண்டு வர அனுமதி கேட்டு விண்ணப்பிக்க அறிவுறுத்தியதாகவும், ஏற்கெனவே 305 கோடியை முறைகேடாகக் கொண்டு வந்ததன் மீது நடவடிக்கை எடுக்காமல் அதற்கு ப.சிதம்பரம் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அனுமதி அளித்தார் என்பதே சிபிஐ முன்வைக்கும் குற்றச்சாட்டு. 

சிபிஐயின் இந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில் இந்திராணி முகர்ஜி, ஜூலை 21, 2019 அன்று ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவராக மாறியதும், சிதம்பரத்தை அனுமதி கோரி சந்தித்ததாகவும் வாக்கு மூலம் அளித்தார். தமது வாக்குமூலத்தில், ப.சிதம்பரத்தின் அறிவுரையின் பேரில்தான் ஏ.எஸ்.சி.பி.எல் நிறுவனத்தை (Advantage Strategic Consulting Pvt. Ltd) அணுகியதாகவும், அந்த நிறுவனத்திற்கு 1 மில்லியன் டாலர்கள் (3.5 கோடி) அளவிற்குக் கொடுத்தால், எப்.ஐ.பி.பி மூலமாக முறைகேடாகக் கொண்டு வந்த 305கோடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்படும் என்று ப.சிதம்பரம் உறுதி அளித்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்திராணி முகர்ஜி அப்ரூவர் ஆவதற்கு முன்பு வரை, ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் கோரிக்கையை ஏற்று, கைது நடவடிக்கை எடுக்க விடாமல் தடை செய்து வந்த டெல்லி உயர்நீதி மன்றம், இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்திற்குப் பிறகு அவரைக் கைது செய்ய அனுமதி அளித்தது. முன்ஜாமீன் தேவைப்பட்டால் ப.சிதம்பரம் மூன்று நாட்களுக்குள் உச்சநீதி மன்றத்தை அணுகி ஜாமீன் பெற கோரிக்கை வைக்கலாம் என்றும் அறிவுறுத்தியது. டெல்லி உயர் நீதிமன்றம் ப.சிதம்பரத்தை இந்த வழக்கின் முக்கிய ஆணிவேர் என்று காரணம் காட்டிக் கைது செய்ய அனுமதித்தது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 21, 2019ல் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் அதன் பிறகு மூன்று முறை முன்ஜாமீன் கோரியும், உச்சநீதிமன்றம் மூன்று முறையும் நிராகரித்துள்ளது. இக்கட்டுரை எழுதப்படும் இந்நேரத்தில், ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 03, 2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ப.சிதம்பரம் ஏர்செல் மாக்சிஸ் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டு 20க்கும் மேற்பட்ட தடவை முன்ஜாமீன் கேட்டு, நீதிமன்றத்தின் மூலம் முன்ஜாமீன் பெற்றார் என்பதும் முக்கியமானது. அதிலும் குறிப்பாக மகன் கைதிற்குப் பின்னர் தாமாகவே, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தன்னைக் கைது செய்யக் கூடாது என முன்ஜாமீன் கோரினார். இதை விட விசித்திரமாக ஒன்று  நடந்தது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நீதிமன்றக் காவல்தான் கேட்பார்கள். ஆனால் ப.சிதம்பரம் தமக்கு நீதி மன்றக் காவல் கூடாது என்றும், சிபிஐ விசாரணை மட்டுமே வேண்டும் என்றும் கோர்ட்டில் கோரிக்கை வைத்தார். ஆனால் அந்தக் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு திகார் ஜெயிலில் நீதிமன்றக் காவலில் தற்போது உள்ளார்.

இந்த வழக்கில் அப்ரூவர் ஆகியுள்ள இந்திராணி முகர்ஜியும், பீட்டர் முகர்ஜியும், அவர்களது மகள் சோனா போராவைக் கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஎன்எக்ஸ் மீடியா மீது, பணத்தை முறைகேடாகக் கொண்டு வந்தது, ஐஎன்எக்ஸ் மீடியாவிலிருந்து ஐஎன்எக்ஸ் நியூஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு அனுமதி மறுத்தும் பணத்தைக் கொண்டு சென்றது போன்ற வழக்குகளும் உள்ளன. ப.சிதம்பரம் மீது, முறைகேடாக அனுமதி வழங்கியது, அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்ட விதி மீறலில் ஈடுபட்டது போன்ற வழக்குகள் உள்ளன. 

கார்த்தி சிதம்பரம் 10 லட்சம் ரூபாயை ஏஎஸ்சிபிஎல் மூலமாக லஞ்சமாகப் பெற்றார் என்பதே சிபிஐ முன்வைத்த குற்றச்சாட்டு. இதற்கு கார்த்தி சிதம்பரத்தின் பெயரில் பில்கள், இன்வாய்ஸ் உள்ளன என்று சிபிஐ நேரடியாகக் குற்றம் சாட்டியது. அதன் அடிப்படையில்தான் கார்த்தி சிதம்பரமும் கைது செய்யப்பட்டார். மேலும் இவ்வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் எஸ்.பாஸ்கர ராமனும் குற்றம் சுமத்தப்பட்டவர். அவர்தான் செஸ் மானேஜ்மெண்ட் செர்விசெஸ் நிறுவனத்திற்கு ஆடிட்டர் ஆவார். ஏஎஸ்சிபிஎல் நிறுவனத்திற்கு 3.5 கோடி அளவிற்கு ஐஎன்எக்ஸ் மீடியா பணம் செலுத்தி உள்ளது என்பதும் ஏஎஸ்சிபிஎல் நிறுவனம் கார்த்தி சிதம்பரத்தின் ஷெல் கம்பெனி என்பதே சிபிஐயின் வாதமாக உள்ளது.

யாருடையது இந்த ஏஎஸ்சிபிஎல் நிறுவனம்? அதற்கும் கார்த்தி சிதம்பரத்திற்கும் என்ன தொடர்பு? இந்த வழக்கைப் பொருத்தவரையில் அமலாக்கத் துறைக்கும் (ED) , தேசிய புலனாய்வுத் துறைக்கும் (CBI) உள்ள சவாலே ஏஎஸ்சிபிஎல் நிறுவனம் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் என்று நிருபிப்பதுதான். 

ஏஎஸ்சிபிஎல் நிறுவனத்தின் இயக்குநர்கள் ரவி விஸ்வநாதன் மற்றும் பத்மா பாஸ்கரராமன். எஸ்.பாஸ்கர ராமனின் மனைவிதான் பத்மா பாஸ்கர ராமன். பத்மா பாஸ்கர ராமனின் சகோதரர்தான் ரவி விஸ்வநாதன். எகானாமிக் டைம்ஸ் புலானய்வு செய்து வெளியிட்டுள்ள செய்தியில் இடம் பெற்றுள்ள விஷயங்களைத் தருகிறேன். “அமலாக்கத்துறையிடம், கார்த்தி சிதம்பரம் மற்றும் எஸ்.பாஸ்கர ராமனின் அறிவுரையின் பேரில்தான் இன்வாய்ஸ் மற்றும் அனைத்துப் பத்திரங்களிலும் கையெழுத்து வைத்ததாக ரவி விஸ்வநாதனும் பத்மா பாஸ்கர ராமனும் தெரிவித்துள்ளனர்” என்று கூறி உள்ளது.

மேலும் இன்னொரு செய்தியில், ஐஎன்எக்ஸ் மீடியாவின் உயர் அதிகாரிகள் அமலாக்கத்துறையிடம் 3.3 கோடி அளவிற்கு, கார்த்தி சிதம்பரத்தின் அறிவுரையில் பேரில் ASPCL, Geben Trading Limited (கார்த்தியின் நண்பர் நிறுவனம்) மற்றும் North Star Software Solutions Private Limited, Mumbai ஆகிய நிறுவனங்களின் மூலம் ஐஎன்எக்ஸ் மீடியாவிற்கு இன்வாய்ஸ் சமர்ப்பிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்

இந்த வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், எஸ் பாஸ்கர ராமன், பத்மா பாஸ்கர ராமன், ரவி விஸ்வநாதன் ஆகியோருக்கான தொடர்புகள் மற்றும் உறவு முறைகளை வைத்து சாமானியனாக நாம் இதில் தவறு நடந்துள்ளது என்று யூகிக்கலாம். தவறுகள் நடந்துள்ளன என்பதில் சந்தேகமில்லை என்றாலும், சட்டத்தின் முன்பாக ஏஎஸ்சிபில் நிறுவனம் கார்த்தியின் பினாமி (ஷெல் கம்பெனி) நிறுவனம் என்றோ அல்லது ஏஎஸ்பிஎல் மூலமாக பணம் ஏதேனும் வழியில் கார்த்தியின் நிறுவனத்திற்குக் கைமாறியது என்றோ நிருபிக்க வேண்டிய நிலையில் உள்ளது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை. ஏஎஸ்சிபிஎல் நிறுவனத்திற்கும் செஸ் மானேஜ்மெண்ட் நிறுவனத்திற்கும் இடையில் பணப்பரிவர்த்தனைகள் ஏதும் நடந்துள்ளதா என்பதை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது சிபிஐ. மேலும் ஐஎன்எக்ஸ் மீடியாவிடமிருந்து சேகரிக்கப்படும் ஆதாரங்கள் சிபிஐக்கும், அமலாக்கத் துறைக்கும் வலு சேர்க்கக்கூடியதாக உள்ளது. எளிதாகச் சொல்ல வேண்டுமானால் ஐஎன்எக்ஸ் மீடியாவிற்கும் ஏஎஸ்சிபிஎல் நிறுவனத்திற்கும் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என்பது உண்மை. ஆனால் அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதே கார்த்தியின் வாதமாக உள்ளது. இந்தப் புள்ளிகளை சிபிஐயும் அமலாக்கத்துரையும் இணைத்துவிட்டாலே போதும், கார்த்தி சிதம்பரம், ப.சிதம்பரம், பாஸ்கரராமன், எப்ஐபிபி அதிகாரிகள் முறைகேடாக அனுமதி வழங்கினார்கள் என்பது எளிதாக நிரூபிக்கப்பட்டுவிடும்.