Posted on Leave a comment

வலம் ஆகஸ்ட் 2019 இதழ் – முழுமையான படைப்புகள்

வலம் ஆகஸ்ட் 2019 படைப்புகள்

இந்துத்துவ முன்னோடி கஸலு லட்சுமிநரசு செட்டி | அரவிந்தன் நீலகண்டன்

பீஷ்ம நாரயண் சிங்கின் ஆலிங்கனம் | ஜெயராமன் ரகுநாதன்

அ.கா.பெருமாளின் ‘தமிழறிஞர்கள்’: அறியப்பட்ட ஆளுமைகளின்  அறியப்படா முகங்கள் | செ.ஜகந்நாதன்

ஹம்பி: விஜயநகரப் பேரரசின் சிற்பக் கலைமாட்சியைப் பறைசாற்றும் சிதைந்த நகரம் | அரவக்கோன்

சில பயணங்கள் சில பதிவுகள் (பகுதி – 21) | சுப்பு

இமயத்தின் விளிம்பில் – நிறைவுப் பகுதி (ஆதி கைலாஷ் யாத்திரை) | வித்யா சுப்ரமணியம்

மேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்

அந்தமானில் இருந்து சாவர்க்கரின் கடிதங்கள் (கடிதம் 3) | தமிழில்: VV பாலா

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) பகுதி 4 | லாலா லஜ்பத் ராய், தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்

மகாத்மா காந்தி கொலை வழக்கு: சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 4) – தமிழில்: ஜனனி ரமேஷ்

Posted on Leave a comment

மகாத்மா காந்தி கொலை வழக்கு: சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 4) – தமிழில்: ஜனனி ரமேஷ்



பகுதி 4
மூன்றாவதாக, அதே
காரணத்துக்காக பேட்ஜின் குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் அவரே பேசியதாவது: ‘அடுத்த
5 அல்லது 10 நிமிடங்களில் ஆப்தேவும், கோட்சேவும் கீழே இறங்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து
சாவர்க்கரும் உடனே இறங்கினார். கோட்சே மற்றும் ஆப்தேவிடம் சாவர்கர் கூறியதாவது: ‘வெற்றியுடன்
திரும்பி வாருங்கள்’. இந்த வாக்கியத்தை நான் சொன்னேன் என்றே வைத்துக் கொண்டாலும், அது
நிஜாம் ஒத்துழையாமை அல்லது அக்ரணி தினசரிக்கு நிதி திரட்டுதல் அல்லது இந்து ராஷ்ட்ர
பிரகாஷன் நிறுவனத்தின் பங்குகளை விற்றல் அல்லது வேறெந்த சட்டப்பூர்வ விஷயத்துக்கான
பொருள்களாகவும், பணிகளாகவும் இருக்கலாம். மாடியில் என்னுடன் ஆப்தேவும் கோட்சேவும் என்ன
பேசினார்கள் என்று பேட்ஜுக்குத் தெரியாத நிலையில் ‘வெற்றியுடன் திரும்பி வாருங்கள்’
என்று எது குறித்து நான் சொன்னேன் என்று அவரால் கட்டாயம் உறுதிப்படுத்த முடியாது.

நான்காவதாக என்
வீட்டை விட்டு வெளியேறி இன்னொருவர் வீட்டுக்கு வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது
நான் ஆப்தேவிடம் சொன்னதாக ஆப்தேவே பேட்ஜிடம் கூறிய ‘காந்திஜியின் நூறு ஆண்டுகள் முடிந்துவிட்டது’
என்பது வெறும் செவி வழிச் செய்தி மற்றும் எங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாததாகும்.
காரணம் அது நான் ஆப்தேவிடம் சொன்னதாகவும், அதை அவர் பேட்ஜிடம் சொன்னதாகவும் கூறப்படும்
வரியாகும். இந்த வாக்கியத்தை நான் ஆப்தேவிடம் சொன்னதை பேட்ஜ் நேரடியாகக் கேட்டிருக்க
முடியாது. நான் ஆப்தேவிடம் கூறியதாக பேட்ஜிடம் ஆப்தே பொய் கூட சொல்லியிருக்கலாம். நான்
ஆப்தேவிடம் சொன்னதாகக் கூறப்படுவதை நிரூபிக்கவோ உறுதிப்படுத்தவோ எந்த சாட்சியும் ஆதாரமும்
இல்லை.
எனவே, மக்களிடம்
எனக்கிருக்கும் தார்மிகச் செல்வாக்கைப் பயன்படுத்தித் தங்களது குற்றவியல் கூட்டுச்
சதியை வலுப்படுத்த, பேட்ஜ் பொய் சொன்னாலும் சரி அல்லது கோட்சேவும் ஆப்தேவும் பொய் சொன்னாலும்
சரி, எப்படியிருப்பினும், அந்தக் கூட்டுச் சதிக்கான குற்ற அறிவு அல்லது பங்கேற்புடன்
என்னைத் தொடர்புபடுத்தும் நேரடி மற்றும் பொருள் சான்று இல்லாத நிலையில் என்னைக் குற்றவாளியாக்க
முடியாது.
ஐந்தாவதாக, எல்லாவற்றுக்கும்
மேலாக, கோட்சேவும் ஆப்தேவும் இந்த வாக்கியங்களை பேட்ஜுடன் பேசவே இல்லை என ஆக்கப்பூர்வமாக
மறுத்துள்ளனர். 1948 ஜனவரி 17 அன்று நடைபெற்றதாக பேட்ஜ் கூறும் நிகழ்வை முழுமையாக ஆப்தேவும்
கோட்சேவும் மறுத்துள்ளனர். மேலும் அன்றைய தினம் பேட்ஜுடனோ மற்றவர்களுடனோ, சாவர்க்கர்
சதனுக்கு வண்டியில் பயணிக்கவும் இல்லை, சாவர்க்கரைச் சந்திக்கவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஆப்தே மற்றும் கோட்சே கூறியிருப்பது பேட்ஜ் கூறிய முழுக் கதைக்கு முற்றிலும் மாறாக
இருப்பதால் அது பேட்ஜ் சுமத்திய குற்றச்சாட்டின் அடிப்படையையே தகர்த்துவிட்டது.
ஆறாவதாக, சாவர்க்கர்
சதனுக்கு வருகை தந்தபோது ஆப்தே மற்றும் கோட்சேவுடன் இணைந்து ஓட்டுநர் கோஷியானுக்குச்
சொந்தமான டாக்ஸியை வாடகைக்கு எடுத்ததாக பேட்ஜ் கூறியுள்ளார். இந்த டாக்ஸி ஓட்டுநர்
கோஷியான் (பி.டபிள்யூ.80) தனது வாக்குமூலத்தில் (பக்கம் 391 & 392) ‘சிவாஜி பூங்காவில்
நான் டாக்ஸியுடன் காத்திருந்தேன். நான்கு பயணிகள் கீழே இறங்கினர். நான் பார்த்தவரை
எனக்கு வலப்பக்கமுள்ள சாலையின் மூலையிலுள்ள இரண்டாவது வீடு வரை சென்றனர். ஐந்து நிமிடங்களில்
அவர்கள் மீண்டும் டாக்ஸி இருந்த இடத்துக்கு வந்துவிட்டனர்’ எனப் பதிவு செய்துள்ளார்.
பேட்ஜின் கதையை உறுதிப்படுத்த இப்போது இந்த டாக்ஸி ஓட்டநர் அழைக்கப்பட்டிருந்தால்,
இந்நிகழ்வுடன் என்னைத் தொடர்புபடுத்தும் முயற்சியில் அவர் தோல்வி அடைந்துவிட்டார் என்றே
கருத வேண்டும். டாக்ஸி ஓட்டநருக்கு என் வீட்டைச் சரியாக அடையாளம் காட்ட முடியவில்லை;
அந்த வீட்டின் பெயர் கூடத் தெரியவில்லை; டாக்ஸியில் வந்த பயணிகள் வீட்டிலுள்ள யாரைச்
சந்திக்க விரும்பினார்கள் என்பது குறித்தும் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை; அது இரண்டாவது
வீடுதான் என்பதை உறுதியாகக் கூறாமல், மேம்போக்காகத், தெளிவின்றி ‘தொலைவில் நான் நின்று
கொண்டிருக்கும் இடத்திலிருந்து பார்க்கும் போது எனக்குப் வலப்பக்கமுள்ள சாலையின் மூலையிலுள்ள
இரண்டாவது வீடு’ என்றுதான் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் அவர்கள் வீடு வரை சென்றதை
மட்டுமே பார்த்ததாகக் கூறினாரே தவிர அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததைப் பார்த்தேன் என்று
சொல்லவில்லை.
எனவே அவரது சாட்சி,
பேட்ஜ் எனது வீட்டுக்கு வந்ததையும், ஏனைய விவரங்கள் குறித்த அவரது குற்றச்சாட்டையும்
நிரூபிக்கத் தவறிவிட்டது. பேட்ஜின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதற்கு மாறாகக் கோஷியானின்
சாட்சி அவருக்கு எதிராகவே அமைந்துவிட்டது. அவர்கள் ஐந்தே நிமிடங்களில் டாக்ஸிக்குத்
திரும்பி விட்டதாகக் கோஷியான் கூறியுள்ளார் (பக்கம் 392). மேலும் குறுக்கு விசாரணையின்போது
டாக்ஸி ஓட்டுநராக நேரத்தின் மீது கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே அவரது நேரத்தின் மீது நம்பிக்கை வைக்கலாம். பேட்ஜின் கதை உண்மையாக இருக்கும் பட்சத்தில்
20-25 நிமிடங்களுக்குள் அவர்களால் டாக்சிக்குத் திரும்பி இருக்கவே முடியாது.
கோஷியான் தொடர்கையில்
‘டாக்சியுடன் வீடு வரை வந்து நின்றுவிட்டதாகவும் அங்கிகிருந்து அறைக்குள் செல்வதற்குக்
குறைந்தபட்சம் பத்து நிமிடங்களாகவது ஆகும்’ என்றார். இதனைத் தொடர்ந்து பேட்ஜ் கூறுகையில்
‘கோட்சேவும், ஆப்தேவும், மாடிக்குச் சென்று ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குப் பிறகு
கீழே இறங்கி டாக்சிக்குத் திரும்பிவிட்டனர்’ என்றார். எனவே இருபது – இருபத்தைந்து நிமிடங்களுக்கு
முன்பாக அவர்களால் டாக்ஸிக்குத் திரும்பி இருக்கவே முடியாது. டாக்சி ஓட்டுநரின் சாட்சி
மற்றும் பேட்ஜ் கதை ஆகிய இரண்டுக்கும் இடையேயான வேறுபாடு பின்னவர் (பேட்ஜ்) சொல்வது
நம்பத் தகுந்ததாக இல்லை என்பதைத் தெளிவாக்குகிறது. எனவே இரண்டையுமே எனக்கு எதிரான சாட்சியாக
எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஏற்றுக் கொள்ளாமல் தள்ளுபடி செய்வதே நலம்.
பேட்ஜின் குற்றச்சாட்டை
சங்கர் மறுப்பதைப் பார்க்கவும் (இடதுபக்கம் 24-A குறிப்பைப் பார்க்கவும்).
ஏழாவதாக, இந்த நிகழ்வு
தொடர்பான பேட்ஜின் குற்றச்சாட்டைச் சங்கரும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. டாக்சியிலிருந்து
சங்கரும் இறங்கி அவர்களுடன் (பேட்ஜ், ஆப்தே, கோட்சே) சாவர்க்கர் சதனுக்குச் சென்றது
மற்றும் அவர்கள் மூவரும் வீட்டுக்குள் நுழைந்தபோது வெளியே காத்திருக்கச் சொன்னது ஆகியவை
குறித்த பேட்ஜின் குற்றச்சாட்டு தொடர்பாகச் சங்கரிடம் நீதிமன்றம் கேள்வி கேட்டபோது
‘சிவாஜி பூங்காவுக்கு அவர்களுடன் டாக்சியில் சென்றேன். அங்கே டாக்சி நின்றது. பேட்ஜ்,
ஆப்தே மற்றும் கோட்சே மூவரும் கீழே இறங்கி எங்கோ சென்றனர். நான் அவர்களுடன் செல்லாமல்
டாக்சியிலேயே தங்கிவிட்டேன். அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது எனக்குத் தெரியாது.
நான் சாவர்க்கர் சதன் என்ற பெயரைக் கூட கேள்விப்பட்டதில்லை’ என்று பதிலளித்துள்ளார்.
“காந்திஜியின் நூறாண்டுகள்
எண்ணப்பட்ட வருகின்றன….” என்று ஆப்தேவிடம் தத்யாராவ் சாவர்க்கர் சொன்னதாக, பேட்ஜிடம்
ஆப்தே கூறியது உண்மையா என்று நீதிமன்றம் கேட்ட இரண்டாவது கேள்விக்கு சங்கர் அளித்த
பதில் பின்வருமாறு: ‘அவர்களுக்குள் மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தனர்.
நான் டாக்சியின் முன் இருக்கையில் ஓட்டுநருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டிருந்ததாலும்,
மராத்தி மற்றும் ஆங்கில மொழிகள் தெரியாததாலும், அவர்கள் பேசியது காதுகளில் விழவும்
இல்லை, புரியவும் இல்லை.’
எனவே ஆப்தே, நாதுராம்
மற்றும் சங்கர் ஆகியோருடன் கோஷியான் ஓட்டுநருக்குச் சொந்தமான டாக்சியில் 1948 ஜனவரி
17ம் தேதி சாவ்ர்க்கர் சதனுக்குச் சென்றதாகப் பேட்ஜ் கூறும் குற்றச்சாட்டை எவருமே உறுதிப்படுத்தவில்லை
என்பதுடன், அனைவருமே முற்றிலுமாக மறுத்துள்ளனர்.
நன்றி:
ஃப்ரண்ட்லைன் – தி ஹிந்து
(13) பேட்ஜ் தனது
வாக்குமூலத்தில் (பக்கம் 220) ஆப்தேவுடனும், கோட்சேவுடனும் சேர்ந்து காந்திஜியையும்
மற்றவர்களையும் கொல்வதற்கு தில்லி செல்ல முடிவெடுத்ததற்கு முக்கியக் காரணம் கோட்சேவும்,
ஆப்தேவும், பல முறை தனக்குப் பண உதவி செய்துள்ளதாகக் கூறியுள்ளார்; மேலும் அவர்களுடன்
எப்போதும் இணைந்து செயல்படுவதாகவும், அவர்கள் சொன்னதுபோல் செய்ததாவும் பதிவு செய்துள்ளார்;
தத்யாராவ் சாவர்க்கர் இச்செயலைச் செய்து முடிக்கத் தனக்கு ஆணையிட்டதாக ஆப்தே கூறியதாக
அவர் புரிந்து கொண்டதால், அவரது உத்தரவைச் செய்து முடிக்க வேண்டியது தனது கடமை என்று
பேட்ஜ் நினைத்திருக்கலாம்.
இது குறித்து நான்
சமர்ப்பிப்பதாவது:
முதலாவதாக, இதுபோன்ற
குற்றப் பணியைச் செய்யுமாறு நான் ஆப்தேவிடம் சொன்னதற்கு எந்தத் தனிப்பட்ட ஆதாரமும்
இல்லை. இந்தப் பொய்யை ஆப்தே கண்டுபிடித்திருக்கலாம் அல்லது பேட்ஜ் பொய் சொல்லியிருக்கலாம்.
எப்படி இருப்பினும், நான் மேலும் பதிவு செய்துள்ள காரணங்களின் அடிப்படையில், இந்தக்
குற்றச்சாட்டு மூலம் பேட்ஜ் என்னைக் குற்றவாளியாக்க முடியாது.
இரண்டாவதாக, பேட்ஜ்
சொல்வதுபோல் 1948 ஜனவரி 15 சதித் திட்டத்தில் சேர்ந்துகொள்ள உண்மையிலேயே முடிவெடுத்திருந்தால்,
பிறகு பேட்ஜைப் போன்ற ஒருவர், அவரது சொந்த சாட்சியத்தின்படி, அவரது உயிருக்கோ, தனிப்பட்ட
பாதுகாப்புக்கோ, பொறுப்பற்றவராகவோ மூடனாகவோ இருப்பவராகத் தோன்றவில்லை. சாதாரண மனிதனுக்குள்ள
இயல்பான குணத்தின்படி ஆப்தேவுக்கு இதுபோன்ற செயலைச் செய்ய நான் ஆணையிட்டேனா என்று அப்போதே
என்னிடம் பேட்ஜ் நேரடியாகவே கேட்டிருக்கலாம். மேலும் பேட்ஜ், அவரே கூறியதுபோல், ஆப்தேவுடனும்
கோட்சேவுடனும் சாவர்க்கர் சதனுக்கு இரு நாள்கள் கழித்து, அதாவது 1948 ஜனவரி 17 அன்று
சென்றதாகவும், பேட்ஜ் காதுகளுக்குக் கேட்குமாறு ‘வெற்றிகரமாகத் திரும்பி வாருங்கள்’
என்று நான் அவர்களிடம் சொன்னதாகவும் கூறியுள்ளார். பேட்ஜ் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்
வகையில் இதுபோன்ற பயங்கரமான பணியைச் செய்து முடிக்க நான் உத்தரவிட்டேனா என்று ஆப்தே
மற்றும் கோட்சே முன்னிலையில் அப்போதே உடனுக்குடன் பேட்ஜ் என்னிடம் கேட்டுத் தெளிவு
பெற்றிருக்கலாம். ஆனால் பேட்ஜ் இதுபோல் எதையும் செய்யவில்லை.
மூன்றாவதாக, பேட்ஜ்
உயிருக்கே ஆபத்தாக முடியும் ஒரு பயங்கரமான பணியைச் செய்து முடிக்கத் தில்லிக்குப் புறப்பட்டுச்
செல்லுமாறு, நான் ஆணையிட்டதாகச் சொல்லப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு மீது அவருக்கு
உண்மையிலேயே ஏதேனும் ஆச்சரியமான மற்றும் பொறுப்பற்ற மரியாதை இருக்குமானால், காந்திஜியைத்
தாக்குவதாக அளித்த உறுதிமொழியை நிறைவேற்றாமல், சம்பவ இடத்திலிருந்து முன் கூட்டியே
ஓடியதும், தலைமறைவாக இருந்ததும், அவரே ஒப்புக் கொண்டதுபோல், ‘தன்னைக் காப்பாற்றிக்
கொள்வதைப் பற்றி மட்டுமே ஏன் எண்ணினார்?’
நான்காவதாக, பேட்ஜ்
ஒருவேளை தில்லிக்குச் சென்றிருந்தால், அது பண விஷயமாக இருந்திருக்கலாம் அல்லது தில்லி
மற்றும் பஞ்சாப்பிலுள்ள அகதிகளிடம் அவர் விற்பனை செய்து கொண்டிருந்த ‘பொருளுக்கு’ மிகப்
பெரிய தொகையை எதிர்பார்த்திருக்கலாம் அல்லது ‘ஆணை’ என்னும் ஆதாரமற்ற குற்றச்சாட்டைத்
தவிர வேறெந்தக் காரணமாகவும் இருந்திருக்கலாம்.
(14) பேட்ஜின் உள்நோக்கமும்
நடத்தையும்: மேலே காணப்படும் பேட்ஜ் சாட்சியத்தை விரிவாக ஆய்வு செய்தத்தில், என்னைப்
பொருத்தவரை, பெருமளவு ஜோடிக்கப்பட்டவை என்பதுடன், எனக்கு எதிராக எந்த மதிப்புமிக்க
ஆதாரமும் இல்லை என்பதும் நிரூபணம். எனக்கு எதிராகத் தவறான சாட்சி அளிக்க வேண்டும் என்னும்
பேட்ஜின் உள்நோக்கமும் தெளிவாகி உள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் எப்படியேனும் என்னை
இந்த வழக்கில் சிக்க வைக்க வேண்டும் என்று காவல்துறை தீவிரமாக முனைவதை பேட்ஜ் தெரிந்துகொண்டார்.
பொது வாழ்க்கையில் மதிப்போடும் கௌரவத்தோடும் வாழும் புகழ்பெற்ற மனிதரை இதுபோன்ற வழக்கில்
சிக்க வைத்தால் மட்டுமே நாடு முழுவதும் செய்தி பரபரப்பாவதுடன் சுய விளம்பரமும் கிடைக்கும்
என்றும், வேறு வழிகளில் கிடைக்காது என்றும், காவல்துறை நம்புவதை பேட்ஜ் உணர்ந்திருப்பார்.
எனவே கடுமையான குற்றச்சாட்டுகளின்
அடிப்படையில் குற்றவாளிக் கூண்டில், கவலை மற்றும் இக்கட்டான சூழலில் உழன்று கொண்டிருக்கும்
பேட்ஜ், எப்படியாவது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ‘அப்ரூவராக’ மாறுவதுதான் ஒரே வழி என்பதை
அறிந்து கொண்டிருக்கிறார்; எனக்கு எதிராகச் சாட்சியம் அளித்தால் மட்டுமே காவல்துறை
தன்னைத் தவிர்க்க முடியாத அப்ரூவராக ஏற்றுக் கொள்ளும் என்னும் உட்கிடையான நிபந்தனை
காரணமாக இம்முடிவுக்கு வந்துள்ளார். ஆகவேதான் இந்த நிபந்தனையை நிறைவு செய்து தன்னைக்
காப்பாற்றிக் கொண்டுள்ளார். பேட்ஜ் புத்திசாலித்தனத்துடன், நேர்மையற்ற குணமும் உடையவர்
என்பதற்கு நீதிமன்றத்தில் அவர் அளித்த சாட்சியங்களே ஆதாரம். அவரது வாக்குமூலத்தில்
சில தருணங்களில் தற்பெருமையாகவும், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அடுத்தவர் வாழ்க்கையைப்
பற்றிக் கவலைப்படாமல் பொய் சொன்னதாகவும், தகுதி இருப்பதுபோல் போலியாக நடித்ததாவும்,
அவரே ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பான அவரது சாட்சியத்தில் சில நிகழ்வுகள் பின்வருமாறு:
(a)  பேட்ஜ் கூறுகிறார்: ‘நான் உரிமம் இல்லாமலும், சட்டத்துக்குப்
புறம்பாகவும் வெடி மருந்துகளும், குண்டுகளும், விற்பனை செய்து கொண்டிருந்தேன் என்பது
உண்மைதான் (பேட்ஜ் வாக்குமூலம் பக்கம் 228)
(b) கராத்தின் வீட்டில்
வெடி மருந்துகள் அடங்கிய பையை மறைத்து வைத்ததற்குக் காரணம் அது என்னிடம் இருப்பது தெரியக்
கூடாது என்னும் முக்கிய நோக்கம் மற்றும் நான் கைது செய்யப்படுவேன் என்ற அச்சமுமே ஆகும்
(அதே பக்கம்).
(c) டாக்ஸியில்
இரு ரிவால்வர் துப்பாக்கிகள் அடங்கிய பையை டாக்ஸி ஓட்டுநருக்குத் தெரியாமல் வைத்ததன்
காரணம், தேடுதலின்போது ஒருவேளை அவை கண்டுபிடிக்கப்பட்டால், டாக்சி ஓட்டுநர்தான் மாட்டிக்கொண்டு
கைதாவார், நான் தப்பித்துக் கொள்வேன் (பக்கம் 240).
(d) பேட்ஜ் தனது
உண்மைப் பெயரை மறைந்து ‘பந்தோபந்த்’ என்னும் போலியான பெயரை வைத்துக்கொண்டார் (பக்கம்
215)
(e) பயணச் சீட்டு
வாங்காமல் பேட்ஜ் பயணித்ததுடன், டிக்கெட் கலெக்டர்களுக்கு லஞ்சமும் கொடுத்துள்ளார்
(பேட்ஜ் வாக்குமூலம் பக்கம் 237)
(f) பணத்துக்காகப்
பொய்யான தகவல்களைக் கூறியதாக அவரே வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். ‘எனக்கு அவசரமாகப்
பணம் தேவைப்பட்டது. தீக்ஷித் மகராஜ் என்னிடம் வாங்கிய ரிவால்வர் துப்பாக்கிக்காகக்
குறைந்தபட்சம் ரூ 350/-ஆவது கொடுக்க வேண்டும் என்று விரும்பினேன். எனவே அவரிடம் அந்த
ரிவால்வரை நான் பணம் கொடுத்துதான் வாங்கினேன் என்று பொய் சொன்னேன். உண்மையில் அது எனக்கு
வேறொரு பொருளுக்குப் பரிமாற்றாகத்தான் கிடைத்தது.’ (பக்கம் 236).
எனவே, மேலே குறிப்பிட்டதுபோல்
நேர்மையற்ற முறையில் வாக்குமூலம் அளித்த பேட்ஜ் போன்ற ஒரு அப்ரூவர் தன்னைக் காப்பாற்றிக்
கொள்ளவும், மன்னிப்புப் பெறவும், என் மீது கூட தவறான குற்றச்சாட்டுகளைக் கூறிச் சாட்சி
அளிக்கலாம்.
(15) பேட்ஜின் சாட்சியத்தில்
என்னை நேரடியாகத் தொடர்புபடுத்திய பகுதியை மட்டுமே நான் மேலே விவரித்துள்ளேன். காந்திஜி,
நேரு அல்லது ஸுஹ்ரவார்தி ஆகியோரைத் தீர்த்துக் கட்டக் கொடுமையான ஆணையை நான் ஆப்தேவுக்கு
வழங்கியதை நிரூபிப்பதற்கு எந்தவொரு தனிப்பட்ட சாட்சியும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தி
உள்ளேன். ஆகவே அரசு சாட்சியாக மாறியுள்ள அப்ரூவர் பேட்ஜ் சொன்ன கதை என்னைக் குற்றவாளியாக்க
முனைவதால் அதை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் பேட்ஜின்
சாட்சியத்தில் எனக்குத் தொடர்பில்லாத சில விஷயங்கள் விவரிக்கப்பட்டு, நீதிமன்றம் ஒருவேளை
சில தகவல்களுக்காக உறுதிப்படுத்தி இருந்தாலும் கூட, ஆதாரமற்ற சதிச் செயலுடன், எனது
தனிப்பட்ட தொடர்பு அல்லது பங்கேற்பை நீரூபிக்க இயலாத பட்சத்தில், அப்போதும் கூட அவற்றை
அப்ரூவரின் சாட்சியாக எனக்கு எதிராக உறுதிப்படுத்த முடியாது. இந்த விஷயத்தை இன்னும்
சிறப்பாகத் தெளிவுபடுத்தப் பிரிவு 133 கீழ் சர்கார் சாட்சிச் சட்டம் 7ஆவது பதிப்பிலிருந்து
ஒன்று அல்லது இரு பத்திகளை மேற்கோள் காட்டுகிறேன்:
“பொருள் விவரங்களுடன்
சாட்சியை உறுதிப்படுத்துவதுடன், குற்றம் சாட்டப்பட்ட நபரின் அடையாளத்தையும் உறுதிப்படுத்தும்
வகையில் விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். குற்றத்துக்கு உடந்தையாக இருப்பவரை மட்டும்
உறுதிப்படுத்தினால் போதாது, சாட்சியினால் பாதிக்கப்பட்ட அனைவரையும் உறுதிப்படுத்த வேண்டும்.
அவரது சாட்சி மூலம் சிறைக் கைதியாக ஒருவர் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், உறுதிப்படுத்தப்படாத
மற்றொருவர் மீதான அவரது சாட்சியை ஏற்றுக் கொள்வது நடுநிலை ஆகாது.” (பக்கம் 1253).
“குற்றத்துக்கு
உடந்தையாக இருப்பவர் தனிப்பட்ட சாட்சி மூலம் அவர் குற்றம் சுமத்தும் ஒவ்வொரு நபரின்
அடையாளத்தையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது வழக்கமான நடைமுறைச் சட்டமாகும்.
குற்றத்துக்கு உடந்தையாக இருப்பவர் குற்றத்தின் ஒவ்வொரு சூழலையும் அறிந்திருப்பார்
என்பதால், தனது நண்பரைக் காப்பாற்ற அல்லது பகைமையைச் திருப்திப்படுத்த (அல்லது தன்னைக்
காப்பாற்றிக் கொள்ள) குற்றத்துக்குத் தொடர்பே இல்லாத அப்பாவியைக் குற்றவாளிகளுள் ஒருவராக
அடையாளம் காட்டத் துணிவார்.” (பக்கம் 1254).
(16) பேட்ஜின் மூன்று
கடிதங்கள்
ப்ராக்ஸிக்யூஷன்
தரப்பு மூன்று கடிதங்களைச் சாட்சி / ஆவணம் பி87, பி88 மற்றும் பி89 சமர்ப்பித்துள்ளது.
முதல் இரண்டு கடிதங்கள் 1943ல் பேட்ஜ் எனக்கு அனுப்பியவை. உரிமம் தேவைப்படாத ஆயுதங்களை
விற்பதற்காக அவர் நடத்திய சஸ்திர பண்டாருக்காக நன்கொடை அனுப்புமாறு அவற்றில் கோரியிருந்தார்.
பேட்ஜ் தனது வாக்குமூலத்தில் திரும்பத் திரும்ப தன்னை இந்து மஹாசபா ஊழியர் என்றும்
1947ல் உரிமை தேவையில்லாத ஆயுதங்களை மட்டுமே விற்பனை செய்து வந்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்
(பி.டபிள்யூ 57, பக்கங்கள் 218, 229, 242). ஆயுதச் சட்டத்தை ரத்து செய்வதுடன், ஆயுத
விற்பனைக்கு உரிமம் வழங்குவது மற்றும் ராணுவப் பயிற்சியைப் பரவலாக்குவது ஆகியவற்றுக்கு
ஆதரவாக நான் வெளிப்படையாக ஓர் இயக்கம் நடத்தி வந்த காரணத்தால் இந்து மஹாசபா தலைவர்
என்ற முறையில் எண்ணற்ற கடிதங்களும், அறிக்கைகளும், நிதி உதவி கேட்டு எனக்கு வந்தன.
மூன்றாவது கடிதம்,
பேட்ஜ் நடத்திய படிக்கும் அறைக்கு இந்து சங்கதான் மற்றும் இந்து மதம் தொடர்பான சில
புத்தகங்களை இலவசமாக அனுப்பியதற்காக எனது செயலாளர் திரு வி ஜி தாம்லேவுக்கு நன்றி தெரிவித்து
அவர் அனுப்பிய ரசீதாகும். இந்த ரசீதில் துக்காராம் பாடல்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனது அலுவலகம் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள இந்து இயக்கம் தொடர்பான
புத்தகங்களை இந்தியா முழுவதுமுள்ள நூலகங்களுக்கும், படிக்கும் அறைகளுக்கும் இலவசமாகவே
அனுப்பி வைப்பது வழக்கமாகும். தற்போது ப்ராக்ஸிக்யூஷன் வசமுள்ள எனது அலுவலகக் கோப்புகளில்
இதுபோல் ஏராளமான ரசீதுகள் உள்ளன. எனவே இதன் மூலம் நான் பணிவுடன் தெரிவிப்பது என்னவெனில்,
இந்த ஆவணங்களுக்கும், இப்போதைய வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதுடன் இவற்றில்
குற்றம் சுமத்தும் அளவுக்கு எதுவுமில்லை என்பதுமே ஆகும்.

Posted on Leave a comment

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) பகுதி 4 | லாலா லஜ்பத் ராய், தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்



குறுகிய இனவாதம்
சுதந்திரத்தைப் பெறுவதிலிருந்து நம்மைத் தடை செய்கிறது

பகுதி 
சென்ற கட்டுரையில் செய்யப்பட்ட அவதானிப்புகள் பல அறிவுசார்ந்த
கேள்விகளை எழுப்புகின்றன. இந்தப் பிரச்சினையின் அரசியல் மற்றும் பொருளாதார அம்சங்களுக்கு
வருவதற்கு முன்பு அவற்றை விரிவாக விவாதிப்பது அவசியமாகும். ஹிந்து மற்றும் இஸ்லாமிய
மதங்களும் கலாசாரங்களும் தங்களைப் பின்பற்றுபவர்களை இயற்கையாகவே ஒருவருக்கொருவர் விரோதப்
போக்குடையவர்களாக மாற்றும் அளவிற்கு அடிப்படையாக வேறுபட்டதா? அல்லது இன்னும் குறிப்பாக,
ஒன்றுக்கொன்று விரோதமானதாக இருக்கிறதா? அப்படியானால், இரண்டிற்கும் இடையில் ஒரு ஒற்றுமையை
ஏற்படுத்த நமக்கு என்ன மாதிரியான வாய்ப்புகள் உள்ளன? ஹிந்து மதம் கறாராக வரையறுக்கப்பட்ட
ஒன்று அல்ல. அப்படி அதை வரையறுப்பதும் கிட்டத்தட்ட சாத்தியமற்றது. அது ஒரு வாழ்க்கை
முறை. அதில் சாதி ஒரு முக்கிய அங்கம். சாதி இருக்கும் வரை, மற்ற மத சமூகங்களுடன் எளிதான,
சாத்தியமான ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு அதை சகிப்புத்தன்மையுடையதாகவோ முற்போக்கானதாகவோ
மாற்ற இயலாது.
இருப்பினும், ஒரு கடுமையான சாதி அமைப்பு மற்றும் சமூக ஒழுக்க
நெறிமுறைகள் இருந்தபோதிலும், உலகின் அனைத்து பெரிய மதங்களிலும் ஹிந்து மதம் மிகவும்
சகிப்புத்தன்மை கொண்டது என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. ஹிந்து மதம் மற்ற மதங்களைச்
சேர்ந்த மக்களின் நம்பிக்கைகள் அல்லது விஸ்வாசத்தைக் கேலி செய்வதோ, இகழ்வதோ இல்லை:
பிற மதத்தினர் தங்கள் சொந்த நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்வதற்கும் அதன்மூலம் ஆன்மிக
திருப்தியைப் பெறுவதற்கும் உள்ள உரிமையை இது கேள்விக்குட்படுத்தாது. இரட்சிப்பின் ஒரே
ராஜபாட்டை என்று அது பிரத்தியேக உரிமை கோரவில்லை. மற்றவர்களை நரகத்திலிருந்தோ அல்லது
அழிவுகளிலிருந்தோ காப்பாற்றுவதாகச் சொல்லி அவர்களை மதம் மாற்ற அது முனைவதில்லை. சொல்லப்போனால்,
வெவ்வேறு நபர்களுக்கு, உடல், மன மற்றும் ஆன்மிக வளர்ச்சிகளின் வெவ்வேறு கட்டங்களில்,
கடவுளை அணுகுவதற்கும் ஆத்மதிருப்தியையும் மோட்சத்தையும் பெறுவதற்கும் வெவ்வேறு வழிகள்
உள்ளன என்பதை இது வெளிப்படையாகக் கூறுகிறது. அதைப் பின்பற்றுபவர்களுக்கு, அவர்கள் விரும்புவதை
நம்புவதற்கும், அவர்கள் விரும்பியபடி வழிபடுவதற்கும் முழு சுதந்திரத்தை ஹிந்து மதம்
அனுமதிக்கிறது.
அதன் கடுமையான சமூகக் குறியீடும் சாதி அமைப்பும் கூட இப்போது
தளர்ந்து கொண்டு வருகின்றன. முன்பெல்லாம் ஹிந்து சமூகம் அதன் உறுப்பினர்களை மிகச்சாதாரணமான
காரணங்களுக்காக, அடிப்படையற்ற குற்றங்களைச் சாட்டி அதிலிருந்து வெளியேற, அதாவது சாதிப்பிரஷ்டம்
செய்துவந்
துள்ளது. தற்போதைய
காலகட்டத்தில் அதன் சமூகக் கோட்பாடுகளைப் புறக்கணிக்கும் உறுப்பினர்களுடன் எல்லாவிதமான
சமரசங்களையும் செய்து கொள்ளத் தயாரானதோடு, அவர்களைத் தன் சமூகத்திலேயே வைத்திருக்க
மெனக்கெடுகிறது. ஒருகாலத்தில் உயர்சாதிக் குடும்பங்கள், பணக்காரர்கள், செல்வாக்கு மிக்கவர்கள்,
பண்பட்டவர்கள் ஆகியோர் கூட ஹிந்து சமூகத்திலிருந்து அடிப்படையில்லாத காரணங்களுக்காக,
சந்தேகத்தின் பெயரிலும் மதவெறியின் பெயரிலும் சாதிப்பிரஷ்டம் செய்யப்பட்டனர். இப்போது
மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் கூட பொறுத்துக்கொள்ளப்படுகிறார்கள், மன்னிக்கப்படுகிறார்கள்,
கௌரவிக்கப்படுகிறார்கள். ஹிந்து சமுதாயத்தில் ஏராளமான ஆண்களும் பெண்களும் உள்ளனர்.
அதில் கௌரவமான, மரியாதைக்குரிய உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் அதன் சமூகக் கோட்பாடுகளின்
மிக முக்கியமான நியதிகளை வெளிப்படையாக மறுத்து, மீறுகின்றனர். சாதிக்கு வெளியே திருமணம்
செய்து கொண்டவர்கள், வெளிநாட்டவர்களைத் திருமணம் செய்தவர்கள், தடைசெய்யப்பட்ட உணவை
உண்டு அதை மறைக்காத ஆண்கள், தடைசெய்யப்பட்ட மதுபானங்களை எடுத்துக்கொள்பவர்கள், வேதங்களைக்
கேலி செய்யும் நாத்திகர்கள் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.. இவர்களில் ஹிந்து சமுதாயத்தின்
குறிப்பிடத்தக்க தலைவர்கள் சிலர் இருப்பதைக் காண்கிறோம்.
இந்த விசித்திரமான மாற்றத்தை நாம் எவ்வாறு விளக்க முடியும்?
இதற்கான காரணம் என்ன? இது எதைக் குறிக்கிறது? என்னைப் பொருத்தவரை, இந்த மாற்றம் உயர்நிலை
ஹிந்துமதம் என்பது அதன் வடிவங்களுக்கும் சம்பிரதாயங்களுக்கும் மேலானது என்று அதன் சமூகம்
மற்றும் உறுப்பினர்கள் உணர்ந்ததால் ஏற்பட்டிருக்கிறது. அது மனம், உணர்வு சார்ந்த கலாசாரம்.
குறிப்பிட்ட நியதிகளின் அடிப்படையில் உண்பது, குடிப்பது, ஏன் மணம்புரிவது ஆகியவற்றைச்
சார்ந்ததல்ல. இந்த உணர்தல்தான், படிவங்களுக்கும் சூத்திரங்களுக்கும் மேலாக உயர்ந்துள்ள
ஆண்களையும் பெண்களையும் ஹிந்து மதத்தைப் பற்றி இன்னும் பெருமிதம் கொள்ள வைக்கிறது,
தங்கள் குழந்தைகள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் நலனுக்காக அதன் உறுதிப்படுத்தப்பட்ட
தொடர்பைப் பற்றிக் கவலை கொள்ள வைக்கிறது. இந்த உணர்தல்தான் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள்,
வெளிநாட்டுப் பெண்களின் கணவர்கள், வேதங்களைக் கேலி செய்பவர்கள், சுருக்கமாக, வழக்கத்திற்கு
மாறான மற்றும் வெளிப்புறமாக இந்து அல்லாத மக்களைப் போன்று தோன்றுபவர்கள் பழமைவாதிகளோடு
தோளோடு தோள் சேர்ந்து ஹிந்து மதத்தின் உரிமைக்காக, அதன் கோவில்கள், தலங்கள், விழாக்கள்,
நடைமுறைகள், ஆகியவற்றைக் காப்பதற்காக முன்னிற்பதை விளக்குகிறது. ஹிந்து மதத்தின் மீது
ஹிந்து அல்லாத மத போதகர்கள், பிரசாரம் செய்வோர் ஆகியோர் செய்யும் கண்டனங்களை அவர்கள்
கடுமையாக எதிர்க்கவும் இதுவே காரணமாக அமைகிறது.
ஆனால் இந்த நிகழ்வை விளக்கும் மற்றொரு காரணமும் உள்ளது. ஒருவரது
பொருளாதார மற்றும் அரசியல் வாய்ப்புகள் அவர் சார்ந்த சமூகத்தில் உள்ளோருடைய வாய்ப்புகளுடன்
பிணைக்கப்பட்டுள்ளன. இவர்களில் பலர் ஹிந்துக்களின் பெரும் பகுதியிலிருந்து தங்களைத்
தாங்களே பிரித்துக் கொண்டார்கள். அவர்களில் சிலர் தாங்கள் ஹிந்துக்கள் அல்ல என்று பெருமிதத்துடன்
வெளிப்படையாகக் கூறினர். வகுப்புவாத அமைப்பிற்கு அரசாங்கம் அளித்த அங்கீகாரம் இந்த
நிலைமையை மாற்றியது. ஹிந்துக்கள் என்று சொன்னாலொழிய தங்களுக்கு எந்த அந்தஸ்தும் இல்லை,
அவர்கள் இஸ்லாத்தைத் தேர்வுசெய்தாலன்றி அவர்களின் குழந்தைகளுக்கும் உரிமை இருக்காது
என்பதை அவர்கள் கண்டறிந்தனர். இந்நிலைக்கு அவர்கள் தயாராக இல்லை. எனவே, அவர்கள் தங்களை
ஹிந்துக்கள் என்று அறிவித்து, முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்படாத பொதுத் தொகுதிகளிலிருந்து
தேர்தல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அதற்காக ஹிந்து உரிமைகளின் காவலர்கள் என்றும்
தங்களைக் கூறிக்கொள்ள வேண்டியிருந்தது.
ஹிந்து மதத்தைப் போலல்லாமல், இஸ்லாம் என்பது கோட்பாடுகள்
மற்றும் கட்டளைகள் சார்ந்த நம்பிக்கை. ஒவ்வொரு முஸல்மானும் ஒரு நொடி தவறாமல் கடவுளை
நம்புவது மட்டுமல்லாமல் (லா அல்லாஹ் இல் அல்லாஹ்), முஹம்மது அவருடைய தூதர் என்றும்,
குர்ஆன் அவருடைய வார்த்தை என்றும் நம்ப வேண்டும். பழமைவாதிகளின் கூற்றுப்படி, முஹம்மது
தூதர்களில் கடைசியானவர் என்றும் அவர் சொன்னதும் செய்ததும் அவருடைய உண்மையுள்ள சீடர்கள்
அனைவரையும் பிணைக்கிறது என்பதையும் அவர் நம்ப வேண்டும். இஸ்லாத்தை ஒரு வகையான உயர்
அமானுஷ்ய நிலைக்கு உயர்த்த முயன்றவர்கள் இருந்தனர், ஆனால் அவர்களின் முயற்சிகள் கணிசமான
வெற்றியை எட்டவில்லை. இஸ்லாம் அதன் அடிப்படை நோக்கங்களையும் காரணங்களையும் கொண்டு,
அதைப் பின்பற்றும் பெரும்பான்மையானவர்களுடன் கடந்த பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது.
இஸ்லாத்தின் ஆகப்பெரிய பிரச்சினை அது தன் கோட்பாடுகளைக் கடுமையாக வலியுறுத்துவதுதான்
என்ற என்னுடைய கருத்தை என் இஸ்லாமிய நண்பர்கள் மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன். அதன்
அரசியல் ரீதியான வீழ்ச்சிக்கு அதுவே காரணமாக இருந்தது. அதைத் திருத்தாவிட்டால், உலகளாவிய
அரசியல் காரணிகளில் ஒன்று என்ற நிலையை இஸ்லாம் மீண்டும் எட்ட இயலாது. கிறிஸ்துவம் ஒரு
காலகட்டத்தில், ஏன் இப்போதும் இருப்பதைப் போலவே இஸ்லாமும் பல பிரிவுகளாகவும், உட்பிரிவுகளாகவும்
பிரிந்து உள்ளது.
ஹிந்து மதத்தில் உள்ள பிரிவுகள், உட்பிரிவுகளைப் பொருத்தவரை
ஒரு நல்ல விஷயம் உள்ளது. ஹிந்துமதத்தின் சகிப்புத்தன்மை அவை ஒன்றையொன்று அழித்துக்கொள்ளாமல்
தடுக்கிறது. இஸ்லாம் அதுபோன்றதல்ல என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. இஸ்லாமியர்களின்
வரலாறு முழுவதும் வீரம், துணிச்சல், வைராக்கியம், கற்றல் மற்றும் பக்தி ஆகியவற்றுக்கு
இடையே கடுமையான மதவெறி இஸ்லாமியர்களிடையே இருந்து வருவதைக் காணலாம். முதல் நான்கு கலீபாக்களில்
மூன்று பேர் முஸ்லிம்களால் கொல்லப்பட்டனர். இஸ்லாமிய வரலாற்றின் பக்கங்கள் மத ஆர்வலர்கள்
அல்லது அரசியல் சாகசக்காரர்களால் செய்யப்படும் இதுபோன்ற செயல்களால் நிரம்பியுள்ளன.
துருக்கி மற்றும் எகிப்தில் நடைபெற்ற சமீபத்திய நிகழ்வுகள் இந்த விஷயத்தில் இஸ்லாத்தைத்
தண்டித்திருக்கும் என்று ஒருவர் நினைத்திருப்பார். ஆனால் காபூல் அரசாங்கத்தின் உத்தரவின்
பேரில் ஒரு அஹ்மதியாவை கல்லெறிந்து கொன்றது, அந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு
இந்தியாவின் மிக முக்கியமான, படித்த சில முஸ்லீம் தலைவர்கள் ஒப்புதல் அளித்திருப்பது
இந்த நோய் இன்னும் புரையோடி இருப்பதையும் அதன் அசலான வன்முறையின் எந்த ஒரு பகுதியையும்
இழக்கவில்லை என்பதையும் காட்டுகிறது.
எகிப்தும் துருக்கியும் வேறுபட்ட ஒரு மனநிலையில் இருப்பதாகத்
தெரிகிறது. எப்படியிருந்தாலும், அவர்கள் காலத்தோடு ஒத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை
உணர்ந்து, அத்தியாவசியங்களுக்கும் அத்தியாவசியமற்றவற்றுக்கும் இடையே ஒரு தெளிவான வேறுபாட்டைக்
காட்டியுள்ளனர். இந்திய ‘மௌலானாக்கள்’ அவர்களை ‘மோசமான முஸல்மான்கள்’ என்று அழைக்கலாம்,
ஆனால் தங்கள் அரசியல் சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் பாதுகாக்கவும் முடியும்
வரை அவர்கள் இதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. ஒரு மதரீதியான ‘கெட்ட முஸல்மான்’ (ஒரு
துருக்கிய தேசியவாதி என்னிடம் சொன்னார், ஒரு இந்திய முஸல்மான் ஒருமுறை அவரை ஒரு மோசமான
முஸல்மான் என்று அழைத்தார், ஏனெனில் அவர் எப்போதாவது ஒரு பெக் [ஒரு மது பானம்] எடுத்துக்
கொண்டார். வெளிநாட்டுச் சக்திக்குத் தலை வணங்கும், அந்த அடிமைத்தனத்துக்கு சப்பைக்கட்டாகத்
தன்னுடைய ஷரியாவை பிரசாரம் செய்யும் முஸல்மானை விட எவ்வளவோ சிறந்தவராகக் கருதப்படுவார்.
துருக்கியின் ‘கெட்ட முஸல்மன்கள்’ என் பார்வையில் இந்தியாவின் பக்தியுள்ள முஸல்மான்களை
விட சிறந்தவர்கள். ஏனெனில், அவர்கள் ‘ஷரியா’ மற்றும் ‘ஹதிஸ்’ ஆகியவற்றின் முக்கியத்துவம்
அற்ற சிறிய விவரங்களுக்கு மிகுந்த மரியாதை செலுத்தியிருந்தாலும், வெளிநாட்டு அதிகாரத்துவத்தின்
கருவிகளாக இருக்கிறார்கள். கேள்விக்குரிய வழிமுறைகளின் மூலம் தங்களுக்கும் தங்களைப்
போன்ற முஸல்மான்களுக்கும் இடங்களையும் தேவையானவற்றையும் வாங்குகிறார்கள்.
முஸல்மான்களின் பக்தி ஹிந்து மதத்துடனான சண்டைகளில் அதிகமாகப்
புகழப்ப
டுகிறது. ஆனால், தெரிந்தும் தெரியாமலும் இஸ்லாமிய சட்டங்களின் புனிதமான கோட்பாடுகளை வெளிப்படையாக
மீறும் தலைவர்கள் முன்னிலையில், அது ஊமையாகவும் சக்தியற்றதாகவும் இருக்கிறது. ஹிந்துக்களைப்
போலவே, இஸ்லாமியர்களால் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சிலர், குரானில் தவறுகள் இல்லை
என்று நம்ப மறுக்கிறார்கள். ‘ஹதிஸ்’ மற்றும் ‘ஃபிக்கா’ ஆகியவற்றின் மீது நம்பிக்கையில்லாமல்
இருக்கிறார்கள். வெளிப்படையாக மது அருந்துவதும், பன்றி இறைச்சி உண்பதும், வழிபடாமல்
இருப்பதும், ரம்ஜானின் போது நோன்பு நூற்காமல் இருப்பதும், பர்தா, தாடிவளர்ப்பது போன்ற
சிறிய விஷயங்களில் மாறுபட்ட கருத்துகள் கொண்டிருப்பது உண்மைதானே?
எனவே, ஹிந்துக்களும் முஸல்மான்களும் அவரவர் நம்பிக்கைகளின்
அனைத்துப் புனிதமான நியதிகளையும் வெளிப்படையாகப் பழிப்போரால் வழிநடத்தத் தயாராக இருக்கிறார்கள்.
இருந்தபோதிலும், தங்களின் பழக்கவழக்கங்கள், சடங்குகள் மற்றும் அனுசரிப்புகளின் தீவிரத்தை
ஒருவருக்கொருவர் அருகருகே நல்லெண்ணத்தோடு அமைதியாக வாழ்வதற்காக, துளிக்கூட விட்டுக்கொடுக்கத்
தயாராக இல்லை. ஐக்கிய இந்தியா என்பது ஹிந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஆகிய இருவருக்கும்
சுதந்திரத்தை அளிக்கும். ஆனால் அவர்களோ சுதந்திரத்தை விட, தங்கள் நம்பிக்கைகளின் பயனற்ற
மற்றும் அத்தியாவசியமற்ற கூறுகளைக் கடைப்பிடிக்க விரும்புகிறார்கள். இது கடவுளுக்கே
கூட கண்ணீரை வரவழைக்கக்கூடிய விஷயம் அல்லவா?            
புரையோடியிருக்கும் மதம் என்ற புண் அகற்றப்படாவிட்டால், நாம்
ஒரு ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க முடியாது, சுதந்திரத்தை எந்த வடிவத்திலும் வெல்ல
முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். ‘மஜாப்’ (அதன் குறுகிய அர்த்தத்தில்), என்
அன்பு நண்பர் ஸ்டோக்ஸ் அடிக்கடி எனக்கு நினைவூட்டுவது போல், இந்தியாவின் சாபமாக இருக்கிறது.
அது உச்சத்தில் ஆட்சி செய்யும் வரை, இந்தியாவுக்கு எதிர்காலம் இல்லை. நாம் ‘நல்ல இந்துக்கள்’
மற்றும் ‘நல்ல முஸல்மான்கள்’ ஆக, அவற்றின் குறுகிய அர்த்தத்தில், இருந்து கொண்டே சுதந்திரத்தை
வெல்ல முடியும் என்ற எண்ணம் என்னைப் பொருத்தவரை அபத்தமானது, இது கடந்த சில ஆண்டுகளில்
அதிகமான குழப்பங்களைச் செய்துள்ளது. சுதந்திரமாகவும் ஒற்றுமையாகவும் இருக்க இஸ்லாம்
மற்றும் இந்து மதத்தின் உண்மையான மற்றும் அத்தியாவசிய மனப்பான்மையிலிருந்து நாம் எந்த
வகையிலும் மாறத் தேவையில்லை என்று நான் இன்னும் நம்புகிறேன். கிரேட் பிரிட்டன், பிரான்ஸ்
மற்றும் ஜெர்மனியில் உண்மையான கிறிஸ்தவர்கள், ரோமன் கத்தோலிக்கர்கள், ப்ரட்டஸ்டன்ட்டுகள்,
ப்ரீபிர்ஸ்டிரியன்ஸ், ஆங்கிலிகன்கள், யூதர்கள் மற்றும் மற்ற ஜாதியினர் உள்ளனர், ஆனால்
அவர்களின் மத நம்பிக்கையின் ஆழம் அவர்கள் அந்தந்த நாடுகளின் சுதந்திரமான குடிமக்களாக
இருப்பதைத் தடுக்காது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு காலகட்டத்தில் யூதர் ஒருவர் கிரேட்
பிரிட்டனின் பிரதமராகவும், மற்றொருவர் வெளியுறவு செயலாளராகவும், மூன்றாவது நபர் இந்தியாவின்
வைஸ்ராயாகவும் இருப்பார் என்று யார் கற்பனை செய்திருக்க முடியும்?
யூதர்கள் கிரேட் பிரிட்டனில் மிகச் சிறிய மதச் சமூகமாக இருக்கலாம்.
அவர்கள் ஒருபோதும் பாராளுமன்றத்தில் எந்தவொரு சிறப்பு பிரதிநிதித்துவத்தையும் அல்லது
அரசாங்க பதவிகளில் எந்தவொரு குறிப்பிட்ட பங்கையும் கோரவில்லை. உண்மையில் சுமார்
150 ஆண்டுகளுக்கு முன்பு, கிரேட் பிரிட்டனில் உள்ள ரோமன் கத்தோலிக்கர்கள் மற்றும் ப்ரட்டஸ்டன்ட்டுகளின்
இனவாத உணர்வு இன்று ஹிந்துக்கள் மற்றும் முஸல்மான்களின் உணர்வைப் போலவே தீவிரமாகவும்
பிரத்தியேகமாகவும் இருந்தது. நீண்ட காலமாக ரோமன் கத்தோலிக்கர்கள் நாடாளுமன்றத்தில்
இருந்து விலக்கி வைக்கப்பட்டனர். எந்தவொரு அரசாங்க அலுவலகத்திலும் அவர்களால் பணியாற்ற
முடியவில்லை. இன்னும் அவர்கள் ஒருபோதும் சிறப்புப் பிரதிநிதித்துவத்தை கோரவில்லை. இப்போது
இந்தக் குறைபாடுகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன, ரோமன் கத்தோலிக்கர்கள், ப்ரட்டஸ்டன்ட்டுகளுக்குச்
சமமாக, மாநிலத்தில் மிக உயர்ந்த பதவிகளை வகிக்கின்றனர். இந்த விஷயத்தில் கிரேட் பிரிட்டனின்
உதாரணம் ஐரோப்பாவின் அனைத்து பெரிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் பின்பற்றப்பட்டுள்ளது.
அதன் விளைவுகளையும் நாம் காண்கிறோம். துருக்கி, எகிப்து மற்றும் சிரியா ஆகியவையும்
அதையே செய்யப் போகின்றன என்பது என் மனதில் உறுதியாக உள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால்,
அவர்கள் ஒருபோதும் சுதந்திரமாக இருக்க மாட்டார்கள். இந்தியா இதற்கு விதிவிலக்காக இருக்கும்
என்று யாராவது எதிர்பார்க்கிறார்களா?

Posted on Leave a comment

அந்தமானில் இருந்து சாவர்க்கரின் கடிதங்கள் (கடிதம் 3) | தமிழில்: VV பாலா

கடிதம் 3

திரும்பி பார்க்கையில் ஒரு வருடம் உருண்டோடி விட்டது. அந்த
சந்தோஷமான நாள் திரும்பவும் வந்திருக்கிறது. வீட்டில் இருந்து ஒரு செய்தி வருவதும்
வீட்டிற்கு ஒரு கடிதம் எழுதுவதும் எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம் என்பது சிறையில் இருக்கும்
ஒருவருக்குதான் நன்றாகத் தெரியும். நாம் நேசிக்கும் ஒருவருடன் கடற்கரையில் அமர்ந்து
நிலவொளியில் உரையாடுவதைப் போல மனதுக்கு ரம்மியமானது அது. ஒரு நிமிடம் பொறு. மணி அடித்துவிட்டது.
நான் போய் உணவு உட்கொள்ள வேண்டும். காலை மணி பத்தாகி விட்டது… நான் மற்ற கைதிகளுடன்
அமர்ந்து உணவு உட்கொண்டு திரும்பி வந்து விட்டேன். ஆமாம் நான் ஏற்கெனவே சொன்னது போல
அது மிக இனிமையானதுதான். உண்மையில் வீட்டிற்கு கடிதம் எழுதும் நாள்தான் எனக்குப் புத்தாண்டுத்
தினம் போல. என் ஆண்டுக்கணக்கை நான் அன்றிலிருந்துதான் தொடங்குவேன். எனக்கு நெருக்கமானவர்களுடன்
உரையாடும்போது எனக்குப் புத்துணர்ச்சியும் உற்சாகமும் கிடைக்கின்றன. அது என்னை மேலும்
ஒரு வருடத்திற்கு ஜீவித்திருக்கச் செய்கிறது. நான் ஏற்கெனவே கடிதம் எழுதாமல் உன்னைத்
தந்தி கொடுக்க வைத்ததற்கு மன்னிக்கவும். அதிகாரிகள் எனக்கு அதை பற்றித் தெரிவித்திருந்தனர்.
கடிதம் எழுதி ஒரு வருடம் ஆகிவிட்டபடியால் அடுத்த கடிதம் எழுத எனக்கு அனுமதி உண்டென்றாலும்
இங்குள்ள தபால் துரையின் மெத்தனத்தால் கடிதம் எழுதியபின் ஆறு அல்லது ஏழு வாரங்களுக்குப்
பிறகுதான் அது கல்கத்தாவிற்கு அனுப்பப்படுகிறது. அதனால்தான் அடுத்த கடிதத்திற்கு பதினான்கு
மாதங்கள் ஆகின்றது. ஆனால் நீ அனுப்பும் கடிதங்கள் இந்த இருவதாம் நூற்றாண்டில் எத்தனை
சீக்கிரம் வர இயலுமோ அதனை சீக்கிரத்தில் வந்து விடுகின்றது. உன்னுடைய கடிதத்தின் மூலம்
நீ ஆரோக்யமாக இருப்பதையும் நீ தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதையும்
தெரிந்து கொண்டேன். தேர்வுகள் ஒருபுறம் இருந்தாலும் நீங உன் ஆரோக்யத்திற்கு முக்கியத்துவம்
அளிக்க வேண்டும். இளமையான ஆரோக்கியமான உன்னைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆவலாக
உள்ளது. நீ இப்போதுதான் இளமை பிராயத்தினுள் நுழைகிறாய். இப்போது சக்தியும் உத்வேகமும்
அதிகமாக இருக்கும். அதனை எக்காரணம் கொண்டும் யாருக்காகவும் வீணடிக்காதே. உடல் ஆரோக்கியத்தைப்
போல மன ஆரோக்கியமும் முக்கியம். நீயே ஒரு டாக்டர் என்பதால் உன்னிடம் ஆரோக்கியத்தைப்
பற்றி வலியுறுத்துவது தேவையற்ற செயல்தான். ஆனால் இளமைப் பருவத்தில்தான் நாம் கண்மூடித்தனமாக
சில காரியங்களைச் செய்து நம் சக்தி அனைத்தையும் வீணாக்கிக் கொள்வோம். இப்போது சக்தியை
வீணாக்காமல் இருப்பது பிற்காலத்தில் நமக்குத் தேவைப்படும்போது உதவும். இல்லாமல், உன்
கண் பார்வை மங்கினால் நானே உன்னிடம், ‘டாக்டர் உங்கள உடல் நிலையை சீராக்கிக் கொள்ளுங்கள்’
என்று கோபமாகச் சொல்வேன். (நான் சொல்வதைக் கேட்டு உனக்குச் சிரிப்பு வரலாம். நான் டாக்டர்
அல்ல. அதனால் என் கண் பார்வைத் திறன் குறைவது பிரச்சினையில்லை. எல்லா வழக்கறிஞர்களுக்கும்
இந்தப் பிரச்சினை வரும்.) எனக்கு விருப்பமானவர்கள் சிலர் BA மற்றும் MA ஆகியவற்றை முடித்துவிட்டார்கள்
என்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இது மிகவும் உயர்வானது. ஆனால் இதனைக் காட்டிலும்
உயர்வான விஷயம் அவர்கள் தங்கள் பணிகளை மேற்கொண்டு அதில் வரக்கூடிய தடைகளை நீக்கி வெற்றி
பெறுவது. பலகலைக்கழகங்கள் வழங்கும் பதக்கங்களை விட சமுதாயம் வழங்கும் பதக்கங்களே மிக
உயர்வானவை. நான் இன்னமும் அவர்களை நினைவில் வைத்திருக்கிறேன். அவர்கள் என்னிடம் அந்த
வெற்றியைப் பற்றி நேரடியாகக் கூறினால் நான் மகிழ்ச்சி அடைவேன். அப்படித் தெரிவிக்கச்
சொல்லி உன்னிடம் கூறுபவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு எழுது.
நீ அனுப்பிய புத்தகங்கள் அருமையானவை. ‘மகாத்மா பரிச்சய’
– என்ன ஒரு அருமையான மொழிபெயர்ப்பு! அதன் அறிமுகத்தில் முதல் இரண்டு வரிகளும் பொருத்தமாகவும்
அடக்கமாகவும் இருந்தன. அதன் முதல் சில பக்கங்களைப் படிக்கும்போது அந்த வார்த்தைகளே
என் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. அதனை யார் எழுதி இருப்பார்கள் என்று எனக்குத்
தெரியும். புத்தகத்தின் சொல்வளமும் மையகருத்தும் ஒன்றுகொன்று அழகு சேர்ப்பதாய் இருந்தது.
மக்களிடையே பிரபலமாகி உள்ள ‘பாரத் கவ்ரவ் மாலா’ போன்ற தொடர்கள் அரசியல் வரலாறு, விஞ்ஞானம்,
பொருளாதாரம் குறித்த கட்டுரைகளையும் தாங்கி வர வேண்டும். வேதாந்த தத்துவப் புத்தகங்களைப்
பொருத்தவரை நமக்கு அதற்க்கான நேரம் இன்னும் வரவில்லை என்றே நான் கருதுகிறேன். அமெரிக்கர்களுக்கும்
ஆங்கிலேயர்களுக்கும் வேதாந்த தத்துவங்கள் தேவைப்படுகின்றன. அவர்களுடைய வாழ்கை முழுமையான
முன்னேற்றம் அடைந்துள்ளது. அவர்கள் ஷத்ரியத் தன்மையில் இருந்து பிராம்மண தன்மையின்
விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார்கள். இந்தத் தத்துவங்களை நிஜ வாழ்வில் செயல்ரீதியாகக்
கொண்டு வருவதற்கான சரியான நிலை அதுதான். ஆனால் இந்தியா தற்போது அந்த நிலையில் இல்லை.
நாம் தற்போது வேத வேதாந்தங்களைக் கற்கும் நிலையில் இல்லை.
சூத்திரர்களுக்கு வேதம் மறுக்கப்பட்டதன் மூல காரணம் இதுதான்.
அது குறுகிய மனப்பான்மையாலோ அல்லது கொடூர சிந்தனையாலோ அல்ல. அப்படியென்றால் அதே தத்துவங்களை
விவரிக்கும் புராணங்களை பிராமணர்கள் எழுதி இருக்க மாட்டார்கள். இவ்வளவு உயர்ந்த தத்துவங்களைப்
பெறுவதற்கு தகுதி இல்லாத நிலையில் நம்முடைய நாடு தற்போது இருக்கிறது. பாஜிராவ் 2 ஒரு
பெரிய வேதாந்தி, அதனாலேயே அவரால் ஒரு தேசத்திற்கும் பென்ஷனுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப்
புரிந்து கொள்ள இயலாமல் போய்விட்டது. நாம் வரலாறு, அரசியல், விஞ்ஞானம், பொருளாதாரம்,
போன்றவற்றைப் படித்து நம் வாழ்க்கைத் தரத்தை முதலில் மேம்படுத்தி கொள்வோம். முதலில்
க்ரிகஸ்தாஸ்ரம தர்மத்தை ஒழுங்காகக் கடைப்பிடித்துவிட்டுப் பிறகு வானப்ரஸ்த ஆஷ்ராமத்தின்
வாயிலில் அடி எடுத்து வைப்போம். இந்த புத்தகங்கள் எல்லாம் தற்போது விதவைகள், முதியவர்கள்,
ஒய்வூதியம் பெற்று வீட்டில் இருப்போர் போன்றவர் படிக்கட்டும். அவர்கள்தான் பழைய நினைவுகளில்
வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவர்கள் படிக்கட்டும் இந்தக் கடவுள், ஆத்மா, மனிதன் போன்றவற்றை
அலசும் புத்தகங்களை! இளைஞர்கள் எதிர்காலம் குறித்த கனவில் வாழட்டும். பெனாரஸ் ஒரு தியாகியைக்
கூட அளித்ததில்லை, அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கென எந்தத் தியாகத்தையும் செய்யவில்லை.
என்னைப் பற்றியும் கொஞ்சம் எழுதுகிறேன். கடந்த ஒரு வருடத்தில்
எனக்கு எந்த நோயும் வரவில்லை. என் ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது. உடல் எடையும் குறையவில்லை.
அதுவே ஒரு சாதனைதான் இல்லையா? சிறையின் இந்த சிறு அறையில் நான் தினமும் சீக்கிரம் எழுந்து,
சரியான அளவு உணவை சரியான நேரத்திற்கு உண்டு, சீக்கிரமே படுத்தும் விடுகிறேன். இதனாலேயே
நான் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். வருங்கால டாக்டரான உனக்கு என்னுடைய இந்த அட்டவணை
மிகவும் உபயோகமாக இருக்கும். உடலைப் போலவே என்னுடைய மனமும் ஆரோக்கியமாக இருக்கிறது.
இப்போது நான் இருக்கும் சிறை அறையில் தினமும் மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்க
முடிகிறது. அறையில் இருந்தபடியே ரோஜா, லில்லி போன்ற மலர்களைப் பார்கிறேன். அவற்றைப்
பார்க்கும்போது என் மனம் தத்வார்த்த விசாரங்களில் ஈடுபடுகிறது. மிகவும் மகிழ்ச்சியாக
அப்போது நான் உணர்கிறேன். சில சமயங்களில் ஒரு சிறு குழந்தை போல அழவும் செய்வேன். அப்போது
நான் கொண்ட கொள்கை எனக்கு நினைவிற்கு வந்து என்னைத் தேற்றும். தனி மனித சுகத்திற்கோ
அங்கீகாரதிற்கோ வேண்டியா நாம் இந்தப் போராட்டத்தில் இறங்கினோம் என்ற எண்ணம் வந்து என்னை
அந்தத் துக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வரும். பெயர், புகழ், சொத்து போன்றவற்றை
எண்ணி நாம் இந்தப் போராட்டத்தில் இறங்கவில்லை. சந்தோஷமும் நம்முடைய இலக்கில்லை. இந்தப்
போராட்டத்தில் அதிகம் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பது தெரிந்தே ஈடுபட்டிருக்கிறோம்.
மற்றவர்களுக்காவும் மனித குலத்திற்காகவும் தியாகம் செய்ய வேண்டியே இதில் ஈடுபட்டிருக்கிறோம்.
அப்படி இருக்க இதில் ஏமாற்றம் எங்கிருந்து வரும்? நாம் செய்வது ஒரு தவம். நம்முடைய
சமுதாயம் மேம்பட ஒவ்வொரு நிமிடமும் உழைக்கிறோம். இதைவிட மேலான காரியம் வேறென்ன இருக்கிறது?
இந்த சிந்தனை மனதில் படர்ந்த உடன் மனம் மறுபடியும் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்து விடுகிறது.
மனம் அழுந்திக் கிடக்கும்போதெல்லாம் இமயமலையைப் பற்றி எண்ணிக்கொள்வேன். அது உருவாகாத
காலம் ஒன்றிருந்தது. அது இல்லாமல் போகும் காலம் ஒன்றும் வரும். இந்த நிலவு, இந்த சூரியக்
குடும்பம் பற்றி எல்லாம் சிந்திக்கத் தொடங்குவேன். பிரபஞ்சத்தைப் பற்றிய சிந்தனையில்
ஆளும்போது மனம் அதில் ஒரு சிறு துகளாகிய நம்மை மறக்கும்.
எனதருமை பால் (Bal), நாங்கள்
இருவரும் இங்கு நல்ல ஆரோக்
கியத்துடன்
இருக்கிறோம். எங்களைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். எங்களுக்கு இருப்பதெல்லாம் உன்
ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு பற்றிய கவலைகள்தான். இவை இரண்டிற்கும் நீ உத்தரவாதம்
அளித்தால் நாங்கள் வேறு எதனைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம். மகிழ்ச்சியாக இருப்போம்.
சிறை வாழ்க்கையினால் நாங்கள் துன்புறவில்லை. அதனையும் மீறி நாங்கள் மகிழ்ச்சியுடன்
இருக்கிறோம். நீ இங்கு வருவதற்கு அதிகாரிகளிடம் கொடுத்த மனு குறித்து எழுதியிருந்தாய்.
இங்குள்ள விதிமுறைகளின்படி நான் இந்நேரம் சிறையில் இருந்து வெளியே அனுப்பப்பட்டு இந்தத்
தீவில் வாழ அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். என்னுடைய நடத்தை நல்லபடியாகவே இருக்கிறது.
ஆனால் எங்கள் இருவரையும் வெளியே அனுப்பவில்லை. இதனை மறுபரிசீலனை செய்யக்கோரி அரசிடம்
வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். சீக்கிரத்திலேயே நம்முடைய பாபா ஐந்து வருடங்களைப் பூர்த்தி
செய்து விடுவார். அதன் பிறகு நீ இங்கு வர விண்ணபிக்கலாம். ஆனால் எங்கள் விடுதலையும்,
உறவினர்களை இங்கு அழைத்து வந்து சேர்ந்து வாழ்வதும் நடக்கும் என்று தோன்றவில்லை. மற்ற
கைதிகளுக்கெல்லாம் அது நடக்கிறது. இதற்கு இங்குள்ள அதிகாரிகளையும் குறை சொல்ல முடியாது.
ஏனென்றால் இந்திய அரசின் உத்தரவுப்படியே அவர்கள் செயல்படுகிறார்கள். எனவே இங்குள்ள
அதிகாரிகளிடம் இருந்து ஏதேனும் தகவல் கிடைக்கவில்லை என்றால் நீ நேரடியாக இந்திய அரசிடம்
கோரிக்கை விடுக்கலாம். அரசு நியாயப்படி என்ன செய்ய வேண்டுமோ அதனை ஓரளவு செய்யும். நாங்களும்
அவர்களை நினைவுபடுத்திக்கொண்டே இருப்போம். வேறென்ன செய்வது? நீ உன்னுடைய ஆரோக்கியத்தையும்
பாதுகாப்பையும் பற்றி மட்டும் அக்கறை கொண்டால் போதுமானது. நான் உன்னிடம் உயர் நீதிமன்றத்தில்
சொன்னதை நினைவில் வைத்திரு.
அன்பிற்குறிய யமுனாவிடம் மகிழ்ச்சியான நாள் ஒன்று விரைவில்
விடியும் என்று கூறு. நம்பிக்கையுடன் காத்திருக்கச் சொல்.
நம் அன்புக்குரிய வாஹினியிடமும் நம்பிக்கையுடன்
இருக்கச் சொல்.
அவர்கள் புராணங்களை மட்டுமில்லாமல் மராத்தி இலக்கியங்களையும், உலகின் நவீன படைப்புகளையும்
படிக்கட்டும். நம் சகோதரன் சாகாராமின் மறைவுச் செய்தி கேட்டவுடன் வருந்தினேன். நாங்கள்
உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதுதான் சந்தித்தோம். அவன் துணிச்சலுடன் வாழ்ந்தான்,
துணிவுடன் மறைந்தான். இதைவிட வேறு என்ன வேண்டும். அவன் மனைவி ஜானகி வாகினியை நான் நேரில்
பார்த்ததில்லை. நீ வரைந்து அனுப்பிய படங்களின் மூலம்தான் பார்த்திருக்கிறேன். அவர்களின்
நிலை பரிதாபத்திற்குரியது அல்ல. மிகவும் போற்றுதலுக்கு உரியது. அது தனிமையில் இருந்தாலும்
கூட. நான் அவர்களை நினைவில் வைத்திருக்கிறேன் என்று கூறவும். வசந்த் குட்டி எப்படி
இருக்கிறான்? அந்தப் பெரிய மனிதன் எனக்கு ஏதாவது எழுதுவானா? அவனுக்கு இப்போது ஏழு வயதிருக்கும்
இல்லையா? அவன் தாய் எப்படி இருக்கிறார்கள்? நான் அவர்களை டோங்கிரி சிறையில் கடைசியாகப்
பார்த்தேன். ஒரு மனிதனுக்குக் கிடைக்கக்கூடிய மிகச் சிறந்த பரிசு ஒரு நல்ல சகோதரிதான்.
வசந்த் குட்டிக்கு என்னுடைய அன்பு முத்தங்களையும் அவனுடைய அம்மாவிற்கு என் அன்பையும்
கூறவும். நம் உறவினர் எல்லோரையும் நான் விசாரித்ததாகக் கூறவும். நான் தமாஷாக அம்மா
என்று அழைக்கும், உனக்கு உறுதுணையாக இருக்கும் அந்த சகோதரியிடமும் நான் விசாரித்ததாகக்
கூறவும். சிறையில் இருப்பதால் நான் அவர்களுடைய பெயரை குறிப்பிடவில்லை. என்னுடைய மனதிற்கு
நெருக்கமானவர்கள் யார் என்று உன்னிடம் கூறியிருக்கிறேன். அவர்கள் எல்லோரையும் நான்
விசாரித்ததாகக் கூறவும். அவர்களில் யாரேனும் தனிப்பட்ட முறையில் அவர்களை விசாரிக்க
வேண்டும் என்று கூறுவார்களேயானால் நான் அவர்களைப் பெயரைக் குறிப்பிட்டு விசாரிப்பேன்.
எனக்கு அனுப்ப வேண்டிய புத்தகங்களின் பட்டியலை அனுப்பி உள்ளேன். நேரமாகி விட்டது, மிகுந்த
தயக்கத்துடன் உன்னிடம் இருந்து விடைபெறுகிறேன்.
உன் சகோதரன்
தாத்யா.

Posted on Leave a comment

மேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்

நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான்
– ஆண்டாள், நாச்சியார் திருமொழி
ஸ்ரீரங்கவாசிகளுக்கே
‘EVS’ சாலையின் விரிவாக்கம் தெரியாது. நமக்கும் அந்தக் கவலை வேண்டாம். இவிஎஸ் சாலையும்
வரதாச்சாரி தெருவும் முட்டிக்கொள்ளும் இடத்தில் ‘பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா’
என்று அந்தக் காலைவேளையிலும் பிடிவாதமாக அலறிக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண தினத்தில்
க்ரோமியத்தில் குளிப்பாட்டிய பஸ்ஸிலிருந்து இறங்கினார்கள். இறங்கியது ஜெயபாலனும், கண்ணம்மாவும்.
தூக்கம் மிச்சம் அவர்களின் கண்களில் தெரிந்தது.

இறங்கியவுடன் கண்ணம்மாவிற்கு
ஸ்ரீரங்கம் கோபுரமும் ஆவின் பால்வண்டிகளும் மூடப்பட்ட ஜன்னல்களும் வீட்டு வாசலில் தண்ணீர்
தெளிப்பவர்களும் கண்ணில் பட்டார்கள்.
“காபித் தண்ணி கிடைக்குமா?”
என்றாள்
“கிடைக்கும் பேசாம
வா!”
“உள்ளே அஞ்சு மாசக்
குட்டி இருக்கு” என்ற தன் மேடிட்ட வயிற்றைத் தடவிக்கொண்டாள். ஜெயபாலன் அதைக் கவனிக்காமல்
காது குடைந்துவிட்டு, தன் வேட்டியை மேலுயர்த்தி பட்டாப்பட்டியிலிருந்து செல்போனை எடுத்து
அழுத்தினான்.
“காபி கிடைக்குமா
கேளுங்க.”
“சட்… சும்மா இரு..”
என்றபோது மறுமுனை ‘சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்’ என்றபோது வாயில் கெட்ட வார்த்தை
வந்தது.
“பாட்டிலக் கொடு”
என்று வாயைக் கொப்பளித்தபோது செல்பேசி அழைக்க, வாயை அவசரமாகத் துடைத்துக்கொண்டு, செல்பேசியை
அழுத்தி “தோழர்” என்றான்.
“இங்கே… பஸ் ஸ்டாண்ட்
பக்கம்… ஏ.டி.எம். எதிதாப்பல..”
“……”
“தங்கச்சியும் தான்..
தனியா விட முடியாது…”
“……”
“அங்கேயே நிக்கறோம்..”
“முத்து வரான்” என்று
பூட்டியிருந்த அந்தக் கடை வாசலில் உட்கார்ந்துகொண்டு அவளையும் உட்காரச் சொன்னான். முப்பது
நிமிடம் கழித்து கருப்பு சட்டை, ஜீன்ஸ் பேண்டுடன் முத்து என்கிற முத்துகுமார் பைக்கில்
ஸ்டாண்ட் போட்டபோது கண்ணாடி இடுக்கில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த அன்றைய நாளேடு கீழே
விழுந்தது. அதைக் கையில் எடுத்துக்கொண்டே “ரொம்ப நேரம் ஆச்சா வந்து?”
“முக்கா மணி ஆச்சு”
என்றாள் கண்ணம்மா.
“இப்பதாம்பா… சரி…
நம்ம செய்யப் போற இடம் எங்கே?” என்றான் ஜெயபாலன்
“பக்கம் தான்.. தங்கச்சியால
நடக்க முடியுமா?”
அவர்கள் அந்த இடத்தைப்
பார்க்கச் சென்றபோது அங்கே மூன்று போலீஸ்காரர்கள் நின்றுகொண்டு இருந்தார்கள். அங்கே
தற்காலிகத் தடுப்பில் ‘சாரதாஸ்’ என்று எழுதியிருந்தது.
‘இந்த ஹோட்டல்தான்,
பார்த்துக்கோ…’ என்று முத்து கண்களால் காட்ட, ஜெயபாலனும் கண்ணமாவும் அதைப் பார்த்தார்கள்.
அவர்கள் பார்த்த
இடத்தில், “ஹோட்டல் ஸ்ரீ கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே – Hotel Sri Krishna Iyyer” என்று,
தமிழில் பெரிதாகவும் ஆங்கிலத்தில் சிறியதாகவும் எழுதியிருந்தது.
“பார்ப்பான் என்ன
மாதிரி எழுதியிருக்கான் பாரு” என்று முத்துக்குமார் சொல்ல, ஜெயபாலன் “(கெட்டவார்த்தை)…
ஐய்யருக்கு இரண்டு ‘y’ வேற போட்டிருக்கான் என்ன திமிரு…!” என்று சிரித்தான்.
போர்டின் மேலே பொடி
எழுத்துகளில் என்ன எழுதியிருக்கிறது என்று உற்றுப் பார்த்து, படிக்கத் தொடங்கினாள்
கண்ணம்மா.
“ஸ்ரீ… மீன்…
குளத்தி… பகவதி அம்மன் துணை” என்று இடதுபக்கத்திலும், வலது பக்கம் “ஸ்ரீ… சமயபுரத்து…
மாரியம்மன்… துணை” என்றும், நடுவில் “ஸ்ரீ… லக்ஷ்மி… நரசிம்மன் துணை” என்றும்
படித்து முடித்தபோது அவளுக்கு நாக்கு வறண்டு போயிருந்தது.
“இன்னிக்குத் தெறிக்க
விட்டுடலாம்… கவலைப்படாதீங்க தோழர்… எதாவது சாப்பிட்டீங்களா?”
“இங்கே காபி கிடைக்குமா?”
என்றாள் கண்ணம்மா.
“இங்கேயா?…” என்று
குழப்பத்துடன் முத்துக்குமார் “இந்த ஹோட்டல் வேண்டாம்… நமக்குத் தெரிந்த கடை ஒண்ணு
இருக்கு.. நீ தங்கச்சியக் கூட்டிகிட்டு கோபுரம் எதித்தாப்புல… போலீஸ் ஸ்டேஷன் பக்கம்…
தலைவர் சிலை இருக்கு அங்கே வந்துடு… நான் நடந்து வரேன்” என்று முத்து பைக்கை ஸ்டார்ட்
செய்து கொடுத்தான்.
கண்ணம்மா காபியும்,
நியூஸ் பேப்பர் கிழிசலில் மசால் வடையையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது முத்து வந்து,
“போஸ்டர் பாரு” என்று சொல்ல, கோணலாக ஒட்டிய போஸ்டரில் “…சனிக்கிழமை காலை 10 மணிக்குச்
சிறீரங்கத்தில் பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டம்” என்று கொட்டை எழுத்தில் அடித்திருந்தார்கள்.
“மொத்தமா முவாயிரம்
போஸ்டர்.. நேத்து ராவோடு ராவா நானும்… தில்லைநகர் சங்கர் தெரியுமில்ல… சேர்ந்து
ஒட்டினோம்.”
“தலைவர் எத்தினி
மணிக்கு வரார்?”
“தலைவர் கனடாலேர்ந்து
நேத்தி ராத்திரிதான் வந்தார்… இங்கே பத்து பத்திரை மணிக்கு வந்துடுவார். கருப்பு
பெயிண்ட் ரெடி பண்ணிடலாம்… பக்கத்துலேயே ஹார்ட்வேர் கடை இருக்கு… வாங்கிக்கலாம்..
இன்னிக்கு ஐயருக்குக் கருப்பு அபிஷேகம்தான்…”
மசால் வடை காகிதத்தில்
அந்த எண்ணெய் வழிந்த நடிகரைப் பார்த்துக் கொண்டிருருந்த கண்ணம்மாவிடம் “தங்கச்சி..
செலவுக்கு வெச்சுக்கோ” என்று முத்துக்குமார் இரண்டு நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு பைக்கில்
செல்லும்முன் ஜெயபாலனுடன் ஏதோ பேசிவிட்டு தோளில் தட்டிவிட்டுச் சென்றான்.
எட்டு மணிக்குக்
கோபுரத்துக்கு முன் இருக்கும் காபி கடையில் கூட்டமாக இருக்க, அங்கே சில கருப்புச் சட்டைகள்
தென்பட்டன. திடீரென்று ஒலிபெருக்கி ‘உஸ்…உஸ்’ என்ற சத்தத்தைத் தொடர்ந்து, கோபுரத்துக்கு
முன் சிரித்துக்கொண்டிருந்த காந்தி சிலை பக்கம் விசில் சத்தத்துடன் ஒரு டாட்டா சுமோ
வந்தது. நடுவில் ஒருவன் நெற்றியில் கர்சீப் கட்டிக்கொண்டு, சுருட்டு குடித்துகொண்டிருந்த
முகம் போட்ட பனியனுடன் மூங்கில் கம்பில் கட்டப்பட்ட கருப்புக் கொடியைப் பிடித்துகொண்டிருக்க,
பக்கத்தில் இன்னொருவன் “…பெரியார் வாழ்க…” என்றபோது ஜெயபாலன் “நீ போராட்டத்துக்கெல்லாம்
வராதே… வயித்துல புள்ள இருக்கு… இங்கேயே நிழல்ல எங்காவது இரு.. கையில பணம் இருக்கு
இல்ல? கருப்பு பெயிண்ட் ஒரு டப்பா, பிரஷ்… அப்பறம் நீ ஏதாவது வாங்கி சாப்பிடு” என்று
பதிலுக்குக் காத்திராமல் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினான்.
கண்ணம்மா என்ன செய்வது
என்று தெரியாமல் ஜெயபாலனைப் பார்த்துக் கொண்டிருக்க, ஒலிபெருக்கி இன்னொரு முறை “பெரியார்
வாழ்க… சமத்துவம் ஓங்குக” என்று முழங்கிவிட்டுத் தொடர்ந்தது.
“1957ல் தமிழ்நாடு
முழுவதும் பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டத்தைத் தந்தை பெரியார் நடத்தி வெற்றி கண்டார்…
ஆனால் தற்போது ஸ்ரீரங்கத்தில் ‘ஸ்ரீகிருஷ்ணய்யர் பாரம்பரிய பிராமணாள் கபே’ என்ற ஹோட்டல்
இருக்கிறது. நம் கழகத் தோழர்கள் கொதித்துப் போய் ஹோட்டல் உரிமையாளாரை அணுகி பிராமணாள்
என்பது வர்ணத்தின் பெயரை அப்பட்டமாகக் குறிக்கும் சொல்… பார்ப்பனரல்லாத மக்களை இழிவுபடுத்தும்
சொல்… அதை அழிக்க வேண்டும் என்று அறவழியில் கேட்டார்கள். ஆனால் பார்ப்பான் கேட்கவில்லை.
இன்னிக்கும் பிராமணாள் பெயர் அழிக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. வர்ண வெறி பிடித்தவர்கள்…
தலைவர் இன்னும் சில மணிநேரத்தில் இங்கே வரப் போகிறார். நம் கருப்பு மை இன்று நாம் யார்
என்பதைக் காட்டும்…” என்றபோது விசிலும் கைத்தட்டலும் மெலிதாகக் கேட்டது.
கண்ணம்மாவிற்கு எங்காவது
அமைதியான இடத்தில் படுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சற்று நேரம்
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். கடையில் ‘இன்று மந்திரி சபை விரிவாக்கம்’ என்பது
அவளுக்கு அபத்தமாகப் பட்டது. ஒலிபெருக்கிச் சத்தம் அவளுக்குப் பழகி, சுவாரசியம் இல்லாமல்
போனபோது “ஒரு பன்னீர் சோடா கொடுங்க” என்றவரை கண்ணம்மா பார்த்தாள். அவருடன் இன்னொருவர்
வந்திருந்தார். அவர் தலையில் குடுமி இருந்தது.
“சாமி உங்களுக்கு?”
“எனக்கு ஏதும் வேண்டாம்.
சந்நிதி கைங்கரியம் இருக்கு…”
“ஏன் சாமி கோபுரத்துக்கு
முன்னாடி சிலை வைக்கும்போது நீங்க எல்லாம் சும்மாவா இருந்தீங்க?”
“போராட்டம் எல்லாம்
நடத்தினோம்.. ஆனா ஆட்சி செஞ்சவா சப்போர்ட் இல்லை… என்ன செய்ய?”
“நீங்க அன்னிக்கு
விட்டதுதான் இவங்க இன்னிக்கு தைரியமா மைக் பிடிச்சுப் பேச ஆரம்பிச்சுட்டாங்க பாருங்க…”
“திருமஞ்சனக் காவிரி
பக்கம் நம்பிள்ளை சன்னதி இருக்கு… யாருக்குத் தெரியும்? ஆனா இந்தச் சிலை?… எல்லாருக்கும்
தெரியும்… என்ன செய்ய…? கலி காலம்.”
“நீங்க ஏதாவது செய்யனும்
சாமி… சும்மா பூஜை, பொங்கலுனு இருந்தா போதாது… நீங்க எல்லாம் மைக் பிடித்துப் போராட்டம்
செய்யனும்…”
“யாரும் வர மாட்டா…
ஐபிஎல் பார்த்துண்டு இருப்பா… ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம். ஆழ்வார்கள், ஆசாரியர்கள்
வாழ்ந்த இடம்… இங்கே இருக்கும் மரம், பூ, கல்லு, மண்ணு, எறும்பு, மாடு எல்லாம் போன
ஜன்மத்தில் ஏதோ புண்ணியம் செஞ்சுருக்கு..”
“அப்ப கடவுள் இல்லைனு
இங்கே மைக் பிடிச்சு கத்திண்டிருக்கறவா எல்லாம்…?”
“கருப்புச் சட்டை
போட்ட அடியார்கள்… பூர்வ ஜென்ம புண்ணியம் இன்னிக்கு இவா ஸ்ரீரங்கத்துல இருக்கா.”
கண்ணம்மா அவர்களிடம்
சென்று “சாமி! இங்கே பெயிண்ட் கடை ஏதாவது இருக்கா?” என்றாள்.
“பழைய தேவி தியேட்டர்
தெரியுமா?”
“தெரியாதுங்களே…
ஊருக்குப் புதுசு”
“இப்படி நேராப் போனா,
இடது கைப்பக்கம் பஸ் எல்லாம் திரும்பும்… அங்கே கடை இருக்கு. ஆனா பத்து மணிக்குத்தான்
திறப்பாங்க…” பன்னீர் சோடாவிற்கு சில்லறையுடன் ஏப்பத்தையும் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்.
கண்ணம்மாவுக்கு ஒலிபெருக்கி
ஏதோ பேசிக்கொண்டேயிருந்தது சலிப்பாக இருந்தது. தானும் பன்னீர் சோடா குடிக்க வேண்டும்
போல இருந்தது. போலீஸ் ஜீப் ஒன்று ‘இங்கே யாரும் கூட்டம் போடக் கூடாது… நகருங்க…
நகருங்க…’ என்று அவள் தாகத்தையும் அமைதியாகக் கலைத்துவிட்டு எக்ஸ்ட்ராவாக ‘…ஆட்டோ
உனக்கு இங்கே என்ன வேலை…?’ என்ற அதட்டலுடன் சென்றது.
‘ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத்
தொடர்ந்து குரல் கொடுக்கும் நம் தலைவர் சற்று நேரத்தில் இங்கே வருவார்…’ என்றது இன்னொரு
ஒலிபெருக்கி.
நடந்து சென்றவரிடம்
“மணி என்னங்க?” என்று கேட்டுவிட்டு கண்ணம்மா மெதுவாக பெயிண்ட் கடை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
பஸ் திரும்பும் இடத்தில் சிமெண்ட் மூட்டைகள், சுருட்டபட்ட டியூப், சங்கலிகள் வெளியே
தொங்க, ‘ஸ்ரீரங்கா ஹார்ட்வேர்’ என்ற கடை காலியாக இருந்தது. நம்பெருமாள் சேர்த்தி சேவைக்குக்
படத்துக்கு கீழே ஊதிபத்தி பத்து பர்சண்ட் தன்னை இழந்து புகையால் கைங்கரியம் செய்து
கொண்டிருந்தது.
“கருப்பு பெயிண்ட்
கொடுங்க” என்ற வாசகத்தை, வெளியே சென்ற போலீஸ் ஜீப்பின் தலையில் சிகப்பு-நீல ஒளியின்
பளிச்சும், அதைத் தொடர்ந்த ஒலிபெருக்கியின் ‘கூட்டம் போட அனுமதி இல்லை… யாரும் கூட்டம்
போடக் கூடாது… அமைதியாக் கலைஞ்சுடுங்க…!’ அபகரித்தது.
“அந்தச் சிமெண்ட்
மூட்டையை எல்லாம் உள்ளே அடுக்குப்பா.. இன்னிக்கிக் கடையைத் திறக்க வேண்டாம்… பிரச்னை
வர வாய்ப்பு இருக்கு” என்று தினத்தந்தியை மடித்து வைத்தார் கடைக்காரர். “உனக்கு என்னம்மா
வேணும்? சீக்கிரம் சொல்லுமா… கடை இன்னிக்குக் கிடையாது.”
“பெயிண்டு…”
“எதுக்கு அடிக்க?”
கண்ணம்மாவுக்கு என்ன
சொல்வது என்று தெரியவில்லை. “சுவத்தில அடிக்க…”
“வெளிச் சுவரா? வீட்டுக்குள்ள
அடிக்கவா? டிஸ்டம்பரா? ராயலா? எமல்ஷனா? என்ன கலர்? எவ்வளவு வேணும்?” என்று கேள்விகளை
அடுக்க கண்ணம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
“கருப்பு பெயிண்ட்
ஒரு டப்பா… இதோ இங்கே அடிச்சிருக்கீங்களே…”
“இந்த பெயிண்ட் சுவத்துல
அடிக்கமாட்டாங்க… ஒரு லிட்டர் கருப்பு எனாமல் கொடுப்பா!”
“பிரஷ் ஏதாவது வேணுமா?”
“ஆமாம் ஒரு பிரஷ்.”
“எவ்வளவு இன்ச்?”
“இந்த அளவு கொடுங்க..”
என்று கையால் காண்பித்தாள்.
“அரை இன்ச் பிரஷ்…
வேற?” கண்ணம்மா தலையை ஆட்ட, ஒரு துண்டுக் காகிதத்தில் சரசரவென்று எழுதி “இருநூற்றி
நாற்பத்தி இரண்டு ரூவா. இருநூற்றி நாற்பது கொடு!”
கண்ணம்மா தன் கையில்
சுருட்டியிருந்த பணத்தைப் பிரித்தபோது அதில் இரண்டு நூறு ரூபாய் இருந்தன.
“இதுல சின்ன டப்பா
இருக்கா?”
“முதல்லயே சொல்லக்
கூடாதா?… அரை லிட்டர் கொடுப்பா.”
“நூற்றி முப்பது
கொடு” என்று கண்ணம்மாவிடம் இருந்த பணத்தை வாங்கிகொண்டு சில்லறையைக் கொடுத்தபோது கடை
வாசல் காலியாக இருந்தது.
கண்ணம்மா கோபுரத்தை
நோக்கி அவசரமாக நடந்தாள். கோபுர வாசலில் மாடு ஒன்று என்ன செய்வது என்று தெரியாமல் ஒன்றுக்கு
போய்க்கொண்டு இருந்தது. தடுப்புகள் போடப்பட்டு, கடைகள் எல்லாம் படபடவென்று ஷட்டர்கள்
மூடப்பட்டு, கொய்யா கூர் கலைக்கப்பட்டு, எல்லா இடங்களிலும் போலீஸ் நின்று கொண்டு இருந்தது.
பெயிண்ட் வாங்கி
வருவதற்குள் இடமே சினிமா செட் போட்ட மாதிரி மாறிவிட்டதை உணர்ந்தாள். கண்ணம்மாவிற்கு
உலகமே தன்னைப் பார்த்துக் கோபித்துக்கொண்டது போலத் தோன்றியது.
“என்னப்பா ஒரு ஆட்டோ,
பஸ் கூட இல்லையே”, “சி.எம் வராரா?” என்ற கேள்விகளைக் கடந்து சென்றபோது, கோபுர வாசலில்
பலர்கூடி ஊர்வலம் போலக் காட்சி அளித்தது. கூட்டத்தின் நடுவில் ஜெயபாலனைப் பார்த்தபோது
மனதில் நிம்மதியும், கூட்டத்தில் ஊர்ந்து சென்ற போலீஸ் ஜீப்பைப் பார்த்த போது பயமும்
கவ்விக்கொண்டது.
கண்ணம்மா ஜெயபாலனை
நோக்கி நடந்தாள்.
“இங்கே எதுக்கு புள்ள
வந்தே?”
“பெயிண்ட் வாங்கியாந்தேன்.
“இன்னிக்குத் தேவைப்படாது
போல… கோர்ட் தடை விதிச்சுட்டாங்களாம்
.
“ஐயோ… இதைத் திருப்பிக்
கூட தர முடியாது. கடை எல்லாம் முட்டிட்டாங்க.”
“ஒன்னும் கவலைப்படாதே…
இருட்டின பெறகு ஒரு வேலை இருக்கு… முத்து… முத்து…” என்று கூப்பிட, முத்து வந்தபோது
ஒருவித வாடை அடித்தது.
“முத்து! இவ கிட்ட
சொல்லிடு.”
“தங்கச்சி, உனக்குத்
தாயார் சன்னதி தெரியுமா?”
கண்ணம்மா தெரியாது
என்பதை போல முகத்தைக் காண்பிக்க, முத்து தொடர்ந்தான். “கடை எல்லாம் மூடிட்டாங்க…
அதனால நேரா கோபுரத்துக்குள்ள போயிடு. கருடன் சன்னதி வரும்… அங்கே பிரசாதக் கடை இருக்கு.
புளிசாதம், தயிர் சாதம் கிடைக்கும். பதினஞ்சு ரூபாய். சாப்பிட்டுக்க. அங்கேயே எதிர்த்த
மாதிரி தண்ணி இருக்கு. இருட்டிய பிறவு ஏழு மணிக்கு தாயார் சன்னதி வாசல்ல வந்திடு. வேலை
இருக்கு.”
“என்ன வேலை?”
முத்து நிதானமாகச்
சொன்னான். “கோர்ட் கருப்பு பெயிண்டு வெச்சு அழிக்கக் கூடாது என்று தீர்ப்பு சொல்லிட்டாங்க….
தலைவர் கொஞ்ச நேரத்துல வந்து பேசுவார். ஒரு கூட்டம் இருக்கு. நாம ஏழு மணிக்கு… கொஞ்சம்
இருட்டின பெறவு… கோயில் சுவத்தில நாமம் எல்லாம் பெரிசா போட்டிருக்காங்கல்ல… கருப்பு
பெயிண்ட் வெச்சி.. “
“வெச்சி?”
“வெச்சு செஞ்சிடுவோம்.
நீ கிளம்பு தங்கச்சி…”
கண்ணம்மாவுக்கு என்ன
செய்வது என்று தெரியாமல் கிளம்பினாள். கோபுரத்தைத் தாண்டிச் சென்றபோது கோயிலில் கூட்டம்
அதிகம் இல்லாமல் இருந்தது. குழந்தை ஒன்று எல்.ஈ.டி பம்பரம் வேண்டும் என்று அடம்பிடித்துகொண்டு
இருந்தது. “துளசி மாலை வாங்கிப் போங்க அக்கா” என்று ஒரு சின்ன பெண் அவளைச் சுற்றி சுற்றி
வந்து கெஞ்சியது.
கருட மண்டபத்துக்கு
வந்தபோது வவ்வால் நாற்றம் அடித்தது. சற்று தூரம் சென்று பார்த்தபோது கையில் இருபது
ரூபாய் மட்டுமே இருந்தது. ஐம்பது ரூபாயை பெயிண்ட் கடைக்காரர் திருப்பித் தந்தாரா இல்லை
வழியில் விழுந்துவிட்டதா என்று நினைவில்லை.
மத்தியானம் ஒரு பொட்டலம்
புளிசாதம் வாங்கிச் சாப்பிட்டாள். பாக்கி ஐந்து ரூபாய்க்கு ஒரு வடை தந்தார்கள். இன்னும்
பசித்தது. சூரிய புஷ்கரணி பக்கம் படுத்தபோது தூங்கிவிட்டாள். எழுந்தபோது எல்லாம் இருட்டாக
எங்கோ ‘டம் டம்’ என்று மேளச் சத்தம் கேட்டது. சோர்வாக இருந்தது.
துடப்பத்தை வைத்துக்
கூட்டிக்கொண்டிருந்த பணியாளாரிடம் “மணி என்ன?” என்றபோது “ஏழு ஆகப் போகுது… இனிமேதான்
நடை திறப்பாங்க.”
“வெளியே எப்படிப்
போகணும்?”
“நீ எந்தப் பக்கம்
போகணும்?”
“தாயார் சன்னைதி
பக்கம்.”
“இப்படியே நேரா போனா
தன்வந்திரி சன்னதி வரும். அங்கே கேட்டா சொல்வாங்க.”
மதில்களைப் பார்த்து
நடந்து சென்றபோது பிரமிப்பாக இருந்தது. அதில் சோர்வாக சாய்ந்தபோது சூரியனின் சூடு இன்னும்
கற்களில் தெரிந்தது. அவளைக் கடந்து பேட்டரி கார் காலியாகச் சென்றபோது அதைக் கூப்பிடலாமா
என்று யோசிப்பதற்குள் அது சென்றுவிட்டது.
மெதுவாக நடந்தாள்.
தன்வந்திரி சன்னதிப் பக்கம் ஒரு பூனை ஓடியது. “தாயார் சன்னதி…” என்றவுடன் “இதோ இப்படிப்
போனா வரும்” என்று ஒருவர் கைகாட்டினார்.
‘தாயார் சந்நிதி’
என்று நியான் எழுத்துகள் ஒளியில் தெரிய, கண்ணம்மாவுக்குத் தளர்ச்சி ஏற்பட்டு அப்படியே
கம்பர் மண்டபத்தில் உட்கார்ந்தாள். சரிந்தாள் என்று சொல்வது இன்னும் சரியாக இருக்கும்.
தேசிகர் சன்னதியில்
காலை ஆட்டிகொண்டிருந்தவர் இதைக் கவனித்து ஓடி வந்தார். “என்ன ஆச்சு?” என்று கேட்டபோது
கண்ணம்மாவுக்கு கண்கள் திறக்கத் தெம்பில்லாமல் சொருகியது. அவள் வயிறு சற்று மேடிட்டிருப்பதைக்
கவனித்து, உடனே தாயார் சன்னதியில் சீருடையில் இருந்த செக்யூரிட்டியை நோக்கி ஓடினார்.
“ஒரு பொண்ணு மயக்கமா
இருக்கா… கம்பர் மண்டபம்… புள்ளதாச்சி போல…” என்று படபடப்பாகச் சொல்ல, தாயார்
சன்னதியிலிருந்து வெளியே வந்தவர்களும் கம்பர் மண்டபத்துக்கு செக்யூரிட்டியுடன் விரைந்தார்கள்.
கண்ணம்மா பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தாள்.
ஒருவர் உடனே தன்னிடம்
இருந்த பூ, மஞ்சகாப்பு இத்தியாதிகளை “இதை கொஞ்சம் வெச்சிக்கோங்க” என்று கொடுத்துவிட்டு
உடனே செயல்பட்டார். “முதல்ல எல்லோரும் கொஞ்சம் தள்ளிப் போங்கோ தள்ளி போங்கோ.. காத்து
வரட்டும்” என்று கண்ணம்மாவின் கைகளைப் பிடித்து நாடியை சோதிக்க ஆரம்பித்தார்.
“கூட யாராவது வந்தீங்களா?”
கூட்டம் ஓர் அடி தள்ளிச் சென்றது.
“நாடித் துடிப்பு
அதிகமா இருக்கு.. தண்ணி வேணும். சக்கரை… ஸ்வீட் ஏதாவது இருக்கா?… ஆம்புலன்ஸ் ஒன்னுக்கு
சொல்லிடுங்க…” என்றார்.
உடனே ஒரு பிஸ்லேரி
வந்தது.
“கொஞ்சம் இருங்கோ.
மேலே நரசிம்மர் சன்னதில பானகம் இருக்கு. எடுத்துண்டு வரேன்” என்று அர்ச்சகர் மேட்டழகிய
சிங்கர் சன்னதி படிகளை நோக்கி ஓடினார். வட்டிலில் பானகம் எடுத்துக்கொண்டு வர, அதைக்
கண்ணம்மாவின் வாயில் விட்ட பிறகு, கண்ணம்மா விழித்தாள். கூட்டத்துக்கு உயிர் வந்தது.
அவள் கையில் இன்னும்
கொஞ்சம் பானகம் ஊற்றப்பட்டது. அதையும் குடித்தாள்.
“ஏம்மா வயித்துல
புள்ள இருக்கு… எத்தனை மாசம்?”
“அஞ்சு ஆச்சு.”
“காலையிலிருந்து
என்ன சாப்பிட்ட? தண்ணி கிண்ணி குடிச்சியா?” கண்ணம்மாவுக்கு அப்போதுதான் தான் தண்ணீரே
குடிக்கவில்லை என்று தெரிந்தது.
“இல்லை” என்றாள்.
“…டிஹைட்ரேஷன்…
லோ சுகர்… குழந்தை வயித்துல இருக்கு… அதுக்காகவாவது ஒழுங்கா சாப்பிட வேண்டாமா?
நல்லவேளை இந்த ஸ்வாமி பானகம் கொடுத்தார். இல்லன்னா ஆபத்தா முடிஞ்சிருக்கும்…”
அர்ச்சகர் சந்தோஷமாக
“தேவரீர் டாக்டரா?” என்றார்.
“ஆமாம்.. திருநெல்வேலியில.”
“ஆழ்வார் எந்தத்
தொழிலையும் சொல்லலை. ஆனா மருத்துவனாய் நின்ற மா மணிவண்ணா என்று ஆழ்வார் டாக்டரை மட்டும்தான்
சொல்லுகிறார். நரசிம்மர் மாதிரி வந்து காப்பாத்திருக்கார்… நீ ஒன்னும் கவலைப் படாதே…
பானகம் குடிச்சிருக்க… குழந்தை பிரகலாதன் மாதிரி பிறப்பான்… இந்தா இன்னும் கொஞ்சம்
சாப்பிடு” என்று அவள் கையில் பானம் முழுவதையும் கவிழ்த்தார்.
“எங்கேமா போகணும்?…
ஆம்புலன்ஸ் வேண்டாம்னு சொல்லிடுப்பா.”
“தாயார் சன்னதிக்கு
வழி கேட்டு வரச் சொன்னாரு.”
“யாரு?”
“என் வூட்டுக்காரர்..”
“இதோ இதுதான் கேட்டு”
என்றதைக் கேட்டு மெதுவாக நடக்கத் தொடங்கினாள். கை பிசுக்காக ஒட்டியது. மூக்குப் பக்கம்
வைத்துப் பார்த்தபோது சுக்கும், ஏலக்காய் வாசனையும் கலந்து அடித்தது.
தாயார் சன்னதி வாசல்
திகில் படத்தில் வரும் மௌனம் போல நிசப்தமாக இருந்தது. தூரத்தில் இருவர் வருவது தெரிந்தது.
ஜெயபாலுவும் முத்துவும் வந்தபோது பையைக் கொடுத்தாள்.
மதில் மீது வரையப்பட்ட
நாமம் பக்கம் நெருங்கிய ஜெயபாலன், பிரஷ்ஷை எடுத்தபோது “ஏதோ பிசுபிசுப்பா ஒட்டுதே” என்றான்.
கண்ணம்மா மீண்டும்
தன் கையை முகர்ந்தாள்.

Posted on 1 Comment

இமயத்தின் விளிம்பில் – 2 (ஆதி கைலாஷ் யாத்திரை) | வித்யா சுப்ரமணியம்


பகுதி 2

குஞ்சி நோக்கி செல்லும்
வழியெங்கும் தேவதாரு மரங்களும் பைன் மரங்களும் தென்படுகின்றன. தவிர காற்றோடு ஏதோ ஒரு
நறுமணம் பரவுகிறது. வாசனை மரங்கள் பலவும் இங்கிருப்பதாக அறிந்தோம். தவிர இங்கு போஜ்பத்ரா
மரங்களும் அதிகம். இந்த மரத்தின் பட்டையில்தான் விநாயகர் பாரதம் எழுதினாராம். போஜ்பத்ரா
மரப்பட்டைகளை இங்கு விற்கிறார்கள். இது வீட்டில் இருப்பது நல்ல அதிர்வுகளைத் தரும்
என்றார்கள். அதில் ஏதேனும் படம் வரையலாமென்று நானும் கொஞ்சம் மரப்பட்டைகள் வாங்கிக்
கொண்டேன்.
நம் பயணத்தில் பல
இடங்களில் பாலங்களின் மூலம் நதியைக் கடந்து நேபாள பகுதியிலும் கூட பயணிக்கிறோம். புத்தியிலிருந்து
குஞ்சி செல்லும் பயணப்பாதையும் கடுமையாகவே இருக்கிறது. மலையின் விளிம்பில்தான் பயணம்
தொடர்கிறது. குதிரைகள் நம்மைப் பயமுறுத்துவது போல மிகவும் விளிம்பில்தான் செல்லும்.
கீழே பார்த்தால் தலைசுற்றும். குதிரை சற்று தடுமாறினாலும் நம்கதி அதோகதிதான். சிலநேரம்
குதிரைக்காரர் குதிரையைப் பிடித்துக் கொள்ளக்கூட மாட்டார். எனக்கோ இந்தி தெரியாது.
பயமாக இருக்கிறது என்று சொல்லத் தெரியாமல் டர்ர் டர்ர் என்பேன். அவர் சிரித்தபடி என்னிடம்
ஏதோ சொல்ல, எனக்குப் புரியவில்லை. ஹிந்தி தெரிந்த ஒருவர் அதை மொழி பெயர்த்தார். குதிரை
மீது நம்பிக்கை வைக்கச் சொல்கிறார். அது பத்திரமாகவே அழைத்துச் செல்லுமாம். உண்மைதான்
மூன்றாம் நாள் குதிரைப் பயணம் பழகி விட்டது.
தினமும் காலையில்
ஓட்ஸ் கஞ்சி, ரொட்டி போன்ற எளிய சிற்றுண்டி நமக்கு அளிக்கப்படும். பின்னர் பயணத்தின்
நடுவழியில்தான் ஏதேனும் ஓரிடத்தில் கிராமவாசிகளிடம் நமக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.
சிறிய தகரம் வேய்ந்த உணவகம் இருக்கும். இரண்டு மூன்று மர பெஞ்சுகளும், நீண்ட மேசைகளும்
இருக்கும். அங்கே யாரேனும் இருவர் நமக்கு சிரித்த முகத்தோடு உணவு தருவார்கள். சிலநேரம்
இளம் பெண்களும் சிறுவர்களும் கூட உணவளிப்பார்கள்..
படிக்கிற வயதில்
அவர்கள் இவ்வேலையைச் செய்கிறார்களே என்று நினைத்தபோது உடன் வந்தவர் அவர்களிடம் பள்ளிக்கு
செல்ல மாட்டீர்களா என்று கேட்டார். இன்று பள்ளி விடுமுறை என்றான் அச்சிறுவன். ஒரு கால்
ஊனமான மாற்றுத் திறனாளியாகவும் இருந்தான். பள்ளி எங்கே இருக்கிறது என்று கேட்க அவன்
சொன்ன பதில் வியக்க வைத்தது. டார்ச்சுலா வரை அவர்கள் தினமும் இதே மலைப்பாதையில் நடந்து
பள்ளிக்குச் செல்கிறார்கள் என்றதும் எனக்கு மயக்கமே வந்தது. கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு
போகவர நாற்பது கி.மீ தூரம். அப்படியென்றால் எப்போது கிளம்புவார்கள், எப்போது பள்ளி
முடிந்து வருவார்கள் என்று யோசித்தால் தலை சுற்றியது. அதுவும் அந்தப் பையன் கால் வேறு
சரியில்லாதவன். ஆனால் அவர்கள் இதுகுறித்து அலட்டிக் கொள்ளவேயில்லை. எங்களுக்கு மலைப்பாதையில்
நடந்து பழகிவிட்டது. என்ன… நிலச்சரிவு ஏதும் ஏற்படாத வரை கவலையில்லை என்று சர்வசாதாரணமாக
அவன் சொன்னதும் எனக்கு சாப்பிடக்கூட முடியவில்லை. உள்ளே குறையொன்றுமில்லை என்று எம்.எஸ்.ஸின்.
குரல் கேட்டது. வாழ்கிற இடத்திற்குத் தேவையானவாறு அவர்களது உடலமைப்பும், உள்ளுறுப்புகளும்
பலமாகவே இருக்கும் போலும். இதுதான் வாழ்க்கை என்றாகி விட்டால் அதை எதிர்கொள்வதற்கான
சக்தியும் தானாகக் கிடைத்து விடுமோ?
சியாலேக்கிலிருந்து
குஞ்சி செல்லும் கடுமையான வழியில் கர்பியாங் என்ற கிராமம் இருக்கிறது. கடுமையான மலையேற்றத்தில்
இந்த கிராமத்தைக் கடக்கிறோம். வீடுகள் வரிசையாக இருக்கின்றன. பல வீடுகள் இரண்டடுக்கு
மாடிகளோடு கூட இருக்கின்றன. வேலைப்பாட்டுடன் கூடிய அழகிய கதவுகள், ஜன்னல்கள் என்று
பார்க்கவே அழகாக இருக்கிறது. மிஞ்சிப்போனால் மொத்த மக்கள்தொகையே அறுநூறு பேர்களுக்குள்தான்.
உருளைக்கிழங்கு, வெங்காயம், கோஸ் போன்றவற்றைப் பயிரிடுகிறார்கள். ஆண்கள் குதிரைக்காரர்களாகவும்
இருந்து யாத்ரிகர்களை அழைத்துச் செல்கிறார்கள். பெண்கள் கம்பளி ஆடைகள் பின்னி விற்கிறார்கள்.
மக்கள்தொகை குறைவாக இருந்தாலும் இங்கு படித்தவர்களின் எண்ணிக்கை தொண்ணூறு சதம் என்கிறது
சென்சஸ் கணக்கு. கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. வீட்டின் மாடிகளுக்கு செல்ல, தடித்த மூங்கில்
மரங்களைக் குடைந்து அதனுள் படிக்கட்டுகள் போல செய்து ஏணி மாதிரி சார்த்தி வைத்திருக்கிறார்கள்.
குழந்தைகள் ரோஜாப்பூ போல சிவந்த கன்னங்களோடு, கம்பளி குல்லாவும், காலில் கிழிந்த ஷூவும்
அணிந்து அழகிய சிரிப்புடன் நம்மைப் பார்க்கிறார்கள். குழந்தைகளைக்கூட இரண்டு மூன்று
வயதிலேயே மலைப்பாதையில் நடந்து செல்ல பழக்கி விடுவார்களாம்.
ஆனால் இந்த கிராமத்தை
மூழ்கும் கிராமம் என்கிறார்கள். ஏனெனில் பெருகி ஓடும் காளி நதி இந்த கிராமத்தின் நிலப்பரப்பை
அரித்துச் செல்வதாகவும், ஆண்டுக்கு ஒன்றிரண்டு சென்டிமீட்டர் இந்த கிராமம் பூமிக்குள்
அழுந்தி வருவதாகவும் கூறுகிறார்கள். எப்போது வேண்டுமானாலும் ஏற்படும் நிலச்சரிவு, எப்போதும்
பெய்யும் மழை, மண் அரிப்பு என்ற ஆபத்தான சூழலில் வறுமை இவர்களை அன்போடு தழுவிக் கொண்டிருக்கிறது.
அத்யாவசியப் பொருட்களுக்காக கர்பியாங், குட்டி, குஞ்சி, நாபிடாங் போன்ற ஏழு எல்லையோர
கிராமங்கள் நேபாளம் மூலம் வரும் சீன உணவுப் பொருட்களைத்தான் நம்பியிருக்கின்றன. அல்லது
மலைப்பாதையில் ஐம்பது கி.மீ தூரம் நடந்து சென்று டார்ச்சுலாவிலிருந்து வாங்கி வரவேண்டும்.
அதைவிட நேபாளம் சென்று சீனப் பொருட்களை வாங்கி வருவது அத்தனை கடினமல்ல என்று நினைக்கிறார்கள்.
மூன்று நாடுகளின் எல்லையோரத்தில் இருப்பதால் சொந்த நாட்டிலேயே அனாதைகள் போல தாங்கள்
வாழ்ந்து வருவதாக இங்குள்ள கிராமத்து முதியவர் ஒருவர் வருத்தப்படுகிறார். இந்திய அரசு
தங்களுக்கு ரேஷன் பொருட்களை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
இத்தனைக்கும் கர்பியாங்
சந்தை மிகவும் புகழ் பெற்றது. மிகச்சிறந்த முறையில் இவர்கள் வியாபராம் செய்து வாழ்ந்திருக்கிறார்கள்.
இவர்களது பொருட்களை நேபாளம் சீனா போன்ற நாட்டினர் வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.
1962ல் நடந்த இந்திய சீனப் போருக்குப் பிறகு இந்நிலை தலைகீழாக மாறி விட்டது. இத்தனை
கஷ்டத்திலும் வெகுதூரம் சென்று இங்குள்ள குழந்தைகள் கல்வி கற்பதை நிறுத்தவில்லையென்பது
எத்தனை பெருமையான விஷயம்! எல்லா வசதிகள் இருந்தும்கூட நாம் சுற்றி இருப்பவர்களையும்,
அரசையும் எத்தனை குறைகள் கூறுகிறோம்!
குஞ்சியை அடைவதற்கு
முன்னமே ஓரிடத்திலிருந்து ஆதிகயிலாயத்தின் சிகரம் தெரியும். அதைப்பார்த்தபடி, நாங்கள்
அனைவரும் அரைமணி ஓய்வெடுத்துக் கொண்டோம். பிறகு ஒருவழியாக் குஞ்சி முகாமை அடைந்தோம்.
எல்லைக்காவல் படையினர் தேநீர் கொடுத்து வரவேற்றார்கள். அரைவட்டமாக ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளை
கவிழ்த்து தங்குமிடங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. உள்ளே தரை முழுவதும் மெத்தைகளும் தலையணைகளும்
ரஜாய்களும் இருந்தன. தங்குமிடத்திற்கு அருகிலேயே உணவுக் கூடம். அங்கேயே பிரார்த்தனைகள்
செய்யவும் வசதி உண்டு.
குஞ்சி முகாமிலிருந்து
இரவு பகல் எந்நேரமும் அன்னபூர்ணா மலைத் தொடரை ரசிக்கலாம். சுற்றிலும் பசுமை போர்த்திய
மலைகள் சூழ, குஞ்சி முகாம் இந்த யாத்திரையில் ஒரு முக்கிய இடம். ராணுவ முகாமும் கூட
அது. தவிர, குஞ்சியிலிருந்து இரண்டு பயணப் பாதைகள் பிரிகின்றன. ஆங்கிலத்தில் Y என்று
எழுதினால் அதில் இடப்பக்கம் மேல்நோக்கி செல்வது ஆதிகயிலாயம் நோக்கியும், வலப்புறம்
மேல்நோக்கி செல்வது ஓம் பர்வதம் அமைந்திருக்கும் நாபிடாங் நோக்கியும் செல்கிறது.
இந்திய வழிமூலம்
கயிலாயம் செல்பவர்கள் நடுவழியிலேயே தென்படும் ஆதிகயிலாயக் காட்சியை தரிசித்துவிட்டு
குஞ்சியிலிருந்து காலாபானி வழியாக நாபிடாங் சென்று அங்கிருந்து லிப்புலேக் கணவாய் வழியாக
இந்திய எல்லை கடந்து சீன ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தின் தக்ளகோட் வழியே கயிலை மானசரோவர்
செல்வார்கள். உத்தர்கான்ட் மாநில அரசு மூலம் ஓம் பர்வதம் செல்லும் நமக்கு எல்லை தாண்ட
அனுமதியில்லை.
நாங்கள் குஞ்சியிலிருந்து
காலாபானி நோக்கி சென்றோம். காலாபானி (கருப்பு நதி) என்னும் இடத்தில்தான் நாம் வழியெங்கும்
கண்ட ஆக்ரோஷமான, பெயருக்கேற்றாற்போல் பிரவாகமாக ஓடும் காளி நதி உற்பத்தியாகிறது. காவேரி
நதி போலதான் காளி நதியும் ஒரு சிறிய தொட்டி போன்ற இடத்தில் உற்பத்தியாகிறது. அந்த இடத்தையே
ஒரு கோவிலாகக் கட்டியிருக்கிறார்கள். கோவிலுக்கு வெளியே இரு பெரிய தொட்டி போன்ற இடத்திலும்
காளி நதி நிரம்பியிருக்கிறது.
இந்தக் கோவிலின்
எதிர்ப்புறமிருக்கும் ஓங்கி உயர்ந்ததொரு மலைத்தொடரின் மேற்புறம் சிறிய வட்டவடிவ துவாரம்
தெரிகிறது. இதை வியாச குகை என்றார்கள். அதனுள் கொடி மரம் போல சிறிய குச்சி தெரிகிறது.
இந்த குகையில்தான் வியாசர் சொல்ல விநாயகர் மகாபாரதம் எழுதியாக நம்பப்படுகிறது. யாருமே
அந்த இடத்திற்கு செல்லமுடியாது. ஆனால் ராணுவ வீரர் ஒருவர் ஹெலிகாப்டர் உதவியோடு அதன்
மேற்புறம் சென்று, நூலேணியின் உதவியோடு அந்த குகைக்கு சென்றதாகவும் அவர்தான் அங்கே
அடையாளமாக ஒரு கழியை நட்டு வைத்திருப்பதாகவும் ஒரு இராணுவ வீரர் தெரிவித்தார்.
காலாபானியில் நாங்கள்
தங்கியிருந்த முகாமிலிருந்து சூர்யோதயத்தில் தகதகவென இரண்டு மலைச் சிகரங்களைக் கண்டோம்.
விண்ணில் இரண்டு பாம்புகள் படமெடுத்தாற்போல் தெரியும் அம்மலைகளை நாக பர்வதங்கள் என்றே
அழைக்கிறார்கள். ஒன்று நாக் பரவத். மற்றொன்று நாகினி. வியக்க வைக்கிறது இதன் அழகு.
காலாபானியில் வெந்நீர் ஊற்றுகளும் உள்ளன.
காலாபானியிலிருந்து
நாபிடாங் நோக்கி செல்லும் வழி சற்று சமவெளிதான் என்றாலும், வெயில் கொளுத்தியது. பாதை
முழுவதும் சிறிதும் பெரிதுமாகப் பாறைக் கற்கள் குவிந்திருந்தன. இவற்றின் மீதுதான் குதிரைகள்
செல்ல வேண்டும்.
சரி, நாபிடாங் என்ற
பெயருக்கு என்ன அர்த்தம்? இங்குள்ள ஒரு மலையின் பனிபடிந்த வடிவம் பார்வதி தேவியின்
தொப்புளாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே நாபிடாங் எனப்படுகிறது. கடல்மட்டத்திலிருந்து
11,000 அடி உயரம். இரண்டு மூன்று அடுக்கு உடை, ஜெர்க்கின் என அனைத்தையும் தாண்டி உடல்
குளிரில் விரைக்கிறது..
எங்கள் முகாமிற்கு
எதிர்ப்புறமாகத்தான் ஓம் பர்வதம் இருந்தது. சரிந்தவாக்கில் பலகை மாதிரி இருக்கும் ஒரு
மலைமீது இயற்கையாகவே தேவநாகரி வடிவில் ஓம் என்று எழுதியது போல பனி படர்ந்திருக்கிறது.
நமக்கு இடப்புறமாக இரண்டு மிகச்சிறிய கோவில்களும் இருக்கின்றன.
சற்று தூரத்தில்
உடைந்து கிடந்த ஒரு சிறிய விமானம் அல்லது ஹெலிகாப்டர் எங்கள் கண்ணில்பட, அதன் அருகே
சென்றோம். எண்பதுகளின் இறுதியில் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இந்த இடத்தில் விபத்துக்குள்ளான
போது இங்கு சுற்றிலும் பனி மூடியிருந்திருக்கிறது. அதிலிருந்த மூன்று இராணுவ வீரர்கள்
எந்த உதவியும் கிடைக்காத நிலையில் ஈசனைத் தஞ்சமடைந்து பிரார்த்தித்திருக்கிறார்கள்.
பின்னர் உயிர் பிழைத்திருக்கிறார்கள். அது ஈசனின் அருளால் என எண்ணியவர்கள் அதற்கு நன்றி
தெரிவிக்கும் விதமாக இங்கே சிவனுக்கு இரண்டு சிறிய கோவில்களைக் கட்டியுள்ளார்கள். அதனுள்
இருக்கும் சிவன் அத்தனை அழகு. மனதைக் கொள்ளை கொள்கிறார். ஒருபக்கம் இக்கோவில்கள், அதற்கு
எதிரே பார்வதியின் தொப்புளாக கருதப்படும் நாபிடாங் சிகரம், மறுபக்கம் ஓம் பர்வதம் என்று
இந்த இடத்தின் அழகும், அமைதியும், தெய்வீகமும் சொல்லி மாளாது. இந்திய எல்லைப் பகுதி
என்பதால் இங்கு இராணுவ கெடுபிடிகள் அதிகம் என்றாலும் யாத்ரிகர்களிடம் மிகவும் அன்பாக
பேசுகிறார்கள்.
அடுத்த நாள் மீண்டும்
குஞ்சி நோக்கிப் பயணம். அதற்கு மறுநாள் எங்கள் பயணம் ஆதி கயிலாயம் நோக்கி. குஞ்சியிலிருந்து
இரண்டாவது பாதை மூலம் நாங்கள் சென்றது குட்டி என்ற இடத்தை நோக்கி. பாண்டவர்களின் தாயான
குந்திதேவி பிறந்த இடம் இது. குந்தி என்ற பெயர் நாளடைவில் மருவி குட்டி என்றாகிவிட்டது.
மிகவும் கடுமையாக இருந்தது பயணம். பல நதிகளைக் கடந்து குறுகிய பாதையில் செல்ல வேண்டியிருந்தது.
நதிகளைக் கடக்க சில இடங்களில் வெறும் மர ஏணி மாதிரி குறுக்கே வைக்கப்பட்டிருக்கிறது.
நாம் நடந்துதான் இந்த இடங்களைக் கடக்க முடியும். உதவியாளர் வெகு பத்திரமாக நம் கரம்பற்றி
அழைத்துச் செல்வதால் கவலையுமில்லை,
எங்கேயோ இமயத்தில்
ஒரு மூலையில் இருந்தாலும் குட்டியில் உள்ள கிராம வீடுகள் வியக்க வைத்தன. இரண்டடுக்கு
மாடி வீடுகள் கூட இருந்தன. அவற்றின், கதவு மற்றும் ஜன்னல்களின் வேலைப்பாடுகள் கலையம்சத்துடன்
இருந்தன. குந்தி பிறந்த இடத்தில் தாங்களும் பிறந்திருப்பதில் அந்த கிராமவாசிகளுக்கு
அத்தனை பெருமிதம். நதிக்கு இக்கரையிலும் அக்கரையிலுமாக இரண்டு இடங்களில் எங்களுக்கான
தங்குமிடங்கள் அமைந்திருந்ததால் நாங்கள் இங்குமங்கும் நடமாடிக் கொண்டிருந்தோம். மாலை
நேரம் அங்கு கிராமத் திருவிழா ஆரம்பித்திருந்தது. எங்களையும் கலந்து கொள்ளச் சொன்னார்கள்.
கிராமத் தலைவர் ஒருவரது
வீட்டின் முன்புதான் விழா நடந்தது. யாரோ ஒருவர் வெள்ளைத் துணிகள் போர்த்தப்பட்ட ஒரு
பெரிய மூட்டையை எடுத்து வந்து அங்கிருந்த திண்ணை போன்ற அமைப்பின் மீது வைத்தார். பிறகு
சிறுசிறு மண் விளக்குகள் இதர சமாசாரங்கள் எல்லாம் வர, கிராமவாசிகள் கைதட்டியவாறு பிரார்த்தனை
பாடல்கள் பாட ஆரம்பிக்க, நாங்களும் அவர்களோடு அமர்ந்து உற்சாகமாக கை தட்ட ஆரம்பித்தோம்.
எங்களோடு எங்கள் குதிரைக்காரர்கள், உதவியாளர்கள் எல்லோருமே அமர்ந்து உற்சாகமாய்ப் பாடினார்கள்.
மொழி புரியாவிட்டாலும் செவிக்கு இனிமையாக இருந்தன அவர்களது நாட்டுப்புறப் பாடல்கள்.
“உங்களுக்கு அதிர்ஷ்டம் உள்ளது. ஆண்டுக்கொருமுறை நடக்கும் கிராமத் திருவிழாவில் நீங்கள்
கலந்து கொள்கிறீர்கள்” என்றார் ஒரு குதிரைக்காரர். அந்த வெள்ளைத்துணி போர்த்திய மூட்டைக்குள்
இருப்பது சிவன் உருவமாம். ஆண்டுக்கொரு முறை அதன் மீதுள்ள துணிகளை மாற்றுவதைத்தான் விழாவாகக்
கொண்டாடுவார்களாம். சிவனைக் காணமுடியவில்லை.
விழாவின் முடிவில்
எங்கள் அனைவருக்கும் மண் குடுவையில் ஏதோ ஊற்றி பிரசாதமாகக் கொடுத்தார்கள். நாங்கள்
தயங்கினோம். குடிக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். எங்கள் குழுவில் சிலர் வாங்கிக்கொள்ள,
அதற்குள் உதவியாளர் ஒருவர் ஹிந்தியில் ஏதோ சொல்ல, ஒருவர் மொழி பெயர்த்தார். குடுவையில்
இருப்பது நாட்டு மதுவாம். அதுதான் பிரசாதமாம். அப்பாடா பிழைத்தோம் என்று எல்லோரும்
சிரித்தோம்.
குட்டியில் பாழடைந்த
ஒரு கோட்டையும் அதன் மீது சிதிலமடைந்த ஒரு கட்டடமும் இருக்கின்றன. அதுதான் குந்தியின்
அரண்மனையாம். அந்த இடத்திற்கு யாரும் செல்லமாட்டார்களாம். அங்கிருந்து ஒரு கல்லை எடுத்தால்கூட
குட்டி கிராமப்பகுதியின் சீதோஷ்ண நிலை மாறி பெரும் ஆபத்தேற்படும் என்று நம்புகிறார்கள்.
தூரத்திலிருந்தே அந்த கோட்டையைப் பார்த்தபடி சென்றோம் நாங்கள்.
மறுநாள் நாங்கள்
சென்றது ஆதிகயிலாயம் நோக்கி. உத்தர்காண்டின் பிதாரகர் மாவட்டத்தின் ஜோலிங்காங் என்ற
இடத்தில்தான் ஆதிகயிலாயம் அமைந்துள்ளது. இந்திய பகுதியாக இருந்த திபெத்தில் இருந்த
ஆதிகயிலாயம், சீன ஆக்கிரமிப்பிற்கு மாறிய பிறகு, எல்லை கடந்து சென்று கயிலாயம் மானசரோவரை
தரிசிக்க முடியாதவர்களுக்கு, நம் எல்லைக்குள்ளேயே இருக்கும் ஆதிகயிலாயம் ஒரு வரம்.
திபெத்தில் இருக்கும் கயிலாயம் போலவேதான் இதுவும் பனி போர்த்திய பிரமீடு வடிவில் இருக்கும்.
அங்கு மானசரோவர் ஏரி உள்ளது போலவே இங்கும் பார்வதி சரோவரம் உள்ளது. அங்குள்ளது போலவே
இங்கும் கயிலை மலையை ஒட்டி கௌரி குண்டம் என்ற ஏரியும் இருக்கிறது. மிகமிக புனிதமான
இடம் இது. இங்கிருக்கும் புனித அதிர்வுகளும், அமைதியும் நம்மை என்னவோ செய்கின்றன. சலனமற்றிருக்கிறது
பார்வதி சரோவரம். நல்ல காலநிலை இருந்தால் ஆதிகயிலையின் பிம்பத்தை இதில் காணலாம். சரோவரத்தின்
அருகில் ஈசனுக்கு கோவிலும் கட்டப்பட்டிருக்கிறது. திபெத்தில் இருக்கும் கயிலையை படா
கைலாஷ் என்றும் இதனை சோட்டா (சிறிய) கைலாஷ் என்றும் அழைக்கிறார்கள்.
நாங்கள் எங்கள் தங்குமிடத்தை
அடைந்ததுமே அங்கிருந்து சற்று தொலைவு நடந்து சென்று ஆதிகயிலாயத்தை தரிசிக்கும்போது
வானம் சற்று தெளிவாகவே இருந்தது. இந்த அழகையும், தெய்வீகத்தையும் கான்பதற்காகத்தானே
இத்தனை சிரமப்பட்டு வந்திருக்கிறோம் அவனருளால் என்று நினைத்தபடி அங்கே வெகுநேரம் அமைதியாக
அமர்ந்திருந்தேன். ஆதிகயிலாயத்திற்கு எதிர்ப்புறம் பார்வதி சரோவரம் செல்லும் வழியில்
ஒரு மலைமுகடு உள்ளது. ஒரு கிரீடம் போல இருக்கும் இதனை பார்வதி தேவியின் கிரீடம் என்ற
பொருளில் பார்வதி முகுட் என்கிறார்கள்.
ஜோலிங்காங்கிலிருந்து
ஆதி கயிலை நோக்கி ஐந்தாறு கி.மீ தூரம் உட்புறமாக மலையேறிச் சென்றால் கௌரி குண்டத்தைக்
அடையமுடியும். அமைதியான கௌரி குண்டத்தில் பனிப்பாறைகள் மிதந்து கொண்டிருக்க தேவலோகம்
போலிருக்கிறது அந்த இடம். செல்லும் வழியில் நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்க, உதவியாளர்களின்
உதவியுடன் அவற்றைக் கடந்து சென்றோம்.
மீண்டும் அதே கடினமான
மலைப்பாதை, குதிரைப்பயணம், என பதினான்காம் நாள் டார்ச்சுலாவை அடைந்ததுடன் எங்கள் பயணம்
முற்றுப்பெற்றது.
யாத்திரை என்பது
பக்தியை மட்டுமல்ல, பக்குவத்தையும், பரந்துபட்ட பார்வையையும் அளிப்பதாக எண்ணுகிறேன்.
இமயத்தின் விளிம்பில், ஆபத்து சூழ வாழும் மக்களின் வாழ்வையும், அவர்களது தன்னம்பிக்கையும்
சிரிப்பையும் காணும்போது நம் கர்வம் அழிகிறது. அவர்களைக் காட்டிலும் நாம் எவ்வளவு நல்ல
நிலையில் இருக்கிறோம் என்று புரிகிறது.
(நாபிடங் சிகரம்)
(ஓம் பர்வதம்) 
(வியாசர் குகை) 
(காளிநதியின் பிறப்பிடம்) 
 

(நிறைவு)

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் (பகுதி – 21) | சுப்பு

பரந்தவெளியில் பரவச நிலைகள்
‘சித்தெடுத்த மெய்ஞானியர்
சிறையெடுத்திடும் திருவருள்

முத்தெடுத்த மென்முறுவலை முகமெடுத்திடும் பேரொளி
வித்தெடுத்து என்வேதனை வேரெடுத்திடும் மந்திரம்
பித்தெடுத்தவன் காதலி பெரும் பேரெடுத்தவள் பைரவி’
என்று கவிதை தொடர்ந்தது.
எழுதி முடிக்கும் வரை எனக்கு வேறு பிரக்ஞை இல்லை. முடித்துவிட்டுக் கைக்கடிகாரத்தைப்
பார்த்தால் இரவு மணி பன்னிரண்டு.
காலையில் நிஜாம்பட்டினம்
போய்ச் சேர்ந்தோம். அங்கே போனவுடன் புத்தி மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.
அன்று பூராவும் கண்ணனோடு ஊர் வம்பு பேசுவதில் பொழுது போயிற்று. பராசக்தியைப் பற்றிய
கவனமே இல்லை. நிஜாம்பட்டினத்தில் நாகபூஷணம் என்பவர் மிகவும் உதவியாக இருந்தார். இவர்
ராஜேந்திரனுக்கு ராயபுரத்தில் சாராயக்கடை சகவாசம். ஆனால் மீனவர்களின் விசேஷ குணம் இதுதான்.
கொஞ்சம் பழகிவிட்டால், உயிருக்கு உயிராக இருப்பார்கள்.
மறுநாள் காலையில்
ராஜேந்திரன் வந்தான். ஃபேன் பெல்ட் (fan belt) அறுந்துவிட்டதால் படகைக் கரைக்குச் செலுத்தி,
ஆற்று வழியாக ஓங்கோல் அருகே உள்ள கொண்டய பாலம் என்ற ஊரில் நிறுத்திவைத்திருப்பதாகக்
கூறினான். டீசலும் தீர்ந்துவிட்டிருந்தது. ராஜேந்திரனுக்குப் பணத்தைக் கொடுத்து அனுப்பி
வைத்தோம்.
இரண்டு நாட்களுக்குப்
பிறகு ராஜேந்திரன் மீண்டும் வந்தான். அவனைப் பார்த்தால் பேயறைந்தவனைப் போலிருந்தான்.
ஃபேன் பெல்ட்டைச் சரி செய்து கொண்டு, டீசலை நிரப்பிக் கொண்டு கொண்டய பாலத்தை விட்டுப்
புறப்பட்டிருக்கிறார்கள். ஆற்றின் ஆழம் தெரிவதற்காக ஒரு உள்ளூர்ப் பையனையும் படகில்
ஏற்றிக்கொண்டாலும், அவன் தெலுங்கில் பேசுவது இவர்களுக்குப் புரியவில்லை. ஆறும் கடலும்
சேரும் இடத்தில் படகு கவிழ்ந்துவிட்டது. அலை அடித்துப் படகைக் கரை ஓரமாகத் தள்ளிவிட்டாலும்
படகின் பளு அதிகமாயிருந்ததால் படகு சேற்றில் புதைந்துவிட்டது. இதுதான் ராஜேந்திரன்
கொண்டு வந்த தகவல்.
ஆந்திரா வந்தவுடன்
இரால் மீன் பிடித்து எக்கச்சக்கமாய் சம்பாதிக்கலாம் என்று நினைத்திருந்த எங்களுக்கு
இது பேரிடியாக இருந்தது. சேற்றில் இறங்கிவிட்ட படகை மேலே எடுக்க முடியுமா என்று தெரியவில்லை.
இனிமேல் அந்தப் படகை எடுத்துத் தொழில் செய்யும் வரை பொருளாதார ரீதியாகத் தாக்குப்பிடிக்க
முடியுமா என்பதும் சந்தேகமாயிருந்தது. படகின் பெயரால் வாங்கியிருந்த சில கடன்களை உடனடியாகத்
தீர்க்க வேண்டும். படகை எப்படி எடுப்பது, அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதும் தெரியவில்லை.
கடன்கள் சில லட்சம். வரவு எதுவும் இல்லை.
கண்ணன் உடனே சென்னைக்குப்
புறப்பட்டுப் போனான். ராஜேந்திரனும் அப்போதே கொண்டய பாலத்திற்குப் போனான். இரவுச் சாப்பாட்டை
முடித்துக்கொண்டு நான் தங்கியிருந்த குடிசைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, பராசக்தியின்
நினைப்பு வந்தது. இந்த ஆபத்திலிருந்து பராசக்தி ‘நம்மைக் காப்பாற்றுவாளா’ என்று நானே
கேட்டுக் கொண்டேன். பராசக்தி காப்பாற்றுகிற மாதிரி இதுவரை நாம் என்ன செய்திருக்கிறோம்
என்ற பதிலும் வந்தது. யோசித்துக் கொண்டிருக்கும்போது கையில் சார்மினார் புகைந்து கொண்டிருந்தது.
கையிலிருந்த சிகரெட்டைக் கீழே போட்டு அணைத்தேன். சட்டைப் பையிலிருந்த சிகரெட் பாக்கெட்டையும்,
தீப்பெட்டியையும் தூக்கி எறிந்தேன்.


குடிசைக்குப் போகும்
வழியில் செருப்பு அறுந்துவிட்டது. அதைத் தூக்கி எறிந்தேன். அங்கே போனால் அரிக்கேன்
விளக்கில் கெரஸின் இல்லை. அப்போதிருந்த மனநிலையில் அடுத்த வீட்டுக்காரனிடம் கெரஸின்
கடன் வாங்கவும் மனதில்லை. மூளைக்கு முழு வேலை கொடுத்து, இந்த நிலைமையிலிருந்து தப்பிக்க
எவ்வளவு பணம் தேவைப்படும், அதை எவ்வாறு திரட்டலாம் என்று நிதானமாக யோசித்துப் பார்த்தேன்.
பொறியில் சிக்கிய
எலிபோல் இருந்தது என் நிலைமை. பராசக்திதான் ஒரே வழி. எப்படிப் பிரார்த்தனை செய்வது
என்பதும் தெரியவில்லை. பராசக்தி என்னை இந்தப் பிரச்சினைகளிலிருந்து எப்படியாவது காப்பாற்ற
வேண்டுமென்றும், அதற்குப் பதிலாக நான் ஒழுங்காக நடப்பேன் என்றும் வேண்டிக் கொண்டேன்.
அன்று தூக்கமில்லை. அன்று முதல் வேறு சில விஷயங்களும் என்னை விட்டுப் போயின.
காலையில் நானும்
நாகபூஷணமும் புறப்பட்டோம். நிஜாம்பட்டினத்திலிருந்து தெனாலி, தெனாலியிலிருந்து ஓங்கோல்வரை
பஸ். ஓங்கோலிலிருந்து இன்னொரு பஸ்ஸில் அரை மணி நேரம். பிறகு கொண்டயபாலத்துக்கு முழங்கால்
சேற்றில் நடந்தோம். கொண்டயபாலத்திற்கும் படகு இருந்த இடத்திற்கும் மூன்று கிலோ மீட்டர்.
ஆறு, கடல் சேரும் இடமாதலால் அங்கங்கே மணல் திட்டுக்களில் ஏறியும், இடுப்பளவு நீரைத்
துழாவிக் கொண்டும் அஸ்வத்தாமா இருக்கும் இடத்திற்கு வந்தோம்.
அந்தக் காட்சி வால்மீகியின்
சுந்தர காண்டம் போலிருந்தது. எந்தவிதமான வாகன வசதியும் இல்லாத அந்த இடத்தில் பரட்டைத்
தலையும் அழுக்கு வேட்டியுமாய் இருநூறு பேர் கூடி படகை எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.
பனை மரங்களைக் கூம்பாக நட்டு அவற்றின் வழியாக கயிற்றைக் கட்டிப் படகைத் தூக்க வேண்டும்.
எவ்வளவு முயன்றாலும் சேற்றில் பனை மரங்களை நிற்க வைக்க முடியவில்லை. படகு மேல்தளம்
வரை சேற்றில் இறங்கிவிட்டது. படகில் இருந்த பொருட்களை எடுத்து அப்புறப்படுத்தி விட்டார்கள்.
நான் அருகில் போய்ப் பார்த்தபோது கேபினில் மாட்டியிருந்த வெங்கடாஜலபதி படம் கழன்று
கண்ணாடி உடையாமல் கரையில் கிடந்தது. எடுத்து வைத்துக்கொண்டேன்.
நான் வந்து சேர்ந்தவுடன்
ராஜேந்திரன் சென்னைக்குப் போய்விட்டான். நான் அங்கேயே ஒரு குடிசையை வாடகைக்குப் பேசிக்கொண்டு
தங்கிவிட்டேன்.
கொண்டயபாலம் வறுமைக்கோட்டின்
கீழிருக்கும் இந்தியக் கிராமம். ரோடு இல்லாததால் மீன்களை எடுத்துக்கொண்டு போய் வியாபாரம்
செய்ய முடியாது, கருவாடுதான். தவிர உப்பளத்தில் கூலி வேலை செய்தால் ஒருநாள் உழைப்புக்கு
ஆண்களுக்கு எட்டு ரூபாய். பெண்களுக்கு ஐந்து ரூபாய். இதுவும் அன்றாடம் கிடைக்காது.
அந்த ஊரிலேயே ஒருவர்தான் ரிஸ்ட் வாட்ச் வைத்திருந்தார். ஊரிலேயே ஒரே ஒரு டிரான்சிஸ்டர்தான்
இருந்தது. நான் அதை சரி செய்து பாட வைத்தேன். எதுவுமே இல்லாத இந்த ஊரில் கம்யூனிஸ்ட்
கட்சிக்கு மட்டும் ஒரு அமைப்பு இருந்தது.
கொண்டய பாலத்தில்
நான் ஒரு மாதம் தங்கியிருந்தேன். கோமுட்டி தேவுடு வீட்டில் எனக்குச் சாப்பாடு. கண்ணனிடமிருந்தோ
ராஜேந்திரனிடமிருந்தோ தகவல் இல்லை. அதைப்பற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை. ஏனென்றால்
எதுவுமே விளையாத இந்தப் பிரதேசத்தில்தான் எனக்குள் அன்பு விளைந்தது. எப்படியாவது இந்த
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு பராசக்தியைப் பார்த்துவிட வேண்டும் என்கிற சங்கல்பத்தோடு
இருந்தேன்.
கண்ணுக்கெட்டிய
தூரம் வரை தென்படும் உப்பளங்களின் எல்லையில் பராசக்தி இருப்பதாகக் கற்பனை செய்து கொள்வேன்.
‘அம்மா, அம்மா பராசக்தி’ என்று உரக்கக் கூவிக்கொண்டே எல்லைவரை நடப்பேன். நான் வருவதற்குள்
பராசக்தி புறப்பட்டுப் போய்விடுவாள். இந்த முறை வேறிடத்தில் பராசக்தி. நடந்தால் பிடிக்க
முடியாதென்று தலைதெறிக்க ஓடுவேன். இருந்தாலும் பராசக்தியைப் பிடிக்க முடியாது. ஓடி
ஓடிக் களைத்து அழுவேன். புரண்டு அழுவேன். தரையில் ஓங்கி அறைவேன். பராசக்தி தென்பட மாட்டாள்.
மொட்டை வெய்யிலில் மோனத் தவங்கள். பரந்த வெளியில் பரவச நிலைகள்.
எந்த ஸ்தோத்திரமும்
எனக்குத் தெரியாது. பராசக்தியின் வடிவைக் கற்பனை செய்கின்ற திறமும் கிடையாது. பாரதியார்
பாடல்கள்தான் எனக்குத் தெரிந்த ஒரே துதி. இரவு நேரங்களில் தூங்காமல் பாரதியார் பாடல்களை
ஜபம் போல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பேன். ‘இந்த மெய்யும் கரணமும் பொறியும்
இருபத்தி ஏழு வருடங்கள் காத்தனள்’ என்று ஜபம் செய்வேன்.
ஒவ்வொரு வேலை செய்யும்போதும்
பராசக்தி அருகில் இருப்பதாக பாவனை செய்து அது அவளுக்குச் சம்மதமா என்று பார்ப்பேன்.
பராசக்தி இருக்கும்போது பருக்கை சிந்த சாப்பிடக்கூடாது. படுக்கையில் கையைக் காலை விரித்துப்
போட்டுப் படுக்கக்கூடாது. அனாவசியமாகப் பேசக்கூடாது. இதெல்லாம் நானே எனக்கு விதித்தக்
கட்டுப்பாடுகள்…
சென்னையிலிருந்து
சேதி இல்லாததால் நானே சென்னைக்குப் புறப்பட்டேன். சென்னை வந்தவுடன் ராகவன் வீட்டுக்குப்
போனேன். ராகவன் வீட்டிலில்லை. தலையில் எண்ணெய் தடவலாமென்று தேங்காயெண்ணெய் பாட்டிலைத்
தேடினேன். அதைக் காணோம். அங்கேயிருந்த பையனைக் கேட்டதற்கு அவன் ஏதோ சிடுசிடுத்தான்.
அதோடு தலையில் எண்ணெய் தடவுவதையும் ஷேவ் செய்வதையும் முடி வெட்டுவதையும் விட்டுவிட்டேன்.
ராகவன் வந்தவுடன்
ஓட்டலுக்கு அழைத்துப் போனான். நான் அனாவசியமாக எதுவும் சாப்பிடுவதில்லை என்றும், காபி
மட்டும் போதும் என்றும் சொன்னேன். ‘ஏன் அதையும் விட்டுவிடேன். எனக்குச் செலவு மிச்சம்’
என்றான். ‘சரி’ என்றேன். ஆர்டர் செய்த காப்பி வந்தது. நான் குடிக்கவில்லை. ராகவன் எவ்வளவோ
கெஞ்சினான். அவனுக்குக் கண்ணீர் வந்தாலும் அந்தக் காப்பியை நான் குடிக்கவில்லை. அவனே
குடித்தான்.
காலில் செருப்பு
இல்லாமல், காவி வேட்டியோடு சட்டைக்குப் பட்டன் போடாமல், தலைமுடியைச் சீவாமல் பெசன்ட்
நகரில் பைராகியாகத் திரிந்து கொண்டிருந்தேன். ஒரே உடமை பராசக்திதான். ரமணன் வேலையில்
மாற்றலாகி பெங்களூர் போய்விட்டான். தொழில்ரீதியாக மேற்கொண்டு என்ன செய்வதென்று எனக்குத்
தெரியவில்லை. கடன்காரர்கள் என்னைத் தாக்காவிட்டாலும் எந்த நேரமும் உதைவிழும் என்ற சூழ்நிலை.
ராஜேந்திரன் செயலற்றுப் போய்விட்டான். என்னுடைய பரிதாபமான நிலையைக் கேள்விப்பட்டு விஷ்ணுவின்
அண்ணன் மோகன் எனக்கு உதவ முன்வந்தான். என்னை அழைத்துப்போய் தொழிலதிபர் ஏ.என். ஜகன்னாதராவ்
(சாலிடேர் டிவி) அவர்களிடம் அறிமுகம் செய்தான். கொண்டயபாலத்தில் படகு இருக்கும் நிலையையும்
என்னுடைய நிதி நிலைமையையும் பற்றி சுருக்கமாகத் தெரிவித்தேன். கொஞ்சம்கூடத் தயங்காமல்
அவர் தன்னிடமிருந்த செயின் பிளாக் புல்லியை எடுத்துப் போகச்சொன்னார். இதைக்கொண்டு லாரி
போன்ற கனரக வாகனங்களை சுலபமாகத் தூக்க முடியும். இதற்காக அவர் என்னிடம் எந்தப் பணத்தையும்
எதிர்பார்க்கவில்லை. எத்தனை நாள் இதை நான் பயன்படுத்தப் போகிறேன் என்றுகூட கேட்கவில்லை.
அவரிடம் நான் விடை பெற்றபோது ‘மன்னிக்க வேண்டும். என்னால் நேரில் வந்து உங்களுக்கு
உதவி செய்ய முடியவில்லை’ என்றார்.
ஒவ்வொரு பைசாவையும்
பார்த்து செலவு செய்ய வேண்டிய நிலைமையில் இருநூறு கிலோ எடையுள்ள இந்த சாதனத்தை எடுத்துக்கொண்டு
ஓங்கோலுக்கு ரயிலேறினேன். மிகுந்த சிரமப்பட்டு ஓங்கோலிலிருந்து கொண்டயபாலத்தை அடைந்தேன்.
கொண்டயபாலத்து மக்களிடம் ‘இந்தச் சாதனத்தை வைத்துக்கொண்டு படகை எடுக்க வேண்டும். அதற்கு
ஐம்பது ஆட்கள் வேண்டும்’ என்றேன். ஏற்கெனவே ஊர் ஜனங்கள் பூராவும் எங்களுக்காக இரண்டு
நாட்கள் உழைத்திருக்கிறார்கள். அதற்காக நாங்கள் அவர்களுக்குப் பணம் எதுவும் கொடுக்கவில்லை.
இந்தமுறை அவர்கள் எப்படியும் மூவாயிரம் ரூபாய் தரவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.
என்னிடம் இந்தத் தொகை இல்லாததால் நிஜாம்பட்டினத்திற்குப் போய் எங்களுடைய வலையை அடமானம்
வைத்துப் பணம் வாங்கி வரலாம் என்று நினைத்துப் புறப்பட்டேன். அதிர்ஷ்டவசமாக, அசுவத்தாமா
சென்னையிலிருந்து புறப்பட்டபோது எங்கள் வலைகளை நாகபூஷணத்தின் படகில் ஏற்றி நிஜாம்பட்டினத்திற்கு
அனுப்பியிருந்தோம். அது இப்போது உதவும் என்று நம்பினேன்.
நிஜாம்பட்டினத்தில்
நான் போன நேரத்தில் நாகபூஷணம் இல்லை. அவர் வெளியூருக்குப் போய்விட்டதாகவும், வருவதற்கு
ஒரு வாரம் ஆகும் என்றும் சொல்லி விட்டார்கள். ஆகவே, எதிர்பார்த்த பணம் கிடைக்கவில்லை.
நாகபூஷணத்தின் சகோதரரிடம் செலவுக்குப் பணம் வாங்கிக் கொண்டு பாபட்லாவுக்கு வந்தேன்.
அங்கே லாட்ஜில் ரூம் போட்டுவிட்டு பக்கத்துத் தியேட்டரில் ஈவினிங் ஷோ பார்க்கப் போனேன்.
சினிமா பார்த்துக்
கொண்டிருந்தபோது, மின்சாரத் தடை ஏற்பட்டது. வெளியே வந்து டீக்கடையில் டீ சாப்பிட்டுக்
கொண்டிருந்தபோது வானொலியில் செய்தி. தமிழ்நாட்டைப் புயல் தாக்கியதாகச் சொல்லப்பட்டது.
இதற்கும் நான் இதை அடுத்து செய்த நடவடிக்கைக்கும் என்ன சம்பந்தம் என்பது இன்றுவரை விளங்கவில்லை.
அருகிலிருந்தவரிடம் ஓங்கோலுக்குப் பஸ் இருக்கிறதா என்ற விசாரித்துத் தெரிந்துகொண்டு
லாட்ஜுக்கு போனேன். ரூமைக் காலி செய்துவிட்டு, ஓங்கோல் பஸ் ஏறினேன். இரவு ஓங்கோலில்
லாட்ஜில் தங்கினேன்.
அன்று பாபட்லாவைப்
புயல் தாக்கியது. நான் சினிமா பார்த்த இடத்தில் இருநூறு பேர் இறந்துபோனார்கள். கடல்
கரையைத் தாண்டி உள்ளே வந்ததில் பெருத்த சேதம். அந்த மாவட்டத்தில் ஆயிரக்கணக்கில் உயிர்ப்பலி.
ஓங்கோலிலும் புயல் அடித்தது. நான்கு நாட்களுக்கு எந்தக் கடையையும் திறக்கவில்லை. தெருவில்
எந்த வாகனமும் ஓடவில்லை. மின்சார சப்ளை கிடையாது. லாட்ஜ்காரர் செய்து போட்ட வெறும்
ரொட்டியைச் சாப்பிட்டு, பேதியோடு உயிர் வாழ்ந்தேன். ஆனால் அதிசயமாக மனது கவலைப்படாமல்
சந்தோஷமாயிருந்தது. லாட்ஜின் மொட்டை மாடியில் நாற்காலியைப் போட்டுக்கொண்டு ‘அலைமகள்
ஆட்டம்’ என்ற கவிதையை எழுதினேன்.
நான்கு நாட்களுக்குப்
பிறகு சென்னைக்குப் போகலாம் என்று ஓங்கோல் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போனால் அரிக்கேன்
வெளிச்சத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் மட்டுமிருந்தார். சென்னைக்கு எப்போது ரயில் என்ற கேட்டேன்.
என்னை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார். தண்டவாளங்கள் தரையிலிருந்து விடுபட்டுப் பாம்புபோல்
படமெடுத்திருப்பதைக் காட்டினார்.
லாரிகள் சில சென்னைக்குப்
புறப்பட்டன. நான் ஒரு லாரியில் ஏறிக்கொண்டேன். கொஞ்ச தூரம் போனதும் லாரிகள் நின்றுவிடும்.
எல்லோரும் இறங்குவார்கள். கடப்பாரைகளை உபயோகித்து மரங்களை அப்புறப்படுத்துவார்கள்.
மீண்டும் லாரிகள் நகரும். மீண்டும் மரங்கள். இப்படியே சென்னை வந்து சேர்ந்தோம்.
சென்னையில் வீட்டாருக்கு
நான் உயிரோடுதானிருக்கிறேன் என்பதை நிச்சயப்படுத்திவிட்டு இரண்டாம் நாளே மீண்டும் ஓங்கோலுக்குப்
போய் அங்கிருந்து கொண்டயபாலம் போனேன். புயலில், படகு போன இடம் தெரியவில்லை. மேற்பகுதி
பூராவும் சுக்கல் சுக்கலாக உடைந்து ஆங்காங்கே ஒதுங்கிவிட்டது. இன்ஜின் இன்னும் ஆழத்தில்
புதைந்துவிட்டது. இன்ஜினை எடுக்க முடியாதபடி கடல் உள்ளே வந்ததில் ஆறு திசை மாறி ஓட
ஆரம்பித்துவிட்டது. இன்னும் ஆறு மாதம் காத்திருந்தால் ஆற்றின் திசை மீண்டும் மாறும்.
அப்போது என்ஜினை எடுக்க முயற்சிக்கலாம் என்றார்கள். எனக்கு நம்பிக்கையில்லை. இருந்தாலும்
படகிலிருந்த மற்ற பொருட்கள், அலுமினியம், பித்தளை, புரபல்லர் ஏதாவது கிடைத்தால் அதாவது
மிச்சமாகும் என்ற நோக்கத்தில் ஒரு மாதம் தங்கினேன்.
காலையில் காரச்சட்டினி,
கணக்காக எட்டு இட்டிலி சாப்பிட்டுவிட்டு, எட்டு மணிக்குப் புறப்பட்டால் திரும்பி வர
மதியம் மூன்று மணியாகும். இவ்வளவு தூரம் அலைந்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. இதற்குள்
என்னுடைய சாப்பாட்டுக்கணக்கே கணிசமான அளவை எட்டியிருந்தது. செயின் பிளாக் புல்லியை
சென்னைக்கு எடுத்துவர வேண்டும். கையில் காசு இல்லை. தேவுடுவின் உதவியை நாடினேன். அந்த
ஊரில் மளிகைக்கடை, சாப்பாட்டுக்கடை, சாராயக்கடை, வட்டிக்கடை எல்லாம் அவர்தான். வழிச்
செலவுக்குப் பணம் எடுத்துக்கொண்டு அவர் என்னோடு சென்னைக்கு வந்தால், அங்கே அவருடைய
பாக்கியைக் கொடுத்துவிடுவதாகக் கூறினேன். தேவுடுவும் நானும் செயின் பிளாக் புல்லியை
மாட்டு வண்டியில் போட்டுக்கொண்டுப் புறப்பட்டோம்.
ஓங்கோலுக்கு வந்தவுடன்
கயிறு, டீசல் கேன் ஆகியவற்றை விற்று விட்டோம். சென்னைக்குப் போகும் லாரிக்காரரிடம்
பேரம் பேசி லாரியில் ஏறிக்கொண்டோம். சரக்கு ஏற்றப்பட்ட லாரியில், மூட்டைகளுக்கு மேல்
நாங்கள் ஏறி உட்கார்ந்து கொண்டோம். செயின் பிளாக் புல்லியை இந்த மூட்டைகளுக்கு மேல்
ஏற்ற நான்பட்ட பாட்டை நினைக்கவே ஆயாசமாயிருக்கிறது. சென்னைக்கு வந்த லாரிக்காரர் மூலக்கடையில்
எங்களை இறக்கிவிட்டுப் போய்விட்டார். இரண்டு ஸ்டாப்புகளுக்கு இடையில் நாங்கள். தேவுடுவை
அங்கேயே விட்டுவிட்டு அடுத்த ஸ்டாப்பிங்கிற்குப் போய் வருகிற பஸ்ஸில் ஏறிக்கொண்டேன்.
கண்டக்டரிடம் கெஞ்சியதற்குப் பலன் இருந்தது. பஸ் தேவுடுவுக்கு அருகில் நின்றது. பஸ்
பயணிகள் உதவியுடன் செயின் பிளாக் புல்லி பஸ்ஸில் ஏற்றப்பட்டது. அடையாறு, ஏ.என். ஜகன்னாதராவ்
வீட்டில் செயின் பிளாக் புல்லியை ஒப்படைத்தேன். ராகவன் வீட்டுக்குப் போனேன். நானே எதிர்பார்க்கவில்லை.
ராகவன் தேவுடுவுக்குத் தர வேண்டிய பாக்கியைக் கொடுத்து அனுப்பிவைத்தான்.
… தொடரும்

Posted on Leave a comment

ஹம்பி: விஜயநகரப் பேரரசின் சிற்பக் கலைமாட்சியைப் பறைசாற்றும் சிதைந்த நகரம் | அரவக்கோன்

விஜயநகரப் பேரரசுக்கு கர்நாட அரசு என்றும் ஒரு பெயர் இருந்தது
என்பது அப்போது எழுதப்பட்ட நூல்களில் இருந்து தெரிகிறது. போர்ச்சுகீசியர் பிஸ் நெகர்
(Bisnegar) அரசு என்று இதைக் குறிப்பிட்டுள்ளனர். பொயு 1336ல் இன்றைய வடக்கு கர்நாடக
மாநிலத்தில் துங்கபத்திரா நதியின் தெற்குப் பகுதியில் விஜயநகர அரசு தோற்றம் கண்டது.
ஹக்கராயர் (ஹரிஹர ராயர் ஹக்கா) புக்கராயர் (புக்கா) என்னும் இரு சகோதரர்
கள் ஸ்ரீங்கேரி சாரதாபீடத்தின்
12வது ஜகத் குருவாகப் பின்னர் விளங்கிய ஸ்ரீவித்யாரண்யரால் வழிகாட்டப்பட்டு இந்த அரசைத்
தோற்றுவித்தனர். அதை அவருக்கே காணிக்கையாகவும் அளித்தனர். எனவே அவர்தான் மன்னர். அவர்
சார்பாகவே மன்னர்கள் ஆட்சி செய்தனர். அரசு முத்திரைகளும், அரசாணைகளும் ‘ஸ்ரீ விரூபாக்ஷர்’
என்றே கையொப்பமிடப்பட்டன. (வித்யாரண்யர் ஸ்ரீங்கேரி சாரதாபீடத்தின் 12வது ஜகத் குருவாக
விளங்கிய காலம் பொயு 1380-1386). இந்த வழக்கம் தொடர்ந்து வந்ததால் இன்றளவும் சாரதா
பீட சங்கராச்சார்யாருக்கு அரியணை, வெண் கொற்றக் குடை, செங்கோல் கிரீடம் ஆகியவை உண்டு.
அவற்றைத் தரித்து அவர் அடியாருக்கு தரிசனம் தருவார்.
ஹக்கராயர் புக்கராயர் இருவரும் தட்சிண சுல்தான்களின் படையெடுப்புகளைத்
தடுத்து நிறுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஹொய்சாள அரசின் கன்னடநாட்டு தளபதிகள் என்றும்,
ஹொய்சாள அரசின் வலிமை குன்றியபோது காகதீய அரசால் கைபற்றப்பட்ட துங்கபத்திரா நிலப்பகுதியை
நிர்வகித்த தெலுங்கர் என்றும் இருவிதக் கருத்துகள் வரலாற்று வல்லுனரிடையே நிலவுகிறது.
ஆனால், அவ்விருவரும் தமது குருவாக வரித்துக் கொண்ட ஸ்ரீங்கேரி மடத்துப் பீடாதிபதி வித்யாரண்ய
ஆசாரியருடைய வழிகாட்டுதலால்தான் இந்த அரசைத் தோற்றுவித்தனர் என்பதில் ஒத்த கருத்து
உடையவராகவே உள்ளனர். இந்த அரசின் தோற்றமே சுல்தானிய அரசுகளின் விரிவாக்கத்தையும் இஸ்லாம்
மதம் பரவுதைத் தடுக்கவும், நலிந்துவிட்ட ஹிந்துமத்தை மீட்டெடுக்கவும்தான்.
தண்டக ஆரண்யம் என்று குறிப்பிடப்படும் பாறைகள் நிறைந்த மலைப்
பகுதியை அரவணைத்துச் செல்லும் துங்கபத்திரா ஆற்றின் தெற்குநிலப் பகுதியின் முந்தையப்
பெயர் பம்பா. அங்கு உள்ள ஏரி பம்பா சரோவர். என்றும், நிலப்பகுதி பம்பாக்ஷேத்ரம் என்றும்
அழைக்கப்பட்டன. பம்பாபதி என்பது சிவனுக்குப் பெயர். இப்பகுதியில் மலயவந்தா, மாதங்கா,
ஹேமகூட என்னும் மூன்று மலைகள் உள்ளன. கிஷ்கிந்தாபுரி என்றும் மக்களிடையே ஒரு பெயர்
புழங்குகிறது. பம்பா என்னும் வடமொழிச்சொல் கன்னட மொழியில் ஹம்பா என்றாகிப் பின்னர்
ஹம்பி எனத்திரிந்து நிலைத்தது.
விஜயநகர மன்னர்கள் ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் இந்தியாவின்
தென் பகுதி முழுவதையும் தங்கள் ஆட்சியின் கீழ் வைத்திருந்தனர். சங்கம (பொயு 1336-1485)
, சாலுவ (1485-1505), துளுவ (1491-1570),
அரவீடு (1542-1646) என்று நான்கு வெவ்வேறு வம்சங்களின் ஆட்சி நடந்தது. இவை ஒன்றுக்கு
ஒன்று இரத்த உறவில்லாதவை. ஆளும் அரசனின் வலிமை குன்றும்போது தலைமைப் படைதளபதி அல்லது
அமைச்சரால் ராணுவப் புரட்சி மூலம் அரியணை கைபற்றப்பட்டு ஆட்சி தொடர்ந்தது. ஆனால் அவர்களின்
ஆட்சிக் கொள்கை, கலாசார சிந்தனை இரண்டும் ஒன்றாகவே இருந்தன. இதனால் ஆண்ட அரசர் வம்சம்
மாறியபோதும் அரசின் பெயர் விஜயநகர அரசு என்றே விளங்கியது. இவர்களில் ஒரே ஒரு ஆண்டு
ஆட்சி செய்த மன்னரும் உண்டு; இருபத்து எட்டு ஆண்டுகள் அரியணையில் இருந்த மன்னரும் உண்டு.
விஜயநகரம் என்னும் பெயரைக் கொண்ட தலைநகரமே அரசின் அடையாளப் பெயராகத் திகழ்ந்தது.
தட்சிண நிலப்பரப்பில் ஆட்சிசெய்த அஹமத்நகர், பேரார், பீடார்,
கோல் கொண்டா, பிஜாபூர் சுல்தான்கள்தான் ஒன்றுகூடி இந்தப் பேரரசை வீழ்த்தி அழித்தவர்கள்.
ரெய்ச்சூர், தலைக்கோட்டை என்னும் இடங்களில் நிகழ்ந்த இருபெரும் போர்கள் இந்த வீழ்ச்சியை
முடிவுசெய்தன. அரவீடு வம்சத்து ஆட்சிக் காலத்தில்தான் பேரரசின் வீழ்ச்சி தொடங்கியது.
அரவீடு அலியராம ராயருக்கும் (1542-1565) தட்சிண சுல்தான்களின் கூட்டமைப்புக்கும் இடையே
தலைக்கோட்டையில் நிகழ்ந்த போரில் அலியராமவர்மர் தனது முலீம் படை
த்தளபதி இருவரால் வஞ்சிக்கப்பட்டு
போர்க்களத்திலேயே சிறைப்பிடிக்கப்பட்டு அங்கேயே தலை சீவிக் கொல்லப்பட்டார். சுல்தான்களின்
படை ஹம்பியை (விஜய நகரத்தின் இன்னொரு பெயர்) அடைந்து முற்றிலுமாக நகரை அழித்துவிட்டது.
ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அப்போது கைவிடப்பட்ட அந்த நகரம் இன்றளவும்
விஜயநகரப் பேரரசின் கலை மாட்சியை பறைசாற்றியபடி அதேவிதமாகவே உள்ளது.
தலைகோட்டை போரில் விஜயநகரப் படை தோல்வியுற்ற செய்தி தெரிந்தவுடன்
மன்னர் அலியராமராயரின் தம்பி திருமலை தேவராயர் (1565-72) அரசு கஜானா, குடை, வாள் கிரீடம்
போன்ற அரசு அடையாளங்கள், அரசு உடைமைகள், அரசு விசுவாசிகள், அரச குடும்பத்துப் பெண்கள்
ஆகியோருடன் ஹம்பியிலிருந்து வெளியேறி பேணுகொண்டாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சியை மீட்டெடுத்துக்
கட்டமைக்க முயற்சி செய்தார். (பேணுகொண்டா என்னும் இந்த நகரம் அனந்தப்பூர் மாவட்டத்தில்
மேற்கு கோதாவரி நதிப் பகுதியில் உள்ளது. ஹம்பிகும் இந்த நகருக்கும் இடையே 233 கி.மீட்டர்
இடைவெளி.) ஆனால், தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் அதுவரை விஜயநகரப்பேரரசின் கீழ் ஆண்டுவந்த
நாயக்கர் எனப்படும் தலைவர்கள் தம்மை சுதந்திர அரசுகளாக அறிவித்துக் கொண்டு விட்டனர்.
போரின்போது உதவிக்கும் வரவில்லை. அவருக்குப்பின் உண்டான அரியணைக்கான சண்டைகளினாலும்
தக்காண சுல்தன்களின் தொடர் படையெடுப்புகளினாலும் விஜய நகரப்பேரரசு உருக்குலைந்து
1614ல் முற்றுமாக அழிந்துபோனது.
முதலாம் புக்கராயர் (1374) காலத்திலேயே தென்னாடு முழுவதும்
விஜயநகரப் பேரரசின் ஆட்சி வளையத்துக்குள் வந்துவிட்டது. இரண்டாம் தேவராயர்
(1424-1446) சங்கம அரசர்களில் புகழின் உச்சம் தொட்டவராக அறியப்படுகிறார். இது மேலைநாடுகளிலிருந்து
வந்த யாத்திரிகர்களின் குறிப்புகளிலிருந்து தெரிகிறது. அண்மையில் ஹம்பியில் மேற்கொள்ளப்பட்ட
அகழ்வாராய்ச்சியால் இந்த அரசின் அறுபடாத வரலாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. விஜயநகரப்பேரரசின்
இலக்கு ஹிந்துமதத்தை மீட்டெடுப்பது என்பதாக இருந்தபோதும், இஸ்லாமிய மக்களுக்கு அரசு
எந்தவித இடையூறும் செய்யவில்லை. திறமைமிக்க இஸ்லாமியர் அரசின் போர்ப் படையில் தளபதிகளாகவும்
விளங்கினர்.

விஜயநகரப்பேரரசின் மிகவும் புகழ்பெற்ற பேரரசர் துளுவ வம்சத்து
கிருஷ்ண தேவராயர் (1509-1529) கன்னடம், தெலுங்கு, வடமொழி ஆகியவற்றில் பெரும் புலமை
பெற்றிருந்தார். இலக்கியம், கலை ஆகியவற்றில் அளவற்ற ஈடுபாடும் கொண்டிருந்தார். தெலுங்கு
மொழியில் இவரால் இயற்றப்பட்ட ‘ஆமுக்த மால்யதா’ (ஆண்டாள் சரித்திரம்) வடமொழியில் இயற்றப்பட்ட
‘ஜம்பாவதி கல்யாண’ இரண்டும் புகழ்பெற்றவை. கிருஷ்ணதேவராயரின் அரசவையில் அஷ்டதிக்கஜங்கள்
என்னும் எட்டு கல்விமான்கள் இடம் பெற்றிருந்தனர். அலசானி பெத்தன்னா, முத்து திம்மன்னா,
தெனாலி ராமகிருஷ்ணா போன்றவர் இதில் புகழ்பெற்றவர். புக்கராயரின் மருமகள் கங்காவதி இயற்றிய
‘மதுர விஜயம்’ என்னும் காவியம் விஜயநகர மன்னர் மதுரை சுல்தானை வெற்றி கொண்ட சிறப்பைக்
கூறுகிறது.
கன்னடமும், தெலுங்கும், வடமொழியும், தமிழும் இவர்களால் ஒரேவிதமாகப்
பேணப்பட்டன. இவர்களில் சில மன்னர்கள் சைவத்தையும், சிலர் வைணவத்தையும் அரவணைத்துக்
கொண்டனர். வைணவபக்தி வழியை முன்னெடுத்துச் சென்ற பக்திமான்கள் ஹரிதாசர் என்றும், சைவ
பக்தி வழியைப் பின்பற்றினோர் வீரசைவர் (லிங்காயதுகள்) என்றும் சிறப்பிக்கப்பட்டனர்.
இவர்களில் அந்தணர், அந்தணர் அல்லாதார் இருவரும் அடங்குவர். ஹரிதாசர் எனப்படுவோர் இயற்றிய
பாடல்கள் ‘தேவர்நாமா’ என்று குறிப்பிடப்பட்டன. வியாசராயர், புரந்தரதாசர், கனகதாசர்
போன்றவர் மத்வாசாரியாரின் பக்தி வழியைப் பின்பற்றினார்கள். குமாரவியாசர் என்னும் அந்தணர்
மஹா பாரதத்தைக் கன்னட மொழியில் காவியமாகப் படைத்தார். இவருக்குப் பின்னால்தான், கன்னடமொழி
புதிய வடிவம் பெற்றது. வீரசைவரான சமரதாசர் ‘பிரபுலிங்கலீலா’ என்னும் காவியத்தை வடமொழியில்
இயற்றினார். பின்னர் அது தெலுங்கு தமிழ் இரண்டிலும் மொழிபெயர்க்கப்பட்டது.
மதம் சாராதவை என்று வகைப்படும் படைப்புகளில் சில: ‘சங்கீதசார’
வித்யாரண்யர் (இசைநூல்), ‘ரதிரத்ன ப்ரதீபிகா’ புரந்தரதாசர் (இசைநூல்), ‘ஆயுர்வேத சுதாநிதி’
ஸயனர் (மருத்துவநூல்). ‘வைத்யராஜவல்லபம்’ லக்ஷ்மண பண்டிதர் (மருத்துவநூல்).
தமிழைப் பொருத்தவரை பெரும்பாலும் அது மதுரை மன்னர்களால்
(சிற்றரசு நிலை) வளர்க்கப்பட்டது. என்றாலும், ‘சிவப்பிரகாசப் பெருந்திரட்டு’ என்னும்
அத்வைத்த நூலை ஸ்வரூபாநந்த தேசிகர் எழுதினார். இவர் கிருஷ்ணதேவ ராயரின் அரசவையில் இடம்
பெற்றிருந்தார். அவரது சீடர் தாட்டுவராயர் (துறவி) அதன் குறுகிய வடிவத்தை ‘குறுந்திரட்டு’
என்று எழுதினார். ‘இருசமய விளக்கம்’ என்னும் சைவ-வைணவ பக்திவழி பற்றின நூலை ஹரிதாசர்
என்பவர் எழுதினார். அவர் வைணவத்தை பேணியமையால் அதை உயர்த்தியே தமது கருத்துகளை வெளியிட்டார்.
விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்கால ஆலயக் கட்டடக்கலை, சாளுக்கிய-ஹொய்சாள-பாண்டிய-சோழர்
காலத்துப் படைப்புவழி, அவர்கள் பின்பற்றிய உத்தி ஆகியவற்றின் கூட்டுக் கலவையைக் கொண்டிருந்தது.
உத்தியும் செயற்பாடும் முன்னர் இருந்த வழக்கிலிருந்தே எடுத்தாளப்பட்டன. ஆயினும் இவை
ஹம்பி நகரத்தில் மட்டுமே மையம் கொண்டிருந்தன. தமது ஆட்சிக் காலத்தில் தென்னாடு முழுவதும்
கவனிப்பாரற்றுக் கிடந்த பல ஆலயங்களை விஜயநகர மன்னர்கள் மேம்படுத்தியும், விரிவாக்கம்
செய்தும் அவற்றுக்குப் புதிய முகம் கொடுத்தனர். ஹொய்சாள சிற்பிகள் சிலைவடிக்கப் பயன்படுத்திய
மாக்கல் இப்போது கைவிடப்பட்டது. கிரானைட் வகை (அடர்த்தியும் கனமும் கொண்டது) கற்கள்
கொண்டு சிலைகள் உருவாயின; ஆலயங்களும் எழுப்பப்பட்டன. சாளுக்கிய சிற்ப பாணியிலேயே சிலைகள்
உருவாயின. 14ம் நூற்றாண்டில் தட்சிண, வேசர பாணி ஆலயங்களை உருவாக்கிய அவர்கள் பின்னர்
திராவிடபாணி ஆலயங்களையும் கட்டுவித்தார்கள். நிலத்தில் உள்ள பிரசன்ன விரூபாட்சி ஆலயம்,
(புக்கர் காலம்) ஹசாரா ராமர் ஆலயம் (கிருஷ்ணதேவராயர் காலம்) இரண்டும் இதற்கு எடுத்துக்காட்டாக
உள்ளன. ஒருபுறம் சுல்தான்களின் அரசுகளுடன் தொடர் போர் நிகழ்ந்தவண்ணம் இருந்தபோதும்
அது ஆட்சி சார்ந்ததாகவே இருந்தது. கட்டடக் கலைப் படைப்பில் இந்திய முஸ்லீம் பாணி இரண்டும்
விரவியவிதமாக மாளிகைகள் ஹம்பியில் எழுப்பப்பட்டன.
விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்காலத்தில்தான் ஆலயங்கள் நுழைவாயிலில்
பெரும் கோபுரமும், உட்புறம் கூரையும், தூண்வரிசையும் தாழ்வாரமும் கொண்டதாகவும் அமைக்கப்பட்டன.
ஆலயவளாகத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்புவதும் தொடங்கியது. அது ராய (ராஜ) கோபுரம்
என்று சிறப்பிக்கப்பட்டது. கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலத்தில் இது அதிகரிக்கத் தொடங்கியது.
பேலூர் சென்னகேசவர் ஆலயம், ஸ்ரீசைலம் ஆலயம், திருவரங்கம் அரங்கன் ஆலயம், மதுரை மீனாக்ஷிஅம்மன்
ஆலயம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆலயம், குடந்தை ராமசாமி ஆலயம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
கோபுரங்கள் செங்கல், சுண்ணாம்பு கொண்டு எழுப்பப்பட்டன.
ஆலயத்தை வலமாகச் சுற்றிவர திறந்தவெளிப்பாதை, நாற்புறமும்
திறந்த தூண்கள் கூடிய மஹா மண்டபம், கல்யாண மண்டபம், ஆலயத் திருக்குளம் ஆகியவை ஆலயத்துடன்
இணைக்கப்பட்டு ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது. மண்டபத் தூண்களில் பெரும்பாலும் பின்கால்களை
நிலத்தில் ஊன்றி, உடலை உயர்த்திப்பாயும் யாளிகள், புரவிகள் போன்ற விலங்குகள் தூணின்
முன்புறம் அல்லது பக்கங்களில் இடம்பெற்றன. புரவியில் அமர்ந்தவிதமாகவும், அவற்றின் கால்களுக்கு
இடையில் வாளுடன் நின்றவிதமாகவும் போர்வீரர்கள் காணப்பெற்றனர், நூறு, ஆயிரம் என்னும்
எண்ணிக்கைகளில் மண்டபத்தைத் தூண்கள் தாங்கின. தூண்களின் நடுப்பகுதியில் புராண, இதிஹாச
காட்சிகள் அல்லது தனித்த நடனமங்கையரின் தோற்றங்களைக் கொண்டிருந்தன. தூண்கள் ஒரேகல்லில்
உருவானவை. தூண்கள் அமைந்தவிதம் விஜயநகர சிற்ப வழியில் ஒரு எழில் கூடிய விரிவாக்கம்.
புஷ்கரணி என்று விளிக்கப்படும் ஆலயத் திருக்குளங்கள் சதுரவடிவமானவை.
நாற்புறமும் மடிப்புகளுடன்கூடிய படிகளைக் கொண்டவை. அவை மிகுந்த சிற்பக் கலை சிறப்புக்கூடியவை.
ஆனால், இந்த அமைப்புமுறை இவர்களால் உருவானது அல்ல, இவர்களுக்கு முன்னரே சாளுக்கியர்,
பின்னர் ஹொய்சாளர் தமது ஆட்சிக்காலத்தில் தோற்றுவித்ததின் தொடர்ச்சிதான்.
முன் நாட்களில் அரசர், அவரது குடும்பத்தினர் போன்றோர் வசித்த
கட்டடங்கள், மாளிகைகள் ஆகியவை செங்கல், காரை, சுண்ணாம்பு, மரம் இவற்றால் உருவாயின.
எனவே அவை அழிந்தும் போயின. இதனால் அவற்றின் கட்டடக் கலைச் சிறப்புபற்றி நமக்குத் தெரிய
வாய்ப்பில்லை, ஆனால், ஹம்பியில் உள்ள மாளிகைகள் நமக்குப் பல அரிய செய்திகளைக் கொடுக்கின்றன.
விஜயநகர ஆட்சி காலத்து மாளிகைகள் பொதுவாக கிழக்கு அல்லது வடக்கு திசைநோக்கி நுழைவாயிலுடன்
கட்டப்பட்டன. அளவில் பெரிய மாளிகையின் முன்புறம் இருபக்க நுழைவாயில்கள் கூடியதாக இருந்தது.
மேலும் அவை ஆலயங்கள்போல நிலத்திலிருந்து ஆறு அல்லது எட்டு அடிகள் பாறை கொண்டு உயர்த்திய
தளத்தில் எழுப்பப்பட்டன. எனவே நிலத்திலிருந்து மாளிகை வாயிலை அடைய பலபடிகள் ஏறவேண்டும்.
இந்த மேடையும் அடுக்கு தளங்களை கொண்டிருந்தது. அவற்றில் பல்வேறு விலங்குகள், மலர்க்
கொடிகள், design என்று கூறப்படும் வடிவங்கள், அச்சுறுத்தும் மானுட-விலங்கு முகங்கள்
போன்ற தொடர் சிற்பங்கள் இடம்பெற்றிருந்தன. மாளிகையைத் தாங்கிய தூண்களும் கூரையின் உத்திரங்களும்
மரத்தினாலான சிற்பவேலைப் பாட்டுடன் உருவாயின. மாளிகைகளின் நுழைவாயில்கள் மிகுந்த சிற்பவேலைப்
பாடுகளுடன் விளங்கின. மாளிகையின் முன்புறவெளியில் பல கலைவடிவங்கள் கொண்ட சுற்றுக் கைப்பிடிச்
சுவர் அமைந்த நீர் தேக்கங்களின் நடுவில் பலவடிவங்கள் கொண்ட நீரூற்று நாற்புறமும் நீரை
பீச்சி அடித்தது.. மாளிகையின் உட்புறம் சிறு நுழைவாயில்களுடன் மடித்தவழி கொண்டதாக இருந்தது.
இந்த நுழைவாயில்களின் அமைப்பு இஸ்லாமியக் கட்டடப்பாணியில் இருந்தது. எண்ணிக்கை கூடிய
தடாகங்களையும், பழத்தோட்டங்களையும், நீர்வழித்தடப் புதுமையையும் கொண்டிருந்தது இந்நகரம்.
மாளிகைகளிலும் மண்டபங்களிலும் தந்தத்தால் வடிவமைக்கப்பட்ட மலர்க் கூட்டங்களால் உட்கூரைகள்
அழகுபடுத்தப்பட்டிருந்தன. நகரச்சுற்றி பெருஞ் சுவர் எழுப்பப்பட்டிருந்தது.
“இதுவரை வேறெங்கும் கண்டிராததும் கேட்டிறாததுமான பேரழகைக்கொண்ட
கம்பீரமான நகரம் இது” என்கிறார் ஆசியாவின் மையப்பகுதியிலிருந்து பயணித்த அப்துர் ரசாக்.
“பெருவணிக வளாகம் இருபுறமும் தூண்கள் தாங்கிய மூடிய கூரைகூடிய நீண்ட பாதையும் காட்சிக்
கூடங்களையும் கொண்டிருந்தது. உயர்ந்தெழுந்த அரச மாளிகை பகலிலும் இரவிலும் ஒளிர்ந்தது.
அதைச்சுற்றி கல்லால் உண்டாக்கப்பட்ட நீர்வழிகளில் துங்கபத்திரா நதியிலிருந்து நீர்
கொணரப்பட்டது. அது தூண்களால் நிலத்திலிருந்து உயர்த்தப்பட்டிருந்தது. இது முன்னர் கண்டிராத
நீர்வழித்தட உத்தி. நகர் முழுவதும் பூங்காக்களும், மரங்களும் நிறைந்திருந்தன. நகரத்தின்
சுற்றளவு 60 மையில்கள் இருந்தது” என்கிறார் இத்தாலிய நாட்டுப் பயணி நிகொலாகோட்டி
(Nicolo Conti 1420). இத்தாலிய நகரங்களைப் பார்த்திருந்த பியஸ் (Paes 1522) என்னும்
போர்ச்சுகல் நாட்டுப்பயணி “விஜயநகரம் இத்தாலிய ரோம் நகரம் போலப் பொலிவுடன் திகழ்கிறது”
என்கிறார்.
விரூபாக்ஷர் ஆலயம்
இந்த ஆலயத்தில் வழிபாடு என்பது 9ம் நூற்றாண்டிலேயே – விஜயநரப்
பேரரசுக்கு முன்பே – இருந்துள்ளது. அது தடையற்று தொடர்ந்து இன்றும் உள்ளது. தொடக்கத்தில்
அளவில் சிறிய சிவாலயமாக இருந்த அது காலம் செல்லச்செல்ல விஜயநகரப் பேரசின் ஆட்சியில்
விரிவாக்கம் செய்யப்பட்டது. முன்பு சாளுக்கிய, ஹொய்சாளர் ஆண்டகாலத்திலும் ஆலயம் மேம்படுத்தப்பட்டது,
அதற்கான தடயங்கள் இன்றும் உள்ளன. ஆலயத்தின் நுழைவாயில் ராய கோபுரம் இரண்டாம் தேவராயர்
(1424-1465) ஆட்சிக் காலத்தில் லக்கண தேனேச என்னும் சிற்பியின் தலைமையில் எழுப்பப்பட்டது.
50 மீட்டர் உயரமும் ஒன்பது அடுக்குகளும் கொண்ட கிழக்கு நுழைவாயில் கோபுரம், ஆலயத்தின்
மைய மண்டபம் இரண்டையும் மன்னர் கிருஷ்ண தேவராயர் தாம் அரசுக் கட்டிலில் அமர்ந்த ஆண்டில்
தமது காணிக்கையாக எழுப்பியதற்கான கல்வெட்டுச் சான்று (1510) உள்ளது, வடக்கு வாயில்
கோபுரம் கனககிரி கோபுரம் என்று குறிப்பிடப்படுகிறது. அதன் வழி துங்கபத்திரா நதியைச்
சென்றடைகிறது. வடிவியலைப் பின்பற்றி முக்கோணவடிவில் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது, ஆலயத்தின்
சிறப்புகளில் இது முதன்மையானதாகும். 1565ல் இந்த நகரம் முற்றிலும் அழிக்கப்பட்டபோதும்
இந்த ஆலயவழிபாடு நிற்காமல் தொடர்ந்தது. 19ம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆலயச் சீரமைப்பு,
கிழக்கு, வடக்கு கோபுரங்கள், உட்கூரை ஓவியங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.
ரங்க மண்டப ஓவியங்கள்
16ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இந்த மண்டபத்துக் கூரையிலும்
அதைத் தாங்கும் உத்திரங்களிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டன. இந்து மதம் சார்ந்ததும், அப்போது
வாழ்ந்தவருடையதுமான காட்சிகள் அவற்றில் இடம்பெற்றன. பின்னாளில் விஜயநகர ஓவியப்பாணி
என்று அழைக்கப்பட்ட அது, சாளுக்கிய, சோழ, பாண்டிய பாணிகளை ஒருங்கிணைத்ததுதான்.
ரங்க மண்டபத்து விதானம் சதுரப்பரப்புகளாகப் பிரிக்கப்பட்டு
ஓவியங்கள் தீட்டப்பட்டன. புராணங்களிலிருந்து தேர்வுசெய்யப்பட்ட கதைக் காட்சிகளின் இடையே
ஸ்ரீவித்யாரண்யரை ஊர்வலமாகப் பல்லக்கில் சுமந்து செல்லும் காட்சியும் உள்ளது. திண்டுடன்
கூடிய அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அவர் அமர்ந்துள்ளார். பல்லக்கை நால்வர் சுமக்கின்றனர்.
சவரிகொண்டு விசிறிய படியும் கையில் கோலுடனும் பல்லக்கை பின்தொடரும் பணியாட்கள், பல்லக்கின்
முன்னும் பின்னும் யானைகளின் வரிசை என்று ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. இதேபோன்ற இன்னொரு
ஓவியத்தில் ஸ்ரீவித்யாரண்யருடன் மன்னரும் காணப்படுகிறார்.
சுவர்ப்பரப்பை ஓவியத்துக்கு ஏற்றவிதமாகப் பூசி, அது நன்கு
காய்ந்தபின் ஓவியங்கள் தீட்டும் சிக்கோ முறை (Seeco) தான் மேற்கொள்ளப்பட்டது. இது அஜந்தா
ஓவிய வழியிலிருந்து வேறுபட்டது. காவிநிறத்தில் உருவங்கள் வரைந்து கொள்ளப்பட்டன. மூன்று
அல்லது நான்கு வண்ணங்களே பயன்படுத்தப்பட்டன. சுவரிலிருந்து ஓவியம் உரியாமல் இருக்க
வச்சிரம் போன்ற பசைகலந்த வண்ணங்களால் ஓவியம் தீட்டப்பட்டது. ஓவியத்தின் பின்புலம் சிவப்பு
நிறத்திலும், உருவங்கள் வெளிரிய நீலத்திலும் காணப்படுகின்றன. ஆனால் பெரும்பகுதி ஓவியங்கள்
பொலிவிழந்தும், உதிர்ந்தும், மூடர்களால் சிதைக்கப்பட்டும் பரிதாபமான நிலையில் உள்ளன.
மண்டபத்தின் மையப்பகுதி ஓவியங்கள்தான் அவற்றின் அடையாளங்களாக இன்று நம்மிடையே உள்ளன.
விஜய விட்டல ஆலயம்
சங்கம மன்னர் 2ம் தேவராயர் (1422-1446) தமது ஆட்சிக்காலத்தில்
இந்த ஆலயத்தைக் கட்டுவித்தார். இதில் பல்வேறு மேம்படுத்துதல்களும், விரிவாக்கங்களும்
மன்னர் கிருஷ்ணதேவ ராயர்காலத்தில் (1509-1529) மேற்கொள்ளப்பட்டன. ஹம்பியில் உள்ள ஆலயங்களிலேயே
இதுதான் அளவில் பெரியது. ஆலயக் கட்டட உன்னதமும், முதிர்ந்த கலைநயமும் கொண்ட சிற்பங்களும்,
அதன் கலைச்சிறப்புக்குப் பேசப்படுவது. ஆலய வளாகம் உயர்த்திய கல்சுவர் கொண்டது. முப்புற
நுழைவாயில்களும் அவற்றின் மேல் உயர்ந்த கோபுரங்களும் கல்லால் உருவான பல மண்டபங்களும்,
கருவறைகளும் கொண்டது. அவற்றில், மஹா மண்டபம், சபா மண்டபம், ரங்க மண்டபம், உற்சவ மண்டபம்,
கல்தேர் ஆகியவை பார்வையாளரைப் பெரிதும் கவர்பவை.
மைய மண்டபம்
ஆலயவளாத்தின் திறந்தவெளிப் பகுதியில் சிற்பவேலைப்பாடுகள்
கொண்ட, நிலத்திலிருந்து உயர்த்தப்பட்ட கல்மேடையின் மீது இம்மண்டபம் அமைந்துள்ளது. அம்மேடை
பல அடுக்குகள் கொண்டது. அவற்றில் ஹொய்சாள பாணியில் வரிசை வரிசையாகப் பறவைகளும் விலங்குகளும்
மலர்களும் போர்வீரர்களின் தோற்றங்களும் சிற்பமாகியுள்ளன. மண்டபத்தை அடைய உள்ள கிழக்குப்
பகுதிப் படிகளில் யானைகளின் சிற்பங்களும், நுழைவாயிலின் இருபுறமும் மிக நேர்த்தியான
சிற்பங்களுடன் பத்து அடிகள் உயரம் கொண்ட நாற்பது கல்தூண்களும் காணப்படுகின்றன. மண்டபம்
நான்காகவும் மையப்பகுதி என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் மையப் பகுதியில்
ஒரு பக்கத்துக்கு நான்கு என்னும் விதத்தில் பதினாறு தூண்கள் சிற்பங்களால் நிரம்பி வழிகின்றன.
சதுர வடிவமான இப்பகுதி மண்டபத்துக்குப் பேரழகைக் கொடுக்கின்றது. உட்கூரையும் பல்வேறு
வடிவங்களால் எழிலூட்டப் பட்டுள்ளது.
ரங்க மண்டபமும் இசைத்தூண்களும்
ஐம்பத்தாறு கல்தூண்களை உள்ளடக்கியது ரங்க மண்டபம். அவை அளவில்
மிகப் பெரியவை. அவற்றுடன் இணைந்த ஏழு சிறிய தூண்களும் ‘சரிகம’ இசைத்தூண் என்று பெரும்
புகழ் பெற்றவை. கைகொண்டு இத்தூண்களை மெல்லத் தட்டினால் ஏழு தூண்களிலிருந்தும் ஏழு வகையான
ஒலிகள் உண்டாகின்றன. அதுதான் இவற்றின் சிறப்பு, புதிர். இது காண்போரை வியக்க வைப்பது.
ஆங்கிலேய ஆட்சியின்போது இந்த ஒலி பற்றிய மர்மத்தைக் கண்டுபிடிக்க விரும்பி இரண்டு இசைத்
தூண்களை வெட்டி எடுத்து ஆராய்ச்சி செய்தனர். எனினும் அதில் எந்த மர்மமும் இல்லையென
உணர்ந்தனர். இந்த இரண்டு தூண்களும் இன்றும் மண்டபதின் ஒருபுறம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கல்தேர்

ஒவ்வொரு சுற்றுலாத் தலத்திலும் அனைவரையும் ஈர்க்கும் ஒன்று
இருக்கும். அதுவே அதன் அடையாளமாகவும் அமையும். ஹம்பிக்கு அடையாளமாகத் திகழ்வது. கல்தேர்.
கர்நாடக அரசின் சுற்றுலாத்துறையின் குறியீடும் (logo) இதுதான். இந்தத் தேர் மன்னர்
கிருஷ்ணதேவராயரால் கட்டுவிக்கப்பட்டது. கோனார்க் சூரியனார் ஆலயத்தைக் கண்டு மோகித்த
அவர் அதுபோன்ற ஒன்றை இங்கும் தோற்றுவித்தார் என்கிறது வராற்றுக் குறிப்பு.
உண்மையில் இது தேர்மட்டுமில்லை. தேரின் உருவம் கொண்ட ஆலயம்.
முன்னர் அதன் மேற்புறதில் உள்ள கருவறையில் ஒரு பெரிய கருடனின் சிலை கம்பீரமாகக் காட்சியளித்தது.
நகரம் அழிக்கப்பட்டபோது அது இடித்து உடைக்கப்பட்டது. முதல்பார்வைக்கு இது ஒரே கல்லில்
செதுக்கிய சிற்பம் போல் தோன்றினாலும், ஊன்றி கவனித்தால் அது பாறைத் துண்டுகளைக் கொண்டு
உண்டானது என்பது விளங்கும். இணைப்புகள் தெரியாதபடி உருவாக்கியிருப்பதில் இருந்து சிற்பியின்
சிற்பநுணுக்க முதிர்ச்சி புலப்படுகிறது. இது அவர்களின் படைப்பு மேதைமையை பறைசாற்றும்
அடையாளம். தேரின் அமைப்பு திராவிட ஆலய பாணியைக் கொண்டுள்ளது. தேரை இழுப்பதுபோல இப்போது
உள்ள யானைகள் இருக்கும் இடத்தில் முன்பு புரவிகள் இருந்தன. அதற்கு அடையாளமாக புரவிகளின்
பின்னங்கால் குளம்பு நிலத்தில் ஒட்டிக்கொண்டு உள்ளதைக்கொண்டு புரிந்துகொள்ளலாம். இரண்டு
யானைகளுக்கும் இடையில் உடைந்த கல் ஏணி காணப்படுகிறது. அந்தப் படிகளின்மீது ஏறி கருடர்
சிலைக்கு வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டன. உயர்த்திய மேடையின் மீது எழுப்பப்பட்ட தேரின்
இருபுறமும் இரண்டு சக்கரங்கள் உள்ளன. அவற்றை சுழற்றும் விதமாக சிற்பி உண்டாக்கினான்.
இப்போது பாதுகாப்புக் கருதி அவை அசையாதபடி சிமெண்ட் கலவை பூசப்பட்டுள்ளது. விட்டலர்
ஆலயத்தின் திறந்த வெளியில் உள்ள இதன் முன் புகைப்படம் எடுத்துக்கொள்ளாதவரே இரார், என்னையும்
சேர்த்து.
ஆனால், விஜய விட்டல ஆலயம் இன்று இடிபாடுகளுடன் உருக்குலைந்து
காணப்படுகிறது. கருவறையில் முன்னர் விட்டலரின் சிலை வழிபாட்டுகளுடன் விளங்கியது. இப்போது
கருவறையில் சிலை இல்லை. மைய மண்டபத்தின் மேற்குப்புறம் சிதைந்த நிலையில் உள்ளது. முன்பு,
அங்காடிகளுடன் பரபரப்பாக இருந்த ஆலயத்தை அடையும் நீண்ட சாலையும் பராமரிப்பின்றிப் பாழ்பட்டுக்
காட்சியளிக்கிறது. அன்று புரவிகள் பெரும் அளவில் வியாபாரம் செய்யப்பட்டது இங்குதான்.
இப்போது ஆலய வளாகம் இரவில் ஒளிவிளக்குகளுடன் கூடியதாக, சுற்றுலாப் பயணிகளுக்கு அதன்
அழகைச் சொல்கிறது. ஆண்டுதோறும் புரந்தரதாசர் இசைவிழா கோலாகலமாக நிகழ்த்தப்படுகிறது.
ஹசாரா ராமர் ஆலயம்
மன்னர் கிருஷ்ணதேவ ராயரால் 1513ல் இந்த ஆலயம் கட்டப்படத்
தொடங்கி அவரது ஆட்சி முடியும் முன்னர் நிறைவு பெற்றது. இந்த ஆலயம் பொது மக்களக்கானது
அல்ல. மன்னரும் அவரது குடும்பத்தினரும் மட்டும் வழிபடுவதற்கு என்றே உருவாயிற்று. கிழக்கு
திசையில் ஆலயத்தின் நுழைவாயில் தூண்களுடன் கூடிய மண்டபத்துடன் தொடங்குகிறது. உள்ளே
கருங்கல் தூண்கள் தாங்கும் ரங்க மண்டபத்தை அடைவோம். உயரம் கூடிய அத்தூண்கள் கண்ணைக்
கவரும் அரிய சிற்பங்களைக் கொண்டுள்ளன. விநாயகர், மஹிஷாசுரமர்த்தனி, ஹனுமான் விஷ்ணுவின்
பலதோற்றங்கள் ஆகியவை இவற்றுள் சிலவாகும். நாற்கரங்களிலும் ஆயுதம் ஏந்தியவாறு புரவியில்
வீற்றிருக்கும் கல்கி அவதார சிற்பம் மிகச்சிறப்பானது.
ரங்க மண்டபத்து மேற்கு, தெற்கு, வடக்கு நுழைவாயில்கள் கருவறை
செல்லும் பாதையில் இணைகின்றன. ஆலயத்தின் வெளிச்சுற்று வழியை ஒட்டி மதில்சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
இது வெளிப்புறத்தில் நீளவாட்டில் ஐந்தாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கீழிருந்து வேழம்,
புரவிகளின் வரிசை, கிருஷ்ணரின் இளம்பருவ விளையாட்டுகள், முருகன், விநாயகர் உருவங்கள்
தொடர் புடைப்புச் சிலைகளாக உள்ளன. ருஷ்யசிங்கர் கதை, புத்ரகாமேஷ்டி வேள்வி, சீதா சுயம்வரம்
ஆகிய சிற்பத் தொகுப்புகள் கலை ஆர்வலரைக் கிறங்கவைக்கின்றன.
கருவறையின் வடக்கில் உள்ள தாயாரின் ஆலயம் அளவில் சிறியது.
ஆனால் மிகுந்த சிற்பவேலைப்பாடுகள் கொண்டது. இதன் சிறு மண்டபத்தின் கிழக்குச் சுவரில்
நரசிம்மரின் உருவம் பெரிய அளவில் காணப்படுகிறது. நடைவழியில் மன்னருக்கு வைணவ ஆச்சாரியார்
பொருள் ஒன்றை அளிப்பது போன்ற சிற்பம் உள்ளது. அது கிருஷ்ணதேவ ராயரும் அவரது குரு வியாச
ராயரும் என்போர் உண்டு. வடக்கு எல்லையில் உள்ள கல்யாண மண்டபம் 1521ல் எழுப்பப்பட்டது.
விஷ்ணுவுக்கான இந்த ஆலய வெளிச்சுவர் மூன்று அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டு இராமாயணக்
காவியம் தொடர் சிற்பங்களாகியுள்ளது. அவ்விதமே தாயாரின் ஆலய வெளிச்சுவரில் குசன் – லவன்
கதையும் சிற்பமாகியுள்ளது.
அச்சுதராயர் ஆலயம்
கிருஷ்ணதேவராயரின் மரணத்துக்குப் பிறகு அவரது தம்பி அச்சுததேவராயர்
அரசுக்கட்டிலில் அமர்ந்தார். அவரது ஆட்சிக்காலத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டது.
(1534). திருவேங்கடவனுக்கானது இந்த ஆலயம். மதங்க மலைக்கும் கந்தமதன மலைக்கும் இடையில்
உள்ள இது விஜயநகர ஆலயக் கட்டட அமைப்பின் முதிர்ச்சியைக் கொண்டதாக உள்ளது என்று கலை
வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். விஜயநகரப் பேரரசின் கடைசி ஆலயமும் இதுதான்.
இரண்டு சதுரமான அரவணைப்புகளுடன் கூடிய மையப்பகுதியில் ஆலயம்
உள்ளது. தூண்களுடன் கூடிய தாழ்வாரம் இரண்டு காணப்படுகிறது. மற்ற பகுதிகள் இடிபாடுகளாகக்
காணப்படுகின்றன. கருவறையில் முன்னர் கருட சிற்பம் வழிபடப்பட்டு வந்தது. மண்டபத்துத்
தூன்களில் கஜேந்திர மோக்ஷம், பசுக்களின் கூட்டத்தில் குழலூதும் கண்ணன், காளிங்கன் மீது
நடமாடும் கிருஷ்ணன் போன்ற அரிய சிற்பங்கள் இவற்றில் உள்ளன. திருக்கல்யாண மண்டபம் ஒன்றும்
காணப்படுகிறது. இவ்வாலயம் ஹம்பியிலிருந்து சிறிது தள்ளி இருக்கிறது. இன்று இவ்வாலயம்
இடிபாடுகளுடன் பரிதாபமாகக் காட்சியளிக்கிறது. வருவோரின் எண்ணிக்கையும் குறைவுதான்.
பத்ம மஹால்
இந்த மாளிகையின் கட்டட வடிவ அமைப்பைச் சார்ந்து இது பத்ம
மஹால் என்று குறிப்பிடப்படுகிறது. அந்த நாளையக் கட்டடக் கலையின் உன்னதத்துக்கு இது
ஒரு எடுத்துக்காட்டு. இந்திய இஸ்லாமியக் கட்டட வழிகளை இணைத்துக் கட்டப்பட்ட இரு தளங்களைக்
கொண்ட இம்மஹால், நாற்புறமும் எழுப்பிய சுவரும், மலரும் தாமரையின் வடிவம் கொண்ட உப்பரிகைகளுடன்
கூடியது. கட்டடத்தை 24 தூண்கள் தாங்குகின்றன. நுழைவாயிலின் மேற்புறம் கவிழ்த்த வில்போல்
வளைந்து வடிவாகியுள்ளன. இந்த மஹால் அரசுப் பெண்டிருக்கானது. அவர்களின் உல்லாசத்துக்காகவே
கட்டப்பட்டது. எனவே ‘சித்ராங்கி மஹால்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒன்றுதான் போர்
அழிவிலிருந்து தப்பிப் பிழைத்து இடிபாடுகள் இல்லாத முழுகட்டடமாக உள்ளது.
ஹேமகூடமலை ஆலயத்
தொகுப்பு
ஹம்பி நகரத்தின் தெற்குப்புறத்தில் உள்ள ஹேமகூடமலை எனப்படும்
இந்த மலையின் மேற்புறம் நீண்ட தட்டையான அமைப்பைக் உடையது. 9ம் நூற்றாண்டு முதல் 14ம்
நூற்றாண்டு வரை அவ்வப்போது கல்லால் எழுப்பப்பட்ட ஆலயங்களைக் கொண்டது. முன்னர் இப்பகுதி
முழுவதும் மதிற்சுவரால் சூழப்பட்டிருந்தது. இதற்கான தடையங்கள் இன்றும் உள்ளன. பெரும்பாலும்
இந்த ஆலயங்கள் சிவனுக்கானவை.
இந்த மலையின்மேல் ஏறத்தாழ 35 ஆலயங்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும்
இப்போது வெறும் நினைவுச் சின்னங்கள்தான். பல ஆலயங்கள் முற்றிலுமாக இடிந்து காணப்படுகின்றன.
ஆலயங்கள் சிலவற்றில் சிலபகுதிகள் இன்றும் திடமாக உள்ளன. இவற்றின் கட்டடப்பாணி விஜயநகர
கட்டடப் பாணியிலிருந்து வேறுபட்டது. அவற்றின் அமைப்பு வடிவம் காரணமாக ஜைனர் ஆலயம் என்று
தவறாகப் பேசப்படுகிறது. மலையின் தெற்குப்புறத்தில் பழைய விரூப்பாக்ஷர் ஆலயம் உள்ளது.
இந்த ஆலய வளாகத்தில் ஒரு சிறிய குளம் உள்ளது. இன்றும் அங்கு வழிபாடு நிகழ்கிறது. கிருஷ்ணர்
ஆலயம், படவிலங்கர் ஆலயம், லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம் போன்றவை விஜயநகர ஆட்சி காலத்தில்
உருவானவை.
லக்ஷ்மி நரசிம்மர்
ஆலயம்
ஹேமகூடமலையில் உள்ள இந்த ஆலயமும் இதில் உள்ள லக்ஷ்மி நரசிம்மர்
சிலையும் கிருஷ்ணதேவராயர் ஆட்சிக் காலத்தில் (1528) கட்டப்பட்டன. ஹம்பியில் உள்ள சிலைகளிலேயே
லக்ஷ்மி நரசிம்மர் சிலைதான் அளவில் பெரியது. ஒற்றைக் கல்லில் உருவானது. விட்டலர் ஆலயத்தில்
உள்ள கல்தேரைப்போல இதுவும் ஹம்பியின் புகழை ஓங்கி ஒலிக்கும் சிலை.


அமர்ந்த நிலையில் உள்ள இதன் உயரம் அதன் மேடையையும் சேர்த்து
6.7 மீட்டர்களாகும். மண்டலமிட்ட ஆதிசேஷன் மேல் சம்மணமிடும் விதமாக அமர்ந்த நிலையில்
சிலை உருவாக்கப் பட்டுள்ளது. சம்மணமிட்டு அமரும் நிலைக்கு ஆயத்தமாவது போன்ற கால்கள்.
இரு தொடைகளும் நிலத்தில் படியாது உள்ளன. ஏழுதலை ஆதிசேஷன் படத்தை விரித்து அவரது தலைக்கு
மேல் குடையாகக் காட்சியளிக்கிறார். பெரிய கிரீடம் சூடிய சிலையின் இருபுறமும் மகரதோரணம்
ஒன்று அலங்காரமாக அமைந்துள்ளது. நரசிம்மரின் முகத்தில் உருண்டு பிதுங்கி விழிக்கும்
கண்களும், பற்களும், விரியும் வாயும் காண்போரை உறையச் செய்யும். ஆதிசேஷனின் தலைக்கு
மேல் சிங்க முகம் ஒன்றும் உள்ளது. ‘மாலோல நரசிம்மர்’ என்றும், ‘உக்கிர நரசிம்மர்’ என்றும்
இதற்கு சிறப்புப் பெயர்கள் உண்டு. முன்னர் அவரது மடியில் இலக்குமியின் சிலை அமர்ந்த
நிலையில் இருந்துள்ளது. 1565ல் நிகழ்ந்த போருக்குப்பின் இச்சிலையின் கைகளும் இலக்குமி
சிலையும் உடைக்கப்பட்டன. இலக்குமி சிலை இப்போது அருங்காட்சிக்கூடத்தில் பாதுகாப்பாக
உள்ளது.
இந்தத்தொகுப்பில் விநாயகரின் சிலைகள் இரண்டு உள்ளன. ஒன்று
சசிவேகலு கணேசர் (கடுகு கணேசர்) மற்றது கடலகலு கணேசர் (நிலக்கடலை கணேசர்).

சிதைந்த நிலையில் இருந்தாலும்,
விஜயநகரப் பேரரசின் கட்டடக் கலையின் சிறப்பை இன்றும் பறைசாற்றி நிற்கிறது ஹம்பி.

Posted on Leave a comment

அ.கா.பெருமாளின் ‘தமிழறிஞர்கள்’: அறியப்பட்ட ஆளுமைகளின் அறியப்படா முகங்கள் | செ.ஜகந்நாதன்



தமிழறிஞர்கள்,
அ.கா.பெருமாள், காலச்சுவடு.

காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள அ.கா.பெருமாளின்
‘தமிழறிஞர்கள்’ என்னும் நூல் பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த,
பழந்தமிழ் இலக்கியங்களுடன் தொடர்புடைய 40 தமிழ் அறிஞர்களைப் பற்றிய தொகுப்பு நூல்.
ஐந்து ஆண்டுகாலம் பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளின்
தொகுப்பான இந்நூலில் இடம்பெற்றுள்ள 40 நபர்களைத் தவிர மேலும் 80 பேரைப் பற்றிய தகவல்களை
ஆசிரியர் சேகரித்து வைத்துள்ளதாக முன்னுரையில் கூறுகிறார். அச்செய்திகளும் எதிர்காலத்தில்
நூலாக்கம் பெறக்கூடும்.
நூலில் இடம்பெற்றுள்ள 40 நபர்களும் சீரான தன்மை உடையோர் அல்லர்.
தனித்தமிழை முன்னிறுத்திய மறைமலையடிகள்; தேவநேயப்பாவாணர்; தமிழொடு வடமொழிப் பேரறிவும்
வாய்க்கப் பெற்ற பண்டித மணி கதிரேசஞ் செட்டியார்; திராவிடச் சார்பாளர் எனத் தமிழறிஞர்களாலும்
திராவிடக் கொள்கையை எதிர்த்துப் பேசியவர் என திராவிட இயக்கத்தவர்களாலும் ஒரு சேரப்
புறக்கணிக்கப்பட்ட கா.அப்பாத்துரையார் எனப் பல்வேறு சிந்தனைத் தளங்களில் செயல்பட்ட
ஆளுமைகளை அறிமுகம் செய்யும் வகையில் நூல் அமைந்துள்ளது.
ஒவ்வொரு ஆளுமையைப் பற்றிய கட்டுரையைத் தொடங்கும்போதும் சுவாரசியமான
அறிமுகத்துடன் வாசகர்களைக் கட்டுரைக்குள் அழைத்துச் செல்லும் உத்தி அழகானது.
தமிழ் அறிவுப் புலங்களில் அதிகம் அறியப்படாதவர்களான, கிரேக்க
– சம்ஸ்க்ருத நாடகங்களை ஒப்பிட்டு ஆராய்ந்தவரும் 60,000 உட்தலைப்புகளுடன் கூடிய நாடகக்
கலைக் களஞ்சியம் தயாரிக்கத்தகுந்த வல்லமை வாய்க்கப்பெற்றிருந்தவருமான ஆண்டி சுப்பிரமணியம்
பற்றியும் தமிழ்ப் பயண நூல் எழுத்தாளர்களில் முன்னோடியான சே.ப.நரசிம்மலு நாயுடு, தமிழ்
இலக்கியங்களின் கால நிலையை வானியல் அறிவுடன் ஆராய்ந்த எல்.டி.சாமிக்கண்ணு பிள்ளை, தமிழ்க்
கவிதையியல் திறனாய்வுத் துறையில் புதிய பரிணாமங்களைக் காட்டிய ஆ.முத்துசிவன் போன்ற
ஆளுமைகளை அறிமுகம் செய்துள்ளது இந்நூலின் சிறந்த பணி.
அறியப்படாத ஆளுமைகளை அறிமுகம் செய்ததைப் போல தமிழ் அறிவுப்
புலங்களில் நன்கு அறியப்பட்டவர்களின் அறியப்படாத முகங்களையும் இந்நூல் அறிமுகம் செய்கிறது.
உதாரணமாக சேரன்மாதேவி குருகுலப் பஞ்சாயத்திற்காகவே அதிகம்
விமர்சிக்கப்பட்ட வ.வே.சு ஐயரின் பன்மொழிப் புலமை, தமிழ்மொழிப்பற்று, புத்திலக்கிய
ஆதரவு, மொழிபெயர்ப்பு மற்றும் ஒப்பியல் துறை பங்களிப்பு ஆகியவற்றை வ.வே.சு வைப் பற்றிய
கட்டுரை திறம்பட எடுத்துரைக்கின்றது.
‘கம்பராமாயண சாரம்’ நூலுக்காகவே பெருமளவு கொண்டாடப்படும்
வெ.ப.சுப்பிரமணிய முதலியார் கால்நடைகளுக்கு ஏற்படும் வியாதி தொடர்பாக மூன்று நூல்களும்
கால்நடை மருத்துவம் சார்ந்த மொழிபெயர்ப்புகளும் செய்தவர் என்பதும், பாரத சக்தி மகா
காவியத்துக்காக அதிகம் பேசப்படும் சுத்தானந்த பாரதியார் தமிழிசை இயக்கத்திற்குப் பெரும்பங்காற்றியுள்ளார்
என்பதும், ‘கைகேயியின் நிறையும் தசரதன் குறையும்’ போன்ற ஆய்வுகளுக்காகவும் திராவிட
இயக்கச் சிந்தனை மரபின் முன்னோடித் தமிழாசான்களாகவும் அறியப்படும் சோமசுந்தர பாரதியாரின்
சுதந்திரப் போராட்ட ஈடுபாடும் இந்நூல் தரும் அரிய தகவல்கள்.
தன் 30ம் வயதில் ஜே.எம்.நல்லுசாமிப்பிள்ளை சிவஞான போதத்தை
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் என்ற செய்தியைப் படிக்கும்போது பெருவியப்பு எழுவதைத்
தவிர்க்க இயலாது.
அறிஞர்களின் கருத்துக்கு ஏற்புகள் இருந்ததைப் போல் எதிர்ப்புகள்
வலுவாகவே இருந்துள்ளன. மா.இராச மாணிக்கனாரின் ‘தமிழர் திருமணத்தில் தாலி’ குறித்து
அவருக்கும் ம.பொ.சிக்கும் நடந்த விவாதங்கள் சான்று.
சில சூழல்களில் விவாதங்கள் தீவிரத்தன்மையையும் எட்டியுள்ளன.
‘கனங்குழை’ என்ற திருக்குறள் சொல்லுக்கு அன்மொழித்தொகை என இலக்கணக்குறிப்பு எழுதிய
சிவஞான முனிவரின் கருத்தை மறுத்து எழுதியமைக்காக சைவப்பற்றாளர்களான யாழ்ப்பானத் தமிழறிஞர்களுக்குப்
பயந்து அரசஞ் சண்முகனாருக்கு இன்சூரன்ஸ் எடுத்து அவரை யாழ்ப்பாணத்துக்குப் பேச அழைத்துப்
போக வேண்டிய நிலை ஏற்பட்டதாம்.
தமிழின் முதல் எள்ளல் இலக்கியமான மருமக்கள் வழி மான்மியம்
படைத்ததும் தமிழ்க் கதைப் பாடல்கள் பற்றி முதன்முதலாக ‘திவான் வெற்றி’ என்ற கதைப் பாடல்
பற்றி ஆங்கிலக் கட்டுரை எழுதியதும் தனித்துவப்பணி; செவ்வியல் படைப்புகளான சங்கப் பாடல்கள்
கடினமானவை எனினும் அவற்றைப் பிரித்துப் பொருள் புரிந்து படிக்கும் மாதிரியை உருவக்கிய
கி.வா.ஜ தான் தமிழின் நாட்டுப்புறவியல் ஆய்வுகளுக்கு முன்னோடி எனச் சில ஆளுமைகள் ஆழமாகத்
தடம் பதித்த பகுதிகளை நூல் சுட்டிச் செல்கிறது.
‘அல்லிக்கும் அர்ஜுனனுக்கும் உள்ள உறவு பாண்டியர் தொடர்பானது
என ராகவையங்கார் கூறும் கருத்து இன்னும் விரிவாக ஆராயப்பட வேண்டியது’ என்றும், ஏ.சி.செட்டியார்
மேற்கொண்ட தமிழ்ச் சமூகக் கட்டமைப்புக்கும் யாப்பிலக்கணத்துக்கும் இடையிலான தொடர்பு
விரிவாக அலசப்பட வேண்டும் என்பதும் போன்ற பகுதிகள் எதிர்கால ஆய்வாளர்களுக்கான மேலாய்வுக்
களங்களை இனங்காட்டுவன.
திருப்பனந்தாள் மடத்தில் பாவாணருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்,
ஆண்டி சுப்பிரமணியத்தின் நாடகக் கலைக் களஞ்சியத்தை சென்னைப் பல்கலைக் கழகம் தொலைத்த
அதிர்ச்சி என சோகத் தருணங்கள் காணப்படினும் 70 வயதில் மனைவி, மகள், மருமகன் ஆகியோரை
இழந்தபோதும் தன் தனிப்பட்ட துக்கங்களை ஒதுக்கி வைத்துவிட்டு கம்பராமாயணப் பதிப்புக்காக
உழைத்த மு.ராகவையங்காரின் மனவலிமை நமக்கு உற்சாகம் தருகின்றது.
பரிதிமாற் கலைஞர் உரையாசிரியரான நச்சினார்க்கினியருக்கு வெண்கலச்
சிலை வைக்க வேண்டும் என வலியுறுத்தினாராம். ‘தமிழ் மொழியின் பேரைச் சொல்லி ஒருவருக்குச்
சிலை வைத்து வழிபாட்டை உருவாக்குவது எதிர்காலத்தில் மோசமான சூழ்நிலையை உருவாக்கும்;
யோசித்துப் பார்’ எனக் கூறி சில மூத்த தமிழறிஞர் மறுத்தனராம். மொழிவளத்திற்கான சேவை
மிகவும் தட்டையாக நடைபெறும் தற்காலச் சூழலில் அந்த அறிஞர்களின் வருவது உரைக்கும் திறன்
வியப்பாக உள்ளது.
ஆளுமைகளை அறிமுகம் செய்தல், ஆய்வுக்க களங்களைச் சுட்டுதல்,
அறிஞர்களின் வாழ்வையும் பணியையும் நோக்கிய தேடலை முடுக்கிவிடுதல் போன்ற வகையில் இந்நூல்
தமிழ் இலக்கியச் சூழலில் கவனம் தரத்தக்க தொகுப்பாகும்.

Posted on Leave a comment

பீஷ்ம நாரயண் சிங்கின் ஆலிங்கனம் | ஜெயராமன் ரகுநாதன்

உத்திரப்பிரதேசத்தின் ஈட்டா மாவட்டத்தில் ஆள் கடத்தல், அதற்குப்பணம்
பறிப்பது தொடர்ந்து நடை பெறுவதாகச் செய்திகள் சொல்லுகின்றன. போன மாதம் கூட டெல்லியில்
கடத்தப்பட்ட டாக்டரும் கம்பவுண்டரும் இதே ஈட்டா மாவட்டத்தில்தான் மீட்டெடுக்கப்பட்டனர்.
1983ல் நான் ஹிந்துஸ்தான் லீவரில் மானேஜராக வேலை செய்த சமயம்
இந்த ஈட்டாவில் இரண்டு மாதம் ஒரு குக்கிராமத்தில் கழித்தேன். அப்போதே ஆள் கடத்தல் என்பது
அவர்களின் வாழ்க்கையில் சரளமாகிப்போன அவலத்தைக் கண்டு அதிர்ந்தேன்.
1982ல் பஸ்ஸில் ஃப்ளோரா ஃபௌண்டனில் சீட் கிடைத்தது பூர்வ
ஜென்ம புண்ணியம். அதுவும் மாலை ஏழு மணிக்கு. எனக்கென்னவோ இதெல்லாம் ஒரு பொருட்டாகவே
தெரியவில்லை. அன்று மும்பை நகரமே அலம்பிவிட்டாற்போலச் சுத்தமாக இருந்தது. எல்லோரும்
நல்லவராகத் தெரிந்தார்கள். என் கையில் ஹிந்துஸ்தான் லீவரின் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.
என் ஆதர்ஸ கம்பெனி ‘நீ தேர்ந்தேடுக்கப்பட்டுவிட்டாய்’ என்று சொன்ன அந்தக்கணம் மறுபடி
மறுபடி ரீவைண்ட் ஆகி ஒரு வித சுஷுப்தி அவஸ்தையிலேயே செம்பூர் வந்து சேர்ந்தேன்.
அடுத்த பதினாலு மாதங்கள் ஹிந்துஸ்தான் லீவரில் நான் நாயடி
பேயடி பட்டு வேலை கற்றுக்கொண்டது பற்றியோ, கிட்டத்தட்ட ஒரு மாதம் இரவு எட்டு மணிக்கு
வந்து அடுத்த நாள் காலை ஆறு மணி வரை வேலை செய்துவிட்டு, மறுபடி ஒன்பது மணிக்கு ஆபீஸ்
வந்தது பற்றியோ, கடுமையான ஆடிட்டுக்கு நடுவில், தென்றலாய் ஃபெர்க்யூஸன் கம்பெனியிலிருந்து
வந்த காதம்பரி பற்றியோ இங்கே எழுதப்போவது இல்லை.
பதினெட்டு மாத டிரெயினிங்கில் இரண்டு மாதம் ஈட்டா மாவட்டத்தில்
உள்ள ஒரு குக்கிராமத்தில் நான் குப்பை கொட்டிய சாகசமே இந்தக் கட்டுரை. கிராமத்தில்
எதேச்சையாக தென்பட்ட, வளைவுகள் நிறைந்த பதினாறு வயதுப் புயல் பற்றி இருக்கும் என்ற
சம்சயத்துடன் இதைப் படிப்பவர்கள் இப்போதே விலகலாம். வாழ்க்கை எப்போதாவதுதான் அப்படிப்பட்ட
சுவாரஸ்யங்களை ஜாதக விசேஷம் உள்ளவர்களுக்கு அளிக்கிறது.
ஈட்டாவில் கம்பெனியின் ஃபாக்டரி கெஸ்ட் ஹவுஸில் டாக்டர் சில
பல ஊசிகள் போட்டார்.
“அங்கெல்லாம் ஈசியா இன்ஃபெக்ஷன் வரும்! ரெண்டு நாளுக்கு மேல்
ஜுரம் நீடித்தால் ஈட்டா ஆஸ்பத்ரியில் சேர்த்துவிடச் சொல்!”
அன்று மாலை நாலு மணிக்கு பக்கெட், ஒரு மெல்லிசான படுக்கை,
ஹரிக்கேன் விளக்கு அப்புறம் ஒரு லோட்டா கொடுத்து ஜீப்பில் ஏற்றி ‘……….’ என்கிற
அத்வானத்துக்குக் கொண்டு விட்டார்கள். எனக்கு அளித்த சாமக்கிரியைகளின் காரணத்தை விளக்குவது
இப்போது அவசியம்.
பக்கெட் – வெட்டவெளிக்குளியலுக்காம்.
படுக்கை – கயிற்றுக்கட்டிலில் மூட்டைப்பூச்சி அதிகம்.
ஹரிக்கேன் விளக்கு – அந்தப் பேட்டைக்கே மின்சாரம் கிடையாது.
லோட்டா – வேறெதற்கு, வயல் வெளியில் ஒதுங்கத்தான்!
ஈட்டா மாவட்டத்தில் எங்கள் கம்பெனி நூற்றைம்பது கிராமங்களைத்
தத்தெடுத்து இருந்தார்கள். ஒவ்வொரு பயிற்சியாளரும் இரண்டு மாதம் ஒரு கிராமத்தில் தங்கி
அதன் முன்னேற்றத்திற்காக எதாவது செய்ய வேண்டியதுதான் எங்கள் முக்கியமான ப்ராஜெக்ட்.
இது பின்னால் வேலை நிரந்தரமாவதற்கு மிக ஆதாரமானது.
தங்குவதற்கு கிராமத்திலேயே கொஞ்சம் வசதியான விவசாயியின் வீட்டில்
ஏற்பாடு. இரண்டு மாதங்களுக்குப் பின் காசு கொடுத்தால் மரியாதைப்படாது என்பதால் அவர்
வீட்டிற்குத் தேவையான சாமான்கள் ஏதாவது வாங்கிக்கொடுப்பது வழக்கமாக இருந்தது.
எனக்குத் தஞ்சமளித்த விவசாயி பீஷ்ம நாராயண் சிங். ஒல்லியான
மீசை வைத்த பஞ்சகச்சம் கட்டின ஆசாமி. அவருக்கு பதினாறில் ஆரம்பித்து இருவத்திரெண்டு
வரை ஐந்து பெண்கள். ஒன்றுக்கும் கல்யாணம் ஆகவில்லை. எனவே என்னை வீட்டுக்குள் வைத்துக்கொள்ள
முடியாது என்று வாசலில் வானம் பார்த்த ஒரு கயிற்றுக்கட்டிலில் தள்ளி விட்டார்.
அக்டோபர் மாதம் என்பதால் கொஞ்சம் குளிர். அதிக வெளிச்சமில்லாத
காலை. கண் விழித்தபோது எனக்குப் பத்து அடியில் கிராமமே உட்கார்ந்து என்னை கண் கொட்டாமல்
பார்த்துக்கொண்டிருந்தது. இப்பவே எனக்கு அரைகுறை இந்திதான். அப்போது சுத்தமான திராவிடனாக
இருந்தமையால் சைகையில்தான் பேச்சுவார்த்தை. அவர்கள் இந்தியில் பேசுவார்கள். டீ வந்தது
(மூன்றாவது பெண்). குடித்துவிட்டு என்ன பண்ணுவது என்று தெரியாமல் பேந்த பேந்த விழித்துக்கொண்டு
இருந்தேன். அப்போதுதான் அந்த சரித்திரப் பிரசித்திபெற்ற உரையாடல் நிகழ்ந்தது.
“மானேஜர் சாப்! நஹி ஜா ரஹேஹோ?”
“கஹான்?”
“நை, ஆப் நஹி ஜா ரஹே ஹோ.”
எனக்கு புரியவில்லை. உதவிக்கு வந்தான் ஒரு பையன்.
“வோ பூச் ரஹா ஹய், ஆப் டட்டி நஹி ஜா ரஹே ஹோ!”
சுருக்கமாகச்சொன்னால் அவனுக்கு நான் ஏன் இன்னும் காலைக்கடனுக்குப்
போகவில்லை என்ற கவலை!
ஒரு வழியாகக் கிளம்பி வெட்கத்தினால் வெகு தூரம் போய்த் தனியான
இடம் பார்த்து உட்காரப்போகும்போது வெகு அருகில் கணீர்க்குரல்.
“ஜெய் ராம் ஜி கி, மானேஜர் சாப்!”
திடுக்கிட்டுப் பார்த்தால் ஐந்தடி தூரத்தில் இன்னொரு புதருக்கருகில்
ஒரு சக ஆள்!
ஒரு வழியாகக் காலைக்கடன் பஞ்சாயத்து முடிந்து நான் கிணற்றடிக்குக்
குளிக்கப் போனால் கூடவே முப்பது பேர் வேடிக்கை பார்க்க. ராம் தேரி கங்கா மைலி ஹீரோயின்
போல உணர்ந்தேன்.
இதெல்லாம் முதல் ஓரிரண்டு நாட்களுக்குத்தான். வெட்ட வெளியில்
காலைக்கடன், பொதுக்கிணற்றில் குளியல் எல்லாம் பின்னாள் பம்பாய் வாழ்க்கையில் கிடைக்காதா
என்று ஏங்க வைத்த அனுபவமாக மாறிப்போனது.
வ வே சு அய்யர் கதைகளில் போல இரண்டு மாதங்கள் “உருண்டோடின”!
கடைசி நாட்களில் பீஷ்ம நாராயண் சிங் என்னை வீட்டுக்குள் அனுமதித்ததும்,
அவர் தம் பெண்களை விட்டே எனக்கு உணவு பரிமாற வைத்ததும் என் நேர்மையை விட அவரின் வெள்ளை
மனசு காரணமாகத்தான் என்பதை ஒத்துக்கொள்ள எனக்குத் தயக்கமே இல்லை.
புறப்படும் அன்று பீஷ்ம நாராயன் சிங்கும் அவர் மனைவியும்
பெண்களும் கண்ணீர் விட்டபோது பாழாய்ப்போன அந்த என்னுடைய போலித்தனம் அழவிடாமல் வீரமாகப்
பேச வைத்தது.
மண் வாசனையும் வேர்க்கடலை வறுபடும் நெடியும் கொஞ்சம் அழுக்கும்
வியர்வையும் கலந்த பீஷ்ம நாராயன் சிங்கின் அந்த ஆலிங்கனம்!
அப்புறம் என்ன, கம்பெனியின் ஓட்டத்தில் நானும் ஓடினேன். சண்டிகர்,
கல்கத்தா, ஜம்மு என்று இடம் இடமாக மாற்றம். 1989ல் சீனியர் மானேஜராகப் பதவி உயர்ந்து
ஈட்டா ஃபாக்டரியின் ரிவ்யுக்குப் போகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. நான் இருந்த கிராமத்தைக்
காட்டுவதற்காக மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு போயிருந்தேன்.
அந்த சனிக்கிழமை ஜீப் எடுத்துக்கொண்டு கிராமத்துக்குப் போனோம்.
வெட்கமின்றி அழ வைத்த நெகிழ்ச்சியான வரவேற்பு.
என்னமோ என் பிறந்த ஊருக்கு வந்தாற்போல வாழ்த்தும் விஜாரிப்புமாய்
இருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் பாலும், ஜிலேபியும் அடைத்தார்கள். என் மனைவிக்கு “இங்கதான்
குளிப்பாரு, இங்கதான் வாலி பால் ஆடுவாரு, இந்தக் கிணறு இவர் அரசாங்கத்தில் சொல்லிப்
போட்டதுதான்” என்றெல்லாம் சுற்றுலா வேலை செய்தார்கள்.
பீஷ்ம நாராயண் சிங்கைத் தேடினேன்.
இரண்டு வீடு தள்ளி இருக்கும் ராம் சிங்தான் இருந்தார்.
“அவரைக் கடத்தி விட்டார்கள். மாசக் கடைசிக்குள் முப்பதாயிரம்
கேட்டிருக்கிறார்கள். இதோ இவர்தான் அவரின் முதல் மாப்பிள்ளை. பணம் சேகரித்துக் கொண்டிருக்கிறார்.
ஒன்றும் பயமில்லை, வந்துவிடுவார்!”
இந்த சமாச்சாரத்தை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.
மாப்பிள்ளை கீழ்ப் பார்வை பார்த்துக்கொண்டு ஒரு வித அலட்சியத்துடன்
இருப்பதுபோல எனக்குத் தோன்றியது. வீட்டில் அவரின் மனைவி, “வோ ஆயேகா” என்று என்னமோ விதை
நெல் வாங்க டவுனுக்குப் போயிருப்பதுபோல சொன்னார்கள்.
“ஜாக்கிரதை, ஜாக்கிரதை” என்று சொல்லி விடை பெற்று வந்துவிட்டோம்.
இரண்டு வாரம் கழித்து ஒரு நாள் பாம்பேயில் ஆஃபீஸ் காரிடாரில்
லிஃப்டுக்காகக் காத்திருந்தபோது ராமநாதன் வருவதைப் பார்த்தேன். அவர் ஈட்டா ஃபாக்டரி
மானேஜர்.
“ரகு! நீ “…………” லதானே இருந்தே? அந்த பீஷ்ம நாராயண்
சிங் செத்துட்டான்”!
“ஐயோ என்ன ஆச்சு?”
“முப்பதாயிரம் குடுக்க முடியலை. கரும்பு காட்டுல குத்துயிரும்
கொலை உயிருமா ஆள போட்டிருந்தாங்க. மூணு நாள் காஸ்கஞ்ஜ் ஆஸ்பத்திரில கஷ்டப்பட்டு செத்துப்போயிட்டான்.
நம்ம டாக்டரை விட்டு கூட பாக்கச் சொன்னேன். பிரயோஜனமில்லாம போய்டுத்து!”
உறைந்து போயிருந்தேன். உடனே மனசில் தோன்றியது அந்தப் பெண்கள்தான்.
யார் அவர்களைக் கரையேற்றுவார்கள். அவ்வளவு அன்புடன் சக மனிதனை நேசித்த பீஷம் ஏன் இப்படி
கோரமாய்ச் சாக வேண்டும். அந்த குடும்பம் எப்படி அலை பாயுமோ?
“ச்சே ச்சே! கிராமங்கள் பாம்பே டெல்லி போல விட்டேத்தியாய்
இருக்காது. கூட இருப்பவர்கள் அந்தப் பெண்களுக்கு ஏதேனும் நல்ல வழி காட்டுவார்கள். முதல்
மாப்பிளை சொந்த பிள்ளை போலக் குடும்பத்தை காப்பாற்றுவான்!”
சும்மாவா சொல்லியிருக்கார் மகாத்மா காந்தி, “இந்தியாவின்
உயிர் நாடி கிராமங்களில்தான் இருக்கிறது.”
என்னை நானே தேற்றிக்கொண்டேன்.
இன்றும்கூட எப்பவாவது சில இரவுகளில் அந்த பீஷ்ம நாராயண் சிங்கின்
ஆலிங்கனமும் அந்த வாடையும் என்னை எழுப்பி மீதி இரவில் தூங்க விடாமல் செய்து விடுவதுண்டு.
36 வருடங்களுக்குப் பின்னரும் நிலைமை அதிகம் மாறாததுதான்,
நாம் இந்த நாட்டின் ஜனநாயகத்துக்குக் கொடுக்கும் விலை என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.