Posted on Leave a comment

அஞ்சலி: மனோகர் பாரிக்கர்


மனோகர் பரிக்கர் மார்ச் 17ம் தேதி காலமானார்.
சிறு வயதிலேயே ஆர் எஸ் எஸ்ஸில் சேர்ந்து ஸ்வயம்சேவக் ஆனவர். இறுதி மூச்சு வரை இந்தியாவின்
வளர்ச்சி குறித்து யோசித்தவர். தன் உடல்நிலை மோசமானபோதும் தனது பதவிக்குரிய பணிகளைச்
செய்துவந்தவர். கோவாவின் எளிய மக்களுக்கான முதல்வராக அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார்.
மோதி பிரதமராகப் பொறுப்பேற்றதும் மனோகர்
பரிக்கர் பாதுகாப்புத் துறை அமைச்சரானார். பாகிஸ்தான் மீதான முக்கியமான சர்ஜிகல் ஸ்ட்ரைக்கில்
மிகப்பெரிய பங்காற்றினார். கோவாவில் ஏற்பட்ட அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக மீண்டும்
கோவாவின் முதல்வரானார். தன் இறுதி மூச்சு வரை கோவாவின் முதல்வராகப் பணியாற்றினார்.
இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்கும்
தகுதிகள் அனைத்தும் ஒருங்கே பெற்றவர் என்று புகழப்பட்டவர் மனோகர் பரிக்கர். புற்றுநோயால்
அவர் உடல்நலம் நலிந்தது. ஆனாலும் தளராமல் மக்கள் பணியாற்றினார்.
ஐஐடியில் படித்துவிட்டு  இந்தியாவுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் ஆர் எஸ்
எஸ்ஸில் சேர்ந்தார். 1988ல் பாஜகவுக்கு அவரை அனுப்பி வைத்தது ஆர்எஸ்எஸ். 1994ல் முதன்முறையாக
பனாஜி தொகுதியில் வென்று சட்டமன்ற உறுப்பினரானார். அக்டோபர் 2000ல் கோவாவின் முதல்வரானார்.
ஐஐடி படித்துவிட்டு முதன்முதலாக முதல்வரான பெருமை இவரையே சேரும். 2002ல் இரண்டாம் முறையாக
முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மார்ச் 2012ல் மீண்டும் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.
மோடி பிரதம வேட்பாளராக முதன்முதலில்
முன்மொழியப்பட்டபோது வெளிப்படையாகத் தன் ஆதரவைத் தெரிவித்தார். மோடியின் அமைச்சரவையில்
பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். மார்ச் 2017ல் மீண்டும் கோவாவின் முதல்வராகப்
பதவியேற்றார்.
வாழ்நாள் முழுக்க நாட்டுக்காக உழைத்தவர்
மனோகர் பாரிக்கர். அவரது நினைவுகள் என்றென்றும் நம்மை வழிநடத்தும்.

Posted on Leave a comment

வெப்பம் (சிறுகதை) | ஸிந்துஜா

ண்ணன் வீட்டிலிருந்து வெளியே வந்து
சாலையின் இரு பக்கங்களையும் பார்த்து, ஒரு வண்டியும் வரவில்லை என்று நிச்சயம்
செய்துகொண்டு, ஒரே ஓட்டமாக சாலையைக் கடந்து எதிர்சாரியை அடைந்தான்.
 அவன் கையில் இருந்த நோட்டுப்
புத்தகத்தை உமாவிடம் காண்பிக்க வேண்டும். அவன் வித்யா மந்திரில் ப்ளஸ் டு
படிக்கிறான்.
 

காலையிலிருந்து இந்த ஸ்டேட்மென்ட்
சரியாக வரவில்லை. உமா பி.காம் படித்தவள்.
 அவர்கள் இரு குடும்பத்துக்கும்
இருபது வருஷப் பழக்கம். அவனுடைய தாத்தா உமாவின் தாத்தாவிடம் ஹிந்து பேப்பரைக்
கொடுத்துவிட்டு
 அவர் பொடி மட்டையிலிருந்து பொடியை சர்ரென்று
இழுத்துப் போட்டுக் கொள்வார். வீட்டில் எந்த பட்சணம் செய்தாலும் உமாவின் அம்மா
அதைக் கண்ணனின் வீட்டுக்குக் கொடுத்து அனுப்பி விடுவாள். கண்ணனின் அண்ணன் சங்கரும்
உமாவின் அண்ணன்
 சந்தானமும் கிரிக்கெட் ஆட்டத்தில் ஒரே டீம்.
அப்பாக்கள் காலையில் வாக்கிங் போவதில் ஆரம்பித்து இரவு அரசியல் பேசி முடித்து
விட்டுத்தான் தூங்கச்
 செல்வது வழக்கம்.
கண்ணன் உமாவைத் தேடிச் சென்றபோது,
அவள் வீட்டுவாசல் திறந்திருந்தது. உள்ளே போனதும் அவன் கண்ணில் பட்ட முதல் ஆள்
சந்தானம்தான்.
 
“என்னடா விடிஞ்சதும் விடியாததுமா
உமாவைத்
 தேடிகிட்டு வந்திட்டியா?” என்று கேட்டான் சந்தானம்.
வாசலில் கிடந்த நாலைந்து நாற்காலிகளில் ஒன்றில் உட்கார்ந்திருந்தான்.
“ஆமா. அவளைப் பாக்கணும்” என்றான்
கண்ணன்.
“அதான் தெரியுதே!” என்றான்
சந்தானம். “என்ன விஷயம்?”
“இல்ல. உமா கிட்டதான் கேக்கணும்”
என்றான் கண்ணன்.
 
“உனக்கு அவ பாவாடை நுனியை
பிடிச்சுக்கிட்டே அவ பின்னால அலையணும், இல்லே?” என்றான்.
கண்ணன் பதில் பேசாமல் நின்றான்..
சந்தானம் கண்ணன் கையிலிருந்த
நோட்டுப் புத்தகத்தை வாங்கினான். அதைப் பிரித்துப் பார்த்துவிட்டு “அட,
கணக்குதானடா. என்ன டவுட்டு? எங்கிட்ட சொல்லு” என்றான்.
“கணக்கு இல்ல, அக்கவுண்டன்சி.”
“எல்லாம் ஒண்ணுதாண்டா. உனக்கு என்ன
பிராப்ளம்?” என்று சந்தானம் அவனைப் பார்த்துச் சிரித்தான்.
கண்ணன் நோட்டைப் பிரித்து ஒரு
பக்கத்தை எடுத்து “டாலி ஆக மாட்டேங்குது” என்றான்.
 
சந்தானம் அதைப் பார்த்தான். நிமிஷங்கள் நகர்ந்தன. பிறகு அவன்
கண்ணனிடம் “டோட்டல் எல்லாம் சரியா இருக்கான்னு பாத்தியா?” என்று கேட்டான்.
கண்ணன் தலையை ஆட்டினான்.
“நீயே கூட்டிப் போட்டியா?”
“இல்ல. கால்குலேட்டர வச்சுத்தான்
போட்டேன்.”
“அதானே பார்த்தேன். நீ ஆயிரத்து
நூறுன்னு அடிச்சிருப்ப. அதுல ரெண்டாயிரத்து நூறுன்னு விழுந்திருக்கும். உனக்கு கூட்டறதுக்கு
சோம்பல்” என்று அவனிடம் கொடுத்தான்.
“இதுக்குத்தான் நான் சொன்னேன், உமா
கிட்ட காமிச்சிக்கிறேன்னு” என்றான் கண்ணன். 
அப்போது சிரிக்கும் சத்தம்
கேட்டது. சந்தானம் திரும்பிப் பார்த்தான். உமா.
“போடா போ. உனக்கும் இந்த
பொம்பளைகளை சுத்திகிட்டு அலஞ்சாதான் சரியா இருக்கும்” என்று சிரித்தான் சந்தானம்.
“சரி அவன் உன் லுங்கி நுனியை பிடிச்சிக்கிட்டு
வரட்டும். அந்தக் கணக்கை போட்டுக் குடுத்துரு” என்றாள் உமா. 
சந்தானம் அவளை முறைத்துப் பார்த்து
விட்டு கையிலிருந்த பேப்பரில் ஆழ்ந்தான்.
உமா கண்ணனிடம் “டெபிட்டுக்கும்
கிரெடிட்டுக்கும் என்னடா வித்தியாசம் வருது?” என்று கேட்டாள் நோட்டை வாங்கியபடியே.
கண்ணன் அவளிடம் “பதினெட்டாயிரம்”
என்றான்.
“ஓ, ரவுண்டு ஃபிகரா? அப்ப ரெண்டால
கழிச்சா ஒன்பதாயிரம் வருது. உனக்கு அந்த மாதிரி ஏதாவது…”
கண்ணன் அவளிடமிருந்து அவசரமாக
நோட்டைப் பிடுங்கிப் பார்த்துவிட்டு, “ ஒம்பதாயிரம் ஆடிட் பீசு.
அது டெபிட்டுல போறதுக்கு பதிலா கிரெடிட்டுல போயிருச்சு. இப்ப சரியா ஆயிரும்”
என்று திருத்திவிட்டுச் சிரித்தான்.
“அதாண்டா பாவாட நுனியோட
வெற்றி” என்று சந்தானத்தைப் பார்த்துச் சத்தமாகச் சொல்லிவிட்டுச் சிரித்தாள்
உமா. சந்தானம் திடீரென்று செவிடாகி விட்டவன் போலத் தலையை உயர்த்திப்
பார்க்கவில்லை.
“கண்ணா அவ்வளவுதானா? இல்ல வேற
ஏதாச்சும் சந்தேகம் இருக்கா?” என்று உமா கேட்டாள்.
“இந்த வராத கடனுக்கு மொதல்ல ஒரு
புரொவிஷன் என்ட்ரி போட்டு அப்புறமா அதை சரி பண்ணுறதுதான் சரியாவே வரமாட்டேங்குது”
என்றான் கண்ணன்.
“வராத கடனுக்கு எதுக்குடா
அக்கவுண்ட்ஸ்?” என்று சிரித்தான் சந்தானம்.
“இவரு விஜய்மல்யாவோட ஃபிரெண்டு.
அந்தக் கணக்குதான் இவுருக்கு வரும். விட்டுரு பாவம்” என்று அவனுக்கு
வலிப்புக் காண்பித்து விட்டு உமா உள்ளே போகத் திரும்பினாள். “கண்ணா, நீ உள்ளே
வா. கிச்சன்ல கை வேலையா இருக்கேன். அங்க உக்காந்து உன் சந்தேகத்தைக் கேளு” என்று
அவனைக் கூட்டிக்கொண்டு உள்ளே சென்றாள்
கண்ணன் உட்கார சமையல் அறையில் ஒரு
ஸ்டூலைப் போட்டுவிட்டு, அடுப்பில் கொதித்து முடிந்திருந்த சாம்பாரைக் கீழே
இறக்கினாள் உமா. கண்ணனிடம் “ஒரு நிமிஷம், இந்தப் புளித்தண்ணியை ஒரு கொதி விட்டு
தக்காளியையம் பருப்பையும் விட்டிட்டு வந்திர்றேன். அப்புறம் ஒரு பத்து நிமிஷம்
யாரு தொந்திரவும் இல்லாம உன்னோட டவுட்ட கிளியர் பண்ணிரலாம்” என்று சிரித்தாள்.
அவனும் சேர்ந்து சிரித்தான்.
“அரைக்கப்பு காபி குடிக்கிறியா?”
என்றாள். அவன் வேண்டாமென்றான். அவள் “பரவால்ல. ஒரு வாய்தான” என்றாள். அவன் சரியென்றான்.
உமா காப்பியைக் கலந்து எடுக்கும்போது
கையில் சுட்டு விட்டது. வலி பொறுக்க முடியாமல் “அம்மா” என்று கத்திவிட்டாள்.
கண்ணன் பதறிப் போய் “என்ன ஆச்சு உமா?” என்று எழுந்து வந்தான். 
“ஒண்ணுமில்லே. கைல சூடு
இழுத்திருச்சு” என்று கையை அவனிடம் காட்டினாள். அவன் கையைப் பிடித்துப்
பார்த்துவிட்டு “பர்னால் இருக்கா?” என்று கேட்டான்.
அப்போது சந்தானம் உள்ளே வந்தான்.
அவர்களைப் பார்த்து “என்ன ஆச்சு?” என்று கேட்டான்.
அவள் அவனிடம் காயம் பட்டதைச்
சொன்னாள். கண்ணன் அவள் கையைப் பிடித்துக் கொண்டிருந்ததை அவன் பார்த்தான். 
“சரி அவ கையை விடு. நான் பர்னால்
கொண்டு வரேன்” என்று உள்ளே போய் பஞ்சும் பர்னால் பாட்டிலும் கொண்டு வந்தான். 
அவள் கையைப் பஞ்சினால் சுத்தம்
செய்து பர்னால் போட்டபடியே “இப்ப எதுக்கு காபி போடப் போனே?” என்று கேட்டான்.
“கண்ணனுக்கு ஒரு வாய் குடுத்திட்டு
நானும் குடிக்கலாமின்னு பாத்தேன்” என்றாள். கண்ணனைப் பார்த்து “பயந்திட்டியா?”
என்று சிரித்தாள்.
“இவன் எதுக்கு பயப்படப் போறான்?”
என்றான் சந்தானம். “ஏண்டா காலேல உங்க வீட்டுல காபி குடுக்கலையா?” என்று கேட்டான்.
“சீ, உளறாதே. நாந்தான் காபி
குடின்னு கட்டாயப்படுத்தினேன்” என்றாள் உமா.
சந்தானம் திரும்பச் செல்லுகையில்
உமா அவனிடம் “நீ எதுக்கு வந்தே?” என்று கேட்டாள்.
அவன் ஒரு நிமிஷம் திகைத்து “சும்மாதான்.
தண்ணி குடிக்கலாம்னு வந்தேன். அதுக்குள்ளே இந்த கலாட்டா” என்றான்.
“சரி. நீயும் வேணா காபி
குடிக்கிறியா?” என்று கேட்டாள்.
“இல்ல, எனக்கு வேணாம்” என்றபடி
அவன் பானையிலிருந்து தண்ணீரை எடுத்துக் குடித்து விட்டுச் சென்றான். 
உமா கண்ணனுக்குக் காபியைக்
கொடுத்தாள். பிறகு “நான் ரசத்துக்கு வேண்டி செய்யறதை முடிச்சிட்டு வந்திர்றேன்.
சரியா?” என்று கேட்டுவிட்டு அடுப்பருகே சென்று வேலையைக் கவனித்தாள்.
ஏழெட்டு நிமிஷங்கள் வேலையாய்
இருந்துவிட்டு உமா அவனிடம் வந்தாள். அவன் உட்கார்ந்த இடத்துக்கு அருகே இருந்த
மேடையில் உட்கார்ந்துகொண்டு சொன்னாள். ”நமக்கு வரவேண்டிய கடன் பாக்கி
நிச்சியம் வராதுன்னா வராக்கடன்னு பத்து எழுதிரலாம். வருமோ வராதோன்னு சந்தேகத்தில இருக்கறப்ப
சரி கொஞ்சம் பாக்கலாம்னு காத்திருப்போம். அந்த சமயத்துல புரொவிஷன் என்ட்ரி போடறது
எதுக்காகன்னா அது நிச்சயம் கிடைக்கிற பாக்கின்னு சொல்ல முடியாதுங்கிறதை எடுத்துக்
காமிக்கிறதுக்காகத்தான். இப்ப பாரு. நா போட்டுக் காமிக்கிறேன். நோட்டைக் குடு.
இப்பிடி பக்கத்துல வந்து நில்லு. அவ்வளவு தூரத்திலிருந்து உன்னால நான் எழுதறதை
பாக்க முடியாது” என்று நோட்டை வாங்கினாள்.
அவள் எழுதுவதைக் கண்ணன் அவள் அருகே
நின்று குனிந்து பார்த்தான்.
“ஒன்னோட கையெழுத்து எவ்வளவு அழகாயிருக்கு?”
என்றான் கண்ணன்.
“நீயுந்தான் அழகா எழுதறே” என்று
சிரித்தாள் உமா.
“என்ன ஒரே சிரிப்பா இருக்கு?”
என்று உள்ளே வந்தான் சந்தானம்.
“சொன்னா உனக்கு கோபம் வரும்”
என்றாள் உமா. “கோழி குப்பையை கிண்டின மாதிரி கோணாமாணான்னு எழுதுறவன் நீ.”
“ஓஹோ. நீங்கள்லாம் அப்பிடியே
கண்ணுல ஒத்திக்கிற மாதிரி எழுதறவங்களோ?” என்றான் சந்தானம். “கண்ணா, என்னடா கணக்கு
கத்துக்கணும்னு சொல்லிட்டு வம்படிச்சிகிட்டு இருக்கியா?’
“இதோ பாரு, உமா எனக்கு சொல்லிக்
குடுத்திட்டு இருக்காங்க” என்றான் கண்ணன்.
“சரி தொலை. படிச்சா சரிதான்” என்று
பெரிய மனிதன் மாதிரி சொல்லியபடியே வெளியே போனான்.
“இப்ப எதுக்கு இங்க வந்தாப்புல?”
என்று உமாவிடம் கண்ணன் கேட்டான்.
“யாரு கண்டா?” என்றாள் உமா.
அப்போது செல்போன் அடித்தது. எடுத்து “ஹலோ?” என்றாள்.
எதிர்க்குரல் பேசியதைக் கேட்டு “ஆமாம்மா.
அவன் இங்கதான் இருக்கான். வரப்போ உங்ககிட்ட சொல்லிக்கிட்டு வரலையா? ஆமா.
அக்கவுண்ட்ஸ்ல சந்தேகம்னு வந்தான். சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கேன்”
என்றாள் 
மறுமுனையில் பேசியதைக் கேட்டு “சரி,
முடிஞ்சதும் அனுப்பி வைக்கிறேன்” என்று போனைக் கீழே வைத்தாள்.
“உங்க அம்மாதான். ஏன் வரப்ப நீ
சொல்லிட்டு வரலையா?” என்று கேட்டாள்.
“அவங்க அப்போ குளிக்கப்
போயிட்டாங்க. சங்கர் கிட்ட சொல்லிட்டுத்தானே வந்தேன்” என்றான் கண்ணன். 
“அவனும் வீட்டிலே இல்லையாம்.
அதுனாலதான் இங்க போன் பண்ணிட்டாங்க” என்றாள் உமா. “சரி, இப்ப நான் ரெண்டு
ஐட்டம் கொடுக்கிறேன். நீ என்ட்ரி போட்டுக் காமி. உனக்குப் புரிஞ்சுதான்னு
பாக்கலாம்”‘ என்று நோட்டில் விறுவிறுவென்று எழுதி அவனிடம் திருப்பிக்
கொடுத்துவிட்டு எழுந்தாள். அடுப்பருகே சென்று சமையல் வேலையைக் கவனித்தாள்.
கண்ணன் அவள் சொல்லிக் கொடுத்ததை
நினைவில் கொண்டுவந்து என்ட்ரி போட்டான். ஆனால் அவை சரியாக வரவில்லை என்று
அவனுக்குத் தோன்றியது. அவள் சொல்லும்போது புரிந்தமாதிரி இருந்தது. இப்போது எழுதும்போது
பலவித சந்தேகங்களை எழுப்பியது.
“என்னடா திருதிருன்னு
முழிச்சுகிட்டு உக்காந்திருக்கே?” என்று சந்தானம் குரல் கேட்டது.
அருகில் வந்து நின்ற அவனைப்
பார்த்து கண்ணன் சிரித்தான். 
“எதுக்குடா சிரிக்கிறே?”
“இல்ல டவுட்டு இருக்கு. ஆனா
உன்னைக் கேட்டு பிரயோஜனம் இல்லியே” என்றான்.
உமா அவர்கள் இருவரையும் பார்த்துச்
சிரித்தாள். 
“உனக்கு கொழுப்பு ஜாஸ்தியா
போச்சுடா” என்றான் சந்தானம்.
“உமா. என்னோட மௌத்
ஆர்கனை பாத்தியா? அதைத் தேடிகிட்டுதான் வந்தேன்” என்றான் சந்தானம்.
“நேத்தி நீதானே சொன்ன அது ரிப்பேரா
இருக்கு ஜெயின் கடைல குடுத்திருக்கேன்னு” என்றாள் உமா.
“ஆ, மறந்தே போயிட்டேன் பாரு” என்று
தலையில் அடித்துக்கொண்டான். பிறகு அவளைப் பார்த்து “ கொஞ்சம் புடவையை கீழே
இறக்கி விடு. காலுக்கு மேல நிக்குது” என்றான். 
அவள் திரும்பி நின்று அவனை
நிதானமாகப் பார்த்தாள். பிறகு மெல்லிய குரலில் “உனக்கு நாளைக்கு வரப் போற
பொண்டாட்டி கிட்ட அவ சமைக்கறப்ப தழையத் தழைய புடவையைக் கட்டிக்கிட்டு நிக்கச்
சொல்லு” என்றாள்.. 
“இப்ப என்ன சொல்லிட்டேன்னு
கோபப்படறே?” என்றபடி அவன் வெளியே போனான்.
“என்ட்ரி சரியா வரலையா கண்ணா?”
என்று உமா கேட்டாள். 
கண்ணன் ஆமென்று தலையை ஆட்டினான்.
“சரி, இரு. வேலையெல்லாம்
முடிஞ்சிருச்சு. ஒரு நிமிஷத்துல வந்திர்றேன்” என்று ரசப் பாத்திரத்தைக் கீழே
இறக்கினாள்.
மேடையின் மீது சிந்தியிருந்த தண்ணீரையும்
மற்ற பொருட்களையும் துணியால் துடைத்தாள். பிறகு குழாயினருகே சென்று துணியை அலசி
இறுக்கிப் பிழிந்துவிட்டு உலர்த்தினாள். புடவையில் கையைத் துடைத்தவாறே அவனிடம்
வந்தாள்.
அவனிடமிருந்து நோட்டுப் புத்தகத்தை
வாங்கிக்கொண்டு வாசலுக்குச் சென்றாள். கண்ணனும் அவளைப் பின்தொடர்ந்தான். அவள்
அங்கிருந்த நாற்காலிகளில் ஒன்றில் உட்கார்ந்துகொண்டு கண்ணனையும் இன்னொன்றில்
உட்காரச் சொன்னாள். பேப்பர் படித்துக் கொண்டிருந்த சந்தானம் நிமிர்ந்து
ஆச்சரியத்துடன் அவர்களைப் பார்த்தான்.
“அப்பா! என்ன வெயில்! என்ன சூடு!
உஸ்ஸ்” என்றான் கண்ணன் உட்கார்ந்தவுடன்.
“பரவால்ல விடு!
வாசல்லேந்து கிச்சனுக்கு ஓடி ஓடி வர வேணாம்ல” என்றபடியே உமா நோட்டுப் புத்தகத்தைப்
பிரித்து கண்ணனிடம் “டெபிட்டுலையும் கிரெடிட்டுலையும்…” என்று சொல்லிக் கொடுக்க
ஆரம்பித்தாள்.



*****

Posted on Leave a comment

ஓலைப் பத்திரக் கதைகள் | சுஜாதா தேசிகன்


சமீபத்தில் உ.வே.சாவின் கட்டுரைத் தொகுப்பு ஒன்றைப் படித்தேன்.
பெரும்பாலும் செவிவழிக் கட்டுரைகள், தனி மனித வாழ்வுச் சம்பவங்களின் தொகுப்பாக,
18-19ம் நூற்றாண்டு வாழ் தமிழ் மக்களின் வாழ்வின் ஒரு பகுதியை ஆவணப்படுத்துகிறது என்று
சொல்லலாம்.
மருது பாண்டியர்கள் வீரம் மிக்கவர்கள். கூடவே, பக்தியும்,
புலவர்களையும் தம் மக்களையும் காப்பாற்றும் குணமும் படைத்தவர்கள். அதில் மருது பாண்டியரைப்
பற்றி கர்ண பரம்பரையாகச் சொல்லப்பட்ட கதை ஒன்றைப் படித்தேன்.

முள்ளால் எழுதிய ஓலை!

மருது பாண்டியர் தம் இறுதிக் காலத்தில் தங்களைவிட வலியவரான
சிலரது பகைக்கு இலக்கானார். பல தந்திரங்கள் செய்து பகைவர்களின் கைகளில் அகப்படமால்
தப்பித்தார். ஒருசமயம் திருக்கோட்டியூர் பெருமாள் கோயிலுக்கு எதிரிலுள்ள மண்டபமொன்றில்
தங்கி இருந்தார். வலக்கையில் ஒரு கொப்புளம் உண்டாகி அவரை வருத்தியது. பகைவர்கள் ஊர்
எல்லைக்குள் வந்துவிட்டார்கள் என்ற செய்தியை அந்தரங்க வேலையாள் ஒருவர் வந்து சொன்னபோது
வீரத்தால் அவருடைய ரத்தம் கொதித்தது. ஓர் ஆடையை உடனே கிழித்து அவர் கைக் கொப்புளத்தை
இறுகக் கட்டிக்கொண்டு குதிரையில் புறப்பட்டார்.

இதை அறிந்த விரோதிகள் அவரைச் சூழ்ந்துக்கொண்டு தாக்க ஆரம்பித்தனர்.
மருது பாண்டியர் அவர்களைத் தாக்கி அவர்களிடம் அகப்படாமல் தப்பித்து ஒரு கிராமத்துக்கு
வந்தார். அவ்வூர் அக்கிரகாரத்தை அடைந்தார். இரவு முழுவதும் உணவு இல்லாமலும், பகைவர்களிடம்
போராடியதாலும் அவருக்குப் பசியும் தாகமும் மிகுதியாக இருந்தன.
அங்கே ஒரு கூரைவீட்டின் வெளியே சில குழந்தைகள் நிற்க ஒரு
கிழவி கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். பாண்டியரின் குதிரை அவர்கள் வீட்டின் முன் வந்து
நின்றது.

கிழவி நிமிர்ந்து பார்த்து, “யாரப்பா ! உனக்கு என்ன வேண்டும்?”
என்றாள்
“அம்மா பசியும் தாகமும் என்னை மிகவும் வாட்டுகிறது. ஏதாவது
இருந்தால் தரவேண்டும்” என்றார் பாண்டியர்.
“தண்ணீரில் போட்ட பழைய சோறுதான் இருக்கிறது. வேண்டுமானால்
தருகிறேன் அப்பா” என்று கிழவி அன்பாகச் சொன்னாள்.
“ஏதாயிருந்தாலும் எனக்கு இப்போது அமிர்தமாகும். பிறகு மற்றொரு
விஷயம், நான் இரவு முழுவதும் பிரயாணம் செய்து தூக்கம் இல்லை. அதனால் ஒதுக்குபுறமாகத்
தூங்க ஒரு இடம் வேண்டும்” என்றார்.
“இது என்ன பெரிய விஷயம். வீட்டுப் பின்புறம் ஒரு கொட்டகை
இருக்கிறது, அங்கே தூங்கலாம். குதிரைக்கும் தீனி தருகிறேன்” என்று அன்போடு பழைய சோறைப்
பரிமாறினார். ராஜபோஜனத்தைக் காட்டிலும் அது சிறந்ததாக இருந்தது. பிறகு கிழவி கொடுத்த
ஓலைப்பாயொன்றில் படுத்து உறங்கினார்.

விழித்து எழுந்தபோது சூரியன் உச்சியில் இருந்தான். மருது
பாண்டியருக்கு உண்ட உணவும் தூக்கமும் ஒரு புதுத் தெம்பைக் கொடுத்தன. அவர் மனதில் நன்றி
உணர்வு பொங்கி வழிந்தது. அந்தக் கிழவிக்கு ஏதாவது கைமாறு செய்யவேண்டும் என்று துடித்தார்.
“அம்மா!” என்று கிழவியை அழைத்தார். கிழவி வந்தாள்.
“இந்தக் குழந்தைகள் யார்? உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா?”
“அயலூருக்கு ஒரு விசேஷத்துக்காகப் போயிருக்கிறார்கள். குழந்தைகள்
என் பேரக் குழந்தைகள்” என்றாள்.
“சரி, உங்கள் வீட்டில் ஏடு எழுத்தாணி இருந்தால் கொண்டு வாருங்கள்.”
“இங்கே ஏடேது எழுத்தாணியேது? அவர்கள் எங்கே வைத்திருக்கிறார்கள்
என்று தெரியாதப்பா” என்றாள்.

உடனே குதிரைக்காரனைக் கூப்பிட்டு, வீட்டுக் கூரையிலிருந்து
ஒரு பனையோலையையும் வேலியிலிருந்து ஒரு முள்ளையும் கொண்டுவரச் சொன்னார். கையில் இவை
இரண்டும் கிடைத்த உடன், பாண்டியர் ஏதோ எழுதலானார். கிழவி அதை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
முள்ளால் எழுதிய அந்த சாஸனத்தைக் கிழவியின் கையில் கொடுத்து,
“அம்மா, சிவகங்கை சமஸ்தான அதிகாரிகளிடம் இதை நீங்கள் கொடுத்தால் உங்களுக்கு அனுகூலம்
உண்டாகும்” என்று சொல்லிவிட்டு, அவர் குதிரை மேலேறிக் குதிரைக்காரனுடன் புறப்பட்டார்.

சில நாள் கழித்து கிழவியின் பிள்ளைகள் ஊரிலிருந்து வந்தார்கள்.
அந்த ஓலையை அதிகாரிகளிடம் காட்டுவதற்கு முன் சம்ஸ்தானத்து விரோதிகள் மூலம் அவரை எதிரிகள்
கைப்பற்றிக் கொண்டதாக அறிந்து வருந்தினார்கள்.

பாண்டியரைப் பகைவர்கள் பிடித்துச் சிறையில் வைத்தனர். சிலவருடங்கள்
கழித்து அவருடைய கடைசிக் காலத்தில் “உம்முடைய விருப்பம் யாது?” என்று பகைவர்கள் கேட்க,
அதற்கு “நான் சிலருக்கு சுரோத்திரியமாக யார் யாருக்கு எந்த எந்தப் பொருளை வழங்கினேனோ
அவையெல்லாம் அவரவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும். இது என் பிரார்த்தனை. வேறு எதுவும்
இல்லை” என்றார். அவருடைய இறுதி விருப்பத்தைப் பகைவர்கள் அங்கீகரித்து நிறைவேற்றினார்கள்.

மருது பாண்டியர் வழங்கிய பொருள்கள் உரியவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது
என்ற செய்தியை அறிந்த கிழவி, தன்னிடமுள்ள முள்ளால் எழுதிய ஓலையைக் காட்டினால் ஏதாவது
கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதை அனுப்பிவைத்தாள்.
என்ன நடந்தது?  

சீட்டு பெற்ற சீமாட்டி

ஸ்ரீநம்பிள்ளை ( ஸ்ரீராமானுஜருக்கு பிறகு வந்த ஸ்ரீவைஷ்ணவ
ஆசாரியர்) ஸ்ரீரங்கத்தில் காலக்ஷேபங்கள் செய்துகொண்டு இருந்தபோது கோயிலுக்கு வரும்
கூட்டத்தைவிட இவருடைய காலக்ஷேபங்களுக்கு அதிகக் கூட்டம் வரத் தொடங்கியது. “நம்பிள்ளை
கோஷ்டியோ அல்லது நம்பெருமாள் கோஷ்டியோ” என்று வியந்தனர்.

அவர் காலக்ஷேபங்கள் அவருடைய திருமாளிகையில் (இல்லத்தில்)
நடைபெற்றன. கூட்டம் அதிகமானதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. நம்பிள்ளையின் அடுத்த இல்லத்தையும்
ஒன்றாகச் சேர்த்தால், பலபேர் வந்து காலஷேபம் கேட்க வசதியாக இருக்கும் என்று நினைத்தார்கள்.
பக்கத்து அகத்தில் ஓர் ஸ்ரீவைஷ்ணவக் கிழவி வசித்து வந்தாள்.

நம்பிள்ளையின் சிஷ்யர் ஒருவர் அந்த அம்மையாரிடம் சென்று “நம்
ஆசார்யன் திருமாளிகை இடம்பற்றாமல் சிறியதாக இருக்கிறது. உமது அகத்தை ஆசார்யனுக்கு சமர்பித்துவிடுமே”
என்றார்.

அதற்கு அந்த அம்மையாரோ, “கோயிலிலே (ஸ்ரீரங்கம்) சாண் இடம்
யாருக்கு கிடைக்கும்? நான் பகவான் திருவடியை அடையும்வரை இவ்விடத்தை ஒருவருக்கும் கொடுக்க
முடியாது” என்று சொல்லிவிட்டார்.
இந்த விஷயத்தை சிஷ்யர் நம்பிள்ளையிடம் சொன்னார்.
நம்பிள்ளை அந்த அம்மையாரை வேறு ஒரு சமயம் பார்த்தபோது “காலக்ஷேபம்
கேட்க வருபவர்கள் கஷ்டப்படுகிறார்கள். உமது இடத்தைத் தரவேண்டும்” என்று மீண்டும் விண்ணப்பம்
செய்தார்.

“அவ்விதமே செய்கிறேன். ஆனால் தேவரீர் பரமபதத்தில் எனக்கு
ஓர் இடம் தந்தருள வேண்டும்” என்று பதில் கோரிக்கை வைத்தார் அந்த அம்மையார்.

“நான் எப்படிக் கொடுக்க முடியும்? அதை வைகுண்ட நாதனன்றோ தந்தருள
வேண்டும்” என்றார்.

“தேவரீர் பெருமாளிடம் சிபாரிசு செய்து விண்ணப்பம் செய்யலாமே”
என்றார்.

“சரி செய்கிறேன்” என்றார் நம்பிள்ளை ஆச்சரியத்துடன்.

“ஸ்வாமி, அடியேன் ஒன்றும் தெரியாத சாது, பெண்பிள்ளை வேறு.
அதனால் சும்மா தருகிறோம் என்றால் போதாது. சாஸனமாக எழுதித் தந்திடும்” என்றாள்.

நம்பிள்ளை மேலும் ஆச்சரியப்பட்டு ஒரு ஓலையை எடுத்து,
“அகில ஜகத் ஸ்வாமியும்
அஸ்மத் ஸ்வாமியுமான ஸ்ரீவைகுண்டநாதன் இவ்விமையாருக்கு பரமபதத்தில் ஓர் இடத்தைத் தந்தருள
வேண்டும் இப்படிக்கு,
திருக்கலிகன்றி தாஸன்,

தேதி, மாதம், வருடம்”

என்று எழுதிக் கையெழுத்திட்டு கொடுத்தார்.

என்ன நடந்தது?

முடிவுகள்:

1. கிழவி அனுப்பிய ஓலையில் அவள் வசித்த அந்த கிராமத்தையே
சுரோத்திரியமாக (இனாமாக வழங்கப்பட்ட நிலம்) பெற்றாள். வீட்டின் கூரையின் மீது இருந்த
பனையோலையும் வேலி முள்ளையும் கொண்டு மருது பாண்டியர் எழுதிய அந்தக் காட்சி அவள் கண்
முன்னே வந்து சென்றது. பழையது உண்டு, முள்ளால் எழுதிய ஓலைக்கு அவ்வளவு மதிப்பிருந்ததைக்
கண்டு வியந்தாள். இன்றும் இந்தக் கிராமம் ‘பழஞ்சோற்றுக் கருநாதனேந்தல்’ என்று வழங்கப்படுகிறது
என்பர்.

2. நம்பிள்ளையிடம் பனை ஓலை சீட்டைப் பெற்று சிரஸில் வைத்துக்கொண்டு
சந்தோஷமாகத் தம் இருப்பிடத்தை உடனே நம்பிள்ளைக்குக் கொடுத்தார். சீட்டைப் பெற்ற அவ்வம்மையார்
மூன்றாம் நாள் திருநாடு அடைந்தார்.

பயன்பட்ட நூல்கள்:

* முள்ளால் எழுதிய ஓலை – உ.வே.சா கட்டுரை தொகுப்பு

* ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரை 

Posted on Leave a comment

நியூஸிலாந்து மசூதிப் படுகொலை | அரவிந்தன் நீலகண்டன்

அண்மையில் (மார்ச் 15, 2019) நியூஸிலாந்தில் க்ரைஸ்ட்சர்ச் என்கிற இடத்தில் இரு கிறிஸ்தவ வெறியர்கள், மசூதிகளில் தொழுகை செய்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் நாற்பது பேரைக் கொன்று குவித்தனர். இச்செய்கை பொதுவாக விரிவான கண்டனங்களைப் பெற்றது. ஆனால் ஒரு சிலர் இதை ஆதரித்து சில ட்வீட்களைச் செய்திருக்கிறார்கள். அவர்களுள் சிலர் தங்களை இந்துத்துவர்களாகக் கருதுகிறார்கள்.

அண்மைக்காலங்களாக இஸ்லாமியப் பயங்கரவாதிகள் மேற்கத்திய நாடுகளில் பல பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்தி வருகிறார்கள். பாரிஸ் தொடங்கி அமெரிக்க நகரங்கள் வரை பல அவர்களின் கொடுஞ்செயல்களுக்கு ஆளாக்கியுள்ளன. அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர் கூடும் கேளிக்கை மையமொன்றில் இஸ்லாமியப் பயங்கரவாதிகள் உள்நுழைந்து பலரைக் கொன்று குவித்தனர். மேற்கத்திய நாடுகள் அண்மையில் சில பத்தாண்டுகளாகத்தான் இப்படிப்பட்ட மனிதத்தன்மையற்ற ஜிகாத்தை சந்திக்கின்றன.

இந்தியா இப்படிப்பட்ட கொடுங்கொலை ஜிகாத்தை கடந்த ஏழு நூற்றாண்டுகளுக்கும் மேலாக சந்தித்து வருகிறது. சோமநாத புரம் படுகொலை தொடங்கி கோவை குண்டு வெடிப்பு என்று புல்வாமா வரை நாம் தொடர்ந்து இப்பயங்கரவாதத்தைச் சந்தித்து வருகிறோம். இங்கு இந்து முஸ்லிம் மதக்கலவரங்கள் வெடித்துள்ளன. ஆனால் இன்றுவரை எந்த மசூதிக்குள்ளும் ஆயுதமேந்திய இந்துக்கள் சென்று இஸ்லாமியரைக் கொன்று குவித்ததில்லை. மாறாக அக்க்ஷயதாம் முதல் காசி கோவில், ஜம்மு ரகுநாதர் கோவில் என இந்து ஆலயங்களுக்குள் நுழைந்து இஸ்லாமிய ஜிகாதிகள் அப்பாவி இந்துக்களைக் கொன்று குவித்துள்ளார்கள்.

அப்போதெல்லாம் மேற்கத்திய நாடுகளில் அந்தத் தாக்குதல்கள் பெரிய கண்டனங்களைப் பெறவில்லை. ஏன்? மும்பையில் நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஜிகாதி பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்று குவித்தபோது அமெரிக்காவின் முன்னணி தார்மீகவியல் போதிக்கும் பேராசிரியையான மார்த்தா நஸ்பம் ஏறக்குறைய அதனை நியாயப்படுத்துவது போல நியூயார்க் டைம்ஸில் எழுதினார். 2002ல் இந்து முஸ்லிம் கலவரத்தின்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அனைத்துக் கஷ்டங்களையும் பட்டியல் இட்டார். மற்றொரு அமெரிக்க லிபரல் ஜிம் லீச், மும்பை தாக்குதல் காட்டுமிராண்டித்தனம் எனs சொன்னவர், சொன்ன கையோடு ஆகவே இதை ஏதோ ஒரு குறிப்பிட்டவர்கள் செய்தார்கள் எனக் கருதக்கூடாது, இதை முடிந்தவரை தேசியப் பார்வையில்லாமல் அணுகவேண்டும் என்று சொன்னார். இந்தத் தாக்குதலை நிகழ்த்தியவர்கள் இந்தியர்களையும் அமெரிக்க இஸ்ரேலியர்களையும் தாக்கியதில் ஒரு நியாயத்தைக்கூடப் பார்த்திருக்கலாம், ஆனால் இதைத் தேசியத்தன்மையுடன் அணுகக் கூடாது என்று சொன்னார்.

இந்த லிபரல் அமைதிப்புறா பார்வைகள் ஏன் இந்துக்களும் யூதர்களும் படுகொலைச்செய்யப்படும்போது பொங்குவதில்லை, ஆனால் இஸ்லாமியர்கள் அப்படிப் படுகொலை செய்யப்படும்போது பொங்குகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

கொஞ்சம் உங்கள் அண்டை வீட்டு லிபரல் ஃபெமினிஸ்டையோ அல்லது இடதுசாரி பேராசிரியரையோ கேளுங்கள். எப்போதெல்லாம் அவர்கள் பாலஸ்தீனியர்களுக்காகப் பொங்கினார்கள் என்று. அவர்கள் ஏறக்குறைய ஒரு காலண்டரையே உங்களிடம் தூக்கித் தருவார்கள். வருஷத்தில் முந்நூற்றைம்பது நாட்களில், முடிந்தால் அறுநூறு நாட்கள் பொங்கியிருப்பார்கள். சரி திபெத்தியர்களுக்காகவோ அல்லது யாஸிதிகளுக்காகவோ ஏதாவது ஒருநாள் ஒரு நிமிட மௌன அஞ்சலியாவது செலுத்தியிருக்கிறீர்களா எனக் கேளுங்கள். அந்தக் கேள்வியிலிருந்தே அவர்கள் உங்களை ஒரு இந்துத்துவ பாசிச அற்பப் பதர் எனக் கண்டுபிடித்துவிடுவார்கள்.

இடதுசாரிகள் உலகின் மிக மோசமான வெறுப்புணர்வு பரப்பிகள். ஹிட்லர் காலத்திற்குப் பின்னர் யூத வெறுப்பு வெளிப்படையாகச் செய்ய முடியாத ஒன்று. காலனியக் காலத்துக்குப் பிறகு இந்து மதத்தின் மீது மிஷிநரிகள் செய்தது போல வெறுப்புச் சேற்றை வெளிப்படையாக வாரியிறைக்க முடியாது. எனவே முன்னதைத் தொடர்ந்து செய்ய பாலஸ்தீனிய பிரச்சினை. பின்னதைச் செய்ய ‘சாதியம் பிராமணீயம்’ என்கிற முகமூடி. ஆனால் வெளிப்படுத்தப்படும் வெறுப்பென்னவோ ஒன்றுதான்.

அது அன்னியமானவற்றின் மீதான, நம்மிலிருந்து வேறுபடுபவர்கள் மீதான வெறுப்பு. பன்மைகளையெல்லாம் அழித்தொழிக்கவேண்டும் என்கிற வெறுப்பு.

இந்துத்துவர்களின் நிலைப்பாடு என்ன?

அவர்கள் பன்மையைப் போற்றுகிறவர்கள். அவர்களின் இருப்பை நியாயப்படுத்துவதே பன்மைத்தன்மைதான். அதுவே இந்துத்துவத்தின் அடிநாதம். அவர்கள் எதிர்ப்பது பன்மையை அழிக்கும் ஒற்றைப்படைத்தன்மையான எதையும்.

ஆம். ராமரா அல்லாவா என்பதல்ல இந்துக்களுக்கும் இஸ்லாமியவாதிகளுக்குமான பிரச்சினை. பன்மைக் கடவுளர்களை வணங்கலாம் என்கிற நிலைபாட்டுக்கும் அல்லாவை மட்டுமே வணங்கவேண்டும் என்கிற நிலைபாட்டுக்குமான பிரச்சினைதான் இந்து முஸ்லிம் பிரச்சினை. இது பன்மையைப் பேணும் ஆன்மிகப் பண்பாட்டுக்கும் ஒற்றை மத நம்பிக்கையை மட்டுமே கொண்ட ஒரு விரிவாதிக்கத்துக்குமான பிரச்சினை. இந்த அடிப்படை வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இப்போது க்ரைஸ்ட்சர்ச் படுகொலைக்கு வருவோம்.

க்ரைஸ்ட்சர்ச் படுகொலை என்பது ஏசு மட்டுமே என்கிறவர்களால் அல்லா மட்டுமே என்கிறவர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலை. இதே போன்ற படுகொலைகளை அல்லா மட்டுமே என்கிறவர்கள் ஏசு மட்டுமே என்கிறவர்கள் மீது பாகிஸ்தான் தொடங்கி ஆப்பிரிக்கா வரை அவர்கள் எங்கே ஆட்சியதிகாரத்துடன் இருக்கிறார்களோ அங்கெல்லாம் நிகழ்த்தியிருக்கிறார்கள்.

குமரி மாவட்டத்தில் சற்றேறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் அருள்பாலித்த அவதார புருஷர் ஐயா வைகுண்டர் இப்படிப்பட்ட மதங்கள் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை முன்னறிவித்திருக்கிறார்:

“நான் பெரிது நீ பெரிது நிச்சயங்கள் பார்ப்போ மென்று
வான் பெரிதென்றறியாமல் மாள்வார் வீண் வேதமுள்ளோர்
ஒரு வேதந் தொப்பி உலகமெல்லாம் போடுவென்பான்
மறுத்தொரு வேதஞ் சிலுவை வையமெல்லாம் போடுவென்பான்
அத்தறுதி வேதமொன்று அவன் சவுக்கம் போடுவென்பான்

குற்றமுரைப்பான் கொடுவேதக் காரனவன்
ஒருத்தருக்கொருத்தர் உனக்கெனக் கென்றேதான்
உறுதியழிந்து ஒன்றிலுங் கை காணாமல்
குறுகி வழிமுட்டி குறை நோவு கொண்டுடைந்து
மறுகித்தவித்து மடிவார் வீண்வேதமுள்ளோர்”

விளக்க வேண்டிய அவசியமில்லை. எளிதான தமிழில்தான் அமைந்திருக்கிறது. வான் என்று ஐயா வைகுண்டர் சொல்வது சிதாகாசம். அதை அறிந்தவன் என் மதம் பெரிது உன் மதம் பெரிது என்று சண்டை போடமாட்டான். உலகமெல்லாம் தொப்பி (இஸ்லாம்) அணிய வைப்போம் என்கிறார் ஒரு மதத்தவர். மற்றொருவரோ கிறிஸ்தவம்தாம் வையகமெல்லாம் இருக்க வேண்டும் என்கிறார். கத்தோலிக்கரோ அவர்களின் சவுக்கத்துக்கே (பாதிரி அங்கி) உலகம் கட்டுப்பட வேண்டுமென்று நினைக்கின்றனர். இதன் விளைவாக ஒருவரையொருவர் குற்றம் உரைப்பார்கள் என்கிறார் ஐயா வைகுண்டர். இறுதியில் ஒருவரை ஒருவர் ஒழித்துக்கொண்டு மடிவார்கள் என்கிறார். இது மிகவும் முக்கியமான அவதானிப்பு. வெறும் பிரசாரம் என்று மதமாற்றப் பிரசாரத்தை அனுமதித்தால் அதனை மறுத்து அடுத்தவனும் பிரசாரம் பண்ணுவான். பிரசாரப் போர்கள் இன்றியமையாமல் எழும். இறுதியில் அது வன்முறையாக, போராக, பயங்கரவாதமாக வெடிக்கும். இன்று க்ரைஸ்சர்ச்சிலும் நேற்று பாகிஸ்தானிலும் இதர ஆப்பிரிக்க இஸ்லாமிய நாடுகளில் கிறிஸ்தவர் மீது அவிழ்த்துவிடப்படும் வன்முறையும் இப்படிப்பட்ட வன்முறைதான்.

ஆனால் இந்துக்கள் மீதான ஜிகாத் வேறுவிதமானது. இங்கு இந்துக்களின் அடிப்படை பண்பாட்டுப் பன்மை பேணுதல் மீதுதான் ஜிகாதும் மதமாற்றப் போரும் நடத்தப்படுகின்றன. இந்த பன்மை பேணுதல் என்பது இன்றைய ஜிகாதியத் தோழர்களான மார்க்ஸிய ஸ்டாலினிஸ்ட்களுக்கும், நாளைய ஸ்டாலினிஸ்ட்களான இன்றைய நேருவியர்களுக்கும், நாளைய நேருவியர்களான இன்றைய காந்தியர்களுக்கும், இவர்களுடன் இந்துமதத்தை ஒழிக்கும் வரை பயணிக்கத் தயாராகும் கிறிஸ்தவ மதமாற்ற அமைப்புகளுக்குமே பிரச்சினையான விஷயம்தான். பன்மை என்பது ஒற்றைப்படைத்தன்மையின் எதிரி. ஒரு புத்தகம், ஒரே தேவகுமாரன், ஒரே மீட்பர், ஒரே இறுதி நபி என்கிற நிலைபாடுள்ள எவருக்கும் இந்துமதம் அழிக்கப்பட வேண்டியதுதான். அதை நேற்று காலனியம் செய்திருந்தால் நம் பங்கு பாதிரி இன்று விதந்தோதியிருப்பார் இல்லையென்றால் செத்தொழிந்துவிட்ட இந்துக்களுக்காகக் கண்ணீர் சிந்தியிருப்பார். என்ன கெட்டுப்போயிற்று, எல்லா இந்துக் கோவில்களும்தான் மியூஸியங்களாக சர்ச் கட்டுப்பாட்டில் இருந்திருக்குமே. ஆனால் அது நடக்காததால் இன்றைக்கு அவர் இந்தியாவுக்குள் மட்டும் ஜிகாதிகளை ஆதரிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். சங்கைக்குரிய போப் அவர்கள் யூதர்களுக்கு எதிராக பாலஸ்தீனியர்களை ஆதரிப்பது போல.

அப்படி என்றால் க்ரைஸ்ட்சர்ச் படுகொலையில் இந்துக்கள் கவலைப்பட, கண்டனம் செய்ய என்ன இருக்கிறது?

எந்த மனிதனிலும் இறைவனே இருக்கிறார் என்பதுதான் இந்து சமயத்தின் அடிப்படை. கிறிஸ்தவரோ இஸ்லாமியரோ ஏன் மார்க்சியரோ அல்லது நேருவிய நாசியோ, அவரிலும் இறைவன் இருக்கிறார். அவருக்கு ஒரு துன்பம் வரும்போது அவருக்கு உதவுவது இறைவழிபாட்டுக்கு இணையானது. அவருக்கு துன்பம் வரும்போது அவர் துன்பத்தில் அக்கறையின்மை காட்டுவதுகூடட் தவறானது. இறைக்குற்றமே. இயற்கை பேரிடரிலோ அல்லது ஏழ்மை நிலையிலோ உள்ள கிறிஸ்தவரல்லாதவருக்கு ஒரு கிறிஸ்தவ மிசிநரி உதவும்போது அதை அவர் மதமாற்ற நோக்கத்துடன் செய்கிறார். ஆனால் ஒரு ஆர்எஸ்எஸ்காரர் இந்துவுக்கோ இந்து அல்லாதவருக்கோ உதவும்போது அதை இறைவழிபாடாகச் செய்கிறார். அப்படித்தான் செய்யவேண்டும், அப்படி மட்டும்தான் செய்யவேண்டும் என்று கூறியவர் பரம பூஜனீய குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர்.

மேற்கத்திய கிறிஸ்தவ உலகம் ‘ஆரிய’ என்கிற நம் வார்த்தைக்கு இனவாதப் பொருள் கொடுத்தது. அதன்பின் ஒன்றரை நூற்றாண்டுகள் அந்தப் பொருள் கொண்ட ஒரு அரசியல் இனவெறி சித்தாந்தம் வளர்த்தெடுக்கப்பட்டது. அந்த ஆபாசத்தின் உச்சம்தான் நாசி கட்சி. நாசிகளிடம் மட்டும் ஆரிய இனவாதக் கோட்பாடு இருக்கவில்லை. கத்தோலிக்க இறையியல் ஆவணங்களிலும் நாம் அதைக் காணலாம். ஆனால் இந்த மேற்கத்திய கிறிஸ்தவ ஆரியக் கோட்பாட்டின் அடிப்படை: ‘உன்னிலிருந்து வேறுபட்டவன், உன்னில் கீழானவன் உனக்கு ஆபத்தானவன். அவனை அழி அல்லது அவனை உன் வழிக்கு மாற்று.’

க்ரைஸ்ட்சர்ச் படுகொலையிலும் ஜிகாதி படுகொலைகளிலும் நாம் பார்ப்பது இந்த ஐரோப்பிய அரேபிய ஆரியக் கோட்பாடு.

இந்துக்களிடம் ஒரு ‘ஆரிய’ கோட்பாடு உண்டு. அது என்ன என்று பார்ப்பதற்கு முன்னர் ஒரு கதை.

ஒரு வேடனைப் புலி துரத்தியது. புலிக்குப் பயந்து மரத்தின் மீது ஏறினான் வேடன். அங்கே இருந்தது ஒரு கரடி. புலி கரடியிடம் வேடனைத் தன்னிடம் தள்ளச் சொன்னது. ‘அவன் நம் இனங்களை வேட்டையாடுபவன். நம் எதிரி. அவனை என்னிடம் தள்ளு’. கரடி சொன்னது: ‘இந்த மரம் என் வீடு. இவன் இப்போது என் அதிதி. நான் செய்யமாட்டேன்.’ கொஞ்ச நேரத்தில் கரடி தூங்கிவிட்டது. வேடனிடம் புலி பேசியது. ‘என்ன இருந்தாலும் கரடி ஒரு விலங்கு. அது நான் போனதும் உன்னை முழுதாக உண்ணத்தான் இப்போது உண்ணவில்லை. அதை என்னிடம் தள்ளிவிடு. நான் அதை உண்டு பசியாறிப் போய்விடுவேன். உனக்கும் என்னால் ஆபத்து இல்லை. கரடியாலும் உனக்கு ஆபத்து இல்லை.’ வேடன் இசைந்தான். கரடியைக் கீழே தள்ளிவிட்டான். மரத்திலேயே வாழ்ந்து பழகிய கரடி எளிதில் தாக்குப் பிடித்து கீழே விழாமல் தப்பிவிட்டது. இப்போது புலி கரடியிடம் சொன்னது, ‘பார்த்தாயா அந்த மனிதன் எவ்வளவு வஞ்சகன். இப்போது உன்னையே கொல்ல அவன் தயங்கவில்லை. அவனை என்னிடம் தள்ளிவிடு.’ கரடி சொன்னது, ‘என் தர்மத்தை நான் மாற்ற முடியாது. அவன் என் அதிதி. அவனை நான் கொல்லவோ அல்லது கைவிடவோ முடியாது.’

இந்தக் கதை வான்மீகி ராமாயணத்தில் வருகிறது.

ராமர் வென்றுவிட்டார். மகிழ்ச்சியான செய்தியை அசோகவனத்தில் அனுமன் வந்து அன்னையிடம் சொல்கிறார். அப்படியே சுற்றிப் பார்க்கிறார். சீதைக்கு காவல் இருந்த அரக்கிகள், ராவணன் உத்தரவின் பேரில் சீதையை இம்சித்தவர்கள். அவர்களைத் தண்டிக்க சீதையிடம் அனுமதி கேட்கிறார் அனுமான். அதற்கு சீதை ஒப்புக்கொள்ளவில்லை. ‘அவர்கள் அவர்களுக்கு இடப்பட்ட கட்டளையின்படிதான் நடந்தார்கள். யார்தான் தவறு செய்யவில்லை?’ என்றெல்லாம் சொல்லி, பிறகு, அனுமனுக்கு இக்கதையை சொல்கிறாள் அன்னை. அவள் சொல்கிறாள்:

‘கார்யம் கருணம் ஆர்யேண ந கஸ்சின் ந அபராத்யதி’

ஆரியரை வரையறை செய்யும் குணம் கருணை. யார்தான் நம்மில் குற்றமற்றவர். இங்கு அன்னை சொல்லும் கருணை, அனைவரிடமும் காட்டப்படும் கருணை.

ஆனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ராவணனிடம் அன்னை கருணை காட்டவில்லை. ராவணனின் சேனைகளிடம் அன்னை கருணை காட்டவில்லை. அவள் கருணை அரக்கியரிடம். அவர்கள் சூழ்நிலைக் கைதிகள். புல்வாமா படுகொலையைச் செய்த பயங்கரவாதிகளை சர்ஜிக்கல் தாக்குதல் மூலம் அழிப்பது கடமை. அதற்காக அந்த மதத்தைச் சேர்ந்தவர்களையெல்லாம் அடிப்போம் அழிப்போம் என்பது கீழ்மை. ஐரோப்பிய அரேபியத்தின் ஆரியத்தன்மை பிற மனிதரைவிடத் தான் உயர்ந்தவரென்பது. அன்னை சீதையின் இந்து ஆரியத்தன்மை மனிதரிலும் மனிதர் தம்மைவிடக் கீழ் என நினைக்கும் உயிர்களிடத்திலும்கூட வெளிப்படும் கருணையினை அடிப்படையாகக் கொண்டது.

ஜமாத் இ இஸ்லாமி அல்லது தவ்ஹீத் ஜமாத் போன்ற ஒரு அமைப்பின் அல்லது ஜாகிர் நாயக் போன்ற ஒருவனின் பிரசாரத்துக்கு ஆட்படும் ஒரு முஸ்லிம் இறுதியில் ஜெய்ஷ்-இ-முகமதுவில் ஐக்கியமாவான் என்பது உண்மை. ஆனால் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைத் தாக்கி அழித்த அதே ராணுவ உக்தி ஜமாத் இ இஸ்லாமியிடமோ அல்லது ஸாகிர் நாயக்குடனோ செல்லாது. இங்கு தேவை அந்தப் பிரசாரத்தை எதிர்கொண்டழிப்பது அவர்களின் பெட்ரோ டாலர் குழாய்களை அழிப்பது. நரேந்திர மோதி அதைத்தான் செய்கிறார். ஒவ்வொரு இந்துத்துவனும் அதையே செய்யவேண்டும்.

க்ரைஸ்ட்சர்ச் படுகொலை கண்டிக்கப்படவேண்டும். இப்படிப்பட்ட படுகொலைகள் இல்லாமல் ஆக, ‘நான் மட்டுமே உண்மை’ என்கிற மதமாற்ற மதங்கள், தர்மத்தின் உண்மை முடிவிலிப் பன்மை என்பதை உணரவேண்டும். அதுமட்டுமே இப்படிப்பட்ட படுகொலைகள் இல்லாமலாக ஒரே வழி.

Posted on Leave a comment

கைபேசியை விவாகரத்து செய்யுங்கள் | ரஞ்சனி நாராயணன்

‘இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது: அப்போதுதான் எனக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தது. குழந்தையை மடியில் கிடத்திக்கொண்டு நான் பால் புகட்டிக் கொண்டிருந்தேன். குழந்தை கவனம் சிதறாமல் பால் அருந்த வேண்டும் என்பதற்காக அறையை இருட்டாக்கி இருந்தேன். அது குழந்தைக்கும் எனக்குமான நெருக்கமான நெகிழ்வான தருணம். ஒரே ஒரு விஷயம் மட்டும் சரியாக இல்லை என்று பிறகுதான் உணர்ந்தேன்.

குழந்தை என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கவனம் முழுக்க என்மேல் இருந்தது. ஆனால் என் கவனம் முழுக்க e-bay தளத்தில் எனக்குத் தேவையான பழைய காலத்திய கதவுக் கைப்பிடிகளைத் தேடுவதில் இருந்தது.

கிட்டத்தட்ட ஒரு பதினைந்து நிமிடங்கள் நான் இந்தத் தேடலில் என்னை மறந்திருந்தேன். அதன்பின்தான் என் குழந்தை என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். என் கையிலிருந்த ஸ்மார்ட் போனின் நீலநிற ஒளியில் அவளது சின்ன முகம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. அவளது கவனம் என் மேல், என் கவனமோ என் ஸ்மார்ட் போன் மேல்! இந்தக் காட்சியை ஒரு வெளி ஆள் போலப் பார்த்தேன். அந்த நொடிகளை இப்போது நினைத்தாலும் என் இதயம் வலிக்கிறது. நிச்சயம் என் வாழ்வு இப்படி இருக்கக்கூடாது என்று தீர்மானித்தேன்.

அடுத்த ஒன்றரை ஆண்டுகளை இந்தப் பழக்கம், இது தரும் போதை, இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளான நடத்தையில் மாறுதல், கவனமின்மை, நரம்பு மண்டலப் பாதிப்பு இவை பற்றிய ஆராய்ச்சியில் கழித்தேன். எப்படி இவற்றைக் கட்டுப்படுத்துவது, ஒரு ஆரோக்கியமான உறவை ஸ்மார்ட் போனுடன் வளர்த்துக் கொள்வது என்பது பற்றி முடிவுக்கு வந்தேன்’ என்கிறார் “How to Break Up With Your Phone: The 30-day Plan to Take Back Your Life” என்ற புத்தகத்தை எழுதியிருக்கும் திருமதி காதரீன் ப்ரைஸ் (Catherine Price).

சராசரியாக ஐந்து மில்லியன் பயனாளர்கள் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் அவர்கள் கையிலிருக்கும் போனுடன் கழிப்பதாக ஒரு தகவல் சொல்லுகிறது. நம்முடைய ஸ்மார்ட் போனுடன் ஆன இத்தகைய உறவு ஒரு ஆரோக்கியமான உறவு இல்லை என்று நம் எல்லோருக்குமே தெரியும்.

சரி, இதற்கு என்ன தீர்வு?

இனி நான் கைபேசியைப் பயன்படுத்தவே மாட்டேன் என்பதல்ல தீர்வு. கைபேசி என்பது நமக்குத் தேவையான ஒன்றாகிவிட்டது. அதனுடனான உறவை எப்படி மேம்படுத்திக் கொள்ளலாம்? கைபேசியுடனான உறவு நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். நாம் அதன் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது. நமக்கும் நமது கைபேசிக்கும் ஆன எல்லைகளை மேம்படுத்திக் கொள்ள முடியுமா? ஒரு ஆரோக்கியமான உறவை வளர்த்துக் கொள்ள முடியுமா?

நிச்சயம் முடியும். திருமதி காதரீன் ப்ரைஸ் சொல்லும் வழிகளை நாமும் பின்பற்றிப் பார்க்கலாமே. இதோ அவர் தரும் குறிப்புகள்:

மாற்றி யோசியுங்க:

‘இனிமேல் கைபேசியுடன் நான் கழிக்கும் நேரத்தைக் குறைக்கப்போகிறேன்.’ நம்மில் நிறைய பேர் நினைப்போம். இப்படி நினைப்பதே நம்மை வருத்தத்தில் ஆழ்த்திவிடும். மாற்றி யோசியுங்கள். கைபேசியில் நான் செலவழிக்கும் நேரம் எனக்குப் பிடித்த, என்னை மகிழ்விக்கும் ஒரு செயலை நான் செய்யாமல் இருக்கும் நேரம் என்று நினைக்க ஆரம்பியுங்கள். ஒரு தோழியுடன் அந்த நேரத்தைக் கழிக்கலாம்; அல்லது புதிதாக ஒரு பொழுதுபோக்கைக் கற்றுக்கொள்ளலாம். இல்லையென்றால், ஏற்கெனவே தெரிந்த தையல் வேலையைச் செய்யலாம். ஓவியம் வரையலாம். பாதியில் நிறுத்தியிருந்த வேலையை முடிக்கலாம். மனதுக்குப் பிடித்த ஒரு விளையாட்டில் (நிச்சயம் செல்போன் விளையாட்டு அல்ல) நேரத்தைக் கழிக்கலாம் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

செல்போனில் குறைந்த நேரம் செலவழிக்கப் போகிறேன் என்பதற்குப் பதில் என் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதில் அல்லது என் வாழ்க்கையுடன் அதிக நேரம் செலவழிக்கப் போகிறேன் என்று மாற்றி யோசியுங்கள்.

உங்கள் கவனத்தைக் காசாக்குகிறார்கள், உஷார்!

நமது வாழ்க்கையின் மேல் நமது கவனம் இருக்கவேண்டும். ஆனால் நம் கவனமோ கைபேசி மேல் இருக்கிறது. இந்த நேரத்தில் எனது கவனம் எதன் மேல் இருக்கவேண்டும் என்ற கேள்வி எழும்போது நம் நேரத்தை நாம் எப்படிச் செலவழிக்க வேண்டும் என்ற கேள்வியும் கூடவே எழுகிறது, இல்லையா?

நமது ஸ்மார்ட் போனில் இருக்கும் பலவிதமான சமூக வலைத்தளங்கள் நமக்கு இலவசமாகக் கிடைக்கின்றன. எதற்காக இவைகளை நமக்கு இலவசமாகக் கொடுக்க வேண்டும்? இவர்களுக்கு எங்கிருந்து பணம் வரும்? எப்போதாவது இதைப்பற்றி யோசித்திருக்கிறீர்களா? அவர்களுக்கு நமது கவனம் தேவை. நாம் நிறைய நேரம் அவற்றில் செலவிடவேண்டும். அதுதான் அவர்களது நோக்கம். அதில் விளம்பரம் செய்பவர்கள்தான் அவர்களது வாடிக்கையாளர்கள். அவர்களின் மூலம் இவர்களுக்குப் பணம் கிடைக்கிறது. அதாவது நமது கவனத்தை அவர்கள் காசு பண்ணுகிறார்கள். இப்போது யோசியுங்கள்: உங்களது கவனம் எதில் இருக்கவேண்டும்? வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளுவதிலா? கைபேசியில் நேரம் போவது தெரியாமல் மேய்வதிலா?

உங்கள் வாழ்வின் வெற்றி உங்கள் கையில்

உங்கள் குறிக்கோள்களை நினைவுபடுத்தும் தூண்டுகோல்களை உருவாக்குங்கள். அவற்றைப் பயன்படுத்தி வெற்றிக்குத் தயாராகுங்கள். நிறைய நேரம் படிப்பதில் செலவழிக்க வேண்டுமென்றால் உங்கள் படுக்கையறை மேஜையில் ஒரு புத்தகத்தை வையுங்கள். புதியதாகச் சமைக்க வேண்டுமா, அதற்கான சாமான்களை விலாவாரியாகப் பட்டியலிடுங்கள். உங்கள் கைபேசியின் சார்ஜர் படுக்கையறைக்கு வெளியே இருக்கட்டும். அலாரம் வைக்க என்று தனியாக ஒரு கடியாரம் வாங்குங்கள்.

உங்களை உங்கள் குறிக்கோளிலிருந்து வெளியே இழுக்கும் தூண்டுகோல்களைத் தவிர்த்துவிடுங்கள். உதாரணத்திற்கு சமூகவளைத்தளச் செயலிகளை உங்கள் கைபேசியில் செயலிழக்கச் செய்யுங்கள். தகவல் சொல்லிகளை (notifications) – மின்னஞ்சல் உட்பட – தவிர்த்துவிடுங்கள். சாப்பிடும் நேரங்களில் யார் கைகளிலும் கைபேசி இருக்கக்கூடாது என்பது உங்கள் குடும்பத்தில் எழுதப்படா விதியாக இருக்கட்டும்.

வேகத் தடை

எத்தனை முறை ஜஸ்ட் ஏதாவது வந்திருக்கிறதா பார்க்கலாம் என்று செல்போனைக் கையில் எடுத்துவிட்டு மணிக்கணக்கில் அதைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறோம்? இந்த வழக்கத்தை முதலில் நிறுத்துங்கள். இவையெல்லாம் உங்களிடத்தில் ஒரு அதிருப்தியை உண்டாக்கும். ஐயோ, இவ்வளவு நேரம் வீணாக்கிவிட்டோமே என்று உங்களைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும். சாலையில் எதிர்படும் வேகத் தடை போல செல்போனை கையில் எடுப்பதற்கும் தடைகள் இருக்கட்டும். உங்கள் செல்போனைச் சுற்றி ஒரு ரப்பர்பேண்ட் போட்டு வையுங்கள். அது செல்போனைத் தொடவிடாமல் உங்களைத் தடுக்கும். இல்லையென்றால் உங்கள் லாக்-ஸ்க்ரீனில் ‘போனை எடுத்துப் பார்க்க வேண்டுமா?’ இப்போது என்ன அவசரம்?’, ‘தேவையா?’, ‘எதற்கு?’ போன்ற கேள்விகளைப் போட்டு வையுங்கள்.

உடல்/மனம் சார்ந்த மாற்றங்கள்

கைபேசியில் மும்முரமாக இருக்கும்போது உங்கள் உடல்மொழிகளைக் கொஞ்சம் கவனியுங்கள்: எந்த நிலையில் உங்கள் உடல் இருக்கிறது? நேராக, நிமிர்ந்து முதுகு வளையாமல் உட்கார்ந்திருக்கிறீர்களா? நீங்கள் இப்போது உங்கள் கைபேசியில் செய்து கொண்டிருக்கும் வேலை உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கிறதா? அதைத் தொடரவேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்கள் உடலில் மனதில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் உணர ஆரம்பித்தீர்கள் என்றால் கைபேசி தரும் போதையிலிருந்து நீங்கள் உங்களை விலக்கிக் கொள்வது சுலபமாகிவிடும்.

குறிப்பாக கேம்ஸ் ஆடும்போது ஒரு நிலையில் வெற்றி பெற்றவுடன் ஏற்படும் மகிழ்ச்சி, அடுத்த நிலையில் முதல்முறை வெற்றி கிட்டாதபோது ஏற்படும் கோபம் முதலியவற்றைக் கூர்ந்து கவனியுங்கள். ஒரேமுறையில் நான்கு அல்லது ஐந்து நிலைகளைத் தாண்டிச் சென்றுவிட வேண்டும் என்ற வெறி மெதுவாக உங்கள் மனதில் ஏற்படும். அது இயலாதபோது உங்கள் மனநிலையைக் கவனியுங்கள். சாதாரணமாக யாராவது வந்து பேசினால்கூட சுள்ளென்று ஒரு கோபம் பொங்கும். இதெல்லாம் நீங்கள் கைபேசியின் கட்டுப்பாட்டிற்குள் வர ஆரம்பித்துவிட்டீர்கள் என்பதன் அறிகுறிகள். ஆரம்பத்திலேயே இந்த ஆட்டங்களிலிருந்து விடுபட்டு விடுங்கள். ‘வெற்றி பெற வேண்டுமா? நண்பர்களிடம் உதவி கேளுங்கள்’ என்று உங்களுக்கு மெல்ல வலைவிரிக்கப்படும். உஷார்!

கைபேசி இல்லா நேரங்கள்

அவ்வப்பொழுது கையில் கைபேசி இல்லாமல் பழகுங்கள். நடைப்பயிற்சியின் போது கைபேசியை வீட்டில் விட்டுவிட்டுச் செல்லுங்கள். மணி பார்க்க கைகடியாரத்தைக் கட்டிச் செல்லுங்கள். அலுவலகத்திற்குப் பேருந்தில் செல்லும்போது ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு செல்லுங்கள். கைபேசியை எடுத்துப் பார்க்கவேண்டும் என்று கை அரிக்கும்; அடக்குங்கள். அந்த அடக்குமுறை உங்கள் உடம்பில், மனதில் என்னென்ன மாற்றங்களை உண்டு பண்ணுகிறது என்று கூர்ந்து கவனியுங்கள். அந்த ஆர்வம் சற்று நேரத்தில் தானாகவே மறைந்துவிடும்.

உங்களைக் காக்கும் தொழில்நுட்பம்

நீங்கள் ஒருநாளைக்கு எத்தனை மணிநேரம் கைபேசியைப் பயன்படுத்தினீர்கள் என்பதை அறிய பலவித செயலிகள் இருக்கின்றன. அவை காட்டும் பயமுறுத்தும் தகவல்களைக் காணத் தயாராகுங்கள். உங்களை அறியாமலேயே பலமணி நேரங்களை விரயம் செய்திருப்பீர்கள். பிரச்னை கொடுக்கும் வலைத்தளங்களிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள பல செயலிகள் இருக்கின்றன. சில வலைத்தளங்கள் எத்தனை நேரம் நீங்கள் கைபேசியைப் பயன்படுத்தாமல் இருக்கமுடியும் என்று உங்களைச் சவாலுக்கு அளிக்கும். அதனைப் பயன்படுத்துபவர்களில் எத்தனை பேர் எத்தனை நேரம் ‘ஆஃப்லைனில்’ இருந்திருக்கிறார்கள் என்றும் சொல்லும்.

ஆப்பிள் போன்களில் ஒரு செயலி இணைத்திருக்கிறார்கள். இதன்மூலம் ‘வாகனம் ஓட்டும்போது தொந்திரவு செய்யவேண்டாம்’ என்று உங்கள் போனில் போட்டுவிடலாம். யாராவது உங்களை நீங்கள் வாகனம் ஓட்டும்போது கூப்பிட்டால் இந்தச் செயலி அவர்களுக்கு ஒரு தயார்நிலைச்செய்தி அனுப்பிவிடும். வாகனம் ஓட்டும்போது பேசிக்கொண்டே செல்வதைத் தடுக்கும் ஒரு நல்ல செயலி இது. ஆண்ட்ராய்ட் கைபேசியிலும் இந்தச் செயலி இருக்கிறது. நீங்கள் எவ்வளவு நேரம் கைபேசியை பயன்படுத்தாமல் இருந்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் லாக்-ஸ்க்ரீனில் காட்டும் இந்தச் செயலி.

ஒரு தொழில்நுட்பம் இன்னொரு தொழில்நுட்பத்திலிருந்து உங்களைக் காப்பாற்றும்.

வெளிஉலக உந்துதல்கள்

பேருந்துகளில் செல்லும்போது அல்லது நடந்து செல்லும்போது மற்றவர்கள் தங்களது கைபேசிகளை எடுத்துப் பார்க்கும்போது உங்களுக்கும் பார்க்க வேண்டுமென்று தோன்றலாம். அப்போது உங்களது நோக்கம் என்ன என்று சற்று நினைவுபடுத்திப் பாருங்கள். நீங்கள் உங்கள் கைபேசியுடன் ஆரோக்கியமான உறவை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ஒரு புதிய ஆரோக்கியமான பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களை நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள். அப்படியும் உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் நீண்ட ஆழ்ந்த மூச்சு ஒன்றை விட்டு உடலைத் தளர்த்திக் கொள்ளுங்கள். நிச்சயம் உங்களால் கட்டுப்பாட்டுடன் இருக்க முடியும்.

இவை எதுவுமே உங்கள் கைபேசியை உங்களிடமிருந்து விலக்கவில்லை என்றால் உங்கள் வாழ்க்கையை ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள்: எத்தனை பேர் தாங்கள் இறக்கும் தருவாயில் ‘நான் முகநூலில் இன்னும் சிறிது நேரத்தைக் கழித்திருக்கலாம்’ என்று சொல்வார்கள்? மறுபடி மறுபடி ஒரு கேள்வியை உங்களிடமே கேட்டுப்பாருங்கள்: ‘இது என் வாழ்க்கை. இதில் எத்தனை நேரம் நான் கைபேசியில் வீணாகக் கழிக்கப் போகிறேன்?’

அந்தக் கேள்விக்கு உங்கள் பதில் என்ன?

முப்பது நாட்கள் நீங்கள் இந்த வழிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்தால், உங்கள் கைபேசியை விவாகரத்து செய்துவிடலாம் என்கிறார் திருமதி காதரீன் ப்ரைஸ். முயற்சி செய்யுங்களேன். 

Posted on Leave a comment

சு.வெங்கடேசனின் உரையும் மறுப்பும் | ஜனனி ரமேஷ்


(இந்து) கல்யாண
மாலை நிகழ்ச்சியில் ‘இயற்கை அறம்’ என்ற தலைப்பில் சக எழுத்தாளரும், ‘காவல் கோட்டம்’
நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில்
மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளருமான  சு.வெங்கடேசன்
ஆற்றிய உரையைக் கேட்டேன்.

(புகைப்படம் நன்றி: விகடன்.காம்)
முதல் பிழை

நீதி நூல்களை
மேற்கோள் காட்டிய வெங்கடேசன் அத்துடன் நிறுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் தேவையில்லாமல்
சம்பிரதாயங்களை, பூஜை புனஸ்காரங்களைக் கடைப்பிடித்துப் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவோர்தான்
சொர்கத்தை அடைவார்கள் என்று சாஸ்திர நூல்கள் (அதாவது இந்து நூல்கள்) சொல்கின்றன என்று
உரையைத் தொடங்கி உள்ளார். தொடர்ந்து தமிழனின் அறிவுச் சொத்தான சிறுபஞ்ச மூலத்தில் வரும்
‘நீர் வழிந்தோட வாய்க்கால் தோண்டுபவன், குளம் வெட்டுபவன், கிணறு எடுப்பவன், விளை நிலம்
உருவாக்குபவன், மரம் நடுபவன்’ ஆகியோர் சொர்க்கத்துக்குப் போவார்கள் என்பதை மேற்கோள்
காட்டியுள்ளார்.

சிறுபஞ்ச மூலத்தை
மேற்கோள் காட்டித் தமிழின் சிறப்பை மேம்படுத்துவதை விடவும், சம்பிரதாயங்கள், பூஜை,
புனஸ்காரங்கள், பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவோர்தான் சொர்க்த்துக்குப் போவார்கள் என்று
சொல்லும் இந்து தர்மத்தைக் கொச்சைபடுத்த வேண்டும் என்பதே வெங்கடேசனின் நோக்கம். அவர்
எந்தக் கட்சியையும் சேராதவராக, நடுநிலையாளராக இருந்திருந்தால், அல்லாவை வணங்கும் முஸ்லிம்கள்
நற்கதி அடைவார்கள், இயேசுவைக் கும்பிடும் கிறித்துவர்கள் சொக்கத்துக்குப் போவார்கள்
ஆகிய சொற்களையும் சேர்த்துச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் இந்து மத விரோதியாக, இந்துக்
கடவுளை நிந்திப்பவராக, இந்துக் கடவுள்களை மட்டுமே நம்பாதவராக (அல்லா, இயேசு விதிவிலக்கு),
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினராக இருப்பதால், மேடையில் கிடைத்த வாய்ப்பை நன்றாகப்
பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஒருவேளை (முஸ்லிம்
அல்லது கிறித்துவ) கல்யாண மாலை நிகழ்ச்சி ஏதாவது இருப்பின் அதில் பேச வெங்கடேசனுக்கு
அழைப்பு வருமெனில் அங்கே அல்லாவை வணங்கும் முஸ்லிம்கள் நற்கதி அடைவார்கள், இயேசுவைக்
கும்பிடும் கிறித்துவர்கள் சொக்கத்துக்குப் போவார்கள் என்று உங்கள் நூல்கள் கூறுகின்றன..
ஆனால் எங்கள் தமிழ் நூலான சிறுபஞ்சமூலம் ‘நீர் வழிந்தோட வாய்க்கால் தோண்டுபவன், குளம்
வெட்டுபவன், கிணறு எடுப்பவன், விளை நிலம், மரம் நடுபவன்’ ஆகியோர் சொர்க்கத்துக்குப்
போவார்கள் என்று சொல்லும் துணிச்சல் அவருக்கு இருக்குமா?
கட்டாயம் அந்தத்
தைரியத்தையும், துணிச்சலையும், இந்து மத விரோத எண்ணத்தில் ஊறிய மார்க்சிஸ்ட் உறுப்பினர்
வெங்கடேசனிடம் எதிர்பார்க்க முடியாது. போதாக் குறைக்கு இப்போது அவர் மதுரை நாடாளுமன்ற
வேட்பாளராக வேறு அறிவிக்கப்பட்டிருக்கிறார். வாக்குகள் சேகரிக்கப் பிரசாரத்துக்குப்
போகும் இடங்களில் இப்படிப் பேசுவாரா? சிறுபான்மை ஓட்டு மொத்தமாகப் காலியாகிவிடும்.
அதுமட்டுமா? அடுத்த வினாடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவரது வேட்பு மனுவை வாபஸ்
வாங்கிக் கட்சியிலிருந்தே நீக்கி விடும்!

(இந்து) கல்யாண
மாலை நிகழ்ச்சியில் குழுமியிருந்த அனைவரும் இந்துக்கள். வேற்று மத நிகழ்ச்சியில் அவர்கள்
சம்மந்தப்பட்ட மதங்கள் குறித்து இவ்வாறு பேச முடியாது என்பதையும் அவர் உணர்ந்திருப்பார்.

இரண்டாவது பிழை

‘அன்னதானம்’
சமணத்தின் கொடை என்பது பிழையின் உச்சம். சமணத்தின் தோற்றமே அதிகபட்சம் 3000 ஆண்டுகளுக்குள்தான்.
சமண மாதம் தோன்றுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வேதங்களிலும், சங்க
இலக்கியங்களிலும் அன்னதானம் மிக முக்கியமாகப் போற்றப்படுகிறது. குறிப்பாக அன்னதானம்
என்பது இந்து மதத்தின் ஆணிவேர் என்பதுடன் மிக முக்கியமான தர்மமாகவும் கருதப்படுகிறது.

சமணம் தோன்றாத
வேதத்தில், 
வியாசர் எழுதிய
மகாபாரதம் வன பர்வத அதியாயத்தில் மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னதாக ஸ்லோகங்கள்
உள்ளன.

அதிதி தேவோ பவ”
= ‘விருந்தாளிகள் கடவுள்’ (தைத்ரீய உபநிஷத், சிக்ஷாவல்லி 1-20) விருந்தினர்களைக் கடவுளாகக்
கருத வேண்டும் என அன்னதானத்தின் மேன்மையை விளக்குகிறது. கிருஷ்ணர் பகவத் கீதையில் அன்னதானத்தின்
சிறப்பை எடுத்துக் கூறுகிறார்.

சாம வேதத்திலே
ஒரு இடத்தில் “அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ” என்று கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும்
நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் 
வடிவில் இருப்பதாக
கூறப்பட்டுள்ளது. அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. பசித்தவர்களுக்கு
அன்னமிடுதல் கோடி புண்ணியம் என்கிறது.

சமணம் தோன்றாத
சங்க இலக்கியங்களில்,

‘விருந்து தானும்
புகுவது கிளந்த யாப்பின் மேற்றே’ என்று விருந்தோம்பலையும், அன்னதானத்தையும் (தொல்காப்பியம்
– பொருளதிகாரம்)

கோவலர் மழவிடைப்
பூட்டிய குழாஅய்த் 
தீம்புளி செவியடை தீரத் தேச்சிலைப் பகுக்கும்
புல்லிநன்னாடு
‘(அகம் 311,9-12) 

விருந்தினர் இரவில் காலம் கழித்து வரினும் மனம் மகிழ்ந்து விருந்தோம்பினர்
(நற்றிணை,142)

இரவில் வாயில்
கதவை அடைக்கும் முன் விருந்தினர் உளரா எனப் பார்த்து இருப்பின் அழைத்து வந்து உணவளிப்பர்.
(குறுந்தொகை, 205, 12-14) 

விருந்தினருக்கு விடைகொடுத்து அனுப்பும்போது குதிரை பூட்டிய
தேரினைக்கொடுத்து, ஏழடி பின்தொடர்ந்து சென்று வழியனுப்புதல் பண்டைய வழக்கமாகும். (பொருநராற்றுப்படை,
165, 166) 

விருந்தோம்பலில் விருப்பம்கொண்டு அதற்காகவே பொருளிட்டச் சென்றுள்ளனர் (அகம்,205,12-14).

பொருளையெல்லாம்
இழந்து வறுமையுற்ற காலத்தும், விருந்தினரைச் சிறப்பாக ஓம்புதலைச் சங்க மக்கள் தங்கள்
கடமையாகக் கொண்டிருந்தனர்.
வறுமையுற்று
விருந்தோம்பா நிலையிலும் ஒருவன் முதல் நாள் தன் பழைய வாளை விற்றும், அடுத்த நாள் யாழை
அடகு வைத்தும் விருந்தோம்பினான். (புறம்,316,5,7)

வரகும் தினையும்
இரவலர்க்கு ஈந்து தீர்ந்தன வேறு வகையில் பொருள் பெற வழியில்லை. அந்நிலையில் விதைக்கு
இருந்த தினையை உரலில் இட்டுக் குத்தி மகளிர் விருந்தோம்பினர். (புறம்,333)

அதியமான் வறுமையுற்ற
காலத்தும் விருந்தோம்பினான் என்பதை புறநானூறு கூறுகிறது (103) (95).

 .. இந்திரர் 
அமிழ்தம்
இயைவது ஆயினும், 
இனிது எனத் 
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்; 
துஞ்சலும் இலர்; பிறர்
அஞ்சுவது அஞ்சி, 
புகழ் எனின், உயிரும் கொடுக்குவர்; 
பழி எனின், உலகுடன் பெறினும், கொள்ளலர் 

– புறம் 182, க.மா.இளம்பெருவழுதி.

சிறுகுடி கிழான்
பண்ணனை ‘பசிப்பிணி மருத்துவன்’ என்று சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பாராட்டுகிறான்
– புறம்.173-ல்.

பாண்டியன் நெடுஞ்செழியனை
குடபுலவியனார் பாரரட்டுகையில் உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே என்ற வரியைப் பாடுகிறார். 

இதே வரி பின்னர் மணிமேகலையிலும் வருகிறது – புறம்.18-ல்.

கோவூர்க்கிழார்
பாடிய பாடலில் விருந்தின் சிறப்பு காட்டப்படுகிறது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
– தமிழரின் பண்பாடு என்பது கோவூர்க் கிழார் கருத்து (புறம்.46).

மறுமைப் பயனை
மனதிற் கொள்ளாமல், மக்களின் வறுமையைத் தீர்க்கவே ஈத்துவப்பர் என்று கூறப்படுகிறது புறம்.141
(பரணர்), புறம்134 (முடமோசி).

இப்பாடல்களில்
விருந்தினரை உபசரித்துவிட்டு, அடுத்தவர்க்காகக் காத்திருக்கும் செய்தி வருகிறது! (அகம்.203,
புறம்.177)

சிலப்பதிகாரம்,
மணிமேகலை, சீவகசிந்தாமணி மற்றும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்துமே சமண மற்றும்
பௌத்த மதக் காப்பியங்கள். சைவம் (சிவன்), வைணவம் (விஷ்ணு) ஆகிய பெயர்கள் தவிர்த்து
இவற்றில் அருகன் என்ற சமணத் தீர்த்தங்கரர்களின் பெயர்கள் காணப்படும். இந்து மதத்தைத்
தூற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ‘அன்னதானம்’ என்பது சமணர்களின் கொடை என்பது தவறான
வாதம். சமண மதம் தோன்றுவதற்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வேதங்களிலும், சங்க
இலக்கியங்கள் (எட்டுத் தொகை மற்றும் பத்துப் பாட்டு) ஆகியவற்றிலும் அன்னதானம் / விருந்தோம்பல்
குறிப்பிடப்பட்டுள்ளது என்பது தெளிவு.



Posted on Leave a comment

ஐநாவில் நிரந்தர இடமும் நேருவும் | டாக்டர் ஆண்டன் ஹார்டர், தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்

ஐக்கிய நாடுகள்
பாதுகாப்பு
ச் சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் அளிக்க அமெரிக்கா அளித்த வாய்ப்பை நிராகரித்தார் நேரு. 

நேருவிற்கும் அமெரிக்காவில் இருந்த இந்தியத் தூதருக்கும் இடையே நடந்த
கடிதப் போக்குவரத்து
, ‘இந்தியா நிரந்தர உறுப்பினர் பெறும் தகுதியைக் கொண்டிருந்த போதிலும்’
அது சீனாவின் இடத்தைப் பறிப்பதாக இருக்கக்கூடாது என்பதைத் தெளிவாக்குகிறது
.

குறிப்பு: வில்சன் மையத்தில்
(wilsoncenter.org)
உள்ள பனிப்போர் தொடர்பான பன்னாட்டு வரலாற்றுத் திட்டத்தில் இந்தக்
கட்டுரை பிரசுரிக்கப்பட்டது.
இதை எழுதியவர், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிஸைச் சேர்ந்த டாக்டர்
ஆண்டன் ஹார்டர்.

ஐக்கிய நாடுகள்
(ஐநா) சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கான நிரந்தர இடத்தைப் பற்றிய உரிமைப்
பிரச்சினை இன்று இந்தியாவில் ஒரு முக்கியப் பேசுபொருளாகியிருக்கிறது. ஆனால் இது புதிதல்ல.
சுதந்தர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, ஐநா சபையில் இந்தியாவிற்கு நிரந்தர
இடம் பெறுவதற்காகக் கிடைத்த பல வாய்ப்புகளைத் தவறவிட்டதை மையமாகக் கொண்ட ஒரு வரலாற்றுச்
சர்ச்சை இது. அன்றும் சரி இன்றும் சரி, ‘சர்வதேச அறம்’ என்ற சந்தேகத்திற்குரிய காரணத்தைக்
காட்டி இந்தியாவின் உரிமையை நேரு தியாகம் செய்துவிட்டார் என்று அவர்மீது குற்றம் சாட்டுபவர்கள்
கூறுகின்றனர். ஆனால் இந்தக் கேள்வி, நேருவின் மீதான மதிப்பையும் தாண்டி, பனிப்போர்
காலகட்டத்தின் ஆரம்பத்தில் ஐநா சபையுடனும் மக்கள் சீனக் குடியரசுடனும் இந்தியா கொண்டிருந்த
உறவின் அரிய பல பக்கங்களை ஆராய்கிறது.


ஐநா சபையில் அதற்குக்
கிடைத்திருக்கக்கூடிய நிரந்தர இடத்தைப் பற்றி இந்தியாவின் வரலாற்றில், ஒரு வித்தியாசமான
வதந்தி உலவுகிறது. இணையத்தில் இதைப் பற்றித் தேடினால் மதிப்பிற்குரிய அந்தச் சபையில்
இந்தியா இடம்பெறுவதற்கான கோரிக்கை ஒன்று ஆரம்பகாலத்தில் வைக்கப்பட்டதற்கான ஆதாரம் இருந்தது
அல்லது இல்லை என்ற விவாதங்களுக்கு அது இட்டுச்செல்கிறது. 2005ம் ஆண்டு, தி ஹிந்துவில்
வெளிவந்த ‘திஸ் டே தட் ஏஜ்’ என்ற கட்டுரை, 1955ல் இடம்பெற்றிருந்த ஒரு செய்திக்குறிப்பை
ஆதாரமாகக் காட்டி, ஐநா பாதுகாப்பு
ச் சபையில் நிரந்தர இடம் ஒன்றை அளிக்க சோவியத் யூனியன் முன்வந்தது
என்ற வதந்தியை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு பாராளுமன்றத்தில் மறுத்தார் என்று குறிப்பிட்டிருந்தது.
இதிலிருந்து இந்தச் செய்தியில் 1995லும் 2005லும் ஆர்வம் இருந்திருக்கிறது என்று தெரிகிறது.
அப்போது நேரு இதை மறுத்திருந்தாலும், சோவியத் யூனியன் 1955ம் ஆண்டு அளித்த வாய்ப்பு
நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதைப் பற்றிய தகவல்கள் அதிகம் வெளிப்படவில்லை.
இந்த வதந்தியைப் பற்றிய நியாயமான கவலைகள் வரலாற்றையும் அரசியலையும் ஒன்றாகக் கலக்கின்றன.
இதுபோன்ற வாய்ப்புகள் அளிக்கப்பட்டன என்று வாதம் செய்து, அது பொய்யென்று மறுக்கப்பட்டவர்கள்,
ஜவஹர்லால் நேருவின் மதிப்பு என்ற சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட மற்றொரு ஆணியாகவே இதைக்
கருதுகிறார்கள். இந்தியாவின் சோஷலிஸ, மதச்சார்பற்ற முதல் பிரதமர், அவருடைய சீர்மைத்தன்மையை
உயர்த்திப்பிடிக்கும் முயற்சியில் இந்தியாவின் தேசிய நலனைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டார்
என்று குற்றம் சாட்டுவோர் உண்டு.

இந்த 1955ம் ஆண்டு
நிகழ்வு இந்திய வரலாற்றிலும் அரசியலிலும் நிபுணரான ஏ.ஜி. நூரனியால் பொதுவில் 2002ம்
ஆண்டு விவாதிக்கப்பட்டது. இருப்பினும் அந்த வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க இயலவில்லை.
ஆனால், அதற்கு முன்பே அமெரிக்கா ஆகஸ்ட் 1950ல் இதுபோன்ற ஒரு வாய்ப்பை, அதாவது இந்தியாவிற்கு
ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினருக்கான இடத்தை, அளிக்க முன்வந்தது என்ற ஒரு
புதிய தகவல் வெளிப்பட்டது. இது நூரனி முன்பே எழுதியதை மேலும் உறுதிப்படுத்தியது. அமெரிக்கா
அளித்த இந்த வாய்ப்பை நேரு நிராகரித்தது, சீனாவின் நியாயமான கோரிக்கைகளை ஏற்பது ஒன்றே
பன்னாட்டுச் சிக்கல்களைத் தீர்க்கும் என்ற அவருடைய உறுதியான முடிவின் வெளிப்பாடாகக்
கருதலாம்
. சீனாவிற்குப் பாதுகாப்புச் சபையில் ஒரு இடம் அளிப்பதன் மூலம், அந்நாட்டைப் பன்னாட்டுச் சமூகத்தில்
இணைத்துவிடலாம் என்பது நேருவின் வெளிநாட்டுக்கொள்கையின் மையப் புள்ளியாக இருந்தது.
இந்த வாய்ப்புகளை ஏற்பதில் நேருவுக்கு இருந்த அவநம்பிக்கை, அதன்மூலம் ஐநாவில் அவர்
ஏற்படுத்திய குழப்பம், ஐநாவின் மீது அவர் கொண்டிருந்த மதிப்பின் அடையாளம் என்று கூடக்
கூறலாம். மேலும் அமெரிக்கா அளித்த வாய்ப்பை நிராகரித்தது, அந்த நேரத்தில் இருந்த இந்திய
– அமெரிக்க உறவின் மோசமான நிலையின் குறியீடாகவும் கருதலாம். இறுதியாக, நேருவின் நிராகரிப்பு
இந்தியாவை ஒரு பெரிய நாடாகக் கருதவேண்டும் என்று அவர் நினைத்தாலும், அவருடைய கொள்கையில்
அவர் எந்தவித சமரசமும் செய்ய நினைக்காததையும் எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்கா இப்படி
ஒரு வாய்ப்பை அளித்தது துணைக்கண்டத்தின் பெரிய சக்திகளை சமமாகக் கருதவேண்டும் என்று
நினைத்த அதன் முயற்சியையும் பிரிட்டன் இந்த பிராந்தியத்தில் அடைந்த அனுபவத்தை அடிப்படையாகக்
கொள்ளவேண்டும் என்ற நிலையையும் தெளிவுபடுத்துகிறது. மேலும் பனிப்போரின் ஆரம்பகாலங்களில்,
ஐநா சபையை
த் தன்னிஷ்டப்படி வளைக்க நினைத்த அமெரிக்காவின் உள்துறைச் சிக்கல்களைப் பற்றிய
நமது புரிதல்களையும் இந்த நிகழ்வு மேம்படுத்துகிறது.

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கக்கூடிய
முக்கியமான ஆவணங்கள் புதுதில்லியிலுள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக
(என் எம் எம் எல்) வளாகத்தில் இருக்கும் விஜயலக்ஷ்மி பண்டிட் தாள்களில் பத்திரமாக மறைத்து
வைக்கப்பட்டுள்ளன. பண்டிட் தாள்களின்
(Pandit Papers) முக்கியத்துவம், அவருடைய சகோதரரும் இந்தியப் பிரதமராக இருந்தவருமான ஜவஹர்லால் நேருவுடனான அவர் உறவுமுறையிலும்,
சோவியத் யூனியன், அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் போன்றவற்றில் 1940 மற்றும் 1950களில் அவர்
வகித்த முக்கியமான தூதரகப் பொறுப்புகளிலும் உள்ளது. தவிர, அதிகாரபூர்வமாக பதிப்பிக்கப்பட்ட
நேரு தாள்கள் (Nehru Papers) அவருடைய தேர்ந்தெடுத்த கட்டுரைகளையும் முதல்வர்களுக்கு
அவர் எழுதிய கடிதங்களையும் உள்ளடக்கி, நேருவின் காலத்தைப் பற்றி அதிகத் தகவல்களைக்
கொண்டுள்ளன. அதேசமயம் அதிகம் பயன்படுத்தப்படாத ஆவணங்களாக
வும் உள்ளன. இருந்தபோதிலும் அக்காலத்தைப் பற்றிய ஒரு பகுதிச் சித்திரத்தையே
இது அளிக்கிறது. மற்றொரு முக்கியமான பகுதி என் எம் எம் எல்லில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும்
பண்டிட் தாள்களில் உள்ளது. 1940-50களில் நேருவின் வெளிநாட்டுக் கொள்கையைப் பற்றிய சிந்தனையை
புரிந்துகொள்ள முக்கியமானவை இந்த பண்டிட் தாள்களே. இந்த பண்டிட் தாள்கள் சுதந்
திர இந்தியாவின் பொதுவான வரலாறு மற்றும் இந்திய வெளியுறவுக் கொள்கையைப்
பற்றிய ஆய்வுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்திய – சீன உறவைப் பற்றிய ஆய்வுகளுக்காக
அவற்றை எவரும் பயன்படுத்தவில்லை.

1995ல் சோவியத் அளித்த வாய்ப்பு

2002ம் ஆண்டு ஏ.ஜி
நூரனி, 1955ல் சோவியத் பிரதமர் நிகோலாய் புல்கானின் அளித்த ஐநா சபையின் நிரந்தர உறுப்பினருக்கான
இடத்தை நேரு நிராகரித்ததை ஆதரித்து எழுதியிருந்தார். நேரு அப்படிச் செய்தது சரிதான்
என்றும்
, அளிக்கப்பட்ட இந்த
வாய்ப்பு ‘இந்தியாவைச் சோதனை செய்யும் ஒரு முயற்சியே’ என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
நூரனி அப்போதுதான் வெளியிடப்பட்டிருந்த ‘செலக்டட் வொர்க்ஸ் ஆஃப் ஜவஹர்லால் நேரு’ என்ற
தொடரை ஆராய்ந்து இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார்.
இந்த வாய்ப்பை நிராகரித்ததற்காக
நேருவை விமர்சனம் செய்த, நன்கு அறியப்பட்ட சில அரசியல் நோக்கர்களைக் குறிவைத்தே அவர்
இப்படி எழுதினார். உதாரணமாக ‘பயாக்ரபி ஆஃப் நேரு
(1979) என்ற பெயரில்
நேருவின் வாழ்க்கை வரலாறு ஒன்றை எழுதிய சர்வப்பள்ளி கோபால், “அவர் (ஜவஹர்லால் நேரு)
இந்தியாவை
ப் பாதுகாப்பு சபையில்
ஆறாவது நிரந்தர உறுப்பினராக முன்மொழிய முன்வந்த சோவியத்தின் கோரிக்கையை நிராகரித்தார்.
மாறாக ஐநா சபையில் சீனாவைச் சேர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்”
. (பக்கம் 248). செலக்டட் வொர்க்ஸ் வெளியீட்டில் இடம்பெற்ற புதிய
தகவல்களை அடிப்படையாக வைத்து, இந்த வாய்ப்பைப் பற்றி நேரு அதிகமாக அலட்டிக்கொள்ளாததை
சரி என்றும், இது உண்மையில் நடக்கூடிய ஒன்றே அல்ல என்றும் அப்படி ஒரு வேளை சோவியத்
யூனியன் தன் முயற்சியால் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்கினால் அது இந்தியாவின் வெளியுறவுக்
கொள்கையில் பல சிக்கல்களை உருவாக்கி சீனா மற்றும் பல வல்லரசுகளிடையேயான உறவைப் பாதிக்கக்கூடும்
என்று நூரனி வாதிட்டார். பின்வரும் உரையாடலை தன் வாதத்திற்கு ஆதரவாகவும் அவர் சுட்டினார்.

(நிகோலாய்) புகானின்:
ஃபோர் பவர் கான்பிரன்ஸைப் பற்றிய உங்களுடைய யோசனையைப் பற்றி நாங்கள் முறையான நடவடிக்கை
எடுக்கிறோம். பொதுவான சர்வதேச நிலையையும் பதட்டத்தைக் குறைப்பதையும் பற்றி விவாதிக்கும்
அதே நேரத்தில், இந்தியாவை
ப் பாதுகாப்புச் சபையின் ஆறாவது உறுப்பினராக பின்னால் ஒரு கட்டத்தில் பரிந்துரை
செய்ய முடிவுசெய்திருக்கிறோம்.

ஜேஎன் (ஜவஹர்லால் நேரு): சீனாவிற்குப்
பதிலாக இந்தியா பாதுகாப்புச் சபையில் இடம்பெற வேண்டும் என்று அமெரிக்காவில் சிலர் யோசனை
தெரிவித்திருப்பது புகானினுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். இது எங்களுக்கும் சீனாவிற்கும்
இடையே பிரச்சினையைக் கிளப்பும் விஷயமாகும். எனவே நாங்கள் இந்த யோசனையை
முழுமையாக எதிர்க்கிறோம். தவிர, நாங்கள்
சில பொறுப்புகளை ஏற்கத் துணிந்து இறங்குவது எங்களுக்கே ஏற்புடையதல்ல. அது கடினமான சில
விளைவுகளை ஏற்படுத்தி இந்தியாவைப் பல சிக்கல்களில் இட்டுச்செல்லக்கூடிய ஒன்று. இந்தியா
பாதுகாப்புச் சபையில் இடம்பெற வேண்டுமென்றால், அதற்காக ஐநா சாசனத்தில் திருத்தங்கள்
செய்யப்படவேண்டியிருக்கும். எனவே சீனாவையும், இன்னும் சில நாடுகளையும் ஐநாவில் உறுப்பினராகச்
சேர்ப்பது போன்ற கேள்விகளுக்கு விடை காணப்படாமல் இதைச் செய்யக்கூடாது என்று நாங்கள்
நினைக்கிறோம். என்னைப் பொருத்தவரையில், சீனாவைச் சேர்ப்பதில் நாம் முதலில் கவனம் செலுத்தவேண்டும்.
ஐநா சாசனத்தைத் திருத்துவது பற்றி புல்கானின் கருத்து என்ன? இப்போது அதைச் செய்வதற்குச்
சரியான நேரம் அல்ல என்று நாங்கள் கருதுகிறோம்.

புல்கானின்: உங்களுடைய கருத்தைத் தெரிந்து
கொள்வதற்காகவே இந்தியா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினர் பெறும் சாத்தியத்தைப்
பற்றி நான் கூறினேன். ஆனால் இது சரியான நேரம் அல்ல என்றும், அதற்கான நேரம் வரும்வரை
நாம் காத்திருக்கவேண்டும் என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன். ஒன்றன்பின் ஒன்றாக நாம்
செயல்களில் இறங்கவேண்டும் என்பதும் எங்களுக்கு ஏற்புடையதே.

இவ்வாறு நேரு எழுப்பிய சந்தேகங்களுக்கு புல்கானின் பதிலளித்தது,
பாதுகாப்பு சபையில் இடம்பெறுவதைப் பற்றிய வாய்ப்பு ‘உண்மையானது அல்ல’ என்றும் இந்தியாவின்
விருப்பத்தைத் தெரிந்துகொள்வதற்காகத் தெரிவிக்கப்பட்ட ஒன்று என்றும் நூரனி வாதிட்டார்.
தவிர, இந்தியா பாதுகாப்பு சபையில் இடம்பெறுவதற்கான சரியான சமயம் அதுவல்ல என்பதைப் பற்றி
புல்கானின் நேருவின் கருத்தோடு ஒத்துப்போனார் என்று அவர் சுட்டினார்.

இந்தக் கருத்துபரிமாற்றம், மேலும் தெரிவிப்பது, இதுபோன்று அமெரிக்கா
தெரிவித்த யோசனை ஒன்றையும் இந்தியா நிராகரித்துவிட்டது என்பதைத்தான். அமெரிக்கா இந்த
யோசனையை முன்வைத்தது, இந்திய சீன உறவுகளில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே என்று நேரு
நினைத்தார். ஐநாவில் சீன மக்கள் குடியரசின் இடத்தைப் பற்றிய பிரச்சினைக்கான தீர்வுக்கு
முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று நேரு கருதினார். அதன்பின்னரே பாதுகாப்புச் சபையில்
புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான ஐநா சாசனத் திருத்தத்தைப் பற்றி யோசிக்கவேண்டும்
என்று அவர் கூறினார். இங்கே ‘மற்றவர்கள்’ என்று நேரு குறிப்பிடுவது எந்த நாடுகளை? இந்தியாவைச்
சேர்ப்பதற்கு முன் அவர்களை ஐநாவில் இணைப்பதைப் பற்றி ஏன் நேரு குறிப்பிட்டார் என்பது
சரியாகத் தெரியவில்லை. புதிதாகச் சுதந்தரமடைந்து இன்னும் ஐநாவில் சேர்க்கப்படாமலிருக்கும்
நாடுகளைப் பற்றியே அவர் குறிப்பிட்டிருக்கவேண்டும்.

சோவியத் யூனியனின் 1955ல் நேரு பயணம் மேற்கொண்டிருந்தபோது அவர்
எழுதிய குறிப்பு ஒன்றையும் நூரனி சுட்டியிருந்தார். அதில் அமெரிக்கா அளித்த வாய்ப்பைப்
பற்றி நேரு விரிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

“சீனா ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெறலாமே
தவிர பாதுகாப்புச் சபையில் அல்ல என்றும், பாதுகாப்புச் சபையில் அதன் இடத்தை இந்தியாவிற்கு
அளிக்கலாம் என்றும் அதிகாரபூர்வமற்ற வகையில் அமெரிக்கா தெரிவித்திருந்தது. ஆனால் இப்படிச்
செய்தால் நாங்கள் சீனாவுடன் முரண்பட நேரிடும் என்ற காரணத்தால் இதை நாங்கள் ஏற்க இயலாது.
சீனாவைப் போன்ற பெரிய நாடு பாதுகாப்புச் சபையில் இடம் பெறாதது நியாயமல்ல. ஆகவே, இந்த
யோசனையைக் கூறியவர்களிடம் நாங்கள் இதை ஏற்கமாட்டோம் என்று தெளிவாகத் தெரிவித்துவிட்டோம்.
இன்னும் ஒரு படி முன்னே சென்று, ஒரு பெரிய நாடென்ற முறையில் இந்தியா பாதுகாப்புச் சபையில்
இடம்பெற வேண்டுமென்றாலும் இந்த நிலையில் அந்தச் சபையில் இடம்பெற இந்தியா அவசரப்படவில்லை
என்று கூறிவிட்டோம். முதலில் சீனா அதற்குரிய முறையான இடத்தைப் பெறட்டும் அதன்பின் இந்தியாவைப்
பற்றித் தனியாக முடிவுசெய்து கொள்ளலாம்.”

‘செலக்டட் வொர்க்ஸில்’ உள்ள 29வது பகுதி 1995ல் சோவியத் யூனியன்
அளித்த வாய்ப்பை பற்றி மட்டும் அல்லாது, அதற்கு முன்பு அதிகம் அறியப்படாத, ஐநா பாதுகாப்பு
சபையில் நிரந்தர உறுப்பினருக்கான இடத்தை அளிக்க முன்வந்த அமெரிக்காவின் கோரிக்கையைப்
பற்றியும் பரபரப்பான தகவல்களை வெளிக்காட்டியது என்று நூரனி சுட்டிக்காட்டினார்.

1950
அமெரிக்கா அளித்த வாய்ப்பு

ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவிற்கு அமெரிக்கா வாய்ப்பு
அளிக்கும்போது இருந்த சூழ்நிலை என்ன? இதைப் பற்றிய நேருவின் குறிப்பு தெளிவில்லாமலும்,
துரதிருஷ்டவசமாக எந்தச் சூழ்நிலையில், எந்த நேரத்தில் இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது
என்பதற்கான குறிப்பேதுமில்லாமலும் உள்ளது. இருப்பினும் நேருவின் சகோதரியும்
1940-50களில் முக்கியத் தூதரகப் பொறுப்புகளை வகித்தவருமான விஜயலக்ஷ்மி பண்டிட்டின்
கடிதப் போக்குவரத்துகளை ஆராயும்போது பல தகவல்கள் வெளிப்பட்டன. ஆகஸ்ட் 1950ல், அமெரிக்காவிற்கான
இந்தியத் தூதர் பொறுப்பை வகித்தபோது பண்டிட் தனது சகோதரருக்குப் பின்வருமாறு எழுதியிருக்கிறார்.

“வெளியுறவுத் துறையில் பேசப்பட்டு வரும்
ஒரு விஷயத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது பாதுகாப்புக்
கவுன்சிலில் இருந்து சீனாவை வெளியேற்றி, அதன் இடத்தில் இந்தியாவை அமர்த்துவது. ராய்ட்டர்
நிறுவனம் இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்டபோது அதற்கு நீங்கள் அளித்த பதிலைப் பார்த்தேன்.
கடந்தவாரம் (ஜான் ஃபாஸ்டர்) டல்லஸ் மற்றும் (பிலிப்) ஜெஸப் ஆகியோருடன் நான் செய்த கலந்துரையாடல்கள்
பற்றிய அறிக்கையை பாஜ்பாயிடம் சமர்ப்பித்துவிட்டேன். இருவரும் இந்தக் கேள்வியை எழுப்பினார்கள்.
குறிப்பாக டல்லஸ் அந்தத் திசையில் வேகமாகக் காய்களை நகர்த்தவேண்டும் என்று அவசரப்பட்டார்.
நேற்று இரவு, வாஷிங்டனில் உள்ள முக்கியப் பத்தி எழுத்தாளரான மார்க்விஸ் சைல்ட்ஸ், மக்களின்
கருத்தை இதற்கு ஆதரவாகத் திரட்டுமாறு வெளியுறவுத் துறை சார்பாக டல்லஸ் கேட்டுக்கொண்டதாக
என்னிடம் கூறினார். நம்முடைய எண்ண ஓட்டங்களை அவரிடம் கூறியதோடு இந்தியாவில் இந்த விஷயத்திற்கு
ஆதரவு இருக்காது என்ற காரணத்தால் இதில் நிதானப்போக்கைக் கடைப்பிடிக்குமாறு அவரிடம்
தெரிவித்தேன்.”

ஒரு வாரத்திற்குள் நேரு இதற்கான பதிலை சந்தேகத்திற்கிடமில்லாத
வகையில் அளித்திருந்தார்.

“உங்களுடைய கடிதத்தில் வெளியுறவுத் துறை
ஐநா பாதுகாப்புக் கவுன்சில் நிரந்தர உறுப்பினர் பொறுப்பிலிருந்து சீனாவை நீக்கி அந்த
இடத்தை இந்தியாவிற்கு அளிக்க முயல்கிறது என்று குறிப்பிட்டிருந்தீர்கள். நம்மைப் பொருத்தவரை,
நாம் அதை நிராகரிக்கப்போகிறோம். எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இது ஒரு தவறான முடிவு.
இது சீனாவிற்குச் செய்யும் அவமரியாதையாக இருப்பதோடு, நமக்கும் சீனாவிற்கும் இடையே பிளவை
உருவாக்கும். வெளியுறவுத்துறை இதை விரும்பாது என்றே நினைக்கிறேன், ஆனால் அந்த வழியில்
செல்ல நாம் விரும்பவில்லை. நாம் சீனா ஐநாவிலும் பாதுகாப்பு கவுன்சிலும் இடம்பெறவேண்டும்
என்று தொடர்ந்து வலியுறுத்துவோம். இந்தப் பிரச்சினை ஐநாவின் பொதுச்சபை அடுத்த முறை
கூடும்போது எழுப்பப்படும் என்று நினைக்கிறேன். சீன அரசு தன்னுடைய தூதுக்குழு ஒன்றை
அங்கே அனுப்புகிறது. அவர்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை என்றால் சோவியத் யூனியனும்
இன்னும் சில நாடுகளும் கூட ஐநாவிலிருந்து வெளியேறக்கூடிய அபாயம் உள்ளது. இது வெளியுறவுத்
துறைக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக இருக்கலாம், ஆனால் ஐநாவை இது முடிவுக்குக் கொண்டுவந்துவிடும்.
தவிர, ஒரு போருக்கும் இது இட்டுச்செல்லும்.

இந்தியா, பல காரணங்களால், பாதுகாப்புக்
கவுன்சிலின் இடத்துக்கு உரிமை கோரலாம். ஆனால், அது சீனாவிற்குப் பதிலாக இருக்காது.”

அமெரிக்க வெளியுறவுத்துறை இந்தியாவிற்குச் சாதகமாக எடுத்த இந்த
ரகசிய முடிவுக்கான காரணங்கள் ஆராயப்படவேண்டிய ஒன்று. பனிப்போரின் பதட்டம் கிழக்கு ஆசியப்
பகுதிகளுக்குப் பரவிக்கொண்டிருந்தது. யூரோப் முடங்கிக் கிடந்தது. குறிப்பாக, சீனாவில்
கம்யூனிஸ்ட் அரசு உருவாகி வந்தது ஒரு புதிய தலைவலியைத் தோற்றுவித்தது. ஆசியாவின் மற்றொரு
பெரிய நாடான, ஜனநாயக இந்தியா இந்தத் தலைவலியைக் கண்டுகொள்ளாமல் சீனாவுக்கு அங்கீகாரம்
அளித்து தன்னுடைய ஆதரவை தேசியவாத தைவானிடமிருந்து கொரில்லப் புரட்சியாளர்கள் இருந்த
பீஜிங்கிற்கு அளித்திருந்தது.

ஜனவரி 1950ம் ஆண்டு மத்தியில், யூஎஸ்எஸ்ஆர் சீன மக்கள் குடியரசுக்கு
ஐநாவில் சீனாவுக்குரிய இடம் அளிக்கப்படாததை எதிர்த்து வெளிநடப்புச் செய்திருந்தது.
அதன் காரணமாக, ஜூன் 25, 1950ல் கொரியப் பிரச்சினை வெடித்தபோது, ஐநா பாதுகாப்பு சபை,
சோவியத் யூனியன் வீட்டோ செய்யக்கூடிய சாத்தியத்தையும் மீறி, அமெரிக்க ஆதரவு கண்டனத்
தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தியாவும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்தது. அது தீபகற்பத்தில்
வடகொரியாவின் அத்துமீறலை எதிர்த்து வந்ததால் இந்த நிலையை எடுத்திருந்தது.

என்னதான் கூட்டுச்சேராக் கொள்கையைப் பின்பற்றி வந்தாலும், கம்யூனிஸ்ட்
அத்துமீறலை எதிர்த்து வாஷிங்டனுடன் இந்தியா சேர்ந்ததில் அமெரிக்கா மகிழ்ச்சியடைந்தது.
கம்யூனிஸத்தைக் குறித்து நேரு சரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கத்தொடங்கியிருப்பதாக
அமெரிக்கர்கள் நம்பத் தொடங்கினர். இந்தியப் பிரதமர் ஜூன் 1950ல் தென்கிழக்கு ஆசியாவில்
மேற்கொண்ட பயணத்தை அமெரிக்க வெளியுறவுத் துறை கவனித்து பின்வரும் முடிவுக்கு வந்தது.

“நேருவின் அறிக்கைகள் கம்யூனிஸ்டுகளுக்கு
எதிரான அவரது உள்நாட்டுப் பிரச்சாரத்தின் நீட்சியாகவே அமைந்திருக்கின்றன. கம்யூனிஸ்டுகள்
தெற்காசியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் தம் உத்திகளை மாற்றிக்கொள்ளாவிட்டால், அதை
எதிர்க்க இந்தியாவில் மட்டுமல்லாது, அதற்கு வெளியிலும் நேரு முயல்வார். இப்படி வெளிப்படையாகப்
பேசியதன் மூலம், நேரு நம்முடைய தரப்பிற்கு வலு சேர்த்திருக்கிறார். நேருவின் இந்தோனேசியப்
பயணத்தை அடுத்து, இந்தோனேசியா வியட் மின்னை அங்கீகரிக்கப் போவதில்லை என்றும் ஆசிய மாநாட்டை
இந்தோனேசியாவில் நடத்தப்போவதில்லை என்றும் நம்முடைய பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.”

ஆனால், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமான தற்காலிக இணக்கமாகத்தான்
இது இருந்தது. பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா கொண்டுவந்த இரண்டாவது தீர்மானத்தை, அதாவது,
வடகொரியாவின் அத்துமீறலை எதிர்க்க தென்கொரியாவிற்கு எந்த ஒரு உதவியையும் செய்யத் தயாராக
இருப்பதாகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை, பிரிட்டன் அளித்த கடும் அழுத்தத்தால், இந்தியா
அரை மனதுடன் ஆதரித்தது. அதன்பின், ஜூலை 7ல், கொரியாவில் உள்ள ஐநா துருப்புகளுக்கு அமெரிக்கா
முழுத் தலைமையையும் ஏற்பதாகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க
மறுத்தது. அமெரிக்காவின் ஆதர்சக் கொள்கையான ஒட்டுமொத்த பன்னாட்டுப் பாதுகாப்பிற்கான
இந்தியாவின் ஒப்புதல் சந்தேகத்திற்கிடமானது.
அதன்பின், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமான வேறுபாடு மேலும்
அதிகரித்தது. இது பண்டிட் மற்றும் நேருவிற்கு இடையேயான கடிதப் போக்குவரத்தில் வெளிப்படுகிறது.
ஜூன் 29, 1950ல் பண்டிட் எழுதிய மற்றொரு கடிதம் அந்த நேரத்தில் இந்திய மற்றும் அமெரிக்க
அரசுகளின் நேரெதிரான மனப்போக்குகளைத் தெரிவிக்கிறது. கொரியப் பிரச்சினை, மற்ற ஆசியப்
பிரச்சினைகளான தைவான், இந்தோசீனா, பிலிப்பைன்ஸ் போன்றவற்றுடன் இணைத்துப் பார்க்கப்பட
வேண்டிய ஒன்றல்ல என்று பண்டிட் அமெரிக்கர்களிடம் தெரிவித்திருந்தார். இப்படி இந்தப்
பிரச்சினையை விரிவுபடுத்தினால் ஆசிய நாடுகள் அமெரிக்காவிற்கு ஆதரவு அளிப்பது கடினம்
என்றும் அவர் கூறியிருந்தார். இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ‘இந்தியா ஜனநாயக நாடுகளோடு
ஒத்துப்போகாமல் அதேசமயம் தனிப்பட்ட, நடுநிலையான வெளியுறவுக் கொள்கை ஒன்றைப் பேண விரும்புவதுபற்றி’
வருத்தம் தெரிவித்திருந்தார் என்றும் பண்டிட் குறிப்பிட்டிருந்தார்.

ஜூலையில் இந்திய, அமெரிக்க அரசுகளிடையேயான இந்தப் பிளவு மேலும்
அதிகரித்தது. சீன மக்கள் குடியரசை ஐநா சபையில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பன்னாட்டுப்
பதட்டங்கள் குறையும் என்றும், கொரியப் பிரச்சினை அந்தப் பிராந்தியத்திற்குள் மட்டுப்படும்
என்றும் இந்தியா எல்லாத் தரப்பினரிடையும் வலியுறுத்தி வந்தது. பீஜிங்கிற்கான இந்திய
தூதர் சூ என்லாயிடம் பிரிட்டனும் எகிப்தும் சீனா ஐநா பாதுகாப்பு சபையில் இடம்பெறுவதை
ஆதரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். அதன்மூலம் பெரும்பான்மை ஆதரவு சீனாவிற்குக்
கிடைக்கும் என்று அவர் கூறினார். பீஜிங் பாதுகாப்பு சபையில் இடம்பெறுவதன் மூலம் கொரியப்
பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்படும், அதற்கு பீஜிங் மற்றும் மாஸ்கோவின் ஆதரவு இந்தியாவிற்குத்
தேவை என்று அது தெரிவித்தது. அமெரிக்காவினுடைய முரட்டுத்தனமான அணுகுமுறையும் இந்தியாவிற்குக்
கவலை அளித்தது. இது ஜூலை 13,1950ல் பண்டிட் நேருவுக்கு எழுதிய கடிதத்திலிருந்து தெரிய
வருகிறது. அதில் அவர் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் டீன் அசேசன் ‘அணுகுண்டைப்
பயன்படுத்தும் சாத்தியக்கூறு’ உள்ளதாகக் கூறியதைப் பற்றி புகார் செய்திருந்தார்.
ஜுலையின் பிற்பகுதியில் சீன தேசியவாத இயக்கத்தில் இருந்த சில தீவிரக்
கருத்துடையோர், சியாங் கே ஷேக்குடனான உறவை முறித்துக்கொண்டு, கொரியப் பிரச்சினையைத்
தீர்ப்பதற்கு சீனா ஐநாவில் இடம்பெறுவதே சரியான வழி என்ற இந்தியாவின் கருத்துக்கு ஆதரவு
தெரிவித்தனர். பண்டிட்டுடனான தகவல் பரிமாற்றம் ஒன்றில் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டிருந்தனர்.
இது சீனா ஐநாவில் சேர்வதே சிறந்த தீர்வு என்ற முடிவில் இருந்த நேருவின் கருத்தை உறுதிப்படுத்தியது.
இதற்கிடையில் அசேசன், பண்டிட்டிடம், ‘இந்தியா கொண்டுவந்த ஐநா தீர்மானங்களைப் பொருத்தவரை
அதன் அறம்சார்ந்த குரலுக்கு மதிப்பளிப்பதாகவும், ஆனால் அதே வேளையில் அவரது கொள்கை முடிவுகள்
அவர்கள் நாட்டு மக்கள் கருத்துப்படியே இருக்கவேண்டிய கட்டாயம் உள்ளது என்று கையை விரித்துவிட்டார்.
அதன்பின், ஆகஸ்ட் 1, 1950ல் யூஎஸ்எஸ்ஆர் ஐநாவின் தன்னுடைய இடத்திற்கு மீண்டதை ஒட்டி
அமெரிக்காவிற்கு பாதுகாப்பு சபையில் இருந்த சாதகமான நிலை மாற்றம் கண்டது.

ஆக, இந்தியாவின் அறம்சார்ந்த நிலைப்பாட்டைப் பற்றிய வாஷிங்டனின்
கருத்து, இன்னும் சந்தேகத்திற்குரியதாக இருந்த இந்தியாவின் ஆதரவு மற்றும் கம்யூனிஸத்திற்கு
எதிரான நிலைப்பாடு (தவிர சோவியத் யூனியன் பாதுகாப்பு சபைக்குத் திரும்பியது) ஆகியவற்றின்
இடையே அமெரிக்க வெளியுறவுத் துறை, இந்தியா ஐநா பாதுகாப்பு சபை உறுப்பினராவதைப் பற்றிய
கோரிக்கையுடன் பண்டிட்டை அணுகியது. டல்லஸ் மற்றும் ஜேசப் ஆகியோருடன் எப்போது உரையாடல்
நிகழ்ந்தது என்று பண்டிட் கூறாவிட்டாலும், அவர் நேருவுக்கு ஆகஸ்ட் 24ம் தேதி கடிதம்
எழுதிய காரணத்தால், இது ஆகஸ்ட் மாத ஆரம்பத்திலோ அல்லது மத்தியிலோ நிகழ்ந்திருக்கலாம்
என்று நம்மால் கணிக்க முடிகிறது.

இவ்வாறு இந்தியாவை அமெரிக்க வெளியுறவுத் துறை அணுகியது, அதிகாரபூர்வமாக,
உயர்மட்ட அளவில் இல்லாவிட்டாலும் கூட, நேர்மையான ஒன்றாகவே கருதப்படவேண்டும். திருமதி.
பண்டிட் அமெரிக்காவில் நல்ல மதிப்புப் பெற்றவர், அவருடைய சகோதரருடன் தொடர்பு கொள்ள
சரியான ஒருவராகக் கருதப்பட்டவர். சில ஆண்டுகளுக்குப் பின்னர், சோவியத் அளித்த வாய்ப்பு
நிராகரிக்கப்பட்டது போல, இந்த வாய்ப்பு நடைமுறைப்படுத்தப்படும் சாத்தியம் குறைவாகவே
இருந்தாலும் இந்தியாவுடனான ஒரு நம்பிக்கையான உறவை ஏற்படுத்திக்கொள்ள அமெரிக்கா தெரிவித்த
முக்கியமான விருப்பமாகவே இதை எடுத்துக்கொள்ளவேண்டும். கூட்டாகச் சேர்ந்து வட கொரியாவின்
அத்துமீறலைக் கண்டிக்கவேண்டும் என்ற அமெரிக்கத் தீர்மானங்களை இந்தியா ஐநா சபையில் ஆதரித்தது.
1950ம் ஆண்டு ஆரம்பத்தில் சீனாவின் புதிய கம்யூனிஸ்ட் அரசை அங்கீகரிப்போம் என்று, அமெரிக்கா
ஆதரிக்க முன்வராத ஒன்றை, இந்தியா உறுதியாக ஆதரித்தது.
இதையும் மீறி, பனிப்போர் காலகட்டத்தில் தன்னோடு இந்தியா
சேர்ந்துவிடும் என்ற அமெரிக்காவின் நம்பிக்கையை, இந்தத் தீர்மானங்களுக்கான இந்திய ஆதரவு
அதிகரித்தது.

ஆனால், ஆரம்பத்தில் இருந்த இந்த ஆதரவு படிப்படியாகக் குறையவே அமெரிக்கா
வருத்தமடைந்தது. கொரியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வாஷிங்டன் மற்றும் புதுதில்லியின்
அணுகுமுறைகளுக்கிடையே வேறுபாடுகள் அதிகரித்து வந்தன. இருப்பினும் ஆகஸ்ட் 1950ல் டல்லஸால்
முன்னெடுக்கப்பட்ட இந்த அரசியல் முயற்சி, இந்திய – அமெரிக்க உறவுகள் மேம்படக்கூடிய
சாத்தியங்கள் உண்டு என்ற அமெரிக்காவின் நம்பிக்கையை வெளிக்காட்டுகிறது. அதை நிரூபிப்பதற்காக
அவர்கள் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையாகவே இதைக் கருதலாம். இது இந்தியாவை தங்கள் பக்கம்
இழுக்கக்கூடும் என்று அவர்கள் எண்ணியிருக்கக்கூடும். பனிப்போரின் ஆரம்ப கால கட்டங்களில்
இந்திய அமெரிக்க உறவில், அமெரிக்காவின் நல்லெண்ண நடவடிக்கைகள் ஏதுமில்லை என்ற ஆண்ட்ரூ
ராட்டரின் வாதத்திற்கு எதிரான ஆதாரமாக இந்தச் சம்பவம் உள்ளது. ஆனால் நேரு சகோதர சகோதரிகளுக்கான
கடிதப் போக்குவரத்திலிருந்து இந்த நடவடிக்கையை இந்தியா ரசிக்கவில்லை என்று தெரிகிறது.
எந்த மாதிரி நடவடிக்கை இந்தியாவிற்குத் திருப்தியளித்திருக்கக் கூடும் என்ற கேள்வியையும்
இது எழுப்புகிறது. பனிப்போரின்போது அமெரிக்க அணிக்கு ஆதரவு அளிக்குமாறு இந்தியாவை ‘சரிக்கட்டலாம்’
என்ற அமெரிக்க நம்பிக்கைக்கு இது எடுத்துக்காட்டாக இருக்கிறது. அதுமட்டும் அல்லாமல்,
சிலர் கூறுவது போல் இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பிரச்சினையில் அமெரிக்கா
நடுநிலையே வகிக்க விரும்புகிறது என்ற எண்ணத்தையும் இந்த முயற்சி மாற்றியமைக்கிறது.
இந்தியா ஐநா பொதுச்சபையில் நிரந்தர உறுப்பினர் பதவியை அடைவதற்கு வாஷிங்டன் ஆதரவு அளிக்கிறது
என்ற செய்தி பாகிஸ்தானுக்கு எட்டுமானால் அது அமெரிக்கா மீது அதிருப்தி அடையும் என்பது
தெளிவு. இது இந்தியாவிற்கு காஷ்மீர் பிரச்சினையில் பெரும் ஆதரவை அளிக்கும் என்ற காரணத்தால்
பாகிஸ்தான் இதை விரும்பாது.

பண்டிட்டிற்கும் நேருவுக்கும் இடையேயான கடிதப்போக்குவரத்து, கொரியத்
தீபகற்பத்தில் போர் மூண்டபின் அதில் தலையிட முடிவு செய்த ஐநாவைப் பற்றி அமெரிக்கா என்ன
நினைக்கிறது என்பதையும் தெளிவுபடுத்துகிறது. தென்கொரியாவை எதிர்த்து ராணுவத்தை ஏவிய
வடகொரியாவைக் கண்டித்து ஐநா ஆரம்பத்தில் இரண்டு தீர்மானங்களை, 25 மற்றும் 27 ஜூன்
1950ல் நிறைவேற்றியபோது அது அமெரிக்காவாலும் மற்ற நாடுகளாலும் கம்யூனிஸ ஆக்கிரமிப்பிற்கு
எதிரான கூட்டு முயற்சியாகக் கருதப்பட்டது. இத்தீர்மானங்களுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்து,
அமெரிக்காவின் பக்கம் இருப்பதுபோன்ற ஒரு கருத்தை பனிப்போரின் போது ஏற்படுத்தினாலும்,
ஐநாவில் சீனாவிற்கு உரிய இடத்தைப் பெறுவதற்கான தனது ஆதரவை இந்தியா தொடர்ந்து அளித்து
வந்தது. ஆகஸ்ட் மாதத்தில் சோவியத் ஐநாவிற்குத் திரும்பியதை அடுத்து அமெரிக்காவிற்குச்
சாதகமான சூழ்நிலை மாற்றமடைந்தது. இந்தியாவுடனான இந்த அணுகுமுறைக்கு முன்பும் அதன் பின்பும்
அமெரிக்காவில் ஐநாவை எப்படி அமெரிக்க நலனுக்காகப் பயன்படுத்தலாம் போன்ற விவாதங்கள்
நடைபெற்றுவந்தன. குறிப்பாக ஐநா பாதுகாப்பு சபையில், ஏன் ஐநாவிலேயே சீனா இடம்பெறுவது
குறித்தும் விவாதங்கள் நடைபெற்றன.
ஒருபுறம் சீன தேசியவாதிகளை வெளியேற்றி, மறுபுறம் கம்யூனிஸ்டுகளையும்
காலியாக உள்ள இடத்தைப் பெற விடாமல் செய்வது என்ற யோசனையை பலர் தெரிவித்திருந்தனர்.
ஆகஸ்ட் பின்பகுதியில் நடந்த பண்டிட்-நேரு இருவருக்கிடையேயான கடிதப்போக்குவரத்து, இதுபோன்ற
விவாதங்கள் எவ்வளவு தூரம் சென்றன என்பதைத் தெரிவிக்கிறது. ஐநாவை ஒட்டுமொத்தமாக மறுசீரமைப்புக்குள்ளாக்காமல்,
பாதுகாப்புச் சபையில் இந்தியாவைச் சேர்த்துவிட்டால் அமெரிக்காவின் நலன்களுக்கு அது
சாதகமாக இருக்கும் என்ற எண்ணம் நிலவியது. இல்லாவிடில், இந்தியாவிற்குப் பாதுகாப்பு
சபையில் இடமளித்ததற்குப் பிரதியுபகாரமாக, சீனாவை ஐநா சபையில் சேர்த்துக்கொள்வது என்ற
இந்தியாவின் கொள்கையைக் கைவிடவேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக்கொண்டிருக்கலாம். இருப்பினும்
இந்த நடவடிக்கை – இந்தத் தலைப்பில் அமெரிக்க விவாதங்களைப் பற்றிய மேலும் பல தகவல்கள்
தேவைப்படும் என்ற நிலையில் – அமெரிக்கா ஐநா சபையின் திறனை எப்படித் தன் நலன்களுக்குப்
பயன்படுத்தலாம் என்று எண்ணியதையும் குறுகிய காலத்தில் தென்கொரியாவில் ஆக்கிரமிப்பு
செய்த வடகொரியாவின் மீது நடவடிக்கை எடுக்க ஐநாவை எப்படிப் பயன்படுத்தலாம் என்று அது
முயன்றதையும் காட்டுகிறது. ஆக, இந்தியாவை அமெரிக்கா அணுகியது ஐநா என்கிற நிறுவனத்தை
தன் நலன்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்த முனைந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே கருதலாம்.
இதில் செப்டம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட ‘அமைதிக்காக ஒன்றுபடுவோம்’ தீர்மானமும் ஒரு
பகுதியாக விளங்குகிறது.

நேருவின்
நிராகரிப்பு

இந்தியாவிற்கு ஐநா சபையில் சீனாவிற்கான இடத்தை அளிக்க முன்வந்த
அமெரிக்காவின் திட்டத்தை உறுதியான முறையில் நிராகரித்த நேருவின் அணுகுமுறை ‘நேருவின்’
வெளியுறவுக் கொள்கை ஐநாவை எப்படி மதிப்பான முறையிலும் உலக நாடுகளின் மையமாகவும் கருதியது
என்பதைத் தெளிவுபடுத்துகிறது. நேருவைப் பொருத்தவரை பன்னாட்டுத் தகராறுகளைப் பேச்சுவார்த்தை
மூலம் தீர்க்கும் ஒரு இடமாக, போரைத் தவிர்க்கும் ஒரு அமைப்பாக ஐநா இருந்தது. எனவே ஐநா
வலிமையாக இருப்பது பேச்சுவார்த்தை மற்றும் எல்லோரையும் கலந்தாலோசிப்பது என்ற அவரது
வெளியுறவுக் கொள்கையின் மறுக்கவியலாத ஒரு அங்கமாக இருந்தது. இந்தியாவில் கொள்கை முடிவுகளை
எடுப்பவர்களின் இடையே 1950களில் ஐநா முக்கியமானதாக இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள
மிதி முகர்ஜி வரை நாம் செல்லவேண்டியதில்லை.

வெளியுறவுத்துறையின் திட்டத்தை நிராகரித்த நேருவின் வாதம், இதன்
மூலம் ஐநா பலவீனமடைந்துவிடும் என்ற கவலையின் அடிப்படையிலும் ‘நன்கு அறியப்பட்ட’ ஐநா
சபைக்கு மூடுவிழா நடத்தவேண்டியிருக்கும் என்ற அச்சத்தினாலும் ‘ஒரு போரை நோக்கி இது
இட்டுச்செல்லும்’ என்ற எண்ணத்தினாலும் பாதிக்கப்பட்டிருந்தது. ஐநா என்ற அமைப்பு பேச்சு
வார்த்தைகளின் மூலம், பிரச்சினைகளுக்கு அமைதித் தீர்வுகளை எட்ட உதவும், உலகின் பதட்டத்தைத்
தணிக்கும் என்று நேரு நம்பினார். நேரு மற்றும் இன்னும் சிலர் இரண்டாவது உலகப் போரைப்
போல மீண்டும் ஒரு போர் மூளக்கூடும் என்று நினைத்ததைக் குறைத்து மதிப்பிட முடியாது.
மேலும், ஐநா சபை நாடுகளின் அறமில்லாத நடவடிக்கைகளைக் கண்டிக்கும், தண்டிக்கும் இடமாக
இருக்கும் என்று நேரு எண்ணினார். இது தென்னாப்பிரிக்காவில், இந்தியர்களுக்கு எதிரான
இனவெறிச் சட்டங்களின் மீது ஐநா எடுத்த நடவடிக்கைகளுக்கு இந்தியா தெரிவித்த ஆதரவிலிருந்து
அறியலாம். ஐநா மீதான நேருவின் நம்பிக்கைகளுக்கு அந்த நேரத்தில் பெருமளவு பாதிப்பு ஏதும்
ஏற்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் காஷ்மீர் மீதான உரிமையில்
அமெரிக்காவும் பிரிட்டனும் ஐநாவில் செய்த குழப்படிகளுக்குப் பின்னும் இந்த நம்பிக்கை
நீடித்தது. 1949ல் பண்டிட், பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர் இடத்திற்கு விலையாக
காஷ்மீர் இருக்குமோ என்று ஐயுற்றார்.
பன்னாட்டு விவகாரங்களில் ஐநா முக்கியமான இடத்தை வகிக்கும் என்ற
நேருவின் நம்பினார். ஐநாவில் சீனாவின் இடத்தை இந்தியா பெறுமானால் அது சாசனத் திருத்தத்திற்கு
வழிவகுத்து அந்த அமைப்பையே சீர்குலைத்துவிடும் என்ற அஞ்சினார். அவர் தனது சகோதரிக்கு
எழுதிய கடிதத்தில், 1950 செப்டம்பரில் நடைபெறுகின்ற ஐநா பொதுச்சபையில் சீனாவின் இடத்திற்கான
விவாதங்கள் அந்த அமைப்பைப் பிளந்து ஒரு பெரும் பிரச்சினைக்கு வழிவகுத்துவிடும் என்று
தெரிவித்திருந்தார். அந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்க தாம் விரும்பவில்லை என்று
அவர் திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.

உலகின் ஒட்டுமொத்த நாடுகளின் பிரதிநிதித்துவத்தைப் பெற்றால் மட்டுமே
ஐநா சபை வலிமையுறும் என்ற எண்ணம் நேருவின் மனதில் உறுதியாக இருந்தது. எனவே, சீனாவின்
பிரதிநிதித்துவம் சீன மக்கள் குடியரசைக் கொண்டு இருக்கவேண்டும் என்பது நேருவின் ஐநா
சம்பந்தப்பட்ட கொள்கையாக இருந்தது. தவிர, இது நேருவின் விரிவான சீனக் கொள்கையின் ஒரு
பகுதியாக விளங்கியது. சீனாவுடன் நேரடித் தகராறு ஒன்றைத் தவிர்க்க நேரு விரும்பினார்.
சீனா பன்னாட்டு சமூகத்தில் ஒன்றிணைவது அந்நாட்டுடனான சிக்கலைத் தவிர்க்கும் என்று அவர்
எண்ணினார். பன்னாட்டுப் பிரிவினைகளை ராணுவ முகாம்கள் அமைத்து தமது வலிமையைக் காட்டுவதன்
மூலம் தீர்த்துவிட இயலாது என்று நேரு கருதினார். அனைத்துத் தரப்பினரையும் பன்னாட்டு
சமூகத்தில் இணைத்து அவர்களுக்கிடையே நம்பிக்கையை வளர்ப்பதன்மூலமே பதட்டங்கள் தணிக்கப்படும்
என்பது அவர் நம்பிக்கை. ஆரம்பகால கட்டத்தில், சோவியத் யூனியனின் மீது மேற்கு நாடுகள்
நெருக்கடி கொடுத்து, அந்நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக்குறி ஆக்கியதன் காரணமாகவே உலகம்
இரண்டாகப் பிளவடைந்தது, அந்த வகையில் மேற்கு நாடுகள் தவறு செய்துவிட்டன என்று அவர்
நினைத்தார். இப்படிப்பட்ட நேருவின் வரலாற்றுப் புரிதலே, இந்தியப் பிரதமரை இந்தியா மற்றும்
உலகத்தின் சார்பாக சீனாவின் பிரதிநிதித்துவத்திற்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய வைத்தது.

பிடிவாதமாக, ஐநா பாதுகாப்பு சபையில் சீனாவின் இடத்தை இந்தியா பெற
விரும்பவில்லை என்று வலியுறுத்திய விதத்திலும், ஐநாவில் சீனா பிரதிநிதித்துவம் பெறுவது,
இந்தியா பாதுகாப்பு சபையில் இடம்பெறுவது போன்ற எந்த ஒரு விஷயத்திற்கும் முன்பு தீர்க்கவேண்டிய
பிரச்சினை என்ற நிலைப்பாட்டை எடுத்த விதத்திலும், நேருவின் வெளியுறவுக்கொள்கையில் எந்த
அளவு சீனா முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதை உணரலாம். போருக்குப் பிந்தைய உலகில்,
நேருவின் வெளியுறவுக் கொள்கைக்கு ஒரு மையம் உள்ளது என்று எடுத்துக்கொண்டோமானால், அது
சீனாவாகவே இருந்தது. ஒருவருக்கு இந்தக் கொள்கையில் விருப்பம் உள்ளதோ இல்லையோ, நேரு
விரும்பிய ஆசியாவின் மறுமலர்ச்சியின் ஒரு பகுதியாக இது இருந்தது. ஒரு குறிப்பிட்ட கொள்கைக்காக
சீனாவை ஒதுக்கி வைப்பது எதிர்ப்பை மென்மேலும் வலுப்படுத்தி, பன்னாட்டு நிலைத்தன்மையைக்
கேள்விக்குறியாக்கிவிடும் என்று அவர் நினைத்தார்.

சீன மக்கள் குடியரசு உருவாவதற்கு முன்பே நேருவின் நிலை தெளிவாக
இருந்தது. ஜூலை 1949ல் வாஷிங்டனின் இருந்த பண்டிட்டிற்கு அவர் எழுதிய கடிதத்தில், கம்யூனிஸ்டுகளுக்கு
எதிரான ‘பசிபிக் ஒப்பந்தத்தில்’ சேருமாறு வந்த அழைப்பைப் புறக்கணிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

“ஒரு யதார்த்தவாதியாகப் பார்க்கும்போது,
கம்யூனிஸ்டுகள் சீனாவின் பெரும்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்பதும்
விரைவில் நாடு முழுவதும் அவர்கள் கைக்குச் செல்லக்கூடும் என்பதும் ஒருவருக்குப் புரிந்திருக்கும்.
பன்னாட்டு அமைதியின் நலன் கருதி, புதிய சீனாவுடனான நட்பைச் சீர்குலைக்கும் எந்த ஒரு
விஷயத்தையும் நாம் செய்யக்கூடாது.”

ஆகஸ்ட் 1950ல், இந்தியா சீன மக்கள் குடியரசை அங்கீகரித்தது மட்டுமல்லாமல்,
அதனுடனான உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ளப் பெரிதும் முயன்றது. நேருவின் ஒட்டுமொத்த வெளியுறவுக்
கொள்கை, ‘சீனா ஒரு பன்னாட்டுக் கூட்டாளி, அந்நாட்டால் பனிப்போரின் பதட்டங்களைக் குறைக்க
முடியும்’ என்று நிறுவுவதை மையமாகக் கொண்டிருந்தது. சோவியத் யூனியன் உருவானபோது மேற்கு
நாடுகள் பதட்டப்படாமல் இருந்திருந்தால் அதனுடன் ஒரு நல்ல உறவை உருவாக்கிக்கொண்டிருக்க
முடியும் என்பது நேருவின் வாதம். அதேபோன்ற ஒரு தவறை மீண்டும் மேற்கு நாடுகள் இழைத்துவிடக்கூடாது
என்பதில் அவர் முனைப்பாக இருந்தார்.

நிறைவு

இக்கட்டுரையை நிறைவு செய்வதற்கு முன் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய
முக்கியமான ஒன்று. “இந்தியா ஒரு வலுவான நாடு, அதற்குப் பாதுகாப்புச் சபையில் நிரந்தர
இடத்தைப் பெறுவதற்கான தகுதி உண்டு” என்ற நேருவின் கருத்தை பண்டிட்டுடனான அவரது கடிதப்
போக்குவரத்து உறுதி செய்கிறது என்பதை. ஒரு மீள்யோசனைக்குப் பின் எழுதியதைப் போல, ஆகஸ்ட்
30, 1950ல் அவரது சகோதரிக்கு எழுதிய கடிதத்தில் ‘பல்வேறு காரணங்களால்’ இந்தியா ‘பாதுகாப்புச்
சபையில் நிரந்தர இடத்தைப் பெறுவதற்கான தகுதியைக் கொண்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் ஆசிய மற்றும் உலக விவகாரங்களில் இந்தியா கொண்ட முக்கியத்துவம் நேருவின் கடிதங்களில்
அடிக்கடி இடம்பெற்றிருந்தது. வரலாறு, புவியியல் மற்றும் அறம் சார்ந்த ரீதியாக இந்தியா
இந்தத் தகுதியைக் கொண்டிருந்தது என்று அவர் நம்பினார்.

நேருவை அன்றும் சரி இன்றும் சரி, விமர்சனம் செய்வோர் இந்தியாவின்
பெருமையைப் பற்றிய அவரது கணிப்போடு ஒத்துப்போகும் அதே வேளையில், ‘சீனா பாதிப்படையும்’
வகையில் இந்தியா ஐநா பாதுகாப்புச் சபையில் இடம் பெறாது என்ற அவரது நிபந்தனையைக் கடுமையாகக்
குறைகூறுகின்றனர். எனவே இது தொடர்பாக மேலும் பல ஆதாரங்களை, அவை இருந்தால், ஆய்வு செய்வது
இந்த வாய்ப்புகளைப் பற்றிய இந்தியத் தரப்பு வாதங்களை அறிந்துகொள்ளப் பயனுள்ளதாக இருக்கும்.
அதேபோல அமெரிக்காவின் இந்தத் தூண்டில் எவ்வாறு உருவானது, இந்தியாவுடன் மேலும் என்ன
வகையான தகவல் பரிமாற்றம் நடந்தது என்பதையும் அறிந்துகொள்வது மேலும் பல அரிய தகவல்களை
அளிக்கலாம். எப்படியிருந்தாலும் அமெரிக்கா இதுபோன்ற ஒரு வாய்ப்பை அளித்தது, அதை இந்தியா
நிராகரித்தது என்பது வெள்ளிடைமலையாகத் தெரிகிறது.
இந்திய அமெரிக்க உறவின் இந்த அத்தியாயம், 1950களின் மத்தியில்
இந்திய அமெரிக்க நாடுகளின் மனப்போக்கையும் வெளியுறவுக்கொள்கைகளையும் விளக்குகிறது.
பனிப்போரின் ஆரம்ப காலகட்டங்களில் இந்தியாவைத் தன்பக்கம் இழுக்க அமெரிக்கா முயன்றது
என்பது இதிலிருந்து தெரிகிறது. 1953ல் பாகிஸ்தானுடன் ஒரு ராணுவ ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு
முன்னால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அமெரிக்கா நடுநிலை வகித்தது
என்ற எண்ணத்தை இது கேள்விக்குறியாக்குகிறது. அதுபோல, கொரியப் போரில் சீனா தலையிடுவதற்கு
முன்பே, துணைக்கண்டப் பிரச்சினைகளை பிரிட்டனின் பார்வைக்கு விட்டுவிடுவது என்ற கொள்கையும்
மறுபரிசீலனைக்கு உள்ளானது என்பதையும் இது தெளிவாக்குகிறது. பனிப்போர் கால கட்டத்தில்
ஐநாவை தன் இஷ்டத்திற்கு வளைக்க அமெரிக்கா செய்த முயற்சிகளின் ஒரு பகுதியே அது இந்தியாவிற்கு
அளித்த இந்த வாய்ப்பு என்றும் இந்நிகழ்வைப் புரிந்துகொள்ளலாம். அமெரிக்கா கம்யூனிஸ்ட்
சீனாவின் மீது அச்சம் கொண்டிருந்தது என்பதையும் அதன் காரணமாக ஒரு கட்டத்தில் அதன் ஆதரவு
பெற்ற சியாங்கே ஷேக்கை வெளியேற்றி உலக அரசியலின் ஆகப் பெரிய இடம் ஒன்றில் இந்தியாவை
அமரவைத்து, அதன்மூலம் அப்போதுதான் சோவியத் மீண்டும் இடம்பெற்ற பாதுகாப்பு சபையில் அதன்
பலத்தை அதிகரித்துக்கொள்ளலாம் என்ற அமெரிக்க எண்ணத்தையும் இது கோடிட்டுக் காட்டுகிறது.

அமெரிக்காவுடனான சிக்கலான ராஜீய உறவுகளின் ஒரு பகுதியாக நேரு இந்த
வாய்ப்பை நிராகரித்ததைக் காணலாம். இந்தியாவின் தேசிய நலனைக் கருதி ஒரு தாராளமான வாய்ப்பை
அளித்த அமெரிக்காவை, கொள்கையின் அடிப்படையில் நேரு நிராகரித்தது இந்த இரு நாடுகளும்
1950களில் ஒன்றுபட்ட எண்ணவோட்டத்தை கொண்டிருக்கவில்லை என்பற்குச் சாட்சியாக விளங்குகிறது.
இந்தப் பரிமாற்றங்கள், அவரது வெளியுறவுக் கொள்கையின் முக்கியமான பகுதியாக, ஐநா சபையின்
மீது நேரு அதிக மரியாதை வைத்திருந்ததைக் கூறுகிறது. காஷ்மீர் விவகாரத்தை ஐநாவிற்குக்
கொண்டுசென்று அது இந்தியாவிற்குச் சாதகமாக இல்லாத போதிலும் ஐநாவின் மீது நல்லெண்ணத்தை
நேரு கொண்டிருந்தார். நேருவின் வெளிநாட்டுக்கொள்கையின் மையமாக சீனா இருந்தது என்பதை
அவர் தன் சகோதரிக்கு எழுதிய கடிதங்கள் தெளிவாக்குகின்றன. 1950ல் மட்டுமல்லாது,
1955ல் மாஸ்கோவின் நடந்த பரிமாற்றங்களும் இதை உறுதிசெய்கின்றன. நேரு அச்சம்கொண்டவரல்ல,
‘பாண்டாவைத் தழுவிக்கொள்ள’ அவசரப்பட்டவருமல்ல. ஆனால் ஒரு பெரிய நாடான சீனாவை அவ்வளவு
எளிதில் ஒதுக்கிவிடமுடியாது என்பதில் உறுதியாக இருந்தார். இறுதியாக, இந்தியா பாதுகாப்புச்
சபையில் நிரந்தர இடம்பெறுவதற்குத் தகுதியான ஒன்று என்று நேரு எண்ணியபோதிலும் அது சீனாவை
பாதிப்படையச் செய்து அடைய வேண்டிய ஒன்றல்ல என்ற அவரது உறுதியான எண்ணத்தையும் இது காட்டுகிறது.

1964ல் நேரு மறைந்தபோது சீன மக்கள் குடியரசு உலக நாடுகளாலும்,
இந்தியாவாலும், ஏன் அதன் நெருங்கிய துணைவரான யூஎஸ்எஸ்ஆராலும் ஒதுக்கப்பட்டது. சீனாவை
பன்னாட்டுச் சமூகத்தில் ஒன்றிணைக்கச் செய்த முயற்சி தோற்றுவிட்டது என்பதைத்தான் இது
உணர்த்துகிறது. சொல்லப்போனால், சீனாவுடனான 1962ம் ஆண்டுப் போர்தான் ‘நேருவைக் கொன்றுவிட்டது’
என்று சொல்வோர் உண்டு. ஆனால் இந்தத் தோல்வியை வைத்து நேருவின் மதிப்பைக் கணிப்பது,
தீவிரக் கொள்கையுடய தலைவர்களால் ஆன பீஜிங் மீது அவரது தாக்கம் செல்லுபடியாகவில்லை என்பதைப்
புறக்கணிப்பதாகும். மேற்கு நாடுகளிலிருந்து தொடர்ந்து விலகிச் சென்றது மட்டுமல்லாமல்,
இந்தியாவுடன் தகராறுகளில் ஈடுபட்டு அதனுடன் 1962ல் போர் புரிந்து, பின்னர் மாஸ்கோவுடனிருந்து
கூடப் பிரிந்து சென்ற சீனாவின் நடத்தை ஆச்சரியகரமான ஒன்று. ஆனால் ஆரம்ப காலகட்டத்தில்
அமெரிக்காவின் மனநிலையையும் மீறி, உலக நாடுகளுடன் நல்லுறவைப் பேண சீனா செய்த முயற்சிகளுக்கான
பாராட்டு ஒருவகையில் நேருவைச் சேரவேண்டும். சீன மக்கள் குடியரசு மீது நேரு காட்டிய
இந்த இணக்கமான அணுகுமுறை இல்லாவிட்டால், தன்னைச் சந்தேகத்துடன் பார்த்த உலகத்தின் போக்கிலிருந்து
நீண்ட நாட்களுக்கு முன்பே பீஜிங் விலகிச்சென்றிருக்கக்கூடும்.



Posted on Leave a comment

ஆர்.எஸ்.எஸ். ஊழியர் தஞ்சாவூர் ராமரத்தினம் பேட்டி | சுப்பு – கரிகாலன்

உங்களைப் பற்றி…

நான் ஈஸ்வர வருஷம் ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரம் அன்று
பிறந்தேன். அதாவது, ஆங்கில ஆண்டு 1938 நவம்பர் பதினோராம் நாள். எனது அப்பா பெயர் ஏ.கிருஷ்ணசுவாமி,
தாயார் பெயர் லட்சுமி அம்மாள். என் தந்தையார் தென்னங்குடி கிராமத்தில் கர்ணமாகப் பணிபுரிந்து
வந்ததால் ஐந்தாம் வகுப்பு வரை அங்குதான் படித்தேன். நாங்கள் இரண்டு சகோதரர்கள், நான்கு
சகோதரிகள். ஆறு பேரும் பிறந்தது அன்பில் கிராமத்தில். வளர்ந்தது தென்னங்குடி கிராமத்தில்.

பத்தாம் வகுப்பு வரை தஞ்சையிலும், பியுசி திருச்சி ஜமால்
முகமது கல்லூரியிலும் படித்தேன். தஞ்சாவூர் சரபோஜி மன்னர் கல்லூரியில் படித்தேன். அதன்
பின்னர் சுவாமி சித்பவானந்தர் ஆரம்பித்த கல்லூரியில் ஓராண்டு படித்தேன். படித்து முடித்தவுடன்
தஞ்சாவூர் வீரராகவா உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து 1997ம் ஆண்டு ஓய்வு
பெறும்வரை அங்கேயே பணியாற்றினேன்.

1948 – நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலம்,
எனது அண்ணன் ஆர்எஸ்எஸ் ஷாகா சென்று கொண்டிருந்தார். அப்போது நானும் அவருடன் சென்றேன்.
தஞ்சாவூர் சீனிவாசபுரம் சிக்ஷக் இல.நாராயணன். ஷாகா சென்ற முதல் நாளே அண்ணன் கையால்
குட்டுப்பட்டேன். ஆனால் மறுநாள் சென்றபொழுது என் உயிரிலும் மேலான நண்பன் நாராயணன் என்னைக்
கட்டி அணைத்து, நீங்க தினசரி ஷாகா வாங்க என்று சொன்னான். அன்று தொடங்கி இன்றுவரை உறுதியாக
இருக்கிறேன்.

தமிழகத்தில் சங்கத்தை வளர்ப்பதற்காக வந்த முதல் பிரச்சாரக்
சங்கராந்தி விழாவில் ஆங்கிலத்தில் உரையாற்றினார். அவர் என்ன பேசினார் என்பது அப்போது
எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் அவரது உடல்மொழி என்னைத் ஈர்த்தது. இப்பொழுதும் என் கண்முன்னே
நிற்கிறது! 

அதற்குப்பிறகு தொடர்ச்சியாக நான் சங்கத்திற்கு வந்துகொண்டிருந்தேன். ஜமால்
முகமது கல்லூரியில் படிப்பதற்காக தஞ்சையிலிருந்து தினசரி சென்று வந்த காலகட்டத்தில்
தொடர்பு விட்டுப் போயிருக்கலாம். இன்று வரையில் 68 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று நான்கு
பேர் மத்தியில் மதிப்பு இருப்பதற்குக் காரணம் நான் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தில்
பெற்ற பயிற்சியும் அனுபவமும்தான். நான் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோதும்
சங்கத்திற்குச் சென்றுகொண்டிருந்தேன்.
1959 திருச்சி பாப்பம்மாள் சத்திரத்தில் முதலாம் ஆண்டு பயிற்சி
முகாமில் என்னுடன் வந்திருந்தவர் தமிழக பாரதிய ஜனதாவின் தலைவராக இருந்த இல.கணேசன்.
நானும் அவரும் ஒரே அறையில் தங்கி இருந்தோம். அவர் அவ்வளவு சீக்கிரமாக எழுந்துவிட மாட்டார்.
என்னைவிட ஆறு வயது இளையவர். நான் காலையில் எழுந்து தேநீர் குடித்துவிட்டு அவருக்கும்
ஒரு கோப்பையில் தேநீர் கொண்டு வந்து வைத்துக் கொண்டு ‘கணேசா’ என்று சொல்லி எழுப்புவேன்.
அந்த நறுமணம் அவரை எழுப்பி விடும்.
இல.கணேசன் தஞ்சை வீரராகவா மேல்நிலைப் பள்ளியில்தான் படித்தார்.
ஆனாலும்கூட நான் ஆசிரியராகப் பணி செய்வதற்கு முன்னதாகவே அவர் தனது பள்ளிப் படிப்பை
முடித்துவிட்டார். இன்றும் கூட இல.கணேசன் என்னைப் பார்த்துச் சொல்லுவார். ‘சங்கத்தில்
ராமரத்தினம்தான் எனது முதல் வழிகாட்டி’ என்று. உண்மையில் எனது வழிகாட்டுதல் குறைவு.
அவரது சுய முயற்சி அதிகம். அவரது உழைப்பால் உயர்ந்து இன்று தலைவர் என்று சொல்லும் அளவுக்கு
வளர்ந்திருக்கிறார்.

முதலாம் ஆண்டுப் பயிற்சி மட்டுமல்ல, சங்கத்தில் இரண்டாம்
ஆண்டுப் பயிற்சியும் (1968ம் ஆண்டு) நானும் கணேசனும் சேர்ந்துதான் முடித்தோம். அப்பொழுதும்
கணேசன் என் அறையில்தான் தங்கியிருந்தார். மூன்றாம் ஆண்டு மட்டும், எனக்கு ஒரு வருடம்
முன்னதாகவே நாக்பூரில். நான் 1970ம் ஆண்டு தான் மூன்றாமாண்டு பயிற்சி முடித்தேன்.




கணேசன் அரசியல் தலைவராக வருவார் என்று உங்களுக்கு அப்போதே தெரியுமா?

தெரியாது. அப்போது தெரியாது. ஆனால் அவர் பிரசாரத்துக்காக
வந்தபிறகு அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். அவருடைய பேச்சு, பழகக்கூடிய
விதம், நகைச்சுவை உணர்வு, எல்லாமே வித்தியாசமாக இருக்கும். நிச்சயமாக எதிர்காலத்தில்
பெரிய பொதுநலத் தலைவராக வருவார் என்ற எண்ணம் எனக்கிருந்தது. ஆனால் அன்று நான் சொல்லக்கூடிய
காலகட்டத்தில் ஜனசங்கம் இருந்தது. ஆனால் ஜன சங்கத்திற்கு தமிழகத்தில் அந்த அளவுக்கு
வளர்ச்சி இல்லை.
1959 பாப்பமா சத்திரம் முகாமுக்கு ஒரு சிறப்பு உண்டு மூன்று
நாட்கள் பரம பூஜ்ய குருஜி அவர்கள் அந்த முகாமில் உரையாற்றினார். பண்டித தீனதயாள் ஜீயவர்களும்
மூன்று நாட்கள் தங்கியிருந்து எங்கள் மத்தியில் உரையாற்றினார். நானாஜி தேஷ்முக், பாய்
மஹாவீர் போன்ற பெரியவர்கள் அந்த முகாமுக்கு வந்திருந்தனர். அன்றைக்கு தமிழகமும் கேரளமும்
இணைந்துதான் நடந்தது. தமிழகத்திலிருந்து 50 பேர் வந்தால் கேரளத்தில் 100 பேர் வருவார்கள்.

நான் மதுரையில் இரண்டாமாண்டு பயிற்சி முடிக்கும்பொழுதும்
பரம பூஜ்ய ஸ்ரீ குருஜி அவர்கள் மூன்று நாட்கள் வந்திருந்தார்கள். 1970ம் ஆண்டு நாக்பூர்
முகாமிலும் ஐந்து நாட்கள் கலந்து கொண்டார்கள்.
சங்கத்திற்கு நான் வந்ததிலிருந்து 1975 நெருக்கடி நிலை அறிவிக்கப்படும்வரை
தஞ்சாவூரின் அனைத்து தாலுகாக்களுக்கும் அப்போதைய பிரசாரக் ராமகோபாலன் அவர்களுடன் சென்றிருக்கிறேன்.
20 தாலுகாக்கள். வேலைக்கு அஞ்சு பேரைக் கூப்பிட்டா பத்து பேர் வருவாங்க. அவங்களோட பேசிட்டு,
‘ஏதாவது கேள்வி இருந்தா கேளுங்க’ன்னு ராமகோபாலன் சொல்வார். அப்ப நிச்சயமா எல்லாரும்
கேட்கிற முதல் கேள்வி, ஏன் காந்தியைக் கொன்றார்கள் என்பதுதான். அப்போது பவ்யமாகச் சொல்வார்.
சரி இனிமே கொல்ல மாட்டோம் என்று. நகைச்சுவை உணர்வு அவருக்கு. பின்னர் அதன் அரசியல்,
மற்ற நுணுக்கங்கள் பற்றி விளக்குவார். காந்தி கொலைக்கான உச்சநீதிமன்றத் தீர்ப்பில்
ஆர்எஸ்எஸ் என்ற வார்த்தையே இல்லை என்று சொல்லி, ஆர்எஸ்எஸ்ஸுக்கும் அதற்கும் தொடர்பே
இல்லை என்பார். உங்களுக்குத்தான் நல்ல பாட்டு பாடத் தெரியுமே, ஒரு பாட்டு பாட வேண்டும்
என்று யாரையாவது கேட்பார். உடனே அதுக்கு ஒருவர் ‘நரபலி கொடுத்த வீர பங்கமும் பாஞ்சாலமும்’
என்று நெஞ்சை உருக்கும் விதமாய்ப் பாடுவார்.

அதிலிருந்து ஒன்றிரண்டு பேர் நமக்கு சங்கக்காரர்கள் கிடைப்பார்கள்.
அன்று கிடைத்தவர்கள்தான் இன்றுவரை தொடர்ந்து சங்கப்பணி செய்து கொண்டிருக்கிறார்கள்.
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், கும்பகோணத்தில் ஒருவர் பிளாஸ்டிக் கடை வைத்திருந்தார்.
தஞ்சாவூர் ஜில்லா சங்கசாலக் அவரை சங்கத்திற்குக் கொண்டு வந்தவர். அதன்பிறகு நெருக்கடி
நிலையின்போது சங்க சகோதரர்கள் செய்த சாகசம்தான் இன்று ஆயிரக்கணக்கில் சாகா வளர்ந்திருப்பதற்கு
அடிப்படைக் காரணம்.
நெருக்கடி நிலையை எதிர்த்து திமுக, ஸ்தாபன காங்கிரஸ் இவர்களெல்லாம்
சத்யாகிரகத்தில் ஈடுபடவில்லை. பதுங்கிக்கொண்டார்கள். துணிந்து எதிர்த்துப் போராடியது
சேவகர்கள்தான். தமிழகத்திலிருந்து 1000 பேர் கைது. தஞ்சாவூரிலிருந்து 15 பேர் மிசாவில்
கைதானோம்.

நவம்பர் 14 1975. தஞ்சாவூர் சத்யாகிரகத்தில் தலைமை தாங்கக்
கூடிய பொறுப்பு எனக்கு இருந்தது. 18 மாதங்கள் மிசாவில் கைதாகும் பாக்கியம் கிடைத்தது.
நெருக்கடி நிலைக்குப் பிறகு மீண்டும் அதே பள்ளிக்கூடத்தில் பணியாற்றினேன். அந்த மேல்நிலைப்பள்ளி
உயர்நிலைப் பள்ளி முழுக்க முழுக்க காங்கிரஸ் குடும்பத்தின் நிர்வாகத்தில் இருக்கிறது.
வாண்டையார் குடும்ப நிர்வாகம். அவர்கள் முழுக்க முழுக்க காங்கிரஸ்காரர்கள். ஆனாலும்கூட
நான் எதிர்த்தது நெருக்கடி நிலையைத்தான், மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கைத்தான்,
தனி நபருக்கு எதிரான போராட்டம் அல்ல என்பதை அவர்கள் புரிந்து வைத்திருந்ததால், எனக்கு
மீண்டும் வேலை கொடுத்தார்கள்.

அதனால்தான் 1997 நான் ஓய்வு பெற்றபொழுது அய்யாறு வாண்டையார்
அவர்கள் கையினாலேயே எனக்குப் பட்டாடை அணிவித்து ஒரு பொன் மோதிரம் போட்டுக் கௌரவித்தார்.

லட்சியத்தில் உறுதியாக இருந்தால் சமூகத்தில் எந்த ஒரு சக்தியாலும்
நம்மை ஒன்றும் செய்ய இயலாது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

நெருக்கடி காலத்தில் உங்களுடைய குடும்பத்தின் நிலை?

குடும்பம் என்னாச்சு என்று கடவுளுக்குத்தான் தெரியும். எனது
தாய்மாமா ஓரளவு வசதி படைத்தவர். என் மனைவியைப் பிறந்த வீட்டில் கொண்டு விட்டுவிட்டேன்.
குறை சொல்லக் கூடிய மனநிலை இல்லாதவள் அவள். எனக்கு மூன்று குழந்தைகள். சிறு குழந்தைகள்.
ஆனால் அவர்களைப் பற்றிச் சிந்திப்பதற்குக் கூட எனக்கு நேரம் இல்லை.

யாதவர் ஜோஷி என்று ஒரு தலைவர். அவர் எழுதிய கடிதம் ஒன்று
திருச்சி சிறைக்கு வந்தது. அதில் அவர் சொல்லியிருந்தார், ‘நாமெல்லாம் மெழுகுவத்தி போன்றவர்கள்.
எரியும் மெழுகுவர்த்தியை நீங்கள் எப்படிச் சாய்த்தாலும் தலைகீழாகக் கவிழ்த்தாலும் தீபமானது
மேல் நோக்கித்தான் சுடர்விட்டுப் பிரகாசிக்கும்.’ அதனால் சிறையிலிருந்த அந்த 18 மாத
காலம் எங்கள் சிந்தனை தேசத்தை நோக்கியதாகவே இருந்தது. வேறு எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.
திருச்சி மத்தியச் சிறையில் என்னுடன் இருந்த 15 பேரில் ஒன்பது பேர் மரணம் அடைந்துவிட்டார்கள்.
என்னோடு சேர்த்து ஆறு பேர்தான் உயிரோடு இருக்கிறோம்.

நெருக்கடி நிலை – அப்படின்னா என்னன்னு இந்தக் கால இளைஞர்களுக்குப் புரியற மாதிரி
சொல்ல முடியுமா?

அவசரநிலை முடிஞ்சு 42 வருஷம் ஆகப்போகுது. அவசியம் இந்த விஷயத்தைப்
பதிவு பண்ணனும். அப்பத்தான் இந்தத் தலைமுறைக்கும் இனி வரும் தலைமுறைக்கும் இதனுடைய
ஆபத்து என்னன்னு புரியும்.
அப்போதைய பிரதமர் இந்திரா அம்மையார் தேர்தல்ல ஜெயிச்சது செல்லாதுன்னு
1975ல் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளிச்சார். அதோடு கூடவே இன்னும் ஆறு வருஷத்துக்கு
அந்தம்மா தேர்தலில் போட்டியிட முடியாதுங்கறது அவருடைய தீர்ப்பு. உடனே அந்தம்மா ‘கொஞ்சம்
அவகாசம் கொடுங்க, பிரதமரை மாற்றுவது அவ்வளவு சுலபம் இல்லை. நான் காங்கிரஸ் காரியக்
குழுவை கூட்டி விவாதித்து வேறு ஒரு பிரதமரை மாத்துறேன்’ன்னு அவகாசம் கேட்டாங்க. உடனே
துரிதமா செயல்பட்டு அந்த வழக்குல மேல்முறையீடு பண்ணி உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத்
தடை வாங்கினாங்க. அந்தத் தீர்ப்பே செல்லாதுன்னும் அறிவிக்க வைச்சாங்க. என்னதான் நீதியை
விலைகொடுத்து வாங்கினாலும் மக்கள் மனசுல ஒரு கோபம் இருக்கும் இல்லையா? அதை அடக்குறதுக்காக
நெருக்கடி நிலையை அறிவிச்சு தன்னை சர்வாதிகாரியா நிலை நாட்டிக்கிட்டாங்க.

ராத்திரியோட ராத்திரியா சங்கத்து மேல தடை வந்தது. எதிர்க்கட்சித்
தலைவர்களைக் கைது பண்ணினாங்க. மாபெரும் தலைவர்களான ஜெயபிரகாஷ் நாராயணன், வாஜ்பாய்,
அத்வானி, எல்லாரையும் கைது பண்ணிட்டாங்க. நெருக்கடி நிலையை எதிர்த்து சத்தியாகிரகம்
பண்ணின எங்களையும் கைது பண்ணிட்டாங்க. நாடு முழுக்க இந்த மாதிரி பல்லாயிரக்கணக்கானவர்கள்
கைதாகிச் சிறையில் இருந்தனர். அந்த அனுபவத்தைத்தான் நான் இப்போ உங்ககிட்ட சொல்லப் போறேன்.

திருச்சி மத்திய சிறையில உங்க கூட யார்யார் இருந்தாங்க?

பதில்: நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம் நடத்திக்
கைதானோம். திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட எங்களோடு திராவிடர் கழகம், திராவிட
முன்னேற்றக் கழகம், ஸ்தாபன காங்கிரஸ், சோஷலிஸ்ட் போன்ற கட்சிகளைச் சார்ந்தவர்களும்
சில தீவிர கம்யூனிஸ்டுகளும் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் சேர்த்து 250 பேர். நாங்கள்
15 பேர்.

நெருக்கடி நிலையின்போது கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் சித்திரவதைக்கு உள்ளானார்கள்
என்ற பேச்சு அடிபட்டது. திருச்சியில் அப்படி ஏதும் நடந்ததா? உண்மையா?

அரசியல் கைதிகள் என்று நீங்கள் சொல்வது ஸ்டாலின் போன்ற அரசியல்
கட்சித் தலைவர்களை. எங்களோட இருந்தவர்களுக்கு அந்த மாதிரி எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஏன்னா, நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பொருத்துத்தான் சிறை வாழ்க்கை அமையும்.
எங்களது சிறை மேலாளர் ராமநாதன், கைதிகளின் ஆவணங்களை ஒவ்வொன்றாகப்
புரட்டிப்பார்க்கும்போது ராமரத்தினம் எம்எஸ்சி பிஎட், ஆசிரியர் என்றிருந்ததால் என்னைக்
கூப்பிட்டனுப்பினார். அவரது பையன் செயின்ட் ஜோசப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்
கொண்டிருந்தான். ஆங்கில வழி போதனா முறை. ஆனால் பையன் ஆங்கிலத்தில் சுமார். தன் பையனுக்குப்
பாடம் சொல்லித் தரும்படி என்னைக் கேட்டார். அது மட்டும் இல்லை. ‘வீட்டுக்கு வரமுடியுமா?’
என்றும் கேட்டார். ‘வீட்டுக்கு வந்தா உங்க வேலைக்கே உலை வச்சிடுவாங்க. சிறையை விட்டு
நான் வெளியில போக முடியாது. அதனால உங்க பையனை இங்கேயே வரச் சொல்லுங்க’ன்னு நான் சொன்னேன்.

ராமநாதன் அவரோட அறையிலேயே எனக்காக ஒரு இடம் ஒதுக்கிக் கொடுத்தார்.
அவரோட பையன் தினசரி பாடம் படிக்க வருவான். இரண்டே மாசத்தில எல்லாப் பாடத்துலயும் நல்ல
மதிப்பெண் வாங்கினான். அம்மா அவங்க பையன்கிட்ட விசாரிச்சிருக்காங்க. பையன் ‘அந்த வாத்தியார்
எனக்கு நல்லா பாடம் நடத்தினார்’ன்னு அம்மாகிட்ட சொல்லி இருக்கான். உடனே அந்தம்மா தன்
கணவரைக் கூப்பிட்டு, ‘இந்த சங்கத்துக்காரங்க ரொம்ப நல்லவங்களாத்தான் இருக்கணும்; நம்ம
பையனை இந்தளவுக்கு படிக்க வச்ச அவங்களுக்கு நாம ஏதாவது பிரதியுபகாரம் பண்ணனும்னு’ சொல்லி
இருக்காங்க.

திருச்சியில காந்தி காய்கறிச் சந்தை பிரபலம். அங்கிருந்து
தினசரி நல்ல பச்சைக் காய்கறிகள் அவங்க சொந்தச் செலவுல வாங்கி அனுப்புவாங்க. சிறையில்
இருக்குறவங்களுக்கு ஆச்சரியமாய் இருக்கும். பொதுவா காய்ந்துபோன காய்கறிகளைத்தானே போடுவாங்க,
உங்களுக்கு மட்டும் என்ன பச்சைக் காய்கறிகள் வருதுன்னு கேட்பாங்க. யாரோ புண்ணியவான்
அனுப்பி வைக்கிறார்னு சொல்லி நானும் சமாளிச்சுடுவேன்.
அப்படித்தான் எங்களுக்குக் கடைசி வரைக்கும் தனி மரியாதை,
அந்தஸ்து கிடைச்சது. அது எல்லாத்துக்கும் காரணம் எங்களோட நடத்தை.

பிற கட்சிக்காரங்க உங்களோட கலந்து பழகுவாங்களா?

பழகுவாங்க. ஆனா துக்க வீட்டுல இருக்கறது போல சோகமாவே இருப்பாங்க.

கோ.சி.மணி, திருச்சி சிவா போன்ற மாற்றுக் கட்சிக்காரங்க எங்களோட
இருந்தாங்க. அவங்களை எல்லாம் கூப்பிட்டு மத்தியானம் ஒரு காப்பி கொடுத்துட்டுப் பேசுவோம்.
எப்படிங்க உள்ள வந்தீங்கன்னு கேட்டாக்க, நாங்க எங்கங்க போராடினோம், பிடிச்சிட்டு வந்துட்டாங்கன்னு
புலம்புவாங்க. திருச்சியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கே.அனந்த நம்பியார் என்பவரை தூத்துக்குடியிலிருந்து
பிடிச்சிட்டு வந்தாங்க.

சத்தியாகிரகம் பண்ணினா மிசாவில கைதாவோம்னு தெரிஞ்சுதான் சங்கக்காரர்கள்
நாங்க கைதானோம். அதனால எங்க மனநிலையில எந்தக் குழப்பமும் இல்லை. நாங்கள் சிறைக்குள்
இருந்தாலும் சங்க முகாமில் இருப்பது போலத்தான் உணர்ந்தோம். அதைத்தவிர வெளியில் இருந்து
செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும்.

செய்திகள் எப்படி உள்ளே வந்தன?

திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து இப்போது ஓய்வு
பெற்றிருக்கக் கூடிய பெல் ஸ்ரீநிவாசன் அப்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.
அவர்தான் எங்களுக்குச் செய்திகளைக் கொண்டு வருவார். நாக்பூரில் இருந்து, தில்லியில்
இருந்து வரக்கூடிய குறிப்புகள் ஆங்கிலத்தில் இருக்கும். ஸ்ரீநிவாசன் ஏதாவது சிறைக்காவலரிடம்
ஐந்தோ பத்தோ கொடுத்து செய்திகளை உள்ளே அனுப்புவார். காவலர் அதைத் தனது காலணியில் ஒளித்து
வைத்து வந்து உத்தமராஜிடமோ, என்னிடமோ அறைக்குள் தள்ளி விட்டுச் சென்று விடுவார். நான்
அதைத் தமிழில் மொழிபெயர்த்து அனைவருக்கும் அனுப்புவேன். சில நேரங்களில் வாசித்தும்
காட்டுவேன்.

அனந்த நம்பியார் போன்ற மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு
எல்லாமே ஆச்சரியமாக இருக்கும். எப்படி உங்களுக்கு மட்டும் செய்தி வருதுன்னு கேட்பாங்க.
டெல்லியில் ஒரு சுரங்கம் வச்சிருக்காங்க, அதுல காகிதத்தைப் போட்டுத் தண்ணி ஊத்தினா
அது வந்துடும்னு கிண்டலாகவே பதில் சொல்லுவேன்.

இதுல விசேஷம் என்னன்னா, நாங்க சிறைக்குப் போனதிலிருந்து வெளியே
வர்ற வரைக்கும் எல்லாக் காலத்திலும் தொடர்ச்சியா செய்திகள் வந்து கொண்டிருந்தன.

அதுல குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். தில்லியில் நாடாளுமன்றக்
கூட்டத்தொடரின்போது சுப்பிரமணிய சாமி தோன்றினார், பேசினார், தப்பினார் என ஒரு செய்தி.
கும்பகோணத்தைச் சேர்ந்த ரமணி என்கிற ராமஸ்வாமி எங்களோடு சிறையில் இருந்தார். அவரது
மனைவியும், சகோதரரும் அவ்வப்போது அவரைப் பார்க்க வருவார்கள். அவர்கள் மூலமாகக் கிடைத்த
செவிவழிச் செய்திதான் அது. அதை நான் சக கைதிகளிடம் தெரிவித்தேன். எவரும் நம்பவில்லை.

கும்பகோணத்தைச் சேர்ந்த மார்க்கெட் துரை பெரிய போக்கிரி.
திமுகவைச் சேர்ந்தவன். கோசி மணியே அவனைக் கண்டால் நடுங்குவார். அவன் என்னிடம் வந்து,
‘என்ன ராமரத்தினம், ஏன் இப்படிப் பொய்ச் செய்தி எல்லாம் பரப்பறீங்க? சுப்பிரமணியசாமியாவது
நாடாளுமன்றத்திற்கு வர்றதாவது, பேசுறதாவது? சும்மா பொய் சொல்லாதீங்க!’ என்றான்.
‘பாரப்பா, இது எனக்கு வந்த செய்தி. நம்புவதும் நம்பாததும்
உன் இஷ்டம்’ என சொல்லிட்டேன். மூணு நாள் கழித்து அந்தச் செய்தி வெளிவந்தது. மார்க்கெட்
துரை என்னிடம் வந்து மன்னிப்புக் கேட்டான். இதிலிருந்து நமக்கு முன்னாடி பெட்டிப் பாம்பு
மாதிரி பவ்யமா வளஞ்சு கும்பிடுவான்.

இன்னொரு சுவாரசியமான சம்பவம். 1976 மார்ச் 18ல் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன்
அனைத்துக் கட்சி கைதியினரும் விடுதலை செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட், ஸ்தாபன காங்கிரஸ்,
தி.க, திமுக என அனைத்துக் கட்சியினரும் விடுதலையானார்கள். ஆனால் எங்களையும் மூன்று
நக்சலைட்டுகளையும் மட்டும் விடுவிக்கவில்லை.
ஆர்எஸ்எஸ் காரர்கள் பதினைந்து பேர். மூன்று நக்சலைட்டுகள்.
நாங்கள் 18 பேர் மட்டும் பாதுகாப்பான சிறையில் அடைக்கப்பட்டோம். அடுத்த நாள் ஜெயபிரகாஷ்
நாராயணன் நாடு தழுவிய உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்தார். உண்ணாவிரதத்தில்
நாங்களும் பங்கெடுக்கப் போகிறோம் என்று எழுதிக் கொடுத்தோம்.

கடிதத்தைப் பார்த்த சிறை அதிகாரிக்கு ஆச்சரியம். எங்களோடு
சேர்ந்து அந்த மூன்று நக்சலைட்டுகளும் கையெழுத்துப் போட்டிருந்தார்கள். ‘சங்கத்துக்காரங்கதான்
உண்ணாவிரதம் இருக்காங்க! நீங்க ஏன் அதுல போய் கலந்துக்குறீங்க?’ன்னு கேட்டார் சிறை
அதிகாரி செல்லதுரை. அதுக்கு நக்சலைட்டுகள் சொன்ன பதில்தான் ஆச்சரியமான விஷயம்.
“சங்கத்துக்காகரங்க எங்களோட ஒரு வருஷமாக உள்ள இருக்காங்க.
அவங்க தங்களுக்குன்னு இது வரைக்கும் எதுவுமே கேட்டதில்லை. எங்களுக்கு நம்பிக்கை இருக்கு.
இந்த நாட்டுக்கு ஏதாவது ஒரு நல்லது நடக்கும்னா அது சங்கத்தாலதான் நடக்கும். அது புரிஞ்சதாலத்தான்
கையெழுத்து போட்டோம்”.

சிறை சட்டப்படி உண்ணாவிரதம் இருக்கக் கூடாதே!

பதில்: ஆமாம். அதனாலதான் சிறைத் துறை அதிகாரிகள் என்னோட பலஹீனத்தை
வைச்சு மிரட்டிப் பார்த்தாங்க.

அது என்ன பலஹீனம்?

பீடி பிடிக்கிறதுக்கு சிறையில் ஒரு தொகை (Smoking
Allowance) தருவாங்க. அந்தப் பணத்தை எல்லாம் வச்சு நான் பத்திரிகைகள் வாங்கிடுவேன்.
அது தெரிஞ்சுக்கிட்ட அந்தச் சிறை அதிகாரி உண்ணாவிரதம் இருந்தா பத்திரிகைகளை நிப்பாட்டிடுவேன்னு
பயமுறுத்தினார். சாப்பாடே வேணாம்னு சொல்றேன், பத்திரிகையையா பெருசா நினைக்கப் போறோம்னு
சொல்லிட்டேன்.

சிறை மேலாளர் ராமமூர்த்தி ‘யோவ் செல்லதுரை, அவங்களை ரொம்ப
மிரட்டாதீங்க. ஒருநாள் உண்ணாவிரதத்தை காலவரையற்ற உண்ணாவிரதம்னு நீட்டிக்கப் போறாங்க’
ஒரே போடாகப் போட்டார். சிறை அதிகாரி ஆடிப்போயிட்டார். ஒருநாள்தானே, அந்த ஒரே நாள்ல
நிப்பாட்டிடனும் என்னும் நிபந்தனையுடன் எங்களுக்கு அனுமதி தந்தார். ‘பாருங்க இட்லிக்கு
மாவு அரைச்சிருக்கோம். நாளைக்கு இட்லி, தொட்டுக்க மோர்க் குழம்பு. நீங்களும் சாப்பிட
வாங்க!’ என அவர்கிட்ட சொன்னேன்.
ஒருநாள்தான் உண்ணாவிரதம். அதையும் சோதிச்சுப் பார்த்தாங்க.
இட்லி, தோசை, நெய்யில பொரிச்ச பூரி. இதுதான் அன்றைய காலை உணவு. எங்க அறை முன்னாடி கொண்டு
வச்சுட்டாங்க. நாங்க கண்டுக்கவே இல்லை. அதேபோல மதியச் சாப்பாடு, இரவு பட்சணம், எல்லாமே
அறை வாசல்ல வச்சாங்க. ஏன் வீணடிக்கிறீங்கன்னு கேட்டோம். தலைமைச் செயலாளர் கேப்பாங்க,
அவங்களுக்கு உணவு கொடுத்தாச்சான்னு விசாரிப்பாங்க, அதனாலதான் வைக்கிறோம்னு சொன்னாங்க.
அடுத்த நாள் காலையில் எல்லாத்தையும் எடுத்துக் கொட்டினாங்க.

மறுநாள் காலையில் நாங்க இட்லி மோர்க்குழம்பு சாப்பிட்ட உடனே
அந்தச் சிறை அதிகாரிகளுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. நாடு முழுக்க இருந்த உண்ணாவிரதத்தின்
தொடர்ச்சி சிறையிலும் இருந்தது எங்களுக்கு மகிழ்ச்சி.

இதனுடைய தாக்கம் எந்த அளவிற்கு இருந்தது என்றால், மறுநாள்
காலையில் சமையலுக்குப் பொருள் எல்லாம் வாங்கறதுக்காக போனப்போ, பின்னாடி இருந்து ‘பிரதர்’னு
ஒரு குரல். திரும்பிப் பார்த்தேன். கலியபெருமாள். தமிழ்ப் புலவர். நக்சலைட்டுகள் அமைப்பின்
தலைவர். நெருக்கடி நிலைக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை. வேறொரு கொலை வழக்கில் கைதாகிச்
சிறையில் இருந்தவர். எல்லாரையும் தோழர் என்றுதான் கூப்பிடுவார்.
அவரு சொன்னாரு, ‘தோழர்கள் சொன்னாங்க. நேத்து உங்க உண்ணாவிரதம்
பெரிய வெற்றி. அதைவிடப் பெரிய சந்தோஷம் சிறை அதிகாரியும் கண்காணிப்பாளரும் உங்களால
நேத்து முழுக்க ரொம்ப அவஸ்தையில் இருந்தாங்க. சிறையில் உண்ணாவிரதம் இருக்கிறது சட்டப்படி
குற்றம். ஆனா நீங்க ரொம்ப துணிச்சலா அதைச் சாதிச்சுட்டீங்க. அதுதான் அந்த அதிகாரிகளுக்கு
வயித்தெரிச்சல். உண்மையிலேயே ஆர்எஸ்எஸ்காரர்கள் நல்லவர்கள்.’ இது அந்த நக்சலைட் தலைவர்
வாயிலிருந்து வந்த வார்த்தைகள்.

அடுத்த நாள் நாங்க சாப்பிட உட்கார்ந்தோம். அந்த மூணு பேரும்
தனியா சாப்பிடுவாங்க. அவங்க எங்கிட்ட வந்து, ‘நாங்களும் உங்களோடு சேர்ந்து சாப்பிடலாமா’ன்னு
கேட்டாங்க. ‘சேர்ந்துக்கறது பத்தி எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் கோழி, கறி, மீன்
எதுவும் கிடைக்காதே’ன்னு சொன்னேன். பரவாயில்லை, நீங்க என்ன கொடுக்கிறீங்களோ சாப்பிடுகிறோம்னு
சொன்னாங்க. சரின்னு எங்க தட்டுகளுடன் சேர்த்து அவங்களுக்கும் தட்டு வைச்சோம். ஆனா கொஞ்சம்
தள்ளி உட்காரச் சொன்னேன். ஏன்னா நாங்க 15 பேரும் சாப்பிடறதுக்கு முன்னாடி போஜன மந்திரம்
சொல்றது வழக்கம். ஸஹனா வவது மந்திரம் சொல்லிச் சாப்பிடுவோம். ரெண்டு நாள் பார்த்துட்டு
மூணாவது நாள் நாங்களும் மந்திரம் சொல்லலாமான்னு அந்த நக்சலைட்டு தலைவர் கேட்டார். பொதுவான
மந்திரம்தான் ஐயா, யார் சொன்னால் என்ன, வாங்கன்னு சொல்லி சேர்ந்து மந்திரம் சொல்லிச்
சாப்பிட ஆரம்பிச்சோம்.
பிறகு நாங்க 15 பேரும் விடுதலை ஆகும்போது அந்த மூன்று பேர்
‘ஓ’ன்னு அழுதாங்க.

சிறையிலிருந்த காலத்துல நக்சல்கள் கூட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில்
நான் புரிந்து கொண்டதை என்னோட நாட்குறிப்பில் எழுதி வச்சிருக்கேன். அது என்னன்னா, நாட்டு
மக்கள் எல்லோரும் முன்னேறனும்னுதான் சங்கமும் நினைக்குது. நக்ஸல்களும் அப்படித்தான்
நினைக்கிறாங்க. ஆனால் மனிதர்களைச் சுட்டுத்தான் திருத்த முடியும்னு நக்ஸல் நம்புறான்.
மனிதனுக்கு உள்ள தெய்வாம்சம் இருக்குன்னு சங்கம் நினைக்குது. இதுதான் வித்தியாசம்.

பாரதி மிக அழகாகச் சொல்லுவார், ‘பக்தி உடையார் காரியத்தில்
பதறார்; மிகுந்த பொறுமையுடன் வித்து முளைக்கும் தன்மை போல் மெல்லச் செய்து பயனடைவார்’
என்று. நாங்கள் சிறையில் அதை முழுமையாகக் கடைப்பிடித்தோம்.

சிறையில அவங்க எல்லாரும் உங்க கூட ஒத்துழைப்போடுதான் நடந்துகிட்டாங்களா?

எங்களோட கைதான ஸ்வயம்சேவகர்கள்ல நிறையப் பேர் தறி நெய்யறவங்க.
மார்க்ஸிஸ்ட் அனந்த நம்பியார் அவங்ககிட்ட போய், ஐயோ பாவம் உங்க இயக்கமே தடைசெய்யப்பட்டது,
உங்களுக்கு விடுதலையே கிடையாதே, நீங்கள் எல்லாம் எப்படித்தான் வெளியே வருவீங்களோன்னு
பேசி அவங்க தன்னம்பிக்கையை அசைச்சுப் பார்ப்பார். கோவத்துல நான் போய் அந்தாளுகிட்ட
சண்டை போட்டேன். ‘உங்க இயக்கம் ஏன்யா சிபிஎம்ன்னு பிரிஞ்சுது? நீங்க சீனா அடிவருடிங்கறதுனாலதானே!
ஏன் உங்க இயக்கமே ஒரு காலத்துல தடை செய்யப்பட்டது. நீங்க இயங்காம போய்ட்டீங்களா என்ன?
இப்ப கூடத்தான் உங்க இயக்கத்தைத் தடை பண்ணலை. ஆனா நீங்க ஏன் உள்ள வந்தீங்க! தடை செய்யறது
பெருசில்லையா. தடையை உடைச்சு அதுலேர்ந்து எப்படி வெளியே வர்றோம்ங்கறதுதான் முக்கியம்”ன்னு
சொன்னேன்.

‘தயவு செஞ்சு எங்க தொண்டர்களோட மனநிலையைச் சோதிக்காதே’ன்னு
சொல்லிட்டு வந்தேன்.

அனந்த நம்பியாருக்கு இதயம் பலகீனமா இருக்குன்னு அவருடைய மனைவி
எழுதிக் கொடுத்து அவரை விடுதலை பண்ணி வெளியே அழைச்சிட்டுப் போய்ட்டாங்க. ‘ஐயா, எங்கள்
தலைவனே எங்களை விட்டுட்டுப் போய்ட்டான்’னு அவங்க கட்சிக்காரங்க எல்லாம் நம்மகிட்ட வந்து
அழுவாங்க. நான்தான் அவங்களுக்கெல்லாம் சமாதானம் சொல்லுவேன்.
அது தவிர, வெளியில இருக்குற நம்மாளு ஒருத்தர்கிட்ட சொல்லி
கட்டுக்கட்டா பீடி வாங்கி வைச்சிருப்பேன். அந்த கம்யூனிஸ தோழர்களுக்கு அப்பப்ப ஒரு
பீடிக்கட்டு கொடுப்பேன். சில பேரு அதை வச்சு, ராமரத்தினம் சிறைக்குப் போய் கெட்டுப்
போயிட்டாருன்னு பேசிக்கிட்டாங்க. அது தனி விஷயம். ஒரு சின்ன செய்திகூட வெளியில் போகும்போது
பல விதமான உருவமெடுக்கும் அப்படிங்கறதுக்கு இது ஒரு உதாரணம்.
எங்களோடு சிறைப்பட்டிருந்த திமுக சிவாவுக்கு அப்போது இருபது
வயது இருக்கும். முதலாமாண்டு முதுகலைப் பட்ட மாணவர். எங்களோடு நட்பு பாராட்டியவர்களில்
ஒருவர். கேரம், கைப்பந்து என அனைத்திலும் பங்கெடுப்பார். சதுரங்கம் ஆடுவதில் கில்லாடி.
இப்போது திருச்சி சிவா நாடாளுமன்ற உறுப்பினராக ஆன பின்பும் நம்முடன் நல்ல தொடர்பில்
இருக்கிறார்.

எங்களோடு சிறைப்பட்டிருந்த சங்க பிரசாரக் உத்தம ராஜ் அவர்கள்
எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்தபோது அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நினைவஞ்சலிக்
கூட்டத்தில் கலந்துகொண்ட திருச்சி சிவா “இவர்கள் (சங்கத்துகாரர்கள்) மட்டும் இல்லையென்றால்
நாங்கள் எல்லாம் சிறையிலேயே செத்திருப்போம்!” என வெளிப்படையாகப் பேசினார்.
வெளியே எந்த சங்க வேலையைச் செய்யக்கூடாது என்று எங்களைக்
கைது செய்தார்களோ, அதை நாங்கள் சிறைக்குள்ளே சிறப்பாகச் செய்துகொண்டிருந்தோம். தினசரி
ஷாகா உட்பட.

ஷாகா என்றால் த்வஜ ப்ரணாம் உண்டா?

த்வஜ ப்ரணாம் மட்டுமல்ல, தினசரி பிரார்த்தனையும் உண்டு! ஆக
18 மாதங்கள் அரசுப் பணத்தில் நாங்கள் ஷாகா நடத்தினோம்.

உங்கள் கூட இருந்த சக கார்யகர்த்தர்கள்?

தஞ்சாவூரைச் சேர்ந்த ஏ.என்.சுந்தர்ராமன் என் மனசுக்கு ரொம்ப
நெருக்கமானவர். கல்யாணமான மூணு மாசத்துல கைதாகி விட்டார். 18 மாசம் என்னோட கூடவே இருந்தவர்.
அவர் பசங்க எல்லாம் இன்னைக்கு நல்ல நிலையில் இருக்காங்க. அவரோட மனைவி இன்னும் இருக்காங்க.
நம்முடைய நிகழ்ச்சி எது நடந்தாலும் அவரைக் கூப்பிட்டு கௌரவிக்கிறது நம்ம வழக்கம்.

கோபி ராமமூர்த்தி இன்னொருத்தர். சிறையில் இருக்கும்போது அவருடைய
குழந்தை தவறிப் போச்சு. அதுக்காக ஒருநாள் பரோல்ல வெளியில போனார். மறுநாளே திரும்பி
வந்துட்டார். அவர் உள்ளே வந்ததும் அவர் எவ்வளவு வசூல் பண்ணிட்டு வந்தார் என்றுதான்
மீதி கட்சிக்காரங்க, இயக்கத்து ஆளுங்க கேட்டாங்க. அவங்க எல்லாருக்கும் பணத்து மேலதான்
குறி. அவங்களுக்கு லட்சியத்தைப் பற்றியெல்லாம் கவலையே கிடையாது.

குடும்பத்தலைவர் நீங்களே கைதானபோது உங்க குடும்பம் எப்படிச் சமாளித்தது?

சத்யாகிரகம் பண்ணினால் கைதாவோம்னு தெரிந்தேதான் என் மனைவியை
அன்பில் கிராமத்தில் எங்க மாமா வீட்டில் கொண்டு விட்டுவிட்டேன். வீட்ல நான் இல்லையே
என்கிற குறையைத் தவிர்த்து பொருளாதார ரீதியா வீட்டுக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. என்
மனைவியும் அதிகம் ஆசைப்படுபவர் கிடையாது. யாராவது ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டால்கூட,
ஒன்றும் தேவையில்லை என மறுத்து விடுவாள். தங்களது உறவினர்களை சிறையில் சந்திக்க வரும்
எவரும் கைதிகளிடம் கொடுப்பதற்கென்று ஏதாவது வாங்கிக் கொண்டு வருவார்கள். நான் மட்டுமே
என் கையில் இருப்பதை என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் என, என்னைப் பார்க்க வருபவர்களிடம்
கொடுத்து அனுப்புவேன்.
எனது தாய்மாமா மத்திய பொதுப்பணித் துறையில் பொறியாளராக வேலை
செய்து வந்தார். அதனால் ஒருநாள் உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் ஒருவரைப் பார்த்து,
‘எங்க வீட்டுப் பையன் ஆசிரியர் உத்தியோகம் உத்யோகம் பார்க்கிறான், அவன் தப்பு ஏதும்
பண்ணி இருக்கமாட்டான்’ என்று சொல்லி இருக்கிறார். அந்த அதிகாரி அவரது பார்வையில் படும்படி
கோப்பு ஒன்றை எடுத்து மேஜையில் வைத்திருக்கிறார். அதில் எனது அப்பா பெயர், அம்மா பெயர்,
அதற்கு கீழே ஏ.எஸ்.ராமசாமி என்று எனது மாமா பெயரும் இருந்திருக்கிறது. என்னைக் காப்பாற்றப்
போனவர் தனது பெயரைப் பார்த்ததும் தன் மீதும் வழக்கு வந்துவிடுமோ என்ற பயத்தில், விட்டால்
போதும் என்று அலறி அடித்து ஓடி வந்துவிட்டார்.

விடுதலையான பின்னால் வேலை உடனே கிடைத்தா?

நான் தஞ்சாவூர்ல ஏற்கெனவே வேலை பார்த்துக்கிட்டு இருந்த பள்ளிக்கூடத்துக்குப்
போய் மீண்டும் எனக்கு வேலை கொடுக்க மனு கொடுத்தேன். அவர் என்னோட கோரிக்கையை மாவட்ட
அதிகாரிக்கு அனுப்பி வைத்தார். அது கல்வித்துறை இயக்குநர் கிட்ட போச்சு. அவர்கிட்ட
இருந்து அந்த மனு கல்வித்துறைச் செயலருக்கு போச்சு. அவர் தலைமைச் செயலருக்கு அனுப்பி
வைத்தார்.

தலைமைச் செயலர்தான் என்னை வேலையை விட்டு நீக்குவதாக ஆணை பிறப்பித்திருந்தார்.
அந்த ஆணை மாநிலக் கல்வித்துறை இயக்ககத்துக்கு வந்திருந்தது. நான் மீண்டும் வேலையில்
சேரப் போகிறேன் என்று மாநிலக் கல்வி அதிகாரிகள் மத்தியில் சொன்னபோது அலுவலக குமாஸ்தா
எனது பணிநீக்க ஆணையை என்னிடத்தில் காட்டினார்.

தலைமைச் செயலர் எனது பெயரை மாவட்டங்களுக்கு அனுப்பி நான்
எதுவும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருக்கிறேனா என அறிக்கை கேட்டிருந்தார். இதற்குள்
ஏழு மாதங்கள் ஓடிவிட்டன.

பிறகு எம்ஜிஆர் ஆட்சி வந்தது. அரங்கநாயகம் கல்வித் துறை அமைச்சராக
வந்தார். அவர் தலைமை ஆசிரியராக இருந்தவர். அவரைச் சந்தித்து “என்னை ஏன் மிசாவில் கைது
செய்தார்கள் என்று தெரியவில்லை. நான் கைதானபோது சுதந்திரமில்லை. சோறு கிடைத்தது. விடுதலை
ஆகிவிட்டேன். சுதந்திரம் கிடைக்கிறது, சோறு கிடைக்கவில்லை! இரண்டும் சேர்த்து எப்போது
கிடைக்கும்” என்று கேட்டேன். அவரது ஆணையின் மூலமாக நான் மீண்டும் வேலைக்குச் சேர்ந்தேன்.
மார்ச் மாதம் விடுதலை ஆனேன். நவம்பர் மாதம் வேலை கிடைத்தது.

சிறை வாசத்திற்குப் பிறகு அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை வரவில்லையா?

நான் விடுதலையாகி வந்த பிறகும் தொடர்ந்து சங்க வேலைதான் செய்து
வந்தேன். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஜில்லா கார்யவாஹ் பொறுப்பில் நான் இருந்தபோது,
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இல.கணேசன் பாரதிய ஜனதா கட்சிக்கு அனுப்பப்பட்டார். அப்போது
ஒருமுறை அவர் என்னை சந்தித்து பாரதிய ஜனதா கட்சிப் பொறுப்பேற்கும்படி வேண்டினார்.
‘ஐயா, கட்சி வேலையை நீங்கள் பாருங்கள்; சங்க வேலையை நான் பார்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டேன்.
கடவுள் புண்ணியத்தால் எனக்கு அரசியல் ஆசையே வரவில்லை.
பரம பூஜ்ய ஸ்ரீ குருஜி தொடங்கி பரம பூஜ்ய ஸ்ரீ தேவரஸ் ஜி,
பரம பூஜ்ய ஸ்ரீ ரஜு பையாஜி, பரம பூஜ்ய ஸ்ரீ சுதர்ஷன் ஜி, இப்போது இருக்கக்கூடிய பரம
பூஜ்ய ஸ்ரீ மோகன் பாகவத் ஜி என ஐந்து சர்சங்கசாலக்களைப் பார்த்ததனால், அவர்களது தாக்கத்தினால்,
சங்க வேலையைத் தாண்டி பெரிதாய் எதுவும் இல்லை என்ற எண்ணம் எனக்குள்ளே ஊறிவிட்டது.
அரசியல் என்பது சாதாரண மனிதர்களுக்கானது. அதைத் தாண்டி சமுதாயத்திற்காகச்
செய்ய வேண்டிய எத்தனையோ விஷயங்களை சங்கம் மட்டுமே செய்ய முடியும். அதைத்தான் நாங்கள்
செய்து கொண்டிருக்கிறோம்.

ஒரு சிலர் வேண்டுமானால் சங்கத்திலிருந்து அரசியலுக்குச் செல்லலாம்.
ஆனால் என்னைப் பொருத்தவரை சங்க வேலையை விட்டுவிட்டு வேறு எந்த அமைப்புகளுக்கும் போவதை
எனது மனம் ஏற்கவில்லை.
ஒரு தொண்டனாக, ஸ்வயம்சேவகனாக, என் வாழ்நாளின் இறுதி வரை இருப்பேன்
என்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி. எத்தனை பெரிய பதவி வந்தாலும் என்னைப் பொருத்தவரையில்
அது இரண்டாம் பட்சம்தான் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

(நவம்பர் 12, 2018, ஸ்ரீரங்கம்; நன்றி: விஸ்வநாதன்)



Posted on Leave a comment

2019 தேர்தல் – பாயத் தயாராகும் மௌன வெள்ளம் | சாணக்யா


“என்ன மடத்தனம் சார் இது?”

“என்ன?”

“புல்வாமா தாக்குதலுக்கு நாங்கதான் பொறுப்புன்னு ஒரு தீவிரவாத இயக்கம் சொல்றாங்க. அதுக்கப்புறமும் ப்ரூஃப் எங்கன்னு கேக்கிறாங்க? சர்ஜிக்கல் ஸ்டிரைக் பண்ணினா அதுக்கும் ப்ரூப் கேக்கிறாங்க. 300 பேர் செத்துட்டாங்கன்னு சொன்னா அதுக்கும் ப்ரூஃப் வேணுமாம். இவங்கல்லாம் ஆட்சிக்கு வந்தால் என்ன பண்ணுவாங்க சார்?”

வெறுமையாக சிறிதுநேரம் இருந்தார். பின் மெதுவான குரலில், “இந்த உள்நாட்டுப் போரில் மோடி முதலில் ஜெயிக்கணும்?” என்றார். “தேர்தலைத்தான் சொல்றேன்” என்றார்! ரயில் பயணத்தில் நான் சந்தித்த, நடுத்தர வயதுடைய, முன்னாள் விமானப்படை வீரர்.

இந்தியத் தேர்தல் வரலாறில் சில தேர்தல்கள் மிக முக்கியமானவை – அவை 1977, 1998, 2014. அதைப் போலவே 2019.

பொதுவாக ஆண்ட கட்சிகள் தாங்கள் செய்தவற்றையம் இனி செய்ய போகிறவற்றையும் சொல்லி வாக்குகள் கேட்கும். எதிர்க்கட்சிகள் ஆண்ட கட்சியின் ஊழலையும் தவறையும் சொல்லி, இனி தாங்கள் செய்யப் போகிறவற்றையும் சொல்லி வாக்குகள் கேட்கும். அதுமட்டுமில்லாமல் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஆண்ட கட்சி செய்தவற்றின் நல்ல விஷயங்களை அதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியும் என்றும் சொல்லும்.

அப்படியெனில் எல்லை தாண்டிய தாக்குதலைத் தாங்களும் செய்வோம் என்றுதான் காங்கிரஸ் கூறியிருக்க வேண்டும். மாறாக பாகிஸ்தானுடன் போர் கூடாது, சமாதானம் பேசுங்கள் என்று பாகிஸ்தானுக்கான அமைதித் தூதராக எதிர்க்கட்சிகள் பேசியதுதான் பெரும்பாலான மக்களை பீதியடையச் செய்தது. ஆனால் அந்த மக்களின் குரல் வெளியில் கேட்காது. வெளியில் கேட்காததனாலேயே அப்படி ஒரு எண்ணமே இல்லை என்றுதான் வழக்கம்போலப் பிரிவினைவாதம் பேசுவோர் முடிவு கட்டி விட்டனர்.

உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால், விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பெரும் ஆதரவு இருப்பது போல் பேசுவார்கள். அப்படி பேசிய செய்திகளே பெரும்பாலும் ஊடகத்திலும் வரும். ஒருவர் பத்திரிகைச் செய்திகளை மட்டும் படிப்பாரானால் அவர் தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு பெரும் ஆதரவு உண்டு என்றே முடிவுக்கு வருவார். அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் வைகோ என்றோ முதல்வராகிருப்பார். குறைந்தபட்சம் சீமானாவது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகிருப்பார். இது இரண்டுமே நடக்கவில்லை என்பதோடு இருவருமே மிகக் குறைவான வாக்குகளையே வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கதக்கது.

தமிழக மக்கள் எப்போதும் பிரிவினையை ஆதரித்ததே இல்லை. அனைத்து மாநிலங்களிலும் பரவி இருப்பதால் மட்டுமே சில கட்சிகள் தேசியக் கட்சிகள் என்று கூறிவிட முடியாது. தேசியச் சிந்தனை கொண்டிருக்கவேண்டும். மாறாக காங்கிரசும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் பிரிவினைவாதத்தின் மென்போக்கையே கொண்டிருக்கின்றன.

பிரிவினைவாதிகளிடம் பேச்சு என்ற கட்டத்தையெல்லாம் இந்தியா கடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மே 1999 கார்கிலில் பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தபோதே அமைதிக்கான அத்தனை கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டன. அதற்குச் சற்று முன்னர்தான் பிப்ரவரி 1999ல் லாகூர் வரை இந்தியப் பிரதமர் வாஜ்பாய் திறந்த மனதோடு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் வாஜ்பாயின், இந்தியாவின் முதுகில் குத்தியது பாகிஸ்தான்.

ஆயினும் அதற்குப் பின்னரும் இந்தியா பேச்சுவார்த்தையைக் கைவிடவில்லை. லாகூர் சம்மிட் – முஷாரப்க்கும் வாஜ்பாய்க்கும் இடையில் நடந்த இன்னொரு பேச்சுவார்த்தை. ஆனால் பாகிஸ்தானை எந்த அளவு நம்புவது என்பதில்தான் இந்தியாவுக்குப் பிரச்சினை.

2016ல் மோடி லாகூர் சென்று நவாஸ் ஷெரிஃப்பின் பிறந்த நாளுக்குக் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார். பாஜக ஆண்டாலும் பேச்சுவார்த்தை மூலம் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கவே பாஜகவும் விரும்புகிறது என்பதே இவற்றின் சமிக்ஞை. ஆனால் தீவிரவாதிகள் ஒருபோதும் அமைதியை விரும்புவதில்லை.

இதுவரை நாம் இந்த பிரச்சினையை எல்லாம் நினைவுகூர்வது தேசத்தை நேசிக்கும் பலமான அரசும், பிரதமரும்தான் இன்றையத் தேவை என்பதை வலியுறுத்தவே.

இந்திராவுக்குப் பின்னான காலங்களில் இந்தியா வெளியுறவுக் கொள்கை என்றெல்லாம் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை, வாஜ்பாய் காலம் தவிர. எப்போதும் எங்காவது கூட்டம், மாநாடு, கருத்தரங்கம் என்று இந்திய வெளியுறவு அமைச்சர்கள் அல்லது அதன் பிரதிநிதிகள் சென்று எழுதி வைத்த உரையை வாசித்து வருவார்கள். ஆனால் மோடி அதைத் தீவிரமாக அணுகினார். முடிந்த அளவு, தானே அத்தகைய கூட்டங்களில் கலந்துகொண்டார். மற்ற நாட்டுத் தலைவர்களோடு உளப்பூர்வமாகப் பேசி நட்பாகினார். பாகிஸ்தான், சீனா தவிர கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுடன் நல்ல உறவைக் கொண்டுவந்தார். முக்கியமாகச் சொல்வதென்றால் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளுடனான நட்பைச் சொல்லலாம்.

மோடி இஸ்லாமியருக்கு எதிரானவர் என்று இங்கே நடக்கும் அவதூறுக்குத் தக்க பதிலடி சமீபத்தில் கொடுத்தார். உலக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவைச் சிறப்பு பிரதிநிதியாக அழைத்துக் கௌரவித்தது, இந்தியாவை அழைத்தால், தான் கூட்டத்தைப் புறக்கணிக்க நேரிடும் என பாகிஸ்தான் மிரட்டியும் இந்தியாவை அழைத்துக் கௌவுரவித்தது இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு. இது மகத்தான வெற்றி என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்

அப்படியென்றால் உலக இஸ்லாமியர் ஒருபுறம் மோடியின் பக்கமும், இங்கே இருக்கும் சில பிரிவினைவாதிகளும் பாகிஸ்தானும் மறுபுறம் இருக்கிறார்கள் என்பது புரியலாம். மோடி இந்தியாவை முன்னேற்றுவதால் இவர்கள் இந்தியாவுக்கு எதிராக நிற்கிறார்கள் என்பது தெளிவு.

*

மோடி தன் ஆட்சிக்காலத்தின் ஒவ்வொரு திட்டத்திலும் நடக்கும் முறைகேடுகள், அமைப்புகளால் கொள்ளை அடிக்கப்படும் ஊழல்கள் ஆகியவற்றை நிறுத்தினார். உதாரணம், சமையல் எரிவாயுவுக்கான மானியம். வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தவுடன் போலிக் கணக்கில் வாங்கப்பட்ட சிலிண்டர்கள் ஒழிந்தன. மானியத் தொகை முறைகேடு தடுக்கப்பட்டது. மக்கள் கணக்கில் பதிவு செய்து, மானியத்தை டீலர்கள் மூலம் திருடும் முறை, நேரடி மானியம் மூலம் தடுக்கப்பட்டது. இதன்மூலம் செயற்கையான சிலிண்டர் தட்டுப்பாடும் ஒழிக்கப்பட்டது. இப்போதெல்லாம் பதிவுசெய்த உடன் சிலிண்டர் வருவதைக் காணலாம்.

கவனிக்க, நேரடி மானியத் திட்டத்தை ஒழிப்போம், பழைய முறையைத் திரும்ப கொண்டு வருவோம் என்கிறார் ஸ்டாலின்.1 யாருக்காக எனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை

சத்துணவுத் திட்டத்தில் ஆதாரை இணைக்கச் சொன்னவுடன், மாணவர்கள் வயிற்றில் அடிக்கிறார் மோடி என மீம் போட்டார்கள். சில மாதங்களில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் எண்னிக்கை வெகுவாகக் குறைந்தது. அதாவது போலியாகச் சேர்க்கப்பட்டிருந்த மாணவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

இதுபோன்று கடந்த ஐந்து ஆண்டுகளில், 6 கோடி போலி ரேஷன் கார்டுகள், சிலிண்டர் இணைப்பு, ஓய்வூதியக் கணக்குகள் ஒழிக்கப்பட்டன எனவும் இதன்மூலம் தொண்ணுறு ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டது எனவும் சமீபத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லீ தெரிவித்தது நினைவிலிருக்கலாம். ஊழல் ஒழிப்புத் திட்டங்கள், கருப்புப் பணம் பறிமுதல், சரியான வரிவசூல் மூலமாகச் சேமிக்கப்பட்ட பணமே இந்த நிலையை அடைய உதவுகிறது என்பது நிதர்சனம்.

முத்ரா வங்கிக் கடன் உதவி மூலம் சிறு குறு தொழில் செய்வோர் பயன்பெற்றதையும் கருத்தில் கொள்ளவேண்டும். உள்நாட்டில் தீவிரவாதம் வெகுவாகக் குறைந்தது. இவ்வளவு ஏன், இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் திரும்பி வந்தனர். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் இந்தியா திருப்பி அனுப்பப்பட்டனர்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 600ஐத் தாண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒருவர் கூடக் கொல்லப்படவில்லை. இதை இங்கு இருப்பவர்களும் ஊடகங்களும் பாராட்ட மறுப்பதேன்?

அனைவருக்கும் வீடு என்ற பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் நாடு முழுவதும் பெரும் அளவில் வரவேற்பினைப் பெற்ற திட்டமாகும். இந்தத் திட்டத்தின்கீழ் பல குடிசை வீடுகள் சிமெண்ட் வீடுகளாக மாறியுள்ளன. ஒன்றரை கோடி ஏழைக் குடும்பங்கள் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் இலவச வீடு பெற்றன. அனைத்துக் கிராமங்களும் மின்மயமாக்கப்பட்டன. நான்கு கோடி வீடுகள் மின் இணைப்பைப் பெற்று இருக்கின்றன

மலிவு விலை மருந்துத் திட்டம், மூட்டு மாற்று அறுவை சிகிசைகள், இதய ஸ்டென்ட்-கள் 50 முதல் 70% தள்ளுபடியில் கிடைப்பது, ஏழரை கோடிக்கு மேல் புதிய கழிப்பறைகள் கட்டியது, வங்கிக் கணக்கு இருக்கும் அனைவருக்கும் ஐந்து லட்சம் காப்பீட்டுத் திட்டம் போன்றவை மிக முக்கியமான திட்டங்கள். பெண் குழந்தைகளுக்கான சுகன்யா ஸம்ருத்தி திட்டம் தபால் நிலையச் சேமிப்புச் சேவையாக நாடு முழுவது அமல்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.

கொரியர் சேவை, கைபேசி போன்றவை வந்தவுடன் நலிவடைந்திருந்த தபால்நிலையங்களை ஒரு சிறு வங்கியாக மாற்றிப் புதுப்பித்தது மத்திய அரசு.

புதிய ரயில்கள் விடப்பட்டன. சில ரயில் நிலையங்கள் விமான நிலையங்கள் போல் நவீன படுத்தப்பட்டன. மெட்ரோ ரயில் திட்டங்கள் முடிக்கப்பட்டன. மகளிர் வீட்டுக் கடனில் 2.5 லட்சம் மானியமாக வழங்கப்பட்டது. நாடு முழுவதும் 9.77 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டன. கிராமப்புற சுகாதாரம் உயர்ந்தது. மேகாலயா, மிசோரம், திரிபுராவில் ரயில்வே திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

புதிய நீர்வழிச் சாலைகள் கொண்டு வரப்பட்டன. 2017ல் நிதின் கட்கரி பாண்டு துறைமுகத்திலிருந்து துப்ரி துறைமுகம் வரையிலான நீர்வழிப் போக்குவரத்தைத் துவக்கி வைத்தார். இதனால் 300 கிமீ சாலைப் போக்குவரத்தும் அதனால் ஏற்படும் செலவினங்களும் குறைக்கப்பட்டன. இப்படி அதிரடி அசத்தல்கள் இருந்தாலும் எதிர்க்கட்சிகள் போடும் கூச்சல்களைத்தான் பெரும்பாலான மீடியாக்கள் பரப்புகின்றன. மக்கள் இதை வேடிக்கை பார்க்கத் துவங்கி இருக்கின்றனர்.

இந்நிலையில் தேர்தல் நடக்கிறது.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மிக எளிதாக நாற்பதையும் கைப்பற்றிவிடும் என்ற நினைப்பைத் தகர்த்தது பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக கூட்டணி. அதுமட்டுமில்லாமல் வாசன், கிருஷ்ணசாமி போன்றோர் மூலமாகவும் கொஞ்சம் வாக்குகள் கூட்டணிக்குள் வரும்.

கூட்டணி அமைந்த உடனே பத்து தொகுதிகள் வரை கைப்பற்றும் எனப் பொதுமக்களே யூகிக்க ஆரம்பித்தனர். தொகுதிகள் முடிவானவுடன் அது பதினைந்து தொகுதிகள் வரை ஜெயிக்கும் என்று அதிமுக – பாஜக கூட்டணியின் செல்வாக்கு உயரத் தொடங்கி இருக்கிறது.

சென்ற முறை 2014ல் அதிமுக வாங்கிய வாக்குகள் சதவீதம் 44.30%. கடந்த முறை வாக்கு சதவித அடிப்படையில் பார்த்தால்கூட அதிமுக கூட்டணி 59.3%. திமுக கூட்டணி 31.4% வாக்குகள் பெறலாம். இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான ஓட்டுகள், சிறுபான்மையின வாக்குகள், தினகரன், கமல்ஹாசன் பிரிக்கும் வாக்குகள் எனக் குறைந்தாலும் அதிமுக கூட்டணி பலமான அணியாகவே தெரிகிறது.

அதிமுக கூட்டணி:

அதிமுக: 44.3%, பாஜக: 5.5%, பாமக: 4.4%, தேமுதிக: 5.1%, மொத்தம்: 59.3%

திமுக கூட்டணி:

திமுக: 23.6%, விசிக: 1.5%, காங்கிரஸ்: 4.3%, மற்றவை: 2%, மொத்தம்: 31.4%

பின்வரும் பதினாறு தொகுதிகள் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் வாக்குகளுக்கும் அதிகமான வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள்: திருவள்ளூர், அரக்கோணம், ஆரணி, சிதம்பரம், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பெரம்பலூர், மதுரை, மயிலாடுதுறை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, கடலூர், மதுரை, கரூர், விழுப்புரம், தேனி.

இவை தவிர, தருமபுரி, கோவை, வேலூர் தென்சென்னை, சிவகங்கை, பொள்ளாச்சி, காஞ்சிபுரம் தொகுதிகளில் பாஜக, பாமக வாக்குகளுடன் சேரும்போது அவையும் வெற்றி பெறக்கூடிய தொகுதிகளாகும்.

எனவே இருபத்தொரு தொகுதிகள் இப்போதே வெற்றி என்றே கணக்கிடலாம். கூட்டணித் தலைவர்களும் தொண்டர்களும் கடுமையாக உழைத்தால் இன்னும் ஐந்து தொகுதிகள் வசமாகும்.

இன்றையக் கூட்டணிக் கணக்குகளை வைத்துப் பார்க்கும்போது பின்வருமாறு முடிவுகள் வரக்கூடும்:

உறுதியாக அதிமுக கூட்டணி வெற்றி பெறக் கூடிய தொகுதிகள் – 21

அதிமுக – 15 இடங்கள்: ஆரணி, திருவள்ளூர், அரக்கோணம், சேலம், நாமக்கல், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சிதம்பரம், திருப்பூர், மயிலாடுதுறை, தென்சென்னை, பொள்ளாச்சி, மதுரை, காஞ்சிபுரம்.

பாமக – 3 இடங்கள்: தருமபுரி, விழுப்புரம், கடலூர்.

பாஜக – 2 இடங்கள்: கோவை, சிவகங்கை.

இவை தவிர, வேலூர் என இருபத்தியொரு தொகுதிகள் உறுதியான வெற்றியைத் தரலாம்.

திருவண்ணாமலை, தேனி, விருதுநகர், தென்காசி, கள்ளக்குறிச்சி, ஸ்ரீபெரும்புதூர், கரூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய ஒன்பது தொகுதிகள் கடும் உழைப்பைக் கொடுத்தால் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாகும். ஆக முயன்றால் முப்பது. 

இவைபோக 2006 முதல் 2011 வரையான திமுகவின் காட்டாட்சி மக்களின் நினைவில் வந்து பயமுறுத்தத்தான் செய்கிறது. அவர்களே மறந்தாலும் பேன்சி கடை சூறையாடல், பிரியாணி கடையில் அடிதடி, தேங்காய்க் கடையில் இரண்டு பெண்களை அடித்தது என திமுக தொண்டர்கள் ஞாபகபடுத்திக்கொண்டேதான் இருக்கின்றனர். திமுக முன்னாள் அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் குறுநில மன்னர்களைப் போலத்தான் எப்போதும் செயல்படுகின்றனர். அவர்களை மீறி எந்த ஒரு திமுக தொண்டனும் முன்னேற முடியாது. 

இந்துக்களை எப்போதும் சீண்டும் வழக்கம், ஸ்டாலின், திருமாவளவன் குழுவுக்கு உண்டு. திருமாவளவன் இந்துப் பண்டிகைகளை, பூப்புனித நீராட்டு விழாக்களைக் கிண்டல் அடித்தார். அதுவும் மாற்று மதத்தவர் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அப்படிப் பேசினார். ஸ்டாலின் ஹிந்துத் திருமண முறையைக் கிண்டலடித்தார். கனிமொழி ஒருபடி மேலே சென்று ‘திருப்பதி பாலாஜிக்கு எதற்குக் காணிக்கை? லஞ்சமா? உண்டியலுக்கு எதற்குப் பாதுகாப்பு? சாமியால் அவர் உண்டியலையே பாதுகாக்க முடியாதா?’ என்றெல்லாம் கிண்டலடித்தார். இவர்கள் பேசும் ஒவ்வொரு இந்து எதிர்ப்பு வாசகமும் பெரும்பாலான இந்துக்களை நோகடிக்கவே செய்கிறது. அவர்களின் மெளனம் சம்மதமில்லை, ஆதரவில்லை. அது தெளிவான எதிர்ப்பு. இந்துக்கள் எப்போதும் போராட்டம், ஊர்வலம், கொடி பிடித்து பேரணி என்றெல்லாம் செல்லும் வழக்கமில்லை. இவர்கள் தயவில் இவையெல்லாம் நடக்கத் துவங்கி இருக்கிறது. வாக்குகளைக் கூட எதிராகப் பயன்படுத்தாத ஹிந்துக்கள் இன்று அரசியல் ரீதியாக ஒருங்கிணையத் துவங்கி இருக்கிறார்கள். சபரிமலை பிரச்சினையில் திமுக கூட்டணி என்ன நிலை எடுத்தது என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கெல்லாம் பதில் சொல்ல மக்கள் தயாராகிவிட்டனர்.

ஐயப்பன் கோவிலுக்குப் போயே தீர வேண்டும் என இளம் பெண்களை, அதுவும் ஆபாசப் படத்தில் எல்லாம் நடித்த, மாற்று மத இளம் பெண்களை கம்யூனிஸ்ட் அரசு தயார் செய்து அனுப்பியது. ஐயப்ப பக்தர்களின் தீவிரப் போராட்டத்தால் சில முயற்சிகள் வெற்றி பெறவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாலபாரதி தந்தி டிவி விவாதத்தில், “ஐயப்பன் கோவிலுக்குச் செல்வது பெண்கள் உரிமை” என்றார். உடனே தந்தி டிவி செய்தியாளர் ஹரிஹரன், “அப்படியென்றால் அங்குள்ள வாவர் மசூதிக்கும் பெண்கள் செல்லலாமா?” என்றவுடன் பதறி, “நோ ஹரி நோ.. நீங்க புது பிரச்சினையைக் கிளப்பாதிங்க” என்றார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் அதிக அளவில் குமுறலோடு பரப்பப்பட்டது.

ஒரு நண்பரின் வீட்டுக்குச் சென்றபோது ‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன. அதற்கு நான் சிரித்தபோது அவரின் மூத்த சகோதரி சொன்னது, “இதுவே வேற மதக் கடவுளை வச்சு இத மாதிரி காட்சி வச்சா அவங்க சிரிக்க மாட்டாங்க.”

இன்னுமா தமிழ்நாட்டில் இந்துத்துவ உணர்வு வளரவில்லை என்று நினைக்கிறீர்கள்?

மெல்லப் பாயக் காத்திருக்குது ஒரு மெளன வெள்ளம். அதன் பாய்ச்சலில் இங்குள்ள அரசியல் கசடுகள் அடித்துச் செல்லப்படட்டும்.

உசாத்துணைகள்:

1. https://www.ndtv.com/tamil-nadu-news/dmk-poll-manifesto-highlights-jobs-crop-loan-waiver-more-reservation-2009805?amp=1&akamai-rum=off