Posted on Leave a comment

வந்தே மாதரம்: தேசத்தின் உணர்வு, தேசியத்தின் ஆன்மா – பி.ஆர்.ஹரன்


கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய
ஒரு தீர்ப்பில், பள்ளி, கல்லூரிகளில் வாரம் ஒருமுறையும், அனைத்து அரசு அலுவலகங்கள்,
தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் மாதம் ஒரு முறையும் வந்தே மாதரம்
பாடலைப் பாட வேண்டும் என்று உத்தரவிட்டது.

எதிர்பார்த்தது போல, முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளும்,
திராவிட இனவெறி அமைப்புகளும், போலி மதச்சார்பின்மை கடைப்பிடிக்கும் கட்சிகளும் இந்த
உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இவ்விஷயத்தை அலசி ஆராய்வதற்கு முன்பு இந்த உத்தரவின் பின்னணியைத்
தெரிந்துகொள்வோம்.

வழக்கும் உத்தரவுகளும்

பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதிய வீரமணி என்பவர், வந்தே
மாதரம் பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது என்கிற கேள்விக்கு வங்காள மொழி என்று சரியான
பதிலைத் தந்திருந்தாலும், சம்ஸ்க்ருத மொழி என்பதே சரியான பதில் என்று கூறி அவருக்குத்
தரப்பட வேண்டிய மதிப்பெண் வழங்கப்படாததால், அவர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. ஒரு
மதிப்பெண்ணில் தேர்வை இழந்த அவர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன்,
“நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் இருந்து, வந்தே மாதரம் பாடல், வங்க மொழியில்
எழுதப்பட்டது உறுதியாகிறது. பின், இந்தப் பாடல் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
பாடலில், சமஸ்கிருத மொழி பயன்படுத்தப்பட்டாலும், வங்க மொழியில் எழுதப்பட்டது என்பதை
ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. சரியான விடை அளித்ததற்காக, கூடுதலாக ஒரு மதிப்பெண் பெற,
மனுதாரருக்கு உரிமையுள்ளது. அவருக்கு, ஒரு மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும். ஆதிதிராவிடர்
பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர் ஒருவர், 54.12 மதிப்பெண் பெற்று, பணி நியமனம் பெற்றிருப்பதாக,
அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மனுதாரரை பொருத்தவரை, 58.57 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ஆதிதிராவிடர் பொதுப் பிரிவில், ஏதாவது காலியிடத்தில், மனுதாரரை நியமிக்க வேண்டும்”
என்று தீர்ப்பு வழங்கினார்.

அவர் மேலும், “நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், தேசபக்தி
மிக முக்கியம். சுதந்திரப் போராட்டத்திற்காகப் பலர் தங்கள் உயிரை, குடும்பத்தைத் தியாகம்
செய்துள்ளனர். வந்தே மாதரம் போன்ற தேச பக்திப் பாடல்கள், மக்கள் மத்தியில் மன உறுதியையும்,
நம்பிக்கையையும் ஏற்படுத்தும். இந்த நவீன உலகில், நம் வாழ்க்கை முறை மாறியுள்ளது. சில
நேரங்களில், நம் தேசத்தை நாம் மறந்துவிடுகிறோம். அதை உணர்ந்துதான், திரை அரங்குகளில்
தேசிய கீதம் ஒலிக்கவும், அதற்கு மரியாதை செலுத்தவும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
எனவே, பொதுநலன் கருதி, ஒவ்வொரு மக்களின் மனதிலும், தேச பக்தி உணர்வை ஊட்டும் விதத்தில்,
கீழ்க்கண்ட உத்தரவுகளை இந்த நீதிமன்றம் பிறப்பிக்கிறது” என்று கூறி பின்வரும் உத்தரவுகளை
இட்டார்:

     அனைத்து பள்ளிகள்,
கல்லூரிகள், பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில், வந்தே மாதரம் பாடலை ஒலிபரப்ப வேண்டும்;
பாட வேண்டும். வாரத்தில் ஒரு நாளாக, திங்கள் அல்லது வெள்ளியில் இதை மேற்கொள்ள வேண்டும்

     மாதம் ஒரு
முறையாவது, அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், தொழிற்சாலைகளில்
வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும்; ஒலிபரப்ப வேண்டும்.

     வந்தே மாதரம்
பாடலின் தமிழ் மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்பை, அரசு இணையதளத்திலும், சமூக வலைத்தளங்களிலும்
பதிவேற்றம் செய்ய, பொது தகவல்துறை இயக்குநருக்கு உத்தரவிடப்படுகிறது

     இந்த உத்தரவின்
நகல், அரசின் தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்படவேண்டும். அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்

     வந்தே மாதரம்
பாடலை பாடுவதில் அல்லது ஒலிபரப்புவதில், யாருக்காவது அல்லது எந்த அமைப்புக்காவது பிரச்சினை
இருந்தால், அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆனால், அவ்வாறு பாடாமல் இருப்பதற்கு உகந்த
காரணங்கள் இருக்க வேண்டும்.

எதிர்ப்பு

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா, “நம் நாட்டில்
ஏற்கெனவே ‘ஜன கன மன’ தேசிய கீதமாக இருக்கும்போது ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடச் சொல்வது
குழப்பங்களை ஏற்படுத்தும். வேறொரு கோரிக்கையை வைத்துத் தொடரப்பட்ட வழக்கில் தொடர்பில்லாமல்
ஒரு தீர்ப்பை வழங்குவது நீதி பரிபாலனத்திற்கு உகந்தது அல்ல. இப்பாடலை இஸ்லாமியர்களால்
ஒருபோதும் பாட இயலாது. சமூக நல்லிணக்கத்தை விரும்பும் எவரும் இப்பாடலைப் பாட முன்வரமாட்டார்கள்.
எனவே சென்னை உயர் நீதிமன்றம் இவ்வுத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று அறிக்கை
விட்டுள்ளார்.

அல்லாவை ஏக இறைவனாகக் கொண்டிருக்கும் இஸ்லாமியர்கள் இதைப்
பாட இயலாது என்று வேண்டுமானால் இவர் கூறலாம். அவ்வாறு கூறுவதை அனுமதிப்பதும், ஏற்றுக்கொள்வதும்
இந்நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின்முன் வைக்கப்பட வேண்டியவை. ஆனால், சமூக நல்லிணக்கத்தை
விரும்பும் எவரும் இப்பாடலைப் பாட முன்வரமாட்டார்கள் என்று இவர் கூறுவது சரியல்ல. அப்படியென்றால்
வந்தே மாதரம் பாடலைப் பாடுபவர்கள் சமூக நல்லிணக்கத்துக்கு எதிரானவர்கள் என்று இவர்
சொல்கிறாரா? இது மிகவும் தவறான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கத்தக்கதும் கூட.

எதிர்பார்த்ததைப் போல முஸ்லிம்களின் வாலைப் பிடித்துக்கொண்டு
நடைபோடும் திராவிடர் கழகம் இவருக்கு ஆதரவு அளித்தது. கழகத்தின் தலைவர் கி.வீரமணி,
“பன்கிம் சந்திர சாட்டர்ஜீ எழுதிய ‘ஆனந்தமடம்’ என்கிற வங்காள நாவலில் இடம்பெற்ற இப்பாடலில்
ஹிந்து மதத்தில் முப்பெரும் தேவியராகப் போற்றப்படும் பார்வதி, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய
பெண்கடவுள்கள் துதிக்கப்படுகின்றனர். ஆகவே அல்லாவை மட்டுமே கடவுளாக ஏற்றுக்கொண்டுள்ள
முஸ்லிம் சமுதாயத்தினர் இந்தப் பாடலைப் பாட முடியாது. உயர்நீதிமன்ற உத்தரவு இந்திய
அரசியல் அமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்படும் மதச்சார்பின்மைக்கு விரோதமானது. எனவே
நீதிமன்றம் இவ்வுத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று அறிக்கை விட்டுள்ளார்.

அவர் தன் அறிக்கையில் மேலும், “இந்தப் பாடலைத் தேசிய கீதமாகக்
கொண்டுவர முயன்றபோது ரபீந்திர நாத் தாகூர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் அனுமதிக்க
முடியாது என்று உறுதியாகக் கூறினர்” என்று ஒரு பச்சைப் பொய்யையும் கூறியுள்ளார். ரபீந்திரநாத்
தாகூர் இசையமைத்து மனம் ஒன்றிப் பாடிய பாடல் வந்தே மாதரம். நேதாஜியின் இந்திய தேசிய
ராணுவம் வந்தே மாதரத்தைத் தன் அதிகாரப்பூர்வப் பாடலாகக் கொண்டது. அதனுடைய சிங்கப்பூர்
வானொலி நிலையத்திலிருந்து இப்பாடலைத் தொடர்ந்து ஒலிபரப்பச் செய்தார் நேதாஜி. உண்மை
இப்படியிருக்க, அவர்கள் எதிர்த்தனர் என்று வீரமணி அபாண்டமாகப் பொய் பேசுகிறார்.

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு
தௌஹீத் ஜமாத் அமைப்பும் உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி வழக்கு தொடரப் போவதாகக் கூறியுள்ளது.

மற்ற மாநிலங்களில் உள்ள முஸ்லிம் கட்சிகளும், சமாஜ்வாதி
போன்ற போலி மதச்சார்பின்மைக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

எதிர்ப்பு புதியதல்ல

வந்தே மாதரம் பாடலுக்கான எதிர்ப்பு புதியதல்ல. 2006ம் ஆண்டு
செப்டம்பர் மாதம் இப்பாடல் பாடியதன் நூற்றாண்டு கொண்டாடப்பட்டது. அப்போதே இஸ்லாமிய
அடிப்படைவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. தியோபாண்டைச் சேர்ந்த ‘தருல் உலூம்’
(Darul Uloom at Deoband) எனும் இஸ்லாமிய மத நிறுவனம், “தேசியப் பாடலான வந்தே மாதரம்
இஸ்லாத்திற்கு எதிரானது. அதை முஸ்லிம்கள் பாடக் கூடாது” என்று ஒரு கட்டளை (Fatwa) இட்டிருந்தனர்.
பிறகு 03-11-2009 அன்று நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான உலமாக்களைக் கூட்டிய
‘ஜமாத் உலமா-இ-ஹிந்த்’ (Jamiat Ulema-e-Hind) என்கிற அமைப்பு, “தருல் உலூம் இட்ட வந்தே
மாதரத்திற்கு எதிரான கட்டளை சரியானது. இஸ்லாத்தின் மதக் கொள்கைகளுக்கு எதிராக இருப்பதால்
வந்தே மாதரம் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது” என்று தீர்மானம் நிறைவேற்றியது. அப்போதைய
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சிறப்பு விருந்தினராக அக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

தேசியப் பாடலான வந்தே மதரத்திற்கு எதிரான தீர்மானம் ஜமாத்
சபையில் தன் முன்னே நிறைவேற்றப்படவில்லை என்று அப்போது சிதம்பரம் கூறியிருந்தாலும்,
அத்தீர்மானத்தைப் பற்றித் தெரிந்த பின்னர் அவரோ, அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
அரசாங்கமோ, அவரின் காங்கிரஸ் கட்சியோ கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு
அடிப்படைக் காரணம், 1930களிலிருந்து வந்தே மாதரம் பாடலைத் தேசிய நீரோட்டத்திலிருந்து
தள்ளிவைக்கப் பயன்படுத்தப்பட்ட, நேரு குடும்பச் சொத்தாக மாறிய காங்கிரஸ் கட்சியின்
‘போலி மதச்சார்பின்மை’ மற்றும் ‘சிறுபான்மையின தாஜா அரசியல்’ ஆகிய கொள்கைகள்தான்.

காங்கிரஸ் கட்சியின் ‘மதச்சார்பின்மை’ கொள்கையின் பாதிப்பு

இந்திய தேசிய காங்கிரஸ் நேரு குடும்பத்தின் ராஜ்ஜியமாக
ஆனதால், ‘வந்தே மாதரம்’ மெதுவாகப் புறந்தள்ளப்பட்டு ‘சாரே ஜஹான் ஸே அச்சா’ முக்கியத்துவம்
அடைந்தது. நேருவிற்குப் பிறகு வரிசையாக அவரின் குடும்பத்தவரின் கீழ் நடந்த ஆட்சிகளில்,
நேரு முதல் இந்திரா, ராஜிவ் வழியாக சோனியா வரை, சிறுபான்மை சமுதாயத்திற்குக் காவடி
தூக்கி அதிக சலுகைகள் வழங்கியதால், தேச ஒற்றுமைக்கும், தேசியத்திற்கும் எதிராகக் கட்டளைகள்
இடும் அளவிற்குத் தைரியம் அடைந்தனர் முஸ்லிம் மத குருமார்கள். அதற்குச் சரிசமமாக அவர்களை
எதிர்க்கத் திராணி இல்லாமல் அமைதி காக்கும் அளவிற்கு வளர்ந்தது காங்கிரஸ் கட்சியின்
கோழைத்தனம்.

சுதந்திரம் பெற்றபின் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நேரு
குடும்பத்தின் ஆக்கிரமிப்பில் நம் தேசம் கட்டுண்டு கிடந்தமையால் ‘தேசியம்’
(Nationalism) குறைந்து ‘போலி மதச்சார்பின்மை’ (Pseudo Secularism) வளர்ந்து, சிறுபான்மையினருக்குத்
தேவைக்கு அதிகமாகச் சலுகைகள் அளிக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் வழித்தடங்களைப் பின்பற்றி
மற்ற கட்சிகளும் சிறுபான்மையினருக்குத் தாஜா செய்து, சாமரம் வீசி, தேசிய ஒருமைப்பாட்டிற்கு
எதிராக, மதவெறி, ஜாதிவெறி, பிரிவினைவாதம், மொழி வெறி ஆகிய கொள்கைகளைக் கையாண்டு சமூகத்தைக்
கூறுகளாகப் பிளந்து விட்டனர்.

நாளடைவில் மேற்கண்டவாறு பல வகைகளில் பிரிந்து போன சமூகம்,
‘வேற்றுமையில் ஒற்றுமை’ (Unity in Diversity) என்கிற உன்னத மந்திரத்தை மறந்துபோனது.
ஆங்கிலேய அரசு அறிமுகம் செய்த மெக்காலே கல்வித் திட்டத்தின் தொடர்ச்சியும், தேசப்பற்றும்
தேசியவாதமும் வளர்ச்சியடையாமல் இருக்கவும் மேலும் குறைந்து போகவும் காரணமாக இருக்கிறது.
வந்தே மாதரம் புறந்தள்ளப்பட்டதோடு மட்டுமல்லாமல், ஜன கன மன பாடலும் தன்னுடைய தேசிய
கீதம் என்னும் முக்கியத்துவத்தை இழக்கக் காரணமாக அமைந்தது. பல மாநிலங்கள் தங்களின்
சொந்த மாநில கீதங்களைக் கொண்டாட ஆரம்பித்தன. உதாரணமாக, தமிழகத்தில் மாநில கீதமாக ‘தமிழ்த்தாய்
வாழ்த்து’ நம் தேசிய கீதத்தைவிட அதிக முக்கியத்துவம் பெற்றதால் தேசிய கீதம் அரசு விழாக்களில்
கூட இசைக்கப்படுவது நின்றுபோனது. நம் தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான மந்திரிகளுக்கும்,
எம்,எல்.ஏக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தேசிய கீதத்தை முழுமையாகப் பாடத் தெரியாது
என்பதில் ஐயமில்லை. இதே போன்றுதான் மற்ற பல மாநிலங்களிலும்.

மாநில கீதங்கள் மாநில அரசு விழாக்களில் இசைக்கப்படுவதில்
தவறில்லை. ஆனால் அவை தேசிய கீதத்தை மறைத்திருக்கும் கிரகணங்களாக மாறியதுதான் கொடுமையிலும்
கொடுமை. மாநிலக் கட்சிகள் அனைத்தும் சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை மனதில் கொண்டு,
சிறிதும் தேசப்பற்று இன்றி, வந்தே மாதரம் பாடலை, அதற்குத் தரவேண்டிய முக்கியத்துவத்தைத்
தராமல், புறந்தள்ளின. அரசுக் கல்வி நிலையங்களிலும், சிறுபான்மையினர் அரசு உதவியுடன்
நடத்தும் கல்வி நிலையங்களிலும் வந்தே மாதரம் பாடுவது அறவே நின்று போனது.

வந்தே மாதரம் பாடலின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் புனிதத்துவம்

நவம்பர் 7, 1876: ஸ்ரீ பன்கிம் சந்திர சாட்டர்ஜீ
(1838-1894) வங்காளத்தில் கந்தல்படா என்கிற கிராமத்தில் ‘வந்தே மாதரம்’ பாடலை எழுதி
ராகம் அமைத்து நம் தாய்த்திரு நாட்டிற்கு அர்ப்பணம் செய்தார்கள். இந்தப் பாடல் அவருடைய
‘ஆனந்தமத்’ (1882) என்கிற நாவலிலும் இடம் பெற்றது.

1896: கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் ரபிந்த்ரநாத் தாகூர்
வந்தே மாதரம் பாடலைப் பாடினார். குழுவினராக இப்பாடலைப் பாடிய முதல் அரசியல் நிகழ்ச்சியாகும்
அது. தாகூர் அப்பாடலுக்கு இசையும் அமைத்தார்.

1901: ஸ்ரீ தக்கின சரண் சென் அவர்களின் வழிகாட்டுதல்படி
இந்திய தேசிய காங்கிரஸ் வந்தே மாதரம் பாடலைப் பாடுவதற்குப் பயிற்சி மேற்கொண்டது. கல்கத்தாவில்
நடந்த இன்னொரு காங்கிரஸ் மாநாட்டில் அவர் அதை மீண்டும் பாடினார்.

1905: கர்சன் பிரபுவின் ‘வங்காளப் பிரிவினை’ (16 அக்டோபர்
1905) மற்றும் ‘சுதேசி இயக்கத்தின் துவக்கம்’ (7 ஆகஸ்ட் 1905) ஆகியவற்றைத் தொடர்ந்து
ஆங்கிலேய அரசாங்கத்தின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து நாட்டை மீட்கும் தேச விடுதலை முழக்கமாக
ஆகியது ‘வந்தே மாதரம்’ பாடல்.

ஆங்கில அரசாங்கத்தின் தடையை மீறி, பனாரஸ் காங்கிரஸ் மாநாட்டில்,
ரபிந்த்ரநாத் தாகூரின் மருமகள் ஸ்ரீமதி சரளா தேவி சௌதரணி வந்தே மாதரம் பாடலைப் பாடினார்.

மாதங்கனி ஹஸ்ரா என்னும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர் ஒருவரை
கிரௌன் போலீஸார் சுட்டுக் கொன்றபோது, அவர் வந்தே மாதரம் என்று முழங்கியபடியே உயிர்
நீத்தார்.

1906: ‘பஞ்சாப் சிங்கம்’ என்று போற்றப்பட்ட லாலா லஜபதி
ராய் ‘வந்தே மாதரம்’ என்கிற சஞ்சிகையை லாஹூரில் ஆரம்பித்தார்.

அதே ஆண்டு மார்ச் மாதம் ‘பரிசல் பரிஷத்’ தொடங்கப்பட்டு
வங்காள அளவிலான மாநாடு பரிசல் என்ற இடத்தில் நடத்தப்பட்டது. அம்மாநாட்டின் அங்கத்தினர்கள்
அனைவரும் ஆங்கில அரசாங்கத்தின் தடையை மீறி வந்தே மாதரம் முழங்கியபடியே ஊர்வலம் சென்றனர்.
அவர்கள் போலீசாரின் தடியடித் தாக்குதலில் இரத்தம் சிந்த, மாநாடு பாதியிலே நின்று போனது.

ஆகஸ்டு 7, 1906 அன்று ஸ்ரீ அரவிந்தர் (1872-1950) ‘வந்தே
மாதரம்’ தினசரியைத் தொடங்கினார். பின்னர் அது இந்தியப் பத்திரிகைத் துறை வரலாற்றில்
அழியாத இடத்தைப் பெற்றது.

1907: ஜெர்மனி நாட்டின் ஸ்டட்கார்ட் என்னுமிடத்தில் நடந்த
இரண்டாவது சர்வதேச காங்கிரஸ் மாநாட்டில், மேடம் பிகாய்ஜி காமா (1861-1936) மூவர்ணக்
கொடியைப் பறக்கவிட்டார். அவரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து 1905ல் வடிவமைத்த அம்மூவர்ணக்
கொடியானது, மேலே பச்சையும், இடையே காவியும், கீழே சிவப்பும் கொண்டு, நடுவில் ‘வந்தே
மாதரம்’ என்று எழுதப்பட்டதாகும்.

ஆகஸ்டு 11, 1908: ஆங்கிலேய அரசால் தூக்கிலிடப்பட்டபோது
பத்தொன்பதே வயதான இளம் விடுதலை வீரர் குதிராம் போஸ் வந்தே மாதரம் பாடலைத் தன் உதடுகளில்
தாங்கி உயிர் துறந்தார்.

ஆகஸ்டு 17, 1909: லண்டன் பெண்டன்வில்லே சிறைச் சாலையில்
இருபத்தாறே வயதான விடுதலை வீரர் மதன்லால் திங்க்ரா (1883-1909) தூக்கிலிடப்பட்டார்.
வந்தே மாதரம் பாடி உயிர் நீத்த அவர் வரலாற்றில் அழியா இடம் பெற்றார்.

1915: ஒவ்வொரு மாநாட்டிலும் வந்தே மாதரம் பாடித் துவக்குவதை
ஒரு புனித பாரம்பரியமாகக் கைக்கொண்டது இந்திய தேசிய காங்கிரஸ்.

1927: வந்தே மாதரம் பாடலின் அற்புதத்தை அடிக்கடி போற்றி
வந்த காந்திஜி, “இப்பாடல் ஒருவரின் கண்முன்னே முழுமையான பிரிக்கமுடியாத பாரதத்தைக்
கொண்டு வந்து நிறுத்துகிறது” என்றார்.

1943-1945: தன்னுடைய இந்திய தேசிய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ
பாடலாக வந்தே மாதரத்தை அங்கீகரித்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவருடைய சிங்கப்பூர்
வானொலி நிலையத்திலிருந்து இப்பாடல் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டு வந்தது.

எப்போது வந்தே மாதரம் நம் தேசத்தின் விடுதலை முழக்கமாக
ஆனதோ, அப்போதிலிருந்து நூற்றுக்கணக்கான தேசத் தலைவர்களும், லட்சக்கணக்கான சுதந்திரப்
போராட்டத் தொண்டர்களும் வந்தே மாதரம் என்கிற மந்திரத்தைத் தங்களின் கடைசி வார்த்தைகளாகச்
சொல்லியபடியே தேச விடுதலைப் போராட்டத்தில் தங்களின் உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

துரதிர்ஷ்டவசமாக தேசியத்தை முன்வைத்த தலைவர்களும் அவர்களின்
தொண்டர்களும் பின்தள்ளப்பட்டு, சிறுபான்மைச் சமுதாயத்திற்குக் காவடி தூக்கும் ‘மதச்சார்பற்ற’
போலி சக்திகளின் கைகள் இந்திய தேசிய காங்கிரஸில் ஓங்கிய பின்னர், சிறுபான்மை சமுதாயத்தினரின்
ஆதரவை வெற்றி கொள்ளும் பாதையில் வந்தே மாதரம் ஒரு ‘தடங்கல்’ போன்று அவர்களால் பார்க்கப்பட்டது.
அந்த நோக்கத்தின் விளைவாக, விடுதலை இயக்கத்தின் ஆன்மாவான வந்தே மாதரத்திற்குப் பதிலாக
‘ஜன கன மன’ இந்திய தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது. மேலும் இந்திய தேசிய காங்கிரஸ்
முகம்மது இக்பாலின் ‘சாரே ஜஹான் ஸே அச்சா’வையும், முஸ்லிம் சமுதாயத்தினரைத் திருப்தி
படுத்துவதற்காக ஒரு இணைப்பு கீதமாகக் கொண்டது.

அதிர்ஷ்டவசமாக, ‘ஜன கன மன’ என்னும் தேசிய கீதத்திற்கு சமமாக
வந்தே மாதரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதை தேசியப் பாடலாக அங்கீகரிக்க வேண்டும்
என்கிற எண்ணம் நம் அரசியல் சாஸன நிர்ணய சபைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, 24 ஜனவரி
1950 அன்று அரசியல் நிர்ணய சபையை துவக்கி வைத்துப் பேசிய நம் முதல் ஜனாதிபதி டாக்டர்
ராஜேந்திர பிரஸாத் அவர்கள், “ ‘ஜன கன மன’ என்று இயற்றப்பட்டு இசையமைக்கப்பட்ட பாடலை,
அவ்வப்பொழுது அரசு ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு இணங்க, தேசிய கீதமாவும், நம்முடைய விடுதலைப்
போராட்ட இயக்கத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வந்தே மாதரம் பாடலை தேசிய கீதத்திற்கு
இணையான முக்கியத்துவத்தை கொடுத்து தேசியப் பாடலாகவும் இச்சபை அங்கீகரிக்கிறது. இது
அனைத்து அங்கத்தினர்களுக்கும் திருப்தி அளிப்பதாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று
உறுதியிட்டுக் கூறினார். அரசியல் சாஸன நிர்ணய சபையில் 28 முஸ்லிம் அங்கத்தினர்களும்
இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

(மேற்கூறப்பட்ட தகவல்கள், கான்பூர் பிரகாஷ் புஸ்தகாலயாவின்
சிவ நாராயண மிஷ்ரா வைத்யா அவர்களின் பதிப்பை மூலமாகக்கொண்டு, சென்னையைச் சேர்ந்த தங்க
காமராஜ் அவர்கள் வடிவமைத்தபடி, பத்மா சுந்தரம் அவர்களின் ‘என்னபடம் எஜுகேஷனல் பப்ளிஷர்ஸ்’
(Ennappadam Educational Publishers, Chennai-85) மறுபதிப்பு செய்துள்ள ‘வந்தேமாதரம்
ஆல்பம்’ (Bandemataram Album) என்கிற அற்புதமான புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை.
இப்புத்தகத்தில் வந்தே மாதரம் பாடலில் உள்ள சில அழகான வார்த்தைகளை விளக்கி கே.தேஜேந்த்ரகுமார்
மித்ரா அவர்கள் வரைந்த அருமையான ஓவியங்களும் உள்ளன.)

மற்ற மதத்தவர்களும் வந்தே மாதரம் பாடுகிறார்கள்

பல முஸ்லிம் பிரபலங்கள் வந்தே மாதரம் பாடலுக்கு முழு ஆதரவைத்
தந்துள்ளார்கள் என்பதும் உண்மைதான். ஆரிஃப் முகம்மது கான், முக்தார் அப்பாஸ் நக்வி,
நஜ்மா ஹெப்துல்லா போன்ற அரசியல்வாதிகள் வந்தே மாதரம் பாடுபவர்களே. ஆரிஃப் முகம்மது
கான் அவர்கள் அப்பாடலை உருது மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். செப்டம்பர் 6,
2006ல் அகில இந்திய சன்னி உலேமா வாரியம், முஸ்லிம்கள் வந்தே மாதரம் பாடலின் முதல் இரு
பத்திகளைப் ‘பாடலாம்’ என்று கட்டளை இட்டுள்ளது! அந்த மன்றத்தின் தலைவர் மௌலானா முஃப்தி
சையது ஷா பத்ருத்தின் காத்ரி அல்ஜீலானி அவர்கள், “நம் அன்னையின் காலடியில் வணங்கும்போது
அது மரியாதைதானே ஒழிய தொழுகை அல்ல” என்று விளக்கம் அளித்துள்ளார்.

நம் நாட்டின் ஐம்பதாவது சுதந்திர தின விழாவையொட்டி
1997ம் ஆண்டு பரத் பாலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்
அவர்கள் வந்தே மாதரம் பாடலுக்கு அற்புதமாக இசையமைத்து வெளியிட்டார். அதில் அவர் பாடவும்
செய்துள்ளார். மேலும் அதை உலகம் முழுவதும் பரவச்செய்தார். அதேபோல் வந்தே மாதரம் பாடியதன்
நூற்றாண்டு விழாவின்போது பல பள்ளிகளில் உள்ள முஸ்லிம் மாணவ மாணவிகள் வந்தே மாதரம் பாடினார்கள்
என்பதும் உண்மையே. மேலும் மற்ற மதங்களைச் சார்ந்த சில தீவிரவாத இயக்கங்கள் வந்தே மாதரம்
பாடக் கூடாது என்று கட்டளை இட்டிருந்தாலும் அம்மதத்தவர்கள், பாடலின் நூற்றாண்டின்போது,
அக்கட்டளைகளை மீறிப் பாடவே செய்தார்கள் என்பதும் பாராட்டப்படவேண்டிய உண்மையே.

வந்தே மாதரம் பாடலைப் பாட மறுப்பது அரசியல் சாஸனத்திற்கு
விரோதமானது

நம் நாட்டில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் தங்களின்
அரசியல் ஆசான்களையும், கட்சித் தலைவர்களையும் வணங்கத் தவறுவதில்லை. தமிழகத்தில் கூட
திராவிடக்கட்சிகளில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அக்கட்சித் தலைவர்களின் கால்களில்
விழுந்து வணங்குவதைக் கண்கூடாக நாம் பார்த்திருக்கிறோம். அத்தலைவர்களை அல்லாஹ்வின்
நிலைக்கு உயர்த்துவார்களாம், ஆனால் தாங்கள் வாழும் தேசத்தை வணங்க மாட்டார்களாம். இது
இரட்டை வேடம் இல்லை என்றால், பின் எது?

தேசத்தைப் போற்றுவது என்று வரும்போது, போற்றுபவர் இந்துவா,
முஸ்லிமா, கிறுத்துவரா, சீக்கியரா, ஜைனரா, பௌத்தரா, கம்யூனிசவாதியா அல்லது நாத்திகரா
என்பது சம்பந்தமில்லாத விஷயம். வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளில் எந்த
இந்துக் கடவுளும் குறிக்கப்படவில்லை என்றாலும், அவற்றைப் பாடக் கூடாது என்று முஸ்லிம்
மதகுருமார்கள் கட்டளை இட்டுள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த தேசத்தில் உள்ள மற்ற
மக்களுடன் தங்கள் ஒற்றுமையையும் இணக்கத்தையும் காண்பிக்கக் கூடிய ஒரு நல்ல வாய்ப்பை
அவர்கள் இக்கட்டளை இடுவதன் மூலம் இழந்திருக்கிறார்கள் என்பதே உண்மை. ஜெர்மனி நாட்டிலும்
ஃப்ரான்ஸ் நாட்டிலும் வாழும் முஸ்லிம்கள் அந்நாட்டுத் தேசிய கீதங்களைப் பாடுவதன் மூலம்
தந்தை நாடுகளான அவற்றைப் போற்றும்போது, இந்திய முஸ்லிம்கள் வந்தே மாதரத்தின் முதல்
இரண்டு பத்திகளைப் பாடித் தாய்நாட்டைப் போற்றுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

அரசியல் சாஸனம் வந்தே மாதரத்திற்கு, தேசிய கீதத்திற்கு
சமமான புனிதத்துவமும், முக்கியத்துவமும் கொடுத்துள்ளபடியால், அதற்கு எதிராக முஸ்லிம்
மதகுருமார்களின் அமைப்பு கட்டளை இட்டுள்ளது அரசியல் சாஸனத்திற்கு எதிரான நிலைப்பாடு.

ஜாதி, மத, மொழி வேறுபாடுகள் இன்றி இந்நாட்டின் அனைத்துக்
குடிமக்களும், இந்நாட்டின் தேசியச் சின்னங்களுக்கு மரியாதை செய்வதன் மூலம் இந்த தேசத்தை
வணங்கவேண்டும். நம் அரசியல் சாஸனத்துக்கு மரியாதை அளிப்பது நம் கடமை.

வந்தே மாதரம்!

Posted on Leave a comment

‘வந்தே மாதரம்’ தமிழாக்கம் – ஜடாயு

தாயே வணங்குகிறோம்

இனிய நீர்
இன்சுவைக்கனிகள்
தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை
மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்

வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்
இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்
எழில்மிகு புன்னகை
இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்
எங்கள் தாய்
சுகமளிப்பவளே
வரமருள்பவளே
தாயே வணங்குகிறோம்

கோடிக் கோடிக் குரல்கள்
உன் திருப்பெயர் முழங்கவும்
கோடிக் கோடிக் கரங்கள்
உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்
அம்மா ! ‘அபலா’1 என்று உன்னை அழைப்பவர் எவர் ?
பேராற்றல் பெற்றவள்
பேறு தருபவள்
பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள்
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்

அறிவு நீ
அறம் நீ
இதயம் நீ
உணர்வும் நீ
எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ
எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ
எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்
தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ
தாயே வணங்குகிறோம்

ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்
அன்னை துர்க்கை நீயே
செங்கமல மலர் இதழ்களில் உறையும்
செல்வத் திருமகள் நீயே
கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே
தாயே வணங்குகிறோம்

திருமகளே
மாசற்ற பண்புகளின் மனையகமே
ஒப்புயர்வற்ற எம் தாயகமே
இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே
கருமை அழகியே
எளிமை இலங்கும் ஏந்திழையே
புன்முறுவல் பூத்தவளே
பொன் அணிகள் பூண்டவளே
பெற்று வளர்த்தவளே
பெருமைகள் அனைத்தும் அளித்தவளே
தாயே வணங்குகிறோம்

*******

1.     வங்காளி மொழியில்
அபலா என்ற சொல் ‘பெண்’, ‘வலிமையற்றவள்’ என்று இரு பொருள்படும்.

 

 

Posted on Leave a comment

வலம் செப்டம்பர் 2017 இதழ் உள்ளடக்கம்

வலம் செப்டெம்பர் 2017 இதழ் வெளியாகிவிட்டது. அச்சு இதழை இன்று அனைத்து சந்தாதாரர்களுக்கும் அனுப்பி இருக்கிறோம்.

இபுத்தக சந்தா செலுத்தியவர்கள் நம்மபுக்ஸ் வலைத்தளத்தில் லாகின் செய்து, அவர்களது புக்செல்ஃபில் இருக்கும் செப்டம்பர் இதழை வாசிக்கலாம்.


வலம் – செப்டெம்பர் 2017 (ஹேவிளம்பி வருடம் ஆவணி – புரட்டாசி) இதழின் உள்ளடக்கம்:

வந்தே மாதரம் – தமிழாக்கம்: ஜடாயு
வந்தே மாதரம்: தேசத்தின் உணர்வு – பி.ஆர்.ஹரன்
ஆங்கிலவழிக் கல்வியின் அபாயங்கள் – லஷ்மணப் பெருமாள்
ஜி.எஸ்.டி: கட்டுக்கதைகளும் உண்மையும் – ஜெயராமன் ரகுநாதன்
டெஸ்ட் டியூப்பில் இண்டர்நெட் – சுஜாதா தேசிகன்
சில பாதைகள் சில பதிவுகள் (தொடர்) – சுப்பு
அவர்கள் அப்படித்தான் – ஹரன் பிரசன்னா
திரை: தர்மத்தின் குரல் – ஆமருவி தேவநாதன்
கிடைமட்டக் கற்றல் – ஹாலாஸ்யன்
கடன் (சிறுகதை) – ரெங்கசுப்ரமணி
ஹெச்.ஜி.ரசூல் (அஞ்சலி) – ஜடாயு
கார்ட்டூன்கள் – ஆர்.ஜி.

ஆன்லைனில் அச்சுப் புத்தகத்துக்கு சந்தா செலுத்த: https://www.nhm.in/shop/Valam-OneYearSubscrpition.html

இ புத்தகத்துக்கு ஓராண்டுச் சந்தா செலுத்த: http://nammabooks.com/valam-one-year-subscription?filter_name=valam%20subscription

வலம் செப்டம்பர் 2017 இதழை மட்டும் ஆன்லைனில் வாங்கி வாசிக்க: http://nammabooks.com/valam-sep