அவன் தன் வீட்டின் பின் பக்கம் வழியே தப்பி ஓடிக் கொண்டிருந்தான். அப்போது ஓரிரு குதிரைகள் மட்டுமே அவனைத் துரத்தின. ஆனால் தொடர்ந்து குளம்புச் சத்தம் எண்ணிக்கையில் கூடிக்கொண்டே போய் நெஞ்சும் தொண்டையும் காய்ந்து போனது. மூச்சு வாங்குவது மிகவும் அதிகரித்தது. ஓடுவது மிகப் பெரிய போராட்டமாக இருந்தது. ஆனால் நிற்கவும் முடியவில்லை. ‘மடக்குங்கடா’ குதிரை வீரர்களுள் ஒருவனின் குரல் மிக அருகே கேட்டது. கெஞ்சும் பின்னங் கால்களை விரட்டி இன்னும் வேகம் எடுக்க முயன்றான். அப்போது சிறிய கல் ஒன்று தடுக்கிவிடக் குப்புற அடித்துக் கீழே விழுந்த அவன் தோள் மீதும் முகத்தின் மீதும் குதிரைகளின் குளம்படிகள் பட்டு வலி உயிரே போனது. ரத்தம் முகத்தில், முதுகில் உடலின் மேற்பகுதி முழுவதும் வழிந்தது.
தன் உடலின் மேற்பகுதியை நடுங்கும் விரல்களால் துடைத்துக் கொண்டான் அனந்த ரூபன். அவன் பயன்படுத்திய விரிப்பு முழுவதுமே வியர்வையால் நனைந்திருந்தது. நல்ல வேளை, வியர்வைதான்; ரத்தமில்லை.
அறையை விட்டு வெளியே வந்து முற்றத்தில் எட்டிப் பார்த்தான். மேற்குப் பக்கம் சூரியன் இறங்கி விட்டிருந்தது. பொழுது சாய இன்னும் ஒரு சாம நேரம் இருக்கும்.
பின்கட்டுக்குச் சென்றான். சமையலறையைக் கடக்கும்போது, பெரியம்மா வழித் தங்கை வைத்துவிட்டுப் போன சாப்பாட்டுப் பாத்திரங்களை அப்பா திறக்கவே இல்லை என்பது தெரிந்தது. மங்கள தேவி தன் பிறந்த வீட்டுக்குப் போய் விட்டாள். அம்மா உயிரோடு இருந்திருந்தால் அப்பா உணவைப் புறக்கணித்து நகை வேலையில் ஆழும்போது கண்டிருத்திருப்பார். கிணற்றடியில் இருந்த துவைக்கும் கல்மீது அமர்ந்தான். வெயிலின் சூடு இன்னும் அதில் இருந்தது. மங்களாவின் தாய்மையைக் கொண்டாடி இருப்பார் அம்மா. அவளது பிறந்த வீட்டுக்கே அனுப்பி இருக்க மாட்டார்.
அரைத் தூக்கத்தில் எழுந்தது தலை நோவை விட்டுச் சென்றிருந்தது. இரவுத் தூக்கம் போய் ஒரு மாதமாகிறது. அரண்மனையில் பொற்கொல்லர் செய்ய தங்கமோ வெள்ளியோ ஏதேனும் ஒரு வேலை இருந்து கொண்டுதான் இருக்கும். அப்பா அந்தக் கூட்டத்தில் சேரவே இல்லை. அனந்தன் போகும்போது தடுக்கவும் இல்லை.
அன்றாடம் போலத்தான் ஒரு மாதம் முன்பும் அவன் போயிருந்தான். அபூர்வமாகத் தென்படும் மூத்த பொற்கொல்லர் ஆசான் விஷ்வ வல்லபர் தானே நேரில் வந்திருந்தார். அரண்மனைப் பல்லக்கில் அவர் வந்து இறங்கியபோதுதான் ராஜ குடும்பத்தில் யாரோ அழைத்திருக்கிறார்கள் என்பது தெளிவானது. சற்று நேரத்திலேயே மகாராணி கோப்பெருந்தேவிதான் அழைப்பை அனுப்பினார் என்பதும் தெரிய வந்தது.
அன்று அனந்தனுக்கு வேலை எதுவும் இருக்கவில்லை. வல்லபரின் பாதம் பணிந்தான். “கைலாச நாதனோட மகனா நீ? என்கிட்டே வேலை கத்துக்கிட்டவங்க நடுவிலே நான் சொல்லிப் பெருமைப்பட்டுக்கிற மாதிரி இருக்கிற ரெண்டு மூணு பேருல அவரும் ஒருத்தர்” என்றவர். “நல்லா இருப்பா” என ஆசியும் வழங்கினார். ”வர்றேன் ஆச்சாரியாரே” என்று அவன் கிளம்ப யத்தனித்தபோது, “இரு. உன்னாலே எனக்கு ஓர் உதவி ஆகணும்” என்றார். ”என்னங்கய்யா.. உத்தரவு போடுங்க” எனப் பதிலளித்தான் அனந்தன்.
அவர் தமக்கு வழங்கப்பட்ட பெரிய ஆசனத்தில் அமர அவன் இளைஞர்களுக்கென சுவரோரம் வைக்கப்பட்டிருந்த வரிசையான இருக்கைகள் ஒன்றில் அமர்ந்தான். சற்று நேரத்தில் கோப்பெருந்தேவியாரின் முக்கியத் தாதியான கலாவதி வந்து மெல்லிய குரலில் வணக்கம் என்று கூறி தலை குனிந்து அவர் எதிரே நின்று வணங்கியபோது அவர் பக்கவாட்டில் பார்த்தபடி, “நல்லா இரு” என்றார். அவருக்குப் பார்வை மங்கல் என்பது அப்போதுதான் அவனுக்குப் பிடிபட்டது. தொலைவிலிருந்து அவர்கள் பேசியது அவனுக்குக் கேட்கவில்லை.
சற்று நேரத்தில் அவர் சத்தமாக, “கைலாசம் மகனே, எங்கே இருக்கே?” என்று இங்கும் அங்கும் திரும்பினார். அவர் பார்வைக்கு அவன் தென்படவே இல்லை. ”வந்துட்டேன் ஐயா” என்று அவன் அருகில் சென்றான். ”என்னை உள்ளே அழைத்துக் கொண்டு போ” என்று அவன் கையைப் பிடித்துக் கொண்டார்.
பல படிகள் கடந்து ஒரு பெரிய நடையைத் தாண்டி இறுதியாக அந்தப்புரத்தின் முக்கியக் கதவை அடைந்தார்கள். அவ்வளவு உள்ளே அவன் போனதே இல்லை. பணிப் பெண்கள் அவருக்கு வணக்கம் சொல்லிக் கதவுகளைத் திறந்தார்கள்.
உள்ளே மறுபடி ஒரு நடை. அதன் இடப் பக்கம் ஒரு பெரிய கூடம் அதன் கதவுகள் மூடி இருந்தன. வலப் பக்கம் பல அறைகள் இருந்தன. ஒரே ஓர் அறையின் வாயிலில் மட்டும் ஒரு பணிப்பெண் இவர்களுக்காகவே காத்திருந்தது போல நின்றிருந்தாள். “வாருங்கள்” என்றவள் அறைக் கதவைத் திறந்து விட்டு வெளியே நின்றாள்.
அந்த அறைக்குள் அவரைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான். உள்ளே நுழைந்ததும் அந்த அறையின் அமைப்பு அவனை அயரச் செய்தது. சூரிய வெளிச்சம் மேற்குப் பக்கத்தில் இருந்து சிறிய சாளரங்கள் வழியே விழுந்து கொண்டிருந்தது. அழகிய வேலைப்பாடு மிகுந்த கண்ணாடிக் குடுவைகளுக்குள் அகல் விளக்குகள் சிறிய மாடங்களில் இருந்து ஒளியை உமிழ அந்த அறை பிரகாசமாக இருந்தது. திரைச் சீலைகள் அரிய வண்ணமும் ஜரிகை நகாசுகளுமாக பிரமிக்க வைத்தன.
கலாவதியை அவன் கவனித்தபோது அவள் ஒரு பெரிய மர அலமாரியைத் திறந்தாள். நான்கு மரத் தட்டுகளில் எண்ணற்ற தங்க நகைகள் விதம் விதமாகத் தென்பட்டன. இத்தனை தங்கத்தை அவன் பார்த்ததே இல்லை. ”ஐயா… மகாராணிக்கு அது எந்த ஒட்டியாணம் என்பது மறந்து விட்டது. தாங்கள் இவற்றுள் திருகாணி இல்லாத ஒட்டியாணத்தைக் கண்டு பிடித்து சரி செய்ய வேண்டும்” என்றாள் பணிவாக.
“ஓர் இருக்கையை அலமாரி அருகே போடுங்கள்” என்றார் ஆசான்.
“தம்பி ஒட்டியாணங்கள் எல்லாவற்றையும் அதன் நீளத்தை ஒட்டி ஒப்பிட்டு, இருப்பதிலேயே அதிக நீளமானதை எடு” என்றார். வளையத்துள் கொக்கி மாட்டும் ஒட்டியாணங்கள் ஒரு வகை. திருகாணியால் இடுப்பைச் சுற்றி மாட்டப் படுவது இன்னொரு வகை. பத்து ஒட்டியாணங்களையேனும் அவன் ஒப்பிட்டிருப்பான். ஒரு தட்டில் பாதி இடம் முழுதும் ஒட்டியாணங்களே. வளையல்கள், நாகொத்துகள், நெற்றிச் சுட்டிகள், தோடுகள், மாலைகள் இருந்தன. கீழ்த் தட்டில் ஒரே ஒரு ஜோடி காற்சிலம்புகள் தங்கத் தாம்பாளங்கள், கிண்ணங்கள் மற்றும் கரண்டிகளுடன் இருந்தன.
ஒப்பிட்ட ஒட்டியாணங்களுள் இருப்பதிலேயே பெரியதை அவன் அவரிடம் நீட்டியபடி, “ஏன் இருப்பதில் பெரியதைக் கேட்டீர்கள்?” என்றான்.
”பிறகு சொல்கிறேன்” என்றவர் அதன் மையப் பகுதியைக் கை விரல்களால் தடவினார். மறைகளுடன் கூடிய நீண்ட வளையம் மட்டும் இருந்தது. திருகாணி இல்லை.
“இதுதான் அது” என்றார்.
“மகாராணியிடம் காட்டி விட்டு வருகிறேன்” என்று கலாவதி நகர்ந்ததும்,
“ராணியின் இடுப்புப் பெரிதாகிக் கொண்டே வந்தது. அதனால்தான் இத்தனை ஒட்டியாணங்கள்” என்றார் மெல்லிய புன்னகையுடன்.
அப்போது அவரும் அவனும் மட்டுமே அறையில் இருந்தார்கள். கனமாகவும், ஜொலிப்பதாகவும் இருந்த அந்த ஜோடி சிலம்புகளுள் ஒன்றை எடுத்தான். அதன் மீது மிகவும் நுண்ணிய பூ வேலைப் பாடுகள் இருந்தன. சற்றும் தயங்காமல் அதைத் தன் இடுப்பில் இருந்த வேட்டிக் கொசுவத்துக்குள் ஒளித்துக் கொண்டான். அதன் ஜோடிச் சிலம்பை நோக்கி அவன் கை நகரும் நொடியில் கலாவதி உள்ளே நுழைந்தாள்.
“ராணியார் இடுப்பில் அதை மாட்டிப் பார்த்தார். அளவு சரிதான். திருகு மட்டும் போடுங்கள்” என்றாள்.
அன்று அரண்மனையை விட்டு வெளியேறும்போது அவன் அவருடனே பல்லக்கில் வந்து விட்டான். வீட்டுக்கு வந்தபோது, அதைப் பத்திரப்படுத்தியபோது, சில நாட்களில் அது தன்னை இப்படித் தொல்லை செய்யும் என்று தோன்றவே இல்லை.
”அனந்தா.” தந்தையின் குரல் அருகிலேயே கேட்கவே திடுக்கிட்டான். ”என்னப்பா ஆச்சு உனக்கு? இது என்ன திடீர் பகல் தூக்கம்?” என்றார். அவர் முகத்தையே உற்றுப் பார்த்தவன் ஒரு வேகத்தில், “உங்க கிட்டே பேச வேண்டியவை இருக்கு அப்பா” என்றான்.
“முதலில் நீ ஒற்றர் தலைவர் சொக்கநாதரைப் பார்த்து இதைக் கொடு” என்றார். மீன லச்சினை பொறித்த தங்க மோதிரம் அது.
இரண்டு தெருக்களே தள்ளி இருந்தது ஒற்றர் தலைவர் வீடு. அந்தணர் மற்றும் வைசியர் தெருவைத் தாண்டிச் சென்று அவன் அந்த மோதிரத்தைக் கொடுத்து விட்டுத் திரும்புகையில், வீட்டு வாயிலில் நல்ல மர வேலைப்பாடுள்ள மாட்டு வண்டி நின்று கொண்டிருந்தது.
வீட்டில் நுழையும்போதே ஒரு பக்கம் பெரிய திண்ணை, மறுபக்கம் அப்பாவும் அவனும் பயன்படுத்தும் சிறிய நெருப்புக் குழி இருந்தது அனேகமாக அதில் சிறு கரித்துண்டு கனன்று கொண்டே நீறு பூத்திருக்கும். வீணையின் குடம் போன்ற ஒன்றுக்குள் சிறு மரச் சக்கரத்தின் ஒவ்வொரு ஆரத்தின் மீதும் சிறு முக்கோண வடிவ மரத் துண்டுகளை அப்பா பிசின் வைத்து ஒட்டி வைத்திருந்தார். கை வாட்டமான நீண்ட குச்சியை அவர் அசைக்க அது குடத்தின் முன் பக்கமுள்ள மற்றொரு குச்சியை முன்னும் பின்னும் அசைக்கும். அந்த அசைவில் சக்கரம் முன்னும் பின்னும் சுற்றும். சக்கரத்தின் மேலுள்ள சிறிய ஓட்டை வழி உட்செல்லும் காற்று, விசிறி போல சுழலும் சக்கரத்தின் வீச்சால், சக்கரத்தின் பின்னே பூமி வழி சென்று நெருப்புக் குழியில் உள்ள கரியை கனன்று எரிய வைக்கும். இடது கையால் அதை அசைத்த படியே அவருடன் பேசிக் கொண்டிருந்தார் அப்பா. நெருப்பில் ஒரு சிறிய துண்டு தங்கம் உருகிக் கொண்டிருந்தது. பட்டு வேட்டியும் பட்டு அங்க வஸ்திரமும் பூணூலுமாக அந்த அந்தணர் பெரிய பணக்காரர் என்பது தெளிவாகத் தெரிந்தது.
அவனை வந்தவருக்கு அவர் அறிமுகம் செய்யவில்லை. வீட்டுக்குள் சென்றவன் கால் கழுவி மாலை நேரப் பிரார்த்தனைக்கு விஸ்வகர்மாவின் சிறு விக்கிரகம் முன்னே விளக்கை ஏற்றி வணங்கினான். மனம் குவியவில்லை. ஒவ்வொரு நொடியும் அச்சத்தின் பிடி இறுகிக்கொண்டே போனது.
வெளியே செல்ல எண்ணி அவன் திண்ணையைத் தாண்டித் தெருவில் இறங்கியபோதும் இருவரும் பேசிக்கொண்டே இருந்தார்கள். குடியானவர்கள் தெருவைத் தாண்டி வைகை ஆற்றங் கரையை அடைந்தான். சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தது. பறவைகள் அலை அலையாய் ஒன்றாய்ச் சிறகடித்து மரங்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன. மாலை வந்தனம் முடித்துப் பல அந்தணர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். மீனாட்சி அம்மன் கோயில் மாலை ஆரத்திக்கான மணியை ஒலித்துக் கொண்டிருந்தது.
ஒற்றர் தலைவர் சொக்கநாதர் கூறியவை அவனை உள்ளே அமிலமாய்க் குதறிக் கொண்டிருந்தன. “பொற்கொல்லர்களில் ஒருவர்தான் எடுத்திருக்க வேண்டும். ஆனால் பெரியவர் வல்லப ஆச்சாரியாரைத் தவிர யாருக்கும் அந்தப்புரத்துக்குள் அனுமதி இல்லை. யார் திருடி இருந்தாலும் அது பொற் கொல்லர்களிடம் வந்திருக்கும். ஏனெனில் அது ஒற்றைச் சிலம்பு. மேலும் அதைச் சிலம்பாக அணியும் அந்தஸ்து உள்ள பெண்கள் இந்த நாட்டில் வேறு யாரும் கிடையாது. எல்லா பொற்கொல்லர்களையுமே விஸ்வகர்மா சன்னதியில் தம் குழந்தை மீது சத்தியம் செய்யச் சொல்லப் போகிறோம். உன் அப்பா கைலாசம் மற்றும் வல்லபர் போன்ற பெரியவர்களை இதிலெல்லாம் இழுக்க மாட்டோம்.”
பிறக்கும் முன்பே தன் குழந்தை மீதுதான் பொய் சத்தியம் செய்ய வேண்டுமா? அதன் பின் குலம் விளங்குமா? அந்த ஒரு கணம் ஏன் என் மனம் தடுமாறியது? இன்று ஏன் இந்தச் சித்திரவதை? கவியும் இருளால் அவன் குலுங்கிக் குலுங்கி அழுவதை யாரும் கவனிக்கவில்லை. வைகையில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்வதே ஒரே வழி. இந்தப் போராட்டம் இந்த வேதனை இந்தக் குற்ற உணர்வு எல்லாம் அழியும்.
சட்டென எழுந்து ஓடி வைகையில் குதித்தான். முதல் முறை நீர் தூக்கி விட்டபோது அவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மறுபடி மூழ்கும்போது இனி விடுதலை என மனம் ஆறுதலும் கொண்டது. சட்டென ஓர் உருவம் தன் மீது மோதி, வலிமையான ஒரு கரம் தனது குடுமியைப் பற்றுவதை உணர்ந்தான்.
சில நொடிகளில் அவனைக் கரை சேர்த்த ஆஜானுபாகுவான ஒரு குடியானவர் அவனைக் குப்புறப் படுக்க வைத்து முதுகில் வலுவாக நான்கு முறை தட்டினார். அவன் வாய் வழியே அவன் குடித்த வைகை ஆற்று நீர் வெளியேறியது.
“என்ன தம்பி இது? நீ அந்தணனா? நீச்சல் தெரியாதா? ஏன் இந்த தற்கொலை முயற்சி?”
மெல்லிய குரலில், “நான் பொற்கொல்லன்” என்றான்.
“உன்னைக் காப்பாற்றவே உன்னைத் தொட்டேன். உன் வீட்டுக்கு நீ தனியே செல். நீ போகும் வரை நான் கண்காணிப்பேன்” என்றார் அவர். தலையை அசைத்து விட்டு அவன் ஈர உடையும் காலெல்லாம் மண்ணுமாகத் தன் வீட்டுக்கு நடந்தான்.
அவன் உள்ளே போய் உடை மாற்றும் வரை பொறுமை காத்த அப்பா ”என்ன நிகழ்ந்தது?” என்றார். எல்லாவற்றையும் அவரிடம் கொட்டி, அவர் காலைப் பற்றி மன்னிப்புக் கேட்டான். குலுங்கிக் குலுங்கி அழுதான். அப்பா அறையை விட்டு நீங்கி வீட்டில் இருந்தும் கிளம்பி எங்கேயோ போனார். எங்கே போயிருப்பார் என்னும் கவலையுடன் அவன் திண்ணையில் காத்திருந்தான்.
சிறிது நேரத்தில் அவர் தீப்பந்தத்துடன் பெரியம்மாவுக்குத் துணையாக வந்தார். பெரியம்மா இருவருக்கும் உணவளிக்க, மீண்டும் அவரை அவர் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தார் அப்பா. தனது வேலையில் கல் விளக்கு வெளிச்சத்தில் அவர் மூழ்கி விட்டார்.
நள்ளிரவில் திடீரென அவன் அறைக்கு வந்தவர், “நாளை காலையில் மேல மாசி வீதியில் உள்ள நந்தவனத்துக்கு போ. அங்கே இருந்து பல கூடைப் பூக்கள் அந்தப்புரம் செல்கின்றன. ஏதேனும் ஒரு கூடைக்குள் சிலம்பைப் போட்டு விடு. காலையில் சூரியன் உதித்து ஓரிரு நாழிகைக்குள் அங்கே நீ இருக்க வேண்டும். தற்கொலை அளவு போன நீ ஒருக்காலும் மறுபடி இதைச் செய்ய மாட்டாய். நம் குலத்தின் நம் தொழிலின் பெயருக்குக் களங்கம் செய்ய ஒருக்காலும் முயலாதே” என்றவர் தன் அறைக்குப் போய்விட்டார்.
விதி அவன் பக்கம் இல்லை. காலையில் மேல மாசி வீதியில் மக்கள் இரு பக்கமும் நின்று கொற்றவை விழாவுக்குப் போகும் ராஜ குடும்பத்தைக் காண வரிசையாக நின்றிருந்தார்கள். நந்தவனத்தைச் சுற்றியும் ஒரே கும்பல்.
வாடிய முகத்துடன் வீடு திரும்பியவன் அவர் முன் அமர்ந்து அழுதான். அவனது முகத்தை இரு கரங்களால் பற்றியவர் அவன் கண்களுள் கூர்ந்து பார்த்து, “நீ உயிர் வாழ விரும்பு. உன் உயிரை நீ காத்துக் கொள்ள இந்தப் பழியிலிருந்து நீ தப்ப வேண்டும். அதை முடிக்காமல் வீடு திரும்ப மாட்டேன் என்னும் உறுதியுடன் கிளம்பு. முதலில் தன் உயிரைக் காத்துக் கொள்ளும் திடமான உறுதி உனக்குள் இருக்க வேண்டும். எல்லா உயிர்களுக்கும் இயல்பானது இது. கிளம்பு” என்றார்.
உச்சி வெயில் வரை அரண்மனை செல்லும் வழியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தான். நூறு பொற்கொல்லர்கள் தினம் போல அரண்மனைக்கு அணி வகுத்தபோது, துணிந்து அவர்களுடன் உள்ளே போய் எப்படியும் சிலம்பை எங்கேயாவது போட்டு விட எண்ணினான். ஆனால் கால் பின்னியது. நடுக்கமாக இருந்தது. கையும் களவுமாகப் பிடி படாமல் வேறு வழி எதுவுமே இருக்காதா? பிற பொற் கொல்லர்கள் மேலே செல்ல செல்லச் செல்ல அவன் கடைசி ஆளாக மிகவும் தயங்கி நடந்து கொண்டிருந்தான்.
நல்ல உயரம் மற்றும் நிறத்துடன் ஓர் இளைஞன் அவன் அருகே வந்து, “ஐயா… என் பெயர் கோவலன். நான் வாணிகன். எனக்கு இப்போது பணம் தேவைப்படுகிறது. மகாராணி மட்டுமே அணிய வல்ல இந்தச் சிலம்பின் பொன் மிகவும் அரிய தரமுள்ளது. தங்களால் இந்த ஒற்றைச் சிலம்பை விற்றுத் தர இயலுமா?” என்றான்.
அனந்தன் கண்கள் அதிசயத்தால் விரிந்தன. அப்படியே மகாராணியின் சிலம்பின் அதே வேலைப்பாடுகளுடன் இருந்தது அந்த ஒற்றைச் சிலம்பு.