Posted on Leave a comment

வலம் ஜனவரி 2017 இதழ் – முழுமையான படைப்புக்கள்

வலம் ஜனவரி 2017 இதழின் படைப்புகளை  முழுவதுமாக இங்கே வாசிக்கலாம்.


பைரப்பாவின் பித்தி: பெருந்துயரங்களைத் தாண்டி வாழ்தல் – அனீஷ் கிருஷ்ணன் நாயர்

அபரத்யாகராஜூ – ரஞ்சனி ராமதாஸ்


ஐசாக் அஸிமாவ்வின் புனைவுகளில் மதம் – அரவிந்தன் நீலகண்டன்


சோவைப் பற்றிப் பேசுகிறேன் – சுப்பு


ஆசிரியர் சோ – பி.கே. ராமசந்திரன்


குருவை மிஞ்சிய சிஷ்யை – ஜெ.ராம்கி


ஜெயலலிதா மறைவு – அடுத்து என்ன? – பி.ஆர். ஹரன்


தமிழக அரசியலின் எதிர்காலம்: ஜெயலலிதா மறைவுக்குப் பின் – லக்ஷ்மணப் பெருமாள்


அழகிய சிக்கிம் – ஹரி வெங்கட்


சோஷலிசம் (எ) தரித்திர விருத்தி ஸ்தோத்திரம் – ஆமருவி தேவநாதன்


சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் – ’என்றென்றும் அன்புடன்’ பாலா


சிதம்பரமும் இஸ்லாமியப் படையெடுப்புகளும் – ஜடாயு



Posted on 4 Comments

சிதம்பரமும் இஸ்லாமியப் படையெடுப்புகளும் – ஜடாயு

சில வருடங்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நண்பர் ஒருவருடன் சென்றிருந்தேன்.
வரலாற்றிலும் இலக்கியங்களிலும் கோயில் சிற்பங்களிலும் அவருக்கும் நல்ல ஆர்வமும் ஈடுபாடும்
உண்டு.கோயிலில் உள்ள விஷயங்களையெல்லாம் நிதானமாக ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டு உரையாடியபடியே
வந்தோம். நடராஜர் வீற்றிருக்கும் கனகசபையின் கூரையில் வேயப்பட்டுள்ள தங்க ஓடுகளைத்
தலையைத் தூக்கி நிமிர்ந்து பார்த்தோம். “சோழனும் பாண்டியனும் போட்டி போட்டுக்கொண்டு
இந்தக் கோயிலை அலங்கரித்திருக்கிறார்கள் பார்த்தீர்களா? ‘சென்னி அபயன் குலோத்துங்கச்
சோழன் தில்லைத் திருவெல்லை பொன்னின் மயமாக்கிய வளவர் போரேறு’ என்று பெரியபுராணத்தில்
ஒரு இடத்தில் வருகிறது. ஜடாவர்மன் சுந்தர பாண்டியனுக்கு ‘கோயில் பொன்வேய்ந்த பெருமாள்’
என்றே ஒரு பட்டப்பெயர் உண்டு. தமிழ் மன்னர்கள் அன்று இங்கே கொண்டு வைத்த தங்கம் இவ்வளவு
நூற்றாண்டுகளுக்குப் பிறகும் எப்படி தகதகக்கிறது பாருங்கள்.” – மிகவும் நெகிழ்ச்சியுடன்
சொல்லிக்கொண்டு போனார் நண்பர்.
என் முகத்தில் ஒரு விரக்தியான புன்னகை அரும்பியதைக் கவனித்து அவர் பேச்சை நிறுத்தினார்.
என்ன ஏதாவது தப்பாகச் சொல்லிவிட்டேனா என்பது போலப் பார்த்தார். “நீங்கள் சொன்னது சரிதான்.
ஆனால், அந்தப் பொன் அல்ல இப்போது நீங்கள் இங்கே பார்ப்பது” என்றேன். அவர் ஒரே நேரத்தில்
ஆச்சரியமும் பதற்றமும் அடைந்தார். அக்கோயில் வரலாற்றின் சில பக்கங்களை அவருக்கு விளக்கினேன்.
இக்கட்டுரைக்கான பின்னணி இதுதான்.


ஸ்ரீரங்கம், மதுரைக் கோயில்கள் 13-14ம் நூற்றாண்டுகளில் இஸ்லாமியப் படையெடுப்புகளால்
சிதைக்கப்பட்டு மீண்டும் புனரமைக்கப்பட்டது குறித்த வரலாறு இப்போது ஓரளவு பரவலாகத்
தமிழ் மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. மதுரைக் கோயிலில் இது குறித்த ஒரு தகவல் பலகையும்
உள்ளது. ஆனால், சிதம்பரம் மற்றும் இன்னும் சில முக்கியக் கோயில்களும் இதே போன்ற தாக்குதல்களுக்கு
உள்ளாகிப் பிறகு அழிவிலிருந்து மீண்டெழுந்தன என்பது பலர் அறியாதது.

“மாலிக் காபூர் உறையூருக்கு அண்மையிலிருந்த வீரபாண்டியனின் தலைநகரான ‘பீர்தூல்’
என்ற இடத்தை நோக்கித் தன் படைகளைச் செலுத்தினான். வீரபாண்டியனின் படைகளில் பணிபுரிந்து
வந்த 20,000 முஸ்லீம் படைவீரர்கள் தக்க சமயத்தில் தம் கடமையையும் நன்றியையும் மறந்தவர்களாய்
மாலிக்காபூர் படையினருடன் சேர்ந்து கொண்டனர். வீர்பாண்டியன் ஊரைவிட்டே ஓடிவிட்டான்…
காடுகளில் ஒளிந்து ஒளிந்து வெளிப்பட்டான். தன் கைகளிலிருந்து நழுவி நழுவிச் சென்ற வீரபாண்டியனைத்
துரத்திக் கொண்டு மாலிக்காபூர் சிதம்பரம் வந்தடைந்தான். ஆங்குப் பொன்னம்பலத்தை அடியுடன்
பேர்த்தெடுத்துக் கொண்டு கோயிலுக்கு எரியூட்டினான். ஊருக்கும் தீயிட்டான். உடைமைகளைச்
சூறையாடினான். ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் கொன்று குவித்து வெறியாட்டயர்ந்தான்.
சிதம்பரத்தில் இருநூற்றைம்பது யானைகளைக் கைப்பற்றினான். கொள்ளையடித்த பொன்னையும் மணியையும்
யானைகளின் மேல் ஏற்றிக் கொண்டான். மீண்டும் பீர்தூலை நோக்கித் தன் படையைச் செலுத்தினான்.
ஆங்காங்கே கண்ணில்பட்ட கோயில்கள் அத்தனையும் இடித்துத் தரைமட்டமாக்கினான் (கி.பி.
1311). திருவரங்கத்தையும் அவன் விட்டு வைத்தானல்லன்.” (தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்”,
கே.கே. பிள்ளை, பக். 386-387).

மேற்கண்ட பிரபல வரலாற்றுப் பாடப்புத்தகத்தில்தான் இந்த வர்ணனையை நான் முதலில்
கண்டேன். இதற்கு அடிப்படையாக இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்களே எழுதிவைத்த ஆதாரபூர்வமான
ஆவணங்கள் உள்ளன என்பது பின்னர் தெரியவந்தது.
அலாவுதீன் கில்ஜியின் அரசவைப் புலவராகவும் பன்மொழி வல்லுநராகவும் இருந்த அமீர்
குஸ்ரு எழுதியுள்ள ‘வெற்றிப் பொக்கிஷங்கள்’ (Khazain-Ul-Futuh) என்ற நூலில் மாலிக்
காபூரின் படையெடுப்பு குறித்த விவரங்கள் தேதியிட்டுத் தரப்பட்டுள்ளன. இதன்படி, மாலிக்
காபூரின் தமிழ்நாட்டுப் படையெடுப்பு நிகழ்ந்த காலம் 1311ம் ஆண்டு மார்ச் 10 முதல் ஏப்ரல்
25 வரை 45 நாட்கள். இப்படையெடுப்பு தொடர்பான ஒரு குறிப்பிட்ட பகுதியை அமீர் குஸ்ருவின்
சொற்களிலேயே காண்போம்.

“பிர்தூலுக்கு வந்தபிறகு, மாலிக்காபூர் ராஜாவை காண்டூருக்கு துரத்திச் சென்றான்.
ராஜா மறுபடி தப்பித்து விட்டான். எனவே, காண்டூரில் முழுப் படுகொலை ஆணையிடப்பட்டது.
அவன் ஜால்கோட்டாவுக்கு தப்பியோடி விட்டான் என்று தெரியவந்தது. அங்கு மாலிக் அவனை மீண்டும்
துரத்தினான். அவன் காடுகளுக்குள் தப்பித்து ஒளிந்திருந்தான். மாலிக் அங்கு புகமுடியவில்லை.
எனவே மீண்டும் காண்டூருக்குத் திரும்பிவந்தான். இங்கு, பிரம்ஹஸ்த்புரி என்ற இடத்தில்
உள்ள தங்க விக்கிரகத்தைப் பற்றியும் அதைச் சுற்றிலும் யானைகள் கட்டிவைக்கப்பட்டிருப்பதையும்
குறித்து அவன் அறிந்தான். அந்த இடத்தைக் குறிவைத்து மாலிக் ஒரு இரவுப் படையெடுப்பை
நிகழ்த்தினான். காலையில் இருநூற்றைம்பதுக்குக் குறையாத எண்ணிக்கையில் யானைகளைக் கைப்பற்றினான்.
பிறகு, அவன் அந்த அழகிய கோயிலை அடியோடு தகர்ப்பதற்குத் தீர்மானித்தான். அது ஷாதாதின்
சொர்க்கம் போல இருந்து, இழக்கப்பட்ட பிறகு அந்த நரகவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்ட ராமனின்
பொன்மயமான இலங்கை போன்று இருந்தது என்று கூறலாம். மொத்தத்தில் அது ஹிந்துக்களுக்குப்
புனிதமான ஒரு இடம். மாலிக் மிகவும் கவனத்துடன் அஸ்திவாரத்தோடு அதைப் பெயர்த்து எடுத்தான்.
பிராமணர்கள் உள்ளிட்ட காஃபிர்களின் தலைகள் அவர்கள் கழுத்திலிருந்து ஆடி ஆடி அவர்கள்
கால்களின் கீழ் நிலத்தில் விழுந்தன. ரத்தம் வெள்ளமாகப் பெருகி ஓடிற்று.

லிங்க் மஹாதேவ் என்று அழைக்கப்படும் கற்சிலை அங்கு நீண்டகாலமாகவே நிறுவப்பட்டிருந்தது.
காஃபிர் பெண்கள் தங்கள் பிறப்புறுப்புக்களை இதன்மீது தேய்த்து மகிழ்ச்சியடைவார்களாம்.
இந்த அனாசாரங்களை இது நாள்வரை இஸ்லாம் என்ற குதிரை உடைத்து எறியாமல் இருந்தது. இப்போது
முஸல்மான்கள் எல்லா லிங்கங்களையும் அழித்தொழித்தார்கள். தேவ் நாரயண் கீழே விழுந்தது.
அங்கே பீடத்தில் அமர்ந்திருந்த மற்ற கடவுளர்கள் இலங்கைக் கோட்டையில் சென்று விழுந்தனர்.
லிங்கங்களுக்கும் கால்கள் இருந்தால் அவையும் பறந்து சென்றிருக்கும். பெருமளவிலான பொன்னும்,
விலையுயர்ந்த நகைகளும் முஸல்மான்களின் கைகளில் வந்து சேர்ந்தது. இவ்வாறு தங்கள் புனிதக்
கடமையை முடித்த பிறகு, ஹிஜ்ரி 710 ஜில்கிதா 13ம் நாள் (1311 ஏப்ரல் 4) முஸல்மான்கள்
தங்கள் அரச கூடாரத்துக்குத் திரும்பினர். பிறகு பிர்தூலில் இருந்த அனைத்துக் கோயில்களையும்
அழித்தனர். கொள்ளைகளைப் பொக்கிஷத்தில் சேர்த்தனர்.”

(மூலம்: The History of India as told by its own historians, Elliot and
Dowson: Vol II, pp 90-91)

இந்த விவரணத்தில் அமீர் குஸ்ரு பாரசீக மொழி வடிவில் கூறும் ஊர்ப்பெயர்கள் குறிக்கும்
இடங்களை வரலாற்றாசிரியர்கள் அடையாளம் காண முயன்றுள்ளார்கள். ‘பிர்தூல்’ என்பது ‘வீரதாவளம்’
எனப்பட்ட ஜெயங்கொண்ட சோழபுரம். ‘காண்டூர்’ என்பது ஹொய்சளர்களுக்கும் மதுரையிலிருந்து
ஓடிவந்த வீரபாண்டியனுக்கும் முக்கியத் தளமாக விளங்கிய கண்ணனூர். ‘ஜால்கோட்டா’ எந்த
ஊர் என்று தெரியவில்லை. கொள்ளிடத்திற்கு அருகில் இருந்த பழைய ‘நீர்க்கோட்டை’யைக் குறிக்கலாம்
என்ற ஊகம் உள்ளது. பிரஹ்மஸ்த்புரி
என்று குறிக்கப்படுவது சிதம்பரம்தான் என்று சீதாராம் கோயல்
1, ரிச்சர்ட் எம் ஈடன்2 உள்ளிட்ட பல வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். கிருஷ்ணசுவாமி
ஐயங்கார் சிதம்பரத்திற்குரிய சைவாகமப் பெயரான பிரம்மபுரி என்பதன் திரிந்த வடிவமே அது
என்கிறார். லிங்க் மஹாதேவ், தேவ் நாராயண் என்று இரு கடவுளர் பெயர்களையும் குறிப்பிடுவதால்
நடராஜர், கோவிந்தராஜர் இருவரும் உறையும் சிதம்பரம் கோயில்தான் அது என்கிறார்
3. விதிவிலக்காக,
குடவாயில் பாலசுப்ரமணியன் இது பிரகதீஸ்வரபுரி எனப்படும் தஞ்சையைக் குறிக்கலாம் என்று
கருதுகிறார். தஞ்சைப் பெரிய கோயிலின் மகாமண்டபம், திருச்சுற்று மாளிகை மற்றும் பிரகாரங்களிலுள்ள
சிற்பங்களில் ஏற்பட்டுள்ள சீரழிவுகள், இந்தப் படையெடுப்பின் போது நிகழ்ந்திருக்கலாம்
என்றும் சிவலிங்கத்தின் பீடத்தை உடைக்க முயற்சி செய்து அதில் இஸ்லாமியப் படையினர் தோல்வியுற்றனர்
என்றும் கூறுகிறார்
4. எப்படியானாலும், சோழநாட்டின் எல்லா முக்கியக் கோயில்களுமே
இக்காலகட்டத்தில் மிக மோசமாக சேதப்படுத்தப்பட்டன என்பதில் ஐயமில்லை.

கலைப் பெட்டகங்களாகத் திகழ்ந்த கோயில்களின் இடிப்புகளையும், தமிழ்நாட்டு மக்களின்
அழித்தொழிப்பையும் இவ்வாறு பெருமிதத்துடன் எழுதிச் செல்லும் இந்த அமீர் குஸ்ருதான்
சிறந்த பாரசீக, உருது மொழிக் கவிஞராகவும் சூஃபி ஞானியாகவும் மேதையாகவும் அறியப்படுகிறார்.
அதற்கும் மேலாக, இந்தியாவின் மார்க்சிய வரலாற்றாசிரியர்கள் குஸ்ருவை மத நல்லிணக்க உணர்வின்
சின்னமாகவும், இந்திய கலாசாரப் பன்மையின் அடையாளமாகவும் முன்வைப்பது குரூரமான நகைச்சுவை
அன்றி வேறில்லை. இதே போன்ற விவரணங்கள் குஸ்ருவின் நண்பரும் கவிஞருமாகிய ஜியாசுதீன்
பரனி எழுதிய Tarikhi Firoz Shahi என்ற நூலிலும், வேறு சில இஸ்லாமியப் பதிவுகளிலும்
உள்ளன.

மாலிக் காபூர் படையெடுப்பின் இறுதிக் கட்டமாக மதுரை மாநகர் அழிக்கப்பட்டது.
பின்பு 1318ல் குஸ்ரூகான் தலைமையில் மீண்டும் ஓர் இஸ்லாமியப் படை தில்லியிலிருந்து
வந்து தமிழகக் கோயில்களைக் கொள்ளையடித்துச் சிதைத்துவிட்டுப் போயிற்று. 1320 முதல் சுமார் 50 ஆண்டுகள் மதுரையில்
சுல்தானியக் கொடுங்கோலாட்சி இருந்தது. தமிழக வரலாற்றின் மிக இருண்ட காலகட்டம் இது.

பின்பு தென்னாட்டின் ஒளிவிளக்காக 1336ல் விஜயநகரப் பேரரசு உருவாகி எழுந்து வந்தது.
அதன் நிறுவனர்களில் ஒருவரான புக்கராயரின் மருமகன் குமார கம்பணன் இஸ்லாமிய ஆட்சியை முறியடித்து
1371ல் மதுரையை மீட்டார். தமிழ் ஆவணங்கள் ‘வீர கம்பண உடையார்’ என்றே இவரது பெயரைக்
குறிக்கின்றன. இதன்பிறகுதான் அழிந்து வீழ்ந்து கிடந்த தமிழ்நாட்டுக் கோயில்கள் ஏற்றம்
பெற்றன. “துலுக்கர் கலகத்தால் நாற்பதாண்டுகள் கோயில்கள் மூடப்பெற்றிருந்தன” என்று
1370ம் ஆண்டைச் சேர்ந்த கம்பணரின் இன்னம்பூர் கல்வெட்டு (கும்பகோணம் அருகில்) கூறுகிறது.
திருவையாறு வீரசாவண உடையார் சாசனம் (1381), திருவொற்றியூர் இராஜநாராயண சம்புவரையன்
சாசனம் ஆகியவை துருக்கரால் சிதைக்கப்பட்ட கோயில்கள் புதுப்பிக்கப்பட்டதைக் கூறுகின்றன.
இக்காலகட்டத்தில் சிதம்பரமும் மீண்டிருக்க வேண்டும். இப்போது நாம் காணும் கனகசபை முழுவதும்
சோழரும் பாண்டியரும் அலங்கரித்ததல்ல, விஜயநகர அரசர் எழுப்பியது என்றே கருதவேண்டும்.
பிறகு தொடர்ச்சியாக விஜயநகர மன்னர்கள் சிதம்பரம் கோயிலில் செய்த திருப்பணிகள் பற்றிய
விவரங்கள் கிடைக்கின்றன. 1428ல் மகாதேவராயர் கோயில் நிர்வாகத்தை சீரமைத்தது, 1503ல்
திம்மராயர் ஒரு கிராமத்தை நிவந்தமாக அளித்தது, 1510ல் கிருஷ்ணதேவராயர் வடக்குக் கோபுரத்தைக்
கட்டி, பல பூசைகளுக்கான கொடைகளை அளித்தது, 1529ல் அச்சுதராயர் தேர்த்திருவிழாவைச் சிறப்புற
நடத்த 38 கிராமங்களை சர்வமானியமாக வழங்கியது, 1578ல் வேங்கடதேவராயர் துறவிகளுக்கும்
பக்தர்களுக்கும் கட்டிச்சோறு வழங்க கிராமங்களை அளித்தது என்று இது தொடர்கிறது. பின்னர்
நாயக்க மன்னர்களும் இப்பாரம்பரியத்தினைப் பின்பற்றினர்.

17ம் நூற்றாண்டில், ஹைதர் அலியின் ஔரங்கசீபின்*** காலத்தில் சிதம்பரம் கோயில் மீண்டும் இஸ்லாமியத் தாக்குதல்களுக்கு இலக்காயிற்று. சுமார் 38 ஆண்டுகள்
கோயில் பூஜையின்றி இருந்தது. இக்காலகட்டத்தில் நடராஜரின் திருவுருவம் வேறுவேறு இடங்களில்
வைத்துப் பாதுகாக்கப்பட்டு வந்தது என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைக்கின்றன.



(*** இணையப் பதிப்பில் இந்தத் திருத்தம் செய்யப் பட்டுள்ளது. தவறைச் சுட்டிக்காட்டிய திரு. அனந்தகிருஷ்ணன் பக்ஷிராஜன் அவர்களுக்கு நன்றி). 

இது குறித்த ஒரு செவிவழிச் செய்தியை வைத்து உ.வே.சாமிநாதையர் ‘அம்பலப்புளி’
என்ற சுவாரஸ்யமான கட்டுரையை எழுதியிருக்கிறார் (நினைவு மஞ்சரி இரண்டாம் பாகம், பக்.
1-10). இஸ்லாமியப் படையெடுப்பு குறித்து அறியவந்த சிதம்பரம் தீட்சிதர்கள் இரவோடிரவாக
நடராஜரின் மூர்த்தியை எடுத்துச் சென்று ஒரு சிற்றூரிலிலுள்ள புளியந்தோப்பில் புளியமரப்பொந்தில்
வைத்து அப்பொந்தை மூடிவிட்டுத் திரும்பி வந்து விடுகிறார்கள். அத்தோப்புக்குச் சொந்தக்காரர்
எதேச்சையாக அதற்குள் நடராஜரின் திருவுருவம் இருப்பதைக் கண்டு இதற்கு ஏதோ காரணம் இருக்கவேண்டும்
என்று ஊகிக்கிறார். இந்த மரத்தில் தெய்வம் இருப்பதாகக் கனவு கண்டதாக ஊர்மக்களிடம் கூறிப்
பூசை செய்து வருகிறார். ஆண்டுகள் பல கடந்ததும் சிதம்பரத்தில் அமைதி திரும்புகிறது.
தீட்சிதர்கள் நடராஜரை மறைத்து வைத்த இடத்தை அடையாளம் காண முடியாமல் ஊரூராகத் தேடி அலைகிறார்கள்.
ஓரிடத்தில் “தம்பி, அந்த அம்பலப்புளியில கொண்டு போய் மாட்டைக் கட்டு” என்று ஒரு பெரியவர்
சொல்வதைக் கேட்டு அங்கு சென்று பார்க்க, நடராஜர் உருவம் அங்கு ஒரு புளியமரப்பொந்தில்
இருந்தது கண்டு பெருமகிழ்ச்சியடைந்து, அதை எடுத்துவந்து கோயிலில் பிரதிஷ்டை செய்கிறார்கள்.
இதன் காரணமாகவே அந்த ஊருக்கு புளியங்குடி என்று பெயர் ஏற்பட்டது என்று கூறி அதற்குச்
சான்றாக ‘சோழமண்டல சதகம்’ என்ற நூலிலிருந்து பின்வரும் பாடலையும் உ.வே.சா மேற்கோளாகத்
தருகிறார்.

தெளிவந்து அயன்மால் அறியாத தில்லைப்பதி அம்பலவாணர்
புளியம்பொந்தினிடம் வாழும் புதுமை காட்டிப் பொருள்காட்டி
எளிதிற் புளியங்குடியார் என்று இசைக்கும் பெருமை ஏருழவர்
வளருங்குடியில் பொலிவாழ்வு வளஞ்சேர் சோழமண்டலமே.

உ.வே.சா குறிப்பிடும் விஷயம் கற்பனையல்ல, வரலாற்றில் உண்மையாக நடந்த சம்பவங்களின்
அடிப்படையிலானதே என்பதற்கான ஆதாரம் செப்பேடுகள் மூலம் உறுதி செய்யப் படுகிறது
5. இதில் நான்கு
செப்பேடுகள் (‘தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்-50’ நூலின் படி, செப்பேடு எண் 45 முதல்
48) சிதம்பரத்தில் நடந்த இரண்டு கும்பாபிஷேக விழாக்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன. இவை
சத்ரபதி சிவாஜியின் புதல்வரான சாம்பாஜி காலத்தியவை.

47 எண்ணுள்ள செப்பேடு 1684ல் நடந்த கும்பாபிஷேகம் பற்றிக் கூறுகிறது. இதில்
வரும் பாடலில், முதல் பாதியில் கும்பாபிஷேக ஆண்டு நாள் கிழமை விவரங்கள் உள்ளன. இரண்டாம்
பாதி இவ்வாறு கூறுகிறது –

உயர் ஆகமப் படியின் ஆனந்த நடராஜர்
ஒளிபெற நிருத்தமிடவே
ஓங்கு சிற்சபைதனைச் செம்பினால் மேய்ந்திடும்
உண்மையை உரைக்க எளிதோ.

‘செம்பினால் மேய்ந்திடும் என்பது கவனிக்கத்தக்கது. இதன்மூலம், சோழபாண்டியர்கள்
அளித்த பொன் முழுவதும் இஸ்லாமியப் படையெடுப்பில் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு மூளியாக
இருந்த சிற்சபை, சுமார் 350 ஆண்டுகளுக்குப் பிறகு செம்புத் தகடுகள் வேய்ந்து திருப்பணி
செய்யப்படுகிறது என்பது புலனாகிறது. கீழே அடுத்துவரும் பாடலில் இருந்து இந்தக் கும்பாபிஷேகத்தின்போது
நடராஜரின் மூலமூர்த்தி தில்லைக்கு வெளியே இருந்தது என்பதும் தெரியவருகிறது.
45ம் எண்ணுள்ள செப்பேட்டின் படி, 1686ம் ஆண்டு, கனகசபையில் முற்றிலும் பொன்
வேய்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட செய்தி உள்ளது. இதுதான் இன்று நாம் காணும்
பொன்னம்பலம். இந்த நிகழ்வைக் குறிக்கும் கீழ்க்காணும் செப்பேட்டுப் பாடலில் நடராஜர்
தில்லையிலிருந்து வெளியேறி மீண்டும் திரும்பிவந்த காலக்கணக்கு துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருவிய சகாத்தம் ஆயிரமும் ஐநூற்றெழுப-
துக்கு மேல் சர்வதாரி
வருஷ மார்கழி மாதம் ஆதித்த வாரமதில்
மன்னும் அம்பலவாணரை
அருமையொடு குடுமிமாமலையில் நாற்பது மாதம்
அப்புறம் மதுரை தனிலே
அடவுடன் எழுந்தருளி ஆகமுப்பதிமின்-
னெட்டான அட்சய வருஷமும்
பரவு கார்த்திகை மாத தேதி பதினாலுடன்
பருதிநாள் வளர்பக்கமும்
பகருட்டிரத்தாதி திசமிக்கும் பத்தினில்
பாருயிரெலாம் உய்யவே
திருமருவு செம்பொன்மா மழைகளது பொழியவும்
தில்லை மாநகர் வாழவும்
தேவர்கள் துதிக்கவும் ஊருடைய முதலியார்
சிற்சபையும் மேவினாரே.

ஆக, நடராஜர் வெளியே இருந்த காலம் சகாப்தம் 1570 சர்வதாரி மார்கழி 25 (1648 டிசம்பர்
24) முதல் சகாப்தம் 1608 அட்சய வருடம் கார்த்திகை 14 (1686 நவம்பர் 14) வரை. அதாவது
37 ஆண்டுகள் 10 மாதம் 20 நாட்கள்.
மேற்கூறிய இரண்டு கும்பாபிஷேகங்களும் சாம்பாஜி மன்னரின் ஆணைப் படி நிகழ்ந்தன.
அவரது குலகுருவான முத்தைய தீட்சிதரின் வழிகாட்டலில் திருச்சிற்றம்பல முனிவர் நடத்தி
வைத்தார். பறங்கிப் பேட்டையில் மராட்டிய மன்னரின் அதிகாரியாக இருந்த கோபால் தாதாஜி
பண்டிதர் என்பவர் பொறுப்பேற்று திருப்பணிகளைக் கண்காணித்தார். இந்தச் செய்திகளும் இச்செப்பேடுகளிலிருந்து
தெரிய வருகின்றன.
இதற்குப் பின்னரும், இன்னும் ஒரு பத்தாண்டுகள், 1686 முதல் 1696 வரை மீண்டும்
நடராஜர் தில்லையிலிருந்து வெளியேறி திருவாரூரில் இருந்தார் என்ற செய்தி சிதம்பரம் கோயில்
ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஒரு கல்வெட்டிலிருந்து தெரிய வருகிறது. ஔரங்கசீப்பின்
இஸ்லாமியப் படைகள் மராத்தியப் படைகளைத் துரத்தி வந்து செஞ்சியில் முகாமிட்டிருந்தது
இதற்குக் காரணமாக இருக்கலாம்.

சிவாஜியின் முதல் மனைவியின் மூத்த மகனாகப் பிறந்த சாம்பாஜியின் வாழ்க்கை பெரும்
போராட்டங்களும் துயரங்களும் தியாகமும் நிறைந்தது. அவர் உலகில் வாழ்ந்திருந்ததே 31 ஆண்டுகள்தான்.
ஆட்சியில் இருந்த காலம் பத்தாண்டுகள் கூட அல்ல. அவ்வளவு குறுகிய வாழ்க்கையில் இரண்டு
முறை தில்லை நடராஜரின் கும்பாபிஷேகம் அவரது ஆணையின் கீழ் நடந்திருக்கிறது என்பது மிகவும்
ஆச்சரியத்திற்குரிய விஷயம். இரண்டே
ஆண்டுகளில் சிற்சபைக்குக் கூரையிடும் அளவு பொன்னைத் திரட்டிய சாம்பாஜியின் பக்தியுணர்வும்,
முயற்சியும் வியக்க வைக்கின்றன.
1689ம் ஆண்டு சாம்பாஜி இஸ்லாமியப் படைகளால்
சிறைப்பிடிக்கப்பட்டார். ஔரங்கசீப்பின் ஆணைப் படி அவர் குரூரமாகச் சித்திரவதை செய்து
கொல்லப்பட்டார் என்பது வரலாற்றில் ஆதாரபூர்வமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கூடுதலாக,
ஔரங்கசீபின் முன் தலைவணங்கி இஸ்லாம் மதத்தை ஏற்றால் சாம்பாஜியை விடுவிக்கிறோம் என்று
ஆசைகாட்டப்பட்டது என்றும், சாம்பாஜி அதை மறுத்து மரணத்தைத் தழுவி தனது வீரமரபின் மேன்மையைக்
காத்தார் என்றும் மராட்டிய வீரகதைப் பாடல்கள் கூறுகின்றன. சாம்பாஜியை ‘தர்மவீரன்’ என்று
புகழ்கின்றன.

இனி அடுத்தமுறை சிதம்பரத்திற்குச் சென்றால், கனகசபையின் பொற்கலசங்களை நோக்கும்போது
இந்த வரலாறும் உங்கள் நினைவில் எழட்டும். ஸ்தலபுராணக் கதைகளோடு சேர்த்து, அந்தந்தத்
தலத்தின் புனிதத்தையும் பண்பாட்டையும் காப்பதற்காக நமது முன்னோர்கள் தொடர்ந்து போராடிய
தியாக வரலாறுகளையும் அறிந்து கொள்வோம். அவற்றை நமது அடுத்த தலைமுறைக்கும் கூறுவோம்.

உசாத்துணைகள்:

[1] Hindu Temples: What Happened to Them: Vol. 2 (The
Islamic Evidence), Sita Ram Goel. Voice Of India, Ch. 7
[2] Temple desecration and Indo-Muslim states, Richard M
Eaton, Frontline, Jan 2001, pp 72-73
[3] இராஜராஜேச்சரம், குடவாயில் பாலசுப்ரமணியன், பக். 487.
[4] South India and Her Muhammaden Invaders, JB Krishnaswamy
Aiyangar, pp 109.
[5] தில்லைப் பெருங்கோயில் வரலாறு (க.வெள்ளைவாரணர்), பக். 160-164

Posted on Leave a comment

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் – ‘என்றென்றும் அன்புடன்’ பாலா

பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் என்ற பெருமை ஆண்டாள் நாச்சியாருக்குண்டு.
ஆண்டாள் என்ற பெயரைக் கேட்டவுடன் நமக்கு மார்கழி மாதமும், பாவை நோன்பிருந்து ஆண்டாள்
பாடிய திருப்பாவையும் ஞாபகத்துக்கு வந்து விடுகின்றன. ஆண்டாளின் திருப்பாவை அத்தனை
சிறப்புடையது. பன்னிரு ஆழ்வார்களின் பிரபந்தப் பாசுரங்களை, நாதமுனிகள் என்ற வைணவப்பெருந்தகை
தேடித் தொகுத்து, இசையுடன் வழங்க, அதுவே நாலாயிர திவ்யப் பிரபந்தமாக வைணவக் கோயில்களில்
ஓதப்படுகிறது.

மார்கழி, என்னும் தமிழ் மாதம். ‘மாரி‘ என்ற வார்த்தையிலிருந்து உண்டானது. மார்கழிக்கு,
மழைக்காலம் கழிந்த பின்னர் ஆரம்பிக்கும் மாதம் என்று பொருள். ஆயர்பாடியிலுள்ள கன்னியர்கள்,
நாட்டு நலத்திற்காகவும் பால் வளம் பெருகவும் நல்ல கணவர்களை அடையவும் நோன்பு நோற்றனர்.
மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப் பெண்களால் நோற்கப்பட்டதால்
‘பாவை நோன்பு’ என்றும் கூறப்படுகின்றது. கன்னியர்கள் விடியற்காலை எழுந்து, மற்றப் பெண்களையும்
எழுப்பி, ஆற்றங்கரை சென்று, அங்குள்ள மணலினால் பாவை போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி,
பார்வதி தேவியைப் பாடித் துதித்து வழிபட்டனர்.

தான் பிறந்து வளர்ந்தது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆயினும், தன்னை கோகுலத்திலுள்ள ஓர்
ஆயர்குலப் பெண்ணாகவே கருதி, கண்ணனை மணக்க வேண்டி, ‘பாவை நோன்பு’ நோற்ற சமயம் சூடிக்கொடுத்த
நாச்சியார் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’.

கோதை நாச்சியார் என்ற இயற்பெயர் கொண்ட ஆண்டாள் அருளிய பிரபந்தங்கள் 2, திருப்பாவையும்,
நாச்சியார் திருமொழியும். 30 பாசுரங்கள்
கொண்ட திருப்பாவை, கோதா பிரபந்தம்/உபநிடதம் என்று வெகுவாகக் கொண்டாடப்படுகிறது.
இவற்றை
அருளிய சமயம் ஆண்டாள் பதின்ம வயதில் இருந்தாள் என்பது பாசுரங்களைப் பார்த்தாலே விளங்கும்.
அவரது பாசுரங்களை வாசித்து அனுபவிக்கையில், அந்தச் சின்னப்பெண்ணுக்குத் தமிழில் இருந்த
பெரும்புலமை பிரமிக்க வைக்கும். அதிலும் திருப்பாவை மிகக் கடினமான ‘இயல் தரவிணை கொச்சகக்
கலிப்பா’ வகையைச் சேர்ந்தது. ஆக, கோதை ஆண்டாள் தமிழையே ஆண்டாள்! பன்னிரு ஆழ்வார்களில்
பதினெட்டு வயதுக்கு முன்னரே, திருப்பாசுரங்கள் அருளியவர்கள், தலையாய நம்மாழ்வாரும்,
ஆண்டாளும் மட்டுமே என்பது குறிப்பிடவேண்டியது.

ஆண்டாள் திரு ஆடிப்பூரத்து நாளில் துளசிச்செடிக்கு அருகில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவள்,
திருப்பாவை முப்பதும் செப்பியவள், இராமானுஜருக்குத் தங்கையாகக் கருதப்படுபவள், ஒரு
நூற்று நாற்பத்து மூன்று உரைத்தவள் (நாச்சியார் திருமொழி 143 பாசுரங்கள் கொண்டது),
உயர் அரங்கர்க்கே கண்ணி (மாலை) உகந்து அளித்தவள். அதனால் அவள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி.
பெரியாழ்வார் அரங்கனுக்குத் தொடுக்கும் மாலைகளைத் தான் ரகசியமாகச் சூடி கண்ணாடியில்
அழகு பார்த்து, பெருமாளை மணமுடிப்பதற்குத் தான் பொருத்தமானவளா என்றும் எண்ணிப்பார்த்துவிட்டே
கோதை அவற்றைக் கோயிலுக்கு அனுப்புவாளாம். ஒருநாள் பெரியாழ்வார் இதைப் பார்த்துவிட்டு,
“இது தகாத காரியம்” என்று கடிந்து, அடுத்த முறை ஆண்டாள் சூடிப் பார்க்காத மாலையை எடுத்துச்
சென்றபோது பெருமாள், “அந்தப் பெண் சூடிய மாலைதான் எனக்கு உவப்பானது; அதை எடுத்து வாரும்!”
என்றாராம்.

பெரியாழ்வார் வியந்து போய், ‘நம் பெண் மானுடப் பிறவி இல்லை; ஒருவேளை பூமிபிராட்டியின்
அம்சமாக இருக்கலாம்’ என்று எண்ணி, ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ என்று தன் பெண்ணை அழைக்கலானார்.
மணப்பருவம் வந்தவுடன், கோதையை அலங்கரித்து பெரியாழ்வார் திருவரங்கத்துக்கு அழைத்து
வந்து, அரங்கனின் சன்னதியில் அவளை விட்டுவிட, கோதை அரங்கனுடன் ஐக்கியமாகி மறைந்து போனாள்
என்பது குரு பரம்பரை சொல்லும் ஆண்டாள் கதை. இதன் அடிப்படைச் சம்பவங்கள் ஆண்டாளின் பல
நாச்சியார் திருமொழிப் பாசுரங்களில் இருக்கின்றன.

அப்பரந்தாமனையே தனது உடைமையாக்கிக் கொண்டு, அந்த உரிமையை என்றைக்குமாகத் தக்க
வைத்துக்கொண்ட சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் திருப்பாவை/நாச்சியார் திருமொழிப்
பாசுரங்களில் காணப்படும் கடலை ஒத்த பேரன்பும், பிரவாகமாகப் பெருக்கெடுக்கும் பக்தி
ரசமும், கவிதை நயமும், அழகியல் உணர்வும் தனித்துவமானவை. ஒரு தெய்வப் பெண்ணின் காலத்தினால்
அழியாத தமிழ்ப் புலமைக்கும், கவித்துவ அழகுக்கும் நாம் தரும் மரியாதைக்கும் கௌரவத்திற்கும்
இன்றளவும் சாட்சிகளாக, வருடாவருடம் நடக்கும் திருவில்லிபுத்தூர் உத்சவமும், தைலக்காப்பும்,
பிரியாவிடை சேவையும் விளங்குகின்றன.
உடையவர் என்று போற்றப்பட்ட ராமானுஜர், ஆண்டாள் மீது பெரும்பக்தி கொண்டு, தினம்
பலமுறை திருப்பாவையை ஓதி வந்தார். திருப்பாவையின் மீது இருந்த ஈடுபாடே ராமானுஜருக்கு
‘திருப்பாவை ஜீயர்’ என்ற பட்டத்தை அவரது ஆச்சார்யனான பெரிய நம்பியிடம் பெற்றுத் தந்தது.
ராமானுஜர் திருப்பாவை குறித்த உபன்யாசங்கள் செய்ததோ, விளக்கங்கள் எழுதியதோ கிடையாது.
அதற்கு ஆண்டாள் மீது உடையவருக்கு இருந்த பிரியமும், பெருமதிப்பும் ஒரு காரணம். இன்னொரு
காரணம், தான் திருப்பாவைக்கு ஈடு எழுதும் பட்சத்தில், பின்னாளில் யாரும் அதற்கு வித்தியாசமான
விளக்கம் எழுதத் துணியமாட்டார்கள் என்று அவர் கருதினார். ராமானுஜருக்கு விரிந்த தொலைநோக்குப்
பார்வை இருந்ததும், திருப்பாவையின் சீர்மையும் இதனால் நமக்குப் புரியலாம்.

ஒரு சின்னப்பெண் எழுதிய திருப்பாவையில் சின்னச்சின்ன விஷயங்கள் நம்மை வியப்பில்
ஆழ்த்தும். ஐந்து இறை நிலைகளில், முதல் பாசுரத்தில் பரம்பொருளையும் (நாராயணனே நமக்கே),
2வதில் பாற்கடலில் பள்ளி கொண்ட வியூகப் பெருமாளையும் (பையத்துயின்ற பரமன்), 3வதில்
விபவ மூர்த்தியான த்ரிவிக்ரமனையும் (ஓங்கி உலகளந்த உத்தமன்), 4வதில் அந்தர்யாமியாக
எங்கும் வியாபித்திருக்கும் ஊழி முதல்வனையும் (ஊழி முதல்வன் உருவம் போல்), 5வதில் கோயில்களில்
எழுந்தருளியிருக்கும் பெருமாளின் அர்ச்சாவதர கோலத்தையும் (மன்னு வடமதுரை மைந்தனை) சூடிக்கொடுத்த
நாச்சியார் பாடியிருக்கிறாள். ஆக, ஆண்டாள். வரிசைக் கிரமமாக பரந்தாமனின் பர, வியூக,
விபவ, அந்தர்யாமி, அர்ச்ச நிலைகளை முதல் 5 பாசுரங்களில் பாடியிருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பாவையின் 30 பாசுரங்கள் தரும் செய்திகளைச் சுருக்கமாகச் சொல்ல விழைகிறேன்.

முதல் பாசுரத்தில் (மார்கழித் திங்கள்), நோன்புக்கான நேரம், நோன்புக்கான மூலப்பொருள்
(கண்ணன்) குறித்தும்,
2-வது பாசுரத்தில் (வையத்து வாழ்வீர்காள்), நோன்பின்போது செய்யத் தகாதவை பற்றியும்,
3-வது பாசுரத்தில் (ஓங்கி உலகளந்த), நோன்பினால் விளையும் நன்மைகள் குறித்தும்,
4-வது பாசுரத்தில் (ஆழிமழைக்கண்ணா), மழைக்காக வருணனை வேண்டியும்,
5-வது பாசுரத்தில் (மாயனை மன்னு வடமதுரை), நோன்புக்கு ஏற்படக் கூடிய தடைகளை
கண்ணனே நீக்க வல்லவன் என்று போற்றியும்,
6-வது பாசுரத்திலிருந்து 15-வது பாசுரம் வரையில், கோகுலத்தில் வாழும் கோபியரிடம்,
உறக்கம் விட்டெழுந்து, கண்ணனைத் தரிசித்து வணங்கச் செல்லும் அடியவர் கூட்டத்தோடுச்
சேருமாறு விண்ணப்பித்தும்,
16-வது பாசுரத்தில் (நாயகனாய் நின்ற), நந்தகோபர் மாளிகையில் உள்ள துவார பாலகரை
எழுப்பி, உள் செல்ல அனுமதி வேண்டியும்,
17-வது பாசுரத்தில் (அம்பரமே சோறே), நந்தகோபர், யசோதா பிராட்டி, கண்ணபிரான்,
பலராமன் என்று நால்வரையும் விழித்தெழுமாறு வரிசையாக விண்ணப்பித்தும்,
18-வது பாசுரத்தில் (உந்து மதக்களிற்றன்), நப்பின்னை பிராட்டியை மிக்க மரியாதையுடன்
விழித்தெழ வேண்டியும்,
19-வது மற்றும் 20-வது பாசுரங்களில், நப்பின்னை, கண்ணன் என்று, ஒரு சேர, இருவரையும்
உறக்கம் விட்டு எழுமாறு விண்ணப்பித்தும்,
21-வது மற்றும் 22-வது பாசுரங்களில், (கோபியர்) கண்ணனின் கல்யாண குணங்களைப்
போற்றியும், தங்கள் அபிமான பங்க நிலைமையை ஒப்புக் கொண்டும், கண்ணனின் அருட்கடாட்சத்தை
மட்டுமே (தங்கள் சாபங்கள் ஒழிய) நம்பி வந்திருப்பதையும்,
23-வது பாசுரத்தில் (மாரி மலை முழைஞ்சில்), கிருஷ்ண சிம்மத்தை அவனுக்கான சிம்மாசனத்தில்
அமர வேண்டியும்,
24-வது பாசுரத்தில் (அன்று இவ்வுலகம் அளந்தாய்), அம்மாயப்பிரானுக்கு மங்களாசாசனம்
செய்தும்,
25-வது பாசுரத்தில் (ஒருத்தி மகனாய் பிறந்து), (கோபியர்) தங்களை ரட்சித்து
அரவணைக்க அவனைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று உணர்த்தியும்,
26-வது பாசுரத்தில் (மாலே மணிவண்ணா), நோன்புக்கான பொருள்களை கண்ணனிடம் யாசித்தும்,
27-வது பாசுரத்தில் (கூடாரை வெல்லும்), பாவை நோன்பு முடிந்ததும், (கோபியர்)
தாங்கள் வேண்டும் பரிசுகளைப் பட்டியலிட்டும்,
28-வது பாசுரத்தில் (கறவைகள் பின்சென்று), (கோபியர்) தங்களது தாழ்மை, கண்ணனின்
மேன்மை, அவனுடனான பிரிக்க முடியாத உறவு, தங்களது பாவ பலன்களை நீக்கக் கோருதல் ஆகியவை
பற்றியும்,
29-வது பாசுரத்தில் (சிற்றஞ்சிறுகாலே), எந்நாளும் பிரியாதிருந்து கண்ணனுக்குத்
திருச்சேவை செய்வதற்கு அருள வேண்டியும்,
30-வது பாசுரத்தில் (வங்கக்கடல் கடைந்த) திருப்பாவை ஓதும் அடியவர் கண்ணபிரானின்
அன்புக்கும், அருளுக்கும் பாத்திரமாகி, பேரானந்தம் அடைவர் என்ற செய்தியை வெளியிட்டும்,
30 அதி அற்புதமான பாசுரங்கள் வாயிலாக, முதற்பாடலிலிருந்து இறுதிப் பாசுரம் வரை,
தொடர்ச்சியும் ஓட்டமும் பங்கப்படா வகையில், கோதை நாச்சியார் ஒரு கிருஷ்ண காவியத்தையே
படைத்துள்ளார்.

திருப்பாவைக்கு ராமானுஜ சம்பந்தம் காட்டும் சுவையான நிகழ்வு ஒன்று உண்டு. பிட்சை
பெறச் செல்லும்போது (பாதுகைகள் அணியத் தடையில்லாதபோதும்) ராமானுஜர் பாதுகைகள் அணியாமல்தான்
செல்வார். அச்சமயங்களில் அவர் திருப்பாவையை உரக்க ஓதியபடி செல்லும் பழக்கம் இருந்ததால்,
பாதுகைகள் அணிந்து செல்வதை ஆண்டாளுக்கும், திருப்பாவைக்கும் செய்யும் அவமரியாதையாகவே
கருதினார்.

ஒரு சமயம், திருப்பாவையைப் பாடியபடி (திருக்கோட்டியூரில்) பிட்சைக்குச் சென்ற
ராமானுஜர், ‘உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்’ என்ற 18வது பாசுரத்தை பாடிய வண்ணம்
தனது குருவான திருக்கோட்டியூர் நம்பி அவர்களின் வீட்டு வாசற்கதவைத் தட்டினார். பிட்சையோடு
வந்த பெரிய நம்பியின் மகளான அத்துழாய் கைவளை குலுங்கக் கதவைத் திறக்கவும், ராமானுஜர்
‘செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்’ என்று பாடி முடிக்கவும் சரியாக
இருந்தது. அவளைக் கண்ட மாத்திரத்தில், பாசுர வரிகளில் லயித்திருந்த ராமானுஜர், அத்துழாயை நப்பின்னை பிராட்டியாக எண்ணிக்
கொண்டு, நெடுஞ்சாண்கிடையாக அவள் கால்களில் விழுந்து சேவித்து, மயங்கிவிட்டார்.

அத்துழாய் பயந்து போய், தன் தந்தையான பெரிய நம்பியைக் கூட்டி வர, அவர் மிகச்
சரியாக ராமானுஜர் ‘உந்து மதகளிற்றன்’ பாசுரத்தைப் பாடியபோதுதான் இப்படி ஒரு நிகழ்வு
ஏற்பட்டு அவர் மயங்கியிருக்கவேண்டும் என்பதைக் கணித்து விட்டார். ஆக, இப்பாசுரம் உடையவருக்கு
மிகவும் உகந்தது. அதனாலேயே, இப்பாசுரத்தை வைணவக் கோயில்களில் இரண்டு தடவை பாடுவது வழக்கமாக
இருந்து வருகிறது.

இப்பாசுரம் தரும் வைணவச்சிந்தாந்தச் செய்தியைக் கவனித்தல் அவசியம்.

கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார்விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

பந்தார் விரலி என்று பாடும்போது, கண்ணனோடு பூப்பந்து விளையாடி அதில் அவனைத்
தோற்கடித்து விட்டு, கண்ணனை ஒரு கையாலும், பூப்பந்தை ஒரு கையாலும் அணைத்த வண்ணம் கிடந்த
நப்பின்னையின் கோலம் சித்தரிக்கப்படுகிறது. ஐம்புலன்களில் ‘தொடுதல்’ என்பது மேலே சொல்லப்பட்டது.
அது போல, மற்ற நான்கு புலன்களின்அனுபவமும் சொல்லப்பட்டுள்ளது சிறப்பு.

கந்தம் கமழும் குழலி – மூக்கு
உன் மைத்துனன் பேர் பாட – நாக்கு
சீரார் வளையொலிப்ப – செவி
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ – கண்

வைணவத்தின் முக்கிய சித்தாந்தமான, திருமாலும், திருமகளும் பிரிக்க முடியாதவர்
(ஒன்றே) என்பதையும், அவர்கள் இருவரும் சேர்ந்தே உபாயமாகவும் (வழிமுறை) உபேயமாகவும்
(இலக்கு) இருப்பதையும் இப்பாசுரம் உணர்த்துகிறது. இதை வடமொழியில், ‘ஏக சேஷித்வம்’ என்றுரைப்பார்கள்.

திருப்பாவையின் 6-15 பாசுரங்கள் (புள்ளும் சிலம்பின காண் முதல் எல்லே இளங்கிளியே
வரை உள்ள 10 பாசுரங்கள்) ‘ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி’யாக, அதாவது ஒவ்வொரு பாசுரமும்
ஓர் ஆழ்வாரை (முறையே, பெரியாழ்வார், குலசேகராழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார்,
பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார்,
திருமங்கையாழ்வார்) துயிலெழுப்புவதாகச் சொல்வது ஒரு வைணவ மரபு. அதற்கான சுவையான விளக்கங்களும்
உண்டு. பன்னிருவரில், ஆண்டாளும், மதுரகவியாரும் துயில் எழுப்பப்படவில்லை.

எல்லா ஆழ்வார்களுக்கும் மனதுக்கு நெருக்கமான வாமன அவதாரத்தை
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி*— பாசுரம் 3
அம்பர மூடறுந்தோங்கி உலகளந்த உம்பர் கோமானே — பாசுரம் 17
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி! — பாசுரம் 24
என்று ஆண்டாள் 3 இடங்களில் போற்றியிருக்கிறார். பெருமாள் த்ரிவிக்ரமனாக எடுத்து
வைத்த 3 அடிகளில், பூமியை அளந்த திருவடியைத்தான் கோதை நாச்சியார் போற்றியிருக்கிறார். 

விசுவரூபமெடுத்த பரமனின் பிரமாண்டத் திருவடியானது, இந்த பூமியை நீக்கமற வியாபித்ததால்,
(ஆழ்வார்களும், எந்தை இராமனுசரும் இன்னும் பல மகான்களும் வந்துதித்த) மண்ணுலகம் முழுதுமே
புண்ணிய பூமிதானே! திரிவிக்ரமனே புருஷோத்தமன் (புருஷ உத்தமன்). பரமன் வாமனனாகி மூவுலகை
அளந்த காலத்தில், அவனது திருவடியானது, அடியவர்-கொடியவர் என்று பாராமல் அனைத்து உயிர்களையும்
தொட்டு ரட்சித்தது.

முதல் மூன்று ஆழ்வார்களும் முறையே ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் திருவந்தாதிகள்
அருளிய புண்ணியத்தலமான திருக்கோவலூரில் ‘நடந்த’ கோலத்தில் அருள் பாலிக்கும் உலகளந்த
பெருமாளை, கோதைக்கு உகந்த கண்ணனாகப் பார்க்கிறோம். எப்படி? திருக்கோவலூர் திவ்வியதேசம்
பஞ்ச கிருஷ்ண சேத்திரங்களில் முதன்மையானது. (மற்ற நான்கு, திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி,
திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம் ஆகியவையாம்.) ஏனெனில், இத்திருத்தலம் ஓர் ஆதி கிருஷ்ண சேத்திரம்.
இங்கு சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார். ஆகையால்,
இக்கண்ணபிரானையே (உலகளந்த பெருமாள் இருந்தாலும்) இத்திருத்தலத்தின் கதாநாயகனாகச் சொல்வது
வைணவ மரபு.

‘நாச்சியார் திருமொழி’ என்பதே, திருமால் மீது மையல்கொண்ட கோதை அவனை எப்படியாவது
அடைந்துவிடும் ஆசையை வெளிப்படுத்தும் அற்புதமான காதல் பாசுரங்கள்; எப்படியாவது தன்னை
அவ்வழகிய மணவாளனிடம் சேர்த்து விடு என்று ஆண்டாள் காமதேவனை வேண்டி நோன்பு நோற்பதில்
தொடங்கி, பின் கண்ணனின் லீலைகளில் திளைத்து, காதலில் உருகியுருகி பாடியவை அவை.

தரையில் வட்டம் வரைந்து அது கூடினால் கண்ணன் என்னுடன் கூடுவான் போன்ற குழந்தைத்தனமான
விருப்பங்கள்; மேகங்களையும் குயில்களையும் கார்கோடற் பூக்களையும் விளித்து திருமாலின்
பெருமை பேசுதல், தூது விடுதல்; வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்யும் பிரமாண்டமான கல்யாண
ஊர்வலத்தைக் கனவு காணுதல்; அவன் ஆடையை என்மேல் வீசுங்கள், அவன் திருக்கேசத்தை அலங்கரித்த
துளசி மாலையை என் குழலில் சூட்டுங்கள், அவன் திருமார்பில் தரித்த மாலையை எனக்கு அணிவியுங்கள்,
அவன் வாய் நீரைப் பருகக் கொடுங்கள், அவன் குழல் ஊதிய துளைவாய் நீரை என் முகத்தில் தடவுங்கள்,
அவன் திருவடி மண்ணை என் மேல் பூசுங்கள் என்று காதல் அரற்றல்கள்… இப்படி நாச்சியார் திருமொழிப் பாசுரங்களில் ஒரு
சராசரிப் பெண்ணின் பாசாங்கற்ற அதி தீவிரக் காதல் இருப்பதை உணரலாம்.
நாச்சியார் திருமொழியில் பக்தி யோகம் தெரியவில்லையே என்று சந்தேகம் கொள்பவர்,
இது பெரும்பக்தியையும் தாண்டிய ஓர் உன்னத நிலை என்பதைப் புரிந்து உணரவேண்டும். அரங்கனைத்
தன் மணாளனாக மனதில் வரித்துக்கொண்டு, ஆண்டாள் அவன் மீது எடுத்துக்கொண்ட உரிமை, காமம்
என்ற வரையறைக்குள் வரவே வராது. அவனுடன் ‘சேர’ வேண்டும் என்பதான கோதையின் விருப்பம்,
வைகுந்த (மீள்) வாசத்திற்கான பூமிப்பிராட்டியின் ஏக்கம்.

ஆண்டாள் ஒரு சாதாரணப் பெண்ணைப் போலவே தன் காதல் வெற்றிக்காக நேர்ந்து கொண்டதைப்
பார்க்கலாம்.

நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையானின்று வந்திவை கொள்ளும் கொலோ

என்று நாச்சியார் திருமொழிப் பாசுரம் வாயிலாக வேண்டுதல் மேற்கொண்டவள், திருவரங்கத்திற்குப்
போய் அரங்கனின் கருவறையில் கரைந்துவிட்டாள். ‘நூறு அண்டா வெண்ணெய்யும் நூறு அண்டா
சக்கரைப்பொங்கலும்’ என்ற அவளது நேர்த்திக் கடனை யார் செலுத்துவது? சில நூற்றாண்டுகள்
கழிந்தன.

வைணவம் தழைக்க வந்த எந்தை ராமானுசமுனி என்கிற எம்பெருமானாருக்கு, ஆண்டாள் தன்
வேண்டுதலை நிறைவேற்றியிருப்பாளோ மாட்டாளோ என்ற நெருடல் ஏற்பட்டது. திருமாலிருஞ்சோலைப்
பெருமாளுக்கான கோதையின் நேர்த்திக்கடனை செலுத்தும் கடமையைத் தான் மேற்கொண்டார். பின்பு
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சென்றார். வில்லிபுத்தூர் வந்தடைந்த ராமானுஜருக்கு
ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. ஆண்டாளது கோயிலின் அர்த்தமண்டபத்தில் ராமானுஜர் நுழைந்தபோது,
அங்கே அவருக்காகக் காத்திருந்த ஆண்டாளே அவரை வரவேற்று, தனது வேண்டுதலை நிறைவேற்றியதற்காக
அவருக்கு நன்றி தெரிவித்தாள். அவரை ‘அம்மான்’ என்று அன்போடு அழைத்தாள் ஆண்டாள்.

அதாவது, ஒரு பொறுப்புள்ள தமையன் எப்படித் தனது தங்கையின் விருப்பத்தைப் பூர்த்தி
செய்வானோ, அப்படி ‘சில நூற்றாண்டுகளுக்கு முன்னான’ தனது விருப்பத்தை நிறைவேற்றிய ‘அண்ணனான’
ராமானுஜருக்காக கர்ப்பகிருகத்திலிருந்து வெளியே வந்த கோதை நாச்சியார் அதன்பிறகு உள்ளே
செல்லவே இல்லை. அன்றிலிருந்து அர்த்தமண்டபத்திலேயே, தனது மணாளன் வடபத்ரசாயியுடன் சூடிக்
கொடுத்த சுடர்க்கொடி எழுந்தருளி இருக்கிறாள். அன்றிலிருந்து ராமானுஜருக்கும் கோதக்ராஜர்
என்ற திருநாமம் வழங்கலாயிற்று. ஆண்டாளின் அன்புக்குரிய தமையன் ஆனார். அதனால்தான் இன்றும்,
ஆண்டாளுக்கு வாழி சொல்லும்போது ‘பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே’ என்கிறோம்.
Posted on Leave a comment

சோஷலிசம் (எ) தரித்திர விருத்தி ஸ்தோத்திரம் – ஆமருவி தேவநாதன்

100 ரூபாய் சம்பளம், ஆனால்
95 ரூபாய் வருமான வரி என்றால் நம்புவீர்களா? அப்படித்தான் இருந்தது இந்தியா. இந்திராவின்
ஆட்சியில் அதிகபட்ச அளவாக 95% வருமான வரி இருந்தது.
1
அப்படி கொடூரமான வரி விதிப்பு
இருக்கவேண்டிய காரணம் என்ன? பாரதத்தில் நெல், கோதுமை முதலியன விளையவில்லையா? ஆகவே சிங்கப்புர்
போல் உணவு தானியங்களைக் கூட இறக்குமதி செய்யவேண்டி இருந்ததா? அதனால் வேறு வழி இல்லாமல்
அரசு இவ்வளவு வரி விதித்ததா?

நேருவிய சோஷலிசம் – அதனால்
ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவுகள் – அதே பொருளாதார வித்தை முன்னெடுத்துச் சென்று, அந்த
விஷ விதைக்கு உரமிட்டு நீரூற்றி வளர்த்ததன் பயனாக நாட்டின் வருமானம் குறைந்தது – அதனால்
இப்படியான கொடும் வரி விதிப்பு என்று செயல்பட்டது நேருவின் புதல்வி இந்திராவின் ஆட்சி.
விவரமாகப் பார்ப்போம்.

விடுதலை அடைந்தவுடன் பண்டித
நேரு அவர்கள் வேளாண்மையையும் நாட்டின் பாதுகாப்பையும் புறந்தள்ளிவிட்டு, தொழிற்சாலைகளைப்
பெருக்குவதில் முனைந்தார். அன்றைய சோவியத் குடியரசின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சோஷியலிசமே
பாரதம் உய்ய வழி என்று நம்பினார். பொருளாதாரத் திட்டமிடல் மத்தியில் நடைபெறவேண்டும்
என்று சோவியத் வழியில், ‘திட்டக்கமிஷன்’ என்னும் பேரதிகாரங்கள் படைத்த நிறுவனத்தைத்
துவங்கினார். மாநிலங்கள் தங்களின் வருடாந்திரத் தேவைகளுக்கு திட்டக்கமிஷனின் கடைக்கண்
பார்வைக்கு ஏங்கி டெல்லிக்கு வந்து கையேந்தி நிற்க வழிவகுத்தார். ஐந்தாண்டுத் திட்டங்கள்
என்னும் முறையையும் கொண்டுவந்து மத்தியத் திட்டமிடல் என்னும் முறையால் நாட்டின் வளர்ச்சிக்கு
ஐந்தாண்டுக்கு ஒருமுறையேனும் தடை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது திட்டக்கமிஷன்.
திட்டமிடல், உற்பத்தி,
வழங்கல் அனைத்துமே சர்வ வல்லமை பொருந்திய மத்திய அரசிடம் இருக்க வேண்டும் என்பது கம்யூனிச
சர்வாதிகாரத்தின் சிந்தனை. அதுவே நேருவிய சோஷியலிசத்தின் மையக்கூறாகவும் இருந்தது.
ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளும், மாநிலத்தில் செயல்படும்
உள்ளாட்சி, பஞ்சாயத்துக்களும் முறையே அதனதன் மேற்பார்வையாளரான அரசுகளிடம் கையேந்தி
நிற்க வேண்டும். டெல்லியில் அமர்ந்திருக்கும் திட்டக்கமிஷன் என்னும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத,
அதிகாரிகளின் அமைப்பு, கையேந்தி நிற்கும் மாநில அரசுகளுக்கு தானம் செய்வது போல் ஆண்டுதோறும்
நிதி வழங்கும். சோவியத் ரஷ்யாவின் அப்பட்டமான இந்தப் பொருளாதார முறையையே நேருவும் இந்தியாவில்
செய்தார்.


சோஷியலிசம் என்னும் பொருளாதார
முறையை எப்படியேனும் அமலுக்குக் கொண்டுவந்து மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான,
வலுவான பொருளாதார முறையாக முன்னிறுத்த நேரு உறுதி பூண்ட ஆண்டு 1927. பி.யூ.படேல் என்னும்
பொருளாதார நிபுணர் சொல்வது,
“நேருவின்
சோஷியலிசப் பொருளாதார ஈர்ப்புக்குக் காரணம், அவர் 1927ல் சோவியத் ரஷ்யாவிற்குச் சென்று
வந்ததே ஆகும்.
” 1932, 1933ல் தனது மகள்
இந்திராவிற்குக் கடிதம் எழுதும்போது நேரு சொல்வது: “பழைய ஏகாதிபத்திய சந்தைப் பொருளாதார
முறைகள் உடைந்துவருகின்றன… சோஷியலிசப் பொருளாதார முறைக்கு மாற வேண்டிய காலம் கனிந்துள்ளது.”
(Patel 1964; p.245)
சோவியத் ரஷ்யாவிற்கு ஒருமுறை
சென்று வந்ததாலேயே பாரதத்தின் பொருளாதார முறையையே மாற்றவேண்டும் என்று முழங்கினார்
நேரு. 1936ல் நடந்த காங்கிரசின் 49வது மாநாட்டில்: “இந்தியாவின் பிரச்சினைகளுக்கு ஒரே
தீர்வு சோஷியலிசத்தில்தான் அடங்கியுள்ளது என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
இது புது வகையான பொருளாதாரம். அத்தகைய பொருளாதாரம் எப்படி இருக்கும் என்பதை சோவியத்
ரஷ்யாவின் மாநிலங்களில் நாம் காணலாம். நமது எதிர்காலம் மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக
இருப்பது சோவியத் ரஷ்யா என்னும் நாடு இருப்பதாலும் அது செய்துவரும் செயற்கரிய செயல்களாலும்தான்.
சோஷலிசத்தை வெறும் பொருளாதாரக் கொள்கையாக நான் பார்க்கவில்லை. அது என் மனம், அறிவு
அனைத்திலும் வியாபித்திருக்கிறது…” என்றார்.
சோஷலிசம் பற்றி அனைத்துத்
தலைவர்களும் நேரு கொண்டிருந்த கருத்தையேதான் கொண்டிருந்தார்களா?
சோஷலிசம் பற்றிய வல்லபாய்
படேலின் பார்வை கடுமையானதாகவே இருந்தது. இளம் சோஷலிஸ்டுகள் மத்தியில் பேசுகையில் “சோஷலிசம்
பற்றிப் பேசுவதற்கு முன் உங்கள் உழைப்பால் என்ன பொருளீட்டியுள்ளீர்கள் என்று உங்களையே
கேட்டுக் கொள்ளுங்கள். உற்பத்தியைப் பெருக்குவது எப்படி என்று தெரிந்துகொண்டு பின்னர்
விளைச்சலை என்ன செய்யலாம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்” என்று சோஷலிச எதிர்க்குரலை
1950லேயே எழுப்பினார். நேரு காதில் வாங்கிக்கொள்வதாய்த் தெரியவில்லை.
பாரதத்தின் அரசியலமைப்புச்
சட்டத்தை இயற்றுவதில் பெரும் பங்காற்றிய அம்பேத்கர் அவர்கள் ‘சோஷியலிசம்’ என்னும் சொல்லை
அரசியலமைப்புச் சட்டத்தின் வரையறையில் சேர்க்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தார்.
பின்னாளில் பாரத மக்கள் தங்களின் அரசு எவ்வகையான பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டிருக்க
வேண்டும் என்பதை அரசியல் அமைப்புச் சட்டம் எழுதப்படும் வேளையில் உறுதி செய்ய முடியாது,
எனவே அந்நாளைய பொருளாதாரக் கொள்கையைப் பின்னாளைய மக்களின் மேல் திணிக்கக் கூடாது என்பதில்
அம்பேத்கர் உறுதியாக இருந்தார். சோஷியலிசம் என்னும் சொல்லை மட்டும் அல்ல, செக்யூலரிசம்
என்னும் சொல்லையும் அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் சேர்க்க அவர் முன்வரவில்லை.
அம்பேத்கர் அத்துடன் நிற்கவில்லை.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கம்யூனிஸ்டுகளும் சோஷலிஸ்டுகளும் ஏன் எதிர்க்கிறார்கள்
என்றும் சொல்கிறார்: “நமது அரசியல் அமைப்புச் சட்டம் தனிமனித எதேச்சாதிகாரத்தை முன்னிறுத்தவில்லை.
பாராளுமன்ற ஜனநாயகத்தையே முன்னிறுத்துகிறது. இது கம்யூனிஸ்டுகளுக்குப் பிடிக்கவில்லை.
அதேசமயம் சோஷலிஸ்டுகளுக்கும் பிடிக்கவில்லை. ஏனெனில், இந்த அரசமைப்புச் சட்டத்தின்படி
தனியார்ச் சொத்துக்களை அவர்களால் அவர்கள் இஷ்டப்படி எந்த நஷ்டஈடும் தராமல் நாட்டுடைமையாக்க
முடியாது… இதனால் எதிர்க்கிறார்கள்…”
அம்பேத்கர் எவற்றை எதிர்த்தாரோ
இந்திரா அவற்றை நடைமுறைப்படுத்தினார். தனது தந்தையின் கொள்கைகளை அடியொற்றி, 1976, இந்திரா
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் (ப்ரியாம்பிள்) இந்த இரு சொற்களையும்
சேர்த்தார். மன்னர் மானியத்தை ஒரே அடியில் ஒழித்தார். இதனால் கம்யூனிஸ்டுகளுக்கு இடமளித்து
நாட்டின் எதிர்காலத்தை இருண்டதாக்கினார்.
சோஷலிசத்தையும் இடதுசாரி
சார்ந்த அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்வுகளையும் மிகக் கடுமையாகச் சாடியவர் இராஜாஜி
அவர்கள்.
மன்னர் மானிய ஒழிப்பு பற்றி
ராஜாஜி இப்படி மனம் வெதும்பிப் பேசுகிறார். “காங்கிரஸ்காரர்கள் பேசுகிறார்கள்: இராமாயணப்
பாத்திரம் இராமன் எவ்வளவு பெரிய முட்டாள்! கொடுத்த வாக்கை நிறைவேற்றக் கானகம் சென்றானே!
மன்னர்களுக்கு வாக்குறுதி கொடுத்ததுபோல் கொடுத்துப் பின்னர் அவர்களுக்குத் துரோகம்
செய்வதுதானே புத்திசாலித்தனம்?” (Swarajya, 27.7.68) மேலும் பேசுகையில், “
மன்னர் மானியங்கள் பற்றிய பேச்சுவார்த்தையில்
ஈடுபட்டவர்களில் நேருவும் படேலும் காலமாகிவிட்டனர். நான் மட்டும் உயிருடன் இருந்து
வாக்கைக் காக்க முடியாமையை எண்ணி வருந்திக்கொண்டிருக்கிறேன்
” என்கிறார். பாரத விடுதலைக்கென்று தங்கள் ஆவியையே
பணையம் வைத்த தலைவர்களை சோஷலிசம் என்னும் மாயாவாதத்தால் மனம் ஒடிந்து அழச்செய்த பெருமை,
தன்னை சோஷலிஸ்ட் என்று அறிவித்துக்கொண்ட இந்திராவைச் சாரும்.
நேருவும் தான் கொடுத்த
வாக்கைக் காக்கவில்லை. தானியங்கள் உற்பத்தி, அவற்றுக்கான விலை நிர்ணயித்தல், கொள்முதல்,
கூட்டுறவு வேளாண்மை என்று சோஷலிச எதேச்சாதிகாரத்தை நேரு அறிமுகப்படுத்தினார். “இந்த
(சோஷலிச) ஓநாய் சங்கிலியால் பிணைக்கப்பட வேண்டும்” என்று கூறிய இராஜாஜி, ‘வன்முறையான
சோஷலிசம்’, ‘காந்தீயத்திலிருந்து பின்வாங்குதல்’, ‘நான் ஏன் சிவப்புக்கொடி காட்டுகிறேன்’
என்ற தலைப்புகளில் முறையே ’ஸ்வராஜ்யா’, ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’
இதழ்களில் காட்டமாக எழுதித் தனது
 ஆழ்ந்த எதிர்ப்பைத் தெரிவித்தார்.
பாரதத்தில் நேருவால் அமல்படுத்தப்படும்
கூட்டுறவுப் பண்ணைகள், கூட்டுறவு வேளாண்மை முதலியன “ஆழ்ந்த சிந்தனைகளின் பயனால் விளைந்தவை
அல்ல” என்றும், “தனிமனித சுதந்திரம் அற்ற, எதேச்சாதிகாரப் போக்குகள் கொண்ட, மனித உழைப்பை
அரசாணைகளின் மூலம் பெற்று நடத்தப்படும் கொத்தடிமை முறைகள் நிலவும் கம்யூனிச நாடுகளில்
மட்டுமே இவை சாத்தியம்” என்று கடுமையாகச் சாடிய இராஜாஜி, “கம்யூனிஸ்டுகளிடமிருந்து
அவர்களது பெயிண்ட் மற்றும் அதைப் பூசும் பிரஷ் இரண்டையும் காங்கிரஸ் கடன் பெறுகிறது”
என்று கேலி பேசினார். (Indian Express, 19.1.59)
நேருவின் சோஷலிசப் பற்றும்
அவரைப் பின்பற்றிய காங்கிரஸ் அமைச்சர்கள் முதலானோரின் சோஷலிச சத்தியப் பிரமாணங்களும்
நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் இருந்த வேளையில் அமைச்சர்களும் காங்கிரஸ்காரர்களும்
செல்வந்தர்களாவதைப் பார்த்து இராஜாஜி அதிசயித்தார். “காங்கிரஸ்காரர்கள் பெரும் செல்வந்தர்களாக
மாறியுள்ளனரே, ஏதாவது புதிய தொழில்கள் செய்து வருகின்றனரா?” என்று நையாண்டி செய்தார்.
(Indian Express, 28.5.56)
எப்படியாவது நாட்டை நேருவிய
சோஷலிசப் பாதையில் இருந்து விடுவிக்கவேண்டும் என்னும் நோக்கில் இராஜாஜி தனது 83-வது
வயதில் ‘சுதந்திரா’ என்னும் கட்சியைத் துவக்கினார். காங்கிரசின் சோஷலிசக் கொள்கையால்
‘லைசன்ஸ்-பர்மிட்-ராஜ்யம்’ நடைபெறுகிறது என்று கடுமையாகச் சாடிய இராஜாஜி, இதனால் காங்கிரசின்
பணக்கார ஆதரவாளர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவுமே வழி வகுக்கப்படுகிறது
என்று மனம் வருந்திப் பேசினார்.
திட்டக்கமிஷன் நாட்டின்
உற்பத்தியைக் குலைக்கிறது என்பதில் ஆணித்தரமான நம்பிக்கை கொண்டிருந்த இராஜாஜி, இந்திராவிடம்
அந்த நிறுவனத்தைக் கலைத்து விடும்படி வேண்டினார்.
சோஷலிசக் காதல்கொண்ட காங்கிரஸின்
உண்மை நிலை என்ன? தேர்தல் நேரங்களில் காங்கிரஸ் என்ன செய்தது? இது பற்றி இராஜாஜி சொல்வது:
“நான் சுதந்திரா கட்சியின் தேர்தல் நிதிக்காகப் பிச்சை எடுத்தபோது பெரிய கம்பெனிகளிடம்
காங்கிரஸ் எங்களைவிட ஐந்திலிருந்து இருந்து பத்து மடங்கு பணம் பெற்றிருந்தது.”
(Swarajya, 11.2.67) ‘பேசுவது மானம் இடைப் பேணுவது காமம்’ என்று கம்பன் சொன்னது இதுதான்
போல.
அப்படி சோசலிசத்தால் என்னதான் பயன் விளைந்தது? உணவுத்தட்டுப்பாடு
நீங்கியதா? மக்கள் மூன்று வேளை உணவு உண்டார்களா? தானிய உற்பத்தி அதிகரித்து, பாரதம்
வெளிநாடுகளுக்கு தானிய ஏற்றுமதி செய்ததா
என்றால் இல்லை. 17 ஆண்டுகள் சோஷலிச ஆட்சி செய்த பண்டித நேருவின் மரணத்தின்போது
இந்தியா அமெரிக்கச் சட்டம் 480ன் தயவால், அமெரிக்காவிடமிருந்து கோதுமையை மலிவு விலையில்
பெற்றுவந்தது. சோஷலிசப் பொருளாதாரம் கொண்டுவந்து கொடுத்தது நித்ய தரித்திரம் மட்டுமே.
நேருவால்தான் தரித்திரத்தை
நீக்க முடியவில்லை. இடதுசாரிப் பக்கம் முழுதுமாகச் சாய்ந்து, அரசியலமைப்புச் சட்டத்தின்
முன்னுரையையே
சோஷலிசத்துக்காக மாற்றிய
இந்திராவாவது செய்தாரா? அதுவும் இல்லை. கடைசியில் ‘கரிபி ஹடாவோ’ (ஏழ்மையை நீக்குவோம்)
என்று வெற்று வார்த்தைகளுடன் அரசியல் நடத்தினார்.
நாட்டை அழிவுப்பாதையில்
கொண்டுசென்ற காங்கிரசின் சோஷலிசக் காதல், இந்திராவின் 95% வருமான வரியையும் தாண்டி
நாட்டின்
பொருளாதாரத்தைச் சீரழித்தது.
அதன் பலனாக 1991ல் சந்திரசேகர் அரசு பாரதத்தின் தங்கக் கையிருப்பை அடகு வைக்கும் நிலைக்குத்
தள்ளப்பட்டது.நரசிம்மராவின் ஆட்சியில் இராஜாஜியின் கருத்துக்கள் முன்னெடுக்கப்பட்டன.
2014ல் வந்த நரேந்திர மோதியின் அரசு முதல் வேலையாக திட்டக்கமிஷன் என்னும் வெள்ளையானையைக்
காட்டுக்கு அனுப்பியது.

இராஜாஜி மேலுலகில் இருந்தவண்ணம்
மகிழ்ந்திருப்பார்.

அடிக்குறிப்புகள்:

உசாத்துணைகள்:
India Since 1980 – Sumit Ganguly, Rahul Mukherji
Dr.Ambedkar’s speech in the Constituent Assembly on 15
November 1948.
Rajaji, a life – Rajmohan Gandhi
The God Who Failed: An Assessment of Jawaharlal Nehru’s
Leadership by
Madhav Godbole.

Posted on Leave a comment

அழகிய சிக்கிம் – ஹரி வெங்கட்

பொதுவாகவே இந்தியாவின் வடகிழக்குப் பகுதி குறித்து ஊடகங்களும், இடதுசாரி அறிவுஜீவிகளும்
ஒருவித மாயத் தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். எந்நேரமும் பிரிந்து விழக்கூடிய வலுவில்லாத
ஒற்றை நூலால் பிணைக்கப்பட்டுள்ள பகுதி என்ற கதையைத் தொடர்ச்சியாகச் சொல்லிவருகிறார்கள்.
அந்தப் பகுதிக்கு நேரில் சென்று வருவதே சிறந்த விஷமுறிவுச் சிகிச்சையாக இருக்க முடியும்.
மேற்கு வங்கத்தின் பாக்டோக்ரா விமானநிலையம் இந்திய விமானப் படையின் கட்டுப்பாட்டில்
உள்ளது. சென்னையிலிருந்து பாக்டோக்ரா சென்று, சிலிகுரி வழியாக, கேங்டாக் சென்றேன்.
இந்திய ராணுவத்தின் பரவல் சிலிகுரியில் அதிகம். புவியியல் ரீதியாக அதன் முக்கியத்துவம்
அப்படி. நேபாளம், பூட்டான், சீனா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு இந்தியாவின் நுழைவாயில்
அது. சுக்னா பகுதியின் சமதளத் தேயிலைத் தோட்டங்கள் எனக்குப் புது அனுபவம். மதிய நேர
வெயில் அச்செடிகளின் பச்சையை இன்னும் மெருகூட்டியிருந்தது. சிறப்பான சாலைகள். மலைப்பகுதியின்
சாலைகள் கூட மோசமில்லை.
சிக்கிம் தாந்திரீக பூமி. மலையைச் சுற்றி ஏறியபடி கார் கேங்டாக் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
மரத்தைச் சுற்றி ஊறியபடி உச்சியை அடைய நினைக்கும் பாம்பைப் போல்.
சிக்கிம் எல்லையின் நுழைவாயிலில் கொஞ்சம் கெடுபிடி அதிகம். மாநிலத்தினுள் நுழைபவர்களின்
விவரங்களைக் கேட்டுவிட்டு உள்ளே அனுமதிக்கிறார்கள். குறிப்பாக பங்களாதேஷிகளைத் தவிர்க்கவே
இந்த அணுகுமுறை என்றார் எங்கள் வாகன ஓட்டுநர். வார இறுதியில் வாகனங்களின் எண்ணிக்கை
அதிகமாதலால் சிக்கிம் எல்லைக்கு 10 கி.மீட்டர் தூரத்தைக் கடக்க 2 மணி நேரம் ஆனது. ஒவ்வொரு
வாகனத்தையும் நன்கு சோதித்து அனுப்புகிறார்கள். நடக்கக் கூட யோசிக்க வேண்டிய சாலையில்
கார் சென்றது. இரவு 7 மணிக்குச் சென்றடைய வேண்டிய இடத்தை 10 மணிக்குச் சென்றடைந்தோம்.
ஹோட்டல் மேலாளர் எங்களுக்கு உணவைத் தயாராக வைத்திருந்தார். கொடுக்க வேண்டிய பணத்தை
மெதுவாக வாங்கிக் கொள்வதாகச் சொல்லிவிட்டார். பிறகு கேட்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்துக்
கொடுத்தபோது புன்முறுவலுடன் பெற்றுக் கொண்டார்.
நாதுலாவிற்கான பயணம் நான் மிகவும் எதிர்பார்த்திருந்த ஒன்று. இந்திய-சீன எல்லையின்
ஒரு முக்கியமான பகுதி நாதுலா. பூட்டானுடனான எல்லையும் உண்டு. இந்திய-சீனப் படைகள் பலமாக
மோதிக்கொண்டு, இருதரப்பிற்கும் பலத்த சேதங்கள் நேர்ந்த வரலாறு கொண்ட இடம் இது.
14,000 அடி உயரத்தில் உள்ள இடம். ராணுவத்தால் அமைக்கப்பட்ட சிறப்பான சாலைகள். சிறு
சிறு குன்றுகள் மீது இரு நாட்டு ராணுவமும் முகாமிட்டு எதிர்த்தரப்பைக் கண்காணிக்கின்றன.
அடுத்த அடி வைத்தால் நீங்கள் சீனாவிற்குள் இருப்பதற்கான சாத்தியமுள்ள இடம் வரை அனுமதிக்கிறார்கள்.
நான் சென்றபோது மூன்று டிகிரி தட்பவெப்பம். சில சமயங்களில் அதற்கும் கீழே. குளிர் காற்று
தொடர்ச்சியாக முகத்தில் அறைந்தது. உதடுகள் உறைந்துவிட்டதைப் போலிருந்தன. ஒரு வார்த்தை
உதிர்க்க கூடச் சில விநாடிகள் யோசிக்க வேண்டியிருந்தது. மிகக் குறைந்த ஆக்ஸிஜன் நிலவும்
இடம் அது. இதயத்தின் மீது பெரும் கல் ஒன்றை வைத்ததைப் போல் கனத்தது. நடையின் இயல்பான
வேகம் காணாமல் போனது. சாதாரண மனித
நடவடிக்கைகள் எதுவும் மட்டுப்படும் அந்த இடத்தில் 24 மணிநேரமும் இருப்பது என்பது என்
கற்பனைக்கு எட்டாதது. ஆனால் இந்திய ராணுவம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.
நாதுலாவின் சிறு சிறு மலைகள், அதன் பள்ளத்தாக்குகளை நிரப்பும் ஏரிகள். பிரபலமான
சாங்மோ ஏரி நவீன இந்திய வழக்கத்தை ஒட்டி அசிங்கப்படுத்தப்பட்டிருந்தது. ஏரியைச் சுற்றிக்
கும்பலாகக் கூடிக் கூச்சலிட்டு சுற்றுலாப் பயணிகள் ’என்ஜாய்’ செய்தனர். இயற்கை பெரும்
போராட்டத்தால் இன்னும் தன் அழகைத் தக்கவைத்திருக்கிறது.
கேங்டாகின் கைவினைப் பொருட்களின் ம்யூசியம் செல்ல முடிந்தது. பல்வேறு கைவினைப்
பொருட்கள் செய்வதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. ’தாங்கா’ எனப்படும் திபெத்திய பெளத்தத்
துணி ஓவியங்கள் போதிசத்வர்களை, மண்டலங்களைக் காட்சிப்படுத்துபவை. திபெத்தில் பரவலாக
இருந்த கலை, இப்போது இந்தியாவின் வடகிழக்கில் எஞ்சியிருக்கிறது என்று சொல்லலாம். இந்த
ஓவியங்கள் குறிப்பிட்ட ஒரு புள்ளியில் துவங்குகின்றன. ஒரு வகைமாதிரியை மையமாகக் கொண்டிருக்கின்றன.
இந்த வகைமாதிரி (pattern) ஓவியத்தின் பிறபகுதியிலும் எதிரொலிக்கிறது. பலமுறை பலகோணங்களில்
அடுக்கப்படுகிறது. Fractal எனும் மாதிரியை நினைவுபடுத்துகிறது. எந்த ஒரு ஓவியமும் பல
துண்டுகள் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துண்டும் தனக்கான அளவீடுகளைக் கொண்டது.
இத்துண்டுகள் அதன் சரியான கணக்கு அளவுகளின் படி அமையும் போது அந்த ஓவியம் தன் முழுமையை
அடைகிறது. திபெத் ஓவியங்கள் குறித்து எவ்விதப் பரிச்சயமும் இல்லாத என்னால் புரிந்து
கொள்ள முடிந்தது இதுவே. சிக்கிம் அரசால் இக்கலை பயிற்றுவிக்கப்படுகிறது. நான் சென்றிருந்தபோது
பள்ளி மாணவர்கள் இக்கலை குறித்து ஓவியர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தனர்.
கேங்கடாகிலிருந்து பெல்லிங் நோக்கிப் பயணம் துவங்கியது. நாம்சி வழியாகச் சென்றேன்.
சிவனும் போதிசத்வ பத்மசாம்பவரும் இப்பகுதியில் நிறைந்துள்ளனர். ஒரு மலை முகட்டில் சிவனுக்கான
மாபெரும் சிலை. ‘சார்தாம்’ (char dham – நான்கு புனிதத் தலங்கள்) என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவெங்கும் சிவனின் முக்கியமான கோயில்களின் மாதிரிகள் அடங்கிய மிகப்பெரும் காம்பெளக்ஸ்.
அங்கிருந்த மற்றொரு மலைமுகட்டில் குரு பத்மசாம்பவருக்கு மாபெரும் சிலை. இந்து மதமும்,
தாந்திரீக திபெத்திய பெளத்தமும் சிக்கிம் நிலத்தின் பெரு மதங்கள். குரு பத்மசாம்பவர்
எனும் போதிசத்வர் இந்நிலத்தின் முக்கியமான கடவுள். சாம்பவர் குலத்தின் அரசர். போதிசத்வ
நிலையை அடைந்தவர். சாம்பவ குலத்தில் பிறந்த ஒருவரை வடகிழக்கு மற்றும் திபெத் பகுதியைச்
சேர்ந்த பிற குலமக்களும் கடவுளாக ஏற்கின்றனர். சிவனை நினைவுபடுத்தும் திரிசூலம் ஏந்தியவர்.
திபெத்திய பெளத்தத்தின் 8 குறியீடுகளில் சங்கும் சக்கரமும் அடக்கம். போதிசத்வர் முன்
வைக்கப்படும் 7 கிண்ணங்களும் (சில சமயங்களில் 8) தினமும் பூஜை செய்யும் சாமானிய இந்துவால்
புரிந்துகொள்ளக்கூடியதே.
மேற்குலக இறக்குமதியான முரணியக்கம் எனும்
கருத்து, வன்முறைக்கு ஒரு நியாயத்தை அளித்து அதை வரலாற்றை முன்னோக்கிச் செலுத்தும்
கருவியாக பார்க்கிறது.
இரு தரப்பும் ஆயுதம் தரித்துச் சண்டையிட்டுப் பின்
சமாதானம் நிலவும் சாத்தியம் குறித்த கற்பனை எந்தவொரு எம்.ஜி.ஆர்-நம்பியார் கத்தி சண்டைக்கும்
குறைந்ததல்ல. ஓர் உயிர் (அல்லது) கருத்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் பிறரை அழிப்பதன்
அவசியத்தைக் குறித்துச் சிந்திக்கும் மேற்குலகின் நீட்சியே, விலங்குகளின் வன்முறையை
அழகியல்தன்மையுடன் காட்சிப்படுத்தும் இன்றைய டிஸ்கவரி சேனல். இந்திய வரலாற்றெழுத்து
இன்றுவரை இக்கருத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றின் நகர்வை நியாயப்படுத்த
சண்டைகள் குறித்த கற்பனைகள் அவசியமாகின்றன. அதன் உச்ச சாத்தியம் இந்து எதிர் பெளத்தம்
குறித்த வரலாற்றெழுத்து. இந்த மத/கலாசார முகிழ்ப்புகள் வன்முறையால் நிகழ்ந்திருக்க
சாத்தியமில்லாதவை. இதைச் சாத்தியமாக்கிய ஊடுபாவுகளை அறிய முரணியக்கத்தால் முடியாது.
இன்னும் கொஞ்சம் கையை நீட்டினால் கஞ்செஞ்ஜங்கா மலையைத் தொட்டுவிட முடியும் எனும்
பிரமையைக் கொடுப்பதுதான் பெல்லிங்கின் (Pelling) சிறப்பு. ஊரின் எந்தப் பகுதியில் இருந்தாலும்
அம்மலையை வெகு அருகில் காணமுடியும். அம்மலையின் பிரமாண்டத்தை அறியத்தரும் முக்கியமான
இடம் அது. மற்றபடி திபெத்திய பெளத்தம் இங்கும் செழித்திருக்கிறது.
சிக்கிம் எங்கும் காணக்கூடிய ஒரு விஷயம், நீருடனான அதன் பிணைப்பு. திஸ்தா
(Teesta) மற்றும் பல்வேறு நதிகள் அம்மாநிலத்தின் குறுக்கும் நெடுக்கும் பரவியுள்ளன.
இம்மாநிலத்துள் செல்லும் வழியெங்கும் சிறு சிறு நீர் அருவிகள் வழிந்து ஓடுகின்றன. இத்தகைய
வளமான நீராதாரத்தால் மொத்த மாநிலத்தின் நீர்த் தேவையும் எளிதாகக் கையாளப்படுகிறது.
திஸ்தா நதியிலிருந்து கிடைக்கும் மின்சாரம் சென்றடையாத பகுதியே இம்மாநிலத்தில் இல்லை.
எஞ்சும் மின்சாரம் பிற மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. மலைகள் சூழ்ந்த சிக்கிம்மில்
கட்டடங்களுக்கும் குறைவில்லை. இருந்தும் இயற்கை பாதிக்கவில்லை. தொலைத்தொடர்புச் சிக்கல்
இல்லை. சிக்கிமின் கலாசாரத்தைக் காக்கும் பொருட்டு நிலஉரிமை குறித்து அம்மாநில அரசு
கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒரு மதத்தைச் சேர்ந்தவர் விற்கும் நிலம் அதே மதத்தைச்
சேர்ந்த மற்றொரு நபருக்கு மட்டுமே விற்கப்படவேண்டும். பிற இந்திய மாநிலங்களில் வசிப்பவர்கள்
நிலம் வாங்க முடியாது. லீசுக்கு மட்டும் எடுக்கலாம். அதன் விவசாயம் முழுக்க முழுக்க
இயற்கை முறையை மட்டும் சார்ந்திருக்கிறது. இருசக்கர வாகனங்களை அரிதாகவே காண முடிகிறது.
(‘பனிக் காலத்தில் வழுக்கி விடும்.’) அதன் சுற்றுலா மற்றும் புவியியல் முக்கியத்துவத்தைத்
தாண்டி, சிக்கிம் இந்தியாவின் பெருமைக்குரிய இடங்களில் ஒன்று. சீனாவால் துரத்தப்பட்ட
திபெத்திய பெளத்தம் சிக்கிமில் செழித்திருப்பதைக் காணமுடிகிறது. திபெத் சுதந்திரம்
அடையும்போது தன் கலாசாரத்தை மீட்க இந்தியா மட்டுமே அதன் நம்பிக்கை. நேபாள மொழியும்
அதன் மக்களும் இங்கு வெகு இயல்பாக வாழமுடிகிறது. வருங்காலத்தில் சீனாவால் நேபாளம் நெருக்கடியைச்
சந்தித்தால் அப்போதும் சிக்கிம் அவர்களை ஏற்கும்.
எல்லாவகையிலும் சிக்கிம் நகரின் எதிர்முனையில் டார்ஜிலிங்கை நிறுத்தலாம். மிகக்குறைந்த
நிலப்பகுதியில் பிதுங்கி வழியும் மக்கள் கூட்டம். அதற்குக் குறையாத நான்கு சக்கர வாகனங்கள்.
நீண்ட வாகன வரிசைகள். பொறுமையற்று ஒலி எழுப்பியபடி இருக்கும் வாகனஓட்டிகள். ஊரின் பெரும்பாலான
சாலைகள் ஒருவழி போக்குவரத்திற்கு மட்டுமே. 70-80 களில் உறைந்து நின்றுவிட்ட ஊர். வங்காளிகள்,
திபெத் அகதிகள், நேபாளிகள் நிரம்பிய ஊர். நேபாள மொழியே அதிகம் பேசப்படுகிறது. இந்த
ஊர் என்னை அதிகம் கவரவில்லை. Toy Train-ல் இருந்த சில தருணங்களைத் தவிர.
திபெத்திய பெளத்தம் நிலவும் மற்றொரு முக்கியமான இடம் இது. திபெத்திய அகதிகளுக்கான
முக்கிய மையமும் கூட. அவர்கள் நிர்வகிக்கும் நெசவுகூடத்திற்குச் செல்ல முடிந்தது. அழகான
வேலைப்பாடுகள் கொண்ட பொருட்களையும், தங்கள் கலாசாரத்தை அழிக்க முயலும் சீனாவின் மீதான
கோபத்தையும் வெளிப்படையாகவே காணமுடிந்தது. தற்போதைய தலாய் லாமா தன்னுடைய வாரிசாக அறிவித்த
ஒரு சிறுவனை சீன அரசாங்கம் கடத்திச் சென்று ரகசியமாக வைத்துள்ளது. அதைக் கண்டிக்கும்
சுவரொட்டிகள், சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை நிராகரிக்கக் கோரும் கோஷங்கள்
என்று எதுவும் மறைவில் இல்லை. சீன எதிர்ப்பு என்பது கம்யூனிச எதிர்ப்பும்தான். கம்யூனிசத்தை
விமர்சிக்கும் ஜெயபிரகாஷ் நாராயணின் சொற்களைப் புகைப்படச் சட்டகமாக்கி வைத்துள்ளனர்.

நன்கு பராமரிக்கப்படும் மிருகக்காட்சி சாலைக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு
புலி புல்லைத் தின்று கொண்டிருந்தது. 30 வருட ஆட்சியில் மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்கள்
சாதித்தது என்ன என்று இனி ஒரு பயல் கேட்டு விடமுடியாது!
Posted on Leave a comment

தமிழக அரசியலின் எதிர்காலம்: ஜெயலலிதா மறைவுக்குப் பின் – லக்ஷ்மணப் பெருமாள்

தமிழக முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதாவின் மறைவு, தமிழக
அரசியலில் ஒரு வெற்றிடத்தை நிச்சயமாக ஏற்படுத்தியுள்ளது என்பதை எவரும் மறுக்க இயலாது.
அவரின் மறைவால் தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ வாய்ப்புண்டு. இதற்கிடையில்
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் ஆரம்பித்து, அவரது கடந்தகால மற்றும்
அதிமுகவின் எதிர்கால அரசியல் மாற்றங்கள் பற்றி இனி கிளப்பப்படும் சந்தேகங்களுக்கும்
வதந்திகளுக்கும் பஞ்சம் இருக்கப் போவதில்லை.
இந்தக் கட்டுரை கூட நம்மை வந்து சேரும் செய்திகளிலிருந்தும்,
எனக்குத் தோன்றும் / அறிந்த அரசியல் பார்வையிலிருந்து மட்டுமே எழுதப்படுகிறது. இது
நடக்கலாம், நடக்காமல் போகலாம். நம் முன்னே உள்ள சாத்தியக்கூறுகள் என்ன என்பது பற்றி
மட்டுமே இக்கட்டுரையில் அலசப்படுகிறது.

ஜெயலலிதாவின் இறப்புச் செய்தியிலிருந்தே அடுத்தடுத்து நிகழ்ந்த
காட்சிகள் பலருக்கும் ஐயத்தை மட்டுமல்ல, அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எந்த நடராஜனையும்
சசிகலா குடும்பத்தினரையும் ஜெயலலிதா விலக்கி வைத்தாரோ அவர்களனைவரும் ஜெயலலிதாவின் பூத
உடலைச் சுற்றி நின்றிருந்தார்கள் என்பதிலிருந்தே அந்த அச்சம் எழுகிறது. சசிகலாவின்
ஆதிக்கமும் ஜெயலலிதாவுடனான அவரது நெருக்கமும் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கும்,
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் அச்சத்தை உண்டாக்கின என்பதை நாமறிவோம்.
சசிகலாவால் கட்சியில் பதவியை இழந்தவர்களும் உண்டு, பதவியைப் பெற்றவர்களும் உண்டு. ஜெயலலிதாவிற்குக்
கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், சசிகலா தலையீட்டால், அமைச்சராக இருந்தவர்கள் பலர்
பதவியை இழந்ததையும் நாமறிவோம்.
இவையெல்லாம் கடந்த கால வரலாறு. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
நாளிலிருந்து அவரது உடல்நிலை குறித்து வந்த செய்திகளில் ஆரம்பித்து, ஓ.பன்னீர் செல்வத்திடம்
ஒப்படைக்கப்பட்ட முதல்வர் பொறுப்பு உட்பட, மருத்துவமனையில் ஜெயலலிதாவின் உடல்நிலையை
அறிந்து கொள்வது வரையிலான தகவல்கள், எந்தெந்த அதிமுக தலைவர்களுக்குத் தெரியும் என்றுகூட
நமக்குத் தெரியாத வண்ணம் ரகசியம் காக்கப்பட்டது. முதல்வர் பொறுப்புகளை ஓ.பன்னீர்செல்வம்
கவனிப்பார் என்பதில் ஆரம்பித்து ஒ. பன்னீர்செல்வம் நடுஇரவில் அவசர அவசரமாக முதல்வர்
பதவிப் பிரமாணம் நடந்தது வரையுள்ள காட்சிகளுக்குப் பின்னாலிருக்கும் அரசியல் அந்தரங்கங்கள்
இனிமேல் மெல்ல மெல்ல வெளி வரலாம். அல்லது வெளியாகாமலேயேவும் போகலாம்.

எதிர்காலத்தில் என்ன அரசியல் மாற்றங்கள் நடக்கலாம்?

1.       ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையிலான இந்த ஆட்சி ஐந்து வருடத்திற்குத் தாக்குப்
பிடிக்காது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.
2.       தற்போதைய நிலையில் தமிழகத்தில் அடுத்த தேர்தல் என்பது உடனடி சாத்தியமில்லை என்பதும்
நிச்சயம். சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட அதிமுக, திமுக உறுப்பினர்கள்
அதை விரும்ப மாட்டார்கள். எனவே அவர்கள் யார் தலைமையில் ஆட்சி நடந்தாலும் ஏற்றுக் கொள்வார்கள்.
3.       அதிமுகவில் அடுத்து என்ன நடக்கிறது என்பதை திமுக, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள்
கூர்ந்து கவனிக்கும். பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுகவினர் தங்களுக்குள்ளாக அடித்துக்
கொள்கிறார்களா, கட்சி உடைகிறதா, தலைமைப் பொறுப்பையும், பொதுச் செயலாளர் பதவியையும்
யார் அலங்கரிக்கப் போகிறார்கள் என்பது வரை மௌனமாகவே கவனிப்பார்கள்.
4.       ஒருவேளை சசிகலா தரப்பு அப்பொறுப்புகளைப் பெற்றால், குறிப்பிட்ட கால இடைவெளிக்குள்
கட்சியை உடைக்கும் வேலையை திமுக ஆரம்பிக்கும். அல்லது பாஜகவும், காங்கிரசும் தனித்தனியே
அதற்கான நடவடிக்கையில் இறங்கலாம். அதிமுகவின் மீதான நம்பகத்தன்மையைக் குறைப்பதன் வாயிலாக
தமக்கான ஆதரவு கூடுமென பாஜகவும் காங்கிரசும் நம்பலாம்.
5.       திமுக என்ன செய்யும்? திமுக அடுத்த ஆறுமாதங்களுக்கோ, ஒரு வருடத்திற்கோ வேண்டுமானால்
அதிமுகவின் ஆட்சியை விட்டு வைக்கும். அதன் பின்னர் நிச்சயமாக அதிமுகவை உடைத்து நேரடியான
ஆட்சியில் அமரும் வாய்ப்புகள் அதிகம். இதில் காலதாமதம் ஆகலாம். அதிமுகவை ஐந்தாண்டுகளுக்கு
ஆட்சியில் தொடர விடுவது திமுகவிற்குத்தான் அதிக இடைஞ்சலை ஏற்படுத்தும். எனவே இந்த ஆட்சியை
உடைத்து, ஆட்சி அமைக்கத் தேவையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு உள்ளது எனச்
சொல்லிப் பதவியைப் பிடிக்கும்.
6.       அதிமுகவை ஐந்தாண்டுகள் ஆட்சியைத் தொடர விடுவது திமுகவைக் காட்டிலும் பாஜகவிற்கும்,
காங்கிரசிற்கும் இதர தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளுக்கும் எந்த லாபத்தையும் தராது
என்பதால் அவர்கள் திமுகவைக் காட்டிலும் அதிமுக எப்போது உடையும் என்று காத்திருப்பார்கள்.
அதாவது அதிமுக ஒன்றுபட்டு வலுப்படுவதை எந்தத் தமிழக கட்சியும் விரும்பப்போவதில்லை.
ஆனால் இதை முன்னின்று செய்யும் வலிமை பாஜகவின் கையில் மட்டுமே இப்போது உள்ளது. மத்தியில்
ஆளுங்கட்சியாக இருப்பதால் அதிமுகவைக் கட்டுக்குள் வைக்க முயல்வார்கள். காங்கிரஸ், திருநாவுக்கரசருக்கு
அதிமுகவிலிருந்து சில தலைவர்களையாவது காங்கிரஸ் பக்கம் கொண்டு வர வேண்டிய பொறுப்பைக்
கொடுக்கும்.
7.       இதனால் உடனடி மற்றும் நீண்டகாலப் பலனை அடையப் போகும் கட்சி திமுக மட்டுமே. குறைந்தபட்சம்
தமிழக அரசியலில் அதிமுக என்ற கட்சி உடைந்தாலே போதும், திமுகவின் ஆட்சி 2024 வரை உறுதியாக
இருக்கும் எனக் கணித்துவிட இயலும்.
அதிமுகவிற்குள் என்ன நடக்கலாம்?
1. கட்சி, ஆட்சி எனப் பங்கிட்டுக் கொண்டு இந்த ஐந்தாண்டு ஆட்சியை
நிறைவேற்ற முயலும் அதிமுக. அதற்கு சசிகலா தரப்பு இறங்கி வர வேண்டியிருக்கும். குறிப்பாக
கட்சியின் முக்கிய சாதித் தலைவர்களுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்குவதன் மூலமாக ஆட்சியை
நடத்தலாம்.
2. கட்சியை முழுமையாக சசிகலா கைப்பிடித்தால் ஜெயலலிதாவைப் போல
அவருக்கு யார் இடைஞ்சலாக இருந்தாலும் , அவர்களைக் கட்சியை விட்டுத் தூக்கி எறிவார்.
கட்சித் தலைவராக, பொதுச் செயலாளராக மட்டுமே சசிகலா தரப்பு ஆரம்பத்தில் இருக்க முயலும்.
அப்போது மட்டுமே இரட்டை இலை என்ற சின்னம் கிடைக்கும்.
3. இரட்டை இலை என்னும் சின்னத்தை வைத்திருப்பவர்களால் மட்டுமே
அதிமுக என்ற பெயருடன் கட்சியை நடத்த இயலும். அவ்வாறு சசிகலா சாதுர்யமாகச் செயல்பட்டு
தீவிர அதிமுக தொண்டர்களை அதிமுகவில் தொடரச் செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக
சாதிக் கட்சியாக சுருங்கி விடாமல், மற்ற சாதித் தலைவர்களுக்கும் முக்கியப் பொறுப்புகள்
வழங்கினால் அதிமுக என்ற கட்சி நிச்சயமாக எதிர்க் கட்சியாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
4. சசிகலாவிற்கு இருக்கும் மிக முக்கிய சவால், கட்சியைக் காட்டிலும்
கட்சிக்கு வெளியே மக்களிடம் அதிமுக மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதே. அதை வென்றெடுக்க
கடுமையான போராட்டக் குணம் வேண்டும். ஜெயலலிதாவிற்கு வேண்டுமானால் மத்திய அரசிடமிருந்தும்
பாஜகவிடமிருந்தும் கருணை கிடைத்திருக்கலாம். ஆனால் சசிகலாவிற்கு அது அவ்வளவு எளிதில்
நடக்காது. அதற்கு அவர் நிறைய விலை கொடுக்க வேண்டி வரும்.
5. அதிமுக என்ற கட்சியிலிருந்து முக்கியத் தலைவர்களும் இதர சாதித்
தலைவர்களும் வெளியேறினால் அதிமுக என்ற கட்சி தேய்ந்து மற்றவர் தலைமையை ஏற்கும் கட்டாயம்
கூட எதிர்காலத்தில் வரலாம். காலமும், சசிகலா தரப்பின் நடவடிக்கையும் மட்டுமே அதிமுகவின்
எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.

பாஜக என்ன செய்ய வேண்டும்?

மத்திய அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக அவசர அவசரமாகக்
காயை நகர்த்தினால் பாஜக வளராது. மேலும் அது பாஜக மீது கசப்பான எண்ணத்தையே மக்களுக்குக்
கொடுக்கும். இதனால் தமிழ்த் தேசியம் பேசும் மாநிலக் கட்சிகளுக்கும் திமுகவிற்குமே லாபம்
கிடைக்கும். தமிழகத்தில் பாஜக வளர வேண்டுமானால் அடுத்த ஒரு வருடத்திற்கு அதிமுகவை உடைக்கக்
கூடாது. இதற்கிடையில் பாஜக என்ன செய்யலாம்?
1. பாஜகவிலிருந்து முதல்வர் வேட்பாளர் யார் என
அடையாளப்படுத்த வேண்டும். மக்களை வசீகரிக்கும் நபராக, குறிப்பாகக் கட்சியைக் கட்டுக்குள்
வைக்கத் தெரிந்த தலைவராக இருத்தல் நலம் பயக்கும்.
2. முதல்வர் வேட்பாளராக ஒருவரை நியமித்த பிறகு
உட்கட்சிப் பூசல் இல்லாமல் அவரது தலைமையை ஏற்று, தலைமையால் தமிழகத்தைச் சிறப்பான மாநிலமாக
மாற்ற இயலும் என்ற நம்பிக்கையுடன் கூடிய பரப்புரைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
3. இந்தக் குறிப்பிட்ட காலத்திற்குள்ளாக RSS என்ற
அமைப்பு தமிழகம் முழுவதுமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அன்றாடப் பயிற்சிகள் வழங்கும்
ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
இயன்ற வரையில் மத்திய அரசின் சாதனைகள் எளிய மக்களுக்குச் சென்று
சேரும் வகையில் செயல்பட வேண்டும். குறைந்தபட்சம் ஒரு வருடமோ, இரு வருடங்களோ கழித்தே
அதிமுகவை உடைக்க வேண்டும். அதிமுக வலுவடைவதற்கு முன்பாகக் கட்சியிலிருந்து ஒரு சாராரைப்
பிரித்து பாஜகவுடன் கூட்டணி அமைக்கச் செய்யவேண்டும் அல்லது பாஜகவில் இணைக்கவேண்டும்.
தமிழகத்தில் பாஜக வளர்வது அத்தனை எளிதல்ல என்பதே யதார்த்தமான உண்மை.
அதைப் புரிந்து கொள்ளாமல் மத்திய அரசின் அதிகாரத்தின் வாயிலாகவோ, மோடியின் சாதனைகள்
என்று சொல்லியோ மட்டும் மக்களை நம்ப வைப்பது இயலாத காரியம்.
இதை உணர்ந்து ஆத்மார்த்தமான கடும் உழைப்பைக் கொட்டுவதன் வாயிலாக மட்டுமே பாஜகவை
கொஞ்சமேனும் வளர்க்க இயலும் என்பதே கள நிலவரம். பாஜக வளர்ந்து விடுமோ என்று அஞ்சுபவர்களுக்குக்
கூட, பாஜக கடந்த காலங்களில் வாங்கிய ஓட்டுகளை வைத்துப் பார்க்கும்போது, இது தமிழகத்தில்
செயற்கையாக ஊதிப் பெரிதாக்கப்படுகிற பலூன் என்பதும், பாஜகவால் மக்கள் செல்வாக்கைக்
கடந்த தேர்தல்களில் பெற இயலவில்லை என்பதே உண்மை என்பதும் தெரியும். அதற்கு மிக முக்கியக்
காரணம், ஜெயலலிதா என்ற ஆளுமை.
உயர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பலருக்கும் பாஜக
மீது நல்ல அபிப்பிராயங்கள் இருந்தாலும், தேர்தல் என்று வருகிற போது, திமுக வரக்கூடாது
என்ற ஒற்றைக் காரணத்திற்காகவும், வெல்லும் கட்சிக்கு ஓட்டுப் போடுவோம் என்ற எண்ணத்திலும்
ஜெயலலிதாவிற்கே வாக்களிக்க முடிவெடுத்தார்கள். பாஜகவை மட்டம் தட்டுபவர்களும் இதை உணர்ந்தே
உள்ளனர். பாஜக வளர்ந்து விடுமோ என்று அஞ்சுவதற்குக் காரணம் இந்தப் பயத்தினால்தான்.
இந்த அருமையான வாய்ப்பு எப்போதுமில்லாமல் இப்போது தமிழக பாஜகவிற்குக் கிடைத்துள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தனது தலைமையிலான ஓர் அணியை உருவாக்கி முதன்மை
எதிர்க்கட்சியாக அமையும் அரிய வாய்ப்பை பாஜக தவறவிட்டால், இதே போன்று இன்னொரு சந்தர்ப்பம்
எதிர்காலத்தில் கிடைக்காமலேயே போய்விடும்.
அதிமுகவால் பலன் அடையும் மற்ற கட்சிகள் எவை?
தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள், குறிப்பாக நாம் தமிழர் இளைஞர்களில்
ஒரு பகுதியினர் மீது மாற்று நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சிக்கலாம். ஜெயலலிதா இருந்தால்
வழக்குகள் பாயுமோ என்று அஞ்சியவர்களுக்கு இனி அந்தப் பயம் இருக்காது. ஆனால் என்னைப்
பொருத்தவரையில் மக்கள் தெளிவானவர்கள். இந்திய தேசியத்தையோ அல்லது இந்திய தேசியத்தோடு
அங்கமான அல்லது அங்கம் வகிக்கும் கட்சிகளையோ தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு
உள்ளது. தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி அரசியல் செய்வதும், ஈழத்தை வைத்து அரசியல்
செய்வதும் ஒன்றுதான்.
ஈழப் பிரச்சினை தமிழகத் தேர்தலில் எந்த மாற்றத்தையும்
கொண்டு வந்ததில்லை என்பதைக் கடந்தகால தேர்தல்கள் சொல்லிக்கொடுத்துள்ளன.
ஆனால் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள், வாஞ்சையாக, உள்ளூர்ப் பிரச்சனைகளை அதிகம்
முன்னெடுத்தால் அதற்கான சிறிய பலனை எதிர்காலத்தில் அடையும் சாத்தியக் கூறுகள் அதிகம்
என்பதை மறுக்க இயலாது. இத்தனை அரசியல் செய்தாலும் நாம் தமிழர் மூன்று சதவீத வாக்குகளுக்கு
மேல் பெறாது என்பதே நிதர்சனம்.
பாமக:
அன்புமணி ராமதாஸ் கடந்த சட்டசபைத் தேர்தலில் தோற்று இருக்கலாம்.
ஆனால் தமது கட்சியை மூன்றாவது பெரிய கட்சியாக அதுவும் தனித்து நின்று செய்துகாட்டினார்
என்பது சூசகமாக ஒரு செய்தியைச் சொல்கிறது. மாநிலம் தழுவிய அரசியலை முதன்முறையாகக் கடந்த
தேர்தலில் மட்டுமே பாமக செய்தது. ராமதாஸ் தமது அரசியல் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய
தவறே இதுதான். கட்சியை வட மாநிலங்களைத் தாண்டி கொண்டு போவதற்கு எந்த மெனக்கெடலும் செலுத்தாததுதான்.
தாமரை என்ற சின்னம் தெரிந்த அளவிற்குக் கூட மாம்பழம் தெரியாது என்பதே பாமகவிற்கான மிகப்பெரும்
பாதகம். நிச்சயமாக அவர்களின் வளர்ச்சி பெரிய அளவில் இருக்காது. ஆனால் அன்புமணி ராமதாசுக்கு
இணையான கவர்ச்சியான மக்கள் நம்பும் இளம் தலைவரை பாஜக போன்ற கட்சிகள் கொடுக்காமலே தற்போதைய
அரசியல் போல செய்து கொண்டிருந்தால் அன்புமணி சிறிது தாக்கத்தை ஏற்படுத்தி, கட்சிக்கான
வாக்குகளை அதிகரிக்க உதவுவார். எதிர்காலத் தேர்தல்களில் கூட்டணி வைக்கும்போது அதிக
சீட்டுகளைப் பெறவும், பதவிகளை அடையவும் மட்டுமே உதவும். மற்றபடி தமிழகத்தை ஆளும் கட்சியாக
வளர்வதற்கு பாமகவுக்கு வாய்ப்பே இல்லை.
காங்கிரஸ்:
காங்கிரஸ் எதிர்காலத்தில் எத்தகைய முயற்சிகளை எடுத்தாலும் தேர்தல்
நேரத்தில் திமுக அல்லது அதிமுக இரண்டில் ஒரு கட்சியைச் சார்ந்தே அரசியல் செய்யும்.
இயன்ற அளவிற்கு ஆளும் கட்சியாக வரும் வாய்ப்புள்ள திமுக பக்கமே சாய விரும்பும். ஆனால்
திமுக இனி காங்கிரசை வைத்துக் கொள்ளாது என்றே தோன்றுகிறது. காங்கிரசும் பாஜகவைப் போலவே
திமுக அதிமுகவிற்கு மாற்றாகத் தன்னை முன்னெடுக்கும் அரசியல் செய்ய முயற்சிக்கலாம்.
ஆனால் அது எந்தப் பலனையும் தமிழக காங்கிரசிற்குத் தராது. பெண்கள் நம்பிக்கையையும்,
இளைஞர்கள் நம்பிக்கையையும் ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் இழந்து நிற்கும் ஒரு கட்சியாகவே
காங்கிரஸ் உள்ளது.
தேமுதிக, கம்யுனிஸ்ட், மதிமுக கட்சிகள்:
ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை சாதிக் கட்சிகளான விடுதலைச்
சிறுத்தைகளும், பாமகவும் பயன்படுத்திக்கொள்வதைப் போல, கொங்கு வேளாளக் கட்சியும் பயன்படுத்திக்கொள்ளும்.
குறைந்தபட்சம் இளைஞர்களைத் தம் பக்கம் திருப்பும் வாய்ப்புகளையாவது பயன்படுத்தி வாக்கு
சதவீதத்தை உயர்த்திக் கொள்ள முயற்சிக்கும். அது ஓரளவு பலனளிக்கும். ஆனால் தேமுதிகவுக்கும்,
கம்யுனிஸ்ட் கட்சிகளுக்கும், மதிமுகவிற்கும் இதனால் எந்த லாபமும் கிடையாது. விஜயகாந்தின்
உடல்நலக்குறைபாடு, தேர்தல் கூட்டணி சார்ந்து அவர் செயல்பட்ட விதம், மேலும் அவரது மேடைப்
பேச்சுகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, தேமுதிகவைப் போல மக்கள் மத்தியில் குறைந்த
காலத்தில் நம்பிக்கையை இழந்த கட்சி தமிழக அரசியல் வரலாற்றில் வேறெந்தக் கட்சியும் இல்லை
என்று சொல்லலாம். கம்யுனிஸ்ட் கட்சிகளால் ஊடக விவாதங்கள் நடத்துபவர்களுக்கு மட்டுமே
லாபம். ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை விமர்சிக்கும் நல்ல பேச்சாளர்கள் கம்யுனிஸ்ட்
கட்சியைப் போல மற்ற கட்சிகளில் கிடையாது. விமர்சிப்பவருக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.
எந்தப் பொறுப்பும் இல்லையென்கிறபோது அது கேட்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் மக்கள்
மத்தியில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தாது. மக்களைப் பொருத்தவரையில் நீங்கள் என்ன
செய்தீர்கள் அல்லது என்ன செய்வீர்கள் என்பதை மனதிற்கொண்டே வாக்குகளைச் செலுத்துகிறார்கள்.
கம்யுனிஸ்ட் கட்சியைப் பொருத்தவரையில் காங்கிரசை திமுக வெளியே தள்ளினால் ஓடிப்போய்
ஒட்டிக்கொண்டு தேர்தலில் சில சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே பெற இயலும். மக்கள் நலக்கூட்டணி
போலப் புதிதாக முயற்சித்தால் 0.67 % வாக்குகள் மேலும் குறையும். மதிமுகவைப் பொருத்தவரையில்
வைகோவிற்கே அவரது உயரம் என்னவென்று புரிந்துவிட்டது. தமிழகத்தின் இன்னொரு கம்யுனிஸ்ட்
கட்சி எதுவென்றால் அது மதிமுகதான். போராட்டக் களங்களில் கம்யுனிஸ்ட் போல செயல்படுவார்
வைகோ. தேர்தல் கூட்டணியில் அவரைப் போல தவறான முடிவுகளை எடுத்த தலைவர்கள் எவரும் கிடையாது.
மதிமுகவிற்கு அதிமுக உடைவதாலோ ஜெயலலிதாவின் மறைவாலோ எந்த லாபமும் இருக்கப்போவது கிடையாது.

தமிழ்த் தேசியம் பேசுபவர்களை மத்திய அரசு கூர்ந்து கவனிக்க வேண்டும்.
அவர்களது செயல்பாடுகள் எல்லை மீறிப் போனால் கடும் நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள்
மேற்கொள்ள வேண்டும். இந்திய தேசியம் வலுப்படும் வகையிலான நம்பிக்கை நடவடிக்கைகளை மத்திய
அரசும், மாநில அரசுகளும் செயல்படுத்தினால் போதும். அந்த வகையில் தேசிய நீரோட்டத்தில்
கலந்து கொண்ட கட்சிகள் அதிமுக, திமுக. அவர்களின் வீழ்ச்சி முக்கியமல்ல. இந்திய தேசியத்தின்
ஒற்றுமை அனைத்தையும் விட முக்கியம். இந்திய தேசியம் மொழி உணர்ச்சிகளைத் தாண்டிய உன்னதமான
ஒன்று. அது ஒருபோதும் வீழாது. வீழக்கூடாது. இந்திய தேசியத்தை முன்னிறுத்தும் எந்தக்
கட்சி வளர்ந்தாலும், அதை வரவேற்று அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையுடன் தமிழக அரசியலை
அணுகுவோம்.
Posted on Leave a comment

ஜெயலலிதாவின் மறைவு – அடுத்தது என்ன? பி.ஆர்.ஹரன்

‘அம்மா’ என்று லட்சக்கணக்கான தொண்டர்களால்
அன்புடன் அழைக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் கடந்த டிசம்பர் (2016) மாதம்
திங்கட்கிழமை ஐந்தாம் தேதியன்று இரவு 11.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார். 75 நாட்கள்
தொடர் சிகிச்சைக்குப் பிறகு 4-ம் தேதி மாலை மாரடைப்பு ஏற்பட்டு, அதற்குப் பிறகும் மருத்துவ
நிபுணர்களின் தொடர் சிகிச்சைப் பலனளிக்காமல் மரணமடைந்தார்.
பொதுமக்களுக்கு, குறிப்பாக கட்சித்
தொண்டர்களுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், ஜெயலலிதாவைப் பார்க்க வருபவர்களை,
மிகவும் முக்கிய பிரமுகர்களாக இருந்தாலும், அவரைப் பார்க்க அனுமதிக்காமல், அவருடைய
தோழியாக உடன்பிறவா சகோதரியாக அறியப்பட்ட சசிகலா என்பவரின் உத்தரவுகளுக்கு இணங்க அபோல்லோ
மருத்துவமனை நிர்வாகம் செயல்பட்டது. அவ்வாறு செயல்பட்ட காரணத்தால் ஜெயலலிதாவின் 75
நாள் சிகிச்சை மற்றும் இறப்பு பற்றிப் பலவித சந்தேகங்களும் கேள்விகளும் மக்கள் மனதில்
எழும்பியுள்ளன. அந்தக் கேள்விகளைத்தான் நடிகை கௌதமி பிரதமருக்கு அனுப்பிய பகிரங்கக்
கடிதத்தில் எழுப்பியிருந்தார்.
அந்தக் கேள்விகளுக்கு விடைகள் வெளிவருமா
அல்லது ஜெயலலிதாவின் புதிர்கள் நிறைந்த வாழ்க்கையில் இந்தக் கேள்விகளும் புதிர்களாகவே
அடங்கிவிடுமா என்பது வரும் நாட்களில்தான் தெரியும்.


கடந்த காலம் பற்றிய சிறு நினைவூட்டல்
ஜெயலலிதா தன்னுடைய சிறு வயதிலேயே
தந்தையாரை இழந்தவர். தாய் சந்தியாவின் வளர்ப்பில், மிகவும் புத்திசாலியான மாணவியாக
உருவெடுத்தார். ஆயினும், தனக்கு விருப்பம் இல்லாமல் இருந்தாலும், தாயாரின் விருப்பத்திற்கிணங்க
திரையுலகில் கால்பதித்த ஜெயலலிதா பெரும் வெற்றி பெற்று முன்னணிக் கதாநாயகியாக வலம்
வந்தார். இருபத்து இரண்டாவது வயதில் தன் தாயையும் இழந்தார் ஜெயலலிதா.
தனிமையில் உழன்று கொண்டிருந்தவரை,
அப்போது திரையுலகில் மாபெரும் சக்தியாக விளங்கிய எம்.ஜி.ஆர் நெருங்கி, அவருடன் நட்புறவை
ஏற்படுத்திக்கொண்டு, அவரைத் தன் விருப்பத்தின்படி அரசியலிலும் நுழைத்தார். அரசியல்
மீது நாட்டமில்லாமல் இருந்தாலும், எம்.ஜி.ஆரின் கட்டுப்பாட்டில் இருந்ததால், அரசியலிலும்
கால்பதித்தார் ஜெயலலிதா. அவரை 1983ல் கொள்கைப் பரப்புச் செயலாளராக்கி, 1984ல் ராஜ்ய
சபா உறுப்பினராகவும் ஆக்கினார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். 1987ல் இறந்த சமயத்திலும்,
அதற்குப் பின்னரும் பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்த ஜெயலலிதா, அவற்றை எதிர்த்துப் போராடி
வெற்றி பெற்றுக் கட்சியைத் தன் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்.
கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்தபோது,
ஜெயலலிதாவுக்கு சசிகலாவின் தொடர்பு ஏற்பட்டது. சசிகலாவின் கணவர் நடராஜன் அப்போது மாநில
அரசில் பொதுத்தொடர்பு அலுவலராகப் பணிபுரிந்து வந்தார். சசிகலா ஒரு வீடியோ மையம் வைத்து
நடத்திக்கொண்டிருந்தார். நாளடைவில் ஜெயலலிதாவின் முழு நம்பிக்கைக்குப் பாத்திரமான சசிகலா,
அவரின் உற்ற தோழியாக போயஸ் தோட்ட இல்லத்தில் நுழைந்தார். 1991ல் அ,தி.மு.க வெற்றி பெற்று
அரசு அமைத்தபோது, திரைமறைவில் பெரும் சக்தியாக விளங்கினார் சசிகலா. 1991 முதல்
1996 வரையிலான ஐந்து வருட ஆட்சியானது, ஊழல்களும் குற்றங்களும் நிறைந்த ஆட்சியாக இருந்தது.
அதன் விளைவாக 1996 தேர்தலில் ஆட்சியை இழந்தது அ.தி.மு.க.
ஊழல்கள்
· ஜெயலலிதா முதன் முதல்
ஆட்சியைக் கைப்பற்றி முதல்வராக இருந்த 1991 முதல் 1996 வரையிலான ஆட்சியில்தான் ஊழல்கள்
மலிந்து காணப்பட்டன.
· கொடைக்கானலில் உள்ள
பிளெஸண்ட் ஸ்டே ஹோட்டல் (Pleasant Stay Hotel) வழக்கு
· டான்ஸி (TANSI – Tamil Nadu
Small Industries Corporation)
நில
பேரத்தில் நடந்த ஊழல் பற்றிய வழக்கு
· டிட்கோ பங்குகளை ஸ்பிக் நிறுவனத்திற்கு விற்றதில் நடந்த
ஊழல் (
Disinvestment of TIDCO’s
shares to SPIC)
பற்றிய
வழக்கு
· இலவச கலர் டி.வி. வாங்கியதில்
பலகோடி ரூபாய் ஊழல் வழக்கு
· வருமானத்திற்கு அதிகமாக
சொத்துக்கள் சேர்த்த வழக்கு
இந்தக் காலகட்டத்தில் சசிகலாவின்
குடும்பத்தினர் தமிழகமெங்கும் தங்களுடைய அராஜகத்தைக் கட்டவிழ்த்து, பல பிரமுகர்களை
மிரட்டியும் ஏமாற்றியும் பல சொத்துக்களைக் கைப்பற்றினர். திரைப்பட இசையமைப்பாளர் கங்கை
அமரனின் பங்களா, சென்னை அண்ணா சாலையில் இருந்த சஃபையர் தியேட்டர், கோயமுத்தூரில் இருந்த
குரு ஹோட்டல் மற்றும் தமிழகமெங்கும் பல முக்கியப் பிரமுகர்களின் சொத்துக்கள் மிரட்டியும்
ஏமாற்றியும் வாங்கப்பட்டன. இதனாலேயே அவர்களுக்கு ஊடகங்களால் ‘மன்னார்குடி மாஃபியா’
என்கிற பெயர் கொடுக்கப்பட்டது.
அனைத்திற்கும் உச்சக்கட்டமாக, சசிகலா
குடும்பத்தைச் சேர்ந்த சுதாகரன் என்பவரைத் தன்னுடைய வளர்ப்பு மகனாக அறிவித்து, அவருக்கு
நடிகர் சிவாஜி கணேசனின் பேத்தியைத் திருமணம் செய்வித்தார் ஜெயலலிதா. அந்தத் திருமண
விழா மிகவும் பகட்டாக பணக்காரத்தனத்தின் அகம்பாவம் மிகுந்த வெளிப்பாடாகக் காட்சி அளித்தது.
அந்த ஒரு விழாவே இவர் கண்டிப்பாக ஊழல்கள் பல செய்திருப்பார் என்கிற வலுவான எண்ணத்தைப்
பொதுமக்களின் மனதில் ஏற்படுத்துவதாக இருந்தது.
டாக்டர் சுப்பிரமணியன் ஸ்வாமி தனியாகவும்,
தி.மு.க. தனியாகவும் ஜெயலலிதாவுக்கும், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கும் எதிராகப்
பதிவு செய்த சொத்துக்குவிப்பு வழக்கு, கீழ் நீதிமன்றத்தில் தண்டனை அளிக்கப்பட்டு, உயர்
நீதிமன்றத்தில் அந்தத் தண்டனைத் தள்ளுபடி செய்யப்பட்டு, தற்போது தீர்ப்புக்காக உச்ச
நீதிமன்றத்தில் இருக்கிறது. இதனிடையே 2001 முதல் 2006 வரை ஆட்சி செய்தபோது, முந்தைய
தி.மு.க அரசு தன் மேல் தொடர்ந்திருந்த மற்ற அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுதலை பெற்றார்
ஜெயலலிதா.
குற்றங்கள்
ஜெயலலிதாவின் ஆட்சியில் குற்றங்களுக்கும்
பஞ்சமில்லை. ஊழல் வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட போது, தர்மபுரி அருகே அ.தி.மு.கட்சியினரால்
பெண்கள் கல்லூரி பஸ் ஒன்று தீ வைக்கப்பட்டு மூன்று அப்பாவி மாணவிகள் உயிரிழந்தனர்.
‘தராசு’ பத்திரிகை அலுவலகத்தின் மீது அ.தி.மு.கட்சியினர் தாக்குதல் நடத்தி இரண்டு நிருபர்களைக் கொன்றனர்
.
ஆட்சியில் ஊழல் நடவடிக்கைகளுக்கு
ஒத்துவரவில்லை என்கிற காரணத்துக்காக திறமை மிகுந்த IAS அதிகாரியான சந்திரலேகா அவர்கள்
மீது கூலிப்படை ஆள் ஒருவனை ஏவி அவர் மீது அமிலத்தை வீசி அவரைக் கொலை செய்யும் முயற்சி
நடந்தது. அவரின் அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த பிரபல வழக்கறிஞர் விஜயன் மீது கொலைவெறித்
தாக்குதல் நடத்தப்பட்டது.
அனைத்துக் குற்றங்களுக்கும் உச்சக்கட்டமாக,
உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக, 2004ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று, பாரம்பரியம்
மிக்க பழமையான காஞ்சி சங்கர மடத்தின் மீது கடுமையான தாக்குதலை நடத்தினார். பொய்யாகப்
புனையப்பட்ட கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் இருவரையும் ஒருவர் பின் ஒருவராகக்
கைது செய்து, மடத்தின் உள்ளே இருக்கும் பரமாச்சாரியாரின் பிருந்தாவனத்துள் போலிஸ்படையினரை
பூட்ஸ் கால்களுடன் அனுப்பி அந்தப் புனிதமான மஹாசமாதியை அவமதித்தார். மடத்து ஊழியர்களை
விசாரணை என்கிற பெயரில் கைது செய்து பலவிதமாகச் சித்தரவதை செய்தனர் அவருடைய போலிசார்.
உயர் பதவிகள் வகித்து ஓய்வு பெற்று, காஞ்சி மடத்தில் ஆன்மிகச் சேவை புரிந்து வந்த வயதானவர்கள்
மீது கஞ்சா கடத்தியதாகப் பொய் வழக்கு போட்டு சிறை செய்து சித்தரவதை செய்தது காவல்துறை.
தன்மீது நியாயமான விமர்சனத்தைக் கூடப் பொறுக்காமல் மானநஷ்ட வழக்குகள் போடும் ஜெயலலிதா,
ஊடகங்கள் காஞ்சி மடத்தின் மீது சேற்றையும் புழுதியையும் வாரி இறைத்ததைக் கண்டுகொள்ளாமல்
இருந்தார். 9 ஆண்டுகள் கழித்து ஜெயலலிதாவின் அரசு, சுமத்திய குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க
முடியாமல் தோல்வி அடைந்தது. சங்கராச்சாரியார்களும் மற்றவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
அதன் பிறகு 3 ஆண்டுகள் முடிந்து, ஒட்டுமொத்தமாக 12 ஆண்டுகள் கழிந்த பிறகும், தான் செய்த
மாபெரும் தவறுக்குச் சிறு வருத்தம் கூடத் தெரிவிக்காமல் அவர் மரணம் அடைந்தது அவருடைய
துரதிர்ஷ்டமும் கர்மவினையும் என்றுதான் சொல்லவேண்டும்.
ஜெயலலிதா-சசிகலா
2012ம் ஆண்டு, சசிகலா மற்றும் குடும்பத்தினரை
ஜெயலலிதா தன் இல்லத்தை விட்டும் கட்சியை விட்டும் வெளியேற்றினார். அப்போது ஊடகங்களில்
ஒரு பகுதியினர் சசிகலா குடும்பத்தைப் பற்றிப் பலவிதமான செய்திகளையும் கட்டுரைகளையும்
வதந்திகளையும் வெளியிட்டனர். ஆனால், ஜெயலலிதா ஒரு சில மாதங்களிலேயே சசிகலாவை மீண்டும்
தன் இல்லத்தில் சேர்த்துக்கொண்டார். இருப்பினும், கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர்களில்
ஒரு பகுதியினரும், கட்சியில் கீழ்மட்டப்பதவியில் இருப்பவர்கள் மற்றும் தொண்டர்கள் பெரும்பகுதியினரும்
சசிகலாவின் மீது உள்ளூர சந்தேகம் கொண்டவர்களாகவும், ஆனால் வெளியே ஏதும் சொல்ல விரும்பாமலும்
இருந்தனர்.
தன் கணவர் நடராஜனை விட்டுப் பிரிந்துவாழ்வதாக
சசிகலா காட்டிக்கொண்டாலும், நடராஜன் எக்காரணம் கொண்டும் கட்சிப்பக்கமோ, அரசு பக்கமோ
நெருங்கக் கூடாது என்று தீர்மானமான உத்தரவை ஜெயலலிதா போட்டிருந்ததால்தான் சசிகலா அம்மாதிரியான
ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம். மேலும் சசிகலாவின் ஒவ்வொரு நகர்வும், ஒவ்வொரு
செயலும் நடராஜனின் திட்டப்படியே நடப்பதாகவும், அனைத்திற்குமே அவர்தான் சூத்திரதாரி
என்றும் கூறப்பட்டு வந்தது. இவ்வுண்மை ஜெயலலிதாவுக்குத் தெரியவில்லையா அல்லது தெரிந்தும்
ஒன்றும் செய்ய இயலாதவராக இருந்தாரா
என்பது என்றுமே புதிராகத்தான் இருந்துள்ளது.
தற்போது ஜெயலலிதாவின் மறைவு சசிகலா,
நடராஜன் மற்றும் இவர்களது குடும்பத்தினரை வெளியே பகிரங்கமாகக் கொண்டுவந்துள்ளது. ராஜாஜி
கூடத்தில் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைத்திருக்கப்பட்டபோது, அவருடைய
உடலைச் சுற்றி அந்தக் குடும்பத்தினர் மட்டுமே சூழ்ந்து நின்றுகொண்டிருந்தனர். முதல்வர்
பன்னீர்செல்வமும் மற்ற அமைச்சர்களும் ஜெயலலிதாவின் உடல் இருந்த இடத்திற்குச் செல்லும்
படிக்கட்டுகளில்தான் அமர்ந்திருந்தனர். சசிகலா குடும்பத்தினரின் முகபாவத்திலும் உடல்
மொழியிலும் பெரிய அளவில் சோகம் தெரியவில்லை. ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்ய நடந்த
இறுதிச்சடங்குவரை இந்த உடல்மொழி அப்படியே இருந்ததைத் தொலைக்காட்சிகளின் நேரலை ஒளிபரப்பில்
தெளிவாகவே பார்க்கமுடிந்தது.
பா.ஜ.க எதிர்கொள்ளும் சவால்
ஜெயலலிதாவின் மறைவு தமிழக அரசியலில்
ஒரு பெரும் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அ.தி.மு.க மிகுந்த கவர்ச்சியும் பெரும் மக்கள்
செல்வாக்கும் உள்ள தலைவரின் கட்டுப்பாட்டில் வளர்ந்த கட்சி. கட்சியின் நிறுவனரான எம்.ஜி.ஆர்
திட்டமிட்ட தொலைநோக்கம் கொண்டவர். தன் திரையுலக நடிப்பு மூலம் அப்பேற்பட்ட ஒரு மக்கள்
செல்வாக்கை வளர்த்திருந்தார். எம்.ஜி.ஆர். இறந்த பிறகு கட்சியின் மூத்த தலைவர்களிடமிருந்து
ஜெயலலிதா கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தார். அதன் விளைவாக கட்சி இரண்டாகப் பிளந்தது.
ஆயினும் குறைந்த காலத்திலேயே அந்த மூத்த தலைவர்கள் மற்றும் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி
அம்மாள் ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்று மற்ற தலைவர்களையும் ஒருங்கிணைத்து கட்சியைத்
தன் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்.
பல நோக்குகளில் எம்.ஜி.ஆரை மிஞ்சிய
ஜெயலலிதா, காலப்போக்கில் கட்சியின் பிரசாரம் மற்றும் அரசின் திட்டங்கள் ஆகியவற்றில்
அவருடைய பெயரையும், படங்களையும், பிம்பங்களையும் நீக்கிவிட்டுத் தன்னையே முன்னிறுத்தி,
தன்னை ஓர் அன்னையாகக் காண்பித்துக்கொண்டு, ‘அம்மா’ என்கிற முத்திரை கொண்ட ஒரு பிம்பத்தைப்
பெரிதாக வளர்த்துக்கொண்டார். அந்த அம்மா என்கிற பிம்பம் அவருக்கும் கட்சிக்கும் வெற்றிகளைத்
தேடித்தந்தது. அந்த பிம்பத்தின் சக்தியை உணர்ந்த மற்ற தலைவர்கள் அவரின் அடிமைகளாகவே
தொடர்ந்தனர்.
தற்போது ஜெயலலிதா இல்லாத சூழலில்
சசிகலா குடும்பம் தன்னுடைய சக்தி அனைத்தையும் பிரயோகித்துக் கட்சியைக் கைப்பற்றித்
தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்யும். செய்ய ஆரம்பித்து விட்டது. இதன் முதல்
கட்டமாக, ஜெயலலிதாவின் இறுதிச்சடங்குகளை அந்தக் குடும்பமே முன்னின்று நடத்தியது. சொல்லப்போனால்
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினத்திலிருந்தே அந்தக் குடும்பம் தன்னுடைய வேலைகளை
ஆரம்பித்துவிட்டது என்பதே உண்மை.
ஆயினும், 4ம் தேதி மாலையிலிருந்து
6ம் தேதி மாலை வரை, பகிரங்கமாகவும், திரைக்குப் பின்னும் நடந்ததாகச் சொல்லப்படும் விஷயங்களை
ஆழ்ந்து நோக்கும்போது, மத்திய அரசு ஒரு யுக்தியுடன் நடந்துகொள்வதாகத் தெரிகின்றது.
அ.தி.மு.கவில் பிளவு எற்படுவதை இன்றைய சூழலில் பா.ஜ.க விரும்பாது. குறைந்தபட்சம் வருகின்ற
2019 பாராளுமன்றத் தேர்தல் வரையிலாவது பிளவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் தன்னுடைய எதிர்காலத்தைச்
சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கான கடினமான பணிகள் பா.ஜ.கட்சிக்குக் காத்திருக்கின்றன.
ஜெயலலிதாவின் மறைவு தமிழகத்தில் ஒரு சிறந்த வாய்ப்பை பா.ஜ.கட்சிக்கு உருவாக்கியுள்ளது.
தான் விரும்பிய பன்னீர்செல்வத்தை முதல்வராக ஆக்கியது உண்மை என்றால், அதில் ஒரு சிறு
வெற்றியை பாஜக அடைந்துள்ளது எனலாம். இதன் அடுத்த கட்டமாக சசிகலா அ.தி.மு.கட்சியின்
பொதுச் செயலாளராக ஆவதைத் தடுக்க வேண்டும். சசிகலாவின் விசுவாசிகள் தவிர மற்றவர்கள்
அவர் பொதுச் செயலாளர் ஆவதை விரும்பமாட்டார்கள். ஏனென்றால் ஜெயலலிதா ‘அம்மா’ என்கிற
சக்தியால்தான் தாங்கள் இப்பேற்பட்ட நல்வாழ்வைப் பெற்றிருக்கிறோம் என்பது அவர்களுக்குத்
தெரியும். மேலும் சசிகலா ஜெயலலிதாவை எப்படித் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பதும்
அவர்களுக்குத் தெரியும். ஆகவே அவர்கள் சசிகலா பொதுச் செயலாளர் ஆவதை விரும்பமாட்டார்கள்.
ஆனால், இரண்டாம்கட்டத் தலைவர்களுக்குள் ஒற்றுமையும் புரிதலும் இல்லாத பட்சத்தில் சசிகலா
சுலபமாகப் பொதுச்செயலாளர் பதவியைக் கைப்பற்ற முடியும். அதற்கான அறிகுறிகளும் தெரிய
ஆரம்பித்துள்ளன.
இருப்பினும், கட்சியைக் கைப்பற்ற
சசிகலா பல்வேறு வழிகளில் முயற்சி செய்யும் பட்சத்தில் கட்சி பிளவு ஏற்படும் வாய்ப்பும்
உண்டு. அம்மாதிரி நடந்தால், எதிரக்கட்சிகள், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம்,
அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களைத் தன்பக்கம் இழுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடும்.
பா.ஜ.க தன்னுடைய விருப்பப்படி அ.தி.மு.கவில் பிளவு ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது என்று
தெரிந்தால், தி.மு.க பிளவை ஏற்படுத்த மேலும் முயற்சிக்கும். தேவைப்பட்டால் சசிகலா குடும்பத்துடன்
சேர்ந்துகொள்ளவும் செய்யும்.
எனவே பா.ஜ.க (மத்திய அரசு) சில
காரியங்களில் தீவிர கவனத்துடன் செயல்படவேண்டும். முதலாவதாக, சசிகலா குடும்பத்தைத் தனிமைப்படுத்த
வேண்டும். இரண்டாவதாக, அவர் பொதுச் செயலாளராக ஆவதைத் தடுக்க வேண்டும். மூன்றாவதாக,
சசிகலா குடும்பம் சட்டத்திற்குப் புறம்பாகவும் வருமானத்திற்கு அதிகமாகவும் சேர்த்துள்ள
சொத்துக்களையும், அவர்களுடைய பினாமி சொத்துக்களையும் வருமானவரித்துறையின் கண்காணிப்பில்
சோதனைக்கு உள்ளாக்க வேண்டும். சொத்துக்குவிப்பு
வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இறுதித்தீர்ப்புக்காக நிலுவையில் இருக்கிறது
என்பதையும்
கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவேளை சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராக ஆகிவிட்டால்,
பிறகு பா,ஜ.க நீண்ட காலத்திற்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாமல் விட்டதற்காகத்
தன்னைத்தானே நொந்துகொண்டிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்.
மற்றொரு புறம், தி.மு.கட்சியும்
நல்ல நிலையில் இருக்கிறது என்று சொல்ல முடியாது. அக்கட்சியின் முதல் பிரச்சினை கட்சித்தலைவர்
கருணாநிதியின் உடல்நலன். இரண்டாவது பிரச்சினை அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே தொடர்ந்து
கொண்டிருக்கும் பனிப்போரும், சச்சரவுகளும். மூன்றாவதாகக் கட்சியில் கனிமொழியின் நிலை.
ஸ்பெக்ட்ரம் ஊழல், கலைஞர் டிவி ஊழல் என்று ஊழல் வழக்குகளை சந்தித்துக்கொண்டிருக்கிறார்
அவர். நான்காவதாக மாறன் சகோதரர்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் ஊழல் வழக்குகள் மிகவும்
வலுவானவை. ஐந்தாவதாக தி.மு..கட்சியின் கூட்டாளியான காங்கிரஸ் கட்சி நாடெங்கிலும் பெரும்பாலான
மாநிலங்களில் படுதோல்வி அடைந்துள்ளது. தமிழகத்திலும் வெறும் பூஜ்யமாக உள்ளது. கருணாநிதியின்
இருப்பு மட்டுமே தி.மு.கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது. அரசியல் களத்தில்
அவர் இல்லாமல் போனால், ஸ்டாலினின் கீழ் பெரும்பாமையானவர்கள் அணிதிரண்டாலும், கட்சி
பலவீனமாகத்தான் காட்சி அளிக்கும். தி.மு.கட்சியின் மேற்கண்ட நிலையையும் பா.ஜ.க கவனத்தில்
கொள்ள வேண்டும்.
மற்ற எதிர்க்கட்சிகளான பா.ம.க.,
தே.மு.தி.க போன்ற கட்சிகள் சென்ற தேர்தல்களில் பெருந்தோல்வி அடைந்து ஒன்றுமில்லாமல்
போய்விட்டன. தமிழகத்தில் மூன்றாவது இடத்தில் இருந்த தே.மு.தி.க, சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில்
நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது. அக்கட்சியிலிருந்து பலர் தி.மு.கவுக்கும்
அ.தி.மு.கவுக்கும் போய்விட்டனர். கட்சியைப் போலவே கட்சித் தலைவர் விஜயகாந்தும் உடல்நிலை
பொருத்தவரைப் பலவீனமாக இருக்கிறார். மற்ற எதிர்க்கட்சிகளான ம.தி.மு.க, கம்யூனிஸ்டுகள்,
விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் போன்றவை வருகின்ற நாட்களில் ஏற்படும் அரசியல் மாற்றங்களைப்
பார்த்துக்கொண்டு தங்கள் நவடிக்கைகளை மேற்கொள்ளும். பா.ஜ.க இக்கட்சிகளின் நடவடிக்கைகளையும்
ஒரு பக்கம் கவனிக்க வேண்டும்.
பா.ஜ.க செய்ய வேண்டிய மிகவும் முக்கியமான
விஷயம் சசிகலாவின் கணவர் நடராஜனைக் கண்காணிப்பது. சசிகலாவின் கடந்தகால நடவடிக்கைகள்
அனைத்திற்கும் பின்னணியில் இருந்த ‘சூத்திரதாரி’ இவர்தான் என்பதையும், அவருடைய ஒவ்வொரு
நகர்வையும் முடிவு செய்தவர் இவர்தான் என்பதையும் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.
சசிகலா மூலமாக, ஜெயலலிதா, அரசு, கட்சி ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்தியவர் இவர்தான்.
விடுதலைப் புலி ஆதரவும், தமிழ்ப் பிரிவினைவாதிகளின் ஆதரவும் கொண்டவர் இவர். திராவிட
இனவெறியாளர்களிடமும் நட்பு பாராட்டுபவர். இவரைப் பக்கத்தில் நெருங்க விடாமல் தள்ளி
வைத்தது ஜெயலலிதா செய்த நல்ல விஷயங்களுள் ஒன்று. மத்திய அரசு இவரைத் தீவிரக் கண்கானிப்பில்
வைத்திருக்க வேண்டும்.
ஜெயலலிதாவின் மறைவும் அதன் விளைவாக அ.தி.மு.கட்சி உடைவதும் பொதுவாக இந்தியாவுக்கும்,
குறிப்பாகத் தமிழகத்துக்கும் நல்லதல்ல.
தமிழகத்தில்
உறுதியற்ற நிலை நிலவினால், அது மொழி வெறி, இன வெறி, பிரிவினைவாத, தேச விரோத சக்திகளுக்குப்
பெரும் வாய்ப்பாக முடிவதோடல்லாமல், அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகள், கிறிஸ்தவ மதமாற்ற
சக்திகள், வெளிநாட்டு நிதியில் தேச விரோத வேலைகள் செய்யும் NGOக்கள், நக்ஸலைட்டு மற்றும்
மாவோயிஸ்டுகள் ஆகியோருடன் கூட்டணி கொண்டு செயல்படுவார்கள். அது தமிழகத்துக்குப் புதிதல்ல
என்றாலும், பேராபத்தில் முடியும் என்பதில் சந்தேகமில்லை.
மத்திய அரசும் பா.ஜ.கட்சியும் தற்போதைய
சூழ்நிலைக்கு ஏற்றார்போல் விழிப்படைந்து உயிர்த்தெழுந்து களத்தில் இறங்கவேண்டியது அவசியம்.
(உதய் இந்தியா வலைத்தளத்தில் தமிழ்ச்செல்வன்
எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழ் வடிவம்.)
சான்றுகள் / ஆதாரங்கள்: –

Posted on Leave a comment

குருவை மிஞ்சிய சிஷ்யை – ஜெ. ராம்கி

அலுமினிய அண்டாவை ஒற்றை
ஆளாக நகர்த்தி வைத்துவிட்டு, வகுப்புக்கு வந்தார் சந்திரா என்னும் சத்துணவு டீச்சர்.
‘இன்னிக்கு நாம படிக்கப்போற அதிகாரம், கள்ளாமை. அப்படீன்னா என்ன தெரியுமா?’
அது 1984. பள்ளிக்கூடத்து
நாட்கள் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் மதிய உணவு முடிந்ததும்
திருக்குறள் வகுப்பு ஆரம்பமாகிவிடும். ‘வாரம் ஒரு அதிகாரம் சொல்லிக்குடுக்கணும்னு ஜெயலலிதா
உத்தரவு போட்டிருக்கா’ என்று சத்துணவு டீச்சர், கிளாஸ் டீச்சரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
தமிழ்நாடெங்கும் சத்துணவுக் கூடங்களுக்கு ஜெயலலிதா மேற்கொண்ட அதிரடி விசிட் அப்போது
பரபரப்பான விஷயமாகப் பேசப்பட்டது.

சத்துணவுத் திட்டக்குழு
உறுப்பினராக ஜெயலலிதாவின் அனுபவங்களே, பின்னாளில் ‘அம்மா உணவகம்’ வரை வரக் காரணமாக
இருந்திருக்கவேண்டும்.
1980
இறுதியில் எம்ஜிஆரின் நெருக்கமான வட்டாரத்துக்குள் வந்துவிட்டாலும், அதிகாரபூர்வமாக
அதிமுகவில் சேர சத்துணவுத் திட்டமே காரணமாக இருந்தது.
காமராஜர் காலத்திலிருந்து செயல்பட்டு வந்த
திட்டம், எம்ஜிஆரால் தூசு தட்டப்பட்டு, 100 கோடி ரூபாய் செலவில் இன்னும் பல மாணவர்களைச்
சென்றடையும்படி மாற்றப்பட்டிருந்தது. தமிழ் சினிமாவினர் அதை மக்களிடம் கொண்டு சென்றார்கள்.
பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவைக் கடத்திக்கொண்டு போகும் லாரி டிரைவரை வழிமறித்து
சினிமாவில் உதைத்துக் கொண்டிருந்தார் பாக்யராஜ். சத்துணவு சாப்பிட்டால் கண்பார்வை கிடைக்கிறது,
காது கேட்கிறது என்றெல்லாம் சினிமா மேடைகளில் பேசினார் பாரதிராஜா. எம்ஜிஆர் அரசுக்குப்
போதுமான விளம்பரம் கிடைத்தது. ஆனால், செயல்பாடு?

சத்துணவுத் திட்டத்தின்
தூணாக இருந்தவர் ஜெயலலிதா. திட்டத்திற்கான நிதிஒதுக்கீடு செய்வதில் ஏகப்பட்ட சிக்கல்கள்
இருந்தன. டெல்லியின் ஏராளமான கேள்விகளை ஜெயலலிதாதான் எதிர்கொண்டார். காமராஜர் கொண்டுவந்த
திட்டம்தானே, இதிலென்ன புதுமை என்று கிண்டலடித்தது திமுக. சத்துணவுத் திட்டத்தை பித்தலாட்டம்
என்றார் கம்யூனிஸ்ட் கல்யாண சுந்தரம். அரிசி போதவில்லை என்று எம்ஜிஆர் டெல்லியிடம்
முறையிட்டபோது, சத்துணவுத் திட்டத்தின் மூலம் அரிசியை வீணாக்குகிறார்கள் என்றது காங்கிரஸ்.
எல்லாவற்றையும் சமாளித்தது ஜெயலலிதாதான்.

அதிமுக பேச்சாளர்களுக்கு,
சத்துணவுத் திட்டம் குறித்துப் பயிலரங்கு நடத்தினார். பள்ளி ஆசிரியர்களால் நடத்தப்பட்டு
வந்த சத்துணவுத் திட்டத்தில் இருந்த குளறுபடிகளை நீக்கி, ஒவ்வொரு பள்ளி வளாகத்திலும்
சத்துணவு மையத்தை அமைத்தார். சத்துணவு டீச்சர் பொறுப்பேற்றுக் கொண்டார். தனி கட்டடம்,
பாத்திரங்கள், பண்டங்கள், ஆயாக்கள், அரிசி, பருப்பு என அதுவொரு தனி அமைப்பாக மாறியது.
அடுத்த கட்டமாக, பாலர் பள்ளி உருவானது. கர்ப்பிணிகளுக்கும் முதியோர்களுக்கும் மதிய
உணவு இலவசமாக இங்கிருந்து தரப்பட்டது. திருக்குறள் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. பின்னாளில்,
ஜெயலலிதா முதல்முறையாக முதல்வரானபோது சத்துணவு ஊழியர்கள், அரசு ஊழியர்களாக்கப்பட்டார்கள்.
சத்துணவுக் கூடங்கள், பள்ளிக் கூடங்களுக்கு இணையான எழுச்சியைப் பெற்றன.

ஜெயலலிதா என்னும் அதிரடி
ஆட்டக்காரர் ஆடிய வெற்றிகரமான முதல் ஆட்டம் அது. அரசியலோடு அரசு நிர்வாகமும் அவருக்குப்
பழக்கப்பட்டிருந்தது. அரசியல், அவருக்குக் கனவாகக் கூட இருந்ததில்லை. 1974ல் திரையுலகத்திலிருந்து
காணாமல் போன ஜெயலலிதா, ஐந்தாண்டுகள் கழித்து எழுத்தாளராகத்தான் அறிமுகமானார். துக்ளக்கில்
வாராவாரம் தொடர் கட்டுரைகள் எழுதினார். அதிலும் அதிரடிதான்.
ஜெயப்பிரகாஷ் நாராயணன்
மறைவுக்கு நாள் முழுவதும் ரேடியாவில் சோக கீதம் இசைக்கப்பட்டது. இதெல்லாம் போலித்தனமான
அஞ்சலிகள் என்று எழுதினார். ‘மதுவிலக்கைப் பொருத்தவரை எம்ஜிஆரும் கருணாநிதியும் ஒன்றுதான்.
ஆட்சியில் இல்லாதவரை மதுவிலக்கு வேண்டுமென்பார்கள். ஆட்சிக்கு வந்ததும் மறந்துவிடுவார்கள்’
என்று விமர்சித்தார். இந்திய மருத்துவர்களின் அலட்சியப் போக்கிற்குத் தரப்படவேண்டிய
தண்டனை, ஜோசியத்தின் மீது கொள்ள வேண்டிய நம்பிக்கைகள் எனப் பொதுப்புத்தி தாண்டிய விஷயங்களை
எழுதியவர், கடைசிவரை சினிமா பற்றி எழுதவேயில்லை.


முழுநேர எழுத்தாளராவது
என்கிற முடிவில் ஜெயலலிதா இருந்திருக்கலாம். கலைஞருக்கு குங்குமம் போல், எம்ஜிஆருக்கும்
ஒன்று ஆரம்பித்தாகவேண்டும் என்பது வலம்புரிஜானின் விருப்பம். ‘தாய்’ பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டது,
வலம்புரிஜான் ஆசிரியரானார். ‘எனக்குப் பிடித்தவை’ என்னும் தலைப்பில் ஜெயலலிதா நிறைய
கட்டுரைகள் எழுதினார். வலம்புரிஜானுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையேயான முட்டல், மோதல்களில்
சிக்கிக்கொண்ட எம்ஜிஆருக்கு வேறு வழி தெரியவில்லை. ‘தாய்’ நிறுத்தப்பட்டது.

தமிழ்நாடெங்கும் ஒவ்வொரு
ஊராகச் சென்று அதிமுக கொடியை ஏற்றி வைத்த நாஞ்சில் மனோகரன் போன்ற உற்சவர்கள் கட்சியை
விட்டு விலகியிருந்த காலம் அது. இந்திரா காந்தியே முன்வந்து தஞ்சாவூரில் போட்டியிட
விருப்பம் தெரிவித்தபோதும், மெரார்ஜி தேசாய்க்குப் பயந்து எம்ஜிஆர் நழுவினார். கோபம்
கொண்ட இந்திரா, திமுகவுடன் கூட்டணி அமைத்து, டெல்லி கோட்டைக்குச் சென்றார். உள்ளூர்
அரசியல் முதல் டெல்லி அரசியல்
வரை சுழலில் மாட்டிக்கொண்ட எம்ஜிஆருக்கு, சுறுசுறுப்பான இரண்டாம் கட்டத் தலைவர்கள் தேவைப்பட்டார்கள்.
ஜெயலலிதாவின் எழுத்தில்
இருந்த துணிச்சலையும், அதில் தொனிக்கும் சாமானியனின் குரலையும் எம்ஜிஆர் புரிந்துகொண்டார்.
ஜெயலலிதா பேச்சாளராக்கப்பட்டார். கட்சிக்கு மட்டுமல்ல, கழக வரலாற்றிலும் அதுவொரு முக்கியமான
திருப்பம். அதுவரை கழக மேடைகள் அடுக்குமொழி வசனங்களைப் பேசும், அலங்கார இடமாகவே இருந்து
வந்தன. சினிமா நட்சத்திரங்கள், குறிப்பாக நடிகைகள் முன்னிறுத்தப்பட்டதில்லை. எம்ஜிஆர்
அதை மாற்றியமைத்தார்.
ஜெயலலிதா, தலைமையுரை மட்டுமல்ல,
சில மேடைகளில் அவரே ஒரே பேச்சாளராகவும் ஆனார். அவரது பேச்சுகளில் கருணாநிதி எதிர்ப்பு
பிரதானமாக இருந்தாலும், தேசிய அரசியலையும் தொட்டுக்காட்டினார். வழக்கமான அரசியல் மேடைப்பேச்சுகளிலிருந்து
முற்றிலும் மாறுபட்டிருந்தது. அடுக்குமொழி வசனங்கள் இல்லை. சிலேடையும் இல்லை. பாமர
மக்களின் மனதுதான் அவரது இலக்கு. ‘கிருஷ்ணா நதிநீரை தமிழ்நாட்டுக்கு கெண்டு வர நம்முடைய
முதல்வர் ஆந்திர முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு இரவு திரும்புவார். விடிந்தால்
வேறொரு முதல்வர் இருப்பார். அவரோடும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பி வருவார்.
மறுநாள் வேறொருவர் ஆந்திர முதல்வராக இருப்பார். நம் முதல்வர் என்னதான் செய்வார் பாவம்!’
என்றார். கிண்டல், குத்தல், ஆவேசம், அதுதான் ஜெயலலிதா.

நம்பர் டூவாக இருந்தாலும்,
அவ்வப்போது கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு அவமானங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது.
படுதோல்வி அடையும் என்று கணிக்கப்பட்டபோதும், 1984ல்அதிமுக பெற்ற பெருவெற்றிக்கு காரணமாக
இருந்தது ஜெயலலிதாவின் அதிரடி பிரசாரம்தான். எம்ஜிஆர் அமெரிக்காவிலிருந்து திரும்பியபோது,
மீனம்பாக்கம் விமானநிலையத்தில் அவரை தூரமாக நின்று கூடப் பார்க்க முடியாத ஏமாற்றத்தோடும்,
எதிர்காலம் பற்றிய கவலைகளோடும் போயஸ்கார்டனுக்கு திரும்பிய அதே ஜெயலலிதா, பின்னாளில்
நான்கு முறை அதிமுக ஆட்சியில் ஏறுவதற்குக் காரணமாக இருந்தார்.
ஜெயலலிதாவின் துணிச்சலும்
தன்னம்பிக்கையும், அவரது அரசியல் எதிரிகளாலும் வியக்கப்பட்ட விஷயம். தன்னுடைய படங்களைப்
பற்றி, கடுமையாக விமர்சனம் செய்த ஒரே சினிமாக்காரர் அவராகத்தான் இருக்க முடியும். அதையும்
சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது செய்தவர். ஜெயலலிதா நடிக்க வருவதற்கு முன்பு படப்பிடிப்பு
தளங்களில் நடிகைகளின் சுயமரியாதை கெட்டுக்கிடந்தது. படப்பிடிப்பு இல்லாத நேரங்களில்
கால்மேல் போட்டபடி புத்தகம் படித்த ஜெயலலிதாவின் கலகக்குரல், அறுபதுகளின் தமிழ்ச் சமூகத்திற்கு
அவசியம் தேவைப்பட்டது.

சினிமா மட்டுமல்ல, சினிமாவுக்குப்
பின்னணியில் உள்ள விஷயங்களையும் பொதுவெளியில் விமர்சிக்க அவர் தயங்கியதேயில்லை.
இந்தி சினிமா நாயகர்களுக்கும், தமிழ் சினிமா நாயகர்களுக்கும்
உள்ள வித்தியாசம் பற்றி ஜெயலலிதாவிடம் கேட்கப்பட்டது. சட்டென்று பதில் சொன்னார், ‘ஜனநாயகத்துக்கும்
சர்வாதிகாரத்துக்கும் உள்ள வித்தியாசம்.
அவ்வளவுதான்.’ எம்ஜிஆர் மட்டுமல்ல, என்.டி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமனோடு
நடித்துக்கொண்டிருந்த காலத்திலும் தன்னுடைய தனித்தன்மையை நிரூபித்தவர். 1964 தொடங்கி
பத்து ஆண்டுகள் நடித்திருந்தாலும் 100 நாட்கள் ஓடிய 4 படங்களும், 3 வெள்ளி விழா படங்களில்
மட்டுமே சம்பந்தப்பட்டிருந்தார். ஆண்டுக்கு சராசரியாக 15 படங்கள் நடித்தாலும், அவர்
சினிமாவில் உச்சத்தில் இருந்த காலம்வெறும் 6 ஆண்டுகள் மட்டுமே.

1972 மே மாதம், வேதா நிலைய
கிரஹப்பிரவேசம். சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோது கட்ட ஆரம்பித்த வீடு. திரையுலகம்
திரண்டு வந்து வாழ்த்தியது. வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட எம்ஜிஆர், கடைசிவரை வரவேயில்லை.
பிற்பகலுக்குப் பின்னர் வீடே வெறிச்சோடி கிடந்தது. ஜெயலலிதாவின் அம்மா சந்தியா பார்த்துப்
பார்த்து கட்டிய வீடு. ஆனால், வீடு கட்டி முடிவதற்குள் சந்தியாவின் வாழ்க்கை முடிந்துவிட்டது.
ஜெயலலிதா இப்போது ஒரு தனி ஆள்.

அடுத்து வந்த இருபதாண்டுகள்,
புயலில் சிக்கிய தோணியாக இருந்தது ஜெயலலிதாவின் வாழ்க்கை. அவரது வாழ்க்கைப் பாடத்தின்
முக்கியமான அத்தியாயங்கள் இக்காலகட்டத்தில்தான் புதைந்து கிடக்கின்றன. அவற்றை முழுவதுமாக
வெளிக்கொண்டுவர அவர் ஒருவரால் மட்டுமே முடியும்.
திட்டமிட்டு ஒதுக்கப்பட்டாலும்,
கட்சித்தொண்டர்கள் அவரது பக்கம்தான் இருந்தார்கள். கருணாநிதி எதிர்ப்பு என்பதைப் பரிபூரணமாக
அவரால் மட்டுமே முன்னெடுக்க முடிந்தது. உதிர்ந்த ரோமங்கள் என்று விமர்சித்தாலும், அவரைத்
தேடி வந்தார்கள். தலைவியாக ஏற்றுக்கொண்டார்கள். சுற்றி கூட்டம் கூடி நின்றாலும், மனதளவில்
அவர் தனிமையின் சிறையில் இருந்தார்.

எழுபதுகள் தொடங்கி, மாநில
சுயாட்சி பற்றி திமுக பேசாத கூட்டங்கள் இல்லை. காங்கிரஸுடன் கூட்டணியில் இல்லாத காலங்களில்
திமுகவும், அதிமுகவும் அவ்வப்போது பேசுவதுண்டு. மாநில உரிமைகள் குறித்து ஒவ்வொரு முறையும்
ஜெயலலிதாவிடமிருந்து உரத்த குரல்களே எழுந்தன. அது டெல்லியைக் கிடுகிடுக்க வைத்து, சென்னையை
நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தது. ஆணாதிக்க அரசியல் உலகில், ஆண்களைக் குனிய வைத்து,
தரையில் விழுந்து வணங்க வைத்தது விமர்சிக்கப்பட்டது. கேலிக்கூத்தாக்கப்பட்டது. காலப்போக்கில்
பார்வை மாறியிருக்கிறது. கருணாநிதியை விட ஜெயலலிதாவை அதிகமாக விமர்சித்த எழுத்தாளர்
வாஸந்தி, ‘அதுவொரு உத்தி. ஆண்களைச் சற்று எட்ட நிறுத்தவேண்டிய அவசியம் இருந்தது. ஆண்
உலகம் அவரை அவமானப்படுத்தியதற்கான பரிகாரம் அது‘ என்கிறார்.

தமிழ்நாட்டு அரசியல் வானில்,
முரண்பாடுகளின் மொத்த உருவமாக ஜெயலலிதா இருந்தார்.
அவரது முன்கோபம், கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கலைத்துப்போட்டது.
புதிய அரசியல் சமன்பாடுகளை ஆரம்பித்து வைத்தது. முன்னுப்பின் முரணான அரசியல் நடத்தினாலும்
அதை உறுதியுடன் நடத்துவதில் வெற்றி பெற்றிருந்தார். தமிழ் ஈழம், பாஜகவுடன் கூட்டணி
போன்ற விஷயங்களில் அவரது உண்மையான நிலைப்பாடு அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம். அவரது
பிடிவாத குணமும், அசட்டுத்துணிச்சலும் ஆயிரம் விமர்சனங்களை ஏற்படுத்தினாலும் ஆரோக்கியமான
வழியையும் திறந்துவிட்டிருந்தது. யாரும் எதிர்க்கத் துணியாத நேரத்தில் விடுதலைப்புலிகளை
எதிர்த்தார். சட்டம், ஒழுங்கைத் தொலைத்து, ஆயுதக் கலாசாரத்தில் மூழ்கிக்கொண்டிருந்த
தமிழகத்தை மீட்டெடுத்தார். எம்ஜிஆரால் நிகழ்த்தவே முடியாத சாதனை.

ஒவ்வொரு வீழ்ச்சிக்குப்
பின்னரும் ஜெயலலிதா மாறிப்போனார் என்பதை யாரும் நம்பத் தயாராக இல்லை. ஆனால், ஒரு சில
விஷயங்களில் அவர் மாறாமல் இருந்தது, தமிழ்நாட்டிற்குக் கிடைத்த வரம். குறிப்பா பெண்கள்
நலனும், பசித்தவர்களுக்கு சோறிடும் ஒவ்வொரு திட்டங்களும், தொண்ணுறுகள் தொடங்கி அவர்
கைக்கொண்டவை. தொட்டில் குழந்தைகள் திட்டம் தொடங்கி, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பெண்
குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்ட நிதியுதவி வரை பெண்கள் நலனுக்கான திட்டங்களை வேறெந்த
முதல்வர்களும் முன்னெடுத்ததில்லை. அவரது ஆட்சியில்தான் மதிய உணவுத் திட்டம், காலை உணவுத்திட்டமாகவும்
விரிவுபெற்றது. வழிபாட்டுத் தலங்களில் நாள்தோறும் அன்னதானம் ஆரம்பமானது. இனம், மதம்,
மொழி பேதமின்றி பசி தீர்க்கும் அம்மா உணவகங்களை ஏற்படுத்தியது கடைசிக்காலங்களில் அவர்
செய்த பெரும் சாதனை.
ஜெ
யலலிதாவே சொல்வது போல்
வாரிசாக வருவதற்கான எந்தப் பாதையையும் எம்ஜிஆர் உருவாக்கித் தரவில்லை. அரசியலுக்கு
அழைத்து வந்தாலும், அந்தப் பாதையை அவர் எளிதாக்கித் தரவில்லை. எம்ஜிஆர் உதாசீனப்படுத்தியிருந்தாலும்
ஜெயலலிதா தளர்ந்துவிடவில்லை. ஒருவேளை, எம்ஜிஆர் மீது கோபம்கொண்டு, வேறு கட்சிகளில்
இணைந்திருந்தால் ஜெயலலிதா எப்படி இருந்திருப்பார்? நம்மால் கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியாது.

ஜெயலலிதா, நவீன அரசியல்
கண்டெடுத்த அற்புதம். அதுவரை கொள்கை என்னும் முகமூடியில் தனிமனித அரசியலே அரங்கேறிக்கொண்டிருந்தது.
போலித்தனத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, தேர்தல் அரசியலையும், சீட் பேரங்களையும் வெளிப்படையாக
முன்னிறுத்தினார். ஆட்சித் தலைமை வேறு, அரசியல் தலைமை வேறு என்பதை அழுத்தமாக பதிவுசெய்திருக்கிறார்.
காமராஜர், கருணாநிதி போன்ற அரசியல்வாதிகள், சிறந்த ஆட்சியாளர்களாகவும் இருந்த காரணத்தால்
மட்டுமே வரலாற்றில் நிலைக்க முடிந்தது. அண்ணாதுரை, எம்ஜிஆரால் அத்தகைய நிலையை எட்டமுடியவில்லை.
ஆனால், ஜெயலலிதாவால் அதை அநாயசமாக செய்யமுடிந்தது. ஜெயலலிதா, இனி ஜெயில் லலிதா என்ற
நிலை வந்தபோதுதான் அப்படியொரு விஸ்வரூபமெடுத்தார்.

சகலகலாவல்லியாக அவரை முன்னிறுத்தும்
அஞ்சலிகள் இன்னும் நிறைய வரக்கூடும். அதற்குத் தகுதியானவர்தான். அவரை விடச் சிறப்பான
ஆட்சியாளர்களாக சந்திரபாபு நாயுடுவையும், மம்தா பானர்ஜியையும் நிறுவமுடியும். ஆனால்,
ஜெயலலிதா வாழ்ந்த வாழ்க்கை, சந்தித்த சோதனைகள், அவரது தனிமையின் துயரோடு இணைத்துப்
பார்க்கும்போது, ஒரு புதிய சித்திரம் கிடைக்கும். அது முற்றிலும் ஜெயலலிதாவுக்கு மட்டுமே
சொந்தமானதாக இருக்கும். 
Posted on Leave a comment

ஆசிரியர் சோ – B.K. ராமசந்திரன்

வரலாற்றின் பக்கங்களில் இந்தியா என்றுமே ஒரு கொந்தளிப்பான நாடாகத்தான் இருந்துவந்தது. உலக வரலாற்றில் மிக முக்கியமான நாகரிகமாக, உலக வர்த்தகத்தில் முக்கியமான பங்கேற்பாளராக, அளவற்ற செல்வம் நிறைந்த நாடாக, அதனாலே அந்தச் செல்வத்தைக் கவர நினைத்த பலருக்கு ஒரு கனவு தேசமாக, மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்பாளர்களால் படையெடுக்கப்பட்ட தேசமாக, அதற்கெதிராகத் தன் வாழ்வுக்கான போராட்டத்தை நடத்திய தேசம் என்றே இந்த நாட்டின் வரலாற்றைச் சொல்லிவிடலாம்.

இந்தக் கொந்தளிப்புக்கு சிறிதும் குறைந்ததல்ல சுதந்திரம் அடைந்த பிறகான வரலாற்றின் காலகட்டமும். நாட்டின் தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டதும், ஊழலுக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் நாடெங்கும் போராட்டங்கள் வெடித்ததும், பதவியில் இருக்கும் பிரதம மந்திரியின் தேர்தல் வெற்றி அலகாபாத் நீதிமன்றத்தின் புகழ்பெற்ற தீர்ப்பின் மூலம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து பதவியைத் தக்கவைக்க நாடெங்கும் நெருக்கடி நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டு, மக்களின் உரிமைகள் எல்லாம் மறுக்கப்பட்டு, எதிரணியில் இருந்த தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதும் என்று, அறுபதுகளின் கடைசி வருடம் முதல் எழுபதுகளின் பாதிவரை நாடெங்கும் ஒரு கொந்தளிப்பான நிலை நிலவியது.

“நாங்கள் அவர்களை மண்டியிடச் சொன்னோம், அவர்கள் தவழவே செய்தார்கள்.” இது அன்றைய காலகட்டத்தின் பத்திரிகைகளைப் பற்றிய அதிகாரத்தின் கூற்று. அரசாங்கத்தின் கொள்கையாக தனிமனிதர்களின் துதிபாடல் நாடெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. “இந்தியாவே இந்திரா, இந்திராவே இந்தியா” என்று துதிபாடிகள் இந்திராவின் புகழ்பாட, ஏழ்மையை ஒழிப்போம் என்ற கோஷங்களும், பிரதம மந்திரியின் இருபது அம்சத் திட்டமும், அவர் மகனின் ஐந்து அம்சத் திட்டமும் பொன்னுலகைக் கொண்டுவரும் என்ற பிம்பங்களும் கட்டமைக்கப்பட்ட காலம் அது.

இந்தப் புலத்தில் தனித்து ஒலித்த குரல் சோ ராமஸ்வாமியின் குரல். பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் பிறரை மிரட்டியும், யார் பதவிக்கு வரவேண்டும் யார் வரக்கூடாது என்று தரகு வேலை பார்த்தும், நாட்டின் நலனை, நாட்டு மக்கள் நலனைக் காற்றில் பறக்கவிட்டவர்களுக்கு மத்தியில், தனக்கென ஒரு தனி வழியை, தான் நல்லது என்று நினைக்கும் வழியைத் தேர்ந்தெடுத்து அதில் நடந்தவர் சோ என்பது இன்றையத் தலைமுறைக்கு ஆச்சரியம் அளிக்கக் கூடியதாகத்தான் இருக்கும்.

 நாடக நடிகராக, திரைப்பட நடிகராக, கதாசிரியராக, இயக்குநராக என்று பல முகம் கொண்டவரின் எல்லாப் பாதைகளும் இறுதியாகச் சங்கமித்தது, துக்ளக் பத்திரிகை ஆசிரியர் என்ற இடத்தில். அதிகாரத்தின் மிக நெருக்கமான இடங்களில் இருந்தபோதும் அதை அவர் தனிப்பட்ட பலனுக்காக அதைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை அவர்மீது யாரும் சுமத்த முடியாததே அவரின் தனிவாழ்வின் நேர்மைக்குச் சான்றாகும்.

அரசின் எந்தப் பதவியிலும் இல்லாத சஞ்சய் காந்தி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அவர் நினைவாக ஒரு தபால்தலை வெளியிடப்பட்டது. அதைக் கண்டிக்கும் விதமாக அந்த விபத்தில் மரணமடைந்த கேப்டன் சுபாஷ் சாஸ்சேனாவின் தபால் தலையை துக்ளக்கில் வெளியிட்டார் சோ. எம்ஜியார் ஆட்சியைக் கேலி செய்து அவர் எழுதிய ‘சர்க்கார் புகுந்த வீடு’ என்ற தொடர் மிகவும் புகழ்வாய்ந்தது.

இந்து மஹா சமுத்திரம், மஹாபாரதம் பேசுகிறது, வால்மீகி ராமாயணம், எங்கே பிராமணன் ஆகிய புத்தகங்கள் ஒரு பண்பாட்டுத் துறையின் ஆரம்பநிலை வாசகன் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்கள்.

விளையாட்டாகத்தான் அவர் பத்திரிகை ஆரம்பித்தார், ஆனால் அதைத் தொடர்ந்து நடத்தவேண்டிய கட்டாயத்தை கருணாநிதி அவர்கள் ஏற்படுத்தித் தந்தார். துக்ளக் பத்திரிகையைப் பறிமுதல் செய்து, கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்குப் புத்தகம் வாங்கவைத்த பெருமை அன்றைய முதல்வரான கருணாநிதியையே சாரும். இப்படிப்பட்ட கைங்கரியத்தைச் செய்தவரைத்தான் மாபெரும் அரசியல் அறிஞர் என்றும், மூத்த பத்திரிகையாளர் என்றும் கருத்துரிமையின் காவலர் என்று சிலர் சொல்லித் திரிகின்றனர்.

அதையும் தாண்டி நெருக்கடி நிலைமையைக் கருணாநிதி எதிர்த்ததைப் பாராட்டி, மத்திய அரசை விமர்சிக்கும் உரிமை கிடைக்கும்வரை மாநில அரசை விமர்சிக்கப் போவது இல்லை என்று சொன்னவர் சோ. நெருக்கடி நிலையின் போது பத்திரிகைகள் தணிக்கைக்குட்பட்ட பின்னரே வெளிவருதை எதிர்க்கும் பொருட்டு, தணிக்கைத்துறை அதிகாரிகளிடம், “என் வேலையை நீங்கள் செய்கிறீர்கள், அதனால் எனது சம்பளத்தையும் நீங்கள்தான் வாங்கிக் கொள்ளவேண்டும்” என்று கூறித் திகைக்க வைத்தவர்.

அவர் ஒரு பழமைவாதி என்று சனாதனவாதி என்று சிலர் கூறுகின்றனர். அவர் என்றுமே தனது கொள்கைகளை மறைத்து வேஷம் போட்டதில்லை. தனக்குச் சரி என்று பட்டதைச் சொன்னார், எழுதினார். இந்த நாட்டுக்கென்று ஒரு பாரம்பரியம் உண்டு, அதற்கு ஒரு சிறப்பு உண்டு என்று அவர் உளமார நம்பினார். போலி அறிவுஜீவிகள் போல நடித்திருந்தால் அவருக்கும் உலகளாவிய புகழ் கிடைத்திருக்கும், அது தனக்குத் தேவையில்லை என்று ஒதுக்கினார். தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார்.

பெண்ணுரிமையை அவர் ஆதரிக்கவில்லை என்று சொல்வார்கள். எது உரிமை என்பதில் சோவுக்கு நிறைய கருத்துகள் இருந்தன. கட்டற்ற உரிமை என்பது எங்குமே இருக்க முடியாது. எல்லா உரிமைகளும் கடமைகளின் மீது அமைக்கப்பட்டவைதான். பெண்கள் புகைபிடிப்பதும், மது அருந்துவதும், கட்டற்ற பாலியல் உறவு வைத்துக் கொள்வதும்தான் பெண்ணுரிமை என்று கூறுபவர்களை அவர் ஒருநாளும் ஏற்கவில்லை.

சோ, துக்ளக் இதழைத் தன் எண்ணங்களைக் கூறப் பயன்படுத்தினாலும், எதிர்க்கருத்துக்களுக்கும் இடமளித்தே வந்தார். அதனால்தான் வலதுசாரி கருத்துடைய குருமூர்த்தியின் கட்டுரைகளும், அதற்கு எதிரான கம்யூனிஸ்ட் தலைவர்களின் கட்டுரைகளும் ஒரே சமயத்தில் துக்ளக்கில் வெளிவந்தன. பத்திரிகை என்பது அறிவார்ந்த விவாதங்களை உருவாக்கும் இடமாக இருக்கவேண்டும், அதற்கு எதிரும் புதிருமான தகவல்களைத் தரவேண்டும் என்பது சோவின் கருத்தாக இருந்தது.

பல்வேறு தலைவர்கள் அவர்களது அரசியல் வாழ்க்கையைப் பற்றிய சித்திரங்களை துக்ளக்கில் எழுதி உள்ளனர். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மூத்த பிரசாரகர் சூரியநாராயணராவ் ஜிக்கும் அப்துல் சமது அவர்களுக்குமான உரையாடல் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பற்றிய ஒரு தெளிவை மக்களுக்குத் தந்தது.

எண்பதுகளில் விடுதலைப் புலிகளைப் பற்றித் தவறாகச் சொன்னாலே கிடைக்கும் வசைகளைத் தாண்டி, அவர்கள் ஒரு தீவிரவாத இயக்கம்தான், அவர்களால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்காது என்று எச்சரித்தவர் சோ மட்டும்தான். அதைத்தான் இன்று கழகக் கண்மணிகளும் கூறுகின்றனர் என்பதுதான் நகைமுரண்.

முழுவாழ்விலும் பிரிவினை சக்திகளுக்கு எதிராகவே சோ நின்றிருந்தார். ஹிந்து மதத்தைத் தாக்குவது ஒன்றே பகுத்தறிவு என்று பேசியவர்களின் இடையே நெற்றி நிறைய திருநீற்றோடு காட்சி அளித்தார். தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அவர் எடுத்த நிலைப்பாடுகள் என்னால் ஏற்கமுடியாதவைதான் என்றாலும், எழுத்துக் கூட்டி வாசிக்க ஆரம்பித்த நாள்முதலாகப் பல வருடங்களாக நான் படித்த பத்திரிகையின் ஆசிரியர், பெருவாரியான மக்களின் கருத்து எப்படி இருந்தாலும் தன் நெஞ்சுக்கு சரியென்று தோன்றியதை எதற்கும் அஞ்சாமல் எடுத்துரைக்க வேண்டியதின் அவசியத்தைப் புரியவைத்தவர். நடுநிலைமை என்பது எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது அல்ல, மாறாக நியாயத்தின் பக்கம் நிற்பதுதான் என்று மீண்டும் மீண்டும் அறிவுறுத்தியவர் அவர்.

சிலநேரங்களில் ஆசிரியர்கள் அந்த இடத்திலேயே நின்றுவிடலாம். அவர்களைத் தாண்டி, அந்த ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்தவற்றில் சரியானவற்றை மாணவர்கள் முன்னெடுப்பதுதான், மாணவர்கள் ஆசிரியர்களுக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும்.

சென்று வாருங்கள் ஆசிரியரே. உங்களுக்கான இடம் இங்கே நிரப்பப்படாமலே இருக்கும்.

Posted on Leave a comment

சோவைப் பற்றிப் பேசுகிறேன்… – சுப்பு

தொலைபேசி அல்லது கைபேச மணி அடித்து நம்மை எழுப்பலாம். அது அனுபவ சாத்தியம்தான்.
ஆனால், சிலசமயங்களில் விளக்கமுடியாத காரணங்களால் குறுஞ்செய்திகூட நம்மை எழுப்பிவிடுகிறது.
07:12:2016 அன்று அதிகாலை ஒரு குறுஞ்செய்தி என்னை எழுப்பிவிட்டது. துக்ளக் இதழின் ஆசிரியர்
சோ.ராமசாமி இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தியை மாப்பிள்ளை அனுப்பியிருந்தார்.

சோ நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தாலும், அலுவலகம் – மருத்துவமனை – அலுவலகம்
என்று இருந்ததாலும், பெரிய அளவில் அதிர்ச்சி ஏற்படவில்லை. ஆனால் இழப்பு…? நிச்சயமாக
சுப்புவுக்கு மட்டுமல்ல, துக்ளக் வாசகர்களுக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கு மட்டுமல்ல,
மனித நேயத்திலும் ஜனநாயகத்தில் பற்றுள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் இது இழப்புதான்…

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள சோவின் வீட்டைக் கண்டுபிடிப்பதில் எந்தவித சிரமமும்
இல்லை. All road leads to Rome என்பது போல அந்தக் காலைப்பொழுதில் நடந்தும், டூவீலர்களிலும்,
கார்களிலும் மக்கள் கூட்டம் சோவின் வீட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. சென்னையின்
நாடக உலகமே அங்கிருந்தது. ஊடகமும் சினிமாவும் கூட. அரசியலும்தான். எப்போதும் சிரித்த
முகத்தோடு செயல்படும் துக்ளக் ஊழியர்களைக் கண்ணீரோடு பார்ப்பது சங்கடமாக இருந்தது.
ஆசிரியருக்கு என்னுடைய அஞ்சலியைச் செலுத்தினேன். வெளியே வந்து செருப்பை மாட்டியபோது,
தந்தி தொலைக்காட்சி நிருபர் என்னை ஓரமாக ஒதுக்கினார். அதிகம் பிரபலமில்லாத என்னை இவர்
எப்படிக் கண்டுபிடித்தார் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே கேள்வியைக் கேட்டுவிட்டார்.
“சோ சாரோடு உங்களுக்கு நீண்ட நெடிய அனுபவமிருக்கும். அதை பற்றிச் சொல்லுங்கள்” என்றார்.

எனக்கு நீண்ட அனுபவமில்லை, இருந்தாலும் அவர் எனக்கு ஒரு முக்கியத்துவத்தைக்
கொடுத்தார். பிராபல்யத்தை உண்டாக்கினார். தனக்குத் தெரிந்தவர்களை, தனக்கு வேண்டியவர்களைப்
பிரபலப்படுத்துவது பெரிய விஷயமல்ல. ஆனால் சோ தன்னுடைய வட்டத்துக்கு வெளியே இருந்தவர்களையும்
தகுதி கருதிப் பிரபலப்படுத்தினார். அதற்கு நானும் ஓர் உதாரணம்.

தமிழக அரசியல் வரலாற்றை ‘திராவிட மாயை – ஒரு பார்வை’ என்ற புத்தகமாக நான் எழுதி,
அது வெளியிடப்பட்டு, ஓரளவுக்கு கௌரவமான விற்பனையை அடைந்த நேரமது. ஒரு நிகழ்ச்சியில்
சோவைச் சந்தித்தேன். யாராவது ஒருவர் அவரை மொய்த்துக் கொண்டிருந்தார்கள். எனக்கும் விருப்பம்தான்.
இருந்தாலும் கூச்சம் தடுத்தது. அதற்கு அவசியமில்லாதபடி, சோ என்னிடம் வந்தார்.

“நீங்கள் தானே திராவிட மாயை எழுதியது?” என்று கேட்டார். “ஆமாம் சார், எப்படி
என்னைக் கண்டுபிடிச்சீங்க?” என்று கேட்டேன்.
ஒரு நல்ல நண்பருடைய நிர்ப்பந்தத்தின் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு நான்
துக்ளக் அலுவலகத்துக்குப் போய், என் புத்தகத்தைக் கொடுத்திருந்தேன். அதை சோ படித்துவிட்டார்
என்பதே எனக்கு ஆச்சரியமான செய்தி. அந்த அட்டைப் படத்திலுள்ள புகைப்படத்தை வைத்து என்னை
அடையாளம் கண்டுபிடித்தார் என்பது கூடுதல் ஆச்சரியம்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து ‘திராவிட மாயை’ இரண்டாம் பகுதியை துக்ளக் வார இதழில்
இரண்டு வருடங்கள் எழுதினேன். வாசகர்களுடைய அபிமானத்தை அது பெற்றது என்றுதான் சொல்லவேண்டும்.
இரண்டாவது பகுதியும் புத்தகமாக வந்து நல்லபடியாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது என்பதை
வைத்துச் சொல்கிறேன். நம்முடைய சரக்கு எப்படியிருந்தாலும் சோவுடைய முத்திரைக்கு ஒரு
மவுசு உண்டு என்பதை உணர்ந்திருக்கிறேன். “இன்றைக்குச் செவ்வாய்க் கிழமையா?” என்று கேட்டால்கூட
“சோ சார் இது பற்றி என்ன சொல்கிறார்?” என்று விவாதிக்கும் வாசகர் கூட்டம் அவருக்கு
உண்டு.

சோவுடைய ஆளுமை, துக்ளக் இதழில் முழுமையாக
இருக்கும். அச்சில் வருகிற வாக்கியங்கள், வார்த்தைகள் மட்டுமல்ல; கால்புள்ளி அரைப்புள்ளி
கூட அவருடைய கட்டளையில்லாமல் உள்ளே வரமுடியாது.
சொற்களுக்கு நடுவே வரும் இடைவெளிக்குக்
கூட அவருடைய அனுமதி தேவை. இந்த முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் அந்த இதழில், ஓரளவுக்கு
சுயசிந்தனையை விரும்பும் என்னைப் போன்றோர் எழுதுவது கொஞ்சம் சிரமம்தான். அதை நான் மறைக்க
விரும்பவில்லை. உண்மையைச் சொல்வதால் சோவின் பெருமை குறைந்துவிடாது.
ஒருமுறை, காமராஜரைப் பற்றிக் கழகத்தவர்கள் பிரயோகித்த சில வசைச் சொற்களைக் குறிப்பிட்டு
நான் எழுதியிருந்தேன். சோ அதைத் தவிர்த்துவிடலாம் என்றார்.

“சார், இது அவங்க சொன்னது…” என்று இழுத்தேன். அவர் உடன்படவில்லை. ஒரு மேற்கோளாகக்
கூட காமராஜரைப் பற்றிய வசைச் சொற்கள் துக்ளக் இதழில் அச்சு ஏறுவதை அவர் விரும்பவில்லை
என்பதுதான் இதன் அடிப்படைக் காரணம்.

சோவின் தடை உத்தரவு என்னைப் பாதிக்கவில்லை. காமராஜரை அவர் எந்த இடத்தில் வைத்திருந்தார்
என்பது எனக்குத் தெரிந்த விஷயம். வாசகர்களுக்காகச் சொல்கிறேன்.

1971 தேர்தலில் காமராஜரும் ராஜாஜியும் திமுகவுக்கு எதிராகக் கூட்டணி அமைத்தார்கள்.
அந்தக் கூட்டணிக்கு ஆதரவாகச் சோ பிரசாரம் செய்தார். தேர்தலில் அந்தக் கூட்டணி தோல்வியடைந்தது.
தோல்விக்குக் காரணம் ராஜாஜியோடு சேர்ந்ததுதான் என்று நினைத்த சோ, காமராஜரிடம் அது பற்றிப்
பேசுகிறார். சோவின் கருத்தைக் கேட்ட காமராஜருடைய ரியாக்ஷன் எப்படி இருந்தது என்பதை
சோ எழுதுகிறார்.

“தோத்துட்டோம்ங்கிறத்துக்காக
எல்லாத்தையும் மறந்துடறதா? நாம் தோத்ததுக்கு ஆயிரம் காரணம் இருக்கும். முதல்லே கையிலே
பணம் இல்லே; ஏமாத்தறவங்களைத்தான் ஜனங்க நம்பறாங்கன்னு ஆயிடிச்சு. எல்லாத்துக்கும் சேர்த்து
ராஜாஜி தலைமேலே பழியைப் போடச் சொல்றீங்களா? ஜெயிப்போம்னு நெனச்சுத்தானே அவரோடே சேர்ந்தோம்னேன்!
ஜெயிக்கணும்னா வேண்டியவரு; ஜெயிக்காட்டி வேண்டாதவரா? அவர் என்ன கெடுதல் செய்துப்புட்டாரு?
இந்த மாதிரி நீங்க நினைக்கறதே தப்பு. அவரும் நானும் நிறைய விஷயங்கள்லே ஒத்துப் போறதில்லே.
ஆனால் தேசம் நல்லா இருக்கணும், மக்கள் நல்லா இருக்கணும்னு அவருந்தானே விரும்பறாருன்னேன்?
அதை ஒத்துக்கிட்டுதானே கூட்டு சேர்ந்தோம்? நாம தோத்தவுடனே, அவருக்கு தேசத்துமேலே அக்கறையே
கிடையாதுன்னு நினைக்கச் சொல்றீங்களா? ரொம்ப தப்புன்னேன்; ராஜாஜியோட சேர்ந்ததுனாலே தேர்தல்லே
தோத்துட்டோம்னு யாரு வந்து சொன்னாலும் நம்பாதீங்க” என்றார் காமராஜ்.

காமராஜின் அரசியல்
நேர்மை அணைக்கட்டை உடைத்துக்கொண்டு பீறிட்டு வரும் வெள்ளம்போல் பிரவாகமெடுத்து என்
கண்முன்னே ஓடியது. மாபெரும் தோல்வியின் பழியைச் சுலபமாக வேறொருவர் மீது திருப்பிவிட
நல்ல சந்தர்ப்பம் இருந்தும்கூட, தன் தோல்வியின் சுமையை ஏற்றுக்கொண்டு, அந்தப் படுதோல்வியிலும்
கண்ட ஒருசில வெற்றிகளையும் மற்றவர்களுக்கு அர்ப்பணிக்கத் தயாராக இருந்த காமராஜின் பரந்த
உள்ளம் அலை கடல் போல் அங்கே பரந்து விரிந்து கிடந்தது. அந்தக் கடலோரத்தில் நின்று அரசியல்
விமர்சகன் என்ற முறையில் நான் குறுகிய நோக்கோடு கூறிய வார்த்தைகளை நினைத்து வெட்கித்
தலைகுனிந்து அந்தக் கடலின் அலைகளில் என் கால்களை நனைத்து பாவத்தைக் கழுவிக்கொண்டேன்.

இவ்வாறு எழுதியுள்ளார் சோ.

நாட்டுப்பற்றை முன்னிறுத்துச் செயல்பட்டவர்
சோ என்பது பிரத்யட்சப் பிரமாணம். எனவே ஊடகத்துறையின் சில விதிகளை அவர் புறந்தள்ளினார்
என்பது எனக்கு ரசிக்கக் கூடியதாக இருந்தது.
 நான் சொல்ல விரும்புவது இதுதான். இன்றைய
தமிழ் அரசியல் உலகம் பாழ்பட்டிருக்கிறது. நம்முடைய சொத்தைk கொள்ளை அடித்து அதை ஆயிரக்கணக்கான
கோடிகளாக உருமாற்றி இரண்டு கட்சிகளை நிலை நிறுத்தியிருக்கிறார்கள். இரண்டு கட்சியிலும்
வாரிசு யுத்தம் நடக்கிறது. சொத்துக்கு யார் சொந்தம் என்பதுதான் இங்கே தலையாய பிரச்சினை.
சொத்துக்கு பாத்யதை கொண்டாடுகிறவர்கள் இதைப் பிரச்சினையாக்குவதில் விசேஷமில்லை.

இந்தப் பணம் மொத்தமும் தங்களுடையதுதான் என்கிற பிரக்ஞையே இல்லாமல் பொதுமக்களும்
போட்டி போட்டுக் கொண்டு இந்த யுத்தத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது
வருத்தமாக இருக்கிறது. அதிலும் முகநூல் நண்பர்களுடைய மூர்க்கத்தனம் கூடுதலாகவே இருக்கிறது.
அஇஅதிமுகவை சசிகலா என்ற சாராய அதிபரிடம் ஒப்படைப்பதா அல்லது தீபா என்ற புதுமுகத்திடம்
குத்தகைக்கு விடுவதா என்கிற துவந்த யுத்தத்தில் தமிழறிவுலகம் பிளவுபட்டு நிற்பதைப்
பார்க்கும்போது அழுகையைவிடச் சிரிப்பு அதிகமாக ஏற்படுகிறது. கருணாநிதி கட்சியிலும்
அதே கதைதான்.

இந்த நாற்றம்பிடித்த சூழலிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள வேண்டுமென்றால்
சோ போன்ற பத்திரிகையாளர்களை நாம் நினைவுகூர வேண்டும். அதைச் செய்திருக்கிறேன்.

சோ பற்றிய வெங்கட் சாமிநாதனின் கருத்தை இங்கே பதிவது பொருத்தமாக இருக்கும் என்று
நினைக்கிறேன். வெங்கட் சாமிநாதன் எழுதுகிறார்:

“தமிழ்நாட்டுக்கு
மீட்சியே இல்லை என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும்போது, தமிழ் அரசியல் களத்தில்
திரு.வி.க போன்ற ஒரு தார்மீக நெறி, அறிவார்ந்த சக்தி தோன்றும் என நாம் கனவிலும் நினைத்துப்
பார்க்க இயலாத ஒன்று. ஆனால் தார்மிகமும் அறிவார்த்தமும் அறவே அற்ற தமிழ்நாட்டு அரசியல்
களத்தில் இத்தகைய கனவுலக நிகழ்ச்சி ஒன்று தோன்றியுள்ளது. அது ஒரு freak ஆக, வினோதப்
பிராணியாகவே காட்சியளிக்கக்கூடும், தமிழக அரசியல் களத்தின் குணாம்சங்களை நாம் நினைவு
கொண்டால். ஆனால் இன்னமும் ஒரு ஆச்சரியம், அது freak ஆக இல்லை. பொருட்படுத்தவேண்டிய
ஒரு சக்தியாகவும் வளர்ந்துள்ளது. நிச்சயமாகச் சொல்கிறேன். இச்சக்தி தொடருமானால் ஒரு
புதிய அரசியல் கலாசார மரபுக்கும் இது வழிவகுக்கக்கூடும். தொடருமானால்தான். ஆனால் தொடருமா
என்பது கேள்விக்குறிதான். நான் ‘சோ’ வைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன்
” என்கிறார்
வெங்கட் சாமிநாதன்.

நானும்தான்.