“ரமணனா… வா வா. சௌக்கியமா இருக்கியா?”
“மன்னி. நீங்க சௌக்கியமா? சங்கரா, எப்படி இருக்கே?”
“என்ன கேள்விடா இது. 84 வயசுக்கு ஏதோ நாளை ஓட்டிண்டு இருக்கோம். ஆமா, உனக்கே 81 ஆயிடுத்தே.”
“போன தை மாசந்தானே சதாபிஷேகம் பண்ணிண்டான் ரமணன். சௌம்யா சௌக்கியமா இருக்காளா?”
“இருக்கா மன்னி. இந்த முட்டி வலிதான் அப்பப்போ படுக்கையில போட்டுடறது.”
“ஆமா எப்படி இருக்கு நம்ம ராக்கியப்ப முதலி ஸ்ட்ரீட்?”
“அப்படியேதான் இருக்கு. அட சொல்ல மறந்துட்டேன், சங்கரா. அந்த பைத்தியம் போன வாரம் செத்துப்போய்ட்டாண்டா.”
“அடடே… கிளி மாதிரி சொன்னதையே சொல்லிக்கிட்டு தெருவுலேயே சுத்திண்டு இருந்தானே அவனா? போய்ட்டானா? அவனுக்குமே 75 வயசு இருக்கும்டா.”
“ஆமா, ஆறேழு வயசு இருக்கும்போது நம்ம தெருவுக்கு வந்தான் அனாதையா.”
“இத்தனை வருஷம் தெருவுலேயேதான் இருந்தான் இல்ல?”
“ஆமா, அடிக்கொரு தரம் “எங்கப்பா அம்மா ஊருக்குப் போய்ட்டாங்க’ன்னு சொல்லிண்டே இருப்பான். அவன் ஒரு மாதிரி ராக்கியப்ப முதலி தெருவுக்கு செல்லமாயிட்டான்.”
“எனக்கு ஞாபகம் இருக்குடா ரமணா. நானும் இவளும் கல்யாணம் ஆகி உங்க வீட்டுக்கு முதமுதல்ல சாப்பிட வந்தபோது, உங்கம்மா அவனுக்கும் கிணத்தடில உக்கார வெச்சு சாப்பாடு போட்டா.”
“எங்கம்மா மட்டும் இல்ல, தெருவுல எல்லார் வீட்டிலயும் அவனுக்கு ஒரு நா சாப்பாடு உண்டு. விசேஷத்துக்கு சம்மந்தி இல்லாட்டாலுங்கூட இவனுக்கு சாப்பாடு இல்லாம இருக்காது.”
“பாவம் நல்லவண்டா. அவம்பாட்டுக்கு போட்டதைச் சாப்பிட்டுண்டு தெருவுல நடமாடிண்டு, சாதுவா புழங்கிண்டு இருந்தான்.”
“சங்கரா, உனக்கு ஞாபகம் இருக்கா? ஒரு தீபாவளி சமயம், ஆயிரத்து தொள்ளாயிரத்து நாப்பத்தி மூணோ நாலோ, நாம அந்த பிஎஸ் ஹை ஸ்கூல் க்ரௌண்டுல வாண வேடிக்கை பாக்கப்போனோமே, அன்னிக்குதான் இவன் ராக்கியப்ப முதலி தெருவுக்கு நம்ம பின்னாடியே வந்துட்டான்.”
“இருக்கு இருக்கு. பெரிய ராஜகோபாலந்தான் வாண வேடிக்கைன்னு நம்ம எல்லோரையும் கூப்டுண்டு போனான்.”
“மணி கூட நொண்டிண்டே வந்தான், கால்ல அடி பட்டுண்டு.”
“என்னா ஆச்சுடா அவனுக்கு? எப்படி செத்துப்போனான்?”
“ராத்திரி சௌம்யாதான் சாப்பாடு போட்ருக்கா. சாப்டுட்டு வழக்கம்போல தெருவுக்குப்போய் வாசத்திண்ணையில் படுத்துண்டுட்டான். கார்த்தால எழுந்திருக்கல. குமார்தான் போய் டாக்டர் நாராயணனைக் கூப்பிட்டு காமிச்சான். ராத்திரியே உசிர் போய்டுத்துன்னுட்டார். எல்லோருமா காசு போட்டு காரியத்தப் பண்ணிட்டோம்.”
“என்ன மாதிரி ஜென்மமாப்போயிட்டாண்டா…”
1943 அக்டோபர் மாதம்…
“என்ன துரை, கொஞ்ச நாளா ஆள கண்லயே காணுமே…”
“ரொம்ப வேல ஜாஸ்தியாய்டுச்சுங்க. இப்ப ஜப்பான்காரன் குண்டு போடப்போறான்னு பீதி வேற. வர்ற கப்பல்ல சாமாங்களை எறக்கி கோடவுன்ல கொண்டு சேர்க்கறதுக்குள்ள தாவு தீந்துடுதுங்க. ரெண்டு மடங்கு கூலி குட்த்தாலும் ஆளே இல்லை. ஜனமெல்லாம் தெற்குப்பக்கம் போய்ட்டாங்க.”
“ஹார்பர்ல என்ன பேசிக்கிறாங்க? ஜப்பான்காரன் வந்துடுவானா?”
“பயம் இருக்குதுங்க. ராணுவக்காரங்க நடமாட்டம் ஜாஸ்திதான். ஆனா ஒருத்தரும் வாயத்தொறக்க மாட்றாங்க.”
“உன் கம்பெனிக்கு யோகம்தாம்ப்பா. கொழிக்கறாரே செட்டியாரு.”
“இப்ப தானுங்களே யுத்த சமயம். இப்ப பிஸினஸ் பண்ணினாத்தானே லாபம் பாக்கமுடியும்.”
“நீதான் ஹார்பர் பக்கம் சிப்பாயிங்களோட ஸ்னேஹமாயிருக்க. என்னதாம்ப்பா ஆச்சு விசாகப்பட்ணத்துல?”
“நிச்சயமா ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஜப்பான் ப்ளேன் வந்து குண்டு போட்டதென்னவோ நெஜம்தான். ஏப்ரல்ல கார்த்தால ஏழு மணிக்கு காக்கிநாடா ஹார்பர்ல ஒத்தையா வந்து ஜப்பான்காரன் குண்டு போட்ருக்கான். ரெண்டு சரக்குக்கப்பல் சேதமாயிடுச்சி. ஒண்ணு ரெண்டு பேர் செத்துப்போய்ட்டானுங்கன்னு வேற பேச்சு. எதுவும் நிச்சயமா சொல்றதுக்கில்ல.”
“மறுபடி அஞ்சு மணிக்கு அன்னிக்கே குண்டு போட்டானாமே… எம்மாம் தைரியமப்பா அவனுக்கு. இதோ, இங்க மெட்ராஸ் வரதுக்கு எம்மாம் நேரம் ஆவப்போவுது.”
“அதெல்லாம் கஷ்டம். ஆனா கவர்மெண்ட் எல்லாத்தையும் ரகசியமா வெச்சிருக்காங்க. வெளியே இதப் பேசிடாதீங்க, சங்கடமாய்டும். சரி, நா போறேன், புள்ளாண்டான் என்னைத் தேடிக்கினு இருப்பான்.”
“வாங்க… ஏங்க இம்மாம் நேரம்?”
“வழில நம்ம ராமசாமி பேச்சுக்கொடுத்தாரு.”
“டேய் முருகேசு, என்ன பண்றே?”
“அப்பா, இன்னிக்கு கோலில செல்வத்தோட டாணா கோலிய உடைச்சுட்டேம்ப்பா.”
“போடு சக்கைன்னானாம். சரி வா சாப்டலாம்.”
“என்னங்க, எங்கனா வெளில கூப்ட்டுப்போங்க. பையன் ஏங்கிப் போயிட்ருக்கான்.”
“இப்ப எங்கடி வெளில போறது? ஊரே பயந்துகிடக்கு.”
“நாலு நாள் செட்டியாரண்ட சொல்லி லீவு எடுங்க. உத்திரமேரூர் போய் எங்கக்காவப் பாத்துட்டு வரலாம்.”
“லீவா? செட்டியார் அதோட போயிடு வராத திரும்பின்னுடுவாரு. இன்னும் ரெண்டு சரக்குக்கப்பல் வரணும் அடுத்த பத்து நாளுல. நா வூட்டுக்கு வரதே சிரமம். அத்தோட தீபாவளி வருது. புள்ளைக்கு உனக்கு புடவத்துணிமணி எடுக்கணும்னா துட்டு வாணாம்? இந்த ரெண்டு கப்பல் வேல முடிஞ்சா காசு புரளும். நல்லபடியா தீபாவளி கொண்டாடலாம். மே மாசம் போலாம் உத்திரமேரூருக்கு.”
“ஏங்க அப்படியே நம்ம வூட்டுக்கும் ஓடைச் சரிபண்ணிடணும். போனமாச மழைக்கு பிச்சிக்கிச்சு. என்னா மழ, என்னா மழ…”
“செய்வோம் செய்வோம். பசிக்குதுடி. சோத்தைப்போடு. முருகேசு, வா சாப்பிட.”
“துரை, செட்டியார் கூப்பிடறாரு உன்னை.”
“என்னங்க?”
“வா துரை. அடுத்த வாரம், அதான் பதினொண்ணாம் தேதியன்னிக்கு சரக்கு கப்பல் டாக் ஆவுதாம். நம்ம சரக்கு பதினேழு லோடாம். அத அன்னிக்கு ராவே எறக்கி, கோவிந்தப்பநாய்க்கன் கோடவுன்ல போட்டு வெச்சிரு. நீ ஹார்பர்ல பாத்துக்க. மேஸ்திரி நடேசன கோடவுன்ல இருக்கச்சொல்லி லோடெல்லாம் எண்ணிப் பாத்து எறக்க சொல்லிடு.”
“செஞ்சுடலாம் முதலாளி.”
“அடுத்த நாள் காலையில வீட்டுப்பக்கம் வா. போன கப்பலுக்கே குடுக்க வேண்டிய அம்பது ரூபாயும் சேத்து எண்பது ரூபாய் கொடுத்துடறேன். உனக்கும் தீபாவளிக்கு ஆச்சு. ஆமா பையன் எப்படி இருக்கான்? நல்லா படிக்கிறானா?”
“ரொம்ப சந்தோஷங்க. நல்ல படிக்கிறான்.”
“நல்லது. பாத்து செய்யி. ஹார்பர்ல ஆர்மிக்காரங்க நடமாட்டம் இருக்கு. வம்பு பண்ணுவானுங்க. ஒதுங்கிப்போயிடு. நமக்கு காரியம் முக்கியம்.”
“செல்லி, இன்னிக்கி சாயங்காலம் சீக்கிரமா சாப்பாடு போட்டுடு. ஏழுமணிக்கெல்லாம் கிளம்பணும். கப்பல் வருதுன்னு சொன்னேனே… ராத்திரி பன்னண்டாய்டும் வர்றதுக்கு.”
“நாளைக்கி வூட்லதான இருப்பீங்க. சினிமா போலாமா? மங்கம்மா சபதம்னு ரொம்ப நல்லா இருக்குன்னு அந்த வூட்டம்மா சொன்னாங்க.”
“போலாமே.”
“யப்போவ். இன்னாப்பா ராத்திரிக்கி ஆபீஸ் போற?”
“ஆமாண்டா, இன்னிக்கி கப்பல் வருது. சரக்கெல்லாம் எறாக்குவானுங்க, அதை பாத்துக்கணுமுல்ல?”
“என்னையும் அழச்சிட்டுபோயேம்ப்பா. நானும் கப்பல் பாக்கறேன்.”
“டேய், இது வேல நேரண்டா. உன்ன எப்படி அழச்சிட்டுப்போறது?”
“என்னங்க, இதோ இருக்குது ஹார்பர். நாங்களும் வரோமே. அப்படி ஓரமா உக்காந்து பாக்கறோம். நீங்க பாட்டுக்கு உங்க வேலய முடிங்க. எல்லாமா திரும்பி வூட்டுக்கு வந்துடலாம்.”
“ஹார்பருக்குள்ள உன்னல்லாம் வுடமாட்டாங்க செல்லி. அதும் இப்ப பதட்ட காலமா இருக்கு.”
“அட என்னங்க நீங்க… அதான் ஹார்பர்ல எல்லா கேட் கீப்பருங்களையும் உங்களுக்கு நல்லாத் தெரியுமே… வேடிக்கை பாக்கறோம்னா வாணான்னா சொல்லுவாங்க. கூட்டுட்டு போங்க.”
“சரி வாங்க.”
“இன்னா தொர, குடும்பத்தோட வண்ட்ட? இன்னிக்கு கப்பல் வருதுன்னாங்க..?”
“ஆமா சார், கப்பல் பாக்கணும்னு ஒரே தொணதொணப்பு, அதான்…”
“சரி அப்படி ஓரமா நடந்து போய் நம்ம காபின் கிட்ட இவங்கள உக்காரச்சொல்லிட்டு நீ வேலயக் கவனி. அங்க இங்க நடமாடக்கூடாது. மேலதிகாரி பாத்தா எனக்கு வேல போய்டும், என்னா?”
“அதெல்லாம் நா ஜாக்கிரதையாப் பாத்துக்கறனுங்க. வா செல்லி, வாடா முருகேசு. சாருக்கு சல்யூட் வை.”
“கமான் க்விக். அந்த ஃபையர் யூனிட்ட அனுப்பு. மூவ் மூவ்…”
“காப்டன், இதெல்லாம் இன்ஃப்ளெம்மபிள். உடனே நகர்த்தியாகணும்!”
“பாஸ், அங்க ஆயில் லீக் ஆகுது. எனக்கு இன்னொரு ஃபையர் யூனிட் வேணும்.”
“ரோட்ரிக்ஸ், சிவிலியன் காஷுயாலிடி இருக்கா?”
“சார்…”
“கம் அவுட் மேன். ஜஸ்ட் ஸ்பில் இட்.”
“இருக்கு சார்.”
“யாரு லேபரா? ஐடெண்டிஃபை பண்ணியாச்சா?”
“இல்ல சார். ஒரு ஆளும் பெண்ணும்.”
“பெண்ணா? வாட் இஸ் ஹேப்பெனிங் சோல்ஜர்?”
“ஒண்ணுமே புரியலை சார்.”
“என்ன புரியல? கால் தட் கேட் கீப்பர் இடியட்.”
“என்ன மன்னிச்சிடுங்க சார். செட்டியார் கம்பெனி சூப்பரைசர் துரையும் அவனோட சம்சாரம், புள்ளயும் வந்தாங்க. சும்மா கப்பல் பாக்கணும்னாங்கன்னு நாந்தான்…”
“புல் ஷிட், புள்ளயா? பாடி கெடச்சுடுத்தா?”
“இல்ல சார்…”
“தேடு தேடு… க்விக். என்ன ஒரு மெஸ்… மேஜர் என்னுடைய பின் பக்கத்தைக் காவு வாங்கப்போகிறார்.”
“சார், புள்ள கெடச்சுட்டான் சார்.”
“தாங்க் காட்! என்ன பண்ணப்போறோம் மூணு பாடியையும்?”
“மூணு இல்ல சார், ரெண்டுதான். பையன் உயிரோடதான் இருக்கான்.”
“வாட்… அடக்கடவுளே. இப்ப என்ன பண்றதுய்யா?”
“சார், ஐ ஹேவ் அன் ஐடியா…”
“சொல்லித் தொலை.”
“ரெண்டு பாடியையும் இங்கேயே புதைச்சுடலாம் சார். பையனை எங்கியாவது கொண்டுவிட்டுடலாம்.”
“யோவ், அவன் பேசிட்டான்னா நா, நீயெல்லாம் ராணுவ வேலயை விட்டு தோட்டம் கொத்தப் போக வேண்டியதுதான்.”
“அவன் பேசாம நா பாத்துக்கறேன் சார்.”
“என்ன பண்ணப்போற?”
“டெர்ர்ரைஸ் தான் சார். அஸால்ட் ஆன் ஐடெண்டிடி.”
“பாத்துப்பண்ணுய்யா. I don’t want any comebacks.”
“தம்பி, உம்பேரென்ன?”
“முருகேசு. எங்கப்பா அம்மா வேணும்…”
“த பாரு. உங்கப்பாம்மா ஊருக்குப் போய்ட்டாங்க. அப்படியே சொல்லு கேப்போம்…”
“இல்ல, அங்க இருந்தாங்க நேத்து ராத்திரி. வெடி வெடிச்சது.”
பளார்.
“சொல்லுடா, எங்கப்பாம்மா ஊருக்குப் போய்ட்டாங்க.”
“இல்ல, அங்க…”
பளார்.
“சொல்லுடான்னா…”
“எங்கப்பாம்மா ஊருக்குப் போய்ட்டாங்க.”
“எங்கப்பாம்மா ஊருக்குப் போய்ட்டாங்க.”
“உம்பேரு என்ன?”
“எங்கப்பாம்மா ஊருக்குப் போய்ட்டாங்க.”
“உங்க வீடு எங்க?”
“எங்கப்பாம்மா ஊருக்குப் போய்ட்டாங்க.”
“நீ இங்க என்ன பாத்த?”
“எங்கப்பாம்மா ஊருக்குப் போய்ட்டாங்க.”
“சார்லஸ், சாயங்காலம் ஆறு மணிக்கு, கொஞ்சம் இருட்டினப்றம் ஜீப்புல இவன அழச்சிட்டுப்போய் நல்ல நடமாட்டம் இருக்கற எடமா… தப்பாரு, ஹார்பர்லேர்ந்து தள்ளி… மைலாப்பூர் பக்கம் போ. அங்க கமுக்கமா கூட்டத்துல எறக்கிவிட்டுட்டு நீ பாட்டுக்கு திரும்பிப்பாக்காம வந்துடணும்.”
“எங்க இறக்கி விட்டே?”
“பிஎஸ் ஹைஸ்கூல்ல வாண வேடிக்கை காட்டிட்டு இருந்தாங்க. ஒரு ஏழெட்டு சின்னப்பசங்க பின்னாடி வுட்டுட்டு நழுவி வந்துட்டேனுங்க.”
“என்ன ரோட்ரிக்ஸ்? பையன்…?”
“மிஷன் கம்ப்ளீடெட் சார்.”
“ரமணா, அந்தப் பைத்தியத்தை தேடிண்டு யாருமே வரலியா இத்தனை வருஷமா…”
“எங்கேடா… அவன் வாயிலேர்ந்து இத்தனை வருஷத்துல “எங்கப்பாம்மா ஊருக்குப் போய்ட்டாங்க’ங்றதத் தவிர வேற வார்த்தை வந்தே யாரும் கேட்டது இல்லியே…”
“பாவம், என்ன படைப்போ… கடவுளோட டிசைனே புரியமாட்டேங்கறதே ரமணா.”
ரோட்ரிக்ஸின் பெண் மூன்றாம் மாடியிலிருந்து விழுந்து அடிபட்டுச் செத்துப்போனதும் சார்லஸின் மனைவி சுபேதார் ஒருவனுடன் ஓடிப்போனதும்… அது வேறு கதை.