ஒவ்வொரு வருடமும் மண்டலக் காலத்தில் சபரிமலையையொட்டிச் சர்ச்சைகள் கிளம்புவது சமீபகாலமாக வாடிக்கையாகவே ஆகி விட்டது. அதிலும்
இந்த ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பும் அதற்கு
எதிர்வினையாக ஹிந்துக்களின் எழுச்சியும் பலரையும் கொதிப்படையச் செய்திருக்கிறது. கேரளம்
தாண்டி, தென்னிந்தியா தாண்டி உலகமெங்கும் சபரிமலையில் ஆசாரங்களை
மாற்றுவதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இதன் பின்னணியில் மிகப்பெரும் சதி இருப்பதை – நடக்கும்
சம்பவங்களை கூர்ந்து கவனித்தால் உணர முடியும்.
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் சபரிமலையில் நடைபெற்ற ஒரு முக்கியமான
சம்பவத்தை இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க மாட்டார்கள். அன்றைய திருவிதாங்கூர்
மாநிலம் எனப்படும் (Travancore State) கேரளத்தில், 1950ல் சபரிமலையின் ஆலயம்
முற்றிலும் தீக்கிரையாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டிருந்தது. விசாரணை நடத்த வந்த
காவல்துறை கூட ஒருகணம் ஸ்தம்பித்து நின்று விட்டது. உள்ளே ஐயப்பனின் திருமேனி
(முன்பு ஆலயத்தில் பிரதிஷ்டை
செய்யப்பட்டிருந்தது) மூன்று துண்டுகளாக நொறுக்கப்பட்டுக் கிடந்தது.
காட்டுத்தீயினால் உண்டான விபத்து என்றே அனைவரும் நினைத்திருந்த நிலையில், காவல்துறை தன் விசாரணையைத் துவங்கியதும் அது விபத்தல்ல என்று
தெளிவாக்கியது. எரிந்து போயிருந்த ஆலயத்தில் கிடைத்த நெய்யில் நனைக்கப்பட்ட
தீப்பந்தங்களும் ஆலயக்கதவுகளில் காணப்பட்ட
கோடாலி அடையாளங்களும் இது விபத்தாக இருக்கமுடியாது என்று
திட்டவட்டமாக உறுதி செய்தது. ஐயப்பன் எனும் தெய்வத்தை நாடி ஆண்டுக்கு ஆண்டு
பக்தர்கூட்டம் அதிகரித்து வருவதைச் சிலர்
விரும்பவில்லை. சாதிமத வித்தியாசமில்லாமல் எல்லா
மதத்தவரும் சபரிமலைக்கு வருவதைப் பொறுக்க முடியாமல், சபரிமலை கோவிலையே அழித்துவிட்டால்
அத்துடன் அங்கு வரும் பக்தர் கூட்டமும் ஐயப்ப பக்தியும் அழிந்து விடும் என்று
எண்ணி இந்தச் சதிச்செயல்
அரங்கேறி இருப்பது தெரிய வந்தது. அரசியல் தலையீட்டால் அந்த வழக்கு மெல்ல பிசுபிசுத்து
விட்டது.
அந்தச் சதியின் தொடர்ச்சி அவ்வப்போது சபரிமலையில் அரங்கேறவே செய்கிறது, முயற்சியின்
மனம் தளராத சில சக்திகள் சபரிமலைக் கோவிலின் சான்னித்தியத்தையும் பக்தர் கூட்டத்தின் நம்பிக்கையையும் அழிக்கும் செயல்களில்
ஈடுபட்டே வருகிறார்கள்.
1983ல் செயிட்
தாமஸ் நிலக்கல்லுக்கு வந்து சிலுவை நட்டுவைத்தார் என்றும் அது ஐயப்பனுடைய இடம் அல்ல
என்று கூறி ஒரு சர்ச்சையை கிளப்பினார்கள்.
பின்னர் சில போலி மேதாவிகளைக் கொண்டு, ‘சபரிமலை
ஆலயம் ஹிந்து ஆலயமே அல்ல! பௌத்த தெய்வத்தின் ஆலயம்’ என்றொரு கதையைக் கிளப்பி விட்டார்கள். அதற்கு
தகுந்த ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்தோம்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு மக்கள்
எதிர்ப்பு வலுத்தவுடனே தங்கள் முயற்சியெல்லாம் பிரயோஜனம் இல்லாமல் ஆனவுடன், இப்போது, ஆதிவாசிகளிகளான மலை அரையர்களில் ஒரு பிரிவு
மக்களை ஹிந்துக்களுக்கு எதிரான சக்திகள் திருப்பி விட்டிருக்கிறார்கள்.
சபரிமலை எங்களுக்குச் சொந்தமானது என்று கேரளாவின் மலை அரையர் பழங்குடியினர்
சபாவின் நிறுவனரான பி.கே. சஜீவ் பேட்டி கொடுத்துள்ளார். இதையே
கேரள ஆதிவாசி கோத்ரா மகாசபை தலைவி ஜி.கே.ஜானு வழிமொழிந்து இருக்கிறார். சபரிமலையைச் சுற்றியுள்ள
மலைக்காட்டின் ஆதிவாசிகள் பலரும் இன்று யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள், யார்
அவர்களை இயக்குகிறார்கள் என்பதும் ஊரறிந்த ரகசியம். அதேபோல சபரிமலையின் மற்ற பற்றி
எரியும் பிரச்சினைகள் விஷயங்களில் வாயே திறக்காத கேரள முதல்வர் பினராயி விஜயன், “கோயிலின்
சம்பிரதாயம் மலை அரையன் ஆதிவாசி சமூகத்தினுடையது. இது, அனைவருக்கும் தெரியும். சபரிமலை
ஆலயம் ஹிந்து ஆலயம் அல்ல! அது செக்யுலர் ஆலயம்” என்று வரிந்து கட்டிக் கொண்டு பேசி இருப்பது, ‘அப்பன்
குதிருக்குள் இல்லை’ என்பதை இன்னும் தெளிவாக்குகிறது இதன் பின்னரே இந்த விஷயத்தில் என் ‘மஹாசாஸ்தா விஜயம்’ நூலுக்காக ஆராய்ச்சி செய்தபோது கிடைத்த தகவல்களைத் தொகுத்திருக்கிறேன்.
முதலில் அவர்கள் வைக்கும் வாதத்தைப் பார்த்துவிட்டுப் பின்னர் அதற்கான
விளக்கங்களைச் சொல்கிறேன்.
1. மலை அரையர் என்ற ஆதிவாசிகளின்
மூதாதையர்கள்தான் அய்யப்பன் கோவிலை நிர்வகித்து வந்தனர். ஆனால், 19ம் நூற்றாண்டில்
பந்தளம் மன்னர்களால் கோவில் அபகரிக்கப்பட்டது;
2. மலையரையர் சமூகத்தைச் சேர்ந்த கந்தன் – கருத்தம்மா என்ற பழங்குடியினத் தம்பதியருக்குத்தான் 41 நாட்கள் விரதமிருந்து அய்யப்பன் பிறந்தார்.
அரைய பழங்குடியினருக்கு பிறந்த அய்யப்பன் தனது நண்பர்களுடன்
சேர்ந்து போர்க்கலை பயிற்சி பெற்று அந்தப் பகுதியில், ஒரு வலுவான
சமூகத்தை உருவாக்கினார். பாண்டிய மன்னர்களை தாக்கிய சோழர்களை எதிர்க்க
அவர் உதவி புரிந்தார். அவருக்கு நாங்கள் கோவிலைக் கட்டினோம்.
எங்கள் சமூகத்தைச் சேர்ந்த எல்லா வயதுப் பெண்களும் கோவிலுக்கு செல்லுவோம்;
3. ஆனால், 1900ம் ஆண்டுகளில், பந்தளம் அரச குடும்பத்தினர் சபரிமலை
அய்யப்பன் ஆலயத்திற்கு விஜயம் செய்தனர். அப்போது பிராமணர்களான தாழமண்
குடும்பத்தைச் (தந்த்ரி குடும்பம்) சேர்ந்த குருமார்களை அழைத்து வந்து, சபரிமலை அய்யப்பன் கோவிலில் சடங்குகளை
குடும்பத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அதன்பிறகு சபரிமலை கோவிலைச் சுற்றி உள்ள பகுதியில் வசித்து வந்த ஆதிவாசி மக்களை
அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டனர்.
இதுவே அவர்கள் முன்வைக்கும் வாதங்கள்.
இந்த வாதங்களைக் கேட்கும் நம் மக்களிலேயே
சிலர் கூட – இது உண்மையாக இருக்குமோ என்ற ஐயத்துக்கு ஆட்படுகிறார்கள்.
நம் மக்களும், ஏதோ சொல்கிறார்கள் நெருப்பில்லாமல்
புகையாது என்றெல்லாம் பேசத்தலைப்படுகிறார்கள். இன்னும் சில அறிவுஜீவி
எழுத்தாளர்கள், ‘இது தான் உண்மை! வனவாசி
தேவதைக் கோவிலான ஐயப்பன் கோவிலைக் கைப்பற்றி சஸ்ம்கிருதமயமாக்கல் செய்துவிட்டார்கள்’ என்று அடித்தும்
விடுகிறார்கள்.
சபரிமலையின் பழைமை
சபரிமலையில் தர்மசாஸ்தாவின் ஆலயம் அமைந்திருப்பது ‘பிரம்மாண்ட
புராணம்’ முதலான புராணங்களிலேயே
தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை
ஒருபுறம் இருக்கட்டும்.
வரலாற்று ரீதியாக – சபரிகிரி ஆலயம் பலமுறை
தீவிபத்துக்குள்ளாகியும், புனரமைக்கப்பட்டும் மூல விக்ரஹங்கள் மாற்றப்பட்டும்
இருக்கிறது. பொ.யு, 978ம் ஆண்டைச் சேர்ந்த
சபரிமலை கோயிலின் கல்வெட்டு ஒன்று,
அப்படியொரு தீ விபத்துக்கு பின் அக்கோயில் புனரமைக்கப்பட்டு, ஸ்ரீ ப்ரபாகராசாரியார் என்பவரது கைகளால்
விக்கிரகம் புனர்ப்ரதிஷ்டை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கிறது. (1900களில் இருந்த ப்ரபாகராசாரியார் இவர் அல்ல!
இவர் வேறு.)
ஸமீன பஸ்வ நயன ப்ரயாதீன ப்ரபாவதீ
பாக்யவச்ய க்ருபாலய /
ப்ரபாகராசார்ய கர ப்ரதிஷ்டிதோ மாகனய வக்ஷது பூரி மங்கலம்//
(கடபயாதி ஸங்க்யை என்று கூறப்படும் காலத்தைச் சுட்டும் கணக்கீட்டு முறையில், இந்த பிரதிஷ்டை பொயு
978ல் நடந்ததாக இக்கல்வெட்டு கூறுகிறது. மிகச் சமீபகாலம் வரை காணப்பட்ட இக்கல்வெட்டு பெயர்த்து எடுக்கப்பட்டு
சில காலம் தேவஸ்வம் போர்டு அலுவலகத்தில் இருந்தது. இப்போது
எங்கே என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.