‘டக்.. டக்.. டக்…’ என்று பறந்து வந்த குதிரையின் குழம்படி ஓசை சற்றே குறையத் தொடங்கியது. அந்த வெண்ணிறப் புரவிகளிலிருந்து இரண்டு வீரர்கள் நீண்ட அரண்மனை கோட்டைக் கதவுகளைத் தாண்டி உள்ளே சென்றார்கள். அவர்களைக் காவலர்களும் எதுவும் கேட்கவில்லை. அங்கே எதிர்ப்பட்ட உபஅமைச்சர் நரசிம்மராயரிடம் ஏதோ கூற, அவர் இருவரையும் அழைத்துக்கொண்டு அரண்மனையின் பின்புறம் அமைச்சர் இருக்குமிடத்திற்குச் சென்றார். அவர்கள் சென்று கொண்டிருந்த காலம் பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதி. துலுக்க ஆட்சியிலிருந்து மீண்டு பாண்டிய நாடு தன் பண்டைய அடையாளங்களான கலை, இலக்கியம் மற்றும் அமைதியான வாழ்க்கையைத் தொடங்கியிருந்தது. இருந்தாலும் உள்நாட்டுப் பகை, சிற்றரசர்கள், சேரர்கள் என எல்லாத் தரப்பிலும் கொஞ்சம் நெருக்கடி இருந்தது. மக்கள் தங்கள் பழமையை மறந்தே போயிருந்தார்கள் இந்த அறுபது வருட முகலாயர் ஆட்சியில். இந்தச் சம்பவம் நடக்குமிடம் இராஜபாளையம் என்ற கிராமம். பாண்டியப் படைகள் ஒரு பகுதி இருக்கும் பாளையம். அரசரும் அவ்வப்போது இங்கு தங்கிடுவதால் இராஜ பாளையமாயிற்று.
தலைமை அமைச்சர் செல்வநம்பி அவர்களைக் கண்டவுடன் திடுக்கிட்டு எழுந்தார். வந்திருந்தவர்கள் தலைமை ஒற்றர் வீரவல்லபரும், மற்றொருவரும்.
‘வீர வல்லபரே.. என்ன அவசரம்? இந்த பாளையம் பக்கம் வரவேண்டிய கட்டாயம் ஏதுமுண்டோ?’ என்றார் செல்வநம்பி தலைமை ஒற்றர், அருகில் இருக்கும் பாலகனைக் கொஞ்சம் புதிதாய்ப் பார்த்தவராய்.
‘ஆம் அமைச்சர் பெருமானே. சிறிது அவசர அவசியச் செய்தி.. இந்த பாலகன் பெயர் சுந்தரன். நம் படையில்தான் உள்ளான்.’
‘ஓ.. நம் மன்னர் இந்த அரண்மனை வந்து சில நாட்களாகிறது…’ மீண்டும் சுந்தரனைப் பார்த்தார்.
‘அமைச்சரே.. நீங்கள் தயங்காமல் பேசலாம். இவன் கொண்டுவந்த செய்தி பற்றித்தான் அரசரிடம் சொல்லவேண்டும். சில மாதங்கள் முன் காவிரிக்கு அப்பால் இருக்கும் சம்புவரரயர்கள் ஏதோ திட்டம் தீட்டுவதாய் ரகசியத் தகவல் கிடைத்தது.’
‘ஆம். அதுதான் தெரிந்ததாயிற்றே. அதன்பின் அரசர் உம்மை கண்காணிக்கச் சொன்னது எல்லாம் நடந்த விஷயம்தானே.’
‘ஆம் அமைச்சரே. அதன் பெயரில் சுந்தரன் வட காவிரியில் சிலகாலம் ஓடக்காரன் வேடத்தில் இருந்து கவனித்து வந்தான். இப்போது அங்கிருந்து மிக அவசரச் செய்தியை கொண்டு வந்துள்ளான்’ என்று அந்தச் செய்தியை வல்லபர் அமைச்சரிடம் சொன்னார்.
‘மிகவும் ஆபத்தான செய்திதான். நாம் மிக விரைந்து செயல்படவேண்டும். அரசர்களிடம் இதைக்கொண்டு சேர்க்கவேண்டும். சரி. நாம் உள்ளே போய் அவரைப் பார்க்கலாம். ஆனால்..’ என்று சற்றே அமைச்சர் யோசிக்க,
‘என்ன அமைச்சரே..? மன்னர் இங்கில்லையா..?’
‘இல்லை. இங்குதான் உள்ளார். ஆனால் பாடம் வாசிக்கிறார். அதனால்தான் குறுக்கிட யோசித்தேன்.’
‘பாடமா?’ என்றான் சுந்தரன்.
‘ஆமப்பா. இந்த துலுக்கப்படை வந்து போனவுடன் நம் மக்களின் கலாச்சாரம் மாறிப்போனதைவிட பெரும்பாலானவர்களுக்கு மறந்தே போனது. நம் அரசரும் பல நற்பணிகளைச் செய்து நம் இழந்த பெருமைகளை ஜனங்களிடம் எடுத்துச் செல்கிறார். ‘தென்கலை வடகலை தெளியுறத் தெரிந்து மன்பதை புரக்க மணிமுடி புனைந்து’ என்ற அரசரின் மெய்க்கீர்த்தி போல் திராவிட மொழியும் வடமொழியும் கற்றுத் தேர்ந்தவராயுள்ளார். ஆனாலும் திங்களின் சில நாட்கள் இந்தப் பாளையம் வந்து தமிழறிந்தவர்களிடம் பண்டைய இலக்கியங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் பிரபந்தங்கள் என்று சில நேரம் வரியிடை பயில்கிறார்.’
‘ஓ.. அதனால்தான் இந்த பாளையத்திற்கு அடிக்கடி வருகிறாரா?’
‘அதுமட்டுமல்ல.. நம் பகைவர்களும் ஒரு முக்கியக் காரணம். தெற்கில் இருக்கும் எதிரிகளைச் சமாளிக்க, இந்தப் பாளையத்தைக் கொஞ்சம் வலிமையானதாய் மாற்ற தானே நேரில் வந்து உரியவற்றையும் செய்கிறார். அதற்கும் இங்கு வந்து தங்குகிறார். குலசேகரன் பெரும்பாலும் மதுரைக் கோட்டையில் தங்கியிருப்பார். சரி. நாம் சற்றே போய் வாயிலில் காத்திருப்போம். வாசிப்பு முடியும் நேரம். அவர் வந்தவுடன் சந்திக்கலாம்..’ என்று அமைச்சரோடு மற்றை மூவரும் வந்தனர் அரசரின் பயிலகம் முன்!
உள்ளே..
‘மறக்களை பறித்து நல்லறப் பயிர் விளைவித்து’ என்ற கீர்த்தி போல் அரிகேசரி சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் சிஷ்யனாய் அமர்ந்து வாசிக்க, அவரின் இளவல் சடையவர்மன் குலசேகர பாண்டியனும் உடனிருக்க, அன்று அவர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.. அதிலும் அதே திருமல்லிநாட்டில் அவதரித்த ஆண்டாள் நாச்சியார் பாடல்களின் பொருளை ஒரு வித்வான் மூலம் செவிமடுத்துக்கொண்டிருந்தார்கள். அவர் ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வந்திருந்த, சின்ன வேத பிரான் பட்டர். பெரியாழ்வாரின் வழி வந்தவர்கள். முன்னொருகாலம் ஸ்ரீ வல்லபதேவ பாண்டியனுக்கு ஒரு ஐயம் வந்த போது, அதற்குத் தக்க பொருள் கூறி சமாதானம் செய்ததால் பெரியாழ்வார் மீது பேரன்பு கொண்டனர் பாண்டியர்கள். அதே வம்சத்தில் வந்தவர்களிடம் இந்த மன்னனும் வாசிக்கத் தொடங்கிவிட்டார்.
பட்டர் அன்று நாச்சியார் திருமொழியில் கண்ணன் ஆய்ச்சியர்களின் துகிலை ஒரு குருந்தை மரத்தில் மறைத்தது பற்றிய பின்வரும் பாசுரங்களைச் சொல்லி அதற்குத் தகுந்த விளக்கமும், ஸ்ரீமத் பாகவதத்தில் இது பற்றிச் சொன்னது, அதை ஆண்டாள் அனுபவித்தது எல்லாம் கூறிக்கொண்டிருந்தார்.
‘பரக்க விழித்தெங்கும் நோக்கிப் பலர்குடைந் தாடும் சுனையில்*
அரக்கநில் லாகண்ணநீர்கள் அலமரு கின்றவா பாராய்*
இரக்கமே லொன்று மிலாதாய் இலங்கை யழித்த பிரானே!*
குரக்கர சாவ தறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய்*’
‘அந்த இராமன்தான் கண்ணனாய் வந்தார். அவர்தான் மீனோடு, ஆமை, கேழல் என்ற தசாவதாரங்களையும் எடுத்த திருமால். அவரே நம்மைப் படைத்துக் காத்து வருகிறார்’ என்றெல்லாம் ஆண்டாளின் பாசுரங்களிருந்தும், மற்றைய வடமொழி இதிகாசங்களிருந்தும் மேலும் பல அர்த்த விசேஷங்களை விவரித்தார் பட்டர். ஆழ்ந்து வாசித்து வந்த மன்னர் வெளியில் ஏதோ பேச்சுக்குரல் கேட்டு, பட்டரிடம் அனுமதி பெற்று வெளியில் வந்தார். வெளியில் அமைச்சருடன், ஒற்றர் தலைவனும் இருக்கவே மன்னருக்கு விவரம் தீவிரமானது என்று விளங்கியது. பட்டரிடம் கூறிவிட்டு, மற்றை அனைவரையும் அழைத்துக்கொண்டு தனி அறைக்குச் சென்றார்.
‘வல்லபரே.. ஏது அவசரம்..? இவர்தானே நாம் வட காவிரியில் அமர்த்தியவர்?’
‘ஆம் அரசே.. சுந்தரன்தான். நாம் ஏற்கனவே ஆலோசித்தபடி இவன்தான் காவிரியில் இருந்துகொண்டு கண்காணித்து வந்தான். சில நாட்களாய் சம்புவரையர்களின் நடமாட்டம் அதிகமாகியிருக்கிறது. அவர்களை கொஞ்சம் உன்னித்து பின்தொடர்ந்து வந்துள்ளான்.’
‘சுந்தரா.. சம்புவரையர்கள் என்ன திட்டம் தீட்டியுள்ளனர்? கம்பண்ண உடையார் இந்த சம்புவரையரைப் பணிய வைத்துத்தான் மதுரையிருந்த அந்நியப் படைகளை விரட்டினார். அவர்களுக்கு பாண்டிய மண்டலத்தின் மீது ஒரு விரோதம் எப்போதுமேயுண்டு.’
‘அரசே.. நேற்று இராஜ நாராயண சம்புவரையரை மதுரையிருந்து வந்த மாபலி வாணராயன் சந்தித்தார். இந்த சந்திப்பு வீரதளவாய்புரத்தில் நடந்தது…’
கோபம் உச்சத்தில் இருந்த மன்னர் பெரிய கர்ஜனை செய்தார். ‘யார்? நம் பாண்டிமண்டலத்து புதுக்கோட்டை கோனாட்டில் இருக்கும் குலசேகர மாபலி வாணராயன் வம்சத்தினரா? அவர்கள்தான் அந்நிய படையெடுப்பின்போது தங்களை தனியரசாய் அறிவித்துக்கொண்டனர். இப்போது நமக்கு எதிராகவே இறங்கிவிட்டனரா?’
வீர வல்லபர் தொடர்ந்தார். ‘அரசே.. அவர்கள் திட்டப்படி இன்னும் சிலதினங்களில் நம் மீது பலமுனை தாக்குதல் நடத்த உள்ளனர். முதலில் உள்நாட்டில் ஏதாவது கலவரம் ஏற்படுத்திவிட்டு, பின் சேரர்கள் மூலம் பாளையம்கோட்டை பகுதியில் தாக்க திட்டமிட்டுள்ளார்கள். மக்கள் அனைவரும் தென்காசி கோவில் திருப்பணி செய்துவருவதால் இந்தப்பக்கம் தாக்கினால் பலன் கிடைக்குமென்று திட்டமிட்டுள்ளனர்.’
சிறிய மௌனம். அரசர் ஏதோ யோசனையில் அமர்ந்தார்.
‘ம்..’ என்ற பெருமூச்சிற்குப் பிறகு மன்னர் தொடர்ந்தார்.
‘சரி.. நம் பகைவர்களுக்கு நம் பாண்டியகுல வீரம் என்னவென்று காட்டவேண்டிய தருணம் மீண்டும் வந்துவிட்டது. திருக்கோவில் கைங்கர்யம் செய்வதால் அரசை கவனிக்கவில்லை என்று நினைத்துவிட்டான் போலும் சேரன். சேரனையும் சேர்த்துக் கவனித்து விடவேண்டியதுதான்.’
‘அமைச்சரே, உடனே நாம் மதுரை போகவேண்டும். மந்திரலோசனைக் கூட்டம் அங்கு நடக்கட்டும்.’
‘பாளையங்களில் உள்ள படைகள் தயார் நிலையில்தான் உள்ளது அரசே. அவர்கள் எந்த நேரத்திலும் களத்திற்கு வர ஆயத்தமாய் இருக்கிறார்கள். தவிர அரையர், போரரயர் போன்றோருக்கு விழிப்புடன் இருக்க செய்தி அனுப்பிவிட்டேன். மந்திரலோசனை கூட்டம் முடிந்து செயல்படுத்த வேண்டியதுதான்.’
‘நல்லது செல்வநம்பியாரே..’
‘தம்பி குலசேகரா, நீயும் அமைச்சரும் பாளையங்களில் சென்று பார்வையிட்டு சூர்ய அஸ்தமனத்திற்குள் மதுரை வரவும். அங்கிருந்து நீ வடக்கு எல்லையைப் பார்த்துக்கொள்ளலாம். நான் இங்குவந்து திருக்குற்றால எல்லையைக் கண்காணிக்கறேன். உள்நாட்டுக் கலகத்தை சமாளிக்க, நான் ஏற்கனவே தேர்ந்தெடுத்த அரையர்கள், காலிங்கராயர்கள் உள்ளனர். அவர்களுக்குத் திருமுகம் கொண்டுசேர்க்கும் பொறுப்பு ‘சுந்தரா’ உன்னுடையது. இப்போது நாம் கிளம்புவோம்..’ என்று மொத்தத் திட்டத்தையும் சொன்ன மன்னன், மதுரை போக ஆயத்தமாயினான். மன்னரே திட்டமிடுவதாயினும் ஆலோசனைக்கூட்டத்தில் தேர்ந்தவர்களின் அறிவுரை கேட்டே செயல்படுத்துவது மரபு.
அவசரமாய்ப் பயணிக்க வேண்டியிருந்ததால், மன்னர் சிறு பாதுகாப்புப் படையோடு தன்னுடைய குதிரையில் கிளம்பினார் மற்றவர்கள் அரசனின் கட்டளைப்படி நடக்கத் தொடங்கினர். சிறிது நேரத்தில் அந்த இராஜபாளையம் பரபரப்போடு இயங்கத் தொடங்கியது.
மன்னர் கொஞ்ச நேரத்திலேயே ஸ்ரீவில்லிபுத்தூரைக் கடக்க, நெடிந்து உயர்ந்த கோபுரத்தை வணங்கி மேலும் செல்லலானார். சற்று தூரத்தில், மலர்களின் வாசமும், இயற்கையின் வனப்பும் நிறைந்த சோலைகள் விரிந்த சோலைபட்டி அவரை ஈர்த்தது..் அதன் வழியே மாற்றுப்பாதையில் பயணித்தால் மதுரையை விரைவில் அடையலாம் என்று அவ்வழியே தன் பயணத்தை மாற்றினார். வீரர்கள் திடுக்கிட்டுப் பின்சென்றனர். அங்கு ‘கமண்டல நதி’ ஓடி அவ்வழியைப் பசுமையாக்கி கொண்டிருந்தது அதைக்கடந்து சென்றதும், குரா என்கிற குருந்தை மரங்கள் அடர்ந்து கானகம் போல் காட்சியளித்தது. திடீரென்று யாழ் பிடித்த சிறு பாணன் ஒருவன் பாடல் கேட்டது தான் இருக்கும் அவசர வேலையிலும், அந்தப்பாடல் அரசரைக் கட்டிப்போட்டது. பாணர் பின்வரும் பாடலைப் பாடினான்.
சாயக் குருந்தம் ஒசித்த தமியற்குண்ட்
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு,*.
பேயைப் பிணம்படப் பால் உண் பிரானுக்கு*
என் வாசக் குழலி இழந்தது மாண்பே*
அந்தக் குறைந்த நேரத்தில், இந்தப்பாடல் நம்மாழ்வாரின் திருவாய்மொழி என்றும், குருந்தை மரத்தைக் கண்டதால் இப்பாடல் பாடியதாகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் அப்பாணன் மூலம் அறிந்துகொண்டார் மன்னர். பாணருக்கு பாரிசில் தந்துவிட்டு மதுரை நோக்கி மேலும் பயணமானார். வெகுவிரைவாக மதுரையை அடைந்தார். அங்கு இருக்கும் தளபதிகளுடன் ஆலோசித்து அடுத்த திட்டங்களை வகுக்கலானார்.
இதற்கிடையே, குலசேகரன், அமைச்சரோடு மதுரை நோக்கி வரத் தொடங்கினான். மன்னர் மாற்றுவழியில் சென்றது அறியாது, வழக்கமான வழியில் சென்றான். அந்த வழியில்தான், பழைய பாண்டியர்களின் சுதையினால் கட்டிய கோட்டை ஒன்று உள்ளது. (தற்போது சுதைக் கோட்டை, சிவரக்கோட்டை என்றானது.) பாண்டியர்களின் பெரும் பரந்த படைகள் தண்டு இறக்கிய செழும்படை (செங்கபடை) கிராமம் எல்லாம் கடக்கும்போது, குலசேகரன் வித்தியாசமான ஒன்றை உணர்ந்தான். அருகிலிருக்கும் கோட்டையில் வாள் வீசும் சப்தம் கேட்டது. எதிர்த்திசையில் சிலர் ஓடிவருவது தெரிந்தது. குலசேகரன் வாளை எடுத்துச் சுழற்றலானான். வாள் மோதிய சப்தமதான் கேட்டது. கண நேரத்தில் பலர் மடிந்திருந்தனர் குலசேகரன் வாளால். அதற்குள் அமைச்சர், சுதைக் கோட்டைக்கருகில் சிலரை வீழ்த்தியிருந்தார். கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்தது. இருவரும், ‘அரசர் இவ்வழிதானே சென்றிருப்பார்.. என்ன நடந்ததோ?’ என்ற அச்சத்தோடு மதுரை விரைந்தனர்.
அரசர் மதுரை வந்திருப்பது அறிந்து நிம்மதி கொண்டனர். நேராய் அரசரைக் கண்டு நடந்ததைக் கூறினர். அரசர் யூகித்தது சரியாய்ப் போனது. உள்நாட்டுக் கலகம் என்று வீர வல்லபர் சொன்னது பற்றி அரசர் சொன்னார். ‘நான் அந்த வழியில் வரவில்லை. சில சோலைகள் கடந்து மாற்றுப்பாதையில் வந்தேன். நான் அவ்வழி வந்திருந்தால் என்னையும் தாக்க முயன்றிருப்பர்.’ அதற்குள் மந்திராலோசனைக்கு நேரமானதால் அனைவரும் அங்கு கூடினர்.
அரசர் ஏற்கெனவே போட்ட திட்டம் பற்றிச் சொன்னார். முக்கிய மந்திரிகள் தங்கள் நோக்கைச் சொல்லினர். முடிவில், குலசேகரன் மதுரையிருந்து கோட்டையைக் காக்கவேண்டும். சிறுபடை ஒன்று வாணராயன் வம்சத்தினரை கோனாட்டில் சிறைப்படுத்தும். பராக்கிரம பாண்டியர் இராஜபாளையம் சென்று திருக்குற்றால போருக்குத் தயாராயிருப்பார். தென்காசி கோவில் திருப்பணிகள் தொடர்ந்து நடக்கும். தான்யாதிகாரி மக்களுக்கும், படைகளுக்கும் தேவையான தானியங்களைக் கண்காணிப்பார். சோழபாண்டியருக்கு ஓலை அனுப்பி தேவைப்பட்டால் அவர்களின் ஆதரவைப் பெறுவார் செல்வநம்பி. இப்படி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. திருமுகம் வரைவோர் மூலம் சில தேவையான ஆணைகள் அரையர்களுக்கும், காலிங்கராயர்களுக்கும் அனுப்பப்பட்டன.
இம்முறை பாளையம் செல்லும் போதும் பராக்கிரம பாண்டியர் அதே குருந்தை வனப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். அழகான இயற்கை சோலைகளில் லயித்ததால், அவர் பயணப்பட்டதே தெரியாமல் இருந்தது. இராஜபாளையமும் அடைந்தார். எதிர்பார்த்தது போலவே இரண்டு நாட்களில் மேலை மலை அடிவாரம் வழியே சேரர் படை வரத்தொடங்கியது. அதற்குள் பராக்கிரம பாண்டியர் திருக்குற்றாலத்தைப் போர்க்களத்திற்குத் தயார் செய்தார். அருகிலிருந்த கிராம மக்கள் தங்கள் ஊர்களை விட்டு வெளியேறினர். போரில் சாதாரண குடிகளுக்கு எந்தப் பாதிப்பும் வரக்கூடாதென்று அரசர் மிகக் கவனமாய் இருந்தார். நாடு, கூற்றம், வளநாடு, மண்டலம் என்று பாண்டிய நாடே மிகச் சிறந்த நிர்வாக அமைப்பைப் பெற்றிந்தது. பாண்டியப் படைகளுக்குத் தேவையானதை எளிதில் கொண்டுவர அருகிலிருந்த கிராமக் கூடாரங்களில் தேவையான ஏற்படுகளை அந்தந்தக் கூற்றத்தின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
பாண்டியர்கள் பெரும் படையோடு அவர்களை எதிர்கொண்டார்கள். கடும் போர் மூண்டது. ஒரு கிழமை (வாரம்) கூட சேரன் படையால் தாக்குப் பிடிக்கமுடியவில்லை. அவர்கள் எதிர்பார்த்த உள்நாட்டுக் கலகம் குலசேகரனால் முழுதும் சிதைப்பட்டது. சேரன் படைகள் தோற்று பின்வாங்கின. இனிமேல் சேரன் போருக்கே வரவேமாட்டான் என்ற அளவுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது. வாணராயன் வம்சத்தினரும் ஒடுக்கப்பட்டனர். பாண்டிய மன்னனின் வீரமும் விவேக ஆற்றலும் படைகளுக்குத் திறன் கூட்டின. இப்பெரு வெற்றியைக் கொண்டாட அனைவரும் விரும்பினர். ஒரு விஜயாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அது மன்னன் மழவராயன் சிங்காசனம் வீற்றிருக்கும் மதுரையம்பதியில் நடக்கவிருந்தது.
பராக்கிரம பாண்டியன் திருக்குற்றாலம் போர் முடிந்து, சில நாட்கள் இராஜபாளையத்தில் இருந்தார். பின்னர் தென்காசி கோவில் திருப்பணிகளை நேரிடையாகப் பல முறை பார்த்தார். விஜயாபிஷேகத்திற்கு நாள் நெருங்கும்போது மதுரை நோக்கிப் பயணமானார். வழியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று அந்த பாணன் சொன்ன பதிகத்திற்கு விளக்கம் கேட்டறிந்தார். மீண்டும் மதுரைக்கு அதே வழியில் பயணமானார். அதே குருந்தை மரங்கள், அதன் பூக்கள் தரும் மணம்.. அருகில் ஓடும் கமண்டல நதி.. ஆண்டாளின் பாசுரங்கள், பட்டரின் விளக்கம், ‘..முன் இராமாவதாரத்தில் இலங்கையை அழியச் செய்து உபகரித்தவன்..’ பாணனின் இனிய குரலில் பாசுரம்.. இவையெல்லாம் மாறிமாறி வந்தன அவர் நினைவில்! ஒருகணம், கமண்டல நதியே அவருக்கு கண்ணன் ஆய்ச்சியர்களின் ஆடைகளை மறைத்த பொய்கையாகத் தோன்றியது.
‘தேரோட்டி.. சற்றே நிறுத்தும்..’ மன்னர் கீழே இறங்கினார்.
அலகிலா விளையாட்டுடையவன் இறைவன்! ‘இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்?’ என்று ஆண்டாள் கேட்ட கேள்விக்கு, எங்கோ செல்லவேண்டியவனை இந்த வழியில் திருப்பி, இந்த கமண்டல நதி ஓரத்தில்தான் இருக்கிறதை நிரூபிக்க இத்தனை விளையாட்டா!
‘அமைச்சரே.. பாண்டியநாட்டில் முல்லை, ஞாழல் காடுகளைத் திருத்தி கோவில் கட்டியதாய் இலக்கியங்களில் சொன்னது போல், அதே பாண்டிய பூமியில், இந்த குருந்தை என்ற குரா மரங்களைத் திருந்தி அதன் நடுவே கண்ணனுக்கு கோவில் எழுப்புவோம். அவர் கண்ணன் மட்டுமல்ல. திருமால் அவதாரம். அந்த பாணன் யாழிசை போல் இனிய குழல் ஊதும் கண்ணனாய், திருமாலின் சின்னங்களாக திருவாழி, திருச்சக்கரத்தோடும் இருப்பார். நான்கு திருக்கரங்களோடு வேணு கோபாலனாய்! அரசால் இந்த இடம் திருவிடையாட்டமாகவும், அந்தணர்களுக்கு வீதிகளும் அமைத்து உருவாக்கப்படட்டும். குரா மரங்களால் உருவானதால் இது ‘குராயூர்’ என்றும், ‘பொன்னின் பெருமாள் சதுர்வேதிமங்கலம்’ என்றும் வழங்கப்படட்டும்…’
அமைச்சர் உட்பட அனைவரும் ஆனந்தத் திகைப்பில் நின்றனர் மன்னரின் திடீர் பேச்சைக் கேட்டு. ஓலைப்படுத்துவோர் அனைத்தையும் ஆவணப்படுத்தினர். மன்னர் விஜயாபிஷேகம் இனிது முடிந்தது. அங்கங்கு நடக்கும் சில பிரச்சினைகளை பராக்கிரமனும், குலசேகரனும் தீர்த்து வைத்தனர். சில திங்கள்களில் குராயூர் கோவில் திருப்பணி முடிந்தது. பொன்னின் பெருமாள் பராக்கிரம பாண்டியனும், சடையவர்மன் குலசேகரப் பாண்டியனும் மங்களாசாசனம் செய்தனர். ஆயர்களின் கண்ணன், அந்த ஊரில் குருந்திடை தோன்றிய கோபாலனாய் நான்கு திருக்கரங்களோடு குழல் ஊதும் வண்ணம் ருக்மணி–சத்யபாமாவோடு வீற்றிந்தார். அதே பாணியில் உற்ஸவ மூர்த்திகளோடு. அந்நியப் படையெடுப்புகள், பண்டைய கலாசார மறைவு, உள்நாட்டுப் பகை என்று பலவற்றை எதிர்கொண்டிருந்த மக்கள், நீண்ட காலத்திற்குப் பிறகு நல்லரசர் கிடைத்த களிப்பில் ஆனந்தமாய் வாழ்ந்து வந்தனர்.
*
இன்று, அந்நியப்படையெடுப்பிற்குப் பின் இவற்றைக்கூட நம்மால் காக்க முடியவில்லை. காலத்தின் வினோதமாய் அந்தப் பொக்கிஷங்களை நாம் காக்க மறந்துவிட்டோம். அந்த உற்ஸவ மூர்த்திகள் மன்னர்கள் கட்டிப் பராமரித்த கோவிலில் இல்லை. இருக்குமிடம் ஆராயப்படுகிறது. கோவில்களை நம்மிடம் விட்டுச் சென்றதற்கு மன்னர்கள் வருத்தப்படத்தான் செய்திருப்பர்.