Posted on Leave a comment

தரம்பாலின் ‘அழகிய நதி’: விரைவில் பூரணகுணம் உண்டாகட்டும் | டி.கே.ஹரி, ஹேமா ஹரி

தரம்பாலை நேரில் சந்திக்கும் பாக்கியம் எங்களுக்கும் கிடைத்திருக்கிறது. எங்களுடைய பாரத் க்யான் அமைப்பின் பணிகள் தொடர்பாக அவரை வார்தாவில் சேவா கிராமில் சென்று சந்தித்திருக்கிறோம். அவருடைய கட்டிலில் அவருக்கு அருகில் அமர்ந்து பல நாட்கள் பாடம் கற்றிருக்கிறோம்.
திரும்ப வரும்போது இந்தியா ஆஃபீஸ் ரெக்கார்ட்ஸ், பிரிட்டிஷ் மியூசியம் ஆகியவற்றுக்குச் சென்று கைப்பட எழுதி எடுத்த மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டபோது குழந்தைபோல் அவர் முகம் குதுகலித்தது. நாங்கள் இங்கிலாந்துக்கு ஆய்வுக்காகச் சென்றபோது ஒரு மாத காலம் தினமும் அவரைப் போலவே எங்களுக்கான ஆய்வுத் தரவுகளைக் கைப்பட எழுதி எடுத்தோம். ராமர் நடந்து சென்ற பாதையில் நடக்கும்போது கிடைக்கும் ஒரு சந்தோஷம், அப்படி அவரைப் போலவே எழுதி எடுத்தபோதும் கிடைத்தது. இங்கிலாந்தில் இருந்து தரம்பால் பெரிய அளவு டிரங்க் பெட்டிகளில் எடுத்துவந்த கையெழுத்துப் பிரதிகளைத் தொட்டுப் பார்த்தபோது நம் முன்னோர்களைத் தொட்டு உணர்ந்த பரவசம் கிடைத்தது. அந்த பெட்டிகளில் சில வார்தாவிலும் சில சென்னையிலும் இன்றும் இருக்கின்றன. அந்த ஆவணங்களை தரம்பாலின் அனுமதியுடனும் வழிகாட்டுதலுடனும் நமது கடந்த காலம் பற்றிய எங்கள் பாரத் க்யான் ஆய்வுகளுக்குப் பயன்படுத்திக்கொண்டும் இருக்கிறோம்.
தரம்பால் சென்னையோடு மிக நெருங்கிய உறவு கொண்டவர். அவருடைய பிரிட்டிஷ் காலத் தரவுகளில் செங்கல்பட்டு பற்றிய ஆவணங்கள் அதிகம் உண்டு என்பது ஒருபக்கம் இருந்தாலும் Patriotic and People oriented Science and Technology (PPST) என்ற சென்னை அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். பிற மொழிகளைவிட தமிழ்நாட்டுடனும் தமிழ் மக்களுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அந்த வகையில் இந்தப் புத்தகம் (இப்போதாவது) தமிழில் வருவது அவருக்குச் செய்யும் மிகப் பெரிய அஞ்சலியே. அந்த வகையில் மகாதேவன் மிக முக்கியமான பணியைச் செய்திருக்கிறார்.
மேற்கத்திய சிந்தனை, இடதுசாரிப் பார்வை, எதிர்மறை உணர்வுகள் இப்படியான விஷயங்களே அச்சு ஊடகம், காட்சி ஊடகம் எங்கும் நிரம்பி வழிகின்றன. அதை மாற்ற வேண்டுமென்றால் வரலாற்று உண்மைகளை, ஆதாரபூர்வமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம். அதை மிக அழுத்தமாகச் செய்யும் தரம்பாலின் படைப்புகள் அனைத்து பிராந்திய மொழிகளிலும் கொண்டுசெல்லப்படவேண்டும். அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் பாடமாகவும் வைக்கப்படவேண்டும்.
*
எளிய மனிதர்கள் மீதான அக்கறை, அவர்களுடைய தொழில் நேர்த்தி மீதான மரியாதை இதுவே தரம்பாலின் ஆதார அம்சமாக எனக்குத் தோன்றுகிறது. அவருடைய வாழ்வின் பல கட்டங்கள் கிராமப்புற வாழ்க்கை, அது தொடர்பான கனவுகள் ஆகியவற்றால் நிறைந்ததாகவே இருந்தது. அதோடு சமகாலத்தில் இளைய தலைமுறையினர் வெற்று ஆடம்பரம், நுகர்வு வெறி, பொறுப்பற்ற தன்மை, பொய்யான வாழ்க்கை ஆகியவற்றில் ஈடுபட்டுவருவது குறித்து மிகுந்த கவலையும் கொண்டிருந்தார்.
எளிய மனிதர்கள் மீதான மரியாதை, நவீன வாழ்க்கையின் வீழ்ச்சி இந்த இரண்டு விஷயங்கள் தொடர்பான பார்வைதான் நமது கடந்த காலத்தை நோக்கிய அவருடைய ஆய்வுகளுக்கு ஆதாரமாகவும் இருந்தன. அவர் அந்த ஆய்வுகளை அறிவியல்பூர்வமாக, வலுவான வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கொண்டதற்கு காந்தியுடனான மற்றும் நவீன உலகுடனான அவருடைய பரிச்சயமே காரணமாக அமைந்தது.
ராமாயண காலத்தில் சேது பாலம் கட்டப்பட்டது பற்றி மிகத் துல்லியமாக விவரிக்கப்பட்டிருக்கிறதுமகாபாரக் காலத்தில் ஓரிடத்தில் நடக்கும் நிகழ்வுகளை வேறொரு இடத்தில் இருந்துகொண்டு ஏதோவொரு தொலைத்தொடர்பு வசதி இருந்ததுபோலவே விவரித்திருக்கிறார்கள். இதுபோல் எண்ணற்ற நவீன கால விஷயங்கள் நமது ஆதிகால இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், அவற்றையெல்லாம் வெறும் புராண கட்டுக்கதை என்பதாகவே நவீன உலகம் ஒதுக்கிவருகிறது.
எனவே, எளிய மனிதர்களான நமது முன்னோர்கள் மகத்தான சாதனைகளைச் செய்தவர்கள் என்பதை நவீன மனிதர்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்பிய தரம்பால் மிகப் பொருத்தமான வழியைக் கண்டுபிடித்தார். மேற்கத்திய நவீன சிந்தனைகளால் சூழப்பட்டவர்களுக்கு மேற்கத்திய ஆதாரங்கள், ஆவணங்களையே சான்றாக முன்வைத்தார். தரம்பால் தொகுத்த தரவுகள் அனைத்தும் ஏதேனும் இந்திய மொழியில், ஏதேனும் இந்தியத் துறை சார் நிபுணர்களால் எழுதப்பட்டிருந்தால் அவை மேற்குலக, இடதுசாரி அறிவுஜீவி வர்க்கத்தாலும் அவர்களுடைய இந்திய சீடர்களாலும் ஒரேயடியாகப் புறம் தள்ளப்பட்டிருக்கும். அம்மை நோய்க்கிருமிகளைக் கொண்டே அம்மை நோய்க்கு தடுப்பு மற்றும் முறி மருந்து கண்டுபிடித்த நம் முன்னோர்களைப் போலவே தரம்பால், மேற்கத்திய (பிரிட்டிஷ்) ஆவணங்களைக் கொண்டே மேற்கத்திய வரலாற்றுப் புனைவுகளை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
நவீன மனிதர்கள் புரிந்துகொள்ளும் வரலாற்று மொழியில், அவர்களுக்குத் தேவைப்படும் அறிவியல்பூர்வ ஆதாரங்களுடன் நமது முன்னோர்களை, நமது கடந்த காலத்தைப் பற்றிய உண்மையான சித்திரத்தை முன்வைத்திருக்கிறார். மேற்குலகம் உருவாக்கி வைத்த இந்தியாவுக்கு மாற்றான உண்மையான, இன்னொரு இந்தியாவை நமக்குக் காட்டியிருக்கிறார். தரம்பாலின் ஆங்கிலப் பதிப்பாளரான க்ளாட் ஆல்வரெஸ் தனது பதிப்பகத்துக்கு அதர் இந்தியா பிரஸ் என்று பெயர் சூட்டுவதற்கான முக்கியக் காரணமாகவும் அதுவே அமைந்தது.
*
இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஆவணங்கள் எல்லாம் பிரிட்டிஷாரால் எழுதப்பட்டவை. இந்தியாவை, மன்னிக்கவும் இந்துஸ்தானை (பிரிட்டிஷார் தமது ஆவணங்களில் 90% இடங்களில் இந்தியர்களை இந்துக்கள் என்றே குறிப்பிட்டிருக்கின்றனர். இந்து அல்ஜீப்ரா, இந்து வானவியல் என்றே குறிப்பிட்டிருக்கிறார்கள்) ஆக்கிரமிக்கத் தொடங்கும் முன் இந்துஸ்தானின் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணிதம், கனிம வளம், விவசாயம், கைவினைத் தொழில்கள் ஆகியவை பற்றி பிரிட்டனில் இருந்த துறைசார் நிபுணர்கள், அரசு பிரதிநிதிகள் ஆகியோருக்கு விரிவாக எழுதி அனுப்பியிருக்கிறார்கள். 18ம் நூற்றாண்டின் பின்பாதியில் எழுதப்பட்ட பல ஆவணங்கள் இந்துஸ்தானின் உண்மை நிலையை, பிரிட்டிஷார் புரிந்துகொண்ட வகையில் அப்படியே ஆவணப்படுத்தியுள்ளன. எந்தவித அரசியல் உள்நோக்கங்களும் அப்போது பெரிதாக ஆரம்பித்திருக்கவில்லை.
அல்ஜீப்ரா என்பது அரபுப்பெயர் கொண்டதாக இருந்தாலும் அராபியர்கள் இந்துக்களிடம் இருந்துதான் அதைத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்; கிரேக்கர்களைவிட இந்துக்கள் அல்ஜீப்ராவில் சிறந்து விளங்கியிருக்கின்றனர் என்ற உண்மைகளை மிக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு பார்த்து பிரிட்டிஷார் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
காசியில் கங்கைக் கரையில் அமைந்திருக்கும் வான் ஆராய்ச்சி மையம் பற்றியும் வானவியலில் இந்துஸ்தான் செய்த மகத்தான சாதனைகள் பற்றியும் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்துஸ்தானின் எஃகானது ஐரோப்பிய எஃகைவிட மிக உயர் தரத்தில் இருந்தது என்பதை பிரிட்டிஷார் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இரும்புத் தாதுக்களை வெட்டி எடுப்பதில் தொடங்கி வார்ப்பிரும்பு, தேனிரும்பாக உருவாக்கி எடுப்பது வரையிலான செயல்பாடுகளை அருகில் இருந்து பார்த்து எழுதியிருக்கிறார்கள். இந்திய இரும்புத் தொழிலின் எளிமை, சிக்கனம், செய் நேர்த்தி, உயர் தரம் ஆகியவற்றை அன்றைய ஐரோப்பியத் தொழில் நுட்பத்துடன் ஒப்பிட்டுப் புகழ்ந்திருக்கிறார்கள்.
இந்துஸ்தானின் விதைக் கலப்பைத் தொழில்நுட்பமானது ஐரோப்பிய கலப்பைத் தொழில்நுட்பத்தைவிடச் சிறந்தது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
இமயமலை நீங்கலாக இந்துஸ்தானில் வேறு எங்குமே ஐரோப்பா போல் பனி படரும் வாய்ப்பு இல்லை. இந்நிலையில் பூமிக்கு அடியில் குழிகளை வெட்டி அதில் வெந்நீரைச் சிறுகலங்களில் ஊற்றி வைத்து பனிக்கட்டி தயாரித்ததை வியந்து பாராட்டியிருக்கிறார்கள். வெப்பம் மிகுந்த நம் நாட்டுக்கு பனிப்பிரதேசத்தில் இருந்து வந்த ஐரோப்பியர்கள் பானங்களைக் குளிர்விக்க எவ்வளவு தவித்திருப்பார்கள்; இந்துஸ்தானில் அது நம்ப முடியாதவகையில் உற்பத்தி செய்யப்பட்டதைக் கண்டு எவ்வளவு மகிழ்ந்தார்கள் என்பவையெல்லாம் அவர்களுடைய வார்த்தைகளிலேயே இந்தப் புத்தகத்தில் பதிவாகியுள்ளன.
கப்பலின் அடித்தளம் தொடங்கி வெடிமருந்துப் பீப்பாய்களை நீர் புகாமல் பாதுகாப்பதுவரை அனைத்துத் தேவைகளுக்குமான பசு மரப்பிசினை இந்துஸ்தானின் மகத்தான கண்டுபிடிப்பாகப் போற்றியிருக்கிறார்கள்.
அம்மை நோய் சீஸன் ஆரம்பித்த மறுநொடியே ஐரோப்பாவுக்குப் பறந்துவிடவேண்டும் என்ற தீர்மானத்துடனே ஐரோப்பியர்கள் இந்துஸ்தானுக்கு வருவார்கள். அவர்கள் இந்துஸ்தானில் அம்மை நோய்க்கு பிராமணர்கள் செய்த சிகிச்சையைப் பார்த்து மலைத்துப் போயிருக்கிறார்கள். அம்மை நோய் குணமாக வேண்டிக்கொள்ளும் அம்மன், கங்கை நீர் தெளித்து தடுப்பு சிகிச்சை செய்த விதம் ஆகிய உளவியல் அம்சங்களைக் கண்ணியமான முறையில் பதிவு செய்திருக்கிறார்கள். அதோடு அந்தத் தடுப்பு சிகிச்சை முறையின் மருத்துவ அறிவியல் அம்சங்கள், உணவுப் பத்தியம் ஆகியவற்றை மிக விரிவாகப் புகழ்ந்து ஆவணப்படுத்தியிருக்கிறார் ஒரு பிரிட்டிஷ் மருத்துவர். அவரிடம் சிகிச்சைக்கு வரும் ஐரோப்பியர் அனைவருக்கும் பிராமணர்கள் பின்பற்றிய வழிமுறையிலேயே தடுப்பு சிகிச்சை செய்து அவர்கள் உயிரைக் காப்பாற்றியுமிருக்கிறார்.
விதைப்பதற்கு முன்பாக நாள், நட்சத்திரம் பார்ப்பது, சிகிச்சைகளில் புனித நீரைப் பயன்படுத்துவது தொடங்கி கிராமப்புறங்களில் சாணிகளைச் சிறுவர்கள் கூடை எடுத்துச் சென்று அள்ளுவதுவரை அனைத்துமே ஐரோப்பாவில் இருப்பதுபோலவே இங்கும் இருப்பதை ஒருவித அந்நியோந்நியத்துடன் பதிவு செய்திருக்கிறார்கள்.
கங்கைப் பகுதியில் இருந்து இந்து மதம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் ஸ்டோன்ஹென்ஜ் (Stonehenge- நடுகல்பூத வழிபாடு, இறந்தவர் வழிபாடு) என்பது இந்து வேர்கள் கொண்ட வழிபாடுகளில் ஒன்றே. கணிதவியல், வானவியல், ஜோதிடம், விடுமுறைகள், விளையாட்டுகள், நட்சத்திரங்களின் பெயர்கள், நட்சத்திரத் தொகுப்புகளின் பெயர்கள், பழங்கால நினைவுச் சின்னங்கள், சட்டங்கள், பல்வேறு நாடுகளின் மொழிகள் என அனைத்திலும் மூல இந்து வேர்களின் தடயங்களைக் காண முடியும் என்று பிரிட்டிஷார் குறிப்பிட்டிருக்கிறார்கள்
இந்துக்களின் முன்னுதாரணமான வாழ்க்கையைப் பார்த்துவிட்டுத் தான் இஸ்லாமியர்கள்கூட வேறு எந்த நாட்டிலும் இல்லாதவகையில் இந்துஸ்தானில் அமைதி காலக் கலைகள், வாழ்க்கை முறை ஆகியவற்றில் ஈடுபட்டுவந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இன்று உலகம் அனைத்து அறிவியல்தொழில்நுட்பத் துறைகளிலும் மிகப் பெரிய சாதனைகளைச் செய்துவருவது உண்மையே. நாம் இப்போது பெருமளவுக்கு எந்தவிதப் படைப்பூக்கமும் இன்றி வெறும் நுகர்வுச் சந்தையாக நகல் வாழ்க்கையை வாழ ஆரம்பித்திருக்கிறோம். பத்திருபது தலைமுறைகளுக்கு முன்பாக நாம் அன்றைய அளவில் அடைந்திருந்த சுயமான வளர்ச்சியைத் தெரிந்துகொள்வதென்பது மிகவும் அவசியம். அம்மை நோய்வாய்ப்பட்ட உடம்பில் எதிர்ப்பு சக்தியை விழித்தெழவைக்க அதிகாலையில் மளமளவென்று குளிர்ந்த நீரைக் குடம் குடமாக ஊற்றும் சிகிச்சை பற்றி இந்தப் புத்தகத்தில் பிரிட்டிஷ் மருத்துவர் விவரித்திருக்கிறார். மேற்கத்தியக் கிருமிகளால் பீடிக்கப்பட்ட நம் மனதுக்கு இந்தப் புத்தகமும் அப்படியான ஒரு அதிர்ச்சி வைத்தியத்தையே தருகிறது. சீக்கிரமே நம்மைப் பீடித்திருக்கும் மேற்கத்திய, காலனிய சிந்தனை நோய் விலகி சுய வலிமை பெருகட்டும்.
(B.R. மகாதேவன் மொழிபெயர்ப்பில் கிழக்கு பதிப்பகம் வெளியிட இருக்கும் தரம்பாலின் அழகிய நதி புத்தகத்துக்கான முன்னுரை.)
Posted on Leave a comment

ஈழத்தமிழர் அகதியல்லர் – இந்துக்கள் | அகரமுதல்வன்

எனது அம்மம்மா ஒரு சைவ வைதீகவாதி. அவள் எப்போதும் சொல்லிக்கொண்டே
இருப்பாள். ‘இந்தியா எங்களைக் கைவிடாது. இந்தியா எங்களைக் கைவிடாது.’ எப்படி இவ்வாறு
நம்பிக்கையாகச் சொல்கிறாய் என்று கேட்டால், ‘அங்குதான் இந்துக்களின் அதிக இதயம் துடிக்கிறது’
என்பாள். அம்மம்மா இறந்துபோவதற்கு ஓராண்டிற்கு முன்னால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்
களத்தில் ஒரு பதுங்குகுழியில் இருமிக்கொண்டு சொன்னாள். ‘இந்தியா எங்களைக் கைவிட்டுவிட்டது.’
இப்போது நான் ‘இந்தியா எங்களைக் கைவிடாது’ என ஒவ்வொரு ஈழத்தமிழ் அகதியாகவும் நின்றுகொண்டு
சொல்கிறேன். ஒருபொழுதும் அம்மம்மா பதுங்குகுழியில் இருந்து சொன்னதைப் போலச் சொல்லுமளவிற்கு
இன்றைய இந்திய அரசாங்கம் எம்மைக் கைவிடாது என மனந்துணிகிறேன்.(Image thanks: IndiaToday.in)

பிரதமர் மோடியின் இந்திய அரசினால் கொண்டுவரப் பட்டிருக்கும் குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடர்பாக இந்தியாவில் அகதியாக வாழ்ந்து வருகிற ஈழத்தமிழர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். அதேவேளையில் ஈழத்தமிழர்கள் இந்துக்கள் தானென்று இந்திய நாடாளுமன்றத்தில் எழுந்த ஒவ்வொரு குரலும் அதிர்ச்சி அடைந்த மக்களுக்கு ஒருவித ஆறுதலையும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் வழங்கியுள்ளது. ஈழத்தமிழர்களை இந்துக்கள் என்கிற அடையாளத்திற்குள் சேர்ப்பது தொடர்பாக அல்லது அந்த அடையாளத்தை முன்னிறுத்துவதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட இன்று ஈழத்தமிழர்கள் இந்துக்கள் தானென அடையாளம் வழங்கும் விநோதமான திருப்பம் அரசியல் வெளியில் நிகழ்ந்திருக்கிறது. இப்படியொரு அதிர்ச்சிகரமான நிகழ்வின் விளைவு இந்தியப்பரப்பில் ஈழத்தமிழர்களை இந்துக்கள் என அடையாளம் காட்டியிருப்பதானது சுட்டிக்காட்டப்படவேண்டிய ஒன்று. ஈழத்தமிழர் அகதியல்லர்இந்துக்கள் என்பதை இந்தியாவின் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூறியிருக்கும் இந்த உரைகள் மிக முக்கியமானவை.
ஈழத்தமிழர்கள் தமது சொந்தநாட்டில் நிகழ்ந்த இனப்பகைமையினாலும் வன்முறை யுத்தத்தினாலும்தான் புலம்பெயர்ந்து இந்தியாவிற்கு வந்தனரே அல்லாமல் மதப்பிரச்சினையால் அல்ல என இந்தியளவில் வெளியான ஒருவரின் கருத்தை வாசித்ததும் மனம் பதைபதைத்தது. பெளத்த வெறிகொண்ட தேரவாத பெளத்த சிந்தனையால் உருவாக்கப்பட்ட அரசபடையினரால் பல்லாயிரக்கணக்கான அப்பாவித்தமிழர்கள் (இந்துக்கள்) இலங்கைத்தீவில் கொல்லப்பட்டனர். ஆயின் இங்கே நிகழ்ந்திருப்பது இந்துக்கள் மீதான பெளத்தத்தின் ஒன்றுதிரட்டப்பட்ட படுகொலை அன்றி வேறெதுவும் இல்லை. அப்படியாக புத்தனின் கோரப்பற்களிலிருந்து உயிர்தப்பி இந்திய மண்ணிற்குள் அடைக்கலம் தேடிய ஈழ இந்துக்களை இன்றைய இந்திய அரசு கைவிடாது என்றுதான் ஈழத்தமிழ் அகதிகள் நம்புகின்றனர். கடந்தகாலத்தில் (காங்கிரஸ் ஆட்சியில்) தனது ஒட்டுமொத்தமான நலன்களின் பொருட்டு ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினையை கண்டும் காணாது இருந்ததைப் போல இன்றைய அரசசும் இருந்துவிடக் கூடாது என்பதும் ஈழத்தமிழர்களின் விருப்பமாக இருக்கிறது.
எனவே இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமை அளிக்கப்படாதது தொடர்பாக இந்துத்துவஈழஆதரவு என்ற ஒரு புள்ளியில் இயங்கும் சக்திகள் தமது மனக்கிடக்கையை வெளிப்படுத்தவேண்டும். இந்தியாவில் வாழுகிற ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கவேண்டியதன் தார்மீகமான பொறுப்பை அதிகாரத்திலுள்ள கொள்கை வகுப்புவாதிகளுக்கு எடுத்துரைக்க வேண்டிய கடமை நான் மேற்கூறியவர்களுக்கே இருக்கிறது. இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டதன் பிறகு முகாமிலிருக்கும் ஒரு ஈழத்தமிழ் அகதி அழுதுகொண்டே
இருபது வருஷமாய் இந்த அகதி முகாமிற்குள்ள வாழ்ந்திட்டு இருக்கிறன். என்ர பிள்ளையள், என்ர பிள்ளையளோட பிள்ளையள் என்று ரெண்டு தலைமுறை அகதி முகாமிற்குள்ளேயே வாழ்ந்திட்டு இருக்கு. அகதி முகாமிற்குள்ளேயே ரெண்டு கோவில் கட்டியிருக்கிறம். தமிழ் பேசக்கூடிய இந்து அகதியாக இருந்தும் இந்தியாவில் குடியுரிமை இல்லை என்று கேள்விப்பட்டு மனம் நொந்து போனோம். காங்கிரஸ் ஆட்சியிலேதான் நாங்கள் பயந்து போயிருந்தோம். மோடி ஆட்சிக்கு வரவேண்டுமென விரும்பிய கோடிக்கணக்கான இந்திய மக்களைப் போல முகாமில் வாழும் நாங்களும் விரும்பினோம். ஆனால் அவரின் ஆட்சியில் இப்படியொரு அறிவிப்பை ஏன் சொல்லியிருக்கினம் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த முடிவை இந்த அரசாங்கம் மறுபரீசீலனைக்கு உட்படுத்தி ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்துக்கள் என்கிற அடிப்படையில் குடியுரிமை வழங்குமென நம்புகிறோம் என்கிறார்.
இப்படியானதொரு நம்பிக்கையையே ஈழத்தமிழ் அகதிகள் ஒவ்வொருவரும் கொண்டிருக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தமிழ்மக்கள் விரும்பக்கூடிய தீர்வைப் பெற்றுத்தந்து விடுமென நம்புகின்றனர். இந்துக்களாகிய ஈழத்தமிழ் மக்களைக் கொன்று நரபலி ஆடிய பெளத்த ஆட்சியாளர்களின் அதிகாரக் களமாக இன்னும் தீவிரம் பெற்றிருக்கும் இலங்கை அரசியலையும் அதன் இந்திய எதிர்ப்புவாதத்தையும் அறிந்துகொள்ளுமளவிற்கு இந்தியஇந்துத்துவகொள்கைசார் அறிவுஜீவிகள் இல்லையோ என்கிற மனக்குறை என்னைப்போன்ற ஈழத்தமிழர்களுக்கு இருக்கவே செய்கிறது.
ஏனெனில் இந்தக் குடியுரிமை மசோதா கொண்டுவரப்பட்டு இந்தியளவில் எதிர்ப்பும்ஆதரவும் ஒருசேர எழுந்திருக்கும் இந்நேரத்தில் விவாதிக்கப்படும் கருத்துக்களில் மிகமோசமான புத்திபூர்வமற்ற கருத்துகள் ஏராளமானவை. அதிலொன்று ஈழத்தமிழ் அகதிகள் இந்திய நிலவெளிக்குள் புலம்பெயரக் காரணமாக இருந்தது இனரீதியான முரண்பாடுகளே அன்றி மதரீதியான ஒடுக்குதல் இல்லையெனக் கூறுவதேயாகும். இதுவொரு அடிமுட்டாள்தனமான அரசியல் பார்வை. மேலும் கழுத்தைச் சுற்றிக் கண்ணில் கொத்தநிற்கும் பாம்பைக் கயிறென நினைக்கும் விபரீதமான புரிதல்.
இலங்கைத்தீவில் தொடர்ந்து நடந்துவரும் தமிழ்சிங்கள இன முறுகலை சரியாகப் புரிந்துகொள்ள விரும்புகிற இந்தியர்கள் மிகக்குறைவானவர்களே. ஏனெனில் அவர்களுக்கு இதுவொரு அண்டைநாட்டுச் செய்தி. ஆனால் உண்மை அதுவல்ல. இலங்கைத்தீவில் தமிழ்மக்கள் நூறாண்டு காலமாக பெளத்த சிங்கள ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டதற்கும்இனப்படுகொலை செய்யப்பட்டதற்கும் காரணம் ஈழத்தமிழர்கள் இந்துக்கள் என்கிற ஒற்றைக்காரணமே. இந்துக்கள் என்றால் இந்தியாவின் நீட்சியாக இலங்கைத்தீவை அபகரிக்கவந்தவர்கள் என்பதே தேரவாத பெளத்தர்களின் கொலைச்சிந்தனையாக இருக்கிறது. சோகம் என்னவெனில் பாகிஸ்தானில் சிறுபான்மையாக இருக்கிற இந்துக்களை ஏற்றுக்கொள்ளும் இந்தக்குடியுரிமை மசோதா ஏன் ஈழத்தமிழ் இந்துக்களை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை? அப்படியெனில் ஈழத்தமிழ் இந்துக்களை சிங்கள பெரும்பான்மைவாத பெளத்தத்தின் நரபலிக்கு விட்டுக்கொடுத்துவிட இன்றைய இந்தியாவும் தயாராக இருக்கிறதா?
குடியுரிமை மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசிய அனைவரும் ஈழத்தமிழர்கள் இந்துக்கள் எனக் குறிப்பிட்டதனை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இப்படியொரு கருத்தினை தமிழகத்தில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் ஒருவர் சொல்லியிருந்தால் அவருக்கு மிக சுலபமாக இந்துத்துவவாதி பட்டம் வழங்கப்பட்டிருக்கும். ஆனால் இன்று முற்போக்குச் சக்திகளாக சொல்லப்படும் அனைவரும் ஈழத்தமிழர்கள் இந்துக்கள் என இந்தியாவின் நாடாளுமன்றத்தில் சத்தமாக ஆற்றுகிற உரைகள் ஒருவிதத்தில் மகிழ்ச்சியைத் தருகின்றது. இலங்கைத்தீவு என்பது பெளத்த நாடுஅது பெளத்தர்களுக்கே சொந்தமானது என சிங்கள ஆட்சியாளர்கள் மீண்டும் மீண்டும் கூறிவரும் நிலையில் அங்குள்ள சிறுபான்மை இனமான தமிழ்மக்கள் இந்துக்கள் என்கிற வகையில் அடக்குமுறைக்கு உள்ளாவதை இன்னும் இந்தியாவின் இந்துத்துவக் கரிசனம் கொண்ட கண்கள் உற்றுப் பார்க்கவில்லையோ?
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னர் தமிழர் நிலங்களில் இருந்த இந்துக் கோவில்களை இடித்தழித்து அதே இடத்தில புத்தவிகாரையைக் கட்டியெழுப்பி வருகிற அநீதிகளை இந்துத்துவர்களின் இணையத்தளமான ஸ்வராஜ்யா
(SWARAJYA)
செய்தியாக ஆவணப்படுத்தியதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்துக்களின் வணக்கஸ்தலங்களையே இடித்துப்புதைக்கும் செயலென்பது மதரீதியான ஒடுக்குதல்கள் இல்லையா? ஆக இலங்கைத்தீவினுடைய அரசியல் மையங்கொண்டிருக்கும் இனப்பிரச்சினை என்கிற பதத்தின் அடியாழத்தில் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் பெளத்தஇந்து மோதலை வரலாற்றின் குகையிலிருந்து கண்டுணர்ந்தால் இப்படியொரு முடிவு இந்திய அதிகாரமட்டத்தில் எட்டப்பட்டிருக்காது என்பது எனது துணிபு.
இந்தப் பின்னணியில் ஈழத்தமிழ் அகதிகளுக்கு வழங்கப்படவேண்டிய குடியுரிமை சார்ந்து மிகுந்த கவனம் கொண்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது சட்டமன்ற தீர்மானத்தில் இரட்டைக் குடியுரிமை சார்ந்து வெளியிட்ட அறிக்கை மிகவும் முக்கியமானதொரு நிலைப்பாடு. அதனைக் கருத்தில் கொண்டேனும் இந்த அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டுமென்பதே ஒவ்வொரு ஈழ அகதியினதும் எதிர்பார்ப்பு. இந்தியாவிற்கும் ஈழத்தமிழர்களுக்கும் வரலாற்று ரீதியாக இருக்கும் மதரீதியானஅரசியல் ரீதியானபண்பாட்டு ரீதியான உறவுகள் குறித்து ஒரு கருத்தியல் பிரசாரத்தினை இந்துத்துவ சக்திகள் முன்னெடுக்க வேண்டும். ஒரு பண்பாட்டுச் செழுமை வாய்ந்த ஈழத்தமிழினத்தை குடியுரிமை அற்ற அகதிகளாக இந்திய நிலத்தில் ஆக்கிவைப்பதன் மூலம் கேள்விக்குட்படுத்தப்படுவது இந்து தர்மமும் கூடத்தான். ஆக திபெத்திய பெளத்தனை குடியுரிமை உள்ளவனாக ஆக்கும் இந்திய நாடுஈழத்தமிழனை ஏன் புறங்கை கொண்டு தட்டுகிறது? என்கிற வினாவை ஒவ்வொரு இந்திய மனமும் தனக்குள் கேட்பதன் வாயிலாக ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க அரசிடம் வேண்டுகோள் வைக்கமுடியுமென நம்புகிறேன்.


Posted on Leave a comment

குடியுரிமைச் சட்டத் திருத்தம் | ஹரன் பிரசன்னா

    


குடியுரிமைச் சட்டத் திருத்தம் (CAA) லோக் சபாவிலும் ராஜ்ய சபாவிலும் அங்கீகரிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டிருக்கிறதுமிக நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சினை இதுபல்லாண்டுகளாக வேண்டுமென்றே காங்கிரஸ் அரசால் கிடப்பில் போடப்பட்டிருக்கும் முக்கியமான சட்டங்களையெல்லாம் மோடி தலைமையிலான இந்த பாஜக அரசு தைரியமாக சட்டப்படி நிறைவேற்றிக்கொண்டு வருகிறதுஅதில் மிக முக்கியமானது இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம்.
அஸ்ஸாமில் தேசியக் குடியுரிமைப் பதிவேடு (NRC) நிறைவேற்றப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டதன் பெயரில் மத்திய அரசு அதை நிறைவேற்றியதுஇதை ஒட்டியே தேசியக் குடியுரிமை திருத்தமும் (CAA) நிறைவேற்றப்பட்டதால்இரண்டும் ஒன்றுக்குள் ஒன்று எதிர்க்கட்சிகள் பல வதந்திகளைக் கிளப்பி விட்டனஅஸ்ஸாமில் சட்ட விரோதமாகக் குடியேறிய ஹிந்துக்களுக்குக் குடியுரிமை தரவே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது என்றன எதிர்க்கட்சிகள்மத்திய அரசு தெளிவாக இவை இரண்டும் ஒன்றல்ல என்று சொன்னாலும் எதிர்க்கட்சிகள் அதை ஏற்றுக்கொள்ளாமல் நாடு முழுக்க பல இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கின.
தேசியக் குடியுரிமை பதிவேட்டை எல்லா மாநிலங்களிலும் இந்த அரசு கொண்டு வரப் போகிறது என்றும்அதில் முஸ்லிம்கள் மட்டுமே வேண்டுமென்றே குறிவைக்கப்படுவார்கள் என்ற பொய்யையும் பல முஸ்லிம்கள் நம்பினர்வேறு பல முஸ்லிம்கள் இதனைப் பொய் என்று தெரிந்துகொண்டாலும்இதை எதிர்க்க முன்வராமல்அமைதியாக இருந்து ஆதரித்தனர்அஸ்ஸாமில் கொண்டு வரப்பட்டது போன்ற அதே அடிப்படையில் இந்தியா முழுக்க தேசியக் குடியுரிமை பதிவேட்டைக் கொண்டு வரமுடியாது என்பது குழந்தைக்கும் தெரியும்.
இந்தியா முழுக்க தேசியக் குடியுரிமைப் பதிவேட்டில் அனைவரும் பதிந்துகொள்ள வேண்டும் என்று ஒருவேளை ஆணை வந்தாலும்அது பல வகைகளில் இந்தியர்கள்அதாவது எந்த மதத்தைச் சேர்ந்த இந்தியராக இருந்தாலும் அவர்கள் தங்கள் குடியுரிமையை மிக எளிதாக நிரூபிக்கும் வண்ணமே இருக்கும்ஆனால் எதிர்க்கட்சிகள் இதை ஒட்டிப் பல பொய்களை அவிழ்த்துவிட்டனர்.

(Image from:
ahmedabadmirror.indiatimes.com)

இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அவதிப்பட்டு இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறி, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் மதச் சிறுபான்மையினர் (கிறித்துவர், பார்சிக்கள், சீக்கியர்கள், ஹிந்துக்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள்) மட்டுமே இந்தியர்களாக முடியும் என்பது சட்ட திருத்தத்தின் முக்கியப் பிரிவு. இதில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று எதிர்க்கட்சியினர் பொய்ப் பிரசாரம் செய்தனர். முஸ்லிம்கள் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள்! இவர்கள் அங்கே மத ரீதியாகக் கொடுமை செய்யப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை! ஷியாஸுன்னி பிரச்சினையைக் கணக்கில் கொண்டாலும், முஸ்லிம்கள் தஞ்சம் புக சுற்றி ஏகப்பட்ட இஸ்லாமிய நாடுகள் உள்ளன. ஆனால், வழக்கம்போல வெகுஜன முஸ்லிம்களைப் பகடைக் காயாக்கினர் எதிர்க்கட்சிகள்.
பாஜக அரசுக்கு எதிராக எப்போது வாய்ப்புக் கிடைக்கும் கலவரம் செய்யலாம் என்று காத்திருக்கும் இந்திய எதிர்ப்புக் கட்சிகள் உடனே இந்த வாய்ப்பைப் பிடித்துக்கொண்டன. ஹிந்து விரோத திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை தொடர்ந்து தினமும் பொய்களையும் வதந்திகளையும் பரப்பின. கூடுதலாக, இலங்கையில் உள்ள ஹிந்துக்களான ஈழத் தமிழர்களும் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று திமுகவும் காங்கிரஸும் பேச ஆரம்பித்தன.
* இத்தனை வருடம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏன் ஈழத் தமிழர்களை ஹிந்துக்களாக அங்கீகரித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை?
* ஏன் திமுக இத்தனை காலம் ஈழத் தமிழர்களை இன அடிப்படையில் மட்டுமே பார்த்தது?
* இங்கே ஈழத் தமிழர்களின் ஆதரவாளர்களாகத் தங்களை அடையாளம் காட்டிக்கொண்டு அரசியல் செய்பவர்கள் (வைகோ, திருமாவளவன், நெடுமாறன் போன்றவர்கள்) ஏன் ஈழத் தமிழர்கள் ஹிந்துக்களே என்று இத்தனை நாள் சொல்லவில்லை? ஏன் இவர்கள் தொடர்ந்து ஹிந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே எப்போதும் எடுத்து வந்தார்கள்? ஏன் இப்போது திடீரென்று ஈழத் தமிழர்கள் ஹிந்துக்களே என்கிறார்கள்? (இதில் நெடுமாறன் தற்போது, ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை தரப்பட்டால் சிங்கள அரசு ஈழத் தமிழர்களை ஒருபோதும் ஈழத்துக்குத் திரும்ப அனுமதிக்காது என்று கருத்து சொல்லியுள்ளார்.)
* சிங்கள இனவாத அரசு என்பதுதானே இவர்களது இத்தனை நாள் முழக்கம்? சிங்கள பௌத்த மதவாத அரசு என்று ஏன் இத்தனை நாள் சொல்லவில்லை? எப்போதும் தமிழ்நாட்டில் பௌத்தத்தைத் தூக்கிப் பிடிக்கும் திருமாவளன் எப்படி சிங்கள பௌத்தத்தை எதிர்க்கிறார்.
* எல்.டி.டி. அழிக்கப்படுகிறது என்ற போர்வையில் தமிழ் ஹிந்துக்கள் அங்கே கொன்று குவிக்கப்பட்டபோது இந்தியாவில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செய்தது என்ன? அப்போது அரசில் பங்கு பெற்றிருந்த திமுக செய்தது என்ன? அன்றெல்லாம் தமிழர்கள் இன ரீதியாக இருந்தபோது இன்றெப்படி திடீரென்று ஈழத் தமிழர்கள் ஹிந்து மத ரீதியிலான மக்கள் ஆனார்கள்?
இத்தனை இரட்டை நிலைப்பாட்டுடன், பொய்யுடன் இந்தப் பிரச்சினையை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அணுகுகின்றன. இதையெல்லாம் யோசிக்க விடாமல் முஸ்லிம்கள் மத ரீதியாகத் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்என்ற பொய்யையே திரும்ப திரும்பச் சொல்லி வருகின்றன இக்கட்சிகள். உண்மையில் இந்த சட்டத் திருத்தத்துக்கும் இங்கே வசிக்கும் இந்தியர்களான முஸ்லிம்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இன்னும் சொல்லப் போனால், இங்கே வசிக்கும் முஸ்லிம்கள் இந்தியக் குடிமக்களே என்று சந்தேகமே இல்லாமல் இந்தச் சட்டத் திருத்தம் சொல்லியுள்ளது என்பதுதான் உண்மை. இந்தச் சட்டத் திருத்தத்தின் நோக்கம், அண்டை முஸ்லிம் நாடுகளில் உள்ள மதச் சிறும்பான்மையினர் பற்றி மட்டுமே அன்றி, இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களைப் பற்றியது அல்ல.
அஸ்ஸாம் தேசியக் குடியுரிமைப் பதிவேட்டைப் பொருத்தவரை 1985ல் ராஜிவ் தலைமையிலான அரசு ஓர் ஒப்பந்தத்தை அசாம் மாணவர் அமைப்புடனும் வேறு சில குழுக்களுடனும் கையெழுத்திட்டது. அதன்படி 1971 மார்ச் 24ம் தேதிக்கு முன்பு அசாமில் வாழ்ந்ததாக நிரூபிக்கமுடியாதவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று கருதப்படுவார்கள். ஆனால் இந்த ஒப்பந்தத்தின் சரத்துகள் நிறைவேற்றப்படவே இல்லை.
பின்பு 2003ல் மன்மோகன் சிங், அண்டை முஸ்லிம் நாடுகளில் உள்ள மதச் சிறுபான்மையினர் எவ்வாறு கஷ்டப்படுகிறார்கள் என்பதைச் சொல்லி அவர்களுக்கு இந்தியா அடைக்கலம் தரவேண்டும் என்று நாடாளுமன்றத்திலேயே பேசினார்.
எனவே மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சட்டத் திருத்தம் திடீர் என்று வந்த ஒன்றல்ல. பல்லாண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கும் ஒரு சட்டத் திருத்தம்.
அஸ்ஸாமில் குடியுரிமைப் பதிவேடு என்பது உச்சநீதிமன்றம் பலமுறை நிறைவேற்றச் சொன்ன ஒரு விஷயம். அஸ்ஸாமில் 2016 ஜனவரி 31க்குள் இதைச் செய்து முடிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு 2014ல் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனாலும் முதல் பதிவேட்டின் அறிக்கை டிசம்பர் 2017ல்தான் வெளியிடப்பட்டது. இரண்டாவது வரைவு ஜூலை 30,
2018
ல்தான் வெளியிடப்பட்டது. இதை எதையும் கணக்கில் கொள்ளாமல், வேண்டுமென்றே உண்மைகளை மறைத்து, பொய்யைப் பரப்பி, இத்தனை தேவையற்ற பதற்றத்தை நாடு முழுக்கப் பரப்புகின்றன எதிர்க்கட்சிகள். குடியுரிமைப் பதிவேடு (NRC) பிரச்சினை இருக்கும்போதே குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் (CAA) மத்திய அரசு கொண்டு வந்தது வசதியாகப் போயிற்று இவர்களுக்கு.
பெரும்பாலான மக்கள் அமைதியாகவும் உண்மையை உணர்ந்தும்தான் இருக்கின்றனர். இதைக் கண்டு எரிச்சலான நடுநிலையற்ற ஊடகங்கள் இந்தியாவே பற்றி எரிவது போன்ற பிரமையை உண்டாக்குகின்றன. உண்மையில் போராடுவது பொதுமக்கள் அல்ல. நகர்ப்புற நக்ஸல்களும் கம்யூனிஸ்ட்டுகளும் இந்திய எதிர்ப்பாளர்களும் மட்டுமே. ஆனாலும், இந்தியா முழுமைக்கும் ஒரு சில இடங்கள் தவிர மற்ற இடங்களில் மக்கள் அமைதியாகவே இருக்கிறார்கள். இந்தியாவைப் போன்ற ஒரு அமைதியான வாழிடம், இந்தியாவில் வாழும் எந்த ஒரு மதச் சிறுபான்மையினருக்கும் உலகில் எங்கேயும் கிடைக்கமுடியாது என்பதே நிதர்சனம். அதேபோல் உலக ஹிந்துக்களுக்கான ஒரு அமைதியான வாழிடமாக இந்தியாவே இருக்கமுடியும். உலக ஹிந்துக்களை, மதரீதியாகத் துன்புறுத்தப்படும் ஹிந்துக்களை இந்தியா அங்கீகரிக்கவேண்டும். இதைச் செய்யாவிட்டால் பாஜக அரசு அமைந்து எந்த ஒரு பயனும் இல்லை. இதற்காகத்தான் மக்களும் பாஜகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். அதுவும் தொடர்ச்சியாக இரண்டு முறை!
ஹிந்துக்களுக்கு, அதுவும் இஸ்லாமிய நாட்டில் மத ரீதியாகக் கொடுமைப்படுத்தப்படும் ஹிந்துக்களுக்கு ஆதரவு தருவது என்பதும், இங்கே இருக்கும் முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பதும் ஒன்றுடன் ஒன்று தொடர்பே இல்லாதது. முதலாவது உண்மை, பின்னது அநியாயமான பொய். இந்திய நாட்டில் மதவேறுபாடின்றி எந்த ஒரு இந்தியனுக்கும் ஒரே போன்ற உரிமையே உள்ளது. இது இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கிறித்துவருக்கும் நிச்சயம் நன்றாகத் தெரியும். ஆனாலும் இவர்களைக் கேடயமாக்கி எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியான பொய்ப்பிரசாரத்தில் ஈடுபடுகின்றன. அதற்கு சில முஸ்லிம்களும் கிறித்துவர்களும் துணை போகிறார்கள் என்பது வருத்தத்திற்குரியது.
ஏன் எதிர்க்கட்சிகள் இப்படிச் செய்கிறார்கள்?
* பாஜகவின் தொடர் வெற்றி தரும் அச்சம்.
* முஸ்லிம்கள், கிறித்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் பரவலாக பாஜக அரசின் மீது கொள்ளும் நம்பிக்கை.
* ஓட்டரசியல், மத வெறுப்பரசியல் செய்ய முடியாதபடி இந்தியர் என்ற எண்ணம் இந்திய முழுமைக்கும் பரவிவிடுமோ என்கிற அச்சம்.
* நாட்டை எப்போதும் ஒரு கொதி நிலையில் வைத்திருப்பதன் மூலம் பாஜக அரசுக்கு எப்படியாவது ஒரு கெட்ட பெயரை கொண்டு வந்துவிட முடியாதா என்கிற ஏக்கம்.
* சட்டப்பிரிவு 370 திரும்பப் பெறப்பட்டது, அயோத்தியில் ராமர் கோவில் தீர்ப்பு போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நகர்வுகள் எவ்வித ஒரு சிறு கீறலையும் கூட நாட்டில் கொண்டு வரவில்லை என்ற கோபம்.
எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு வன்முறையைப் பரப்ப இவையெல்லாம்தான் காரணம்.
காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் சொன்ன பொய்களையெல்லாம் ஒருவேளை உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், அவை கீழே உள்ள உண்மைகளை விளக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* இந்தியாவில் சட்ட விரோதமாகக் குடியேறி, ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் வசிக்கும் மதச் சிறுபான்மையினரில் கிறித்துவர்களும் இந்தியக் குடியுரிமை பெறலாம் என்று சட்டம் அங்கீகரிக்கிறது. அப்படியானால் பாஜக அரசு கிறித்துவ சிறுபான்மையினரை ஏற்றுக்கொள்கிறது என்று எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொள்ளத் தயாரா?
* மியான்மார் உள்ளிட்ட நாடுகளில் உள்ள ஹிந்துச் சிறுபான்மையினரைப் பற்றி இந்த அரசு எதுவும் சொல்லவில்லை. அப்படியானால் இந்தச் சட்டம் மத அடிப்படையில் அமைந்த ஒன்றல்ல என்று எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொள்ளுமா?
* இலங்கைத் தமிழர்கள் ஹிந்துக்களே. அவர்களை ஏற்றுக்கொள்ள இந்த அரசு இச்சட்ட திருத்தத்தில் ஒப்புக்கொள்ளவில்லை. அப்படியானால் இந்தச் சட்டம் ஹிந்துக்களைக் குறி வைத்து எழுதப்பட்ட சட்டத் திருத்தம் அல்ல என்று எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொள்ளுமா?
எதிர்க்கட்சிகளின் பித்தலாட்டங்களுக்கு இவையெல்லாம் சில எடுத்துக்காட்டுகள்.
இலங்கையில் நடப்பது ஹிந்து ஒழிப்பே என்று பேசிய ஒரே குரல் ஹிந்துத்துவர்களின் குரல் மட்டுமே. அப்போது ஈழத் தமிழர்களை மத ரீதியாகப் பிளவு படுத்தப் பார்க்கிறார்கள் என்று இங்கிருக்கும் ஈழத் தமிழ் ஆதரவு வியாபாரிகள் கூவினார்கள். இலங்கையில் ஹிந்து நாடு ஒன்று அமையுமானால் அதை நிச்சயம் ஆதரிக்கவேண்டும் என்று எழுத்தாளரும் ஹிந்துத்துவருமான அரவிந்தன் நீலகண்டன் மிக வெளிப்படையாகவே பேசினார். அப்போதெல்லாம் அதை எதிர்த்தவர்கள், இன்று ஒரு சட்ட திருத்தம் வரவும், ஈழத் தமிழர்களும் ஹிந்துக்களே என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
திராவிடக் கட்சிகள் எத்தனை முறை இங்கே இருக்கும் ஈழத்தமிழர்களின் அகதி முகாமுக்குப் போயிருக்கிறார்கள்? ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்க்கை குறித்து இவர்களுக்கு என்ன அக்கறை உள்ளது? ஈழத்தமிழர்களைத் தங்கள் கொள்கை அரசியலுக்கு கருவேப்பிலையைப் போல் பயன்படுத்துவதன்றி இந்த கட்சிகள் செய்தவைதான் என்ன? இவை எதற்கும் இக்கட்சிகளிடம் நேர்மையான பதில் இருக்காது.
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சட்டத் திருத்தம் அண்டை இஸ்லாமிய நாடுகளில் சொல்லொணாத் துன்பத்தில் தங்கள் அடிப்படை உரிமைகளைக் கூட இழந்து வாழும் சிறுபான்மையினருக்கானது மட்டுமே. இது ஹிந்துக்களுக்கு உதவுமா என்றால், ஆம் உதவும், உதவவேண்டும், அது இந்திய அரசின் கடமை, ஒவ்வொரு இந்தியனின் கடமை, ஒவ்வொரு ஹிந்துவின் கனவு. இதைச் செய்வதால் அடுத்து வரும் தேர்தலில் இந்த அரசு தோற்றாலும் கவலையில்லை. ஓட்டுக்காக மட்டுமே நாட்டை ஆள முடியாது.
அதேபோல் இலங்கையில் இருந்து அகதிகளாக வரும் ஹிந்துக்களுக்கும் இந்த அரசு உரிய உரிமைகளை வழங்க ஆவன செய்யவேண்டும். இதுநாள் வரை இப்படியான அகதிகள் இந்தியக் குடியுரிமை பெறவேண்டும் என்று கேட்டதாக நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினையை ஒட்டிப் பேசிய அகதிகள் சிலர், தாங்கள் இந்தியக் குடியுரிமை கேட்டதாகச் சொன்னார்கள். இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் எதிர்க்கட்சிகள்!
ஈழத் தமிழர்களின் உரிமைக்காக இங்கே தமிழ்நாட்டில் போராடுவதாகச் சொல்லிக்கொள்ளும் அத்தனை பேரும் ஹிந்து எதிரிகளாகவும் இந்திய எதிரிகளாகவும் நகர்ப்புற நக்ஸல்களாகவும் இருப்பது தற்செயல் அல்ல. இப்படி இருந்தால் இங்கே தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு ஈழத் தமிழர்கள் பற்றிய பிம்பம் என்னவாக இருக்கும் என்பதைத் தனியே சொல்லவேண்டியதில்லை. இந்தச் சட்டத் திருத்தம் வந்த பிறகுதான் பலரின் இரட்டை நாக்குகள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. ஈழத் தமிழர்கள் இனியாவது ஹிந்து, இந்திய எதிர்ப்பாளர்களிடமிருந்து தங்களை விலக்கிக்கொள்ளவேண்டும். அதற்கான அவசியம் இப்போது மிக முக்கியமாகிறது.
ஈழத் தமிழ் அகதிகள் ஹிந்துக்களே என்று ஹிந்து விரோத திராவிடக் கட்சிகளைச் சொல்ல வைத்தது இந்த குடியுரிமைச் சட்டத்தின் ஆகப்பெரிய சாதனை. இனி ஈழத்தமிழ் ஹிந்து அகதிகள் விஷயத்தில் திராவிடக் கட்சிகளுக்கு இரட்டை வேடம் போட வாய்ப்பில்லை என்பது பெரிய நிம்மதி. இதை ஈழத் தமிழர்களும் நிச்சயம் உணர்ந்துகொண்டிருப்பார்கள் என்றே நம்புகிறேன்.