வலம் ஜூலை 2017 இதழ் – முழுமையான படைப்புக்கள்


வலம் ஜூலை 2017 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.

புத்தர் இந்து மதத்திலிருந்து எப்போது விலகினார் – கொய்ன்ராட் எல்ஸ்ட், தமிழில்: ஜடாயு

தாமஸ் கட்டுக்கதை – தமிழ்ச்செல்வன் 

பயங்கரவாதத்தை எதிர்க்கத் தயாராகும் கார்ப்பரேட் நிறுவனங்கள் – ஜெயராமன் ரகுநாதன்

காலத்தை வென்ற கவிஞன் காளிதாசன் – பெங்களூரு ஸ்ரீகாந்த்

பழக்கங்களின் மரபுப் பின்னணி  – சுதாகர் கஸ்தூரி 

கல்வெட்டுகளும் பயிலாத வரலாறும் – வல்லபா ஸ்ரீனிவாசன்

எங்கே செல்லும் இந்தப் பாதை  – ஹாலாஸ்யன்

யாரூர் – ஓகை நடராஜன்

சாகபட்சிணி (சிறுகதை) –  சத்யானந்தன்

மலச்சிக்கல் – சுஜாதா தேசிகன் மலச்சிக்கல் – சுஜாதா தேசிகன்

எழுபது வயதில் காலை எழுந்தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன்” – சுஜாதா, தனது எழுபது வயது கட்டுரையில்.

மலமோ, மாநிலமோ எது பந்த் செய்தாலும் கஷ்டம்தான். சாப்பிட்டபின் என்ன ஆகிறது என்று அறிந்துகொண்டாலே மலச்சிக்கலைப் புரிந்துகொள்ள முடியும் என்பது என் Gut Feeling!

ஹைவேயில் 130கிமீ வேகத்தில் கார் ஓட்டிக்கொண்டு போகும்போது நடுவில் சுங்கச்சாவடி வரிசை. பிரேக் போட்டு நின்றுவிடுகிறீர்கள். முன்பு இருக்கும் வண்டிக்கு ஏதோ பிரச்சினை. ஸ்டார்ட் ஆகாமல் நிற்க, பின்னாலே பெரிய வரிசை. முன் பின் நகர முடியாமல் இருக்கும் கார் போல சிக்கலில் மலம் மாட்டிக்கொண்டால்? மலச்சிக்கல்!

வாய் முதல் ஆசனவாய் சுமார் இருபத்தெட்டு அடி நீளமுள்ள ஒரு வழிப் பாதை (குழாய்). இந்த ஹைவேயில் சாப்பாட்டுடன் பயணம் மேற்கொள்ள வாசகர்களை அன்புடன் அழைக்கிறேன். பயண நேரம் பதினெட்டு முதல் இருபத்தி நான்கு மணி நேரம். பயணத்தின்போது ஏதாவது (மல)சிக்கல் ஏற்படாமல் இருக்க இயற்கைக் கடவுளை வேண்டிக்கொண்டு பிடித்த உணவை வாயில் போட்டுக்கொண்டு புறப்படுங்கள்.

முதலில் கண். கண்ணுக்கும் சாப்பாட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கலாம். இருக்கிறது. ஜிலேபியோ, இட்லியோ, சாப்பாட்டு ஐட்டங்களைப் பார்த்தவுடன் கண் நரம்புகளின் வழியாகப் படம் பிடித்து, இனிப்பு/காரச் செய்தியாக மூளைக்கு அனுப்புகிறது. உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாக்கில் எச்சிலும், வயிற்றில் செரிமானத்துக்குத் தேவையான திரவங்களும் சுரக்கின்றன.

அடுத்து மூக்கு. மூக்குத்திக்கு மட்டும் இல்லை வாசனைக்கும் மூக்கு மிக அவசியம். சூடாக இருந்தாலும், வாசனை இல்லாத காபி வெந்நீர்தானே?

அடுத்து வாய். தாடை, பற்கள், நாக்கு என்று வலுவான தசைகள் ஒன்றாக வேலை செய்யும் இடம். கன்னங்கள், நாக்கு அடியில் புடைத்திருக்கும் இடங்களில் உமிழ்நீர் சுரக்கும். உமிழ்நீரில் உள்ள என்சைம்கள் செரிமானத்துக்கான முதல் வேலையை ஆரம்பிக்கிறது.

வாய் ஒரு துவாரம், ஆசனவாய் ஒரு துவாரம். இதற்கு நடுவில் மூன்று துவாரங்கள் இருக்கின்றன. இவை இல்லாவிட்டால் சாப்பிட்டவுடன் குமட்டலாக வாந்தி எடுத்துவிடுவோம்.

உணவு தொண்டைக்குச் செல்கிறது. உணவுக் குழாயையும் வாயையும் இணைக்கும் பகுதி தொண்டை. முழுங்கும்போது மூக்கையும், குரல்வளையையும் (vocal chord) அடைத்து, சாப்பாட்டை உள்ளே அனுப்புகிறது. இப்பவே கொஞ்சம் எச்சிலை முழுங்கிப் பாருங்கள். காதில்கிளிக்என்று சத்தம் கேட்கிறதா? தொண்டைப் பகுதி மேலே செல்கிறதா? ஆம் என்றால், உங்களுக்கு இவை எல்லாம் சரியாக வேலை செய்கிறது. மேலே பயணிக்கலாம்.
அடுத்து உணவுக்குழாயை அடைகிறது. ஐந்து முதல் பத்து நொடியில் சாப்பிட்ட உணவு இதில் பயணிக்கிறது. விரிந்துகொடுத்து உணவை உள்ளே அனுப்புகிறது. திரும்ப வாய்ப் பக்கம் ரிவர்ஸ் கியரில் வராமல் இருக்க மூடிக்கொள்கிறது. சிரஸாசனம் செய்யும்போது சாப்பிட்டாலும் வெளியே வராமல் இருப்பதற்கு இதுதான் காரணம். ஒரு நாளைக்கு 600 முதல் 2000 முறை முழுங்குகிறோம். முழுங்கியது எல்லாம் வயிற்றுக்குச் செல்கிறது.

வயிற்றுக்கு வந்துவிட்டது உணவு. ‘எதையும் தாங்கும்இதயம் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். உண்மையில் எதையும் தாங்குவது நம் வயிறுதான். கொதிக்கும் காபி முதல் கரகர பக்கோடா வரை, மேல் நாக்கைப் பொரித்துவிட்டு, தொண்டையைக் கடந்த பிறகு சூடு தெரிவதில்லை. அதுமட்டும் இல்லை, நம் இரைப்பையில்ஹைட்ரோ குளோரிக் அமிலம்இருக்கிறது என்றால் நம்புவீர்களா? அதை ஒரு பாட்டிலில் பிடித்து அடித்தால் ரவுடிகள் வீசும் ஆசிட் தோற்றுவிடும்.

ஹைட்ரோ குளோரிக் அமிலமா என்று கேட்பவர்கள் பின்வரும் பகுதியைப் படிக்க சிபாரிசு செய்கிறேன்.

1822, ஜூன் 6 அலெக்ஸ் மார்டினை ஒரு துப்பாக்கி குண்டு துளைத்தது. யாரும் சுடவில்லை. விபத்து. சுடப்பட்ட இடம் வயிறு. டாக்டர் பியூமாண்ட் அவருக்குச் சிகிச்சை அளித்தார். ‘இன்னும் கொஞ்ச நாள்தான்என்று நினைத்தார். ஆனால் மார்டின் பிழைத்துக்கொண்டார். வயிற்றில் குண்டு அடிபட்ட ஓட்டை மட்டும் ஆறவே இல்லை. ஓட்டையாகவே இருந்தது!

மார்டின் வேலை செய்த கம்பெனி அவரை ஓட்டையுடன் வேலை செய்ய முடியாது என்று வீட்டுக்கு அனுப்பியது. டாக்டரிடமே எடுபிடியாக வேலைக்குச் சேர்ந்தார்.

அடுத்தவன் வீட்டில் இருந்தால் என்ன, வயிற்றில் இருந்தால் என்ன, ஓட்டை இருந்தாலே எட்டிப்பார்ப்பது மனித இயல்புதானே. மார்ட்டின் வயிற்றின் ஓட்டையில் என்ன நடக்கிறது என்று பார்க்க ஆரம்பித்தார் டாக்டர். தூண்டிலில் சின்ன புழுவைக் கட்டி மீன் பிடிப்பது மாதிரி சின்ன பீஸ் உணவை நூலில் கட்டி அவர் வயிற்று ஒட்டையில் விட்டு ஒரு மணிக்கு ஒருமுறை அதை எடுத்து பார்த்துப் பரிசோதனையை ஆரம்பித்தார். கூடவே அதனுடன் வந்த இரைப்பை அமிலத்தையும் எடுத்துப் பரிசோதித்தார்.

சில மாதங்களில் மார்ட்டின் டாக்டரிடமிருந்து தப்பித்து ஓடினார். ஆனால் டாக்டர் விடவில்லை. அவரைத் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் பரிசோதனையைத் தொடர்ந்தார்.

ஓட்டையிலிருந்து எடுத்த அமிலத்தை உணவின் மீது செலுத்தி அது என்ன ஆகிறது என்று பார்த்தார். முக்கியமான கண்டுபிடிப்பு நிகழ்ந்தது.

வயிற்றில் உணவை ஜீரணிக்க மாவு மிஷின் மாதிரி எல்லாம் எதுவும் இல்லை. எல்லாம் வேதியியல் முறையில் செயல்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அமிலம் கையில் பட்டால் நம் கை ஓட்டையாகும்! ஹார்பிக் என்ற நம் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் வஸ்துவில் 10% இந்த அமிலம்தான் இருக்கிறது. நம் வயிறு, ஆசிட் வைத்திருக்கும் ரவுடி!

சாப்பிட்ட உணவு பட்டாணியோ, பன்னீர் பட்டர் மசாலோவோ, எல்லாம் இரைப்பையை வந்து சேருகிறது. வாஷிங் மிஷினில் சோப்பு போட்டவுடன் அது தண்ணீருடன் கலந்து அழுக்கை எடுப்பது போல, இந்தக் கரைசல் நம் வயிற்றுச் சாப்பாட்டை ஜீரணம் செய்கிறது. வாஷிங் மிஷின் உள்ளே டிரம் இப்படியும் அப்படியும் அசைவது மாதிரி, இரைப்பையின் தசைகள் பாபா ராம் தேவ் செய்வது மாதிரி சுருங்கி விரிந்து அரைக்கிறது.

இங்கிருந்து சின்ன துவாரம் வழியாகச் சிறுகுடலுக்கு அனுப்புகிறது. அங்கேதான் ஹைட்ரோ குளோரிக் அமிலம் செயல்பட ஆரம்பிக்கிறது. அமிலத்துடன் கல்லீரல் கணையத்திலிருந்து ஜீரண நீர் கலந்து உணவில் இருக்கும் புரதச்சத்துஅமினோ அமிலமாகவும்; மாவு சத்துசர்க்கரையாகவும்; கொழுப்புகொழுப்பு அமிலமாகவும் பிரிக்கும் வேலைகள் நடக்கின்றன. மீதம் இருக்கும் கழிவுகளைப் பெருங்குடலுக்கு அனுப்புகிறது. வண்டி ஸ்மூத்தாக ஓட ஆயில் தேவைப்படுவது போல, பெருங்குடலில் கோழை மாதிரி ஒரு லூப்ரிகண்ட் உற்பத்தி ஆகி, மலத்தை இளகவைத்து அடுத்த நாள்மகிழ்ச்சிஎன்று சொல்ல வைக்கிறது..

எப்படி வாஷிங் மிஷின் துணியைப் பிழிந்து அழுக்குத் தண்ணீரை வெளியே தள்ளுகிறதோ, அதே மாதிரி சிறுகுடல் உணவில் உள்ள சத்துக்களை எடுத்துக்கொண்டு தேவை இல்லாதவற்றைப் பெருங்குடலுக்கு அனுப்புகிறது. பெருங்குடலுக்கு வந்து சேருபவை எலும்புத் துண்டு, பழக் கொட்டை (மாங்கொட்டை இதில் சேராது), நார்ச்சத்து போன்றவை.

ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறைதான் பெருங்குடல் சிணுங்கும். அப்படிச் சிணுங்கும்போது மலம் வர தயாராகும். கண்டதைச் சாப்பிட்டு அதிகமாகச் சிணுங்க வைத்தால் டாய்லெட்டுக்கு விசிட்டிங் ப்ரொஃபசராக இருந்த நீங்கள், நிரந்திர ப்ரொஃபசராக அங்கேயே இருப்பீர்கள்.

காலை சூடாக காபி சாப்பிட்டால்தான் சிலருக்குஅது வரும்.’ (அதனுடன் சிலருக்குச் சிகரெட்டும் பிடிக்க வேண்டும்.) சூடான காபி இரைப்பையின் நரம்புகளைத் தூண்டி, அது பெருங்குடலை சிணுங்க வைத்துஅதுதான் விஷயம்! இப்போது கடைசிப் பகுதிக்கு வந்துவிட்டோம். மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

ஆசனவாயை ‘Anal Sphincter’ என்பார்கள். பாட்டியின் சுருக்குப்பை மாதிரி இருக்கும் இதற்கும் நம் மூளைக்கும் சம்பந்தம் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆசவனாய்க்கு சில சென்டிமீட்டர் முன் இன்னொரு சுருக்குப்பை இருப்பது பலருக்குத் தெரிவதில்லை.

வெளியே இருக்கும் சுருக்குப்பைதான் நம் மூளையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மீட்டிங்கின்போதுஅவசரம்என்றாலும் நம்மால் அடக்கிக்கொள்ள முடிகிறது. ஆனால் உள்ளே இருக்கும் விஷயம் அப்படி இல்லை. தன்னுணர்வற்ற (unconsciousness) முறையில் செயல்படுகிறது. உள்ளே எல்லாம் சரியாக இருக்கிறதா (பிரஷர் ஒகேவா?) என்று பார்த்துக்கொள்ள வேண்டியது இதனுடைய பொறுப்பு.

இது இரண்டும் எப்படி வேலை வேலை செய்கின்றன? டிவியில் டாக் ஷோவில் அதை நடத்துபவர் மைக் மூலம் சொல்லுவது மாதிரி உள்ளிருக்கும் சுருக்குப்பைஇந்தாப்பா கொஞ்சம் சாம்பிள்என்றுஅதைடெஸ்டுக்கு அனுப்பும். வெளியே இருக்கும் சுருக்குப்பை மதகுகளைத் திறப்பதற்கு முன் பல சென்சார் செல்களால் அதை ஆராய்ந்துஇன்னிக்கு ரொம்ப கெட்டி போலஅல்லதுஐயோ இவ்வளவு தண்ணியாவா…? நேற்று என்ன சாப்பிட்டேன்என்று யோசிக்கத் தொடங்கும். அல்லதுவிடுங்கவெறும் காற்றுதான்என்று விட்டுவிடும். அல்லதுமாஸ்டர் இன்னொரு சூடான டீஎன்று ஆர்டர் செய்யும்.

சுற்றுப்புறச் சூழலைக் கவனித்து, டாய்லெட் போக வேண்டுமா வேண்டாமா என்பதை மூளை முடிவு செய்யும். அதனால்தான் வீட்டில் கிடைக்கும் நிம்மதி, வெளியே போகும்போது கிடைப்பதில்லை. டாய்லெட் போகும்போது யாராவது நம்மைக் கூப்பிட்டால் சுருக்குப்பை உடனே மூடிக்கொள்ளும். இது எல்லாம் சென்சார் செல்களின் வேலையே.

இன்று பத்தில் மூன்று பேருக்குசரியாபோகலை பிரச்சினை இருக்கவே செய்கிறது. மலம் பெருங்குடலில் மாட்டிக்கொண்டு வெளியே வர வேலைநிறுத்தம் செய்கிறது. பச்சை சிக்னல் வந்த பிறகும் நமக்கு முன்னே இருக்கும் வண்டி போகாமல் இருப்பது மாதிரி. நரம்புகளும், வயிற்றுத் தசைகளும் ஒன்றாகச் சேர்ந்து இயங்காததால் வரும் பிரச்சினை.

அதுக்குஅடிக்கடிப் போக வேண்டும் என்பது பலருக்குப் பிரச்சினையாக இருப்பதில்லை ஆனால் ஸ்மூத்தாக போக முடிகிறதா என்பதுதான் பிரச்சினையே.

ஸ்கூட்டியில் போகும் பெண் போலவோ அல்லது தீவிரவாதிகள் போல முகத்தை மூடிக்கொண்டோ கீழே உள்ளதைப் படிக்கவும்.
.
மலத்தின் அளவு:

நாம் சாப்பிடும் சாப்பாடு மட்டுமே மலமாக வெளியே வருகிறது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம். நம் உடல் நாம் சாப்பிடும் உணவில் தேவையானவற்றை உறிஞ்சி உபயோகத்துக்கு எடுத்துக்கொள்கிறது. இதை தவிர பல நுண்ணங்களும், குடலிலிருந்து சேரும் பலவகைக் கழிவுகளும் சேர்ந்து மலமாக வெளிவருகிறது. அரைக்கிலோ உணவு உண்டுவிட்டு அரைக்கிலோ மலம் வரும் என்று எதிர்பார்க்கக் கூடாது!

மலத்தில், மூன்று பங்கு நீர்தான். மீதம் ஒரு பங்கில் ரிடையர் ஆன பாக்டீரியாக்கள், பழம், காய்கறிகளின் நார்ச்சத்து, தேவை இல்லை என்று உடல் ஒதுக்கிய மருந்து மாத்திரைகள், உணவுகளில் இருக்கும் வண்ணம், கொலஸ்டாரால் போன்றவை.

மலத்தின் துர்நாற்றம்:

பெரிய குடலில் மலம் தங்கிச் செல்லும் காலத்தில் இண்டால், ஸ்கேட்டால் என்ற வேதி வஸ்துக்களால் துர்நாற்றம் ஏற்படுகிறது. மாமிச உணவு, குடலில் நோய், குறைவான பித்தம் போன்றவை அதிக துர்நாற்றம் ஏற்படுத்தும்.

மலத்தின் நிறம், தன்மை:

மலம் பொதுவாகப் பழுப்பு நிறமாக இருக்கும். ஆனால் சில சமயம் நீலம், மஞ்சள், பச்சை, சிகப்பு என்று காட்சி தரும். மலத்தின் நிறம் ஏன் பழுப்பாக (அல்லது மஞ்சளாக) இருக்கிறது?

தினமும் நம் உடல் உற்பத்தி செய்யும் முக்கியமான வஸ்துதான் காரணம்ரத்தம்! நம் உடல் ஒரு நாளைக்கு 24 லட்சம் ரத்த அணுக்களை உற்பத்தி செய்கிறது. அதே சமயம் அதே அளவுக்குப் பழசை வெளியேற்றவும் செய்கிறது. அப்படி உடைத்து வெளியேற்றம் செய்யும்போது சிகப்பு பச்சையாக, பிறகு மஞ்சளாக மாறுகிறது. இது எல்லாம் கல்லீரல் மற்றும் வயிற்றுக்குச் செல்லும்போது, அங்கே இருக்கும் பாக்டீரியா அதன் நிறத்தைப் பழுப்பு (brown) நிறமாக மாற்றுகிறது. மலத்தை ஆராய்ந்தால் நம் உடலில் என்ன நடக்கிறது என்று பெரும்பாலும் கண்டுபிடித்துவிடலாம்.

இளம் பழுப்புமஞ்சள் நிறத்தில் இருந்தால்ரத்தத்தைப் பிரிக்கும் என்சைம் 30% தான் வேலை செய்கிறது என்று அர்த்தம். (இதற்கு Gilbert’s syndrome என்று பெயர்). பயப்பட வேண்டாம். சிலருக்கு வயிற்றில் பாக்டீரியா இன்பெக்ஷன் இருக்க வாய்ப்பு இருக்கும். ஆன்டிபயாட்டிக் எடுத்துக்கொண்டாலும் மலம் மஞ்சளாக இருக்க வாய்ப்பு உண்டு.

இளம் பழுப்புசாம்பல் நிறம்: கல்லீரல், வயிறு இணைப்பில் எங்கோ அடைப்பு. தினமும் சாம்பல் நிறம் அதிகம் பார்த்தால் நீங்களே டாக்டரை அணுகலாம்.

கருப்புசிகப்பு: உறைந்த ரத்தம் கருப்பாக இருக்கும்; புதிய ரத்தம் சிகப்பாக இருக்கும். எப்போதாவது கொஞ்சம் சிகப்பு ரத்தம் வெளியே வந்தால் பிரச்சினை இல்லை. (ஆவக்கா சாப்பிட்டிருக்கலாம்.) அடிக்கடி கருப்பாக இருந்தால் உறைந்த ரத்தமாக இருக்கலாம்.

மலம் என்ன பதத்தில் இருக்க வேண்டும் என்று 1997 வருடம்பிரிஸ்டல் ஸ்டூல்விளக்கப்படம் வெளியிடப்பட்டது. அதில் மலத்தை ஏழு விதமாக வகைப்படுத்தியிருக்கிறார்கள். நீங்களே பார்த்து ஒப்பிட்டுக்கொள்வது நலம்.


முதல் வகை: ஆட்டுப் புழுக்கை மாதிரி கெட்டியாக இருந்தால் நீங்கள் சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகி வெளியே வர கிட்டதட்ட நூறு மணி நேரம் ஆகிறது என்று அறிந்துகொள்ளலாம். இது மலச்சிக்கல்.

ஏழாம் வகையில் பத்து மணிநேரத்தில் வெளியே வருகிறது. இது பேதி அல்லது வயிற்றுப்போக்கு.

நான்காம் வகை தான்மகிழ்ச்சிஎன்று சொல்லலாம்.

மூன்றாம் வகை, விரிசல் இருக்கும். பரவாயில்லை, நாட் பேட்.

நீங்கள் மூன்று, நான்கு குரூப்பை சேர்ந்தவர்களா? இதோ இன்னொரு டெஸ்ட் உங்களுக்குடாய்லட் போகும்போது மலம் தண்ணீரில் எவ்வளவு சீக்கிரம் கீழே போகிறது என்று பாருங்கள். முழுவதும் தண்ணீரில் முழுகிவிட்டால், மலத்தில் ஊட்டச்சத்துக்கள் இன்னும் இருக்கிறது என்று அறிந்துகொள்ளலாம். மெதுவாக ஸ்லோ மோஷனில் நடிகை நீச்சல் குளத்தில் இறங்குவது போல இறங்கினால் அதில் வாய்வுக் குமிழ்கள் இருக்கிறது என்று அர்த்தம். பயப்படத் தேவையில்லை.

இரண்டாம் வகை: கட்டியாக, அதே சமயம் குவியலாக இருக்கும். இதுவும் மலச்சிக்கல்தான். ஒன்றாம் வகை மாதிரி அவ்வளவு மோசம் இல்லை.

ஐந்தாம் வகைஉங்கள் உணவில் நார்ச்சத்து கம்மியாக இருக்கிறது.

ஆறாம் வகைகூழாகப் பஞ்சு போல இருக்கும். உங்கள் வயிற்றில் எங்கோ வீக்கம், அல்லது கட்டியாகக் கூட இருக்கலாம். குடலில் தடை ஏற்பட்டால் கழியும் மலம் பட்டையாக இருக்கும். மலம் பிளந்து காணப்பட்டால் (அடிக்கடி) பெருங்குடலின் கடைசிப் பகுதியில் கட்டி இருக்கலாம்.

மலச்சிக்கல்அடிக்கடி கேட்கப்படாத கேள்விகள்

1. முக்கிய காரணங்கள்?
பயணம், உணவு பழக்கம், உடல்நலக்குறைவு, மன அழுத்தம்.
2. மன அழுத்தமா?
ஆமாம். டாய்லெட் ரிலாக்ஸ் செய்யும் இடம் அங்கே இலக்கியம் படிக்காதீர்கள். மனத்துடன் மற்றவையும் இறுகிவிடும்.
3. இறுகிவிட்டால் என்ன செய்யலாம்?
வில்வப் பழம், பேரிச்சம் பழம் மலத்தை இளகச்செய்யும்.
4. பயணத்தின்போது ஏன் பிரச்சினை வருகிறது?
நம் வயிறு தினமும் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோம், இரவா பகலா, எந்த நேரத்துக்கு எவ்வளவு முறை போகிறோம் என்று குறித்து வைத்துக்கொள்கிறது. பயணத்தின்போது இது எல்லாம் மாறுகிறது. கூடவே ஜெட்லாக் சமாசாரம் எல்லாம் சேர்ந்துகொண்டால் நம் வயிற்றின் நரம்பு மண்டலம் குழம்பிபோய் பிரேக் போட்டு நின்று விடுகிறது. பயணத்தின்போது நம் வயிறும் பயணிக்கிறது என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
5.. என்ன செய்ய வேண்டும்?
நிறைய நார்ச்சத்து உள்ள உணவை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம். (பழம் காய்கறிகள்.) பயணத்தின் முதல்நாள் நார்ச்சத்து உணவை எடுத்துக்கொள்வது நல்லது. அதை சிறுகுடல் அப்படியே பெருங்குடலுக்கு அனுப்பிவிடும். நார்ச்சத்து கதவைத் தட்டினால் நாம் திறக்காமல் இருக்கமுடியாது.
6. தண்ணீர்?
நிச்சயம் நிறைய அருந்த வேண்டும். மூக்கு உலர்ந்து போன மாதிரி இருந்தால் உங்கள் உடலில் இருக்கும் நீரச்சத்து குறைந்துள்ளது என்று அர்த்தம்.
7. எங்க வீட்டு டாய்லெடில்தான் எனக்கு…?
நம்ம டாய்லெட் மாதிரி இல்லையேஎன மனக்கலக்கமே மலசிக்கலுக்கு முக்கியக் காரணமாக இருக்கலாம். அதனால்தான் பப்ளிக் டாய்லெட்ரொம்ப அர்ஜெண்ட்என்றால் மட்டுமே விசிட் செய்கிறோம். புது இடமாக இருந்தாலும்எல்லாம் நார்மல்என்று நினைத்துக்கொண்டு உட்காருங்கள்.
8. தினமும் எவ்வளவு தடவை?
ஒரு தடவை அல்லது இடண்டு தடவை எதேஷ்டம். தினமும் குறிப்பிட்ட நேரத்துக்குச் செல்வது அதைவிட முக்கியம்.
9. குறிப்பிட்ட நேரமா?
ஆமாம். தினமும் காலை ஏழு மணிக்கு டாய்லெட் என்று வைத்துக்கொள்வது நல்ல பழக்கம்தான். இரண்டு நிமிஷம் லேட் என்று பதறினால் டாய்லெட் சரியாக வராது! காலைக்கடனைக் கடனே என்று போகாதீர்கள். சீரியல் பார்க்க வேண்டும் என்று அடக்கிக்கொள்ளக்கூடாது.
10. உடற்பயிற்சி?
உடற்பயிற்சி மலம் கழிக்க உதவுகிறது என்பது நிஜம். தினமும் நடைப்பயிற்சி செய்துவிட்டு நிறுத்தினால் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படும்.
11. எப்படி உட்கார வேண்டும்?
மலம் கழிக்க உட்காரும்போது எந்த நிலை உங்களுக்குச் சரியாக இருக்கிறது என்று பாருங்கள். உடம்பைக் கொஞ்சம் முன்பக்கம் வளைத்து அல்லது குனிந்து பாருங்கள். வயிற்றைப் பிடித்து மசாஜ் செய்து பார்க்கலாம்.
13. பாட்டி வைத்தியம் ஏதாவது?
(Potty) பாட்டி வைத்தியம் விளக்கெண்ணெய், கடுக்காய்தான்.
14. அறிகுறிகள்?
அரோசிகம் (பசியின்மை, உணவின் மேல் வெறுப்பு), நாக்கு தடிப்பு, தலைவலி, சுறுசுறுப்பின்மை, உப்புசம், தலைவலி, வயிற்று சங்கடம், வயிற்று வலி.

உணவைக் கையில் எடுத்து வாயில் போட்டால் சாப்பிட்டாச்சு என்று அடுத்த முறை சொல்லுவதற்கு முன் வயிற்றைப் பற்றி நினைத்துக்கொள்ளுங்கள். டாய்லெட்டில் சிம்ஃபொனி நிகழ்த்திய ஆனந்தம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

உதவிய புத்தகங்கள்:
1.    GUT – Guila Enders
2.    இப்படிக்கு வயிறுடாக்டர் செல்வராஜன்விகடன் பிரசுரம்
3.    வீட்டு வைத்தியர்டாக்டர் தி.சே.சௌ.ராஜன்சந்தியா பதிப்பகம்


படங்கள்: நன்றி: GUT – Guila Enders புத்தகம்

சாகபட்சிணி [சிறுகதை] – சத்யானந்தன்

லத்தி இரும்புக் கிராதிக் கதவை ஓங்கித் தட்டிய சத்தத்தில் விழித்தவுடன் கல்யாணிக்கு பக்கத்து அடைப்பில் சிறைபட்டவள் நினைவுதான் முதலில் வந்தது. நேற்று மாலை அவள் அடைக்கப்பட்டு பெண் காவலாளி மறைந்ததும் சத்தமாக, “யாருடி நீ? உன் பேரென்ன? இன்னாத் தப்புக்கு மாட்டிக்கினே? விசாரணையா? இல்லே உள்ளே தள்ளிட்டாங்களா?” ஒவ்வொன்றாகக் கேட்டாள். பதிலே இல்லை. அழுத்தக்காரி.

பல்துலக்க, குளிக்க வெளியே வந்துதானே ஆக வேண்டும். தலையை வாரி முடிந்தபடி வெளியே வந்தவள் முதல் வேலையாக பக்கத்து அறையின் கதவை மெலிதாகத் திறந்து எட்டி மட்டும் பார்த்தாள். “உன் பேரென்னம்மா?” என்று குரல் கொடுத்தாள். காலையின் வெளிச்சம் படுக்கையாகும் ‘சிமெண்ட்’ மேடை மீது மங்கலாகவே விழுந்தது. கதவைத் தாண்டி உள்ளே போக பயமாயிருந்தது. முன்பு ஒரு முறை ஒருத்திக்குகிட்டே போய்ப் பார்க்க, அவள் கையைப் பிடித்து அழுந்தக் கடித்துவிட்டாள். காயம் ஆறுவதற்கு இரண்டு வாரம் ஆயிற்று.

ஓர் எட்டு உள்ளே வைத்து, கூர்ந்து பார்த்தாள். படுக்கை மேடை மீது இருப்பவள் எந்தப் பக்கம் தலை வைத்திருக்கிறாள்? வடக்குப் பக்கம் யாரும் வைக்க மாட்டார்கள். தெற்குப் பக்கம் முகம் தலைமுடி நிறையத் தெரிந்தது. “உன் பேரென்னம்மா?” குரல் கொடுத்தாள். பதில்லில்லை. உஷாராக ஓர் அடி எடுத்து வைத்தாள். முகம் மங்கலாகத் தெரிந்தது. ஒரு கடிகாரம் அது. எந்த முள் எந்தப் பக்கம் இருந்தது மூக்கும் வாயும் கடிகாரத்துக்குள் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அந்தக் கடிகாரம் தலை முடிக்கற்றைகள் ஒன்றிரண்டு மேலே விழுந்த நிலையில் தெரிந்தது. கடிகாரக்காரி பேசுவதாகத் தெரியவில்லை. கதவை மூடிவிட்டு நகர்ந்தாள்.

பலமாக இரும்புக் கிராதி மீது லத்தி விழும் ஒலியில் கிருத்திகா விழித்திருந்தாள். பம்மிப்பம்மி ஒருத்தி எட்டிப் பார்த்து குரல் கொடுத்துவிட்டுப் போனதும் எழுந்து உட்கார்ந்தாள். கடிகார முகத்தின் கண்களால் கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்தாள்.

‘பப்ளிக் ப்ராஸிக்யூட்டர்’ ராமசாமியின் மேஜை மீது கிருத்திகாவின் ‘கேஸ்’ கட்டு இருந்தது. அவர் வேறு ஒரு கட்டைப் பிரித்து வைத்துக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். அவருடைய அறையின் ‘பால்கனி’யிலிருந்து ‘கிர்கிர்’ என்று இரும்பைச் சுரண்டும் சத்தம் கேட்டபடி இருந்தது. எழுந்து பால்கனிக்கு விரைந்தார். ஒரு எலியின் நீள மீசை கம்பிகளுக்கு இடைப்பட்டு கூண்டுப் பொறிக்குள் இருந்து நீட்டிக் கொண்டிருந்தது.

“சுரேஷ்.” அலுவலக முன்னறையிலிருந்து ‘ஜூனியர்’ ஓடி வந்தான், “ஸார்.”

“இந்த எலியை ‘டிஸ்போஸ்’ பண்ணு.”

“ஷ்யூர் ஸார்.”

மறுபடி தனது மேஜைக்கு வந்தபடி ‘ஐசோ சைனட் காஸ்’ ஒரு ஆளை சாக அடிக்கிற அளவு தயார் பண்ண என்னென்ன ‘எக்விப்மெண்ட்’’ தேவைப்படும்னு ‘கூகுள்’ பண்ணி சாயங்காலம் நாம ‘டிஸ்கஸ்’ பண்ண ரெடியா வை.”

“கண்டிப்பா ஸார்.”

“மிச்ச வேலையையெல்லாம் விட்டுடு. இதை இன்னிக்கே ரெடி பண்ணு. நாளைக்கி கிருத்திகா பெயிலுக்கு அவ ப்ரெண்ட் மூவ் பண்றான். அவன் பேரென்ன?”

“ஆதித்யா ஸார்.”

“நாம் இதில சொதப்பினா வேற ‘ப்ராஸிக்கியூட்டர் கிட்டே கேஸ் போயிடும். மீடியால ஃப்ளாஷ் ஆன கேஸ் இது.”

“பாஸிட்டிவா சாயங்காலத்துக்குள்ளே ரெடி பண்றேன் ஸார்.”

குடும்ப நீதிமன்றத்தின் நடுவயது கடந்த ஆலோசகர் தொடர்ந்தார். “கிருத்திகா உங்க கம்ப்ளெயிண்ட்டில உங்க ஹஸ்பண்ட் டெய்லி அடிச்ச மாதிரியோ அல்லது அவர் ரொம்ப அடிக்டட் ஆயிட்ட குடிகாரன் மாதிரியோ ஒண்ணுமே இல்லையே.”

“மேடம். அப்டின்னா தினசரி அடிவாங்கி இருக்கணும் நான்னு சொல்றீங்களா?”

“நோ கிருத்திகா. யூ ஆர் நாட் கெட்டிங்க் இட். எந்த ஒரு தம்பதிக்கு நடுவிலேயும் வழக்கமா வரக்கூடிய சண்டைதான் உங்க ரெண்டு பேருக்கும் இருந்திருக்கு.”

அதற்குள் அம்மாளின் கைபேசி சிணுங்கியது. “வணக்கம் மேடம். தேங்க்ஸ் ஃபார் ரிமைண்டிங்க். நாளைக்கி காலையில அபிஷேகத்துக்குக் கண்டிப்பா வருவேன். இப்போ ஒரு ‘கவுன்ஸிலிங்க். அப்பறம் கூப்பிடறேன்.”

“மேடம் என்னோட சர்ட்டிஃபிகேட் எல்லாத்தையும் கொளுத்தினாரே அதை நீங்க படிக்கலே?”

“என்ன கிருத்திகா குழந்தை மாதிரி பேசறீங்க? நீங்க ஒரு கெமிக்கல் எஞ்சினீயர். போன வருஷம் வெள்ளத்தில சர்ட்டிஃபிக்கேட்டை லூஸ் பண்ணின நூத்துக்கணக்கான பேர் அதையெல்லாம் டியூப்ளிகேட்ல வாங்கலே?”

“மேம். யூ வாண்ட் டு டவுன் ப்ளே எனிதிங்க் பட் வோண்ட் கிவ் மீ டைவர்ஸ்.”

“லுக் கிருத்திகா, திஸ் கவுன்ஸலிங்க் பிராஸஸ் ஈஸ் மேண்டேடரி. யூ ஹாவ் எ ஸ்மால் கர்ல் சைல்ட். ரிமெம்பர்.”

“பெண் குழந்தை இருந்தா டைவர்ஸ் கிடைக்காது, அதானே?”

“இவ்வளவு அவசரம் கூடாது, கிருத்திகா. யோசிச்சிப் பாரு. டைவர்ஸ்க்கு அப்புறம் வாழ்க்கை ரொம்ப சிக்கலாயிடும்.”

“இப்போ நரகமா இருக்கிற மாதிரியே என்னிக்கும் இருந்தா சிக்கலே இருக்காது, இல்லே? ஒருத்திய தினசரி அடிச்சுக் கொடுமைப் படுத்தினாத்தான் வலிக்குமா? அவளை கால் மிதிக்கிற டோர் மேட் மாதிரி, ஒரு கைநாட்டு மாதிரி நடத்தினா அது பரவாயில்லியா? புல் ஷிட்?” அம்மாள் மௌனமானார். அந்த ஆலோசனையை அத்துடன் நிறைவு செய்தார்.

‘காஃபி டே’ நேரம் போவதே தெரியாமல் சத்தமாகப் பேசும் இளசுகளால் நிறைந்திருந்தது. கிருத்திகாவும் ஆதித்யாவும் விதிவிலக்காக மௌனமாயிருந்தார்கள். நாற்காலியின் அருகே தரை மீது வைத்திருந்த முதுகுப்பையைத் திறந்து துழாவி ஒரு சின்னஞ்சிறு நகை டப்பாவை வெளியே எடுத்தான். “கேன் யூ ரி கால்?” என்றபடி தயக்கப் புன்னகையுடன் அவள் முன்னே அதை வைத்தான்.

கிருத்திகா அதைத் திறந்தபோது ஒரு சின்னஞ்சிறிய தங்க மோதிரம். ஆங்கிலத்தில் ‘கே’ என்ற எழுத்துப் பொறிக்கப்பட்டது தென்பட்டது. பத்து வருடம் முன்னாடி அவன் அதை நீட்டியபோது அது அவளுக்கு ஒரு சுற்றுப் பெரிதாயிருந்தது. அதன் பிறகு வாழ்க்கை பலசுற்றுகள் சுற்றி விட்டது.

“இதைக் கொடுத்துவிட்டுப் போகத்தான் வந்தியா?”

“ஞாபகார்த்தமா வேற எதையும் உடனே வாங்க முடியல கிருத்தி.”

“அப்பிடின்னா மெமெண்டோ குடுத்திட்டு ஜூட்டா?” புன்னகைத்தாள். அவன் முகம் இறுகி இருந்தது. மோதிரத்தை எடுத்து அணிந்து பார்த்தாள். கச்சிதமாகப் பொருந்தியது. அவன் கையை நட்புடன் பற்றினாள்.

“கிருத்திகாவோட பொண்ணு யாரு?”

“நான்தான் ஆண்டி. ரோஜா நிற ‘ப்ராக்’ அணிந்த எட்டு வயதுக் குழந்தை புன்னகையுடன் எழுந்து நின்றது. சளசளவென்று பேசும் பலவயதுப் பெண்கள், பெண் குழந்தைகள் இரு அறைகள் மற்றும் ஹால் முழுவதும் நிரம்பி வழிந்தார்கள். அவர்கள் நடுவே ஒரு வெண்கலச் சொம்பின் மீது தேங்காய், அதைச் சுற்றி ஒரு முழம் மல்லிககைப்பூ இவையெல்லாம் தரையில் பரப்பிய நெல் மீது வைக்கப்பட்டிருந்தன.

“உன்னை உங்க பாட்டி தேடினாங்க.” உடனே அந்தக் குழந்தை அமர்ந்திருந்தவர்களுக்கு இடைப்பட்ட கையகல இடங்களில் காலை வைத்து வாயிலை அடைந்த பின் குதித்துக் கொண்டு கீழ்த்தளத்திலுள்ள தன் வீட்டுக்குப் போய்க் கதைவைத் தட்டினாள். பாட்டிதான் திறந்தாள் “பாட்டி ஏன் என்னைக் கூப்பிட்ட? அங்கேயே ப்ரெக்ஃபாஸ்ட் சாப்ட்டுட்டேன். பட்டுப்பாவடை போட்டுக்கலியான்னு ஃப்ரெண்ட்ஸ் கூட ஸஜ்ஜெஸ்ட் பண்ணினாங்க,” என்றபடி தன் அறைக்கு விரைந்தாள்.

“சிந்து. நீ மறுபடி அங்கே போகவும் வேணாம். பாவாடைக்கெல்லாம் மாறவும் வேணாம்.”

“அவங்க என்னைப் போகச்சொல்லி சொல்லல பாட்டி.”

“லுக் சிந்துஜா. நீ நெனக்கற அளவு ‘சிம்பிள்’ ஆன விஷயம் கிடையாது இது. அவங்க சுமங்கலிப் பிரார்த்தனை நடத்தறாங்க. அங்கே நீ வர்றதை அவங்க விரும்பல.”

“என் ப்ரெண்ட்ஸ் எல்லோரும் என்னைக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. அவங்க யாரையும் அப்பிடிச் சொல்லலியே . உனக்கு யாரு பாட்டி இப்பிடிச் சொன்னா?”

“கமலாப்பாட்டிதான் இப்போ ஃபோன் பண்ணி சொன்னாங்க.”

“எதுக்கு கமலாப்பாட்டி என் கிட்டே அங்கே சொல்லாம உனக்குப் போன் பண்ணினாங்க?”

“குழந்தைடி நீ. உனக்குப் புரியாது. உங்கம்மா கிருத்திகாவையோ உன்னையோ யாருமே எந்த கேதரிங்க்குக்கும் கூப்பிட மாட்டங்க.”

‘ஏன் பாட்டி?”

“மண்ணாங்கட்டி. இங்கேயே உக்காந்து புஸ்தகத்தை எடுத்து வெச்சுப்படிடி,” அவள் அறைக் கதைவை பாட்டி சார்த்தி விட்டுப் போனாள்.

கண்களில் நீர் நிறைய சிந்துஜா படுக்கையில் அமர்ந்தாள். சுவர்க்கடிகாரத்தைப் பார்த்ததும் அம்மா முகம் நினைவுக்கு வந்தது. கடிகாரத்தைப் பார்த்து, “எங்கம்மா மாதிரியே இருக்கியே ஒரு கதை சொல்லேன்,” என்றாள்.

“கண்டிப்பாக சிந்து. உனக்குப் பிடிச்ச மாதிரியே கதை சொல்லப் போறேன்,” கடிகாரம் குரலைச் செறுமிக் கொண்டு துவங்கியது.

“ரொம்ப ரொம்ப காலம் முன்னாடி இமைய மலையையெல்லாம் தாண்டி நிறைய மலைகளுக்கு நடுவிலே பெரிய பாதாளமான ஓர் உலகம். அது முழுக்க முழுக்க அடர்ந்த காடு. அங்கே நிறைய விலங்குகள் ராட்சங்களெல்லாம் மட்டுந்தான் இருந்தாங்க.”

“ராட்சங்கன்னா யாரு?”

“ராட்சங்கன்னா உயரம் ரொம்ப ரொம்ப அதிகமா பத்தடி பதினைஞ்சடி இருப்பாங்க. ரொம்ப குண்டா தாட்டியா இருப்பாங்க. அவங்க விலங்கு மனுஷங்க யாரையும் உயிரோடையே சாப்பிட்டுடுவாங்க. காட்டுவாசிங்க கூட அதுக்கு பயந்து அந்தக் காட்டுப்பக்கம் போக மாட்டங்க.”

“ஓகே. மேலே சொல்லு.”

“ஆனா அங்கே அஜயின்னு ஒரு ராட்ச ஆண் குழந்தை பிறந்தான். அவன் சிறுவயசிலே இருந்தே செடி, கொடி, பழம் காய்ன்னு சாப்பிட்டு வளந்தான்.”

“ஏன் அவங்க அப்பா அம்மா அவனுக்கு அசைவமே கொடுக்கலியா?”

“கொடுத்தாங்க. அண்ணன், அக்கா எல்லோருக்கும் கொடுத்த மாதிரி சமைச்ச சமைக்காத அசைவத்தையெல்லாம் கொடுத்தாங்க. ஆனா அவனுக்கு செடி கொடிதான் புடிச்சிது. இதை ஒதுக்கிட்டு பழம் இலையின்னு சாப்பிடுவான்.”

“அவன் வீக் ஆயிட்டானா?’

“இல்லே வீக் ஆகல. பலமான ஆம்பிளையாத்தான் வளந்தான். ஆனா அவன் வயசுப் பசங்களோ மத்த ஆண் ராட்சங்களோ அவனை ஒரு ஆம்பிளையாவே ஏத்துக்கலே. சாகபட்சிணின்னு ரொம்ப வெறுப்பேத்தினாங்க”

“கிண்டல் பண்ணினவங்களை அவன் அடிச்சானா?”

“பொறுத்துதான் போனான். பத்துப் பதினைஞ்சு பேரை அவன் எப்படி அடிக்க முடியும்? அடிக்க ஆரம்பிச்சா அவன் நூத்துக்கும்மேலே கிண்டல் பண்ணினவங்களை அடிச்சாகணுமே.”

“அப்டினா கிண்டல் நிக்கவே நின்னிருக்காதே?”

“ஆமாம். அதனாலே அவன் எப்பவுமே தனியாவே இருக்க ஆரம்பிச்சான். ஒதுங்கி ஒதுங்கித் தனியா சுத்தினான்.”

“பாவம் அவன்.”

“ஆனா அவன் நிலமை அதை விடப்பாவமா ஆனது.”

“எப்படி?”

“அவனமாதிரியே கலியாண வயசிலே இருந்த ஒரு ராட்சப் பொண்ணும் அவனும் பழக ஆரம்பிச்சாங்க. அவங்க ரெண்டு பேரோட அப்பா அம்மா அவங்க ரெண்டு பேருக்கும் கலியாணம் செஞ்சு வெச்சாங்க.”

“ரொம்பப் பாவம்னியே. கலியாணம்தானே ஆச்சு.”

“அவசரப்படாதே சிந்துஜா. அவனோட பொண்டாட்டிக்கிட்டே இருந்துதான் பிரச்சினை ஆரம்பிச்சிது”

“என்ன பிராப்ளம்?”

“நீ இனிமே அசைவம் சாப்பிட்டே ஆகணும்னு அவ கட்டாயப் படுத்தினா.”

“அவனுக்கு அது பிடிக்காதே?”

“என்ன பண்றது. அவ தினமும் கட்டாயப்படுத்தவே அவனும் சாப்பிட ஆரம்பிச்சான்.”

“அப்புறம்?”

“ஒரு வருஷத்திலே அவனுக்கு அசைவம் பழக்கமா ஆயிடுச்சு. ஆனா அவ இன்னொரு கட்டாயமும் பண்ணினா.”

“என்ன அது?”

“இனிமே யாராவது கிண்டல் பண்ணினா அவனை அடின்னா.”

“அஜய் எல்லாரையும் அடிச்சானா?’

“இல்லே. தயங்கித் தயங்கி ஒதுங்கினான்.”

“அடப்பாவமே. அவங்க கிண்டல் அதிகமாச்சா?”

“ஆமாம். ஒரு நாள் அவனோட மனைவி எதிர்க்கவே கண்டபடி கிண்டல் பண்ணினாங்க. அவ அஜய் முன்னாடிப் போய் நின்னு நீ இவங்களை அடிக்கறியா? நான் அடிக்கட்டான்னா? அப்போ அவன் என்ன பண்ணினான் தெரியுமா?

“என்ன?” சிந்து சற்றே பதட்டமானாள்.

“ஒரு பெரிய கல்லை எடுத்து வீசினான். எல்லாரும் ஓடினாங்க. ஆனால் ஒருத்தன் தலை மேலே அது விழுந்து மண்டையே சிதறி ரத்தம் பீச்சி அடிச்சிது. அதை அப்பிடியே உறிஞ்சிக் குடிச்சு இன்னொரு கல்லை எடுத்துக்கிட்டு துரத்திக்கிட்டே ஓடினான். எல்லோரும் எங்கேயோ ஓடி ஒளிஞ்சிக்கிட்டாங்க. அவன் அந்தக் கல்லை மேலே வீசி எறிஞ்சான். அது தரைமேலே பெரிய சத்தத்தோட விழுந்துது. அதை விட சத்தமா காடே அதிர்ந்து போற மாதிரி அவன் கடகடவென ஒரு வெறிச் சிரிப்பு சிரிச்சான்.”

“அதுக்கப்பறம்?”

“அதுக்கப்பறம் யாருமே அவனைக் கிண்டல் பண்ணலே. அவனைப் பாத்தாலே கையெடுத்துக் கும்பிட்டாங்க,” கதையை முடித்து கடிகாரம் மௌனமானது.

நீதிமன்றத்திலிருந்து மாலை திரும்பி வரும் வழியில் காரில் ‘பப்ளிக் பிராசிக்யூட்டர்’ ராமசாமி மௌனமாகவே வந்தார். பின் இருக்கையில் இருந்த மூன்று ‘ஜூனியர்’களும் சூழ்நிலையின் இறுக்கத்தை உணர்ந்து பேசாமல் வந்தார்கள். ஆணை, திட்டு அல்லது அறிவுரை எதுவுமே இல்லாத பயணம் ஒருவிதத்தில் நிம்மதியாகவும் இருந்தது. சுரேஷ் தவிர மற்ற இருவரும் வழியில் ஒரு ரயில் நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டார்கள்.

வீடு வந்த உடன் காரிலிருந்து இறங்கிய ராமசாமி, மாடியிலுள்ள அலுவலகத்துக்கு வராமல் கருப்பு அங்கியைக் கழற்றி சுரேஷ் கையில் கொடுத்து விட்டு வீட்டுக்குள் போய் விட்டார்.

சுரேஷ் மாடிக்கு வந்து ‘கேஸ்’ கட்டுக்களை அடுத்த முறை விசாரணைக்கு வரும் தேதிவாரியாக வரிசைப்படுத்தி அடுக்கி வைத்தான்.

கிளம்பும் முன் ‘பால்கனி’யிலிருந்து எலிப்பொறியின் கம்பிகளைக் கரண்டும் சத்தம் அவன் கவனத்தை ஈர்த்தது.

எலிப்பொறியை எடுத்துக் கொண்டு, மாடிப்படிகளில் இறங்கி, தெருவுக்கு வந்தான். ஒதுக்குப்புறமாக வந்து ஒரு குப்பைத் தொட்டி அருகே எலிப்பொறியின் மேற்புறம் இருக்கும் நீண்ட மெல்லிய கட்டையை அழுத்த பொறியின் கதவு திறந்து கொண்டது. வெளியே வந்ததும் அந்த எலி ஒரு பெரிய பெண் புலியானது. சுரேஷின் முக்கால் உயரத்துக்கு இருந்த அது நிமிர்ந்து உறுமியது. சுரேஷ் வந்த வழியில் ஓடி மறைந்தான். செல்லும் இடம் தெரிந்தது போல் புலி நிதானமாக நடந்து சென்றது.

***

யாரூர் – ஓகை நடராஜன்


முன்குறிப்பு: அண்மையில் தனியார்த் தொலைக்காட்சி ஒன்றின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திருவாரூர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பிரித்திகா என்ற ஒரு சிறுபெண்மணி என்னை இக்கட்டுரை எழுதத் தூண்டியதால் அவருக்கு என் மனமார்ந்த நன்றி. தன் அற்புதமான குரலிசையால் ஆனந்தம் அள்ளித் தந்த அந்தப் பெண்ணைப் போற்றாமல் செல்ல, அதை உணர்ந்த எவராலும் முடியுமா என்பது ஐயமே!

பொதுவாக எல்லாத் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் குப்பைகள்தாம். அதிலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், பண்பாட்டு விரோதமாகவும் மலினங்கள் மலிந்தாகவும் இருக்கும். பல நேரடிப் போட்டி நிகழ்ச்சிகள் தெளிவாகத் திரைக்கதை எழுதப்பட்டு நடிக்கப்படுகிற நிகழ்ச்சிகளே. அதனால் இப்போது சில பொறுப்புத் துறப்புகளைச் செய்துவிடுகிறேன். இந்த நிகழ்ச்சியில் வெளிவந்த தகவல்களைத் தவிர வேறெந்த மேலதிகத் தகவல்களும் தெரியாத நிலையிலும், அந்த நிகழ்ச்சியையோ அதில் பங்குகொண்ட மற்றவர்களையோ கொஞ்சம் கூட அறியாமலும், பின்னணி விவரங்களைப் பொருட்படுத்தப்படாமலும் இக்கட்டுரை எழுதப்படுகிறது. ஆனாலும் விஜய் தொலைக்காட்சி கடந்த ஆறு மாதங்களாக நடத்தியசூப்பர் சிங்கர் ஜூனியர்-5’ நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற பிரித்திகா என்ற 12 வயதுப் பெண், இசை ரசிப்பில் இலட்சக் கணக்கான தமிழரிடையே ஒரு இன்பச் சிற்றலையை ஏற்படுத்தியிருப்பதால், கண்டுகொள்ளப்படாத அரிய திறமைகள் இந்த நிகழ்ச்சிகளால் வெளிவருவதையும் பாராட்டியே ஆகவேண்டும்.

ஒரு புது மனிதரை அறிந்துகொள்ள அவரிடம் பொதுவாக இரண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன, அது அவர் பெயரும் ஊரும். பெயரை வைத்து இனி அவரை அழைக்கவும் அடையாளப்படுத்தவும் ஆரம்பிக்கலாம். ஆனால் ஊர்? அது தெரிந்து என்ன ஆகப்பொகிறது? உண்மையில் என்னென்னவோ ஆகிறது! அது தெரிந்த ஊராக இருந்தால், இந்த ஊர்க்காரன் இப்படியெல்லாம் இருப்பான் என்ற ஊகமும் நடையுடை பாவனையும் நாகரிகமும் பண்பாடும் தொழிலும் ஒரு மின்னலடித்துச் செல்லும். தெரியாத ஊர் என்றால் ஊரைப் பற்றிய தெரிதலுக்கு ஆரம்பமாக அமையும். பிறகு ஊர் சார்ந்த ஊகங்கள் ஊற்றெடுக்கும். இப்படியாக திருவாரூருக்கு அருகிலிருக்கும் ஒரு சிற்றூரிலிருந்து வந்த ஒரு சின்னப்பெண் தன் இசையால் பலருடைய கவனத்தைக் கவர்ந்த நிகழ்வு என் கவனத்தையும் கவர்ந்தது.

என் பெயரில் இருக்கும் முன்னொட்டான ஓகை என்பது எனது முன்னோர்கள் வாழ்ந்த கிராமம். இது திருவாரூரிலிருந்து 20 கிமீ தூரத்தில் இருக்கிறது. வயலும், வைக்கோல்போரும், வாய்க்காலும், வரப்புகளும், வண்டல் மண்ணும், வற்றாத கிணறுகளும், வாழ்வதற்கான அத்தனை வனப்புகளைக் கொண்டதும், மருத நிலத்தின் பண்புகள் மிகுந்து மிளிருவதுமான ஒரு நிலத்துண்டு என் ஊர். எனக்கு ஓகை என்று சொல்லும்போது தஞ்சைத் தரணியுடன் ஏற்படும் தொடர்பில் ஒரு கற்பனை சுகம் வந்துவிடும். இந்த சுகம் என் எல்லாப் புலன்களையும் வருடிவிட்டுச் செல்லும்.

வெறுங்காலில் நடக்கும்போது மெத்திடும் மென்மணலின் சுகம், எப்போதோ தட்டுப்படும் நெருஞ்சி முள்ளைத் தூர எறிந்த பின்னும் தொடரும். சுற்றிவரும் காற்றில் ஈரம் உயிர்ப்பாய் இருக்கும். அங்கு நான் உண்ட கன்னலும் களியும் இன்னமும் நாவில் ருசிக்கும். ஆறும் சோலையும், மாவும் தெங்கும், ஆலும் அரசும், வாழையும் தாழையும், நாணலும் மூங்கிலும், கோவிலும் குளமும், மடுவும் குட்டையும், தேரும் திருவிழாவும், மீனும் மாடும், ஆடும் ஆனையும், இன்ன பிறவும் கண்களை விட்டகலாமல் இன்றளவும் நிற்கும்.

என் மூக்கு இன்னமும் இழக்காத ஒரு கலவை சுகந்தம் சுவாசத்தில் என்றும் கலக்கும். சாணமும், புழுதிக் காற்றின் மண்மணமும், பச்சை நெடியும், இவற்றை இணைக்கும் ஏதோ ஒன்றும், நீர்நிலைகளின் பாசி மணமும், நெல்வேகும் புழுங்கல் மணமும், வெற்றிலைப் பாக்கு வாசனையும், பூக்களுக்கு மணமிருப்பதைச் சிலநேரம் மறந்து போகச் சொல்லும். இந்நிலத்தில் காற்றின் ஈரமும் கடுங்கோடையும் கூட்டணியாகிச் சுரக்கச் செய்யும் வியர்வையின் மணம் கூட வேறானதோ என உணரும் ஒரு பொய்யை என் மனம் பலவேளை விரும்பிப் படைப்பிக்கும்.

வாகீச கலாநிதிகளின் வளமான தமிழும், வட்டார வழக்காய் வாஞ்சையில் மூழ்கி வடிவிழந்த சொற்களும், பல்லியத்தின் பண்பட்ட பல இசையும், பண்டிதரின் பண்ணிசையும், பாமரரின் நாட்டுப் பாடல்களும், வடமொழி விற்பன்னரின் வியாக்கியானமும், வேத கோஷமும், நட்பின் நையாண்டியும் நக்கலும், இவையேதும் காதில் விழாதிருக்கும் நேரத்தில் விரிவான ஆலாபனையாய் ஒரு நூறு பறவைகளின் ஓங்காரமும் கேட்கும்.

காவிரி வறண்டபிறகு இதெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போனதென்று நொந்தே போயிருந்தாலும், வாடி வலித்திரங்கிப் போன தஞ்சைத் தரணியின் உயிரும் உடலும் மாறாதே என்ற நினைப்பும், இது போன்ற பழைய நினைப்புகளும், இதோ, இப்போது வந்ததுபோல் எப்போதோ வரும் செய்திகளும்தான், அந்த வலி தெரியாமல் வருடும் கைகளாய் இருக்கின்றன.

திருவாரூர் தமிழகத்தின் நாயன்மார்கள் வரலாறு பதிவு செய்யப்படும் காலத்திலிருந்து தொடர்ந்து பதிவுகளில் இருக்கிறது. தண்டியடிகள், கழற்சிங்கர், செருத்துணையார், விறன் மிண்டர், நமிநந்தியடிகள் முதலிய நாயன்மார்களின் திருத்தொண்டுகள் பரிமளித்த பதி இது. அப்பரும் சம்பந்தரும் சுந்தரரும் இத்தலத்தை ஆசைதீரப் பாடியிருக்கிறார்கள். சுந்தரின் வரலாறே பெருமளவில் திருவாரூரில் நடக்கிறது. அவர், ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்…’ என்று தொடங்கும் தமது திருத்தொண்டத் தொகையில்திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்என்றே கூறுகிறார். சேக்கிழாரோ பல படிகள் மேலே போய்திருக் கயிலை வீற்றிருந்த சிவபெருமான் திருக் கணத்தார் பெருக்கிய சீர்த் திருவாரூர்ப் பிறந்தார்கள் ஆதலினால்…’ என்று திருவாரூர் பிறந்த அனைவரும் சிவபெருமானின் தேவகணங்கள் என்று கூறி விடுகிறார். பெரியபுராணத்தில் இந்நகர் சிறப்பாக பல பாடல்களைப் பாடியிருக்கிறார். இவ்வளவு பெருமைக்குரிய திருவாரூரில்தான் சங்கீத மும்மூர்த்திகள் அவதாரம் செய்தார்கள். இன்றும் என்றும் தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலும் பெருமளவில் பாடப்படுகிற கர்நாடக சங்கீதப் பாடல்கள் இவர்களுடையதுதான். மிக விஸ்தாரமான கோவிலும், அதே விஸ்தாரமான கமலாலயம் என்ற குளமும், ஆசியாவிலேயே மிகப் பெரியதுமான ஆழித்தேரும் கொண்டது திருவாரூர். இதனால்தான்பாரூர் எல்லாம் ஓரூர் என்னும் ஆரூர்என்று புகழப்படுகிறது. இது சிவபெருமானுக்கான சப்த விடங்கத் தலங்களில் முதன்மையானது. நடனத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த வழிபாட்டுத் தலங்களில் இங்கு சிவன் ஆடுகின்ற நடனம்உயிரின் இயக்கமான மூச்சு உள்ளும் வெளியும் போய்வரும் உன்னத இயக்கத்தை உணர்த்தும் அஜபா என்கிற நடனம். குரலிசைக்கு ஆதாரமான மூச்சே நடனமாகி இருக்கும் இந்த ஊரின் இசை ஊற்று எப்போதும்பொங்கிக் கொண்டே இருக்காதா என்னசரஸ்வதிக்காக ஒட்டக்கூத்தர் நிறுவிய கூத்தனூர் கலைமகள் ஆலயம் திருவாரூரிலிருந்து 20 கிமீ தூரத்தில் இருக்கிறது. அதனால்தானோ இவ்வூர் உள்ளடங்கிய தஞ்சைத் தரணி (தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்கள்) முற்றிலும் எங்கெங்கு நோக்கினும் கலைத்தாயின் கருணாவிலாசம் பொங்கி வழிகிறது. இந்த மண்ணின் மகிமையை எழுதிச் சளைக்காதவர் தி. ஜானகிராமன். இதையே கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் புதினமும் உரக்கச் சொல்கிறது.

இந்த ஊர் ஈன்ற இசையூற்று, பிரித்திகா என்ற ஒரு சின்ன பெண்மணி. இவரைப் பற்றி விக்கி வலைத்தளம் என்ன சொல்கிறது என்று முதலில் பார்த்துவிடுவோம்.1
உலகெங்கும் வாழும் தமிழர்களில் இலட்சக் கணக்கானோரின் இதயத்தைத் தன் இசையால் திருடியவர் இந்தப் பெண். யூட்யூப் தளத்தில் மட்டும்  இவரது 7 பாடல் காணொளிகள் ஒவ்வொன்றும் 10 இலட்சம் தடவைக்குமேல் பார்க்கப்பட்டிருக்கின்றன. இவரது எல்லாப் பாடல்களும் குறைந்தது 5 இலட்சம் தடவைகளுக்குமேல் பார்க்கப்பட்டிருக்கின்றன.  ‘தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோஎன்ற பாடல் 40 இலட்சம் முறைகளுக்கு மேலாகவும், ‘மன்னார்குடி கலகலக்கபாடல் 25 இலட்சம் முறைகளுக்கு மேலாகவும், ‘மச்சான் மீச வீச்சருவாபாடல் 10 இலட்சம் முறைகளுக்கு மேலாகவும், ‘அய்யய்யோஎன்று தொடங்கும் பருத்திவீரன் படப்பாடல் 17 இலட்சம் முறைகளுக்கு மேலாகவும்சொய் சொய்என்ற கும்கி படப்பாடல் 10 இலட்சம் முறைகளுக்கு மேலாகவும், இப்போதுவரை பார்க்கப்பட்டிருக்கிறது. மேலும் மேலும் இவை தொடர்ந்து பார்க்கப்பட்டு வருகின்றன. இந்தப் பெண் போட்டியில் வெல்வதற்காக 6 இலட்சத்துக்கும் மேலானவர்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

வெறும் 6 மாதத்துக்கும் குறைவான காலத்தில் இவ்வளவு பெயர்பெற்ற இந்தப் பெண்மணிக்கு எந்தவிதமான இசைப் பயிற்சியும் இல்லை. அது கிடைக்காத இடமும் எட்டாத இடமுமாக ஒரு கூலித் தொழிலாளியின் மகளாய் அரசுப் பள்ளியில் 7ம் வகுப்புப் படித்துக்கொண்டு சத்துணவு சாப்பிட்டு வாழும் கிராமத்துப் பெண். இந்த விவரணையைத் தன் உருவத்தாலும் பார்த்தமாத்திரத்தில் சொல்லிவிடுகிற ஒரு பெண். தேசிய கீதத்தையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் இந்தப் பெண் பாடியவிதத்தில் திறமையைக் கண்டுகொண்ட இப்பெண்ணின் பள்ளி ஆசிரியர்கள் இப்பெண்ணை முன்னெடுத்து மாவட்ட ஆட்சித் தலைவரின் பாராட்டைப் பெற்றுவிடும் இந்த அளவுக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். இன்னும் பலரும், நானும் கூட, திரும்பத் திரும்பக் கேட்கும்படி இந்தப்பெண் பாடிய பாடல்கள் நாம் தினமும் கேட்கும் ஜனகனமனவிலிருந்தும் நீராரும் கடலுடுத்தவிலிருந்தும் முளைவிட்டு வெளிப்பட்டிருப்பது ஒரு பேராச்சரியம்தான்.

இந்தப் பெண்ணின் குரல், பயிற்சியால் எவராலும் எட்ட முடியாத ஒன்று. அது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிற வரம். உருக்கி வார்த்து, அடித்து நீட்டி, மெலித்து மெருகேற்றிய தங்கக் கம்பி அல்ல இவரது குரல். தனக்காகத் தானாய் தன்னெச்சில் ஊற்றெடுத்து தன்கூடு தான் கட்ட உமிழ்ந்திழுத்த மென்பட்டு இழை. மின்பட்டுத் தாரை. வெட்டுப்பிசிறு இன்னதென்று அறியாத துகில்பட்டு. சுத்த சுயம்பிரகாசச் சுயம்பு. நாட்டுப் பாடல்களின் நன்நாற்றமும் நகர்பாடல்களின் மின்வெட்டுகளும் மென்பாடல்களின் உள்வண்ணமும் இவர் குரலில் பொங்கிப் பிரவகிக்கிறது. சோலையில் பூத்துகுலுங்கும் வளர்செடி போலல்லாமல் கடுங்காட்டின் நடுவில் கண்கூச ஒளிரும் பச்சைப் பசுஞ்செடி போலிருக்கிறது இவர் குரல். அது மல்லிகை மணமறியாமல் வளர்ந்து மலர்ந்திருக்கும் மல்லிகை.

இசையின் தாய் சுரமும் தந்தை லயமும் என்று சொல்வார்கள். இந்த அடிப்படைகளுக்குப் பிறகு மிளிரும் இசை பேரானந்தம் அளிக்கிறது. நாட்டுப்புற இசைக்கு லயம் என்பது உயிர்நாடி. அதன் தளமும் வெளியும் தாளம்தான். அதைத் தன் அங்கங்களில் ஒன்றாகப் பெற்றிருக்கிறாள் இந்தப் பெண். பெரிய சங்கீதக்காரர்களுக்கே அது பயிற்சியால் பொருத்திக் கொண்ட ஒரு விஷயம்தான். சுருதியும் சுரமும்தான் ஒலியை இசையாக்குகிறது. ஆனால் இவர் சொல்வதே சுரமாக இருக்கிறது இவரது பாடல்களில். இது வெறும் உயர்வு நவிற்சி இல்லை. இவர் பாடிய பிறகு அது எவர்பாடலாக இருந்தாலும் இவர் பாடலாக மாறிவிடுவதாக இந்த நிகழ்ச்சியின் நடுவர்களான இசை வல்லுநர்கள் சொல்கிறார்கள். இவர் பாடிய பிறகு மூலப் பாடலைக் கேட்டால் சில பாடல்களில் நிச்சயமாக அது தெளிவாக நடக்கிறது. இவர் இயல்பாகச் செய்யும் சில ஜோடனைகளால் அது நிகழ்கிறது. அதற்கு அங்கீகாரமும் ஏற்பும் கிடைக்கிறது. இவர் பாடலின் தொடக்கமும் முடிப்பும் இவர் பாடலுக்கு இவரே சேர்க்கும் இருபுறத்து உறை அணிகளாக இருக்கின்றன.

கர்நாடக சங்கீதப் பயிற்சி இவருக்கு வாய்க்கவில்லை. இனிமேல் நடக்கலாம். கர்நாடக சங்கீதம் ஒரு சட்டகம். நீண்டு அகன்று உயர்ந்த ஒரு முப்பரிமாணச் சட்டகம். ஒரு பெருங்கூண்டைப் போல. கர்நாடக சங்கீதப் பயிற்சி முடிந்த ஒருவர் இந்தக் கூண்டுக்குள் செல்கிறார். ஆனால் அவர் உயரத்துக்கு அவரால் அதைக் கூண்டாக உணராமல் பெருவெளியாக வியாபித்திருப்பதாகவே உணர்வார். வளர வளர எல்லைகள் கண்ணுக்குத் தென்படும். ஆனால் எவராலும் எல்லைகளைத் தொடமுடியாது. அதை நோக்கிய பயணமே செய்ய முடியும். வெகு சிலரால் அந்தக் கூண்டின் உள்ளிருந்தே வெளியே வளர முடிந்திருக்கிறது. குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களை அவ்வாறு சொல்லலாம். கச்சேரி சங்கீதம் தொடாத பல எல்லைகளைத் திரை இசையில் வந்த கர்நாடக சங்கீதம் தொட்டிருக்கிறது. நாட்டுப்புறப் பாடல்கள் இந்தக் கூண்டுக்கு உள்ளேயும் வெளியேயுமாய் வாழ்கிறது. இந்தப் பெண்மணி கூண்டுக்கு வெளியே இருப்பதாகவே நான் உணர்கிறேன். இவர் அதனுள்ளே செல்லும்போது நாட்டுப்பாடல்கள் அனுமதித்துப் போற்றிய சில சிறகுகளோடு செல்ல முடியாது. சிலர் வெட்டிக்கொண்டு உள்ளே செல்வார்கள். சிலர் சுருக்கிக் கொண்டு உள்ளே செல்வார்கள். ஆனால் இந்தப் பெண்ணுக்கோ அங்கும் இங்குமாய் சிறகுகளை விரித்துவிடும் திறமை இருக்கலாம். அந்த மாயமும் நிகழலாம்.

இந்தப் பெண் தமிழை அனுபவிப்பதை என்னால் அனுபவிக்க முடிகிறது. நாட்டுப் பாடல்களின் உயிர் அதன் சொல்லிலும் அது தரும் பாவத்திலும் இருக்கிறது. இதை இவர் மிக எளிதாகச் செய்கிறார். சில சில உச்சரிப்புகளை இவர் இன்னும் மேம்படுத்திவிட்டால் அது இவர்  எப்பொழுது எதைப் பாடினாலும் அது தமிழ்த்தாய் வாழ்த்தாகவே இருக்கும். மண்ணின் மணம் மனித உருக்கொண்டாற்போல்  வந்திருக்கும் இவர் தமிழிசை வடிவாகவே மாறிவிடுவார். இவர் குரல் இவருக்கு இறைவன் கொடுத்தது. ஆனால் அக்குரலின் பாவமும் சுவையும் அவர் பிறந்த மண் கொடுத்திருக்கிறது. ஆயிரமாயிரம் கலைஞர்களைப் பிறப்பித்துக் கொண்டிருக்கும் அந்த மண்ணைப் போற்றுகின்றேன். அந்த மண்ணின் மாமகளைப் போற்றுகின்றேன்.

இந்தப் பெண்ணுக்கு தமிழ்நாட்டில் ஓர் இணை நிகழ்வு இருக்கிறது. அது கொடுமுடி என்ற கொங்குநாட்டு சிற்றூரிலிருந்து சின்னஞ்சிறு பெண்ணாகப் புறப்பட்ட கேபி சுந்தராம்பாள். மிகப்பெரிய வறுமையில் பிறந்து தன் சொந்தக் குரல்வளத்தால் இசைத் திறமையால் விண்முட்ட வளர்ந்த அந்தப் பெருந்தகையை இந்தப் பெண் எனக்கு நினைவுபடுத்துகிறார். தன் உருவத்தாலும் கூட ஓரளவுக்கு அவரைக் கொண்டிருக்கும் இவருக்கு, அவருக்கு அன்று கிடைத்த பாலர் நாடக மேடைகளைப் போல் இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சி கிடைத்திருக்கிறது. அதைப் போல ஓர் இசைப்பேரரசி நமக்குக் கிடைக்கிறாரா என்று பார்ப்போம். இதை இப்போது கட்டியமாகக் கூறவைத்திருப்பது அந்த ஆரூர் அருகில் வீற்றிருக்கும் கலைமகள் எனக்கிட்ட ஆணையாகக் கூட இருக்கலாம்.

அடிக்குறிப்புகள்:


எங்கே செல்லும் இந்தப் பாதை – ஹாலாஸ்யன்

தன் மனைவிநாய் வளர்ப்பதைப் பிடிக்காத கணவனைப்பற்றிய ஒரு நகைச்சுவை சொல்வார்கள்.

தனக்குப் பிடிக்காத மனைவியின் நாயை, கணவன் தன்காரில்ஏற்றி‌, சுமார் இரண்டு கிமீ தள்ளிக் கொண்டுபோய் விட்டுவிட்டு வருகிறான். அந்த நாய் அவன் வரும் முன்னர் வீட்டுக்கு வழி கண்டுபிடித்து வந்துவிடுகிறது. அடுத்த முறை ஒரு பத்து கிமீ எங்கெல்லாமோ சுற்றிச் சுற்றிப் போய் விட்டுவிடுகிறான். மறுபடியும் வந்துவிடுகிறது. மூன்றாவது முறை இன்னும் ஏகப்பட்ட தூரம் போய் இறக்கி விடுகிறான். திரும்பி வரும் வழி இவனுக்கு மறந்துவிடுகிறது. மனைவியை ஃபோனில் அழைத்து அந்த நாய் வந்துட்டுதா என்று கேட்கிறான். மனைவி ஆம் என்கிறாள். ‘அதை அனுப்பி வை. எனக்கு வழி மறந்துபோச்சுஎன்று கணவன் சொல்வதாக அந்த நகைச்சுவை போகும்.


அதில் கவனிக்க வேண்டிய உண்மை என்னவெனில் அந்த நாய் எப்படியோ வழி கண்டுபிடித்துவிடுகிறதுஎன்பதுதான். நாய் மட்டுமல்ல, பொதுவாகவே விலங்குகள் வழி தெரியாமல் முச்சந்தியில் நின்று தலையைச் சொறிவதில்லை. என்தாத்தாவின்இளம்பிராயத்தில் அவர் யாருக்கோ விற்ற ஒரு வண்டிமாடு, விற்றவர் வீட்டிலிருந்து கயிற்றை அவிழ்த்துக்கொண்டு நேரே வீட்டுக்கு வந்துவிட்டதாம்‌. மன்னர்கள் கதைகளில் அவர்களின் குதிரைகள் மயக்கமுற்ற தன் எஜமானரைச் சுமந்துகொண்டு அரண்மனைக்குத் திரும்பிய கதையெல்லாம் கேட்டிருப்போம். இதெல்லாம் என்ன பிசாத்து?
தி கிரேட் ஆர்டிக் டெர்ன் The great arctic tern என்னும் பறவை வலசைப் போவதற்காக வடதுருவத்தில் இருந்து தென்துருவத்திற்கும் வலசை முடிந்து ஒரு ரிட்ர்ன் ட்ரிப்பும் அடிக்கிறது‌‌. அசகாய சூரத்தனம். கடல்மேல் பறக்கையில்சட்டென்று நீருக்குள்பாய்ந்து ஒரு மீனை கவ்விக்கொண்டு அந்த மீனை காற்றிலேயே தூக்கிப்போட்டுப் பிடித்துப் பறக்கையிலேயே விழுங்கிவிடும். டெர்ன் பறவைகள் தமிழில் ஆலாக்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஓயாமல் பறக்கிற அவற்றின் பெயராலேயே ஆலாய்ப் பறக்கிறான் என்ற சொலவடை வந்திருக்கக்கூடும். அதேபோல சாலமன் மீன்கள் இனப்பெருக்கப் பருவம் வந்ததும், கடலில் இருந்து சில ஆயிரம் கிலோமீட்டர்கள் எதிர்நீச்சல் போட்டு, தான் பிறந்த நதிப் படுகைக்குப் போய் இனப்பெருக்கம் செய்து முட்டையிடுகின்றன. புறாக்கள் தம் காலில் கட்டிய ஓலையை, கச்சிதமாய்ச் சேர வேண்டிய இடத்தில் சேர்த்துவிட்டுஏப்பா!! ரிப்ளை ஏதும் போடுவியா?” என்று பதில் ஓலையையும் வாங்கிக்கொண்டு வந்து சேர்கின்றன. சாணத்தை உருட்டி எடுத்துப்போய்ச் சேகரிக்கும் வண்டுகள்  உருட்டிக்கொண்டு வழி மாறாமல் தன் இருப்பிடம் சேர்கின்றன.


 விலங்குகள், பறவைகள் மற்றும் பூச்சிகள் திசை அறியும் நுட்பம் மிகமிகச் சுவாரசியமானது‌. அவை இயற்கையைப் பலவாறாகத் தங்களுக்கு வழிகாட்டியாகப் பயன்படுத்துகின்றன. அவற்றுள் முக்கியமானது சூரியன். சூரியன் இருக்கும் இடத்தையும், அப்போதைய நேரத்தை வைத்தும் வழி கண்டுபிடிக்கின்றன. தேனீக்கள் இந்த வித்தையில் கில்லாடிகள். பூ எங்கிருக்கிறது என்று ஃபீல்ட் விசிட்டுக்குப் புறப்படும் தேனீ, பூக்களைக் கண்டவுடன் திரும்பி வந்துசூரியனுக்கு எதுத்தாப்புல அஞ்சு டிகிரி லேசா சாஞ்சு போனா ஒரு நந்தவனமே இருக்குஎன்று வழி சொல்கின்றன. பறவைகள் சூரியனை நம்புகின்றன. அதைத்தவிர வானம் மப்பும்மந்தாரமுமாய் இருக்கையில் பூமியின் காந்தப்புல மாறுதல்களை வைத்து இடம் கண்டுபிடிக்கின்றன. இந்த காந்தப்புல மாறுதல்களை வைத்து திசை கண்டுபிடித்தல், பறவைகளில் மட்டுமல்ல, பாக்டீரியாக்களிலும் உள்ளது. அவற்றின் உடலினுள் சிறு இரும்புத் தாது அதனை ஒட்டிச் சில புரதங்கள், காந்தப்புல மாறுதலால் அந்த இம்மி இரும்புத் தாதுவில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றி இருக்கும் புரதங்களையும் பாதித்து அதன் மூலம்ஏ வேடந்தாங்கல் வந்தாச்சு, லேண்ட் ஆகுஎன்று பறவைகள் இறங்கும். இதையும் தவிர க்ரிப்டோக்ரோம் (cryptochrome) என்னும் புரதங்களின் மூலமும் காந்தப்புல மாறுதல்களை அறிய முடியும். அந்தப் புரதங்கள் காந்தப்புல மாறுதலால் ஒளியில் ஏற்படும் மாறுதல்களை வைத்து வழி கண்டுபிடிக்கின்றன. பழக்கடைகளில் மாம்பழங்களை மொய்க்கும் பழ வண்டுகள் இந்த க்ரிப்டோக்ரோம்களைத்தான் வழிகாட்டியாகக் கொண்டுள்ளன. சாணத்தை உருட்டி எடுத்துப் போகும் வண்டுகள் உண்மையில் எல்லா ஜீவராசிகளையும் தலைகுனிய வைக்கின்றன. அவை பால்வீதியின் நட்சத்திரங்களை, இரவு வானில் அவற்றின் இருப்பிட மாறுதல்களைக் கொண்டு சாணத்தை உருட்டி இருப்பிடம் எடுத்துப்போகின்றனவாம். சாலமன் மீன்கள் ஞாபகத்தின் மூலமாகவும் வாசனையின் மூலமாகவும் தாம் பிறந்த நதிப்படுகையை அடைகின்றன. ஆனால் நாம்?

நாமும் சளைத்தவர்கள் அல்ல. இந்த உலகத்தில் வாழிடத்துக்காகவும், பிழைப்புக்காவும் இடம்பெயரும் ஜீவன்களில் மனிதர்களும் அடக்கம். ஆப்பிரிக்காவில் தொடங்கி, கண்டம், தீவுகள் எனத் தாறுமாறுகாக இடம் பெயர்ந்திருக்கிறோம். கிட்டத்தட்ட நடந்தே போய்ப் பல கண்டங்களில் குடியேறியிருக்கிறோம். ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களுக்கெல்லாம் எப்படிப்போனோம் என்பது இப்போது வரை பெரிய பிரமிப்புதான், காந்தப்புலத்தை அறியும் அளவுக்கு நமது மூளைக்குத் திறமையில்லை என்றாலும், இந்த நகர்தலுக்கு நம் மூளை பழக்கப்பட்டதுதான். இன்னும் பார்த்தால் வேட்டைச் சமூகக் காலத்தில் எதையாவது துரத்திப்போய் அடித்துக்கொண்டு மீண்டும் வீடோ, குகையோ திரும்புதல் என்பது உயிர்வாழ்தலுக்கு அத்தியாவசியமான ஒன்று. நமது மூளையில் அதற்கு உரிய பங்கு இருக்கிறது. மூளையின் இரண்டு அரைக்கோளங்களுக்கு அடியிலும் குர்குரே சிப்ஸ் போன்ற ஒரு வடிவத்தில் மூளையின் ஒரு ஏரியா இருக்கிறது. அந்த ஏரியாவின் பெயர் ஹிப்போகாம்பஸ் (Hippocampus). ஹிப்போகாம்பஸ் குறுகிய கால ஞாபகத் திறன், நெடுங்கால ஞாபகத் திறன் மற்றும் பரிமாண ஞாபகங்களை நிர்வகிக்கக் கூடியதாக இருக்கிறது.

புதிதாக ஒரு இடத்துக்குப் போகையில் அந்த இடத்தைப் பார்வையால் அளந்து அதன் பரிமாணங்களை, நம்மால் எங்கெல்லாம் நகர முடியும் என்று ஹிப்போகாம்பஸ் ஒரு திட்டம் வைத்துக்கொள்ளும். பார்வையற்றோருக்கு வேறு புலன் உள்ளீடுகளால் அந்த இடைவெளி நிரப்பப்படும். அந்த இடத்தின் வழியாகத் திரும்ப வரவேண்டி இருக்குமெனில் அதைக் குறுகிய கால ஞாபகத்திலேயே வைக்கும். அடிக்கடி வந்து போகிற இடமெனில் நெடுங்கால இலாகாவிற்கு மாற்றிவிடும். இதனைத் தவிரபாஸ் இங்கேர்ந்து செவுறு ஏறிக் குதிச்சா, நேரா சாப்புட்ற இடத்துக்கு வந்துடலாம் பாஸ்என்பதுபோல முப்பரிமாணத்தில் வரைபடம் தயாரிக்கிற பரிமாண ஞாபகங்களையும் அதுவே நிர்வகிக்கிறது,

அறிவியல் சம்பிரதாயப்படி எலிகளை வைத்துச் சோதனை செய்ததில் அவற்றின் ஹிப்போக்காம்பஸின் இடம் கண்டுபிடித்தலுக்கான சிறப்பான ந்யூரான்கள் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். எலிகள் ஒரு அறைக்குள் நகர்கையில் ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு ந்யூரான்கள் செயல்பட்டிருக்கின்றன. ஒரு புது அறைக்குள் விடப்படுகையில் அந்த அறையின் பரிமாணங்களை அறிந்துகொள்ளவும், ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு ந்யூரான் என்று நிறுவவும் வேண்டியிருப்பதால் ஹிப்போகாம்பஸ் அதிகம் செயல்படுவதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பாலூட்டிகளின் மூளை அமைப்பில் ஏகப்பட்ட ஒற்றுமைகள் இருப்பதால் நமக்கும் இதே ந்யூரான் நேர்ந்துவிடல்கள் உண்டு. ஆரம்ப காலத்தில் வழி கண்டுபிடிக்க எந்த உபகரணமோ, உதவியோ இல்லாதபோது இந்த வழிகளெல்லாம் செவிவழிச் செய்திகளாய், அந்தக் குழுவின் மூத்த, பழுத்த அனுபவமுடைய ஒரு மனிதரால் கடத்தப்படும். வானியல், காற்று வீசும் திசை, நீரோடும் திசை இவற்றையெல்லாம் நாம் பயன்படுத்தி வழிகண்டுபிடிக்கத் தொடங்குகையில் மூளையும் அந்தக் கருவிகள் சார்ந்த தரவுகளைத் தொடர்ச்சியாகச் சேமித்துக்கொண்டே வந்து கொண்டிருந்தது. அந்தக் கண்டுபிடிப்பு வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்தான் வரைபடங்கள்.

வரைபடங்கள் வாழ்வை எளிதாக்கியிருக்கின்றன. பெரிய நிலப்பரப்புகளை ஆளவும், கடக்கவும் ஏன் அழிக்கவும் பயன்பட்டிருக்கின்றன. Cartography என்கிற வரைபடவியல் மிகவும் சுவாரசியமான ஒரு இயல். வரைபடங்களை எப்படி வரையவேண்டும், அவற்றின் அளவீடுகள் என்ன மாதிரியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லும். நாம் தட்டையான பேப்பரில் பார்க்கிற வரைபடங்கள் உருச்சிதைந்தவையே. கிட்டத்தட்ட ஆப்பிரிக்காவிற்குத் தம்பி போல வரைபடத்தில் தெரிய வரும் க்ரீன்லாந்து, உண்மையில் அளவீட்டில் ஆப்பிரிக்காவிற்குப் பக்கத்தில் கூட வர முடியாது. ஆனால் ஒரு கோளத்தை தட்டையான இருபரிமாணத் தாளில் தருவது என்கிற இடியாப்பச் சிக்கலில் இதுவே பெரிய விஷயம்.

நாம் வழிமாறிப் போகாமல் திரும்ப வருவோம். வரைபடங்கள் மிக அதிகம் பயன்பட்டது கடலோடிகளுக்குதான். வெறும் நட்சத்திரங்களையும், தொலைநோக்கிகளையும் வைத்துக் குத்துமதிப்பாகப் போய்க்கொண்டிருந்த கப்பல்கள் துல்லியமாய் இலக்கை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்ததில் உலக வரலாற்றிலும் வர்த்தகத்திலும் பெரும் திருப்பங்களுக்குக் காரணமானது. ஆனால் வரைபடங்கள் நெகிழ்வுத்தன்மை கொண்டவை அல்ல. அவற்றின் மேற்பக்கம் எப்போதுமே வடக்கைப் பார்த்துதான் இருக்கும். “உனக்கு வேணும்னா நீ திரும்பி பாத்துக்கோஎன்கிற கதையாய் முரண்டு பிடிக்கும். அப்படி வேறு ஒரு பொருளை, இந்த இடத்தில் வடக்கு திசையை ஆதாரமாய்க் கொண்டிருப்பதால் இவ்வகையான வரைபடங்களை அல்லோசெண்ட்ரிக் (Alocentric) என்று அழைக்கிறார்கள்.

நன்றாக வரைபடத்தை அலசத் தெரிந்த ஒரு ஆளுக்கு ஹிப்போக்காம்பஸ் கொஞ்சம் கூடுதலாய் வேலை செய்யும். ஒரு நகரின் வரைபடத்தைப் பார்க்கையில் ஒவ்வொரு சாலையும் எங்கு போகிறது, இடையில் வரும் முச்சந்தி, நாற்சந்திகள் எங்கெல்லாம் போகின்றன என்று நாம் இருக்கும் இடத்தையும், அந்த வரைபடத்தையும் ஒப்பிட்டு ஹிப்போகாம்பஸ் ஒரு வரைபடத்தைத் தனக்குத் தானே தயாரித்துக்கொள்ளும். “சத்யம் தியேட்டர் போணுமா? அண்ணா சாலை ட்ராபிக்கா? பீச் ரோடு புடிச்சு சுத்தி உள்ள போய்க்கலாம்என்று சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவுகளையும் எடுக்கும்.

ஆனால் பாருங்கள், இந்த கூகுள் மேப்ஸ் போன்ற வழிகாட்டும் செயலிகளின் வரைபடங்கள் இஷ்டத்துக்கு திரும்பும். அதாவது நீங்கள் முக்கியம். வடக்கு தெற்கெல்லாம் இல்லை. உங்களுடைய இடது, வலது, முன், பின் இவைதான் திசைகள். இப்படி தன்னை முன்னிலைப்படுத்தலுக்கு ஈகோசெண்ட்ரிக் (egocentric) என்று பெயர். ஈகோ செண்ட்ரிக் வரைபடங்களில் ஹிப்போகேம்பஸ் திணறும். நாம் திரும்புவதற்கு ஏற்ப அதுவும் சுழன்று கொண்டே இருப்பதால் லேசாய்க் கடுப்பாகும். Turn right at என்று திரும்பச் சொல்கிற கணினிப் பெண்குரலை கிட்டத்தட்ட தன் சக்களத்தியாகவே பார்க்கும். அந்தக் குரல் ஒலிக்கையில் அது ந்யூரான்களைப் பயன்படுத்தும் தேவையின்றிப் போவதால் ஹிப்போகாம்பஸ் கிட்டத்தட்ட அணைக்கப்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

ஒரு ஆய்வில், கலந்துகொண்டவர்களை, லண்டன் நகரத்தின் கணினி மாதிரி ஒன்றில் டாக்ஸி ஓட்டுநர்களாக இருக்கச்சொல்லி இவ்வளவு வாடிக்கையாளர்களை அவர்கள் சொல்லும் இடத்தில் இறக்கிவிட வேண்டும் என்று விளக்கிச் செய்ய வைத்தனர். ஒரு சாரார் வழிகாட்டும் செயலிகளைப் பயன்படுத்தலாம். மற்றொரு சாரார் பயன்படுத்தக்கூடாது. அந்த ஆய்வு நடக்கையிலேயே அவர்களை மூளையை ஸ்கேன் செய்து பார்த்ததில் வழிகாட்டும் செயலிகளைப் பயன்படுத்துபவர்களின் ஹிப்போகாம்பஸ் பெரிதாகச் செயல்படவில்லை எனவும், அதுவே தானாய் வழிகண்டுபிடித்த ஆட்கள் குறைவான வேகத்தில் செயல்பட்டாலும், அவர்களின் ஹிப்போகாம்பஸ் சுறுசுறுப்பாக இயங்கியது.

இதில் ஆச்சரியம் என்னவெனில் லண்டன் டாக்ஸி டிரைவர்களுக்கு ஹிப்போகாம்பஸ் சராசரியைவிட அளவில் பெரியதாக இருந்தது. லண்டன் நகரத்தில் கார் வைத்திருந்து, ஓட்டத் தெரிந்திருந்தால் மட்டும் டாக்ஸி நடத்திவிட முடியாது. பத்தாயிரத்திற்கும் அதிகமான அந்த நகரின் தெருக்களை, இண்டு, இடுக்குகளை ஞாபகம் வைத்துக்கொண்டிருக்க வேண்டும். தகுதித் தேர்வெல்லாம் உண்டு. அதனால் அவர்களின் ஹிப்போகாம்பஸ் அளவில் சற்றே பெரிதாய் இருந்திருக்கிறது. அதே நேரம் வழிகாட்டும் செயலிகளைத் தொடர்ச்சியாய்ப் பயன்படுத்துவோரின் ஹிப்போகாம்பஸ் அளவில் லேசாய்ச் சுருங்கி இருந்தது, இந்தத் திறனெல்லாம் use it or lose it வகையைச் சேர்ந்ததுபயன்படுத்தாவிடில் அந்த இடம் லேசாய் வேறு ஒரு மூளையின் பாகத்திற்குக் கொடுக்கப்படும். காரணம் மொத்த மூளையும் அந்த மண்டை ஓட்டுக்குள்ளேதானே இருந்தாக வேண்டும்.

சரி, எவ்வளவோ திறன்களை இழந்தாயிற்று. இதுவும் ஒன்றாக இருக்கட்டுமே என்று இருக்கலாம்தான். நாம் எல்லா வேலைகளையும் திறன்களையும் தொழில்நுட்பத்திற்கு அவுட்சோர்ஸ் செய்து வருகிறோம். கால்குலேட்டர்கள் மிகச் சிறந்த உதாரணம். ஏற்கெனவே பார்த்தபடி ஹிப்போகாம்பஸ் ஞாபகத்திறனில் சம்பந்தப்படுவதால் அந்தப் பகுதி டிமெண்டியா dementia, அல்ஸைமர் alzheimer போன்ற வியாதிகளில் முதலில் பாதிக்கப்படும் பகுதியாக இருக்கிறது, முதியவர்கள் வழிதவறிச் செல்லுதல், வழிதெரியாமல் சுற்றிச் சுற்றி வருதல் இதெல்லாம் ஹிப்போகாம்பஸ் சிதைவின் வெளிப்பாடு, அதனால் இந்தப் பகுதியை சுறுசுறுப்பாக வைத்திருந்தால் பின்னாளில் இந்த மாதிரியான சிதைவு நோய்கள் வரும் வாய்ப்பு குறைவு. அப்படி சுறுசுறுப்பாக வைக்க என்ன செய்யலாம்?

     வாரமிருமுறை உங்களுக்கு அருகில் உள்ள, நீங்கள் சென்றிருக்காத ஒரு பகுதிக்கு எந்த வழிகாட்டியும் இல்லாமல் போய் வாருங்கள். (நாய் விரட்டினால் நான் பொறுப்பல்ல.)
     போய் வந்த இடத்தின் வரைபடத்தைத் தோராயமாய் வரைய முடிகிறதா என்று முயற்சியுங்கள். எத்தனை இட, வல திருப்பங்கள் போன்றவை.
     அலுவலகத்துக்குப் போகையிலோ வருகையிலோ இதுவரை முயன்றிருக்காத ஒரு வழியில் சென்று பாருங்கள்.
     ஜிபிஸ் உதவியுடன் செயல்படும் செயலிகளைப் பயன்படுத்த வேண்டிய சூழல் வந்தாலும் அதை மட்டுமே நம்பி இருக்காமல், கொஞ்சம் வழிகாட்டும் பலகைகளையும் பார்த்து ஓட்டுங்கள்.

இது ஒரு ஒட்டுமொத்தமான மூளைக்கான பயிற்சியாகவும் அமையும். ந்யூரான்கள் செயல்பாடு ஒழுங்குபடுத்தப்படும்மூளைச் சிதைவு நோய்களைத் தள்ளிப் போடவும் முடியும். ஏனெனில் ஒரு தொழில்நுட்பத்திடம் எதை இழக்கிறோம் என்ற புரிதலும் அதை எப்படி வேறுவிதத்தில் தக்க வைக்கலாம் என்ற தேடலும் இன்றைய உலகின் அத்தியாவசியத் தேவையாகி விட்டது.கல்வெட்டுகளும் பயிலாத வரலாறும் – வல்லபா ஸ்ரீனிவாசன்

கோயில்களில் உள்ள முக்கியமான அம்சங்களுள் ஒன்று, கல்வெட்டுகள். இவை ஏராளமான செய்திகளைத் தாங்கி நிற்கின்றன. வரலாறு என்று தனியாக எதுவும் ஆவணப் படுத்தப்படவில்லை அல்லது அத்தகைய ஒன்று நம் கைக்கு இதுவரை கிடைக்கவில்லை. இதனால், பொதுவாக, ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய நம் நாட்டின் வரலாறு பல்வேறு இலக்கியங்கள் மூலமாகவும், இத்தகைய எழுத்து வடிவச் செய்திகளின் மூலமாகவுமே அறியப்படுகிறது. சங்க காலம் தொட்டு நம் வரலாற்றை ஓரளவு அறிய இவை உதவுகின்றன என்றாலும், இடையில் பல ஆண்டுகள் என்ன நடந்தது என்பதை அறிவது சிரமமாகவே உள்ளது. உதாரணம் களப்பிரர்கள் ஆண்டதாகச் சொல்லப்படும் சங்க காலத்திற்குப் பிந்தைய காலம் பற்றிய போதுமான விவரங்கள் நம்மிடம் இல்லை.

பல்வேறு மொழிகளையும், நாகரிகங்களையும் கொண்ட நம் நாட்டின் வரலாறு விசித்திரமானது. அதைவிட விசித்திரம், நாம் வரலாறு கற்கும் விதம். நம் பள்ளி வரலாற்றுப் புத்தகங்கள் பெரும்பாலும் மொகலாய சாம்ராஜ்யத்தையும், ஆங்கிலேய ஆட்சியையும் பற்றிச் சொல்வதாகவே உள்ளது. ஆனால் நம் வரலாறு மிகத் தொன்மையானதல்லவா? அவற்றை நாம் எவ்வளவு அறியாமலிருக்கிறோம் என்பது அதிர்ச்சி தரும் ஒரு விஷயம். பாபரும் அக்பரும் அறியப்பட்ட அளவு காரவேலனும், ராஜசிம்ம பல்லவனும் அறியப்படவில்லை.

இதற்குக் காரணம், நம் வரலாற்றாசிரியர்களும், கல்வியாளர்களுமே இதை முக்கியமாகக் கருதவில்லை என்பதே. நாம் அடிமைப்பட்ட வரலாற்றைப் படித்துப் படித்தே, ஒரு தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். ஆளப்பட்டோம் என்பது உண்மையே. ஆனால் அதற்குமுன் எவ்வளவு போராட்டங்கள் நடந்தன என்பதை அறிவதும் இன்றியமையாதது. ஆனால் பள்ளிப் புத்தக வரலாறோ வேறு முகமாக எழுதப்படுகிறது. உண்மையும், ஆழ்ந்த ஆராய்ச்சி சார்ந்ததாகவும் இல்லாத நிலையில், அந்த வரலாறு புறக்கணிக்கப் படுகிறது. வரலாறு என்ற ஒரு துறையே பள்ளியில், கல்லூரிகளில் இல்லாத ஒரு காலத்தில் இப்போது இருக்கிறோம். இது சோகமான விஷயம்.

வாட்ஸப்பில் வரும், ‘கொனார்க்கில் சூரியன் உள்ளே தெரியும், எல்லோரா ஏலியன்களால் கட்டப்பட்டதுபோன்ற உண்மையற்ற அபத்தங்களின் மூலம் நாமே நம் உயர்ந்த நாகரிகத்திற்கு நியாயம் செய்யாமல் போய்விடுகிறோம். கல்வி, இலக்கியம், பல்வேறு கலைகள் இவற்றில் நாம் எத்தகைய உயர்ந்த நிலையில் இருந்தோம் என்பதைச் சரியான முறையில் அறிந்து கொள்வது மிக முக்கியம். இது நமக்கு ஒரு தன்மான உணர்வையும் பெருமையையும் தருவதோடு, நாட்டுப்பற்றையும் பலப்படுத்தும்.

இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகள், பல்வேறு எழுத்துச் சான்றுகள், இவற்றை வைத்தே நாம் வரலாற்றை அறியவேண்டும். பல கலைகளில் நாம் சிறந்திருந்ததற்குச் சான்றாக நிற்பவை நம் கோயில்கள். கட்டுமானம் மூலமாகவும், சிற்பங்கள் மூலமாகவும் நம் வரலாற்றுச் சிறப்பைச் சொல்லியபடி நிற்கும் இவற்றுள் விஷயப் பொக்கிஷமாய் இருப்பவை இன்ஸ்கரிப்ஷன்ஸ். தனியாகப் பல இடங்களில் காணப்பட்டாலும் பெரும்பாலும் கோயில்களிலேயே காணப்படுகின்றன.

இன்ஸ்க்ரிப்ஷன் என்பதற்குத் தமிழில் கல்வெட்டுகள் என்ற பதமே உபயோகப்படுத்தப்படுகிறது. கல்லில் வெட்டப்பட்டவை கல்வெட்டுகள் சரி. ஆனால் கல்லில் மட்டுமல்லாமல் செப்புத் தகடுகளிலும், மண்பானைகளிலும் எழுத்துக்களைக் காண்கிறோம். இன்ஸ்க்ரிப்ஷன் என்ற வார்த்தை அனைத்துக்கும் பொதுவானது. கல்லிலும், செப்புத் தகடுகளிலும் பொறிக்கப்பட்டிருப்பதால் பொறியெழுத்துக்கள் என்று சொல்லலாம். இதைத் தமிழறிஞர்கள் முடிவு செய்யட்டும். நாம் பார்க்கப் போவது அவற்றிலுள்ள விவரங்கள்.

விவரங்களைப் பற்றிப் பார்க்குமுன் இவை எழுதப்பட்ட மொழி, வடிவங்கள் இவற்றை சற்றே பார்க்கலாம். எகிப்தில் தமிழ்ப் பொறியெழுத்துக்கள், மலேசியாவில் சம்ஸ்கிருதப் பொறியெழுத்துக்கள் என்று இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இவை விரவிக் கிடக்கின்றன.
இவை எழுதப்பட்ட மொழிகள்தமிழ், சம்ஸ்கிருதம், ப்ராகிருதம் போன்றன;
எழுத உபயோகப்பட்ட லிபிகள்கிரந்தம், பிராமி, தமிழ் வட்டெழுத்து, தமிழ் பிராமி, தேவநாகரி போன்றன.

பல்லவர்கள் பல்லவ கிரந்தம் என்றழைக்கப்படும் லிபியையும் தேவநாகிரி லிபியையும் சம்ஸ்கிருதம் எழுத உபயோகப்படுத்தினர். தமிழுக்கு கிரந்தம், வட்டெழுத்து ஆகியவற்றை உபயோகப்படுத்தினர். ஆசியாவின் பல பகுதிகளில் காணப்படும் கல்வெட்டுகள் பல்லவ கிரந்தத்திலேயே இருக்கின்றன.

நண்பர் ஒரு நிகழ்வைச் சொன்னார். ஆங்கிலேயர் ஒருவர் இங்கு வந்தாராம். கோயில்களில் கல்வெட்டுகளில் எழுத்துக்கள் இருப்பதைக் காட்டி, ‘இதில் என்ன எழுதியிருக்கிறது?’ என்று கேட்டாராம். அவரை அழைத்துச் சென்ற தமிழர் தெரியாது என்றாராம். உடனே இது என்ன மொழி என்று கேட்டாராம். தமிழ் என்று பதில் சொல்லியிருக்கிறார். ‘நீங்கள் பேசுவதும் தமிழ், இதுவும் தமிழ், உங்கள் தாய்மொழியும் தமிழ், ஆனால் இதைப் படிக்கத் தெரியாதா?’ என்று ஆச்சரியமாகக் கேட்டாராம். தொன்மையான ஒரு மொழி பல எழுத்து வடிவங்களைப் பெற்று பல நூற்றாண்டுகளைக் கடந்து வரும் போது இத்தகைய விசித்திரம் நிகழ்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து இந்தக் கல்வெட்டு ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பாபிங்டன், வில்லியம் ஜோன்ஸ், லாக்வுட் எனப் பல ஆங்கிலேய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தவற்றையே நாம் இப்போது படித்து அறிய முயல்கிறோம். புதிதாகக் கல்வெட்டுகளும், செப்புத் தகடுகளும், எழுத்து பொறிக்கப்பட்ட மண்பாண்டங்களும் கிடைத்த வண்ணமிருக்கின்றன. ஆனால் சிலராலேயே இவற்றைப் படிக்க முடிகிறது. தற்போது இதைக் கற்க பல வகுப்புகள் இருந்தாலும் ஆராய்ச்சி போதுமான அளவில் இல்லை. இவற்றுள் பொதிந்துள்ள விவரங்கள் படிக்கப்படக் காத்திருக்கின்றன.

இதுவரை ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்த முக்கியமான சில இன்ஸ்க்ரிப்ஷன்களைப் பார்ப்போம்.

1. அசோகர் கல்வெட்டு. 262 பொ.மு. (பொது யுகத்துக்கு முன்பு)

பொ.மு. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கண்டறியப் பட்டிருக்கும் தமிழ் பிராமி எழுத்து வடிவங்களும் அசோகரின் நீண்ட கல்வெட்டும் நமக்குத் தெரிந்தவரை மிகப்பழமையானவையாகக் கருதப்படுகின்றன. இதுவரை கண்டெடுத்து, வரலாற்றாசிரியர்களால் அங்கீகரிக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டதில் அசோகரின் கல்வெட்டுகளே முதன்மையானவை. அசோகரின் தூண்களிலும், பாறைகளிலும் 33 பிரகடனங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. பிராக்ருத, கிரேக்க, அரமாயிக் மொழிகளிலும் பிராமி, கரோஷ்டி லிபிகளிலும் எழுதப்பட்டிருக்கின்றன.

இதில் ஒடிசாவில் தவ்லி என்ற இடத்தில் உள்ள பாறைப் பிரகடனம் பிரசித்தமானது. அதைப் பார்ப்போம்.

புவனேஸ்வர் அருகே தயா நதியின் கரையில் ஒரு பாறையில் காணப்படும் இக்கல்வெட்டு, தர்மத்தைப் போதிப்பதாகச் சொல்கிறது. இந்த இடத்தில்தான் கலிங்கப் போர் நடந்ததாகக் கூறப்படுகிறது. கலிங்கப் போரில் உயிர்ச் சேதம் அதிகமானதால் இந்த தயா ஆறு ரத்த ஆறாக ஓடியதாம். அதைப் பார்த்து அவர் மனம் கலங்கி தர்மவழியில் சென்றதாக அறிகிறோம். தோசாலி என்பதே தவ்லியாக மாறியிருக்கிறது.

இந்தக் கல்வெட்டு பிராக்ருத மொழியில் பிராமி லிபியில் எழுதப்பட்டிருக்கிறது. தெளிவாகப் பொருள் அறியப்பட்ட கல்வெட்டுகளில் இதுவே மிகப் புராதனமானது. கலிங்கப் போருக்குப் பின் இது பொது மக்களுக்குத் தினமும் படித்துக் காட்டப்பட்ட ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.

அசோகரின் தவ்லி பிரகடனம்

அசோகரின் பிரகடனங்கள் என்று மற்ற ஊரில் காணப் படும் கல்வெட்டுகளில் 1 முதல் 14 பிரகடனங்கள் உள்ளன. ஆனால் போர் நடந்த இடமான இந்த தவ்லியில் 11, 12, 13 மூன்றும் காணப்படவில்லை. அதற்குப் பதிலாக ஸ்பெஷல் எடிக்ட்ஸ் என்று வகையறுக்கப்பட்டிருக்கும் இரண்டு பிரகடனங்களைக் காண்கிறோம்.

முதல் பத்து, மிருகவதை கூடாது, பலியிடுதல் கூடாது, அனைவரும் சமம், தர்மம் பரப்பப்பட வேண்டும் எனப் பல கட்டளைகளைச் சொல்கிறது. 11, 12, 13 மூன்றும் சகிப்புத் தன்மை, தர்மம், அசோகரின் கலிங்க வெற்றி இவற்றைப் பற்றி இருப்பதால், கலிங்கப் போர் நடந்த இடத்தில் இவை பொருத்தமாக இருக்காது என்பதாலும்,புரட்சிக்குக் காரணமாகலாம் என்பதாலும் தவிர்க்கப் பட்டிருக்கின்றன. இதற்குப் பதிலாக இரண்டு பெரிய பிரகடனங்களைக் காண்கிறோம்.

இந்த இரண்டும், ‘கடவுளுக்குப் பிரியமானவரின் வார்த்தைகளிலிருந்து…’ என்று தொடங்கிப் பல கருத்துகளைச் சொல்கின்றன. ‘அனைவரும் என் குழந்தைகள். அனைவருக்கும் நல்வழி காட்டுவதே என் விருப்பம். நாம் தர்ம வழியில் நடக்கவேண்டும். பொறாமை, கோபம், அவசரம், அலுப்பு, சோம்பல் இவை நம்மை தர்ம வழியில் நடக்க விடாது. அதனால் இவை நம்முள் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கோபமில்லாமல் இருப்பதும், அவசரமில்லாமல் இருப்பதும் இதற்கு மிக அவசியமானது. தர்ம வழியில் செல்ல அலுப்புற்றவன், வாழ்வில் உயர முடியாது. தர்மத்தைக் கடைப்பிடித்து நேரான வழியில் சீராகச் சென்று முன்னேற வேண்டும்என்று பல நற்கருத்துகளைச் சொல்கிறது.

அசோகர் திக்விஜயம் செய்து பல நாடுகளை வென்று தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியதையும், மக்கள் தர்ம வழியில் இருக்க அவர் எடுத்த முயற்சிகளையும், அவர் செய்த பல திட்டங்களையும் இக்கல்வெட்டுகளால் அறிகிறோம்.

2. காரவேலன் கல்வெட்டு – 180 பொ.மு.

இதன் சிறப்பு இதில் பல தேதிகள் குறிப்பிடப்பட்டிருப்பதே. பல அரசர்களைப் பற்றியும், நிகழ்ச்சிகளைப் பற்றியும் இதில் குறிப்புகள் இருப்பது வரலாற்று ஆசிரியர்களுக்கு உபயோகமாக உள்ளது.

புவனேஸ்வர் அருகில் உள்ள ஹதிகும்பா குகையில் பிராக்ருத மொழியில், பிராமி லிபியில் எழுதப்பட்ட இந்த காரவேலன் கல்வெட்டு இம்மன்னனின் பல திட்டங்களை அவை நடந்த வருடங்களோடு குறிப்பிடுகிறது.

இதன் மற்றொரு சிறப்பு, இதில் தமிழ்நாட்டின் அரசர்களைப் பற்றிய குறிப்புகள். குதிரைகள், முத்துகள் இவற்றை பாண்டிய மன்னனிடம் பெற்றுக் கொண்டதாகச் சொல்கிறது இக்கல்வெட்டு.

ஆட்சியின் முதல் வருடம் கோட்டை வாயிலைச் சரி செய்ததாகவும், இரண்டாம் வருடம் சதகர்ணி மகாராஜாவை மீறி, குதிரை, யானை, தேர்ப்படைகளை மேற்கு நோக்கி அனுப்பி வெற்றி கண்டதாகவும், அந்நாட்டின் பொருட்களை அடைந்ததாகவும், பாசனத்திற்கு நீர்வழிகளை அமைத்ததாகவும், மகத நாட்டை வென்றதாகவும் இக்கல்வெட்டு வருடா வருடம் காரவேலனின் ஆட்சியில் நடந்தவற்றைச் சொல்கிறது. கோட்டையைச் சரி செய்ய ஆன செலவைக் கூட 35,00,000 நாணயங்கள் என்று குறிப்பிடுகிறது.


3. மண்டகப்பட்டு கல்வெட்டு – 600 பொ.பி.

திண்டிவனம் அருகே உள்ள மண்டகப்பட்டு எனும் இடத்தில் காணப்படும் பல்லவர்காலக் கல்வெட்டு. சம்ஸ்கிருத மொழியில் பல்லவ கிரந்த லிபியில் எழுதப்பட்டது.


 மகேந்திரவர்ம பல்லவனால் கட்டப்பட்ட இக்குகைக் கோயிலில் மூன்று பகுதிகளும், இரண்டு புறமும் துவாரபாலகர்களும் இருப்பதுபோல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை கோயில்கள் சுதையாலேயே கட்டப்பட்டு வந்தன. காலத்தால் அழியாத கோயிலை நிர்மாணிக்கும் பொருட்டு விசித்திர சித்தன் என்று அழைக்கப்படும் மகேந்திர பல்லவன் கல்லிலேயே கோயில் கட்டுகிறான். இதை விளக்கும் வரிகளே இங்கு இருக்கும் கல்வெட்டில் காணப்படுகிறது.

ஏதத் அனிஷ்டம் அத்ருமம் அலோகம் அசுதம்
விசித்ர சித்தேந நிர்மாபித ந்ருபேண
ப்ரம்மேஷ்வர விஷ்ணு லக்ஷிதாயதநம்.

மரமில்லாத, சுதையில்லாத, உலோகமில்லாத கோயிலை விசித்திர சித்தனானவன் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோருக்காகப் படைக்கிறான் என்கிறது இக்கல்வெட்டு. இதுவே முதன்முதலாகக் கட்டப்பட்ட ஒரே கல்லில் அமைக்கப்பட்ட கற்கோயில் என்பதை இதன் மூலம் அறிகிறோம்.

3. நரசிம்ம பல்லவர் கல்வெட்டு: 642 – 654 பொ.பி.

தற்போது பாதாமி என்றழைக்கப்படும் சாளுக்கிய தேசத்தின் வாதாபி நகரத்தில் காணப்படுகிறது இக்கல்வெட்டு. பாதாமி மியூசியம் அருகே உள்ள பாறையில் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். சம்ஸ்கிருத மொழியில், கிரந்த லிபியில் எழுதப்பட்டது.

புலிகேசி, மகேந்திரவர்ம பல்லவனைத் தோற்கடிக்கிறார். அதற்குப் பதிலாக நரசிம்மவர்மர் பரஞ்சோதி தலைமையில் படையை வாதாபிக்கு அனுப்பி வெற்றி வாகை சூடி பன்னிரண்டாண்டு காலம் வாதாபியில் ஆட்சி செய்ததைக் கூறுகிறது இக்கல்வெட்டு.


5. அதிரணசண்ட கல்வெட்டு – 700 பொ.பி.

மாமல்லபுரத்தில் சாளுவங்குப்பத்தில் உள்ள அதிரணசண்ட மண்டபத்தில் இருபுறமும் காணப்படும் கல்வெட்டுகள். சம்ஸ்கிருத மொழியில் பல்லவ கிரந்தத்தில் ஒரு புறமும், நகரி லிபியில் ஒரு புறமுமாக ஒரே விஷயம் அழகாகத் தெளிவாகச் செதுக்கப் பட்டிருக்கிறது. முதல் நான்கு வரிகள் சிவனின் புகழைக் கூறுகின்றன. முதல் வரி அத்யந்த காமாஸ்ய என்று ஆரம்பிக்கிறது. இதன் மூலம் இது ராஜசிம்ம பல்லவனைக் குறிக்கிறது என அறிகிறோம். காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் என்ற அற்புதத்தைக் கட்டுவித்த அதே ராஜசிம்ம பல்லவன் இந்த சாளுவங்குப்பத்தில் உள்ள அதிரணசண்டேஸ்வரம் என்ற இந்தக் கோயிலையும் கட்டுவித்தான்.

காஞ்சி கைலாசநாதர் கோயிலில் பிராகாரம் முழுவதும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ராஜசிம்மனின் பல்வேறு பெயர்கள் கிரந்தம், தேவநாகரி, அழகேற்றப்பட்ட எழுத்து வடிவம் (காலிக்ராஃபி) என்று மூன்றுவிதமான லிபியில் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதே கோயிலில் மற்றுமொரு கன்னட மொழிக் கல்வெட்டு, காஞ்சியின் மீது படையெடுத்து வந்த சாளுக்கிய அரசன் விக்ரமாதித்தியன் இந்த கோயிலைக் கண்டதும் மயங்கி அதற்குப் பொன்னும் பொருளும் அளித்ததாகக் கூறுகிறது.


6. உத்திரமேரூர் கல்வெட்டு – 917 பொ.பி.

உத்திரமேரூர், பராந்தகச் சோழன் காலத்தில் தமிழ் மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டு.

நான்மறை உணர்ந்த வேதியர்கள் நிறைந்த ஊராதலால் உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்படும் ஊரில், ஊர்ப் பெருமக்கள் சபை இயங்கி வந்ததை இக்கல்வெட்டின் மூலம் அறிகிறோம். சபை நிர்வாகம் வாரியம் வாரியமாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றிற்கும் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு நிர்வாகம் நடந்திருக்கிறது. குடவோலை மூலம் அங்கத்தினர் தேர்ந்தெடுக்கப்படுவர். சபை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் தகுதி பற்றிக் கல்வெட்டு கூறுகிறது. அதன்படி  
1. கால் வேலிக்கு மேல் இறை கட்டும் நிலம் வைத்திருக்கவேண்டும்
2. சொந்த மனையில் வீடு கட்டப்பட்டிருக்கவேண்டும்
3. வயது 30க்கு மேல் 60க்குள் இருக்கவேண்டும்
4. வேதத்திலும் சாஸ்திரத்திலும் தொழிலும் காரியத்திலும் நிபுணராக இருக்கவேண்டும்
5. நல்ல வழியிலான செல்வமும், தூய்மையான ஆன்மாவையும் பெற்றிருக்கவேண்டும்.
6. கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக் கூடாது. அவ்வாறு வாரிய உறுப்பினராக இருந்தோரும், அவர்களது நெருங்கிய உறவினர்களும் உறுப்பினராக இயலாது.

சபை உறுப்பினராகக் கோரப்படும் தகுதிகள் (இரண்டாம் கல்வெட்டு):

1. கால் வேலிக்கு அதிகமான இறை செலுத்தக் கூடிய சொந்த நிலம் பெற்றிருக்க வேண்டும்.
2. அந்நிலத்தில் சொந்த மனை இருக்கவேண்டும்.
3. வயது வரம்பு முந்தைய கல்வெட்டில் 30க்கு மேல் 60க்குள் என்றிருந்தது. பின் அது மாற்றப்பட்டு 35க்கு மேல் 70க்குள் என்று வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4. மந்தர பிரமாணம் அறிந்து அதைப் பிறருக்கு எடுத்துச் சொல்லுபவன்.
5. 1/8 நிலமே பெற்றிருப்பினும் 1 வேதத்திலும் 4 பாஷ்யத்திலும் நிபுணராக இருக்கவேண்டும்.
6. நல்ல வழியிலான செல்வமும், தூய்மையான ஆன்மாவையும் பெற்றிருக்கவேண்டும்.
7. கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக் கூடாது. அவ்வாறு வாரிய உறுப்பினராக இருந்தோரும், அவர்களது நெருங்கிய உறவினர்களும் உறுப்பினராக இயலாது.
8. ஏதாவதொரு வாரியத்தில் இருந்து கணக்கு காட்டாது சென்றவர்களும் அவர்களது உறவினர்களும் உறுப்பினராகக்கூடாது. (முன் கல்வெட்டில் இவ்விதம் குறிக்கப்படவில்லை.) தாயின் சிறிய, பெரிய சகோதரிகளின் மக்கள்தந்தையின் சகோதரிமக்கள்மாமன்மாமனார்மனைவியின் தங்கையை மணந்தவர்உடன்பிறந்தாளைத் திருமணம் செய்தவர்தன் மகளை மணம் புரிந்த மருமகன் . இதுபோன்ற சுற்றத்தினர் யாரும் தங்களது பெயர்களைக் குடவோலைக்கு எழுதுதல் கூடாது.
9. ஆகமங்களுக்கு எதிராகப் பஞ்சமா பாதகங்கள் செய்தார், கொள்கையை மீறுபவன், பாவம் செய்தவர்கள், கையூட்டுப் பெற்றவர்கள் அதற்கான பரிகாரங்களைச் செய்து தூய்மை அடைந்திருந்தாலும் அவர்கள் உறுப்பினராகும் தகுதியற்றவரே. அவர்களது உறவினர்களும் உறுப்பினராக இயலாது. கொலைக்குற்றம் செய்யத் தூண்டுபவர், கட்டாயத்தினால் கொலைக்குற்றம் செய்பவர், அடுத்தவர் பொருளை அபகரிப்பவர், ஊர் மக்களுக்கு விரோதியாய் இருப்போர் (கிராம கண்டகர்) இவர்கள் உறுப்பினராகத் தகுதியற்றவர்களாவர்.
10. கழுதை ஏறியோரும், பொய் கையெழுத்திட்டோரும் உறுப்பினராகத் தகுதியற்றோராவர்.

இதன் மூலம் உறுப்பினர்களுக்கான தகுதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.

என்ன அருமையான விவரங்கள் பாருங்கள். உறுப்பினர்களுக்குத் தேவையான தகுதியைப் பாருங்கள். இப்போது நாம் தேர்ந்தெடுப்பவருக்கு இதில் இரண்டு தகுதியேனும் இருக்குமா? நாம் ஏன் இதை நம் நாட்டுத் தேர்தல் விதிமுறைகளாக ஆக்கக் கூடாது?

இதை நடைமுறைப் படுத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும். நம் நாட்டில் கல்வெட்டுகளின் கதியைப் பற்றி ஒரு அனுபவம். கர்நாடகத்தில் பாதாமிக்கு அருகில் உள்ள பட்டடக்கல் என்ற ஊரில் ஜம்புலிங்கேஸ்வரர் கோயில் ஒன்று. அதில் முக்கியமான ஒரு கல்வெட்டு இருக்கிறது என்று பார்க்கச் சென்றோம். அந்தக் கோயிலையே தேட முடியவில்லை. அங்கிருப்பவர்களுக்கோ அந்தப் பெயரே தெரியவில்லை. வேறு கோயிலைக் காட்டுகிறார்கள். வீடுகள் அடர்த்தியாக இருக்கும் தெருக்கள். ஓரத்தில் சாக்கடை, பன்றிக்கூட்டம், எல்லாவற்றையும் தாண்டி மூன்று முறை சுற்றி வந்துவிட்டோம். ‘இங்கேதான் எங்கயோ இருக்கணும்என்றார் எங்கள் குழுத் தலைவர் மேப்பைக் கையில் வைத்துக் கொண்டு. இரண்டு வீட்டிடையே இரு புறமும் கொடி கட்டி உணர்த்திய துணிகளைத் தாண்டி உள்ளே உள்ளே போனோம். நீண்ட சந்தின் இறுதியில் ஒரு வீட்டின் கொல்லைப் புறத்தில் நிறைய துணிகள் உலர்த்தியிருந்தது. ஏதோ ஹோட்டல் பெட்ஷீட்டுகள், துணிகள் என்று கொடி மயம். பெட்ஷீட்களை விலக்கிப் பார்த்தால் கோயில். ஜம்புலிங்கேஸ்வர். மேப்பில் இருக்கும் கல்வெட்டைத் தேடி துணிகளை விலக்கி படிக்க முயன்றனர் நண்பர்கள். கொல்லைப்புறத்தில் ஒருபுறம் இது எதிலுமே பட்டுக் கொள்ளாமல் துணிகளை அடித்து அடித்துக் கசக்கிய வண்ணம் கருமமே கண்ணாக ஒரு பெண்மணி. துணி துவைக்கும் கல் பிரமாதமாகப் பெரிதாக இருந்தது. அதன்மேல் ஏதோ கல்லில் வெட்டி எழுதப்பட்டிருந்த இடம், அந்தம்மாவுக்கு கரகரவென்று துவைக்க ஏதுவாய் இருந்தது.


பழக்கங்களின் மரபுப் பின்னணி – சுதாகர் கஸ்தூரி


புதுவருஷத்துல டைரி எழுதத் தொடங்குவது, சிகரெட்டை விட்டுவிடுவதாக உறுதி எடுப்பது, இதெல்லாம் ஏன் நிலைக்க மாட்டேனென்கிறது?”

ஐம்பத்து எட்டு வயது ஹிரேன் ஷா என்ற நண்பர் வியந்தபோது, சற்றே இரக்கமாகவும் இருந்தது. அவரும் பல வருடங்களாக சிகரெட்டை விடுவதற்கு முயற்சிக்கிறார். ஒரு பை பாஸ், ஆஸ்த்மா இருமல் எனப் பலதும் இருக்கையில், ஆபத்து எனத்தெரிந்தும் தன்னால் ஏன் விட முடியவில்லை என்ற கேள்வி கோபமாகவும் இயலாமையாகவும் மாறுவதைப் புரிந்துகொள்ள முடிந்தது
.
புதிய நல்ல பழக்கங்களையும் ஏன் தொடர்ந்து செய்ய முடிவதில்லை?’ என்ற கேள்வியும் கூடவே கேட்டுக்கொண்டேன். இப்போதெல்லாம். காலையில் எழுந்து வேலைகளைப் பார்ப்பது என்பது சிலரால் மட்டுமே முடிகிறது, இது தேவையா இல்லையா என்பதல்ல கேள்வி. ஏன் முடியவில்லை என்பதுதான். பழக்கங்கள் எதற்காக நிற்கின்றன? பழக்கங்களின் பின்னே நிற்பதென்ன?

ஸ்டீபன் கோவே ‘7 Habits of Effective People’ என்ற பிரபல புத்தகத்தில், 7 பழக்கங்களையே முன் வைத்தார். வெற்றி என்பது ஒரு நாள் வேலை செய்து கிடைக்கும் செப்படி வித்தையல்ல. அதற்கான அடிப்படைப் பழக்கங்கள். அவை நம்மில் ஊறியிருக்க வேண்டுமென்பதைப் புத்தகத்தில் பல இடங்களில் வலியுறுத்துகிறார். எதைக் கொண்டுவரவேண்டும் என்பதைச் சொன்னாரே தவிர, எப்படி என்று சொல்லவில்லை. அது ஒவ்வொருவரின் மன ஆளுமையைப் பொருத்தது. அதுவே அப்புத்தகத்தின் பெரும் வெற்றி. புரியாத பலருக்குப் பயனளிக்காத தோல்வி.

அடிப்படையில் வெற்றியென்பது சில பழக்கங்களின் விளைவு என்றே கோவே கருதினார். இதனை ப்ரையன் ட்ரேஸி, மால்கம் க்ளாட்வெல், டேனியல் கோல்மேன் போன்றோரின் புத்தகங்களிலும் இழையோடுவதைப் பார்க்கலாம். இதனை நம்முன்னோர்கள் வாழ்வியல் நெறிகளில் உட்புகுத்தினார்கள். நாலடியார், திருக்குறள் என்று நீளும் பதினென்கீழ்க்கணக்கு இலக்கியத்தில் பழக்கங்களின் அருமை பல இடங்களில் வலியுறுத்தப்படுகிறது.

இப்பழக்கங்களின் மூலம், நமது சமூகத்தொடர்பின் புதிய கோணங்கள் சாத்தியமாவதைக் கண்கூடாகக் காணலாம். எப்படி நடந்துகொள்ளவேண்டும், பேச வேண்டும் என்பது போன்ற, நாகரிகத்தின் முக்கியக் கூறுகளை பழக்கங்கள் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கின்றன. இதனை மரபின் கடத்தலாக சமூகம் அங்கீகரித்தது. இதில் இடையூறாகப் பரிணமிக்கும் புதிய தொழில்நுட்பம் மற்றும் சிந்தனைகள், பழக்கங்கள் தலைமுறைகளைக் கடந்து செல்வதைத் தடுக்கின்றன. இங்குதான் போராட்டம் தொடங்குகிறது.

சமூக வலைத்தளங்களைக் காலையில் எழுந்தவுடன் பார்க்கும் பழக்கம் இன்று பலருக்கு இருக்கிறது. அதுவரை, காலையில் எழுந்ததும் உடல் சுத்தப்படுத்துதல், தியானம், பெரியோரை வணங்குதல், தெய்வ வழிபாடு என்றிருந்த பழக்கங்கள் சற்றே பின்தள்ளப்படுகின்றன. மொபைல் போன் படுக்கையறையில் நுழைந்தது, இடையூறாகிய தொழில்நுட்பம்.

மற்றொரு இடையூறு, எதிர்ப்புச் சிந்தனைகள். உதாரணமாக, “ஏன் காலையில் எழுந்து படிக்கணும்? எனக்கு ராத்திரி ரொம்பநேரம் முழிக்க முடியும்அப்ப படிச்சிக்கறேன்என்ற கருத்து. இதில் காலை எழும் பழக்கம் தடைப்படுகிறது.

உடல் ரீதியான பழக்கங்கள் மட்டும் ஒருவரின் வாழ்க்கையை வெற்றியடையச் செய்துவிட முடியுமா, சிகரெட் குடிக்காதவர்களுக்குப் புற்றுநோய் வராமலா இருக்கிறது அல்லது காலையிலெழுந்து படிப்பவர்களெல்லாம் வாழ்க்கையில் வெற்றியடைந்து விட்டார்களா என்ற கேள்விகள் எழலாம். இதில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால் பழக்கங்கள் என்பன ஐந்து நாள் கிரிக்கெட் போல்அது 20 ஓவர் விளையாட்டில்லை.
இதனை மிக அருமையாக விளக்கியது 1970களில் சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் நடத்தப்பட்டமார்ஷ்மல்லோ சோதனை.’ நான்கு வயதுக் குழந்தைகளுக்கு, ஒரு அறையில், வேறு கவனச் சிதறலுக்கான காரணிகள் ஏதுமின்றி, மார்ஷ்மால்லோ என்ற இனிப்பு மேசைமேல் வைக்கப்பட்டது. அவர்களுக்கு ஒரு விவரமும் கொடுக்கப்பட்டது. ‘அந்த இனிப்பை எப்போது வேண்டுமானாலும் அவர்கள் எடுத்துச் சுவைக்கலாம். பதினைந்து நிமிடம் பொறுத்தால், ஒருவர் வந்து இரண்டு இனிப்புகள் தருவார். பொறுத்திருக்க வேண்டுமானால் இருக்கலாம்.’ பல குழந்தைகள், அப்போதே இனிப்பை எடுத்துக் கொண்டுவிட்டன. சில குழந்தைகள், இனிப்பைப் பார்க்காமல் கண்களை மூடி, ஏதோ தனக்குள் பாடி, தன் கவனத்தை இனிப்பிலிருந்து புறத்தாக்கின. அவர்களில் சிலர் மட்டுமே இறுதி வரை இரண்டு இனிப்பிற்குக் காத்திருந்தனர். இனிப்பைக் குழந்தைகள் உடனே எடுத்துக்கொண்டுவிடும், அவர்களுக்கு அதிகமாக சுயக் கட்டுப்பாடு கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ஆய்வு அத்தோடு நிற்கவில்லை. முதலில் இனிப்பை எடுத்துக்கொண்ட குழந்தைகளும், இறுதி வரை உறுதியாக நின்ற குழந்தைகளும் கவனமாகப் பல பத்தாண்டுகளாகக் கவனிக்கப்பட்டனர். பொறுத்து நின்ற குழந்தைகள், பிற்காலத்தில், போதை, பதின்ம வயது கர்ப்பம், பள்ளியிலிருந்து விலகுதல் என்பதானவற்றிலிருந்து விலகி, தங்கள் துறையிலும், தனி வாழ்விலும், பொது வாழ்விலும் ஓரளவு வெற்றியை அடைந்திருந்தனர். முதலில் இனிப்பை எடுத்த குழந்தைகள் போதை போன்ற பல கவனச் சிதறல்களுக்கு ஆளாகியிருந்தனர்

இதே போல் நியூஸிலாந்திலும் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பெருமளவில் குழந்தைகளைக் கவனித்த அந்த ஆய்வு, பல பத்தாண்டுகளுக்குப் பின், மார்ஷ்மாலோ பரிசோதனையின் முடிவு போலவே தனது முடிவுகளையும் கொண்டிருந்தது.

கவனம், மன உறுதி, மனக் குவியம் போன்றவற்றை இது போன்ற ஆய்வுகள் அடிக்கோடிட்டுக் காட்டின. சிறு வயதிலேயே மன உறுதியும், தெளிவும் கொண்டவர்கள், வாழ்க்கை முழுதும் அதனைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை. “சின்ன வயசுல டாண்ணு அஞ்சு மணிக்கு எந்திச்சிருவா. இப்ப மணி எட்டாகுதுபோன்ற அங்கலாய்ப்புகள் சகஜம். சிறு வயதில் இருந்த பண்புகள் காலப்போக்கில் மாறுவதை, புறவயக் காரணிகளின் தாக்கம் என்று மட்டுமே இதுவரை கருந்தியிருந்தனர்.

ரோல்ஃப் டோப்லி என்பவர் தனது புத்தகத்தில் இது அகவயமான சிந்தனையின் விளைவின் தாக்கமும் கொண்டது என்கிறார். சிந்திக்கும் விதம் பிறழும்போது, தோல்விக்குத் தொடர்பில்லாத காரணிகளோடு தோல்வியைத் தொடர்பு செய்து பார்க்கும் தவறு சிந்தனையில் ஏற்படுவதே இதற்கு அடிப்படைக் காரணம் என்று வலியுறுத்தினார். “அவ, போன வாரம் டூர் போயிட்டு வந்தும், கணக்குல நூத்துக்கு நூறு வாங்கியிருக்கா; நான் காலேல அஞ்சு மணிக்கு எந்திச்சுப் படிச்சும் 80தான்என்ற சிந்தனை, காலையிலெழுவதை சந்தேகத்திலாக்குகிறது. பழக்கம் அறுபடுகிறது.

பழக்கங்கள் மட்டுமே வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பதில்லை. ஆனால், பழக்கங்கள் சாதகமாக இருப்பவருக்கு வேண்டியபடி முடிவினைக் கொள்வதன் நிகழ்தகவு 0.6க்கு மேல். இதன் உளவீயல்கூறுகள் பலவிதமாக இருப்பதால், ஒரு பழக்கம், பல விதங்களில் பயனடையச் செய்யும். எனவேதான் முன்னோர்கள் மரபின் வழி பழக்கங்களைச் சடங்குகளாக்கி வலுக்கட்டாயமாக முன்னிறுத்தினர். சில நாட்களில் ஒரு வேளை உணவு விடுதல், குறிப்பிட்ட உணவு வகைகளை மட்டுமே அடுத்தநாள் உட்கொள்ளுதல், தினமும் சந்தியாவந்தனத்தில் ப்ராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சி, கோயிலில் நடை என்று செல்வதில் பன்முகப் பயனுண்டு.

ஒவ்வொரு பழக்கத்திற்கும் மூன்று காரணிகள் தேவை. ஒன்று, தூண்டும் பொருள்/ நிகழ்வு, நமது எதிர்வினை, அது தரும் சாதகமான முடிவு. இனிப்பைப் பார்த்ததும், அது தரும் முடிவாகஇனிப்பான உணர்வு’, இனி வரப்போகும் மகிழ்வைக் கொண்டு, நமது எதிர்வினையைத் தூண்டுகிறது. இந்தச் சுழற்சி பலமுறை தொடர்ந்ததும், ஆக்க நிலை அனிச்சைச் செயல் நமது எதிர்வினையை, நாமறியாமலேயே நிகழ வைக்கிறது. கோயிலைத் தாண்டும்போது, கன்னத்தில் கை போவதும், மதிய உணவின் பின் தானாக எழுந்து கடை வரை போய் சிகரெட்டை வாங்குவதும் இந்த அனிச்சைச் செயலின் வகையே.

இதில் தடுக்க வேண்டியவற்றை எப்படித் தடுப்பது? நமது தேவை என்னவென்பதை முதலில் கண்டுபிடிக்கவேண்டும். சிகரெட் குடிப்பதால் எனக்கு என்ன கிடைக்கிறது என்ற கேள்விக்கான விடை, ஒரு விதமான சுக உணர்வு, ஒரு நிறைவு என்று வருமானால், அதனை வேறு எதன் மூலம் நான் பெற முடியும் என்று ஆராய வேண்டும். இது முதல்படி.

இதுவே மிகச்சிக்கலான படியும்கூட. அத்தனை தெளிவாக, ஒரு உணர்வைப் பகுத்துப் போட்டுவிட முடியாது. எனவே இரு நிலைகளாக சிந்தனையைப் பிரிக்கவேண்டும். ஒன்று உணர்ச்சி பூர்வமானது. மற்றது தருக்க பூர்வமானது. சிகரெட், இனிப்பு, நடை, அரட்டை என்பன உணர்வு பூர்வமானவை. இவற்றில் ஒன்றை, மற்றதால் மாற்ற முடியுமா? என்ற கேள்வி எழவேண்டும். சிகரெட்டை விட, அங்கு நின்றுகொண்டிருக்கும் நண்பர்களுடனான அரட்டை முக்கியம் எனத் தோன்றினால், சிகரெட் இல்லாதவர்களிடம் அரட்டை அடிக்கப் போவது நல்லது. இதனைப் பயன்பாடு என அறுதியிட்டு, நமது எதிர்வினையை மாற்றவேண்டும். புகை பிடிக்க வேண்டுமென்று நினைக்கையில், எழுந்து, நண்பர்களிடம் சென்று பேசுவது, பயன்பாட்டை மாற்றி எதிர்வினையையும் மாற்றுகிறது. அடிக்கடி செய்வதில், புகை பிடிக்கும் பழக்கம் உடைகிறது. இது சார்ல்ஸ் டுஹிக்ன் உத்தி.
இதுபோன்று புதிய பழக்கங்களை உண்டாக்க முடியும். காலையில் எழுந்து படிக்க நினைக்கும் இளைஞனின் வீட்டார், அவனது காலையெழும் முயற்சியைப் பாராட்டாமல், அவன் படித்ததைப் பாராட்ட வேண்டும். எப்போது பயன்பாடு பாராட்டப்படுகிறதோ, மூளை அதனை மீண்டும் விரும்பி, அதனை அடையும் எளிதான வழியை நோக்கும். இது பழக்கமாக உருவாகும்.

தவறான பயன்பாடு கணித்தல், தவறான எதிர்வினை என்பன பழக்கத்தைக் கொண்டு வராது. மாறாக விரக்தியே மிஞ்சும். இன்றைய இளைஞர்களுக்குப் பழக்கங்கள் வருவதற்கு, பயன்பாட்டின் ஊக்கம் தருதல், எதிர்வினையின் முயற்சிகளுக்கு ஆதரவு தருதல், கெட்ட பழக்கங்களை விடுவதற்கு அவற்றின் தூண்டுதல்களை நிராகரித்தல் போன்றவை பயிற்சிக்கபபடவேண்டும். இது ஒரு குழும அமைப்பின்மூலம் தொடங்கப்பட்டால், வெற்றியடைய சாத்தியங்கள் உண்டு.
மரபின் பல சடங்குகள் நம்மில் பழக்கங்களை எதிர்பார்க்கின்றன. காலையில் தியானம், யோகா, கோயில் செல்லுதல் போன்றவை, பழக்கங்களை முன்னிறுத்துகின்றன. மனக்குவியத்தை இப்பழக்கங்கள் வளர்ப்பதோடு, ஒரு சுய ஆளுமையை மெல்ல மெல்ல உறுதிப்படுத்துகின்றன. ஒரு நற்பழக்கத்தின் வளர்ப்பு, வாழ்க்கையில் பல இடங்களில் வெற்றியைக் கொண்டுவர முடியும். ஒரு பழக்கத்தையேனும் கைக்கொள்ள, ஒரு தீயபழக்கத்தையேனும் கைவிட முயற்சிப்பது பெரும்பயனைத் தரும். வாழ்வு மரத்தான் ஓட்டம், நூறு மீட்டர் ஓட்டமல்ல.

Reference : 7 Habits of Highly Effective People – Stephen Covey Habits – Charles DuHigg, Art of Thinking Clearly – Rolf Dobili, Focus – Daniel Goleman.

காலத்தை வென்ற கவிஞன் காளிதாசன் – பெங்களூரு ஸ்ரீகாந்த்


காலத்தை வென்ற கவிஞன் காளிதாசன்
பெங்களூரு ஸ்ரீகாந்த்
இளம்பிறை போல் வளைந்துள்ளன
மொட்டவிழாத சிவந்த பலாச மலர்கள்
வசந்தத்துடன் கூடிக் களித்த வனமகள் மேனி மீது
நகக் கீறல்களென.
தன் இணை பருகிய மலர்க்கலத்தில் எஞ்சிய தேனை
சுவைக்கிறது வண்டு.
தீண்டலின் சுகத்தில் கண்மூடிய பெண்மானைக்
கொம்புகளால் வருடுகிறது ஆண்மான்.
கமல மலரின் நறுமணம் ஊறும் நீரைக்
களிற்றுக்குத் துதிக்கையால் ஊட்டுகிறது பிடி.
தாமரைக் குருத்தை நீட்டித்
தன்னவளை உபசரிக்கிறது சக்ரவாகம்.
பெருமரங்களின் திரண்ட கிளைகளைத்
தழுவுகின்றன
செறிந்த மலர்முலைக் கொத்துக்களும்
அசையும் தளிர் இதழ்களும் கொண்ட
பூங்கொடிகள்.
புஷ்பமதுவால் சுழலும் கண்களுடன்
வியர்வை துளிர்க்கப் பாடுகிறாள் அவள்.
பாட்டுகளுக்கு நடுவில் அவள் முகத்தை முத்தமிடுகிறான்
கிம்புருஷன்.
மாந்தளிரின் சுவையூறும் குரலில்
இனிதாகக் கூவுகிறது ஆண்குயில்
முகம் திருப்பிச் செல்லும் இவளது தற்செருக்கை உடைக்கும்
மன்மதனின் வசந்தகால ஆணை என.

(காளிதாசனின் குமாரசம்பவத்திலிருந்து, மொழியாக்கம்: ஜடாயு)

காவியம் எதற்கு? காவியத்தைப் படைப்பதனாலோ படிப்பதனாலோ என்ன பயன்? இந்தக் கேள்விக்கு பழைய கவிஞர் ஒருவர் இவ்வாறு பதில் சொல்கிறார்.

காவ்யம்ʼ யச²ஸே அர்த்த²க்ருʼதே வ்யவஹாரவிதே³ சி²வேதர க்ஷதயே |
ஸத்³ய: பரநிவ்ருʼதயே காந்தாஸம்ʼமிததயா உபதே³ச²யுஜே ||

“காவியம் இயற்றுவதிலும் வாசிப்பதிலும் ஆறு நன்மைகள் உண்டு. புகழ் கிடைக்கும். செல்வம் சேரும். நடைமுறையில் எண்ணங்களை வலுவாக வெளிப்படுத்த இயலும். மங்கலம் உண்டாகும். அமங்கலம் விலகும். கவிதை இன்பத்தை அனுபவித்து மனமகிழ்வு அடையலாம். விடை தெரியாத சிக்கல் ஏற்படும்போது, உற்ற மனைவி சொல் போன்ற நல்லுரையைக் காவியத்திலிருந்து பெறலாம்” என்கிறார் கவிஞர். அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்று வாழ்க்கையில் அடையவேண்டியவையாக உள்ள நான்கிலும் உன்னதத்தை எடுத்துக் காட்டும் காவியங்களுக்கு நமது வரலாற்றில் குறைவில்லை. அவற்றில் முதன்மையானவை காளிதாசனின் காவியங்கள்.

புரா கவீநாம்ʼ க³ணநா ப்ரஸங்கே³ கநிஷ்டிகாதி⁴ஷ்டித காளிதா³ஸ: |
அத்³யாபி தத்துல்ய கவேரபா⁴வாத் அநாமிகா ஸார்த²வதீ ப³பூ⁴வ ||

“முன்பொருமுறை கவிஞர்களை வரிசைப்படுத்த எண்ணி, சுண்டு விரலை நீட்டி காளிதாசன் என்ற பிறகு, அவனுக்கு இணையாக அடுத்து யாரைச் சொல்வது என்று பார்த்தால், யாருமே கிடைக்கவில்லை. அதனால் மோதிரவிரல் அநாமிகா (பெயரற்றது) என்று பெயர் பெற்றது.”

சம்ஸ்கிருதத்தில் மோதிர விரலுக்கு அநாமிகா என்று பெயர். அதை வைத்து சாமர்த்தியமாக புனையப் பட்ட கவிதை இது.

“ஓ இணையற்ற கவியே
அன்றொரு ஆடிமாதத்தின் அற்புத நாளில்
எப்போதென்று தெரியாத ஒரு வருடத்தில்
நீ மேகதூதம் எழுதினாய்
உன் கவிதை வரிகள் ஒவ்வொன்றுமே
கருமை பூசிய ஆழ்ந்த ஒலியுடைய மேகம் போல
பிரிய நேர்ந்த காதலரின் தாபங்களை
இடியோசையாய் எடுத்துரைக்கும்”

– காளிதாசனைக் குறித்து ரவீந்திரநாதத் தாகூர்

நம் காலத்துக்கு வெகு அருகில் வாழ்ந்து மறைந்த தாகூர் மட்டுமல்ல, நமது வரலாற்றில் புகழ் பெற்ற கவிஞர்கள் அனைவரிடமுமே காளிதாசனின் பாதிப்பு உண்டு. அதனால் தான் கவி குல குரு என்றே சம்ஸ்கிருத மரபில் அவனை அழைக்கிறார்கள்.

இவ்வளவு பெருமை உள்ள கவியரசன் தன்னை எப்படி கருதிக் கொள்கிறான் தெரியுமா?

மந்த³: கவியஶ:ப்ரார்தீ² க³மிஷ்யாம்யுபஹாஸ்யதாம்|
ப்ராம்ʼஶுலப்⁴யே ப²லே லோபா⁴து³த்³ப³ஹுரிவ வாமன:||

“கவிஞர்களுக்கே உரிய பெருமையை விரும்பி மந்தனான நானும், எட்டாத பழத்துக்கு ஆசைப்பட்டு துள்ளித் துள்ளிக் குதித்து ஏமாந்து நகைப்புக் கிடமாகும் குள்ளனின் நிலையை அடைவேனோ” என்கிறான்.


உவமை என்றால் காளிதாசனின் உவமைகளே (உபமா காளிதாசஸ்ய) என்றொரு வழக்கு உண்டு. எத்தனை கோணத்திலிருந்து ஒப்பு நோக்கினாலும் பொருந்தக் கூடிய உவமைகள் அவை.

ரகுவம்சத்தின் முதல் கவிதை:

வாக³ர்தா²விவ ஸம்ப்ருக்தௌ வாக³ர்த²ப்ரதிபத்தயே |
ஜக³த: பிதரௌ வந்தே³ பார்வதீபரமேஶ்வரௌ ||

சொல்லும் பொருளும் என இணைந்த
தொல்லுலகின் தாய்தந்தையரை,
பார்வதி பரமேஸ்வரரை,
சொல்லையும் பொருளையும் அறிந்திடவேண்டிப்
பணிகிறேன்.

எத்தனை அழகிய, ஆழமான உவமை! பார்வதி பரமேஸ்வர தம்பதியர் இருவர் மீதும் கவிஞருக்கு இணைபிரியாத, பேதமற்ற பக்தி உண்டு என்பது இப்பாடலில் வெளிப்படுகிறது. காளிதாசன் என்ற பெயருக்கு காளியின் தாசன் என்று பொதுவாக அர்த்தம் சொல்வர். காலிந் என்றால் காலனை வென்றவன், சிவன் என்றும் பொருள். எனவே சிவபெருமானுக்கு தாசன் என்று இன்னொரு அர்த்தமும் உண்டு.
காளிதாசனின் கவித்திறன் சம்ஸ்க்ருதம் என்ற மொழிக்குள் அடைபட்டதன்று. ஏனெனில் அவனது கவிதைகளின் விழுப்பொருள் நமது பாரதப் பண்பாட்டில் ஊன்றித் திளைத்த ஒன்றாகவே இருக்கும். மறைந்த சம்ஸ்க்ருத மேதை டாக்டர் V. ராகவன் கூறுகிறார் – “Kalidasa represents the quintessence of Indian culture and heritage; and whether it is a native who wants to partake of it or an outsider who seeks an authentic message of it, to both of them Kalidasa is most satisfactory and at the same time the most attractive exponent of it”. தமிழ் உட்பட எல்லா பாரத மொழிகளிலும் அவனுக்குப் பின்வந்த கவிஞர்களிடம் காளிதாசனின் தாக்கம் காணக் கிடைக்கிறது என்று இந்திய இலக்கிய அறிஞர்கள் கருதுகிறார்கள்.

உதாரணமாக குமாரசம்பவத்தில் ஒரு கவிதை:

ஸ்தி²தா: க்ஷணம்ʼ பக்ஷ்மஸு தாடி³தாத⁴ரா:
பயோத⁴ரோத்ஸேத⁴நிபாதசூர்ணிதா:
வலீஷு தஸ்யா: ஸ்க²லிதா: ப்ரபேதி³ரே
சிரேண நாபி⁴ம்ʼ ப்ரத²மோத³பி³ந்த³வ:

“மழையின் முதல் துளிகள் அவளின் கண் இமைகளில் சிறிது தங்கின.பின் அவள் மார்பகங்களில் சிதறின. இறங்கி அவள் வயிற்று சதைமடிப்பு வரிகளில் தயங்கின. வெகுநேரத்திற்குப் பின் அவள் நாபிச் சுழியில் கலந்தன.”
கம்பராமாயணத்திலும் இதே உவமையைக் காணலாம்.

திடருடைக் குங்குமச் சேறும், சாந்தமும்
இடை இடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன;
மிடை முலைக் குவடு ஓரீஇ, மேகலைத் தடங்
கடலிடைப் புகுந்த, கண் கலுழி ஆறு அரோ

(அயோத்தியா காண்டம், நகர்நீங்குபடலம்)

“கண்களினின்று புறப்பட்ட கண்ணீர் ஆறு மிகுதியான குங்குமக் குழம்பையும் சிவந்த சாந்தினையும் நடுநடுவே சேறாகப் பொருந்தப் பெற்று மாதரின் முத்து மாலைகளை இழுத்தது. நெருங்கிய தனங்களில் விழுந்து நீங்கி மேகலை அணிந்த இடையில் சென்று சேர்ந்தது.”
காளிதாசனுக்கு முன்பு மேகதூதம் போல காதல் தூது என்பதைக் கொண்ட காவியங்கள் வடமொழியில் இல்லை. ஆனால் தமிழில் சங்க இலக்கியங்களில் தூது விடும் பாடல்கள் உண்டு. ஒருவேளை காளிதாசனும் தமிழ் இலக்கியம் குறித்து அறிந்து அதிலிருந்து உந்துதல் பெற்றிருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. ரகுவம்சத்தில் பல இடங்களில் பாண்டியர்கள் பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது. அதிலொன்று இது –

தி³ஸி² மந்தா³யதே தேஜோ த³க்ஷிணஸ்யாம்ʼ ரவேரபி |
தஸ்யாம்ʼ ஏவ ரகோ⁴: பாண்ட்³யா: ப்ரதாபம்ʼ ந விஷேஹிரே | |

தக்ஷிணாயன காலம். சூரியன் தெற்கு திசையில் வருகிறான். அப்போது சூரிய ஒளி மங்கியதாக இருக்கிறது. இதற்கு, சூரியன் பாண்டியர்க்கு அஞ்சி ஒளி குன்றியதாக கூறுகிறார். அவ்வளவு வீரம் செறிந்த பாண்டியர்களும் மாமன்னன் ரகுவுக்குப் பணிந்தனராம்.

காளிதாசனின் காவியங்களையும் தமிழ் இலக்கிய நூல்களையும் ஒப்பீடு செய்யும் ஆராய்ச்சி எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. தமிழ்மொழி, வடமொழி இரண்டிலும் வல்லவர்களே அத்தகைய ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட முடியும். அத்தகைய ஆய்வு மேற்கொள்ளப் பட்டால் அது பல புதிய செய்திகளை வெளிக்கொணரும் என்பதில் ஐயமில்லை.

கவிஞர்கள் தாம் மதிக்கும் விரும்பி ரசிக்கும் முன்னோடிகளின் கருத்துக்களையும் வாசகங்களையும் தாமும் எடுத்தாண்டு அவர்களுக்கு மரியாதை செய்வது வழக்கம் தான். ஒரு சுவாரசியமான உவமையின் வாயிலாக இதைக் காளிதாசன் கூறுகிறான்.

அத² வா க்ருʼதவாக்³த்³வாரே வம்ʼஶே(அ)ஸ்மின்பூர்வஸூரிபி⁴: |
மணௌ வஜ்ரஸமுத்கீர்ணே ஸூத்ரஸ்யேவாஸ்தி மே க³தி: ||

ஆயினும், முன்னிருந்த புலவோர் செய்த
சொல்லெனும் துளையில் என் மொழி செல்லும்,
ரத்தினத்தை ஊடுருவி வைரம் இட்ட துளை வழியே
நூல் செல்வது போல்.

அதாவது, ரகுவம்சத்தில் ஒவ்வொரு அரசனின் வரலாறும் இணையற்ற இரத்தினமாக இருக்கிறது. என் முன்னிருந்த வால்மீகி போன்ற பெரியோர் அந்த இரத்தினங்களுக்கு அவர்களது வைரம் போன்ற படைப்புகளால், துளையிட்டு உள் நுழைந்து வெளிவந்தனர். அத்தகைய துளைகளுக்குள் நுழைந்து வெளிவந்து அவற்றை இணைக்கும் சரடு போன்றது தான் என் முயற்சி. பத்தொன்பது அத்தியாயங்களுடன், ஆயிரக்கணக்கான அழகழகான கவிதைகளுடன் ஒரு மகா காவியத்தைப் படைத்த கவியிடம் எத்தனை அடக்கம்!

ரகுவம்சத்தில் இந்துமதியின் சுயம்வரக் காட்சி. சுயவரத்துக்கு பல தேசத்து அரசர்களும் வந்து அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் இந்துமதியின் அழகில் மயங்கி அவளை தன்னை நோக்கி ஏற்பதற்காக சில சைகைகளைச் செய்து கவனத்தை ஈர்க்கின்றனர். அப்போது இளவரசி ஒவ்வொருவராகப் பார்வை இடுகிறாள்.

ஸஞ்சாரிணீ தீ³பஶிகே²வ ராத்ரௌ யம்ʼ யம்ʼ வ்யதீயாய பதிம்ʼவரா ஸா |
நரேந்த்³ரமார்கா³ட்ட இவ ப்ரபேதே³ விவர்ணபா⁴வம்ʼ ஸ ஸ பூ⁴மிபால: ||

இந்துமதி ஒவ்வொரு அரசனையும் நெருங்கும்போது மகிழும் அவ்வரசன் அவள் அடுத்து நகர்ந்து விட, நமக்கு மாலையிடவில்லையே என்று வருந்தி களையிழந்து போகிறான். இக்காட்சி, இருபுறமும் அழகழகான மாளிகைகள் கொண்ட ராஜவீதியில் தீபம் ஒன்று எடுத்துச் செல்லப் படும்போது, ஒவ்வொரு மாளிகையும் பிரகாசம் அடைந்து, அந்த தீபம் நகர்ந்தபின் இருளடைவதைப் போல இருந்ததாம். இந்துமதியை தீபச்சுடராகவும், வந்திருக்கும் அரசர்களை அவள் வாசம் செய்யப்போகும் மாளிகையாகவும் ஒப்பிட்டது சிறந்த உவமையாக ரசிக்கப் படுகிறது.

இந்துமதி சுயம்வரத்தில் ரகுவின் புதல்வனான அஜனைத் தேர்ந்தெடுத்து மணம் புரிகிறாள். சிலகாலம் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து தசரதனை மகனாகப் பெற்றெடுக்கிறார்கள். பின்பு ஒரு நாள் திடீரென்று இந்துமதி இறந்து விடுகிறாள். அந்த சந்தர்ப்பத்தில் வரும் கவிதைகள் தன் அன்புத் துணையை இழந்த காதலனின் ஆழ்ந்த சோகத்தை வெளிப்படுத்துவதில் இணையற்றவையாகக் கருதப் படுகின்றன.

“அந்த ஒப்பற்ற ஒற்றைத் தாமரை இரவில் கூம்புகிறது. உள்ளே வண்டுகளின் ஒலி நின்று விட்டது. கலைந்த கூந்தலோடு, பேச்சடங்கிய உன் முகம்!

நீ எனக்கு மனைவியாக, மந்திரியாக இருந்தாய். தனிமையில் துணையாகவும், கலைகளைக் கற்கையில் அன்பான மாணவியாகவும் இருந்தாய். கருணையற்ற யமன் எனது எப்பொருளைத் தான் அபகரிக்கவில்லை?..

நான் வாய்வழி தரும் இனிய மதுவையே பருகி மயக்கும் விழியாளே, என் கண்ணீரும் கலந்து நான் கைகளால் தரும் தர்ப்பண நீரை மறுவுலகில் எப்படிப் பருகுவாய்?”

(ஜடாயுவின் மொழியாக்கத்திலிருந்து)

காளிதாசனின் பெண் பாத்திரங்கள் வலிமையாகவே படைக்கப்பட்டுள்ளன. கல்வியில், அழகில், நிர்வாகத் திறனில் எதிலும் அபலைகளாக அப்பெண்கள் இல்லை. குறிப்பாக மாளவிகாக்னிமித்ரம் என்ற நாடகத்தில், கௌசிகியின் பாத்திரம். அவள் கணவனற்றவள், சகோதரனையும் பறிகொடுக்கிறாள், ஆனால் அறிவிற் சிறந்தவளான அவள் மனம் தளரவில்லை. எல்லாக் கலைகளிலும் கல்வியிலும் சிறந்தவளான அவள் தான் அரசவையில் முக்கிய இடம் பிடிக்கிறாள். கௌசிகியின் பாத்திர அறிமுகம் இவ்வாறு அமைகிறது:

மங்க³லாலங்க்ருʼதா பா⁴தி கௌசி²க்யா யதிவேஷயா |
த்ரயீ விக்³ரஹவத்யேவ ஸமமத்⁴யாத்மவித்யயா || 13||

“அழகிய ஆபரணங்களுடன் அரசியும் பின் தொடர்ந்து சந்நியாசினியான கௌசிகியும் வருவது, வேதத்தைத் தொடர்ந்து உபநிஷதம் வருவதைப் போன்று இருந்தது.”

காளிதாசனின் காலத்தில் ஆண்களுக்குச் சமமாகப் பெண்களும் அரசில் பங்கு பெற்றார்கள், துறவும் பூண்டார்கள், விரும்பியதை அடைவதில் பாகுபாடு, வேறுபாடுகள் இல்லை. நடைமுறைக் கல்வியும், ஆன்மீகக் கல்வியும் பெண்களுக்குத் தடை செய்யப் படவில்லை என்பதே இங்கு நமக்குக் கிடைக்கும் சித்திரம். இன்னொரு குறிப்பிடத் தக்க அம்சம், எந்தப் பெண்ணுக்கும் ஜாதி, வர்ண வேறுபாடுகள் ஏற்றத்தாழ்வுகள் காளிதாசனின் காவியங்களில் கூறப்படவில்லை. இளவரசியான மாளவிகா, பணிப்பெண்ணாகவும் இருக்கிறாள். அதனை அவள் கீழ்மையாகக் கருதவில்லை. சகுந்தலா துஷ்யந்தனின் அவையில், இன்னொரு பெண்ணால் தூஷிக்கப்படுவதை எதிர்த்து சுயமரியாதையுடன் வாதிடுகிறாள். காளிதாசன் நமக்குக் காட்டும் பெண் பாத்திரங்கள், நமது இன்றைய பல முன்முடிவுகளைத் தகர்ப்பதாகவே அமைந்துள்ளன.

**********
காளிதாசன் உஜ்ஜைனி பட்டணத்தில் விக்கிரமாதித்தன் அவையில் வீற்றிருந்தான் அல்லது தாரா நகரத்தில் போஜராஜன் அவையில் இருந்தான் என்பன போன்ற கதைகள் பல உண்டு. காளிதாசன் எந்த அரசனின் காலத்தில் இருந்தான் என்பது யாருக்கும் தீர்மானமாகத் தெரியாது. அகச்சான்றுகளும் இல்லை. எப்படியாயினும் அவன் மன்னரைப் பாடிப் பரிசு பெரும் கூட்டத்தைச் சேர்ந்த புலவனல்ல.

அவன் வாழ்ந்த காலம் பாரதத்தின் பொற்காலமாக இருந்திருக்க வேண்டும். அப்போது பாரதப் பண்பாடு செல்வ வளத்தில் மிகுந்திருந்தாலும் துறவறத்தையும் உயர்வாக எண்ணிக் கொண்டாடியது. ஆடம்பரத்தையும், செல்வச் செழிப்பையும் மட்டுமே பெரிதாக எண்ணி அதனைத் தேடி ஓயாமல் ஓடுவதை நம் பண்பாடு ஊக்குவிக்கவில்லை. காளிதாசனின் கவிதைகளில் இத்தகைய விழுமியங்களைத் தொடர்ச்சியாகக் காணலாம்.

சாகுந்தலத்தில் துஷ்யந்தனின் ராஜ போக வாழ்க்கையை விட கானகத்தில் முனிவர்கள் வாழும் சூழலும் அதன் அழகுமே அதிகம் இடம் பிடிக்கிறது. குமார சம்பவமும் காடு, இயற்கை சூழ்நிலையில் நிகழ்வதே. ரிது சம்ஹாரம் இயற்கையைக் கொண்டாடுவதே. ரகுவம்சத்தில் தேவருலகம் வரை ரதத்தில் சென்று வரக்கூடிய அரசனாக இருந்தும், திலீபன் காட்டில் முனிவரின் குடிலில் உள்ள காமதேனுவுக்கு பணிவிடை செய்ய நேரிடுகிறது. ராமனின் வரலாறும் அரச போகம் துறந்து காட்டில் வாழ்வதில் தான் பெரும்பகுதி செல்கிறது. எத்தனையோ மகாராஜர்கள் பராக்கிரமசாலிகள் பேசப் படும்போதெல்லாம், தவ வலிமையும் எளிமையும் உள்ள முனிவர்களும் முன்னிறுத்தப் படுகிறார்கள். இத்தகைய சூழ்நிலைகள் திரும்ப திரும்ப வருவதன் பின்னால் உள்ள சிந்தனை கவனத்திற்குரியது.

காளிதாசன் வானவில்லின் ஏழு வண்ணங்களைப் போல் ஏழு சிறந்த படைப்புகளை நமக்கு படைத்து அளித்திருக்கிறான். மூன்று நாடகங்கள், இரண்டு சிறு காவியங்கள், இரண்டு பெருங்காப்பியங்கள். அவனது கவிதை அத்தனை எளிமையானது, புரிந்து கொள்ளக் கூடியது. அதே சமயம் ஆழ்ந்த பொருள் உள்ளது.

பத³வீம்ʼ காளிதா³ஸஸ்ய லலிதாம்ʼ ம்ருʼது³லை: பதை³: |
ந ச²க்னுவந்த்யஹோ! க³ந்தும்ʼ பச்²யந்தொ(அ)பி கவீச்²வரா: ||

“கண்ணெதிரே காளிதாசன் கடந்து சென்ற பாதை வெகு எளிதாகத் தெரிந்தும் அஹோ! கவியரசர்களால் அப்பதம் அடைய முடியாமல் இருக்கிறதே.”

இதில் ‘பதம்’ என்பது காலடி, உயர்ந்த நிலை (பதவி), சொல் ஆகிய மூன்று அர்த்தங்களையும் தரும். காளிதாசனின் பதத்தை அடைவது மிகவும் அரிது என்று கவிஞர் கூறுகிறார். இந்தக் கூற்று முற்றிலும் உண்மையானது.

பயங்கரவாதத்தை எதிர்க்கத் தயாராகும் கார்ப்பரேட் நிறுவனங்கள் – ஜெயராமன் ரகுநாதன்

மேஜர் சந்தீப் நாராயணனையும் இன்னும் பல உயிர்களையும் இழந்து, இந்தியாவையே ஒன்றிரண்டு நாட்களுக்கு டென்ஷனில் உட்கார வைத்த 26/11ல் நடந்த பயங்கரம், இந்த நவம்பரில் ஒன்பதாவது வருட சோக நினைவாகப் போகிறது. என்னதான் கடுமையான சோதனைகள் வைத்தாலும் தன் உயிரை மாய்த்துக்கொள்ளத் தயங்காத பைத்தியக்காரத் தீவிரவாதியை எப்படித் தடுக்க முடியும். செப்டம்பர் பதினொன்று சோகத்தைக் கண்ட அமெரிக்கா பல ஆயிரம் பில்லியன் டாலர்கள் செலவழித்துக் கடும் சோதனைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இருந்தும் தீவிரவாதத்தின் அரக்கக்கைகள் எங்கு எப்போது நீண்டு அப்பாவி உயிர்களைக் கொல்லுமோ என்னும் பயம் அடிநாதமாக ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில்தான் மான்செஸ்டரில் குண்டு வெடித்து 19 பேரைக் கொன்று தன்னையும் அழித்துக்கொண்டான் ஒரு தீவிரவாதி.இந்த இழப்பில் நாம் கற்ற பல பாடங்களில் ஒன்று, முழுக்க முழுக்க அரசையும் காவல்துறையையும் மட்டுமே நம்பி இனி இந்த உலகத்தில் வாழ்வது போதாது. ஒவ்வொரு தனி மனிதரும் சரி, நிறுவனமும் சரி, ஆரம்பகட்டத்திலாவது தம்மைத்தாமே காத்துக்கொள்ள, பல முயற்சிகள் எடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. அமெரிக்காவில் பல ஊர்களில் ஒவ்வொரு இடம் சார்ந்த மக்கள் குழுக்களாகப் பிரிந்து தத்தம் ஏரியாவுக்குள் கண்காணிப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ள ஆரம்பித்துவிட்டனர். ஒரு தாக்குதல் நடந்தால் போலீஸும் கமாண்டோக்களும் வருவதற்குள் என்னென்ன முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பது பற்றிய பயிற்சி கொடுக்கப்படுகிறது.

என்ன ராமசாமி! உம்ம தெருவுல நேத்து புதுசா ஒரு ஆள் நடமாட்டமாமே?”

அதொண்ணுமில்லீங்க! என் மச்சான்தான், கானாடுகாத்தான்லேர்ந்து வந்திருக்கான்.”

ஓ உன் மச்சான்தானா! சரி சரி. நா வர்ரேன். வயலுக்கு போவணும்.”

பழங்காலக் கிராமங்களின் சூதானம் இப்போது விஞ்ஞானபூர்வமாகச் செயல்படுத்தப்பட வேண்டிய அவசியம். நம் சுற்றுப்புறத்தில் நடக்கும் விஷயங்களைக் கவனித்து, செய்திகள் பரிமாறி, அனாவசிய ரகசியங்களுக்கு இடம் கொடாமல் பாதுகாத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.

26/11 நடந்தபோதுதான் நம் பாதுகாப்பு எவ்வளவு பலவீனமாக இருந்திருக்கிறது என்று புரிந்தது. பயங்கரவாத எதிர்ப்புத் தயார் நிலை என்பது நம் ராணுவத்தில் மேலானதாக இருந்தபோதும் பதான்கோட்டில் ராணுவ வளாகத்துக்குள்ளேயே நுழைந்திருக்கிறார்கள். அப்படி இருக்க நகரங்களில், அதுவும் அதிக நடமாட்டம் இருக்கும் இடங்களில், பாதுகாப்பு ஓரளவுக்குத்தான் இருக்க முடியும். இன்னொரு 26/11ஐ நம்மால் தாங்க முடியுமா? தாஜ் மஹால் ஹோட்டலைப் போன்ற இன்னொரு நிறுவனச் சேதமும் உயிர் இழப்பும் கடுமையானதாக இருக்கும். அதனாலேயே பல முன்னணி நிறுவனங்கள் தங்களுக்கான பாதுகாப்பை ஓரளவுக்குத் தாமே கவனித்துக்கொள்ள முடிவு செய்து அதைச் செயல்படுத்தியும் வருகின்றன. உலகம் முழுவதிலும் புதிது புதிதாகச் சித்தாந்தங்கள் உருவாகி ஒவ்வொரு சித்தாந்தத்துக்கும் ஒரு பயங்கரவாதம் முன்னணியாகும் அவலம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தப் பயங்கரவாதிகளின் கையில் தொழில்நுட்பம் சிக்கி சேதங்களுக்குத் துணைபோகும் அபாயமும் அதிகரிக்க, இந்தப் பயங்கரத்தைக் கட்டுப்படுத்த வேண்டியவர்கள், இன்னும் இன்னுமே அதிக கவனத்துடனும், திட்டமிடுதலுடனும் அதீதத் தொழில்நுட்பங்களுடன் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இன்றைய இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் சுயப்பாதுகாப்பே முதல் வரிசைப் பாதுகாப்பு என்பதை உணர்ந்து அதைச் செயல்படுத்தவும் தொடங்கிவிட்டன.

மாபெரும் இணைய வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டின் பாதுகாப்புத்துறை இயக்குநர் தனது பணியாளர்களில் பலரைப் பயங்கரவாத எதிர்ப்புச் சிறப்புச்சான்றிதழ் பயிற்சிக்கு (Certified Anti Terror Specialists Training Programme – CATS) அனுப்பித் தயார்ப்படுத்தியிருக்கிறார். இந்தத் தயார்ப்படுத்துதல் மிக முக்கியமும் அவசியமானதும் என்கின்றார்கள் விற்பன்னர்கள். இந்த பயிற்சிக்குப் பிறகு தீவிரவாதச் செயல்களை முன்னெச்செரிக்கையாகத் தடுக்கும் விதமும் அது பற்றிய முன்னேற்பாடான சிந்தனைகளும் அதிகரித்திருக்கின்றன என்கிறார் இன்னொரு பாதுகாப்பு எக்ஸ்பர்ட் மேஜர் ராஹுல் சூதன். ஃப்ளிப்கார்ட் தவிர, ரிசர்வ் பேங்க், ரிலயன்ஸ், தாமஸ் குக், பாரத் பெட்ரோலியம் போன்ற மேலும் பல பெரும் நிறுவனங்களும் இந்தப் பயிற்சியைத் தம் பணியாளர்களுக்கு வழங்க ஆரம்பித்துவிட்டன.

காப்டன் முகேஷ் செயினி என்னும் காட்ரெஜின் பாதுகாப்புத் தலைவர் தாமே இந்தச் சான்றிதழ்ப் பயிற்சியை எடுத்துக்கொண்டிருக்கிறார்.

ஒரு தீவிரவாதச் செயலை நம்மால் முழுவதும் தடுத்துவிட முடியாது. ஆனால் இந்த பயிற்சிக்குப் பிறகு அவனைக் கூடுமானவரைச் செயலிழக்கச் செய்ய முடியும். எங்களுடைய உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்க முடியும். இதில் மனவியலே உடலியலை விட முக்கியம்என்கிறார் செயினி.

அமெரிக்காவின் 9/11, இந்தியாவின் 26/11க்குப்பிறகு ஒவ்வொரு நிறுவனமும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதன் அடிப்படைகளைத் தெரிந்துகொண்டேயாக வேண்டும். அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத் தாக்குதலின்போது அதன் தீவிரத்திலும் நம்பமுடியாத அதிர்ச்சியிலும், அரசாலும் பாதுகாப்பு விற்பன்னர்களாலும் உடனடியாகச் செயல் படமுடியவில்லை. இப்படியெல்லாம் கூடத் தாக்குதல் வருமா என்னும் அதிர்ச்சியே மேலோங்கி ஸ்தம்பிக்க வைத்தது. இந்தியாவிலும் நவம்பர் 26 தாக்குதலின்போது தீவிரவாதிகளின் துணிச்சல் அதிர்ச்சி அடையவைத்துவிட்டது. இனி இது போன்ற தாக்குதல்களை முன்பே கண்டுபிடிப்பதும் அந்தத் தாக்குதல்களின் தீவிரத்தை ஒடுக்க முனைவதும் மிக முக்கியம்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் தீவிரவாதம் என்பதன் இன்னொரு பரிமாணத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்தப்பரிமாணம் Cyber attack என்னும் இணைய ஊடுருவல் மற்றும் தகவல் திருட்டு அல்லது அழிப்பு. ஆகவே பயிற்சி என்பது இம்மாதிரியான இணையத்தாக்குதலையும் சமாளித்து வெற்றிகொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும்.

ஒரு நிறுவனம் தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகுமானால் முதலில் அதை எதிர்கொள்வது அந்த நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள்தான். எனவே அவர்கள் புதுமையாகச் சிந்தித்து, தீவிரவாதிகளைவிட ஒருபடி மேலாகச் செயல்பட்டேயாக வேண்டும். இல்லையென்றால் உயிர் இழப்பும் அழிவும் தவிர்க்க முடியாததாகிவிடும்.

தொழில்நுட்பம் வளர வளர, அது நல்ல வளர்ச்சியை மட்டும் கொண்டு வருவதில்லை. வர்த்தகத்தில் Drone என்னும் தானியங்கிகள் எவ்வளவோ உதவியாக இருந்தாலும் அவை தீவிரவாதிகளுக்கும் வரமாகவே இருக்கின்றன. நிறுவனங்கள் இந்த மாதிரியான தாக்குதலுக்கு எதிராக முன்னேற்பாடாக இருக்க வேண்டும்.

நான் மேலே சொன்ன CATS பயிற்சி மிகப் பயனுள்ளது எனப் பல நிறுவனங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இந்த CATS பயிற்சியில் சில முக்கியமான விஷயங்கள் சொல்லித் தரப்படுகின்றன.

     ஒரு அவசர நிகழ்வில் எப்படி உடனடியாக செயல்படுவது
     உயிர்களையும் சொத்துக்களையும் நெருங்காமல் தீவிரவாதிகளை எப்படி கால தாமதம் செய்வது
     நேரம் கடத்தி பாதுகப்பை இறுக்குவது
     உடனடியாக உதவி கேட்பது
     முதலுதவி மற்றும்
     மனிதர்களைப் பாதுகாப்பாக எப்படி அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்துவது

சிங்கப்பூரின் Chartered International Institute of Security and Crisis Management என்னும் சர்வதேச நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றிருக்கும் இந்தப் பயிற்சியை முடித்த சிலர், தங்களின் தன்னம்பிக்கையும் தீவிரவாதத் தாக்குதலை எதிர்கொள்ளத் தேவையான துணிவும் அதிகரித்திருப்பதாகச் சொல்லியிருக்கின்றனர். புதிதாக முளைத்துள்ள தாக்குதல் முறைகள், தொழில்நுட்பங்கள் மற்றும் Best Practices என்னும்சிறந்த செயல்பாடுகள்போன்றவை கற்பிக்கப்பட்டு, முந்தையத் தாக்குதல்களையும் அதனை எதிர்கொண்ட செயல்பாடுகளின் நல்ல மற்றும் தோல்வியடைந்த செயல்பாடுகளையும் அலசி ஆராய்ந்து, எதிர்கால முன்னேற்பாட்டைப் பலப்படுத்தும் வழி முறைகளும் விவாதிக்கப்படுகின்றன. ஒரு தாக்குதல் தொடங்கிவிட்டால் அதை உடனடியாக எப்படி எதிர்கொள்வது, சந்தேகத்துக்குரிய பேர்வழியை எப்படித் துப்புத்துலக்குவது, ஒருவருடைய பின்புலத்தை எப்படி அலசுவது பற்றியும் இணையத் தாக்குதலின் பல்வேறு பரிமாணங்கள் பற்றியும் பாடங்கள் எடுக்கப்படுகின்றன. ஒருவரைப் பற்றிய Profiling என்னும் விவரமிடுதல் இயலும் விலாவரியாகச் சொல்லித்தரப்படுகிறது.

ஆண்களின் உடைமாற்றுமிடம் தீவிரவாதிகள் சுலபமாக நழுவி உள்ளே வரும் இடம் என்பதை ஆராய்ந்து ஃப்ளிப்கார்ட் அலுவலகத்தில் அந்த இடத்தை செக்யூரிட்டிக்கு அருகில் மாற்றிவிட்டது ஒரு முக்கியமான தடுப்புச்செயல் என்கிறார் மேஜர் ராஹுல் சூதன்.

அதெல்லாம் சரி, இந்த ட்ரெயினிங்க்குக்கு என்ன செலவாகும்?”

அதுதான் சிக்கல்! ஒருவருக்கு ட்ரெயினிங் தர, எக்ஸ்பர்ட்டுகள் கிட்டத்தட்ட 80,000 ரூ முதல் ஒரு லட்சம் வரை கேட்கிறார்கள்!”

இதுதான் கொஞ்சம் கவலை தரும் விஷயமாக இருக்கிறது. இந்தச் செலவுக்குப் பயந்து பல நிறுவனங்கள் தயங்குகின்றன. ஒரு தாக்குதல் நடக்கும்போதுதான் அந்தத் தயக்கத்தின் அருமை புரியும். ஆனாலும் செலவு அதிகம்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்தப் பயிற்சியைத் தரும் நிறுவனமான நேட்ரிகா (Netrika) இன்னொரு கோணத்தை முன்வைக்கிறார்கள்.

இந்தப் பயிற்சியில் இதுவரை எங்களுக்கு லாபம் ஏதுமில்லை. ஏனென்றால் பயிற்சி தரும் விற்பன்னர்களை நாங்கள் அமெரிக்கா அல்லது பிரிட்டனிலிருந்துதான் வரவழைக்கிறோம். அவர்கள் ஒரு நாளைக்கு 3,000 டாலர் (கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாய்) வரை கேட்கிறார்கள். இதனால் சில நிறுவனங்கள் தங்கள் கம்பெனியிலிருந்து நன்கைந்து பேரை இந்தப் பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். இந்த நாலைந்துபேர் பயிற்சியை முடித்து தத்தம் கம்பெனியில் மற்ற பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதே பயிற்சி (Train the Trainer) தந்துவிடுகிறார்கள்.”


நம்மைச் சுற்றி இன்று பரவி வரும் தீவிரவாதக் கலாசாரம் எத்தனையோ பரிமாணங்களைப் பெற்றுவிட்டது. அதன் ஆக்டோபஸ் கைகள் பலவிதங்களில் ஒரு நாட்டையும் மக்களையும் நிறுவனங்களையும் அழிக்க முற்படுகிறது. உள்நாட்டு வெளி நாட்டுத் தீவிரவாதம், தீவிரவாதத்தின் தோன்றலும் வளர்ச்சியும், வெடிகுண்டைக்கண்டறிதல், மேம்படுத்தாப்பட்ட வெடிச்சாதனங்கள், முக்கியமாக வாகங்களில் பயன்படும் வெடிச்சாதனங்கள், ஒரு தாக்குதலின் சுழற்சி, தற்கொலைப்படையின் சித்தாந்தங்கள், தீவிரவாதிகளின் நடத்தை மற்றும் மன ஓட்டம் என்று பல்வேறு விதப் பாடத்திட்டங்களில் கொடுக்கப்படும் இந்தப் பயிற்சிகளினால் நாமும் நம் உலகமும் இன்னும் இன்னும் பாதுகப்பான இடமாக மாற வேண்டும் என்று நாம் விரும்பினாலும், தீவிரவாதிகளின் குறுக்குப்புத்தியானது நம்மைவிட இரண்டடி முன்னேறி விடுகிறது. தொடர்ந்து அரசும், நிறுவனங்களும் சாதாரண மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் தீவிரவாதிகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு அழித்து உயிர்களையும் நாட்டையும் காப்பாற்ற முடியும்.

தாமஸ் கட்டுக்கதை – தமிழ்ச்செல்வன்

சென்னையைச் சேர்ந்த பிரபலமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றானசிவாஜி புரொடக்ஷன்ஸ்’, கத்தோலிக்க அப்போஸ்தலர்களுள் ஒருவராகக் கொண்டாடப்படும் புனித தாமஸ்ஸின் கதையைத் திரைப்படமாகத் தயாரிக்கப்போவதாகச் செய்திகள் வந்துள்ளன. அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள தார்லின் எண்டெர்டெய்ன்மெண்ட் (Dharlin Entertainment) என்கிற நிறுவனத்துடன் இணைந்து, கேரளா, சென்னை மற்றும் இலங்கை ஆகிய இடங்களில் படப்பிடிப்புகள் நடத்தப்படும் என்றும், இந்திய மற்றும் சர்வதேசக் கலைஞர்கள் பங்குபெறுவார்கள் என்றும், 2018 ஆரம்பத்தில் திரைப்படம் வெளியிடப்படும் என்றும் சொல்லப்படுகிறது. திரைப்படத்தின் பெயர்கமிஷண்ட்’ (Commissioned) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் அப்போஸ்தலர் தாமஸ்ஸின் இந்தியப் பயணத்தைப் பற்றியும், அவர் சென்னையில் ஒரு பிராம்மண புரோகிதரால் கொல்லப்பட்டு மடிந்தது பற்றியும் விரிவாகச் சொல்லும் என்றும் கூறப்படுகின்றது. (Deccan Chronicle dated 1 May 2017)

அப்போஸ்தலர் தாமஸ் கதையைத் திரைப்படமாக எடுக்கவிருப்பதாக 2008ம் ஆண்டே செய்திகள் வந்தன. சென்னை மயிலாப்பூர் தலைமை மறைமாவட்டம், அப்போஸ்தலர் புனித தாமஸ் இந்தியா டிரஸ்ட் என்கிற அமைப்பின் பெயரில் ரூபாய் 50 கோடி செலவில், புனித தாமஸின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாகத் தயாரிக்கப்போவதாக அறிவித்தது. (Deccan Chronicle dated 24 June 2008)

அந்த அறிவிப்புக்கு முக்கிய காரணங்கள் இரண்டு.

முதலாவதாக, போப் இரண்டாம் ஜான்பால் இந்தியாவிற்கு 1986 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் வந்தார். அந்த இரண்டு பயணங்களின் போதும் இந்தியாவில் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் புனித தாமஸ் பற்றி அலட்டிக்கொள்ளவேயில்லை. சொல்லப்போனால்புனித தாமஸ்பற்றி ஒரு வார்த்தைகூட அவர் பேசவில்லை என்று சொல்லலாம்.

கிறிஸ்தவர்கள் முக்கியமாகக் கருதும் அப்போஸ்தலர்களுள் ஒருவரான புனித தாமஸ் உண்மையிலேயே இந்தியப் பயணம் மேற்கொண்டு, கேரளம் மற்றும் தமிழகக் கடற்கரை கிராமங்களில் வாழ்ந்து இறுதியாகச் சென்னையில் கொல்லப்பட்டு இறந்தவர் என்றால், கத்தோலிக்கக் கிறிஸ்தவத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் போப் அவரைப் பற்றிப் பேசாமல் இருந்திருப்பாரா? இத்தனைக்கும் அவர் 1986ம் ஆண்டு வந்தபோது, சென்னையில் சாந்தோம் சர்ச்சுக்கும், புனித தாமஸ் மலை (உண்மைப் பெயர்பிருங்கி மஹரிஷி தொடர்பால்பிருங்கி மலை’ – பின்னர் பரங்கிமலை என்று மருவியது) சர்ச்சுக்கும் வந்து பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தியுள்ளார். ஆகவே, இரண்டு முறை வந்தபோதும் போப் இரண்டாம் ஜான்பால் புனித தாமஸ் பற்றிப் பேசவில்லை.

இரண்டாவதாக, போப் இரண்டாம் ஜான் பாலுக்குப் பிறகு பதவியேற்றுக்கொண்ட போப் பதினாறாம் பெனடிக்ட் 27 செப்டம்பர் 2006 அன்று வாத்திக்கனில், புனித பீட்டர் சதுக்கத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், அப்போஸ்தலர் புனித தாமஸ் சிரியா மற்றும் பெர்ஷியா ஆகிய நாடுகளில் மதமாற்றத்தில் ஈடுபட்டுவிட்டுப் பின்னர் இந்தியாவின் மேற்குப் பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான்) மதமாற்றம் செய்தார். அங்கிருந்து கத்தோலிக்கக் கிறிஸ்தவம் இந்தியாவின் தென்பகுதிகளை அடைந்தது என்று, புனித தாமஸ் தென் இந்தியாவுக்கு வரவில்லை என்று தெளிவாகப் புரியுமாறு, பேசினார். (Hindustan Times dated 23 November 2006)

கேரளம் மற்றும் தமிழகக் கத்தோலிக்கச் சபைகளுக்கு போப் பெனடிக்டின் பேச்சு இடிபோல இறங்கியது. இத்தனை வருடங்களாக அவர்கள் கட்டமைத்து வந்த புனித தாமஸ் கதை, உண்மையிலேயே கட்டுக்கதை என்று நிரூபிப்பது போல போப் பெனடிக்டின் பேச்சு இருக்கவே, அவர்கள் அவசரம் அவசரமாக வாத்திக்கனுடன் தொடர்புகொண்டு தங்கள் பிரச்சினையைத் தெரிவிக்கவே, வாத்திக்கன் தலைமை தங்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் போப்பின் பேச்சை மாற்றி அமைத்தது. இருந்தும் அவர் பேச்சு வெளியில் செய்திகள் மூலம் முன்னரே வந்துவிட்டதை எப்படி மாற்றி அமைக்க முடியும்? (Rediff.com dated 29 November 2006)

ஆகவே, சென்னை மயிலை தலைமை மறைமாவட்டம் புனித தாமஸ் பற்றிய திரைப்படம் ஒன்றை எடுத்துத் தன்னுடைய கட்டுக்கதைக்கு மேலும் வலுச் சேர்க்க முனைந்தது. புனித தாமஸ்ஸின் கட்டுக்கதைக்கு மேலும் கூடுதலான நம்பகத்தன்மையைச் சேர்க்க, அவர் சென்னை மயிலாப்பூர் கடற்கரையில் திருவள்ளுவருடன் அளவளாவினார் என்றும், திருவள்ளுவர் தாமஸ்ஸின் சீடர் என்றும், அதனால்தான் திருக்குறளில் விவிலியத்தின் தாக்கம் காணப்படுகின்றது என்றும் புனைந்துரைகளை, ஏற்கெனவே பரப்பிக்கொண்டிருந்த தெய்வநாயகம் என்னும் ஒரு மதமாற்றப் பிரசாரகரை மீண்டும் பயன்படுத்திக்கொண்டனர். திருக்குறளில் விவிலியத்தின் தாக்கம் உள்ளது என்கிற புனைந்துரையை முதன்முதலில் பரப்பியவர் 19ம் நூற்றாண்டில் மதமாற்றம் புரிய வந்த ஜி.யு.போப் என்கிற பாதிரி ஆவார். அவருடைய போலித்தனமான வழியைப் பின்பற்றித்தான் தெய்வநாயகமும் நடந்துள்ளார்.

தமிழர் சமயம் பற்றிய திரிப்பு வேலையில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் தெய்வநாயகம்விவிலியம், திருக்குறள், சைவ சித்தாந்தம்ஒப்பு ஆய்வுஎன்கிற ஒரு நூலை 1985-86ல் எழுதி வெளியிட்டு இந்தப் புனித தாமஸ் கட்டுக்கதையை உண்மையென நிலைநாட்ட முயற்சி செய்தார். ஆனால் அருணை வடிவேல் முதலியார் என்கிற தமிழறிஞர் மூலம் தரமான மறுப்பு நூல் ஒன்றை வெளியிட்டு தருமை ஆதீனத்தைச் சேர்ந்த அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தினர், தெய்வநாயகத்தின் சதியை முறியடித்தனர். அந்த நூல்: ‘விவிலியம் திருக்குறள் சைவ சித்தாந்தம் ஒப்பாய்வின் மறுப்பு நூல்’ – அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், தருமபுரம் ஆதீனம் – 1991.

இங்கே முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டிய விஷயம் என்னவென்றால் தாமஸ் என்று ஒருவர் தமிழகத்துக்கு வந்தார் என்பதற்கோ, இங்கே ஒரு பிராம்மணர் அவரைக் கொன்றார் என்பதற்கோ எந்த வரலாற்றுச் சான்றும் கிடையாது. ஆனால், போர்ச்சுகீசியர் படையெடுத்து வந்து ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலை அழித்தனர் என்பதற்கும், பிருங்கி மலையில் இருந்த கோவிலையும் அழித்தனர் என்பதற்கும் கல்வெட்டு ஆதாரங்கள் உட்படப் பல ஆதாரங்கள் இருக்கின்றன. சொல்லப்போனால், சாந்தோம் சர்ச்சிலும், அதன் அருகில் உள்ள அருங்காட்சியகத்திலும் பழைய கபாலீஸ்வரர் கோவிலின் தூண்கள் மற்றும் சில இடிபாடுகள் இன்னும் இருக்கின்றன. கோவில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு அந்த இடத்தில்தான் சர்ச்சு கட்டப்பட்டுள்ளது என்கிற உண்மையைப் பறைசாற்றும் விதமாக அவை இன்றும் சர்ச்சுக்குள்ளேயே காட்சியளிக்கின்றன. டாக்டர் நாகசாமி போன்ற தொல்லியல் நிபுணர்களும் இந்த உண்மையை உறுதிப்படுத்தியுள்ளனர். தமிழக இந்து அறநிலையத்துறையே, தற்போதைய கபாலீஸ்வரர் கோவிலின் நுழைவாயிலில் இவ்வுண்மையைக் கல்வெட்டில் பதிய வைத்துள்ளது. எனவே, இந்தத் தாமஸ் என்கிற கதாபாத்திரத்தை உருவாக்கியதே பாரதத்தின் தென்பகுதியில் உள்ள இந்துக்களை மதமாற்றம் செய்யத்தான்.


தாமஸ் இங்கு வந்து திருவள்ளுவருக்கு குருவாக இருந்தார் என்றும், திருவள்ளுவர் தாமஸிடம் பைபிள் கற்று, பின்னர் பைபிளில் உள்ள பல கருத்துக்களின் அடிப்படையில் திருக்குறளை இயற்றினார் என்றும் கதை கட்டிவிட்டதுதான் தமிழுக்குப் பங்குத் தந்தைகளின் பங்களிப்பு. பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றாகும் திருக்குறள். நம்மிடமுள்ள வரலாற்றுச் சான்றுகளை வைத்துப் பார்த்தால் திருவள்ளுவர் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருப்பார் என்று தெரிய வருகிறது. மேலும் இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இயற்றப்பட்ட கம்ப ராமாயணம், பெரிய புராணம் ஆகியவற்றில் திருக்குறள் கருத்துக்கள் காணப்படுவதும், கிறிஸ்துவம் பற்றிய ஒரு தகவலும் இல்லாமல் இருப்பதுமே, இவர்களின் தாமஸ் கதை சரியான ஏமாற்று வேலை என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது. மயிலையில் உள்ள புனித தாமஸ் தேவாலயத்தின் சுவர்களில் பதினோராம் நூற்றாண்டு ராஜேந்திரச் சோழனின் கல்வெட்டுக் குறிப்புகள் இருந்து பின்னர் அழிக்கப் பட்டுள்ளன. கிறிஸ்தவர்களின் தாமஸ் கூத்தைபுனித தாமஸ் கட்டுக்கதையும் மயிலை சிவாலயமும்என்ற புத்தகத்தின் மூலம் ஈஸ்வர் சரண் என்கிற ஆராய்ச்சியாளர் தோலுரித்துக் காட்டியுள்ளார். வேதம் வேதபிரகாஷ் என்கிற வரலாற்று ஆய்வாளரும், தன்னுடையபுனித தாமஸ் கட்டுக்கதைஎன்கிற புத்தகத்தில் கிறிஸ்துவர்களின் சூழ்ச்சியை நிரூபித்துள்ளார். ஈஸ்வர் சரண் எழுதியுள்ள The Myth of St.Thomas and Mylapore Shiva Temple என்ற புத்தகத்தை அவசியம் படியுங்கள். அதற்கு பெல்ஜியம் நாட்டு வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான கோன்ராட் யெல்ஸ்ட் எழுதியுள்ள முன்னுரையும் படிக்க வேண்டிய ஒன்று.1

இருப்பினும், தாமஸ் கட்டுக்கதையைத் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட முடிவு செய்த மயிலை மறைமாவட்டம் தெய்வநாயகத்தின் மூலமாக தாமஸ் கட்டுக்கதை மீண்டும் புதிய வேகத்துடன் பரவத் தொடங்கியது

அந்தத் திரைப்படத்தின் துவக்க விழாவில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு துவக்கி வைத்துப் பேசினார். ஜி.யு.போப்பை சிலாகிக்கும் கருணாநிதி, திருக்குறளை நன்கு கற்றறிந்து அதற்கு உரையும் எழுதிய கருணாநிதி, தன்னுடைய துவக்க விழா உரையில், புனித தாமஸ்திருவள்ளுவர் சந்திப்பைப் பற்றியோ அல்லது திருக்குறளில் விவிலியத்தின் தாக்கம் உள்ளதைப் பற்றியோ ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவை உண்மைகளாக இருந்திருந்தால் பேசாமல் இருக்கக்கூடியவரா அவர்? ஆனால், கிறிஸ்தவர்களைத் திருப்திப படுத்தி அவர்கள் ஓட்டுகளைப் பெறவேண்டும் என்கிற காரணத்துக்காக புனித தாமஸை ஒரு பிராம்மணர் கொன்றார் என்கிற கட்டுக்கதையைப் பற்றி மட்டும் பேசினார். பல்வேறு ஆதாரங்களும் சான்றுகளும் உடைய ராமபிரானின் வரலாற்றைக் கேள்விக்குள்ளாக்கி ராமாயண சரிதத்தின் உண்மைத் தன்மையைப் பற்றிக் கேள்விகள் எழுப்பிய கருணாநிதி, ஒரு துளி கூட ஆதாரமோ சான்றோ இல்லாத புனித தாமஸ்ஸின் வரலாற்றைப் பற்றி ஒரு கேள்வி கூட எழுப்பவில்லை. (Rediff.com dated 4 July 2008)

திரைப்படத் தயாரிப்பைப் பற்றிய அறிவிப்பைச் செய்து, அதற்கு முதலமைச்சர் தலைமையில் துவக்க விழா நடத்திய பிறகும், எந்த காரணத்தாலோ மயிலாப்பூர் மறைமாவட்டம் அதன் பிறகு அந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கவில்லை. அவர்களின் தயக்கத்திற்கு புனித தாமஸ்ஸின் இந்தியப் பயணம் பற்றி வாத்திக்கனே நம்பிக்கை தெரிவிக்கவில்லை என்பதே முக்கியக் காரணமாக இருக்க வேண்டும். மேலும், பின்வரும் உண்மைகளும் காரணங்களாக இருக்கலாம்:

·         1729ம் ஆண்டு மயிலாப்பூர் மறைமாவட்டத் தலைமைப் பாதிரியார் சாந்தோம் சர்ச்சில் உள்ள கல்லறை புனித தாமஸ்ஸுடையதுதானா என்கிற சந்தேகத்தை எழுப்பி, ரோமானிய சடங்குமுறைச் சபைக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார். ஆனால் அவருடைய சந்தேகத்தை நிராகரித்தோ அல்லது சாந்தோமில் உள்ளது தாமஸ்ஸின் கல்லறைதான் என்பதை உறுதி செய்தோ ரோமானியச் சபை பதில் எதுவும் அளிக்கவில்லை.

·         1886ம் ஆண்டு போப் பதிமூன்றாம் லியோவும், 1923ம் ஆண்டு போப் பதினொன்றாம் பையஸும், புனித தாமஸ் இறுதியாக சிந்து நதிக்கு அப்பால் உள்ள இந்திய எல்லைக்கு (தற்போதைய பாகிஸ்தான்) வந்தார் என்றுதான் கூறியிருக்கிறார்கள். அதாவது 2006ல் போப் பெனடிக்ட் கூறியதும் அவர்கள் கூறியதும் ஒன்றே. ஆகவே, தாமஸ் தென் இந்தியாவுக்கு வந்தார் என்பது வெறும் பொய் என்பதே உறுதியாகின்றது.   

·         பொது ஆண்டு 52ல் அப்போஸ்தலர் தாமஸ் கேரளக் கடலோரக் கிராமமான கொடுங்கல்லூரில் வந்து இறங்கினார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று வாத்திக்கன் தலைமையகம் 13 நவம்பர் 1952 அன்று கேரள கத்தோலிக்க சபைக்குத் தகவல் அனுப்பியுள்ளது.2

இந்த மாதிரியான சூழ்நிலையில் தாமஸ் கட்டுக்கதையை, உண்மையான வரலாறாகக் கட்டமைக்க, மயிலை கத்தோலிக்கச் சபை மேலும் முயற்சி செய்வது பரிதாபத்திற்குரியது. ஆனால் இவ்வாறான முயற்சிகள் மூலம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்கள் மதமாற்ற நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்த நினைக்கலாம். அதற்குத் திரைப்படங்கள் பயனுள்ள வழிவகையாகவும் அமையக்கூடும்.

எனவே, தற்போது எடுக்கப்படும் இந்தத் திரைப்பட முயற்சியை தேசப்பற்றும் மதநல்லிணக்க விருப்பமும் கொண்ட இந்தியக் குடிமக்கள் அனைவரும் கடுமையாக எதிர்த்து முறியடிக்க வேண்டும். ஹிந்து இயக்கங்களும் அமைப்புகளும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அதிபர்களான பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோரிடம் விஷயத்தை எடுத்துச் சென்று, உண்மையான வரலாற்றை எடுத்துக்கூறி, மதநல்லிணக்கத்திற்கு ஆபத்தாக முடியும், போலியான வரலாற்றை நிலைநிறுத்த முயலும் இந்த முயற்சிக்குத் துணைபோக வேண்டாம் என எச்சரிக்க வேண்டும்.

இந்தத் திரைப்படத் தயாரிப்பைக் கைவிடுவது சிவாஜி புரொடக்ஷன்ஸ்ஸுக்கு மட்டுமல்லாமல், மயிலைக் கத்தோலிக்க மறைமாவட்டத்திற்கும், கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கும் நல்லது.

அடிக்குறிப்புகள்: