புதுக்கோட்டையில்
இறங்கி ஒரு ஆட்டோ ஓட்டுநரை விசாரித்ததுமே, ‘தெரியும் சார், வாங்க போகலாம்’ என்று ஏற்றிக் கொண்டார். திருக்கோகர்ணத்தில்
இருக்கும் ஞானாலயா நூலகமும் சரி, கிருஷ்ணமூர்த்தியும் சரி அந்த அளவுக்குப் பிரபலம்.
பழங்கால நூல்கள், இதழ்கள், மலர்கள், தொகுப்புகள் என ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட
நூல்கள் இங்கே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அத்தனையும் கிருஷ்ணமூர்த்தி-டோரதி கிருஷ்ணமூர்த்தி
இணையரின் உழைப்பு, கனவு. ஆரம்பத்தில் ‘மீனாட்சி நூலகம்’ என்று தனது தாயாரின் பெயரில்தான்
இந்த நூலகத்தை நடத்தி வந்திருக்கிறார், கிருஷ்ணமூர்த்தி. அது ஏதோ வாடகை நூல் நிலையத்தின்
பெயர் போல இருப்பதாக நண்பர்கள் சொல்லவும், ‘ஞானாலயா’ என்று பெயர் மாற்றம் செய்தார். ‘ஞானச்சோலை’யாக, ஆய்வாளர்களின் வேடந்தாங்கலாகத்
திகழ்ந்து வரும் ஞானாலயா மூலம் இன்றைக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் முனைவர் பட்டம்
பெற்றுள்ளனர். இன்றும் பலர் ஆய்வுக்காக நாடி வந்த வண்ணம் உள்ளனர்.
10-15
நிமிடப் பயணத்தில் ‘ஞானாலயா’ வந்துவிட்டது. நாம் உள்ளே நுழைந்ததும் “வாருங்கள்” என்று வரவேற்கிறார், டோரதி கிருஷ்ணமூர்த்தி.
“சார் இப்பத்தான் வெளில போனாரு. கொஞ்ச நேரத்துல வந்திருவாரு” என்றார். சிறிது நேரம் காத்திருக்க,
தனது இரு சக்கர வாகனத்தில் வந்து இறங்குகிறார் கிருஷ்ணமூர்த்தி. “வாருங்கள்” என்று வரவேற்றுவிட்டு நம்முடன்
உரையாடத் துவங்குகிறார். புத்தகச் சேகரிப்பில் தனது ஆர்வம், அந்தக் காலத்து அச்சகங்கள்,
பதிப்பகங்கள், நூலகங்கள், அதைப் பாதுகாத்த புரவலர்கள், நூலகங்களின் இன்றைய நிலை என்று
அவர் சொல்லச் சொல்ல கேட்கும் நாம் பிரமிக்கிறோம். மூன்று மணி நேரத்துக்கும் மேல் நீண்ட
அந்த உரையாடலில் இருந்து…
புத்தக ஆர்வம்
என்னுடைய
தந்தையார் கே.வி. பாலசுப்ரமணியன், நல்ல படிப்பாளி. கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர்.
அவர் மூலம் எனக்குச் சிறு வயதிலேயே புத்தகங்கள் அறிமுகமாகின. என் தந்தையார் ஒருமுறை
சில நூறு புத்தகங்களை என்னிடம் கொடுத்து இவற்றைக் கவனமாகப் பாதுகாத்து வா என்று சொன்னார்.
ஒருநாள் அதில் ஒரு புத்தகத்தைப் புரட்டினேன். அது என் தாய்வழித் தாத்தாவான பொன்னுசாமி,
1873ல், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தபோது, எஸ்.எஸ்.எல்.சியில் தமிழில் முதல்
பரிசு பெற்றமைக்காகக் கிடைத்த பரிசு. Footprints of Famous men என்பது அந்தப் புத்தகத்தின்
பெயர். கோல்டன் கலரில் பச்சையப்பன் கல்லூரி எம்ப்ளம் பொறித்த நூல் அது.
தாத்தா பொன்னுசாமி, திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளுக்கு ஆங்கிலம்
சொல்லித் தந்தவர். ஆசிரியராக இருந்தவர். ஆங்கிலம், தமிழ், சம்ஸ்கிருதம் மூன்றிலும்
தேர்ந்தவர். கரந்தை தமிழ்ச்சங்கம் உருவாதற்குக் காரணமானவர். என் தாத்தா கையெழுத்திட்ட
‘தனிப்பாடல் திரட்டு’ என்ற நூலும் அந்தச் சேகரிப்பில் இருந்தது. அது எழுத்தாளர் கு. அழகிரிசாமி அவர்கள்
வெகுநாட்களாய்த் தேடிக் கொண்டிருந்த புத்தகம் என்பதை அறிந்ததும் எனக்கு வியப்பாக இருந்தது.
அதுமுதல் பழைய புத்தகங்களின் மீதான எனது காதலும் தேடுதலும் அதிகரித்தது.
பாரதி
துவங்கி அசோகமித்திரன் வரை பத்திரிகைகளில் எழுதி, பின்னர்தான் அவை நூல்களாக வெளியாகி
இருக்கின்றன. நேரடியாகப் புத்தகங்களை வெளியிட்டவர்கள் மு.வ. உள்ளிட்ட ஒரு சிலர்தான்.
ஆக, பத்திரிகைகள்தான் எழுத்திற்கு அடிப்படையாக அந்தக் காலத்தில் இருந்திருக்கின்றன.
ஞானாலயா பத்திரிகைகளின் சேகரிப்பில் தனித்த கவனம் செலுத்தியது. பாரதியாரின் முதல் கவிதை
வெளியான விவேகபாநு 1904 இதழ் என்னிடம் இருக்கிறது. அதை நீங்கள் பார்ப்பதற்கும் இப்போது
உள்ள ‘தனிமையிரக்கம்’ பாடலைப் பார்ப்பதற்கும் வேறுபாடு இருக்கும். ஆக, முதற் பதிப்பைச் சேர்ப்பது,
அவை வெளியான மூல நாளிதழ்கள், வார, மாத இதழ்களைச் சேர்ப்பது என்பதில் கவனம் செலுத்த
ஆரம்பித்தேன். பாரதியின் சுதேச கீதங்கள், உ.வே.சா.வின் மணிமேகலை போன்றவற்றின் முதல்
பதிப்பில் இடம்பெற்ற பல விஷயங்கள் அதற்குப் பிறகு வந்த பதிப்புகளில் இல்லை. அப்படித்
தேடித் தேடிச் சேகரித்தவைதான் இந்த இத்தனை நூல்களும். இதற்கு என்னை ஊக்கப்படுத்தியவர்
ஏ.கே. செட்டியார். பல புத்தகங்கள் எனக்குக் கிடைப்பதற்குக் காரணமாக இருந்ததும் அவர்தான்.
அவரது ‘குமரிமலர்’ இதழ்த் தொகுப்புகள் முழுமையாக என்னிடம் இருக்கின்றன.
புத்தகச் சேகரிப்பு
20 வயதிலேயே
எனது புத்தகத் தேடல் துவங்கிவிட்டது. பல இடங்களுக்கும் பயணித்து நான் புத்தகங்களைச்
சேகரித்திருக்கிறேன். இதற்கு மிகுந்த பொறுமை தேவை. அலைச்சல்களும் ஏமாற்றமும் இருக்கத்தான்
செய்யும். செட்டிநாட்டுப் பகுதியில் நாள் முழுக்க, காலை முதல் மாலை வரை காத்திருந்து
வெறும் கையுடன் திரும்பியிருக்கிறேன். விளக்கு வைத்தபின் எதுவும் கொடுக்கக் கூடாது
என்பது நகரத்தார்கள் பின்பற்றி வரும் பழக்கம். அதனால் நான் உள்ளம் சோர்ந்து போகாமல்
மீண்டும் மீண்டும் முயற்சி செய்திருக்கிறேன். இன்றைக்கும் செட்டிநாட்டில் புத்தகங்களைப்
பொக்கிஷமாக, ஆவணமாகக் கருதுகிறார்கள். குழந்தை பிறப்பிற்கு, திருமணத்திற்கு, 60ம் ஆண்டு,
80ம் ஆண்டு, பவள விழா, முத்து விழா, வெள்ளி விழா எனப் புத்தகங்களை நகரத்தார்கள் தங்கள்
குடும்ப விழாக்களில் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். தமிழக்கடல் ராய. சொக்கலிங்கம்
போன்றவர்கள் எல்லாம் இம்மாதிரி விழாக்களுக்குப் புத்தகங்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளனர்.
1980க்கு முன்னால் புகழ்பெற்ற 13 பதிப்பாளர்களில் 10 பேர் நாட்டுக்கோட்டை நகரத்தார்
சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
அச்சகங்களும் பதிப்பகங்களும்
அந்தக்
காலத்தில் தமிழ் நூல்களை அச்சிடுவதற்குச் சரியான அச்சகமே கிடையாது. 1835ல்தான் பிரிட்டிஷ்
அரசு தமிழர்களுக்கு, இந்தியர்களுக்கு அச்சாபீஸ் வைத்துக் கொள்ள உரிமை வழங்கியது. அதற்கு
முன் எல்லாம் கிறிஸ்துவ மிஷனரீஸ்தான் பதிப்பிக்க, விற்க உரிமையுள்ளவர்களாக இருந்தனர்.
பிற்காலத்தில் தமிழர்களின் அச்சுக்கூடம் உருவாவதற்குக் காரணமே அக்காலத்தில் ஜூப்ளி
அச்சுக்கூடம், ரிப்பன் பிரஸ் போன்ற பல அச்சுக்கூடங்கள் கிறித்துவர்களுடையதாகவும், கிறித்துவப்
பாதிரியார்களுடையதாகவும் இருந்ததுதான். நாம் எப்படி ஆங்கிலத்தை ‘மிலேச்ச பாஷை’ என்று சொன்னோமோ அதே போல் அவன்
நமது மொழியை ‘நீச பாஷை’ என்று சொல்லிவிட்டான். அதனால்தான் தமிழ் நூல்கள் பலவற்றை அச்சிடுவதற்காக திரு.வி.க.
‘சாது அச்சுக் கூடம்’ என்பதை உருவாக்கினார். திரு.வி.க.வின் அண்ணன் உலகநாதன் அதனை நடத்தினார். அந்த
எழுத்துக்களே ஒரு மாதிரி அழகாக இருக்கும். அம்மாதிரி எழுத்துக்கள் எல்லாம் இப்போது
கிடையாது. மறைமலையடிகள் “முருகவேள் அச்சக சாலை” என்ற ஒன்றை வைத்திருந்தார். இப்படிப் படிப்படியாகத்
தமிழ் நூல்களை அச்சிட அச்சகங்கள் தோன்றின.
உ.வே.சா.
கும்பகோணம் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது நூல்களைப் பதிப்பிப்பது என்றால்
சென்னைக்கு வர வேண்டி இருந்தது. சனிக்கிழமை போட் மெயிலில் புறப்பட்டு வேலையை முடித்துவிட்டு
ஞாயிறு இரவு போட்மெயிலில் அவர் திரும்பி விடுவார். இப்படி அவர் அலைவதைப் பார்த்துவிட்டு
மனம் வருந்திய பூண்டி அரங்கநாத முதலியார் உ.வே.சா.வை பிரசிடென்சி கல்லூரிக்கு மாற்றினார்.
இதெல்லாம் வரலாறு.
பழைய
பதிப்பகங்களில் அல்லயன்ஸ் குப்புசாமி ஐயர் செய்த சாதனையை யாரால் செய்ய இயலும்? அதேபோல
ஜி.ஏ.நடேசனும் புகழ்பெற்ற பதிப்பாளர். ஆங்கிலத்தில் பத்திரிகை நடத்தியவர். இப்படி அந்தக்
காலத்தில் நிறையச் செய்திருக்கிறார்கள். ஆனால் வெளியே தெரியவில்லை. தெரிந்தாலும் அரசு
ஆதரவில்லை. பல்கலைக்கழகங்கள் உதவவில்லை.
விராலிமலையில்
இருக்கும் வக்கீல் ஒருவர்தான் முதன்முதலில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் புத்தகத்தை
1928ல் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறார். அந்த நூலின் பெயர் : “கல்வி கற்பித்தல்
– ஒரு புதிய அணுகுமுறை.” அதுபோல “At The Feet of the Master” என்பது ஜே.கே.யின் புகழ்பெற்ற சொற்பொழிவு. அதனை “குருநாதரின் அடிச்சுவட்டில்” என்ற தலைப்பில் விராலிமலையில்
வெளியிட்டிருக்கிறார்கள். இப்படிப் பரவலாகத் தமிழகம் முழுவதும் பதிப்பு முயற்சிகள்
இருந்தன. 1960, 1970 வரை பதிப்பாளர்கள் தமிழ்நாட்டில் பரவலாக இருந்தார்கள். மதுரை,
திருச்சி, திருநெல்வேலி, கோவை, கும்பகோணம் என்று எல்லா ஊர்களிலும் பதிப்பாளர்கள் இருந்தார்கள்.
ஆனால், இன்றைக்கு எல்லாம் அரிதாகிவிட்டது. அன்று பல மாவட்டங்களில் பதிப்பகங்கள் இருந்தன.
இன்று கோவையில் விஜயா பதிப்பகம் போன்று ஒரு சிலதான் பிரபலமாக இருக்கின்றன. தற்போது
எல்லாரும் சென்னையை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறார்கள்.
நூலகங்கள்
திருச்சியில்
பழைய புத்தகங்கள் விற்பனையில் முன்னோடியாக இருந்தவர் சுப்பையாச் செட்டியார். அவருக்கு
தமிழ்நாட்டில், எந்தெந்தப் பிரபலங்கள் வீட்டில் எந்தெந்த மாதிரியான நூலகங்கள் இருக்கின்றன
என்பது தெரியும். இவர் என்ன செய்வார் என்றால் பிரபல மனிதர்கள், அறிஞர்கள் யாரேனும்
மறைந்து விட்டால் அதற்கு ஒரு மாதம் கழிந்த பின்பு, அவர்கள் வீட்டுக்குச் சென்று பேசி
அந்தப் புத்தகங்களை வாங்கிக் கொண்டுவந்து விடுவார். அவரை நான் சந்தித்துப் பேசியபோது
வாசன், கொத்தமங்கலம் சுப்பு, கிருஷ்ணசாமி ஐயர் உள்பட பல பிரபலங்கள் தன் கடைக்கு வந்ததாகச்
சொல்லியிருக்கிறார். செட்டியார் திருச்சியில் பிரபலம் என்றால் சென்னை மூர் மார்க்கெட்டில்
ஜெயவேல் பிரபலம். லண்டன் டைம்ஸிலேயே அவர் கடை குறித்த விளம்பரங்கள் வரும். மூர் மேக்கெட்
தீப்பிடித்து எரிந்தது பழைய புத்தகங்களுக்கும், பழைய சேகரிப்புகளுக்கும் அதன் ஆர்வலர்களுக்கும்
மிகப் பெரிய இழப்பு. தியாசபிகல் சொசைட்டி (பிரம்மஞான சபை) நூலகங்கள் அந்தக் காலத்தில்
பல ஊர்களில், சொல்லப்போனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்தன. இன்றைக்கும் சிவகங்கையில்
பிரம்மஞான சபை நூலகம் இருக்கிறது.
அன்றைக்குப்
பல தனியார் நூலகங்கள் மிகவும் புகழ்பெற்றதாக இருந்தன. நான் கல்லூரியில் படிக்கும்போது
திருச்சியில், பெரியகடை வீதியின் மாடி ஒன்றில் நேஷனல் லைப்ரரி இருந்தது. வ.ரா.வை, கல்கி
முதன்முதலில் சந்தித்த இடம் அதுதான். அங்கு சென்று நிறையப் புத்தகங்களை வாசித்திருக்கிறேன்.
தனி நபர் நூலகங்கள் என்று எடுத்துக் கொண்டால் அந்தக் காலத்தில் ஆர்.கே.சண்முகம் செட்டியாரின்
நூலகம் மிகப் பெரிய நூலகமாக இருந்தது. அந்த நூலகத்தில் வேலை பார்த்தவர்தான் எழுத்தாளர்
ஆர்.சண்முகசுந்தரத்தின் தம்பி ஆர்.திருஞானசம்பந்தம். சண்முகம் செட்டியார், ‘வசந்தம்’ என்ற இதழை, திருஞானசம்பந்தத்தை
ஆசிரியராக வைத்து வெளியிட்டார். இன்றைக்கு ‘வசந்தம்’ பத்திரிகையைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்?
இன்னுமொரு தெரியாத செய்தி சொல்கிறேன். சண்முகம் செட்டியார், சிலப்பதிகாரத்தின் புகார்
காண்டத்திற்கு உரை எழுதியிருக்கிறார். அந்த நூல் என்னிடம் இருக்கிறது. அதுபோல கோவையில்
ஜி.டி.நாயுடுவின் நூலகமும் மிகப் புகழ்பெற்றது. அதில் கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு
நாவலர் நெடுஞ்செழியன் பணியாற்றினார் என்று நினைவு. அது போல அழகப்பச் செட்டியாரின் நூலகமும்
மிகப் பெரியது. அதுவும் காரைக்குடியில் அழகப்பா கல்லூரி உருவானதும் சா.கணேசன் முயற்சியில்
அது அங்கு சென்றுவிட்டது.
சென்னையிலும்
முன்பு மாக்ஸ்முல்லர் பவனில் மாக்ஸ்முல்லர் நூலகம், யூ.எஸ்.ஐ.எஸ். நூலகம் இருந்தது.
தனியார் நூலகங்கள் நிறைய இருந்தன. Servants of India Society Library லஸ் கார்னரில்
இருந்தது. சீனிவாச சாஸ்திரியார் தலைவராக இருந்து நடத்திய நூலகம் அது.
Y.M.I.A.Library இருந்தது. காமதேனு தியேட்டருக்கு எதிரே ரானடே நூலகம் இருந்தது. இப்படி
ஒவ்வொரு நூலகத்திற்குப் பின்னாடியும் மிகப் பெரிய கதைகள் இருக்கின்றன. ஆனால், இன்றைக்கு
யாருக்குமே தெரியாது. நூறு ஆண்டு கூட ஆகவில்லை. இந்தச் செய்திகள் எல்லாம் மறந்து போய்
விட்டன. பல நூலகங்கள் செயல்படவில்லை. சென்னையில் நூலகங்கள் என்றால் கன்னிமாரா, மாவட்டங்களில்
மாவட்ட நூலகங்கள் என்றுதான் சொல்வார்களே தவிர, பல நூலகங்களைப் பற்றி இன்றைக்கு யாருக்குமே
தெரியாது.
புத்தக மறுமலர்ச்சியின் தந்தை:
சக்தி வை.கோவிந்தன்
1920க்குப்
பிறகு, காந்தியால் ஏற்பட்ட சுதந்திரத் தாகம் மற்றும் விழிப்புணர்ச்சிக்குப் பிறகு ஒவ்வொரு
மாவட்டங்களிலும் பல அச்சுக்கூடங்கள் உருவாகின. பல பத்திரிகைகள் வெளியாக ஆரம்பித்தன.
பல வெளியீட்டாளர்கள் வந்தார்கள். அதில் முக்கியமானவர் 1934ல் பர்மாவிலிருந்து தமிழகத்துக்கு
வந்த சக்தி வை. கோவிந்தன். அவர் புதுக்கோட்டை மாவட்டம் ராயவரத்தைச் சார்ந்தவர். அவர்தான்
புத்தக வெளியீட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். History of Indian Publication
என்ற நூலை எழுதிய கேசவன், அந்த நூலில், “அந்தக் காலத்தில் நகரத்தார்கள் எல்லாம் வட்டிக்
கடை வைத்துப் பிழைத்துக் கொண்டிருந்த காலத்தில், இந்த மனிதர் (சக்தி வை.கோவிந்தன்)
ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்து, சக்தி காரியாலத்தை உருவாக்கினார்” என்கிறார். இன்றைக்கு மியூசிக்
அகாதமி இருக்கும் இடம்தான் அந்தக் காலத்தில் சக்தி காரியாலயம். அவர் வெளியிட்ட நூல்கள்
எல்லாம் மிக முக்கியமானவை. அரசியல் நூல்கள், வரலாற்று நூல்கள், விவசாய நூல்கள், காய்கறிகளைப்
பற்றி, மரங்களைப் பற்றி, மொழிபெயர்ப்பு நூல்கள் என்று பல தரப்பட்ட நூல்களை அவர் கொண்டு
வந்தார். எனக்குத் தெரிந்து ரஷ்ய நூல்களை, இலக்கியங்களை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து
வெளியிட்டது அவர்தான். உலகப் புகழ்பெற்ற டைம் மேகசின் போல தமிழிலும் ஒரு பத்திரிகை
வேண்டும் என்று விரும்பி, அதே ஃபார்மட்டில் ‘சக்தி’ என்ற இதழை ஆரம்பித்தார். கோவிந்தன் கடைசியாக வெளியிட்டது
தினமணி ஆசிரியர் சொக்கலிங்கம் மொழிபெயர்த்த ‘வார் அண்ட் பீஸ்.’ சக்தி கோவிந்தன் எல்லாம் ஒரு லட்சியத்துடன்
வாழ்ந்தவர். அவரது நூல்கள் எல்லாம் இங்கே ஞானாலயாவில் இருக்கின்றன. இன்றைக்கும் கண்ணில்
ஒற்றிக் கொள்ளலாம் அப்படி ஒரு அச்சு. அப்படி ஒரு நேர்த்தி.
இன்றைக்கு
அச்சுத்தொழில் கற்பனைகூடச் செய்ய முடியாத அளவுக்கு முன்னேறிவிட்டது. ஆனால், அன்றைக்கு
காலால் ட்ரெடில் மிஷன் ஓட்டி அச்சிட்ட காலத்தில் அந்த மனிதர் செய்த சாதனை போற்றத் தகுந்தது.
பெங்குவினுக்கு நிகராக ‘சக்தி மலர்கள்’ என்று ஒரு சீரிஸ் பண்ணியிருக்கிறார். 45 மலர்கள் வந்திருக்கின்றன. “What’s will we do that?” “இனி நாம் செய்ய வேண்டியது யாது?” என்னும் டால்ஸ்டாய் நூல்தான் சக்தி
மலர் வெளியிட்ட முதல் நூல். அதன் எம்ப்ளமே கலங்கரை விளக்கம்தான். எழுத்தாளர்களுக்கு
மட்டுமல்ல; பதிப்பாளர்களுக்கும் அவர் ஒரு கலங்கரை விளக்கம். அந்தக் காலத்திலேயே எழுத்துலகில்,
பதிப்புலகில் பல புதுமைகளைச் செய்தவர். பெரிய காந்தியவாதி. ஆனால் அவர்தான் காரல் மார்க்ஸின்
வரலாற்றை முதன்முதலில் வெளியிட்டார். அவர் அச்சுலகிற்கு, பத்திரிகை உலகிற்குச் செய்திருப்பது
மிகப் பெரிய தொண்டு.
தமிழின் முன்னோடிப் பதிப்பாளர்:
முறையூர் சொக்கலிங்கம் செட்டியார்
தமிழ்
நூல்கள் வெளியீட்டில் அடுத்து மிக முக்கியமானவர் முறையூர் சொக்கலிங்கம் செட்டியார்.
தமிழின் மிகச் சிறந்த வரலாற்று நூல் ஆசிரியரான வெ.சாமிநாத சர்மாவை ஆதரித்தவர் இவர்.
படிக்கும் பழக்கமே இல்லாதவனைக் கூட வரலாற்று நூல்களை நாவல் மாதிரிப் படிக்கச் செய்தவர்
என்ற பெருமை சாமிநாத சர்மாவுக்கு உண்டு. அவரது நூல்களை வெளியிடுவதற்காகவே பிரபஞ்ச ஜோதிப்
பிரசுராலயத்தை ஆரம்பித்தார் செட்டியார். அதில் சாமிநாத சர்மாவின் நூலைத் தவிர வேறெதையுமே
அவர் வெளியிட்டதில்லை. மொத்தம் 83 புத்தகங்களை அவர் வெளியிட்டிருக்கிறார்.
தனது
நூலை வெளியிடுவதற்காக முறையூர் சொக்கலிங்கம் செட்டியார் ஆரம்பித்ததுதான் பிரகாஷ் பதிப்பகம்.
அவரது மாமா வள்ளல் சண்முகஞ்செட்டியார். அவர்தான் ‘தனிச்செய்யுட் சிந்தாமணி’ என்னும் தொகுப்பை முதன்முதலில்
கொண்டு வந்தவர். 1908ல் வெளிவந்த அந்த நூல்தான் பிற்காலத்தில் வெளியான தனிப்பாடற்றிரட்டு
நூல்களுக்கு எல்லாம் முன்னோடி நூல். சண்முகனார் முறையூர் ஜமீனும் கூட. இப்படியெல்லாம்
தமிழுக்காகவும், புத்தகங்களுக்காகவும் அந்தத் தலைமுறையில் வாழ்ந்திருக்கிறார்கள். இன்றைக்கு
நாம் சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
இரட்டைமலை சீனிவாசன்
அம்பேத்காருடன்
வட்டமேசை மாநாட்டுக்குச் சென்றவர் நம் தமிழ்நாட்டின் இரட்டைமலை சீனிவாசன். அதைப்பற்றி
யாருமே பேசுவதில்லை. அப்படிப் பேசினாலும் ஒரு குழு அல்லது வேறு சில அடிப்படைகளில்தான்
பேசுகிறார்கள். உண்மையில் வட்ட மேசை மாநாட்டிற்கு பிரிட்டிஷார் அம்பேத்கரை அழைத்தது
போலவே இவரையும் கூப்பிடுகிறான், தென் மாநிலத்தின் பிரதிநிதியாய். அம்பேத்கர் அதனைத்
தெரிந்துகொண்டு, இரட்டைமலை சீனிவாசனிடம், “நாம் ரெண்டு பேரும் தனித் தனியாக அறிக்கை
சமர்ப்பிக்க வேண்டாம். ஒன்றாகவே சமர்ப்பிப்போம். நீங்கள் தயாரித்த அறிக்கையை என்னிடம்
கொடுங்கள்” என்று கேட்டு
வாங்கி, ஒன்றாகச் சமர்ப்பிக்கிறார். இந்த இரட்டை மலை சீனிவாசன்தான் 1920களில், இரட்டை
ஆட்சி முறை அறிமுகமானபோது, சுப்பராய ரெட்டியார் அமைச்சரவையில், தாழ்த்தப்பட்டவர்களை
காந்தி ‘ஹரிஜன்’ என்று அழைப்பதற்கு
முந்தைய கால கட்டத்தில், அவர்களை “ஆதி திராவிடர்” என்று அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். ஆதி
திராவிடர்கள் என்றால் பூர்விகக் குடிகள் என்பது பொருள்.
வட்டமேசை
மாநாட்டில் கலந்து கொண்டவர்களை எல்லாம் ஐந்தாம் ஜார்ஜ் விருந்துக்கு அழைக்கிறார். வந்தவர்களை
கணவரும், மனைவியும் கை கொடுத்து வரவேற்கிறார்கள். இரட்டைமலை சீனிவாசன் தன்னுடைய முறை
வரும்போது கை கொடுக்க மறுத்துவிடுகிறார். “ஏன்?” என்று ஜார்ஜ் கேட்க, சீனிவாசன் தன் சட்டைக்குள்ளிலிருந்து
ஒரு அட்டையை அடுத்துக் காண்பிக்கிறார். அதில் “I am untouchable” என்று இருக்கிறது. ஜார்ஜ்
what do you mean என்று கேட்க, சீனிவாசன் அன்றைய சமூகநிலையை, நடப்பு உண்மைகளைச் சொல்கிறார்.
“நான் என்னால் இயன்ற அளவுக்கு இதற்கு எதிரான முயற்சிகளைச் செய்கிறேன். நீங்கள் இப்போது
என் விருந்தினர்” என்று கூறி
கை கொடுக்கிறார் ஜார்ஜ். 1892-1899 இரட்டைமலை சீனிவாசன் “பறையன்” என்ற பெயரில் ஒரு பத்திரிகையை
நடத்தினார். அதன் தொகுப்பு எதுவும் தற்போது கிடைக்கவில்லை. பின்னால் அயோத்திதாசப் பண்டிதரின்
ஒரு பைசாத் தமிழன் தொகுப்பு கிடைக்கிறது. ஆனால் இரட்டைமலை சீனிவாசனின் இதழ்கள் கிடைக்கவில்லை.
இரட்டைமலை சீனிவாசனின் சகோதரி தனலட்சுமியின் கணவர்தான் அயோத்திதாசர்.
பாரதியின் கனவு
பாரதி
என்ன சொல்கிறான், தமிழையே புகழ்ந்து கொண்டிருக்காதே. அது செம்மொழி, சிறந்த மொழி என்று
நீ கருதினால் அதை உலகம் ஒப்புக்கொள்ளும்படியாக நீ செய்ய வேண்டும் என்கிறான். சும்மா
சொல்லிச் செல்லவில்லை. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்கிறான். அதனால் தான்
மகாகவி. அவன் கருத்துக்கள் என்றும் மாறாது.
“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.”
என்கிறான்.
பாரதியின்
கனவை நனவாக்கிய முதல் தமிழர் என்றால் தனிநாயக அடிகளைத்தான் சொல்ல வேண்டும். அவர்
Tamil Culture என்ற தலைப்பில் ஒரு காலாண்டு இதழை நடத்தினார். அதில் தமிழ் இலக்கியம்
பற்றிய ஆங்கில மொழிபெயர்ப்புக் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டார். சிறந்த ஆசிரியர்களை,
கட்டுரையாளர்களைக் கொண்டு அவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டார். அப்போதெல்லாம் தமிழ்
எம்.ஏ. படிப்பு என்றாலும் இரண்டு தாள்கள் ஆங்கிலம் அதில் உண்டு. ஆக தமிழோடு அவர்கள்
ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பர். டாக்டரேட் தீஸிஸ் எல்லாம் ஆங்கிலத்தில்தான்
எழுத வேண்டும், அது தமிழ் பற்றிய ஆய்வாக இருந்தாலும் கூட. மு.வ. தமிழ்த்துறைத் தலைவராக
வந்த பிறகுதான் இது மாறியது, தமிழ்ப் படிப்பிற்கு ஆங்கிலம் வேண்டாம் என்று. தமிழாய்வுக்கு
தீஸிஸ் ஆங்கிலத்தில் வேண்டாம் என்று மாற்றியவர் அவர்தான். சொல்லப்போனால் அவருடைய முனைவர்
பட்ட ஆய்வே ஆங்கிலத்தில்தான். பின்னர்தான் அது ‘சங்க இலக்கியத்தில் இயற்கை’ என தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு
வெளியானது. அவருக்கே ஆறுக்கு மேற்பட்ட மொழிகள் தெரியும். பல மொழிகள் கற்றவராக இருந்ததால்
அவர்கள் எல்லம பரந்துபட்ட கண்ணோட்டம் உடையவராக இருந்தனர். இல்லாவிட்டால் மொழி நூல்,
மொழி வரலாறு எல்லாம் எழுத முடியாது. அவர்தான் ஆராய்ச்சி அணுகுமுறைகள், நெறிகள் போன்றவற்றையெல்லாம்
எம்.ஏ.விற்குப் பாடமாகக் கொணர்ந்தார்.
அண்ணா
அண்ணா
முதலமைச்சர் ஆனதும் முதன்முதலில் கையெழுத்துப் போட்டதே வாஞ்சிநாதனின் மனைவி பென்ஷனுக்கு
ஒப்புதல் வழங்கித்தான். அது குறித்து அவரது உதவியாளர், “ ‘இவர் காந்தியத்திற்கு எதிரானவர்.
அதனால் பென்ஷன் பெறத் தகுதி இல்லை’ என்று பக்தவச்சலம் ஃபைலில் எழுதி இருக்கிறார்” என்கிறார். உடனே அந்தக் கோப்பைக்
கொண்டுவரச் சொல்கிறார் அண்ணா. அதை வாங்கிப் பார்த்தால், பக்தவச்சலம், “Not eligible for freedom fighter’s pension” என்று எழுதி கையெழுத்திட்ட குறிப்பு இருக்கிறது. அதன் கீழே அண்ணா எழுதுகிறார்.
“வாஞ்சிநாதன் ஆஷைச் சுட்டது 1911, ஜூன். அண்ணல் காந்தியடிகள், தென் ஆப்பிரிக்காவில்,
அகிம்சையையும், சத்தியாகிரகத்தையும் பரீட்சார்த்தமாக முயற்சி செய்ய ஆரம்பித்தது அப்போதுதான்,
அவர் இந்தியாவிற்கு வந்ததே 1914ல் தான். ஆகவே வாஞ்சிநாதன் ஆஷைச் சுட்ட காலத்தில், இந்தியாவில்
அகிம்சை, சத்தியாக்கிரகம் என்ற பேச்சே எழவில்லை. ஆகவே, “eligible for pension” என்று அவர் குறிப்பு எழுதினார்.
அண்ணாவிடம் சொந்தமாக கார் கூட இல்லை. காமராஜர், ராமமூர்த்தியிடம் “நந்தி ஹில்ஸுக்குச்
சென்று ஓய்வெடுங்கள்” என்று சொல்லியனுப்புகிறார். அண்ணா போகவில்லை. ‘சிம்லாவுக்குச் சென்று ஓய்வெடுங்கள்” என்று நேரு ஜோதிபாசு மூலம் சொல்லியும்
அண்ணா கேட்கவில்லை. அவர் மிகவும் எளிமையாகவே வாழ்ந்தார். முதலமைச்சர் ஆனதும் சம்பளத்தைக்
குறைத்தவர் அவர்தான். அதிகாரிகளுக்கு இத்தனை ஜீப்புகள், செலவுகள் தேவையில்லை என்று
குறைத்தவரும் அவர்தான். மக்களும் அரசும் இணைந்து தங்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்து
கொள்ள வேண்டும் என்று அவர் ‘சீரணிப் படை’ என்பதை உருவாக்கினார். அவரோடு அது போய்விட்டது.
அன்றும் இன்றும்
நான்
38 ஆண்டுகாலம் ஆசிரியராகப் பணியாற்றியவன். என்னிடம் மாணவர்கள், “சார், எங்களிடம் படிக்கும்
பழக்கமே இல்லை. நல்ல நூல்களைப் பரிந்துரையுங்கள்” என்று கேட்டால் மு.வ., கல்கியின் நாவல்களைப் பரிந்துரைப்பேன்.
வரலாறு என்றால் வெ.சாமிநாத சர்மா. இந்த மூன்று பேரின் புத்தகங்களை ஒருவன் படிக்க ஆரம்பித்துவிட்டான்
என்றால் பிற்காலத்தில் அவன் எல்லாப் புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்து விடுவான். இந்தக்
காலத்திற்கும் கூட நான் கல்கியின் வரலாற்று நாவல்களைப் பரிந்துரைப்பேன். இன்றைக்கு
ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் எனப் பலரும் நன்றாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு
சினிமா மோகம் அதிகமாகி விட்டது. நீங்கள் கவிஞர் என்றால் திரைப்படத்திற்குப் பாடல் எழுதும்
மோகம். எழுத்தாளர் என்றால் கதை-வசனம் எழுதும் மோகம். அப்போதுதான் பலரால் கவனிக்கப்
படக் கூடும் என்ற எண்ணப்போக்கு இருக்கிறது. வருமானமும், புகழும் கூடவே கிடைக்கிறது.
ஆனால் அன்றைக்கு சினிமா வேறு மாதிரி இருந்தது. நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது
வந்த படம் ‘ஏழை படும் பாடு.’ பக்ஷிராஜா ஸ்டூடியோ தயாரிப்பு. சுத்தானந்தபாரதிதான் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
விக்டர் ஹ்யூகோவின் கதை. நாகையா, பாலையா, ஜாவர் சீதாராமனின் நடிப்பு மறக்கவே முடியாது.
நான் பல தடவை பார்த்த படம் அது. இன்றைக்கு அப்படி ஒரு படம் வந்திருக்கிறது என்பதே பலருக்குத்
தெரியாது. அந்தக் காலகட்டம் அப்படி இருந்தது.
அன்றைக்குப்
பள்ளிகள் பாரதியார் பாடல், திருக்குறள் ஒப்புவித்தல், பாரதிதாசன் பாடல் என்றெல்லாம்
பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் நடக்கும். இன்றைக்கு பள்ளிகளில் சினிமாதான்
ஆதிக்கம் செலுத்துகிறது. சினிமாக்களைப் பார்த்து அதே போன்று ஆடும் ரிகார்ட் டான்ஸ்தான்
அதிகமாகி விட்டது. Literature Prefers Oldest. Science Prefers Latest என்று சொல்வார்கள்.
இலக்கியத்திற்கு எப்போதுமே பெருமை பழமையில்தான்.
அன்றைக்குத்
தலைவர்களுக்குள்ளேயே நல்ல போட்டி இருந்தது. ஆதித்தனார் – நாம் தமிழர் இயக்கம், ம.பொ.சி.
– தமிழரசு கட்சி, ஜீவானந்தம் – கலை இலக்கியப் பெருமன்றம், அண்ணா தமிழைச் சொல்லியே ஆட்சிக்கு
வந்தவர். இந்தத் தலைவர்களுக்குப் பின்னால் நிறையப் படித்தவர்கள், கற்றவர்கள் இருந்தார்கள்.
தமிழரசுக் கட்சியில் மு.வ. தெ.பொ.மீ., ந.சஞ்சீவி போன்றோ இருந்தனர். அதே போல அண்ணாவுக்குப்
பின்னால் தில்லை வில்லாளன் எம்.ஏ.பி.எல், ராதாமணாளன், எம்.எஸ். வெங்கடாசலம் எம்.ஏ.பி.எல்.
என்று பலர் இருந்தனர். இவர்களுக்குத் தமிழ்தான் தாய்மொழியா அல்லது ஆங்கிலமா என்று நினைக்குமளவுக்குச்
சரளமாக ஆங்கிலத்தில் பேசக் கூடியவர்கள். பல மணி நேரத்திற்குச் சளைக்காமல் ஆங்கிலத்திலும்
தமிழிலும் பேசுவார்கள். கவிதையை மேடையிலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பேசுவார்கள்.
இவர்கள் எல்லாம் இந்த ஆற்றலை எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் முன்னமேயே வளர்த்துக் கொண்டவர்கள்.
அந்த அளவுக்கு அன்றைக்குக் கல்வி இருந்தது. ஆனால் இன்றைக்குப் பெற்றோர்களே தமிழை ஒதுக்கும்
நிலை. தமிழில் படித்தால் வேலை கிடைக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருக்கிறது. தமிழ்
ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்றும் அதில் பாண்டித்யம் பெறுவது பெரிய அறிவே இல்லை என்றும்
நினைக்கின்றனர். படிப்பு என்பது இன்றைக்கு வணிகமாகிவிட்டது. வெளிநாடுகளுக்குச் சென்று
பொருளீட்டுவதற்கான ஒரு பாஸ்போர்ட் ஆகி விட்டது இன்றைய கல்வி முறை.
அதுபோல
இலக்கியமும் வணிக நோக்கம், ஜாதிக் கண்ணோட்டம், கட்சிக் கண்ணோட்டம் ஆகி விட்டது. சில
இலக்கிய அமைப்புகளின் விருதுகளே அவர்களது வளையத்துக்குள் வந்தால்தான். இல்லாவிட்டால்
இல்லை என்ற நிலைமை இன்றைக்கு இருக்கிறது. இது மிகவும் வருத்தத்திற்குரியது.
ஞானாலயாவில் புத்தக வரிசை
எழுத்தாளர்களின்
அடிப்படையில் புத்தகங்களை வரிசைப்படுத்தியுள்ளோம். காந்தி ஒரு ராக்கில் என்றால், முதல்
வரிசையில் காந்தி பற்றிய ஆங்கிலப் புத்தகங்கள். பின்னால் தமிழ்ப் புத்தகங்கள். அதுபோல
சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ணர் நூல்களுக்கு, முதலில் தமிழில் வந்தவை, பின்னர் ஆங்கிலத்தில்
வெளியானவை. பின்னால் கீதையின் மொழிபெயர்ப்புகள் இருக்கும். அடுத்த வரிசை பாரதியார்
நூல்கள் முழுமையும். பின்னால் குரான், பைபிள். அடுத்து ராமாயணம். வால்மீகி, துளஸிதாசர்,
கம்பன் எல்லாருடைய பதிப்புகளும் இருக்கும். அடுத்து உரையாசிரியர்கள் திரு,வி.க., மறைமலையடிகள்
நூல்கள். தொடர்ந்து திருக்குறள் அனைத்து பதிப்பு, ஆராய்ச்சி நூல்கள். தொடர்ந்து தமிழ்நாட்டு
வரலாறு, மன்னர்கள் வரலாறு. ஒரு ராக்கில் சிறுகதைகள். துறைவாரியாகவும், நூல் பெயர் வாரியாகவும்
நூல்களை வரிசைப்படுத்தியுள்ளோம்.
விழா
மலர்கள், செய்தித் தொகுப்புகள், கட்டுரைகள், தின இதழ்கள் என்று தனியாகவும் வரிசைப்படுத்தி
வைத்திருக்கிறோம். வாசனின் ‘நாரதர்’ தொகுப்பு எங்களிடம் உள்ளது. ஏ.கே.செட்டியாரின் உலக நாடுகள் குறித்த பயண நூல்கள்,
சக்தி வை. கோவிந்தனின் பிரசுரங்கள் என பல்வேறு இதழ்களையும், நூல்களையும் இங்கே சேகரித்து
வைத்துள்ளோம். 1578ல் தமிழில் அச்சான முதல் நூலான ‘தம்பிரான் வணக்கம்’ நூலின் நகல் இங்குள்ளது. ‘தீபம்’ இதழ் இருக்கிறது. மாதவையாவின்
பஞ்சாமிர்தம், வ.வே.சு.ஐயர் நடத்திய பாலபாரதி, குகப்ரியை ஆசிரியையாக இருந்த மங்கை,
கலைமகள், சக்தி, சுதேசமித்திரன் இதழ் தொகுப்புகள், ஜம்புநாதன் தமிழாக்கிய வேதத் தொகுப்புகளும்
உள்ளன. அக்காலத்தில் ஆங்கிலேய அரசால் தடை செய்யப்பட்ட பல நூல்களும் இங்கே உள்ளன.
வழிபாட்டு மனப்பான்மை
இந்தியர்களுக்கு,
குறிப்பாக தமிழர்களுக்கு வழிபாட்டு மனப்பான்மை அதிகம் உண்டு. பூஜா மனப்பான்மை. அதனால்
யாராவது ஏதாவது எதிராகச் சொன்னால் அடிக்க வருவார்களே தவிர, சிந்திக்க மாட்டார்கள்.
தாகூர் எழுதிய நூலைத் தழுவித் தான் ‘குளத்தங்கரை அரசமரம்’ எழுதப்பட்டது என்று சொல்வார்கள்.
நான் என்ன சொல்கிறேன் என்றால், Greatmen think Alike. “The world is my home; All
are my brethren” என்று
Thomas Paine சொல்லியிருக்கிறார். அவர் என்ன, “யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்று சொன்ன கணியன் பூங்குன்றனாரைப்
படித்துத்தான் அப்படிச் சொல்லியிருக்கிறார் என்று நாம் சொல்ல முடியுமா?
நம்முடைய
வழிபாட்டு மனப்பான்மையும், உயர்வு மனப்பான்மையும் உண்மையைத் தேடுவதில் பெரிய இடர்ப்பாடாக
இருக்கிறது. வைக்கம் போராட்டத்தில் யார் யார் கலந்து கொண்டார்கள் என்று நம்மிடம் பட்டியல்
உள்ளது. காந்தியோடு உப்புசத்தியாகிரகத்தில் கலந்து கொண்டவர்கள் யார் என்ற பட்டியல்
இருக்கிறது. ஆனால் வேதாரண்யம் உப்புச்சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டவர்கள் பற்றி முழுமையான
பட்டியல் நம்மிடையே இல்லை. பாரதி புதிய ஆத்திசூடியில் ‘சரித்திரம் தேர்ச்சி கொள்’ என்கிறான். ஏனென்றால் நம்மிடம்
வரலாற்று உணர்வோ, பெருமிதமோ, அதனைப் போற்றிப் பாதுகாக்கும் மனப்பான்மையோ கிடையாது.
தேடல் உள்ளவர்களே இன்றைக்குக் குறைந்து போய் விட்டார்கள். இந்தக் காலத்தில் ஆய்வாளர்கள்
பலர் உழைக்க விரும்புவதில்லை. பலர் கடமைக்காகச் செய்கின்றனர். ஆராய்ச்சி செய்ய விரும்பும்
பலருக்கு உண்மையான ஆர்வம் இருப்பதில்லை. ஏன், பலருக்கு ஆய்வுத் தலைப்புகளையே சரியாகத்
தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை. ஒரு சிலர் தொலைபேசியில் அழைத்து, “நீங்களே பார்த்துச்
சொல்லிவிடுங்கள் சார், நாங்கள் எழுதிக் கொள்கிறோம்” என்கிறார்கள். இப்படியான நிலைமை ஆரோக்கியமானதல்ல.
அந்தக் காலத்து இலக்கிய இதழ்கள்
‘வாசகர்
வட்டம்’ அந்தக் காலத்தில்
அவ்வளவு சிறப்பான பணிகளைச் செய்திருக்கிறது. 45 புத்தகங்களை வெளியீட்டிருக்கிறார்கள்.
‘அம்மா வந்தாள்’ தி.ஜானகிராமனின்
நாவல். வாசகர் வட்டத்திற்காக நேரடியாக எழுதப்பட்ட நாவல். ஜானகிராமனுக்கு வாரம்/மாதம்
ஓர் அத்தியாயம் என தொடர்கதை எழுதித்தான் பழக்கம். ஒரே மூச்சில் அச்சுக்காக அவர் எழுதிய
நாவல் என்றால் அது ‘அம்மா வந்தாள்’ தான். மிகச் சிறப்பான நாவல். கத்திமேல் நடப்பது மாதிரியான விஷயத்தை சிறப்பாகக்
கொண்டு சென்றிருப்பார் ஜானகிராமன். அவர்கள் ‘நூலகம்’ என்ற பத்திரிகையையும் வெளியிட்டார்கள்.
மணிக்கொடிக்குப்
பிறகு எழுத்தாளர்களை ஆதரித்தது ‘கலாமோகினி’ இதழ். அதன் ஆசிரியர் வி.ஆர். ராஜகோபாலன் என்னும் சாலிவாஹனன் தன் நிலங்களை எல்லாம்
விற்று பத்திரிகை நடத்தினார். முதன்முதலில் எழுத்தாளர்களின் படத்தை அட்டையில் போட்டு,
அவர்கள் சிறப்பைப் பற்றி ‘நமது அதிதி’ என்று கட்டுரையும் எழுதி வெளியிட்டவர் அவர்தான். இன்றைக்கு சாலிவாஹனனை யாருக்காவது
தெரியுமா? கலைஞன் பதிப்பகம் ‘கலாமோகினி’ இதழ்த் தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்
எம்.ஏ.வில் புதுக்கவிதை, நாவல், சிறுகதை எல்லாம் பாடமாக இடம் பெறக் காரணமே சி.சு.செல்லப்பாதான்.
அது தெ.பொ.மீ. மதுரை பல்கலையில் துணைவேந்தராக இருந்தபோது நிகழ்ந்தது. செல்லப்பா எம்.ஏ.
தமிழில் இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்களையும் சேர்க்க வேண்டும் என்று மிகவும் வலியுறுத்தினார்.
அப்படித்தான் அவை பாடத்திட்டத்தில் இடம்பெற்றன. கவிதை பற்றிய பாடங்களைக் கோடை விடுமுறையில்
ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தார் செல்லப்பா. நாவல், சிறுகதை பற்றி வகுப்பெடுத்தனர்
சிட்டியும், சிவபாதசுந்தரமும். செல்லப்பா செய்த அரிய சாதனை இது. இன்றைக்கு இது எத்தனை
பேருக்குத் தெரியும்?
“மற்ற
நூலகங்களில் நூலகர் உங்களுக்குத் தேவையான நூல்களைத் தேடி எடுத்துத் தரலாம். ஆனால் இங்கு
உங்களுக்குத் தேவையான நூல் என்ன, அதன் பின்னணி, பதிப்பு பற்றிய வரலாறு, அதோடு தொடர்புடைய
பிற சம்பவங்கள், பிற நூல்கள் என எல்லாவற்றையும் ஒருங்கே தெரிந்து கொள்ள முடியும். என்னால்
விளக்கவும் முடியும். பல நூல்கள் இங்கிருந்து பெற்று மறுபதிப்புச் செய்யப்பட்டுள்ளன.
இது முழுக்க முழுக்க எங்கள் சுய உழைப்பால் ஆன நூலகம். இந்த நூலகம் இங்கேயேதான் இருக்க
வேண்டும். தற்போது பழைய நூல்களை டிஜிடலைஸ் செய்து சேகரித்து வருகிறோம். நவீன தொழில்நுட்பங்களைப்
பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளட்டும். இந்த நூலகம் பற்றி,
இதன் சிறப்பு பற்றி 21 மணி நேரத்திற்கு மேல் (துண்டு துண்டாக) நான் பேசியது தனிப்பட்ட
முறையில் என் நண்பர்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அது 17 டிஸ்கில் இருக்கிறது. இன்னும்
பேச வேண்டியது நிறைய இருக்கிறது. பாரதி கிருஷ்ணகுமார் என்னைப் பற்றி, ஞானாலயா பற்றி
ஒரு டாகுமெண்ட்ரியைத் தயார் செய்து கொண்டிருக்கிறார். இப்போதெல்லாம் மெள்ள மெள்ளச்
சோர்வு எட்டிப் பார்க்கிறது. மதியம் ஒருமணி நேரமாவது ஓய்வெடுத்தே ஆக வேண்டிய கட்டாயம்
இருக்கிறது. மருத்துவரோ வயதாவதன் தளர்ச்சி என்கிறார். ஆமாம், எனக்கு 78 வயது முடியப்
போகிறது.”
சொல்லிவிட்டுச்
சிரிக்கிறார், கிருஷ்ணமூர்த்தி. கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் உரையாடி, ‘வலம்’ இதழுடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து
கொண்டமைக்காக அவருக்கு நன்றி கூறி விடைபெற்றேன்.
ஞானாலயா
நூலக முகவரி: ஞானாலயா ஆய்வு நூலகம், எண்.6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம் அஞ்சல்,
புதுக்கோட்டை – 622002, தமிழ்நாடு, இந்தியா.
*
சில புத்தகங்கள்,
சில சுவாரஸ்யங்கள்
* தமிழில்
கலித்தொகையைப் பதிப்பித்தவர் சி.வை. தாமோதரம் பிள்ளை. மிகப் பெரிய தமிழறிஞர். சென்னைப்
பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரி என்ற சிறப்பு இவருக்கு உண்டு. அவர் ஈழத்தவர். சைவராக
இருந்து, பின் கிறித்தவரானவர். பின் மீண்டும் சைவர் ஆனவர் என்று சொல்வார்கள். அவர்
பயன்படுத்திய சதுரகராதி என்னிடம் இருக்கிறது. 1880ம் வருடத்தது. அதில், ‘தாமோதரம் பிள்ளை,
பாளையங்கோட்டை’ என்று அவரது
கையெழுத்து இருக்கிறது. அங்கு ஜட்ஜாக இருந்திருக்கிறார். அப்போது வாங்கிய புத்தகம்
போலிருக்கிறது. அதில் என்ன விசேஷம் என்றால், அந்தச் சதுரகராதியை அச்சிட்டவர்கள் ‘முருகன்
துணை’ என்று அச்சிட்டிருக்கிறார்கள்.
இவர் அதை அடித்துவிட்டு, அதற்கு மேல் சின்னதாக ஒரு சிலுவைக் குறியைப் போட்டு, கூடவே
இம்மானுவேல் துணை என்று எழுதியிருக்கிறார்.
* பெரியாரின்
ஞானசூரியன் என்ற நூல்தான், குடியரசின் முதல் வெளியீடு. அதை எழுதியவர் தயானந்த சரஸ்வதி.
அவருடைய இயற்பெயர் அப்புண்ணி நாயர். அவர் ஒரு மலையாளி. தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும்
புலமை பெற்றவர். அவரை அழைத்துக் கொண்டுவந்து கானாடுகாத்தானிலேயே தங்க வைத்து எழுத வைத்தது
வை.சு. சண்முகம் செட்டியார். அவர் ஒரு காந்தியவாதி. இவர் பாரதியையும், பாரதிதாசனையும்
ஆதரித்த வள்ளல். வ.வே.சு. ஐயர் குருகுலம் வாங்கம் இடமளித்தவர்.
செட்டியாரின்
வீட்டின் பெயர் ‘இன்ப மாளிகை.’ இப்போது மண்மேடு ஆகிவிட்டது. அவரது பேத்தியின் கணவர் தான் எஸ்.பி. முத்துராமன்.
தமிழுக்காகவும், சமூக முன்னேற்றத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் சண்முகம்
செட்டியார். தனது சொத்துக்களை எல்லாம் அதற்காக இழந்தவர். இறுதிக் காலத்தில் வறுமையில்
வாழ்ந்தார். அவர் 1927ல் பதிப்பித்த நூலை பெரியார் வாங்கி தனது பதிப்பகத்தின் முதல்
நூலாக 1929ல் வெளியிட்டார். சண்முகம் செட்டியார் பதிப்பித்த நூலின் விலை 1 ரூபாய்.
பெரியார் பதிப்பித்த நூலின் விலை நாலணா. அந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியவர்கள் வ.உ.சி.,
மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்ற பல தமிழ் அறிஞர்கள். இப்போதைய சுயமரியாதை
இயக்கப் பதிப்பில் நீங்கள் அதையெல்லாம் பார்க்க முடியாது. எடுத்துவிட்டார்கள்.
* பாரதிதாசனின்
முதல் தொகுதி 1938ல் வந்தது. குஞ்சிதம் குருசாமி வெளியிட்டது. அதன் சிறப்பு அதில் இருக்கும்
சமர்ப்பணப் பாடல்கள். அந்த நூல் வெளியாவதற்கு உதவி செய்தவர் யார் என்றால், சைவ சித்தாந்தப்
பெருமன்றத்தினுடைய தமிழ்நாட்டின் செயலாளர் நாராயணசாமி நாயுடு. ஆனால் அடுத்த பதிப்பில்
அந்த சமர்ப்பணப் பாடல் இல்லை.
* அட்டைப்படம்
இல்லாமல் நூலை வெளியிட்டவர் திரு,வி.க. அதைப் பார்த்துத் தான் மு.வ.வும் அட்டையில்
எந்தப் படமும் இல்லாமல் (மலர்விழி தவிர்த்து) தன் நூல்களை வெளியிட்டார். மு.வ. நாவல்களுக்கு
எல்லாம் அவரது மாணவர்கள் ரா.சீனிவாசன், மா.ரா.போ.குருசாமி போன்றோர் தான் முன்னுரை எழுதியிருப்பர்.
ஒரே ஒரு நூலுக்கு மட்டும் அவர் நீண்ட முன்னுரையை திரு,வி.க.விடம் வாங்கியிருக்கிறார்.
அந்த நூல் “திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்”. அற்புதமான முன்னுரை அது.
* வ.வே.சு.ஐயரின்
முதல் சிறுகதைத் தொகுப்பான ‘மங்கையர்க்கரசியின் காதல்’ அதற்கு ஆங்கிலத்தில் ராஜாஜி முன்னுரை
எழுதியிருக்கிறார். தமிழிலும் முன்னுரை எழுதியிருக்கிறார். ஒரே நூலுக்கு, இரண்டு முன்னுரைகள்.
இரண்டையும் எழுதியவர் ராஜாஜி என்பது இன்றைக்குப் பலருக்கும் தெரியாது. மற்றுமொரு முக்கியமான
சிறப்பு, அந்த நூலுக்கு, ஐயரின் மிக நெருங்கிய நண்பரான சாவர்க்கர் எழுதியிருக்கும்
அணிந்துரை. அது படிக்க மிக நெகிழ்ச்சியாக இருக்கும். இதெல்லாம் நினைவு கூர்வதற்குக்
கூட இன்று ஆட்கள் இல்லை. காரணம், பின்னால் வந்த பதிப்புகளில் இவையெல்லாம் இல்லை.
* வ.வே.சு.
ஐயரின் “Kural or The Maxims of Tiruvalluvar” என்னும் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு அவ்வளவு
அற்புதமானது 36 நாட்களில் அவர் திருக்குறளை மொழிபெயர்த்தார். எந்தெந்த இடங்களில் ட்ரூவும்,
போப்பும் தவறியிருக்கிறார்கள், தவறான பொருள் கொண்டிருக்கிறார்கள் என்று முன்னுரையில்
மிக அழகாக விளக்கியிருப்பார் அந்த நூலில். சித்பவானந்தர் அமைப்பு மூலம் அது மீண்டும்
வெளியாகியிருக்கிறது. ஆனால், ஐயர் எழுதிய முன்னுரை அதில் இல்லை.
* காந்தி
பற்றிய மிகப் பெரிய தொகுப்பு ஞானாலயாவில் உள்ளது. அதில் ஒன்று இந்திய அரசின் பப்ளிகேஷன்
டிவிஷன் வெளியிட்ட ஓர் அற்புதமான நூல்.
காந்தியைப் பற்றிய முழுமையான
நூல் என்று இதனைச் சொல்லலாம். அரிய படங்கள் இதில் இருக்கின்றன. ஜெயகாந்தன் உள்ளிட்ட
இங்கே வந்த பலரும் அந்தப் புத்தகத்தைப் பார்த்ததும் அதிலேயே மூழ்கிப் போய்விட்டனர்.
அந்த நூல் இப்போது அச்சில் இல்லை. அருணன் போன்றவர்கள், ஆப்பிரிக்காவில் காந்திக்கு
தமிழில் கையெழுத்துப் போடச் சொல்லிக் கொடுத்ததே இரட்டைமலை சினிவாசன்தான் என்பதாக எழுதியிருக்கிறார்கள்.
ஆனால், என்னுடைய தேடலில் அதற்கு ஆதாரமே கிடைக்கவில்லை. என்னிடம் இருக்கும் காந்தி குறித்த
எந்த நூல்களிலும் அதற்கு ஆதாரம் இல்லை. ஆனால், வாய்ப்பிருந்திருக்கலாம் என்பதையும்
மறுப்பதற்கில்லை.
* 1901ல்
வெளியானது வருண சிந்தாமணி என்ற நூல். அதற்கு பாரதியார் சாற்றுக்கவி வழங்கியுள்ளார்.
அந்த நூல் இங்கே உள்ளது.
* 1899ல்
வெளியான, மோசூர் வெங்கடசாமி ஐயர் தொகுத்த “Tamil Poetical Anthology” என்னும் நூலும் ஞானாலயாவில் உள்ளது.
* 1887ல்
வெளியான தமிழ்-லத்தீன் அகராதி உள்ளது.
இது போன்று ஆயிரக்கணக்கான அரிய நூல்கள்
இங்கே உள்ளன.
-ஞானாலயா
கிருஷ்ணமூர்த்தி