Posted on Leave a comment

வலம் டிசம்பர் 2016 இதழ் – முழுமையான படைப்புக்கள்

வலம் டிசம்பர் 2016 இதழின் படைப்புகளை ம்ழுவதுமாக இங்கே வாசிக்கலாம்.
நம்மை எதிர்நோக்கும் பணி – குருஜி கோல்வல்கர் (தமிழில்: கிருஷ்ணன் சுப்ரமணியன்)
லா.ச.ரா : அணுவுக்குள் அணு – பா. ராகவன் 
சங்கப் பாடல்களின் ‘கவிதை’ – ஜடாயு 
விடாது கறுப்பு! – கே. ஜி. ஜவர்லால் 
மனித வடிவில் காருண்யம்: ஸ்ரீ இராமானுஜர் – சுதர்ஸன்
 
அடாலஜ் படிக்கிணறு – ஜெ. ராம்கி
GST ஒரு புரிதல் – லக்ஷ்மணப் பெருமாள்
பீவர்களின் அணை – ஹாலாஸ்யன் 
வெறுப்பரசியல் – பிரவீண் 
ஷா பானு வழக்கு – சந்திர மௌளீஸ்வரன் 
களங்கமில்லாதவர்கள் கல்லெறியுங்கள் – ஆமருவி தேவநாதன்
கொல்லப்படும் கோழிக் குஞ்சுகள் – சுதாகர் கஸ்தூரி 
அகத்தவரும் புறத்தவரும்: நமது பாரம்பரியத்தின் பெருமையைப் பேசுவது யார்? – ராஜிவ் மல்ஹோத்ரா (தமிழில்: கனகராஜ் ஈஸ்வரன்)
லாலா லஜ்பத் ராய்: மறக்கப்பட்ட ஒரு தலைவர் – அரவிந்தன் நீலகண்டன்
 
Posted on Leave a comment

லாலா லஜ்பத் ராய்: மறக்கப்பட்ட ஒரு தலைவர் – அரவிந்தன் நீலகண்டன்

அக்டோபர்
30 1928. லாகூரின் வீதிகளில் மிகப் பெரிய எண்ணிக்கையில் மக்கள் குழுமியிருந்தார்கள்.
சைமன் கமிஷனை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்திருந்தது. அதை எதிர்த்து ’சைமனே திரும்பிப்
போ’ என்கிற கோஷத்துடன் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்திருந்தது. அகிம்சை முறையில்
அப்போராட்டம் நடந்து கொண்டிருந்தது. எதிர்ப்பு ஊர்வலம் ‘பாரத மாதா வெல்க’, ‘மகாத்மா
காந்தி வெல்க’ எனும் கோஷங்களுடன் நடந்து கொண்டிருந்தது.  அந்த ஊர்வலத்தை எப்படியாவது தோல்வி அடைய செய்ய வேண்டுமென்பது
பிரிட்டிஷ் அதிகாரிகளின் எண்ணம். அகிம்சையை மக்கள் கைவிட வேண்டும்; ஊர்வலத்தின் ஒழுங்கு
குலைய வேண்டும் என்ற நோக்கங்களுடன் காவல்துறை செய்த சீண்டல்கள் அனைத்தும் வீணாகிப்
போயின. அதற்குக் காரணம் யார் என்பதை விரைவில் பிரிட்டிஷ் அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டார்கள்.
கையில் குடையை வைத்துக்கொண்டு தலையில் தலைபாகை கட்டி நின்ற ஒரு வயதான மனிதர். அவர்தான்
மந்திரவாதி போல கூட்டத்தை அகிம்சை வழிப்படுத்தியிருந்தார். அவரை மீறி மக்கள் செயல்பட
மாட்டார்கள். அப்போது அவரைத் தாக்கினால் என்ன ஆகும்? நிச்சயம் மக்களின் ஒழுங்கு குலையும்.
அவர்கள் கண்முன்னாலேயே அவரை அடித்து வீழ்த்தி குற்றுயிரும் கொலையுயிருமாக்கிப் போட்டால்
அப்புறம் இவர்கள் இதே அகிம்சையுடன் இருப்பார்களா என்ன! லாகூரின் சீனியர் போலீஸ் சூப்பிரண்டெண்ட்
குதிரையிலிருந்தபடி உத்தரவை அனுப்பினார். ‘குடையுடன் நிற்கும் அந்த மனிதனைக் கவனியுங்கள்’.
லாலா லஜ்பத்ராயின்
வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் ஃபெரோஸ் சந்த். எவ்வித மிகைப்படுத்தலும் இல்லாமல், ஆனால்
உணர்ச்சியுடன் அதன்பின் நிகழ்ந்தவற்றை அவர் வர்ணிக்கிறார்:
ஒடிந்து விழுந்துவிடுகிற
தளர்ந்த ஒரு ஜீவனாகத்தான் அவர் இருந்தார். ஆனால் அவரது உள்ளாற்றல் வெல்லப்பட முடியாத
ஒன்றாக இருந்தது. ஒரு மனிதனாக நிமிர்ந்து நின்று அடிகளை வாங்க அவரால் முடிந்தது. அவர்
ஓடவில்லை. துடிக்கவில்லை. அங்கிருந்து அகலவில்லை. அவரது ஆட்கள் திரும்ப அடிப்பதை அவர்
அனுமதிக்கவும் இல்லை. அவரது தளகர்த்தர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு அவர்மீது விழும் அடிகளை
தம்மீது ஏந்தினார்கள். ஆனால் அடிகளின் பெரும்பகுதி அவர் மீதே விழுந்தது. அவருடன் இருந்த
டாக்டர் கோபிசந்த ஷார்கவா பின்னர் வெறும் சாட்சியாக மட்டுமல்லாமல் மிக அண்மையில் அந்த
அடிகள் விழுந்ததை தாமும் வாங்கிக் கொண்டவர் என்கிற முறையில் சொன்னார்: இத்தனை அடிகளை
வாங்கிக்கொண்டு அங்கேயே விழாமல் எப்படி ஒரு மனிதனால் நிற்க முடியும்! அவர் அடிகளை வாங்கியபடி
கேட்டதெல்லாம் ஒன்றுதான், இப்படி அடிக்கிற அதிகாரியின் பெயர். அதற்குப் பதிலாக மேலும்
லத்தி அடிகள் விழுந்தன. மீண்டும் அதே உக்கிரத்துடன் அதிகாரியின் பெயரை அவர் கேட்டார்.
மீண்டும் மேலும் மேலும் அடிகள்!
அத்தனை அடிகளையும்
வாங்கிக்கொண்டு அவர் அந்த ஊர்வலத்தின் முன்னணியில் நடந்து சம்பிரதாயமாக ஊர்வலத்தை முடித்து
வைத்தார். அதன் பின்னரும் அவர் மருத்துவமனை செல்லவில்லை. அன்று மாலையே பொதுக்கூட்டம்.
அதில் அவர் கூடியிருந்த மக்களுக்கு, அமைதி காத்து அகிம்சாவாதிகளாக இருந்தமைக்கு நன்றி
கூறினார். பின்னர் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வார்த்தைகளை அவர் உச்சரித்தார்!
என் மீது விழுந்த ஒவ்வோர் அடியும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் கல்லறையில்
அறையப்பட்ட ஆணிகள்.
அவரது தேசபக்தி
அடிகளால் உடைந்துவிடாத ஒன்றுதான். ஆனால் அவரது வயது முதிர்ந்த உடல் அத்தனை அடிகளைத்
தாங்கிக் கொள்ள முடியவில்லை. நவம்பர் 17 1928 இல் லாலா லஜ்பத்ராய் மறைந்தார்.
அவர் வாழ்ந்த
வாழ்க்கைத்தான் எத்தகையது!
1907 – பிரிட்டிஷ்
அதிகாரிகளின் அச்சமும் பதட்டமும் உச்சங்களில் இருந்தன. 1857 எழுச்சியின் ஐம்பதாவது
ஆண்டு. பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் பலவிதமான உளவுத்துறை அறிக்கைகளால் உள்ளூர நடுங்கிக்
கொண்டிருந்தது. பஞ்சாப் எல்லைப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் இந்தியப் படைவீரர்கள் புரட்சிக்குத்
தயாராக உள்ளனர். அவர்களது தலைவர் லாலா லஜ்பத் ராய். அவரிடமிருந்து ஒரேஒரு வார்த்தை.
அவர்கள் கலகம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். கிராமப்புறங்களில் மக்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு
வரி கொடுக்காமல் இருக்க ஆரம்பித்துவிட்டார்கள். பிரிட்டிஷ் அரசுக்கும் ராணுவத்துக்கும்
தேவையான பொருட்களை விற்பனை செய்யவில்லை. காவல்துறையினரையும் ராணுவத்தினரையும் தேசத்துரோகிகள்
என மக்கள் சீண்டுகின்றனர்; அவர்களை ஒதுக்குகின்றனர். அவர்களைப் பதவி விலகச் சொல்கிறார்கள்.
இதற்கெல்லாம் பின்னால் இருப்பது ஆரிய சமாஜத்தின் ஒரு ரகசியக் குழு. அதன் பின்னால் இருப்பவர்  உளவுத்துறையால் வைஸ்ராய்க்கு அனுப்பப்பட்ட ரகசிய
தந்தி கூறியது:
இந்த முழு இயக்கத்தின்
தலைமையும் மையமும் லாலா லஜ்பத் ராய் என்கிற கத்ரி வழக்கறிஞர்தான். இவர் பஞ்சாபின் காங்கிரஸ்
பிரதிநிதியாக இங்கிலாந்துக்கு வந்தவர். அவர் ஓர் அரசியல் ஆர்வலர்; புரட்சியாளர்; அவருக்கு
உந்துசக்தியாக இருப்பது, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது அவருக்கு இருக்கும் உக்கிரமான
வெறுப்பு.
லாலாஜி என அழைக்கப்பட்ட
லஜ்பத் ராய், கத்ரி அல்ல. ஆனால் அவருக்கு சாதிகளில் நம்பிக்கை இல்லை. எனவே அது பிரச்சினை
இல்லை. ஆனால் இதன் விளைவாக அவர் பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார். விசாரணை இல்லாமலே.
வைஸ்ராய் அதை நியாயப்படுத்தினார். நாடு கடத்தப்பட்டுச் சிறை வைக்கப்படும் சூழலில்
1907ல் அவர் தன் தந்தைக்கு எழுதினார்:
அரசாங்கத்தை எதிர்க்கும்போதே தீயுடன் விளையாடுகிறோம் என்று தெரிந்துதான் களத்தில்
இறங்குகிறோம்…  விளைவு எதுவென்றாலும் தீரத்துடன்
எதிர்கொள்வோம்.
கடல் கடந்து
விடுதலை போராட்டத்துக்காக இந்தியர்களை இணைப்பதிலும் அவர் ஆர்வத்துடன் ஈடுபட்டார்.
1914ல் அமெரிக்காவில் அவர் செயல்பட்டார். முதல் உலகப்போர் சூழலில் எப்படி இந்தியர்கள்
செயல்பட வேண்டுமென திட்டங்கள் வகுத்தார். இங்கிலாந்தின் இடத்தில் ஜெர்மனியை வைக்க,
கடல் கடந்து வாழும் சில இந்திய விடுதலைப் போராளிகள் தயாராக இருந்தனர். ஆனால் லாலாஜிக்கு
அதில் ஈடுபாடில்லை:
நான் ஒரு இந்திய
தேசபக்தன். என் தேசத்துக்கு விடுதலை வேண்டுமென்பது என் நோக்கம். ஆனால் ஜெர்மானியரைப்
பொருத்தவரையில் நான் அவர்களை ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை. …நான் எப்போதுமே ஒரு விஷயத்தை
ஏறக்குறையை கண்மூடித்தனமான ஒரு கொள்கையாகக் கொண்டிருக்கிறேன். அன்னியர் உதவியுடன் பெறும்
சுதந்திரம் மதிப்பில்லாத ஒன்று.
ஆனால் அப்படிப்பட்ட
முயற்சிகளில் இறங்கியவர்களை அவர் எதிரிகளென்றெல்லாம் கருதவில்லை. மாறாக அவர்கள் அம்முயற்சிகளில்
தோல்வி அடைந்து கஷ்டப்பட்ட காலங்களில் உதவினார். அப்படி லாலாஜியிடன் உதவி பெற்றவர்களில்
ஒருவர், பின்னாட்களில் கம்யூனிஸ்ட் கட்சியை இந்தியாவில் உருவாக்கிய எம்.என்.ராய்.
லாலாஜியின்
ஆதர்ச இந்தியா அனைத்து மதப்பிரிவினருக்கும் உரியது. ஹிந்து-முஸ்லிம் பிரச்சினை பிரிட்டிஷாரால்
உருவாக்கப்பட்டதென்றே அவர் நம்பினார். 1924ல் லாலாஜி எழுதுகிறார்:
ஒரு வகுப்பினர்
அல்லது ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரால் அப்படியே உள்ளிழுத்துக் கொள்ளப்படுவதை நாம்
விரும்பவில்லை. அனைவரும் ஒரு முழுமையில் ஒருங்கிணைவதையே நாம் விரும்புகிறோம்.  அந்த ஒருங்கிணைப்பு எந்தக் குழுவினரையும் எவ்விதத்திலும்
குறைக்கக் கூடியதாக இருக்காது. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள்,
சமணர்கள் என எவரும் அந்த அடையாளங்களைத் துறந்து இந்தியராக வேண்டியதில்லை. அவர்கள் தம்மை
இந்தியராகவும் அதே நேரத்தில் முஸ்லிம்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் இதரர்களாகவும் அடையாளப்படுத்திக்
கொள்ளலாம். அவர்கள் தம்மை இந்திய முஸ்லிம்களாகவும் இந்தியக் கிறிஸ்தவர்களாகவும் நினைப்பார்களென்றால்
சமூகம் சுமுகமாக இருக்கும்.
ஆனால் இப்படி
மதச்சார்பின்மையில் தோய்ந்திருந்த லாலாஜியை உலுக்கும் சில யதார்த்தங்களை அவர் சந்திக்க
நேர்ந்தது. அவர் இஸ்தான்புல் சென்றிருந்தபோது இஸ்லாமிய அகிலம் – கலீபேத் அரசு ஒன்றை
அமைப்பதற்கான திட்டம் வகுக்கப்படுவதைக் கண்டார். அதை உருவாக்கியவர் இந்தியாவைச் சார்ந்த
இஸ்லாமிய மௌல்வியான ஒபியத்துல்லா என்பவர். இந்தத் திட்டம் மிகவும் சமத்காரமாக அமைக்கப்பட்டிருப்பதை
லாலாஜி கண்டார். ஒபியத்துல்லா திட்டம் (Obeidylluah plan)  என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் முதல் உலகப்போரின்
இறுதியில் உருவான ஒன்று. இந்திய தேசியவாதிகளுடன் இணைந்து அவர்களின் பிரிட்டிஷ் எதிர்ப்பு
மனநிலையைப் பயன்படுத்தி அதன்மூலம் ஆப்கானிய-இந்தியப் பிரதேசங்களில் ஒரு காலிபேத் இஸ்லாமிய
அரசை ஏற்படுத்துவதே நோக்கம். அங்கிருந்து விரிவாக்கம் செய்து இஸ்லாமிய அகிலம் ஒன்றை
உருவாக்க, பிற இஸ்லாமிய நாடுகளின் உதவியை நாடுவது. இந்தியாவில் பிரிட்டிஷாரை விரட்ட
ஆப்கானிஸ்தானிய இஸ்லாமிய அரசரை இந்தியா மீது படையெடுக்க வைப்பது. ஆனால் இந்திய தேசியவாதிகளிடம்
பேசும்போது இஸ்லாமிய அகிலம் என்பதை அடக்கி வாசித்து, பிரிட்டிஷ் எதிர்ப்பைப் பிரதானப்படுத்துவது.
இத்தனைக்கும் மேலாக இதற்கு ஒருங்கிணைந்த இந்திய எதிர்ப்பு இல்லாமல் இருக்க இந்தியாவில்
மொழிவாரி தேசிய இனங்கள் எனும் கோட்பாட்டுக்கு ஆதரவு அளித்து – இந்தியாவைத் தனிதனி குடியரசுகளாக
உடைப்பது. (எனவே அவை இந்தியா எனும் அடிப்படையில் இல்லாமல் இஸ்லாமிய காலிபேத்தின் கீழ்
எளிதாக வர இயலும்.)
பிரிட்டிஷ்
எதிர்ப்பு என்கிற பெயரில் ஆப்கானிய இஸ்லாமியப் படையெடுப்பு இந்தியா மீது ஏற்பட்டால்,
அதை ஆதரிப்பதாக இந்திய கிலாபத் தலைவர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்த்னர். அதற்கு மகாத்மா
காந்தியும் ஆதரவு தெரிவித்திருந்தார்.  ஆக,
ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் இந்தியா மீது படையெடுக்கும் ஒரு சாத்தியம் மிக அருகிலேயே
இருந்தது. இந்தியா மீதான இஸ்லாமிய ஜிகாத்துக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு என்கிற பெயரில்
சோவியத் யூனியனிடம் ஆதரவு கோருவதும் நிகழ்ந்து கொண்டிருந்தது. காங்கிரஸ் தலைவர்களில்
ஒரு சாரார் இதன் ஆபத்துக்களைக் கருதவில்லை. ஆனால் லாலா லஜ்பத் ராய் இத்திட்டத்தின்
முழுமையான விபரீதங்களை உணர்ந்திருந்தார்.
ஒபியத்துல்லா  திட்டம் குறித்தும் அதன் விபரீத விளைவுகள் நாட்டை
துண்டு துண்டுகளாக்கும் என்பதையும் அவர் நேருவிடம் கூறினார். நேரு தன் சுயசரிதையில்
லாலாஜி ஏன் ஆப்கானிஸ்தான் காங்கிரஸ் பிரிவை எதிர்க்க வேண்டுமென்று தமக்கு புரியவில்லை
என்று எழுதுகிறார். ஒபியத்துல்லா திட்டத்தில் தமக்கு எதுவும் விபரீதமாகத் தெரியவில்லை
என எழுதுகிறார்.
ஒபியத்துல்லா  லாலாஜியிடம் அளித்த முன்வரைவு ’இந்திய துணைக்கண்டத்தைப்
பல்வேறு தனித்தனி குடியரசுகளாக அறிவிக்கும்’ ஒன்றாக இருந்தது. இந்த முன்வரைவு காபூல்
காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக வெளியிடப்பட்டிருந்தது. ஒரே நேரத்தில் ஒரு வலிமையான
இஸ்லாமிய விரிவாதிக்க சக்தியை ஆப்கானிஸ்தான் முதல் சோவியத் வரை உருவாக்குவதும், வலிமையில்லாத
பல்வேறு சிறு சிறு குடியரசுகளாக இந்தியாவை உருமாற்றுவதுமான இந்தத் திட்டத்தை லாலாஜி
அதன் உண்மையான நோக்கத்தைத் தெரிந்துகொண்டு அது அபாயம் என்பதை உரக்கப் பிரகடனம் செய்தார்.
1946ல் நேரு
இந்த ஆபத்தை உணர்ந்தார். மாஸ்கோவில் கிலாபத் இயக்கத் தீவிரவாத இளைஞர்களாலும் பிரிட்டிஷ்
எதிர்ப்பால் வேறெதையும் குறித்துக் கவலைப்படாத இந்திய இளைஞர்களாலும் உருவாக்கப்பட்ட
இந்திய கம்யூனிஸ்ட், ஒபியத்துல்லா  திட்டம்
போன்ற இந்தியப் பிரிவினைத் திட்டத்தை பிரிட்டிஷார் முன் வைத்தது. அப்போது நேரு, “இப்படி
இந்தியாவைச் சிறு சிறு துண்டுகளாக உடைப்பதென்பது, அதனைச் சிறு சிறு துண்டுகளாக வென்று
ஒரு சோவியத் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கான முயற்சியே” என்று எழுதினார். இப்படி
ஒரு கனவு இஸ்லாமிய அகில கனவில் இருந்தவர்களுக்கு உருவானதையும் அதற்கு சோவியத் ஆதரவை
அவர்கள் கோருகிறார்கள் என்பதையும் முன்னறிவித்தவர் லாலா லஜ்பத் ராய்.
தேசபந்து சித்தரஞசன்
தாஸுக்கு அவர் எழுதிய கடிதத்தில் தம் அச்சத்தை வெளிப்படுத்தினார் லாலா லஜ்பத் ராய்:
இந்தியாவில் உள்ள ஏழு கோடி இஸ்லாமியர்களைக்
குறித்து நான் அச்சமடையவில்லை.  ஆனால் இங்குள்ள
ஏழு கோடி பேருடன், ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா, அரேபியா, துருக்கி ஆகிய நாடுகளின்
ஆயுதமேந்திய இஸ்லாமியப் படைகள் சேரும்போது இந்தியாவின் கதி என்ன ஆகும்? எதிர்க்க இயலாத
அப்படி ஒரு படையெடுப்பு நிகழ்ந்தால்? நாம் அனைவரும் அழிக்கப்படுவதுதான் விளைவா?”
 1946ல் டாக்டர் அம்பேத்கர் லால லஜ்பத் ராயின் எழுத்துக்களை
மேற்கோள் காட்டுகிறார். அது ஒரு மிகவும் யதார்த்தமான அச்சம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
பிரிட்டிஷ்
ஆட்சியாளர்கள் இஸ்லாமிய மதவாதத்தை வெளிப்படையாக ஆதரிப்பதை அவர் கண்டார். இஸ்லாமிய மதவாதத்தின்
விளைவாக திட்டமிட்ட கலவரங்கள் நடப்பதையும் அதில் பாதிக்கப்படுவோர் ஹிந்துக்களும் சீக்கியர்களுமாக
இருப்பதைக் கண்டார். இந்தக் கலவரங்களைத் திட்டமிடுவோரில் பெரும்பாலானோர் கிலாபத் இயக்க
அமைப்பாளர்கள். சுவாமி சிரத்தானந்தர் போல இந்து முஸ்லிம் ஒற்றுமைக்குப் பாடுபட்ட ஒரு
துறவி கூட இஸ்லாமிய மதவாதிகளால் சுட்டுக்கொல்லப்படுவதைப் பார்த்தார். எனவே இந்து ஒற்றுமையின்
தேவையை (இந்து சங்கதான்) பிரசாரம் செய்தார். 
அவரது இந்து சங்கதான் என்பது  ஒருபோதும்  மத அடிப்படையிலான அரசு அமைவதல்ல.
சமரசமற்ற சமுதாயச்
சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தவர் லஜ்பத் ராய். தீண்டாமைக்கும் சாதியத்துக்கும் கடும்
எதிர்ப்பாளராக இருந்தவர் லாலாஜி. தீண்டாமைக்கான அவரது எதிர்ப்பு ஜனநாயகத்தின் அடிப்படையில்
அமைந்திருந்தது. இவ்விதத்தில் அவரது பார்வை பாபா சாகேப் அம்பேத்கரின் பார்வைக்கு முன்னோடியாக
இருந்தது. ஸ்ரீ அரவிந்தர், லாலா லஜ்பத் ராய், பாபா சாகேப் அம்பேத்கர் மூவருமே சாதி
அமைப்பின் ஜனநாயகமற்றத் தன்மையைக் குறிப்பிட்டு அதனை விமர்சித்திருக்கிறார்கள் என்பது
இங்கே குறிப்பிடத்தக்கது.  தீண்டாமை ஜனநாயக
விரோதமான ஒரு செயல்பாடு எனக் கருதிய லாலாஜி, அன்றைய ஆசாரவாதிகளின் ஒரு பாதுகாப்புக்
கேடயத்தைக் கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ் தனது செயல்திட்டத்தில் தீண்டாமை எதிர்ப்பைச்
சேர்ப்பதை ஆச்சாரவாதிகள் எதிர்த்தனர். தீண்டாமை என்பது மதம் தொடர்பானது என்றும், எனவே
ஓர் அரசியல் கட்சியின் செயல்திட்டத்தில் தீண்டாமை எதிர்ப்பு எடுத்துக் கொள்ளப்படலாகாது
என்று அவர்கள் கூறினர். லாலாஜி எழுதினார்:
தீண்டாமை போன்றதொரு
மனத்தடை நம்மில் இத்தனை ஆழமாக வேரூன்றி நம் நடத்தையை தீர்மானிக்கும் நிலையில் இருக்கும்போது
ஜனநாயகம் என்பதைப் பேசுவதென்பது பயனற்ற விஷயம். நம்மிடமிருந்து மத ரீதியாகவோ செய்யும்
தொழில் ரீதியாகவோ வேறுபடுவோரிடம் நாம் இப்படி நடப்பது அவலமான ஒரு விஷயமாகும். …தேசத்தைக்
கட்டமைப்பது அறம் சார்ந்த விஷயமாகும். இப்படி இரட்டை வேடத்தன்மையுடன் அதை நம்மால் செய்ய
இயலாது. …தீண்டாமை ஒழிப்பைப் பேச வேண்டிய ஒரு நிலையில் நாம் இன்று இருக்கிறோம் என்பதே
அவமானகரமான ஒரு விஷயம் என்றால் அதைக் குறித்துப் பேசவே கூடாது, ஆனால் நம் சொந்த சகோதரர்களிடம்
நாம் தீண்டாமையைக் கடைபிடிப்போம் என்பது ஒழுக்கக் கேடான  விஷயம்.
தீண்டாமை ஒழிப்பென்பது
லாலாஜிக்கு, ‘ஜனநாயகத்துக்கு நாம் லாயக்கானவர்கள்  என்பதற்கான அடிப்படைத் தகுதி’ மற்றும் ’சுயராஜ்ஜியம்
அடைவதற்கான முக்கிய தேவை’. அல்லாமல், அது பட்டியல் சமுதாய மக்களுக்குச் செய்யப்படும்
சலுகை அல்ல. தீண்டாமை ஒழிப்புக்கு லாலாஜி கூறும் வழிமுறை டாக்டர் அம்பேத்கரின் ‘கற்பி,
ஒன்று சேர், போராடு’ என்பதற்கான முன்னோடியாக இருக்கிறது.  தீண்டாமையை ஒழிக்க நாம் ‘கல்வி, ஒற்றுமை, அமைப்பு’
என்னும் ரீதியில் செயல்பட வேண்டும் என்கிறார் லாலாஜி.
லாலா லஜ்பத்
ராய் சைமன் கமிஷனை எதிர்த்தார். ஆனால் அன்றைக்கு பட்டியல் சமுதாயத்தின் முக்கியமான
தேசியத் தலைவர்களில் ஒருவரான எம்.சி.ராஜா அவர்கள் அதை எதிர்த்தார். இருந்தபோதிலும்
பட்டியல் சமுதாய மக்களின் முன்னேற்றத்துக்காக தீவிரமாகப் பாடுபட்ட தலைவர்களில் முக்கியமானவர்
என்றும் தம் நெருக்கமான நண்பர் என்றும் லாலாஜியைக் குறிப்பிடுகிறார் எம்.சி.ராஜா அவர்கள்.
பட்டியல் சமுதாய மக்களுக்கு காவல்துறையில் இடஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கையை
இந்து மகாசபை தலைவரான எம்.ஆர்.ஜெயகரும், பட்டியல் சமுதாய மக்களின் கல்வி வளர்ச்சிக்கு
ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட வேண்டுமென்கிற தீர்மானத்தை லாலாஜியும் கொண்டு வந்தார்கள்
என்பதை ராவ் பகதூர் எம்.சி.ராஜா குறிப்பிடுகிறார். இது 1928ம் ஆண்டு பிப்ரவரி மாதம்.
அதே ஆண்டில்தான் லாலாஜி மறைந்தார். அதாவது சமுதாயத் தலைவர்களுடனான கருத்து வேற்றுமைகளைத்
தாண்டி பட்டியல் சமுதாய வளர்ச்சிக்காக இறுதிவரை குரல் கொடுத்துக் கொண்டிருந்தவர் லாலா
லஜ்பத் ராய். 1931ல் வட்ட மேசை மாநாட்டில் எம்.சி.ராஜா உரையாற்றினார். அப்போது ‘ஒடுக்கப்பட்ட
இனத்தவரின் நண்பர்’ என்கிற அடைமொழியுடன் லாலா லஜ்பத்ராயை நினைவுகூர்ந்த ராஜா அவர்கள்,
லாலாஜியின் வார்த்தைகளை அங்கே மேற்கோள் காட்டினார்: “ஹிந்து சமயம் எனும் அழகிய பெயரிலிருந்து
தீண்டாமை எனும் கறை முழுமையாகத் துடைக்கப்படாவிட்டால்  இந்தியா சுவராஜ்ஜியம்  அடையும் தகுதியைப் பெறாது.”
தேச முன்னேற்றம்
குறித்த லாலாஜியின் பார்வை இன்றைக்கும் கூட முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது. முன்னேற்றம்
என்பது மேலேயிருந்து கீழே திணிப்பதல்ல என்கிறார் லாலாஜி. எனில் முன்னேற்றம் என்பதுதான்
என்ன?  லாலாஜி கூறுகிறார்:
ரயில்வே பாதைகளை
அதிகரிப்பது முன்னேற்றமா? ஏற்றுமதி இறக்குமதி புள்ளிவிவரங்கள் முன்னேற்றமா? பெரிய பட்ஜெட்
தொகைகள் மூலம் முன்னேற்றம் ஏற்பட்டுவிடுமா? அரசு அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால்
முன்னேற்றம் ஏற்பட்டுவிடுமா? பெரும் கட்டடங்களை பொதுமக்கள் வரிப்பணத்தால் கட்டிப் பெருமை
அடைந்து கொள்வதை நாம் முன்னேற்றம் எனச் சொல்லலாமா?  … நமக்குத் தேவை கீழேயிருந்து ஏற்படும் ஒரு பரிணாம
வளர்ச்சி.
தொலை நோக்குப்
பார்வை, தேசபக்தி, சமுதாய நீதி – என அனைத்திலும் சமரசமற்ற நேர்மையை முன்வைத்து இறுதி
வரை போராடியே இறந்தவர் லாலா லஜ்பத் ராய். முழுமையான தேசபக்தர், ஜனநாயகவாதி, இந்துத்துவர்,
சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராடியவர்.
ஆதாரங்கள்:
·         Lajpat Rai, Ideals of
Non-Co-Operation and Other Essays, Ganesan Publishers, Madras, 1924
·         Feroz Chand, Lajpat Rai Life
and Work, Publications Division, 1978
·         அடிபட்ட லாலா லஜ்பத் ராய் புகைப்படம் நன்றி:
Christopher Pinney,
“Photos
of the Gods’: The Printed Image and Political Struggle in India
, Reaktion
Books Ltd, 2004
Posted on Leave a comment

அகத்தவரும் புறத்தவரும்: நமது பாரம்பரியத்தின் பெருமையைப் பேசுவது யார்? – ராஜிவ் மல்ஹோத்ரா (தமிழில்: கனகராஜ் ஈஸ்வரன்)

ஷெல்டன் போலாக் (Sheldon Pollock) சம்ஸ்கிருதம், இந்தியப் பண்பாடு,
இந்தியச் சிந்தனை மரபு ஆகிய துறைகளில் உலகளவில் கல்விப் புலங்களில் மிகவும் மதிப்புக்குரிய
அறிஞராகக்  கருதப்படுகிறார். அமெரிக்காவின்
ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பயின்றவர். தற்போது கொலம்பியா பல்கலைக் கழகத்தில் தெற்காசிய
ஆய்வுகள் (South Asian Studies) துறையில் பேராசிரியராகவும் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி
குடும்பத்தினரின் பெருநிதியுடன் துவங்கப்பட்ட மூர்த்தி சம்ஸ்கிருத நூலகம் (Murty
Sanskrit Library) என்ற நூல்வரிசையின் தொகுப்பாசிரியராகவும் உள்ளார். இந்திய அரசின்
பத்மஸ்ரீ விருதும் 2010ல் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆய்வுத்துறையில் இவ்வளவு செல்வாக்குடன்
திகழும் போலாக், சம்ஸ்கிருதம், இந்துப் பண்பாடு, இந்து சாஸ்திரங்கள் குறித்த மோசமான
திரிபுகளையும், பிழையான சித்திரிப்புகளையுமே தனது ஆய்வுகளிலும்  நூல்களிலும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளார்.
19ம் நூற்றாண்டில் மாக்ஸ்முல்லர் உள்ளிட்ட காலனிய வரலாற்றாசிரியர்கள் இந்திய வரலாற்றைத்
திரித்து எழுதுவதற்கு ஒரு சட்டகத்தை உருவாக்கியதற்கு ஈடாக 21ம் நூற்றாண்டில் இந்திய
வரலாற்றை நவீன மேற்கத்திய அணுகுமுறைகளின்படி திரித்து எழுதுவதற்கான சட்டகங்களாக போலாக்
கட்டமைக்கும் கருத்துகள் உள்ளன. அதனால் அவற்றை விமர்சிப்பது மிகவும் அவசியமானதாகிறது.
சிறந்த இந்திய சிந்தனையாளரான ராஜீவ் மல்ஹோத்ரா இக்கட்டுரையில் போலாக்கின் அணுகுமுறையை
ஆதாரபூர்வமாகக் கேள்விக்கு உட்படுத்துகிறார்.
ராஜீவ் மல்ஹோத்ரா
அகத்தவரும் புறத்தவரும்:
நமது பாரம்பரியத்தின் பெருமையைப் பேசுவது யார்?
ராஜிவ் மல்ஹோத்ரா
தமிழில்: கனகராஜ் ஈஸ்வரன்
‘சம்ஸ்கிருதத்திற்கான போர்’
(Battle for Sanskrit) என்னும் எனது நூலில் ஷெல்டன் போலாக்கின் எழுத்துக்களை மையமாகக்கொண்ட
மேற்கத்திய இந்தியவியலின் (Indology) ஒருபிரிவின் கருத்தியல் நிலைப்பாடுகளைப் பற்றி
விமர்சிக்க முயன்றுள்ளேன். கடும் உழைப்பாளி என்ற வகையில் போலாக் என்ற சம்ஸ்கிருத மொழியியல்
ஆராய்ச்சியாளரிடம் எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. ஆனால் சம்ஸ்கிருதப் பாரம்பரியத்தைப்
பற்றிய அவரது ஆராய்ச்சிச் சட்டகத்தை என்னால் ஏற்க இயலாது. ஹிந்து சமயத்தைத் தமது வாழ்வியல்
நெறியாகப் பின்பற்றுகின்ற மக்கள் மிக உயர்வாக மதித்துப் போற்றும் சில ஆழ்ந்த கருத்துக்களை
அவரது ஆராய்ச்சி அணுகுமுறை தகர்க்க முயல்கின்றது. ஹிந்துப் பாரம்பரியத்தின் ஆதாரக்
கட்டமைப்பைத் தகர்த்துவிட அது முயல்கிறது. இந்தக் கட்டுரையில் போலாக்கின் கருத்துக்களில்
முக்கியமான சிலவற்றைச் சுருக்கமாகச் சொல்ல முனைகிறேன். கட்டுரையைப் படிக்கின்ற அன்பர்கள்
எனது நூலை முழுமையாக வாசித்து, போலாக்கின் கருத்துகளையும் அதற்கு எதிரான எனது வாதங்களையும்
ஆழ்ந்து புரிந்துகொள்ளவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
ஷெல்டன் போலாக்கின் சம்ஸ்கிருத
ஆராய்ச்சி தோற்றுவித்திருக்கின்ற சிக்கல்களை, எனது நூல், ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரு
சட்டகங்களின் (பார்வை) முரண்பாடாக, மோதலாக, போராட்டமாகக் காண்கிறது. முதலாவது, அகத்தவர்
பார்வை; மற்றொன்று புறத்தவர் பார்வை. அகத்தவர் பார்வை என்பது வேத மரபின் உள்ளே அதன்
வாழ்வியல் நெறியில் ஆழ்ந்த பற்றும் நம்பிக்கையும் கொண்டு வாழ்பவர்களுடையது. புறத்தியார்
பார்வை அல்லது அன்னியர் நோக்கு என்பது வேதங்களை நிராகரிப்பவர்கள், புறக்கணிப்பவர்கள்
மற்றும் ஒதுக்குவோர்களுடையது. இந்த அன்னிய அறிஞர்கள், சமூக அடக்குமுறை மற்றும் அரசியல்
ஆதிக்கம் போன்ற மார்க்சிய, பின்நவீனத்துவக் கோட்பாடுகளின் வாயிலாக சம்ஸ்கிருத சாஸ்திரங்களை
விமர்சிக்கின்றனர்.
ஷெல்டன் போலாக் மற்றும் பிற புறத்தவர்களுடைய
பின்வரும் கருத்துக்களையும் ஆராய்ச்சி அணுகுமுறையையும் வேதப் பாரம்பரியத்தின் உள்ளே
வாழ்கின்ற அகத்தவன் என்ற முறையில் நான் நிராகரிக்கின்றேன். .
·         புனிதமானது-புனிதமற்றது என்ற
நிரந்தரமான வேறுபாட்டை, சம்ஸ்கிருதப் பாரம்பரியத்தினை ஆராய்வதற்கான அடிப்படையாகக் கொள்ளும்
அவரது பிளவுண்ட ஆராய்ச்சி முறையியல்.
·         சிறுபான்மை இனக்குழுக்களை ஒடுக்குதல்,
இன அடக்குமுறை, வர்க்க முரண்பாடு, ஆண்-பெண் பாலினப் பேதம், பாரபட்சம் ஆகியவற்றை சம்ஸ்கிருதம்
மற்றும் வேதத்தின் உள்ளீடாக இட்டுக் கட்டும் அவரது கருத்தியல் நிலைப்பாடு.
·         பாரத நாட்டின் வரலாறு, சிந்தனை
ஆகியவற்றிலிருந்து அதன் மிக முக்கியமான உந்துவிசையாக இயங்கும் வாய்மொழி மரபுகளைப் புறந்தள்ளுதல்,
ஒதுக்குதல், கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் போக்கு.
·         காவிய, காப்பிய இலக்கிய நடையை
அரசியலாகக் காணும் நோக்கு.
·         நமது சாஸ்திரங்களின் நல்ல கூறுகளை,
நற்பயன்களை முழுமையாக நிராகரிக்கும் போக்கு.
·         சம்ஸ்கிருதத்தையும் இதர பாரதிய
மொழிகளையும் வேறுவேறு, தனித்தனி என்று பிளவுபடுத்தும் நாடகீயப் பாங்கு.
·         ஹிந்துசமயம் மற்றும் பௌத்தம்
ஆகியவற்றிடையே உள்ள தொடர்ச்சியை மறுத்து, அவை வேறுவேறான தனியன்கள் என்று பிளவுண்டாக்கும்
முயற்சி.
·         இராமாயணத்தைச் சமூக அடக்குமுறை
என்பதோடு, இஸ்லாமியர்களுக்கு எதிராக ஹிந்துக்களைத் தூண்டி ஒன்று திரட்டும் அரசியல்
முயற்சி அது என்று பழிக்கும் போக்கு.
ஆன்மிகம் (பாரமார்த்திகம்) மற்றும் லௌகிகம் (வியவகாரிகம்) ஆகிய இரண்டும் வேறுவேறான,
ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற, எதிரான, முரணான தளங்கள் என்பது போலாக்கின் ஆராய்ச்சிமுறையின்
அடிப்படையான அனுமானமாக, நம்பிக்கையாக, ஆதார சுருதியாக விளங்குகிறது.
புலன் கடந்த அனுபூதியே வேத மரபின் முக்கியப் பிரமாணமாக ஆதாரமாக உள்ளது. ஆனால்
அந்தப் புலன் கடந்த ஆழ்ந்த அனுபவம் என்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது, சமூகத்தில் காணப்படும்
ஏற்றத்தாழ்வுகளை, படிநிலை சமூக அமைப்பை நியாயப்படுத்துவதாக அமைந்திருக்கிறது என்பதாக
போலாக் கூறுகின்றார்.
பாரத நாட்டின் வரலாற்றின் முக்கிய முன்நகர்வுகள் எல்லாவற்றையும், அது தனது பாரமார்த்திக,
வேதநெறி சார்ந்த அடிப்படைகளில் இருந்து  விலகிச்செல்லும்
முயற்சியின் விளைவுகளாகவே அவர் காண்கிறார். சம்ஸ்கிருதத்தின் வரலாற்றுக்கு முந்தைய
காலத்தை வேதரிஷிகள் தர்க்கபூர்வமாக உலகைப் புரிந்துகொள்ள முயலாமல் ஆன்மிகத்தில் ஒதுங்கி
தனித்திருந்த காலமாக அவர் புனைந்துரைக்கின்றார். 
 “கடவுளரின் மொழியும், மனிதரின் உலகும்: நவீனகாலத்துக்கு
முற்பட்ட இந்தியாவில் சம்ஸ்கிருதம், பண்பாடு, அதிகாரம்” (
The
Language of the Gods and the World of Men; Sanskrit, Culture and Power in
Premodern India
) என்ற தனது மிகமுக்கியமான நூலில், போலாக் இந்தக்
கருத்தினை வெளியிட்டிருக்கிறார். ஷெல்டன் போலாக்கை ஆழ்ந்து புரிந்துகொள்ள முயல்பவர்கள்
இந்த நூலை அவசியம் வாசிக்கவேண்டும்.
பொருளற்ற சடங்குகளும் மறுமையைப் பற்றிய இறுகிய மனப்பிடிப்பும் கொண்டதாக பிராமண
மேட்டிமைத்தனத்தை போலாக் உருவகிக்கின்றார். சம்ஸ்கிருதம் அத்தகைய பிராமண மேட்டிமையின்
பிடியிலிருந்து விலகி அரசர்களின் ஆதரவைப் பெறுவதற்காக உலகியலுக்கு நகர்வதை ஒரு முக்கியமான
வரலாற்று முன்னகர்வாகப் புனைகிறார். அரசர்களின் அதிகாரத்தினை நிலைநிறுத்திக்கொள்ளும்
ஆயுதமாக உருமாற்றமடைந்த சம்ஸ்கிருத மொழி, பிற்போக்குத்தனமானதாகவும், கேலிக்குறியதாகவும்
மாறிவிடுகிறது என்றும் அவர் கூறுகின்றார் . சமூக அநீதி, அரசியல் உள்குத்து, ஊழல்கள்
ஆகியவற்றால் அரசுகள் சீர்குலைவதால் அரசின் அதிகாரத்தை நிலைநிறுத்தும் கருவியான சம்ஸ்கிருதம்,
பிற்போக்கானதாக உருமாற்றம் அடைகின்றது என்று போலாக் கருதுகிறார்.
 
அறிவியல்பூர்வமாக ஆய்ந்து பரிசோதிக்கமுடியாது என்ற காரணத்தைக்கூறி, பாரமார்த்திகம்
என்னும் வாழ்வின் ஆன்மிகப் பரிமாணத்தை மிக எளிதாகப் புறந்தள்ளிவிடுகிறார் போலாக். வேதம்
கூறும் ஆன்மிகச் சாதனங்கள், பயிற்சிகள் எதையும் பயன்படுத்திப் பார்த்ததாக அவர் கூறிக்கொள்வதில்லை.
அவரது ஆராய்ச்சிநோக்கும் வேதப் பாரம்பரியத்தின் அணுகுமுறையாக இல்லை. தன்னை மதச்சார்பற்ற
ஆராய்ச்சியாளர் என்று கூறிக்கொள்ளுவதால் நம்முடைய மரபுக்கு புறத்தவராக அன்னியராகிறார்.
இதன் விளைவாக சம்ஸ்கிருத மொழி மற்றும் நூல்களை ஆராய்வதில் ஆன்மிக நோக்கு புறந்தள்ளப்பட்டு,
ஒதுக்கப்பட்டு மதச்சார்பற்ற அன்னிய அணுகுமுறை முதன்மைப்படுத்தப்படுகிறது.
சம்ஸ்கிருத மொழியின் வரலாறு மற்றும் அதன் எதிர்காலம் ஆகியவற்றைப் பற்றிய மரபார்ந்த
அகத்தவர்களின் பார்வை ஆரம்ப முதலே போலாக்கால் புறக்கணித்து ஒதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆன்மிகம், ஆன்மிகமல்லாதது (மதச்சார்புள்ளது மற்றும் மதச்சார்பற்றது) என்று பிளவுபடுத்தி,
மதச்சார்புள்ளவற்றை ஒதுக்கித்தள்ளும் ஷெல்டன் போலாக்கின் ஆராய்ச்சி அணுகுமுறையால்,
மரபில் ஊறித் திளைத்த அகத்தவர் பார்வை புறந்தள்ளப்படுகிறது. அவரது இந்த மதச்சார்பற்ற
ஆராய்ச்சி அணுகுமுறையை உயர்கல்வி நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டு வருகின்றன. மேலும் இந்தியாவில்
சமூகநீதியின் பெயரால் சம்ஸ்கிருதத்தைத் தாக்கி அழிக்கும் பிரசாரத்தின் ஒரு பகுதியாக
இவரது சம்ஸ்கிருதம் பற்றிய கருத்துக்களும் ஆராய்ச்சிகளும் மாற்றப்பட்டுவிட்டன.
வெளிப்படையாகவே தனது நூல்களில்
இருந்து தனக்குக் கிடைக்கும் அரசியல் பயங்களைப் பற்றியும் போலாக் சொல்லியிருக்கிறார்.
சம்ஸ்கிருதத்தை ஒரு செத்த மொழி என்று கடந்த காலத்திற்குப் பின்தள்ளி, பிற்போக்குச்
சிந்தனைகளின் தோற்றுவாயாக அது இலங்குவதைக் காட்டுவது ஒன்றே இந்தியாவில் சமூக நீதியை
ஏற்படுத்துவதற்கான வழி என அவர் கருதுகிறார். போலாக்கின் இந்தக் கருத்து எனது இரண்டாவது
மறுப்பிற்கு இட்டுச் செல்கிறது. சம்ஸ்கிருதத்தில் பெண்கள், சிறுபான்மையினர் போன்றவர்களை
ஒடுக்கும் கருத்துக்கள் ஆதிகாலம் தொட்டே பொதிந்திருப்பதால் அதனைப் புத்துயிர்க்கச்
செய்வதும் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதும் பிற்போக்கான வகுப்புவாத சக்திகளை வலுப்படுத்தவே
பயன்படும் என்ற போலாக்கின் கருத்தையும் மறுக்கின்றேன்.
போலாக் எழுதுகிறார்:
“சம்ஸ்கிருதம் நவீன காலத்துக்கு முந்தைய இந்தியாவில் ஆதிக்கத்தினை நிலைநிறுத்துவதற்கு
முதன்மையாகப் பயன்படுத்தப்பட்ட ஆயுதமாகும். மேலும் நவீன இந்திய மக்களில் மிகப் பிற்போக்குத்தனமான
வகுப்புவாதம் பேசும் பிரிவினரால் அது மீண்டும் கையகப்படுத்தப்பட்டு அதற்காகத் தொடர்ந்து
பயன்படுத்தப்பட்டு வருகிறது.” (சம்ஸ்கிருதத்திற்கான போர் நூலில் சுட்டப்பட்டுள்ளது
பக். 140).
சமூக ஒடுக்குதலுக்கு சம்ஸ்கிருதம்
பயன்படுத்தப்படுவது தொடர்கிறது என்றும் அவர் கருதுகின்றார். அவர் சொல்கிறார்.
சம்ஸ்கிருதத்தில் பதிந்துள்ள மரபார்ந்த ஆதிக்கம் என்பது கடந்த காலவரலாறு மட்டுமல்ல
என்பது உறுதியாகத் தெரிகிறது.
பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, ஆதிக்கத்தினை நிலைநிறுத்தும் சமூகப்பொருளாதாரக்
கட்டமைப்பினை வலுவிழக்கச் செய்ய சட்டங்கள் பல இயற்றப்பட்டிருக்கின்றன. என்றாலும் சம்ஸ்கிருதத்தின்
கடந்தகால வரலாறு ஆழ்ந்து புரிந்துகொள்ளப்படாததால், சரியாக விமர்சிக்கப்படாததால், மரபார்ந்த
ஆதிக்கம் தனது பல்வேறு கோர வடிவங்களோடு இன்னமும் வலிமையாகவே இருக்கிறது. இருபிறப்பாளர்
வர்ணத்தவர்களின் முதலாளித்துவச் சுரண்டல், மரபார்ந்த அடக்குமுறையை மேலும் தீவிரப்படுத்துகின்றது.”
(சம்ஸ்கிருதத்திற்கான போர் நூலில் சுட்டப்பட்டுள்ளது பக். 140).
ஆனால் அறிஞர்கள் இதனை கண்டுகொள்ளவில்லை
என்று போலாக் புலம்புகிறார். எனவே இந்தியப் பாரம்பரியத்தில், பண்பாட்டில் காணப்படும்
ஆதிக்கம், அடக்குமுறையின் பல்வேறு வடிவங்களைத் தோண்டித்துருவி, தேடிக்கண்டறிந்து, பகுத்தாய்ந்து,
தனிமைப்படுத்தி, அவற்றைப் பற்றிய கோட்பாடுகளை உருவாக்குவதே இன்றைய இந்தியவியலின் தலையாய
நோக்கம் என்று அவர் கருதுகிறார். கடந்தகாலங்களில் சம்ஸ்கிருதத்தைப் பயன்படுத்துவதில்
இருந்த சமூகக் கட்டுப்பாடுகளுக்கு நவீன விளக்கங்களைக் கொடுப்பது அவரது ஆய்வின் முதன்மையான
நோக்கமாக அமைந்திருக்கிறது. சம்ஸ்கிருதத்தைக் கற்கும் வாய்ப்பு, சமூகத்தின் உயர் படிநிலைகளில்
இருந்தவர்களுக்கு மட்டுமே இருந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். சமூகத்தின் மேல்தட்டு
மக்களுக்கு சம்ஸ்கிருதத்தின் மீதிருந்த ஏகபோக, முற்றுரிமை பௌத்தர்களால் அகற்றப்பட்டது
என்றாலும், அது அரசியல் அதிகாரத்திற்கான கருவியாக, ஆயுதமாகத் தொடர்ந்தது என்கிறார்
போலாக். பண்பாட்டை நிலைநிறுத்துவதற்கும், பண்பாட்டுக்கும் அரசியல் அதிகாரத்திற்கும்
இயைவை உருவாக்குவதற்கும் சம்ஸ்கிருதத்தை அரசர்கள் பயன்படுத்தினர், யார் எதற்காக சம்ஸ்கிருதத்தைக்
கற்கவேண்டும் என்பதை அரசர்களே முடிவு செய்தனர் என்கிறார் அவர். இந்தக் கருத்தை இன்னும்
சற்றே விரிவாக கீழ்க்கண்டவாறு அவர் சொல்கிறார்.
“அனைவரும் பயன்படுத்துவதற்கு உரிமையுள்ள மொழியாக சம்ஸ்கிருதம் இருக்கவில்லை.
மிகச்சிலரே அதனைப் பயன்படுத்த வல்லவர்களாக இருந்தனர். சிலர் அதைப் பயன்படுத்தினர்,
சிலர் அதைப் பயன்படுத்தவில்லை என்பதல்ல, மாறாக, சிலருக்கு மட்டுமே அதைப் பயன்படுத்தும்
உரிமை இருந்தது, பெரும்பான்மையான மக்களுக்கு அதைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருந்தது”.
(
சம்ஸ்கிருதத்திற்கான போர் நூலில் சுட்டப்பட்டுள்ளது பக். 140). 
போலாக் இந்த ஒடுக்குமுறைக்கு
வழிவகுக்கும் கட்டுப்பாடுகளின் தோற்றுவாயே ஆரியரின் வேதவாழ்வியல் என்று கருதுகிறார்.
அவர் கூறுகிறார்:
“சம்ஸ்கிருதம் முதன்மையாகப் பயன்படுத்தப்படும் தளம், தம்மை ஆரியர் என்று அழைத்துக்கொண்ட
அந்த மொழியைப் பேசுகின்ற சமூகத்தின் சடங்கு மற்றும் வழிபாடு முதலானவை என்பதால், அவற்றிலே
பங்கேற்பதற்கான நெறிமுறைகள் தடைகளாக உருவாக்கப்பட்டன என்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.”
(சம்ஸ்கிருதத்திற்கான போர் நூலில்
சுட்டப்பட்டுள்ளது பக். 142). 
  
வேத இலக்கியத்தின் மீதான அவரது
வெறுப்புணர்வு, காழ்ப்புணர்வு மற்றும் மேற்கத்திய மொழி வரலாற்று ஆய்வுமுறையின் பயன்பாடு
ஆகியவற்றின் கலவையாக அவரது ஆராய்ச்சி அணுகுமுறை மற்றும் கருத்தியல், அரசியல் திட்டம்
அமைந்திருக்கிறது. வாய்மொழி இலக்கிய மரபை வரலாற்றில் இருந்து ஒதுக்குகிற அவரது போக்குக்கு
இந்த அணுகுமுறை இட்டுச் செல்கிறது. தற்காலத்தில் தோன்றி பெருகி வரும் சமூக அரசியல்
விழிப்புணர்வை மரத்துப் போகச்செய்யும் கடந்தகாலத்தின் அடிமைப்படுத்தும் போக்காக வேத
மந்திரங்களை உச்சரித்தல், சடங்குகளை மேற்கொள்ளுதல், நெடிய, சிக்கலான நூல்களை மனப்பாடம்
செய்தல் ஆகிய முறைகளை அவர் காண்கின்றார். மேலும் பௌத்த சமயம் வேதப் பாரம்பரியத்தினை
“குறைகளைக் களைந்து மேம்படுத்தும் வகையில் அமைந்த தீவிரமான முயற்சி” என்ற முடிவிற்கு
அவரை இந்த நிலைப்பாடு இட்டுச் செல்கிறது.
பிராமணர்களின் சம்ஸ்கிருதத்தின்
மீதான முற்றுரிமையின் இரும்புப் பிடியினை தகர்த்தும், காவியம் போன்ற புதிய இலக்கிய
வடிவங்களை உருவாக்கியும் பௌத்தம் வேதப் பாரம்பரியத்தில் ஒரு தீவிரத் தாக்குதல் மூலம்
மாற்றத்தினை முன்னெடுத்ததாகவும் அவர் கருதுகிறார். மொழி ஆராய்ச்சியின்
அறிவார்ந்த பயனாக காவியம் போன்ற இலக்கிய வடிவங்களுக்கும், மகத்தான பண்டைய சம்ஸ்கிருத
இலக்கண நூல்களுக்கும் புதிய விளக்கங்களை வழங்குவது என்றும் அவர் கூறுகின்றார். ஏனெனில்
இந்த இலக்கிய வடிவங்களும் சரி, இலக்கண நூல்களும் சரி, அரசுகளின் அதிகாரத்துக்கும்,
கௌரவத்துக்கும், புகழுக்கும் எவ்வாறு முட்டுக்கொடுத்து நிலைநிறுத்தின, அவற்றைப் பெருக்கின
என்பதைப் பற்றியெல்லாம் அறியப் பயன்படுகின்றன. அதுமட்டுமன்று.  சம்ஸ்கிருதம் எவ்வாறு பெண்கள், சிறுபான்மையினர்,
வெளியார் ஆகியோரை அடக்கிவைக்கும் சமூகக் கருத்துக்களை தொடர்ந்து பதிவுசெய்து வந்திருக்கின்றது
என்பதையும் புரிந்துகொள்ள அவை உதவுகின்றன. இந்த நிலைப்பாட்டிலிருந்து போலாக் சம்ஸ்கிருதம்
மேட்டுக்குடியினரின் மொழி என்றும் அது சாமானிய மக்கள் பேசிய மொழிகளுக்கு அடிப்படையிலேயே
முற்றிலும் மாறுபட்டது முரண்பட்டது, எதிரானது என்ற முடிவினையும் அடைகிறார்.
பாரத நாட்டின் மகத்தான வீரகாவியங்களான
இராமாயணம் மற்றும் மஹாபாரதம் ஆகிய இதிகாசங்களை மற்ற (வேறுபட்ட) மக்களை வன்முறையின்
மூலம் ஒடுக்குவதை நியாயப்படுத்தும் இலக்கியங்களாக போலாக் கட்டுரைக்கின்றார். சம்ஸ்கிருதத்தில்
உள்ள சாஸ்திரங்களில் காணப்படும் அளப்பரிய, உள்ளார்ந்த ஞானத்தையும், காலந்தோறும் புதிய
கருத்துக்களை, சிந்தனைகளை உருவாக்குவதற்கு அதில் காணப்படும் சாத்தியக்கூறுகளையும் மதித்துப்
போற்றுகின்றவர்களுக்கு  போலாக்கின் மேற்கத்தியப்
பூதக்கண்ணாடிப் பார்வையில் கட்டமைக்கப்பட்டுள்ள சாஸ்திரங்களைப் பற்றிய பிம்பம் பெரும்
அதிர்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.
சாஸ்திரங்களில் தொடர்ந்து வலியுறுத்தப்படும்
வேத நெறிமுறைகளும், பிரபஞ்சவியல் புரிதல்களும், ஆன்மிக ஞானமும் புதியனவற்றைத் தோற்றுவிப்பதற்கு
வாய்ப்பில்லாமல் செய்துவிடுகின்றன என்று போலாக் கருதுகிறார். நவீன காலத்துக்கு முந்தைய,
காலாவதியாகிப்போன சட்டகங்களுக்குள் அவை சிறைப்பட்டிருப்பதால், மறுமலர்ச்சிக் காலத்தில்
மேற்குலகில் தோன்றியது போன்ற சுதந்திர சிந்தனைகளை உருவாக்க அவற்றினுள் வாய்ப்பில்லை
என்றும் அவர் கருதுகிறார். மொழியியலைப் பற்றிய பிரபலமான சம்ஸ்கிருத சாஸ்திரங்களைப்
பற்றி போலாக் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார். .
எனினும் இந்திய நாகரிகம், நெறிமுறைகள் வழியாக
மனித நடத்தையை வழி நடத்துவதன் முக்கியத்துவத்தை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறது.
வேதச் சடங்குகளின் கண்டிப்பான நெறிமுறைகளில் இருந்து உருவான வாழ்வியல் நோக்கினால் மனித
நடத்தைக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. சாஸ்திரங்கள் எனப்படும் விதி நூல்கள் வேதநெறி
சார்ந்த விழாக்களில் சடங்குகளை நடத்துவதற்கான கடுமையான, கண்டிப்பான விதிமுறைகள் வகுத்திருக்கின்றன.
பிராமணர்களும், லௌகிக வாழ்வும், ஒருவகையான சடங்கு மயமாதலுக்கு உட்படுத்தப் பட்டிருந்திருக்கின்றன.
அதன் வாயிலாக எல்லாவிதமான வாழ்வியல் நடைமுறைகளும் முக்கியமான நிகழ்வுகளும் எப்படி நிகழ்த்தப்படவேண்டும்
என்று சாஸ்திர நூல்களில் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே சாஸ்திரம் என்று சம்ஸ்கிருதத்தில்
குறிப்பிடப்படும் இலக்கணங்கள், ஒட்டுமொத்த இந்திய நாகரிகத்தின் அடிப்படைக் கூறுகளில்
ஒன்றாகவும், அதன் அறிவு வரலாற்றில் காணப்படும் சிக்கல்களிலும் ஒன்றாகவும் காட்சியளிக்கின்றன.
இதுபோன்ற போலாக்கின் கருத்துக்களின் உண்மையான பொருளை நாம் புரிந்துகொள்ளாமல்
விட்டுவிடுவதற்கு வாய்ப்புகள் நிறையவே உள்ளன. ஏனென்றால் ஆரம்பத்தில் பாரதப் பாரம்பரியத்தைப்
புகழ்வது போல, அதன் மிக அழகான கூறு சாஸ்திரம் என்று அவர் சொல்கிறார். பின்னர் அதே மிக
அழகிய நூல்கள் சிக்கல்களுக்குக் காரணமாக மூலமாகக் கட்டுரைக்கப்படுகின்றன. பாரத தேசத்தின்,
நவீனத்துக்கு முந்தைய, விமர்சனம் இல்லாமல் ஏற்றுக்கொள்ளுகிற, அறிவியலுக்கு முரணான,
பயனற்ற எல்லாச் சிந்தனைகளுக்கும் தோற்றுவாயாக சாஸ்திரங்களை அவர் புனைந்துரைக்கின்றார்.
ஷெல்டன் போலாக் மேற்கத்திய மதச்சார்பற்ற
வரலாற்று அனுபவத்தைப் பற்றிய ஒருவகைப் புரிதலை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு முனைவது
தெளிவாகத் தெரிகிறது. இடைக்காலத்தில் ஐரோப்பாவில் சர்ச்சும், கிறிஸ்தவ நம்பிக்கைகளும்
மக்களை மழுங்கடித்து அடக்கி ஒடுக்கும் சக்திகளாக, அரசியல் ஆயுதங்களாக இருந்தன. மறுமலர்ச்சியின்
விளைவாக ஏற்பட்ட அறிவியல் புரட்சியினால் அந்தச் சக்திகளின் அடக்குமுறையிலிருந்து மக்கள்
விடுதலை பெற்றுச் சுதந்திர சிந்தனையைப் பெற்றனர் என்பது ஐரோப்பிய வரலாறு பற்றிய ஒரு
முக்கியமான புரிதல் ஆகும். இதை உண்மை என்று நம்பும் போலாக்குக்கு, தற்போது சம்ஸ்கிருதத்தை
நடைமுறையில் புழங்கும் பேச்சு மொழியாக்க, அதன் மறுமலர்ச்சிக்காகச் செய்யப்படும் முயற்சிகளை
எதிர்ப்பது மிக இயல்பானதாகவே அமைந்திருக்கின்றது. சம்ஸ்கிருதத்தின் இந்த மறுமலர்ச்சி
காவி மயமாக்குதலின் ஒரு பகுதியாகவே அவருக்குத் தெரிகிறது. இந்தியர்களைப் புரியாத சிந்தனைப்போக்கிலே,
அதன் கடந்த கால வரலாற்றிலே அடைத்துவைக்கும் முயற்சியின் அரசியல் ஆயுதமாகவும் சம்ஸ்கிருத
மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் அவருக்குக் காட்சியளிக்கின்றன.
மேற்கண்டவற்றை ஷெல்டன் போலாக்
என்ற அமெரிக்க இந்தியவியலாளரின் முக்கியமான கருத்தியல் நிலைப்பாடுகள் என்று நான் கருதுகிறேன்.
மிகச்சுருக்கமாக அவற்றை மேலே சொல்லியிருக்கின்றேன். நான் இவற்றையெல்லாம் விரிவாக ‘சம்ஸ்கிருதத்திற்கான
போர்’ என்ற எனது நூலிலே விவரித்திருப்பதோடு, அவற்றை நிராகரிக்கவும் செய்திருக்கின்றேன்.
நிறைவாக நான் சொல்வது என்னவென்றால்
ஷெல்டன் போலாக்கின் சம்ஸ்கிருதம் பற்றிய பல்வேறு கருத்துக்ககளை நாம் எளிதாக மறுக்கவோ,
நிராகரிக்கவோ அல்லது அபத்தம் என்று புறந்தள்ளிவிடுவதோ சாத்தியமன்று. அவர் சம்ஸ்கிருதத்தில்
ஆழ்ந்த புலமை படைத்தவர் என்பது மட்டுமல்ல, அந்த மொழியின் நெடிய வரலாற்றையும், அதில்
பல்வேறு காலகட்டங்களில் தோன்றிய மகத்தான இலக்கியங்களைப் பற்றிய புரிந்துணர்வையும் கொண்டவராக
இருக்கிறார். நமது பாரம்பரியத்தைப் பற்றிய அவரது தவறான புரிதலுக்கு எதிராக நின்று,
நமது பாரம்பரியத்தின் மேன்மையை நிலைநாட்ட விரும்புகின்றவர்கள், ஆழ்ந்த மொழிப்புலமை,
தர்க்கப்பூர்வமாக விவாதிக்கும் திறன் ஆகியவற்றோடு, பாரத நாட்டின் எதிர்கால முன்னேற்றத்தில்
ஆழ்ந்த அக்கறையும் உடையவர்களாக இருத்தல் வேண்டும், ஆனால் அதற்காக அவர்கள் மேற்கத்தியச்
சட்டகங்களையோ, அதன் மதச்சார்பற்ற கோட்பாடுகளையோ பயன்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. மேற்கத்திய
உயர்கல்வி நிறுவனங்கள் விதித்துள்ள நியதிகளை ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம்கூட அவர்களுக்குக்
கிடையாது. நமது பாரம்பரியத்தினை, பண்பாட்டினை, நாகரிகத்தினைக் காப்பதற்கு, அவர்களுக்கு
போதிய வசதிகளும் வாய்ப்புகளும் உள்நாட்டிலேயே இருக்கின்றன. வேதப் பாரம்பரியத்தில் வியவஹாரிகம்
(லௌகிகம்) மற்றும் பாரமார்த்திகம் (ஆன்மிகம்) சார்ந்த அறிவுக்கருவூலங்கள் பலப்பல நிறைந்திருக்கின்றன.
அவற்றைப் புரிந்துகொள்வதற்கும், அவற்றில் உள்ள உண்மைகளை உணர்வதற்கும் ஒருவர் தனது வாழ்வு
முழுவதையும் அர்ப்பணிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. அத்தகைய ஆழ்ந்த புரிதல் உடையவர்களால்தான்
மிக வலுவான ஆதாரங்களோடு மிகச்சிறப்பாக ஷெல்டன் போலாக்கை முழுமையாக நிராகரிக்கமுடியும்.
 
ஆங்கில
மூலம்:
http://battleforsanskrit.com/insiders-versus-outsiders/
Posted on 1 Comment

கொல்லப்படும் கோழிக் குஞ்சுகள் – சுதாகர் கஸ்தூரி

அரவை இயந்திரம்

 வினய் மக்கானி எனது நெடுநாளைய நண்பர். சில நாட்கள்
முன்பு மதிய உணவு அருந்திக்கொண்டிருக்கையில், “என் பொண்ணு ஒரு கேள்வி கேட்டா

என்றார்.அப்பா, பொண்ணு கோழிதானே முட்டை
போடும்? அப்ப பாய்ஸ் கோழியை எல்லாம் என்ன செய்வாங்க?

என்கிறாள். என்ன பதில் சொல்வது? நிஜமாவே எனக்குத் தெரியலை. சேவல்களை எவ்வளவுன்னு
வளர்ப்பாங்க?

அன்னம்மா, “அதை கறிக்கு வளப்பாங்க
என்றார்.
வினய் “இல்லங்க. ப்ராய்லருக்கு வளர்க்கிற கோழி வேற,
முட்டை இடறதுக்குன்னு வளர்க்கிற இனம் வேற
என்றார்.
அன்னம்மா சிந்தித்து, உரக்க வியந்தார். “அட, ஆமா…
இப்பத்தான் நானும் யோசிக்கறேன்… சேவலை என்ன செய்வாங்க?
இந்தியாவில் இது ஒரு பெரும் பிரச்சினையோ இல்லையோ, உலகளவில்
பெரும் பிரச்சனை. முட்டைக்கோழிகள் இனத்திற்கே இழைக்கப்படும் இனப்படுகொலையின் ஓர் அங்கம்,
சேவல்களின் கொடூரக்கொலை.
கோழிகளைப் பண்ணைகளில் வளர்ப்பது மிக்க லாபம் ஈட்டும்
துறை. அசைவ உணவு வகையில் உலகளவில் மீனுக்கு அடுத்தபடியாக, சாப்பாட்டுத் தட்டில் காணப்படுவது
கோழி இறைச்சி. அமெரிக்காவின் ஒரு நாளைய நுகர்வு 22 மில்லியன் ப்ராய்லர் கோழிகள் என
ரெஃபரன்ஸ்.காம் சொல்கிறது. இது 2014ன் புள்ளிவிவரம். ரெட் மீட் எனப்படும் ரத்தச் சிவப்பேறிய
இறைச்சிகள் (ஆடு, மாடு, பன்றி முதலியன) உண்ணப்படுவது குறைவதன் மூலம், கோழிகள் உண்ணப்படுவது
மேலும் இரு மில்லியன்கள் அதிகரித்திருக்கவேண்டும் என ஊக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இத்தனை கோழிகள் உண்ணப்படுவதில் சேவல்கள் எத்தனையாக
இருக்க முடியும்? நிகழ்தகவின் அடிப்படையில் 50% பெட்டைக்கோழிகளுக்கு 50% சேவல்கள் பிறந்திருக்கவேண்டும்.
இறைச்சிக்கோழிகள் பண்ணையில் இது ஒரு பெரிய விஷயமில்லை. இறைச்சிக்காக வளர்க்கப்படும்
ப்ராய்லர் வகைக் கோழிகளில் ஆணென்றும் பெண்ணென்றும் வித்தியாசமில்லை. அனைத்துக் கோழிகளும்
உண்ணப்படுகின்றன.
ஆனால் முட்டைக்கோழிகளின் நிலை அப்படியில்லை. இங்கு
சேவல்கள் பயனற்றவை. அவற்றை வளர்ப்பதில் ஆகும் செலவுக்கு, அவற்றின் இறைச்சி ஈடுகட்டுவதில்லை..
எனவே, பிறந்த ஒரு நாளைக்குள் ஆண் குஞ்சுகள் கொல்லப்படுகின்றன.
நன்கு வளர்ந்த, ஆரோக்கியமான பெட்டைக்கோழி ஒரு வருடத்தில்
270 முட்டைகள் வரை இடும். அதன்பிறகு அவை
பயனற்ற கோழிகள்
என வகைப்படுத்தப்பட்டுக் கொல்லப்படும். அந்த ஒருவருட வாழ்வை அவை இடும் முட்டைகள்
தீர்மானிக்கின்றன.
கோழிக் குஞ்சு பொரித்து அவற்றை விற்கும் பண்ணைகள்,
முட்டைக்கோழிகளின் குஞ்சுகளின் விற்பனையில், பெண் குஞ்சுகளையே விற்கின்றன. ஏனெனில்
அவையே முட்டைகளை வருங்காலத்தில் இட்டு லாபம் ஈட்டும்.
முட்டைக்கோழி வளர்ப்புப் பண்ணைகள் முட்டை விற்பனையை
முன்வைக்கின்றன. குஞ்சு பொரித்து விற்கும் பண்ணைகளில் இருந்து வரும் குஞ்சுகள், இங்கு
வந்து வளர்ந்ததும் கருத்தரிக்காத முட்டைகளைத் தொடர்ச்சியாக இட்டு வரும். பெருவாரியான
கருத்தரிக்காத முட்டைகளை விற்பனைக்கு அனுப்பிவிடுவார்கள். பல பண்ணைகளில் இக்கோழிகள்
பின்னர் கருத்தரிக்க வைக்கப்பட்டு, அதன்பின் கிடைக்கும் முட்டைகளைச் செயற்கையாக அடைகாத்து,
அவற்றைக் குஞ்சு பொரிக்கச்செய்து அடுத்த சந்ததிகளை உருவாக்குவார்கள் இதில்தான் பிரச்சனை
தொடங்குகிறது.
நிகழ்தகவின் அடிப்படையில், ஒரு குஞ்சு ஆணாகவோ பெண்ணாகவோ
இருப்பதற்கு 50% வாய்ப்பு இருக்கிறது. எனவே 100 முட்டைகள் அடைகாக்கப்பட்டால் 50 குஞ்சுகள்
ஆண் குஞ்சுகளாக இருக்கும் வாய்ப்புள்ளது. இத்தனை சேவல்களால் ஒரு பயனும் முட்டைக்கோழி
வளர்ப்பவருக்கு இல்லை. இரை, பராமரிப்புச்செலவு, நோய்த் தடுப்பூசி, மருந்துகள் இவற்றின்
விலை, அக்கோழியை இறைச்சிக்காக விற்பதில் கிடைக்கும் தொகையைவிட அதிகம். எனவே இச்சேவல்கள்
நஷ்டத்தையே, முட்டைக்கோழி வளர்ப்பில் தருகின்றன. இதே பிரச்சனைதான், முட்டைக்கோழிகளைப்
பொரித்துக் குஞ்சுகள் விற்கும் பண்ணைகளிலும். ஆண்குஞ்சுகளை எவரும் வாங்குவதில்லை.
மேற்சொன்ன இப்பண்ணைகளில், முட்டையோட்டை உடைத்து வெளி
வரமுடியாத குஞ்சுகள், அழுகிய முட்டைகள், சரியாக வளராத குஞ்சுகள், இரு கருக்கள் உள்ள
முட்டைகள், நுண்ணுயிரிகளால் தாக்கப்பட்ட முட்டைகள் போன்றவை அழிக்கப்படும். முட்டைகளிலிருந்து
வரும் குஞ்சுகளின் பாலினம் சோதிக்கப்பட்டு ஆண் குஞ்சுகள் அப்புறப்படுத்தப்படுகின்றன.
இவை ஒரு நாளைக்குள் பிரிக்கப்பட்டு விடுகின்றன.
இக்குஞ்சுகளைக் கொல்லும் விதம் கொடூரமானது. பல நாடுகளில்
அவை கழுத்தை நெறித்துக் கொல்லப்படுகின்றன. அல்லது, ஒரு பெரிய ப்ளாஸ்டிக் / உலோக அடைப்பில்
இடப்பட்டு, கார்பன் டை ஆக்ஸைடு செலுத்தப்பட்டு, மூச்சுத்திணற வைத்துக் கொல்லப்படுகின்றன.
சில நாடுகளில், சிறிய ப்ளாஸ்டிக் பைகளை அவற்றின் தலையில் மாட்டி, ரப்பர் பேண்ட் போட்டுவிடுகிறார்கள்.
அவை மூச்சுத்திணறி தடுமாறித் தத்தளித்து, துடிதுடித்து இறக்கின்றன.
அய்யோ கொடூரம் என்று நீங்கள்
அதிர்ந்தீர்களானால், பெரும்பண்ணை உரிமையாளர்கள் இவற்றைத் தவிர்த்துவிடுகின்றனர். தவிர்த்ததன்
காரணம், இது அதிகப்படியான வேலை என்பதும், உற்பத்தித் திறனைப் பாதிக்கிறது என்பதும்தான்!
எனவே, அவர்கள் மற்றொரு உத்தியைப் பயன்படுத்துகிறார்கள்.
வளர்ந்த நாடுகளில், பெரும் பண்ணைகளில், அரவை இயந்திரம்
போன்ற ஒரு கருவியை நிறுவுகிறார்கள். பிறந்து ஒரு நாள் கூட ஆகாத குஞ்சுகளை அதில் எறிந்து
விடுகிறார்கள். ஒரு வினாடிப் பொழுதில் அவை அரைத்துக் கொல்லப்படுகின்றன. இதற்கு முன்சொன்ன
உத்திகளே பரவாயில்லை.
முட்டைக்கோழிகளின் ஆண் குஞ்சுகளுக்கு நேரும் இக்கொடுமை
பலர் அறிவதில்லை. 1990களின் இறுதியில் விலங்குகளுக்கான கருணை அமைப்புகள், தன்னார்வல
நிறுவனங்கள், இறைச்சிக்காக விலங்குகள் வளர்க்கப்படும் விதத்தைக் குறித்து கடும் எதிர்ப்புகளைத்
தெரிவித்து வந்தன. சுதந்திரமாகக் கோழிகளைப் பரவலான இடத்தில் வளர விடுதல், பண்ணைகளில்
கால்நடைகளுடன் வளர விடுதல், இயற்கையான சூழ்நிலையில் வளர்த்தல் என்பன முன்வைக்கப்பட்டு,
அவ்வாறு வளர்க்கப்பட்ட கோழிகளின் இறைச்சியைத் தனியாக லேபல் இட்டு விற்பனைக்குக் கொண்டு
வரவேண்டுமென்ற கோரிக்கை வலுத்தது. பல நிறுவனங்கள், தாங்கள் கொள்முதல் செய்யும் பண்ணைகளில்
இத்தகைய நிபந்தனைகளை விதித்தன. இதோடு, அரசு அதிகார நிறுவனங்கள், முறைப்படுத்தும் அதிகார
நிறுவனங்கள் தங்களது செயல்முறைப் பரிந்துரைகளில் இத்தகைய நிபந்தனைகளை, கெடுபிடியின்றி,
தகுந்த அவகாசம் தந்து பரிந்துரை செய்தன.
ஆனால், முட்டைக்கோழிகளின் ஆண்குஞ்சுகள் கொல்லப்படும்
விதம் குறித்து பன்னாட்டு நிறுவனங்கள் கண்டுகொள்ளாமல், முட்டைகளைப் பண்ணைகளில் வாங்கி
வினியோகித்து வந்தன. ஃபார்ம் ஃபார்வர்டு என்ற தன்னார்வல நிறுவனம், யூனிலிவர் முட்டைகளைக்
கொள்முதல் செய்யும் பண்ணைகளில், எவ்வாறு ஆண்குஞ்சுகள், அரவை இயந்திரங்களில் எறியப்பட்டுக்
கொல்லப்படுகின்றன என்பதை வீடியோவாகப் பதிந்து இணையத்தில் வெளியிட்டது. பல லட்சம் பேர்
அக்காணொளியைக் கண்டு தங்கள் அதிர்ச்சியை பின்னூட்டமாகப் பதிவு செய்ததும், யூனிலீவர்,
தனது முட்டைக் கொள்முதல் கொள்கைகளை மாற்றியதுடன், தனது முட்டை விற்பனையாளர்களுடன் ஆலோசனை
நடத்தி, ஆண்குஞ்சுகளைப் பாலினப் பிரிப்பு செய்து கொலைசெய்யும் விதிமுறைகளை மாற்றச்
சொன்னது. ஒரு வருடத்தில் யூனிலீவர் விற்கும் முட்டைகள் மட்டும் 350 மில்லியன். இதற்கு
இணையான அளவிலான ஆண்குஞ்சுகள் கொல்லப்பட்டிருக்கும்.
இப்படிக் கொல்லப்படும் ஆண்குஞ்சுகளையும், வலுவிழந்த
பெண்குஞ்சுகள், நோய்வாய்ப்பட்டவை, முட்டையிலிருந்து வெளிவராத குஞ்சுகள் போன்றவற்றையும்
அரைத்து, உலர்த்திப் பொடித்துப் புரத உணவாக விலங்குத் தீவனத்தில் கலப்பது இதுவரை இருந்த
நிலை. இதன் தரக்கட்டுப்பாடு, மிகுந்த சவாலான ஒன்று. பெரும்பாலும் கழிவாகவே அவை தள்ளப்படுகின்றன.
ஆண்குஞ்சுகள் கொல்லப்படுவதைத் தவிர்க்க, ஜெர்மனியும்,
நெதர்லாந்தும் இணைந்து புதிய உத்தி ஒன்றை நடைமுறைப்படுத்தியிருக்கின்றன.
லேசர் கொண்டு, மிகச்சிறிய துளைகள் முட்டையோட்டில் இடப்பட்டும்,
நுண் ஊசிகள் மூலம் துளையிடப்பட்டும், முட்டையின் திரவம் சேகரிக்கப்பட்டு, மரபணு ஆய்வுக்
கருவிகள் மூலம் அவற்றின் பாலின மரபணுக்கள் சோதிக்கப்படுகின்றன. இதன்மூலம் முட்டைகள்
பிரிக்கப்பட்டு, அவை பொரியுமுன்னே அகற்றப்படுகின்றன.
மற்றொரு உத்தியில், முட்டைகள் இருக்கும் வெப்பநிலை
பதப்படுத்தப்பட்ட பெட்டிகளில், அம்முட்டைகளிலிருந்து வெளிவரும் வாயு, கவனமாகச் சேகரிக்கப்படுகிறது.
ஆண்குஞ்சுகள் இருக்கும் முட்டைகளிலிருந்து வரும் வாயுக்கலவையின் விகிதம், பெண்குஞ்சு
முட்டைகளிலிருந்து வரும் வாயுக்கலவையிலிருந்து வேறுபட்டிருக்கும். இதன்மூலம் முட்டைகளை,
அவை பொரியுமுன்னேயே பிரித்தறியலாம்.
இவ்வாறு பிரிக்கப்பட்ட ஆண் குஞ்சு தாங்கிய முட்டைகள்,
தடுப்பூசிகள் தயாரிக்கவும், வளர்ப்புப் பிராணிகளின் உணவு தயாரிக்கவும் (புரதம் செறிந்த
உணவு) பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் குஞ்சுகள் வளராத நிலையில் கொல்லுதல் என்ற செயல்பாடு
இல்லை என்பது அவர்களது கணிப்பு.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து கண்காணிப்பு, தரக்கட்டுப்பாட்டுs
சோதனை நிறுவனமான USFDA ஐந்து அடிப்படைச் சுதந்திர உரிமைகளை வளர்ப்பு விலங்குகளுக்குப்
பரிந்துரைத்திருக்கிறது. அவை முறையே,
1. பசி மற்றும் தாகத்திலிருந்து விடுதலை. தங்கு தடையின்றி
உணவும் நீரும் வளர்ப்பு விலங்களுக்குக் கிட்டவேண்டும்.
2. வசதியான இருப்பிடம்.
3. வலி, காயம், நோய் இவை இல்லாத சூழல், பராமரிப்பு.
4. விலங்குகள் இயற்கையாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்
சூழல்.
5. பயம் மற்றும் அழுத்தமற்ற சூழல்.
     இதில் 5ஆவது உரிமையில், கொல்லப்படுவதில் மனித நேயமான
முறைகள் கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதில் ஆண் குஞ்சுகள்
கொல்லப்படும் முறைகள் அடங்கும்.
இதுபோன்று பல நாடுகளும், பண்ணை விலங்களை நடத்தும் விதிமுறைகளில்
மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன. இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இதில் சற்றே முன்னணியில்
இருப்பதாகத் தெரிகிறது. ஜெர்மனி, ஆண்குஞ்சுகளைக் கொல்வதில், முட்டையிலேயே பாலினப் பரிசோதனை
செய்வதை 2016லேயே நடைமுறைப்படுத்த முயன்றுவருகிறது. அமெரிக்கா, 2022ல் அனைத்துப் பண்ணைகளிலும்,
முட்டையில் பாலினப்பரிசோதனை செய்ய முடிவெடுத்திருக்கிறது.
இந்தியாவில் இதுபோன்று விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
கட்டுப்படுத்தப்படாத சிறு பண்ணைகளில் இவ்விதி முறைகளை எவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள்
என்பது பண்ணையைச் சேர்ந்தவர்களுக்கே வெளிச்சம்.
இது குறித்தான நுகர்வோர் அறிதலும், நமது எதிர்ப்புகளும்
ஓங்கி வளரும்வரை, இக்குரல்கள், பண்ணைகளின் கதவுகளைத் தட்டித் திறக்கும்வரை, பிறந்து
ஒருநாள்கூட ஆகாத குஞ்சுகளின் கிச்கிச் ஒலி, அரவைகளின் பெரு ஒலியில் அமிழ்ந்து போவது
தொடரும்.
வினய் மக்கானியின் பெண்ணின் கேள்விக்கு விரைவில் நல்ல
பதில் கிடைக்குமென நம்பலாம்.
உசாத்துணைகள் :
http://kb.rspca.org.au/What-happens-with-male-chicks-in-the-egg-industry_100.html#
http://www.publish.csiro.au/book/3451
https://www.washingtonpost.com/news/animalia/wp/2016/06/10/egg-producers-say-theyll-stop-grinding-male-chicks-as-soon-as-theyre-born/
http://www.fda.gov/ohrms/dockets/dockets/06p0394/06p-0394-cp00001-15-Tab-13-Farm-Animal-Welfare-01-vol1.pdf
http://www.thepoultrysite.com/poultrynews/34741/germany-aims-for-chicken-sexing-in-the-egg-by-2016/
http://www.insidermonkey.com/blog/11-countries-that-consume-the-most-chicken-in-the-world-353037/10/
Posted on Leave a comment

களங்கமில்லாதவர்கள் கல்லெறியுங்கள் – ஆமருவி தேவநாதன்

‘பேச்சுரிமை மறுக்கப்படுகிறது’, ‘கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படுகிறது’, ‘சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது’, ‘பாசிச அடக்குமுறைகள் அவிழ்த்து விடப்படுகின்றன’ போன்ற கூக்குரல்கள் கடந்த இரு ஆண்டுகளாக ‘அறிவுஜீவி’களால் எழுப்பப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ‘மனம் உடைந்து’, முன்னர் அரசிடமிருந்து பெற்ற விருதுகளைத் திருப்பித்தர பேரறிவாளர்கள் முனைந்து செயல்பட்டதும், இது உண்மை என்று நம்பிய அயல்நாட்டுப் பத்திரிகைகள் ஓலமிட்டு அழுததும் நாம் சமீபத்தில் கண்டவை.

அப்படிக் கூக்குரலிட்டவர்களில் முதன்மையானவர் நயந்தாரா சேஹல் என்னும் எழுத்தாளர். இவர் பண்டித நேருவின் உறவினர். தனக்கு அளிக்கப்பட்ட சாஹித்ய விருதைத் திரும்ப அளித்தார் இந்த எழுத்தாளர். இவரும், இவரைப்போன்ற பலரும் அடிக்கடிப் பேசிவரும் மொழி, ‘பாரதத்தில் பேச்சுரிமையை நிலை நாட்டியவர் நேரு; அவர் கடைசி வரை பத்திரிகைச் சுதந்திரம், பேச்சுரிமை என்பதையே முழுமூச்சாகக் கொண்டிருந்தார். அவரது கொள்கைகள் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன’ என்பதே. அது எந்த அளவு உண்மை என்று பார்க்கலாம்.

விடுதலை அடைந்த பின் 17 ஆண்டுகள் பாரதத்தை வழிநடத்திய பண்டித நேரு அவர்கள், பத்திரிகை சுதந்திரம் தூக்கிப் பிடிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதைப் பலமுறை, பல கூட்டங்களில் சொல்லியே வந்திருந்தார். மார்ச் 8, 1948 அன்று அரசியல் நிர்ணய சபையில் பேசும்போது,(1) நேரு பேசியது: “நாங்கள் பத்திரிகைகளிடம் அளவுக்கதிகமாகவே நீக்குப் போக்காக இருந்து வருகிறோம். அவர்கள் எங்கள் கொள்கைகளுக்கு எதிராக எழுதினாலும் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதைத் தெரியப்படுத்தி இருக்கிறோம்” என்றார். நாடு அன்று இருந்த சூழலில் அவர் அப்படிப் பேசியது அவரைப் பெரிய முற்போக்காளர் என்றே காட்டியது.

பின்னர் டிசம்பர் 3, 1950 அன்று நாளேடுகளின் ஆசிரியர்கள் கூட்டத்தில் நேரு பேசியது மிக முற்போக்கான ஒன்றாகப் பார்க்கப்பட்டது(2). “பத்திரிகைகள் எடுத்துக்கொண்டுள்ள உரிமைகள் அளவுக்கதிகமானவை, ஆபத்தானவை என்று அரசு நினைத்தாலும், பத்திரிகைகளின் சுதந்திரத்தில் தலையிடுவது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை… அடக்கப்பட்ட, சுதந்திரங்களற்ற ஊடகங்களைக் கொண்டிருப்பதைக்காட்டிலும், ஆபத்தான விளைவுகளை உண்டாக்கக் கூடிய, கட்டுப்பாடற்ற சுதந்திரங்களைக் கொண்ட இதழ்களை இயங்க அனுமதிப்பதில் எனக்கு உடன்பாடே” என்றே பேசினார்.

ஆசிய ஜோதி பண்டித நேரு அவர்களின் வாக்கில் கருத்துச் சுதந்திர தேவி நடமாடாத நாளே இல்லை என்னும்படியாக, பெருவாரியான பொதுக்கூட்டங்களில், பத்திரிகையாளர் சந்திப்புக்களில் என்று பல நேரங்களில் கருத்துச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் என்று முழங்கிக் கொண்டிருந்தார்.

நாட்டிற்குத் தீமை விளையும் என்றாலும் பத்திரிகைச் சுதந்திரத்தைக் காப்போம் என்பதாக இருந்த நேருவின் நிலைப்பாடு ஓராண்டிலேயே தலைகீழாக மாறியது.

சென்னையில் இருந்து ரொமேஷ் தாப்பர் என்பார் நடத்திய ‘க்ராஸ் ரோட்ஸ்’ என்னும் இடதுசாரிப் பத்திரிகை நேருவின் கொள்கைகளைக் கடுமையாகச் சாடியபடி இருந்தது. இது காங்கிரஸாருக்குப் பெரும் நெருடலாகவே இருந்து வந்தது. இப்பத்திரிகையை எதிர்த்து அன்றைய சென்னை மாகாண அரசு வழக்கு தொடர்ந்தது. ஆனால் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்து, ‘அரசியலமைப்புச் சட்டத்தின் படி பேச்சுரிமை அடிப்படை உரிமைகளில் ஒன்று. அதனை மறுத்து பத்திரிகையைத் தடை செய்ய இயலாது’ என்று தீர்ப்பளித்தது(3). இது காங்கிரஸ் அரசையும் நேருவையும் பாதித்தது.

அதேநேரம் பஞ்சாப் அரசு ‘ஆர்கனைசர்’ என்னும் பத்திரிகையையும் தடை செய்ய வேண்டி பஞ்சாப் உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. சென்னை வழக்கு போன்றே ‘அடிப்படை உரிமை’யை மறுக்க முடியாது என்னும் விதமாக இந்த வழக்கும் தோல்வி அடைந்தது.

இந்த இரு தீர்ப்புகளும் காங்கிரஸ் அரசை மிகவும் பாதித்தன. ‘அடிப்படை உரிமை’ என்பதால் ஒன்றும் செய்ய இயலாத நிலை. பலவாறு குழம்பிய காங்கிரஸ் மத்திய அரசு, அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த முடிவெடுத்தது. ஆம். ஜனவரி 26, 1950ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்புச் சட்டம், ஓராண்டுக்குள், முதல் முறையாக, பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரம் என்னும் அடிப்படை உரிமைகள் விஷயமாகத் திருத்தப்பட வேண்டும் என்று முடிவானது. இந்த முயற்சியை முன்னெடுத்தவர், அதுவரை பத்திரிகைச் சுதந்திரத்தின் காவலனாக அறியப்பட்ட நேருவேதான்.

மே 10, 1950 அன்று சுதந்திர பாரதத்தின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. மே 29 அன்று பாராளுமன்றத்தில் பேசும்போது நேரு, “பத்திரிகைச் சுதந்திரம் என்பது கட்டற்றது அல்ல. அதற்கான கட்டுப்பாடுகளுக்குள் அது அடங்குவதாக இருக்கவேண்டும். நடைமுறையையும், நாட்டின் சட்டங்களையும் மனதில் கொண்டு பத்திரிகைகள் நடந்துகொள்ள வேண்டும்”(4) என்றார். ஜூன் 18, 1951ல் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்தது சட்டத் திருத்தம்.

‘கட்டுப்பாடற்ற சுதந்திரம்’ என்பது அல்ல என்றாகி, ‘வரைமுறைகளுக்குள் அடங்கும் சுதந்திரம்’ (Reasonable Freedom) என்று ஆனது. 1950 டிசம்பர் மாதம் துவங்கி 1951 ஜூன் மாதத்திற்குள் கருத்துச் சுதந்திரம் மலை முகட்டிலிருந்து அதல பாதாளத்தில் விழுந்தது.

பாரதத்தில் சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி நூல்கள் தடை செய்யப்படும் போதும், இதே ‘நேரு கொடி’ தூக்கப்படும். ஆனால் எழுத்தாளரான நேருவின் காலத்திலேயே நூல்கள் தடை செய்யப்பட்டன என்பதை யாரும் வெளியே சொல்வதில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட ஞாபக மறதி நோய் பரவுகிறதோ என்னவோ.

நேரு காலத்தில் தடை செய்யப்பட்ட நூல்கள் இவை:

Nine hours to Rama – Stanley Wolpert

1962ல் இந்திய அரசு, கலிஃபோர்னியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஸ்டான்லி வோல்பர்ட் எழுதிய  ‘Nine hours to Rama’ என்னும் நாவலைத் தடை செய்தது.  மஹாத்மா காந்தியின் இறுதி நாள் பற்றிய புனைவு நூலான இது, அரசு, காந்திக்குச் சரியான பாதுகாப்பு அளிக்கவில்லை என்னும் கருத்தை வலியுறுத்தி எழுதப்பட்டிருந்தது.

Lotus and the Robot – Arthus Koestler

ஆர்தர் கோஸ்லர் என்பார் எழுதிய ‘Lotus and the Robot ‘ என்னும் நூலை 1960ல் இந்திய அரசு தடை செய்தது. கோஸ்லர் தனது ஜப்பானிய மற்றும் இந்தியப் பயணங்களைப் பற்றி எழுதிய இந்த நாவலில் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு இருண்ட எதிர்காலமே இருப்பதாக எழுதியிருந்தார்.

The Heart of India  – Alexander Campbell

அலெக்ஸாண்டர் கேம்பெல் எழுதிய ‘The Heart of India’ என்னும் நூல், இந்தியாவின் சமூக, பொருளாதாரக் கொள்கைகளைக் கேள்வி கேட்பதாக இருந்தது. நேரு பற்றியும், காங்கிரஸ் கட்சி பற்றியும் அவதூறான கருத்துக்களை இந்த நூல் கொண்டிருந்தது.

Lady Chatterle’s Lover – D.H.Lawrence

டி.எச்.லாரன்ஸ் எழுதிய ‘Lady Chatterle’s Lover – D.H.Lawrence’ என்னும் நூலில் பாலியல் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனை பிரிட்டன் முதலில் தடை செய்தது. பின்னர் தடை நீக்கப்பட்டாலும், இந்திய உச்ச நீதிமன்றம் இந்த நூலைத் தடை செய்தது. ஆயினும் இந்தத் தடையில் நேருவின் பங்கு பற்றி தெரியவில்லை.

பிறந்த குழந்தையைப் பாதுகாக்க வேண்டி சில முன்னேற்பாடுகள் செய்வது போல், விடுதலை அடைந்த சில ஆண்டுகளுக்குள் பாரதத்தின் ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கும் போக்குடைய ஏடுகளை நேரு அடக்கி வைத்து நாட்டைக் காப்பாற்ற முயன்றார் என்று நாம் இன்று நினைத்துப்பார்க்கலாம். ஆனால் அதேபோல் இன்னும் பல மடங்கு ஊறு விளைவிக்கக்கூடிய விஷமப் பிரசாரம் செய்யும் ஊடகங்கள் நாட்டில் பெருகிவிட்ட நிலையில், ஊடக தர்மம் என்பதே தேசியத்தை எதிர்ப்பதுதான் என்னும் விதமாக ஆகிவிட்ட நிலையில், ஊடகவியலாளர்கள் வெளிப்படையாக தேச நலனுக்கு எதிராகச் செயல்படுவது தெரியும் நிலையிலும்கூட, அவர்களை அடக்கவென்று சட்டங்களில் மாற்றங்கள் ஏதும் நடைபெறாத தற்காலத்தில், ‘கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது’ என்னும் கூக்குரல் எழுவது என்ன நியாயம்?

விரைவில் உத்திரப் பிரதேசத்தில் தேர்தல் வர இருக்கும் வேளையில், கருத்துச் சுதந்திரப் போராளிகள் மறு அவதாரம் எடுக்கலாம். விருதுகளைத் திரும்ப வழங்கும் ஆராதனைகள் துவங்கலாம். அப்போது நாம் நினைவில் கொண்டு கேட்க வேண்டிய கேள்வி: கருத்துச் சுதந்திரத்தை முதலில் களங்கப்படுத்தியது யார்?

அடிக்குறிப்புகள்:

(1), (2) மற்றும் (4) –  https://www.sarcajc.com/Nehru_on_Indian_Press.html
(3)  https://indiankanoon.org/doc/456839/

Posted on Leave a comment

ஷா பானு வழக்கு – சந்திர மௌளீஸ்வரன்


இந்திய நீதித்துறை வரலாற்றில், முக்கியமான தீர்ப்புகள்
என்று பட்டியலிட்டால் ஷா பானு வழக்கு முதல் பத்து வழக்குகளில் ஒன்றாக இருக்கும். இன்றளவும்
பேசப்படும் இவ்வழக்கின் அடிப்படை மிக எளிமையானது. ஆனாலும் நீண்ட போராட்டம். ஒரு பெண்
தனக்கான உரிமை கேட்டு சுமார் ஏழு வருடங்கள் நடத்திய சட்டப் போராட்டம்.
1932ம் வருடம் முகமத் அகமத் கான், ஷா பானுவை மணக்கிறார்.
அவர்களின் குடும்ப வாழ்வில் ஐந்து குழந்தைகள் அவர்களுக்குப் பிறந்தன. முகமத் அகமத்
கான் இந்தோரில் ஒரு வழக்குரைஞர். அவர் இன்னுமொரு பெண்ணையும் தன் துணையாக இணைத்துக்கொண்டார்.
இரண்டு மனைவிகளுடன் சில காலம் குடும்ப வாழ்வில் ஈடுபட்ட அவர், ஷா பானுவைத் தன் இல்வாழ்வில்
இருந்து விலக்கி வைக்கிறார். அப்போது அந்தப் பெண்ணுக்கு 62 வயது. அப்படி விலக்கி வைக்கும்போது,
அவர்களுக்குள் ஜீவனாம்ச ஒப்பந்தமாக அகமத் கான், ஷா பானுவுக்கு மாதம் 200 ரூபாய் தருவதாக
ஒப்புக் கொள்கிறார். அதன்படியே சில காலம் கொடுத்தும் வந்திருக்கிறார். இந்த ஜீவனாம்சத்
தொகையையும் ஏப்ரல் 1978ல் வழங்காமல் நிறுத்தினார். தன் மனைவி ஷா பானுவை, இஸ்லாமிய முறைப்படி,
தான் தலாக் செய்துவிட்டதால், இஸ்லாம் வழிமுறைகளின்படி ஷாபானு இனிமேல் தன் மனைவி இல்லை
என்பதும், அவருக்கு மாதா மாதம் ஜீவனாம்சம் தர வேண்டியது இல்லை என்பதும், ஷாபானுவுக்கு
மொத்தமாக ஒரு தொகை தந்துவிட்டால் போதுமானது என்பதும் முகமத் அகமது கான் வாதம்.
ஷா பானு நீதி கேட்டு இந்தோரில் குற்றவியல் நடுவர் நீதி
மன்றத்தில், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு (Code of Criminal Procedure)
125ன் கீழ் தனக்கு தன் கணவர் முகமத் அகமத் கான் ஜீவனாம்சம் தர வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.
மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் மாதம் இருபத்து ஐந்து ரூபாய் ஜீவனாம்சம் தர வேண்டும் என ஆகஸ்ட்
1979ல் ஆணையிட்டது.
மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் சொல்லும் தொகை மிகக் குறைவு
என்று ஷா பானு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் மேல் முறையீட்டு மனு
செய்தார். அவரது மனுவைத் தீர விசாரித்த நீதிமன்றம் ஜீவனாம்சமாக மாதம் ரூபாய்
179.20ஐத் தர ஆணையிட்டது.
இந்தத் தீர்ப்பினை எதிர்த்து அகமத் கான் உச்ச நீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்தார்.
வழக்கின் முதல் கட்ட விசாரணை நீதியரசர்கள் முர்தாச
ஃபசல் அலி, வரதராஜன் எனும் இரண்டு பேர் கொண்ட அமர்வினால் செய்யப்பட்டது.
வாதியான அகமத் கான் தான் இஸ்லாமியர் என்றும், தான்
இஸ்லாமிய மரபுகளுக்கும் அதன் சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட்டவர் என்பதால் மாதாந்திர
ஜீவனாம்சம் வழங்க குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 125ன் கீழ் வழங்கப்பட்ட ஆணை தனக்குப்
பொருந்தாது என்றும் வாதங்களை முன்வைத்தார். நீதியரசர்கள் இருவரும் குற்றவியல் நடைமுறைச்
சட்டப் பிரிவு 125 இந்தியர் அனைவருக்கும் பொதுவானது என்றும், இந்த வழக்கில் சட்ட முக்கியத்துவம்
இருப்பதால் இந்த வழக்கினை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிப்பது பொருத்தமாக இருக்கும்
என்று கருதி இந்தியத் தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்தனர்.
இதன் அடிப்படையில் இந்த வழக்கு ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு
மாற்றப்பட்டது. தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட், நீதிபதிகள் ரங்கநாத் மிஸ்ரா, டி.ஏ.தேசாய்,
ஓ.சின்னப்ப ரெட்டி, ஈ.எஸ் வெங்கட்ராமையா ஆகியோர் இந்த வழக்கினை விசாரித்தார்கள்
All India Muslim Personal Law Board அமைப்பும்
Jamiat Ulema-e-Hind அமைப்பும் இந்த வழக்கில் இணைந்து கொண்டன.
உலக அளவில் மிகக் கவனம் பெற்ற இந்த வழக்கில் விவாதிக்கப்பட்ட
முக்கியமான இரு சட்ட / சமூக அம்சங்கள்:
1.  
தான் விவாகரத்து (தலாக்) செய்த மனைவிக்கு ஜீவனாம்சம்
தருவது குறித்து இஸ்லாமியக் கணவருக்கு இஸ்லாமிய நடைமுறை சொல்வது என்ன?
2.  
இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் உள்ள சட்டப்பிரிவு
125 இஸ்லாமியர் உட்பட அனைவருக்கும் பொதுவானதா?
வாதி அகமத் கான் மற்றும் வழக்கில் தன்னை இணைத்துக்கொண்ட
இஸ்லாமிய அமைப்புகள் முன்வைத்த வாதங்களைக் கவனிக்கலாம்.
இஸ்லாமிய வழக்கப்படி (Muslim Personal Law), தன்னால்
விவாகரத்து செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு இஸ்லாமியக் கணவன், இஸ்லாமியச் சட்டங்களில் சொல்லப்பட்ட  ‘காத்திருக்கும் காலம்’ எனச் சொல்லப்படும் ‘இதாத்’
(Iddat) காலம் வரைக்கும் மட்டுமே ஜீவனாம்சம் தரக் கடமைப்பட்டவன். இந்த வாதத்துக்காக
அவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில், எடுத்துரைக்கப்பட்ட சான்றுகள்:
Sir Dinshah Fardunji Mulla எழுதிய Mahomedan Law எனும்
புத்தகம், Faiz Hassan Badrudin Tyabji எழுதிய Personal Law of Muslims எனும் புத்தகம்
மற்றும் Paras Diwan எழுதிய Muslim Law in Modern India எனும் புத்தகங்களில் இருந்து
மேற்கோள் செய்யப்பட்ட வாதங்களை, உச்ச நீதிமன்ற நீதியரசர்கள்­­, இஸ்லாமிய தனிச் சட்டங்கள்
நடைமுறைகள், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 125க்கு முரண்பட்டது
என்ற நிலையில், இஸ்லாமியச் சட்டங்ளையே அனுசரிக்க வேண்டும் எனும் வாதத்தினை மொத்தமாக
நிராகரித்தார்கள். ஐந்து நீதியரசர்கள் கொண்ட அமர்வின் தீர்ப்பினைப் பார்ப்போம்.
விவாகரத்து செய்யப்பட்ட, தன்னைப் பராமரித்துக்கொண்டு
வாழ வழியற்ற நிலையில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு, ஜீவனாம்சம் தரும் பொறுப்பு இஸ்லாமியக்
கணவனுக்கு இல்லை எனும் வாதத்தினை நிரூபிக்க, வலுவாக்க, கொடுக்கப்பட்ட இந்தப் புத்தகங்களின்
சான்றுகள் போதுமானதாக இல்லை என்றும், இஸ்லாமியச் சட்டங்களின் ஒட்டுமொத்த நோக்கத்தினை
நாம் நன்கு கவனிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது நீதிமன்றம்.
இஸ்லாமியக் கணவன் தன் மனைவிக்கு மரியாதை செய்து வழங்கும்
மஹர் என்பது குறித்து இஸ்லாமியச் சட்டங்கள் பெருமிதமாகப் பேசுகின்றன. இந்த மஹர் என்பது
திருமணத்தின்போதும், மண வாழ்க்கையின் போதும், மனைவியின் கௌரவம், கண்ணியம், மரியாதை,
அவளின் அன்றாடச் செலவுகளுக்காக எனச் சொல்லும் இஸ்லாமியச் சட்டங்கள், அதே மனைவி, விவாகரத்து
பெற்று, தன்னைத் தானே பராமரிக்க இயலாத நிலையில், அவளது பாதுகாப்பினைப் புறக்கணிக்கும்
விதமாக இருப்பதை நீதிமன்றம் நிராகரிக்கிறது.
வாதி மற்றும் இந்த வழக்கில் தன்னை இணைத்துக்கொண்ட இஸ்லாமிய
அமைப்புகள் இஸ்லாமியத் தனிச் சட்டங்களை முன்னிறுத்தி முன்வைத்த வாதங்கள், விவாகரத்தின்
காரணமாக தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள இயலாத துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படாத பெண்களுக்கு
மட்டுமானது எனக் கருதுகிறோம்.
ஒரு கணவன் தன்னால் விவாகரத்து செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு
ஜீவனாம்சம் தர வேண்டுமா இல்லையா எனும் பொதுக் கோணத்தில் தாங்கள் இந்த வழக்கினை எந்த
ஒரு நிலையிலும் அணுகவில்லை என்பதைத் தெளிவு செய்த நீதியரசர்கள், இந்தியக் குற்றவியல்
நடைமுறைச் சட்டத்தின் சட்டப் பிரிவு 125ன் தன்மையும் அத்தகையது அல்ல என்பதைத் தெளிவு
செய்தனர்.
(கணவனுக்குப்) போதுமான வருமானமிருந்தும், தன்னால் விவாகரத்து
செய்யப்பட்ட மனைவிக்கு ஜீவனாம்சம் தராமல் புறக்கணிக்கும் நிலையினையும், அந்த நிலையில்  ஜீவனாம்சம் கட்டாயம் வழங்கப்பட வேண்டிய அவசியத்தினையும்
சட்டப் பிரிவு 125 உரைக்கிறது என்பதை நீதியரசர்கள் வலியுறுத்தினர்
காத்திருக்கும் காலம் வரையே தன்னால் விவாகரத்து செய்யப்பட்ட
மனைவிக்கு, ஜீவனாம்சம் தர இஸ்லாமியக் கணவர்கள் கடமைப்பட்டவர்கள் என இஸ்லாமியச் சட்டங்கள்
/ வழிமுறைகள் இவற்றினை முன்னிறுத்தி, வாதி மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் செய்த வாதம்,
நிராகரிக்கப்படுவதாகத் தங்கள் தீர்ப்பில் நீதியரசர்கள் குறிப்பிட்டனர்.
இஸ்லாமியர்களுக்கான personal lawம் சட்டப்பிரிவு
125ம் ஒன்றுக்கொன்று முரண்படவில்லை என்பதை நீதியரசர்கள் வலியுறுத்தினர்.
வாதியும் இஸ்லாமிய அமைப்புகளும் முன்வைத்த வாதங்களைச்
சட்ட ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் எதிர்கொண்டு விளக்கமும், அறிவுரையும் வழங்கிய
நீதிபதிகள் அமர்வு, மிக முக்கிய அம்சம் ஒன்றை எடுத்துரைத்தது.
இஸ்லாமிய நடைமுறைகளில் மிகச் சரியான அறிவுரை புனித
குரானில் இருப்பதை எடுத்துக் கூறினர்.
The Quran- Interpreted by Arthur J.
Arberry. Verses (Aiyats) 241 and 242 of the Quran show that according to the
Prophet, there is an obligation on Muslim husbands to provide for their
divorced wives.
விவாகரத்து செய்த மனைவிக்கு ஜீவனாம்சம் தர குரான் வலியுறுத்துவதை
குரான் தொடர்பான சில நூல்களைக் குறிப்பிட்டு விவரித்தனர்.
The Holy Quran’ by Yusuf Ali என்ற நூலில் இருந்து
நீதியரசர்கள் மேற்கோள் செய்தபோது, அதனை மறுத்து All India Muslim Personal Law
Board, அந்த நூலில் வரும் சொல் குறிப்பது ஜீவனாம்சத்தை அல்ல, வேறு பொருளை என்று வாதம்
செய்ததை நிராகரித்த நீதிமன்றம், நாம் நம் பொதுஅறிவையும் பயன்படுத்த வேண்டும் என்பதைக்
குரான் சொல்வதை எடுத்துரைத்தது.
Board of Islamic Publications, Delhi பதிப்பித்த
The Meaning of the Quran நூலை மேற்கோள் செய்த நீதிமன்றம் அந்த வாக்கியத்தினை அப்படியே
தீர்ப்பில் பதிவு செய்தது.
Those of you, who shall die and leave
wives behind them, should make a will to the effect that they should be
provided with a year’s maintenance and should not be turned out of their homes.
But if they leave their homes of their own accord, you shall not be answerable
for whatever they choose for themselves in a fair way; Allah is All Powerful,
All-wise. Likewise, the divorced women should also be given something in
accordance with the known fair standard. This is an obligation upon the
God-fearing people.
இஸ்லாமிய அறிஞர், Dr. Allamah Khadim Rahmani
Nuri, பதிப்பித்த The Running Commentary of The Holy Quran எனும் விளக்க உரை நூலின்
முகவுரையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்தையும் நீதிமன்றம் பதிவு செய்தது. விவாகரத்து
செய்யப்பட்ட மனைவிக்கு ஜீவனாம்சம் அவசியம் வழங்க வேண்டும் என்பதை குரான் வலியுறுத்துகிறது
என்றும், அதற்கு எதிரான வாதம் குரான் காட்டும் வழிமுறைகளுக்குச் செய்யப்படும் அநீதி
என்றும் தெளிவாகப் புரிய வைத்தது.
கணவன் மனைவி விவாகரத்து, ஜீவனாம்சம் எனும் தனிநபர்
வாழ்க்கை தொடர்புடைய வழக்கில், கணவன் தரப்பினை ஆதரித்து, தங்களை ஈடுபடுத்திக்கொண்ட
இஸ்லாமிய அமைப்புகள் வழக்கின் மீது காட்டிய ஆர்வத்தினை ‘தேவையற்ற ஆர்வம்’ என வருணித்த
நீதியரசர்கள் அவை சட்ட ரீதியாகவும் வாழும் முறைக்கும் பொருத்தமற்றவை என்பதை ஆழ்ந்த
வருத்தத்துடன் எடுத்துரைத்தனர்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பகுதி நான்கு –
Directive Principles of State Policy. இந்த வழிகாட்டும் நெறிமுறைகளில், ஷரத்து 44
பொதுச் சிவில் சட்டம் குறித்தது. இது குறித்து இந்த வழக்கில் நீதிமன்றம் தனது ஆழ்ந்த
கவலையை வெளிப்படுத்தியது
பொது சிவில் சட்டம் அமையப் பெற அரசு நடவடிக்கை எதுவும்
எடுக்கவில்லை எனக் கவலை கொண்ட நீதிமன்றம், இஸ்லாமியர்கள் தங்களுக்கான தனிச் சட்டங்களைப்
புனரமைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை துளிர்த்திருப்பதாகவும்
கருத்துரைத்தது. (A belief seems to have gained ground that it is for the Muslim
community to take a lead in the matter of reforms of their personal law.)
பொதுச் சிவில் சட்டத்திற்கான அவசியத்தினை தேசிய ஒருமைப்பாடு
எனும் கோணத்தில் தெளிவாக விளக்கிய நீதிமன்றம், நமது அரசமைப்புச் சட்டத்துக்கு முறையான
அர்த்தத்தைத் தரக் கூடியது பொதுச் சிவில் சட்டம் என்பதை எடுத்துரைத்ததோடு, அரசு இதனை
நடைமுறைக்குக் கொண்டு வருவதில் நிறைய சவால்களைச் சந்திக்க வேண்டும் என்ற நிதர்சனத்தையும்
புரியவைத்தது. இப்படியான சூழலில் தேவையான சமூக மாற்றத்தினை முன்னெடுக்கும் தலையாய பொறுப்பினை
நீதிமன்றங்கள் ஏற்க வேண்டிய அவசியமான சூழலையும் விளக்கினர்.
இங்கொன்றும் அங்கொன்றுமாய்க் கவனத்துக்குக் கொண்டுவரப்படும்
வழக்குகளின் மூலம் நீதிமன்றங்கள் வழங்கும் நிவாரணங்கள், பொதுச் சிவில் சட்டம் தர வல்ல
நிரந்தர நிவாரணத்தினைத் தர இயலாது என்பதை மிகத் தெளிவாக உச்ச நீதிமன்றம் சொல்லியது.
Dr. Tahir Mahmood எழுதிய Muslim Personal Law நூலில்,
பொதுச் சிவில் சட்டத்துக்கான அவசியத்தை வலியுறுத்தியதை நீதிமன்றம் தன் தீர்ப்பில் தெளிவாகப்
பதிவு செய்துள்ளது.
ஷா பானுவின் நியாயமான உரிமையினை மீட்டுக் கொடுத்த உச்ச
நீதிமன்றம், தனது தீர்ப்பின் இறுதியில், பாகிஸ்தான் அரசால் அமைக்கப்பட்ட
Commission on marriage and Family Laws எனும் அமைப்பின் ஆய்வு அறிக்கையினை மேற்கோள்
செய்கிறது.
எந்தக் காரணமும் இல்லாமல், ஏராளமான நடுத்தர வயதுப்
பெண்கள் விவாகரத்து செய்யப்பட்டு ஆதரவின்றி, தெருவில் தள்ளப்பட்டு அவர்களும் அவர்களது
பிள்ளைகளும் வாழ வழியில்லாமல் செய்யப்படலாகாது.
“மாறிவரும் சமூகச் சூழலில், இஸ்லாமியச் சட்டங்கள் அவற்றை
எதிர்கொள்ளத் தகுந்தவையா எனும் கேள்வியை எதிர்கொண்டு முறையான பதிலுரைக்க இஸ்லாமிய நாடுகள்
அறிவுபூர்வமான முயற்சி நிறைய மேற்கொள்ள வேண்டும்.”
ஷா பானு வழக்கின் அரசியல் எதிரொலியாக அப்போது ஆட்சி
செய்த ராஜிவ் காந்தி தலைமையிலான அரசு The Muslim Women (Protection of Rights on
Divorce) Act 1986 எனும் சட்டத்தினைக் கொண்டு வந்தது.
ஷா பானு வழக்கில் வாதியான கணவரும் இஸ்லாமிய அமைப்புகளும்
செய்த வாதங்களை தாங்கிப் பிடிப்பதாக இந்தப் புதிய சட்டம் இருந்தது.
அதாவது, விவாகரத்து பெற்ற இஸ்லாமிய மனைவி தன் கணவரிடமிருந்து,
காத்திருக்கும் காலம் ‘இதாத்’தின் போது மட்டுமே ஜீவனாம்சம் பெறத் தகுதியுள்ளவர் என்பதை
இந்தப் புதிய சட்டம் வலியுறுத்தியது. இச்சட்டம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நீர்த்துப்
போகச் செய்தது. இந்தப் புதிய சட்டத்தினை எதிர்த்து டனியல் லத்தீஃபி (Danial
Latifi) உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவர்தான் ஷா பானு வழக்கில் அவர் சார்பாக
வாதாடியவர். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் மேற்படிச் சட்டம் செல்லத்தக்கது என்று தீர்ப்பு
சொல்லி, இரண்டு முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தது.
* இஸ்லாமியக் கணவர் தான் விவாகரத்து செய்த மனைவிக்கு
இதாத் காலம் வரை மட்டும் ஜீவனாம்சம் தந்தால் போதும்.
* இதாத் காலத்திற்குப் பின் அந்தப் பெண்ணை அவளது உறவினர்
பராமரிக்க வேண்டும். உறவினர் இல்லை என்றால், மாநில வக்ஃப் வாரியம் அந்தப் பெண்ணுக்கு
ஜீவனாம்சம் வழங்க வேண்டும்.
இந்த ஷா பானு 1992ம் ஆண்டு உடல்நலமின்றி மரணமடைந்தார்.
இந்த  ஷா பானுவின்
வழக்கு இன்றும் தொடர்ந்து ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இப்போது பொதுச் சிவில் சட்டம் பற்றிய விவாதங்கள் தலைதூக்கியுள்ள நிலையில், ஷா பானுவின்
வழக்கின் தீர்ப்பைப் பற்றிய சரியான புரிதல் நமக்கு இருப்பது மிகவும் அவசியமானது. ஷா
பானு வழக்கில் உச்சநீதிமன்றம் தந்த முழுமையான தீர்ப்பைப் படிக்க:
http://judis.nic.in/supremecourt/imgs1.aspx?filename=9303
Posted on Leave a comment

வெறுப்பரசியல் – பிரவீண்

கடந்த ஆண்டின் இறுதியில், தாத்ரி சம்பவத்தை முன்வைத்து,
பிரதமர் மோடிக்கு எதிராக இடதுசாரி எழுத்தாளர்களும், எதிர்க்கட்சிகளும் பிரசாரத்தில்
ஈடுபட்டார்கள். அப்போது, மத்திய அரசு கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவதாக அவர்கள் அலறினார்கள்.
பாரதிய ஜனதா மீதும் இந்துத்துவர்கள் மீதும் அக்கறை
கொண்டவர்களும், எக்கட்சி சார்பும் இல்லாத பொதுமக்களும்கூட மத்திய அரசு தவறிழைக்கிறதோ
என்று சந்தேகப்படும் வகையில், எதிர்க்கட்சிகள் வலுவாகக் கோஷமிட்டன. பிகார் தேர்தலுடன்
பிரசாரத்தை மூட்டை கட்டிவிட்டன.
விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் வரவிருக்கும் உத்திரப்
பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மோடிக்கு எதிரான பிரசாரத்தை எதிர்க்கட்சிகள் தொடங்கிவிட்டன.
அண்மையில் நாடு முழுவதும் தலாக் பிரச்சினை தொடர்பாக
விவாதம் எழுந்தது. முஸ்லிம் பெண்களுக்கு உரிய நியாயத்தை மத்திய அரசு உறுதி செய்யும்
என்றார் மோடி. உடனே மோடியின் மனைவி யசோதாபென்னுக்கு நியாயம் வழங்கப்படுமா என்று காங்கிரஸ்
கட்சி தனிப்பட்ட தாக்குதலை மீண்டும் தொடங்கியது. இத்தனைக்கும் இந்த விவகாரம் எழுப்பப்படுவது
புதிதல்ல. குஜராத் தேர்தலில் மோடியைத் தோற்கடிக்க முடியாமல், யசோதா பென் விவகாரத்தை
காங்கிரஸ் எழுப்பியது. ஏதுமறியாத 10 வயதில் யசோதாபென்னைத் திருமணம் செய்ததை மோடி மறுக்கவில்லை.
ஆனால், விவரம் புரிந்ததும் பால்யத் திருமணம் செல்லாது என்று கூறிவிட்டு, ஆர்.எஸ்.எஸ்.
இயக்கத்தில் மோடி சேர்ந்துவிட்டார். யசோதா பென்னும் மறு திருமணம் செய்து கொள்ளவில்லை.
சாதாரண ஆசிரியையாக வாழ்ந்து வருகிறார். ஆனால், இருவருக்கும் அதன் பிறகு தொடர்பும் இல்லை.
இந்த பதிலை அப்போது முதலே பாஜகவும் கூறி வருகிறது. மக்களவைத் தேர்தலில் இந்த விவகாரம்
எழுப்பப்பட்டது. மக்கள் இந்த விஷமப் பிரசாரத்தைப் புறக்கணித்தனர். மீண்டும் மீண்டும்
தோல்வி அடைந்தாலும் எதிர்க்கட்சிகள் தங்களைத் திருத்திக் கொள்ளவில்லை. இனி மாற்றிக்
கொள்ளப் போவதுமில்லை. காரணம், எதிர்க்கட்சிகளின் குணம் அது.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய
அரசு திடீர்த் தடை விதித்தபோதும், எதிர்க்கட்சிகளின் ‘தரம்’ புரிந்தது. மத்திய அரசின்
நடவடிக்கைகளை விமர்சிப்பது தவறல்ல. ஆனால், அதை மையமாக வைத்து நடந்த கீழ்த்தர அரசியல்,
சாமானிய மக்களை முகம் சுளிக்க வைக்கிறது. பிரதமரின் அறிவிப்பை சாமானிய மக்கள் வரவேற்று
விடக் கூடாது என்ற ‘பதற்றம்’ அவர்களிடம் காணப்பட்டது. பல விமர்சனங்களில் தர்க்கம் இல்லை.
மாறாக அவதூறு மட்டுமே காணப்பட்டது. பலவிதமான பொய்கள் ஊடகங்களில் பரப்பப்பட்டன. மக்களை
பீதிக்குள்ளாக்குவதன் மூலம் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றெல்லாம் சிலர் கனவு
கண்டனர்.
ரூபாய் நோட்டு தடை திடீரென அறிவிக்கப்பட்டிருக்கலாம்.
இது தவிர்க்கமுடியாதது. ஒட்டுமொத்தமாக கறுப்புப் பணத்தையும் கள்ளப்பணத்தையும் ஒழிக்க
ரகசியம் மிக அவசியம். அதேசமயம் இத்திட்டத்தை சரியாக அமல்படுத்த ஆறு மாதங்களாகத் திட்டமிடப்பட்டது.
அறிவிப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்பு, அமைச்சரவைக் கூட்டத்துக்கு வரும் மத்திய அமைச்சர்களோ
அவர்களது உதவியாளர்களோ அலைபேசிகளைக் கொண்டு வரக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
சாதாரண மக்கள் தங்கள் இன்னல்களையும் தாண்டி அரசின் அறிவிப்பை வரவேற்கிறார்கள். எதிர்க்கட்சிகளும்
அவர்களது ஆதரவு ஊடகங்களும் வழக்கம் போலவே வதந்திகளைப் பரப்பின.
மத்திய அரசின் நடவடிக்கைகளை வரவேற்பவர்களுக்கு டேஷ்
பக்தர்கள் என்று அடைமொழி இடுவது, பிரதமர் மோடியை சகட்டுமேனிக்கு விமர்சிப்பது என்று
சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியான அர்ச்சனை. போதாததற்கு, அரவிந்த் கெஜ்ரிவாலும், மம்தாவும்
செய்யும் ஸ்டண்டுகள். ஒருபக்கம், பாரதிய ஜனதாவின் நண்பர்களுக்கு மட்டும் முன்கூட்டியே
தகவல் தெரியும் என்கிறார்கள். அதையே காங்கிரசும் கூறுகிறது. மறுபக்கமோ, பிரதமரின் அறிவிப்பு
பற்றி நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கே தெரியாது என்று ராகுல் காந்தி விமர்சிக்கிறார்.
முதலில், மோடி எதிர்ப்பாளர்களும், எதிர்க்கட்சிகளும் அவர்களுக்குள் பேசி தெளிவு அடையவேண்டும்.
என்ன செய்வது என்று புரியாத கையறு நிலையில் இவர்கள்
இருப்பது புரிகிறது. பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு ஆதரவு பெருகி வருகிறது. என்னதான்
காட்டுக் கத்தல் கத்தினாலும், மோடி எதிர்ப்பாளர்களை மக்கள் நம்புவதாக இல்லை. அவர்களை
நினைத்துப் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. இதற்கெல்லாம் அசறுகிறவராக மோடி தெரியவில்லை.
நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் இந்த நடவடிக்கைகள் தொடரும் என்றே தெரிகிறது.
Posted on Leave a comment

பீவர்களின் அணை – ஹாலாஸ்யன்


சிறுபிராயத்தில் வாழைப்பழம் ஒன்றை மரத்தினுள் வைத்துவிட்டு எடுக்க முடியாமல் திணறிய ஒரு குருவியின் கதையை எனக்குச் சொல்வார்கள்.

தாத்தா… தாத்தா…
அரைக்காசுக்கு ரெண்டு வாழைப்பழம் வாங்கினேன்
ஒண்ணைத் தின்னேன் ஒண்ணை பொந்துக்குள்ள வச்சேன்
பொந்தும் பொந்தும் பொருதிப் போச்சு
பொந்த வெட்டித் தராத தச்சன்
தச்சன அடிக்காத ராஜா
ராஜா காட்டை அழிக்காத மான்
மானைப் பிடிக்காத வேடன்
வேடன் வலையைக் கடிக்காத எலி
எலியைப் புடிக்காத பூனை
பூனையைக் கட்டி வைக்காத பாட்டி
பாட்டியை அடி தாத்தா

பழத்தை எடுக்கவும், எடுக்க வைக்கவும் ஒவ்வொரு ஆளாகக் குருவி மேல்முறையீடு செய்யும். ஒவ்வொரு ஆளிடமும் கதையைத் தொடக்கத்தில் இருந்து சொல்லும். குழந்தைகள் இதைக் கேட்கையில் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி நினைவு வைத்துக்கொள்ளும் ஆற்றல் வளரும்.

தச்சனில் இருந்து பாட்டி வரை செய்ய மறுத்ததை தாத்தா கருணைகொண்டு செயல்படுத்துவார். தாத்தா பாட்டியை அடிக்கப்போக, பாட்டி பூனையைக் கட்டிப் பிடிக்க, அது எலியைத் துரத்த, வேடனுடைய வலையை எலி கடிக்க என்று பின்னாலேயே போய், கடைசியில் தச்சன் குருவிக்கு மரப்பொந்தைத் திறந்து வாழைப்பழத்தை எடுத்துக் கொடுத்து விடுவான். கேட்க மிகவும் சுவாரசியமாய் இருக்கும் இந்தக் கதையில், நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் ஒன்று இருக்கிறது.

உணவுச் சங்கிலி (food chain) பற்றிப் படித்திருப்போம். தாவரங்கள் சூரிய ஒளியின் உதவியுடன் கரியமில வாயுவை நீருடன் சேர்த்து கார்போஹைட்ரேட்களை உற்பத்தி செய்யும்.  அவற்றைத் தாவர உண்ணிகள் சாப்பிட, மாமிச உண்ணிகள், தாவர உண்ணிகளை வேட்டையாடி உண்பதன் மூலம், தாவரங்கள் உற்பத்தி செய்யும் ஆற்றலைப் பெறுகின்றன. இவை எல்லாம் இறந்த பின்னர் வல்லூறு போன்ற பிணந்தின்னிகள் (scavengers) அந்த உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் மாமிசத்தை உண்ணும். மீதம் கிடக்கும் எலும்பு உரமாகும். இப்படித்தான் உணவுச் சங்கிலி நிறைவடையும். இந்தச் சங்கிலியில் எந்த உயிரினத்தின் எண்ணிக்கை குறைந்தாலும் சிக்கல்தான். உதாரணமாய் புலிகள் குறைந்தால் தாவர உண்ணிகளுக்குக் கொண்டாட்டம். அவை ஏகத்துக்கும் பெருகி காடு முழுக்க மேயும். மரமாக எதையும் வளர விடாமல் செடியிலேயே மொட்டையடிக்கும். மண்ணில் புல்லோ செடியோ இல்லையெனில் மண் அரிக்கப்படும். சத்து நிறைந்த மண் அரிக்கப்பட்டுவிட்டால் தாவர வளர்ச்சி பாதிக்கப்படும். இதை எப்படிச் சரிசெய்வது என்பதன் ஒரு வழியைத்தான் நாம் முதலில் சொன்ன கதையில் பார்த்தோம். அதில் நாம் பார்த்த தச்சன், ராஜா என எல்லோரையும் ஒன்றன்மேல் ஒன்றாய் இருக்கும் உணவுச் சங்கிலிபோல் எடுத்துக் கொள்வோம். பிரச்சினை உள்ள ஒரு சங்கிலியில், அதன் மேல்மட்ட ஆளை சரிசெய்கையில் எல்லாம் வழிக்கு வருகிறதல்லவா? உணவுச் சங்கிலியில் இப்படிப்பட்ட மேல்மட்ட ஆளை apex predator என்கிறார்கள். ஆற்றலை ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுகையில், அதிக உயிரிகள் இருக்கும் பாதையையே இயற்கை தேர்ந்தெடுக்கும். நிறைய வயிறுகள் நிறைகையில் அது சமநிலையுடன் இயங்கும். அப்படிக் கொன்று புசிக்கும் ஓர் உயிரினம் மறையத் தொடங்கினால் அது சூழியலுக்குப் பெரும் சேதமாக முடியும்.

 இவ்வாறு வேட்டையாடும் ஒரு விலங்கின், உணவுச் சங்கிலியின் மேல்மட்டத்தில் இயங்கும் ஒரு விலங்கின் எண்ணிக்கை மாறுவது, அடிமட்டம் வரை பாதிக்கும். இதனை trophical cascading என்கிறார்கள். Troph என்னும் சொல் உணவு தொடர்பானது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவில் ஓநாய்களின் எண்ணிக்கை சில காரணங்களால் குறையத் தொடங்கியது. ஓநாய்களின் உணவான கடமான்கள் (Elk) அதிகம் வேட்டையாடப்பட்டதால் உணவு குறைந்தும், பண்ணைகளில் வளர்க்கப்படும் கால்நடைகளை வேட்டையாடப் போகையில் சுடப்பட்டும் ஓநாய்கள் நூற்றுக் கணக்கில் இறந்தன. இதன் காரணமாய்க் கடமான்களை உணவாகக் கொள்ள ஆளில்லாமல், வசவசவென்று பெருகி புல்வெளிகளையெல்லாம் மேய்ந்து தீர்த்தன. வில்லோ மரங்களின் கன்றுகளை அவை  தின்றதால், புதிதாய் மரங்கள் இன்றி, மண் அரிப்பும் பறவைகள் இடம் பெயர்வதும் நடந்தது. கொல்ல ஆளில்லை என்னும் கர்வத்தில் அவை பேட்டை வஸ்தாது போல் திரிந்தன. கொரித்துண்ணி (Rodents) வகைகளில் காடுகளின் நலனுக்கு முக்கியமானதாய்க் கருதப்படும் பீவர்கள் (Beavers), மரங்களின் அடிப்பாகத்தைக் கொறித்துக் கொண்டு போய் அணை கட்ட, மரம் இல்லை. அணை இல்லாமல் நீர் தேங்காததால் மீன்வளம் பாதிக்கப்பட்டது.  பீவர்கள் கட்டும் அணையில் தேங்கும் நீரே மண்ணின் ஈரப்பதத்துக்கு ஆதாரம். அணையும் எனவே நீரும் இல்லாததால் மண்ணில் ஈரப்பதம் குறைந்தது. இது மண்ணின் நுண்ணுயிரி விகிதத்தைப் பாதித்தது.  அங்குள்ள வ்யோமிங் (Wyoming) மாகாணத்தின் Yellowstone National Park  இந்தச் சூழியல் சிக்கலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதன் சூழியல் ஆராயப்பட்டு, வனவியல் மற்றும் சூழலியர் அறிஞர்கள் Trophical Cascadingஐ நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டனர். அதற்காக அருகில் இருக்கும் காடுகளில் இருந்து 41 ஓநாய்கள் இங்குக் கொண்டு வந்து விடப்பட்டன. அதன்பிறகு நடந்த மாற்றங்கள் ஆச்சரியமூட்டுபவை.

1.    ஓநாய்கள், அங்குப் பல்கிப் பெருகியிருந்த கடமான்களை வேட்டையாடின. இதனால் அவற்றின் எண்ணிக்கை கட்டுக்குள் வந்தது.
2.    தன்னை வேட்டையாடும் ஓர் உயிரினம் இருப்பதை உணர்ந்த அந்த மான்கள், இடம்விட்டு இடம் நகர்ந்துகொண்டே இருந்தன. அதனால் ஒரு மரம் முழுவதுமாக மொட்டையடிக்கப்படுவது நின்று போனது.
3.    மாட்டிக்கொண்டால் தப்புவதற்கு கடினமான பள்ளத்தாக்குகளும் தாழ்வான பகுதிகளும் ஆபத்து என்று உணர்ந்து, அங்கெல்லாம் செல்வதை மான்கள் தவிர்த்தன. இதனால் அங்குப் புற்களும் மரங்களும் செழித்து வளர்ந்தன.
4.    மரங்கள் வளரத் தொடங்கி, மண்ணை வேர்கள் பிடித்துக் கொண்டதால், காற்றாலும் நீராலும் ஏற்படும் மண் அரிப்பு தடுக்கப்பட்டது.
5.    செழித்து வளர்ந்த மரங்கள், வண்டுகளையும் தேனீக்களையும் அழைத்துவந்தன. அவற்றால் நிறையப் பழங்கள் உருவாகவும், கரடிகளும் பறவைகளும் வந்தன.
6.    மரங்களின் அடிப்பாகத்தைக் கொறித்துப்போய் பீவர்கள் அணைகட்டின. பீவர் அணைகளுக்கு வில்லோ மரங்கள் முக்கியம். நிறைய வில்லோ மரங்கள் இருக்கவும் அவை நிறைய அணைகள் கட்டின. அங்குத் தேங்கிய நீரில் மீன்கள் வளர்ந்தன. மண்ணை அரிக்காத நதி தன் பாதையை சீர்செய்துகொண்டு அழகாகப் பாயத்தொடங்கியது. ஓநாய்கள் வருவதற்கு முன் ஒரே ஒரு பீவர் அணை இருந்த பூங்காவில் இன்று ஒன்பது அணைகள் இருக்கின்றன.

இப்படி கண்ணுக்குத் தெரிய பல மாற்றங்கள். அந்த ஓநாய்கள் பல மிருகங்களைக் கொன்று தின்பது மட்டும்தான் நாம் அறிவோம். ஆனால் அவை ஏகப்பட்ட உயிர்களை வாழ வைக்கின்றன. புல் நுனியில் இருந்து பூதாகரமான கரடிகள் வரை. 2015ம் வருடத்தில், ஓநாய்கள் கொண்டுவந்து விடப்பட்ட பத்தாவது ஆண்டில், அந்தப் பூங்கா ஆச்சர்யப்படத்தக்க வகையில் மாறியிருக்கிறது. வெறும் 41 ஓநாய்களை அங்கு விடுதல் என்பது ஒரு முழு உணவுச் சங்கிலியை மீட்டெடுத்துக் கொண்டுவந்திருக்கிறது.

ஓர் உயிரினத்திற்கு வலுவான சந்ததி உண்டாவது வலுவான பெற்றோரால் மட்டுமே சாத்தியம். அப்படி வலுவில்லாத ஓர் உயிருக்குப் பிறக்கும் உயிரும் வலுவில்லாமல்தானே இருக்கும். அதைச் சரிசெய்ய, வேட்டையாடுகையில் வலுவில்லாத விலங்கைக் குறிவைத்து வேட்டையாடி உண்டு, அந்த விலங்கின் ஜீன் தொகுப்பை (gene pool) ஓநாய்கள் செறிவூட்டி வைக்கும்.

இதையெல்லாம் தெரிந்துகொண்ட பிறகு, நமக்குள் இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.

●     நம்முடைய காடுகளையும், தேசியப் பூங்காக்களையும் பற்றி எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறோம்?
●      மேற்குத் தொடர்ச்சி மலைகள், சுந்தரவனக் காடுகள் – இப்படித் தனிச்சிறப்பு வாய்ந்த காடுகளின் உணவுச் சங்கிலியை நாம் பதிவு செய்து வைத்திருக்கிறோமா?
●     ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இருக்கும் மரங்கள் மற்றும் உயிரிகளை (Endemic species) பற்றியும் அவற்றின் உணவுச் சங்கிலிப் பங்களிப்பு பற்றியும் ஆய்வுகள் இருக்கின்றனவா?
●      இருக்கிறதெனில் சமநிலை பிறழ்ந்த வனங்களில் இதுபோன்ற trophic cascading செய்ய வாய்ப்புகள் உண்டா என்று ஆராய்ந்திருக்கிறோமா?
●      குறிப்பிட்ட உயிரினங்களின் முக்கிய உணவாக (staple food) இருக்கும் மரங்களையும், குறிப்பிட்ட உயிர்களாலேயே பரப்பப்படும் மர விதைகளையும் பற்றிய பட்டியல் இருக்கிறதா?

வெறுமனே விலங்குகளையும் காடுகளையும் காப்பாற்ற வேண்டும் என்று குரல்கொடுப்பது வேலைக்காகாது. வனவியல் அறிஞர்கள், காட்டில் வாழும் காட்டை வீடாகக் கொண்ட பூர்வகுடிகளின் தொல்லறிவோடு கை கோக்காத வரை இதற்குத் தீர்வு கிடைக்காது. அறுப்பதற்கு அல்லாமல் கொஞ்சம் அணைப்பதற்கும் நம் கைகள் வனங்களை நோக்கி நீளட்டும். அங்கிருந்து கிளைகள் எல்லாம் ஆதூரமாக நம்மை நோக்கி நீளும். அதுதான் நாம் அந்த இயற்கை அன்னைக்குச் செய்யும் உண்மையான கைம்மாறு.

Posted on Leave a comment

GST ஒரு புரிதல் – லக்ஷ்மணப் பெருமாள்


 சரக்கு மற்றும் சேவை வரியின் (Goods and Services Tax) சுருக்கமே ஜிஎஸ்டி. மத்திய,
மாநில சரக்கு மற்றும் சேவை வரி 2014ம் ஆண்டு லோக்சபாவில் ‘122வது பாராளுமன்ற சட்டத்திருத்த
மசோதாவாக’ நிறைவேறியது. கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் தேதியன்று ராஜ்யசபையில் சில திருத்தங்கள்
சேர்க்கப்பட்டு அங்கும் நிறைவேறியது. அடுத்த இரு தினங்களில் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும்
லோக்சபாவிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நேரடி மற்றும் மறைமுக வரிகளை விதிக்கின்றன.
(1) பொருள் உற்பத்தி மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரி (Excise duty), (2) பொருள்
விற்பனை மீது மாநிலங்கள் விதிக்கும் விற்பனை வரி, (3) மாநிலங்களுக்கிடையே விற்பனை நடைபெறும்போது
எந்த மாநிலத்தில் விற்பனை ஏற்படுகிறதோ அம்மாநிலத்தால் விதிக்கப்படும் மத்திய விற்பனை
வரி, (4) சேவைகள் மீது மத்திய அரசு விதிக்கும் சேவை வரி, (5) சினிமா போன்ற பொழுபோக்கு
வியாபாரத்தின் மீது மாநிலங்களால் விதிக்கப்படும் கேளிக்கை வரி, (6) ஒரு மாநிலம் அல்லது
ஒரு உள்ளாட்சி தங்கள் பகுதிக்குள் வரும் பொருட்கள் மீது விதிக்கும் உள்ளூர் வரி அல்லது
ஆக்ட்ராய், (6) மாநிலங்கள் விதிக்கும் வாகன வரி எனப் பல வரிகள், பொருட்கள் மீதும் சேவைகள்
மீதும் விதிக்கப்படுகின்றன.
இதில் மத்திய அரசு விதிக்கும் பொருள் உற்பத்தி வரி, சேவை வரி, உற்பத்தி மற்றும்
சுங்கத்துறையில் விதிக்கப்படும் கூடுதல் வரி, செஸ், சிறப்பு கூடுதல் சுங்க வரி, சர்சார்ஜ்
உள்ளிட்ட அனைத்து பல்முனை வரிகளும் தொகுக்கப்பட்டு இனி ஒருமுனை வரியாக விதிக்கப்படும்.
மாநில அரசு விதிக்கும் மதிப்புக் கூட்டு வரி (வாட்), மத்திய வரி, வாங்கும்போது விதிக்கப்படும்
வரி, நுழைவு வரி, பொழுதுபோக்கு வரி, விளம்பரங்கள் மீதான வரி, லாட்டரி, பந்தயம், சூதாட்டம்
என மாநில அரசு விதிக்கும் பிற வரி விதிப்புகளுக்கு மாற்றாக இது அமையும். பல்வேறு பெயரில்
விதிக்கப்படும் நேரடி மற்றும் மறைமுக வரிவிதிப்பு முறைகளுக்கு மாற்றாக ஒருமுனை வரிவிதிப்பைக்
கொண்டுவருவதே இச்சட்டத்திருத்தத்தின் நோக்கம்.
வரி வசூலிக்கும் முறை
வரி வசூலிக்கும் முறை மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
1.    மத்திய சரக்கு மற்றும் சேவை வரி
– சிஜிஎஸ்டி (CGST) – மத்திய அரசு வசூலிக்கும்.
2.    மாநில சரக்கு மற்றும் சேவை வரி
– எஸ்ஜிஎஸ்டி (SGST) – மாநில அரசு வசூலிக்கும்.
3.    மாநிலங்களுக்கிடையேயான சரக்கு மற்றும்
சேவை வரி – (IGST) – மத்திய அரசு வசூலிக்கும்.
வரி வசூலிப்பு எவ்வாறு பங்கு செய்யப்படும்?
உதாரணமாக 19% GST வரி என்று எடுத்துக்கொள்வோம். ஒரு பொருள் ஒரு மாநிலத்தில்
உற்பத்தி செய்யப்பட்டு அதே மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்டால் அந்த 19% ஜிஎஸ்டி வரியானது
சிஜிஎஸ்டி (Central GST) என்றும், எஸ்ஜிஎஸ்டி (State GST) என்றும் பிரிக்கப்பட்டுச்
சமர்ப்பிக்கப்படும். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பங்குகள் செல்லும். மாறாக,
ஒரு பொருள் ஒரு மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வேறு மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்டால்,
அதற்கும் 19% ஜிஎஸ்டி. அதில் மத்திய அரசின் பங்கு மத்திய அரசுக்குச் செல்லும். ஆனால்,
மீதமுள்ள பங்கு எந்த மாநிலத்திற்கு விற்பனை செய்யப்பட்டதோ அந்த மாநிலத்திற்குச் செல்லும்.
இதனை ஐஜிஎஸ்டி என்ற பொதுக் கணக்கில் வரவு வைப்பார்கள். பின்பு பொருள் சென்று சேர்ந்த
மாநிலத்தில் உள்ள அரசுக்கு அந்த வரிப்பணம் சென்று சேரும்.
ஜிஎஸ்டியால் யாருக்கு லாபம்? யாருக்குச் சுமை?
ஜிஎஸ்டி
அறிமுகத்தால் இந்தியாவிற்கே லாபம்தான். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இதனால்
அதிகரிக்கும் (1 to 2%) எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்தப் புதிய சரக்கு மற்றும் சேவை வரியால் உற்பத்தி
பொருட்களுக்கான வரி குறைவதால், பொருட்களின் விலையும் குறையும். இதனால் நுகர்வோர் பெரும்
பலனை அடைவர். விலை குறைவதால் வாங்கும் திறன் அதிகரிப்பதும், அதனால் உற்பத்தி அதிகரிப்பதும்
இயல்பாகவே நடக்கும். தொழில் உற்பத்தியாளர்களுக்கான வரியும் குறைவதால் நிறைய முதலீடுகளும்
புதிய உற்பத்தி நிறுவனங்களும் பெருகும். போட்டி உருவாவதால் பொருள் விலை குறையும். ஏற்றுமதிப்
பொருட்களுக்கான போட்டிகள் அதிகரிக்கும். ஒருமுனை வரி செலுத்துவதால் பொதுமக்களுக்கும்
குழப்பங்கள் நீங்கும். வரி ஏய்ப்பும் இதனால் பெருமளவு குறைய வாய்ப்புள்ளது.
சிறு மற்றும் குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்கள் வளர GST மசோதா வழிவகுக்கிறது.
உற்பத்தி, வணிகம், நுகர்வில் உள்ள சிக்கலான தடைகள் விலகும். வியாபாரிகள் பலமுனை வரிவிதிப்பிலிருந்து
விடுபடுவதால் அவர்கள் சிரமமின்றி வரியைச் செலுத்த இயலும். மேலும் சிறுவியாபாரிகளுக்கு
இந்த GSTயிலிருந்து வரிவிலக்கு அளிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சேவைத்துறையை மட்டும் நம்பி வணிகம் செய்தவர்களின் வரி உயருவதால் அவர்களுக்கு
இது பாதிப்பைத் தரும். தற்போது 14%தான் சேவை வரி விதிக்கப்படுகிறது. இனி புதிய சதவீத
(குறைந்த பட்சம் 18% க்கும் மேல்) வரியைச் செலுத்த வேண்டி வரும். அதேபோல சில பொருட்களின்
விலை உயருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் சில்லறை வணிக வரி இரட்டிப்பாவதற்கான சாத்தியக்கூறுகள்
உள்ளன. இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியும் 6% வரை உயரும். அனைத்துத் துறைகளும்
மத்திய மாநில அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கும்.
GSTயிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள்:
1. மது. (ஆனால் மருந்துகள், சுத்தம் செய்யும் பொருட்களில் உபயோகிக்கும் ஆல்கஹாலுக்கு
விலக்குக் கிடையாது.). 2. பெட்ரோலியப் பொருட்கள்.3. டீசல் 4. புகையிலை
மேற்கூறிய பொருட்களை GST க்குள் கொண்டு வர மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன்
அடிப்படையில் தற்காலிகமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மது மற்றும் பெட்ரோலியம் மூலமாகவே
மாநில அரசுகளுக்குத் தேவையான 40-45% வருவாய் கிடைப்பதே எதிர்ப்பிற்குக் காரணம். பெட்ரோலியப்
பொருட்கள் GST வரையறைக்குள் வராத பட்சத்தில் அது முழுமையற்ற GST என்ற கருத்தும் உள்ளது.
வங்கிகளை GST வரைமுறைக்குள் கொண்டு வந்தால் வங்கிகளின் சேவைச் செலவும் கூடுமாதலால்
அதற்கும் விலக்கு அளிக்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சரக்கு மற்றும் சேவை வரியை எவ்வாறு நிர்ணயிப்பது?
மத்திய மாநில அரசுகளின் தற்போதுள்ள வரி வருவாயைப் பாதிக்காத வண்ணமும், எதிர்காலத்தில்
புதிய வரி வருவாயை அதிகரிக்கும் வண்ணமும், வரிவிகிதம் அதிகமாக இருக்க வேண்டும். இதைத்தான்
Revenue Neutral Rate என்கிறோம். இதனால்தான் ஜிஎஸ்டி வரி RNRஐப் பொருத்தது என்கிறோம்.
தற்போதுள்ள நிலையில் முக்கிய வருவாயுள்ள பெட்ரோலியம், மது போன்ற பொருட்களை
GSTயிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதால் RNR அதிகமாக இருக்கும். அதாவது சரக்கு
மற்றும் சேவை வரி 18% க்குள்ளாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே பணவீக்கத்தைக்
கட்டுக்குள் வைத்திருக்கமுடியும். RNR அதிகமானால் சரக்கு மற்றும் சேவை வரி அதிகமாகும்.
அதனால் தற்காலிகமாக அதிக பண வீக்கத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
பிரதமரின் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியம் இவ்வாறாகச் சொல்கிறார்.
“GSTக்கான வரி 18% ஆக இருப்பதே சிறந்தது. ஆனால் இதை மாநில அரசுகள் புரிந்துகொண்டதாகத்
தெரியவில்லை. அவர்களுக்கு அரசுக்கான வருவாயை அதிகரிக்க வரியை அதிகமாக்க வேண்டும். அப்படி
மட்டுமே அரசின் வருமானம் அதிகரிக்கும் என எண்ணுகிறார்கள். இதனால் இந்திய அளவில் பண
வீக்கம் அதிகரிக்கும் என்பதை உணரவேண்டும்” என்கிறார்.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் மதுவிற்கு விலக்கு அளித்துவிட்டுக் கொண்டுவரப்பட்டுள்ள
GST அர்த்தமற்றது என்ற குரல்கள் குறித்துக்கேட்டபோது மிக அழகான பதிலை முன்வைக்கிறார்.
“இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், அனைத்து மாநில அரசுகளையும் ஒருங்கிணைத்து
அவர்களின் ஒப்புதலுடன் முதலில் GSTயைக் கொண்டு வந்ததே மிகச் சிறந்த சாதனைதான். கூட்டாட்சித்
தத்துவத்தை மதித்துத்தான் திட்டங்களை அமல்படுத்த இயலும். அவ்வகையில் மாநில அரசுகளின்
அச்சத்தைப் போக்கித்தான் மத்திய அரசு செயல்பட முடியும். அதைத்தான் மோதியின் அரசு செயலாக்கி
உள்ளது. மேலும் எதிர்காலத்தில் மாநில அரசுகளே சில ஆண்டுகளுக்குப் பிறகு வருவாயைப் பொருத்தும்,
மக்கள் சுமையைப் புரிந்துகொண்டும் பெட்ரோலியப் பொருட்களையும் GST க்குக் கீழ் கொண்டு
வரச் சம்மதிப்பார்கள்.” எனவே பெட்ரோலியப் பொருட்கள் அல்லாத ஜிஎஸ்டி பயனற்றது என்ற வாதத்தைக்
காட்டிலும் முதல் நடவடிக்கையை எடுத்துள்ளோம் என்பதே முக்கியமானது. இது ஓர் இயக்கம்”
என்கிறார்.
உலக அளவில் சராசரியாக ஜிஎஸ்டி விகிதம் 16 to 20% ஆக உள்ளது. ஆஸ்திரேலியாவில்
10%, நியுசிலாந்தில் 15%, ஜப்பானில் 8%, ஜெர்மனியில் 23%, மலேசியாவில் 6% ஆக உள்ளது.
பிரான்ஸ், இங்கிலாந்தில் இரட்டை ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை உள்ளது. இந்தியாவும் ஜிஎஸ்டி
விகிதத்தை சராசரி நிர்ணய அளவான 20%க்கு மிகாமல் வைத்திருக்கவும், ஏழை மக்களைக் கருத்தில்கொண்டு
சில பொருட்களுக்கு அடிப்படை விகிதமான 14% மட்டுமே வைத்திருக்கவும் திட்டமிட்டுச் செயல்படுகிறது.
சில ஆடம்பரப் பொருட்களுக்கு அதிக விகிதத்தில் வரி விதிக்கலாமா என்ற யோசனையிலும் உள்ளது.
இதில் எந்தத் திட்டவட்டமான முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஜிஎஸ்டி கவுன்சில் கூடித்தான்
இந்த வரி அளவை நிர்ணயிக்க இயலும். ஜிஎஸ்டி விகிதம் அதிகமானால் நுகர்வோருக்கு அவநம்பிக்கை
ஏற்படும். இது அனைத்துத் துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
சிக்கலான வரி செலுத்தும் முறையா ஜிஎஸ்டி?
வரி செலுத்தும் முறையை எளிமைப்படுத்துவதற்காக ஜிஎஸ்டி நெட்வொர்க் (GSTN) என்ற
ஒரு நிறுவனத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து 2013லேயே ஆரம்பித்துவிட்டன. முழுவதும்
கணினி மயமான வரி செலுத்தும் முறையை இந்த நிறுவனம் ஏற்படுத்திவிட்டது. தங்கள் வரி வசூலிக்கும்
நிர்வாக அலுவலகங்களைக் கணினிமயமாக்கவும், அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் இந்
நிறுவனம் மாநிலங்களுக்கு உதவி செய்கிறது. பல தனியார்க் கணினி மென்பொருள் நிறுவனங்களும்
இந்த வேலையைச் செய்துள்ளன.
ஜிஎஸ்டி வரியை வங்கிகளில்தான் கட்டவேண்டும். இணையத்தள வங்கிச் சேவையில் வரி
செலுத்துவது ஊக்குவிக்கப்படும். இதற்காக மத்திய ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்குத்
தனியான பண வரிவர்த்தனை வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பங்குதாரராக மத்திய மாநில அரசு வங்கிகளின் பங்களிப்போடு,
தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி, எல்ஐசி ஃபினான்ஸ் கம்பெனி ஆகியவையும் பங்குதாரராக
இருக்கும். வேறெந்தப் பொதுத்துறை வங்கியும் பங்குதாரராக இல்லை. ஜிஎஸ்டி வரியை வசூலிக்க
ஆரம்பச் செலவாக 4,000 கோடி நிர்வாக முதலீட்டுத் தொகை தேவைப்படுகிறது. இதை முழுவதுமாக
அரசு வங்கியாலோ பொதுத்துறை வங்கியாலோ ஏற்க இயலாது என்பதால், தனியார் வங்கிகளின் பங்களிப்போடு
செயல்படும் வகையில், சிதம்பரம் அமைச்சராக இருந்தபோதே முடிவெடுக்கப்பட்டுவிட்டது.
GSTN ன் பங்குதாரராக மத்திய, மாநில வங்கிகளின் பங்கு 49 சதவீதமும், தனியார் வங்கிகளின்
பங்கு 51 சதவீதமும் இருப்பதைக் கடுமையாக எதிர்க்கிறார் சுப்பிரமணியம் சுவாமி. இதை எதிர்த்துப்
பிரதமருக்குக் கடிதமும் அனுப்பியுள்ளார். இது குறித்து முறையான நடவடிக்கையை நிதித்துறை
எடுக்காவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் எனக் கூறிவருகிறார் சுவாமி.
 ஜிஎஸ்டி கவுன்சில்
மத்திய மாநில அரசுகள் இணைந்தே வரிவிதிப்பில் மாற்றம் கொண்டுவர இயலும். மத்திய அரசு தன்னிச்சையாகச் செயல்படுவது கூட்டாட்சி
தத்துவத்திற்கு எதிரானது என்பதால் மாநில அரசுகளின் கோரிக்கைகளும் கேட்கப்பட்டு ஒரு
பொதுவான/ சமரசமான முடிவுகள் எட்டப்பட ஒரு கவுன்சில் அமைக்கப்படும். அதுவே GST கவுன்சில்.
அதன் தலைவராக மத்திய அரசின் நிதி அமைச்சர்
இருப்பார். இதன் உறுப்பினர்களாக அனைத்து மாநில நிதி அமைச்சர்களோ, வருவாய்த் துறையைச்
சார்ந்த அமைச்சர்களோ நியமிக்கப்படுவார்கள். சட்ட வரைவை மாற்ற வேண்டுமென்றால், குழுவிலுள்ள
உறுப்பினர்களில் நான்கில் மூன்று பங்கு ஓட்டுக்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம். கூட்டாட்சித்
தத்துவத்தை நிரூபிக்கும் வகையில் மூன்றில் ஒரு பங்கு ஆதரவு வாக்குகள் மத்திய அரசிடமும்,
மூன்றில் இரு பங்கு வாக்குகள் மாநிலங்கள் வசமும் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது சட்டவரைவிலோ, தற்போது ஜிஎஸ்டி வரையறைக்குள் வராத பொருட்களை எதிர்காலத்தில் கொண்டுவரவேண்டுமானால்
குறைந்த பட்சம் 75% வாக்குகளைப் பெற்றிருந்தால் மட்டுமே மாற்றம் கொண்டு வர இயலும்.
எளிதாக விளக்க வேண்டுமானால் 19 மாநிலங்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே மத்திய அரசால்
மாற்றங்களைக் கொண்டுவர முடியும். அதேபோல மாநிலங்களைப் பொருத்தவரையில், 12 மாநிலங்களின்
ஆதரவு இருந்தால் மத்திய அரசின் விருப்பப்படி நடக்காமல் தடுத்துவிட இயலும்.
மாநில உரிமைகளை ஜிஎஸ்டி சட்டம் பறிக்கிறதா?
ஜிஎஸ்டியை ஏப்ரல் 2017 முதல் நடைமுறைக்குக் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
அதற்கு முன்பாகக் குறைந்தபட்சம் 50%க்கும் கூடுதலான மாநிலங்கள் இந்த சட்டவரைவை ஏற்றுக்கொள்வதாகச்
சட்டசபையில் சட்டமாகக் கொண்டுவரவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மாநில உரிமைகள்
எவ்விதத்திலும் பாதிக்கக்கூடாது என்ற வகையில்தான் இந்த ஏற்பாடு.
அதிமுகவைத் தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் ஜிஎஸ்டி மசோதாவை ஏற்று ராஜ்யசபாவில்
வாக்களித்திருந்தது. இதனைத் தொடர்ந்து இதுவரையிலும் 23 மாநிலங்கள் GST யில் சேர்வதை
உறுதிசெய்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுள்ளது. தமிழகம் தவிர்த்து அனைத்து
மாநிலங்களும் வெகுவிரைவில் தீர்மானம் நிறைவேற்றிட உறுதி கொண்டுள்ளன. இந்தியாவில் கூட்டாட்சித்
தொடர்பான ஷரத்துகளில் மாற்றம் கொண்டுவரவேண்டுமானால் சட்டத்திருத்த மசோதாவாக மட்டுமே
கொண்டுவர இயலும். எனவேதான் சட்டத்திருத்தம் 368 அறிமுகப்படுத்தப்பட்டு 122வது சட்டத்திருத்த
மசோதாவாக இது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டியை எதிர்ப்பதற்கு அதிமுக கூறும் காரணங்கள்:
அதிமுகவின்
எதிர்ப்பினை முற்றிலும் புறந்தள்ளவிட முடியாது. அதில் நிச்சயமாக மாநில நலன் அடங்கியுள்ளது.
அதேபோல முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
அதிமுக எதிர்ப்பதில் மிக முக்கியமான அம்சமாக இருப்பது, பொருள்
ஏற்றுமதி (IGST Inter State GST) வரியின்கீழ் கூடுதலாக 2% வரியை மாநிலங்கள் நேரடியாக
இதுவரையிலும் வசூலித்து வந்தன. பாஜக தனது ஆரம்ப சட்டவரைவில் இதை 1% இருக்குமாறு வைத்திருந்தது.
ஆனால் காங்கிரஸ் மற்றும் நுகர்வோர் மாநிலங்கள் காட்டிய எதிர்ப்பின் காரணமாக IGSTயிலிருந்த
1% வரியை நீக்க ஒப்புக்கொண்டுவிட்டது. மத்திய அரசே வசூலித்துப் பின்னர் பொதுக் கணக்கை
உருவாக்கி, நுகர்வோர் மாநிலத்திற்கும் உற்பத்தி மாநிலத்திற்கும் கொடுக்குமெனச் சட்டவரைவில்
திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு உற்பத்தி மாநிலமாக இருப்பதாலும், உற்பத்திப்
பொருட்களுக்கான புதிய வரி குறைவதாலும் மாநில அரசிற்கு ஆண்டிற்கு 9200 கோடி ரூபாய் இழப்பு
ஏற்படுவதைக் காரணமாகச் சொல்கிறது அதிமுக.
தன் மாநில நலன்கருதி அதிமுக முன்வைத்த குற்றச்சாட்டு மிகச் சரியானதே. இதேபோல
மகாராஷ்டிராவிற்கு ஆண்டிற்கு 20,000 கோடி ரூபாயும், குஜராத்திற்கு 10,000 கோடி ரூபாயும்,
ஹரியானாவிற்கு 3,000 ரூபாய் கோடிக்கு மேலாகவும் இழப்பு ஏற்படலாம். மற்ற மாநிலங்களை
பிஜேபி ஆள்வதால் மௌனம் காக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அந்தக் கட்டாயம் அதிமுகவிற்குக்
கிடையாது. மாநிலங்களுக்கான இந்த இழப்பை மத்திய அரசு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஈடுசெய்யும்
என்ற உறுதியையும் கொடுத்துள்ளது. தற்போது மாநிலங்களுக்குச் சேவை வரி மூலம் கூடுதல்
வருவாயும் வர வாய்ப்புள்ளது. தமது மாநில நலனை முன்வைத்து எதிர்ப்பை அதிமுக பதிவு செய்ததை
வரவேற்கலாம். ஆனால், மத்திய அரசே GST கவுன்சிலில் இருக்கக்கூடாது என்றும், ஏற்கெனவே
இருந்த Empowered Committee மட்டுமே போதுமானது என்றும், ஜிஎஸ்டி மாநில உரிமைகளைப் பறிக்கிறது
என்றும், மாநிலப் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பாதிக்கிறது என்றும் அதிமுக சொல்வதை ஏற்க
இயலாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஓட்டு என்ற முறையை அதிமுக எதிர்க்கிறது. அதிமுகவின்
வாதம், இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% வரை உற்பத்தி செய்யும் மாநிலத்திற்கும்,
குறைந்த உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கும், சரிசமமாக ஒரே ஓட்டு என்பது சரியானதல்ல
என்பதுதான். மேலும், மக்கள்தொகை விகிதத்தைக் கணக்கில் கொள்ளாமல் அனைத்து மாநிலங்களுக்கும்
ஒரே விதமாக ஒரு ஓட்டு என்ற முடிவை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளது அதிமுக.
அதிமுகவின் எதிர்ப்பால் தற்போதைய நிலையில் எந்தப் பலனும் கிடையாது. மேலும் உற்பத்தி
மாநிலங்களைக் காட்டிலும், மக்கள்தொகை அதிகமான உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம்,
மத்தியப் பிரதேசம், ஒடிஸா, கேரளா போன்ற மாநிலங்கள் நுகர்வோர் மாநிலங்கள் என்ற இடத்தில்
இருப்பதால்தான் அந்த மாநிலங்கள் இது மாநில அதிகாரத்தைப் பறிப்பதாகப் பார்க்கவில்லை.
மற்ற மாநிலங்களைப் பொருத்தவரையில், மாநிலங்களுக்கு 2/3 பங்கு அதிகாரமுள்ளது என்பதால்,
தமது அதிகாரம் அதிகமாக இருப்பதாக நம்புகிறது. தத்தம் மாநிலங்களுக்கு வருமானம் அதிகமாக
புதிய GST வரிவிதிப்பு முறை உதவும் என்பதால்தான் மத்திய அரசுடன் ஒத்துழைத்துள்ளன என்பதைப்
புரிந்துகொள்ள வேண்டும். மேலும், பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டிக்குக் கீழ் கொண்டுவரக்கூடாது
என்றும் அதிமுக தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டியை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்ற முனைப்போடு
மத்திய அரசு செயல்படுகிறது. மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பையும் இவ்விஷயத்தில் பெரும்பாலான
மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. ஜிஎஸ்டி கவுன்சில் கூடி மக்கள் ஏற்றுக்கொள்ளும்படியான
வரிவிகிதத்தை அமைக்க வேண்டும். ஏழைகளைக் கணக்கில்கொண்டு அத்தியாவசியப் பொருட்களுக்கு
குறைந்தபட்ச வரி மட்டுமே விதிக்கப்படவேண்டும்.
எந்த வகையில் பார்த்தாலும் இந்தியாவின் புதிய வரிக்கொள்கை வரவேற்கப்படவேண்டியதே.
அற்ப அரசியல் காரணங்களைக் காட்டிலும், புதிய சரக்கு மற்றும் சேவை வரியால், பொதுமக்கள்
பெருவாரியான விஷயத்தில் பலனடைவார்கள். உலகப் பொருளாதார வளர்ச்சியில் தேசம் முக்கிய
இடத்தைப் பெறும். இந்த எளிய காரணங்களை முன்வைத்து ஒவ்வொரு இந்தியனும் இதைத் தாராளமாக
ஆதரிக்கலாம். பல ஆண்டுகளாக இழுத்து வந்த விஷயத்தை மோதியின் அரசு திறம்பட மாநில அரசுகளை
அனுசரித்து கூட்டாட்சித் தத்துவத்தைக் காக்கும் வகையிலும் இந்தியாவின் எதிர்காலப் பொருளாதார
வளர்ச்சியைக் கணக்கில்கொண்டும் இதை ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டிற்குள்ளாகக் கொண்டுவந்து
சாதனை படைத்துள்ளது.
உசாத்துணைகள்:
Posted on Leave a comment

அடாலஜ் படிக்கிணறு – ஜெ. ராம்கி

ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்…
கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,
துருப்பிடித்தக் கட்டையோடு
உள் விழுந்த ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்…

-நா. முத்துக்குமார்

வங்கக்கடலில் புயல் மையம் கொண்டால் மாயவரத்தில் மழை வரும். பெருமழைக் காலங்களில் கொல்லைப்புறத்துக் கிணறு மழை நீரால் நிரம்பி வழியும். இரும்புச் சகடையும் கயிறும் இல்லாமல் தண்ணீரை மொண்டு, தரையில் விடுவது மழைக்காலங்களில் எங்களுக்குப் பிடித்தமான மெகா விளையாட்டு. கோடைக்காலங்களில் கிணறு வேறுவிதமாகக் காட்சியளிக்கும். கிணற்றடியில் பல்லாங்குழி விளையாடுவது கோடையின் வெம்மையைக் குறைக்கும். கவிஞர் முத்துக்குமாரின் கவிதையைப்போல் தூர் வாருவது வருடாந்திர உற்சவம். முத்தாட்சியம்மன் கோயில் தெரு டவுசர் பையன்களுக்கு அம்பிகாவை போஸ்டரில் பார்ப்பதைவிடக் கிறங்கடிக்கும் இன்னொரு விஷயமும் உண்டு. தூர் வாரும் சட்டி மேலே தூக்கிக் கொண்டு வரும் விளையாட்டுப் பொருட்களை வேடிக்கை பார்ப்பதுதான்.

பின்னாளில் ஓமலூரில் நண்பர் வீட்டுத் தோட்டத்தில் பிரமாண்டமான கிணற்றைப் பார்க்க முடிந்தது. மாயவரத்துக் கிணறுகளைவிட நூறு மடங்கு பெரியதாக இருந்தது. கிணறுகளில் தண்ணீர் இருக்கவேண்டியது அவசியமில்லை என்பதை தர்மபுரி, செங்கல்பட்டு மாவட்டத்துக் கிணறுகளிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது. படிக்கட்டு வசதியெல்லாம் இருந்தும், கிணற்றின் பிரமாண்டம் பயமுறுத்தியதால் உள்ளே இறங்குவதற்குத் தைரியமில்லை.

கிணறுகள், எண்பதுகளோடு இறந்து போய்விட்ட ஒரு பொற்காலத்தின் மிச்சம். அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தேன், குஜராத் செல்லும் வரை.
குர்ஜரி யாத்ரா என்று பெயரிட்டிருந்தாலும் நதியைத் தேடி ஒரு நெடும்பயணம் (ஜனவரி 2014ல் சென்ற பயணம்) என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். தமிழ்ப் பாரம்பரியக் குழுவின் சார்பில் சிந்துச் சமவெளி நாகரிகத்தின் நகரங்களான தோலவீரா, லோத்தல் போன்ற இடங்களில் உள்ள நீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு முறைகளைப் பற்றி அறிந்து கொள்வதுதான் பயணத்தின் நோக்கம்.

டெல்டாவில் கிணறுகள் இருப்பதும், அதில் 365 நாட்களும் போதுமான தண்ணீர் இருப்பதும் ஆச்சரியமான விஷயமல்ல. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை நிறத்தையே பார்க்கமுடியாத ஒரு உப்புப் பாலைவனமான கட்ச் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான கிணறுகள் உண்டு என்கிற செய்திதான் ஆச்சரியமளித்தது.

5ம் நூற்றாண்டு தொடங்கி 15 ம் நூற்றாண்டு வரை கட்ச் வளைகுடாவை உள்ளடக்கிய குஜராத்தில் படிக்கிணறுகளே பிரதான நீர் ஆதாரமாக இருந்திருக்கின்றன. லோத்தல், தோலவீரா செல்வதற்கு முன்னர், மழை நீர் சேகரிப்பில் முக்கியமானதாகவும் குஜராத்தின் கலை, கலாசார அங்கமாகவும் உள்ள படிக்கிணறுகளைப் பார்வையிட முடிவு செய்திருந்தோம்.
குஜராத் படிக்கிணறுகளில் முக்கியமானது ராணி கி வாவ். ஆனால், ராணி கி வாவின் பிரமாண்டத்தை உள்வாங்கிக்கொள்வதற்கு முன்னர் அதைவிட அளவில் சிறியதும், நீண்ட காலமாக அறியப்பட்டதுமான ஓர் இடத்தை முதலில் பார்த்தாகவேண்டும். அதுதான் அடாலஜ்.

அகமதாபாத்திலிருந்து அரைமணி நேரப் பயணம். புதிதாகக் கட்டப்பட்டுள்ள நர்மதா கால்வாயைக் கடந்து, காந்தி நகர் சாலையில் பயணித்தால் அடாலஜ் என்னும் கிராமத்திற்கு வந்துவிடலாம். தொலைவிலிருந்து பார்க்கும்போது நாயக்கர் காலத்து மண்டபங்களை ஞாபகப்படுத்தும். அருகே செல்லும்போதுதான் ஓர் அற்புதத்தின் தரிசனம் நிகழும்.
ஐந்து அடுக்கு மாடிகளைப் போல், ஐந்து அடுக்கு தரைத்தளங்களைக் கொண்டிருக்கிறது அடாலஜ் படிக்கிணறு. படிப்படியாக இறங்கிச்சென்று தண்ணீர் எடுக்கும்படியான அமைப்பு. ஒவ்வொரு தளத்திலும் காணப்படும் சிற்பம் மற்றும் தூண் வேலைப்பாடுகள் கண்களைக் கவருகின்றன. கடைசி படிக்கட்டில் நின்று, அடாலஜின் உயரத்தைப் பார்க்கும்போது அதன் பிரமாண்டம் புரியும்.

ஓர் அரிய கலைப் பொக்கிஷத்தைத் தரையில் புதைத்துப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஒரு வழிபாட்டுக்குரிய கோவிலுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைவிடப் பலமடங்கு அதிக முக்கியத்துவம், சாமானியர்கள் புழங்கும் கிணற்றுக்குக் கொடுத்திருப்பதன் உயர்வான எண்ணத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

குஜராத் வரலாற்றுப் புத்தகத்தில் அடாலஜ் படிக்கிணறுக்கு சர்வ நிச்சயமாக ஒரு பக்கம் உண்டு. வகேலாவின் மன்னனாக இருந்த வீரசிம்மாவின் மனைவி ராணி ரூடாபாய், தன்னுடைய கணவனின் நினைவாகக் கட்டி முடித்ததுதான் இந்தப் படிக்கிணறு. அடாலஜ் என்றால் ‘சொர்க்கத்தின் ஆறு’ என்று அர்த்தம்.
11ம் நூற்றாண்டில் வீரசிம்மாவில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, ரூடாபாயால் வெற்றிகரமாகக் கட்டி முடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. மொத்த செலவு 7 லட்சம் டான்கஸ். (டான்கஸ் – இஸ்லாமிய ஆட்சியில் கூலி. 7 லட்சம் டான்கஸ் என்பது தோராயமாக ஐந்து லட்ச ரூபாய்க்குக் கூடுதலாக மதிப்புடையது.) அடாலஜின் முதல் தளத்தின் இரண்டாவது அடுக்கில் தென்படும் கிழக்கு நோக்கிய கல்வெட்டு வரலாற்றுக்குச் சாட்சியாக இருக்கிறது. சம்ஸ்கிருதத்தில்,தேவநகரி பாணியில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டு, ரூடாபாய் பற்றிக் குறிப்பிடுகிறது.

குஜராத்தின் பெரும்பாலான பகுதிகள் முஸ்லிம்களால் ஆளப்பட்டபோது, வகேலா மட்டும் தனித்து ஆளப்பட்டு வந்திருக்கிறது. சுல்தான் மெஸ்முத் பெகடா மற்றும் வீரசிம்மாவுக்கு இடையேயான யுத்தத்தில் வீரசிம்மா கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. வீரசிம்மாவின் மறைவுக்குப் பின்னர் சுல்தான், ரூடாபாய் தன்னை மணந்துகொள்ளக் கட்டாயப்படுத்தினான். ரூடாபாயும் சம்மதித்தாள். அதற்கு முன்னதாக, வீரசிம்மாவால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாமல் இருந்த அடாலஜ் படிக்கிணற்றைக் கட்டி முடித்த பின்னரே திருமணம் செய்து கொள்ளமுடியும் என்று நிபந்தனை விதிக்கிறாள். சுல்தானும் ஒப்புக்கொள்கிறான்.

திட்டமிட்டபடி, படிக்கிணறு கட்டி முடிக்கப்படுகிறது. இந்து / முஸ்லிம் கட்டடக்கலையின் சிறப்பம்சங்களை உள்வாங்கிக்கொண்டு அடாலஜ், முக்கியமான கலாசாரச் சின்னமாக எழுப்பப்பட்டது. ரூடாபாய் அதில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படுகிறது. அப்படியெல்லாம் இல்லை என்று மறுக்கிறது இன்னொரு தரப்பு.

குஜராத் போன்ற வறண்ட மாநிலங்களில் மழை நீரைச் சேமிக்கவும், சேமித்ததைக் குடிப்பதற்குப் பயன்படுத்தவும் படிக்கிணறுகள்தான் உதவியிருக்கின்றன. அரச குடும்பத்தினர் மட்டுமல்ல, சாதாரணக் குடியானவர்களும் குடிநீர்த் தேவைகளுக்குப் படிக்கிணற்றையே நம்பியிருந்தார்கள். தண்ணீர்த் தேவைக்காக மட்டுமல்லாமல் மக்கள் கூடும் இடமாகவும், வழிபாட்டு இடமாகவும், பயணம் மேற்கொள்பவர்கள் தங்குமிடமாகவும் இருந்திருக்கிறது படிக்கிணறு.

பெரு மழைக்காலங்களில் கிணறு நிரம்பி, முதல் தளத்திலேயே தண்ணீர் எடுத்துக்கொள்ள முடிந்திருக்கிறது. தண்ணீர் குறையும்போது, அடுத்தடுத்த தளங்களுக்கு இறங்கிச்சென்றாக வேண்டும். 16ம் நூற்றாண்டு வரை, இப்பகுதியில் 700 படிக்கிணறுகள் இருந்திருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட படிக்கிணறுகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன. இன்னும் சில படிக்கிணறுகள் வழிபாட்டு இடங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.
தெற்கு வடக்காக நீண்டிருக்கும் அடாலஜ் படிக்கிணற்றை நாம் மூன்று வழிகளில் அணுக முடியும். தென்புறம் உள்ள மூன்று நுழைவாயில்கள் ஏதேனும் ஒன்றின் வழியாக உள்ளே நுழைந்து, ஒவ்வொரு தளமாக இறங்கி, படிகளைக் கடந்தால், முடிவில் கிணற்றை அடைந்துவிடலாம். படிக்கிணற்றின் மொத்த நீளம் 75.3 மீட்டர். அகலம் 10 மீட்டர் இருக்கலாம்.
நுழைவாயில் எண்கோண வடிவைப் பெற்றிருக்கிறது. மூன்று நுழைவாயில்களையும் இணைக்கும் மண்டபமாக இருக்கிறது. எண்கோண வடிவிலான தளத்தை, 16 தூண்களும் தாங்கி நிற்கின்றன.
நுழைவாயிலின் கிழக்கிலும் மேற்கிலும் S வடிவ மாடம் உண்டு. மாடத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் இலை மற்றும் சுருள் வடிவப் பட்டைகளால் நிரப்பப்பட்டுள்ளன. பெரிய பட்டை வடிவ உத்தரங்களில் விலங்குகளே பிரதானமாகத் தென்படுகின்றன. சண்டையிடும் யானை, குதிரையை அடக்கும் மனிதன் என விதவிதமான பாணிகளில் சிற்பங்களைப் பார்க்கமுடிகிறது.

நுழைவாயிலைத் தாண்டி வந்தால் அடுத்தடுத்து இரண்டு தளங்களைப் பார்க்கமுடியும். குடா என்னும் தளங்களைச் சிறிதும் பெரிதுமான தூண்கள் தாங்கிப் பிடிக்கின்றன. முதலிரண்டு கூடங்களில் தூண்கள் மூன்று வரிசைகளில் காணப்படுகின்றன. மூன்றாவது கூடமான இறுதிக்கட்டத்தில் தூண்கள் நான்கு வரிசைகளில் அமைந்துள்ளன.
 தூண்களின் அடித்தளம் சிறியதாக இருந்தாலும், மேல்நோக்கி நீளும்போது வேலைப்பாட்டுடன் கூடிய பெரிய தூண்களாகக் காட்சியளிக்கின்றன. தொங்கும் இலை அல்லது கழுத்தில் தொங்கும் மணிமாலை போன்ற வேலைப்பாடுகளுடன் சின்னஞ்சிறிய வளைவுகளும் முன்வரிசைத் தூண்களில் குறிப்பிடும்படியாக உள்ளன.

ஒவ்வொரு தளத்தின் முகப்பிலும், சிற்பங்களின் தொகுதியைப் பார்க்கமுடியும். இரண்டாவது தளத்தின் கிழக்குப்பகுதியில் நவக்கிரகங்களைப் பார்க்கலாம். இருபுறமும் பணியாள் சகிதம் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அரசன், தயிர் கடையும் மனிதன், பைரவர், நடனமாடுபவர்கள், இசை விற்பன்னர்கள், நுழைவாயிலில் பார்த்தது போல் யானை, குதிரை, கஜ சர்டுலா, சக்தி வடிவங்கள், நாணயங்கள், கீர்த்தி முகங்களுக்கும் குறைச்சலில்லை.

ஒவ்வொரு தளத்திற்கு மேலும் ஒரு மேல்தளம் உண்டு. அவற்றை ஒரே அளவிலான உயரங்கள் கொண்ட தூண்கள் தாங்கிப்பிடிக்கின்றன. மேல்தளத்திற்குச் செல்ல சரியான வழியில்லை. ஒரு பாதம் அளவு சுற்றுப்பட்டை மீது கால் வைத்துத்தான் மேல்தளத்திற்குச் செல்லமுடியும்.
மேல்தளத்தின் இருபுறமும் அலங்காரமான மாடங்கள் உண்டு. பெரிய அளவிலான சிற்பங்கள் நல்ல வேலைப்பாட்டுடன் கூடிய மாடத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இறைவடிவங்கள், குறிப்பாகச் சக்தி வடிவங்கள் தென்படுகின்றன. குஜராத் முழுவதும் சக்தி வடிவங்களைப் பார்க்கமுடியும். சிங்கம், குதிரை போன்ற சக்தியின் வாகனங்களும் சக்தி வடிவங்களாகப் போற்றப்படுகின்றன.

ஒரு சிங்கம் தன்னுடைய முதுகில் திரிசூலத்தைச் சுமந்து செல்கிறது. இன்னொரு மாடத்தில் வெறும் சிங்கத்தை மட்டும் பார்க்கமுடியும். பாய்ந்து செல்லத் தயாராக நிற்கும் குதிரையைச் சுற்றிப் பூக்களும், நாணயங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

மூன்று குடங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு மூன்று வரிசைகளில் வைக்கப்பட்டுள்ளன. 9 குடும்பங்கள் உள்ளடக்கிய இந்த அமைப்பும் ஒரு சக்தி வடிவமாகக் கருதப்படுகிறது. இன்னொரு மாடத்தில் மூன்று சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட ஒரு குடம் தொங்கிக்கொண்டிருக்கிறது. இலைகளும், அதன் காம்புகளும் இணைந்த ஒரு புதுவிதமான வடிவத்தை இன்னொரு இடத்தில் பார்க்கமுடிந்தது.

அடாலஜ் படிக்கிணற்றின் முக்கியமான அம்சம், கடைசிப் பகுதியான எண்கோண வடிவ அமைப்புதான். 9 மீட்டர் அளவுள்ள சதுரங்கள் இணைந்து ஒரு எண்கோண வடிவை ஏற்படுத்துகின்றன. அவற்றை 12 தூண்கள் தாங்கிப் பிடிக்கின்றன. ராஜசேனகா, வேதிகா, அசனபட்டா, காக்சாசனா என நான்கு தளங்கள் இணைந்து, இப்படியொரு உருளை போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன.

கிணற்றின் விட்டம் 7 மீட்டர். கீழிருந்து மேலே பார்க்கமுடியும். மேலிருந்து கீழே பார்க்கத் தற்போது அனுமதி இல்லை. கிணற்றில் உள்ள ஒவ்வொரு தளத்திலும் ஒரு சிற்பம் செதுக்கப்பட்டிருக்கிறது. அவற்றைச் சுற்றி வேலைப்பாடுகள் கொண்ட பட்டையும் காணப்படுகிறது.
நீர், ஆவியாகிவிடுவதைத் தடுப்பதற்கே இப்படிச் சிக்கலான அடுக்குத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. 6 டிகிரி சாய்வில் உள்ள எண்கோண அமைப்பின் ஊடாகச் சூரிய ஒளியானது ஒரு நாளில் அதிகபட்சமாக ஆறு நிமிடங்களே ஊடுருவ முடியும்.

 ஒவ்வொரு உத்திரத்தின் மையப்பகுதியிலும் நிறையச் சிறு உருவ அமைப்புகளைப் படிக்கிணறு முழுவதும் காண முடியும். புகைப்படத்துக்குள் உள்ள ஓவியம் போல் சற்று சதுர வடிவமான அமைப்பில் உட்கார வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பிள்ளையார், ஹனுமான் தவிர அதிகமாக நம்மைக் கவருவது கீர்த்திமுகம்தான்.

யானைகளின் சிற்பத் தொகுதி, நல்ல வேலைப்பாட்டுடன் உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான யானைகள் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. மரங்களைப் பிடுங்கி, தும்பிக்கையில் ஏந்தியபடி நிற்கின்றன. சில இடங்களில் யானைகள் போர்க்கள ஆடை அணிந்து, போருக்குத் தயாராக மிடுக்குடன் தென்படுகின்றன.

விலங்குகளின் தொகுதியில் ஒரு சில விசித்திரமான விலங்குகளும் உண்டு. பாதி யானை, பாதி சிங்கம், நடுவே மனிதன். தன்னுடைய கூரிய அலகுகளால் இலைகளைப் பறித்துக்கொண்டிருக்கும் கொக்குகள். மழைக்காலங்களில் கிணறு நிறைந்து தண்ணீரின் அளவு உத்திரத்தை எட்டும்போது மண்ணாலான கொக்குகள், நிஜமான தண்ணீரில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும்.
கட்ச் வளைகுடாவில் கோடைக்கு மறுபெயர் கொடுமை. இமயமலையின் பனி போல், கட்ச் பகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளை நிற உப்பளங்களை மட்டுமே பார்க்கமுடியும். கிணறுகள், கட்ச் வளைகுடா பகுதியின் முக்கியமான நீர் ஆதாரமாகத் தொடர்ந்து இருந்து வருகின்றன. அந்த வகையில் படிக்கிணறுகளை வழிபாட்டுக்குரிய இடங்களாகக் கருதுவதில் எந்தத் தவறுமில்லை.

இனி, ஓ காதல் கண்மணி. அடாலஜின் மேல்தளத்திலிருந்து கல்லெறியும் நாயகனை, தரைத்தளத்திலிருந்து நாயகி நிமிர்ந்து பார்ப்பதை க்ளோஸ்-அப் காட்சியாக காமிரா விழுங்குகிறது. மணிரத்னத்தின் மற்ற படங்களில் வருவது போலவே, மும்பையிலிருந்து அடாலஜ் வரை துரத்தி வரும் நாயகன், சற்றும் சம்பந்தமில்லாத இடத்தில் காதலைத் தெரிவிக்கிறான். அடலாஜ் வரை வந்துவிட்டு, ஒரே ஒரு காட்சி மட்டுமே வைத்த பி.சி.ஸ்ரீராம் மீது கோபம்தான் வருகிறது. அடாலஜை மட்டுமல்ல, ஒட்டுமொத்த குஜராத்தையும் பி.சி.ஸ்ரீராமின் காமிரா போல் ஒரேவிதமாகத்தான் பார்க்கிறார்கள். அப்படித்தான் பழக்கப்பட்டிருக்கிறோம்.