Posted on Leave a comment

மனித வடிவில் காருண்யம்: ஸ்ரீ இராமானுஜர் – சுதர்ஸன்

 மோக்ஷம் என்று ஒன்று உண்டு. அதை, சென்றடையக்கூடிய இடம் என்று சிலரும், பற்றற்ற நிலையில் உள்ள மனம் என்று சிலரும் நம்புகிறார்கள். எதுவாக இருப்பினும் சரியே. மோக்ஷம் என்பது மறுபிறப்பு இல்லாத ஒரு நிலை. பசி, தாகம் என்ற உணர்வுகள் தோன்றாத நிலை. அந்த நிலையில் தேகத்திற்கும் வியாதி கிடையாது, மனமும் வருந்தாது; ஏன்,மகிழ்ச்சியில்கூட நாட்டம் கொள்ளாது. அங்கு வெற்றியில் மனதுமயக்கம் கொள்ளாது, தோல்வியில் வெறுமை கொள்ளாது.போட்டியிடக் காரணம் இருக்காது, வென்று குவிக்கப் போட்டியும் இருக்காது. அனைத்துக்கும் மேலாக, இந்த நிலை அனைத்தும் நீடிக்குமோ மாறிவிடுமோ என்ற பயம்கூட இருக்காது.

மோக்ஷம் ஓர்உயர்ந்த மனநிலையாக இருந்தால், அது எப்படிக் கைக்கூடும்? ஓர்உயர்வான இடமாக இருந்தால் அங்கு எந்த வழியில் செல்லமுடியும்? பெரும்பாலானோர் நினைக்கக்கூடியது, அவர்களுக்கென்று வகுக்கபெற்ற கடமைகளை இடைவிடாது புரிந்துகொண்டிருந்தால் மோக்ஷம் கிட்டும் என்பது. அந்திமக் காரியங்கள் மூலமாக மோக்ஷம் பெறலாம் என்றும் அதைச் செய்வதற்கென ஒரு மகனைப் பெற்றெடுத்து சம்பிரதாய முறையில் வளர்த்தால் போதும் என்றும் குறுகிய ஆச்சாரங்களில் தத்தளிப்போர் தீவிரமாகவே நம்புவதுண்டு. மற்றும் பலர், அதிகப்படியான தானங்கள் அளித்து மோக்ஷம் செல்லும் வழிக்கட்டணம் செலுத்திக்கொள்ளலாம் என்றும் நினைக்கிறார்கள். நம்பிக்கைளோ இப்படி இருக்க உபநிடதங்கள் இம்முறைகளை அங்கீகரிக்கிறதா என்றால்,இல்லை! அனைத்தும் அதனளவில் தர்ம காரியங்களாக இருந்தபோதிலும் மோக்ஷம் பெற இவை வழி என்று வேத உபநிடதங்கள் கூறுவதில்லை. சந்யாச யோகம் மூலமே மோக்ஷத்தைப் பற்றிய உயர்ந்த ஞானம் பெற இயலும் என்கிறது மகாநாராயண உபநிதத்தில் இடம்பெறும் சந்யாஸ சூக்தம்.

வேதாந்த-விஞ்ஞான ஸுநிஸ்சிதார்தா:
சன்யாஸ யோகாத்-யதய: -சுத்த-ஸத்வா:
தே-ப்ரஹ்ம-லோகேது பரா-ந்த காலே
பர-அம்ருதாத்-பரிமுச்யந்தி சர்வே

பொருளாக: வேதத்தின் தீர்மானங்களை உணர்ந்த, இறைவனின்பால் கொண்ட நாட்டத்தினால் தன் விருப்பங்களைத் துறந்த, லௌகிகத்திலிருந்து முற்றிலும் அப்பாற்பட்ட சந்யாசியானவர்கள், தன் வாழ்கையின் முடிவில் இப்பூவுலகில் பிறந்து-மடிவதிலிருந்து விடுபட்டு மோக்ஷம் அடைகிறார்கள்.

ஆகையால், கண்டிப்பான துறவிகளுக்கு மட்டுமே மோக்ஷத்தைப் பற்றிய ஞானமும் அதன்மூலம் மோக்ஷமும் கிட்ட வாய்ப்புள்ளதாக உபநிடதம் எச்சரிக்கிறது. இந்நிலையில் சந்யாசத்தைப் பற்றிய தெளிவு அவசியம் தேவைப்படுகிறது. சராசரி மக்களிடையே சன்யாசத்தைப் பற்றிய அறிவோ அவரவர்களுக்கு எட்டும் உயரத்திலேயே நின்று விடுகிறது. காவி உடை அணிவதே சந்யாசம் என்றும், எனவே காவி உடை அணிவதன் மூலம் மோக்ஷம் கிட்டிவிடும் என்றவரையில் புரிதல் தேங்கிவிடுகிறது.

‘சந்யாச யோகம்’ என்று குறிப்பிடப்படும் உபநிடதக் கருத்துக்களில் மிக வசதியாக ‘யோகம்’ என்ற சொல்லை மறந்துவிட்டுக் காவி உடை மட்டுமே சந்யாசம் என்று எண்ணிவிடுகிரார்கள். சந்யாசம் மட்டுமே மோக்ஷத்திற்கு வழி என்பது உண்மையானால், உண்மையில் சந்யாசம் என்பது என்ன, யார் சந்யாசம் பெற முடியும் என்பது தெளிவாக வேண்டும்.

நடைமுறையில் அனைத்து மக்களுக்கும் பொதுவான மோக்ஷத்தைப் பற்றிய இந்த ஞானமானது, துரதிருஷ்டவசமாக, ஒரு கட்டத்தில் அந்தணராகப் பிறந்தவர் மட்டுமே அடையமுடியும் என்று சாஸ்திரங்கள் சொல்வதாக சிலரால் விளக்கப் பட்டது. அந்தணராகப் பிறப்பினும் ஆண் பிறவி அவசியம் என்றும் மற்றவர் அனைவரும் பெற்ற அந்தப் பிறவியில், கல்வி கற்று, மணம் புரிந்து, மக்கள்பேறு பெற்று, தர்ம வழியில் உலக வாழ்க்கை நடத்திக்கொண்டு இறைச் சிந்தனையோடு வாழ்ந்து வந்தால் மற்றொரு பிறவியில் அந்தணராக, அதிலும் ஆணாக பிறக்க வாய்ப்பு பெறக்கூடும் என்றும், அதன்பிறகே மோக்ஷம் செல்ல வழி அமையும் என்றும் நம்ப, மக்கள் மனங்களைத் தயார் செய்தனர்.

வேதாந்தமோ, சந்யாசம் மூலமே மோக்ஷம் என்று உறுதியாகப் பிரகடனம் செய்கிறது. வேதாந்தத்தைப் பற்றிய ஒருசாராரின் விளக்கமோ, அந்தணராகப் பிறந்த ஆண்களுக்கு மட்டுமே சந்யாசம் என்று பிரசாரம் செய்தது. இந்த நிலையில் மற்றவர்களின் கதி என்ன? சந்யாசம் எனும் நிலை எட்டாத உயரத்தில் வைக்கப்பட்டதால் மற்றவர் அனைவரும் மோக்ஷதிற்கே தகுதியற்றவர் என்று கொள்வது சரியாகுமா? அனைவரும் தகுதி பெறலாம் என்ற சமாதானம் கொடுக்கப்பட்டது; ஒரு நிபந்தனையோடு; இப்பிறவியில் அல்ல, மற்றொரு பிறவியில் ஏற்படக்கூடும் என்பதுதான் சமாதானம்;ஓரிரண்டு பிறவியிலோ அல்லது ஓராயிரம் பிறவி கழித்தோ. இப்படிப் பிரசாரம் செய்தவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கக்கூடும் என்பதை எளிதாகவே கணிக்கலாம். அவர்களைப் பொருத்தவரையில் சந்யாசம் என்பது, மனைவி மக்களை விட்டு காஷாயம் அணிந்து கண்காணாத இடத்திற்குச் செல்வது; ஆண் துணையின்றி பெண் வாழ இயலாது என்ற தீர்மானம்; மற்றும் அவர்கள் அறிந்த சாதிக் கோட்பாடுகளில் மற்றவர் அனைவருக்கும் பிறப்பினால் ஒரு சமுதாயப் பொறுப்பு இணைக்கப்பட்டிருந்தது. அந்தணர்கள் மட்டும் அவர்களுக்கிருந்த பொறுப்புகளைத் துறக்க அனுமதிக்கப்பட்டார்கள். படித்த பல பண்டிதர்கள்கூட இதை உண்மை எனறே கருதி, இந்தக் கருத்துக்களை ஒட்டியே சமூகக் கட்டமைப்பு அமைய விரும்பினார்கள்.

சூழ்நிலை இப்படி இருந்த காலத்தில், இவ்வுலகம் உய்வதற்கு, பிறந்த குலம் எதுவாக இருப்பினும் அனைவருக்கும் அதே பிறவியில் மோக்ஷம் கிடைக்க வழி உண்டு; அதையே வேதம் சொல்கிறது; அந்த வேதத்தைப் பலர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை; வேதத்தின் மீது பிழை இல்லை, வேதத்தை விளக்க வந்தவர்கள் குழம்பினார்கள் என்று உலகிற்கு எடுத்துக் காட்டிய பெரும் வள்ளல் ஸ்ரீ இராமானுஜர்.

ஸ்ரீ ராமானுஜர், தன் சித்தாந்தத்தின் ஆதாரமாக ஜீவாத்மா-பரமாத்மா சம்பந்தத்தின் இயல்பைப் பற்றிய ஓர்எளிய கருத்தைஉணர்த்துகிறார். அனைத்து ஜீவாத்மாக்களும், வேறுபாடுகளோ பாகுபாடுகளோ அற்று, சமமான நிலையில் உள்ளனர் என்ற வேதாந்த உண்மையைப் பற்றி அவர் வெகு ஆழமாகச் சிந்தித்தார். ஆத்மாக்களுள் ஆண்-பெண் கிடையாது; ஆத்மாக்களுள் பிராமண-க்ஷத்ரிய-வைசிய-சூத்திரர் என்ற வர்ணம் கிடையாது என்று கண்டுணர்ந்தார். ‘பாண்டித்தியம் பெற்றவர்கள், நாயினுள் வசிக்கும் பரமாத்மனும், நாய் மாமிசம் உண்பவரினுள் வசிக்கும் பரமாத்மனும், நன்கு படித்துத் தெளிந்த பிராமணருக்குள் வசிக்கும் பரமாத்மனும், ஒரு குலத்தில் பிறந்துவிட்ட காரணத்தால் தன்னை பிராமணர் என்று அறிவித்துக் கொள்பவருள் வசிக்கும் பரமாத்மனும் ஒன்றே என்பதை உணர்ந்து சமத்துவத்துடன் வாழ்க்கையை அணுகுவர்’ என்று கிருஷ்ணர் கீதையில் உரைப்பதை தீவிரமாக உள்வாங்கினார். அனைத்து ஜீவனும் சமமாயின், அனைவருள் வசிக்கும் பரமன் ஒன்றாயின், ஒரு சிலருக்கு மட்டுமே மோக்ஷம் இப்பிறவியில் கூடும், மற்றவருக்கு மேலும் பிறவிகள் வேண்டும் என்ற கோட்பாட்டினை கேள்விகளுக்கு உள்ளாக்கினார்ராமானுஜர். இவை அனைத்தையும் ஆராய்ந்து, நன்கு சிந்தித்து,
பரவலாகப் புழக்கத்தில் இருந்த விளக்கங்களுக்கு வேதாந்த அங்கீகாரம் இருக்கமுடியாது என்ற ஒரு முடிவினை முன்வைத்தார். மேலும் அரைகுறை ஞானத்தால் ஏற்பட்ட குழப்பங்கள் இவை என்பதை தெளிவுபடுத்தினார்.

ராமானுஜரின் இந்தச் சிந்தனை வெள்ளத்தைத் தூண்டிய, அவரது தெளிவுரைக்கு ஆதாரமாகவும் அமைந்தஒரு நூல் ஆண்டாளின் திருப்பாவை. தன் பாசுரத்தின் முதல் வரியிலேயே மானுடர் அனைவரும் மார்கழி நோன்பில் கலந்துகொள்ளும்படி ஒரு திறந்த அழைப்பை ஆண்டாள் முன்வைக்கிறாள். ஏதேனும் தகுதி உள்ளதா என்ற கேள்விக்கு ஆண்டாளின் காருண்யம் மிக்க பதில் ஒன்றுதான்; யார் ஒருவருக்குத் தீவிர விருப்பம் உள்ளதோ, அவர்கள் யாவரும் விரதத்தில் கலந்துகொள்ளத் தகுதிபெற்றவர் என்ற அறைகூவல். ஆகையால், ஒருவருக்கு விருப்பம் இருக்குமானால், அந்தப் பிறவியிலேயே மோக்ஷத்தைத் தேடுவதற்கான தனது உரிமைகளை மறுக்க சாஸ்திரங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதை,திருப்பாவையின் துணைகொண்டு இராமானுஜரால் மிக எளிதில் முன்னிறுத்த முடிந்தது. ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்ற அழைப்பிற்கு மேலாக ஆண்டாளும், ராமானுஜரும் விடுத்த அறைகூவல் – ‘திறந்தே இருக்கிறது, வாருங்கள்.’

ஆகவே, வைஷ்ணவ சித்தாந்தத்தின் வேர்களின்பால் ஆழ்ந்த த்யானம் மேற்கொண்டு, ஸ்ரீ ராமானுஜர், சந்யாசம் மற்றும் சந்யாச யோகம் என்பதன் உட்பொருள் என்னவென்று எடுத்துரைத்தார். உலகத் தொடர்பைத் துண்டித்து காவி அணிவது மட்டுமே சந்யாசம் அல்லஎன்பதை, சந்யாச யோகம் என்பது ‘தனது’ என்ற உணர்வைத் துறந்த நிலை என்ற உண்மையை வெறும் சொற்களில் கூறி அமர்ந்துவிடாமல், வாழ்ந்தும் காட்டினார். சந்யாசம் என்பது, மனித ஆன்மா தன்னைத் தானே காத்துக்கொள்கிறது என்ற உணர்விலிருந்து விடுபெறுவது என்றும்; சந்யாசம் என்பது பரமனுடன் இணைவதற்கு ஜீவன் எடுக்கக்கூடிய முயற்சிகளைத் துறப்பது என்றும்; தன் ஆன்மிக எழுச்சிக்கு முயற்சி தேவையில்லை, பரமாத்ம அநுக்ரஹம் ஒன்றே போதுமானது என்ற எண்ணத்துடன் முழுமையாக சரணாகதி மேற்கொள்வது என்றும்; மதிப்பற்ற இந்த ஜீவனை, பரமாத்மா தன் இச்சையால் ஆலிங்கனம் செய்துகொள்வதென்றும் விரிவுரைத்தார். விளைவாக, மோக்ஷத்தைக் கோருவோர், தேடல்களையும் பதற்றங்களையும் துறப்பாராயின், ‘தரப்படும்’ என்ற உத்தரவாதம் அளித்தார்.

சாரமாக, ராமானுஜரின் கற்பித்தலில் சந்யாசம் என்பது அடைக்கலம்; பரமாத்வாவின் ஆட்கொள்ளலுக்கு ஜீவாத்மாவின் சரணாகதியை தெரிவிக்கும் ஒரு நிகழ்வு மட்டுமே. இந்த நோக்கத்தின் முடிவிற்குக் கொண்டுசெல்ல வேண்டிய மற்ற அனைத்துப் பொறுப்பும் பரமாத்வாவிற்கே, ஏனெனில், மோக்ஷம் கோருவோரின் ஆசை மட்டுமே உண்மையானது.

ராமானுஜரின் மற்றொரு பெருமை, பக்தருக்கு அவர் வகுத்துக் கொடுத்த வாழ்கை முறை. சரணாகதி கோரிய பின்னும், நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றக் கூடிய தெய்விகக் காரியங்கள், வெறும் உலக வாழ்க்கைக்கு மட்டுமே என்ற தெளிவும், மோக்ஷத்திற்கான உத்தரவு ஏற்கெனவே பெற்றாகிவிட்டது என்ற விழிப்புணர்வும் அவர் ஏற்படுத்திய பாரம்பரியத்தின் பெருமை. இதுவே உண்மை சந்யாச நிலை. இப்பேற்பட்ட சந்யாசம் பெற, பிறந்த சாதி பொருளற்றது, குலம் பொருளற்றது. ஸ்ரீ ராமானுஜ சித்தாந்தத்தின் உதவியால்பின் வந்த ஒரு மாபெரும் வைஷ்ணவ குருவான வேதாந்த தேசிகர், இந்தக் கருத்தைப் பற்றி மிகவும் ஆற்றல்மிக்க வரிகளை சமர்ப்பிக்கிறார்.

அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைத்துலகும்
நொந்தவரே முதலாக நுடங்கி அனன்னியராய்
வந்தடையும் வகை வண்தகவேந்தி வருந்திய நம்
அந்தமில் ஆதியை அன்பர் அறிந்து அறிவித்தனரே.
(அதிகார சங்க்ரஹம் – 18)

“எல்லை வரம்புகளற்ற பரம்பொருள், ஈடு இணையில்லா இறக்கத்துடன் நம்மை ரக்ஷிக்க காத்தருள்கிறார். சரணாகதியே அவரை அடைவதற்கான வழி என்று நம் ஆச்சார்யர்கள், அவர்களது ஆச்சார்யர்களிடமிருந்து கற்றறிந்தனர். அந்தணர் முதல் சமூகத்தின் எல்லையில் உள்ள அனைவருக்கும், மற்றும் சம்சாரத்தில் மூழ்கி தவிப்பருக்கும்கூட ஒருசீராக இவ்வழிப் பொருந்தும், மற்ற சிந்தனை தவிர்த்து ஒற்றைச் சிந்தனையுடன் பரம்பொருளை நாடுபவராயின்” – என்பது ஸ்ரீ வேதாந்த தேசிகரின் சமர்ப்பணம்.

பாரதத் தாயின் தவப்புதல்வர்களைப் பற்றி சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவில் ராமானுஜரைப் பற்றி உரைக்கிறார்; “அறிவுச்சுடரான சங்கரரைக் காட்டிலும் ராமானுஜர் மிக்க இரக்கம் நிறைந்தவர் என்றே கூறவேண்டும். ராமானுஜரின் இதயம் விளிம்புநிலை மக்களுக்காக உருகியது. சிதைந்து கிடந்த சடங்குகளை ஒருங்கிணைத்து, சீரமைத்து, புதுப்பித்து அதை மீண்டும் அடித்தட்டு மக்களுக்கு சமர்ப்பித்தார். அதே சமயம் மூடி வைக்கப்பட்டிருந்த உன்னத ஆன்மிகக் கருத்துக்களின் கதவுகளைத் திறந்து அந்தணர் முதல் பறையர் வரை அனைவரும் ஒருசீராகப் பருகக் கொடுத்தார். அதுவே ராமானுஜரின் பணி.”

சாதியை ஒழிக்க நம் நாட்டில் பலவகையான அரசியல் சீர்திருத்த முயற்சிகள், பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்திருக்கின்றன. அவை உன்னதமான முடிவை எட்டியது கிடையாது. முயற்சிகள் நேர்மையற்றதாக அமைந்திருக்கக்கூடும், அல்லது கைக்கொண்ட வழிமுறைகளில் குறைபாடு இருந்திருக்கக்கூடும். ஒவ்வொரு அரசியல் சார்ந்த முயற்சியும் ஒரு சாதி சார்ந்த சங்கத்தையே உருவாக்கியது. முடிவில் அரசியல் போட்டியில் ஒரு சாதியினருக்குப் பல்வேறு அமைப்புகள் அமையப்பெற்று அவற்றுக்குள் பூசல்கள் ஏற்பட்டு, முயற்சி குன்றிப்போகும். ராமானுஜருடைய சீர்திருத்தம், சுவாமி விவேகானந்தர் கூறுவது போன்று கிளைகள் மட்டுமல்லாது வேர் வரை சென்று சீரமைக்கக்கூடிய ஒரு மாபெரும் எழுச்சி கொண்ட ஒன்று; சாமானிய மக்களை ஆன்மீக உணர்வில் வேரூன்றச் செய்யும் நம்பிக்கை இயக்கம். ஓராயிரம் வருடங்கள் முன் ஸ்ரீ ராமானுஜர் துவங்கிய இந்த இயக்கம் உலகம் முழுதும் சூழ்ந்து விரியக் கூடிய தன்மை கொண்டது.

Posted on Leave a comment

விடாது கறுப்பு! – கே. ஜி. ஜவர்லால்

பிரதமரின் அதிரடித் திட்டமான 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் மாற்றம் நல்ல திட்டம் என்றாலும் பாராட்டுக்களை விட விமர்சனங்களை அதிகமாகச்  சம்பாதித்திருக்கிறது.

வழக்கமாகப் பிரதமர் மோடியையும், பா.ஜ.க அரசாங்கத்தையும் விமர்சிப்பதே கொள்கையாக இருக்கிற இரண்டு பிரிவுகள் உண்டு. பெரும்பாலான மைனாரிட்டிகளுக்கு பா.ஜ.கவின் மீது இருக்கும் அச்சம் புரிந்து கொள்ளக் கூடியதே. அது நியாயமானதா அல்லவா என்பதைப் பற்றிய விவாதம் இப்போதைக்குத் தேவையானதல்ல.

எந்த அரசியல் சார்பும், மதச் சார்பும், சாதிச் சார்பும் இல்லாத சாதாரண மக்களையும் இது முணுமுணுக்க வைத்திருக்கிறது. காரணம் வெளிப்படையானது,  அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமங்கள். ‘என் மேல் எந்தத் தப்பும் இல்லாதபோது நான் ஏன் இந்தச் சிரமத்தை அனுபவிக்க வேண்டும்?’ என்கிற அவர்களின் கேள்வியும் நியாயமானதே. அந்தக் கேள்விக்கு ரெண்டு மார்க் கேள்விக்கு பதில் எழுதுவது போல இன்ன காரணத்தால் நீ சிரமத்தை அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்றோ, பத்து மார்க் கேள்வி போல ஒரு பத்தியிலோ பதில் சொன்னால் போதாது.

அடிப்படைப் பொருளாதாரம் ஒவ்வொரு குடிமகனுக்கும் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டியது அவசியம். கறுப்புப் பணமும் கள்ள நோட்டுகளாக உள்ள பணமும் எவ்விதமாய் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும், பாதுகாப்பையும், நேர்மையையும், நிம்மதியான வாழ்க்கையையும் பாதிக்கும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும். அப்படித் தெரிவிக்கிறதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

அடிப்படைப் பொருளாதாரத்தை தேவைக்கும் (Demand) வழங்கலுக்கும் (Supply) இருக்கும் உறவின் அடிப்படையிலேயே புரிந்துகொண்டு விடலாம். இரண்டும் சமமாக இருந்தால் பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்கிறது என்று பொருள். இரண்டில் எந்த ஒன்று அதிகமானாலும் அது ஆரோக்கியமான சூழல் அல்ல.

ஒருநாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கொஞ்சம் பொருட்களும் (Product) கொஞ்சம் சேவைகளும் (Services) உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றின் மொத்த மதிப்புக்கு  Gross Domestic Produce (GDP) என்று பெயர்.  அந்த நாட்டில் கொஞ்சம் பணமும் புழக்கத்தில் இருக்கிறது. இவற்றின் மதிப்புக்களைப் பொருத்து மூன்று விதமான நிலைகள் உண்டாகலாம்.

1.        புழக்கத்தில் இருக்கும் பணம் GDPக்கு  சமமாக இருப்பது மிகவும் ஆரோக்கியமான பொருளாதார நிலையைக் காட்டும். ஆனால் இதை அப்படிப் பராமரிப்பதுதான் நாட்டை ஆள்பவர்களுக்கும், பொருளாதார நிபுணர்களுக்கும் இருக்கும் சவால். இவை இரண்டையும் பத்து சதவீத வேறுபாட்டில் நிலையாக வைக்க முடிந்து விட்டால்கூட அது பெரிய சாதனையாக இருக்கும்.

2.        உற்பத்தியைக் காட்டிலும் பணம் அதிகமாக இருப்பதற்கு ஒரு சாத்தியக்கூறு இருக்கிறது.  இதில் இரண்டு வகை உண்டு. பணம் பரவலாக எல்லாரிடமுமே அதிகமாக இருந்தால் அது ஆரோக்கியம். மக்களின் Buying Power அதிகரித்திருப்பதாக இதற்குப் பொருள். அதைச் சரிக்கட்டும் அளவுக்கு உற்பத்தியைப் பெருக்கலாம். அது இன்னும் ஆரோக்கியமான சூழலுக்கு வழி வகுக்கும்.

உடம்பு எல்லா இடத்திலும் பெருத்தது என்றால் பெருத்திருக்கிறான் என்கிறோம். ஒரு இடம் மட்டும் பெருத்தால்? வீங்கியிருக்கு என்கிறோம் இல்லையா?

அதுபோலவே பணம் ஒரு பிரிவில் மாத்திரம் வலுத்தது என்றால் ஒட்டுமொத்த நாட்டில் பணம் அதிகமாக இருப்பது போன்ற தோற்றம்தான் இருக்கும். அதனால்தான் அதைப் பண வீக்கம் (Inflation) என்கிறோம். பண வீக்கம் உண்டாகும்போது உற்பத்தியைக் கூட்ட முடியாது. விலைவாசிகள் ஏறும். ஏனென்றால் பணம் நிறைய இருக்கிறது, பொருள் குறைவு. டிமாண்ட் அதிகமாக இருப்பதால் விலை ஏறும். ஏற்கெனவே பத்து ரூபாய்க்கு வாங்கின பொருளைப் பதினைந்து ரூபாய்க்கோ, இருபது ரூபாய்க்கோ வாங்க வேண்டியிருக்கும். ரூபாயின் மதிப்பு குறைவது இது போன்ற சூழலில்தான். நேற்றைய பத்து ரூபாய் இன்று உண்மையில் ஏழரை ரூபாய்தான் என்கிறார்போல் ஆகிவிடும்.

3.        பணத்தைக் காட்டிலும் உற்பத்தி அதிகமாக இருப்பது இன்னொரு சூழல். இது போன்ற சந்தர்ப்பத்தில் விலைவாசி குறையும். ஆஹா.. தங்கமாய்ப் போச்சு, வேறென்ன வேணும், இதுவல்லவோ சிறந்த நிலை என்று நீங்கள் நினைக்கலாம். உற்பத்தியை எப்போது அதிகம் என்று சொல்வோம்? ஒரு நாட்டில் ஆண்டு தோறும்  16,000 டன் இரும்பு தேவை என்று வைத்துக் கொள்ளலாம். உற்பத்தி 18,000 டன் என்றால் வீண்! விலை குறைத்துத்தான் விற்க வேண்டும். எவ்வளவு குறைந்தாலும் உற்பத்தியானது முழுவதும் விற்றுத் தீராது. ஆண்டு தோறும் எவ்வளவு தேவையோ அவ்வளவுதான் விற்கும். மிஞ்சியது அந்தப் பொருளின் Shelf Life ஐப் பொருத்து வீணாகும். அடுத்த ஆண்டில் மிஞ்சியதற்கு இணையான அளவு உற்பத்தி குறையும். உற்பத்தி குறைந்தால் அந்தத் தொழிலுக்கு Supply செய்கிறவர்களும் குறைக்க வேண்டும். இப்படி ஒன்றுக்கொன்று தொடர்புடையதாய் இருப்பதால் நாட்டின் உற்பத்தியே அடுத்த ஆண்டு ஒட்டுமொத்தமாய்க் குறையும். அடுத்த ஆண்டு பணவீக்கம் ஆகிவிடும்.

ஆகவே உற்பத்திப் பெருக்கம் என்பது தேவைப் பெருக்கம் உண்டாயின் மட்டுமே நடக்க வேண்டும். எவ்வளவு உற்பத்திப் பெருக்கமோ அவ்வளவு பணம் அச்சடிக்கப்பட வேண்டும்.

இவையெல்லாம் அடிப்படைப் பொருளாதாரம். இவையே மொத்தமும் அல்ல.

கறுப்புப் பணம் என்பது புழக்கத்திலிருந்து மறைக்கப்பட்ட பணம். அது புழக்கத்தில் இருப்பதாக அரசாங்கம் நினைத்திருக்கும்போது உண்மையில் குறைவான அளவு பணமே புழக்கத்தில் இருக்கிறது. ஆகவே உற்பத்தியின் அளவு அதிகமாக இருக்கும். உற்பத்தியானது உபயோகிக்கப்படாமல் மிஞ்சி வீணாகும். மேலே சொன்ன பாயிண்ட் நம்பர் 3ல் சொல்லப்பட்ட எல்லாம் நடக்கும். மெல்ல மெல்லத் தேக்கம் உண்டாகி கறுப்புப் பணத்தின் பரிமாணத்தைப் பொருத்து அது மிகப் பெரிய Industrial Recession ஆக உருவெடுக்கலாம்!

அதாவது கறுப்பின் அளவு அதிகமாக அதிகமாக நாட்டில் உற்பத்தி குறைந்துகொண்டே போகும்.

ஒரு நாட்டின் செல்வ நிலையை தனிநபர் வருமானத்தைக் கொண்டு அளப்பார்கள். Per Capita income. அதாவது  GDP என்று சொல்லப்பட்ட மதிப்பை மக்கள் தொகையால் வகுத்தால் கிடைக்கும் மதிப்பு. ஆண்டுதோறும் GDP குறைந்து ஆண்டுதோறும் மக்கள் தொகை அதிகரித்த வண்ணம் இருந்தால் Per Capita income குறைந்து கொண்டே போய் உலக அரங்கில் நாம் பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடாகத் தெரிவோம்.

ஆகவே கறுப்புப் பணம் என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு ஒழிக்கப்பட வேண்டியது. மிதமிஞ்சிப் போகும்போது வேகமாகக் களையெடுப்பு செய்யப்பட வேண்டியது. அதுதான் இப்போது நிகழ்ந்திருப்பது. இது ஒரு பகுதி.

கள்ளப் பணம் என்ன செய்யும்?

பாயிண்ட் நம்பர் 2ல் சொன்னது போல புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவை அதிகமாக்கிப் பணவீக்கத்தை உண்டாக்கும். விலைவாசி ஏறும். சேமிப்பு குறையும். மெல்ல மெல்ல எல்லாரும் ஏழைகளாகவும் கடனாளிகளாகவும் ஆவார்கள். ஒட்டுமொத்த நாடு பின்னடைவைச் சந்திக்கும் சூழல்.

இப்போது சில புத்திசாலிகள் ஒரு கேள்வி கேட்கலாம்.

கறுப்புப் பணமும் கள்ளப் பணமும் ஒன்றுக்கொன்று எதிரான தன்மை கொண்டவை என்பதால் இரண்டும் இருந்துவிட்டுப் போகட்டும், கூட்டிக் கழிச்சிப் பார்த்தா கணக்கு சரியாத்தான வரும் என்று சொல்லலாம். ஆனால் இரண்டுமே அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லாதபோது அப்படியான சமநிலை வராது. அது ஒரு மாதிரி Virtual Balance. பிரேக்கில் ஒரு காலும், ஆக்ஸிலேட்டரில் ஒரு காலும் வைத்தபடி ஒரு காரை ஓட்டுவது போலாகும்.

அடுத்தபடியாக இந்தத் திட்டத்தை எதிர்க்கிறவர்கள் கேட்கிற ஒரு கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டியிருக்கிறது.

கறுப்புப் பணத்தை ரொக்கப் பணமாகக் (லிக்விட் கேஷ்) கையிலேவா வைத்திருப்பார்கள்? தங்கம் வாங்க மாட்டார்களா? நிலம் வாங்க மாட்டார்களா?

நன்றாக வாங்கட்டும். ஆனால் கணக்கில் வராத பணத்தில் தங்கம், நிலம், வெள்ளி, பிளாட்டினம், லொட்டு லொஸ்க்கு எதை வாங்கினாலும் ரசீது வாங்க மாட்டார்கள். ரசீது இல்லாமல் செய்த வியாபாரத்தை விற்றவனும் கணக்கில் காட்ட முடியாது. அது ஒரு கறுப்பு டு கறுப்பு டிரான்ஸாக்ஷன். ரொக்கம் கைமாறிக்கொண்டே இருக்குமே ஒழிய எப்போதும் அது வெள்ளை ஆகாது. ஆகவே 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தால் அந்தப் பணம் எங்கே இருந்தாலும் (ஹவாலா புரோக்கர்கள் வசம் இருந்தாலும்) குப்பைக் காகிதம்தான்.

ஐடியா கறுப்புப் பணத்தை மதிப்பில்லாமல் ஆக்குவதுதான். அது செவ்வனே நடந்தாகிவிட்டது.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

லிக்விட் கேஷாக இருக்கவே இருக்காது என்கிற வாதத்தை ஏற்கவே முடியாது. அது சிறுபிள்ளைத்தனமானது. தேர்தலில் ஒரு ஓட்டுக்கு இவ்வளவு என்று தருகிறார்களே, அதுவும் எல்லாத் தரப்பினரும்! அதெல்லாம் அவரவர் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்தா தருகிறார்கள்? அல்லது வங்கியில் கடன் வாங்குகிறார்களா? எல்லாம் கறுப்புதானே? ஒவ்வொரு தொகுதியிலும் ஐம்பது கோடியாவது புழங்கும். 234 தொகுதிகளில் எவ்வளவு? தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு (சுமார் 1500 கோடி, ஒரு தேர்தலின்போது மட்டும்) என்றால் நாடு முழுக்க எவ்வளவு லிக்விட் கேஷ் இருக்கும்?

இதெல்லாம் கண்ணிலேயே படாதது போல எப்படிப் பேசுகிறார்கள்?

இன்னொரு சுவாரஸ்யமான கேள்வி பெருமதிப்புக்குரிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் திரு. ப. சிதம்பரம் கேட்டிருப்பது. ரூ.400 கோடி கள்ள நோட்டுக்களை ஒழிக்க இந்த நடவடிக்கை அவசியமா? அதாவது இந்த நடவடிக்கையில் கறுப்புப் பணத்துக்கு எதிராக எதுவுமே இல்லை போல, இது வெறும் கள்ள நோட்டுக்கு எதிரான நடவடிக்கை போலக் கேட்டிருக்கிறார்.

முதலில் அவர் சொல்லும் 400 கோடி என்பது எவ்வளவு சரியான தகவல் என்பது தெரியாது. கட்டாயம் அதைக் காட்டிலும் அதிகம் இருக்கும். ஒரு பேச்சுக்கு அவ்வளவுதான் என்று வைத்துக் கொள்வோம். அப்படியே விட்டு விடலாமா? அது வெறும் 400 கோடியோடு நின்று விடுமா? அந்த நோட்டு அடிக்கும் பிளாக்குகள், உள்நாட்டிலும் பாகிஸ்தானிலும் யார் யார் அடிக்கிறார்களோ அவர்கள் வசம் இருக்கிறதே? தொடர்ந்து அடித்த வண்ணம்தானே இருப்பார்கள்? இது அவருக்குத் தெரியாதா? நிஜமாகவே தெரியாது என்றால் அப்படி ஒரு நிதியமைச்சர் இருந்ததற்கு நாம்தான் வருத்தப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் எவ்வளவு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது என்றும் மாவோயிஸ்ட்டுகள் எவ்வளவு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்றும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

மக்கள் தங்களுக்கு சிரமம் ஏற்பட்டதால் இதன்  நன்மைகளை உணர முடியாத நிலையில் இருக்கிறார்கள். இந்தச் சிரமத்தின் வலிகள் ஓய்ந்த பிறகு நிச்சயமாக நன்மைகளை அவர்களால் உணர முடியும்.

கறுப்புப் பணம் மற்றும் கள்ளப் பணத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமானால் பணத்தையே ஒழித்தால்தான் முடியும். அதாவது நூறு ரூபாய்க்கு அதிகமான எல்லாப் பரிவர்த்தனைகளும் கார்ட் மூலம் அல்லது காசோலை மூலம்தான் நடக்க வேண்டும் என்ற நிலை வர வேண்டும். நூறு நூறாகப் பலமுறை செய்வதைத் தடுக்க அதிக பட்சம் ஒரு நாளில் இத்தனை முறைதான் என்கிற உச்ச வரம்பு வர வேண்டும்.

இதற்கு உடனடியாக வரப்போகும் ஆட்சேபம், சிறு வியாபாரிகள் எப்படி கார்டு வசதி அமைத்துக் கொள்வார்கள் என்பதே. வேறு வழியில்லை. போதிய அவகாசம் தந்து செய்துகொள்ளச் சொல்ல வேண்டியதுதான். அடுத்த ஆட்சேபம், வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் என்பது. அவர்கள் பணம் தந்தால் அந்த மதிப்புக்கு கார்டு தரும் செண்ட்டர்கள் (மொபைல் ரீசார்ஜ் நிலையம் போல) அமைக்கலாம். அதை ஸ்வைப் செய்து பொருட்கள் வாங்கலாம்.

பஸ்கள், ரயில்களில் கூட இப்படி ரீசார்ஜபிள் கார்டுகள் ஸ்வைப் பண்ணுகிற சிஸ்டம் வர வேண்டும். சில்லறைத் தட்டுப்பாடும் இருக்காது. திருட்டுப் பயமும் இருக்காது. புழக்கத்தில் மிகச் சிறிய அளவே கரன்ஸி இருந்தால் பொருளாதாரம் மிக ஆரோக்கியமாக இருக்கும். வெளுப்புப் பணமே இல்லாத போது கறுப்புப் பணம் எங்கிருந்து வரும்? கார்டு மூலமோ செக் மூலமோ லஞ்சம் கொடுத்தால் வருமான வரித்துறைக்கு இணையம் மூலம் தகவல் போய்விடும். ஒட்டுமொத்த கேஷ்லெஸ் எகானமி என்பது இந்தியாவுக்கு ஏற்புடையதல்ல என்பது உண்மைதான். எனவே கட்டுப்படுத்தப்பட்ட கேஷ்லெஸ் எகானமியை நோக்கி நாம் முன்னேறியாகவேண்டும்.

குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக ரொக்கம் வங்கியிலிருந்து எடுத்தால் எதற்காக என்பது சொல்லப் படவேண்டும். அந்தப் பரிவர்த்தனையின் ரசீது ஒப்படைக்கப்பட வேண்டும். பான் கார்ட் எண் குறிப்பிடப்பட்டாகவேண்டும்.

இப்போதே, பான் கார்டு இல்லாமல் தங்கம் வாங்க முடியாது என்கிற நிலை ஏறக்குறைய வந்தாகி விட்டது. இதில் தங்க உச்சவரம்பும் அவசியம். அதேபோல பழைய நில உச்ச வரம்பும் திரும்ப வந்தாக வேண்டும். நிலப் பதிவும் பான் கார்டு இல்லாமல் நடக்கக் கூடாது. ரொக்கத்தில் நடக்கக் கூடாது.

இப்படிச் செல்லவேண்டிய தொலைவு அதிகம் உள்ளது. இந்த நீண்ட பயணத்தில் மிக முக்கியமான முதல் அடி மட்டுமே எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து எல்லாவற்றையும் எப்படி மத்திய அரசு கண்காணித்து வெற்றி கொள்ளப்போகிறது என்பதே மத்திய அரசின் முன் உள்ள சவால்.

Posted on Leave a comment

சங்கப் பாடல்களின் ‘கவிதை’ – ஜடாயு

(1)

நவீன வாழ்க்கையில் மனிதன் முழுவதுமாக அன்னியப்பட்டுப் போய் விட்டான். அதன் கசப்புணர்வும் விரக்தியும்தான் நவீனத்துவ இலக்கியம் முழுக்க வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பொதுவாக எல்லா இலக்கிய விமர்சகர்களும் கூறுகிறார்கள். இந்தப் புறநானூற்றுப் பாடலை வாசிக்கும்போது, எல்லாக் காலகட்டங்களிலும், சில மனிதர்களுக்காவது நேர்வதுதான் அது என்று தோன்றுகிறது. அனேகமாக அவர்கள்தான் நல்ல கவிதைகளையும் எழுதுகிறார்கள்.

அதள் எறிந்தன்ன நெடு வெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடுமன்
ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே.

– புறநானூறு 193 (ஓரேர் உழவனார்)

உரித்த தோலைப் பரப்பியது போன்ற
நீண்ட வெளிறிய சேற்று நிலத்தில்
ஒருவன் துரத்தி வரும் மானைப் போல
ஓடிப் பிழைக்கவும் கூடுமோ
சுற்றி நிற்கும் வாழ்க்கை தடுக்கும் போது.

இந்தப் பாடலுக்கு உரை கண்ட உ.வே.சா உள்ளிட்ட தமிழறிஞர்கள் அத்தனை பேரும், ‘ஒக்கல் வாழ்க்கை’ என்பதற்கு சுற்றத்தாருடனே கூடி வாழும் இனிய இல்வாழ்க்கை என்று பொருள் கொள்கிறார்கள். அத்தகைய நல்வாழ்க்கை இல்லாதவர்களுக்கே துறவும் தவ ஒழுக்கமும் தகும்; அந்த இனிய வாழ்க்கையை உடையவர்கள் துறவு நெறியில் ஓடிச் சென்று உய்தல் கூடாது. இதுதான் புலவர் கூறும் கருத்து என்கிறார்கள் அவர்கள்.

ஆனால், ஒக்கல் வாழ்க்கையின் குரூரத்தால் அதன் வன்முறையால் நொந்துபோன ஒருவனின் புலம்பலாகத்தான் இந்த எளிய கவிதை எனக்குத் தோன்றுகிறது. புல்லைத் தின்று வாழும் அந்த ஜீவனுக்கு மான் என்ற அடையாளம் கூட இல்லை, வெறும் ‘புல்வாய்’ அது. நூற்றாண்டுகள் கழித்தும் இந்தக் கவிதை வழியாக வந்து நம்மைத் தாக்குகிறது அந்த சங்கப் புலவனின் தனிமை.

ஓர் எளிய வாசகன் கூடத் தீண்ட முடிந்த கவிதையின் உள்ளத்தை பண்டித மனங்கள் பல நேரம் தவற விட்டு விடுகின்றன என்பதற்கு இது ஓர் உதாரணம்.

(2)

சங்கப் பாடல்களின் இயற்கை வர்ணனைகள் எல்லாம் வரிகளை நிரப்புவதற்காகவோ அல்லது சூழலைப் பற்றிய தகவலைத் தெரிவிப்பதற்காகவோ சொல்லப்பட்டவை அல்ல. அவை அந்தப் பாடலின் உணர்ச்சிகளுடன் பின்னிப் பிணைந்தவை. தனியாகத் தொக்கி நிற்பவை அல்ல. உண்மையில் இந்த நுட்பமும் வசீகரமுமே இப்பாடல்களைக் ‘கவிதை’யாக்குகிறது. சங்கப் பாடல்களை ஆங்கிலத்தில் சிறப்பாக மொழிபெயர்த்த ஏ.கே.ராமானுஜன் Interior landscape (அகநிலக் காட்சி) என்ற அழகிய சொல்லால் இதைக் குறிப்பிடுகிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, ஒருசில கவிதா ரசிகர்கள் தவிர்த்து சங்கப் பாடல்களைப் ‘படிக்கும்’ பெரும்பாலான தமிழர்களுக்கு அன்றும் இன்றும் இந்த விஷயம் மனதில் ஏறவில்லை என்ற எண்ணமே ஏற்படுகிறது.

அவரோ வாரார் முல்லையும் பூத்தன
பறியுடைக் கையர் மறியினத் தொழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும்
யாடுடை இடைமகன் சென்னிச்
சூடிய வெல்லாம் சிறுபசு முகையே.

– குறுந்தொகை 221(உறையூர் முதுகொற்றன்)

தோழி, அவரோ வாரார். முல்லையும் பூத்து விட்டது.
பனையோலையைக் கையிலேந்தி, குட்டிகளை ஓட்டிக் கொண்டு வந்து
பாலைக் கொடுத்து விட்டு கூழை வாங்கிச் செல்லும் இடையர்கள்
தலைநிறைய சிறிய முல்லை அரும்புகளைச் சூடிச் செல்கிறார்கள்.

அவ்வளவுதான். மிக எளிய பாடல். இதற்கு எழுதப் பட்ட உரைகள் எல்லாம் இந்த ரீதியில் உள்ளன:

முடிபு – முல்லையும் பூத்தன; இடைமகன் சூடியவெல்லாம் முகையே; அவர் வாரார். கருத்து – கார்ப்பருவம் வரவும் தலைவர் வந்திலர்.கார்ப்பருவத்தை உணர்த்துவதற்காகக் கூறப்பட்ட ஒரு காட்சி என்பதையும் பாட்டிலுள்ள இலக்கண சமாசாரங்களையும் சுட்டிக்காட்டிவிட்டு உரை நின்றுவிடுகிறது. .

ஒரு பூ கூட அவள் சூடாமல், எங்கிருந்தோ வந்துசெல்லும் இடையர்கள் தலைநிறைய சூடிக் கொண்டு செல்லப் பூத்த முல்லை எது? அதுதான் இதிலுள்ள கவிதை. உரைகள் அதைக் குறிப்புணர்த்துவது கூட இல்லை.

(3)

பல சங்கப் பாடல்களில் வரும் உவமைகள் நேரடியான பொருளுக்கு அப்பால் நின்று நிதானித்து நோக்கப் படுவதில்லை. ஆனால் நுண்ணுணர்வு கொண்ட வாசகனுக்கு அவை மேலும் ஆழ்ந்த பொருளை அளிக்கக் கூடும்.

உள்ளினென் அல்லனோ யானே உள்ளி
நினைத்தனென் அல்லனோ பெரிதே நினைத்து
மருண்டனென் அல்லனோ உலகத்துப் பண்பே
நீடிய மராஅத்த கோடுதோய் மலிர்நிறை
இறைத்துணச் சென்றற் றாஅங்கு
அனைப்பெருங் காமம் மீண்டுகடைக் கொளவே.

– குறுந்தொகை 99 (ஔவையார்)

எண்ணிப் பார்த்தேனன்றோ
மீண்டும் மீண்டும் நினைத்தேனன்றோ
உலகத்தின் இயல்பை எண்ணி மயங்கினேனன்றோ
உயர்ந்த மரத்தின் கிளையைத் தொட்டு ஓடும் பெருவெள்ளம்
பிறகு கையால் இறைத்து உண்ணும்படி சிறுகிச் செல்வது போல
பெரிய காதல் நோய் முடிவடையுமாறு
நான் மீண்டு வந்துவிட்டேன்.

பிரிந்து சென்ற காலத்தில் அவளை நினைத்தாயோ என்று கேட்ட தோழிக்குத் தலைவன் கூறுவதாக அமைந்த பாடல் இது.

“மரத்தின் கிளையைத் தொட்டுச் சென்ற வெள்ளம் நெடுந்தூரம் வந்து, இறைத்துண்ணும்படி சிறுகிப் பின்பு அற்றது போல, காம வெள்ளமானது மிகப் பெரிதாயிருந்து, நான் இங்கு மீண்டுவரும்போது வரவரக் குறைந்து, தலைவியோடு அளவளாவியவுடன் அறும் என்று உவமையை விரித்துணர்க” என்று உரை கூறுகிறது. இந்த நேரடியான பொருளைத் தாண்டி இப்பாடலில் ஒன்றுமே இல்லையா என்ன?

பெண்ணே, இதோ இந்தக் கணம் உன்முன் நிற்கையில் என்னுள் பொங்கும் காதல் நீ கையால் மொண்டு அறியும் சிறுவெள்ளம். ஆனால், உன்னைப் பிரிந்திருந்த போதில் என்னுள் பிரவகித்த காதல் கிளைதொட்டு ஓடிய பெருவெள்ளம். அதை என்றாவது உன்னால் அறிந்து விட முடியுமா? – இந்த ஆற்றாமை, இதிலுள்ள பெரும் தவிப்பு. இதுதான் இப்பாடலைக் கவிதையாக்குகிறது.

நூற்றாண்டுகள் கடந்தும் கவிஞனின் அகவெள்ளத்தை அதனோடு ஒத்திசைந்த சில மனங்களாவது தீண்டி அறிந்து விட முடியும். அதுவே கவிதையின் மாயம்.

Posted on 1 Comment

லா.ச.ரா : அணுவுக்குள் அணு – பா. ராகவன்

லாசரா எனக்கு
முதல் முதலில் அறிமுகமானபோது நான்  விவேக் ரூபலாவின்
கொலைவெறி ரசிகனாக இருந்தேன். பத்தாம் வகுப்பு முடித்திருந்த நேரம். எங்கள் பேட்டையில்
அப்போது இருந்த லீலா லெண்டிங் லைப்ரரியில் தினமும் ஒரு கிரைம் நாவலை எடுத்துப் படிப்பது
என்பதை ஒரு சமூகக் கடமையாக நினைத்தேன். சுஜாதாவெல்லாம் என்னைக் கவரவில்லை. ராஜேஷ்குமார்தான்.
உலகின் ஒரே உன்னத எழுத்து என்றால் அது அவரது க்ரைம் நாவல்தான்.
அத்தகு ரத்த
தினம் ஒன்றில் எங்கள் குடும்ப நண்பர் கவிஞர் நா.சீ. வரதராஜன், ‘நீ நிறைய படிக்கறியாமே?
லாசரா படிச்சிருக்கியா?’ என்று கேட்டார்.
‘ராஜேஷ்குமார்
மாதிரி சூப்பரா எழுதுவாரா சார்?’
அவர் பதில்
சொல்லவில்லை. மாறாக, பைண்ட் செய்யப்பட்ட பழைய புத்தகம் ஒன்றை எடுத்துக் கொடுத்து,
‘முடிஞ்சா படிச்சிப் பாரு. புரியலன்னா கவலப்படாத. அப்பறமா புரியும்’ என்று சொன்னார்.
இந்த அறிமுகமே
எனக்கு திகிலாக இருந்தது. சரி, ராஜேஷ்குமாரைவிடப் பெரிய ஆள் போலிருக்கிறது என்று எடுத்து
வந்து புரட்ட ஆரம்பித்தேன். அது ஜனனி சிறுகதைத் தொகுப்பின் முதல் பதிப்பு. தடிதடியான
தாள்கள். பழுப்பேறி இருந்தது. முதல் பக்கத்தில் லாசராவின் ஆட்டோகிராஃப் இருந்தது. அந்தக்
கையெழுத்து எனக்குப் பிடித்தது. இஸ்திரி செய்த அங்கவஸ்திரத்தைக் கொடியில் போட்ட மாதிரி
எழுத்து.
ஆனால் கையெழுத்து
கவர்ந்த அளவுக்குக் கதை கவரவில்லை. முதல் சிறுகதையின் முதல் பத்தியிலேயே நான் காலி.
அணுவுக்குள் அணுவாம் பரமாணுவுக்குள் எனக்கு அப்போது நுழையத் துப்பில்லை.
ஆனால் நான்
லாசராவின் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு திரிந்ததைக் கண்ட ஒரு சிலர் என்னை ஒரு
மாதிரி பார்க்க ஆரம்பித்தார்கள். அந்த லுக் எனக்குப் பிடித்தது. புரியாவிட்டாலும் இந்த
ஆள் நமக்கு உதவுவார் என்று தோன்றியது.
இதே மாதிரி
ரகத்தில் வேறு யார் யாரெல்லாம் உண்டு என்று எனக்குத் தெரிந்த மாபெரும் இலக்கிய ஏஜெண்டான
லீலா லெண்டிங் லைப்ரரியின் உரிமையாளர் சாமியப்பனிடம் கேட்டபோது அவர் அம்மா வந்தாளை
எடுத்துக் கொடுத்தார்.
பகல் பதினொரு
மணிக்கு அதைப் படிக்க ஆரம்பித்து மூன்று மணிக்கு முடித்தது முதல் எனக்கு நிலைகொள்ளாமல்
போய்விட்டது. அந்தக் கதை என்னவோ செய்தது. இரவு தூக்கம் வரவில்லை. மறுநாள் மீண்டும்
படித்தேன். மேலும் சிலது புரிவது போலிருந்தது. மூன்றாம் நாள் மறுபடியும். முற்றிலும்
பிடிபட்டு கிறுகிறுத்துவிட்டது.
பிசாசு அடித்த
மாதிரி அது முதல் ஜானகிராமனின் அத்தனை நாவல்களையும் தேடிப் பிடித்து மூன்று மாதங்களில்
படித்துத் தீர்த்தேன். அதன் பிறகுதான் மீண்டும் லாசராவுக்கு வந்தேன்.
 

அணுவுக்குள்
அணு.
அப்போதும் எனக்கு
ஜனனி பிடிபடவில்லை. ஆனால் த்வனி பிடித்தது. கதை புரிதலைவிட இம்முறை மொழியை ரசிக்க ஆரம்பித்தேன்.
கண்ணாடியில் பிம்பம் விழும் த்வனிகூட எனக்குக் கேட்கிறது என்னும் வரியை நாளெல்லாம்
நினைத்து வியந்துகொண்டிருந்தேன். லாசராவின் பெண்களையும் ஜானகிராமனின் பெண்களையும் ஒப்பிட்டுப்
பார்க்கும் வழக்கம் உண்டானது. என்னால் ஜானகிராமன் காட்டிய பெண்களை சுலபமாகத் திருட்டுக்காதல்
செய்ய முடிந்ததைப் போல ராமாமிருதம் சுட்டிய பெண்களை நெருங்க முடியவில்லை. அது பயமில்லை.
மிரட்சி. சுநாதனி போன்ற ஒரு பெண்ணை வாழ்வில் என்றேனும் சந்திக்க நேர்ந்தால் விழுந்து
சேவித்துவிடுவேன் என்று தோன்றியது.
சுமார் பத்து
முறையாவது திரும்பத் திரும்பப் படித்து அந்தத் தொகுப்பை ஒருவாறு உள்வாங்கியபிறகு ஒருநாள்
லாசராவுக்கு ஒரு போஸ்ட் கார்ட் போட்டேன். அப்போது அவர் அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில்
இருந்தார். ‘எனக்குப் புரியவில்லை; ஆனால் படிக்காமல் இருக்கமுடியவில்லை’ என்பதுதான்
அந்தக் கடிதத்தின் சாரம். மிகவும் மொக்கையான மொழியில் இதைச் சுற்றி வளைத்துத் தெரிவித்திருந்தேன்.
அவரிடமிருந்து நாலு நாளில் பதில் கார்ட் வந்தது.
சிரஞ்சீவி ராகவனுக்கு,
ஆசிகள் என்று ஆரம்பித்து அஞ்சலட்டையின் ஒன்றரைப் பக்கத்திலும் இடைவெளியின்றி எழுதியிருந்தார்.
அதே கையெழுத்து. அதே அழகு. அதில் ஒருவரி எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. எல்லாம்
புரிந்தேதான் தீரவேண்டுமென்று என்ன கட்டாயம்? என்றாவது புரியட்டும். அவசரப்பட வேண்டாம்.
இறுதிவரை புரியாவிட்டாலும் நஷ்டமில்லை.
இது என்னைச்
சீண்டியது. இந்த மனிதரைப் புரிந்துகொள்ளாமல் அடுத்த வேலை இல்லை என்று முடிவு செய்து
மீண்டும் மீண்டும் வாசிக்கத் தொடங்கினேன். அவரது மாய மொழியின் அடர்ந்த வலைப்பின்னலைக்
களைந்து கதையின் அந்தராத்மாவைத் தொடுவதுதான் அங்கே எனக்கிருந்த ஒரே ட்ராப். மொழி போதையிலேயே
திளைத்து உள்ளே போகாதிருந்ததுதான் நான் செய்த தவறு. அதைப் புரிந்துகொண்ட மறுகணமே லாசராவின்
விஸ்வரூப தரிசனம் எனக்குக் கிடைக்கத் தொடங்கிவிட்டது.
தமிழ்ச் சமூகத்தில்
அப்போதுதான் குடும்பம் என்னும் அமைப்பு ஆங்காங்கே சிதைய ஆரம்பித்திருந்தது. தனிக்குடித்தனத்
தனியாவர்த்தனங்கள் பரவலாக அரங்கேறத் தொடங்கியிருந்தன. லாசராவின் கதைகள் எனக்குக் குடும்பத்தின்
மீதான பிரேமையை உருவாக்கியளித்தன. உறவுக்கார மகாஜனங்களின் குற்றம் குறைகளையும் ரசிக்கப்
பழகினேன். மனிதன் என்பவன்தான் யார்? ஏராளமான பிசிறுகளின் நேர்த்தியான தொகுப்பே அல்லவா?
சிக்குப் பிடித்த தலைமுடியை உட்கார்ந்து எண்ணெய் தடவி வாரி,  சல்லாத்துணி போலாக்குவதில் ஒரு லயம் உள்ளது. சிக்கு
பிடிக்கத்தான் செய்யும். வாரிக்கொண்டேதான் இருக்கவேண்டும். மொட்டையே சுகமென்றால் சொல்ல
ஒன்றுமில்லை. லாசராவின் ஒரு கதாநாயகி பிரமாதமான கூந்தலழகி. இறுதியில் அவள் உயிரைக்
கொடுத்த இறைவனுக்கு மயிரைக் கொடுக்கிற தருணம் ஒன்று கதையில் வரும். மழித்தாலும் அது
விளைந்துவிடுவதுபோலத்தான் உறவென்னும் நினைவுப் போதம்.
பின்னர் அவருக்கு
எத்தனையோ தபாலட்டைகள் அனுப்பியிருக்கிறேன். அவரும் சளைக்காமல் பதில் போடுவார். கதைகள்
மீதான எனது புரிதல் அளவு உயர்ந்து வருவதை ஒரு கடிதத்தில் பாராட்டியிருந்தார். அவரது
சுபமங்களா பேட்டி வெளியானபோது, ‘இதற்குமேல் தாங்காது; உங்களை நேரில் சந்திக்கவேண்டும்’
என்று எழுதினேன். வரச் சொல்லி வீட்டு விலாசத்தைக் குறிப்பிட்டு குரோம்பேட்டையில் இருந்து
எப்படி வருவது என்று வழியெல்லாம் விளக்கியிருந்தார்.
அந்த நாளை என்னால்
மறக்க முடியாது. முதல் பார்வையில் எனக்கு அவர் ஒரு மகரிஷி போலக் காட்சியளித்தார். கண்ணைச்
சுருக்கி என்னைப் பார்த்தார். சரேலென ஒரு புன்னகை. உட்காரச் சொல்லி நிறையப் பேசினார்.
என்ன படிக்கற. அப்பா என்ன பண்றார். மூத்தவனா நீ? கூடப் பொறந்தவா எத்தன பேர். எழுதறியா.
ஜாக்கிரதை. படிப்ப கெடுத்துண்டுடாம எழுது. சினிமா பாப்பியா. குறைச்சிக்கோ. ராத்திரி
ரொம்ப நேரம் கண்ணு முழிக்காத.
என்னைப் பொறுத்தவரை
அவர் மகரிஷிதான். ஆனால் அந்த முதல் சந்திப்பிலேயே என் அப்பாவின் அன்னியோன்னியத்தை அவரிடம்
காண முடிந்தது. இது எனக்குப் பெரிய வியப்பை அளித்தது. வாழ்வில் நான் சந்தித்த கொம்பு
முளைக்காத முதல் எழுத்தாளர். (அடுத்தவர் அசோகமித்திரன்.)
லாசராவைப் படிக்கத்
தொடங்கியபிறகு வெகுகாலம் நான் வேறெந்த எழுத்தாளரையும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. மற்ற
எதுவுமே வேண்டாம் என்று நினைக்கச் செய்துவிடும் எழுத்து அவருடையது. மொழியின் மீதான
அவரது சாகசம் திரும்பத் திரும்ப இங்கு பேசப்பட்டிருக்கிறது. உண்மையில் வாழ்வின்மீது
அத்தகு சாகசம் நிகழ்த்தாமல் மொழியில் அது பிரதிபலிக்க வாய்ப்பில்லை.
ஜென் குரு ஒருவர்
இறக்கும் தருவாயில் ஆசைப்பட்டு ஓர் இனிப்புப்பண்டம் வாங்கி வரச் சொல்லி உண்டு முடித்த
வேளையில் அவரது சீடர்கள் கேட்டிருக்கிறார்கள். ‘குருவே, இறுதியாக ஒரு சொல்லை அளியுங்கள்.’
குரு சொன்னார்,
‘அப்பா! என்ன ருசி!’
லாசராவின் எழுத்தில்
நான் அடைந்தது அதுதான். வாழ்வின் மீதான பூரண ருசி.
Posted on Leave a comment

நம்மை எதிர்நோக்கும் பணி – குருஜி கோல்வல்கர் (தமிழில்: கிருஷ்ணன் சுப்ரமணியன்)

திப்பிற்குரிய ஸ்ரீ சூரிய நாராயண ராவ் நவம்பர் 18ம்
தேதி மறைந்தார். பாரதத்தின் சமூக ஆன்மிக வரலாற்றில் மிக உச்சமான ஒரு மைல்கல் –
1969ல் கர்நாடக மாநிலத்தில் உடுப்பியில் நடந்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநாடு.
இம்மாநாட்டில்தான், பாரதத்தின் வெவ்வேறு சம்பிரதாயங்களைச் சார்ந்த துறவியர்களை இணைத்து
ஒரே மேடையில் அமர வைத்து ‘தீண்டாமைக்கு சாஸ்திர அங்கீகாரம் எதுவும் கிடையாது. அது சாஸ்திர
விரோதமானது. அனைத்து இந்துக்களும் சகோதரர்’ எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரலாற்று
முக்கியத்துவம் மிக்க இம்மாநாட்டுக்கான பொறுப்புகளை நிர்வகித்து, பரம பூஜனீய குருஜியின்
வழிகாட்டுதலில் அதை நடத்தியவர் வணக்கத்துக்குரிய ஸ்ரீ சூரிய நாராயண ராவ். 1970களிலும்
80களிலும் தமிழ்நாட்டில் சங்கத்தை வளர்த்தவர். 1990களில் அகில இந்திய சேவை அமைப்புகளுக்கான
பொறுப்பில் பாரதம் முழுவதும் சென்று தேசப்பணி செய்தவர். பெரும் விபத்தொன்றில் மிக மோசமாக
பாதிக்கப்பட்ட பின்னரும் எவ்விதத் தொய்வும் இல்லாமல் சங்கப் பணி ஆற்றியவர். எத்தனை
வயதானாலும் புதிய நல்ல விஷயங்களில் அவர் ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் ஈடுபடுவார்.
தொடர்ந்து வாசித்தார். ஒரு மகா மனிதரை சங்க குடும்பமும் தேசமும் இழந்திருக்கிறது. பாரத
வரலாற்றில் நவீன காலகட்டங்களில் இந்து சமுதாயத்தின் பொன்னேட்டு நிகழ்ச்சியை உருவாக்கிய
சிற்பிகளில் ஒருவர் அமரத்துவம் அடைந்தார். முழுமையான தியாகத்தால் பரிபூரணத்துவமடைந்த
ஒரு வாழ்க்கை, நம் அனைவரிலும், நாம் இருக்கும் நிலைகளிலிருந்து பண்புகளால் உயர்ந்திடவும்
தேசத்துக்காக வாழ்ந்திடவும் தூண்டும். ஓம் சாந்தி.
ஸ்ரீ சூரியநாராயண ராவ்
உடுப்பி
மாநாட்டின் செயலரான ஸ்ரீ சூரிய நாராயண ராவுக்கு ஸ்ரீ கோல்வல்கர் எழுதிய கடிதம்.

நம்மை எதிர்நோக்கும் பணி
(குருஜி கோல்வல்கர்
எழுதிய கடிதத்தின் முழு வடிவம்)

தமிழில்: கிருஷ்ணன்
சுப்ரமணியன்
விஸ்வ ஹிந்து
பரிஷத்தின் கர்நாடக மாநில மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. மாநாட்டின் அமைப்பாளர்கள்,
தொண்டர்கள் சிலரின் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புக்கு மேலாகவே அது பெரிய அளவில் நடைபெற்றிருக்கிறது.
இயல்பாகவே, இந்த வெற்றி எல்லாருடைய மனத்திலும் அதிக எதிர்பார்ப்புகளை வளர்த்துள்ளது.
ஆனால் மந்திரம் போட்டது போல உடனடியாக எல்லாமே நல்லபடியாக மாறிவிடும் என்ற எண்ணம் சரியல்ல
என்று நான் நினைக்கிறேன். கடுமையான, தொடர்ச்சியான உழைப்பு இங்கே தேவைப்படுகிறது. ஹிந்துக்களின்
முழுமையான ஒருங்கிணைப்புக்காகவும்  நல்வாழ்வுக்காகவும்
தொய்வில்லாத உழைப்பைக் கோரும் அறைகூவலை இந்த மாநாடு விடுத்திருக்கிறது. அதே வேளையில்,
இந்த மாநாட்டின் வெற்றி, நம்மை மெத்தனமாக இருக்க வைத்துவிடக்கூடாது.
உதாரணமாக: தீண்டாமையைக்
குறித்த, ஆச்சாரியர்களாலும், தர்மகுருக்களாலும், மடாதிபதிகளாலும், நம்முடைய மற்ற பிரிவுகளைச்
சேர்ந்த பிற புனிதர்களாலும் ஆசீர்வதிக்கப்பட்ட தீர்மானத்தை வெறும் சொற்களால் மட்டுமே
நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்த இயலாது. நூற்றாண்டுகளாக இருந்து வந்த தவறான பழக்கங்கள்,
வார்த்தைகளாலும் கனவு காண்பதாலும் மறைந்துவிடாது. கடும் உழைப்புடன் கூடிய சரியான பிரசாரத்தை
ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும், வீடுவீடாக மேற்கொள்ளவேண்டும். நவீன காலத்தின்
அழுத்தங்களினால் ஏற்பட்ட மாற்றமாக மட்டும் இது இருந்துவிடக்கூடாது. கடந்த காலத் தவறுகளுக்கு
ஒரு பரிகாரமாக,  வாழ்க்கையின் ஒரு அங்கமாக,
உறுதியான கொள்கையாக அனைவரும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தும் வண்ணம் இந்தத் தீர்மானம்
போதிக்கப்படவேண்டும். தார்மீக மற்றும் உணர்வுபூர்வமான வகையில் மக்களின் சிந்தனையிலும்
செயலிலும் இந்த மாற்றம் ஏற்படவேண்டும். பின்னுக்குத் தள்ளப்பட்ட மக்களின் வாழ்வில்,
பொருளாதார, அரசியல் ரீதியான மேம்பாட்டை ஏற்படுத்தி, மற்றவர்களோடு தோளுக்குத் தோள் சரிசமமாக
நிற்கும் நிலையை உருவாக்குவது மிகவும் கடினமான பணி. ஆனால் இது மட்டும் போதாது. ஏனெனில்
இந்த ‘சமத்துவம்’, பிரிவினை உணர்வு அற்றதாக இருக்கவேண்டும். நாம் வேண்டுவதும் உழைப்பதும்
பொருளாதார, அரசியல் சமத்துவத்திற்காக மட்டுமல்ல. நமக்குத் தேவை உண்மையான மாற்றத்துடன்
கூடிய முழுமையான ஒருங்கிணைப்பு. இது அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் சக்திக்கு
அப்பாற்பட்டது. ஒருங்கிணைப்பு என்ற பெயரில் தொடர்பில்லாத வேலைகளைச் செய்துகொண்டிருக்கும்
அரசியல் கட்சிகளைத் திறமையாக வளைப்பதின் மூலம் கூட இதைச் செய்துவிட முடியாது. இதயத்தின்
அடியாழத்திலிருந்து புறப்பட்டு தினசரி நடவடிக்கைகளில் வெளிப்படும் கடும் உழைப்பு, அதாவது
ஆன்மிக, தார்மீக, சமூகத் தளங்களில் மேற்கொள்ளப்படும் பணி இதற்குத் தேவைப்படுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களும், வெளியிலிருந்து ஆதரவுக்காரம் நீட்டியவர்களும் இம்முயற்சிக்குக்
கைகொடுத்து, காலங்காலமாக இருந்துவரும் முறையில்லாத பாரபட்சங்களைத் தூள் தூளாக்கிட முன்வரவேண்டும்.
மற்றொரு முக்கியமான
பணி, தர்மத்தைப் பற்றிய கொள்கையையும் அதன் செயல்பாட்டையும் மக்களுக்குப் போதிப்பதாகும்.
இது இரண்டு வகையில் இருக்கவேண்டும். அதாவது அனைத்தையும் உள்ளடக்கிய பொதுவான ஒன்றாகவும்,
ஒருவர் பிறந்த அல்லது பின்னர் ஏற்றுக்கொண்ட ஒரு பிரிவின் விதிமுறைகளைப் பற்றியதாகவும்
இருக்கவேண்டும். இந்தக் கல்வி நம்மிடமிருந்தே தொடங்கவேண்டும். ஏனெனில், தாம் கற்றுக்கொண்டு,
அதை தன்னுடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தாமல், எதைப் போதிக்கவேண்டும் என்று தெரியாமல்,
ஒருவர் மற்றவர்களுக்குத் திறமையாக கற்பிக்க இயலாது. ஆழ்ந்த நம்பிக்கை, முழு ஈடுபாடு,
நடத்தையிலும் சொல்லிலும் உணர்விலும் செயலிலும் தூய்மை ஆகியவை மட்டுமே மற்றவர்களுக்குப்
போதிக்கும் அதிகாரத்தை ஒருவருக்கு வழங்கமுடியும். எனவே இந்தக் குணங்களை சிரத்தையோடு
நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
குருஜி கோல்வல்கர்
இந்தக் கல்வியை
நாம் நாட்டின் மூலை மூடுக்கெல்லாம் எடுத்துச் செல்லவேண்டும். மூடநம்பிக்கைகள் கலந்த
சடங்குகள் மட்டுமே தர்மம் என்று கருதுபவர்களுக்கு இதைக் கொண்டு செல்லவேண்டும். தொலைதூரக்
கிராமங்களில், தர்மத்தைப் பற்றி அறிந்துகொள்ளவும் அதைக் கடைப்பிடித்து வாழவும் வாய்ப்பில்லாதவர்களுக்கு
இதை எடுத்துச் செல்லவேண்டும். மலைகளிலும், அடர்ந்த காடுகளில் வாசிப்பவர்களிடமும் இதைக்
கொண்டு சேர்க்கவேண்டும். இந்தப் பணியில் பல சிரமங்கள், தொல்லைகள், சோதனைகள் ஏற்படலாம்.
இது ஒரு உபயோகமில்லாத வேலை என்று நாம் எண்ணலாம். ஆனால், உடனடி பலன்களையும், அற்புதங்களையும்
எதிர்பார்க்காமல், எல்லையற்ற பொறுமையுடன் இந்தக் கடினமான பணியை ஒரு கர்மயோகியைப் போல
வெற்றிகரமாக நாம் செய்து முடிக்கவேண்டும்.
பல தொண்டர்கள்,
எல்லாப் பிரச்சினைகளுக்குமான காரணத்தை அடுத்தவர் மேல் சுமத்துவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
சிலர் அரசியல் முறைகேடுகள் மீதும், இன்னும் சிலர் கிறித்துவ, இஸ்லாமிய போன்ற மதப் பிரசாரகர்களின்
முரட்டுத்தனமான நடவடிக்கைகள் மீதும் பழி சுமத்துகிறார்கள். நம்முடைய தொண்டர்கள் இதுபோன்ற
சிந்தனைகளை விட்டுவிட்டு, மனதை ஒருநிலைப்படுத்தி, நம்முடைய மக்களுக்காகவும், நமது தர்மத்திற்காகவும்
சரியான முறையில் பணி புரியவேண்டும். உதவி தேவைப்படும் நம் சகோதரர்களுக்கு கைகொடுத்து,
துன்பத்தை நீக்கப் பாடுபடவேண்டும். இந்தச் சேவையில் மனிதர்களுக்கிடையே எந்தவிதமான பாகுபாடும்
பார்க்கக்கூடாது. அனைவருக்கும், கிறித்துவராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும் வேறு
எந்தப் பிரிவைக் சேர்ந்த மனிதராக இருந்தாலும், நம்முடைய சேவை தரப்படவேண்டும். ஏனென்றால்,
அழிவுகள், துன்பங்கள், துரதிருஷ்டவசமான நிகழ்வுகள், எந்த வேறுபாடும் இன்றி எல்லோரையும்
பாதிக்கின்றன. துன்பங்களை நீக்கப் பாடுபடும்போது, நாம் நம்முடைய நிலையிலிருந்து கீழிறங்கி
வருகிறோம் என்றோ இரக்கத்தினால் உதவி செய்கிறோம் என்றோ எண்ணக்கூடாது. எல்லோருடைய உள்ளத்தில்
குடியிருக்கும் கடவுளுக்குச் செய்யும் தொண்டாகக் கருதி அதைச் செய்யவேண்டும். நமக்குத்
தந்தையாகவும் தாயாகவும் சகோதரராகவும் நண்பராகவும் 
எல்லாமாகவும் இருக்கும் இறைவனின் சேவைக்காக நம்முடையது அனைத்தையும் அளிக்கும்
நமது தர்மத்தின் உண்மையான கோட்பாட்டைப் பின்பற்றி இந்தச் சேவையை மேற்கொள்ளவேண்டும்.
என்றும் நிலைத்திருக்கும்
– சனாதன – எல்லையற்ற – தர்மத்தின் புகழையும் பேரொளியையும் வெளிக்கொணரும் வகையில் நம்முடைய
செயல்கள் வெற்றிபெறுவதாக.
எம்.எஸ்.கோல்வல்கர் 
 

மகரசங்கிரமணம், சக 1891.                         
14-01-1970

Posted on Leave a comment

வலம் – டிசம்பர் 2016 இதழ்

வலம் டிசம்பர் இதழின் அட்டை

இந்த இதழின் உள்ளடக்கம் 
இதழை ஆன்லைனில் வாங்கிப் படிக்க: http://nammabooks.com/magazines/buy-valam-magazine-dec
கூகிள் ப்ளே மற்றும் நியூஸ் ஹண்ட்டில் வரும் வாரத்தில் வெளியாகும்.