Posted on Leave a comment

உத்தரகாண்டம் வால்மீகி ராமாயணத்தின் பிற்சேர்க்கையா? | ஜடாயு


இன்று புழக்கத்திலுள்ள வால்மீகி ராமாயணத்தின் பாரம்பரிய வடிவத்தில் உத்தரகாண்டம் அதன் கடைசிப் பகுதி என்ற அளவில் பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால் இது அனைவராலும் ஏற்கப்படவில்லை. உத்தரகாண்டம் ஆதிகாவியமான வால்மீகி ராமாயணத்தில் உள்ளதல்ல, பின்னால் சேர்க்கப்பட்டது என்ற கருத்து ஸ்ரீ ராமபத்ராசாரியார் (சித்ரகூட்) உள்ளிட்ட ஆசாரியர்கள், பல பாரம்பரிய ராமாயணப் பண்டிதர்கள், சம்ஸ்கிருத அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களிடம் உள்ளது. அவ்வாறு கருதும் பாரம்பரியப் பண்டிதர்கள் தங்களது ராமாயண பாராயண முற்றோதலில் அந்தக் காண்டத்தை வாசிப்பதில்லை, அதனைச் சொற்பொழிவு செய்வதுமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு எதிர்த்தரப்பாக வேறுசில அறிஞர்களின் கருத்துக்களும் உள்ளன. இந்த நீண்ட விவாதத்தின் முக்கியப் புள்ளிகளை ஒரு பறவைப் பார்வையாக இக்கட்டுரையில் பார்க்கலாம். எனது ராமாயணக் கல்வி மற்றும் ஆய்வில் நான் வந்தடைந்த கருத்து உத்தரகாண்டம் பிற்சேர்க்கை என்பதே. எனவே அதற்கான உறுதியான வாதங்களை முதலிலும், அத்தகைய பிற்சேர்க்கைக்கான பின்னணி குறித்த எனது புரிதலை இரண்டாவதாகவும் அளித்திருக்கிறேன்.

உத்தரகாண்டத்தின் உள்ளடக்கம்: 

வால்மீகி ராமாயணத்தில் ஆறாவதாக உள்ள யுத்தகாண்டம் ராம பட்டாபிஷேகம் மற்றும் ராமராஜ்யத்தின் வர்ணனையுடன் முடிவடைகிறது. அதன் பிறகு வருவது இக்காண்டம். ‘உத்தர’ என்ற சொல்லுக்கு ‘பிறகு / பின்னால்’ என்றும் சில இடங்களில் ‘கடைசியான’ (உத்தரக்கிரியை என்பது போல) என்றும் பொருள். இதில் கூறப்படும் விஷயங்கள்:

1. ராவணாதியரின் பிறப்பு, வளர்ப்பு, தவம், மூவுலகையும் அவர்கள் படையெடுத்து வெற்றி கொள்வது. பட்டாபிஷேகத்திற்கு வந்துள்ள முனிவர்களிடம் ராமர் கேட்க, அவர்கள் கூறுவதாக இப்பகுதி அமைந்துள்ளது.

2. குடிமக்களில் ஒருசாரார் பழிதூற்றுவதை ஒற்றர்கள் மூலம் கேட்ட ராமர் சீதையை வனத்துக்கு அனுப்ப முடிவெடுத்து, லக்ஷ்மணன் கானகத்தில் அவளை விட்டுவருவது. சீதையின் துயரம், வால்மீகி முனிவர் அவளைக் கண்டு தனது ஆசிரமத்தில் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்தல். லவ குசலர்களின் பிறப்பும் வளர்ப்பும்.

3. சத்ருக்னன் படையெடுத்துச் சென்று லவணன் என்ற அரக்கனை வதம் செய்து, மதுபுரி என்கிற மதுரா நகரை உருவாக்கி அங்கு ஆட்சிபுரிதல்.

4. தவத்திற்கு அதிகாரமில்லாத சூத்திர முனியான சம்பூகன் தவம் செய்வதால் கேடுகள் விளைவதால் அவனைத் தண்டிக்க வேண்டும் என்று நாரதர் உள்ளிட்ட ரிஷிகள் கூற, ராமர் சம்பூகனை வதம் செய்தல்.

5. ராமர் அசுவமேத, ராஜசூய யாகங்களைச் செய்தல். யாகசாலையில் வால்மீகி முனிவருடன் லவ குசர்கள் வந்து ராமாயணத்தைப் பாடுதல், தனது புதல்வர்கள் என்று அறிந்து ராமர் மகிழ்தல். (அசுவமேதக் குதிரையை லவகுசர்கள் பிடித்துக் கட்டுவது, பிறகு ராமரின் படைகளும், ராமருமே வந்து லவகுசர்களிடம் போரிட்டுத் தோற்பது ஆகியவை எதுவும் இதில் இல்லை. அவை பிற்காலத்தில் மகாகவி பவபூதி தனது உத்தர ராம சரிதம் என்ற காவியத்தில் நாடகத்தன்மைக்காக எழுதிச் சேர்த்தவை).

6. ராமரின் கோரிக்கைப் படி, வால்மீகி ஆசிரமத்திலிருந்து சீதை யாகசாலைக்குள் அழைத்து வரப்படுதல். ராமரும் சபையினரும் முனிவரும் அவளைப் புகழ்தல். சீதை பூமித்தாயை வேண்ட, பூமிபிளந்து அவளை ஏற்றுக் கொள்ளுதல்.

7. ராமர் லவ குசர்களுக்கும் பரதனது புதல்வர்களுக்கும் உரிய ராஜ்யத்தை அளித்துவிட்டு, அவதார காலம் நிறைவுற்றதை அறிந்து, சகோதரர்களும் அயோத்தி நகரத்தின் மக்களும் மற்ற உயிர்களனைத்தும் புடைசூழ சரயு நதியில் புகுந்து தனது இருப்பிடமான வைகுந்தத்தை அடைதல்.

இனி, உத்தரகாண்டம் பிற்சேர்க்கையே என்பதற்கான முக்கியமான வாதங்களைப் பார்க்கலாம். 

1. யுத்தகாண்டத்தின் இறுதி அத்தியாயம் தெளிவாக அதுவே காவியத்தின் முடிவு என்னும் வகையில் அமைந்துள்ளது. கடைசி 15 சுலோகங்கள் நூலின் பெருமைகளையும் அதைக் கற்பதால் உண்டாகும் நலன்களையும் எடுத்துரைக்கும் பலசுருதியாக உள்ளன. எனவே இதற்குப் பிறகு காவியத்தின் அடுத்த பகுதி தொடங்குவதற்கான சாத்தியம் இல்லை. (மகாபாரதத்திலும் புராணங்களிலும் பல இடங்களில் நடுநடுவிலும் அத்தியாய முடிவுகளிலும் கூட பலசுருதிகள் கூறப்பட்டுள்ளனவே என்று இதற்கு ஆட்சேபம் கூறப்படுகிறது. ஆனால் வால்மீகி ராமயாணத்தில் அத்தகைய அமைப்பு இல்லை. மேலும் இந்தப் பலசுருதியில் ‘இந்தப் பகுதியை’ என்றில்லாமல் நூல் முழுவதையும் சுட்டுவதாக உள்ளது.)

2. உத்தரகாண்டத்திலுள்ள 111 சர்க்கங்களில் பாதிக்கு மேல் (55 சர்க்கங்கள்) மையக்கதையை விட்டு விலகி உபகதைகள் போன்ற வேறொன்றைக் கூறுவதாக (digression) உள்ளன. மகாபாரதத்திலும், புராணங்களிலும் இத்தகைய போக்கு மிக சகஜமானது, ஆனால் வால்மீகி ராமாயணத்தின் பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம் வரையிலான காவிய அமைப்பில் இப்போக்கு மிகச்சில இடங்களில், அதுவும் சிறிய அளவிலான விலகல்கள் என்ற அளவிலேயே உள்ளது.

3. மகாபாரதத்தில் பாண்டவர்களின் வனவாசத்தின்போது மார்க்கண்டேய ரிஷி அவர்களுக்கு ராமாயணக்கதை முழுவதையும் கூறுவதாக வருகிறது (வனபர்வம், 275-289). ராமோபாக்யானம் எனப்படும் இக்காதை பட்டாபிஷேகத்துடன் நிறைவடைகிறது. இதில் உத்தரகாண்டக் கதை நிகழ்ச்சிகள் இல்லை. பற்பல ராஜவம்சங்களைப் பற்றிக் கூறும் மகாபாரதத்தில் லவகுசர்கள் பற்றிய குறிப்பு எங்கும் இல்லை. ஆனால் கிருஷ்ணர், நரநாராயணர்கள் பற்றிய நேரடிக் குறிப்பு உத்தரகாண்டத்தில் (53.20-22) உள்ளது. வேறு எந்தக் காண்டத்திலும் கூறப்படாத கோவிந்த, ஹரி, மாதவ, வாசுதேவ ஆகிய விஷ்ணு நாமங்கள் வருகின்றன. எனவே, உத்தரகாண்டப் பகுதி காலத்தால் மகாபாரத்திற்கும் பிற்பட்டது என்பது புலனாகிறது.

4. ராமாயண காலம் திரேதாயுகம் என பாரம்பரியமாக அறியப்படுகிறது. மற்ற காண்டங்களில் அதற்கு முந்தைய கிருதயுகம் மட்டுமே குறிப்பிட்டப் பட்டுள்ளது. ஆனால் உத்தரகாண்டத்தில் துவாபர, கலி யுகங்கள் பற்றியும் குறிப்பு உள்ளது (சர்க்கம் 74).

5. ராமாயணத்தின் மற்ற காண்டங்களில் வேத வேள்விகளையும், நதிகள் முதலான இயற்கை அம்சங்களையும் வணங்குதலையும் தவிர்த்து வேறுவகையான வழிபாடுகள் கூறப்படவில்லை. ஆனால் உத்தரகாண்டம் சிவலிங்க பூஜை (31.43), விஷ்ணு உருவத்தை பூஜித்தல் (109.31) ஆகியவற்றைக் கூறுகிறது. ராவணன் பிரம்மனிடம் வரம் பெற்றதாகவே முந்தைய காண்டங்களில் உள்ளது. சிவபக்தன் என்பது உத்தர காண்டத்தில் மட்டுமே உள்ளது. இவையும் பிற்காலத் தன்மைக்கு சான்றுகள்.

6. வால்மீகி ராமாயணம் என்ற கச்சிதமான ஒழுங்குடைய காவியப் பிரதியில் வேறெங்கும் கதை முரண்கள் இல்லை. ஆனால் உத்தரகாண்டத்தில் மீண்டும் கூறப்படும் சில சம்பவங்கள் முன்பு கூறப்பட்டதற்கு முரணாக உள்ளன. சில உதாரணங்கள்: பிரபலமாக அறியப்பட்டுள்ள கும்பகர்ணன் வாய்குழறி தூக்கத்திற்கான வரம் கேட்டான் என்ற கதை உத்தரகாண்டத்தில்தான் (10.45) உள்ளது. மாறாக, யுத்தகாண்டத்தில் (6.61), கும்பகர்ணன் பிறந்தவுடனேயே பிரம்மா அவனைத் தூங்குமாறு செய்துவிட்டார் என்றே உள்ளது. ஹனுமானைப் பற்றி உத்தரகாண்டத்தில் உள்ள கதை (சர்க்கம் 36), முன்பு கூறப்பட்டதற்கு (கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் 66) முரணாக உள்ளது. ராவணன் அவளது சம்மதமின்றி ஒரு பெண்ணைத் தீண்ட முயன்றால் அவன் இறப்பான் என்ற சாபம், அவன் புஞ்ஜிகஸ்தலா என்பவளை வன்புணர முயற்சித்தபோது பிரம்மாவால் இடப்பட்டது என்று யுத்தகாண்டத்தில் (சர்க்கம் 13) கூறப்பட்டற்கு மாறாக, ரம்பையை அவ்வாறு செய்ய முற்படுகையில் குபேரன் மகன் நளகூபரன் அவ்வாறு சாபமிட்டதாக உத்தரகாண்டம் (சர்க்கம் 26) கூறுகிறது. இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் வால்மீகி எழுதியிருக்க முடியும். இது எல்லாவற்றையும்விட, மற்ற காண்டங்களில் சிறப்பித்துக் கூறப்பட்ட ஏகபத்தினி விரதத்திற்கு முரணாக, ராமர் சீதை தவிர்த்து மற்ற பெண்களையும் மணந்து கொண்டதாக உத்தரகாண்டம் (42.22) கூறுகிறது.

6. அக்னி பிரவேசத்தின்போது தேவர்களாலும் ரிஷிகளாலும் சுவர்க்கத்திலிருந்து யுத்தகளத்தில் வானில் வந்து தோன்றிய தசரதராலும் தூயவள் என்று போற்றி ஆசிர்வதிக்கப்பட்ட சீதையைத்தான் ஏற்று ராமர் அயோத்திக்கு அழைத்து வருகிறார். ஆனால் குடிமக்களின் பழிதூற்றலைக் கேட்டு, அத்தகைய சீதையைத் துறந்து அவளை ராமர் வனத்திற்கு அனுப்பினார் என்ற கதைக் குறிப்பு, வால்மீகி ராமாயணத்தின் காவிய ஒருமையையும், ராமரின் பாத்திரப் பாங்கையுமே முற்றிலும் சிதைத்து விடுகிறது. முந்தைய ஆறு காண்டங்களில் அதை அபாரமாக வளர்த்தெடுத்து வந்த கவி-ரிஷியாகிய காவியகர்த்தா, ஏழாவது காண்டத்தில் அதை முற்றிலும் நாசமாக்கினார் என்பது போல இது உள்ளது. அந்த விவரணத்திற்குள்ளேயே பல உள்முரண்களும் குழப்பங்களும் உள்ளன.

அ) அபகீர்த்திக்குப் பயந்து சீதையைத் துறக்கிறேன் என்று ராமர் முதலில் கூறுவதாகவும், ஆனால், பின்பு கருவுற்றிருந்த அன்பு மனைவியாகிய சீதையைக் கானகத்திற்கு அனுப்பியதே பெரிய அபகீர்த்தி (52.15) என்றும் இருவேறு இடங்களில் உத்தரகாண்டம் கூறுகிறது. பின்பு சீதையைத் துறப்பதற்கான முகாந்திரம்தான் என்ன?

ஆ) லவகுசர்களை சீதையின் மறைவுக்குப் பின் ராமர் இளவரசர்களாக ஏற்கிறார். பழிதூற்றப்பட்ட அரசிக்குப் பிறந்த குழந்தைகளை அரசன் ஏற்பது சாஸ்திர சம்மதம் என்றால், அக்குழந்தைகள் பிறந்தபோதே செய்தியறிந்து அரசனாகிய ராமர் அவர்களை ஏற்றுக்கொண்டு வளர்த்திருக்கலாம். பன்னிரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டிய தேவையில்லை.

இ) லவகுசர்கள் கானகத்தில் வளர்கையில் ராமர் அவர்களது தந்தை என்பதை சீதை அவர்களுக்குக் கூறவில்லையா? கூறினாள் எனில், அவர்கள் எப்படி எந்தவிதமான கேள்விகளும் எதிர்வினைகளுமின்றி ராமாயணம் முழுவதையும் வால்மீகியிடமிருந்து கற்றார்கள்? இதுபற்றிய எந்தக் குறிப்பும் உத்தரகாண்டத்தில் இல்லை.

ஈ) தனது அபகீர்த்திக்கும் (அதனால் விளையும் நரக பிராப்திக்கும்) அஞ்சி ராமர் சீதையைத் துறந்தார் என்றால், சீதைக்கு அடைக்கலம் அளித்த வால்மீகிக்கு அந்தக் குற்றங்களும் பாவங்களும் நேராதா என்ற கேள்வி எழுகிறது.

உ) உத்தரகாண்டத்தில் இறுதியில், “துர்வாச மகரிஷியின் சாபத்தினால் ராமர் சீதையும், தனது சகோதரர்களையும் தானே தண்டனையளித்து துறக்கும் நிலை உருவாகும் என்று முன்பே கூறப்பட்டுள்ளது” என்று சுமந்திரர் லக்ஷ்மணனிடம் கூறுவதாக வருகிறது. ஆனால், சீதைக்கும் லக்ஷ்மணனுக்கும் மட்டுமே இக்கதி நேர்கிறது. பரதனையும் சத்ருக்கனையும் ராமர் இவ்வாறு செய்வதில்லை. ஏன் ரிஷியின் சாபத்திற்கான பாதிப்பலன் மட்டுமே உண்டாயிற்று என்ற கேள்வி எழுகிறது.

ஊ) தன்னை நம்பி வந்தவர்களிடமும், சரணமடைந்தவர்களிடமும் குற்றங்கள் இருந்தாலும் அவர்களை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்று விபீஷணன் அடைக்கலம் கேட்டும் வரும் தருணத்தில் ராமர் கூறுவதாக வால்மீகி கம்பீரமான மொழியில் பதிவு செய்கிறார் (யுத்த காண்டம்18.3,29,32,35):

ஸக்ருʼதே³வ ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே |
அப⁴யம்ʼ ஸர்வபூ⁴தேப்⁴யோ த³தா³ம்யேதத்³ வ்ரதம்ʼ மம ||

“ஒரே ஒரு முறை, ‘நான் உன்னைச் சேர்ந்தவன்’ என்று கூறிக்கொண்டு என்னிடம் வந்து அடைக்கலம் புகுவோர் யாராயினும், அவர்களுக்கு உலகத்தின் அனைத்து உயிர்களிடமிருந்தும் எந்த அச்சமும் நேராதபடி அபயம் அளிக்கிறேன். இதுவே எனது விரதம்.”

இத்தகைய ராமர், தன்னை நம்பிவந்த சீதையைப் பின்பு ஊரார் பழிக்காகத் துறப்பதாக உள்ள சித்தரிப்பு சிறிதும் பொருத்தமற்றதாக உள்ளது.

எ) “அந்த சீதைக்காக ராமர் உலகத்தையே தலைகீழாகச் செய்துவிடுவேன் என்கிறார் என்றால், அது சரியாகவே இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். மூவுலகிற்கும் அதிபதியாவது என்பதுகூட சீதையின் பேரொளியின் ஒரு கீற்றுக்கும் ஈடாகாது” என்று ஹனுமான் கூறுகிறார் (கிஷ்கிந்தா காண்டம் 15.50). இது சுந்தரகாண்டத்தில் அசோகவனத்தில் சீதையின் தரிசனத்தைப் பெறுவதற்கு முந்தைய ஹனுமானின் கூற்று. இக்கூற்றின்வழி ராமரின் இதயத்தைப் பேசுபவர் வால்மீகியேதான். அத்தகைய ராமரின் சித்திரத்தை பின்பு வால்மீகி மாற்ற வேண்டியதற்கான அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

7. உத்தர காண்டத்தில் வரும் சம்புகன் வதம் வால்மீகி ராமாயணத்திலேயே அதற்கு முன்பு கூறப்பட்டதற்கு முற்றிலும் முரணாக உள்ளது. தசரதரால் இருட்டில் யானை என்று கருதி அம்பெய்து கொல்லப்படும் முனிகுமாரனான சிரவணனின் கதையை நாம் நன்கு அறிவோம். இறக்கும் தருவாயிலும் தசரதரைத் தன் வயதான, கண்தெரியாத பெற்றோரிடம் செல்லக் கோரும் அவன், “தான் வைசிய தந்தையாருக்கும், சூத்திர தாயாருக்கும் பிறந்தவன்” என்று கூறுகிறான் (அயோத்தியா காண்டம், 63.50). அவன் “தவத்திலும் சாஸ்திரங்களைக் கற்பதிலும் ஈடுபட்டிருப்பவன்” (63.25, 64.33) என்ற குறிப்பும் உள்ளது. அந்தப் பெற்றோர்கள் தாங்கள் உயிர்துறக்கும் முன்பு இடும் கடும் சாபத்தினால்தான் பின்பு புத்திரசோகத்தால் தசரதரே இறக்க நேரிடுகிறது எனில் அவர்களது தவத்தின் வலிமை எந்த அளவிற்கு இருந்து என்பதைப் புரிந்துகொள்ளலாம். பின்பு, கானகத்தில் வனவாசிகளான சபரர்களின் குலத்தைச் சேர்ந்த சபரி என்ற மூதாட்டியை ராமர் சந்திக்கிறார். அவளது தவத்தின் மேன்மையைப் புகழ்கிறார். அவளது தவ வலிமையால் அவள் மேன்மையான உலகங்களை அடைந்தாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது (கிஷ்கிந்தா காண்டம், 3.74). ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, உத்தரகாண்டம் சூத்திரன் தவம் செய்ய அருகதையற்றதால் அவன் தண்டிக்கப் படவேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறது. இது பிற்சேர்க்கையன்றி வேறென்ன?

(நன்றி: இப்பகுதியில் உள்ள சில குறிப்புகளும் ஆதாரங்களும் Ramayana of Valmiki (Vol 1-7), translation by Dr. R Rangan, WEBOLIM India publication நூலிலிருந்து எடுக்கப்பட்டவை) 

பிற்சேர்க்கையும் பரவலும்: 

மகாபாரதத்தில் உத்தரகாண்டக் கதைக் குறிப்புகள் எதுவும் இல்லை என்பதை முன்பே பார்த்தோம். புராணங்களில் ஸ்ரீமத்பாகவம் (9.11.10-11) ராமாவதாரம் பற்றிய பகுதியில் சீதையை வனத்திற்கு அனுப்பியதையும் லவகுசர்கள் பிறப்பையும் இரண்டு சுலோகங்களில் சுருக்கமாகக் கூறுகிறது. பத்மபுராணத்தில் (5.56.61-64) ஊரார் பழிப்பேச்சைக் கேட்டு, பரதனிடம் ஆலோசித்து, கானகத்தில் விட்டுவர பரதனை அனுப்புவதாக உள்ளது. வேறுசில புராணங்களிலும் இருக்கலாம். எப்படியாயினும் இப்புராணங்கள் குப்தர் காலத்தியவை (பொ.பி. 3 முதல் 5ம் நூற்றாண்டு) அல்லது அதற்குப் பிற்பட்டவை என்பதே வரலாற்றாசிரியர்களின் கருத்து.

எனவே, மகாபாரதம் அதன் முழுவடிவில் தொகுக்கப்பட்டதற்குப் பின்பும், மேற்கண்ட புராணங்கள் இயற்றப்படுவதற்கு முன்பும் ஆன இடைப்பட்ட காலத்தில் இந்தப் பிற்சேர்க்கை நிகழ்ந்திருக்கிறது என்று கருத இடமிருக்கிறது. சம்ஸ்கிருத மொழியில் அதற்குப் பின்வந்த ராமாயணக் காவியங்கள் பலவற்றில் உத்தரகாண்டம் இடம்பெறுகிறது. காளிதாசரின் ரகுவம்சத்திலும் (14,15ம் சர்க்கங்கள்) பவபூதி இயற்றிய உத்தர ராம சரிதம் என்ற அற்புதமான காவிய நாடகத்திலும், அபாரமான கவித்துவத்துடன் உத்தரகாண்டக் கதை கூறப்படுகிறது. குறிப்பாக, கருணை, சோகம் ஆகிய ரசங்களை வெளிப்படுத்துவதில் பவபூதியின் காவியம் நிகரற்றதாக மதிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் நாம் பரவலாக அறிந்துள்ள கம்பராமாயணம் யுத்தகாண்டத்துடன், ஸ்ரீராம பட்டாபிஷேகத்துடன் முடிவடைகிறது. கம்பர் காலத்தில் (பொ.பி. 11ம் நூற்) உத்தரகாண்டம் ராமாயணத்தின் ஒரு பகுதியாக பெருமளவு நிலைபெற்றுவிட்டபோதும் அவர் அதனை எழுதாது விடுத்தார். ராமாயணத்தின் காவிய அமைதியைக் குலைப்பதாக அது உள்ளது என்று அவர் கருதியதே காரணம் என்று தோன்றுகிறது. ஒட்டக்கூத்தர் எழுதியதாக உத்தர ராமாயணம் என்ற நூல் வழங்கப்படுகிறது. (உண்மையான ஆசிரியர் வாணியந்தாதன் என்போரும் உளர்.) இது பரவலாகப் பயிலப்படுவதில்லை.

துளசிதாசர் (16ம் நூற்.) ஹிந்தி மொழியில் எழுதிய ஸ்ரீராமசரிதமானஸ் காவியத்தில் உத்தரகாண்டம் என்ற பகுதி உள்ளது. ஆனால், அதில் சீதையைத் துறந்தது, யாகம் செய்தது, சம்புகன் வதம் ஆகிய கதைகள் இல்லை. தர்மம், ஞானம், பக்தி, வைராக்கியம் குறித்த ஞான உபதேசங்களே பெருமளவு உள்ளன.

பக்தி இலக்கியங்களிலும், ராமரைக் குறித்த துதிப்பாடல்களிலும் மீண்டும் மீண்டும் முதல் ஆறு காண்டங்களில் உள்ள விஷயங்களேதான் வருகின்றன. உத்தரகாண்ட செய்திகள் அனேகமாக இல்லை, அல்லது மிகமிகக் குறைவாகவே உள்ளன. ‘சீதையை தாட்சண்யமின்றி கானகத்திற்கு அனுப்பியவனே’ என்று பாடுமளவுக்கு எந்த ராம பக்தனுக்காவது கல்நெஞ்சம் இருக்குமா என்ன? உதாரணமாக, ஒட்டுமொத்த நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் 3-4 வரிகளில் மட்டுமே இக்குறிப்புகள் உண்டு (“செறிதவச் சம்புகன் தன்னைச் சென்றுகொன்று செழுமறையோன் உயிர்மீட்டு…” “மிதிலைச் செல்வி உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள் செம்பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்” – குலசேகராழ்வார்). தியாகராஜ கீர்த்தனைகளில் ஒன்றிரண்டு இடங்களில் ‘குசலவ ஜனகா’ போன்ற வரிகள் உண்டு. ராமபக்தர்கள் உணர்வுபூர்வமாக உத்தரகாண்டத்தை என்றுமே ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே உண்மை.

எனில், ஆதியில் இந்தப் பிற்சேர்க்கைக்கான பின்னணி என்னவாக இருந்திருக்கக்கூடும்?

முதன்மையாக, ராமாயணத்தை ஒட்டுமொத்த குல/வம்ச வரலாறுகளில் பொருத்தவேண்டிய தேவை. ஏனெனில், இந்தியாவின் பண்டைய மன்னர்கள் அனைவரும் (இதில் சேர சோழ பாண்டியர்களும் அடக்கம்) தங்களது குலமுறையை சூரிய / சந்திர வம்சங்களுடன் ஏதோ ஒரு வகையில் பொருத்திக் கொண்டனர். இது அவர்களுக்கு ஒரு மகத்தான பாரம்பரியப் பெருமையையும் தார்மீக உரிமையையும் அளித்தது. மகாபாரதத்திலும் புராணங்களிலும் நாம் பல இடங்களில் நீண்ட வம்சப் பட்டியல்களைக் காண்பது இதனால்தான். ஆதிகாவியமான வால்மீகி ராமாயணம், சூரிய வம்சத்தையும், சகரன், இக்ஷ்வாகு, திலீபன், ரகு போன்ற ராமரின் குலமுன்னோர்களையும் கூறுகிறதென்றாலும் அது அடிப்படையில் வம்சகாதைப் பாடல் அல்ல. மாறாக தர்மத்தின் திருவுருவமான ராமனின் சரித்திரத்தையும் அறத்தின் பாதையையும் கூறுவதே அதன் மையநோக்கம். அதனால் அது பட்டாபிஷேகத்துடன் நிறைவடைந்துவிட்டது. பிறகு, அதற்கு ஒரு வம்சகதைத் தொடர்ச்சி அளிப்பதற்காக உத்தரகாண்டம் சில நூற்றாண்டுகள் கழித்து வலிந்து இணைக்கப்பட்டது என்று தோன்றுகிறது.

லவனது வழியில் ஓரிரு தலைமுறைகளும் குசனது வழியில் அக்னிவர்ணன் ஈறாக நீண்ட ஒரு வரிசையையும் காளிதாசரின் ரகுவம்சம் கூறுகிறது. ஒரு காவிய அவலத்தைக் கொண்டு வருவதற்காக, அக்னிவர்ணனை காமத்திலும் குடியிலும் மூழ்கி அந்த ஒளிமிகுந்த பரம்பரைக்கே களங்கமாக வந்து சேர்ந்தவனாக கவி சித்தரிக்கிறார். ஆனால், இறுதியாக, பூமிக்குள்ளிருக்கும் விதைபோல அவன் மனைவியின் கருவில் சிசு வளர்ந்து வந்தது என்று காவியத்தை நிறைவு செய்கிறார்!

சத்ருக்னன் மதுரா நகரத்தை நிறுவிய காதை, கோசல நாட்டிலிருந்து மேற்கு நோக்கி இக்ஷ்வாகு வம்சத்தினர் விரிவடைந்ததைக் குறிக்கலாம். “குசனுடைய அழகிய தலைநகரம் விந்திய மலைச்சாரலில் குசாவதீ என்றும், லவனுடைய நகரம் ஸ்ராவஸ்தீ எனவும் புகழ்படைத்ததாயிற்று (உத்தரகாண்டம் 108.4,5) என்பதை வரலாற்று ரீதியாக இந்த நகரங்களில் புதிய அரசுகளும் ராஜவம்சங்களும் உருவாகி வளர்ந்ததுடன் தொடர்புப்படுத்தலாம். பேதி (Bedi), சோந்தி (Sondhi) ஆகிய பஞ்சாபி சமூகத்தினரும், அதனைச் சார்ந்த குருகோவிந்த சிங் அவர்களும் தன்னை ராமருடைய பரம்பரையில் வந்தவர்களாகப் பிரகடனம் செய்கின்றனர். லவன் உருவாக்கிய லவபுரி என்ற நகரமே பின்பு லாகூர் ஆயிற்று என்றும் ஒரு கருத்து உள்ளது. உத்தரகாண்டம் தென்னிந்தியாவைவிட வடஇந்தியாவிலேயே மிகவும் பிரபலமாக இருப்பதற்கு இத்தகைய கூறுகளே காரணமாகலாம்.

சரி, வம்சத் தொடர்ச்சியே உந்துதல் என்றால் லவகுசர்கள் இளவரசர்களாக அரண்மனையில் பிறந்து வளர்ந்ததாக சித்தரித்திருக்கலாம்; சீதையைக் கானகத்திற்கு அனுப்புதல் என்ற சோகமான பிரசங்கத்தை இணைப்பதற்கான தேவை என்ன என்று கேட்கலாம். அது பல்வேறு விதமான ஊகங்களுக்கு இட்டுச்செல்லும். கல்நெஞ்சத்துடன் கூட பிரஜைகளின் கருத்துக்கு மதிப்பளிக்கும் ‘மரியாதா புருஷோத்தமன்’ என்ற ஒரு அரசனின் ஆதர்சத்தை நிலைநிறுத்துவது ஒரு காரணமாக இருக்கலாம். இலக்கிய நோக்கில் பார்த்தால், மங்கலமாக முடியும் காதையை அதிலிருந்து திசைதிருப்பி கிரேக்கத் துன்பியல் நாடகங்களின் பாணியில், சோகத்தையும் சிதைவையும் குலைவையும் நோக்கி இட்டுச் சென்று முடிக்கும் வகையில் இந்தப் பிற்சேர்க்கை நிகழ்ந்திருக்கலாம். மனித மனத்தின் போக்குகள் விசித்திரமானவை.

‘உத்தர’ என்ற சொல்லுக்கு விடை என்றும் ஒரு பொருள் உண்டு. பிற்சேர்க்கைக்கான மற்றொரு உந்துதல் என்ன என்பதை நேரடியாகவே இப்பொருளிலிருந்து ஊகிக்கலாம். ஆதிகவியின் மனத்திலிருந்து இயல்பாகப் பொங்கிப் பெருகிய ராமகாதையை அவர் அவ்வாறே சுலோகங்களாக வடித்தார். ஆனால் பின்னால் அதை வாசித்தவர்களுக்கு பல இடங்களில் கேள்விகள் எழுகின்றன. உத்தரகாண்டம் இவற்றுக்கெல்லாம் திட்டமிட்டு விடையளிப்பது போல இருக்கிறது. சில உதாரணங்கள்: அ) கிஷ்கிந்தா காண்ட முடிவில், கடலைத் தாண்டுவது பற்றி வானரர்கள் யோசித்துக் கொண்டிருக்கையில், ஜாம்பவான் நினைவுறுத்திய பின்பே ஹனுமானுக்குத் தன் மாபெரும் பலம் பற்றிய உணர்வு ஏற்படுகிறது. அந்த வர்ணனை மிக இயல்பானது. சக்திமான்களுக்கும் கூட அடுத்தவர் சொல்வதுவரை தன் பலம் தெரிவதில்லை என்ற சமாதானமே போதுமானது. அதெப்படி ஹனுமானுக்கு தன் பலம் முற்றிலுமாக மறந்து போகும் என்ற கேள்வி அங்கு இல்லை. ஆனால் உத்தரகாண்டத்தில், அந்தக் கேள்வியை வலிந்து எடுத்துக்கொண்டு, சிறுவயதில் முனிவர்களின் ஆசிரமங்களில் குறும்புத்தனங்கள் செய்ததால், முனிவர்கள் அவ்வாறு சாபமிட்டனர் என்ற விளக்கம் தரப்படுகிறது. ஆ) வாலி, ராவணனைத் தோற்கடித்து தன் வாலில் கட்டுமளவுக்கு வீரனாக இருந்தான் என்ற கதை வாலிவதத்திற்கு முன்பும் பின்பும் எங்குமில்லை. அது உத்தரகாண்டத்தில் வருகிறது. ராவணன் அதுவரை யாராலும் தோற்கடிக்கப் படவில்லை என்பது உண்மையல்ல என்று நிறுவுவதற்காகவே இது இணைக்கப்பட்டிருக்கலாம் இ) ராவண வதத்திற்கும் பட்டாபிஷேகத்திற்கும் பிறகு உத்தரகாண்டம் ராவணனின் பூர்வகதையை, குடும்ப வரலாற்றை, வெற்றிகளை, அவன் அடைந்த சாபங்களை மிக விரிவாகக் கூறவேண்டியதற்கான அவசியம் என்ன? அது தொடர்பாக முந்தைய காண்டங்களில் எழும் கேள்விகளுக்கு (எ.கா: சூர்ப்பணகை எங்கிருந்து வந்தாள் பிறகு எங்கே போனாள்?) விடைசொல்வதற்காகத்தான். எனவே, வால்மீகி ராமாயணம் அதன் முழுவடிவை அடைந்து பரவலானதுமே அதன் முதல்கட்ட வாசகர்களால் இதில் ஏதோ சொல்லாமல் விடுபட்டிருக்கலாம், தர்க்கபூர்வமாக இந்தக் காவியம் கச்சிதமாக இல்லை ஆகிய எண்ணங்களால் உந்தப்பட்டு ‘விடைகூறும் தன்மை’யுடன் பிற்சேர்க்கையாக இந்தக் காண்டம் இணைக்கப்பட்டது என்று கருத இடமிருக்கிறது.

ராமாயணம் என்ற வற்றாத ஜீவநதி நமது பண்பாட்டின். அறவாழ்வின், கலாசாரத்தின், தேசியத்தின் இடையறாத பிரவாகமாக என்றென்றும் ஓடிக் கொண்டிருக்கிறது. காலம்காலமாக எத்தனையோ கிளைகளும் சிற்றாறுகளும் அதில் கலந்தும் பிரிந்தும் தடம் மாறியும் இந்த மண்ணையும் அதன் மைந்தர்களையும் வளப்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே உத்தர காண்டத்தையும் கண்டு அதனைச் சமநிலையுடன் ஒரு வழியில் புரிந்துகொள்ளும் முயற்சியே இக்கட்டுரை.

உதவிய நூல்கள்: 

[1] வால்மீகி ராமாயணம் உத்தரகாண்டம்: https://sanskritdocuments.org/mirrors/ramayana/valmiki/uttarakand_1.htm

[2] ரகுவம்ச மஹாகாவ்யம் (வே.ஸ்ரீ வேங்கடராகவாசார்யார் தமிழ் உரை)

[3] ஸ்ரீமத்வால்மீகி ராமாயண ஸாரம் – ஸ்ரீ அண்ணா, ராமகிருஷ்ண மடம்

Posted on 2 Comments

பரமார்த்த குருவும் பஞ்சதசீயும் | அரவிந்தன் நீலகண்டன்


பரமார்த்த குருவும் அவருடைய சீடர்களும் ஆற்றைக் கடந்தார்கள். பிறகு அவர்களில் எவரையாவது ஆறு விழுங்கி விட்டதா இல்லையா எனத் தெரிந்துகொள்ள அவர்கள் தங்களைத் தாங்களே எண்ணிக்கொண்டார்கள். அப்படி எண்ணும்போது எண்ணுகிறவர் அவரை விட்டுவிட்டு எண்ணியதால் ஒரு ஆள் குறைந்துகொண்டே இருந்தார். அவர்கள் எல்லோரும் ஆறு ஒரு ஆளை விழுங்கிவிட்டதே என்று அழுது புலம்பினார்கள். அப்போது அந்த வழியாக வந்த வழிப்போக்கன் விஷயத்தைக் கேட்டு, ‘எனக்கு யட்சிணி வித்தை தெரியும். செத்துப் போனவனைக் கொண்டு வருகிறேன். ஆனால் அதற்கு நான் மந்திரப் பிரம்பால் உங்கள் ஒவ்வொருவரையும் அடிப்பேன். அப்போது நீங்கள் உங்கள் பெயரைச் சொல்லி ஒன்று இரண்டு என்று சப்தமாக எண்ணிக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிக் காசு வாங்கிவிட்டு அவர்கள் ஒவ்வொருவரையும் அடித்தான். அவர்கள் அனைவரும் அடி வாங்கிக்கொண்டு இருப்பதைக் கண்டு மகிழ்ந்து அந்த வழிபோக்கனை கௌரவித்தார்கள்.

இது, கான்ஸ்டண்டைன் பெஸ்கி என்கிற கத்தோலிக்க மதமாற்றி எழுதிய ‘பரமார்த்த குருவும் சீடர்களும்’ கதையில் வருவது. சைவ ஆதீனங்களைக் கிண்டல் செய்வதும் அவர்களை அறிவற்ற மடையர்களாகக் காட்டுவதும் என எழுதப்பட்ட நூல். நாமும் இதை ‘சிறுவர் இலக்கியம்’ என்று பிரபலப்படுத்திக் கொள்கிறோம்.

இதை நம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்போது அவர்கள் மனதில் என்னென்ன பதிவுகள் ஏற்படக் கூடும் எனக் கொஞ்சம் சிந்திப்போம். நம்முடைய ஆச்சாரியர்கள், குருமார்கள் மடையர்கள். ஆறாவது மனிதனை விழுங்குவதாவது, தங்களில் ஒருவனை ஆறு விழுங்கிவிட்டது என்று எண்ணிக்கை கூடத் தெரியாமல் புலம்புகிறார்கள். அந்த வழிப்போக்கனும் இவர்களின் மடத்தனத்தை நன்றாகப் பயன்படுத்தி அவர்களை யட்சணி வித்தை என்று சொல்லி இவர்களிடம் பணம் பிடுங்கியிருக்கிறான். இவர்களும் ஏமாந்திருக்கிறார்கள். சாதாரண மக்களுக்கு இருக்கக் கூடிய மூளை கூட இந்த ‘பரமார்த்த’ குருவுக்கு இல்லை. எதுவானாலும் ஒட்டுமொத்த இந்துக்களும் முட்டாள்களாகவும் ஏமாற்றுக்காரர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இந்த எண்ணங்களை இந்த ‘நகைச்சுவை’ கதை மூலம் நாம் நம் குழந்தைகளுக்கு விதைக்கிறோம்.

பெஸ்கி இத்தாலி நாட்டுக்காரர். இத்தாலியில் இதைப் போல சங்கைக்குரிய போப்பாண்டையைக் கிண்டலடித்து ஒரு சிறுவர் இலக்கியம் எழுதியிருந்தால் அன்னாரின் கதி என்னவாயிருக்கும் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்க்விசிஷன் என்கிற புனித விசாரணையில் அவர் ‘விசாரிக்கப்பட்டிருப்பார்’. ஆனால் இந்துக்கள் இளிச்சவாயர்கள்.

கொஞ்சம் பொறுங்கள். இந்த ’பரமார்த்த குருவும் சீடர்களும்’ கதையில் வரும் இத்தகைய நகைச்சுவை நிகழ்வுகளெல்லாம் ஏற்கெனவே பாரதமெங்கும் கதைகளாக நிலவி வந்தவைதான். இந்துப் பண்பாட்டுச் சூழலில் அவை வெறும் கதைகளாக மட்டுமல்லாமல் அதைத்தாண்டி அவற்றுக்குச் சில பயன்பாடுகள் இருந்தன. இதோ மேலே கூறிய கதையையே எடுத்துக் கொள்வோம்.

இக்கதையை பெஸ்கிக்கு நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ஸ்ரீ பாரதி தீர்த்தரும் ஸ்ரீ வித்யாரண்யரும் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆதி சங்கர பகவத் பாதரால் நிறுவப்பட்ட ஸ்ரீ சாரதா பீட வியாக்கியான சிம்மாசனத்தில் ஜகத் குருக்களாக இருந்த இவர்கள் இருவரும் பூர்வாசிரம சகோதரர்கள். இவர்கள் இணைந்து பல நூல்களை இயற்றியிருக்கிறார்கள். இவர்கள் வாழ்ந்த காலகட்டம் மிகவும் கொந்தளிப்பான காலகட்டம். அன்னிய மத ஆக்கிரமிப்பாளர்களால் தென் பாரதம் சூறையாடப்பட்டு வந்த காலகட்டம். வித்யாரண்யர் சன்னியாசியாக தர்மத்தைக் காக்க ஹக்க புக்கர்களைக் கொண்டு விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர். இன்றைக்கும் தென்னிந்தியாவில் கோவில் கோபுரங்கள் வானளாவ உயர்ந்து நிற்கின்றனவென்றால் அதற்கு காரணம் ஸ்ரீ வித்யாரண்யரின் செயல்முறை அத்வைதத்தின் விளைவுதான் அது.

இவர்கள் இருவரும் இணைந்து இயற்றிய அத்வைத சித்தாந்த நூல் பஞ்சதசீ. பதினைந்து பிரகரணங்களைக் கொண்டது என்பதால் அந்த பெயர். ஸ்ரீ வித்யாரண்யரின் நேரடி சீடர் ஸ்ரீ ராமகிருஷ்ண பண்டிதர். இவர் பஞ்சதசீ நூலுக்கு மிக அழகான விதத்தில் மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும்படியாக வடமொழி வியாக்கியான நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். இந்நூலின் ஏழாவது அத்தியாயத்துக்கு திருப்தி தீபம் என்று பெயர். 298 சுலோகங்கள் கொண்ட இந்த அத்தியாயம்தான் பஞ்சதசீயில் மிகப்பெரிய அத்தியாயம். ஆனால் இவ்வளவு பெரிய பிரகரணம் பிரஹதாரண்ய உபநிடதத்தில் உள்ள ஒரு சுலோகத்துக்கு வியாக்கியானமாக எழுதப்பட்டிருக்கிறது என்பதுதான் விசேஷம் என்கிறார்கள் பெரியவர்கள். இதில்தான் மேலே கூறப்பட்ட கதை சொல்லப்பட்டிருக்கிறது. எப்படி எனப் பார்ப்போம்.

நேரில் தெரியாதது நேரில் தெரிவது என்பதும், அறிவு அறியாமை என்பதும், இவ்விரண்டும் எப்பொழுதும் தெரிந்து கொண்டேயிருக்கிற பதார்த்தத்தில் கூட இருக்கலாம், பத்தாயிருப்பவனில் போல. (22)


பத்தாவது மனிதன், ஒன்பது என்கிற எண்ணிக்கையால் விவேகஞானமிழந்தவனாய் அப்பொழுது அந்த ஒன்பது பேர்களைப் பார்த்துக் கொண்டிருந்த போதிலும் பிராந்தியால் தன்னைப் பத்தாவது பேர்வழியாக நான் இருக்கிறேன் என்று அறிந்து கொள்வதில்லை. (23)


தானே பத்தாவதாக இருக்கையில் ‘பத்தாவது மனிதன் காணவில்லை, அவன் இல்லை’ என்று அப்பொழுது நினைத்துக் கொண்டு சொல்கிறான். அதை அக்ஞானத்தினால் ஏற்பட்ட ஆவரணம் (மறைவு) என்று கருதுகிறார்கள். (24)


பத்தாவது மனிதன் நதியில் இறந்துவிட்டான்’ என்று துக்கப்பட்டு அழுகிறான். அழுவது முதலியதை அக்ஞானத்தினால் ஏற்பட்ட ‘விக்ஷேபம்’ என்று வித்வான்கள் அறிகிறார்கள். (25)


பத்தாமவன் இறக்கவில்லை. இருக்கிறான்’ என்று ஆப்தனுடைய வார்த்தையைக் கேட்டு அப்பொழுது மறைமுகமாய்ப் பத்தாவது மனிதனை அறிகிறான். (26)’நீயேதான் பத்தாவது’ என்று எண்ணிக் காட்டப்பட்டவுடன் நேரிலேயே அறிந்து, ஸந்தோஷத்தையே அடைகிறான். அழுவதில்லை. அழுவதை நிறுத்திவிடுகிறான். (27)


1.அறியாமை, 2. ஆவரணம், 3. விக்ஷேபம், (4. பரோக்ஷ ஞானம், 5. அபரோக்ஷஞானம் என்று) இருவித ஞானங்கள், 6. திருப்தி 7. துக்க நிவிருத்தி ஆகிய இவைகளை சைதன்யமான ஆத்மா விஷயத்திலும் சேர்க்க வேண்டும். (28)


விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்தக் கதை வழக்கில் உள்ள கதை. வித்யாரண்யரும் பாரதி தீர்த்தரும் இதை எப்படிப்பட்ட உயர்ந்த தத்துவத்தை எத்தனை எளிமையாக எவரும் புரியும் வண்ணம் சொல்லப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். இந்தக் கதையைக் குழந்தைகளுக்குச் சொல்வதன் மூலம் அவர்களை மிக உயர்ந்த ஒரு உண்மையை அறியும் பாதையில் செலுத்தக் கூடிய ஒரு முன்னேற்பாடு இந்தப் பண்பாட்டுக்கல்விச் சூழலில் நிலவுகிறது. மீண்டும் அதே அத்யாயத்தில் வித்யாரண்யர் கூறுகிறார்:

’பத்தாவது மனிதன் இருக்கிறான்’ என்ற பரோக்ஷ ஞானம் பிராந்தியில்லாததாகக் காணப்படுகிறது. அதைப் போலவே ‘பிரஹ்மம் இருக்கிறது என்பதும் (பிராந்தியில்லாத பரோக்ஷஞானம்). (இரண்டிடத்திலும்) அறியாமையினால் ஏற்படும் மறைவு ஒரே விதம். (57)

’பத்தாவதாக நீயே இருக்கிறாய்’ என்பதினால் எப்படி (விசேக்ஷத்தை நேரில் கிரகிக்கும் அறிவு ஏற்படுகிறதோ) அப்படியே ‘ஆத்மாவே பிரஹ்மம்’ என்ற வாக்கியத்தின் தாத்பர்யத்தை பாக்கியன்னியில் (எவ்வித ஸந்தேஹத்திற்கும் இடமன்னியில்) தீர விசாரணை செய்த பிற்பாடு (தானே ப்ரஹ்மம் என்ற பிரஹ்ம ஸ்வரூப) விசேஷம் நேரில் கிரஹிக்கப்படுகிறது. (வாக்கியத்தினால் பரோக்ஷ ஞானமும் அதே வாக்கியத்தின் அர்த்தத்தை நன்கு விசாரித்துப் பார்த்தோமானால் விசாரத்துடன் கூடைய அதே வாக்கியத்திலிருந்தே அபரோக்ஷ ஞானம் ஏற்படுகிறது. (58)

’பத்தாவது யார்?’ என்று கேட்டதற்கு ’நீயே தான்’ என்று பதில் வந்தவுடன், தன்னையும் சேர்த்து எண்ணிப் பார்த்துக் கொண்டு தான்தான் பத்தாவது என்று அறிகிறான்’ (59)

’நீதான் பத்தாவது’ என்ற வாக்கியத்தினால் ‘தான் பத்தாவது’ என்று ஏற்படும் இவனுடைய அறிவு அடிபட்டு போவதில்லை. முதலிலோ, நடுவிலிருந்தோ, கடைசியிலிருந்தோ எப்படி எண்ணிய போதிலும் ‘ஒன்பது பேர்தான்’ என்கிற ஸந்தேஹம் (மறுபடியும் ) ஏற்படுவதில்லை. (60)

’ஸத்தாகவேயிருந்தது’ இது முதலான வாக்யத்தினால் பிரஹ்மத்தின் ஸத்த்வம் (இருக்கிற வஸ்து என்ற தன்மையை) பரோக்ஷமாக கிரஹித்துக் கொண்டு, ‘தத் த்வம் அஸி’ (நீ அதுவாய் இருக்கிறாய்) இது முதலான வாக்கியத்திலிருந்து விசேக்ஷமாக (நானே ப்ரஹ்மம் என்று அத்விதீய பரஹ்மஸ்வரூபமான ஆத்மாவை) அறியலாம். (61)

ஆக இந்தக் கதையிலிருந்து வித்யாரண்யர் எங்கே செல்கிறார் என்பதைக் கவனியுங்கள். முட்டாள்கள் என அந்த வழிப்போக்கனை இழிபகடி செய்யவில்லை. மாறாக அவனிடம் இருக்கும் அதே அறியாமையின் மற்றொரு நிலையில்தான் நாம் இருக்கிறோம் என்பதை நமக்குக் காட்டுகிறார். பொதுவாகவே நல்ல நகைச்சுவை என்பதில் ஒரு சுய விமர்சனம் இருக்கும். பிறர் ஏளனம் இருப்பது மோசமான நகைச்சுவை. அது சிரிப்பை ஏற்படுத்தினாலும் இறுதியில் வெறுப்பை விளைவிக்கும். இங்கு ஒரு சாதாரண கதை உலகின் ஒரு மிக பெரிய சத்தியத்தை – தத் த்வம் அஸி – என்கிற பேருண்மையைச் சுட்டப் பயன்படுகிறது.

கான்ஸ்டண்டைன் பெஸ்கிக்கு இந்த ’ஆறு விழுங்கிய பத்தாவது ஆள்’ கதை ’கோதம் நகரின் அறிவாளி மக்கள்’ என்கிற பிரபல ஐரோப்பிய நூலில் இருந்து கிடைத்திருக்கலாம். கோதம் என்கிற நகரின் வழியே அரசன் சாலை அமைக்கத் திட்டமிட்டான். அதற்கு வரி கட்ட வேண்டி வரும் என்பதுடன் அதைப் பராமரிக்கும் செலவு தங்களுக்கு ஏற்படும் என்பதால் அப்படி ஒரு சாலை அமைவதைத் தடுக்க அந்த நகர மக்கள் தாங்கள் பெரும் பைத்தியக்காரக் கூட்டம் என்பது போல் காட்டிக்கொண்டார்களாம். அக்காலத்தில் பைத்தியம் என்பது தொத்து என்கிற அச்சம் இருந்ததால் சாலை அமைக்கும் திட்டமே இதனால் கைவிடப்பட்டதாம். உண்மையோ பொய்யோ இந்த நகர மக்கள் வேடிக்கை விநோதமாக நடந்தார்கள் என்பது ஒரு நூலாக மாறியது ஆண்ட்ரூ போர்ட் (1490-1549) என்கிற யாத்திரீகரால் எனக் கருதுகிறார்கள். இந்தக் கதையில் இதே போலப் பிரம்படிபடும் கதை வருகிறது. ஆனால் அதில் பிஷப் எவரும் பகடி செய்யப்படவில்லை. பரமார்த்த குருவின் கதைகளை ஆங்கிலத்தில் 1822ல் மொழி பெயர்ப்பு செய்த பெஞ்சமின் பாபிங்க்டன் இக்கதை இந்துச் சாமியார்களைப் பகடி செய்ய எழுதப்பட்டது என்கிறார். தோமா வழி கிறிஸ்தவமே இந்து மதம் என்பது போன்ற பரப்புரைகளைச் செய்யும் ஜான் சாமுவேல் இயக்குநராக இருக்கும் ‘ஆசிய ஆராய்ச்சி மையம்’ (Institute of Asian Studies) வெளியிட்ட நூலில் இன்னும் ஒரு படி மேலே சென்று பரமார்த்த குரு கதை பகடியாக இருந்தாலும் கூட அது ‘கல்விச் செயல்பாடுகள் பரமார்த்த குரு போன்றவர்களால் கூடக் கையாளப்படும் விதமாக இருந்தது என்கிற அடிப்படை உண்மையைக் காட்டுகிறது’ (1998) என்று நகைச்சுவைப் பகடிக்குள்ளிருக்கும் விஷச்சுவை வெளியே வருகிறது.

தன்னை எண்ணாமல் ஆற்றில் மூழ்கி விட்டதாக அழும் கதை வித்யாரண்யரால் பயன்படுத்தப்பட்டிருப்பது இங்கு மற்றொரு விதத்தில் முக்கியத்துவம் அடைகிறது. ஏனெனில் இதுவே முதன் முறையாக அந்தக் கதை இலக்கியத்தில் பதியப்படுவதாகத் தெரிகிறது. வித்யாரண்யரின் அருளாசியால் உருவாக்கப்பட்ட விஜயநகர சாம்ராஜ்ஜியத்துடன் ஐரோப்பியம் வர்த்தக உறவு வைத்திருந்ததை அறிவோம். இந்த உறவின் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டவற்றுள் இது போன்ற வழக்கு கதைகளும் ஐரோப்பா சென்றிருக்கின்றன. ஆனால் அவற்றின் பயன்பாடு நகைச்சுவையையும் பகடியையும் தாண்டவில்லை, அவை மீண்டும் இந்துஸ்தானத்துக்கு வந்திறங்கியபோதோ அவை இந்து மதக் குருமார்களையே பகடி செய்யவும் இந்து சமுதாயத்தையும் வரலாற்றையும் கீழ்மைப்படுத்தவுமான ஒரு கதையாடலுக்கு விதையாக மாற்றப்பட்டுள்ளன.

இந்தக் கதையை நம் குழந்தைக்கு வித்யாரண்யரின் பார்வையில் சொல்லிக் கொடுத்தால் அந்தக் கதையும் குழந்தையின் தேடலுடன் மலரும், வளரும். அதே நேரத்தில் ‘பரமார்த்த குரு’ கதை மூலம் அதே கதையை நம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தால் இந்தக் கதையின் ஆழமும் பண்பாட்டுப் பயன்பாடும் இல்லாமல் போய்விடும். சுய பண்பாட்டு வெறுப்பை மட்டுமே அந்தக் கதை கொடுக்கும். கான்ஸ்டண்டைன் பெஸ்கியின் இறுதி நோக்கமும் அதுதான். இந்துக்கள் தம் பண்பாட்டை, தம் சமயக்குரவர்களை இழிவாக நோக்க வேண்டும். இந்தக் கதைகள் அதற்கான மனமண்டலங்களைத் தொடர்ந்து உருவாக்குகின்றன. இத்தகைய சூழலில் வளரும் குழந்தை ஒரு இலக்கியவாதியாக மாறும்போது அது சித்தரிக்கும் பாரம்பரிய மடங்கள் மடையர்களால் ஆனதாக இருக்கும். நம் பண்பாட்டின் மகோன்னதங்களைக் கூட மார்க்சிய காலனியப் பார்வையில் உள்வாங்கி அது இலக்கியப் பிரதியாக வெளிப்படும்போது நம் ஆழ்வார்கள், நாயன்மார்கள், பாரம்பரிய மடங்கள் ஏளன நகைச்சுவையுடன் வெளிப்படும். அசட்டு ஆழ்வார்கள், ஏமாற்றுக்கார போஜனப் பிரிய பிராம்மண அதிகார வெறியர்கள் எனக் கதை மாந்தர்கள் உருவாக்கப்படுவார்கள். வரலாறே இப்படித்தான் இருந்ததென நம்மை அறியாமலே நாம் நம்ப ஆரம்பிப்போம்.
பொய்மையின் வெறுப்பின் ஊற்றுக்கண் விதைகள் நம் காலனிய வரலாற்றின்போது ரொம்பவே நம்மிடம் ஆழமாக விதைக்கப்பட்டிருக்கின்றன.

நாம் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும் போதும் ஜாக்கிரதையாகவே அவற்றை எடுத்து வைக்க வேண்டியுள்ளது.

பஞ்சதசீ – ஸ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகள் எழுதிய தமிழ் உரையுடன். வெளியீடு: ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ரப்ரதிஷ்டா டிரஸ்ட், 2010  (சென்னையில் கிடைக்குமிடம்: Sri Vidyatheertha Foundation, GB, Sai Karuna Apartments, 49, Five Furlong Road, Guindy, Chennai – 600032 Phone: 097899 99160)