Posted on Leave a comment

வலம் டிசம்பர் 2019 – முழுமையான இதழ்

வலம் டிசம்பர் 2019 இதழை வாசிக்க:

அயோத்தி தீர்ப்பு – உண்மை மதச்சார்பின்மையின் வெற்றி | அரவிந்தன் நீலகண்டன்

பராசரன் என்ற இராமப்பிரியன் | சுஜாதா தேசிகன்

திருக்குறள் மதச்சார்பற்றதா? | ஆமருவி தேவநாதன்


ஹிந்து – முஸ்லிம் பிரச்சினை (1924) | லாலா லஜ்பத் ராய் | தமிழில்: சுப்ரமணியன் கிருஷ்ணன்

விடுதலைக்கு முந்தைய சமய இதழ்கள் | அரவிந்த் சுவாமிநாதன்

மகாத்மா காந்தி கொலை வழக்கு – சாவர்க்கரின் வாக்குமூலம் – பகுதி 8 (நிறைவுப் பகுதி) | தமிழில்: ஜனனி ரமேஷ்

மஹாராஷ்ட்ரா, ஹரியானா – 2019 -சட்டசபைத் தேர்தல் முடிவுகள் – ஒரு பார்வை | லக்ஷ்மணப் பெருமாள்

சில பயணங்கள் சில பதிவுகள் – 25 | சுப்பு

பெரு வெடிப்புக் கோட்பாடும், பரிபாடலும் | கணேஷ் லக்ஷ்மிநாராயணன்

ஆன்லைன் மூலம் சந்தா செலுத்த: http://www.nhm.in/shop/1000000025686.html

Posted on Leave a comment

பெரு வெடிப்புக் கோட்பாடும், பரிபாடலும் | கணேஷ் லக்ஷ்மிநாராயணன்

சுஜாதா,
‘கடவுள் இருக்கிறாரா?’ என்று ஒரு அருமையான புத்தகம் எழுதினார். தன் வாழ்நாளின்
கடைசிப் படைப்பாக, ‘வாரம் ஒரு பாசுரம்’ எழுதியவர், இளமையில், ‘அறிவியலுக்குக்
கடவுள் தேவைதானா?’ என்று ஆராய்ந்து எழுதிய புத்தகம் அது.
அதை
முடிக்கும்போது, ‘கடவுள் இருக்கிறாரா?’ என்ற கேள்விக்கு, ‘அறிவியலின் பதில்
இருக்கலாம்; ஆன்மிகத்தின் பதில் இருக்கிறார்; என் பதில் IT DEPENDS’ என்று
முடித்திருப்பார்.
அறிவியலுக்கு,
கடவுள் தேவைப்படுவதன் இடங்கள், குறைந்து கொண்டேதான் வருகின்றன. பௌதிக விதிகளின்
அர்த்தம் விரிய விரிய, புற நிகழ்வுகள் பலவற்றையும் அது விளக்கி விடுகிறது. ஆனால்,
அறிவியலில் கூட, சில விஷயங்களுக்கு இன்னும் கடவுளோ, அவர் போல் ஏதோ தேவைப்படுகிறது.
அவற்றில் இரண்டு இடங்கள் முக்கியமானவை.
1.
பிரபஞ்சம் ஒரு, மிக, மிக அடர்த்தியான முட்டையில் இருந்து, வெடித்துச் சிதறி, நேரம்
தோன்றி, அணுத் துகள்கள் பறந்து, அவை இணைந்து, அணுக்கள் பிறந்து, அவை ஒன்றை,
மற்றொன்றைக் கவர்ந்து வாயுக்கள் வீசி, நெருப்பு பரவி, திடப் பொருட்கள் மிதந்து,
இவையெல்லாம் குளிர்ந்து நீர் உண்டாகி, நிலம் வெளிப்பட்டு, உயிர்கள் தோன்றி, இதோ,
நாமெல்லாம் அதைப் படித்துத் தெரிந்து கொண்டு விட்டோம்.
அழகிய
தமிழில், பெரியாழ்வார் இதே விஷயத்தைக், கிட்டத்தட்ட இந்த பெரு வெடிப்பு கோட்பாடு
(big bang theory) விளக்குவது போலவே, சொல்லி இருக்கிறார்.
பண்டை
நான்மறையும் வேள்வியும் கேள்வி பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மாநகர் அமர்ந்தானே
(பெரியாழ்வார்
)
ஆனால்,
இந்த முட்டை, எப்படி இப்படி அடர்த்தி ஆயிற்று? முட்டைக்கு முன் என்ன இருந்தது? அது
ஏன் வெடித்தது? இந்தக் கேள்விக்கு விடை இல்லை. ‘இந்த இடத்தில்தான், ஆத்திகரும்,
நாத்திகரும் அடித்துக் கொள்கிறார்கள்’ என்பது போல் எழுதியிருப்பார் சுஜாதா.
2.
பிரபஞ்ச விதிகளில் காணப்படும் அழகிய ஒழுங்குணர்ச்சி மற்றும் ‘மகத்தான சமச்சீர்’
(super symmetry).
Big
Bang Theory என்று ஒரு அமெரிக்க காமெடி நிகழ்ச்சி. அதில் வரும் ஷெல்டன் ஒரு
விஞ்ஞானி. நாத்திகவாதி. அவனைச் சிறு பையனாக ஆக்கி Young Sheldon என்று இன்னொரு
நிகழ்ச்சி.
நிகழ்ச்சியின்
வாரநிகழ்வு (episode) ஒன்றில், தீவிர ஆத்திகவாதியான அவன் அம்மாவுக்கு கூட, கடவுள்
உண்மையாகவே இருக்கின்றாரா என்ற தவிப்பு வந்து விடும். சமீபத்தில், அந்த ஊரில்
நடந்த ஒரு பெரிய சோக நிகழ்வை, கடவுளின் செயல் என்று கடந்து செல்ல முடியாத
மனநிலையில் உழல்வாள்.
அப்போது
அந்த சிறு பையன், அம்மாவிடம் ‘இந்தப் பிரபஞ்சம் முழுவதிலும் ஒரு துல்லியம்
இருக்கிறது. பௌதிக விதிகளில், சமன்பாடுகளின் மாறிலிகள் (constants), சிறிது விலகி
இருந்தாலும், உயிரினங்கள் இருக்க முடியாது’ என்று சொல்லுவான். இந்தப்
பிரபஞ்சத்தில், ஒழுங்கும், அழகு உணர்ச்சியும், எல்லாவற்றுக்கும் ஒரு காரணமும்,
இருப்பதை நாம் காண்கிறோம். இது சுயம்புவாக முளைத்ததா? உறுதியாய் இன்னும்
அறிவியலில் பதிலில்லை.
இந்த
இரண்டுக்கும், அறிவியல் விடை தேடுவதைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
சுஜாதாவின்
புத்தகத்தில் Roger Penrose என்பவரைப் பற்றி எழுதியிருப்பார். இவர் ஆக்ஸ்போர்டு
கணிதப் பேராசிரியர். ஸ்டீபென் ஹாகிங், ‘ஒருமித்த கணத்தை’ (Singularity)
சிந்தித்தபோது, அவருடன் பங்களித்தவர். இவர் 2010ல், ஒரு புதிய கோட்பாட்டை முன்
வைத்தார். ‘conformal cyclic cosmology (CCC)’ என்று பெயரிடப்பட்ட இந்தக்
கோட்பாடு, பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலைக்கு ஒரு புதிய விளக்கத்தைக் கொடுக்கிறது.
இந்த
‘சுழற்சிப் பிரபஞ்சவியல் (CCC)’ என்ன சொல்லுகிறது என்று பார்க்கும் முன், கொஞ்சம்
பரிபாடல் பக்கம் போய் விட்டு வருவோம். பரிபாடல் சங்க நூல்களில் ஓன்று. இதில்
சொல்லப்படும் கோள் நிலைகளை வைத்து, இது இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது
என்கிறார்கள்.
தொல்
முறை இயற்கையின் மதிய…
… … … … … … … … … … …மரபிற்று ஆக,
பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,
விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
(பரிபாடல்
– பாடல் 2 )
‘திருமாலே..
பல ஊழிகளுக்கு முன்னால், ஒரு பண்டைக் காலத்தில், எல்லாம் அழிந்து போயின.
சூரியனும், சந்திரர்களும், எல்லா நட்சத்திரங்களும் மறைந்து போயின. இந்த உலகமும்,
பிரபஞ்சமும் பாழ்பட்டுப் போய், ஒன்றும் இல்லாமல் போயின. இப்படிப் பல ஊழிகள்
கடந்தன…’
கொசுறாக
இன்னொன்றையும் பார்த்து விடலாம். இதைப் பூஜைகள் தொடங்கும் முன் வரும் சங்கல்ப
மந்திரத்தில் எல்லோரும் கேட்டிருப்போம் – ‘மமோபார்த்த சமஸ்த..’
முப்பது
கல்பங்கள்; ஒவ்வவொரு கல்பத்திலும் பதினாலு மன்வந்தரங்கள், மன்வந்தரங்கள் ஒன்றுக்கு
எழுபத்தியோரு மகா யுகங்கள், ஒரு மகா யுகத்துக்கு, நாலு யுகங்கள்..
‘இப்போது
நடப்பது – இரண்டாவது கல்பம் – ஸ்வேத வராக கல்பம்; ஏழாவது மன்வந்தரம் – ‘வைவசுவத’
மன்வந்தரம்; கலியுகம்.’
சுழற்சிப்
பிரபஞ்சவியலின் (CCC) தேவை என்ன? ரோஜேர் பென்ரோசுக்கு, பெரு வெடிப்பின் ஆரம்ப
நிலையின் விளக்கத்தில் திருப்தி ஏற்படவில்லை. ‘அது, அப்படித்தான் இருந்தது.
வெடித்தது. அதற்கு முன்னால் என்ன என்று எல்லாம் கேட்கக் கூடாது. அதற்கு முன் காலமே
இல்லை’ என்ற முரட்டு வாதங்களில் சமாதானமடையாமல் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
எளிய
முறையில் இதைப் புரிந்து கொள்ள முயன்றால், பிரபஞ்சம் ஒரு சுழற்சி என்கிறது இந்தக்
கோட்பாடு. இந்தப் பிரபஞ்சம் சுருங்கிக் கரந்து, ஆதி முட்டைக்குள் அடங்கி, எல்லா
சக்தியையும் தன்னுள் உண்டு, வெடித்துச் சிதறி – மீண்டும் முதலிருந்து.
கிட்டத்தட்ட,
இந்தப் பாசுரத்தில் சடகோபர் சொல்வது போல. சிவன், பிரம்மா, இந்திரன் முதல் எல்லா
தேவர்களையும், எல்லா உலகங்களையும், பஞ்ச பூதங்களையும், ஒரு பொருளையும் விடாது
எல்லாவற்றையும், தன்னுள்ளே வாங்கி, மறைத்து, ஆலிலை மேல் உறங்குகிறான் பெருமாள்.
நளிர்
மதி சடையனும் நான்முக கடவுளும்
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை உலகமும் யாவரும் அகப்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்
மலர் சுடர் பிறவும் சிறிது உடன் மயங்க
ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும்
அகப்பட கரந்து ஓர் ஆலிலை சேர்ந்த எம்
பெரு மா மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே
(நம்மாழ்வார்)
இந்தக்
கோட்பாட்டை, ரோஜேர் 2010ல் முதலில் முன்மொழிந்தார். புறச் சான்றுகள் இல்லாததால்,
அறிவியலார் பலரும் இதைக் கழுவி ஊற்றினார்கள்.
சென்ற
வருடம் (2018), அவருக்கு இதை நிரூபிக்க ஒரு சான்று கிடைத்தது. ‘கடந்த பெரு
வெடிப்புக்கு முன் இருந்த பழைய பிரபஞ்சத்தின் தடங்களை கண்டுபிடித்து விட்டோம்
என்று நினைக்கிறோம்’ என்று ஒரு கட்டுரை எழுதினார்.
இதை
Microwave கதிர்களை வைத்து, Wilkinson Microwave Anisotropy Probe ( WMAP) என்னும்
ஒரு உத்தியில், பரிசோதனை செய்து, படம் வரைந்து, சமன்பாடுகளைச் சரி
செய்து….இதற்கு மேல் புரியும்படி, எளிய தமிழில் எழுத வேண்டுமானால், வாத்தியார்
சுஜாதாதான் வைகுண்டத்தில் இருந்து தொடர வேண்டும்.
இப்போது
அந்தப் பரிபாடல் பாடலை மீண்டும் முழுவதுமாகப், பார்த்து விடலாம்.
தொல்
முறை இயற்கையின் மதிய………..
……………………………………………………. மரபிற்று ஆக,
பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,
விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையின் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழ் ஊழ் ஊழியும்;
செந் தீச்சுடரிய ஊழியும் பனியொடு
தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர் தருபு,
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்;
நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,
மை இல் கமலமும், வெள்ளமும் நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை
கேழல்
திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா;
ஆழி முதல்வ நிற் பேணுதும், தொழுதும்,
கரு
வளர் – ஆதி முட்டை; இசையின் – சத்தத்துடன்; உரு அறிவாரா ஒன்று – முதல் துகள்கள் ;
ஊழ் ஊழ் – வாயுக்கள்; தண் பெயல் – குளிர்ந்த மழை; வெள்ளம் மூழ்கி ஆர் தருபு –
வெள்ளத்தில் மூழ்கி யுகங்கள் கரைந்து; மீண்டும் பீடு உயர்பு ஈண்டி – அவை மீண்டும்
பெருமையுடன் எழுந்தன; இரு நிலம் – பூமி; கேழல் திகழ் வரக் கோலம் – வராகம்; ஆழி
முதல்வன் – திருமால்.
(பரி
பாடல்)
எல்லாமும்
மறைந்து, பின் எல்லாமும் ஒரு ஆதி முட்டையாகி, அதில் இருந்து பெரு வெளி, நெருப்பு,
நீர், காற்று, அண்டங்கள் எல்லாம் தோன்றி, அவை நீரிலும், பனியிலும் மூழ்கி இருக்க,
வராக அவதாரம் எடுத்து, மீண்டும் அவை பீடுடன் விளங்கச் செய்தவன் திருமால் என்கிறது
இந்தப் பாடல்.
நான்
சுழற்சிப் பிரபஞ்சவியல் (CCC) பரிபாடலில் இருக்கிறது என்று சொல்ல வரவில்லை. இதே
விளக்கம் வேதங்களில் இருக்கிறது என்று பல பேர் எழுதி இருக்கிறார்கள்.
பிரளயங்களும்,
அவை வரும் போது கடவுள் மனிதர்களைக் காப்பதும், இதே மாதிரி, பல மதங்களிலும்
இருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் அறிவியல் ஒத்துக் கொள்ளாது. அதற்குப் பரிசோதனைகள்
வேண்டும், டேட்டா வேண்டும். கணிதம் ஒத்துப் போக வேண்டும்.
என்னுடைய
வியப்பு அதுவல்ல. பிரபஞ்சத்தின் ஆரம்பத்தைப் பற்றி அழகு தமிழில், கிட்டத்தட்ட
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், நம் முன்னோர் எழுதி வைத்து, அதை நாம் இன்னும்
படிக்கக் கிடைத்துக் கொண்டு இருப்பதுதான்.
பரிபாடல்,
நமக்கு முழுமையாகக் கிடைக்காத ஒரு பொக்கிஷம். பெருமாளைப் பற்றிய முழுமையான
வர்ணனைகள் அடங்கிய அற்புத வரிகள் அதில் இருக்கின்றன.
முருகனும்,
திருப்பரங்குன்றமும், திருமாலிருஞ்சோலையும், வைகையும், மதுரையும், வானவியல்
குறிப்புகளும் உள்ளன. பாடலுக்கு, ராகத்துடன் பாட பண்கள் அமைத்தவரின் பெயர்களுடன்,
படிக்க படிக்க பிரமிக்க வைக்கும் நூல்.
‘பரிபாடல்தான்,
பக்தி இலக்கியத்துக்கு முன்னோடி’ என்பார் சுஜாதா, தன் ‘ஆழ்வார்கள் ஒரு எளிய
அறிமுகம்’ என்ற புத்தகத்தில். 
பாசுரங்களின் பல பாடல்களின் மூலம், பரிபாடலில் இருக்கிறது. பரிபால்
சொல்லும், பிரபஞ்சத்தின் ஆரம்பத்தையும், சுழற்சியையும் ஆழ்வார்கள், அற்புதத்
தமிழில் எழுதி மகிழ்ந்து இருக்கிறார்கள்.
படைத்த
பாரிடந் தளந்த துண்டு மிழ்ந்து பெளவநீர்
படைத்த டைத்ததிற் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
என்கிறார்
திருமழிசையாழ்வார் திருச்சந்த விருத்தத்தில். ‘படைத்தவனும் அவனே, படைத்ததை, தன்
திருவடிகளால் அளந்தவனும் அவனே!, அளந்ததை உண்டு, உமிழ்ந்தவனும் அவனே’ என்கிறார்.
‘பெளவநீர் படைத்து, அதில் கிடந்து, அதைக் கடைந்து’ – பெளவநீர் எது? பாற்கடல்
வெறும் கடலா?
காட்டி
நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டை
கோட்டையினில் கழித்து என்னை உன் கொழும் சோதி உயரத்து
கூட்டு அரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே
என்கிறார்
பெரியாழ்வார். ‘உலகத்தைக் காட்டிப், பின் மறைத்து, பின் உமிழ்ந்து, பஞ்ச பூதங்களை
வைத்து அமைத்தவனே, என்னை இந்த சுழற்சியில் சிக்க வைக்காமல், நித்ய சூரிகள் வாழும்
வைகுண்டம் என்னும் தனி முட்டைக் கோட்டையில், உன் திருவடிகளில் எப்போதும் இருக்கச்
செய்வது எப்போது?’ என்று கேட்கிறார்.
தாமிரபரணி
தண்ணீர் குடித்த சடகோபரை மிஞ்ச, இந்த அறிவு சார்ந்த விஷயங்களில் ஆளே இல்லை. இரண்டே
வரிகளில் சொல்லி விட்டுப் போய் விடுகிறார் இந்தப் பிரபஞ்ச ரகசியத்தை.
தானே
உலகு எல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே.
‘தன்னையே
படைத்து, எல்லா உலகையும் படைத்து, அதை அளந்து, உண்டு, உமிழ்ந்து, மீண்டும்
ஆள்வானே..’ என்று எளிய வார்த்தைகளில், மிகப் பெரிய விஷயங்களைச் சொல்லிச் செல்லும்
நம்மாழ்வார்தான், சுஜாதாவுக்குப் பிடித்த ஆழ்வார் என்பதில் ஆச்சரியம் இல்லை.
சுழற்சிப்
பிரபஞ்சவியல் கோட்பாடு இன்னமும் முழுதாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை. அது நடந்தால்,
ஆதி முட்டை எப்படி உண்டானது என்பதற்கு விளக்கம் கிடைத்து விடும். அதற்குப் பிறகும்
கேள்விகள் நீண்டு கொண்டே போகும். ஏன் பிரபஞ்சம் இப்படி ஊசலாடுகிறது? ஆடுகிறதா?
ஆட்டுவிக்கப்படுகிறதா?
இன்னொரு
கேள்வியும், பதில் இல்லாமல் இருக்கிறது. பிரபஞ்சத்தின் ‘மகத்தான சமச்சீர்’ (super
symeetry). இதை விளக்குவதற்கு ‘தரநிலை மாதிரி’ (standard model) என்று ஓன்று
தயாரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு அணுத்துகளுக்கும் (sub atomic particles) ஒரு
மாற்றுத்துகள் இருக்கிறது என்பது இந்தக் கோட்பாடு. Higgs-Boson பரிசோதனைகள்
இதற்காகவே. இதுவரை ஒன்றுதான் கிடைத்து இருக்கிறது. மற்ற துகள்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அறிவியலுக்கு
கடவுள் தேவையா என்ற கேள்விக்குப் பதில், ஐன்ஸ்டீனின் இந்த வரிகளில் இருக்கலாம்.
‘பிரபஞ்சத்தில் நாம் ஆழ்ந்து புரிந்து கொள்ள இயலாதது என்பது, நாம் அதைப் பற்றி
அறிந்து கொள்ள முடியும் என்பதே.’
அறிவியலுக்குத்
தேவையோ இல்லையோ, ஐம்பது வயது ஆகி விட்ட எனக்கு, கடவுள் கண்டிப்பாகத்
தேவைப்படுகிறார். ‘கடவுளே இயற்கை, இயற்கையே கடவுள்’ என்று சொல்லும், தமிழின்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த பரிபாடல் வரிகள் பிரமிக்க
வைப்பவை. இந்த மனநிலை வந்து விட்டால், இதை உள் வாங்கித் தெளிந்து விட்டால்,
கோயில், கோயிலாய் அலைய வேண்டியதில்லை.
‘பெரிதில்
தோன்றி, பெரிதால் மேவப்பட்டு, பெரிதொடு சென்றடையும்’ என்ற விஷிட்டாத்வைதம்
புரிந்து விட்டால், தேடல் நின்று விடும்.
நின்
வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள  25
நின்
தண்மையும் சாயலும் திங்கள் உள;
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள;
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள;
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள;  30
நின்
உருவமும் ஒலியும் ஆகாயத்து உள;
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள;
அதனால் இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும்,
ஏமம் ஆர்த்த நிற் பிரிந்து,
மேவல் சான்றன எல்லாம்.  35
சூரியனின்
ஒளியும், வெப்பமும் நீயே
சந்திரனின் குளிர்ந்த தன்மையும் நீயே
மழையின் பெருந்தன்மையும் அதன் வழங்கலும் நீயே
பூமியின் பொறுமையும், வளங்களும் நீயே
பூக்களின் மணமும், காந்தியும் நீயே
ஞாலத்து நீரின் தோற்றமும், விரிவும் நீயே
வானத்தின் உருவமும், ஒலியும் நீயே
காற்றின் ஆரம்பமும், முடிவும் நீயே
ஆதலால்
அவையும், இவையும், உவையும், பிறவும்
உன்னில் இருந்தே தொடங்கிப் பிரிந்து
உன்னையே வந்து தழுவிக் கொள்பவையே!
அப்படிப்பட்ட
நிலை எத்தனை பேருக்கு வரும் என்று தெரியவில்லை. அது இயலாத என்னைப் போன்றோருக்கு
வாழ்க்கையின் கவனச் சிதறல்களுக்கு நடுவே கடவுளை வணங்குவதற்கு ஒரு உருவமும்
தேவைப்படுகிறது.
‘எல்லா
தெய்வ உருவங்களும் ஒன்றின் பலவே. அவர் உனது செயல்களை முடித்துத் தரும் ஏவலாள்,
உன்னைக் காப்பவன்’ என்ற திருமாலைப் பற்றிய, இந்தப் பழைமையான பரிபாடல் வரிகள்.
எந்தக் கடவுளுக்கும் பொருந்தும் என்பது, நம் தமிழில் எனக்கு மிகவும் பிடித்த,
பெருமிதம் கொள்ள வைத்த விஷயம்.
அழல்
புரை குழை கொழு நிழல் தரும் பல சினை
ஆலமும் கடம்பும், நல் யாற்று நடுவும்,
கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும்,
அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்!
எவ் வயினோயும் நீயே நின் ஆர்வலர் 70
தொழுத
கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே!
அவரவர் ஏவலாளனும் நீயே!
அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே!
(பரிபாடல்
– பாடல் 4)
கடுவன்
இளவெயினனார்
தீக்கதிர்களைப் போல் பரந்து விரிந்து
குளிர்ச்சியான நிழலைத் தரும் ஆல், கடம்பு மரங்களிலும்;
ஆறுகளின் நடுவிலும்; காற்று வீசாத குன்றங்களின் மேலேயும்;
விரும்பத்தகும் இடங்களில் எல்லாம்
வேறு வேறு பெயர்களில் நிறைந்த பெரு உருவே!
உன்னைக் கை கூப்பித் தொழுவோர் கை பற்றி வரமளிப்பவனே!
அவர்களின் கட்டளைகளை நிறைவேற்றும் ஏவலாளன் நீயே!
அவர்களின் செல்வங்களுக்கு எல்லாம் காவலாளியும் நீயே!

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 25 | சுப்பு

கொண்டம்மா
அடையாரில்
(1978 தீபாவளி) நானும், சித்தார்த்தனும் இன்னொரு நண்பனோடு பேசிக்கொண்டே சாலையைக்
கடந்தபோது ஒரு கார் என் மீது மோதியது. தூக்கியடிக்கப்பட்ட நான் காரின் பானட்டில்
விழுந்தேன். காரின் கண்ணாடியில் என் தலை மோதியது. நான் அங்கிருந்து கீழே உருள,
கார் கடந்து போய்விட்டது. அந்தரத்தில் இருந்த கணத்தில் என்முன் பார்வதி அக்காவின்
தோற்றம். கீழே விழுந்ததும் உடனே எழுந்து கார் நம்பரைக் குறித்து அங்கிருந்த
போலீஸ்காரரிடம் கொடுத்தேன்.
ராயப்பேட்டை
ஆஸ்பத்திரியில் காயங்களுக்குக் கட்டுப் போட்டுக் கொண்டேன். போலிஸ் கேஸ் பதிவு
செய்யப்பட்டது. தலையை எக்ஸ்ரே எடுத்தார்கள். அதை யார் பார்க்க வேண்டுமோ அந்த
டாக்டரைத் தேடிக்கொண்டு அரைமணி நேரம் அலைந்தேன். பிறகு மனசு வெறுத்துப்போய்
டீக்கடையில் எக்ஸ்ரேயை அடமானம் வைத்து டீ குடித்துவிட்டு நடந்தே பெசன்ட் நகருக்கு
வந்துவிட்டேன். இந்த விபத்தில் பட்ட அடியால் முதுகெலும்பு எவ்வளவு
பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற விவரத்தைப் பல வருடங்களுக்குப் பிறகு தெரிந்து
கொண்டேன்…
கடலில்
விசைப்படகைச் செலுத்தி மீன் பிடிக்கலாம் என்று நினைத்து அஸ்வத்தாமாவை வாங்கினோம். அந்த
ஆசை நிராசையாக முடிந்துவிட்டது. இருந்தாலும் இடைப்பட்ட காலத்தில் மீன்பிடி தொழில்
பற்றிய விவரங்கள், நுட்பங்கள் என் மூளைக்குள் ஏறிவிட்டன. வெளியூரிலிருந்து மீன்
கொள்முதல் செய்து அதை சென்னைக்கு அனுப்பி விற்பனை செய்யலாம் என்கிற யோசனை
வலுவடைந்தது. அதற்காக உப்படாவுக்குப் போனேன்.
ஒவ்வொரு
ஊரிலும் அங்குள்ள கடல் அமைப்பு, கரை அமைப்பு ஆகியவற்றைப் பொருத்து சில விசேஷமான
மீன்பிடிக்கும் முறைகள் உண்டு. ராமேஸ்வரத்தில் விசைப்படகுகள் அதிகம். நாகப்பட்டினத்தில்
நாட்கணக்கில் பயணம் செய்து காலா மீன் பிடிப்பார்கள். காணாமல்போன மீனவர்களைப்
பற்றிய பத்திரிகைச் செய்தியில் இவர்கள்தான் அதிகமிருப்பார்கள். சென்னையிலுள்ள
குப்பத்தைச் சேர்ந்தவர்கள் பண்ணில் (nylon twine) கட்டப்பட்ட தூண்டில் மூலம் சுறா
பிடிப்பதில் நிபுணர்கள். வாய் அல்லது கழுத்தில் சிக்கிய பண்ணை இழுத்துக்கொண்டு
சுறா தண்ணீரைக் கிழித்துக்கொண்டு பறக்கும். போகும் வேகத்தில் கட்டுமரத்தையும்
இழுத்துக்கொண்டு போகும். சுறாவின் ஓட்டத்திற்குத் தகுந்தவாறு கட்டுமரத்தில்
இருப்பவர்கள் பண்ணை விட்டுக் கொண்டு போவார்கள். ஆங்கில திரைப்படத்தில் கௌபாய்கள்
இடுப்பில் கயிற்றைச் சுருட்டி தொங்கவிட்டுக் கொண்டு இருப்பார்களல்லவா,
அதுபோலத்தான். ஒரு கட்டத்தில் சுறா களைத்து, ஓட்டத்தை நிறுத்திவிடும். அதோடு சுறா
வேட்டை ஓவர். சுறா வேட்டையில் விரல்களை இழந்த மீனவர்களும் உண்டு. பண்ணுடைய
கூர்மையும், சுறாவுடைய வேகமும் ஒத்துழைத்தால், சமயத்தில் மீனவரின் கைவிரல்கள்
அறுபட்டுவிடும்.
அடுத்த
வியாபார முயற்சிக்காக காக்கிநாடாவுக்கு அருகிலுள்ள உப்படாவுக்குப் போனபோது அங்கே
உள்ள மீன்பிடி முறை ஒன்றைப் பற்றி அறிந்தேன். முதலில் தனியாக ஒரு சின்ன படகு. அதில்
இருப்பவன்தான் வேட்டைக்குத் தலைவன். அவனைத் தொடர்ந்து நூறு பெரிய படகுகள். இந்தப்
படகுகளில் ஆட்கள் வலைகளோடு தயாராயிருப்பார்கள். முதல் படகுக்கும் இவர்களுக்கும்
இடையே ஒரு கிலோ மீட்டருக்கு மேல் இடைவெளி. தலைவன் படகை நிறுத்திவிட்டு,
தன்னிடமிருக்கும் மூங்கில் குழாயை – இரண்டு அடி நீளக்குழாய் – தண்ணீருக்குள்
செலுத்தி மேல் பக்கத்தில் காது வைத்துக் கேட்பான். சிறிது நேரத்திற்குப் பிறகு
மற்றவர்களுக்கு அருகே வருமாறு சைகை மூலம் அழைப்பு. சில படகுகள் வரும். அந்த
இடத்தில் எந்த ஆழத்தில், என்ன மீன்கள், எவ்வளவு இருக்கிறது என்பதைத் துல்லியமாகக்
கணித்துச் சொல்வான். அவர்கள் வலை போடுவார்கள். தலைவன் அடுத்த இடத்தை நோக்கிப்
படகைச் செலுத்த, மீதமுள்ள படகுகள் அவனைப் பின் தொடரும். இந்த மீன்பிடி முறை
வேறெங்கும் இருப்பதாக நான் கேள்விப்பட்டதில்லை.
உப்படாவிலிருந்து
ஐஸ்மீனை வாங்கி நான் சென்னைக்கு அனுப்புவேன். ராஜேந்திரன் சிந்தாதிரிப்பேட்டை
மார்க்கெட்டில் ஐஸ்மீனை ஏலம்விட்டுப் பணமாக்குவான். ஒரு மாத காலத்தில் இது முடிவு
பெற்றுவிட்டாலும் இதைத் தொடர்ந்து சில வருடங்கள் நாங்கள் செய்த ஐஸ்மீன்
வியாபாரத்திற்கு இது பயிற்சியாயிருந்தது. உப்படாவிற்குப் பிறகு நான்
பாரதீப்புக்குப் போனேன். பாரதீப் ஒரிஸ்ஸாவின் துறைமுகம். உப்படாவில் எனக்குப்
பழக்கமாயிருந்த சில ஆந்திர மீனவர்கள் இங்கே தொழில் செய்து கொண்டிருந்தார்கள். பாரதீப்
சுறா வேட்டைக்குப் பேர் போனது. சுறாவிற்குக் கல்கத்தாவில் விலை கிடையாது. ஆகவே,
மலையாளிகள் சுறாவைக் கருவாடாக்கி கேரளாவுக்கு எடுத்துப் போய்க் கொண்டிருந்தார்கள்.
நான் சுறாவை வாங்கி, ஐஸ்மீனாக சென்னைக்கு அனுப்பினேன். இந்த வியாபாரம்
ஒழுங்காகவும் லாபகரமாகவும் நடந்தது.
பாரதீப்
நாட்கள் என்னால் மறக்க முடியாதவை. பாரதீப் துறைமுகம் முழுதாகக் கட்டப்படாத
நிலையில், ஆந்திர மீனவர்கள் அங்கே ஒரு காலனியை உருவாக்கியிருந்தார்கள். நல்ல
வருமானம் கிடைக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக ஒரியாக்கார குண்டர்கள் செய்த எல்லாக்
கொடுமைகளையும் இவர்கள் சகித்துக் கொண்டார்கள். பகலெல்லாம் கலகலப்பாக இருக்கும்
இந்தக் காலனியில் விளக்கு வைத்தால் எங்கும் பெண்களின் அழுகுரல்தான். மதுவின்
பிரவாகம்தான். இரவில் வெகுநேரம் வரை எல்லா பக்கங்களிலிருந்தும் ஆண்களின் ஆபாசமான
வசவுகளும் கூக்குரல்களும் ஒலித்துக் கொண்டிருக்கும். மதுவின் கொடுமையைப் பற்றியும்
மதுவிலக்கை வற்புறுத்திய மகாத்மா காந்தியின் பெருமைபற்றியும் பாரதீப்
நாட்களில்தான் நான் தெரிந்துகொண்டேன்.
கொண்டம்மா
என்ற இளம்பெண் அங்கே வியாபாரிகளுக்கு ஏஜண்டாக இருந்தாள். எனக்கும் இவள்தான்
ஏஜெண்ட். எப்போதும் உற்சாகமாயிருக்கும் இந்த இருபத்து இரண்டு வயதுப்பெண்ணுக்கு
நான்கு குழந்தைகள். ஒரு குழந்தை எப்போதும் இவள் இடுப்பிலேயே குடியிருக்கும். கொண்டம்மாவைச்
சுற்றி நோட்டுப் புத்தகமும் பேனாவும் வைத்துக்கொண்டு என்னைப்போல ஐந்து
வியாபாரிகள். ஒவ்வொரு ஏலத்தையும் நாங்கள் குறித்துக் கொள்வோம். அவளுக்கு
நோட்டுப்புத்தகம் தேவையில்லை. எந்த ஏலம் எவ்வளவு போயிற்று, அதை யார் எடுத்தார்கள்,
யாருடைய வலை மீன் அது, அவர்களுக்கு இன்னும் எவ்வளவு பாக்கி என்பது போன்ற ஏராளமான
விவரங்களை எப்போது கேட்டாலும் சொல்லும் அபாரமான ஞாபக சக்தி அவளுக்கிருந்தது. இடையிடையே
குழந்தைகளின் நச்சரிப்பு.
பகல்
பன்னிரண்டு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை ஓடி ஓடி உழைத்து கொண்டம்மாள் தினசரி
ஐநூறு ரூபாய்க்குக் குறையாமல் சம்பாதிப்பாள். சம்பாதித்த பணத்தை எடுத்துக்கொண்டு
குழந்தைகளோடு வீடு திரும்பும்போது, கொண்டம்மாவின் கணவனை சீட்டாட்ட பாக்கிக்காக
எவனாவது ஒருவன் சட்டையைப் பிடித்துக் கொண்டிருப்பான். இது அன்றாடம் நடக்கும்
நிகழ்ச்சி. கணவனைப் பிடித்தவனுக்கு அலட்சியமாய் ஒரு தட்டு. இருநூறோ, முந்நூறோ
அங்கேயே கணக்குத் தீர்க்கப்படும். கணவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போனால்,
அதற்குள் அவனுக்குப் போதை தெளிந்துவிட்டிருக்கும். ‘ஏன் சமையல் செய்யவில்லை’ என்று
அவளை எட்டி உதைப்பான்.
கொண்டம்மாள்
என்னை உரிமையுடன் கேலி செய்வாள். Bertrand Russel எழுதிய Problems of philosophy
புத்தகத்தை வைத்துக்கொண்டு, நான் யோசித்துக் கொண்டிருப்பேன். ‘அதிகம் படித்தால்
மறை கழண்டு விடும்’ என்பாள். கொண்டம்மாள் எனக்கு ஒரு சாய வேட்டி வாங்கிக்
கொடுத்தாள். கணவனிடம் இப்படிக் கஷ்டப்படுகிறாளே என்ற எண்ணத்தில் ‘நீயேன் வேறு
ஒருவனைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது’ என்று கேட்டுவிட்டேன். வாழ
விருப்பமில்லையென்றால் இங்கே பெண்கள் தாலியைக் கழட்டிக் கணவனிடம் கொடுத்துவிட்டு
வேறு ஒருவனோடு வாழலாம். அதற்கு அவ்வளவாக மரியாதை இராது என்றாலும், பெரிய
குற்றமாகக் கருதமாட்டார்கள். கொண்டம்மாள் என் நோக்கத்தைத் தவறாகப் புரிந்து
கொண்டாள். ஊர்ப் பஞ்சாயத்தில் புகார் செய்துவிட்டாள். பஞ்சாயத்தாருக்கு என்னைப்
பற்றிய நல்ல அபிப்பிராயம் இருந்ததால் என்னிடம் ‘உன்னுடைய கொள்கைகளை இந்த ஊரில்
நிறைவேற்ற முடியாது. வீணாக வம்பில் மாட்டிக் கொள்ளாதே’ என்று சொல்லியதோடு,
விவகாரம் முற்றுப் பெற்றது.
ஊருக்கு
நடுவே என் குடிசையிருந்தது. அந்த வழியாகப் பெண்கள் தண்ணீர் எடுப்பதற்காகப் போய்க்
கொண்டிருப்பார்கள். என்னுடைய குடிசையில் தண்ணீர்ப் பானை உண்டு. தண்ணீர் எடுத்து
வருவதற்கென்று தனியாக ஆள் கிடையாது. எப்போதாவது பானையில் தண்ணீர் இல்லாவிட்டால்
கட்டிலில் உட்கார்ந்தபடியே குரல் கொடுப்பேன். யாராவது ஒரு பெண் உள்ளே வருவாள். பானையை
எடுத்து இடுப்பில் வைத்துக் கொள்வாள். நான் சொல்லாமலேயே அழுக்குத் துணிகளை எடுத்து
அந்தப் பானைக்குள் திணித்துக் கொள்வாள். பிறகு பானை கழுவப்பட்டு, குடிநீர் நிரப்பப்பட்டு
வந்து சேரும். துணிமணிகள் துவைக்கப்பட்டு, யாராவது லாண்டிரிக்குப் போகிறவர் மூலமாக
இஸ்திரி போடப்பட்டு என் இருப்பிடத்திற்கு வந்து விடும். சில நாட்களுக்குப் பிறகு,
‘பாபு, நீங்கள் இரண்டு ரூபாய் இஸ்திரிக்காசு தர வேண்டும்’ என்று அந்தப் பெண்
கேட்கும்போது, ‘இந்த ஊரே இப்படித்தான் என்னை ஏமாற்றிப் பிழைக்கிறது’ என்று
சலித்துக் கொள்வேன். ஏகப்பட்ட சாட்சியங்களை வைத்து அவள் நிரூபணம் செய்த பிறகு
இரண்டு ரூபாய் கைமாறும்.
இடையில்
சென்னையில் நடந்த ரமணன் – அனு திருமணத்திற்கு பாரதீப்பிலிருந்து வந்து போனேன்.
மீன்
கொள்முதல் செய்த பாரதீப்பிலும் பராசக்தி என்னை பத்திரமாக வைத்திருந்தாள். கட்டாக்கிலிருந்து
பாரதீப் போகும் வழியில், மெயின் ரோடிலிருந்து தெற்கே ஐந்து கிலோ மீட்டர்
தூரத்திலிருந்த ஒரு கிராமத்திற்கு கொண்டம்மாள் கணவனை அழைத்துக் கொண்டு வியாபார
நிமித்தமாகப் போனேன். அங்கே எனக்கு நாராயணனை அறிமுகம் செய்து வைத்தார்கள். நாராயணன்
எட்டு வருஷமாக சாப்பிடுவதில்லையாம். ஆனால் ஆற்றுக்குப்போய் மீன் பிடித்துக்
கொண்டுதானிருந்தான். அழகான உடற்கட்டு, ஒளி ததும்பும் பார்வை. இளம் வயது அரவிந்தர்
போல தாடி. நாராயணன் கிரேக்கச் சிலைக்கு இந்தியச் சாயம் பூசியது போலிருந்தான். கொண்டம்மா
கணவனை துபாஷியாக்கி நான் நாராயணனைக் கேட்டேன்.
‘நாராயணா,
நீ என் சாப்பிடுவதில்லை?’
‘ஏன்
சாப்பிட வேண்டும்?’
‘உயிர்
வாழ்வதற்கு’.
‘நான்
உயிரோடுதானே இருக்கிறேன்’.
சாப்பிடாமல்
இருக்க வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு எப்படி ஏற்பட்டது என்று கேட்டேன். பங்காளிகளுக்குள்
சொத்துத் தகராறு ஏற்பட்டதாகவும் வயிற்றுப் பசியால்தானே இதெல்லாம் ஏற்படுகிறது
என்று தான் வருத்தப்பட்டதாகவும் சொன்னான். இவ்வளவு பொறுமையாக சொல்லிக் கொண்டு
வந்தவன், அப்போது தான் குருவைச் சந்தித்ததாகவும் அவர் சாப்பிடாமலிருக்கும் வழியைக்
கற்றுக் கொடுத்ததாகவும் கூறி சட்டென்று முடித்துவிட்டான். குருவைப் பற்றியோ,
அவருடைய செயல்முறை பற்றியோ எதுவும் கூற மறுத்துவிட்டான்.
நாராயணன்
யாரிடமும் இவ்வளவு விவரமாகப் பேசியது இல்லையென்று அங்கிருந்தவர்கள்
ஆச்சரியப்பட்டார்கள். நேரம் அதிகமாகிவிட்டதால் அங்கிருந்து புறப்பட்டுவிட்டேன். கொஞ்ச
தூரம் போனதும் கொண்டம்மா கணவனை அனுப்பி நாராயணனிடம் போய் ‘என்னிடம் மட்டும் ஏன்
பேசினான்?’ என்று கேட்டு வரச் சொன்னேன். கொட்டுகிற மழையில் நான் தொடர்ந்து நடந்து
போய்க் கொண்டிருந்தேன். ஊருக்குள் போய்விட்டுக் கொண்டம்மா கணவன் வேகமாக ஓடி
வந்தான். உரத்த குரலில் அவன் கொண்டு வந்த பதிலில் ஒரு வார்த்தைதான் இருந்தது.
காளி.

தொடரும்


Posted on Leave a comment

மஹாராஷ்ட்ரா, ஹரியானா – 2019 -சட்டசபைத் தேர்தல் முடிவுகள் – ஒரு பார்வை | லக்ஷ்மணப் பெருமாள்

அரசியலில்
என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்பதைத்தான் மஹாராஷ்ட்ரா, ஹரியானா தேர்தல்
முடிவுகள் காட்டுகின்றன. மஹாராஷ்ட்ராவைப் பொருத்தவரை, கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட
பாரதிய ஜனதா கட்சியும் சிவசேனாவும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பெற்றன.
ஹரியானாவில் தனித்தே போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சிக்கு, பெரும்பான்மைக்குப்
போதுமான இடங்கள் கிடைக்கவில்லை. ஹரியானாவில் தேர்தல் முடிவுகள் வெளியானபோது,
பாரதிய ஜனதா ஆட்சி அமைக்குமா அல்லது காங்கிரஸ் மற்றும் சிறு கட்சிகள் இணைந்து
ஆட்சி அமைக்குமா என்று விவாதங்கள் எழுந்தன.
2019ல்
புதிதாகக் களமிறங்கிய ஜன்நாயக் ஜனதா கட்சி
10 இடங்களைப்
பெற்றிருந்தது. பாஜகவை எதிர்த்து தேர்தல் களத்தை எதிர்கொண்ட போதும், இரு
நாட்களுக்குள்ளாக பாஜகவிற்கும், ஜனநாயக் ஜனதா கட்சிக்கும் உடன்பாடு ஏற்பட்டு
சுமூகமாக ஆட்சியை அமைத்தது பாரதிய ஜனதா கட்சி. மீண்டும் மனோகர் லால் கத்கர்
முதல்வரானார்.
மஹாராஷ்ட்ராவில்
தேர்தல் முடிவுகள் வந்த போது பாரதிய ஜனதாவும், சிவசேனாவும் ஓரிரு நாட்களில் ஆட்சி
அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல்வர் பதவி தங்களுக்கு
வேண்டுமென்ற சிவசேனாவின் கோரிக்கையில் கூட்டணியில் பூசல் உருவானது. அக்டோபர்

23
ல், தேர்தல் முடிவுகள் வந்த போதிலும், ஒரு நிலையற்ற சூழலே
அங்கே நிலவுகிறது. திடீரென பாஜகவின் ஃபட்நாவிஸும் தேசியவாத காங்கிரஸின் அஜித்
பவாரும் முறையே முதல்வராகவும் துணை முதல்வராகவும் பதவி ஏற்றிருப்பது
அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் உருவாக்கி உள்ளது.
சிவசேனாவின்
அரசியல் வரலாற்றில் முதல்முறையாக காங்கிரசுடனும் தேசியவாதக் காங்கிரசுடனும்
கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
2014-19
க்கான சட்டசபை நவம்பர் 8ம்
தேதி கலைக்கப்பட்டவுடன், தனிப்பெரும்கட்சியான பாரதிய ஜனதாவை
48 மணி நேரத்திற்குள் ஆட்சி
அமைக்க வேண்டுமென அழைப்பு விடுத்தார் கவர்னர் பகத் சிங். பாஜகவோ தங்களிடம் போதுமான
எண்கள் இல்லையென்று அறிவித்துவிட்டது. உடனடியாக சிவசேனாவை அழைத்து
24 மணி நேரத்திற்குள்ளாக ஆட்சி
அமைக்க நேரம் ஒதுக்கினார். சிவசேனா போதுமான ஆதரவுக் கடிதங்களைக் கொண்டு வரவில்லை
என நிராகரித்தார் கவர்னர். பின்னர் தேசியவாதக் காங்கிரஸ் கட்சிக்கும்
24 மணி நேரத்திற்குள்ளாக
போதுமான சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்துடன் வந்தால் ஆட்சி அமைக்க
அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்தார். தேசிய வாதக் காங்கிரஸ் கூடுதல் நேரம்
கேட்டவுடன் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு உத்தரவிட்டார் கவர்னர். நவம்பர்

12, 2019
அன்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு
வந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘குடியரசுத் தலைவர் ஆட்சி
மஹாராஷ்ட்ராவில் அறிவிக்கப்பட்டது துரதிருஷ்டம் என்றாலும், எதிர்க் கட்சிகள்
பெரும்பான்மை எண்ணிக்கையைக் காட்டும் பட்சத்தில், குடியரசுத் தலைவர் ஆட்சி
கலைக்கப்பட்டு, பெரும்பான்மை காட்டும் கட்சிக்கு ஆட்சி அமைக்க அனுமதி அளிக்கப்படும்’
என்று தொலைக்காட்சி பேட்டியில் அறிவித்தார். ஆனால் எதிர்பாரா திருப்பமாக நவம்பர்
23ம் தேதி அதிகாலையில் பட்நாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும்
பதவி ஏற்றுக்கொண்டார்கள்.
காங்கிரஸ்
ஆரம்பத்தில் சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் தனது மதச்சார்பின்மை (வேடம்)
கலைந்துவிடுமோ என்று அஞ்சியது. போலி மதச்சார்பின்மையை வழக்கம் போல கையில்
எடுத்தும், கடந்த இரு லோக்சபா தேர்தலில் எதுவும் பலிக்கவில்லை என்பதால்,
மதச்சார்பின்மை என்ற அரசியலைக் கையில் எடுப்பதற்குப் பதிலாக ஆட்சிக் கட்டிலில்
பாஜக அமராமல் இருக்கச் செய்தால் போதுமென்ற அரசியல் நிலைப்பாட்டை எடுத்துள்ளது
காங்கிரஸ். அப்படித்தான் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் தேர்தலுக்குப்
பிந்தைய கூட்டணியை அமைத்து ஆட்சி அமைத்த காங்கிரஸ், ஒரே வருடத்தில் ஆட்சியைக்
கவிழ்த்தது. தன்னுடைய தலைமையின் கீழ் ஆட்சி அமைக்கப்படவில்லை எனில், மாநிலக்
கட்சியை ஆட்சி அமைக்கச் சொல்லி விட்டு, சமயம் பார்த்துக் காலை வாரிவிடுவதை
வழக்கமாகவே கொண்டுள்ளது காங்கிரஸ். இவையனைத்தும் மாநில கட்சிகளுக்குத் தெரிந்த
போதும், பதவி வெறியில்  எந்தக் கட்சியும்
இதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. அதிகாரத்திற்கு வந்தால் மட்டுமே தங்களது
கட்சியைப் பலப்படுத்த முடியும் என்று நம்புவதால் காங்கிரஸ் அளிக்கும் ஆதரவை
ஏற்றுக் கொள்கின்றனர். அதிக இடங்களைப் பிடித்தும் தம்மை ஆட்சி அமைக்க விடாமல்
எதிர்க் கட்சிகள் அரசியல் செய்கின்றன என்பதால் பாஜகவும் அத்தனை மோசமான வழிகளையும் கையாண்டு,
எதிர்க்கட்சிகளின் ஆட்சியைக் கவிழ்க்கச் செய்ய முயலவேண்டியதாகிறது. கர்நாடகாவில்
காங்கிரசின் பங்கைப் போல அந்த ஆட்சியைக் கவிழ்க்க பாஜக எடுத்த முயற்சிகளும் வெட்ட
வெளிச்சம். சமீபத்தைய உதாரணம், இன்று சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்த காங்கிரஸ்
மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தள சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் பாஜகவிலேயே
ஐக்கியமாகி உள்ளது.
அதிகாரம்
என்று வரும்போது அரசியலில் யார் யாரோடு வேண்டுமென்றாலும் சேருவார்கள். மஹாராஷ்ட்ரா
மாநிலத்தில் கட்சிகள் பெற்ற இடங்களையும்,கடந்த கால தேர்தல்களோடு ஒப்பிட்டுப்
பார்க்கலாம்.
2019 சட்டசபைத்
தேர்தலில், மொத்தமுள்ள
288 தொகுதிகளில்,
பாஜக
105, சிவசேனா 56, தேசியவாதக் காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 மற்றும் இதர கட்சிகள் 29 இடங்களையும் பிடித்தன. பாஜக
கூட்டணி
162 இடங்களையும்,
காங்கிரஸ் கூட்டணி
105
இடங்களையும் பிடித்தன. பெரும்பான்மையை நிரூபிக்க
144 இடங்களே தேவை. ஆனால் மேலே கூறியுள்ளபடி
குளறுபடிகள் நடந்ததால் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாமல் போய்விட்டது. இப்போது
இன்னொரு குளறுபடியாக பட்நாவிஸ் முதல்வர் பொறுப்பேற்றிருக்கிறார்.
2014ல்
நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பாஜக, சிவசேனா, தேசியவாதக் காங்கிரஸ், காங்கிரஸ்
ஆகிய கட்சிகள் தனித்தே போட்டியிட்டன. தனித்துப் போட்டியிட்ட பாஜக
122, சிவசேனா 63,
காங்கிரஸ் 42,
தேசியவாதக் காங்கிரஸ்
41
இடங்களையும் பிடித்திருந்தன.
2019 சட்டசபை
தேர்தலில் பாஜக சிவசேனாவுடனும், காங்கிரஸ் தேசிய வாதக் காங்கிரசோடும் கூட்டணி
அமைத்துத் தேர்தலைக் களம் கண்டன. பாஜகவைப் பொறுத்தவரையில்
2014 தேர்தலில் நின்ற தொகுதிகளோடு
வெற்றி பெற்ற தொகுதிக்கான வெற்றி விகிதத்தை ஒப்பிட்டால்
2019
தேர்தலில் அதிகமென்றாலும் எண்ணிக்கையில் குறைவான இடங்களையே
பிடித்துள்ளது. கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் பாஜக, சிவசேனா முறையே
17,
7
இடங்களை இழந்துள்ளன. தேசியவாதக் காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய
இரு கட்சிகளும் முறையே
13, 2 இடங்களைக்
கூடுதலாக பெற்றுள்ளது.
பட்டியலின
தொகுதிகள் ஓர் ஒப்பீடு:
மஹாராஷ்ட்ராவில்
கடந்த
2014 சட்டசபைத் தேர்தலில்,
எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான தொகுதிகளில் தேசிய வாதக் காங்கிரசும், காங்கிரசும் தலா
ஏழு இடங்களைப் பிடித்திருந்தன. இம்முறை இரு கட்சிகளும் முறையே தலா
12 இடங்களைப் பிடித்துள்ளன.
கடந்த
2014 சட்டசபைத் தேர்தலில்,
பாஜக, சிவசேனா ஆகிய கட்சிகள் முறையே
25, 12
இடங்களைப் பிடித்திருந்தன. 2019 சட்டசபை தேர்தல் முடிவுகளில்
பாஜக
16 இடங்களையும், சிவசேனா 8 இடங்களையுமே பிடித்துள்ளன.
கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில், பட்டியலினத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில்
பாஜகவும் சிவசேனாவும்
13 தொகுதிகளை
இழந்துள்ளன.
நகர்ப்புற
தொகுதி முடிவுகள் ஓர் ஒப்பீடு:
மஹாராஷ்ட்ராவில்
58 தொகுதிகள் நகர்ப்புறத்
தொகுதிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன. அவற்றில் பாஜக
2019 தேர்தலில் 29 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது.
கடந்த
2014 தேர்தலில்
28 தொகுதிகளைக் கைப்பற்றியது
குறிப்பிடத்தக்கது. அதே போல சிவசேனாவும்
2014 & 2019 இரு
தேர்தல்களிலும்
18 தொகுதிகளைக்
கைப்பற்றி தக்கவைத்துக் கொண்டுள்ளது.
2014 & 2019 தேர்தலில்
தேசியவாதக் காங்கிரஸ்
4 தொகுதிகளைக்
கைப்பற்றி தக்கவைத்துக் கொண்டுள்ளது
. காங்கிரஸ்
கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் ஒரு இடம் குறைந்து நான்கு இடங்களை இம்முறை
பெற்றுள்ளது. நகர்ப்புற படித்த மக்களிடையே பாஜகவும், சிவசேனாவும் நன்மதிப்பைப்
பெற்றுள்ளது என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
கிராமப்புறத்
தொகுதிகள் :
கிராமப்புறத்
தொகுதிகளாக மொத்தம்
140 தொகுதிகள்
அடையாளப்படுத்தப் பட்டுள்ளன. இதில் கடந்த
2014
தேர்தலில் பாஜக, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்
ஆகிய கட்சிகள் முறையே
55, 25, 25, 28 ஆகிய
இடங்களைப் பிடித்திருந்தன. இம்முறை தேர்தல் முடிவுகள் வெளிவந்த போது
132 தொகுதிகளில் பாஜக,
காங்கிரஸ்,தேசியவாதக் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முறையே
39,
31, 26
ஆகிய இடங்களில் முன்னணி வகித்தன. சிவசேனா
மற்றும் இதர கட்சிகள்
36 இடங்களில்
முன்னணியில் இருந்தன. இதையே நாம் முடிவாகக் கருதிக் கொண்டால் கூட (தேர்தல்
முடிவுகளுக்குப் பின்னான தரவுகள் இன்னும் கிடைக்கவில்லை), கிராமப்புறத்
தொகுதிகளில் கடந்த தேர்தலோடு ஒப்பிட்டால் பாஜக தனது செல்வாக்கை இழந்துள்ளது.
ஹரியானா
தேர்தல் முடிவுகள்:
ஹரியானாவில்
மொத்தம்
90 சட்டசபை
தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்க
46
இடங்கள் தேவை. நடந்து முடிந்த
2019
சட்டசபை தேர்தலில், பாஜக 40 இடங்களையும், காங்கிரஸ் 31 இடங்களையும், புதிதாக உதயமான ஜன்நாயக் ஜனதா
கட்சி
10 இடங்களையும், இந்திய தேசிய லோக்தள் கட்சி ஒரு
இடத்தையும்
, இதர கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 8

இடங்களையும் கைப்பற்றின. ஏற்கெனவே குறிப்பிட்டது போல பாஜகவும்  ஜன்நாயக் ஜனதா கட்சியும் தேர்தலுக்குப் பிந்தைய
கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துக் கொண்டன.
ஹரியானாவில்
பாஜகவிற்கு உண்மையில் வீழ்ச்சியா, காங்கிரஸ் இயக்கத்திற்குப் பெரிய வெற்றியா
என்பதை ஆராய வேண்டி உள்ளது. ஹரியானாவில்
2014
Vs 2019
தேர்தலில் கட்சிகள் பெற்ற இடங்களுக்கான
ஒப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. பாஜக ஏழு இடங்களை இழந்துள்ளது. காங்கிரஸ்
15 இடத்திலிருந்து 31 இடங்கள் வரை பெற்றுள்ளது.
இந்திய தேசிய லோக்தள் கட்சி இம்முறை முற்றிலுமாக தமது செல்வாக்கை இழந்து
விட்டுள்ளது. அதற்கு பதிலாக புதிதாக உதயமான ஜேஜேபி கட்சி
10
இடங்களைப் பிடித்துள்ளது.
பட்டியிலினத் தொகுதிகள் ஓர் ஆய்வு:
ஹரியானாவில் மொத்தம் 17 எஸ்சி தொகுதிகள் உள்ளன. 2019 தேர்தலில் பாஜக, காங்கிரஸ்,
ஜேஜேபி ஆகிய கட்சிகள் முறையே
5, 7, 4 இடங்களைப்
பெற்றுள்ளன. இதர ஒரு இடத்தை மட்டும் மற்றவர்கள் பெற்றுள்ளனர். பாஜக
2014
தேர்தலில் 9 இடங்களைப்
பெற்றிருந்தது. இம்முறை வாக்கு சதவீதத்தை இழக்காவிட்டாலும், காங்கிரசிடமும் மற்ற
கட்சிகளிடமும் இடத்தைப் பறி கொடுத்துள்ளது. இதை கீழுள்ள படத்தைப் பார்த்தாலே புரிந்து
கொள்ளலாம்.
2014 தேர்தலில்
இந்திய தேசிய லோக்தள் பெற்ற வாக்குகள் மற்றும் இதர வாக்குகள் இம்முறை கூடுதலாக
காங்கிரசிற்குச் சென்றுள்ளதால் காங்கிரஸ் கடந்த தேர்தலைக் காட்டிலும் அதிக
இடங்களைப் பெற முடிந்திருக்கிறது.
பிஜேபியின் பின்னடவுக்குக்கான காரணம்
பாஜக 2014 தேர்தலைக்
காட்டிலும் குறைந்த இடங்களையும் குறைந்த வாக்கு சதவீதத்தையும் பெற இரு முக்கியக்
காரணிகள் உள்ளன. பாஜக ஹரியானாவில் ஜாட் பிரிவைச் சேராத ஒருவருக்கு முதல்வர் பதவியை
வழங்கியது. ஹரியானாவின் மொத்த மக்கள் தொகையில்
40% வரையிலும் ஜாட் இனத்தவர் உள்ளனர். பாஜக ஜாட்
அல்லாத
35 இதர ஜாதியினருக்கு அதிக
அளவில் முக்கியத்துவம் கொடுப்பதாக ஜாட் மக்கள் கருதி உள்ளனர்.
1977
ல் மட்டும் பன்சாரி தாஸ் குப்தா என்பவர் மட்டுமே
ஹரியானாவில் ஜாட் பிரிவைச் சேராத ஒருவர் முதல்வராக இருந்துள்ளார். அதுவும்
52 நாட்கள் மட்டுமே முதல்வர்
பதவியில் நீடித்துள்ளார். அதை பாஜக உடைத்து ஐந்தாண்டுகளுக்கு ஜாட் இனத்தைச் சேராத
ஒருவரை (மனோகர் லால் கத்தார் – பஞ்சாபி பஜன்லால்) முதல்வராக வைத்தது. இதுதான்
குறிப்பாக ஜாட் மக்களின் பிஜேபிக்கு எதிரான அணித் திரள அமைய முக்கியக் காரணியாகப்
பார்க்கப்படுகிறது.
பாஜக
தான் வாங்கிய வாக்குகளில் ஜாட் சமூக மக்கள் அதிகமாக உள்ள தொகுதிகளில்
16% குறைவாகவும், ஜாட்
மக்கள்தொகை குறைவாக உள்ள மற்ற தொகுதிகளில்

22%
வாக்குகளை லோக்சபா தேர்தலோடு ஒப்பிடுகையில்
குறைவாகப் பெற்றிருந்தாலும், அதிக இடங்களை இழந்துள்ளது ஜாட் மக்கள்
40%
இருக்கும் தொகுதிகளில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாட்
மக்கள் குறைவாக உள்ள சில தொகுதிகளில் ஜாட் மக்கள் காங்கிரசிற்கு அதிக அளவில்
வாக்களித்துள்ளனர். அதேபோல ஜாட் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் துஷ்யந்த்
சௌதாலாவின் ஜேஜேபி கட்சி அதிக வாக்குகளையும் அதிக இடங்களையும் கைப்பற்றி உள்ளது.
பாஜகவின் வெற்றியை பல தொகுதிகளில் ஜேஜேபி கட்சி பதம் பார்த்துள்ளது என்றே சொல்ல
வேண்டும். கீழுள்ள அட்டவணையைப் பார்த்தால் புரியும். தமிழகத்தில் வன்னியர்,
முக்குலத்தோர், கவுண்டர்கள் ஓரணிக்கு அணி திரண்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான்
அங்கு ஜாட் மக்கள் அணி திரண்டால் ஒரு கட்சியின் வெற்றியைப் பாதிக்கிறது. பெரும்
எண்ணிக்கையிலான சாதிகள் மட்டுமே அதிகார பலத்தில் இருக்கக் கூடாது என்ற சமூக நீதியை
பாஜக முன்னெடுத்துள்ளது. அது வேறு மாதிரியான வாக்கரசியல்தான் என்றாலும், உண்மையில்
இதுதான் சமூக நீதியை நிலை நாட்டுவதாகும். தமிழ்நாட்டில் அரசியல் அதிகாரம் ஐந்தே
சாதிகளின் கைகளில் குவிந்துள்ளதற்குக் காரணம் அதிமுகவும் திமுகவும் சிறிய
எண்ணிக்கையிலான சாதிகளை மதிக்காமல் பெரும் எண்ணிக்கையிலான சாதியினருக்கு மட்டுமே
இடங்களை அதிக அளவில் ஒதுக்குவதும், அமைச்சரவையில் இடம் கொடுப்பதுமே ஆகும்.
முக்குலத்தோர், வன்னியர், கவுண்டர், நாயக்கர், நாடார், தலித் ஆகிய ஆறு சாதிகளில்
எத்தனை எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பதோடு பிராமணர்கள், பண்டாரம், ஆசாரி, பிள்ளைமார்,
ஆதி சைவர் சாதிகளைச் சேர்ந்தவர்களுக்குப் பிரதிநித்துவம் எந்த அளவுக்கு
வழங்கப்பட்டுள்ளது என்று பார்த்தாலே தெரியும். திமுக அதிமுகவும் ஏன் சிறு
எண்ணிக்கையிலான சாதிகளை அதிக அளவில் மதிக்காமல் உள்ளன என்றால், தேர்தல் வெற்றிக்கு
பெரும் சாதிகளின் ஆதரவு தேவை என்கிற ஒற்றை அரசியல் பார்வை மட்டுமே! அதைத் தாண்டி
அனைத்து சமூகத்தினருக்குமான அதிகாரப்பகிர்வை வழங்காமல் தமிழகத்தை ஆண்ட/ஆளும்
கட்சிகள் சமூக நீதி என்று பேச அருகதை அற்றவர்கள்.
ஹரியானா
நகர்ப்புறத் தொகுதி முடிவுகள் ஓர் ஆய்வு:
ஹரியானாவில்
மொத்தம்
26 தொகுதிகள் நகர்ப்புறத்
தொகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பாஜக
17 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் 7 தொகுதிகளையும் ஜெஜேபி
மற்றும் சுயேட்சை தலா ஒரு இடத்தையும் பெற்றுள்ளனர். கடந்த

2014
சட்டசபை தேர்தலிலும் பாஜக
17
இடங்களைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஹரியானா,
மஹாராஷ்ட்ரா என இரு மாநிலங்களிலும் பாஜக நகர்ப்புற மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ளது.
இரு
மாநில முடிவுகளையும் வைத்துப் பார்த்தால் மக்களிடம் பெருமளவுக்கு ஆட்சிக்கெதிரான
மனநிலை பெருமளவுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. நாம் இந்த இரு மாநில தேர்தல்
முடிவுகளையும் எப்படிப் பார்க்க வேண்டும்? கடந்த
2014 தேர்தலில் பாஜக முதல்வர் யாரென சொல்லி வாக்குகள்
கேட்கவில்லை. ஆனால் இந்த இரு மாநிலங்களிலும் சிறிய சமூகமான பிராமணர் சமூகத்தைச்
சேர்ந்த தேவேந்திர பாட்நாவிசை மஹாராஷ்ட்ராவிலும், கத்தாரை (பஞ்சாப் பஜன்லால்)
ஹரியானாவிலும் முதல்வராக்கியது. ஹரியானாவில் மோடியை ஏற்றுக் கொண்ட ஜாட் இன மக்கள்
கத்தாரை அந்தளவுக்கு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ஜாட் மக்களை அடிப்படையாகக் கொண்டு
உருவாக்கப்பட்டுள்ள ஜேஜேபி கட்சியைச் சேர்ந்த துஷ்யந்த் சௌதாலாவை துணை
முதல்வராக்கி சமூக நீதியை நிலை நாட்டி உள்ளது. உண்மையில் அனைத்து சமூக மக்களின்
பிரதிநிதிகளுக்கும் அதிகாரப்பகிர்வை பல மாநிலங்களிலும் பாஜக ஏற்படுத்தி வருகிறது.
அதன் அம்சமாகவே இதைப் பார்க்க வேண்டும். அதைப் போலவே தேவேந்திர பாட்னாவிசை மராத்தா
அல்ல என்றோ, பெரும் சமூகம் சேர்ந்தவர் தங்கள் முதல்வராக இல்லையென்றோ மக்கள்
பார்க்கவில்லை. ஆகையால் தான் பாஜக சிவசேனா கூட்டணியால் பெரும்பான்மைக்குத் தேவையான
இடங்களைப் பெற முடிந்துள்ளது. மகாராஷ்ட்ராவில் பாஜக தனிப்பெரும் கட்சி என்ற
பெருமையை தக்க வைத்துள்ளது. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஒருவேளை ஆட்சி
அமைத்தால், அது அதிக ஆண்டுகள் நீடிக்காது என்பது தெரிந்தும், அதிகாரத்தில்
இருந்தால் மட்டுமே தமது சொந்த கட்சியைப் பலப்படுத்த முடியுமென்ற அடிப்படையில்தான்
அனைத்துக் கட்சிகளும் செயல்படுகின்றன என்பதே யதார்த்தமான உண்மை! இது
ஹரியானாவிற்கும் பொருந்தும்.


Posted on Leave a comment

மகாத்மா காந்தி கொலை வழக்கு – சாவர்க்கரின் வாக்குமூலம் – பகுதி 8 (நிறைவுப் பகுதி) | தமிழில்: ஜனனி ரமேஷ்

பகுதி 8 (நிறைவுப் பகுதி)
(27)   மத்திய அரசு
தொடர்பான எனது மனப்பாங்கு
இந்தப் பத்திரிகைச் செய்தியை நான் வெளியிட்ட
பின்னர், இந்திய அரசியலில் மிகப் பெரிய பிரளயமே ஏற்பட்டது. இந்தியாவில் விலங்குகளை
உயிருடன் அறுத்து ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இயக்கத்துக்குத் தலைமை வகித்து
வருகிறேன். ஆனால் 1947ம் ஆண்டு நமது தாய்நாடு பிரிவினைக்கு உள்ளானது. பாகிஸ்தான் தனி
நாடாகப் பிரிந்து சென்றாலும், அந்த இழப்பை ஈடு செய்ய, இந்துஸ்தானின் மிகப் பெரிய பகுதி
அந்நிய ஆளுமையிலிருந்து விடுதலை பெற்றது. அரசியல் விடுதலைக்காக நடைபெற்ற சுதந்திரப்
போரில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒரு போர் வீரனாகப் பங்கேற்றுக் கடுமையான பாதிப்புகளுக்கு
உள்ளானேன். நான் பட்ட துன்பங்களும், துயரங்களும், எனது தலைமுறையைச் சேர்ந்த வேறேந்த
நாட்டுப்பற்று மிக்கத் தலைவருக்கும் சளைத்ததல்ல. நிறைவாக நாடு விடுதலை பெற்று சுதந்திர
இந்தியா மலர்ந்தது. என் நாடு விடுதலை பெறுவதைக் கண்ணாரக் கண்டு மகிழ உயிருடன் இருப்பதற்கு
பாக்கியம் செய்திருக்க வேண்டுமென்றே உணர்கிறேன். எங்கள் நோக்கத்தின் ஒரு பகுதி இன்னும்
முழுமை பெறவில்லை என்பது உண்மை. என்றாலும், சிந்து முதல் பெருங்கடல்கள் வரை தாய்நாட்டை
மீட்டெடுத்து ஒருங்கிணைக்கும் விருப்பத்தை நாங்கள் கைவிடவில்லை. இந்த நோக்கத்தை நிறைவு
செய்வதற்குக் கூட முதலில் நாம் வெற்றி பெற்ற பகுதிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதால்,
எந்தக் கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தாலும், மத்திய அரசு வலுவாக இருக்க வேண்டியது
அவசியம் என்பதை மக்கள் மனத்தில் ஆழமாகப் பதிய வைக்க முயன்றேன்.
ஆட்சிப் பொறுப்பில் எந்த மாற்றத்தை விரும்பினாலும்
அது அரசியல் அமைப்புச் சட்டம் மூலம் மட்டுமே நடைபெற வேண்டும். வன்முறையோ, உள்நாட்டுக்
கலவரமோ ஏற்பட்டால் அது நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும். அந்நிய அரசை எதிர்த்து
நான் நடத்திய போராட்டத்தின் போது புரட்சிகரமான எண்ணங்கள் தவிர்க்க முடியாதது மற்றும்
நியாயமானதுதான். என்றாலும், நமது நாட்டைப் பயங்கரமான குழப்பங்களிலிருந்தும், உள்நாட்டுக்
கலவரங்களிலிருந்தும் காப்பாற்ற வேண்டுமானால், ஆயுத ஒடுக்குமுறையிலிருந்து, அரசியல்
அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட ஜனநாயகத்துக்கு உடனடியாக மாற வேண்டும். இதை நோக்கமாகக்கொண்டே,
தற்போது நெருக்கமாகி வரும் காங்கிரஸ் மற்றும் மகாசபா ஆகிய இரு அமைப்புகளும் பொதுவான
முன்னணியை அமைத்து நமது நாட்டின் மத்திய அரசின் கரங்களை வலுப்படுத்த வேண்டுமென விரும்பினேன்.
இதன் அடிப்படையிலேயே புதிய தேசியக் கொடியை ஏற்றுக் கொண்டேன். உடல்நலம் குன்றியிருந்த
நிலையிலும் அனைத்துக் கட்சி இந்து மாநாட்டுக்குத் தலைமை வகிக்க தில்லி சென்று மகாசபா
செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றேன். பெரும்பான்மை மகாசபா தலைவர்கள் மற்றும் சில காங்கிரஸ்
முன்னணி தலைவர்களும் என்னுடன் இணைந்து பொதுவான முன்னணியை அமைக்கக் கடுமையாக உழைத்துக்
கொண்டிருந்தனர். மத்திய அரசுக்கு முழுமையான ஆதரவளிக்க மகாசபா செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது.
மகாசபா தலைவர் டாக்டர் எஸ்.பி.முகர்ஜி மத்திய அமைச்சரவையில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டதை
நாங்கள் அனைவரும் மனதாரப் பாராட்டி வரவேற்றோம். இந்த நீதிமன்றத்தில் இவற்றின் சில விவரங்கள்
பதிவு செய்யப்பட்டுள்ளன (பேட்ஜ் சாட்சியம் பக்கம் 224 & 225 பார்க்கவும்). பி.டபிள்யூ
69 தாதா மகராஜும் கூறுகையில் ‘பம்பாயில் இந்து தலைவர்கள் நடத்திய மாநாட்டில் 1947 டிசம்பரில்
கலந்து கொண்டேன். வீர சாவர்க்கர் அந்த மாநாட்டுக்குத் தலைமை வகித்து அனைத்து இந்துக்களும்
ஒன்றுபட வேண்டும் என்றும், இந்தியா விடுதலை பெற்றதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும்
தங்கள் வேற்றுமைகளை மறந்து இந்திய அரசை வலுப்படுத்தி முழுமையான ஆதரவை வழங்க வேண்மென
வலியுறுத்தினார்’ என்றார். (பி.டபிள்யூ 69 பக்கம் 320).
கோட்சேவும் ஆப்தேவும் மகாசபையை நிராகரித்தனர்
இந்து மகாசபாவின் முன்னணித் தலைவர்களாக
நாங்கள் கருதப்பட்டாலும், மகாசபா உள்ளேயும், வெளியேயும், இந்து சங்கடன்களின் பெரிய,
தீவிர மற்றும் உறுதினான பிரிவு, நாங்கள் மேற்கொண்ட இந்தக் கொள்கையை எதிர்த்ததை
1947 ஆகஸ்ட் பிரிவினையிலிருந்தே கண்டுபிடித்தோம். மகாசபா உள்ளேயும், வெளியேயும், இந்திய
யூனியனை அங்கீகரிப்பது, பாகிஸ்தானை அங்கீகரிப்பதற்கு ஒப்பாகும் என்ற அடிப்படையில் எங்களை
வெளிப்படையாக எதிர்க்கத் தொடங்கினார்கள். மேலும் வங்காளம் மற்றும் பஞ்சாபிலுள்ள முஸ்லிம்
தீவிரவாதிகள் லட்சக் கணக்கான இந்துக்களைக் கொன்று குவித்த போது அவர்களைப் பாதுகாகத்
தவறிய மத்திய அரசுடன் ஒத்துப் போவது இந்துக்களுக்குச் செய்யும் துரோகம் என்றும் வாதாடினார்கள்.
இந்த வழக்கில் என்னைப் பாதுகாத்துக் கொள்ளத்
தேவையான விவரங்களை மட்டுமே நான் தெளிவுபடுத்தி என் வாக்குமூலத்தைக் கட்டுப்படுத்தி
கொள்ள விரும்புகிறேன். எனவே, பிரிவினை முதற்கொண்டே ஆப்தே, கோட்சே மற்றும் அவர்கள் குழுவினர்,
இந்தியா முழுவதுமுள்ள இந்து சங்கடன் முகாமிலுள்ள எதிர்ப்பு கோஷ்டியினருடன் கை கோத்துக்
கொண்டனர் என்பதை மட்டும் தெளிவுபடுத்துவது போதுமென எண்ணுகிறேன்.
(A) ஆப்தேவும் கோட்சேவும் கட்டாயப்படுத்தி வழிநடத்தப்படும் மனிதர்கள்
அல்ல
பண்டிட் கோட்சேவும், ஆப்தேவும், மன உறுதி
மிக்கவர்கள் என்றும், இந்து மதத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர்கள் என்றும், தங்கள்
மனத்துக்குச் சரியென்றால் மட்டுமே ஒரு விஷயத்தைச் செய்வபர்கள் என்றும், காரணம் ஒத்துப்
போனால் மட்டுமே ஒன்றைப் பின்பற்றுவார்கள் என்றும் ப்ராசிக்யூஷன் தரப்பே சாட்சியம் அளித்துள்ளது.
ஆதலால் அவர்கள் கட்டாயப்படுத்தி வழிநடத்தப்படும் மனிதர்கள் அல்ல என்பது தெளிவு. இந்து
மகாசபா தலைவர் என்ற முறையில் இந்து மகாசபா ஊழியர்களாக அவர்கள் எனக்கு எழுதிய கடிதங்களை
பராசிக்யூஷன் தரப்பு சான்றாவணங்களாகச் சமர்ப்பித்துள்ளது. அவற்றில் நான் என்ன செய்ய
வேண்டும், தலைமை உரையில் எவ்வாறு பேச வேண்டும், தலையங்கம் எவ்வாறு எழுத வேண்டும் என்று
‘யோசனையும்’, சில தருணங்களில் ‘அறிவுரையும்’ கூறியுள்ளனர். மேலும் அவர்கள் நம்பாத,
மகாசபாவின் சில தலைவர்களை நான் நம்புதுவது தவறு என்றும், அவர்கள் விருப்பம்போல் நான்
செயல்படாதது, இன்னும் குறிப்பாக, அக்ரணி பத்திரிகைக்கு நான் எழுதாததற்காக மறைமுகமாகக்
கண்டித்ததுடன், அவர்களது பத்திரிகைக்கு இருபதாயிரம் ரூபாய் வழங்காததால் ஏற்பட்ட இழப்புக்கு,
அவர்களுடைய வார்த்தையையே மேற்கோள் காட்டுவதென்றால், ‘மூழ்கிவிட்டது’ எனத் தங்களது அதிருப்தியை
வெளிப்படுத்தியதையும் அக்கடிதங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். (கடிதங்கள் ஜி1 (டி/30),
ஜி26 (பி/277), ஜி43 (பி/284), ஜி70 (பி/293) மற்றும் ஜிஏஎஸ்4 (பி/298 பார்க்கவும்).
(B) மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு
அளிக்க வேண்டும் என்பதுடன் அதில் பங்கேற்கவும் ஆதரவளித்த மகாசபாவின் தீர்மானத்தை ஆப்தே,
கோட்சே மற்றும் அவர்கள் குழுவினர் கண்டித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. இந்திய யூனியனை
அங்கீகரித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவளித்த டாக்டர் முகர்ஜி, பாரிஸ்டர்
என் சி சாட்டர்ஜி, டாக்டர் மூஞ்சி, போபட்கர், நான் மற்றும் ஏனைய தலைவர்கள் மகசபாவின்
‘வயதான தலைவர்கள்’ என்று அவர்களால் முத்திரை குத்தப்பட்டோம். வயதான தலைவர்கள் தலைமையில்
செயல்படும் மகாசபா, இந்து ராஜ்ஜியத்தைப் பாதுகாக்கத் தவறியதற்காக அவர்களது தினசரியான
‘அக்ரணி’ அல்லது ‘இந்து ராஷ்ட்ரம்’ பத்திரிகையில் தொடர்ந்து பல மாதங்கள் தாக்குதலுக்கு
உள்ளானார்கள். மேலும் இந்து இளைஞர்கள் ‘வயதான தலைவர்களின்’ தொடர்பு இல்லாமல், தனிப்பட்ட
முறையில் சுதந்திரமான ‘நடவடிக்கை அமைப்பை’ ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் புத்திமதி
சொல்லிக் கொண்டே இருந்தனர்.
(C) இந்த வாக்குமூலம் முழுவதும் ப்ராசிக்யூஷன்
தரப்பு சாட்சி மூலம் ஏற்கெனவே உறுதிப்படுத்திய விவரங்களை மட்டுமே நான் குறிப்பிட்டுள்ளேன்.
இதிலும் கூட அப்ரூவராக மாறி மன்னிப்புக் கோரிய பேட்ஜ், சாட்சியத்தில் பதிவு செய்த சில
தொடர்புடைய வரிகளை, துல்லியமான தகவல்களை நான் மேற்கோள் காட்டுகிறேன். 1947 ஆகஸ்ட்
15 இந்திய சுதந்திரம் பெற்ற நாளன்று வீர சாவர்க்கர் தனது இல்லத்தில் இந்து மகாசபா மற்றும்
தேசியக் கொடியை ஏற்றிக் கொண்டாடியது நினைவிருக்கிறது. தேசியக் கொடியைத் தத்யாராவ் தனது
இல்லத்தில் ஏற்றியதை இந்து மகாசபாவினர் ஆட்சேபித்தது உண்மைதான். அவர் தேசியக் கொடியை
ஏற்றியதை நானும் ஆட்சேபித்தேன். கோட்சே, ஆப்தே மற்றும் பலரும் ஆட்சேபித்தனர். இந்தியப்
பிரிவினையைத் தொடர்ந்து மத்திய அரசை (நேரு அரசை) வலுப்படுத்த வேண்டும் என்பதே மகாசபையின்
கொள்கை என்பதை நானறிவேன். இந்து மகாசபா நிறைவேற்றிய தீர்மானத்தை எல் பி போபட்கர் படித்தார்.
காங்கிரஸோடு தோளோடு தோள் நின்று நாம் உழைப்பதுடன், நேரு அரசுக்கு (மத்திய அரசுக்கு)
அதரவளிக்க வேண்டும் என்பதே அத்தீர்மானத்தின் சாராம்சம் ஆகும். பார்சியில் நடைபெற்ற
மராட்டிய மாகாண இந்து மகாசபா முன்னிலையில் 1946 டிசம்பரில் தீர்மானம் படிக்கப்பட்டது.
கோட்சேவும், ஆப்தேவும் இத்தீர்மானத்தைக் கடுமையாக எதிர்த்தனர். சமீபமாகச் சில தருணங்களில்
இந்து மகாசபாவின் கொள்கையை கோட்சேவும், ஆப்தேவும், தங்கள் ‘அக்ரணி’ மற்றும் ‘இந்து
ராஷ்ட்ரம்’ பத்திரிகைகளில் விமர்சித்தது உண்மையே (பேட்ஜ் சாட்சி பக்கம் 224 &
225).
இந்த நேரத்தில் என் உடல்நலம் மீண்டும்
பாதிக்கப்பட்டேன். தினசரிக் காய்ச்சல், 1948 ஜனவரி மாதம் முழுவதும் என்னைப் படுக்கையிலேயே
கிடத்தியது. திடீரென ஜனவரி 30ம் தேதி தில்லியில் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட
அதிர்ச்சியான செய்தியைக் கேட்டேன். பத்திரிகைச் செய்தி முகமைகள் என்னைத் தொலைபேசியில்
தொடர்ந்து அழைக்கவே, நான் கைது செய்யப்படுவதற்கு முன்பு, 1948 பிப்ரவரி 4ம் தேதி, கீழ்க்காணும்
பத்திரிகைச் செய்தியை வெளியிட்டேன். இந்தியாவின் அனைத்துப் பத்திரிகைகளிலும் அது வெளியானது.
இந்த வாக்குமூலத்துடன் எனது பத்திரிகைச் செய்தியை உறுதிப்படுத்தப் பம்பாய் ‘டைம்ஸ்
ஆஃப் இந்தியா’ 1948 பிப்ரவரி 7 ம் தேதி வெளியான செய்திக் குறிப்பை இணைத்துள்ளேன். அறிக்கை
பின்வருமாறு:-
தில்லியிலுள்ள இந்து மகாசபா தலைவர் எல்
பி போபட்கர் மற்றும் செயற்குழுவின் சில உறுப்பினர்களின் கூட்டு அறிக்கை, மகாத்மா காந்தியின்
கொடூரமான படுகொலை தொடர்பான உணர்வுகளை அதிகாரப்பூர்வமாக சிறப்பாக வெளியிட்டிருக்கிறது.
அத்துடன், இந்து மகாசபா என்பது ஜனநாயக மற்றும் பொது அமைப்பு என்பதையும் தெளிவுபடுத்தி
உள்ளது. இந்து மகாசபையின் துணைத் தலைவர்களுள் ஒருவன் என்ற முறையில், நானும் அவர்களது
உணர்வுகளுடன் உடன்படுகிறேன். தனிநபர் வெறுப்பு அல்லது கூட்டத்தின் வெறிச் செயல் காரணமாக
ஏற்படும் இதுபோன்ற சகோதரச் சண்டைகளை எந்தச் சமரசமும் இன்றி வன்மையாகக் கண்டிக்கிறேன்.
வெற்றிகரமான நாடு தழுவிய புரட்சிக்கும், புதிதாகப் பிறந்த தேசிய அரசுக்கும், சகோதரத்துவ
உள்நாட்டுச் சண்டையைக் காட்டிலும், குறிப்பாக அந்நிய சக்திகளால் தூண்டப்பட விரோதத்தை
விடவும், மோசமான எதிரி இருக்க முடியாது. வரலாறு உரைக்கும் இந்த உறுதியான எச்சரிக்கையை
ஒவ்வொரு நாட்டுப்பற்று மிக்க குடிமகனும் நெஞ்சில் நிறுத்தவேண்டும் – வி டி சாவர்க்கர்.
மேற்கூறிய பத்திகளில், என் மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுகளுக்கான பதிலைச் சுருக்கமாகப் பதிவு செய்துள்ளேன். என்னுடைய வழக்கறிஞர்கள்
அவர்களது வாதத்தின் போது சரியாகவும், முறையாகவும் இருக்கும் வகையில் விரிவாக எடுத்துரைப்பார்கள்.
என்னுடைய வழக்கில் தொடர்புடைய அனைத்து சட்ட விவரங்களையும் அவர்கள் கவனிப்பார்கள்.
நிறைவாக, எனக்கு எதிரான ப்ராசிக்யூஷன்
வழக்கைக் கூட்டாகவும், விரிவாகவும் ஆய்வு செய்த பிறகு கீழ்க்காணும் முக்கிய விவரங்களைச்
சமர்ப்பிக்கிறேன்:-
(A) கூறப்படும் சதித்திட்டத்தில் எனக்குத்
தனிப்பட்ட முறையில் நேரடித் தொடர்பு அல்லது பங்களிப்பு அல்லது அதன் கருத்துருவாக்கம்
அல்லது அதனைத் தொடர்ந்து நடைபெற்றதாகக் கூறப்படும் செயல்கள் எதிலும் நேரடிச் சாட்சி
இல்லை.
(B) என்னைக் குற்றவாளியாக்கும் வகையில்
எனது கையிருப்பிலோ, கட்டுப்பாட்டிலோ, எந்த ஆயுதமோ, வெடிமருந்தோ, அதைப் போன்ற எந்தப்
பொருளோ இல்லை
(C) பத்து ஆண்டுகளுக்கும் மேலான
கடிதத் தொடர்பில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களில்
என்னைக் குற்றவாளியாக்கும் வகையில் ஒரு வார்த்தை அல்லது சிறு குறிப்பு கூட இல்லை.
(D) என் மீதான முழு வழக்கு மூன்று அல்லது
நான்கு சொற்றொடர்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு தொடரப்பட்டுள்ளது. செவிவழிச் செய்தியாகவும்,
அதுவும் அப்ரூவர் ஒருவரால் கேட்டதாக ஒப்புக் கொள்ளப்பட்ட செவி வழிச் செய்தியாகவும்,
எந்த தனிப்பட்ட அல்லது நம்பகத்தன்மை கொண்ட சாட்சியால் முற்றிலும் உறுதி செய்யப்படாததாகவும்
உள்ளது.
(E) மேலே உள்ள பிரிவுகளில் (பிரிவு
26 & 27) மேற்கோள் காட்டப்பட்ட எனது பத்திரிகைச் செய்தி மூலம் மகாத்மா காந்தி மற்றும்
பண்டிட் ஜவாஹர்லால் நேரு ஆகியோரின் நாட்டுப் பற்று மற்றும் தியாகத்தின் மீது நான் உயர்ந்த
அளவு மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தது, பிரிட்டிஷ் அரசு அவர்களைக் கைது செய்த போதெல்லாம்
நான் கண்டித்தது, காந்திஜிக்கு ஏற்பட்ட தனிப்பட்ட சோகங்களிலும், துக்கங்களிலும் பங்கேற்றது,
அவர் விடுதலையாகும் போதும் மகிழ்ந்தது, அவரது 75 ஆவது பிறந்த நாளின் போது நீண்ட காலம்
வாழ வேண்டுமெனப் பிரார்த்தித்தது, எனது 60ஆவது பிறந்தநாளுக்குக் காந்திஜி வாழ்த்துச்
செய்தி அனுப்பியது என, மேற்கண்ட விஷயங்கள் அனைத்துமே, எங்கள் இருவருக்கும் இடையே கொள்கை
ரீதியான அல்லது நிஜமான வேற்றுமைகள் இருந்தாலும், அவை பொதுவிலோ, தனிப்பட்ட முறையிலோ,
ஆழ்ந்த வெறுப்பாக மாற நாங்கள் என்றைக்குமே அனுமதித்ததில்லை என்பதைத் தெளிவாக்குகிறது.
இதன் காரணமாகவே திடீரென அதிர்ச்சியூட்டும்
வகையில் மகாத்மா காந்தியின் படுகொலைச் செய்தியை நான் கேட்டதுடன், பத்திரிகை செய்தி
மூலம் அதைச் சந்தேகத்துக்கு இடமற்றக் கொடூரமான, சகோதரச் சண்டை என்று வெளிப்படையாகவே
கண்டித்தேன். இன்றைக்கும் கூட மகாத்மா காந்தியின் படுகொலையை சமரசமற்றப் படுகொலை என்றே
கண்டிப்பேன்.
மேற்கூறிய முக்கிய விவரங்கள் காரணமாக
ப்ராசிக்யூஷன் தரப்பு கிரிமினல் வழக்குக்குத் தேவையான நிலையான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால்,
என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறிவிட்டது
எனவே வாக்குமூலத்தில் விவரிக்கப்பட்ட
எனது வாதத்தைப் படித்துப் பார்த்த பிறகு என் மீது தொடுக்கப்பட்ட வழக்கு முழுக்க முழுக்க
சந்தேகங்களாலும், அனுமானங்களாலும் ஆனவை என்பதைப் ப்ராசிக்யூஷன் தரப்பு நம்புமெனத் தாழ்மையுடன்
சமர்ப்பிக்கிறேன். இது போன்ற சந்தேகங்கள் மற்றும் அனுமானங்களால் பிரச்சினைகளைக் குழப்பாமல்,
எனக்கு எதிராக உள்ளதைப் போன்ற வழக்கை மதிப்பீடு செய்து நீதிமன்றம் முடிவுக்கு வர உதவுவதே
அதன் கடமை என்பதை ப்ராசியூஷன் தரப்புக்கு நினைவூட்ட வேண்டுமெனக் கருதவில்லை.
எனது வாக்குமூலத்தை நிறைவு செய்வதற்கு
முன்பு ஒரு மனிதன் தன்னை நிரபராதி என்று நிரூபிப்பதற்குச் சாத்தியம் உண்டு என்பதால்
மீண்டும் உறுதியாக வலியுறுத்துகிறேன். என் மீது சுமத்தப்பட்ட எந்தக் குற்றத்தையும்
நான் இழைக்கவும் இல்லை, அதற்கான காரணமும் எதுவும் இல்லை. என் மீது குற்றம் சுமத்தப்பட்டது
போல் எந்தக் கிரிமினல் ஒப்பந்தத்துடனோ, சதித்திட்டத்துடனோ எனக்கு எந்தப் பங்களிப்பும்
இல்லை. குற்றச்சாட்டில் கூறியுள்ளபடி நான் எந்தக் குற்றத்துக்கும் உடந்தையாகவும் இல்லை,
குற்றச் செயல்கள் குறித்து அறிந்திருக்கவும் இல்லை.
எனவே, மாண்புமிகு கனம் நீதிபதி அவர்களுக்குத்
தாழ்மையுடன் சமர்ப்பிப்பது என்னவெனில், மேற்கூறியவை உள்ளிட்ட ஏனைய காரணங்களுக்காக,
எனது நடத்தை மீது சிறு களங்கம் கூட இல்லாமல், அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும்
விடுவித்து என்னை விடுதலை செய்ய ஆணையிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  
தில்லி                                                
 (ஓப்பம்) வி.டி. சாவ்சர்கர்
தேதி 1948 நவம்பர் 20                                     குற்றம் சுமத்தப்பட்டவர்
இணைப்பு A 
ஏ எஸ் பிடே எழுதிய ‘வீர் சாவர்க்கர் சூறாவளிப்
பிரச்சாரம்’ என்னும் நூலின் 262 பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவை (பிரிவு 26 (A) பக்கம்
46)
ஜவாஹர்லால் நேருவுக்குச் சிறைத் தண்டனை
பண்டித ஜவாஹர்லால் நேருவுக்கு நான்கு
ஆண்டு சிறைத் தண்டனை என்னும் செய்தி ஒவ்வொரு தேசாபிமானிக்கும் வருத்தமான அதிர்ச்சியைக்
கட்டாயம் ஏற்படுத்தி இருக்கும். எங்கள் இருவருக்கும் இடையே நிலவும் பல்வேறு தத்துவங்கள்
மற்றும் கொள்கைகள் காரணமாக நாங்கள் வேறு வேறு பாதைகளில் இயங்கிக் கொண்டிருந்தாலும்,
பண்டித ஜவாஹர்லால் நேருஜியின் பொது வாழ்வு முழுவதும் அவர் மேற்கொண்ட நாட்டுப் பற்று
மற்றும் மனிதாபிமான முனைவுகளைப் பாராட்டவும், அவர் சந்திக்கும் துன்பங்களுக்கு எனது
ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவிக்கவும் தவறினால், இந்து சபா உறுப்பினர் என்னும் கடமையிலிருந்து
தவறியவன் ஆவேன்.
‘காங்கிரசுக்குள் காந்தியக் கொள்கைகளிலிருந்து
மாறுபட்ட கட்சிகளின் தேசாபிமானத் தலைவர்களான சேனாபதி பாபத், பாபு சுபாஷ் சந்திர போஸ்
மற்றும் ஏனைய தொண்டர்களும், போர் தொடங்கிய உடனேயே இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்
கீழ் தண்டனை அளிக்கப்பட்ட போது, பண்டித ஜவாஹர்லால் நேருஜி உள்ளிட்ட காங்கிரஸின் இப்போதைய
செயற்குழுவும், வழிநடத்திய காந்திஜியும், குற்ற உணர்ச்சியுடன் அமைதியாக இருந்தார்கள்.
அத்தோடு, எந்தவொரு கண்டனத்தையோ, வருத்தத்தையோ தெரிவிக்கவில்லை. இந்நிலையில், அரசின்
கொள்கையையும், அடக்குமுறையையும், இந்து மகாசபா தனது கடமையிலிருந்து விலகி எச்சரிக்கத்
தவறவில்லை. வெஸ்ட்மினிஸ்டர் ஸ்டேசரில் பரிந்துரைத்ததுபோல் டொமினியன் அந்தஸ்தை உடனடியாக
அரசு வழங்கினால் மட்டுமே இந்திய மக்களின் உண்மையான மற்றும் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும்
என்றும், ஒடுக்குமுறை இன்னும் ஆழமான அதிருப்தியையே ஏற்படுத்தும் என்றும், இந்து மகாசபாவின்
செயற்குழு 1940 மே மாதமே இது தொடர்பான தீர்மானத்தை வலியுறுத்தி நிறைவேற்றியது. நம்பிக்கை
ஒன்றே நம்பிக்கையை ஏற்படுத்தும். அரசியல் அமைப்புச் சட்ட ரீதியான மேம்பாடு மட்டுமே
தேசிய அளவிலான ஒத்துழைப்பை ஏற்படுத்த முடியும்.
‘உலக யுத்தம் வெடித்த உடனேயே பண்டித ஜவாஹர்லால்ஜி
போன்ற மாமனிதர் அவசர அவசரமாக, அதீத ஆர்வத்துடன், உலக ஜனநாயகத்தைக் காக்கும் பிரிட்டிஷுக்கு
நிபந்தனையற்ற ஒத்துழைப்பை இந்தியா வழங்க வேண்டுமென்று அறிக்கை வெளியிட்டார். பிறகு,
மனக்கசப்புடன் அனைத்து ஒத்துழைப்பையும் திடீரெனக் கண்டித்தார். ‘இதன் காரணமாக இந்தியப்
பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பழிவாங்கும் நோக்கத்துடன் அவருக்குத் தண்டனை வழங்கும்
அளவுக்கு வேறு வழியின்றி அரசு தள்ளப்பட்டிருக்கிறதா என்ன?’ என்று நான் கேட்கும் ஒரு
சாதாரண கேள்வி தொடர்பாகக் கொஞ்சம் தீவிர கவனம் செலுத்துமாறும் அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
உலக யுத்தம் வெடித்தவுடன் ஐரோப்பாவிலுள்ள
ஒரு நாடு உலக ஜனநாயகத்தைக் காப்பாற்ற அல்லது சுயநலமற்ற வேறு முனைவுக்காகப் போரில் பங்கேற்றது
என்று காங்கிரஸ் வெளிப்படையாக, அவசர அவசரமாக, அதீத ஆர்வத்துடன் அறிக்கை வெளியிட்டது.
ஆனாலும், ஒவ்வொரு நாடும் தனது சொந்த தேசிய நலனுக்காகவும், ஏகாதிபத்திய இலட்சியத்துக்காகவுமே
களத்தில் இறங்கின. இதன் விளைவாக இந்து மகாசபா தொடக்கம் முதற்கொண்டே தங்கள் தேசிய நலன்களைப்
பெற ஒரே வழி ‘ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு’ மட்டுமே என்று தனக்குத் தானே சொந்தக் கொள்கையை
வகுத்துக் கொண்டது.
இந்தக் கொள்கையின் கீழ் ஒத்துழைப்பு என்பதும்
தொடர்புடைய ஆக்கப்பூர்வ விளைவு என்று சுட்டிக் காட்டப்படுவதும் தெளிவாக இல்லையா? நேர்மையான
ஒத்துழைப்பைப் பெற ஒடுக்குமுறை மட்டுமே சிறந்ததாகக் கருத முடியுமா?
இந்திய அரசு இந்தியாவைத் தொழில்மயமாகவும்,
ராணுவ பலமிக்கதாகவும் மாற்றவும், எதிரிகளின் படையெடுப்பு அல்லது உள்நாட்டுக் குழப்பம்
ஆகியவற்றிலிருந்து இந்தியாவைப் பாதுகாக்கவும், திட்டமிட்டு மேற்கொள்ளும் அனைத்து போர்
முனைவுகளிலும், இந்து சங்கடன்கள் இன்றைய சூழலில் தங்கள் சக்திக்கு உட்பட்டு பங்கேற்க
வேண்டும். இந்து சபா உறுப்பினர் என்ற வகையில் இதில் உண்மையாகவே ஆர்வமாக உள்ளேன். அமைதி
அல்லது நிர்பந்திக்கப்பட்ட ஒத்துழைப்பைப் பெற இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்
அடக்குமுறையை மட்டுமே நம்பியிருக்கிறது. இந்தியாவின் நிஜமான பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும்,
தடையாகவும், இதை விடத் தீவிரமாக வேறேதும் இல்லை. இவற்றையெல்லாம் தாமதமாக உணர்ந்து கொள்வதற்கு
முன்பாகவே, இந்திய அரசு மயக்கத்திலிருந்து விடுபட வேண்டுமென இந்திய அரசை வலியுறுத்தக்
கட்டாயப்படுத்தப்பட்டுள்ளேன்; நல்ல ஆரம்பமாக டொமினியன் அந்தஸ்தை வழங்குவதன் மூலம் உடனடியாக
அரசியல் அமைப்புச் சட்ட வழிமுறைகளுக்கான கதவுகளைத் திறந்து விட வேண்டும். இவ்வாறு நடைபெறும்
பட்சத்தில், இந்திய தேச நலனில் தங்களுக்குக் கடமை இருப்பதுடன், அரசுடன் இணைந்து செயல்படவும்,
நேருஜி போன்ற தலைவர்கள் உணர்வதை அரசு காண வாய்ப்புண்டு. ஒரு பிரிவினர் இந்தக் கொள்கைக்கு
உடன்படவில்லை என்றாலும், இந்திய மக்களுக்கும், பிரிட்டிஷ் அரசுக்கும் இடையேயான ஒப்பந்தத்தை
எதிர்க்கும் அவர்களது கிளர்ச்சி பொது மக்கள் மனத்தில் தானாகவே குறையத் தொடங்கும். இதனால்
அவர்களுடைய எண்ணமும் தானாகவே தோல்வி அடைந்துவிடும். எனவே இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்
கீழ் கடுமையான தண்டனைகள் பெறும் அளவுக்கு எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டார்கள்.
06/11/1940
இந்து சபாக்களுக்கு எச்சரிக்கை
வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பும், உங்கள் கடமையும்.
அனைத்து மாகாண மற்றும் உள்ளூர் உள்ளூர்
இந்து சபாக்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தீவிர கவனம் செலுத்த அவசர அழைப்பு விடப்படுகிறது.
ஐதராபாத் உள்நாட்டு எதிர்ப்பு இயக்கத்தைப் போன்று மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்
என்பதால் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி முக்கியம் மற்றும் அவசரமும் ஆகும். வரவிருக்கும்
குறைந்தபட்சம் பத்தாண்டுகளுக்கு பொதுச் சேவை, சட்டமன்றங்கள் தொடர்பான அனைத்து அரசியல்
அமைப்பு விவகாரங்கள், எதிர்வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவாகும் எண்கள் மற்றும்
தகவல்கள் அடிப்படையில் அட்டவணையிடப்பட்டு உறுதி செய்யப்படும்.
ஏனைய விஷயங்களைப் போன்றே காங்கிரஸின்
முட்டாள்தனமான கொள்கையால், முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பைப் புறக்கணித்த காரணத்தால்,
இந்துக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயினர். காங்கிரஸை வழிநடத்தும் எண்ணக் கோளாறு
கொண்ட காந்திஜியின் சில புதிய ‘உள் குரல்கள்’ இம்முறை கூட இந்துக்களின் நலன்களைத் தியாகம்
செய்வதுடன், போலித்தனமான தேசியத்தையும் திருப்திப்படுத்தும், ‘சத்தியாகிரகம்’ போன்ற
நடவடிக்கையை எடுப்பார்களா என்று சொல்ல முடியாது. எனவே இதன் காரணமாக இந்து மகாசபா தொடக்கத்திலிருந்தே
தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் உறுதியாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.
வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்துக்களின் ஜனத்தொகை வலிமையைத் துல்லியமாகப் பதிவு
செய்ய வலியுறுத்துவதுடன், இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கூட இந்துக்களின் நலன்களைப்
பாதுகாக்கத் தவறினால், தங்கள் வாழ்க்கையின் அனைத்துக் கோணங்களிலும் தங்களுக்குத் தாங்களே
இந்துக்கள் இரட்டைப் பாதிப்பை ஏற்படுத்திக் கொள்வார்கள் என்பதை உணர்த்தும் வகையில்,
சரியான நேரத்தில் களமிறங்கி இந்து நாட்டுக்குத் தனிப்பட்ட முனைவையும், வழிகாட்டுதலையும்
வழங்க வேண்டும்.
புயல் வேகப் பிரச்சாரத்தை மேற்கொள்ளுதல்
இதன் காரணமாக ஒவ்வொரு மாகாணம், மாவட்டம்
மற்றும் உள்ளூர் இந்து சபா உறுப்பினர்கள் இந்தியா முழுவதும் புயல் வேகப் பிரச்சாரத்தை
மேற்கொண்டு இந்துக்களின் எண்ணிக்கையை வரும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் துல்லியமாகப்
பதிவு செய்ய வேண்டும். அதே சமயம் சட்டத்துக்குப் புறம்பாக முஸ்லிம்கள் தங்களது எண்ணிக்கையை
மிகைப்படுத்திப் பதிவு செய்வதையும் எப்படியேனும் தடுத்தாக வேண்டும். மேலும் மக்கள்
தொகை எண்ணிக்கையின் சரியான பதிவு மட்டுமே முக்கியமல்ல. இந்துக்களின் நலன் அரசியல்,
சமூகம், மதம், பொருளாதாரம், வரலாறு என எல்லாப் பிரிவுகளிலும் பாதுகாக்கப்பட வேண்டுமெனில்
அனைத்து விவரங்களும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியமும் கட்டாயமும்
ஆகும்.
பிரச்சாரத்துக்கான எல்லைகளை வகுக்கவும்,
முறைப்படுத்தவும், கீழ்க்காணும் சில முக்கிய அறிவுறுத்தல்களை இந்தியாவிலுள்ள அனைத்து
மாகாண, மாவட்ட, உள்ளூர் இந்து சபாக்களும் வரையறைகளுக்கு உட்பட்டு உடனடியாகப் பின்பற்ற
வேண்டும்.
மாகாண இந்து சபாக்கள் முதற்கட்டமாக மாகாண
மக்கள் தொகைக் கணக்கெடுப்புக் கண்காணிப்பாளர் அலுவலகத்துடனான தொடர்பை ஏற்படுத்திக்
கொள்ள வேண்டும். மாவட்ட மற்றும் உள்ளூர் சபாக்கள் அவரவர் பகுதியில் பொறுப்பிலுள்ள மக்கள்
தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளுடன் அதேபோன்ற தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுவது அவசியமாகும்.
இணைப்பு B
‘பயோனீர்’ பத்திரிகை தேதியிட்ட 1943 பிப்ரவரி 22 (நகரப் பதிப்பு)
சான்றாவணம் டி.79
பிரிவு 26 (சி) பக்கம் 47 மேற்கண்டபடி
உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் காந்திஜிக்கு விண்ணப்பம்
சாவர்க்கர் ஆலோசனை
பம்பாய் பிப்ரவரி 20 : மகாத்மா காந்தியின்
உயிரைக் காப்பாற்ற அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதைத் தவிர இப்போதைக்குத்
வேறு வழியில்லை என்பதால் தேசிய அளவிலான கோரிக்கையை இந்து மகாசபைத் தலைவர் வி டி சாவர்க்கர்
பரிந்துரைத்துள்ளார்.
‘நமக்கு முன்னிருக்கும் இருண்ட சூழலை
நாம் மன உறுதியுடன் சந்தித்தே ஆக வேண்டும். நமக்கு அந்நியமாகவும், கருணையற்றும் இருக்கும்
வைஸ்ராய் லாட்ஜ் கதவுகளின் வாசலில் நிற்பதை விடுத்து மகாத்மா காந்தியின் படுக்கை அருகே
நமது கவனத்தைத் திருப்பி, எந்த தேச நலனுக்காக உண்ணாவிரதம் மேற்கொண்டாரோ, அந்த தேசத்துக்குச்
சேவை புரியத் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டுமென வேண்டுகோள் விடுக்க வேண்டும்’ என்கிறார்
சாவர்க்கர்.
‘இந்த நிமிடம் வரை மகாத்மா காந்திஜியை
விடுதலை செய்து அவரது உயிரைக் காப்பாற்ற எங்களால் இயன்ற வரை அரசிடம் வேண்டுகோள் விடுத்தோம்.
ஆனால் உண்ணாவிரதம் தொடர்பாக நம்பிக்கை மீது நம்பிக்கை வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
மனிதாபிமான முறையில் வைக்கும் வேண்டுகோளும் அரசின் மனத்தில் எந்த வகையான மாற்றத்தையும்
ஏற்படுத்தப் போவதில்லை. அரசின் இந்த முடிவைக் கோடிக் கணக்கான மக்கள் ஏற்காமல், அதன்
மனப்பாங்கைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். நேரம் மிக வேகமாக ஓடிக் கொண்டே இருப்பதால்,
விமர்சனம் மற்றும் எதிர்ப்பென ஒரு நிமிடத்தைக் கூட நம்மால் வீணடிக்க முடியாது. மகாத்மாவின்
விடுதலையை நாம் அரசுக்கு வைக்கும் வேண்டுகோள், ராஜிநாமா அல்லது தீர்மானங்கள் மூலம்
பெற முடியாது.
‘மகாத்மா காந்தி உயிரிழப்பதற்கு முன்பாக
அவரது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேறெந்த நியாயமான கேள்வியும் தடையாக இருக்க முடியாது.
மகாத்மா காந்தி உண்ணாவிரதத்தைத் தொடங்கும் போது அதை உயிருக்கான இடர்ப்பாடாகக் கருதாமல்
கடுமையான சோதனையை வெற்றி கொள்ளவே விரும்புவதாகக் கூறினார். இதன் காரணமாக இதுவொரு திறன்
உண்ணாவிரதம் ஆகும். எத்தனை நாள்கள் என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றிக் கூறினாலும்,
அதுவொரு அரைகுறைக் கணக்கே ஆகும்’.
உயர்ந்த நோக்கம்
இரண்டாவதாக, தேவையற்ற சிறு விஷயங்களுக்கு
அதிக முக்கியத்துவம் அளிப்பதைத் தவிர்க்கும் வகையில் உயர்ந்த நோக்கம் ஒன்றுள்ளது. மகாத்மா
காந்திஜியின் வாழ்க்கை நாட்டின் சொத்து என்பதால் அவருக்கே சொந்தமானதல்ல. நமது நச்சரிப்புகள்
அல்லது முகஸ்துதிகளுக்கு அரசு இறங்கி வருவதை விடவும், தேசிய நலனுக்காக அவர் இறங்கி
வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். தான் எடுத்த முடிவுகள் தேச நலனுக்குக் கேடு விளைவிக்கும்
என்பதைத் தெரிந்து கொண்டாலோ, ராஜ்கோட் மற்றும் ஏனைய இடங்களில் மேற்கொண்ட சபதங்களைப்
போன்று தான் மேற்கொண்ட சபதங்களில் ஏதேனும் சிறு தவறுகள் காணப்பட்டாலோ, தேசிய நலனைக்
கருத்தில் கொண்டு அவற்றை மகாத்மா காந்திஜி பலமுறை புறக்கணித்திருப்பதை நாம் அறிவோம்.
நிறைவாக சாவர்க்கர் கூறுவதாவது: ‘எனவே
தில்லி கருத்தரங்கில் பங்கேற்கும் அனைத்து கனவான்களுக்கும் நான் தாழ்மையுடன் கேட்பது
என்னவெனில் ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காமல், மகாத்மா காந்திஜி தனது உண்ணாவிரதத்தை உடனடியாகக்
கைவிட வேண்டுமென்று நீங்கள் மட்டுமின்றி அவரது உயிரைக் காப்பாற்ற ஏற்கெனவே துடித்துக்
கொண்டிருக்கும் நாடு முழுவதுமுள்ள நூற்றுக் கணக்கான நிலையங்களிலுள்ள பிரதிநிதிகள் அனைவரும்
கூட்டாகக் கையெழுத்திட்டு வேண்டுகோள் விடுக்க வேண்டும்’.
இணைப்பு C
ஆனந்த் பஜார் பத்திரிகை தேதி 1944 பிப்ரவரி 24 (சான்றாவணம் டி.78)
பிரிவு 26 (எஃப்) பக்கம் 50 மேற்கண்டபடி
வி டி சாவர்க்கர் கீழ்க்காணும் தந்தியைக்
மகாத்மா காந்திஜிக்கு அனுப்பி உள்ளார்:
கஸ்தூரி பாய் மரணத்துக்கு என் ஆழ்ந்த
அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம்பிக்கையான மனைவியாகவும், அன்பான அன்னையாகவும்,
கடவுள் மற்றும் மனிதனுக்கான சேவையில் மேன்மையான மரணத்தைத் தழுவியுள்ளார். இந்த நாடே
உங்கள் துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறது.
இணைப்பு D
‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகை’ 1948 பிப்ரவரி 7 பிரிவு 29,
பக்கம் 55 மேற்கண்டபடி
சாவர்க்கரின் கருத்து
பிப்ரவரி 4 அதாவது கைதாவதாற்கு முதல்
நாள் இந்து மகாசபாவின் முன்னாள் தலைவர் வி டி சாவர்க்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
‘மகாத்மா காந்தி படுகொலை தொடர்பாகத் தில்லியிலுள்ள இந்து மகாசபா தலைவர் மற்றும் செயற்குழு
உறுப்பினர்கள் சிலர் கூட்டாக விடுத்த அறிக்கை, தம் உணர்வுகளை அதிகாரப்பூர்வமாக சிறப்பாக
வெளியிட்டிருக்கிறது. அத்துடன், இந்து மகாசபா என்பது ஜனநாயக மற்றும் பொது அமைப்பு என்பதையும்
தெளிவுபடுத்தி உள்ளது. இந்து மகாசபையின் துணைத் தலைவர்களுள் ஒருவன் என்ற முறையில்,
நானும் அவர்களது உணர்வுகளுடன் உடன்படுகிறேன். தனிநபர் வெறுப்பு அல்லது கூட்டத்தின்
வெறிச் செயல் காரணமாக ஏற்படும் இதுபோன்ற சகோதரச் சண்டைகளை எந்தச் சமரசமும் இன்றி வன்மையாகக்
கண்டிக்கிறேன். வெற்றிகரமான நாடு தழுவிய புரட்சிக்கும், புதிதாகப் பிறந்த தேசிய அரசுக்கும்,
சகோதரத்துவ உள்நாட்டுச் சண்டையைக் காட்டிலும், குறிப்பாக அந்நிய சக்திகளால் தூண்டப்பட
விரோதத்தை விடவும், மோசமான எதிரி இருக்க முடியாது. வரலாறு உரைக்கும் இந்த உறுதியான
எச்சரிக்கையை ஒவ்வொரு நாட்டுப்பற்று மிக்க குடிமகனும் நெஞ்சில் நிறுத்தவேண்டும்.
நிறைவு
Posted on Leave a comment

விடுதலைக்கு முந்தைய சமய இதழ்கள் | அரவிந்த் சுவாமிநாதன்

தமிழில் சமயம் வளர்க்கும் இதழ்களை இன்றைக்கு விரல் விட்டு எண்ணி விடலாம். சமய இதழ்கள் என்ற பெயரில் இன்றைக்கு ஆன்மிக, பக்தி இதழ்களும், ஜோதிடம் சார்ந்த இதழ்களுமே அதிக அளவில் வெளிவருகின்றன. ஆனால், நம் தேசத்தின் விடுதலைக்கு முன்பு சைவம், வைணவம், சைவ சித்தாந்தம், அத்வைதம் சார்ந்து பல இதழ்கள் வெளியாகி இருக்கின்றன. ஆதினங்கள் வெளியிட்ட சமயம் சார்ந்த இதழ்கள் தவிர்த்து தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாகவும் பலர் பல இதழ்களைத் தொடங்கி நடத்தியிருக்கின்றனர். அக்காலச் சமய இதழ்களைப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகமே இக்கட்டுரை.

தத்துவபோதினி
இந்து சமயம் சார்ந்த தமிழின் முதல் இதழ் இதுதான். 1864ல், சென்னை பிரம சமாஜத்தைச் சேர்ந்த சுப்பராயலு செட்டியார், ராஜகோபாலாசாரியார், ஸ்ரீதரன் ஆகியோர் ஒன்றிணைந்து இவ்விதழைத் தொடங்கினர். சாந்தோமில் தத்துவ போதினி அச்சுக்கூடம் என்ற ஒன்றை நிர்மாணித்து அதன் மூலம் இவ்விதழை வெளியிட்டனர். இவ்வச்சுக்கூடம் அமைப்பதற்கு வள்ளல் பாண்டித்துரையின் தந்தை பொன்னுசாமி தேவர் அவர்கள் அக்காலத்தில் 1000 ரூபாய் நன்கொடையளித்திருக்கிறார். இவ்விதழில் சமாஜக் கொள்கைகளுடன் இந்துமத, சமுதாய முன்னேற்றம் சார்ந்த விஷயங்கள் அதிகம் இடம்பெற்றன. தமிழர்களால் துவங்கி நடத்தப்பட்ட முதல் இந்து சமயம் சார்ந்த இதழ் இது எனலாம்.
இதில் சமயம் மட்டுமல்லாது பெண்கள் நலம், கல்வி பற்றியும் மிக விரிவான கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. குறிப்பாக பால்ய மணத்தைக் கண்டித்தும், கைம்பெண் மணத்தை ஆதரித்தும், பெண் கல்வியின் இன்றியமையாமை குறித்தும் பல கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன.
ஆகஸ்ட் 1865 இதழில் வெளியாகி இருக்கும் ஆசிரியர் கட்டுரையிலிருந்து ஒரு சிறு பகுதி இது.
‘தத்துவ போதினிகர்த்தர்களுக்கு..
சோதரர்களே! நம்மதேசத்தாருக்கு மிகுந்த க்ஷேமகரமான ஒரு பிரயத்தனம் ரங்கநாதசாஸ்திரி யவர்களால் செய்யப்படுகிறதென்று கேள்விப்பட்டு, அதை நம்மவரனைவர்க்குந் தெரிவிக்க நான் விருப்பங்கொண்டிருக்கின்றமையால் நீங்கள் தயை செய்து இந்தச் சஞ்சிகையை உங்கள் பத்திரிகையில் பிரசுரப்படுத்துவீர்களென்று கோருகிறேன்.
நமதுதேசத்தில் பாலுண்னும் பெண்களுக்கு விவாகம் செய்வதினாலும், பெண்களுக்குப் புனர்விவாகம் செய்யாமையினாலும், விளைகின்ற அளவற்ற தீமைகளை நேராய்க்கண்டும் கேட்டும் அனுபவித்து மிருப்பதினால், இத்தீமைகளை நிவர்த்திக்க மேற்கண்ட ரங்கநாதசாஸ்திரிகள் வெகுநாளாய் யோசித்திருந்ததாய்க் காண்கிறது. பிரகிருதத்தில் சங்கராசாரியர் மடம் இவ்விடம் வந்திருக்கின்றமையால் அந்த மடாதிபதியின் சகாயத்தால் அவர் இப் புகழ்பொருந்திய கோரிக்கையை நிறைவேற்ற யத்தனித்ததாய் கேள்விப்படுகிறேன். இவர் பிரயத்தனத்தின் உத்தேசியம் என்னவெனில் பிரகிருதத்தில் நடந்தேறிவரும் பொம்மைக் கல்லியாணங்களை நிறுத்திவிட்டு பெண்களுக்கு வயதும் பகுத்தறிவும் வந்தபிறகு கல்லியாணம் செய்விக்கவேண்டுமென்பது தான். இப்பால் நிஷ்பக்ஷபாதமாய் உரைக்கத்தக்க பண்டிதர்களை விசாரிக்குமளவில், இத்தன்மையான விவாஹத்துக்கு சாஸ்திர பாதகமில்லையென்றும், ஆகிலும், புதுமையானதாகையால் உலகத்தார் ஒப்பமாட்டார்களென்றும் விடையுரைத்தார்கள். லவுகிகயுக்திகளை யோசிக்கையில் அளவற்ற நன்மையளிக்கத்தக்க இக்காரியத்துக்குச் சாஸ்திர பாதகமும் இல்லாவிடில் அதையனுசரிக்க என்ன தடையுண்டோ என்னாலறியக்கூடவில்லை. கடவுளின் கிருபையினால் இக்காரியம் கைக்கூடிவருமெனில் இதற்காக முயற்சியும் ரங்கநாதசாஸ்திரியவர்களுடைய பேரும் பிரதிஷ்டையும் இந்த பூமியுள்ளவரையில் நிலைத்திருக்குமென்பதில் சந்தேகமில்லை.’
1865 முதல் இதே குழுவினரால் ‘விவேக விளக்கம்’ என்ற இதழும் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
இந்துமத சீர்த்திருத்தி
சென்னை மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆர்வமும் சமயப்பற்றும் உள்ளவர்கள் பல இதழ்களைத் துவங்கி நடத்தினர். தீவிர மதப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த கிறித்துவ மதத்தினரின் செயல்களைக் கண்டிக்கும் விதமாகவும் அவர்களை விமர்சித்தும் பல இதழ்கள் வெளிவந்தன. அவ்வாறு இந்து மதத்தில் செய்ய வேண்டிய சீர்த்திருத்தங்களை வலியுறுத்தி வந்த இதழே ‘இந்துமத சீர்த்திருத்தி’ என்பது. இது, 1883 முதல் பாளையங்கோட்டையிலிருந்து வெளிவந்தது. கே. ஆறுமுகம் பிள்ளை என்பவர் இதன் ஆசிரியராக இருந்தார்.
ப்ரம்மவித்தியா
தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம் என இருமொழி இதழாக வெளிவந்த இதழ். 1886 முதல் சிதம்பரத்தில் இருந்து வெளியான இவ்விதழை கு.சீனிவாச சாஸ்திரியார் ஆசிரியராக இருந்து வெளியிட்டார். சமயம், வைதீக நெறிகள், தத்துவ விளக்கங்கள் சார்ந்த விஷயங்கள் இவ்விதழில் அதிகம் வெளியாகியிருக்கின்றன. சுவையான வாசகர் கடிதங்களும், அதற்கான அறிவார்ந்த பதில்களும் வெளியாகியுள்ளன. அந்நிய மதப் பிரசாரங்களைக் கண்டித்துப் பல கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன.
1888ம் வருடத்து இதழ் ஒன்றிலிருந்து ‘இந்துவுக்கும் பாதிரிக்கும் சம்பாஷணை’ என்ற தொடரிலிருந்து ஒரு சிறு பகுதி :-
இந்து : உங்கள் தேசத்தார் கிறிஸ்து மதஸ்தரானது நியாயத்தாலா? நம்பிக்கையாலா? அக்கிரமத்தாலா?
பாதிரி : நம்பிக்கையால் தான்.
இந்து : நியாயமில்லாமல் நம்புவது விவேகமா? அவிவேகமா?
பாதிரி : கடவுளிடம் நியாயம் பார்க்கப்படாது.
இந்து : கடவுள் அநியாயஸ்தரோ?
பாதிரி : அல்ல, அல்ல. நியாயஸ்தர் தான்.
இந்து : நியாயஸ்தரானால் அவரிடம் அநியாயம் இருக்குமா?
பாதிரி : எப்படிப் பேசினாலும் வாயை யடக்குகிறீர்களே?
இந்து: இயற்கையாக மூக்கில்லாதவன் பிறரையும் அவ்வாறு செய்யக் கருதி வெட்டவெளியினின்று பரம்பொருளே! பாபநாசா! மூக்கை யிழந்த எனக்குப் பிரத்தியக்ஷமாக நீ தரிசனந் தந்தாய் என்று சொல்லி நன்றாய் ஆநந்தக் கூத்தாடி, மற்றவரையும் மூக்கையறுத்துக் கொண்டு வரச் செய்து, அவர்களும் இதனுண்மையை அறிந்து கொண்டு தாங்களும் பிறர் மூக்கை யறுக்கப் பிரயத்தனப்படுவதற்கும் கிறிஸ்துப் பாதிரிகளுக்கும் வித்தியாசமிருக்கின்றதா?
பாதிரி: பாதிரிகள் உண்மையாய் உழைப்பவர்கள். மூக்கறையர்களுக்கும் பாதிரிகளுக்கும் ஒற்றுமை சொல்லப்படாது.
இந்து: பாதிரிகளும் பொய்யை மெய்போல் காட்டிப் பேசுகிறார்கள். மூக்கறையரும் அப்படித்தான் பேசுகின்றார்கள்.
பாதிரி: உபாத்தியாயரே! உமது மதசித்தாந்தம் ஆக்ஷேபங்களில்லாம லிருக்கின்றனவா?
இந்து: எனது மதத்திற்கு உம்மைக் கூப்பிடும்போது, உமது சங்கைகளுக்கு சமாதானம் சொல்வேன். எனக்கு செலவு தாரும்.
பாதிரி : போய் வாரும்.
*
1888 ஜனவரி இதழில் வெளியான ஒர் அறிவிப்பு.
‘அறிவிப்பு’
‘இந்து டிராக்ட் ஸொஸைட்டி’
தாய் தந்தைகள் நெடுநாள் அருந்தவம் புரிந்து பெற்றெடுத்த பிள்ளைகளைப் பாதிரிகள் துர்ப்போதனை செய்து வெகு சுலபமாய்க் கிறிஸ்தவராக்கின்றதைத் தடுக்கும் பொருட்டு, இந்துமதாபிவிருத்தி செய்யும் பொருட்டும் 1887௵ ஏப்ரல் ௴ 27 உ சென்னையில் இந்து டிராக்ட் ஸொஸைட்டியென ஓர் சங்கம் ஸ்தாபிக்கப் பட்டுள்ளது, அதில் மெம்பராகச் சேர விருப்பமுள்ள உள்ளூரார்க்கும் வெளியூரார்க்கும் குறைந்தது சந்தா 1-4-0. இச்சங்கத்துக்குத் தருமமாகப் பொருளளிப்போர் அளிக்கலாம். இச்சங்கம் திரவிய சகாயம் செய்யும் தாதாக்கள் கைகளையே நோக்குகின்றது, இந்து மதாபிமானிகள் ஒவ்வொருவரும் இதை ஆதரிக்க வேண்டும், இச்சங்கத்தில், தற்காலம் ஒவ்வொரு தடவைக்கும் பதினாயிரம் வீதம் சிறு பத்திரங்கள் அச்சடித்து மெம்பர்களுக்கனுப்புவதோடு கிறிஸ்தவரால் உபத்திரவமுண்டாகும் பலவூர்களிலும் அனுப்பி இலவசமாகப் பரவச் செய்யப்படுகின்றன. இன்னும் அனேக காரியங்கள் செய்ய வேண்டும். யாவும் பொருளாலேயே ஆகவேண்டுமென அறிந்த விஷயமே. இதற்காக இந்து டிராக்ட் ஸொஸைட்டி தருமமென இங்கிலீஷ், தமிழ் தெலுங்கு இம்மூன்று பாஷைகளும் சேர்த்து அச்சிட்டு ஸ்டாம்புடனே புத்தகங்கள் வெளிப்பட்டிருக்கின்றன, அதில் இஷ்டமான தொகை கையொப்பமிட்டு பொக்கிஷதார் கையெழுத்திட்ட ரசீதின் பேரில் ஏஜெண்டுகளிடத்திலாவது பில் கலெக்டரிடத்திலாவது பணம் கொடுக்க வேண்டியது, மற்றப்படி யாரிடத்திலும் பணம் தரப்படாது.
இச்சங்கத்தைப் பற்றி யாதேனுமறிய விரும்புவோர் அரை அணா லேபிலாவது ரிப்ளை கார்ட்டாவது அனுப்ப வேண்டியது.
கஅஅஎ௵ இங்ஙனம்
நவம்பர் மீ 30 உ பொன்னரங்கபிள்ளை
சென்னை ௸ சங்கத்தின்
அக்கிராசனாதிபதி
– இவ்வாறு பல்வேறு பகுதிகளைக் கொண்டிருந்த இவ்விதழுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால், இது, 1888 முதல் மாதமிருமுறை இதழாக வெளியானது. இரண்யகர்ப்ப ரகுநாத பாஸ்கர சேதுபதி அவர்களின் பொருளுதவியால் இவ்விதழ் நடத்தப் பெற்றது. இப்பத்திரிகையின் ஆசிரியரான சீனிவாச சாஸ்திரியார், 1888 முதல் ‘சன்மார்க்க போதினி’ என்ற இதழையும் நடத்தி வந்திருக்கிறார்.
ஞான சாகரம்
மறைமலையடிகளால் 1902ல் ஆரம்பித்து நடத்தப்பட்ட சைவ சமயம், தனித்தமிழ் சார்ந்த இதழ். சைவம் சார்ந்த விழுமிய கருத்துக்களும், தனித்தமிழ்க் கொள்கைகளை விளக்கும் கட்டுரைகளும் கொண்டது. பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் என்பதை விளக்கும் வகையில் தொடர்ந்து பல கட்டுரைகள் இவ்விதழில் வெளியாகியிருக்கின்றன. மாணிக்கவாசகர் காலம், சைவ சமயப் பெரியோர்களின் வாழ்க்கை வரலாறு, கருத்து விளக்கக் கட்டுரைகள், மறைமலையடிகள் ஆற்றிய சொற்பொழிவுகள், அவரது தொடரான குமுதவல்லி போன்றவை இவ்விதழில் வெளியாகி இருக்கின்றன. மிக நீண்ட காலம் நடைபெற்ற இதழ் இது.
இகபரசுகசாதனி
கொ.லோகநாத முதலியார் இதன் ஆசிரியர். 1903, மே மாதம் முதல் சென்னையிலிருந்து வெளியான இந்து சமயம் சார்ந்த 16 பக்கங்கள் மட்டுமே கொண்ட இதழ். இம்மை, மறுமை நல்வாழ்விற்கான பல்வேறு கட்டுரைகளைத் தாங்கி வந்திருக்கிறது. ஔவையார் சரித்திரம், பொய்யாமொழிப் புலவர் சரித்திரம், மத ஆராய்ச்சி, நாயன்மார் வரலாறு என பல விஷயங்களைத் தாங்கிய கட்டுரைகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.
ஆரியன்
கும்பகோணத்தில் இருந்து ஆகஸ்ட் 1906 முதல் வெளிவந்த இதழ். ஆசிரியரின் பெயர் வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை. ‘லோகோபகார சிந்தையுள்ள பிராம்மண ஸன்னியாஸி ஒருவர்களது பார்வையில் நடத்தப்படுகின்றது’ என்ற குறிப்பு காணப்படுகிறது. யோகி போகி ஸம்வாதம், ஸ்ரீ சங்கரபகவத்பாத சரித்திரம், பிரபஞ்ச நாடகம், நசிகேதஸ் போன்ற கட்டுரைகள் காணப்படுகின்றன.
வேதாந்த தீபிகை
1910ல் சென்னையிலிருந்து மாதந்தோறும் வெளியான வைணவம் சார்ந்த தமிழ்ச் சிற்றிதழ். அஹோபில மடத்துச் சிஷ்ய சபையின் சார்பாக இவ்விதழ் வெளிவந்திருக்கிறது. ஆரம்பத்தில் எஸ். வாஸூதேவாச்சாரியார் இதன் ஆசிரியராக இருந்தார். மணிப்பிரவாள நடையில் வைணவம் மற்றும் இந்து சமயம் சார்ந்த பல செய்திகளைக் கொண்டதாக இவ்விதழ் இருந்தது. ஸம்ஸ்கிருத ஸ்லோகங்களும் அதன் விளக்கங்களும் நிறைய இடம் பெற்றிருக்கின்றன. விசிஷ்டாத்வைத விளக்கம், ஜீவாத்மா-பரமாத்மா தத்துவ விளக்கம், பாகவதம் போன்ற பல செய்திகள் இவ்விதழில் காணப்படுகின்ரன. ‘கடிதங்கள்’ என்ற பகுதி சுவையான பல விவாதங்களைக் கொண்டதாக உள்ளது. வாஸூதேவாச்சாரியாருக்குப் பின் வழக்குரைஞர் திவான்பகதூர் டி.டி.ரங்காச்சார்யரின் ஆசிரியர் பொறுப்பில் இவ்விதழ் மிகச் சிறப்பாக வெளிவந்திருக்கிறது.
சித்தாந்தம்
சித்தாந்தம், 1912ல், சென்னையில் இருந்து வெளிவந்தது. சைவ சித்தாந்த சமாஜத்தின் மாதாந்திரத் தமிழ் இதழ். இதன் ஆசிரியர் சித்தாந்த சரபம், அஷ்டாவதானி பூவை கலியாண சுந்தர முதலியார். (இவர் துறவு நெறி மேற்கொண்ட பின் சிவஸ்ரீ கல்யாணசுந்தர யதீந்திரர் என்று அழைக்கப்பட்டிருக்கிறார். ‘மணவழகு’ என்ற புனைபெயரில் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.) இது சைவ சித்தாந்தக் கருத்துகளையும், சமய, தத்துவக் குறிப்புகளையும் உள்ளடக்கமாகக் கொண்டது. ஜே.எம்.நல்லுசாமிப்பிள்ளை, தி.அரங்கசாமிநாயுடு, கி.குப்புசாமி, மெய்கண்ட முதலியார், பண்டிதை அசலாம்பிகை அம்மாள், காசிவாசி செந்திநாதையர், துடிசை கிழார் அ.சிதம்பரனார், நாகை ஸி. கோபாலகிருஷ்ணன் எனப் பல சித்தாந்தப் பெருமக்கள் இவ்விதழில் கட்டுரைகளை எழுதியுள்ளனர். சைவ சித்தாந்தக் கருத்துக்கள் வினா – விடையாக பல்வேறு விளக்கங்களுடன் இடம் பெற்றிருக்கின்றன.
பாஷை என்பதை ‘பாழை’ என்றே இந்த இதழ்களில் குறிப்பிட்டுள்ளனர். ஆகம விளக்கம் பற்றிய கட்டுரைகளும் உள்ளன. பூவை கலியாண சுந்தர முதலியாரின் மறைவிற்குப் பின் வி.உலகநாத முதலியார் இதன் ஆசிரியராக இருந்து நடத்தியிருக்கிறார். சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் மூலமாக வெளிவந்த இவ்விதழ், தற்போதும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
சைவம்
சென்னை சிவனடியார் திருகூட்டம் என்றழைக்கப்படும் சைவ மஹா சபையின் மாதாந்திர இதழ் இது. சென்னை ஏழுகிணறு பகுதியில், 1914ல் ஆரம்பிக்கப்பட்ட இவ்விதழின் நோக்கம் சைவத்தின் பெருமையைப் பரப்புவதும், பழமையைப் போற்றுவதும். இருக்கம் ஆதிமூல முதலியார் இதன் ஆசிரியர். சைவத்தின் உயர்வு, சைவ சமயத்தின் உண்மை, அதனைப் பரப்பச் செய்ய வேண்டியது பற்றிய கட்டுரைகள் வெளியாகியுள்ளன. பெரிய புராணம் தொடராக வெளியாகியுள்ளது. சாத்திர விளக்கம், நாம விளக்கம் என பல விளக்கக் கட்டுரைகள் காணப்படுகின்றன. சிவஞான போதம், தேவார, திருவாசகப் பாடல் விளக்கங்கள், நூல் அறிமுகப் பகுதி போன்றவையும் அமைந்துள்ளன. இதழின் தலையங்கம் ஒன்றில், வாசிப்போர் உள்ளம் நெகிழும்படி கீழ்கண்டவாறு அதன் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.
சந்தாதாரர்களுக்கு விஞ்ஞாபனம்
இக்காலத்தில் சைவ சமயபரிபாலனம் செய்வாரில்லை. கை ஒழுக்கங்கள் குன்றிப்போயின. ஒவ்வோர் காலத்தில் ஒவ்வொர் சைவாபிமானிகள் வெளிப்பட்டுச்செய்யும் முயற்சிகளும் அவ்வவர்களோடு அழிகின்றன. இப்படியே அடியேன் செய்யும் முயற்சிகளும் என்னோடேயழிந்து போகலாம். ஆதலால் நான் இப்போது தொடங்கி நடத்திவருவன என்றும் நிலைபெற்று மேலுமேலும் விருத்தியடையுமாறு பெருமுயற்சிகள் செய்துகொண்டிருக்கிறேன். நான் இன்னும் இரண்டொரு வருடம் உயிரோடிருந்தால் இம்முயற்சி இறைவனருளால் முற்றுப்பெறும். இதற்கிடையில் பத்திரிகைக்கு விஷயங்கள் எழுதுவதில் என்மனம் செல்லவில்லை. அவரவர்கள் பலபல உதவிகளை நாடி எழுதுங் கடிதங்களைக் கவனிக்கவும் இயலவில்லை. பத்திரிகை தாமதித்து அனுப்பநேரிடுகிறது. இக்குறைகளை சிலகாலம்வரை அன்பர்கள் பொறுத்துக்கொள்ளுமாறு பிரார்த்திக்கிறேன்.
– இ. ஆதிமூல முதலியார்.
ஆரிய தர்மம்
இந்துக்களின் தர்ம நெறிகளை விளக்கும் வைதீக சமயம் சார்ந்த இதழ். காஞ்சி காமகோடி பீடாதிபதி அவர்களின் ஆசியுடன் கும்பகோணத்தில் இருந்து 1914 முதல் வெளிவந்திருக்கிறது. ப.பஞ்சாபகேச சாஸ்திரிகள் இதன் ஆசிரியர். ஸ்ரீரங்கம் ஸ்ரீவாணி விலாஸ பிரஸ்ஸில் அச்சிடப்பட்டு வெளியாகியிருக்கிறது. சங்கரரின் கொள்கைகளை முதன்மையாகக் கொண்ட இவ்விதழில் ஸ்ரீ சங்கரர் சரித்திரம், ஸ்ரீ சங்கர தத்துவங்கள், அம்பரீஷ சரித்திரம், ஈச்வர பூஜா விதானம், வியாஸகலீயம், மாயாசாஸ்திரம், ஸ்மிருதிகள், கல்வி, ஒழுக்கம், தவம், ஞான யோக விளக்கம் உள்பட பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. வசதியுள்ள பலர் நிதியுதவி செய்து இவ்விதழ் வளர்ச்சிக்கு ஊக்குவித்துள்ளனர்.
ஞானசூரியன்
ஞானசூரியன் யோக, ஞானத் தத்துவ விளக்கமாக 1922 ஏப்ரல் முதல் வெளிவந்த நூல். இரண்டு வருடங்கள் மட்டுமே வெளிவந்த இதன் ஆசிரியர் கருணையானந்த பூபதி அவர்கள். திருவாரூரைத் தலைமையகமாகக் கொண்டு இவ்விதழ் வெளியானது. இந்து சமயத்தின் யோக, ஞான, சமயக் கருத்துக்கள், தத்துவ விளக்கங்கள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. கூடவே முகமது நபியின் சரித்திரமும் தொடராக வெளியாகியுள்ளது. இஸ்லாமியக் கருத்து விளக்கங்களும் நிறைய இடம் பெற்றுள்ளன. ஆம். கருணையானந்த பூபதி பிறப்பால் ஓர் இஸ்லாமியர். அவரது இயற்பெயர் முகமது இப்ராஹிம். ’மணிமுத்து நாயகம்’ என்ற புனை பெயரிலும் எழுதியுள்ளார்.
‘வேதாந்த பாஸ்கரன்’, ‘ஞானக் களஞ்சியம்’,‘ஞானயோக ரகசியம்’, ’சர்வ மதஜீவகாருண்யம்’, ‘கந்தப்புகழ்’, ‘முருகப்புகழ்’, ‘திருப்பாவணி’,’காவடிக் கதம்பம்’, ‘முருகர் தியானம்’, ‘தெட்சணாமூர்த்தி பக்தி ரசக் கீர்த்தனை’ உள்ளிட்ட பல நூல்களை இவர் எழுதியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதிக்குப் பெயர் சூட்டியவர் இவர்தான். கருணாநிதியின் தந்தை, தாய் இருவருமே கருணையானந்தபூபதியின் அத்யந்த பக்தர்கள்.
சன்மார்க்க பானு
ஜனவரி 1925 முதல் ராணிபேட்டையிலிருந்து பிரதிமாதம் பௌர்ணமி தோறும் வெளிவந்த இதழ் இது. இதன் ஆசிரியர் பண்டிட் பி. ஸ்ரீநிவாசலு நாயுடு. சரியை, கிரியை, ஞானம், யோகம் இவற்றை மையப்படுத்தி வெளியான இதழ். விழிப்புணர்வைத் தூண்டும் சமூக நலன் சார்ந்த செய்திகளும் இவ்விதழ்களில் இடம் பெற்றிருக்கின்றன.
ஹரிஸமய திவாகரம்
1923ல் துவங்கப்பட்ட வைணவ சமய இதழ். ஸ்ரீராமாநுஜரின் தத்துவம் கொள்கைகள், பெருமைகளை விளக்கும் இதழ். பண்டிதர் ஆ.அரங்கராமாநுஜன் இதன் ஆசிரியர். மதுரை ஹரிஸமய திவாகர அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டு இரு மாத இதழாக வெளியானது. வைஷ்ணவர்களின் பெருமை, ஸ்ரீபாஷ்யகாரர் சரித்திரம், ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம், கம்பநாட்டாழ்வார், தத்வத்ரய விசாரம், யக்ஷ ப்ரச்நம், வைஷ்ணவ தர்மம், ஸ்ரீராமாநுஜ சித்தாந்தப் ப்ரகாசிகை, ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்த சாரம், திவ்விய சூரி சரிதம், ருக்மாங்கத சரிதம், திருக்குறள் சமயம், திருக்குறள் கடவுள் வாழ்த்து ஆராய்ச்சி, நசிகேதோபாக்யானம், யாதவாப்யுதயம், கம்பராமாயணம் அரங்கேறிய காலம் என பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர், மு.இராகவையங்கார், உ.வே.நரசிம்ஹாச்சாரியார், உ.வே. அப்பணையங்கார் ஸ்வாமி, வி.எஸ்.ராமஸ்வாமி சாஸ்திரிகள் போன்ற பலர் இவ்விதழில் கட்டுரைகள் எழுதியுள்ளனர். வைணவ மடம் சார்ந்த பலர் இவ்விதழ் வளர்ச்சிக்கு நிதியுதவி செய்து ஊக்குவித்துள்ளனர்.
ஸன்மார்க்கப் பர்தர்சினீ
மதுரையிலிருந்து, தேதியூர் சுப்பிரமணிய சாஸ்திரிகளின் ஆசிரியர் பொறுப்பில் 1933, செப்டம்பர் முதல் வெளியான மாத இதழ் இது. ராமாயணம், மகாபாரதம், அவற்றின் சிறப்பான தத்துவங்கள், கீதையின் பெருமை, சங்கர விஜயம் போன்றவற்றைப் பற்றிய தொடர் கட்டுரைகளைத் தாங்கி வந்திருக்கிறது. புராணக் கதைகளும், கட்டுரைகளும் வெளியாகியிருக்கின்றன. ஆலய நுழைவுப் போராட்டம் பற்றிய செய்திகளும் வெளியாகியுள்ளன.
திருப்புகழ் அமிர்தம்
திருப்புகழின் பெருமையை விளக்க வெளிவந்த இந்த இதழ் கிருபானந்த வாரியாரின் ஆசிரியர் பொறுப்பில் காங்கேயநல்லூரில் இருந்து வெளியானது. 1935ல் துவங்கப்பட்ட இவ்விதழில் முருகனின் பெருமை, திருப்புகழின் அருமை, சிறப்புகள், முருகன் அருள் புரியும் விதம், ஆலயங்கள் பற்றிய செய்திகள் இடம் பெற்றன. திருப்புகழ் பாடல்களின் விரிவான விளக்கவுரை மாதந்தோறும் இடம் பெற்றது.
அம்ருதலஹரி
பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஆசிரியராக இருந்து நடத்திய வைணவ சமய இதழ். 1938ல் காஞ்சியில் இருந்து வெளிவந்த இவ்விதழ் பின்னர் ஸ்ரீரங்கத்தில் இருந்து வெளிவந்தது. பிற்காலத்தில் ஸுந்தரராஜாச்சாரியார் இதன் ஆசிரியராக இருந்தார். வைணவம் சார்ந்த பல தத்துவ விளக்கங்கள், விவாதங்கள் மிக விரிவாக இடம் பெற்றுள்ளன. நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சியில் நடக்கும் அரிய விழாவான அத்திகிரி வைபவம் எனப்படும் அத்தி வரதர் வைபவம் பற்றிய சுவையான செய்திகள் இவ்விதழ் ஒன்றில் காணப்படுகிறது. வடகலை, தென்கலை விவாதங்கள், என குழு சார்ந்த விவாதங்களும் இடம் பெற்றுள்ளன. பல க்ரந்தங்களுக்கு, பாடல்களுக்கு பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் விளக்கவுரை அவரது மேதைமையைப் பறை சாற்றுகிறது. பாஷ்ய விளக்கங்கள், முமூக்ஷுப்படிக்கான விளக்கங்கள் போன்றவை மணிப்ரவாளமாக எழுதப்பட்டுள்ளன. இவ்விதழின் ஆசிரியர் அண்ணங்கராச்சாரியார், பிற்காலத்தில் ‘ஸ்ரீராமநுஜன்’ என்ற இதழையும் துவங்கி நடத்தியிருக்கிறார்.
மாத்வ மித்திரன்
மத்வ சமய விளக்கக் கொள்கைகள் கொண்ட மாத இதழ். 1940களில் கும்பகோணத்தில் இருந்து வெளிவந்த இவ்விதழின் ஆசிரியர் ரங்கனாதாச்சாரிய பாகவதர் இவ்விதழில் பகவத்கீதை விளக்கம், ஹரிகதாம்ருதஸாரம், ஸ்ரீமாத்வ விஜயம், குரு ஆபோத தௌம்யர் போன்ற பல தலைப்புகளில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. மாத்வ சமயம் சார்ந்து வெளிவந்த அக்காலத்தின் ஒரே தமிழ் இதழ் இதுதான். இது பற்றி அந்த இதழில் காணப்படும் குறிப்பு:- ‘மாத்வர்களின் சாஸ்திரீயமான தமிழ் பத்திரிகை இது ஒன்றே. ஸ்ரீ மத்வ மதத்தின் அரிய இரகசியங்கள், ஸம்பிரதாயங்கள், மாகாத்மியங்கள், புராண சரிதைகள், மாத்வ வகுப்பு புண்ய புருஷர்களின் சரித்திரங்கள், வேதாந்த சர்ச்சைகள், தர்ம சாஸ்திர விசாரங்கள், தினசரி விரதாதி குறிப்பு, மகாபாரத தாத்பர்ய நிர்ணயம் முதலான அநேக கிரந்தங்களின் மொழிபெயர்ப்புகள் முதலிய எண்ணிறைந்த விஷயங்கள் நிறைந்திருக்கின்றன. ஸ்ரீ மத்வ மதத்தை சுலபமாய் அறிந்து கொள்ள இப்பத்திரிகைக்கு உடனே சந்தாதாரர்களால் சேருங்கள்’ என்கிறது.
ஞானசம்பந்தம்
1941 டிசம்பரில் ஆரம்பித்து தருமபுர ஆதினத்தாரால் நடத்தப்பட்ட இதழ் இது. ஒடுக்கம் ஸ்ரீ சிவகுருநாதத் தம்பிரான் ஆசிரியராக இருந்து நடத்தியிருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் இவ்விதழில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சைவ சமயத்தின் சிறப்பு, வேதத்தின் பெருமை, ஆகமத்தின் முக்கியத்துவம், ஞான சம்பந்தரின் அருள் பாடல் விளக்கங்கள், தருக்கசங்கிரக விளக்கம் என பல்வேறு செய்திகளைத் தாங்கி இவ்விதழ் வெளிவந்திருக்கிறது. சி.கே.சுப்பிரமணிய முதலியார், கா.ம.வேங்கடராமையா, பாலூர் கண்ணப்ப முதலியார், பண்டிதர் நாராயணசாமி அடிகள், சுவாமிநாத சிவாசாரியார் உள்ளிட்ட பலர் இவ்விதழில் கட்டுரைகள் எழுதியுள்ளனர். சமயம் சார்ந்த நூல்களின் நூல் விமர்சனமாக ‘மதிப்புரை’ப் பகுதி இவ்விதழில் இடம் பெற்றுள்ளது. சைவ சமயத்தின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்வதற்காக வெளிவந்த இதழ் இது என்கிறது பத்திரிகைக் குறிப்பு.
பிற்காலத்தில் இவ்விதழை சோமசுந்தரத் தம்பிரான் ஆசிரியராக இருந்து நடத்தினார். அவரது ஆசிரியர் பொறுப்பில் வெளிவந்தபோது சமூக நலன் சார்ந்த கட்டுரைகளும், தொல்காப்பிய விளக்கம், திருக்குறள் மேன்மை போன்ற இலக்கியக் கட்டுரைகளும் ராசி பலன் போன்ற பகுதிகளும் இடம் பெற்றுள்ளன.
இவை தவிர்த்து மேலும் பல சமயம் சார்ந்த இதழ்கள் வெளியாகியிருக்கின்றன. ‘ஜே.கிருஷ்ணமூர்த்தியே அடுத்த அவதார புருடர்’ என்பதை வலியுறுத்தி தியாசபிகல் சொஸைட்டி சார்பாக 1909 முதல் ‘பூர்ண சந்திரோதயம்’ என்ற மாத இதழ் வெளியாகியிருக்கிறது. (ஜே.கே. அதை உதறிவிட்டுச் சென்றது வரலாறு) ‘தர்மபோதினி’ என்ற சமய, சமூக இதழ், தர்மபுரியிலிருந்து ஏப்ரல் 1924 முதல் வெளியாகியுள்ளது. காரைக்குடியை அடுத்த பலவான்குடியிலிருந்து ’சிவநேசன்’ என்னும் பெயரில் தமிழ் மற்றும் சைவ சமயம் சார்ந்த இதழ் 1933ல் வெளிவந்துள்ளது. வீர சைவம் சார்பாக 1934 முதல் ’சிவபக்தன்’ என்ற இதழ் வெளிவந்துள்ளது. வைணவம் சார்ந்த கருத்துக்களையும், திருப்பதி வேங்கடவன் பெருமையையும் மக்களிடையே பரப்ப தஞ்சாவூரின் கோவில்வெண்ணியிலிருந்து 1942 மே மாதம் முதல் ஸ்ரீவேங்கட க்ருபா என்ற இதழ் வெளியாகியிருக்கிறது. சந்தானகோபாலன் ஆசிரியராக இருந்து நடத்தியிருக்கிறார். திருக்கோயில் என்ற இதழ் தமிழக அரசின் சார்பாக பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
மேற்கண்ட பட்டியலில் இடம் பெறாத அக்காலச் சமய நூல்கள் பலவும் இருக்கக் கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை. வாசிக்கக் கிடைத்தவற்றின் தொகுப்பே இக்கட்டுரை.















Posted on Leave a comment

ஹிந்து – முஸ்லிம் பிரச்சினை (1924) | லாலா லஜ்பத் ராய் | தமிழில்: சுப்ரமணியன் கிருஷ்ணன்

பகுதி – 8
உலகளாவிய இஸ்லாமிய வாதம் என்னும் திவாலான
கருத்தாக்கம்
இதனுடன், இந்தியா ஒரு ‘தாருல்-ஹராப்’
(போர்க்களம்) என்பதால், ஒவ்வொரு நல்ல முஸ்லிமும் அதை விட்டுவிட்டு ஒரு முஸ்லிம் நாட்டிற்குக்
குடிபெயர வேண்டும் என்று உலமாக்களின் ஃபத்வாவைச் சேர்த்துக்கொள்ளலாம். ஹிஜ்ரத் இயக்கம்
எவ்வாறு முடிந்தது என்பதை இத்தருணத்தில் நாம் அறிவோம்; அதன் மீது எவ்வளவு பணம் வீணடிக்கப்பட்டது,
அதன் மூலம் எவ்வளவு துன்பங்கள் ஏற்பட்டன என்பதையும் நாம் அறிவோம். இது குறித்த சிறந்த
வர்ணனை ஒன்றை கான்ஸ்டான்டினோபிளில் நான் கண்டேன். நான் அங்கு தங்கியிருந்த மூன்றாவது
அல்லது நான்காவது நாளில், இரண்டு இளம் இந்திய முஸ்லிம்களை வீதியில் நடந்து சென்றபோது
சந்தித்தேன். அவர்கள்தான் முதலில் என்னை அணுகினர். கான்ஸ்டான்டினோபிளில் அவர்கள் எப்படி
இருக்கிறார்கள் என்று நான் கேட்டபோது,
​​அவர்களில் ஒருவர் கிட்டத்தட்ட கண்ணீருடன் வெடித்தார். அவர் எப்போதாவது
இந்தியாவுக்குத் திரும்பினால், இந்தியா ஒரு போர்க்களம் என்ற போதனை எவ்வளவு முட்டாள்தனமானது
என்பதையும் முழு உலகமும் முஸ்லிம்களின் வீடு என்ற கருத்து எவ்வளவு அபத்தமானது என்பதையம்
தனது முஸ்லிம் மக்களுக்குக் கட்டாயம் சொல்வேன் என்று கூறினார். அவர் 1921ம் ஆண்டைச்
சேர்ந்த மகாஜரின்களின் ஒருவர்.  ஆப்கானிஸ்தானில்
இருந்து துருக்கிஸ்தான் வழியாக ரஷ்யா வரை முஸ்லிம் ஆசியா முழுவதும் பயணம் செய்திருக்கிறார்.
பின்னர் அங்காரா மற்றும் கான்ஸ்டான்டினோபிலுக்குத் திரும்பினார். அவரது அனுபவம் மிகவும்
கசப்பானதாகவும் அவரது நிலை மிகவும் பரிதாபகரமானதாகவும் இருந்தது.  அவர் உலகளாவிய இஸ்லாமியவாதத்தை மிகவும் வலுவான வார்த்தைகளில்
கண்டித்தார்.
துருக்கி மற்றும் எகிப்தில் நான் சந்தித்த
மற்ற இந்திய முஸ்லிம்களிடமிருந்தும் நான் கற்றுக்கொண்டது இதுதான், இது இயற்கையானது.
எகிப்தில் ஒரு பெங்காலி முஸ்லிம் கிலாபத் இயக்கத்தை கண்டித்த விதத்தை என்னால் வார்த்தைகளில்
எழுத முடியாது.  பிரபலமான பழமொழியான இரத்தம்
தண்ணீரை விட அடர்த்தியாக இருக்கிறது என்பதை அது உறுதிப்படுத்தியது. எகிப்தைத் தவிர
முஸ்லிம்கள் வாழும் வேறு எந்தப் பகுதியும் அதிக வசதியானதாகவும் வளமானதாகவும் இல்லை.
எல்லா இடங்களிலும் அரசுகளே தங்கள் மக்களைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. மக்களுக்கோ
தங்கள் தினப்படி வாழ்க்கையைத் தள்ளுவதே பெரும்பாடாக உள்ளது. முஸ்லிம்களாக இருந்தாலும்,
வெளிநாட்டினரை அவர்கள் ஆதரிப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? மகாஜரின்களை
தன் நாட்டிலிருந்து வெளியேற்றும்படி சொன்ன காபூல் அமீரின் செய்கை நியாயமானதே. பிற்காலத்தில்,
இராஜதந்திர காரணங்களுக்காக, பிரிட்டிஷ் விரோத முஸ்லிம்கள் என்று கூறப்படும் சிலரை தனது
பிரதேசங்களை விட்டு வெளியேற்றும்படி அவர் கட்டாயப்படுத்தப்பட்டார். இதேபோல், தங்கள்
சொந்த நிலத்தில் இவ்வளவு வறுமை இருக்கும்போது துருக்கியர்கள் இந்திய முஸ்லிம் மகாஜரின்களுக்கு
உதவி செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது அபத்தமானது.
உண்மை என்னவென்றால், துருக்கி, ஆசியா
மைனர், சிரியா, பாலஸ்தீனம் மற்றும் எகிப்தில் நான் மேற்கொண்ட பயணங்கள் உலகளாவிய இஸ்லாமியத்தைப்
பற்றிய எனது நம்பிக்கையை முற்றிலும் இழக்கச் செய்துள்ளது.  நான் அதை எங்கும் காணவில்லை. ஒவ்வொரு நாடும் தன்
சொந்தப் பிரச்சினைகளில் மும்முரமாக உள்ளது, அந்தப் பிரச்சினைகள் மிகவும் சிக்கலானவையாகவும்
குழப்பமானவையாகவும் இருப்பதால் அந்த நாடுகள் மற்ற எவற்றிலும் ஈடுபட நேரமே இருப்பதில்லை.
துருக்கி ஒரு பேரழிவுகரமான போரின் விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. போர் அதன் ஆண்
வர்க்கத்தின் உழைக்கும் கரங்களைப் பலவீனப்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாகவே அவர்கள்
பர்தா முறையை ஒழித்து, உணவு உற்பத்திக்கு பெண்களை நம்ப வேண்டியிருக்கிறது.  துருக்கியில் இருந்து கிறிஸ்தவர்களை வெளியேற்றுவதும்,
அதற்கு ஈடாக கிரேக்கத்திலிருந்து  முஸ்லிம்களைப்
பெறுவதும் அவர்களின் கைகளில் உள்ள மிகப்பெரிய பிரச்சினையாகும். உள் எதிரிகளிடமிருந்து
(கிரேக்கர்கள், ஆர்மீனியர்கள் மற்றும் யூதர்கள் போன்றவை) தங்களைப் பாதுகாப்பதில் உள்ள
சிக்கலே அவர்களுக்குப் போதுமானது. உள் மற்றும் வெளிப்புற அச்சங்கள் ஒரு திறமையான இராணுவத்தைப்
புதுப்பித்து வைத்திருக்க அவர்களைக் கட்டாயப்படுத்துகின்றன. இவை அனைத்தும் ஒரு பெரிய
நிதி நெருக்கடிக்கு இட்டுச் செல்கின்றன. இவை எல்லாவறுக்கும் மேலாக, அவர்கள் தங்களுக்குள்
ஒன்றிணைவதில்லை. மற்ற நாடுகளைப் போலவே, துருக்கியிலும், அரசியலில் வித்தியாசமாக சிந்திக்கும்
கட்சிகள் உள்ளன. கிலாஃபத்தை ஒழிப்பது மற்றும் கலீஃபா மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்த
மற்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்படுவது தற்போதைய அரசியலமைப்பின் நலன்களுக்காக வேறு வழியில்லாமல்
அவர்கள் எடுத்த நடவடிக்கையாகும். அவர்கள் தங்கள் அதிகாரத்தை பலப்படுத்தவும், தங்கள்
நிர்வாகத்தை சீர்திருத்தவும், தங்கள் நாட்டை யூரோப்பின் சபைகளில் முதல் வகுப்பு நிலைக்கு
உயர்த்தவும் மிக உன்னதமான முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், மதம். அரசியல் விஷயங்களில்
முஸ்தபா கமலுடனும் அவரது கட்சியுடனும் முரண்படுகிறவர்களும், கிலாஃபத்தை ஒழிப்பதை எதிர்த்தவர்களும்
கூட, இந்தக் கேள்வியை மீண்டும் எழுப்புவதை தேசபக்தியின் அடிப்படையிலான காரணங்களால்
எதிர்க்கின்றனர். துருக்கியின் நிலையைப் பற்றிய எனது ஆய்வில் இருந்து துருக்கியர்கள்
தீவிர தேசியவாதிகள் என்று தீவிரமாக நம்புகிறேன். தற்போதைய தருணத்தில் அவர்களின் ஒரே
அக்கறை அவர்களின் நாடு. அவர்கள் துருக்கியர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், நிர்வகிக்கவும்,
ஆட்சி செய்யவும் விரும்புகிறார்கள். துருக்கியர்கள் நல்லவர்களாகவே  எனக்குத் தோன்றினர், அவர்கள் தோற்றத்தில் சுத்தமாகவும்,
மற்றவர்களுடனான நடவடிக்கைகளிலும் சுத்தமாகவும் இருந்தார்கள். ஆண்கள் குல்லா அணிவதைத்
தவிர, அவர்களின் உடை மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை கிட்டத்தட்ட முற்றிலும் யூரோப்பிய
மயமானவை.
அவர்களின் மதத்தைப் பற்றி எனக்கு எதுவும்
தெரியாது, ஆனால் திறந்த மனத்துடன் இருக்கும் ஒருவர் யதார்த்தத்தை சரியாகக் கணிக்க முடியும்.
துருக்கியில் மதவாதம் அதிகம் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் பர்தாவை ஒழித்துவிட்டார்கள்.
பெண் குமாஸ்தாக்கள் தபால் அலுவலகம் மற்றும் பிற பொது அலுவலகங்களில் முக்காடு இல்லாமல்
வேலை செய்வதை நான் கண்டேன். ஆயிரக்கணக்கானோர் [பெண்கள்] ஐரோப்பிய உடையில் துருக்கிய
மேல் ஆடைகளுடன் பொது வீதிகளில் செல்வதையும், முக்காடு இல்லாமல் பொதுத் தோட்டங்களில்
நடப்பதையும் நான் கண்டேன். என்னைப் பொருத்தவரை அவர்களின் ஆடை மிகவும் ஒழுக்கமானதாகத்
தோன்றியது. இது கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளின் நாகரிகங்களை மிகவும் பொருத்தமான முறையில்
இணைத்தது. பலதார மணங்களை ஒழிக்கும் விதத்தில் துருக்கியர்கள் கடுமையான விதிமுறைகளை
வெளியிட்டுள்ளனர். அதை முற்றிலுமாக ஒழிக்காவிட்டாலும் மிகப் பெரிய அளவில் கட்டுப்படுத்துவதை
இந்த விதிமுறைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன. துருக்கிய மொழியைத் தவிர வேறு எதையும் பயன்படுத்துவதற்கு
எதிராக மிகக் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதை நான் கண்டேன். துருக்கியர்கள்
அல்லாதவர்களை இராணுவத்தில் சேர்ப்பதற்கு எதிராக (சில விதிவிலக்குகளுக்கு உட்பட்டு)
மிகவும் கடுமையான விதிகளும் உள்ளன. வாய்ப்பாட்டு அல்லது கருவி இசைக்கு எதிரான எந்தவொரு
பாரபட்சத்தையும் நான் கவனிக்கவில்லை. நடனம் கூட உயர் வட்டங்களில் அனுமதிக்கப்படுகிறது.
ஆனால் மதுவைப் பயன்படுத்துவதைக் கண்டு நான் வருந்தினேன்.
சுருக்கமாகச் சொன்னால், கான்ஸ்டான்டினோபிளிலோ
அல்லது ஆசியா மைனரின் பிற நகரங்களிலோ துருக்கியர்கள் யூரோப்பின் மற்ற குடிமக்களை விட
அதிக மதநம்பிக்கை உடையவர்கள் என்பதற்கான அறிகுறிகள் எதையும் நான் எதுவும் காணவில்லை,.
எல்லா இடங்களிலும் நான் சமூக, தேசிய வேறுபாடுகளையும் தனிப்பட்ட விருப்பங்களின் அறிகுறிகளையும்
கண்டேன். என்னைச் சந்தித்த கான்ஸ்டான்டினோபிளில் வசிக்கும் இந்திய முஸ்லிம் குடியிருப்பாளர்களால்
எனது எண்ணங்கள் உறுதி செய்யப்பட்டன. அல்-அஹார் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களின்
குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்ட அறைகள் ரவாக்.ஐ-ஹனுத் (அதாவது இந்துக்களுக்கான ஒரு
விடுதி) என்று அழைக்கப்பட்டதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். சிரியாவிலும். பாலஸ்தீனத்திலும்
முஸ்லிம் சமூகம் சந்திக்கின்ற மிகப்பெரிய பிரச்சினை அவர்களின் சுதந்திரத்தை எவ்வாறு
மீட்டெடுப்பது அல்லது பராமரிப்பது என்பதுதான்.
பாலஸ்தீனத்தில் முஸ்லிம்கள் யூதர்களை
விட பெரும்பான்மையில் உள்ளனர். கிறிஸ்தவ யூரோப் பாலஸ்தீனத்தில் ஒரு வலுவான, நன்கு பாதுகாக்கப்பட்ட
உல்ஸ்டரை உருவாக்கி வருகிறது, இது முஸ்லிம்கள் தங்கள் இழந்த மேலாதிக்க நிலையை மீண்டும்
பெறுவார்கள் என்ற நம்பிக்கையை அளிக்கவில்லை. எல்லா இடங்களிலும் யூதர்களின் நன்கு கட்டப்பட்ட,
எல்லா வசதிகளும் உடைய  காலனிகள் வளர்ந்து வருவதைக்
காண முடிகின்றது, அவர்களின் திறமையான கல்வி, பரோபகார நிறுவனங்களின் உதவியாலும் திறன்வாய்ந்த
தொழில்துறை நிறுவனங்களாலும் இது நிகழ்ந்துவருகிறது. அவர்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின்
நிலங்களை வேகமாக வாங்குகிறார்கள். அமெரிக்காவிலிருந்தும் யூரோப்பிலிருந்தும் இதற்கான
பணம் கொட்டப்படுகிறது. ஒரே ‘அதிருப்தி’ அளிக்கின்ற அம்சம் என்னவென்றால், யூதர்களின்
ஏழ்மையான வர்க்கமும், அந்த இனத்தின் ஒடுக்கப்பட்ட உறுப்பினர்களும் மட்டுமே நிரந்தர
குடியேற்றத்திற்காக பாலஸ்தீனத்திற்கு குடிபெயர்கின்றனர். சிரியாவில் கிறிஸ்தவர்கள்
மக்கள் தொகையில் மிக முக்கியமான பகுதியாக உள்ளனர். இந்த இரண்டு நாடுகளிலும் முஸ்லிம்களுக்கும்
கிறிஸ்தவர்களுக்கும் இடையில் எந்தவிதமான இன வெறியும் பொறாமையும் இல்லை.
உலக முஸ்லிம்களை விட இந்திய முஸ்லிம்கள்
உலகளாவிய இஸ்லாமிய வாதம் மூலமாக தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்று நான் பயப்படுகிறேன்.
இது மட்டுமே ஒரு ஐக்கிய இந்தியாவை உருவாக்குவதைக் கடினமாக்குகிறது. இந்த விஷயத்தில்
குறைந்தபட்சம், சர் சையத்தின் கொள்கை கிலாஃபாத் இயக்கத்தினரின் கொள்கையை விடச் சிறந்ததாக
இருந்தது என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு மதவாத கிலாபத்தை நம்பவில்லை. அவர் துருக்கி
சுல்தானை ஒரு கலீஃபாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. துருக்கி அல்லது பிற முஸ்லிம் நாடுகளின்
விவகாரங்களில் இந்திய முஸ்லிம்கள் அதிக கவனம் செலுத்துவதை அவர் எதிர்த்தார்.

Posted on Leave a comment

திருக்குறள் மதச்சார்பற்றதா? | ஆமருவி தேவநாதன்

‘திருக்குறள்
உலகப்பொதுமறை; சாதி, மத, மொழி, இன, நில வேறுபாடுகளைக் கடந்து எல்லா மதத்தவருக்கும்
பொதுவான மறை நூல்; மதச்சார்பற்றது.’ இந்தப்  பரப்புரையில் உண்மையின் விழுக்காடு எவ்வளது? திருக்குறள்
இறை மறுப்பு நூலா? திருக்குறளுக்கும் பாரதத்தின் ஆன்மிகக் களஞ்சியங்களான வைணவ,
சைவ, சமண, பௌத்த மதங்களுக்கும்
தொடர்பில்லையா? பார்க்கலாம்.
பலருக்கும் தெரிந்த பின்வரும் குறட்பாக்கள் வைணவத்
தொடர்பைக் காட்டுவன.
1954ல் பண்டித ரெ.திருமலை ஐயங்கார் எழுதிய ‘திருவாதிமாலை’
நூலில் ‘ஆதிபகவன்’ என்னும் சொல்லாடல் எவ்வாறு ஆழ்வார்களின் பாசுரங்களிலும்,
விஷ்ணுபுராணம் முதலிய வைணவ நூல்களிலும் கையாளப்படுகிறது என்று தெளிவாகக் கூறி,
அதனால் திருக்குறள் வைணவ நூலே, திருவள்ளுவர் வைணவரே என்பதை நிறுவுகிறார். பகவான்
என்னும் சொல் ‘பகவந்’ என்னும் வடமொழிச் சொல்லின் திரிபே என்று கூறுகிறார். இதற்கு
அவர் காட்டும் விஷ்ணுபுராண ஸ்லோகம் இதோ:
‘’ஜ்ஞாநசக்தி பலைச்வர்ய வீர்யதேஜான் ஸ்யசேஷத:
பகவச்சப்த வாச்யாநி விநா ஹேயைர் குணாதிபி:
ஏவமேஷ மஹாசப்தோ மைதேய பகவாநிதி
பரமப்ரஹ்மபூதஸ்ய வாஸுதேவஸ்ய நாக்யக:
தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷாஸமந்வித:
சப்தோயம் நோபசாரேண அந்யத்ர ஹ்யுபசாரத:’
(ஸம்பூர்ணமான ஐச்வர்யம், வீர்யம், கீர்த்தி, செல்வம்,
ஜ்ஞாநம், வைராக்யம் என்னும் இந்த ஆறு குணங்களுக்கும் ‘பக’ என்னும் பதம்
வாசகமாயிருக்கிறது. பூதங்களைச் சரீரமாகக் கொண்டவனும், எல்லாவற்றுக்கும் ஆத்மாவாயிருப்பனுமான
அவனிடத்தில் பூதங்கள் வஸிக்கின்றன. அவனும் எல்லா பூதங்களிலும் வஸிக்கிறான்.
ஆகையால் அழிவற்றவனான பகவான் ‘வ’காரத்திற்கு அர்த்தமாகிறான். கீழானவையான
முக்குணங்கள் முதலியவற்றுடன் சேராத ‘ஜ்ஞானம், ‘சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம்,
தேஜஸ்’ என்னும் எல்லா குணங்களும் ‘பகவான்’ என்னும் சப்தத்தினால் சொல்லப்
பெறுகின்றன. மைத்ரேயரே, இம்மாதிரியாக பகவான் என்ற இந்த மஹாசப்தம் பரப்ரஹ்மமான
வாஸுதேவனுக்கே உரியது. வேறு ஒருவரையும் குறிக்காது.)
1904ம் ஆண்டு மதுரை ஜில்லா, சிறுகூடற்பட்டி சே.சுப்பராய
ஐயர் அவர்கள் விஷ்ணுபுராணத்தைத் தமிழ்ப் பாக்களாக மொழிபெயர்த்து எழுதினார்.
அப்பாக்களில் சில பின்வருமாறு. இவற்றிலும் ‘பகவன்’ என்னும் சொல் இடம்பெறக்
காணலாம்.
‘அகமதி னினைக்க வேண்டு மப்பர மான்மா ரூபம்
பகவனென் றுரைக்கா நின்ற பதத்திற்குப் பொருளா மந்தப்
பகவனா நாம மன்னோன் பற்பல குணஞ்சொ ரூப
முகவைசால் விபவ மின்ன வுரைத்திடத் தக்க தன்றே.
மற்றுமிப் பகவ னென்னும் வாசக நாம ரூபம்
பெற்றில னாகி யன்ன பிரமத்திற் கிணையாய் நின்ற..
அவித்தையென் றிவற்றை யோர்ந்தோன் பகவனென் றறைதல் வேண்டும்…’
விஷ்ணுபுராணம் மேலும் சொல்வது :
‘ததேவ பகவத் வாச்யம் ஸ்வரூபம் பரமாத்மந:
வாசகோ பகவச்சப்தஸ் தஸ்யாத்யஸ்யாக்‌ஷயாத்ம ந:’
(அந்த பரமாத்ம ஸ்வரூபமே பகவான் எனப்படுவது. அழிவற்றவனான
அந்த ஆதிபுருஷனுக்கே வாசகமாயிருப்பது பகவச்சப்தம்.)
‘பகவாநிதி சப்தோயம் ததா புருஷ இத்யபி
நிரூபாதி வார்த்தேதே வாஸுதேவே ஸநாதநே’
(பகவான் என்னும் சப்தமும், புருஷன் என்னும் சப்தமும்
இயற்கையாகவே பழமையானவனான வாஸுதேவனிடமே விளங்குகின்றன.)
‘அந்தமிலாதியம்பகவன்’ என்று திருவாய்மொழி திருமாலைச்
சொல்கிறது. ஒன்பதினாயிரப்படி என்னும் வைணவ உரை ‘தனக்கு அந்தமின்றி எல்லார்க்கும்
தான் ஆதியாய் ஸ்வாபாவிகமாய் ஹேயப்ரத்நீகமான ஜ்ஞாநாதி கல்யாண குண பரிபூரணன்’ என்று
மஹாவிஷ்ணுவை விவரிக்கிறது. இவ்விடத்தில் ‘ஆதி’, ‘பகவன்’ என்பது வைணவத்தின் மூலமான
திருமாலைக் குறிப்பதை உணரலாம்.
இவைமட்டுமன்றி, திருவள்ளுவர் ‘எண்குணத்தான்’ என்னும்
சொல்லைப் பயன்படுத்துகிறார். ‘கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத்
தலை’ என்பது குறள். மாலவனின் எட்டுக் குணங்களாகச் சாந்தோக்ய உபநிஷத் சொல்வது:
பாபமின்மை, நரையின்மை, மரணமின்மை, சோகமின்மை, பசியின்மை,
தாகமின்மை, ஸத்யகாமம், ஸத்யஸங்கல்பம் என்பன. இவற்றையே திருவள்ளுவர் எண்குணத்தான்
என்கிறார். திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் ‘எண்குணத்தான்’ என்னும்
சொல்லிற்குச் சொல்லும் விரிவிரை : ‘ தன்வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை
உயர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேரருளுடைமை,
முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை’.
இதனைத் தொடர்ந்து, ‘கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்’ என்பதாலும், ‘மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை
நீடுவாழ் வார்’ என்பதாலும் அடியைத் தொழும் வைணவ மரபு சுட்டப்படுகிறது. ஆண்டாள்
எழுதிய திருப்பாவையை ‘பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்’ என்று போற்றுவதை
நாம் அறிவோம். மேலும் திருப்பாவையில் ‘அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி’ என்று
வாமனாவதாரத்தைப் பாடுகிறாள். வள்ளுவரும் ‘அடியளந்தான் தாயது எல்லாம் ஒருங்கு’
என்னும் போது மூவடியால் மூவுலகையும் அளந்த வாமனனைப் பற்றிப் பேசுகிறார்.
‘வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல’
என்னும் குறட்பாவினால், எந்தப் பொருளையும் விரும்புதல்
இல்லாதவனும், வெறுத்தல் இல்லாதவனுமாகிய பரம்பொருளைப் பார்க்க முடிகிறது. இந்த
இரண்டு குணங்களும் ஒருங்கே இருப்பதால், எந்த விதப் பாபமும் இல்லாதவன் என்றாகிறது.
எனவே அவன் இயல்பாகவே பாபங்களில் இருந்து நீங்கியவன் என்பதைக் காண்கிறோம். இதுவும்
மாலவனின் எண் குணங்களில் ஒன்றே.
‘இருள் சேர் இருவினையும் சேரார் இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு’
என்னும் குறளால் இறைவனது குணங்களான ஸத்யகாமம் (பழுதடையாத
இச்சை), ஸத்யஸங்கல்பம் (பழுதடையாத நினைவு) முதலியன புலனாகின்றன.
‘பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீ ரொழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார்’
என்னும் குறளில் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும்
ஐந்து பொறிகள் வழியாக வந்தடையும் ஐந்து ஆசைகளையும் ஒழித்தவனது மெய்யான ஒழுக்க
நெறியின் கண் வழுவாது நின்றவர், பிறப்பில்லாமல் எக்காலத்திலும் ஒரு தன்மையராய்
வாழ்வார் என்பதாகச் சொல்லும்போது, பசியின்மை, தாகமின்மை, சோகமின்மை, மரணமின்மை
என்கிற நான்கு குணங்களையும் அறிய முடிகிறது. பசி, தாகம் இருந்தால் அவற்றை
நீக்கிக்கொள்ள வேண்டிப் புலன்களை மேயப் பொறிகள் செல்லும். சுவை, ஒளி, ஊறு, ஓசை,
நாற்றம் என்பன புலன்கள். மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன பொறிகள். பசி, தாகம்
முதலியன இல்லாதவனாதலால் பொறிவாயில் ஐந்தவித்தவன் ஆகிறான். பசி, தாகம் இல்லாததால்
அவற்றால் உண்டாகும் சோகம் அற்றவனாகிறான். உண்ணும் சோறும் பருகு நீரும் பசி தாகங்களை
அகற்ற உதவுகின்றன. இவை இல்லாவிட்டால் மரணமே. இறைவன் பசி, தாகம் இல்லாதவன். ஆதலால்,
உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டியதில்லை. அதனால் வளர்தல், தேய்தல் அற்றவனாகிறான்.
இவற்றினால் எல்லாம் மரணம் அற்றவன் ஆகிறான்.  
இதுகாறும் திருக்குறளில் வைணவக் கோட்பாடுகள் குறித்துக்
கண்டோம்.
மணிவாசகர் பதிப்பத்தார் வெளியீட்டில் திருக்குறள்
மாமுனிவர் முனவர்.கு.மோகனராசு எழுதிய ‘திருவள்ளுவர் கண்ட கடவுள்களும்
தெய்வங்களும்’ நூலில் பாரதத்தின் பல சமயங்களின் கடவுளர்கள் திருக்குறளில் எவ்வாறு
காட்டப்பட்டுள்ளனர் என்பது பற்றிச் சொல்லப்பட்டுள்ளது.
முனைவர் சு.மாதவன் என்பார் எழுதிய ‘சமூக மெய்யியல்
நோக்கில் திருக்குறள்’ (செம்மொழிப் பதிப்பகம், தஞ்சாவூர்) என்னும் நூலில்,
திருக்குறள் சைவ மரபை ஒத்து வருகிறது என்கிறார். அவரது பார்வை புதியது.
நிலைத்த பேருண்மையை உணர்த்த மட்டுமே திருவள்ளுவர்
‘ஏ’காரத்தைப் பயன்படுத்தியுள்ளார் என்கிறார் முனைவர் சு.மாதவன்.
1330 குறட்பாக்களில் 114ல் மட்டுமே ஏகாரங்கள் உள்ளன.
அதாவது 133 அதிகாரங்களில் 74ல் மட்டுமே ஏகாரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடவுள்
வாழ்த்தில் ஏகாரம் உண்டு. வான் சிறப்பில் இல்லை. ஏனெனில் கடவுள் என்பது நிலைத்த பேருண்மை,
வானம் அப்படியானதன்று. அவ்வப்போது மாறுபடும், நிலையானதாக இருக்காது. எனவே வான்
சிறப்பில் எந்தக் குறளிலும் ஏகாரம் இல்லை. நீத்தார் பெருமையில் ஏகாரம் உண்டு
என்பதையும் உற்று நோக்குக.
‘சுவை ஒளி ஊறு, ஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு.’
‘அறத்தான் வருவதே இன்பம்’
‘அறமெனப் பட்டதே இல்வாழ்க்கை’
‘அமிழ்அமிழ்தினும் ஆற்ற இனிதே’
‘அன்றே மறப்பது நன்று’
பரிதியார் வியாக்கியானம்: அனந்த ஞானம், அனந்த வீரியம்,
அனந்த குணம், அனந்த தெரிசனம், கோத்திரமின்மை, அவாவின்மை, அழியாவியல்பு என்பன’.
‘சைவ சித்தாந்த அறிஞர் கி.லெக்ஷ்மணன் ‘தாடலை’ என்னும் சொல்
குறித்துக் கூறுவது:
‘சைவ சித்தாந்தப் படி முத்தி என்பது துன்பம் துளியும்
இல்லா நிலை மட்டுமன்றிப் போரின்பமயமான உடன்பாட்டு நிலையும் ஆகும். இம்முத்தியாலேயே
ஆன்மா இறைவனோடு இரண்டறக் கலந்தபோதும் தன் தனி இயல்பை முற்றாய் இழந்துவிடுவதில்லை.
இக்கலப்புக்குத் தமிழில் ‘தாள்’, ‘தலை’ என்னும் இரு சொற்களின் புணர்ச்சியை
உதாரணமாக காட்டுவது மரபு. தலை ஆன்மாவையும், தாள் இறைவனையும் குறிப்பனவாகக்
கொள்ளலாம். அதாவது, இறைவனது திருவடிகளில் ஆன்மாவின் தலை பொருந்துகிறது என்பதே
கருத்து. தாளும் தலையும் தமிழ் இலக்கண விதிப்படிப் புணரும் போது ‘தாடலை’ ஆகும்.’
இத்தாடலைக் கோட்பாட்டின் சிந்தனைக் கட்டிணைவைக் கடவுள் வாழ்த்தில் காணமுடிகிறது ‘  என்கிறார் முனைவர் மாதவன். ஆக, சைவ சித்தாந்தக்
கருத்தும் வெளிப்படுகிறது.
இவை தவிரவும் ‘மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்’, ‘ஆ பயன் குன்றும் அறு தொழொலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின்’, ‘ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவர்க் கெழுமைக்கும்
ஏமாப்புடைத்து’, ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு இரப்பின் இளி வந்தது இல்’
முதலிய குறட்பாக்களால் வைணவ, சைவ மத நம்பிக்கைகளான அந்தணன் ஒழுக்கம், வேதம்
ஓதுதலின் அத்தியாவசியம், பசுவின் மேன்மை, கர்ம வினை, மறுபிறப்பு முதலியன
சுட்டப்படுகின்றன. ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்’ என்னும் ஆண்டாளின் வரிகள்
நினைவிற்கு வரலாம்.
திருக்குறள் சமண நூல் என்பதற்கான சான்றுகளும் கொட்டிக்கிடப்பதாகவும்
சில நூல்கள் தெரிவிக்கின்றன. தஞ்சை சரசுவதி மகால் வெளியீடாக ‘திருக்குறள் – ஜைன
உரை’ என்றொரு நூலில் உள்ள சில சான்றுகளைக் காண்போம்.
திருவள்ளுவர் ஶ்ரீ குந்த குந்த ஆச்சாரியர், பத்ம நந்தி,
வக்கிர கிரீவர், கிருத்ர பிஞ்சர், ஏலாசாரியர் என்று பல பெயர்களால்
அழைக்கப்பட்டுள்ளார். இவர் கிமு 52 – கிபி 44 வரை வாழ்ந்தவர் என்று தெரிகிறது.
இவரைப்பற்றிய சிலாசாசனம் சிரவணபேளாகோளாவில் உள்ளது என்கிறது மேற்சொன்ன நூல்.
குந்த குந்தர், தற்போது திருப்பாதிரிப்புலியூர் என்றும்,
அன்னாட்களில் பாடலிபுரம் என்றும் அழைக்கப்பட்ட ஊரில் வாழ்ந்த சமண ஆச்சாரியர் என்று
அறியப்படுகிறார், பிராகிருத மொழியில் பல நூல்களையும், குறிப்பாக
‘பிரப்ருதத்திரயம்’ என்று அறியப்பட்ட பஞ்சாஸ்திகாயம், பிரவசனஸாரம், ஸமயஸாரம்,
மற்றும் தமிழில் திருக்குறளையும் இயற்றினார். இவரது சீடர் திருவுள்ளம் நயினார். இவரே
‘கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’ என்று குறளைக்
கொண்டாடியதாகவும், அதனால் ஶ்ரீ குந்த குந்தர் அவரையே மதுரைக்குச் சென்று குறளை
அரங்கேற்றம் செய்யச்சொன்னதாகவும், பின்னர் சீடரின் பெயர் திருவுள்ளம் நயினார்
என்பதில் இருந்து திருவள்ளுவர் என்றானதாகவும் ஜைன மரபு தெரிவிக்கிறது. (‘கடுகைத்
துளைத்து’ இடைக்காடர் செய்தது என்றும் கூறுவர்).
சமணர்களின் கடவுள் வணக்கம் நான்கு வகையானது.
1. அருக சரணம்
2. சித்த சரணம்
3. சாது சரணம்
4. தர்ம சரணம்
சீவக சிந்தாமணிக்கு உரையெழுதிய நச்சினார்க்கினியனார்
‘நல்லறத் திறை வனாகி நால்வகைச் சரணமெய்தி’ என்ற பகுதிக்கு உரை எழுதுகையில்
மேற்சொன்ன நான்கு வணக்கங்களைப் பற்றிக் கூறுகிறார்.
இந்த நான்கையும் திருக்குறளின் கடவுள் வாழ்த்து
அதிகாரத்தில் காணமுடிகிறது. அவ்வதிகாரத்தில் முதல் ஏழு செய்யுட்களால் ‘அருக
சரணமும்’, ’பொறிவாயில் ஐந்தவித்தான்’ செய்யுளால் ‘சாது துசரண’மும், ‘அறவாழி
அந்தணன்’ குறளால் ‘தர்மசரண’மும் குறிக்கப்படுகின்றன என்கிறது ‘திருக்குறள் – ஜைன
உரை’ என்னும் நூல்.
அத்துடன் ‘திருக்குறள் ஆய்வு – கவிராஜ பண்டிதர் உரை’
என்னும் நூல், ‘கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்துள் அருக சரணமும் சித்த சரணமும்
அடங்கியுள்ளனவென்றும், நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்துள் சாது சரணமும், அறன்
வலியுறுத்தல் என்னும் அதிகாரத்துள் தரும சரணமும் கூரப்பட்டுள்ளன என்றும் ஜைன சமயப்
பெரியோர் கூறுவர்’ என்கிறது.
‘ஆதிபகவன்’ என்பது அருகரையே குறிப்பதாக ‘கயாதர நிகண்டு’
என்னும் சமண நூல் பின்வரும் செய்யுளால் தெரிவிக்கிறது:
‘கோதிலருகன் திகம்பரன் எண்குணன் முக்குடையோன்
ஆதிபகவன் அசோகமர்ந்தோன் அறவாழி அண்ணல்’.
மேற்சொன்ன செய்யுளில் திருக்குறளில் காணப்படும்
‘ஆதிபகவன்’, ‘எண்குணத்தான்’, ‘அறவாழி அண்ணல்’ என்ற சொற்கள் சுட்டப்படுகின்றன.
சமண நூலாகிய சீவக சிந்தாமணி ‘அறவாழியண்ணல் இவன் என்பார்’
என்று அருகரைக் குறிக்கிறது.
‘பண்ணவன் எண்குணன் பாத்தில் பரம்பொருள்’ என்று
சிலப்பதிகாரம் குறிப்பதும் அருகனையே.
மேரு மந்திர புராணம் என்னும் சமண நூல் ‘இறைவனீ ஈசனீ
எண்குணத் தலைவனீ’ என்று அருகனுக்கு எண்குணத்தானெனும் பெயரிட்டு அழைக்கிறது.
மேற்சொன்ன செய்யுட்கள் ஒன்று அருகனை நேரடியாகக்
குறிக்கின்றன அல்லது ஜைன சித்தபரமேட்டிகளைக் குறிக்கின்றன.
‘அந்தணர் என்போர் அறவோர்
மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்’
என்னும் குறளுக்கு விளக்கம் போல அமைந்துள்ளது
பின்வரும் ஜைன மரபுக்கதை.
பரத சக்கரவர்த்தி மகாஜனங்களுக்குத் தானம்
செய்ய விழைகிறான். அரண்மனை வாயிலில் பூ, பழம், இலை முதலியன பரப்பிக்
காத்திருக்கிறான். அரசர்கள், செல்வந்தர்கள் வருகின்றனர். ஓரிரு மகாஜனங்கள் மட்டுமே
வருகின்றனர். சிலர் வெளியில் காத்திருக்கின்றனர். அவர்கள் வேறு வழியில் உள்ளே வர
சம்மதிக்கின்றனர்.
‘நீங்கள் ஏன் வாயில் வழியாக வரவில்லை?’
என்று சக்கரவர்த்தி வினவுகிறான்.
‘நீ வாயிலில் பரப்பிவைத்துள்ள பொருட்கள்
ஏகேந்திரிய ஜீவன்கள். ஏகேந்திரிய ஜீவ ஹிம்சைகூட செய்யாதவர்கள் நாங்கள்’ என்கின்றனர்
அம்மகாஜனங்கள்.
‘நீங்களே உண்மையான மகாஜனங்கள்’ என்று
சொல்லி, அவர்களுக்கு ஒன்று முதல் பதினோரு சூத்திரம் ஈராக, யக்ஞோபவீதம் இட்டுச்
சன்மானம் பண்ணி ஆரிய ஷட்கர்மங்களை (ஆறு தொழில்கள்) உபதேசித்தான். இவர்களே
அந்தணர்கள். இவர்களே செந்தண்மை பூணாத, ஏகேந்திரிய ஜீவ ஹிம்சை கூட செய்யாத
அந்தணர்கள் என்கிறது ஜைன மரபு.
‘அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்’
என்னும் குறளில் குறிக்கப்பெறும் நூல் ஜைன
வேதங்களான பிரதமாநு யோகம், கரணாநு யோகம், சரணாநு யோகம் மற்றும் திரவியாநு யோகம்
என்கிறது ‘திருக்குறள் – ஜைன உரை’ நூல்.
‘த்ரிகுப்தி’ என்னும் மூன்று அவசியமான கோட்பாடுகளை ஜைன சமயம் வலியுறுத்துகிறது.
அவையாவன ‘காயத்தின் அடக்கம்’, ‘வாக்கின் அடக்கம்’, ‘மனோவடக்கம்’. ‘அடக்கமுடைமை’ அதிகாரத்தின்
கீழ் உள்ள குறட்பாக்களால் ’த்ரிகுப்தி’யை அறியலாம்.
செறிவறிந்து
சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின்
அடங்கப் பெறின் – காயத்தின் அடக்கம்.
ஒன்றானும்
தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா
தாகி விடும் – வாக்கின் அடக்கம்.
கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி
யறம்பார்க்கு மாற்றி னுழைந்து  – மனோவடக்கம்.
‘மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்’
என்னும் குறள் சைவ, பௌத்த சமயங்களை ஒரே
நேரத்தில் இழித்துரைப்பதாகசவும் தொனிக்கிறது. (மழித்தல் – பௌத்தத் துறவியர்
செய்வது. நீட்டல் – ஜடா முடி வளர்க்கும் சைவ சமயத் துறவியர்). இக்குறளின்
வாயிலாகவும் திருக்குறளின் ஜைனத் தொடர்பு தெரிகிறது.        
17ம் நூற்றாண்டில் வாழ்ந்த தருமபுர
ஆதீனத்தின் அடியார் கூட்டத்தில் ஒருவரான வெள்ளியம்பலவாண முனிவர் என்பார் ‘முதுமொழி
மேல்வைப்பு’ என்னும் நூலை இயற்றியுள்ளார். திருக்குறளைப் பின்னிரண்டடிகளில்
வைத்து, மேற்கோள் செய்தியை முன்னிரண்டடிகளில் வைத்து எழுதப்பட்ட இந்த நூலில்
திருக்குறள் ஜைன நூல் அன்று என்கிற வகையில் பல வெண்பாக்கள் உள்ளன. அவற்றுள்
பின்வரும் ஒன்று சிறப்புடையது:
‘ஒருவர் செய வேண்டா உலகியல்பா மென்னும்
அருகர் பிறர்கோள் சிதைக்குமாற்றால் – வருவது
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற் றியான்’
இதன் பொருளாவது: ‘உலகில் பிச்சை எழுத்தே
ஒருவன் உயிர் வாழ வேண்டும் என்றால் இந்த உலகத்தைப் படைத்தவனான இறைவன் அழியட்டும்
என்று சொல்கிறது திருக்குறள். இக்கருத்து, ஜைனக் கோட்பாடென்று அருகர் சொன்ன
‘உலகத்தை யாரும் இயற்றவில்லை, அது தானாகவே இருப்பது’ என்ற கருத்துக்கு முரணாகவன்றோ
உள்ளது?’
இதனால் 17ம் நூற்றாண்டு வரை திருக்குறள்
ஜைனை நூலாகவே அறியப்பட்டது என்பது புலனாகிறது.
மேலும் கொல்லாமை, புலால் உண்ணாமை,
கள்ளுண்ணாமை, உணவு, மருந்து முதலியன பற்றியும் குறட்பாக்கள் அமைந்துள்ளதால் சமண
அறங்களான ‘அன்ன அறம்’, ‘மருத்துவ அறம்’, ‘சாத்திர (கல்வி) அறம்’ முதலியன
சுட்டப்படுகின்றன.
‘கொடுப்பது அழுக்கறுப்பான்
சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம்
இன்றிக் கெடும்’ என்னும் ஒரு குறள் ‘தானம்’ செய்வதைக் கெடுப்பதால் ஏற்படும் கேட்டைக்
குறிக்கிறது. மற்றவனுக்குச் செய்யும் உதவியை ஒருவன் கெடுத்தால், அவனது சுற்றம் உடுக்க
உடையின்றியும், உண்ண உணவின்றியும் கெட்டழியும் என்று சாபம் இடுவதைப்போல் அமைந்துள்ளது
இக்குறள். உதவியைக் கெடுப்பவனது கேட்டைக் குறிக்காமல், கெடுப்பவனின் சுற்றத்தார் இதனால்
பெரும் இன்னலுக்கு ஆளாவர் என்றுரைத்ததால், இது பெரிய அளவில் ஜைனக் கோட்பாடான ‘தானம்’
என்னும் அறத்தை  வலியுறுத்துகிறது என்பதைக்
கணிக்க முடிகிறது. 
திருக்குறளை மேலும் ஆராய்ந்தால் பௌத்த மதக்
கருத்துகளும் புலப்படும் என்பது தெளிவு.

ஆக, ஜைன, வைணவ, சைவக் கருத்துக்களை
உள்ளடக்கிய திருக்குறள் பாரதத்தின் ஆன்மிகம் சார்ந்த பண்பாட்டின் விஸ்வரூப தரிசனம்
என்றே கொள்ளவேண்டும். எனவே, கடவுள் மறுப்பு, சனாதன மறுப்பு, மதங்களின் மறுப்பு என்று
மதச்சார்பின்மைச் சாயத்தைப் போலியாகத் திருக்குறளின் மீது ஊற்ற முயல்வது, வள்ளுவரின்
கூற்றின்படியே, ‘காயாத மண் பானையில் நீர் சேகரிப்பது’ போன்றதாகும். 

Posted on Leave a comment

பராசரன் என்ற இராமப்பிரியன் | சுஜாதா தேசிகன்

பதினோராம் நூற்றாண்டு. ஸ்ரீ ராமானுஜர் தன்
குருவான ஆளவந்தாரைப் பார்க்கக் காஞ்சியிலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு ஓடோடி வருகிறார்.
வருவதற்குள் ஆளவந்தார் பரமபதித்துவிட, வட திரு காவிரியில் ஆளவந்தாரின் சரமதிருமேனியைக்
கண்ணீருடன் நோக்கும்போது, அதில் மூன்று விரல்கள் மட்டும் மடங்கியிருப்பதைக் கவனிக்கிறார்.
அவர் உள்ளத்தில் நிறைவேறாத ஆசை இருந்திருக்கிறது
என்று உணர்ந்து, தான் ஒவ்வொரு ஆசையாக நிறைவேற்றப் போவதாக பிரதிக்ஞை செய்கிறார். ஆளவந்தாரின்
விரல்கள் ஒவ்வொன்றாக விரிகிறது..
அதில் ஒரு ஆசை: ‘விஷ்ணுபுராணம் அருளிய பராசர
மகரிஷியின் பெயரையும், மஹாபாரதத்தை அருளிய அவரது குமாரரான வேத வியாசர் பெயரையும், தகுதியுள்ளோருக்குச்
சூட்ட வேண்டும்’ என்பது.
ஸ்ரீ ராமானுஜர் அவருடைய சிஷ்யரான கூரத்தாழ்வானுடைய
புதல்வர்களுக்கு இந்தப் பெயர்களைச் சூட்டினார். ஒருவர் ஸ்ரீ பராசரபட்டர், இன்னொருவர்
ஸ்ரீவேதவியாஸ பட்டர்.
ஸ்ரீரங்கத்தில் பிறந்த ஸ்ரீ பராசர பட்டர்
புலமை மிகுந்தவராகவும், ஸ்ரீராமர் மீது அளவு கடந்த பக்தியும் வைத்திருக்கிறார். இவருடைய
சிஷ்யர்கள் கண்ணனின் குணங்களைச் சொல்லி, ஸ்ரீராமர் இப்படிச் செய்தாரா என்று கேள்வி
கேட்டால், அதற்குத் தகுந்த பதிலளித்து, சக்கரவர்த்தி திருமகனை என்றும் விட்டுக்கொடுக்கமாட்டார்.
(திரு
கே.பராசரன்) 



பட்டருக்கு 800 ஆண்டுகளுக்குப் பிறகு,
1927ல் பிறந்தவரும் இன்று இந்தியாவின் முன்னோடி வழக்கறிஞர்களில் ஒருவருமான கே. பராசரன்
அவர்கள் பட்டரைப் போலப் புலமையும், ஸ்ரீராமர் மீது அளவு கடந்த பக்தியும் வைத்திருப்பவர்.
பராசரன் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல்,
அட்டர்னி ஜெனரல் போன்ற உயர் பதவிகளை வகித்தவர். 92 வயதில் ராம ஜென்ம பூமி வழக்கில்
உச்ச நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றுத் தந்தவர்.
ஒரு நாள் வழக்கு விசாரணையின்போது அவரிடம்
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ‘உங்கள் வயதுக்கு மதிப்பளித்துச் சொல்கிறேன். ஒரு நாற்காலி
போடச் சொல்கிறேன். அமர்ந்து வாதங்களைச் சொல்லுங்கள்’ என்றார்.
அதற்கு, ‘வக்கீல் நின்று வாதிடுவதுதான் முறை.
என் ராமனுக்காக நிற்பேன். நிற்க இயலாது போனால் நீதிமன்றம் வருவதை நிறுத்திக் கொள்வேன்’
என்று சொல்லி, 92 வயதிலும் நின்றுகொண்டே வாதாடினார் தமிழகத்தைச் சேர்ந்த முதுபெரும்
வழக்கறிஞர். தொழில் பக்தியுடன் இணைந்த, ஸ்ரீ ராமாயண பக்தியுடன் கூடிய இவருடைய வாதங்களே
நீதிபதிகளைத் தர்மத்தை நோக்கி வழிநடத்தின என்று கூறலாம்.
‘தர்மத்தை நோக்கி’ என்று போன பத்தியின் கடைசி
வாக்கியம் ஏதோ அலங்கார வாக்கியம் என்று நினைக்க வேண்டாம். ‘தர்ம சாஸ்திரம்’ என்ற சொல்
நமக்குப் புதிதல்ல. இந்த இரண்டு சொல்லும் ஏன் சேர்ந்தே வருகிறது என்று நாம் யோசித்திருக்கிறோமா?
ரிக்வேதத்தில் பல இடங்களில் தர்மம் பற்றிப்
பேசப்படுகிறது. வேதம்தான் எல்லாவற்றிருக்கும் ஆதாரம். ஸ்மிருதிகள், ராமாயணம், மஹாபாரதம்
முழுமையாக வேதத்தை அங்கீகரித்தவை. பாரத தேசத்துக்கு வேதமே வேர்.
எப்படி ‘தர்ம சாஸ்திரம்’ பிணைத்துள்ளதோ அதே
போல ‘இந்தியாவும் கலாசாரமும்’. தர்மம் என்பது அனைத்து ஜீவராசிகளுக்கும் அடித்தளமாக
விளங்குகிறது, இதுவே சனாதன தர்மம். இதுவே பாரதத்தின் தர்மம். நம் தேசத்தில் ஸ்ரீமத்
ராமாயணம், ஸ்ரீ மஹாபாரதம் போன்ற இதிகாசங்கள் இந்த நல்லிணக்கத்தைப் போதிக்கின்றன. அதுவே
நம் கலாசாரமாகப் பிரதிபலிக்கிறது.
இந்தியத் தேசத்தின் ‘motto’ பொன்மொழி முண்டக
உபநிஷத் வாக்கியமான ‘சத்யமேவ ஜெயதே’ என்பது. இதுவே நம் தேசிய சின்னத்தில் கீழே பொறிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் முக்கிய வாக்கியம் ‘யதோ
தர்ம: ததோ ஜெய’ என்ற அதாவது ‘தர்மம் உள்ள இடத்தில் வெற்றி இருக்கும்’ என்பது தற்செயல்
இல்லை. இந்த வாக்கியம் ஸ்ரீ மஹாபாரதத்தில் பல இடங்களில் வருகிறது.
‘சில்வர் டங்’ என்று போற்றப்பட்ட வி.எஸ்.ஸ்ரீனிவாச
சாஸ்திரி அவர்கள் ஸ்ரீ ராமாயணத்தை ‘It is essentially a human document’ என்கிறார்.
ஸ்ரீமத் ராமாயணத்தில் தசரதனுக்கு மூத்த மகனான
ஸ்ரீராமர்தான் முடிசூட வேண்டும் என்பது ராஜ நீதி என தரசதனும் அறிவித்துவிட்டார், அது
மட்டுமல்ல, அயோத்தி மக்கள் அனைவரும் ஸ்ரீராமர்தான் தங்களுக்கு அடுத்த அரசனாக வேண்டும்
என்றும் விரும்புகிறார்கள். ‘மக்கள் குரலே மகேசனின் குரல்’ என்று ஸ்ரீராமர் ஏற்றுக்கொண்டிருக்க
வேண்டும். ஆனால் தன் தந்தை செய்துகொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற, பதவியை ஏற்றுக்கொள்ளாமல்
ஸ்ரீராமர் தர்மத்தை நிலைநாட்டினார். சட்டம் எப்போதும் தர்மத்துடன் இணங்க வேண்டும்.
அப்போது தான் நாட்டில் நல்லாட்சி நடைபெறும்.
பராசரன் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும்
ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ கேசவ ஐயங்காருக்கும் ரெங்கநாயகி அம்மாளுக்கும் பிறந்தவர். கேசவ
ஐயங்கார் புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்தார். வேத விற்பன்னரும் கூட.
தன் தந்தையின் வழக்குகளுக்குத் தட்டச்சு செய்து
உதவ ஆரம்பித்த பராசரனுக்குச் சட்டத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. சட்டம் படித்து, பல
விருதுகளைப் பெற்றார். திருமணமாகி சென்னையில் ஒரு ‘கார்  ஷெட்டில்’ குடும்பம் அமைத்து ஒரு பெண் குழந்தையுடன்
குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தார். நீதிமன்ற ‘டிராப்டிங்’ வேலை, கல்லூரியில் பேராசிரியர்
வேலை என்று தேடி எதுவும் கிடைக்காமல் வாழ்க்கையில் கஷ்டப்பட்ட சமயம் சிபாரிசு என்று
எங்கும் போகாமல் ‘திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் பார்த்துக்கொள்வார்’ என்று
இருந்தார்.
பார்த்தசாரதி என்ற கீதாசாரியன் இவருக்கு வழி
காண்பித்தார்.
திருவல்லிக்கேணியில் சேங்காலிபுரம் அனந்தராம
தீக்ஷிதரின் ஸ்ரீமத் ஸ்ரீ ராமாயண உபன்யாசத்தைக் கேட்க ஆரம்பித்தார். அப்போது அந்த உபன்யாசகர்
ஸ்ரீமத் ராமாயணம் படித்தால் கை ரேகை கூட மாறும் என்று அவர் சொல்ல, பராசரன் அவர்கள்
தினமும் ஸ்ரீமத் ராமாயணம் படிக்க ஆரம்பித்தார். அதற்குப் பிறகு அவருக்கு எல்லாம் ஏறுமுகம்தான்
!
1958ல் உச்ச நீதிமன்ற வழக்குரைஞராகப் பதிவு
செய்துகொண்டார். அப்போது மோகன் குமாரமங்கலம் போன்ற பல முக்கியப் பிரமுகர்களுடன் பழக்கம்
ஏற்பட்டு, தொழிலதிபர்கள் பலருக்கு ஆலோசனைகள் செய்து, 1971ல் சென்னை உயர்நீதிமன்றத்தில்
மத்திய அரசின் ஸ்டாண்டிங் கவுன்சிலில் நியமிக்கப்பட்டார்.
கோயில் அர்ச்சகர் நியமனம் செல்லாது என்ற வழக்கு
உச்ச நீதிமன்றத்தில் வந்த சமயம் காஞ்சி மஹா பெரியவர் இவரைக் கூப்பிட்டு ‘சட்ட நிபுணர்,
பொருளாதார மேதை நானி பால்கிவாலாவை நான் இந்த வழக்கில் ஆஜராகச் சொல்லியிருக்கிறேன்.
அவருடன் சேர்ந்து நீங்களும் உதவ வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். அப்போது பால்கிவாலாவுடன்
அவருக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் கட்டணம் எதுவும் வாங்காமல் கைங்கரியமாக அந்த வழக்கை
ஜெயித்துக் கொடுத்தார்கள்.
இந்திரா எமர்ஜன்சி கொண்டு வந்து மீண்டும்
ஆட்சிக்கு வந்த சமயம். எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் வழக்கில் கட்டடங்களை இடிக்க அரசு மேற்கொண்ட
‘ஷோகாஸ் நோட்டீஸ்’ நடவடிக்கையை அரசாங்கத் தலைமை வழக்குரைஞரான பராசரன் ஒத்துக்கொள்ளவில்லை.
அரசு இவர் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவில்லை.
தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்
என்று தர்மத்தின் பக்கம் நின்றார். பலர் அரசுக்கு எதிராக இப்படிச் செய்கிறீர்களே என்று
கேட்டதற்கு அவர் தைரியமாகத் தர்மத்தின் பக்கம் நின்றதற்குக் காரணமாக, அவரது தந்தை சொன்ன
அறிவுரையைக் குறிப்பிடுகிறார். ‘Don’t sell your heritage for a mess of pottage’.
வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட அன்று அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்து தன் தந்தையின்
படத்தின் முன் விழுந்து வணங்கினார்.
இவருடைய நீதிமன்ற வாதங்கள் பலநேரங்களில் இந்து
வேதங்களிலிருந்து பெறப்பட்டவை. இந்திய நீதிமன்றங்களில் வழக்காடும் பிதாமகன் இவர் என்றும்,
தர்மங்களிலிருந்து நெறி பிறழாமல் வாதாடும் திறமை கொண்டவர் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின்
தலைமை நீதிபதி பராசரனைப் பாராட்டியுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் விவகாரத்துக்குப் பிறகு
இந்திரா அரசில் இவருக்கு இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞராகப் பதவி உயர்வு தரப்பட்டது.
முதல் குழந்தை பிறந்த சமயம், அவருடைய மனைவிக்கு
அது கஷ்டமான பிரசவமாகியது. அவர் உயிர் பிழைத்ததே கடவுளின் ஆசி என்றுதான் கூற வேண்டும்.
அப்போது மருத்துவர்கள் இனிமேல் உங்களுக்குக் குழந்தை பிறப்பது கஷ்டம் என்று சொல்லிவிட்டார்கள்.
இவருடைய ஆசாரியன் அஹோபில மடம் முக்கூர் அழகியசிங்கர் சேலத்தில் எழுந்தருளியிருந்த ஒரு
சமயம், அவரை வணங்கியபோது, மருத்துவர் சொன்னதைப் பராசரன் ஆசாரியனிடம் கூறியதற்கு, அவர்
‘லக்ஷ்மி நரசிம்மனைவிடப் பெரிய டாக்டர் இருக்கிறாரா?’ என்று சொல்லிவிட்டு அட்சதை கொடுத்து
ஆசீர்வாதம் செய்து அனுப்பினார். அதற்குப் பிறகு அவருக்குக் குழந்தைகள் பிறந்தார்கள்.
ஒரு முறை ஒரு பெரியவரிடம் வழக்கறிஞராக இருக்கிறேன்,
வழக்குகளில் வாதாடுகிறேன், நான் யாரை வணங்க வேண்டும் என்று கேட்க, அதற்கு அந்தப் பெரியவர்
அனுமார் என்று பதில் கூற, அன்றிலிருந்து அவருடைய கோட் பாக்கெட்டில் சின்ன சந்தனச் சிற்ப
அனுமாரும், பார்த்த சாரதி படமும் நிரந்தரமாயின.
ஸ்ரீ ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில்,
ஸ்ரீராமர் லக்ஷ்மணனிடம் அனுமாரைப் பற்றி இப்படிக் கூறுகிறார்:
‘ரிக் வேதத்தை கிரமப்படி அறியாவிட்டால் இவன்
இப்படிப் பேசமுடியாது. யஜூர்வேதத்தைப் பூர்ணமாக அறிந்து மனத்தில் தரிக்காவிட்டால் இப்படிப்
பேசமாட்டான். ஸாம வேதத்தின் ரஹஸ்யத்தை அறியாதவன் இப்படிப் பேசமாட்டான். இவன் சகல வியாகரணங்களையும்
பூர்ணமாகப் பலமுறை கற்றிருந்திருக்கிறான் என்பது நிச்சயம். அவன் பேசும் வாக்கியங்களில்
ஒரு பிசகான சப்தத்தைக் கேட்கமுடியவில்லை. முகத்திலும், நெற்றியிலும் புருவத்திலும்
மற்ற அவயங்களிலும் யாதொரு தோஷமும் பேசும்பொழுது காணப்படவில்லை. அவன் பேசும் வாக்கியங்கள்
அதிக வேகமில்லாமலும், இருதயத்தில் தோன்றி, கழுத்தில் ஒலித்து மத்யம ஸ்வரத்தில் உச்சரிக்கப்படுகின்றன.
இவனைக் கொல்ல கத்தியுடன் பாயும் சத்துருவும், கோபம் தணிந்து சாந்தம் ஏற்பட்டு இவனுக்கு
வசப்படுவான்’ என்கிறார்.
(திரு
கே.பராசரன் தன் வழக்கறிஞர்கள் குழுவுடன்)
பராசரனுக்கு அந்த அனுமாரே வந்து சில இடங்களில்
வாதாடினாரோ என்று கூடத் தோன்றுகிறது. ஒரு வழக்கில் இவர் சரியாக வாதாடவில்லை. பராசரனுக்கு
என்ன ஆயிற்று என்று பலர் குழம்பினார்கள். அப்போது பராசரன் தன் கோட்டு பாக்கெட்டில்
கையை விட்டுப் பார்த்தபோது அங்கே அந்தச் சந்தன அனுமாரைக் காணவில்லை. உடனே தன் ஜூனியரை
அழைத்து தன் அறையிலிருந்து அந்த அனுமாரை எடுத்து வரச் சொன்னார். அதற்கு பிறகு அவர்
செய்த வாதங்களைப் பார்த்து நீதிமன்றம் பிரமித்துப் போனது.
(சேதுபந்தம்
என்ற ஸ்ரீராம சேது பாலம்)
சேது சமுத்திர திட்டம் வந்தபோது அதற்குப்
பல இடங்களிலிருந்தும் எதிர்ப்பு வந்தது. வழக்கு நீதிமன்றம் சென்றபோது, சிலர் அதைத்
தடுக்க வேண்டும் என்று இவரிடம் வந்தார்கள். அரசுத் தரப்பும் இவரை அணுகி வழக்கை நடத்தவேண்டும்
என்றார்கள். என்ன செய்வது என்று குழம்பினார். அன்று இரவு இவருக்குத் தூக்கம் வரவில்லை.
ஸ்ரீராம சேது என்பது ஸ்ரீ ராமாயணத்தில் முக்கியமான
இடம். விபீஷணருக்குச் சரணாகதி கிடைத்த இடம். ஸ்ரீ ராமாயணத்தைப் படித்து நாம் முன்னேறியிருக்கிறோம்
என்றும், ஸ்ரீராம சேதுவை இடிக்கக் கூடாது என்ற பக்கம் இவர் உச்சநீதிமன்றத்தில் வாதாடினார்.
வாதங்களை எல்லாம் முடித்தபிறகு ஒரு நீதிபதி
பராசரனிடம், ‘எல்லா வழக்கிலும் அரசு தரப்புக்குத்தான் நீங்க வாதாடுவீர்கள் ஆனால் இந்த
வழக்கில் மட்டும் எதிராக வாதாடுகிறீர்களே?’ என்றதற்கு
‘வாழ்கையில் ராமாயணம் படித்து முன்னுக்கு
வந்திருக்கிறேன். This is the least I owe to Lord Rama’ என்று நீதிமன்றத்தில் பிரகடனப்படுத்தினார்.
(ராமஜென்ம
பூமி வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்களுக்கு வி.எச்.பி ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில்
கே பராசரன்)
இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞராக இருந்த
பிறகு, சில தனியார் வழக்குகளில் வாதாடி ஒரு மந்திரியின் வழக்கை மும்பையில் ஜெயித்துக்
கொடுத்தார். அப்போது உங்களின் கட்டணம் எவ்வளவு என்று கேட்டதற்கு, கட்டணம் வாங்க மறுத்துவிட்டு,
ஏதாவது நன்கொடை கொடுக்க வேண்டும் என்றால் ராஜிவ் குண்டு வெடிப்பில் இறந்த காவல்துறையினரின்
குடும்பங்களுக்கு உதவி செய்யுங்கள்’ என்றார்.
ஸ்ரீராம ஜன்ம பூமி வழக்கு உச்சநீதிமன்றத்தில்
வந்தபோது ‘தாய், தாய்நாடு சொர்க்கத்தை விடப் பெரியது’ என்று வாதத்தைத் தொடங்கினார்
இந்த 92 வயது வழக்கறிஞர்.
‘பரா: 
என்றால் எதிரிகள் என்று பொருள், சர: என்றால் அம்புகள். ஸ்வாமி தேசிகன் ‘பராசரா’
என்றால் எதிரிகளைத் தன் வாதங்களின் அம்பு மழையால் தோற்கடிக்கும் வீரர் என்கிறார்.
‘என் ராமனுக்காக நிற்பேன்’ என்று நின்றுகொண்டு
வாதாடிய இந்த 92 வயது மூதறிஞர் இந்த வழக்கிற்காக ஒரு ரூபாய்கூட ஊதியம் பெற்றுக்கொள்ளவில்லை.
இதுவே தனது கடைசி வழக்கு என்றும் அறிவித்திருக்கிறார்.
நவம்பர் 23 அன்று, அயோத்தி சென்று தீர்ப்பின்
நகலை ஸ்ரீராமருக்கு அளித்துவிட்டு அவர் எழுதிக்கொடுத்த வாசகம் இது:
‘The genuine bhakti of the Bhaktas of
Lord Ram has brought back Ram Janmabhumi with a temple long due.’
– K Parasaran, A Bhaktha of Sri SitaRam.
‘கோயிலுடன் கூடிய ராமஜென்ம பூமி என்ற நீண்ட
நாள் கனவு, ராம பக்தர்களின் தூய பக்தியினால் திரும்பக் கிடைத்திருக்கிறது.’
கே பராசரன்
ஸ்ரீ சீதாராமின் பக்தன்
வாஜ்பாய் அரசு அவருக்கு பத்மபூஷன் விருது
வழங்கியது. மன்மோகன் சிங்கின் அரசு அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கியது.
தன் வாதங்களால் ராம ஜன்ம பூமியை மீட்டுக்கொடுத்து
இராமப்பிரியனானார் பராசுரன் அவர்கள்.
உதவியவை:
* K.PARASARAN – PAR EXCELLENCE.
EXCELLENCE AT THE BAR – ஆவணப்படம் Sanskriti வெளியீடு
* Law & Dharma: A tribute to the
Pitamaha of the Indian Bar by SASTRA University

Posted on Leave a comment

அயோத்தி தீர்ப்பு – உண்மை மதச்சார்பின்மையின் வெற்றி | அரவிந்தன் நீலகண்டன்


அயோத்தியில்
ஸ்ரீ ராமருக்கு கோவில் கட்ட இறுதியாக அனுமதி கிடைத்துவிட்டது. பிரச்சினை ஒரு
முடிவுக்கு வந்துவிட்டது. ஏறக்குறைய 500 ஆண்டுகளாக இந்துக்கள் மேற்கொண்ட ஒரு
பெரும் தொடர் போராட்டம் அமைதியான ஆர்ப்பாட்டமற்ற வெற்றியை அடைந்திருக்கிறது.
சர்வதேச
அளவில் மதச்சார்பின்மைக்குக் கிடைத்த மிகப் பெரிய சமீபத்திய வெற்றி இதுதான்.
ஸ்வராஜ்யா
பத்திரிகையின் இணைய ஆசிரியர் ஆருஷ் தாண்டன் தீர்ப்பு வரும் அன்று அதிகாலை தனது
ட்விட்டரில் ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டினார்:
‘சற்றேறக்குறைய
100 கோடி மக்களைக் கொண்ட மதத்தின் சமுதாயம், அதன் மிக மிக ஆதாரமான புனித இடத்தில் கோவில்
கட்ட வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய மதச்சார்பற்ற நாட்டின் நீதிமன்றத்தை
நம்பிக் காத்திருக்கிறார்கள். இதை போல் வேறெங்காவது பார்க்க முடியுமா?’
பின்னர்
அன்று காலை பத்திரிகையாளர் மின்ஹாஸ் மெர்ச்சண்ட் இதே விஷயத்தை மீண்டும்
சுட்டிக்காட்டினார்.
இந்தியா
போல தன்னியல்பிலேயே மதச்சார்பின்மை கொண்ட தேசத்தில்தான் 80 விழுக்காடு
பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் 70 ஆண்டுகளாக தாம் கோவில் கட்ட சட்டபூர்வமான ஒரு
தீர்ப்புக்காகக் காத்திருப்பார்கள். இந்தியாவுக்கு மத சகிப்புத்தன்மை குறித்து
உபதேசப் பேருரை செய்யும் மேற்கத்திய ஜனநாயகங்கள் கொஞ்சம் தங்கள் வரலாறுகளைப்
பார்த்தால் நலம்.
அப்படியானால்
டிசம்பர் 6 1992?
இந்தியாவின்
சராசரி முஸ்லிமுக்கு இது மிகப்பெரிய துயரத்தை அளித்தது. அது முழுமையாகப் புரிந்து
கொள்ளக் கூடியதுதான். இதன் விளைவாக முஸ்லிம் சகோதரர்கள் இயல்பாக, பாதுகாப்பற்ற
உணர்வில் ஆழ்ந்தார்கள். அன்னிய முதலீட்டில் ஊட்டி வளர்க்கப்பட்ட பயங்கரவாத
இயக்கங்களுக்கு இரையானார்கள். இது ஒரு விஷச்சுழலை உருவாக்கியது.
ஆனால்
இதை உருவாக்கியவர்கள் இந்துத்துவர்கள் அல்ல.
இதை
உருவாக்கியவர்கள் இடதுசாரிகள். மார்க்ஸியவாதிகள்.
தொடக்கம்
முதல் ஹிந்துத்துவ இயக்கங்கள் மீண்டும் மீண்டும் சொல்லிவந்த ஒரு விஷயம், இது
ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே உள்ள மதப்பிரச்சினை அல்ல என்பதுதான்.
ஹிந்துத்துவ இயக்கத் தலைவர்களில் ஒருவரும் உத்தரப் பிரதேச மாநில முதல்வராகவும்
இருந்த கல்யாண் சிங் உருக்கமாக சொன்னார்:  ‘நாங்கள் ஸ்ரீ ராம ஜென்மபூமியாக தலைமுறை
தலைமுறையாக வழிபடும் இந்த இடத்தை எங்களுக்கு விட்டுக் கொடுங்கள். எங்கள் தலைகளில்
செங்கல்கள் சுமந்து இதே சரயு நதிக் கரையில் பிரம்மாண்டமான மசூதியை நாங்கள்
கட்டித்தருகிறோம்.’
அதற்கு
இஸ்லாமிய சகோதரர்கள் பெரிய அளவில் ஒத்துக் கொண்டார்கள் எனக் கூறுகிறார்
அகழ்வாராய்ச்சியாளர் கே.கே.முகமது அவர்கள். அதை இல்லாமல் ஆக்கியவர்கள் மார்க்சியக்
குறுங்குழு ஒன்று என்கிறார் அவர்.
அக்காலகட்டத்தில்
வெளிப்படையாகக் களமிறங்கியவர்கள் பெரும் மார்க்சிய அறிவுஜீவிகள். ஆனால் அவர்கள்
அனைவரும் கச்சிதமாக கல்வி சமூக-வரலாற்று ஆராய்ச்சி அமைப்புகளில் மிகப் பெரிய
பொறுப்புகளில் இருந்தார்கள். அவர்கள்தான் பாடநூல்களை வடிவமைத்தார்கள். அவர்களை
பொதுவாக மக்கள் வரலாற்று அறிஞர்களாகப் பார்த்தார்களே தவிர ஒரு அரசியல் தரப்பின்
சித்தாந்தத் தரகர்களாகப் பார்க்கவில்லை.
அவர்கள்
அந்த இடம் மசூதிதான் என்றார்கள். ஹிந்துக்களின் கோரிக்கைக்கு வரலாற்று ஆதாரம்
எதுவுமில்லை என்றார்கள். புராண மத நம்பிக்கைகளை வரலாறாகத் திரித்து அரசியல்
செய்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் என்றார்கள்.
ஜனவரி
1991ல் மார்க்ஸிய வரலாற்றறிஞர்களான ஆர்.எஸ்.ஷர்மா, இர்ஃபான் ஹபீப், ரொமிலா தாப்பர்
உட்பட 42 அறிவுஜீவிகள் ஒரு பொது அறிவிப்பு வெளியிட்டார்கள். ‘அங்கே கோவில் இருந்ததற்கான
சான்றுகளே இல்லை.’
இன்னும்
கூட சொன்னார்கள், ‘ராமரைக் கும்பிடும் வழக்கமும் அயோத்தியைப் புனிதமாகக்
கருதுவதும் கூட பின்னாட்களில் ஏற்பட்டதுதான்.’
ஹிந்து
தரப்பினருக்குப் பொதுவாக நவீனத்துவ பரிபாஷைகள் நிரம்பிய அறிவியக்கத் தந்திரங்களில்
பரிச்சயமில்லை. இடதுசாரிகள் அடித்து ஆடினார்கள். ராமர் பிறந்ததே ஆப்கனிஸ்தானில்
என்றார்கள். பத்திரிகைகளில் அறிக்கை கொடுத்தார்கள். இரு தரப்பினரிடமும் அரசு
ஆதாரங்கள் கேட்டபோது பாபர் மசூதிக் குழுவினருக்கு ஆதரவாக ஆதாரங்களை அளிக்கிறோம்;
ஆனால் நாங்கள் பாரபட்சமற்ற அறிவியல் நோக்கு கொண்ட வரலாற்றாசிரியர்களின் தனிக்குழு
என அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று கேட்டார்கள். ஏற்கெனவே பாப்ரி ‘மசூதி’ ஆலோசனைக்
குழுக்களிலும் இருந்த இந்த பெருமக்களின் கோரிக்கையை அரசு மறுத்துவிட்டது. பேச்சு
வார்த்தைகள் நடந்தபோது ஒரு விசித்திரம் நிகழ்ந்தது. ஆதாரமே இல்லை என்று சொன்ன
ராமர் கோவிலுக்கு ஆதாரங்களை விஸ்வ ஹிந்து பரிஷத் அளித்தது. அதிர்ச்சி அடைந்த
அறிவுஜீவிகள் அதனைப் படிக்கத் தங்களுக்குக் கால அவகாசம் வேண்டுமென்று கேட்டார்கள்.
அகழ்வாராய்ச்சியாளர்
பி.பி.லால், ராம ஜென்ம பூமி – பாப்ரி அமைப்பு பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்தவர்.
அவர் அங்கே தூண்களின் அடித்தளங்கள் இருப்பதை உறுதி செய்தார். இடதுசாரிகளோ, இல்லவே
இல்லை அது பொய், லால் வேண்டுமென்றே இட்டுக்கட்டுகிறார் என்றார்கள். அவரது ஒரிஜினல்
அறிக்கையில் அவர் அதைக் கூறவே இல்லை என்றார்கள். அகழ்வாராய்ச்சியாளர் கே.கே.முகமது
இதை மறுத்தார். 1977களில் பாப்ரி அமைப்பினையொட்டி நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில்
இருந்த ஒரே முஸ்லிம் தான் மட்டுமே என்பதை நினைவுபடுத்திய அவர் ‘பாப்ரி அருகே
அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்துக்கு நான் சென்று பார்த்தேன். அங்கே தூண்களின்
அடித்தளங்கள் இருப்பதைக் கண்டேன்’ எனத் திட்டவட்டமாக கூறினார்.
தண்டனையாக
அதன் பின்னர் கே.கே.முகமது இடமாற்றமும் செய்யப்பட்டார். ஆனால் அவர் அதைக்
குறித்தெல்லாம் கவலை அடையவில்லை. அவர் கூறிய சான்றாதாரம் இந்தியன் எக்ஸ்பிரஸில்
வெளிவந்தது. கேகே முகமது அவர்களின் சாட்சியத்தை வெளியே கொண்டு வர உதவியவர் ஐராவதம்
மகாதேவன்.
ஆனால்
இடதுசாரிகள் விடவில்லை. நாடு முழுக்கத் தங்கள் இயக்கங்களைப் பயன்படுத்தி, பெரிய
பிரசாரம் செய்தார்கள். ‘புத்த கயாவின் கதை என்ன? அதை ஹிந்துக்கள் அழிக்கவில்லையா?
ஆக்கிரமிக்கவில்லையா?’ என்று கேட்டார்கள்.
ஆனால்
உண்மை அப்படி அல்ல. வரலாற்றாராய்ச்சியாளர் டாக்டர்.அப்துல் குதோஸ் அன்ஸாரி
விளக்கினார்:
‘பௌத்தம்
செழித்து வளர்ந்திருந்த புத்த கயா பகுதியில் இஸ்லாமின் சிலை உடைப்புத் தீவிரம்
பெரும் அழிவை ஏற்படுத்தியிருந்திருக்க வேண்டும். இதன் விளைவாக அங்கே பௌத்தர்களே
இல்லாமல் அழிந்துவிட்ட நிலையில் அங்கு (சிதைக்கப்பட்ட) பௌத்த விகாரங்களை வழிபட,
பராமரிக்க ஆளில்லாத நிலையில் பிராமணர்கள் தங்கள் மதக்கடமைக்கு வெளியே சென்று
அந்தப் பணிகளையும் செய்ய வேண்டியிருந்தது.’
ஆனால்
இத்தகைய வரலாற்று நுண் உண்மைகளைக் குறித்துப் பேசிடும் நிலையில் இல்லை இடதுசாரி
பிரசாரகர்கள். வலுவான ஊடகமும் அதிகார வர்க்கமும் ஒரு பக்கம் அணிதிரள, அயோத்தியில்
ராமனுக்கு ஓர் ஆலயம் இல்லையா என்கிற ஆதங்கம் வெகுஜன மக்கள் மனத்தில் அலையடிக்க
ஆரம்பித்தது. இஸ்லாமியர் மனத்திலோ, அது ஒரு மசூதி என்கிற எண்ணம் ஆழப்பதியத்
தொடங்கியது.
இந்நிலையில்
அக்டோபர்-நவம்பர் 1990 – தேவ தீபாவளி எனப்படும் வடநாட்டு கார்த்திகா பௌர்ணமி
தினத்தன்று அயோத்தியில் குழுமிய கரசேவர்களை முலாயம் சிங் யாதவின் அரசு படுகொலை
செய்தது. அதிகாரபூர்வமாக 13 முதல் 16 என்கிறார்கள். ஆனால் நிச்சயம் ஐம்பதுக்கு
அதிகம் கரசேவகர்கள் இறந்ததாகக் கூறப்படுகிறது. பல உடல்கள் மண் சாக்கில் கட்டி சரயு
நதிக்குள் வீசப்பட்டு பின்னர் அழுகி உருகுலைந்த நிலையில் வெளியே எடுக்கப்பட்டன.
இதன்
விளைவாக அடுத்த தேர்தலில் உத்தர பிரதேசத்தை பாஜக வென்றது. கல்யாண் சிங்
முதலமைச்சரானார். சர்ச்சைக்குட்பட்ட நிலத்தை சுற்றி நிலத்தைக் கையகப்படுத்தினார்.
இதற்கு
எதிராக மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. கரசேவகர்கள் கடும் வருத்தமடைந்தனர். ஆனால்
1991ல், உச்சநீதிமன்றம் சொன்னதைக் கேட்டு அமைதி காத்தனர். உடனே ஊடகங்கள் ‘கரசேவை
பிசுபிசுத்துவிட்டது; ராமஜென்மபூமி மீட்பு இயக்கம் சக்தி இழந்துவிட்டது’ என்று
பேசின.
1991ல்
கூறப்பட்ட தீர்ப்பு 1992 இறுதியில் கூட கொடுக்கப்படவில்லை. இத்தனை
உணர்ச்சிபூர்வமான விஷயத்தில், லட்சக்கணக்கான மக்கள் தேசமெங்கும் இருந்து வந்து
அயோத்தியில் குழுமியிருக்கும் ஒரு விஷயத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்பது சில
வாரங்கள் தாமதமானால் புரிந்து கொள்ளலாம். ஆனால் ஒரு வருடம் தாமதமானால்? தங்கள்
பொறுமை அதிகார வர்க்கத்தால் துச்சமாக விளையாட்டுப் பொருளாக்கப்படுகிறது என்பதைப்
புரிந்து கொண்டனர் கரசேவகர்கள். அதனால்தான் டிசம்பர் ஆறு 1992ல் பொங்கியெழுந்தனர்.
அது துரோகமென்றால், துரோகத்தின் முதல் கல்லை இந்த நாட்டின் போலி மதச்சார்பின்மை
பேசும் அதிகார வர்க்கம் அவர்கள்மீது வீசியது.
இக்கும்மட்டங்கள்
இடிக்கப்பட்ட பின்னர் 1993 ஜனவரியில் சென்னையில் ஒரு சர்வமத தலைவர்களும்
அரசியல்வாதிகளும் கொண்ட ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் முக்கிய பேச்சாளராக
இருந்தவர் காந்தியரும் வரலாற்றாசிரியருமான தரம்பால்.
தரம்பால்
அந்த இடிப்பு பெரும்பான்மை இந்தியர்களுக்கு நன்மையைத் தந்ததாகவே கூறினார்.
மக்களின் உணர்ச்சியின் வெளிப்பாடு இது, இதற்கு ஒரு தனி இயக்கமோ அல்லது கட்சியோ
பொறுப்பாக முடியாது என்றார்.
விடுதலைக்குப்
பின்னர் இந்திய அரசுக்கும் பாரத தேசத்துக்கும் ஏற்பட்ட பிளவை இந்த இயக்கம் சமன்
செய்கிறது. அது வெற்றி அடையுமா என்னவாகும் என்பது தெரியாது என்பதுதான் உண்மை –
இதுதான் அவரது மைய கருத்து.
அதன்
பின்னர் 2003ல் வழக்குக்காக அகழ்வாராய்ச்சி ஆரம்பித்தது. ஒரு கனேடிய புவியியல்
நிறுவனம் முதலில் ஆராய்ந்து, அங்கே பாப்ரி அமைப்புக்குக் கீழே மற்றொரு அமைப்பு
இருப்பதற்கான ஆதாரம் இருப்பதாகத் தெரிவித்தது. அகழ்வாராய்ச்சியில் தேவநாகரி
கல்வெட்டு உட்பட, சில மனித உருக்கொண்ட விக்கிரகங்களும் கிடைக்க ஆரம்பித்தன. நவீத்
யார் கான் என்ற ஒரு பாப்ரி ‘மசூதி’ ஆதரவாளர் அகழ்வாராய்ச்சிக்குத் தடை விதிக்க
கோரி உச்சநீதிமன்றத்திடம் கோர, அது தள்ளுபடி ஆயிற்று.
ஜூன்
மாதத்தில் மீண்டும் ஊடக காமெடி தொடங்கியது. ஜூன் 11 2003ல் வெளியான செய்திகளில் ‘பாப்ரி
மசூதிக்குக் கீழே ஓர் அமைப்பு இருப்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை’ என்பதாகச்
செய்திகள் வெளியாயின. ஆனால் இந்தச் செய்திகளைப் படிக்கும்போது எந்த அளவுக்குத்
தங்கள் வாசகர்களை எவ்வித மனச்சாட்சியும் இல்லாமல் மடையர்கள் என இந்தப்
பத்திரிகைகள் கருதுகின்றன என்பது புரியும். உதாரணமாக, ’தி ஹிந்து’ தனது செய்தியின்
தொடக்கத்தில் இப்படி முழங்கியது:
‘இந்திய
அகழ்வாராய்ச்சிக் கழகம் தனது அறிக்கையில் பாப்ரி மசூதியின் கீழே வேறொரு அமைப்பு
இருப்பதற்கான எவ்வித அமைப்புரீதியிலான வித்தியாசங்களையும் தான் தோண்டிய 15 புதிய
குழிகளிலும் காண முடியவில்லை என்று சொல்லியிருப்பதாகக் கூறப்படுகிறது.’
ஆனால்
உண்மை இப்படி இருந்தது. அது முக்கியப்படுத்தப்படாமல் அதே செய்தியில்
குறிப்பிடப்பட்டது.
‘அமைப்புரீதியிலான
வித்தியாசங்களைத் தான் ஆராய்ச்சி மேற்கொண்ட வேறு 15 குழிகளில் கண்டறிந்ததாக
அறிக்கை சொல்கிறது.’
இப்போது
நாம் அனைவரும் மனச்சாட்சியைத் தொட்டு கேட்க வேண்டிய கேள்வி – எது இந்திய
மதச்சார்பின்மைக்கும் அற உணர்வுக்கும் எதிராக செய்யப்பட்ட மிகப்பெரிய அநீதி?
திட்டமிட்டுப் பொய் பிரசாரம் செய்து, இல்லாத மசூதியான ஒரு கும்மட்டத்தை, ஒரு
மசூதியாக சிறுபான்மை மக்கள் மனத்தில் பதித்த இந்தப் படித்த அயோக்கியர்களின் செயலா?
அல்லது தாக்கப்பட்டு, குண்டடி பட்டு மீண்டும் மீண்டும் இந்தியாவின் உச்ச
மட்டங்களில் அமர்ந்திருக்கும் அதிகார வர்க்கத்தினரால் ஏமாற்றப்பட்டு, அந்தக்
கும்மட்டத்தை ஏறி உடைத்த கரசேவகர்களின் செயலா?
அந்த
இடம் இந்த தேசத்தின் ஆதார தேசிய உணர்ச்சியுடன் தொடர்புடையது. இந்த தேசம் முழுவதும்
அனைத்து சமுதாய மக்களிடமும் ஆழமான பண்பாட்டு ஆன்மிக உணர்ச்சியுடன் இணைந்த ஒரு
பெயர் ஸ்ரீ ராமன். ஆதிகவி வான்மீகிக்கு அவன் ஆதர்ச நாயகன். அகநானூற்றுக் கவி
கடுவன் மள்ளனாருக்கும் வேடுவப் பெண் சபரிக்கும் அவன் தெய்வம். குகனுக்கு சகோதரன்.
ஆனால் அவனையும் கூட கேள்விக்கு உட்படுத்தும் மரபு ஹிந்துக்களுடையது. எனவேதான் அவன்
பாரதத்தின் தேசிய நாயகன். ராம ரசத்தைப் பருகுங்கள் என்று சிந்து நதிக்கரை
சீக்கியர் கபீர் கானத்தைப் பாடுகிறார். பிபரே ராமரசம் என்ற காவேரிக்கரை
தென்னிந்தியர் போதேந்திரர் கானத்தைப் பாடுகிறார். இப்படி அனைவரையும் இணைக்கும்
பண்பாட்டு உன்னதம் ராமன்.
பாஜக
ஏன் ஒரு அரசாணையைப் பிறப்பித்து ராமர் கோவில் கட்டியிருக்கக் கூடாது என்று 2019
தேர்தலின்போது சிலர் கேட்டார்கள். அது அரசியல் ஆதாயத்தைத் தந்திருக்கலாம். ஆனால் தேசம்
முழுமைக்கும் சொந்தமான ராமனுக்குக் கட்டப்படும் கோவிலாக அது அமையாது. அப்படி அமைய
இப்படிக் காத்திருந்து நீதிமன்றம் மூலமே செய்யப்படும் செயல்தான் ராமனுக்குப்
பெருமை தரும்.
இன்றைக்கு
அளித்த தீர்ப்பின் மூலம் பாரதத்தின் உச்ச நீதிமன்றம் இந்திய அரசுக்கும்
பாரததேசத்தின் ஆன்மாவுக்கும் இடையில் ஏற்பட்ட செயற்கை நேருவியப் பிளவை அகற்ற
முன்வந்திருக்கிறது. அதற்கான ஆன்ம பலம் நம் அரசியல் சாசனத்துக்கு உள்ளது என்பதைக்
காட்டியிருக்கிறது.

இது இந்த தேசத்தின் பண்பாட்டின் பெருமை. ராம நாம வேள்வியின்
மகிமை.