Posted on Leave a comment

வலம் நவம்பர் 2017 இதழ் – முழுமையான படைப்புக்கள்


வலம் நவம்பர் 2017 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.

காந்தி, அம்பேத்கர், சாவர்க்கர், ஹிந்துத்துவம் – அரவிந்தன் நீலகண்டன்

இந்தியாவில் சுகாதாரம் – லக்ஷ்மணப் பெருமாள்

லாட்வியா: வேர்களைத் தேடி… : நேர்காணல் – V.V. பாலசுப்பிரமணியன், வசந்த் பார்த்தசாரதி


அயோத்தியின் மனத்துக்கு இனியான் – சுஜாதா தேசிகன்


கோயில் அறிவோம் பகுதி 2 – சிற்பத் தொகுதிகள் – வல்லபா ஸ்ரீனிவாசன்


இந்தியாவுக்கெனத் தனது அனைத்தையும் அளித்தவள்: சகோதரி நிவேதிதா – ஜடாயு


எரிப்பதும் புதைப்பதும்: ஒரு பதினேழாம் நூற்றாண்டு சர்ச்சை – அனீஷ் கிருஷ்ணன் நாயர்


சில பயணங்கள் சில பதிவுகள் – 3 – சுப்பு (தொடர்)


சிறகுகளின் சொற்கள் (சிறுகதை) – சத்யானந்தன்


கை வரை ஓவியங்கள்: அது ஒரு கனாக்காலம் – ஓவியர் ஜீவா

Posted on Leave a comment

கை வரை ஓவியங்கள்: அது ஒரு கனாக்காலம் – ஓவியர் ஜீவா


ஒரு பத்து பதினைந்து வருடங்கள் முன்னர் பிளக்ஸ் அச்சுமுறை என்று ஒரு புதிய தொழில்நுட்பம் நம் நாட்டில் பரவலாக அறிமுகமானது. அந்த அச்சு யந்திரங்களின் விற்பனைப் பிரதிநிதிகள் சந்து பொந்துகளிலெல்லாம் புகுந்து எங்கும் அதைப் பரப்பினர். பெட்டிக்கடைகளைவிட அதிகரித்தன பிளக்ஸ் யந்திரங்கள். நூறடி நீளமானாலும் பத்தடி உயரத்திற்கு நிமிடத்திற்குப் பலப்பல சதுர அடிகளாக பிளாஸ்டிக் பேனர்கள் துப்பி எறியப்பட்டன. கடைகள் எங்கும் நவீன பெயர்ப்பலகைகள். வீதியெங்கும் ராட்சச பேனர்கள்… காது குத்து முதல் கண்ணீர் அஞ்சலி வரை, அரசியல் பொதுக்கூட்டங்கள் முதல் பிரம்மாண்ட மாநாடுகள் வரை உயர்ந்து நின்றன. ஒவ்வொன்றிலும் நூற்றுக்கணக்கான முகங்கள். கிராபிக்ஸ் துணையுடன் வேறு உடலில் புகழ் மாந்தர்கள் தோன்றினர். திரைப்பட அரங்கங்களுக்கு வெளியேயும் நகரத்து முக்கியச் சாலைகளிலும் நின்றிருந்த சினிமா பேனர்களும் கட்டவுட்களும் மறைந்து போயின. அந்த இடங்களில் குறைந்த விலையில் தெளிவற்று சாய அடர்த்தியற்ற பிளாஸ்டிக் பேனர்கள் வந்தன. ஓவியர்கள், பெயர்ப்பலகை எழுதுபவர்கள், சுவர்களில் எழுதும் கலைஞர்கள் அனைவரின் வயிற்றிலும் இடி விழுந்தது. அவர்கள் செய்து வந்த தொழில்கள், பணம் மட்டும் முதலீடு செய்த முதலாளிகள் கைகளுக்குச் சென்றன.

கையால் வரையப்பட்ட பேனர்களை ஒரு தலைமுறையே பார்த்திருக்குமா என்பது சந்தேகம்தான். இந்தக் கலையே தமிழகத்திலிருந்துதான் நாடெங்கும் பரவியது என்று சொல்வார்கள். சந்திரலேகாவுக்காக கே.மாதவன் போன்ற புகழ்பெற்ற ஓவியர்கள் பிரம்மாண்டமான பிளைவுட் கட் அவுட்களையும் பேனர்களையும் வரைந்து வடக்கத்திய மாநகரங்களை வியப்பில் ஆழ்த்தினர் என்று சொல்வதுண்டு. டி.ஆர்.ராஜகுமாரியின் ஜிமிக்கியே ஆள் உயரம் இருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! ‘கலை’ என்ற அற்புத பத்திரிகையை நடத்திய பாலு பிரதர்ஸ் தொடங்கி ஏராளமான ஓவியர்கள் இந்தத் துறையில் உருவானார்கள். சென்னை, திருச்சி, சேலம், கோவை மற்றும் மதுரையில் பேனர் ஸ்டுடியோக்கள் உருவாயின. இந்த இடங்களிலிருந்து பக்கத்து மாவட்ட தியேட்டர்களுக்கும் வரைந்து அனுப்பப்பட்டன.

ஒரு பேனருக்கு பின்னால் எத்தனை பேரின் உழைப்பு இருந்தது என்பது ஒரு வியப்பான விஷயம். சில்வர் ஓக் ரீப்பர்களை ஒன்றரை அங்குலம் அகலத்திற்கு நீளமாக நறுக்கவேண்டும். மர ஆலைகளிலிருந்து கட்டுக்கட்டாக ரீப்பர்கள் வரும். காடா துணி கொள்முதல் இன்னொரு பெரிய வேலை. பண்டல்களாக வாங்கினால் விலை அதிகம் என்பதால் கட்பீஸ் துணிகளைத் தேடவேண்டும். அத்தனையையும் தையல் இயந்திரத்தின் மூலம் இணைக்கவேண்டும். பத்தடி, எட்டடி, ஆறடி அகலத்திற்கு காடா துணிகள் தயாரானவுடன் ரீப்பர் சட்டங்களை தச்சர் அடித்து வைப்பார். 20×10, 20×8, 15×10, 15×8, 12×10, 12×8, 10×10, 10×8 என்ற அளவிலான சட்டங்களில் காடா துணி புளூ டாக்ஸ் ஆணிகள் மூலம் இணைக்கப்படும். இனி துணியை வரைவதற்கேற்ப தயார் செய்யவேண்டும். இதற்கு ஒரு விதமான பசை தேவை. மூட்டைக்கணக்கில் வஜ்ஜிரம் வாங்கிக் கொதிக்க வைக்கப்படும். மாட்டுக் கொழுப்பிலிருந்து எடுக்கப்படுவதால், தாங்க முடியாத ஒரு நெடி இதிலிருந்து கிளம்பும். மூட்டை மூட்டையாக சாக் பவுடரும் தயாராக இருக்கும். நன்கு கொதித்துவந்த வஜ்ஜிரத்தில் சாக் பவுடரைக் கலந்து பசை போன்ற ஒரு கலவையை உருவாக்கி, படுத்த வாக்கில் வைக்கப்பட்டிருக்கும் பேனர் மீது ஒரு சப்பையான பிரஷ் கொண்டு மெழுகவேண்டும். நல்ல வெயிலடித்தால் இந்தக் கலவை காய்ந்துவிடும். அதன்மீது இன்னொரு கோட் பிரைமர் அடிக்கவேண்டும். பிரைமரை இளகச் செய்ய வார்னிஷைக் கலப்பார்கள். இதுவும் வெய்யிலில் காய்ந்த பிறகு வரைவதற்கான நாட்டு கான்வாஸ் தயார். இதையெல்லாம் செய்ய உதவியாளர்கள் இருப்பார்கள். பெரும்பாலான பேனர் ஓவியர்களுக்கு பாலபாடமும் சகிப்புத்தன்மைக்கான தேர்வும் இங்கிருந்துதான் தொடங்கும்.

இதன் மீது தேவையான படங்களை ஸ்கெட்ச் செய்யவேண்டும். பொதுவாக பேனர் விளம்பரங்களுக்கான ஸ்டில்கள், அந்தப் படங்களின் விநியோகஸ்தர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். வண்ணப்படக் காலங்களில்கூட கருப்பு வெள்ளை புகைப்படங்கள்தான் அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர் கலர் லாப்கள் பெருகி, கருப்பு வெள்ளை பிரிண்டுகள் அருகத் தொடங்கியவுடன், வண்ணப்படங்கள் வரத்தொடங்கின. ஸ்கெட்ச் செய்ய அந்தக் காலத்தில் மேஜிக் லாண்டர்ன் என்ற சிலைடு புரஜெக்டரையே ஓவியர்கள் பயன்படுத்தி வந்தனர். இதற்காக இரவில் அந்தப் புகைப்படங்களை ஸ்டாண்டு காமெரா பயன்படுத்தி ரீகாபி செய்வார்கள். நெகடிவுக்கு பதிலாக அக்பா கம்பனியின் ரசாயனம் பூசப்பட்ட கண்ணாடி சிலைடுகளைப் பயன்படுத்தினர். பின்னர் இந்தக் கண்ணாடி நெகடிவ்களை, மேஜிக் லாண்டர்னில் பொருத்தி ப்ரொஜெக்ட் செய்தால் பிரம்மாண்டமாக பேனரில் தெரியும். அதன் மீது காப்பியிங் பென்சில் கொண்டு ஸ்கெட்ச் செய்வார்கள். மனதிற்குள்ளேயே ஒரு வடிவமைப்பு நிகழ்ந்திருக்கும். பின்னர் எபிடியாஸ்கோப் என்ற ஒரு கருவி வந்தது. இதற்கு சிலைடு எல்லாம் தேவையில்லை. புகைப்படத்தையே கருவிக்குள் வைத்து இயக்கினால், திரையில் பிரம்மாண்டமாகத் தெரியும். ஸ்கெட்ச் எடுக்க முக்கியமான தேவை இருள். வெளிச்சத்தில் ஒன்றும் செய்ய இயலாது.

ஸ்கெட்ச் செய்தவுடன், அதைத் திருத்தி, பின்னணி வண்ணங்கள் அடிக்கப்படும். உருவங்களுக்கு ஒரு கோட் ஆரஞ்சும் வெள்ளையும் கலந்த கலவை அடிக்கப்படும். அதுவும் காய்ந்தவுடன்தான், ஓவியம் முழுமையாக வரைந்து முடிக்கப்படும். படத்தின் டைட்டில்களை புளோரசன்ட் வண்ணத்திலும் மற்ற எழுத்துக்களைப் பொருத்தமான வண்ணத்திலும் எழுதுவார்கள். இதற்குப் பயன்படுத்தப்பட்ட வண்ணங்கள் ஆயில் பெயிண்ட்டுகள்தான். போர்ட்ரெயிட் ஓவியர்களைப் போல டியூப்களில் வாங்க முடியாது. கட்டுப்படியும் ஆகாது. மூட்டைக்கணக்கில் வண்ணப்பொடிகள் வாங்கப்படும். வெள்ளை வண்ணம் மட்டும் (2727 என்ற பிராண்டு) களிம்பு போன்ற கலவை பத்து கிலோ டின்களிலும், லின்சீட் ஆயில் இருபது லிட்டர் டிரம்களிலும், பர்ண்ட் சியன்னா, ரா சியன்னா, ஆரஞ்சு (ஈயச் செந்தூரம்), சிகப்பு, நீளம் போன்றவை பொடி வடிவத்தில் மூட்டைகளில் வாங்கப்படும். சிறப்பு வண்ணம் சேர்க்க மெஜந்தா அல்லது மாவ் பிரிண்டிங் இங்க், குருவி நீலம் என்றழைக்கப்பட்ட ராபின் அல்ட்ராமரின், வெள்ளை, கருப்பு, கிரிம்சன் எனாமல் பெயிண்டுகளும், அனைத்து வண்ணங்களிலும் புளோரசன்ட் பெயிண்ட்டுகளும் பயன்படுத்தப்பட்டன. பட்டையான தூரிகைகள் நம்பர் இரண்டிலிருந்து பன்னிரண்டு வரையிலும், பெரிய பிரஷ்கள் ஒரு அங்குலம் முதல் நாலு அங்குலம் வரையிலும் வாங்கப்படும். இந்த வண்ணங்களையும் பிரஷ்களையும் கடனுக்கு சப்ளை செய்ய அம்பாலாவிலிருந்து கூட சர்தார்ஜிகள் வருவார்கள்.

ஓவியர்கள் இதே துறையில் நீண்ட நாட்கள் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள். பத்தடி உயரமான ஒரு நடிகரின் தலையை வரைய கடும் உடலுழைப்பும் வலிமையும் வேகமும் தேவைப்படும். பெஞ்சிலும் குதிரை என்றழைக்கப்பட்ட கோடாவிலும் ஏறி இறங்கி, குதித்து, அமர்ந்து, நின்று எல்லாம் வரையவேண்டும். ஜாடையும் மாறக்கூடாது. கருப்பு வெள்ளை புகைப்படங்களை வரையும்போது ஓவியனுக்குக் கட்டற்ற சுதந்திரம் இருக்கும். அவனது விருப்பம் போல வண்ணங்களைப் பயன்படுத்தலாம்.

பிளைவுட் கட்டவுட்கள் இன்னுமொரு மாய வித்தை. நாற்பது அடி ஐம்பது அடிக்கெல்லாம் உருவத்தைப் பிரித்து, ஸ்கெட்ச் செய்து வெட்டி, ரீப்பர்களில் அரைந்து, பகுதி பகுதியாக வரையும் ஒரு மாபெரும் சாதனை. தீபாவளி போன்ற பண்டிகை சமயங்களில் இரவும் பகலும் வேலை நடக்கும். ஒரு ஓவியக்கூடத்தில் குறைந்தது பத்து பேருக்கு வேலை இருக்கும்.

ஒவ்வொரு தியேட்டர்களுக்கும் அவர்கள் கட்டட அமைப்புக்கேற்ப பேனர்கள் கட்டவுட்களின் அளவு வேறுபடும். கோவை போன்ற ஒரு நகரத்தில், கோவையின் ஒவ்வொரு தியேட்டரின் அளவுகள் மட்டுமல்ல, பொள்ளாச்சி, ஊட்டி, உடுமலை, ஈரோடு, திருப்பூர், காங்கயம், தாராபுரம் போன்ற ஊர்களின் ஒவ்வொரு தியேட்டர் அளவும் மனப்பாடமாக தெரியும். பெரும்பாலும் படம் வெளியாவதற்கு இரண்டு மூன்று நாட்கள் முன்னர்தான் தியேட்டர்கள் தெரியும். அதற்கேற்ப அனைத்து அளவுகளிலும் பேனர்கள் ரெடியாக இருக்கும். மழை நேரங்களில் பெரும் சோதனையாக இருக்கும். காய வைக்கவேமுடியாது. வெளியூர் பேனர்கள் காய்ந்து பின்னர் சுருட்டப்பட்டு, பேருந்துகளின் கூரை மீது ஏறிப் பயணிக்கும். உள்ளூர் பேனர்களும் கட்டவுட்களும் இரவு நேரங்களில் கைவண்டிகள் மீது, ரோட்டையே அடைத்துப் பயணித்து தியேட்டர்களை அடையும்.

இவ்வளவு மூலதனத்திற்கும் உழைப்புக்கும் எற்ற ஊதியம் கிடைப்பதுதான் சந்தேகம். பெரும் நஷ்டத்தை அடைந்த ஓவியர்கள்தான் ஏராளம். பணம் தராமல் ஏமாற்றியவர்கள் மீது வழக்கு தொடர்ந்தால், அவ்வளவுதான், யாரும் பிறகு அண்டமாட்டார்கள்.

வேலாயுதம்

கோவை நகரத்தில் சினி ஆர்ட்ஸ் என்ற நிறுவனத்தை 1954ல் என் தந்தை திரு வேலாயுதம் தொடங்கினார். முதல் படம் கோவை ராயல் தியேட்டரில் தூக்குத்தூக்கி. அவர் மறைவுக்குப் பின் அதை நான் தொடர்ந்தேன். பிளக்ஸ் வருகைக்கு முன்வரை ஓய்வில்லாத பணிகள்தான். கடும் உழைப்பு, கடும் வேகம். வரம்புகளை உடைத்த வண்ணக்கலவைகளின் ஜாலம், ரசிகர்களின் பாராட்டுக்கள் எனக் காலம் போனது. சத்யராஜும், ரகுவரனும் வரைவதைப் பார்க்க வந்தவர்கள். இயக்குநர் மணிவண்ணன், ஜான் அமிர்தராஜ் போன்றவர்கள் சில குறைந்த காலங்கள் இங்கு பணி புரிந்தனர். வரைவதற்கு எனக்கு மிகவும் பிடித்த முகங்கள், சிவாஜி, ரஜினி மற்றும் விஜயகாந்த். முக வடிவங்களும் தோலின் நிறங்களும் அளவற்ற சுதந்திரத்தைத் தந்தன. தமிழில் பின்னர் வந்த புதிய அலைத் திரைப்படங்களுக்கும், பிறமொழிப்படங்களுக்கும் வரைவதென்றால் மிக மகிழ்வேன்.

தியேட்டர்களில் வைக்கப்பட்ட பேனர்களையும் கடவுட்களையும் காண்பதற்கென்றே ரசிகர்கள் ஊர் சுற்றி வந்தனர். இன்று வெளுத்துக்கிடக்கும் பிளக்சை யாரும் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை என்பதுதான், துவண்டு கிடந்தாலும், மனதில் ஒரு வெற்றிப்புன்னகையை தரும் ஒரு இனிமையான பிளாஷ்பேக்.

(இந்தக்  கட்டுரையில் உள்ள பேனர் ஓவியங்கள் அனைத்தும் ஓவியர் ஜீவாவின் கைவண்ணத்தில் உருவானவை)

Posted on Leave a comment

சிறகுகளின் சொற்கள் (சிறுகதை) – சத்யானந்தன்

தொலைக்காட்சிப் பெட்டியின் ஒலியை அவன் மனைவி நிறுத்தினாள். காரசாரமான சூடுபிடிக்கும் விவாதம் நின்றதில் அவன் பதைபதைத்து எழுந்தான். “என்ன வேண்டும் உனக்கு?”

“கொழந்தைக்குக் காலையில் பள்ளிக்கூடம் போணும். நீங்க வேலக்கிப் போணும். நான் சமைச்சி முடிச்சி வேலைக்கி ஒடணும். டிவி சவுண்டுல வூடேஅதிருதுப்பா…”

“ஒருத்தர் டிவி பாக்கும்போது ஆஃப் பண்றது என்ன மேனர்ஸ்?”

“மியூட்தான் பண்ணியிருக்கேன். ஆஃப் பண்ணலே.” அவள் குழந்தை தூங்கும் அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.”

அந்தச் செய்தித் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவரது உருவத்துக்குக் கீழே எழுத்து வடிவிலும் விவாதத்தின் சாராம்சம் வந்த வண்ணம் இருந்தது அவனுக்கு சற்றே ஆறுதல் தந்தது. ‘24 மணி நேரத்துக்குள் நிகழ்ந்திருந்த திடுக்கிடும் திருப்பங்கள் திடீரென நடந்தவை அல்ல’ என ஒருவர் கழுத்து நரம்பு புடைக்கக் கையை ஆட்டி ஆட்டி வாதித்துக் கொண்டிருந்தார்.

“எதிரிகளைப் போர்க்களத்தில் எதிர்கொள்வதில் கண் இமைக்கும் நேரத்தில் செய்யும் பதிலடி இது. இதைச் சதி என்று கூறுவது பொருந்தாது” என்று எடுத்துக்கூறினார் எதிர்த் தரப்பு.

ஒரு விளம்பர இடைவேளையை அறிவித்த தொலைக்காட்சி “உங்கள் ஓட்டு யாருக்கு? உடனே குறுஞ்செய்தி அனுப்புங்கள்” என்ற அறிவிப்பை எழுத்துவடிவில் விளம்பரங்களுக்குக் கீழே ஓட்டிக் கொண்டிருந்தது.

குறுஞ்செய்தி என்றதும்தான் அவனுக்குத் தன் கைப்பேசியின் நினைவு வந்தது. திறந்திருந்த அறைக்குள் சென்று அவனது உள்ளங்கை மற்றும் விரல்களைவிட நீண்டும் அகன்றுமிருந்த கைப்பேசியை எடுத்து வந்தான். அதன் வலப்புற உச்சி மூலையில் சிறு விளக்கொளி மினுக்கியது. ஏதோ செய்தி காத்திருக்கிறது. ‘ட’ வடிவமாய் விரலால் திரை மீது வரைய, அதன் பல செயலிகள் உயிர் பெற்றன. திரையின் இடதுபக்க உச்சி மூலையில் பச்சை நிறத்தில் ‘வாட்ஸ்அப்’புக்கான சின்னம் தெரிய, அதன் மீது விரலை அழுத்தினான்.

‘5 தொடர்புகளிலிருந்து 28 செய்திகள்’ எனப் பட்டியல் வந்தது.

அவனது மேலாளர் ‘வாட்ஸ் அப்’ குழு வழியாக நாளை காலை செய்யவேண்டிய தலை போகும் விஷயங்களைத் தந்திருந்தார். அவனுடைய மனைவி ‘மூலிகைத் தேநீர்’ பற்றி, பெண்ணுரிமை பற்றி மற்றும் சுற்றுலாத் தலங்கள் பற்றிப் பல காணொளிகளைப் பகிர்ந்திருந்தாள். அண்ணன் தனது புதிய காரின் படத்தை அனுப்பியிருந்தான். ‘சண்டையிடும் இரு அரசியல் குழுக்களுமே மட்டமானவை’ என்னும் பொருள்படும் ‘மீம்ஸ்’ஐயும் மனைவி பற்றிய நகைச்சுவைத் துணுக்குகளையும் அவனது நண்பன் ஒருவன் அனுப்பியிருந்தான். பல செய்திகள் ‘நண்பர் குழு’ மற்றும் ‘குடும்பக் குழு’வில் இருந்தன. அவற்றைத் திறக்காமல் மறுபடி வரவேற்பறைக்கு வந்து, தொலைக்காட்சி முன் அமர்ந்தான். விவாதம் சூடுபிடித்துக் கொண்டிருந்தது. வீட்டின் வாயிலுக்கு வெளியே ஒரு இரும்பு கிராதிக் கதவு இருந்தது. அதைப் பூட்டிவிட்டு மரக்கதவைத் தாளிட்டுப் படுப்பது அவன் வழக்கம். மரக்கதவைத் திறந்தான்.

கிராதிக் கதவை இரண்டாக மடித்து ஒருக்களித்து வைப்பதே, எதிர் வீட்டாருக்கும், மேலே மாடிக்குப் போவோருக்கும் இடைஞ்சலில்லாதது. கிராதியில் அவர்கள் பகுதியின் வார விளம்பரப் பத்திரிக்கை செருகப்பட்டிருந்தது. அதை எடுப்பதற்காக அவன் வாயிலுக்கு வந்தான். ‘காக் கா… கர்… கர்ர்… கா…’ என்னும்ஒலியும், ‘பக்… பக்… பகப்ப்..பக்… க்குகு…க்குக்’ என்னும் ஒலியும் கூடத்திலிருந்து ஒரே சமயத்தில் காதில் விழ, திரும்பினான். தொலைக்காட்சித் திரையிலிருந்து ஒரு அண்டங்காக்காவும், குண்டான சாம்பர் வண்ணப் புறாவும் வெளிப்பட்டன. காக்கா திறந்திருந்த வாசற்கதவு வழியே பறந்து போனது. புறா ‘பால்கனி’க்குள் சென்றது. அதைத் தொடர்ந்து சென்றான். அது பால்கனியின் இரும்புக் கம்பித் தடுப்புக்குள் புகுந்து மெலிதாகப் பறந்து, கீழே ஜன்னல் மீதுள்ள ‘மழைத் தடுப்பு’ கான்கிரீட் பலகை ஓரத்தில் சென்று அமர்ந்தது. அதன்மீது இருந்த குளிர்சாதன இயந்திரத்தின் பின்பக்கம் ஒண்டிக் கொண்டது.

வீட்டு வாசலில் பதட்டத்தைக் காட்டிக் கொள்ளாமல் கிராதியை சார்த்தி உட்பக்கமாகப் பூட்டை மாட்டிப் பூட்டினான். மரக்கதவைத் தாழிட்டான். ‘வாஷ்பேசினி’ல் வியர்க்கும் முகத்தைக் கழுவினான்.

அறைக்குள் நுழைந்து படுத்துக்கொண்டான். காக்கா பறந்து சென்றதை அக்கம் பக்கத்துக் குடுத்தனக்காரர்கள் யாரும் பார்க்கவில்லை. மனைவி, குழந்தை இருவரும் பார்க்கவில்லை. அதனால் அவர்கள் பயப்பட ஏதுவில்லாமல் போனது.

“எந்திரிங்க” என்று உலுக்கி எழுப்பியது யார்? படைப்பாளி பாதி ராத்திரியில் விழித்துக் கொண்டார். கண் எரிந்தது. எதிரே முந்தைய கதையின் அச்சுப் பிரதி நின்றிருந்தது. “இது நள்ளிரவு. என்ன வேண்டும் உனக்கு?”

“இப்போது எழுதும் கதையில் புறாவையும் காக்காவையும் படிமமாக்கப் போகிறீர்கள் இல்லையா?”

“அது என் சுதந்திரம்.”

“காலையில் மொட்டை மாடியில் பேசுவோம்.” பிரதி நகர்ந்தது.

பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் நிறைய கோதுமை இறைத்திருந்தார்கள். ஒரு பக்கத்தில் இருந்து காக்கைகள் கொத்தி விரைவாய்ப் பறந்து உயரம் சென்றன. மறுபக்கம் புறாக்கள் அலகுகளிலேயே அடைத்துக் கொண்டு மெதுவாய் நகர்ந்தன. இரண்டும் நல்ல இடைவெளி விட்டே இரை தேடின. “புறாக்களையும் காக்கைகளையும் பாருங்கள். அவை ஏன் ஒன்றாய் இழையவில்லை?” தற்போது எழுதும் பிரதி கவனத்தைக் கலைத்தது. அதன் அருகில் பல அச்சுப் பிரதிகள் நின்றிருந்தன.

“மனிதனை ஒட்டி வாழ்ந்தும், தமக்குள் ஒட்டாமலும் வாழும் பறவை இனங்கள் இரண்டுக்குமே உடலில் இருந்து வீசும் வாசனையில் தொடங்கி உணவின் தேர்வு வரை எதுவுமே பிடிக்காமல் இருக்கலாம். அவை மட்டுமா? எத்தனை எத்தனையோ இனங்கள் ஒன்றுக்கு ஒன்று ஒட்டாமல் ஒன்றாய் வாழ்வதில்லையா?”

“நேற்று இரவு சுதந்திரம் என்று கூறினீர்கள்… உங்கள் சிந்தனையில் பறவை இனம் பற்றி, அவற்றைப் படிமமாக்கும் குறுகிய அணுகுமுறை மட்டுமே இருக்கிறது. சுதந்திரம் பற்றி எதற்கு அளக்கிறீர்கள்?”

வெய்யில் ஏற ஆரம்பித்தது. பிரதிகளின் உற்சாகம் குறையவே இல்லை.

வாசகன் 1 மூன்றாவது முறையாக 65 வார்த்தைகள் மட்டுமே ஆன கவிதையைப் படித்தான்:

புலியின் காற்தடம்
பாம்புச் சட்டை
கரையோர முதலை
இவற்றை மறைத்த
இரவு
கானகமெங்கும்
அப்பட்டமாய்
அலைந்து கொண்டிருந்தது

வாசகன் 2 தான் படித்த கல்லூரி முதல்வரின் அறைக்குள் உட்தாளிட்டு அவரது இருக்கையில் அமர்ந்தான்.

முதலில் மெதுவாக ஒரு தட்டல். பின்னர் இரண்டு… இடைவெளி விட்டபின் நான்கைந்து… கதவைத் தட்டும் ஒலி கூடிக் கொண்டே போனது. அவன் திறக்கவே இல்லை.

திடீரென, கதவை உடைத்துக் கொண்டு காயந்த மல்லிகைப் பூச்சரங்கள், காற்று இல்லாத காற்பந்துகள், ‘ராக்கெட்’ போலச் செய்யப்பட்ட காகித அம்புகள், பழுதான விஞ்ஞான ‘கால்குலேட்டர்கள்’ விதவிதமான கைப்பேசிகள், கண்ணீர் காயாத கைக் குட்டைகள், காலி மது பாட்டில்கள், காலி வாசனை வாயுக்குப்பிகள் உள்ளே வந்து விழுந்து அறையெங்கும் சிதறின. மேலும் மேலும் வந்து விழுந்துகொண்டே இருந்தன.

நாற்காலியைத் தற்காப்பாக முன்னே நிறுத்தி, அதன் பின்பக்கம் நின்று கொண்டான். அவன் காலுக்குக் கீழே இருந்த சதுரம் அசைந்தது. அவன் விலகி நின்றான். அதை ஒட்டி இருந்த பல சதுரங்களும் அசைந்து வழி விட, கீழே படிகள் இறங்குவது தெரிந்தது.

பறவைகளின் எச்ச வாடையின் வீச்சும் அரையிருட்டுமாயும் இருந்த தளத்தில் இறங்கினான். தொலைவில் தெரிந்த சன்னமான வெளிச்சத்தை நெருங்கினான். ஒரு பக்கம் புறாவின் சிறகும் மறுபக்கம் காக்கையின் சிறகும் கொண்ட பறவைகள் கிளியின் மூக்குடன் தென்பட்டன.
________________

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் -3: வணக்கம் சொன்ன எம்.ஜி.ஆர் – சுப்பு


வாரியங்காவலுக்கு அருகில் மருதூர் என்ற சிற்றூர் இருக்கிறது. கிராமத்துப் பெண்கள் பகல் வேளையில் சுள்ளி ஒடிப்பதற்காக முந்திரிக் காட்டுக்குப் போவார்கள். ஐம்பது வருடங்களுக்கு முன்னால் ஒருநாள் காட்டுக்குப் போனவர்கள் தங்களோடு வந்த ஒரு பெண்ணைக் காணாமல் தேடியிருக்கிறார்கள். பின்னர் வீடு திரும்பினார்கள். இதற்குள் காணாமல் போன பெண் வீடு வந்து சேர்ந்துவிட்டாள். காட்டில் ஒரு முனிவரைக் கண்டதாகவும், அந்த முனிவர் இவளைக் கன்னத்தில் ஒரு அறை கொடுத்ததாகவும் அவள் கூறினாள். அன்று முதல் அந்தப் பெண் பல அற்புதங்களை நிகழ்த்தினாள். கூரையிலிருக்கும் ஓட்டை உடைத்து வந்தவர்கள் கையில் கொடுத்து மூடிக்கொள்ளச் சொன்னால், கொஞ்ச நேரத்தில் அவரவர் விருப்பப்படி கைக்குள் குட்டி விக்ரகம் கிடைக்கும். கொங்கண முனிவர் அவளுக்கு இவற்றை அருளியதாகக் கருதிய மக்கள் அவளை மருதூர் சித்து என்று அழைத்தார்கள்.

வீதியில் நின்றுகொண்டு மருதூர் சித்து கையைத் தூக்கி வேண்டினால் ரோஜா மாலையும், பழனிப் பஞ்சாமிர்தமும் கையில் விழும். குழந்தை இல்லாதவர்கள் மருதூர் சித்துவிடம் வேண்டிக்கொண்டு, குழந்தை பிறந்தவுடன் தூக்கிக்கொண்டு வருவார்கள். குழந்தையை மருதூர் சித்து கைகளில் தூக்கி வைத்துக் கொள்வாள். எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே குழந்தை காணாமல் போய்விடும். சித்து வீட்டு வேலை செய்யப் போய்விடுவாள். வந்தவர்கள் பயபக்தியோடு காத்திருப்பார்கள். கொஞ்ச நேரம் கழித்து சித்து ஓடிவந்து கையைத் தூக்கினால் குழந்தை மொட்டை அடிக்கப்பட்டு, சந்தனம் பூசப்பட்டு, மாலையோடு, வேலோடு தொப்பென்று விழும். பழனி விபூதியும், பஞ்சாமிர்தமும் கூட வரும். குழந்தை பழனிக்குப் போய் மொட்டை அடித்துக்கொண்டு வந்துவிட்டதாக ஐதீகம். மருதூருக்கும் பழனிக்கும், குறைந்தபட்சம் முந்நூறு கிலோ மீட்டர் இருக்கும்.

நானும் மருதூர் சித்தைப் பார்த்திருக்கிறேன். எனக்கும் விக்ரகம் கிடைத்திருக்கிறது.

பல வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் இரவு மருதூர் சித்துவின் வரலாற்றை மகாபலிபுரத்துக் குப்பத்துத் தோழர்களிடம் உற்சாகமாக விவரித்துக் கொண்டிருந்தேன். அவர்களில் ஒருவன் மொத்தக் கதையையும் கேட்டுவிட்டு நான் கப்ஸா விடுகிறேன் என்று சொல்லிவிட்டான். எனக்கு உண்மையை எப்படி நிரூபிப்பது என்று தெரியவில்லை. மருதூர் சித்து எவ்வளவோ அற்புதங்கள் செய்திருக்கிறதே, இங்கே இப்பொழுது ஒரு அற்புதம் செய்து தன்னை நிரூபிக்கக்கூடாதா என்று வேண்டினேன். அப்பொழுது குப்பத்துப் பையன் ஒருவன் அங்கே வந்து நாங்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறோம் என்று கேட்டபோது, விவரத்தைச் சொன்னோம். “ஆமாம், நானும் டூர் போயிருந்தபோது அந்த மருதூர் சித்தைப் பார்த்திருக்கிறேன். இவன் சொல்வதெல்லாம் உண்மைதான்” என்று அடித்துப் பேசினான்.

*

ஓவியம்: ஜீவா

வாரியங்காவலில் ஹோட்டலோ, டீக்கடையோ கிடையாது. வெளியூரிலிருந்து வருகிறவர்கள் வேண்டப்பட்டவர்களுடைய வீட்டில் சாப்பிட்டுக் கொள்ள வேண்டியதுதான். மற்றபடி அரசாங்க அதிகாரிகளோ, பள்ளிக்கூட இன்ஸ்பெக்டர்களோ வந்தால் அவர்களுக்கு நம்ம வீட்டில்தான் சாப்பாடு.

யாராவது ஒரு கூட்டுறவுத் துறை பதிவாளரை மதிய விருந்துக்காக அழைத்து வருவார் நயினா. சாப்பிட்டு முடித்து வெற்றிலை சீவல் போட்டு அலுவலக அரசியலைப் பேசி முடித்த பிறகு ஒரு சம்பிரதாயம் பாக்கி இருக்கும். விருந்தினருக்கு ‘சகலகலாவல்லி மாலை’, ‘முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்’ போன்ற தோத்திரங்களை நான் சொல்லிக் காட்ட வேண்டும். இதற்காகவே எனக்கு பளிச்சென்ற உடை. தவிர அப்பளாக்குடுமியோடு எண்ணெய் வைத்த ஜடை.

ஒருநாள், தாசில்தார் ஒருவர் வந்திருந்தார். சாப்பிட்டாயிற்று, சம்பிரதாயங்களும் ஆயிற்று. அவர்கள் இருவரும் சுவாரஸ்யமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். என்னுடைய புத்தியோ வேறு திசையில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. ஒரு கேள்வி, என்னை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. விஷயம் இதுதான்.

எதிர் வீட்டில் சுசீலா என்றொரு பெண் இருந்தாள். எட்டாம் வகுப்பை முடித்தவள். இருந்தாலும் எனக்குத் தோழிதான். எனக்கு ஆறு வயது என்றாலும் அவள் எனக்குத் தோழிதான்.

முதல்நாள் மாலை முதல் சுசீலாவைக் காணவில்லை. சன்னமான குரலில் ‘ஓடிப்போய்’விட்டதாகப் பேசிக்கொண்டார்கள். ‘எங்கே போயிருப்பாள்? கூட்டிப் போனவன் யார்?’ என்றெல்லாம் விதவிதமாக விசாரணைகள். நம்முடைய பிரச்சினை அதுவல்ல. ‘சுசீலா எவ்வளவு நேரம் ஓடிக்கொண்டே இருப்பாள். அவளுக்கு கால் வலிக்காதா?’ என்பதுதான் என்னுடைய கவலை. காலையிலிருந்து இந்தக் கேள்வி மூளையில் முட்டிக்கொண்டு நின்றது.
கேட்டுவிட்டேன்.

தாசில்தாருடன் பேசிக் கொண்டிருந்த நயினாவின் கையைப் பிடித்து இழுத்து, “சுசீலா ஓடிண்டே இருக்காளே அவளுக்குக் கால் வலிக்காதா?”

தாசில்தார் முகத்தில் கலவரம் படர்ந்தது.

நயினா ஒருவாறு சமாளித்தார். அம்மா என்னை உள்ளே இழுத்துப் போனார்.

*
இப்படி சுவாரசியமாகப் போய்க்கொண்டிருந்த என்னுடைய வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு, நான் சென்னைக்குப் போய் பெரியப்பா வீட்டில் தங்கிப் படிக்க வேண்டும் என்பது நயினாவின் முடிவு.

நயினாவின் முடிவு எனக்குத் தெரிவிக்கப்பட்டவுடன் நான் எடுத்த முடிவு, குடுமியை எடுத்துவிட வேண்டும் என்பதுதான். அதுவும் அமல்படுத்தப்பட்டது.

சென்னை அடையாரில் பெரியப்பா வீடு. முத்தண்ணா, ஏகாம்பரம், சீதாராமன், தியாகராஜன் என்று அண்ணன்கள். விசுவநாதன் என்று ஒரு தம்பி.

சென்னையில் நுழைந்தவுடன் என்னை முதலில் தாக்கியது அதனுடைய அளவு. இரண்டாவது தொழில்நுட்பம்.

சென்னைக்கு வந்த புதிதில், பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருப்பேன். ஜன்னலில் மழைத் தடுப்புக்காக ஒரு பிளாஸ்டிக் திரையும், அதைப் பொருத்துவதற்காக சின்னச் சின்னக் குமிழ்களும் அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் குமிழ்கள் இதற்காகத்தான் இருக்கின்றன என்ற விவரம் அப்போது தெரியாது. தெரியாத விஷயத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற பணிவும் கிடையாது. அந்தக் குமிழ்களை பஸ் இஞ்சினுடைய ஒரு உறுப்பு என்று நானாகவே ஊகித்துக் கொண்டேன். அதன் விளைவாக இந்தப் பகுதியை இப்படி கவனிப்பாரற்று விட்டுவிட்டார்களே, இதனால் ஏதாவது விபத்து ஏற்படுமோ என்ற கலக்கம். சமயத்தில் ஜன்னலோரமாய் அமர்ந்திருக்கும் பயணி அதை எதேச்சையாகத் திருகிக் கொண்டிருப்பார். நான் மரண பயத்தில் உறைந்துபோய் அவரையே பார்த்துக் கொண்டிருப்பேன்.

எனக்கு ஜன்னல் சீட் கிடைத்தால், அவர் திருப்புவதைக் கண்காணித்து அதற்கு நேர்மாறான திசையில் எனக்கருகிலிருக்கும் குமிழை நான் திருப்பி பஸ்ஸையும், பயணிகளையும் காப்பாற்ற முயற்சிப்பேன். பஸ்ஸை விட்டு இறங்கிய பிறகுதான் எனக்கு உயிர் வரும். இந்தச் சின்ன விஷயத்தை ஒழுங்காய்த் தெரிந்து கொள்ள எனக்கு ஒரு வருடம் ஆயிற்று.

*
பெரியப்பா வீட்டில் ரேடியா உண்டு. ரேடியோவில் இரண்டு விஷயங்கள்தான் அனுமதிக்கப்படும். ஒன்று ஆங்கிலச் செய்தி. இன்னொன்று நாதஸ்வரம். என்னால் தவுல்காரன் வாசிப்பைத் தாங்க முடியாது. ரேடியோ எப்படி வேலை செய்கிறது என்று அண்ணன்மாரிடம் விசாரித்தேன். உள்ளே நாதஸ்வர கோஷ்டி உட்கார்ந்துகொண்டு வாசிப்பதாக எனக்குச் சொல்லப்பட்டது. ஆளில்லாத நேரம் பார்த்து தவுல்காரனுக்கு ஒருமுறை எச்சரிக்கை விடுத்தேன். அவன் என்னை மதிப்பதாயில்லை. கோபத்தில் ரேடியோ பெட்டி மீது ஓங்கி ஒரு குத்து. கண்ணாடி உடைந்து களேபரம். என்னைச் சுற்றி வீட்டார். ‘இந்தத் தவில்காரன் சொன்னா கேக்க மாட்டேங்கிறான்’ என்றேன். எதிர்வீடு, மாடி வீடு, பக்கத்து வீடு, பள்ளி நண்பர்கள் என்று செய்தி மெல்லப் பரவி எல்லோரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

விஷயம் இதோடு முடியவில்லை. சில நாட்களுக்குப் பிறகு வீட்டு வாசலறையில் இருந்தேன். ரேடியோ மெக்கானிக் ரேடியோவை ரிப்பேர் செய்து எடுத்து வந்தார். கை நீட்டி வாங்கும்போது கை தவறி ரேடியோ கீழே விழுந்து உடைந்தது. எனக்கு யார் மீதும் கோபமில்லை. ஏதோ அதுவே கீழே விழுந்துவிட்டது என்று நான் சொன்னதை யாரும் நம்பத் தயாராயில்லை. மீண்டும் ரேடியோ சம்பவம் அக்கம்பக்கங்களில் சுவாரசியமாகப் பேசப்பட்டது.

*

இல்லஸ்ட்ரேடட் வீக்லியில் மணமக்களின் புகைப்படம் வெளிவரும். அனேகமாக எல்லா மணமகனும் கோட் சூட்தான் அணிந்திருப்பார்கள். சில ஜோடிகளைப் பார்க்கும்போது பொருத்தம் சரியில்லையென்று நினைப்பேன். கழுத்தோடு மணமகனை வெட்டி என் ரசனைக்கேற்றவாறு வேறு மணமகளோடு இருப்பவனின் இடத்தில் ஒட்டிவிடுவேன். ஒருநாள் இந்த வேலையில் மும்முரமாயிருந்தபோது பெரியப்பா கவனித்துவிட்டார். அன்று அவர் காட்டிய கோபத்திற்கு நல்ல பலனிருந்தது. இந்தத் தவறை அதற்குப் பிறகு நான் செய்யவில்லை.

*
நான்கு அண்ணன்கள் இருந்தது சில விஷயங்களில் அசௌகரியமாய் இருந்தது. நான் புதுப்புத்தகம் வாங்க முடியாது. பெரியண்ணனிடமிருந்து கைமாறிக் கைமாறிக் கடைசியாகப் புத்தகம் என்னிடம் வரும்போது அது சிரமதசையிலிருக்கும். எல்லோரும் அட்டை போட்டு லேபிள் ஒட்டிய புத்தகங்களை எடுத்து வருவார்கள். எனக்கோ புத்தகத்தைத் தொட்டுப் பார்க்கவே எரிச்சலாய் இருக்கும். துக்கம் தாளாமல் ஒருநாள் நார்நாராய் இருந்த ஆங்கிலப் புத்தகத்தை தனித்தனி பேப்பராகக் கிழித்து எடுத்துவிட்டேன். அன்றையப் பாடத்தை மட்டும் மடித்து டவுசர் பாக்கெட்டில் செருகிக்கொண்டு ஸ்கூலுக்குப் போனேன். டெஸ்க் மேல் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு ஹிந்து பேப்பரைப் படிப்பதுபோல் ஆங்கிலப் பாடத்தை விரித்துப் படித்தேன்.

எல்லாப் பெண்களும் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். ‘இனிமேல் எந்தப் பாடம் நடக்கிறதோ அதை மட்டுமே நான் எடுத்து வருவேன்’ என்றும், ‘எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு வரவேண்டிய அவசியமில்லை’யென்றும் அறிவித்தேன். இரண்டுபேர் என்னைப் பின்பற்றி அப்பொழுதே தங்கள் புத்தகங்களைப் பிரித்து எடுத்துவிட்டார்கள். டீச்சர் வந்ததும் அவர்களுக்கு மட்டும் பூசை. டீச்சரின் கருத்துப்படி சில தவறுகளை மாணவர்கள் செய்யலாம். ஆனால் மாணவிகள் செய்யக்கூடாது.

*       
நான் படித்த ராணி மெய்யம்மை உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஜார்ஜ். இவர் குள்ளமான உருவமுடையவர். கோட்டு, பேன்ட் அணிந்திருப்பார். கையில் ஒரு போலீஸ் விசிலை வைத்து ஊதிக்கொண்டே பள்ளியைச் சுற்றி வருவார். ஜார்ஜுடைய தோரணைகள் நாடக பாணியிலிருக்கும். இவர் பையன்களைத் தண்டிக்கும் விதமே அலாதி. தவறு செய்தவன் ப்ரேயர் நடக்கும்போது, மேடையில் ஏறி ஓரமாக நிற்க வேண்டும். தலைமையாசிரியர் நடுநாயகம். ப்ரேயர் முடிந்தபிறகு பையன் செய்த குற்றத்தை ஜார்ஜ் அனைவருக்கும் அறிவிப்பார்.

அறிவிப்புக்குப் பிறகு தீர்ப்பு. யார் என்ன தவறு செய்தாலும் தீர்ப்பு ஒன்றுதான். அது மாறாது. ‘நான் நீதிபதியாய் இருந்தால் இவனுக்குத் தூக்குத் தண்டனை விதித்திருப்பேன். நான் தலைமையாசிரியராய் இருப்பதால் என் முழு பலத்தையும் பிரயோகித்து இவனுக்கு ஆறு அடிகள் வழங்குகிறேன்’ என்பார். இந்த வாசகத்திற்காகவே காத்திருந்த ப்யூன், மேடை மீதேறி தலைமையாசிரியரிடம் பிரம்பைக் கொடுப்பான். இதற்குள் பையனும் அவர் அருகில் வந்துவிட வேண்டும். நீட்டிய கைகளில் ஆறு அடிகள். வலிதாங்காமல் கை மடக்கப்பட்டால், எண்ணிக்கை மீண்டும் ஒன்றிலிருந்து துவங்கும்.

தமிழாசிரியர் செவ்வாய்க் கிழமைகளில் மிகவும் கோபமாயிருப்பார். இதற்கான காரணத்தை கமலக்கண்ணன்தான் கண்டுபிடித்தான். செவ்வாய்க்கிழமைகளில் ஆசிரியர் ஷேவிங் செய்து கொள்ளுகிறார், அந்த எரிச்சலில் நம்மை விரட்டுகிறார் என்று கமலக்கண்ணன்தான் சொன்னான். வகுப்பிலேயே அவன்தான் உயரம். வயதும் அதிகம். கமலக்கண்ணன்தான் எங்கள் வகுப்பில் ஒரே கம்யூனிஸ்ட். பெரிய ஜிகினா போட்ட அரிவாள் சுத்தியல் பேட்ஜை பனியனில் குத்திக்கொண்டு வருவான். சட்டையை நீக்கி பாட்ஜைக் காட்டு என்ற நாங்கள் அவனைக் கேட்க வேண்டும். எல்லோரும் எம்.ஜி.ஆர்., சிவாஜியைப் பற்றிப் பேசும்போது இவன் மட்டும் விடாமல் ‘சோவியத் ரஷ்யாவில் எத்தனை ஐந்தாண்டு திட்டங்கள் நிறைவேறிவிட்டன என்று தெரியுமா?’ என்று ஒவ்வொருத்தரையும் கேட்பான். எங்களுக்குத் தெரிந்ததெல்லாம். அதிகமான ஐந்தாண்டு திட்டம் என்றால் அதிகமாகப் பாடம் படிக்க வேண்டியிருக்கும் என்பதுதான்.

*       
மாலை நேரத்தில் அடையாறு ஆற்றங்கரையில் நான்கு பேராக (இரண்டு இந்து, ஒரு கிறித்துவர், ஒரு முஸ்லீம்) சேர்ந்துகொண்டு உண்டிவில்லால் ஓணான் அடிப்போம். அடிபட்டு விழுந்த ஓணானை எடுத்து முதலில் கிறித்துவர் முறைப்படி மரியாதை செலுத்தி ஒரு டப்பாவுக்குள் போடுவோம். பிறகு முஸ்லீம் முறைப்படி ஓணான் டப்பாவைப் புதைத்துவிடுவோம். கடைசியாக ஓணான் டப்பா தோண்டியெடுக்கப்பட்டு இந்து முறைப்படி மந்திரங்கள் சொல்லிக் கொளுத்தப்படும். இந்தக் கிறித்துவன் இப்போது அமெரிக்காவில். இந்து, வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தில் காம்ரேட் (சி.எச். வெங்கடாசலம்). தொலைக்காட்சிகளில் பிரதமர் மோடியைக் கண்டிக்கிறார். முஸ்லீம் என்னவானான் என்று தெரியவில்லை.

*
எங்கள் வீட்டிற்கு அருகில் திரைப்பட நடிகர் கே.ஆர்.ராமசாமி குடியிருந்தார். அவரைப் பார்ப்பதற்காக தி.மு.க.வினர் வந்து போவார்கள். ஒருநாள் நானும் ஞானசேகரன் என்ற பையனும் கே.ஆர்.ராமசாமி வீட்டு வழியாகப் போய்க் கொண்டிருந்தோம். வாசலில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர். கேட்டைத் திறந்துகொண்டு வெளியே வந்தார்.

ஞானசேகரன் ‘டேய், எம்.ஜி.ஆர்.டா. எம்.ஜி.ஆர்.டா’ என்று என்னை இடித்தான். நானும் எம்.ஜி.ஆரைப் பார்த்துவிட்டேன். இருந்தாலும் அதற்காக இவன் இப்படிக் கத்துவது எனக்குப் பிடிக்கவில்லை. ‘எம்.ஜி.ஆராக இருந்தால் என்னடா’ என்று அவனைத் தள்ளிவிட்டேன். இத்தனையும் எம்.ஜி.ஆர். முன்னிலையில் நடந்தது. அவர் புன்முறுவலுடன் கைகூப்பி எங்களைப் பார்த்து ‘வணக்கம்’ என்றார். பதட்டத்தில் நான் பதிலுக்கு மரியாதை செய்யவில்லை. அவர் காரில் ஏறிப் போய்விட்டார். ஞானசேகரன் எம்.ஜி.ஆரைப் பார்த்ததைப் பற்றியும், நான் எம்.ஜி.ஆருக்கு வணக்கம் சொல்லவில்லை என்பதையும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டான்.

(…தொடரும்)

Posted on Leave a comment

எரிப்பதும் புதைப்பதும்: ஒரு பதினேழாம் நூற்றாண்டு சர்ச்சை – அனீஷ் கிருஷ்ணன் நாயர்


சமீபத்தில் ஒரு அரசியல் தலைவர் இறந்தபோது அவரது உடலை எரிப்பதா, புதைப்பதா என்ற சர்ச்சை எழுந்தது. ஒரு வழியாகப் புதைப்பது என்று முடிவு செய்து அம்முறையில் இறுதி சடங்கையும் செய்து முடித்து விட்டார்கள். ஆனால் இன்றளவும் புதைத்தது தவறு என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள். அரசியல் தலைவர்களைப் பொருத்தமட்டில், அவர்கள் உயிரோடு இருக்கும்போதே தங்களது இறுதிச் சடங்குகளைக் குறித்தும் அவை நடத்தப்பட வேண்டிய முறை குறித்தும் தெளிவாக எழுதி வைத்திருந்தால் பிரச்சினை இல்லை. இல்லாவிட்டால் பெருங்குழப்பம்தான்.

இத்தகைய சர்ச்சைகள் புதிதல்ல. பதினேழாம் நூற்றாண்டிலேயே இத்தகைய சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கின்றன. அந்தச் சர்ச்சை பன்னிரண்டு வருடங்கள் வரை நீடித்திருக்கிறது.

இதனை தஞ்சை சரஸ்வதி மஹால் ஆவணங்கள் வாயிலாக அறியலாம். சரஸ்வதி மஹால் சேகரிப்பில் ‘ஞபரமானந்தயோகி சரித்திரம் (பூர்ணபிரம்மானந்த யோகி கூற்று)’ என்னும் பதினேழாம் நூற்றாண்டு ஆவணம் உள்ளது.

தஞ்சை மராத்திய பேரரசைச் சேர்ந்த மன்னன் ஷாஹாஜி போன்ஸ்லே 1684 முதல் 1712 வரை ஆண்டவர். முஹாலயப் படைகளுக்கு எதிராக வெற்றிகரமான பல தாக்குதல்களை நடத்தியவர். கலை இலக்கியப் புரவலர். இவரது மரணத்திற்குப் பிறகு அவரது பூத உடலைத் தகனம் செய்வதா புதைப்பதா என்று குழப்பம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து நடந்த சில விஷயங்கள் ‘சமாதிலிங்க பிரதிஷ்டை விளக்கம்’ என்னும் பெயரில் மஹால் வெளியிட்ட நூலின் பின்னிணைப்பாக உள்ளது. இவற்றைத்தான் மேற்கண்ட ஆவணம் விவரிக்கிறது.

ஷாஹாஜி இறந்த செய்தி கேட்டதும் பரப்பிரம்மானந்த யோகி (அவரது சீடர் பூரணப்பிரம்மானந்த யோகியும் உடன் வர) வல்லத்தில் இருந்து தஞ்சை கோட்டைக்கு வந்து கோட்டை ஹவில்தாரான சீத்தப்பராவிடம் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

‘சகசிராசீபரர் சரீர வாசம் விட்டு தவலோகம் போனார். அவர் நமக்கு ஆன்மபந்து. அவர் வாசம் பண்ணின கோயில் மந்திரபிண்டமான படியினாலே அவர் கோயிலான மந்திரபிண்டத்தை சமாதியிலே வையுங்கள்.’

ஹவில்தார் துரையிடம் கேட்டுத் தக்கபடிச் செய்வதாக கூறுகிறார். இங்கு துரை என்பது அடுத்த பட்டம் ராஜாவைத்தான் குறிக்கும் என்று எண்ணுகிறேன். துரை பரம்பரையாக நடக்கும் சம்பிரதாயத்தை மாற்றக்கூடாது என்கிறார். “இப்போது நூதனமாக ஒன்று செய்தால் பூர்வீகம் தவறி போகும்” (78) என்று கூறி ஷாஹாஜியின் உடலைத் தகனம் செய்து விடுகிறார்.

இவ்வாறு அரசரது உடல் புதைக்கப்படாமல் தகனம் செய்யப்பட்டதை அறிந்த பரப்பிரம்மானந்த யோகி மிகவும் வருத்தம் அடைகிறார். அவர் ஹவில்தாரைக் கண்டு கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

“சம்பிரதாயம் பார்த்தீர்களே தவிர மகிமை அறியாது போனீர்கள்… இராசாவுக்கும் தேசாதிபதிக்கும் மண்டலாதிபதிக்கும் ஆகிய இவர்களிடத்திலே சிவம் மாத்திரை போது இருக்கும். சகஜிராசீசுபரர் சதாசிவ பிரம்மம். அவர் வாசம் பண்ணின கோயில் மந்திரபிண்டமான திருக்கோவில். அது தகனமான தோஷம் பதினாறு வருடம் வருத்துமே இராசாவுக்கு ஆகாதே. இராக்சியத்துக்கு ஆகாதே.”

இவ்விடத்தில் இரண்டு விஷயங்கள் கவனிக்கத்தக்கது. யோகி அரசனின் உடலை எரிக்கக் கூடாது என்று கூறுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். சிலர் கூறுவது போல மன்னர் இறுதி நாட்களில் சன்னியாசம் எடுத்துக் கொண்டார் என்பது உண்மையாக இருக்கலாம். அதனால்தான் மன்னனை ‘சதா சிவ பிரம்மம்’ என்று கூறி இருக்கலாம். இல்லையெனில் அரசர்கள் விஷ்ணு அம்சம் என்ற நம்பிக்கை இருப்பது போல, அரசர்கள் சிவ அம்சம் (‘மாத்திரை அளவு சிவம் இருக்கும்’) என்ற நம்பிக்கை கூட அரசன் உடலை எரியூட்டக் கூடாது, புதைக்கத்தான் வேண்டும் என்று வலியுறுத்தியதற்குக் காரணமாக இருக்கலாம். அரசனிடம் சிவ ஸ்வரூபம் உள்ளது என்பது சோழர் காலம் தொட்டு, அதற்கும் முன்பிலிருந்தே இருக்கும் நம்பிக்கை எனக் கொள்ளலாம். முன்னர் அரசர்களுக்கு அவர்களைப் புதைத்த இடத்தில் பள்ளிப்படை கோவில்கள் இருக்கும. பள்ளியடைதல் எனில் உறங்குதல் என்றும் இவ்விடத்தில் நீங்காத உறக்கம் என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் பள்ளிப்படை கோவில்களில் ஆதிசைவர் பூஜை செய்யவில்லை. காளாமுகர்கள்தான் பூஜை செய்துள்ளனர்.

ஹவில்தார் நடந்த விஷயத்திற்கு வருத்தம் தெரிவித்து பரிகாரம் கேட்கிறார். பரமானந்தயோகி தக்க பரிகாரத்தைக் கூறுகிறார். தனது சிஷ்யனான பூரணபிரம்மானந்த யோகியை பதினாறு வருடம் தஞ்சை நகரில் தவம் இருக்க வைப்பதே தக்க பரிகாரம் என்கிறார். அவ்வாறு தியான சமாதியாகிய தவத்தில் அவர் சகலருக்கும் நன்மை வேண்டி பிரார்த்தனை செய்வார் எனவும், அவரது தியானத்திற்கும் தவத்திற்கும் இடையூறு வராமல் காக்க வேண்டியது ஹவில்தார் சீத்தப்பாராவின் பொறுப்பு என்றும் கூறி ஸ்ரீங்கத்திற்குச் சென்று விடுகிறார்.

அவ்வாறு பூர்ணபிரம்மானந்த யோகி தவம் செய்து வருகையில் சீத்தப்பாராவ் இறந்து விடுகிறார். ஆனாலும் அவரது மகன் வைத்தியோசி ஹவில்தார் யோகியைப் பராமரித்து வருகிறார். ஆனால் தவம் இடையில் தடைபடுகிறது. யோகி, “…சமாதி நின்று போய் அடியேனையும் பட்டணம் விட்டு வெளியே கொண்டு போய் பத்திரம் செய்து விட்டார்கள்” என்கிறார். எதற்காக அவர் காவலில் வைக்கப்பட்டார் என்பது சொல்லப்படவில்லை. பிறகு வைத்தியோசி ஹவில்தார் உதவியுடன் திரும்பி தஞ்சைக்கு வருகிறார்.

இதற்கிடையில் காவேரி சம்மந்தமான பிரச்சினை ஒன்று வருகிறது. அனேகமாக நாயக்கர்கள் மற்றும் தஞ்சை மராட்டியர்கள் இடையே நீர் பகிர்தல் மற்றும் உபரிநீரை வெளியேற்றுதல் தொடர்பான சச்சரவாக இருக்கக் கூடும். இவ்விஷயத்திலும் சிஷ்ய யோகி தலையிடுகிறார். அவர் “…அதனால் திருச்சிராப்பள்ளிக்குப் போய் சமூக மீனாட்சி நாயக்கரைக் கண்டு விசயரருரங்கச் சொக்கநாத நாயக்கருக்கும் பயபக்தி வரத்தக்கதாய் தாகீதை செய்து…” என்று கூறுகிறார்.

ஒரு வழியாக 16 வருடம் முடிகிறது. தவக்காலம் முடிந்ததால் சாந்தி செய்து முறையாகப் பரிகாரச் செயல்களை முடிக்க வேண்டும் என்கிறார். இது விஷயமாக ஆறு முறை அரண்மனைக்குச் செய்தி அனுப்புகிறார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. செய்தி பலர் வழியாக எழுத்து மூலமாக அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அவற்றால் எந்தப் பயனும் இல்லாததால் சிஷ்ய யோகி நேரடியாக அரண்மனைக்குச் சென்று ஒரு தாக்கீதைக் கொடுக்கிறார். அதன் பிரதி வழியாக நாம் அறிந்து கொண்ட விவரங்கள்தான் மேலே சொன்னவை.

மேற்கண்ட ஆவணத்தை நவசரித்திரக் கோட்பாடு (New Historicism) வழியாக அணுகலாம். Pramod. K. Nayar , From Text to Theory : A Hand book of Literary and Cultural Theoryல் கூறிய இரண்டு விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. “In New Historicist readings, texts (both literary and non-literary) are material practices and not simply linguistic acts because they actively shape a collective imagination and identity.” (108).

2. “Cultural forms such as literary texts embody social relations and power structures in a society and age…” (109).

இவ்விரண்டு கருத்துக்களையும் மேற்கண்ட ஆவணத்தில் பொருத்திப் பார்க்கும் போது சில கருத்துக்கள் தெளிகின்றன.

1. தஞ்சை மராத்தியர் ஆட்சியிலும் சைவ யோகிகள் பலமாகத்தான் இருந்தனர்.

2. மன்னர் உடலை எரிப்பதா புதைப்பதா என்று வந்த சர்ச்சை இரண்டு கலாசாரங்கள் மற்றும் மரபுகள் மோதி இணையும் / பிரியும் இடத்தில் உருவாவதுதான்.

3. அதிகாரிகள் யோகிகளை வருடகணக்கில் வைத்துப் பராமரிப்பதைச் சுமையாகக் கருதவில்லை.

4. ஹவில்தாரால் பராமரிக்கப்படும் யோகிகள் கூட அரச நடவடிக்கைகளில் இருந்து தப்பவில்லை.

5. ஹிந்து மதம் என்றுமே பாரதத்தை இணைக்கும் சரடாகவே இருந்துள்ளது. சைவரான யோகி கூறியதை வைணவ நாயக்கர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

6. ஆன்மிகவாதிகள் முக்கிய பிரச்சினைகளில் தூதுவர்களாகச் செயல்பட்டு சமரசம் செய்துள்ளனர்.

7. அரச வாரிசுகளுக்குத் தங்களுக்குமுன் ஆட்சி புரிந்தவர்களின் இஹலோக பரலோக வாழ்க்கையைக் குறித்து அதிகம் அக்கறை இருக்கவில்லை.

வரலாற்றின் விசித்திரமே அது மீண்டும் மீண்டும் தன்னை நிகழ்த்திக் கொள்வதில்தான் உள்ளது. இந்தச் சுழற்சியில் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்கிறோம் என்பதுதான் முக்கிய கேள்வி.

Posted on 1 Comment

இந்தியாவுக்கெனத் தனது அனைத்தையும் அளித்தவள்: சகோதரி நிவேதிதா – ஜடாயு


“இந்தியாவில் பெண்களுக்கிடையில் பணியாற்ற சிங்கம் போன்ற ஒரு பெண் வேண்டும். நீ சிறப்பாகக் கல்வி கற்றவள். இந்தியாவிற்குத் தொண்டு செய்யவேண்டும் என்ற மனப்பூர்வமான எண்ணம் உனக்கு உண்டு. நீ தூய்மையானவள். உள்ளன்போடு மனித உயிர்களை நேசிப்பவள். மேலும் உன் உடலில் ஓடிக்கொண்டிருப்பது ஐரிஷ் க்ஷத்திரிய வீர ரத்தம் (Celtic blood). எனவே இங்கு ஆற்றவேண்டியுள்ள அரும்பெரும் செயலுக்கு நீ முற்றிலும் தகுதியானவள்தான்.”

இப்படித் தொடங்குகிறது 29 ஆகஸ்டு, 1897 என்று தேதியிட்ட அந்தக் கடிதம். பின்பு, “இங்கு கஷ்டங்கள் பல உண்டு. இந்த நாட்டில் மக்கள் படும் பெருந்துயரம், அவர்கள் கொண்டுள்ள மூடநம்பிக்கைகள், அவர்களது அடிமைத்தனம் பற்றியெல்லாம் இப்போது உனக்கு ஒன்றும் தெரியாது. இந்தியாவின் சீதோஷ்ண நிலை பயங்கரமானது. ஐரோப்பிய வசதிகள் ஒன்றுமே இங்கு கிடையாது. இவ்வளவு இன்னல்களுக்கிடையிலும் நீ பணிபுரிய விரும்புவாயானால், உன்னை வரவேற்கிறேன், பலமுறை கூவியழைத்து வரவேற்கிறேன். ஒருவேளை உன் முயற்சியில் நீ தோல்வியுற்றாலோ, சலிப்படைந்தாலோ எனக்கு எந்த ஏமாற்றமுமிருக்காது… யானையின் தந்தங்கள் வெளியே வருகின்றன, பிறகு உள்ளே போவதில்லை. நல்லோர் தனது உறுதிமொழியைத் திரும்பப் பெறுவதில்லை. என்ன நேர்ந்தாலும், என் உயிர் உள்ளவரை உனக்கு எனது உதவியும் ஆதரவும் உண்டு என்று உறுதி கூறுகிறேன்…” என்று முடிகிறது.  அந்தக் கடிதம் சுவாமி விவேகானந்தர் லண்டனில் உள்ள மார்க்ரெட் எலிஸபெத் நோபல் (Margaret Elizabeth Noble) என்ற தனது சீடருக்கு எழுதியது.

அப்போது முப்பது வயதுப் பெண்ணாக இருந்த மார்க்ரெட் 1867 அக்டோபர் 28ம் தேதி அயர்லாந்தின் கிராமப்புற ஊரின் நடுத்தர ஏழைக்குடும்பம் ஒன்றில் பிறந்தவர். உள்ளூர்ப் பள்ளி ஆசிரியரும் பாதிரியாருமான தனது தந்தையைப் பத்து வயதிலேயே இழந்திருந்தாலும், தன்னலமற்ற சேவை, கல்விப் பணி ஆகிய ஆதர்சங்களை அவரிடமிருந்து சுவீகரித்துக் கொண்டு, தனது 17ம் வயதிலிருந்தே ஆசிரியையாகப் பணி செய்யத் தொடங்கியிருந்தார். குழந்தைகளின் உளவியல் தேவைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்துக் கற்பிக்கும் புதிய கல்விக் கொள்கைகள் அப்போது பரவத் தொடங்கியிருந்தன. அவற்றின் அடிப்படையில் விம்பிள்டன் நகரில் தானே ஒரு பள்ளியையும் அவர் நடத்தி வந்தார். சிந்தனையாளராகவும் பெண்ணிய ஆதரவாளராகவும் பத்திரிகைக் கட்டுரைகள் எழுதி லண்டன் அறிவுஜீவி வட்டங்களிலும் அறியப்பட்டிருந்தார். தான் விரும்பி மணம் புரிவதற்காக நிச்சயிக்கப்பட்டிருந்த வெல்ஷ் இளைஞரின் அகால மரணம் அந்த இளவயதில் அவரை உலுக்கியிருந்தது. கல்வி மேதைமை அளித்த சிந்தனைகளின் வீச்சால் சம்பிரதாய கிறிஸ்தவமதக் கோட்பாடுகளின் மீதான அவரது நம்பிக்கைகள் ஏற்கெனவே தளர்ந்து கொண்டிருந்தன. தத்துவத் தேடலிலும் பௌத்தம் உள்ளிட்ட கீழைமதங்களின் கோட்பாடுகளைக் கற்பதிலும் அவரது மனம் ஈடுபட்டிருந்தது.

இந்தச் சூழலில்தான், அமெரிக்காவில் புகழ்பெற்று இங்கிலாந்து வந்திருந்த இந்துத் துறவியான சுவாமிஜி, வேதாந்த தத்துவம் குறித்து நிகழ்த்திய ஒரு சொற்பொழிவை 1895 நவம்பர் மாதம் அவர் கேட்க நேர்ந்தது. சுவாமிஜியின் மகத்தான ஆளுமையையும், சத்தியம், சுதந்திரம், பிரபஞ்ச தரிசனம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர் முன்வைத்த தத்துவ நோக்கையும் கண்டு, மார்க்ரெட்டுக்கு அவர் மீது பெரும் மதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சுவாமிஜியிடம் கேள்விகள் கேட்டும் விவாதித்தும், ஆசான் (Master) என்று விளித்து கடிதங்களின் மூலம் உரையாடியும் வந்தார். இந்தியா, அதன் மக்கள், அதன் மதம், அதன் பண்பாடு ஆகியவற்றின் மீது அவருக்கு ஒரு பந்தம் ஏற்பட்டு வந்தது. “இந்திய மக்களுக்கு நான் எந்த விதத்திலாவது பயன்படுவேனா என்பது பற்றித் தெளிவாகவும், வெளிப்படையாகவும் எனக்குச் சொல்லுங்கள். இந்தியாவிற்கே வந்துவிட நான் விரும்புகிறேன். எனது வாழ்க்கைப் பயனை நான் அடைவது எங்ஙனம் என்பதை இந்தியாதான் எனக்குப் புகட்டியாக வேண்டும்” என்ற அவரது முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக சுவாமிஜி எழுதியதே நாம் முதலில் கண்ட கடிதம்.

தனது வாழ்க்கையின் திசையைக் கண்டுகொண்ட மார்க்ரெட் உடனே கிளம்பி இந்தியாவிற்கு வந்து சேர்ந்தார். இந்து மரபில், பழைய அடையாளங்கள் அனைத்ததையும் துறந்து புதிய ஆன்மிக அடையாளங்களை ஏற்பது ‘தீட்சை’ என்று அழைக்கப்படுகிறது. இதன்படி 1898 மார்ச் 25 அன்று சுவாமிஜி அவருக்கு பிரம்மசாரிணியாக தீட்சை அளித்து, நிவேதிதா என்ற அழகிய திருப்பெயரையும் சூட்டினார். தெய்வத்திற்கு நிவேதனம் செய்யப்பட்டவள், அர்ப்பணிக்கப்பட்டவள் என்பது அதன் பொருள். இக்காலகட்டத்தில் சாரா புல் (Sara Bull), ஜோசஃபின் மெக்லாயிட் (Josephine MacLeod) ஆகிய அமெரிக்கப் பெண்சீடர்களும் இந்தியா வந்திருந்தனர். இவர்கள் இறுதிவரை நிவேதிதாவின் உற்ற தோழிகளாகவும் உடன் பணியாற்றுபவர்களாவும் இருந்தனர்.

இயல்பாகவே தனது ஆங்கிலப் பாரம்பரியம் மீதான பெருமிதமும், பிரிட்டிஷ் ஆட்சி எந்தவிதத்திலும் நெறிதவறாது என்பது போன்ற முன்முடிவுகளும் நிவேதிதாவின் மனதில் இருந்தன. இதை உணர்ந்திருந்த சுவாமிஜி தனது பணிக்கு முற்றிலும் தகுதியுள்ளவராக நிவேதிதா ஆகவேண்டும் என்பதில் மிகுந்த கவனத்தையும் உழைப்பையும் செலுத்தினார். இந்துமத நூல்களையும் தத்துவங்களையும் புராணக் கதைகளையும், தியான முறைகளையும், ஆன்மிக வழிகளையும் சுவாமிஜியின் நேரடி உபதேசங்கள் மற்றும் அவருடனான தொடர்ந்த தர்க்கங்கள், விவாதங்கள் மூலமாக நிவேதிதா கற்றறிந்தார். வங்க மொழியைப் பயின்று விரைவில் அதில் சரளமாக உரையாடும் திறனையும் பெற்றார். கல்கத்தா நகரில் ஐரோப்பிய கனவான்கள் வாழ்ந்த பகுதிகளில் வசிக்காமல், பாக்பஜார் என்ற பகுதியின் சிறிய குடியிருப்புகளில் வசித்தார். அங்குள்ள பலதரப்பட்ட மக்களிடமும், குறிப்பாகப் பெண்களிடம், பழகியும் உடனுறைந்தும் நிவேதிதா ஒரு சராசரி இந்திய வாழ்க்கையைத் தானே வாழ்ந்து அறிந்தார். சுவாமிஜி மற்றும் பிற சீடர்களுடன் இணைந்து பாட்னா, காசி ஆகிய நகரங்களிலும், குக்கிராமங்களிலும், இமயமலைச் சாரலில் உள்ள அமர்நாத், பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய தலங்களிலும் பயணம் செய்தார்.

இந்தக் கட்டத்தில் கருணை, பரிவு, கடுமை ஆகிய அனைத்தையும் சுவாமிஜி நிவேதிதா மீது பிரயோகித்தார். சமயங்களில் மிகவும் புண்பட்டு கதறி அழுததையும் நிவேதிதா வெளிப்படையாகப் பதிவு செய்திருக்கிறார். ஆனால் ஒருபோதும் தனது குரு மீதான பக்தியிலும், தனது உறுதியிலும் அவர் பின்வாங்கவில்லை.

‘நிவேதிதாவுக்கு ஆசிகள்’ என்று தலைப்பிட்டு சுவாமிஜி ஒரு கடிதத்தில் அனுப்பிய வாழ்த்துக் கவிதை, தனது சீடரைக் குறித்து அவர் கொண்டிருந்த தீர்க்க தரிசனத்தை உணர்த்துகிறது.

ஒரு அன்னையின் இதயம், ஒரு வீரனின் உறுதி
தென்திசைக் காற்றின் இனிமை
ஆரியரின் வேள்வித்தீச் சுடர்களில் ஒளிரும்
புனித வசீகரம், வலிமை
இவையனைத்தும், இதற்கும் மேலானதும்
எல்லாம் உனதாகட்டும்.
எந்தத் தொன்மையான ஆன்மாவும் கனவிலும் காணாதபடி
இந்தியாவின் எதிர்கால மகவாக நீ விளங்கிடுக –
அதன் தலைவியாக, சேவகியாக, தோழியாக.

அன்னை ஸ்ரீ சாரதா தேவி மிக்க வாஞ்சையுடன் தனது அன்பையும் ஆசிகளையும் நிவேதிதாவுக்கு அளித்தார். இறுதிவரை அன்னைக்கும் மகளுக்கும் இடையில் மிக நெருக்கமான உறவு தொடர்ந்தது. 1898 காளி பூஜை (தீபாவளி) தினத்தன்று நிவேதிதா கல்கத்தாவின் பாக்பஜார் பகுதியில் தனது பெண்கள் பள்ளியைத் தொடங்கினார். ஸ்ரீ அன்னை அதனைத் திறந்து வைத்து வாழ்த்தினார். ஆனால், பள்ளியை நடத்துவதில் பல்வேறு விதமான சவால்கள் இருந்தன. அன்றைய காலகட்டத்தில் கல்கத்தா போன்ற இந்தியப் பெருநகரத்தில்கூட  பெண்கள் ஒரு பொது இடமான பள்ளிக்கு வந்து கல்வி கற்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தது. வீடுவீடாகச் சென்று தங்கள் பெண்களைப் பள்ளிக்கு அனுப்புமாறு நிவேதிதா மன்றாடி, சிறுமிகளையும் அவர்களது தாய்மார்களையும் இளம் விதவைகளையும் அழைத்து வந்தார். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆங்கிலக் கல்விக் கொள்கைக்கு மாறாக, இந்துப் பண்பாட்டு அம்சங்களையும் இந்தியக் கைத்தொழில்கள், கலைகள் ஆகியவற்றையும் இணைத்து அப்பள்ளியின் பாடத்திட்டத்தை நிவேதிதா உருவாக்கினார். தாமே ஆசிரியையாக இருந்து கற்பிக்கவும் செய்தார். பல்வேறு இடர்களைத் தாண்டி வந்து, இன்றுவரை இப்பள்ளி வெற்றிகரமாக இயங்குகிறது.

சுவாமிஜியின் இரண்டாவது மேற்கத்தியப் பயணத்தின் போது (1899 ஜூன் – 1900 டிசம்பர்) உடன்சென்ற நிவேதிதாவும் பல இடங்களில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இந்தியாவில் தனது கல்விப் பணிகளுக்கான நிதிதிரட்டும் முயற்சிகளிலும் ஈடுபட்டார். 1902ல் சுவாமிஜி மகாசமாதி அடைந்தார். ஸ்ரீராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன் இயக்கங்களுக்கு இது ஒரு பேரிழப்பாக இருந்தாலும், சுவாமிஜியின் வழிகாட்டுதல்களை நினைவிலிறுத்தி மேலும் உத்வேகத்துடன் அவை தங்கள் பணிகளைத் தொடர்ந்தன.

****

கல்விப்பணிகளோடு, பேரிடர்க் காலங்களில் சமூகசேவைப் பணிகளிலும் நிவேதிதா முனைப்புடன் ஈடுபட்டார்.

1899ம் ஆண்டின் முற்பகுதியில் கல்கத்தாவை பிளேக் நோய் மிகக் கொடூரமாகப் பீடித்தது. அடிப்படை சுகாதாரமின்மை, மக்களின் அறியாமை, அரசு இயந்திரத்தின் மெத்தனம் அனைத்தும் சேர்ந்து நிலைமை மிகவும் கவலைக்குரியதாயிற்று. இச்சுழலில் ராமகிருஷ்ண மிஷன் துறவிகளும் தொண்டர்களும் களத்தில் இறங்கி நிவேதிதாவின் தலைமையில் நிவாரணப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டனர். நிவேதிதாவே பணிகளைத் திட்டமிட்டார், ஒருங்கிணைத்தார். தேவைப்பட்ட போதெல்லாம் பிரிட்டிஷ் அரசு அதிகாரிகளைச் சந்தித்தார். அதிகாலையிலிருந்து நள்ளிரவு வரை ஓய்வின்றி உழைத்தார். பிளேக் நோயாளிகளைத் தானே நேரடியாகக் கவனித்து சிகிச்சை செய்தார். நிவாரணப் பணிக்குத் தேவையான நிதி திரட்டினார். மாணவர்களையும் பொதுமக்களையும் தட்டி எழுப்பி இப்பணிகளில் ஈடுபடச் செய்தார். தெருவைச் சுத்தம் செய்ய எவரும் வராதபோது தாமே துடப்பத்தை எடுத்துச் சென்று சுத்தம் செய்து வழிகாட்டினார். அவர் படைத்திருந்த ஆற்றலையெல்லாம் பொது நலத்திற்குப் பயன்படுத்துவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது. வெறும் காய்கறிகளையும் பாலையும் மட்டும் உண்டு வாழ்ந்தபடி பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேவையாற்றி வந்த நிவேதிதா ஒரு கட்டத்தில் அந்தப் பாலையும் மக்களுக்காகத் தியாகம் செய்தார். மரணத்தோடு போர் புரிவது போலிருந்தது, அவர் சலிக்காமல் செய்த சேவை.

1906ல் கிழக்கு வங்காளத்தைக் கொடும் பஞ்சமும் அதைத் தொடர்ந்து பெய்த பருவம் தப்பிய மழையால் ஏற்பட்ட பெருவெள்ளமும் ஆக்கிரமித்தன. எலும்புக்கூடுகள் போலப் பஞ்சடைந்து இடுங்கிய கண்களுடன் வாழும் மக்களையும், அந்தச் சூழலிலும் கிடைத்த உணவைத் தங்களின் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்குக் கொடுத்து தாங்கள் பட்டினி கிடந்த தாய்மார்கள், சகோதரர்கள், சகோதரிகளின் தியாகத்தையும், கிராமப்புறங்களுக்குத் தொண்டர்களுடன் சென்ற நிவேதிதா நேரே கண்டார். நிவாரணக் குழு கொண்டு சென்றிருந்த உணவைப் பார்த்தவுடன் கலவரத்தில் ஈடுபடாமல் அந்தச் சொற்ப உணவையும் பங்கீடு செய்து ஆளுக்கு ஒரு துண்டு என்று கொடுத்துவிடுமாறு கோரிய கிராமிய மனங்கள் நிவேதிதாவை நெகிழ்ச்சியுறச் செய்தன. இந்தியப் பண்பாடு குறித்து அவர் வந்தடைந்த ஒட்டுமொத்த தரிசனத்தில் இத்தகைய சம்பவங்களுக்கும் பங்கிருந்தது.

****
 ஒருமுறை தனது வகுப்பில் “உங்கள் அரசி யார்?” என்ற கேள்விக்கு “விக்டோரியா மகாராணி” என்று சிறுமி அளித்த பதிலைக் கேட்டு வேதனையும் கோபமும் அடைந்தார் நிவேதிதா. “உங்கள் மகாராணி என்றென்றும் சீதை மாத்திரமே என்று நினைவில் கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தினார். தனது பள்ளியில் வந்தே மாதரம் பாடலை அனைத்து மாணவிகளும் பாடும்படி செய்தார்.

1905 வங்கப் பிரிவினையைத் தொடர்ந்து மாபெரும் தேசிய எழுச்சியும், சுதேசி விழிப்புணர்வும் வங்கத்தில் தோன்றி, பின்பு இந்தியா முழுவதும் ஜ்வாலையாகப் பரவின. இந்த எழுச்சியில் நிவேதிதா ஆற்றிய பங்கு மகத்தானது. தனது கூரிய சிந்தனைத் திறன் மற்றும் இந்திய வாழ்க்கை அனுபவங்களின் மூலம், மிக விரைவிலேயே பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் அடக்குமுறைகளையும் பொருளாதாரச் சுரண்டலையும் நிவேதிதா அறிந்து கொண்டார். காங்கிரஸ் கட்சியின் மிதவாதிகள் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சலுகைகளை வேண்டிக் கோரிக்கை மனுக்களை மட்டுமே அனுப்பி இயங்கிக் கொண்டிருந்த காலத்தில், முதன்முதலாக பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியாவிற்கு பரிபூரண சுதந்திரம் வேண்டும் என்று சிம்மக்குரல் எழுப்பியவர் நிவேதிதாதான்.

ஒரு கட்டத்தில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் பணிகள் தனது அரசியல் சார்புகளால் பாதிக்கப்படலாம் என்ற நிலையில், தான் அந்த ஆன்மிக அமைப்பிலிருந்து வெளியேறுவதாக நிவேதிதா அதிகாரபூர்வமாக அறிவித்தார்.  மடத்துத் துறவியரின் ஆசியும் ஒத்துழைப்பும் இருக்கவே செய்தன. ஆயினும் தனித்து இயங்கினார். காங்கிரசிற்குள் இருந்த தீவிரவாத சிந்தனையாளர்கள், இந்திய சுதந்திரத்திற்காக ஆயுதப் புரட்சியை முன்னெடுத்த அனுசீலன் சமிதி போன்ற ரகசியக் குழுக்களின் தலைவர்கள், ராஷ் பிகாரி போஸ், ஸ்ரீஅரவிந்தர் உள்ளிட்ட புரட்சியாளர்கள் ஆகியோருக்கு வழிகாட்டியது மட்டுமின்றி, நிதியுதவி உட்பட பல்வேறு விதங்களிலும் நிவேதிதா ஆதரவளித்தார். யுகாந்தர், கர்மயோகின், வந்தே மாதரம், தர்மா ஆகிய தேசியப் பத்திரிகைகள் தொடர்ந்து வெளிவருமாறு செய்தார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் முதல் தேசியக் கொடியாக, ததீசி முனிவரின் தியாகத்தையும் வலிமையையும் உணர்த்தும் சின்னமான வஜ்ராயுதமும் வந்தே மாதரம் என்ற வாசகமும் அடங்கிய கொடியை அவர்தான் வடிவமைத்தார். இந்தச் சூழலில்தான் 1906ம் ஆண்டு கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்ற பாரதியார், அங்கு நிவேதிதையைச் சந்தித்தார். அந்தச் சிறிது நேர சந்திப்பிலேயே நிவேதிதாவின் ஆன்மிகப் பேரொளியையும் வீர உணர்வையும் பாரதியார் தரிசித்து அக்கணமே அவரை ஞானகுருவாக ஏற்றுக்கொண்டார். பெண் விடுதலை, தேசபக்தி, சுதந்திர தாகம் என்ற தனது லட்சியங்களைக் கண்டடைந்தார். தனது நூல்களை நிவேதிதாவுக்கு சமர்ப்பணம் செய்து பாரதியார் எழுதிய கீழ்க்கண்ட வாசகங்களிலிருந்து இது புலனாகிறது.

“ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்துமநிலை விளக்கியதொப்ப, எனக்குப் பாரததேவியின் சம்பூர்ண ரூபத்தைக் காட்டி ஸ்வதேச பக்தி உபதேசம் புரிந்தருளிய குருவின் சரண மலர்களில் இச்சிறு நூலைச் சமர்ப்பிக்கிறேன்.” (ஸ்வதேச கீதங்கள், 1908)


“எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமையையும் சொல்லாமல் உணர்த்திய குருமணியும் பகவான் விவேகானந்தருடைய தர்மபுத்திரியும் ஆகிய ஸ்ரீமதி நிவேதிதா தேவிக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன்.” (ஜன்மபூமி, 1909)


“ஓம். ஸ்ரீமதி நிவேதிதா தேவிக்கு ஸமர்ப்பணம் செய்யப்பட்டதும.” (ஞானரதம், 1910)

****

உண்மையான தேசிய மறுமலர்ச்சி என்பது அரசியல் விழிப்புணர்வோடு நின்றுவிடாமல், கல்வி, அறிவியல் கலை, தொழில் ஆகிய எல்லாத் தளங்களிலும் நிகழவேண்டும் என்று நிவேதிதா கருதினார். இத்திறக்கிலும் அவரது பங்களிப்பு நிகரற்றது.

ஜாம்ஷெட்ஜி டாடா இந்திய அறிவியல் கழகத்தைத் தொடங்க முயல்கையில் பிரிட்டிஷ் அரசுத் தரப்பிலிருந்து அதற்குப் பல தடைகள் ஏற்பட்டன. “இந்தியர்கள் அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதைத் தடுப்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, அறிவியலுக்கும் ஆபத்தானது” என்று பிரிட்டனின் கல்வி அதிகாரிக்கு நேரடியாக நிவேதிதா எழுதினார். அறிவியலாளர் ஜகதீஷ் சந்திர போஸ் மற்றும் அவரது மனைவி அபலா போஸ் இருவரும் தொடக்கத்திலிருந்தே நிவேதிதாவின் நண்பர்களாகவும் சீடர்களாகவும் இருந்தனர். தனது அறிவியல் சாதனைகள் அனைத்திற்கும் பின்னால் நிவேதிதாவின் வழிகாட்டலும், ஊக்குவிப்பும் உதவிகளும் ஆசிகளும் உள்ளன என்று போஸ் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். அறிவியல் சிந்தனைகளை ஆராய்ச்சிக் கட்டுரைகளாகப் பதிவுசெய்தால் மட்டுமே அவை உலகுக்குத் தெரியவந்து நிலைபெறும் என்று நிவேதிதா கூறியபோது, தன்னால் எண்ணங்களைத் திரட்டி அவ்வாறு எழுத இயல்வதில்லை என்று வருந்தி மனத்தளர்ச்சியுற்றார் போஸ். அவரைத் தேற்றிய நிவேதிதா, தாமே உதவியாளராக இருந்து போஸ் எழுதிய கட்டுரைகளை நெறிப்படுத்தியும் பிழைதிருத்தியும், நிதி திரட்டி அவை புத்தகங்களாக வெளிவரச் செய்தும் உதவினார். போஸின் அறிவியல் சாதனைகளை விளக்கிப்
பல பத்திரிகைகளில் எழுதினார். மேரி கியூரி உள்ளிட்ட ஐரோப்பிய அறிவியலாளர்களையும், மற்ற நாடுகளில் உள்ள இந்திய அபிமானிகளையும் தொடர்புகொண்டு போஸின் அறிவியல் கண்டுபிடிப்புகள் உலக பிரசித்தி அடைய உதவி செய்தார். இந்த ஆசிகளனைத்தையும் நினைவுகூறும் விதமாக 1917ல் தான் உருவாக்கிய போஸ் அறிவியல் கழகத்தின் முகப்பில் நிவேதிதாவின் சிலையையும் அஸ்திக் கலசத்தையும் ஜகதீஷ் சந்திர போஸ் நிறுவினார். நூற்றாண்டு காணும் இந்த நிறுவனம் இந்திய அறிவியல் வளர்ச்சியில் இன்றளவும் சிறப்புமிக்க பணியாற்றி வருகிறது.

ஓவியக்கலைப் போக்குகள் 19, 20ம் நூற்றாண்டுகளின் நவீன, புரட்சிகர சிந்தனைகளின், மறுமலர்ச்சியின் அடையாளமாகவே கருதப்பட்டன. இந்நிலையில் அக்காலத்திய இந்திய ஓவியர்கள் தங்களது கலைப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியை முற்றிலும் இழந்து ஐரோப்பியக் கலைப் பாணியை அப்படியே பிரதியெடுக்கும் போக்கினைக் கண்டு நிவேதிதா வருந்தினார். புகழ்பெற்ற வங்க ஓவியர்களிடமும், ஆனந்த குமாரசுவாமி போன்ற கலை விமர்சகர்களிடமும் தொடர்ந்து உரையாடி இது குறித்த தெளிவான பிரக்ஞையை ஏற்படுத்தினார். ஒரு நாட்டின் கலை அதன் ஒட்டுமொத்த தேசிய உணர்வுடன் எப்போதும் இயைந்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இதன் விளைவாகவே அவனீந்திர நாத் தாகூர், நந்தலால் போஸ், அஸித் ஹல்தர் போன்ற மகத்தான ஓவியக் கலைஞர்கள் இன்றுவரை உயிர்த்துடிப்புடன் வாழும் புகழ்பெற்ற நவீன வங்க ஓவியப் பாணியை வளர்த்தெடுத்தனர்.

****

மாபெரும் கர்மயோகியாக செயலாற்றிக் கொண்டிருந்த நிவேதிதா, ஒரு சிறந்த சிந்தனையாளராகவும் எழுத்தாளராகவும் மிளிர்கிறார். தனது மகத்தான 13 ஆண்டுகளின் இந்திய வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து பல தளங்களில் அவர் எழுதியும் உரையாற்றியும் வந்திருக்கிறார். The Complete Works of Sister Nivedita என்ற தலைப்பில் 5 தொகுதிகளாக சுமார் 2,500 பக்கங்களுக்கு விரிகின்றன அவரது எழுத்துக்கள். இதுதவிர ஜோசஃபின் மெக்லாயிடுக்கு அவர் எழுதிய முக்கியமான கடிதங்கள் சமீபத்தில்தான் பதிக்கப்பட்டு வருகின்றன. அக்காலகட்டத்தின் அலங்காரமான விக்டோரிய ஆங்கில மொழியில் (Victorian English) இருந்தாலும், வரலாற்று முக்கியத்துவம் என்பதைத் தாண்டி, இந்த எழுத்துக்களின் வசீகரத்தையும் வீரியத்தையும் ஆழத்தையும் வீச்சையும் இன்று அதை வாசிப்பவர்களும் உணர முடியும்.

சுவாமி விவேகானந்தரின் முழு ஆளுமையையும் நாம் அறிந்து கொள்வதற்கு, நிவேதிதா எழுதிய The Master as I saw Him (நான் கண்ட எனது ஆசான்) என்ற அற்புதமான நூலே சிறந்ததொரு வழிகாட்டி. சுவாமிஜியுடனும் மற்ற துறவிகளுடன் இணைந்து அவர் செய்த பயணங்கள் குறித்து, Notes of Some Wanderings with Swami Vivekananda, Kedar Nath and Badri Narain – A Pilgrims Diary ஆகிய நூல்களில் குரு சிஷ்ய உறவின் மலர்ச்சி, இமயத்தின் காட்சிகள், ஆன்மிக தரிசனங்கள் எனப் பல வண்ணங்களைக் காண முடியும்.

1904ல் லண்டனில் வெளிவந்த The Web of Indian Life (இந்திய வாழ்வெனும் வலைப்பின்னல்) என்ற அவரது நூல், அன்றைய காலகட்டத்தில் இந்தியா, அதன் பண்பாடு மற்றும் இந்துமதம் குறித்து அதுகாறும் மேற்கத்தியர்கள் எழுதியிருந்த அத்தனை நூல்களிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டிருந்தது. The Studies from an Eastern Home என்ற நூல், அவரது முதல் சில ஆண்டுகளின் இந்திய வாழ்க்கையின் நேரடி அனுபவங்களை அவ்வப்போது எழுதிய பதிவுகளின் தொகுப்பு. இந்தியக் குடும்பங்கள், அவற்றின் மகிழ்ச்சிகள் துயரங்கள், பண்டிகைகள் போன்றவற்றின் உயிர்த்துடிப்பான சித்திரம் இவற்றில் உள்ளது. முதன்முதலாக, நமது இதிகாச புராணங்களில் உள்ள கதைகளை குழந்தைகளுக்காக சுவாரஸ்யமான எளிய ஆங்கிலத்தில் எழுதிய பெருமை நிவேதிதாவையே சாரும். The Cradle Tales of Hinduism என்ற அவரது நூல் இத்திறக்கில் ஒரு கிளாசிக் என்றே கூறலாம். அன்னை காளியின் தீவிர பக்தையாக இருந்த நிவேதிதா சக்தி தத்துவத்தின் சாரத்தைத் தனது அன்மிக அனுபூதியில் உணர்ந்து எழுதியது Kali The Mother என்ற கவித்துவமான நூல். 

தான் கண்ட பஞ்சம் மற்றும் வெள்ளப் பேரிடரின் யதார்த்தமான காட்சிகளை மட்டுமில்லாமல், அதுகுறித்த ஒட்டுமொத்த சமூக, பொருளாதாரப் பின்னணியையும் ஆய்வுசெய்து Glimpses of Famine and Flood in East Bengal in 1906 என்ற நூலில் நிவேதிதா எழுதியிருக்கிறார். உணவுப் பயிர்களை விடுத்து, பிரிட்டிஷ் ஆட்சியின் வற்புறுத்தல்கள் மற்றும் குறுகிய காலப் பேராசைகளால் சணல் பயிரை விளைவிக்க முயன்றதன் கோர விளைவுகளை விவரிக்கும் இந்த நூலின் அத்தியாயங்கள் (The Commonwealth based on Rice, The Tragedy of Jute) தம்மளவில் மிகச்சிறந்த சமூக ஆய்வுகள் என்றே கூறலாம்.

இந்தியக் கல்வியாளர்களின் வரிசையில் முதலிடத்தில் வைத்து எண்ணுதற்குரிய நிவேதிதா, தேசியக் கல்விக் கொள்கை குறித்த தனது எண்ணங்களை Hints on National Education என்ற நூலில் மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார். இந்திய வரலாறு குறித்த அவரது ஆழமான புரிதல் Footfalls of Indian History என்ற நூலில் வெளிப்படுகிறது. Indian Art என்ற நூலில் இந்தியக் கலை குறித்த தனது அவதானிப்புகளையும் மதிப்பீடுகளையும் எழுதியிருக்கிறார். சில குறிப்பிட்ட இந்திய, ஐரோப்பிய ஓவியங்களை ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு எழுதியுள்ள விமர்சனங்கள் அவரது நுட்பமான ரசனையையும் கலைமனத்தையும் வெளிப்படுத்துகின்றன.

நிவேதிதாவின் அரசியல், சமூக சிந்தனைகள் மிகவும் தீர்க்கமானவை. Civic Ideals and Indian Nationality (குடிமைப் பண்புகளும் இந்திய தேசியமும்), Aggressive Hinduism (தீவிரம்கொண்ட இந்துமதம்) ஆகிய நூல்களும், On political, economic and social problems என்று தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகளும் இன்றும் இந்தியாவில் நாம் பொதுத்தளத்தில் மையமாக விவாதித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளையும் கருத்தியல்களையும் கோட்பாடுகளையும் குறித்துப் பேசுகின்றன.

இந்திய தேசிய மறுமலர்ச்சிக்காக தனது சிந்தனை, சொல், செயல் அனைத்தையும் ஆகுதியாக அளித்த சகோதரி நிவேதிதா, தனது வாழ்வின் கடைசிக்கட்டத்தில் உடல் தளர்ந்து நோயுற்றார். வங்காளத்தின் சுதந்திரப் புரட்சி இயக்கங்கள் பிரிட்டிஷாரால் ஒடுக்கப்பட்டது அவருக்கு மிகுந்த சோர்வை அளித்தாலும், அவரது வேதாந்த மனம் வாழ்வையும் மரணத்தையும் சமநிலையுடன் நோக்கும் முதிர்ச்சியைப் பெற்றிருந்தது. இந்தியா எழுச்சியுற்று உலகில் தனக்கான இடத்தைப் பெறும் என்ற அவரது உறுதி தளரவில்லை. டார்ஜிலிங்கில் ராய்வில்லா என்ற போஸ் குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டில் தனிமையிலும் தியானத்திலும் தன் இறுதி நாட்களைக் கழித்தார். 43 ஆண்டுகளே இப்பூவுலகில் வாழ்ந்திருந்த அந்தத் தாரகை 1911 அக்டோபர் 11ம் நாள் மரணத்தைத் தழுவியது. இந்தியாவின் ‘தலைவியாக, சேவகியாக, தோழியாக’ விளங்குவாய் என்ற தனது குருவின் ஆசியை அவர் மிகச்செம்மையாக நிறைவேற்றி விட்டிருந்தார்.

அருளுக்கு நிவேதனமாய், அன்பினுக்கோர்
கோயிலாய், அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய், எமதுயர்
நாடாம் பயிர்க்கு மழையாய், இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
பெரும்பொருளாய்ப் புன்பைத் தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்
நிவேதிதையைத் தொழுது நிற்பேன்

என்று பாரதியார் எழுதிய சொற்கள் ஒரு சிறிதும் அலங்காரமானவையல்ல. அவை சத்திய வாசகங்கள்.

பனிமலைகளின் அடிவாரத்தில் அமைந்த எழில் தவழும் டார்ஜிலிங் நகரில் அந்த எளிமையான புனித நினைவிடத்தில் உள்ள இந்த வாசகங்கள் அதை இன்றும் அறிவித்துக் கொண்டிருக்கின்றன.

Here reposes Sister Nivedita, who gave her all to India.

இங்கு துயிலில் ஆழ்ந்திருக்கிறாள் சகோதரி நிவேதிதா – இந்தியாவுக்கெனத் தனது அனைத்தையும் அளித்தவள்.

****

(28 அக்டோபர் 2017 சகோதரி நிவேதிதாவின் 150வது பிறந்த நாள். அதனை
நினைவு கூரும் வகையில் இந்த ஆண்டு முழுவதும் பல நிகழ்ச்சிகளும்
கருத்துப்பரவல்களும் நடந்து வருகின்றன)

துணைபுரிந்த நூல்கள்:

[1] நிகரில்லா நிவேதிதா – யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா, வெளியீடு: ராஷ்டிர சேவிகா சமிதி, சென்னை (தொ.பே: 94449-15979)

[2] Complete Works of Sister Nivedita, Vol. 1 to 5, Published by Sister Nivedita Girls School, Kolkata. Online version – https://archive.org/details/The.Complete.Works.of.Sister.Nivedita

Posted on Leave a comment

கோயில் அறிவோம் 2: சிற்பத் தொகுதிகள் – வல்லபா ஸ்ரீனிவாசன்


போன மாதம் ஆயிரக்கணக்கான சிற்ப வகைகளுள், மூர்த்தங்களுள் கொஞ்சமே கொஞ்சமாகச் சிலவற்றைப் பார்த்தோம். அதில் குறிப்பிட்ட மற்றொரு அம்சமான சிற்பத் தொகுதிகளைச் சற்றே பார்க்கலாம்.

கடவுள் வடிவங்களான மூர்த்தங்கள் தவிர இதிகாசங்களிலிருந்தும் புராணங்களிலிருந்தும் காட்சிகள் சித்திரிக்கப்பட்டிருப்பதைப் பல கோயில்களில் காணலாம். தூண்களிலும், சுற்றுச் சுவர்களிலும் இவை காணப்படுகின்றன. புராணக் கதைகள், ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்றவற்றிலிருந்து காட்சிகள், ஜாதகக் கதைகள் என்று இவை எண்ணிலடங்கா. இந்தியா முழுவதும், இன்னும் தாய்லாந்து, மலேசியா போன்ற பல கிழக்காசிய நாடுகளிலும் இத்தகைய காட்சிப்படுத்தும் சிற்பங்கள் காணப்படுகின்றன.

பா ரிலீஃப் எனப்படும் புடைப்புச் சிற்பங்களாகக் காணக்கிடைக்கின்றன. அதாவது தனிக்கல்லிலோ, கல்தூணிலோ ஒரு செவ்வக, சதுர வடிவ அமைப்பிற்குள் (ஃப்ரேம்) கல்லில் இருந்து புடைத்து வெளியே தெரிவதான அமைப்பு. ஒரு ஆழத்தில் உருவம் ஏற்படுத்தி கையால் தொடுகையில் நிரடுவது போல முன்புறம் மட்டும் செதுக்கப்பட்டு பின்புறம் கல்லோடு சேர்ந்திருக்கும். ஒரு தவறானாலும் அந்தப் பாறையோ தூணோ முழுவதும் வீணாகிவிடும். அதனால் கவனமாகச் செதுக்கப்பட வேண்டியவை. கவனம் மட்டுமின்றி கலையும் செம்மையும் சேர்த்துப் படைத்திருக்கின்றனர் நம் சிற்பியர்.

தனிச் சிற்பங்களில் ஒயில், பாவம் எனச் சிறப்புகள் என்றால், காட்சிகளை விவரிக்கும் இச்சிற்பத் தொகுதிகளில் பல்வேறு சிறப்பு அம்சங்களை ரசிக்க முடியும். சாதாரணமாக ஒரு காட்சி ஓவியம் என்பது அதன் கதாபாத்திரங்கள், அந்தக் காட்சியில் அவற்றின் நிலை, காட்சி நடக்கும் இடம், சூழ்நிலை, அதன் தன்மை, இயல்பு இவை யாவற்றையும் கொண்டதாயிருத்தல் சிறப்பு. இவற்றை விளக்கும்பொருட்டு லட்சக்கணக்கான சிற்பத் தொகுதிகளுள் ஒரு சிலவற்றைப் பார்க்கலாம்.

சிற்பக்கலைக்கு சிறப்பேற்றும் மாமல்லபுரம்! இதில் சில சிற்பத் தொகுதிகளைப் பார்ப்போம்.

1. மாமல்லபுரம் – மஹிஷாசுரமர்த்தனி போர்க்காட்சி: இது ஒரு அற்புதப் படைப்பு. உலகிலேயே மிகச்சிறந்த காட்சிச் சிற்பங்களில் ஒன்று.

புராணக்கதை: மகிஷாசுரனை யாராலும் அடக்க முடியாமல் போகவே ப்ரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தங்களது சக்திகளைக் குவித்து, தத்தமது ஆயுதங்களை அளித்து உருவாக்கிய ஒரு சக்தி ஸ்வரூபம் மகிஷாசுரமர்த்தினி. அவள் எழில் கண்டு ஒரு கணம் மகிஷன் காதலுற்றான் என்கிறது புராணம். இந்த மகிஷாசுரமர்த்தினியை பல கோயில்களில் மகிஷன் தலை மீது நிற்பது போலவும், கூரிய வேலால் குத்தியபடி இருப்பது போலவும் பல கோயில்களில் காணலாம். ஆனால் மாமல்லபுரத்தில் நாம் காண்பது ஒரு காட்சி. எந்தவிதக் குரூரமுமில்லாமல் அதே சமயம் ஒரு போர்க்காட்சியை மிகச் சிறப்பாக விவரிக்கும் விதத்தைப் பாருங்கள்.

மகிஷாசுரமர்த்தினி சிங்கத்தின் மீதேறி வருகிறாள். விஷ்ணுவின் சங்கு சக்கரம், சிவனின் சூலம் இன்னும் பல ஆயுதங்களையும் தன் கைகளில் தாங்கியவாறு ஆக்ரோஷத்தோடு மகிஷனை நோக்கி வருகிறாள். அவள் உடலழகையும், சிங்கத்தின் மீதமர்ந்திருக்கும் எழிலையும் பாருங்கள். மகிஷன் இனி வெற்றி தனதில்லை என்றறிந்துவிட்டான். தலை பின்னோக்கி அவளைப் பார்த்தவாறு புறமுதுகிட்டு ஓட எத்தனிக்கிறான். கையில் அவனது கதாயுதம் இன்னும் இருக்கிறது. ஆனால் அவன் உடல்மொழி அவன் தளர்ந்து சோர்ந்து ஓடும் விதமாகச் சித்திரிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். தேவியின் வெற்றியை அழகாக உணர்த்தும் சிற்பம்.

தேவி உள்ளிருந்து வெளி வருவது போன்ற கோணத்தில் இருப்பதைக் கவனியுங்கள். இது ஒரு வேகத்தை நமக்கு சிறப்பாகச் சொல்கிறது. அதேபோல மகிஷன் ஓடுவதும். நாம் நடுவில் நின்று பார்க்கும்போது இடப்பக்கம் தேவி வருவதையும் வலப்புறம் மகிஷன் ஓடுவதையும் ஒரு சேர இணைத்துப் பார்க்க முடியும். தேவி ரூபம் சிறிதாக அவள் சற்றே தொலைவில் வருவதைக் குறிக்கிறது. மகிஷன் உருவம் பெரிதாக உள்ளது. இவ்வளவு தொலைவில் வரும்போதே மகிஷன் பயந்து கூனிவிட்டானென்றால் அருகில் வந்ததும் அவன் கதி என்னவாகும் என்ற ஒரு வியப்பை உணர்த்தி தேவியின் சிறப்பை உயர்த்துகிறது இக்காட்சி.

2. மாமல்லபுரம் – வராகமூர்த்தி பூமாதேவியைக் காத்தருளும் காட்சி: மற்றுமொரு அருமையான சிற்பத் தொகுதி.

புராணம்: இரண்யாட்சகன் பூமாதேவியை சமுத்திரத்திற்குள் சுருட்டி ஒளித்து வைத்து விடுகிறான். மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து சமுத்திரத்திற்குள்ளிருந்து பூமாதேவியைத் தாங்கி எடுத்து வருகிறார். ஆதிசேஷன் மீது (இதை சமுத்திர ராஜன் என்று சொல்வோரும் உண்டு) காலை வைத்தபடி அன்புடன் பூமா தேவியை அணைத்தபடி உயர்ந்தெழுகிறார். இது சித்திரிக்கப்பட்டிருக்கும் அழகைப் பாருங்கள்.
வராகத் தலையை மனித உடலோடு பொருத்தி அமைக்க வேண்டியது இந்த உருவம். ஒவ்வொன்றுக்கும் சிற்ப சாஸ்திரமும் ஆகமங்களும் இலக்கணம் வகுத்திருக்கின்றன. இவ்வாறு அமைக்கப்பட்ட சிலைகள் இந்தியா முழுவதும் உள்ளன. ஆனால் மாமல்லபுரச் சிற்பி போல இதைச் செம்மையாகச் செய்த சிற்பி எவரும் இல்லை. வராகத் தலையும் மனித உடலும் சேரும் கழுத்துப் பகுதி மிக அற்புதமாக இணைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

வராக முகத்தில் லேசான ஒரு புன்னகை. ஒரு விலங்கு முகத்தில் புன்னகை தருவிப்பது சாதாரண விஷயமா? அதுவும் கருங்கல்லில் செதுக்கும்போது. மேலாடை நழுவி தொடையில் வழிந்து தொங்கும் நிலையில் ரசிக்கும்படியான தேவியின் நாண பாவத்தைப் பாருங்கள். கீழே ஆதி சேஷன் எந்தையைக் கைகூப்பித் தொழுகிறார். அருகில் அவர் மனைவி அவரைக் காக்கும்படிக் கைகூப்பி நிற்கிறார். உயர்ந்து நிற்கும் பெருமானின் சிறப்பைக் கூறும் விதமாக சூரிய சந்திரர்களும் கைகூப்பி மேலே இருபுறமும் காணப்படுகின்றனர்.

ஒரு நிமிடம் அந்தக் காட்சி இருக்கும் இடத்தைப் பார்ப்போம். சற்றே பின் வந்து நோக்கினால், அந்தச் சிற்பம் இருப்பது, ஒரு பெரிய பாறையைக் குடைந்தெடுக்கப்பட்ட கோயிலின் ஒரு சுவரின் பகுதி எனத் தெரியும். எங்கு ஆரம்பித்திருப்பார்கள் எவ்வாறு செய்திருப்பார்கள் என வியக்க வைக்கும் ஒரே கல்லில் (மோனோலித்) குடைந்து செய்யப்பட்ட ஆச்சரியங்கள்.

3. காஞ்சி கைலாசநாதர் கோயில் – சிவபெருமானும் இந்திரனும் – ஒரு காட்சி

இந்திரன் சிவபெருமானைக் காண வருகிறாராம். வாசலில் அவரை விடாமல் கணங்கள் விளையாடி ஆர்ப்பரித்து அட்டகாசம் செய்கின்றன. சிவபெருமானும் கணங்களோடு கணமாக விளையாட்டில் ஈடுபடுகிறார். இதில் வலதுபுறம் காணப்படும் கணத்திற்கு நான்கு கைகள் இருக்கும். இரண்டுக்கு மேல் கைகள் அமைக்கப்பட்டிருந்தால் அது தெய்வ ஸ்வரூபம் என அறிகிறோம். எனவே அது கணமாக உருவெடுத்த சிவபெருமான்.

பொறுமையிழந்த இந்திரன் கோபத்தில் தன் வஜ்ராயுதத்தை எறிய ஆயத்தமாகிறான். நடுவில் வலக்கையை உயர்த்தி ஆயுதமேந்தி நிற்பவன் இந்திரன். அவன் சிவபெருமானைத் தாக்க எத்தனிப்பதைக் கண்டு கலங்கிய விஷ்ணு, ப்ரம்மா, அக்னி தேவர் மூவரும் அவனைத் தடுக்கின்றனர்.

விஷ்ணு: மேலே ஆட்காட்டி விரலைத் தூக்கி எச்சரிக்கை செய்வதாக சித்திரிக்கப்பட்டிருக்கிறார்.

ப்ரம்மா: தனது ஒரு கரத்தால் இந்திரனின் வலக்கையைத் தடுத்துப் பிடிக்கிறார். உற்றுப் பார்க்கவும். மற்றொரு கை “யாரை அடிக்க கிளம்பினாய் இந்திரா? அது சாக்‌ஷாத் சிவபெருமான். அறியவில்லையா?” எனக் கேட்கும்படி கை விரித்துக் காண்பிக்கப்பட்டிருக்கிறது. மற்றுமொரு கை இந்திரனின் இடதுகையைத் தடுத்தவாறு இருக்கிறது.

அக்னி பகவான்: இந்திரனின் மார்பைப் பிடித்துப் பின்னிழுக்க முற்படுகிறார். அவர் முகத்தில் கவலையையும் இந்திரனைத் தடுக்கும் வேகத்தை உடல்மொழியிலும் சித்திரித்திருப்பதைக் காணலாம்.

இந்திரன் தாக்க முற்பட்டதைக் கண்டு சிவபெருமான் கோபம் அடைந்து நெற்றிக் கண்ணைத் திறக்கிறார். அதிலிருந்து புறப்பட்ட கோபமானது துளியாக மாறி கமண்டலத்தில் அடைக்கப்படுகிறது. அதுவே ஜலந்திரன் எனும் அசுரனாக இந்தச் சிற்பத் தொகுதியின் கீழே கைகூப்பி நிற்பதாகக் கூறப்படுகிறது. புராணக் கதைகளைப் புரிந்து கொள்ளுதல் ஒருபுறம். அவற்றின் காட்சிப்படுத்தலை வியக்க கதை மட்டுமே போதுமானது.

ஆர்ப்பரிக்கும் கணங்கள், இந்திரனின் கோபம், அக்னியின் கவலை, ப்ரம்மாவின் முயற்சி அத்தனையும் காணலாம். நிறைய சிதிலமான போதிலும் இவற்றைக் காண முடிகிறது. முதலில் எப்படி இருந்திருக்கும்?

இதைப் போல கட்டுரையில் எழுதி மெச்சுவதற்கு இடமே போதாமல் போகும் அளவு சிறப்பான பிரம்மாண்டமான மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு, கோவர்த்தன கிரி சிற்பத் தொகுதிகள். அழகழகான காஞ்சி கைலாச நாதர் கோயில் காட்சிச் சிற்பங்கள். இவ்வாறு பல கோயில்களிலும் இருக்கும் எண்ணிலடங்கா சிற்பங்கள்.

பெரிய மிகப் பெரிய தொகுதிகள் ஒரு பக்கம். இப்போது நாம் பார்ப்பது ஒரு ராமாயணக் காட்சி.

4. குகன் படகு விடும் காட்சி: கும்பகோணம் அருகே புள்ளமங்கை என்ற ஊரில் உள்ள ஒரு சிறு கோயிலில் அருமையான ராமாயணச் சிற்பக் காட்சிகள் காணக் கிடைக்கின்றன.

ராமனும், லட்சுமணனும் சீதையும் கங்கை ஆற்றைக்கடந்து செல்லும் பொருட்டு குகனின் படகில் ஏறிச் செல்கின்றனர். ஊரே கரையில் நின்று அழுதவாறு ராமனுக்குப் பிரியாவிடை அளிக்கிறது. குகனோ என்னுடனே தங்கி விடலாமே, வனவாசம் போக வேண்டாம் ராமா என்கிறான்.

தந்தை சொல்லை நிறைவேற்ற முடியாமல் களங்கம் உண்டாகலாம் என உணர்ந்த ராமன் இனியும் தாமதிப்பதில் அர்த்தம் இல்லை என்று புரிந்துகொண்டு படகில் ஏறிக் கொள்கிறான். “விடு நனி கடிது என்றான்…” என கம்பர் இந்தக் காட்சியை விவரிக்கிறார். ராமனின் கட்டளைக்கு அடிபணிந்து குகன் துடுப்பை அழுத்திப் படகைச் செலுத்துகிறான். படகு விரைகிறது. ராமர், சீதை, லட்சுமணர் – இவர்களின் உடல் சற்றே சாய்ந்திருப்பது, இந்தப் படகு செல்லும் வேகத்தை உணர்த்துவதாக இருக்கிறது.

*

ஆளுயரச் சிற்பத் தொகுதிகள் மாமல்லபுரத்தில் மலைக்க வைக்கின்றன என்றால் இந்தக் காட்சி செதுக்கப்பட்டிருப்பது ஒரு உள்ளங்கை அளவே உள்ள கல்லில். ஒரு ஆட்காட்டி விரலின் உயரம் இந்தக் காட்சிச் செவ்வகத்தின் உயரம்.

இவை ஒரு புராணக் காட்சியின் கலைப் பார்வை மட்டுமே. புராணப்பகுதி, நுணுக்கமான கலையம்சங்கள், அழகுணர்ச்சி, இவை தவிர பல்வேறு படிகளில் (லேயர்ஸ்) இச்சிற்பத் தொகுதிகள் அடுக்கடுக்காகப் பல விஷயங்களைச் சொல்கின்றன. அவை ஒரு ஆன்மிக அனுபவத்தை நமக்குத் தரக் காத்திருக்கின்றன.

Posted on Leave a comment

அயோத்தியின் மனத்துக்கு இனியான் – சுஜாதா தேசிகன்


விக்கிபீடியாவில் அயோத்தியா பற்றி குறிப்பு இப்படி இருக்கிறது – ‘is an ancient city of India, believed to be the birthplace of Rama’ – அதாவது ஸ்ரீராமர் பிறந்த இடம் என்று ‘நம்பப்படுகிறது.’

அக்டோபர் 10 இரவு. பேருந்தில் தூங்கிக்கொண்டு இருந்தபோது “அயோத்தி வந்தாச்சு!” என்று எழுப்பப்பட்டேன். வெளிக்காற்று முகத்தை வருடிய நேரத்தில் எங்கிருந்தோ ராம பஜனை கேட்டது. டியூப் லைட் வெளிச்சத்தில் சில குரங்குகள் தென்பட்டன.

மறுநாள் காலை சரயூ நதியில் குளிக்கச் சென்றபோது, பெரிய சைஸ் குலோப் ஜாமுன் போல் சூரியன் என்னை வரவேற்றது. சூரியோதயத்தைப் பார்ப்பதா குளிப்பதா என்ற தடுமாற்றத்தைத் தாண்டி, சூரியோதயத்தில் சரயூவில் மூழ்கி ரசித்தேன். ‘ஸ்ரஸ்-யூ’ என்பதையே சரயூ என்று நாம் கூறுகிறோம். அதாவது பிரம்மாவின் மனமே உருகி ஒரு பெரிய நதியாக மாறியதாம்.

முக்தி தரும் ஷேத்திரங்கள் ஏழு. அவந்திகா – பாதங்கள், காஞ்சிபுரம் – இடுப்பு, துவாரகா – நாபி, மாயாபுரி (ஹரித்வார்) – இருதயம், மதுராபுரி – கழுத்து, காசி – மூக்கு, அயோத்தி – தலை. முக்தி தரும் ஷேத்திரங்களில் தலையானது அயோத்யா என்று சொல்லலாம்.

அயோத்யா என்றால் சொல்ல முடியாத அழகு என்று பொருள். ஸ்ரீ வேதாந்த தேசிகன் தனது கருட பஞ்சாசத்தில் பெரிய திருவடியின் பார்வையை ‘அயோத்யா’ என்கிறார். அதாவது ஜெயிக்க முடியாத அழகு வாய்ந்ததாம் அவர் திருவடி.

ஆனால் இன்றைய அயோத்யா அதுவும் ‘ராமஜன்ம பூமி’ என்றால் உள்ளூரக் கொஞ்சம் பதற்றம் நம்மைப் பற்றிக்கொள்வதை மறுக்க முடியாது.

நாம் படிக்கும் வரலாறு வடி கட்டியது. ஏதோ ஆங்கிலேயரும், முகம்மதியர்களும் நமக்கு நல்லது செய்தார்கள் போன்ற தோற்றத்துடன் எழுதப்பட்டுள்ளது. ஹிந்துக் கோயில்களின் மீதும், நம் தேசத்தின் மீதும் அவர்கள் புரிந்த தாக்குதலின் சுவடுகளை யாத்திரை முழுவதும் பார்க்க முடிந்தது. இவை எல்லாம் நம் வரலாற்றுப் பாடத்தில் இல்லாத ஒன்று. ஆங்கிலேயர்கள்தான் ரயில்வே, போஸ்ட் பாக்ஸைக் கொண்டு வந்தார்கள் என்று ரிட்டையரான தாத்தாக்கள் பிதற்றிக்கொண்டு இருப்பதற்கு, நம் வரலாற்றைச் சரியாக எழுதாததுதான் காரணம்.

1528ல் பாபர் மசூதி ஒன்று ஸ்ரீராமர் கோயில் இருந்த இடத்தின் மீது மிர் பக்கி என்னும் பாபரின் படைத்தலைவரால் கட்டப்பட்டது. கலவரம் நடந்த பிறகு, ஆங்கிலேயர்கள் கட்டைப் பஞ்சாயத்து செய்து, ஒரு பகுதியில் மசூதியையும், இன்னொரு பகுதியில் கோயிலையும் அனுமதித்தார்கள். 1949ல் ஸ்ரீராம மூர்த்திகளை அங்கே பிரதிஷ்டை செய்தார்கள். 1992ல் அங்கே இருந்த மசூதியை இடித்து மீண்டும் அங்கே ராமரை பிரதிஷ்டை செய்தபோது நடந்தவை எல்லாம் நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்த வரலாறு.

இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் (ASI) 2003ல் அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டு, மசூதியின் அடியில் இருக்கும் கட்டட அமைப்புப் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்து அறிக்கை சமர்ப்பித்தது. சுமார் 3,000 ஆண்டு பழமை மிகுந்த கட்டட அமைப்புக்கு மேல் மசூதி கட்டப்பட்டதாக அறிக்கை சொன்னது. ராமர் ‘மித்’ இல்லை நமக்கு மித்திரன்.

“எக்கசக்க செக்யூரிட்டியாம்… மொபைல் கேமரா எதுவும் நாட் அலவ்ட்” போன்ற அறிவுரைகளால் உள்ளூர ‘ராம ஜன்ம பூமி’க்குச் சீக்கிரம் செல்லவேண்டும் என்ற பதற்றம் தொற்றிக்கொண்டது.

நம் சடகோபன் திருவாய்மொழியில் –

கற்பார் இராம-பிரானை அல்லால், மற்றும் கற்பரோ?
புல் பா முதலா, புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே
நல்-பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நல்-பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே?

‘அயோத்தியில் வாழ்கின்ற எல்லா ஜீவராசிகளுக்கும், புல் முதல் எறும்பு வரை, ஆயோத்தியில் இருந்ததால் சுலபமாக பரமபதம் கிடைத்தது. ஸ்ரீராமபிரானுடைய கீர்த்தியை அல்லாமல் வேறு கீர்த்திகளையும் கற்பார்களோ?’

இங்கே ‘நற்பால் அயோத்தி’ என்று நம்மாழ்வார் கூறுவதற்கு நம்பிள்ளை ‘அயோத்தி மண்ணை மிதித்தாலே இராம பக்தி தானாக உண்டாகும்’ என்று விளக்கம் தருவாராம். அதாவது ராமகுணங்கள் நடனமாடுகிற அயோத்தி என்று பொருள்.

ஸ்ரீராமரை பற்றிப் பள்ளியில் எங்கு படித்தேன் என்று யோசித்தேன். Ram killed Ravana. – Active Voice; Ravana was killed by Ram. – Passive Voice. நமக்குத் தெரிந்த ராமர் அவ்வளவே!

ராமாயணத்தில் எவ்வளவு காண்டம் இருக்கிறது, கம்பர், துளசிதாஸ் எழுதிய ராமாயணத்தில் உத்திர காண்டம் இருக்கிறதா போன்ற தகவல்கள் பலருக்குத் தெரியாது. நம் குழந்தைகளின் நிலையை யோசித்துப் பாருங்கள்.

ஒரு மகனாக, ஒரு கணவனாக, ஓர் அரசனாக, ஒரு சகோதரனாக, ஒரு வீரனாக எப்படி வாழ வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணமாக விளங்கிய ஸ்ரீராமரைப் பற்றி நாம் அவர்களுக்குச் சொல்லித் தந்தால் அதுவே சிறந்த வரலாற்றுப் பாடம்.

அயோத்தி முழுவதும் மொத்தம் 12,000 இராமர் கோயில்கள் உள்ளன என்பார்கள். அதனால் ‘பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா’ மாதிரி இங்கே போகும் இடம் எல்லாம் ராமர் கோவில்தான்.

அயோத்தியாவில் பார்க்கும் கல், கோயில், மண்டபம், மூர்த்திக்குப் பின் ஏதோ ஒரு ராம கதை இருக்கிறது. இரண்டு நாளில் இவை எல்லாவற்றையும் சேவித்துவிட்டு வருவது என்பது பிரம்மப் பிரயத்தனம். சில முக்கியமான கோயில்களை மட்டும் அனுபவித்து சேவிப்பது என்று முடிவு செய்து புறப்பட்டோம்.

முதலில் சென்ற கோயில் கனக பவன். ஸ்ரீராமர், சீதையின் அந்தப்புரம். இதை கைகேயி, ராமர்-சீதைக்குக் கல்யாணப் பரிசாகக் கொடுத்தார். அங்கே பல மூர்த்திகள் இருந்ததால், குழப்பத்துடன், “இதில் யார் ராமர், சீதை?” என்றேன். “எல்லாமே ராமர் சீதைதான்” என்று பதில் கிடைத்தது! அங்கே ஒரு சின்ன மண்டபம் மாதிரி தென்பட, அது என்ன என்று ஒருவரிடம் விசாரிக்க, இங்கிருந்துதான் ஸ்ரீராமர் வனவாசம் சென்றார் என்றார்கள்.

நாங்கள் சென்ற ஆட்டோ டிரைவரிடம் “ராம ஜென்ம பூமியை பார்த்துவிடலாம். மற்றவை எல்லாம் பிறகு” என்றோம். போகும் வழியில் ஒரு இடத்தில் ஆட்டோவின் வேகத்தைக் குறைத்து ராமர் கோயில் கட்டுவதற்குத் தயாராக இருக்கும் தூண், கற்கள் முதலியவற்றைக் காண்பித்தார்.

ராம ஜன்ம பூமி வாயிலை அடைந்தபோது அங்கே camouflage உடையில் தூப்பாகியுடன் ராணுவத்தைப் பார்க்க பயமாகத்தான் இருந்தது. கையில் இருந்த பை, பேனா, மொபைல் என்று சகல வஸ்துக்களையும் ஒரு கடையில் கொடுத்துவிட்டு உள்ளே நுழைந்தோம்.

என் பர்ஸை முழுவதும் சோசித்த முதல் காவலாளி, “ஏதாவது சிம் கார்ட் இருக்கா?” என்றார். “சின்ன சீப்பு மட்டும்தான் இருக்கு” என்றேன். அதை வாங்கிப் பக்கத்தில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டார்.

இருபது அடியில் மீண்டும் சோதனை. இந்த முறை அவர் என் பர்ஸை முழுவதும் சோதித்துப் பார்த்து என் இடுப்பில் இருந்த அங்கவஸ்திரத்தைத் தடவியபின் உள்ளே அனுமதித்தார்.

இதற்கு பிறகு சர்க்கஸ் கூண்டுக்குள் போகும் சிங்கம் போலச் சென்றேன். என்னுடன் வந்தவர் கொஞ்சம் எரிச்சலாக “எதுக்கு இவ்வளவு செக்யூரிட்டி செக்” என்று சொல்லி முடிக்கும் முன் அடுத்த செ.செக். அங்கவஸ்திரம் கழற்றப்பட்டது.

இடுப்பில் கட்டிக்கொண்டபின் மேலும் ஒரு செ.செக். மனதில் இருந்த ராமரைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சோதித்துவிட்டார்கள். போர்ட்டிங் பாஸ் கொடுத்து வைகுண்டத்துக்கு அனுப்பினாலும் ஆச்சரியபட்டிருக்க மாட்டேன்.

கூண்டுக்குள் நடக்கும்போது வெளியே சிஆர்பிஎப் வீரர்கள் கையில் AK47 வைத்துக்கொண்டு சோர்வே இல்லாமல் காவல் காத்துக்கொண்டு இருப்பதைப் பார்க்க முடிந்தது.

சில நிமிஷத்தில் ராம ஜன்ம பூமி என்ற பிரசித்தி பெற்ற இடம் வந்தது. தற்போது உள்ள கோயில், இரண்டு சுவற்றின் மீது தார்பாலின் கூடாரம். ‘மனத்துக்கு இனியான்’ என்று ஆண்டாள் போற்றிய சக்ரவர்த்தித் திருமகனான ஸ்ரீராமரை ஒருவித கனத்த மனத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தேன்.

சென்ற ஆண்டு மதுராவுக்குச் சென்றபோதும் இதே நிலைமை. எல்லாம் பெருமாள் திருவுள்ளம் என்று நினைத்துக்கொண்டேன்.

இக்ஷ்வாகு வம்சத்தில் உதித்த ஸ்ரீராமர், தான் ஆராதித்த ஸ்ரீரங்கநாதரை விபீஷ்ணனிடம் அன்பளிப்பாகக் கொடுத்தார் அதுவே இன்று ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பெருமாள். வைகுண்டத்தின் ஒரு பகுதி அயோத்தியா என்பார்கள். ராமர் ஆராதித்த பெருமாள், விமானம் ஸ்ரீரங்கம் வந்தபோது ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம் ஆனதில் வியப்பில்லை.

சங்க இலக்கியங்கள், வால்மீகி, ஆழ்வார்கள், கம்பன் எல்லோரும் அயோத்தி பற்றிக் குறிப்பிடுகிறார்கள். கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல, ‘நம்பப்படுகிறது’ என்று சொல்லுவது அயோக்கியத்தனம். ஸ்ரீராமர் இங்குதான் பிறந்தார் என்று நம் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். மாற்றக் கூடாதவற்றை மாற்றாமல் இருப்பதுதான் முன்னேற்றம்.

ஸ்ரீராமரை சேவித்துவிட்டு அவர்கள் கொடுத்த கற்கண்டு பிரசாதத்தை எடுத்துக்கொண்டு நடக்கும் போது மனம் முழுவதும் ஸ்ரீராமரே குடிகொண்டு இருந்தார். சீக்கிரம் இங்கே கோயில் கட்டப்பட்டு அதில் ஸ்ரீராமரைச் சேவிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

அயோத்தியா – தயார் நிலையில்

அங்கே இருந்த ஒரு ஜவானிடம் பேச்சுக் கொடுத்தோம் (நல்ல வேளை என் நண்பருக்கு ஹிந்தி தெரியும்!)

சம்பாஷனை இதுதான்.

“இங்கே தான் பாப்ரி மஸ்ஜித் இருந்ததா?” என்று கேட்டோம். அதற்கு அந்த ஜவான், “நீங்களே மஸ்ஜித் என்று சொல்லலாமா? இங்கே ராமர் கோயில்தான் இருந்தது, மஸ்ஜித் இல்லை… இது ராமருக்கே சொந்தமான இடம்…”

உணர்ச்சிவசப்பட்டு “ஜெய் ஸ்ரீராம்!” என்றேன்

கொஞ்சம் தூரம் நடந்தபின் மேலும் இன்னொரு ஜவானிடம் பேச்சுக் கொடுத்தோம்.

“எவ்வளவு நாளா இங்கே காவல் புரிகிறீர்கள்?”

“இங்கே ராமர் கோயில் வரும் வரை நாங்கள் காவல் காப்போம்… கோர்ட் கோயில் கட்டலாம் என்றால் நான்கே மணி நேரத்தில் கோயில் கட்டி முடித்துவிடுவோம்!”

மீண்டும் “ஜெய் ஸ்ரீராம்” என்றோம். ஜவான்கள் சல்யூட் அடிக்க, உணர்ச்சிவசப்பட்டுத் திரும்பினேன்.

அயோத்தியா பற்றிய செய்திகள், படங்கள், புத்தகங்களை கூகிளில் பார்க்கலாம். ஆனால் நேரில் பார்க்கும்போது இங்கே ஸ்ரீராம ஸ்பரிசம் ஏற்படுவது நிச்சயம். எங்கு திரும்பினாலும் ஸ்ரீராம பஜனைகள். கோயில்களில் தாடி வைத்த பெரியவர்கள் ஸ்ரீராமாயணத்தை சதா படித்துக்கொண்டே இருக்கிறார்கள். எங்கு திரும்பினாலும் வானரக்கூட்டம். வீடுகள் இருக்கிறதா, இல்லை எல்லாம் கோயிலா என்று பிரமிப்பே ஏற்படுகிறது.
*
ஸ்ரீரமரை சேவித்துவிட்டு ‘அம்மாஜி மந்திர்’ என்று பிரசித்தி பெற்ற கோயிலுக்குப் பயணம் ஆனேன். இந்த கோயில் சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கோயிலைப் பார்த்தவுடன் நம் மனதில் ‘ரகுவம்ச சுதா’வின் கதன குதூகலம் ஏற்படுகிறது. காரணம் கோயில் தென்னாட்டுப் பாணியில் அமைந்துள்ளது. கோயிலின் உள்ளே சீதை ராமர், லட்சுமணருடன் காட்சி தருகிறார்கள். கூடவே ஹனுமார். தனி சன்னதியில் சின்னதாக ஆனால் மிக அழகாக ஸ்ரீரங்கநாதர் சேவை. எதிரே ஆழ்வார்களுடன் ஸ்ரீராமானுஜர் எழுந்தருளியிருக்கிறார்.

கோயிலுக்கு வெளியே வரும் போது தம்பதிகள் படம் ஒன்று கண்ணில் தென்பட அது யார் என்று விசாரித்தேன். யோகி பார்த்தசாரதி, அவர் தர்மபத்தினி யோகினி சிங்கம்மாள்.

யோகி பார்த்தசாரதி, அவர் தர்மபத்தினி யோகினி சிங்கம்மாள்

 இவர்களுக்கும் இந்த கோயிலுக்கும் என்ன சம்பந்தம்? இவர்கள் கனவில் ஸ்ரீராமர் தோன்றி திருப்புள்ளாணியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அர்ச்சா மூர்த்தியாக இருக்கிறேன், அதை அயோத்தியில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று பணிக்க, ராமேஸ்ரத்துக்குப் பயணித்தார்கள். குறிப்பிட்ட இடத்தில் ஸ்ரீராமர், சீதை, லட்சுமணன் ஆகிய மூவரின் அர்ச்சா மூர்த்தி கிடைக்க, அதை பிரதிஷ்டை செய்ய அயோத்தியில் நிலத்தை வாங்கிக் கோயிலை ஏற்படுத்தினார்கள்.

1900ல் யோகி பாரத்தசாரதி ஆசாரியன் திருவடியை அடைந்த பிறகு நாற்பது வருட காலம் அவர் தர்மபத்தினி சிங்கம்மாள் கைங்கரியங்களைப் பார்த்துக்கொண்டாள். அதனால் இந்தக் கோயில் ‘அம்மாஜி’ மந்திர் என்று அழைக்கப்படுகிறது.

கோயிலில் தமிழில் நாலாயிரத் திவ்ய பிரபந்தங்கள் பேனர் கண்ணில் பட்டது. அயோத்தியா பற்றி ஆழ்வார்களின் மங்களாசாசன பாசுரங்கள். சேவித்தேன்.

தென் திசையிலிருந்து வட திசைக்கு பிரபந்தம் வந்துள்ளது. அதற்கு காரணம் ஸ்ரீராமர்தான். ஸ்ரீராமர் அருள் இல்லை என்றால் நமக்கு நம்மாழ்வாரே கிடைத்திருக்க மாட்டார்.

மதுரகவிகள் அயோத்தியில் இருந்தபோதுதான் வானத்தில் ஒரு ஒளி தென்பட்டது. அதைத் தேடிக்கொண்டு சென்று திருக்குறுகூர் என்ற அழ்வார் திருநகரிக்கு வந்தடைந்து நம்மாழ்வாரைப் புளியமரத்துப் பொந்தில் பார்த்து அவருக்கு சிஷ்யரானார். திருவாய்மொழி நமக்குக் கிடைத்தது. இது அயோத்தியின் பெருமை!

அடுத்து வசிஷ்ட் குண்ட் என்ற அழகான கோயில். ராமர் மற்றும் அவருடைய சகோதரரர்கள் பயின்ற இடம். குருவிடம் நால்வரும் படிக்கும் சிற்பம் அழகாகவும் மனதுக்கு நிறைவாகவும் இருக்கிறது. அங்கே ஒரு கிணறு இருந்தது. “வாங்க அதை காண்பிக்கிறேன்” என்று ஒருவர் எங்களை கீழ்ப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். கிணறு சின்ன குளம் போலக் காட்சி அளித்தது! “சரயூ நதியில் என்ன அளவு தண்ணீர் இருக்குமோ அதே அளவு இங்கே இருக்கும்” என்று எங்களை ஆச்சரியப்படுத்தினார். அதில் சின்னதாக ஒரு ஆமை நீச்சல் அடித்துக்கொண்டு இருந்தது.

*
பிரியாவிடை கொடுத்துவிட்டு ஹனுமான் கடீ என்ற இடத்துக்குச் சென்றேன். சிறு குன்றின் மீது அமர்ந்திருக்கும் ஹனுமானுக்கு நாமே லட்டுவைச் சமர்பித்துவிட்டு வரலாம். இந்த ஹனுமான்தான் அயோத்தியை இன்றும் காத்துக்கொண்டு இருக்கிறார். அதனால் ரொம்ப பவர் ஃபுல் அனுமார்.

அயோத்தி முழுக்க குரங்குகளைப் பார்க்க முடிகிறது. அவைகளை யாரும் ஒரு சங்கடமாக நினைப்பதில்லை. குப்தார் காட் என்ற சரயூ நதிக்கரையில் (அயோத்தியிலிருந்து 15 கிமீ தூரம்) ஸ்ரீராமன் வைகுண்டத்துக்கு எல்லோரையும் அழைத்துச் சென்ற இடம். எல்லோரும் என்றால் நாட்டு மக்கள், புல், கல் என்று எல்லாவற்றையும், ஒருவரைத் தவிர. அது ஹனுமான். ராம நாமம் சொல்லிக்கொண்டு இங்கேயே அயோத்தியில் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டார். அதனால்தான் அயோத்தியா இன்றும் இருக்கிறது.

பிருந்தாவனம் போல அயோத்தியில் குரங்குகள் சேட்டை செய்வதில்லை. கண்ணன் கோபிகைகளின் துணியை ஒளித்துவைப்பது போல பிருந்தாவனத்தில் குரங்குகள் நம் மூக்குக் கண்ணாடியைப் பிடுங்கி வைத்துக்கொள்ளும் விளையாட்டு கிடையாது.

பாபர் மசூதிக்குள் 1949ல் இந்து பக்தர்களின் வழிபாட்டுக்குத் திறந்து விடும் உத்திரவை 1986ல் பிறப்பித்த பைசலாபாத் மாவட்ட நீதிபதி கே.எம்.பாண்டே, பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின், 1991ல் தனது சுய சரிதையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“பூட்டியிருந்த கோயிலின் கதவை பக்தர்களின் தரிசனத்துக்குத் திறந்து விடுவதற்கான உத்திரவைப் பிறப்பித்த அந்த நாளன்று, எனது நீதிமன்ற அறையின் மேற்கூரையில் கொடிமரத்தைப் பற்றியபடி ஒரு கருப்புக் குரங்கு அமர்ந்திருந்தது. அன்றைய தினம் தீர்ப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பைசலாபாத், அயோத்தி நகரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அந்தக் குரங்குக்கு வேர்க்கடலை, பழம் முதலானவற்றைக் கொடுத்தனர். அந்தக் குரங்கோ அவற்றைத் தொடக்கூட இல்லை. மாலை 4.40க்கு நான் தீர்ப்பைப் படித்தவுடன் அந்தக் குரங்கு அங்கிருந்து அகன்றது. பின்னர் எனது பாதுகாப்புக்காக வந்திருந்த மாவட்ட ஆட்சியரும், போலிஸ் கண்காணிப்பாளரும் என்னை எனது பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர். பார்த்தால், எனது பங்களாவின் தாழ்வாரத்தில் அமர்ந்திருக்கிறது அந்தக் குரங்கு. எனக்கு அச்சரியம் தாங்கமுடியவில்லை. நிச்சயமாக ஒரு தெய்வீக சக்திதான் அந்தக் குரங்கு என்பதை உணர்ந்துகொண்டு அதனை வணங்கினேன்.”

*
மதிய உணவு சமயம் சாப்பாட்டைத் தவிர்த்து மீண்டும் ராம ஜன்ம பூமிக்குப் பயணித்தேன். இந்த முறையும் என்னை முழுவதும் சோதித்து அனுப்பினார்கள். என் சீப்பை போட்ட அந்த குப்பைத் தொட்டியில் எட்டி பார்த்தேன். நீங்கள் நம்ப மாட்டீர்கள், உள்ளே பல சீப்புக்கள்!

மீண்டும் மனத்துக்கு இனியானை சற்று நேரம் சேவித்துவிட்டு அடுத்தமுறை வரும்போது கோயில் கட்டியிருக்க வேண்டும் என்று ஸ்ரீராமரிடம் ஆத்மார்த்தமாகப் பிராத்தனை செய்துகொண்டேன்.

மாலை நாட்டிய நிகழ்ச்சி. கூடவே ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் நடந்தது. அந்த நிகழ்வின்போது உ.வே ஸ்ரீவேளுக்குடி ஸ்வாமி குழுமியிருந்த 1,500 பேரிடமும் ஒரு பிரார்த்தனை வைத்தார். அது, “விரைவில் பல ஆயிரம் பேர் ஒரே இடத்திலிருந்து பஜனை செய்யும் வசதியுடன் ஸ்ரீராமருக்குக் கோயில் ஒன்று அமைய வேண்டும்” என்பதுதான். நிச்சயம் இந்தப் பிரார்த்தனை பலிக்கும்.

*
மறுநாள் குப்தார் காட் நதிக்கரையில் நீராடிவிட்டு, அயோத்தியின் பெருமையை முழுவதும் சொல்ல முடியாமல் ‘யாது என் வியப்பாம்’ என்று கம்பன் சொல்லியது நிஜம் என்று நினைத்துக்கொண்டு கிளம்பினேன்.

பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் அயோத்தியா பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்.

ஆர்க்கும் இது நன்று தீது ஆனாலும் நெஞ்சே நீ
பார்க்கும் பல கலையும் பன்னாதே சீர்க்கும்
திரு ஐ யோதிப் புயலை சீரிய மெய்ஞ்ஞானத்து
உருவை ஒத்தின் பொருளை ஓர்

அயோத்தி ஸ்ரீராமரை தியானித்தால் போதும், வேறு எதுவும் செய்ய வேண்டாம் என்பது ஒருவரி அர்த்தம்.

Posted on Leave a comment

லாட்வியா: வேர்களைத் தேடி…: நேர்காணல் – V.V. பாலசுப்பிரமணியன், வசந்த் பார்த்தசாரதி

(பண்பாடு மற்றும் நாகரிகம் என்பது பல தலைமுறைகள் கடந்த சமூகத்தின் அனுபவ ஞானத் திரட்டு. அது வெறும் மொழியோ அல்லது உடையோ மட்டுமல்ல. ஆகவே ஒரு தேசத்தின் நாகரிகம் மற்றும் அதன் பண்பாடு அழிக்கப்படும்போது அங்கு நடப்பது வெறும் மதமாற்றம் மட்டும் அல்ல. மாறாக அந்தத் தேசத்தின் தொன்மையான மருத்துவ ஞானம், சிற்பக்கலை, அந்த சமுதாயத்தின் அறிவுத்தேடலின் விளைவாகக் கிடைத்த தத்துவங்கள், அதன் ஆன்மிக வெளிப்பாடுகள், அதை பிரதிபலிக்கும் அவர்களுடைய  கலை மற்றும் இலக்கியங்கள் என்று அனைத்துமே அழித்தொழிக்கப்படும். கடந்த சில நூற்றாண்டுகளில் ஆப்ரஹாமிய மதங்களின் விரிவாக்கப் பேராசையினால் பண்டைய மதங்களுக்கும் பாரம்பரியங்களுக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு கொஞ்ச நஞ்சமல்ல. பல தேசத்து மக்களின் தொன்மையான பாரம்பரியம் அவர்களின் நினைவிலிருந்து முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. அவற்றின் மிச்சங்கள் இன்று உடைந்த நினைவுச் சின்னங்களிலும் ஒரு சில நாட்டுப்புறக் கதைகளிலும் தொங்கி நிற்கின்றன.

இத்தகைய பண்டைய நாகரிகங்களையும் மதங்களையும் மீண்டும் உயிரூட்டவும் அவற்றை அதன் மக்களிடையே பரப்பவும் International centre for cultural studies என்ற அமைப்பு முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நம் நாட்டில் நடத்தப்பட்ட ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள, தங்களுடைய பண்டைய நாகரிக வேர்களைத் தேடும் முயற்சியில் இருக்கும் நபர்கள் பல நாடுகளில் இருந்தும் வந்திருந்தார்கள். இந்தியாவின் மிஷ்மி, அபதானி, ஆதி, நியிஷி, மிஸோ, ஆப்ரிக்காவைச் சேர்ந்த யோருபா, கிகுயு, தொங்கோ, ஸுலூ, அமெரிக்காவில் இருந்து மாயா, ஒகனாகன், நவாஜோ, செரோகீ, தாஹிதி, ஐரோப்பாவில் இருந்து ரொமூவா, தைவ்தரூபா மற்றும் ஆசியாவில் இருந்து யூத, ஜைன, பௌத்த, பார்ஸி சமூகப் பிரதிநிதிகள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். இதற்காக இந்தியா வந்திருந்த லாட்வியா நாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்து பேட்டி கண்டோம். விவேகானந்த கேந்திராவின் இளைஞர்களுக்கான மாத இதழான யுவ பாரதி இதழில் வந்த நேர்காணலின் தமிழாக்கம் இது).

நேர்காணலுக்குப் போவதற்குமுன் லாட்வியாவை பற்றி ஒரு சிறு குறிப்பு. லாட்வியா வடக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு பால்டிக் தேசம். அது ஒரு பக்கம் பால்டிக் கடலாலும், மற்ற பக்கங்களில் எஸ்தோனியா, லிதுவேனியா, பெலாரூஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளாலும் சூழப்பட்டு இருக்கிறது. ரீகா இதன் தலைநகரம், இதுவே அங்கு மிகப்பெரிய நகரமும் ஆகும். லாட்வியர்கள் பால்ட் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள். பால்டிக் மொழிகளில் இன்று எஞ்சி இருப்பது லாட்விய மொழியும் லிதுவேனிய மொழியும் மட்டும்தான்.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரையிலும் லாட்வியாவின் முக்கியத் தொழில் விவசாயமாக இருந்து வந்தது. பண்டைய பால்ட்கள் இயற்கையை வழிபடுபவர்களாக இருந்துள்ளனர். கிறிஸ்தவம் அவர்களைக் குறிவைக்க இதுவே காரணமாக அமைந்தது. பால்டிக் பகுதி தொடர்ந்து பல சிலுவைப் போர்களைச் சந்தித்து வந்துள்ளது. பாவிகளை அழித்தொழிக்கிறோம் என்ற பெயரில் பதினைந்தாம் நூற்றாண்டில் இந்தப் பகுதி ஜெர்மானியர் ஆதிக்கத்திலும், பதினாறாம் நூற்றாண்டில் இந்தப் பகுதி லிதுவேனியா, போலாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் ஆதிக்கத்திலும், பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ரஷ்யாவின் ஸார் மன்னரின் ஆதிக்கத்தின் கீழும் வந்தது.

முதலாம் உலகப் போரின் முடிவு வரையிலும் இது ரஷ்ய ஆதிக்கத்திலேயே இருந்தது. கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் லாட்வியா மூன்று முறை அந்நிய நாட்டுப் படைகளினால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. முதலில் 1940ல் சோவியத் படைகளினாலும், பிறகு 1941 – 44 வரை ஜெர்மன் நாசிக்களின் ஆதிக்கத்தாலும், பிறகு திரும்பவும் 1945-91 வரை சோவியத் யூனியனாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வந்துள்ளது. இவற்றின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த காலகட்டம் பயங்கர ரத்தக்கறை படிந்த ஒன்று. சோவியத் ராணுவம் லாத்வியாவில் ஆதிக்கத்தை எதிர்த்தவர்களை எல்லாம் கொன்று ஒரு பெரும் இனஅழிப்பை நிகழ்த்தியது. ஆதிக்கங்கள் நிகழும்போதெல்லாம் அதைச் செய்பவர்கள் அங்குள்ள மக்களுக்கான விடுதலை அது என்று பிரசாரம் செய்வதை நாம் வரலாற்றில் பல தருணங்களில் பார்த்திருக்கிறோம். சோவியத் ராணுவமும் அதையேதான் செய்தது. புது வரலாறும் அந்த ‘விடுதலையை’ புகழ்பாடும் பாடல்களும் குழந்தைகளின் பாடங்களாக ஆயிற்று. 1991ல் லாட்வியா அரசியல் ரீதியான விடுதலையைப் பெற்றது. லாட்வியா இன்று தன் தொலைந்து போன வேர்களைத் தேடிக்கொண்டிருக்கிறது.

லாட்வியா குழுவுக்குத் தலைமை தாங்கி வந்த ரமான்ஸ் யான்ஸன்ஸ் மற்றும் ஆஸ்ட்ரா லஸ்மானேயுடன் 2010ம் வருடத்தில் நிகழ்த்திய நேர்காணல் இனி.

ரமான்ஸ் யான்சன்ஸ்

தொன்மையான பாரம்பரியத்தை மீட்டெடுக்க முயற்சி செய்யும் இந்த இயக்கம் பற்றிக் கொஞ்சம் கூறுங்கள்.

ரமான்ஸ் யான்ஸன்ஸ்: லாட்வியா மொழியில் ‘தைவ்தரூபா’ என்றால் கடவுளை வழிபடுதல் என்று அர்த்தம். இது ஒரு இயக்கமல்ல. இது எங்கள் தேசிய மதம். எண்கள் பண்டைய வாழ்க்கை முறை. எங்கள் தீவ்டுரிபா-வில் மூன்று முக்கிய தெய்வங்கள் உண்டு. அவை தீவ்ஸ் – முழுமுதல் கடவுள், அதாவது இந்த பிரபஞ்சம் மற்றும் இந்தப் படைப்பு, லைமா – நம் விதியைத் தீர்மானிக்கும் பெண் தெய்வம், மாரா – பஞ்ச பூதங்களுக்கும் தாயான தெய்வம்.
உங்கள் நாடு முதலாளித்துவம், கம்யூனிசம் என்ற இரு துருவங்களான கொள்கைகளாலும் இதுவரை ஆளப்பட்டு இருக்கிறது. இந்த இரு அமைப்புகளைப் பற்றியும் உங்கள் அனுபவங்களைக் கொஞ்சம் கூறுங்கள்.

ரமான்ஸ் யான்ஸன்ஸ்: பலன் என்று பார்த்தால் இந்த இரு அமைப்புகளிலும் ஒரே மாதிரியான விளைவுகள்தான் நிகழ்ந்தன. இந்த அமைப்புகள் உலகம் முழுவதும் மண்ணின் மரபுகளை அழிப்பதில் முனைப்பாக இருக்கின்றன. இதில் கம்யூனிசத்தால் லாட்வியாவில் ஏற்பட்ட பாதிப்புகள் ரொம்பவே அதிகம். மொத்த ஜனத்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்கள், அதாவது 2.5 மில்லியன் பேர் கொல்லப்பட்டனர். குடும்பங்கள் பிரிந்தன. குழந்தைகள் கொல்லப்பட்டனர். பலர் அநாதைகளாகவும் ஆக்கப்பட்டனர். வயதானவர்கள் ரயில் மூலம் சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இதுபோன்று நாடு கடத்தப்பட்டவர்களில் பெரும் தேசத் தலைவர்களான எர்னஸ்ட் ப்ராஸ்டின்ஸ் போன்றோரும் உண்டு. எர்னஸ்ட் ப்ராஸ்டின்ஸ் தைவ்தரூபாவை உயிரூட்ட முக்கியக் காரணமாக இருந்தவர். எர்னஸ்ட் 1942ல் கொல்லப்பட்டார்.

எல்லா தேசிய மதங்களும் புறக்கணிக்கப்பட்டன. பல கிறிஸ்தவப் பிரிவுகள், பாரம்பரிய மாதங்கள் எனப் பதிவு செய்யப்பட்டன. இது இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நாங்கள் தேசிய மதமான தைவ்தரூபாவை பாரம்பரிய மதமென அங்கீகரிக்கப் போராடி வருகிறோம்.

முதலாளித்துவம் ஒவ்வொரு நாடுகளில் ஒவ்வொரு மாதிரியாக இருக்கின்றது. எங்கள் நாட்டில் எல்லா மரபு சார்ந்த தொழிற்சாலைகளும் அழிக்கப்பட்டன. மீன் பிடிப்பு, சர்க்கரை உற்பத்தி, விவசாயம் என்று எல்லாம் அழிக்கப்பட்டன. இது ஒரு செயற்கையான பொருளாதாரத் தேக்கநிலையை ஏற்படுத்தியது. எங்கள் மக்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டனர். தனியார் வங்கிகளின் நடைமுறைகளும் எங்களுக்கு உதவிகரமாக இருக்கவில்லை. தனிநபரின் பேராசை வளர்ந்து குடும்பங்களில் முதியவர்கள் கவனிக்கப்படாத ஒரு சூழல் உருவாயிற்று. இப்போது லாட்வியாவில் இரண்டே இரண்டு வர்க்கம்தான் உள்ளது. ஒன்று மிகப் பெரிய பணக்காரர்கள், மற்றொன்று, மிக மிக ஏழைகள். ஓய்வு பெற்றவர்களுக்கான பென்ஷன் தொகையும் மிகக் குறைவானதாக இருக்கிறது. அவர்களுக்கு அது போதுமானதாக இல்லை. இளைஞர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையினால் மாபியா கூட்டங்களில் சேருகிறார்கள். வருத்தத்திற்குரிய விஷயம் இது.
 
இந்தியாவின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் பற்றி உங்கள் எண்ணம் என்ன?

ஆஸ்ட்ரா லஸ்மானே: எங்கள் தைவ்தரூபாவிற்கும் இந்தியக் கலாசாரத்திற்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. எங்கள் பெண் தைவமான லைமா உங்கள் கடவுள் லக்ஷ்மி போலத்தான். இரண்டு கலாசாரத்திலும் நெருப்பை வழிபடும் வழக்கம் ஒன்று போல இருக்கிறது. எண்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கின்றன. இரு கலாசாரத்தின் பாரம்பரிய ஆபரணங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி வடிவமைப்பைக் கொண்டிருக்கின்றன. எங்கள் மதத்திலும் ஸ்வஸ்திகா பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதை நாங்கள் fire- cross என்று அழைப்போம். இந்தச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட துணி எங்கள் எதிர்காலத்தையும் எங்கள் தேசத்தின் எதிர்காலத்தையும் குறிக்கிறது. (நம் ஐஸ்வர்ய கோலத்தைச் சுட்டி காண்பித்து) இதைப் போன்ற பாரம்பரியச் சின்னங்கள் எங்கள் நாட்டிலும் உண்டு. எங்களுடைய மத வழிபாடுகளும் இங்கு நடப்பதைப் போலவே, சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் போதுதான் நடக்கும். இந்தியக் கலாசாரத்தைப் போலவே இயற்கையோடு இசைந்து வாழ்வது எங்கள் கலாசாரத்தின் மையக்கருத்தாகும்.

ஆஸ்ட்ரா லஸ்மானே


உங்களுடைய பாரம்பரியத்தை உயிரூட்ட நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு இந்தியா எந்த விதத்தில் உதவ முடியும் என்று நினைக்கிறீர்கள்?

ரமான்ஸ் யான்ஸன்ஸ்: இந்தியாவிற்கு இதில் மிகப் பெரிய பங்கு இருக்கிறது. ஏனென்றால் எங்கள் மக்கள் எண்ணிக்கையில் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கின்றோம். எங்களுடைய இந்த முயற்சியை எதிர்க்கும் சக்திகளோ மிக பலம் வாய்ந்தவை. ஒருங்கிணைப்பும் கொண்டவை. பாரம்பரிய ஞானம் என்பது மனித குலத்துக்கே பொதுவானது. எல்லா நாடுகளுக்கும் பலனளிக்கக் கூடியது. இதனைத் தங்கள் பாரம்பரியத்தை இழந்து நிற்கும் மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். பண்டைய மாதங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டால் இங்கு போர்களே இருக்காது. இந்தச் செயற்கையான மதங்களே நம்மைப் போர்களுக்கு இட்டுச் செல்கின்றன. இஸ்ரேலிலும் பாலஸ்தீனத்திலும் அவர்கள் ஒரு முடிவில்லாத போரை நிகழ்த்திக்கொண்டு இருக்கிறார்கள். கிறிஸ்தவ மதமாற்றம் உலகின் பல இடங்களில் உள்ள பூர்வகுடிகளுக்கு இடையே பிரச்சினைகளைத் தோற்றுவித்திருக்கிறது. இத்தகைய சக்திகளை எதிர்த்துப் போராடும்போது எங்களுக்கு வலுவான ஒருங்கிணைப்பு தேவை. எங்களுடைய குரல் வலுப்பட இந்தியா எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கின்றது.

உங்களுடைய பாரம்பரியங்களைப் பாதுகாக்க என்று உங்கள் நாட்டில் ஏதேனும் சட்டங்கள் இருக்கின்றனவா? அப்படி இல்லையென்றால் அவற்றைக் கொண்டு வர ஏதேனும் முயற்சி எடுக்கின்றீகளா?

ரமான்ஸ் யான்ஸன்ஸ்: இல்லை, எங்கள் தேசிய மதமான தைவ்துரீபாவை பாதுகாக்க என்று சட்டங்கள் எதுவும் தற்போது இல்லை. ஆனால் நாங்கள் அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். எங்களுடைய பாரம்பரியம் லாட்வியாவின் பாரம்பரியமாக அங்கீகரிக்கப் படவில்லை. எங்கள் சடங்குகள், எங்கள் பாரம்பரிய வழக்கப்படி நடக்கும் திருமணங்கள் எதுவும் சட்டத்தினால் அங்கீகரிக்கப்படவில்லை. குழந்தைப் பிறப்பும் அங்கீகரிக்கப்படவில்லை. இதெல்லாம் நாங்கள் கருத்தரங்கில் விவாதித்தோம். இதற்கெனச் சட்டங்கள் கொண்டு வர முயற்சி செய்கின்றோம். ஆனாலும் இதுவரை நேர்மறையான பலன்கள் எதுவும் கிட்டவில்லை. எங்கள் கோரிக்கைகளை அவர்கள் செவி மடுப்பதில்லை. நாங்கள் இதுபோன்ற பன்னாட்டுக் கருத்தரங்கங்களில் பங்கெடுப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இதன் மூலம் எங்கள் குரல் அனைவருக்கும் எட்டும் என எதிர்பார்க்கிறோம். பாரம்பரிய மதங்களை உயிரூட்ட எண்ணும் மக்கள் ஐரோப்பா எங்கிலும் இதே பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். லிதுவேனியா, போலாந்து, ஜெர்மனி,பிரான்ஸ், பெலாரூஸ், உக்ரைன், ரஷ்யா இங்கெல்லாமும் இதே நிலைதான்.


உங்களுடைய இந்தப் பாரம்பரியத்தை உயிரூட்டும் முயற்சிக்கு லாட்வியா மக்களிடம் ஆதரவு இருக்கிறதா?

ஆஸ்ட்ரா லஸ்மானே: நாங்கள் சோவியத் யூனியனின் ஆதிக்கத்தில் இருந்தபோது எங்கள் நாட்டில் பல நாடுகளின் மக்கள் குடியேறினர். இதன் காரணமாக எங்கள் தைவ்திரூபா வாழ்க்கை முறையை லாட்வியா வாழ்க்கை முறையாக ஏற்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. லாட்வியர்களுக்கும், ரஷ்யர்களுக்கும், உக்ரேனியர்களுக்கும் இடையே பல திருமணங்கள் நடந்திருக்கின்றன. இதனால் எங்கள் மக்களிடையே கலாசாரம் வலுவான நிலையில் இல்லை. ஆனால், இப்போது இந்த தைவ்தரூபா வாழ்க்கை முறையைப் பின்பற்ற விரும்பும் மக்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. எங்களுடைய பண்டிகைகளுள் கோடைப் பண்டிகை மிக முக்கியமான ஒன்று. அதற்கு இப்போது இளைஞகர்களிடையே வரவேற்பு அதிகமாகிக் கொண்டுவருகிறது.


இத்தகைய பன்னாட்டுக் கருத்தரங்கங்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவிகரமாக இருக்கின்றனவா?

ரமான்ஸ் யான்ஸன்ஸ்: கண்டிப்பாக. இவை எங்களுக்கு உதவுகின்றன என்றுதான் சொல்வேன். இத்தகைய கருத்தரங்கங்கள் மூலமாக எங்கள் குரல் வலுப்படுகிறது. அதுமட்டுமல்லாது, இதுபோன்ற கருத்தரங்கங்களில் கலந்துகொள்ளும்போது நாங்கள் மற்ற பண்டைய பாரம்பரியங்களையும் பற்றித் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கின்றது. இது எங்களுக்கு மட்டுமில்லாமல் இதில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு பிரதிநிதிக்கும் பயனுள்ளதாகவே அமையும். அது மட்டுமில்லாது, நாங்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடுவது இதில் ஒரு முக்கியமான அம்சம். பல கலாசாரங்களின் பிரதிநிதிகளை, குறிப்பாக உங்கள் நாட்டில் இருப்பவர்களைப் பார்ப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒரு அனுபவமாக இருந்தது. பூர்வகுடிகளை மீட்டெடுக்கும் இத்தகை முயற்சியை செய்யும் இந்தியாவுக்கு நாங்கள் எல்லோரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். உங்களுடைய பண்பாடும், உபசாரமும் எங்களை சிலிர்க்க வைக்கின்றது. இதுவும் ஒரு வகையில் ஒரு விதமான ஆன்மிக அனுபவமே.

ஆங்கில மூல நேர்காணல்: V.V. பாலசுப்ரமணியன் மற்றும் வசந்த் பார்த்தசாரதி.
தமிழாக்கம்: V.V.பாலசுப்ரமணியன்.
படங்கள்: V.V.பாலசுப்ரமணியன் மற்றும் லாட்விய அருங்காட்சியகம் வெளியிட்ட The three occupations of Latvia 1940 – 41 என்ற புத்தகத்தில் இருந்து.

Posted on Leave a comment

இந்தியாவில் சுகாதாரம் – லக்ஷ்மணப் பெருமாள்


‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்கிறது குறள். நோயற்ற வாழ்வு என்பது வெறும் உடல்நலக் கேடு சார்ந்தது மட்டுமல்ல, மன நலனையும் சார்ந்தது. இன்று பல நோய்கள் வருவதற்கு மன அழுத்தம் மிக முக்கியக் காரணியாக மாறியுள்ளது. உடல்

உழைப்பு சார்ந்த வேலைப்பளுவும் கடந்த காலங்களை ஒப்பிடும்போது குறைந்து வருகிறது. இந்தியாவில் சுகாதாரத்தின் நிலை என்ன? மத்திய அரசு மற்றும் மாநில அரசு சுகாதாரத்தின் நிலையை மேம்படுத்த எடுத்து வரும் முயற்சிகள் என்ன? மத்திய,

மாநில அரசு சுகாதாரத்திற்காக ஒதுக்கும் பட்ஜெட் போதுமானதா? இந்திய அளவில் குழந்தைகளின் பிறப்பு-இறப்பு விகிதம், சராசரி ஆயுள், ஒரு பெண் சராசரியாக எத்தனை குழந்தைகளைப் பெறுகிறாள், தங்கள் நலனிலும் சுற்றுச் சூழலைப் பேணுவதிலும்

மக்களிடம் போதுமான அளவு பொறுப்பும் அக்கறையும் இருக்கிறதா?

சுகாதாரத்தைப் பேணிக் காக்கும் பொறுப்பு யாருடையது?

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 7ன் கீழ், சில துறைகளின் சட்ட மயமாக்கும் உரிமை மத்திய அரசின் பட்டியலில் (Central List) உள்ளது. சில துறைகளின் சட்டமயமாக்கும் சுதந்திரம் மாநில அரசின் பட்டியலில் (State List) உள்ளது.

மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இணைந்து சட்டமாக்கிச் செயல்படுத்தும் வகையில் சில துறைகள் பொதுப் பட்டியலில் (concurrent List) உள்ளன. அவ்வகையில் பலரும் பொதுச் சுகாதாரத்தைப் பற்றிப் பேசும்போது மத்திய அரசை நோக்கிச் சாடுகிறார்கள். உண்மையில் பொதுச் சுகாதாரம் மாநில அரசின் பட்டியலில் உள்ளது. அதாவது மாநில அரசிற்கே சுகாதாரம், துப்புரவு, மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்கள் ஆகியவற்றை அமைக்கும் பொறுப்பு உண்டு. மத்திய அரசு

இந்தியாவை ஆளும் அரசென்பதால் மத்திய அரசும் சுகாதாரத்திற்கென பட்ஜெட்டை ஒதுக்குகிறது. பல்வேறு நடவடிக்கைகளை சுகாதாரம் சார்ந்து மேற்கொள்ள நடவடிக்கைகளையும் திட்டங்களையும் கொண்டு வருகிறது.

மத்திய அரசு சுகாதாரத்திற்கென ஒதுக்கும் பட்ஜெட் ராணுவத்திற்கு ஒதுக்கும் பட்ஜெட்டோடு ஒப்பிட்டால் மிகக் குறைவு என்பது வருத்தமான விஷயமே. கடந்த சில வருடங்களோடு ஒப்பிடுகையில், சுகாதாரத்திற்கு தற்போதைய மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சுகாதாரத்திற்கு 26,567 கோடி (2012-13) செலவிடப்பட்டது. தற்போதைய பாஜக தலைமையிலான அரசில் 37,471 (2017-18) செலவிடப்படுகிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும் சராசரியாக 18% சுகாதாரத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதம மந்திரி சுவஸ்த சுரக்ஷா யோஜனாவின் கீழ் இந்தாண்டு கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 26% அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 3.2 கோடியிலிருந்து (2016-17) 1486 கோடி (2017-18) இத்திட்டத்தின் கீழ் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2011–12லிருந்து சராசரியாக 4.4% கிராமப்புற மருத்துவ மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் 2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான பட்ஜெட் 2015-16ல் 53% ஆக இருந்தது, 2017-18ல் 43% ஆகக் குறைந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் 2017-18 பட்ஜெட்டில் 10,150 கோடி பொதுச் சுகாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு 18,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 1,800 கோடி முதலமைச்சர் சுகாதாரக் காப்பீட்டின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.1

மனித வளக் குறியீட்டில் இந்திய சராசரியும் தமிழகத்தில் நிலையும்

பிறப்பின்போது குழந்தைகள் இறப்பு விகிதம், சராசரியாக ஒரு பெண் எத்தனை குழந்தைகளைப் பெறுகிறாள், மனிதனின் சராசரி ஆயுள் எனப் பல முடிவுகளை மாதிரி சர்வேக்கள் (Sample Survey Registration) எடுக்கப்பட்டு, 1971 முதல் 2015 வரையிலான காலக்கட்டத்தில், மாநிலங்களின் நிலை, இந்தியாவின் சராசரி போன்ற விஷயங்கள் நிதி ஆயோக்கின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய இரு பிரிவுகளிலும் கேரளாவும், தமிழ்நாடும் சுதந்திர இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவே உள்ளன. அதற்கு வரலாற்று ரீதியிலான காரணங்களும் உண்டு. உதாரணமாக கேரளா சுதந்திரம் அடைந்த போதே 47% கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்தனர். தமிழகம் அடுத்த நிலையில் இருந்தது. கேரளாவும் தமிழகமும் 1971ம் ஆண்டிலேயே மேற்கூறிய மனித வளக் குறியீட்டில், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், மேம்பட்ட நிலையில் இருந்ததைக் காண முடிகிறது. இந்திய அளவில் மனித வள குறியீடுகள் பல படிகள் முன்னேறி இருந்தாலும் உலக நாடுகளின் சராசரியை ஒப்பிடும்போது இந்தியா பின்தங்கியே உள்ளது. அவ்வகையில் கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தொடர்ச்சியாக சுகாதார விஷயத்தில் அக்கறை செலுத்திய காரணத்தால்தான் இன்று இந்திய சராசரியைக் காட்டிலும் மேம்பட்ட நிலையில் இருப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையம், துணை நிலை ஆரம்ப சுகாதார மையம் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டு இருக்கிறது. குறிப்பிட்ட கிலோமீட்டர் தொலைவிற்குள்ளாக மருத்துவ மனைகள் மற்றும் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதால் பல இறப்புகளைத் தடுக்க இயலுகிறது.

பிறப்பின் போது இறப்பு விகிதம்: (Infant Mortality Rate)

ஒரு லட்சம் குழந்தைகள் பிறந்தால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை:

மேற்கூறிய பட்டியலை நாம் இரு விதமாக அணுகலாம். பிறப்பின்போது இறப்பு என்பதை எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்துள்ளது. அதே வேளையில் இந்திய சராசரியோடு ஒப்பிடுகையில் உத்திரப் பிரதேசமும், மத்திய பிரதேசமும் இன்னமும் பின்தங்கியுள்ளதைப் பார்க்க முடியும். குஜராத் இந்திய சராசரி அளவைக் காட்டிலும் குறைத்து விட்டுள்ளதையும் பார்க்க இயலும். கேரளாவும், தமிழகமும் முன்மாதிரி மாநிலங்களாகவே தொடர்கின்றன.2

குழந்தைகளின் பிறப்பு விகிதம்: (Total Fertility rates by Residence)

ஒரு பெண் சராசரியாக எத்தனை குழந்தைகளைப் பெறுகிறாள் என்பதை அடிப்படையாகக் கொண்ட புள்ளி விபரங்கள்:

கல்வியறிவு அதிகமுள்ள மாநிலங்களில் குழந்தைகள் பிறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளதைப் பார்க்க முடிகிறது. மேலும் இந்தி பேசும் மாநிலங்களில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் இந்திய சராசரியைக் காட்டிலும் அதிகமுள்ளது என்பதும் தெரிகிறது. எதிர்காலத்தில் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் பிறப்பு விகிதம் இன்னும் குறையுமேயானால் அரசியல் ரீதியாகப் பல இழப்புகளைச் சந்திக்க நேரலாம். ஆனால் தனி நபர் வருமானம் மிக அதிக அளவில் உயர்ந்தது போலத் தோன்றும். பொருளாதாரக் குறியீட்டில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறிப்பிட்ட அளவிற்குக் கீழே குறைந்தால் தனி நபர் வருமானம் அதிகரிக்கும். மேற்கத்திய நாடுகளான ஐரோப்பாவில் ஒரு பெண் சராசரியாக 1.0 to 1.6 வரையில் பெறுவதை அரசியல் மற்றும் பொருளாதார அறிஞர்கள் விமர்சிக்கும் போது இவை அந்த நாடுகளின் எதிர்கால அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பெரும் கேள்விக்குறியையும், தனி அடையாளத்தையும் காலப் போக்கில் அழிக்கும் என்கிறார்கள். போர், உற்பத்தி போன்ற விஷயங்களில் இவை மிகுந்த சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

சராசரி ஆயுள்:3

மேற்கூறிய பட்டியலில் குறிப்பிட்ட மாநிலங்களைத் தவிர சிறிய மாநிலங்களான டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் சராசரி ஆயுள் தமிழகத்தைக் காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவே இந்தியாவில் மனிதர்களின் சராசரி ஆயுள் விஷயத்தில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. இந்தப் பட்டியலில் ஏன் சில மாநிலங்களில் பிறப்பின்போது சராசரி ஆயுள் அதிகமாகவும் வயது 5-10ல் கணக்கிடும்போது சராசரி ஆயுள் ஏன் குறைந்துள்ளது அல்லது அதிகரித்துள்ளது என்ற சந்தேகம் வரலாம். குழந்தை பிறப்பின்போது இறக்கும் குழந்தைகளுக்கான எண்ணிக்கையில் இந்திய சராசரியைவிட அதிகமாக இருக்கும் மாநிலங்களில், சராசரி ஆயுள் அதிகமென்பதும் அதே மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, குஜராத் போன்ற மாநிலங்கள் வயது 5-10ன் போது உயிரோடு இருக்கும் குழந்தைகள் என்ற கணக்கில் பார்த்தால் மனிதர்களின் சராசரி ஆயுள் குறைந்துள்ளதையும் காணலாம். இந்திய சராசரியைக் காட்டிலும் குறைவாக, பிறப்பின்போது இறக்கும் குழந்தைகளைக் கொண்ட மாநிலங்களில் இவை அப்படியே தலைகீழாக இருப்பதையும் காண முடியும்.

பிறப்பின் போது ஆண்-பெண் விகிதம்:
(1000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்ற கணக்கீடு)

இந்தப் பட்டியலில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆண் பெண் விகிதத்தை ஒப்பிட்டால் எந்த முடிவுக்கும் வர இயலாது. கல்வி பெற்ற மாநிலங்களுக்கு இணையாகக் கல்வியறிவு இல்லாத சில மாநிலங்களில் பெண் குழந்தைகளின் சராசரி உள்ளது அல்லது அதிகமாகவும் உள்ளது. பல இஸ்லாமிய நாடுகளில் கூட ஆண் – பெண் விகிதத்தை ஒப்பிட்டால் பெண்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதைக் காணலாம். இதைப் பெண் சிசுக் கொலை என்று சுருக்கிப் பார்க்க இயலாது என்பதே எனது பார்வை.

சுகாதாரத்தில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்:

சிக்கன் குனியா, பறவைக் காய்ச்சல், டெங்கு, பிளேக், பன்றிக் காய்ச்சல் எனப் பல தொற்று நோய்கள் இந்தியாவைத் தொற்றிக் கொண்டு வருவது மிகுந்த சவாலாக உள்ளது. இதில் சிக்கன் குனியா, பறவைக் காய்ச்சல், பிளேக் போன்ற நோய்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது என்பது ஆறுதல் தரும் விஷயம். ஆனால் இது போன்ற தொற்று நோய்கள் பரவுவதைத் தடுக்கவோ சுற்றுச் சூழலைப் பேணிக் காப்பதில் மக்களுக்கும் பொறுப்பில்லை. மேலும் சாக்கடை, கழிப்பறை வசதியின்மையால் பொது வெளியைப் பயன்படுத்துவதற்கு சமூகமாக நாம் பல முயற்சிகளை எடுக்காததாலும் எளிமையில் தொற்று நோய்கள் பரவுகின்றன. இன்று ஊடகம் இல்லாத வீடுகளைப் பார்ப்பது அரிது. ஆனால் கழிப்பறை இல்லாத வீடுகள் நிறைய உண்டு. பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது, குப்பைகளைக் கொட்டுவது என மக்களே சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். ஒருபுறம் கழிப்பறையின் பற்றாக்குறை, மற்றொரு புறம் அவற்றை முறையாகப் பராமரிக்காமை. பேருந்து நிலையம் போன்ற மக்கள் கூடும் இடங்களிலேயே கழிப்பறைக்கு வெளியே பொது வெளியில் சிறுநீர் கழிப்பது என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். பிளாஸ்டிக் பொருட்களை, கண்ட கழிவு நீர்ச் சாக்கடையிலும்,வாய்க்காலிலும் போடுவதால் நீர் செல்ல இயலாது கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதற்கு மேலும் ஏன் தொற்று நோய்கள் பரவுகின்றன. இந்தியர்களுக்குத் தங்களுடைய உடல் மீது பெரிதும் அக்கறை கிடையாது. சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்திருப்பதிலும் அக்கறையோ பொறுப்போ கிடையாது. இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாரபட்சமெல்லாம் கிடையாது.

மத்திய மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள்:

மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்ததோடு நில்லாமல் சுகாதாரம் சார்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தூய்மை இந்தியா திட்டத்தில் மோடி பதவியேற்ற மூன்று ஆண்டுகளில் 3 கோடியே 88 லட்சத்து 50 ஆயிரம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.3

போலியோ நோய் ஒழிப்புத் திட்டத்திலும் இந்தியா வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையைப் படைத்துள்ளது. இந்தியா போலியோ இல்லாத நாடாக 2014 மார்ச் மாதம் 27ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. டெட்டனஸ் தாக்குவதால் தாய் மற்றும் பச்சிளம் குழந்தை இறப்பு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. பல நோய்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள, நோயை முற்றிலுமாக ஒழிக்க அரசின் மூலம் மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி விழிப்புணர்வும் பெரிய அளவில் உதவி உள்ளது. குழந்தைகளுக்கு முறையாகத் தடுப்பூசி போடப்பட்டதால் பல குழந்தைகளின் இறப்பு தடுக்கப்பட்டுள்ளது. இந்திர தனுஷ் என்ற திட்டத்தின் மூலம் தடுப்பூசி குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் போடப்படுகிறது.4

சுருக்கமாக, இந்தியாவின் சுகாதாரம் மேம்பட என்ன செய்ய வேண்டும்?

1. மத்திய மாநில அரசு சுகாதாரத்திற்கு ஒதுக்கும் பட்ஜெட் போதுமானதாக இல்லை. அதை அதிகரிக்க வேண்டும்.

2. மக்களிடையே சுற்றுச் சூழல் குறித்த அக்கறையையும் பொறுப்பையும் அதிகரிக்க வேண்டும்.

3. கிராமப் பஞ்சாயத்தில் ஆரம்பித்து மெட்ரோ நகரங்கள் வரை குறிப்பிட்ட அளவிலான வீடுகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அதிக அளவில் குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும்.

4. கழிவு நீர்ப் பாதைகள் முறையாக மூடப்பட்டிருக்க வேண்டும். பொது வெளியில் துப்புவது, குப்பையாக்குவது போன்றவை தவறானது என்ற எண்ணத்தை மக்களிடம் உருவாக்க வேண்டும்.

5. மருத்துவத்திற்கான காப்பீடு அனைவருக்கும் இலவசம் என்ற வகையில் மருத்துவ மனைகளில் இலவசமாக மருத்துவப் பரிசோதனை கிடைக்கப்பெறும் நாளில் இந்தியாவில் மக்களின் ஆயுளும் கூடும். இறப்புகளையும் பெருமளவில் தடுக்க இயலும்.

அடிக்குறிப்புகள்:

01. http://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-nadu-budget-key-points-highlights/article17471153.ece

02. http://niti.gov.in/writereaddata/files/StateStats-Ebook.pdf

03. http://swachhindia.ndtv.com/httpswachhindia-ndtv-com5-year-report-card-shows-massive-growth-indias-sanitation-coverage-6232-6232/

4. http://www.pmindia.gov.in/ta/news_updates/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95/
________________