Posted on Leave a comment

பிளாஸ்டிக் பசுக்கள் | சுஜாதா தேசிகன்

“வாங்கக்
குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்:
நீங்காத செல்வம் நிறைந்து”
– ஆண்டாள்
அருளிய திருப்பாவை
ஆண்டாள், திருப்பாவை என்று படித்தவுடன், இது ஸ்ரீ
வைஷ்ணவம் பற்றிய பதிவு என்று படிக்காமலிருந்துவிடாதீர்கள். இதைப் படித்தபின், இதை எழுதிய
நான், படிக்கும் நீங்கள் நிச்சயம் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
ஸ்ரீரங்கத்தில் காலை பெருமாள் உறங்கியெழும் சேவைக்கு
‘விஸ்வரூபம்’ என்று பெயர். பெருமாளை வீணை மீட்டி எழுப்புகிறார்கள். பிரம்மா, தேவர்கள்
என்று பலர் கூடி பெருமாளை தரிசிக்கக் காத்துக்கொண்டிருக்க பெருமாள் எழுந்தவுடன் யாரைப்
பார்க்கிறார்? பின்பக்கமாய்த் திருப்பி நிற்க வைக்கப்பட்ட பசுமாட்டைப் பார்க்கிறார்.
பசுமாட்டின் வால்பக்கம் மஹாலக்ஷ்மி வாஸம் செய்கின்றாள்!
சில வாரங்களுக்கு முன் திருச்சி பஸ் ஸ்டாண்டில்
உறையூர் நாச்சியார் கோயிலுக்குப் போக பேருந்துக்குக் காத்துக்கொண்டிருந்தபோது ஒரு பசுமாடு
பக்கத்தில் இருந்தவர் கை அருகே வந்து ஏதாவது கிடைக்கிறதா என்று அவர் கையை முகர்ந்து
பார்த்தது. ‘தள்ளிப் போ’ என்று செய்கை செய்தவுடன் அது வேறு வழியில்லாமல், கீழே கிடந்த
சிகரெட் துண்டை நாக்கால் சுருட்டிச் சாப்பிட்டது. உள்ளம் பதறியது.
‘கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு’ என்கிறாள்
ஆண்டாள். சிறுவீடு என்ற வார்த்தையை ஆண்டாள் மட்டுமே உபயோகித்திருக்கிறாள். ‘சிறுவீடு’
என்றால் அதிகாலையில் பால் கறக்குமுன் மாடுகளை மேயவிடுவதைக் குறிக்கிறது. மாடுகள் புல்லில்
அரும்பியிருக்கும் பனித்துளிகளுடன் நுனிப்புல்லை மேயும். கன்றுகுட்டிகளுக்குப் பால்
கொடுத்த பின், பாலை இடையர்கள் கறப்பார்கள். சிறுவீடு என்றால் காலைச் சிற்றுண்டி மாதிரி
மாடுகளுக்கு.
சில வருடங்கள் முன் விடியற்காலை சென்னையில் இருந்தபோது
தாம்பரம் பக்கம் ‘கறந்த பால்’ வாங்க அதிகாலை தேடிக்கொண்டு ஒரு வீட்டைக் கண்டுபிடித்துச்
சென்றபொழுது அவர்கள் வீட்டு மாடு தெருவில் இருக்கும் குப்பைத் தொட்டியில் முகத்தை உள்ளே
புதைத்து அதில் இருந்த வஸ்துக்களைச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தது. எட்டிப்பார்த்த போது,
அதில் ஒரு மாதவிடாய் நாப்கின் அடக்கம்.
2016ல் இயற்கை விவசாயம், பசுமைப் புரட்சி செய்த
நம்மாழ்வார் அவர்களால் உருவாக்கப்பட்ட ‘வானகம்’ பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொண்டேன்.
செடிகளைப் பூச்சி தாக்குவதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும், பூச்சிகளை அழிக்காமல் அவற்றுடன்
எப்படிப் பழக வேண்டும் என்று விளக்கப்பட்டது. அதில் ஒரு முக்கியமான அம்சம், பஞ்சகவ்யம்
தயாரிப்பது.
சிறந்த பூச்சி மருந்து பஞ்சகவ்யம். முன்பு கோவில்களில்
பிரசாதமாக வழங்கப்பட்டு வந்தது. விரிவுரையாளர் அது சிறந்த நோய் எதிர்ப்புசக்தி பெற்றது
என்றும் அதை எப்படித் தயாரிப்பது என்று சொல்லிகொடுத்தார். பசு சாணம், பசுவின் கோமியம்,
பால், தயிர், கடலைப் புண்ணாக்கு ஆகியவற்றுடன், வாழைப்பழம், இளநீர், கரும்புச்சாறு ஆகியவற்றைக்
குறிப்பிட்ட விகிதத்தில் கலக்கி செடிகளுக்கு தெளிக்கும் பஞ்சகவ்யம் தயாரிக்கப்பட்டது.
தயாரிக்கும்போது எல்லோர் முகமும் அஷ்டக்கோணல் ஆனது. காரணம் பசுவின் சாணம் மனித மலம்
போலத் துர்நாற்றம் அடித்தது.
“அம்மாவும், பாட்டியும் வீட்டுக்கு முன் சாணம்
தெளிக்கும் போது வந்த வாசனை வேறுவிதமாக இருக்க, நீங்கள் கொண்டு வந்த சாணம் ‘செப்டிக்
டேங்கில்’ வரும் துர்நாற்றம் மாதிரி அடிக்கிறதே?” என்று கேட்டேன்
“ஊரில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவு, சினிமா போஸ்டர்
போன்ற ‘ஜங்க் ஐட்டங்களை’ மாடுகள் சாப்பிடுவதால் இப்படி மணம் வீசுகிறது’ என்றார்.
மாடுகள் பிளாஸ்டிக் சாப்பிடுமா என்ற கேள்வியை ஆராய்வதற்கு
முன் சென்னை வெள்ளத்தின்போது ஊரே அல்லோல கல்லோலமாய்க் காட்சி அளித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
வெள்ளம் வடிந்த பிறகு சென்னையைச் சுற்றினேன். வழியெல்லாம் வீடுகளும் மரங்களும் அவ்வளவாகச்
சீரழியவில்லை. ஆனால் வழியெங்கும் வெள்ளம் வடிந்த இடங்களில் எல்லாம் பிளாஸ்டிக் நகரமாகக்
காட்சி அளித்தது சிங்காரச் சென்னை.
பம்மல் அருகில் அனகாபுத்தூர் என்ற இடத்தில் வெள்ளத்துக்குப்
பிறகு எப்படிக் காட்சியளித்தது என்று இந்தப் படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
வாசகர்களுக்கு ஒரு புதிர்: இந்தப் படத்தை எடிட் செய்து இன்னும் கொஞ்சம் குப்பையைச்
சேர்த்திருக்கிறேன். புத்திசாலி வாசகர்கள் அதைக் கண்டுபிடிக்கலாம்.
வாசகர்கள் அந்தக் குப்பையைத் தேடும் சமயம், மாடு
எப்படி உணவை உட்கொள்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். மாடுகளுக்கு வயிறு, நான்கு பகுதிகளாக
இருக்கிறது.
ரூமென் (rumen)- முதல் வயிறு ; ரெட்டிகுலம் (reticulum)-
தேன் அடைப்பை; ஒமாசம் (omasum)- மூன்றாம் பகுதி, நான்காமிரைப்பை (abomasum)என்ற உண்மையான
வயிறு, குடல் என வயிற்றுப் பகுதி அமைந்திருக்கும்.
ஆடு-மாடுகள் அசைபோடும் விலங்குகள் என்று நாம் படித்திருக்கிறோம்.
கிடைத்த இலை தழைகளை உள்ளே வாய் வழியாக சாப்பிட்டவுடன் அவை நேராக ரூமென் பகுதிக்கு சென்றுவிடும்.
இது அவைகளின் சாப்பாட்டு கிடங்கு போல. சாப்பிடும் பொருட்கள் இங்கேதான் சேமிக்கப்படுகின்றன.
மாடுகளின் இதயத்துக்குப் பக்கம் இரண்டாம் பகுதியான
ரெட்டிகுலம் இருக்கிறது. தேன்கூடு போல இருப்பதால் இதற்குத் தேன் அடைப்பை என்ற பெயர்.
கனமான அல்லது அடர்த்தியான தீவனம் சாப்பிடும்போது இந்த அறையில் உண்டியலில் பைசா போடுவது
போல உள்ளே விழுந்துவிடும்.
மெதுவாக அசைப்போட்டு சாப்பிட்ட உணவை மீண்டும் மென்று
அரைத்து உள்ளே செலுத்தும். மாடு எப்படி சாப்பிடுகிறது என்பதைப் பற்றியது அல்ல கட்டுரை;
எதைச் சாப்பிடுகிறது என்பதைப் பற்றியது.
இரண்டாம் அரையில் உண்டியல் போல என்று சொல்லியிருந்தேன்
அல்லவா? அங்கே ஆணிகள், இரும்பு துண்டு, பிளாஸ்டிக் (கேரிபேக்)என்று குப்பைத் தொட்டியில்
என்ன என்ன இருக்குமோ அவை மாடுகளுக்குள் இருக்கின்றன, செரிமனமாகாமல்!
மேலே புதிருக்கு விடை தெரிந்துவிட்டதா? இல்லை என்றால்
கீழே உள்ள படத்தைப் பார்த்துச் சரி பார்த்துக்கொள்ளுங்கள். இது சமீபத்தில் (அக்டோபர்
19, 2019)ஒரு பாசுமாட்டின் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட குப்பை. இதன் எடை 52 கிலோ.
சாணம், சிறுநீர் கழிக்க முடியாமல் மாடு அவதிப்படுகிறது
என்று மருத்துவரிடம் காண்பித்து ஸ்கேன் செய்து வயிற்றில் ஒரு அடிக்குக் கிழித்துக்
கழிவுகளை எடுத்துள்ளார்கள். (விருப்பம் உள்ளவர்கள் QR Scan செய்து பார்க்கலாம்.)
இந்தக் காணொளியை துரதிருஷ்டவசமாகப் பார்க்க நேர்ந்தது.
திரௌபதியின் சேலையைப் பிடித்து இழுக்கும் துச்சாதனன் போல, பிளாஸ்டிக் குப்பையை டாக்டர்கள்
எடுக்கிறார்கள்.
பிளாஸ்டிக் மட்டும் இல்லை அதில் மருத்துவமனை சிரிஞ்ச்
ஊசிகள், ஆணிகள், உணவை பேக் செய்ய பயன் படும் அலுமினிய ஃபாயில் என்று சகலமும் அடக்கம்.
இந்த உலகில் நாம் எல்லோரும் ஒரு விதத்தில் மோசமான அரக்கர்கள்தான்.
செய்தியைப் படித்த பின், சென்னையில்தான் இப்படி
என்று உடனே முடிவு கட்ட வேண்டாம். சில தலைப்புச் செய்திகளை மட்டும் கீழே தருகிறேன்.
– குஜராத்தில் 20 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்துள்ளார்கள்
(ஏப்ரல் 2019)
– கேரளாவில் 10 கீலோ எடுத்துள்ளார்கள் (ஜூன் 2019)
– டெல்லியில் 34 மாடுகள் உடம்பு சரியில்லாமல் இருக்க,
15 மாடுகள் இறந்தன. அவற்றின் வயிற்றில் பிளாஸ்டிக்! அறுவை சிகிச்சை மூலம் மற்ற 15 மாடுகளில்
இருந்து 8 முதல் 10 கிலோ வரையிலான பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்துள்ளார்கள் (ஆகஸ்ட்
2018)
– அகமதாபாத்தில்  ஒரு மாட்டிலிருந்து எடுக்கப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக்
கழிவுகளில் சாக்ஸ் எல்லாம் வந்திருக்கிறது (செப் 2016)
– ராஜஸ்தானில் ஒரே மாட்டிலிருந்து 170 கிலோ பிளாஸ்டிக்
கழிவுகளை எடுத்து ‘சாதனை’ புரிந்திருக்கிறார்கள்.
சென்னையில் 52 கிலோ குப்பையை அகற்றினார்கள் என்று
செய்திக்குப் பக்கத்தில் கர்நாடகாவில் வெறும் 20 கிராமுக்குப் பசுவிற்கு அறுவை சிகிச்சை
என்று இன்னொரு செய்தி. ஒருவர் விஜயதசமி அன்று தனது வீட்டில் பூஜை செய்யும் போது மலர்
மாலையால் சாமிகளை அலங்காரம் செய்து, கூடவே அவருடைய 20 கிராம் தங்கச் சங்கிலியையும்
சேர்த்து பூஜை செய்துள்ளார். மறுநாள் மலர் மாலைகளைத் தனது பசுவுக்கு உணவாகக் கொடுத்தார்.
மென்று தின்றது மாலையை மட்டும் அல்ல, அவருடைய தங்கச் சங்கிலியையும்தான். இரண்டு நாள்
சாணத்தைப் பார்த்து அதில் வராததால் அறுவை சிகிச்சை செய்து சங்கலியை மீட்டனர். நமுட்டுச்
சிரிப்புடன் இதைப் படித்தாலும், இதில் இரண்டு செய்திகள் இருக்கின்றன.
– முன்பு பார்த்த மாதிரி கனமான வஸ்துக்கள் மாடுகளின்
உண்டியல் போன்ற இரண்டாவது வயிற்றில் சென்றுவிடுகின்றன.
– தீவனத்துடன் உள்ளே செல்லும் தங்கமோ அல்லது பிளாஸ்டிக்
பைப்போ மாட்டின் வயிற்றுக்குச் சென்றால் வெளியே வருவதில்லை.
– பூசாரி போன்ற டாக்டர்கள் உண்டியலை உடைத்து அதில்
நாம் போடும் காணிக்கைகளை எடுக்கிறார்கள்.
அடுத்த முறை காய்கறி, சாப்பாட்டுக் குப்பையை ‘கேரி
பேக்’ என்ற ஒன்றில் இறுக்கமாக முடிந்து குப்பைத் தொட்டியில் போடும்பொழுது, பிரிக்கத்
தெரியாத மாடுகள் அந்த மூட்டையை அப்படியே தின்றுவிடப் போகிறது என்று நினைத்துக்கொள்ளுங்கள்.
இதுவும் ஒருவிதத்தில் பசு வதையே!
நெறிமுறைகள் சுகாதாரம் இரண்டும் சுயநலம் என்ற ஒன்றால்
நம் கண்முன்னால் நம்மாலேயே வீழ்த்தப்படுகின்றன.
சமீபத்தில் பிரதமர் மோதி அவர்கள் கடற்கரையில் குப்பைகளைப்
பொறுக்கியபோது அவர் நடிக்கிறார், நாடகமாடுகிறார் என்று சிலர் அதை விமர்சனம் செய்தார்கள்.
விமர்சனம் செய்தவர்கள் மேலே உள்ள இந்தச் செய்திகளைப் படித்திருப்பார்களா என்று தெரியாது.
இதுவே நம் நாட்டுக்கு இப்போது மிகவும் தேவையான களப்பணி. அதைத்தான் மோடி செய்திருக்கிறார்.
தாய்ப்பால் உட்கொள்ளும் குழந்தைக்கு அதனால் ஏதாவது
பிரச்சினை வரபோகிறதே என்று, பிரசவித்த தாய் தனக்கு ஜுரம் வந்தாலும், மருந்து சாப்பிட
மாட்டாள். கிலோ கிலோவாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாடுகள் கொடுக்கும் பால் எப்படிப்பட்டதாக
இருக்கும்?
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்
பாலில் புற்றுநோயை உருவாக்கும் டையாக்ஸின் ரசாயனத்தின் தடயங்களை சமீபத்தில் கண்டறிந்தது.
பசுமாட்டின் மூத்திரம் புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது என்று இன்னொரு இடத்தில் ஆராய்ச்சி
செய்வது விந்தை.
கல்வியறிவு அதிகம் உள்ள கேரளாவில் 2018 வெள்ளத்தின்
போது மலையாட்டூரில் பாலம் மூழ்கியது. வெள்ளம் வடிந்த பின் பாலம் முழுவடும் பிளாஸ்டிக்
கழிவுகள். ஒருவழியாக வெள்ளத்தினால் பிளாஸ்டிக் கழிவுகள் வெளியே வந்துவிட்டன என்று நினைத்தபொழுது
எக்ஸ்வேட்டர் இயந்திரம் கொண்டு அதைச் சுத்தம் செய்து அந்த பிளாஸ்டிக் கழிவுகளை மீண்டும்
ஆற்றிலேயே கொட்டினார்கள்!
(Thanks: http://oneindiaonepeople.com/, Image Copyright: Morparia)நான் கடைக்குப் போகும்போது துணிப்பைதான் உபயோகிக்கிறேன்
என்று நினைப்பவர்கள், அதன் உள்ளே எவ்வளவு பிளாஸ்டிக் பைகள் இருக்கின்றன என்றும் பார்க்க
வேண்டும்.
(Cartoon by Arun Ramkumar originally published in
Fountain Ink magazine.)
என் நண்பர் திரு ஸ்ரீநி சாமிநாதன் ‘மாரத்தான்’
ஓட்ட வீரர். இந்தியாவில் பட இடங்களில் ஓடியிருக்கிறார். பலர் ஓடும்போது இவரை உடனே கண்டுபிடித்துவிடலாம்.
அவர் தோளில் ஒரு நீல நிறப் பை ஒன்று இருக்கும். ஓடும் வீரர்கள் கீழே போடும் தண்ணீர்
பாட்டில், கப், பிளாஸ்டிக் பை என்று சகல குப்பைகளையும் பொறுக்கி தன் ‘ஷாப்பிங்’ பையில்
போட்டுக்கொண்டே, மராத்தானிலும் ஓடுவார். சமீபத்தில் அவர் லடாக்கில் ஓடினார். அங்கேயும்
அவர் குப்பைகளைப் பொறுக்கிக்கொண்டு ஓடி மூன்றாவதாக வந்தார். இன்று மூன்றாவதாக வருபவர்கள்தான்
இந்தியாவை முதல் இடத்துக்கு உயர்த்த முடியும்.
இந்தியா டுடே கட்டுரை ஒன்றுல் இவ்வாறு எழுதியிருக்கிறார்கள்.
‘The secret behind a healthy nation might just be to remember that a happy herd
produces better milk’. கட்டுரை ஆரம்பத்தில் தரப்பட்டிருக்கும் ஆண்டாளின் திருப்பாவையின்
பொருள் இது: ‘பருத்த முலைகளைப் பற்றி இழுக்க இழுக்க அசையாமல் நின்று வள்ளல்களைப் போல்
பால் குடங்களை நிரப்பும் பசுக்கள் இருக்க, குறைவற்ற செல்வம் நிறைந்திருக்கும்’.
பொருளாதாரம் வீழ்ச்சி என்று வாய்கிழியப் பேசிக்கொண்டு
இருக்கும் நேரத்தில், நம் நாட்டின் செல்வமாகிற பசுவின் ஆதாரத்தை சரி செய்தால் நாடு
சுபிக்ஷம் பெற்று, பொருளாதாரம் தானாக வளரும்.
இந்தப் பிரச்சினைகள் இருக்கும்போது நாம் சந்தராயன்
ராக்கெட் விடுகிறோமே என்று ஒரு கும்பல் கிளம்பும்! சில பிரச்சினைகளுக்குப் பணம் தேவைப்படும்;
சிலவற்றுக்கு மனம் மட்டும் இருந்தாலே போதும்.
கடைசிச் செய்தி: உத்தரகண்டில் சிறுத்தை ஒன்று பிளாஸ்டிக்
பையை சாப்பிடுவதை சமீபத்தில் கண்டுபிடித்தார்கள்.
  
உசாத்துணைகள்:
2. ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

Posted on Leave a comment

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)- லாலா லஜ்பத் ராய் (பகுதி 7) | தமிழில்: சுப்ரமணியன் கிருஷ்ணன்

பகுதி
7


சர்
சையது அகமது கானிலிருந்து இக்பாலுக்கு
சர் சையத் அகமது கான் சந்தேகத்திற்கு இடமின்றி
ஒரு சிறந்த மனிதர். அவர் நல்ல மனமுடையவர், தன்னலமற்றவர், தனது சமூகத்தின் நலன்களுக்காகத்
தன்னையே அர்ப்பணித்தவர். தன் சமூகத்திற்காகவே அவர் வாழ்ந்தார், மறைந்தார். அவரது கொள்கை
மூன்று கூறுகளைக் கொண்டிருந்தது:
(அ)மற்ற முஸ்லிம் நாடுகளின் விவகாரங்களில் தலையிடாதது.
(ஆ)உள்நாட்டில் முஸ்லிம்களின் நிலையை மேம்படுத்துவதற்கான
அனைத்து முயற்சிகளிலும் கவனத்தைச் செலுத்துவது.
(இ)பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் கூட்டணி.
அவரது பார்வையில், இம்மூன்றும் ஒன்றுக்கொன்று சார்ந்தவை.
தான் வாழ்ந்தவரை, தனது படித்த சக மதவாதிகளின் நம்பிக்கைக்குப்
பாத்திரமாகவே இருந்தார் அவர். ஆனால் அவர்களில் சிலர் இந்திய தேசிய காங்கிரஸிலும் ஆர்வம்
காட்டினர். அவரது மரணத்திற்குப் பிறகு ஒரு மாற்றம் ஏற்பட்டது. அவரைப் பின்பற்றியவர்களும்
அவரது மாணவர்களும் அவருடைய கொள்கையின் மூன்று கூறுகளையும் கைவிட்டனர். ஆனாலும் பெரும்பாலானோர்
அவரது கொள்கையை தொடர்ந்து நம்பிப் பின்பற்றி வந்தனர். இந்த நிலைமையைப் பின்வருமாறு
விளக்கலாம். உலகளாவிய இஸ்லாமிய வாதம், பிரிட்டிஷருக்கு எதிரான விரோதம்.
ஒத்துழையாமை இயக்கத்தின் தாக்கத்தினால் பெருமளவு
முஸ்லிம்கள் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தனர்; ஆனால் பல சந்தர்ப்பங்களில் தேசியவாதம்
அவர்களின் இஸ்லாமிய வாதத்திற்கு அடுத்த இடத்திலேதான் இருந்தது என்று தோன்றியது. இந்திய
முஸ்லிம்கள் வெளிநாடுகளில் உள்ள சக முஸ்லிம்களுக்கு அனுதாபம் காட்ட வேண்டும் என்பது
தெளிவானதாக இருந்தது. வெளிநாட்டு முஸ்லிம்களின் துன்பங்கள் அவர்களது அனுதாபத்தை ஈர்த்தன,
அவர்களது வெற்றிகள் இங்குள்ளவர்களை உற்சாகப்படுத்தின. இது இயற்கையானது. இந்தியாவுக்கு
வெளியே இந்துக்கள் அதிகம் இல்லாததால் இந்துக்களால் இதை முழுமையாக உணர முடியாது. ஒருபுறம்
இதை ஒப்புக் கொள்ளும்போது, சர் சையத்தின் உள்நாட்டுக் கவனம் பற்றிய கொள்கை சிறந்தது
என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
அரசியல் அல்லது மத ரீதியான தேசியவாதம் சர்வதேச
ரீதியான மதவாதத்திற்கு முன்னதாக இருக்க வேண்டும் என்பதை உலகளாவிய இஸ்லாமியவாதத்தின்
ஆதரவாளர்கள் ஒருபோதும் உணரவில்லை. வீட்டில் சுதந்திரமில்லாத நபர்கள், மற்றவர்கள் சுதந்திரத்தைப்
பெற அல்லது அதைத் தக்க வைத்துக் கொள்ள உதவ முடியாது. ஏழைகள், கல்வியறிவற்றவர்கள், ஆதரவற்றவர்கள்,
தன் வீட்டைச் சார்ந்துள்ளவர்கள் ஆகியோர் மற்றவர்களுக்கு உதவுவதற்காக தங்களிடம் உள்ளதைக்
கொடுக்க முடியாது. இந்த உணர்வு எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும், நடைமுறை அரசியலுக்கோ
அல்லது நல்ல ஒரு பொருளாதாரத்திற்கோ ஒவ்வாத ஒன்று. என்னைப் பொருத்தவரை இது ஒரு சிறந்த
மதரீதியான வழிமுறையாகவும் இருக்க இயலாது. இந்த யோசனைகளைப் பார்த்து எள்ளி நகையாடும்
சிலர் உள்ளனர், ஆனால் அது இந்த உண்மையைப் பாதிப்பதில்லை. கடந்த மூன்று ஆண்டுகளின் நிகழ்வுகள்
எனது நம்பிக்கையை குறைந்தபட்சம் இந்த விஷயத்தில் உறுதிசெய்துள்ளன. சர் சையத்தின் கொள்கை
அதை மாற்றியமைத்தவர்களின் கொள்கைகளை விட சிறந்ததாக இருந்தது.
குறிப்பு: கிலாபத் மற்றும் ஸ்மிர்னா நிதிகளுக்கான
முஸ்லிம் பங்களிப்புகளை திலக் ஸ்வராஜ்ய நிதியம், மலபார் நிவாரணம் மற்றும் முஸ்லிம்
கல்வி நிதி போன்றவற்றுடன் ஒப்பிடுக.
ஒரு இந்தியரின் முதல் நோக்கம் உலகத்தின் மற்ற எல்லா
நாடுகளுக்கும் மேலாக இந்தியாவை நேசிப்பதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் ஒரு தேசபக்தராக
இருக்க முடியும். பிளவுபட்ட விசுவாசம் மற்றும் பிளவுபட்ட நேசம் நல்ல தேசியவாதிகளை,
தேசபக்தர்களை அல்லது நல்ல மதவாதிகளைக் கூட உருவாக்க முடியாது.
முஸ்லிம் கவிஞர்களில் மிகவும் திறமையான, பிரபலமான
ஒருவர் இரண்டு பாடல்களைப் பாடினார். ஒன்று சாரே ஜஹான் சே அச்சா இந்துஸ்தான் ஹமாரா
(உலகின் அனைத்து நாடுகளிலும், நமது இந்துஸ்தான் சிறந்தது), மற்றொன்று ஒரு முசத்தாஸ்
பல்லவியுடன் முடிவடைகிறது: ‘இது எனது நாடு, இதே எனது நாடு.’ இந்த பாடல்களின் சில வரிகளை
இங்கே காண்பது சுவாரஸ்யமானதாக இருக்கும், பாடலாசிரியரின் தேசபக்தியின் ஆழத்தையும்,
அவரை ஊக்கப்படுத்திய தேசியவாதத்தின் உயரத்தையும், சகிப்புத்தன்மையின் பரந்த மனநிலையையும்
இவை காட்டுகின்றன. முதலாவதாக
(மொழிபெயர்ப்பு)
மதம் பரஸ்பர விரோதத்தைக் கற்பிக்காது.
நாம் இந்தியர்; நம் நாடு இந்துஸ்தான்.
கிரீஸ், எகிப்து, ரோம் என்ற அனைத்தும் உலகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன,
ஆனால் நம் பெயரும் தனித்தன்மையும் இன்னும் வாழ்கின்றன.
நம் வாழ்க்கை அழிந்துபோகாததற்கு சில காரணங்கள் உள்ளன,
ஆயினும் மாறிவரும் காலம் பல நூற்றாண்டுகளாக நம் எதிரியாக உள்ளது
இந்தப பாடல் பெரும்பாலும் ‘வந்தே மாதரம்’ என்ற
கீதத்திற்கு மாற்றாகப் பாடப்பட்டு தேசிய கீதத்தின் கண்ணியத்திற்கு ஈடாக உயர்த்தப்பட்டுள்ளது.
அடுத்த பாடலைப் பார்ப்போம்:
(மொழிபெயர்ப்பு)- “சிஸ்டி தனது சத்திய செய்தியை
வழங்கிய நிலம்; நானக் தத்துவ பாடலைப் பாடிய தோட்டம்; தார்தாரியர்கள் தங்கள் வீடாக ஏற்றுக்கொண்ட
நிலம்; ஹெட்ஜாஸ் மக்களை அரேபியாவின் பாலைவனத்தை விட்டு வெளியேறச் செய்த நிலம்; அதே
நிலம் என் பூர்வீக நிலம், அதே என் சொந்த நிலம்.”
2. (நிலம்)இது கிரேக்கர்களின் அதிசயத்தைத் தூண்டியது.
(நிலம்)அறிவியல் மற்றும் கலையை முழு உலகிற்கும் கற்பித்தது.. முதலியன.
3. தத்துவத்தின் பாடலை உலகம் கேட்ட இடம்; அரேபிய
நபி குளிர்ந்த காற்று போன்றவற்றைப் பெற்ற இடம்.. முதலியன
அடிக்குறிப்பில், முதல் வரி ஸ்ரீ கிருஷ்ணரின் புல்லாங்குழலின்
இசையைக் குறிக்கிறது என்றும், இரண்டாவது வரி நபி கூறியதின் ஒரு ஹதீஸ்: “அவர் இந்தியாவின்
திசையிலிருந்து குளிர்ந்த காற்றைப் பெற்றுக்கொண்டார்” என்றும் கூறப்பட்டுள்ளது.
(4) (நிலம்)யாருடைய வாழ்க்கைச் சூழல் சொர்க்கத்தின்
வாழ்க்கையைப் போன்றுள்ளதோ
(5) (நிலம்)இது கௌதமரின் நாடு, (இதனால்)ஜப்பானியர்களின்
புனித நிலம், (நிலம்)இது கிறிஸ்துவின் அன்பர்களுக்கு ஒரு சிறிய ஜெருசலேம்.
அதே கவிஞரால் ‘புதிய சிவாலா’ என்ற பெயரில் இயற்றப்பட்ட
மற்றொரு பாடல் உள்ளது – சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இப்பாடல் இந்து-முஸ்லிம் ஒற்றுமையின்
உன்னதமான உணர்வுகளால் நிறைந்துள்ளது. நான் அமெரிக்காவில் இருந்த போது இதை அடிக்கடி
படித்து ஒரு ஆங்கில இதழுக்காக மொழிபெயர்த்தேன். எனது மொழிபெயர்ப்பை டாக்டர் ஆனந்த குமாரசாமி
சரிபார்த்து அமெரிக்கப் பத்திரிகை ஒன்றில் வெளியிட்டார்.
இதைப் போலவே, குறிப்பிடத்தக்க மற்றும் பரிதாபகரமான
ஒரு கவிதை, சதா-இ-தர்த் (வலியின் அழுகை)இந்து-முஸ்லிம் ஒற்றுமை இன்மையைப் பற்றிப் புலம்புகிறது.
அதே வரிசையில் இன்னும் ஈர்க்கக்கூடியது தஸ்வீர்-இ-தர்த் (வலியின் சித்திரம்)என்று அழைக்கப்படும்
ஒரு கவிதை. இங்கே ஒரு சில வரிகளைக் கொடுக்க விழையும் என்னுடைய ஆர்வத்தை என்னால் அடக்க
இயலவில்லை.
(மொ.பெ)ஓ, இந்துஸ்தான், அந்தக் காட்சி என்னை அழ
வைக்கிறது. எல்லா கதைகளைக் காட்டிலும் போதனையைத் தரக்கூடியது உங்களது கதை.
அடுத்த வரிகள், இந்தியாவைப் பற்றிய துன்பியல் இலக்கியங்களை
(நௌஹா கவான்)வாசிப்பதன் கடமை விதிவசத்தால் ஒரு எழுத்தாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற
உண்மையை உரைக்கிறது.
(மொ.பெ)ஓ! மலர்களைப் பறிப்பவர்களே (வெளிநாட்டு
ஆட்சியாளர்களைக் குறிக்கிறது). நீங்கள் இலைகளின் சுவடுகளைக் கூட விட்டுவைக்கவில்லை.
உங்கள் நல்ல அதிர்ஷ்டத்தால், தோட்டக்காரர்கள் ஒருவருக்கொருவர் போரிடுவதில் ஈடுபட்டுள்ளனர்.
(இது இந்து முஸ்லிம் சண்டைகளைக் குறிக்கிறது).
பின்வரும் வரிகள் அடுத்து:
(மொ.பெ)ஓ, முட்டாள்களே, உங்கள் நாட்டை நினைத்துப்
பாருங்கள்; அதை அழிக்க வானத்தில் ஆலோசனைகள் நடக்கின்றன, துரதிர்ஷ்டம் உங்களை நெருங்குகின்றது.
என்ன நடக்கிறது, என்ன நடக்கப்போகிறது என்று பாருங்கள். பழைய கதைகளை மீண்டும் மீண்டும்
பேசுவதன் பயன் என்ன?
ஓ! இந்தியர்களே, நீங்கள் சரியான நேரத்தில் விழித்துக்
கொள்ளாவிட்டால், நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள். கதைகளில் கூட உங்களைப் பற்றிய குறிப்பேதும்
இருக்காது.
லாகூரில் வெளியிடப்பட்ட டாக்டர் இக்பாலின் உருது
கவிதைத் தொகுப்பில், அவரது கவிதைகள் மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதலாவது
1905 உடன் முடிவடைகிறது. நாட்டின் அன்பையும் இந்து முஸ்லிம் ஒற்றுமையையும் சுவாசிக்கும்
அனைத்து கவிதைகளும் இந்தக் காலத்தைச் சேர்ந்தவை. இரண்டாவது 1908 உடன் முடிவடைகிறது.
மூன்றாவது 1908 இல் தொடங்குகிறது. நான் மேற்கோள் காட்டிய அனைத்து கவிதைகளும் முதல்
காலகட்டத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் மற்றும் இரண்டாவது காலகட்டங்கள்
குறுங்குழுவாதத்திலிருந்து ஒப்பீட்டளவில் விடுபடுகின்றன. மூன்றாவது குறுங்குழுவாதமும்
மதவாதமும் நிறைந்தது.
உருது இலக்கியம் மற்றும் இந்திய தேசியவாதத்தின்
இந்த ரத்தினங்களை உலகளாவிய இஸ்லாமிய வாதத்தின் காலகட்டத்தில் இயற்றப்பட்ட பிற்காலப்
பாடல்களுடன் ஒப்பிடுங்கள். அவை இவ்வாறு தொடங்குகின்றன:
(மொ.பெ)சீனாவும் அரேபியாவும் நம்முடையது (போலவே)இந்தியா
நம்முடையது. நாம் முஸ்லிம்கள், உலகம் முழுவதும் எங்கள் பூர்வீக நிலம்.
இன்னும் பிற்கால கவிதைகளில் பின்வருபவை குறிப்பிடப்படுகின்றன:
(மொ.பெ)உங்கள் ஆடை விளிம்புகள் பூர்வீக நிலத்தின்
தூசியிலிருந்து விடுபட்டவை: ஜோசப் என்ற உனக்கு ஒவ்வொரு எகிப்தும் கானனாகிய மொழி.
தேசபக்தி அல்லது நாட்டுப்பற்று பற்றிய ஒரு கவிதையில்
கவிஞர் அதன் தீமைகளைப் பாடுகிறார், தேசபக்தி என்ற மரத்தின் வேர்களை நபி வெட்டியதைக்
குறிக்கிறார். நவீன சக்திகளின் புதிய, சிக்கலான ஆயுதம் இது என்று அவர் கூறுகிறார்.
பார்த்தீர்களா… என்ன ஒரு மாற்றம்! ஆனால் இன்னும்
ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கிலாபத் இயக்கத்தின் சிறந்த நாட்களில் இதுபோன்ற
நாட்டுப்புறப் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன, இன்றும் பஞ்சாபில் உள்ள முஸ்லிம்களால் பாடப்படுகின்றன.
இது போன்ற எழுத்துக்கள், பாடல்களால் இஸ்லாமியர்களின்
இளைய தலைமுறையினர் மனதில் எந்தவிதமான ஒரு மனப்பான்மை உருவாகியிருக்க வேண்டும் என்பதை
வாசகர் கற்பனைக்கே விட்டுவிடுகின்றேன்.
டாக்டர் முஹம்மது இக்பால் ஒரு சாதாரணக் கவிஞர்
இல்லை. அவர் ஒரு சிறந்த அறிஞர், அருமையான பாடலாசிரியர். பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.
அவரது எழுத்துக்களும் கவிதைகளும் ஒவ்வொரு படித்த முஸ்லிமின் வீட்டிலும் காணப்படுகின்றன.
சொல்லப்போனால், பெரும்பாலான ஹிந்துக்களின் வீடுகளிலும் கூட உள்ளன. அவர் எந்த வகையிலும்
இந்த கருத்துக்களுக்கான தனிப்பட்ட சொந்தக்காரர் இல்லை. நான் அவரின் அபிமானியாக இருப்பதால்
அவரைத் தேர்ந்தெடுத்துள்ளேன். நான் அவரது பாடல்களைத் தொடர்ந்து வாசிப்பவனாக இருந்தேன்.

Posted on Leave a comment

குழந்தையின் மரணமும் நியூட்ரினோவின் சாத்தியமும் | அரவிந்தன் நீலகண்டன்நம் அனைவரையும் உலுக்கியிருக்கும் ஒரு துன்பச்
சம்பவம் இரண்டு வயதுக் குழந்தை சுஜித் வில்ஸனின் துர்மரணம். எண்பது மணி நேரப் போராட்டத்தின்
பின்னர் அக்குழந்தையை மீட்க இயலவில்லை. ஆனால் அரசு அதன் மொத்த ஆற்றலையும் பயன்படுத்தியது.
நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பத்தையும் மானுடத் திறமையையும் அதன் உச்ச துரித கதியில்
பயன்படுத்தியது. மாநில அரசின் அமைச்சரின் செயல்பாடு இத்தருணங்களில் எப்படி அரசியல்வாதிகள்
நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான புதிய அடிப்படை நடத்தையாக மாறியுள்ளது.
இவை ஒருபுறமிருக்க இந்தத் துன்பச் சம்பவத்தை ஊடகங்கள்
பயன்படுத்திய விதம் அனைத்து மக்களிடமும் பொதுவாக முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘அறம்’ திரைப்பட இயக்குநர் போன்ற அறிவியல் எதிர்ப்பாளர்கள் ஊடகப் பிரபலங்களாகவும் துறை
வல்லுநர்களாகவும் வலம் வந்தனர். நல்ல காலம் அத்திரைப்படத்தில் நடித்த நடிகர்களும் துறை
வல்லுநர்களாக பேட்டி தரவில்லை என்பது ஏதோ தமிழ்நாட்டின் பூர்வ ஜென்ம புண்ணியம்.
அக்குழந்தையின் மறைவுக்குப் பிறகு சமூக ஊடகங்களில்
அருணன் போன்ற ‘அறிவுசீவிகள்’ வெளியிட்ட வெறுப்பு உமிழும் ட்வீட்கள் தமிழ்நாட்டில் முற்றிப்
போய்விட்ட மனோவியாதியின் வெளிப்பாடுகளாக இருந்தன. ஏதோ அந்தக் குழந்தை கிறிஸ்தவர் என்பதால்
ஆர்.எஸ்.எஸ் மகிழ்ந்ததாக ட்வீட் செய்து தனது வக்கிரத்தை வெளிக்காட்டி புளகாங்கிதமடைந்திருந்தார்
அருணன்.
இப்படி ஒரு ஊடகப் பொது மன மண்டலம் அனைத்துத் தமிழரும்
வெட்கித் தலைகுனிய வேண்டிய சமூக வியாதியே அன்றி வேறல்ல. தமிழ்நாட்டில் இன்று ஊடகவியலாளனாக
வேண்டுமென்றால் அதன் முதல் தகுதியே இந்த மனவக்கிரம்தான் எனத் தோன்றுகிறது.
சுஜித் வில்ஸன் அவன் மரணத்தின் மூலம் நமக்குப்
பல பாடங்களைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறான். ஆழ் துளைக் கிணறுகளை அலட்சியப்படுத்தாதீர்கள்.
அவற்றை ஒழுங்காக மூடுங்கள். குறிப்பாக சிறார்கள் அவற்றின் அருகில் செல்வதைத் தடுக்கும்
விதமாக மூடி அபாயக் குறிப்புகளை வையுங்கள். உங்கள் வீட்டின் அருகிலேயே குழந்தைகள் விளையாட
ஆபத்தற்ற இடங்களையும் அவை செல்லக் கூடாத ஆபத்து சாத்தியங்கள் உள்ள இடங்களையும் குழந்தைகளுக்குத்
தெளிவாகச் சொல்லி, தவிர்க்க வேண்டிய இடங்களைக் கண்டிப்பாகத் தவிர்க்க வையுங்கள்.
சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் விண்கலன்களை அனுப்பும்
இந்தியா பூமியில் எண்பதடிகளுக்குள் மாட்டிக் கொண்ட சிறார்களைக் காப்பாற்ற முடியவில்லை
என மீம்கள் வலம் வரலாயின. மீத்தேனைத் தோண்டி எடுக்க முடிந்த ONGC தொழில்நுட்பத்தால்
குழந்தையை மீட்க முடியாதா என அடுத்த மீம்கள். இவை எல்லாவற்றிலும் அடிப்படையாக இருப்பது
இந்தியாவின் மீதும் அதன் அறிவியல் தொழில்நுட்ப அமைப்புகள், சாதனைகள் மீதுமான வெறுப்பு.
வேற்று நாட்டின் மீது பயபக்தி. இது இந்தியாவில் ஒவ்வொரு துயர நிகழ்வின் போதும் செயல்படுத்தப்படும்
சமூக ஊடக நிகழ்வு. இப்போது தமிழ்நாட்டில் இது பொது ஊடகங்களிலும் அழுத்தமாகக் குடி கொண்டிருக்கும்
வியாதி.
பெட்ரோலையும் மீத்தேனையும் தோண்டி எடுப்பது போலவா
குழந்தையைத் தோண்டி எடுக்க முடியும்? அருவாமனையில் அபெண்டிக்ஸ் ஆப்பரேஷன் செய்ய சொல்லும்
புத்திசாலித்தனம் இது.
வெறுப்பு பேச்சுக்கு உள்ளான இஸ்ரோவை எடுத்துக்
கொள்வோம். பல முறை நம் மீனவர்களைக் கடலில் தத்தளிக்கும்போது காப்பாற்ற இஸ்ரோ தொழில்நுட்பமே
உதவியது. நம் நீராதாரங்களை மேம்படுத்த இஸ்ரோ உதவியுள்ளது. இஸ்ரோவால் உண்மையாகக் காப்பாற்றப்பட்ட
நம் நாட்டு மக்களின் எண்ணிக்கை எந்த சூப்பர் கதாநாயகனும் அவனது ஒட்டுமொத்தத் திரைவாழ்க்கையில்
திரையில் காப்பாற்றியதாக நடித்த மக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடப் பெரிதாக இருக்கும்.
ஆனால் தமிழ்நாட்டில் தொழில்நுட்ப எதிர்ப்பு, இந்திய
வெறுப்பு ஆகியவற்றைத் திட்டமிட்டு பரப்பும் தீயசக்திகளான லயோலா முதல் திமுக வரை இவற்றைக்
குறித்து கவலைப்படுவதே இல்லை.
சுஜித் மீட்பு நடக்கும்போது ஆளூர் ஷா நவாஸ் என்கிற
விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி சீனாவில் இத்தகைய மீட்பு பணி வெற்றிகரமாக நடக்கும்
வீடியோ காட்சியை வைரலாக்கினார். சீனாவில் தொழில்நுட்பம் மக்களுக்கு உதவுகிறது, இந்தியாவில்
உதவவில்லை என்பது பிரசாரத்தின் அடிநாதம்.
சீனா கடந்த சில பத்தாண்டுகளில் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும்
அசுர வளர்ச்சியைக் காட்டுகிறது. ஆனால் அதற்கு சீன மக்கள் கொடுத்த விலை அதிகம். பெரிய
விண்வெளி சாதனைகளைச் செய்திருக்கிறது சீனா. ஆனால் அதற்காக ராக்கெட் லாஞ்ச்களின் போது
ஒட்டுமொத்தக் கிராமங்கள் எரிந்து சாம்பலாகியிருக்கின்றன. தவறுதலாக ஏவப்பட்ட ராக்கெட்களால்
நள்ளிரவில் மக்களோடு எரிந்து தரைமட்டமான கிராமங்களின் காணொளிகள் காணக்கிடைக்கின்றன.
கைதிகள் எல்லாவிதமான அறிவியல் மானுடப் பரிசோதனைகளுக்கு ஆட்படுத்தப்படுவதுடன் அவர்களின்
உள்ளுறுப்புகள் பெரிய அளவில் ‘அறுவடை’ செய்யப்படுகின்றன. அண்மையில் க்வாண்டம் டெலிபோர்ட்டேஷன்
என்கிற முன்னணித் தொழில்நுட்பத்தில் சீனா பெரும் சாதனையை நிகழ்த்தியது. மானுட அறிதலிலேயே
மிக முக்கியமான முன்னணித் தாவல். ஆனால் அதற்கான மையத்தை சீனா ஆக்கிரமிக்கப்பட்ட திபெத்தின்
மேற்சிகரமொன்றில் அமைத்திருந்தது. திபெத்தில் சீனா நடத்தும் பண்பாட்டு மக்கள் இனத்துடைத்தழிப்பு
உலகம் அறிந்த ஒன்று. 2016ல் சீனா உலகின் மிகப் பெரிய ரேடியோ தொலைநோக்கி டிஷ்ஷை அமைத்தது.
பிரபஞ்சத்தில் எங்காவது ரேடியோ அலைகளைப் பயன்படுத்தும் அறிவுத்திறனுள்ள உயிரினங்கள்
ஏதாவது சமிக்ஞைகளை அனுப்புகின்றனவா எனப் பகுத்தறிய இந்த ரேடியோ டெலஸ்கோப் டிஷ் ஆண்டெனா.
இதற்காக 9,000 கிராம மக்களின் வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு வேறிடங்களுக்குக் கொண்டு
போக வைக்கப்பட்டனர்.
இந்தியாவின் அறிவியல் வளர்ச்சி இப்படிப்பட்ட அசுரத்தனம்
கொண்டதல்ல. இன்னும் சொன்னால் அதற்கு முட்டுக்கட்டை போடும் சக்திகள்தான் அசுரத்தனமாக
இயங்கி வருகின்றன.
தமிழ்நாட்டில் தேனியில் நியூட்ரினோ ஆராய்ச்சி மையம்
அமைக்கப்படவிருந்தது நினைவிருக்கலாம். இதன் அமைப்பைச் சிறிது சிந்தித்துப் பாருங்கள்.
ஆயிரம் அடி கீழே அமைக்கப்பட்ட ஆராய்ச்சி மையம். இதனை வந்தடைய பக்க வாட்டில் மலையடியே
ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு சுரங்க அணுகு சாலை. இதை வரவிடாமல் செய்தவர்கள்
நாம். லூடைட் தனமாகப் போராடி நியுட்ரினோ குறித்துப் பொய் பிரசாரம் செய்து, அறிவியல்
எதிர்ப்புப் பிரசாரம் செய்து இதை வரவிடாமல் செய்தோம்.
இது நிறைவேறியிருக்கும் பட்சத்தில் ஆயிரம் அடிக்கு
கீழே மனிதர்கள் – ஆராய்ச்சியாளர்கள் வேலை செய்யும் ஒரு அமைப்பு அமைக்கப்பட்டிருக்கும்.
அது செயல்படும் பட்சத்தில் அதில் நெருக்கடி மீட்புக்கான தொழில்நுட்பமும் அமைந்திருக்கும்.
அதற்குத் தேவையான உபகரணங்கள், நிலச்சரிவில் ஆழத்தில் மாட்டிக் கொண்டால் என்ன செய்ய
வேண்டும் என்ன செய்ய கூடாது என்பது போன்ற விதிகள் தெரிந்த ஒரு வல்லுநர் குழு நமக்கு
இருந்திருக்கும். இங்கு இருக்கும் ஆபத்து உதவி உபகரணங்கள் மிக நிச்சயமாக சுஜித்தைக்
காப்பாற்றுவதிலும் நல்பங்கு வகித்திருக்கும் என நம்ப மிகுந்த இடம் இருக்கிறது.
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நியூட்ரினோ ஆய்வகத்தில்
1,000 அடி ஆழத்தில் மனிதர்கள் வேலை செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் அல்ல என்றாலும்
கூட, மானுடர்கள் உள்ளே செல்ல வேண்டியது அவசியம். அப்போது ஏதாவது ஆபத்துக்கள் நிகழ்ந்தால்
அவர்களைக் காப்பாற்றும் அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அங்கே இருந்தாக வேண்டும்.
இவை எல்லாம் அங்கே உருவாகியிருக்கும். சுஜித் விஷயத்தில் அவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
அக்குழந்தையைக் காப்பாற்றும் விஷயத்தில் மிக முக்கியக் காரணியான காலம் என்பதை அது சிக்கனப்படுத்தியிருக்கலாம்.
ஆனால் அப்படிப்பட்ட ஒரு சாத்தியத்தைக் கூட இல்லாமல்
ஆக்கியது வேறு யாருமல்ல, நம் இடதுசாரி தமிழ்ப் பிரிவினைவாத லூடைட் கும்பல்தான்.

நமது ஏவுகணை தொழில்நுட்பம் நமக்கு ஏவுகணைகளை மட்டும்
தரவில்லை. போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எடை குறைவான அதே சமயம் வலுவான நடையுதவி
சாதனங்களை உருவாக்கி தந்தது. இப்படிப்பட்ட உப நன்மைகளை ‘ஸ்பின் ஆஃப்’ நன்மைகள் என்பார்கள்.
எந்த ஒரு பெரும் தொழில்நுட்பத்துடனும் இப்படிப்பட்ட ஸ்பின் ஆஃப்கள் கூட கிடைக்கும்.
நியூட்ரினோ ஆய்வக அமைப்பு பொறிநுட்ப சாதனை. நம் நிலவியல் சூழலில் மிக ஆழங்களில் மானுடர்கள்
செயல்பட அமைக்கப்படும் ஒரு அமைப்பு. இதன் ஸ்பின் ஆஃப்களில் பேரிடர் சூழலில் ஆழப்புதைபடும்
மக்களைக் காப்பாற்றும் தொழில்நுட்பம் நமக்குக் கிடைத்திருக்க பெரும் வாய்ப்பு உண்டு.
அதனை இல்லாமல் ஆக்கியதில் நம் இடதுசாரி லூடைட்களுக்குப் பெரும் பங்கு உண்டு. இதற்கு
நாம் என்ன விலை கொடுக்கிறோம் என்பதைத் தெரியாமலே விலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
அறிவியல் தொழில்நுட்ப எதிர்ப்பு சக்திகளை எந்த அளவு விலக்கி வைக்கிறோமோ அந்த அளவு நம்
சமூகத்துக்கு நல்லது.