Posted on Leave a comment

வலம் பிப்ரவரி 2020 இதழ்

வலம் பிப்ரவரி 2020 இதழை முழுமையாக இங்கே வாசிக்கலாம்.

அந்தமானில் இருந்து கடிதங்கள் (எட்டாவது கடிதம்) | சாவர்க்கர், தமிழில்: VV பாலா

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) – லாலா லஜ்பத் ராய் | தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்

சில பயணங்கள் சில பதிவுகள் – 27 | சுப்பு

1984ம் ஆண்டில் அழிவின் அடையாளங்கள் – எழுத்தாளர் அமிதவ் கோஷ் அனுபவங்கள் – | தமிழில்: ராம் ஸ்ரீதர்

ஹிந்துத்துவ அறிவியக்கச் செயல்பாடும் சென்னைப் புத்தகக் கண்காட்சியும் | ஹரன் பிரசன்னா

ஆழி பெரிது முன்னுரை | ஜடாயு

அழகிய மரம் நூலின் முன்னுரை | தரம்பால், தமிழில்: BR மகாதேவன்

மறைக்கப்பட்ட உண்மைகள் – அழகியமரம் நூலின் மொழிபெயர்ப்பாளர் உரை | BR மகாதேவன்

எம்ஜியார் என்கிற இந்து புத்தக ஆசிரியரின் முன்னுரை | ம.வெங்கடேசன்

திராவிட மாயை (பாகம் 3) என்ற புத்தகத்தின் முன்னுரை | சுப்பு

Posted on Leave a comment

திராவிட மாயை (பாகம் 3) என்ற புத்தகத்தின் முன்னுரை | சுப்பு



(திராவிட மாயை மூன்று
பாகங்கள், சுப்பு, 
ரேர் பப்ளிகேஷன்ஸ், 400 ரூ (மூன்று பாகங்களும் சேர்த்து)
எம்.ஜி.ஆருடைய அரசியல்தான் இதில் (திராவிட மாயை 3ம் பாகத்தில்)
அதிகம் பேசப்படுகிறது இந்திய விடுதலைக்கான போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மிக முக்கியமானது.
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரஹத்தின் போது போலீஸ்காரர்களுக்கு சவரம் செய்ய மாட்டேன்
என்று சபதம் எடுத்து, அதன் விளைவாக ஆறுமாத சிறைத் தண்டனை பெற்ற நாவிதரின் பெயர் வைரப்பன்.
கதர் ஆடையையும் கழுத்தில் உள்ள தாலியையும், கை வளையல்களையும் தவிர மற்ற எல்லா ஆபரணங்களையும்
நாட்டுப் பணிக்காக அகற்றிவிட்டவர் வை.மு.கோதைநாயகி, ‘சாதி ஒழிய வேண்டும்’ என்று குரல்
கொடுத்தவர் ஜி.சுப்ரமணிய ஐயர்- காங்கிரஸ் பேரியக்கத்தின் முதல் கூட்டத்தில் முதல் தீர்மானத்தை
முன் மொழிந்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு (28-02-1885). வெள்ளையனுடைய வியாபார நோக்கம்
கெடும்படியாக கப்பலோட்டியவர் வ.உ.சிதம்பரனார். ஆங்கிலேயரின் தலைமைப்பீடமான லண்டன் நகரிலேயே
கலகக்கொடி உயர்த்தியவர் வ.வே.சு.ஐயர். ஆப்கானிஸ்தானுடைய காபூல் நகரில் ‘இந்திய சுதந்திர
சர்க்கார்’’ என்ற அமைப்பை உருவாக்கிய செண்பகராமன், காந்தியப் போராட்டங்களின் முதல்
களப்பலியான தில்லையாடி வள்ளியம்மை, பின்னி மில் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய திரு.வி.
கல்யாணசுந்தரனார், அப்பழுக்கற்ற அரசியல்வாதி ராஜாஜி, மக்கள் தலைவர் கு.காமராஜ், திண்டுக்கல்
சர்தார் சாகிப், குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்த பசும்பொன் முத்துராமலிங்க
தேவர், கல்வியாளர் டி.எஸ். அவினாசிலிங்கம் செட்டியார், ஜோசப் செல்லதுரை கொர்நீலியஸ்
என்ற இயற்பெயர் கொண்ட பொருளாதார மேதை குமரப்பா. கொடிகாத்த திருப்பூர் குமரன், கே.பி.
சுந்தரம்பாள், கக்கன் என்று முடிவில்லாத பட்டியல் இது.
தமிழகமே தேசியத்தில் மூழ்கி இருந்த போது, அதிலிருந்து விலகி
வேறுபட்டு நின்றவர்கள் மிகச் சிலரே. அந்தக் கூட்டத்தின் முன்னணித் தலைவர் ஈ.வெ.ராமசாமி.
இவருடைய அடிப்படைக் கொள்கை வெள்ளைக்காரனுக்கு வெண்சாமரம் வீசுவது. கௌரவக் குறைவான இந்த
வேலைக்கு நியாயம் கற்பிப்பதற்காக அவர் கையில் எடுத்த காரணம் பிராமண துவேஷம். மற்றபடி
அன்றாட வசனங்களும் அடிக்கடி ஒப்பனைகளும் மாறி வரும். ஹிந்தி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு,
சாதி ஒழிப்பு என்பதெல்லாம் இவர் சால்ஜாப்புக்காக ஏற்படுத்திக் கொண்ட மேற்பூச்சுக்களே.
இப்படிப்பட்ட தலைவரின் வாரிசுகளுக்கு எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட யோக்கியதை
இல்லை என்பதுதான் நம்முடைய கட்சி. ஈ.வெ.ரா. என்பவர் தமிழ் மொழியின் எதிரி, இந்திய தேசத்தின்
எதிரி என்பது புத்தகத்தின் உள்ளே விவரிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். என்ற தமிழ்ப்பற்றாளரை
இந்திய ஒற்றுமையில் அக்கறை கொண்டவரை, ஹிந்து மதச்சார்புடையவரை திராவிடர் கழகத்தவர்கள்
கொண்டாடுவதற்கு எந்த பாத்தியதையும் இல்லை. ஈ.வெ.ரா.வின் திசையிலிருந்து விலகிப் பயணித்தவர்
எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். மட்டுமல்ல, அவரை வழிநடத்திச் சென்ற சி.என்.அண்ணாதுரையும் பிற்காலங்களில்
எவ்வாறு பண்பட்டிருந்தார் என்பதையும், இந்திய அரசமைப்புக்குள் தன்னுடைய கட்சியை அழகாகப்
பொருத்திக் கொண்டார் என்பதையும் இதில் எழுதியுள்ளேன். ஈ.வெ.ரா.வின் வெகுஜன விரோதப்
பாதையிலிருந்து விலகித் தன் கட்சியை நடத்தியவர் அண்ணாதுரை. ஆனால் அண்ணாதுரையின் கொள்கைகளை
அண்ணாதுரையின் மறைவிற்குப் பிறகு கருணாநிதி மறந்துவிட்டார். கட்சியை ஈ.வெ.ரா.விடம்
அடமானம் வைத்துவிட்டார். அடுத்த கட்டத்தில் இந்தச் சீர்கேட்டில் இருந்து விலகி, எம்.ஜி.ஆர்.
அண்ணாதுரையின் பாதையில் அ.தி.மு.க.வை நடத்திச் சென்றார்.
திராவிடர் கழகத்தின் அமைப்பு விதிகளின்படி அதில் பிராமணர்கள்
உறுப்பினர் ஆக முடியாது. ஆனால் தி.மு.க.வில் இந்தத் தடையில்லை. அண்ணாதுரை தி.மு.க.வில்
பிராமணர்களைச் சேர்த்துக் கொண்டார். தி.மு.க.வைச் சேர்ந்த நாத்திகம் ராமசாமி இதைக்
கண்டித்து எழுதினார். ‘மன்றம்’ என்ற தி.மு.க. அதிகாரப்பூர்வ இதழில் நெடுஞ்செழியன் பிராமணர்களை
சேர்த்துக் கொள்வது சரிதான் என்று விளக்கக் கட்டுரை எழுதினார்.  
‘நாத்திகம்’ என்று பெயர் வைக்கப்பட்ட இதழுக்கு தி.மு.க.வின்
‘நம் நாடு’ இதழில் (1958) விளம்பரம் தர முயற்சிக்கப்பட்டது. அதை தி.மு.க. தலைமை ஏற்க
மறுக்கிறது. ‘நாத்திகம்’ இதழை தி.மு.க.வின் ஏடாகக் கருதக் கூடாது என்று தி.மு.க. தரப்பில்
விளக்கம் வருகிறது. இதன் விளைவாக நாத்திகம் ராமசாமி தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்படுகிறார். 
(- திராவிட மாயை-ஒரு பார்வை- இரண்டாம் பகுதி /பக் 18.)
காலம் சென்ற மு.கருணாநிதியின் தலைமையில் இயங்கிய தி.மு.க.,
அண்ணா போட்ட வழியில் போவதில்லை; எம்.ஜி.ஆரை மதிப்பதில்லை. இது பொதுவெளியில் அனைவராலும்
அறியப்பட்ட விஷயம். ஆகவே அதுகுறித்து இங்கே விவரித்து எழுதவில்லை. ஆதாரங்களைத் திரட்டி,
தமிழக அரசியலின் குறிப்பிட்ட காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் படியாக (1967-1981) ‘எம்.ஜி.ஆர்.
– தி.க. உறவு பற்றிய அலசல்’ என்ற தலைப்பில் ‘விஜயபாரதம்’ வார இதழில் 25-11-2016 முதல்
26-05-2017 வரை எழுதினேன். அது தொகுக்கப்பட்டு ‘திராவிட மாயை ஒரு பார்வை மூன்றாம் பகுதி’
என்ற தலைப்பில் இந்தப் புத்தகமாக உருவெடுத்திருக்கிறது. படித்துப் பயன்பெறுக. இதை,
ஈடுபாட்டு உணர்வோடு தட்டச்சு செய்து கொடுத்த திருமதி எஸ். பிரேமாவுக்கு நன்றி. தொடரை
வெளியிட்ட ‘விஜயபாரதம்’ இதழுக்கும் என்னுடைய உதவியாளராகச் செயல்பட்ட வி.எஸ். ரவிச்சந்திரனுக்கும்,
நண்பர் வி.வெங்கட் குமாருக்கும், தேவைப்பட்ட பொழுது விவரங்களைத் தேடிக்கொடுத்த பெரியவர்
வி.ராஜகோபாலனுக்கும், நண்பர் பா.கிருஷ்ணனுக்கும் என்னுடைய நன்றி.
*
எம்.ஜி.ராமச்சந்திரன் என்று அதிகாரப்பூர்வமாகவும் புரட்சித்
தலைவர் என்று அவருடைய கட்சிக்காரர்களாலும், எம்.ஜி.ஆர் என்று தமிழ் மக்களாலும் அழைக்கப்பட்டவரின்
ஆளுமை இருபது ஆண்டு காலம் தமிழகத்தின் அரசியல் போக்கை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்தது
என்பதை யாரும் மறுக்க முடியாது. அவருடைய திரைப்படங்களைப் போலவே அரசியல் வாழ்க்கையும்
திருப்பங்களும் மோதல்களும் நிறைந்த சுவாரஸ்யமான நகர்வு.
தமிழக அரசியல் வரலாற்றை அதிலும் திராவிட இயக்கங்களை மையமாகக்
கொண்டு ஆவணப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய முயற்சி. இதில் 1917 முதல் 1944 வரையிலான
காலகட்டம் ‘திராவிட மாயை – ஒரு பார்வை – முதல் பகுதி’ என்று முதலில் இணையத்திலும்
(தமிழ் ஹிந்து) பிறகு புத்தகமாகவும் வெளிவந்தது. அடுத்த பகுதி ‘துக்ளக்’ வார இதழில்
தொடராக 103 வாரங்கள் வெளிவந்து வாசகர்களின் ஆதரவைப் பெற்றது. இது ‘திராவிட மாயை – ஒரு
பார்வை – இரண்டாம் பகுதி’ என்ற பெயரில் புத்தகமாக வந்தது. இது குறிப்பிடும் காலகட்டம்
1944 முதல் 1967 வரை. உங்கள் கையிலிருக்கும் ‘திராவிட மாயை ஒரு பார்வை மூன்றாம் பகுதி’
1967 முதல் 1981 வரை உள்ள காலகட்டத்தைக் குறிப்பிடும் பகுதியாகும்.
இந்தக் காலம் எம்.ஜி.ஆருடைய காலம், அவருடைய ஆளுமை முழுமையாக
வெளிப்பட்ட காலம். திராவிட இயக்கத்தின் போக்கை மடைமாற்றியவர் எம்.ஜி.ஆர். என்பதை இனிவரும்
பக்கங்களில் நிறுவ முயற்சிக்கிறேன். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, எம்.ஜி.ஆர். என்ற அதிசய
மனிதரைப் புரிந்து கொள்ள ஒரு நிகழ்வைச் சொல்கிறேன்.
சி.எல். ராமகிருஷ்ணன் என்பவர் அதிகம் அறியப்படாத ஆனால் உத்தமரான
ஒரு காவல்துறை அதிகாரி (DGP). எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாதபடி இருப்பது இவருடைய
வாழ்க்கை . சி.எல்.ராமகிருஷ்ணன் மத்தியப் புலனாய்வுத் துறையின் (சிபிஐ) தமிழகப் பிரிவில்
பணியாற்றி வந்தார். ஒரு நாள் அவருக்கு அன்றைய முதல்வரான எம்.ஜி.ஆரிடமிருந்து அழைப்பு
வந்தது. சென்று சந்தித்தார்.
சி.எல்.ஆருடைய பொருளாதாரப் பின்புலங்களைக் கேட்டுத் தெரிந்து
கொண்ட எம்.ஜி.ஆர்., ஓர் காவல் துறை உயர் அதிகாரி வாடகை வீட்டில் வசிப்பதைத் தான் விரும்பவில்லை
என்று தெரிவித்தார். வீட்டுவசதி வாரியத்தில் ஒரு வீடு ஒதுக்கீடு செய்வதாகச் சொல்லி
அதை ஏற்றுக் கொள்ளும்படி வலியுறுத்தினார். வீட்டுவசதி வாரியத்தினுடைய ஒதுக்கீட்டைப்
பெற்றுக் கொண்டாலும் அதற்கான மாதத் தவணையை தன்னால் கட்ட இயலாது என்று சொல்லி சி.எல்.
ஆர். மறுத்துவிட்டார். விஷயம் இதோடு முடியவில்லை.
வீட்டுவசதி வாரியத்தின் ஜீப்பும், அதிகாரிகளும் மறுநாள் காலையில்
சி.எல்.ஆர். வீட்டிற்கே வந்துவிட்டார்கள். முதுலமைச்சரின் உத்தரவுப்படி அவர்களுடைய
வேண்டுகோளை மறுக்கமுடியாமல் குறைந்த அளவு வருமானம் உடையவர்களுக்கான வீட்டைப் பெற்றுக்
கொண்டார் சி.எல்.ஆர். இருந்தாலும் அவர் போலீஸ்காரர் அல்லவா. எம்.ஜி.ஆர். எப்படித் தன்னைத்
தேர்வு செய்தார் என்ற கேள்வி அவரிடம் இருந்தது. விசாரித்துப் பார்த்தார். அவருக்கு
கிடைத்தது இனிய அதிர்ச்சி.
அப்பழுக்கில்லாத அதிகாரிகளில் சிலருக்கு எம்.ஜி.ஆர். உதவியிருக்கிறார்
என்பதுதான் அந்தச் செய்தி. கட்சிக்காரராக இருந்தபோதிலும், திரையுலகப் பிரமுகராக இருந்த
நேரத்திலும் முதலமைச்சராகப் பதவி வகித்த போதிலும் எம்.ஜி.ஆர். கருணையோடு நீட்டிய கரங்களால்
பயனடைந்தவர் எத்தனை பேர் என்பதைப்பற்றித் தனியாக ஒரு புத்தகமே எழுதலாம்.
இத்தகைய சம்பவங்களுக்கு இந்தப் புத்தகத்தில் முக்கியத்துவம்
தரவில்லை. எம்.ஜி.ஆருடைய அரசியல்தான் இதில் அதிகம் பேசப்படுகிறது…
திராவிட மாயை முதல் பகுதி, இரண்டாம் பகுதி மற்றும் மூன்றாம்
பகுதியை மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு ஒரு முரண்பாடு தென்படலாம். முதல் இரண்டு பகுதிகளில்
சி.என்.அண்ணாதுரை மீது வீசப்படும் வெளிச்சம் விமர்சனத் தன்மையோடு இருப்பதாகவும் மூன்றாம்
பகுதி அவருடைய கீர்த்தியைக் கூட்டுவதாகவும் தோன்றலாம். இந்தச் சிக்கல் என்னுடைய வார்த்தைகளாலும்
வாக்கியங்களாலும் ஏற்பட்டதல்ல. அதற்குக் காரணம் அண்ணாதுரையின் பொதுவாழ்க்கையில் ஏற்பட்ட
அல்லது அவரே ஏற்படுத்திக்கொண்ட கொள்கை மாறுதல்கள்தான்.
தேசவிரோதியான ஈ.வெ.ரா.வின் சீடராக பொதுவாழ்க்கையைத் தொடங்கிய
அவர் ஒரு நீண்ட நெடிய பயணத்தில் வெகுஜனத் தலைவராக உருவெடுத்து, இந்திய அரசியல் நெறிகளுக்கு
உட்பட்டு ஆட்சி செய்கிற முதலமைச்சராகி, மறைந்தார். திராவிட மாயை புத்தகத்தின் மூன்று
பகுதிகளும் வெவ்வேறு காலப்பகுதிகளைப் பற்றி விவரிப்பதால் இதனூடே முரண்பாடு இருப்பதாகத்
தோன்றலாம், அவ்வளவுதான்.
என்னைப் பொருத்தவரை அண்ணாதுரை என்பவரை ‘சேற்றில் மலர்ந்த
செந்தாமரை’ என்று சொல்லலாம். எம்.ஜி.ஆர். அரசில் அமைச்சராக இருந்த வி.வி.சுவாமிநாதனுக்கும்
பெரியவர் கே.ராஜாராமின் குடும்பத்தினருக்கும் என்னுடைய நன்றி. சோதனையான இன்றையச் சூழலில்
என்னைக் காவல் அரணாகக் காத்திருக்கும் தமிழ் வாசகர்களுக்கு நன்றி.
அன்புடன், 

‘திராவிட மாயை’ சுப்பு

Posted on Leave a comment

எம்ஜியார் என்கிற இந்து புத்தக ஆசிரியரின் முன்னுரை | ம.வெங்கடேசன்



(எம்.ஜி.ஆர் என்கிற இந்து, ம.வெங்கடேசன்,
தடாகமலர், ரூ 150)
எம்.ஜி.ஆர். இந்த
மூன்றெழுத்துக்குத்தான் எத்தனை எத்தனை மந்திர சக்திகள்!
திரைத்துறையில்
அவர் இருந்தவரை அவர்தான் வசூல் நாயகன். அவரை நம்பி எவ்வளவு கோடி பணம் செலவு செய்து
படம் எடுத்தாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டம் வராது. அவரின் லட்சோபலட்சம் ரசிகர்கள் அவரை
ஒரு மனிதராக – ஒரு நடிகராகப் பார்க்கவில்லை. தங்களை மீட்க வந்த மீட்பராக – கடவுள் அவதாரமாகவே
அவரைக் கருதினர். தங்களுடைய ரத்தத்தைக் கொடுத்து அதிலிருந்து வந்த பணத்தின் மூலம் எம்ஜிஆரின்
படத்தைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு உண்டு.
தர்மத்தின் மறுவடிவமாக
– மாபெரும் வள்ளலாக அவரைப் பார்த்தனர் தமிழக மக்கள். தங்களுடைய வீட்டின் அடுப்பில்
தண்ணீரைக் கொதிக்கவிட்டுவிட்டு அரிசிக்காக எம்ஜிஆர் அவர்கள் வீட்டுக்கு நம்பிக்கையுடன்
போகலாம். லட்சக் கணக்கான மக்களுக்கு அவர்தான் தமிழகக் கர்ணன். அரசியல்துறையில் அவர்
இருந்தவரை அவர்தான் நிரந்தர முதல்வர். அவரைத் தவிர்த்து வேறு ஒருவரைக் கனவிலும் தமிழக
மக்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அவர் நேரடியாகத் தேர்தல் பிரசாரத்திற்குக்கூட
வரவேண்டாம். ஆனால் அவர் முகம் மட்டும் போஸ்டரில் காட்டினால்கூட ஓட்டு விழும்.
மூன்றெழுத்தில்
என் மூச்சிருக்கும் – அது முடிந்த பின்னால் என் பேச்சிருக்கும் என்கிற பாடல் வரிகள்
பொய்யல்ல. நூறு சதவீதம் உண்மை என்பதை இன்று பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் போட்டிப்
போட்டுக்கொண்டு நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருவதன்மூலம் நாம் அறியலாம்.
அவரை கடைசிவரை விமர்சித்த,
எதிர்த்த திராவிடர் கழகம்கூட இன்று அவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடியிருக்கிறது.
கொண்டாடியது தவறல்ல. ஆனால் அவர்கள் தற்போது அவரைச் சொந்தம் கொண்டாடுவதுதான் வேடிக்கையாக
உள்ளது. அவர்கள் கொண்டாடிய நூற்றாண்டுவிழாவில் பேசிய பேச்சுகள், வெளியிட்ட மலர் போன்றவற்றில்
இருக்கின்ற பொய்கள்தான் இந்தப் புத்தகத்தை எழுதத் தூண்டியது. எம்ஜிஆரை இந்து மத விரோதி,
இந்து இயக்க விரோதி, திராவிடக் கொள்கை நாத்திக கொள்கையில் நம்பிக்கையுடையவர் என்றெல்லாம்
பொய்யை அவர் மேல் ஏற்றியுள்ளனர்.

மறுபுறம் ஆர்எஸ்எஸ்
அமைப்பு அவரை இந்து மதத்தைக் கடைப்பிடித்தவர், கடவுள் நம்பிக்கை உடையவர், தேசியவாதி
என்று பரப்புரை செய்து வருகின்றது.
இதில் எது உண்மை?
திராவிடர்கழகம்
சொல்வது உண்மையா?
ஆர்எஸ்எஸ் சொல்வது
உண்மையா?
வாருங்கள் நாமும்
உண்மையை நோக்கி பயணிப்போம்.
-O-
எம்ஜியார் என்கிற
இந்து என்ற நூலின் முதல் அத்தியாயம் வலம் வாசகர்களுக்காக இங்கே தரப்படுகிறது.
1. யார் சொல்வது உண்மை?
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின்
அதிகாரப்பூர்வ இதழ் ‘விஜய பாரதம்’. அந்த இதழில் (14-10-2016) எம்.ஜி.ஆர். மற்றும் கிருபானந்தவாரியார்
அவர்களின் படத்தைப் போட்டு ‘எம்.ஜி.ஆர். போல ஹிந்துத்துவ ஆதரவு முதல்வர் நேற்றும் இல்லை,
நாளையும் இல்லை’ என்று முகப்பு அட்டையைப் போட்டு உள்ளே வெறும் நான்கு பக்கத்திற்கு
எம்.ஜி.ஆர். பற்றிய கட்டுரையை வெளியிட்டது.
இதற்கு மறுப்பாக
உடனே திராவிடர் கழகம் தங்களுடைய இதழான ‘உண்மை’ இதழில் (அக்டோபர் 16-31, 2016) ஆர்எஸ்எஸ்
அமைப்பை விமர்சனம் செய்து எம்.ஜி.ஆர். மற்றும் ஈவெரா படத்தைப் போட்டு பதினொரு பக்கத்திற்குக்
கட்டுரை வெளியிட்டு உள்ளது. மேலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையும் திடீரென நடத்தியிருக்கிறது.
‘திராவிடர் கழகம் என்ற வேரில் இருந்து கிளர்ந்தெழுந்து ஆலமரமாக வளர்ந்தவர் எம்.ஜி.ஆர்.1
திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அவரை அபகரிக்க ஆர்எஸ்எஸ் திட்டமிட்டதால் நாங்கள் முந்திக்கொண்டோம்’
என்று நூற்றாண்டு விழாவில் வீரமணி பேசியிருக்கிறார். ஆனால் அதில் கூட ‘புரட்சி நடிகர்’,
‘புரட்சித் தலைவர்’ என்று இல்லாமல் ‘வள்ளல் எம்.ஜி.ஆர்’ என்றே நூற்றாண்டு விழாவைக்
கொண்டாடி யிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் அவர்களுக்கு புரட்சி நடிகர், புரட்சித் தலைவர்
என்ற அடைமொழியை ஏன் அவர்கள் கொடுக்கத் தயங்குகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியும்.
ஏனென்றால் அவர் பல சமயங்களில் ஈவெராவின் கொள்கைகளுக்கு, திராவிடர் கழகக் கொள்கைகளுக்கு
எதிராகவே செயல்பட்டுள்ளார் என்பது அவர்களுக்கும் தெரியும்; நமக்கும் தெரியும்.
எம்.ஜி.ஆர். அவர்களை
திராவிடர் கழகத்துக்காரராக, ஈவெராவின் சீடராகவே குறிப்பிட்டு அக்கட்டுரையிலும், அவர்கள்
வெளியிட்டுள்ள ‘தந்தை பெரியாரும் டாக்டர் எம்ஜிஆரும்’ என்ற நூலிலும் எழுதியிருக்கிறார்கள்.
அப்புத்தகத்தில் ஈவெரா பற்றி எம்.ஜி.ஆர் அவர்கள் என்ன பேசியிருக்கிறார் என்பது பற்றிய
நான்கு கட்டுரைகளும் ஈவெராவின் ஒரு கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. ஈவெராவின் கட்டுரையில்
எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி வார்த்தைக்குக்கூட ஈவெரா ஏதும் புகழ்ந்து விடவில்லை என்பதைப்
படிப்பவர்கள் அனைவரும் புரிந்து கொள்ளலாம். பக்கத்தைக் கூடுதலாக்கவே அதைச் சேர்த்திருக்கிறார்கள்
என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
எம்.ஜி.ஆர் அவர்கள்
ஈவெராவைப் பற்றிப் பெருமதிப்புக் கொண்டிருந்தார் என்று திராவிடர் கழகம் சொல்கிறது.
உண்மையிலேயே அப்படிக்கூட இருக்கலாம். ஆனால் ஈவெராவும் திராவிடர் கழகமும் எம்.ஜி.ஆர்
அவர்களை எப்படி மதிப்பிட்டது என்பது நமக்கு முக்கியம். அதே போல எம்.ஜி.ஆர் அவர்களும்
திராவிடர் கழகக் கொள்கைகளை எந்த அளவுக்கு பின்பற்றியிருக்கிறார் என்பதும் அக்கொள்கைகளுக்கு
அவர் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதும் நமக்கு முக்கியம். இரண்டையுமே
நாம் பார்த்துவிடலாம்.
ஆதாரம்
1. தி இந்து (தமிழ்)
25-10-2016

Posted on Leave a comment

மறைக்கப்பட்ட உண்மைகள் – அழகியமரம் நூலின் மொழிபெயர்ப்பாளர் உரை | BR மகாதேவன்

(அழகிய மரம், தரம்பால், தமிழில்: BR மகாதேவன், கிழக்கு பதிப்பகம், ரூ
500)

(The
Beautiful Tree என்ற தரம்பாலின் ஆங்கில நூலின் தமிழ் மொழியாக்கம் ‘அழகிய மரம்’ என்ற
பெயரில் வெளியாகிறது. இந்த நூலும் மொழிபெயர்ப்பாளர் BR மகாதேவன் இந்த நூலுக்கு முன்னுரை.)
2000 ஆண்டுகளாக
எங்களைப் படிக்கவிடவில்லை என்பதுதான் பிராமணரல்லாதார் இயக்கமாக முன்னெடுக்கப்பட்ட திராவிட
அரசியலின் முத்திரை முழக்கம். ஆனால், பிரிட்டிஷ் ஆவணங்களை அடிப்படையாகக்கொண்டு, ‘அழகிய
மரம் – 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி’ என்ற தலைப்பில் தரம்பால் தொகுத்திருக்கும்
நூல் வேறொரு உண்மையை அழுத்தமாக முன்வைக்கிறது.
தரம்பாலின் வார்த்தைகளிலேயே
அதை இங்கு தருகிறேன்:
பழங்கால
இந்தியாவிலும் பிரிட்டிஷ் ஆட்சியின் ஆரம்பகட்டத்திலும் கூடக் கல்வி என்பது பெரிதும்
மேல் மற்றும் இடைநிலை சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் கிடைத்ததாகவே நம்பப்படுகிறது.
இந்துக்களைப் பொருத்தவரையில் (மதராஸ் பிரஸிடென்ஸியில் 95% பேர் இந்துக்களே) அது பிராமணர்,
சத்ரியர், வைசியர் என்ற இரு பிறப்பாளர்களுக்கு மட்டுமே கிடைத்ததாகவே நம்பப்படுகிறது.
ஆனால்,
18-ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் ஆவணங்களை எடுத்துப் பார்த்தால் நிலைமை முற்றிலும் நேர்மாறாக
இருப்பது தெரியவரும். அதிலும் தமிழ் பேசப்படும் பகுதிகளில் கல்வி கற்ற மாணவர்களில்
இரு பிறப்பாளர்களின் சதவிகிதம் தென் ஆற்காடில் வெறும் 13 மட்டுமே. மதராஸில் 23% மட்டுமே.
தென் ஆற்காடு, செங்கல்பட்டில் கல்வி கற்ற முஸ்லிம்களின் சதவிகிதம் 3க்கும் குறைவு.
சேலத்தில் 10%. ஆனால், சேலம், திருநெல்வேலியில் இருந்த பள்ளிகளில் கல்வி பெற்றவர்களில்
சூத்திர சாதி மாணவர்களின் எண்ணிக்கை 70%. தென் ஆற்காட்டில் அவர்களின் எண்ணிக்கை
84%க்கும் அதிகம்.
இந்தப் புத்தகத்தில்
தரம்பால் முன்வைக்கும் உண்மைகளை இப்படித் தொகுக்கலாம்.
பிரிட்டிஷார் இந்தியாவுக்கு
வருவதற்கு முன்னால் உலகின் பிற பகுதிகளில் கல்வி எப்படி இருந்ததோ அதைவிட மேலான நிலையில்
இந்தியாவில் இருந்திருக்கிறது. கற்றுக் கொடுக்கும் முறை மிகவும் எளிமையானதாகவும் அதிகப்
பயன் தருவதாகவும் இருந்திருக்கிறது. அனைத்து வகுப்பு மாணவர்களும் ஒன்றாகச் சேர்ந்து
படித்தல், மேல் வகுப்பு மாணவர்களே கீழ் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்களாகவும் இருப்பது,
பெரிதும் இலவசக்கல்வி, கட்டணம் விதிக்கப்பட்ட இடங்களிலும் மிகவும் குறைவான கட்டணம்,
குறைவான தண்டனை, அருகமைப் பள்ளிகள், மாணவர்கள் வாழும் சமூகத்தோடு நெருக்கமான கல்வி
என இன்றைய லட்சியப் பள்ளிக்கு என்னவெல்லாம் இலக்காகச் சொல்லப்படுகின்றனவோ அவையெல்லாம்
இந்தியப் பாரம்பரியக் கல்வியில் 18ம் நூற்றாண்டுக்கு முன்பாகவே இருந்திருக்கின்றன.
சமஸ்கிருதம், அண்டை
மாநிலத்து மொழி போன்றவை கற்றுத் தரப்பட்ட நிலையிலும் தாய்மொழி வழிக் கல்வியே பெரிதும்
இருந்திருக்கிறது. சமூகத்தின் அனைத்து சாதியினருக்கும் அடிப்படைக் கல்வி கிடைத்திருக்கிறது.
மன்னர்கள், செல்வந்தர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூகமும் அந்தக் கல்வி மையங்களுக்கு
நில மானியம், பொருள் உதவி, மாணவ ஆசிரியர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம் என முடிந்த
வழிகளில் எல்லாம் உதவிவந்திருக்கிறது.
வர்த்தக நோக்கில்
நுழைந்த பிரிட்டிஷார், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டதும் இந்தியப் பாரம்பரியக்
கல்வியை அப்புறப்படுத்தி ஆங்கிலக் கல்வியை இந்தியாவில் புகுத்தினார்கள். இந்தியப் பாரம்பரியப்
பள்ளிகளுக்கு அதுவரை கிடைத்து வந்த அரசு உதவிகள் அனைத்தையும் தடுத்து நிறுத்தினார்கள்.
இந்து அரசர்களும் இஸ்லாமிய அரசர்களும் முன்பு மானியமாகக் கொடுத்த நிலங்களுக்கு வரி
விதித்தார்கள். அல்லது அந்த மானியம் பெற்றவரிடமிருந்து அதைப் பறித்து அரசின் பொறுப்பில்
எடுத்துக்கொண்டார்கள். இதனால், அந்த மானியத்தை நம்பி நடந்துவந்த ஏராளமான குருகுலங்கள்,
திண்ணைப் பள்ளிகள், மதரஸாக்கள், பாரசீக, அரபுப் பள்ளிகள் எல்லாம் ஒரு தலைமுறை காலத்துக்குள்
அழிந்தன.
பள்ளிக்கூடம் என்றால்
பல அறைகள் கொண்ட கட்டடம் இருக்க வேண்டும், அச்சிட்ட புத்தகங்கள் இருக்கவேண்டும், முறையான
பாடத்திட்டம், தேர்வுகள் எல்லாம் இருக்கவேண்டும் என்று நவீன கல்வியை பிரிட்டிஷார் அறிமுகம்
செய்தார்கள். அப்படியான கல்வி இங்கிலாந்திலும் அப்போதுதான் அறிமுகமாகியிருந்தது. அந்த
மேலான கல்வி கிடைக்க வேண்டுமென்றால் அதிகக் கட்டணம் வசூலித்தாக வேண்டும். ஒருவருக்கு
அப்படியான கட்டணம் கொடுக்க முடியவில்லையென்றால் அந்தக் கல்வியைப் பெற அவர்களுக்குத்
தகுதி இல்லை என்றே அர்த்தம் என்று விட்டேத்தியாக முடிவெடுத்தார்கள். இந்தியப் பாரம்பரியப்
பள்ளிகள் அழிந்து போயிருக்க, ஆங்கில நவீனக் கல்வி எட்டாக்கனியாக இருக்க இந்திய இடை,
கடைநிலை சாதியினர் கல்வியில் பின்தங்கிப் போக நேர்ந்துவிட்டது.
இதுதான் தரம்பால்
இந்தப் புத்தகத்தில் முன்வைக்கும் இந்தியக் கல்வியின் வரலாறு.
அப்படியாக 200 ஆண்டு
பிரிட்டிஷ் ஆட்சிக் காலகட்டத்தில் கடை, இடைநிலை சாதியினர் கல்வியில் இருந்து விலக்கப்பட்டதைத்தான்
திராவிட அரசியல் சக்திகள் 2000 ஆண்டு கால சதியாக முன்வைத்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டிருக்கிறார்கள்.
அந்த 200 ஆண்டுகளில் சமூகத்தில் பொருளாதாரரீதியாக வசதி வாய்ப்புகளைப் பெற்று முன்னேறிய
பிராமணர்களையே அந்த சதியின் மூல காரண கர்த்தாவாக ஓர் அவதூறுப் பிரசாரத்தை முன்னெடுத்தும்
வந்திருக்கிறார்கள். கடை, இடை நிலை சாதிகளில் இருந்து அம்பேத்கர் போல் ஒருசில அறிஞர்கள்
உருவாக வழிவகுத்த அதே பிரிட்டிஷ் கல்விதான் எஞ்சிய இடை, கடைச் சாதியினரை முற்றாகக்
கல்வியில் இருந்து விரட்டியடிக்கவும் செய்திருக்கிறது. இந்தப் புத்தகம் அந்த உண்மையை
ஆதாரபூர்வமாக முன்வைக்கிறது.
இந்தப் புத்தகத்தில்
இடம்பெற்றிருக்கும் ஆதாரங்கள் ஒருவகையில் முழுமையற்றவையே… அதாவது இந்த நூலில் இந்தியப்
பாரம்பரியப் பள்ளிகளின் செயல்பாட்டில் பிரிட்டிஷாராகிய நாம் குறுக்கிடக்கூடாது… அந்தக்
கல்வி மையங்களுக்கான உதவித் தொகைகளை நம் அரசு கையகப்படுத்தக்கூடாது… அவர்களுக்கு
மேலும் நாம் உதவ வேண்டும் என்ற உத்தரவுகளே ஆவணமாகக் கிடைத்திருக்கின்றன. பாரம்பரியப்
பள்ளிகளுக்குத் தரப்பட்ட மானியமானது அந்த மானியம் பெற்றவர்கள் இறந்ததும் அவருடைய வாரிசுகளுக்கு
பிரிட்டிஷ் அரசால் தரப்பட்டிருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகளுக்கான சில உதாரணங்களே இடம்பெற்றிருக்கின்றன.
இவை மிகவும் தந்திரமான ஆவணப்படுத்தல். அதாவது, நாடு முழுவதிலும் லட்சக்கணக்கான ஏக்கர்
நிலங்களைக் கையகப்படுத்தியதையும் ஆயிரக்கணக்கான கல்வி மையங்களை முடக்கியதையும் பற்றி
எதுவும் பதிவு செய்யாமல் ஒருசில இடங்களில் செய்த உதவிகளை மட்டும் பதிவு செய்து சரித்திரமாக்கியிருக்கும்
தந்திரம். அந்த ஆவணங்களை நுட்பமாகப் பரிசீலித்தால்தான் சொல்லாமல் விடப்பட்ட உண்மைகள்
ஒருவருக்குப் புரியும்.
காந்தியடிகளுக்கும்
வேறு பல இந்திய தலைவர்களுக்கும் ஒருசில பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கும் கல்வியாளர்களுக்கும்
இந்த உண்மைகள் புரிந்திருந்தன. ஆனால், அவர்களிடம் பிரிட்டிஷாரால் இந்தியப் பாரம்பரிய
மரம் வேரோடு பிடுங்கப்பட்டுவிட்டது என்பதற்குத் தெளிவான அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களாக
எதுவும் இருந்திருக்கவில்லை. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் காந்தி – சர்
ஃபிலிப் ஹெர்டாக் உடனான உரையாடல் அதையே நமக்கு உணர்த்துகிறது.
இந்தியப் பாரம்பரியக்
கல்வியை பிரிட்டிஷாராகிய நாம் அழித்துவிட்டோம் என்று சில 18ம் நூற்றாண்டு பிரிட்டிஷ்
அதிகாரிகள் கூறிய கருத்துகளையே காந்தி தனது கூற்றுக்கு ஆதாரமாகச் சொல்கிறார். ஆனால்,
அந்தக் காலகட்டத்து மக்கள் தொகை என்ன… அதில் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை என்ன…
இன்றைய மக்கள்தொகை என்ன… அதில் கல்வி கற்றவர்களின் சதவிகிதம் என்ன என்ற புள்ளிவிவரங்களின்
அடிப்படையில்தான் பேசவேண்டும் என்று ஃபிலிப் ஹெர்டாக் பிடிவாதமாக வாதிடுகிறார். அவருடைய
முன்னோர் தந்திரமாகப் பதிவு செய்யாமல் விட்ட ஆதாரங்கள் அல்லவா அவை! எனவே முன்னால் ஓடியவர்கள்
ஈட்டிக் கொடுத்த முன்னிலையைத் தக்கவைத்துக் கொண்டு ஹெர்டாக் வெகு உற்சாகமாக வெற்றிக்கோட்டை
நோக்கி ஓடுகிறார். ஆனால், அது தவறான திசையிலான ஓட்டம் என்பது உலகக் கல்வி வரலாற்றை
முழுமையாகப் பார்க்கும் ஒருவருக்கு எளிதில் புரியும்.
உண்மையில் பழங்கால
இந்தியாவின் கல்வி நிலை எப்படி இருந்தது என்பதை இன்றைய கல்வி நிலையோடு ஒப்பிட்டுப்
பார்க்கக்கூடாது. அதே காலகட்டத்தில் உலகில் கல்வி நிலை என்னவாக இருந்தது என்பதோடுதான்
ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். அதோடு, பழங்காலக் கல்வி முறை அதன் இயல்பான வளர்ச்சிப்
பாதையில் முன்னேற வழிவகுக்கப்பட்டிருந்ததா இல்லையா என்றும் பார்க்கவேண்டும். அந்த அடிப்படையில்தான்
காந்தி பிரிட்டிஷாரை விமர்சித்தார். ஹெர்டாகோ நவீன காலத்தோடு ஒப்பிட்டுப் பழங்கால இந்தியாவை
விட பிரிட்டிஷ் இந்தியாவில் கல்வி நிலை மேம்பட்டுத்தான் இருக்கிறது என்று காந்தியை
மடக்கினார். இது எப்படியென்றால், எந்தக் குழந்தையும் திரும்பியே படுத்திருக்காத காலகட்டத்தில்
ஒரு குழந்தை நடைவண்டியைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்திருக்கிறது. ஆனால், காலப்போக்கில்
பிற குழந்தைகள் எல்லாம் நடக்கக் கற்றுக்கொண்டு ஓடவும் ஆரம்பித்துவிட்ட நிலையிலும் முன்பு
நடைவண்டியைப் பிடித்துக்கொண்டு நடக்கத் தொடங்கிய குழந்தையின் இயக்கத்தை முடக்கி அதை
வெறுமனே நடக்கும் அளவுக்கு மட்டுமே ஆக்கிவைத்திருக்கிறார்கள். இப்போது ஒருவர் முன்பே
நடைவண்டியில் நடக்கத் தொடங்கிய குழந்தையை அதன் போக்கில் விட்டிருந்தால் இன்று ஓட மட்டுமல்ல
பறக்கவே செய்திருக்குமே அப்படிச் செய்ய முடியாமல் தடுத்துவிட்டீர்களே என்று சொல்கிறார்.
இன்னொருவரோ முன்பு நடைவண்டியைப் பிடித்து நடந்த குழந்தை இன்று தானாக நடக்க ஆரம்பித்திருக்கிறதே
இது சாதனைதானே என்று மடக்குகிறார். கல்வியில் மட்டுமல்ல, இந்தியச் சமூகத்தின் பெரும்பாலான
விஷயங்களிலும் இப்படியான குறுக்கீடே நடந்திருக்கிறது.
மேலும், தமிழர்களாகிய
நமக்கு இந்தப் புத்தகம் சுட்டிக்காட்டும் வேறொரு உண்மை மிகவும் முக்கியமானது: பிராமணர்களைவிட
அதிக எண்ணிக்கையில் பிற சாதியினரே அடிப்படைக் கல்வி பெற்றிருக்கின்றனர்.
உண்மையில் இந்தப்
புத்தகம் காலம் தாழ்த்தி வந்திருக்கும் ஒன்றுதான். இரட்டை ஆயுள் தண்டனை பெற்று வாழ்நாள்
முழுவதையும் சிறையில் வாடிக் கழித்த ஒருவருக்கு அவருடைய மரணத்துக்கு முந்தைய தினங்களில்
வந்து, நீ நிரபராதிதான்… உன்னைத் தவறுதலாகச் சிறையில் அடைத்துவிட்டோம். இனி நீ போகலாம்
என்று சொன்னால் எப்படி இருக்கும்? அதுபோல்தான் இந்தியப் பாரம்பரியக் கல்வியை அழித்தொழித்து
ஆங்கிலக் கல்வியை ஆழமாக நிலைபெறச் செய்ததோடு பிராமண அறிவுத் தரப்பை அப்புறப்படுத்தி
திராவிட வெறுப்புக் கருத்தியலை முன்னிலை பெறச் செய்துவிட்ட பிறகு இன்று வந்து இந்தியக்
கல்வி பழங்காலத்தில் சிறப்பாகத்தான் இருந்திருக்கிறது, அனைவருக்கும் கல்வி கிடைத்திருக்கிறது
என்று சான்று வழங்குவது இருக்கிறது.
காலந்தாழ்த்திக்
கிடைக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்குத்தானே சமம். எனினும் அப்படி முற்றாகச் சோர்ந்துபோய்
விடவேண்டியதில்லை. ஏனென்றால் இன்றும் மெக்காலே புத்திரர்கள் புதிய புதிய குற்றச்சாட்டுகளுடனும்
வழக்குகளுடனும் இந்தியாவையும் இந்து மதத்தையும் தாக்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
நம் கையில் இருந்த வைரக்கல்லை கண்ணாடித்துண்டு என்று குப்பைக்கூடையில் நம்மைக் கொண்டே
தூக்கி எறிய வைத்தவர்கள் இன்றும் வேறு வடிவங்களில் நம்மைச் சிறுமைப்படுத்தி வருகிறார்கள்.
இந்தப் புத்தகம் குப்பைக் கூடையில் நாம் தூக்கி எறிந்த நம் வைரக்கல்லை நமக்கு எடுத்துக்காட்டியிருக்கிறது.
அதன் ஒளியில் நாம் நம்மிடம் இருக்கும் மேலும் பல ரத்தினங்களை இனம் கண்டு (அவற்றையும்
மெக்காலே புத்திரர்கள் கண்ணாடித்துண்டுகள் என்றே வீசி எறியச் சொல்கிறார்கள்) மீட்டெடுத்து
அணிந்துகொண்டாகவேண்டும். அந்த வகையில் இந்தப் புத்தகம் இன்றும் முக்கியமானது என்று
சொல்வதைவிட இன்றுதான் அது மிக மிக முக்கியமானது என்றே சொல்லவேண்டும்.
ஆனால், இந்தப் புத்தகத்தைப்
படித்த பிறகு திராவிட இயக்கத்தினர் தமது பிழையான பார்வையைத் திருத்திக்கொள்வார்கள்
என்றெல்லாம் நம்பவில்லை. ‘சரி… அனைத்து ஜாதியினரும் கல்வி பெற்றிருக்கிறார்கள்…
ஆனால், மொத்த மக்கள்தொகையில் கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை வெகு குறைவுதானே. அதோடு
அனைத்து ஜாதியினரும் கல்வி பெற்றிருந்தாலும் அனைத்து வேலைகளையும் அவர்கள் செய்ய அது
வழிவகுத்திருக்கிறதா… உயர்கல்வி பிராமணர்களுக்கு மட்டும்தானே கிடைத்திருக்கிறது…
பெண்களுக்கும் தலித்களுக்கும் கல்வி வெகு சொற்பமாகத்தானே கிடைத்திருக்கிறது. எனவே அது
அழகிய மரம் அல்ல… வெறும் ஒரு செடிதான்’ என்று சொல்வார்கள்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது
இந்த விமர்சனங்கள் நியாயமானவை போலவே தோன்றும். ஆனால், உலகில் எல்லாப் பகுதியிலுமே ஏட்டுக்
கல்வி புரோகித, அரச, பிரபுத்துவ குடும்பங்களுக்கு மட்டுமே கிடைத்துவந்திருக்கிறது.
பெண்களுக்கும் தலித்களுக்கும் ஏட்டுக் கல்வி எங்குமே கிடைத்திருக்கவில்லை. வேலைகளானது
பெற்றோரிடமிருந்தே குழந்தைகளுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. ஒவ்வொரு தொழில் குழுமங்களுக்கு
உள்ளேயே அந்தந்த வேலைகளுக்கான பயிற்சிகள் கிடைத்து வந்திருக்கின்றன.
உயர்கல்வி என்று
அவர்கள் சொல்வதெல்லாம் பிராமணர்களின் தொழிலுக்கான கல்வி மட்டுமே. ஆய கலைகள் அறுபத்து
நான்கில் பிராமணரல்லாதாரின் கலைகள் எல்லாமும் குல வழியில் கற்றுத் தரப்பட்ட நிலையில்
பிராமணக் கலைகளும் குல வழியில் கற்றுத் தரப்பட்டிருக்கின்றன தொழிற்புரட்சிக்கு முன்னால்
மன்னராட்சி காலத்தில் உலகில் எல்லா இடங்களிலுமே நிலைமை இதுதான். எனவே, இந்தியாவிலும்
அப்படியே இருந்திருக்கிறது. மேலும் பிற பகுதிகளில் எந்த அளவுக்கு விதிவிலக்குகள் உண்டோ
அதைவிட இந்தியாவில் விதிவிலக்குகள் அதிகம் உண்டு. அந்தவகையில் இந்தியக் கல்வி மரம்
ஒப்பீட்டளவில் சிறப்பாகவே இருந்திருக்கிறது. இயல்பான போக்கில் வளர்ச்சியடைய அனுமதிக்கப்பட்டிருந்தால்
அந்த அழகிய கல்வி மரம் நிச்சயம் அதிகம் பேருக்கு கனியும் நிழலும் தரும் அழகிய தோப்பாகச்
செழித்திருக்கும். ஆனால், மரத்தை ஆராய்ச்சி செய்கிறேன் என்ற போர்வையில் வேரைப் பிடுங்கிப்
பார்த்தவர்கள் அதன் பிறகு அப்படியே அதை மட்கிப் போக வைத்துவிட்டார்கள்.
இந்தப் புத்தகத்தை
எந்தவித முன்முடிவுகள் இன்றியும் படிக்கும் ஒருவருக்கு அந்த எளிய உண்மை புரியவரும்.
தரவுகளின் அடிப்படையில் அரசியலைத் தீர்மானிப்பவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு
இந்தியக் கல்வி தொடர்பான தமது அரசியலை நிச்சயம் மறு பரிசீலனை செய்வார்கள். தன் அரசியலுக்கு
ஏற்பத் தரவுகளைத் திரிப்பவர்கள் பழகிய செக்குமாட்டுப் பாதையில் தலையை ஆட்டிக்கொண்டு
தமது பயணத்தைத் தொடர்வார்கள்.
மொழிபெயர்ப்பு தொடர்பாக
சில விஷயங்கள் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்தியப் பாரம்பரியப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு
மாணவர்கள் விசேஷ நாட்களில் கிஃப்ட்கள், பிரசெண்ட்கள் தந்தார்கள் என்று பிரிட்டிஷ் ஆவணங்களில்
குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதைப் பரிசுகள் என்று மொழிபெயர்க்கவில்லை. ஏனென்றால்,
அவை உண்மையில் தானம், சன்மானம், தட்சணை என்ற பெயரில் நம்மால் தரப்பட்டிருக்கின்றன.
பரிசு என்று பிரிட்டிஷ் ஆவணங்களில் குறிப்பிட்டிருப்பதுபோல் ஒரு இடத்தில் பயன்படுத்திவிட்டு
அதன் பிறகு வரும் இடங்களில் தானம், சன்மானம், தட்சணை என்றே மொழிபெயர்த்திருக்கிறேன்.
விசேஷ நாட்களில் மாணவர்கள் ஆசிரியர்களுக்குப் புதுத் துணியைப் பரிசாகத் தந்தார்கள்
என்று மொழிபெயர்க்கும்போது அது மிகவும் அந்நியமாகப்படுகிறது. எனவே, மாணவர்கள் ஆசிரியர்களுக்கு
வஸ்திர தானம் தந்தார்கள், புதுத் துணியை சன்மானமாகத் தந்தார்கள் என்று மொழிபெயர்த்திருக்கிறேன்.
அதுபோல் இந்தியப்
பெயர்களை அன்றைய ஆங்கிலத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கடித்துக் குதறியிருக்கிறார்கள்.
சில இடங்களில் அவர்கள் எதைச் சொல்கிறார்கள் என்பதே நமக்குப் புரிவதில்லை. எனவே, அந்த
இடங்களில் கொஞ்சம் சுதந்தரம் எடுத்து நமக்குப் புரியும் ஒன்றாக மொழிபெயர்த்திருக்கிறேன்.
உதாரணமாக, Paurejantahpatraranum அதாவது ப(வ்)ரிஜந்தபத்ராரணம் என்று வருகிறது. இதை
பாரிஜாத புராணம் என்று மொழிபெயர்த்திருக்கிறேன். ஒருவேளை அது தவறென்றால் சரியானதைத்
தெரியப்படுத்துங்கள். அடுத்த பதிப்பில் சரி செய்துகொள்கிறேன்.

Posted on Leave a comment

அழகிய மரம் நூலின் முன்னுரை | தரம்பால், தமிழில்: BR மகாதேவன்

(The Beautiful Tree என்ற தன்
நூலுக்கு தரம்பால் எழுதிய முன்னுரை
யின் தமிழாக்கம்.)


(தரம்பால்)

இந்தியக் கல்வியின்
வரலாறுபற்றி, குறிப்பாக 1930-40களில், ஏராளமான ஆய்வு நூல்கள் வெளியாகின. ஒருவகையில்
பார்த்தால், பிரிட்டிஷ் அதிகாரிகளாகவும் அறிஞர்களாகவுமிருந்தவர்கள் 19ம் நூற்றாண்டின்
மத்தியிலேயே இது தொடர்பாக எழுத ஆரம்பித்திருந்தனர். எனினும் இவற்றில் பெரும்பாலானவை
பழங்கால இந்தியாவைப் பற்றியவையாக இருந்தன. சில நேரங்களில் 10-12ம் நூற்றாண்டுகள் பற்றியவையாக
இருந்தன. எஞ்சியவை பிரிட்டிஷாரின் காலத்திலும் அதற்குப் பிறகும் இந்தியாவில் கல்வி
எப்படி இருந்தது என்பது பற்றி எழுதப்பட்டவை. பழங்காலக் கல்வி அமைப்புகள் (நாலந்தா அல்லது
தட்சசீலத்தில் இருந்தவை போன்று) பற்றிய விரிவான ஆய்வுபூர்வமான படைப்புகள் நீங்கலாக
ஏ.எஸ்.அல்டேகர்1 போன்றோர் எழுதிய, பழங்காலம் பற்றிய பொதுவான பல படைப்புகள்
வெளியாகின. அதற்குப் பிந்தைய காலம் பற்றியும் பல படைப்புகள் வெளியாகியுள்ளன: இந்திய
அரசால் வெளியிடப்பட்டு சமீபத்தில் மறுபதிப்பும் கண்ட செலக்ஷன்ஸ் ஃபிரம் எஜுகேஷனல் ரெக்கார்ட்ஸ்
(இரண்டு தொகுதிகள்),2 எஸ்.நூருல்லா, ஜே.பி. நாயக் போன்றோரின் படைப்புகள்
ஆகியவற்றை இந்த இடத்தில் குறிப்பிடலாம்.3 இவர்கள் தமது படைப்பை, ‘கடந்த
160 வருடங்களிலான இந்தியக் கல்வியின் வரலாற்றை விரிவாக, ஆவணபூர்வமாக, இந்தியக் கோணத்தில்
எழுதுவதற்கான முயற்சி’ என்று (அந்த நூல் பேசும் காலகட்டம் மற்றும் அது எந்தக் கோணத்தில்
ஆராயப் பட்டிருக்கிறது என்பது பற்றிச் சுட்டிக்காட்டும்வகையில்) குறிப்பிட்டிருக்கின்றனர்.4
ஒருவகையில் அகடெமிக்
ஆய்வு அம்சம் சற்றுக் குறைவாக இருந்தபோதிலும் 1939ல் பண்டிட் சுந்தர்லால் எழுதிய பிரமாண்டப்
படைப்பு மிக அதிக வாசகர்களைச் சென்றடைந்தது.5 அவர் எழுதிய நூலில் சுமார்
40 பக்கங்கள் கொண்ட 36வது அத்தியாயத்தின் தலைப்பு ‘இந்திய பாரம்பரியக் கல்வியின் அழித்தொழிப்பு.’
ஏராளமான பிரிட்டிஷ் ஆவணங்களை மேற்கோள்காட்டிப் பேசும் அந்த நூல் கிட்டத்தட்ட 100 ஆண்டு
கால வரலாற்றை விவரிக்கிறது: ஜூன் 1814ல் இந்தியாவுக்கான கவர்னர் ஜெனரலுக்கு இங்கிலாந்தில்
இருந்து வந்த அறிக்கையில் ஆரம்பித்து மாக்ஸ் முல்லருடைய கருத்துகள் வரை பேசுகிறது.
1909ல் பிரிட்டிஷ் தொழிற்கட்சித் தலைவர் கேர் ஹார்டி எழுதியவையும் அதில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.
அந்தப் புத்தகம் எழுதப்பட்ட காலகட்டத்தில் கையெழுத்து ஆவணப் பிரதிகள் எளிதில் கிடைத்திருக்கவில்லை.
எனவே, அன்றைய தேதியில் அச்சில் இருந்தவற்றை மட்டுமே வைத்து அந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.
இருந்தபோதிலும் ‘பாரத் மேம் அங்ரேஜி ராஜ்’ (பாரதத்தில் ஆங்கிலேயர் ஆட்சி) என்ற அந்த
அத்தியாயம் 18-19ம் நூற்றாண்டுகளில் இந்திய பாரம்பரியக் கல்விபற்றிய மிக மிக முக்கியமான
படைப்பாகத் திகழ்கிறது.
13ம் நூற்றாண்டில்
ஆரம்பித்து 19ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதிவரையிலான காலகட்டத்து வரலாறு அல்லது கல்விபற்றி
மிகக் குறைவாகவே எழுதப்பட்டிருக்கிறது. இஸ்லாமியர் கல்வி பற்றி எஸ்.எம். ஜாஃபர் எழுதிய
படைப்பு6 போன்றவை எல்லாம் இருக்கின்றன; பிரிட்டிஷ் காலகட்டத்தில் இந்தியாவில்
கல்வி பற்றியும் 18-19ம் நூற்றாண்டுகளில் சிதைந்த நிலையில் இருந்த இந்தியப் பாரம்பரியக்
கல்வி பற்றியும் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிற்சில தகவல்களும் அத்தியாயங்களும் கல்வி
வரலாறு பற்றிய நூல்களில் எழுதப்பட்டிருக்கின்றன. மொத்தம் இருக்கும் 643 பக்கங்களில்
நூருல்லாவும் நாயக்கும் சுமார் 43 பக்கங்களை 19ம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்தில் இருந்த
இந்தியக் கல்வி பற்றி எழுதியிருக்கிறார்கள்.7 அந்தக் கல்வியின் வீச்சு,
தன்மைபற்றிய பிற்கால பிரிட்டிஷாரின் சில கருத்துகளை அந்த நூலில் கேள்விக்கு உட்படுத்தியுமிருக்கிறார்கள்.
19ம் நூற்றாண்டின்
ஆரம்பகட்டத்தில் இந்தியாவில் இருந்த கல்வி பற்றி எழுதப்பட்ட பெரும்பாலான படைப்புகளும்
அதுதொடர்பான பல்வேறு மாறுபட்ட கருத்துகளும் முன்று ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன.
முதலாவதாக, முன்னாள் கிறிஸ்தவ மத போதகரான வில்லியம் ஆடம் எழுதிய ஆவணங்கள்.8
வங்காளம், பிகார் முதலான பகுதிகளில் 1835-38 காலகட்டத்திலிருந்த பாரம்பரியக் கல்வி
பற்றி விரிவாக ஆய்வு செய்து எழுதப்பட்ட இந்த ஆவணங்கள் மிக அதிகக் கவனம் பெற்றன. இரண்டாவதாக,
பம்பாய் பிரஸிடென்ஸியில் 1820களில் இருந்த இந்தியப் பாரம்பரியக் கல்வி பற்றி பிரிட்டிஷ்
அதிகாரிகள் நடத்திய ஆய்வு முடிவுகள்.9 மூன்றாவதாக 1822-25 காலகட்டத்தில்
மதராஸ் பிரஸிடென்ஸியில் இந்தியக் கல்வி தொடர்பான மிக விரிவான பிரிட்டிஷ் ஆய்வு முடிவுகள்.10
வடக்கே ஒரிஸாவின் கஞ்சம் பகுதியில் ஆரம்பித்து தெற்கே திருநெல்வேலி வரையிலும் மேற்கே
மலபார் வரையிலுமான பகுதிகள் மதராஸ் பிரஸிடென்ஸியில் அப்போது இருந்தன. இதே விஷயம் தொடர்பான
பிற்காலத்திய ஆவணம் பஞ்சாபின் பாரம்பரியக் கல்வி தொடர்பாக ஜி.டபிள்யூ. லெய்ட்னர் தொகுத்தவை.11
மேலே குறிப்பிடப்பட்டுள்ளவற்றில்
லெய்ட்னரின் படைப்பு பிரிட்டிஷாரின் கொள்கை முடிவுகளை மிகக் கடுமையாக வெளிப்படையாக
விமர்சிக்கிறது. இவரது நூல் இவர் சொந்தமாக மேற்கொண்ட ஆய்வு மற்றும் முந்திய பிரிட்டிஷ்
அரசு ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டிருந்தது. பஞ்சாப் பகுதியில் பாரம்பரியக்
கல்வியின் நசிவுக்கு மட்டுமல்லாமல் அதன் அழித்தொழிப்புக்கும் பிரிட்டிஷ் அதிகாரிகளே
காரணம் என்று அது சொல்கிறது.
ஆடம்மின் ஆய்வுகளும்
வேறு சில மதராஸ் பிரஸிடென்ஸி கலெக்டர்களின் ஆய்வுகளும்12 இந்தியப் பாரம்பரியக்
கல்வியின் அழிவுக்கு பிரிட்டிஷார்தான் காரணம் என்றே தெரிவிக்கின்றன. எனினும், அந்த
விமர்சனங்கள் மிகவும் நாசூக்காக, பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கும் கனவான்களுக்கும் உகந்த
மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன (லெய்ட்னர் பிரிட்டிஷ் அதிகாரிதான் என்றாலும் அவர்
‘ஆங்கிலேயர் அல்லர்’)13
அக் 20, 1931ல்
மகாத்மா காந்தி லண்டனில் இருக்கும் ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டர்நேஷனல் அஃபயர்ஸில்
ஒரு நீண்ட உரை ஆற்றினார். அதில், ‘இந்தியாவில் கல்வி கடந்த 50 -100 வருடங்களாக அழிந்துவருகிறது;
அதற்கு பிரிட்டிஷாரே காரணம்’ என்று தெரிவித்தார். ஆடம், லெய்ட்னர் போன்ற பலர் தெரிவித்த
கருத்துகளுக்கும் இந்தியர்கள் பல காலமாகச் சொல்லிவந்த கருத்துகளுக்கும் காந்தியின்
உரை பெரும் வலுவை ஊட்டியது. அதைத் தொடர்ந்து 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியப்
பாரம்பரியக் கல்வி தொடர்பான மேலே சொன்ன ஆவணங்களுக்குப் பெரியதொரு முக்கியத்துவம் வந்தது.
தனி நபர் என்ற வகையிலும் பிரிட்டிஷ் அரசின் சார்பாகவும் சர் ஃபிலிப் ஹெர்டாக்கிடமிருந்து
காந்திக்கு உடனே மறுப்பு எழுந்தது. அவர் டாக்கா பல்கலைக்கழகத்தின் துணைச் செயலாளராகவும்
ஆக்ஸிலரி கமிட்டி ஆஃப் இந்தியன் ஸ்டாச்சுடரி கமிஷனின் சேர்மனாகவும் இருந்திருக்கிறார்.
காந்தியின் கூற்றுக்கு ‘அச்சில் வெளியான துல்லியமான ஆதாரங்கள் இருக்கின்றனவா’ என்று
கேட்டார்.14
காந்திஜியும் (இந்தக்
காலகட்டத்தில் சிறையில் அதிக காலம் கழிக்க வேண்டியிருந்தது) அவருடைய சக போராளிகளும்
அளித்த பதில்களினால் திருப்தியடையாத ஹெர்டாக், நான்கு ஆண்டுகள் கழித்து லண்டன் இன்ஸ்டிடியூட்
ஆஃப் எஜுகேஷனில் ஆற்றிய மூன்று தொடர் உரைகளில் காந்திஜியின் கூற்றை மறுத்து விரிவாகப்
பேசினார். 1939ல் தனது அந்த உரைகளையும் வேறு சில ஆதாரங்களையும் சேர்த்துப் புத்தகமாக
வெளியிட்டார்.15
காந்திஜியையும்
பிரிட்டிஷாரின் ஆரம்பகால ஆவணங்களையும் மறுதலித்தவர்களில் ஹெர்டாக் முதல் நபர் அல்ல;
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியையும் கொள்கைகளையும் நியாயப்படுத்திப் பேசியபடி பலரும்
பயணித்திருந்த பாதையை அப்படியே பின்பற்றுபவராகவேதான் இருந்தார். விக்டோரிய இங்கிலாந்தின்
தந்தை என்று பாராட்டப்பட்ட வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் மூலமாக பிரிட்டிஷ் ஹவுஸ் ஆஃப்
காமன்ஸில் 125 ஆண்டுகளுக்கு முன்பாகவே போடப்பட்ட பாதை அது.16 ஹெர்டாகைப்
போலவே அவருடைய காலகட்டத்தைச் சேர்ந்த டபிள்யூ ஹெச் மோர்லாந்தும் முன்பு இதுபோல் பேசியிருக்கிறார்.
‘இப்போது இருப்பதைவிட அக்பர், ஜஹாங்கீர் காலகட்டத்தில் பஞ்சம் வெள்ளம் போன்றவை இல்லாத
இயல்பான காலகட்டத்தில் தொழிலாளர்களுக்கு அதிகக் கூலி கிடைத்தது’ என்று வின்சென்ட் ஸ்மித்
கூறியிருந்ததை மோர்லாந்து மறுத்திருந்தார்.17 மோர்லாந்து ஓய்வு பெற்ற வருவாய்
அதிகாரி என்ற நிலையில் இருந்து இந்தியாவின் பொருளாதார வரலாற்று ஆசிரியர் என்ற நிலைக்கு
மாற ஸ்மித் முன்வைத்த சவால் ஒருவகையில் காரணமாக அமைந்தது.18 1940கள் வரை,
உலகை நாகரிகப்படுத்தும் பெரும் பொறுப்பைச் சுமந்தவர்கள் என்ற வகையில், பிரிட்டிஷார்
இந்தியாவில் (அல்லது வேறு இடங்களில்) ஆட்சி செய்த 200 ஆண்டுகாலத்தில் அவர்களால் திட்டமிடப்பட்ட
அல்லது திட்டமிடப்படாத செயல்கள் குறித்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்திருக்கவில்லை.
இந்தப் புத்தகத்தில்
மறுபிரசுரம் செய்யப்பட்டிருக்கும் ஆவணங்கள் பெருமளவுக்கு ‘மதராஸ் பிரஸிடென்ஸி இண்டிஜினஸ்
எஜுகே ஷன் சர்வே’யில் இருந்து எடுக்கப்பட்டவையே. 1966ல்தான் இதை முதலில் பார்த்தேன்.
முன்பே சொன்னதுபோல் 1831-32லேயே ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் ஆவணங்களில் இந்த ஆய்வறிக்கைகளின்
சுருக்கம் இடம்பெற்றிருக்கிறது. ஏராளமான ஆய்வாளர்கள் மதராஸ் பிரஸிடென்ஸி டிஸ்ட்ரிக்ட்
ஆவணங்களிலும் பிரஸிடென்ஸி ரெவின்யூ ஆவணங்களிலும் (பிந்தைய அறிக்கைகள் மதராஸிலும் இருக்கின்றன,
லண்டனிலும் இருக்கின்றன) இருக்கும் இந்த விரிவான ஆய்வறிக்கைகளைப் பார்த்திருக்கக்கூடும்.
எனினும் இனம்புரியாத காரணங்களினால் அவை அறிவுப்புலப் பார்வையில் இருந்து தப்பிவிட்டிருக்கின்றன.
இதே காலகட்டத்தைச் சேர்ந்த மதராஸ் பிரஸிடென்ஸி மாவட்டங்கள் பற்றிய ஆய்வு ஏடுகள்கூட
இந்த ஆய்வுத் தகவல்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை. இத்தனைக்கும் அந்த ஆய்வு
ஏடுகள் சிற்சில இடங்களில் கல்வி தொடர்பான குறிப்புகளைப் பற்றிப் பேசவும் செய்திருக்கின்றன.
பிரிட்டிஷாரின்
ஆட்சியைக் குறைகூறுவதற்காக இந்த நூல் எழுதப்படவில்லை. 18ம் நூற்றாண்டின் பிந்தைய காலகட்டம்,
19ம் நூற்றாண்டின் முந்தைய காலகட்டம் ஆகியவற்றில் இந்தியாவின் உண்மைநிலை என்ன என்பதை
இந்த ஆவணங்களில் இருந்து முடிந்தவரை தெரிந்துகொள்வதற்கான முயற்சியே இது. இந்திய சமூகம்,
அதன் உள்கட்டமைப்பு, அதன் பழக்கவழக்கங்கள், பிற நிறுவனங்கள், அவற்றின் பலங்கள், பலவீனங்கள்
ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியே. 18ம் நூற்றாண்டில்
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (இண்டியன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இன் த எய்டீன்த்
செஞ்சுரி)19, இந்தியப் பாரம்பரியத்தில் ஒத்துழையாமை அணுகு முறை (சிவில்
டிஸொபீடியன்ஸ் இன் இந்தியன் டிரடிஷன்)20 என்ற முந்தைய நூல்களின் பாணியிலேயே
இந்த நூலும் இந்தியாவின் வேறொரு பரிமாணத்தை சித்திரித்துக் காட்டுகிறது. அந்தக் கால
கட்டத்து நிலைமையோடு இந்த ஆய்வுகளைப் பொருத்திப் பார்ப்பதோடு, பிரிட்டனில் 19ம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் கல்வி எப்படி இருந்தது என்பதையும் லேசாகக் கோடிகாட்டுகிறது.
ஏராளமான நண்பர்கள்
இந்த ஆய்வுப் பணியில் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள். பல ஆலோசனைகள் கூறியிருக்கிறார்கள்.
அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. அவர்களுடைய ஆதரவும் ஊக்கமும் இல்லாதிருந்தால்
இந்தப் புத்தகம் உருவாகியிருக்கவே முடியாது. 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆக்ஸ்போர்ட்
பல்கலைக்கழகத்தில் என்ன பாடங்கள் கற்பிக்கப்பட்டன என்பது தொடர்பான என் ஆய்வுகளுக்கு
உதவும் வகையில் ஆக்ஸ்ஃபோர்டு ஆவணக் காப்பகத்தைப் பயன்படுத்திக்கொள்ள உதவியதற்காக அவர்களுக்கு
நன்றி. அதுபோலவே இந்தியா ஆஃபீஸ் லைப்ரரி அண்ட் ரெக்கார்ட்ஸுக்கும் நன்றி. காந்தி –
ஹெர்டாக் இடையிலான உரையாடலுக்கான பிரதிகளைத் தந்து உதவியதற்காக திரு மார்டின் மோயருக்கு
விசேஷ நன்றி.
1972-73 காலகட்டத்தில்
எனக்கு சீனியர் ஃபெலோஷிப் தந்ததற்காக ஏ.என்.சின்ஹா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் ஸ்டடீஸ்க்கு
(பாட்னா) என் நன்றி. வாரணாசியைச் சேர்ந்த காந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்டடீஸ், புது
டில்லியின் காந்தி பீஸ் ஃபவுண்டேஷன், த காந்தி சேவா சங்கம், சேவாகிராம், புது தில்லையைச்
சேர்ந்த அசோசியேஷன் ஆஃப் வாலண்டரி ஏஜென்ஸிஸ் ஃபார் ரூரல் டெவலப்மெண்ட் என அனைத்து அமைப்புகளும்
தேவைப்படும் நேரங்களில் எனக்கு உதவிகள் புரிந்தன. அதற்கு அவர்களுக்கு நன்றிகள் பல.
இந்தப் புத்தகத்தில்
பின்னிணைப்பாக இடம்பெற்றிருக்கும் மதராஸ் பிரஸிடென்ஸி தொடர்பான ஆவணங்களை இந்தியா ஆஃபீஸ்
நூலகத்தில்தான் முதலில் பார்த்தேன். எனினும் தமிழ்நாடு அரசு ஆவணக்காப்பகத்தில் இருந்தே
அவற்றை மறு பிரசுரம் செய்திருக்கிறேன். முன்பு அது மெட்ராஸ் ரெக்கார்டு அலுவகம் என்ற
பெயரில் இருந்தது. இதற்கும் அவர்கள் என் மீது காட்டிய அன்புக்கும் மிக அதிக சிரமம்
எடுத்துக்கொண்ட அந்த ஆவணக்காப்பகத்தின் பணியாளர்களுக்கும் நன்றி. அலெக்சாண்டர் வாக்கரின்
குறிப்பும் இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. எடின்பர்க்கில் இருக்கும் ஸ்காட்லாந்து
தேசிய நூலகத்தில் இருக்கும் வாக்கர் ஆஃப் பௌலாந்து பேப்பர்ஸ் அறிக்கையில் இருந்து அது
எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த தேசிய நூலகத்துக்கு என் நன்றி. ஸ்காட்லாந்து ரெக்கார்டு
அலுவலகம், எடின்பர்க் பல்கலை, அலகாபாத்தில் இருக்கும் உத்தரபிரதேச அரசு ஆவணக்காப்பகம்
ஆகியவற்றுக்கும் நன்றி.
சேவாகிராமின் ‘ஆஸ்ரம்
பிரதிஸ்தான்’ இந்தப் புத்தகத்தை எழுத இடவசதியும் பிற வசதிகளும் செய்துகொடுத்து அவர்களில்
ஒருவராகவே என்னை அன்புடன் நடத்தியது. காந்திஜியின் குடிலுக்கு அருகில் அமர்ந்தபடி இந்த
நூலை எழுதி முடித்தது மிகப் பெரிய பாக்கியமே.
*
இந்த மொழிபெயர்ப்பின்
மூல ஆங்கிலப் புத்தகத்தின் தலைப்பான The Beautiful Tree (அழகிய மரம்) மகாத்மா காந்தி
லண்டனில் சாத்தம் ஹவுஸில் அக், 20, 1931ல் ஆற்றிய உரையில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.
‘பிரிட்டிஷ்
நிர்வாகிகள் இந்தியாவுக்கு வந்தபோது, இங்கிருக்கும் யதார்த்த நிலையை வளர்த்தெடுக்காமல்
அவற்றை வேருடன் பிடுங்கி எறிய முற்பட்டார்கள். மண்ணைத் தோண்டி வேரை வெளியில் எடுத்து
மரத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். அதன்பிறகு அந்த வேரை அப்படியே விட்டுவிட்டார்கள்.
அந்த அழகிய மரம் அழிந்துவிட்டது.’
18ம் நூற்றாண்டில்
இந்தியப் பாரம்பரியக் கல்வி என்ற துணைத் தலைப்பும் பொருத்தமாகவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் புத்தகத்தில் பெருமளவுக்கு இடம்பெற்றிருக்கும் மதராஸ் பிரஸிடென்ஸி ஆவணங்கள்
1822-25ல் தொகுக்கப்பட்டவை. எனினும் அந்தத் தகவல்கள் அதைவிடப் பழமையான கல்வி அமைப்பு
பற்றியே பேசுகின்றன. அந்தக் கல்வி அமைப்புதான் 18ம் நூற்றாண்டிலும் நடைமுறையில் இருந்தது.
அதன் பிறகு அது வெகு விரைவில் அழிந்துவிட்டது. ஆடம்மின் ஆய்வறிக்கை 19ம் நூற்றாண்டின்
நான்காவது பத்தாண்டில் நடந்த இந்திய பாரம்பரியக் கல்வியின் வீழ்ச்சி பற்றிப் பேசுகின்றன.
– தரம்பால்
பிப்ரவரி 19, 1981,
ஆஸ்ரம் பிரதிஸ்தான்,
சேவா கிராமம்.
1. ஏ.எஸ். அட்லேகர்:
எஜுகேஷன் இன் ஏன்சியண்ட் இந்தியா. இரண்டாம் பதிப்பு., பனாரஸ், 1944.
2. இந்திய தேசிய
ஆவணக்காப்பகம்: செலக்ஷன்ஸ் ஃப்ரம் தி எஜுகேஷனல் ரெகார்ட்ஸ்: I: 1781-1839, II –
1840-1859, ஹெச்.ஷார்ப் மற்றும் ஜே.ஏ.ரிச்சி எழுதியது, 1920, 1922 (மறுபதிப்பு
1965).
3. சையது நூருல்லா
மற்றும் ஜே.பி.நாயக்: ஹ்ஸ்டரி ஆஃப் எஜுகேஷன் இன் இந்தியா ட்யூரிங் தி பிரிட்டிஷ் பீரியட்.,
பம்பாய், 1943.
4. அதே நூல் முன்னுரை.
5. பாரத் மேம் அங்கிரேஜி
ராஜ் (ஹிந்தியில்). இந்த நூலின் முதல் பதிப்பு 1929ல் வெளியானதுமே தடை செய்யப்பட்டது.
1939ல் மூன்று தொகுதிகளாக (1780 பக்) மீண்டும் வெளியிடப்பட்டது. மிக விரிவன தகவல்களைக்
கொண்டிருக்கும், மறுபதிப்பு காணாத அந்த நூல் இன்று அரிய க்ளாசிக் படைப்பாக ஆகிவிட்டிருக்கிறது.
6. எஸ்.எம்.ஜாஃபர்:
எஜுகேஷன் இன் முஸ்லிம் இந்தியா, பெஷாவர், 1936.
7. ஹிஸ்டரி ஆஃப்
எஜுகேஷன் இன் இந்தியா ட்யூரிங் பிரிட்டிஷ் பீரியட்., 1943
8. டபிள்யூ. ஆடம்:
ரிப்போர்ட்ஸ் ஆன் தி ஸ்டேட் ஆஃப் எஜுகேஷன் இன் பெங்கால் 1835 அண்ட் 1838. அனந்தநாத்
பாசு எடிட் செய்தது., மறு பதிப்பு கல்கத்தா 1941.
9. ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்
பேப்பர்ஸ், 1831-1832., தொகுதி 9.
10. அதே படைப்பு.,
பக் 413-417, 500-507.
11. ஜி.டபிள்யூ.
லெட்னர்: ஹிஸ்டரி ஆஃப் இண்டிஜினஸ் எஜுகேஷன் இன் த பஞ்சாப் சின்ஸ் அனெக்சேஷன் அண்ட்
இன் 1882, 1883; (பஞ்சாப், மொழித்துறை, மறு பிரசுரம், பட்டியாலா, 1973).
12. மதராஸ் கலெக்டர்கள்
அறிக்கை, பின்னிணைப்பு A(i)&(xxx)
13. ஃபிலிப் ஹெர்டாக்:
சம் ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இந்தியன் எஜுகேஷன் பாஸ்ட் அண்ட் ப்ரசன்ட்., ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்சிட்டி
பிரஸ்., முன்னுரை.
14. இந்தியா ஆஃபீஸ்
லைப்ரரி: எம்.எஸ்.எஸ். இ.யு.ஆர். டி 551., காந்திக்கு ஹெர்டாக் அனுப்பிய கடிதம்:
21.10.1930.
15. Hartog:
op. cit.
16. ஹன்ஸார்ட்:
ஜூன் 22 மற்றும் ஜூலை 1, 1813.
17. வி.ஏ.ஸ்மித்:
அக்பர் தி கிரேட் மொகல், க்ளியர்டன் பிரஸ், 1917, பக் 394.
18. லண்டன்: ஜர்னல்
ஆஃப் தி ராயல் ஆசியாட்டிக் சொசைட்டி, 1917, பக் 815-825.
19. இந்தியன் சயின்ஸ்
அண்ட் டெக்னாலஜி இன் தி எய்டீந்த் செஞ்சுரி: சம் காண்டம்பரரி ஈரோப்பியன் அக்கவுண்ட்ஸ்
(அதர் இந்தியா பிரஸ்) கோவா 2000.
20. சிவில் டிஸ்ஒபீடியன்ஸ்
இன் இந்தியன் டிரடிஷன்: வித் சம் எர்லி நைண்டீந்த் செஞ்சுரி டாக்குமெண்ட்ஸ், அதர் இந்தியா
பிரஸ்., கோவா, 2000.

Posted on Leave a comment

ஆழி பெரிது முன்னுரை | ஜடாயு

(தடம் பதிப்பக வெளியீடாக வெளிவரும், அரவிந்தன்
நீலகண்டனின் ‘ஆழிபெரிது’ நூலுக்கான அணிந்துரை)


(ஆழி பெரிது, அரவிந்தன் நீலகண்டன், தடம் பதிப்பகம், ரூ 330)
கடந்த இருபதாண்டுகளாக
இந்த நூலின் ஆசிரியர் அரவிந்தன் நீலகண்டன் தமிழில் பல தளங்களில், அரசியல் முதல் சூழலியல்
வரை பல்வேறு பேசுபொருள்கள் குறித்துத் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார். அனேகமாக அவற்றில்
பெரும்பாலானவற்றை, ஃபேஸ்புக் விவாதங்கள் உட்பட, நான் முழுமையாக வாசித்து வந்திருக்கிறேன்
என்று சொல்ல முடியும். அதனடிப்படையில், அவர் இதுகாறும் எழுதியவற்றில், அதிகமான நிலைத்த
இருப்பு கொண்ட படைப்புக்கள் எவை என்று கேட்டால், சந்தேகமின்றி இந்த நூலில் உள்ள கட்டுரைகளுக்குத்
தான் முதலிடம் என்று சொல்வேன்.
அதற்குக் காரணங்கள்
உண்டு. இக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் தமிழ்பேப்பர் தளத்தில் 2011ம் ஆண்டு தொடர்ச்சியாக
வெளிவந்தபோது, ஒருவித இறையாவேச நிலையில்தான் அவர் இவற்றை எழுதுகிறாரோ – வேத ரிஷிகள்
சூக்தங்களைப் பாடியது போல – என்ற எண்ணம் வாசகர்களில் கணிசமானவர்களுக்கு எழுந்திருக்கக்
கூடும். அந்த அளவுக்கான உத்வேகம் இவற்றில் உறைந்துள்ளது. முனைவர் பட்ட ஆய்வேடுகளைக்
கூட போகிறபோக்கில் எழுதிவிட்டுச் செல்கிற தமிழ் அறிவுச்சூழலில், இந்த இணையதளக் கட்டுரைகள்
ஒவ்வொன்றுமே உயர்தரமான ஆய்வுத்தாள்களோ என்று வியக்குமளவுக்கான பொருட்செறிவும், வீச்சும்
கொண்டு விளங்குகின்றன என்றால், இவற்றை எழுத அவர் எடுத்துக் கொண்ட சிரத்தையையும் செலுத்திய
உழைப்பையும் பற்றி ஊகிக்க முடியும். எல்லாவற்றையும் விட, இக்கட்டுரைகளின் பண்பாட்டு
முக்கியத்துவம் அவற்றை மிகவும் கவனத்திற்குரியதாக ஆக்குகிறது.
வேதம் நிறைந்த தமிழ்நாடு
என்றார் பாரதியார். அதற்கேற்ப, தமிழ்ப் பண்பாட்டின் ஆதி விடியல் முதலே இங்கு வேதம்
தழைத்து வந்து கொண்டிருக்கிறது. வேதஞானத்தின் ஒளியே ஆதாரமாக நின்று, தமிழரின் கல்வியிலும்,
கலைகளிலும், வாழ்க்கை நெறிகளிலும், இலக்கியங்களிலும், ஆன்மீகத்திலும், தத்துவங்களிலும்
வர்ணஜாலங்களை, நிறப்பிரிகைகளை உருவாக்கி வந்திருக்கிறது. அதற்கான ஆதாரங்களை இந்த நூல்
நெடுகிலும் காண முடியும். ஆயினும், தமிழ்நாட்டில் கல்விகற்கும் ஒரு இளைஞருக்கோ அல்லது
நவீன இலக்கிய வாசகருக்கோ கூட வேதங்கள் குறித்த அறிதல், புரிதல் என்பது அனேகமாக இல்லை,
அல்லது பல்வேறு பொய்மைகள், திரிபுகள், எதிர்மறைச் சித்திரங்கள் வழியாக வடிகட்டப் பட்டிருக்கிறது
என்பதே நிதர்சனம். வேதம், வேதாந்தம், இந்து ஞானம் என்று வாயெடுத்தாலே அதைப் பற்றிய
ஏராளமான முன்முடிவுகளோடும் மனத்தடைகளோடும் தயக்கங்களோடும் நிராகரிப்புகளோடும் ஏளனங்களோடும்
கூடிய கருத்துக்களையே படித்து, கேட்டு வளர்ந்துள்ள தலைமுறை சார்ந்தவர்களே இங்குள்ள
கணிசமான வாசகர்கள். இத்தகைய சூழலின் அழுத்தங்களையும் சார்பு நிலைகளையும் கடந்து உண்மையான
அறிவு வேட்கையுடனும், திறந்த மனத்துடனும் வரும் வாசகர்களும் கணிசமான பேர் உண்டு. அத்தகையோரை
எதிர்நோக்கி, வேதப் பண்பாடு குறித்த ஒரு காத்திரமான, ஆழமான, அதே சமயம் சுவாரஸ்யமான
நூலைப் படைப்பது என்பது பெரிய சவாலான விஷயம். அதை இந்த நூல் சாதித்திருக்கிறது.
வைகறையில் மெதுமெதுவாகப்
புன்முறுவல் பூத்துக் கொண்டு உதிக்கும் உஷையின் மென்கதிர்கள், பளீரென்று சூரிய கிரணங்களாக
மாறிக் கல்லிலும் புல்லிலும் நீரிலும் ஒளியையும் தகிப்பையும் உண்டாக்குவது போல, அமர்ச்சையாக,
அமைதியாக ஆரம்பிக்கும் நூலின் கதி, விடுவிடுவென்று பல திசைகளிலும் பரவுகிறது. இதிலுள்ள
ஒவ்வொரு கட்டுரையுமே சம்பிரதாயமான நேர்கோட்டுப் பார்வையையும் நடையையும் தவிர்த்து,
பல தளங்களிலும் சஞ்சரிப்பதாக, பல திறப்புகளை அளிப்பதாக உள்ளதை வாசகர்கள் எடுத்த எடுப்பிலேயே
உணர முடியும்.
வேதப் பண்பாட்டின்
கூறுகளை விவரிக்கும் முகமாக, பரிணாம அறிவியல், நரம்பியல், உளவியல், உயிரியல், வரலாற்று
ஆய்வுகள், தத்துவ தரிசனங்கள், புராணங்கள், சங்க இலக்கியம், கட்டிடக் கலை, கிரேக்க –
ரோமானிய – எகிப்திய பண்பாடுகள், அகழ்வாராய்ச்சி, நாட்டார் கலை வடிவங்கள், சமூகவியல்
எனப் பல அறிவுத் துறைகளிலிருந்தும் ஆதாரங்களையும், நுண் தகவல்களையும், புதிய அறிதல்களையும்
அளித்தபடியே செல்கின்றன இக்கட்டுரைகள். அந்த தகவல்களும் அறிதல்களும் கச்சிதமாக, மிக
இயல்பாக அந்தந்த இடங்களில் அமைந்து வருவது சிறப்பு. அவை பிரமிப்பூட்டுகின்றனவேயன்றி,
அயர்ச்சியூட்டுவதில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
அரவிந்தனுக்கென்று
சில திட்டவட்டமான, ஆணித்தரமான கருத்துக்கள் உண்டு. அவற்றை எந்த சமரசமுமின்றி திட்டவட்டமாக
முன்வைப்பவர் அவர். அதே சமயம் இந்து ஞான நெறியின் ஆதார சுருதியாக விளங்கும் ‘சமன்வய
நோக்கு’ சார்ந்த கண்ணோட்டமும் அந்த நெறியை ஆழ்படக் கற்று அதனை உள்வாங்கியிருக்கும்
அவரிடம் உண்டு. உதாரணமாக, வேதங்கள் ‘அபௌருஷேயம்’ (மனிதரால் செய்யப்படாதவை) என்ற சம்பிரதாயமான
கருத்தை அவர் விவாதத்திற்கே எடுத்துக் கொள்வதில்லை. “வேதங்களை இயற்றியவர்கள் யார்?
ரிஷிகள். வேதங்கள் என்பவை ரிஷிகள் தம் தெய்வாவேச நிலையில் இயற்றிய பாடல்களால் நிரம்பியவை.
மிக உயர்ந்த கவித்துவ உச்சங்கள். மிக எளிய வேண்டுதல்கள்… “ (பக். 15) என்று தான்
ஆரம்பிக்கிறார். அதே சமயம், அஸ்வமேத யாகத்தைப் பற்றி எழுதுகையில் அதன் சடங்கு சார்ந்த
பரிமாணங்களை வரலாற்று ரீதியாக முற்றிலுமாக அலசி ஆராய்ந்து விட்டு, அதன் பிரபஞ்ச உருவகத்தையும்
மகத்தான குறியீட்டுத் தன்மையையும் மறக்காமல் குறிப்பிடுகிறார் (பக். 233). வேதங்களின்
ஞான காண்டம் சார்ந்த தத்துவப் பகுதிகள் மட்டுமல்ல, அவற்றிலுள்ள சடங்குகள் சார்ந்த கர்மகாண்டப்
பகுதிகளும் கூட முக்கியமானவையே என்பதை அக்நிசயனம், அதிராத்ரம் போன்ற வேள்விகள் குறித்த
ஆழ் அறிதல்கள் மூலம் விளக்குகிறார்.
வேதங்களைப் பற்றிய
விரிவான கல்வியால், ஆராய்ச்சியால், சமகாலத்தில் ஏதேனும் பயன் உண்டா என்று வாசகன் மனதில்
இயல்பாகவே எழும் கேள்விகளை ஊகித்து, தக்க இடங்களில் சமகால பிரச்சினைகள், சமகால அறிவுசார்
விவாதங்கள் ஆகியவற்றையும் தொட்டுச் செல்கிறது இந்த நூல். அதர்வ வேதத்தின் பூமி சூக்தம்
அளிக்கும் மகத்தான சூழலியல் பார்வைகள், டாக்டர் அம்பேத்கர் பார்வையில் வேதகால சமுதாயத்தைப்
பற்றிய மதிப்பீடு, வேதத்தின் சமூக பார்வை : ஆழியும் பிரமிடும், நவீன இந்து மறுமலர்ச்சிக்
காலத்திய சமூக சீர்திருத்தங்களில் வேத சிந்தனைகளின் தாக்கம், வேதப் பெண்ணியம் முதலானவை
குறித்த கட்டுரைகள் அரசியல், சமூக தளங்களில் செயல்படும் இந்துத்துவர்கள் கட்டாயம் வாசித்து
உள்வாங்க வேண்டியவை.
சோமபானம் என்றால்
என்ன? சோமலதை என்ற தாவரம் எதுவாக இருக்கக் கூடும்? சரஸ்வதி நதியைக் குறித்து நவீன ஆராய்ச்சிகள்
சொல்வதென்ன? சிந்துவெளி இலச்சினைகளில் உள்ள ஒற்றைக் கொம்பு மிருகம் குதிரையா அல்லது
வேறொன்றா? அது எதைக் குறிக்கிறது? ஆரியப் படையெடுப்பு, ஆரிய இனவாதம் இவற்றுக்கு ஏதேனும்
ஆதாரங்கள் உண்டா? – இந்த வரலாற்றுப் புதிர்கள் ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டு அறிவுபூர்வமாக,
தர்க்கபூர்வமாக ஆராயும் பகுதிகள் இந்த நூலில் உண்டு.
அதற்கிணையாக, அறிதலின்
பரவசமும் கவித்துவமும் வெளிப்படும் கீழ்க்காண்பது போன்ற இடங்களும் உண்டு.
 “ஆதித்தன்னுணர்வின் படுகையில் இருந்து மலர்ந்த மலரே,
இப்பொருண்மைப் பிரபஞ்சம். நாரணன் தொப்புளில் இருந்து எழும் கமலத்தில் சிருஷ்டி தேவன்
இருக்கிறான். அவன் எதைக் கொண்டு படைக்கிறான்? பிரபஞ்ச சிருஷ்டியின் மர்மம் என்ன?…
ஆதித் தன்னுணர்வே பிரபஞ்சமாக விரிகிறது, பிரளயத்தில் ஒடுங்குகிறது. ஆனால், தன்னுணர்வின்
தூய இருப்பில், இவை அனைத்துமே ஒன்றாக, இருப்பும் இருப்பின்மையுமாக இருக்கின்றன” (பக்.
24).
நாம் நன்கறிந்த
தொன்மங்களையும், நன்கு வாசித்த படைப்புகளையும் (உதா: லா.ச.ரா.வின் ‘பாற்கடல்’ போல)
முற்றிலும் புதிய வெளிச்சம் பாய்ச்சிக் காட்டும் மின்னல்களும் உண்டு.
“ஆழ்மனத்தின் இருட்கடல்,
அதிமனத்தின் ஒளிக்கடலுக்கு எதிரானதல்ல. இந்த ஆழ்மனத்தின் அடி ஆழங்களிலிருந்தே அமிர்தத்தை,
இறவாமையைக் கோரும் இனிமையான சோமப் பேரலை எழும்புகிறது. மனம், அதன் ஒளிமிகுந்த தருணங்களில்
எல்லாம் இப்பேரலையின் திவலைகளையே ருசிக்கிறது. இப்பாடலில் விதையாக இருப்பது, இந்தியப்
புராணங்களில் பிற்காலத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஒரு முக்கியத் தொன்மக் கதையாக
மாறும். கடலைக் கடைந்து அமுதம் எடுக்கும் கதை அது. நன்மையும் தீமையும் இணைந்து, இறவாமையை
அடைய அகக்கடலைக் கடையும் அந்த பாற்கடல் தொன்மம், எல்லா அகச்செயல்பாடுகளுக்குமான ஓர்
ஆதார உருவகமாக விளங்குகிறது. இதை, ஒவ்வொரு இந்தியப் படைப்பாளியும் தனது அகத்திலேயே
கூட உணர்ந்திருப்பார்கள்” (பக். 161)
ஒட்டுமொத்தமாகச்
சொல்வதானால், இந்துப் பண்பாடு என்கிற பிரம்மாண்டத்தின் பல கூறுகளில் ஒன்று அல்ல வேதம்
என்பது. வேதத்தின் இடம் என்பது மையமானதும் ஆதாரமானதும் ஆகும். “வேதமன்றோ அனைத்து அறத்தின்
ஆணிவேர்” (வேதோsகிலோ தர்மமூலம்) என்பது முதுமொழி. எனவே, இந்துப் பண்பாட்டின் மீது பற்றும்
நேசமும் கொண்டு, அதைக் கற்கவும், கற்பிக்கவும் விழைபவர்களுக்கு வேதங்களைப் பற்றிய அடிப்படையான
கல்வி என்பது அத்தியாவசியமானது. அதற்கான அனைவருக்குமான ஒரு அறிவுசார் கையேடு இந்த நூல்.
“ஞானமும் தைரியமும்
கொண்ட மக்கள், மனத்தின் உதவியினாலேயே பெரும் காரியங்களைப் போர்க்காலங்களிலும் அமைதிக்
காலங்களிலும் செய்கிறார்கள்,. அந்த மனம் மங்களகரமான சங்கல்பத்துடன் இருக்கட்டும்” (பக்.
173)
என்ற சிவசங்கல்ப
மந்திரத்தின் வாசகங்கள் குறிப்பிடும் அக ஒளியின் விகசிப்பு இந்த நூலின் கட்டமைப்பிலும்,
இதன் வெளிப்பாட்டிலும் நெடுகக் காணக் கிடைக்கிறது.
முதல்பதிப்பு வெளிவந்தபோது,
இத்தகைய காத்திரமான நூலுக்கேற்ற உரிய கவனம் இந்த நூலுக்குப் பரவலாகக் கிடைக்கவில்லை
என்பது ஒரு பெருங்குறை. நமது சூழலின் துரதிர்ஷ்டமும் கூட. செம்மையாக வெளிவரும் இந்த
இரண்டாம் பதிப்பில் இது உரிய கவனத்தையும் தீவிர வாசிப்பையும் பெற வேண்டும் என்று ஆசைப்
படுகிறேன். பெறும் என்று நம்புகிறேன்.

Posted on Leave a comment

ஹிந்துத்துவ அறிவியக்கச் செயல்பாடும் சென்னைப் புத்தகக் கண்காட்சியும் | ஹரன் பிரசன்னா



43வது சென்னைப்
புத்தகக் கண்காட்சி 2020 ஜனவரி மாதம் நடந்து முடிந்தது. பல லட்சம் மக்கள் கலந்துகொண்ட
இந்தப் புத்தகக் கண்காட்சியில் பல்லாயிரக் கணக்கான புத்தகங்கள் விற்பனையாயின. தமிழ்நாடு
முழுக்கப் புத்தகக் கண்காட்சிகள் நடந்தாலும், சென்னைப் புத்தகக் கண்காட்சியைப் போல
மிகப் பெரிய வெற்றி பெற்ற புத்தகக் கண்காட்சி பிறிதொன்றில்லை எனலாம். இந்தியா முழுவதிலும்
நடக்கும் பல புத்தகக் கண்காட்சிகளிலும்கூட, இந்த அளவு வாசகர்கள் திரளாக வந்திருந்து
புத்தகங்கள் வாங்குவது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் மட்டும்தான். அந்த அளவுக்கு
சென்னையின் ஒரு அடையாளமாகவே மாறிப் போயிருக்கிறது சென்னைப் புத்தகக் கண்காட்சி.
இந்த சென்னைப் புத்தகக்
கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை ஒரு பருந்துப் பார்வையில்
பார்த்தோமானால், அரசியல் புத்தகங்களில் பெரும்பாலும் கண்ணில் பட்டவை இடதுசாரிகளின்
புத்தகங்களும், திராவிட அரசியலையும் ஈவெராவையும் விதந்தோதும் புத்தகங்களும்தான். ஹிந்துத்துவ
இயக்கங்களையும் ஹிந்துத்துவத் தலைவர்களையும் பற்றிய புத்தகங்கள் மிகச் சொற்பமே. அதேபோல்
திராவிட, கம்யூனிஸ சித்தாந்தங்களை மிகக் கறாராக வெளியில் இருந்து விமர்சிக்கும் புத்தகங்களும்
மிகக் குறைவே.


இதற்கான காரணங்களை
மிக எளிதாகவே ஊகிக்கலாம்.
* ஹிந்துத்துவ இயக்கங்களையும்
ஹிந்துத்துவ சித்தாந்தத்தையும் விமர்சித்தால் மட்டுமே இங்கே செல்லுபடியாகும் என்ற நிலை
மிகத் தெளிவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மிக நீண்ட காலத் தொடர் செயல்பாட்டின் வெற்றி
இது.
* இஸ்லாமிய, கிறித்துவ
அடிப்படைவாதத்தை ஆதரித்தாலும்கூட அந்த எழுத்தாளர்கள் முற்போக்காளர்கள் என்றே அறியப்படுவார்கள்.
ஆனால் யாரேனும் ஒருவர் தன் வாழ்நாளில் ஒரே ஒரு முறை ஹிந்துத்துவக் கருத்தியலின் தேவையைப்
பற்றி மிக நடுநிலையாக ஒரு புத்தகம் எழுதினாலும் போதும், அவர் ஹிந்துத்துவ ஆதரவாளர்
என்று முத்திரை குத்தப்படுவார். தன் மீதான கறை நீங்க அவர் எதிர்முனைக்குச் சென்று ஹிந்துத்துவ
இயக்கங்களை வசைபாடினால் மட்டுமே அவர் மீதான கறை நீங்கும்.
* ஹிந்துத்துவ ஆதரவாளர்களாக
அறியப்படும் எழுத்தாளர்கள் இங்கே இருட்டடிப்புச் செய்யப்பட்டுப் புறக்கணிக்கப்படுவார்கள்.
இதனால் ஒரு எழுத்தாளர் தன்னை எக்காரணம் கொண்டும் ஹிந்துத்துவ எழுத்தாளர் என்று அறிவித்துக்கொள்ள
முன்வரமாட்டார்.
* ஒருவர் ஹிந்துத்துவ
ஆதரவாளராக இருந்து, அவர் எழுதுவது தூய இலக்கியம் என்றாலும் கூட இங்கே அவர் புறக்கணிக்கவே
படுவார். எனவே இலக்கியவாதிகள்கூட தங்கள் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு, ஒன்று அமைதியாக
இருப்பார்கள் அல்லது தங்கள் மனசாட்சிக்கு விரோதமாக ஹிந்துத்துவத்துக்கு எதிராகப் பேசுவார்கள்.
இப்படிப்பட்ட சூழலில்
யார்தான் ஹிந்துத்துவ ஆதரவுப் புத்தகங்களை எழுத முன்வருவார்கள்? அப்படியே எழுதினாலும்
எத்தனை பதிப்பகங்கள் அதைப் பதிப்பக்க முன்வரும்? தொடர்ச்சியாக இத்தகைய புத்தகங்களைப்
பதிப்பிக்கும் ஒரு சில பதிப்பகங்களும் கூட முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுகிறது
என்பதே யதார்த்தம். இன்றைய சூழலில் ஹிந்துத்துவ எதிர்ப்பாளராக இருப்பதே பல வகைகளில்
நல்லது என்பதால், அதுவே வாய்ப்பரசியல் செய்ய வசதியானது என்பதால் பலரும் ஹிந்துத்துவக்
கருத்துக்களைத் தாங்கிய புத்தகங்களைப் பதிப்பிப்பதில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார்கள்.
இதில் நம் தரப்புக்காரர்களின்
பலவீனமும் ஒன்று உள்ளது. எதிர்த்தரப்புக்காரர்கள் எப்போதாவது ஹிந்து ஆதரவுக் கருத்துக்களை
எழுதினால், அதன் உள்நோக்கம் என்ன என்றுகூட யோசிக்காமல் உடனடியாக அதை ஆதரித்துப் பேசுவார்கள்,
எழுதுவார்கள். ஆனால் ஹிந்துத்துவ ஆதரவுத் தரப்பின் கருத்தை எந்த ஒரு நிலையில் ஹிந்துத்துவ
எதிர்ப்பாளர்கள் ஆதரித்து எழுதவோ பேசவோ மாட்டவே மாட்டார்கள். இதைப் புரிந்துகொள்வது
முக்கியம். இதைப் புரிந்துகொண்டால்தான் எப்படி ஹிந்துத்துவ ஆதரவு எழுத்தாளர்கள் இங்கே
அமைதியாக்கப்படுகிறார்கள் என்பதை உணர முடியும்.

இப்படியான பல காரணங்களால்,
எல்லாக் கருத்துகளையும் வெளியிடும் ஒரு தளமாகச் செயல்படும் பொதுவான பதிப்பகங்கள் கூட
ஹிந்துத்துவ ஆதரவுப் புத்தகங்களை வெளியிட முன்வருவதில்லை. அல்லது நூறு ஹிந்துத்துவ
எதிர்க்கருத்துகள் அல்லது இடதுசாரிக் கருத்தியல் புத்தகங்களைக் கொண்டு வரும்போது ஒன்றிரண்டு
ஹிந்துத்துவ ஆதரவுக் கருத்துகளைக் கொண்ட புத்தகங்களைக் கொண்டு வருகின்றன.
இலக்கியவாதிகள்,
எழுத்தாளர்கள் என அனைவரும் இந்தப் போலி முற்போக்கு நடுநிலையில் பீடிக்கப்பட்டிருப்பதால்,
புத்தகக் கண்காட்சியில் எவ்விதமான புத்தகங்கள் இருக்கும்? அப்படியானால் ஹிந்துத்துவ
இயக்கங்கள் இதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?
இந்த அறிவியக்க
சூழலைப் பற்றி இன்னும் தமிழக ஹிந்துத்துவ இயக்கங்கள் பெரிய அளவில் புரிந்து கொள்ளவில்லை
என்பது துரதிர்ஷ்டவசமானது. விஜயபாரதம் என்ற ஒரு பதிப்பகத்தை மட்டுமே ஹிந்துத்துவப்
புத்தகங்களை மட்டுமே வெளியிடும் பதிப்பகம் என்று கூறலாம். தடம் பதிப்பகம் இப்போதுதான்
சில புத்தகங்களை வெளியிடத் துவங்கி இருக்கிறது. மற்றபடி வேறு எந்த ஒரு பதிப்பகத்தையும்
இப்படி ஹிந்துத்துவக் கருத்தியல் சார்ந்த புத்தகங்களை மட்டுமே வெளியிடும் புத்தகம்
என்று சொல்லிவிடமுடியாது.
அதே சமயம் இடதுசாரி
கருத்தியல் தொடர்பான கருத்துக்களை மட்டுமே வெளியிடும் பதிப்பகம் என்றால் குறைந்தது
ஐம்பதுக்கும் மேற்பட்ட பதிப்பகங்களாவது இருக்கும். அதேபோல் திராவிட இயக்கக் கருத்தியலைச்
சார்ந்த புத்தகங்களைப் பதிப்பிக்கும் பதிப்பகங்கள் நூறாவது இருக்கும்.
இதற்கு என்ன காரணம்?
மிக முக்கியமான காரணம், ஹிந்துத்துவ இயக்கங்கள் எப்போதும் தங்கள் ஆற்றலை சேவையின்பால்
மட்டுமே செலவிட விரும்புகின்றன. அறிவியக்கச் செயல்பாடு என்பது சேவைக்குத் துணை செய்வதாகவே
இருக்கவேண்டும் என்கிற அடிப்படை மனநிலையில் இருந்து இவர்களால் வெளியே வரவே முடியவில்லை.
உண்மையில் நாம் இந்தக் கருத்தைப் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் இன்றைய சூழலில் இப்படி
நாம் சிக்கிக்கொள்வது நமக்கு அதிக பலனைத் தரப்போவதில்லை. நம் எதிரிகள் நம் ஆயுதங்களைத்
தீர்மானிப்பார்கள் என்பதையும் நாம் கருத்தில்கொள்ளத்தான் வேண்டும்.
மானுட சேவை என்பது
எத்தனை முக்கியமானதோ அதற்கு ஈடாக இந்த அறிவியக்கச் செயல்பாட்டையும் முன்னெடுக்க வேண்டும்.
இல்லையென்றால் நாம் கருத்தியல் ரீதியாக மிக பலவீனமானவர்கள் என்கிற மாயை மீண்டும் மீண்டும்
எதிர்த்தரப்புக் காரர்களால் சொல்லப்பட்டு அது உண்மை என்றாக்கப்பட்டுவிடும். ஏற்கெனவே
அப்படி ஆக்கப்பட்டுவிட்டது. இந்த நொடியிலாவது நாம் விழித்துக்கொள்ளவில்லை என்றால்,
நம்மால் மீண்டும் சரிசெய்யவே முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவோம்.
அப்படியானால் ஹிந்துத்துவ
இயக்கங்களும் ஹிந்துத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் அரசியல் அமைப்புகளும் என்ன செய்யவேண்டும்?
* தொடர்ந்து ஹிந்த்துத்துவ
அறிவியக்கம் சார்ந்த புத்தகங்களை வெளியிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அந்தப் புத்தகங்கள்
16 பக்க ப்ரவுச்சர்கள் போல் இல்லாமல், தெளிவான திட்டத்துடன் கூடிய நூலாக உருவாக்கப்படவேண்டும்.
* நூல் கட்டுமானம்,
அட்டை என எல்லாவற்றிலும் கவனம் எடுத்து மிகச் சிறப்பான தயாரிப்பில் கொண்டு வரவேண்டும்.
* அறிவியக்கம் சார்ந்தது
என்பதால் அதோடு நேரடித் தொடர்பற்ற தீவிர நவீன இலக்கியப் படைப்புகளில் இருந்து விலகி
இருக்கக்கூடாது. ஹிந்துத்துவ சித்தாந்தத்தைப் பற்றிய நல்ல நேர்மையான புரிதல் உள்ள இலக்கியவாதிகளின்
தீவிரமான படைப்புகள் வெளிவர இயன்றவற்றைச் செய்துகொண்டே இருக்கவேண்டும். வெங்கட் சாமிநாதன்,
பைரப்பா போன்ற பிதாமகர்களை இங்கே நினைவுகூரலாம்.
* இவற்றையெல்லாம்
விட மிக முக்கியமான விஷயம், ஹிந்துத்துவப் புத்தகங்கள் வெளிவந்தால் அவற்றை வாங்கி வாசித்து
அதைப் பற்றி விவாதிக்கவோ எழுதவோ செய்யவேண்டும். இல்லையென்றால் மேலதிகப் புத்தகங்கள்
வராது என்பதோடு, எழுதுபவர்கள் தங்கள் ஊக்கத்தையும் இழந்து விடுவார்கள். அரவிந்தன் நீலகண்டன்,
ம.வெங்கடேசன் போன்ற இன்றைய எழுத்தாளர்களின் புத்தகங்களை இங்கே நினைவுகூரலாம்.
* ஹிந்துத்தவ அரசியல்
அமைப்புகள் இத்தகைய புத்தகங்களைத் தங்கள் தொண்டர்களுக்குக் கொண்டு சேர்ப்பது மிக முக்கியமானது.
தொண்டர்களை சித்தாந்த ரீதியாகத் தயார்ப்படுத்த இது போன்ற புத்தகங்களின் தேவை அவசியம்.
புத்தகங்கள் மட்டுமே தெளிவான ஒரு பார்வையை ஹிந்துத்துவ அரசியல் தொண்டர்களுக்குத் தரமுடியும்.
* ஹிந்துத்துவ ஆதரவுப்
புத்தகங்களைப் பரவலாக்குவது போலவே, ஹிந்துத்துவ எதிர்ப்புப் புத்தகங்களின் பொய்களையும்
இணையாக அம்பலப்படுத்தவேண்டும்.
* ஹிந்துத்துவ ஆதரவுப்
புத்தகங்கள் நூலக ஆணைகளில் புறக்கணிக்கப்பட்டால் அது தொடர்பாக வெளிப்படையாகப் போராட
வேண்டும். பொய்களைச் சுமந்து திரியும் புத்தகங்கள் நூலகங்களுக்கு வாங்கப்பட்டால் அதை
எதிர்த்தும் போராடவேண்டும்.
இப்படிப் பல விஷயங்களைக்
கருத்தில் கொண்டு செயல்படாவிட்டால், சென்னைப் புத்தகக் கண்காட்சி என்றல்ல, எந்தப் புத்தகக்
கண்காட்சிக்குப் போனாலும் ஈவெராவும் மாவோவுமே நம்மை வரவேற்பார்கள். ஹிந்துத்துவ அரசியல்
இயக்கங்கள் இதைப் புரிந்துகொண்டு செயலாற்றவேண்டியது உடனடியாக மேற்கொள்ளவேண்டிய முக்கியமான
செயல்பாடு என்பதில் மாற்றுக் கருத்தே இருக்கமுடியாது.

Posted on Leave a comment

1984ம் ஆண்டில் அழிவின் அடையாளங்கள் – எழுத்தாளர் அமிதவ் கோஷ் அனுபவங்கள் – | தமிழில்: ராம் ஸ்ரீதர்

(New Yorker 17, July, 1995 இதழில் வெளியான
கட்டுரையின் தமிழ் வடிவம்)
  
1984ம் ஆண்டில்
மிகப் பெரிய அழிவின் அடையாளங்களை நம் இந்தியா அனுபவித்த மாதிரி உலகத்தில் எங்குமே பார்த்திருக்க
முடியாது.
தனிநாடு கேட்டு
பஞ்சாப் மாநிலத்தில் கிளர்ந்த பயங்கரம்; சீக்கியர்களுக்குப் புனிதமான பொற்கோயிலில்
நடந்த ராணுவ முற்றுகை; நமது (அப்போதைய) பிரதமரான இந்திரா காந்தியின் படுகொலை; பல ஊர்களில்
நடந்த கலவரம்; போபாலில் நடந்த விஷவாயு பயங்கரம் – இவையெல்லாமே அடுத்தடுத்து நடந்த அவலங்கள்.
1984ல் புது தில்லியில் செய்தித்தாளைப் பிரிப்பதற்கே மனதில் திடம் வேண்டும். இந்த ரத்தம்
தோய்ந்த நினைவுகள் எல்லாமே என் மனதில் ஆழ ஊடுருவி இருந்தன. நான் பார்த்த, கேட்ட, அனுபவித்த
அனுபவங்கள் எல்லாம் சேர்ந்துதான் நான் எழுத்தாளராவதற்கு முக்கியக் காரணங்களாகின. இவையெல்லாம்
என்னுள் ஏராளமான மாற்றங்களை உண்டு பண்ணியிருந்தாலும் இது நாள் வரை இவற்றை எழுத்தில்
கொண்டுவர நான் முயன்றதில்லை.
அந்த இக்கட்டான
நாட்களில் தில்லியிலுள்ள டிஃபன்ஸ் காலனி குடியிருப்பில் நான் வசித்து வந்தேன். பிரமாண்டமான
வீடுகள். வீட்டிலுள்ள வேலையாட்களுக்குத் தங்குவதற்கு தனித்தனியே குடியிருப்புகள். தேன்கூட்டைப்
போல அடுக்கடுக்காக குடியிருப்புகள், தலையில் முளைத்த டிவி ஆன்டென்னா கொம்புகள்…
இங்கிலாந்தில் உள்ள
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் டாக்டரேட் வாங்கிவிட்டு, தில்லி பல்கலைக்கழகத்தில்
விரிவுரையாளர் வேலை கிடைத்த சமயம் அது. தனியே இருக்கும் நேரங்களில் என்னுடைய முதல்
நாவலை எழுதவும் திட்டமிட்டு வேலை செய்து வந்தேன். அந்த 31ம் தேதி அக்டோபர் மாதம், திருமதி.
இந்திரா காந்தி இறந்த அன்று எப்போதும்போல காலை ஒன்பதரை மணிக்கு பஸ் ஏறி தில்லி பல்கலைக்கழகத்திற்குச்
சென்று கொண்டிருந்தேன். நான் இருந்த இடத்திலிருந்து அது நல்ல தூரம். அந்த சமயத்தில்
இந்தப் படுகொலை பற்றிய விஷயம் எனக்குத் தெரியாது. அந்த செய்தி வேகமாகப் பரவி நான் பல்கலைக்கழகம்
சென்றடைந்தபோது என்னைச் சேர்ந்தது.
கல்லூரி வளாகத்தினுள்ளே
ஆங்காங்கே சிறு சிறு குழுவாக மக்கள் கையில் ட்ரான்ஸிஸ்டர் ரேடியோவுடன் நின்று செய்திககளைக்
கேட்டு விவாதித்துக்கொண்டிருந்தனர். சீக்கியர்களின் புனிதச் சின்னமான பொற்கோவிலுக்குள்
ராணுவத்தை அனுப்பிய காரணத்திற்காகப் பழிவாங்கும் விதமாக சீக்கிய மெய்க்காப்பாளர்களே
இந்திரா காந்தியைச் சுட்டுக் கொன்றுவிட்டனர் என்ற பேச்சு காற்றில் அலைந்து கொண்டிருந்தது.
வகுப்பறைக்குள் நுழையும் முன் திருமதி காந்தி மீது துப்பாக்கிச் சூடு நடந்து அவர் சிகிச்சைக்காக
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை ஆல் இந்தியா ரேடியோ ஒலிபரப்பிக்
கொண்டிருந்தது.

நான் எப்போதும்
போல வகுப்பறைக்குள் நுழைந்து என் பாடத்தை ஆரம்பிக்க முற்பட்டேன். நிறைய மாணவர்கள் வரவில்லை.
வந்திருந்த மாணவர்களும் ஒரு மாதிரியான அச்சத்துடன் காணப்பட்டார்கள். நானே பாடம் எடுக்கத்
தடுமாறியபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் திருமதி இந்திரா காந்தியின் ஆதரவாளன்
அல்ல. ’70 களின் மத்தியில் எமெர்ஜென்சி என்ற பெயரில் அடக்குமுறை ஏவப்பட்டு நடந்த நிகழ்வுகள்
என் மனதில் பசுமையாக நினைவிருந்தன. ஆனாலும், ஒரு துணிச்சல்மிக்க, ஆளுமை நிறைந்த இந்தியப்
பெண்மணியைத் தாக்கிய விதம் சங்கடப்படுத்துவதாக இருந்தது.
திருமதி. இந்திரா
காந்தியின் மறைவு பற்றி பாகிஸ்தான் வானொலிதான் (கராச்சியிலிருந்து) மதியம் 1.30 மணி
வாக்கில் ஒலிபரப்பியது. ஆல் இந்தியா ரேடியோவில் எல்லா நிலையங்களும் சோக சங்கீதத்தை
வாசிக்க ஆரம்பித்தன. நான் ஒரு அயல் தேச தொலைபேசி அழைப்பு செய்ய வேண்டியிருந்தது. நண்பர்
ஹரி சென் அருகில் இருந்ததால் தன் வீட்டிலிருந்து செய்யலாம் என அழைத்தார். அவர் வீட்டுக்குச்
செல்ல வேண்டுமானால், தில்லி கன்னாட் பிளேஸ் எனும் இடத்தில பஸ் மாற வேண்டும். பஸ்ஸில்
செல்லும்போது கிட்டத்தட்ட எல்லாக் கடைகளுமே மூடியிருந்தன. எங்களுடன் அந்தக் கூட்டமில்லாத
பஸ்ஸில் ஒரு சீக்கிய அன்பரும் பயணித்ததை நான் முதலில் கவனிக்கவில்லை. துரதிருஷ்டவசமாக
திருமதி. இந்திரா காந்தி இறந்த மருத்துவமனை வழியாகத்தான் அந்த பஸ் சென்றது. அங்கிருந்த
ஒரு கும்பல் இந்திய ஜனாதிபதி ஜெயில் சிங் சென்ற காரை, அவர் சீக்கியர் என்ற ஒரே காரணத்தினால்,
அப்போதுதான் மறித்துத் தாக்கியிருந்தது. எங்களில் பெரும்பாலானோருக்கு தில்லியில் சீக்கியர்கள்
மீது தாக்குதல் ஆரம்பமாகி உள்ள விஷயமே தெரியாதிருந்தது.
பஸ் அந்த மருத்துவமனையை
நெருங்கும்போது அங்கிருந்த இளைஞர்கள் பலர் கைகளில் சைக்கிள் செயின், இரும்புக் குழாய்கள்
என்று ஆயுதங்களை ஏந்தி, கடந்து செல்லும் ஒவ்வொரு வண்டியையும் உற்று நோக்கியவாறு இருந்தனர்.
என் அருகே அமர்ந்திருந்த ஒரு காத்திரமான பெண்மணி அந்த சீக்கிய அன்பரைப் பார்த்து ஒளிந்து
கொள்ளுமாறு ஹிந்தியில் கிசுகிசுத்தார். அந்த சீக்கிய அன்பர் சற்று சிரமப்பட்டு இரு
இருக்கைகளுக்கிடையே தன்னை மறைத்துக் கொண்டார்.
சில நிமிடங்களில்
கையில் ஆயுதங்களுடன் ஒரு இளைஞர் கும்பல் பஸ்ஸை வழிமறித்து, கூட்டத்தில் இருந்த ஒருவன்
வண்டி ஓட்டுநரிடம், ‘உள்ளே சீக்கியர்கள் இருக்கிறார்களா?’ என்று கேட்க, அவர் ‘இல்லை’
என்றார். அதற்குப் பிறகும் திருப்தி அடையாத சில இளைஞர்கள் பஸ்ஸில் ஏறி நோட்டம் பார்த்து,
‘சீக்கியர்கள் யாரேனும் இருக்கிறார்களா?’ என்று மெல்லிய, கோபம் இல்லாத குரலில் நிதானமாகக்
கேட்டதே மிக அச்சுறுத்தலாக இருந்தது. பஸ் பயணிகள் நிறையப்பேர் ஒருமித்த குரலில் ‘அப்படி
யாரும் இல்லை. நேரமாகிவிட்டது. வழிவிடுங்கள்’ என்று கூறவும், அந்த சோம்பேறிகள் கீழே
இறங்கிக் கொண்டு பஸ்ஸுக்கு அனுமதி கொடுத்தனர்.
ரிங் ரோட் அருகே
பஸ் செல்லும் வரை யாருமே பேசவில்லை. நண்பர் ஹரி சென் புதிதாக வளர்ந்திருந்த சஃப்தர்ஜங்
என்க்ளேவ் என்ற இடத்தில இருந்தார். அந்த ஏரியாவில் நிறைய சீக்கிய அன்பர்களும் குடியிருந்தனர்.
அன்று இரவு நண்பர் வீட்டில் தங்கிவிட்டு, மறுநாள் காலை வெளியே வந்தபோது காற்றில் அச்சம்,
வெறுப்பு எல்லாம் கலந்து அங்கங்கே சீக்கிய வீடுகள், கடைகள் எரிந்துகொண்டிருந்தன. அருகே
இருந்த அன்பர் ஒருவர் எல்லா சீக்கிய வீடுகள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு, உடைமைகள்
திருடப்பட்டு வருகின்றன என்றும், சீக்கியர்களுக்கு யாரேனும் இந்துவோ, இஸ்லாமியர்களோ
புகலிடம் கொடுத்தால் அவர்களையும் ஒரு கும்பல் தாக்குவதாகத் தெரிவித்தார்.

Image Credit: AFP
சம்பவங்கள் அமைதியாக,
அதிகப்படியான திகில் கலந்த ஆச்சரியத்துடன் நிகழ்ந்து கொண்டிருந்ததை உணர முடிந்தது.
வழக்கம் போல இருக்கும் கால நேர அவசரப் போக்குவரத்தின் சப்தங்கள் அதிகமாக இல்லை. நிதானமாகத்
திட்டமிட்டு அந்த நிகழ்வின் அமைப்பாளர்கள் ஆங்காங்கே குண்டர்கள் சீக்கியர்களின் வீடுகள்
/ கடைகள் என்று குறிவைத்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். கையில் தேவையான பெட்ரோல் இருப்பை
வைத்துக்கொண்டு தேர்வு செய்து சீக்கியர்களின் குருத்வாரா (அவர்கள் தொழும் இடங்கள்)
எங்கெங்கே இருக்கிறதோ அவற்றையெல்லாம் தீ வைத்து எரித்துக் கொண்டிருந்தார்கள். சீக்கிய
இளைஞர்களை இழுத்து வந்து அடித்து நொறுக்கி உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொண்டிருந்தார்கள்.
உடைமைகளை சேதமாக்குவதை விட சீக்கியர்களை உயிருடன் கொளுத்துவதே ஆர்பாட்டக்காரர்களின்
நோக்கமாக இருந்தது. நகரமெங்கும் தீயின் வெளிச்ச நடனம்.
நான் நேரில் பார்த்ததுபோக,
இதில் கணவனையும் தன் மூன்று மகன்களையும் இழந்த ஒரு சீக்கியப் பெண்மணி, ஹரி சென் வீட்டருகே
இருந்த ஒரு சமூக சேவகரிடம் விலாவாரியாக விவரித்துக் கொண்டிருந்ததை வேறு எதுவும் செய்யமுடியாமல்
கைகளைக் கட்டிக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தோம். அடுத்த சிலநாட்களில் தில்லியில் மட்டுமே
சுமார் 2500 சீக்கியர்கள் பலியாகினர். மற்ற நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் மடிந்து இருக்கலாம்.
இந்தக் கணக்கு வெளியே வரவேயில்லை. இறந்தவர்களில் பெரும்பாலானோர் சீக்கிய ஆண்கள். இதில்
உடைமைகள், வீடுகள் எல்லாவற்றையும் இழந்து நிராதரவானவர்கள் ஏராளம்.
இந்தியாவில் உள்ள
பெரும்பான்மை மக்களைப் போலவே இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது – 1947ல் நடந்தது
போன்ற நிகழ்வுகள் – இனி ஒருபோதும் நிகழாது என்றே நம்பியிருந்தோம். ஆனால், எங்களுடைய
நம்பிக்கைகள் இந்தக் கொடூர நிகழ்வுகளினால் பொடிப்பொடியாகின. வன்முறையின் ரத்தவெறி உச்சத்தை
நேரில் பார்த்து அனுபவிக்கும் துயரமான வாய்ப்பு கிடைத்தவர்களில் நானும் ஒருவன்.
நண்பர் ஹரி சென்னும்
நானும் எல்லாவற்றையும் விவாதித்துக் கொண்டிருக்கையில், ஹரியின் அம்மா பொறுப்புடன் அருகே
இருந்த சீக்கிய முதியவர்களின் வீட்டுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்கள் தன்
(ஹரி சென்) வீட்டிற்கு வந்துவிட ஆலோசனை கூறினார். ஏனென்றால், ஆர்ப்பாட்டக்காரர்கள்
ஹரி சென்னின் வீடு இருந்த சஃப்தர்ஜங் என்க்ளேவ் ஏரியாவில் ஒவ்வொரு வீடாக சோதனையிட்டு
வருவதை அறிந்தோம்.
அந்த வீட்டிலிருந்த
முதிய சீக்கியரை பாவா என்று அன்புடன் அழைத்து வந்தார்கள். அவர் வெளியுலகில் நடப்பதின்
தீவிரம் அறியாதவராகக் காணப்பட்டார். அவருடன் சூழ்நிலையின் தீவிரத்தை எப்படி விளக்குவது
என்று யோசித்தேன். அவரோ எல்லாவற்றையும் நகைச்சுவையுடன் எடுத்துக் கொண்டு தன்னை அந்த
ஏரியாவில் இருக்கும் யாரும் துன்புறுத்த மாட்டார்கள் என்று தீர்மானமாகச் சொல்லி, என்னையும்
நண்பர் ஹரியையும் முதுகில் தட்டிக் கொடுத்து வெளியே அனுப்பிவிட்டார்.
அப்போது நடந்துகொண்டிருந்த
வன்முறையை அடக்க அரசு ஆவன செய்யும் என்று நம்பினேன். பொதுமக்களுக்கு இடையூறு தரும்
எந்தவொரு கலகத்தையும் அரசு அடக்க முற்படும் என்பது பொதுவாக எல்லோருடைய எதிர்பார்ப்புதானே?
அடிக்கடி ரேடியோவில் கலகத்தைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கேட்டுக் கொண்டே இருந்தோம்.
ராணுவம் என்ன செய்கிறது? பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்போது உதவி கிடைக்கும் போன்ற விவரங்கள்
எதுவும் தெரியவில்லை. ரேடியோவில் அதைப் பற்றிச் சொல்வார்கள் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமாந்து கொண்டிருந்தோம். இந்திரா காந்தி அம்மையாரைப் பார்க்க வெளிநாட்டு முக்கிய மனிதர்கள்
எல்லாம் வர ஆரம்பித்துவிட்டார்கள் என்று தெரிய வந்தது.
எதையும் உணரும்
முன், அடுத்த தெருவிலேயே கூச்சலும், புகையும் வருவதைப் பார்த்தபோது மிகுந்த அச்சமாக
இருந்தது. ராணுவத்தையோ, போலீஸ் படையையோ எங்கேயும் பார்க்க முடியவில்லை.
பாவா வீட்டு ஜன்னல்
வழியே வெளியே பார்த்தபோது நெருப்பையும், புகையையும் உணர முடிந்தது. அவரும் நிலைமையின்
தீவிரத்தை உணர்ந்து எங்களுடன் வெளியே (ஹரி வீட்டுக்கு) வரச் சம்மதித்தார். அவர் வீட்டுக்கு
வெளியே வந்தபோது சூரியன் மேற்கே மறைய ஆரம்பித்திருந்தான். அவர்களுடன் இருந்த சமையல்காரர்
சீக்கியர் அல்லாதவர் என்பதால் பாவா வீட்டிலிருந்து பார்த்துக் கொள்ள சம்மதித்தார்.
பாவா மற்றும் அவர் மனைவி இருவரையும் ஹரி வீட்டில் பத்திரமாக அமர வைத்துவிட்டு, நானும்
ஹரியும் வெளியே நின்றோம். மிகச் சரியாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்து பாவா வீட்டருகே
நின்றது. ஆயுதம் படைத்த இரண்டு குண்டர்கள் இறங்கி வீட்டினுள்ளே சென்றார்கள். சமயற்காரர்
பயந்து போயிருந்தார். அவரைச் சுற்றி ஒரு கும்பல். கத்தி, தடி, இரும்புக் கம்பி என வைத்துக்
கொண்டு, அந்த வீட்டில் உரிமையாளர் சீக்கியரா அல்லது சீக்கியர் அல்லாதவரா என்று கேட்டுக்
கொண்டிருந்தது. ஆனால் சமையற்காரர் பயந்து போயிருந்தாலும் தெளிவாக அங்கே இருந்த வயது
முதிர்ந்த சீக்கிய ஜோடி வெளியூர் சென்றுள்ளது என்றும், அவர்கள் வாடகைக்கு இருப்பது
ஒரு சீக்கியர் அல்லாதவர் வீட்டில்தான் என்று அசராமல் சொன்னார். அவர்கள் அருகே இருந்த
ஹரி வீட்டைப் பார்த்துவிட்டு அங்கே வந்து வாசல் கேட்டைத் தட்டினார்கள்.
நானும் ஹரியும்
சென்று இரண்டு பக்கமும் நின்று கொண்டு அவர்களிடம் சத்தம் போட்டோம். இங்கே சீக்கியர்கள்
யாரும் இல்லை. நீங்கள் தேவையில்லாமல் எங்களைத் துன்புறுத்த வேண்டாம் என்று ஒருமித்த
குரலில் பலமாகச் சொன்னோம். அதிசயமாக அந்தக் கூட்டம் கலைய ஆரம்பித்தது. மெதுவே உள்ளே
சென்று பார்த்தபோது பாவா எந்தவித பயமும் இல்லாமல், டீ அருந்தியபடி நிலவரத்தைப் பற்றி
அலசிக்கொண்டிருந்தார். அந்த முதியவரின் அசாத்திய தைரியத்தைப் பார்த்து அசந்து போனேன்.
அடுத்த நாள் காலை
70-80 பேர் கொண்ட கூட்டம் ஒன்று பொது மக்களைத் துன்புறுத்தவதை எதிர்த்துக் குரல் கொடுக்க
ஆரம்பித்தபோது நானும் ஒருவனாக அங்கே சேர்ந்து கொண்டேன். அங்கிருந்தோர் நிலைமையை அலசினார்கள்.
எவ்வாறு ரத்தவெறியுடன் சீக்கியர்கள் தாக்கப்படுகிறார்கள், எப்படி போலீஸும், அரசின்
மற்ற இயந்திரங்களும் பாதுகாப்பு எதுவும் கொடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றன, ஏராளமான
சீக்கிய மக்கள் எப்படிப் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்றெல்லாம் ஆவேசமாக சிலர் பேசினார்கள்.
சீக்கியர்களின் கடைகள் மற்ற உடைமைகள் எப்படி நாசமாக்கப்படுகின்றன என்பதையும் பார்க்க
முடிந்தது.
இந்தியாவின் மிகப்
புகழ் பெற்ற எழுத்தாளர் வி.எஸ். நைபால் ஒருமுறை இதுபோன்ற கலகத்தைப் பற்றி விவரித்திருந்தார்.
தென் ஆப்பிரிக்காவில் தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையின் சன்னல் வழியே பார்த்த போது,
கலகக்காரர்களுடன் சென்று கலந்து கொள்ள மிக விரும்பினாலும், அது போன்ற கூட்டத்துடன்
அதுவரை தான் கலந்துகொண்டதில்லை என்பதால் கடைசியில் தைரியம் போதாமல் அந்த வேலையைக் கைவிட்டதாக
எழுதியிருந்தார். கிட்டத்தட்ட என் நிலைமையும் அதுபோலவே இருந்தது.
இப்போது கூட்டத்தில்
அதிகமாக ஆண்களும் பெண்களும் சேர ஆரம்பித்திருந்தார்கள். ஸ்வாமி அக்னிவேஷ் என்ற அரசியலில்
ஈடுபாடுள்ள ஹிந்து சாமியாரும், ரவி சோப்ரா என்ற விஞ்ஞானியும் கலந்துகொண்டு பேச ஆரம்பித்தார்கள்.
அப்போது பின்னாளில் நம் பிரதமரான சந்திரசேகர் அவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
நான் கொஞ்சம் தைரியம் பெற்று கூட்டத்தில் ஐக்கியமாகலானேன். கூட்டம் மெதுவாக ஊர்வலமாக
அருகே இருந்த முக்கிய வியாபார ஸ்தலமான லஜ்பத் நகர் நோக்கி முன்னேறியது. மகாத்மா காந்தியின்
அஹிம்சா வழியைப் பின்பற்றி கோஷங்கள் போட்டுகொண்டு நாங்கள் முன்னேறினோம். நிதானமாகக்
கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனது மகிழ்ச்சியாக இருந்தாலும், அடுத்து என்ன நடக்குமோ
என்ற அச்சமும் இருந்தது. எப்படியும் நான் இருந்த கூட்டம் தாக்கப்படும் என்ற எண்ணம்
மிகுந்திருந்தது. சிறிது தூரம் சென்றபின், ஏகப்பட்ட ஆயுதங்களுடன் ஒரு பெருங்கூட்டம்
எங்களை நோக்கி கண்களில் வெறியுடன் முன்னேறியது. ஆனால், எங்கள் கூட்டம் அசராமல் முன்னேறியது.
அப்போது ஒரு அதிசயம்
நிகழ்ந்தது. கூட்டத்தில் புடவையுடன், சல்வார்-கமீஸுடன் இருந்த பெண்கள் சொல்லிவைத்தாற்போல
ஆண்களுக்கு முன்னால் அரணாக நடக்க ஆரம்பித்தார்கள், அந்த அற்புத வேலையை எந்தப் பெண்மணி
ஆரம்பித்தார் என்று தெரியவில்லை. ஆனால், ஒரு அன்னையின் அரவணைப்பை அங்கே உணர முடிந்தது.
எங்கள் யாருடைய கைகளிலும் எந்த ஆயுதமும் இல்லை. ஒரு சிலர் கைகளில் நமது தேசியக் கொடி
மட்டுமே காற்றில் படபடத்துத் துடித்துக் கொண்டிருந்தது. எங்கள் கண் முன்னே அந்த அராஜகக்
கூட்டம் செய்வதறியாது திகைத்து, பின் மெதுவே கலைந்து செல்ல ஆரம்பித்தது. இந்த உணர்வு
ஒரு மகத்தான, இன்று வரை மறக்க முடியாத, உணர்வு.
அடுத்த சில மணி
நேரங்களில் அந்தக் கூட்டம் – அப்போது அதற்கு ஒரு பெயரும் முளைத்திருந்தது – நகரிக்
ஏக்தா மார்ச் – ஊர் மக்களின் ஒருமித்த ஊர்வலம் – பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும்
அவர்களுக்கு நிவாரணம் உடனே வழங்க வேண்டும், மருத்துவ உதவி உட்பட எல்லா உதவிகளையும்
அரசு உடனே செய்ய வேண்டும் என்ற கோஷங்களுடன் கூட்டம் முன்னேறிக்கொண்டிருந்தது.
பத்திரிகை நிருபர்களையும்,
புகைப்படக்காரர்களையும் இப்போது பார்க்க முடிந்தது. கூட்டத்திலிருந்த லலிதா ராமதாஸ்,
வீணா தாஸ், மிதா போஸ், ராதா குமார் போன்ற சில தைரியமான தாய்மார்கள், அடைக்கலமில்லாத
சீக்கியர்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்று முன்வந்தார்கள். என்னுடைய பங்கு
இதில் சொற்பமே. நான் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. என்னால் ஆன அளவு, நான் வேலை பார்த்து
வந்த பல்கலைக்கழகத்திலிருந்து ஆட்களை உதவிக்கு அழைத்தேன். இந்தக் கூட்டத்தின் வேலை
முடிந்துவிட்டது என்றே நினைத்தேன். தவறு, விரைவிலேயே அந்தக் கூட்டத்திலிருந்த சிலர்
ஒரு ஆவணப்படத்தை ‘Who is Guilty?’ என்ற பெயரில் தயாரித்தார்கள். பொறுப்பிலிருந்து தவறிய
அரசியல்வாதிகள்/ போலீஸ் ஆகியோரை மிகத் துணிவுடன் கேள்விகள் கேட்ட அந்த ஆவணப்படம் மிகப்
பிரபலம் அடைந்தது.
காலப்போக்கில் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு (அனைவருக்கும் இல்லையென்றாலும், குறிப்பிட்ட அளவுக்கேனும்) வீடு, வேலை போன்ற
வசதிகளை அரசு செய்தது. ஆனால், இன்றளவும் அது செய்யத் தவறிய ஒன்று – அந்தக் கலகத்தைத்
தூண்டியது யார், அவர்களுக்கு என்ன தண்டனை என்ற இந்தக் கேள்விகளுக்கு இதுவரை பதில் வரவில்லை
என்பதுதான். மக்களைக் காப்பாற்றுவது அரசின் தலையாய கடமை என்பதை எந்த அரசானாலும் உணர
வேண்டும்.

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 27 | சுப்பு

சமாசார்

பாரதீப்பிலிருந்து
சென்னைக்கு ஐஸ்மீன் அனுப்பிக் கொண்டிருந்தபோது, மகாநதியில் வெள்ளம் வந்து பாலம் உடைந்துவிட்டது.
சென்னை கல்கத்தா ரயில் வேறு வழியாகத் திருப்பிவிடப்பட்டது. ஆகவே, என்னுடைய தொழிலில்
ஒரு இடைவேளை.
இந்த நேரத்தில்
நான் நண்பர் சித்தார்த்தனோடு சேர்ந்து சில முயற்சிகளில் ஈடுபட்டேன்.
நானும் நண்பர் சித்தார்த்தனும்
அந்த வயதுக்கே உரித்தான ஆர்வத்தோடும் புரிதலோடும் பல பரிசோதனை முயற்சிகளில் எங்களை
ஈடுபடுத்திக்கொண்டிருந்தோம். அறிவியலின் அளவுகோலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை (Para
Science Club) தெரிந்துகொள்வதற்காக ஒரு மாதாந்திர சந்திப்பை நடத்தினோம். சென்னை துரைப்பாக்கம்
டி.பி.ஜெயின் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ரமேஷ் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தார்.
சுட்டி இதழின் ஆசிரியர் பேராசிரியர் சுந்தர் உடனிருந்தார். தொலைவில் உணர்தல், பறக்கும்
தட்டுகள், விண்வெளி மனிதர்கள் பற்றிய பத்திரிகைகளையெல்லாம் வெளிநாட்டிலிருந்து வரவழைத்துப்
படிப்பது எங்களுக்கு வழக்கமாக இருந்தது.
இந்தக் காலகட்டத்தில்
‘வெளிச்சப்புள்ளி’ என்கிற அறிவியல் ஆர்வத்தின் விளைவாக அறிவியல் கதையையும் எழுதினேன்.
அந்தக் கதை தொடர்பான சில தொழில்நுட்பச் சந்தேகங்களுக்கு நண்பர் பி.சி. ஸ்ரீராம் (ஒளிப்பதிவாளர்)
விடையளித்தார். அவரோடு கொஞ்சம் பரிச்சயம் உண்டு.
ஒரு குறிப்பிட்ட
காரணத்தால் பல மாதங்களுக்குப் பிறகு அறிவியல் க்ளப் முடிவுக்கு வந்தது. அந்தக் காரணம்
நிஜ நாடகம் அல்லது வீதி நாடகம்.
வீதி நாடகக்குழு
அமைத்து அதன் மூலம் எங்களுடைய கருத்துக்களை மக்களிடையே பரப்புரை செய்ய வேண்டும் என்பது
திட்டம். இந்த முயற்சியில் இருவர் இணைந்து கொண்டார்கள். ஒருவர் துரை. துரை ‘ஆதிசங்கரர்’
என்ற சமஸ்கிருத திரைப்படத்தை இயக்கிய ஜீ.வி.அய்யரின் உதவியாளர். இவர்தான் பின்னாட்களில்
‘நக்கீரன்’ இதழுக்கு ஆசிரியராக இருந்தார். இன்னொருவர் மலேசியாவிலிருந்து தமிழ் ஆய்வுக்காக
சென்னை வந்திருந்த ந.முருகேச பாண்டியன். திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு மேன்சனில் ந.முருகேச
பாண்டியன் தங்கியிருந்தார். நிஜ நாடகம் குறித்த திட்டமிடுதல் எல்லாம் அவர் அறையில்தான்
நடக்கும். சிற்றுண்டிச் செலவுகள் அவருடையதென்பதை சொல்லத் தேவையில்லை.
முருகேச பாண்டியன்
தங்கியிருந்த அறையில் ஒரு எழுத்தாளரும் இருந்தார். அவர் ஒரு வார இதழில் அப்போது வேலை
செய்துகொண்டிருந்தார். ஒருநாள் நான் தவறுதலாக எழுத்தாளரின் செருப்பை போட்டுக்கொண்டு
வந்துவிட்டேன். நான் திருவல்லிக்கேணி மேன்சனுக்குப் போய் அவருடைய செருப்பைக் கொடுத்துவிட்டு
என்னுடைய செருப்பைப் போட்டுக்கொண்டு வரவேண்டும். என்ன செய்வது. நான் போகும் நேரத்தில்
எழுத்தாளர் அறையிலிருப்பதில்லை. எனவே செருப்பு பிரச்சினைக்கு எளிதில் தீர்வு கிடைக்கவில்லை.
முருகேச பாண்டியனிடம் “இரண்டுமே சாதாரண ஹவாய் செருப்புகள்தான். அவர் அதை வைத்துக்கொள்ளட்டும்.
நான் இதை வைத்துக்கொள்கிறேன்” என்று சொல்லிப் பார்த்தேன். இந்த சமரசத்திற்கு எழுத்தாளர்
உடன்படவில்லை. இறுதியாக ஒரு நாள் முருகேச பாண்டியன் அறைக்குப் போனபோது அறை பூட்டியிருந்தது.
முருகேச பாண்டியனும் இல்லை, எழுத்தாளரும் இல்லை. எனக்கிருந்த கோபத்தில் ஒரு பேப்பரில்
‘இரண்டு செருப்பையும் நீங்களே வைத்துக்கொள்ளலாம். இதற்கு மேலும் விஷயத்தை வளரவிட்டால்
நடப்பது வேற’ என்று எழுதி, கடிதத்தையும் செருப்பையும் கதவுக்கு மேலே உள்ள இடைவெளி வழியாக
அறைக்குள்ளே போட்டுவிட்டேன். வெறுங்காலோடு வீடு திரும்பினேன்.
அதற்குப் பிறகு
நிஜநாடக விஷயத்தில் முருகேச பாண்டியன் அக்கறை காட்டவில்லை. துரையும் பத்திரிகை வேலைக்குப்
போய்விட்டார். எழுத்தாளர் நல்லவர். அவர் தரப்பிலிருந்து எந்த எதிர்வினையுமில்லை.
அந்த எழுத்தாளரின்
பெயர் பிரபஞ்சன்.
அறிவியல், புனைகதை,
வீதி நாடகம் என்று அலைந்துகொண்டிருந்த என்னை வழக்கம் போல் நெறிப்படுத்தியது ஆர்.எஸ்.எஸ்தான்.
சங்கக் கட்டளைப்படி
நான் சமாசார் செய்தி ஸ்தாபனத்தின் நிருபராக வேலைக்குச் சேர்ந்தேன். சமாசார் ஆர்.எஸ்.எஸ்.
சார்புடைய ஸ்தாபனம். திருவல்லிக்கேணியில் எனக்கென்று டெலிபோன் வசதியுடன் கூடிய தனி
அலுவலகம் இருந்தது. அன்றாடம் விருந்துகளில் கலந்து கொள்ளக்கூடிய வசதி இருந்தது. மற்றபடி
சிறப்பாகச் செய்வதற்கு ஒன்றுமில்லை. தில்லி அலுவலகத்திலிருந்து வரும் கடிதங்கள் இந்தியில்
இருக்கும். அவற்றை நான் படித்துப் பார்த்ததேயில்லை. எனக்கு இந்தி தெரியாது என்று அவர்களுக்குத்
தெரியும். நான் எனக்குத் தேவையானவற்றை ஆங்கிலத்திலேயே எழுதி அனுப்பிக் கொண்டிருந்தேன்.
விரைவிலேயே எனக்கு
இந்த வேலை சலித்துவிட்டது. பெரும்பாலான நிருபர்கள் குடிப்பதைப் பற்றியும் compliments
பற்றியுமே பேசிக்கொண்டிருந்தார்கள். இவர்களுக்குள்ளே ஏகப்பட்ட ஜாதிப்பிரிவினை வேறு.
Upcountry என்று சொல்லப்படும் வெளி மாநில பத்திரிகையாளருக்கு உள்
ளூர் நிருபர்களைக் கண்டால் இளப்பம். தமிழ்ப்
பத்திரிகை நிருபர்களுக்கோ, ஆங்கிலப் பத்திரிக்கை நிருபர்களைக் கண்டால் பயம்.
பிரதமர் மொரார்ஜி
தேசாயின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டேன். அத்தனை பேர் முன்னிலையில்
தி.மு.க.வோடு தாங்கள் எப்போதும் கூட்டு வைத்துக் கொண்டதில்லை என்று அவர் சாதித்தார்.
திரு.சோ அவர்களும் அங்கிருந்தார். ஒரு சாதாரண அரசியல் நிகழ்ச்சியை ஒழுங்காக நினைவுகூர
முடியாதவர் எப்படி இந்த நாட்டை ஆள முடியும் என்று எனக்குப் புதிராய் இருந்தது. பத்திரிகைகள்
இதை வெளியிடத் தவறிவிட்டன என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
சமாசார் செய்தி
ஸ்தாபனத்தின் செய்திகள் இந்தியாவெங்கும் நூறு இதழ்களுக்குப் போய்க் கொண்டிருந்தன. தமிழ்நாட்டுப்
பிரதிநிதி என்ற முறையில், தமிழ்நாடு சட்டமன்றத்திலும், சட்டமன்ற மேலவையிலும் பத்திரிகையாளர்
பகுதியில் எனக்காக ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அரசியலின் மையக் களமான சட்டமன்ற
நடவடிக்கைகளை உள்ளிருந்து கவனிப்பதற்கு எனக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்திருந்தது.
அதில் ஒன்று…
காஞ்சிபுரத்தில்
இருக்கும் சங்கர மடத்தின் எதிரில் ஈ.வெ.ராவுக்கு சிலை வைப்பதற்கான முயற்சி செய்தது
திராவிடர் கழகம். தி.மு.க. ஆட்சிக்காலத்திலேயே அந்த இடம் தரப்பட்டுவிட்டது. ஆனால் அந்தச்
சிலையை வைக்க அதிமுக ஆட்சியில் அனுமதி அளிக்கப்படவில்லை. மு.கருணாநிதி முதல்வராக இருந்த
காலத்தில் அதற்கான ஒப்புதலைக் கொடுத்துவிட்டார். ஆனால் சிலையை அமைப்பதற்குள் ஆட்சி
மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இந்த விவகாரத்தை சட்டமன்றத்தில் கிளப்பினார் மு.கருணாநிதி.
அந்த விவாதம் சுவாரஸ்யமாகத் தொடர்ந்தது. என்னைப் பொருத்தவரை திராவிடர் கழகத்தின் ஆஸ்தான
கொள்கைகளிலிருந்து எம்.ஜி.ஆர் விலகி நின்றார் என்பதற்கான முக்கியமான சான்று இது. அப்போது
எதிர்கட்சித்தலைவராக இருந்த கருணாநிதிக்கும் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கும் நடந்த உரையாடலில்
இருந்து சில பகுதிகள் இங்கே:
எதிர்கட்சித்தலைவர்
கருணாநிதி: பெரியார் நூற்றாண்டு விழாவை இந்த அரசு கொண்டாடுகிறது. ஆனால், காஞ்சிபுரத்தில்
பெரியார் சிலை வைக்க வேண்டும் என்று திராவிடர் கழகத்தார் தி.மு.க. ஆட்சிக்காலத்திலேயே
அதற்கான இடத்தையும் பணத்தைக் கட்டி வாங்கி, பராமரிப்புச் செலவுக்கான பணத்தையும் கட்டி,
கழக ஆட்சியில் அந்த இடம் தரப்பட்டுவிட்டது. ஆனால் அந்தச் சிலையை வைக்க இந்த ஆட்சியில்
அனுமதி அளிக்கப்படவில்லை.     
எம்.ஜி.ஆர்.: அவர்கள்
கேட்டிருந்த இடம் மத நம்பிக்கைக்குரியவர்களுடைய, மடம் போன்ற, கோயில் போன்ற இடத்துக்கு
எதிராக, இடைஞ்சலாக இருக்கின்ற இடத்தைக் கேட்டதாக குடியரசுத்தலைவர் ஆட்சிக்காலத்தில்
அது பற்றி பரிசீலிக்கப்பட்டு, கூடாது – முடியாது என்று மறுக்கப்பட்டுவிட்டது. நான்
காஞ்சிபுரத்துக்குச் சென்றபோது அந்த இடத்தைப் பார்க்க நேரிட்டது. அங்கிருந்து வந்தபிறகு
உத்தரவே போட்டுவிட்டேன். வேறு ஒரு இடத்தை அவர்கள் கேட்பார்களானால் அந்த இடத்தைக் கொடுக்க
வேண்டும் என்று உத்திரவிட்டு சில மாதங்களாகின்றன.
மு. கருணாநிதி:
சங்கராச்சாரியார் மடம் இருக்கிறதென்றால் அந்த இடத்துக்கு எதிரிலே பெரியாருடைய சிலை
இருக்கக்கூடாது என்பது என்ன நியாயம் என்று எனக்குப் புரியவில்லை. ஒருவேளை, போக்குவரத்துக்கு
இடைஞ்சலான இடம் என்பதால் அதை அனுமதிக்கவில்லை என்ற கருத்தை முதலமைச்சர் சொல்வார் என்று
நினைத்திருந்தேன். சங்கராச்சாரியாருக்காகத்தான் அது அனுமதிக்கப்படவில்லை என்று திட்டவட்டமாக
முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர்.: நான்
சங்கராச்சாரியாருக்காகத்தான் சொல்வதாக இருந்தால் அதைத் துணிவோடு சொல்கின்றவன். ஏனென்றால்,
அவரைச் சந்தித்து அவர் என்ன சொல்கிறார் என்று கேட்டு, கருத்துக்கள் பரிமாறிக்கொண்டு
வந்தவன் நான். அந்த வகையில் ஒரு துறவிக்கு அடையாளமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை
இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அதிலே எனக்குக் கொஞ்சமும்
சந்தேகமில்லை. இட நெருக்கடியும் இருக்கிறது. எதிர்காலத்தில் அரசியல் நெருக்கடிகள்,
மத நெருக்கடிகள் போன்ற குழப்பங்கள் வரலாம். அதெல்லாம் தோன்றக்கூடாது என்பதற்காகத்தான்
இந்த நிலைமையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன். முதலமைச்சர் என்ற நிலைமையில் இங்கேயே
பதில் சொல்லிவிடுகிறேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த இடத்தில் சிலை வைக்க இந்த
அரசு அனுமதிக்காது….
இன்னொருமுறை தி.மு.கழகம்
தொடர்ந்து சந்தித்து வரும் தேர்தல் தோல்விகளைப் பற்றி குறிப்பிட்ட கருணாநிதி ‘தேர்தல்கள்,
ஒரு நாட்டின் வரலாற்றில் புரண்டு வரக்கூடிய சில பக்கங்கள். அதிலும் திண்டுக்கல் இடைத்தேர்தல்
அப்பக்கத்தில் தேடிப் பார்க்க வேண்டிய ஒரு வரி, அவ்வளவுதான்… பொதுத் தேர்தல் என்பது
ஒரு பக்கம், இடைத்தேர்தல் ஒரு வரி. ஆகவே நான் அதில் அதிக கவனம் செலுத்த விரும்பவில்லை’
என்று பேசினார்.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்
தி.மு.க இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற போது இதே கருணாநிதி எவ்வளவு தூரம் எகிறிக் குதித்தார்
என்பது என் நினைவுக்கு வந்தது. அதை சில பத்திரிகையாளரிடம் சொன்னேன். அவர்கள் ரசிக்கவில்லை.
எப்படி மக்கள் வாக்களிக்கின்ற தேர்தலில் கருணாநிதி வெற்றிபெற முடியாதோ அதுபோலவே பத்திரிகையாளர்கள்
மட்டுமே வாக்களிக்கின்ற தேர்தலில் எம்.ஜி.ஆர் வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதைப் புரிந்துகொண்டேன்.
சட்டமன்ற விவாதங்களில்
கருணாநிதியின் முழுச் சாதுர்யமும் வெளிப்பட்டது. நாளிதழ்களும் அவற்றை முதல் பக்கச்
செய்திகளாக வெளியிட்டன. ஆனால், தி.மு.கவும் செய்தி ஊடகங்களும் எவ்வளவு முயன்றாலும்
எம்.ஜி.ஆர் செல்வாக்கை அசைக்க முடியவில்லை.
எம்.ஜி.ஆர் அரசு
மீது தி.மு.வும் இந்திரா காங்கிரஸும் கொண்டு வந்த கண்டனத் தீர்மானத்தில் கருணாநிதி
பேசினார். (நவம்பர் 1979). பல்கேரியா பால்டிகா ஊழல் என்ற பூதத்தை முன் வைத்தார் (நவம்பர்
1979). ஏகப்பட்ட ஆதாரங்கள், கடிதங்கள், தொலைபேசி உரையாடல்கள் என்று அவர் நிகழ்த்திய
உரையை தி.மு.கவினர் பெரிதாகக் கொண்டாடினார்கள். வாய் பிளந்த எம்.ஜி.ஆர் கப்பலை விழுங்குவது
போல கார்டூன் படம் போட்டு, ‘ஊழல் திலகம், சுப்ரீம் கோர்ட் நீதிபதி விசாரணை கமிஷன் வருவதாக
அறிவித்து இன்று வெற்றிகரமான ஐம்பதாவது நாள்’, ‘அறுவதாவது நாள்’ என்று முரசொலியில்
அன்றாடம் கட்டம் கட்டப்பட்டது. அடிப்படையில் எம்.ஜி.ஆர் ஒரு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிவிட்டார்
என்பதுதான் குற்றச்சாட்டு. ஆனால் இதற்குப் பலகாலங்களுக்குப் பிறகு கருணாநிதி முதலமைச்சராக
ஆனபோது பல்கேரியா – பால்டிகா ஊழல் பற்றிப் பேசவே இல்லை. சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழக அரசு சார்பாக
மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடந்தது. மாநாட்டை மு.கருணாநிதி புறக்கணித்தார். மாநாட்டில்
பேசிய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நிகழ்ச்சியை மதுரையில் நடத்துவதற்குக் காரணம் காஞ்சி
சங்கராச்சாரியாரின் அறிவுரை என்று குறிப்பிட்டார் (ஜனவரி 1980). இது திராவிட இயக்கங்களுக்கு
மிகப் பெரிய அடியாக அமைந்தது.
பிரதமர் இந்திராவின்
நிருபர் கூட்டத்தில் அவருக்கு நெருக்கடி ஏற்படுத்தும் கேள்வியைக் கேட்டேன். அந்தக்
கேள்வி, பதில் எல்லாம் பத்திரிக்கைகளிலும் முதன்மையான இடத்தைப் பெற்றதில் மகிழ்ச்சியடைந்தேன்
(ஏப்ரல் 1980).
… தொடரும்

Posted on Leave a comment

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) – பாகம் 10 – லாலா லஜ்பத் ராய் | தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்



பகுதி 10 – சுத்தி, சங்கதன், டான்ஸிம் இயக்கங்கள்
ஆர்ய சமாஜத்தால்
பிரசாரம் செய்து வளர்க்கப்பட்ட ஆக்ரோஷமான ஹிந்துமதம், ஆரம்பத்தில் அரசியல் கலக்காமல்
இருந்தது. ஆனால் அது பின்னால் அரசியல் கருத்தாங்களால் வலுப்பெற்றது என்பதை மறுக்க இயலாது.
நாம் இப்போது அடிக்கடி
கேள்விப்படுகின்ற ‘சுத்தி’ இயக்கத்தின் தோற்றத்தையும் கட்டமைப்பையும் ஆராய்வதற்கு இது
ஒரு பொருத்தமான இடமாகத் தோன்றுகிறது. இந்த இயக்கம் ஆர்ய சமாஜம், ஏன் சீக்கிய மதத்தைப்
போலப் பழமையானது. ஆர்ய சமாஜ், தான் பிரசாரம் செய்து வரும் மதம் உலகளாவிய மதம் என்று
கூறுகிறது. உலகம் முழுவதையும் அதன் குடைக்கீழ் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த வகையில் அதன் கூற்றுகள் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைப் போன்ற குறிக்கோள்களைக் கொண்டதாகவும்
பரந்ததாகவும் உள்ளன. ஒரு காலத்தில், ஆர்ய சமாஜின் மிகவும் கட்டுப்பாடான பிரிவு அவர்கள்
இந்துக்கள் அல்லாதவர்கள் என்று கூரைமேலிருந்து பறைசாற்றிக்கொண்டிருந்தது; தவிர, அவர்கள்
இந்துக்கள் அல்லாதவர்களுடன் சாப்பிடவும் குடிக்கவும் திருமணம் செய்து கொள்ளவும் சுதந்திரம்
அளிக்கப்பட்டிருந்தது; மேலும் இந்துக்கள் கூட ஆர்ய சமாஜில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு
ஒரு குறிப்பிட்ட அளவு சுத்திக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற முறை இருந்தது.
அரசியல் கருத்தாக்கங்கள் கொண்ட மற்றொரு பிரிவு, சுவாமி ஷ்ரதானந்த்
(அப்போதைய லாலா முன்ஷி ராம்) தலைவராக இருந்த மகாத்மா கட்சியின் இந்த கூற்றுக்கள் அனைத்தையும்
எதிர்த்துவந்தது.
இந்தக் கட்சியைப் பொருத்தவரை, சுத்தி என்பது மதமாற்றத்திற்கான ஒரு சடங்கு,
அதாவது சர்சில் அனுமதிப்பதற்குத் தேவையான ஒரு முறை. அதற்கு எந்த அரசியல் முக்கியத்துவமும்
இல்லை. சிறிது காலத்திற்கு, லாலா முன்ஷி ராமின் கட்சி இந்த அணுகுமுறையைத் தக்க வைத்துக்
கொண்டது. அவர்களில் சிலர் கோட்பாட்டு ரீதியாகத் தாங்கள் நம்பியதை நடைமுறைக்குக் கொண்டுவர
முயன்றனர். அந்த நேரத்தில்தான் தற்போது பிரபலமான தரம்பால் ஒரு ஹீரோவாக மாற்றப்பட்டார்.
விரைவில், இந்த யோசனையை வலியுறுத்துவதன் மூலமும், அதை நடைமுறைக்குக் கொண்டுவருவதன்
மூலமும், இந்து சமூகத்தின் அனுதாபத்தை இழக்க நேரிடும் என்பதை அவர்கள் கண்டுகொண்டனர்.
அது அவர்களுக்குச் சிக்கலைத் தோற்றுவித்தது. ஏனெனில் அவர்களை இயக்கும் உதவிகள் பலவற்றைத்
தந்துகொண்டிருந்தது அந்தப் பொது இந்து சமூகம்தான். எனவே அவர்கள் தங்கள் எண்ணத்தையும்
அணுகுமுறையையும் மாற்றிக்கொண்டனர்.
நான் அப்போது ஆர்ய
சமாஜின் தீவிர உறுப்பினராக இருந்ததால், ஐக்கிய மாகாணங்கள், ராஜ்புதானாவின் மல்கனா மற்றும்
பிற ராஜபுத்திரர்களை ஆர்ய சமாஜத்திற்குள் கொண்டுவர கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன
என்பதை அறிவேன். அலிகார் மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள சிலர் சமாஜத்திற்குள் கொண்டு
வரப்பட்டனர் என்பது கூட உண்மையே. இருப்பினும், மல்கனாக்கள் ‘ஆரியர்களாக’ இருக்க விரும்பவில்லை;
அவர்கள் விரும்பியது மீண்டும் தங்கள் சொந்தச் சாதியில் சேர்க்கப்பட வேண்டும், அதுவும்
சமமான அடிப்படையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதைத்தான். இதற்கு மரபுவழி ராஜபுத்திரர்கள்
உடன்பட மாட்டார்கள். எனவே, மரபுவழி ராஜபுத்திரர்கள் அவர்களைச் சேர்த்துக்கொள்ளச் சம்மதிக்கும்
வரை இந்த விஷயம் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இந்த அணுகுமுறை மாற்றத்தின் பின்னணி
என்ன என்பதும் தெளிவு. முஸ்லிம் சமூகத்தின் வகுப்புவாத
க் கோரிக்கைகள், மியான் பாஸ்ல்-இ-ஹுசைனின் கொள்கைகள்,
முல்தான் கலவரம் ஆகியவை இந்த மாற்றத்தை உருவாக்கத் தேவையான சூழ்நிலையை ஏற்படுத்தியது.
சுத்தி என்ற கொள்கை இப்போது இந்து மகாசபாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முடிவின்
பின்னணியில் உள்ள யோசனை ஓரளவு அரசியல், ஓரளவு வகுப்புவாதம், ஓரளவு மனிதாபிமானம் கலந்தது
என்பதை நான் ஏற்றுக்கொள்ளச் சித்தமாக இருக்கிறேன். இறுதியில் உள்ளது தீண்டத்தகாதவர்களின்
சுத்தியில் தெளிவாக வெளிப்படுகிறது.
மரபுவழி இந்துக்களின்
அணுகுமுறையில் ஏற்பட்ட இந்த மாற்றம் முஸ்லிம்களை எரிச்சலடையச் செய்வது இயல்பான ஒன்று.
ஏனெனில் இந்த மாற்றம் இந்திய வரலாற்றில் முற்றிலும் புதிய அத்தியாயத்தைத் திறக்கிறது.
இந்த இயக்கம் எழுப்பிய கேள்வி அடிப்படையானது. இஸ்லாமிய தரப்புப் பார்வையை ஒருவர் புரிந்து
கொள்ளவும், அதற்கான பின்னணியை உணரவும் முடியும் என்றாலும், ஹிந்து அல்லாத இயக்கங்கள்
மதமாற்றம் செய்வதற்கான சுதந்திரம் தரப்பட்டதன் காரணமாக, ஆர்ய சமாஜத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான
வழியை ஒருவர் காண முடியாது. இந்த இயக்கம் நிலை நிறுத்தப்பட்டது என்ற உண்மையை தத்துவ
ரீதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன் தொடர்ச்சியாக நேரடி அரசியல் தாக்கங்கள் உள்ளன
என்பதை மறுக்க முடியாது. அதன் முக்கியத்துவத்தைக் குறைப்பதற்கான ஒரே வழி வகுப்புவாத
பிரதிநிதித்துவத்தை அகற்றுவதே ஆகும். இப்போதைக்கு, டெல்லி ஒற்றுமை மாநாட்டில் எடுக்கப்பட்ட
முடிவுகள் இந்த விஷயத்தில் இறுதி வார்த்தையாக ஏற்றுக்கொள்ளப்படலாம்
இந்தக் கட்டத்தில்
நாம் சங்கதன் மற்றும் டான்ஸிம் இயக்கங்களையும் விவாதிக்கலாம். சங்கதன் இயக்கம் (அல்லது
அதன் சரியான பெயரான இந்து சபா இயக்கம் என்று அழைக்கப்படுவது) ஒரு பழைய கருத்தாக்கத்தைக்
குறிக்கிறது. ஆர்ய சமாஜின் நிறுவனர் மனதில் இந்தக் குறிக்கோள் இருந்தது. ஆனால் சமாஜ்
அதன் குறுங்குழுவாத முன்னேற்றங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தியதால் அந்தக் குறிக்கோளை
உணரத் தவறிவிட்டது. எண்பதுகளின் ஆரம்பத்தில் நான் லாகூர் அரசு கல்லூரியின் மாணவனாக
இருந்தபோது, லாகூரில் உள்ள ஷேகுபுராவைச் சேர்ந்த ராஜா ஹர்பன்ஸ் சிங்கின் வீட்டில் ஒரு
இந்து சபை உருவாக்கப்பட்டது எனக்கு நினைவிருக்கிறது. அந்த சபா ஆரம்பக் கட்டத்திலேயே
இறந்துவிட்டது. பின்னர் அந்த இயக்கம் கடந்த நூற்றாண்டின் இறுதியில் லாகூரின் ரெய்ஸில்
மறைந்த லாலா பால்மோகண்டின் வீட்டில் புத்துயிர் பெற்றது. எவ்வாறாயினும், மறைந்த ஆர்.பி.லால்
சந்த் உயிர்ப்பிக்கும் வரை இந்த அமைப்பு கூட கிட்டத்தட்ட உயிரற்றதாகவே இருந்தது.
ஆனால் எந்தக் காரணத்தாலோ
இந்த இயக்கம் ஒருபோதும் வேரூன்றவில்லை. தனிப்பட்ட உறுப்பினர்களுக்குப் பயனளித்துள்ளபோதிலும்
அது ஒட்டுமொத்த இந்து சமூகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இதற்கு இரண்டு வலிமையான
போட்டியாளர்கள் இருந்தனர்: அரசியல் ரீதியாக இந்திய தேசிய காங்கிரஸ், சமூக-மத ரீதியாக
ஆர்ய சமாஜ். இந்த இரண்டு பெரும் சக்திகளுக்கு இடையே அது மாட்டிக்கொண்டது, அது ஒருபோதும்
வெற்றிபெறப் போதுமான அளவு தன்னை உயர்த்திக்கொள்ள முடியவில்லை. தற்போதைய இயக்கம் இந்து-முஸ்லிம்
நிலைமையின் ஒரு எதிர்வினை. அதன் நோக்கங்கள், குறிக்கோள்களில், அதன் அரசியலமைப்பில்
முஸ்லிம் விரோதப்போக்கு என்று எதுவுமில்லை. ஆனால், வெளிப்படையாகச் சொல்வதானால், அது
முஸ்லிம் விரோதமானது என்ற உண்மையே அதை உயிரோடு வைத்திருக்கிறது.
கிலாபத் கிளர்ச்சியை
ஆதரிப்பதற்காக முதலில் நிறுவப்பட்ட கிலாபத் குழுக்கள் தொடர்ந்து முறையான ஒரு மத பிரசாரத்தை
மேற்கொண்டுள்ளன, இதன் ஒரு பகுதியாவது, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான
தற்போதைய கசப்புக்கு இட்டுச்செல்லக்கூடியது. கோகனாடாவில், இந்திய முஸ்லிம்களை ஒழுங்குபடுத்த
கிலாபத் கமிட்டி பயன்படுத்தப்படும் என்று சொல்லப்பட்டது. டான்ஸிம் என்பது அதன் மற்றொரு
பெயர். இது வெளிப்படையான இந்து எதிர்ப்பு இயக்கமாகும்.
தனிப்பட்ட முறையில்,
இரு இயக்கங்களையும், அதாவது சங்கதன் மற்றும் டான்ஸிம் ஆகியவற்றை, நான் வரவேற்கிறேன்.
இந்துக்களின் வெவ்வேறு பிரிவுகளை ஒரு அமைப்பாக ஒரு பக்கமும், முஸ்லிம்களின் அனைத்து
வெவ்வேறு பிரிவுகளையும் இன்னொரு பக்கமும் ஒன்றிணைக்க முடிந்தால், இரண்டு முக்கிய அமைப்புகளும்
ஒருவருக்கொருவர் இணங்குவது ஒப்பீட்டளவில் எளிதான விஷயமாக இருக்கும். ஆனால் இந்தப் பணி
நம்பிக்கையற்றது. என்னைப் பொருத்தவரை, இரு இயக்கங்களுக்கும் செய்யக்கூடிய ஒரே வேலை
இரு சமூகங்களுக்கிடையில் ஏற்கெனவே இருக்கும் பிரிவை அதிகரிப்பதாகும். முஸ்லிம் இயக்கம்
உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பஞ்சம்,
வெள்ளம், பூகம்பங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் நிவாரணத்திற்காக முஸ்லிம்கள்
தங்கள் பணப்பையைத் திறக்கவில்லை என்பதையும் இந்திய முஸ்லிம்களின் கல்வி மற்றும் பொருளாதாரத்தை
மேம்படுத்துவதற்கு முஸ்லிம் பணம் மிகக் குறைவாகவே செலவிடப்படுகிறது என்பதையும் வருத்தத்துடன்
கவனிக்க முடிகிறது. இந்திய முஸ்லிம்கள், ஆயிரக்கணக்கான, ஏன் லட்சக்கணக்கானவர்கள் ஏதவாது
ஒரு பெயரில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். இந்த நிகழ்வு இந்தியாவில் மட்டுமே
உள்ளது. எகிப்து, துருக்கி, மொராக்கோ, சூடான், சிரியா போன்ற பிற முஸ்லிம் நாடுகளில்
இப்படி நடப்பதில்லை.
உள் கட்டமைப்பைப்
பொருத்தவரை, இரு இயக்கங்களும் தோல்வியடையும் நிலையில் உள்ளன. குறுங்குழுவாதத்தின் புற்றுநோய்
ஏதாவது ஒரு விதத்தில் ஆபத்தானது.
சங்கதன் விஷயத்தில்,
ஆர்ய சமாஜ் மற்றும் சனாதன் தரம் சபை ஆகியவை அவ்வியக்கம் செழித்து வெற்றிபெற அனுமதிக்காது.
அவர்கள் தங்கள் செயல்பாடுகள் அல்லது செல்வாக்கை இந்து சபைக்கு மாற்றத் தயாராக இருப்பதாகத்
தெரியவில்லை. டான்ஸிம் விஷயத்தில், வெவ்வேறு முஸ்லிம் பிரிவுகள் ஒன்றிணைந்து அதை வெற்றிபெற
விடாது. எவ்வாறாயினும், இரு இயக்கங்களும் ஒருபுறம் முஸ்லிம்-விரோத உணர்வை உயிரோடு வைத்திருக்கவும்,
மற்றோரு புறம் இந்து எதிர்ப்பு உணர்வை உயிரோடு வைத்திருக்கவும் விளம்பரப்படுத்தப்படும்.