Posted on Leave a comment

அந்தமானில் இருந்து கடிதங்கள் (எட்டாவது கடிதம்) | சாவர்க்கர், தமிழில்: VV பாலா



எட்டாவது கடிதம்
செல்லுலர் சிறை.
போர்ட் ப்ளேயர்
21-9-1919
அன்பிற்குரிய சகோதரா,
நீ பம்பாய் சென்று
சேர்ந்ததும் தொடர்பு கொள்வாய் என்று நினைத்தேன். வழக்கத்துக்கும் மாறாக அதிக
நாள் காத்திருந்தேன். ஆனால் இதுவரையிலும் உன்னிடம்
இருந்து எந்த
த்
தகவலும் இல்லாததால் மேற்கொண்டு
காத்திராமல் நானே தொடர்பு கொள்வது எனத் தீர்மானித்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
நீ என்னைப் பார்த்தபோது என் உடல்நிலை எப்படி இருந்ததோ அதேபோல்தான் இப்போதும் இருக்கிறது.
நீ வந்து பார்த்துச் சென்ற பிறகு ஒரு வாரத்திற்கு நன்றாக இருந்தது. அதன் பிறகு மலேரியாவோ
அல்லது வயிற்றுப்போக்கின் காரணமாகவோ எனது உடல் நிலை மோசமாகி, உடல் எடையும் குறைந்து
விட்டது. இது போல ஒரு வாரம் அல்லது பதினைந்து நாட்களுக்குத் தொடர்வதால் உடல் எடை பெரிய
அளவில் குறைந்து விடுகிறது. சென்ற வருடம் நான் உனக்குக் கடிதம் எழுதும்போது என் எடை
சராசரியாக 99 பவுண்டுகள் இருந்தது. ஆனால் இப்போது அது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து
கடந்த சில மாதங்களில் 96 ஆகி, பிறகு 95 என்று குறைந்துவிட்டது. இப்போது எனக்கு ஓரளவு
நல்ல உணவும், ஓரளவு நல்ல அறையும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இல்லையென்றால் என் நிலைமை
இன்னும் மோசமாக இருந்திருக்கும். என் உடல் எடை வேகமாகக் குறைந்துகொண்டு வந்தாலும் எனக்கு
நன்றாகப் பசி எடுக்கிறது. முன்பு போலில்லாமல் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் குறைந்திருக்கின்றன.
இதற்குக் காரணம் கடந்த பத்து மாதங்களாக எனக்கு உணவு மருத்துவமனையில்தான் வழங்கப்படுகிறது.
எனக்கு உடல் நிலை சரியில்லாததாலும் மலேரியா வந்ததாலும் மருத்துவமனையில் நோயாளியாகச்
சிகிச்சை அளிக்கிறார்கள். இதனால் கடுமையான வேலைகள் எனக்கு அளிக்கப்படுவதில்லை. இங்கே
சிறைவாழ்க்கையைப் பொருத்தவரை என்னுடைய உடல்நிலை மோசமான காரணத்தால் இங்குள்ள சிறை சூப்பரின்டண்டன்ட்
கூடுமான வரையில் என்னிடம் ஒழுங்காக நடந்து கொள்கிறார். அப்படி அவர் என்மீது கூடுதல்
கவனம் செலுத்தும் போதிலும் என்னுடைய உடல் எடை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது என்பதன்
மூலம், இந்த மலேரியா மற்றும் வயிற்றுப்போக்கு எந்த அளவுக்குத் தீவிரமாக இருக்கிறது
என்பதைப் புரிந்துகொள்ளலாம். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது எனக்கு வயிறு சம்பந்தமான
பிரச்சினை எதாவது வந்து விடுகிறது. இங்கிருக்கும் வானிலை ஆரோக்கியத்திற்கு மிகவும்
ஊறு விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. இங்கே செல்லுலர் சிறையில் இத்தகைய வானிலையில்
இருப்பது என்பது இரட்டிப்பு ஆபத்தானதாக இருக்கிறது. கடுமையான உடல் உழைப்பால் நல்ல ஆரோக்கியமான
உடல் அமைப்பைப் பெற்றிருப்பவர்களும் கூட இங்கு வந்தால் அவதிப்படுவார்கள்.
இங்கிலாந்தில் அமைதிக்
கொண்டாட்டங்களின் போது இங்கே கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாகப் படிக்கப்பட்ட
உத்தரவு குறித்து இந்தியாவில் உங்களுக்கு ஏதேனும் தெரிந்திருக்குமா என்று எனக்குத்
தெரியவில்லை. அவ்வாறு தண்டனைக் குறைப்புப் பெற்றவர்கள் சிலர், இங்கே கைதிகள் காலனியில்
இருந்து விடுதலை செய்யப்பட்டார்கள். ஆனால் அரசியல் கைதிகளைப் பொருத்தவரையில் வெறும்
வெற்று உத்தரவாதங்கள் மட்டுமே அளிக்கப்பட்டன. ஒரு நாள் கூட தண்டனைக் குறைப்பு செய்யப்படவில்லை.
ஓரிரு பெங்காலி அரசியல் கைதிகளுக்கு மட்டும் விதிவிலக்காகத் தண்டனைக் குறைப்பு அளிக்கப்பட்டது.
உள்துறைச் செயலாளரின் பெயரில் ஒரு அறிக்கை படிக்கப்பட்டது. அரசியல் கைதிகளுக்கும் தண்டனைக்
குறைப்பு தருவதைப்பற்றி அரசு பரிசீலித்து வருவதாக அதில் கூறப்பட்டது. அந்தந்த மாகாண
அரசுகளிடம் கருத்தைக் கேட்டபின், உள்ளூர் சிறை அதிகாரிகளின் பரிந்துரையையும் கேட்டு,
கைதிகளின் நடத்தை குறித்த அறிக்கையையும் பெற்று இத்தகைய தண்டனைக் குறைப்பு வழங்கப்படுமாம்.
அதுமட்டுமல்லாமல் அந்தந்த கைதிகளின் தனிப்பட்ட கருத்துகளையும் கணக்கில் எடுத்துக்கொண்ட
பிறகே இறுதி முடிவு எடுக்கப்படுமாம். இத்தகைய நடவடிக்கை எப்போது எடுக்கப்படும் என்று
எந்தத் தேதியும் குறிப்பிடப்படவில்லை. இது நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம். நான்கு
வருடங்களுக்கு முன்பே இந்திய அரசு என்னிடம் பொது மன்னிப்பு வழங்குவது பற்றிப் பரிசீலிக்கப்படும்
என்று உறுதி அளித்திருந்தார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அதனால் இன்னும் நான்கு
வருடங்கள் கழித்து இதேபோல மீண்டும் ஒரு உத்தரவாதம் தரப்படலாம். அதேபோல கைதிகளின் தனிப்பட்ட
கருத்துகளைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் கொஞ்சம் சிக்கலானது. ஏனென்றால்
இந்திய அரசியல் சூழல் குறித்த ஒரு அரசியல் கைதியின் தனிப்பட்ட கருத்து என்னவாக இருக்கும்?
அதனை அரசு எவ்வாறு அறிந்து கொள்ளும்? அந்த நபர் சொல்லும் கருத்தை அவர்கள் ஒப்புக்கொள்ளப்
போவதாக இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் அவர்கள் அந்தக் கைதியைக் குறித்து மற்றவர்கள்
கூறுவதையும் மற்றும் உளவு அறிக்கைகள் கூறுவதையும் அடிப்படையாக வைத்துத் தீர்மானிக்க
முயல்வார்கள் என்றால், அவர்கள் இத்தகைய ஒரு நடவடிக்கையை எடுக்காமலேயே இருக்கலாம். திருடர்கள்,
கொள்ளைக்காரர்கள், தொடர்ந்து குற்றச்செயல்களைப் புரிபவர்கள் ஆகியோருக்கு மத்தியில்
வாழ்வதால் சொல்கிறேன். இவர்கள் எங்களுடைய அரசியல் கருத்துக்களைப் புரிந்துகொண்டிருக்க
வாய்ப்புகள் குறைவு. மேலும் அதிகாரிகள் யாரைக் குறித்தாவது இவர்களிடம் கருத்து கேட்டால்
இவர்கள் அவர்கள் மேல் வெறுப்பு கொண்டு அதனால் உண்மையைச் சொல்வார்களா என்பதும் சந்தேகமே.
ஒருவரைக் குறித்து அதிகாரிகள் இவர்களிடம் அறிக்கை கேட்டால், அந்த நபரைப் பற்றி குறை
கூறி அறிக்கை கொடுத்தால் சிறை அதிகாரியின் மதிப்பீட்டில் தாங்கள் உயர்வோம் என்று இவர்கள்
நினைத்துக்கொள்வார்கள்! இவர்கள் எல்லோரும் மிகக் கொடூரமான குற்றச்செயல்கள் புரிந்தவர்கள்.
இவர்களுடைய கருத்துக்களை எந்த அதிகாரியும் கேட்கலாகாது. இவர்கள் ஊழலின் மூலமாகத்தான்
இங்கு சிறையில் பதவிகள் பெற்றிருக்கிறார்கள். ஆகவே அரசிற்கு இந்த விஷயங்களைப் பொது
மக்கள் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால் உள்துறைச் செயலாளர் நல்ல எண்ணத்தில் ஏதாவது
செய்ய முயன்றாலும் அதனால் பெரிய பயன் எதுவும் விளையாது போகும்.
இந்த உறுதிமொழியைக்
குறித்து உனக்கு எதாவது தெரியுமா? இது பொதுவில் அறிவிக்கப்பட்டதா? ஆம் என்றால் மாகாண
அரசுகளை இது குறித்து அணுகிவிட்டார்களா? அவர்கள் கருத்துக்களைக் கொடுத்துவிட்டார்களா?
இதற்கு ஏதேனும் ஒரு கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? அரசு அது குறித்து ஏதேனும்
கூறியுள்ளதா? இதனை ஒழுங்கான முறையில் அரசு செய்ய வேண்டும். இந்த அமைதிக் கொண்டாட்டங்கள்
நடந்து முடிவதற்குள்ளாக நம் பொதுமக்கள் அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்குவதில்
ஒருமித்த குரலில் அரசை வற்புறுத்தி நல்ல தீர்வைக் காண வேண்டும். இதன் பிறகு அரசு இதில்
முனைப்புக் காட்டாமல் போகலாம். இந்த உறுதிமொழி மக்களின் எண்ணவோட்டத்தைத் தெரிந்து கொள்வதற்காகக்
கூறப்பட்டுள்ளது. ஆகவே பொது மன்னிப்பு குறித்து மக்கள் தங்கள் கருத்தை அரசுக்கு வலியுறுத்தும்
வகையில் தெரிவிக்கtஹ் தவறினால் பிறகு பொது மன்னிப்பு வழங்கவில்லை என்று அரசைக் குறை
கூறிப் பயனில்லை.
என்மீது சும்த்தபட்டிருக்கும்
109, 302 ஆகிய குற்றப்பிரிவுகள் உண்மை என்று வைத்துக்கொண்டால் அது மற்றவர்கள் விஷயத்திலும்
உண்மைதான். இதன் காரணமாக அரசியல் கைதியான நான் விடுதலை செய்யப்படப் போவதில்லை என்றால்
இந்தியாவில் அரசியல் கைதி என்று யாருமே இல்லை எனலாம். நாம் எப்படிப்பட்ட வாதங்களை எடுத்து
முன்வைக்க வேண்டும் என்பதனைக் கோடிட்டுக் காண்பித்து இருக்கிறேன். நீ என்னைக் காட்டிலும்
சிறப்பாக அதனைச் செய்வாய் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இரண்டாவதாக, ‘சிறையில் நடத்தை’.
கடந்த ஐந்து வருடங்களாக என்மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. அதிகாரிகளும் இந்த விஷயத்தில்
என் மீது எந்த எதிர்க்கருத்தும் கொண்டிருக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
அடுத்ததாக, என்னுடைய
தனிப்பட்ட கருத்துகள் குறித்து. இதனை நான் எல்லோருக்கும் தெளிவாகத் தெரிவித்து கொண்டுதான்
இருக்கிறேன். 1915 மற்றும் 1918ம் ஆண்டுகளிலேயே நான் என்னுடைய கருத்துக்களைத் தெளிவாகக்
கூறியிருக்கிறேன். அவை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டால் என்னுடைய விடுதலையை மேலும் சிக்கலாக்கும்
என்ற விஷயத்தையும் அறிந்தே நான் அவற்றைத் தெளிவுபடுத்தி இருக்கிறேன். நான் அரசுக்கு
அனுப்பிய அறிக்கை, உனக்கு நான் சென்ற கடிதத்தில் எழுதியிருந்த அதே விஷயம்தான். அதற்கு
முன்னரே அது பொதுமக்கள் பார்வைக்கும் வைக்கப்பட்டது. ஆகவே பொது மக்களும் சரி அரசும்
சரி, என்னுடைய கருத்துகளை அறிந்தே இருக்கிறார்கள். இந்த மாற்றங்கள் செயல்படுத்தப் படுமானால்,
அதிலும் வைஸ் ரீகல் கவுன்சில்கள் மக்களின் குரலைப் பிரதிபலிக்கப் போகிறார்கள் என்றால்,
நானும் என்னால் இயன்ற அளவு, அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அரசியல் சட்ட அடிப்படையில்
சட்ட ஒழுங்கைக் கடைப்பிடிக்க முயல்வதில் தயக்கம் எதுவும் இல்லை. சட்ட ஒழுங்கே சமுதாயத்திற்கு,
குறிப்பாக ஹிந்து சமுதாயத்திற்கு அடிப்படையானது. ஸ்காட் மக்களும் போயர் மக்களும் பிரிட்டிஷ்
சாம்ராஜ்யம் அவர்கள் முன்னேற்றத்திற்கு நடவடிக்கைகளை எடுக்கும்போது அவர்களோடு இணைந்து
பணியாற்றவில்லையா? அத்தகைய ஒரு காமன்வெல்த்தில் இந்தியா மட்டுமல்ல, வேறு எந்த நாடாக
இருந்தாலும் கலந்து கொள்வதில் தவறில்லை. அதற்கு எதிராக ஏன் இருக்க வேண்டும்? தனியாக
இருந்து அவதிப்படுவதைக் காட்டிலும் இப்படி கூடி இருப்பதால் நன்மை எனில் அது நல்லதே.
மனிதன் கூடி வாழப் பழக்கப்பட்டவன். ஒரு நாடும் அதேபோலத்தான். மனிதனுடைய இயல்பான சமூகக்
குணங்களை மேம்படுத்தும் குடும்பங்களையும் தேசங்களையும் போலவே சாம்ராஜ்யத்தின் ஆட்சியும்
ஒரு இயற்கையான வளர்ச்சியாக இருக்கும்.
எனதருமை பால், எனக்குக் கடந்த இரண்டு நாட்களாக ஜலதோஷம் இருப்பதால்
ஜூரமும் இருக்கிறது. அதனால் நான் எழுத வேண்டிய பல விஷயங்களை எழுதாமல் விடுகிறேன். நீ
உன்னுடைய உடலை நன்றாகப் பார்த்துக்கொள். எங்களைப் பற்றியோ அல்லது வேறு எதனைப் பற்றியுமோ
கவலைப்பட வேண்டாம். நீ என்னைச் சந்தித்த போது நம் குடும்ப விவகாரங்கள் குறித்து நான்
சொன்னதை மறக்க வேண்டாம். செலவுகளைக் குறைத்து சேமிக்க முயற்சி செய். எனதருமை யமுனா
எனக்கு பாதாம் மற்றும் இனிப்புகள் அடங்கிய பெரிய பார்சல் ஒன்றை விரைவிலேயே கொடுத்து
அனுப்புவதாகச் சொன்னாள். அது மிகப் பெரியதாக இருப்பதால் அதனை அனுப்பப் பல மாதங்கள்
ஆகிறது என்று நினைக்கிறேன். அவளைப் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி. அவளுடைய தைரியமும்
இனிமையான குணமும் மேலும் மகிழ்ச்சியைத் தருகின்றன. ஆனால் வஹினியை (அண்ணி) நினைத்தால்
வருத்தமாக இருக்கிறது. நான் விடுதலையாகி வந்தாலும் என்னை வரவேற்க அவர் இருக்க மாட்டார்
என்பதை நினைக்கும் போது வருத்தம் அதிகமாகிறது. அவர் என்னுடைய தோழி. என்னுடைய சகோதரி
மட்டுமல்லாமல் என்னுடைய அன்னையும் கூட. பெண்கள் உடன்கட்டை ஏறுவது போல அவர் மரணித்திருக்கிறார்.
தன்னுடைய அன்புக் கணவன் சிறை சென்று திரும்பமாட்டான் என்ற போதே இந்த இந்தியப் பெண்மணிகள்
தங்கள் இதயத்தை நெருப்பில் பொசுக்கித் தியாகம் செய்து விடுகிறார்கள். தேசத்திற்காக
உயிரை விடும் தியாகிகளைப் போலவே இவர்களும் தியாகிகளே. இந்த ஹிந்துப் பெண்கள் அமைதியாக
தங்கள் தாய்நாட்டிற்காக, தங்கள் மதத்திற்காக இத்தகைய தியாகத்தைச் செய்கிறார்கள்.பெண்கள்
பொதுவாகவே மிகவும் இனிமையானவர்கள். அதிலும் ஹிந்துப் பெண்கள் மிக மிக இனிமையானவர்கள்.
அவர்கள் நமக்கு ஆறுதல் அளிப்பவர்கள். சீதாதேவியின் அமரத்துவம் வாய்ந்த கதையை நினைவில்
வைத்திருப்பவர்கள். நீ நமது தாயை ஆறுதல் படுத்த வேண்டும் என்று நம் அன்பிற்குரிய பாபா
கூறச் சொன்னார். அவர் வஹினியைக் காட்டிலும் இவர்களுக்காக வருத்தப்படுகிறார். நீ மகிழ்ச்சியாகவும்
ஆரோக்கியமாகவும் இருப்பதை
க்
கண்டதில் எனக்கு மிகவும் சந்தோசம்.
இதேபோல எப்போதும் ஆரோக்கியமாக இருக்க முயற்சி செய். உணர்ச்சி மேலிடுவதனாலும் இங்கு
கடிதம் எழுதும் சூழ்நிலை சரியில்லாததாலும், என் மீது அன்பும் கருணையும் கொண்ட பலருக்கு
நன்றி கூற இயலாத நிலையில் இருக்கிறேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்த உணர்வு
ஒன்றுதான் எனக்கு இத்தனை மலேரியா வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்சினைகள் இருந்தபோதும் என்னைத்
தாங்கிப் பிடித்துக்கொண்டு இருக்கிறது. மனிதாபிமானத்தின் அடிப்படையிலும் என்னுடன் பழகியதன்
காரணமாக நட்பினாலும் பலர் என்னைக் குறித்து நலம் விசாரிக்கின்றனர். இத்தகைய நண்பர்கள்
இருக்கிறார்கள் என்ற எண்ணம் எனக்கு ஆறுதலைக் கொடுக்கின்றது. எனதருமை சாந்தா எப்படி
இருக்கிறாள்? அவளைப் படிக்கவும் எழுதவும் சொல்லித் தொந்தரவு செய்யாதே. ஆனால் அத்தகைய
வேலைகளை யமுனாவிடம் கூறு. நான் திரும்பி வரும்போது அவள் எனக்கு டைப்ரைட்டராக இருக்கிறேன்
என்று கூறி இருக்கிறாள். சம்பளத்திற்கு அல்ல, தேசத்தின் மேல் இருக்கும் பற்றினால்.
அன்பிற்குரிய பாபு, அண்ணா, மற்றும் மைத்துனர்களிடம் என் அன்பைக் கூறவும்.
இப்படிக்கு
தங்கள் அன்பிற்குரிய
தாத்யா.