Posted on Leave a comment

வலம் மார்ச் 2018 இதழ் – முழுமையான படைப்புக்கள்

வலம் மார்ச் 2018 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.

காவிரி – தீரா நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினை | லக்ஷ்மணப் பெருமாள்

மத்திய பட்ஜெட் 2018 | ஜெயராமன் ரகுநாதன்

ஓம் எனும் ஓசையின் தோற்றம்: ஓர் ஆய்வு | மூலம்: கொய்ன்ராட் எல்ஸ்ட், தமிழில்: ஜடாயு

சில பயணங்கள் – சில பதிவுகள் (தொடர்) | 6 – மாணவர் போராட்டமும் மசால் தோசையும் | சுப்பு

ஒரு கிரைம் கதை (சிறுகதை) | சுஜாதா தேசிகன்


அறம் திரைப்படம்: இந்திய எதிர்ப்பு அரசியலின் மாதிரி – ஹரன் பிரசன்னா

ஒளிமயமான எதிர்காலம் | ஹாலாஸ்யன்

கரு | பிரகாஷ் ராஜகோபால்

கோவில் சொத்துக்கள்: உயர் நீதிமன்ற உத்தரவு | பி.ஆர்.ஹரன்

Posted on Leave a comment

கோவில் சொத்துக்கள்: உயர் நீதிமன்ற உத்தரவு | பி.ஆர்.ஹரன்

தமிழகத்தில் உள்ள ஆலயங்கள் பல நூற்றாண்டுகள் வரலாறு கொண்டவை. சேர, சோழ, பாண்டிய, பல்லவ, நாயக்கர்கள் போன்று பழங்காலத்தில் தமிழகத்தை ஆண்ட மாமன்னர்களால் கட்டப்பட்டவை. அவ்வாறு தாங்கள் கட்டிய மாபெரும் கோவில்களுக்கு அம்மன்னர்கள், நிலங்கள் முதலான சொத்துக்களை ஏராளமாகக் கொடுத்தனர். மன்னர்கள் மட்டுமல்லாமல், பின்வந்த நாட்களில் நிலச்சுவான்தார்களும், செல்வந்தர்களும்கூடக் கோவில்களுக்குப் பலவிதமான சொத்துக்களைத் தானமாகத் தந்துள்ளனர். அந்தச் சொத்துக்கள் மூலமாகக் கிடைக்கும் வருமானத்தில் கோவில் நிர்வாகம் மட்டுமல்லாமல், பல்வேறு திருவிழாக்களும் உற்சவங்களும் கொண்டாடுவதும், பசுமடங்கள் கட்டிப் பசுக்களை பராமரிக்கவும் வேண்டும் என்பதே தானமளித்தவர்களின் நோக்கமாகும். மேலும் கோவில் சம்பந்தப்பட்ட, ஹிந்து சமூகம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு சொத்துக்களின் மூலம் கிடைக்கும் வருமானம் பயன்படவேண்டும் என்பதே அவர்கள் எண்ணமாகும்.

கோவில்களையும் அவற்றின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களையும் பாதுகாப்பதாகச் சொல்லித்தான் அரசு அவற்றின் நிர்வாகத்தைக் கையகப்படுத்திக் கொண்டது. ஆனால் கடந்த 47 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஆலய நிர்வாகம் என்கிற பெயரில் கோவில்களின் சீரழிவையும் கோவில் சொத்துக்களின் பேரழிவையும்தான் பார்க்கிறோம்.

கடந்த பல ஆண்டுகளில், கோவில் சொத்துக்கள் குறைந்தும் அழிந்தும் வருவதோடு மட்டுமல்லாமல், இருக்கின்ற சொத்துக்களிலிருந்து கிடைக்கவேண்டிய வருமானமும் நின்றுபோயுள்ளதைக் காண்கிறோம். ஊழலும் சீர்கேடும் நிறைந்த நிர்வாகத்தினால்தான் இந்த நிலை என்பது தெளிவு. உதாரணத்திற்கு, தமிழகத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களின் கணக்கை எடுத்துக்கொள்வோம். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 36,488 கோவில்கள், 56 திருமடங்கள், 58 பிரம்மாண்ட கோவில்கள், 17 சமண கோவில்கள் ஆகியவை உள்ளன. இவற்றுக்குச் சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருப்பதாக அரசு வெளியிட்ட அறநிலையத்துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் 1986ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அறநிலையத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் மேற்கண்ட கோவில்களுக்கு மொத்தமாக 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. அதாவது 28 ஆண்டுகளில் 47,000 ஏக்கர் நிலங்கள் காணாமல் போய்விட்டன! (தினமலர் – 5 ஆகஸ்டு 2014). திராவிட மாயையில் கோவில் நிலங்கள் தொடர்ந்து காணாமல் போகின்றன என்பதற்குச் சமீபத்திய உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்.

காணாமல் போன சிவகங்கை சூரக்குடி கோவில் நிலங்கள்

சிவகங்கை மாவட்டம் சூரக்குடியில் ஆவுடைநாயகி அம்பாள் சமேத தேசிகநாத ஸ்வாமி திருக்கோவிலின் நிலங்களை முத்துச் செட்டியார் என்பவர் மோசடி செய்து விற்றுள்ளார். இது சம்பந்தமாகக் கோவிலின் பரம்பரை அறங்காவலராக இருக்கும் லட்சுமணன் என்பவர் கடந்த 2016 நவம்பர் மாதம் அறநிலையத்துறை ஆணையருக்கு மனு அளித்திருந்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆணையர், “உடனடியாக விசாரணை நடத்தி கோவில் நிலங்களை மீட்கும் விதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று பரமக்குடியில் உள்ள அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

ஆனால், உதவி ஆணையரோ, அந்த உத்தரவின்படி நடந்துகொள்ளாமல், சிவில் நீதிமன்றத்தை அணுகி மேல் முறையீடு வழக்குத் தொடரும்படி பரம்பரை அறங்காவலருக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே, உதவி ஆணையரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி அறங்காவலர் லட்சுமணனின் பிரதிநிதிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.


உயர் நீதிமன்ற உத்தரவு

மனுவை இம்மாதம் (ஃபிப்ரவரி) 12ம் தேதி விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி மகாதேவன், “உதவி ஆணையர் அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்ட நோக்கத்தையும், சட்டத்தின் நோக்கத்தையும் கவனத்தில் கொண்டு பரிசீலிக்கத் தவறிவிட்டார். அறநிலையத்துறையின் ஒப்புதல் பெறாமல் சொத்துக்களை விற்க அனுமதித்தால் அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்ட நோக்கமே பாழாகிவிடும்” என்று கூறி உதவி ஆணையரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

ஏற்கெனவே தமிழகக் கோவில்களின் சொத்துக்களில் 47,000 ஏக்கர் நிலங்கள் காணாமல் போயுள்ளதையும் குறிப்பிட்ட நீதிபதி மகாதேவன், “ஒவ்வொரு பகுதிக்கும் குழுக்கள் நியமிக்கப்பட்டு கோவில் சொத்துக்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் பற்றிய விவரங்களைச் சேகரித்து ஆறு வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோவில் சொத்துக்களை மீட்கத் தங்கள் அதிகாரங்களை ஆணையரும் இணை ஆணையர்களும் பயன்படுத்த வேண்டும். ஏற்கெனவே கடந்த 2014ம் வருடம் அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவின் பேரில் அறநிலையத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த இரண்டாவது முறையாக அளிக்கப்படும் இந்த உத்தரவை நிறைவேற்றத் தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்க இந்த நீதிமன்றம் தயங்காது” என்று கூறி வழக்கு விசாரணையை ஆறு வாரங்களுக்குத் தள்ளி வைத்தார்.

உயர் நீதிமன்ற உத்தரவின் அம்சங்கள்

இரண்டு வாரங்களுக்குள் கோவில் சொத்துக்களை மீட்கும் விதமாக பரமக்குடி உதவி ஆணையர் விசாரணை நடத்தி மேல்நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

கோவில் நிலங்களுக்குச் சம்பந்தமில்லாத மூன்றாம் நபர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் பெயர்களில் பட்டாக்கள் வழங்கப்பட்டிருந்தால், அந்தத் தகவல்களைச் சேகரித்து நான்கு வாரங்களில் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

சட்ட விரோதமாக தனிப்பட்ட பயனாளிகளுக்கு மாற்றப்பட்டுள்ள கோவில் நிலப் பட்டாக்களை மீண்டும் கோவில் பெயருக்கு மாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, அனைத்துத் தாசில்தார்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஆகியோருக்கு வருவாய்த்துறைச் செயலர் உத்தரவிட வேண்டும். அறநிலையத்துறையிடமிருந்து எழுத்துப் பூர்வ அனுமதி இல்லாமல் கோவில் நிலங்களுக்குப் பட்டா வழங்கப்படக் கூடாது.

அனைத்துக் கோவில்களின் சொத்துக்கள் பற்றிய விவரங்களைத் திரட்டி அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

கோவில்களின் சொத்துக்கள் விற்பனை, குத்தகை மற்றும் அடைமானம் செய்யப்பட்ட விவரங்களையும், அவற்றுக்கு அறங்காவலர்கள் தெரிவித்த ஆட்சேபனைகள் பற்றிய விவரங்களையும் நான்கு வாரங்களில் அறிக்கையாக ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும்

அறங்காவலர்கள் வசம் உள்ள சொத்துக்கள், சட்ட விரோதமாக மூன்றாம் நபர்கள் பெயர்களில் உள்ள சொத்துக்கள், அனுமதியுடனும் அனுமதியின்றியும் விற்கப்பட்டுள்ள சொத்துக்கள், நிலுவையில் உள்ள வழக்குகள் ஆகிய விவரங்களைச் சேகரித்து ஆறு வாரங்களில் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும்.

கோவில் சொத்துக்கள் (விற்பனை, குத்தகை) விஷயத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டுள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை ஆணையர் ஆராய வேண்டும்.

கோவில் சொத்துக்கள் சட்ட விரோதமாக விற்பனைக்கும் குத்தகைக்கும் விடப்படவில்லை என்பதை உறுதி செய்யுமாறு கீழ்நிலை அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட வேண்டும்.

ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துக்களை மீட்க உடனடி விசாரணை செய்யுமாறு உதவி ஆணையர்கள் மற்றும் இணை ஆணையர்களுக்கு ஆணையர் உத்தரவிட வேண்டும்.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சொத்துக்கள் மற்றும் பொதுமக்கள் வசம் உள்ள சொத்துக்களை உடனடியாக ஒப்படைத்துவிடும்படியும், அவ்வாறு ஒப்படைக்காத பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையர் பொது அறிவிப்பு வெளியிட வேண்டும்.


சிவகங்கை கோவில் விஷயம்

சிவகங்கை கோவில் நிலங்கள் வழக்கு விஷயத்தில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால், முத்துச் செட்டியார் என்கிற கோவிலுக்குச் சம்பந்தமில்லாத மூன்றாம் நபர் கோவில் நிலங்களை விற்பனை செய்துள்ளார் என்பதுதான். பரம்பரை அறங்காவலருக்குத் தெரியாமல் நடந்துள்ள விற்பனையாகும் இது. அறநிலையத்துறை அதிகாரிகளின் உதவி இன்றி இந்த விற்பனை நடந்திருக்க வாய்ப்பேயில்லை என்பது தெளிவு.

மற்ற சில கோவில்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை ஆராய்ந்தால், கோவில் நிலங்களின் மோசடி விற்பனைகளில் அறநிலையத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கும் வாய்ப்பு அதிகம் என்கிற உண்மை உறுதி செய்யப்படுகிறது. இவ்வுண்மையைக் கவனத்தில் கொண்டுதான் நீதிபதி மகாதேவன் மேற்கண்ட சிறப்பான உத்தரவை இட்டுள்ளார்.

சட்டமும் கோவில் சொத்துக்களும்

இந்து அறநிலையத்துறைச் சட்டத்தின்படி கோவில் அறங்காவலர்களுக்கு மட்டுமே கோவிலை நிர்வாகம் செய்யும் அதிகாரம் உண்டு. ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழக அரசு எந்தக் கோவிலுக்கும் அறங்காவலர்களை நியமனம் செய்யவில்லை. வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகிறது. இந்து அறநிலையத்துறை சட்டத்தின் 47வது பிரிவின்படி கோவில்களுக்கு அறங்காவலர்கள் அமைப்பது தமிழக அரசின் தலையாய கடமையாகும். இந்தக் கடமையைச் செய்யத்தவறிய தமிழக அரசும் அறநிலையத்துறையும், அவர்கள் இஷ்டத்திற்கு அறங்காவலர்களுக்குப் பதிலாக அவர்கள் இடத்தில் ‘பொருந்தும் நபர்கள்’ (Fit Persons) என்கிற பெயரில் அறநிலையத்துறை அலுவலர்கள் சிலரையே நியமிக்கின்றன. ஆனால் இந்து அறநிலையத்துறை சட்டத்தில் அரசு அலுவலர்களை கோவில் அறங்காவலர்களாக நியமிக்க இடமோ அதிகாரமோ கொடுக்கப்படவில்லை.

அறங்காவலர்கள் என்று யாரும் இல்லாதபோது, கோவில் சொத்துக்களை நிர்வாகம் செய்வதற்கும், விற்பதற்கும், வாடகைக்கோ குத்தகைக்கோ விடுவதற்கும் செயல் அலுவலருக்கோ, உதவி/துணை/இணை ஆணையருக்கோ, பொருந்தும் நபருக்கோ சட்டப்படி அதிகாரம் இல்லை. இந்து அறநிலையத்துறை சட்டத்தின் 23வது பிரிவு ஆணையருக்கு மட்டும் குறைந்தபட்சமாக மேற்பார்வை செய்யும் அதிகாரம் மட்டுமே கொடுத்துள்ளது. அவரும் கூட, குறிப்பிட்ட சொத்து எதற்காகக் கோவிலுக்குக் கொடுக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டுத் தேவையான வருமானம் வருகிற அளவில்தான் அந்தச் சொத்தைக் கையாள வேண்டும்.

இந்து அறநிலையத்துறை சட்டம் 45வது பிரிவின்படி ஆணையர் செயல் அலுவலரை நியமித்தது செல்லாது. இதை சிதம்பரம் கோவில் வழக்கில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆகவே, அந்தச் சட்டத்தின்படி, தமிழகத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்கள் அனைத்திலும் இருக்கும் செயல் அலுவலர்களின் நியமனமும் செல்லாததாகிவிடுகிறது. எனவே, அந்தச் செயல் அலுவலர்கள் கோவில் சொத்துக்களைக் குத்தகைக்கு விடவோ குத்தகைதாரர்களுடன் ஒப்பந்தம் செய்யவோ அதிகாரம் அற்றவர்கள் ஆவார்கள்.

இந்து அறநிலையத்துறை சட்டத்தின் 78, 79 மற்றும் 79-C பிரிவுகள் கோவில் நிலங்களின் ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கும், அக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுவதற்கும், வாடகை மற்றும் குத்தகைத் தொகைகளை வசூல் செய்வதற்கும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்குத் தேவையான அதிகாரமும் உரிமையும் அளிக்கின்றன. அந்த அதிகாரங்களைக் கொண்டும் தேவையான அலுவலர்களைக் கொண்டும் கோவில் நிலங்களை சரிவர நிர்வாகம் செய்யாமல் இருப்பது, அறநிலையத்துறை தன்னுடைய ஊழல் நிறைந்த திறமையற்ற நிர்வாகத்தை ஒத்துக்கொள்வதாகும்.

அரசு ஆணை (G.O. Ms. No. 689, Home dated 18th February 1958) படி, கோவில் சொத்துக்களை ஹிந்து அல்லாதவர்களுக்கு வாடகைக்கு விடக்கூடாது என்று உள்ளது. மேலும், D.Dis.No.2599/58, dated 1st February 1958 – D.Dis.No.2311/58, dated 7th April 1958 படி, கோவில் நிலங்களையும், மனைகளையும், கட்டிடங்களையும் வாடகைக்கு விடும்போது, அவற்றை உள்வாடகைக்கு விடக்கூடாது என்றும், அந்நிலங்களில் வாடகைதாரர்கள் எந்தவிதமான கட்டிடங்களையும் கட்டக்கூடாது என்றும் விதிகள் இருக்கின்றன. அவ்வாறு இருக்கும் பட்சத்தில், அந்தக் குறிப்பிட்ட தேதியில் வாடகை ஒப்பந்தம் தானாகவே ரத்தாகிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏல அறிவிப்பிலும், வாடகை அறிவிப்பிலும் இந்த விதிகளைக் கட்டாயமாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கோவிலுக்கும், ஒவ்வொரு ஆண்டும் ‘கேட்பு, வசூல், நிலுவை பதிவேடு’ என்கிற ஆவணத்தைத் தயார் செய்ய வேண்டியது அறநிலையத்துறையின் கடமை. அதில் சொத்தின் பயனாளிகள் மற்றும் வாடகை ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் இருக்க வேண்டும்.

இந்து அறநிலையத்துறை சட்டம் 29ம் பிரிவின்படி கோவிலைப் பற்றிய அனைத்து விஷயங்களும் அடங்கிய பதிவேடு (Ledger 29) ஒன்று தயாரிக்கப்பட வேண்டும். சட்டப்பிரிவு 30ன் படி, அப்பதிவேடும் ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ஆண்டின் கூட்டல்கள், கழித்தல்கள் கணக்கில் கொண்டு (Updating) சரி செய்யப்படவேண்டும். சட்டப்பிரிவு 31ன் படி, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் பதிவேடு (Ledger 29) முழுமையாகத் தயாரிக்கப்பட வேண்டும். 

மேற்கண்ட சட்டங்களையும் விதிகளையும் கருத்தில் கொண்டு, உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் உள்ள முக்கிய அம்சங்களைப் பார்த்தோமானால், உயர் நீதிமன்றத்தின் உத்தரவு எந்த அளவிற்குக் கோவில்களின் நலனைக் கருத்தில் கொண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது புரியும். தமிழ் ஹிந்துக்கள் உயர் நீதிமன்றத்தின் உத்தரவைப் பாராட்ட வேண்டும்.

தங்களுடைய அரை நூற்றாண்டுக்கும் மேலான நிர்வாகச் சீர்கேட்டைச் சரிசெய்வதற்கான ஒரு நல்வாய்ப்பாக அறநிலையத்துறையும், தமிழக அரசும் இவ்வுத்தரவைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால் மக்களின் மதிப்பைப் பெற முடியும். ஆனால் அரை நூற்றாண்டுக்கும் மேலான திராவிட அரசுகளின் செயல்பாடு நமக்கு அந்த நம்பிக்கையைத் தரவில்லை. எனினும், தமிழக அரசுக்கு நல்லபுத்தி வரவேண்டும் என்று கோவில்களில் உள்ள கடவுளர்களை வேண்டிக்கொள்வோம்.

Posted on Leave a comment

கரு | பிரகாஷ் ராஜகோபால்

பெங்களூருவின் அந்தப் பெரிய மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவப் பிரிவில் டாக்டரைக் காண எங்கள் முறை வருவதற்காகக் காத்திருந்தோம். திருமணமாகி ஆறுமாதங்களில் நல்ல செய்தி. மனைவியை அழைத்துச் சென்று மருத்துவமனையில் பரிசோதனை. “எல்லாம் நார்மலா இருக்கு. பிளட் டெஸ்ட் எடுத்துட்டுப் போங்க” என்றார்.

ரிசப்ஷனிஸ்ட் அழைத்து “உள்ளே போங்க” என்றதும் உள்ளே சென்று அமர்ந்தோம். ஐம்பது வயதிருக்கும் அந்த டாக்டருக்கு. ரொம்பக் கண்டிப்பானவர் என்று பெயரெடுத்தவர். சொற்ப வார்த்தைகளே பேசுவார். அசிஸ்டென்ட் டாக்டர்கள் அவரது முகத்தின் குறிப்பறிந்து டக்டக்கென்று பணியில் உதவ வேண்டும்; அவர் கேட்ட கேள்விக்குத் தெளிவாக சுருக்கமாக பதில் சொல்ல வேண்டும். அவர் பேசுகையில் குறுக்கே பேசக்கூடாது. ஒருமுறைதான் எதையும் சொல்வார். இப்படி நிறைய கண்டிப்புத்தனம் இருப்பினும் அந்த டாக்டரையே நாங்கள் தேர்வு செய்திருந்தோம். காரணம் அவர் பல வருடங்கள் அனுபவமிக்க சீனியர் மகப்பேறு மருத்துவர்.

அவரது கணினித் திரையில் ரத்தப் பரிசோதனை முடிவை ஒரு நிமிடம் ஊன்றிப் படித்தார். தன் சுழலும் நாற்காலியைத் திருப்பி, எங்களைப் பார்த்தார். தன் மூக்குக் கண்ணாடியை சரிசெய்தவாறே, “இந்த ஹாஸ்பிடல்ல இருக்குற பன்னிரண்டு கைனகாலஜிஸ்ட்டுகள்ல, நாங்க ஒரு மூணு டாக்டர்ஸ்தான் பிளட் டெஸ்ட் எழுதிக் கொடுக்கும்போது டாக்சப்ளாஸ்மாவுக்கும் சேர்த்து இருக்கானு பார்க்கச் சொல்லி எழுதிக் கொடுப்போம். மத்தவங்க அவ்வளவு சீரியஸா அதை எடுத்துக்கறது இல்ல. ஐயம் ஸாரி, உங்களுக்கு டாக்ஸபிளாஸ்மோசிஸ் பாஸிட்டிவ்னு காமிக்குது” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

Toxoplasmosis! எனக்கு திக்கென்று இருந்தது. மனைவிக்கு சரியாகப் புரியவில்லை. என் முகத்தை பயத்துடன் பார்த்த என் மனைவியிடம் அவர் சொன்னார். “இது ஒரு பாரசைட்டிக் இன்ஃபெக்ஷன், இது ப்ரக்னென்சிய பாதிக்கும், கருவையும் பாதிக்கும்” என்றவர், “நீங்க ஒண்ணு செய்யுங்க. ஆனந்த் லேபரட்ரினு இன்னொரு லேப் இருக்கு, அங்க போய் பிளட்டெஸ்ட் எடுத்துப் பாருங்க. என்ன ஏதுன்னு எல்லாம் சொல்லாதீங்க. டாக்ஸோ செக் பண்ணிட்டு வாங்க. அங்க ரிசல்ட் எப்படி வருதுன்னு பாத்துட்டு முடிவெடுக்கலாம்” என்று ரத்தப் பரிசோதனைக்கு எழுதிக் கொடுத்தார்.

மறுநாளே ஆனந்த் லேபிற்கு சென்று ரத்தப் பரிசோதனைக்கு ரத்தமாதிரி கொடுத்தார் என் மனைவி. மூன்று நாள்கள் கழித்து வந்த பரிசோதனை முடிவை எடுத்துக்கொண்டு மறுபடியும் கைனக்காலஜிஸ்டை சந்தித்தோம். ரிசல்டை வாங்கிப் பார்த்த டாக்டரின் முகத்தில் சீரியஸ்தன்மை அதிகமானது. நிமிர்ந்து எங்களைப் பார்த்தவர், “மறுபடியும் டாக்ஸோ பாசிட்டிவ்னு வந்திருக்கு” என்றவர், “வீட்டில் செல்லப்பிராணிகள் ஏதும் வளர்க்கிறீர்களா?” என்றார்.

“இல்லை, எனக்கு நாய், பூனைன்னாலே பயம்” என்றார்.

“நான்வெஜ் சாப்பிடுவீங்களா?”

“இல்லை, வெஜிடேரியன்தான்.”

டாக்ஸோ என்று டாக்டர் கவலையுடன் சொன்ன டாக்சப்ளாஸ்மா என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு ஒட்டுண்ணிப் புழு. இந்த ஒட்டுண்ணி தாக்கிய நோயாளிகள் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை. வெகு சிலருக்கே ஃப்ளு காய்ச்சல் போல ஒரு அறிகுறி தென்படலாம். உலகத்தில் பாதிப்பேருக்கு மேல் டாக்சப்ளாஸ்மா நோய்த்தொற்று இருக்கிறது, ஆனால் அதற்கான எந்த அறிகுறிகளையும் அது வெளிப்படுத்துவதில்லை. ஐரோப்பா, அமெரிக்கா போன்ற குளிர்ப்பிரதேசங்களில் இது பரவலாகக் காணப்படும். குறிப்பாக, சமைக்காத இறைச்சி, பதப்படுத்தப்படாத பால், பதப்படுத்தப்படாத பாலாடைக்கட்டி போன்றவைகள் விரும்பி உண்ணப்படும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் டாக்சோ அதிகம் உள்ளது.

பொதுவாக, சரியாக வேகவைக்கப்படாத இறைச்சியைச் சாப்பிடுகையில் அந்த இறைச்சியில் டாக்ஸா தாக்கம் இருந்தால் இந்த நோய்த்தொற்று வரும். ஆனால், சைவ உணவை மட்டுமே உண்ணும் என் மனைவிக்கு இது தொற்றியது எப்படி?

இந்த ஒட்டுண்ணிகள் இருக்கும் எலிகளைப் பூனைகள் தின்ன அவற்றுக்கும் இது பரவும். பூனையின் வயிற்றில் அடுத்தப் பரிணாமத்தை அடையும் இந்த ஒட்டுண்ணிகள் பூனையின் கழிவில் லட்சக்கணக்கில் வெளியேறுகின்றன. இப்படி வெளியேறும் ஒட்டுண்ணிப் புழுக்கள் நோய்த் தாக்கத்தை உண்டாக்க வல்லவை. கக்கா போய் விட்டு வந்த பூனையைத் தூக்கிக் கொஞ்சுகையில் நம் கைகளில் பட்டு, தெரியாமல் அது நம் வாயினுள், மூக்கினுள் நுழைந்து, நம்மையும் போட்டுத் தாக்குகிறது. கர்ப்பிணிகளுக்கு இந்த நோய்த் தொற்று வந்தால் அது தொப்புள்கொடி வழியே பயணித்து வளரும் கருவையும் தாக்குகிறது.

அது சரி, நாய், பூனை இது எதையுமே எப்போதுமே தொடாத என் மனைவிக்கு இந்தத் தொற்று எவ்விதம் நிகழ்ந்திருக்கும் என்று இணையத்தில் தேடிப்படித்தேன். மண்ணுக்கு உள்ளே இருந்து கிடைக்கும் காய்கறிகளான கேரட், உருளைக்கிழங்கு, முள்ளங்கி போன்றவற்றை காய்கறிக் கடையில் வாங்குகையில் நோய்த்தாக்கம் இருந்த பூனையின் கழிவுகள் ஒட்டிய மண் அந்தக் காய்கறிகளில் ஒட்டிக் கொண்டிருந்து, அதில் கைபட்டு நம் வாய் மூலமோ, மூக்கு வழியாகவோ டாக்ஸபிளாஸ்மா ஒட்டுண்ணிகள் உடலில் புக வாய்ப்பிருக்கிறது. எனக்குத் தெரிந்து இந்த வழியாகத்தான் என் மனைவிக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பினேன்.

எதிர்பாராதவிதமாக டாக்சப்ளாஸ்மா இருக்கும் மண்ணை உண்பது – சரியாக கழுவப்படாத பழங்கள் மூலம் நேர்கிறது.

டாக்சப்ளாஸ்மா கலந்த அசுத்தமான நீரைக் குடிப்பது (குளம் போன்ற பொதுக் குடிநீர்நிலைகளில் நோய்த்தாக்கம் உள்ள பூனையின் கழிவு கலப்பதின் மூலம்) இந்தத் தொற்றைக் கடத்துகிறது.

இந்த நோய்த்தொற்றை டாக்சப்ளாஸ்மொசிஸ் என்பர். இதன் காரணகர்த்தாவை ஃபர்ஸ்ட்நேம் சர்நேம் எல்லாம் சேர்த்துச் சொல்வதானால் டாக்ஸப்ளாஸ்மா கோன்டை எனலாம்.

டாக்ஸோ ஒட்டுண்ணி உடம்பில் இருந்தாலும், நம் நோய்த்தடுப்பு சக்தி நன்றாக இருக்கும் வரை அது நம்மை ஒன்றும் செய்வதில்லை. எப்போது நம் நோய் எதிர்ப்புச்சக்தி குறைகிறதோ அப்போது டாக்ஸோ வலுப்பெற்று இந்த வியாதியை நம் உடலில் பரப்புகிறது.

சாதாரண மனிதர்களில் அதிகம் வெளிப்படாத டாக்ஸோ கர்ப்பமுற்ற பெண்களை எளிதாகத் தாக்கி தொப்புள்கொடி மூலம் வளரும் கருவையும் தாக்குகிறது.

டாக்ஸோ தாக்கின வளரும் சிசு வளர்ச்சி குன்றி இருக்க வாய்ப்புண்டு. குறைப்பிரசவம் அல்லது சிலசமயம் கர்ப்பமே கலைந்துவிடும் ஆபத்தும் உண்டு. நோய்த்தாக்கப்பட்ட கரு பெரும்பாலும் எந்தவிதப் பாதிப்பையும் வெளிக்காட்டுவதில்லை. டாக்ஸோ தாக்கின சிசுக்கள் மற்ற ஆரோக்கியமான குழந்தைகளைப் போன்றே பிறந்து வளரும். ஆனால், அவர்களுக்குப் பத்து வயது பூர்த்தியடைகையில் பார்வைக் குறைபாடு, நரம்புமண்டலக் குறைபாடு, மூளைவளர்ச்சிக் குறைவு போன்றவையாக அதன் பாதிப்புகள் வெளிப்படுகின்றன.

டாக்ஸோ வராமல் தவிர்க்க என்னென்ன முன்னெச்சரிக்கைகள் எடுக்கலாம்?

– இறைச்சி உணவுகளை சரியாக, முழுமையாக சமைத்து உண்பது. டாக்ஸோ ஒட்டுண்ணி கொதிநிலை வெப்பத்தில் கொல்லப்பட்டுவிடும்.

– மண்ணிலிருந்து பெறப்படும் காய்கறிகள், கிழங்கு வகைகளை சுத்தமாகக் கழுவிய பின்னரே உணவுக்குப் பயன்படுத்துதல்

– காய்ச்சாத பால், பதப்படுத்தப்படாத பாலாடைக்கட்டி போன்றவற்றை உட்கொள்வதைத் தவிர்த்தல்.

– பழங்கள் போன்ற இயற்கை உணவுகளை நன்கு கழுவியபின்னரே உண்ணுதல்

– காய்கறிகளை வெட்டப் பயன்படுத்தும் பலகையை நன்கு கழுவித் சுத்தப் படுத்துதல்

– தோட்டவேலைகள் செய்கையில் கைகளில் கையுறை உபயோகித்தல்

– குழந்தைகளுக்குக் கை கழுவுவதன் அவசியத்தை வலியுறுத்துதல்

– பூனைகளை வளர்ப்போர், அதன் கழிவு டப்பாவை சுத்தம் செய்கையில் கையுறைகள் அணிவது

– கர்ப்பவதிகள் பூனைகளை மடியில் போடாது, படுக்கையில் சேர்க்காது சற்று விலகி இருக்கச் செய்வது. கூடியவரை அதன் கழிவுகள் எந்தவிதத்திலும் நம் கை கால்களில் படாது பார்த்துக் கொள்ளுதல்

இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் டாக்ஸப்ளாஸ்மோஸிஸ் தொற்றாமல் வருமுன் காக்கலாம்.

“கன்ஃபர்மா இன்ஃபெக்ஸன் இருக்குதுன்னு வந்திருக்கு. பிரக்னென்சிய கண்ட்டினியு செய்யலாம்னா சொல்லுங்க. பிரசவம் வரைக்கும் ஊசி போட்டுக்கிட்டு, குழந்தை பிறந்த பின்னாலும் அதற்கும் தொடர்ந்து சிகிச்சை கொடுக்க வேண்டி இருக்கும். அதனால சைட் எஃபெக்ட்சும் வரும். ஆனா, குழந்தை வளர்ந்தப்புறம் நான் சொன்ன பாதிப்புகள் முழுவதும் வராதுன்னு என்னால உறுதியா சொல்ல முடியாது. நீங்களே யோசிச்சி உங்க முடிவ சொல்லுங்க” என்றார்.

சரி என்றோம். “இங்க பாருங்க” என்றவர், குனிந்து தன மேசையின் கிழே இருந்து ஒரு பழைய ரூல்டு நோட்டை எடுத்து தூசி தட்டி அதைத் திறந்து காண்பித்தார்.

வரிசையாய் அதில் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. “என்னோட இருபது வருஷ சர்வீசுல இதுவரைக்கும் பதினைஞ்சு பேருக்கும் மேல கர்ப்பிணிகளுக்கு இந்த டாக்ஸப்ளாஸ்மோசிஸ் இன்ஃபெக்ஷன் வந்திருக்கு. நான்தான் டெலிவரி பாத்தேன்; அவங்களுக்குப் பிறந்த குழந்தைகளும் நார்மலாத்தான் பிறந்தார்கள். ஆனா, பத்துப் பதினைந்து வருஷமாச்சு, இதுவரைக்கும் இவங்கள்ல ஒருத்தர்கூட என்கிட்ட வந்து என் குழந்தைக்கு இந்த பாதிப்பு இருக்குன்னோ, அல்லது என் குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாம நல்லபடியா இருக்குதுன்னோ ஃபீட்பேக் எதுவுமே கொடுக்கவேயில்லை. அதனால என்னால உறுதியா எதையும் தீர்மானமா சொல்ல முடியாது, நீங்களே முடிவெடுத்து சொல்லுங்க” என்றார்.

டாக்ஸப்ளாஸ்மோஸிஸ் பற்றி வெட்னரி காலேஜில் பாரசைட்டாலஜியில் படித்துள்ளேன். அதன் பாதிப்பை என் வாழ்க்கையிலேயே அனுபவிக்க நேரிடும் என்று கனவிலும் நினைத்ததேயில்லை. இணையத்தில் அதைப்பற்றி மீண்டும் வாசித்தேன். அந்த வாரத்தின் ஒரு மாலையில் சேனல் மாற்றிக் கொண்டிருக்கையில் டிஸ்கவரி சேனலில் டாக்ஸப்ளாஸ்மோஸிஸ் பற்றிய ஒரு அரைமணி நேர நிகழ்ச்சியை கவனித்துப் பார்த்தோம். அது எப்படிப் பரவுகிறது, கர்ப்பவதிகளைத் தொற்றுகையில், தொப்புள்கொடி மூலம் வயிற்றில் வளரும் சிசுவையும் எப்படி பாதிக்கிறதென தெளிவாக விளக்கினர்.

அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மனைவி, இதற்கு வேறெதுவும் வழியே இல்லையா என்று கேட்கையில் அவர் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. முதல்முறை கருவுற்று இரண்டு மாதங்கள் கூட முற்றுப்பெறவில்லை எனினும், வயிற்றில் வளரும் கருவுக்கும் அவருக்கும் உடலளவில் மட்டுமல்ல, உள்ளத்தளவிலும் பிரிக்க முடியாத பந்தம் வளர்ந்துவிட்டது.

கருவின் வளர்ச்சியை உணர்த்தும் உடல் மாற்றங்கள் உள்ளத்திலும் மாறுதல்களை உண்டாக்கி இன்னும் முகம் பார்க்கா சிசுவெனினும் அதன் மேல் கொண்ட பிரியத்தினால் அதை எக்காரணம் கொண்டும் பிரிந்துவிட மனமில்லை அவருக்கு.

டாக்ஸப்ளாஸ்மோஸிஸ் பற்றித் தெரியுமாதலால், இரண்டாம் முறை ரத்தப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டபோதே என் மனதில் வருத்தமளிக்கும் அந்த முடிவைத் தேர்ந்தெடுத்து விட்டிருந்தேன். அதனால் என் மனம் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், என் மனைவி விஷயத்தில் அது இன்னும் நிகழவில்லை. இன்னமும் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்து எல்லாம் சரியாகி விடாதா என்று ஒரு மெல்லிய நம்பிக்கை நூலைப் பற்றியபடி அவர் மனம். இன்னொரு முறை ரத்தப் பரிசோதனை எடுத்துப் பார்த்து அதில் நார்மல் என்று முடிவு வருமோ என்று கூட ஒரு நப்பாசை அவருக்கு.

இல்லை. இது நம்மால் சரி செய்ய முடியாத விஷயம். அசட்டுத் துணிச்சலுக்கு இங்கே இடமில்லை. டாக்ஸோ பாதித்த குழந்தை வளர்ந்தவுடன் அதற்கு நேரும் குறைபாடுகள் பற்றி அறிவியல் ஆவணப்படுத்தியுள்ளது. அதை முற்றிலும் நிராகரித்து வருவது வரட்டும் என்று கடவுளின் மீது பாரத்தைப் போட்டுக் குழந்தையைப் பெறுவது படித்திருந்தும் முட்டாள்தனம் செய்வது.

“டாக்டர் சொன்ன மாதிரி டெலிவரி வரைக்கும் ட்ரீட்மென்ட் எடுத்துக் கிட்டு, குழந்தை பிறந்தபின்னும் அதுக்கும் ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டா சரியாகிடுமா?” என்று கேட்டார் என் மனைவி.

“இல்லை. கர்ப்பகாலத்தில் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் உனக்கும், வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பக்க விளைவுகள் நிறைய வரும். பிறந்த பின்னும் மாதக்கணக்கில் எடுக்கப்போகும் மருந்துகள் குழந்தையின் உடல்நலனில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒழுங்காகப் பிறந்து நன்றாக வளரும் குழந்தையையே இந்தக் காலத்தில் வளர்ப்பது பெரும்பாடாக இருக்கிறது. பார்வைக் குறைபாடு, மூளைவளர்ச்சிக் குறைபாட்டுடன் இருக்கும் குழந்தையை வளர்ப்பது இன்னும் சிக்கல். இதில் நமக்கு இருக்கும் கஷ்டத்தைவிட அந்தக் குழந்தை அனுபவிக்கப் போகும் கொடுமைகளே என்னை இந்த முடிவுக்குத் தள்ளின” என்றேன்.

ஆனாலும் வார்த்தைகளால் ஆறுதல் படுத்தமுடியாத மனநிலைக்கு என் மனைவி சென்று விட்டிருந்தார். இதைக் கடந்தே தீரவேண்டும் என்று எனக்குத் தெரிந்தது. மொபைலை எடுத்து மருத்துவமனைக்குப் பேசினேன். டாக்டரைச் சந்திக்க நேரம் கேட்டு முன்பதிவு செய்தேன்.

அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு மறுநாள் காலையில் மருத்துவமனை வரவேற்பறையில் அமர்ந்திருந்தோம். அந்த அறையில் முகத்தில் பூரிப்புடன், பெரிய வயிற்றுடன் பல கர்ப்பிணிகள். இரவெல்லாம் உறக்கமின்றி அழுது வீங்கின கண்களுடன் என் மனைவி. ஆறுதல் படுத்த முடியாத நிலையில் நான்; அந்தச் சூழ்நிலையில் எங்களை வித்தியாசமாக உணர்ந்தோம்.

எங்கள் முறை வந்ததும் தளர்வாய் நடந்து உள்ளே சென்று டாக்டரிடம் பேசினோம்.

“குட், சரியான முடிவைத்தான் எடுத்திருக்கீங்க” என்றவர், தன் அசிஸ்டெண்ட் டாக்டரிடம், “D and C – ப்ரிஸ்க்ரிப்ஷன் நீங்களே எழுதிருங்க, என் வாழ்நாள்ல இந்தப் பிரிஸ்க்ரிப்ஷன மட்டும் என் கைப்பட நான் எழுத மாட்டேன்” என்று கண்களை மூடிக் கைகளைக் கோர்த்தார்.

அது ஒரு சிறிய அளவிலான சர்ஜிகல் ப்ரொஸீஜர். அது முடிந்ததும் கொஞ்ச நேரம் ஓய்வில் இருக்கச் சொன்னார்கள். இரண்டு மணி நேரங்கள் கழித்து மெதுவாய் நடக்க முடிந்தது. ஐந்து வாரங்கள் உட்கொள்ள வேண்டிய மருந்துகளை அங்கேயே மருந்துக்கடையில் வாங்கிக் கொண்டு சோர்வாய் வீடு வந்து சேர்ந்த மனைவியின் மனம் புயல் வந்து கிளைகளை எல்லாம் இழந்த மரமாய் வெறுமையாய் இருந்தது. உடலளவிலும் மனத்தளவிலும் பலவீனமாக இருந்தார்.

ஐந்து வாரங்கள் முடிந்ததும் மீண்டும் மருத்துவமனை. ரத்தப் பரிசோதனை. டாக்டர். “ப்ளட்டெஸ்டில் டாக்ஸோ நெகடிவ்னு வந்திருக்கு” என்று புன்னகைத்தார். “ரொம்ப நல்லது இனிமே நீங்க ப்ளான் செய்யலாம். ஒருமுறை டாக்ஸோ வந்து குணமாகிருச்சுன்னா, உடம்புல அதுக்கு இம்யூனிட்டி டெவலப் ஆகிடும் அதனால நோ வொர்ரி” என்றார்.

சிலவாரங்களே வயிற்றில் சுமந்திருந்த போதிலும் மாதக் கணக்கில், வருடக்கணக்கில் அந்த பாரத்தை இதயத்தில் சுமந்து கொண்டிருந்தோம். எங்களுக்கென ஒரு குழந்தை பிறந்தும், இந்த நிகழ்ச்சியை இன்னும் மறக்கமுடியவில்லை. இம்மாதிரியான ஒரு வேதனை எங்களுக்குத் தெரிந்த யாருக்கும் இனி நேரக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறோம். நேரிலோ, தொலைபேசியிலோ “எனக்குக் கல்யாணம் நிசசயம் ஆயிருக்கு” என்று சொல்லும் தோழிகளிடம், உறவினர்களிடம், “அட்வான்ஸ் கங்கிராஜிலேஷன்ஸ்” என்று சொல்வதற்கு முன்பே “தயவுசெய்து உடனே டாக்டரை கன்சல்ட் செஞ்சு ஒரு டீவார்மிங் டேப்ளட் எடுத்துக்குங்க” என்று சொல்கிறோம்.

Posted on Leave a comment

ஒளிமயமான எதிர்காலம் | ஹாலாஸ்யன்


வைணவத்தின் பன்னிரு ஆழ்வார்களில் முதலாழ்வார்கள் மூவர் என்று பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வாரைச் சொல்வார்கள். மூவரும் திருக்கோவிலூரில் ஒருமுறை ஒருவர் படுக்க, இருவர் அமர மூவர் நிற்க மட்டுமே இடமுள்ள ஒரு இடத்தில் மாட்டிக்கொள்ள, நான்காவது ஆளாக பெருமாள் வந்து மூவரை நெருக்குகிறார். ஒளியில்லாத இடத்தில் நெருக்குகிற ஆளை யாரென்று பார்க்க, பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் விளக்கு ஏற்ற, பேயாழ்வார் நாலாவது ஆளான பெருமாளைக் கண்டதாகப் பாடுகிறார். ‘வையம் தகழியா வார்கடலே நெய்யாக’ என்று தொடங்கி பொய்கையாழ்வார், நூறு பாடல்கள் கொண்ட அந்தாதியும், ‘அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக’ என்று தொடங்கி பூதத்தாழ்வார் நூறு பாடல்களைக் கொண்ட அந்தாதியும், அந்த வெளிச்சத்தில், ‘திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்’ என்று தொடங்கி நூறு ‌அந்தாதிப் பாடலை பேயாழ்வாரும் பாடினார்கள். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இவை முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் திருவந்தாதி என அழைக்கப்படுகின்றன. விளக்குகள் மனிதக் கண்டுபிடிப்பில் முக்கியமானவை. உற்பத்தியில் ஈடுபட்ட கால அளவை நீட்டித்ததில் விளக்குகளுக்குப் பெரும்பங்கு உண்டு.

ஆனால் தொடக்கத்தில் விளக்கு என்பது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட நெருப்பு மட்டுமே. நெருப்பில் ஒளி என்பது உபரி‌. மூலக்கூறுகளின் பிணைப்புகள் உடைந்து வெளியேறும் வெப்பத்தில் மூலக்கூறுகளின் எலெக்ட்ரான்கள் தற்காலிகமாக அதிக ஆற்றல் நிலைக்குப் போகும். அவை திரும்ப பழைய இடத்திற்குக் திரும்புகையில் அந்த ஆற்றல் வேறுபாட்டை ஒளியாக வெளிவிடும். வெப்ப அலைகளான அகச்சிவப்பு அலைகளுக்கு அருகில் இருக்கும் நிறங்களான மஞ்சள் சிகப்பு நிறத்திலேயே அந்த விளக்குகளின் ஒளி இருக்கும். விளக்கு என்றாலே பல வருடங்களாக மஞ்சள் நிற ஒளி தருபவையாகத்தான் இருந்தன.

இதன்பின்னர் பெட்ரோலியப் பொருட்களை எரிக்கும் விளக்குகள் வந்தன. பெட்ரோமாக்ஸ் அதில் ஒரு வகை. அவற்றை gas lighting என்று அழைத்தார்கள். விளக்குகளில் மிகப்பெரிய மாற்றம் மின்சாரம் வந்தபின்னர்தான் வந்தது
.

மின்சார விளக்குகள் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை. எரிபொருளின் அளவை சோதிக்கத் தேவையில்லாத, புகையை வெளிவிடாத விளக்குகள் அவை. அவற்றின் இயக்கம் கிட்டத்தட்ட நெருப்பு விளக்குகளைப் போல்தான்‌. நெருப்பின் வெப்பத்திற்குப் பதிலாக அவை மின் ஆற்றலை கிரகித்து, வெளிவட்ட எலெக்ட்ரான்களின் ஆற்றலை ஏற்றி விடும். அவை திரும்ப பழைய இடத்திற்கு வருகையில் அந்த ஆற்றல் வித்தியாசத்தை ஒளியாக வெளிப்படுத்தும். மெல்லிய கார்பன் அல்லது உலோக இழைகளில் மின்சாரம் செலுத்தி ஒளியைப் பெறும் இவ்விளக்குகள் incandescent lamps என்று அழைக்கப்பட்டன. ஆனால் அவையும் பெரும்பான்மை ஆற்றலை வெப்பமாகவே வீணடித்தன‌‌. சிறிது நேரம் எரிந்து அணைந்த குண்டு பல்பைத் தொட்டுப் பார்த்தால் நான் சொல்வது புரியும்‌.

பின்னர் வாயு – மின் விளக்குகள் gas discharge புழக்கத்திற்கு வந்தன. மிகக் குறைவான அழுத்தத்தில் இருக்கும் ஒரு வாயுவின் மீது, மிக அதிக வோல்டேஜ் மின்னழுத்தம் செலுத்தப்படும்போது அதிலுள்ள எலெக்ட்ரான்கள் ஆற்றல் உறிஞ்சி பின்னர் வெளிப்படுத்தும். அப்படி வெளிப்படும் ஒளியை உறிஞ்சு அலைக்கற்றை (absorption spectra) என்று அழைக்கிறார்கள். மஞ்சள் நிற ஒளி தரும் சோடியம் ஆவி விளக்கு, வெளிர் நீல ஒளி தரும் பாதரச ஆவி விளக்கு, விளையாட்டில் பகல் இரவு ஆட்டங்களில் மொத்த மைதானத்தையும் ஒளி வெள்ளத்தில் நனைக்கும் உலோக ஹாலைடு விளக்குகள். விளம்பரப் பலகைகளில் பயன்படுத்தப்படும் நியான் (neon) விளக்குகள் என எல்லாமே வாயு-மின் விளக்குகள்தான். அவை முழு திறனுடன் இயங்கத் தொடங்க சிறிது நேரம் ஆகும். ஆனால் அவற்றின் முந்தைய தலைமுறை உலோக இழை விளக்குகளை விட, ஆற்றலை ஒளியாய்  மாற்றுவதில்  இவை திறன் வாய்ந்தவை.

வீடுகளின் விளக்குகள் குண்டுபல்புகளில் இருந்து, ட்யூப் லைட்டுகள் என்று அழைக்கப்பட்ட ஒளிர் குழல் விளக்குகள் (flourescent lights) என்று முன்னேறின.  அடிப்படையில் அவையும் பாதரச ஆவி விளக்குகள்தாம். அவை வெளியேற்றும் ஆற்றல் குறைந்த புற ஊதா ஒளி பாஸ்பர் phosphor எனப்படும் பொருளின் மீது மோதி வெண்ணிற ஒளியாய் வெளிப்படும். இவ்வகை விளக்குகள் மின்சாரத்தை இன்னமும் சிக்கனமாய்ச் செலவிட்டன. அவற்றின் அபூர்வ சகோதர அப்பு வடிவமே CFL விளக்குகள். அதே தொழில்நுட்பம் ஆனால் அளவுகள் வேறு. வீடுகளை ஒளியால் நிறைத்ததில் இவற்றிற்குப் பெரும்பங்கு உண்டு. ஆனால் இவற்றின் ஆயுட்காலத்திற்குப் பின்பு பாதரசம் போன்ற நச்சுப்பொருட்கள் இருப்பதால் கவனமாகக் கையாள வேண்டிய பொருளாகிறது.

இந்தப் பத்தாயிரம் ஆண்டு ஒளிக்கான தொழில்நுட்ப முன்னேற்றத்தில் மிகச் சமீபமான சேர்க்கைதான் ஒளியுமிழிகள். Light Emitting Diode.  குறைகடத்திகளில் எலெக்ட்ரான் இல்லாத் துளைகள் (hole) கொண்ட p வகை குறைகடத்தியையும், எலெக்ட்ரான்கள் உபரியாய் இருக்கும் n வகை குறைகடத்தியையும் இணைத்தால் கிடைக்கும் PN ஜங்ஷன் இருமுனையம் (PN junction diode) ஏற்கெனவே மின்னணுச் சாதனங்களில் புழக்கத்தில் இருந்ததுதான்.

இருமுனையங்களில் மின்சாரம் சரியான திசையில்‌ பாய்கையில் எலெட்க்ரான்கள்‌ இல்லாத் துளைகளில் எலெக்ட்ரான்கள் போய் அமர்கையில் அவை ஆற்றலை வெளியிட்டன. பெரும்பாலும் அந்த ஆற்றல் வெப்பமாக அதாவது அகச்சிவப்பு அலைக்கற்றையாக வெளிப்பட்டது. அந்த வகை அகச்சிவப்பு ஒளியுமிழிகளே டிவி ஏசி ரிமோட்களில் பயன்படுகின்றன. நீங்கள் பட்டன் அழுத்துகையில் அகச்சிவப்பு அலைகள் குறிப்பிட்ட பாணியில் வெளிப்பட்டு அதனை உங்கள் டிவி புரிந்துகொண்டு தெய்வமகள் சீரியலுக்குத் தாவுகிறது‌. உங்கள் கைபேசியின் கேமராவை ஆன் செய்து அதன் முன்னர் ரிமோட் பட்டனை அழுத்தினால், ரிமோட்டின் முனையில் இருக்கும் ஒளியுமிழி ஒளிர்வதைப் பார்க்க முடியும். அரிச்சந்திரனுக்கு மட்டும் சந்திரமதியின் தாலி தெரிவதைப்போல அகச்சிவப்புக் கதிர்கள் கேமராக்களில் தெரியும். நம் கண்களுக்குத் தெரியாது.

ஒரு ஒளிபுகக்கூடிய ப்ளாஸ்டிக், இரு நீண்ட உலோகக் கம்பிகள் என்ற வடிவில்தான் ஒளியுமிழிகள் தம் வரலாற்றைத் தொடங்கின. பின்னர் ஒளியுமிழிகளில் இருந்த கம்பிகள் மறைந்து, நேரடியாக மின்னணுச் சுற்றுகளில், electronic circuirts பொருத்தக் கூடிய, தட்டையான வடிவுடைய பரப்புப் பொருந்தும் திரைகள் Surface Mounted Displays SMDs என அவற்றின் வடிவம் வந்து நிற்கிறது.

குறைகடத்திப் பொருட்களை சரியாகத் தேர்வு செய்வதன் மூலம் இந்த அகச்சிவப்பு அலைக்கற்றையை, புலனாகு நிறமாலை (visible spectrum) பக்கம் தள்ளினார்கள். உதாரணமாக சிகப்பு நிறத்துக்கு காலியம் பாஸ்பைட் (Gallium phospide GaP), காலியம் ஆர்சனிக் பாஸ்பைட் (Gallium Arsenic Phosphide GaAsP), அலுமினியம் காலியம் இண்டியம் பாஸ்பைட் (Aluminium Gallium Indium Phosphide AlGaInP) ஆகிய குறைகடத்திகளைப் பயன்படுத்துகிறார்கள். நீல நிறத்துக்கு காலியம் நைட்ரைடு (Gallium Nitride GaN), இண்டியம் காலியம் நைட்ரைடு (Indium Gallium Nitride InGaN) ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

பங்களிப்பு செய்தவர்களின் பெயர்களைப் பட்டியலிட ஆரம்பித்தால் அவை தனியே ஒரு பக்கம் போகும் என்பதால் அதை விட்டுவிடுவோம். முதல் ஒளியுமிழிகள் ஒரு மாதிரி அசட்டுச் சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்தன. பின்னர் அசட்டு மஞ்சள் நிற ஒளியுமிழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதேநேரம் பளிச்சென்ற சிகப்பி நிற ஒளியுமிழியும் வந்துவிட்டது. அதன்பின்னர் பச்சை நிற ஒளியுமிழி. கொஞ்சம் பழைய மின்னணுச்சாதனங்களில் பச்சை மற்றும் சிகப்பு ஒளியுமிழிகள் பயன்படுத்தியிருப்பார்கள்.

ஒளியுமிழிகள் இதுவரை வந்த விளக்குகள் எல்லாவற்றையும் விடத் திறன் அதிகம் கொண்டவை. விளக்குகளின் பிரகாசத்தை லுமென் (lumen) என்ற அலகால் அளப்பார்கள். ஒரு விளக்கின் திறன் ஒரு வாட் மின்சாரத்திற்கு எவ்வளவு லுமென் வெளிப்படும் (lumens per watt) என்ற கணக்கால் அளக்கப்படும். அந்த அளவு ஒளியுமிழிகளுக்கு அதிகம். ஒரு வாட் மின்சாரத்திற்கு அதிக வெளிச்சத்தை வெளியிடுகின்றன. ஆனால் பாருங்கள், சிகப்பு மற்றும் பச்சை விளக்குகளை, ஒளிமூலமாய்ப் பயன்படுத்த முடியாதே.

வெண்மை நிறத்தை உருவாக்கத் தேவையான, முதன்மை நிறங்கள் எனப்படும் சிகப்பு, பச்சை, நீலம் (primary colours Red Green Blue) ஆகிய மூன்றில்‌ நீல நிறம் குறைகிறதல்லவா? அந்த நீல நிற ஒளியுமிழி 1974ல் ஷூஜி நகமுரா shugi nakamura என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது‌. ஆனால் 1990ல் தான் அது கட்டுப்படியாகும் விலையில் தயாரிக்கப்பட்டுப் பொதுப்புழக்கத்திற்கு வந்தது. இது மிக முக்கியமான ஒரு முன்னேற்றம். இப்போது ஒளியுமிழிகளின் வெண்மை நிறம் சாத்தியம். இந்தக் கண்டுபிடிப்புக்காக நகமுராவிற்கு 2014ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது‌.

அதுவரை இயந்திரங்களில், கருவிகளில் செயல்பாட்டு நிலையைக் காட்டப் பயன்பட்டுக்கொண்டிருந்த ஒளியுமிழிகள், இப்போதுதான் விளக்குகளாய்ப் பயன்படக்கூடிய நிலைக்கு வந்தன.

சிகப்பு, பச்சை, நீலம் மூன்று ஒளியமிழிகளையும் மிக நெருக்கமாக வைத்து எரியவிடுவதன் மூலம் வெண்மை நிறத்தைப் பெற்றுவிட முடியும். ஒரு திரிதடையம் transistor மூலம் தனித்தனியே மூன்று ஒளியுமிழிகளின் பிரகாசத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் எல்லா வண்ணங்களையும் பெற்றுவிட முடியும். இவையே பெரும்பான்மை ஒளியுமிழித் திரைகளுக்கு அடிப்படை.

ஆனால் விளக்குகளாகப் பயன்படக்கூடிய ஒளியுமிழிகளில் வெண்மை நிறத்தை, நீல நிற ஒளியுமிழியை வைத்து மட்டும் கொண்டு வருகிறார்கள். நீற நிற ஒளியுமிழியின் மேல் மஞ்சள்‌ நிறத்தில் இருக்கும் ஒரு பூச்சைப் பூசிவிடுவார்கள். நீல‌ நிற ஒளியை அது உள்வாங்கிப் பல வண்ணங்களாக வெளியேற்றும். அந்த பல வண்ணக் கலவை வெண்மையாக நம் கண்களுக்குத் தெரியும். ஒரு ஒளியுமிழி விளக்கைப் பார்த்தால் இது தெளிவாக விளங்கும்.

வெண்மை நிறம் சாத்தியமானவுடன் சந்தைகளில் ஒளியுமிழிகள் குவிய ஆரம்பித்தன. ஏற்கெனவே இருக்கும் மின்சார விளக்கு பொருத்தும் அமைப்புகளில் பயன்படக்கூடிய வடிவத்திலேயே கிடைக்க ஆரம்பித்தன. டார்ட் லைட்டுகள், கைபேசி கேமராவின் ஃப்ளாஷ் லைட்டுகள் என்று எல்லாம் ஒளியுமிழிகள்.

அடுத்ததாக அவை கால்பதித்த இடம் திரைகள். மொடா மொடாவாய் இருந்த பிக்சர் ட்யூப் டிவிக்கள் போய், தட்டைத் திரைகள் வந்தன. பின்னர் திரவப் படிகத் திரைகள் Liquid Crystal Display LCD வந்தன. திரவப் படிகத் திரைகளில், திரையின் கடைசி அடுக்காக பின்புல விளக்குகள் background light உண்டு. அவற்றின் மேலிருக்கும் திரவப்படிகங்களின் படிக அமைப்பை மாற்றி திரை ஒளியைக் கூட்டவோ குறைக்கவோ செய்வார்கள். மிக அருமையான அந்தத் தொழில்நுட்பத்தில் ஒரு சிக்கல் இருந்தது. திரையில் கருப்பு நிறம் வந்தால் பின்புல விளக்கை அணைத்து விட முடியாது. மாறாக திரவப் படிவங்களின் அமைப்பை மாற்றி ஒளியைப் புகாவண்ணம் மாற்ற வேண்டும். இது இரவு படுக்கப் போகுமுன் விளக்கை எரியவிட்டு அதைப் பெட்டிக்குள் அடைத்து வெளிச்சம் வராதவாறு பார்த்துக் கொள்வது போன்றது. இதனால் திரவப் படிகத் திரைகள் கொஞ்சம் ஆற்றல் வீணடிப்பவை.

ஆனால் ட்ரான்சிஸ்டர்கள் மூலம் துல்லியமாகக் கட்டுப்படுத்தப்படும் ஒளியுமிழித் திரைகள் இந்தச் சிக்கலைத்‌ தீர்த்தன. சிகப்பு, நீலம் மற்றும் பச்சை ஒளியுமிழிகளைப் பயன்படுத்தி எல்லா நிறங்களையும் கொண்டு வந்துவிடலாம். கருப்பு நிறம் என்றால் எல்லாவற்றையும் அணைத்துவிடலாம்‌. இதனால் படங்கள் திரையில் துல்லியமாகத் தெரிவதுடன் ஆற்றலும் மிச்சமாகும்.

அந்த ஒளியுழித் திரைகளின் நீட்சியாக ஆர்கானிக் ஒளியுமிழிகள் Organic LEDs or LEDs வந்தது. சில கரிமப் பொருட்களுக்கு நடுவே ஒளியுமிகளின் குறைகடத்திகளை வைத்துப் பயன்படுத்தினால் அவை இன்னும் திறனுடன் செயல்பட்டன. அவற்றில் பி.எம்.ஓ.எல்.ஈ‌‌.டி PMOLED Passive Matrix Organic Light Emitting Diode மற்றும் அமோலெட் AMOLED Active Matrix Organic Light Emitting Diode எல்லாம் வந்தது‌. இந்த அமோலெட் வார்த்தை சாம்சங் கைபேசி விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள். ஒளியுமிழிகள்தான் இவையனைத்திற்கும் அடிப்படை. 

இந்தப் புரட்சிக்கு கொஞ்சம் உயிரியல் விலை இருக்கிறது.  டயர்னல் (diurnal) எனப்படும் பகலில் செயல்பட்டு இரவில் தூங்கும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த நமக்கு உறக்கம் விழிப்பு எல்லாமே சூரியனை அடிப்படையாகக் கொண்ட சர்கேடியச் சுழற்சி (circadian rhythm) மூலமாகக் கட்டுப்படுத்தப்படுகிறது‌. நமக்கு உறக்கம் வரவேண்டுமென்றால் மெலட்டோனின் என்ற சமாசாரம் சுரக்க வேண்டும். அதுதான் கண்கள் சொருகி ஒருவிதமாய் வரவைக்கும். அந்த மெலட்டோனின் சுரப்பு, பகல் நேரச் சூரியனின் நீலம் அல்லது வெள்ளை ஒளியொல் குறைந்து, மசால் சூரியனின் அதிக அலைநீளம் கொண்ட மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு ஆகிய அலைநீளங்களால் தூண்டப்படும். சூரியன் மறைந்ததும் உடல் தூக்கத்திற்குத் தயாராகிவிடும். விளக்குகளின் சரித்திரத்தில் பெரும்பான்மைக் காலம் அவை மஞ்சள் வண்ணமாகத்தான் இருந்தன. ஆனால் இன்று பெரும்பாலும் கணினித் திரை, கைபேசித் திரை, வெண்ணிற ஒளி என எல்லாமும் ஒளியுமிழிகளால் நீல நிற ஒளி அதிகம் இருப்பதாய் இருக்கிறது. இதனால் உறக்கமின்மை அதன் விளைவாகப் பசியின்மை, சோர்வு இப்படியேபோய் மன அழுத்தன் வரை வரலாம் என்று எச்சரிக்கிறார்கள்‌.

ஆனால் திரையைப் பார்க்காமல், போராளிகள் பதிவு போட முடியாதே. அதற்குச் சில தீர்வுகள் இருக்கின்றன. இருட்டியபின்னர் உங்கள் கணினி அல்லது கைபேசியின் திரையை ஒரு மெல்லிய சிகப்பு நிறம் ஏறியதுபோல் தோன்றவைக்கும் செயலிகள் இருக்கின்றன. திரைப்படம் பார்ப்பவர்கள், நிறங்களைத் துல்லியமாய்ப் பார்க்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வடிவமைப்பாளர்கள் இவர்களைத் தவிர பேஸ்புக், வாட்ஸாப் களமாடல்கள் புத்தக வாசிப்பு போன்ற கெட்ட பழக்கங்கள் இருக்கும் நபர்கள் இந்தச் செயலிகளைப் பயன்படுத்தலாம்.

ஆண்டிராய்ட் கைபேசிகளுக்கு twilight என்று ஒரு இலவசச் செயலி இருக்கிறது‌. விண்டோஸ் கணினி பயன்படுத்துபவர்களுக்கு f.lux என்ற செயலி இருக்கிறது. இரண்டு செயலிகளுமே இரவு நேரத்தில் தானாகவே திரையில் இந்த வண்ண மாற்றம் கொண்டுவரும் வசதியோடு உள்ளவை‌. இரண்டு நாட்களில் கண்கள் பழகிவிடும். கண்களில் எரிச்சல் குறையும், தூக்கம் வருதலில் முன்னேற்றம் இருக்கும். பயன்படுத்திப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

திரைமயமாகும் தொழில்நுட்ப வாழ்க்கையில் இவற்றைச் செய்துகொள்ள வேண்டியது கட்டாயம்.

Posted on Leave a comment

அறம் திரைப்படம்: இந்திய எதிர்ப்பு அரசியலின் மாதிரி – ஹரன் பிரசன்னா


கலைக்கான படங்களில் பிரசாரமும் பிரசாரப் படங்களில் கலையும் முக்கியமானவை. உண்மையில் ஒரு கலைப்படத்தில் உள்ள பிரசாரத் தன்மையும் பிரசாரப் படத்தில் உள்ள கலைத்தன்மையும் ஒரு திரைப்படத்தின் விவாதங்களைப் பல முனைகளுக்கு எடுத்துச் செல்ல வல்லவை. கலைப்படத்தில் உள்ள பிராசரத்தையும் ஒரு பிராசரப் படத்தில் உள்ள கலைத்தன்மையையும் சேர்த்தோ தனித்தனியாகவோ எதிர்கொள்வது எளிதானதல்ல. இவை இரண்டும் சரியாகப் பொருந்திப் போகும் ஒரு படம், பிரசாரவாதிகளின் கனவாகவே இருக்கும்.

அறம் இப்படியானதொரு படம். இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை ஒரு தரமான திரைப்படம் என்று சொல்லும்படியான தன்மையுடன் இயக்குநர் கோபி நயினார் இயக்கி இருக்கிறார். எப்படி ஒரு திரைப்படத்தில், தவிர்க்கமுடியாத பிரச்சினைகளையும் இந்திய எதிர்ப்பையும் ஒரே புள்ளியில் இணைக்கமுடியும் என்பதை மிக அழகாகச் செய்து காட்டி இருக்கிறார்.

இந்த மாதிரியான படங்களின் அரசியலைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், தரமான மற்றும் உணர்வு ரீதியான திரைப்படம் என்ற வகையில் மட்டும் புரிந்துகொள்ளும் சாமானியர்களை, மிக எளிதாக இந்திய எதிர்ப்பு அரசியல் அவர்களது பிரக்ஞை இன்றியே சென்று சேரும். இதுதான் இந்திய எதிர்ப்புப் பிரசாரப் படங்களின் நோக்கம். ஆனால் இதைச் சாதிப்பது அத்தனை எளிதானதல்ல. கொஞ்சம் பிரசாரம் தூக்கினாலும் படத்தை சாமானியர்கள் நிராகரித்துவிடுவார்கள். பல படங்கள் இப்படி வெற்றுப் பிரசாரப் படங்களாகவே தேங்கிவிடும். கலைத்தன்மை மட்டும் அதிகரித்து மாற்றுத் திரைப்படமாகத் தோன்றினால் அது சாமானியர்களுக்கான படமல்ல என்கிற ஒரு கருத்து உருவாகிவிடும். பிரசாரப் படங்கள் சாமானியர்களிடம் இருந்து விலகுமானால் அதன் நோக்கம் முழுமையாக நிறைவேறாது. இரண்டும் இல்லாமல் அந்தரத்தில் அலையும் படங்களாகப் பல படங்கள் அமைந்துவிடும்.

இப்படி எந்தப் பிரச்சினையும் இல்லாமல், இந்திய எதிர்ப்பு என்னும் தன் நோக்கத்தைத் தெளிவாக பிரசாரம் செய்திருக்கிறார் கோபி நயினார்.

*

பொது மக்களுக்கு எதிரான ஒரு அரசு, அது எந்த அரசாக இருந்தாலும் கண்டிக்கப்படவேண்டியது. மக்களிடம் அந்த அரசுக்குரிய பிரச்சினைகளைக் கொண்டு செல்லவேண்டியது ஒவ்வொரு கட்சியின் கடமையும்தான். கூடவே அது பொதுமக்களின் கடமையும்கூட. ஆனால் எந்த அரசை எந்தக் காரணங்களுக்காக அம்பலப்படுத்துகிறோம் என்பது முக்கியமானது. காரணங்களைக் கண்டுகொண்டு அதற்குப் பொறுப்பான அரசை எதிர்ப்பதுதான் சரியான அரசியல். ஆனால் இங்கே முற்போக்கு என்னும் முகமூடியில் நடப்பதெல்லாம், எந்த அரசை எதிர்க்கவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டு, பின்பு அதற்கான காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்து உருவாக்கி அந்த அரசின் மீது சுமத்துவது.

இப்படிச் செய்வதிலாவது ஒரு குறைந்தபட்ச நேர்மை இருக்கவேண்டும். ஆசை வெட்கம் அறியாது என்பதைப் போல, மாநில அரசுக்குரிய பொறுப்புக்களைக் கூட மத்திய அரசின் குற்றப்பட்டியலில் சேர்ப்பது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. காரணம் மத்தியில் இருப்பது ஹிந்து ஆதரவு மற்றும் ஹிந்துத்துவ ஆதரவு அரசு. மோதியின் தலைமையிலான இந்த அரசைக் குறை சொல்வதுதான் ஒரே நோக்கம். இந்த நோக்கத்துக்காக எந்த ஒரு பிரச்சினையும் மத்திய அரசின் பிரச்சினையாகக் காட்ட போலி முற்போக்காளர்கள் தயாராகவே இருப்பார்கள். அவர்கள் பல வழிகளில் இதைச் செய்வார்கள். திரைப்படம் என்பது இன்னும் ஒரு ஊடகம். வலுவான ஊடகம். அதை நேர்மையற்ற முறையில் வெற்றிகரமாகப் பயன்படுத்தி இருக்கிறார் கோபி நயினார்.

 *

ஒரு ஊரில் தண்ணீர் இல்லை, அந்த ஊரை மாநில அரசு கண்டுகொள்ளவில்லை, புறக்கணிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இதை யாரும் ஏற்கமாட்டார்கள். ஹிந்துத்துவவாதிகளும் இப்படியான ஒரு அநியாயத்தை ஏற்கப் போகிறார்களா என்ன? நிச்சயம் இல்லை. இந்தப் பிரச்சினைகளுக்கு முதன்மையான பொறுப்பு யாருக்கு உள்ளது? மாநில அரசுக்குத்தானே? ஆனால் ராக்கெட் விடும் மத்திய அரசுக்கு இதைப் பற்றி அக்கறை இல்லை என்கிற பிரசாரம் படம் முழுக்கப் பரப்பப்படுகிறது. அதைவிட முக்கியமாக மத்திய அரசுக்கான எதிர்ப்பு என்பது மெல்ல மெல்ல இந்திய எதிர்ப்பாகிறது.

ஆழ்துளைக் கிணற்றுக் குழியில் குழந்தை விழுந்துவிடுகிறது. அடிக்கடி இதுபோன்ற செய்திகளை நாம் பார்த்த வண்ணம் இருக்கிறோம். இது போன்ற செய்திகள் தரும் மன உளைச்சல் சொல்லில் அடங்காதது. இதுபோன்ற செய்தியை வாசிக்கும் ஒவ்வொருவரும் நான்கைந்து நாள் தூக்கம் இழந்து தவிப்போம். இப்படிக் குழந்தைகள் விழுவதும் இறப்பதும் பெரிய கொடுமை. இதற்கான பொறுப்பை உண்மையில் மாநில அரசுதான் ஏற்றுக்கொள்ளவேண்டும். மத்திய அரசுக்கு இதில் பொறுப்பே இல்லை என்பதல்ல. வேறொரு வகையில் மத்திய அரசுக்கும் பொறுப்பு உள்ளது என்பது உண்மைதான்.

ஏன் ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் உள்ளன என்பது முதல் கேள்வி. ஒவ்வொரு குழந்தை சாகும்போதும் எதாவது நிவாரணப் பணம் கொடுக்கும் அரசு, இதை ஒட்டுமொத்தமாகத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பது ஏன் என்பது இரண்டாவது கேள்வி. மூன்றாவது கேள்விதான், அப்படி குழந்தை விழுந்தால் அதைக் காப்பாற்ற, குழந்தையை வெளியே எடுக்கத் தேவையான கருவிகளை மத்திய மாநில அரசுகள் ஏன் கண்டுபிடிக்கவில்லை என்பது. இந்த மூன்றுமே முக்கியமானவைதான். கோபி நயினார் மூன்றாவது கேள்வியை மட்டும் மையமாக்கி மத்திய அரசை மட்டும் பொறுப்பாக்குகிறார். கருவிகள் கண்டுபிடிக்கப்படாதது இந்தியாவின் பொறுப்பற்ற தன்மை என்றாக்கி அத்தகைய இந்தியாவை எல்லா விதங்களிலும் எதிர்க்கலாம் என்பதை நோக்கிப் போகிறார்.

மத்திய அரசைப் பொறுப்பாக்குவதால் மாநில அளவில் பெரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று தயாரிப்பாளர் முதல் குஞ்சு குளுவான் வரை அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. மாநில அரசியலில், அதுவும் கருணாநிதி ஜெயலலிதா அரசியலில் இருந்த வரை வெளிப்படையாக மாநில அரசியலைக் கேள்வி கேட்டு இவர்களுக்குப் பழக்கமில்லை. அதே பழக்கத்தை இப்போதும் தொடர்கிறார்கள்.

*

திண்ணைப் பேச்சுக்காரர்கள் வம்பளக்கும்போது எதாவது ஒன்றை எதோ ஒன்றுடன் கோர்த்துப் பேசுவார்கள் என்பதைப் பார்த்திருப்போம். ராணுவத்துக்குக் கோடி கோடியாகச் செலவழிக்கிறோம், ஆனால் தெருவில் பாதுகாப்பில்லை என்பது தொடங்கி, சைன்ஸ் சைன்ஸ்னு சொல்றாங்க, 21ம் நூற்றாண்டுன்னு சொல்றாங்க, ஒரு குழந்தையைக் காப்பாத்த முடியலை என்பார்கள். இதில் மேம்போக்கான நியாயம் உள்ளது என்பது சரிதான். ஆனால் நியாயம் மேம்போக்காக மட்டுமே உள்ளது என்பதுதான் பிரச்சினை.

இந்தத் திண்ணை வம்பின் ஒரு பரிமாணத்தை மட்டுமே இயக்குநர் அறம் படத்தில் காட்டி இருக்கிறார். பல கோடி ரூபாயில் ராக்கெட் விடும் அரசுக்கு ஒரு குழந்தையைக் காப்பாற்ற வக்கில்லை என்றால், ராக்கெட் ஒரு கேடா என்பதுதான் கம்யூனிஸ இயக்குநரின் புலம்பல். ராக்கெட் விடுவதும் அதனால் வரும் நன்மைகளை மக்களுக்குப் பயன்படுத்திக்கொள்வதும் வேறு. குழந்தையைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை என்பது வேறு. ராக்கெட் விடுவதில் கவனம் செலுத்தும் அரசு குழந்தையைக் காப்பாற்ற கவனம் செலுத்தாது என்று சொன்னால் அது அயோக்கியத்தனமே. குழந்தையைக் காப்பாற்ற வக்கில்லாத அரசு ராக்கெட் விடுவது மோசடி என்பதும் இதற்கு இணையான இன்னுமொரு அயோக்கியத்தனமே.

எல்லோருக்கும் ஏற்பில்லாத நீர்ப் பற்றாக்குறை, ஆழ் துளைக் கிணறு பிரச்சினைகளையெல்லாம் ராக்கெட் விடுவதோடு தொடர்புபடுத்தி மத்திய அரசையும் எனவே இந்தியாவையும் அதை ஆதரிப்பவர்களையும் அராஜகவாதிகளாகச் சித்திரிக்கிறார் இயக்குநர்.  ராக்கெட் விடுபவர்களை ஆதரிப்பவர்களும் நீர்ப்பற்றாக்குறையையும் ஆழ் துளைக் கிணற்றில் குழந்தைகள் இறக்கும் பிரச்சினையை எதிர்க்கத்தானே செய்கிறார்கள் என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். அதோடு ராக்கெட் விடுவது என்னவோ ஒரு அவசியமற்ற வேலை என்பதான எண்ணத்தை வெகுஜனங்களின் மத்தியில் விதைக்க பெரிய அளவில் மெனக்கெடுகிறார். இவை எல்லாமே ஆபத்தான மற்றும் நியாயமற்ற போக்குகள்.

இந்தப் போக்குகளின் ஊடே இன்னும் இரண்டு அநியாயங்களைச் செய்திருக்கிறார் இயக்குநர். ஒன்று, ஐஏஎஸ் அதிகாரி முட்டாள்தனமாக உணர்ச்சிப் பெருக்கில் செயல்படுவதுதான் சரி என்பதோடு, யோசித்து யதார்த்தமாகச் செயல்படும் அரசு ஊழியர்கள் எல்லாம் முட்டாள்கள், அநியாயக்காரர்கள், கொலைகாரர்கள் என்கிற பார்வையைப் படம் நெடுகிலும் கொண்டு வந்தது. இன்னொன்று, அறிவியல் என்பதே அவசியமற்றது, மாறாக அசட்டு நம்பிக்கையே தேவையானது என்ற பார்வை.

ஐஏஎஸ் அதிகாரியாக நயன்தாரா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கான வாழ்நாள் வேடமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இந்த ஐஏஎஸ் கதாபாத்திரம் வார்க்கப்பட்டிருக்கும் விதம், ஒரு கம்யூனிஸ்ட்டின் கனவு என்பதைத் தாண்டி எந்த வகையிலும் யதார்த்தம் கொள்ளவில்லை. குழந்தை உயிருக்குப் போராடும்போது மக்களின் கண்ணீர் துடைக்கிறேன் என்று அரசு ஊழியர்களையே கேள்வி கேட்பதும் மக்களோடு சேர்ந்துகொண்டு இன்னொரு குழந்தையை உள்ளே செலுத்துவது என்று முட்டாள்தனமான முடிவெடுப்பதும் என இந்த கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

ரஜினியோ அஜித்தோ தன் எதிரிகளை ஆயிரம் பேரை ஒரே ஆளாகத் தூக்கிப் போட்டு மிதிக்கும் கற்பனைகள்கூட ஆபத்தில்லாதவை. அவற்றில் முட்டாள்தனம் மட்டுமே உண்டு, அதற்குப் பின்னால் அரசியல் கிடையாது. ஆனால் இப்படிப்பட்ட ஐஏஎஸ் கதாபாத்திரத்தின் அசட்டுத் துணிச்சலுக்குப் பின்னே, ஆளும் வர்க்கத்தின் மீது நம்பிக்கையின்மையை விதைக்கும் அரசியல் உள்ளது. ஆளும் வர்க்கம் புனிதமானது அல்ல. அதே சமயம் அந்தப் புனிதத்தன்மையைக் கேள்வி கேட்பது முட்டாள்தனத்தின் வழியாகவோ, மக்களை உணர்வுரீதியாக மட்டுமே தூண்டிவிடும் முயற்சிகளின் வழியாகவோ இருக்கக்கூடாது. கோபி நயினார் எவ்விதத் தர்க்கமும் இன்றி இந்தியாவின் அறிவியல் முயற்சிகளைக் கொச்சைப்படுத்தவேண்டும் என்ற ஒரே நோக்கில் மனம் போன போக்கில் மட்டுமே அணுகுகிறார்.

மத்திய அரசுக்கு எதிரான ஒரு போக்கு ஒருவேளை சிலருக்கு ஏற்கத்தக்கதாக இருந்தாலும் கூட, அதை அப்படியே இந்தியாவுக்கு எதிராகக் கட்டமைக்கவேண்டும் என்பது மட்டுமே கோபி நயினாரின் நோக்கமாக இருந்திருக்கிறது என்பது வெளிப்படை. மத்திய அரசுக்கு எதிரானவர்கள் இந்தியா என்ற கருத்தாக்கத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கும்போது அவர்கள் சொல்லும் கருத்துக்கும், இந்தியாவின் மீது வெறுப்பைக் கொண்டிருப்பவர்கள் அதே கருத்தைச் சொல்லும்போது அது எதிர்கொள்ளப்படும் விதத்துக்கும் நிச்சயம் வேறுபாடு இருந்தே தீரும்.

இந்த எதிர்ப்பில் பிற்போக்குத்தனமான கருத்துகளைச் சொல்வதோடு உதவ வரும் அரசு இயந்திரங்களையும் கேலி பேசுகிறார் இயக்குநர். தன் மனைவி மயக்கம் போட்டு விழும்போது மருத்துவர்களின் உதவி தேவையில்லை என்பதை நியாயப்படுத்தும் இயக்குநர் சொல்ல வருவது என்ன? யாருடைய உதவியும் தேவையில்லை, நாங்களே காப்பாற்றிக் கொள்கிறோம் என்றொரு கிராமம் எல்லா சமயத்திலும் முடிவெடுக்க முடியுமா? இத்தனைக்கும் ஒரு குழந்தை குழியினுள்ளே விழுந்ததும் அனைத்து அரசு இயந்திரமும் விழுந்தடித்துக்கொண்டே அங்கே வருகிறது. அங்கேயே நிற்கிறது. இப்படிக் குழந்தை விழுந்தால் அதைக் காப்பாற்றத் தேவையான வசதிகளும் கருவிகளும் இல்லை என்று அந்த அரசு இயந்திரமும் கவலைப்படத்தான் செய்கிறது. இதையெல்லாம் தன்னை அறியாமலேயே படத்தில் பதிவு செய்திருக்கிறார் கோபி நயினார்.

இத்தனைக்குப் பிறகும் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தின் பங்களிப்பையும் சிறுமைப்படுத்தும் விதமாகவும் மறைக்கும் விதமாகவும் இந்திய எதிர்ப்பு இந்தப் படத்தில் மையச் சரடாகப் பின்னப்பட்டுள்ளது. காவல் துறையின் உதவி, அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, இந்திய அரசு அதிகாரியான ஐஏஎஸ்ஸின் அர்ப்பணிப்பு (மடத்தனமாக நடந்துகொண்டபோதும் உள்நோக்கம் குழந்தையைக் காப்பாற்றுவதுதான்) என எல்லாவற்றையும் பின் தள்ளி, இந்திய எதிர்ப்புக் குரலும் அறிவியலைக் கிண்டலடிக்கும் அறிவீனக் குரலும் ஓங்கி ஒலிக்கின்றன.

இப்படத்தில் ஒரு கதாபாத்திரம் குடித்துவிட்டு, குழியினுள் விழுந்த குழந்தையின் தந்தையைப் பார்த்தும் காவல்துறையைப் பார்த்தும் பேசிக்கொண்டே இருக்கும். குழந்தையின் தந்தையைப் பார்த்து, இவங்க நம்ம குழந்தையைக் காப்பாத்த மாட்டாங்க என்றும் அறிவியலின் கண்டுபிடிப்புகளைக் கேலி செய்தும் புலம்பிக்கொண்டே இருக்கும். அக்கதாபாத்திரம் வேறு யாருமல்ல, முற்போக்காளர்கள் என்ற பெயரில் அவநம்பிக்கையை மட்டுமே விதைத்துக்கொண்டிருக்கும் நபர்களின் உருவம்தான். இந்திய எதிர்ப்பையே எப்போதும் யோசித்துக்கொண்டிருக்கும் நபரின் பிரதிபலிப்புதான் அந்தக் கதாபாத்திரம். ஒருவகையில் அவர் இயக்குநர் கோபி நயினார்தான்.

*

1990ல் மாலூட்டி என்றொரு மலையாளத் திரைப்படம் பரதன் இயக்கத்தில் வெளிவந்தது. தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்து பரவலாகக் கவனம் பெற்றது. அச்சு அசலாக ‘அறம்’ திரைப்படத்தின் அதே கதைதான். ஆசை ஆசையாக வளர்க்கப்பட்ட செல்லக் குழந்தை ஆழ் துளைக்காகத் தோண்டப்பட்ட கிணற்றுக் குழியில் விழுந்துவிடும். அதை எப்படித் தூக்குகிறார்கள் என்பதே கதை.

‘அறம்’ திரைப்படத்தைப் போலவே முதல் காட்சிகளில் கணவன் மனைவியின் கூடல் காட்சிகளெல்லாம் வரும். மாலூட்டியில் அக்காட்சிகள் மிகுந்த செயற்கைத்தனத்துடன் இருக்கும். ‘அறம்’ படத்தில் இக்காட்சிகள் மிக யதார்த்தமாக உள்ளன. இக்காட்சிகளில் வரும் நடிகை, இப்படத்தின் கதாநாயகி நயன்தாராவின் நடிப்பையும் தாண்டிச் செல்கிறார். ‘அறம்’ படத்தைப் போலவே ‘மாலூட்டி’ படத்திலும் காவல்துறை, அரசு இயந்திரம் என எல்லாரும் சேர்ந்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றுவார்கள். எனவே ‘அறம்’ திரைப்படம் கதை மற்றும் திரைக்கதை என்ற வகையில் எதையும் புதிதாகச் சொல்லவில்லை. ஆனால் அக்களத்தைத் தன் அரசியலுக்குத் தேவையான வகையில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார். ‘மாலூட்டி’ படத்தில் இத்தகைய அரசியல் எதையும் பரதன் முன்வைக்கவில்லை. ஒரு கடினமான நேரத்தில் பொது மக்கள் சொல்லும் குறைகளும் புலம்பல்களும் காட்டப்படத்தான் செய்தன. ஆனால் அப்படியே அவை வளர்ந்து இந்திய வெறுப்புத் தோற்றத்தைக் கைக்கொள்ளவில்லை. அங்கேதான் ‘அறம்’ அரசியல் படமாகிறது.

*

‘அறம்’ திரைப்படத்தில் அரசு இயந்திரத்தின் மெத்தனப் போக்கில் மனம் வெறுத்துத் தன் வேலையை ராஜினாமா செய்யும் ஐஏஎஸ் அதிகாரி எம்எல்ஏ ஆகிறார். அல்லது முதல்வராகவோ அல்லது அமைச்சராகவோ ஆகிறார். ஐஏஎஸ் அதிகாரியின் கொள்கைகளைப் பார்த்தால் அவர் ஒரு கம்யூனிஸ்ட்டாகவே இருக்கமுடியும் என்று யூகிக்கலாம். அல்லது சுயேச்சையாக வென்றிருக்கலாம் என்று தர்க்கம் செய்யலாம். எப்படி இருந்தாலும் அது இயக்குநரின் கனவு என்பதைப் புரிந்துகொள்ளலாம். அரசு அதிகாரி அரசுக்கு எதிராக மனம் நொந்து அரசுப் பணியில் இருந்து விலகி அரசின் அங்கமாகவே மாறும் ஒரு கனவு. உண்மையில் இந்தக் கனவு இன்றும் சாத்தியம் என்பதுவே இந்தியா நமக்களித்திருக்கும் கொடை. ஆனால் இயக்குநர் இந்தக் கனவைச் சொல்ல இந்திய எதிர்ப்புக்கான களத்தை அமைத்துக்கொள்கிறார். ராக்கெட் விடுவதைக் கேலி செய்யும் காட்சிகள் உணர்வு ரீதியாக மக்களைத் தன்வயப்படுத்த மட்டுமே. உண்மையில் நமக்குத் தேவை, ராக்கெட் விடுவதும்தான், இனி ஒரு குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிடாமல் இருப்பதும்தான். ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிப்பதும், ஒன்று நிகழும் வரை இன்னொன்று நிகழ்வது ஒரு கேடா என்று சொல்வதும், அறிவுபூர்வமான தர்க்கங்களல்ல என்பதைப் புரிந்துகொள்ளவேண்டியது மிக அவசியம். இந்தப் புரிதல் இருந்தால் மட்டுமே அறம் போன்ற திரைப்படங்கள் விரிக்கும் வலையில் விழாமல் இருக்கமுடியும்.

Posted on Leave a comment

ஒரு கிரைம் கதை (சிறுகதை) | சுஜாதா தேசிகன்


SarvayoniShu Kaunteya MurrtayaH SaMbhavanti YaaH |
Taasaam Brahma Mahat YoniH Aham BeejapradaH Pitaa ||


Whatever forms (of beings) are produced in any wombs, O Arjuna, the Prakriti (i.e. the matter at large) is their great womb (mother) and I am the sowing father (to all beings)


– Shrimad Bhagawad Gita Chapter 14 Shloka 4அன்று சீக்கிரம் விழிப்பு வந்திருக்காவிட்டால் அந்த அபூர்வ வழக்கில் ஈடுபட்டிருக்க மாட்டேன். வழக்கு என்றவுடன் நான் ஏதோ வக்கீலோ போலீஸோ என்று நினைக்க வேண்டாம். சென்னையில் சாதாரண கம்ப்யூட்டர் இன்ஜினியர். மென்பொருளாளர்களைப் பற்றிய பிம்பம் ஒன்று ஏற்கெனவே பல எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்டிருப்பதால் என்னை நானே விவரித்து நேர விரயம் செய்ய விரும்பவில்லை.

வழக்கமாக ஏழரை மணிக்கு விழிப்பு வரும். முதல்நாள் நிறைய நேரம் தொலைக்காட்சியில் விவாதத்தைப் பார்த்ததால் சரியான தூக்கம் இல்லை. சீக்கிரமே முழிப்பு வந்து, பாண்டி பஜார் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் பைக்கை நிறுத்திவிட்டு, பிளாட்பாரத்தில் மயில் தோகை போல அடுக்கப்பட்ட அன்றைய நாளிதழில் ஒர் இறக்கையைப் பிடுங்கி, பக்கத்தில் இருக்கும் சரவணாவில் “காபி… சக்கரை இல்லாம…” என்று தினத்தந்தி ‘ஆன்மீக அரசியலை’ பிரித்தபோது, முதுகுக்குப்பின் “கண்டரோல் ரூம்… ஓவர்… ஓவர்” என்ற இரைச்சலான வாக்கிட்டாக்கி அதைக் கலைத்து, போலீஸ் என்று உணர்த்தியது.

ரயில் நிலையத்தில் சத்தத்துக்கு நடுவில் தூங்கும் குழந்தையைப் போல அந்த இரைச்சலை சட்டைசெய்யாமல் மொபைலில் பேசிக்கொண்டு இருந்தார்.

“சார் நம்ம ஜுரிஸ்டிக்ஷன்தான்…”

“….”

“சார்.. நைட் முழுக்க மெரினாவிலதான் டியூட்டி.. இப்ப தான் காலைல வந்தேன்.”

“….”

“ஆமா சார் என்.ஆர்.ஐ. கன்பர்ம் சார்… அந்த ஜவுளிக் கடை ஓனர் பையன்தான் சார்.”

“….”

“அடிச்சு சொல்றான் சார்..”

“…..”

“நம்ம ஸ்டேஷன்லதான் பையன உக்கார வைச்சிருக்கேன் சார்.”

“…..”

“ஓகே சார்… சார்… சார்…” என்று பேச்சு துண்டிக்கப்பட்டு இரைச்சலுக்கு நடுவில் “சாவுக்கிராக்கி…” என்று முணுமுணுத்துக் கொண்டு ஒரு விதப் பதட்டத்தில் இருந்தது தெரிந்தது.

காபி வர அதை எடுத்துச் சுவைத்தேன். சக்கரையுடன் இருந்தது.

“ஹலோ… சக்கரை இல்லாத காபி கேட்டா… பாயசம் மாதிரி…” என்றபோது பின்பக்கத்திலிருந்து, “உங்க காபி இங்கே வந்திருச்சு… சீனியே.. இல்லாம” என்றார் போலீஸ் அதிகாரி. திரும்பிப் பார்த்தேன். நல்ல உயரம், அளவான மீசையுடன் சினிமாவில் வரும் சமுத்திரகனி மாதிரியே இருந்தார்.

“சாரி சார், மாறிப்போச்சு. வேற எடுத்தாறேன்” என்று சர்வர் இரண்டு காபியையும் எடுக்க, “வேற காபி கொண்டுவா… அப்பறம் இதை எடுத்துகிட்டு போ… இதையே மாத்தி கொடுத்தா?”

“அப்படில்லாம் செய்ய மாட்டோம் சார்…” என்று உள்ளே மறைந்தான். நான் காவல் அதிகாரியைப் பார்த்துச் சிரித்து, “உங்க வேலையே ரொம்ப டென்ஷன்… இப்ப குழப்பமான அரசியல் சூழ்நிலை வேற..?” என்று சொல்லிக்கொண்டே, முதல் பக்கத்தைப் பார்த்தபோது அவரும் முதல் பக்கச் செய்தியைப் பார்த்தார்.

“ஆமா… தேர்தல் வந்தா நிம்மதி… எல்லா இடத்திலேயும் இழுக்கிறாங்க…. டிரான்ஸ்பர் நிச்சயம்.”

அதற்குள் இன்னொரு போன் வந்தது.

“எஸ் சார்.”

“….”

“நானே பாஸ்போர்ட்டை பாத்துட்டேன்… யூ.எஸ். சிடிசன்தான் சார்.”

“….”

“நம்ம ஸ்டேஷன்தான்.”

“…”

“சார்… எஸ் சார்.”

அவர் பேசியபோது அவர் முகத்தில் மேலும் டென்ஷன் கூடியிருந்தது.

“சார் இது உங்களுக்கு” என்று சர்வர் கொண்டு வந்த காபியை கையில் எடுத்துக்கொண்டே, “எந்த மாதிரி எல்லாம் கேஸ் வருது பாருங்க…” என்றார்.

“என்ன ஆச்சு சார்?”

“இன்னிக்கு காலையில ஐஞ்சு மணிக்கு ஒத்தன் வந்தான்.. என்.ஆர்.ஐ.

போன வாரம்தான் யு.எஸ்ஸிலிருந்து வந்திருக்கிறான். இங்கேதான் சாரி ஸ்ட்ரீட்டுல வீடு.”

“பாஸ்போர்ட் தொலைஞ்சு போச்சா?”

“அதெல்லாம் இல்ல. எங்க அப்பா மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு ஒருத்தன் என்னை ஏமாத்துகிறான் என்கிறான்.”

“அது யார்?”

“அவன் அப்பா!”

“அது எப்படி சார்? அவனோட அம்மா?”

“அவங்களும் போலியாம்.”

“இண்ட்டரஸ்டிங்…”

“எங்களுக்கு அப்படி இல்ல. பெரிய இடம், என்.ஆர்.ஐ வேற. ஜாக்கிரதையா ஹாண்டில் பண்ண வேண்டியிருக்கு. மீடியா வேற பிரேக்கிங் நியூஸுக்கு அலையிது.”

“இப்ப அந்தப் பையன் எங்கே…”

“நம்ம ஸ்டேஷனில்தான் இருக்கான்…” என்று அவசரமாகக் காபியைக் குடித்துவிட்டுப் புறப்பட்டார்.

இதை வைத்துக்கொண்டு க்ரைம் கதை ஒன்றை எழுதலாமே என்ற எண்ணமும், கூடவே “நீங்க எழுதுவதே ஒரு க்ரைம்தான்” என்று மனைவி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. காபிக்குப் பணம் கொடுத்துவிட்டு அவர் பின்னால் தன்னிச்சையாகச் சென்றேன்.

செல்போனில் யார் நம்பரையோ தேடிக்கொண்டு இருந்தவரிடம், “சார்.. ஒரு ரிக்வஸ்ட்” என்றுபோது திரும்பினார். “அந்த பையனைப் பார்க்கலாமா?”

“எதுக்கு… நீங்களும் மீடியாவா?”

“மீடியாலாம் இல்ல சார். சாஃட்வேர்லதான் வேலை செய்றேன்….” கம்பெனி பெயரைச் சொன்னேன். பத்து செகண்ட் யோசனைக்குப் பிறகு, “வாங்க. ஆனா மொபைல்ல படம், ஃபேஸ்புக், வாட்ஸாப் எல்லாம் கூடாது. சரியா?” என்றார் முன்ஜாக்கிரதையாக.

“ஓகே சார்.”

சல்யூட் அடித்த கான்ஸ்டபளிடம், “ஸ்டேஷன் வாசல்ல பைக் நிப்பட்டியிருக்காங்க… க்ளியர் செய்ங்க”

“என் பைக்தான்.”

“சரி ஓரமா நிப்பாட்டுங்க…”

சிகப்பு, நீல வண்ண போர்டில் ஆர்-4 என்று எழுதியிருக்க அதன் கீழே பேரிகேட் ஒன்று கால் இல்லாமல் சாய்ந்திருந்தது. அதன் மீது ஏதோ ‘சில்க்ஸ்’ என்று எழுதியிருப்பதைக் கடந்து உள்ளே சென்றபோது பார்சல் தோசை வாசனை என் மூக்கிலும், தோசை கான்ஸ்டபிள் வாயிலும் போய்க்கொண்டு இருந்தது.

சல்யூட்டை வாங்கிக்கொண்டு இன்ஸ்பெக்டரைத் தொடர்ந்தேன். அங்கே இருந்த ஒரு நாற்காலியில் அந்தப் பையன் தன் ஐபோனைத் தடவிக்கொண்டிருந்தான். முட்டி பகுதியில் ஒட்டுப்போட்ட ஜீன்ஸ், மெலிதான லினென் சட்டை இரண்டு பட்டன் போடாமல் உள்ளே வெள்ளை நிற பனியன், அதில் கருப்பாக ஏதோ எழுதியிருக்க சிக்கனமாகச் சிரித்தான்.

போலீஸ் அதிகாரி இருக்கையில் உட்கார்ந்தபோது மேஜை மீது அவர் பெயர் ஷண்முகம் என்று காட்டியது. தூசு ஸ்ப்ரே அடித்த மேஜை கண்ணாடிக்குக் கீழே காஞ்சி பெரியவர் ஆசிர்வதித்துக்கொண்டு இருந்தார்

அந்தப் பையன் அவர் முன் வந்து உட்கார்ந்தான்.

“எதுக்குப்பா உங்க அப்பா மாதிரி வேஷம் போட்டு ஏமாத்தனும்?”

“தட்ஸ் வை ஐம் ஹியர்.”

“சரி உங்க வீட்டு நம்பர் கொடு…”

கொடுத்தான். இன்ஸ்பெக்டர் போனில் பேச ஆரம்பித்தார்.

“நான் பாண்டி பஜார் R4 போலீஸ் இன்ஸ்பெக்டர் சன்முகம் பேசறேன். ஒண்ணுமில்ல சார். ஒரு… ஸ்டேஷன் வர முடியுமா?”

“…”

“பையன் இங்கேதான் இருக்கான்.”

“…”

“வாங்க சார் பேசிக்கலாம்.”

“…..”

“அவசரம் இல்ல. ஆனா இன்னும் ஒன் ஹவர்ல வாங்க. ராஜ்பவன் டியூட்டி.”

மறு முனையில் பதற்றத்தை உணர முடிந்தது.

“உங்க அப்பா வராரு.”

“லுக், ஹி இஸ் நாட் மை டாட்…” என்று அந்தப் பையன் ஐபோன் ஆப் ஆனான்.

நாற்பது நிமிடத்தில் ஸ்டேஷன் வாசலில் ஒரு ஆடி ஏ-3 கருப்பு நிற கார் வந்து நின்றது. செண்ட்டும் கோல்கேட் வாசனையும் கலந்து நுழைந்தவர் முகத்தில் கலவரம் தெரிந்தது. கோல்ட் ஃபிரேம் கண்ணாடி, கையில் வெயிட்டாக வாட்ச் பளபளத்தது. காலையிலேயே கூலிங் கிளாஸுடன் இருந்தார். பார்க்க ஐம்பத்தைந்து வயது இருக்கும் போலத் தெரிந்தார்.

“இன்ஸ்பெக்டர் நான் சொல்றதை கேளுங்க” என்றார் படபடப்புடன்

“பொறுமையா பேசுங்க. நீங்க நிஜமான அப்பா இல்லையாமே.”

“சார், நான்தான் சார் அவன் அப்பா” என்று சுற்றிமுற்றும் பார்த்துக்கொண்டார். பார்வையில் அந்தஸ்து பற்றிய கவலை தெரிந்தது.

“ஹீஸ் நாட் மை டாட்.”

“இருங்க சார், இங்கே சண்டை வேண்டாம்.”

“இல்ல சார், இவங்க அம்மா கூட வந்திருக்காங்க. கேட்டுப்பாருங்க.”

“எங்கே?”

“கார்லதான் இருக்காங்க… போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளே வர… இன்ஸ்பெக்டர் உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா எங்கே வீட்டுலேயே நீங்க விசாரிக்கலாம். அப்பறம் உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும்.”

“என்ன பேசணும்.” கேட்டுக்கொண்டே இன்ஸ்பெக்டர் வெளியே சென்றார்

பையன் ‘கிரஷ் கேண்டி’ விளையாடிக்கொண்டிருக்க அவனிடம் “ஹலோ” என்றேன்.

திரும்ப அவன் ‘ஹை’ என்று சொல்லுவதற்குள் போன் வர “எக்ஸ்யூஸ் மீ” என்று பேச ஆரம்பித்தான்.

“எஸ் டாட். ஐம் இன் போலீஸ் ஸ்டேஷன். காப்ஸ் ஆர் இன்வஸ்டிகேட்டிங். வில் கம் ஹோம்.”

அவன் பேசி முடித்தபின் இன்ஸ்பெக்டர் மீண்டும் உள்ளே நுழைந்தார். முகத்தில் கலவரம் தெரிந்தது.

என்னைத் தனியாகக் கூப்பிட்டு, “உங்க பேர் சொல்லுங்க சார்.”

சொன்னேன்.

“இந்த கேஸுக்கு நீங்க உதவ முடியுமா?”

“நானா?”

“ஆமாம் சார். இந்தப் பையனை கொஞ்சம் விசாரிக்கணும்.”

“பிரச்சனை ஒண்ணும் வராதே.”

“சேச்சே.”

“அப்பறம் உங்களிடம் ஒரு விஷயம்.”

“சொல்லுங்க….”

“நீங்க வெளியே போன சமயம் அவனுக்கு ஒரு போன் வந்தது…” என்று சொல்ல, “யார் அவன் டாடி பேசினாரா?” என்றார் இன்ஸ்பெக்டர்.

ஆச்சரியமும் குழப்பமும் கலந்து கண்ணைச் சுருக்கிக்கொண்டு “எப்படி உங்களுக்குத் தெரிந்தது?” என்றேன்.

“வெளியே போனபோது இங்கே வந்த அவன் அப்பாதான் போன் போட்டுப் பேசினார். ஸ்பீக்கர் போனில். அவன் டாட் டாட்ன்னு சொல்றான்.. ஆனா நேர்ல பார்த்தா டாட் இல்லையாம்.”

“நான் என்ன செய்யணும்?” என்றேன் குழப்பமாக.

“ஒண்ணும் இல்ல. அவனோட பழகி பாருங்க ஏதாவது க்ளூ கிடைக்குதான்னு பார்க்கலாம். பெரிய இடத்து விவகாரம்… டிபார்ட்மெண்ட் ஆளை போட்டா லீக் ஆகிவிடும்..”

“எவ்வளவு நாள்?”

“பழகுங்க. பார்க்கலாம்.”

“தினமும் எனக்கு ரிப்போர்ட் செய்யுங்க. வாட்ஸ் ஆப்பில் இருக்கீங்க இல்ல. நம்பர் கொடுங்க.”

கொடுத்துவிட்டுப் பையன் பக்கம் சென்றபோது சின்னதாக, ‘ஹாய்’ யைத் தொடர்ந்தான்.

“ஹாய்.. சாரி, வாஸ் ஆன் எ கால். ஐயம் தீபக்.”

என் பேர் சொன்னேன்.

“க்ரேட்…” என்றதில் அமெரிக்கா கலந்திருந்தது.

கொஞ்சம் நேரம் மௌனத்துக்குப் பிறகு அவன், “எவரித்திங் குட்?”

“யா.”

“தென் வை ஆர் யூ ஹியர்?”

“ஐ லாஸ்ட் மை பைக்…” என்று சட்டென்று தோன்றிய பொய்யைச் சொன்னேன்.

“ஐ லவ் பைக்ஸ். யூ லாஸ் இட்?” என்றான் புருவத்தை உயர்த்தி.

“பட் காட் இட் பேக். ஜஸ்ட் கேம் ஹியர் டு தாங்க் தெ காப்ஸ்” என்று பொய்யின் ஆயுட்காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்தேன்.

“வாவ்.. வேர்ஸ் இட்?”

“அவுட்சைட்.”

என்னிடம் அனுமதி கூடக் கேட்காமல்.. வெளியே ஓடினான்

“வாவ் யமஹா. A15.. கான் வீ கோ ஃபார் ரைட்?”

“நாட் நவ். மே பி இவினிங் ஆப்டர் ஃபை?”

அவர்கள் கிளம்பிச் செல்லும்போது, போலீஸ் அதிகாரி என்னைக் காண்பித்து அவனுடைய பெற்றோரிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்.

ஆடி புறப்பட்டபின், “பையனை ஃபிரண்ட் பிடித்துவிட்டீங்க போல?”

“பைக் அவனுக்கு ரொம்ப பிடிக்கும் போல. சாயந்திரம் ரைடு போகலான்னு சொல்லியிருக்கிறேன்.”

“சரி பார்த்து போங்க. வந்தவர் யார் தெரியுமா?”

“தெரியாது. எங்கோ பார்த்த மாதிரி இருக்கு.”

அவர் விரலை நீட்டிய திக்கில் திரும்பியபோது “…. புடவைக் கடை ஓனர்.”

சட்டென்று நினைவுக்கு வந்து, “ஆமாம்… பார்த்திருக்கிறேன்.”

“உங்களை பத்தி சொல்லியிருக்கிறேன்.. ஏதாவது உதவி தேவைப்பட்டா சொல்லுங்க.”

அலுவலகத்தில் டிசைன் ரெவ்ய்யூ போது அந்த ‘வாட்ஸ் ஆப்’ செய்தி ஒளிர்ந்தது.

“Deepak: What time?”

“6pm” என்று பதில் அனுப்பினேன்.

ஐந்து மணிக்கு அலுவலகத்தை விட்டுக் கிளம்பி உஸ்மான் சாலை அவசரத்தைக் கடந்து இடதுபக்கம் திரும்பியபோது எல்லா அவசரமும், சத்தமும் ஸ்விட்ச் போட்ட மாதிரி நின்று அமைதியாக இருந்தது சாரி தெரு.

அமுல் ஐஸ்கிரீம் கடையும், மின்சாரக் கம்பத்தில் மஞ்சள் நிறத்தில் ‘நிரந்திர வைத்தியம்!! மூலம் விரைவீக்கம் பௌத்தரம்.. ஆண்மைக்குறைவு!! ஆபரேஷன் இல்லாமல் சிகிச்சை…’ சுவரில் ‘ஸ்வச் பாரத் – தூய்மையான இந்தியா’ என்று எழுதியிருந்த காம்பவுண்ட் கேட்டில் பெயர்ப் பலகை பித்தளையில் பளபளத்தது.

பைக்கை நிறுத்திவிட்டு இறங்குவதற்குள் செக்யூரிட்டிக்கும்முன் வேர்வை வாசனை வந்தது.

“யார் சார்?” என்று கேட்டதில் “இங்கே பைக் வைக்கக் கூடாது” என்பது அவர் பார்வையில் தெரிந்தது. சொன்னேன்.

“என்ன விஷயமா?” என்ற கேள்விக்கு பதில் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்துவிட்டு “பார்க்கணும்” என்றேன்.

அங்கே சின்ன பெட்டிக்கடை மாதிரி அவர் இருந்த அலுவலகத்தை அடைந்து இண்டர்காமில் பேசினார்.

“ஐயா வர டைம்… பைக்கை ஓரமாக வெச்சுட்டு போங்க” என்று அனுமதி கொடுத்தார்.

சிசி டிவி கேமராவைக் கடந்து சென்றால் கார் நிற்கும் இடத்துக்குப் பக்கம் மினி கோயிலில் பளிச் சென்று வேட்டி கட்டிக்கொண்டு இருந்தார் பிள்ளையார். வரவேற்பு அறையில் இருந்த செடிகள் பிளாஸ்டிக் மாதிரி இருந்தது. வரிசையாக தஞ்சாவூர்த் தட்டு கேடயமும், முதலமைச்சர், மந்திரிகளுடன் ஐயாவின் படங்கள் வரிசையாக அடுத்தடுத்த முதலமைச்சர்களுடன் இவருடைய உயர்வும், வயதும் சேர்ந்து கூடியிருந்தது தெரிந்தது.

“ஹேய்” என்று குரல் கேட்டுத் திரும்பியபோது தீபக் ரவுண்ட் நெக் வெள்ளை டி.சர்ட்டில் “When nothing goes right… go left” என்றது.

“யூ லுக் வெரி ஃபார்மெல்.”

“ஜஸ்ட் ரிடர்னிங் ஃபர்ம் வர்க்.”

“ஓகே. வேர் கான்வி கோ?” என்று கேட்டுவிட்டு அவனே “பீச்?” என்றான்.

நான் பைக் ஓட்ட பைக் பின்புறம் உட்கார்ந்துகொண்டான். செக்யூரிட்டி ஆச்சரியம் கலைவதற்குள் தி.நகர் ஜனத்தொகையில் கலந்து ஜி.என்.செட்டி சாலையை தொட்டபோது, “திஸ் பைக் இஸ் ஆஸம்…”

“தாங்க்ஸ்.”

“யூ நோ வாட் திஸ் பைக் இஸ் 19பிஸ் பவர், ஃபோர் ஸ்டிரோக் அலுமனியம் என்ஜின். ஆம் ஐ ரைட்?”

புரியாமல் “ஐ டோண்ட் நோ… யூ நோ அ லாட் அபவுட் பைக்ஸ்.”

“ஐ லைவ் பைக்ஸ்.”

பீச்சில் துப்பாக்கியால் பத்து ரூபாய்க்கு இரண்டு பலூனைச் சுட்டுவிட்டு “க்ரேஸி” என்றான்.

“விச் யூனிவர்சிட்டி இன் அமெரிக்கா?” என்று பேச்சை ஆரம்பித்தேன்.

“மாசசூசெட்ஸ்… யூநோ?”

“யா…”

“டிட் எம்.எஸ் இன் டாட்டா அனலிடிக்ஸ். ஐ லவ் திஸ் பிலேஸ்” என்றான் மாங்கா கடித்துக்கொண்டே.

“ஹவ் இஸ் யூ எஸ்?”

“கூல். யூ வாண்ட் டு சீ சம் பிக்சர்ஸ்?” என்று ஐபோனைத் தேய்த்துச் சில படங்களைக் காண்பித்தான்.

ஆரஞ்சு கலர் மரக் கூட்டங்களுக்கு மத்தியில் தனியாக நின்றுகொண்டிருந்தான். “சீ திஸ்” என்று காண்பித்த படத்தில் அவன் ஒரு ராட்சச பைக்குடன் இருந்தான்.

அந்தப் படத்தைப் பெரிது செய்ய முற்பட்டபோது அடுத்த படம் வந்தது. அதில் இவனுடன் அவன் அப்பா, அம்மாவும் ஜீன்ஸில் இருந்தார்கள்.

“யூர் டாட் அண்ட் மாம்?” என்றேன்

“யா” என்றான். கொஞ்ச நேர மௌனத்துக்குப் பிறகு, “டாட் ஆண்ட் மாம் நௌ அட் மை ஹோம் ஹியர் ஆர் இம்போஸ்டர்ஸ்.. தீஸ் ஆர் மை ரியல் டாட் ஆண்ட் மாம்” என்றான். என்ன பதில் சொல்ல என்று யோசிக்கும்போது இன்ஸ்பெக்டரிடமிருந்து போன்.

“…”

“கிளம்பிட்டோம்..சார்…”

“….”

“இன்னும் அரை மணியில இருப்பேன்.”

“லெட்ஸ் கோ” என்று கிளம்பி அவன் வீட்டுக்குப் போகும்போது, “யுவர் பைக் டிஸ்க் பிரேக்ஸ் ஆர் ஆசம்” என்றான்.

அவன் வீட்டுக்கு வந்தபோது, “கான் ஐ ரைட் யூர் பைக்?”

“வை நாட்” என்று யோசிக்காமல் கொடுக்க, ஏ.ஆ.ரஹ்மான் கிட்டாரை எடுப்பது போல எடுத்து அதில் உட்கார்ந்துகொண்டு, இலவம் பஞ்சு காற்றில் பறப்பது போல பைக்கின் முன் பக்கச் சக்கரத்தை மேலே உயர்த்தி ஒற்றைச் சக்கரத்தில் வீலீங் செய்து புன்னகையுடன் திருப்பும்போது முகத்தில் அலட்சியம் தெரிந்தது.

“தாங்க்ஸ்… நைஸ் இவினிங்… பை” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

கனவு போல இருந்தது.

இன்ஸ்பெக்டரைப் பார்க்கச் சென்றேன்.

ரிப்போர்ட்டரைப் படித்துக்கொண்டு, “கொஞ்சம் வெய்ட் செய்யுங்க. ராஜ்பவன் டியூட்டி. வந்துடுவார்” என்றார் ஒரு காக்கி.

சிறுது நேரத்தில் இன்ஸ்பெக்டர் அங்கே வந்தபோது எல்லோரும் எழுந்து நின்றார்கள்.

“சாப்பிட்டாச்சா?” என்று கேட்டுவிட்டு பதிலை எதிர்ப்பார்க்காமல் சரவணபவனுக்கு அழைத்துச்சென்று, “இட்லி, மசால் தோசை, காப்பி” என்று சொல்லிவிட்டு “உங்களுக்கு என்ன?”

“ஒண்ணும் வேண்டாம் வீட்டுக்கு போய்…”

“சரி… என்ன சொல்றான் உங்க ஃபிரண்ட் தீபக்?”

அமெரிக்கா படிப்பு, டேட்டா மைனிங், பைக் பற்றிப் பல விஷயங்கள் தெரிவது, கடைசியாக வீட்டுக்கு வந்தபோது அவன் செய்த வீலிங் என்று எல்லாவற்றையும் சொன்னேன்.

“தெரியும்” என்றார்.

“அவன் அப்பா, அம்மா பற்றி பேசினீங்களா?”

“அவன் அப்பா அம்மா படம் அவன் மொபைலில் இருக்கு. அதுதான் அவன் நிஜ அப்பா அம்மாவாம். வீட்டில் இருப்பது அவன் அப்பா அம்மா இல்லையாம்” என்றேன்.

இட்லி வர, “மண்டை காயுது” என்று அவசரமாகச் சாப்பிட்டு முடித்தார். கிளம்பும்போது, “அடுத்த முறை அவனை சந்தித்தால் உங்க பைக்கைக் கொடுக்காதீங்க. வில்லங்கமான பையன். அமெரிக்காவில இப்படி ஓட்டி ஆக்ஸிடண்ட் ஆகி ஒரு வாரம் கோமாவுல வேற இருந்தான். ஜாக்கிரதை” என்றபோது நல்லவேளை என்று நினைத்துக்கொண்டேன்.

“சரி சார். வெள்ளிக்கிழமை வரை ஆபீஸில் கஸ்டமர் விசிட்.. தீபக்கை பார்க்க முடியாது.”

“சரி பாருங்க. ஏதாவது உதவி தேவைப்பட்டா சொல்லுங்க.. என் நம்பர் இருக்கில்ல? அப்பறம் சனிக்கிழமை லீவுதானே?”

“ஆமாம்.”

“அப்ப லஞ்சுக்கு லீமெரிடியன் வந்துடுங்க. தீபக் அப்பா கூப்பிட்டிருக்கிறார். தீபக்கையும் கூட்டிகிட்டு வருவாங்க. ஏதாவது பேசி செட்டில் செய்ய முடியுமா என்று பார்க்கலாம்.”

“சரி.”

சனிக்கிழமை லீமெரிடியன் சென்றபோது ஸ்டார் ஹோட்டல் வாசனை அடித்தது. தலைக்கு மேலே விளக்குகள் பளபளக்க, ரெடிமேட் புன்னகையுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“மே ஐ ஹெல்ப்யூ” என்ற லிப்ஸ்டிக் பெண்ணிடம் “ஃபுபே ஹால்” என்றவுடன் அது ஏதோ ஜோக் போலச் சிரித்துவிட்டு எட்டு அடி கூட நடந்து கதவைத் திறந்துவிட்டாள்.

மூலையில் தீபக் அமர்ந்திருக்க அவன் அப்பா அம்மா அவன் எதிரில் அமைதியாக இருந்தார்கள். இன்ஸ்பெக்டருக்கு முன் சூப் இருந்தது.

“கொஞ்சம் லேட்டாவிட்டது…” என்று அமர்ந்தேன்.

“ஹாய்” என்றான் தீபக் என்னைப் பார்த்து. அவன் அம்மா அவனிடம் “பாஸ்தா” என்று பேச்சுக் கொடுக்க அதை சட்டை செய்யாமல் இருந்தான். இன்ஸ்பெக்டர் அவர்களைத் தன் மொபைலில் படம் பிடித்தார்.

அந்தச் சூழலிலிருந்து தப்பிக்க, சாப்பிடத் தட்டு எடுக்கச் சென்றபோது தீபக் என்னைப் பின்தொடர்ந்தான்.

“யூ நோ வாட். மை ரியல் மாம் ஆன் டாட் ஆர் ஆல்சோ ஹியர்” என்றான்.

புரியாமல் விழிக்க, “வில் ஷோ யூ” என்று என்னை அழைத்துக்கொண்டு சென்றான்.

இன்ஸ்பெக்டர் எங்களைப் பார்த்துவிட்டு, கையில் தட்டுடன் வர நான் அவரிடம் , “சார் அவனுடைய நிஜ அம்மா அப்பா வந்திருக்காங்களாம்” என்றேன்.

“நிஜ அம்மா அப்பாவா?”

“ஆமாம் அப்ப அங்கே பாஸ்தா சாப்பிட்டுக்கொண்டு இருப்பது?” என்று இன்ஸ்பெக்டர் சொன்னதைக் காதில் வாங்காமல் “லெட்ஸ் கோ” என்று சொன்ன தீபக்கை பின்தொடர்ந்தோம். ஒரு இடத்தில் நின்றான். எதிரே இருந்த பெரிய சைஸ் கண்ணாடியில் எங்கள் முகம் தெரிய, “மை மாம் ஆண்ட் டாட்” என்றான்

“எங்கே?” என்று நானும் இன்ஸ்பெக்டரும் விழிக்க அவன் காட்டிய இடத்தில் அவன் அம்மாவும் அப்பாவும் பாஸ்தா சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள், கண்ணாடியில்!

*

Capgras’ delusion: காப்ஸ்ராஸ் மாயை என்பது ஒரு வித மனநலக் கோளாறாகும். விபத்தில் சிலருக்கு மூளை அடிபட்டு, நெருங்கியவர்கள், குடும்பத்தினர் ஒரே மாதிரி மோசடி செய்வதாக எண்ணம் ஏற்படும். வி.எஸ்.ராமச்சந்திரனின் ‘Phantoms in the Brain’ புத்தகத்தில் வந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதியது.

Posted on Leave a comment

சில பயணங்கள் – சில பதிவுகள் (தொடர்) | 6 – மாணவர் போராட்டமும் மசால் தோசையும் | சுப்பு


நான் பத்தாவது படிக்கும் பொழுது வாரியங்காவலில் நயினாவுக்குச் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. வாரியங்காவலில் நயினாவும், அம்மாவும் என்னுடைய தம்பிகள் ரவியும், சீனுவும் இருந்தார்கள். நான் வருடத்துக்கொருமுறை விடுமுறை நாட்களில் அண்ணன்மார்களோடு ஊருக்குப் போய் வருவது வழக்கமாகிவிட்டது.

நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு நூல் வாங்குவதற்காக நயினா திருச்சிக்குப் போனார். போன இடத்தில் மாவட்டக் கல்வி அதிகாரியைச் சந்தித்திருக்கிறார். மாவட்டத்தில் அரசு அனுமதியளித்திருந்த உயர்நிலைப் பள்ளி கோட்டாவில் இரண்டு இடங்கள் இன்னும் பூர்த்தியாகாமலிருப்பதாகவும் விண்ணப்பம் செய்வதற்கு அன்றே கடைசி நாளென்றும் அதிகாரி தெரிவித்திருக்கிறார். உயர்நிலைப்பள்ளி அனுமதி பெற 25,000 ரூபாயும், பள்ளிக்கென்று சொந்த மனையும் வேண்டும் என்று தெரிந்து கொண்ட நயினா நூல் வாங்குவதற்காகக் கொண்டு வந்த 25,000 ரூபாயைப் பள்ளிக்கூடத்திற்கென்று செலுத்திவிட்டார். அங்கிருந்தபடியே ஊருக்குத் தகவல் அனுப்பி ஊர்ப் பெரியவர்களை அழைத்து வரச் செய்து முறைப்படி விண்ணப்பமும் தாக்கல் செய்துவிட்டார்.

வாரியங்காவலுக்கும் பக்கத்து ஊரான எலையூருக்கம் இடையில் ஒரு பெரிய மைதானமிருந்தது. இதன் உரிமை பற்றிய தகராறு வெகு நாட்களாக இரண்டு கிராமத்தாருக்குமிடையில் தீராமலேயே இருந்தது. நயினாவின் யோசனைப்படி எலையூர்காரர்களோடு உடனடியாக சமரசப் பேச்சு வார்த்தை நடந்தது. ஒப்பந்தம் உருவானது. ஒப்பந்தப்படி மைதானத்தை உயர்நிலைப் பள்ளிக்கென்று இரண்டு கிராமத்தாரும் கொடுத்துவிட்டார்கள். பள்ளிக்கு எலையூர் வாரியங்காவல் உயர்நிலைப்பள்ளி என்று பெயரிடப்பட்டது.

பணத்தை ஈடு செய்வதற்காக நூற்றுக்கணக்கானவர்கள் கிராம வங்கியில் சிறு சிறு தொகையாகக் கடன் விண்ணப்பம் செய்தார்கள். ஒருவருக்கொருவர் காரண்டி. அத்தனை மனுக்களும்; ஒரே சமயத்தில் பரிசீலிக்கப்பட்டு தொகை வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட தொகையை அப்படியே நிதியாக வசூலித்து நூல் வாங்கும் தொகை திருப்பிக் கொடுக்கப்பட்டது. ஊர் மக்களின் முழு ஒத்துழைப்பாலும் நயினாவின் துணிச்சலான நடவடிக்கையாலும் வாரியங்காவலுக்கு உயர்நிலைப் பள்ளிக்கூடம் வந்தது.

இவ்வளவு திறமையாகச் செய்யப்பட்ட இந்த முயற்சி ஒரு கூட்டுறவு அதிகாரியால் முறைகேடான செயலாகக் கருதப்பட்டு விஷயம் விசாரணைக்குள்ளானது. விசாரணை நடக்கும்போது பதவியிலிருக்க விரும்பாமல் நயினா சங்கப் பதவியை ராஜினாமா செய்தார். நயினாவின் அதிரடி நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டிருந்த சிலர் இந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு கோஷ்டி மனப்பான்மையை வளர்த்தார்கள். நயினாவால் பலன் அடைந்த பலரும் விசாரணை, வழக்கு என்றபோது விலகிக் கொண்டார்கள். இருபத்தைந்து ஆண்டுகளாக எந்த மக்களுக்காக உழைத்தாரோ அந்த மக்கள் நன்றியோடு நடந்து கொள்ளவில்லை என்று அறிந்தபோது நயினா மனம் வெறுத்தார். குடும்பத்தோடு புறப்பட்டு சென்னைக்கு வந்து விட்டார்.

*

இதற்கிடையே பள்ளியில் நடக்கும் பேச்சுப்போட்டி, ஒப்பித்தல் போட்டி ஆகியவற்றில் நான் வெற்றி பெறுவது வழக்கமாகிவிட்டது. அடுத்து என் கவனம் நாடகத்தின் பக்கம் திரும்பியது. தமிழ் மீடியம் மாணவர்கள் நிறைந்த பள்ளியில் தமிழ் நாடகம் போடுவது பெரிய விஷயமாகாது. ஆகவே, ஷேக்ஸ்பியரின் ‘ஜுலியஸ் ஸீஸர்’ ஆங்கில நாடகம் தயாரானது. நான்தான் வசனகர்த்தா, டைரக்டர். வகுப்பிலேயே சிறந்த நடிகன் என்று கருதப்பட்டவனை ஸீஸராக வசனம் பேச வைத்து ஒத்திகை பார்த்தேன். அவன் தனக்குத் தெரிந்த திறமையைக் காட்டுவதில் குறியாயிருந்தானே ஒழிய, என்னுடைய ஆலோசனையை மதிப்பதாய் இல்லை. இரண்டாம் நாள் ஒத்திகையில் அவனை நீக்கிவிட்டேன். நான் மலைபோல் நம்பியிருந்த இன்னொரு நண்பன் – இவனும் நானும்தான் எங்கள் பள்ளியிலேயே ரீடர்ஸ் டைஜஸ்ட் படிப்பவர்கள் – சீசரின் மனைவி வேடத்தில் பையன்தான் நடிக்க வேண்டும் என்று தெரிந்த பிறகு சத்தமில்லாமல் நழுவிவிட்டான்.

ஒரு வாரம் சிரமப்பட்டுத் தயாரித்த நாடகத்தைக் கைவிடுவது மானப்பிரச்சனை ஆகிவிட்டது. திறமைசாலிகளே தேவையில்லை. சொன்னபடி செய்பவன் இருந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்தேன். அப்போதுதான், நான் ராஜேந்திரனைக் கவனித்தேன். கடைசி பெஞ்சில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். நல்ல வலுவான உடல். இவனை அதிகம் பார்த்ததாக நினைவில்லை. பையன்களிடம் விசாரித்தேன். ராஜேந்திரன் சாந்தோமிலிருந்து வரும் மீனவர் குப்பத்துப் பையன் என்றும், எப்போதும் தாமதமாக வருவானென்றும், மதியம் அநேகமாக வகுப்பில் இருக்க மாட்டான் என்றும் அறிந்தேன். அவனை அணுகி ஆங்கில நாடகத்தில் நடிக்க முடியுமா என்று கேட்டேன். முதலில் தயங்கியவன் நான் கொடுத்த தைரியத்தில் ஒத்துக்கொண்டான். அவனைப் பரிசோதனை செய்வதற்காக ஒரு பக்க அளவு வசனத்தைக் கொடுத்து மனப்பாடம் செய்து வரச் சொன்னேன். மறுநாள் அதைக் கச்சிதமாக ஒப்பித்தான். அடுத்த இரண்டு மாதங்களுக்கு நானும், ராஜேந்திரனும், மற்ற நண்பர்களும் கடுமையாக உழைத்தோம். தினசரி ஒத்திகை. இடைவிடாத பயிற்சி.

பள்ளி நிறுவனர் தினத்தில் ஜுலியஸ் ஸீஸர் அரங்கேறியது. நான் ஆண்டனியாக நடித்தேன். ஆண்டனி வீர உரை ஆற்றும்போது மக்கள் கோபமுற்றுக் குரல் கொடுப்பது தத்ரூபமாக இருக்க வேண்டுமென்பதற்காக நாலைந்து மாணவர்களை நாடகம் பார்க்கும் ஜனங்களுக்கு நடுவில் அங்கங்கே அமரச் செய்திருந்தேன். ஆண்டனியின் உரையால் ரோமாபுரி மன்னன் வீறுகொண்டு எழ வேண்டுமென்பது ஏற்பாடு. வேடிக்கை பார்க்கும் ஜனங்களுக்கு இந்த விவரம் தெரியாது. முக்கியமான கட்டத்தில் யாரோ மாணவர்கள் கலாட்டா செய்கிறார்கள் என்று நினைத்து, சட்டையைப் பிடித்திழுத்து கீழே உட்காரவைத்துவிட்டார்கள். இந்த மாதிரி இடைஞ்சல்கள் இருந்தாலும் நாடகம் அமோகமாக வரவேற்கப்பட்டது.

*

இந்த வருடம்தான் தமிழகமெங்கும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. போலீஸின் அடக்குமுறையை எதிர்த்து மாணவர்கள் நடத்திய எழுச்சிமிகு போராட்டத்திற்கு வெகு ஜனங்கள் ஆதரவு அளித்தார்கள். நானும் இந்த சமயத்தில் தி.மு.க. ஆதரவாளனாயிருந்தேன்.

பெரியப்பா சுதந்திரக் கட்சி. அண்ணன்மார்கள் கல்லூரி மாணவர்கள் என்ற முறையில் போராட்டத்தின் முன்னணியிலிருந்தார்கள். ஆகவே, இந்தி எதிர்ப்பு என்பது நியாயமாகவும், சுலபமாகவும் என்னால் செய்யக்கூடிய ஒன்றாயிருந்தது. பொருளற்ற வகையில் சொற்களை அடுக்கி நீண்ட வாக்கியங்களைப் பேசுவதும், எழுதுவதும் மொழி வளர்ச்சியென்ற பெயரில் நடந்தது. காங்கிரஸ்காரர்களும் பொது மக்களோடு எந்த வகையிலும் தொடர்பு இன்றி சயம்பிரகாச மேட்டுக்குடியினராகத் திரிந்தார்கள். தீக்குளிப்பு போன்ற செயல்களால் ஆவேசப்பட்டு இளைஞர்கள் இந்தித் திணிப்பிற்கு எதிராகத் திரண்டார்கள்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று எங்கள் பள்ளியில் மாணவர்கள் முடிவெடுத்தோம். இந்த மாதிரி போராட்டங்களில் மாணவர்கள் கலந்துகொள்ளும் மரபு இல்லை என்பதால் அவர்கள் வகுப்பறைக்குள் இருந்தார்கள். “யார் உண்ணாவிரதம் இருப்பது” என்ற கேள்வி எழுந்தபோது நாற்பது பேர் பெயர் கொடுத்தார்கள். ஆயிரம் பேர் படிக்கும் பள்ளிக்கூடத்தில் நாற்பது பேர் மட்டும் உண்ணாவிரதம் என்பது கௌரவப் பிரச்சனை ஆகிவிட்டது.

நான் கேட்டேன் “உண்ணாவிரதத்தை முடிக்கும்பொழுது என்ன கொடுப்பீங்க?”.

“லெமன் ஜுஸ்” என்று பதில் வந்தது.

“அதான் நாற்பது பேர் பெயர் கொடுத்துருக்கான். மசால் தோசை குடுத்தா நிறைய பேர் சேருவாங்க” என்றேன் நான்.

“அதுக்கெல்லாம் பணம் இல்லையே” என்பதுதான் பதில்.

வாக்குவாதத்தை இந்த அளவில் நிறுத்திவிட்டு நான் சில நண்பர்களை அழைத்துக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு எதிரில் இருந்த ஹோட்டலுக்குப் போனேன். ஹோட்டல் உரிமையாளர் தமிழறிஞர் கி.வ.ஜகந்நாதனின் தம்பி. மாணவர்களிடம் அன்பாகப் பேசுவார்.

அவரிடம் தமிழுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைச் சொல்லிவிட்டு உண்ணாவிரதம் முடியும்போது ஹோட்டல் சார்பாக மசால் தோசை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன்.

அவர் “எத்தனை மசால் தோசை” என்று கேட்டார்.

பின்னாலிருந்து ஒரு நண்பன் என் சட்டையைப் பிடித்து இழுத்தான். நான் அதைப் பொருட்படுத்தாமல் “பசங்கல்லாம் ரொம்ப கோவமா இருக்காங்க. நூறு மசால் தோசை வேண்டும்” என்றேன்.

தகராறு வேண்டாமென்று நினைத்தோ அல்லது தமிழ் பற்றின் காரணமாகவோ அவர் சம்மதம் தெரிவித்தார்.

இதற்குள் ‘நூறு மசால் தோசை விசயம்’ பள்ளிக்கூடம் முழுவதும் பரவிவிட்டது. உண்ணாவிரதப் பட்டியலில் எண்ணிக்கை நூறைத் தாண்டிவிட்டது.

மீண்டும் ஹோட்டலுக்கு போய் கோரிக்கை வைப்பது நன்றாக இருக்காது என்பதால் சில மூத்த மாணவர்கள் மசால் தோசையைத் தியாகம் செய்ய முன்வந்தார்கள்.

 … தொடரும்

Posted on Leave a comment

மத்திய பட்ஜெட் 2018 | ஜெயராமன் ரகுநாதன்


“இந்தியா ஒரு விவசாய நாடு!”

ஃபிப்ரவரி ஒன்றாம் தேதி காலை எல்லோரும் டிவியின் முன் ஆவலோடு காத்திருக்க, அருண் ஜெய்ட்லியின் வார்த்தைகள் காதில் விழுந்தன..

இந்த வருட பட்ஜெட்டின் சார்பு நிலை அப்போதே ஓரளவுக்குப் பிடிபட்டுவிட்டது. விவசாயிகளும் கிராமப்புறப் பொருளாதாரமும் முன்னணியில் நிற்கப்போவதைக் கட்டியம் கூறிய வார்த்தைகள்.

பட்ஜெட்டுக்கு முன்னர் அளித்த ஒரு பேட்டியில் நமது பிரதமர், “இலவசங்களை சாதாரண இந்தியன் எதிர்பார்க்கவில்லை. அவன் எதிர்பார்ப்பது நேர்மையும் தகுதிக்கேற்ற சலுகைகளும்தான்” என்று ஆணித்தரமாகச் சொல்லியிருந்தார்.

மீடியாக்களிலும் அலுவலக காரிடார்களிலும் மிக அதிகமாகப் பேசப்பட்ட ஜனவரி மாதம் இது. அப்படிப் பேசின விஷயம், இந்த வருட பட்ஜெட் எப்படி அமையும் என்பதுதான். ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப்பிறகு வரும் முதல் பட்ஜெட். மேலும் இந்த பாஜக அரசின் கடைசி பட்ஜெட். இந்த இரண்டு விஷயங்களும் பலரை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்தன.

நிச்சயம் நடுத்தர வர்க்கத்துக்கு அதிகம் நன்மைகள் வரும் என்றும் கார்ப்பரேட்டுகளுக்கு வரிக் குறைப்பு இருக்கும் எனவும் வெளி நாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் வண்ணம் நிறைய சமாச்சாரங்கள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட்.

விவசாயிகளின் நலன், சுகாதாரம், ஊட்டச்சத்து, பெண் முன்னேற்றம், கல்வி, கட்டுமானம், மலிவு வீட்டு வசதி போன்ற விஷயங்கள் இந்த பட்ஜெட்டில் முன்னிலை பெறப்போவதை உணர முடிந்தது.

மோதி அரசு பதவியேற்ற சமயத்தில் நாட்டின் பொருளாதாரம் ஒரு வெடிக்கக் காத்திருக்கும் வெடிகுண்டாக இருந்தது. ஏராளமான ஊழல்கள், பொருளாதார விரயம், குழப்பமான இறக்குமதிக் கொள்கை ஆகியவை நம் பொருளாதாரத்தின் வேரையே அசைத்திருந்தன. 2011–13 வரையிலான காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி நிலை குலைந்திருந்தது. விலைவாசி ஏற்றம் ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட 9.8% வரை உயர்ந்திருந்தது. பட்ஜெட்டில் விழுந்த துண்டு 5.1% அளவில் அதிகரித்து இருக்க, ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாகி இந்தப் பற்றாக்குறை இன்னும் உயர்ந்தது.

மோதி அரசு பதவியேற்ற முதல் இரண்டு ஆண்டுகளில் பொருளாதார வீழ்ச்சியைச் சரி செய்து சமன்படுத்துவதே முக்கியமாகிப் போனது. பட்ஜெட் பற்றாக்குறையைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டு இன்று அந்தப் பற்றாக்குறை 3.5% ஆகக் குறைந்துள்ளது. வெளிநாட்டு வர்த்தகப் பற்றாக்குறை கூடப் பாதிக்குப் பாதியாகக் குறைந்து இப்போதைய நிலைமையில் நல்ல முன்னேற்றத்துடன் இருந்து வருகிறது. கறுப்புப் பணப்புழக்கத்தால் ஏகத்துக்கும் உயர்ந்திருந்த தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டின் விலையேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டாலும் அரசு கொண்டு வந்த ரூ 1,000 மற்றும் ரூ 500 பண மதிப்புத் தடை சில மாதங்களுக்கு நாட்டைக் கொந்தளிப்பில் தள்ளியதை மறுக்க முடியாது. அறுவை சிகிச்சையானதால் அவசியத்தேவை என்றாலும் வலியை மறைக்க முடியவில்லை. கூடவே நாடு தழுவிய ஜிஎஸ்டியும் கொண்டு வரப்பட்டதால் கொந்தளிப்பு இன்னும் அடங்காமல் இருந்தாலும் ஒட்டுமொத்தப் பொருளாதாரம் ஓரளவு கட்டுக்குள் வந்துவிட்டதை யாரும் மறுக்க முடியாது. ஆக, கடந்த வருடங்களில் மோதி அரசின் பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்ட நிலைமைகள் சற்றே அசாதாரணமானவை என்பது கண்கூடு.

இந்த வகையில் 2018க்கான பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டபோது சில விவாதங்கள் எழுந்தன.

தேர்தல் வருவதால்தான் மோதி அரசாங்கம் இந்த வருட பட்ஜெட்டில் பம்மியிருக்கிறார்கள் என்று மோதி எதிர்ப்பாளர்கள் சொல்கிறார்கள்.

முந்தைய அரசாங்கங்கள் போலன்றித் தேர்தலை மனதில் கொள்ளாமல் உண்மையான நலத்திட்டங்கள் நிறைந்த வளர்ச்சிக்கான பட்ஜெட் இது என்பது நடு நிலையாளர்களின் குரல்.

மிக அதிகமான வரி வருவாய் (18.7% அதிகரிப்பு)

முதலீட்டைத் திரும்பப்பெறும் முயற்சியில் வந்து சேர்ந்த அபரிமிதமான தொகை (ரூ 1 லட்சம் கோடி) இருந்தபோதிலும், ஜிஎஸ்டியில் எதிர்பார்த்ததற்கும் குறைவான வருவாயே வந்ததாலும் அரசுக்கு வந்து சேரவேண்டிய டிவிடெண்ட் வருவாய்க் குறைவாலும் அருண் ஜெய்ட்லி பட்ஜெட் பற்றாக்குறையை விட்டுத்தான் பிடிக்க முயன்றிருக்கிறார். போன பட்ஜெட்டில் இந்தப் பற்றாக்குறை 3.2% என்று திட்டமிடப்பட்டாலும் அதை 3.5% க்கு அனுமதித்து அடுத்த வருடத்திய பற்றாக்குறையை 3.3%ஆக நிறுவி இருக்கிறார். கூடவே பல சரி செய்யும் நடவடிக்கைகளையும் அறிவித்திருக்கிறார்.

இந்த பட்ஜெட் நிச்சயம் இந்தியக் கிராமப்புறச் சர்புடையதுதான் என்பதில் சந்தேகமில்லை. முக்கியமாக விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதரவு விலை, ஆன செலவைப்போல ஒன்றரை மடங்காவது இருக்கும் என்பதில் தொடங்கி அருண் ஜெய்ட்லி அறிவித்த பலப்பல திட்டங்கள் கிராமம் மற்றும் வளர்ச்சி சார்ந்ததாகவே இருக்கின்றன. அதனாலேயே இது தேர்தலைக்கொண்டு போடப்பட்ட பட்ஜெட் என்கிறது ஒரு வாதம்.

அதே சமயம் பல நல்ல முயற்சிகளும் எடுக்கப்பட்டிருப்பதை மறுக்கவும் முடியாது.

விவசாயம், சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு என்னும் நான்கு தூண்களில் இந்த பட்ஜெட் இருப்பதாக பல விற்பன்னர்கள் கருத்துக் கூறியிருக்கிறார்கள். கூடவே மத்தியத்தர சிறு குறு தொழில் வளர்ச்சியும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

விவசாயிகளுக்கு அடக்க விலைக்கு மேல் அம்பது சதவீதம் குறைந்த பட்ச விலை நிர்ணயம் அவர்களின் லாபத்துக்கு மிக முக்கியத் தேவையாகும். நாடு முழுவதும் கிட்டத்தட்ட 22,000 சந்தைகளில் இந்தக் குறைந்த அளவு விலை கிடைக்க ஏற்பாடும் செய்யப்போவதாக அறிவித்திருப்பது நன்மையே.

திட்டமிடப்பட்ட நேரத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பிரதமரின் கிராமப்புறs சாலை அமைப்புத் திட்டம் முடிவடைந்துவிட்டது. ஐந்து கோடி குடும்பங்களுக்கு இலவச கேஸ் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இது இன்னும் மூன்று கோடி குடும்பங்களுக்கு வழங்கவும் ஏற்பாடுகள் நடக்கவிருக்கின்றன. கிராமப்புற நகர்ப்புற ஏழைகளுக்கான மலிவு விலை வீடுகள் வழங்கும் திட்டம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பத்து கோடி ஏழைக் குடும்பங்களை உள்ளடக்கிய காப்பீட்டுத் திட்டம் உலகத்திலேயே மிகப்பிரம்மாண்டமான திட்டம் என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

ஒன்றரை லட்சம் உடல்நலப் பரிசோதனை மையங்கள் அமைத்து பரிசோதனை செய்தல் மற்றும் மருந்து வழங்குதல், குறு தொழில்களுக்கு உத்திரவாதத்துடன் இன்னும் மூன்று லட்சம் கோடி கடனுதவி (ஏற்கெனவே ரூ 4 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது), மத்தியத்தரத் தொழில்களுக்கு வரி குறைப்பு என்று பல வளர்ச்சித்திட்டங்களையும் இந்த பட்ஜெட் உள்ளடக்கியிருக்கிறது.

“ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்த மத்தியத்தரத்துக்கு ஒன்றுமே இல்லை!” என்னும் குரல் ஒலிப்பதைக் கேட்க முடிந்தது.

அறுபது வயதுக்கு மேற்பட்ட சீனியர்களுக்கு வரிச்சலுகை, மாதச்சம்பளம் பெறுபவர்களுக்கு ரூ 40,000 standard deduction போன்ற சலுகைகள் மத்தியத்தர வர்க்கத்துக்கு உதவும் அம்சங்கள். சீனியர் சிட்டிசென்களுக்கு அவர்களது முதலீட்டிலிருந்து வரும் வட்டிக்கான வரி விலக்கு ரூ 10,000த்திலிருந்து ரூ 50,000மாக உயர்த்தப்பட்டிருப்பது, பணவீக்கம் மற்றும் குறைந்து வரும் டெபாசிட் வட்டி ஆகியவற்றிலிருந்து பெரிய விடுதலை. ஆனாலும் சம்பள வரி விலக்கை ரூ 3 லட்சத்திற்கு உயர்த்துவார் என்னும் எதிர்பார்ப்பு பலரிடம் இருந்ததையும், அது இல்லாமல் போனதால் ஏமாற்றமும் கோபமும் உண்டானதையும் கவனிக்க முடிகிறது.

ஆனால் கடந்த நான்கு வருடங்களில் பார்த்தால் மத்தியத்தர வர்க்கத்துக்காக இந்த அரசு கொண்டு வந்த சலுகைகள் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்ததற்கு எவ்விதத்திலும் குறைந்தது அல்ல என்பதை உணரலாம்.

அதேபோல கம்பெனிகளுக்கான வரிவிதிப்பு சராசரியாக 25% அளவில் குறைக்கப்படும் என்னும் எதிர்பார்ப்பும் இருந்தது. அதுவும் நடக்கவில்லை. ஐரோப்பாவில் கம்பெனிகளின் சராசரி வரி விகிதம் 20% தான். சமீபத்தில் அமெரிக்காவும் கார்ப்பரேட் வரியை 21% ஆகக்குறைத்துவிட்டது. இந்த நிலையில் நாமும் அதைக் குறைத்திருந்தால்தான் அந்நிய முதலீடுகள் நமக்கு வரக்கூடிய வாய்ப்புக்கள் பெருகும் என்னும் வாதம் எழுகிறது.

அதேபோல இதுநாள் வரை முழுவிலக்குப் பெற்றிருந்த நீண்ட கால மூலதன ஆதாயம் (Long Term Capital gain) இந்த முறை 10% வரி விதிக்குள்ளாகியிருக்கிறது. இது பங்குச்சந்தையில் மிகப்பெரும் எதிர்ப்பைக் கண்டிருக்கிறது. இது நிச்சயம் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்னும் கோரிக்கை பரவலாக எழுந்திருக்கிறது. Indexing எனப்படும் சமன்பாட்டையாவது செய்ய அனுமதிக்கப்படவேண்டும் என்பது உரக்கக் கேட்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பங்குச்சந்தை இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது. மற்ற எந்தச் சொத்தை விற்றாலும் பெறப்படும் நீண்ட கால லாபத்துக்கான வரி கட்டியாக வேண்டும். பங்குகளுக்கு மட்டும் வரி இல்லாமல் இருந்தது. 2004ல் இந்த விலக்கு வந்தபோது பங்குச் சந்தை 6,500 – 7,000 புள்ளிகளாக இருந்தது. அது இப்போது 35,000 வரை உயர்ந்துவிட்டிருக்கிறது. இதன் மூலம் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியவர்கள் வரி கட்டவில்லை. போன நிதி ஆண்டில் மட்டுமே வரி இல்லாமல் பங்குகளில் ஈட்டப்பட்ட லாபம் 3.7 லட்சம் கோடியாகும். எனவே இந்த வரி விதிப்பு நியாயமானதுதான் என்பது அரசின் வாதம்.

மேலே சொன்னமாதிரி கடந்த நான்கு ஆண்டுகளில் சீர் திருத்தப்பட்டதால் நம் பொருளாதாரம் தன் வேர்களை உறுதியாக்கிக்கொண்டு இன்று உலகத்திலேயே மிக வேகமாக முன்னேறும் நாடுகளுள் இந்தியாவும் ஒன்று என்பதை உறுதி செய்துள்ளது. நிச்சயம் அடுத்த சில ஆண்டுகளுக்குப் பொருளாதார வளர்ச்சி 8%க்குக் குறைய வாய்ப்பே இல்லை என்பது புலப்படுகிறது.

ஊசலாடிக்கொண்டிருந்த பட்ஜெட் பற்றாக்குறை ஒரு வழியாக 3,5%க்குக் கொண்டு வரப்பட்டு, அடுத்த வருடத்தில் 3.3%ஆகக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வரிகள் விஷயத்தில் நிதி அமைச்சர் சொன்னாற்போல வரி வட்டத்துக்குள் வருபவர் எண்ணிக்கை கணிசமாகக் கூடியிருக்கின்றது. தாமாகவே பதிவு செய்யும் வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை ஜிஎஸ்டியினால் உயர்ந்திருக்கின்றது. ஜிஎஸ்டி வந்துவிட்டதால் மறைமுக வரிகள் பற்றி இந்த பட்ஜெட் அதிகம் பேசவில்லையென்றாலும் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டு மொபைல் ஃபோன், அழகு சாதனப்பொருட்கள், கார், டெலிவிஷன் ஆகியவை விலையேற்றம் கண்டிருக்கின்றன. ஒரு வகையில் இது ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு ஊக்கம் கொடுப்பதாகும்.

பொது நலத்தையும் வளர்ச்சியையும் குறிக்கோளாகக்கொண்ட இந்த பட்ஜெட்டைக் குறை கூற அதிகம் காரணங்கள் அதிகமில்லைதான் என்றாலும் சில நெருக்கடியான கேள்விகள் ஒலிக்காமலில்லை.

அறிவிக்கப்பட்ட சில திட்டங்களுக்கான நிதி பற்றித்தான் சந்தேகங்கள் எழுகின்றன. பல நல்ல திட்டங்களுக்கான நிதியைப் பெற அமைச்சர் பட்ஜெட்டுக்கு வெளியிலிருந்து (Extra budgetary resources) பெற விழைந்திருக்கிறார். அந்த அளவு நிதி திரட்டப்படவில்லை என்றால் திட்டங்கள் அறிவிப்பிலேயெ நின்று போகக்கூடிய அபாயம் உண்டு. உதாரணமாக குறைந்த அளவு விலை நிர்ணயம் (Minimum Support Price – MSP) ஒண்ணரை மடங்கு என்று சொல்லிவிட்டு உணவுக்கான மானியம் ரூ 29,041 கோடிதான் என்றும்  இந்த MSP எந்த நிலையிலும் குறையாமல் பார்த்துக்கொள்ள, சரியாக முறைமைப்படுத்தும் கடமையை நிதி ஆயோக்கிடம் விட்டிருக்கிறார், அவர்கள் அதைச்செய்ய முடியாமல் போனால், இந்த நலத்திட்டமே உடைந்து போய்விடக்கூடும். அதே போல கிராமப்புறச் சந்தைகள் ஏற்படுத்துதல் விவசாயிகளுக்குப் பெரும் நன்மை பயக்கும் எனபதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு வெறும் ரூ 2,000 கோடிதான் என்பதுதான் சிக்கல்.

மிகப்பெரும் கிராமப்புறத் திட்டங்களுக்கான நிதித்தேவை கிட்டத்தட்ட ரூ 14.34 லட்சம் கோடி. அதில் 80%க்கு மேலாக அருண் ஜெய்ட்லி எதிர்பார்ப்பது பட்ஜெட்டுக்கு வெளியிலிருந்து என்னும் போது நமக்கு வேர்த்து விடுகிறது.

பத்து கோடி குடும்பங்களுக்கு தலா ரூ 5 லட்சம் மதிப்பில் காப்பீட்டுத்திட்டம், தனியார் காப்பீட்டு கம்பெனிகளால்தான் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதும் கொஞ்சம் சந்தேகத்துக்கு இடமளிக்கும் அம்சம்தான். இது எப்படி நிர்வகிக்கப்படும் என்பது பெரிய கேள்வி.

கட்டுமானத் திட்டங்களில் நிச்சயம் உறுதித் தன்மை இருப்பதைப் பார்க்க முடிகிறது. ரூ 5.97லட்சம் கோடிக்கான ஒதுக்கீட்டில் முக்கால்வாசித் திட்டங்களை பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டிருப்பது ஆறுதல்.

குமாரமங்கலம் பிர்லா, என்.சந்திரசேகரன் (TCS), தீபக் பாரிக், உதய் கோடக், சந்தா கோச்சர் போன்ற தொழிலதிபர்கள் இந்த பட்ஜெட்டை சிலாகித்திருக்கிறார்கள். முக்கியமாக, கிராமப்புற, கல்வி, சுகாதார முனைப்புக்கொண்ட அம்சங்கள் இந்தியாவின் எதிர்காலப் பொருளாதாரத்துக்கு நல்ல மேடை அமைக்கும் என்பது இவர்களின் கணிப்பு. கட்சி சார்பில்லாத இந்த விற்பன்னர்களின் கருத்து நிச்சயம் நம்பகத்தன்மை வாய்ந்ததுதான்.

கழுகுப் பார்வையில் பார்த்தோமானால் இந்த பட்ஜெட்டின் நோக்கம் அதன் வீச்சு, நீண்ட காலப் பார்வை ஆகியவற்றில் குறை சொல்ல ஏதுமில்லை. வளர்ச்சியைவிட தேர்தலைக்கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்னும் குற்றச்சாட்டில் பெரிய அளவில் உண்மை இல்லை. இன்னும் சொல்லப்போனால் தனி மனிதருக்கான வரிவிலக்கு கூட்டப்படாதது, இந்த அரசு தேர்தலை மட்டுமே மையமாக வைத்து இந்த அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை என்பதை உறுதிபடுத்துகிறது. ஒருவேளை தேர்தலை மையாக வைத்து சிறிய சாய்வு இருக்குமானால் கூட அதைப் புரிந்துகொள்ள முடியும். அந்த சாய்வு கூடப் பொருளாதாரத்தின் அடிப்படையை எந்தவிதத்திலும் சிதைப்பதாக இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கவலை தரும் அம்சம் நிதிப்பற்றாக்குறையும் அதனால் பாதிக்கப்படப்போகும் நல்ல திட்டங்களும்தான். கூடவே ஜிஎஸ்டி வருவாயும் பரந்துபட்டிருக்கும் வரி வருவாயும் எதிர்ப்பார்த்த அளவுக்கு வருமானால் எதிர்கால பட்ஜெட்டுகள் இந்த பட்ஜெட்டின் அஸ்திவாரத்தைக் கட்டிக்காத்து நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமாக்கிவிட முடியும்.

அது நடக்கும் என்று நம்புவோம்.

Posted on Leave a comment

காவிரி – தீரா நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினை | லக்ஷ்மணப் பெருமாள்


 காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் 16-02-2018ல், தனது இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பின் சாராம்சம் இதுதான்.

“கர்நாடகா, தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி (டிஎம்சி என்பது ஆயிரம் மில்லியன் கன அடி) அளவு நீரை வழங்க வேண்டும். அடுத்த 15 ஆண்டுகளுக்கு இதே தீர்ப்பு அமலில் இருக்கும் என்பதால், இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. அதில் உள்ள சிறு குறைகளை மட்டும் நீக்கிவிட்டு, தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்படுகிறது. காவிரி ஆறு ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்குச் சொந்தமானது அல்ல. காவிரி ஆறு தேசியச் சொத்து. அதனை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது.

தமிழகத்தில் காவிரி பாசனப்பகுதிகளில் 20 டிஎம்சி நிலத்தடி நீர் உள்ளது. அதில் குறைந்தபட்சமாக 10 டிஎம்சி நீரை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு, முன்னர் தரப்பட்டிருந்த 192 டிஎம்சி நீரில் இருந்து 177.25 டிஎம்சி நீராகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் கர்நாடகாவில் வளர்ந்து வரும் தொழிற்சாலைகளையும், பெங்களூருவின் குடிநீர்த் தேவையையும் கருத்திற்கொண்டு கர்நாடகாவுக்குக் கூடுதலாக 14.75 டிஎம்சி நீர் ஒதுக்கப்படுகிறது.

பெங்களூரு சர்வதேச நகராக வளர்ந்துள்ளதால் நாளுக்கு நாள் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. இதனால் பெங்களூருவின் குடிநீருக்காக 4.75 டிஎம்சி நீரும், தொழிற்சாலைகளின் தேவைக்காக 10 டிஎம்சி நீரும் ஒதுக்கப்படுகிறது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் தரப்பட்டிருந்த, கேரளாவுக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி நீரில் எவ்வித மாற்றமும் இல்லை.

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக மக்களின் நலன் கருதி 1892 மற்றும் 1924 ஆகிய ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும். எனவே தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட முடியாது. மழைக்காலங்களில் காவிரியில் அதிகப்படியாக வரும் நீரை கர்நாடகா முறையாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.

மத்திய அரசு இன்னும் 6 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.”

இவ்வாறு உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவிரியின் கடந்த கால வரலாறு

18-02-1892ல் சென்னை மாகாணத்துக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையில் முதல் காவிரி நீர்ப்பகிர்வு உடன்படிக்கை செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தப்படி மைசூர் மாகாணம் கூடுதலாக வேளாண்மை செய்ய வேண்டுமென்றால் சென்னை மாகாணத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். இல்லையேல் புதிதாக வேளாண்மை செய்யக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது.

14 ஆண்டுகள் கழித்து நடுவர் குழு மற்றும் ஆய்வுக்குழுவின் வழிகாட்டுதல்படி, 18-02-1924ல் மைசூர் – கண்ணம்பாடியில் கிருஷ்ணராஜ சாகர் அணையையும், இங்கே மேட்டூர் அணையையும் அடிப்படையாக வைத்து, இந்திய அரசின் மேற்பார்வையில் சென்னை மாகாணத்துக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் 50 ஆண்டு கால உடன்படிக்கை செய்யப்பட்டது.

1956ல் மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்பட்டபோது காவிரி உற்பத்தியாகும் குடகு கர்நாடகாவிற்குச் சென்றது. மேலும் காரைக்கால் காவிரி நீரால் பயனடைந்து வந்ததால் புதுச்சேரியும், கபினி நீரின் பிறப்பிடம் கேரளாவிற்குச் சென்றதால் 1960ல் கேரளமும் நீர்ப்பங்கீடு கேட்டு உரிமைப் பிரச்சினையை எழுப்பின.

1924 -1974 உடன்படிக்கை முடிவுக்கு வந்தபோது கர்நாடகா நீர் தர மறுத்தது. இதற்கிடையே 1892, 1924 ஒப்பந்தங்களை மதிக்காமல், நீர்ப்பங்கீட்டை கர்நாடகா மறுக்கிறது என்று தமிழகம் 17-02-1970ல் மத்திய அரசிடம் நடுவர் தீர்ப்பாயத்தை அமைக்கக் கோரிக்கை வைக்கிறது. 16 ஆண்டுகளாகியும் நடுவர் தீர்ப்பாயத்தை அமைக்காத காரணத்தால் ‘மாநிலங்களுக்கிடையேயான நீர்த்தகராறு 1956 சட்டத்தின்’ கீழ் தமிழகம் நடுவர் தீர்ப்பாயத்திடம் செல்வதென முடிவெடுக்கிறது. நடுவர் தீர்ப்பாயக் குழுவை அமைக்காமல் மத்திய அரசு கால தாமதம் செய்கிறது. இதனையடுத்து உச்சநீதி மன்றம் தலையிட்டதன் பேரில் 1990, ஜுனில்தான் காவிரி நடுவர் தீர்ப்பாயம் (நடுவர் மன்றம்) அமைக்கப்படுகிறது. அக்காலக் கட்டத்திலிருந்த மத்திய அரசின் அலட்சியப் போக்கினால் தமிழகம் இழந்தது ஏராளம். ஏனெனில் கர்நாடகாவில் விவசாயம் செய்யும் நிலப்பரப்பு விரிவாக்கப்பட்டுக் கொண்டே சென்றது.

காவிரி நதிநீர் நடுவர் தீர்ப்பாயத்தில் மூன்று நீதிபதிகள் அதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். தீர்ப்பாயத்தின் முடிவான தீர்ப்பு அளிக்கப்படும் வரை, 25-06-1991 அன்று, இடைக்கால உத்தரவாக தமிழ்நாட்டிற்கு 205 டிஎம்சி நீரை ஆண்டுதோறும் வழங்க வேண்டும் என்று ஆணையிட்டது. பத்து நாட்களுக்குப் பிறகு தீர்ப்பாயத்தின் உத்தரவை ஏற்க மறுத்து, கர்நாடக சட்டமன்றம் ஒருமனதாகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. தன்னுடைய அலுவலர்களுக்கும் கர்நாடக அரசு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி, மாநில விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் காவிரி நீரைக் காப்பாற்றிப் பாதுகாக்குமாறு உத்தரவிட்டது. விவகாரம் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. கர்நாடகாவின் தீர்மானம் அரசியலமைப்புச் சட்ட வரம்பை மீறுவது என்று உச்சநீதி மன்றம் கூறியது. இதனையடுத்து மத்திய அரசு கர்நாடகா விடவேண்டிய தண்ணீரின் அளவைக் குறிப்பிட்டு தனது கெஸட்டில் வெளியிட்டு, அதை அதிகாரப்பூர்வமாக்கியது. அதற்குப் பதிலளிக்கும் வகையில் அப்போதைய கர்நாடக முதல்வர் எஸ்.பங்காரப்பா பொதுவேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து தமிழகத்திற்கு எதிராக கர்நாடகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. கலவரங்கள் நிகழ்ந்தன. தமிழகத்திலும் பல கோடி இழப்புகள் ஏற்பட்டது. அதுபற்றிப் பின்னர் விரிவாகக் காணலாம்.

இதற்கிடையே கர்நாடகம் அதன் பாசனப் பரப்பை அப்போதைய 11,20,000 ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக் கூடாது என்றும் தீர்ப்பாயம் ஆணையிட்டது. இந்த இடைக்காலத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. பின்னர், குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டபடி, உச்ச நீதிமன்றம் தலையிட்டு அந்த அவசரச் சட்டத்தை நீக்கியது.

கர்நாடக அரசு பாசனப் பகுதிகளை அதிகப்படுத்தியது; அரசியல் லாபங்களை முன்வைத்து, உச்சநீதிமன்றம், நடுவர் தீர்ப்பாயம் அறிவிக்கும் நீரின் அளவை, மழைக் காலங்களில் அதிக நீர்வரத்து இருந்தால் திறந்து விடுவதும், மழை குறைவான ஆண்டுகளில் அல்லது நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் மாதங்களில் தண்ணீரைத் திறந்து விடுவதில் உள்ள சிக்கலைக் காரணம் காட்டி நடுவர் தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி திறந்து விட இயலாது என்று காரணம் காட்டுவதும் வாடிக்கையானது. தமிழகம் தனக்கான நீதி கேட்டு உச்சநீதிமன்றம் செல்வதும், கர்நாடகமும் தனது பங்கிற்கு வழக்குகளைப் போடுவதும் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. தமக்கான தண்ணீரின் அளவைக் குறைத்துவிடக்கூடாது என்ற கவலையில் கேரளாவும், புதுச்சேரி யூனியனும் கூட வழக்குகளைப் பதிவு செய்தன.

காவிரி பற்றிய சில தகவல்கள்

காவிரி தலைக்காவிரி, குடகு என்ற இடத்தில் தற்போதைய கர்நாடகாவில் பிறக்கிறது. கர்நாடகாவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியின் வாயிலாக தமிழகத்தில் நுழையும் காவிரி, தெற்கு, தென் கிழக்குப் பகுதிகளில் பாய்ந்து இரு கிளைகளாகப் பிரிந்துசென்று இறுதியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

காவிரி நதியில் கலக்கும் சிறு ஆறுகள்: சிம்ஸா, ஹேமாவதி, அர்காவதி, ஹொன்னுகோல், லக்ஷ்மண தீர்த்தா, காபினி, பவானி ஆறு, லோகபவானி, அமராவதி மற்றும் நொய்யல் ஆறு.

காவிரி பாயும் மாநிலங்கள்: கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி.
காவிரிப் படுகையின் நீர்த்தேக்கத்தின் அளவு : 81,155 Sq.KM (31,334 Sq.Miles)
நீளம்: 765 KM
காவிரி விடுவிப்பு சராசரியாக : 235.7 Cubic Meter/Sec (8,324 Cubic feet/Sec)

இந்தியாவில் நீர் பற்றிய சட்டங்களில் என்ன கூறப்பட்டுள்ளது?

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் நீர் மேலாண்மை பற்றிய சட்டங்களை வரையறுத்ததில் உள்ள உரிமைகள் இன்று மாநிலங்களுக்கிடையே நீரைப் பகிர்ந்து கொள்வதில் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. சட்டங்கள் வரையறுக்கப்பட்ட போதிலும், முழுமையான அதிகாரமோ அல்லது மாநிலத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரமோ முற்றிலுமாக மத்திய அரசின் கையில் இல்லை. அதே நேரத்தில் மாநிலங்களுக்கிடையேயான நீரைப் பகிர்ந்து கொள்வதன் மேற்பார்வை மற்றும் நீரைப் பகிர்ந்து கொள்வதில் பிரச்சினை ஏற்பட்டால் மத்திய அரசு என்ன முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற வரையறைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான நேரங்களில் இதுவரை ஆண்ட அனைத்து மத்திய அரசும் இப்பிரச்சினையை நேர்மையாக அணுகவில்லை என்பது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியதாகும். இதுவே உச்ச நீதி மன்றத்திற்கும் பொருந்தும். நடுவர் தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களாக இருந்தும் மாநில அரசு தனது உரிமையைப் பயன்படுத்தி சில அவசரச் சட்டங்களைப் போடுவதை அவர்களால் நேரடியாகக் கேள்வி எழுப்ப இயலவில்லை. அதேவேளையில் நடுவர் தீர்ப்பாயத்தில் எத்தகைய ஆய்வை மேற்கொண்டு குறிப்பிட்ட அளவு நீரை, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு வழங்க வேண்டும் என்று சட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டாலும், பருவ நிலை மாற்றங்கள், மழை குறைவாக பெய்தல் போன்ற பல்வேறு காரணிகளால், அவ்வுத்தரவைப் பல வருடங்களுக்குப் பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவுகளை ஏற்க இயலாது என்பது போன்ற மாநில அரசின் கோரிக்கைகளையும், வழக்குகளையும் முற்றிலுமாக நிராகரிக்க இயலவில்லை. தண்ணீர் கிடைக்காத மாநிலம் தன் தரப்பு நீதி கேட்டு வழக்குகளைப் போடுகிறது. இவ்வாறாக இந்தியாவில் மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ப்பங்கீட்டுப் பிரச்சினை அரசியல் பிரச்சினையாகி, தற்போது மாநில விவசாயிகளின் உணர்வுப் பிரச்சினையாகவும் மாறியுள்ளது.

மாநில அரசின் கீழ் இருக்கும் அதிகார வரம்புகளில் ‘நீர்’ 17வதாக இடம்பெறுகிறது.

Water is a state subject as per constitution of India and Union’s role comes into only in the case of inter- state river waters.

The State List of the Seventh Schedule has the following as Entry 17:

“Water, that is to say, water supplies, irrigation and canals, drainage and embankments, water storage and water power”

17ல் (Entry 17) நீர் மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் வருவதால் குடிநீர் வழங்கல், விவசாயத்திற்கு வழங்கல், கால்வாய், வடிகால், நீர்த்தேக்கம், புனல் மின்சாரம் உள்ளிட்டவைகளில் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது. அது தொடர்பான சட்டங்களையும் மாநில அரசு இயற்ற இயலும். இதைத்தான் கர்நாடகா பயன்படுத்துகிறது. தனது மாநிலத்தின் வேளாண்மையைப் பெருக்கும் வகையில் பல நீர்த்தேக்கங்களை, வடிகால்களை அமைக்கும் உரிமை தனக்குள்ளது என்ற அடிப்படையில்தான் கர்நாடகாவில் விவசாய நிலங்களைப் பெருக்கிக் கொண்டு சென்றது. 1970 லிருந்து 1990 வரை நடுவர் தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்காமல் போனதும் முக்கியக் காரணம்.

1928ல், காவிரி, இப்போதைய கர்நாடகத்தின் 1.1 கோடி ஏக்கர் விவசாய நிலங்களுக்கும், இப்போதைய தமிழ்நாட்டின் 14.5 கோடி ஏக்கர் நிலங்களுக்கும் பாசனவசதி அளித்து வந்தது. 1971ல் இடைவெளி மேலும் அதிகரித்தது. புள்ளிவிவரப்படி, கர்நாடகத்தில் 4.4 கோடி ஏக்கரும், தமிழ்நாட்டில் 25.3 கோடி ஏக்கரும் பாசன வசதி பெற்றன. எனினும், இருபதாம் நுற்றாண்டின் இறுதியில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி கர்நாடகாவில் 21.3 கோடி ஏக்கர் அளவிற்கும், தமிழ்நாட்டில் 25.8 ஏக்கரில் பாசன வசதி உள்ளது.

கர்நாடகாவின் இந்த மகத்தான பாசன வசதி விஸ்தரிப்பு மாண்டியா மற்றும் மைசூர் விவசாயிகளுக்கு அதிகப் பொருள் வளத்தை ஈட்டித் தந்தது. இப்போது கர்நாடகாவில் இரண்டு, மூன்று போகம் நெல், கரும்பு சாகுபடிகளைச் செய்கிறார்கள்.

1970, 1980களில் இரு மாநிலங்களுக்கும் சமரசமாக ஏற்கக்கூடிய வகையிலான காவிரி நதிநீர்ப்பங்கீட்டை முடிவு செய்ய மத்திய அரசு பல்வேறு கூட்டங்களைக் கூட்டியது. இக்காலக்கட்டத்தில் 26 முறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. தமிழ்நாடு, மேல் பகுதியில் விரைவான கால்வாய் அமைக்கும் பணிகள், தம் மாநில விவசாயிகளைப் பாதிக்கும் என்று அஞ்சியது. அதேபோல கர்நாடகம், ஏற்கெனவே காலம் தாழ்த்தி விட்டோம். காலம் கடந்து ஆரம்பித்ததால், தம் மாநிலத்தின் பாசன வசதி மேம்பாடு, எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்று வாதிட்டது. அதை உறுதிப்படுத்த மாநில அதிகார வரம்பில் நீர் இருப்பதால், அதைப் பயன்படுத்தியே பாசன வசதியை மேம்படுத்திக் கொண்டது. கூடுதலாக தேவையான கால்வாய்கள், வடிகால்களை அமைத்தது.

மத்திய அரசின் கீழ் இருக்கும் அதிகார வரம்புகளில் ‘நீர் மேலாண்மை’ 56வதாக இடம்பெறுகிறது.

Entry 56 of List I (Union list), reads as follows:

“Regulation and development of inter- state rivers and river valleys to the extent to which such regulation and development under the control of the Union, is declared by Parliament by law to be expedient in the public interest”.

பிரிவு 56, பல்வேறு மாநிலங்களுக்கிடையே பாயும் ஆறுகள், ஆற்றுப் பள்ளத்தாக்குகளை மேம்படுத்துவது, அவற்றை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு மாநில மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அதிகாரத்தைத் தருகிறது.

மாநிலங்களுக்கிடையே நதி நீர்ப்பங்கீட்டால் ஏற்படப்போகும் பிரச்சினைகளை உணர்ந்த மத்திய அரசு சட்டப் பிரிவு 262ல் இதுபற்றிப் பேசுகிறது. இதற்குத் தேவையான ஒழுங்கு முறை வாரியம், நடுவர் தீர்ப்பாயம் போன்ற குழுக்களை அமைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்று வரையறுக்கப்பட்டது. மேலும் சட்டப் பிரிவு 262ன் படி இரு சட்டங்களை உருவாக்கியது.

River Board Act 1956:

பல்வேறு மாநிலங்களுக்கிடையே பாயும் நதிகள் மற்றும் ஆற்றுப் பள்ளத்தாக்குகளின் மேம்பாடுகளைக் கணக்கில்கொண்டு, மாநிலங்களுடன் கலந்தாலோசனை செய்து, வாரியம் அமைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு. மேலும் பிரச்சினைகளைத் தவிர்க்க மேலாண்மை வாரியம் அல்லது நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்.

இந்தச் சட்டப்பிரிவைப் பயன்படுத்தி இதுவரையிலும் எந்த மத்திய அரசும் காவிரி மேலாண்மை வாரியத்தை (No River Board) அமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 Inter-State Water Dispute Act, 1956:

மாநிலங்களுக்கிடையே ஏற்படும் நதிநீர்ப்பங்கீட்டுப் பிரச்சினையைத் தீர்க்க மாநிலங்களுடன் கலந்தாலோசனை செய்து பிரச்சினையைத் தீர்க்க முயல வேண்டும். அவ்வாறு முயற்சித்தும் பிரச்சினையைத் தீர்க்க இயலவில்லையெனில், நடுவர் தீர்ப்பாயம் அல்லது நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்.

குறிப்பு: உச்சநீதி மன்றம் தீர்ப்பாயம் கொடுக்கும் அளவு பற்றி கேள்வி கேட்கக் கூடாது அல்லது தீர்ப்பாயம் நீரின் அளவை எதனடிப்படையில் அடைந்தது என்ற கேள்விகளைக் கேட்க முடியாது. ஆனால், அது வேலை செய்யும் முறையைக் கேள்வி கேட்கும் அதிகாரம் உண்டு.


காவிரிப் பிரச்சினையின் உண்மை நிலவரம்

காவிரி நதிநீர்ப்பங்கீட்டுப் பிரச்சினையில் 1974ம் ஆண்டிலிருந்தே தமிழகத்திற்கு உரிய நீதி கிடைக்கவில்லை. எம்ஜிஆர் 1974ல் ஒப்பந்தம் முடிவிற்கு வந்ததை அடுத்து உச்சநீதி மன்றத்தை அணுகினார். பின்னர் இந்திராவின் கோரிக்கையை ஏற்று வழக்கை திரும்பப்பெற்றுக் கொண்டது தமிழக அரசு. ஆனால், நடுவர் தீர்ப்பாயம் அமைக்க கர்நாடகம் தெரிவித்த கடும் எதிர்ப்பை மட்டும் கருத்திற்கொண்டு உடன்பாடு எட்டப்படாததால் நடுவர் தீர்ப்பாயக் குழுவை அமைக்காமல் காலம் கடத்தி வந்தது. இதனால் மீண்டும் தமிழ்நாடு 1986ல் உச்சநீதி மன்றத்தை அணுகியது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல நடுவர் தீர்ப்பாயக் குழு அமைக்கப்பட்டதும், அதன் இடைக்கால உத்தரவாக 25-06-1991ல் 205 டிஎம்சி நீரை வழங்க வேண்டும் என்ற உத்தரவை முழுமையாக கர்நாடகா நிறைவேற்றவில்லை.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் (05-02-2007) வழங்கப்பட்ட 192 டிஎம்சி தண்ணீரையும் கர்நாடகா தொடர்ச்சியாக வழங்கியது கிடையாது. இதை எதிர்த்தும் இரு மாநில அரசுகளும் சிறப்பு மனுவை (Special Leave Petition) உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தன. கூடவே கேரளாவும், புதுச்சேரியும் கூடத் தம்மையும் வழக்கில் இணைத்துக் கொண்டன. அதன் இறுதித் தீர்ப்பு 16-02-2018ல் வந்தபோது 192 டிஎம்சியிலிருந்து 14.75 டிஎம்சி-ஐக் குறைத்து தமிழகத்திற்கு 174.75 டிஎம்சி அளவு வழங்க வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு கூட உச்சநீதி மன்றம் வலியுறுத்தியும் பாராளுமன்றத்தில் இதுபற்றி விவாதித்து புதிய சட்ட வரைவுடன்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும், உச்சநீதி மன்றம் விடுத்த நான்கு வாரங்களுக்குள் அமைக்க இயலாது என்று மத்திய அரசு தெரிவித்தது ஞாபகமிருக்கலாம். சட்ட ரீதியாக சரி என்றால் கூட தமிழகம்தான் இதனால் இழப்புக்குள்ளாகி உள்ளது.

இந்தத் தீர்ப்பைக் கர்நாடகா 14 ஆண்டுகளுக்கும் ஏற்றுச் செயல்படும் என்று நம்ப இடமில்லை.

உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதால் மழை மற்றும் அணையின் கொள்ளளவைப் பொறுத்துக் குறைந்தபட்சம் ஆண்டுதோறும் நீரின் அளவை முன்வைக்கும். மேலும் உபரி ஆறுகளிலிருந்து காவிரியில் கலக்கும் நீரையும் கணக்கில் கொண்டு வெளியிடப்படும் நீரின் அளவைத் தீர்மானிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தில் நான்கு மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், துறை சார்ந்த வல்லுநர் குழு, தொழில்நுட்பக் குழு மற்றும் அதன் தலைமைப் பொறுப்பை வகிக்கும் நீதிபதி குழு அறிக்கையை சமர்ப்பிப்பதன் மூலம் மாநிலங்களுக்கிடையே எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நீரைப் பகிர்ந்து கொள்ள முடியும் என்பதே, மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பவர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலாண்மை வாரியத்தின் முடிவை ஏற்று கர்நாடகமும் தமிழகமும் செயல்பட வேண்டும். குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை இதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவரை மாற்ற வேண்டும். குழுவைக் கூடச் சில ஆண்டுகளில் மாற்ற வேண்டும். தனி அமைப்பாக சுதந்திரமாக செயல்படும் மேலாண்மை வாரியமாக அமைக்கப்பட வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் கூட, ஆண்டுதோறும் நீரின் அளவைக் குறைக்கச் சொன்னாலோ அதிகரிக்கச் சொன்னாலோ, இரு மாநிலங்களில் ஏதோ ஒரு மாநிலம் உச்சநீதி மன்றத்தை அணுகி வழக்கு தொடரும் என்றே அனுமானிக்கிறேன். தனக்கு எதிரான எந்த முடிவை மேலாண்மை வாரியம் எடுத்தாலும் அதையே அரசியல் பிரச்சினையாக்கி மாநில அரசுகள் முன்னெடுத்துச் செல்லும். ஆயினும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றே தற்போதைக்கு மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு செய்யும் நற்செயலாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.


வஞ்சிக்கப்படும் தமிழகம்

மூன்று விஷயங்களில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது.

இன்று வரையிலும் தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்த மத்திய அரசு காவிரிப் பிரச்சினையை நேர்மையாக அணுகவில்லை. மேலும் குறிப்பிட்ட கால அளவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை.

கர்நாடகாவின் காவிரிப் பாசனப்படுகையில் விவசாயம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் இருக்கக்கூடாது என்ற சட்ட உத்தரவும் போட இயலாத காரணத்தால் தமிழகம் இன்று பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதனால் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவும் குறைகிறது.

பருவ மாற்றங்களால் ஏற்படும் வெப்பம், கர்நாடகாவில் பெய்யும் மழையின் அளவுக் குறைவு போன்ற காரணங்களாலும் தமிழகத்திற்குக் கொடுக்கவேண்டிய குறிப்பிட்ட அளவிலான நீர் வர இயலாமல் போகிறது.


கர்நாடக தரப்பின் வாதங்கள்

மத்திய நீர் கமிட்டி (Central Water Commission), 1971- 2004 வரையிலான காலக்கட்டத்தில் பெய்த மழை பற்றிய ஓர் ஆய்வை மேற்கொண்டது. அது காவிரிப் படுகையில் மழையின் அளவு குறைந்து வருகிறது எனத் தெரிவித்தது. இந்தியன் இன்ஸ்டிடுயுட் ஆப் சயின்ஸ் மேற்கொண்ட ஆய்விலும் பருவ நிலை மாற்றங்களால் காவிரிப்படுகையில் மழையின் அளவு குறைந்து வருகிறது என்று தெரிவித்தது. குடகு பகுதியிலும் மழையின் அளவு குறைந்து வருவதாகவும் தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காவிரி நீர்ப்பிரச்சினை வாரியம் (CWDT- Cauvery Water Dispute Tribunal ) 205 டிஎம்சி வழங்கச் சொல்லி இருந்தது. ஆனால் மழையில்லாக் காலக்கட்டத்திலோ, தண்ணீர் வரத்து குறைவாக இருக்கும் மாநிலங்களில் எந்த அளவு நீர் வழங்க வேண்டும், அதை எவ்வாறு கணக்கிடுவது என்ற தெளிவை முன்வைக்கவில்லை. ஏனெனில் காவிரி மேலாண்மை வாரியம் இன்று வரையிலும் அமைக்கப்படவில்லை. கர்நாடகாவில் உள்ள விவசாயிகளின் நலன், 95-96, 2003-2004 மற்றும் சில வருடங்களில் பெய்த குறைந்த மழையைக் காரணம் காட்டியது கர்நாடகம். அதே வேளையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் எதிர்ப்பு தெரிவித்தது.

விவசாயம், மின்சாரம் ஆகியவற்றைக் கொடுக்கும் கடமை தனக்குள்ளது என்ற வாதங்களை தன் தரப்பிலிருந்து முன்வைத்தது கர்நாடகம்.

மத்திய அரசின் அலட்சியம்

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் (05-02-2007) 192 டிஎம்சி தண்ணீரைத் தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்டிருந்தது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, காவிரியில் வரும் தண்ணீரை நான்கு மாநிலங்களிடையே ஒவ்வொரு மாதமும் (ஏன் ஒவ்வொரு 10 நாட்களுக்கும்) பிரித்து வழங்கும் பொறுப்பும் அதிகாரமும் காவிரி மேலாண்மை வாரியம் என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு வழிகாட்டி நெறிமுறைகளை / அறிவுரை வழங்குவதற்காக காவிரி ஒழுங்குமுறை குழு என்ற ஒரு அமைப்பும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இந்த இரு அமைப்புகளையும் அரசிதழில் இறுதித் தீர்ப்பு வெளியிட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் மத்திய அரசு நியமித்திருக்க வேண்டும். (மே 18, 2013க்குள்) ஆனால், எப்போதும்போல் காங்கிரஸ் அரசு காலம் தாழ்த்தியது. இதையடுத்து, கடந்த 08-04-2013ல் மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை தமிழக அரசு தட்டியது. ஆனால், 10-05-2013ல் உச்ச நீதிமன்றமும் (காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை ஓரங்கட்டும் வகையில் அதன் அரசியல் சட்ட அமைப்புகளை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் எந்தவித முகாந்திரமும் இன்றி) காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட மத்திய அரசுக்குக் காலக்கெடுவும் அறிவுறுத்தலும் செய்யாமல் அதிகாரமற்ற காவிரி மேற்பார்வைக் குழுவை அமைக்க உத்தரவிட்டது. இந்தக் குழுவும், கண்துடைப்பு நாடகமாக கடந்த 2013 ஜூன் 1, 12ல் கூடியது. ஆனால், எந்த முடிவும் எடுக்காமல் கலைந்தது.

2016 செப்டம்பரில் மீண்டும் உச்சநீதி மன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை நான்கு வாரங்களுக்குள் அமைக்கச் சொல்லி மத்திய அரசிற்கு உத்தரவிட்டது. மத்திய அரசு பாராளுமன்றத்தில் கலந்துகொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கால தாமதம் செய்தது. அதன் பின்னர் தற்போதைய மத்திய அரசு ‘Inter-State River Water Disputes (Amendment) Bill 2017’ கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த சட்ட மசோதா நதிநீர்ப்பங்கீட்டுப் பிரச்சினையை அணுகும் விதத்தில் சற்றுக் கடுமையான வழிவகைகளை முன்வைத்துள்ளது. இது முக்கியமான முன்னகர்வுதான் என்றபோதிலும் அது எந்தளவுக்கு நடைமுறையில் செயல்படப் போகிறது என்ற ஐயமும் உள்ளது. ஏனெனில் கடந்த கால வரலாறு அவ்வாறாக இருப்பதே இதற்குக் காரணம்.

தற்போதைய மத்திய அரசு அறிமுகப்படுத்தும் இந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

சட்டம் 1956 படி, பிரச்சினை ஏற்பட்டால் மட்டுமே தீர்ப்பாயம் அமைக்கப்படும் என்று இருந்தது. மேலும், குறிப்பிட்ட கால அளவுக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது கொண்டு வருகிற சட்டத்தில், தற்காலிகமாகவோ அல்லது பிரச்சினை காலத்திற்கு மட்டுமே என்றில்லாமல் நிலையாக ஒரு ஒழுங்குமுறைக்குழு (permanent Inter-State River Water Disputes Tribunal (ISRWDT) அமைக்கப்படும் என்கிறது. மேலும் அதிகபட்சமாக ஐந்தரை ஆண்டுகளுக்குள் தமது அறிக்கையைக் குழு வல்லுநர்களின் உதவியோடு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது. உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி உட்பட்ட எட்டு உயர்நீதி மன்ற நீதிபதிகளைக் கொண்ட குழுவின் முன்பாக மூன்று பேர் கொண்ட தீர்ப்பாயக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்றும் தெரிவிக்கிறது. மேலும் அவர்களின் பதவிக் காலம் 70 வயது என்ற உச்சவரம்பையும் புதிய சட்டத்தில் சமர்ப்பித்துள்ளது.

2017ல் சமர்பிக்கப்பட்ட சட்ட மசோதாவில், பிரச்சினையைத் தீர்க்கும் குழு (DRC-Dispute Resolution Committee ) அமைக்கப்படும் என்றும் அது துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்டதாக இருக்குமென்றும் தெரிவிக்கிறது. துறை சார்ந்த நிபுணர்கள் மாநிலங்களின் கோரிக்கைகள், தண்ணீரின் அளவு, மழையின் அளவு என பல்வேறு விஷயங்களைத் தொகுத்து தீர்ப்பாயத்திற்கு வழங்குவார்கள் என்கிறது.

மத்திய அரசே அதற்கான குழுவை அமைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதை எந்த அளவிற்கு மாநில அரசுகள் ஏற்கும் என்பது தெரியவில்லை. புள்ளிவிவரங்களைத் தொகுப்பதோ, உண்மை நிலவரத்தைத் தொகுத்து வழங்குவதோ இங்குப் பிரச்சினையல்ல. உண்மையில் தண்ணீரைத் திறந்துவிடும் இடத்திலுள்ள மாநில அரசும், தண்ணீரைக் கோரும் மாநில அரசும் எப்படி அணுகும் என்பதே பிரச்சினை.

இதற்குக் கடந்த காலத்தில் பல உதாரணங்கள் உண்டு. ஒவ்வொரு முறையும் காவிரி விஷயத்தில் தமிழ்நாடு அதிக அளவிலான டிஎம்சி நீரைக் கோருவதும், கர்நாடகா குறைந்த அளவைத் தர இயலும் என்று சொல்வதும் நாம் பார்த்ததே. இரு தரப்பிலும் அடுத்தவர் தரப்பின் நியாயங்களை உணர்ந்து செயல்படுவதில்லை. அதைத் தடுக்க வேண்டிய இடத்திலுள்ள மத்திய அரசோ காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் கால தாமதம் செய்கிறது.


காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன?

காவிரிப் பிரச்சினையின் மையப்புள்ளி, நீரின் இருப்பைக் காட்டிலும் தேவையின் அளவு அதிகமாக இரு தரப்புக்கும் இருக்கிறது. இப்பிரச்சினையை மாநிலங்கள் பரந்த மனப்பான்மையுடன், வெளிப்படைத் தன்மையுடன், ஜனநாயக முறையை மதித்தும், துறை சார்ந்த நிபுணர்களின் பங்களிப்புடன் ஒரு முறையான சட்ட வடிவை மதித்து நடப்பதே இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை விரைவில் அமைக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியமும் நீர்ப்பிரச்சினை தீர்க்கும் குழுவும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத வகையில் தனி அமைப்பாகச் செயல்படும் சுதந்திரம் வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் நீரின் அளவைப் பொறுத்தும், மழையின் தன்மையைப் பொறுத்தும் விடக்கூடிய நீரின் அளவை ஒவ்வொரு பத்து நாட்களுக்கும் பரிசீலனை செய்ய வேண்டும். பல்வேறு மாநிலங்களுக்கிடையே செல்லும் நதிகள் தேசியச் சொத்து என்ற உச்சநீதி மன்றத்தின் கூற்றை நிருபிக்க கர்நாடகாவின் தலையீடு நீர் வெளியிடுவதில் இருக்கக் கூடாது.

அரசியல் சட்ட வரைவில் மாநிலங்கள் கூடுதல் நிலங்களை விவசாயத்திற்குப் பயன்படுத்துவது பற்றிய ஒப்பந்தங்கள் இருக்க வேண்டும்.

இரு மாநிலத்திலும் பெரும்பாலும் நெல் மற்றும் கரும்பே அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இதற்கு ஆகும் நீரின் அளவு மற்ற பயிர்களையோ தானியங்களையோ ஒப்பிடும் போது மிக அதிகமாகச் செலவாகிறது. இரு மாநில விவசாயிகளையும் இரு போகங்களில் மாற்றுப் பயிர்களை பயிரிட வைப்பதன் மூலமாக விவசாயத்தையும் காப்பாற்றலாம். விவசாயிகளின் பிரச்சினையும் குறையும். ஆனால் அத்தகைய முன்னெடுப்புகளை எந்தத் தரப்பும் செய்வதில்லை என்பது சோகமான செய்திதான்.

மத்திய அரசு, மாநில அரசு, உச்சநீதி மன்றம் போன்றவை காவிரி மேலாண்மை கூறிய விஷயங்களை ஏற்று நடக்க மட்டுமே அறிவுறுத்தப்பட வேண்டும். அவ்வாறு முன்வைக்கும் தீர்வு நடைமுறையில் செயல்படுத்தக்கூடியதாகவும், நீண்ட காலத்திற்குப் பொருந்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மாறாக மத்திய அரசு நிலையான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் சென்றால் அது இன்னும் பிரச்சினையைப் பெரிது படுத்துமே ஒழிய தீர்வை நோக்கி நகராது.

மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து கர்நாடகமோ தமிழகமோ இதை அரசியலாக்கும் வகையில் செயல்படும் பட்சத்தில் காவிரிப் நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினை தீராப்பிரச்சினைதான்.

உதவியவை:

https://interstatedisputes.wordpress.com/2013/10/06/case-study-cauvery-river-water-sharing-dispute/ | https://www.clearias.com/inter-state-river-water-disputes-india/ | http://www.livemint.com/Opinion/JDRZ3dpZdFPes9qiULWUgO/Addressing-Indias-water-dispute-problem.html | https://interstatedisputes.wordpress.com/ | https://sandrp.wordpress.com/2016/10/06/inter-state-river-water-disputes-in-india-history-and-status/ | http://tamil.thehindu.com/tamilnadu/article22771035.ece?homepage=true | http://tamil.thehindu.com/tamilnadu/article22771035.ece?homepage=true | http://tamil.thehindu.com/india/article22781477.ece | http://www.prsindia.org/uploads/media/Inter-state%20river%20water%20dispute/SCR-%20Inter-State%20River%20Water%20Disputes(A)%20Bill,%202017.pdf | http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=164541

Posted on Leave a comment

ஓம் எனும் ஓசையின் தோற்றம்: ஓர் ஆய்வு | மூலம்: கொய்ன்ராட் எல்ஸ்ட், தமிழில்: ஜடாயு


கொய்ன்ராட் எல்ஸ்ட் (Koenraad Elst) பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த சிறந்த வரலாற்றாசிரியர், இந்தியவியலாளர். கடந்த ஐம்பதாண்டுகளாக இந்தியாவுடன் ஆழ்ந்த பிணைப்புக் கொண்டு ஆய்வுகளைச் செய்து வருபவர். வேதப் பண்பாடு, பௌத்தம், அயோத்தி ராமஜன்ம பூமி, இந்துத்துவ இயக்கங்கள் ஆகியவை குறித்து காத்திரமான நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். இது அவர் 2013ல் எழுதிய கட்டுரை.

புனிதமான ஓசையாகிய ‘ஓம்’ என்பதைக் குறித்த இந்த ஆய்வு இந்துக்களில் பலருக்கு அதிர்ச்சிகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஏன்? வேதங்களைத் தொகுத்தவராக அறியப்படும் வியாசர் இந்த ஓசையையே தேர்ந்தெடுத்து ரிக்வேதத்தின் முதற்சொல்லாக அமைத்தார். (“ஓம் அக்னிமீளே புரோஹிதம்…”) அதன் எழுத்து வடிவமான ॐ என்ற சின்னமே இன்று பரவலாக இந்துமதத்தின் அடையாளமாக அறியப்படுகிறது. எனவே, அதன் தோற்றத்தைப் பற்றிய ஒரு விவாதம் என்பது பலவிதங்களிலும் முக்கியமானதாகிறது.

“இந்து ஆன்மீகம் அறியல்பூர்வமானது” என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். அதனை அடியொற்றி, அறிவியலைப் போலவே அதுவும் படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளது என்பதே நான் கூறவருவது. ஆதியில், இயற்கைக்கு அதீதமான ஒரு இருப்பால் ஆன்மீக சத்தியம் முழுதாக வெளிப்படுத்தப்படவில்லை. முதலில் எளிமையான ஆனால் ஆழமான அறிதல்கள் கண்டடையப்பட்டன. பின்பு அவை தொடர்ந்து சீராக மேம்படுத்தப்பட்டன.

மறுபிறவி

உதாரணமாக, மறுபிறவியையும் கர்மவினையையும் குறித்த கருத்துக்கள் தொடக்கத்திலிருந்தே வரவில்லை. ரிக்வேதத்தில் இந்த விஷயங்கள் குறித்து எதுவும் இல்லை. சாந்தோக்ய உபநிஷதம் இந்தப் புதிய கருத்தை அறிமுகப்படுத்துவதாக வெளிப்படையாகக் கூறுகிறது. கவனியுங்கள்: அதிகம் பழிக்கு ஆளாகியுள்ள ‘மேற்கத்திய இந்தியவியல் (Indology) ஆய்வாளர்கள்’ இதைக் கண்டுபிடிக்கவில்லை. இந்துமதத்தின் புனிதநூலே இதைத் தெளிவாக சொல்லியிருக்கிறது.

ஆனால், இதன் பொருள் மறுபிறவி பற்றிய நம்பிக்கையே வேதகாலத்தில் இல்லை என்பதல்ல. அப்போது புழக்கத்திலிருந்த பல்வேறு இந்தோ ஆரிய மொழிவழக்குகளில் (தற்போதைய வடஇந்திய மொழிகளின் மூலங்களில் இவற்றின் தாக்கம் உண்டு) மையமான ஒன்றே வேதமொழியான சம்ஸ்கிருதம். அப்போது புழக்கத்திலிருந்த பல்வேறு சமய மரபுகளில் (இவை பிற்கால நூல்களான புராணங்களில் குறிக்கப்படுகின்றன) மையமான ஒன்றே வேதமரபு. அதைப் போலவே, மரணத்துக்குப்பின் என்ன நேர்கிறது என்பதைக் குறித்தும் பல்வேறுவிதமான நம்பிக்கைகள் புழக்கத்திலிருந்தன. பண்டைய கிரேக்க, ரோமானிய கலாசாரங்களிலும் கூட, மறுபிறவியில் நம்பிக்கை, மரணத்திற்குப் பிந்தைய வாழ்வில் நம்பிக்கை, மரணத்தோடு எல்லாமே முடிந்து விடுகிறது அப்பால் ஒன்றுமில்லை என்ற நம்பிக்கை என்ற பலவித நம்பிக்கைகளும் இதே போன்று ஒரே காலகட்டத்தில் அருகருகே புழக்கத்திலிருந்தன என்பதை இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ஆனால், மறுபிறவி பற்றிய நம்பிக்கை ரிக்வேதத்தில் திட்டவட்டமாகக் குறிப்பிடப்படவில்லை என்பதும் உண்மை. மாறாக, மனித ஜீவன்கள் ஆகாச மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குச் சென்றுவிடுவதாகவே மரணச் சடங்குகள் குறித்த ரிக்வேதப் பாடல்கள் கூறுகின்றன. பல இந்துக்கள் இதை மறுத்து ரிக்வேதத்தில் மறுபிறவி குறித்துப் பேசும் பாடல்கள் உண்டு என்று எனக்கு மின்னஞ்சல்கள் அனுப்பியுள்ளனர். அதே ரிக்வேதப் பாடல்களுக்கு வேறுவிதமான அர்த்தங்கள் உண்டு, அவை மரணத்திற்குப் பிந்தைய புதிய உடலைப் பற்றிப் பேசவில்லை, நோயில் வீழ்ந்து மீண்டு ஆரோக்கியத்தைத் திரும்பப் பெறும் புதிய உடலைக் குறிப்பிடுகின்றன போன்ற வாதங்களை அவர்கள் முன்வைக்கின்றனர்.

ரிக்வேதத்தில் மறுபிறவி நம்பிக்கைகள் உள்ளதாகக் காண்பவர்கள், உலகெங்கும் மத நம்பிக்கையாளர்கள் காட்டும் அதே மனப்போக்கை வெளிப்படுத்துகின்றனர். தங்களது நிகழ்காலத்திய நம்பிக்கைகளை ஒட்டுமொத்த மரபுக்கும் நீட்டிப்பது (project) என்ற மனப்போக்கு. ஆனால், உண்மை என்னவென்றால், அவர்களது நிகழ்கால நம்பிக்கைகளுக்கு ஒரு வரலாற்றுத் தொடக்கம் உள்ளது. அவர்களது சமய மரபின் ஆரம்பக் கட்டங்களிலும் அந்த நம்பிக்கைகள் அப்படியே இருக்கவில்லை

இந்தக் குறிப்பிட்ட விஷயத்தில், மறுபிறவி குறித்த நம்பிக்கை புதியதாக எழுந்து, பல புதிர்களை திருப்திகரமாக விளக்கும் வகையில் அமைந்தது. தியான முறைகளில் ஈடுபட்டவர்கள் தங்களது அனுபவங்களின் ஒரு பகுதியாக கடந்த பிறவிகளின் வாழ்க்கையை நினைவுகூர்வதாக உணர்ந்தனர். புத்தர் தனது எல்லா முந்தைய பிறவிகளையும் அவற்றின் சம்பவங்களையும் நினைவுகூர்வதாக மட்டுமின்றி, கூடுதலாகத் தானே அந்தப் பிறவிகளில் இன்னின்னபடி இருந்ததாகவும் கூறினார்.

பின்னர் இது வேதங்களின் கர்மம் (பலன் விளைவிக்கக் கூடிய செயல்) என்ற கருத்தாக்கத்துடன் இணைந்து, பரவலாக இருந்த மற்ற சாதாரண மறுபிறவி நம்பிக்கைகளைக் காட்டிலும் நுட்பமான வகையில் மேம்படுத்தப்பட்டது. போர்வெற்றி, உடல்நலம், பெண்ணின் மன இசைவு ஆகிய லௌகீகமான பலன்களைக் கூடச்செய்யும் நுண் இயக்கம் அவற்றைக் கருதிச் செய்யப்படும் வேத வேள்விகளால் நிகழும் என்ற கருத்து ஏற்கெனவே இருந்தது. அதன் நீட்சியாகவே, இந்தப் பிறவி வாழ்க்கையில் நெறிமுறைகளின்படியோ அதற்கு விரோதமாகவோ செய்யப்படும் செயல்கள், அடுத்த பிறவியின் நிகழ்வுகளுக்கான நுண் இயக்கத்தை உருவாக்குகின்றன என்ற கருத்து வளர்ந்தது.

இந்த நம்பிக்கை உண்மையானதா அல்லது பொய்யானதா என்பதை விவாதிப்பது இங்கு நமது நோக்கமல்ல. இது வரலாற்று ரீதியான ஒரு வளர்ச்சிப் போக்கு என்பதைச் சுட்டிக்காட்டுவதே நோக்கம். முதலில் மறுபிறவியும் கர்மவினையும் குறித்த கோட்பாடு இல்லை, பிறகு அது ஏற்கப்பட்டது, மேம்படுத்தப்பட்டது. முதலிலேயே ‘வெளிப்படுத்தப்பட்டு’ அப்படியே அது பாதுகாக்கப்படவில்லை. மாறாக, படிப்படியாகக் கண்டறியப்பட்டது. இந்தியாவின் சமய மரபுகளுக்குள் சீரான மேம்பாடு என்ற இத்தன்மை இருந்தது என்பதே உண்மை.

ஓங்காரம்

மாண்டூக்ய உபநிஷதமும் மேலும் பல நூல்களும் ஓங்காரத்தின் ஆன்மீக ரீதியான மகத்துவத்தைப் பேசுகின்றன. அதிலுள்ள அ, உ, ம ஆகிய மூன்று ஒலிகளும் முறையே விழிப்பு (ஜாக்ரத்), கனவு (ஸ்வப்னம்), ஆழ் உறக்கம் (சுஷுப்தி) ஆகிய உணர்வு நிலைகளைக் குறிக்கின்றன. இந்த ஒலிகளுக்கு வேறு பல மும்மை சார்ந்த விளக்கங்களும் தரப்படுகின்றன – பூர்-புவ-ஸுவ (பூமி, ஆகாயம், சுவர்க்கம்), சத்வம், ரஜஸ், தமஸ் (முக்குணங்கள்) என்பது போல.

தியானத்தில் ஆழ்ந்திருந்த யோகிகள் தங்கள் அகத்தில் ஓங்கார ஓசையைக் கேட்டனர் என்பதாக இதன் தோற்றம் விவரிக்கப்படுகிறது. நாதயோகம் என்ற வகையில் வரும் பல்வேறு யோக முறைகளில் அகத்தில் ஒலிகளைக் கேட்பது என்பது யோகத்தில் முன்னேற்றமடைந்ததன் அறிகுறியாகக் கருதப்படுகிறது. ரீங்காரத்தின் ஓசைகளும், கோயில் மணியோசையும் ஓங்காரத்தின் வடிவங்களாகவே உணரப்படுகின்றன. இந்த வகையில், ஓங்காரத்தின் தோற்றம் யோகத்தின் தோற்றத்துடன் தொடர்புடையதாக ஆகிறது.

முன்பு சொன்ன கோட்பாட்டின்படி, ஓங்காரத்தைப் போல யோகத்திற்கும் வரலாற்று ரீதியான தோற்றமும் வளர்ச்சியும் உண்டு. யோகம் ஆதியிலிருந்தே வருவது, சிருஷ்டியின் தொடக்கத்திலேயே வெளிப்படுத்தப்பட்டது என்பதான நம்பிக்கை நமக்கு இல்லை. அது ஒரு மனிதக் கண்டுபிடிப்பு என்றும், குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ந்து, அதன் பண்பட்ட நிலையில் பதஞ்சலியின் யோக சூத்திரங்களில் செம்மையை அடைந்துள்ளது என்றும் கருதுகிறோம். அதற்குப் பின்னும் ஹடயோகம் போன்ற சேர்க்கைகளும் மாறுபாடுகளும், துரதிர்ஷ்டவசமாக, சில பலவீனமான திரிபுகளும் கூட அதில் ஏற்பட்டுள்ளன.

ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டில் ஊறிய மேற்கத்திய ஆய்வாளர்கள், தொன்மைக் காலத்திலிருந்தே ஓங்காரம் ஆன்மீக முக்கியத்துவம் கொண்டதாக இருந்து வந்துள்ளது என்பதை ஏற்கின்றனர். ஆனால், அதன் தோற்றம் ஆன்மீக ரீதியானது அல்ல, மண்ணில் வேர் கொண்டது (down to earth), பிறகு அதற்கு ஆன்மீகமான விளக்கம் அளிக்கப்பட்டது என்கின்றனர். இதுவரை, இந்தக் கருத்து சரிதான். இதுவே யதார்த்தமான சாத்தியம், மனிதகுலத்தின் சீரான பரிணாம வளர்ச்சி என்ற பொதுக் கருத்தாக்கத்துடன் பொருந்தி வருவது என்று நானும் கருதுகிறேன். ஆனால், ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டைக் கேள்வியின்றி ஏற்றுக் கொண்டதால் இந்த ஆய்வாளர்கள் வேண்டுமென்றே ‘பூர்வகுடிகளான திராவிடர்களுடனான’ இனமோதல் என்பதையும் இதற்குள் கொண்டு வருகின்றனர். எனவே, திராவிட மொழிச் சொல்லான ‘ஆம்’ என்பதிலிருந்தே ஓம் தோன்றியிருக்கிறது என்று இவர்கள் முடிவு கட்டினர்.

ஏற்கெனவே முன்முடிவுகளுடன் இருப்பவர்களுக்கு இந்த முடிவு மிகவும் சரியானது என்றே தோன்றும். ஆனால், இது சிறிதும் ஆதாரபூர்வமானது அல்ல. திராவிட மொழி சார்ந்த தொடக்கக் கால இலக்கியங்கள் என்று அறியப்படுபவை, ஓங்காரத்தைத் தனக்குள் கொண்ட ரிக்வேதத்துடன் ஒப்பிடுகையில் ஆயிரமாண்டுகள் அல்லது அதற்கும் மேலாகப் பிற்பட்டவை (சங்க இலக்கியங்களையே இங்கு எல்ஸ்ட் குறிப்பிடுகிறார் – மொ.பெ.). இவை ரிக்வேதப் பண்பாட்டின் தொட்டிலாக இருந்த சரஸ்வதி நதி தீரத்திலிருந்து (இன்றைய ஹரியாணாவிற்கு மேற்கிலுள்ள பகுதி) ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள இந்தியாவின் தென்கிழக்குக் கடற்கரையை ஒட்டிய பகுதியில் உருவானவை. வேதமொழியான சம்ஸ்கிருதம் மற்ற அறியப்படாத மொழிகளிலிருந்து சொற்களைக் கடன் வாங்கியுள்ளது என்பதற்கும் சான்றுகள் உள்ளனதான். ஆனால் திராவிட மொழிகளிலிருந்து இத்தகைய சில கடன்வாங்கல்கள் (உதாரணமாக, மீனைக் குறிக்கும் ‘மீன’ என்ற சொல்) மிகவும் பிற்காலத்தியவை. எனவே, வேதகால ரிஷிகள் இவ்வளவு முக்கியமான, மையமான ஒரு ஓசையை திராவிட மொழிகளிலிருந்து பெற்றிருக்கலாம் என்பதற்குச் சாத்தியமே இல்லை. ஒரு தடாலடியான ஊகம் சார்ந்த கோட்பாடு என்பதைத் தாண்டி, இது பொருட்படுத்தத்தக்கது அல்ல.

தீர்க்கதமஸ்

ரிஷி தீர்க்கதமஸ் வேதகால மன்னரான பரதரின் புரோகிதராக இருந்தவர் என்று கருதப்படுகிறார். வேதப்பண்பாட்டை உருவாக்கி வளர்த்தவர்களில் முக்கியமானவர் இந்த மன்னர். புருவின் வழித்தோன்றல்கள் என்பதால், பௌரவ என்றழைக்கப்பட்ட வம்சத்தில், இவர் முன்னோராக இருந்த குடி, பரத குலம் என்றழைக்கப்பட்டது. இந்த பரதகுலத்திற்குள் நடந்த சகோதரச் சண்டையையும் அதனால் விளைந்த போரையும்தான் மகாபாரதம் வர்ணிக்கிறது. இந்தியாவிற்கு பாரதம் என்ற பெயர் ஏற்பட்டதும் இந்த பரதரால்தான். ‘நீண்ட இருள்’ என்ற பொருள் கொண்ட தீர்க்கதமஸ் என்ற ரிஷிக்கு, அந்தப் பெயர் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகக் கொடுக்கப்பட்டிருக்கலாம். அவர் இரவில் நட்சத்திரங்களைக் கண்டு ஆராய்பவராக இருந்தார் என்பது கண்கூடு. அவர் பெயர் வழங்குகின்ற ரிக்வேதப் பாடல்களில் (முதல் மண்டலம், சூக்தங்கள் 140-164) அவரது வானியல் சார்ந்த கண்டறிதல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ரிஷி பரத்வாஜரின் சகோதரராகவும் இவர் அறியப்படுகிறார். பரத்வாஜர் ரிஷிகுலங்களில் தொன்மையானதான ஆங்கிரசர் குழுவின் தலைவர். ரிக்வேதம் ஆறாவது மண்டலத்திற்கு உரியவர்.

உலக மதங்களின் வரலாற்றில், புத்தர், ஏசு, முகமது போன்ற பெரிய பெயர்கள் அனைவருக்கும் தெரியும். ஒப்பீட்டில் சிறிய பெயர்கள் சிலருக்கே தெரியும். மேற்குலகில் ஒரு சராசரி மனிதரைக் கேட்டால், ஒருவருக்கும் தீர்க்கதமஸ் என்ற பெயர் தெரிந்திருக்காது. இந்தியாவில் கூட, சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். ஆயினும், ஆத்மாவைக் குறித்த அதிமுக்கியமான தத்துவத்தை (ஆத்மவாதம்) முதன்முதலாக உருவாக்கிய ரிஷி யாக்ஞவல்கியருடன் சேர்த்து, ரிஷி தீர்க்கதமஸ் மனித குலத்தின் மகத்தான சிந்தனையாளர்களில் ஒருவர்.

அவரது மிகப்பிரபலமான கொடை என்பது ரிக்வேதம் முதல் மண்டலத்திலுள்ள 164வது சூக்தம். அதிலுள்ள அற்புதமான விஷயங்களில் பலருக்கும் தெரிந்த ஒன்று ‘இரு பறவைகள்’ உருவகம். ஒன்று பழங்களைத் தின்று கொண்டிருக்கிறது, மற்றது அசையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது (பின்னாளில் ஜீவனையும் ஆத்மாவையும் இவை குறிப்பதாக முன்வைத்து விரிவுரைகள் எழுந்தன). இன்னொன்று, ஒரு வட்டத்தைப் பன்னிரண்டாகவும் 360 ஆகவும் பகுக்கும் முறை பற்றிய குறிப்பு. மற்றொன்று, வேள்வியிலிருந்து சிருஷ்டி உண்டாவது குறித்த கருத்தாக்கம். மற்றொன்று, ‘சத்தியம் ஒன்றே; முனிவோர் அதைப் பலவாறு அழைக்கிறார்கள்’ (ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி) என்று தொடர்ந்து மேற்கோளாகக் காட்டப்படும் (திரிபுகளுக்கும் உள்ளாகும்) வாசகம். இந்த அற்புதமான சூக்தம்தான் ஓங்காரத்தின் தோற்றம் குறித்ததான ஒரு தடயத்தையும் எனக்கு அளித்தது.

பசு

ஓங்காரத்தின் தோற்றத்தைக் குறித்து அப்படி என்னதான் சொல்கிறார் தீர்க்கதமஸ்? வெளிப்படையாக ஒன்றுமில்லை. அப்படியிருந்தால், அது மிகவும் தெளிவாகவும் எளியதாகவும் இருந்திருக்கும். அடிப்படை ஆதார நூலே இந்துக்களுக்கு அதனை நினைவூட்டுவதாக இருந்திருக்கும். ‘தெய்வங்களுக்குப் புதிர்கள் பிரியமானவை’ என்கிறது உபநிஷதம். எனவே வரிகளுக்கு இடையில் வாசித்துத்தான் நீங்கள் உண்மையை அறியவேண்டும்.

இந்த விஷயத்தில் இரண்டு விஷயங்களை அடுத்தடுத்து வைத்துள்ளது (juxtaposition) முக்கியமானது.

சூக்தத்தின் 39வது பாடலில் தெய்வங்களை அழைக்கும் ஓரெழுத்தை (‘ரு’சே அக்ஷரே பரமே வ்யோமன்’) ரிஷி வேண்டுகிறார். அது பரம ரகசியம், ஆனாலும் இங்குக் கூடியுள்ளவர்கள் அனைவரும் அறிந்தது என்கிறார். இந்த சூக்தம் முழுவதும் ஓரெழுத்திற்கு மிகாத ஓசையைக் குறிப்பிடுகிறது.

அதே சமயம், இந்த சூக்தத்தில் இதற்கு முந்தைய பாடல்களில், பசுக்கள் எழுப்பும் ஒலியையும், கன்றின் மீது பசு கொள்ளும் பரிவையும் பற்றித் தொடர்ந்து கூறப்படுகிறது. ‘வத்’ என்ற வேர்ச்சொல் வருடத்தை / வயதைக் குறிக்கிறது (Latin vetus, “having years”, “old”). ‘வத்ஸ’ என்றால் ஒரு வயதான குழந்தை (yearling), அதாவது கன்று. பசுவுக்கும் கன்றுக்கும் இடையிலுள்ளது ‘வாத்ஸல்யம்’ அதன் பொருள் அன்பு, பரிவு என்பதாகும். பசு எழுப்பும் ஒலியிலும், அதற்கு கன்று எழுப்பும் மறு ஒலியிலும் இந்த பரஸ்பர அன்பு வெளிப்படுகிறது. இந்த சூக்தத்தில், பசுவும் அது எழுப்பும் ஒலியும் பலமுறை போற்றப்படுகின்றன.

அங்கு, உடனே எனக்குப் பொறி தட்டியது. ஆம், அனைத்து வேதமந்திரங்களையும் அடக்கிய ஓசையும், வேதத்தில் முதலாவதாக அமைந்த ஓசையுமான ஓங்காரம், உண்மையில் பசு எழுப்பும் ஓசையின் மானுட குரலொலியாக்கம் (vocalization) தான். ஆங்கிலத்தில் பொதுவாக அதை Mooh என்று எழுதுகிறோம்.

சில மதங்களில் அதன் புனிதமான மந்திர ஓசை பசு எழுப்பும் ஒலியிருந்து உருவானது என்று கூறுவது தண்டனைக்குரிய மதவிரோதமாகக் கருதப்படும். ஆனால், வேதநெறியான இந்துமதத்தில் அப்படியல்ல. பசுவை ஒருபோதும் கொல்லக்கூடாது என்பது ஆரம்பக் காலத்திலும் கறாராகக் கடைப்பிடிக்கப்பட்டது என்று கூறமுடியாது. ஆனால் பசுவின் புனிதத்துவம் என்பது எப்போதுமே இருந்துவந்த ஒன்று. பசுவே வேதகாலத்திய பொருளாதாரத்தின் மையமாக இருந்தது. எந்த ஒரு வைதீகச் சிறுவனும் கிருஷ்ணனைப் போல முழுநேரமும் பசுக்களைக் கவனித்துக்கொண்டும் பேணியும் அவற்றின் ஒலிகளைக் கேட்டுக்கொண்டும்தான் வளர்ந்தான். யோகி தனது தியானத்தினூடாக அகத்தின் ஓசையைக் கேட்பதற்கு நெடுங்காலம் முன்பு, வேதகாலச் சிறுவனுக்குப் பசுக்களின் ஒலி பரிச்சயம் மிகுந்ததாக இருந்தது. அதையே அவன் ஓங்காரமாக குரலொலியாக்கம் செய்தான். தான் புனிதமாகக் கருதியவை அனைத்திலும், தெய்வங்களை அழைக்கும் வேதப்பாடல்களிலும் அதனைப் பிரதி செய்தான்.

மூலம்: http://beta.valamonline.in/2013/05/the-origin-of-aum.html