Posted on Leave a comment

வலம் மே 2017 இதழ் – முழுமையான படைப்புகள்


வலம் மே 2017 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.

(அட்டைப்பட அசோகமித்திரன் ஓவியம் – லதா ரகுநாதன்)


Posted on Leave a comment

ஜக்கி வாசுதேவும் ஸ்டீபன் ஜே கவுல்டும் – அரவிந்தன் நீலகண்டன்

சில வாரங்களுக்கு முன்னர் ஒரு நண்பர் சமூக வலைத்தளம் ஒன்றில் காணொளியைப் பகிர்ந்திருந்தார். அது சத்குரு எனத் தம் பக்தர்களால் அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ் அவர்களுடையது. அக்காணொளியில் ஜக்கி வாசுதேவ் ஒரு அதிசயமான விஷயத்தைச் சொல்கிறார். சூரிய சித்தாந்தத்தில் ஒளியின் வேகம் குறித்துச் சொல்லப்பட்டுள்ளது என்கிறார். ஒளி அரை நிமிஷத்துக்கு 2202 யோஜனைகள் செல்லும் என்று சூரிய சித்தாந்தம் சொல்வதாகக் கூறும் ஜக்கி, ஒரு யோஜனை என்பது ஒன்பது மைல்கள் என்றும், ஒரு நிமிஷம் என்பது ஒரு நொடியில் 16/75 பாகம் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார். கணக்கு போட்டுப்பார்த்தால் ஒரு நொடிக்கு 1,85,793 மைல்கள் என்று வருகின்றது. (0.10666 நொடிக்கு 19,818 மைல்கள்). நவீன அறிவியல் சொல்லும் ஒளியின் வேக மதிப்புக்கு ஏறக்குறைய சமமாக வருகிறது. இன்றைக்கு கஷ்டப்பட்டு பெரிய பெரிய அறிவியல் கருவிகளை எல்லாம் கொண்டு கண்டுபிடித்த விஷயத்தை 15,000 ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் இதைக் கண்டு பிடித்து விட்டார்கள் என்கிறார் ஜக்கி வாசுதேவ்.

பெருமையாக இருக்கிறது. ஆனால் சில நெருடல்கள்.

15,000 ஆண்டுகளுக்கு முன்னர்?

முதல் நெருடல் சூரிய சித்தாந்தத்தின் காலம். பொது யுகத்தில் 7 முதல் 10ம் நூற்றாண்டுகளுக்குள் இந்நூல் எழுதப்பட்டிருக்க வேண்டுமென்பது அறிஞர்களின் பொதுவான மதிப்பீடு. இந்தியாவின் மிகவும் பழமையான வானவியல் நூல் ‘வேதாங்க ஜ்யோதிஷம்’ என்பது. இதற்கும் இன்றைய ராசிபலன் சோதிடத்துக்கும் துளி கூடத் தொடர்பு கிடையாது. இது வானவியல் நூல். வானவியல்-இயற்பியலாளரும் வரலாற்றாராய்ச்சியாளருமான ராஜேஷ் கோச்சர் இந்நூலில் இருக்கும் விஷயங்களில் சில பொதுயுகத்துக்கு 1,400 ஆண்டுகளுக்கு முன்னர் வரை கூடப் போகலாம் என்கிறார். இந்த நூலில் ஒளியின் வேகம் குறித்து எவ்விதத் தரவும் இல்லை.

எனவே நம் ’சத்குரு’ எங்கிருந்து அவரது தரவுகளைப் பெற்றார்?

ஒளியின் வேகத்தில் இந்தியப் பாரம்பரியத்தின் பங்களிப்புக் குறித்து எழுதியவர் எனப் பார்த்தால் அது இயற்பியல்- கணினிவியல் ஆகியவற்றில் சிறந்த ஆராய்ச்சியாளராகவும் இந்தியவியலில் முக்கியப் பங்களித்திருப்பவருமான பேராசிரியர் சுபாஷ் கக் எனும் பெயர் உடனடியாகக் கவனத்துக்கு வரும். 1998ல் அறிவியலின் வரலாறு குறித்த இந்திய இதழ் எனும் ஆராய்ச்சி இதழில் அவர் ஒரு ஆராய்ச்சி ஊகத்தை முன்வைத்தார். ‘சாயனரின் வானவியல்’ எனும் பெயரில் எழுதிய அந்த ஆராய்ச்சிக் கட்டுரையின் தொடர்ச்சியாக ‘ஒளியின் வேகமும் புராணப் பிரபஞ்சவியலும்’ எனும் தலைப்பில் இன்னும் விரிவான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை, புகழ்பெற்ற பண்டார்க்கர் ஆராய்ச்சி மையத்தின் சஞ்சிகையில் வெளியிட்டார். (‘Sāyana’s astronomy’, ‘Indian Journal of History of Science’, 1998 & ‘The Speed of Light and Puranic Cosmology’, ‘Annals of Bhandarkar Oriental Research Institute’, 1999). இரண்டுமே இணையத்தில் கிடைக்கின்றன.

சாயனர், 15ம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்ஜியம் உருவான காலகட்டத்தில் வாழ்ந்த வேத அறிஞர். அவர் வேதங்கள் குறித்த தம் வியாக்கியான உரைகளில் ஒரு சொற்றொடரைப் பயன்படுத்துகிறார். அது என்னவென்றால் சூரியனின் பண்புகளில் ஒன்று ‘அரை நிமிஷத்தில் 2202 யோஜனைகள் செல்வது’ என்பது.

யோஜனை என்றால் எவ்வளவு?

யோஜனை என்பதன் அளவு தேவைகளையும் காலகட்டஙக்ளையும் பொருத்து மாறியபடியே இருந்தது எனத் தோன்றுகிறது. சூரிய சித்தாந்தத்தில் யோஜனை என்பது சற்றேறக்குறைய ஐந்து மைல்கள் என்பதாக இருந்தது என்பதே பொதுவாக அறிஞர்களின் கருத்து. சூரிய சித்தாந்தத்தின்படி, பூமியின் விட்டம் 1,600 யோஜனைகள் – 8000 மைல்கள். இன்றைய அறிவியல் சொல்வது 7,915 மைல்கள். ஆரியபட்டர் தமது புகழ்பெற்ற நூலை எழுதிய காலகட்டம் பொ.யு. ஐந்தாம் நூற்றாண்டு என்பது பொதுவான கணிப்பு. அவர் பூமியின் விட்டம் என தருவது 1050 யோஜனைகள். அவரது காலத்தில் இந்திய வானவியலாளர்கள் ஒரு யோஜனை என்பதற்கு அளித்த அளவு 7.7 மைல்கள் எனலாம். இதன்படி ஆரியபட்டர் பூமியின் விட்டத்தை 7980 மைல்கள் எனக் கணக்கிட்டிருக்கிறார். பரமேஸ்வரன் நம்பூதிரி 15ம் நூற்றாண்டு வானவியலாளர். கேரள கணிதப் பாரம்பரியத்தில் முக்கியமான ஒருவர். சூரிய சந்திரக் கிரகணங்கள் குறித்த கணிப்புகளைச் செய்தவர். இவர் ஒரு யோஜனை என்பது 8 மைல்கள் எனப்படத்தக்க விதத்தில் ஒரு வரையறையை அமைத்திருந்தார். ஆக ஒன்பது மைல்கள் எனும் அளவு எப்படி ‘சத்குரு’வுக்குக் கிட்டியது?

சுபாஷ் கக் தம் ஆராய்ச்சித்தாளில் விளக்குகிறார். சாயனர் வானவியலாளரோ அல்லது கணிதவியலாளரோ அல்ல. அவர் வேத அறிஞர். பொதுவாக நில அளவைகளுக்கான யோஜனையை அர்த்த சாஸ்திரம் வரையறை செய்திருந்தது. எனவே அந்த அளவைத்தான் சாயனர் பயன்படுத்தியிருக்க வேண்டும். எனவே சாயனர் பயன்படுத்தும் சொற்றொடரில் யோஜனை என்பது ஒன்பது மைல்களாக இருக்க வேண்டுமென்பது பேராசிரியர் கக் அவர்களின் கருத்து.

சாயனர் பயன்படுத்தும் அந்தக் குறிப்பிட்ட சொற்றொடர் சாயனரின் சொந்தச் சொற்றொடர் அல்ல. ஏறக்குறைய பத்தாம் நூற்றாண்டு எனக் கணிக்கப்படுபவர் பட்ட பாஸ்கரர் என்கிற காஷ்மீர அறிஞர். இவர் தைத்திரீய பிராமணத்துக்கு எழுதிய உரையில் இதே சொற்றொடரைப் பயன்படுத்துகிறார். இதை அவர் அதற்கு முந்தைய புராண நூல்களிலிருந்து பெற்றதாகச் சொல்கிறார். ஒளியின் வேகம் குறித்தும் இந்திய மரபு குறித்துமான விவாதங்கள் ஃபேஸ்புக்கில் ஓடிக் கொண்டிருந்தபோது ராம்கே என்கிற நண்பர் தாம் தினமும் கூறும் த்வாதசசூர்ய ஸ்துதி என்பதில் இதே சொற்றொடர் வருவதாகக் கூறினார். இந்த துதி கிருஷ்ணனுக்கு ஜாம்பவதி மூலம் பிறந்த மைந்ததான சாம்பனால் இயற்றப்பட்டதாகக் கருதப்படுவதாகவும் சொல்லியிருந்தார். பேரா. கக் இதையேதான் சொல்கிறார்.

பொதுவாக இந்தியப் பாரம்பரிய வானவியல் ஆரிய பட்டர், சூரிய சித்தாந்தம் என ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிப் பாதையில் அறியப்படுகிறது. ஆனால் அதைத் தாண்டி மற்றொரு வானவியல் அறிதல் இருந்திருக்கலாமா? அது குறித்து புராணங்களில் செய்திகள் இருந்திருக்கக் கூடுமா? அதன் அடிப்படையில் சாயனரின் சொற்றொடர் உருவாகியிருக்குமா? இப்படியான ஊகங்களை பேராசிரியர் சுபாஷ் கக் முன்வைக்கிறார்.

மேற்கத்திய வானவியலில் ஒளியின் வேகம்

மேற்கத்திய வானவியல் மரபில் 17ம் நூற்றாண்டு டேனிஷ் வானவியலாளரான ரோமெர் (Ole Rømer), ஒளி ஒரு குறிப்பிட்ட வேகத்தில் பயணிக்கிறது என்பதைக் கண்டறிந்தார். அவ்வேகத்தைக் கணிக்க வியாழன் கோளின் துணைக்கிரகமான இயோவிலிருந்து வரும் ஒளி, பூமி வியாழனுக்கு அருகிலும் தொலைவிலும் இருக்கும்போது எப்போது வந்தடைகிறது என்பதை அவதானித்துக் கணித்தார். அவர் கண்டடைந்த வேகம் நொடிக்கு 13,6701.662 மைல்கள். இன்றைக்கு நாம் அறிந்த மதிப்புக்கு 26 விழுக்காடு குறைவு என்றாலும், முதல் கணிப்பில் ஒரு தனிமனிதனின் அவதானிப்பில் இந்த முன்னேற்றம் அபரிமிதமானது.

பேராசிரியர் கக் வெகுநிச்சயமாக நமக்கு சாயனரின் வாக்கை புதிய ஒளியுடன் காண வைக்கிறார். ஐயமில்லை. பாரம்பரிய இந்திய வானவியலுக்கு சித்தாந்த அடிப்படைகள் மட்டுமல்லாமல் வேறேதாவது அடிப்படை இருக்கக் கூடுமா என்பது அவர் ஐயம். அப்படி ஒரு ஒழுகு இருக்கும் பட்சத்தில் அதனை அறிய புராணங்களின் உருவகங்களிலிருந்தும் தரவுகளிலிருந்தும் நாம் அதை ஊகிக்க முடியுமா என்பது அவர் கேள்வி. ஆனால் இங்கு வருவதற்குக் கூட நாம் சில முன்யூகங்களை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது:

ஒன்று: சூரியன் அரை நிமிஷத்தில் பயணிக்கும் தூரம் என சாயனர் கூறுவதற்கு நாம் சூரியனின் ஒளி அரை நிமிஷத்தில் பயணிக்கும் தூரம் எனப் பொருள் கொள்ள வேண்டும்.

இரண்டு: பாரம்பரிய வானவியல் நூல்களில் யோஜனை என்பதற்கு அளிக்கப்பட்டுள்ள தூரத்தைப் புறக்கணித்துவிட்டு வானவியல் பயன்பாட்டுக்கு அல்லாமல் சாதாரண பயன்பாடுகளுக்கு அதாவது அர்த்த சாஸ்திரத்தில் யோஜனைக்குக் கொடுக்கப்பட்டுள்ள தூரத்தைப் பயன்படுத்த வேண்டும். இதற்குக் காரணம் சாயனர் வானவியலாளர் அல்ல என்பதால், அவர் வானவியலளார்கள் பயன்படுத்தும் தூர அளவைப் பயன்படுத்தியிருக்க மாட்டார் என்பதே.

மூன்று: நிமேஷா அல்லது நிமிஷம் என்பதற்கு மகாபாரதம் கொடுத்திருக்கும் அளவை நாம் பயன்படுத்த வேண்டும்.

இம்மூன்றையும் நாம் ஏற்றுக்கொண்டால் சாயனரின் வார்த்தைகளில் ஒரு நவீன அறிவியல் கண்டுபிடிப்பு புதைந்திருக்கிறது, அது எப்படி இந்தியர்களால் கண்டடையப்பட்டது என்பதற்கு நாம் வர வேண்டி இருக்கும்.

ஆக பேராசிரியர் கக் நம்பமுடியவே முடியாத ஒரு விஷயத்தை முன்வைக்கவில்லை. ஆனால் ஜக்கி வாசுதேவ் இவ்விதமாக எவ்வித முன்னெச்சரிக்கையோ அல்லது வரலாற்றுணர்வோ இல்லாமல் அதே விஷயத்தை முன்வைக்கிறார். மிகக் குறைந்தபட்சம் குரு அல்லது அவரது அணியினர், பேராசிரியர் கக், 1998 மற்றும் 1999ல் வெளியிட்ட ஆராய்ச்சித் தாள்களைச் சுட்டியிருக்கலாம்.

இக்கட்டுரையாளன் ஜக்கி, ஸ்ரீஸ்ரீ போன்ற குருக்களுக்கு எதிரானவன் அல்ல. இன்று நம் பண்பாட்டைக் காப்பாற்ற அவர்களின் பங்கும் முக்கியமானதுதான். குறிப்பாக வனவாசி சமுதாயங்களில் ஜக்கி அவர்கள் ஆற்றும் பணி, இலங்கையில் ரவிசங்கர் அவர்கள் அன்றைய காங்கிரஸ்-திமுக அரசால் வஞ்சிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு ஆற்றிய பணி ஆகியவற்றுக்காகவே அவர்கள் போற்றத்தகுந்தவர்கள். ஆனால் அவர்களின் புலங்களான யோக முறைகளுக்கும் பயிற்சிகளுக்கும் அப்பால் பேசும்போது அவர்கள் கவனமாக இருக்கவேண்டும். அவர்கள் அனைத்தையும் உணர்ந்தவர்கள் அல்லர். அண்மையில் மற்றொரு ‘குரு’ ஆகாஷிக் ஆவணங்கள் மூலம் பிரபஞ்ச ரகசியங்களை அறிந்தவராகத் தம்மைக் காட்டிக் கொண்டிருக்கிறார். சில நேரங்களில் மேற்கத்திய உலகின் புதுயுகச் சந்தை உத்திகளை நம் ‘குருக்கள்’ பயன்படுத்துவது மிகவும் மோசமான ஒரு போக்காக உள்ளது.

அமெரிக்கப் புதுயுகச் சந்தை உத்திகளை அல்ல நம் ’குருக்கள்’ படிக்க வேண்டியது. பரிணாமவியலாளர் ஸ்டீபன் ஜே கவுல்ட் ஒரு கோட்பாட்டை முன்வைக்கிறார். மதமும் அறிவியலும் ஒன்றோடொன்று வெட்டிக் கொள்ளாத புலங்களாகச் செயல்பட வேண்டுமென்கிறார் அவர். (NOMA – Non-overlapping magisteria). ஆனால் எப்போதும் அவ்வாறு இருக்க முடியாதென்பது மற்றொரு உண்மை. அப்போது சுவாமி விவேகானந்தர் சொன்னதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். அறிவியலாலும் அறிவாலும் மதிப்பிழக்கும் சமய அம்சங்கள் எப்போதுமே மூடநம்பிக்கைகளாகவே இருந்திருக்கின்றன. அவை எத்தனை விரைவாக அழிந்தொழிகின்றனவோ அத்தனைக்கத்தனை உண்மையான சமயத்துக்கு நல்லது என்றார் விவேகானந்தர். உண்மையான ஆன்மிக உறுதிப்பாடு உள்ளவர்களால் மட்டுமே இந்நிலைப்பாட்டை எடுக்க முடியும். நம் ‘குருக்களுக்கு’ தேவையும் அதுவே. அன்றி, சிறுபிள்ளைத்தனமான புல்லரிப்புகளோ அல்லது சில்லறை அற்புதங்களோ அல்ல.

References:

· https://arxiv.org/pdf/physics/9804020.pdf
· https://pdfs.semanticscholar.org/2796/95eaf90efa5645937212d82bb40adbc69ea9.pdf

Posted on Leave a comment

ஸார்… வோட் ப்ளீஸ்! – ஜெ. ராம்கி

அடையாறு மேம்பாலத்தைத் தாண்டி, திருவான்மியூர் திரும்பும்போது முத்துலெட்சுமி சாலையின் ஆரம்பத்தில் உள்ளது அந்த அலுவலகம். தென் சென்னைக்கான வாக்காளர் மையம். இடைத்தேர்தல்கள் ரத்து செய்யப்படுவதைப் பார்த்திருக்கிறோம். வாக்காளர் மையத்தின் வேலை நாட்கள் ரத்து செய்யப்பட்டதேயில்லை. ஒரு ஆண்டின் அனைத்து வேலைநாட்களிலும் இயங்குகிறது.

தேர்தல் காலங்களில் வாக்குச்சாவடி வாசலில் இருந்து வரும் ஊடக நேரலைச் செய்திகளில் எல்லோரும் பார்த்த சங்கதிதான். ‘எனக்கு ஒட்டு இல்லைன்னு சொல்லிட்டாங்க’ ‘இருவது வருஷமா இந்த ஏரியாவுலேயே இருக்கேன், எனக்கே ஒட்டு இல்லைன்னுட்டாங்க’, ‘எங்க அப்பா செத்து ஆறு வருஷமாச்சு, அவருக்கு ஓட்டு இருக்குது, எனக்கு இல்லையே…’ இதெல்லாம் ஒவ்வொரு தேர்தல் திருவிழா நேரத்திலும் அரங்கேறும் காட்சிகள்.

வாக்களிக்க மறுக்கப்பட்டவர்கள் ஒன்று கூடி தர்ணா நடத்துவதும், தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து கோஷம் போடுவதும் தவறாமல் மீடியா செய்திகளில் இடம்பெறும் விஷயங்கள். சம்பந்தமில்லாத பெயர்களும், வித்தியாசமான முகவரிகளும், ஏகப்பட்ட வயது வித்தியாசங்களுடனும் வரும் வாக்காளர் பட்டியல் சில சமயம் சிரிப்பையும் வரவழைக்கும். சம்பந்தப்பட்ட பகுதியிலேயே இல்லாத பலரது பெயர்கள், இறந்தவர்களின் பெயர்கள், பல வருஷங்களுக்கு முன்னர் வீட்டைக் காலி செய்துகொண்டு போனவர்கள் என எல்லோருமே வாக்காளர் பட்டியலில் இருப்பார்கள். புதிய விபரங்கள் சேர்ந்தாலும் பழைய விஷயங்களை யாரும் நீக்குவதேயில்லை.

இப்படியொரு குழப்பமான பட்டியலை நம்பி இந்தியா என்கிற மிகப்பெரிய ஜனநாயக நாடு தன்னுடைய எதிர்காலத்தை எப்படித் திட்டமிடப்போகிறது என்பதை நினைத்துப்பார்த்தால் கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறது. வாக்காளர் பட்டியல்களைத் திருத்துவதற்கும் அவ்வப்போது தகவல்களைச் சரிபார்ப்பதற்கும் ஏகப்பட்ட வழிமுறைகள் ஆலோசனை மட்டத்திலேயே இருந்து வந்தன.

பல வருடக் கனவு நனவாகும் காலம் வந்துவிட்டது. முதல் ஆயுதம், ஆதார்! ஆதார், நவீன இந்தியாவில் பல விஷயங்களை இணைத்தது முக்கியமான விஷயம். ஆரம்பத்தில் ஆதார் உதாசீனப்படுத்தப்பட்டாலும், கடந்த சில ஆண்டுகளில் ஆதாரின் முக்கியத்துவம் புரிந்து கொள்ளப்பட்டு, பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், வாக்காளர் அட்டை? சந்தேகம்தான்.

தேர்தல் ஆணையமும், மெத்தனமாக இருந்துவிடவில்லை. தேர்தல் காலங்களில் மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் தொடர்ந்து செயல்படுகிறது. புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டையை இலவசமாக வழங்குகிறது. சமீபத்தில் கருப்பு, வெள்ளை அட்டையை மாற்றிவிட்டு வண்ணமயமான வாக்காளர் அட்டை வழங்குவதும் ஆரம்பமாகியுள்ளது. 25 ரூ கட்டணத்தில் பழைய அட்டையைக் கொடுத்து, உடனே புதிய வண்ணமயமான வாக்காளர் அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.

அடுத்து அமலுக்கு வந்துள்ள முக்கியமான மாற்றம். வாக்குப்பதிவு முடிந்ததும் ரசீது தருவது. எந்தச் சின்னத்திற்கு வாக்களித்தோம் என்பதிலிருந்து, வாக்குப் பதிவு எந்திரம் சரியாகச் செயல்படுகிறதா என்கிற சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் வாக்காளருக்கு ஒரு ரசீது தருவது என்கிற தேர்தல் ஆணையத்தின் முடிவு சமீபத்தில் நல்லதொரு வரவேற்பைப் பெற்றுள்ளது.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்களின்போது வாக்குப் பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு வேலைகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்ட மன்ற தேர்தல்களில் ஓட்டு எந்திர தில்லுமுல்லு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் வைத்துள்ளன. மின்னணு வாக்கு எந்திரத்தில் நம்பிக்கை இல்லை. ஓட்டுச்சீட்டு முறைப்படி இடைதேர்தலை நடத்த வேண்டும் என்கிறார்கள். ஆனால், கற்காலத்திற்கு யார் செல்வார்? குறைகள் இருக்கலாம். அவை தீர்க்கப்படவேண்டும். அதற்குப் பதிலாக புதிய அமைப்பை உதாசீனப்படுத்திவிடமுடியாது. ஆனால், இப்படி எந்தத் தில்லுமுல்லையும் செய்துவிட முடியாது என்று தேர்தல் ஆணையம் உறுதியாகத் தெரிவித்துள்ளது. அதோடு யாராவது முடிந்தால் வாக்கு இயந்திரத்தில் குறிப்பிட்ட ஒரு சின்னத்துக்கு வாக்கு விழுவது போல் நிரல் எழுதி நிரூபித்துக் காட்டலாம் என்று சவாலும் விடுத்துள்ளது.

இந்தியா முழுவதுமே ஒவ்வொரு தேர்தலிலும் பதிவான வாக்குகளின் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை, டெல்லி போன்ற பெருநகரங்களில் பல பகுதிகளில் வாக்கு விகிதம் முப்பது சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. வாக்களிப்பது குறித்த அலட்சிய மனப்பான்மை, மழை, வெய்யில், வாக்குச் சாவடிகளில் நடக்கும் வன்முறைகள், இவையெல்லாமே வாக்கு சதவிகிதம் குறைந்து விட முக்கியமான காரணங்கள்.

பெருநகர மக்கள், வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க வந்தாலும் ஓட்டு இல்லை என்று திருப்பி அனுப்பும் முயற்சிகளினால் மக்களிடம் அதிருப்தி இருக்கிறது. இதற்காகத் தேர்தல் ஆணையத்தைக் குறை சொன்னாலும் மக்களின் அலட்சியத்தையும் குறை சொல்லியாக வேண்டும். அவ்வப்போது திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடுவது நிகழ்ந்து கொண்டு இருந்தாலும் தங்களுடைய விபரங்கள் சரியாக இருக்கின்றனவா என்பதைச் சரிபார்க்க யாரும் அக்கறை காட்டுவதில்லை.

ஏகப்பட்ட நடைமுறைச் சிக்கல்களையும் தாண்டி, ஒட்டுமொத்த வாக்காளர் பட்டியலையும் இணையத்தில் கொண்டு வந்திருக்கிறது தேர்தல் ஆணையம். வீட்டில் இருந்தபடியே வாக்காளர்கள் தங்களது விபரங்களை இணையத்தின் மூலம் சரிபார்த்துக்கொள்ளலாம். ஆனால், எத்தனை பேர் இத்தகைய சேவையைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று கேட்டால், ஏமாற்றமே மிஞ்சும்.

வாக்காளர் பட்டியலை தயாரிப்பதும் அவற்றைச் சரிபார்த்துப் பராமரிப்பதும் ஒரு தொடர் வேலையாக இருந்தாகவேண்டும். இதுவரை அப்படி இருந்ததில்லை. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் அவசர கதியில் வாக்காளர் பட்டியலை வெளியிடுவதும் தேர்தல் முடிந்தவுடன் எல்லாவற்றையும் மறந்துவிடுவதும் தொடர்கதையாக இருந்துவருகிறது.

வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பது தொடர்பான பணிகள், வாக்காளர் பதிவு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம், மாநில அரசின் ஆலோசனைக்கு ஏற்ப ஒரு அரசு அமைப்பின் அலுவலரைப் பொறுப்பாக நியமிக்கிறது. வாக்காளர் பட்டியல் தயாரித்து சரிபார்ப்பது எல்லா மாவட்ட ஆட்சித்துறையின் கீழ் உள்ள வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தாலுகா ஊழியர்கள் ஏப்ரல், மே மாதங்களில் ஆசிரியர்களிடம் பட்டியலைச் சரிபார்க்கும் பணியை ஒப்படைக்கிறது.

மூன்று லட்சம் பேர் மக்கள் தொகை கொண்ட ஒரு நகராட்சியில் இருக்கும் வாக்காளர்களை வார்டு வாரியாகப் பிரித்து அந்தந்த வார்டில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கிறது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்களும் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கிறார்கள். புதிதாகப் பெயரை சேர்க்க, நீக்க, மாற்றங்கள் செய்ய, அதற்குரிய விண்ணப்பப் படிவங்களை விநியோகித்து அவற்றையெல்லாம் நிரப்பி வாங்கிக்கொள்கிறார்கள். ஒவ்வொரு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலை திருத்தினாலும் தகவல்களைச் சரிபார்ப்பது என்பது அவர்களால் முடியாத காரியம்.

பாஸ்போர்ட் வழங்குவதைத் தொடர்ந்து வாக்காளர் அட்டைகளை சரிபார்க்கவும், விநியோகிக்கவும் அஞ்சலக ஊழியர்களைக் களத்தில் இறக்குவது என்கிற திட்டம் பத்தாண்டுகளாகவே பேசப்பட்டு வருகிறது. அஞ்சல் துறை ஊழியர்களால் மட்டுமே குக்கிராமங்களுக்கும், காடு, மேடு தாண்டிய பிரதேசங்களுக்கும் சென்று மக்களோடு மக்களாகப் பழக முடிந்திருக்கிறது. அஞ்சல் துறை ஊழியர்களால் வாக்காளரின் இருப்பிடம் பற்றிய தகவல்களைச் சரிபார்க்கமுடியும்.

எழுதப் படிக்க தெரியாத சாமானியர்களுக்கும் அஞ்சல் துறை ஊழியர்கள் நெருக்கமானவர்கள். நம்பகத்தன்மை கொண்டவர்கள். அஞ்சல் துறை ஊழியர்களால் வாக்காளர் பட்டிலை முழுமையாகச் சரிபார்க்கமுடியும். பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்தை மாற்றும்போது அது அஞ்சலகத்தின் கவனத்திற்கு வருகிறது. அஞ்சல்துறை ஊழியர்களால் ஆண்டு முழுவதும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் கவனம் செலுத்த முடியும். தமிழகத்தின் குக்கிராமங்களில் கூட அலுவலகங்கள் இருப்பதால் இது சாத்தியமான விஷயம். ஏற்கெனவே அடையாள அட்டைகள் தபால்துறை அலுவலகங்கள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகின்றன. அதைப்போலவே வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, வெளியிடுவது, சரிபார்ப்பது போன்றவற்றையும் தபால் அலுவலகங்களின் பொறுப்பிலேயே விட்டுவிடலாம்.

அரசு சாராத தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தவிர, மக்களோடு நெருங்கிப் பழகும் அரசு ஊழியர்களும் இதை முன்னெடுத்துச் சென்றாக வேண்டும். அரசியலில் அதீத ஈடுபாடு காட்டி வரும் மாநில அரசு ஊழியர்களைவிட, மத்திய அரசு ஊழியர்களே இத்தகைய பணிக்கு பொருத்தமானவர்கள். குறிப்பாக, மக்களை அவர்களது வாழ்விடங்களில் சந்தித்து, ஆண்டு முழுவதும் நேரடித்தொடர்பில் உள்ள அஞ்சலக ஊழியர்களே இதற்குப் பொருத்தமானவர்கள்.

அஞ்சலக ஊழியர்களைப் பொருத்தவரை இதுவொரு கூடுதல் பணி. ஆனால், அஞ்சல் துறை ஊழியர்களை விட யாராலும் சிறப்பாகச் செய்ய முடியாது என்பதும் உண்மை. கனவு மெய்ப்படவேண்டும். எல்லாமே நினைத்தபடி நடந்தால் ‘ஸார்.. போஸ்ட்’ என்கிற தபால்காரரின் குரல் ‘ஸார்.. வோட்’ என்று மாறி ஒலித்து, ஜனநாயக கடமையை நாம் நம் வீட்டிலேயே அரங்கேற்றும் நாளும் வந்துவிடும்.

Posted on Leave a comment

அயோத்தியில் ராமர் கோவில்: இறுதிக்கட்டத்தில் ராமஜன்ம பூமி வழக்கு – பி.ஆர்.ஹரன்

பல ஆண்டுகளாக, ஏன் பல நூற்றாண்டுகளாக
என்று கூடச் சொல்லலாம், தீர்வு ஏற்படாமல் இருக்கும் அயோத்தி ராமஜன்ம பூமிப் பிரச்சினை
பற்றிய வழக்கில், அனைத்துத் தரப்பினரும் கலந்து பேசி சுமுகமான தீர்வு காண முயற்சி எடுக்கவேண்டும்
என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் பாரதிய
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் ஸ்வாமி, “ராம ஜன்ம பூமியில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்கவேண்டும்.
அதற்காக அவ்வழக்கை அவசர வழக்காகக் கருதி தினப்படி விசாரணை செய்து விரைவில் தீர்ப்பு
வழங்கவேண்டும்” என்று கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்
1.
அதனை அப்போது ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், அவரையும் ஒரு தரப்பாகச் சேர்த்துக்கொண்டது.
அந்த வழக்கு, கடந்த மார்ச் மாதம்
21ம் தேதியன்று, உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
மற்றும் நீதிபதி எஸ்.கே.கௌல் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
2.
அப்போது, “இந்தப் பிரச்சினை மத உணர்வுகள் சம்பந்தப்பட்ட மிகவும் முக்கியமான பிரச்சினையாகும்.
ஆகவே சம்பந்தப்பட்டத் தரப்பினர் அனைவரும் கலந்து பேசி சுமுகமானத் தீர்வை எட்ட வேண்டும்”
என்று உச்ச நீதிமன்றம் கூறியது. நேரில் ஆஜராகியிருந்த சுப்பிரமணியன் ஸ்வாமி, “நான்
முஸ்லிம் தரப்பினரை அணுகினேன். ஆனால் அவர்கள் சமரசப் பேச்சு வார்த்தைக்குத் தயாரில்லை;
நீதிமன்றத்தின் தலையீடு தேவை என்று அவர்கள் நினைக்கிறார்கள்” என்று கூறினார்.
அதற்குப் பதிலளித்த உச்ச நீதிமன்றம்,
சுமுகமான தீர்வு காண அவரையே மீண்டும் முயற்சி மேற்கொள்ளுமாறு கூறியது. அதோடு மட்டுமல்லாமல்,
“சம்பந்தப்பட்ட தரப்பினர் தேர்ந்தெடுக்கும் மத்தியஸ்தர்கள் கொண்ட குழுவுக்கு நானே வேண்டுமானாலும்
தலைமை வகித்து உதவுகிறேன். இல்லையெனில் வேறு ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலும்
குழுவை அமைக்க இந்நீதிமன்றம் உதவும்” என்று தலைமை நீதிபதி கேஹர் கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட
அனைத்துத் தரப்பினரிடமும் ஆலோசனை நடத்திவிட்டு மீண்டும் மார்ச் 31ம் தேதி தங்களிடம்
தகவல் தெரிவிக்குமாறு ஸ்வாமியைக் கேட்டுக்கொண்டனர் நீதிபதிகள்.
அதன்படி மார்ச் 31ம் தேதி மீண்டும்
உச்ச நீதிமன்றம் கூடியபோது, தினப்படி விசாரணை செய்து விரைவில் வழக்கை முடிக்கக் கோரினார்
சுப்பிரமணியன் ஸ்வாமி. அதற்கு மறுத்த உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் வழக்கைத்
தள்ளி வைத்துள்ளது
3.
இவ்வழக்கை மேற்கொண்டு ஆராய்வதற்கு
முன்னால், ராமஜன்ம பூமியின் வரலாற்றையும், வழக்கின் பாதையையும் தெரிந்துகொள்வது நம்முடைய
புரிதலுக்கு உதவும்.ராமஜன்ம பூமியின் வரலாறு4
  
·   பாரத இதிகாசம் ராமாயணம்: ராமர் அயோத்தியில் பிறந்தார்.
·   திரேதா யுகத்தில் மஹாராஜா குஷா என்பவர் ராமர் கோவில்
கட்டினார்.
·   துவாபர யுகத்தில் பகவான் கிருஷ்ணர் இக்கோவிலுக்கு வந்தார்.
·   விக்கிரமாதித்தர், சமுத்திர குப்தர், போன்ற மன்னர்களும்
இக்கோவிலில் வழிபட்டிருக்கிறார்கள்.
·   1527 – முகலாய மன்னர் பாபர் பாரதத்தின்மீது படையெடுத்தார்.
·   1528 – பஃதேஹ்பூர் சிக்கிரி என்ற இடத்தில் ராணா சாங்ராம்
சிங் என்பவரால் பாபர் தோற்கடிக்கப்பட்டு புறமுதுகிட்டு அயோத்தி வந்தார்.
·   ராமர் கோவிலில் பாபாஜி யாமாநந்தஜி என்னும் மகான் ஒருவர்
வாழ்ந்து பூஜைகள் செய்து வந்தார். அவரிடம் கஜால் அப்பாஸ் முசா அஷிகான் கலந்தர் ஷா என்னும்
பஃக்கீர் ஒருவர் சீடரானார். அவரைத் தொடர்ந்து ஜலால் ஷா என்ற பஃக்கீரும் பாபாவிடம் சீடர்
ஆனார். ஆயினும் அவர்கள் தீவிர முஸ்லிம்களாக இருந்தார்கள். அவர்கள் ராமர் பிறந்த இடத்தில்
வாழ்ந்தாலும் அங்கு ஒரு மசூதி கட்டவேண்டும் என்று ஆர்வம் கொண்டார்கள். அயோத்தி வந்த
பாபர் இரு பஃக்கீர்களையும் சந்தித்து ஆசி பெற்று மீண்டும் 6 லட்சம் வீரர்களைத் திரட்டி
ராணா சாங்ராம் சிங்கைத் தோற்கடித்தார். பஃக்கீர்கள் இருவரும் ராமர் கோவிலை அழித்து
அங்கு மசூதி கட்ட வேண்டும் என்று பாபருக்கு ஆலோசனை கூறினர். பாபர் படை வீரர்கள் கோவிலை
அழிக்கத் தொடங்கிய போது, பாபாஜி ராமர் முதலிய விக்கிரகங்களை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.
கோவில் பூசாரிகள் பாபர் படையினரின் வாள்களுக்கு இறையாகினர். கோவில் தாக்கப்பட்டதை அறிந்த
ஹிந்து மன்னர்களும் மக்களும் திரண்டு வந்து மீண்டும் போர் புரிந்தனர். பாபர் படையில்
பீரங்கிகள் இருந்ததால் அவரே மீண்டும் வெற்றி பெற்றார். அவருடைய தளபதி மீர்பாகி மசூதியைக்
கட்டி முடித்தார்.
·   பின்னர் பாபர், ஹுமாயூன், அக்பர் மற்றும் ஔரங்கசீப்
காலங்களிலும் அதற்குப் பின்னரும் ஹிந்துக்கள் ராமர் கோவிலுக்காகத் தொடர்ந்து பலமுறை
போராடி வந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.
·   1853 – மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு ஏராளமானோர் இறந்தனர்.
·   1859 – ஆங்கிலேயர் ஆட்சியில் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும்
தனித்தனியாக வழிபாடு செய்ய ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

ராமஜன்ம பூமி வழக்குகள் வந்த பாதை5

 

·   1885 – மஹந்த் ரகுவர்தாஸ் கோவில் கட்ட ஆங்கிலேய அரசிடம்
அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
·   1886 – ஹிந்துக்களுக்குச் சொந்தமான இடத்தில் மசூதி
(ஜன்மஸ்தான் மசூதி) கட்டப்பட்டிருப்பதாக பைஃசாபாத் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
·   1936 – முஸ்லிம்கள் வழிபாடு நடத்துவதை நிறுத்தினர்.
·   1949 டிசம்பர் 22/23 – சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர்
விக்கிரகம் வைக்கப்பட்டது. இரு தரப்பினரும் அவ்விடத்திற்கு உரிமை கோரி நீதிமன்றம் செல்ல,
வளாகத்துக்குப் பூட்டு போடப்பட்டது.
·   1950 – கோபால் சிங் விஷாரத் மற்றும் மஹந்த் பரமஹம்ஸ
ராமச்சந்திரதாஸ் ஆகியோர் வழிபாடு நடத்த அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தனர். உள்பகுதி பூட்டப்பட்டு
வளாகத்தில் மட்டும் பூஜை நடத்த அனுமதிக்கப்பட்டது.
·   1959 – சர்ச்சைக்குரிய இடத்தில் பூஜை செய்ய உரிமை கோரி
நிர்மோஹி அகாரா அமைப்பும் மஹந்த் ரகுநாத் ஆகியோரும் வழக்கு தொடர்ந்தனர். பூஜை செய்ய
உரிமையும் கோரினர்.
·   1961 – பிரச்சினைக்குரிய இடம் முழுவதும் தங்களுக்கே
சொந்தம் என்று கூறி சன்னி வக்ஃப் வாரியம் உரிமை மனு தாக்கல் செய்தது.
·   1984 – ராமர் கோவில் இயக்கத்தை வி.ஹி.ப/ஆர்.எஸ்.எஸ்/பா.ஜ.க
தொடங்கினர்.
·   1986 – பிரச்சினைக்குரிய உள்பகுதியில் பூஜை நடத்த அனுமதி
கேட்டு ஹரிசங்கர் துபே என்பவர் வழக்கு தொடர்ந்தார். பூஜை செய்ய நீதிமன்றம் அனுமதியளித்ததைத்
தொடர்ந்து பூட்டிய கதவுகள் திறக்கப்பட்டன.
·   1989 – ராமர்கோவில் கட்டுவதற்கான பூமி பூஜைக்கு அப்போதைய
பிரதமர் ராஜிவ் காந்தி அனுமதியளித்தார். விஷ்வ ஹிந்து பரிக்ஷத் துணைத்தலைவர் முன்னாள்
நீதிபதி தேவகி நந்தன் அகர்வால், பகவான் ராமரின் ‘அடுத்த நண்பர்’ என்ற முறையில் சர்ச்சைக்குரிய இடத்திற்கு
உரிமை கோரி மனு தாக்கல் செய்தார்.
·   1990 – சோமநாதபுரத்திலிருந்து அயோத்திக்கு ரத யாத்திரை
தொடங்கினார் பா.ஜ.க. தலைவர் அத்வானி. யாத்திரை பீகாரில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதைத்
தொடர்ந்து வி.பி.சிங் அரசுக்குக் கொடுத்துவந்த ஆதரவை பா.ஜ.க திரும்பப் பெற்றது.
·   1992 டிசம்பர் 6 – கோவில் கட்ட வந்த கர சேவகர்களால்
பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
·   2003 மார்ச் 5
– அலகாபாத் உயர்நீதிமன்றம் பாபர்மசூதி இருந்த இடத்தில் கோவில் இருந்ததா என்பதைக் கண்டறிய
அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளுமாறு தொல்லியல்துறைக்கு உத்தரவு அளித்தது. அனைத்து வழக்குகளும்
உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு மூன்று நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது.
·   2003 ஆகஸ்டு
22 –
தொல்லியல்துறை தன்னுடைய அகழ்வாராய்ச்சி அறிக்கையை
உயர் நீதிமன்றத்திடம் சமர்ப்பித்தது.
·   2010 ஜூலை – வழக்கு விசாரணை முடிவடைந்தது. செப்டம்பர்
24ல் தீர்ப்பு என்று அறிவிக்கப்பட்டது.
·   2010 செப்டம்பர் – தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்ற
மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் மனுவை ஏற்றுக்கொண்டு
ஒருவாரம் தீர்ப்பைத் தள்ளி வைத்து, பின்னர் விசாரணை செய்து மனுவைத் தள்ளுபடி செய்தது.
·   2010
செப்டம்பர் 30 – உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்பில் மூன்று முக்கிய
அம்சங்கள் தெளிவாகச் சொல்லப்பட்டன. முதலாவது,
பாபர் கட்டடத்தின் நடுவில் உள்ள கட்டடத்தின் கீழ் குழந்தை ராமரைப் பிரதிஷ்டை செய்துள்ள
இடமே ராமரின் ஜன்மஸ்தானம். இவ்விடத்தை ஹிந்துக்களுக்குக் கொடுக்கவேண்டும். மற்றவர்
எந்த இடையூறும் செய்யக்கூடாது. குறிப்பிட்ட இடம்தான் ராமஜன்ம பூமி என்கிற நம்பிக்கை
அரசியல் அமைப்புச் சட்டத்தின் 25வது க்ஷரத்தின் (மதச் சுதந்திரம்) பாதுகாப்பைப் பெறுகிறது.
இரண்டாவது, சர்ச்சைக்குரிய கட்டடம் முகலாய மன்னர் பாபரால் கட்டப்பட்டது என்று முஸ்லிம்
தரப்பு நிரூபிக்கவில்லை. ஆனால் தொல்லியல்துறை அளித்துள்ள ஆதாரங்களிலிருந்து, சர்ச்சைக்குரிய
இடத்தில் ஒரு கோவில் இருந்துள்ளது என்பதும் அது இடிக்கப்பட்டுள்ளது என்பதும் நிரூபணமாகியுள்ளது.
மூன்றாவது, சன்னி வக்ஃப் வாரியத்தின் உரிமை
மனுவும், நிர்மோஹி அகாரா அமைப்பின் உரிமை மனுவும் கால வரம்பிற்குள் வராததால் நிராகரிக்கப்படுகின்றன.
ஸ்ரீ ராம் விராஜ்மானின் உரிமை மனு ஏற்கப்பட்டு ராமரின் ஜன்மஸ்தானம் தற்போது பாபர் கட்டடத்தின்
நடுப்பகுதியின் அடியில் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. ஆயினும், ஸ்ரீ ராம் விராஜ்மானுக்கு
மூன்றில் ஒரு பங்கும், நிர்மோஹி அகாராவுக்கு மூன்றில் ஒரு பங்கும், சன்னி வக்ஃப் வாரியத்திற்கு
மூன்றில் ஒரு பங்கும் என சர்ச்சைக்குரிய இடம் பிரிக்கப்படுகிறது.
·   டிசம்பர் 20106 : அலஹாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் மூன்றில் ஒரு பாக பூமியை சன்னி வக்ஃப்
வாரியத்துக்கு அளிக்கப்பட்டதை எதிர்த்து, அகில இந்திய ஹிந்து மகாசபாவின் தலைவர் ஸ்வாமி
சக்ரபாணி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அலஹாபத் நீதிபதி தரம் வீர் ஷர்மா
அவர்கள் அளித்த “ராமஜன்ம பூமி பிரிக்கப்படாமல் ஹிந்துக்களுக்கே வழங்கப்பட வேண்டும்”
என்கிற தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையையும் தன் மனுவில் வைத்தார்.
அதேபோல சன்னி வக்ஃப் வாரியமும், ஜமியாத்-உலெமா-இ-ஹிந்த் என்கிற அமைப்பும், அலஹாபாத்
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மத நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளதாகவும், அதை
ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், சட்டத்திற்கு விரோதமாக பாபர் மசூதி இடிக்கப்பட்டது
என்றும் அதன் இடிபாடுகள் அங்கேயே இருப்பதாலும், அதன் அஸ்திவாரம் வலிமையாக இருப்பதாலும்,
மீண்டும் நிலத்தை முஸ்லிம்களுக்கே வழங்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தன
7.
·   மே மாதம் 9-ம் தேதி 2011: அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின்
தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து, தற்போது இருக்கின்ற நிலையே
ராமஜன்ம பூமியில் தொடரவேண்டும் என்று உத்தரவிட்டது.
·   7, ஆகஸ்டு 20158: – பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் ஸ்வாமி,
“உத்திரப்பிரதேச அரசு தினமும் ராமஜன்ம பூமிக்கு வரும் பக்தர்களிடம் நுழைவுக் கட்டணமாக
இதுவரை கோடிக்கணக்கான ரூபாய் வசூலித்துள்ளது. ஆனால் குடிநீர், கழிப்பறைகள், போன்ற அடிப்படை
வசதிகள் எதுவும் பக்தர்களுக்குச் செய்து தரவில்லை. ஆகவே தினமும் ஸ்ரீ ராமபிரானைத் தரிசிக்க
ராமஜன்ம பூமிக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரச்சொல்லி
உத்தரவிட வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.
அவர் மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்
என்று உத்திரப்பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது.

இறுதிக்கட்டம்

இறுதியாக ஃபிப்ரவரி 2016ல் சுப்பிரமணியன்
ஸ்வாமி வழக்கை விரைவாக விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும் என்று மற்றொரு மனு சமர்ப்பித்த
பிறகுதான் உச்ச நீதிமன்றம் அனைத்துத் தரப்பினரும் கலந்து பேசி சுமுகமான தீர்வை எட்டவேண்டும்
என்று குறிப்பிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை ஹிந்துத் தரப்பினர் வரவேற்றிருந்தாலும் முஸ்லிம்
தரப்பினர் அவ்வளவாக ஈடுபாடு காண்பிக்கவில்லை.
உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி
சுப்பிரமணியன் ஸ்வாமி முயற்சி செய்த பிறகும் எதிர்பார்த்தபடி அதற்குப் பலன் கிட்டவில்லை.
பலன் கிட்டாது என்பது உச்ச நீதிமன்றத்திற்கும் நன்றாகத் தெரியும். தெரிந்திருந்தும்
அது ஏன் இப்படி ஒரு அறிவுறுத்தலைச் செய்தது என்கிற கேள்வி இந்திய மக்கள் அனைவர் மனங்களிலும்
எழுவது இயல்புதான்.
உச்ச நீதிமன்றம் தேவையில்லாமல்
இப்படி ஒரு அறிவுறுத்தலைச் செய்திருக்கிறது. அதைப்பற்றி விவாதிப்பதற்கு முன்பு அலஹாபாத்
உயர் நீதிமன்றம் செய்த ஒரு தேவையில்லாத செயலைப் பார்ப்போம். அது அளித்த தீர்ப்பில், சன்னி வக்ஃப் வாரியத்தின் உரிமையைக் காலவரம்பிற்குள்
வரவில்லை என்று நிராகரித்தாலும், அதற்கு சர்ச்சைக்குரிய இடத்தில் மூன்றில் ஒரு பங்கை
அளித்துள்ளதுதான் தேவையில்லாத செயலாக இருக்கின்றது.
1961ல் தான் சன்னி வக்ஃப் வாரியம் முதல் முதலாக வழக்கில்
நுழைகிறது. அப்போதே அதன் மனு நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால்
இந்த அளவுக்கு இப்பிரச்சினையில் அரசியல் கலந்திருக்க வாய்ப்பில்லை
. 1886ல் ஃபைசாபாத் மாவட்ட நீதிமன்றம் ராமரின் ஜன்ம ஸ்தானத்தில்தான்
மசூதி கட்டப்பட்டது என்று தீர்ப்பளித்துள்ளது. அந்த மசூதியை ஜன்மஸ்தான் மசூதி என்றே
முஸ்லிம்களும் குறிப்பிட்டு வந்துள்ளனர். 1936ல் அங்கே தொழுகை செய்வதையும் நிறுத்தியுள்ளனர்.
மேலும், அகழ்வாராய்ச்சியில் ராமஜன்ம பூமியில் கோவில் இருந்தது என்று தெள்ளத் தெளிவாக
நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதை இடித்து அதன் மேல்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது என்றும்
நிரூபிக்கப்பட்டு விட்டது. மேலும், சர்ச்சைக்குரிய கட்டிடம் முகலாய மன்னர் பாபரால்தான்
கட்டப்பட்டது என்று முஸ்லிம் தரப்பினர் நிரூபிக்கவில்லை என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
உண்மைகள் இவ்வாறு இருக்க, ஹிந்துக்கள்
ராமஜன்ம பூமியில் ராமர் கோவில் கட்டலாம் என்று தெளிவாகவே தீர்ப்பு தந்திருக்க வேண்டும்.
அவ்வாறு தீர்ப்பளிக்காமல், பிரச்சினையை முடிக்க மனமில்லாமல், உரிமையில்லாத சன்னி வக்ஃப்
வாரியத்திற்கும் மூன்றில் ஒரு பங்கை அளித்து முஸ்லிம் தரப்பினரையும் திருப்திப்படுத்த
வேண்டும் என்கிற எண்ணத்தில் செயல்பட்டது தேவையில்லாதது.
அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் செயல்பாட்டைக்
காட்டிலும் தெளிவில்லாமல் இருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடு. உச்ச நீதிமன்றம்
செய்திருக்க வேண்டியது என்னவென்றால், அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அலசி ஆராய்ந்து,
அதிலுள்ள தெளிவில்லாத அம்சங்களை மட்டும் தெளிவுபடுத்தித் தீர்ப்பளித்திருக்க வேண்டும்.
சொல்லப்போனால், சன்னி வக்ஃப் வாரியத்துக்கு மூன்றில் ஒரு பங்கைக் கொடுத்தது மட்டுமே
தெளிவில்லாத அம்சம். மற்றபடி அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் தெளிவாகவே
இருந்துள்ளது. ஆகவே மேலும் தெளிவுபடுத்தி பிரச்சினைக்கு முடிவான தீர்ப்பை வழங்குவதே
அதன் கடமையாகும். ஆனால் அவ்வாறு தன் கடமையைச் செய்யாமல், மீண்டும் அனைத்துத் தரப்பினரும்
கலந்து பேசி முடிவெடுங்கள் என்று குழப்பமான ஒரு உத்தரவை அளித்திருப்பது, பிரச்சினையை
மேலும் அரசியலாக்கத்தான் வழிவகுக்கும். பலமுறை பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு முடிவுக்கு
வரமுடியாமல்தான் நீதிமன்றங்களுக்கே பிரச்சினை வந்துள்ளது. அப்படியிருக்க பிரச்சினையை
முடிக்காமல் மேலும் இழுத்தடிப்பது நாட்டின் உச்ச நீதிமன்றத்திற்கு அழகல்ல. நாட்டின்
ஒருமைப்பாட்டுக்கும் நல்லதல்ல.
ஹிந்து தர்மத்தைப் பொருத்தவரை,
கோவில் என்பது இறைவன் வசிக்கும் இடம். பிராணப் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டுவிட்டால்
அதுவே இறைவனின் நிரந்தர வாசஸ்தலமாக ஆகிவிடுகின்றது. கோவில் இடிக்கப்பட்டாலும் அந்த
இடம் இறைவனின் இடம் என்கிற உண்மை மாறுவதில்லை. ஆனால் மசூதிகள் அப்படியல்ல; அவற்றில்
பிராணப் பிரதிஷ்டை என்பது கிடையாது. உருவ வழிபாடே கிடையாதே! முஸ்லிம்கள் எங்கு வேண்டுமானாலும்
வழிபடலாம். அவர்களுக்குக் குறிப்பிட்ட நேரம்தான் முக்கியமே தவிர இடம் முக்கியமல்ல.
மத்தியக் கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் பல மசூதிகள் அரசாங்கத்தாலேயே இடிக்கப்படுகின்றன.
சௌதி அரேபியாவில் முகம்மது நபி அவர்கள் தொழுத மசூதியையே அரசு இடித்துள்ளது. அப்படியிருக்க
இங்கே 1936க்குப் பிறகு தொழுகையே நடத்தாமல் பாழடைந்த நிலையில் முஸ்லிம் மக்களே புறக்கணித்த
ஒரு கட்டடத்தை வைத்து அரசியல் செய்வது கொஞ்சம் கூட நியாயமே கிடையாது. ஆகவே, நாட்டின்
இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் கருத்தில் கொண்டு முஸ்லிம்கள் இந்துக்களுக்கு ஒத்துழைக்க
வேண்டும்.
மார்ச் 31ம் தேதி கூடிய உச்ச நீதிமன்றம்
சுப்பிரமணியன் ஸ்வாமியின் வேண்டுகோளை நிராகரித்து, தேதி குறிப்பிடாமல் வழக்கைத் தள்ளிவைத்துள்ளது.
தொடர்ந்து என்ன செய்யப்போகிறது என்று தெரியவில்லை. மீண்டும் ஒரு மத்தியஸ்தக் குழுவை
அமைக்குமா என்றும் தெரியவில்லை. அப்படிச் செய்தால் அது நீதிக்கு வழிவகுக்கும் காரியமாக
இருக்காது. மாறாக நீதியை மறுக்கின்ற காரியமாகத்தான் இருக்கும்.
வரலாற்றை நோக்கினால் கோவில் இடிக்கப்பட்டு
கோவிலின் இடிபாடுகள் மீதுதான் மசூதி கட்டப்பட்டுள்ளது என்பது தெளிவாக இருக்கின்றது.
இவ்வழக்கின் பாதையை நோக்கினால், ஒவ்வொரு நிலையிலும் ஹிந்துக்கள் பக்கமே ஞாயம் இருப்பதும்,
நீதிமன்றங்கள் அதை உறுதிப்படுத்தி வருவதும் தெளிவாகத் தெரிகிறது. அப்படியிருக்க மேலும்
பேசுவதற்கு இவ்வழக்கில் ஒன்றுமில்லை.
நிறைவாக ஒரு விஷயம். இது வெறும்
கோவில் பற்றிய பிரச்சினை அல்ல; வெறும் மதவுணர்வு சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. இது
அவற்றையெல்லாம் மீறியது. ராமாயணம் இந்த தேசத்தின் இதிகாசம். இதிகாசம் என்றால் இது நடந்தது
என்று பொருள். இந்த தேசத்தின் உயிர்நாடி ராமாயணம். இந்த தேசத்தின் கலாசார மாண்பு. இந்த
தேசத்தின் தன்மானம். இந்த தேசத்தின் சுயமரியாதை. இந்த தேச மக்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும்
வீற்றிருக்கும் வரலாற்று நாயகன் ஸ்ரீராமன். இந்த தர்ம பூமியில் ‘ராமோ விக்ரஹவான் தர்மா’ என்று தர்மத்தின்
மொத்த உருவமாகப் போற்றப்படுபவன் ஸ்ரீராமன்.
அவனுடைய பூமியில், அவன் பிறந்த
பூமியில், அவன் அரசாண்ட பூமியில் அவனுக்கு ஆலயம் இல்லையென்றால் அது தர்மத்திற்கே அடுக்காது!
அயோத்தியில் பிரம்மாண்டமான ஸ்ரீ ராமர் கோவில் எழும்புவது இந்த தேசத்திற்குப் பெருமை
சேர்ப்பதாகும். இந்த தேசத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்ப்பதாகும். இந்த
தேசத்தில் உள்ள இந்துக்கள் மட்டுமல்ல, மாற்று மதத்தினர் உட்பட அனைவருக்கும் பெருமை
தரக்கூடியது ராமர் கோவில். இந்த தேசத்தில் உள்ள மாற்று மதத்தவர் அனைவரும் மேற்கிலிருந்தோ,
மத்தியக் கிழக்கிலிருந்தோ வான்வழியாக வந்து குதித்தவர்கள் அல்ல. அனைவரும் இந்த தேசத்தின்
வித்துக்களே. அனைவரின் முன்னோர்களும் இந்துக்களே. அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் அனைவருக்கும்
பெருமையே.
சான்றுகள்:

‘Subramanian
Swamy’s Ayodhya plea to be heard by Supreme Court next week
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் சு.சுவாமி புதிய மனு!
SC on
Ayodhya: Give & take a bit
அயோத்தி பிரச்னைக்கு சமரசத் தீர்வு:
உச்ச நீதிமன்றம் யோசனை
Supreme
Court to Subramanian Swamy on Ayodhya: Will hear it later, we thought you were
party to it

அயோத்தி வழக்கை உடனடியாக விசாரிக்க
சுப்ரீம் கோர்ட் மறுப்பு
4.  தினமணி
– 1 அக்டோபர் 2010.
5. தினமணி
– 1 அக்டோபர் 2010.
Hindu
Mahasabha moves SC against part of Ayodhya verdict
Sunni Waqf
Board moves Supreme Court against high court’s Ayodhya order

SC allows
repairing of facilities at makeshift Ram Lalla Temple in Ayodhya
Posted on Leave a comment

உரையாடும் ரோபோ: சாட்பாட் (Chatbot) – ஜெயராமன் ரகுநாதன்

“உங்களின் பிறந்த நாள் என்னவென்று சொல்ல முடியுமா?”

“……………….”

“அட! அடுத்த வாரமா! உங்களுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! சரி, இப்போது நான் என்ன செய்யவேண்டும்?”

“எனக்கு ஒரு ரீபோக் ஷூ வாங்க வேண்டும்?”

“ஆஹா! மிக நல்ல முடிவு! உங்களின் கால் சைஸ் என்ன என்று சொல்லமுடியுமா?”

“நம்பர் எட்டு! எனக்கு வெண்மையும் கிரேவும் கலந்த ஸ்போர்ட்ஸ் ஷூதான் வேண்டும்!”

“அப்படியே! இப்போது உங்கள் ஸ்க்ரீனில் மூன்று மாடல்கள் காண்பிக்கிறேன்! எது வேண்டுமோ அதை செலக்ட் செய்து கிரெடிட் கார்ட் விவரங்களைப் பூர்த்தி செய்யுங்கள்! நான் அதுவரை காத்திருக்கிறேன்!”

“செய்துவிட்டேன்! டெலிவரி எப்போது?”

“இன்றிலிருந்து நான்காம் நாள் வீட்டுக்கு டெலிவரி ஆகிவிடும். உங்கள் பிறந்த நாள் அன்று நீங்கள் எங்கள் ஷூக்களை அணியலாம்!”

“ரொம்ப நன்றி மேடம்! உங்கள் பெயர் என்ன?”

“எனக்கா? பெயரே கிடையாதே! வரட்டுமா? குட் டே!”

திகைக்க வேண்டாம்.

நம் ரீபாக் ஷூ ஆசாமியுடன் பேசியது ஒரு மனிதப்பிறவியே இல்லை! அது ஒரு ரோபோ!

மெஸேஜிங் என்னும் எழுத்து மூலமாக உங்களுடன் பேசி கஸ்டமர் சர்வீஸ் செய்யும் ரோபோ. தகவல் தொழில் விற்பன்னர்கள் இதை சாட்பாட் (Chatbot) என்பார்கள். நாம் தமிழில் இதை ‘உரையாடும் ரோபோ’ என்று சொல்லலாமா?

முதன்முதலில் Joseph Weizenbaum என்பவர் ELIZA என்று ஒரு புரோகிராம் வெளியிட்டார். அது ஒரு உரையாடும் கம்ப்யூட்டர் புரோகிராம். அந்தப் பக்கம் உரையாடுபவர்களால் எளிதில் அறியமுடியாமல் அதை ஒரு மனிதராகவே நினைத்துக்கொண்டிருக்க நம் வெய்சென்பாம் நக்கலாகச் சிரித்துக்கொண்டிருந்தார். ஆனால் ஆசாமி நல்லவர். விரைவில் அவரே இந்த எலிசாவின் சுயரூபத்தை வெளியிட்டு அது இப்படித்தான் வேலை செய்கிறது என்று சொன்னபோது ஏமாந்த பல விற்பன்னர்கள் அசட்டுச்சிரிப்புடன் நகர்ந்துவிட்டதாகக் கேள்வி.

இந்த எலிசா அப்படி ஒன்றும் புத்திசாலித்தனமான புரோகிராம் இல்லைதான். நாம் கம்ப்யூட்டரில் இடும் வார்த்தை அல்லது வாக்கியங்களில் உள்ள சில cue வார்த்தைகளைக்கொண்டு நம்பகத்தன்மையான ஒரு சின்ன உரையாடலை நடத்திய அளவில்தான் எலிசாவின் புத்திசாலித்தனம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த முறை இப்போதும் உரையாடும் ரோபோக்களில் பயன்பட்டு வருகிறது.

சாதாரணமாகவே நாம் கம்ப்யூட்டரில் சாட் என்னும் உரையாடலில் எதிர் தரப்பில் இருப்பது ஆளில்லாத கம்ப்யூட்டராக இருந்தாலும் எளிதான கேள்வி பதில்களை ஒரு மனிதரிடம் பேசுவதாகவே உணர்வோம். இது வகைப்பொருத்துதல் (Pattern Matching) என்னும், 80களிலேயே பிரபலமான எளிதான தொழில்நுட்பமாகும். இப்போதெல்லாம் interactive என்னும் ஊடாடும் உரையாடலில் மிக அதிகமாக இந்த சாட்பாட்டுக்கள் பயன்படுகின்றன. நம் தேவை சிக்கலாகி அதிக யோசிப்பும் உணர்வும் தேவைப்படும்போது இந்த சாட்பாட்டுகள் உரையாடலை ஒரு மனிதரிடம் ஒப்புவித்துவிட்டு அடுத்த ருட்டீன் கஸ்டமரைக் கவனிக்கப்போய்விடும்.

பின்னாளில் Natural Language Processing Capabilities என்னும் இயற்கை மொழிச்செயலாக்க நுட்பத்தைப் பயன்படுத்தி சாட்பாட்டுகள் உருவாக்கப்பட்டன. அவைகூட தமக்கே உரித்தான மொழியையே பயன்படுத்தியதால் அப்படி ஒன்றும் சிலாக்கியமான தொழில்நுட்பம் இல்லை என்று இந்த இயலின் உஸ்தாதுகளால் சொல்லப்பட்டது. ALICE என்னும் சாட்பாட்டானது இயற்கை மொழிச்செயலாக்க முறையில் எழுதப்பட்டதென்றாலும், இதுவுமே நாம் மேலே சொன்ன வகைப்பொருத்துதல் இயலிலேயே அடங்கிவிட்டது.

இப்போதெல்லாம் முகநூல், டுவிட்டர், ஸ்னாப்சாட், கிக் போன்ற சமூக வலைத்தளங்கள் தொழில்நுட்பத்தில் முன்னேறிய சாட்பாட்டுகளை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டனர். நீங்கள் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் ஃபோன் மூலம் கீ போர்டில் தட்டித்தட்டி இந்த உரையாடும் ரோபோக்களுடன் அளவளாவலாம்!

நமக்கு ஒரு கம்பெனி அல்லது பிராண்ட் பற்றிய விவரங்கள் தேவையெனில் அந்த கம்பெனியின் இணையப் பக்கங்களுக்குப் போனால் இதுபோன்ற உரையாடும் ரோபோக்கள் உங்களிடம் கேள்வி கேட்டு உங்களுக்கு வேண்டிய தகவல்களைத் தந்துவிடும். மனிதத்தொடர்பே தேவையில்லாத இந்த உரையாடும் ரோபோக்கள் செயற்கை புத்திசாலித்தன (Artificial Intelligence, Neuro linguistic Programming) புரோகிராம்கள் மூலம் உருவாக்கப்பட்டவை. இவற்றிற்கு உருவம் கிடையாது! கம்ப்யூட்டர் புரோகிராம்களாக உலவி அவை மனிதர்கள் செய்ய வேண்டிய, வாடிக்கையாளர் தொடர்பான பல வேலைகளை, சும்மா இல்லை, மனிதரை விடப் பல மடங்கு வேகத்தில் செய்துவிடக்கூடியவை. இந்த உரையாடும் ரோபோக்கள் தன்னைத்தானே புத்திசாலியாக்கிக் கொள்ளக்கூடிய வல்லமை படைத்த self learning புரோகிராம்கள்.

இந்த உரையாடலைப் பாருங்கள்:

“எனக்கு ஆயுள் காப்பீடு பற்றித் தகவல் வேண்டும்?”

“சொல்லுங்கள்.”

“நான் அடுத்த வருடம் ரிட்டையர் ஆகப்போகிறேன். எனக்குத் தோதான ஆயுள் காப்பீடு எது என்று சொல்ல முடியுமா?”

உரையாடும் ரோபொ சரியான தகவலை சரேலென்று தன் டேட்டாபேஸிலிருந்து உருவி கேள்வி கேட்பவரிடம் கொடுத்துவிடும். ஆனால் நம் கேள்வி ஆசாமி ஒரு படி மேலே போனால்?

“அடச்சீ! இது எனக்குத் தெரியாதா? நான் ரிட்டையர் ஆன பிறகு பென்ஷனும் சேர்ந்து கிடைக்கும்படியான ஆயுள் காப்பீடு இருக்கா, அதச்சொல்லு?”

“பென்ஷனோடா? உரையாடும் ரோபோவின் டேட்டாபேஸில் இது இல்லை என்றால்?

ரோபோ ஞே என்று விழிக்காது. உடனே அருகில் உட்கார்ந்து அடுத்த சீட் பெண்ணிடம் கடலை போட்டுக்கொண்டிருக்கும் மனித ஆஃபீசரிடம் தள்ளிவிட்டுவிடும்.

“த பாரு! ஒரு கிராக்கி என்னென்னமோ கேக்கறான்! என்னாண்ட தகவல் இல்லை! நீயே பேசிக்க!”

உடனே ஆஃபீசர் உரையாடலைத் தொடருவார். நம் ரோபோ இருக்கிறதே, அது சும்மா பராக்குப் பார்த்துக்கொண்டிருக்காது. ஆஃபீசரின் உரையாடலைக் கவனித்து, தன் டேட்டாபேஸில் சேர்த்துக்கொண்டு அடுத்தமுறை இதே கேள்வி வந்தால் சொல்லுவதற்குத் தயாராகத் தன்னை மேம்படுத்திக்கொண்டு விடும்!

ஆனால் இந்நிமிடம் வரை நாம் பேசினது பூச்சி பூச்சியாய் புரோகிராம் எழுதப்பட்ட ஒரு உரையாடும் ரோபோவிடம்தான், நடுவில் மனித வ்யக்தி வந்து சேர்ந்துகொண்டிருக்கிறான் என்பதையெல்லாம் நம்மால் தெரிந்து கொள்ளவே முடியாது.

பிட்சா ஹட், டிஸ்னி போன்ற கம்பெனிகள் தங்களின் தயாரிப்புகள் பற்றிய விவரங்களை நுகர்வோரிடம் கொண்டுசேர்க்க மிக நல்ல வழியாக இந்த மாதிரியான சாட்பாட்டுகளைப் பயன்படுத்தி வெற்றி கண்டு வருகின்றன. இன்றைய பரபரப்பான இயலான எங்கும் இணையம் என்னும் Internet of Things (IOT) இந்த சாட்பாட்டுக்களை உபயோகிக்கிறது. மிகப்பெரும் கம்பெனிகளான ரெனால்ட், சிட்ரன், ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து போன்றவை கால் சென்ட்டரை அறவே எடுத்துவிட்டு இந்த மாதிரியான சாட்பாட்டுகளைப் பயன்படுத்தி மிக நல்ல பயன்களைக் கண்டு வருகின்றன.

கஸ்டமர் இண்டர்ஃபேஸ் எனப்படும் நுகர்வோருடனான உரையாடல்களில் இந்த உரையாடும் ரோபோக்கள் ஏராளமாகப் புழங்க ஆரமித்துவிட்டன. இந்தியாவில் முக்கியமாக நிதி சம்பந்தப்பட்ட வெப்சைட்டுகள், Bankbazaar,com, Policybazar.com, creditbazar,com, Easypolicy.com போன்றவை இந்த உரையாடும் ரோபோக்களை அதிக அளவில் பயன்படுத்தி கஸ்டமர் சேவையை மிக நல்ல முறையில் வளப்படுத்திக்கொண்டு வருகின்றனர்.

ஒரு வெப் சைட்டுடன் இணைந்த கால் சென்ட்டரை எடுத்துக்கொண்டால், முதலில் நம் ரோபோதான் பேச்சுக்கு வரும். சும்மா பொழுதுபோகாமல் வெப் சைட்டை நோண்டும் ஆசாமிகளை இந்த உரையாடும் ரோபோவே அடையாளம் கண்டு ஒரு சின்ன உரையாடலுக்குப்பின் நைசாக கழட்டிவிட்டுவிடும். இதனால் சம்பளம் கொடுத்து வேலைக்கு வைக்கப்பட்ட மனித ஆஃபீசர்கள் முக்கியமான மற்றும் சீரியஸான கஸ்டமர்களோடு மட்டுமே உரையாடி தங்களின் வேலைத்திறனைச் செயல்படுத்த முடிகிறது. நேர மிச்சம், செலவு மிச்சம்.

ஒரு வெப் சைட்டில் நுழைபவரை அந்த கம்பெனி கஸ்டமராக்கும் முயற்சியில் இந்த உரையாடும் ரோபோக்களின் பங்கு மிக முக்கியமானது. இந்த உரையாடும் ரோபோக்களின் மூலம் Policybazar.com தங்களின் எதிர்கால கஸ்டமர் அடையாளங்களைக் கண்டுகொள்ளும் குறியீடுகளை மூன்று மடங்கு அதிகரித்துக்கொள்ள முடிந்ததாம். அதேபோல புதிய கஸ்டமர்களின் சேர்க்கை 35% அதிகரித்துள்ளதாம்.

Easypolicy.com நிறுவனராகிய நீரஜ் அகர்வாலா, “இந்த உரையாடும் ரோபோக்களால் எங்கள் வெப்சைட்டுக்கு வரும் விஸிட்டர்களுக்கு மிகத் துல்லியமாக உதவ முடிகிறது. அதோடு, கஸ்டமரோடு ஒரு மனித ஆஃபீசருக்கு ஏற்படும் ஈகோ விரிசல்கள் நிகழ்வதே இல்லை. இது எங்களின் இமேஜைப் பெரிதும் உயர்த்துகிறது” என்கிறார்.

மேலும் Bankbazaar,comஐச் சேர்ந்த சசிதர் வாவிலா, “என் கால் செண்டரில் இருக்கும் ஒரு பையனோ பெண்ணொ ஒரு விஷயத்தைத் தேடி எடுத்து கஸ்டமருக்குக் கொடுக்க இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் ஆகிறது. ஆனால் உரையாடும் ரோபோகள் இந்த விவரங்களை ஒன்றிரண்டு வினாடிகளிலேயே கொடுத்து விடுகின்றன” என்று சிலிர்க்கிறார்.

வானிலை, மளிகை, தனிமனித நிதிநிலைத் திட்டம், உலகச் செய்திகள், காப்பீடு, வங்கிச்சேவை என ஒவ்வொரு விஷயத்துக்கும் ஸ்பெஷலாக உரையாடும் ரோபோக்கள் உபயோகத்துக்கு வந்துவிட்டன.

இப்போதெல்லாம் மக்கள் மெஸேஜ் எனப்படும் உரையாடல்கள் மிக அதிகமாக உபயோகிக்கிறார்கள். இந்த உரையாடும் ரோபோக்களும் இதே போன்ற மெஸேஜ் என்பதால் இதன் வீச்சும் மிகப்பரவலாக அதிக வாய்ப்புண்டு. எல்லாப் பெரிய கம்பெனிகளும் இந்த உரையாடும் ரோபோக்களை வாங்கிப்போடுவதில் முதலீடு செய்கிறார்கள். தொழில்நுட்பத்தின் அடுத்த பெரிய மாற்றம் இந்த உரையாடும் ரோபோ என்பது நிபுணர்களின் கருத்து.

“அப்ப இந்த உரையாடும் ரோபோக்கள் பெரிய வரமா?” இல்லை!

வாடிக்கையாளர்களின் கேள்விகளைக் கொண்டு மட்டும் ஒரு விற்பனையை நடத்திவிட முடியாது. சில சமயம் வாடிக்கையாளர்களின் பேச்சைக் கவனித்து சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற்போல் விற்பனை விவரங்களைப் பேச வேண்டும். ஏனென்றால் எல்லா வாடிக்கையாளர்களும் ஒரே மாதிரி இல்லை. இந்த சந்தர்ப்பம்-சார்ந்த, dynamic and contextual என்று சொல்லக்கூடிய விஷயங்களை, முன்பே புரோகிராம் செய்யப்பட்ட இந்த உரையாடும் ரோபோக்களால் சமாளிக்க இயலாது.

இரண்டு விதமான உரையாடும் ரோபோக்கள் இருக்கின்றன. ஒன்று மிகக்குறுகிய, ஒரு விஷயம் சம்பந்தப்பட்ட ரோபோ. இவை அந்த சப்ஜெக்டில் மட்டும், ஏற்கெனவே தயாரித்து வைக்கப்பட்ட கேள்விகளுக்கு, ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருக்கும் பதில்களை, கிளிப்பிள்ளை போலச் சொல்லிக்கொண்டிருக்கும். இன்னொரு வகை, தம்மைத்தாமே கற்பித்துக்கொள்ளும் முன்னேறிய ரோபோக்கள். இவை முன்பே சொன்னபடி செயற்கை புத்திசாலித்தனம் கொண்டு புரோகிராம் எழுதப்பட்ட, ஆனால் செயல்படுத்த கொஞ்சம் சிக்கலான ரோபோக்கள்.

இங்கிலாந்தில் உள்ள அமேலியா என்னும் உரையாடும் ரோபோ ரியல் எஸ்டேட் விஷயங்களைப் பற்றி உரையாடி வாடிக்கையாளர்களுக்கு வேண்டிய தகவல்களைத் தருகிறது.

இந்த உரையாடும் ரோபோக்களைச் செயல்படுத்துவது என்பது டெக்னிகல் சமாசாரம் மட்டும் இல்லை.

வாடிக்கையாளர் ஒருவர் ஒரு நிறுவனத்துடன் உரையாடும்போது என்ன அனுபவத்தைப் பெறுகிறார் என்பதில்தான் வெற்றி இருக்கிறது. அப்படிப்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்தை மிகச்சிறப்பாக்கத்தான் எல்லா நிறுவனங்களும் நாளும் முயலுகின்றன. சில வாடிக்கையாளர்கள் ரோபோவுடன் உரையாடுவதை விரும்புவது இல்லை. கேட்கும் குரலை வைத்து அனுமானம் செய்யமுடியாதாகையால் அவர்கள் சாமர்த்தியமாக சில கேள்விகள் கேட்டு அது ரோபோவா இல்லை மனிதரா என்று அறிந்துகொள்கிறார்கள்.

உரையாடிக்கொண்டே இருக்கும்போது குறுக்கிடுகிறார்கள்.

“ஆமா நேத்து நீ என்ன கனவு கண்டே? உன் கனவில் சமந்தா வருவாளா?”

ரோபோ முழிக்கிறது!

அவ்வளவுதான், நம் வாடிக்கையாளர் பட்டென்று அணைத்துவிட்டுப் போய்விடுகிறார்.

ஆக இந்த ரோபோக்களை புரோகிராம் செய்வதுதான் மிகப்பெரிய சவால். நாள்தோறும் ஏற்படும் மாறுதல்களினால் தினமும் கம்பெனியுடன் உரையாடலுக்கு வருபவர்களின் அனுபவத்தை எப்படி மேம்படச் செய்யவேண்டும் என்பதில்தான் நிறுவனத்தின் முழு கவனமும் இருக்கவேண்டும். அதற்கேற்றாற்போல இந்த ரோபோக்களும் வடிவமைக்கப்பட்டுச் செயல்படுத்தப்படவேண்டும்.

இன்றைய தேதியில் உரையாடும் ரோபோக்கள் மெஸேஜ் மூலமாக எழுத்து வடிவில் நம்முடன் அளவளாவுகின்றன. எதிர்காலத்தில் வாய் வழியே உரையாடும் ரோபோக்கள் நம்முடன் பேச ஆரம்பித்துவிடும். அதற்கான ஆராய்ச்சிகள் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

ஜெர்மனியில் என் மகன் கூகிள் உதவி (Google Assistant) என்று ஒன்றை வாங்கி வைத்திருப்பதைப் பார்த்தேன். அதற்கு Alexa என்று பெயர்.

“அலெக்ஸா! இன்று என்ன வானிலை? என்று கேட்டால், இனிய குரலில் “மேக மூட்டம். 12 டிகிரி” என்கிறது.

ஒரு பாட்டுப் பாடேன், இன்னிக்கு டீவில என்ன சினிமா, வடக்கு ம்யூனிக்கில் என்ன இந்திய ரெஸ்டாரண்ட் இருக்கிறது, அங்கே இன்னி சாயங்காலம் ஒரு டேபிள் ரிசர்வ் பண்ணு போன்ற எல்லாவித ஏவல்களையும் வாய் வார்த்தையாகவும் ஈமெயில் மூலமாகவும் செய்துவிட்டு நீலக்கலரில் விளக்குப்போட்டுக் காண்பித்து மகிழ்கிறது!

இப்பொதெல்லாம் குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களிலும் சாட்பாட்டுகள் வந்துவிட்டன. ஹல்லோ பார்பீ என்னும் மிகப்பிரபலமான பார்பி பொம்மை இப்போது சாட்பாட்டுடன் வருகிறது. குழந்தையுடன் பேசி கதைகள் சொல்லி விளையாடி மகிழ்விக்கிறது. ஐ பி எமின் வாட்ஸன் என்னும் புத்திசாலி சாட்பாட் படிப்பறிவிக்கும் விளையாட்டுப் பொருள்களில் பொருத்தப்பட்டு குழந்தைக்கு விளையாட்டோடு கல்வி போதிக்கிறது.

அதேசமயம் போலிகளும் உலாவுகின்றன. விஷமிகள் கிறுக்குத்தனமான சாட்பாட்டுகளை உருவாகி அவற்றை யாஹூ, கூகிள், போன்ற பெரும் நிறுவனங்களின் மெசெஞ்சர்களில் ஊடுருவிக் குழப்பத்தை உண்டு பண்ணிவிட்ட கதைகளும் உண்டு.

இப்போது இந்த சாட்பாட் துறையைப்பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.

எதிர்கால தொழில்நுட்பங்களைக் கூர்ந்து கவனித்து அடுத்த பத்து வருடங்கள் எப்படி இருக்கப்போகின்றன என்று கணிக்கும் visionary என்னும் தொலைநோக்காளர்கள், இந்த சாட்பாட் துறை எங்கேயோ போகப்போவதாகப் பேசுகிறார்கள். அதற்கான முஸ்தீபுகளை நாம் இப்போதே பார்க்க முடிகிறது. சாட்பாட் தயாரிக்கும் கம்பெனிகளில் முதலீடு செய்வதற்கான ஆர்வம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. சமீபத்தில் வெளிவந்த ஒரு தகவல்படி கிட்டத்தட்ட 180 சாட்பாட் நிறுவனங்கள் 24 பில்லியன் டாலர் (1,56,000 கோடி ரூபாய்) முதலீட்டைப் பெற்றிருக்கின்றனவாம். இதில் முகநூல் மட்டுமே 18 பில்லியன் டாலரைப் பெற்றுவிட்டிருக்கிறது! மற்ற கம்பெனிகள் வருமாறு1:

Slack $540 million
Twilio $484 million
Stripe $440 million
MZ   $390 million
Foursquare $207 million
Interactions $135 million
Kik   $121 million
Skype   $77 million).

இந்த எதிர்கால வளர்ச்சியைப் புரிந்துகொள்ள இதோ இந்த கதையைக் கேளுங்கள்.

மேலே சொன்ன MZ என்னும் நிறுவனம் Game of War என்னும் ஒரு மொபைல் விளையாட்டை அறிமுகப்படுத்த, அது விற்பனையில் தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கிறதாம். அதோடு மட்டுமில்லாது இந்த நிறுவனத்தின் இன்னொரு பாட் நுட்பம் நியூசிலாந்தின் போக்குவரத்தை முழுவதுமாக நிர்வாகம் செய்யக்கூடியதாம்!

Cifuentes என்னும் ஆராய்ச்சியாளர் சொல்வது, “எவ்வளவுதான் மிக அதிகமான சாட்பாட்டுகள் தயாரிப்புக்கள் வந்தாலும், போட்ட முதலை எடுக்கக்கூடிய அளவு திறமையுள்ள பாட் தயாரிப்பவர்கள்தான் நிலைப்பார்கள். மற்றவர்கள் வழியில் செத்து மடிவது நிச்சயம். அதேசமயம் மிக அதிகமான விவாதங்களும் முயற்சிகளும் எடுக்கப்பட்டு, ஒரு பக்கம் செயற்கை புத்திசாலித்தனத்தை கம்ப்யூட்டரில் அதிகரிக்கச் செய்யும் முயற்சிகள் முன்னேற முன்னேற, இந்த சாட் பாட் இயலும் முன்னேறிக்கொண்டேதான் இருக்கும்!”

ஆக, தகவல் தொழில்நுட்பம் நாலு கால் பாய்ச்சலில் ஓடிக்கொண்டிருக்கிறது. நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பத்தை எப்படியெல்லாம் தம் விற்பனைக்கும் பிராண்ட் மேம்படுத்தலுக்கும் உபயோகிக்க முடியும் என்று சிண்டைப் பிய்த்துக்கொள்கிறார்கள். இப்போது வேடிக்கை மட்டும் பார்க்கும் சாதாரணர்களாகிய நாமும் கூடிய சீக்கிரம் தினசரி வாழ்க்கையிலேயே இந்த சாட்பாட்டுக்களை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்த ஆரம்பித்து இந்த ஜோதியில் கலக்கப்போகிறோம்.

கலந்துதான் ஆகவேண்டும் என்கின்றன விஞ்ஞானமும் வர்த்தகமும்.

***********

1 : Source: All of the figures mentioned are part of the VB Profiles data; subscription is required to access full data set. – https://venturebeat.com/2017/03/27/bots-shift-towards-ai-and-garner-24-billion-of-investment/

Posted on 1 Comment

மேகாலயா பயணம்: கடவுளின் தோட்டம் – திருச்செந்துறை ராமமூர்த்தி சங்கர்


‘நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்’ என்று கம்பனும், ‘தேன் அருவி திரை எழும்பி வானின் வழி ஒழுகும்’ என்று திரிகூடராசப்ப கவிராயரும் மேகாலயாவைப் பார்த்தால் நிச்சயம் எழுதுவார்கள். ‘எங்கு பார்த்தாலும் இயற்கைக் காட்சி’ என்னும் திரைப்பாடல்தான் மனதுக்குள் கேட்டுக்கொண்டே இருந்தது. கடவுளின் நாடு கேரளா என்று சொல்லிக்கொண்டால், கடவுளின் தோட்டம் மேகாலயா.

நமது ஊர் ரியல் எஸ்டேட் ஆசாமிகள் இங்கு வந்தால், 11 மணி மலையாளப் படக் காலைக்காட்சியில் குளிக்கும் உன்னி மேரி தீபாவை உற்று நோக்கும் சோமன் போலாகிவிடுவர். இதை Meghalaya Transfer of Land Act ஓரளவு காப்பாற்றியுள்ளது. சில வடகிழக்கு மாநிலங்களை 371வது சட்டப் பிரிவு காப்பாற்றியுள்ளது. எனவே, உள்ளூர் ரியால்டி ஆசாமிகள் மட்டுமே இங்கு இயற்கையை நாசமாக்க முடியும்.

அரசியல்

காங்கிரஸ், மாநிலம் பிறந்த 1972 முதல் ஆண்டு வந்த இடம். அடுத்த முறை பாஜக வரும் என்று பரவலாகப் பேச்சு. மிகச்சிறிய மாநிலம். நங்கநல்லூர் கவுன்சிலர் இந்த ஊர் எம்.எல்.ஏ ஐவிட அதிக வாக்கு வாங்கியிருப்பார்.

நவம்பர் 2015ல், இந்தியாவும் பங்களாதேஷும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, ஷில்லாங்கிலிருந்து கொல்கத்தாவிற்கு பங்களாதேஷ் வழியே சாலைப் போக்குவரத்து 2019லிருந்து தொடங்க இருக்கிறது. இதன்மூலம் 700 கிமீ தூரமும், 20 மணி நேரமும் மிச்சம். வழக்கம்போல், நம் பத்திரிகைகளுக்கு அலியா பட்டின் முகப்பருப் பிரச்சினை முக்கியமானதால், இந்த அல்ப விஷயம் சொல்ல நேரம் கிடைக்கவில்லை.

மோதி அரசின் கவனிப்பு வடகிழக்கு மாநிலங்களை நோக்கியிருப்பதை உள்ளூர் மக்கள் புரிந்து கொள்ளத் துவங்கியிருக்கிறார்கள். பங்களாதேஷுடன் உறவு மேம்பட்டிருப்பதையும், சாலை, நீர் வழிப்போக்குவரத்துக் கட்டமைப்பு ஆகியவை பெரிதும் முன்னேறி இருப்பதையும் ஒப்புக்கொள்கிறார்கள்.

வாழ்க்கை முறை

இது ஒரு தாய்வழிச் சமூகம். பெண்களுக்கே சொத்தும் அதிகாரமும். சுருக்கமாகச் சொன்னால் சீதை இருக்குமிடம்தான் ராமனுக்கு மிதிலை. கட்டிய வேஷ்டியுடன் கணவன், மனைவி வீட்டுக்கு வந்துவிட வேண்டும். 70℅ அரசு வேலைகள். சிறுதொழில்கள் பெண்களால் நடத்தப்பட்டு வருகின்றன.

பெண்கள் சுதந்திரமாக இரவு 12 மணி வரை நடமாடமுடியும். பெண் சிசுக்கொலை அறவே இல்லாத மாநிலம்.

பெரும்பாலும் சர்ச் ஆக்கிரமிப்பு. இருந்தாலும் தங்கள் மூதாதையர், பழங்குடியினர் பழக்கங்களிலிருந்து மாறாத மக்கள். எரிக் என்னும் கிறிஸ்தவரை, ஷாயிசா என்னும் முஸ்லீமிற்கு, வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள். காரணம், இருவரும் காஷி பழங்குடியினர்.

வருத்தப் படவேண்டிய விஷயங்கள்

சில முக்கியமான இடங்களில் மோசமான சாலைகள், குறிப்பாக டாகி (Daki) பகுதியில். ஷில்லாங்கின் போக்குவரத்து நெரிசல். மோசமான பொதுஜன பேருந்துப் போக்குவரத்து. இல்லாத ரயில்வே. பெருமளவில் நடக்கும் சுண்ணாம்புக் கல், கரி குவாரி கொள்ளை. பெரும்பாலும் பங்களாதேஷிற்குக் கடத்தப்படுகிறது என்று சொல்லுகிறார்கள்.

மழையினால் மண் அரிப்பு சில இடங்களில் அபாயகரமான அளவில் இருக்கிறது. பெருமளவில் நிகழ்ந்துவிட்ட கிறிஸ்துவ மதமாற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தல். போதை மருந்து பரவல் இன்னொரு முக்கியப் பிரச்சினை.

பொறாமைப் படவேண்டிய விஷயங்கள்

10 மாதம் பெருமழை. மீதம் 2 மாதமும் மழையும் தூறலும். ஷில்லாங் தவிர்த்து, பார்த்த அனைத்து இடங்களிலும் ‘மொபைல் இன்றி’ மைதானத்திலும், தெருவிலும் விளையாடும் குழந்தைகள், இளைஞர்கள். கிராமியத் தொழில்கள் (விவசாயம், மூங்கில், விளக்குமாறு தயாரித்தல்) பாதுகாப்பு. அரசின் உதவி, தலையீடு இரண்டும் இருக்கின்றது. குற்றங்கள் மிக மிகக் குறைவு.

பொதுவான விஷயங்கள்

அசைவர்களுக்குப் பிரச்சினையில்லை. சைவர்கள் என்றால், பிரட்டை க்ராண்ட் ஸ்வீட்ஸ் புளிக்காய்ச்சலில் தடவி விழுங்கும் கலையைக் கற்றுக்கொள்ளவேண்டும். ஷில்லாங்கில் போலீஸ் பஜார் என்னும் பிரபலமான கடைவீதியில் திருச்சிக்கார ராஜரத்தினம் ‘மெட்ராஸ் கபே’ வைத்திருக்கிறார். ‘மணச்சநல்லூர் பக்கத்துல நிலம் இருக்கு சார். மழைதான் இல்லை.’

சிரபுஞ்சியில் மதுரைக்காரரின் ‘ஆரஞ்சு ரெஸ்டாரெண்ட்’ இருக்கிறது என்பது ஆறுதல். அசைவர்களுக்கு பன்றி, மீன், மாடு பரவலாகக் கிடைக்கிறது.

ஆங்கிலம் அனைவருக்கும் புரிகிறது. என் ஹிந்தி சவுகார்பேட் தமிழுக்கு ஒப்பானது. இருந்தும் புரிந்து கொண்டார்கள். கவுஹாத்திக்கு விமானம் / ரயில் மூலம் வந்து கார்/பஸ்ஸில் மட்டுமே ஷில்லாங் செல்லமுடியும். பொதுவாக டாக்ஸிக்கார்கள் நம்மூர் ஆட்டோ போல் கொள்ளை இங்கும். நேரடியாக 50℅ -75% குறைத்துப் பேசப் பழகிக்கொள்ளவேண்டும்.

கொஞ்சம் பங்களாதேஷி, அசாமி, திபேத்திய, சீன, நேபாளிக் கலப்பு சாயலில் மக்கள். ஒருவர் தோற்றத்தை வைத்து பூர்விக மேகாலயர் என்று அறுதியிடுவது கடினம்.

இங்கு மட்டுமே கிடைக்கும் என்று எந்தப் பொருளும் இல்லை. வாங்கி ஏமாறவேண்டாம். திருச்சி தம்பு பெல்ட் ஸ்டோரில் அதே இடுப்பு பெல்ட் கிடைக்கிறது. பிரம்பு சாமன்களுக்கு கவுஹாத்தியில் அரசே நடத்தும் கடை இருக்கிறது.

ராணுவத் தளங்கள் இங்கு நிறைய உள்ளன. திபேத், 1962 ஹிந்தி-சீனி பாய் பாய் முட்டாள்தனம், அருணாச்சல் என்று நம்பத்தகாத கூட்டமாகவே சைனா இருந்துவருவதால் ஏகப்பட்ட பாதுகாப்பு. நம் நாட்டு கம்யூனிஸ்ட்டுகள் இன்னும் அவர்களின் அழுக்கு அடியாட்களாக இருக்கிறார்கள்.

நெட் – 4G அடிக்கடி போய்விடும். லேப்டாப் கொண்டுவந்து ஆஃபீஸ் வேலை செய்யலாம் என்று நினைப்பவர்கள் இதனைக் கவனத்தில் கொள்க.

தெருவெங்கும் செல்ஃபி புள்ளைகளின் அட்டகாசம். இளைஞர்கள் பல்சரில் கிங் ஃபிஷர் பாட்டில்களுடன் வருகிறார்கள். மலச்சிக்கலுடன் அர்ஜித் சிங் தவிக்கும் போது பாடிய பாடல்களை இயர்ஃபோனில் கேட்டுக்கொண்டு இளைஞிகள் வழியில் நிற்கிறார்கள். எல்லா இடத்திலும் நுழைவுக்கட்டணம். அதிகபட்சம் 20 ரூ. ஆனால் காமெராவுடன் சென்றால் 100ரூ-500ரூ. பி.சி.ஸ்ரீராம் ஆகும் உங்கள் உள்ளக் கிடக்கையைக் கண்ட்ரோல் பண்ணித்தான் ஆகவேண்டும்.

கவுஹாத்தியில் காமாக்யா கோவில், காசிரங்கா காடு, பிரம்மபுத்திரா படகு சவாரி… இவையெல்லாம் நான் அடுத்த முறை அசாம் வரும்போதுதான். எங்கள் திட்டத்தன்று தலாய் லாமா வந்திருப்பதால் ஏராளமான பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடுகள்.

பார்க்க வேண்டிய இடங்கள்

(மார்ச் 15 முதல் ஏப்ரல் 15 சமயத்தில் மழை அதிகம் இருக்கும் என்பதை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.)

நாள் 1 & 2

Elephant falls ( ஷில்லாங்கிலிருந்து 10 கிமீ)

இந்திய விமானப்படையின் ஏர்ஃபோர்ஸ் மியூசியம் (Elephant falls அருகில்)

வியூ பாயிண்ட் ( மியூசியம் அருகில்)

ஷில்லாங் கோல்ஃப் கோர்ஸ்

ஷில்லாங் வார்ட்ஸ் ஏரி

ஷில்லாங் லேடி ஹைடர் ஏரி

ஷில்லாங் டான் பாஸ்கோ மியூசியம்.( சுவிசேஷ நெடி தூக்கல். இருந்தாலும் சில உபயோகமான தகவல்கள் உண்டு. ரூ 100 நுழைவுக் கட்டணம்)

உமியம் ஏரி ( இதுதான் தவறவிடக்கூடாதது. மாலை 4 வரை மட்டுமே).

நாள் 3

சிரபுஞ்சி ( 60 கிமீ).

வா கபா நீர்வீழ்ச்சி

நோ கா லிக்காய் நீர்வீழ்ச்சி ( சிரபுஞ்சி வழி)

மவுஸ்மாய் குகை

செவன் சிஸ்டர் நீர்வீழ்ச்சி

ராமகிருஷ்ணா மடம்

நாள் 4

ஷன் படோங் / டாகி – பங்களாதேஷ் எல்லை. 65 கிமீ. இங்கிருந்து சமவெளியைப் பார்த்தால் பங்களாதேஷிகள் அதே டாகி நதிக்கரையில் விடுமுறையை முன்னிட்டு ஈசல் போல். மேலும் அவர்கள் ஊர் மணல் கொள்ளை. வழி எங்கும் BSF செக் போஸ்டுகள். Dakiயில் படகில் செல்வதைவிட இன்னும் சற்று தூரம் மலையில் மேலே சென்று ஷான் படாங்கில் படகில் செல்லவும்.

மாவ்லிலாங் ( ஆசியாவிலேயே சுத்தமான கிராமம் – ஷான் படோங் வழி.) போகும் வழி ஒரு கவிதை. மழை நாளில் ஆஸ்ட்ரிக்ஸின் கிராமம் போலிருக்கும் என்று நினைக்கிறேன். அதிக எதிர்பார்ப்பினால், சற்று ஏமாந்த ஒரு இடம்.

மரக்கிளைகளாலான இயற்கைப் பாலம்( மாவ்லிலாங் அருகில்).

டூரிசம் வலைத்தளங்களில் நல்ல படங்களும் தகவல்களும் கிடைக்கின்றன.

ஆனால் இந்தியர்கள் நல்ல டூரிஸ்டுகள் அல்ல. இரைச்சல், குப்பை போடுவது, வழியை மறித்து நின்று கொண்டு செல்ஃபி எடுப்பது, இயற்கை அழகை ரசிக்காமல் சத்தமாக ஹனிசிங் பாடலோடு தண்ணியடித்து நடனமாடுவது என்று நம்மைத் தரம் தாழ்த்திக்கொண்டு விட்டோம். நம்மைப் பொருத்தவரை இந்த இடம் பார்த்தாகிவிட்டது என்ற டிக் பாக்ஸ் அப்ரோச்தான் இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக அடுத்த தலைமுறை அழகுணர்ச்சி இல்லாத இயந்திரங்களாகிவிட்டதைப் பார்க்கமுடிகிறது. அவர்களில் பெரும்பாலோர்க்கு நீர்வீழ்ச்சியைவிட நியான் விளக்கு ஃபினிக்ஸ் மால்தான் பிடித்திருக்கிறது என்பதுதான் நமது பெரிய வீழ்ச்சி.

Posted on Leave a comment

பிக் டேட்டா – சுஜாதா தேசிகன்

அலுவலகத்தில் இருந்தேன். என் பத்து வயது மகன் தொலைப்பேசினான்.

“சுப்பாண்டி காமிக்ஸ் ஆன்லைனில் ஆர்டர் செய்துவிடு” என்றான்.

“இப்ப மீட்டிங்கில் இருக்கேன்… அப்பறம்.”

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் தொலைப்பேசி அழைப்பு.

“என்ன ஆர்டர் செஞ்சாச்சா?”

“ஃபிளிப் கார்ட்டில் இல்லையே…”

”ஐயோ அப்பா… கூகிளில் சுப்பாண்டி என்று தேடு… அமேசான், ஸ்னாப் டீல்… நிறைய வரும் விலையுடன்… எது சீப்போ அதை வாங்கு…”

இந்தச் சம்பவத்துக்கும் ‘பிக் டேட்டா’வுக்கும் தொடர்பு இருக்கிறது. கோயில் கல்வெட்டு பார்த்திருப்பீர்கள். அது ஒரு விதமான தகவல். நம் கணினியில், தாத்தாவின் டைரியில் இருப்பது எல்லாம் தகவல்களே.

உதாரணத்துக்கு உங்கள் தாத்தாவின் டைரியில் நான்கு என்ற குறிப்பைப் பார்க்கிறீர்கள். அது வெறும் எண். அது தகவல் ஆகாது. ஆனால் அதே தகவலுக்கு முன் வேஷ்டி என்று இருந்தால், அது சலவைக் கணக்கு என்று சுலபமாகப் புரிந்துவிடும்.

டைரியை மேலும் திருப்பினால் மீண்டும் நான்கு வேஷ்டி என்று வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் மாதம், தேதி, கிழமையைப் பாருங்கள். அதிலிருந்து எதாவது தகவல் கிடைக்கலாம். உதாரணமாக உங்கள் தாத்தா மாதா மாதம் திங்கட்கிழமை நான்கு வேஷ்டி சலவைக்குக் கொடுக்கிறார். அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சலவைக்காரர் வருகிறார் என்று சிலவற்றை யூகிக்கலாம்.

நான்கு என்பது டேட்டா. அது வேறு ஒன்றோடு தொடர்புப்படுத்தப்படும்போது தகவல் ஆகிறது. இதே டைரி ஆர்.கே.நகரில் கிடைத்தால்? சலவை நோட்டுக்களாக இருக்கலாம்.

மார்ச் 19, 2017 ஹிந்து பத்திரிகையில் ‘Raise in H1N1 cases, but no need to panic’ என்று ஒரு கட்டுரை புள்ளிவிவரத்துடன் வந்தது. இன்று H1N1 பழக்கப்பட்ட பெயராகிவிட்டது. ஆனால் 2009ல் இந்தப் பன்றிக் காய்ச்சல் வந்தபோது உலகமே பதறியது. பலர் உயிரிழந்தார்கள். எங்கே எப்படிப் பரவுகிறது என்று கண்டுபிடிக்க கஷ்டப்பட்டார்கள். இந்த சமயத்தில் ‘நேச்சர்’ (Nature) என்ற அறிவியல் இதழில் கூகிள் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டது. 2003-2008ல் மக்கள் ‘இருமல், காய்ச்சல்’ என்ற வார்த்தைகளை எப்போது தேடுகிறார்கள், அந்தத் தொடர்பை வைத்துக் காய்ச்சல் எப்போது எங்கெல்லாம் பரவியது என்று கணித்தது. இவர்கள் தேடிய எண்ணிக்கை ஐம்பது மில்லியன் வார்த்தைகள்.

2009ல் H1N1 பரவ ஆரம்பித்தபோது, 450 மில்லியன் தகவல்களைத் தேடி அதிலிருந்து 45 அடிக்கடி தேடும் சொற்களைக் கண்டுபிடித்து, கணித சூத்திரம் கொண்டு எங்கெல்லாம் பரவுகிறது என்று கணித்தது. கூகிள் செய்த விஷயத்துக்கு இன்னொரு பெயர் ‘பிக் டேட்டா.’

டிவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடகங்களில் நீங்கள் பகிரும் ஒவ்வொரு விஷயமும் ஏதோ ஒரு விதத்தில் எங்கோ உபயோகப்படுத்தப்படுகிறது.

மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா கடந்த ஆறு மாதங்களில் கூகிளில் எப்படித் தேடப்பட்டார் என்று நீங்கள் பார்க்கலாம். இதில் இன்னும் நுணுக்கமாக திருச்சியில் எவ்வளவு பேர் தேடினார்கள், பெங்களூரில் எவ்வளவு பேர் தேடினார்கள் என்று கண்டுபிடிக்கலாம்.

நீங்கள் முகநூலில் பதிவிடும் ‘குட்மார்னிங்’ மொக்கைகளையும் ஒருவர் கணக்கு எடுத்துக்கொண்டு இருக்கிறார். நாளைக்கே பெங்களூரில் இருப்பவர்கள்தான் அதிகம் மொக்கை போடுகிறார்கள் என்று புள்ளிவிவரத்துடன் வெளியிடப்படலாம். முகநூலில் கோடைக்கால விடுமுறையின்போதும், கிருஸ்துமஸுக்கு முன்பும் நிறைய பேர் ‘Break-up’ என்று பதிவிடுகிறார்கள் என்கிறது இன்னொரு புள்ளிவிவரம். டிவிட்டரில் வரும் டிரெண்ட் எல்லாம் இந்த சமாசாரம்தான்!.

x-x-x-x-x-x

2003ல் தன் தம்பியின் திருமணத்துக்கு விமானம் பிடித்துச் செல்கிறார் Oren Etzioni. திருமணத்துக்கு முன்பே விமான டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட்டார். விமானத்தில் பயணம் செய்யும்போது பக்கத்தில் இருந்தவரிடம் பேச்சுக் கொடுத்தார். பேச்சுக்கு நடுவில், “நீங்க எப்ப டிக்கெட் புக் செஞ்சீங்க? எவ்வளவு ஆச்சு?” என்ற கேள்விக்கு அவருக்குக் கிடைத்த பதில் ஆத்திரமூட்டியது. பக்கத்தில் இருந்தவர் சமீபத்தில்தான் வாங்கியிருந்தார். வாங்கிய விலை மிகக் குறைச்சல். பக்கத்தில் இருந்த இன்னொருவரிடம் கேட்டார். அவரும் குறைந்த விலையில்தான் வாங்கியிருந்தார். அந்த விமானத்தில் இருந்த பலர் குறைந்த விலையில்தான் டிக்கெட் வாங்கியிருந்தது ஓரனுக்குத் துரோகமாகப் பட்டது. வீட்டுக்கு வந்தபிறகு யோசித்தார்.

விமான டிக்கெட் விலை எல்லாம் பயண வலைத்தளத்திலிருந்து எடுத்து ஆராய்ந்தார். ஏன், எப்போது விலை குறைகிறது என்று தெரியவில்லை. ஆனால் விலை எப்போது, அதிகம் எப்போது கம்மி என்று பன்னிரண்டாயிரம் மாதிரிகளை வைத்து ஒரு நிரல் (ப்ரோக்ராம்) எழுதினார். அந்த நிரல் ‘டிக்கெட் வாங்கலாமா வேண்டாமா’ என்று சொல்லிவிடும். இதற்கு ‘Farecast’ என்று பெயர் சூட்டினார். நீங்கள் உங்கள் பயணத் தேதி, போகும் இடம் ஆகியவற்றைக் கொடுத்தால் “இன்னும் ஒரு வாரம் பொறுங்கள், டிக்கெட் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது” என்று சொல்லும்.

இதனிடையில், ஓரானுக்கு பிளைட் டேட்டா பேஸில் உள்ள தகவல்கள் கிடைக்க, ஒரு வருடத்தில் 10ஆம் நம்பர் சீட்டுக்கு என்ன விலை என்று கூடத் தெரிந்துவிட்டது. சாதாரண டேட்டாவை புத்திசாலித்தனமாக உபயோகித்தால், பேசும்.

டேட்டா என்றால் வெறும் எண்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம். உங்கள் படம், வீடியோ, நீங்கள் உபயோகிக்கும் மொபைல், நீங்கள் போகும் இடங்கள், நீங்கள் வாங்கும் பொருட்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். எல்லாமே டேட்டாதான்.

ஒரு உதாரணம் பார்க்கலாம். சென்ற வாரம் திருச்சிக்கு ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் செய்தேன். திருச்சிக்குக் கிளம்பிக்கொண்டு இருக்கிறேன். கூகிள் எனக்குத் தகவல் அனுப்பியது, ‘திருச்சியில் நாளை வெய்யில் கொஞ்சம் அதிகம்’ என்று.

உங்களிடம் மொபைல் இருந்தால் உங்கள் பாதை கண்காணிக்கிறது. ஏப்ரல் மாதம் நான் பயணம் செய்த இடங்கள் என்று தேடிய போது கிடைத்த தகவல் இது

போன வருஷம் எங்கெல்லாம் சென்றேன் என்று கூகிளிடம் கேட்டபோது கிடைத்த தகவல், 87 இடங்கள். ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு நேரம் இருந்தேன், எந்த சுங்கச்சாவடியில் எவ்வளவு நேரம் வரிசையில் இருந்தேன் என்று எல்லாத் தகவல்களும் கிடைக்கின்றன. இந்த மாதிரி ஒன்று இருக்கிறது என்று உங்கள் மனைவிக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு!

ஆச்சரியம் போதவில்லை என்றால் மேலும் சில விஷயங்கள் இருக்கின்றன. நான் தினமும் அலுவலகம் செல்லும் வழி, சராசரி கிளம்பும் நேரம், திரும்பும் நேரம் முதலியவற்றை கூகிள் குறித்து வைத்துக்கொள்கிறது. அப்போதைய டிராஃபிக் எப்படி இருக்கிறது என்று பார்த்து, “வீட்டுக்கு இப்ப கிளம்பினா கிட்டதட்ட 20 நிமிடம் லேட்டாகும்” போன்ற தகவல்களைத் தருகிறது. மேலும், நான் எந்த சமயம் நடந்தேன், எப்போது காரில் போனேன், எப்போது பைக்கில் போனேன் என்று கூடச் சொல்கிறது!

அமேசானில் ஏதாவது சுயசரிதை அல்லது சிறுகதைத் தொகுப்பை வாங்கினால் சில மணியில் அந்த எழுத்தாளர் எழுதிய வேறு சில புத்தகங்கள் அல்லது மேலும் சில சுயசரிதைகள் உங்களுக்குப் பரிந்துரைக்கப்படுவதைப் பார்த்திருப்பீர்கள்.

கடன் அட்டையில் (credit card) நீங்கள் வாங்கும் பொருட்களைக் கொண்டு ஆணா பெண்ணா, உங்கள் வயது, விருப்பு வெறுப்பு என்று பல விஷயங்களைக் கண்டுபிடிக்கலாம். அமேரிக்காவில் ஒரு டீனேஜ் பெண்ணுக்கு, கர்ப்பிணிகளுக்குத் தேவையான பொருட்கள் வாங்க தள்ளுபடி கூப்பன் அனுப்பியது. அதைப் பார்த்த அவர் அப்பா அந்த கம்பெனியின் மீது புகார் கொடுத்தார். ஆனால் அவருடைய டீன் ஏஜ் பெண் கர்ப்பம் என்று பிறகுதான் அவருக்கு தெரிந்தது. அவருக்கு முன்பே கிரெடிட் கார்ட் கம்பெனிக்குத் தெரிந்திருந்தது.

ஒரு சினிமா தியேட்டரில் நீங்கள் உட்காரும் சீட்டில் சென்சர் பொருத்தினால் மக்கள் எப்படி உட்காருகிறார்கள் என்று கண்டுபிடிக்கலாம். இடைவேளையின்போது எவ்வளவு பேர் எழுந்து போனார்கள், நயந்தாரா வந்தபோது எவ்வளாவு பேர் நெளிந்தார்கள் என்று பல விஷயங்களைக் கண்டுபிடிக்கலாம்.

நாம் தினமும் உபயோகிக்கும் கூகிளில் தப்பாக ஏதாவது டைப் செய்து பாருங்கள். உடனே சரியான வார்த்தையைப் பரிந்துரைக்கும். இது எல்லாம் பிக் டேட்டா சமாசாரங்கள்தான். நீங்கள் தேடும் விஷயத்தில் எத்தனையாவது லிங்கை கிளிக் செய்கிறீர்கள், கிளிக் செய்த இடத்தில் எவ்வளவு நேரம் இருக்கிறீர்கள்… எல்லாம் தகவல்களே!

இன்னும் பத்து வருஷத்தில் இந்தத் துறை எங்கோ செல்லப் போகிறது. உங்கள் டி.என்.ஏ, மருத்துவ ரிப்போர்ட், அதனுடன் செயற்கை நுண்ணறிவு என்று எதை எதையோ செய்யப் போகிறார்கள்.

பாய்ஸ் படத்தில் செந்தில் ஒரு கோயிலுக்குமுன் படுத்திருப்பார். ஓர் இளைஞன் ஜூனியராக வந்து சேர்ந்துகொள்வான். செந்தில் அந்தப் பையனுக்குத் தரும் வேலை – வேளா வேளைக்கு விதவிதமான கோயில் பிரசாதம் வாங்கி வரும் வேலை! அந்த இளைஞன் ‘இது எல்லாம் ஒரு பொழப்பு’ என்று எரிச்சலாகச் சொல்லும்போது செந்தில் சொல்லும் வசனம், “நான் உனக்குத் தருவது சோறு இல்லை, இன்பர்மேஷன். இன்பர்மேஷன் இஸ் வெல்த்” என்பார்.

இன்ஃபர்மேஷன் இஸ் வெல்த். இதுதான் பிக்டேட்டாவின் அடிநாதம்.

Posted on Leave a comment

ஒரு நொடி [சிறுகதை] – லதா ரகுநாதன்

கண்ணாடியில் தீர்க்கமாகப் பார்த்தாள். கறுப்புக்கண்களில் எப்போதும் தெரியும் மெல்லிய சோகம் ஒரு அழகு. அது பளபளப்பாகத் தெரியும்படி அதில் காணப்படும் ஒரு திரை போன்ற கண்ணீர் அந்தக் கண்களுக்கு வரம். சற்றே தூக்கலான சிறிய மூக்கு, நேர்த்தியான சிவப்பு. சும்மா சொல்லக்கூடாது. அழகுதான்.

ஆனால் இன்று…

ஏதோ ஒரு முன்பகல் நேரம். வேலை, அது எப்போதும் ஒன்றேதான். இப்படிப் போகும்போது ஒருமுறை , திரும்பி வரும்போது இன்னும் கொஞ்சம் அதிக நேரம் நின்று, சில போது பற்பசை விளம்பரம் போல் சிரித்து, சில முறை குரங்குபோல் முகம் குவித்து, அட, எல்லாம் கண்ணாடி முன்தான்.

அன்றும் அதே போல் ஒரு நேரத்தில், முகத்தை இப்படிச்செய்து ரசித்துக்கொண்டிருக்கும்போது, அழகிய மூக்கின் கீழ், சிவந்த உதட்டின் மேல், லேசாக கறுப்போடி இருப்பதுபோல் தெரிந்தது. ஒரு கைதேர்ந்த புகைப்படக்காரரின் படைப்பில் தூக்கலாகத் தெரியும் கறுப்பு வெள்ளை போல். ஆமாம்,லேசாகப் பூனைமயிர் போல். அதேதான். வெள்ளை முகத்தில் கொஞ்சம் தெளிவாகவே.

கடவுளே, மீசையா? எனக்கா?

இதற்குப்பின், ஆமாம், நீங்கள் நினைத்தது மிகவும் சரி. கண்ணாடி முன் நிற்கும் காலநேரம் கூடிப்போனது. பார்வையின் ஃபோகஸ், இப்போது இடுப்பில் இருக்கும் மடிப்பு, லேசாக உப்பித்தெரியும் மேல்தொப்பை, சீப்புப்பல்களில் சிக்கிச்சுற்றிய தலை முடி, இவையாவும் இல்லாதுபோய், மேல் உதடு மட்டுமே என்று மாறிப்போனது.

“அம்மா. என்னைப் பாரேன்.” “புதுசா என்ன? பாத்துக்கிட்டேதான் இருக்கேன்.” “முகத்துலே ஏதேனும் மாறுதல்?” “ஏண்டி? பல்லெல்லாம் விழுந்து மொளச்சாசில்ல… இப்ப என்ன கேடு?” “அம்மா… பாரு… உதட்டுக்கு மேல பாரு.” சாளேச்வரம் மிகுதியால் போடப்பட்ட சோடாபுட்டி வழி பூதாகரமாகத் தெரிந்த கண்கள் அவள் மிக அருகில்.

“ஒண்ணுமில்லையே…” “சரியாப்பார்… மீசைமா.”

ஒன்றும் புரியாமல் கண்களை அபாரமாகப் பெரியதாக்கி, திருஷ்ட்டிப் பூசணிக்காய் போல் அளித்த காட்சி, அவளுக்கு கொஞ்சம் குதூகலமளித்தாலும், முகத்தில் உள்ள பிரச்சினை மிக முக்கியமான ஒன்றாகத் தோன்றியதால் சிரிக்காமல் முகத்தைக் கொஞ்சம் கடுமையாகவே வைத்துக்கொண்டாள். “ஆமா… லேசா கருப்போடிதான் கிடக்கு… சொன்னா கேட்டியா? குளிக்கும்போது மஞ்சள் தடவுன்னு எத்தனை முறை சொல்லி இருப்பேன். அப்போதெல்லாம் ஃபாஷன். இப்போ பாரு ஆம்பளை காமாஷி போல… நல்ல வேளை. இப்போதான் வளரத் தொடங்கி இருக்கு. ரெண்டு வேளையும் மஞ்சள் பூசு… உதுந்துவிடும்.”

அன்று ஆரம்பித்தது வினை.

முதலில் மஞ்சள் பெளடரா அல்லது மஞ்சள் கிழங்கா? பெரிய விவாதத்துக்குப் பிறகு கிழங்கு என்று முடிவானது. இரவில் படுக்கப்போகுமுன் முகம் கழுவி, மஞ்சள் விழுது அரைக்கப்பட்டு, முகம் முழுவதும் பூசாமல் வாயைச் சுற்றி மட்டும் கரகரவென்று தேய்க்கப்பட்டு, அடுத்த நாள் காலையில் குளிக்கும்போது மறுபடி ஒருமுறை பூசப்பட்டு, சில காலம் ரோட்டில் பிச்சை எடுக்கவரும் ஹனுமான் கணக்காக, வாயைச்சுற்றி சிகப்புக்கலந்த மஞ்சள் நிறத்தோடு அலைந்துகொண்டிருந்தாள்.

மஞ்சள் கிலோகணக்கில் அரைத்துத் தீர்ந்தது மட்டும்தான் நடந்தது. மீசை… நாளொருமேனியும் பொழுதொரு வனப்பும் கூடித்தான் நின்றது.

இந்த ஹனுமான் ரூபம் பெரும் மனக்கஷ்டத்தைக் கொடுக்கத் தொடங்கியபோது, இது அவ்வளவாக உபயோகப்படாத வழி என்றும், அம்மாவை நம்பி தன் அழகைக் கெடுத்துக்கொள்ள கூடாதென்ற சுயஉணர்வும் வந்த ஒருபொழுதில்தான் பக்கத்து வீட்டு மாலதி அக்கா பார்வையில் பட்டாள். காலேஜ் போகும்போது அவள் பின்னால் போகும் ஒரு கூட்டம். திரும்ப வரும்போது மற்றுமொரு கூட்டம். இதுவே போதுமானதாக இருந்தது அவள் அழகி என்பதற்கு.

ஒரு ஞாயிறு மதியம். பாட்டி மற்றும் அம்மாவின் குறட்டை ஒலிகள் கிடுகிடுத்து எகிறும் ஒரு வேளையில், மாலதியின் வீட்டிற்குச் சென்றாள். கைகளில் நெய்ல் பாலீஷ் இட்டு அது காய்வதற்காக வெளியே வெய்யிலில் கைகளைக் காட்டியபடி நிற்கும் மாலதி அக்கா. அதை ப்ளாட்ஃபார்ம் ஓரம் நின்று ரசித்து நின்ற ரங்கு மற்றும் சுப்பு, சப்பை, குள்ள கார்த்தி இவர்களை ஒதுக்கிவிட்டு…

“அக்கா… உள்ளார போலாம் வா… உங்ககிட்ட முக்கியமா பேசணும்.”

மாலதி அதை அவ்வளவாக ரசிக்காவிட்டாலும் முக்கியமான செய்தி எதுவாகிலும் இருக்கக்கூடும் என்ற ஆவலில் விருட்டென்று தலையை ஒரு சிலுப்பு சிலுப்பி , கூந்தல் அலைகளைப் பறக்கவிட்டாள். அதில் ப்ளாட்ஃபார்ம் ரோமியோக்களின் மனதையும் சிதைக்க விட்ட காட்சி அவள் மனதில் அழுத்தமாகப் பதிந்து, வீடு சென்ற பின் அதைப் பழக்கப்படுத்திப் பார்க்கவேண்டிய கட்டாயம் ஒன்றும் ஏற்பட்டது.

பாதி காய்ந்திருந்த கை நகங்களை ஊதியபடி நின்ற மாலதியின் உதடுகளைப் பார்த்தாள். பளபளபள.

“அக்கா. நீதான் எனக்கு உதவணும். என் மேல் உதட்டைப் பாரு. பெரிசா கருகருன்னு வளந்துடுமோ பயமா இருக்குக்கா. என்ன செய்ய. உனக்குதான் எல்லாம் தெரியுமே. ப்ளீஸ் சொல்லுக்கா.”

உற்றுப் பார்த்த மாலதி அசந்தர்ப்பமாய்ச் சிரித்தாள். பின் தன் கை நகங்களை ஊதிக்கொண்டே, “ரேசர்தான். நீதான் ப்ளேட் போடுவன்னு பார்த்தா நீயே ப்ளேட்போடனும் போல இருக்கே.”

“அக்கா, ப்ளீஸ்…” கண்ணீரின் முதல் தளுக்.

“அய்ய… எதுக்கு அழுவற. எல்லாத்துக்கும் வழி இருக்கு. மயிலாப்பூர்லே புதுசா ஒரு ப்யூட்டி பார்லர் திறந்திருக்கு. நான் அங்கேதான் என் ஐப்ரோ திருத்த போகிறேன். போகும்போது இதையும் கேட்டு வரேன். எடுத்துடலாம்.”

மாலதி கேட்டு வந்தாள். ஆனால் இவள் போகவில்லை. இதற்காக மாலதியிடம் பார்லர் சொல்லி அனுப்பிய தொகை மிகவும் அதிகமாக மனதிற்குப்பட்டதாலும், அது ஒரு தடவையோடு நிற்காது என்ற தெளிவாலும் இவள் போகவில்லை. ஐப்ரோ திருத்தப்பட்ட மாலதியின் முகம் அருகில் பார்த்தபோது அங்கே பச்சை ஓடி சற்று விகாரமாகத் தெரிந்து பயமுறுத்தியதும் ஒரு காரணம்.

மீசை அதிகம் வளராவிட்டாலும், அவள் கவலைகளுக்கு ஒரு விமோசனம் வந்தாற்போல் தோன்றியது புயூமைஸ் ஸ்டோன். கல் வடிவத்தில். கைக்கு அடக்கமாக. தூரத்துச் சொந்தம் ஒருத்தி அவளிடம் இதைக் கொடுத்தபின் இட்ட கட்டளை, காலை மாலை இருவேளையும் முகத்தில் வேண்டாத ரோமம் இருக்கும் இடங்களில் க்ளாக் வைஸ்சாக வட்ட சுழற்சியில் பத்துமுறை சுற்றவேண்டும். அதற்கு முன் நன்றாக சோப் இட்டு இடத்தைப் பதப்படுத்தவேண்டும்.

ஆக, ஏதோ லாப் எக்ஸ்பிரிமெண்ட் போன்ற இந்த முறையைப் பயன்படுத்தியபோது, அந்தக் கல்லில் இருந்த துளைகளில் மாட்டிப் பிடுங்கப்பட்ட வலி தாங்காமல் இதுவும் கைவிடப்பட்டது.

செமஸ்டரில் வாங்கிய அதி குறைந்த மதிப்பெண்கள் கூட மனதைப் பாதிக்க இயலா வண்ணம் அவள் மனதில் இருந்தது அந்த ஒரே ஒரு பிரச்சினை மட்டுமே. இந்த பிரச்சினையின் அடிவரை சென்று பார்த்துவிடும் நோக்கத்தோடு, இதைப்பற்றிய கட்டுரைகளில் அவள் மூழ்கி இருந்த நேரம்.

“அப்பாவின் சினேகிதருக்கு தெரிந்தவராம். பிள்ளை நன்றாகப் படித்து நல்ல வேலையில் கை நிறைய சம்பாத்தியம். போட்டோ பார்த்து பிடிச்சுடுத்தாம். நாளைக்கு உன்னை பொண் பார்க்க வரலாமான்னு கேட்டு அனுப்பி இருக்கா… படிப்பு முடிச்சு கல்யாணம்ன்னும் சொல்லிட்டா. இன்று நீ காலேஜ் போகவேண்டாம் கேட்டியா…”

அவளுக்குக் கல்யாணம், படிப்பு இதெல்லாம் அவ்வளவாகக் கவலை கொடுக்கக்கூடியது இல்லை. ஆனால் இந்த மீசை? கடவுளே… அவர்கள் வரும்போது தயவு செய்து கரண்ட் இல்லாமல் செய். இருட்டாக இருந்தால் தெரியாது.

“எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பையன் பொண்ணோட கொஞ்சம் தனியா பேச நினைக்கிறான்.”

“பேசலாம். பால்கனி இருக்கு. சேரும் இருக்கு. போய் செளகர்யமா உட்கார்ந்து பேசலாம் கேட்டேளோ…”

“உஷ். அம்மா, பால்கனி வேண்டாம். உள்ளே ரூம்மில் போய் பேசறோம்.”

“சட். சும்மா இரு. தனியா இருளோன்னு கிடக்கு. போ பால்கனிக்கு. இந்த காபியையும் கையிலே கொடு.”

அவளுக்குத்தான் அவனை நேரில் நிமிர்ந்து பார்க்கத் தயக்கம், நாணம், இப்படியாகப்பட்ட காரணங்கள் ஏதுமில்லை. மேலுதட்டின் மேல் கறுப்போடியதைப் பார்த்துவிட்டால். அந்த பயம். முடிந்தவரை கைகளால் வாயை மூடி, தலையை சாயோசாய் என்று சாய்த்து, வெய்யில் முகத்தில் அடிக்காமல் பார்த்துக்கொண்டு…

நிறைய பயம். நிறைய தடுமாற்றம். நிறைய கேள்விகள். இருவருக்கும். சமர்த்தாக முகம் குனிந்து அமர்ந்திருந்தாள். என்னென்னவோ பேசினார்கள்.

“நான் என்னைப்பற்றிச் சொல்கிறேன். உங்களுக்கு அப்படி இருப்பவரைப் பிடிக்குமா என்று சொல்லுங்கள். அதேபோல் நீங்களும் உங்களைப்பற்றி சொல்லுங்கள்.”

இதெல்லாம் எவ்வளவு சினிமாவில் பார்த்தாகிவிட்டது. சிரிப்பு வந்தது. முகம் துடைப்பது போல் கைக்குட்டையால் வாயை மூடி… பின்னும் மூடி… மூடியபடியே…

“ஆமாம்… சரிதான்” என்று சொன்னாள்.

“எனக்கு கல்கியின் பொன்னியின் செல்வன் பிடிக்கும், உங்களுக்கு?” போன்ற அதிபுத்திசாலியான கேள்விகளின் பிறகு,

“ஏண்டா… நேரம் ஆகிறது. பேசி முடிச்சாச்சா?”

ஒரு வழியாகச் சமாளித்ததாக நினைத்து மகிழ்ந்து எழுந்தபோது,

”சொல்லலாமான்னு தெரியலை. ஆனால் உங்களை போட்டோவில் பார்த்தே நீங்கள்தான் என்று முடிவெடுத்துவிட்டேன். நேரில் பார்க்கும்போது இன்னும் பிடிக்கிறது… யூ நோ… எனக்கு மிகவும் பிடித்திருப்பது உங்கள் உதட்டின் மேல் இருக்கு அந்தப் பூனை முடிகள்தான்.”

Posted on Leave a comment

தமிழக விவசாயிகளின் போராட்டம் – ராஜா ஷங்கர்

தமிழகத்தில் விவசாயத்தையும் விவசாயிகளையும் முன்னிறுத்திய போராட்டங்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்டவை. கூலியாகக் கொடுப்பட்ட நெல்லை உயர்த்திக் கொடுக்கச் சொல்லி கம்யூனிஸ்டுகள் தஞ்சாவூரில் நடத்திய போராட்டங்களில் இருந்து, மாட்டு வண்டிகளை நிறுத்தி கோயமுத்தூரை முற்றுக்கையிட்ட போராட்டம் வரை தமிழ்நாடு விவசாயத்தை முன்னிறுத்தி ஏகப்பட்ட போராட்டங்களைக் கண்டிருக்கிறது.

இந்தப் போராட்டங்களை முன்னிறுத்தி விவசாய சங்கத் தலைவர்கள் பெரிய அளவில் அரசியல் பலமும் மக்கள் ஆதரவும் கொண்டிருந்தார்கள் என்பதும் உண்மை. அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த விவசாய சங்கத் தலைவர்களின் ஆதரவைப் பெற போட்டி போட்டார்கள் என்பதெல்லாம் இன்றைக்கு நம்பமுடியாத விஷயங்களாக இருக்கும். உழவர் உழைப்பாளர் கட்சி என அரசியல் கட்சி தொடங்கி தேர்தலிலே போட்டியிட்டார்கள் என்பெதல்லம் இன்றைய விவசாய சங்கத்தினருக்கே ஞாபகம் இருக்குமா எனத் தெரியவில்லை.

இன்றைக்கு விவசாயிகள் போராடும் கடன் வசூல், கடன் வசூல் ஏலம் போன்றவைதான் அன்றைக்கும் பெரும் பிரச்சினைகளாக இருந்தன. விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்பதும் அன்றிலிருந்து இன்றைக்கு வரைக்கும் விவசாயிகளின் போராட்டமாக இருக்கிறது. ஒரு தேர்தலின் பிரசாரத்தின்போது எம்ஜியார், தான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பிரச்சினை அடியோடு ஒழிக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார். பின்பு எம்ஜியாரின் ஆட்சியில்தான் போராடிய விவசாயிகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதை விவசாயிகளின் பிரச்சினையை ‘அடி ஓடு’ ஒழித்தார் எனக் கிண்டலாகவும் பரப்புரை செய்தார்கள்.

முன்பு விவசாயத்தை ஊக்குவிக்க பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அணைக்கட்டுகள், கால்வாய்கள், பாசனத் திட்டங்கள், புதிய சாகுபடி முறைகள் எனப் பலவும் காமராஜர் காலத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்டன. பின்பு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை பின்தள்ளிவிட்டு இலவச மின்சாரம், கூட்டுறவுக் கடன் தள்ளுபடி என்று மட்டுமே விவசாயிகளின் நடவடிக்கைகள் சுருங்கின. இதற்கு இன்னொரு காரணம், சினிமாவில் நடித்தால் முதல்வராகி விடலாம் என்ற நம்பிக்கை இருப்பது போல விவசாய சங்கம் ஆரம்பித்தால் பெரும் தலைவராகி விடலாம் என்ற கனவில், ஊருக்கு ஒரு விவசாய சங்கம் ஆரம்பிக்கப்பட்டு பல நூறு பேர்கள் இன்றைக்குத் தங்களை விவசாய சங்கத் தலைவர் எனச் சொல்லிக்கொள்வதுதான்.

இப்படி நிறைய பேர் விவசாய சங்கத் தலைவர் எனச் சொல்லிக்கொள்வது நல்லதுதானே, போராட நிறைய சங்கங்களும் ஆட்களும் கிடைப்பார்கள் என நினைத்தால் அது தவறு. இப்படி உடைந்த சங்கங்கள் வெறுமனே லெட்டர்பேட் சங்கங்களாக அமைப்புகளாக சுருங்கி ஆள்வோரின் அநியாயங்களைச் சுட்டிக்காட்ட, அதை எதிர்த்துப் போராடத் தவறின.

இதனால் ஆண்ட திராவிடக் கட்சிகளின் மணல் கொள்ளை, ஆறு, ஏரி குளங்களை வீட்டு மனைகளாக மாற்றுவது என்ற அதிகார அத்துமீறல்கள் நிகழ்ந்தன. புதிய தடுப்பணைகள் கட்டுவதில் இருந்து மிச்சம் மீதி இருக்கும் நீர் நிலைகளில் பராமரிப்பு பணிகள், மராமத்து பணிகள் என அனைத்தும் ஊழலில் ஊற்றுக்கண்ணாக மாறின. இதைக் கண்காணிக்க வேண்டிய விவசாயிகளோ திராவிடக் கட்சிகள் போட்ட சில்லறைகளை எண்ணிக்கொண்டிருந்தார்கள். இப்போதும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு ஆதாரம் தேடி எங்கேயும் போகவேண்டியதில்லை. தற்போது டெல்லியில் போராடும் நாடகப் போராட்டக் குழுவினரே இதை எல்லாம் சொல்லுகிறார்கள். அவர்களிடம் இதை யாரும் ‘ஏன் இதுவரை எதுவுமே போராடவில்லை?’ எனக் கேட்கவில்லை. இதுவரை இல்லாத அவசரம் ஏன் இப்போது? அதற்கும் காரணமிருக்கிறது. நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்ட பின்பு இலவச மின்சார உதவியுடன் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் இறைத்து விவசாயத்தைச் சமாளித்தார்கள். ஆனால் ஆழ்துளைக் கிணறுகள் ஒன்றும் அட்சயபாத்திரங்கள் அல்லவே?

நிலத்தடி நீர் என்பது மழைபெய்யும் போது பூமிக்கு உள்ளே இறங்கவேண்டும். இல்லையேல் முன்பு பாறைகளிலே சேமிக்கப்பட்ட நீரை எடுக்கலாம். அது வற்றியபின்பு நீர் கிடைக்காது. இதை சமாளிக்கவே நம் முன்னோர்கள் ஏரி, குளங்களிலே சேரும் வண்டல் மண்ணை அகற்றி விவசாய நிலங்களுக்குப் பயன்படுத்தினார்கள். இதன் மூலம் ஏரியிலே தேங்கும் நீர் நிலத்தடி நீரைப் புதுப்பிக்கும். கூடவே விவசாய நிலங்களுக்கு நல்ல உரமும் கிடைக்கும்.

குளத்தை தூர்வாருவதும் கிடையாது. ஆழ்துளைக் கிணறுகளையும் சுரண்டி தண்ணீர் எடுத்தாயிற்று. இனி என்ன ஏமாற்று வேலை செய்வது? இதிலே உள்ளூர் ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கமுடியாத நிலையும் கூட. ஏனென்றால் இந்த விவசாய சங்கங்களும் அவர்கள் அடித்த கொள்ளையில் உடந்தை ஆக இருந்தார்கள்.

சென்னை முகப்பேரியில் ஏரி இருந்தது. 8 ஆண்டுகளுக்கு முன்னால். கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஏரி. அதில் 10 அடிக்கும் மேல் மண் கொட்டி நிரப்பி, அரசே வீட்டு மனையாக மாற்றி விற்றது. இது 8 ஆண்டுகளுக்கு முன்னர்தான் நடந்தது. இதுபோலப் பல உதாரணங்கள் உண்டு.

பேருந்து நிறுத்தங்கள், நீதிமன்றக் கட்டடங்கள், அரசு அலுவலகங்கள் போன்றவை எல்லாம் ஏரிகளிலும் குளங்களிலுமே கட்டப்பட்டன. மிச்சமிருந்த இடங்கள் வீடு கட்டிக் குடியிருக்க விற்கப்பட்டவை. இதுவே இன்றுவரை தொடர்கிறது.

நீர்நிலைகளில்தான் இப்படிப் பிரச்சினை. ஆனால் மழை, புயல், நோய் தாக்குதல் போன்றவற்றில் பயிர் சேதமடைந்தால் அதற்கேனும் அரசு நஷ்டஈடு கொடுக்கவேண்டும் அல்லவா என்ற கேள்வியும் நியாயமானதே. அவை ஏற்கெனவே கொடுக்கப்பட்டு வருகின்றன. பயிர்க்காப்பீட்டுத் திட்டம் மற்ற மாநிலங்களில் நல்ல முறையில் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு அதைப்பற்றித் தெரியவில்லை. எடுத்துச் சொல்லி நலனைக் காக்கவேண்டிய சங்கங்களோ கடன் தள்ளுபடி எனும் ஒற்றைக்கடுக்காய் வைத்தியத்திலே குறியாய் இருக்கின்றன. நெடுங்காலமாக, மத்திய அரசே உர மானியம், விதைப்பு விதைகள் எனப் பல விஷயங்களைச் செய்து வருகிறது. ஆனால் விவசாயிகள் அவற்றைச் சரியான முறையிலே பயன்படுத்தவேண்டும் அல்லவா?

தற்போதைய டெல்லி போராட்டத்தின் கோரிக்கைகள் என்ன?

விவசாயிகள் எல்லா வங்கிகளிலும் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்பதுதான் முக்கியமான கோரிக்கையாக இருக்கிறது. எல்லா வங்கிகளும் என்றால் வழக்கமாகக் கடன் தள்ளுபடி செய்யப்படும் கிராமக் கூட்டுறவு வங்கிகள் மட்டுமல்லாது, தேசிய வங்கிகளான பாரத ஸ்டேட் வாங்கி முதலான வங்கிகளிலே வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்யவேண்டும் எனக் கேட்கிறார்கள்.

இது சாத்தியமா என சக விவசாய சங்கத் தலைவர்களே கேட்கிறார்கள். காரணம், இது கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடிக்கு மேல் போகும். ஏனென்றால் விவசாயி என்பவர் என்ன காரணத்திற்காகக் கடன் வாங்கியிருந்தாலும் எந்த வங்கியிலே வாங்கியிருந்தாலும் கண்டிப்பாக தள்ளுபடி செய்யவேண்டும் எனக் கேட்பது எப்படி சாத்தியம்?

தனிப்பட்ட விவசாயிகள் நஷ்டமடைந்திருந்தால், காப்பீடு மூலமோ அல்லது கடனை அடைக்கமுடியாத சொத்து அற்றவராகவோ அறிவித்துக்கொண்டு அதிலிருந்து விடுபடலாம் என்பதுதான் நடைமுறை. விவசாயத்திற்கு மட்டும் கடன் கொடுத்த கிராமக் கூட்டுறவு வங்கிகளின் கடனைத் தள்ளுபடி செய்தால் விவசாயிகள் அதிலும் குறிப்பாக சிறு, குறு விவசாயிகள் பயன்பெறுவர். ஆனால் இப்படி ஒட்டுமொத்த வங்கிகளிலும் பெற்ற கடனைத் தள்ளுபடி செய்தால் பெரும் விவசாயிகள்தான் பயன்பெறுவர் எனவும், இப்படி ஒரு கடன் தள்ளுபடித் திட்டம் முன்பும் ஒருமுறை அறிவிக்கப்பட்டும் பயன் தரவில்லை எனவும் சொல்லுகிறார்கள்.

சக விவசாய சங்கங்களே ஆதரவு தராத நிலையிலே இன்னொரு விமர்சனமும் வைக்கப்படுகிறது. அது வருமான வரி ஏய்ப்பு. சென்ற வருடம் இந்தியாவின் மொத்த வருமானத்தை விடப் பலமடங்கு வருமானம் விவசாய வருமானமாகக் காட்டப்பட்டு வருமான வரிவிலக்கு பெறப்பட்ட பிரச்சினை நாடாளுமன்றத்திலே எழுப்பப்பட்டது ஞாபகம் இருக்கலாம். அதை முன்வைத்து, ஏன் இது வருமான வரி விலக்குச் சிக்கல்களைத் தவிர்க்க அரசியல் பின்னணியிலே செய்யப்படும் நாடகமாக இருக்கக்கூடாது எனவும் கேள்விகள் எழுகின்றன.

அப்படியானால் என்னதான் வழி? உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்றே காலங்காலமாய் வாழவேண்டியதுதானா? அல்லது கார்ப்பரேட் சதி, அந்நிய சதி என்றே போராடிக்கொண்டிருக்க வேண்டியதுதானா? என்ன தீர்வு?

விவசாயம் ஒரு வியாபாரமாக, ஒரு தொழிலாகச் செய்யப்படவேண்டும். விவசாயம் சார்ந்த தொழில்களை விவசாயிகளே அல்லது சுயாட்சி கொண்ட விவசாயக் கூட்டுறவுச் சங்கங்களே செய்து, தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்கவும் முன்வரவேண்டும்.

கோதுமையாக விற்றால் 1% லாபம் கிடைக்கும். மாவாக விற்றால் 5% கிடைக்கும். பிஸ்கெட் ஆக விற்றால் 15% லாபம் கிடைக்கும்.

தேங்காயாக விற்றால் ஒரு காய் 5 ரூபாய்க்கு விற்கலாம். காயவைத்துப் பருப்பாக விற்றால் கிலோ 100 ரூபாய். 100 காய்களுக்கு 10 கிலோ பருப்பு கிடைக்கும். பாதிக்கும் மேல் கிடைக்கும். எண்ணெய்யாக ஆட்டினால்? இரண்டு கிலோ பருப்புக்குத் தோராயமாக ஒரு லிட்டர் எண்ணெய் கிடைக்கும் என்றால், லிட்டர் 250 ரூபாய் என வைத்துக்கொண்டால், 10 கிலோ பருப்புக்கு 2,500 ரூபாய். புண்ணாக்கு விற்பது, செக்குக்கூலி, போக்குவரத்து என எல்லாம் சேர்த்தாலும் 10 கிலோ பருப்புக்கு 1,800 ரூ வரை கிடைக்கும் இல்லையா?

இதே போலவே மற்ற தொழில்களிலும் பால் உட்படக் கணக்கு போடலாம். ஆவின் விலையைக் குறைத்துவிட்டது எனவும் பால் விற்கவில்லை எனவும் வழியிலே கொட்டிப் போராட்டம் செய்யும் விவசாயிகளைப் பார்த்திருப்போம் ஏன் சீஸ், பனீர், வெண்ணெய், நெய் தயாரிப்பது எனப் போவதில்லை என்பதுதான் கேள்வி.

பால் ஒரு நாளிலே கெட்டுவிடும். பனீர் ஒரு வாரம் தாங்கும். சீஸ் ஒரு மாதம் வரை தாங்கும். வெண்ணெய் அதேபோல. நெய்யோ பல மாதங்கள் தாங்கும் எனத் தெரிந்திருக்கும்போது, ஏன் குஜராத் அமுல் போல தமிழ்நாட்டில் செய்யமுடியவில்லை? இருக்கும் ஆவின் நிறுவனமோ ஊழலில் திளைத்துத் தடுமாறுகிறதே?

பதப்படுத்தப்பட்டகிடங்குகள், சேமிப்பு நிலையங்கள் என வடக்கே அரசுத் திட்டங்களும் தனியாரும் இணைந்து பெருமளவிலே முன்னேற்றம் காணும்பொழுது இங்கே ஏன் இப்படி என ஏன் யாரும் கேட்கவில்லை? போராடவரவில்லை?

விவசாயச் சங்கங்கள் தாங்கள் விவசாயத்தில் இருக்கிறோம் என நினைக்கவில்லை. ஏதோ இலவசமா மின்சாரம் கிடைக்குத, தானா மழை பொழியுது, விதை போட்டா விளையுது என்ற அளவிலே இருக்கும் வரை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு இருக்காது.

விவசாயத்தை நவீனப்படுத்துவதும், விவசாயம் சார்ந்த தொழில்களை ஊக்குவிப்பதும் அதை விவசாய சங்கங்கள் முன்னெடுப்பதும்தான் தீர்வு.

Posted on Leave a comment

நாளைய நகரங்கள் – கிஷோர் மகாதேவன்

‘இந்தியாவின் எதிர்காலம் அதன் கிராமங்களில் உள்ளது. கிராமங்கள் அழிந்தால், இந்தியாவும் அழிந்துவிடக் கூடும்’ என்றார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. ஆனால் இன்று நாம் காணும் யதார்த்தம் என்ன? உலகெங்கும் மக்கள் பெருந்திரளாகக் கிராமங்களை விட்டு நகரங்களில் குடிபெயர்ந்து வருகிறார்கள். 1991ல் இந்தியாவில் 22 கோடி மக்கள் நகரங்களில் வாழ்ந்து வந்தனர். அந்த எண்ணிக்கை 2011ல் 38 கோடியாக அதிகரித்தது. 2030க்குள் இந்தியாவில் 50 கோடி மக்கள் நகரங்களில் வாழ்வார்கள் என்றும், அந்நகரங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் 60% பங்களிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இன்று நம் நகரங்களின் உண்மை நிலை என்ன? இதைப் பற்றி யாரிடமாவது பேசிப் பாருங்கள். ‘திட்டமிடல் பத்தாது’ என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டுப் போவார்கள். இந்திய நகரங்களைப் பொருத்த வரையில் திட்டமிடல் என்றால் என்ன? நம் நகரங்கள் எப்படி உருவாகின்றன?

1947க்குப் பிறகு இந்திய நகரங்களின் வளர்ச்சியை இரண்டு பரிணாம நிலைகளாகப் பிரிக்கலாம். முதலாவது அரசின் மேற்பார்வையில் உருவான நகரங்கள். எந்த நகரத்தையும் அரசு மட்டுமே திட்டமிட்டு வடிவமைக்க வேண்டும், யார் எங்கே வாழ வேண்டும் என்பதை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்பது நேருவின் சோசலிஸ அரசின் நிலைப்பாடாக இருந்தது. சண்டிகர் மற்றும் தில்லியின் சில பகுதிகள் இவ்வாறு உருவாகின. இந்நகரங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கென பிரத்யேகமாக பல குடியிருப்புகள் எழுப்பப்பட்டன. சண்டிகர் இந்தியாவின் ஆதர்ச நகரமாகத் திகழவேண்டும் என்று நேரு கனவு கண்டார்.

ஆனால் 1991க்குப் பிறகு இந்தியா செய்த பொருளாதார சீர்திருத்தங்களால் பல புதிய சாளரங்கள் திறந்தன. தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் நாடெங்கும் தோன்றின. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பெருநகரங்களுக்குக் குடிபெயர்ந்தனர். கலாசாரப் பரிவர்த்தனைகள் அதிகரித்தன. சமூக மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. இதன் தாக்கம் இந்திய நகரங்களில் தென்பட்டது. பெருநகரங்களின் புறநகர்ப் பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் முதலீடு பெருகியது. அப்பகுதிகள் தன்னளவில் தொழிற்பேட்டைகளாக மாறி, நகரங்களோடு இணைந்தன. இந்திய நகரங்களின் வளர்ச்சியில் இரண்டாவது பரிணாம நிலை என்று குறிப்பிடுவது இதைத்தான். சண்டிகரின் மொஹாலி, சென்னையின் மகாபலிபுரம் சாலைப்பகுதி, கொல்கத்தாவின் சால்ட் லேக் சிட்டி போன்றவை இப்படி வளர்ந்தன. இவற்றுள் சில விஸ்வரூபமெடுத்து பெருநகரங்களாக மாறின. இதற்கு எடுத்துக்காட்டாக குர்காவ் கிராமத்தைச் சொல்லலாம். 1990களின் இறுதியில் மேய்ச்சல் நிலமாக இருந்த குர்காவ் கிட்டத்தட்ட தனியார் நிறுவனங்களால் கட்டப்பட்டது என்று சொன்னால் மிகையாகாது. 2001ல் குர்காவின் மக்கள்தொகை 8.7 லட்சம். 2011ல் அது இரட்டித்து 16 லட்சம் ஆனது. இத்தனை மக்களுக்கு வசதிகள் வழங்குவது என்பது எந்த அரசுக்கும் இயலாத காரியம். குர்காவ் நகரின் குடியிருப்புகள், சாலைகள், தெருவோர மின்விளக்குகள், பூங்காக்கள் என்று அனைத்தும் தனியார்த் துறையின் முனைப்பால் கட்டப்பட்டன. அங்குள்ள தீயணைப்புச் சேவை கூடத் தனியார்த் துறையால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. 2008ல்தான் குர்காவ் நகருக்கென தனி நகராட்சி அமைக்கப்பட்டது.

அப்படியென்றால் குர்காவில் பாலாறும் தேனாறும் ஓடுகிறதா என்ன? குர்காவின் நிதர்சனம் என்ன? இந்தியாவின் உச்சக்கட்ட செல்வந்தர்கள் பலர் வாழும் குர்காவ் நகரம் இன்று போதுமான நிலத்தடி நீர் இல்லாமல், கழிவுநீர் அமைப்பு இல்லாமல் தவிக்கிறது. அதுமட்டுமல்ல, குறுகிய காலத்தில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியால் உண்டாகும் ஏழை-பணக்காரர் வித்தியாசம், சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள், பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் என பல்வேறு சிக்கல்களுக்கு இடையே ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

யதார்த்தம் இப்படியிருக்க, மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் எல்லாம் வெற்றுக்கூச்சல்தானா என்ற சந்தேகம் எழுகிறது. அதே நேரம் நகரங்களை எல்லாம் மேம்படுத்தமுடியாது, அவற்றைக் கைவிட வேண்டியதுதான் என்று நேரெதிராகச் சொல்வதும் நியாயம் ஆகாது.

முதலில் ஸ்மார்ட் நகரம் என்றால் என்னவென்று பார்ப்போம். ஸ்மார்ட் நகரம் என்ற சொல்லுக்கு இன்று வரை உலகளாவிய வரையறையோ பொருளோ இல்லை. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நகரமும், அதன் சூழலுக்கு ஏற்ப, அதன் சக்திக்கு ஏற்ப ஸ்மார்ட் நகரம் என்னும் திட்டத்தை வரையறுத்துக் கொள்கிறது. ஸ்மார்ட் நகரத்துக்கு ஐரோப்பாவில் ஒரு வரையறை இருக்குமென்றால், அமெரிக்காவில் வேறொரு வரையறை இருக்கும். இந்தியாவின் புரிதலும் வேறுபட்டு இருக்கும்.

2015ம் ஆண்டு இந்திய அரசு ஸ்மார்ட் நகரத் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் மூலம் 2020க்குள் 100 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்க வேண்டும் என்பதே அரசின் இலக்காகும். ஸ்மார்ட் சிட்டியில் தடையற்ற நீர் விநியோகம், தடையற்ற மின்சாரம், திடக் கழிவு மேலாண்மை, போக்குவரத்து வசதி, மலிவு விலை வீடமைப்பு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, கணினி சார் அரசு சேவை (e-governance), சுற்றுச்சூழல் பராமரிப்பு, பொதுமக்களின் பாதுகாப்பு வசதிகள், கல்வி மற்றும் சுகாதாரம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட அடிப்படைக் கூறுகள் உள்ளன.

ஸ்மார்ட் நகரத்தை எப்படியெல்லாம் வடிவமைக்கலாம்?

1. பின் மாற்றியமைப்பு (Retrofit) : நகரத்தில் ஒரு 500 ஏக்கர் பகுதியை ஒதுக்கீட்டு, அப்பகுதியை ஸ்மார்ட் நகரத்தின் கூறுகளோடு பின் மாற்றியமைக்கலாம்

2. மறுவளர்ச்சி (Re-development) : நகரத்தின் ஒரு 50 ஏக்கர் பகுதியை ஒதுக்கீட்டு, அப்பகுதியில் இருக்கும் சாலைகளை விரிவுபடுத்தலாம், கட்டடங்களை இடித்துப் புதிய கட்டடங்களைக் கட்டலாம்

3. புது ஸ்மார்ட் நகரம் : புத்தம்புது நிலப்பகுதியை அடையாளம் கண்டு, ஸ்மார்ட் நகரமாக வடிவமைத்துக் கட்டலாம்

4. தொழில்நுட்ப பொருத்தல் : வடிவமைப்பில் எந்த மாற்றமும் செய்யாமல், ஸ்மார்ட் நகரத்துக்குத் தேவையான தொழில்நுட்பங்களைப் பொருத்தலாம். உதாரணமாக கண்காணிப்பு காமிராக்கள், சூரிய ஒளி மின்சாரக்கருவிகள் முதலியன பொருத்தலாம்

ஸ்மார்ட் நகரத் திட்டம் எப்படி நிர்வகிக்கப்படுகிறது?

1. மத்திய அரசு ஸ்மார்ட் நகரங்களின் நிபந்தனைகளை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியது. ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஸ்மார்ட் நகரங்களைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொண்டது

2. நாடெங்கும் 100 ஸ்மார்ட் நகரங்கள் மாநிலங்களால் பரிந்துரைக்கப்பட்டன. ஒவ்வொரு நகரமும் தன்னை எப்படி ஸ்மார்ட் நகரமாக மாற்றியமைக்கும் என்ற விரிவான திட்டத்தை மத்திய அரசுக்கு அனுப்பியது

3. நிபுணர்கள் கொண்ட குழு ஒன்று இவற்றைப் பரிசீலித்து, சிறந்த திட்டங்களைத் தேர்ந்தெடுத்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராகின. இதுவரை 74 நகரங்கள் தேர்ந்தடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலூர் மற்றும் தஞ்சாவூர் இப்பட்டியலில் உள்ளன. 2017ன் முடிவுக்குள் 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது இலக்கு

4. தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் ஒவ்வொன்றும் ஸ்மார்ட் நகரக்குழு ஒன்றை அமைத்துக்கொள்ளும். இக்குழுவில் முழு நேர தலைமை நிர்வாக அதிகாரி, மற்றும் மத்திய மாநில அரசு பிரதிநிதிகள் இருப்பர். ஸ்மார்ட் நகரம் எப்படி வடிவமைக்கப்பட வேண்டும், அதற்குத் தேவையான நிதியை எப்படித் திரட்டுவது, வருவாயை எப்படி வசூலிப்பது, எந்தெந்த தனியார் நிறுவனங்களோடு இணைந்து செயல்படுவது போன்ற முடிவுகளை எடுக்க இந்தக் குழுவிற்கு முழு அதிகாரம் இருக்கும்

5. ஒவ்வொரு ஸ்மார்ட் நகரத்துக்கும் மத்திய அரசு ஆரம்ப மூலதனமாக தலா ரூ.194 கோடியை ஒதுக்கீடு செய்யும். அதற்குப் பிறகு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.98 கோடி வழங்கும். ஆண்டுதோறும் இந்த ஒதுக்கீட்டைப் பெறும் தகுதி இருக்க வேண்டுமெனில் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும், அரசின் ஸ்மார்ட் சிட்டி நிபந்தனைகளுக்கு உட்பட்டுச் செயல்பட வேண்டும்

6. அரசு முதலீட்டையும் தாண்டி, வேறு பல வழிகளில் நிதி திரட்ட ஸ்மார்ட் நகரக் குழுக்கள் முயலும். உதாரணமாக நிதி நிறுவனங்களிலிருந்து பணம் திரட்டலாம். வரிப்பணத்தில் ஒரு பகுதியைச் செலவிடலாம். தனியார் நிறுவனங்களின் முதலீடு கொண்டு இயங்கலாம்.
மற்ற திட்டங்களை போல ஸ்மார்ட் நகரங்களின் வெற்றியும், அது எப்படிச் செயல்படுத்தப்படுகிறது என்பதைப் பொருத்து இருக்கிறது. இத்திட்டம் வெற்றிபெற முதலில் நகராட்சிகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இன்று நகராட்சியின் துறைகள் என்ன செய்யவேண்டும் என்பதை மாநில அரசுகளே தீர்மானிக்கின்றன. அனேகமாக இதனால் பல திட்டங்கள் ஆரம்ப நிலையிலேயே தேக்கமடைந்து விடுகின்றன. வளர்ந்த நாடுகளில் நகர மேயர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால் நம்மூரில் நகராட்சி மேயர் என்பவர் கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கௌரவ பதவி வகிப்பவர். நகரப் பணிகளை நிறைவேற்றுதல், அதற்குத் தேவையான வரி விதித்தல் அனைத்தும் மேயரின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும். இதற்கு நம் அரசியலமைப்பு சட்டத்தில் இடமிருந்தும் மாநில அரசுகள் ஏனோ அமல்படுத்தாமல் இருக்கின்றன. அடுத்ததாக, எங்கெல்லாம் தனியார்த் துறையின் நிபுணத்துவம் இருக்கிறதோ, அங்கெல்லாம் அவர்களோடு இணைந்து செயல்பட வேண்டும். உதாரணமாக ஸ்மார்ட் தெருவிளக்கு அமைப்பு, ஸ்மார்ட் வாகன நிறுத்துமிடங்கள், ஸ்மார்ட் மின்சார விநியோகம் போன்ற தொழில்நுட்பங்கள் கொண்ட பல்வேறு ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உள்ளன. இவர்களிடம் தொழில்நுட்பம் இருந்தும், பணப்புழக்கம் அதிகம் இல்லாததால் அரசோடு இணைந்து செயல்பட தடையாக இருக்கிறது. இது போன்ற சிறு நிறுவனங்களும், மற்ற பெரு நிறுவனங்களும் முதலீடு செய்ய ஊக்கமும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். ஸ்மார்ட் நகரம் என்றால் நவீன நகரம், நவீன தொழில்நுட்பம் என்று ஒரு புரிதல் இருக்கிறது. நவீனமயமாக்கல் என்பதைத் தாண்டி, நம் பாரம்பரியச் சின்னங்களை எப்படிப் பாதுகாக்கப் போகிறோம், தொழில்நுட்பத்தைச் சாதாரண மக்களும் உபயோகிக்கக்கூடியதாக எப்படி அமைக்கப் போகிறோம் என்றெல்லாம் யோசித்து வடிவமைக்க வேண்டும்.

நடைமுறைச் சிக்கல்கள் பல இருந்தும், இந்த ஸ்மார்ட் நகரத்திட்டம் வரவேற்கப்பட வேண்டியதே. இந்தப் பரிசோதனை முயற்சியில் அரசு இன்னும் தீவிரமாக இறங்கவேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு நகரங்கள் முக்கியப் பங்களிக்கப் போகின்றன. அதற்குத் தேவையான உள்கட்டமைப்பு மட்டுமல்லாமல், சமூக, பொருளாதார மற்றும் அரசியலமைப்பு சார்ந்த மாற்றங்களையும் கொண்டுவர வேண்டும். செய்யத் தவறினால் இது நழுவ விட்ட மற்றொரு சந்தர்ப்பமாகவே இந்திய வரலாற்றில் எழுதப்படும்.

*********

உதவியவை :

1. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் : http://smartcities.gov.in
2. இந்திய பொருளாதார அறிக்கை : http://indiabudget.nic.in/es2016-17/echap14.pdf
3. ஏழு நதிகளின் நாடு (புத்தகம்) – சஞ்சீவ் சன்யால்