Posted on 3 Comments

திராவிட இயக்கம் என்னும் அபத்தம் – ஆமருவி தேவநாதன்

‘திராவிட இயக்கம் என்னும் மாபெரும் தமிழ் மக்கள் படை’ என்னும் பெரும் பொய் பல்லாண்டுகளாகப் பரப்பப்பட்டு வருகிறது. முதலில் ‘திராவிட’ என்னும் சொல்லே தமிழ்ச்சொல் அல்ல. அதன் பொருள் என்ன என்பதைப் பார்ப்பதற்கு முன் அச்சொல் பயன்படுத்தப்பட்ட பிரபலமான சௌந்தர்யலஹரி ஸ்லோகம் இதோ:

தவ ஸ்தன்யம் மன்யே தரணிதர கன்யே ஹ்ருதயத:
பய: பாரா வார: பரிவஹதி ஸாரஸ்வதமிவ
தயாவத்யா தத்தம் த்ரவிட ஶிஶு ராஸ்வாத்ய ஸததம்
கவீநாம் ப்ரௌடாநா மஜநி கமநீய: கவயிதா

8-9ம் நூற்றாண்டின் ஆதி சங்கரர் இயற்றிய இந்த ஸ்லோகத்தில் சீர்காழியில் பார்வதி தேவியிடம் ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்தரை ‘திராவிட சிசு’ – ‘திராவிடத்தின் குழந்தை’ என்று அழைக்கிறார். முதலில் ‘திராவிட’ என்னும் சொல் பயன்படுத்தப்பட்டதாகப் பொதுவெளியில் நாம் அறிந்துள்ள பாடல் இது. இதில் ஞானசம்பந்தரும், ஆதிசங்கரருமே தற்கால ‘திராவிட விதி’களின் படி திராவிடர்கள் அல்லர். இருவரும் அந்தணர்கள். ஆதிசங்கரர் ‘திராவிட’ என்னும் சொல்லை ஒரு சாதியையோ, இனத்தையோ குறிப்பிடப் பயன்படுத்தவில்லை.

நாலாயிர திவ்யப்பிரபந்தம் என்னும் திருமால் குறித்த 12 ஆழ்வார்களின் பாசுரங்களில், நம்மாழ்வார் எழுதிய ‘திருவாய்மொழி’ பகுதியை ‘திராவிட வேதம்’ என்று அழைப்பது பண்டைய வைணவ மரபு. பின்னாட்களில் பிரபந்தம் முழுமையுமே அப்படி அழைக்கப்பட்டது. ஆழ்வார்களில் முன்னவரான வேளாளர் குலத் தோன்றல் நம்மாழ்வார் குறித்த தனியன் எனப்படும் துதியில் ‘திராவிட வேத சாகரம்’ என்கிற சொல்லாடல் தந்து வியக்க வைக்கிறார் நாதமுனிகள். (ஒன்பதாம் நூற்றாண்டு.)

பக்தாம்ருதம் விஸ்வ ஜனாநு மோதநம்
சர்வார்த்ததம் ஸ்ரீ சடகோப வாங்மயம்
சகஸ்ர சாகோ உபநிஷத் சமாகமம்
நமாம்யஹம் திராவிட வேத சாகரம்

‘திராவிட’ என்னும் சம்ஸ்க்ருதச் சொல்லின் பொருள் என்ன?

மனு ஸ்மிருதியில் உரிய காலத்தில் உப-நயனம் (பூணூல் அணிவிப்பது) நடைபெறாத ஷத்ரியன், ‘விராத்ய ஷத்ரியன்’ என்று அறியப்படுகிறான். ஒரு விராத்ய ஷத்ரியனுக்கும், ஷத்ரிய மனைவிக்கும் பிறக்கும் மகன், அவன் வாழும் பிரதேசத்தை வைத்து ‘மல்லா’, ‘கல்லா’, ‘லிக்கிவி’, ‘நட’, ‘கரண’, ‘கஸா’, ‘திராவிட’ என்று வட்டாரங்களுக்கு ஏற்ப அழைக்கப்பட்டான். (மனு ஸ்மிருதி – 10:21, 10:22).

மேலும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் காஷ்மீரத்தில் இயற்றப்பட்ட ‘ராஜ தரங்கிணி’ என்னும் நூல், தென்னாட்டுப் பிராமணர்களை ‘திராவிட பிராம்மணர்கள்’ என்றே வழங்குகிறது. பல வடநாட்டுப் பிராமணர்கள் தங்கள் பெயருக்குப் பின் ‘திராவிட்’ என்று சேர்த்துப் போட்டுக்கொள்கிறார்கள். ( கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் போல.) இவர்களின் தென்னகத் தொடர்பை இது தெளிவுபடுத்துகிறது. ஆக, ‘திராவிட’ என்னும் சொல் பிராந்தியத்தைக் குறிப்பது என்பது புலனாகிறது. ( ‘திராவிட இயக்கம்- புனைவும் உண்மையும்’, மலர்மன்னன் பக்: 15.)

சமணப் பிரிவுகளில் ஒன்றான ‘நந்தி கணம்’ சார்ந்தவர்கள் ‘த்ரமிளச் சங்கம்’ அல்லது ‘திராவிடச் சங்கம்’ என்பதாகவே ஒன்றைக் கர்நாடகப் பகுதியில் நிறுவியிருந்ததாகத் தமிழறிஞர் சீனி வேங்கடசாமி ‘சமணமும் தமிழும்’ என்ற நூலில் தெரிவிக்கிறார். இதற்குச் சான்றாக அவர் ‘EC Vol.V. Hassan Talku, 131, Arsikera Tq, IEC IV, Gundlupet Tq 27’ என்ற ஒரு சாசனத்தை மேற்கோள் காட்டுகிறார். வஜ்ரநந்தி என்ற சமணத்துறவி கி.பி. 5ம் நூற்றாண்டில் மதுரையில் ‘திராவிடச் சங்கம்’ என்ற அமைப்பைத் துவங்கினார் என்று தேவசேனர் என்பார் எழுதிய ‘தர்சனாசாரம்’ என்னும் நூலில் காணப்படுகிறது என்றும் சீனி வேங்கடசாமி தெரிவிக்கிறார். வஜ்ரநந்தி, தேவசேனர், தர்சனாசாரம் முதலிய சொற்கள் தமிழ்ச்சொற்கள் இல்லை என்பதாலும், பெரும்பாலும் சம்ஸ்க்ருத மொழியைப் பயன்படுத்திய சமணர்கள் மதுரையிலும், கர்நாடகத்திலும் ‘திராவிட’ என்னும் பெயர் கொண்ட அமைப்புக்களைத் தென் பாரதத்தில் துவங்கியதால் ‘திராவிட’ என்னும் சொல் பிரதேசத்தைக் குறிப்பதாகும் என்பது தெளிவு.

கி.பி. 1777 – 1819 வரை வாழ்ந்த பிரன்சிஸ் ஒயிட் எல்லீஸ் என்னும் ஆங்கில ஆட்சியாளர் தென் பாரதத்தில் பணியாற்றவேண்டுமெனில் தென் மொழிகளில் பயிற்சி வேண்டும் என்று 1812ல் புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியைத் துவங்கினார். தமிழில் ஆர்வமும் பாண்டித்யமும் கைவரப்பெற்ற இவர், தென்பாரத மொழிகளுக்கிடையே இருந்த ஒற்றுமைகளை ஆய்வு செய்து கண்டறிந்தார். திருக்குறள் மீது தனி அபிமானம் கொண்டிருந்த எல்லீஸ், அதிலிருந்து சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும் செய்தார். நாணயம் அச்சடிக்கும் அதிகாரியாக இருந்த அவர், திருவள்ளுவர் உருவம் பொறித்த இரட்டை வராகன் தங்க நாணயம் வெளியிட்டார். ‘எல்லீசன்’ என்று அன்றைய தமிழ் மக்களால் அறியப்பட்ட இவர், ‘நமச்சிவாய’ என்னும் பஞ்சாட்சரத்தைத் துதித்து ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு செய்யுள் இயற்றியுள்ளார்’ என்று தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை ‘கிறித்தவத் தமிழ்த் தொண்டர்’ என்னும் நூலில் தெரிவிக்கிறார்.

தெலுங்கு மொழி இலக்கணம் குறித்து ஏ.டி.கேப்ம்பெல் (A.D.Campbell) என்பார் எழுதிய நூலிற்கு எல்லீஸ் முன்னுரை எழுதுகையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்க்ருதம் முதலிய நான்கு மொழிகளுக்கு ஒற்றுமை வேற்றுமைகள் பற்றி விவாதிக்கிறார். ( Note to the Introduction and Grammar of the Teloogoo Language by A.D.Campbell, College of Ft.St.George, Madras, 1916.) இவ்வளவு பாண்டித்யம் உடைய ஒருவர், ஓரிடத்தில் கூட ‘திராவிட’ என்னும் சொல்லைப் பயன்படுத்தவில்லை. ஆக, ‘திராவிட’ என்னும் சொல், தென் இந்திய மொழிகளை இணைக்கும் ஒரு தொகைச் சொல்லாகக் கூட அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்ததில்லை என்று அறியலாம்.

ஆனால், பின்னாளில் வந்த கிறித்தவப் பாதிரியார் கால்டுவெல், ‘திராவிட மொழிகள்’ என்கிற பாகுபாட்டை அளித்து, திராவிட மொழிகளுக்கும் சம்ஸ்க்ருதத்திற்கும் தொடர்பில்லை என்பதாக ஒரு பிரிவினைப் பாதையை முன்வைத்தார். மொழித் தொகுப்பைக் குறிக்க ‘திராவிட’ என்னும் பிராந்திய அடையாளத்தைக் கையாண்டு, தேசப் பிரிவினைக்குப் பின்னாளில் வித்திட்ட பலருக்கு வழிகாட்டியாய் இருந்தார் பாதிரியார் கால்டுவெல். (A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages.)

‘திராவிட’ , ‘திராவிடம் அல்லாத’ என்று இரு பிரிவுகளாக மொழிகளைப் பிரித்தால் மொழிவழியாக பாரத மக்களைப் பிரிக்கலாம், அவர்களைத் தன் மதத்திற்கு மாற்றலாம் என்கிற எண்ணம் கால்டுவெல்லிற்கு இருந்தது. தனது ஒப்பிலக்கண நூலின் முதற்பதிப்பில் எல்லீஸ் பற்றி மேலெழுந்தவாரியாகக் குறிப்பிடும் கால்டுவெல், மூன்றாவது பதிப்பில் எல்லீஸ் பற்றிய குறிப்பை நீக்கினார் என்கிறார் தாமஸ் டிரவுட்மேன் என்னும் மிஷிகன் பல்கலைக்கழகப் பேராசிரியர். (Languages and Nations: The Dravidian Proof in Colonial Madras, Thomas R. Trautman.)

கால்டுவெல் அத்துடன் நிற்கவில்லை. ‘The Tinneveli Shanars: Sketch of their religion and their moral condition and characteristics – with special reference to the facilities and hindrances to the progress of Christianity amongst them’ என்று ஒரு நீண்ட கட்டுரை எழுதினார். சாணார்கள் வணங்குபவை பேய் பிசாசுகள் என்றும், அவை பிராமணர்கள் வழிபடும் மேனிலைத் தெய்வங்கள் அல்ல என்றும் வாதிடுகிறார். பிராமண , பிராமணரல்லாத என்று இரு பிரிவுகளை உண்டாக்கினால் தென்பாரதம் முழுமையையும் சேசுசபையின் கீழ் கொண்டு வர ஏதுவாகும் என்கிற நோக்கில் செயல்பட்ட பாதிரியார் கால்டுவெல், இன்றைய ‘திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள்’ என்று தம்மை அழைத்துக்கொள்பவர்களால் தெய்வமாகப் போற்றப்படுகிறார்.

சுயமரியாதை இயக்கம், பிராமணரல்லாதோர் இயக்கம் என்றெல்லாம் பிராமணர் அல்லாத மேட்டுக்குடி ஜமீந்தார்களின் சங்கங்கள் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் துவக்கப்பட்டன. பிராமணர் அல்லாதோருக்காக அரசாங்கத்தில் பேசி, வேலை, கல்வி முதலியவற்றில் அதிக இடங்களைப் பெறுவதற்காகத் துவங்கப்பெற்ற இவை, பிரிட்டிஷ் ஆட்சியின் அடிவருடிகளாகச் செயல்பட்டன. பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் தொடர வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தியும், விடுதலைக்காகப் போராடிய காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்தியும் பல செயல்களில் இந்த இயக்கங்கள் ஈடுபட்டன. இவற்றின் தலைவர்களுக்குள் மோதல்களும் போட்டிகளும் மலிந்திருந்தன. அப்போது இவ்வியக்கங்களை ஒருவாறு ஒன்றுபடுத்தி அதன் தலைவரானவர் ஈ.வெ.ரா. இந்தியாவின் சுதந்திரத் தினத்தைக் கறுப்பு நாளாகக் கொண்டாட வேண்டும் என்றும், திராவிட நாடு என்கிற தனி நாடு வேண்டும் என்றும் உரக்கப் பேசி வந்தார் ஈ.வெ.ரா. ‘பாகிஸ்தான்’ கோரிக்கையை முகமது அலி ஜின்னா முன்வைத்தபோது, ‘திராவிடஸ்தான்’ என்னும் ஒரு தேசத்தையும் சேர்த்துக் கேட்குமாறு ஈ.வெ.ரா. கேட்டிருந்தார். ஜின்னா அதைக் காதில் போட்டுக்கொண்டதாகவே தெரியவில்லை என்பது வேறு விஷயம்.

‘திராவிடஸ்தான்’ கோரிக்கை எடுபடாததாலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசுவோர் திராவிட நாட்டை ஏற்காததாலும், ’திராவிடம்’ என்பது தமிழகத்தை மட்டுமே குறிப்பதாகத் தற்போது பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.

ஈ.வெ.ரா.வைத் திராவிட இயக்கத் தலைவர் என்பது போலித்தனத்தின் பேருருவம். கன்னட வைணவரான இவர் தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்று கூறியவர். சிலப்பதிகாரத்தை விலைமாது எனப் பேசியவர்.1 திருக்குறளை ‘ஆரியப் பார்ப்பன நூல்’ என்று அழைத்தார். பின்னர் பலகாலம் கழித்துத் திருக்குறள் பற்றிய தன் கருத்தை மாற்றிக்கொண்டார். வள்ளுவர் சமணர் எனத் தற்காலத்தில் சொல்லப்பட்டு வருகிறது என்பதும், ஆரியப் படையெடுப்பு என்பது வழக்கொழிந்து போன ஆங்கிலேயப் புனைவு என்பதும் வேறு விஷயங்கள்.

ஈ.வெ.ரா.வின் திராவிட நாட்டுப் பற்று, அவர் அதனை வலியுறுத்தி வந்த காலத்திலேயே கேள்விக்குரியதாக இருந்தது. ஒரு பக்கம் திராவிட நாடு வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இன்னொரு பக்கம் அதற்கு நேரெதிராகப் பேசிக்கொண்டிருந்தார். திசம்பர் 4, 1940ல் சேலத்தில் பேசும்போது ஆட்சி அதிகாரத்தில் பிராமணர் அல்லாதோருக்கு உரிய பங்களித்தால் தமது கட்சியினர் அனைவருடனும் தானும் காங்கிரசில் சேர்ந்துவிடுவதாகக் கூறினார். ஆக, அடைந்தே தீர வேண்டியதாக இருந்த ‘திராவிட நாடு’ ஈ.வெ.ரா.வால் காற்றில் பறக்கவிடப்பட்டது.

ஈ.வெ.ரா.வின் வழி வந்தவராகத் தன்னைக் காட்டிக்கொண்ட அண்ணாதுரை ‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு’ என்னும் கோஷத்தை முன்வைத்தார். ‘தனி நாடு’ கோரிக்கையை முன்வைத்தால் இந்திய அரசு இறங்கிவரும் என்று பகல் கனவு கண்ட அவரை, நேரு 1962ல் ‘தேச துரோகச் சட்டம்’ இயற்றியதன் மூலம் பணியவைத்தார். பின்னர் தனி நாடு கேட்ட அண்ணாதுரை 1967ல் இந்திய இறையாண்மையைக் காக்க உறுதிமொழி எடுத்து இந்தியத் திருநாட்டின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டின் முதல்வராகி, ‘திராவிட நாடு’ என்னும் நகைச்சுவையை முடித்துவைத்தார்.

இந்தியத் தேசியத்தை எதிர்ப்பதை மட்டுமே ஒரே குறிக்கோளாகக் கொண்டு செய்யப்படும் வெற்றுப் பிரசாரமாக மட்டுமே திராவிட இயக்கக் கோஷம் மாறிவிட்டது தற்கால அபத்தங்களில் ஒன்று. இன்று ‘திராவிட’ என்று துவங்கும் எதனையும் பற்றி நினைக்கும்போது உடனே பளிச்சிடுவது அச்சொல்லைத் தன் பெயரில் கொண்டுள்ள அரசியல் கட்சிகளின் ஊழல் மட்டுமே என்பது நிதர்சனம்.

*********

உதவிய நூல்கள் :

திராவிட மாயை ஒரு பார்வை – சுப்பு

திராவிட இயக்கம் – புனைவும் உண்மையும் – மலர்மன்னன்

அடிக்குறிப்பு:

சிலப்பதிகாரம் ‘தேவடியாள்’ மாதிரி — – விடுதலை (28.7.51)

“…இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால், பாச மூட நம்பிக்கை, ஆரியக் கருத்துக்களைக் கொண்டு, நல்ல தமிழ் அமைப்பு உடையதாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக – அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப்பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும், உடலெல்லாம் நோய்கொண்டும், வளையல் அணிந்து மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப்படுகின்றதோ அது போலத்தான் இந்த சிலப்பதிகாரமும் ஆகும்.”

Posted on Leave a comment

அசோகமித்திரன்: விடைபெற்றுச் சென்ற தனித்துவக் குரல் – அனீஷ் க்ருஷ்ணன் நாயர்

மார்ச் 23ம் தேதி இரவு, அசோகமித்திரனின் மறைவுச் செய்தியைக் கேட்டதும், என்னை ஒரு விதமான ஆற்றாமையும் கோபமும் சூழ்ந்துகொண்டது. ஒரு கலைஞனை ஆன மட்டும் நோகடித்து, அவனுக்குச் சேர வேண்டிய எந்தச் சிறப்பையும் சேரவிடாமல் செய்த நமது அறிவுச்சூழல் மீது வந்த கடுப்பு அது. ரத்தக் கொதிப்பைத் தணித்துக் கொள்ள முகநூலில் கீழ்க்கண்டவாறு ஒரு நிலைத்தகவலைப் பதிவு செய்தேன். “மேலும் ஒரு மேதைக்கு, அவர் வாழ்நாள் முழுவதும் அங்கீகாரம் கிடைக்க விடாமல் செய்தாயிற்று. அற்ப அரசியலின் வெற்றியை ஆர்ப்பரித்துக் கொண்டாடுங்கள். உங்கள் முகாமில் இருக்கும் அரைவேக்காடு துண்டுப் பிரசாரகர் எவராவது எழுதிய அறுநூறு பக்க பிரசாரத்தை அலங்கரித்து யானை மேல் ஏற்றும் பணியை உவகையோடு தொடர்ந்து செய்யுங்கள். காலம் பதில் சொல்லும் என்றெல்லாம் சவால் விட மாட்டேன். நீங்கள் அற்பர்கள் என்று உங்களுக்கு எப்போதும் தெரியும். அது போதும்.”

இன்று அசோகமித்திரனின் இலக்கிய ஆளுமையைக் குறித்து ஆராயும்போது அவர் புறக்கணிக்கப்பட்டதற்கான காரணங்களை ஆராய்வதும் மிகவும் அவசியம் ஆகிறது. இன்றைய சூழ்நிலையில் அசோகமித்திரனை மறுதலித்த தரப்புகள் எவை என்பதை ஆராய வேண்டியது அவரது படைப்புலகை ஆராய்வதை விட முக்கியமானது எனக் கருதுவதற்கு இடமுண்டு. ஏனெனில் அசோகமித்திரனின் படைப்புலகை ஆராய்வதின் வாயிலாக நாமும் அவரது ஆளுமையை ஆழமாகத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை, அவர் மேதைமையை மறுத்த, இருட்டடிப்பு செய்த தரப்புகளைக் குறித்துத் தெரிந்துகொள்வதின் வாயிலாக நமக்கு நம்மைப் பற்றி, நமது அறிவுலகைப் பற்றித் தெளிவான சித்திரம் ஒன்று கிடைக்கும். சற்றே நிதானித்துச் சிந்தித்துப் பார்த்தால் அசோகமித்திரனை நான்கு தரப்புகள் தொடர்ந்து மறுதலித்து இருட்டடிப்பு செய்து கொண்டிருந்தன என்று தோன்றுகிறது. முதலில் முற்போக்குத் தரப்பு. இரண்டாவதாகத் திராவிடத் தரப்பு. மூன்றாவதாக வெகுஜன ஊடகங்கள் மீது கடும் காழ்ப்புக் கொண்ட சிற்றிதழ் அறிவுஜீவிகள் மற்றும் படைப்பாளிகள். நான்காவதாக முதிரா வாசகக் கூட்டம் அசோகமித்திரனைத் தவறாக எடை போட்டது. இவர்களின் தரப்புகளையும் தவறுகளையும் நாம் பார்க்கலாம்

தமிழ் இலக்கிய சூழலில் முற்போக்கு இலக்கிய அமைப்புகள் /இடதுசாரி இலக்கிய அமைப்புகளின் இருப்பும், அவற்றின் பலமும் நன்கறிந்த ஒன்றே. இந்த அமைப்புகள் ஆக்கவும் அழிக்கவும் வல்லவர்கள். இதற்கான காரணங்கள் சில உள்ளன. நல்லதோ கெட்டதோ இடதுசாரி அமைப்புகள் இலக்கியச் செயல்பாட்டைத் தொடர்ந்து, உடனடிப் பலனை எதிர்பார்க்காமல் செய்து வருகின்றனர். இலக்கியக் கூட்டங்கள், பயிற்றரங்குகள், இலக்கியக் கூடுகைகள் என ஏராளமான விஷயங்களை இவர்கள் ஒருங்கிணைக்கின்றனர். இவர்களுக்கு மாற்றாக வேறு அமைப்புகள் அதிகமாக இல்லை. இதன் வாயிலாக இவர்களுக்கு ஒரு வித கருத்ததிகாரம் கிடைக்கிறது. இந்தக் கருத்ததிகாரம் மூன்று இடங்களில் பாலமாகச் செயல்படுகிறது. பெரும்பாலும் இளம் வாசகர்களையும்,படைப்பாளிகளையும் அடையாளம் கண்டு கொள்வது இத்தகைய அமைப்புகள்தான். எனவே இவர்கள் மிக எளிதாக அரசியல் சார்ந்த விருப்பு வெறுப்புகளைத் திறனாய்வு என்ற போர்வையில் இளம் வாசகர்களிடமும் படைப்பாளிகளிடமும் திணித்துவிட முடியும். இதனால் தாம் பல இளைஞர்களும், இடதுசாரி படைப்பாளிகளும் சில மேதைகளை அவர்களது படைப்பில் ஒன்றைக்கூட வாசிக்காமல் நிராகரிக்கிறார்கள். இவர்களை de-radicalize செய்வது மிகவும் சிரமம். இன்னொரு பக்கம் கல்வி நிறுவனங்களில் உள்ள இந்த இயக்கத்தவர்கள் தங்களுக்கு ஒவ்வாத படைப்பாளுமைகளைக் கல்விச்சூழலில் இருந்து விலக்கி வைக்கும் வேலையை மிக திறமையாகச் செய்வார்கள். கருத்தரங்குகளுக்கு அழைப்புகள் வாராது. படைப்புகள் முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுக்கப்படமாட்டாது. நாவல்கள் பாடத்திட்டத்தில் பரிந்துரைக்கப்படாது. பல்கலைக்கழக நூலகங்களில் இவர்கள் எழுதிய புத்தகங்கள் கிடைக்காது. இதில் வேறொரு வேடிக்கையும் உண்டு. அசோகமித்திரன் இடதுசாரிகளை விரோதியாகக் கருதியவர் இல்லை. அத்தரப்பிலிருந்து வரும் நல்ல படைப்புகளையும் அவர் அடையாளம் காட்டியிருக்கிறார். பல இடதுசாரி சிந்தனையாளர்களிடமும் நெருங்கிய நட்பும் இருந்திருக்கிறது. இதையெல்லாம் தாண்டி ஒரு மார்க்சிய விமர்சகனுக்கு அணுக்கமான கூறுகள் அசோகமித்திரனின் படைப்புகளில் ஏராளமாக உள்ளன. ஆனால் நமக்குத்தான் ஒரு எழுத்தாளர் என்ன எழுதுகிறார் என்பதைவிட எங்கு உறுப்பினராக இருக்கிறார் / உறுப்பினராக இல்லை என்பது மிகவும் முக்கியமாயிற்றே. புஷ் சொன்னது போல் அவர் நம்முடன் இல்லையென்றால் நமது எதிரிதான் என்றே இடதுசாரிகள் தீர்மானம் செய்தனர். இதனால் அசோகமித்திரன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார்.

அசோகமித்திரனுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு அவருக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரங்களைக் கிடைக்க விடாமல் செய்த மற்றொரு குழு, திராவிட அரசியல் சிந்தனைகளைக் கைக்கொண்டிருந்த குறுங்குழு. அசோகமித்திரன் பிராமணராகப் பிறந்தார் என்பதே இவர்களுக்கு போதுமான காரணமாக இருந்தது. போதாதகுறைக்கு அசோகமித்திரனின் நாவல்களில் சாமியார்கள் எல்லாம் வந்தனர். வந்த சாமியார்கள் நல்ல சாமியார்களாக இருந்தது மட்டுமல்லாமல் ஹிந்து சாமியார்களாகவும் இருந்தனர். இது மிகப் பெரிய மூட நம்பிக்கை அல்லவா! எனவே அசோகமித்திரனும் அவரது ‘பிற்போக்குப் பார்ப்பனீய எழுத்துக்களும்’ குறிவைத்துத் தாக்கப்பட்டன. அசோகமித்திரன் சுயவதைப்பிரியனுக்கே உரிய நெஞ்சுரத்துடன் வேறொரு விஷயத்தையும் செய்தார். தமிழ்நாட்டில் பிராமண இளைஞர்கள் ஒடுக்கப்பட்ட யூதர்களைப் போல் உணருகிறார்கள் என்று பொருள்படும் விதமாகப் பத்திரிகை பேட்டி ஒன்றில் கூறினார். தமிழ்நாட்டில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் பிராமண வெறுப்பும் இனவாதமும் யாரும் அறியாததல்ல. அதனை முன்னெடுத்துச் செல்பவர்கள் நாசிகளுக்குச் சற்றும் குறைந்தவர்களுமல்ல. என்ன, நாசிகளுக்குக் கிடைத்த வாய்ப்பு இவர்களுக்குக் கிடைக்கவில்லை. அவ்வளவே.
ஆனால் இந்த உண்மையை எந்த ஒரு அறிவுஜீவியும் உரத்துக் கூறியதில்லை. இதனைத் தொடர்ந்து இலக்கியம் என்றால் என்னவென்று தெரியாத திராவிட மேடைப் பேச்சாளர்கள் தொடங்கி, அவ்வியக்கங்களின் அறிவுஜீவிகள் வரை அனைவரும் அசோகமித்திரனை வறுத்தெடுத்தனர். முற்போக்கு பிராமணரைக் கூட ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம்; ஆனால் அவர்கள் குற்றங்களைத் துணித்து சுட்டிக் காட்டும் அசோகமித்திரன் போன்றவர்களைத் திராவிட இயக்கத்தினரால் ஜீரணிக்கவே முடியவில்லை. அசோகமித்திரனுக்கு சாஹித்ய அகாடமி பரிசு வழங்கப்படக்கூடாது எனத் தமிழகத்திலிருந்து கடிதம் சென்றதாகக் கூறுகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள். இனி ஏதாவது ஒரு திறமையான ஆவண ஆய்வாளர் வந்தால் ஒழிய இச்செய்தியின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய முடியாது. இருப்பினும் அவ்வாறு ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருக்கும் எனில் நமக்கு அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. (பின்னர் ஒரு திராவிடத் தலைவரின் பாராட்டு விழாவில் அசோகமித்திரன் பேசினார். ஆனால் அந்த் தலைவரின் படைப்புகளைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. இதுதான் ஒரு சாதாரணனின் ஒத்துழையாமைப் போர்). தன்னை எதிரியாகக் கருதிய அரசியல் இயக்கங்கள் வலுவுடன் இருந்த சூழலிலும் கூட அசோகமித்திரன் தொடர்ந்து இலக்கிய செயல்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருந்தார்.

சிற்றிலக்கிய சூழலிலும் அசோகமித்திரனைத் தவறாக எடை போட்டவர்கள்தான் அதிகம். அவரது படைப்புகள் மேல் உள்ள விமர்சனங்கள் என்பதைத் தாண்டி அவர் மீதான விமர்சனங்கள்தான் அதிகமாக இருந்தன. அசோகமித்திரனின் அஞ்சலிக் கூட்டங்களில் கலந்துகொண்ட மூத்த விமர்சகர்களிடம் பேசும்போது ஒரு விஷயம் தெரியவந்தது. அன்றைய இலக்கியச் சூழலில் வணிக இதழ்கள் X இலக்கிய இதழ்கள் என்ற வேறுபாடு மிக்க கவனத்துடனும் வன்மத்துடனும் கைக்கொள்ளப்பட்டது. வணிக இதழ்களோடு நெருக்கமாக இருந்த படைப்பாளிகள் கொள்கைப் பிடிப்பு இல்லாதவர்களாக, பணத்திற்கு விலை போனவர்களாகக் கருதப்பட்டனர். இந்தப் பின்னணியில் அசோகமித்திரன் மீது இவர்களது வெறுப்பு படர்ந்தது. எந்தப் பத்திரிக்கையில் வேலை செய்தாலும் அசோகமித்திரன் தமது இலக்கியத்தில், இலக்கியச் செயல்பாடுகளில் எந்தச் சமரசத்தையும் செய்து கொள்ளவில்லை. மத்திய /மாநில அரசு வேலையோ /பரம்பரை வியாபாரமோ /நில புலன்களோ இருந்திருந்தால் பரவாயில்லை. எழுத்தாளர்களுக்கு வாரி வழங்கும் இடத்திலும் அவர் வாழவில்லை. இந்நிலையில் அவர் குடும்பத்தோடு தற்கொலை செய்திருக்க வேண்டுமா? ஆனால் தீவிர இலக்கியச் செயல்பாட்டாளர்களுக்கு இந்த நியாயங்கள் என்றும் புரியாது.

அசோகமித்திரனை அவசர அவசரமாக நிராகரித்த மற்றொரு தரப்பு முதிரா வாசகர்களுடையது. அவரது ஏதாவது ஒரு நூலை மேலோட்டமாக வாசித்துவிட்டு, ‘இதில் என்ன இருக்கிறது என இவரை மேதை என்று அழைக்கிறார்கள்’ எனக் கேட்கும் வாசகர்கள் பலரை நான் கண்டிருக்கிறேன். இது ஒரு விதமான அழகியல் சிக்கல். நம் வாசகர்கள் பலர் அலங்கார நடையையும், அதீத வர்ணனைகளையும் வாசித்துப் பழகியவர்கள். மேடைப்பேச்சு தொடங்கி அனைத்து இடங்களிலும் ஜால வித்தைக்காரனின் லாகவத்தோடு மொழியைக் கையாளும் ஆளுமைகளைப் பார்த்தவர்களுக்கு, மொழிஜாலமே இலக்கியம் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு, அசோகமித்திரனின் படைப்புகள் எளிமையானவையாக, ஆழமற்றவையாகத் தோன்றுவது இயல்பே. நான் கீழ்க்கண்ட உதாரணத்தை இத்தகைய வாசகர்களிடம் கூறுவதுண்டு. தொடர்ந்து சில காலம் உணவு விடுதியில் உண்டு பழகிய ஒரு நபருக்கு, வீட்டில் சமைத்த உணவில் உப்பும் உறைப்பும் குறைவாக இருப்பதாகத் தோன்றும். பிரச்சினை வீட்டு உணவில் அல்ல. உண்பவனின் சுவையுணர்வில்தான்.

இன்று அசோகமித்திரனின் வாழ்க்கையைத் தொகுத்துப் பார்க்கும்போது அவர் ஒரு ஒற்றை நபர் இயக்கமாகவே தம் வாழ்நாளெல்லாம் செயல்பட்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. அசோகமித்திரன் பயணம் செய்த பாதை தனிமையானது. துணைகளற்றது. கூட்டங்களில் இருந்தும், குழுச் செயல்பாடுகளில் இருந்தும், குழு அரசியலில் இருந்தும் ஒதுங்கியே இருந்துள்ளார். பொருளாதாரச் சிக்கல்கள், சித்தாந்தம் சார்ந்த எதிர்ப்புகள், ஜாதி வெறியர்களின் தாக்குதல்கள் எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு செவ்வெனே இலக்கியப் பணிகளைச் செய்து வந்துள்ளார். கொஞ்சமே கொஞ்சம் வளைந்து கொடுத்திருந்தார் என்றால் அவர் வாழ்க்கையே வேறுமாதிரி இருந்திருக்கும். ஆனால் எல்லாத் துன்பங்களுக்கு நடுவிலும், எல்லா எதிர்ப்புகளுக்கு நடுவிலும் தமது கொள்கையை விட்டுக்கொடுக்காமல், சிறு புன்னகையோடு, வாழ்ந்திருக்கிறார். இவை எல்லாவற்றையும் தாண்டி யார் மீதும் துவேஷம் கொள்ளவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அசோகமித்திரன் ஒருவேளை இந்தக் கட்டுரையை வாசித்துப் பார்த்திருந்தார் எனில் மகிழ்ச்சி அடைந்திருக்க மாட்டார். எழுத்தாளனைக் குறித்து எழுதக் கூடாது, வம்புகள் கூடாது, எழுத்தைக் குறித்து மட்டும்தான் எழுத வேண்டும் எனக் கூறியிருப்பார். ஆனால் நான் ஏற்கெனவே கூறியது போல இக்கட்டுரையின் நோக்கம் அசோகமித்திரனைப் புரிந்துகொள்வது மட்டுமல்ல. நம் சிறுமைகளைப் புரிந்துகொள்வதும்தான்.

அசோகமித்திரன் தமது வாழ்க்கையை எவ்விதக் குற்றச்சாட்டும் இன்றி எதிர்கொண்டார் என்றாலும் ஒரு எழுத்தாளன் சமூகத்தால் எப்படி நடத்தப்படவேண்டும் என்பது குறித்த அவருக்குத் தீர்க்கமான பார்வை இருந்தது. மெல்லிய நகைச்சுவையோடு, ‘நேஷனல் புக் டிரஸ்ட் கருத்தரங்கு’ (1977) என்னும் கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார்:

“முதலில் கூறியபடியே எல்லாக் கட்டுரைகளுமே உயர்ந்த தன்மை கொண்டதாக இருந்தாலும் பதிப்புத்துறையின் (பிரத்யேகக்) கருத்தரங்கு என்பது போன்றதில் எழுத்தாளர் அசோகமித்திரன் கட்டுரை புள்ளிவிவரமோ மேற்கோள்களோ ஏதும் இல்லாமல் ஒரு தனித்த குரலில் ஒலிப்பதாக இருந்தது. கருத்தரங்கு விவாதத்தில் திரும்ப திரும்ப நினைவுபடுத்தப்பட்ட கட்டுரையும் அவருடையதுதான். வரும் பத்தாண்டுகளிலாவது எழுத்தாளன் சமூகத்தில் உரிய அந்தஸ்து பெறுபவனாக இருக்க வேண்டும் என்று கூறும் அவர் கட்டுரையை அவர் வாசிக்க எழுந்தபோது கருத்தரங்கைத் துவக்கிய அமைச்சர் அரங்கநாயகம் விடைபெற்றுச் சென்றார். அசோகமித்திரன் மேடையை நெருங்கியபோது அதுவரை சுறுசுறுப்பாக இயங்கிய சென்னை டெலிவிஷன்காரர்கள் விடை பெற்றுச்சென்றார்கள். அசோகமித்திரன் மேடையேறிய உடனேயே வானொலிக்காரர்களும் மைக்கைக் கழற்றிவிட்டு விடைபெற்றுச் சென்றார்கள். ”(பக்கம் 65-66, காலக்கண்ணாடி கலைஞன் பதிப்பகம், 1998.)

இது நடந்து இரண்டு தசாப்தங்கள் ஓடிவிட்டன. அந்த ஒற்றைக் குரலும் விடைபெற்றுவிட்டது. இனிமேலாவது அசோகமித்திரன் வலியுறுத்திய சமூக அந்தஸ்து உண்மையான எழுத்தாளர்களுக்குக் கிடைத்தால் சரி.

Posted on Leave a comment

அசோகமித்திரன்: நுணுக்கத்தின் மகத்துவம் – ஜடாயு

”எனக்குத் தெரியாது. எனக்குக் காலமே என்னவென்று தெரியவில்லை. செய்கையே காலம். அல்லது ஒரு செய்கைக்கும் அடுத்ததற்கும் உள்ள இடைவெளி. செய்கை, இடைவெளி இரண்டும் கலந்ததே காலம். அல்லது இரண்டுமே இல்லை. என்னைப் பொறுத்துத்தான் காலம். என் உணர்வுக்கு ஒன்றை விடுத்து அடுத்தது என்று ஏற்படும்போதுதான் காலம். அப்படியென்றால் என்னைப் பொறுத்தவரையில் ரெயில் நின்றுகொண்டிருக்கிறது. அது கிளம்பிவிடவில்லை. நான் அதைப் பிடிப்பதற்கு அதைத் துரத்திக்கொண்டு போக வேண்டியதில்லை…”


– காலமும் ஐந்து குழந்தைகளும், 1973.

நான் அசோகமித்திரனைச் சந்தித்ததில்லை. சில மேடைகளில் பார்த்திருப்பதோடு சரி. கடைசியாக 2015 நவம்பரில் வெண்முரசு நாவல் வெளியீட்டு விழாவில் பார்த்தபோது மிகவும் தளர்ந்து போயிருந்தார். தங்கள் வாழ்வின் முதுமைக் காலங்களில் மகத்தான மனிதர்களின் முகத்தில் மலரக் கூடிய அலாதியான கனிவு அவர் முகத்தில் குடிகொண்டிருந்தது. உடல்ரீதியாக அவர் மிகவும் அசௌகரியமாக உணர்வது தோற்றத்திலேயே தெரிந்தது. அந்த நிலையில் அருகில் சென்று வணக்கம் செலுத்துவதோ கைகுலுக்குவதோ கூட அவரில் இருந்த மென்மையைக் குலைத்து விடும் என்று தோன்றியது. பார்த்ததே மனநிறைவாக இருந்தது.

மறைந்துவிட்ட ஒரு மாபெரும் எழுத்தாளரை எந்த வகையிலெல்லாம் நினைவில் நிறுத்திக் கொள்ள முடியும்? மூன்று விதங்களில். முதலாவது, அவர் நேரடியாக விட்டுச் சென்றிருக்கும் படைப்புகள். இரண்டாவது அவர் வாழ்க்கை குறித்து பலவிதங்களில் பதிவுசெய்யப்பட்டு நாம் அறியவரும் செய்திகள். மூன்றாவது இந்த இரண்டின் வழியாக நாம் திரட்டிக்கொண்டு, நமது மனதில் தங்கி விடுகின்ற அவரது ஆளுமை. அசோகமித்திரன் விஷயத்தில் அவர் மரணமடைந்த போது, தமிழ் நவீன இலக்கியத்தின் ஒரு ஆகிருதி (icon) என்ற நிலையை அடைந்துவிட்டிருந்தார். அந்நிலையில், அவரது படைப்புகளுடனான போதிய பரிச்சயம் கூட இல்லாதவர்கள், அரசல் புரசலாகக் காதில் விழும் அவரது வாழ்க்கைச் சம்பவங்கள் தொடர்பான துணுக்குகளை வைத்துக்கொண்டு அவரை ‘மதிப்பிட்டுக்’ கொண்டிருந்தது, 21ம் நூற்றாண்டில் சமூக ஊடகங்கள் கோலோச்சும் நமது யுகத்தின் ஒரு விடம்பனம். அந்த ஆர்வத்தினால் உந்தப்பட்டு ஒரு சிலராவது மேலெழுந்து அவரது படைப்புகளை வாசிப்பார்கள் என்றால் அது நல்ல விஷயம்தான் என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆயிரம் பக்கங்கள் கொண்ட நாவலை எல்லாம் வாசிப்பார்களா என்று தனது முதுமை நாட்களில் ஒரு சலிப்பை அசோகமித்திரன் வெளிப்படுத்தினார். ஆனால், அவரே தன் வாழ்நாளில் நிறைய எழுதிக் குவித்த, தீவிரமான எழுத்தாளராகத்தான் இருந்திருக்கிறார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 8 நாவல்கள், 20 குறுநாவல்கள், கனமான கட்டுரைத் தொகுதிகள் என்று அவரது படைப்புலகம் நீண்டது, பெரியது.

பதினெட்டாவது அட்சக்கோடு, மானசரோவர், ஒற்றன் போன்ற அவரது படைப்புகள் நாவல்கள் என்றே அறியப்படுகின்றன. ஆனால், நாவல் என்ற கலைவடிவத்திற்கே உரித்தான, அதன் அடையாளம் என்று விமர்சகர்களால் கூறப்படுகிற பெருங்கதையாடல் (grand narrative) என்ற அம்சம் அவற்றில் அனேகமாக இல்லை. பதினெட்டாவது அட்சக்கோடு நாவலின் களம் பிரம்மாண்டமானது. 1947 தேசப்பிரிவினையின் பின்னணியில் செகந்திராபாதில் நிகழ்ந்த பயங்கரமான அரசியல், சமூக கொந்தளிப்புகள்தான் அதன் பின்னணி. அத்தகைய பெரிய வரலாற்றுத் திரைச்சீலையிலும் (canvass) சந்துரு என்ற பதின்மவயது இளைஞனின் உலகத்தைத்தான் அசோகமித்திரன் மையமாக வரைந்து செல்கிறார். இதே களத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட மற்ற பல பிரபல இந்திய நாவல்களில் அந்தக் காலகட்டத்தின் வரலாற்று வன்மங்களும் கொடுமைகளும் நேரடியாக உரத்த குரலில் பதிவு செய்யப் பட்டிருப்பதை ஒப்பிட்டால் இந்த வேறுபாடு புலப்படும்.

அந்த நாவலில் ஓர் இடம். தெலுங்கர்களும் உருதுமொழி பேசுபவர்களுமே அதிகமாகப் படிக்கும் அந்தப் பள்ளியில் உள்ள மிகச்சில தமிழ் மாணவர்களில் இயல்பிலேயே பயந்த சுபாவம் கொண்ட சந்துருவும் அடக்கம். பிரின்சிபல் உட்பட அனைவரும் கலந்துகொள்ளும் ஒரு ‘தமிழ் மன்ற’ நிகழ்ச்சியில் எதிர்பாராதவிதமாக, ‘தமிழில் கடவுள் வாழ்த்துப் பாடு’ என்று ஒரு உடனடி ஆணை ஆசிரியரிடமிருந்து வருகிறது. செய்வதறியாது ஏதேதோ பாடல்கள் நினைவில் அலையடிக்க, கடைசியாக அவனது வாயிலிருந்து கம்மிய குரலில் வெளிப்படுவது ‘எந்தன் இடது தோளும் கண்ணும் துடிப்பதென்ன…” அப்போது பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த சகுந்தலை திரைப்படத்தில் வந்த பாடல். அவன் வியர்த்துப் போய் அதை முனகிவிட்டுச் சென்று அமர்ந்த பின், பேசவரும் ‘செகரட்ரி’ தன் பேச்சு முழுவதும் அந்த ‘சாமிப் பாட்டை’ சிலாகிக்கிறார்.

மேலோட்டமாக வாசித்துச் செல்கையில் ஒரு நகைச்சுவை நிகழ்வு போலத் தோன்றினாலும், இந்த நிகழ்வில் மையமாக உள்ள அபத்தம் (absurdity) நாம் தவறவிட முடியாதது. ஆம், அந்த நகரத்திலும், அது அமைந்துள்ள தேசத்திலும் மக்கள் ஒருவர் மீது ஒருவர் காரணமின்றி அவநம்பிக்கையும் வெறுப்பும் கொண்டு அலையும் அபத்தம். அதன் நுட்பமான குறியீடாகவே அந்த இடத்தில் அந்த சம்பவம் வருவதை இலக்கிய வாசகர்கள் உணர முடியும். அசோகமித்திரனின் கலை மேதைமை சந்துரு என்ற சிறிய மனிதனின் சிறிய உலகத்தின் நுண்ணடுக்குகளின் வழியாகவே வரலாற்றின் கனத்தை நுட்பமாகவும் மௌனமாகவும் கூறிச் சென்றிருக்கிறது. பெருங்கதையாடல்கள் மீதிருந்த அவநம்பிக்கை அல்லது ஒவ்வாமை காரணமாக, சிறுகதையையே தனது கலைவெளிப்பாட்டிற்கான உகந்த வடிவமாக அவர் கருதியிருக்கக் கூடும். அவரது குறுநாவல்களும் கூட ஒருவகையில் நீளமாக்கப்பட்ட சிறுகதைகள்தான்.

ஆனால், அசோகமித்திரனுக்கு வரலாற்றுப் பிரக்ஞையோ அரசியல் சிந்தனையோ இல்லை என்பதல்ல இதன் பொருள். அது மிகச் சன்னமான குரலில் படைப்புகளின் ஊடாகத் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் கவனிக்கலாம். ‘இன்று’ குறுநாவலில், தில்லியில் தீன்தயாள் மார்க் என்ற சாலையைக் கஷ்டப்பட்டுத் தேடிக்கண்டுபிடிக்கிறான், மரணத்தையும் தற்கொலையையும் பற்றிய சிந்தனைகளுடனேயே உழன்று கொண்டிருக்கும் ‘அவன்’. அறைக்குள் போனதும் தனிமையில் அவனது மன அவசங்களின் ஒரு பகுதியாக கீழ்க்கண்ட பத்தி வருகிறது.

“… அப்புறம் கீழே விழுகிறோம் என்ற உணர்வு. அந்த இமைப்போதில் மனிதனுக்கு இறக்கைகள் முளைத்துவிடக் கூடாதா? மனிதனுக்கு மட்டும் இறக்கைகள் இருந்துவிட்டால் தரையில் ஏன் வாழவேண்டும்? பூமியை முழுக்க பாம்பு, புலிகளுக்கு ஒழித்துக் கொடுத்து விடலாம். தீன்தயாள் உபாத்யாயாவுக்கு இறக்கைகள் முளைக்கவில்லை. அவர் மண்ணில் மோதிப் பிணமாகக் கிடந்தார். அவர் அந்த மண்ணை வெறும் மண்ணென அழைக்கமாட்டார். பாரத மண். இந்த மண் பாரத மக்களுக்கே உரியது. பாரத மக்களென்பவர் யாவர்? சரித்திரத்தைப் புரட்டிப் பாருங்கள். இப்போது இங்கு யார் யாரோ உரிமை கொண்டாடுவதோடு பாரத மக்களின் தலைவிதியை அவர்களுக்குத் தோன்றியபடி கிறுக்கித் திருத்தி எழுதுகிறார்கள். நீ இரண்டாவது மணம் புரிந்து கொண்டால் சிறைக்குப் போவாய். மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டால் உன் வேலை போய், நீங்கள் எல்லாரும் நடுத்தெருவில் நிற்கவேண்டும். உன் பணம், உன் சொத்து உன்னிஷ்டம் போல் விநியோகிப்பதற்கு அல்ல. உன் மூதாதையரை மதித்துத் தொழுகிறாயா, நீ பிற்போக்குவாதி. நீ மாற்றப்பட வேண்டியவன். உன் வீடுகளையும் ஸ்தாபனங்களையும் புனித ஸ்தலங்களையும் கோயில்களையும் மரபையும் சம்பிரதாயங்களையும் நான் எப்படியும் எதுவும் செய்வேன். இந்தத் தேசத்துக்கு மதச்சார்பு கிடையாது. அதாவது உன் மதத்தின் மேல் சார்பு கிடையாது. ஜெய் ஹிந்த்!


அவன் தண்ணீரைத் தொடாமல் அந்தக் கட்டடத்து வெளியே வந்தான். பனி அருவியாக இறங்கிக் கொண்டிருந்தது. சில கட்டட விளக்குகள் தவிர அந்தத் தெரு பனிச்சாம்பல் பூத்த கரிய நிறத்தில் உருவ நிர்ணயமற்ற அரக்கன் மல்லாந்து படுத்திருப்பது போல இருந்தது…”

1970களின் முற்பாதியில் நடப்பதாக வரும் நாவல் இது. இதில் நெருக்கடி நிலை பிரகடனத்திற்கான அறிகுறிகள், 1969ல் ஓடும் ரயிலிலிருந்து விழுந்து இறந்த ஜனசங்கத் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் துர்மரணம், காங்கிரசின் செக்யுலரிச கொள்கைகள் ஆகியவற்றைத் தெளிவான அரசியல் பிரக்ஞையுடன் அசோகமித்திரன் பதிவு செய்திருக்கிறார்.

“நன்றாகத் தூங்கியிருந்த அவனுடைய தாடை மூட்டுக்கள் அவனுடைய கரிய கன்னங்களை அளவுக்கு மீறி ஒட்டிப் போனதாக காண்பித்தன. வெள்ளை கொண்டு வரும் ஆட்கள் எல்லாரும் அநேகமாக அப்படித்தான் இருப்பார்கள். ராமராஜ்யம் பற்றிப் படம் எடுத்தால் கூடப் படத்தில் வரும் பிரஜைகள் தாது வருஷத்து மக்களாகத்தான் இருப்பார்கள்…”

புலிக்கலைஞன் சிறுகதையில், நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு வரும் ஒல்லிப்பிச்சானான ஆட்கள் குறித்து வரும் ஒரு வர்ணனை இது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மக்களை வதைத்த தாது வருஷப் பஞ்சத்தையும், அத்தகைய ஒரு பஞ்சம் சுபிட்சத்துக்கும் வளத்திற்கும் இலக்கணமான ராமராஜ்யம் அரசு வீற்றிருந்த நாட்டில் நிகழ்ந்ததையும் எல்லாம் மிக இயல்பாகப் போகிற போக்கில் ஒரு கருப்பு நகைச்சுவை (black humor) மூலமாக மிக நுட்பமாக வெளிப்படுத்திச் சென்றிருக்கிறது அசோகமித்திரனது எழுத்து. இப்படி எத்தனையோ உதாரணங்களை எடுத்துக் காட்டலாம்.

அசோகமித்திரனின் எல்லாப் படைப்புகளிலும் உள்ள இன்னொரு முக்கியமான தன்மை அவற்றின் ஒருமை (integrity). அவரது கதைகளில் உள்ள உரையாடல்களையோ சித்தரிப்புகளையோ உருவி எடுத்து, கதையுடன் தொடர்பில்லாத தனியான ஒரு வடிவத்தை அவற்றுக்கு நாம் தரவே முடியாது. உண்மையில், அத்தகைய சில ‘மேற்கோள்கள்’ வேண்டும் என்று தேடியபோது அப்படி ஒன்றும் எந்தக் கதையிலும் அகப்படாது என்றே தோன்றியது. ஏனென்றால் இரண்டு பக்கங்களுக்கு ஒரு பாத்திரம் தொடர்ந்து பேசிக்கொண்டு போகும் உரையாடல்களையோ அல்லது விவாதங்களையோ அல்லது பொத்தாம்பொதுவாக கதாசிரியர் தன் கூற்றாக ஒரு தத்துவத்தைச் சொல்வதையோ அவர் படைப்புகளில் காண முடியாது. அந்த அளவிற்குக் கச்சிதமான வடிவ நேர்த்தியும் ஒருமையும் கொண்டவை அவை. அபூர்வமாகவே இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் காணப்படுவது போன்ற மேற்கோள்களைக் காணமுடியும். அதிலும் கூட ‘காலம்’ பற்றிய தத்துவ விசாரம் நான்கு வாக்கியங்களுக்குப் பிறகு பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருக்கும் ரயிலுக்கு வந்து விடுகிறது.

இதே ரீதியில், மிகச் சாதாரண வாக்கியங்களும் கதையின் சூழலில் ஒரு பேருண்மை போல ஆகிவிடுவதையும் காணமுடியும். ‘இறந்தவர்கள் எப்படி எடைகூடக்கூடும் என்று தெரியவில்லை’ என்பது ஒரு பொதுப்புத்தி சார்ந்த கூற்று. ‘பிரயாணம்’ சிறுகதையில் வாழ்நாள் முழுவதும் தான் மதித்துப் போற்றிய குருநாதர் ஓநாய்களால் கடித்துக் குதறப்படுவதைப் பார்த்தபின், மாபெரும் தர்மக் குழப்பத்துடனும் உயிர்ப்பயத்துடனும் அவரது சடலத்தைப் பனிமலை வெளியில் தூக்கிக் கொண்டு ஓடும் சீடனின் உள்ளத்தில் இந்தக் கூற்று எழும்போது, அதன் கனம் சாதாரணமானதல்ல. ‘அவன்தான் சற்றுமுன்பு புலியாக இருந்தவன்’ (புலிக்கலைஞன்) என்ற கூற்றும் இதே போலத்தான். இதற்குக் காரணம் இந்தப் படைப்புகளில் கூடியுள்ள அபாரமான ஒருமைதான்.

மே 2016ல் வெளிவந்த ‘அந்தரங்கமானதொரு தொகுப்பு’ (நவீன விருட்சம் வெளியீடு) தான் அசோகமித்திரன் பெயரில் அவர் வாழும்போது வெளிவந்த இறுதி நூல் என்று நினைக்கிறேன். தான் எழுதியவற்றில் தனக்கு மிகவும் பிடித்த படைப்புகளை அசோகமித்திரனே தேர்ந்தெடுத்துத் தொகுத்து வந்திருக்கும் அருமையான நூல் இது. இதில் பொதுவாக பல விமர்சகர்களாலும் தொடர்ந்து சுட்டிக் காட்டப்பட்ட ‘பிரயாணம்’, ‘கிணறு’ போன்ற படைப்புகளுக்கு மத்தியில் எனக்கென்று சில ஆச்சரியங்கள் இருந்தன. ‘விருந்து’, ‘முறைப்பெண்’ ஆகிய சிறுகதைகள். இவற்றைப் பற்றி ஒரு இலக்கியக் கூட்டத்தில் குறிப்பிட்டபோது யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. இரண்டுமே’சதுரங்கா சொன்னார்’ என்று ஆரம்பிக்கும். மைசூர் / பெங்களூர் பின்னணி கொண்ட, எனக்கு மிகவும் பிடித்த, நெருக்கமான கதைகள். இவற்றில் குறிப்பிடப்படும் ‘சதுரங்கா’ என்பவர் ஒரு காலகட்டத்தில் கர்நாடகத்தில் பிரபலமாக இருந்த இடதுசாரி / சோஷலிஸ்ட் அறிவுஜீவிக் குழாத்தைச் சேர்ந்த ஒரு உண்மையான எழுத்தாளர் என்றும் பின்பு அறிய நேர்ந்தது. என்னைப் போலவே அசோகமித்திரனுக்கும் இந்தக் கதைகள் விசேஷமாகப் பிடித்தவை என்பது ஒரு வாசகனாக என்னுள் சிலிர்ப்பையும் சிறு பரவசத்தையும் ஏற்படுத்தியது என்பதைச் சொல்லியாக வேண்டும்.

உண்மையில் மகத்தான எழுத்தாளர்கள் மீது வாசகர்களுக்கு ஏற்படும் இத்தகைய அந்தரங்கமான நெருக்கம்தான் இலக்கிய ரசனையின் ஒரு முக்கியமான அங்கம். இத்தகைய வாசக பந்தங்களின் வாயிலாகவே, அவரைச் சந்தித்தும் பார்த்துமிராத நாளைய தலைமுறை தமிழ் வாசகர்கள் பலரது உள்ளங்களிலும் அசோகமித்திரன் வாழ்வார்.

(குறிப்பு: ஏப்ரல் 2, 2017 அன்று பெங்களூர் வாசகர் வட்டம் சார்பில் பெங்களூரில் நடைபெற்ற அசோகமித்திரன் நினைவுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின்  கட்டுரை வடிவம் இது. இந்தக் கூட்டத்தின் பதிவுகளை இணையத்தில் https://goo.gl/k9Ydv2 என்ற சுட்டியில் காணலாம்.)

Posted on Leave a comment

வலம் மே 2017 படைப்புகள்

வலம் மே 2017 இதழ் படைப்புகள்

  • அசோகமித்திரன் – நுணுக்கத்தின் மகத்துவம் – ஜடாயு
  • அசோகமித்திரன்: விடைபெற்றுச் சென்ற தனித்துவக்குரல் – பா.சி. அனீஷ் கிருஷ்ணன் நாயர்
  • திராவிட இயக்கம் என்னும் அபத்தம் – ஆமருவி தேவநாதன்
  • நாளைய நகரங்கள் – கிஷோர் மகாதேவன்
  • தமிழக விவசாயிகளின் போராட்டம்  – ராஜா ஷங்கர்
  • ஒரு நொடி – லதா ரகுநாதன்
  • பிக் டேட்டா – சுஜாதா தேசிகன்
  • மேகாலயா பயணம்: கடவுளின் தோட்டம் – திருச்செந்துறை ராமமூர்த்தி சங்கர்
  • உரையாடும் ரோபோ: சாட்பாட் (Chatbot) – ஜெயராமன் ரகுநாதன்
  • அயோத்தியில் ராமர் கோவில்: இறுதிக்கட்டத்தில் ராமஜன்ம பூமி வழக்கு – பி.ஆர்.ஹரன்
  • ஸார்… வோட் ப்ளீஸ்!  – ஜெ.ராம்கி
  • ஜக்கி வாசதேவும் ஸ்டீபன் ஜேகவுல்டும் – அரவிந்தன் நீலகண்டன்
  • அட்டைப்பட அசோகமித்திரன் ஓவியம் – லதா ரகுநாதன்
இ புத்தக ஓராண்டுச் சந்தா – http://nammabooks.com/valam-one-year-subscription
அச்சு இதழுக்கு ஓராண்டு சந்தா செலுத்த: https://www.nhm.in/shop/Valam-OneYearSubscrpition.html