Posted on Leave a comment

வலம் – மே 2018 இதழ் – முழுமையான படைப்புகள்

வலம் மே 2018 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.

அறிவியலும் இந்துத்துவமும் -1 – அரவிந்தன் நீலகண்டன்

கண்ணனுக்கென ஓர் கவியமுதம் – ஜடாயு

ஆக்கர் (சிறுகதை) – சுதாகர் கஸ்தூரி

மாறி வரும் சவுதி அரேபியா – லக்ஷ்மணப் பெருமாள்

ஒளிவழிக் கணினிகள் ஆப்டிகல் கம்ப்யூடிங் – ஹாலாஸ்யன்

நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்: புத்தக விமர்சனம் –  ஆமருவி தேவநாதன்

சில பயணங்கள் சில பதிவுகள் (தொடர்) – சுப்பு

சிற்றோவியங்களில் சௌர பஞ்சாஸிகா அல்லது பில்ஹண பஞ்சாஸிகா | அரவக்கோன்

ஸ்ரீ புரி ஜகந்நாதர் – சுஜாதா தேசிகன்

Posted on Leave a comment

ஸ்ரீ புரி ஜகந்நாதர் | சுஜாதா தேசிகன்

ஸ்ரீரங்கம், கரிசைலம் அஞ்சனகிரிம்
தார்க்ஷாத்திரி சிம்மாசலவ் ஸ்ரீகூர்மம்
புருஷோத்தமஞ்ச பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீமத்த்வாரவதி ப்ரயாக் மதுரா
அயோத்தியா கயா புஷ்கரம் சாளக்ராமகிரிம்
நிஷேவ்ய ரமதே இராமானுஜோயம் முநிஹி

ஸ்ரீராமானுஜர் இந்தியாவைச் சுற்றி விஜயம் செய்த பாதையைக் குறிக்கும் ஸ்லோகம். இதில் இருப்பது ஊர்களின் பெயர்கள்தான் – ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், திருவேங்கடம், அஹோபிலம், சிம்மாச்சலம், ஸ்ரீகூர்மம், புரி ஜகந்நாதம், பத்ரி, நைமிசாரண்யம், த்வாரகா, ப்ரயாகம் மதுரா, அயோத்யா, கயா, புஷ்கரம், சாளக்ராமம். இந்த இடங்களை எல்லாம் கூகிள் மேப் கொண்டு பார்த்தால் பாரத தேசமே புண்ணிய பூமி என்பது தெரியும்.

2016, 2017 மேலே குறிப்பிட்ட திவ்ய தேசங்களை எல்லாம் சென்று தரிசிக்கும் பேறு கிடைத்தது. அதில் ‘புருஷோத்தம’ என்று வரும் இடம் ஒடிசாவில் புகழ்மிக்க ஸ்ரீ புரி ஜகந்நாத கோயில். அதைப் பற்றியதுதான் இந்தக் கட்டுரை.

அக்டோபர் 6, 2017 காலை 6.30மணிக்குக் கடலில் ஸ்நானம் செய்ய கிளம்பினோம். ‘ஆழி மழைக் கண்ணா’ என்று பாடாமலே நல்ல மழை. கண்ணன் கீதையில் ‘நீர் நிலைகளுள் நான் கடலாக இருக்கிறேன்’ என்கிறான். கறுத்த மேகம், மழை, சுற்றிலும் கடல் என்று எல்லாம் கண்ணனாகவே காட்சி அளித்தது.

இங்கே உள்ள கடல் ‘சக்ர தீர்த்தம்’ என்று கொண்டாடப்படுகிறது. இந்தக் கடலிலிருந்து தான் ‘தாரு’ ரூபத்தில் (தாரு – மரக்கட்டை) பெருமாள் தோன்றினார்.

புரி ஜகந்நாதரின் ஸ்தல புராணம்

க்ருத யுகத்தில் இந்திரத்துயும்னன் என்ற அரசன் அவந்திகா நகரை ஆண்டு வந்தான். சிறந்த விஷ்ணு பக்தன். அவனுக்கு ஒரு ஆசை. நடக்கிற, ஓடுகிற, ஆடுகிற, உண்ணுகிற, கண்சிமிட்டும் பெருமாளை நேரில் பார்க்க வேண்டும் என்று. குல குருவிடம் தன் ஆசையைச் சொன்னான். குருவிற்கு உடனே பதில் சொல்லத் தெரியவில்லை. கேட்டுச் சொல்லுகிறேன் என்றார்.

யாத்திரை சென்று அரண்மனையில் வந்து உணவு உண்ணும் யாத்திரிகர்களிடம் அரசனின் ஆசையைச் சொன்னார். யாருக்கும் பதில் தெரியவில்லை. ஒரு நாள் ஒரு யாத்திரிகர், ‘நான் அனைத்து புண்ய ஸ்தலங்களையும் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவன். பாரத தேசத்தில் உத்கலதேசத்தில் (தேசிய கீதத்தில் ‘திராவிட உத்கல பங்கா’ என்று வரும் உத்கலதான் இன்றைய ஒடிசா.) கடலுக்கு வடக்கே இருக்கும் புருஷோத்தம சேஷத்திரத்தில் அடர்ந்த காடுகளுக்கு நடுவே மலை மேல் ஆலமரத்தின் பக்கம் இருக்கும் ஒரு கோயிலில் இருக்கிறார். நானே பல ஆண்டுகள் அவருக்குத் தொண்டு செய்துள்ளேன்’ என்று கூற உடனே அரசனிடம் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

குரு தன் தம்பியான வித்யாபதியை முதலில் அங்குச் சென்று விவரம் அறிந்து வரச் சொன்னார். வித்யாபதி தேடி அலைந்தார். ஒரு நாள் மாலை சூரியன் அஸ்தமனம் ஆகும் சமயம் யாத்திரிகர் சொன்ன அடையாளத்துடன் மலை உச்சியில் ஆலமரத்தைக் கண்டார். இரவு, இருட்டு என்று சேர்ந்துகொள்ள, அடர்ந்த காட்டுப் பகுதியில் செல்ல முடியாமல் அங்கேயே தங்கினார். அப்போது அங்கே பேச்சுக் குரல் கேட்டது. காட்டுவாசிகள் இவர்களை ஒரு ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ஆசிரமத்தில் விஷ்வாசு என்பவர் இவருக்கு உணவு கொடுத்து ஓய்வு எடுக்கச் சொன்னார். ஆனால் வித்யாபதி ‘எங்கள் மன்னன் இந்தச் செய்திக்காக உபவாசம் இருக்கிறார்… ஆகவே உடனே மலை மேல் போக வேண்டும்’ என்று சொல்ல, ‘சரி வாருங்கள் போகலாம்’ என்று இருளில் அடர்ந்த காட்டுப்பகுதியில் அழைத்துச் சென்றார்.

விடியற்காலை ஆலமரத்தை அடைந்து, அதன் பக்கம் பேரொளியோடு நீலக் கல் போல எழுந்தருளிய நீல மாதவனனை வியந்து வணங்கி கீழே இறங்கி ஆசிரமத்தை அடைந்தார்கள்.

அங்கே விஷ்வாசு இவருக்குப் கொடுத்த பிரசாதம் பிரமாதமாக இருக்க, ‘இது என்ன பிரசாதம்? ‘ என்று வினவ, ‘இது மஹா பிரசாதம்… இந்திரன் சமைத்து ஜகந்நாதருக்கு அளித்த பிரசாதம்’ என்று அதன் பெருமைகளைச் சொன்னார். கூடவே அதிர்ச்சியான தகவலையும் சொன்னார். உங்கள் மன்னன் இங்கே வரும் போது பெருமாள் அவருக்கு இது போலக் காட்சி அளிக்க மாட்டார். ஆனால் இந்த விஷயத்தை மன்னனிடம் சொல்லாதீர்கள் என்றார். வித்யாபதி கொஞ்சம் பிரசாதத்தைக் கட்டிக்கொண்டு மன்னரைக் காண விரைந்தார்.

மன்னனிடம் நடந்தவற்றைச் சொல்லி நீல மாதவப் பெருமாளின் வடிவழகைச் சொல்லி, பிரசாதத்தைக் கொடுத்தார். மன்னன், ராணி குண்டிச்சா, பிரஜைகள் புடை சூழ உடனே புறப்பட்டார்கள். அந்தச் சமயம் நாரதர் அங்கே வர அவரும் சேர்ந்துகொண்டார்.

உத்கல தேசத்தை அடைந்த போது அந்த தேசத்து மன்னன் இவர்களை வரவேற்று, ‘சூறாவளியால் நீல மாதவப் பெருமாள் மண்ணால் மூடப்பட்டுள்ளார். நாட்டையும் பல ஆபத்துகள் சூழ்ந்துள்ளன’ என்ற தகவலைச் சொன்னான். மன்னன் ஸ்ரீநரசிம்ம பெருமாளைத் தியானித்து ஆயிரம் அசுவமேத யாகங்களைச் செய்தான். அவனுக்குக் கனவில் ‘பாற்கடலுள் பையத்துயின்ற’ என்பது போல பெருமாள் காட்சி தந்தார்.

நாரதர், ‘பெருமாள் எழுந்தருளும் தருணம் நெருங்கிவிட்டது அவர் மரக்கட்டையாக உருவெடுக்கப் போகிறார்’ என்று கூறி எல்லோரையும் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு மரம் மிதந்து வந்தது.

இந்த மரத்தை அரசனும், ராணியும் பயபக்தியுடன் பெற்றுக்கொண்டார்கள். அப்போது ஒரு அசரீரி கேட்டது. ‘இந்த மரத்தை வஸ்திரத்தில் சுற்றி வையுங்கள், சில நாட்களில் ஒரு தச்சன் வந்து செதுக்குவார். செதுக்கும் ஒலி வெளியே கேட்காதபடி வெளியே வாத்தியம் வாசிக்க வேண்டும், தச்சன் செதுக்கும் போது அதை யாரும் பார்க்க கூடாது’ என்றது.

அசரீரி சொன்ன மாதிரியே சில நாள் கழித்து தச்சன் ஒருவன் வந்தான். தனி அறையில் பூட்டப்பட்டுச் செதுக்க ஆரம்பித்தான். சத்தம் கேட்காமல் இருக்க வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.

பதினைந்து நாள்கள் சென்றது. ராணிக்கு ஆவல் அதிகமாகியது. கதவில் காதை வைத்துக் கேட்ட போது செதுக்கும் ஒலி வரவில்லை. அரசன் தடுத்தும் கேளாமல், ராணி கதவை திறக்க அங்கே தச்சனை காணவில்லை. ஆனால் அங்கே கண்ணன் அவர் அண்ணன் பலராமர் தங்கை சுபத்ராவின் விக்கிரகங்கள் அங்கே காட்சி அளித்தார்கள். ஆனால் திருக்கைகள், திருப்பாதங்கள் இல்லாமல் பாதி முடிந்த நிலையில் இருக்க அனைவரும் திகைத்தனர்.

மீண்டும் அசரீரி, ‘பகவான் எளிய ரூபத்தில் இங்கே தரிசனம் தருவார்’ என்று கூற அன்று முதல் இன்று வரை பகவான் அதே ரூபத்தில் நமக்குக் காட்சி தருகிறார். (இந்தத் திருமேனிகள் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படும் – பார்க்க நவ கலேவர உற்சவம்.)

மரக்கட்டையாக பெருமாள் வந்த இடத்தில் அலைகளிடம் செல்லமாக அடி வாங்கி நெஞ்சால் வாரிப் பருகி குளித்துவிட்டு மீண்டும் மழையில் நனைந்து ‘குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவனை’ சேவிக்கக் கோயிலுக்கு புறப்பட்டேன்.

ஒடிசாவில் மழையை இடைஞ்சலாகக் கருதாமல் எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் வேலை செய்வதைப் பார்க்க முடிகிறது. சாலை நடுவே தள்ளு வண்டியில் டீக்கடை நடத்துகிறார்கள். மழையில் பிளாஸ்டிக் குல்லா போட்டுக்கொண்டு சொட்ட சொட்ட நனைத்துக்கொண்டு வெதர்மேனை நாடாமல் ‘சாய்’ குடிக்கிறார்கள்.

தச்சன் வேலை செய்த இடம் குண்டிச்சா மந்தர் என்று அழைக்கப்பட்டு இன்றும் இருக்கிறது. கோயிலுக்குச் செல்லும் முன் ஸ்ரீ புரி ஜகந்நாத பெருமாள் வித்தியாசமாக இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கண்கள் அகல விரிந்து ஆச்சரியமான ஸ்வரூபத்தில் இடமிருந்து வலமாகப் பலராமர், சுபத்ரா, கண்ணன் என்று காட்சி தருகிறார்கள். (கண்ணன் கருப்பு . பலராமர் வெள்ளை – பார்க்க பின்குறிப்பு.)

அவர்களுக்கு கை கால்கள் இல்லாமல் அரைகுறையாக இருப்பதற்குக் காரணத்தை மேலே பார்த்தோம். கண்கள் ஏன் விரிந்து ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்?

இதோ இன்னொரு கதை! 

புரியில் கண்ணனின் தோற்றம் பற்றிய கதை:

கண்ணன் துவாரகையை ஆண்ட போது அவர் நினைவில் கோகுலp பெண்களே நிறைந்திருந்தார்கள். அங்கே செய்த லீலைகளைக் கண்ணன் நினைத்து நினைத்து ஆனந்தப்பட்டுக்கொண்டிருந்தான். கண்ணனின் ராணிகள் இதைப் பார்த்து அவர்களுக்கு ஆர்வம் அதிகமாகியது. யாரிடம் சென்று சிறு வயது கண்ணனின் கதைகளைக் கேட்பது ? அவர்கள் ரோஹிணி தேவியை அணுகி கண்ணனின் லீலைகளைச் சொல்லுங்கள் என்றார்கள்.

ரோஹினி, ‘சரி சொல்லுகிறேன். ஆனால் கண்ணனும் பலராமனும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று வாசலில் காவலுக்கு சுபத்ராவை நிறுத்தி வைத்து, கண்ணன் வந்தால் சமிக்ஞை கொடு என்று கூறி கண்ணனின் லீலைகளை,

ஆனைகாத்து ஓர் ஆனை கொன்று, அது அன்றி, ஆயர் பிள்ளையாய்
ஆனை மேய்த்து; ஆ-நெய் உண்டி; அன்று குன்றம் ஒன்றினால்
ஆனை காத்து மை-அரிக்கண் மாதரார் திறத்து – முன்
ஆனை அன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே?

– திருமழிசை ஆழ்வார்

கஜேந்திரனைக் காத்தாய், குவலயாபீடமென்ற ஒரு யானையைக் கொன்றாய், பசுக்களை மேய்த்தாய், நெய்யை உண்டாய், ஆவொடு ஆயரையும் குடைக்கீழ் சேர்த்தாய், நப்பின்னையை அடைய ஏழு எருதுகளைக் கொன்றாய். நீ மாயன்!

என்று ரோஹினி தேவி கதையைச் சொல்ல சொல்ல, அவள் சொன்ன கதையில் லயித்து சுபத்ரா தன்னையே மறந்தாள். அருகே பலராமனும், கண்ணனும் வந்ததைக் கவனிக்கவில்லை.

பிறந்த ஆறும், வளர்ந்த ஆறும்,
பெரிய பாரதம் கைசெய்து*, ஐவர்க்குத்
திறங்கள் காட்டியிட்டுச்
செய்து போன மாயங்களும்*
நிறம் தன் ஊடு புக்கு எனது ஆவியை
நின்று நின்று உருக்கி உண்கின்ற* இச்
சிறந்த வான் சுடரே! உன்னை
என்றுகொல் சேர்வதுவே?

என்கிறார் நம்மாழ்வார்.

கண்ணா இங்கே வந்து பிறந்ததை நினைத்தால் நெஞ்சம் உருகுகிறது. உன்னை மறைத்துக்கொண்டு வளர்ந்தாய். பாரதப் போரில் பாண்டவர்களுக்கு வெற்றி வழிகளைக் காட்டிக்கொடுத்த உன் மாயங்கள்தான் என்னே ! உன் மாயங்களை நின்று நின்று நினைத்துப் பார்க்கும் போது என் உள்ளத்தை உருக்குகிறது.

கேலிச்சித்திரம் (கார்ட்டூன்) பார்க்கும் போது ஆச்சரியமான பல முகபாவங்களைப் பார்த்திருக்கிறோம் அப்போது கண்கள் விரிந்து உடம்பு சிறியதாக காட்சி அளிக்கும். அதே போல தங்கள் கதையைக் கேட்டு மூவரும் மெய்மறந்து கைகால்கள் சுருங்கி விழிகள் விரிய புளங்காகிதம் அடைந்து நின்று கொண்டிருந்தார்கள்.

கீதையில் கண்ணன் இப்படிச் சொல்லுகிறார்:

ஜன்ம கர்ம ச மே திவ்யம்
ஏவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம
நைதி மாம் ஏதி ஸோ அர்ஜுன

அதாவது, ‘அர்ஜுனா, எனது தோற்றமும் செயல்களும் திவ்யமானவை என்பதை எவனொருவன் அறிகின்றானோ, அவன் இந்த உடலைவிட்ட பின், மீண்டும் இவ்வுலகில் பிறவி எடுப்பதில்லை’. இதற்கு ஸ்வாமி வேதாந்த தேசிகன் தாத்பர்ய சந்த்ரிகாவில் உரை எழுதும் போது ஒரு படி மேலே சென்று இப்படிச் சொல்லுகிறார்: ‘எனது தோற்றமும் செயல்களும் மற்றவர்களுக்கு மட்டும் இல்லை, எனக்கே திவ்யமானவை’ என்கிறார்! மேலும் கருட புராணத்திலும் கீதையிலும் கண்ணன் தன் கதையைக் கேள் என்று சொல்லுகிறான்.

அங்கு வந்த நாரதர் மூவரும் இருக்கும் நிலையைக் கண்டு, ‘தேவரீர் ஆனந்தத்தில் மயங்கி நிற்கும் இந்நிலையில் பக்தர்கள் தரிசிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்றும் அதே போல நமக்குக் காட்சி அளிக்கிறான்.

குண்டிச்சா கோயிலுக்கும் புரி ஜகந்நாத கோயிலையும் இணைக்கும் அகலமான சாலைக்கு பெயர் ‘கிரண்ட் ரோட்’ சுமார் மூன்று கிமீ தூரம் அகலமான சாலை.

இந்தச் சாலையில்தான் பிரசித்திபெற்ற புரி ஜனந்நாத ரத யாத்திரை நடைபெறும். புரியின் ரதயாத்திரை உலகப் பிரசித்தி பெற்றது.

கோயிலுக்குள்  சென்ற போது கூட்டம் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி போல காட்சி அளித்தது. கொஞ்சம் நேரம் பிரமிப்புடன் நின்று கொண்டு இருந்தேன். பிறகு படிகளில் காலை வைத்தேன். கூட்டம் என்னை உள்ளே உறிஞ்சிக்கொண்டது.

ஆண் பெண் என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல், புரி பெருமாளை சேவிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் கூட்டம் என்னை மத்து போலக் கடைய, சிறிது நேரத்தில் நம்மாழ்வார் பாடிய ‘கறந்த பாலுள் நெய்யே போல்’ எனக்கு ஸ்ரீ ஜகந்நாதர் காட்சி கொடுத்தார்.

வெளியே மழை விடவில்லை, அதனால் வெளியே போகாமல் பக்தர்களுடன் மீண்டும் மீண்டும் அவர்கள் நெருக்கத்தில் பிழியப்பட்டேன். ஒவ்வொரு முறையும் பெருமாள் சில நிமிஷங்கள் காட்சி கொடுத்தார். அப்போது ஸ்ரீ சைத்தன்ய மஹா பிரபு பற்றி நினைவுக்கு வந்தது. 

ஸ்ரீ சைதன்யரும் புரி ஜகந்நாதரும்

ஸ்ரீ சைத்தன்ய மஹா பிரபு வங்காளத்தில் நாடியாவில் மாயாபூர் என்னும் கிராமத்தில் 1486ம் ஆண்டு பிறந்தவர். ஒரு முறை புரிக்கு வந்த நேராக ஜகந்நாதனை பார்த்தவுடன், காவலர்களை எல்லாம் மீறி, அவரைக் கட்டிக்கொள்ள உள்ளே ஓடியவர், பெருமாளைக் கிட்டே பார்த்தபோது அவர் தன்னையும் மறந்து மயங்கி விழுந்தார். மயங்கியவரைப் பக்கத்தில் இருந்த ஒரு இல்லத்துக்கு அழைத்துச் சென்று மயக்கத்தைத் தெளிய வைத்தார்கள்.

அங்கே இருந்த ஒருவர், ‘கண்ணை கிட்டே சென்றால் நீங்கள் நினைவிழந்துவிடுகிறீர்கள் அதனால் கருட ஸ்தம்பத்துக்குப் பின் புறத்திலிருந்து பாருங்கள்’ என்று அறிவுரை கூறினார். சைத்தன்யரும் சம்மதித்து, அன்றிலிருந்து அங்கிருந்து கையை ஒரு தூணில் வைத்து கண்ணனைத் தரிசிக்க ஆரம்பித்தார். .

அங்கே கூட்டத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருந்த ஒரு காவல் அதிகாரியிடம் சென்று, ‘இங்கே சைத்தன்யர் பார்த்த இடம் எது என்று கேட்க, ‘என்னை ஆச்சரியமாகப் பார்த்து, என்னைக் கையை பிடித்து அழைத்துச் சென்றார். ஒரு இடத்தில் தூணில் விரலை வைத்து அழுத்தியது போல ஒரு பள்ளம் இருக்க, இங்குதான் சைதன்யர் தன் விரல்களை வைத்து அழுத்தி இப்படி எம்பிப் பெருமாளைப் பார்ப்பார் என்று செய்து காண்பித்தார். நானும் அப்படியே செய்து பார்த்த போது அவ்வளவு கூட்டத்திலும் பெருமாள் அந்த இடுக்கில் ஒளிர்ந்தார்.  

புரி ஜகந்நாதர் கோயில் சில குறிப்புகள்:

புரி ஜகந்நாத கோயில் மிகப் பழமை வாய்ந்தது. சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் இக்கோயில் அமைத்துள்ளது. நான்கு வாசல் கொண்டது.

ஸ்ரீரங்கம் கோயில் போலப் பல நூற்றாண்டுகளாகப் பல மன்னர்கள் அதைக் கட்டியுள்ளார்கள். முதலில் கர்பக்கிரஹம் அளவுக்குத்தான் கோயில் இருந்திருக்கிறது. பிறகு மணல் மேடுகளால் மூடப்பட்டு கால் மாதவ் என்ற அரசர் குதிரையில் செல்லும்போது, மணல் மேட்டில் குதிரையின் கால்கள் கோபுரத்தின் உச்சியில் பட, அரசன் மணல் மேட்டினை அகற்றிக் கோயிலைப் புனர்நிர்மாணம் செய்தார். பொபி 824ல் ஒடிசாவின் கேசலி வம்சத்தவர், பிறகு பொபி 1038ல் கங்கவம்ச அரசர்கள், பொபி 1200ல் அனந்த வர்மன் என்று பல அரசர்கள் கைங்கரியம் செய்துள்ளார்கள். 1975ல் இந்திய அரசாங்கம் புதைபொருள் ஆராய்ச்சித் துறை மூலம் சுவரில் செதுக்கப்பட்டுள்ள கலை வடிவங்களைச் சீரமைத்தது.

கிழக்கு வாசலில் 36 அடி அருண ஸ்தம்பம் 18ம் நூற்றாண்டில் கோனாரக்கிலிருந்து அன்னியப் படையெடுப்பிலிருந்து பாதுகாக்க இங்கே கொண்டு வரப்பட்டது.

மொத்தம் 18 முறை இந்தக் கோயில் சூறையாடப்பட்டுள்ளது. ஃபெரோஸ் கான் துக்ளக், இஸ்மாயில் கஸ்ஸி, கலா பஹார் என்று பல மொகலாய மன்னர்கள் லூட்டி அடித்து லூட் செய்துள்ளார்கள்.

புரி என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது பூரி என்ற தின்பண்டம் தான். மத்தியம் இந்தக் கோயிலில் பிரசிதிப்பெற்ற ‘மஹாபிரசாதம்’ சுவைக்கக் கிளம்பினேன்.

மஹா பிரசாதம்

பத்ரி, புரி, ஸ்ரீரங்கம், த்வாரகா ஆகிய நான்கு இடங்கள் மிக புனிதமாகப் போற்றப்படுகின்றன. ஸ்ரீமந் நாராயணன் விடியற்காலை பத்திரியில் நீராடிவிட்டு, த்வாரகாவில் வஸ்திரம் தரித்து, புரியில் அமுது செய்து, திருவரங்கத்தில் சயனிக்கிறார்.

புரியில் பெருமாள் அறு வேளை அமுது செய்கிறார்.

மஹாபிரசாதம் கிடைக்கும் இடத்துக்குச் சென்றேன் – ‘ஆனந்த பஜார்’ என்று பெயர். பிரசாதத்தை உண்ணும் முன் அதை எப்படிச் சமைக்கிறார்கள் என்று பார்க்கலாம்

உலகிலேயே மிகப்பெரிய சமையல் கூடம் புரியில் இருப்பதுதான். ஒரு ஏக்கர் பரப்பில் மொத்தம் 3 x 4 அளவில் 752 மண் அடுப்புகள் கொண்டது.

விறகு, மண் சட்டி பானைகள். எந்த விதமான யந்திரமோ உலோகமோ கிடையாது. கிணற்றிலிருந்து நீரை இராட்டினம் இல்லாமல் கயிற்றால் 30 பேர் இடைவிடாமல் இழுத்துக் கொட்டுகிறார்கள். மிளகாய், வெங்காயம், பூண்டு, காரட், உருளை, தக்காளி போன்ற காய்கறிகள் உபயோகிப்பதில்லை.

சுமார் 400 பேர் உணவைச் சமைக்கிறார்கள். அவர்களுக்கு உதவியாக இன்னொரு 400 பேர் வேலை செய்கிறார்கள். இதைத் தவிர காய்கறி திருத்தவும், தேங்காய் திருகவும் சுமார் 100 பேர் உள்ளார்கள். தினமும் 7200 கிலோ பிரசாதம் தயாரிக்கிறார்கள். விஷேச நாட்களில் 9200 கிலோ. எப்போது சென்றாலும் 1000 பேர் சுலபமாக உணவு அருந்தலாம்.

எல்லாப் பிரசாதமும் பானையில் ஏற்றப்பட்டு மூங்கில் கம்புகளில் கட்டிச் சுமந்து சென்று பெருமாளுக்குப் படைக்கப்படுகிறது. இதற்கு மட்டும் 60 பேர் வேலை செய்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் 56 வகையான பிரசாதங்கள் செய்யப்படுகின்றன. 9 சித்ரான்னம், 14 வகை கறியமுது, 9 வகை பால் பாயசம், 11 வகை இனிப்பு, 13 வகை திருப்பணியாரங்கள்.

புரியில் பிரசாதத்தை உண்ண சில முறைகள் இருக்கின்றன. பிரசாதத்தைப் பூமியில் அமர்ந்துதான் உண்ண வேண்டும். மேசை நாற்காலி கூடாது. விநியோகம் செய்ய கரண்டி முதலானவற்றை உபயோகப்படுத்தக்கூடாது. உடைந்த சட்டிப்பானைச் சில்லு அல்லது இலையை மடித்து வைத்துத்தான் பரிமாறுவார்கள்.

சாப்பிடும்போது ஜகந்நாதரை நினைத்துக்கொண்டு சாப்பிட வேண்டும். சாப்பிட்டு முடித்தபின் வாய் கொப்பளிக்கும்போது முதல் வாய் தண்ணீரைத் துப்பாமல் விழுங்க வேண்டும். சாப்பிட்ட இடத்தைக் கைகளால்தான் சுத்தம் செய்ய வேண்டும். அந்த ஊரில் கல்யாணம், விழா என்றால் தனியாக சமையல் கிடையாது. இங்கேதான் சாப்பாடு.

மத்தியானம் இந்த மஹா பிரசாதத்தை ஒரு கை பார்ப்பது என்று முடிவு செய்து கிளம்பினேன். முதலில் கண்ணில் பட்டது பாதுஷா மாதிரி ஒரு பிரசாதம். சுற்றி ஈக்கள் இல்லாமல் தேனீக்கள். சுடச் சுட இலையில் கொடுத்தார்கள்.

அதைச் சாப்பிட்டுக்கொண்டே பார்த்தபோது பக்கத்துக் கடையில் திரட்டுப்பால் மாதிரி இருக்க இதை வேகமாக முடித்துவிட்டு அங்கே சென்றேன். அதையும் ஒரு கை பார்த்துவிட்டு, பால் மாதிரி ஏதோ இருக்க, ‘என்ன ?’ என்றேன். ஏதோ கீர் என்று காதில் விழ, டாப் கீயரில் அதை முடித்துவிட்டுப் பக்கத்துக் கடைக்காரர் வேடிக்கை பார்க்க, அவர் கோவித்துக்கொள்ளப் போகிறாரே என்று அவரிடத்தில் கோதுமைப் போளியைக் கொதறிவிட்டு மூச்சு விடுவதற்குள் இந்தாங்க என்று கோதுமை லட்டு சுவைபார்க்கக் கொடுத்தார். எல்லாம் வெறும் இனிப்பாக இருக்கிறதே என்று காரமாகத் தேட, ஓரமாக ஒரு கடையில் பொங்கல் மாதிரி ஒன்று இருக்க, அதைக் கேட்டபோது ஒரு காலிச் சட்டிப் பானையை உடைத்து அதன் சில்லில் பொங்கல் மற்றும் தால் (இஞ்சி தூக்கலாக) பரிமாறப்பட்டது. கையைச் சுத்தம் செய்யப் போகும் வழியில் தயிர் சாதம் கண்ணில் பட அதையும் சாப்பிட்டு வைத்தேன். அட்டகாசம்! கடைசியாக மோர் இருக்க அதைக் குடித்தபோது, அதனுள்ளே என்ன போடுகிறார்கள் என்று யோசிக்க வைத்தது. நாக்கை வாயினுள் தடவி, சீரகம் மற்றும் என்ன மசாலா பொடிகள் உள்ளே இருக்கு என்று மூளை வேலை செய்ய … முதல் முறை கண்ணன் மீது பொறாமை ஏற்பட்டது.

பெருமாளின் கல்யாண குணங்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் அதை இந்த மஹா பிரசாதச் சந்தையில் அனுபவித்தேன்

புரியில் பல கடைகளில் புரி ஜகந்நாதரின் உருவ பொம்மைகள் கண்ணைக் கவரும். காம்பு தடியாக வெற்றிலைகள், கலர் பொடிகள் என்று எங்கும் வண்ண மயமாக இருக்கிறது. கடைகளை எல்லாம் நோட்டம் விட்டு விட்டு நேராக ராமானுச கூடத்துக்கு புறப்பட்டேன்.

ஸ்ரீராமானுசர் புரி விஜயம்

ஸ்ரீராமானுசர் புரி ஜகந்நாதனைத் தரிசிக்க வந்தபோது இங்கே பூஜை முறைகள் ஆகமத்தின்படி இல்லாததைக் கண்டு அதைச் சரி செய்ய முற்பட்டார். ஆனால் பல்லாண்டுகளாக இங்கே கைங்கரியம் செய்பவர்கள் அதை விரும்பவில்லை. புரி ஜகந்நாதர் ஸ்ரீராமானுசரை இரவோடு இரவாக அவர் உறக்கத்தில் இருக்கும்போது அவரை ஸ்ரீகூர்மத்தில் கொண்டு போய் விட்டுவிட்டார். விடியற்காலை எழுந்து பார்த்த ஸ்ரீராமானுசர் தான் வேறு இடத்தில் இருப்பதைக் கண்டு ஜகந்நாதரின் திருவுள்ளம் அப்படி என்றால் அதற்கு மறுப்பு கிடையாது என்று விட்டுவிட்டார். இன்றும் புரியில் ஸ்ரீராமானுசர் தங்கியிருந்த மடம் மற்றும் எம்பார் மடம் ஆகியவை உள்ளது.

1068ம் ஆண்டு முதல் 1074 ம் ஆண்டு வரை தம்முடன் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் இங்கே தங்கியிருந்தார் என்று சொல்லப்படுகிறது. அந்தச் சமயம் ஆண்டு வந்த மஹாராஜா ஆனந்தவர்மன் சோடகங்கதேவா ஸ்ரீராமானுசருக்குக் கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் அவர் தங்க நிலம் கொடுத்தான். அங்கு ஒரு மடம் நிர்மாணித்து அவர் அங்கே நித்திய திருவாராதனம் செய்ய, ஸ்ரீவேணுகோபாலன், ஸ்ரீதேவி, பூதேவியைப் பிரதிஷ்டை செய்தார். இன்று அந்த இடம் ‘ராமானுஜகோட்’ என்று அறியப்படுகிறது. அவருக்குப் பிறகு அந்த மடம் எம்பார் தலைமையில் நடைபெற்றது. அப்போது எம்பார் மடம் என்று அழைக்கப்பட்டது. இன்று அதன் பெயர் மருவி ‘எமார் மட்’ என்று அழைக்கப்படுகிறது.

இன்றும் ஸ்ரீராமானுசர் நிறுவிய மடத்தில் பரம்பரையாகக் கைங்கரியம் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

புரி கோயிலில் உள்ளே தாயார் சன்னதியில் (இங்கே லக்ஷ்மி மந்திர்) சுவரில் ஆழ்வார், ஆசாரியர்கள், ஸ்ரீரமானுசர் மியூரல் ஓவியங்களைக் கொஞ்சம் நேரம் ரசித்துவிட்டுக் கொடியேற்றம் பார்க்க ஆயத்தமானேன்.  

புரி கொடியேற்றம்

கோயில் மீது உற்று நோக்கினால் கோயில் விமானத்தில் சக்கரத்தாழ்வாரும் அதன் மீது சில கொடிகளும் இருப்பதைப் பார்க்கலாம். இந்தக் கோயிலையும், ஊரையும் விமானத்தின் மீதிருந்து ரக்ஷிக்கிறான். கோயிலுக்குச் செல்ல முடியவில்லை என்றால் கோயில் விமானத்தின் மீது இருக்கும் சக்கரத்தாழ்வாரைத் தரிசித்தால் போதும் என்பார்கள். தினமும் மாலை சுமார் நான்கு மணிக்கு இந்த வைபவம் நடைபெறும். குரங்குகளே பார்த்துக் கைதட்டும் அளவுக்கு இவர்கள் கோபுரத்தின் மீது நம்மைப் பார்த்துக்கொண்டு ஏறுவார்கள். கீழே இறங்கி வரும் போது நேற்றைய கொடியை எல்லாம் எடுத்துக்கொண்டு வருவார்கள். பல கொடிகள் விதவித சைஸில் இருக்கும். நான் சின்னதாக ஒன்றை வாங்கினேன். விலை நூறு ரூபாய்.

ஜகந்நாதரின் விமான கோபுரத்தின் உயரம் 214 அடி. அதன் மீது நீலச் சக்கரம் என்று பெயர் பெற்ற சுதர்சனச் சக்கரம் எட்டு உலோகங்களால் செய்யப்பட்டது. 36 அடி சுற்றளவு. அதன் மீது சிகப்பு, வெள்ளை, மஞ்சள் நிறத்தில் கொடிகள் தினமும் சாற்றப்படுகிறது. கருட சேவகர்கள் என்று அழைக்கப்படும் கைங்கரியம் செய்பவர்கள் இதைப் பரம்பரையாகச் செய்து வருகிறார்கள். சுமார் 15 நிமிடத்தில் இந்தக் கோபுரத்தை ஏறிவிடுவார்க்ள். பத்து நிமிடத்தில் கொடிகளை மாற்றி விடுவார்கள். என்ன விதமான சூறாவளி அடித்தாலும் கொடி கட்டப்படும். எட்டு வயதிலிருந்து பயிற்சி கொடுக்கப்படுகிறது.

மாலை கோடியேற்றம் முடிந்த பின் கிஞ்சித்காரம் டிரஸ்ட் சார்பில் ஸ்ரீரமானுஜருடன் புரி ரத யாத்திரை போகும் சாலையில் பல்லக்கில் வீதி உலா சென்றது இனிய அனுபவம். ஸ்ரீராமானுஜர் காலத்தில் அவருடன் செல்ல முடியவில்லை. ஆனால் 1000 ஆண்டுகள் கழித்து செல்ல முடிந்தது.

இரவு மீண்டும் புரி ஜகந்நாதரை சேவிக்கச் சென்றேன். பத்து மணிக்கு உள்ளே சென்றேன். கூட்டம் இருந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் குறைந்து, காலை இந்த இடத்திலா இவ்வளவு கூட்டம் என்று மலைப்பாக இருந்தது. இரவு 11.30 மணிக்கு மொத்தம் 20 பேர்தான் இருந்தார்கள். பெருமாளுக்குப் பழைய வஸ்திரங்கள் களையப்பட்டன. புதிய வஸ்திரங்கள் ஒவ்வொன்றாக மாற்றப்பட்டன. பிரசாதம் கண்டருளச் செய்த பின் மூன்று கட்டில்கள் உள்ளே சென்றன. சிகப்பு, நீலம், மஞ்சள். பிறகு பாடல்கள் இசைக்கப்பட்டு விளக்குகளை ஒவ்வொன்றாக அணைத்தார்கள்.

குட் நைட் என்று சொல்லிவிட்டுத் திரும்பினேன்.

புரி ரத யாத்திரை சில குறிப்புகள்:

வருடம் தோறும், ஆனி மாதம் பௌர்ணமியில் தொடங்கி ஆடி மாதம் சுக்ல சதுர்தசியன்று முடியும் இந்த ரத யாத்திரைக்கு உலகமெங்கும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வருகிறார்கள். குண்டிசா மந்தரில் தாரு ரூபத்தில் உருவான இடம் கண்ணனின் பிறந்த இடம். அதனால் குண்டிச்சா மந்திர்தான் மதுரா. கண்ணன் பத்து வயதுக் குழந்தையாக கோகுலத்திலிருந்து தன் பிறந்த ஊரான மதுராவிற்கு வருவதை நினைவு கூர்கிறது இந்த ரத யார்த்திரை. மொத்தம் மூன்று தேர்கள். வருடா வருடம் மூன்று தேர்களும் புதுசாக 2188 மரத்துண்டுகளால் செய்யப்படுகிறது. செய்ய இரண்டு மாதங்கள் ஆகும்.

கண்ணனின் தேரின் பெயர் நந்தி கோஷ் – 16 சக்ரங்கள், உயரம் 45 அடி. தேர்ச் சீலைகளின் வர்ணம் மஞ்சள். பலராமனின் தேரின் பெயர் – தாலத்வஜம் – 14 சக்ரங்கள் – உயரம் 44 அடி – தேர்ச் சீலைகளின் வர்ணம் நீலம். சுபத்திராவின் தேரின் பெயர் – பத்மத்வஜம் – 12 சக்ரங்கள் – உயரம் 43 அடி – தேர்ச் சீலைகளின் வர்ணம் சிகப்பு.

முன் ஊர் அரசன் தங்கத் துடைப்பத்தால் பெருக்கியவுடன் தேர்கள் புறப்படும். முதலில் பலராமர், பிறகு சுபத்திரா, கடைசியில் கண்ணன். அலங்காரத்தோடு தேர்கள் கோயிலிருந்து குண்டிச்சா மந்திருக்கு நகர்ந்து செல்லும். ஸ்ரீரங்கத்தில் நடக்கும் மட்டையடி உற்சவம் மாதிரி இங்கேயும் உண்டும். போனவர்கள் எங்கே கணோம் என்று ஸ்ரீ லக்ஷ்மி தேவி தேர் இருக்கும் இடத்துக்கு வந்து தேரின் ஒரு பகுதியை உடைத்துவிட்டுச் செல்வார்.

நவ கலேவர உற்சவம்

எந்த ஆண்டில் ஆனி மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் வருமோ அப்போது புதிய திருமேனியை மரத்தால் செய்கிறார்கள். நவ என்றால் புது, கலேவர என்றால் திருமேனி. இதற்காக காகாத்புர் (சுமார்அ நாற்பது மைல் தொலைவில் இருக்கிறது) என்ற காட்டுக்குச் சென்று சில அடையாளங்களுடன் இருக்கும் வேப்ப மரத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். 21 நாள் தச்சர்களைச் கொண்டு செதுக்குவார்கள். அமாவாசை அன்று இருட்டிய பிறகு ஊரில் மின்சாரம் துண்டிக்கப்படும். ஊர் முழுக்க இருட்டாக இருக்கும் சமயம், புதிய திருமேனியை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு பழைய திருமேனியின் பக்கம் வைப்பார்கள். பூசாரிகள் கண்களைக் கட்டுக்கொண்டு பழைய திருமேனியின் நாபியில் இருக்கும் பிரம்மபதார்த்தம் என்ற பெரிய சாளக்கிராம மூர்த்தியை எடுத்துப் புதிய திருமேனியில் பொருத்துவார்கள். பழைய திருமேனியை கோயிலா வைகுண்டம் என்ற இடத்தில் பூமிக்கு அடியில் புதைத்துவிடுவார்கள்.

இந்த உற்சவம் 12 முதல் 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். உற்சவம் நடந்த ஆண்டுகள் – 1912, 1931, 1950, 1969, 1977, 1996, 2015.

Posted on Leave a comment

சிற்றோவியங்களில் சௌர பஞ்சாஸிகா அல்லது பில்ஹண பஞ்சாஸிகா | அரவக்கோன்

இந்தியாவில் பொ.மு. முதலாம் நூற்றாண்டு தொடங்கி பொ.பி.எட்டாம் நூற்றாண்டு வரை அஜந்தா, எல்லோரா, காஞ்சி, சித்தன்னவாசல், வாதாபி போன்ற இடங்களில் அகழப்பட்ட, கற்களைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட ஆலயங்களில் இடம்பெற்ற சுவர் ஓவியங்களுக்குப் பின்னர் நலிந்து தொய்வுற்றிருந்த ஓவியக்கலை கி.பி. 16,17,18 ஆம் நூற்றாண்டுகளில் மீண்டும் தலையெடுத்தது. வசந்த காலத்தில் மலரும் மலர்களைப்போல பெரு நகரம் / சிறு ஊர் என்னும் பாகுபாடு இல்லாமல், அரசவை, செல்வந்தர் இல்லம் என எங்கும் சிற்றோவியங்கள் படைப்பது என்பது ஒரு மேட்டிமைக் குறியீடாக விரிவடைந்தது. மஹாபாரதம், இராமாயணம், பாகவதபுராணம், கீதகோவிந்தம், ராகமாலா, பாரமாஸா போன்ற நூல்கள் தொகுப்பு ஓவியங்களாக மீண்டும் மீண்டும் வடநாடெங்கிலும் தட்சிணப் பகுதியிலும் படைக்கப்பட்டன. ‘சௌரபஞ்சாஸிகா’ அல்லது ‘பில்ஹணபஞ்சாஸிகா’ என்பது அவற்றுள் ஒன்று.

பில்ஹணர் என்னும் வடமொழிக் கவி தமது எதிர்காலப் புகழைத்தேடி காஷ்மீரத்திலிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் வரை வருகிறார். ஆனால் அவருக்குக் கிட்டுவது ஏமாற்றமே. சோர்வுற்று மீளும் அவரை சாளுக்கிய மன்னன் 4ஆம் விக்ரமாதித்யன் வரவேற்று, தனது அரசவைப் புலவராக நியமிக்கிறான். அங்குதான் அவர் ‘சௌர பஞ்சாஸிகா’ அல்லது ‘பில்ஹண பஞ்சாஸிகா’ என்னும் வடமொழிக் காவியத்தைப் படைக்கிறார். இதன் காலம் கி.பி.11ஆம் நூற்றாண்டு என்கிறது வரலாறு. இதற்கு ‘சஸிகலா பஞ்சாஸிகா’ என்னும் பெயரும் உண்டு.

இதை ஒட்டின இரண்டு விதமான கதைகள் உண்டு. ஒன்று தென்நிலம் சார்ந்தது, மற்றது வடநிலத்தது.

தென்நிலத்துக்கதை இவ்வாறு போகிறது:

சௌரன் என்பவன் கற்றறிந்த அந்தண இளைஞன். தென்னாட்டில் ஒரு அரசனின் அவையில் தனது கல்விப்புலமையால் கல்வி பயிற்றுவிக்க அமர்த்தப்படுகிறான். அவனது திறமையில் மகிழும் அரசன் தனது மகள் சஸிகலாவுக்கும் அவனை ஆசிரியனாக நியமிக்கிறான். ஆனால் அவள் அரசகுமாரி என்பது அவனிடமிருந்து மறைக்கப்பட்டு பார்வையற்ற பெண் என்று சொல்லப்படுகிறது. அவ்விதமே அரசகுமாரியிடம் ஆசிரியன் தொழுநோய் பீடிக்கப்பட்டவன் என்றும், எனவே இருவரும் ஒருவரை மற்றவர் காணலாகாது என்றும் தடைவிதிக்கப்படுகிறது. நடுவில் தொங்கும் திரைக்கு இருபுறத்திலும் இருந்தவாறு கற்றலும் கற்பித்தலும் நிகழ்கிறது. ஆனால் விரைவிலேயே இருவருக்கும் இந்த நாடகம் தெரிந்துவிடுகிறது. இருவர் இடையிலும் இருந்த திரை அகன்று காதல் மலர்கிறது. காற்றால் ஊதப்பட்ட தீப்போல வளர்கிறது. களவுமணத்தில் முடிகிறது. காலம்கடந்தே இச்செய்தியை மன்னன் அறிகிறான்.

பிறகென்ன! பண்டிதன் செய்த குற்றத்திற்கு மன்னன் மரணதண்டனை விதித்து இருள்சிறையில் அடைக்கிறான். தண்டனை நிறைவேற்றப்படும் நாளை எதிர்நோக்கி பண்டிதன் காத்திருக்கிறான். ஆனால் அவன் அதற்காக வருந்தவில்லை. அரசகுமாரியுடனான தனது காதலைப் போற்றிச் செய்யுட்களாக சுவடியில் எழுதுகிறான் அவை மொத்தம் எண்ணிக்கையில் ஐம்பதாகும்.(பஞ்சாஸிகா என்றால் ஐம்பது.) ஒவ்வொரு செய்யுளும் ‘நான் அவளை இன்றும் நேசிக்கிறேன்’ என்று தொடங்குகிறது.

மரணதண்டனைக்கான நாளும் வருகிறது. அரசன் பண்டிதனிடம் இறக்கும் முன் அவன் ஏதும் கூற விரும்புகிறானா என்று வினவுகிறான். புலவன், “நான் அவள்மேல் கொண்ட காதலின் சுவையுடனேயே இறக்கவிரும்புகிறேன். அந்தச் சுவை எத்தகையது என்பதை செய்யுட்களாக எழுதியுள்ளேன். என் மரணத்துக்குமுன் மன்னர் அதைப் படிக்கவேண்டும் என்பதே எனது கடைசி ஆசை” என்கிறான்.

நூல் பண்டிதன் கையிலிருந்து மன்னனிடம் போகிறது. நூலைப் படித்த அரசன் அதன் புலமைச் சிறப்பில் நெகிழ்ந்துபோகிறான். தண்டனையை விலக்கி தனது மகளை அவனுக்கு மணமும் செய்துகொடுக்கிறான்.

இக்கதையே வடபகுதியில் “காவ்யமாலா” என்னும் நூலில் 13ஆம் பகுதியில் “பில்ஹண பஞ்சாஸிகா” என்னும் தலைப்பில் உள்ளது. கதைவடிவில் மாற்றம் இல்லை என்றாலும் புலவன் சௌரன் ‘பில்ஹணன்’ ஆகிறான். அரசனின் பெயர் வீரசிம்மன் என்றும் அரசகுமாரியின் பெயர் சம்பாவதி என்றும் உள்ளது. கதைக்கான விளக்கச்செய்யுட்களுடன் மொத்தம் 74 செய்யுட்கள் உள்ளன. கதையின் முடிவு சொல்லப்படவில்லை.

அரசர்களும் செல்வந்தரும் இந்த நூலில் உள்ள ஐம்பது செய்யுட்களுக்கும் ஓவியர்களைக்கொண்டு தொடர் ஓவியங்களைத் தீட்டச் செய்து அவற்றை அரிய செல்வம்போல கருவூலத்தில் பாதுகாத்து வைத்தனர்.

பெருவிழாக்காலங்களிலும் அரச விழாக்களிலும் அவை உயர்குடிமக்களுக்குப் பார்வைப்படுத்தப்பட்டன. (பொதுமக்களுக்கானது அல்ல அவை.) ஜைனமுனி பத்மஸ்ரீ ஜினவிஜயஜி என்பவரிடமிருந்து N.C.மேத்தாவின் பொறுப்பில் வந்த பில்ஹண பஞ்சாஸிகா ஓவியங்கள் (எண்ணிக்கையில் 18) குறிப்பிட்ட தனிச்சிறப்புடையவையாகும். இவற்றில் மஞ்சள் நிறப் பின்புலத்தில் கருப்பு மசிகொண்டு வடமொழியில் நாகரி எழுத்தில் செய்யுட்கள் உள்ளன. அதன் இருபுறத்திலும் உள்ள பரப்பில் ஓவியங்கள் காணப்படுகின்றன. ஆனால் அவை நூல்வடிவில் இல்லை. உதிரியாகவே உள்ளன. பொ.பி. 16ஆம் நூற்றாண்டில் மேவாரில் அவை படைக்கப்பட்டிருக்கப்படவேண்டும் என்று நம்பப்படுகிறது.

இந்த ஓவியங்களில் செய்யுட்களின் காதல் சார்ந்த உணர்வு, நிகழும் இடம் சார்ந்த விவரங்கள், செய்யுட்களின் பொருளை வெளிக்கொணரும் விதமான உடல் அசைவுகள் போன்றவை ஓவியரால் மிகவும் கவனமும் அக்கறையும் கூடியவிதமாக ஓவியமாகியுள்ளன. எழுத்தும் ஓவியங்களும் கூடிய நூல்போலவே புழக்கத்தில் இருந்துள்ளது. செய்யுட்கள் எவ்வாறு முழுமையானதோ அவ்விதமாகவே ஓவியங்களும் தம்மளவில் முழுமையானவை. தனித்தே கண்டுகளிக்கத்தக்கது. இவற்றில் குஜராத் மாநில ஜைன ஓவிய வழி அழுத்தமாகக் காணப்படுகிறது.

இந்தியாவின் பல பகுதிகளிலும் இவை ஓவியமாயின. சிவப்பு, மஞ்சள், பச்சை, கருப்பு போன்ற வண்ணங்கள் ஓவியத்தின் பின்புலமாக உள்ளன. மரங்கள், மற்றும் தாவரங்கள் அழகியல் வடிவம் கொண்டுள்ளன. நிகழ் களம் இல்லத்தின் உட்புறம் எனில் மெத்தையுடன் கூடிய கட்டில், அதன்மேலே மஞ்சம், நிழலுக்காகக் கட்டிலின் நாட்புறமும் கம்புகளில் இணைத்துப் பரப்பப்பட்ட துணி, சாளரத்தில் தொங்கும் திரை, திறந்தவெளி அல்லது முற்றம் எனில் மலர்த்தோட்டம், குட்டையான சுற்றுச்சுவருடன் கூடிய தாமரைத் தடாகம், சுற்றிலும் காணப்படும் பல்வகைப் பறவையினங்கள், பின்னால் தெரியும் வானில் உலவும் மேகத் திட்டுக்கள் போன்றவை ஓவியமாகி உள்ளன.

பில்ஹணன் அணிந்திருக்கும் உடை முகலாய உடைவகையைப் பெரிதும் சார்ந்துள்ளது. (இது முகலாய, ராஜஸ்தான, தட்சிண நிலத்துச் சிற்றோவியங்களில் காணப்படும் பொதுத் தன்மையாகும்.) தலையைச் சுற்றியுள்ள துணியின் மேல் கூம்புவடிவத் தொப்பி காணப்படுகிறது. உடைகள் ஊடுருவும் விதத்தில் (மஸ்லின் வகைத்துணி) சன்னமாக உள்ளன.. கால்களைக் கவ்விய விதமாக இருக்கும் பைஜாமா, இடுப்பிலிருந்து உடலைவிட்டு அகன்று காணப்படும் சுற்றாடை நான்குமுனைகள் கூடியது. முழங்கால்வரை மடிப்பில்லாது விரைத்து நீளும். பூவடிவங்கள் மற்றும் வடிவியல் வடிவங்கள் அவற்றில் இடம்பெற்றுள்ளன. பில்ஹணன் மீசையுடனும் நெற்றியில் ஒற்றைக்கோட்டு நாமத்துடன் காணப்படுகிறான். பெரும்பாலும் இருவர் மட்டுமே கொண்ட ஓவியங்களில் எப்போதேனும் அரசகுமாரியின் தோழியும் இடம் பெறுவாள். உருவங்களின் தலையின் மேற்புறம் அவர்களது பெயரும் காணப்படுகின்றன.

இப்போது வரலாறாகிவிட்ட ஒரு சுவையான செய்தியுடன் இதை நிறைவு செய்வோம். 1944ல் மாடர்ன் தியேடர்ஸ் முதலாளி சுந்தரம் ‘பில்ஹணன்’ என்னும் பெயரிலான திரைப்படத்தில் எம்.கே.தியாகராஜபாகவரை பில்ஹணன் வேடத்தில் ஒப்பந்தம் செய்தார். ஆனால் லக்ஷ்மீ காந்தன் கொலைவழக்கில் பாகவதர் சிறை சென்றதால் அது கைவிடப்பட்டது. பின்னர் T.K.S. சகோதரர்கள் அதை மேடை நாடகமாகவும் திரைப்படமாகவும் கொணர்ந்து பெரும் வெற்றிபெற்றனர். 1948ல் அதே ‘பில்ஹணன்’ என்னும் பெயரில் கே.ஆர். ராமசாமி கதாநாயகனாக நடித்த திரைப்படம் வெளிவந்தது. (அப்போதெல்லாம் பெயருக்குக் காப்புரிமை இல்லைபோலும்.) ஆனால் படம் மக்களை ஈர்க்கவில்லை என்று ‘ராண்டர்கை’ தமது கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஏறத்தாழ கதை மாற்றமில்லாததாகவே உள்ளது.

பின்குறிப்பு:

கட்டுரையை ஓவியங்களுடன் படிப்பதுதான் முறை. ஓவியங்களைக் காண விரும்புவோர் கூகுளில் இந்தத் தலைப்புப் பெயரை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் காணலாம்.

Posted on Leave a comment

சில பயணங்கள் – சில பதிவுகள் (8) | சுப்பு

சுலோசனாவின் சபதம்

பள்ளிப் பருவத்தில் ராஜேந்திரன் என்னோடு நண்பனானான் என்பதையும், நாங்கள் தயாரித்த நாடகம் பற்றியும் முன்பே சொல்லியிருக்கிறேன்.  இதைத் தொடர்ந்து ராஜேந்திரன் வீடு இருக்கும் மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் என்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான களமாக மாறியது.  இந்தத் தொடர்பு இருபது ஆண்டுகள் நீடித்தது.  பலவிதமான அனுபவங்களைக் கொடுத்தது.  ராஜேந்திரனைப் பற்றி பிறகு விவரமாக எழுதுகிறேன்.  இப்போது சொல்ல வந்த செய்தி மயிலாப்பூர் சுலோசனா பற்றியது.

சுலோசனா மயிலாப்பூரைச் சேர்ந்த பாலியல் தொழிலாளி.  காலம் 70கள்.  நொச்சிக்குப்பத்தை சேர்ந்த செல்வம் என்பவர் சுலோசனாவின் வாடிக்கையாளர்.  ஒரு கட்டத்தில் தொழில் ரீதியான உறவு என்பது காதலாக மாறி, தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி சுலோசனாவிடம் கோரிக்கை வைத்தார் செல்வம்.

‘இதெல்லாம் சரிவராது’ என்று மறுத்த சுலோசனா இறுதியில் செல்வத்தின் பிடிவாதத்திற்கு இணங்கிவிட்டார்.  திருமணமும் நடந்தது.

ஒரு வருடத்திற்குப் பிறகு புதுவிதமான பிரச்சனை வடிவெடுத்தது.  செல்வத்திற்குத் திடீரென்று சுலோசனாவின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது.  இத்தனைக்கும் சுலோசனா ஒழுங்காகத்தான் இருந்தார்.  சந்தேகம் என்ற பேயால் பிடிக்கப்பட்டதுபோலச் செயல்பட்ட செல்வம் சுலோசனாவைக் கொடுமைப்படுத்தினார். அவர் எவ்வளவு கொடுமை செய்தாலும் அந்தக் கட்டத்தில் சுலோசனா பத்தினியாகத்தான் இருந்தார்.

விவகாரம் முற்றிப்போய் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று செல்வம் சொன்னபோது சுலோசனா அதற்கு உடன்பட மறுத்துவிட்டார்.

கோபத்தின் உச்சியில் இருந்த செல்வம் செய்யக்கூடாத ஒன்றைச் செய்தார். போலீசுக்கு மாமுல் கொடுத்து சுலோசனாவை விபச்சார வழக்கில் கைது செய்வதற்கு ஏற்பாடு செய்தார்.

ஊரே திரண்டு வேடிக்கை பார்க்கும்போது காவல்துறை அதிகாரி தங்கராஜ் சுலோசனாவைக் கைது செய்து போலீஸ் வண்டியில் ஏற்றினார்.  அப்போது சுலோசனா அழுத அழுகையும், கதறலும் உள்ளத்தை உலுக்கும்படியாக இருந்தன.

‘தங்கராஜ், நான் செல்வத்துக்கு பத்தினியாய் இருந்தது உண்மை என்றால் நீ வாழக்கூடாது’ என்று சொல்லிவிட்டு சுலோசனா போலீஸ் வண்டியில் ஏறினார்.

மறுநாள் ஊரே அதிர்ச்சியில் உறைந்துபோனது. தங்கராஜ் மாரடைப்பால் இறந்துவிட்டார்.

இந்தச் சம்பவம் என்னுள் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.  இந்தப் பிரபஞ்சத்தை இயக்கக்கூடிய, மாற்றக்கூடிய, நிர்மூலமாக்கக்கூடிய ஆற்றல் உண்மையான வார்த்தைகளுக்கு உண்டு என்பதை சுலோசனாவின் சபதத்தின் மூலம் நான் தெரிந்து கொண்டேன்.

*

கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கிப் படிப்பவர்கள் அதிகம்.  பாதிப்பேர் வகுப்புக்கே வரமாட்டார்கள்.  ஹாஸ்டலில் மும்முரமாக சீட்டாட்டம் நடக்கும்.  பிரின்ஸ்பால் இதையெல்லாம் கண்டுகொள்ளமாட்டார்.  அவரைப் பொருத்தவரை யாராவது தவறு செய்தால், கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதற்கான அபராதத்தைச் செலுத்திவிட வேண்டும்.  அவ்வளவுதான். 

கல்லூரி நாட்களில் கூச்சல் போடுவது, ராக்கெட் விடுதல் ஆகியவற்றில் நான் தேர்ச்சி பெற்றேன். ஏடாகூடமாகக் கேள்வி கேட்டு ஆசிரியர்களைத் தொந்தரவு செய்வேன்.  ஜேம்ஸ் என்ற ஆங்கில விரிவுரையாளர் என் தொல்லை பொறுக்க முடியாமல் வகுப்பில் நுழைந்தவுடன் என்னை அழைத்து இரண்டு ரூபாய் கொடுப்பார்.  அந்தக் காசை வாங்கிக் கொண்டு நான் வெளியேறிவிட வேண்டும்,  வகுப்பிலிருந்து கலாட்டா செய்யக்கூடாது என்பது கோரிக்கை.  நான் காசை வாங்கிக் கொண்டு கேண்டீனுக்குப் போய் ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு மீண்டும் வகுப்புக்கு வந்து அமர்ந்து ஜேம்ஸுடைய வயிற்றெரிச்சலைக் கிளப்புவேன்.

விஷ்ணு என்னுடைய சக மாணவன்.  அவன் அடையாரிலிருந்து வந்து என் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான்.  டைட் பேண்ட்டும், ஷூவும் அணிந்து பாப் இசையில் மூழ்கியிருந்தவனோடு எனக்கு அறிமுகம் ஏற்பட்டு, நட்பு பிறந்தது.  சீக்கிரமே இருவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம்.  விஷ்ணுவின் தந்தை உருக்குத் துறையில் உயர் பதவியிலிருந்த இஞ்சினியர்.  அவர் பீஹாரில் இருந்தார்.  விஷ்ணுவின் பள்ளிப்படிப்பு பம்பாயில்.  அப்போதுதான் விஷ்ணுவின் குடும்பம் சென்னைக்கு வந்திருந்தது.  மாதம் அவனுக்கு பாக்கெட் மணியாக நூறு ரூபாய் தருமளவுக்கு அவன் வீட்டாருக்கு வசதியிருந்தது.  விஷ்ணு படிப்பிலும் தேர்ச்சி பெற்றிருந்தான்.  விஷ்ணுவோடுதான் நான் முதன்முதலில் தியேட்டருக்குப் போய் ஆங்கிலப் படம் பார்த்தேன்.  சபையர் It is a mad, mad, mad, mad world என்ற படம்.

சினிமாவுக்குப் போக வேண்டுமென்று முடிவு செய்தவுடன் டிக்கெட் தொகையை என்னிடம் அவன் கேட்டு வாங்கிக்கொண்டான்.  தான் டிக்கெட் வாங்கிவிடுவதாகவும், மறுநாள் இருவரும் போகலாமென்றும் கூறிவிட்டான். மறுநாள் சினிமாவுக்கு முதல் நாளே டிக்கெட் வாங்க முடியுமென்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை.  அவனைச் சந்தேகப்பட்டு கேள்வி கேட்கவும் கூச்சமாயிருந்தது.  எப்படியோ நம்மை ஏமாற்றிவிட்டான் என்ற கவலையில் அன்று இரவு தூங்கவில்லை.

மறுநாள் விஷ்ணு டிக்கெட்டைக் காண்பித்தபோது என்னால் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை.  அவனிடமே கேட்டுவிட்டேன்.  தியேட்டருக்கு அழைத்துப்போய் கரண்ட் புக்கிங், அட்வான்ஸ் புக்கிங் என்று இருக்கும் கவுண்டர்களை காட்டி விஷயத்தை எனக்கு விளங்க வைத்தான்.

விஷ்ணுவிற்கும் எனக்கும் அரசியல் பற்றிப் பேசுவதென்றால் பொழுது போவதே தெரியாது.  விஷ்ணுவை சந்தித்த பிறகு நான் ரீடர்ஸ் டைஜஸ்ட் படிப்பதைக் குறைத்துக் கொண்டேன்.  அமெரிக்கன் லைப்ரரியிலிருந்து புத்தகங்கள் வாங்கி வந்து அமெரிக்காவின் நீக்ரோ பிரச்சனை, மாபியா வளர்ச்சி பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுமளவுக்கு செய்திகளைச் சேகரிப்போம். 

சைனாக்காரர்கள் பாம்பு தின்பார்கள். சைனா நேருவை ஏமாற்றிவிட்டது என்பதுதான் சைனாவைப் பற்றி அதுவரை நான் தெரிந்து வைத்திருந்த விவரம்.  சைனா என்றவுடனே கோபுலு வரைந்த டிராகன்தான் நினைவுக்கு வரும்.  விஷ்ணு இதையெல்லாம் உடைத்துத் தகர்த்தான்.  விஞ்ஞானம், தொழில் அபிவிருத்தி, பொருளாதாரப் பங்கீடு போன்றவற்றையும், புள்ளி விவரங்களையும் எனக்குக் கற்பித்தான்.  நானும் என் பங்கிற்கு, தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் வரலாறு, காங்கிரஸின் உட்கட்சி சண்டைகள் போன்றவற்றை அவனுக்குத் தெரிவித்தேன். 

பரீட்சை வரும்போது படிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் ஒருநாள் முழுவதும் செலவிட்டு அட்டவணை தயாரிப்பேன்.  அதில் எந்தப் பாடத்தை எப்போது படிக்க வேண்டும், எப்போது சாப்பாடு, எப்போது தூக்கம் என்ற எல்லா விவரமும் துல்லியமாகக் கணிக்கப்பட்டிருக்கும்.  அட்டவணை தயாரிப்பதோடு சரி, அதைக் கடைப்பிடிப்பது கிடையாது.  மீண்டும் பத்து நாட்களுக்குப் பிறகு இன்னொரு அட்டவணை.  இது முந்தைய அட்டவணையை விட இன்னும் ஜரூராக இருக்கும்.  இதைத் தயாரிப்பதற்கு நிறைய சிரமப்படுவேன்.  அதோடு சரி.  இப்படியே அட்டவணை அட்டவணையாக நீண்டு, நாளைக்குப் பரீட்சை என்றால் இன்றும் ஒரு அட்டவணை. 

இதெல்லாம் ஒரு புறமிருக்க, வருட முடிவில் ரிசல்ட் வந்தபோது விஷ்ணு பாஸ் செய்துவிட்டான்.  நான் பெயிலாகி விட்டேன்.  நம்முடனே எப்போதும் இருந்த இவன் எப்போது படித்தான் என்ற எனக்குப் புதிராய் இருந்தது.  விஷ்ணுவைக் கேட்டேன்.  இரவு வீட்டுக்குப் போன பிறகு வெகுநேரம் கண் விழித்துப் படித்ததாகக் கூறினான்.  நமக்கு இது தெரியாமல் போயிற்றே, நாம் தூங்கி விட்டோமே என்ற வருத்தத்தில் ‘நீ ஏன் ராத்திரி படித்தேன் என்று என்னிடம் இதுவரை சொல்லவில்லை?’ என்றேன். ‘நீ அட்டவணை தயாரித்த காலத்தில் படித்திருக்கலாம்’ என்று விஷ்ணு சொன்னான்.

*
பரீட்சையைப் பற்றிச் சொல்லும்போது அவசியம் பெரியப்பாவைப் பற்றிச் சொல்ல வேண்டும்.  பரீட்சை எழுதுவதற்காக நான் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.  வாசல் சோபாவில் பெரியப்பா ‘எல்லாம் எடுத்துக்கொண்டாயா?’ என்கிறார்.  ‘எடுத்துக் கொண்டேன்’ என்கிறேன்.  ‘Clarks tables எங்கே?’ என்கிறார்.  ‘Clarks tables ஆ’ என்று விழிக்கிறேன்.  இஞ்ஜினியரிங் படிப்பவர்களுக்கு Clarks tables எப்படிப் பயன்படுத்துவது என்பது பால பாடம்.  நானோ வருடக் கடைசியில் ‘Clarks tables ஆ’ என்கிறேன். பெரியப்பா நிலவரத்தை நன்றாகப் புரிந்து கொண்டார்.  ஒன்றும் பேசவில்லை.  கைக்கடிகாரத்தைப் பார்த்தார்.  ‘உள்ளே போய் அலமாரியில் மேல் அறையில் டயரி அட்டை போட்ட Clarks tables சின்ன புத்தகம் இருக்கும் எடுத்துவா?’ என்றார்.  எடுத்து வந்தேன்.  அடுத்த இருபது நிமிடங்களில் அவர் சத்தியால் முடிந்தவரை Clarks tables -ஐ என் மூளையில் ஏற்றினார்.  இந்த மாதிரி நிகழ்ச்சிகளால் எனக்கு பெரியப்பா மீதிருந்த மரியாதை அதிகமானதே தவிர படிப்பில் எதுவும் முன்னேற்றமில்லை.

… தொடரும்

Posted on Leave a comment

நூல் விமர்சனம் | ஆமருவி தேவநாதன்

மாரிதாஸின் ‘நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்’ என்னும் நூல் ஒரு சாட்டையடித் தொகுப்பு. திடீரென்று முழங்கும் இடி நம்மை எப்படி துணுக்குறச் செய்யுமோ அப்படிச் செய்கிறது இந்த நூல்.

மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக ஃபேஸ்புக்கில் பதில் அளித்து வந்த மாரிதாஸ் அவை அனைத்தையும் ஒன்றாக்கி ஒரு நூல் வெளியிட்டுள்ளார். அதுவே ‘நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்?’ என்னும் படைப்பு.

பிரதமர் நரேந்திர மோதி பற்றிய நூலாக மட்டும் இல்லாமல், திராவிட அரசியல், இடது சாரிகளின் துரோகங்கள், தேசத்தைச் சீரழிக்கும் அழிவுச் சக்திகள் என்று பல்வேறு தளங்களையும் தொட்டுச் செல்கிறது இந்த நூல்.

ஒவ்வொரு தலைப்பும் ஒவ்வொரு கேள்வியுடன் துவங்குகிறது. கேள்விக்குப் பதிலளிக்கும் முன் கேள்வி தொடர்பான சில வரலாற்றுத் தரவுகளைத் தருகிறார் ஆசிரியர். சில கேள்விகளுக்குப் புள்ளி விவரங்களைக் கொண்டு துவங்குகிறார். இவ்வாறாக, வாசகனை பதிலுக்காகத் தயார் செய்கிறார். பின்னர் தனது வாதத்தைத் துவங்கி, கேள்விக்கான நீண்ட பதிலாக எடுத்துரைக்கிறார். மீண்டும் அப்படி ஒரு கேள்வி கேட்பதற்கான வாய்ப்பே இல்லாத வகையில் அமைந்துள்ளன பதில்கள்.

மோதியை எதிர்ப்பதையே தொழிலாகக் கொண்டுள்ள ஊடகம், அவர்களுக்குப் பண உதவி செய்யும் மத மாற்று நிறுவனங்கள், அவர்களிடம் வாங்கி உண்ணும் இடது சாரிகள், அவர்களுக்குத் துணை போகும் திராவிட இயக்கம் என்று ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படும் தேச விரோத இயக்கங்கள் பற்றியும், அவர்களது எண்ண ஓட்டங்கள், செயல்படும் விதங்கள் என்று பல செய்திகளைச் சித்தரிக்கும் கருத்துப் பேழை இந்த நூல்.

பண மதிப்பிழப்பு விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கறுப்புப் பணத்தைப் பெருமளவில் வைத்திருந்த அரசியல்வாதிகளும், ஊடகங்களுமே என்பதையும், அதனாலேயே அவர்கள் பெரும் கூச்சலுடன் ஓலமிட்டழுதார்கள் என்பதையும் எளிதில் புரியும்படி விளக்குகிறார் ஆசிரியர்.

திராவிட இயக்கம் என்பது வெறும் பித்தலாட்ட, ஊழல் கொப்புளிக்கும் இயக்கம் என்பதைப் பல உதாரணங்களுடன் விளக்கும் ஆசிரியர், அவ்வியக்கங்களால் தமிழ் எவ்வாறு எந்த வளமும் பெறவில்லை என்பதையும் தெரிவிக்கிறார். தமிழை வளர்ப்பதாகச் சொல்லி அவ்வியக்கத் தலைவர்கள் செய்த ஊழல்கள், அதனால் தமிழ் நாடு அடைந்த கீழ்மை என்று விரியும் நூல் தமிழ்ச் சூழலில் இன்றியமையாத மைல்கல்.

ஈ.வெ.ரா. தொடர்பான பகுதிகள் சுவாரசியமானவை.  ஈ.வெ.ரா.மீது எழுப்பப்பட்டுள்ள மாய பிம்பத்தைத் தகுந்த தரவுகளுடன் உடைத்தெறியும் ஆசிரியர், இந்துமதம் பற்றி ஈ.வெ.ரா.விற்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை என்பதையும் நிறுவுகிறார். மனு ஸ்மிருதியின் சில பகுதிகளை மட்டுமே ஆதாரமாகக் காட்டிய ஈ.வெ.ரா.வைத் தோலுரிக்கும் மாரிதாஸ், வைக்கம் போராட்டத்தில் ஈ.வெ.ரா.வின் பங்களிப்பு எதுவும் இல்லை என்பதையும் ஆணித்தரமாகக் காட்டுகிறார். வைக்கம் போராட்டத்தின் இறுதியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வெ.ரா. பங்குகொண்டதைத் திராவிடக் கண்மணிகள் ஏதோ ஈ.வெ.ரா. தனியாகவே நின்று போராடியதைப் போன்று பேசுவதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். சாதி ஒழிப்பில் ஈ.வெ.ரா. தமிழகத்தில் எந்தவொரு போராட்டத்திலும் ஈடுபடவில்லை என்பதையும் ஆசிரியர் சுட்டத் தவறவில்லை.

ஆங்கில ஆட்சியால்தான் நாடு ரயில், போக்குவரத்து, மின்சாரம், கல்வி, வணிகம் முதலியவற்றில் முன்னேற்றம் அடைந்தது என்னும் பொய்யை முறியடிக்கும் வகையில் அமைந்துள்ள பகுதி, பல தரவுகளை எடுத்து அடுக்கிக் கொண்டே செல்கிறது. ஆங்கில ஆட்சியால் விளைந்த பொருளாதாரச் சீரழிவு, கல்வியில் தேக்கம், பஞ்சங்களின் கோர தாண்டவம், அதில் மடிந்த கோடிக்கணக்கான மக்கள் என்று விரியும் பகுதி, ஆங்கில ஆட்சியின் அடிவருடிகளுக்குச் சாட்டையடி.

யூதர்கள், இஸ்ரேல் பற்றிய பகுதி, அனேகமாக எந்த இந்தியப் பாடத்திட்டத்திலும் இருக்க வாய்ப்பிருக்காத ஒன்று. பாரதம் இஸ்ரேலுடன் கொண்டுள்ள உறவைப் பற்றி அனேகமாக எந்த ஊடக வெளியிலும் இடம் பெறாத செய்திகளை அளிக்கிறது அப்பகுதி.

ஒரு நிறுவனம் எப்படிச் செயல்படும், அதற்கான செலவினங்கள் யாவை, நிதி ஆதாரங்களை நிறுவனங்கள் எவ்வாறு திரட்டுகின்றன, இவ்வாறு தனியார் நிறுவனங்கள் செயல்படுவதால் நாட்டிற்கு எத்தகைய நலன்கள் விளைகின்றன, என்னென்ன காரணங்களால் இடதுசாரித் தொழிற்சங்கங்கள் தனியார் நிறுவனங்களை எதிர்க்கின்றன, அதன் வழியாக எவ்வாறு தேசத்திற்கு எதிராகச் செயலாற்றுகின்றன என்று தெளிவான விளக்கும் பகுதி தற்காலத்தில் எதற்கெடுத்தாலும் ‘போராட்டம்’ என்று குதிக்கும் இடதுசாரி சார்ந்த குழுக்கள் பற்றிய தெளிவான பார்வையை அளிக்கிறது.

பிரதமர் மோதியின் வெளி நாட்டுப் பயணங்களினால் விளைந்துள்ள பல பயன்களை எடுத்துக்கூறும் பகுதியில் இந்திய-ஆஸ்திரேலிய-ஜப்பானிய-அமெரிக்கக் கூட்டுறவால் விளைந்துள்ள ‘Quadrilateral Alliance’ பற்றியும், சீனாவின் OBOR முலம் விளையவிருக்கும் தீமைகள் பற்றியும் பேசியிருந்திருக்கலாம்..

இப்படி ஒரு நூலை எழுதுவதற்குப் பெரும் மனத்துணிவு வேண்டும். அதனினும் நிறைய அறிவு வேண்டும். தகவல்களைத் திரட்டி, ஒன்றோடு ஒன்று இணைத்து, தொடர்ச் சங்கிலி போன்றதொரு நிகழ்வுச்சங்கிலியை உருவாக்கி, அதனை அலுப்புத் தோன்றாவண்ணம் வாசகர்களுக்கு அளிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் விட, பாரதத்தின் மீது ஆழ்ந்த அன்பு, பக்தி இருக்க வேண்டும். இவை அனைத்தையும் பெற்றமைக்காக மாரிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள், 120 கோடி இந்தியர்களின் சார்பாக நன்றிகள் பல.

இவ்வளவு தரவுகளுடன் எழுதினாலும் ‘நான் எழுதிவிட்டேன் என்பதால் நம்பாதீர்கள். இத்தரவுகளைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள்’  என்று சொல்லும் ஆசிரியர் ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்’ என்னும் குறளை நினைவுபடுத்துகிறார்.

இந்த நூலை எழுதியதற்காக மாரிதாஸ் அவர்களுக்கு நமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
 

Posted on Leave a comment

ஒளிவழிக் கணினிகள் – ஆப்டிகல் கம்ப்யூடிங் | ஹாலாஸ்யன்


கூகுளில் எதையாவது தேடினால், தேடல் முடிவுகளுக்கு மேல், பொடி எழுத்தில் ‘About 22,40,000 results (0.80 seconds)’ இந்த மாதிரி ஒரு வரி இருக்கும் கவனித்திருக்கிறீர்களா? ஷாருக்கானின் மகன் எதிர்காலத்தில் யாரைக் கல்யாணம் பண்ணுவார் என்று தேடுகையில் இதையெல்லாம் பார்க்கத் தோன்றுமா என்ன?

அந்தத் தேடல் எடுத்துத் தரும் முடிவுகளின் எண்ணிக்கையையும், அதைத் தர எடுத்துக்கொள்ளப்பட்ட நேரத்தையும் கவனித்துப் பாருங்கள். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? எப்படி இது சாத்தியம்? நம் கணினிகள் அசாத்திய வேகமாக இருக்கிறதல்லவா?

நீங்கள் தேடவேண்டியதைத் தேடி எண்டர் தட்டுகிற அடுத்த நொடி எலெக்ட்ரான்கள் பறக்க ஆரம்பிக்கின்றன. கடலுக்கடியில் புதைக்கப்பட்ட கண்ணாடி இழைக் கம்பிகள் வழியாக நீங்கள் தேடியது உங்கள் கணினியில் காண்பிக்கப்படுகிறது.

கணினிகளின் வேகம் அதிகரித்திருக்கிறது. குறுக்கே சட்டென்று ஒரு வண்டி வந்தால் சட்டென்று பிரேக் அடித்து நிற்கக் கூடிய தானோட்டிக் கார்கள் டெஸ்லாவில் வந்துவிட்டன. சாவுகிராக்கி என்று திட்டக் கற்றுக்கொள்ளவில்லை இன்னும். இந்த வேகம் வருடா வருடம் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒவ்வொரு பதினெட்டு மாதத்திற்கும், ஒரு சதுர செண்டிமீட்டர் அளவிலான சிலிக்கான் சில்லில் விதைக்கப்பட்டிருக்கும் ட்ரான்ஸிஸ்டர்களின் எண்ணிக்கை இருமடங்காகிறது. இதனை மூர் விதி (Moore’s law) என்று அழைக்கிறார்கள். ஒரு நொடிக்கும் பல லட்சம் முறை அணைக்கவும், திரும்பப் போடவும் திறன்கொண்ட ட்ரான்ஸிஸ்டர்கள்தான் இன்றைய சிலிக்கான் உலகின் உயிர்நாடி. அவற்றை நெருக்கமாகத் திணித்து திணித்து இன்னும் அதிக அளவு ட்ரான்ஸிஸ்டர்களைக் கொண்ட சில்லுகளை உருவாக்கிதான் மூர் விதியை நாம் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் எந்த விதிக்கும் ஒரு வரம்பு இருக்கிறதல்லவா. நான் கடைசியாய் கவனிக்கையில் ஒரு ட்ரான்ஸிஸ்டரின் குறைந்தபட்ச தடிமன் 14 நேனோ மீட்டர். இன்னும் இரண்டொரு வருடங்களில் ஒரு ட்ரான்ஸிஸ்டரை நாம் 5 நேனோ மீட்டர் அளவில் செய்துவிடுவோம். இதுதான் உச்ச வரம்பு. ஒரு ட்ரான்ஸிஸ்டர் ஒரு அணுவின்
தடிமனே இருக்கும். அப்போது சில குவாண்டம் விளைவுகள் செயல்படத் தொடங்கி விடுகின்றன.

அணுக்களில் ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கீழே நாம் செல்லும்போது, சாதாரண இயற்பியல் விதிகள் ஓரங்கட்டப்பட்டு, ‘இனிமே நாங்க பாத்துக்கறோம்’ என்று குவாண்டம் விதிகள் களம் இறங்குகின்றன. எலெக்ட்ரானை பாயவிட்டால் ஆன், பாய விடாவிட்டால் ஆஃப் என்கிற கோட்பாடுடைய ட்ரான்ஸிஸ்டர்களின் அளவு ஐந்து நேனோ மீட்டரை எட்டிவிட்டால் குவாண்டம் டன்னலிங் (Quantum Tunneling) என்ற விளைவு செயல்படத் தொடங்குகிறது. அதாவது அந்த ட்ரான்ஸிஸ்டரை, பேய்ப் படங்களில் அப்படியே உடம்புக்குள் பேய் ஊடுருவிப் போவதுபோல எலெக்ட்ரான்கள் ட்ரான்ஸிஸ்டரைக் கடந்து போய்விடும். அதாவது உங்களால் ட்ரான்ஸிஸ்டரை அணைக்கவே முடியாது. அவற்றால் எந்தக் கணக்கையும் செயல்படுத்த முடியாது. அதுதான் உச்சவரம்பு. அதற்குமேல் நமக்கு வேகம் வேண்டுமெனில், அதிக சில்லுகளை வாங்கிப்போட்டுப் பயன்படுத்த வேண்டும். அந்த வரம்பை நாம் வெகு சீக்கிரம் எட்ட இருக்கிறோம்.

இன்னொரு தடை எலெக்ட்ரான்களின் வேகம். அது மிகவும் குறைவு. இதென்ன புது குண்டு, நான் சுவிட்ச் போட்ட அடுத்த நொடி ஃபேன் சுற்ற ஆரம்பிக்கிறது? எங்கோ இருக்கும் மோட்டார் இயங்கி நீர் இறைக்கிறது. இதெப்படி குறைந்த வேகமாக இருக்க முடியும்? நீங்கள் சுவிட்ச் போடுகையில் அங்கிருக்கும் எலெக்ட்ரான் நகர்ந்து மொத்த வயர் நீளத்திற்கும் போய் ஃபேனில் நுழைந்து சுற்ற வைக்கிறது என்று நினைத்தால் தவறு. அந்த எலெக்ட்ரான் இரண்டு மூன்று அணுக்கள் கூட நகர்ந்திருக்காது. ஆனால் அங்கிருந்து அடுத்த எலெக்ட்ரான் கிளம்பி நகரத் தொடங்கிவிடும். மின்சாரம் பாய்தல் ஒருவகையான டாமினோ விளைவுதான் (domino effect). ஒரு ஒற்றை எலெக்ட்ரான் சுமார் ஒரு மீட்டர் நீளமுள்ள கடத்தியின் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்குப் போக சில நிமிடங்கள் வரை ஆகும். வேகத்தைத் தவிர மின் தடை (resistance), மின்சாரம் பாய்வதினால் உருவாகும் வெப்பம் இரண்டும் பெரிய தொழில்நுட்ப முட்டுக்கட்டைகள். இவையனைத்தையும் தாண்டித்தான் இன்றைய மின்னணுவியல் துறை இயங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு என்ன செய்யலாம்? மேற்கொண்டு முன்னேற்றத்திற்கான உச்ச வரம்பை எட்டப் போகிறோம் என்று இருக்கையில் அடுத்த நகர்வு என்ன?

கொஞ்சம் மாற்றி யோசிப்போம். கணினிகளுக்கு அடிப்படை இரண்டு. ஒன்று தகவர் கடத்துதல் (data moving). மற்றொன்று தகவல்களை வைத்து கணக்குகள் போடுதல் (data processing). இப்போது நடைமுறையில் இருக்கிற செயல்முறை இந்த இரண்டையும் எலெக்ட்ரான்களை வைத்துச் செய்கிறது. கணினிக்குள்ளே வயர்கள் மூலமாகத் தகவல்கள் கடத்தப்படுகின்றன. ட்ரான்ஸிஸ்டர்களின் செயல்பாடு மூலம் தகவல்களில் கணக்குகள் போடப்படுகின்றன. இந்தச் செயல்பாடுகளை ஏன் எலெக்ட்ரான்களை விட்டுவிட்டு வேறு ஏதேனும் ஒன்றை வைத்துச் செய்யக்கூடாது. வேறு என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? ஒளி.

எலெக்ட்ரான்களுக்கு இருக்கிற சட்ட சிக்கல்கள் ஒளிக்குக் கிடையாது. அதற்கு எடை கிடையாது. அதன் வேகம் பிரபஞ்சத்தில் வேறு எதனாலும் விஞ்ச முடியாததாய் இருக்கிறது. ஆக ஒளி ஒரு அருமையான தீர்வு. இப்படி ஒளித்துகள்களை கணினிகளில் பயன்படுத்துவதை ஒளிவழிக் கணினிகள் (optical computing அல்லது photonic computing) என்று அழைக்கிறார்கள்.

இது ஒன்றும் ரொம்ப புதிய யோசனையெல்லாம் கிடையாது. 1960 களில் இருந்து பலரால் பரிந்துரைக்கப்பட்டு வந்ததுதான். நடுவில் சிலிக்கான் புரட்சி அசுரவேகத்தில் எழும்ப இதைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள். இப்போது IBM, HP போன்ற நிறுவனங்கள் இதில் கோடி கோடியாய்க் கொட்டிக் கொண்டிருக்கின்றன.

ஒளிவழிக் கணினியின் அடிப்படைக் கோட்பாடு இதுதான். தகவல் ஒரு இடத்தில் இருந்து ஒரு இடத்திற்கு எலெட்க்ட்ரான்களாகப் பாயாமல் ஒளியாகப் பாய வேண்டும். உண்மையைச் சொல்லப்போனால் உலகின் பெரும்பான்மை இணையம் கடலடியில் பதிக்கப்பட்டிருக்கும் கண்ணாடி இழைக் கம்பிகள் மூலமே கடத்தப்படுகிறது. ஆனால் நம் கணினிகளுக்கு இணையம் வழங்கும் கருவிகளால் அதை நேரடியாகப் புரிந்து கொள்ள முடியாது. அதனால் ஒளி மூலம் அனுப்பப்பட்ட செய்தி அங்கு எலெட்க்ரான் சமிக்ஞைகளாக மாற்றப்படுகிறது. இது புறவழிச்சாலையில் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கையில் சட்டென்று ஒரு சந்தடி மிகுந்த ஊருக்குள் நுழைவதற்குச் சமம். மேலும் இந்த ஒளியில் இருந்து எலெக்ட்ரான் சமிஞ்கைகளாக மாற்றுதல் நேரம் மற்றும் ஆற்றல் இரண்டையும் வீணடிக்கிற செயல். அந்த ஒளி-எலெக்ட்ரான் சமிஞ்கை மாற்றத்தைக் கடாசிவிட்டு, கணினிக்குள்ளேயும் ஒளி மூலமாகத் தகவலைக் கடத்துதல் முதல்படி.

ஒளிமூலங்களுக்கு லேசர்கள், கண்ணாடி இழைகள், மிக நுண்ணிய பிரதிபலிக்கும் கண்ணாடிகள், ஒளி உணர்விகள் (optical sensors) வேண்டும். இதனை நடைமுறையில் சாத்தியப்படுத்த முடிகிறது. சவாலே அந்தத் தகவல்களை வைத்துச் செய்யும் கணக்குகளில்தான் இருக்கிறது. தகவல் நகர்தலை ஒளி மூலம் நடத்தி, கணக்குகளை நடைமுறையில் இருக்கிற ட்ரான்ஸிஸ்டர்களைக் கொண்டு நிகழ்த்துவதில் ஒன்றும் பெரிதாய் மாறிவிடாது. நாம் ஏற்கெனவே பார்த்த நேரம் மற்றும் ஆற்றல் விரயம்தான் மிச்சம்.

ஒரு ட்ரான்ஸிஸ்டர் மின்சாரத்தைக் கடத்தினால் அது ஆன் ON, கடத்தாவிட்டால் OFF என்பதே கணினியின் அடிப்படை விதி. அந்த ட்ரான்ஸிஸ்டர்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து இயங்கி தர்க்கக் கதவங்களாகச் (Logic Gates) செயல்படுகிறது. இவைதான் கணக்குகளின் அடிநாதம். இப்போது இந்தக் கணக்குகளை ஒளிமூலம் செய்ய வைப்பதுதான் உண்மையான சவால். இதற்காகச் சில விசேஷப் பொருட்களை உருவாக்கி இருக்கிறார்கள். அவைகளுக்கு ஒளிவழி ட்ரான்ஸிஸ்டர்கள் என்று பெயர். பெரும்பான்மை தர்க்கக் கதவங்கள் இரண்டு உள்ளீடுகளைக் (input) கொண்டு ஒரு வெளியீடைத் (output) தருபவை. உதாரணத்துக்கு மிக அடிப்படையான AND தர்க்கக் கதவத்தை எடுத்துக்கொள்வோம். இரண்டு உள்ளீடுகளும் உண்மை என்றால் மட்டுமே வெளியீடு உண்மையாக இருக்கும். இல்லையெனில் இயங்காது. ட்ரான்ஸிஸ்டர்களால் இயங்கும் AND தர்க்கக் கதவத்தில் இரண்டு உள்ளீடுகளையும் மின்சாரம் பாய்வது என வைத்துக்கொண்டால் வெளியீட்டில் மின்சாரம் பாயுமாறு வடிவமைக்கலாம். ஆனால் ஒளியில் இதைச் சாத்தியப்படுத்துவதற்கு கொஞ்சம் மாற்றி யோசிக்க வேண்டும். அங்கு கைகொடுப்பது ஒளியின் குறுக்கீடு என்ற பண்பு.

அலைக்குறுக்கீட்டை நீங்கள் கடற்கரையில் உங்கள் கண்களால் பார்த்திருப்பீர்கள். இரு சிறு அலைகள் சட்டென்று ஒன்று சேர்ந்து பெரிய அலையாக மாறும். பெரும் அலையாக இயங்கும் இரண்டு ஏதோ ஒரு காரணத்தால் அப்படியே கரையைத் தொடாமலேயே அடங்கிப் போகும். இரண்டு அலைகளின் மேடு பள்ளங்களும் ஒன்றோடொன்று இயைந்து இருந்தால் புது அலையின் வீச்சு அதிகமாக இருக்கும். ஏறுக்கு மாறாக இருந்தால் அப்படியே அடங்கிவிடும். ஒளியும் அதுபோலத்தான். அப்படியானால் இந்தக் குறுக்கீடு என்னும் பண்பைக் கொண்டு நாம் AND தர்க்கக் கதவத்தை விளக்கி விட முடியும்தானே. இரு ஒன்றோடொன்று இயைந்த ஒளி அலைகள் ஒன்றாகி அதிக வீச்சுடன் புது ஒளி அலை வரும். இதன்மூலம் கணக்குகள் போட முடியும். இப்படி தர்க்கக் கதவங்களுக்கு ஒளியைப் பயன்படுத்தி கதவங்கள் செய்வதைச் சாத்தியப்படுத்திவிட்டார்கள்.

இதில் இன்னொரு வசதி உண்டு. முன்பெல்லாம் நம் ஊர் தபால்துறையின் கடிதங்கள் ஓடும் ரயிலிலேயே இரவில் பிரிக்கப்படும். கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதாவது data is processed while it is moved. தகவல் நகரும்போதே கணக்கும் போடப்படுகிறது. ஒளிவழிக் கணினிகளில் அது சாத்தியம். இப்போதைய கணினிகளில் தகவல், வன் தட்டுகள் (hard drives) அல்லது பிற தகவல் சேமிக்கும் சாதனக்களில் இருந்து தகவல்களைக் கணிக்கும் ப்ராஸஸருக்குச் கொண்டுசெல்லப்பட்டுக் கணிக்கப்படும். ஆனால் ஒளிவழிக் கணினியில் இதைப் போகிற போக்கில் செய்ய முடியும்.

ஒளிவழிக் கணினிகளின் சாதகங்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றன.

1. அவற்றின் இயங்குவேகம், இந்தப் பிரபஞ்சத்தில் எதனாலும் விஞ்சமுடியாததாய் இருக்கும்.ஒளிவழி இயங்கும் ப்ராஸஸர்கள், நிஜமாக ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியும். நாம் தற்போது பயன்படுத்தும் ப்ராஸஸர்கள் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய அதிக ட்ரான்ஸிஸ்டர்களையும், அதிக சிலிக்கான் சில்லுகளையும் கோருகின்றன.

2. ஒரே பாதையில் இரு வேறு அலைநீளங்களில் வேறு வேறு தகவல்களை எந்த வித சேதாரமும் இல்லாமல் அனுப்ப முடியும். இதனால் ஒளிவழிக் கணினிகளின் தகவல் நகரும் பாதைகள் இரு பரிமாணத்தில் இருந்தாலே போதுமானது. ஆனால் எலெக்ட்ரான்களாக தகவல் நகரும் பட்சத்தில் இது சாத்தியமில்லை. இங்கு முப்பரிமாண வயரிங் அவசியம்.

3. ஒருமுறை ஒளி உற்பத்தி ஆகிவிட்டால் அதன்பிறகு அது ஆற்றலை அது கோருவதில்லை. மேலும் அது பாய்வதற்கு மின்னழுத்த மாறுபாடெல்லாம் தேவையில்லை. போகச்சொன்னல் போய்விடும்.

4. தர்க்கக் கதவங்கள் வேறு எந்த விதிகளாலும் மாறுபடாதவை. அதனால் அளவிற் சுருங்கினாலும் பிரச்சினையில்லை

5. மின்கடத்திகள், குறைகடத்திகள் என்று இப்பொழுது நாம் பயன்படுத்தும் கணினிப் பாகங்களோடு ஒப்பிடுகையில், ஒளியைக் கடத்தும் பொருட்கள், லேசர்கள், நுண்ணிய பிரதிபலிக்கும் கண்ணாடிகள் ஆகியவற்றைத் தயாரிப்பது எளிதானதும் சிக்கனமானதும் ஆகும்.

6. தற்போது நாம் பயன்படுத்தும் கணினிகள் தகவலை ஏகப்பட்ட முறை இடம்மாற்றுகின்றன. எவ்வளவுக்கு எவ்வளவு இடம் மாறுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதன் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகும். ஒரு வைரஸோ அல்லது தகவல்கள் திருடுகிற நிரலோ தகவல்களைத் திருடிக்கொண்டு போய்விடும். ஆனால் தகவல் நகர்கிற போதே கணிக்கப்படுகையில் தகவல் திருட்டுக்கான சாத்தியக்கூறு பல மடங்கு குறைகிறது.

7. ஒளி நகர்கையில் எந்தவிதமான ஆற்றலையும் வீணடிக்காததால் கணினிகள் வெப்பமாகாது. அவற்றைக் குளிர்விக்க தனியே குளிர்சாதன வசதி தேவையில்லை. இது கணினிகளுக்கான பராமரிப்புச் செலவில் ஒரு பெரிய தொகையை மிச்சப்படுத்தும்.

சரி இவ்வளவு இருக்கிறதே. இதில் சவால்களே இல்லையா என்றால் அதுவும் உண்டு.

1. ஒளியை நகர்த்துதலும், நகரும்போதே கணித்தலும் எளிது. ஆனால் சேமித்தல் கடினம். ஒளியை எதனாலும் நிறுத்தி வைக்க முடியாது. காரணம் அதற்கு மின்னேற்றமோ (charge), காந்தப்புலமோ (magnetic field) கிடையாது.  இதனால் தகவல் சேமிப்பு என்பது இப்போது வரை கொஞ்சம் சிக்கலாகவே இருக்கிறது. இறுதியாக, கணக்குகள் போட்டுச் சேமிக்க வேண்டிய பகுதி இன்னும் அவ்வளவு தெளிவில்லாமல் இருக்கிறது. முப்பரிமாணப் படிம நினைவகங்கள் (halographic memory) என்ற ஒளி அலைகளில் தகவல் சேமித்தல் தீர்வாகச் சொல்லப்பட்டாலும், அதன் இயங்கக்கூடிய மாதிரி (prototype) வடிவம் இன்னும் கணினிகளுக்கும் அடங்கும் வகையில் சுருங்கவில்லை. ஆய்வுகள் தீவிரமாகப் போய்க்கொண்டிருக்கின்றன.

2. ஒளிவழி இயங்கும் ப்ராஸஸர்கள், தகவல் கடத்தும் உறுப்புகள் எல்லாமே செயல்முறையில் நிரூபிக்கப்பட்டாலும், அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்வதற்கான முறைகளும் முதலீடும் இன்னனும் கூடிவரவில்லை. ஆனால் இது எல்லாப் புது தொழில்நுட்பங்களுக்கும் நிகழ்வதுதான். முதல் ட்ரான்ஸிஸ்டர் நாம் வைத்திருக்கிற கைபேசிகளை விடப் பெரிதாக இருந்தது. இன்று நம் கைபேசிக்குள் கோடிக்கணக்கான ட்ரான்ஸிஸ்டர்கள் இருக்கின்றன. இது எல்லாமே நாள்போக்கில் வந்துவிடும். ஏற்கனவே சில தொழில்நுட்ப ஜாம்பவான்கள் களத்தில் குதித்துவிட்ட நிலையில் இது இன்னும் துரிதப்படும்.

தொழில்நுட்பம் பல சமயத்தில் ஏற்கெனவே இருந்த யோசனைகளைத் தூசுதட்டி எடுத்து அதில் மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறது. நாம் இன்று பயன்படுத்தும் கணினிகள் பயணித்து வந்த பாதை ஒரு மிகப்பெரிய பாய்ச்சல். அதன் ஆரம்பகாலத் தொழில்நுட்ப மைல்கல்கள் இந்த அளவு அறிவியல் முன்னேற்றம் இல்லாதபோதே நிகழ்ந்தவை. அவற்றோடு ஒப்பிடுகையில் ஒளிவழிக்கணினிகள் கொடுத்து வைத்தவை. ஏற்கெனவே ஒரு துறையை வளர்த்தெடுத்த அணுபவம் இருப்பதால் சில விஷயங்களை நாம் எளிதாகச் சாதித்துவிட முடியும். அடுத்த பத்தாண்டுகளில் முழுதாய் ஒளிவழியே இயங்கும் கணினிகள் சாத்தியமே. காத்திருப்போம்.

Posted on Leave a comment

மாறி வரும் சவுதி அரேபியா | லக்ஷ்மணப் பெருமாள்சவுதி அரேபியாவில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். இந்தக்கட்டுரை எனது அனுபவத்திற்குள்ளான காலகட்டத்தில் நடந்த மாற்றங்கள் பற்றி மட்டுமே சொல்லப்போகிறேன். 

மற்ற நாடுகளுக்கு முதன்முறையாகச் செல்வோருக்கு வழங்கப்படும் அறிவுரைகளுக்கும் சவுதி அரேபியாவிற்கு நீங்கள் பணி நிமித்தமாகப் பயணப்பட வேண்டி வந்தால் சொல்லப்படும் அறிவுரைகளுக்குமே ஒரு வித்தியாசமிருக்கும். சவுதி அரேபியா பற்றிய பொதுவான சித்திரம் இந்தியர்களான நமக்கு ஒரு பயத்தை, எச்சரிக்கையைச் சொல்வதாகவே இருக்கும். குறிப்பாக சுதந்திரமற்ற நாடு என்ற மிரட்டல் இருக்கும். அதைப் பிரதிபலிக்கும் விதமாக வேலைக்கு எடுத்த நிறுவனத்தின் அதிகாரியும் பணியில் சேர்ந்த நாளிலோ அல்லது பயணத்திற்கு முன்பாகவோ அப்பயத்தை உறுதிப்படுத்தும் வகையில் சவுதி அரேபியாவிற்குள் வரும்போது என்ன கொண்டு வரலாம், எதையெல்லாம் அறியாமல் கொண்டு வந்துவிடக் கூடாது என்பதில் ஆரம்பித்து, ஆடைக் கட்டுப்பாட்டிலிருந்து ஆட்சியாளர்களைப் பற்றி பொது வெளியில் எங்கும் எதுவும் பேசக் கூடாது என்ற அறிவுரையில் வந்து முடியும்.  குறிப்பாக மன்னரைப் பற்றியோ ஆட்சியைப் பற்றியோ வெளிப்படையாக எழுதினால் விசாரணையின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையும் சவுதிக்கு முதன்முறையாக வருபவர்கள் விமான நிலையத்திலே மோசமான அனுபவங்களைச் சந்தித்திருப்பார்கள். துளியும் ஆங்கிலம் பேசாத விமானநிலைய அதிகாரிகள். களைப்போடு பயணம் செய்து வந்து சேர்ந்திருக்கும் மனிதர்கள் பற்றிய அக்கறை சிறிதும் அதிகாரிகளிடம் இருக்காது. எந்த வரிசையில் நிற்க வேண்டும் என்பது கூடப் புரியாமல் மாற்று வரிசையில் நின்றவர்கள், மீண்டும் சரியான வரிசையில் வந்து நின்று வெளிவருவதற்குள் போதும்போதுமென்றாகி விடும். எத்தனை மணி நேரம் காத்திருந்து நீங்கள் Immigration clearance செய்து வெளி வருவீர்கள் என்பதெல்லாம் உங்கள் அதிர்ஷ்டம்! சிலருக்கு ஏன் காக்க வைக்கிறார்கள் என்று தெரியாது. அங்கிருந்து பாக்கேஜ் எடுத்து வெளி வரும் போது பயணிகள் தங்களின் அனைத்து பாக்கேஜையும் திறந்து காண்பிக்க வேண்டும். அறிந்தோ அறியாமலோ  CD க்கள், கதைப் புத்தகங்கள்,  மடிக்கணினியில்  Pirated software, சாமி படங்கள் கொண்டு சென்று அவர்கள் பார்த்து விசாரித்தால் என்ன செய்வார்கள் என்ற அச்சத்திலேயே மனிதன் பாதி செத்துப் போய் விடுவான். சில நேரங்களில் அவற்றைப் பறிமுதல் செய்து விட்டு சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் பறித்து வைத்த பொருட்களைச் சில தினங்கள் கழித்து அதற்கென உள்ள ஒரு அதிகாரியிடம் சென்று CD யில் தவறாக எதுவுமில்லை என்று நிரூபித்தால்,  உங்கள் பொருளைத் தாராளமாக எடுத்துச் செல்லலாம் என்ற அறிவிப்பு உண்டு. ஆனால், எவரும் அத்தனை எளிதில் சென்று வாங்க மாட்டார்கள். ஏனெனில் அவரையும் அறியாமல் அதில் தேவையற்ற கவர்ச்சிப் படங்களோ, தகாத காட்சிகள் உள்ள வீடியோக்களோ இருந்தால் தேவையற்ற பிரச்சினையில் மாட்டுவோம் என்று அப்பக்கமே செல்ல மாட்டார்கள்.

இன்று வரையிலும் கசகசா சவுதி அரேபியாவில்  ஒரு போதைப் பொருளாகத்தான் பார்க்கப்படுகிறது. மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று எண்ணும் சக இந்தியனுக்கு வழங்கப்படும் அறிவுரையில் கசகசா கொண்டுவரக்கூடாது என்பது தவறாமல் இடம் பெறும். இன்று வரையிலும் மாறாத விஷயங்களைக் கடைசியில் சொல்கிறேன். தற்போதைக்கு எங்கிருந்த சவுதி அரேபியா எப்படி மாறுகிறது என்ற சித்திரம் கிட்டவே கடந்த கால நடைமுறைகள், சட்ட திட்டங்கள் பற்றிச் சொன்னேன்.

முத்தவாக்களின் அதிகார பலம்

கடைகளில் குமுதம், குங்குமம் போன்ற புத்தகங்கள் அப்போதே வந்து கொண்டிருந்தன. அட்டைப்படத்தில் ஆரம்பித்து புத்தகத்தின் இறுதிப்பக்கம் வரை கவர்ச்சிப்படங்கள் அனைத்திலும் கரி பூசப்பட்டிருக்கும். சேலை கட்டிய நடிகைகளின் இடுப்புப் பகுதி கூடக் கரி பூசப்பட்டிருக்கும். வீடுகளில் மாற்று மதத்தினர் தங்களது சாமி படங்களை வைத்திருக்கக்கூடாது. அப்படி வைத்திருப்பது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் போன்ற பயமுறுத்தல்களால் சாமி படங்கள் கூட வெளியாட்கள் கண்களில் படாத வண்ணம் மறைக்கப்பட்டிருக்கும். அப்போது மதக் காவலர்கள் என்று சொல்லப்படும் முத்தவாக்களுக்கு பலத்த அதிகாரமிருந்தது. அவர்களைக் கண்டால்  இஸ்லாமியரில் ஆரம்பித்து மாற்று மதத்தினர் வரை அனைவரும் பயந்து நடுங்குவார்கள். ஏனெனில் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சிறைக்கு அனுப்பி விடுவார்கள். தொழுகை நடக்கும் ஐந்து வேளைகளில் வெளியே யாரேனும் சுற்றித் திரிந்தால் உடனடியாகக் கைதுதான். குறிப்பாக இஸ்லாமியர்கள் தொழுகைக்குச் செல்லாமல் திரிந்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும். மாற்று மதத்தினர் அவர்கள் தொழுகை செய்வதை மதித்து அமைதியாகச் செல்ல வேண்டும். வாகனத்தில் அமர்ந்து இருப்பவர்கள் வரை விசாரணை செய்வார்கள் என்பதால் பலரும் முத்தவா வருகிறார் என்றாலே அவ்விடத்தை விட்டு வேகமாக மாற்று இடங்களுக்குச் சென்று விடுவார்கள். அதை உணர்ந்துகொள்ள வேண்டுமென்றால் திடீரென ஒரு கும்பல் வேகமாக ஓடும். அதுதான் முத்தவா வருகை பற்றிய சமிக்ஞை.

ஆண்கள் கையிலோ கழுத்திலோ தங்க மோதிரம் அணிந்தால் முத்தவாக்கள் பிடுங்கிச் சென்று விடுவார்கள். ஆண்கள் தங்க ஆபரணங்களை அணியக் கூடாது, கைகளில் கறுப்புக் கயிறுகளைக் கட்டி இருக்கக் கூடாது. இதற்குப் பொருள் மோதிரம், கறுப்புக் கயிறு கட்டி இருக்க மாட்டார்கள் என்ற அர்த்தமல்ல. மாட்டினால் பதில் சொல்ல வேண்டி வரும் என்பதே. ஒருமுறை யான்பு என்ற நகரில் சலா (தொழுகை) நேரத்தில் வழக்கம் போல ஒரு கும்பல் ஓட நாங்களும் காரை விட்டு இறங்கி வேகமாக ஓடி விட்டோம். வந்து பார்த்தால் அவசரத்தில் காரின் ஹெட்லைட்டை அணைக்காமல் சென்றுள்ளேன். பாட்டரி முற்றிலும் படுத்து நண்பர்களின் உதவியோடு காரை எடுத்துச் செல்ல வேண்டிய அவஸ்தை ஏற்பட்டது.

பெண்களைப் பொருத்தவரையில் எந்த மதத்தினராக இருந்தாலும் புர்கா போட்டே வெளியில் செல்ல வேண்டும். தலையிலும் அவசியம் அபயா போட்டிருக்க வேண்டும். பெண்கள் ஆண் துணையின்றி, அதாவது கணவன், அண்ணன், தந்தை, தம்பி தவிர்த்த எந்த ஆணுடனும் வெளி இடங்களில் செல்லக் கூடாது. ஒருவேளை மால்களிலோ பூங்காக்களிலோ அப்படி மாட்டினால் சிக்கல்தான். இன்று வரையிலும் சட்டம் அப்படியே சொல்கிறது.

மிகப்பெரிய மால்களுக்குள் வியாழன், வெள்ளி ஆகிய வார விடுமுறை நாட்களில் கல்யாணமாகாதவர்கள் அல்லது குடும்பமல்லாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மற்ற பணி நாட்களில் மட்டுமே உள்ளே செல்ல அவர்களுக்கு அனுமதி உண்டு. வீடியோ கடைகள் உண்டு. அதிலும் சில ஊர்களில் அதற்கும் தடை. மறைத்து வைத்து விற்பவர்கள் முத்தவாக்களிடம்  பிடிபட்டால் அவ்வளவுதான். வெளியூர்களுக்கு மட்டுமே அரசுப் பேருந்துகள் இயங்கி வந்த காலமது. நம்மூரில் வேன் என்று சொல்வோமல்லவா அதுபோன்ற பேருந்து மட்டுமே ரியாத் போன்ற மாநகரங்களில் உண்டு. சிறு நகரங்களில் அதுவும் கிடையாது. வாகனங்கள் இல்லாதவர்கள் டாக்சியில் மட்டுமே செல்ல வேண்டும். விலை மிக மிகக் குறைவுதான். கலை நிகழ்ச்சிகளை எல்லாம் அதிகாரபூர்வமாக நடத்த இயலாது என்பதான காலகட்டமது.

*

நான் துணை மின் நிலையத்தில் பணி புரிந்தபோது கேள்விப்பட்ட நிகழ்வு இது. சவுதி பொறியாளர் ஒருவரையும் இந்தியப் பொறியாளர் ஒருவரையும் அந்த மின் நிலையத்தில் பணி புரிய அமர்த்தியுள்ளார் மேலாளர்.. சவுதி இளைஞர் தொழுகைக்குச் செல்கிறேன் என்று சென்றால் மூன்று மணி நேரம் வரமாட்டார். கேட்டால் சலா சென்றேன், நீ எப்படிக் கேட்கலாம் என்பார். இப்படியாகச் செல்ல சீனியர் மேலாளரிடம் தன்னால் அவரைக் கட்டுப்படுத்த இயலாது என்று இந்தியப் பணியாளர் சொல்லியுள்ளார். இதை அறிந்த சவுதி இளைஞர் நேரடியாக முத்தவாவிடம் சென்று, ‘நான் தொழுகை செல்லக் கூடாது என்று இவர் சொல்கிறார்’ என்று புகார் கொடுக்க, எந்த விசாரணையுமின்றி அந்த நிறுவனமே அவரை இந்தியாவிற்கு final exit செய்து வெளியேற்றியுள்ளது. வெளியற்ற வேண்டும் என்பது மதக்காவலரின் உத்தரவு. இது போன்ற பல செவி வழிச் செய்திகள் மட்டுமல்லாமல் அனுபவத்திலும் பெரும்பாலான சவுதிகள் வேலைக்குக் குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் இருப்பது, முழு நேரமும் அலுவலகத்திலோ பணியிடத்திலோ வேலை செய்யாமல் இருப்பது என்பதெல்லாம் தெரிந்தும் எந்த மேலாளரும் கண்டுகொள்ளாமல் செல்வார்கள். ஏனெனில் காவல் நிலையத்திலோ அல்லது வெளியிலோ தனக்கு இடைஞ்சல் வரலாம் என்பதால்தான்.

மாறி வரும் காட்சிகள்

பெண்கள் முன்னேற்றம்:

மன்னர் அப்துல்லாவின் காலகட்டத்திலேயே மதக் காவலர்களுக்கான அதிகாரங்கள் அகற்றப்பட்டன. அவர்கள் யாரையும் நேரடியாகக் கைது செய்யக் கூடாது, தேவைப்பட்டால் காவலர்களை அழைத்துப் புகார் செய்யலாம் என்ற வகையில் அதிகாரங்கள் சுருங்கின. குறிப்பாகப் பெண்களின் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மன்னர் அப்துல்லாவின் காலத்தில்தான் அதிக அளவில் ஆரம்பமானது. முற்றிலுமாக பெண்களுக்கான சுதந்திரம் இன்று வரையிலும் கிடைக்காவிட்டாலும் மெல்ல மெல்ல பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பல தடைகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. ஓர் அரசின் சில செயல்பாடுகளிலிருந்து அது எத்தகைய மாற்றத்தை நோக்கி நகர்கிறது என்று நாம் அனுமானிக்க இயலும். அவ்வகையில் உலகின் மிகப் பெரிய பெண்கள் பல்கலைக்கழகம் (Princess Noura Bint Abdul Rahman University) ரியாத்தில் அப்துல்லாவின் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. 1970ல் ஆண்களின் கல்வி விகிதம் 15% ஆகவும், பெண்களின் கல்வி விகிதம்  2% ஆகவும் இருந்தது. உலக வங்கியின் கணக்கின் படி, தற்போது ஆண்களின் (15 -24 வயதுடையவர்களின்) கல்வி விகிதம் 98%  என்றும் பெண்கள் 95% என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. (நம்ப முடியவில்லை, ஒருவேளை அரபு மொழியில் படிக்க எழுதத் தெரிந்தவர்களாக இருக்கலாம்.) இன்றைய நிலையில் பெண்களே 60% பல்கலைக்கழகங்களில் படித்து வருகிறார்கள். ஆண்கள் 40%தான் உள்ளனர். மேலை நாடுகளுக்குச் சென்று படித்து பட்டம் பெறுபவர்களின் எண்ணிக்கையிலும் சவுதிய ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் அரசியலில் பங்கெடுக்கும் வாய்ப்பும் மன்னர் அப்துல்லா காலத்திலேயே தொடங்கிய ஒன்று. கலந்தாய்வுக் கூட்டங்களில் பெண்கள் பங்கெடுப்பது எனத் தொடங்கிய விஷயம் இன்று மன்னர் சல்மானின் ஆட்சிக் காலத்தில் பெண் அமைச்சர் ஒருவரை நியமித்துள்ளது என்று முன்னேற்றம் கண்டுள்ளது. தற்போதைய இளவரசர் முகம்மது பின் சல்மான் மிக வேகமாக நாட்டை மாற்றுப்பாதைக்கு எடுத்துச் செல்கிறார். அதன் சாட்சியாக பெண்கள் விஷயத்திலேயே மூன்று விஷயங்களை அவர் அறிவித்தார். பெண்களுக்கான வாகன ஓட்டுநர் உரிமையை வழங்கியது, பெண்கள் அதிக அளவில் பணியில் அமர்த்தப்படும் நிகழ்வுகள், உலகின் முதல் பெண் ரோபோவை அடையாளமாக வாங்கியது எனப் பெண்களுக்கான சுதந்திரம் சார்ந்த சமிக்ஞைகள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன. பெண்களும் விளையாட்டுப் போட்டிகளைக் காணும் வாய்ப்பு, விளையாட்டுக் கல்லூரி எனப் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இவையெல்லாம் பெரிய மாற்றமா என்று ஒருவர் கேட்கலாம். எதுவுமே வழங்கப்படாமல் மறுக்கப்பட்ட உரிமைகள் இன்று கிடைக்க ஆரம்பித்திருப்பதை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

மால்களில் ஆரம்பித்து வணிக நிறுவனங்கள் வரை இன்று பல பெண்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடும் விரைவில் தளர்த்தப்படலாம்.

திரை அரங்குகள் பொதுப் போக்குவரத்து:

பொழுது போக்குவதற்காக திரை அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இதைப் பற்றி அறிவிக்கும் போதும் முகம்மது பின் சல்மான் இவ்வாறாகக் குறிப்பிட்டார். 1979க்கு முன்பான சவுதி அரேபியாவில் திரை அரங்குகள் மற்றும் பல பொது விஷயங்களில் அனைவரும் கலந்து கொள்ளும் வழக்கம் இருந்தது. இடையில் அது மாறி இருந்தாலும் மீண்டும் பழைய சவுதி அரேபியாவாக மாறும் என்றார். இந்த வருடமே திரை அரங்குகள் வந்துவிடும்.  தற்போது பல இடங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு அனுமதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மாநகரங்களில் முதற்கட்ட நடவடிக்கையாக மாநகராட்சிப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் ஏற்கெனவே அறிமுகமும் ஆகிவிட்டது. ரியாத் மெட்ரோ ரயில் பணிகளும் நடந்து வருகின்றன. இனிமேல்தான் மற்ற நகரங்களுக்கும் மெட்ரோ சேவை வரவேண்டும். ஏழைகள் இதனால் மிகப்பெரிய பலனை அடைவார்கள்.

முன்பெல்லாம் இந்துக்களோ மாற்று மதத்தினரோ விழாக்களை இஸ்திரகா (resort) பிடித்துக் கொண்டாடுவார்கள். இப்போது தீபாவளி, பொங்கல் , கிருஸ்துமஸ் எனப் பண்டிகைத் தினங்களிலும் பூஜைகள் செய்து கொண்டாடுகிறார்கள். சட்ட ரீதியாக அனுமதி இல்லையென்றாலும் அரசின் மென்மைப் போக்கின் காரணமாக தைரியமாகக் கொண்டாடும் மனநிலைக்கு மக்கள் வந்துள்ளார்கள்.

விமான நிலையங்களில் இன்று

தற்போது விமான நிலையங்களில் வாடிக்கையாளர்களை வரவேற்பது மற்றும் “Immigration Clearance” பகுதிகளில் தனியார் நிறுவனத்தின் ஆட்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆங்கிலத்திலேயே பேசத் தெரிந்தவர்கள் உள்ளனர். மேலும் ஒரு மணி நேரத்திற்குள்ளாக வெளியில் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்துவிடலாம். இப்போதெல்லாம் Scanning செய்வதில் சந்தேகம் ஏற்பட்டால் மட்டுமே திறந்து காண்பிக்கச் சொல்கிறார்கள். மற்றபடி விமான நிலையத்தில் எந்தப் பிரச்சினையுமில்லை. தற்போதைய அரசு இன்னொரு அறிவிப்பையும் செய்துள்ளது. விமான நிலையங்களில் அதிக அளவில் பெண்களைப் பணியில் அமர்த்தப் போவதாகவும் அவர்களுக்கு இந்தி, தகலாக், உருது, மலையாளம் எனப் பல மொழிகளில், எந்தெந்த நாடுகளிலிருந்து மக்கள் தொகை அதிகமுள்ளனரோ அவர்களை உபசரிக்கும் விதமாக அந்த மொழிகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள் என்ற அறிவிப்பும் வந்துள்ளது. இவையெல்லாம் கடந்த கால சவுதி அரேபியா எப்படி மாறி வருகிறது என்பதற்கான அடையாளங்கள்.

ஐரோப்பிய மாதிரி  நகரம்

 ஐரோப்பிய மாதிரி நகரம் அமைக்கப்படும் என்றும் பல சுற்றுலாத் தளங்கள் அமைக்கப்பட்டு மற்ற வளைகுடா நாடுகளுக்கு இணையான பல்வேறு பொழுதுபோக்கு இடங்களும், வெளி நாட்டினர் வந்து மகிழும் வகையிலான Water Theme Park,  Disney Land எனப் பல விஷயங்கள் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் வருமானத்தில் எண்ணெய்க்கு அடுத்தபடியாக சுற்றுலா வருமானமே இன்றும் இரண்டாமிடத்தில் அதிக வருவாய் ஈட்டித் தருகிறது. சுற்றுலா வருமானம் ஒட்டுமொத்தமாக மெக்கா, மெதினாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலமே கிடைத்து வந்தது.

சவுதி அரேபியாவின் இன்றைய சிக்கல்கள்

எண்ணெய் சார்ந்த வணிகம் குறைவதாலும் அண்டை நாடுகளுடனான உறவுகளில் ஏற்பட்டுள்ள பகையாலும் சவுதி பல்வேறு சிக்கல்களையும் எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக ஏமனில் ஹௌதி அமைப்புடன் நடக்கும் போர், சிரியாவிற்கான போர்ச்செலவு, கத்தாருடனான உறவில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், என்றும் பகைவனான ஈரான் என வளைகுடா நாடுகளுக்குள்ளேயே சவுதி அரேபியாவின் அண்டைய நாடுகளுடனான  உறவு கெட்டுப்போயுள்ளது. (அதேவேளையில் ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரைன், குவைத், ஓமன் போன்ற நாடுகளுடனான உறவு இணக்கமாகவே உள்ளது.) இதனால் மக்கள் நலத்திட்டங்களைக் காட்டிலும் ஆண்டுதோறும் ராணுவத்திற்கு பட்ஜெட் அதிக அளவில் ஒதுக்கப்படுகிறது. இவை ஒருபுறம். மற்றொரு புறம் எண்ணெய் வளத்தை வைத்து செழிப்பாக இருந்த சவுதி அரேபியா எதிர்காலங்களில் எலெக்ட்ரிக் கார்கள், கதிராலைகள், காற்றாலைகள் என பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்படுவதால் மிகப்பெரிய வருமான இழப்பைச் சந்திக்கும். கூடுதலாக பாரலுக்கு விலை நிர்ணயம் செய்வது தாங்கள் எடுக்கும் முடிவே என்ற இடத்திலிருந்து இன்று அதன் தேவை குறைந்துள்ளதால், பாரலுக்கான விலையையும் ஏற்ற முடியவில்லை. இதனால் அரசுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப்
பொருளாதாரச் சிக்கலைச் சமாளிப்பதில் சிக்கல் ஏற்படுவதால் மக்களிடம் வரி, வெளிநாட்டினரிடம் வரி என அரசு தனக்கான வருமானத்தைப் பெருக்கும் வழிகளைக் கொண்டு வந்துள்ளது.

வெளிநாட்டினர் குடும்பத்திலுள்ள நபர் ஒன்றுக்கு இத்தனை ரியால்கள் கட்டவேண்டும் என்பதை  ஆண்டுதோறும் அரசு அதிகரிக்கும் என்பது அமலுக்கு வந்து விட்டது. பொருட்கள் மற்றும் சேவைக்கு 5% VAT வசூலிக்கப்படுகிறது. இதனால் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. மேலும் நிறுவனங்களிடமிருந்து ஆண்டுதோறும் ஒரு வெளிநாட்டினருக்கு ஒரு விலையை நிர்ணயித்து அதன் மூலமும் அரசு வருவாயைப் பெற வேண்டிய நிலையில் உள்ளது. சுருங்கச் சொல்வதனால் வெளிநாட்டினருக்கான விசா வழங்குவதில் ஆரம்பித்து அனைத்திலும் பண வசூல் வேட்டையை அரசு அமல்படுத்தியுள்ளது.  எதிர்காலத்தில் வாகனங்கள் பார்க்கிங்கிற்கும் வசூல் பிரிக்கப்படும். சேமிப்பின் பூமி என்று அனைவராலும் மெச்சப்பட்ட சவுதி அரேபியா இனி செலவழிக்கவும் அரசுக்கு வரி செலுத்தவும் தயாரெனில் மட்டுமே தாக்குப்பிடிக்க இயலும். இத்தகைய வரிவிதிப்பு முறைகளால் பலரும் தங்கள் குடும்பங்களைத் தத்தம் நாடுகளுக்கு அனுப்புவார்கள் என்று கணிக்கப்படுகிறது. இதனால் 2020 க்குள்  35% பன்னாட்டுப் பள்ளிகள் மூடப்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இன்றும் மாறாமல் நடைமுறையில் உள்ளவை

தொழுகை நேரங்களில் கடைகள் மூடப்படுகின்றன. மற்ற அராபிய நாடுகளில் இத்தகைய வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. மெக்கா, மெதினா நகர எல்லைக்குள் மாற்று மதத்தினர் செல்ல இயலாதது; கோயில்கள், சர்ச்சுகள் போன்ற வழிபாட்டுத்தலங்களுக்கு அனுமதி வழங்கப்படாதது; பெண்கள் இன்றும் புர்கா அணிய வேண்டியுள்ளது; உணவகங்களில் குடும்பத்தினர் தனியாக, திருமணமாகாதவர்கள் தனியாக அமர்ந்து சாப்பிடும் வழக்கம் என மாற வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. வெளியே செல்லும் போது மறந்துகூட இக்காமாவை (அடையாள அட்டை) விட்டுச் சென்றால் முதலில் கைது. நிறுவனத்திலிருந்து வந்து இக்காமாவைக் காண்பித்தால் மட்டுமே சிறையிலிருந்து வெளிவர இயலும்.

இன்றும் ஆட்சியாளர்களை எதிர்த்து எழுதுவதோ பேசுவதோ இயலாத காரியம். கருத்துச் சுதந்திரம் கிலோ என்ன விலை என்றுதான் கேட்க வேண்டும். அப்படித் தான் இன்றும் உள்ளது. மாறி வரும் சவுதி அரேபியா என்பது அரசு தானாக முன்வந்து எடுக்கும் நடவடிக்கைகளால் மட்டுமே நடக்கும் என்பதே கவனிக்கப்பட வேண்டிய விஷயம். மக்கள், அரசு என்ன மாற்றம் கொண்டு வருகிறதோ அதில் சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டும். அதை மீறி மொட்டை மாடியில் நடனமாடிய பெண்ணைக் கூட கைது செய்து பின்னர் கண்டிப்புடன் விடுதலை செய்யும் வழக்கம் இன்றும் உள்ளது.

அரசு பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டு வரும் இந்தக் காலகட்டத்தில்தான் வெளிநாட்டினருக்கான செலவும் அதிகரித்து வருகிறது. இந்த ஊருக்கு வந்தபோது லிட்டருக்கு பத்து ஹலாலாவாக இருந்த பெட்ரோல் விலை இன்று இரண்டு ரியால் ஐந்து ஹலாலாவாக அதிகரித்துள்ளது. நவீனமாக மாறும் காலகட்டத்தில் அனுபவிக்கப் போகும் வெளிநாட்டினரும் உள்நாட்டினரும் மகிழ்ச்சி அடைவார்கள். அதிக செலவின் காரணமாகவும் சவுதியர்களை பணிகளில் அமர்த்துவதால் பலரும் வேலை வாய்ப்புகளை இழந்து வருகின்றனர். சவுதியும் மாறுகிறது, பணிபுரியும்  வெளிநாட்டினரில் ஒரு தரப்பின் சகாப்தமும் நிறைவுக்கு வருகிறது. புதிய சவுதி அரேபியாவில் புதிதான வெளிநாட்டினர் அனுபவிப்பார்கள் அல்லது சேமிப்பைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் இங்கே தாக்குப் பிடிப்பார்கள்.

முகம்மது பின் சல்மானின் அதிரடி நடவடிக்கைகளால் சவுதி அரேபியா எட்டுக் கால் பாய்ச்சலில் நாகரிகத்தை நோக்கி வளர்கிறது. பொருளாதாரத் திட்டங்களுக்கான சவால்களைச் சமாளித்து விட்டால் சவுதியும் செழிக்கும், பணி புரியும் வெளிநாட்டினரும் பலன் பெறுவார்கள் என்பதே நிதர்சனம்.

Posted on 1 Comment

ஆக்கர் [சிறுகதை] | சுதாகர் கஸ்தூரி

காற்று வெம்மையாக இருந்தபோதிலும், வியர்த்திருந்ததால் அதிகம் சூடு தெரியவில்லை. சட்டையின்றி, டவுசரில் நான்குபேர் மட்டும் கிருஷ்ணன் கோவில் வாசலெதிரில் மண் தரையில் பம்பரம் விட்டுக்கொண்டிருந்தோம்.

“லே, பம்பரத்த மரியாதக்கி நடுவுல வைய்யி. தோத்துட்டு ஓடியா போற?” மணி, சங்கரனின் கையை இறுகப்பிடித்தான். “கைய வுடுல… வுடுங்கேம்லா?” சண்டை மெல்ல முற்றிக்கொண்டுவர, நான் மறுபுறம் விழிவைத்துக் காத்திருந்தேன். ராஜாமணி இன்னும் வரவில்லை.

அப்படியொன்றும் அவன் பெரிய பம்பர வீரனில்லை. ஆனால் பம்பரம் என்றால் அது ராஜாமணியுடையதுதான். அடிக்க ஆளில்லை.

காரணம் உண்டு. அவன் அப்பா கடைசல் கம்பெனி வைத்திருக்கிறார். சின்ன மரக்கட்டைகளில் சொப்புச் சாமான் செய்து, பனையோலைப் பெட்டியில் வைத்துத் தருவார். அம்மி, குழவி, ஆட்டுக்கல், அடுப்பு, சைக்கிள், வகைவகையான பாத்திரங்கள் எனச் சிறு வீடே அதனுள் இருக்கும். பொதுவாகப் பெண் குழந்தைகள் வைத்து விளையாடுவார்கள். சிறு அளவில் குடும்பங்களை அவர்கள் விளையாட்டில் பார்க்கலாம்.

அதோடு, ராஜாமணி அழுது புலம்பி, சில ஸ்பெஷல் பம்பரங்களைத் தனக்கென செய்துகொள்வான். பெரிய பம்பரம், மேலும் கீழும் ஆணி கொண்ட டபுள் ஆணி பம்பரம், சுற்றும்போது விர்ர்ரென சப்தம் போடும் பம்பரம்… பொறாமையாக இருக்கும்.

ராஜாமணி இன்னும் வரவில்லை.

பள்ளியிலிருந்து வருகையில் ஒரு மாலை அவனுடன் பேச நேர்ந்தது. ஆங்கில வீட்டுப்பாட நோட்டு கொடுப்பதாக நான் ஒத்துக்கொண்டதும் அவன் என்னை அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

வாசலில் ஒரு இயந்திரத்தின் ஒலி. அங்கங்கே சொப்புச் சாமான்களும், மரத்துண்டுகளும், சுருள் சுருளாக மர இழைகளுமாக இறைந்து கிடந்தன.

“அப்பா கடைசல் வச்சிருக்காரு. சொப்புச்சாமான்”

சுற்றிக்கொண்டிருந்த ஒரு இரும்புத் தண்டில் ஒரு மரக்கட்டை வைக்கப்பட்டதும், அது மரச்சுருள் விடுத்து, வளைவாகத் தேய்ந்து ஒரு பெண்ணின் இடையாக மாறுவதை வியப்புடன் பார்த்திருந்தேன்.

“இங்கிட்டு நிக்காத. மரத்தூள் கண்ல விழுந்துரும். லே ராஜாமணி, இங்கிட்டு வா” குனிந்து, இயந்திரத்தில் மரக்கட்டையை வைத்து, லாகவமாக எடுத்த அந்த ஒல்லி மனிதர் ராஜாமணியின் தந்தை என ஊகித்தேன்.

“லே, என் பம்பரத்துல ஆக்கர் வைச்சே, கொன்னுருவேன்.” சங்கரன் மிரட்டிக்கொண்டிருந்தான். அவன் பம்பரம் வட்டத்தின் நடுவே கிடந்தது. மற்றவர்கள் குறிவைத்து அதன் தலையில் தங்கள் பம்பரத்தின் ஆணியால் குத்தவேண்டும். அதுதான் ஆக்கர். பெரிய ஆணியாக இருந்தால் கீழே கிடக்கும் பம்பரம் உடைந்துகூடப் போகும்.

ராஜாமணி என்னை உள்ளே அழைத்துச் சென்றான். அவன் தங்கை ஒருகாலில் தவழ்ந்து வந்து ஹாலைக் கடந்து போனாள். “ காலு சூம்பிருச்சி. சின்னப் பிள்ளேல காய்ச்சல் வந்திச்சி அப்பம். ஸ்கூலுக்குப் போறா. அம்மா தூக்கிட்டுப் போவாங்க.”

பல வெற்றுப் பனையோலைப்பெட்டிகள் ஒரு மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. “இதுல நானும் தங்கச்சியும் சொப்பு சாமான் அடுக்குவோம். ஒரு ஆட்டுக்கல்லு, ஒரு உரலு, மூணு பாத்திரம், ஒரு அடுப்பு. பாத்து வைக்கணும். ஒரு மூடியில, ரெண்டு ஆட்டுக்கல்லு போச்சின்னு வைய்யி, ஆத்தா கொன்னுரும்”

கடைசல் கடையென்பது பெரிய பணக்கார வியாபாரம் என நினைத்திருந்தேன். “போல கூறுகெட்டவனே” என்று சிரித்தான் ராஜாமணி. பாக்கத்தான் சொப்பு செட்டு அழகா இருக்கும். செய்ய எம்புட்டு கஷ்டம் தெரியுமா? இந்தா, இங்கிட்டிருக்குல்லா, சாயம்? அத சொப்புல ஏத்தணும்னா எங்கப்பாவால மட்டும்தான் முடியும். வில ஜாஸ்தில அதுக்கு. சாயம் வேங்கணும்னா ரொம்ப துட்டு வேணும். அப்பா, கடன் சொல்லித்தான் சாயம் வேங்குவாரு.”

“ரோட்டுல கண்ணன் கடைசல்னு ஒண்ணு இருக்குல்லா? அது உங்க கடையா?”

“இல்லலே. அது மாரி சில கடைக்கு அப்பா செஞ்சு குடுப்பாரு. நாங்களும் தனியா விக்கோம். ஆனா கடை இல்ல பாத்தியா, நிறைய பேரு வேங்க மாட்டாவ.”

மிரட்டலுக்கு ஒருவரும் பணியாததால், சங்கரன் அழுதுபார்த்தான். “ஆக்கரு வைக்காதீங்கடே மக்கா. ஒரேயொரு பம்பரம்தாண்டே இருக்கு. போச்சுன்னா அம்மா வையும்.” எவன் கேப்பான்?

“யம்மா, சோலையூர் ஆச்சி வந்திருக்காக” என்றாள் தங்கை. வந்த வயோதிகப் பெண்மணி, “லே ராஜா, தள்ளி நில்லுல. காத்து வரட்டு” என்றாள், சேலையில் முகம் துடைத்தபடி

“ஏட்டி, இவளே.” ஆச்சி, அவன் அம்மாவிடம் அவசரமாகப் பேசினாள். “ ரெண்டு செட்டு எடுத்து வையி. மதுரைல எம் பொண்ணு கேட்டிருக்கா. அவ கொழுந்தியாளுக்கு வேணுமாம். பணம் அடுத்த மாசம் வாங்கிக்க.”

“ஆச்சி” என்றாள் ராஜாமணியின் அம்மா. “ போன தடவெ ஒண்ணு கொண்டு போனிய. அதுக்கே பைசா வரல. எங்கிட்டுருந்து செட்டு போடுவேன்? பத்து ரூவாயாச்சும் கொடுத்துட்டுப் போங்க.”

“பத்தா? வெளங்கும்” என்றாள் ஆச்சி. “ நான் கண்ணன் கடைசல்ல வேங்கிக்கிடுதேன். அவன் எட்டு ரூபா சொல்லுதான்.”

“ஆச்சி.” கையெடுத்துக் கும்பிட்டாள் ராஜாமணியின் அம்மா. “நொடிச்சுப் போயிட்டிருக்கம். நீங்கதான் ஒத்தாச பண்ணனும். சரி, ஒரு செட்டு கொண்டுபோங்க. அஞ்சு ரூபா கொடுப்பீயளா?”

“பேராசைப் படாதட்டீ. ஒரு செட்டுக்கு எனக்கே அஞ்சு ரூவா கேக்க.” வைதுகொண்டே ஆச்சி ஐந்து ரூபாயை இடுப்புச் சுற்றிலிருந்து எடுத்தாள்.

சுப்புவின் பம்பரம் முதலில் வட்டத்தில் இறங்கியது. சங்கரனின் பம்பரத்தில்லிருந்து சற்றே தொலைவில் சர்ரென ஓசைப்படாமல் சுற்றியது. ‘சே” என்றான் சுப்பு. சங்கரனின் முகத்தில் ஒரு நிம்மதி பரவியது.

“லே, இங்கிட்டு வா.” ராஜாமணி அவசரமாக அழைத்தான். மரத்துண்டுகளைத் தாண்டி விரைந்தேன். அவன் காட்டிய இடத்தில் இரு பல்லிகள் எதிரும் புதிருமாக நின்றிருந்தன. “பல்லிச்சண்டை பாத்திருக்கியாடே? பாரு” திடீரென ஒரு பல்லி மற்றதனைக் கவ்வ, இரண்டும் புரண்டன. வெள்ளையாக மென் வயிறு தெரிய, தரையில் துடித்தன. மீண்டும் நிமிர்ந்தன. ஒரு நிமிடம் ஒன்றையொன்று கவ்வியபடி நிலைத்து அசையாது நின்றன. “எவ்ளோ நேரம் இப்படி நிக்கும்?” என்றேன். அவற்றைப் பார்த்தபடியே ராஜாமணி சொன்னான் “தெரியாது. எதாச்சும் ஒன்னு பலவீனமாவும் பாரு. அப்ப அசையும். அடுத்த பல்லி, இன்னும் வேகமா அத இறுக்கும். சிலது செத்துப்போகும். சிலது ஓடீரும்.”

இயந்திரத்தை நிறுத்திவிட்டு ராஜாமணியின் அப்பா வந்தார். காபியைக் கொடுத்தபடியே “பணம் கேக்கப் போறியளா?”என்றாள் ராஜமணியின் அம்மா. “எங்க?” என்றார் அவர். “ போனதடவையே முதலியார் சொல்லிட்டாரு. இனிமே கேக்காதியன்னு. சாயம் நாலு செட்டுதான் வரும்.”

“பொறவு என்ன செய்ய?”

“பாப்பம்” என்றார்.

“லே, கணேசா” என்றான் சங்கரன் கெஞ்சியபடி “ பம்பரத்துல அடிக்காதடே. பக்கத்துல அடி. வேணும்னா, பொறவு, பம்பரம் தர்ரேன். சும்மானாச்சிக்கு ஒரு சின்ன குத்து வையி. ஆக்கரு வைக்காதடே.” கணேசன் ரொம்ப மும்முரமாகத் தன் பம்பரத்தில் கயிற்றை அழுத்திச் சுற்றிக் கொண்டிருந்தான். விடும்போது, படுவேகமாகக் களத்தில் இறங்கும் அது.

“யப்பா” என்றான் ராஜாமணி. “ ரெண்டு பம்பரம் செஞ்சு தாங்கப்பா. ஒண்ணு எனக்கு, இன்னொண்ணு இவனுக்கு.”

“சரி” என்றார் நினைவின்றி. “யப்பா.” கெஞ்சினான் அவன். “ரெண்டுத்தலயும் மண்டைல கலர் வட்டம் வேணும்.”

“லே”அதட்டினாள் அம்மா. “சும்மாயிரி. குடிக்கவே கஞ்சியில்லயாம். ஊருக்குக் கூழு ஊத்தப்போறானாம். சாயம் ரொம்பக் கொஞ்சமாத்தான் இருக்கு, மொண்ணை பம்பரம் போதும், இப்ப.”

“யம்மா “ அழுதான் ராஜாமணி. “இந்த ஒரேயொருவாட்டி மட்டும்.”

மவுனமாக அவன் தந்தை எழுந்து சென்று இயந்திரத்தை இயக்கினார். விஷ் என்ற ஒலியிடன் அது சுற்றியது. ஆவலுடன் ராஜாமணி காத்திருந்தான். இரு கட்டைகளை எடுத்து மெல்ல இழைத்தார். பம்பரத்தின் தலை மெல்லமெல்லத் தோன்றியது.

“யப்பா பெரிய பம்பரம்… உசரமா… ஆணி டபுள்.”

அவர் ஒன்றும் சொல்லாமல் இரு நிமிடத்தில், ஆஸ்பத்திரியில் நர்ஸ் குழந்தையைக் காட்டுவது போல் பம்பரத்தைக் காட்டினார். “போதுமால?”

“ம்.” ராஜாமணி குதித்தான். “யப்பா, இன்னொண்ணு.” என் பம்பரம் சற்றே சூம்பியிருந்த்து. பரவாயில்லை. கண்முன்னே பம்பரம் உயிர்பெறுவது கண்டேன்.

“யப்பா, சாயம்”

“ராஜாமணி… அடி வேணுங்கோ? சாயம் கிடையாதுன்னேம்லா?” அவன் அம்மா கத்துவது கேட்டது.

“போட்டு” என்றார் அவன் தந்தை பம்பரத்தை ஒரு இடுக்கியில் பொருத்தினார். பம்பரம் இடுக்கியில் சுழன்றது. “என்ன கலர் வேணும். சீக்கிரம் சொல்லு.”

“அங் ஊதா, அப்புறம் உள்ளாற சேப்பு, மஞ்ச, வெள்ள… வெள்ள வேண்டாம். ம்ம்..”

“நீ சொல்லு” என்றார் என்னிடம் “ ஊதா, உள்ளாற நீலம்.” “ஊதாக்குப்புறம் நீலம் நல்லா இருக்காது. எடுக்காது. மஞ்ச போடுதேன். அப்புறம் நீலம்.”

இருவரின் பம்பரமும் பளபளவென வந்தன. “ஆணி?”என்றான் ராஜாமணி.

“எதுத்த கடையில கோவாலு சித்தப்பாகிட்ட ஆணி வச்சித்தரச் சொல்லு.”

கோபால் சித்தப்பா அன்று இல்லாததால், அடுத்தநாள் கொண்டு வருவதாக ராஜாமணி சொல்லியிருந்தான். ஏக்கத்துடன் அன்று பிரிந்து நடந்தேன்.

*

இன்னும் ராஜாமணி வரவில்லை. இருட்டிக்கொண்டு வந்துவிட்டது. நண்பர்கள் ஒவ்வொருவராகக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.

ரோட்டிலிருந்து யாரோ என்னை அழைப்பதாகச் சன்னமாய்க் குரல் கேட்டது. ஜெகன்னாதனா அது?

“மக்கா, ராஜாமணி ஒன்கிளாஸ்தானே? அவங்கப்பா இன்னிக்கு செத்துட்டாரு. விசம் குடிச்சிட்டாராம்.”

கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. ராஜாமணி? அவன் தங்கை?

“கடம் ரொம்ப இருந்திச்சாம். வீட்டுல சொல்லாமலே சமாளிச்சிருக்காரு. பாவம். முடியல. தம்பிகிட்ட ‘பையனையும் பொண்ணையும், பாத்துக்கடே’ன்னு காலேல சொன்னாராம். பதினோரு மணிக்கு…” ஜெகன்னாதனுடன் வந்த யாரோ சொல்லிக்கொண்டிருந்தார்.

“கடைசி குத்து” மணிகண்டன் அறிவிக்க, சங்கரன் ஒரு நிம்மதியுடனும் ஒரு திகிலுடனும் தன் பம்பரத்தைப் பார்த்திருந்தான். நங் என கணேசனின் சிறிய பம்பரம் அதன்மீது இறங்க, இரு பல்லிகள் சண்டையிடுகையில் வெள்ளையாக வயிறு தெரிய மல்லாந்து துடித்து மீள்வது போல் இரண்டு பம்பரங்களும் துள்ளிச் சிதறின.

சங்கரன் அழத்தொடங்கினான்.

Posted on 2 Comments

கண்ணனுக்கென ஓர் கவியமுதம் | ஜடாயு


எழிலார்ந்த மயிலிறகை
அணியெனச் சூடியது
மனதிற்கினிய கருமையால் நிரம்பியது
அழகெனும் ஒரே ரசம்
எங்கும் நிரம்பும் வடிவுடையது
திருமகளெனும் தடாகத்திற்கு
மழைக்காலமானது
நுண்ணுணர்வு கொண்டோரின்
புண்ணிய மனங்களை
விளையாட்டாய்க் கவர்ந்திழுப்பது
லீலைகளெனும் அமுதம் ததும்புவது
கோபியரின் அன்புக்கிடமானது
ஐயோ, அந்தப் பேரொளியின் மீது
யார் தான் ஆசைகொள்ள மாட்டார்கள்?

– ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம், 3.62

“சம்ஸ்கிருதத்தில் இதிகாச புராணங்கள் உள்ளன. காவியங்களும் பல உள்ளன. தத்துவ நூல்களும், பல பாரம்பரிய அறிவுத்துறை சார்ந்த நூல்களும் உள்ளன. ஆனால் உணர்ச்சிகரமாக உள்ளத்தை உருக்கும் பக்தி இலக்கியம் தமிழில் உள்ளதைப் போல வடமொழியில் இல்லை என்றே கருதுகிறேன்” என்று ஒரு நண்பர் கூறினார். நான் அதை மறுத்து, “தமிழில் நாயன்மார்கள், ஆழ்வார்களின் அருள் மொழிகள் மகத்தானவை என்பதில் ஐயமில்லை. ஆனால் சம்ஸ்கிருதத்திலும் மனமுருக்கும் பக்தி இலக்கியம் உண்டு. ஸ்ரீமத் பாகவதம் பதினெட்டுப் புராணங்களில் ஒன்றானாலும், அது பக்தி ரசத்தின் பிரவாகம் என்றே அழைக்கப்படுகிறது. அதோடு கூட, பற்பல அருட்கவிகள் எழுதிய பக்தி நூல்களும் உண்டு” என்று கூறினேன். அப்போது நான் வாசித்துக் கொண்டிருந்த ஸ்ரீகிருஷ்ண கர்ணாமிருதம் என்ற நூலிலிருந்து சில சுலோகங்களையும் எடுத்துக் காட்டினேன். அதன் தொடர்ச்சியே இக்கட்டுரை.

இந்த அழகிய நூலை இயற்றியவர் பில்வமங்களாசாரியார் என்னும் மகத்தான கவி. ஸ்ரீமத் பாகவதத்தை எடுத்துரைத்த சுக முனிவரைப் போன்று கிருஷ்ண லீலையில் ஆழ்ந்து ஈடுபட்டிருந்ததால், லீலாசுகர் என்ற தனது சிறப்புப் பெயராலேயே பிரபலமாக அழைக்கப்பட்டார். பதின்மூன்றாம் நூற்றாண்டில், பொ.பி 1220 – 1300 காலகட்டத்தில் கேரளத்தில் பரூர் என்ற ஊரில், கல்வி கேள்விகளில் சிறந்து, அற்புதமான கவிதையாற்றலும் பெற்று கிருஷ்ண பக்தியில் ஆழ்ந்திருந்தவர். வாழ்வின் பிற்பகுதியில் திருச்சூரில் சங்கரரின் சீடரான பத்மபாதர் நிறுவியதாகக் கருதப்படும் தெக்கோல மடம் மூலம் சன்னியாச தீட்சை பெற்று கிருஷ்ண பக்த துறவியாக வாழ்ந்தார் என்று கூறப்படுகிறது.

கர்ணாம்ருதம் என்றால் செவியமுதம். “கிருஷ்ணா, லீலாசுகனால் உனக்கென சமைக்கப்பட்ட இந்த செவியமுதம் நூறு கல்ப காலங்களுக்குப் பின்னும் இனிமையுடன் விளங்குக” (1.110) என்று கவியே தனது பெயரையும் நூலின் பெயரையும் ஒரு சுலோகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம் என்ற இந்த நூலில் மொத்தம் 328 சுலோகங்கள் உள்ளன. இவை மூன்று பகுதிகளாக, முறையே முதலாவது, இரண்டாவது, மூன்றாவது ஆசுவாஸங்கள் என்று பகுக்கப்பட்டுள்ளன. ஒரே மூச்சில் கிருஷ்ணானுபவத்தை இடையறாது பாடும் வேளையில் கவி கொஞ்சம் மூச்சுவாங்கிக் கொண்டிருக்கிறார் என்பது போல இந்தப் பகுப்பு அமைந்துள்ளது (ஆசுவாஸம் – மூச்சுவாங்குதல்).

கண்ணனின் குழலிசை மண்ணையும் விண்ணையும் மயக்குவது மட்டுமன்றி வேதப் பொருளையும் விளக்குகிறது என்கிறார் கவி.

உலகங்களைப் பித்தாக்கும்
வேதங்களை சப்திக்கும்
மண்நின்ற மரங்களை மகிழ்விக்கும்
மலைகளை உருக்கும்
மான்களை வசமிழக்கச் செய்யும்
பசுக்கூட்டங்களுக்குக் களிப்பேற்றும்
இடையர்களை மயக்கும்
முனிவர் மனங்களை மலர்விக்கும்
சப்த ஸ்வரங்களில் ஆரோகணிக்கும்
ஓங்காரப் பொருள் அதிரும்
அந்தக் குழந்தையின் குழலிசை
வெல்க. (2.109)

கண்ணன் மெய்மறந்து தன் சிறுவிரல்களால் தடவிக் குழலூதும்போது, முகம் சற்றே இடப்புறம் சாய்ந்திருக்கும். குழலும் நேராக இல்லாமல் சற்றே சாய்ந்து அதன் ஒரு முனை இதழில் பதிந்து மற்றொரு முனை வலதுகாதைச் சென்று தொடுவது போலத் தோன்றும். இந்தக் காட்சியைப் பல படங்களிலும் சிற்பங்களிலும் நாம் பார்த்திருக்கலாம். இதனை அப்படியே மனக்கண்ணால் தரிசித்து புல்லாங்குழலிடம் முறையிடுகிறார் கவி.

அடி புல்லாங்குழலே
முகுந்தனின் முறுவல் பூத்த முகமலர்
மூச்சில் ததும்பும் மதுரசம் அறிந்தவளே
உன்னை வணங்கி ஒன்று யாசிக்கிறேன்
அவன் மணியிதழ் அணுகும் பொழுதில்
நந்தன்மகன் செவிகளில்
என் நிலையை
ஓசைப்படாமல் சொல்லிவிடேன். (2.11)

லீலாசுகர் தன் இளமைக் காலத்தில் சிந்தாமணி என்ற தாசியிடம் பெரும் ஆசை கொண்டிருந்தார். எந்நேரமும் அவளது மோக லாகிரியில் ஆழ்ந்திருந்தார். ஒரு முறை வெளியூர் சென்றுவிட்டு அவளைப் பார்க்கவேண்டும் என்ற பதைபதைப்புடன் கொட்டும் மழையில் நள்ளிரவில் திரும்பி வருகிறார். வழியில் நதியில் பெருவெள்ளம். அதையும் பாராமல் நீரில் குதித்து, மூழ்கிவிடாமலிருக்க கட்டை என்று நினைத்து ஆற்றில் மிதந்து வந்த ஒன்றைப் பற்றிக் கொள்கிறார். கரையேறிய பிறகு தான் அது ஒரு சடலம் என்று தெரிகிறது. ஆனால் அவருக்குத் தன்மீது அருவருப்பு எதுவும் தோன்றவில்லை. அந்நிலையில் அவர் மனதில் வெட்கம், தயக்கம் எதற்கும் இடமில்லை. ஓடோடிச் சென்று அவள் வீட்டுக் கதவைத் தட்டுகிறார். அவரது கோலத்தைக் கண்ட அவள், “என்னிடம் வைத்த இந்த ஆசையின் தீவிரத்தில் நூற்றிலொரு பங்கை பகவான் மீது வைத்தால் நீர் பிழைத்துப் போயிருக்கலாமே” என்கிறாள். அந்தக் கணத்தில் அவரது அகவிழி திறக்கிறது. தனக்கு நல்வழி காட்டிய அவளது காலில் விழுந்து பணிகிறார். பின்பு சோமகிரி என்ற ஆசாரியரை குருவாக ஏற்று கிருஷ்ண பக்தியில் ஈடுபடுகிறார். இத்தகைய ஒரு கர்ணபரம்பரைக் கதை லீலாசுகரைக் குறித்து வழங்குகிறது. அதனால்தான் தனது முதல் குருவையும் பிறகு ஆசாரியரையும் போற்றும் முகமாக “சிந்தாமணிர் ஜயதி ஸோமகிரிர் குருர்மே” என்று ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதத்தின் முதல் சுலோகம் தொடங்குவதாகக் கூறப்படுகிறது.

“சிந்தாமணிக்கும் எனது குருவான சோமகிரிக்கும் ஜெயம். மேலும் என்னைத் தடுத்தாட்கொண்ட தலையில் மயிற்பீலி சூடிய தெய்வத்திற்கு ஜெயம். கற்பக மரத்தின் தளிர்போன்ற அவனது திருவடிகளைத் தம் தலையில் சூடியவர்களிடம் வெற்றித்திருமகளாகிய ஜெயலக்ஷ்மி தானாகவே வந்து, விளையாட்டாக சுயம்வரத்தில் நாயகனைத் தேடி மாலையிடும் பெண்ணின் உவகையை அடைகிறாள்.” (1.1)

கண்ணனின் குழந்தை விளையாட்டுகளைப் பற்றிய மனம் மயக்கும் சித்திரங்கள் பல இந்நூலில் வருகின்றன.

யாரடா அது பையன்
நான் தான் பலராமன் தம்பி
நீ இங்கே எப்படி
எங்கள் வீடென்று நினைத்து வந்துவிட்டேன்
அது சரி அந்த வெண்ணெய்ப் பானைக்குள் ஏன் கைவிட்டாய்
அம்மா கோபித்துக் கொள்ள வேண்டாம்
கன்றுக்குட்டி ஒன்று காணாமல் போய்விட்டது
தேடிக் கொண்டிருந்தேன்
ஆய்ச்சியர் திலகத்திடம் கண்ணனின் இந்த வாயாடல்
அது நம்மை என்றும் மகிழ்வித்திடுக. (2.81)

வேத வனங்களில் வெகுவாக அலைந்து திரிந்து
களைத்தவர்களே
இந்த நல்லுபதேசத்தை ஆதரியுங்கள்
கோபிகைகளின் வீடுகளில் தேடுங்கள்
உபநிஷத உட்பொருளை அங்கேதான்
உரலில் கட்டிப் போட்டிருக்கிறது. (2.28)

கரத்தாமரையால் பதத்தாமரை மலரைப் பிடித்து
இதழ்த்தாமரையில் வைத்துக்கொண்டு
ஆலிலைமேல் துயிலும் பால முகுந்தன்
அவனையே தியானிக்கிறது என் மனம் (2.57)

கோபிகைகளின் அதீத பிரேமையும், கள்ளங்கபடமற்ற அவர்களது அந்தரங்க பக்தியும், அவர்களுடன் கண்ணனின் காதல் விளையாட்டுகளும் களியாட்டங்களும் மீண்டும் மீண்டும் இந்த நூலில் பல்வேறு வண்ணங்களில் வந்துகொண்டேயிருக்கின்றன.

வீதியில் தயிர் விற்கிறாள் கோப கன்னிகை
முராரியின் பாதங்களில் வீழ்ந்த சித்தமுடையவள்
மோகவசத்தால்
கோவிந்தோ தாமோதரோ மாதவோ
என்றல்லவா கூவுகிறாள் (2.55)

நீ மகிழ்ந்தாய் எனில்
என் குணங்களாலும் தகுதிகளாலும் ஆவதென்ன
நீ மகிழவில்லை எனில்
என் குணங்களாலும் தகுதிகளாலும் ஆவதென்ன
அன்பு ததும்பும் கணவன் எனில்
குங்குமம் தளிர் மலரணி
பெண்ணுக்குத் தேவையில்லை
அன்பற்றவன் எனில்
அது அவசியமே இல்லை. (2.99)

அச்சுதனிடத்தில் சித்தத்தைக் கொடுத்து
தயிரில்லாத வெறும் பானையில்
மத்தை இட்டுக் கடையும் ராதையும்
பூங்கொத்தென விரிந்த அவள் முலைகள்மீது
அலைபாய்ந்து அசையும் பார்வையுடன்
பால்கறக்க வேண்டிய நினைவில்
எருதைக் காலணையும் தேவனும்.
இப்பூவுலகைப் புனிதமாக்கிடுக. (2.25)

மகாபாரத அரசியல் சதுரங்கத்தில் ஸ்ரீகிருஷ்ணனின் ராஜதந்திரங்களும், குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அவன் தேரோட்டி கீதை உரைத்த திறமும் அறிஞர்களுக்கும் அறநெறியாளர்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளன. ஆனால், பெரும்பாலான பக்தர்களும் கவிகளும் பகவானின் கோகுல, பிருந்தாவன லீலைகளையே பாடிப் பரவசமடைந்துள்ளார்கள். லீலாசுகரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனாலும் சில இடங்களில் அபூர்வமாக தேரோட்டி கிருஷ்ணனின் அழகிய சித்திரங்களும் இந்நூலில் உண்டு.

அவன் கைநகங்களினால் தினவு நீங்குகின்றன
பாண்டவன் தேர்க்குதிரைகள்.
திறந்த உடம்புடன்
தலைப்பாகையில் சாட்டையைச் செருகிக் கொண்டு
கடிவாளத்தைப் பற்களால் கடித்துக் கொண்டு
கைகளில் நீரை அள்ளி
அனுதினமும் அவற்றைக் குளிப்பாட்டுகிறான்
தேவகியின் புண்ணியத் தொகுதியாய்த் தோன்றியவன்.
அவன் நம்மைக் காத்திடுக. (2.47)

கிருஷ்ண தத்துவம் என்பது தர்க்க புத்தியால் ஆராய முற்படும் வறட்டு சித்தாந்திகள் சிலருக்கு முரண்பாடுகளின் தொகுதியாகத் தோன்றுகிறது. வேறு சில ஆராய்ச்சியாளர்களுக்கும் வரலாற்றாசிரியர்களுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற புராணங்களையும் தொன்மங்களையும் கலவையாக சேர்த்து வைத்ததாகத் தோன்றுகிறது. ஆனால், நுண்ணுணர்வும் ஞானமும் கொண்ட மேதைகளானாலும் சரி, எந்தப் படிப்பறிவுமில்லாத கிராமத்துப் பெண்களானாலும் சரி, உள்ளார்ந்த பக்தியுடனும் கபடமற்ற நெஞ்சத்துடனும் அணுகுபவர்களுக்குக் கீழ்வானில் உதிக்கும் வைகறைச் சூரியன் போலத் தெள்ளத் தெளிவாகப் புலப்படுகிறது கிருஷ்ண தத்துவம். அதன் முரண்கள் அவர்களுக்குக் குழப்பத்தை அல்ல, பெருவியப்பையும் மெய்சிலிர்ப்பையுமே ஏற்படுத்துகின்றன.

இடையர்கள் வீட்டு முற்றத்தில்
சேற்றில் விளையாடுகிறாய்
வேதியர்களின் வேள்விச்சாலையில்
போவதற்கும் வெட்கப் படுகிறாய்
பசுக்கூட்டங்களின் ஹூம் என்ற ஓசையைக் கேட்டு
அவைகளுடன் பேசிக்கொண்டேயிருக்கிறாய்
அறிஞர்களின் நூறுநூறு துதிகளைக் கேட்டும்
மௌனம் சாதிக்கிறாய்
சபலம் வாய்ந்த கோகுலத்துப் பெண்களுக்கு
தாசனாகப் பணிவிடை செய்கிறாய்
புலன்களை அடக்கிய தபஸ்விகளுக்குத்
தலைவனாக இருக்கவும் விரும்பவில்லை
அறிந்தேன் கிருஷ்ணா
அழகிய உன் திருவடித் தாமரைகளை
அன்பினால் மட்டுமே
நிலையாகப் பெறக்கூடும்
வேறொன்றினாலும் அல்ல. (2.82)

உரலோ
யோகியரின் மனமோ
கோபியரின் பூமொட்டுப் போன்ற முலைகளோ
இம்மூன்றே அன்றோ இப்பூவுலகில்
முராரி என்று பெயர்பெற்ற யானைக்கன்றுக்கு
கட்டுத்தறியாக ஆயிற்று (2.56)

சிறுவனாயிருந்தும்
கைநுனியில் குன்றை ஏந்தியது எங்ஙனம்
கறுப்பனாயிருந்தும்
காருளில் சோதியாய்ச் சுடர்விடுவது எங்ஙனம்
தீரனாயிருந்தும்
ராதையின் நயனங்களில் கட்டுண்டது எங்ஙனம்
கள்வனாயிருந்தும் நீ
பிறவித் தளையை அறுப்பது எங்ஙனம்? (2.72)

ஆதி சங்கரர் வழிவந்த அத்வைத தத்துவத்தைப் பின்பற்றும் ஸ்மார்த்த சம்பிரதாயப் பின்னணியைக் கொண்டவர் லீலாசுகர். சிவன், விஷ்ணு, சக்தி ஆகிய மூன்று தெய்வ ரூபங்களையும் பேதமின்றி வணங்குவதும், இவற்றில் எந்த ஒரு மூர்த்தியையும் தமது இஷ்ட தெய்வமாகக் கொள்வதும் இந்த சம்பிரதாயத்தினரின் மரபு. “அகத்தில் சாக்தனாகவும், புறத்தில் சைவனாகவும், நடத்தையில் வைஷ்ணவனாகவும்”  திகழ்தல் என்பது இந்த சம்பிரதாயத்தினரின் வழிபாட்டு நெறிக்கு இலக்கணமாகக் கூறப்படுகிறது [“அந்த சா’க்தோ ப3ஹி: சை’வ: வ்யவஹாரேஷு வைஷ்ணவ:”]. இந்த நூலிலும் இதற்கான தடயங்களைக் காண முடிகிறது.

சைவர்கள் நாங்கள்
சிறிதும் சந்தேகமில்லை
அதிலும் பஞ்சாட்சர ஜபத்தில் ஊக்கங்கொண்டவர்கள்
ஆயினும் என் மனமோ
காயாம்பூ வண்ணமும் புன்முறுவலும் தவழும்
ஆயர்பெண்ணின் செல்வனைத் தான்
நினைத்துக்கொண்டே இருக்கிறது. (2.24)

லலிதா பரமேஸ்வரி தேவியும் கிருஷ்ணனும் இணைந்து விளங்கும் ‘கோபால சுந்தரி’ என்ற அபூர்வமான தெய்வ வடிவத்தின் தியானம் ஒரு சுலோகத்தில் கூறப்படுகிறது.

அகண்டமான கரும்பு வில்லும் மலர்க்கணைகளும்
சங்கு சக்கரமும் பாசாங்குசமும்
பொன்னொளி திகழும் புல்லாங்குழலும்
எட்டுக் கரங்களில் தாங்கி
உதிக்கின்ற செங்கதிர் போல விளங்கும்
மதன கோபால உருக்கொண்ட ஹரியை
தியானிப்போம். (3.104)

ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம் கேரளத்தில் தோன்றிய கவியால் இயற்றப்பட்டிருப்பினும் நாடெங்குமுள்ள கிருஷ்ண பக்தர்களைத் தொடர்ந்து வசீகரித்து வந்துள்ளது. சைதன்ய மகாபிரபு தனது தென்னிந்திய யாத்திரையின்போது இதன் அழகில் மயங்கி திருவனந்தபுரத்திலிருந்து இதன் பிரதியை எடுத்துச் சென்று அதற்குத் தாமே ஒரு உரையும் எழுதி வட இந்தியாவில் பரவச் செய்தார் என்று கூறப்படுகிறது.
செவியமுதம் என்ற அடைமொழிக்கேற்ப இதன் பல சுலோகங்கள் மிக்க இனிமையும் ஓசையழகும் கொண்டவை. பாடுகையில் சம்ஸ்கிருத ஒலியின் கம்பீரத்துடன் இணைந்து அவை உருவாக்கும் அனுபவம் சிலிர்ப்பூட்டுவது. அதன் காரணமாக கர்நாடக இசையிலும் பரத நாட்டியத்திலும் இதன் சுலோகங்கள் தொடர்ந்து கலைஞர்களால் எடுத்தாளப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு ஒன்று:

கரகமல த3லத3லித லலிததர வம்சீ’
கலநினத3 க3லத3ம்ரு’த க4னஸரஸி தே3வே |
ஸஹஜ ரஸ ப4ர ப4ரித த3ரஹஸித வீதீ2ம்’
ஸததவஹ த3த4ரமணி மது4ரிமணி லீயே ||

கரகமலங்களின் இதழ்விரல்கள் மூடித்திறக்கும் எழில்மிகு குழலின் இன்னொலி வடிவாய்ப் பெருகும் அமுதம் பொங்கி வழியும் தடாகம் அவன். இயல்பிலேயே இன்பரசம் நிறைந்த புன்முறுவலின் தொடர்ச்சியை எப்போதும் தாங்கும் மணியிதழ்களைக் கொண்ட இனிய தேவன். அவனிடத்திலேயே என் லயிப்பெல்லாம் (1.52)

ஸ்ரீ கிருஷ்ணனின் லீலைகளை மீண்டும் மீண்டும் தியானிப்பதாலும் பாடுவதாலும் என்ன கிடைக்கும்? “இந்திரனின் வஜ்ராயுதத்தால் பெரும் மலைகளும் நூறு சுக்கல்களாக உடைந்து போவதைப் போல கிருஷ்ணனின் இடையறாத நினைவாலேயே பாவக் கூட்டமாகிய இரும்புக்கூடு நொறுங்கிப் போகிறது” (3.108) என்கிறார் லீலாசுகர். அதில் சந்தேகமென்ன?

பின்குறிப்புகள்:

இக்கட்டுரையில் உள்ள சுலோக மொழியாக்கங்கள் அனைத்தும் கட்டுரையாசிரியர் செய்தவை. அடைப்புக் குறிக்குள் உள்ளவை சுலோக எண்கள்.

ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம் தமிழ் உரையுடன் (உரையாசிரியர் : ஸ்ரீ அண்ணா). வெளியீடு: ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை – 4.

ஸ்ரீகிருஷ்ண கர்மாம்ருதம் தேர்ந்தெடுத்த சில சுலோகங்கள் பி.சுசீலாவின் தேனினும் இனிய குரலில் – https://youtu.be/TO3IhHFysXs

Posted on Leave a comment

அறிவியலும் இந்துத்துவமும் -1 | அரவிந்தன் நீலகண்டன்

அண்மையில் சில காலங்களாக ஒரு விரும்பத்தகாத விளிம்பு நிகழ்வு மையம்கொண்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் ஒரு மத்திய அமைச்சர் டார்வினின் பரிணாமம் தவறு என்று சொன்னார். அதற்கு எதிர்ப்பு வந்தது. அறிவியலுக்கான மூத்த அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் அதைக் கண்டித்தார். பிறகு அறிவியல் மாநாட்டில் பேசும்போது டாக்டர் ஹர்ஷ் வர்த்தனே அப்போது மறைந்த இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாவ்கிங் குறித்து அபத்தமான ஒரு கருத்தைக் கூறினார். ஸ்டீபன் ஹாவ்கிங் கூறினாராம், ஐன்ஸ்டைனின் புகழ் பெற்ற E=mc2 என்கிற சமன்பாட்டைக் காட்டிலும் முக்கிய விஷயங்கள் வேதங்களில் இருக்கின்றன என்று. இது முழு அபத்தம் என்பதை எவ்வித கூகிள் தேடல் இல்லாமலும் புரிந்து கொள்ள முடியும். இதே போல், மகாபாரதக் காலத்தில் இண்டர்நெட்டும் ராமாயண காலத்தில் புஷ்பேக் ஜெட்டும் சதா சர்வகாலமும் நம்மிடையே புழங்கி வருகிற விஷயங்கள். மீம் தயாரிப்பாளர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கிறது. ‘இதோ பீமன் பயன்படுத்திய பென் ட்ரைவ்’ என்று சகட்டு மேனிக்கு போட்டோஷாப் நக்கல்களைச் செய்து தாக்குகிறார்கள்.

ஏன் இப்படி?

இந்துத்துவர்களே இப்படித்தான், அவர்களுக்கு அறிவுப்புலமோ அல்லது அறிவுஜீவிகளிடம் மதிப்போ கிடையாது; அவர்கள் பழமையான அசட்டுத்தனங்களையும் பிராம்மண மேட்டிமைவாதத்தையும் மட்டுமே பேசுபவர்கள் என ஒரு தரப்பு பிரசாரம் செய்து வருகிறது. அந்தத் தரப்பை நிரூபிப்பது போலவே இத்தகைய விஷயங்கள் நிகழ்கின்றன.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல பாகிஸ்தானிய இயற்பியலாளர் ஒருவர், ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இந்திய அறிவுஜீவிகள் பலரால் அது பகிரப்பட்டு வருகிறது. விரைவில் அது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு பெரும் பரவலாக்கப்படும். அவர் சொல்வது இதுதான்: “இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக நேரு இருந்தார். அவருக்கு அறிவியல் பார்வை இருந்தது. எனவேதான் இன்றைக்கு இந்தியாவில் இந்துத்துவர்களும் கூடப் பெருமைப்படும் அறிவியல் தொழில்நுட்பச் சாதனைகள் நிகழ்ந்தன. அணுத்துறையிலும் விண்வெளி ஆராய்ச்சியிலும் இன்று இந்தியா தலை நிமிர்ந்து நிற்க நேருவின் அறிவியல் பார்வைதான் காரணம். நேருவுக்கு பதிலாக மோடி இந்தியாவின் முதல் பிரதமராக ஆகியிருந்தால் இன்றைக்கு இந்தியா மூட நம்பிக்கைகளின் தேசமாக பசு சாணத்தையும் கோமூத்திரத்தையும் மட்டுமே ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்திருக்கும்.”

இந்தியாவின் முதன்மைப் பத்திரிகையாளர்கள் பாகிஸ்தானிய இயற்பியலாளரின் இந்தக் கட்டுரையைப் போட்டி போட்டுக் கொண்டு பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

முதல் வாசிப்பில் சரிதானே என்றுதான் பலருக்குத் தோன்றும். இந்துத்துவ ஆதரவாளர்களுக்குக் கூட.

காரணம் என்னவென்றால் கார்கோகல்ட் இந்துத்துவம்தான். அதென்ன கார்கோகல்ட் இந்துத்துவம்?

பசிபிக் தீவுகள் சிலவற்றில் இரண்டாம் உலகப் போரின்போது நேச நாட்டு விமான தளங்கள் அமைக்கப்பட்டன. பெரும்பாலும் இவை போர்க்கால அவசரத் தேவைகளுக்காக அமைக்கப்பட்டன. அவ்வப்போது படைகள் இறங்கும். அங்கிருக்கிறவர்களுக்குத் தேவையான பொருட்கள் (கார்கோகள்) பாரசூட்களில் இறக்கப்படும் அல்லது விமானங்களில் வந்தும் இறங்கும். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தீவுவாசிகளின் மத நம்பிக்கைகளில் இவை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தின. அவர்கள் விமான கண்ட்ரொல் டவர் ஆசாமிகள் ரேடியோவில் பேசுவது போலவே உபகரணங்களை உருவாக்கிக் கொண்டார்கள். அதன் மூலம் பேசினார்கள். மந்திர உச்சாடனங்கள். அப்படிப் பேசினால் வானில் மீண்டும் விமானங்கள் தோன்றி அவர்களுக்கு வேண்டிய உணவும் செல்வமும் கார்கோகளாக வானிலிருந்து விழும் என நம்பினார்கள். அல்லது பெரும் கப்பல்கள் மூலமாக வந்திறங்கும் எனவும் நம்பினார்கள். மிஷினரிகள் வந்த காலம் முதலே உருவாகியிருந்த குறுநம்பிக்கைகள் பின்னர் பெரிய அளவில் மத அரசியல் இயக்கங்களாகக் கூட மாறின.

புகழ் பெற்ற இயற்பியலாளர் ரிச்சர்ட் பெய்ன்மான் அறிவியலின் வார்த்தைகளைப் பயன்படுத்திப் பரப்பப்படும் அறிவியல் அடிப்படையற்ற புலங்களுக்கு கார்கோகல்ட் அறிவியல் எனும் பெயரை பயன்படுத்துகிறார். ‘காஸ்மிக் எனர்ஜி’ ‘வைப்ரேஷன்’ என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் மதக்குழுக்கள் பலவற்றை நாமே கண்டிருப்போம். அதென்ன காஸ்மிக் எனர்ஜி எனக் கேட்டால் அதன் பின்னால் எவ்விதச் சமன்பாடும் இருக்காது குழு நம்பிக்கையே இருக்கும்.

மார்வின் ஹாரிஸ் போன்ற சமூகவியலாளர்கள் இந்த கார்கோகல்ட் நம்பிக்கைகளுக்குப் பின்னால் ஒரு ஆழ்ந்த நியாயம் இருப்பதாகக் கருதுகிறார்கள். தீவுவாசிகளுக்கு சர்வதேச அளவில் வளங்களும் செல்வங்களும் பயன்படுத்தப்படும் விதத்தில் ஒருவித அநீதி இருப்பது உள்ளூரத் தெரிகிறது. அதனை அவர்கள் வெளிப்படுத்தும் விதம் இது.

இந்துத்துவத்துக்கு இதையே நீட்டித்துப் பார்க்கலாம்.

அறிவியல் நிறுவனப்படுத்தப்பட்ட இயக்கமாக மாறியபோது அதனை ஒரு ஐரோப்பிய அல்லது மேற்கத்தியப் பண்பாட்டின் விளைவாக மட்டுமே அது முன்னிறுத்தப்பட்டது. அவ்விதத்தில் அது மேற்கத்தியரல்லாத பண்பாடுகளுக்கு, அவற்றின் வரலாறுகளுக்கு, அவற்றின் தத்துவ தரிசன மரபுகளுக்குச் செய்யப்பட்ட பெரும் அநீதி என்றே கூற வேண்டும்.

கணிதம், வானவியல், தாவரவியல், உளவியல், மொழியியல் – எனப் பலதுறைகளில் இந்தியா ஒரு பண்பாட்டுப் புலமாகத் தொடர்ந்து பங்களித்து வந்துள்ளது. தொடர்ந்து ஏற்பட்ட அன்னியப் படையெடுப்புகள், பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் ஆகியவற்றால் மேற்கைப் போல நிறுவனப்படுத்தப்பட்ட அறிவியல் வளர்ச்சியை பாரதத்தால் உருவாக்க முடியவில்லை என்றாலும் கூட இன்று நாம் காணும் மேற்கத்தியப் பண்பாடு சார்ந்த புத்தெழுச்சியில் ஏறக்குறைய சரிசமமான, இன்னும் சில துறைகளில் முக்கியமான பங்களிப்புகளை பாரதம் நல்கியுள்ளது.

ஆனால் இதனை நாம் சரியான விதத்தில் புரிந்து கொள்ள வேண்டும். அறிவியல் என்பது பண்பாட்டு உரையாடல்கள் மூலம் வளர்ந்தது. இந்தியக் கணித முறைகள் ‘திருடப்’ படவில்லை. அவை கொண்டு செல்லப்பட்டன. கணிதவியலாளர் சி.கே.ராஜு இக்கணித முறைகள் ஏசுசபை பாதிரிகளால் மேற்கத்திய நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன எனக் கூறுகிறார். இன்றைக்கு லெபினிட்ஸ்-நியூட்டன் கணித முறைகளின் வேர்கள் கேரளக் கணித மரபிலிருந்து பெறப்பட்டன. கேரளக் கணித முறை அதற்கு முந்தைய ஆரிய பட்டர், பாஸ்கரர் ஆகியவர்களின் மரபின் தொடர்ச்சி. நியூட்டானிய அறிதலின் அடிப்படைக் கணிதங்கள் பாரதத்தின் கணித மரபு.

இந்தியக் கணித மரபுக்குச் சில சிறப்புத்தன்மைகள் இருந்தன. அவை உண்மை உலகிலிருந்து உருவாக்கப்பட்ட கணித மரபுகள். உலகுக்கு அப்பாலான உலகைப்படைக்கும் இறைக் கோட்பாடு இல்லாத காரணத்தால் அனைத்திலும் நம்பிக்கைக்கு இசைவான ஒரு ஒழுங்கு கட்டாயமாக இருக்க வேண்டும் என்கிற தேவை இந்திய மரபில் இல்லை. எனவே √2 போன்ற எண்களை இந்தியர்களால் கவலை இல்லாமல் கையாள முடிந்தது. பிரம்மம் எனும் கோட்பாடும் மாயை கோட்பாடும் அடிப்படையில் கொண்டிருந்த முரண், பூஜ்ஜியம், முடிவிலி ஆகிய கணிதக் கோட்பாடுகளை வந்தடைய உதவியாக இருந்தன.

மாயை கோட்பாட்டினால் உலகை மறுக்கும் தன்மையும் அதனால் உலகமே மாயை என்பதால் அறிவியல் அக்கறையின்மையும் இந்தியர்களுக்கு ஏற்பட்டது என்கிற மேற்கத்திய பிரசாரம் இந்திய அறிவுஜீவிகளால் ஏற்கப்படுகிறது. மார்க்சியர், நேருவியர், திராவிடியர் இன்ன பிற இந்து எதிர்ப்பாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தியல் இது. காலனிய வாதிகளால் உருவாக்கப்பட்டது. ஆனால் மாயை கோட்பாடு இந்தியாவில் அறிவியல் மறுமலர்ச்சிக்கும் முன்னெடுப்புக்கும் மிகவும் உதவிய கோட்பாடு. இதனைப் பின்னர் விரிவாக காண இருக்கிறோம்.

இந்தியா அறிவியலின் வளர்ச்சிக்கு உரிய பங்காற்றியிருந்த போதிலும், அது உதாசீனப்படுத்தப்பட்டு இந்தியப் பண்பாடே ஏதோ ஒரு விதத்தில் அறிவியல் வளர்ச்சிக்கு ஒவ்வாத, குறை கொண்ட ஒன்றாகக் காட்டப்பட்டது. அது காலனியக் காலகட்டத்தில் மட்டுமல்ல, நேருவியக் காலகட்டத்திலும் தொடர்ந்தது.

எனவே ஒரு இந்துத்துவனுக்கு பாரதப் பண்பாடு அறிவியலுக்கு எதிரானதல்ல, அது ஏதோ ஒரு விதத்தில் பங்களித்திருக்கிறது எனத் தெரிகிறது. ஆனால் அது என்ன என்பதை அறிவதற்கான அனைத்து வாய்ப்புகளும் மறுக்கப்படுகின்றன. அவன் கல்வி நிலையம் அதை அறிய அவனுக்கு எவ்வித வாய்ப்பும் அளிக்கவில்லை. இதுவே பொதுவாக இந்துத்துவர்களை ’புஷ்பக விமானம்,  ‘மகாபாரத கால இண்டர்நெட்’,  ‘கம்ப்யூட்டர்களுக்கு ஏற்ற மொழி சமஸ்கிருதம்’ என்றெல்லாம் பேச வைக்கிறது. இது சர்வ நிச்சயமாக உளறல். ஆனால் இந்த உளறலுக்குப் பின்னால் ஒரு துல்லியமான தாழ்வு மனப்பான்மையும், தன் பண்பாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்த ஒரு உணர்வும் இருக்கிறது.

இந்த மனநிலையே இங்கு கார்கோகல்ட் இந்துத்துவம் எனக் குறிப்பிடப்படுகிறது.

 இங்கே நாம் கண்ட ஒரு குற்றச்சாட்டையே எடுத்துக் கொள்வோம். நேரு அவர்கள் அறிவியல் பார்வை கொண்டவர். அவர்தான் இன்று நாம் காணும் அறிவியல் அமைப்புகளை, நிறுவனங்களை உருவாக்கினார். மோடியால் அது முடியாது, ஏனென்றால் அவர் இந்துத்துவர். இந்துத்துவர்கள் பழம்பெருமை பேசுகிறவர்களே தவிர அவர்கள் அறிவியல் பார்வை கொண்டவர்கள் அல்லர்.

இது உண்மையா?

விடுதலையின்போது இந்தியாவின் அறிவியல் மனித வளம் சர்வதேசத் தரத்தில் இருந்தது. சந்திரசேகர வேங்கட ராமன், கிருஷ்ணன், மேகநாத் சாகா, ஹோமி பாபா, சத்யேந்திரநாத் போஸ் என மிகச் சிறந்த அறிவியலாளர்கள் இங்கு இருந்தார்கள். அன்றைய நிலையில் ஆசியாவின் முன்னணி அறிவியல் தேசமாக இந்தியா இருந்தது. இதற்கு முக்கியமான காரணம் தேசிய விழிப்புணர்வு.

நேருவின் அறிவியல் குருவாக இருந்தவர் மேகநாத் சாகா. இடதுசாரி. ஆனால் தேச பக்தர். காலனிய ஆட்சியிலிருந்து விடுதலை பெறும் முன்னரே நம் நாட்டில் அணு ஆராய்ச்சியைத் தொடங்க முடிவு செய்து சைக்ளோட்ரான் எனும் கருவியை நிறுவ முயற்சிகள் மேற்கொண்டவர். அதற்கு காலனிய அரசாங்கமும் கல்கத்தா பல்கலைக்கழக அதிகார வர்க்கமும் முட்டுக்கட்டைகள் போட்டபோது அவர் நேருவை அணுகினார். நேரு இந்து மகாசபை தலைவரும் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் முன்னர் துணை வேந்தராக இருந்தவருமான டாக்டர். ஷியாமா பிரசாத் முகர்ஜியை அணுகினார். முகர்ஜியின் முயற்சியால் இந்தியாவின் முதல் சைக்ளோட்ரானை சாகா நிறுவினார். இதெல்லாம் விடுதலைக்கு முன்னால்.

விடுதலை பெற்ற பின்னர் நேருவின் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன. வெளியே அறிவியல் மனப்பான்மை குறித்தெல்லாம் பேசினாலும் நேரு உள்ளுக்குள் ஜோசியம் பார்ப்பார். ஒரு கட்டத்தில் பிரதம மந்திரியின் செயலரையே தன் ஜாதகப் பணிக்காகப் பத்திரிகைகளைத் தொடர்பு கொள்ளச் செய்தார். ஆக நேரு ஒருவித இரட்டைநிலையில் வாழ்ந்தார்.

ராமன், சாகா இருவரும் எலியும் பூனையும் போல. ஏழாம் பொருத்தம். ஆனால் நேரு ஆட்சி செய்ய தொடங்கியதுமே இருவரும் முடிவுக்கு வந்தார்கள், இவரால் இந்திய அறிவியல் குட்டிச்சுவராகிவிடும் என்று. நேருவுக்குத் தனிப்பட்ட தொழில்நுட்ப மேதைமை கொண்ட தீவுகளை உருவாக்குவதில் ஆர்வம் இருந்தது. தரமான அறிவியல் கல்வியைப் பரவலாக்குவதில், அரசுக்கட்டுப்பாட்டில் இல்லாத ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதில் ஆர்வம் இல்லை. இவையெல்லாம் நல்லதில்லை என சாகா, ராமன் இருவருமே சுட்டிக்காட்டினர்.

ஹோமி பாபா மிகச்சிறந்த விஞ்ஞானிதான். ஆனால் அரசியல் வட்டாரங்களில் எவ்வித நட்பை உருவாக்கி மேலே செல்வது என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. சாகா அப்படி அல்ல. மிகச்சிறப்பான விஞ்ஞானி. அரசியல் நீக்கு போக்கு குறித்து அக்கறை இல்லாதவர். தேசபக்தி கொண்டவர். ஆனால் இடதுசாரி. அவர் உருவாக்கிய முதன்மையான அணுக்கரு ஆராய்ச்சி மையம் உருவாவதில் மத்திய-மாநில உரிமைப் பிளவுகளை உருவாக்கி முட்டுக்கட்டை ஏற்படும் நிலையை நேரு உருவாக்கினார். அப்போது சாகாவுக்கு முழு ஆதாதரவு நல்கியவர் சியாமா பிரசாத் முகர்ஜி அவர்கள்தான். அரசியல் சித்தாந்தப் பிளவுகளைத் தாண்டி தேச நலன் எனும் புள்ளியில் இணைந்து நாட்டின் அறிவியல் எதிர்காலத்தை சிந்திக்க முகர்ஜியால் முடிந்தது.

நவீன இந்தியாவின் அறிவியல் இயக்க வரலாற்றில் இந்துத்துவத்தின் பங்கு இது.

அப்போது மோடி?

அடுத்த இதழில் காண்போம்.